யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்

ரசிக்க .....ருசிக்க ..... ரெசிப்பி காணொளிகள் !!

1 year 6 months ago

உணவு என்பது மனிதனின் வாழ்வியல் பெரும் பங்கு வகிக்கிறது .சுவையாக உணவு தயாரிப்பது என்பது ஒரு கலை .அதை ரசித்து ருசித்து உண்பது என்பதும் ஒரு கலை .இங்கே நான் செய்த சில உணவுகளை  உங்களுக்கு காட்சிப்படுத்துகிறேன் .நீங்களும் இந்த வீடியோக்களை பார்த்து  சுவையான உணவுகளை  செய்யலாம் சுவைக்கலாம் .உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் .நீங்களும் வீட்டில் செய்யலாம் CRISPY FRENCH FRIES

முகத்திலே என்ன அப்படி எழுதி ஒட்டி வைச்சுக் கிடக்கா..

1 year 6 months ago

வந்தவனின் பெல்ட் சரியாக வேலை செய்யவில்லை என்பதால் மற்றுமொரு நட்சத்திர விடுதியில் நடந்திருக்கக் கூடிய அனர்த்தம் தப்பி விட்டது என ஓர் செய்தி (23/04/2019) . பெல்ட் என்பது பழைய ஞாபகம் ஒன்றை கிளறி விட்டது.

முகத்திலே  இலகுவாகப் பேய்க்காட்டுப்படக் கூடிய ஆள் என்று எழுதி வைத்திருக்கோ என்னமோ தெரியவில்லை  , எங்க சாமான் வாங்கப் போனாலும் எதாவது ஒண்டு நடக்கும்.  அது பழைய காலத்தில பெற்ராவில (புறக்கோட்டை)   நூற்றுச் சொச்ச ரூபாவிற்கு இடுப்புப் பட்டி வாங்கிய நாட்கள் என்றாலென்ன,  இப்ப 5.20 வெள்ளி பெறுமதியான யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூள் என்றாலென்ன, 1,399  வெள்ளி பெறுமதியான Lap Top  எண்டாலென்ன எதையாவது அமத்தி அடிச்சு தலையில கட்டப் பார்க்கினம் . ஒண்டுக்கு  இரண்டு ரீடிங் கிளாஸ் எடுத்துக் கொண்டு போய் (  சின்ன எழுத்து வாசிக்க ஒண்டு , பெரிய எழுத்து வாசிக்க ஒண்டு)  எண்ணெய் விட்டுக் கொண்டு போன கண்ணால துருவித்  துருவிப் பார்த்தாலும் சில வேளை ஏதாவது தப்பி விடும் , வீட்டுக்கு வந்து பார்க்கும் போது.

 

Episode 1: பெற்றாவில் வாங்கிய பெல்ட்  : 

 உழைக்கத் தொடங்காத காலம்.  அப்பா ஒவ்வொரு மாதமும் அனுப்பும் மணி ஓடரை  வைத்து ஹால் சாப்பாட்டுக்காசு, சில்லரைச் செலவுகள் எல்லாம் பார்த்து , இடை இடையே நண்பர்களுடன் Leons இற்கு  போய் அருமையாக ரெண்டு பியர் அடிச்சு  (  இரண்டுக்கே நல்லா  ஏறி விடும் அப்பவெல்லாம்) , பிறகு கொழும்புக்கும் போவதற்கு காசினைத் தேற்றி எடுப்பதென்பது குதிரை கொம்பு தான்.  எப்படியோ சில பல குதிரைக்கொம்புகள் இடைக்கிடை வந்து சேரும்.  அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் கொழும்பு போன நேரம் , வந்த அலுவல் முடித்து விட்டு திரும்புவதற்கு பஸ்ஸைப் பிடிக்க Pettah (புறக்கோட்டை ) நடைபாதையில் நடந்து கொண்டிருந்தேன்.  வழியில ஒருத்தன் வித விதமான இடுப்புப் பட்டிகளை பரப்பி வைத்து விலை எதோ நூற்றுச்சொச்சம் என்று கூவி அழைத்துக் கொண்டிருந்தான்.  சற்றுக் குனிந்து இடுப்பைப் பார்த்தேன்.  ஒன்றுக்கு மேற்பட்ட பெரிய ஓட்டைகளும் குறுக்கே ஒரு பெரிய மடிப்பு வெடிப்புமாக எனது பெல்ட் பென்ஷன் தரச் சொல்லி அழுது கொண்டிருந்தது.  பர்ஸினுள் மேலதிகமாக ஒரு 125 ரூபாய் மட்டில் இருந்தது ஞாபகம் வர , சற்றே வேகம் குறைத்து அவனிடம் சென்றேன்.

  “மில கீயத (என்ன விலை)?” என்று எனக்குப் பிடித்திருந்த ஒரு பெல்டைக் காட்டிக் கேட்டேன். எனது சிங்களம் பற்றி எனக்கு எப்பவுமே பெருமை உண்டு 4,5  வயதில்  கத்தோலிக்க சிஸ்டரிடம் படிக்கப் போன காலத்திலேயே , அவர் ஒரு சிங்கள மாஸ்டரை ஒழுங்கு படுத்தி சிங்களம் பயின்று வந்திருந்தது இப்ப ஒரு  45 வருடம் போன பின்பும் நல்லா நினைவில் நிக்கிற ஒண்டெண்டால் , அப்ப  இருபது வயதில தெள்ளுத் தெறித்தது மாதிரித் தானே இருந்திருக்கும்.

“ ஏக்க சீய தஹாயாய் மஹத்தயா”  என்றான் அவன்.

 மஹத்தயா என்று அவன்  விழித்தது மனதுக்கு அப்படி ஒரு திருப்தி. இப்ப நினைச்சுப் பார்த்தால் அன்றாடம் சந்திக்கும் சாதாரண மனிதர்களில் ஒருவராக இருக்கக்கூடிய அவன்  தரவளிகளெல்லாம்  Customer Psychology  இல் PhD தர அறிவு கொண்டிருந்து வியாபாரம் செய்திருந்தார்கள் என வியப்பாகக் இருக்கிறது , Fittest Survives.  

இன்றைய திகதியில் எனது துணைவியாரும் என்னுடன் அங்கு நின்றிருந்தால்,  ஐம்பது ரூபாய்க்குத் தருகின்றாயா எனக் கேட்டிருப்பார். எப்போதுமே வராத அந்தத் துணிச்சல் எங்கேயோ பதுங்கி நிற்க , விலை கொஞ்சம் அதிகம் தான் என மனது சொல்ல , ஒரு மாதிரி துணிச்சலை வரவழைத்து கொண்டு கேட்டேன்,   “ ஏக்க சீயட்ட தெண்ட புளுவாங்த ( நூறு ரூபாய்க்கு தர முடியுமா)”  என்று.

ஒரு மாதிரி என்னை மேலும் கீழும் அளந்து பார்த்தவன் , “சரி”  என்று சொன்னான்.  எனக்குள்ளே ஒரே புழுகம்- ‘ யாரடா சொன்னது உனக்குத் துணிச்சலும் பேரம் பேசும் திறமையும் இல்லை எண்டு’  எனக்கு நானே  தட்டிக் கொடுத்துக் கொண்டேன்.

அதற்குப் பிறகு தான் விவகாரமே ஆரம்பமாகியது.

நூறு ரூபாயை எடுத்து நீட்டினேன். சந்தோசமாக வாங்கி வைத்து கொண்டான். பின்பு Belt ஐ எடுத்து எனது இடுப்பில் சுற்றி  அளவு பார்த்தவன் கேட்டான்  “  ஹோலுத் தஹலா தெனவாத மாத்தையா ருப்பியல் பஹய் விதராய் ( ஓட்டை போட்டுத்  தரவா ஐந்து ரூபாய் மட்டுமே)”   என்றான்.

நானும்  சரி என்றேன்.  இடுப்பில் வைத்து மீண்டும் அளவு எடுத்து ஓட்டை போட்டான்.  பிறகு கேட்டான் பக்கத்தில கொஞ்ச கொஞ்ச இடைவெளி விட்டு மேலும் ஓட்டைகள் போடவா என்று.  நானும் ஒரு பெரிய மனிதத் தோரணையில் ஓமென்று தலையாட்டினேன்.

படக் படக் என்று நாலைந்து ஓட்டைகள் போட்டான்.  பெல்டைத் திரும்பத் தந்தான்.  போட்டுப் பார்க்கச் சொன்னான்.  பழைய பெல்டை அதிலேயே கழற்றி எறிந்து விட்டு புதியதை மாட்டிக் கொண்டேன். குனிந்து பார்க்க நல்ல எடுப்பாகத் தான் இருந்தது. பர்ஸ் இலிருந்து ஐந்து ரூபாயத் தாளை எடுத்து நீட்டினேன். போகத் திரும்பினேன்.

“ பொட்டக் இண்ட மஹத்தயா?”  என குரல் விட்டான். திரும்பிப் பார்த்தேன். “தவ ரூபியால் விஸ்ஸக் தென்ட மஹத்தயா( இன்னமும் இருபது ரூபாய் தாருங்கள்)?”  என்கிறான்.

எனக்குப் பெரிய அதிர்ச்சி. 105  ரூபாய் போக மிச்சமாக இருக்கக் கூடிய 20 ரூபாயில்  புறக்கோட்டை நானா கடை கொத்துரொட்டியை ஒரு கை பார்த்து விட்டு பஸ் ஏறலாம் (அப்ப ஒரு கொத்து ரொட்டி 10 ரூபா அப்படி இருந்திருக்கும்) என இருந்த எனக்கு , இவன் காசு முழுவதையும் அமத்தப் பார்த்தால் எப்படி இருக்கும்.

“ என்ன 5 ரூபாய் எண்டு தானே சொன்னனீ ? “  என்றேன் நான்.

 “ ஓம் மஹத்தயா ஒரு ஓட்டை போட 5 ரூபாய் , 5 ஓட்டைக்கும் 25 ரூபாய் ஆகின்றது.  காசைத் தாருங்கள்”  என்று தொனியை சற்றே உயர்த்தி சொன்னான்.

யாரோ எங்கோ எள்ளி நகைத்தார்கள்.  எனது  கொத்து ரொட்டி கனவை இறுக்கமாக மூட்டை கட்டி வைத்து விட்டு,  பர்ஸை வழித்துத் துடைத்து அவனிடம் கொடுத்து விட்டு , ஏன் எனக்குத் தான் இதெல்லாம் நடக்குது என்று வாழ்க்கையே  வெறுத்துப் போய் திரும்புவதற்கு மீண்டும் பஸ்ஸை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

 

Episode 2 : வரும்….

 

 

கிரேக்கச் சுற்றுலா - பயணக் கட்டுரை

1 year 6 months ago

கடந்த ஆண்டு சித்திரையில் நானும் கணவரும் வரலாற்றுத் தொன்மை மிக்கதும் கடல் வணிகத்துக்குப் பெயர் போனதுமான  கிரேக்கத்தின் தலைநகரான எதென்சுக்குச் சென்றோம். கிரேக்கரின் இடிபாடுகளுடன் காணப்படும் கட்டடங்களை தொலைக்காட்சிகளில் பார்க்கும்போதெல்லாம் கட்டாயம் அங்கு செல்ல வேண்டும் என்ற என் ஆசை கடந்த ஆண்டே நிறைவேறியது.

ஆனாலும் ஒருவித பயம் இருந்துகொண்டே இருந்தது. அங்கு பார்க்கக்கூடிய இடங்களைப் பட்டியலிட்டு அதற்கு அண்மையில் உள்ள ஒரு தங்குமிடத்தையும் ஒழுங்கு செய்துகொண்டோம். ஒரு நாளுக்கு இருவர் தங்குவதற்கு 70 பவுண்ஸ்கள் மட்டுமே. காலை உணவு ஒருவருக்கு 5 யூரோஸ். எனவே அதையும் சேர்த்து  பதிவுசெய்தாகிவிட்டது.

இணையங்களில் தேடித் பார்த்தபோது பெரிதாகக் களவுகள் இல்லை என்றாலும் இரவில் தனியாகத் திரிவது ஆபத்து என்று போட்டிருந்தார்கள். மேலும் தேடியதில் விமான நிலையத்தில் இருந்து எதென்ஸ் செல்வதற்கு டாக்சியில் செல்வதற்கு அதிகமான பணம் வசூலிப்பார்கள். விமான நிலையத்துக்கு முன்னாலேயே தொடருந்துத் தரிப்பிடம் உள்ளது. அதில் செல்வது மலிவு என்று போட்டிருந்தார்கள்.

லண்டனில் இருந்து எதென்ஸ் செல்ல நான்கு மணி நேரம். இங்கு காலை எட்டுமணியளவில் புறப்பட்டு பகல் 12.30 க்கு அங்கு போய் நானும் கணவரும் இறங்கிவிட்டோம். வெளியே வந்து பார்த்தால் விமான நிலையம் சும்மா ஒரு கட்டடம் போல் நின்றுகொண்டிருந்தது.

தொடருந்து நிலையம் சென்று பயணச்சீட்டை எடுத்துக்கொண்டு அங்கேயே ஒரு எதென்சின் வரைபடத்தையும்  வாங்கிக்கொண்டு வெளியே வந்து காத்திருக்கிறோம். கிரேக்க மொழியிலும் ஆங்கிலத்திலும் வரைபடத்தில்  பெயர்கள் எழுதப்பட்டிருந்தது நின்மதியாக இருந்தாலும் சரியான தொடருந்தைப் பிடித்துச் சரியானஇடத்துக்குப் போய்ச் சேர வேண்டுமே என்று மனதில் ஒரு படபடப்பு ஒட்டிக்கொண்டே இருந்தது. தொடருந்து வர இன்னும் அரை மணிநேரம் இருக்கிறது. காவிருக்கைகள் இருக்கும் இடங்கள் எல்லாம் ஆட்கள் இருக்கின்றனர். வேறுவழியில்லாமல் ரெயின் வரும் வரை நிக்கத்தான் வேணும் என்கிறேன். நாலுமணித்தியாலம் இருந்து தானே வந்தனாங்கள் அரை மணித்தியாலம் நில்லன் என்று கூறிவிட்டு மனிசன் பிராக்குப் பார்க்க வேறுவழி யில்லாது  நானும் தண்டவாளத்தின் பலகைகளையாவது எண்ணிக்கொண்டிருப்போம் என்றால் அந்தத் தொடருந்துத் தடத்துக்கு பலகைகளைக் காணவில்லை. என்னப்பா இது இங்க பாருங்கோ பலகையளைக் காணேல்லை என்று நான் சொல்ல, எனக்கு உதைப்பற்றித் தெரியாது. என்னைக் கேட்காதை. வேறை ஏதும் டெக்னோலஜி பாவிச்சிருப்பான்கள் என்கிறார் மனிசன்.

தொடருந்து வருவதாக அறிவிக்க, இது சரியான தொடருந்துதானா என்ற சந்தேகம் எழ, பக்கத்தில நிக்கிறவனிட்டைக் கேளுங்கப்பா என்கிறேன் மனிசனிடம். மனிசன் கேட்க அவனுக்கோ ஆங்கிலம் விளங்கவில்லை. கொஞ்சம் தள்ளி இன்னொரு பெண்ணும் நிற்கிறார். அவளிடம் கேளுங்கோ என்கிறேன். இந்த நாட்டில தெரியாத ஆட்களிடம் பெண்கள் கதைப்பார்களோ தெரியாது. எதற்கும் நீ போய்க் கேள் என்கிறார் மனிசன். நான் போய் கேட்டதும் அவளுக்கும் விளங்கவில்லை. தூரத்தே தொடருந்து வருவது தெரிகிறது. நான் வரைபடத்தில் இறங்கவேண்டிய இடத்தைக் காட்டி தொடருந்தையும் கை காட்டுகிறேன். அவளுக்கு விளங்கியதோ இல்லையோ. ஓம் என்று தலையை இங்குமங்கும் ஆட்டுகிறாள்.

சரி தொடருந்தை விட ஏலாது. முதல்ல ஏறுவம். பிறகு உள்ள ஆரிட்டையாலும் கேட்பம் என்கிறேன். இதுவாய்த் தான் இருக்கும். சும்மா பயந்து என்னை டென்ஷன் ஆக்காதே என்றபின் நான் எதுவும் கதைக்கவில்லை. தொடருந்து வந்து நின்றதும் பார்த்தால் நிறையச் சனம். இருக்கவும் இடம் கிடைக்காது போல என்று விசனத்துடன் நிக்க, நிறையப்பேர் எதென்சில் இறங்க மனிசன் விரைவாக ஏறி எனக்கும் தனக்குமாக இடம் பிடிச்சிட்டார்.

சரியாக ஒரு மணி நேர பயணத்தில் எதென்ஸ் போய் இறங்கியாச்சு. வரை படத்தைப் பார்த்துப் போனால் இடம் பிடிபடவில்லை. வீதிகளை பார்க்க பாழடைந்துபோய் பலகாலம் பயன்படுத்தாத மூடிய கடைகளும் புழுதியான வீதிகளும்.... என்னடா இது உதவாத இடத்தில் தங்குமிடத்தை எடுத்துவிட்டோமோ என்று புழுக்கத்துடன் போனால் வீதியின் மறுபுறம் நல்ல சுத்தமாக இருக்க, மனதில் ஒரு நின்மதி ஏற்பட்டது. வரவேற்பிடத்தில் போய் எம் பதிவைச் செய்துவிட்டு லிப்ரில் ஏழாம் மாடியை அடைந்து எமது அறையைத் திறந்து குளியலறையையும் திறந்துபார்த்தபின் தான் நின்மதியானது மனது. காலநிலையும் 20 பாகை செல்சியஸ் என்பது வருமுதலே அறிந்ததுதான் எனினும் இதமான காலநிலை மனத்துக்குஒரு மகிழ்வைத் தர பால்கனியில் போய் நின்று பார்க்க மேலே உயரத்தில் ACROPOLIS OF ATHENS என்னும் இடிபாடுகளுடைய கோவில் தெரிகிறது. அதை நாளை பார்க்கப் போகிறோம் என்றதுமே மனதில் ஒருவித பரவசம் வந்து சேர்க்கிறது.

விமானத்தில் தந்த உணவுக்குப் பின்னர் எதுவும் உண்ணாததால் பசிக்கிறது. நேரம் மாலை நான்குமணி. கீழே சென்று உணவுவிடுதியைப் பற்றிக் கேட்க, ஆறு மணிக்குத்தான் திறப்பார்கள். ஒருவருக்குப் 10 யூரோஸ் என்கிறாள் வரவேற்புப் பெண். இனி வெளியே சென்று உணவகம் தேடி உண்பதிலும் இங்கேயே உண்பது என முடிவெடுத்து, அங்கு பார்க்கும் இடங்கள்பற்றி விசாரிக்க இன்னொரு தெளிவான வரைபடத்தைத் தருகிறாள் அவள். ஐந்து நிமிடம் நடந்து போனால் பஸ் தரிப்பிடம் வரும் அங்கே மஞ்சள் உடையுடன் ஒருவர் நிற்பார். அவர் உதவுவார் என்கிறாள்.

மேலே அறைக்குச் சென்று ஒருமணிநேரம் படுத்திருந்துவிட்டு எட்டாம் மாடியில் உள்ள உணவகத்துக்குச் சென்றால் நாம் மட்டும் தான் அங்கே. விதவிதமான சலாட்டுகள், ஒலிவ் பழங்கள், பழங்கள் என்று அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அன்றைய இரவு முதன்மை உணவு மாட்டிறைச்சியும் உருளைக்கிழங்கும் அல்லது கோழியும் உருளைக்கிழங்கும் அத்தோடு Spaghetti உம் என்று கூற நாம் மாட்டைத் தெரிவுசெய்துவிட்டு சலாட், ஒலிவ் போன்றவற்றை எடுத்துவந்து உண்ணவாரம்பிக்கிறோம்.

 

Goldan City Hotel

57486003_10211879732982315_3629747196234

57460085_10211880326997165_5752192069661

mq2.jpg?sqp=CPDr8-UF&rs=AOn4CLBjoz6qrB1Y

 

 

தொடரும்

உயிர்த்து எழுவேன் உனக்காகவே

1 year 6 months ago

உயிர்த்து எழுவேன் உனக்காகவே _the Resurrection of Jesus __________________________________________________________________________________________

 

 


மரித்தேன் என்று 
எண்ணிவிடாதீர்கள் 
மறுபடியும் 
உயிர்த்து எழுவேன் 
நான் உயிர்த்து
எழுவது உனக்காகவே 
உன் கதவுகளை 
திறந்து வை 
உன்னிடம் வருகிறேன் 
உன் அருகோடு 
இருப்பேன் 
அமைதியாயிரு 
என் இரத்தத்தை 
கழுவிவிட்டு 
உன் பாவங்களை 
கழுவ வருகிறேன் .

 


பா .உதயகுமார் /ஒஸ்லோ 

உடுப்பைக் கழட்டிப் போட்டுத்தானே ஓட வேணும், மாத்தையா………..

1 year 6 months ago

“டேய்  ஓடுறான் அவன் , விடாதீங்கோடா , அவனை..  சுடுங்கோடா   சுடுங்கோடா  …….”

எனக்கு எல்லாமே ஒரு முடிவிற்கு வரப் போகின்றது என தோன்றிற்று. இதிலிருந்து மீள சான்ஸே இல்லை.  ஒடுபவன்( நானில்லை) ஒரு தனி ஆள்,  துரத்திக்கொண்டு போகின்றவர்கள் ஒரு 10  பேராவது இருக்கும் , அதுவும் வகை வகையான சுடுகலங்களுடன். எப்படியும் அவன் தப்பப் போவதில்லை.

 எங்களுக்கு ( எனக்கு) இரு ‘கேட்ச் 22’  தெரிவுகளே இருந்தன , ஒன்று எப்படியாவது டிவிஷன் ஆஃபீஸுக்கு திரும்பிப் போய் கருணாரத்னவை அவர்கள் கொன்றது எங்களை மீறிய ஓர் சம்பவம் என்று சொல்லி விளங்கப்படுத்தி , தப்பினால் வீடு போய் சேர்வது.  (அநேகம் எங்களை அதிலேயே வைத்து வெட்டிப்  போடுவாங்கள் , கூட்டிக்கொண்டு போய் குடுத்திட்டோம் என்று)

இரண்டாவது கருணாரத்னே தப்பிவிட்டான் என்றால்  ( இதற்கு சான்ஸே இல்லை) , இவர்கள் எங்களை விட மாட்டார்கள்.   கூட்டிக்கொண்டு வந்து இடம் காட்டிக் கொடுத்து விட்டோம் என்று. பங்கர்  வெட்டுதல்,  பச்சை மட்டையடி என பல சீன்ஸும் மனதில் வந்து போயின. என்னை பெரிதாக நம்பிக் கொண்டிருக்கும் தங்கை மார் இருவரின் எதிர்காலம் என்னவாகும்,  உடல் நலம் குன்றிப் போய் மனைவியையும் இழந்த நிலையில் எங்களுடன் இருக்கும் தந்தை இதனை என்ன மாதிரி எடுத்துக் கொள்வார் என பல எண்ணவோட்டங்கள்.  

சூட்டுச் சத்தம் கேட்டகத் தொடங்கி ஒரு வெகு சில வினாடிகளுக்கு என் மனம் இந்த சாத்தியப்பாடுகளை எல்லாம் அலசி நின்றது.

“ தம்பிமார் அவனை சுட்டுப்போடாதையுங்கோ”   அலுவலகப் பெரியவரின் வார்த்தைகள் ஒரு 33, 34 வருடம் கழிந்தும் கூட அப்படியே அதே தொனியில் இப்பவும் கேட்கிறது. அந்த காட்சி அடிமனதில் அப்படியே உறைந்து விட்டதொன்று . புலன்கள் மீண்டும் அந்த நொடிக்கு திரும்பின.

இதில்  சம்பந்தப்பட்டவர்களில் அநேகர் இப்போது உயிரோட இல்லை. இருக்கிற யாராவது இதனைப் பதிவிடத் தானே வேண்டும்.

அன்றைக்கு நித்திரை விட்டு எழும்பும்  போது  எல்லாமே சாதாரணமாகத் தான் இருந்தது ஞாபகம் இருக்கிறது. துறைமுகத்திலிருந்து வந்த மெல்லிய குளிருடன் கூடிய காற்றில் அதே மெல்லிய  உப்புக்கரிப்பு. பின்பக்கத்து மரக்கூட்டுத்தாபனத்தில் குற்றிகள் பறித்துக் கொண்டிருக்கும் அதே ஓசை முன்வீட்டு சிவத்தின் இளைய பையன் படுக்க விடாமல் எழுப்பி,  படிக்க அலுப்புக் குடுத்துக் கொண்டிருக்கினம் என்ற அழுகையுடன் கூடிய முறைப்பாடு என எல்லாமே சாதாரணமாக நடந்து கொண்டிருந்த விடயங்கள் தான் .நானும் என் பாட்டுக்கு எழும்பிக் குளித்து , காம்பௌண்ட் வைரவரை தாண்டும் வரை சைக்கிளை உருட்டிக் கொண்டு போய் , நாள் நல்லபடியாக போக வேண்டும் என்ற வழமையான அப்பீலையும் வைரவருக்கு வைத்து விட்டு , சாமியார் கடைக்கு போய் பாணும்  வாங்கி வந்து காலை  சாப்பாடு முடித்து , பின்னர் மோட்டார் பைக்கை எடுத்துக் கொண்டு மார்க்கெட்டுக்கு போய் நல்ல உடன் விளமீனும் மரக்கறி வகைகளும் வாங்கி வந்து ராணியிடம் சமைக்கக் குடுத்து விட்டு அலுவலகம் போக  வெளிக்கிடும் வரையும் எல்லாமே சாதாரணமாகத்  தான் இருந்தது.

மோட்டார் சைக்கிள்  சிவன் கோயிலைக் கடந்து சிவபுரி பள்ள வீதியால் இறங்கி உள் துறைமுக வீதியில் ஏறுவதற்கு வளைவு எடுக்க ,வழமை  போல்   அவர்கள் இருவரும்  -  முகிலனும் கயலும் - கதைத்துக் கொண்டு நிற்பது தெரிகிறது வழமை போலவே.  கயல் சற்றே நிறம் மட்டு என்றாலும் நல்ல செந்தளிப்பான பெண். அவளின் கண்கள் தான் -  என்ன ஆழமும் துறுதுறுப்பும் - சில நேரங்களில் உலகத்து கனவுகள் எல்லாவற்றின் இருப்பிடமாக இருக்கும் அது. எனக்கும் அவளுக்கும் வயது பெரிய வித்தியாசமில்லை ஆயினும் அலுவலகத்தில் அவளுக்கு நான் மேலதிகாரி. என்னை வளைவில் கண்டவுடனும் அவளுக்கு இல்லாத பதற்றம் எல்லாம் வந்து விடும் , நானும் ஒரு புன்சிரிப்புடன் அவைர்களைக் கடந்து சென்று விடுவேன். முகிலனும் நல்ல வாட்ட சாட்டமான பையன் சோடிப்பொருத்தம் என்றால்  அப்படி இருக்கும் அவர்கள் இருவருக்கும். அவர்களின் காதல் அந்த சிவபுரி பள்ள வீதியில் மலர்ந்தது  தொடக்கம் முகிலனின் அந்த கோரமான முடிவு வரை முழுவதற்கும் நான் சற்றே தள்ளி நின்ற சாட்சியாக  இருந்தேன்.    ( வேறு ஒரு நேரம் அதை பற்றி) . இன்றும் சாதாரணமாகவே அவர்களை கடந்து சென்றேன்,  முகிலனைப் பார்த்து மெதுவே  தலையாட்டி விட்டு  ( பெண்களை பார்த்தது தலையாட்டுவது நடைமுறையில் இல்லாத காலம் )

ஆபீஸ் இல் பஜேரோ ஆயத்தமாக நின்றது.

 இந்த நேரத்திலிருந்து தான் அன்றைய நாள் மற்றைய நாட்களில் இருந்து மாறுபடத் தொடங்கியிருக்க வேண்டும். துறைமுகத்தில் இருந்து வழமையாக வேகமாக வரும் காற்றும் அப்போது அமைதியாகி விட்டிருந்தது என இப்போது யோசித்துப் பார்த்தால் ஞாபகம் வருகிறது. இலங்கைத் தமிழரின் அவலங்களின் ஒரு ஆரம்பப்  புள்ளியாக பின்னர் மாறி விட்டிருந்த ஒரு இடத்துக்கு விதி எங்களை அழைத்துச் செல்லப் போகிறது என யார் தான் ஊகித்திருந்திருக்க  முடியும்.

வழமைக்கு  மாறாக அலுவலகப் பெரியவர் , பிரதம பொறியாளர் , நிறைவேற்று பொறியாளர் என அலுவலகத்தின் முழு பட்டாளமும் அல்லை அணைக்கட்டுக்கு சைட் இன்ஸ்பெக்ஷன் போவதற்கு எல்லாமும் ஆயத்தமாக இருந்தது. அல்லை- கந்தளாய் வீதியால் பயணித்து அல்லை ஆறு அணைக்கட்டுக்கு போக  வேண்டும். அல்லை- கந்தளாய் வீதி என்பது தமிழருக்கு ஒரு மரண பொறிக்கிடங்காக இருந்தது , அன்றைய அரசியல் சமன் செய்தல் நிலவரத்தினால் தாற்காலிகமாகவேனும் பயணம் செய்யக் கூடியதாக மாறியிருந்தது.

புறப்பட்டாயிற்று.  மடத்தடி சந்தி தாண்டி வாகனம் வேகம் எடுத்து அன்புவழிபுரச் சந்தியும்தாண்டி “ஹத்ராஸ்க்கானுவ” என மெல்லிய நடுக்கத்துடன் எம்மவர்கள் உச்சரிக்கும் நாலாம் கட்டைச் சந்தியை நெருங்கினோம். நகரில் இருந்து 4 km  தான் ஆனால் அது முழுமையாக சிங்களமயப்படுத்தப்பட்ட ஒரு பகுதி. முன்பொரு முறை நடந்த  அந்த சம்பவத்திற்குப் பின்பு அந்த சந்தியால் எப்ப கடந்து போக நேர்ந்தாலும் எனக்கு மயிர்க்கூச்செறிவதை  தவிர்க்கவே முடிவதில்லை. முந்தைய அந்த தினத்தில் அச்சந்தியினால் பயணித்துக் கொண்டிருந்த பெருந்தொகையான தமிழர்கள் வெளியே இழுத்தெடுக்கப்பட்டு வெட்டியும் சுட்டும் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த அதே நேரத்திலேயே நாங்கள் ஒரு 4,5  பேர் அலுவலக வாகனத்தில் அச்சந்தியைத் தாண்டும் போது கொலை வெறி கொண்ட நூறு பேருக்கு மேல் இருக்கக் கூடிய கும்பலொன்றினால் ஒரு அரை மணித்தியாலமாக மறித்து வைக்கப்பட்டு,  உயிருக்கு சேதம் இல்லாமல் அந்த சந்தியை தாண்டியதை இன்றும் என்னால் நம்ப முடிவதில்லை. ( அது பற்றியும் பின்னொரு சமயம்..)

 

இப்போது அல்லை- கந்தளாய் வீதியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

( அவ்வீதியில் பயணிக்கும் போதெல்லாம் மனதில் மேலெழும் உணர்வுகளுக்கும்  50 களில் ஹிரோஷிமா நாகசாகி என்பனவற்றினூடாக பயணித்திருக்கக் கூடிய ஒரு ஜப்பானியனுக்கு இருந்திருக்கக் கூடிய உணர்வுகளுக்கும் பெரிய வித்தியாசம் இருந்திராது.  வீதியின் இருமருங்கிலும் துர் அதிர்ஷ்டவசமாக மாட்டுப்பட்டு  உயிர் எடுக்கப்பட்ட சீவன்கள்,  அழிவுகளின் சாட்சியாக இப்பவும் அவ்வீதியின் இருமருங்கிலும் அலைந்து திரிந்து  கொண்டிருக்கும் என எப்போதுமே எனக்கு ஒரு மனப் பிரமை உண்டு.  எவ்வளவு முக்கியமான விடயமாக இருந்தாலும் அந்த வீதியை பொழுது படுவதற்கு முன்னர் கடந்து விடவேண்டும் என்பதில் நான் எப்போதுமே தீர்மானமாக இருப்பதுண்டு)

ஆமாம்,  ஏன்  இந்த பயணம் என்று சொல்லவேயில்லை அல்லவா , வேறொன்றுமில்லை அல்லைக் குளம் ஆதி காலம் தொட்டு இலங்கை தமிழரின் வாழ்வில் பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு சங்கதி.  ஆற்றிற்கு குறுக்கே ஆணை கட்டி , தேங்கும் தண்ணீரை வாய்க்கால் மூலம் கொண்டுவந்து , ஆதி காலத்தில் இருந்தே விவசாயம் செய்து வந்தவர்கள் எம்மவர்.

பின்னாளில் தமிழர் விவசாயம் செய்து கொண்டிருந்த பகுதிக்கு பின்னால் பெரும்பான்மையினரை கொண்டுவந்து படிப்படியாக குடியேற்றி அவர்களுக்கும் விவசாயம் செய்யவென்று  தனி வாய்க்கால் வெட்டிக் கொடுத்து அவர்களும் விவசாயம் செய்து வந்தனர்.

சிலகாலம் செல்ல இனக்கலவரம் அது இது என்று தமிழர் இடம்பெயர்ந்து ,  பலகாலம் அலைந்து களைத்து திரும்பிய நேரம், அவர்களுக்கு நீர்ப்பாசனம் செய்துகொண்டிருந்த வாய்க்கால்கள் காணாமல் போயிருந்தன.  அவர்கள் இப்போது விவசாயம் செய்யவேண்டுமானால் , அவர்களுக்கு கீழே இருக்கும் பெரும்பான்மையினருக்கு பாசனம் செய்தபின் எஞ்சிய நீரை உயர்த்தி மீண்டும் முன்னுக்கு கொண்டுவந்து விவசாயம் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார்கள்.  கஷ்டமான அலுவல் என தெரிகிறதல்லவா.  

தமிழ் விவசாயிகளின் வாழ்க்கை ஏனைய வெட்டு குத்துகள் மத்தியில் இந்த நீர்ப்பிரச்சினையுடன் மிக கேவலமாக போய் கொண்டிருந்தது.

வந்தது சமாதானப் பேச்சுவார்த்தை. தேன்நிலவு காலம்.   இந்திய படையை வேறு நாட்டை விட்டு கலைக்க வேண்டும் .பங்காளி என்ன கேட்டாலும் செய்து கொடுத்து விடவேண்டும் என்று சகல அரச அலுவலகங்களுக்கும் எழுத்தில் இல்லாத கட்டளை.

எங்கள் அலுவலகத்துக்கும் அவர்களின் மேலிடத்தில் இருந்து ஒரு பணிப்புரை. அல்லைக் குளத்தின் முகப்பில் முன்னர் இருந்த நீர்ப்பாசன வாய்க்காலை தேடி கண்டு பிடித்து மீண்டும் நீர்பாசனத்திற்கு திறந்து விட வேண்டும் என்பதே அது. அன்றைய கால கட்டத்தில் இலங்கையில் இருந்திருக்கக் கூடிய மாற்றுப் பேச்சு பேச முடியாத அதிகாரமிக்க பணிப்புரைகளில் அதுவும் ஒன்று. தொலைந்து போன அல்லது பெரும்பான்மையினரால் காணாமல் ஆக்கப்பட்ட நீர்ப்பாசன வாய்க்காலை கண்டு பிடித்து மீளமைக்கும் செயற்திட்டத்தின் முதற்கட்டமாக அலுவலகத்தின் மூத்த சிரேஷ்ட அதிகாரிகள் அனைவரும் அல்லைக் குளப் பகுதியை முகாமைத்துவம் செய்யும் கிளை அலுவலகத்துக்கு சென்று கொண்டிருக்கிறோம்.  

உண்மையில் எங்கள் அனைவரின் மனநிலையும் மிகுந்த பரபரப்பில் இருந்தது.  எங்கள் அனைவருக்கும் அது முற்றிலும் புதியதோர் அனுபவம். இனிமேல் எங்களவர்களின் பணிப்புரைகளைத்தான் எங்கள் பகுதிகளில் நாங்கள் மேற்கொள்ளுவோம் என்பதற்கு கட்டியம் கூறி நிற்கும் ஒரு நிகழ்வாகவே அதனை நாங்கள் உணரத்  தலைப்பட்டோம். அதற்கு முதல் சாட்சிகளாக நாங்கள் இருக்கிறோம் எனப் பூரித்திருந்தோம்.

 

********************************** (தொடரும்) *********************

சிங்கங்கள் கோல்ப் விளையாடியிருக்கக் கூடுமோ

1 year 6 months ago

கற்பனை என்று ஒன்றில்லை….

 அண்மையில் வயதில் குறைந்த உறவினரொருவர் அவரது 3 பிள்ளைகளுடன் வீட்டிற்கு வந்திருந்தார். (முதல் தடவையாக 15 ஆண்டுகளின் பின்னர்) மூவரும் 3  விதமான கெட்டித்தனம் நிறைந்தவர்களாக இருந்தனர். இரண்டாவது பையன் ஒரு 8  அல்லது 9  வயது இருக்கும். சற்று நேரம் கதைத்துக் கொண்டிருந்து விட்டு அப்பால் போனவன் ஒரு 15  நிமிடங்களில் திரும்பி வந்து இதைப் பாருங்கோ அங்கிள் என்று ஒரு தாளை நீட்டினான். அச்சு இயந்திரத்தில் பதிப்பித்தது மாதிரி மிகுந்த வேலைப்பாடுகளுடன் கூடிய Lion King படம்,  பென்சிலாலேயே வெவ்வேறு வகையான shades filling  உடன் அவன் அந்த 15 நிமிடத்தில் வரைந்தது- என்னால் நம்ப முடியவில்லை .

அவனைப் பற்றி பெற்றோர் சொன்னது இது தான் .அவனுக்கு வாய் பேச்சு வர மிகுந்த தாமதம் ஆகியதாம்.  உண்மையில் அவனின் இளைய சகோதரி பிறந்து பேசத் தொடங்கி தங்கையின் பேச்சைக் கேட்டு விட்டுத் தான் இவனே பேசத் தொடங்கினானாம்.

பெற்றோர் வைத்திய நிபுணர்களிடம் காட்டிய போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை சொன்னார்களாம். ஒரு நிபுணர் சொன்னாராம்,  பையன் வயதுக்கு மீறிய தோற்றமாக இருக்கிறான் , ஆட்டிசம் ( autism)  ஆக இருக்கக்கூடும் என்று. தயார் கேட்டாராம் “காது நன்கு கேட்கின்றது,  கதை வரவில்லை என்று இங்கே வந்தால் உடம்பு வளர்ச்சி, ஆட்டிசம் என்று என்னவோ சொல்கிறீர்களே , உடம்பு வளர்ச்சிக்கும் , கதை வராததிற்கும் ஆட்டிசம் இற்கும்  ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா”  என்று. நிபுணர் தடுமாறிப் போய் விட்டாராம்.

இன்று அந்தப் பையன் மிக நன்றாக கதைத்து , மிக்கத் திறமையாகப் பாடி நன்றாகத் தான் இருக்கிறான். நிபுணர் சொன்ன மாதிரி ஆட்டிசம் என்று போயிருந்தால் என்ன மாதிரிப் போயிருக்குமோ சொல்லத் தெரியவில்லை.  அந்த பெற்றோரின் Parenting  இற்கு தலை வணக்க்குகிறேன் , வயதில் மிக இளையவர்களாக இருந்த போதிலும.

அது போக , இதனைப் பற்றி நான் இங்கே பதிவிட வந்ததின் நோக்கமே வேறு .  

அந்தப் பையன் சில வேளைகளில் தன்னுள்ளே அமிழ்ந்து போய் ஒரு வகையான உரையாடல்களுடன் கூடிய செயல்முறைகளில் ஈடுபடுவதனை அவதானிக்கக் கூடியதாக இருக்குமாம்.  அதன் பின்னர் அவனிடம் என்ன விடயம் என்று கேட்டால், நவரசங்களுடன்  கூடிய கோர்வையான கதை ஒன்றுடன் வருவானாம். உதாரணமாக Lion King  ஐ சந்தித்து அதனுடன் மலை உச்சிச்சிக்கு போய் இருவருமாக அவ்வழியே வந்த பெரும் பறவை ஒன்றில் ஏறிப்போய் சிறைப்பட்டிருக்கும் பாட்டியை சண்டை செய்து விடுவித்து வரும் வழியில் ஒரு 18 ஹோல் Golf  லைன் கிங் உடன் கூட விளையாடிய கதையை சுவாரஸ்யமாகச் சொல்வானாம்.

ஒருவர் உணர்வது எதுவுமே கற்பனை அல்ல,  இந்த பிரபஞ்சத்தில் எதுவுமே சாத்தியமான விடயங்களே.

 எதுவொன்றைப்  பற்றியும் ஒருவர் சிந்தித்த கணத்திலேயே  அது உண்மையாக , நடைமுறைச் சாத்தியமாக மாறி விடுகிறது , ஒன்றில் அது முன்னர் எப்போதாவது நடந்திருக்கலாம் , அல்லது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கலாம் எஞ்சியதாக  எதிர்காலத்து நேரத்துளி ஒன்றில் அது நடை பெறப் போவதாக இருக்கக் கூடும்.

நடந்து கொண்டிருக்கும் இந்த இதே நேரத்துளியில்,  முழுப் பிரபஞ்சத்திலும் நடந்து கொண்டிருக்கும் சகல விடயங்களும் அப்படியே அதே நேரத்துளியில் உறைந்து போய் எப்போதுமே சாஸ்வதமாக இருக்கும்  என்று ஒரு கருதுகோள் உண்டு. அந்த நேரத்துளிக்கு திரும்பவும் சென்று அதனை மீண்டும் அனுபவிப்பது சாத்தியமே என்கிறது அறிவியல்.

 இந்தப் பையனும் அந்த லைன் கிங் உடன் முன்னர் எப்பவாவது Friend ஆக இருந்திருப்பானோ?

ஏதோ ஒரு நேரத் துளியில் சிங்கங்களும் கோல்ப் விளையாடியிருக்கக் கூடுமோ ??

 கற்பனை என்று ஒன்றில்லை ………..

கொழுப்பைக் கொழுப்பால் குறைக்கலாம் - அனுபவப் பகிர்வு

1 year 6 months ago

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பது பலருக்கு ஆவலாக இருந்தாலும் அதற்கான முயற்சியில் இறங்குவது கடினமானது. உடல் எடையைக் குறைக்கப் பல விதங்களாக முயன்று பார்த்திருப்பீர்கள். உணவின் அளவையும் கலோரிகளையும் கட்டுப் படுத்தி உடலையும் மனதையும வருத்தி மெலிய வைப்பது கடினம். எமது உடல் மிகவும் புத்திசாலியானது. உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும்போது தனக்குக் கிடைக்கும் சொற்ப உணவைக் கொழுப்பாக மாற்றி உடலில் சேமிக்க முயலும். இவ்வாறு சேமிக்கப்பட்ட கொழுப்பை மீண்டும் கலோரிகளாக மாற்றி இலகுவில் பாவிக்க முடியாது. நீண்டநேர உடற்பயிற்சி நல்ல பலனைத் தரும். கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் எடை மீண்டும் ஏறிவிடும். 

keto_diet.jpg

முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் கொழுப்பைக் கொழுப்பால் கரைக்கும் முறை தற்போது மேலை நாடுகளில பரவி வருகிறது. நானும் இதனை முயன்று பார்க்கலாமே என்ற மூன்று மாதங்கள் இந்த முறையை பின்பற்றிய எனது அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
நான் மருத்துவ நிபுணர் கிடையாது, வாசித்துக் கேட்டு அறிந்து கொண்டவற்றைக் கொண்டு பரீட்சித்துப் பார்த்து அந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே இதனை எழுதுகிறேன். இதன் கருப் பொருளில் உறுதியாக இருந்தாலும் சில குறிப்புகளின் தவறுகள் இருக்கலாம். மருத்துவம் தெரிந்தவர்கள் அவற்றைத் தாராளமாகச் சுட்டிக் காட்டலாம்.
 

எச்சரிக்கை

இம் முறையைப் பின்பற்றுபவர்கள் இக் கட்டுரையை முழுமையாகப் படித்தபின் முடிவெடுங்கள். இணையத் தளங்களிலும் இது பற்றிய ஏராளமான தகவல்கள் உள்ளன. இது பற்றி முழுமையான புரிதலின்பின் முயற்சி செய்யுங்கள். கொலஸ்ரரோல் நீரிழிவு தைரொயிட் போன்றவற்றிற்கு மருந்து பாவிப்பவர்கள் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றுங்கள்.
 

குறிப்பு

சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் உணவு முறை இன்றுள்ளதை விடத் முற்றிலும் மாறுபட்டதாக இருந்துள்ளது. அதாவது 20-40 வீதமாக இருந்த காபோஹைதரேற்றின் அளவு இன்ற 55 வீதத்தைத் தாண்டியுள்ளது. அதிலும் தமிழரின் உணவில் சுமார் 60 வீதத்துக்கு மேல் காபோஹைதரேட் உள்ளது. மனித வரலாற்றில் இதுவரை இந்த அளவு சீனி, மா, அரிசி போன்றவற்றை நாம் உண்டதில்லை என்றே தோன்றுகிறது. எனது பாட்டனார் தனது வாழ்நாள் முழுவதும் சாப்பிட்ட மொத்தச் சீனியை இன்று எனது பிள்ளை 7 வயதுக்குள் சாப்பிட்டு விடுகிறது. உடலுக்குப் பிரதான எதிரி சீனியே தவிர கொழுப்பில்லை.

img1b.png

உடலுக்கான சக்தியின் தேவை

பிரதானமாக இரண்டு வழிகளில் எமது உடல் தனக்குத் தேவையான சக்தியைப் பெற்றுக் கொள்கிறது. 

1. முதலாவது காபோஹைதரேட்
இதற்குள் அரிசி கோதுமை போன்ற தானியங்கள், சீனி மற்றும் பழங்களில் உள்ள இனிப்பு (fructose), பால் (lactose) போன்றவை பிரதானமானவை. இவை தவிர மரக்கறி வகைகளிலும் கணிசமான அளவு உண்டு. 

சுருக்கமாகச் செமிபாட்டினை விளக்குவதானால், காபோஹைதரேட்டின பெரும் பகுதி செமிபாட்டுத் தொகுதியால் குளுக்கோசாக மாற்றப்பட்டு இரத்தத்தில் ககலக்கப்படுகிறது. இரத்தத்திலிருந்து ஒரு பகுதி குளுக்கோசை ஈரல் சேமித்து வைத்திருக்கும். மீதியானவை தசைகளில் சேமிக்கப்படும். அளவுக்கு மிஞ்சிய குளுக்கோஸ் உடலுக்கு நஞ்சு போன்றது. இரத்தத்தில் அதிகமான சீனி ஈரலைப் பாதிக்கும். ஈரலுக்கு அதிக வேலைப்பளவைக் கொடுக்கும்.  அத்தருணத்தில் இன்சுலின் சுரக்கப்பட்டு மிதமிஞ்சிய குளுக்கோள் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமிக்கப்படும். சேமிக்கப்பட்ட இந்த வகையான கொழுப்ப்பபினை உடல் மீண்டும் சக்தியாக்கிப் பாவிக்கப் பஞ்சிப்படும். குறிப்பாக வயிற்றுப் பகுதியில் சேமிக்கப்படும் கொழுப்பால் தொந்தி ஏற்படும்.

 • ஒரு கிராம் காபோஹைதரேட் ஒட்சிசனோடு சேர்ந்து 4 கிலோ கலோரி (கி.கலோரி) சக்தியை வெளியிடுகிறது. 

2. இரண்டாவது கொழுப்பு.
முளுக்கோஸ் இரத்தத்தில் தீர்ந்துபோகும் தருணத்தில உடல் வேறு வழிகளில் சக்தியைத் தேடவேண்டிய தேவைக்குத் தள்ளப்படுகிறது. அப்போது உடலில் தங்கியிருக்கும் கொழுப்பு அமிலங்கள் இரத்தத்தில் கலக்கத் தொடங்கும். இரத்தம் மூலம் இக் கொழுப்பு மூலக்கூறுகள் ஈரலைச் சென்றடைய அங்கு ஈரல் அதனை ketone கூறுகளாகப் பிரித்துவிடும். ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பதுபோல் குளுக்கோஸ் இல்லாமல் சக்திக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் உடல் ketone கூறுகளைச சக்திக்காகப் பயன்படுத்த ஆரம்பிக்கும். ஈரல் கொழுப்பை உருக்கும் கருவியாக மாறிவிடும்.

 • ஒரு கிராம் கொழுப்பு 9 கி.கலோரி சக்தியினை வெளியிடும்.
   

வரலாற்றுக் குறிப்பு

ரோமர் காலத்தில் சில சிறுவர்கள் பேய் அறைந்ததுபோல் இருந்தார்கள். அவர்களுக்குப் பேய் பிடிப்பதாகவே கருதப்பட்டது. பேயை அகற்றுவதற்காக அவர்களைகக் கூண்டில் அடைத்து வைத்துப் பட்டினி போடுவார்கள். சில நாட்களில் பேய் தானாகவே அகன்றுவிட அச் சிறுவர்கள் குணமடைந்தனர். 

20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் Russell Wilder என்ற வைத்தியர் இவ்வாறு பேய் பிடித்தவர்களை ஆய்வு செய்து பட்டினி போடாமல் பலவிதமான பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார். அவ்வாறு ஒரு சாராருக்குக் கொழுப்பு உணவை மட்டும் கொடுக்கப்பட்டது. கொழுப்புணவை மட்டும் உட்கொண்டவர்கள் கணிசமான அளவு குணமடைவதை அவதானித்தார். 

குளுக்கோஸ் மூலம் இயக்கப்படும் மூளைக்கு குளுக்கோஸ் சரியான முறையில் வழங்கப்படுதலில் ஏற்படும் தடையால் epileptics என்ற இந்த நோய் உருவாகிறது. குளுக்கோசுக்குப் பதில் ketone மூலம் மூளைக்குப் போதுமான சக்தி கிடைத்ததும் மூளை சரியாக இயங்கத் தொடங்குகிறது. 

இன்று கூட குளுக்கோஸ் இல்லாமல் மூளை இயங்க முடியாது என்று பலரும் தவறாகக் கருதுகின்றனர். சில உறுப்புக்களுக்குக் குளுக்கோஸ் அத்தியாவசியமானது. அது முற்றாக இல்லாதபோது தேவையான சிறிதளவ குளுக்கோசினைப் புரதத்திலிருந்து உடல் தானாகவே உருவாக்கிக் கொள்கிறது.
 

ஒப்பந்தம்

கொழுப்பு மூலம் கொழுப்பைக் குறைக்கும் நுட்பம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். குளுக்கோசைத் தராது கொளுப்பை மட்டும் கொடுத்து உடலை ketone மூலம் மட்டுமே இயங்கப் பழக்கி விட்டால் பிரதான சக்தி வழங்கியாகக் கொழுப்பு மாறிவிடுகிறது. ஆகவே உடலில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பை உடல் தேவைப்படும்போது தானாகவே எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் இலகுவாக எடையைக் குறைக்கலாம் அல்லவா ?

இதன் மூலம் அனுகூலங்களும் தீமையும் உண்டு. அதனால்தான் இது பற்றிய பூரண அறிவு தேவை.  என்ன வகையான உணவுகளைச் சாப்பிடலாம் எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். உடலைக் ketone நிலைக்கு மெதுமெதுவாகக் கொண்டு செல்ல வேண்டும். பெரும்பாலும் 2 மாதங்கள் இந்த நிலையில் இருப்பது போதுமானது. சிலர் நிரந்தரமாக இதனைப் பின்பற்றுகின்றனர். 2 மாதங்களின்பின்னர் படிப்படியாகக் கொழுப்பைக் குறைத்துப பழைய நிலைக்கு மீண்டும் வராமல் கொழுப்பு / சீனி விகிதாசாரத்தை அரைவாசிக்குக் கொண்டு வந்தால் ஆரோக்கியமாக வாழலாம்.

Pyramide2.png

 

சமன்பாடு

கொழுப்புச் சாப்பிட்டால் உடல் பெருக்கும் என்ற நம்பிக்கை பொதுவாக உண்டு. உண்மையில் கொழுப்பை விட காபோஹைதரேட்டே உடல் எடையை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

ஒரு நாளைக்கு ஒருவருக்கு 2000 கி,கலோரி தேவைப்படும் என்று எடுத்துக் கொண்டால், அவரின் மதியச் சாப்பாடு பின்வருமாறு இருப்பதாக எடுத்துக் கொள்வோம்.

ஒரு கோப்பைச் சோறு 350 முதல் 400 கிராம் = 500 கி.கலோரி 
150 கிராம் கோழி = 350 கி.கலோரி 
ஏனைய மரக்கறிகள் (தாழித்த எண்ணை உட்பட) = 250 கி.கலோரி 

ஒரு நேரச் சாப்பாட்டிலேயே 1000 கி.கலோரிகள் தாண்டப்பட்டு விட்டன. இதில் சாப்பாட்டுக்குப் பின்னர் ஒரு பழம் அல்லது இனிப்புப் பலகாரம் ஒன்றைச் சாப்பிட்டால் கணக்கு எங்கோ போய்விடும். மேலதிகமான ஒவ்வொரு 90 கி.கலோரிகளும் 10 கிராம் கொழுப்பாக உடலில் சேமிக்கப்படுகிறது.

இதுவே காபோஹைதரேட் தவிர்ந்த உணவாக இருந்தால் 1000 கி,கலோரியை எட்டுவது கடினம். உடலுக்குத் தேவையான மிகுதி சக்திக்காகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பு உருக்கப்படுகிறது. மேலதிகமாகத் தேவைப்படும் ஒவ்வொரு 90 கி.கலோரியும் 10 கிராம் எடையைக் குறைக்கும். அதனால்தான் கொழுப்பு உணவை உட்கொண்டால் கலோரிகளை எண்ண வேண்டிய கவலை இல்லை. கண்ணை மூடிக் கொண்டு வயிறு நிறையச சாப்பிடலாம். அத்துடன் சிறிய உடற்பயிற்சி ஒன்றையும் செய்வீர்களாக இருந்தால் இரடிப்பு லாபம். ஒரே நாளில் உடலிலிருந்து சுமார் 100 கிராம் கொழுப்பு வரை வெளியேற்றலாம்
.

அனுகூலங்கள்

கொழுப்பு உண்பதால் வேறு பல நன்மைகளும் உள்ளன.

 • நன்றாகச் சாப்பிட்டுக் கொண்டே உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம்
 • கலோரிக் கட்டுப்பாடு தேவையில்லை
 • இரத்தத்தில் கொழுப்பின் அளவு குறையும்  (triglycerides)
 • இரத்தத்தில் சீனியின் அளவு குறைந்து விடுவதால் இன்சுலின் சுரப்பிக்கு அதி வேலை இல்லாமல் போகிறது
 • மேலே சொன்ன epileptics நோய் கட்டுப்படுத்தப் படுவதுபோல் குளுக்கோஸ் வழங்கல் தடையால் ஏற்படும் அல்சைமரின் ஆரம்ப நிலையிலும் இதனைக் கட்டுப்படுத்தலாம்.
 • சில வகையான புற்றுநோய் மேலும் பரவாமல் தடுக்கப்படலாம். ஏனைய உடல் கலங்கள் போல் புற்றுநோய்க் கலங்கள் புதுப்பிக்கப்படுவதும இல்லை இறப்பதும் இல்லை, இவை பெரும்பாலும் குளுக்கோசினால்தான் உயிர்வாழ்கின்றன, குளுக்கோஸ் இல்லாத கட்டத்தில் புற்றுநோய்க் கலங்கள் நலிவடைந்து மேலும் பரவாமல் தடுக்கபொபடுகிறது
 • சில வகையான கட்டிகள் வீக்கம் போன்றவை குறைந்து விடும்
 • ஈரல் வேலைப்பளு குறைந்து இலகுவாகச் செயல்படும்.
 • இன்னும் பல…
   

தீமைகள்

 • உடலில் நீர்த்தன்மை குறையும். தினமும் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும்
 • நார்ப்பொருள் குறைவாக உட்கொள்ளப்படுவதால் மலச்சிக்கல் ஏற்படலாம். போதுமான அளவு கீரை பச்சை மரக்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும்
 • கொழுப்பு உணவில் சில விற்றமின்களும் கனியுப்புகளும் குறைவாக இருக்கும், அதற்கேற்றவாறு உணவுகளைத் தெரிவு செய்ய வேண்டும்.
 • படிப்படியாகக் காபோஹைதரேட்டைக் குறைத்து keto diet இன் உச்ச நிலைக்குச் செல்லும்போது சிலருக்குக் களைப்பு போன்ற உணர்வு அல்லது காய்ச்சல் போன்ற உணர்வு ஏற்படலாம், இதனை ketone காய்ச்சல் என்று சொல்வார்கள். எந்த ஆபத்தும் இல்லை இரண்டு மூன்று நாட்களில் இல்லாமல் போய்விடும்.

இனி keto diet இனை எப்படிச் செயற்படுத்துவது, எதை உண்பது, எதைத் தவிர்ப்பது என்பதையும் எனது அனுபவத்தினையும் எழுதுகிறேன்.
தயவு செய்து இதன் இரண்டாம் பகுதியையும் எழுதியபின் உங்கள் கேள்விகளை முன்வையுங்கள்.

தொடரும்.

மே18ல் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தல்: அகதிகள் முதல் காலநிலை மாற்றம் வரை 

1 year 6 months ago

அடுத்த ஆஸ்திரேலிய பிரதமரை தீர்மானிக்கக்கூடிய ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தல் வரும் மே 18 நடைபெற இருப்பதாக ஆஸ்திரேலியாவின் தற்போதைய பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்திருக்கிறார். இத்தேர்தலில் காலநிலை மாற்றம், அகதிகள் விவகாரம், பொருளாதார மேலாண்மை, தலைமைத்துவம் உள்ளிட்டவை ஆதிக்கம் செலுத்தக்கூடிய பிரச்னைகளாக இருக்கும் என அறியப்படுகின்றது. 

“உலகிலேயே சிறந்த ஒரு நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நமது எதிர்காலத்தை பாதுகாத்து கொள்வதற்கான வழியை வலிமையான பொருளாதாரமே அமைத்து கொடுக்கும்,” என பத்திரிகையாளர்களிடையே பேசியிருக்கிறார் பிரதமர் ஸ்காட் மாரிசன்.  

தற்போதைய நிலையில், ஸ்காட் மாரிசன் தலைமையிலான லிபரல் ஆட்சி மைனாரிட்டி ஆட்சியாகவே இருந்து வருகின்றது.  அந்த வகையில், இத்தேர்தலை ஆஸ்திரேலியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் தேர்தலாக குறிப்பிட்டுள்ள அவர் பெரும்பான்மை பலமுடைய ஓர் ஆட்சியினை அமைக்க திட்டமிட்டிருக்கிறார்.

அதே சமயம், எதிர்க்கட்சியான லேபர் கட்சியும் இத்தேர்தல் வெற்றியினை பெரிதும் எதிர்ப்பார்த்திருக்கின்றது. அங்கு வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகளின் படி, இரு கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.  ஆனால், லேபர் கட்சியின் தலைவர் பில் ஷார்ட்னை காட்டிலும் ஆஸ்திரேலிய மக்களிடையே பரிட்சயமானவராக ஸ்காட் மாரிசனே அறியப்படுகிறார். 

அகதிகள் விவகாரத்தில் கடும் கொள்கை கொண்டுள்ள ஸ்காட் மாரிசன் தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து வந்த ஆட்கடத்தல் படகுகளை தடுத்ததில் முக்கிய பங்கினைக் கொண்டிருக்கிறார். 

அப்படியான படகுகளில் வந்த அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்களை கையாண்ட விதம், படகுகளை திருப்பி அனுப்பும் முறையின் மீது மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. 2013ல் லிபரல் தலைமையிலான கூட்டணி அரசு அமைந்த போது, ஸ்காட் மாரிசன் அதில் குடிவரவு மற்றும் எல்லைப்பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றார். 

அப்போது ஆஸ்திரேலியாவை நெருங்கிய படகுகளை உயிர் காக்கும் படகுகளில் எரிபொருளை நிரப்பி, இந்தோனேசியா வரை செல்வதற்கு ஏற்ப படகுகள் திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. அப்படி திருப்பி அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கான அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் இந்தோனேசிய முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் கொள்கை இந்தோனேசிய இறையாண்மை அவமதிப்பதாக இந்தோனேசிய அரசாங்கம் குற்றம் சாட்டியிருந்தது. இப்படி படகுகளை தடுக்கக்கூடிய ரகசிய ராணுவ நடவடிக்கையினை மேற்பார்வையிடுபவராக ஸ்காட் மாரிசன் இருந்தார். 

லேபர் ஆட்சி திரும்பி வந்தால் அது படகுகள் வருகையை ஊக்குவிக்கும் என லிபரல் கட்சி தொடர்ந்து தெரிவித்து வருகின்றது. அதே போல், காலநிலை மாற்றம் குறித்த கொள்கையும் ஆஸ்திரேலிய தேர்தலின் முக்கிய சிக்கலாக உருவெடுத்துள்ளது. 

சட்டவிரோதமாக குடியேறியவர்களை பாஜக அரசு கடலில் தூக்கி வீசும்: தேர்தல் பரப்புரையில் அமித் ஷா

1 year 6 months ago

இந்தியா எங்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரை பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிவர்களை வங்காள விரிகுடாவில் தூக்கி வீசுவோம் என ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா பேசியிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. 

அண்டை நாடான வங்கதேசத்திலிருந்து வறுமை காரணமாக இந்தியாவுக்குள் நுழையும் முஸ்லீம் குடியேறிகளையே அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகின்றது. 

மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 11 அன்று நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “வங்காள மண்ணில் ஊடுருபவர்கள் கரையான்களை போன்றவர்கள். பாஜக அரசு அவர்கள் ஒவ்வொருவரையும் பிடித்து வங்காள விரிகுடாவுக்குள் வீசும்” எனக் கூறியிருக்கிறார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நேரத்தில் இப்பேச்சு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 

அதே சமயம், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானிலிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இந்துக்கள், புத்த மதத்தவர்கள், ஜெயின்கள், சீக்கியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என அமித் ஷா தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார். 

“வகுப்புவாத கொதிப்பினை தொடர்ந்து தூண்டிவிட்டு, இந்தியாவில் நிரந்தர மத பிளவை ஏற்படுத்துவதை பாஜக அரசியல் வியாபாரமாகவே செய்து வருகிறது,” என காங்கிரஸ் பேச்சாளர் சஞ்சய் ஜா விமர்சித்திருக்கிறார். 

இதே போல், ரோஹிங்கியா அகதிகளை நாடுகடத்தும் திட்டத்தை பாஜக அரசு தொடர்ந்து முன்வைத்து வருகின்றது. மியான்மரில் உள்ள ராணுவ அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் 40,000 ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் தஞ்சமடைந்திருக்கின்றனர். 

Brexit

1 year 6 months ago

Brexit 

நரிகளோடு நாடகம் ஆடும் தெரேசா மே 
Dances with wolves.

 பிரித்தானியாவிலஇன்று அனைவராலும்பேசப்படும்  ஒரு மிக முக்கியமான செய்தியாக பிரெக்ஸிட் இருப்பதை காண முடிகின்றது .சுமார்  இரண்டு வருடத்திற்கு முன்பு பிரித்தானிய ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து தனித்து இருக்கவேண்டுமா அல்லது சேர்ந்து இருக்க வேண்டுமா என்ற பொது வாக்கு எடுப்பில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து இருக்க வேண்டும் என்று பெரும் பான்மை மக்களால் தீர்ப்பு வழங்கபட்டது .

இதை தொடர்ந்து எந்த வித பொருளாதார ஒப்பந்தமும் செய்யப்படாமல் ஒரு இழுபறி நிலைமையே காணப்படுகின்றது .இந்த நிலையில் பிரித்தானிய பிரதமர் பழமைவாத தேசிய நரிகளோடு நாடகம் ஆடிக்கொண்டு இருக்கின்றார் .

50 ஆண்டு வரை  ஐ .யூ உடன் சேர்ந்து  இருந்த பிரித்தானிய முழுமையான ஓர் விவாகரத்தை வேண்டி நிற்கிறது .தெரேசா அம்மையார் தனது மந்திரி சபையுடன் ஒரு முழுமையான யுத்தம் நடாத்தி கொண்டு இருக்கிறார் .ஐ .யூ .ஓடு சேர்ந்து இருக்க வேண்டும் என்று ஒரு சாராரும் இல்லை நாம் முழுமையாக வெளியேற வேண்டும் என்று இன்னும் சில மந்திரிமாரும் தொடர்ந்து கொடுத்து வரும் அழுத்தங்களால் இன்னும் ஒரு தீர்வு எட்டாமல் இழுபறி நிலையே காணப்படுகின்றது .

ஐ .யூ உடன் இருந்து பிரித்தானிய பிரிந்து போகும் இடத்து பிரித்தானியப் பொருளாதாரம் ஒரு பின்னடைவை  சந்திக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .ஐ .யூ ஊடாக பிரித்தானியாவுக்கு வரும் எந்த வித பொருள்களுழும் வரி விலக்குடனே தான் வந்து சேருகின்றன .ஐ .யூ .இருந்து பிரித்தானிய எந்த விதமான ஒப்பந்தமும் இல்லாமல் விலகுமிடத்து பிரித்தானியாவுக்கள் வந்து சேரும் அனைத்து பொருளுக்கும் பிரித்தானிய வரி செலுத்தியாகவேண்டும் .

இதனால் அங்கு வாழும் மக்கள் பெரிதும் பொருளாதாரரீதியாக மிகவும் பின் தள்ளப்படுவர் .எல்லா வித நுகர்வுப் பொருட்களின் விலை முன்பை விட அதிகரித்தே காணப்படும் .இந்த நிலையில் நடுத்தர வர்க்க மக்கள் பெரிதும் பாதிப்பு அடைவர் .இது மட்டும் இன்றி பல தொழிற்சாலைகள் தாங்கள் இறக்குமதி செய்யும் உற்பத்தி சாதனங்களுக்கு முன்பை விட கூடுதலான பணம் செலுத்த வேண்டும் . இது மாத்திரம் இன்றி தொழிளாரர்  பற்றா குறையும் ஏற்பட்ட வாய்ப்புகள் அதிகம் .

இது இப்படி காணப்படும் இடத்து பிருத்தானியா ஏதோ ஒரு வழியில் ஐ .யு உடன் ஒரு ஒப்பந்தத்துக்கு போக வேண்டிய கட்டாய தேவை இருக்கிறது .
ஐ .யூ உ டன் அங்கத்துவம் பெறும் எந்த ஐரோப்பிய நாடுகளும் அதன் சட்ட வரைபுக்கு உட்பட்டே ஆக வேண்டிய தேவை இருக்கிறது .பின் வரும் முக்கிய காரணிகளை முழுமையாக அவரகள் உடன் பட வேண்டும் அப்பொழுது தான் அவரகள் single market எனப்படும் ஒற்ரை சந்தையிலோ அல்லது customs union ஒரு வரி விலக்கு சந்தையிலோ தம்மை இணைத்து கொள்ள முடியும் .

ஐ .யூ .நின் நான்கு முக்கிய ஒப்பந்தங்களாக 

The free movement of goods ,services,capital,and persons within the e.u.are the famous four freedoms set out in the treaty of Rome.அதாவது ஐ.யூ நாடுகளுடையேபொருட்கள், சேவைகள், மூலதனம் ,மக்கள் ,இலகுவாக போய் வர வேண்டும் .ஆனால் பிரித்தானிய முதல் மூன்று சேவைகளுக்கு மாத்திரமே தாங்கள் உடன் படுவதாகவும் நான்காவதான ஐரோப்பிய மக்களின் சுதந்திரமாக  பிரித்தானியாவுக்குள் வந்து  குடி உரிமை  தொழில் வாய்ப்புகள் என்பன முழுமையாக தடை செய்யப்படும் என்றும் அவர்கள் தங்கள் நாட்டிற்கு நுழைவதற்கான இறுதி திகதி அதாவது cutt-off date for EU nationals 31.12.2020 எனறும் அறிவித்து இருக்கிறது .

ஐ .யூ .பிரித்தானியாவின் தீர்மானத்தில் குடி வரவுகளின் இறுதி திகதியை அங்கீகரித்தாலும் இவர்களது ஒப்பந்தத்தை தொடர்ந்து நிராகரித்து கொண்டே வருகின்றது .தனக்கு தேவையான பிரித்தானிய நலன் கருதிய பொருளாதார காரணிகளை எடுத்துக் கொண்டு தன் நாட்டுக்குள் நுழையும் ஐரோப்பிய யூனியன் மக்களை தடை செய்வதானது ஒரு cherry picking போன்றது என்று ஐ .யூ தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது .

பிரித்தானிய பிரதமர் அடிக்கடி கூறி வருகின்றார் No deal is better than a bad deal என்றெ .ஐ .யூ உடனான நல்ல ஒப்பந்தம் இல்லாது விடத்து எந்த வித ஒப்பந்தமும் இல்லாமல் வெளி ஏறுவது சிறந்தது என்றே கூறி வருகிறார் .எது எப்படி இருப்பினும் பிரித்தானிய கட்டாயமாக ஒரு ஒப்பந்தத்தை செய்தே ஆக வேண்டிய நிலை தான் காணப்படுகிறது .இதுவே பிரித்தானியாவின் நீண்ட காலா பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் .அப்படி ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளுமா அல்லது மீண்டும் ஒரு மக்கள் தீர்ப்புக்கு வழி சமைக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் .

பா .உதயகுமார் /Oslo

வீழ்வேன் என்று நினைத்தாயா

1 year 6 months ago

நான் வீழ்வேன் என்று நினைத்தாயா 

 

பாரதியின் தோளில் ஏறி நின்று 

வான் முழுக்க

வரைந்து வைப்பேன் 

என் வர்ணக் கனவுகளை

 

பித்தனை போல் வாழ்ந்து

 எத்தனை முறை வீழ்ந்தாலும்  

இன்னுமோர்  யுகதிட்காய் 

எழுந்து வர வரம்  தாடி 

 

சுவரோடு உதைத்தபடி 

என் ஜீவன் போகுமட்டும் 

வாடா பாரதி வா 

வந்து பலம் தாடா 

என் சிந்தை தெளிவாக்கி

மனைவி சொல்லே மருந்து

1 year 6 months ago

பிடரிப்பகுதியிலே -எனக்குப்

பெரியதாய் ஒரு தசைப்பிடிப்பு.

ஆட்டிச் சொல்ல முடியுதில்லை-  தலையை

ஆம் என்றும், இல்லை என்றும்.

பின்னாலே பார்ப்பதற்கு நான்

பிரள வேண்டும் பாதி வட்டம்.

முயன்றுதான் பார்த்தேன்- பல மருந்தும்

முன்னேற்றம் மட்டும் பூச்சியமே.

வாட்டி இழு எருக்கிலையை

வலி மறையும் என்றார் பாட்டி.

வாட்டி,வாட்டி இழுத்துப் பார்த்தேன் -பிடரி

மயிரெல்லாம் எரிந்து போச்சு.

வா வீ கியூ மணம் வருதே நானும்

வரட்டா ஒரு பிடிபிடிக்க என

மயிரெரியும் வாசனையை என்

மச்சான் வா வி கியூ என நினைத்துக் கேட்டான்.

டைகிளோ பீனைல் போடு என

ரை கட்டிய நண்பன் சொன்னான்.

போட்டுத்தான் பார்த்தேன் நானும்

ம்கும் போகவில்லை தசைப்பிடிப்பு.

பிசியோ தெரபி சிகிச்சை செய்யும்

பிரிந்து போன பழைய காதலி சொன்னாள்.

செய்துதான் பார்த்தேன்-

செலவாய்ப் போச்சு பெருமளவு.

தலையணையை மாற்றுங்கள் அத்தான் 

தயவாய் எந்தன் மனைவி சொன்னாள்.

மாற்றினேன் தலையணையை-அதிசயம்,

மாயமாச்சு தசைப்பிடிப்பு.

கட்டிப்பிடித்து உம்ம்ம்மா கொடுத்து

காரணம் என்ன என்று கேட்டேன்.

தலையணைக்கும் மெத்தைக்கும்

சரியான பொருத்தமில்லை,

மற்றையவர் பொருந்தாட்டியும்

நமக்கும் வலிகள் வரும்.

மனைவி சொன்னாள் இந்த உண்மை.

மெத்தையை மாற்றுதற்கு

மெத்தச் செலவு ,

அதனாலேதான்- தலையணையில்

கையை வைத்தேன் தயங்காமல்

இதையும் சொன்னாள்.

மனைவி சொல் மந்திரமாம் -மட்டுமில்லை

மனைவி சொல் மருந்துமாகும்.

ஆதலினால் மனைவி சொல்லைக்

கருத்தில் கொள்ளும் -அது உங்கள் துன்பம் போக்கும்,துயரம் தீர்க்கும் !.

 

 

 

பாலைவன தடங்கள்

1 year 6 months ago

பாலைவன தடங்கள் 🐪 ...................................🐫🐫🐫

2003 உயர்தர பரீட்சை  ஒரு படியாக 2 கொடியுடன் கையில் சேர்ந்தது. எப்பவும் விளையாட்டுத்தான் உனக்கு என ஏச்சும் பேச்சும் காதை நிறைத்த வண்ணம் வீட்டில் ஓயாத ரேடியோ பெட்டி  போல எந்த நேரமும் ஒலித்துக்கொண்டிருந்தது. காரணம் விளையாட்டில் அதிக மோகம் ஒரு பைத்தியம் போல இருந்துவிட்டேன் அதனால் என்னவோ சமாதான காலத்தில் கிளிநொச்சி வரைக்கும் சென்று விளையாடி வர சந்தர்ப்பம் கிடைத்தது  . 2004ல் சமாதான காலம் வெள்ளைப்புறா சிறகடித்து பறந்து திரிந்த காலம் அது. அதன் சிறகுகள் மெல்ல மெல்ல களையப்பட்டு , வேட்டையாட காத்துக்கொண்டிருந்தது  மாவிலாறு பகுதியில் சமாதான  புறா மெதுவாக இறக்க ஆரம்பிக்க வெள்ளைவான் ஊர்வலம் வரத் தொடங்கியது கிழக்கு வீதிகளில். யார் யார் உலா வருகிறார்கள் என்று தெரியாமல்  கண்டம் விட்டு கண்டம் பாய்வது போலும் ஊரை விட்டு அயல் முஸ்லீம் ஊர்களில் ஒழித்துக்கொள்வோம் பகல் , இரவு வேளைகளில் அந்த நாட்களில் . (காலத்தில்)

இப்படி இருக்க வேண்டாம் எங்கேயாவது போய்விடு என்று அம்மா சொல்ல கடனையும் வாங்கி ,இருந்த நகைகளையும் வித்து மத்திய கிழக்குக்கு போக தயாராகுகிறேன் . மெடிக்கல் , பாஸ்போட் என எல்லாம் கொழும்பில் வைத்து எடுத்து பயணம் 2004 ... . ....ல் ஆரம்பமாகிறது   போகும் இரவு நேரத்தில் மட்டக்களப்பை தாண்டியதும் வெடியோசைகள் காதை கிழிக்க ஆரம்பித்தது என்னவோ ஏதோ? என மனது  அடித்துக்கொண்டாலும் உயிரை தப்பித்துக்கொள்ள எங்கேயாவது ஓடிடு என்ற குரல் மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தது மனதுக்குள்  எல்லா சோதனைகளை தாண்டி அதிகாலை கொழும்பை அடைந்ததும் மட்டக்களப்பில் சண்டைகள் அரங்கேற்றப்பட்டு இருந்தது என்று அறிய முடிந்தது .

விமான நிலையம் போக பஸ்ஸை தவற விட்டு ஆட்டோ ஒன்றை பிடித்தாலும் விமான நிலையம் இருக்கும் அந்த பாதையோ மிக வாகன நெருசல் மிக்க தாக இருந்தது விமான நிலய அருகாமையில் இருக்கும் சோதனை சாவடியில் வைத்து என்னை மட்டும் இறக்கி நீ யாருடைய ஆள் என வினாக்கள் தொடுக்கப்பட்டது பிரபாகரன் ஆளா? அல்லது கர்ணா ஆளா என?. என்னடா எனக்கு வந்த சோதனை என முழுசிக்கொண்டு இருந்தன் . பிறகே நான் யாருடைய ஆளும் இல்லை படித்து முடித்து விட்டேன்  ஊர்பக்கம் பிரச்சினை அதுதான் வெளிநாடு செல்ல போகிறேன் என்றேன் அவனும் ஒரு மணி நேரம் வரை வைத்துவிட்டு நாட்டை விட்டு செல்வது அவர்களுக்கு நல்லதென்று பட்டுதோ என்னவோ சரி போ என தூரம் வைத்திருந்த அப்பா, சித்தப்பாவிடம் அனுப்பினார்கள் .

அந்த நேரம் விமான நிலையம் கண்ணாடி பொருந்த்தப்படவில்லை வெறும் பலகைகளாலும் மட்டைகளாலும் வைத்து மறைக்கப்பட்டிருந்தது , அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் கையை அசைத்துவிட்டு புறப்படலாகினேன் .  அங்கேயும் போகும் வழியில் ஒரு நன்றாக தமிழ் தெரிந்த புலனாய்வு துறை ஒருவர் வந்து மீண்டும் கூட்டிக்கொண்டு விசாரித்தார் எந்த ஊர்? எந்த ஏரியா என? அவர் எங்கள் பகுதியில் இருந்திருப்பார் என்னவோ தெரியாது! சகல இடங்களையும் விசாரித்து விட்டு  விலாசத்தையும் மனதுக்குள் முணுமுணூத்து பார்த்துவிட்டு விட்டு விட்டார் அவர் தமிழ் தெரிந்த சிங்களவர் அல்ல அவர் ஒரு தமிழர் என்பது அவர் பேசிய மொழி பாஷையில் அறிய முடிந்தது எனக்கு .

தொடரும்.....  🐫🐫🐫

 

நிரந்தரம் என்று எதுகும் இல்லை

1 year 6 months ago

நிரந்தரம் என்று எதுகும் இல்லை 

 

உறவுகளோ 

நண்பர்களோ 

உன்னை வெறுப்பதாய் 

இருந்தால் 

விட்டு விலகிவிடு 

அவர்கள் வேண்டாம் 

என்று போன பின் 

நீ அன்பு வைப்பதில் 

அர்த்தமில்லை 

இந்த உலகில் 

நிரந்தரமானது என்று 

எதுகும் இல்லை 

அன்பு பாசம் 

எல்லாமே ஒரு 

மேடை நாடகமே 

சுயநலத்துடன் சுளரும் 

பம்பரம் போலே 

வேசம் கலைந்தபின் 

விட்டு விலகிவிடுவார்கள் 

ஒன்றை மட்டும் 

உங்களுக்கு சொல்லிக்கொள்ள 

விரும்புகின்றேன் 

என்னோடு எப்பவுமே 

பொய்மைகள் உறங்குவதில்லை 

என் மனச்சாட்சியுடன் 

நான் இப்போ 

மௌனமான மொழியை 

கற்றுக்கொண்டு விட்டேன் 

அதனோடு வாழவும் 

பழகிவிட்டேன் 

என் அருகில் 

அழகிய வாழ்வு 

இருக்கும்பொழுது 

நான் தனியனே 

போதும் 

என் படை 

அசையாமல் நகரும் 

 

பா .உதயகுமார் /Oslo

கலா

1 year 6 months ago

"பல தடவைகள் தாயகம் சென்று வந்த சுரேஸுக்கு இந்த தடவை போவது ஒரு வித புத்துணர்ச்சியை அவனுக்கு கொடுத்தது.சில சமய‌ங்களில் அவனை அறியாமலயே சிரிப்பதும் உண்டு.ஏன் சிரித்தேன் என்று எண்ணும் பொழுது அவனுக்கே வெட்கமா இருந்தது.

"இஞ்சாரும் ஊருக்கு போற நாள் வந்திட்டுது டிக்கட் அலுவல் எல்லாம் பார்த்தாச்சோ"

"காசு டிரான்சவர் பண்ண வேணும் அதுக்கு இப்ப கனகாசு போகப்போகுது"

"போகவெளிக்கிட்டால் காசு போகத்தானே செய்யும்"

"என்ன இந்த முறை ஊருக்கு போறது என்றவுடன் என்னை விட நீங்கள் உசாரா இருக்கிறீயள் போல"

"இஞ்சாருமப்பா இந்த தடவை சிறிலங்கா போகும் பொழுது கொழும்பில் ஒரு நாள் நின்று போட்டு அடுத்த நாள் ஊருக்கு போவம்"

"இதென்ன புதுக்கதையா இருக்கு நீங்கள் தானே வழமையா . ஒரு கிழமைஅக்காவுடன் நிற்கவேணும் என்று சொல்லுறனீங்கள்"

"போனவருசம் போய் நின்டனாங்கள் தானே,,திரும்பி வந்து நிற்க்கலாம் "

"எனக்கு பிரச்சனை இல்லை எல்லோரும் தூரத்து சொந்தங்கள்,

கொழும்பில் ஒரு நாள் நிற்கிறதைப்பற்றி கவலை படுகிறீயள்,  இரண்டு கிழமை இந்தியாவில நிற்க வேண்டி வரப்போகுதே "

"நான் சொன்னனான் அல்ல இந்தியாவுக்கு வரும் பொழுது போவம் என்று"

" இந்தியாவில சொப்பிங்  செய்து கொண்டு போனால் தானே,, உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க வசதியாக இருக்கும் "

"இங்க வாங்கி கொண்டு போகலாம் தானே"

"டோலரில் வாங்கி கொடுக்கிறதிலும் பார்க்க இந்தியன் ருப்பீஸ்ஸில் வாங்கி கொடுத்தால் மலிவா விசயம் முடிஞ்சுடுமல்ல"

"அவுஸ்ரேலியாவில இருந்து போறனாங்கள் அவுஸ்ரேலியன் பொருட்களை கொடுத்தால் ந‌ல்லம் "

"சும்மா போங்கப்பா உவங்க‌ளிட்ட என்ன கிடக்கு ,எல்லாம் சீனாக்காரனின்ட சமான்கள் ,அதுக்கு காசு கொடுக்கிறதிலும் பார்க்க ,அந்த காசில இந்தியாவில நல்ல சீலைகளை வாங்கி கொடுக்கலாம்"

தொடர்ந்து மனைவியுடன் விவாத்தித்து வெல்ல முடியாது என நினைத்தவன்

"நீர் நினைச்சதை தான் செய்து முடிப்பீர் ,என்னத்தையும் செய்து முடியும்"

கலாவை வெகு சீக்கிரத்தில்ச‌ந்திக்க வேணும் என்ற ஆதங்கத்தில் இருந்தவனுக்கு  அத‌ற்கு காலதாமத‌ங்கள் ஏற்படுகின்றது என்ற ஆத்திர‌த்தில் கையிலிருந்த தேத்தண்ணீர் கோப்பையை  மேசையில் டமார் என சத்தம் வரும்படி வைத்தான்.

"இப்ப ஏன் கோவப்படுறீயள் "

"நான் கோவப்பட‌வில்லை ,ஊருக்கு போவதற்கு தாமதமாகுது "

"உன்னான எனக்கு விளங்கவில்லை வழமையாக ஊருக்கு போவது என்றால் பஞ்சிபடுவியள் இந்த‌ தடவை ஏன் அந்தரபடுறீயள்"

"அதோ ,போனதடவை போய் ஒரு சின்ன வீடு செட் பண்ணி போட்டு வந்தனான் அதை பார்க்கத்தான்"

"உந்த மூஞ்சிக்கு அது ஒன்றுதான்இல்லாத குறை "

"இஞ்சாரும் என்ட மூஞ்சிக்கு வராட்டியும் அவுஸ்ரேலியன் பாஸ்போர்ட்டுக்கு சனம் லைனில வரும்"

"ஓஓஒ ,உங்களுக்கு கலியாண வயசு சனம் லைனில வரப்போகுது"

"சும்மா விசர் கதை கதையாமல் போற அலுவலை போய் கவனியும்"

ம்ம்ம்ம் உதுல நின்று உங்களோட கதைச்சுகொண்டிருந்தால் ஊருக்கு போக முதல் டிவோர்ஸில் தான் முடியும் என புறு  புறுத்தபடியே மேசையில் இருந்த தேத்தண்ணீர் கோப்பையை எடுத்துக் கொண்டு குசினிக்குள் சென்றவள் ,தனது கோபத்தை கொப்பைகள்  மீது காட்டினால்.

 

குறைந்த செலவில் நிறைந்த இன்பம் என்ற கோட்பாட்டில் அவள் டிக்கட்களை எடுத்திருந்தாள்.

"எயர்போர்ட்டுக்கு டக்சியை புக் பண்ணி போவமோ"

"என்ன புதுக்கதை வழமையா என்ட தம்பி அல்லது தங்கச்சி தானே கூட்டிக்கொண்டு போறவையள்"

"அவயளுக்கு ஏன் கரைச்சலை கொடுப்பான் "

"20 கிலோவும் கான்ட் லகேட்ஜ் ம‌ட்டும் தான்  கொண்டு போகலாம்"என்றாள்

உடனே சீனாக்காரனின்ட கடைக்கு ஒடிப்போய் ஒரு ஸ்கேலையை வாங்கி கொண்டு வந்தான் சுரேஸ்.ஒவ்வோருமுறையும் ஒரு ஸ்கேல் வாங்குவான் பயணம் முடிய அது உடைந்து விடும் ,ஐந்து டொலருக்கு ஏற்ற வேலையையத்தான் அதுவும் செய்ய முடியும்.எல்லோருடைய ல‌க்கேஜும் ச‌ரியா 20 கிலோ இருக்குமாறு செய்துவிட்டு கைப்பொதிகளையும்  7 கிலோ இருக்கும்மாறு ஒழுங்கு படுத்திவிட்டு

சமான்கள் எல்லாம் வைச்சாச்சோ லொக்கை போடட்டோ என்றான்.

"ஏன் அந்தரப்படுறீயள் அப்பா" அவனது பிள்ளைகளும் மனிசியும் கோரசா குரல் கொடுத்திச்சினம்

"அப்பாவுக்கு எல்லாத்திற்கும் டென்சனும் அந்தரமும்"

"இப்பவே  எல்லா லக்கேஜும் 20 கிலொ வ‌ந்திட்டு இனி எங்க வைக்கிறது

"அப்பா உங்கன்ட உடுப்புகளை குறைச்சு போட்டு உதுகளை வையுங்கோவன், நீங்கள் அங்க போய் வாங்கலாம் தானே"

"ம்ம்ம் கடைசில நான் தான் அதற்கும் தியாகம் பண்ணவேணும்"

" சூவிட் அப்பாவல்லோ"

 

இழுபறிபட்டு அவர்களது பயணம் தொடங்கினது.இரண்டு கிழமை(உந்த இர‌ண்டு கிழமையும் உவன் சுரேஸ் என்ன செய்திருப்பான் என்று பிறகு எழுதுகிறேன்)  கழித்து சென்னையிலிருந்து கொழும்பு பயணம்.

"இஞ்சாரும் இந்தியாவில சீலைகள் எல்லோருக்கும் அளவா  வாங்கினீறோ அல்லது எக்ஸ்ராவா  ஒன்று இரண்டு வாங்கினீரோ"

"ஒம் ஐந்தாறு எக்ஸ்ராவா வாங்கினனான் , ஏன்? என்னப்பா இந்த முறை உங்கன்ட போக்கு ஒரு மாதிரி கிடக்கு"

"சும்மா கேட்டனான் ,ஊரில் சொந்த பந்தங்களுக்கு கொடுக்க"

"உங்களுக்குத்தானே ஒருத்தருமில்லையே ,இருக்கிற சொந்தங்களுக்கும் நான் தான் பார்த்து கொடுக்கிறன் இப்ப என்ன புதுசா"

"சும்மா கேட்டனான் அடிஆத்த"

விமானப்பணிப்பெண் உங்களுக்கு என்ன குளிர்ப்பாணம் வேணும் என கேட்க தனக்கு பிடித்த குளிர்பானத்தை கேட்டு வாங்கி அருந்த தொடங்கிவிட்டான்.

 

கலாவுக்கு ஒரு சீலையை கொடுக்க வேணும் என்று நினைத்து அவன் சீலைகளின் எண்ணிக்கையை அறிந்தவன்,அதை எப்படி மனைவியிடம் கேட்பது என்ற தர்ம சங்கடத்திலிருந்தான் ... .

 

பல தடவைகள் போய் வந்தமையால் விமானநிலையம் கொஞ்சம் பழக்கப்பட்டு விட்டது சுரேஸுக்கு. குடிவரவு திணைக்கள வேலைகளை முடித்து கொண்டு பொதிகளையும்

எடுத்து சுங்க பரிசோதணையாளர்களை பார்த்து ஒரு புண்சிரிப்பை விட்டான் அவர்களும் தங்களது கடமையை சரியாக செய்வது போல அவனை அழைத்து எங்கேயிருந்து வாறீங்கள் என‌ கேட்டார்கள்,சென்னை என்று சொல்லாம் சிட்னி என்றான் ,நேராக வெளியே செல்லும்படி கையை  காட்டினார்கள்.

 

வெளியே அவனது சகோதரி  தனது மக‌னுடன் அவனுக்காக காத்திருந்தாள்.

"மாமா என்ன நல்லா மெலிந்து போனீங்கள்"

நீ நல்லா வெயிட் போட்டிட்டாய் , உனக்கு அம்மாவின்ட சாப்பாடு ,எனக்கு மனிசியின்ட சாப்பாடு அதுதான்"

"மாமி ,மாமா சொன்னது கேட்டதே"

"ஒமடா உவர் உப்படி கணக்கா சொல்லுவார்,அங்க இவ்வளவு காலமும் காத்து தானே குடிச்சுக்கொண்டிருந்தவர்"

"டேய் நாளைக்கு யாழ்ப்பாணம் போகவேணுமடா டிரெயின் புக் பண்ண ஏலுமோ"

"இல்லை மாமா உடனே புக் பண்ணுறது கஸ்டம், வான் பிடிச்சு போங்கோ"

"முதல் முல்லைதீவுக்கு போக வேனுமல்லோ அப்பா ....முதலே சொன்னான் அல்லேஉங்களுக்கு இப்ப எல்லாம் மறந்து போகுது டிமன்சீயா கிமன்சீயா வரப்போகுதோ தெரியவில்லை"

"மறந்து போனன் அப்ப முல்லைத்தீவுக்கு டிரேயின் புக் பண்ணடா"

என்றவன் கண்னை மூடிக்கொண்டு சீட்டில் சாய்ந்து விட்டான்.எல்லோருக்கும் புரிந்து விட்டது கிழவர் கொதியில் இருக்கிறார் என்று ஆகவே அமைதி காத்தனர் வாகனத்தில்.

சகோதரியின் வீட்டில் சமான்களை இறக்கி வைத்து விட்டு குளித்து உணவு உட்கொள்ள அமர்ந்தனர்..

"மாமா நாளைக்கு முல்லைதீவுக்கு வான் புக் பண்ணவே"

"ஓம் புக் பண்ணு எவ்வளவு காசு என்று கேள்'

"அப்பா வவுனியாவுக்கு போவம் அங்கயிருந்து முல்லைதீவுக்கு போக எங்கன்ட மச்சானை வானை கொண்டு வரச்சொல்லுவோம்"

" அட கட‌வுளே இப்ப வவுனியாவிலும் நாலு நாள் நிற்கப்போறீரோ"

"இல்லை சொந்தங்களின்ட வீட்டை டீ குடிச்சு கொண்டிருக்க முல்லை மச்சான் வானை கொண்டு வந்து எங்களை கூட்டிகொண்டு போவார்,தெரிஞ்ச ஆட்களோட அங்க போறது பயமில்லைத்தானே"

 

" ம்ம்ம்ம் ..."

அடுத்த நாள் காலை வானில் வவுனியா புறப்பட்டனர் அங்கு மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுதே முல்லை மச்சான் தனது வாகனத்துடன் வந்தார்.அவரும் விருந்தில் கலந்து கொண்டார் .பிள்ளைகளுக்கு அவர்களை அறிமுகப்படுத்தினாள் சுரேசின் மனைவி.

மாமாவின் மகள்,சித்தாப்பாவின் மகன் என்று சொல்ல பிள்ளைகளுக்கு அடியும் விளங்கவில்லை நுனியும் விளங்கவில்லை

எல்லோருக்கும் ‍‍ஹாய் ‍ஹாய் என்று சொல்லி விட்டு தமிழில் உறையாட தொடங்கிவிட்டனர்.நல்லா தமிழ் கதைப்பினம் போல கிடக்கு எப்படி?என்றனர் உறவினர்.

வீட்டில நாங்கள் தமிழில் கதைக்கிறனாங்கள் ,மற்றது நாங்கள் த‌மிழை ஒரு பாடமாக எடுத்னாங்கள் என்று அவையளின்ட தமிழ் புலமைக்கு விளக்கம் கொடுத்தனர்.

முல்லை மச்சான் வெளிக்கிடுவோமா என்று கேட்க எல்லோரும் நாங்கள் ரெடி என்றனர் . மீண்டும் பைகளை ஏற்றி கொண்டு முல்லை நோக்கி பயணமானார்கள்

 

 சுரேசுக்கு  கலாவை சந்திக்க வேணும் என்ற ஆர்வம் மேலும் மேலும் அதிகரித்தது.போகும் பாதையில் உள்ள தமிழ் பாடசாலைகளை பார்த்த‌வுடன் இங்கு அவள் ஆசிரியராக கடமை புரிவாளோ என்று எண்ணதொடங்கி விடுவான்.அவள் பின்னால் அழைந்து திரிந்தவை எல்லாம் ஞாபக‌ம் வரத்தொடங்கிவிட்டது.

"உங்களுக்கு  முல்லை தீவில்  யாழ்ப்பாணத்து டீச்சர்மார் யாரையும் தெரியுமோ"

"இல்லை என்ட தங்கச்சி டீச்சர் அவளிட்ட கேட்டு பாருங்கோவன்"

"இன்னும் ஒரு மணித்தியாலத்தில் போய்விடுவம் என்ன"

"ஒம் ஓம்  ,மச்சாளை பார்க்க வேணும் என்று சொன்னவள் தங்க‌ச்சி வீட்டை வந்து நிற்பாள் கேட்டு பார்ப்போம்"

 

அந்த ஒரு மணித்தியாலம் ஒரு வருடம் போல தோன்றியது அவ‌னுக்கு

வீடு போய் சேர்ந்தவுடனே சுகம் விசாரிக்க எல்லோரும் ஒன்று கூடிவிட்டார்கள்.பொதிகளை இறக்கி வைத்து விட்டு கிணற்றடியில் குளித்து விட்டு இருக்கும் பொழுது சுடச்சுட் தேனீருடன் டிச்சர் வந்தார்.

"டீச்சர் உங்கன்ட ஸ்கூலில் யாழ்ப்பாணத்து டீச்சர்மார் படிப்பிக்கினமே"

"ஓம் அண்ணே ஐந்தாறு டீச்சர்மார் இருக்கினம்"

அவ‌னுக்கு ஒரு நிமிடம்  கலாவை கண்ட சந்தோசம் வந்து போனது

 

தொடரும் (நாங்களும் டிராமா பார்க்கிறமல்ல)இன்னும் ஒரு பகுதியுடன் கிறுக்கல் முடிவடையும்...😀

இந்த கிறுக்கல் 100 வீதம் யாவும் கற்பனை என்பதை சகல வாசகர்களுக்கும் அறியத்தருவதில் மற்றட்ட மகிழ்ச்சி யடைகிறேன்😁

 

 

 

 

 

 

.

 

 

கொல்வது கொலை

1 year 6 months ago

கொல்வது கொலை

vicecomics01c2-670x446.jpg?resize=320:*

விடிகாலை இருள் விலகும் தருணம். அந்தத் தென்னந்தோப்புக்குள் நிலை எடுத்தபடி அவள் அவதானமாக நகர்ந்தாள். கைகள் பிஸ்டலில் பதிந்திருக்க விழிகள் தூரத்தில் நாய்கள் குரைக்கும் திசை நோக்கி உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்ததன. ஒரு இராணுவப் படைநகர்வு பாரிய அளவில் முன்னெடுக்கப்படுவதற்கான ஆயத்த கூப்பாடுகள் அந்த விடிகாலை இருளைக்கிழித்தன. அரவம் காட்டக்கூடாது என்ற மேலிடத்துக்கட்டளை அவளை அசைவித்துக் கொண்டிருந்தது. பெக்கி சேர்ட், இலகுவாக ஓடுவதற்கும் தடை தாண்டுவதற்கும் ஏற்றாற்போல் பான்ட், இடுப்பிலே கட்டப்பட்டிருந்த பெல்டின் இடது பக்கம் பிஸ்டல் வலதுபக்கம் இரண்டு கிரனைட்டுகள் கழுத்தில் குப்பி. மிடுக்கான தோற்றம், பெண்மையை வெளிப்படுத்தாத பிரிதொரு கம்பீரம். விழிகளில் மருட்சி இல்லை, அவதானம் ,எச்சரிக்கை உணர்வு, நடுக்கமில்லாத மூச்சுக்காற்று, கத்தரிக்கப்பட்ட கூந்தல் தனி மிடுக்கைக் கொடுத்து மீள மீள அந்தப் பெண் போராளியை நோக்கத்தூண்டுவதாக அமைந்திருந்தது. எதிர்ப்புறத்தை நோக்கி கொண்டிருந்தவளுக்கு பின்பக்கமாக அசைவு தெரிய அந்த இருளில் அசையாமல் நிலத்தோடு ஒட்டிக்கொண்டாள். நாய்களின் குரைப்பொலி பின்பக்கம் கேட்காததால் நிச்சயமாக அது இராணும் இல்லை என்பதை உள்ளுணர்வு உணர்த்தியது. யாரோ நம்மாட்களாக இருக்கும் என்று எண்ணியபடி மெல்லத் திரும்பியவளின் முகத்தைத் தாக்கியது ஒரு கனமான பொருள். சட்டென ஒலியின்றி சுருண்டது அவள் தேகம்.

            முனகலுடன் அவள் விழித்தபோது அவள் எதிரே அவன் இரண்டு கொங்கிரீட் கற்களை அடுக்கி அமர்ந்திருந்தான். அவனைக்கிரகித்து எழுவதற்கு முயன்றவளின் உடல் அசைக்க முடியாமல் வலித்தது. கைகால்கள் பின்புறமாகக் கட்டப்பட்டு இடுப்பில் கட்டியிருந்த பெல்ட் கழட்டி எடுக்கப்பட்டிருந்தது. ஏன் ? இவன் எதற்கு? ஏகப்பட்ட குழப்பங்களுடன் நிமிர்ந்தவளைப் பார்த்து புன்னகைத்தான் அவன். அவனை அவளுக்குத் தெரிந்திருந்தது. அவன் போக்கு சரியில்லை என்பதும் அவன் ஒழுக்கம் பற்றியும் அமைப்பிற்குள் அரசல் புரசலாக சில கதைகள் அண்மைகாலத்தில் அலைவதையும் அறிந்திருந்தாள். மற்றப்படி அவனை அவள் அதிகம் அறிந்திருக்கவில்லை. ஆனால் இப்போது அவன் அவளைத்தாக்கி இந்த இராணுவ நகர்வுப்பாதையில் கட்டிப்போட்டிருப்பது திகைப்பையும் அச்சத்தையும் உருவாக்கத்தவறவில்லை. அப்படியானால் இவன் ஒழுக்கந்தவறியதற்கு அப்பால் காட்டிக்கொடுக்கும் துரோகியா?

             அவன் அவளையே வைத்தகண் மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தான். எத்தனை காலமாக அவளைக் குறிவைத்திருந்தான். இப்போது மான் மாட்டியிருக்கிறது. இராணுவ நகர்வு அண்மித்துக் கொண்டிருந்தது. அவன் அச்சமின்றி அமர்ந்திருந்தான். அவனுடன் இன்னும் சிலர் அவனுக்கு பாதுகாப்பாக… அவர்களை இராணுவம் நகரும் திசைநோக்கி நகரச் சொல்லி இந்தப்பக்கம் இராணுவம் வராமல் இருக்க அவர்களைத் திசைமாற்றி குறிப்பறிவிக்கச் சொன்னான் எப்படியாவது அவளைத் தன்வலையில் வீழ்த்த இராணுவ நகர்வைப் பயன்படுத்திவிடவேண்டும் என்பது அவன் எண்ணம். அதுவரை இராணுவத்திடம் அகப்படாமல் அவளை வைத்திருக்கத் திட்டமிட்டு, அவள் வாயில் துணியை அடைத்தான். தென்னோலைகள் கொண்டு அவளை மூடி நகர்ந்தான். அவன் நினைப்பிற்கு மாறாக அவன் மீது சந்தேகப்பார்வையை படர விட்டபடி அந்த இராணுவப் பெண் கொமாண்டர் சுற்றிலும் நோட்டம் விட்டாள். வெறுப்புடனும் விருப்பமில்லா சிரிப்புடனும் அவனுக்கு  கைகுலுக்கிக் கொண்டு அந்தப் பெண் கொமாண்டர் அவன் வந்த திசை நோக்கி நகர்ந்து முன்னேறினாள். அவள் விழிகள் கொடூரத்தன்மையை வெளிப்படுத்த இதழ்கடையில் குரூரமாக புன்னகைத்தாள். சட்டென்று அந்தத் தென்னந்தோப்புக்குள் சில இராணுவர்களுடன் நுழைந்து நோட்டம் விட்டாள் சற்று மேடாகத் தெரிந்த ஓலை அவளின் சந்தேகப்பார்வைக்குள் விழ தனக்கு அருகாமையில் இருந்த இராணுவனுக்கு கண்களால் ஆணையிட்டாள். சரசரவென ஓலைகள் அகற்றப்பட முக்கில் இரத்தம் ஒழுக, முகம் வீங்கிய நிலையில், கைகளும் கால்களும் பின்புறமாக அசையமுடியாதபடி கட்டப்பட்டிருந்த வாயில் துணி அடைக்கபட்டிருந்த போராளிப்பெண் குப்புறவாக கிடந்தாள்.  அருகே வந்த கொமாண்டர் அவள் வாயில் இருந்த துணியை அகற்றி அவளை வானம் பார்க்க நிமிர்த்திப் போட்டு விசாரிக்க ஆரம்பித்தாள். கொமாண்டரின் விசாரணைகள் எதற்கும் பதில் அளிக்காமல் இறுக்கமாக மௌனத்திற்குள் இருந்தாள் போராளி. கொமாண்டர் அவனைச்சுட்டிக்காட்டி அவன்போல் நீயும் எங்களுடன் சேர்ந்து விடு, உனக்கு வசதியான வாழ்க்கை அமைத்துத்தருகிறோம். இங்கு வாழ விரும்பாவிட்டால் இந்தியாவில் நீ அழகான வாழ்க்கை அமைத்துக் கொள்ளலாம் என்றாள். அப்பட்டமான துரோகத்தால் வீழ்த்தப்பட்ட அந்தப்பெண் போராளி ஆணித்தரமான மறுப்பை தலையை அசைத்து வெளிப்படுத்தினாள். இராணுவப் பெண்கொமாண்டருக்கு சினம் கூடியது. ஆத்திரத்துடன் கம்பி நறுக்கும் நீண்ட கொறடை எடுத்து போராளி அருகே வந்து அவள் கழுத்தில் வைத்து மிரட்டினாள். அவள் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் தன்னினத்திற்கே துரோகியாக மாறிய அவனை பார்த்தாள். “ஏய் என்ன அவனை முறைக்கிறாய்? எங்களோடு சேர் இல்லையென்றால் இந்தக்கட்டரால் உன் கழுத்தை அறுத்துவிடுவேன்” என்றாள். முடியாது என்று உரக்கக்கூறினாள் போராளி. அடுத்த கணம் கழுத்தில் இருந்த கட்டரை சற்று சாய்வாக்கி கழுத்தின் நரம்பை அறுத்தாள் கொமாண்டர். குபுகுபுவென்று இரத்தம் பாய்ந்தோட அந்தப்பெண் போராளி கைகால்கள் கூட அசைக்கமுடியாமல் கிடந்தாள். அவள் கண்கள் எதிரியை நோக்கவில்லை துரோகியை காறி உமிழ்ந்தது. கொமாண்டர் விலகி நடந்தாள். அவளுடன் சில இராணுவர் அகல, சிலர் கைகால்கள் கட்டப்பட்டு குற்றுயிராக கிடந்த அவளை நெருங்கினர். கை கால்களின் கட்டுகளை விடுவித்து ஆடைகளைக் கிழித்து நிர்வாணம் ஆக்கி குற்றுயிராய் கிடக்கும் அவள்மேல் சிறுநீர் கழித்து எங்களோடு சேராத உனக்கு இதுதான் தண்டனை என்று சொல்லி அவள் உடலெங்கும் சப்பாத்துக் கால்களால் மிதித்தனர். சற்றுத்தூரத்திலிருந்து அவன் பார்த்துக்கொண்டிருந்தான். ஆசைப்பட்டது தனக்கு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தைத்தவிர அவனுக்கு எதுவும் தோன்றவில்லை. அவள் அன்றே இறந்தும்போனாள்.

            புழுதி படிந்த சாய்வு நாற்காலி, அதிகாரம் இழந்த ஆணவம், எல்லோராலும் ஒதுக்கப்பட்ட தனிமை, களையிழந்த முகம், ஒளி குன்றிய கண்கள், நடுத்தர வயதின் முடிவு நரையும் ,வழுக்கையும் போட்டியிடும் தலை, மனஉளைச்சல்களின் கதக்களியில் மூப்பெய்திய அவன். கேட்க ஒரு நாதியற்ற மானுட அவலத்தில்,……. நேற்றாடிய துரோகத்தால் இன்னும் அவன் உயிரோடு கிடந்தான். அவன் தனித்திருந்தான் சூழ இருந்த பலங்கள் காரியம் முடிந்ததும் காணாமல்போயின. , மெல்ல மெல்ல மன உளைச்சல் அவனிடத்தில் குடியேறி அவன் துரோகத்தை படிப்பினையாக்கி கொண்டிருந்தது. ஆண் என்ற ஆணவமும், வாழ்வேன் என்ற வன்மமும் புழுதி படிந்து அந்த சாய்வு நாற்காலியைப்போல்…. கூட இருந்தவர்களைத் துரோகத்தால் வீழ்த்திய வரலாறு பெருஞ்சாபமாய் தலையில் விடிந்தது. கைகால்கள் மரத்துக் கொண்டன. வாயில் நா ஒரு பக்கமாக இழுத்துக்கொண்டது. உடல் நிலத்தில் வீழ்ந்தது. நீண்ட நேரமாகியும் எவரும் வரவில்லை. ஒரு நாய் மட்டும் அருகே வந்து மணந்து தனது பின்னங்காலைத்தூக்கி சிறுநீர் கழித்துவிட்டு நகர்ந்து மறைந்தது. மூளை கிரகித்துக் கொண்டது. அசைய முடியாதபடி கைகால்கள் கட்டப்பட்டு கழுத்து நரம்பு அறுக்கப்பட்ட பெண்போராளி புன்னகையுடன் அவனை விழித்துப் பார்த்தாள்.

முகமூடி

1 year 7 months ago

ஒரு மாதத்துக்கு முன்னர் நான் வைத்தியசாலைக்குச் சென்று இரத்தப் பரிசோதனை முடித்து கார் பாக் செய்திருந்த இடத்துக்கு வருகிறேன். பிரதான சாலையில் கரையிலேயே தான் என் கார் நின்றது. என்னைக் கடந்துகொண்டு ஒருவர் பெட்டி ஒன்றைத் தூக்கிக்கொண்டு செல்கிறார். அவர் கடந்து சென்றதன் பின்னர் தான் எனக்கு அவரைப் பார்த்ததுபோல் இருக்க, நான் கார் கதவைத் திறந்தபடி தலை திருப்பி அவரைப் பார்க்கிறேன்.

யோசித்துக்கொண்டிருக்க எனக்கு நினைவு வந்துவிட்டது. முன்பு ஒரு தடவை சந்தித்த யாழ் உறவுதான் அவர் என்று. அவர் ஒரு கடைக்குள் நுழைய நின்று கதைத்துவிட்டுச் செல்வோமா என்று எண்ணிவிட்டு அவர் எதோ அலுவலாக இருக்கிறார். எனக்கும் காலை தேநீர் கூடக் குடிக்காத தவிப்பு. சரி இன்னொருநாள் பார்ப்போம் என்றுவிட்டுச் சென்றுவிட்டேன்.

மீண்டும் ஒரு இரண்டோ மூன்றோ வாரங்களுக்கு முன்னர் நான் நடந்து கடைக்குச் செல்ல எதிரே மீண்டும் அந்த (உறவு). இருவரும் நேரே ஒருவரை ஒருவர் பார்த்தாலும் எந்த உணர்வுமற்ற அவர் முகத்தைப் பார்த்ததும் வணக்கம் என்று கூற வெளிக்கிட்ட நான்  ஒன்று கூறாமல் கடந்து போகிறேன். ஏன் இவர் தெரியாததுபோல் போகிறார் என்று என் மனதில் கேள்வி எழுந்தாலும் நீயும் எதுவும் கூறாமல் தானே கடந்து போகிறாய் என்று என் மனச்சாட்சி கேட்க எதுவும் மேற்கொண்டு எண்ணாமல் கடைக்குச் செல்கிறேன்.

கடந்த வாரம் தமிழ்ப் பள்ளிக்காக சிலஉணவுப் பொருட்களை வாங்க உணவகம் இருக்கும் ஒரு கடைக்குச் செல்ல இன்னும் இருவருடன் கதைத்துக்கொண்டு அதே ஆள். இம்முறை பேசாமல் போக்க கூடாது என்று எண்ணிக்கொண்டு வணக்கம் என்கிறேன். அவரும் வணக்கம் சொல்லிவிட்டுப் பார்க்க என்ன தெரியாதாமாதிரி நிக்கிறியள் என்கிறேன். எனக்கு உங்களைத் தெரியவில்லை என்கிறார் அவர். நீங்கள் யாழ் கள உறவு ........ தானே என்று கேட்க, எனக்கு அதில எழுதுற அளவு அறிவில்லை என்கிறார் அவர். நான் சிரித்துவிட்டு காரில் ஏறிக் கிளம்புகிறேன். அவர்  பதிலால் அவரே நான் நினைத்த உறவு என்று ஒத்துக்கொண்டதை நினைத்து இப்பவும் சிரிப்பாக இருக்கு.

சைக்கிள் கடை அப்பு

1 year 7 months ago

“வந்துட்டான்யா வந்துட்டான்
எழுதியே கொல்லப் போறான் “
என்ற மைன்ட் வொய்ஸ் நல்லாவே கேட்குது.
சீ சீ அப்படி செய்வேனா என்ன?
இது ஒரு உண்மைக்கதை.சின்னக்கதை.
ஆனாலும் பிரபல்யமான கதை.
இது சுவியின் ஊரவர் என்றபடியால் அவரும் தெரிந்ததை விபரமாக எழுதலாம்.
இதை அறவே மறந்தே போனேன்.இருந்தாலும் சைக்கிள்கடை என்று சிறி கேள்வி எழுப்பத் தான் ஞாபகத்துக்கு வந்தது.

                                     யாழ் இந்துவில் மழைக்கொதுங்கிய வேளை எட்டாம் வகுப்பிலேயே ஒரு பாடம் இரண்டு பாடம் என்று நாளடைவில் அரைநாள் முழுநாளாக மாறிவிட்டது.யாரிடமாவது சைக்கிள் இரவல் வாங்கிறது.இரண்டு மூன்று பேர் சேர்ந்து கீரிமலை சேந்தாங்குளம் பண்ணை வெள்ளைக் கடற்கரை இப்படி எங்காவது திரிவது.

                                    ஒரு தடவை புறப்பட்டு கொஞ்ச நேரத்திலேயே சைக்கிள் முன்வளையம் வழைந்துவிட்டது.பாடசாலை முடிவதற்கிடையில் திருத்தி கொடுக்க வேண்டும்.யாரிடமும் திருத்த பணம் இல்லை.மதியநேரம் யாரிமாவது கடன் வாங்கலாம் என பொறுத்திருந்தோம்.சைக்கிளை தூக்கிவந்து மைதான வைரவகோவிலுக்கு பக்கத்தில் வைத்துவிட்டு இடைவேளை விட்டதும் ஆளாளுக்கு அலைந்து திரிந்தோம்.ஐஸ்பழத்துக்கும் கடலைக்கும் காசு சேர்ந்ததே தவிர போதுமான காசு சேரவில்லை.

                                    நீராவியடி கோவிலுக்கு பக்கத்திலுள்ளவர் எனது வகுப்பு.அவர் மதியம் வீடு போய் சாப்பிட்டு வர அவரிடம் யாரிடமாவது சொல்லி இந்த சைக்கிளைத் திருத்தி தா நாளை காசு தருகிறோம் என்று அவரை கெட்டியாக பிடித்துக் கொண்டோம்.

                                   சரி இந்து மகளீர் சந்தியில் எனது அண்ணன் சைக்கிள்கடை வைத்திருக்கிறார் பெயர் அப்பு நான் சொன்னதாக சொல்லுங்கோ என்றார்.அந்த நேரம் இந்த ராங்ஸ் நன்றி யார் தான் சொல்லுவது.தூக்கிக் கொண்டு அங்கே போய இஞ்சை அப்பு அண்ணை என்றதும் அவர் இன்னும் கொஞ்ச நேரத்தில வருவார் என்று நின்றவர் சொன்னார்.

                                  கொஞ்சநேரத்தில் அவரும் வந்து இறங்கினார்.உன்னைத் தான் பார்த்துக் கொண்டிருக்கினம் என்று நின்றவர் சொன்னார்.அப்பு அண்ணையும் வளைந்த ரிம்மையும் எங்களையும் பார்த்திட்டு 2-3 ரூபா வரப் போகுது என்ற சந்தோசத்தில உள்ளுக்கு கொண்டு வாங்கோ என்றார்.இப்போ ஆளையாள் பார்த்து முழுசாட்டம்.காசு இப்ப இல்லை என்று சொல்லித் தொலைக்க வேண்டுமே.

                                அப்புஅண்ணை எங்களை விட 6-7 வயது மூத்தவராக இருப்பார்.நான் தான் மெல்ல மெல்ல மசிந்து மசிந்து அண்ணை இப்ப காசில்லை உங்கடை தம்பி முத்துகுமாரு தான் இஞ்சை அனுப்பினவர்.கோபப்படப் போகிறார் என்று எதிர்பார்த்தா பெலத்து சிரித்துக் கொண்டு அதுதானே அங்கையிருக்கிற கடையெல்லாம் விட்டுட்டு இஞ்சை கொண்டாந்திருக்கிறாங்களே என்று பார்த்தேன்.

                               சரி சரி கொண்டு வாங்கோ என்று திருத்தித் தந்தார்.(கூலி சரியாக நினைவில்லை ஓரிரு ரூபா தான்) அடுத்த நாளே அவருக்கு காசைக் கொடுத்துவிட்டோம்.அங்கேயே சைக்கிள் வாடகைக்கு விடுவதாக சொன்னார்.பிற்பாடு தேவையான நேரங்களில் அவரிடமே வாடகைக்கு சைக்கிள் எடுப்போம்.இதுவே நாளடைவில் அங்கேயே ஒரு எக்கவுணட்டும் திறந்தாச்சு.

                                நாள் போகப் போக அண்ணையாக இருந்த அப்பு ஒருமையில் கதைக்கப் பழகிக் கொண்டேன்.எனது 90 வீதம் நண்பர்கள் என்னைவிட 2 வயதுக்கு மேற்பட்டவர்களாகவே இருந்தனர்.எத்தனை வயது கூடு என்றாலும் எல்லோருடனும் ஒருமையிலேயே கதைக்கப் பழகிக் கொண்டேன்.இதை எனது தகப்பனார் பல முறை எச்சரித்திருந்தார்.

                              ஒருநாள் பாடசாலை போன போது சிஐடி வந்து நாலு பேரை பிடித்துக் கொண்டு போட்டாங்கள்.அதில ஒராள் லேடிஸ் கொலிச் சந்தியில் சைக்கிள்கடை வைத்திருக்கிறார்.சைக்கிள்கடைக்குள் கைக்குண்டுகள் இருந்தாம் என்று சொன்னார்கள்.பின்னர் தான் தெரிந்தது யாழ்ப்பாணமே இந்த கைதால் அதிர்ந்து போனது.

                             மெதுவாக முத்துக்குமாரிடம் அப்புவாடா என்று கேட்க கண் கலங்கிவிட்டார்.அண்ணை அண்ணை என்று அழைத்த அப்பு அண்ணை இப்போ வெறும் அப்பு என்றே அழைப்பேன்.இப்போது தான் அவரது முழுப்பெயர் அமரசிங்கம் என்று தெரியவந்தது.

                             இவர் வேறு யாருமல்ல மாவை சேனாதிராஜா வண்ணை ஆனந்தன் இன்னொருவர் பெயர் ஞாபகம் இல்லை இவர்களுடன் பிடிபட்ட அமரசிங்கம் என்ற அப்பு தான்.

                             இந்த நால்வரும் 6-7 வருடம் சிறையிருந்தார்கள்.பின்பு எப்படி விடுதலையானார்கள் என்று தெரியவில்லை.70 களின் பின்பகுதியில் கூட்டணி மேடைகளில் பார்த்தா வெள்ளை வேட்டி வெள்ளைச் சேட்டுடன் இவர்களை இருத்தி வைத்திருப்பார்கள்.இவருக்கு மேடைப் பேச்சு அறவே வராது.வண்ணை ஆனந்தன் தான் இலுப்பைப்பழம் பழுத்துவிட்டது.முன் வரிசையில் இருப்பவர்களிடம் இலுப்பைப்பழம் பழுத்தால் என்ன வரும் வெவ்வால் வரும்.வெவ்வால் வரும் போது சும்மா வராது காலில் துவக்கு கொண்டு தான் வரும் என்றால் விசிலடிச் சத்தம் நிற்கவே ஓரிரு நிமிடமாகும்.


                            மேடையில் இருக்கிற அமரசிங்கம் என்ற அப்பு என்னோடு வாடா போடா என்று நெருங்கி பழக என்னோடு சேர்ந்தவர் சேராதவர் எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம்.அடுத்தடுத்த கூட்டம் எங்கே என்று கேட்டு என்னைக் கூட்டிக் கொண்டு போவார்கள்.

                             இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த நால்வரும் மேடைக்கு வந்ததும் இரண்டு மூன்று பேர் ஊசியுடன் நிற்பார்கள்.பின்னால் இரத்ததிலகம் இடுவதற்கு வரிசையில் நிற்பார்கள்.எனக்கு ஒரே சிரிப்பு.என்ன மாதிரி இருந்த அப்பு இப்ப பாரடா.அட சிறை சென்றவனுக்குத் தான் அந்த மரியாதை என்றால் அவருடன் நெருங்கி பழகியதால் எனக்கு வேறை.கூட்டம் என்றால் என்னைக் கூட்டிக் கொண்டு போகவென்றே அலைவார்கள்.

                               அந்த நால்வரில் நல்ல புத்திசாலித்தனமாக நடந்து மாவை சேனாதிராஜா நல்ல இடத்துக்கு வந்திட்டார்.மற்றவர் என்னவானார்களோ தெரியாது.
முற்றும்.
ஈழப்பிரியன்.

நெடுக்காலபோவன் (AMBCS)

1 year 7 months ago

கணனியில் அதிகம் பயிற்சி எடுத்த களம் என்றால்..  அது யாழ் களம் தான்.

குறிப்பாக தமிழ் விசைப்பலகையில் ஆரம்பித்து... தமிழ் யுனிக்கோட் எழுத்துரு உருவாக்கத்தில்...  ஆரம்ப காலத்தில்... நண்பர்களுடன் இணைந்து பணியாற்றியது ஈறாக.. வலைப்பூக்கள் அமைப்பு.. படங்களை மீள் வடிவமைத்தல்.. அசைவியக்க படங்கள் உருவாக்கம்.. தமிழ் மூல.. வின்டோஸ் அப்பிளிகேசன் மென்பொருள் பாவனை என்றும்..  கணணி வன்பொருள் அறிவு பெற்றமை.. கணனிக்குரிய பகுதிகளை வாங்கிப் பொருத்தி சொந்தமாக கணனி.. உருவாக்குதல் என்று.. போய்.. யாழுக்கு அப்ஸ் உருவாக்கும் வரை என்று நிறைய கணணி சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள யாழ் இடமளித்திருக்கிறது கடந்த பல ஆண்டுகளாக.

இந்தப் பின்னணிகள் மற்றும் கல்வியிடங்களில் பெற்ற கணனி அறிவு.. மற்றும்.. வேலையிடங்களில் பெற்ற கணணி மென்பொருள் அறிவு எல்லாத்தையும் கலந்தடித்து சமர்ப்பித்ததன் அடிப்படையில்..

பிரிட்டிஷ் கம்பியூட்டர் சாசைட்டி.. The British Computer Society.. BCS இல்.. நிரந்தர அங்கீகாரங்களில் ஒன்றான.. AMBCS நிலை அண்மையில் கிடைக்கப் பெற்றது. 

கணணி சார் பட்டப்படிப்பு எதனையும் கொண்டிராத நிலையில்.. இந்த தகுதி நிலையை அடைவதற்கு இடையறாது.. கணணி பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆர்வம்.... இந்த அங்கீகாரத்துக்கான அடிப்படையாகும்.  அதுக்கு யாழும் உதவி புரிந்துள்ளது. 

The benefits of Associate (AMBCS) membership

Associate membership delivers a range of services designed around the professional needs of today’s competent IT practitioners.

 • Professional recognition
  Tools to gain recognition within the industry include post nominal letters AMBCS, and a defined path to Chartered status via Professional membership.
 •  
 • Career development
  To plan and track progression, members use our Personal Development Plan (PDP), the CPD portal and gain full access to Browse SFIAplus, the online tool that allows them to explore the industry framework for IT skills, training and development.
 •  
 • Networking
  Top people, great ideas and the latest thinking locally, nationally and online - our global networking opportunities are unrivalled and include branches, specialist groups and the Member Network.
 •  
 • Knowledge and best practice
 • From the latest industry news to our massive online library, the Institute’s information services keep members up to date with best practice, and at the cutting edge of IT.
 •  
 • Exclusive discounts and offers
  Adding even more value to membership, our discounts and free services enable members to enjoy savings both at work and at home. 
Upgrading to Professional (MBCS) membership

At any time during their free year’s membership, candidates who are eligible can upgrade to Professional (MBCS) membership. (MBCS subscription payment is required).

யாழில் எழுத ஆரம்பித்த ஆர்வத்தின் மிகுதியால் கிடைக்கும் இரண்டாவது அங்கீகாரம் இதுவாகும். முன்னர் விஞ்ஞானச் செய்திகளை.. ஆக்கங்களை படித்து.. மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தமைக்கும் ஒரு அங்கீகாரம் கிடைத்தது. அது  Royal Society of Biology வாயிலாகக் கிடைத்தது. 

இவை போக.. தமிழகத்தில்.. ஆனந்த விகடனில்.. யாழில் எழுதி வந்த விஞ்ஞான ஆக்கங்களை... எளிமையான மொழிபெயர்ப்புக்களை..  கொண்டு  வந்த எங்கள் வலைப்பூவும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்தது. 

இவை போக.. யாழிலிலும் பகிர்ந்து கொள்ள என்று பிடிக்கப்பட்ட இரண்டு.. உயிரியல் சார்ந்த படங்கள்.. The Biologist என்ற இரு மாதங்களுக்கு ஒரு தடவை வெளியாகும் ஏட்டிலும் இரு வேறு படங்கள்.. இரு வேறு தடவைகள்.. பிரசுரமாகியுள்ளன. 

யாழ் ஒரு பொழுதுபோக்கு களம் என்பதற்கும் அப்பால்.. பலரும் பல்வேறு நிலை விருத்திக்குப் பயன்படுத்திய.. படுத்தக் கூடிய.. நுண்மைகள் பொருந்திய இடமும் கூட. 

இவற்றையும் யாழின் 21 ஆண்டு கால சாதனைகளில் சேர்ந்துக் கொண்டமைக்கு யாழுக்கும் யாழை உருவாக்கி.. நிர்வகித்து நடத்துவோருக்கும்.. செந்நன்றிக்கடனாக்கிக் கொள்கிறோம். 

அழியாத கோலங்கள்.

1 year 7 months ago

அழியாத கோலங்கள்.

புலம்பெயர்ந்து ஒரு தசாப்தமாயிற்று.  காலவோட்டத்தில் நிற்காமலேயே நாட்கள் மின்னி மறைந்துபோயின. இளமைக்காலங்களில் அனுபவித்து மகிழத் தவறிய சந்தர்ப்பங்கள் குறித்த ஏக்கங்களும், ஆற்றாமைகளும், சிறியகாயங்களும் அவ்வப்போது வந்துபோயினும் புலம்பெயர்ந்த செயற்கை வாழ்க்கை இது எதையுமே நினைக்க விடவில்லை.

வந்துவிட்டோம், வாகனமும், வீடும், வேலையும் சமூக அந்தஸ்த்தும் தேடித் தேடியே நாட்கள் தொலைந்துதான் மிச்சம். இடையிடையே கவலைகள் மனக்கசப்புகள் வேதனைகள், ஆற்றாமைகள், கோபங்கள், ஏமாற்றங்கள், வெறுப்புகள், விரக்திகள் என்று வாழ்க்கை தெருக்களிலெல்லாம் சிந்திக்கொண்டே போயிருக்கிறது. மறக்க விரும்பிய கணங்கள், நினைக்கத் தோன்றா தருணங்கள், மிண்டும் வாழ்ந்துபார்க்க விரும்பும் பொழுதுகள் என்று எத்தனையோ கணங்கள் வந்து போய்விட்டன.

எவை வந்துபோயினும் கூடவே இழையோடியிருக்கும் ஒரு வெறுமை. எதுவென்று சொல்லத் தோன்றாத ஒரு ஏக்கம். நிறைவடையாத மனது. முடிவில்லாத தேடல்கள். இப்படி ஏதோவொன்று தொடர்ந்தும் என்னுடன் வந்துகொண்டிருக்கிறது. நீ அடைந்திருப்பவை எதுவுமே நீ தேடுபவை அல்ல என்று எனக்குச் சொல்கிறது. 

எனது தேடல்களின் இறுதி எதுவென்று எனக்குத் தெரியாது. பொருள்சார்ந்த தேடல்களில் எனக்கு எப்போதுமே விருப்பு இருந்ததில்லை. ஆனால், மனிதர்களில் இதுவரையில் தோழமையுடன் வந்தவர்கள் வெகு சிலரே. வந்தவர்களும் பாதியிலேயே விட்டகல வெறும் தனிமைதான் கூட வருகிறது. உறவுகள் இறுதிவரையென்றாலும், தனிமனித விருப்பு வெறுப்புகள் அவற்றையும் தேடல்களின் பட்டியலிலிருந்து நீக்கிவிடுகின்றன. அதனால் எனது தேடல் இன்னமும் தொடர்கிறது.

Checked
Fri, 10/30/2020 - 09:53
யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள் Latest Topics
Subscribe to யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள் feed