புதிய பதிவுகள்

அரபு மக்கள் மத நம்பிக்கையை இழந்து வருகிறார்களா?

3 months 3 weeks ago
முன்பு இருந்தது போன்ற மதப்பிடிப்பு தங்களுக்கு இல்லை என்று அரபு மக்கள் அதிகளவில் கூறிவருவதாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய துல்லியமான கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. பெண்கள் உரிமைகள், குடிபெயர்தல், பாதுகாப்பு மற்றும் பாலினம் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து அரபு மக்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பது பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. பிபிசி அரபு மொழி சேவைக்காக, அரபு பரோமீட்டர் ஆராய்ச்சி நிறுவனம் 25,000க்கும் மேற்பட்ட மக்களிடம் நேர்காணல் நடத்தியது. 2018-19ல் பத்து நாடுகள் மற்றும் பாலத்தீன எல்லைப் பிரதேசங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் இங்கே அங்கு வசிக்கும் பெரும்பாலானோர் தங்களை "மத நம்பிக்கையற்றவர்கள்" என்று அடையாளப்படுத்திக் கொள்வது கடந்த 2013ஆம் ஆண்டு முதல் எட்டிலிருந்து 13 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. 30 வயதிற்குட்பட்ட மக்கள்தான் அதிகளவில் தங்களை மத நம்பிக்கையற்றவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என இந்த ஆய்வு கூறுகிறது. இதில் விதிவிலக்கு ஏமன். பெண்கள் உரிமை அதே போல ஒரு பெண் அங்கு பிரதமர் அல்லது அதிபராகும் உரிமைக்கு பெரும்பாலான மக்கள் ஆதரவளித்திருக்கிறார்கள். இதில் அல்ஜீரியா மட்டும் விதிவிலக்காக இருக்கிறது. அங்கு 50 சதவீதத்திற்கும் குறைவான மக்களே ஒரு நாட்டின் தலைவராக பெண் இருப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் வீட்டு விவகாரங்கள் என்று வரும்போது, பெரும்பாலான பெண்கள் உட்பட, பலரும் கணவர்தான் குடும்பத்திற்கான இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்று நம்புகின்றனர். மொரோக்கோ நாட்டில் மட்டும் சரிபாதிக்கும் குறைவான மக்களே கணவன்மார்கள் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். ஒரு பாலுறவு அங்கு பெரும்பாலான மக்கள் ஒரு பாலுறவை ஏற்றுக் கொள்ளவில்லை. குறைந்த அல்லது மிகக் குறைந்தளவு மக்களே ஒரு பாலுறவை ஏற்றுக் கொள்கிறார்கள். சமூக தாராளவாத கொள்கைகள் கொண்ட நாடாக பார்க்கப்படும் லெபனானில் கூட ஆறு சதவீத மக்களே இதனை ஏற்றுக்கொள்கிறார்கள். மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் பாதுகாப்பு குறித்த கவலைகள் பலருக்கும் அதிகமாக இருக்கிறது. தங்கள் ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு எந்த நாடு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்ற கேள்விக்கு, இஸ்ரேலுக்கு பிறகு, அமெரிக்காவே மிகவும் அச்சுறுத்தலாக இருப்பதாக கூறுகின்றனர். மூன்றாவது இடத்தில் இரான் உள்ளது. கணக்கெடுப்புக்காக கேள்வி கேட்கப்பட்டவர்களில் ஐந்தில் குறைந்தது ஒருவர் பிற நாடுகளுக்கு குடியேற யோசித்திருந்தார்கள் சூடானில் பாதி மக்கள் தொகையினர் குடியேற்றத்தை கருத்தில் கொண்டிருந்தனர். பொருளாதார விஷயங்களே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. https://www.bbc.com/tamil/global-48741272

புவி வெப்பமயமாதலுக்கு நாம் வாழும் வீடும் ஒரு காரணம்

3 months 3 weeks ago
படத்தின் காப்புரிமை Getty Images Image caption சிமெண்ட் உற்பத்தி துறையை ஒரு நாடாக கருதி கொள்ளுங்கள், அதுதான் கரியமில வாயுவை அதிகம் வெளிப்படுத்தும் மூன்றாவது பெரிய நாடாக இருக்கும். புவி வெப்பமயமாதலுக்கு நாம் வாழும் வீடும் ஒரு காரணம் என்றால் நம்ப முடிகிறதா? நம்பிதான் ஆக வேண்டும் என்கிறார்கள் சுழலியலாளர்கள். எப்படி என்கிறீர்களா? வீடு கட்ட பயன்படுத்தும் சிமெண்ட், செங்கற்கள் அதிகளவில் கரியமில வாயுவை வெளிப்படுத்துகிறது. சிமெண்ட் பயன்பாடு இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால், சிமெண்ட் உற்பத்தித் துறையை ஒரு நாடாக கருதி கொள்ளுங்கள், அதுதான் கரியமில வாயுவை அதிகம் வெளிப்படுத்தும் மூன்றாவது பெரிய நாடாக இருக்கும். முதல் இரண்டு இடத்தில் இருப்பது சீனாவும், அமெரிக்காவும்தான். பிபிஎல் நெதர்லாந்து சூழலியல் மதிப்பீடு முகமையின் தகவலின்படி 2017ம் ஆண்டு மட்டும் உலகளவில் உற்பத்தி செய்யப்பட்ட சிமெண்டின் அளவு 4000 மில்லியன் டன்களுக்கு மேல். குறிப்பாக ஆசியாவில்தான் அதிகளவு சிமெண்ட் பயன்படுத்தப்படுகிறது. செங்கற்களும் அப்படிதான். செங்கல் சூளைகளுக்காக அதிகளவில் மரங்கள் வெட்டப்படுகின்றன. ஒவ்வொரு அண்டும் 1.5 ட்ரில்லியன் செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுவதாக கூறுகிறது 2015ம் ஆண்டு ஆய்வு. செங்கல் உற்பத்தில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது . இங்கு ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்யப்படும் செங்கற்களின் எண்ணிக்கை 200 பில்லியன். Image caption இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்யப்படும் செங்கற்களின் எண்ணிக்கை 200 பில்லியன். அப்படியானால் இங்கு எத்தனை மரங்கள் வெட்டப்படுகின்றன என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். உலகெங்கும் சிமெண்ட், செங்கல் இல்லாமல் அல்லது குறைவாக பயன்படுத்தி வீடுகளை கட்டும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மாற்று வீடுகள் இந்தியாவிலும் மாற்று வீடுகள் குறித்த உரையாடல்கள் நடந்து வருகின்றன. குறைந்தளவு சிமெண்ட் வைத்து வீடுகள் கட்டுவது எப்படி? எப்போதும் வெளிச்சம் நிறைந்திருக்கும் வீடுகளை எப்படி வடிவமைப்பது? என மாற்று வீடுகள் குறித்து பலர் செயல்பட்டு வருகிறார்கள். Image caption பியூஷ் மனுஷ் சூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ், "வீடுகள் எப்படி கட்ட வேண்டுமென்பதை நாம் பழங்குடிகளிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். இயற்கையாக என்ன பொருள் கிடைக்கிறதோ, அதனை கொண்டு மட்டுமே அவர்கள் வீடு கட்டுவார்கள். காற்றோட்டமான, வெளிச்சம் புகும் வீடுகள் அவர்களுடையது" என்கிறார். Image caption மூங்கில் வீடு நகரத்தில் அதுபோல வீடுகளை கட்டுவதில் சில இடர்பாடுகள் உள்ளன என்று கூறும் அவர் சிமெண்ட், மண், செங்கல், இரும்புகளை பயன்படுத்தாத மாற்று வீடுகள் இப்போதைய உடனடி தேவை, இதற்கான தொழிற்நுட்பத்தில் அரசு அதிகம் முதலீடு செய்ய வேண்டும் என்கிறார். மூங்கில் வீடுகளை பரவலாக்கும் முயற்சியில் பியூஷ் ஈடுபட்டு வருகிறார். எதாவது காட்டில் அல்லது பண்ணைவீட்டில் மட்டுமே இதுபோன்ற வீடுகள் சாத்தியம். எல்லா இடங்களிலும் இது போன்ற வீடுகளை கட்ட முடியாது என்ற பொது கருத்து நிலவுகிறது இதனை மறுக்கிறார் மூங்கில் வீடுகளை ஓர் இயக்கமாக முன்னெடுத்து வரும் கேரளா வயநாடு பகுதியை சேர்ந்த சிவராஜ். 'சாத்தியமே' "வீடு என்பது வாழ்க்கை முறை சார்ந்தது. எப்படியான வாழ்க்கையை வாழ்கிறோம், நம் அடுத்த தலைமுறைக்கு என்ன விட்டு செல்கிறோம் என்பதற்கான சாட்சி இந்த வீடுகள். அது இயற்கையுடன் இயைந்ததாக இருக்க வேண்டும்" என்கிறார் சிவராஜ். Image caption சிவராஜ் மூங்கில் பயன்பாட்டை பரவலாக்க 'உறவு' எனும் அமைப்பை நடந்தி வருகிறார் சிவராஜ். இதன் மூலம் மூங்கில் வீடுகள் கட்டுவது தொடர்பாக பயிற்சியும் அளிக்கிறார். சிவராஜ், "மூங்கில் வீடுகள் கட்டும் போது, அந்த வீட்டை எப்படி வடிவமைக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். 1800 விதமான மூங்கில் இனங்கள் உள்ளன, நாம் இருக்கும் இடத்தின் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்றவாறு மூங்கில்களை தேர்ந்தெடுத்து நாம் வீடு கட்டிக் கொள்ளலாம். நிச்சயம் இவை நிலைத்து நிற்கக் கூடியவை. அதில் எந்த சந்தேகமும், அச்சமும் வேண்டாம்" என்கிறார். தேசிய மூங்கில் இயக்கம் மூலம் அரசும் பல முன்னெடுப்புகளை எடுத்து வருவதாக கூறுகிறார் அவர். 'நீடித்து உழைக்கக் கூடியவை' செங்கற்களை கொண்டு கட்டப்படும் வீடுகள் எவ்வளவு வலிமையாக இருக்குமோ அதே அளவுக்கு வலிமையானவை இந்த மூங்கில் வீடுகள் என்கிறார் கேரளா கரப்புழா பகுதியை சேர்ந்த பொறியாளர் ஜார்ஜ். Image caption கேரளா கரப்புழா பகுதியை சேர்ந்த பொறியாளர் ஜார்ஜ். அவர் தன்னுடைய வீட்டையே மூங்கில்களை கொண்டுதான் கட்டி இருக்கிறார். அவர், " இந்த வீடு கட்டி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. செங்கற்களை பெரும்பாலும் குறைத்து ஸ்டீல் கம்பிக்கு பதிலாக மூங்கில் மற்றும் பாக்கு மரத்தைதான் பயன்படுத்தி இருக்கிறேன். சிமெண்டையும் மிகவும் குறைந்த அளவே பயன்படுத்தி உள்ளேன்" என்கிறார். Image caption ஜார்ஜ் வீடு வயநாட்டில் கடந்த ஆண்டு பெய்த பெருமழையில் தமது வீட்டிற்கு ஏதுமாகவில்லை என்று அவர் கூறுகிறார். 'தண்ணீர் பிரச்சனையும், வீடும்' நிலத்திற்கு ஏற்ற வீடு என்பது அந்த பகுதியில் என்ன மூலப் பொருட்கள் கிடைக்கிறதோ, அதனைக் கொண்டு கட்டுவதுதான் என்கிறார் தருமபுரியை சேர்ந்த செயற்பாட்டாளர் சுரேஷ். Image caption சுரேஷ் களிமண், அவர் வசிக்கும் பகுதியில் கிடைக்கும் கற்கள், சுடாத செங்கற்கள் கொண்டு வீடு கட்டி இருக்கும் சுரேஷ், "காற்று, வெளிச்சம் அதிகம் புகுவதாக வீடுகள் இருக்க வேண்டும். ஒரு நாள் தொடங்கும் போது இயற்கையே தேவையான வெளிச்சத்தை தருகிறது. அதனை பயன்படுத்தி கொண்டாலே மின்சார பயன்பாட்டை தவிர்க்கலாம். மின்சார பயன்பாடு குறைந்தால் நிலக்கரி பயன்பாடு குறையும். பருவநிலை மாற்றத்தில் அது செலுத்தும் தாக்கமும் குறையும்" என்கிறார். Image caption சுரேஷ் வீடு "சாத்தியமற்ற விஷயத்தை பேசுவதாக நீங்கள் கருதலாம். இவ்வாறான வீடுகளை பெரும் எண்ணிக்கையில் நினைத்து பாருங்கள். இந்தியாவெங்கும் இவ்வாறான வீடுகள் இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். நான் சொல்வது புரியும். நீண்டகால செயல்திட்டமாக அரசுதான் இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்" என்று பிபிசி தமிழிடம் அவர் தெரிவிக்கிறார். "தன் வீட்டில் கட்டப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டியில் 55 ஆயிரம் லிட்டர் நீரை சேமிக்கலாம். அண்மையில் பெய்த மழையில் அது நிறைந்துவிட்டது. அடுத்த 4 மாத கால தண்ணீர் தேவையை இதனை கொண்டே பூர்த்தி செய்து கொள்ளலாம்" என்கிறார் சுரேஷ் தண்ணீர் பிரச்சனை குறித்து பேசப்படும் இந்த சூழலில் கான்கிரீட் வீடுகள் அதற்காக உற்பத்தி செய்யப்படும் சிமெண்ட் சூழலியலில் ஏற்படுத்தும் தாக்கம், செங்கற்களுக்காக வெட்டப்படும் மரங்கள் குறித்தும் பேச வேண்டும். ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது இயற்கை. பருவமழை பொய்ப்பதற்கு நம் வீடுகளும் ஒரு காரணம் என்று கூறுகிறார் இவர். https://www.bbc.com/tamil/india-48738953 மூங்கில் தான் 21ஆம் நூற்றாண்டின் இரும்பு Why bamboo is the ‘green steel’ of 21st-century Asian architecture Bamboo is easily grown and regenerated, absorbs a lot of carbon dioxide, and releases plentiful oxygen. https://www.ft.com/content/2cfd8d2c-2816-11e6-8ba3-cdd781d02d89 World Architecture Festival 2015: bamboo could "revolutionise the building industry" and replace steel as the dominant reinforcing material, according to a professor who is working on new applications for the grass. Speaking at WAF in Singapore today, Dirk Hebel said that bamboo fibre could be used as a more sustainable and far cheaper alternative to steel on construction sites. "This has the potential to revolutionise our building industry and finally provide an alternative to the monopoly of reinforced concrete," Hebel said. https://www.dezeen.com/2015/11/04/bamboo-fibre-stronger-than-steel-dirk-hebel-world-architecture-festival-2015/

டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியல் வெளியீடு!

3 months 3 weeks ago
டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியல் வெளியீடு! டென்னிஸ் இரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த, டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. சிறப்பாக விளையாடும் வீரர், வீராங்கனைகளின் தரநிலையை ஒவ்வொரு தொடரின் பின்னரும் மதிப்பிட்டு, சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வெளியிடுவது வழக்கம். அவ்வாறு தற்போது மாற்றம் கலந்த டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை, சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இதில் முதல் பத்து இடங்களில் உள்ள வீராங்கனைகளின் விபரத்தை தற்போது பார்க்கலாம், இந்த தரவரிசைப் பட்டியலில், யாரும் எதிர்பாராத விதமாக அவுஸ்ரேலியாவின் ஆஷ்லி பார்டி, முதலிடத்திற்கு முதல்முறையாக முன்னேறியுள்ளார். 23 வயதான ஆஷ்லி பார்டி, அண்மையில் நடைபெற்று முடிந்த பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரில் வெற்றிபெற்று, தனது முதல் கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டத்தை வென்றார். இதே உத்வேகத்தோடு, இங்கிலாந்தில் நடைபெற்ற பர்மிங்ஹாம் கிளாசிக் டென்னிஸ் தொடரிலும் சம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் அவர், ஒரு இடம் முன்னேறி 6540 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார். பெண்கள் தரவரிசையில் அவுஸ்ரேலிய வீராங்கனை ஒருவர் புள்ளிபட்டியலில், முதலிடத்தை பிடிப்பது கடந்த 43 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். இறுதியாக 1976ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய வீராங்கனை இவோன் கூலாகோங் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரையடுத்து புள்ளிபட்டியலில், இதற்கு முன்னதாக முதலிடத்தில் இருந்த ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, 1 இடம் சரிந்து 6377 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டார். செக். குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா, 5685 புள்ளிகளுடன் தொடர்ந்தும் 3ஆவது இடத்தில் உள்ளார். நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டன்ஸ், 5425 புள்ளிகளுடன் தொடர்ந்தும் 4ஆவது இடத்தில் உள்ளார். ஜேர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் ஒரு இடம் முன்னேறி, 4685 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தில் உள்ளார். செக்குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிடோவா ஒரு இடம் சறுக்கி, 4555 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் உள்ளார். ரோமேனியா வீராங்கனை சிமோனா ஹெலெப் ஒரு இடம் முன்னேறி, 3963 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தை பிடித்துள்ளார். உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஒரு இடம் சறுக்கி 3868 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தில் உள்ளார். அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், 3682 புள்ளிகளுடன் தொடர்ந்தும் 9ஆவது இடத்தில் நீடிக்கின்றார். பெலரஸ் வீராங்கனை அரினா சபாலென்கா, 3565 புள்ளிகளுடன் தொடர்ந்தும் பத்தாவது இடத்தில் உள்ளார். http://athavannews.com/டென்னிஸ்-வீராங்கனைகளின-2/

6 மாதத்திற்குள் 10 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்க வேண்டும் – ஆளுநர் உத்தரவு

3 months 3 weeks ago
6 மாதத்திற்குள் 10 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்க வேண்டும் – ஆளுநர் உத்தரவு முல்லைத்தீவில் அடுத்த 6 மாதத்திற்குள் 10 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் உத்தரவிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத்தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோரின் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் இடம்பெற்றது இதன்போது பிரதேச செயலகம், மாகாண காணி திணைக்களத்தில் இதை நடைமுறைப்படுத்த போதிய ஆளணி இல்லையென கூறப்பட்டது. இருப்பினும் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை இணைத்து காணி உறுதி வழங்குமாறு ஆளுநர் உத்தரவிட்டார். இதேவேளை மகாவலி, தொல்லியல் மற்றும் வனத் திணைக்களத்தின் காணி சர்ச்சைகள் குறித்து ஆராய சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்ய முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்தோடு முல்லைத்தீவு கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது. இந்த விடயம் தொடர்பாகவும் மீன்பிடி அமைச்சின் அதிகாரிகள், ஆளுனர், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகளை உள்ளடக்கிய உயர்மட்ட கூட்டமொன்றை விரைவில் கூட்டி ஆராய தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் மாகாணத்தில் நில அளவையாளர், வரி மதிப்பீட்டாளர் உள்ளிட்ட பல வெற்றிடங்கள் இருப்பதும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கு ஓய்வுபெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் செயற்பட விண்ணப்பிக்குமாறு இரண்டு தடவை ஊடகங்கள் வாயிலாக தான் அறிவித்தும் எவரும் முன்வரவில்லை என ஆளுநர் தெரிவித்தார். இதேவேளை இந்த கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை ஆளணி பற்றாக்குறை பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இந்த பிரச்சினையை தீர்க்க ஓய்வுபெற்ற வைத்தியர்களை இணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/6-மாதத்திற்குள்-10-ஆயிரம்-பே/

அதிகாரங்களையும் சிறப்புரிமைகளையும் விரிவுபடுத்துவதில் நாட்டம் காட்டிய இலங்கை ஜனாதிபதிகள்

3 months 3 weeks ago
அதிகாரங்களையும் சிறப்புரிமைகளையும் விரிவுபடுத்துவதில் நாட்டம் காட்டிய இலங்கை ஜனாதிபதிகள் -பி.கே.பாலச்சந்திரன் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தொடங்கி பிறகு பதவிக்கு வந்த ஒவ்வொரு இலங்கை ஜனாதிபதியுமே மட்டுமீறிய அதிகாரங்களைக் கொண்ட நிறைவேற்றதிகார ஜனாதிபதித் பதவியை இல்லாதொழித்து, பிரிட்டிஷ் வெஸ்மினிஸ்டர் பாணியிலான – பாராளுமன்றத்திற்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்குகின்ற ஆட்சிமுறையொன்றை மீண்டும் ஏற்படுத்துவதாக உறுதியளித்துக்கொண்டே ஆட்சியதிகாரத்திற்கு வந்தனர். ஆனால் அதே ஜனாதிபதிகள் (திருமதி குமாரதுங்க உட்பட) அதிகாரத்தைக் கைவிடத் தவறியது மாத்திரமல்ல, ஏற்கனவே காணப்படுவதை விட மேலதிகமான அதிகாரங்களையும் வரப்பிரசாதங்களையும் பெறுவதிலும் நாட்டம்காட்டி வந்திருக்கிறார்கள். அண்மையில் வெளியாகியிருக்கும் செய்திகளின் பிரகாரம் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வருட இறுதியில் நடத்தப்பட வேண்டியிருக்கும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாகப் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமா, இல்லையா என்பதை மக்களிடம் கேட்பதற்காக சர்வசன வாக்கெடுப்பை நடத்தத் திட்டமிடுகிறார். இது ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதற்கான முயற்சியே தவிர வேறொன்றும் இல்லை என்று கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினரான ரோஹித அபேகுணவர்தன குற்றஞ்சாட்டியிருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய எந்தவொரு முயற்சியையும் கூட்டுஎதிரணி கர்ணகொடூரமான எதிர்க்கும் என்றும் அவர் எச்சரிக்கை செய்திருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போட்டு, பாராளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துவதற்கான சிறிசேனவின் பிரயத்தனத்தின் பின்னணி ஜனாதிபதியா இரண்டாவது பதவிக்காலத்திற்குத் தான் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாகத் தனது அரசியல் மற்றும் பொருளாதார நிகழ்ச்சித்திட்டங்களை அடுத்த சில மாதங்களுக்கு நிறைவேற்றக்கூடிய பிரதமரையும், தன்னால் எளிதில் கையாளக்கூடிய பாராளுமன்றம் ஒன்றையும் கொண்டிருக்க வேண்டும் விருப்பமேயாகும். ஐக்கிய தேசியக் கட்சியினாலும், அதன் நேச அணிகளாலும் ஆதிக்கம் செலுத்தப்படுகின்ற பாராளுமன்றத்துடனும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையுடனும் ஜனாதிபதி சிறிசேன இப்போது பல மாதங்களாக முட்டி மோதிக்கொண்டேயிருக்கிறார். இரு தரப்பிற்கும் இடையிலான முரண்பாட்டு நிலை அரசியல், பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கை என்று பல்வேறு விவகாரங்கள் தொடர்பானதாக இருக்கின்றது. இறுதியாக ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்திற்கும் இடையே ஏற்பட்டிரு;ககும் முறுகல் நிலைக்குக் காரணம் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவாகும். அந்தத் தெரிவுக்குழுவின் அமர்வுகளுக்கு ஊடகவியலாளர்களும் அனுமதிக்கப்பட்டு உடனுக்குடனாகப் பகிரங்கப்படுத்தப்படுவது சிறிசேனவிற்கு கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தெரிவுக்குழுவில் சாட்சியம் அளிக்கின்ற உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகளில் பலரும் பாதுகாப்புத் துறையிலுள்ள குறைபாடுகளுக்காக ஜனாதிபதி சிறிசேனவைக் குற்றஞ்சுமத்தியிருப்பதையும், பகிரங்க விசாரணைகளின் மூலமாக முக்கிய அரச இரகசியங்கள் வெளிப்படுத்தப்படுவதையும் தனக்கு எதிரான திட்டமிட்ட செயற்பாடுகளாகப் பாரக்கும் அவர், தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தார். தெரிவுக்குழு தொடர்ந்து செயற்படுமாக இருந்தால் அமைச்சரவைக் கூட்டங்களை நடத்தப்போவதில்லை என்றும் கூட ஜனாதிபதி அச்சுறுத்தியிருந்தார். இம்மாதம் 11 ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெற வேண்டிய வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டாமலேயே ஜனாதிபதி வெளிநாடு சென்றார். மறுபுறத்தில் தெரிவுக்குழுவை அமைப்பதென்பது பாராளுமன்றத்திற்குரிய சிறப்புரிமை என்பதால் அந்தக் குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு கோருவதற்கு ஜனாதிபதிக்கு எந்த உரிமையும் கிடையாது என்று பாராளுமன்ற சபாநாயகர் கரூ ஜயசூரிய வாதிட்டார். அத்துடுன் தெரிவுக்குழு முன்பாக வந்து சாட்சியம் அளிப்பதிலிருந்து அதிகாரிகளை ஜனாதிபதியால் தடுக்கவும் முடியாது. எனவே சகாநாயகர் வழமை போன்று தெரிவுக்குழு, அதன் செயற்பாடுகளை தொடர்வதற்கு அனுமதித்தார். இந்த சர்ச்சையில் ஜனாதிபதியினாலும், சபாநாயகராலும் அடுத்து முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் ஜனாதிபதி தஜிகிஸ்தானிலிருந்தும், பிரதமர் விக்கிரமசிங்க சிங்கப்பூரிலிருந்தும் நாடு திரும்பிய பின்னர் மாத்திரமே தெரியவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமையில் மாற்றத்தைக் காணக்கூடியதாக இல்லை. இந்த சர்ச்சைக்கு சில தினங்களுக்குள் தீர்வு காணப்படாவிட்டால் அரசியலமைப்பு நெருக்கடியொன்று தோன்றக்கூடிய ஆபத்தும் இருந்தது. வழமைப் பிரகாரம் செவ்வாய்கிழமைகளில் அமைச்சரவை கூட்டப்படாவிட்டால் பாராளுமன்றத்தில் பெரும் குழப்பம் நேருமென்று கூட்டுஎதிரணி எம்.பி ரோஹித அபேகுணவர்தன ஏற்கனNவு எச்சரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தயாசிறியின் கோரிக்கை ஜனாதிபதியின் பதவிக்காலத்தை ஆறு மாதங்களினால் நீடிப்பது தொடர்பில் உச்சநீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கேட்கப்போவதாக அதன் பொதுச்செயலாளர் தயாசிறி ஜனசேகர ஏப்ரல்மாத ஆரம்பத்தில் கூறியிருந்தார். சட்டரீதியான அடிப்படையில் ஜயசேகர ஜனாதிபதியின் பதவிக்காலத்தின் முடிவு குறித்துக் கருத்தைக் கூறியிருந்தாலும் கூட, ஜனாதிபதி சிறிசேன தனது அரசியல் செல்வாக்கை அதிகரித்து இரண்டாவது பதவிக்காலத்திற்குத் தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சியாகவே மேலும் ஆறுமாத காலத்திற்குப் பதவியில் நீடிக்க விரும்புகிறார் என்பது வெளிப்படையானது. ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான நோக்கம் தொடர்பில் சட்ட வியாக்கியானளம் ஒன்றைச் செய்த ஜயசேகர பின்வருமாறு கூறினார்: 'ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களா அல்லது ஆறு வருடங்களா என்று உச்சநீதிமன்றத்திடம் ஏற்கனவே கேட்கப்பட்டது. அப்போது பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என்று தீர்மானிக்கப்பட்டது. அந்த ஐந்து வருட பதவிக்காலம் என்போது தொடங்குகிறது, எப்போது முடிவடைகிறது என்பதே இப்போதுள்ள பிரச்சினையாகும். ஒரு சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் சபாநாயகர் அதில் கையெழுத்திட்டு, அங்கீகாரம் வழங்கிய பின்னர் மாத்திரமே அது நடைமுறைக்கு வருகிறது என்று அரசியலமைப்பு தெளிவாகக் கூறுகிறது. அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தச்சட்டமூலம் 2015 மே மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அதில் சபாநாயகர் 2015 ஜுன் 22 ஆம் திகதியே கைச்சாத்திட்டார். எனவே ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 6 வருடங்களிலிருந்து 5 வருடங்களாகக் குறைக்கும் 19 ஆவது திருத்தச்சட்டம் 2015 ஜுன் 22 ஆம் திகதியிலிருந்தே நடைமுறைக்கு வந்தது. ஆதலால் ஜனாதிபதி சிறிசேனவின் 5 வருட பதவிக்காலம் 2015 ஜுன் 22 ஆம் திகதியே தொடங்கி, 2020 ஜுன் மாதமே முடிவடைய வேண்டுமேயன்றி, 2019 டிசம்பரில் அல்ல. மேலும் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட முன்னதாக 6 வருட பதவிக்காலத்திற்காக சிறிசேன 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்டார். 19 ஆவது திருத்தச்சட்டத்தைப் பின்நோக்கிய காலகட்டத்திற்குப் பிரயோகிக்க முடியாது. ஆகையால் அந்தத் திருத்தச்சட்டம் ஜனாதிபதி சிறிசேனவின் பதவிக்காலத்தைப் பொறுத்தவரை பிரயோகிக்கப்படலாகாது. ஏனென்றால் அவர் அந்தத் திருத்தச்சட்டம் வருவதற்கு முன்னர் ஜனாதிபதியாகப் பதவியேற்றார்" - இது ஜயசேகரவின் வாதம். ஆனால் இதுவிடயத்தில் உச்சநீதிமன்றத்தை அவர்கள் நாடவில்லை. 250 இற்கும் மேற்பட்டோரைப் பலியெடுத்த ஏப்ரல் 21 தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களால் தோற்றுவிக்கப்பட்ட குழப்பநிலை, பதட்டம் மற்றும் உறுதிப்பாடு என்பன இதற்குக் காரணமாக இருக்கலாம். அக்டோபர் 26 சதி முயற்சி 2018 அக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதி சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கிவிட்டு, அவரின் இடத்திற்கு கூட்டுஎதிரணியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தார். அவ்வாறு செய்ததன் மூலம் 19 ஆவது திருத்தச்சட்டத்தை அவர் அவமதித்தார். பிரதமருக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருக்கும்வரை அவரைப் பதவி நீக்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்குக் கிடையாது என்று அந்தத் திருத்தச்சட்டம் தெளிவாகக் கூறுகிறது. பிரதமர் பதவி விலகும் பட்சத்தில் அல்லது பாராளுமன்ற உறுப்பினராக இல்லாமற்போகும் பட்சத்திலேயே அவர் பதவி இழக்கிறார். நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து பெரும் பின்னடைவைக் கண்ட ஜனாதிபதி சிறிசேன பிரதமராக மீண்டும் விக்கிரமசிங்கவை நியமித்தார். பிரதமரினால்சிபாரிசு செய்யப்படாத பட்சத்தில் ஜனாதிபதியினால் அமைச்சர்களைப் பதவி நீக்கமுடியாது என்றும், அரசுக்கு எதிராக நம்பிக்;கையில்லாப் பிரேரணையொன்று நிறைவேற்றப்படும் பட்சத்தில் அல்லது வரவு, செலவுத்திட்டம் அல்லது அரசாங்கதத்தின் கொள்கைப் பிரகடன உரை ஒன்று பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்படும் வரை அமைச்சரவை தொடர்ந்து பதவியிலிருக்கும் என்று 19 ஆவது திருத்தம் கூறுகிறது. பதவிக்கால நீடிப்புக்கு ராஜபக்ஷ மேற்கொள்ள முயற்சி 2010 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஏப்ரலில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் பெருவெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அந்த வருடம் செப்டெம்பரில் அரசியலமைப்புக்கான 18 ஆம் திருத்தத்தைக் கொண்டுவந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றினார். ஜனாதிபதியொருவர் ஒரு பதவிக்காலத்திற்கே ஆட்சியதிகாரத்தில் இருக்கமுடியும் என்ற வரையறையை இல்லாமற்செய்து 2016 இல் நடத்தப்பட வேண்டியிருந்த அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் 3 ஆவது பதவிக்காலத்திற்குத் தான் போட்டியிடுவதற்கு வசதியாகவே அந்தத் திருத்தச்சட்டத்தை அவர் கொண்டுவந்தார். ஆனால் உரிய காலத்திற்கு முன்கூட்டியே 2015 ஜனவரியில் ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலை நடத்தினார். அந்தத் தேர்தலிலும், அடுத்து 2015 ஆகஸ்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் அவர் தோல்வியடைந்தார். ஜனாதிபதி சிறிசேனவினதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான புதிய அரசாங்கம் 2015 ஜுன் மாதத்தில் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. அந்தத் திருத்தம் ஜனாதிபதிக்கு இருந்த இருவருடப் பதவிக்கால மட்டுப்பாட்டை இல்லாமற்செய்தது மாத்திரமல்ல, ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 6 வருடங்களிலிருந்து 5 வருடங்களாகவும் குறைத்தது. ராஜபக்ஷ குழுவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸும், முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாவும் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பின்நோக்கிய காலகட்டத்திற்குப் பிரயோகிக்கப்பட முடியாது என்பதால் இருவருட பதவிக்கால வரையறையை ராஜபக்ஷவுக்குப் பிரயோகிக்க முடியாது என்று இப்போது வாதிடுகிறார்கள். ஆனால், 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் இருக்கின்ற பதவிக்கால மட்டுப்பாடு தற்போது பதவியிலிருக்கும் ஜனாதிபதிக்கு மாத்திரமே பிரயோகிக்கப்படுகிறது. ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதியே தவிர தற்போது ஜனாதிபதிப் பதவியில் இல்லை. திருமதி குமாதுங்கவின் பதவிக்கால நீடிப்பு முயற்சி ராஜபக்ஷவுக்கு முன்னர் ஜனாதிபதியாகப் பதவி வகித்த திருமதி.குமாரதுங்க 2005 ஆம் ஆண்டில் தனது பதவிக்காலத்தை ஒரு வருடத்தினால் நீடித்துக்கொள்வதற்கு முயற்சித்தார். 1999 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு பதவிப்பிரமாணம் செய்துகொண்ட தினத்தில் அல்ல, ஆனால் முதலாவது 6 வருடப் பதவிக்காலம் முடிவடைகின்ற 2006 டிசம்பரிலேயே தனது இரண்டாவது பதவிக்காலம் தொடங்குகின்றது என்ற வாதத்தின் அடிப்படையிலேயே அந்த முயற்சியை மேற்கொண்டார். 1994 நவம்பரில் முதற்தடவையாக ஒரு 6 வருட பதவிக்காலத்திற்கு திருமதி குமாரதுங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றார். இந்தப் பதவிக்காலம் 2000 நவம்பரில் முடிவடையுமே தவிர, 1999 நவம்பரில் அல்ல. தனது இரண்டாவது பதவிக்காலம் 2000 நவம்பரில் தொடங்குகிறது என்று காட்டுவதற்காக இரண்டாவது பதவிப்பிரமாண வைபவமொன்றில் அவர் பதவிப்பிரமாணம் செய்திருந்தார். ஆனால் ராஜபக்ஷ அதை எதிர்த்தார். உச்சநீதிமன்றத்தில் அவர் சார்பில் மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் திருமதி குமாரதுங்கவின் இரண்டாவது பதவிக்காலம் 2006 அல்ல. 2005 நவம்பரிலேயே முடிவடையும் என்று தீர்ப்பளித்தது. பாராளுமன்றப் பதவிக்காலத்தை நீடித்த ஜே.ஆர்.ஜெயவர்தன ஜனாதிபதி ஜெயவர்தன 1977 ஜுலையில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தைக் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தாமல் ஒரு ஆறுவருட காலத்திற்கு 1988 வரை நீடிப்பதற்கு 1982 டிசம்பர் 12 ஆம் திகதி நாடளாவிய சர்வசன வாக்கெடுப்பொன்றை நடத்தினார். அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு நக்சலைட் முயற்சியொன்று மேற்கொள்ளப்படுவதாகக் கூறிக்கொண்ட ஜெயவர்தன, அந்த ஆபத்தை முறியடிப்பதற்கு அரசாங்கத்திற்கு இருக்கக்கூடிய ஆற்றலுக்குப் புதிய பொதுத்தேர்தல் ஒன்று தடையாக இருக்குமென்றும், தனது புதிய திறந்த பொருளாதாரக் கொள்கையை முன்னெடுக்க முடியாமற்போகும் என்றும் காரணம் கூறியே அவர் அந்த சர்வசன வாக்கெடுப்பை நடத்தினார். 1977 ஜுலையில் தெரிவு செய்யப்பட்ட அந்தப் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் 1983 ஆகஸ்டில் முடிவடைய இருந்தது. ஆனால் 1988 அக்டோபரில் ஜெயவர்தன கலைக்கும் வரை அந்தப் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் நீடித்தது. சர்வசன வாக்கெடுப்பின் போது படுமோசமான வன்முறைகளும், அச்சுறுத்தல்களும், மோசடிகளும் இடம்பெற்றன. ஆனால் ஜெயவர்தன கூடுதல் அதிகாரத்தை அபகரிப்பதில் வெற்றிகண்டார். ஆனால் அவரைப் போலன்றி அவருக்குப் பின்னர் ஜனாதிபதியாக வந்தவர்கள் தங்களது அதிகாரங்களையும், சிறப்புரிமைகளையும் விஸ்தரித்துக்கொள்ள மேற்கொண்ட முயற்சிகளில் பரிதாபகரமாகத் தோல்விகண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. (நியூஸ் இன் ஏஸியா ) https://www.virakesari.lk/article/58975

கிரிக்கெட் உலகக் கிண்ணம் -பங்களாதேஷிடமும் ஏமாந்த ஆப்கான்!

3 months 3 weeks ago
பங்களாதேஷிடமும் ஏமாந்த ஆப்கான்! பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 62 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 31 ஆவது போட்டியில் மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ், குல்படீன் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு சவுதம்டனில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்ய பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 262 ஓட்டங்களை பெற்றது. 263 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணி 47 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 200 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 62 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் குல்படின் நைப் 47 (75) ஓட்டத்தையும், ரஹ்மத் ஷா 24 (35) ஓட்டத்தையும், ஹஷ்மதுல்லா ஷாஹிடி 11 (31) ஓட்டத்தையும், அஷ்கர் ஆப்கான் 20 (38) ஓட்டத்தையும், மொஹமட் நபி டக்கவுட்டுடனும், இக்ரம் அலி கில் 11 (12) ஓட்டத்துடனும், நஜிபுல்லா ஸத்ரான் 23 (23) ஓட்டத்துடனும், ரஷித் கான் 2 (3) ஓட்டத்துடனும், டூவ்லட் சத்ரான் மற்றும் முஜிபுர் ரஹ்மான் டக்கவுட்டுடனும் ஆட்டமிழந்ததுடன் சாமியுல்லா ஷின்வாரி 49 (51) ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார். பங்களாதேஷ் அணிசார்பில் அசத்தலாக பந்து வீசிய சகிப் அல்ஹசன் 5 விக்கெட்டுக்களையும், முஷ்தாபிகுர் ரஹ்மான் 2 விக்கெட்டினையும், ஹசேன் மற்றும் சைபுதீன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். இந்த தோல்வி ஆப்கானிஸ்தான் அணி தொடரில் பெற்றுக் கொண்ட ஏழாவது தோல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது. photo credit : ‍icc https://www.virakesari.lk/article/58998

விலகியோட முனைந்தாரா ஜனாதிபதி?

3 months 3 weeks ago
எடுத்தவுடன் SOFA உடன்பாட்டில் கையெழுத்திட ஒப்புக்கொண்டால் சிங்களவர்களின் விமர்சனத்துக்கு உள்ளாக நேரிடும். அதாலை இப்பிடி படம் காட்டி விட்டு இறுதியில் ஒப்புக்கொள்வார். 😎

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

3 months 3 weeks ago
நான் எல்லாக் கொம்பினேஷனையும் போட்டுப் பார்த்தும் நீர்வேலியானை செமி-ஃபைனல் வரை முதல் இடத்திலிருந்து விரட்டமுடியவில்லை! 😤 எப்படியும் அதற்குப் பின்னர் இந்தியா கிண்ணத்தைத் தூக்க எல்லாரும் எனக்குப் பின்னால் வரிசையில் அணிவகுப்பார்கள்!!🤩

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு

3 months 3 weeks ago
யார் அந்த ஆணா அண்ணா புங்குடுதீவு?...அந்த பெண் சக்தி டிவியில் அறிவிப்பாளாராம் என்று எங்கேயோ வாசித்தேன்...நிகழ்சசி தொடங்க முன்னரே போட்டி தொடங்கிட்டுதா?...அநேகமாய் இந்த இருவரில் ஒருவர் தான் முதலாவதாய் வருவார்

கல்முனைக்கு ஆதரவாக யாழில் போராட்டம்…

3 months 3 weeks ago
அவர் சொல்றார் கிழக்கு மக்களுக்காய் போராடப் போனால் யாழ்ப்பாணத்தில் இருக்கும் முஸ்லிம்கள் அங்கிருக்கும் தமிழரை கோப்பாய்க்கும் ,சாவகச்சேரிக்கும் துரத்துவார்களாம்...அதனால போராட வேண்டாமாம்...வாழ்க தமிழன்

‘எமது தலைவரை காட்டிக்கொடுத்த துரோகி’: கல்முனைக்கு வந்த கருணாவிற்கு எதிர்ப்பு; மூடிமறைத்த ஏற்பாட்டாளர்கள்!

3 months 3 weeks ago
வாங்கோ நெல்லையன் நித்திரையால முழிச்சிட்டீங்களோ...என்னும் எத்தினை நாலைக்குத் தான் இதே ஒப்பாரியை பாடப் போறீங்கள்...சுமத்திரனுக்கு அடி காணுமாமோ?...உங்களுக்கு கவலையாத தான் இருக்கும்...இனி மேலாவது உருப்படியாய் ஏதாவது செய்ய சொல்லுங்கோ...அட்லீஸ்ட் கல்முனையாவது மீட்டு கொடுக்கச் சொல்லுங்கோ பார்ப்பம் சுமத்திரனுக்கு அடி விழுந்தால் ஏன் கருணாவோட பாயுறீங்கள்...அவர் காத்துப் போன பலூனாச்சே...கூட்டமைப்பினரும் திருந்தப் போவதில்லை...நீங்களும் மாற போவதில்லை...இப்படியே ஒப்பாரி வைச்சிட்டு இருங்கோ
Checked
Wed, 10/16/2019 - 09:06
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed