'மாலைக் காற்று மெதுவாய் வீச'
அத்தியடி, யாழ்ப்பாணம்]
"தவமின்றிக் கிடைத்த வரமே"
"தன்னந் தனியே தவித்து இருந்தவனை
தட்டிக் கொடுத்து தெம்பு அளித்து
தத்துவம் தவிர்த்து யதார்த்தம் உணர்ந்து
தன்னையே தந்து மகிழ்வை ஈன்று
தலைவி நானேயென நாணிக் கூறி
தளர்வு இல்லாக் காதல் தந்தவளே!"
"அவல நிலையில் நின்ற இவனை
அவனியில் வெறுத்து தனியே சென்றவனை
அவனது மேலே கொண்ட கருணையால்
அவதிப் படாதே ஆயிரம் வந்தாலுமென
அவதாரமாக வந்தவளே! அன்பின் அழகே!
தவமின்றிக் கிடைத்த வரமே! நீயே!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
குறளோடு கவிபாடு / "குறள் 1175"
"அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
கண்களும் பேசின காதலையும் தந்தன
வண்ண உடலின் கவர்ச்சி ஈர்த்தன
ஆண்மை கண்டு அவளும் நெருங்கினாள்
கண்ட கோலம் காமம் கொடுத்தன!"
"பெண்ணின் அழகில் மயங்கி நின்றவனோ
எண்ணம் எல்லாம் அவளே என்றவனோ
கண்ணீர் தந்து உறவு மறந்து
அண்டம் எங்கோ பிரிந்து போனானே
கண்ணனை நினைத்து துயிலும் மறந்தேனே!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
உருவப்படுமா?
---------------------
எங்கும் ஒருவித மயான அமைதி
காடைத்தனத்தின்
உச்சத்தைக் கடந்த பொழுதில்
நிலமெங்கும் மனிதமலைகளாய் உடலங்கள்
குருதியும் சகதியுமாய்...
எனக்கு உயிர் இருந்தது
அதுவே எனக்குப் போதுமானது
கடற்காற்று ஊவென்று வீசியது
உடம்பெங்கும் சில்லிட்டுக் குளிர்ந்தது
ஆடையற்று அம்மணமாகக்
கிடக்கும் உணர்வு
நானும் செத்திருக்கக் கூடாதா
மனம் சொல்லிற்று
குப்புறக் கிடந்த என்னால்
அசையக்கூட முடியவில்லை
பிணங்களில் இருந்துவரும் வாடை
வாடைக்காற்று வீசிய கடலோரம்
பிணவாடை உலுப்பியது
சட்டென அம்மாவின் குரல்
என் காதில் ஒலித்தது
டேய் அரைநாண் கயிறைக் கட்டடா
அவிழ்ந்தால் நீ அம்மணக்கட்டையடா
ஒட்டுத் துணிகூட இல்லாதபோதிலும்
அரைநாண் கயிறிருந்தால்
உன்னை அம்மணமானவன் என்றழையார்
என்று என் அம்மா சொன்னது
நினைவிலே வந்து போனது!
என் சக்தி முழுவதையும் திரட்டி
சுற்றுமுற்றும் தலையைத் தூக்கிப்பார்த்தேன்
சற்றுக் கைக்கெட்டும் தூரத்தில்
ஒற்றைச் சப்பாத்தொன்று புதையுண்டவாறு
யாரோ ஒரு போராளியினுடையதாக
இருக்க வேண்டும்
மெல்ல நகர்ந்து சப்பாத்திலிருந்து
நூலைப் பிரித்தெடுத்து
என் இடுப்பிலே கட்டிக்கொண்டேன்
இப்போது எனக்கொரு திருப்தி!
தொலைவில் ஒற்றை வெடியோசைகள்
வெடிப்புகள் எனக் கேட்டன...
மெதுவாக ஊர்ந்து பற்றையுள் பதுங்கினேன்
எதுவுமே தெரியவில்லை
கண்விழித்ததோ ஒரு மருத்துவமனையில்
நான் ஒரு அரச ஊழியன்
ஆனாலும் நான் தமிழன் அல்லவா
இடுப்பு நூலுக்கும்
விசாரணை விளத்தங்கள்
அலைக்கழிப்புகள் ஆனாலும் என்ன
அரைநாண் கயிறை
இப்போதுவரை அணிந்திருக்கிறேன்!
அப்பா அம்மாவை முள்ளிவாய்கால்
அள்ளிச் சென்றுவிட்டது
உறவுகளில் ஏறக்குறையத்
தொண்ணூறுவீதம் பேரையும்
இழந்துவிட்டேன்
நண்பர்கள் ஒரு சிலரோ
வாடா வெளிநாடென்கிறார்கள்
அரைநாண் கயிற்றையும்
இழக்க முடியுமா
அம்மா சொன்னதை மறக்க முடியுமா
இழப்பதற்கு நான் தயாரில்லை
எங்கள் மண்ணில் எங்கள் வளவிலே
சிறு பயிர்களோடும்
சிறு உயிர்களோடும்
நகர்கிறது என்வாழ்வு
பொருண்மியத் திரட்சி
இல்லையென்றாலும்
மனதிற்குள் மகிழ்வு துளிர்கிறது!
என்னைப் பார்க்க வந்த
வெளிநாட்டு உறவொன்று
மரவள்ளிக் கிழங்கும்
கட்டைச் சம்பலும் அற்புதமென்றான்
அற்புதங்கள் நிகழ்துவதாய்
பழைய நாற்றொன்று புதிதாய் மின்னி
அனைவரையும் அழைத்துத் தலைமையேற்றுள்ளது
ஆனாலும் என்ன அரைநாண் கயிற்றுக்கும்
ஆபத்து வருமா(?) என்ற வினா
என்னைத் தொடர்கிறது!
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி
நாய்களுக்கும் நரிகளுக்குமான
போட்டியில்
ஒவ்வொரு முறையும்
குயில்கள் பலியாகின்றன
குயில்களுக்கு தெரிவதில்லை
தாம் தான் தூண்டிலில்
கொழுவப்பட்ட புழுக்கள் என..
பேய்களுக்கும் பிசாசுகளுக்குமான போரில்
ஒவ்வொரு முறையும்
வண்ணாத்திப் பூச்சிகள்
கொல்லப்படுகினறன
வண்ணாத்திப் பூச்சிகளுக்கு தெரிவதில்லை
தாம் தான் வலையில்
சிக்க வைக்கப்படும்
சிறு கண்ணிகள் என..
மனிதர்களுக்கும் மனிதமற்றவர்களுக்கும்
இடையிலான யுத்தத்தில்
ஒவ்வொரு முறையும்
கடவுள்கள் கொல்லப்படுகின்றனர்
கடவுள்களுக்கு தெரிவதில்லை
தாம் தான் மனிதர்களின்
பொறியில் வைக்கபடும்
இரைகள் என
யார் யாருக்கோ இடையிலான யுத்தத்தில்
எப்போதும் தோற்றுக் கொண்டே இருப்பவர்களுக்கு
ஒரு போதும் தெரிவதில்லை
எப்பவுமே தாம் தான்
பலியாடுகள் என
-நிழலி
கனவு பலிக்குமா?
**********************
கந்தையா அண்ணரும்
காசிம் நானாவும்
றம்பண்டா மல்லியும்
ஒரு குடும்பமாய்
திரிந்த காலம்
அப்போது ஒருநாளும்
நான் கண்டதில்லை
சண்டையை..
புத்த பெருமானுக்கும்
நபிகள் நாயகத்துக்கும்
ஜேசு பிரானுக்கும்
சித்தர் சிவனுக்கும்-மதம்
பிடித்ததாய்..
அப்போது ஒருநாளும்
நான் கண்டதில்லை
சண்டையை..
கண்டியில பெரகராவும்
திருக்கேதீச்சரத்தில
சிவராத்திரியும்
கொச்சிக்கடையில
பாலன் பிறப்பும்
மட்டக்களபில
நோன்புப் பெருநாளும்
அன்பாக நடந்ததே தவிர
அப்போது ஒருநாளும்
நான் கண்டதில்லை
சண்டையை..
ஒவ்வொரு இடத்தில
ஒவ்வொரு ஆலயம் கட்டி
வழிபாட்டுத்தலமெல்லாம்
அனைவரும்..
வந்து வணங்கி வழிபட்டு
போனார்களே தவிர..
அப்போது ஒருநாளும்
நான் கண்டதில்லை
சண்டையை..
தமிழ் இணைந்த
வடக்கு கிழக்கென்றும்
சிங்களம்..
தெற்கு மேற்கென்றும்
பகுதி பகுதியாக
பிரிந்து வாழ்ந்தாலும்
ஒற்றுமையைத் தவிர
அப்போது ஒருநாளும்
நான் கண்டதில்லை
சண்டையை..
இப்படி எனக்கு-என்
பூட்டனார்
கனவில வந்து
கதை சொல்லி போனார்.
அப்போது நினைத்தேன்
இப்போது நடப்பது
இனவாத..
அரசியல் வாதிகளும்-சில
அரசடி வாதிகளும்
கொள்ளையடித்து
தாம் வாழ நினைத்து.
வல்லரசு சிலதோட
வறுமையை காட்டி
முக்குலத்தையும்
முட்டி மோதவிடும்
முடிவால்தான்-இன்று
எங்களுக்குள்ளே
இத்தனை..
சண்டையோ?
எண்ணித் திகைத்து
இடையில..
எழும்பி விட்டேன்.
விடியும் போது
(21.09.2024)
புதிய ஜனாதிபதியின்
பொறுமையான
வரவு பார்த்தேன்.
எனியாவது இந்த
கனவு பலிக்குமென்ற
மகிழ்வோடு..
மனம் நடக்கிறது.
.
அன்புடன் -பசுவூர்க்கோபி-
மொழித்திறன் கவிதை ] / "காதலியின் ஏக்கம்" [படக் கவிதை] & "பொட்டு" [இரு இடங்களில் இருவேறு பொருளோடு]
"காதலியின் ஏக்கம்"
[படக் கவிதை]
"அன்பின் பரிசில் காதலியைப் பொறித்து
அழகாக மலர்களால் வடிவு அமைத்து
அருகில் அணுகி கட்டி அணைத்து
அகவைத் தின வாழ்த்து கூறாயோ?"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
......................................................................
"பொட்டு"
[இரு இடங்களில் இருவேறு பொருளோடு]
"பொட்டு வெளிச்சம் இல்லாத இரவில்
பொட்டு வழியாகப் புகுந்து வந்தான்
மட்டு மரியாதை நன்கு தெரிந்தவன்
பொட்டு இட்டு என்னை அணைத்தான்
பட்டு மேனியைத் தொட்டுப் பார்த்தான்
கட்டு உடல் கொண்ட அழகன்!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
பொட்டு - (அளவுகுறித்து வரும்போது) சிறிது; துளி
பொட்டு - வேலியில் இருக்கும் சிறிய திறப்பு [இலங்கைத் தமிழ் வழக்கு]
அந்தாதிக் கவிதை / "சிந்தனை" & "பாமாலை"
"சிந்தனை"
"சிந்தனை செய்து சீராக வாழ்ந்தால்
வாழ்ந்ததின் பெருமை உலகுக்கு புரியும்!
புரிந்த வழியில் நேராக சென்றால்
சென்றதின் பயன் மகிழ்வைக் கொடுக்கும்!
கொடுத்து வாங்கி ஒழுங்காய் இருந்தால்
இருந்ததின் அர்த்தமே நல்ல சிந்தனை!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
.......................................................
"பாமாலை"
"பாமாலை தொடுத்து பூமாலை போட்டேன்
போட்ட மலர்களை முகர்ந்து பார்த்தாள்!
பார்த்து என்னை அருகில் அழைத்தாள்
அழைத்த எனக்கு பாடினாள் பாமாலை!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
நாட்டில் நின்ற காலம் தொடர்-2
பஸ் பயணம்!
*************
பஸ்..
நிக்கமுன்னே ஏறச்சொல்லி
நடத்துனரோ கத்திறார்
நாங்கள் ஓடி ஏறமுன்னே
சாரதியோ இழுக்கிறார்
யன்னல் சீற்று அத்தனையும்
தண்ணிப்போத்தல் கிடக்குது
நாம் இருக்க போனாலே-அருகில்
ஆள் இருக்கு என்கிறார்
அத்தனைக்கும் காசு வாங்கி
ஆளைப் பின்பு ஏற்றுறார்
ஆரம்பத்தில் ஏறியவர்
அவலப்பட்டுத் தொங்கிறார்.
ஏறிவரும் அனைவர் முதுகிலும்
சாக்கு பைகள் தொங்குது
என்னொருவர் இடத்தை கூட
அந்தபைகள் பிடிக்குது
இறங்கிப் போகும் போதுகூட
கையில் எடுப்பதில்லை
இழுத்திழுத்து அனைவருக்கும்
இடஞ்சல் கொடுத்து போகுறார்.
குடி போதையில் சிலபேரோ
அருகில் வந்து அமருறார்
கொஞ்சநேரம் போன பின்பு
குரங்குப் புத்தியை காட்டுறார்.
கைபேசி பேசிக்கொண்டு-சில
சாரதியோ ஓடுறார்.
சடும் பிறேக்கு போட்டுப் போட்டு
சனத்தை சாவடிக்கிறார்.
ஐம்பதற்கு மேற்பட்டோர்
இருந்த பஸ்சில் ஒருநாள்
ஏந்தம்பி மெதுவாயோடு-என
எழுந்ந்து நானும் சொன்னேன்
என்கருத்தை ஏற்றுக்கொண்டு
இருவர் மட்டும் எழுந்தார்
ஏன் சோலி என்றதுபோல்
மற்றவர்கள் உறைந்தார்.
விபத்தொன்று நடந்தபின்பு
விம்மி அழுதென்ன
விளிப்போடு நாமிருந்தால்
விடியும் எங்கள் நாடு.
தொடரும்…
அன்புடன் -பசுவூர்க்கோபி.
ஊர்த் தாய்க்கு ஒரு கடிதம்!
*************************
உயிருக்கு பயந்து
ஒழித்தோடிப்போனவர்கள்
என்று கேலி செய்கிறார்கள்
அம்மா…
அன்று நீதானே சொன்னாய்
ஓடித்தப்பு பின் ஊர்களைக்
காப்பாற்றவேண்டுமென்று.
அதனால்..
வெளிநாடொன்றில்
தஞ்சம் புகுந்து விட்டோம்.
எங்களை..
ஏற்றுக்கொள்ள
எத்தனை கேள்விகள்
எத்தனை விசாரணைகள்
எத்தனை இழுத்தடிப்புகள்
இப்படியே எத்தனை வருடங்கள்
காத்துக்கிடந்தோம்.
அகதியென்ற பெயருடனும்
கையில்..
அன்னத் தட்டுடனும்
அவர்களின் முகாங்களில்
அலைந்தபோது கூட
எங்கள் துன்பங்களை
உனக்கு சொல்ல நாம்
விரும்பியதேயில்லைத் தாயே!
விடிவு தேடும்
உனது துன்பத்தை விட
இது சிறியதென்பதால்.
நாங்கள்..
தாங்கியே வாழப் பழகினோம்.
வேறொரு மொழி,
வேறொரு கலாச்சாரம்,
வேற்று மனிதர்கள்
விபரம் தெரியாத நாம்.
அரசுகள் எங்களை
ஏற்றுக்கொண்டபோதிலும்
இங்கு சிலர் எங்களை
வேற்ரு கிரக மனிதர்களாகவே
பார்த்தார்கள்.
இப்படி இருந்தும்
எங்களின் உழைப்பின்
ஒருபகுதியை
உனக்கு அனுப்பியே
அங்குள்ளேரை
வாழவைத்தாயென்பதை
அவர்களுக்கு
ஞாபகப் படுத்து தாயே!
அனால் இன்றோ
எங்களின் உழைப்பு
பொய் களவில்லா எங்களின்
வாழ்க்கை முறை
மொழியின் தேர்ச்சி
குழந்தைகளின்
கல்வியின் உயற்சி
பலதையும் பார்த்து
மனிதநேயத்துடன் தங்களின்
குழந்தைகளாக
எங்களை பார்கிறார்கள்.
தாயா?தத்தெடுத்த தாயா?
என்ற குளம்பம்
எங்களை இப்போது
வாட்டுகிறது.
இருந்தாலும்- எம்
உயிர் போகும்
நிலை வந்தாலும்
உன்னை மறக்கமுடியுமா?
அம்மா..
எங்கள் பிள்ளைகளுக்கு
பேரப் பிள்ளைகளுக்கு
பூட்டப் பிள்லைகளுக்கு
உன்னைத்தான் பேர்த்தி,பாட்டி
பூட்டியென
சொல்லி வளர்கிறோம் தாயே!
ஒருகாலம் நாங்கள்
வரும்போது-இது
எனது பிள்ளைகள்,
எனது பேரப்பிள்ளைகள்
எனது பூட்டப் பிள்ளைகளென்று
“அங்கிருப்போர்க்கு”
சொல்லிவை தாயே
அது போதும் எங்களுக்கு!
அன்புடன் -பசுவூர்க்கோபி.