உலக நடப்பு

MH370: மாயமான மலேசிய விமானம் - 10 ஆண்டுகளாக விலகாத பெரும் மர்மம்; வேதனையில் குடும்பத்தினர்

2 weeks 3 days ago
MH370: மாயமான மலேசிய விமானம் - 10 ஆண்டுகளாக விலகாத பெரும் மர்மம்; வேதனையில் குடும்பத்தினர்

பட மூலாதாரம்,EPA

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜோனதன் ஹெட்
  • பதவி, பிபிசி செய்திகள் கோலா லம்பூர்
  • 8 மார்ச் 2024
    புதுப்பிக்கப்பட்டது 9 மார்ச் 2024

லி எர்யோவின் காதுகளில் கடந்த பத்து ஆண்டுகளாக ஒலித்துக் கொண்டிருக்கும் வார்த்தைகள் ‘தொடர்பு துண்டிக்கப்பட்டது’.

லி எர்யோவின் மகன் யான்லின் சென்ற MH 370 விமானம் காணாமல் போனபோது, இதுதான் மலேசிய ஏர்லைன்ஸ் , அவரிடம் சொன்ன இரண்டு வார்த்தைகள்.

“பல ஆண்டுகளாக ‘தொடர்பு துண்டிக்கப்பட்டது’ என்றால் என்னவென கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஒருவரிடம் தொடர்பு துண்டிக்கப்பட்டால், மீண்டும் அவரைத் தொடர்பு கொள்ள இயலும்தானே” என்கிறார் லி.

தெற்கு பெய்ஜிங்கில் உள்ள கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளான லி எர்யோ மற்றும் அவரது மனைவி லியு ஷுயாங்ஃபெங் ‘தொடர்பு துண்டிக்கப்பட்டது’ என்ற வார்த்தைகளின் அர்த்தத்தை இன்னும் தேடிக் கொண்டிருக்கின்றனர். உலக வான் சேவை வரலாற்றின் மிகப்பெரிய மர்மத்தை விளங்க முடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.

 
MH 370

பட மூலாதாரம்,BBC/ LULU LUO

படக்குறிப்பு,

மாயமானவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் மலேசியாவில் அனுசரிக்கப்பட்டது.

பத்து ஆண்டுகளுக்கு முன் இதே நாள், மலேசியாவின் தலைநகர் கோலா லம்பூரில் இருந்து சீன தலைநகரான பெய்ஜிங்க்கு வழக்கம் போல் இரவு நேரத்தில் புறப்பட்டது MH370 விமானம். போயிங் 777 வடிவமைப்புடன் 227 பயணிகளையும் 12 விமானப் பணியாளர்களையும் தாங்கிக் கொண்டு அந்த விமானம் பறந்து கொண்டிருந்தது. புறப்பட்ட ஒரு மணிநேரத்தில் மலேசிய வான் சேவை கட்டுப்பாட்டு அரங்கத்து நன்றி தெரிவித்து விட்டு, வியட்னாம் வான் பரப்பில் நுழையவிருந்தது MH 370.

பத்து ஆண்டுக்கால பெருந்துயரம்

திடீரென விமானம் வேறு திசையில் திரும்பியது. கட்டுப்பாட்டு மையங்களுடன் கொண்ட அனைத்து மின்னணு தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. மீண்டும் மலேசியா நோக்கி அந்த விமானம் வந்தது. பின் தெற்கு இந்தியப் பெருங்கடல் மீது எங்கோ பறந்துகொண்டிருந்தது. அதன் எரிபொருள் தீரும் வரை அங்கேயே பறந்து கொண்டிருந்தது என்று யூகிக்கப்படுகிறது.

மிகத் தீவிரமான அதிக செலவிலான தேடுதல் பணி நடத்தப்பட்டது. ஆனால், நான்கு ஆண்டுகள் ஆகியும் காணாமல் போன விமானத்தின் ஒரு துரும்புகூடக் கிடைக்கவில்லை. ஆயிரக்கணக்கான கடல் ஆராய்ச்சியாளர்கள், விமானப் பொறியாளர்கள், இளம் புலனாய்வாளர்கள் தங்களுக்குத் தெரிந்த சொற்பமான தகவல்களைக் கொண்டு, MH370 தனது பயணத்தை எங்கு முடித்திருக்கும் எனக் கணக்கிட முயன்றுள்ளனர்.

MH 370

பட மூலாதாரம்,BBC/ LULU LUO

தேடுதல் பணியைத் தொடர்வதற்கான போராட்டம், MH 370க்கு உண்மையில் என்ன நேர்ந்தது எனக் கண்டறிவது, என இவை அனைத்தும் அந்த விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பங்களுக்கு பத்து ஆண்டு கால பெருந்துயரத்தைக் கொடுத்துள்ளது.

இந்த பிரசாரத்துக்கு ஆதரவு திரட்ட லி உலகம் முழுவதும் பயணித்துள்ளார். தனது சேமிப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி ஆசியா, ஐரோப்பா, விமானத்தில் சில எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட மடகாஸ்கரின் கடற்கரைகளுக்கும் சென்று வந்துள்ளார்.

தனது மகன் இருந்திருக்கும் மணலைத் தொட்டு உணர வேண்டும் என்கிறார். இந்திய பெருங்கடல் முன்பு நின்றுகொண்டு “யான்லின், நான் உன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்துள்ளேன்,” என்று ஓலமிட்டு அழுததை நினைவு கூர்கிறார் அவர்.

“எனது மகனைக் கண்டுபிடிக்க இந்த உலகின் இறுதி வரை செல்வேன்,” என்று லி கூறுகிறார்.

 

சீனாவில் ஹேபே மாகாணத்தின் கிராமப்புற பகுதி ஒன்றில் வசித்து வருகின்றனர் லி மற்றும் அவரது மனைவி. அவர்களுக்கு தற்போது 60 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. இளமைக் காலத்தில் பிள்ளைகளின் படிப்பு செலவுக்கே அவர்களது வருமானம் முழுவதும் செலவிடப்பட்டது. உலகத்தைச் சுற்றிப் பார்க்க எந்த பணமும் இருந்ததில்லை.

அவர்கள் கிராமத்தில் இருந்து முதன்முதலில் பல்கலைழகத்துக்குச் சென்று படித்தது யான்லின் தான். வெளிநாட்டில் வேலை கிடைத்த முதல் நபரும் யான்லின்தான். மலேசியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனத்தில் யான்லினுக்கு வேலை கிடைத்திருந்தது.

விசா பெறுவதற்காக மலேசியாவில் இருந்து சீனா திரும்பிக் கொண்டிருந்தார் யான்லின். அப்போதுதான் விமானம் காணாமல் போனது. “இந்தச் சம்பவத்துக்கு முன், அருகில் உள்ள ஹாண்டன் நகரத்துக்குக்கூட நாங்கள் சென்றது இல்லை,” என்கிறார் லி.

தற்போது அடிக்கடி பயணிப்பவர்களாக மாறிவிட்ட லி மற்றும் அவரது மனைவி பத்தாவது ஆண்டு நினைவு தினத்தை பிற குடும்பத்தினருடன் அனுசரிக்க மலேசியா வந்துள்ளனர்.

அந்த விமானத்தில் பயணித்த் 153 சீன பயணிகளில் ஒருவர் யான்லின். மலேசிய அரசிடமிருந்து இழப்பீடு வாங்க மறுத்த 40 சீன குடும்பங்களில் அவரது பெற்றோர்களும் உண்டு. விமான சேவை, விமான தயாரிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட பிறர் மீது சீனாவில் வழக்கு தொடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைகள் நகர்ந்தாலும் அவர்கள் காணாமல் போன விமானத்துடன் கட்டிப் போடப்பட்டுள்ளனர்.

 
MH 370

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கிரேஸ் நாதனின் மருமகன், MH370ல் பயணித்த தனது மாமியாருக்கு எழுதியிருந்த கடிதம்.

MH370 காணாமல் போனபோது, கிரேஸ் நேதன், பிரிட்டனில் தனது சட்டப்படிப்பின் இறுதி ஆண்டு தேர்வுகளை எழுதி வந்துள்ளார். அவரது தாய் ஆன் விமானத்தில் பயணம் செய்தார். இன்று அவர் மலேசியாவில் ஒரு வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கோலா லம்பூரில் நடந்த நினைவு தின நிகழ்ச்சியில், தனது திருமணத்தின்போது தாயின் புகைப்படத்தை ஏந்திக்கொண்டு தேவாலயத்துக்குள் நடந்து வந்ததையும், இரண்டு சிக்கலான பிரசவங்களின் போது தனது தாயின் அன்பான அறிவுரைகள் இல்லாமல் போனதையும் நினைவுகூர்ந்து பேசினார்.

விமானத்தில் இருந்து சிதறிய சில துண்டுகள் அந்த நிகழ்வில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. விமானத்தின் இந்த எச்சங்களை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது. கடலுக்கு அடியில் பல நாட்கள் இருந்து துருபிடித்த விமான இறக்கைகளின் பாகங்கள் அவை. இந்த நிகழ்வுக்கு வந்திருந்த பிளைன் ஜிப்சன் தான் விமானத்தின் அதிகமான பாகங்களைக் கண்டறிந்தவர்.

MH 370 நெடுங்கதையின் வண்ணமயமான கதாபாத்திரங்களில் ஒருவர் ஜிப்சன். இளம் சாகசக்காரர் என்றே அவரை அழைக்கலாம். இண்டியானா ஜோன்ஸ் போன்று உடை அணிந்துகொண்டு, கலிஃபோர்னியாவில் உள்ள தனது வீட்டை விற்றுக் கிடைத்தை பணத்தைக் கொண்டு உலகைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று புறப்பட்டவர்.

“முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் பங்கேற்றபோது, கடற்கரை ஓரங்களில் மிதக்கும் கழிவுகளைக் கண்டறிய ஒருங்கிணைந்த தேடுதல் பணிகள் நடைபெறவில்லை எனத் தெரிந்தது. யாரும் அதைச் செய்யவே இல்லை. கடலுக்கு அடியில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து தேடுதல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால், காணாமல் போன விமானத்தின் பாகம் கடற்கரையின் ஓரத்தில் நடந்து செல்லும் ஒருவரின் கண்ணில்தான் முதலில் படும் என்று நான் நம்பினேன். அதை யாரும் செய்தாததால் நானே அதைச் செய்தேன்,” என்றார்.

ஓராண்டு காலம் மியான்மர் முதல் மாலத்தீவுகள் வரையிலான கடற்கரைகளில் தேடிய அவருக்கு விமானத்தின் முதல் பாகம் மொசாம்பிக்கின் மணல்திட்டு ஒன்றில் கிடைத்தது.

இதற்கிடையில் இந்தியப் பெருங்கடலில் உள்ள ரி யூனியன் தீவில் விமான இறக்கையில் இருந்து பெரிய பாகம் ஒன்று கிடைத்தது. இதன் மூலம் MH370 இந்திய பெருங்டலில்தான் வீழ்ந்து மூழ்கியுள்ளது என்பது அந்த குடும்பங்களுக்கு உறுதியானது.

 
MH370யின் பாகங்கள் எப்படி கண்டறியப்பட்டன?
MH 370

பட மூலாதாரம்,BBC/ LULU LUO

படக்குறிப்பு,

விமானத்தின் சிதறிய பாகங்கள், நினைவு தின நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டன

விமானம் காணாமல் போன 16 மாதங்கள் கழித்தே அதன் பாகங்கள் கிழக்கு ஆப்பரிக்க கடற்கரைகளில் கண்டுபிடிக்கப்பட்டன. தெற்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள நீரோட்ட ஆய்வுகள் மூலம், இந்த பாகங்கள் MH370இல் இருந்து கண்டுபிடிக்கப்பட்டவையாக இருக்கலாம் என்று தெரிய வந்தது.

அஸ்லாம் கான், மலேசிய முன்னாள் தலைமை புலனாய்வாளர் இந்த பாகங்களை எப்படி உறுதிப்படுத்தினோம் என விளக்கினார். கண்டுபிடிக்கப்பட்ட பாகங்களில் உள்ள வரிசை எண்கள், விமான தயாரிப்பாளரின் ஆவணங்களில் இருந்த வரிசை எண்களுடன் ஒத்துப் போனது. எனவே அவை மலேசிய ஏர்லைன்ஸ் போயிங் விமானம் என்பது உறுதிசெய்யப்பட்டது.

மேலும் அந்தப் பாகங்களில் இருந்த எழுத்துகளின் வடிவங்களைப் பார்த்தபோது, அவை போயிங் விமானத்தினுடையது என்பது, வேறு எந்த போயிங் விமானமும் இந்திய பெருங்கடலில் விழவில்லை என்பதால் அது MH370இன் பாகங்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

விமானம் பறக்கும்போது அதைச் சீராக வைத்துக்கொள்ள இறக்கைகளில் உள்ள பாகம் ஃப்ளாப்ரான். அந்தப் பாகமும் கண்டுபிடிக்கப்பட்டது. விமானம் மீண்டும் மலேசியா நோக்கி திரும்பியதற்கு இதுவே சான்றாக அமைந்தது. இந்த பாகம் கிடைக்கும் வரை விமானம் மேற்கில் மலாய் தீபகற்பம் நோக்கி பறந்ததற்கான சாட்சி, மலேசியா மற்றும் தாய்லாந்தில் உள்ள ராணுவ ரேடார்களின் தரவுகள் மட்டுமே.

மேலும் சில சான்றுகளும் கிடைத்தன. பிரிட்டன் நிறுவனமான இன்மர்சாட், தனது செயற்கைகோள்கள் ஒன்றுடன் MH370 தொடர்பு கொண்டதைத் தெரிவித்தது. தெற்கு நோக்கிச் செல்லும்போது, ஒவ்வொரு ஒரு மணிநேரத்திலும் MH370 உடன் நிகழ்ந்த ‘கை குலுக்கல்’ என்றழைக்கப்படும் ஆறு தொடர்புகளைக் கண்டறிந்தது.

 
விமானம் மீண்டும் மலேசியா நோக்கிப் பறந்ததா?
MH 370

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்ட தேடுதல்கள் எந்தப் பலனையும் தரவில்லை

ஒவ்வொரு ஒரு மணிநேரத்திலும், விமானத்துக்கும் செயற்கைக் கோளுக்குமான தூரத்தைக் கணக்கிட்டு விமானம் உத்தேசமாக கடலில் எந்தப் பகுதியில் விழுந்திருக்கலாம் என்பது தெரிய வந்தது. அப்படி குறிக்கப்பட்ட இடம், மிகப் பரந்த ஆக்ரோஷமான ஆழமான கடல் பகுதி. அதற்கு மேல் குறிப்பான இடத்தைத் துல்லியமாக கண்டறியமுடியவில்லை.

கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2017ஆம் ஆண்டு ஜனவரி வரை, 26 நாடுகளைச் சேர்ந்த 60 கப்பல்கள், 53 விமானங்கள் தேடுதல் பணியை மேற்கொண்டன. 2018ஆம் ஆண்டு அமெரிக்க தனியார் நிறுவனமான ஓஷன் இன்ஃபினிட்டி ஐந்து மாதங்களுக்கு கடலுக்கு அடியில் செல்லக்கூடிய ட்ரோன்கள் கொண்டு தேடியது.

ஆதாரபூர்வமான தரவுகள் இல்லாததால், விமானம் மாயமானது குறித்துப் பல சதிக்கோட்பாடுகள் பேசப்பட்டன. விமானம் கடத்தப்பட்டு ரஷ்யா கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் அல்லது டியகோ கார்சியா தீவில் உள்ள அமெரிக்க வான் தளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் எனப் பல கோட்பாடுகள் இருந்தன.

காட்சிக்கு வைக்கப்பட்ட விமான பாகங்களைப் பார்த்தபோது, “இது மிகவும் வெறுக்கக்தக்கது” என்கிறார் பிரெஞ்சு பத்திரிகையாளர் ஃப்ளாரன்ஸ் டெ சாங்கி.

இவர், MH370 மாயமானது குறித்து விரிவாக ஆய்வு செய்து புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். MH 370 குறித்து வெளியான நூற்றுக்கணக்கான புத்தகங்களில் இதுவும் ஒன்று.

விமானம் திரும்பி தெற்கு நோக்கிப் பறந்தது என்ற கோட்டைபாட்டை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை, அது பொய்யாகச் சித்தரிக்கப்பட்டது என்கிறார். கண்டெடுக்கப்பட்டவை MH370-இன் பாகங்கள் இல்லை என்கிறார். விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட சரக்குகள் குறித்துக் கேள்விகள் எழுப்புகிறார் அவர். அந்த விமானத்தில் இருந்த சரக்குகள் காரணமாக தென் சீனக் கடல் மீது அமெரிக்க விமானத்தால் சுடப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறார்.

 
தொடர்பு துண்டிக்கப்பட்டும் ஆறு மணிநேரம் எப்படி சீராகப் பறந்தது?
MH 370

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

MH370 மாயமானது குறித்து பல சதிக்கோட்பாடுகள் பேசப்படுகின்றன.

ரேடார் மற்றும் செயற்கைக்கோள்களின் தரவுகளைப் பல நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர். அந்த தரவுகளின்படி பார்த்தால், விமானத்தை யாரோ தெரிந்தே தெற்கு நோக்கி இயக்கியுள்ளனர் என்பதுதான் அதற்குரிய ஒரே விளக்கம்.

பிபிசியின் “ஏன் விமானங்கள் மாயமாகின்றன” என்ற புதிய வீடியோவில் இரண்டு பிரெஞ்சு வான்வெளி நிபுணர்கள் பேசியுள்ளனர். அதில் ஒருவர் அனுபவமிக்க விமானி. விமானம் எப்படி பறந்திருக்கக் கூடும் என்று அவர் தொழில்நுட்ப உதவியுடன் நிகழ்த்திக் காட்டுகிறார். மலேசிய வான் கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பு முடிந்த பிறகு, தென் சீனக் கடல் மீது MH370 துரிதமாக எப்படி திரும்பியிருக்கக் கூடும் என்று விளக்குகிறார். இதை அனுபவமிக்க, திறன்கொண்ட விமானி ஒருவர் செய்தால் மட்டுமே இப்படித் திரும்ப முடியும் என்ற முடிவுக்கு வந்தனர்.

சரியாக மலேசிய வான் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து வியட்நாம் வான் கட்டுப்பாட்டு மையத்துக்குள் நுழையும் முன் விமானம் இப்படி திரும்பியுள்ளதால், யாருக்கும் தெரியாமல் திருப்ப வேண்டும் என்று விமானி செய்திருக்கக் கூடும் என்று கருதுகின்றனர். ஏனென்றால், வியட்நாம் வான் கட்டுப்பாட்டுக்குள் விமானம் வரவில்லை என்பதை அவர்கள் தெரிந்துகொள்ளச் சிறிது நேரம் ஆகும்.

மேலும் சில கோட்பாடுகளும் உள்ளன. விமானத்தில் இருந்த அனைவரும் சீரற்ற அழுத்தம் காரணமாக ஆக்சிஜன் இல்லாமல் இறந்து போயிருக்கலாம் அல்லது திடீரென பெரிய தீ விபத்து ஏற்பட்டு, தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கோட்பாடுகள் உள்ளன. ஆனால், விமானத்தின் சவாலான திருப்பம், அதன் பிறகு தொடர்ந்து ஏழு மணிநேரம் சீராகப் பறந்தது ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, மேற்சொன்ன கோட்பாடுகள் சாத்தியமில்லை என்று கருதப்படுகிறது.

 
மலேசிய அரசின் மெத்தனப் போக்கு
MH 370

பட மூலாதாரம்,BBC/ LULU LUO

படக்குறிப்பு,

ஜாகிடா கொன்சாலெஸின் கணவரான பாட்ரிக் கோம்ஸ் MH 370 விமானத்தின் கண்காணிப்பாளராக இருந்தார்.

அதேநேரம் விமானி வேண்டுமென்றே விமானத்தை வேறு திசையில் திருப்பி பயணிகளை மரணத்துக்கு இட்டுச் சென்றார் என்பதும் நம்பத்தக்கதாக இல்லை. அந்த விமானி அப்படி செய்யக் கூடியவர் என்பதற்கான வரலாறும் இல்லை. இந்த சந்தேகங்கள், கோட்பாடுகள் அனைத்தும் குடும்பங்களின் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

“எனது மோசமான எதிரிக்கும் இந்த நிலை வரக்கூடாது” என்கிறார் ஜாகிடா கொன்சாலெஸ், MH 370 விமானத்தின் உள் இருக்கும் கண்காணிப்பாளர் பாட்ரிக் கோம்ஸின் மனைவி.

“நாங்கள் இதுபோன்ற உணர்ச்சிப் பிழம்புகளுக்கு ஆளாகிக் கொண்டே இருக்கிறோம். முதன்முதலில் தேடுதல் பணிகள் தொடங்கியபோது, ஏதாவது ஒன்றைப் பார்த்து விட்டதாகக் கூறுவார்கள், அப்போது எங்கள் நம்பிக்கை அதிகமாகும். அதன் பிறகு அது MH370 இல்லை என்று கூறுவிடுவார்கள். நாங்கள் மீண்டும் காத்திருக்க தொடங்குவோம்.” என்றார்.

ஆரம்பத்திலிருந்தே மலேசிய அரசு குடும்பங்களால் விமர்சிக்கப்பட்டு வந்தது. ராணுவ ரேடார் தகவல்கள் கொண்டு துரிதமாக MH370 விமானத்தைக் கண்டறியும் பணியை மேற்கொள்ளாததற்காகவும், 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு தேடுதல் பணிகளை மேற்கொள்ள மெத்தனமாக இருந்ததற்காகவும் விமர்சிக்கப்பட்டது. ஓஷன் இன்ஃபினிடி என்ற தனியார் நிறுவனம், எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் கட்டணம் வேண்டாம் என்ற அடிப்படையில் தேடுதல் பணிகளை மேற்கொள்ளத் தயாராக உள்ளது. ஆனால், அதற்கு அரசின் அனுமதி வேண்டும்.

மலேசிய அரசு மேலும் சில நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும் என சில அரசு அதிகாரிகள் தனியாகச் சந்தித்துப் பேசும்போது ஒப்புக் கொள்கின்றனர். இதற்கு சமீப ஆண்டுகளில், நாட்டில் ஏற்பட்டு வரும் அரசியல் குழப்பங்கள் காரணமாக இருக்கலாம். அதன் பிறகு எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிய கொரோனா பெருந்தொற்று பரவியது. பெருந்தொற்றுக் காலத்தில் குடும்பங்கள் வருடாந்திர நினைவு தினத்தை அனுசரிக்கக்கூட இயலவில்லை.

தற்போது பொறுப்பில் இருக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக், கோலா லம்பூரில் நடைபெற்ற 10வது ஆண்டு நினைவு தினத்தில் பங்கேற்றார். மாயமான விமானத்தைக் கண்டுபிடிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்த ஆண்டில் தேடுதல் பணிகளை மீண்டும் தொடங்குவது குறித்து ஓஷன் இன்ஃபினிடி நிறுவனத்துடன் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார்.

ஓஷன் இன்ஃபினிடி 2018ஆம் ஆண்டு 1.12 லட்சம் கி.மீ இடத்தைத் தேடிப் பார்த்தது. இதில் ஆழ்கடல் பள்ளத்தாக்குகள் போன்ற மிக சவாலான பகுதிகளும் இருந்ததால், விமானத்தைத் தவற விட்டிருக்கவும் வாய்ப்புண்டு.

 
தேடுதல் பணியில் புதிய நம்பிக்கை
MH 370

பட மூலாதாரம்,BBC/ JONATHAN HEAD

படக்குறிப்பு,

பத்து ஆண்டுகளாக லி மற்றும் அவரது மனைவி தங்கள் மகனுக்கு என்ன ஆனது என்று தெரிந்துகொள்ள முயன்று வருகின்றனர்.

இந்தத் தேடுதல் பணிகளில் ஈடுபட்ட மற்றொரு நபர் ஓய்வுபெற்ற பிரிட்டன் வான்வெளி தொழில்நுட்ப நிபுணர், ரிச்சர்ட் காட்ஃப்ரே. அவர் விமானம் மாயமாகியிருக்கக் கூடும் என்ற இடத்தை மேலும் குறிப்பாகக் கண்டறிந்துள்ளதாகக் கூறுகிறார். சில சிற்றலை வானொலி சோதனைகள் மூலம் அவர் இதைச் செய்துள்ளார். ட்ரோன்கள் கொண்டு கவனத்துடன் அந்தக் குறிப்பிட்ட பகுதியைப் பல முறை தேடிப் பார்க்க வேண்டும்.

“ஒரு ஆண்டில் 1.7 பில்லியன் தரவுகள் பதிவு செய்யப்படுகின்றன. அதாவது உலகம் முழுவதும் விரிந்து கிடக்கும் ஒரு மீன் வலையை கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்த வலை முழுவதும் ரேடியோ சிக்னல்கள் உள்ளன. ஒவ்வொரு முறையும் ஒரு விமானம் செல்லும் போது, இந்த வலையில் ஒரு துளை ஏற்படும். அதை வைத்து அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்தில் எந்த இடத்தில் இருந்தது என என்னால் கூற முடியும். தெற்கு இந்திய பெருங்கடல் மீது பறந்த ஆறு மணி நேரங்களில், MH370யினால் ஏற்பட்ட 313 முரண்பாடுகள் 95 வெவ்வேறு நேரங்களில் பதிவாகியுள்ளது. அதை வைத்து விமானம் வீழ்ந்த பகுதியை மேலும் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்,” என்கிறார்.

ரிச்சர்ட் சொல்வது சரியான வழியா என்று கண்டறிய லிவர்பூல் பல்கலைகழகம் சோதனை செய்து வருகிறது. இந்த ஆண்டின் இறுதியில் அதன் முடிவுகள் தெரிய வரும்.

மலேசிய போக்குவரத்து அமைச்சர் கொடுத்த வாக்குறுதிகள் நம்பிக்கை அளிப்பதாக இருப்பதாக குடும்பங்கள் தெரிவிக்கின்றன. மலேசிய அரசு இதுவரை கொண்டிருந்த அணுகுமுறையில் இருந்து இந்த வாக்குறுதி மாறுபட்டதாக இருக்கிறது. ஆனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதேபோன்று அவர்களுக்குப் பலமுறை நம்பிக்கைகள் மட்டுமே கிடைத்துள்ளன.

“எனக்கு விமானத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்று கொன்சாலெஸ் கூறுகிறார். “அப்போதாவது எனது கணவரின் ஆன்மா சாந்தியடையும். இதுவரை நான் அவரது நினைவாக எதுவும் செய்யவில்லை. என்னால் செய்ய முடியாது, ஏனென்றால் கண்களுக்குப் புலப்படும் எதையும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை” என்றார்.

நினைவு தின நிகழ்வில் ஒரு பெரிய பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் மக்கள் தங்கள் நம்பிக்கையை, துயரத்தை, சோகத்தைப் பகிர்ந்து கொள்ள முடியும்.

பெரிய சீன எழுத்துகளில், அந்தப் பலகையில் எழுதுவதற்காக கீழே அமர்ந்த லி, அந்த பலகையைப் பார்த்து அழுதுகொண்டே நின்றார்.

அதில், “மகனே, பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. உனது அம்மாவும் அப்பாவும் உன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறோம். மார்ச் 3, 2024,” என்று எழுதியிருந்தது.

https://www.bbc.com/tamil/articles/cy9z80j9g3xo

ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் இஸ்ரேலிய குடியிருப்புகளை விஸ்தரிப்பது போர்க் குற்றம் - வோல்கர் டர்க்

2 weeks 3 days ago

Published By: SETHU   11 MAR, 2024 | 10:48 AM

image
 

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பலஸ்­தீன பிராந்­தி­யங்­களில் இஸ்­ரே­லிய குடி­யி­ருப்­பு­களை விஸ்­த­ரிப்­பது போர்க் குற்­ற­மாகும் என ஐ.நா.வின் மனித உரி­மைகள் உயர்ஸ்­தா­னிகர் வோல்கர் டர்க் கூறி­யுள்ளார். 

ஜெனி­வா­வி­லுள்ள ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வைக்கு கடந்தவாரம்  அளித்த அறிக்­கை­யொன்­றி­லேயே வோல்கர் டர்க் இவ்­வாறு கூறி­யுள்ளார். 

மேற்குக் கரையின் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பகு­தி­களில் இஸ்­ரேலின் சட்­ட­வி­ரோத குடி­யி­ருப்பு நிர்­மா­ணங்கள் வேக­மாக அதி­க­ரித்து வரு­கின்­றன என அவர் கூறினார்.

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பிராந்­தி­யங்­களில்  குடி­யி­ருப்­பு­களை உரு­வாக்­கு­வதும் விரி­வாக்­கு­வதும் இஸ்ரேல் தனது சொந்த ­மக்­களை ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பகு­தி­க­ளுக்கு இட­மாற்­று­வ­தற்கு சம­மாகும். 

இது போர்க் குற்­றத்­துக்கு ஒப்பானது. இதில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை குற்றப் பொறுப்­பா­ளி­க­ளாக்கக் கூடும் என அவர் கூறினார். 

மேற்குக் கரையின் மாலே அடுமின், இப்ரத், கேதார் பகு­தி­களில் மேலும் 3,476 வீடு­களை நிர்­மா­ணிக்கும் இஸ்­ரேலின் திட்­ட­மா­னது சர்­வ­தேச சட்­டங்­க­ளுக்கு முற்­றிலும் முர­ணா­ன­தாகும் என அவர் கூறினார். 

மேற்­படி யூதக் குடியிருப்புகளை நிர்மாணிக்கும் திட்­டத்துக்கு ஸ்பெய்ன், பிரான்ஸ் ஆகியனவும் கடந்த வெள்ளிக்கிழமை கண்டனம் தெரி­வித்திருந்தன.

https://www.virakesari.lk/article/178395

சீனாவுடனான தனது எல்லையை வட கொரியா வேகமாக மூடுவது ஏன்? என்ன பிரச்னை?

2 weeks 4 days ago
வடகொரியா

பட மூலாதாரம்,REUTERS

2 மணி நேரங்களுக்கு முன்னர்

கோவிட் பெருந்தொற்றின்போது வடகொரியா, சீனாவுடனான தனது வடக்கு எல்லையை மூடியது. அதன்பின் சில மாதங்களுக்கு வர்த்தக நோக்கங்களுக்காக அது திறக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த எல்லை மீண்டும் மூடப்படுகிறது.

ஏன்? என்ன நடக்கிறது வடகொரியாவில்?

சீனாவுடனான தனது வடக்கு எல்லையை மூடுவதற்கு கோவிட்-19 நேரத்தை வட கொரியா பயன்படுத்தியது.

வடகொரியாவில் மக்கள் மீதான அடக்குமுறை அதிகரித்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சீனா மற்றும் வடகொரியா இடையே மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனுடன் சீனாவுடனான வடகொரியாவின் வர்த்தகமும் குறைந்துள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகம், வட கொரியாவை தனிமைப்படுத்துவதையும், அங்கு அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடியையும் முடிவுக்குக் கொண்டுவர உதவுமாறு ஐ.நா. உறுப்பு நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

சமீப காலமாக, வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், எல்லை பாதுகாப்பை கடுமையாக அமல்படுத்தி வருகிறார். எல்லையில் மக்கள் நடமாட்டத்தை நிறுத்த கோவிட்-19 காலகட்டத்தைப் பயன்படுத்தினார்.

இருப்பினும், சீனாவுடனான வர்த்தகத்தை அதிகரிக்க சில மாதங்களுக்கு முன்பு இது மீண்டும் திறக்கப்பட்டது.

 
சீனா- வட கொரியா

பட மூலாதாரம்,REUTERS

482கி.மீ நீளமுள்ள புதிய வேலி

இது சம்பந்தமாக, 'புல்லட்டை விட வலிமையான பயங்கரவாத உணர்வு: வட கொரியாவின் மூடல் 2018-2023' என்ற அறிக்கையில், கோவிட் -19 தொற்றுநோயின் போது மக்களிடம் அதிகப்படியான மற்றும் தேவையற்ற கண்டிப்பு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பான செயற்கைக்கோள் படங்கள், சீனாவுடனான எல்லையில் 482கி.மீ. நீளத்துக்கு வடகொரிய அதிகாரிகள் வேலி அமைப்பதைக் காட்டுகின்றன.

இது தவிர, ஏற்கனவே நிறுவப்பட்ட 260கி.மீ. நீளமுள்ள வேலி மேலும் நீட்டிக்கப்படுகிறது.

எல்லையில் வேலி அமைக்கும் பணியுடன், மக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதில், மக்களை சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்ல எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டது.

எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் 20 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்தது. காவலர் பணியிடங்களின் எண்ணிக்கை 38-இல் இருந்து 650 ஆக உயர்ந்துள்ளது.

 
மக்கள் மீது அடக்குமுறையை ஏவிய வடகொரியா

கிம் ஜாங் உன் இத்தகைய கொள்கைகளை நிறுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மூத்த கொரியா ஆராய்ச்சியாளர் லினா யுன் கூறுகிறார்.

மக்களை ஒடுக்கும் அவர்களின் நடவடிக்கைகளால், வடகொரியா மிகப்பெரிய சிறைச்சாலையாக மாறியுள்ளது என்று அவர் கூறுகிறார்.

வடகொரியாவில் இருந்து தப்பி ஓடிய பெண்ணுக்கு அங்கு வசிக்கும் அவரது உறவினர் தொலைபேசியில் அரிசி மற்றும் கோதுமையை வெளியில் இருந்து நாட்டிற்கு கொண்டு வர முடியாது என தெரிவித்துள்ளார்.

வடகொரியாவில் வசிக்கும் அவரது உறவினர் பெண், “இப்போது ஒரு எறும்பு கூட எல்லையை கடக்க முடியாது,” என்றார்.

இதுபோன்ற கண்டிப்பால் வடகொரியாவை விட்டு வெளியேறும் மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு பணம் அனுப்ப முடியாமல் தவிப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் வடகொரியா மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

வட கொரியாவை விட்டு வெளியேறிய மற்றொரு நபர் 2022-இன் இறுதியில் தனது நாட்டில் வசிக்கும் தனது குடும்ப உறுப்பினர்களைக் குறித்துப் பேசினார். உலகின் பல பகுதிகளில் கோவிட் தொடர்பான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலகட்டம் இது.

அந்த நபர், "கோவிட் நோயை விட மக்கள் பசியால் இறப்பதற்கு அதிகம் பயப்படுகிறார்கள் என்று எனது குடும்ப உறுப்பினர்கள் சொன்னார்கள்," என்றார்.

 
மக்கள் எப்படி இருக்கிறார்கள்?
வட கொரியா சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

வடகொரியாவின் மிகக் கண்டிப்பான நடைமுறையால், தென்கொரியாவிடம் இருந்து பணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வடகொரியாவில் வசிக்கும் தங்கள் உறவினர்களை தென்கொரியா மக்கள் சந்திக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கோவிட்-க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது, பத்து தரகர்களில் ஒருவர் மட்டுமே வெளியில் இருந்து பணம் அனுப்ப முடியும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் மதிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், 2017-ஆம் ஆண்டு வடகொரியாவின் அணுசக்தித் திட்டத்திற்குப் பிறகு விதிக்கப்பட்ட ஐ.நா.வின் பொருளாதாரத் தடைகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த வாழ்க்கைத் தரத்திற்கான மக்களின் உரிமைகளைப் பறித்ததால் இந்த மரணங்கள் நிகழ்ந்தன. மக்கள் உணவு, சுகாதார வசதிகள் கூட இல்லாமல் தவித்தனர்.

"இது பெண்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல பெண்கள் தங்கள் குடும்பத்திற்காக சம்பாதித்தனர், ஆனால் கட்டுப்பாடுகள் காரணமாக, சந்தையில் அவர்களின் செயல்பாடுகள் குறைந்துவிட்டன," என்று அறிக்கை கூறுகிறது.

வட கொரியாவில் தொடர்புகளைக் கொண்ட முன்னாள் தொழிலதிபர் ஒருவர், தனது உறவினர்கள் நண்டுகள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களைச் சாப்பிட்டு வாழ வேண்டும் என்றும், சீனாவுடனான முறைசாரா வர்த்தகம் காரணமாக உயிர்வாழ முடிந்தது என்றும் கூறினார்.

ஆனால் கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக இந்த வணிகமும் மூடப்பட்டது. இதன் காரணமாக, இந்த தொழிலதிபர் தனது பொருட்களை வடகொரியாவில் மிகக் குறைந்த விலைக்கு விற்க வேண்டியிருந்தது.

 
சீனாவில் வடகொரிய மக்கள் சுரண்டப்படுகிறார்களா?
வட கொரியா- சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

சீனாவில் பணிபுரியும் வடகொரியர்கள் பணம் கிடைக்காததால் வன்முறையில் ஈடுபட்டதாக கடந்த மாதம் செய்தி வெளியானது.

ஆயுத உற்பத்திக்காக வடகொரிய அரசுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது என்பது அவரது குற்றச்சாட்டு.

வட கொரிய மக்கள் தங்களது எதிர்ப்புகளை ஒருபோதும் வெளிப்படையாக அறிவிப்பதில்லை, ஏனெனில், அரசாங்கம் அதன் குடிமக்களை இறுக்கமாகக் கட்டுப்படுத்துகிறது மற்றும் பொது மறுப்பு மரண தண்டனைக்குரியது.

வன்முறைச் செய்திகள் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், வெளிநாட்டில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான வட கொரியர்களின் நல்வாழ்வு குறித்த கவலையை எழுப்பியுள்ளது.

சீனாவில் பணிபுரிந்த வட கொரிய தொழிலாளி ஒருவரிடம் பிபிசி பேசியது, அவர் போராட்டம் நடத்தியவர்களின் சம்பளம் நிறுத்தப்பட்டதாகக் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/c517xj7krxxo

முதன்முறையாகப் பதவி விலகுவது குறித்துப் பேசிய துருக்கியே அதிபர்

2 weeks 5 days ago
முதன்முறையாகப் பதவி விலகுவது குறித்துப் பேசிய துருக்கியே அதிபர்
 
முதன்முறையாகப் பதவி விலகுவது குறித்துப் பேசிய துருக்கியே அதிபர்

(படம்: Reuters)

 
 

துருக்கியே அதிபர் ரிச்சப் தாயிப் எர்துவான் (Recep Tayyip Erdogan) முதன்முறையாகப் பதவி விலகுவது குறித்துப் பொது இடத்தில் பேசியிருக்கிறார்.

இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல்களே தமக்கு இறுதியானவையாக இருக்கும் என்றார் அவர்.

 

70 வயதாகும் திரு. எர்துவான், சென்ற வருடம் ஐந்தாண்டு காலத்துக்கு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

20 ஆண்டுகளாகத் துருக்கியே அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் அவர், பதவியைக் கைவிடமாட்டார் என்று விமர்சகர்கள் குறைகூறுகின்றனர்.

பனாமா கால்வாய் வறண்டு போகும் நிலை: 20 லட்சம் டன் சரக்கு தேக்கம் - ஆபத்தில் உலக வர்த்தகம்

2 weeks 5 days ago
போகும் நிலை: 20 லட்சம் டன் சரக்கு தேக்கம் - ஆபத்தில் உலக வர்த்தகம்
பனாமா கால்வாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

உலகத்தின் முக்கிய கடல் வழிகளுள் ஒன்றான பனாமா கால்வாய்க்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,மைக்கேல் ஃப்ளூரி
  • பதவி,வட அமெரிக்க வணிக செய்தியாளர், பனாமா
  • 7 மார்ச் 2024
    புதுப்பிக்கப்பட்டது 8 மார்ச் 2024

உலகத்தின் மிக முக்கியமான செயற்கை கடல் நீரிணைப்புகளுள் ஒன்றான பனாமா கால்வாய்க்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தண்ணீர் இல்லாமல் இந்தக் கால்வாய் வறண்டு போகும் நிலை உருவாகி இருப்பதாக அஞ்சப்படுகிறது.

சூயஸ் கால்வாய் போலன்றி, அமெரிக்க கண்டத்தின் பனாமா கால்வாய் காதுன் எனும் நன்னீர் ஏரியின் மூலம் நிரப்பப்பட்டு செயல்பட்டு வரும் கால்வாய் ஆகும். இந்நிலையில் சமீப காலமாக அந்த ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பனாமா கால்வாயின் அதிகாரபூர்வ நீரியல் நிபுணரான நெல்சன் குவேரா, காதுன் ஏரியின் நீர் மட்டம் 5 அடி குறைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஏரியை உருவாக்கும்போது அங்கிருந்த காடுகளின் மரங்கள் பாதியளவு மட்டுமே வெட்டப்பட்டன. ஒவ்வொரு முறை இந்த மாதம் வரும்போதும் அவற்றில் சில தண்ணீருக்கு வெளியே எட்டிப் பார்ப்பதுண்டு.

ஆனால், இன்னும் முழுமையாக கோடைக் காலம்கூட தொடங்காத நிலையில் இப்போதே ஒரு காடளவிற்கான மரங்கள் நீர் மட்டத்துக்கு மேலே நீட்டிக் கொண்டிருப்பதாகவும் பனாமா கால்வாயின் அதிகாரபூர்வ நீரியல் நிபுணர் நெல்சன் குவேரா தனது பயணத்தின்போது கண்டறிந்துள்ளார்.

 
பனாமா கால்வாய்
படக்குறிப்பு,

பனாமா கால்வாயின் அதிகாரபூர்வ நீரியல் நிபுணர் நெல்சன் குவேரா

பனாமா கால்வாய் குறைந்த வரத்து கொண்ட மழைநீரையே சார்ந்துள்ளது. இந்நிலையில் கால்வாயின் 110 வருட வரலாற்றில் இரண்டாவது முறையாக குறைந்த மழையும், வானிலையும் அதன் வறண்ட ஆண்டுக்கு காரணமாக அமைந்துள்ளன.

கடந்த அக்டோபர் தான் அதன் வரலாற்றில் முதல் வறண்ட மாதம். அப்போது இயல்பைவிட 41% குறைவாக மழை பொழிந்தது. இது அமெரிக்க - பசிபிக் வழித்தடம் வாயிலாக பயணிக்கும் 270 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்தது.

இதற்காக கால்வாய் நிர்வாகம் ஒரு சில நீர்சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. குறிப்பாக ஒரு சில கப்பல்களே ஒரு நாளில் கால்வாயை கடக்க முடியும் என்று அது விதியை உருவாக்கியது. காரணம் கால்வாயை இயக்க ஏரியின் தண்ணீரே தேவை.

இதைத் தொடர்ந்து ஒரு நாளைக்கு கால்வாயை கடக்கும் கப்பல்களின் எண்ணிக்கை 36 இலிருந்து 24ஆக குறைக்கப்பட்டது. அதிலும் எடைக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டதால், ஒவ்வொரு கப்பலும் குறைந்த அளவு சரக்கையே கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

இந்த தேக்கம் உலக வர்த்தகத்தில் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

 
பனாமா கால்வாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பனாமா கால்வாய்

என்ன சிக்கல் ஏற்படும்?

பொதுவாக 5 சதவீத உலக கடல்சார் வர்த்தகம் மற்றும் 40% அமெரிக்க கண்டைனர்கள் அட்லாண்டிக் - பசிபிக் வழித்தடத்தையே பயன்படுத்துகின்றன. எனவே, இந்த வழித்தடம் வறண்டு விட்டால், கப்பல் நிறுவனங்கள் வேறு வழித்தடத்தை கண்டுபிடிக்க வேண்டிய தேவை வரும். இது நேரச்செலவை ஏற்படுத்துவது மட்டுமின்றி, பண விரயத்தையும் அதிகப்படுத்தும்.

மேலும் தண்ணீர் வறட்சி உலக வர்த்தகத்திற்கு மட்டும் பாதிப்பல்ல. பனாமா கால்வாய் நிர்வாகம்தான், அந்நாட்டின் பாதி மக்கள்தொகைக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. எனவே, தொடர் தண்ணீர் வறட்சி இதிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆனால், தற்போதைக்கு கால்வாய் நிர்வாகம் இந்த தண்ணீர் இன்னும் ஒரு நூற்றாண்டு தாக்குபிடிப்பதற்கு தேவையான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

பனாமா கால்வாய் ஆணையத்தின் மூத்த அதிகாரியான இலியா எஸ்பினோ டி மரோட்டா, கால்வாயின் பிரச்னையை தீர்ப்பதற்கான முயற்சியில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 
பனாமா கால்வாய்
படக்குறிப்பு,

பனாமா கால்வாய் ஆணையத்தின் மூத்த அதிகாரி இலியா எஸ்பினோ டி மரோட்டா

பனாமா கால்வாய் சிக்கலுக்கு என்ன தீர்வு?

இதுகுறித்து அவர் பேசுகையில், “இது ஒரு தொடர்ச்சியான பிரச்னையாக இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. போக்குவரத்து குறைப்பு அல்லது எடைக்குறைப்பு ஆகியவற்றையும் நாங்கள் விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.

இந்த நிர்வாகம் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்துவதற்கான 8.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிலையான திட்டங்களை வகுப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பூமியில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட, இந்த திட்டங்கள் இது போன்ற முக்கிய வழித்தடங்களை உயிர்ப்போடு வைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.

காலநிலை மாற்றத்தை குறிப்பிட்டு பேசிய இலியா எஸ்பினோ டி மரோட்டா, “பனாமா மிக அதிக மழை பெய்யும் ஒரு நாடு. ஆனால், சமீபத்தில் பல இடங்களை போலவே இங்கும் மழைப் பொழிவு குறைந்துள்ளதை பார்க்க முடிகிறது. எனவே நிச்சயமாக நாம் எதிர்காலத்தை நோக்கி தயாராக வேண்டும்” என்கிறார்.

அதில் முக்கியமான ஒன்று தண்ணீரை சேமிப்பது.

கடல் மட்டத்திற்கு மேலே உள்ள வாயில்கள் வழியாக காதுன் ஏரி மற்றும் சிறிய அலாஜுவேலா ஏரியின் தண்ணீரின் மூலம் படகுகளை கொண்டு செல்வதே பனாமா கால்வாயின் பணியாகும்.

ஒவ்வொரு படகும் அதை கடப்பதற்கு 5 கோடி கேலன் தண்ணீர் தேவைப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு கால்வாயை புதிப்பித்த போது 60% தண்ணீரை சேமிக்கும் வகையிலான நியோ-பனாமாக்ஸ் பூட்டுகள் மாற்றப்பட்டன.

ஆனாலும், பழைய பனாமாக்ஸ் பூட்டுகளும் செயற்பாட்டில் தான் உள்ளன. அவற்றை மாற்றியமைப்பது பெரிய திட்டம். இதற்கிடையில், ஒரு வாயிலில் இருந்து மற்றொரு வாயிலுக்கு அதே நீரை பயன்படுத்துவதற்கான குறுக்கு வழி ஒன்றையும் பனாமா கால்வாய் நிர்வாகம் கண்டுபிடித்தது.

குறுக்கு வழியில் நீர் நிரப்பும் இந்த திட்டம் மூலம் தினசரி 6 கப்பல்கள் இந்த வழியை கடக்கும்போது பயன்படுத்தும் அளவிற்கான தண்ணீரை சேமிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

2016இல் புதிய பூட்டுகள் மாற்றப்பட்டதில் இருந்து, நீர்தேக்கங்களை அமைப்பது குறித்து பனாமா கால்வாய் நிர்வாகம் சிந்தித்து வருகிறது.

 
பனாமா கால்வாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பனாமா கால்வாயில் சிறிய கப்பல்கள் நிற்கும் காட்சி

மழைப்பொழிவு மாதங்களில் அதிக நீரை சேமிக்கவும், வறட்சி காலங்களில் தண்ணீர் விநியோகத்தை அதிகரிக்கவும் அந்த நிர்வாகம் அருகில் உள்ள இந்தியோ நதியில் அணைக்கட்ட விரும்புகிறது. மேலும் காதுன் ஏரிக்கு பைப் வழியாக நன்னீரை வழங்கவும் அது திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் கப்பல் போக்குவரத்தை ஒரு நாளுக்கு 12 முதல் 15 வரை அதிகரிக்கும்.

இந்த திட்டத்தை முன்னெடுப்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. காரணம் இந்த திட்டத்திற்கு இன்னும் காங்கிரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை. அப்படி கிடைத்தாலும் கூட இதன் கட்டுமானம் முடிய சில ஆண்டுகள் ஆகும்.

இதில் மற்றுமொரு திட்டம் என்னவென்றால் உப்புநீக்கும் ஆலைகளை உருவாக்குவது. தொடர் மழையின்மை ஏரிகள் மற்றும் நதிகளை அதிக உப்புத்தன்மை வாய்ந்ததாக மாற்றியுள்ளது. இதனால், நாட்டின் முக்கியமான குடிநீர் ஆதாரங்களை பராமரிப்பது மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளது. அதே சமயம் இந்த திட்டம் விலை உயர்ந்தது மட்டுமின்றி கடல்நீரில் இருந்து உப்பை நீக்குவதற்கு அதிகளவிலான ஆற்றல் தேவைப்படுகிறது.

இவர்களது திட்டப்பட்டியலில் செயற்கை மழையை வர வைப்பதும் கூட உள்ளது. மேகக்கூட்டங்களில் மழை உருவாக்கும் வேதிப்பொருட்களை தூவி மழை வருவிக்கும் மேக விதைப்பு முறையே இந்த செயற்கை மழை. இதை கேட்க அதிநவீன முறையாக தோன்றினாலும், இது 1940ஆம் ஆண்டிலிருந்தே பின்பற்றப்பட்டு வரும் ஒரு முறைதான்.

இந்த ஆண்டு ஏற்கனவே மோசமடைந்துள்ள உலக வர்த்தகம், மேலும் மோசமாகாமல் இருக்க வேண்டுமானால், இதற்கு உடனே தீர்வு கண்டறிய வேண்டும். தற்போது பனாமா கால்வாய் வழியாக நடக்கும் வர்த்தகத்தின் அளவை அதன் உச்ச அளவோடு ஒப்பிட்டால், 49% குறைந்துள்ளது.

இதனால் தங்களின் தினசரி செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் அகுன்சா கப்பல் நிறுவனத்தின் பனாமா கிளை பொது மேலாளர் ஜோஸ் செர்வாண்டஸ் . பனாமா கால்வாயில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக ஜவுளிப் பொருட்களில் இருந்து உணவுகள் உள்ளிட்ட இரண்டு மில்லியன் டன் சரக்குகள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வேறேதும் நல்ல குறுக்குவழிகள் இல்லாததே பிரச்சனை என்கிறார் அவர்.

 
பனாமா கால்வாய்
படக்குறிப்பு,

அகுன்சா கப்பல் நிறுவனத்தின் பனாமா கிளை பொது மேலாளர் ஜோஸ் செர்வாண்டஸ்

பனாமா கால்வாய்க்கு மாற்று இருக்கிறதா?

செங்கடல் பிரச்னை எழுவதற்கு முன்பு, ஆசியாவிலிருந்து சில சரக்கு கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியாக திருப்பி விடப்பட்டன. அது பாதுகாப்பு குறைந்த தேர்வாக இருப்பதன் காரணமாக, பனாமா முழுவதும் ரயில் மற்றும் சாலை போக்குவரத்துக்கான தேவை அதிகரித்துள்ளது.

ஆனால், கப்பல்களில் இருந்து ரயில்கள் மற்றும் வாகனங்களில் சரக்குகளை இறக்கி ஏற்றுவதற்கே அதிக செலவுகள் ஆவதாக கூறுகிறார் ஜோஸ் செர்வாண்டஸ். “அந்த செலவுகள் அனைத்தும் வாடிக்கையாளர் மீதுதான் சுமத்தப்படுகிறது" என்றும் கூறுகிறார் அவர்.

எதிர்பார்த்தபடி மழை மே மாதத்தில் வந்தால், கால்வாயை கடக்கும் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது நிர்வாகம். ஆனால், அது வெறும் தற்காலிக தீர்வு மட்டுமே.

மழைபொழிவதில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை உலக வர்த்தகம் மற்றும் பனாமா கால்வாயின் நீண்ட எதிர்காலத்தில் தாக்கம் செலுத்தும் என்பதற்கான ஒரு நினைவூட்டல் இது.

https://www.bbc.com/tamil/articles/cnl78krx8xgo

நேட்டோவில் உத்தியோகபூர்வமாக இணைந்தது சுவீடன்

2 weeks 6 days ago

Published By: SETHU    08 MAR, 2024 | 11:41 AM

image
 

நேட்டோ அமைப்பில் சுவீடன் நேற்றிரவு உத்தியோகபூர்வமாக இணைந்து  கொண்டது. நேட்டோவின் 32 ஆவது அங்கத்துவ நாடு சுவீடன் ஆகும். 

நீண்டகாலம் அணிசேரா நாடாக விளங்கிய சுவீடன், உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் பின்னர், நேட்டோவில் இணைவதற்கு விண்ணப்பித்தது. 

எனினும், நேட்டோவில் சுவீடன் இணைவதற்கான சம்மதத்தை தெரிவிப்பதற்கு துருக்கியும் ஹங்கேரியும் தயங்கிவந்தன. 

பின்னர் இவ்விரு நாடுகளும் தமது சம்மத்தை தெரிவித்த நிலையில், நேட்டோவில் சுவீடன் இணைந்துகொண்டது.

நேட்டோவில்  சுவீடன் இணைந்ததை வரவேற்றுள்ள சுவீடன் பிரதமர் ஊல்வ் கிறிஸ்டேர்சன், இது சுதந்திரத்துக்கான ஒரு வெற்றி என கூறியுள்ளார். 

https://www.virakesari.lk/article/178238

காஸாவில் தற்காலிக துறைமுகமொன்றை அமெரிக்கா நிர்மாணிக்கும்: பைடன்

2 weeks 6 days ago

Published By: SETHU    08 MAR, 2024 | 11:10 AM

image

மனிதாபிமான உதவிப் பொருட்களை விநியோகிப்பற்காக காஸா கடற்கரையோரத்தில் துறைமுகம் ஒன்றை அமெரிக்கா நிர்மாணிக்கும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரவித்துள்ளார். 

அமெரிக்க காங்கிரஸில்  வியாழக்கிழமை (07) நிகழ்த்திய வருடாந்த உரையின்போது ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாறு கூறினார். 

இத்தற்காலிக துறைமுகமானது, பலஸ்தீனர்களுக்கான மனிதாபிமான உதவிகளை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

காஸாவுக்கு மேலும் அதிகளவு விநியோங்களை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி பைடன் கூறினார்.

அமெரிக்க காங்கிரஸில்  வியாழக்கிழமை நிகழ்த்திய வருடாந்த உரையின்போது ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாறு கூறினார். 

கஸாவிலுள்ள மக்களில் கால்வாசிப் பேர் பஞ்சத்தை எதிர்கொள்வதாக ஐநா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/178234

சர்வதேச மகளிர் தினம் 2024

2 weeks 6 days ago
சர்வதேச மகளிர் தினம் 2024: வரலாறு, போராட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் - முழு விவரம்
சர்வதேச மகளிர் தினம் 2024

பட மூலாதாரம்,GETTY IMAGES

7 மார்ச் 2023
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக ஊடகங்களில் சிறப்புச் செய்திகளும் தகவல்களும் பரவலாக இடம்பெறும் அல்லது நண்பர்கள், தொழில்முறை வாழ்க்கையில் இது குறித்து அதிகம் பேர் பேசுவதைக் கேட்டிருக்கலாம்.

ஆனால் இந்த நாள் எதற்காக? இது அடிப்படையில் ஓர் கொண்டாட்டமா அல்லது போராட்டமா? மகளிர் தினத்தை போல சர்வதேச ஆண்கள் தினம் என ஒன்று உள்ளதா? இந்த ஆண்டு உலகளவில் என்ன நிகழ்வுகள் நடக்கும்?

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகெங்கிலும் உள்ள மக்கள் மார்ச் 8ஆம் நாளை பெண்களுக்கான சிறப்பு நாளாகக் குறிக்கின்றனர்.

ஏன் என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

 
கிளாரா ஜெட்கின்

பட மூலாதாரம்,CORBIS / HULTON DEUTSCH

படக்குறிப்பு,

கிளாரா ஜெட்கின் 1910இல் சர்வதேச மகளிர் தினத்தை முதல் முறையாக அறிவித்தார்.

மகளிர் தினம் எப்போது தொடங்கியது?

சர்வதேச மகளிர் தினம், சுருக்கமாக ஐடபிள்யுடி என்றும் அழைக்கப்படுகிறது. இது தொழிலாளர் இயக்கத்திலிருந்து வளர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட வருடாந்திர நிகழ்வாக மாறியது.

1908இல் 15,000 பெண்கள் நியூயார்க் நகரத்தின் வழியாக குறுகிய வேலை நேரம், சிறந்த ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கோரி அணிவகுத்துச் சென்றபோது அதன் விதைகள் வேரூன்றப்பட்டன. ஒரு வருடம் கழித்து, அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி முதல் தேசிய மகளிர் தினத்தை அறிவித்தது.

இந்த நாளை சர்வதேசமயமாக்க வேண்டும் என்ற எண்ணம் கம்யூனிஸ்ட் ஆர்வலர் மற்றும் பெண்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் கிளாரா ஜெட்கின் என்ற பெண்ணிடமிருந்து வந்தது.

1910இல் கோபன்ஹேகனில் நடந்த உழைக்கும் பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் அவர் இந்த யோசனையை அவர் பரிந்துரைத்தார். அங்கு 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் இருந்தனர். அவர்கள் அவரது ஆலோசனையை ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.

இது முதன்முதலில் 1911இல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு விழா 2011இல் கொண்டாடப்பட்டது.

எனவே இந்த ஆண்டு தொழில்நுட்ப அளவில் 111வது சர்வதேச மகளிர் தினத்தை நாம் கொண்டாடுகிறோம்.

 

1975இல் ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளை கொண்டாடத் தொடங்கியபோது அனைத்தும் அதிகாரபூர்வமாக்கப்பட்டன. அதையொட்டி ஐ.நாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் கருப்பொருள் (1996 இல்) "கடந்த காலத்தைக் கொண்டாடுதல், எதிர்காலத்திற்கான திட்டமிடல்" என்பதாகும்.

சர்வதேச மகளிர் தினம் சமூகத்திலும், அரசியலிலும், பொருளாதாரத்திலும் பெண்கள் எவ்வளவு தூரம் வந்திருக்கிறார்கள் என்பதைக் கொண்டாடும் நாளாக மாறியுள்ளது.

அதே சமயம் அன்றைய அரசியல் வேர்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் தொடர்ந்து சமத்துவமின்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்படுகின்றன.

 
மகளிர் செயல்பாட்டாளர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

2022இல் மெக்சிகோவின் டோலுகாவில் பாலின வன்முறைக்கு எதிரான சர்வதேச மகளிர் தின ஆர்ப்பாட்டத்தில் பெண் செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்

மார்ச் 8 ஏன் தேர்வானது?

சர்வதேச மகளிர் தினத்துக்கான கிளாராவின் யோசனைக்கு நிலையான தேதி எதுவும் ஆரம்பத்தில் இருந்திருக்கவில்லை.

1917இல் ரஷ்ய பெண்கள் "உணவும் அமைதியும்" என்றபெயரில் புரட்சிப் போராட்டத்தைத் தொடங்கும்வரை இந்த தேதி இந்நாளில்தான் கொண்டாடப்பட வேண்டும் என்பது முறைப்படுத்தப்படவில்லை - அவர்களின் நான்கு நாட்கள் போராட்டம், ட்சார் பதவி விலகும் கட்டாயத்தை தூண்டியது. மேலும், தற்காலிக அரசாங்கம் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியது.

ரஷ்யாவில் அப்போது பயன்பாட்டில் இருந்த ஜூலியன் நாட்காட்டியில் பெண்கள் வேலைநிறுத்தம் தொடங்கிய தேதி பிப்ரவரி 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆக இருந்தது. கிரிகோரியன் நாட்காட்டியில் இந்த நாள் மார்ச் 8ஆம் தேதி ஆக இருந்தது. அதுவே மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.

 
மகளிர் தினம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஊதா நிறம் பெரும்பாலும் ஐடபிள்யூடி உடன் தொடர்புடையது. இந்த நிறம், 'நீதி மற்றும் கண்ணியத்தை' குறிக்கிறது.

மகளிர் தினத்தில் மக்கள் ஏன் ஊதா நிற ஆடையை அணிகிறார்கள்?

ஊதா, பச்சை, வெள்ளை ஆகியவை ஐடபிள்யூடி நிறங்கள் என்று சர்வதேச மகளிர் தின இணையதளம் தெரிவித்துள்ளது.

"ஊதா நீதி மற்றும் கண்ணியத்தை குறிக்கிறது. பச்சை நம்பிக்கையை குறிக்கிறது. வெள்ளை தூய்மையை பிரதிபலிக்கிறது.

ஒரு சர்ச்சைக்குரிய கருத்து என்றாலும் நிறங்கள் 1908இல் பிரிட்டனில் உள்ள பெண்கள் சமூக மற்றும் அரசியல் ஒன்றியத்தில் (டபிள்யூஎஸ்பியு) உருவானது," என்று அவர்கள் கூறுகிறார்கள்.

 
சர்வதேச ஆண்கள் தினம் உள்ளதா?

உண்மையில், ஆண்களுக்கான தினம், நவம்பர் 19 என இருக்கவே செய்கிறது.

ஆனால் இது 1990களில் இருந்து மட்டுமே குறிக்கப்பட்டது. இந்த தினத்தை ஐ.நா அங்கீகரிக்கவில்லை. பிரிட்டன் உட்பட உலகம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் மக்கள் இதை கொண்டாடுகிறார்கள்.

ஏற்பாட்டாளர்களின் கூற்றுப்படி, "ஆண்கள் அவர்களுடைய குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு கொண்டு வரும் நேர்மறையான மதிப்பை" இந்த தினம் கொண்டாடுகிறது. மேலும் நேர்மறையான முன்மாதிரிகளை முன்னிலைப்படுத்தவும் ஆண்களின் நல்வாழ்வு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பாலின உறவுகளை மேம்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

 
மகளிர் தினம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

2022ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று யுக்ரேனில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் ஹங்கேரிக்கு வந்தடைந்தபோது, அவர்கள் மலர்களால் வரவேற்கப்பட்டனர்.

மகளிர் தினம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

சர்வதேச மகளிர் தினம் என்பது ரஷ்யா உட்பட பல நாடுகளில் தேசிய விடுமுறையாக உள்ளது. அங்கு மார்ச் 8ஆம் தேதி மூன்று அல்லது நான்கு நாட்களில் பூ விற்பனை இரட்டிப்பாகும்.

சீனாவில், மாநில கவுன்சில் அறிவுறுத்தியபடி, பல பெண்களுக்கு மார்ச் 8 அன்று அரை நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இத்தாலியில், சர்வதேச மகளிர் தினம், அல்லது லா ஃபெஸ்டா டெல்லா டோனா, மிமோசா மலர்களைக் கொடுப்பதன் மூலம் கொண்டாடப்படுகிறது. இந்த பாரம்பரியத்தின் தோற்றம் தெளிவாக இல்லை. ஆனால் இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ரோமில் தொடங்கியதாக நம்பப்படுகிறது.

அமெரிக்காவில், மார்ச் மாதம் பெண்களின் வரலாற்று மாதமாகும். இந்த நாளில் நாட்டின் அதிபர் வெளியிடும் அறிவிப்பு அமெரிக்க பெண்களின் சாதனைகளை கௌரவிக்கும் வகையில் அமைந்திருக்கும்.

மகளிர் அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சம ஊதியத்திற்காக அமெரிக்க மகளிர் கால்பந்து அணி வெற்றிகரமாக போராடியது

2024 மகளிர் தின கருப்பொருள் என்ன?

ஐக்கிய நாடுகள் சபையானது 2024 ஆம் ஆண்டிற்கான கருப்பொருளை 'பெண்களில் முதலீடு செய்யுங்கள்: முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்' என்று குறிப்பிட்டுள்ளது, அதே சமயம் இந்த ஆண்டுக்கான பரப்புரைக் கருப்பொருள் 'அனைவரையும் உள்ளடக்கும் பணியை ஊக்குவிக்கவும்' என்பதாகும்.

சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் பன்முகத்தன்மை மற்றும் அதிகாரமளித்தலின் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. இந்த பரப்புரையின் மூலம், சமூகத்தின் பல்வேறு துறைகளில் பன்முகத்தன்மை மற்றும் அதிகாரமளிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது.

மகளிர் தினம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஆப்கானிஸ்தானில் கல்வி உரிமைக்காக பெண்கள் போராடி வருகின்றனர்

நமக்கு ஏன் அவசியம்?

கடந்த ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான், இரான், யுக்ரேன், அமெரிக்கா போன்ற பல நாடுகளில் உள்ள பெண்கள் அந்தந்த நாடுகளில் போர், வன்முறை மற்றும் கொள்கை மாற்றங்களுக்கு மத்தியில் தங்கள் உரிமைகளுக்காக போராடினர்.

ஆப்கானிஸ்தானில், தாலிபான்களின் மீள் எழுச்சி மனித உரிமைகள் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது. இப்போது பெண்களுக்கு உயர்கல்வி கற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு வெளியே பெரும்பாலான வேலைகளில் ஈடுபட கட்டுப்பாடு, ஆண் துணை இல்லாமல் நீண்ட தூரம் பயணம் செய்ய தடை மற்றும் பொது இடங்களில் முகத்தை மறைக்க கட்டாயப்படுத்தப்படுவது போன்ற நிலைமை உள்ளது.

 
மாஸா அமினி

பட மூலாதாரம்,MAHSA AMINI FAMILY

படக்குறிப்பு,

மாசா அமினி தாக்கப்பட்டதாக நேரில் கண்ட சாட்சிகளின் புகார்களை இரான் போலீசார் மறுத்தனர்

இரானில், பெண்கள் தங்கள் தலைமுடியை ஹிஜாப்பால் மறைக்க வேண்டும் என்ற அந்நாட்டு ஆளுகையின் கடுமையான விதிகளை மீறியதாகக் கூறி 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி டெஹ்ரானில் அறநெறி போலீஸாரால் கைது செய்யப்பட்ட 22 வயது பெண் மாசா அமினியின் மரணம் எதிர்ப்புகளைத் தூண்டியது.

அப்போதிருந்து, பல இரானியர்கள், பெண்களுக்கான சிறந்த உரிமைகள் மற்றும் தற்போதைய அரசியல் தலைமையில் மாற்றத்துக்கு அழைப்பு விடுத்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

"பெண், வாழ்க்கை, சுதந்திரம்" என்பதே போராட்டங்களின் முழக்கமாகும். அதிகாரிகள் அவற்றை "கலவரங்கள்" என்று சித்தரித்து, வலிமையுடன் எதிர்வினையாற்றிய நடவடிக்கையில். 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

2022ஆம் தேதி பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்ய படைகள் யுக்ரேன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து, போரால் தூண்டப்பட்ட விலைவாசி உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக யுக்ரேனிலும் உலகெங்கிலும் உணவுப் பாதுகாப்பின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, வறுமை மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை ஆகியவற்றில் பாலின இடைவெளிகள் மோசமடைந்துள்ளன என்று ஐ.நா தெரிவித்தது.

https://www.bbc.com/tamil/articles/cj7ym13gke9o

சந்திரனில் அணுஉலை அமைக்க ரஷ்யா, சீனா முயற்சி

3 weeks ago

Published By: SETHU    06 MAR, 2024 | 05:08 PM

image

சந்திரனில் அணு உலையொன்றை அமைப்பது குறித்து சீனாவும் ரஷ்யாவும் ஆராய்கின்றன. 

2033 -2035 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சந்திரனில் அணுஉலை அமைப்பதற்கு இவ்விரு நாடுகளும் விரும்புவதாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரொஸ்கொஸ்மோஸின் தலைவர் யூரி பொரிசோவ் தெரிவித்துள்ளார். 

'இப்போது நாம் இத்திட்டத்தை தீவிரமாக ஆராய்கிறோம் என அவர் கூறினார். 

சந்திரனில் அணுசக்தி ஆனது. எதிர்க்கால சந்திரமண்டல குடியிருப்புகளுக்கான மின்சக்தியை அளிக்கும். சூரியத் தகடுகள் போதுமான அளவு மின்சாரத்தை வழங்க மாட்டாது என அவர் கூறினார். 

இத்திட்டம் மிக சவாலானது. மனிதர்களின் பிரசன்னமின்றி, தன்னியக்க முறையில் இது செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் பொரிசோவ் கூறினார்.

https://www.virakesari.lk/article/178094

அமெரிக்க ஜனாதிபதியை நேரலை விவாதத்திற்கு வருமாறு ட்ரம்ப் அழைப்பு!

3 weeks ago
1229228819-858x572-1-750x375.webp அமெரிக்க ஜனாதிபதியை நேரலை விவாதத்திற்கு வருமாறு ட்ரம்ப் அழைப்பு!

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை நேரலை விவாதம் ஒன்றிற்கு வருமாறு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் தலைவருடன் எந்தவொரு நேரத்திலும் நேரடி விவாதத்தில் பங்கேற்க தாம் தயாராக உள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக நேரடி விவாதங்களில் பங்கேற்பது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எதுவித கருத்தினையும் வெளியிடவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் அமெரிக்க குடியரசுக்கட்சியின் வேட்பாளர் போட்டியில் இருந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹேலி வெளியேறியதை தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த போது ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராக நிக்கி ஹேலி பதவிவகித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமெரிக்காவில் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக்டசி வேட்பாளர் ஜோபைடனுக்கு எதிராக குடியரசுகட்சியின் சார்பில் களமிறங்கவுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1372557

ரஷ்சிய ஏவுகணை தாக்குதல் - மயிரிழையில் உயிர் தப்பினார் உக்ரைன் அதிபர்.

3 weeks ago

உக்ரைனின் துறைமுக நகரான ஒடிசாவுக்கு கிறீஸ் நாட்டு அதிபருடன் விஜயம் மேற்கொண்டிருந்த உக்ரைன் அதிபர் அங்கு ரஷ்சியாவின் ஏவுகணைத் தாக்குதல்களையும் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

ரஷ்சிய ஏவுகணை இரு தலைவர்களும் சந்தித்துப் பேசிய இடத்தில் இருந்து சும்மார் 150 மீட்டர் தொலைவில் வீழ்ந்து வெடித்துள்ளது.

இருந்தாலும் இரு தலைவர்களும் உயிர்பிழைத்திருக்கின்றனர்.

இதனிடையே இத்தாக்குதல்.. உக்ரைனின் கடல் ரோன்களின் காப்பிடம் மீது நடத்தப்பட்டதாக ரஷ்சியா கூறியுள்ளது. மேலும் இலக்கு சரியாக தாக்கப்பட்டதாகவும் அறிவித்திருக்கிறது. 

உக்ரைன் கடற்படை இத்தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கிறீஸ் அதிபரோ..  சைரன் ஒலியும் கேட்டது.. ஏவுகணை வெடிப்பும் கேட்டது...நமக்கு அருகில். நமக்கு ஒளிந்து கொள்ளக் கூட போதிய அவகாசம் இருக்கவில்லை.

மேலும் கிறீஸ் அதிபர்.. இங்கு போர் என்பது ஊடகங்களில் செய்தி வாசிப்பது போல் அவ்வளவு எளிதாக இல்லை.. இது வேறொரு அனுபவம்.. செவியால் கேட்பது.. கண்ணால் காண்பது என்று தனது பயபீதியையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்த தாக்குதலை ஐரோப்பிய ஒன்றியமும் விழுந்தடிச்சு கண்டிச்சிருக்கிறது. 

Deadly explosions have rocked Ukraine's southern port city of Odesa as President Volodymyr Zelensky was meeting Greek PM Kyriakos Mitsotakis.

Ukraine's navy says five people were killed. The BBC has been told no-one from either delegation was hurt.

Mr Mitsotakis said the pair heard the sound of sirens and explosions.

Russia said it targeted a maritime drone facility in a commercial port area of the city during an attack on Wednesday.

During a joint news conference, the Greek prime minister said "we heard the sound of sirens and explosions that took place near us. We did not have time to get to a shelter."

"It is a very intense experience... It's really different to read about the war in newspapers, and to hear it with your own ears, see it with your own eyes," he added.

https://www.bbc.co.uk/news/world-europe-68492688

பெரும் ஆபத்தில் இலங்கை: அவுஸ்திரேலியாவிலிருந்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

3 weeks 1 day ago

இலங்கை பெரும் ஆபத்தில் இருப்பதாக அவுஸ்திரேலிய பொருளாதார நிபுணர்கள் தன்னிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை கடனை திருப்பிச்செலுத்தவில்லையென்றால் என்ன நடக்கும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியாது என்றும் நிபுணர்கள் எச்சரித்ததாகவும் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்து இலங்கை திரும்பிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் தலைவிதி

 

மேலும், அவுஸ்திரேலியாவிலுள்ள கன்பரா பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர்கள் இலங்கையின் தலைவிதி குறித்து ஆச்சரியம் தெரிவித்ததாகவும், ஒரு நாடு எப்படி இத்தகைய நிலையை அடைந்திருக்க முடியும் என்றும் தம்மிடம் வினவியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து அவுஸ்திரேலிய கல்வியலாளர்களுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியதாகவும், அவர்களின் சகல கருத்துக்களையும் தன்னால் திரட்ட முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பெரும் ஆபத்தில் இலங்கை: அவுஸ்திரேலியாவிலிருந்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Danger Zone In Srilanka Warrning For Australiya

 

இலங்கை மாத்திரமன்றி பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளைப் பற்றியும் அவர்களுக்கு அதிக புரிதல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையர்களுக்கு மிகவும் கடினமான பாதை இருப்பதாகவும், இந்த உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/article/danger-zone-in-srilanka-warrning-for-australiya-1709690905

செங்கடலில் முக்கிய இணைய கேபிள்கள் சேதம்; ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் இணைய சேவை பாதிப்பு

3 weeks 1 day ago

Published By: DIGITAL DESK 3   06 MAR, 2024 | 02:55 PM

image

செங்கடலில் கடலுக்கடியில் உள்ள பல தகவல் தொடர்பு கேபிள்கள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே இணைய சேவை 25 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக  தொலைத்தொடர்பு நிறுவனம் தெரிவித்துள்ளதுடன் அமெரிக்க அதிகாரியொருவரும் தெரிவித்துள்ளார்.

ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள முக்கிய வழங்குனர்களின் கடலுக்கடியில் கேபிள்கள் சேதமடைந்ததைத் தொடர்ந்து இணையச் சேவை தடைபட்டுள்ளது.

15 கேபிள்களில் நான்கு சமீபத்தில் துண்டிக்கப்பட்டதையடுத்து, போக்குவரத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட எச்.ஜி.சி  குளோபல் கம்யூனிகேஷன்ஸ் தொலை தொடர்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆசியா-ஆப்பிரிக்கா- ஐரோப்பா 1, ஐரோப்பா இந்தியா கேட்வே, சீகாம் மற்றும் டிஜிஎன் வளைகுடா உள்ளிட்ட நான்கு முக்கிய தொலைத்தொடர்பு வலையமைப்புகளின் கேபிள்கள் சேதமடைந்துள்ளன.

சேதமடைந்தமைக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.

கேபிள்கள் வேண்டுமென்றே வெட்டப்பட்டதா அல்லது கப்பல்கள் நங்கூரம் இடப்பட்டதன் மூலம் துண்டிக்கப்பட்டதா என்பதை கண்டறிய விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் தொடங்கியதை அடுத்து, செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது ஹவுத்தி கிளா்ச்சியாளா்கள் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் தங்களை ஹமாஸ் ஆதரவாளர்கள் என்று அழைத்துக்கொள்கின்றனர். இஸ்ரேலை நோக்கி செல்லும் கப்பல்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த மாதம் ஈரான் ஆதரவு ஹவுத்தி இயக்கம் கடலில் கப்பல்களைத் தாக்குவதுடன் கடலுக்கு அடியில் உள்ள கேபிள்களையும் நாசப்படுத்தக்கூடும் என யேமன் எச்சரித்தது.

மேற்கு யேமனின் செங்கடல் கடற்கரையின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த வாரம் தாங்கள் கேபிள்களை குறிவைத்து தாக்கியதை மறுத்ததோடு, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் இராணுவத் தாக்குதல்கள் ஏதேனும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என குற்றம் சாட்டியுள்ளனர்.

செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா வழியாக செல்லும் வணிகக் கப்பல்கள் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு பதிலடியாக அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் கடற்படை நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

அதன் போர்க்கப்பல்கள் செங்கடலில் பயணிக்கும் வணிகக் கப்பல்களுக்கு உதவுகின்றன. 

ஆபிரிக்க தொலைத்தொடர்பு கேபிள் ஆபரேட்டர் சீகாம் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம், "ஆரம்ப சோதனையானது பாதிக்கப்பட்ட பகுதி தெற்கு செங்கடலில் உள்ள யேமன் கடல் எல்லைக்குள் இருப்பதைக் குறிக்கிறது" என்று கூறினார்.

செங்கடலில் கடலுக்கடியில் தொலைத்தொடர்பு கேபிள்கள் துண்டிக்கப்பட்டதை பென்டகன் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/178057

ட்ரம்ப் போட்டியிடுவதை மாநிலங்கள் தடுக்க முடியாது: அமெரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு

3 weeks 2 days ago

Published By: SETHU    05 MAR, 2024 | 12:23 PM

image

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதை மாநிலங்கள் தடுக்க முடியாது என  என  அந்நாட்டு உயர்நீதிமன்றம் ஏகமனதாக தீர்ப்பளித்துள்ளது. 

2021 ஜனவரி 6 ஆம் திகதி அமெரிக்கப் பாராளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களை ஆதரித்தார் என்ற குற்றச்சாட்டின் காரணமாக, கொலராடோ மாநில குடியரசுக் கட்சி உட்கட்சித் தேர்தல் வாக்குச்சீட்டுகளில் ட்ரம்பின் பெயர் இடம்பெற முடியாது என கொலராடோ மாநில நீதிமன்றம் கடந்த டிசெம்பர் மாதம் தீர்ப்பளித்திருந்தது. 

இது தொடர்பாக மேன்முறையீட்டு வழக்கு அமெரிக்க உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. 

இந்நிலையில்,  கொலராடோ உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக 9:0 விகிதத்தில் அமெரிக்க சமஷ்டி உச்சநீதிமன்ற நீதிபதிகள் திங்கட்கிழமை (04)  தீர்ப்பளித்தனர். 

மேற்படி குற்றச்சாட்டின் கீழ் போட்டியிடுவதை தடுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு கிடையாது எனவும், அமெரிக்கப் பாராளுமன்றத்துக்கே அத்தகைய அதிகாரம் உள்ளது எனவும் அமெரிக்க உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இத்தீர்ப்பானது அமெரிக்காவுக்கான ஒரு பெரும் வெற்றி என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கொலராடோ உட்பட 15 மாநிலங்களில் குடியரசுக் கட்சியின் உட்கட்சித் தேர்தல் இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/177943

பிரான்ஸ் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமை!

3 weeks 2 days ago
spacer.png பிரான்ஸ் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமை!

பிரான்ஸில் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை வெளிப்படையாகப் பதிவு செய்த முதல் நாடாக பிரானஸ்  மாறியுள்ளது.

நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டு அமர்வில் 780 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 72 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்திருந்தமையைத் தொடர்ந்து குறித்த மசோதா  வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் மசோதா  நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பிரான்ஸ் முழுவதும்  பெண் உரிமை செயல்பாட்டாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1372228

டிரம்பிற்கு கறுப்பினத்தவர்கள் ஆதரவு என்பதை காண்பிப்பதற்கு போலி செயற்கை நுண்ணறிவு படங்கள்

3 weeks 2 days ago
டிரம்பிற்கு கறுப்பினத்தவர்கள் ஆதரவு என்பதை காண்பிப்பதற்கு போலி செயற்கை நுண்ணறிவு படங்கள் – டிரம்பின் ஆதரவாளர்கள் சர்ச்சை நடவடிக்கை 3-7.jpg

போலியான செயற்கை நுண்ணறிவு படங்களை உருவாக்கி டிரம்பின்  ஆதரவாளர்கள் கறுப்பின வாக்காளர்களை இலக்குவைத்துவருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு கறுப்பினத்தவர்கள் ஆதரவளிக்கின்றனர்  என்ற உணர்வை ஏற்படுத்தும் விதத்தில் டிரம்புடன் கறுப்பினத்தவர்கள் காணப்படும் போலிவீடியோக்கள் படங்களை  டிரம்பின் ஆதரவாளர்கள் உருவாக்குவது தெரியவந்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

2020 தேர்தலில் பைடன் வெற்றிபெறுவதற்கு கறுப்பினத்தவர்களின் ஆதரவு முக்கியமானதாக காணப்பட்ட நிலையில் டிரம்ப் தற்போது அவர்களின் ஆதரவை பெறுவதற்கான முயற்சிகளில் வெளிப்படையாக ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறான போலியான படங்கள் கறுப்பினத்தவர்களின் ஆதரவு  டிரம்பிற்குள்ளது என்பதை காண்பிப்பதற்கு பயன்படுத்தப்படுவதாக பிளக்வோட்டர்ஸ் மட்டர் அமைப்பின் ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்

இவ்வாறான படங்கள் உண்மையானவை என நான் தெரிவிக்கவில்லை என இந்த படங்களை உருவாக்கி ஒருவர் தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி டிரம்ப் ஆதரவாளர்கள் உருவாக்கும் போலி படங்கள் அமெரிக்க தேர்தலிற்கு முந்தைய புதிய போக்காக காணப்படுகின்றது.

அமெரிக்க வாக்காளர்களே இவற்றை உருவாக்கி பயன்படுத்திவருகின்றனர்.

இவ்வாறான படங்களை உருவாக்கியவர்களில் மார்க்கை குழுவினர்களும் உள்ளனர் இவர்கள் டிரம்ப் கறுப்பின பெண்களுடன் காணப்படுவது போன்ற படத்தை உருவாக்கி முகநூலில் பதிவிட்டனர்.இந்த குழுவினரை ஒரு மில்லியனிற்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்கின்றனர்.

முதல் பார்வைக்கு அது உண்மையான படம் போல தோன்றினாலும் உற்றுப்பார்த்தால் பல உண்மைகள் புலனாகும்.

 

https://akkinikkunchu.com/?p=270254

ஆழ்கடலில் மூழ்கிய கப்பலில் ரூ.1.66 லட்சம் கோடி தங்கப் புதையல் - யாருக்குச் சொந்தம் என்பதில் போட்டாபோட்டி

3 weeks 2 days ago
சான் ஜோஸ்: ரூ. 1.5 லட்சம் கோடி மதிப்புள்ள புதையலுடன் மூழ்கிய கப்பலை கண்டுபிடிக்க களமிறங்கும் கொலம்பியா

பட மூலாதாரம்,COLOMBIAN GOVERNMENT

படக்குறிப்பு,

கொலம்பிய ஆட்சித்தலைவர் குஸ்டாவோ பெட்ரோ, இக்கப்பலை மீட்டெடுப்பது தனது நிர்வாகத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாகும் என்று கூறியுள்ளார்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாண்டியாகோ வனேகஸ்
  • பதவி, பிபிசி
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

300 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய `சான் ஜோஸ்`என்ற கப்பலில் தங்கம், வெள்ளி, நகைகள் போன்ற மதிப்புமிக்க பொருட்கள் அடங்கிய சுமார் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான பொக்கிஷம் இருப்பதாக நம்பப்படுகிறது. அக்கப்பலில் உள்ள பொக்கிஷத்தைக் கைப்பற்ற ஆழ்கடலில் உயர் தொழில்நுட்பம் மூலம் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கொலம்பிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இக்கப்பல் குறித்து பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன. இந்த கப்பலில் உள்ள பொக்கிஷம், உலகிலேயே அதிகம் தேடப்படும் பொக்கிஷங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கப்பலின் பாகங்களை கண்டுபிடிக்க ஆழ்கடலில் “புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய” “உயர்மட்ட” ஆய்வை மேற்கொள்ள உள்ளதாக கொலம்பிய அரசாங்கம் சமீபத்தில் அறிவித்தது.

சான் ஜோஸ் என்பது 40 மீட்டர் நீளமுள்ள ஸ்பானியக் கப்பலாகும். இந்த கப்பல் கொலம்பியாவின் கார்டஜீனா நகருக்கு அருகிலுள்ள தீவுக்கூட்டமான ரொசாரியோ தீவுகளைச் சுற்றி 1708-ல் மூழ்கியது.

2015-ம் ஆண்டு, அக்கப்பல் 600 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக கொலம்பிய அரசு அறிவித்தது.

ஸ்பானிய மன்னரின் இறப்புக்குப் பிறகு, வாரிசுப் போரின் ஒரு பகுதியாக, சார்லஸ் வேகரின் கீழ் இருந்த பிரிட்டிஷ் படைக்கும் ஸ்பெயின் படைக்கும் மோதல் மூண்டதாக, கடல்சார் மானுடவியல் பேராசிரியர் ரிக்கார்டோ பொரேரோ தெரிவிக்கிறார். அப்போது, சான் ஜோஸ் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது அக்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. இந்த மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

கப்பலில் என்ன இருக்கிறது?
சான் ஜோஸ்: ரூ. 1.5 லட்சம் கோடி மதிப்புள்ள புதையலுடன் மூழ்கிய கப்பலை கண்டுபிடிக்க களமிறங்கும் கொலம்பியா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

இந்த கப்பல் விபத்தில் 600 பேர் உயிரிழந்தனர்.

20 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1.66 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்கள் இக்கப்பலில் உள்ளதாக வரலாற்றாய்வாளர்கள் நம்புகின்றனர்.

“கப்பல்கள் வடிவமைப்பு 20-ம் நூற்றாண்டு வரை மனித கண்டுபிடிப்புகளிலேயே மிக சிக்கலான தொழில்நுட்பம் கொண்டதாகும். தற்போதுள்ள உலகமயமாக்கலுக்கு இந்த தொழில்நுட்பம் பல வழிகளில் வடிவம் கொடுத்திருக்கிறது. இதனை போர்க்கப்பலாகவும் வணிக கப்பலாகவும் பல வழிகளில் பயன்படுத்த முடியும்” என்கிறார் ரிக்கார்டோ பொரேரோ.

இந்த கப்பல் 40 மீட்டர் நீளம் கொண்டது. 64 பீரங்கிகள் அதில் இருந்தன. கப்பலில் சுமார் 600 பேர் இருந்தனர்.

“17-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 18-ம் நூற்றாண்டிலும் இக்கப்பல் உயர் தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்ட கப்பலாக இருந்தது. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்காவிலிருந்தும் அக்கப்பல் சரக்குகளை ஏற்றிச் சென்றிருக்கிறது” என்கிறார் அவர்.

இக்கப்பல், கொலம்பியாவின் சொத்தாக 2020-ல் அறிவிக்கப்பட்டது. அதனால் தான், அதன் மதிப்பை பண அடிப்படையில் கணக்கிடக் கூடாது என்று அரசாங்கம் பாதுகாக்கிறது.

எனினும், அக்கப்பலின் ஒருபகுதியை சொந்தமாக வைத்திருப்பதாக கூறும் அமெரிக்காவை சேர்ந்த புதையல்களை தேடும் வேட்டை நிறுவனம் ஒன்று, அப்புதையல் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாக இருக்கலாம் என்று ஊகித்துள்ளது .

இக்கப்பலில் எடுத்துச் செல்லப்பட்ட சரக்குகள் குறித்த விவரங்கள், காப்பக ஆதாரங்களிலிருந்தே அறியவருகின்றன. மாறாக, கப்பல் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து அதனை நேரடியாக உறுதிப்படுத்த முடியவில்லை.

2022-ம் ஆண்டில், தேசிய கடற்படை மற்றும் கொலம்பியாவின் தேசிய கடல்சார் இயக்குநரகம் ஆகியவை மேற்கொண்ட ஆய்வில் கப்பலில் இருந்த பொருட்களின் புகைப்படங்கள் வெளியாகின. அப்புகைப்படத்தில் பீரங்கிகள், சில நாணயங்கள் மற்றும் சீன மேஜைப் பாத்திரங்கள் சிலவற்றைக் காண முடிந்தது.

"ஜாடிகள், பாத்திரங்கள், ஊசிகள், கண்ணாடிகள், பீங்கான்கள், சில நாணயங்கள் உள்ளிட்டவை அதில் காணப்படுகின்றன" என, கொலம்பிய மானுடவியல் மற்றும் வரலாற்று நிறுவனத்தின் இயக்குனர் (ICANH) அலெனா கைசிடோ பிபிசி முண்டோவிடம் விளக்குகிறார்.

600 மீட்டர் ஆழத்தில் உள்ள கப்பலில் என்ன இருக்கிறது என்பது பற்றிய கூடுதல் விவரங்களை அறிவதுதான் கொலம்பியா அறிவித்துள்ள புதிய ஆராய்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும்.

 
ரோபோட் தொழில்நுட்பம்
சான் ஜோஸ்: ரூ. 1.5 லட்சம் கோடி மதிப்புள்ள புதையலுடன் மூழ்கிய கப்பலை கண்டுபிடிக்க களமிறங்கும் கொலம்பியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தாண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கு இடையில் நடத்தப்படும் இந்த ஆய்வில், பிரிட்டன் தயாரிப்பு மற்றும் ஸ்வீடன் வடிவமைப்புடன் கூடிய ரிமோட் வாயிலாக இயக்கப்படும் ரோபோட் பயன்படுத்தப்படும் என, கொலம்பிய கலாசார அமைச்சர் ஜுவான் டேவிட் கொரியா தெரிவித்தார்.

தண்ணீரை விட்டு வெளியேறும்போது இந்த பொருட்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கவனிப்பதே இதன் நோக்கம்.

"தண்ணீரில் அப்பொருட்கள் 300 ஆண்டுகளாக மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கும். எனவே, வெளியே எடுக்கப்பட்டவுடன் அவை முழுமையாக உடைந்துவிடும்" என்று அலெனா கைசிடோ பிபிசி முண்டோவிடம் விளக்கினார்.

"இந்த வகையான பொருட்களை எவ்வாறு கையாள்வது, எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து அறிந்திருக்க வேண்டும். ஏனெனில், ஒருகட்டத்தில் அப்பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்படும்” என்று அவர் கூறுகிறார்.

மீட்கப்பட்டவுடன் அவை கார்டஜீனாவில் உள்ள ஒரு ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்படும். அதற்கென அருங்காட்சியகம் அமைப்பது குறித்து சிந்திக்கப்படுகிறது.

இப்போதைக்கு, கொலம்பிய அதிகாரிகள் அக்கப்பலில் இருந்து அதிகளவு தங்கம் மற்றும் வெள்ளி எடுக்கப்படுவதாக கூறப்படும் தகவலை நிராகரித்துள்ளனர்.

2017-ம் ஆண்டு சீனக் கப்பல் கட்டும் தளத்திலிருந்து 13 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கொலம்பிய அரசு வாங்கிய ஏ.ஆர்.சி கரிப் என்ற கப்பலில் இருந்து ஆய்வு செய்யப்படும் கப்பலுக்கு ரோபோட் இறக்கப்படும்.

"இந்த கப்பல் அலை, காற்று மற்றும் கடலின் ஆறு திசைகளில் உள்ள அனைத்து இயக்கங்களையும் துல்லியமான புள்ளியில் வைத்திருக்கும் திறன் கொண்டது" என்று கடற்படை அதிகாரி ஹெர்மன் லியோன் ஸ்பானிய செய்தி முகமையான EFE-யிடம் விளக்கினார்.

இந்த ஆய்வு, கலாசார அமைச்சகம், கொலம்பிய மானுடவியல் மற்றும் வரலாறு நிறுவனம், தேசிய கடற்படை (ICANH) மற்றும் தேசிய கடல்சார் இயக்குநரகம், அனைத்து பொது நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முயற்சியாக இருக்கும்.

ஜுவான் மானுவல் சாண்டோஸின் அரசாங்கத்தின் போது கொலம்பிய அரசு ஒரு பொது-தனியார் கூட்டணியை உருவாக்குவதற்கான தொடக்கத் திட்டங்களுடன் ஒப்பிடும்போது இது ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது. அதன்படி, இப்போது புதையலைப் பிரித்து ஆய்வு நிறுவனத்திற்கும் ஒரு பங்கு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தாண்டு மேற்கொள்ளப்படும் முதல் கட்ட ஆய்வில், அரசுக்கு சுமார் 4.5 மில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும்.

கடலின் அடிப்பகுதியில் என்ன இருக்கிறது என்பது பற்றி அறியப்பட்ட புதிய தகவல்களின் அடிப்படையில், "18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே கடல்சார் வர்த்தகத்தின் வரலாறு பற்றிய பல அறிவியல் ஆராய்ச்சி கேள்விகளுக்கு பதில்கள் இதன் மூலம் கிடைக்கும் என கொலம்பியா நம்புகிறது" என, கலாசார அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

 
சான் ஜோஸ்: ரூ. 1.5 லட்சம் கோடி மதிப்புள்ள புதையலுடன் மூழ்கிய கப்பலை கண்டுபிடிக்க களமிறங்கும் கொலம்பியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கொலம்பியாவின் கலாசார அமைச்சர் இந்த ஆய்வுத் திட்டத்தில் மிக உயர்ந்த அதிகாரிகளில் ஒருவர்.

விமர்சனங்கள்

இந்த திட்டத்தில் சில “முரண்பாடுகளும்” “இடைவெளிகளும்” இருப்பதாக, யூனிவர்சிட்டி நெட்வர்க் ஆப் சப்மெர்ஜ்ட் கல்ச்சுரல் ஹெரிட்டேஜ் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கப்பலில் இருந்து பொருட்களை பிரித்தெடுப்பதற்கு "சரியான அறிவியல் ரீதியிலான நியாயம்" இல்லை என்றும் இது பாதுகாப்பு கொள்கைக்கு எதிரானது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

"இந்த ஆய்வு தற்போதைய அரசாங்கத்தின் சம்பிரதாய நடைமுறை மட்டுமே" என்கின்றனர்.

மேலும், "இதுகுறித்து எந்த விவரங்களும் குறிப்பிடப்படவில்லை. 2015, 2016-க்கு இடைப்பட்ட காலத்தில் புதையல் தேடும் நிறுவனமான மெரிடைம் ஆர்க்கியாலஜி கன்ஸல்டண்ட்ஸ் நிறுவனம் வழங்கிய தகவல்களும் வெளியிடப்படவில்லை. இது இந்த ஆய்வில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும்" என்கின்றனர் விமர்சகர்கள்.

ICANH-ன் இயக்குனர் அலெனா கைசிடோ பிபிசி முண்டோவிடம், ”அரசின் சட்ட பாதுகாப்பு முகமையின் ஆலோசனையின் பேரில், தற்போதைய ஆராய்ச்சி திட்டமானது, கப்பல் குறித்து மெரிடைம் ஆர்க்கியாலஜி கன்ஸல்டண்ட்ஸ் நிறுவனம் வழங்கிய எந்த அறிக்கையையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாது” என தெளிவுபடுத்தினார்.

புதையல் யாருக்கு? 3 பேர் உரிமை கோருவதால் சிக்கல்

இந்த ஆழ்கடல் அறிவியல் ஆராய்ச்சியை அரசாங்கம் அறிவித்த அதே நேரத்தில், தி ஹேக் நகரில் உள்ள நிரந்தர நடுவர் நீதிமன்றம் கொலம்பியாவிற்கும் ’சீ சர்ச் ஆர்மடா’ என்ற அமெரிக்க நிறுவனத்திற்கும் இடையே இக்கப்பல் தொடர்பான சர்வதேச வழக்குகளை முறையாக விசாரிக்கத் தொடங்கியது.

’சீ சர்ச் ஆர்மடா’ நிறுவனம் இதுகுறித்து கூறுகையில், கொலம்பியாவிற்கு முன்பே இக்கப்பலை கண்டுபிடித்ததாகவும், எனவே, அக்கப்பலின் பாதி மதிப்புக்கு சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலரை தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கோரி வருகிறது.

இந்த வழக்கில் கொலம்பியாவின் பாதுகாப்பை ஏற்க வேண்டிய நிறுவனமான தேசிய சட்டப் பாதுகாப்பு முகமையின் இயக்குநர், இந்தக் கூற்றை "கொடூரமானது" மற்றும் "அற்பமானது " என்று விவரித்தார்

கொலம்பிய சட்டங்கள் இக்கப்பலை "கைப்பற்ற முடியாதது" என்று கூறுகிறது. ஆனால் அது கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து யாருடையது என்பது பற்றிய சர்ச்சைகளை இச்சட்டங்கள் தடுக்கவில்லை.

2015-ம் ஆண்டில், ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர், "இக்கப்பல் அரச கப்பல் என்பதால் அதை ஸ்பெயின் விட்டுக் கொடுக்காது" என்று கூறினார். எவ்வாறாயினும், இரு அரசாங்கங்களும் சர்ச்சைக்கு இணக்கமான மற்றும் ராஜதந்திர தீர்வை அடைவதற்கான தங்கள் நோக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன.

பிப்ரவரி 23 அன்று, கொலம்பியாவிற்கான ஸ்பெயின் தூதர், கொலம்பியாவிற்கு "இதுதொடர்பாக இருதரப்பு ஒப்பந்தத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை" வழங்குவதற்கு தனது நாட்டு அரசாங்கத்திடமிருந்து அறிவுறுத்தல்கள் இருப்பதாகக் கூறினார்.

"நாங்கள் பலருடன் வரலாற்றைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். குறிப்பாக ஸ்பெயினுடன், பொலிவியாவுடன், கிரனாடா ராஜ்ஜியத்தைச் சேர்ந்த மக்களுடன், நாங்கள் வரலாற்றைப் பகிர்ந்து கொள்கிறோம்" என்று அவர் விளக்குகிறார்.

பொலிவியன் பூர்வீக குரா குரா (Qhara Qhara) சமூகமும் அக்கப்பலின் ஒரு பகுதியைக் கோருகிறது, வன்முறை மற்றும் சுரண்டல் மூலம் கப்பலில் உள்ள போடோசி சுரங்கங்களிலிருந்து பெறப்பட்டது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c8v3m15llq2o

ரோத்ஸ்சைல்ட்ஸ்: இந்த யூத குடும்பம் 'இஸ்ரேல்' உருவாக என்ன செய்தது?

3 weeks 3 days ago
ரோத்ஸ்சைல்ட்ஸ்: பிரிட்டன் போன்ற வல்லரசுகளுக்கே கடன் கொடுத்த இந்த யூத குடும்பம் 'இஸ்ரேல்' உருவாக என்ன செய்தது?
ரோத்ஸ்சைல்ட்ஸ் குடும்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

லார்ட் ஜேக்கப் ரோத்ஸ்சைல்ட், இந்த வாரம் தனது 87ஆம் வயதில் இறந்தார்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஏஞ்சல் பெர்முடெஸ்
  • பதவி, பிபிசி நியூஸ் வேர்ல்டு
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

திட்டமிட்டபடி அனைத்து விஷயங்களும் நடந்திருந்தால், மேயர் ஆம்ஷெல் ஒரு ரப்பியாக (யூத மதகுரு) இருந்திருப்பார். ஆனால் விதி அவரது திட்டங்களை மாற்றியது. ஒரு ஜெப ஆலயத்தை நடத்துவதற்கு பதிலாக, உலகின் மிகவும் பிரபலமான ரோத்ஸ்சைல்ட் & கோ எனும் தனியார் வங்கி சாம்ராஜ்யத்தை அவர் நிறுவினார்.

ஃபிராங்க்ஃபர்ட் நகரின் யூத கெட்டோவான ஜூடென்காஸ்ஸில் மேயர் ஆம்ஷெலின் மூதாதையர் ஒருவரின் வீட்டை வேறுபடுத்திக் காட்டிய சிவப்பு நிற அடையாளத்திலிருந்து (ரோத் (Rot) = சிவப்பு, சைல்ட் (schild) = அடையாளம்) உருவான ரோத்ஸ்சைல்ட் என்ற குடும்பப் பெயர் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கிறது.

ஃபோர்ப்ஸ் இதழின் பில்லியனர்கள் பட்டியலில் இந்த குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் தற்போது இடம்பெறவில்லை என்றாலும், சர்வதேச அரசியல் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் ஒரு அழியாத தடத்தைப் பதித்துள்ளது இந்த குடும்பம்.

குறிப்பாக 19ஆம் நூற்றாண்டில், நெப்போலியனுக்கு எதிராகப் போரிடும் ஐரோப்பியப் படைகளுக்கு இந்த குடும்பத்தினர் நிதியுதவி அளித்தனர். அதே போல, பிரதம மந்திரி பெஞ்சமின் டிஸ்ரேலி தலைமையிலான பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு சூயஸ் கால்வாயில் மில்லியன் டாலர் பங்குகளை வாங்குவதற்கும் நிதியளித்தனர்.

சமூகத்தில் அவர்களது புகழ் வளர்ந்த அதே நேரத்தில், ரோத்ஸ்சைல்ட்ஸ் குறித்த எண்ணற்ற சதி கோட்பாடுகளும் வளர்ந்தன. அவை மீண்டும் மீண்டும் பொய் என்று நிரூபிக்கப்பட்டாலும், இந்த இரண்டு நூற்றாண்டுகளாக அத்தகைய சதி கோட்பாடுகள் தொடர்ந்து நீடிக்கின்றன.

கடந்த மாத இறுதியில், இந்த குடும்பத்தின் பிரிட்டிஷ் கிளையின் தலைவராகக் கருதப்பட்ட லார்ட் ஜேக்கப் ரோத்ஸ்சைல்ட் தனது 87வது வயதில் இறந்த செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பல கட்டுக்கதைகள், சதி கோட்பாடுகள் மீண்டும் உலாவந்தன.

இந்த குடும்பத்தின் வரலாறு என்ன, சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்த அவர்கள் உண்மையில் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள்?

 
கெட்டோவிலிருந்து அரச நீதிமன்றம் வரை
ரோத்ஸ்சைல்ட்ஸ் குடும்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

குடும்பத் தலைவரான மேயர் ஆம்ஷெல் ரோத்ஸ்சைல்ட், பிராங்பேர்ட்டின் யூத கெட்டோவில் உள்ள இந்த வீட்டில் பிறந்தார்.

1744இல் பிறந்த மேயர் ஆம்ஷெல் ரோத்ஸ்சைல்ட் ஒரு சாதாரண வணிகக் குடும்பத்தின் மகனாவார். அதில் புகழ்பெற்ற ரப்பிகளும் இருந்தனர். அதனால் தான் தங்களது முதல் மகனை ஆன்மிக பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் நினைத்தார்கள்.

ஆனால் 11 வயதாக இருந்தபோது மேயரின் பெற்றோர் மரணமடைந்ததால் ஒரு வேலை தேட வேண்டிய நெருக்கடிக்கு அவர் தள்ளப்பட்டார். ஹனோவரில் உள்ள ஒரு வங்கியில் ஒரு பயிற்சிப் பதவியில் சேர்ந்த அவர் படிப்படியாக வணிகச் சந்தையில் நுழைந்தார்.

அந்த வங்கியில் அவர் பல ஆண்டுகள் பணிபுரிந்தார், போதுமான அளவு கற்றுக்கொண்டு, பணம் சேமித்து, 1770இல் பிராங்பர்ட் திரும்ப முடிவு செய்தார். அங்கு அவர் திருமணம் செய்துகொண்டு, தனது சொந்த நிறுவனத்தை தொடங்கினார்.

ஆரம்பத்தில் மேயர் பழங்கால நாணயங்கள், பொருட்கள் மற்றும் கலைப் படைப்புகள் விற்கும் தொழிலைச் செய்தார். பின்னர் அவருக்கு போதுமான முதலீடு கிடைத்ததும், நிதித்துறையில் நுழைந்தார்.

சில ஆண்டுகளில், அவர் அரசர் வில்லியம் I ஆட்சியின் கீழ் இருந்த லாங்ராவியேட் ஆப் ஹெஸ்ஸே (Landgraviate of Hesse) எனும் சமஸ்தானத்தின் வங்கி நிர்வாகியாக ஆனார்.

இந்த வேலையில் இருந்த போது, அரசரின் கஜானாவை மட்டுமல்லாது, தனது செல்வத்தையும் எவ்வாறு அதிகரிப்பது என்பதை அவர் நன்றாக அறிந்திருந்தார்.

நெப்போலியன் நடத்திய போர்களால் இது சாத்தியமானது. ஏனென்றால் வில்லியம் I தனது போர் வீரர்களின் சேவைகளை இங்கிலாந்து மற்றும் பிரஷியாவிற்கு விற்ற போது, போர்களுக்கு தேவையான நிதியை அரசாங்கங்களுக்கு கடனாக வழங்கினார் மேயர் ஆம்ஷெல்.

"நெப்போலியனுடனான போர்களுக்கு முக்கிய நிதியாளர்களில் ஒருவராக ரோத்ஸ்சைல்ட்ஸ் குடும்பத்தினர் இருந்தார்கள். அவர்கள் பிரிட்டிஷ் இராணுவத்திற்கு நிதியளித்தனர். நெப்போலியனுக்கு எதிரான கூட்டணிக்கு அவர்கள் கடன்கள் வழங்கினார்கள். தங்கத்தை விற்று அதில் பணம் சம்பாதித்தார்கள்," என்கிறார் அமெரிக்க பத்திரிகையாளர் மைக் ரோத்ஸ்சைல்ட். இவரது கடைசிப் பெயர் ரோத்ஸ்சைல்ட் என இருந்தாலும், இந்த வம்சத்துடன் எந்த தொடர்பும் இல்லாதவர்.

200 ஆண்டுகளாக இந்த குடும்பத்தைச் சுற்றி உருவாக்கப்பட்ட முக்கிய கட்டுக்கதைகளைப் பற்றிய புத்தகத்தின் ஆசிரியர் இவர்.

"போருக்கு அதிக பொருளும் பணமும் தேவைப்பட்டதால், மிக விரைவாக அதிக செல்வத்தை ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தினரால் சம்பாதிக்க முடிந்தது" என்று கூறுகிறார் பத்திரிகையாளர் மைக் .

1887இல் வெளியிடப்பட்ட மற்றொரு படைப்பான 'தி ரோத்ஸ்சைல்ட்ஸ்: தி ஃபைனான்சியல் ரூலர்ஸ் ஆஃப் நேஷன்ஸ்' (The Rothschilds: the Financial Rulers of Nations) நூலில், "ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் (1808-1814) தீபகற்பப் போரின் போது அரசுக்கு தொடர்ந்து நிதி வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டன.

நிதியைக் கொண்டு செல்வதற்கான பொறுப்பை ஏற்க அப்போதைய நிதியாளர்கள் தயக்கம் காட்டினர்.

எனவே ரோத்ஸ்சைல்ட்ஸ் ஒரு நல்ல கமிஷனுக்காக இதைச் செய்ய முன்வந்தார்கள். அது மட்டுமல்லாது தொடர்ந்து எட்டு ஆண்டுகள் இந்த தொழிலை மிகவும் இலாபகரமான முறையில் நடத்தினர்.

இந்த வெற்றியால், ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல நட்பு நாடுகளின் இளவரசர்களுக்கு நிதி அனுப்புவதை நிர்வகிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை நியமித்தது." என்கிறார் ஜான் ரீவ்ஸ்.

 
ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குதல்
ரோத்ஸ்சைல்ட்ஸ் குடும்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ரோத்ஸ்சைல்ட் குடும்ப சின்னம்

ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தைச் சுற்றி பின்னப்பட்ட கட்டுக்கதைகளில் ஒன்று, அந்தக் காலத்தின் பல முக்கிய ஐரோப்பிய தலைநகரங்களில் இந்த குடும்ப நிறுவனத்தின் கிளைகளை நிறுவுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வகையான ஒருங்கிணைந்த திட்டத்தைக் குறிக்கிறது.

உண்மையில், முதலில் பிறந்த ஆம்ஷெல் ஃபிராங்க்ஃபர்ட்டில் தங்கியிருந்தபோது, குடும்பத்தின் மற்ற நான்கு மகன்கள் லண்டன் (நாதன்), பாரிஸ் (ஜாகோப், பின்னர் ஜேம்ஸ்), வியன்னா (சாலமன்) மற்றும் நேபிள்ஸ் (கார்ல்) ஆகிய இடங்களில் நிறுவனத்தின் கிளைகளை நிறுவினர்.

இருப்பினும், இந்த கிளைகள் ஒரே நேரத்தில் உருவாக்கப்படவில்லை, 1804இல் லண்டன் அலுவலகத்தை உருவாக்குவதற்கும், 1820களில் வியன்னா மற்றும் நேபிள்ஸில் கிளைகளை நிறுவுவதற்கும் இடையில் 15 ஆண்டுகளுக்கும் மேல் இடைவெளி இருந்தது.

இந்த குடும்பத்தைச் சுற்றியுள்ள மிகப்பெரிய புரளிகளில் ஒன்று, நாதன் ரோத்ஸ்சைல்ட் குறித்தது.

1846இல் வெளியிடப்பட்ட, சாத்தான் என்ற புனைப்பெயருடன் கையெழுத்திட்ட ஒரு துண்டுப் பிரசுரம் ஐரோப்பா முழுவதும் விரைவாக பரவியது. நெப்போலியனுக்கு எதிரான போர் பற்றிய தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி பங்குச் சந்தையில் மில்லியன்களை ஈட்டினார் நாதன் ரோத்ஸ்சைல்ட் என்று அதில் கூறப்பட்டது.

இந்தக் கதையின்படி, வாட்டர்லூ போரில் (பெல்ஜியம்) நெப்போலியன் தோல்வியடைந்ததை வங்கியாளர் நாதன் கண்டார். அங்கிருந்து அவர் விரைவாக, வலுவான புயலையும் பொருட்படுத்தாமல் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து, லண்டனுக்கு வந்தார். போர் குறித்த செய்திகள் வெளியாவதற்கு முன்பே பல பங்குகளை வாங்கினார். பின்னர், போரின் முடிவுகள் பற்றிய செய்தி இறுதியாக நகரத்தை எட்டிய போது, அந்த பங்குகளின் விலை பலமடங்கு உயர்ந்தது.

2015இல், பிரிட்டிஷ் செய்தித்தாள் தி இன்டிபென்டன்ட்டில், பத்திரிகையாளர் பிரையன் கேத்கார்ட், "போர் நடந்த சமயத்தில் நாதன் ரோத்ஸ்சைல்ட் வாட்டர்லூவிலோ அல்லது பெல்ஜியத்திலோ இல்லை, அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் பங்குச் சந்தையில் மகத்தான லாபத்தைப் பெறவில்லை. கூடுதலாக, ஆங்கில கால்வாயில் அப்போது வலுவான புயல் எதுவும் இல்லை" எனக் கூறியுள்ளார். எனவே இந்தக் கதை தவறானது.

இந்த கதை பல தசாப்தங்களாக பரவி வருகிறது. 1910 இல் வெளியிடப்பட்ட என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா பதிப்புகளில் கூட இது இடம்பெற்றது.

நெப்போலியன் போர்களால் இந்தக் குடும்பம் பெரும் செல்வத்தை குவித்தது உண்மை தான். ஆனால் அது முன்னர் சுட்டிக்காட்டப்பட்டபடி, அரசாங்கங்கள் மற்றும் இராணுவங்களுக்கு கடனாக நிதி வழங்கியதன் மூலம் கிடைத்தது.

போர்களில் இரு தரப்பினருக்கும் நிதியளிப்பதன் மூலம் ரோத்ஸ்சைல்ட்ஸ் தங்களை வளப்படுத்திக் கொண்டார்கள் என்பதும் அடிக்கடி சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் அவ்வாறு நடக்கல்லை என பிபிசியிடம் கூறுகிறார் மைக் ரோத்ஸ்சைல்ட்

"வரலாற்று ரீதியாக கணிசமான ரோத்ஸ்சைல்ட் இருப்பைக் கொண்ட இரண்டு நாடுகள் போரில் ஈடுபட்ட சம்பவங்கள் உண்டு. நெப்போலியன் போர்களில் கூட அதைக் காண முடியும். பாரிஸில் ஒரு ரோத்ஸ்சைல்ட் அலுவலகம் மற்றும் லண்டனில் ஒரு ரோத்ஸ்சைல்ட் அலுவலகம் இருந்தது. போர்களில் இத்தகைய சிக்கலான சூழல்களை சமாளிப்பது கடினம்" என்று அவர் குறிப்பிடுகிறார்.

"அவர்கள் இரு தரப்பினருக்கும் நிதியுதவி செய்தார்கள் என்று அர்த்தமல்ல. அவர்கள் அதைச் செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. உண்மையில், அவர்கள் நெப்போலியன் போர்கள் முடியும் வரை பிரான்சின் எதிரிகளுக்கு தொடர்ந்து நிதியுதவி செய்தனர் ," என்று அவர் மேலும் கூறுகிறார்.

மேயர் ஆம்ஷெல் இறக்கும் நேரத்தில், குடும்பம் ஏற்கனவே 'மேயர் ஆம்ஷெல் ரோத்ஸ்சைல்ட் அண்ட் சன்ஸ்' என்ற நிறுவனத்தை நிறுவியிருந்தது, அதன் செல்வம் ஐந்து மகன்களுக்கு சமமாகப் பிரிக்கப்பட்டது. அதை வீணாக்காமல், என்ன நடந்தாலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று தந்தை ஆம்ஷெல் அறிவுறுத்தியிருந்தார்.

 
ரோத்ஸ்சைல்ட்ஸ் குடும்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்த விளக்கப்படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, வாட்டர்லூவிலிருந்து லண்டனுக்கு பயணித்ததன் மூலம் நாதன் ரோத்ஸ்சைல்ட் பணக்காரர் ஆனார் என்ற பொய் பல நூற்றாண்டுகளாக பரவலாகப் பரப்பப்பட்டது.

ஐரோப்பிய காலனித்துவத்திற்கு நிதி அளித்தவர்கள்
ரோத்ஸ்சைல்ட்ஸ் குடும்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நதானியேல் மேயர் டி ரோத்ஸ்சைல்ட் என்பவர் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் நுழைந்த முதல் யூதர் ஆவார்.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு (1815-1914) காலம் 'உலகின் மிகப்பெரிய வங்கி' என்று அழைக்கப்பட்ட ரோத்ஸ்சைல்ட்ஸ் வங்கியை அந்த குடும்பம் சிறப்பாக பராமரித்தனர்.

ஆனால் அவர்களுடையது ஒரு பாரம்பரிய வங்கி அல்ல. அங்கு மக்கள் தங்கள் சேமிப்புகளை டெபாசிட் செய்து கடன் வாங்கவில்லை, மாறாக அரசாங்க கடன்கள் மற்றும் பத்திரப் பரிவர்த்தனைகளில் கவனம் செலுத்தும் முதலீட்டு வங்கி போன்றது.

"1820களில் ரோத்ஸ்சைல்ட்ஸ், சர்வதேச பத்திர சந்தையாக மாறும் சாத்தியம் கொண்டிருந்த ஐரோப்பிய நிதித்துறையில் ஆதிக்கம் செலுத்தியது" என மைக் ரோத்ஸ்சைல்ட் தனது 'Jewish Space Lasers: The Rothschild and 200 Years of Conspiracy Theories' நூலில் குறிப்பிடுகிறார்.

"அவர்கள் ஐரோப்பிய ராயல்டி, வாட்டிகன், நாட்டின் பிரதம மந்திரிகள் மற்றும் கிங் ஜார்ஜ் IV ஆகியோருக்கு ஆலோசகர்களாகவும் கடன் வழங்குபவர்களாகவும் இருந்தனர். மேலும் அவர்கள் எதிர்கால பிரெஞ்சு சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராட உருவான ரஷ்யா, பிரஷ்யா மற்றும் ஆஸ்திரியாவின் ஒப்பந்தக் குழுவான புனிதக் கூட்டணிக்கும் வங்கியாளர்களாக இருந்தனர்." என அவர் கூறுகிறார்.

1836இல் இறக்கும் போது, நாதன் உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருந்தார் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. செல்வத்துடன் பொது அங்கீகாரமும் வந்தது.

மேயர் ஆம்ஷெலின் ஐந்து மகன்களுக்கும் ஆஸ்திரிய பேரரசின் மதிப்பிற்குரிய பட்டங்கள் கிடைத்தன மற்றும் அவர்களின் சந்ததியினரால் சமூகத்தின் மிக உயர்ந்த அடுக்குகளில் ஒருங்கிணையவும் முடிந்தது.

உதாரணமாக, லியோனல் நாதன் டி ரோத்ஸ்சைல்ட் (1808-1879) பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் முதல் யூத உறுப்பினர் ஆவார்.

1875இல் பிரிட்டிஷ் அரசாங்கம் சூயஸ் கால்வாயில் பங்குதாரராக ஆவதற்கு, குறுகிய அவகாசத்தில் 4 மில்லியன் பவுண்டுகள் கடனை வழங்கியவர்.

அவரது உறவினர் மேயர் அல்போன்ஸ் டி ரோத்ஸ்சைல்ட் (1827-1905), குடும்பத்தின் பிரெஞ்சு கிளையைச் சேர்ந்தவர், 1870களுக்குப் பிறகு பிராங்கோ-பிரஷ்யன் போரில் பிரெஞ்சு அரசாங்கத்திற்குத் தேவையான இழப்பீடுகளைச் செலுத்த வேண்டிய இரண்டு பெரிய கடன்களை சாத்தியமாக்கிய வங்கிகளின் கூட்டணிக்கு தலைமை தாங்கினார்.

இது நாட்டில் இருந்த வெளிநாட்டு துருப்புகளை திரும்பப் பெறுவதற்கு உதவியது மற்றும் ஜனாதிபதி அடோல்ஃப் தியர்ஸ் அரசாங்கம் அதிகாரத்தில் நிரந்தரமாக இருப்பதற்கு உத்தரவாதம் அளித்தது.

லியோனல் நாதன் டி ரோத்ஸ்சைல்டின் மகனான நதானியேல் மேயர் (நாட்டி) டி ரோத்ஸ்சைல்ட் (1840-1915), பிரிட்டிஷ் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் நுழைந்த முதல் யூதர் மற்றும் முதல் லார்ட் ரோத்ஸ்சைல்ட் ஆனார்.

19ஆம் நூற்றாண்டு முழுவதும், குடும்பத்தின் வணிகங்கள் தொடர்ந்து செழித்து வளர்ந்தன. வங்கி மற்றும் அரசாங்க பத்திர வர்த்தகத்திற்கு அப்பால் அவை பன்முகப்படுத்தப்பட்டன.

அவர்கள் காப்பீட்டு நிறுவனங்களிலும் முதலீடு செய்தனர் மற்றும் தொழில்துறை, உலோகவியல், சுரங்க மற்றும் இரயில்வே நிறுவனங்களில் பங்குகளை வாங்கினார்கள்.

கூடுதலாக, 19ஆம் நூற்றாண்டில், அவர்கள் ஆப்பிரிக்காவில், குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் பல ஐரோப்பிய காலனித்துவ சாகசங்களுக்கு நிதியளித்தனர்.

"அந்த நிலங்களில் வாழ்ந்த மக்களுக்கு எதிராக நடந்த பல துஷ்பிரயோகங்களுக்கு உடந்தையாகவோ அல்லது குறைந்தபட்சம் அதைக் குறித்து தெளிவற்றவர்களாகவோ இருந்தார்கள்" என்று மைக் ரோத்ஸ்சைல்ட் தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

அவர்களின் வங்கி வணிகம் தொடர்ந்து வளர்ச்சியடைந்தது. ஆனால் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் அவர்கள் ஏற்கனவே மற்ற பெரிய ஐரோப்பிய மற்றும் அமெரிக்க குழுக்களிடமிருந்து போட்டியை எதிர்கொண்டனர். இது நிதித்துறையில் அவர்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

 
ரோத்ஸ்சைல்ட்ஸ் குடும்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பாரோன் எட்மண்ட் ஜேம்ஸ் டி ரோத்ஸ்சைல்ட் (1845-1934) ஓட்டோமான் பாலஸ்தீனத்தில் யூதக் குடியேற்றங்களை நிறுவுவதற்காக அங்கு நிலம் வாங்க பெரும் நிதியை ஒதுக்கீடு செய்தார்.

சியோனிசம் மற்றும் இஸ்ரேல்
ரோத்ஸ்சைல்ட்ஸ் குடும்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

1836 இல் அவர் இறக்கும் போது, நாதன் ரோத்ஸ்சைல்ட் உலகின் மிகப் பெரிய பணக்காரராகக் கருதப்பட்டார்.

பாரம்பரியமாக, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தின் தலைவர் அந்த நாட்டில் உள்ள யூத சமூகத்தின் பிரதிநிதியாகக் கருதப்படுகிறார்.

இஸ்ரேல் நாட்டை உருவாக்கியதில் இந்த குடும்பம் முக்கிய பங்கு வகித்தது.

எட்மண்ட் ஜேம்ஸ் டி ரோத்ஸ்சைல்ட் (1845-1934), மேயரின் பேரன் மற்றும் ஜேம்ஸ் டி ரோத்ஸ்சைல்டின் இளைய மகன். யூத மக்களுக்கு ஒரு தாயகத்தை நிறுவும் யோசனையான சியோனிசத்தின் சிறந்த ஊக்குவிப்பாளர்களில் ஒருவர்.

யூத எதிர்ப்பு மற்றும் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் யூதர்கள் எதிர்கொண்ட அச்சுறுத்தல்களை உணர்ந்த எட்மண்ட், அப்போது ஒட்டோமான் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்த பாலஸ்தீனத்தில் நிலம் வாங்குவதற்கு பெரிய வளங்களை ஒதுக்கீடு செய்தார்.

யூத காலனிகளை நிறுவுவதற்கும், அந்த நாடுகளில் விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கும் எட்மண்ட் நிதியளித்தார். 1934இல் அவர் இறந்த போது, சுமார் 500 சதுர கிலோமீட்டர் நிலத்திலும் கிட்டத்தட்ட 30 குடியிருப்புகளிலும் பிரதிநிதித்துவம் செய்பவராக இருந்தார்.

அவர் இறந்த பிறகு, பாரிஸில் முதலில் புதைக்கப்பட்டாலும், 1954இல் எட்மண்ட் மற்றும் அவரது மனைவி அட்லிஹெய்டின் உடல்கள் இஸ்ரேலுக்கு ஒரு போர்க்கப்பலில் கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவர்கள் உடல்களுக்கு பிரதமர் டேவிட் பென் குரியன் தலைமையிலான அரசு இறுதி மரியாதை செய்தது.

லியோனல் வால்டர் (வால்டர்) ரோத்ஸ்சைல்ட் (1868-1937), இரண்டாவது லார்ட் ரோத்ஸ்சைல்டான இவர், 1917இல் கையெழுத்திடப்பட்ட, புகழ் பெற்ற பால்ஃபோர் பிரகடன ஆவணத்தைப் பெற்றவர் என்பதால், இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளுக்கு வழிவகுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

இதன் மூலம் பாலஸ்தீனத்தில் "யூத மக்களுக்கான தேசிய இல்லத்தை" உருவாக்குவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தனது ஆதரவை அறிவித்தது.

சைம் வெய்ஸ்மேன் - சியோனிசத்தின் சிறந்த ஊக்குவிப்பாளர்களில் ஒருவர், பின்னர் அவர் பிரிட்டிஷ் அரசாங்க உதவியுடன் இஸ்ரேலின் முதல் ஜனாதிபதியாக இருந்தார் .

பால்ஃபோர் பிரகடனம் தொடர்பான பேட்டியில் ஜேக்கப் ரோத்ஸ்சைல்ட் கூறுகையில், "ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் யூதர்களின் வாழ்க்கையில் இது மிகப்பெரிய நிகழ்வு, ஒரு அதிசயம். இது நடக்க 3,000 ஆண்டுகள் ஆனது." என்கிறார்.

டோரதி டி ரோத்ஸ்சைல்ட், 'யாட் ஹனாடிவ்' என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவினார், இது நெசெட் (பாராளுமன்றம்) கட்டிடங்கள், உச்சநீதிமன்றம் மற்றும் மிக சமீபத்தில் இஸ்ரேலின் தேசிய நூலகத்தை கட்டுவதற்கு நிதியளித்தது.

சமீபத்தில் இறந்த ஜேக்கப் டி ரோத்ஸ்சைல்ட் கடந்த சில தசாப்தங்களாக இந்த அறக்கட்டளைக்கு தலைமை தாங்கினார். அவரது வழிகாட்டுதலின் கீழ் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் முயற்சிகள் மற்றும் இஸ்ரேலில் அரபு சிறுபான்மையினருக்கு சம வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்துள்ளது இந்த அறக்கட்டளை.

"இஸ்ரேலில் ரோத்ஸ்சைல்ட்ஸ் குடும்பம் இப்போதும் மிகவும் மதிக்கப்படுகிறது. சியோனிச இயக்கத்தின் முக்கிய நிதியாளர்களில் ஒருவராக அவர்கள் உள்ளனர்” என்று மைக் ரோத்ஸ்சைல்ட் பிபிசியிடம் கூறுகிறார்.

அதேநேரத்தில் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் சியோனிச யோசனையைச் சுற்றி ஒன்றுபடவில்லை என்பதை அவர் எடுத்துக்காட்டுகிறார்.

"சில ரோத்ஸ்சைல்ட்ஸ் இஸ்ரேல் தேசத்தை நிறுவுவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தாலும், மற்றவர்கள் உண்மையில் அதற்கு எதிராக இருந்தனர்," என்று அவர் குறிப்பிடுகிறார்.

ரோத்ஸ்சைல்ட்ஸ் குடும்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தின் உறுப்பினர்களின் ஆதரவுடன், பாலஸ்தீனத்தில் யூத மக்களுக்கு ஒரு தேசிய இல்லத்தை உருவாக்குவதற்கு ஆதரவை வழங்குமாறு பிரிட்டிஷ் அதிகாரிகளை சாய்ம் வெய்ஸ்மேன் சமாதானப்படுத்தினார்.

ரோத்ஸ்சைல்ட்ஸ் குடும்பம் என்ன ஆனது?

முதலாம் உலகப் போருக்குப் பிறகு, ரோத்ஸ்சைல்ட்ஸின் சக்தியும் செல்வமும் குறையத் தொடங்கின, அவர்கள் ஒரு பணக்கார மற்றும் சக்தி வாய்ந்த குடும்பமாக இருந்தபோதிலும், அவர்கள் ஒரு காலத்தில் அனுபவித்த வசதி, மரியாதை அவர்களுக்கு இல்லை.

இருந்தபோதிலும், தொடர்ந்து கட்டுக்கதைகள் மற்றும் சதி கோட்பாடுகளுக்கு ஆளாகினர். ஏன்?

" ரோத்ஸ்சைல்ட்ஸ் குறித்து தொடர்ந்து மக்கள் பேசுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் மேற்கில் நன்கு அறியப்பட்ட யூத குடும்பங்களில் ஒன்றாக இருக்கிறார்கள். சதி கோட்பாடுகள் மற்றும் யூத எதிர்ப்பு எண்ணங்கள் கைகோர்த்துச் செல்கின்றன" என்கிறார் மைக் ரோத்ஸ்சைல்ட்.

"சதி கோட்பாடுகள் பொதுவாக சில வகையான யூத-விரோத கூறுகளைக் கொண்டுள்ளன, குறிப்பாக அதில் கூறப்பட்டுள்ள திட்டங்களை யார் கட்டுப்படுத்துகிறார்கள், யார் நிதியளிக்கிறார்கள் என்பது பற்றிய சில கூறுகள்."

"சதி கோட்பாடுகளை நம்புபவர்களில் பலர், யூதர்கள் தான் அவற்றை உருவாக்குகிறார்கள் என்று நினைக்கிறார்கள். யூதர்களைப் பற்றி பேசும்போது, மிகவும் பிரபலமான மற்றும் பணக்கார யூதக் குடும்பத்தை குறிவைப்பது மிகவும் எளிதானது அல்லவா" என்கிறார் மைக்.

https://www.bbc.com/tamil/articles/cxwz8m777mmo

ஹெய்ட்டியில் சிறை மீது ஆயுதகும்பல் தாக்குதல் - 3000க்கும் அதிகமானகைதிகள் தப்பியோட்டம்

3 weeks 3 days ago

Published By: RAJEEBAN   04 MAR, 2024 | 10:35 AM

image

ஹெய்ட்டி தலைநகரில் உள்ள பிரதான சிறைச்சாலையொன்றின் மீது தாக்குதலை மேற்கொண்ட கும்பலொன்று அங்கிருந்த 4000க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்துச்சென்றுள்ளது.

தலைநகரின் பிரதான சிறைச்சாலை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக 4000க்கும் அதிகமான கைதிகள் தப்பியோடிவிட்டனர் என செய்திகள் வெளியாகின்றன.

2021 இல் ஜனாதிபதி ஜொவெனல் மொஸ்சேயை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களும் சிறையுடைப்பு காரணமாக தப்பிச்சென்றுள்ளனர்.

ஹெய்ட்டியின்  வழமையான நெரிசல் மிகுந்த சிறைச்சாலை வெறுமையாக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இன்றி காணப்படுகின்றது காலணிகளும் ஆடைகளும் கதிரைமேசைகளும் சிதறுண்டு காணப்படுகின்றன என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

haiti_viole1.jpg

சிறைச்சாலை வாயிலில் மூன்று உடல்கள் காணப்படுகின்றன.

இதேவேளை 1400 கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த இரண்டாவது சிறைச்சாலையிலும் சிறை உடைப்பு இடம்பெற்றுள்ளது.

எத்தனை கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர் என்பது தெரியாது என குறிப்பிட்டுள்ள மனித உரிமை சட்டத்தரணி 4000 சிறைக்iதிகளில் 100க்கும் குறைவானவர்களே எஞ்சியுள்ளனர் எனவும்  தெரிவித்துள்ளது.

நான் ஒருவன் மாத்திரம் எஞ்சியுள்ளேன் என ஒருவர் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்காக அவசரகால நிலையை அறிவித்துள்ள ஹெய்ட்டி அரசாங்கம்  இரவு நேர ஊரடங்கு சட்டத்தையும் பிரகடனம் செய்துள்ளது.

https://www.virakesari.lk/article/177839

காசாவை நோக்கி பரசூட்கள் மூலம் உணவுப்பொதிக‍ளை வீசியது அமெரிக்கா

3 weeks 4 days ago

Published By: RAJEEBAN   03 MAR, 2024 | 12:07 PM

image

காசாவின் மீது அமெரிக்கா வான்வழியாக மனிதாபிமான உதவிகளை வீசியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூன்று விமானங்கள் பராசூட்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.

GHsM1PmWQAAMJdH.jpg

ஜோர்தான் விமானப்படையுடன்  இணைந்து அமெரிக்கா இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

உணவுவாகன தொடரணியை சூழ்ந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 110க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து காசாவிற்கான மனிதாபிமான உதவிகளை அதிகரிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருந்த நிலையிலேயே அமெரிக்கா இந்த நடவடிக்கையைமேற்கொண்டுள்ளது.

GHsM1PuWEAAg_2b.jpg

சி130 ரக விமானங்கள் 38000 உணவுப்பொதிகளை காசாவிற்குள் பரசூட் மூலம் வீசின என அமெரிக்காவின் மத்திய கட்டளைப்பீடம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் பிரான்ஸ் எகிப்து ஜோர்தான் ஆகிய நாடுகள் முன்னர் காசாவின் மீது இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன எனினும் அமெரிக்கா இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்வது இதுவே முதல்தடவை.

GHsM1PfXwAAyqV1.jpg

வியாழக்கிழமை இடம்பெற்ற துன்பியல் நிகழ்வு காசாவில் காணப்படும் மிகமோசமான மனிதாபிமான நிலை காரணமாக அந்த பகுதிக்கான மனிதாபிமான உதவிகள் விநியோகத்தை தொடர்ந்து பேணவேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்தியுள்ளது என பைடன் நிர்வாகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/177790

Checked
Thu, 03/28/2024 - 16:25
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe