எல்லா மரபணு சார்ந்த நோய்களும் பரம்பரை நோய்களாக அவசியம் இல்லை
நமது உடல் உறுப்புகளிலேயே, தோலும், அதைச் சார்ந்த முடியும், நகங்களும் மட்டுமே, முழுக்க முழுக்க மரபணுக்களைச் சார்ந்தது என்பது, நம்மில் பலர் அறியாத அறிவியல் உண்மை.
ஒரே இனத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும் ஒருவர், தோல், முடி, நகம் போல், இன்னொருவருடைய தோல், முடி, நகம் இருப்பதில்லை. இவ்வுலகில் பிறந்த எல்லா மனிதர்களுக்கும், அவர்களுடைய தோலும், முடியும், நகங்களும், அவரவர் மரபணுக்களுக்கேற்ப தனித்துவம் வாய்ந்தவை.எனவே தான், என்றென்றும் கைவிரல் ரேகை, மனிதர்களின் தன்னிகரற்ற, யாராலும் மாற்றவியலாத தனித்துவமிக்க அடையாளமாக, உலகெங்கும் சட்ட ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.கரு உருவான எட்டாவது வாரத்தில் உருவாகி விடும், தோலும், முடியும், நகமும், நம் மரபணுக்களோடு இரண்டறக் கலந்திருப்பதால், பெரும்பாலான மரபணுக் குறைபாடுகள், தோல், முடி மற்றும் நகங்களில், அறிகுறிகளாகத் தென்படுகின்றன. தோல், முடி மற்றும் நகங்களை மட்டும் பாதிக்கும் பல மரபணு குறைபாடுகளும் உள்ளன. மரபணு குறைபாடுகளின் பல வகைகளைப் பற்றி, நாம் ஒவ்வொருவரும் சரியாக, மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது, மிக மிக முக்கியமானது.
அறிகுறிகள்
தாய் வழி மற்றும் தந்தை வழி உறவுகளில் உள்ள மரபணுக் குறைபாடுகளால், குடும்பத்தில் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ வருபவை, குடும்ப மரபணு நோய்கள்.கரு உருவாகும் போது, தாய்க்கு ஏற்பட்ட நோய்த் தொற்று, கர்ப்ப காலத்தில் தாய் உட்கொண்ட சில மருந்துகளின் பக்க விளைவுகள், தாய்க்கு ஏற்படும் மன உளைச்சல், மகிழ்ச்சியின்மை இவற்றால் ஏற்படுவது, பிறவி நோய்கள்.'குரோமோசோம்' வழியாக பல தலைமுறைகளைப் பாதிக்கும் நோய்கள், பரம்பரை மரபணு நோய்கள்.எல்லாப் பரம்பரை நோய்களும், மரபணு சார்ந்தவை. ஆனால், எல்லா மரபணு சார்ந்த நோய்களும், குறைபாடுகளும், பரம்பரை நோய்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.பெரும்பாலான மரபணு குறைபாடுகளை, தோல், முடி, நகங்களில் தோன்றும் அறிகுறிகளைக் கொண்டே அறிந்து கொள்ளலாம். பிறந்த குழந்தையின் உள்ளங்கையில், ரேகைகளே இல்லாமல், ஒற்றை நடு ரேகை மட்டுமே இருந்தால், குரோமோசோம் குறைபாட்டால் வரும், 'டவுன் சிண்ட்ரோம்' என்ற மனநலிவு கோளாறு இருப்பதை, குழந்தை பிறந்தவுடனேயே கண்டுபிடித்து விடலாம். குழந்தைப் பருவத்திலேயே சுருங்கிய தோல், காது மடலுக்கு முன் தோன்றும் மரு, பிறவியிலேயே முடியின்மை, முடி நிறமின்மை, கம்பளி போன்ற முடி, மிக மெல்லிய நிறமிழந்த, பொலிவிழந்த முடி, குழி விழுந்த முழு வளர்ச்சியடையாத நகங்கள், வீங்கிய மேடான நகங்கள், பிறந்த குழந்தையின் தோலில் காணப்படும் பல்வேறு நிற மாற்றங்கள், பல்வேறு வடிவங்கள் கொண்ட மச்சங்கள் ஆகியவை கோளாறின் அறிகுறிகள்.
பிறவி நோய்
தோல் வறட்சி, வியர்வைச் சுரப்பிகளே இல்லாத அல்லது மிகக் குறைவாக உள்ள தோல், சற்றே சூரிய ஒளி பட்டாலும், தோல் முழுவதும் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தியது போன்ற தோற்றம், பலவிதமான ரத்தக் குழல் கட்டிகள், அடர்ந்து முடியுடன் வளர்ந்த மச்சங்கள், முழு வளர்ச்சியடையாத தோல், முடி, நகங்கள்.பிறப்புறுப்புகளில் தோலில் வளர்ச்சியின்மை, உடலில் சில இடங்களில் தோலே இல்லாமல் இருத்தல், சில இடங்களில் விலங்குகளின் தோல் போன்று தடித்து இருத்தல் என, பல்வேறு அறிகுறிகள் மூலம், குரோமோசோம் பிழைகளை, மரபணுப் பிறழ்வுகளைக் கண்டறியலாம்.அது மட்டுமின்றி, நாம் உயிர்வாழ தேவையான, மிக முக்கிய உறுப்புகளான மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், ரத்த நாளங்கள், ரத்த அணுக்கள் போன்றவற்றின் பிறவிக் குறைபாடுகளையும், தோல், முடி, நக அறிகுறிகளைக் வைத்து, குழந்தை பிறந்த சில மணித் துளிகளிலேயே அறிந்து கொள்ளலாம்.
பிறவித் தோல் நோய்களில் பெரும்பான்மையானவை, குணப்படுத்தக் கூடியவை. பிறக்கும் போது அழகாக, அடர்த்தியாகக் கருமையாக, தலை முழுதும் இருந்த முடி, பிறந்து ஒராண்டிற்குள் செய்யும் முதல் முடியிறக்கத்துக்குப் பின், அடர்த்தி மிகக் குறைந்து, இருக்கும் சில முடிகளும் வறண்டு, உலர்ந்து, உடைந்து, நிறமிழந்து, பொலிவிழந்து, முன்பல் அமைப்பும், நகங்களும் உருமாறித் தோற்றமளிப்பது, பிறவி முடிக் குறைவு அல்லது கம்பளி முடி, நம் தென்னிந்திய மக்களிடையே பரவலாகக் காணப்படும் பிறவி நோய்.குரோமோசோம் குறைபாட்டால் பிறக்கும் குழந்தைகள், தோல், முடி, நகங்கள், பல் மற்றும் சில நேரங்களில் மூளைத்திறன் குறைவு, மிக முக்கியமாக, வியர்வைச் சுரப்பிகளின் செயல்பாடு ஆகியவை பாதிக்கப்படுகின்றன. இதில், வியர்வைச் சுரப்பிகளின் செயல்பாடு முற்றிலுமாக இல்லாத நிலை, மிகக் குறைந்த செயல்பாடு உள்ள நிலை என, இரண்டு வகைகள் உள்ளன.வியர்வைச் சுரப்பிகள் முற்றிலுமாக இல்லாத நிலையில் உள்ள குழந்தைகள், உடல் முழுவதும் சூடாகி, வெப்பத்தால் தவித்து, மீண்டும் மீண்டும் குளிர்ந்த நீரில் குளித்துக் கொண்டே இருக்கும் நிலை ஏற்படும். வியர்வை சுரப்பிகளின் செயல்பாடு குறைவாக உள்ள குழந்தைகள் வளர வளர, வியர்வைச் சுரப்பிகளின் சுரப்பு அதிகரித்து, அவைகள் இயல்பான வாழ்க்கை வாழ முடிகிறது.
கொடிய நோய்
பிறவியிலேயே, உடல் முழுவதும் தோல் வறண்டு, உலர்ந்து, செதில் செதிலாக உதிரும், 'இக்தையொஸிஸ்' என்ற குரோமோசோம் குறைபாடு, மிகுந்த வேதனையையும், விகார தோற்றத்தையும் தரக் கூடியது. 'வைட்டமின் ஏ' வழி வந்த நவீன மருந்துகள் மூலம், இதை சரி செய்யலாம்.பிறவித் தோல் நோய்களும், மரபணு தோல் நோய்களும், ஆண்டுதோறும் ஐந்து சதவீதம் அதிகரித்த படியே வருகின்றன. நெருங்கிய உறவு களில் திருமணம் செய்தல், கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்படும் மன உளைச்சல், சுற்றுச்சூழல் மாசு என, பல காரணங்கள் இதற்கு கூறப்படுகின்றன.பிறவித் தோல் நோய்களை, கருவிலேயே கண்டுபிடித்து, அவற்றை சரி செய்ய முடியாதா என்ற கேள்வி, நம் எல்லாருக்கும் எழலாம். நவீன மருத்துவம், அதற்கான தீர்வை வழங்குகிறது.
கரு உருவான, 16வது வாரத்திலேயே, பனிக்குட நீரின் செல்களை, கருவுக்கு எந்த பாதிப்புமின்றி, 'அல்ட்ராசவுண்ட்' பரிசோதனை உதவியோடு ஆய்வு செய்வதன் மூலம், சில பிறவித் தோல் நோய்களைக் கண்டறிய முடியும்.சிசுவின் தோலையும் இதில், திசு ஆய்வு செய்ய முடியும். பிறவிலேயே தோல் முழுவதும் பிளவு ஏற்பட்டு, உடல் முழுவதும் தோல் உரிந்து, தீக்காயத்தால் உடல் வெந்தது போல், குழந்தை தினமும் அணு அணுவாய் துன்பப்படும் மிகக் கொடிய நோயான, 'எப்பிடர் மோலைஸிஸ் புல்லோசா' என்ற பிறவி தோல் பிளவு நோயை, சிசுவின் தோல் திசு ஆய்வு மூலம் கண்டுபிடித்து, கருவை அகற்றிவிட முடியும்.
டாக்டர் எஸ்.முருகுசுந்தரம்
மருத்துவ இயக்குனர்,
தோல் மருத்துவ மையம்,
சென்னை.
93811 22225
93813 22234
https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=51879&ncat=11