புதிய பதிவுகள்

அரச அதி­கா­ரி­க­ளினால் பாலியல் இலஞ்சம் கோரப்­ப­டு­கி­ன்றது: ட்ரான்ஸ்பெ­ரன்ஸி இன்­டர்­நெ­ஷனல்

20 hours 31 minutes ago
பாலியல் இலஞ்சம் கோரிய பொறுப்பதிகாரி இடைநிறுத்தம் யுவதியிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக கூறப்படும் நுகேகொடை பொலிஸ் வலயத்துக்கு உட்பட்ட பொலிஸ் நிலையமொன்றில் பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி தொடர்பில் குறித்த யுவதி முறைப்பாடு செய்துள்ள நிலையில், அவருக்கு சாதகமான முறையில் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்து இவ்வாறு பாலியல் இலஞ்சம் கோரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து, குறித்த பொலிஸ் உயரதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/பலயல-இலஞசம-கரய-பறபபதகர-இடநறததம/175-242323

இலங்கையில் இயக்குனர் களஞ்சியம்.

20 hours 33 minutes ago
இயக்குநர் மு.களஞ்சியம் மீது தாக்குதல்?; இராணுவம் மறுப்பு இந்திய இயக்குநர் மு.களஞ்சியம், இலங்கை இராணுவத்தினரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சட்டை இராணுவம் மறுத்துள்ளது. இலங்கை இராணுவத்தால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், இயக்குநர் மு.களஞ்சியம் நாடு திரும்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து, இராணுவத்தின் ஊடகப் பேச்சாளரான பிரிகேடியர் சுமித் அத்தபத்துவிடம் தமிழ்மிரர் கேட்டபோது, இந்த குற்றச்சாட்டை மறுத்தார். அந்த செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது என்றும் அவர் கூறினார். கடந்த 27ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த மாவீரர் தின நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக இயக்குநர் மு.களஞ்சியம் இலங்கைக்கு வந்துவிட்டு நாடு திரும்பும் வழியில் இந்த தாக்குதலுக்கு உள்ளானதாக இந்திய செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. http://www.tamilmirror.lk/செய்திகள்/இயககநர-ம-களஞசயம-மத-தககதல-இரணவம-மறபப/175-242324

சீனா செல்லும் தமிழக அரசு உயரதிகாரிகள்..

20 hours 35 minutes ago
இந்த தமிழக அரசின் செயல்பாட்டிற்கு எவ்வளவுதூரம் டெல்லி ஆதரவு தரும்?, என தெரியவில்லை. ஆனால், எமது இனத்தை பொறுத்தவரையில் ஒரு (பொருளாதார, அரசியல், இராணுவ) மாற்றம் தரும் நிகழ்வாக மாறலாம். சிங்கள அரசு எவ்வளவு சாதுரியமாக ( அதில் ஆபத்துக்களும் உள்ளன) , சீன அரசையும் இந்திய, ஜப்பான் மற்றும் மேற்குலக நாடுகளை கையாண்டு தன்னை வளர்த்துக்கொள்ளுகின்றது என வாழும்பொழுதே கண்கூடாக பார்க்கின்றோம்.

யுத்தநிறுத்தத்தை அமுல்படுத்த ரஷ்யாவும் உக்ரேனும் இணக்கம்

20 hours 44 minutes ago
பூட்டினின் நகர்வுகளை பலரும் முழுமையாக புரிந்து கொள்ளுவதில்லை. இந்த பேச்சுவார்த்தைகள் கூட ஒரு பொறியாக இருக்கலாம். ஐரோப்பாவிற்கு உருசியாவின் நிலவாயு தேவை. உருசியாவிக்ரு நேட்டோவை பலவீனப்படுத்த வேண்டும். இந்த சக்கரத்திற்குள் ஒரு அச்சாணியை தேடிய வண்ணம் பூட்டின் உள்ளார். ஒரு நாள் அதை கண்டுபிடித்து பின்னர் கழட்டியும் விடுவார்.

பௌத்த அடிப்படையைக் கட்டியெழுப்பி பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டும் - ரணில்

20 hours 49 minutes ago
ஐ.தே.கவின் எதிர்காலம் அவர்கள் எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற ஒரு சந்தியில் நிற்கின்றது. அவர்கள், பௌத்த பேரினவாத கொள்கையினை முன்னெடுத்தால் மட்டுமே தாம் வளர முடியும் என எண்ணுகிறார்கள். இல்லாவிட்டால் யாரின் ஆதராவும் இல்லாமல் மொட்டு மீண்டும் வெல்லலாம். அதேவேளை, பௌத்தத்தை நிராகரித்து 21ஆம் நூற்றாண்டு சிந்தனையை, உலக ஒழுங்கை ஏற்கவும் மனோபாவத்திற்கு சிங்கள மக்களும் வரவில்லை.

ஊழலற்ற அதிகாரியாக டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவானார்

20 hours 53 minutes ago
இல்லை. டாக்டர் த.சத்தியமூர்த்தி அவர்களின் ஆளுமையை ஒரு முன்மாதிரியாக மற்றையவர்களும் பின்பற்றலாம் என்பதுடன், திக்கு திசை தெரியாமல் உள்ள எமது இளைய சமூகத்திற்கு ஒரு முன்மாதிரியாக உயர்ந்து நிற்கிறார்.

ஊழலற்ற அதிகாரியா கடாக்டர் சத்தியமூர்த்தி தெரிவானார்

20 hours 53 minutes ago
இல்லை. டாக்டர் த.சத்தியமூர்த்தி அவர்களின் ஆளுமையை ஒரு முன்மாதிரியாக மற்றையவர்களும் பின்பற்றலாம் என்பதுடன், திக்கு திசை தெரியாமல் உள்ள எமது இளைய சமூகத்திற்கு ஒரு முன்மாதிரியாக உயர்ந்து நிற்கிறார்.

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு

20 hours 55 minutes ago
எனது கருத்தானது கீழ் உள்ள நிழற்படம் பற்றியது. கால ஓட்டத்தில் சிங்களம் யார் இந்த புத்த பிரான் அவரின் கொள்கைகள் என்ன என்று தெரியாமலேயே அவரின் பெயரில் செய்யும் .....

மணல் கொள்ளையர்களின் உழவு இயந்திரங்கள் தீ மூட்டப்பட்டன: தீவக மக்கள் அதிரடி!

20 hours 58 minutes ago
"மத்தியில் கூட்டாக கொலை, கொள்ளை, மாநிலத்தில் சுயமாக கொலை, கொள்ளை" என்ற குறிக்கோளாட காலத்தை கழிக்கிற டக்கி அமைச்சரான கையோட தன்னுடைய பாரம்பரியத் தொழிலை முழுமூச்சா செய்யத் தொடங்கின நேரத்துல இப்பிடி ஒரு திருப்பம் வரும் என்டு நெச்சிருக்கமாட்டார்.

வாக்குமூலம் வழங்கினார் சுவிஸ் தூதரக பணியாளர்

21 hours 8 minutes ago
சுவிஸ் அரசு உலக அரசியலில் ஒரு தனித்துவமானது. பலராலும் அரசியல் ரீதியாக ஒரு நடுநிலை நாடாக பார்க்கப்படுகின்றது. எனவே, அவர்களுக்கு எதிராக ஒரு சில நாடுகளே குரல்கொடுக்கும். இதில், சிங்கள இராணுவ அதிகாரிகள் அதிகம் தலையிட்டு இராஜங்க அதிகாரிகளை சிக்கலில் மாட்டி விட்டுவிட்டார்கள் என்றே தெரிகின்றது. அந்த சிக்கலில் இருந்து சிங்களம் மீழுவது கொஞ்சம் சவாலாக இருக்கலாம். இதன் மூலம் தமிழர் தரப்பு உலகத்தில் மீண்டும் தமது மக்களுக்காக அரசியல் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் சந்தர்ப்பமும் தரப்பட்டுள்ளது. குறிப்பு: இதுவே சஜித் வென்றிருந்தால் நடந்து இருக்காது.

தமிழர் மத்தியில் உணரப்பட்டுவரும் பலமான சிவில் அமைப்பின் தேவை

21 hours 12 minutes ago
தமிழர் மத்தியில் உணரப்பட்டுவரும் பலமான சிவில் அமைப்பின் தேவை -க. அகரன் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைப்பாடுகளை நாடி பிடித்து உணர முடியாத வகையில் இருப்பதான தோற்றப்பாட்டில், பல தமிழ் அரசியல் தலைமைகள் இருப்பதை உணர முடிகின்றது. தாம் எதிர்பார்த்த அரசியல் தலைமைத்துவத்தின் தோல்வி, அடுத்து வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்கப்போகும் கட்சி என்பவற்றை ஆராய்கின்ற மன நிலையையும் கடந்து, தமது இருப்பு தொடர்பான தேடலுக்கே, தமிழ் அரசியல் தலைமைகள் தற்போது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. எப்போதுமில்லாத அளவுக்கான மாறுபட்ட அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளதாக உணரத் தொடங்கியுள்ள தமிழ் அரசியல் தலைமைகள், புதிய கூட்டுகளை உருவாக்கவும் அவற்றினூடாக வரப்போகும் தேர்தல்களைச் சந்திக்கவும் விரும்புகின்றன. எனினும், மற்றொரு சிறுபான்மைத் தேசிய இனமான முஸ்லிம்கள், அடுத்து வரப்போகும் தேர்தல்களில், தமது இருப்பு, ஆசனங்கள் தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில், இந்த அரசாங்கம், தமக்கு விரோதமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் தாம் ஓரங்கட்டப்படுவதாகவும் அவர்கள் உணர்ந்துவரும் நிலையில், அடுத்தத் தேர்தல்களில் தமது சமூகம் ஓரணியில் திரளும் அல்லது தமது சமூகம் சார்ந்தவர்களுக்கு மாற்றமின்றி வாக்களித்து, அதிகளவான ஆசனங்களைப் பெற வழிசமைக்கும் என்ற எண்ணப்பாடு அவர்களிடம் உண்டு. இவ்வாறான நிலைப்பாடு, தமிழ் அரசியல் தலைமைகளிடம் இல்லை. அதற்குப் பல காரணங்கள் இருப்பதை, அவர்களே உணர்ந்திருப்பர். கடந்த ஆட்சிக் காலத்தில், தமிழர் தரப்பில் பிரதான கட்சியாகக் காணப்படுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடந்துகொண்ட விதம், தமது மக்கள் மீது அவர்கள் எடுத்துக்கொண்ட அக்கறையும் ஐக்கிய தேசியக் கட்சியை அரியாசனத்தில் அமர்த்திப் பார்க்க விரும்பியதன் வெளிப்பாடுகளும், தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வெறுப்புணர்வையும் அரசியல்வாதிகள் மீதான கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வடக்கைப் பொறுத்தவரையில், டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பதவி, சிறு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தாலும் கூட, தேசியக் கட்சிகள் மீதான தமிழ் மக்களின் ஆதரவுத்தளம் அதிகரிப்பதானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தேசியத்தின்பால் செயற்படுவதாகத் தம்மை அறிமுகப்படுத்தும் ஏனைய கட்சிகளுக்கும், பயத்தை ஏற்படுத்தியுள்ளது. கம்பெரலிய திட்டத்தைத் தவிர்ந்த எந்தவோர் அபிவிருத்தியையும் செய்யாத சுட்டமைப்பின் செயற்பாடுகளால், அக்கட்சியோடு இணைந்து பயணிப்பதற்கு, ஏனைய கட்சிகள் அச்சம் கொண்டுள்ளன. இதன் வெளிப்பாடாகவே, புதிய கூட்டு என்ற தளத்தை நோக்கிப் பயணித்த போதிலும், அவையும் ஒன்றுபட்டுச் செல்வதற்கான களம் ஏற்படுமா என்பது சந்தேகமே. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் ஒற்றுமைக்கான அறைகூவலானது, இதுவரை காலமும் அற்றுப் போயிருந்ததற்கு காரணம் என்ன? இறுமாப்போடும் வரட்டுக் கௌரவத்தோடும், கூட்டமைப்பை வழிநடத்தியதாலேயே, அதனுள் இருந்த கட்சிகள் வெளியேறியதான கருத்துகள் உள்ள நிலையில், சுமந்திரனின் தோல்விப் பயத்தால் வரும் ஒற்றுமைக் கோசத்தை நம்பி, ஏனைய கட்சிகள் ஒன்றுதிரள வாய்ப்பில்லை. குறிப்பாக, கூட்டமைப்பினுள் இருந்த டெலோவும், இன்று இரு வேறு பிரிவுகளாக, சிறிகாந்தா தலைமையில் பிளவைக் கண்டுள்ள நிலையில், கூட்டமைப்பின் பலம் மேலும் வலுவிழந்து செல்கின்றது. இந்நிலையில், நாடாளுமன்றத்துக்குள் கூட்டமைப்புத் தமது ஆசனத்தின் பெருக்கத்தை எவ்வாறு ஏற்படுத்தலாம் என்ற நிலைப்பாட்டையே முன்நகர்த்திச் செல்கின்றது. இந்நிலையில், ஏனைய தமிழ்க் கட்சிகளின் கூட்டு என்பது, விக்னேஸ்வரன் தலைமையில் உருவாகும் பட்சத்தில், அதன் சாத்தியத்தன்மைகள் தொடர்பில் ஆராயத் தலைப்பட வேண்டும். செயற்பாட்டு அரசியலில், விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி இல்லை. அவர்கள், மக்களைத் தேடிச்செல்லும் அல்லது கீழ்மட்ட மக்களின் நிலையறிந்து செயற்படும் தன்மையில் இருந்து ஒதுங்கியிருக்கின்றனர். முன்னாள் முதலமைச்சர் என்ற அடையாளத்தை மட்டும் வைத்து, மேட்டுக்குடி அரசியல் செய்ய முற்படும் களத்தில், ஏனைய கட்சிகளின் கூட்டு சாத்தியமானதா என்ற கேள்வி நியாயமானதே? வடக்கு மாகாண சபையில் இடம்பெற்றதான முறைக்கேடுகள், அவற்றோடு இணைந்த பல செயற்பாடுகள், விக்னேஸ்வரனின் ஆளுமைத் திறனைச் சந்தேகிக்க வைக்கின்றன. அதற்கு உதாரணமாக, வடமாகாண முன்னாள் அமைச்சராக இருந்த டெனிஸ்வரனின் வழக்கும் அதன் தீர்ப்பும், ஒரு சான்றாகியுள்ள நிலையில், தனிப்பட்ட தேவைக்காகவும் மற்றவர் கதை கேட்கும் நிலைப்பாடுடைய தலைவரின் கீழ் இயங்குவதானது, சாத்தியமற்ற விடயமாகியுள்ளது. அதற்குமப்பால், இந்தத் தலைமையானது, வடக்கை மாத்திரம் மய்யப்படுத்தியது என்பதையும் விட, யாழ்ப்பாணத்தை மாத்திரம் மய்யப்படுத்தியது என்பதே உண்மை. எனவே, யாழ்ப்பாணத்தை மய்யப்படுத்தி மாத்திரம் செயற்படும் அமைப்பை, வடக்கில் உள்ள ஏனைய மாவட்டங்களும் கிழக்கு மாகாணமும், எவ்வாறு ஏற்றுக்கொள்ளும் என்ற கேள்வியும் எழச்செய்கின்றது. இவ்வாறான நிலையிலேயே, புதிய கூட்டுக்கு அத்திபாரமிடும் சுரேஷ் பிரேமச்சந்திரன், கிழக்கு மாகாண சபையில், தமிழ்த் தலைமைத்துவம் தேவை என்பதிலும் அது தொடர்பில், கட்சி மிக உறுதியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ள நிலையில், தேர்தல் வருகின்றபோது, அதற்கேற்றவகையில் எமது வியூகங்கள் அமையும் என்றும், தமிழர்களது நலன்கள் பாதிக்கப்படக் கூடாது; தமிழர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் இருந்து எமது முடிவுகள் எட்டப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அவ்வாறெனில், புதிய கூட்டானது, வட பகுதிக்கு மாத்திரமாகவும் கிழக்கு மாகாணத்தில் மாற்று வியூகத்தை அமைத்து, வேறு அணியாகத் தேர்தலில் போட்டியிடப் போகின்றனரா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. இதற்குமப்பால், சில வருடங்களுக்கு முன்பிலிருந்தே இடம்பெற்று வரும் இவ்வாறான புதிய கூட்டுக்கான முயற்சிகளில் இருந்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நழுவிச்சென்றுள்ளது. இதன் உச்சக்கட்டமாக, விக்னேஸ்வரனுடன் தாம் சேரவேண்டுமானால், ஈ.பி.ஆர்.எல்.எப் இருக்கக் கூடாது என்ற கோரிக்கையையும் முன்வைத்து வெளியேறியிருந்தது. இச்சூழலில், தற்போது அமையப்போகும் புதிய கூட்டணிக்குள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நுழைவதற்கான வாப்புகள் இல்லாது போனால், அவர்கள் தனி வழியையே பின்பற்றப் போகிறார்கள். இது, தவிர்க்க முடியாத விடயமாக மாறிவிடும். விக்னேஸ்வரனைப் பொறுத்தவரையில், வன்னியை அடிப்படையாகக் கொண்டு, தனது செயற்பாட்டை முழுமையாகவே முன்னெடுக்காத நிலை உள்ளது. வவுனியாவில் அவர் தொடர்பான எதிர்மறையான கருத்துகள் பலமாகவுள்ளன. அதற்கு, பொருளாதார மத்திய நிலைய அமைவிடம் தொடர்பான இழுபறியும் அதற்கு முதலமைச்சராக விக்னேஸ்வரன் எடுத்த முடிவும், இன்றுவரை வவுனியாவுக்கு பெரும் பாதிப்பாகவே இருந்து வருகின்றது. இந்நிலையில், செல்வாக்கு அரசியல் என்பது, சரிவை நோக்கியிருக்கும் நிலையில், மதவாத அரசியல் வெற்றியளிக்குமா என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது. வன்னி தேர்தல் தொகுதியானது, ஏனைய மாவட்டங்களை விட மத மேலாதிக்கப் பொறிக்குள் சிக்குண்டுள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக, மன்னார் போன்ற பிரதேசங்கள் மிகவும் இறுக்கமாகவே கட்டுண்டுள்ளன. இதனூடாக, வன்னித் தேர்தல் தொகுதியில், பிரபலமான கிறிஸ்தவரொருவரை நிறுத்தி வெற்றிபெற வைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இம்முயற்சி, முதலில் விக்னேஸ்வரன் தலைமையிலான அணிக்கூடாட இடம்பெறவிருந்த போதிலும், தற்போது செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான டெலோ ஊடாக கூட்டமைப்புக்குள் களமிறக்கும் முயற்சியும் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனவே, மத ரீதியான ஆளுகை என்பது, வன்னித் தேர்தல் தொகுதியில் பலமடைந்துள்ள நிலையில், புதிய கூட்டுகள் அதனூடாகத் தங்களது நகர்வுகளை முன்னகர்த்தலாம். எனினும், அது இந்துத்துவத்துடன் நெருங்கிய தொடர்புடைய விக்னேஸ்வரன் போன்றோரின் தலைமையில் சாத்தியமானதா என்ற விடயத்தையும் ஆராய வேண்டும். இச்சூழலில், தமிழ் மக்களின் மாற்றுத் தலைமை அல்லது புதிய கூட்டு என்பது, தமிழர்களுக்காக எதனைச் சாதித்து விடப்போகின்றது என்பதான கேள்விகள் நிறைந்துள்ள நிலையில், ஒன்றுபட்ட அணியாகத் தேர்தல் களத்தில் முகம்கொடுப்பதற்கான முயற்சியே காலத்தின் தேவையாகும். அவ்வாறான ஓரணி என்ற இணக்கப்பாட்டுக்குள் வரமுடியாத கட்சிகளைத் தவிர்த்து, தமிழ்த் தேசியத்தின்பால் செயற்பட்டு வரும் ஏனைய கட்சிகளின் இணைவாக, அது இருக்க வேண்டும். இவ்விணைவுக்குச் சாத்தியமான தலைமைத்துவம், மக்கள் நிலையறிந்து செயற்படும் ஆளுமையின் தேவையாக இருத்தல் அவசியம். இவ்வாறான ஒரு தேடல், தமிழ் அரசியல் தலைமைகளுக்கு மட்டுமன்றி தமிழ்ச் சிவில் அமைப்புகள் மத்தியிலும் இருத்தல் வேண்டும். எனினும், தமிழ் மக்கள் மத்தியில் பலமான சிவில் அமைப்புகள் இன்மையானது, அவர்களது அரசியல் பொருளாதார விடயங்களில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தி வரும் நிலையில், சிறந்த கட்டமைப்புடனான சிவில் அமைப்பின் தேவை தற்போது உணரப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் உருவாகிய தமிழ் மக்கள் பேரவையானது, தம்மைச் சிவில் சமூக அமைப்பாக அறிமுகப்படுத்திய போதிலும், பின்னரான காலத்தில் அரசியல் செயற்பாட்டாளர்களைத் தம்வசப்படுத்தி, அதனை நாசம் செய்திருந்தது. எனவே, பிழையான முன்னுதாரணங்களில் இருந்து பெற்ற படிப்பினைகளைக் கொண்டு, ஆளுமையுள்ளதாகவும் வடக்கு, கிழக்கை உள்ளடக்கியதுமான பலமான தமிழ் சிவில் சமூக அமைப்பு உருவாக்கப்படவேண்டும் என்பதே, தற்போதைய தேவையாகவுள்ளது. அந்த அமைப்பு, அரசியல் பேதங்களுக்கு அப்பாற்பட்டு, துளியளவேனும் அரசியல் சாயமின்றிச் செயற்படுமாக இருந்தால், தமிழர்களின் அரசியல் பொருளாதார இருப்பைப் பலப்படுத்திக்கொள்ள முடியும் என்பதே உண்மை. இவ்வாறான சிவில் அமைப்பினூடாகப் பலமடையும் அரசியல் கட்டமைப்பே, எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம், ஆற்றலுள்ளவர்களால் நிரப்பப்படும் என்பதுடன், மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் தன்மை கொண்டதாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தமிழ் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டால் ‘கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது’ வவுனியாவில் அண்மையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்களின் பிரச்சினைகள் சார்ந்த சில விடயங்களைக் கூறியிருந்தார். இதன்போது அவர் கூறியதாவது, “நான், சமுத்திரத்தில் தள்ளி விடப்பட்டுள்ளேன். எனினும், சமுத்திரத்தில் நான் நீந்துவதென்று முடிவெடுத்து இருந்தாலும், இரு பக்கமும் இரு கருங்கற்கள் கட்டப்பட்டுள்ளன. “அவற்றில் ஒன்று, தேசிய அமைச்சு என்ற கருங்கல்லாகும். மறுபக்கம், தமிழர்களின் பிரச்சினைகள் என்ற கருங்கல் காணப்படுகின்றது. ஆகவே, இந்த கருங்கற்களைக் கட்டிக்கொண்டே, நான் இந்தச் சமுத்திரத்தில் நீந்த முடிவெடுத்துள்ளேன். எனக்கு, கடந்த காலத்தில் சமுத்திரத்தில் நீந்திய அனுபவங்கள் நிறையவே இருக்கின்றன. மக்கள் நலனை முன்னிறுத்துவதால், என்னால் நீந்த முடியும் என நம்புகின்றேன். எனினும், மக்களுடைய பக்கபலம் அவசியமானது. “ஆட்சியாளர்களுடன் கதைப்பதில், எனக்குச் சில சங்கடங்கள் உள்ளன. ஏனென்றால், நான் வெல்லவில்லை. நான் எதிர்பார்த்தது போல், தமிழ் மக்களிடம் இருந்து ஜனாதிபதித் தேர்தலுக்குப் போதிய வாக்குகள் கிடைக்கவில்லை. இதைச் சொல்வதற்கு நான் தயங்கவில்லை. எனவே, வரவிருக்கும் சந்தர்ப்பங்களை, நீங்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும். “ஜனாதிபதித் தேர்தலில், எமக்குக் கிடைத்த வாக்குகளைவிட, எனக்குக் கிடைத்த வாழ்த்துகள் பல மடங்கு அதிகமாகவுள்ளன. குறைந்தது, அடுத்த 5 வருடங்களாவது, இதே அரசாங்கம்தான் ஆட்சியில் இருக்கும். ஜே.ஆர்.ஜயவர்த்தன, யுத்த காலத்தில் அந்தப் பிரச்சினைகளில் ஈடுபடவில்லையா, பிரேமதாஸ யுத்தம் நடத்தும் போது, அவர் ஈடுபடவில்லையா, சந்திரிகா, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஈடுபடவில்லையா? யுத்தம் வந்தால், அது எங்கள் மீது திணிக்கப்பட்ட நிர்ப்பந்தம். “71ஆம் ஆண்டிலும் 89ஆம் ஆண்டிலும், சிங்கள இளைஞர்கள் அரசாங்கத்துக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபடும்போது, அப்பாவிச் சிங்கள மக்களே பாதிக்கப்பட்டனர். இந்திய - இலங்கை ஒப்பந்தத்துக்குப் பின்னர், தமிழீழ விடுதலைப்புலித் தலைமைகள் வன்முறையைத் தொடர்ந்தமையால், அப்பாவித் தமிழ் மக்களே பாதிக்கப்பட்டனர். “சமீபத்தில், முஸ்லிம் மக்களின் பெயரால் குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டபோது, அப்பாவி முஸ்லிம் மக்களே பாதிக்கப்பட்டனர். ஆகவே, அரசாங்கத்துக்கு எதிரான வன்முறை தலைதூக்கும் போது, இது நடப்பது தவிர்க்க முடியாதது. இது, உலக வரலாறு. இதற்கு, உலகில் எந்த நாடும் விதிவிலக்காக இருந்ததில்லை. “ஆகவே, நாங்கள் எங்களில் தவறுகளையும் குறைபாடுகளையும் வைத்துக்கொண்டு, எங்கள் சுயலாப அரசியலுக்காக நாங்கள் எங்கள் மக்களைப் பலிகொடுத்துள்ளோம். “இதே போக்கில் தமிழ் மக்கள் தவறாக வழிநடத்தப்படுவார்களாக இருந்தால், கடவுள் வந்தாலும் அவர்களைக் காப்பாற்ற முடியாத நிலைமையே ஏற்படும் என்று, நானும் எனது இறுதிக் காலட்டத்தில் இதையே கூறவிரும்புகிறேன்” என்று, அமைச்சர் மேலும் கூறினார். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழர்-மத்தியில்-உணரப்பட்டுவரும்-பலமான-சிவில்-அமைப்பின்-தேவை/91-242312

கோயில் மடப்பள்ளிக்குள் வைத்து சிறுமியை சீரழித்த பூசகர்: வல்வெட்டித்துறையில் அதிர்ச்சி சம்பவம்!

21 hours 13 minutes ago
சட்டம் மூலம் தான் உண்மையை கண்டறிய முடியும். ( கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் போயாயா இருக்கலாம், தீர விசாரித்து அறிவதே மெய் )

இது விளையாட்டு அல்ல; விபரீதமானது

21 hours 14 minutes ago
இது விளையாட்டு அல்ல; விபரீதமானது காரை துர்க்கா / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 03:49 அன்றைய காலங்களில், அரசியல் என்பது முற்றிலும் பொதுச் சேவையாகக் காணப்பட்டது. மக்களின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரித்துடையோர், முழுமையா(ன)க மக்கள் பணியாக, அரசியலை ஆரோக்கியமாக முன்னெடுத்து வந்தார்கள். கல்வி அறிவு, சமூகம் பற்றிய பார்வை, எதிர்காலம் பற்றிய தூரநோக்கு, எனது மக்கள் என்ற பற்று எனப் பல்வேறு விடயங்களைத் தன்னகத்தே கொண்டவர்களாகவும் பல பரிமானங்களை உடையவர்களாகவும், மக்கள் தொண்டுகளை அரசியல்வாதிகள் ஆற்றி வந்தார்கள். தமது மக்களுக்கு விசுவாசமாகவும் நம்பிக்கையாகவும், வாழ்ந்தும் காட்டினார்கள். ஆனால் இன்று, அரசியல் என்பது, தொழில் அல்லது வணிகமென மாறிவிட்டது. அல்லது மாற்றி விட்டார்கள். பொருள் தேட, புகழ் தேட, உல்லாசமாக வாழ என்று, தங்களது சொந்த நிகழ்ச்சி நிரல்களுடன் பலர் அரசியலுக்குள் படை எடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். இன்று, அரசியல் செய்ய சாணாக்கியம் தேவை. அது போல, ஆள் (அடியாட்கள்) பலம், பணபலம் அற்றவர்கள், அரசியலுக்கு அருகதை அற்றவர்களாக உள்ளனர். இவ்வாறான போக்கு, அபிவிருத்தி அடைந்து வருகின்ற கீழைத்தேச நாடுகளில், பரவலாகக் காணப்படுகின்றன. இதற்கு, இலங்கையும் விதிவலக்கல்ல. இலங்கைக்கு உள்ளே, எம் தமிழ் அரசியல்வாதிகளும் விதிவிலக்கானவர்கள் அல்லர். இவ்வாறான நிலையில், இலங்கையில் நடைபெற்று வருகின்ற இனப்பூசலில், தமிழினம் இழந்தவைகள் ஏராளம். ஆனாலும், இன்னமும் தமிழ் மக்களது விடுதலை, பின் நோக்கியே சென்றுகொண்டு இருக்கின்றது. இதற்கான பல காரணங்களில், தமிழ் மக்களின் அரசியல் தலைவர்களிடையே காணப்படுகின்ற உட்பூசல்கள், தலைமைத்துப் போட்டிகள், ஒத்துப்போகாத தன்மைகள் கூடக் காரணங்கள் ஆகின்றன. ஆனாலும், அதனைக்கூட இன்னமும் எள்ளளவேனும் பொருட்படுத்தாது, கூட்டு அமைப்புக்குள் இருக்கின்ற ஏனைய கட்சிகளை ஒடு(து)க்குதல், கூட்டை உடைத்து தனி வழிச் செல்லுதல், ஏற்கெனவே பல கட்சிகள் இருக்கின்ற நிலையில், இன்றும் புதிதாகத் தனிக் கட்சி தொடங்குதல், நாமே மாற்று அணி என முழக்கமிடுதல் என்பன, தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதற்கிடையே, விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. வரும் ஏப்ரல் மாதமளவில், பொதுத் தேர்தல் நடைபெறலாம் என ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது. அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை, தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்றது. இதனை, தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்நோக்குவது என்ற உரையாடல்கள் இன்னமும் எந்தவொரு தரப்பாலும் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. தற்போதைய கள நிலைவரங்களின்படி, வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சிகள், ஒருமித்து ஒரு குடையின் கீழ் பொதுத் தேர்தலை எதிர்நோக்குகின்ற போக்குகள், அறிகுறிகள் காணப்படவில்லை. தங்களுக்கான நாடாளுமன்றப் பிரதிநிதித்தவம் குறைந்து விடுமோ அல்லது இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையும் பயமும் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற அளவுக்கேனும், தலைவர்களுக்கு இல்லையா? என்ற கேள்வி, இன்று ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆனாலும், தமிழ்த் தலைவர்கள் தற்போது பயணிக்கும் போக்கிலேயே அவர்களைத் தொடர்ந்தும் பயணிக்க, தமிழ் மக்கள் அனுமதிக்கக் கூடாது; அனுமதிக்கவும் முடியாது. ஏனெனில், விடுதலைக்காக ஒப்பற்ற விலை கொடுத்த தமிழினம், தங்களது தலைவர்களைக் கண்டிப்பதற்கும் தண்டிப்பதற்கும் போதுமான தகுதியைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இலங்கையில், ஏனைய இன மக்களோடு ஒப்பிடுகையில், வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களது வாக்களிப்புச் சதவீதம், குறைவாகவே பதிவு செய்யப்பட்டு வருகின்றது. தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளதை, பரப்புரைக் காலங்களில் கதறக் கதறப் பேசுவோர், வெற்றியீட்டிய பின்னர் அது தொடர்பில் சற்றும் அலட்டிக்கொள்ளாது இருப்பதே, இதற்கான காரணமாகக் கூறலாம். ஆனாலும், அதையும் தாண்டி ஒற்றுமையாக ஒரு சின்னத்தில் தமிழ்த் தரப்பு, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் போட்டியிட்டால், அதுவே ஒரு புதிய எழுச்சியையும் மகிழ்ச்சியையும், தமிழ் மக்களிடையே நிச்சயமாக ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தாமே மாற்று அணி என அண்மையில் தெரிவித்துள்ளது. இவர்கள் இவ்வாறு கூறிக்கொண்டு, வேறு கட்சிகளையும் தங்களோடு அணி சேர்க்காது தனித்துப் போட்டியிட்டால், சில வேளைகளில் யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் மாத்திரம் ஒரு சில ஆசனங்களைப் பெறலாம். இவ்வாறனதொரு நிலைவரம், 2015 பொதுத் தேர்தலில் காணப்பட்ட போதுகூட, அன்றைய காலப் பகுதியில் அவர்களால் ஓர் ஆசனத்தைக்கூடக் கைப்பற்றிக்கொள்ள முடியவில்லை. அதன் பின்னர், 2018இல் நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், யாழ். மாநகர சபை ஆட்சியைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கைப்பற்றலாம் என்ற எதிர்வு கூரல்கள்கூட, பொய்த்துப் போய்விட்டன. அடுத்து, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி உள்ளது. அங்கு, நீதியரசர் மற்றும் கடந்த பொதுத் தேர்தலில் சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அருந்தவபாலன் ஆகியோரே, மக்களால் நன்கு அறியப்பட்டவர்களாக உள்ளார்கள். இவ்வாறு கூறுவதன் மூலம், தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பின்னால் அணி வகுத்து நிற்கின்றார்கள் என்றில்லை. கூட்டமைப்பும், 2018இல் நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், பல இடங்களில் தனது வாக்கு வங்கியை இழந்துள்ளது. தொடர்ந்த ஐந்து ஆண்டுக் காலங்களில், நல்லாட்சி அரசாங்கத்துடன் நல்லுறவைக் கொண்டிருந்த போதிலும், கூட்டமைப்பினரால் தமிழ் மக்களுக்கு குறிப்பிட்டுச் சொல்லும் படியாக நல்ல காட்சிகளைக் காண்பிக்க முடியவில்லை. புதிய அரசமைப்பைக் கொண்டுவந்து, அதனூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்ற எண்ணத்தில் (ஆனால் இது நிறைவேறக்கூடிய காரியம் எனத் தமிழ் மக்கள் ஒருபோதும் நம்பி இருக்கவில்லை), ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அன்றைய அரசாங்கத்துக்கு முண்டுகொடுக்க வேண்டிய அவ(சிய)சர நிலை இருந்திருக்கலாம். அத்துடன், அவ்வாறாக அவர்கள் வாதிடலாம். ஆனாலும் கூட்டமைப்பினரால், போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான வீட்டுத் திட்டப் பணிகளைக்கூட, ஐந்து ஆண்டுகளில் பூரணப்படுத்த முடியாது போனமை, சிறப்பான விளைவுகளைக் காட்டாத வினைத்திறன் அற்ற தலைமைத்துவப் பண்பாகவே பார்க்க முடியும். நிறைவில், அரசியல் சீர்திருத்தமும் கிடப்பில் போடப்பட்டு விட்டது. தமிழ் மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளும், ஆமை வேகத்தில் ஓடி, அவையும் இன்று நின்றுவிட்டன. உண்மையில், நம்பிக்கை கொள்ளக்கூடிய எந்தவொரு தமிழ் அரசியல்த் தலைவர்களும் அற்ற நிலையில், அநாதை இல்லங்களில் வாழ்வதைப் போலவே தமிழ் மக்கள் இன்று தங்கள் இல்லங்களில் வாழ்ந்து வருகின்றார்கள். இவ்வாறானதொரு நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஈபிடீபி, வரதர் அணி என ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சியை ஆதரித்த (வடக்கு, கிழக்கில்) கட்சிகள், வரும் பொதுத் தேர்தலிலும் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஸ்ரீ ஜனாதிபதித் தேர்தலில், இவர்கள் கை காட்டிய வேட்பாளருக்கு (கோட்டாபய ராஜபக்‌ஷ), தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை. ஆனாலும், பொதுத் தேர்தலில் இவர்களே களம் இறங்குவதால், அவர்கள் நம்மவர்கள் (தமிழ்ப் பிரதிநிதிகள்) தானே எனத் தமிழ் மக்கள் சிலவேளை வாக்களிக்கலாம். அதற்கு அடுத்தபடியாக, ஐக்கிய தேசியக் கட்சியும், வேறு சில தமிழ் உதிரிக் கட்சிகளை ஒன்றிணைத்து, வடக்கு, கிழக்கில் போட்டியிடும். இதற்கு மேலதிகமாக, தமிழ் மக்களது வாக்குகளைச் சிதறடிப்பதற்காக, பல சுயேட்சைக் குழுக்களும், திட்டமிட்டக் களமிறக்கப்படலாம். பலர், அதற்காகக் கொழுத்த விலை போவார்கள். இந்நிலையில், யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில், (யாழ்ப்பாணம், கிளிநொச்சி) கட்சிகள் பிரிந்து போட்டியிட்டு, தமிழ்த் தேசியத்துக்கு எதிரான கட்சிகளைச் சேர்ந்தவர்கள், நாடாளுமன்றத்துக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அடுத்தாக, வன்னி (வவுனியா, மன்னார், முல்லைத்தீவு) திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் பிரிந்து போட்டியிட்டு, தமிழினம் தனக்கான ஆசனங்களை மற்றைய இனங்களுக்கு தாரை வார்க்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, இவ்வாறான ஆபத்துகளைத் தமிழ் மக்கள் தடுக்கத் தயாராக வேண்டும். கொள்கைகள், கோட்பாடுகள் என்ற எல்லை கடந்து, அவை ஒருபுறம் இருக்க, ஒற்றுமை என்ற ஒற்றைப் புள்ளிக்குள், அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் இழு(அழை)த்துவர வேண்டும். வெறுமனே, கட்சி அரசியலுக்குள் செக்கு மாடுகள் போலச் சுற்றிவரும் தமிழ்த் தரப்புகளை, என்ன விதத்திலாவது அழுத்தங்களைக் கொடுத்து, ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் போட்டியிட வைப்பதற்கான வேலைத்திட்டத்தை வேகமாக முன்னெடுக்க வேண்டும். அதற்கு, தமிழ்ச் சமூகத்தினது சமய சமூகத் தலைவர்கள், பல்கலைக்கழகச் சமூகத்தினர், வர்த்தகச் சமூகத்தினர், ஏனைய அனைத்துத் தரப்பினரும் இணைந்து, உடனடியாகவும் ஆரோக்கியமானதுமான உரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இது-விளையாட்டு-அல்ல-விபரீதமானது/91-242305

ஹைதராபாத் வன்புணர்வும் பொலிஸ் என்கவுன்டரும்

21 hours 16 minutes ago
ஹைதராபாத் வன்புணர்வும் பொலிஸ் என்கவுன்டரும் எம். காசிநாதன் / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 03:31 ஹைதாராபத் கால்நடை பெண் மருத்துவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரைச் சுட்டுக் கொன்ற பொலிஸாருக்கு, நாடு முழுவதும் இருந்து பாராட்டுகள், பூத்தூவி வரவேற்புகள் கிடைத்திருக்கின்றன. பெண் மருத்துவர் மிருகத்தனமாகக் கொல்லப்பட்ட விதம், பெண் பிள்ளைகளைப் பெற்றோரையும் வேலைக்குச் செல்லும் பெண்களையும் பேரதிர்ச்சிக்கு உட்படுத்தியது. இந்திய நாடாளுமன்றத்தில், பெண் எம்.பிக்கள் ஆவேசமாகக் குரல் எழுப்பி, “பெண்களுக்கு இந்த நாட்டில் என்ன பாதுகாப்பு” என்ற கேள்வியை முன் வைத்தார்கள். நாட்டின் தலைநகரான டெல்லியில் நிருபையா வன்புணர்வு, கொலைக்குப் பிறகு, பெண்கள் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வை, ஹைதராபாத் விவகாரம் நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விழிப்புணர்வால் ஏற்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், ‘பொலிஸ் என்கவுன்டர்’ நடந்திருக்கிறதோ என்று ஒரு சில மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினாலும், இந்தியாவில் தூக்குத்தண்டனை நிறைவேற்றுவதில் உள்ள சட்ட சிக்கல்களையும் கருணை மனு என்ற அடிப்படையில் காலம் கடத்தப்படுவதையும் மறைக்க முடியாது. தூக்குத்தண்டனை விவகாரத்தில் ஒவ்வொரு குடியரசுத் தலைவரும் ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். ‘கடவுள் கொடுத்த உயிரை எடுக்க, எனக்கு ஏது அதிகாரம்’ என்று சில குடியரசுத் தலைவர்கள் கருணை மனுக்களைக் காலம் கடத்தியது உண்டு. சில குடியரசுத் தலைவர்கள் கருணை மனுக்கள் மீது உடனுக்குடன் முடிவு எடுத்ததும் உண்டு. ஆகவே, குற்றம் நிரூபிக்கப்பட்டு, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்படுவதில் உள்ள காலதாமதம், சட்டத்தின் ஆட்சி மீதான நம்பிக்கையைக் குறைத்து விடுகிறது. உச்சநீதிமன்றம் பல்வேறு காலகட்டங்களில், கருணை மனுக்கள் மீதான தாமதத்தைக் கண்டித்திருக்கிறது. ‘சத்ருகன் சவுகன்’ என்ற வழக்கில், கருணை மனுக்கள் தாமதத்தால், தூக்குத்தண்டனை பெற்ற 15 பேருக்கு ஆயுள் தண்டனையாக குறைத்த உச்சநீதிமன்றம், கருணை மனுக்கள் மீதான விசாரணை விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியது. அந்தத் தீர்ப்பில், அப்போது தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம், “குடியரசுத் தலைவரும், ஆளுநரும் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்தவர்கள். உயர்ந்த பதவியில் இருப்பதால், இத்தனை நாள்களுக்குள் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க வேண்டும் என்று அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் கால நிர்ணயம் செய்யவில்லை. ஆனால் அதற்காகக் கருணை மனுக்கள் மீது, காலதாமதம் ஏற்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் சட்டத்தின் கீழ், வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைக் காலத்தே பயன்படுத்த வேண்டும். குடியரசுத் தலைவரும், ஆளுநர்களும் தூக்குத்தண்டனை பெற்றவர்களின் கருணை மனுக்கள் மீது, குறித்த காலத்தில் முடிவு எடுக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்தார். ஆனாலும், கருணை மனுக்கள் மீதான முடிவுகளில், தாமதம் ஏற்படுகின்றன என்பதாலும், அதற்கு முன்பு வழக்கு விசாரணைகளிலேயே தாமதம் ஏற்பட்டு நீதிவழங்குவதற்குக் காலதாமதம் என்பதாலும் இப்போதெல்லாம் ‘உடனடி நீதி வேண்டும்’ என்ற கோரிக்கை, இது மாதிரி வன்புணர்வு, கொடூரமான கொலைகள் நடைபெறும் போது, மக்களிடமிருந்து கோரிக்கையாக மாறி வருகிறது. அப்படியொரு கோரிக்கைதான், ஹைதராபாத் வன்புணர்வு வழக்கிலும் பொதுமக்களால் முன் வைக்கப்பட்டது. இது மாதிரித் தமிழகத்திலும் நடைபெற்றுள்ளது. கோவை மாநகர எல்லைக்குள் பள்ளிக்கூடத்துக்குச் சென்ற பத்துவயதுச் சிறுமியும் அவரது ஏழு வயதுச் சகோதரனும் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, இருவரும் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்தக் கொலைச் சம்பவம், தமிழகத்தை 2010களில் உலுக்கி எடுத்தது. பத்து வயதுப் பெண் குழந்தையை வன்புணர்வு புரிந்த வழக்கில், “குற்றவாளிகளுக்கு உடனடித் தண்டனை கொடுக்க வேண்டும்” என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. “என்கவுன்டர் செய்யுங்கள்” என்று பொதுமக்கள் வெளிப்படையாகப் போராட்டமே நடத்தினார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், அந்த வழக்கில் இருவர், குற்றவாளிகளாகக் கைது செய்யப்பட்டு, அதில் மோகனகிருஷ்ணன் என்ற குற்றவாளி, கோவை மாநகர ஆணையாளராக இருந்த சைலேந்திரபாபு தலைமையிலான பொலிஸாரின் என்கவுன்டரில் கொல்லப்பட்டான். இன்னொரு குற்றவாளியான மனோகரனுக்கு உச்சநீதிமன்றம் தூக்குத்தண்டனையை உறுதி செய்து, அந்தத் தண்டனை இன்னும் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது. இது மட்டுமல்ல, சென்னை மாநகரில் 2012 வாக்கில், முக்கிய வங்கிகளில் கொள்ளை நடந்தது. அந்தக் கொள்ளைகள், மக்களைப் பீதியில் ஆழ்த்தியது. அப்போதும், “பொலிஸ் என்ன ஆனது”? என்ற கேள்வியை எழுப்பிய மக்கள், “வங்கி கொள்ளையர்களுக்கு உடனடி தண்டனை” என்ற கோரிக்கையை முன் வைத்தார்கள். அப்போதும் சென்னை மாநகர பொலிஸ் ஆணையாளராக இருந்த திரிபாதி தலைமையிலான பொலிஸார், வங்கி கொள்ளையில் ஈடுபட்ட ஐந்து கொள்ளையர்களை என்கவுன்டரில் கூண்டோடு கொன்றார்கள். ஆகவே, என்கவுன்டர்கள் மனித உரிமைகளுக்கு எதிரானது என்று இருந்த கருத்துருவாக்கம், இப்போது மாறி வருகிறது. அதற்குக் காரணம், இளம் பெண்கள், குழந்தைகள் மீதான வன்புணர்வுகள் வெட்ட வெளியில் நடக்கும் பயங்கரமான கொலைகள் போன்றவையே ஆகும். சட்டம் அளித்துள்ள பாதுகாப்புகளைக் குற்றவாளிகள் மிகவும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில்லை என்ற தாக்கம் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, அரசாங்கங்கள் கடும் நடவடிக்கைகள் எடுக்கின்றன. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வர்மா பரிந்துரையின் அடிப்படையில், கடுமையான தண்டனைகளுடன் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க, ‘பொஸ்கோ’ சட்டங்கள், பணியிலிருக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளைத் தடுக்கும் சட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இது போன்ற வழக்குகளில், பிணை வழங்குவதற்கு உச்சநீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளை விதிக்கின்றன. இது போன்ற குற்ற வழக்குகளில், சம்பந்தப்பட்டவர்கள் சமரசம் செய்து கொண்டு, வழக்குகளை வாபஸ் பெறவும் தடை விதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், குற்ற வழக்குகள், குறிப்பாக, வன்புணர்வு வழக்குகள், மிகக் கொடூரமான கொலை வழக்குகள் போன்றவற்றில், நீதி பரிபாலன நடைமுறையில் மேலும் சீர்திருத்தங்கள் மட்டுமே, “என்கவுன்டர் வேண்டும்” என்று கோரிக்கை வைக்கும் பொதுமக்களின் உணர்வுகளை மழுங்கடிக்க முடியும். தவிர, மனித உரிமைகள் பேசி அந்தக் கோரிக்கையை எதிர்க்க முடியாது என்ற நிலை, சமுதாயத்தில் உருவாகி வருகிறது. இது ஆரோக்கியமான, சட்டத்தின் ஆட்சியின்படி நடக்கும் சமுதாயத்துக்கு நல்லது. தனியொரு பெண்ணின் கண்ணியத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தி விட்டு, மனித உரிமைகள் பேசுவது ஏன் என்ற கேள்வி இப்போது சமுதாயத்தில் ஒரு பகுதியினர் மத்தியில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. வன்புணர்வு நடந்தால், உடனே என்கவுன்டர் வேண்டும் என்று எதிர்பார்க்கும் சமுதாயத்தை பிழை சொல்வதில் பயனில்லை. அதற்குப் பதில் பெண்களின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும். அந்த வரிசையில், “பணிபுரியும் பெண்கள், தங்கள் வீட்டுக்கு நள்ளிரவில் திரும்ப வேண்டும் என்றால், அவர்களுக்கு பொலிஸாரின் உதவி அளிக்கப்படும்” என்று அறிவித்திருக்கும் பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் பாராட்டுக்குரியவர். அதே நேரத்தில், ‘விரைந்த நீதி’ என்ற அடிப்படையில் உச்சநீதிமன்றம், ஏற்கெனவே பல வழிமுறைகளை உருவாக்கிப் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவான தீர்ப்புக்கு வழி அமைத்திருக்கின்றன. அதில் மேலும் சீர்திருத்தங்கள் தேவை என்பதே இன்றைய நிலை. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் பிணை கொடுப்பதை அறவே நிறுத்தி, அந்த வழக்குத் தீர்ப்புகளை உடனுக்குடன் வழங்கினால், பெண்களின் பாதுகாப்பில் மிகப்பெரிய சாதனையை அடைந்ததாகக் கருத முடியும். தற்போது மத்திய அரசு, “இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வரத் தயார்” என்று அறிவித்திருக்கிறது. இந்த சட்டத் திருத்தமும், கருணை மனுக்கள் விடயத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கறாராகக் கடைப்பிடிப்பதன் ஊடாக, பெண்களின் பாதுகாப்பில் உள்ள எஞ்சியிருக்கின்ற குறைகளை நிவர்த்தி செய்வதற்கு வழி பிறக்கும் http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஹைதராபாத்-வன்புணர்வும்-பொலிஸ்-என்கவுன்டரும்/91-242290

இந்தியாவும் கோட்டாவும் தமிழர்களும்

21 hours 17 minutes ago
இந்தியாவும் கோட்டாவும் தமிழர்களும் என்.கே. அஷோக்பரன் / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 03:23 இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷ பதவியேற்ற மறுதினமே, இந்திய வௌியுறவுத் துறை அமைச்சர் சுப்ரமண்யம் ஜெய்ஷங்கர் இலங்கை விரைந்து, ஜனாதிபதி கோட்டாபயவை நேரில் சந்தித்து வாழ்த்தியதுடன், இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு, அழைப்பையும் விடுத்திருந்தார். ஜனாதிபதியாகப் பதவியேற்று, சரியாக 11 நாள்களில், ஜனாதிபதி கோட்டாபய, தன்னுடைய முதலாவது உத்தியோகபூர்வ சர்வதேச விஜயமாக, புதுடெல்லி சென்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார். இந்திய விஜயத்தின் விளைவாக, இந்தியா, இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவியளிக்க இணங்கி இருந்தமையும் ராஜபக்‌ஷ - இந்தியா இடையேயான, ‘இரண்டாம் இன்னிங்ஸ்’இன், சுப ஆரம்பத்தைச் சுட்டிக்காட்டி நிற்கிறது. 2015இற்கு முன் ராஜபக்‌ஷ, இந்தியா இடையேயான உறவு, சுமூகமானதாக இருக்கவில்லை. 2015ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ கண்ட தோல்வி, ராஜபக்‌ஷக்களுக்கு சர்வதேசம், பூகோள அரசியலில் சமநிலையைப் பேணவேண்டியதன் அத்தியாவசியத்தையும் அதைத் தந்திரோபாய ரீதியில் கையாளவேண்டியதன் தேவைப்பாட்டையும் உணர்த்தியிருக்கிறது. இதை, ஜனாதிபதி கோட்டாபயவின் ஆரம்பகால நடவடிக்கைகள், எமக்கு உணர்த்தி நிற்கின்றன. சிலர், மோடி-ராஜபக்‌ஷ ஆகியோரிடையேயான அரசியல் ரீதியிலான ஒற்றுமைத் தன்மைகளே இந்தப் ‘புதிய ஒற்றுமை”க்குக் காரணம் என்கிறார்கள். மோடியும் ஒரு பெரும்பான்மையினத் தேசியவாதி; அதுபோலவே, ராஜபக்‌ஷக்களும் பேரினத்தேசியவாதிகள். ஆகவே, அவர்கள் இணங்கிச் செயற்படுவதில் ஆச்சரியம் இல்லையென்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், இந்தியாவின் சர்வதேசக் கொள்கை என்பது, ஆட்சிக்கு வருபவர்களால் பெருமளவுக்கு மாற்றியமைக்கப்படும் ஒன்று அல்ல; அதிலும் குறிப்பாக, இந்தியாவின் அயலவர்கள் தொடர்பிலான நிலைப்பாடு, ஆட்சிக்கு வரும் கட்சிகளைத் தாண்டி, மிக நீண்டகாலமாக, ஒரே மாதிரியானதாகவே அமைந்திருக்கிறது. அணுகுமுறைகளில் சிறிய மாற்றங்கள் இருந்தாலும், அயலவர்கள் தொடர்பிலான இந்தியாவின் வௌியுறவுக் கொள்கை, ஸ்திரமானதாகவே இருந்திருக்கிறது. இதற்குக் காரணம், இந்தியாவின் பாதுகாப்பு ஆகும். இது பற்றிக் கருத்துரைக்கும் மஞ்சரி சட்டர்ஜீ மில்லர், “பா.ஜ.கவின் கீழ் கூட, இந்திய வெளியுறவுக் கொள்கையின் பல அம்சங்கள், இன்றும் உலகில் இந்தியாவின் பங்கைப் பற்றிய பழைய, நிறுவன மயமாக்கப்பட்ட கருத்துகளிலேயே சாய்ந்துள்ளன. மேலும், முந்தைய எல்லாக் காங்கிரஸ் அரசாங்கங்கள், தங்கள் கண்ணோட்டங்களிலும் உத்திகளிலும் ஒற்றைத் தன்மையிலேயே செயற்பட்டிருக்கின்றன என்று நினைப்பதும் தவறானதாகும். காங்கிரஸின் கீழான இந்தியாவுக்கும் பா.ஜ.கவின் கீழான இந்தியாவுக்கும் இடையிலான வெளியுறவுக் கொள்கையின் தூரநோக்குக்கு இடையில் வேறுபாடுண்டு என்று கூறுவது தவறாகும். பல வழிகளில் அவை முன்னையதன் தொடர்ச்சியாகவே அமைகின்றன” என்கிறார். சுர்ஜித் மான்சிங், ராஜு தோமஸ் ஆகிய இந்திய வெளியுறவுக் கொள்கை பற்றிய ஆய்வாளர்கள், இந்திய வெளியுறவுக் கொள்கைகள், 30 ஆண்டுகளில் பெருமளவு மாறியிருந்தாலும், அமெரிக்காவின் ‘மொன்றோ கோட்பாடு’, ‘ஐசன்ஹவர் கோட்பாடு’, ‘நிக்ஸன் கோட்பாடு’ (குவாம் கோட்பாடு) போன்று வெளிப்படையான கொள்கைகளை, பிராந்தியப் பாதுகாப்புத் தொடர்பில், இந்தியா கொண்டிருக்கவில்லை என்று கருத்துரைக்கிறார்கள். ஆனால், பிரபலமான அரசறிவியலாளரும் வெளிநாட்டுக் கொள்கை பற்றிய ஆய்வாளருமான பபானி சென் குப்தா, வெளிப்படையாக இந்தியா அறிவிக்காவிட்டாலும், பிராந்திய பாதுகாப்புத் தொடர்பில், வெளிநாட்டுக் கொள்கை ஒன்றைக் கொண்டிருந்ததாகக் குறிப்பிடுகிறார். இதனை அவர் முதலில், ‘பிராந்தியப் பாதுகாப்புத் தொடர்பான இந்தியக் கோட்பாடு’ என்று விளித்தார். காலவோட்டத்தில், அது ‘இந்தியக் கோட்பாடு’ என்றும் ‘இந்திரா கோட்பாடு’ என்றும், பின்னர் ‘ராஜீவ் கோட்பாடு’ என்றும் குறிக்கப்பட்டது. பபானி சென் குப்தா குறிப்பிட்ட இந்தியக் கோட்பாடானது, மூன்று முக்கிய அடிப்படைகளைக் கொண்டது. முதலாவது, தெற்காசிய நாடொன்றின் உள்ளக முரண்பாடுகளில் தலையிட, இந்தியாவுக்கு எந்தவோர் எண்ணமும் கிடையாது. அதேவேளை, எந்த நாடும் இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை, இந்தியா கடுமையாக எதிர்க்கும். இரண்டாவது, இந்திய நலன்களுக்கு, வெளிப்படையாக அல்லது உள்ளார்ந்த வகையில் எதிராக அமையும் வகையில், வெளிநாடொன்று, தெற்காசிய நாடொன்றின் உள்ளக முரண்பாட்டில் தலையிடுவதை, இந்தியா சகித்துக் கொள்ளாது. ஆகவே, எந்தத் தெற்காசிய நாடும், இந்தியாவுக்கு எதிராக அமையத் தக்கவகையில், வெளிநாடொன்றிடமிருந்து இராணுவ உதவியைப் பெறக் கூடாது. மூன்றாவது, ஒரு தெற்காசிய நாட்டுக்குப் பாரதூரமான உள்ளக முரண்பாட்டை எதிர்கொள்ள அல்லது சட்டரீதியாக ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கத்துக்குச் சகிக்கமுடியாத அச்சுறுத்தல் காரணமாக, வெளியக உதவி உண்மையாகவே தேவைப்படுமானால், அது இந்தியா உள்ளிட்ட அருகிலுள்ள நாடுகளிடம் உதவி கோரலாம். அத்தகைய சூழலில், இந்தியாவைத் தவிர்த்தலானது, குறித்த அரசாங்கத்தின் இந்திய எதிர்ப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படும். இந்த மூன்று அடிப்படைகளையும் கொண்டதுதான் ‘இந்தியாவின் பிராந்திய பாதுகாப்புக் கொள்கை’ என்று 1983ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31ஆம் திகதி, ‘இந்தியா டுடே’ பத்திரிகையில் பபானி சென் குப்தா எழுதியிருந்தார். சுருக்கமாக, இந்தக் கொள்கையானது, இந்தியா, தன்னைத் தெற்காசியப் பிராந்தியத்தின் (பாகிஸ்தான் தவிர்த்து) ‘பெரியண்ணன்’ஆக உருவகித்துக் கொள்வதைச் சுட்டுகிறது. 1980 களில் இருந்த நிலையை விட, தற்போதைய பூகோள அரசியல் நிலையும் களமும் பெருமளவு மாறிவிட்டிருக்கிறது. தெற்காசியப் பிராந்தியத்தில், சீனாவின் ஆதிக்கம் இந்தியாவுக்குப் பெரும் சவாலாக மாறியிருக்கிறது. இன்று, சீனாவைச் சமன் செய்வதுதான் இந்தியாவுக்குத் தெற்காசியாவில் இருக்கும் மிகப்பெரும் சவால். மறுபுறத்தில், சீனாவும் தெற்காசியாவில் தனது நலன்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான அனைத்து முஸ்தீபுகளையும் மும்முரமாக முன்னெடுத்து வருகிறது. பாகிஸ்தானோடு மிக நெருக்கமாகச் சீனா செயற்பட்டு வருவதுடன், சீனாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் பெருவீதியை அமைத்தும் வருவதுடன், பாகிஸ்தானின் ‘க்வாடார்’ துறைமுகத்தையும் 2059 வரை குத்தகைக்கு எடுத்துள்ளது. மறுபுறத்தில், தற்போது நேபாளத்தில் ஆட்சியிலிருக்கும் நேபாள கொம்யூனிஸ்ட் கட்சி (ஒன்றுபட்ட மாக்ஸிஸ்ட்-லெனினிஸ்ட்) அரசாங்கத்தோடு, சீனா நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி, நேபாளத்திலும் தனது செல்வாக்கை அதிகரித்து வருகிறது. மேலும், பங்களாதேஷிலும் சீனா மிகப்பாரியளவிலான உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களில், வேறெந்த நாட்டிலும் சீனா முதலிட்டமையை விட, மிக அதிக அளவில், பங்களாதேஷில் முதலிட்டிருக்கிறது என்று சில ஆய்வாளர்கள் கருத்துரைப்பதுடன், பங்களாதேஷை கடன்வலையில், சீனா அழுத்தப் பார்க்கிறது என்றும் எச்சரிக்கிறார்கள். ஆகவே, இந்தியாவின் அயலவர்களை வளைப்பதில், தனது பிடிக்குள் கொண்டுவருவதில், சீனா மிகத் தீவிரமாகச் செயற்பட்டு வருவது ‘வௌ்ளிடைமலை’. இதுதான், இந்தியாவுக்கு இருக்கும் மிகப்பெரும் சர்வதேச பூகோள அரசியல் சவாலாகும். 2015இற்கு முன்னர், ராஜபக்‌ஷக்களின் சீனாச் சார்பு நடவடிக்கைகள், இந்தியாவை மிகவும் அதிருப்திக்கு உள்ளாக்கியிருந்தது என்பது வௌிப்படையாகவே தெரிந்தது. 2015 ஆட்சி மாற்றத்தில், மேற்குலகினது மட்டுமல்லாது, இந்தியாவினது பங்கும் இருந்தது என்ற குற்றச்சாட்டையும் அனைவரும் அறிந்திருந்தனர். 2019இல் மீண்டும் ஆட்சிப்படி ஏறியிருக்கும் ராஜபக்‌ஷக்களுக்கு ,2015இற்கு முன்னர் வௌியுறவுக் கொள்கை தொடர்பிலான தமது அணுகுமுறையில் இருந்த தவறுகள், குறிப்பாக, ‘பெரியண்ணன்’ தொடர்பிலான தமது அணுகுமுறைத் தவறுகள் தௌிவாகப் புரிந்திருப்பதையே, கோட்டாவின் ஆரம்பகால நடவடிக்கைகள் உணர்த்தி நிற்கின்றன. இலங்கை தொடர்பிலான இந்தியாவின் எதிர்பார்ப்பு என்பது, மிகவும் நேரடியானதும் தௌிவானதுமாகும். இலங்கையினது சர்வதேசக் கொள்கை எப்படிக் கட்டமைந்தாலும், அதில் ‘இந்தியாவுக்கு முதலிடம்’ வழங்கவேண்டும் என்பதே, இந்தியாவின் எதிர்பார்ப்பாகும். அதுபோலவே, இந்தியாவும் ‘அயலவர்களுக்கு முதலிடம்’ என்ற வௌிநாட்டுக் கொள்கையைக் கொண்டிக்கிறது. தெற்காசியாவில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கைச் சமன் செய்ய, இந்த வௌியுறவுக் கொள்கை இந்தியாவுக்கு அவசியமாகிறது. இந்தியாவின் இந்த எதிர்பார்ப்பு, இலங்கை அரசாங்கத்தால் பூர்த்தி செய்யப்படும் வரை, இந்தியா, இலங்கையின் ஏனைய முடிவுகளில் தலையிடாது என்று உறுதியாக நம்பலாம். ஜனாதிபதி கோட்டாபயவின் முதற்கட்ட நடவடிக்கைகள், இந்தியாவை அலட்சியப்படுத்தாத ‘இந்தியாவுக்கு முதலிடம்’ என்ற சர்வதேச அணுகுமுறையைக் கையாள விளைகிறார் என்பதை உணர்த்துவதாக அமைகிறது. இதை ஜனாதிபதி கோட்டாபயவும் அவரது அரசாங்கமும் முன்னெடுக்கும் வரை, இலங்கையின் உள்விவகாரங்கள் தொடர்பில் இந்தியா வலுவான தலையீடு எதையும் செய்யாது. ஜனாதிபதி கோட்டாவின் எதிர்பார்ப்பும் இதுதான். இங்குதான் தமிழ் அரசியல் தலைமைகள், பெரும் தர்மசங்கடத்துக்கு ஆளாகப் போகிறார்கள். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் காலம் முதல், இலங்கையின் தமிழ்த் தலைமைகள், இந்தியாவிடம் சரணாகதியடைந்த அரசியலையே முன்னெடுத்து வருகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரையில், இலங்கைத் தமிழர் விவகாரம் என்பது, இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு ‘துருப்புச் சீட்டு’. இந்திய நலன்களுக்கு எதிராக, இலங்கை செயற்படும் போது, இலங்கையில் தலையிடுவதற்கு, இந்தியாவுக்கு இருக்கும் வௌிப்படையனதொரு காரணம் இலங்கையின் இனப்பிரச்சினை. அதனால்தான், இலங்கையின் தமிழர் தலைமைகளைத் தன்னுடைய முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்க, இந்தியா எப்போதும் விரும்புகிறது. ஆகவே, இலங்கை அரசாங்கம், இந்திய நலன்களைப் பாதிக்காது, தமது காய்களை நகர்த்தும் வரையில், தமிழர் விவகாரம் பற்றி, அர்த்தபூர்வமான எந்தவோர் அழுத்தத்தையும் இந்தியா வழங்கப் போவதில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில், வெறுமனே 13ஆம் சீர்திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்று, இந்தியா இலங்கைக்கு சொல்லுமேயன்றி, வேறெதையும் தமிழ்த் தலைமைகள் இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. ஆகவே, இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில், எந்த அர்த்தபூர்வமான முன்னகர்வுகளும் ஏற்படாவிட்டாலும், தமிழ்த் தலைமைகளால் அதுபற்றி எதுவும் செய்யமுடியாத நிலைமை ஏற்படப்போகிறது. இந்திய-சீன-அமெரிக்க நலன்களை, ராஜபக்‌ஷக்கள் சரியாகச் சமன் செய்து, தமது காய்நகர்த்தல்களை முன்னெடுத்தால், தமிழ்த் தலைமைகளுக்கு இந்தப் ‘பூகோள அரசியலில்’ காய்நகர்த்தல் செய்ய இடமேயில்லாமல் போய்விடும். ஆகவே, இந்தச் சூழலில், ராஜபக்‌ஷக்களுடனான அரசியல் ஊடாட்டங்களினூடாகத் தமது நலன்களை அடையப்பெற்றுக் கொள்வது, அல்லது இந்தியாவுடனான உறவுகளில் ராஜபக்‌ஷக்கள் மீண்டும் சறுக்கும் வரை காத்திருப்பது என்ற இரண்டு தெரிவுகளே, தமிழ்த் தலைமைகளிடம் இருக்கின்றன. இது ஒரு வகை ‘செக் மேட்’ நிலைதான். ‘தமிழ்நாடு’ என்ற காரணத்தைத் தாண்டி, இந்தியாவுக்குத் தமிழர் சார்பாகப் பலமான அழுத்தம் தரக்கூடிய எந்த சக்தியும் இல்லை. ஆனால், ‘தமிழ்நாட்டின்’ ஆதரவுச் சக்தியை நீர்த்துப்போகச் செய்யும் அரசியல் தந்திரோபாயங்கள் மிகப் பலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் தமிழர் பிரச்சினையை, உணர்ச்சிகரமான பிரச்சினை என்பதைத்தாண்டி, கேலிக்கூத்தாக மாற்றுவதற்காகவே, தமிழ்நாட்டில் கோமாளிக் கட்சிகள் பல களமிறக்கப்பட்டுள்ளன. இது இலங்கைத் தமிழர் பிரச்சினையை, தமிழ்நாட்டின் அரசியல் மய்யவோட்டத்திலிருந்து நீக்கும் பணியை மிகவிரைவாகச் செய்து வருகிறது. மறுபுறத்தில், இலங்கையின் தமிழ்த் தலைமைகள், இந்தியாவைத் தாண்டிச் சிந்திக்கும் அறிவையும் திராணியையும் இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை. ராஜபக்‌ஷக்கள்,தமது காய்நகர்த்தல்களை சரியாக முன்னெடுக்கும் வரை, ‘பெரியண்ணனை’ அதிருப்தியாகாத வரை, இலங்கைத் தமிழ் தலைமைகளின் நிலையும் இனப்பிரச்சினைத் தீர்வின் நிலையும் ‘செக்மேட்’ தான்! http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இந்தியாவும்-கோட்டாவும்-தமிழர்களும்/91-242288
Checked
Thu, 12/12/2019 - 03:32
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr