யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்

தேவை ஒரு கண்ணாடி

5 months 3 weeks ago

நான் வடிவோ வடிவில்லையோ என்று உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை. நேற்றிரவு நான் எனது படமொன்றை Facebook இல் போட்டுவிட்டுப் படுத்து விட்டேன். இன்று காலையில் எழுந்து பார்த்த போது அந்தப் படத்துக்கு முந்நூறுக்கு மேல் லைக்ஸ். நூறுக்கு மேல் கொமென்ற்ஸ். உள் பெட்டியில் ஊருப்பட்ட செய்திகள்.

'வடிவு, நீங்கள் நல்ல வடிவு'

'உங்களோடை கதைக்கோணும். போன் நம்பரைத் தாங்கோ'

'உங்களுக்கு ஒண்டு சொன்னால் கோவிப்பிங்களோ? நீங்கள் நல்ல வடிவு'

'உங்கடை வடிவாம்பிகை என்ற பெயரைப் போலயே நீங்கள் வடிவா இருக்கிறிங்கள்'

'மடம், பிளீஸ் போன் நம்பர் தாங்கோ'

'அக்கா, ஐ லவ் யூ"

இப்படித்தான் அந்தச் செய்திகள் என்னை மயக்கும் எண்ணத்தில் எழுதப் பட்டிருந்தன. நான் Teenage இல் இருந்திருந்தால் அப்படியே பாசியில் வழுக்கி விழுவது போல வழுக்கி விழுந்து பிடரியை உடைத்திருப்பேன். நல்ல வேளையாக அதை எப்போதோ கடந்திருந்தேன். சிலர் நல்ல அழகான கவிதைகள் கூட எழுதியிருந்தார்கள். இன்னும் சிலர் நான் முதலே வாசித்த வேறு யாருடையதோ கவிதைகளை  தங்களது கவிதைகள் போல எழுதியிருந்தார்கள். எல்லாம் என் வடிவையும் அதனால் அவர்களுக்கு என் மேல் எழுந்த காதலையும் வைத்துத்தான்.  அதுதான் எனக்குக் குழப்பமாக இருந்தது.

வீட்டில் சண்டை வருகிற பொழுதெல்லாம் வடிவில்லாத என்னை தனது தலையில் கட்டி விட்டதற்காகவும் எனக்கு `வடிவாம்பிகை´ என்ற பெயர் வைத்ததற்காகவும் எனது கணவர், ஊரிலிருக்கும் எனது அம்மாவைத் தாறுமாறாகத் திட்டித் தீர்ப்பார்.  'உன்ரை மூஞ்சைக்கும் முகரக்கட்டைக்கும் இந்தப் பெயரொன்றுதான் குறை"  என்றும் சொல்லிக் கத்துவார். உண்மையில் எனக்கு வடிவாம்பிகை என்று பெயர் வைத்தது அம்மா இல்லை. அம்மாச்சிதான் நான் பிறந்த உடனேயே எனது வடிவைப் பார்த்து விட்டு `வடிவாம்பிகை´ என்ற பெயர் வைத்தாவாம். நான் இதைக் கனதரம் எனது கணவருக்குச் சொல்லி விட்டேன். ஆனாலும் மறந்து போனது மாதிரித் திரும்பத் திரும்ப அம்மாவைத் திட்டிக் கொட்டிக் கொண்டிருப்பார்.  நான் நினைப்பூட்டினால் 'காகத்துக்கும் தன்ரை குஞ்சைப் பார்த்தால் வடிவாத்தான் தெரியும்' என்று சொல்லி, கெக்கட்டம் விட்டுச் சிரிப்பார்.  அது மட்டுமே? வேறு பெண்களிடம் அவர் அசடு வழிகிற பொழுதெல்லாம் நான் கேட்டால் 'நீ வடிவா இருந்தால் நான் ஏன் வேறையாரையும் பார்க்கப் போறன்?' என்பார்.

நான் ஓடிப்போய் நான் வடிவோ அல்லது இவர் சொல்லுறது  மாதிரி உண்மையிலேயே வடிவில்லையோ என்று கண்ணாடியில் பார்த்தேன். அந்த நேரம் பார்த்துத்தான் அந்த அழைப்பு வந்தது.

யாரோ Facebook மெசஞ்சரின் ஊடாகத்தான் அழைக்கிறார்கள் என்பதைச் சத்தத்தின் மூலம் உணர்ந்து கொண்டேன். சாதாரணமாக நான் மெசஞ்சர் அழைப்பென்றால் பேசாமல் விட்டு விடுவேன். ஆனாலும்  ஓடி வந்து யாரென்று பார்த்தேன்.

நம்பவே முடியவில்லை. டொக்டர் சுதர்சனின் அழைப்பு அது. டொக்டர் சுதர்சனை உங்களுக்கும் எப்பிடியும் தெரிஞ்சிருக்கும். சரியான நல்ல மனுசன். முள்ளிவாய்க்கால் பிரச்சனை நடக்கிற போது சுவிசிலிருந்து  அங்கேயே போய் நின்று பாதிக்கப்பட்ட சனங்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்தவர். யாருக்குத்தான் அப்படியொரு துணிச்சலும், சேவை மனப்பான்மையும்  வரும். அதுவும் அந்தப் போர் நேரம், உயிரைப் பணயம் வைத்து அங்கேயே நின்று...

எனக்கு பயங்கர ஆச்சரியமாக இருந்தது. அவர் ஏன் எனக்குப் போன் பண்ணுகிறார்?

இரண்டு கிழமைகளுக்கு முன்னர்தான் என்னோடு Facebook இல் நட்பானவர். அவரின் நட்புக்கான அழைப்பு வந்த உடனேயே கொஞ்சமும் யோசிக்காமால் நான் accept பண்ணி விட்டேன். இப்படியான ஒரு ஆளோடு நட்பாயிருப்பது எவ்வளவு பெரிய விசயம். பெருமையும் கூட.  அவரது சேவையைப் பாராட்டி அவருக்கு விருது கூடக் கொடுத்திருக்கிறார்கள்.

 நான் தயக்கமில்லாமல் தொலைபேசியை எடுத்து „வணக்கம்“ என்றேன்.

அங்கிருந்தும் „வணக்கம்“ வந்தது

„நீங்கள் டொக்டர் சுதர்சன் தானே?“

„ஓமோம், அவரேதான்“

„உங்கடை சேவையளைப் பற்றியெல்லாம் அறிஞ்சிருக்கிறன். உண்மையிலேயே நீங்கள் பெரிய ஆள். உங்கடை நல்ல மனசை எப்பிடிப் பாராட்டிறதென்றே எனக்குத் தெரியேல்லை“

அவர் பதிலுக்குச் சிரித்தார்.

„எனக்கு உங்களோடை கதைக்கக் கிடைச்சது பெரிய சந்தோசமா இருக்கு. அது சரி, ஏன் என்னைத் தேடி போன் பண்ணினனீங்கள்?“

„நான் அங்கை உங்களிட்டை வரோணும். உங்களிட்டைத் தங்கோணும்“

„ஏன் இங்கையும் ஆருக்கும் ஏதும் உதவி செய்யப் போறிங்களோ?“

„ம்.. ம்.. அங்கை வந்திருந்துதான் ஆருக்காவது உதவி வேணுமோ எண்டு பார்க்கோணும்“

எனக்கு உடனடியாக ஒன்றுமே விளங்கவில்லை. யாருக்காவது உதவி தேவைப்படும் பட்சத்தில் அதற்காக வரும் ஒருவர் தங்குவதற்கு இடம் தேடுவது உண்டு. இது இங்கு வந்து தங்குவதற்காக யாருக்காவது உதவி செய்யத் தேடுவது... குழம்பினேன்.

எனது குழப்பம் அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்.

இப்போது தெளிவாகச் சொன்னார் „உங்களோடு தங்க வேண்டும்“

எனக்கு எதுவோ புரிந்தது.

„ஓ... அது சாத்தியப்படாது. என்ரை வீட்டிலை தங்கிறதுக்கான எந்தச் சாத்தியங்களும் இல்லை“

„ஏன்.. ஏன்?“ அதிர்ச்சியோடு கேட்டார்.

„எனக்குக் குடும்பம் இருக்குது. கணவர் இருக்கிறார்“

„அதிலையென்ன? அவர் நாள் முழுக்க வீட்டிலையோ  இருக்கப் போறார். வேலைக்கும் போவார்தானே“

„இல்லை, அது ஒரு போதும் சாத்தியப்படாது“

„ஏன் அப்பிடிச் சொல்லுறிங்கள். நினைச்சால் எதையும் சாத்தியப்படுத்தலாம்“

நான் ஆகாயத்துக்கு மேலால் உயரமாகத் தூக்கி வைத்திருந்த டொக்டர் சுதர்சனை வெடுக்கெனக் கீழே போட்டு விட்டேன்.  இந்தப் பூனையுமா? மனசு ஒருவித ஏமாற்றத்தில் வெட்கித்துக் கூசியது.

„உங்களுக்கு எத்தினை வயசு?“ கேட்டேன்

நான் அப்படிக் கேட்டதும், வளைகிறேன் என நினைத்தாரோ? மிகுந்த உற்சாகமாக தனது வயதைச்  சொன்னார்.

„என்ரை மகனுக்கு உங்களை விட இரண்டு வயசு கூட. அது தெரியுமோ உங்களுக்கு?“

„அப்ப Facebookஇலை நீங்கள் போட்டிருக்கிற படத்திலை சரியான இளமையா இருக்கிறீங்கள்? வடிவாயும் இருக்கிறீங்கள்“

„அந்தப் போட்டோவைப் பார்த்திட்டோ இப்ப போன் பண்ணினனீங்கள்?“

„அதுவும் தான்… உங்கடை மற்றப் படங்களையும் பார்த்தனான்“ இழுத்தார்.

„போட்டோவை மட்டும் பார்த்திட்டு நான் வடிவு, இளமையெண்டெல்லாம் எப்பிடி நினைச்சனிங்கள்? நான் நேற்றுப் போட்டது பத்து வருசத்துக்கு முந்தி எடுத்த போட்டோ. மற்றது அதிலை பார்த்தால், நல்லா லைற் விழுந்து என்னை நல்ல வெள்ளை மாதிரிக் காட்டுது. ஆனால் நான் அந்தளவு வெள்ளையில்லை“

இப்போது அவரது கதைகளின் சுரம் குறைந்து கொண்டு போனது. ஆனாலும் நம்ப முடியாதவராய் சில கேள்விகள் கேட்டார்.

„நான் உங்கடை அம்மான்ரை வயசை ஒத்திருப்பன். சில வேளையிலை அதையும் விட அதிகமாகவும் இருப்பன்“ என்றேன்.

அவர் தடுமாறுவது வார்த்தைகளில் தெரிந்தது.

„நீங்கள் இன்னும் கலியாணம் கட்டேல்லையோ?“ கேட்டேன்.

„கட்டீட்டன்“

„குழந்தையள்..?“

„இரண்டு பேர். இரண்டும் பொம்பிளைப் பிள்ளையள்“

„அப்ப ஏன் எனக்கு போன் பண்ணினனிங்கள்?“

„நீங்கள் வடிவு...“ இழுத்தார்

„உங்கடை பெஞ்சாதி Facebookஇலை இருக்கிறாவோ?“

„ஓம்“ ஐடி சொன்னார்.

பார்த்தேன் . Facebook இல், புகைப்படத்தில் அந்த மனைவி மிக அழகாகச் சிரித்துக் கொண்டிருந்தார். மனைவியை அணைத்த படி டொக்டர் இருந்தார். கூடவே தேவதைகள் போல் இரு பெண் குழந்தைகள்.

'ஐயோ இப்பிடி வடிவா இருக்கிறாவே! அவவையும் பிள்ளையளையும் அங்கை தனிய விட்டிட்டு சுவிசிலையிருந்து இங்கை அமெரிக்காவுக்கு இவ்வளவு தூரம் வரப் போறிங்களோ? அதுவும் ஆரெண்டே தெரியாத என்னட்டை…“

„ஹி.. ஹி.. ஹி..“

அதன் பிறகு 'நான் வடிவோ இல்லையோ?' என்ற கேள்வியோ,  ஆயிரத்தெட்டுத்தரம் கண்ணாடியைப் பார்க்கும் எண்ணமோ எனக்குள் வரவில்லை.   `இப்படியானவர்களின் மனசைப் பார்ப்பதற்குக் கண்ணாடி ஒன்றிருந்தால் நல்லாயிருக்கும்´ என்ற எண்ணம்தான் வந்து கொண்டேயிருக்கிறது.

குழலி

30.04.2020

ஆகா.. நானும் ஒரு சமையல் விற்பன்னர்..!

5 months 4 weeks ago

samaiyal.jpg

நேற்று காலையில் பாலைவனத்தில் திட்டப்பணிகளை ஆய்வு செய்யும்போது மனதில் ஒரே தவிப்பு..!

'நாளை ரமலான் நோன்பு ஆரம்பிக்கப்போகுதே.. ஒரு பயலும் கடையை திறக்க மாட்டானுக..சாப்பாட்டுக்கு என்ன செய்வது..?'  emboubli2.gif

இங்கே ரமலான் நோன்பு மாதத்தின்போது தினமும் உணவகங்கள் மாலை ஏழு மணிக்கு மேல்தான் சில கடைகள் திறந்தாலும் திறக்கும், ஆனால் மறுபடியும் எட்டு மணிக்கு கொரானா ஊரடங்கால் மூடிவிட வேண்டும்..!

காலை பத்து மணியிலிருந்து தமிழகத்திலிருக்கும் என் மனைவியிடமிருந்து எனக்கு அடிக்கடி தொலைபேசியில் பல அறிவுறுத்தல்கள், சமையல் குறிப்புகள், கெஞ்சல்கள்..!

"சரி.. சரி..சரியம்மா.. வேலை முடிந்தவுடன் போய் சூப்பர் மார்க்கெட்டில் மளிகை பொருட்களை வாங்கி சமைத்து சாப்பிடுறேன்.. வேலையில் இருக்கிறேன், நீ போனை வையம்மா.." என அலுப்புடன் துண்டித்தேன்..

ஒப்பந்தகாரர்களின் நிறுவனத்தில் பணிபுரியும் சில தமிழ் அன்பர்கள், "என்ன சார், வீட்டம்மாவிடம் நல்ல 'டோஸ்'ஸா.. சமையல் ரொம்ப ஈஸிதான் சார்.. சிரமமாக இருந்தால் எங்க வீட்டுக்கு வாங்க.." என அன்புடன் அழைத்தனர்.

"இல்லையப்பா.. நானே முயற்சிக்கிறேன்.. அழைப்பிற்கு நன்றி.." என கூறிவிட்டு வேலையில் மூழ்கிவிட்டேன்..

மாலை வீட்டுக்கு வந்ததும் 'சரி, சமையலறையில் என்னதான் பொருட்கள் இருக்கின்றன..?' என உருட்டி தேடினேன்.. பாத்திரங்கள், அலமாரி தட்டுகளில் பழைய மளிகை பொருட்கள்.. எல்லாம் தூசி படிந்து காய்ந்திருந்தன..லுங்கியை மடித்துக்கட்டி தேவையான பாத்திரங்களை சோப் தண்ணிரில் ஊறவைத்து கழுவினேன்..

வீட்டம்மா 'வாட்ஸ்அப்'பில் அனுப்பிய குறிப்புகளின்படி தேவையான மளிகை பொருட்களை வாங்கிவந்தேன்..வாங்கி வந்த மளிகை பொருட்களை அடுக்கிவிட்டு ஓய்ந்து, யாழ்ப் பக்கம் வந்தேன்..

யாழ்க்களத்தில் 'சுமே மேரியம்மா'வின் படங்கள் பற்றிய சந்தேகங்களை தீர்த்து வைத்தேன்..! internet02.gif

இரவில் வீட்டில் பேசும்பொழுது 'காலையில் இட்லிக்கு எப்படி தயார் செய்வது..?' என பெரிய விளக்க உரையை மனைவியிடம் முழித்தவாறே கேட்டு புரிந்த மாதிரி தலையாட்டினேன்..மனதிற்குள் தோன்றியது, 'இந்த இமய மலையில்கூட ஏறி சிகரம் தொட்டுவிடலாம், புரிபடாத இந்த சமையலை எப்படி கற்றுத் தேறுவது..?' மலைப்புடன் யூடுயூபில் "இதயத்தில் நீ.." படம் பார்க்க ஆரம்பித்தேன்.. அப்படியே தூங்கியும் விட்டேன்..!

காலையில் மனவியிடமிருந்து அழைப்பு..

"என்ன, இன்னமுமா தூங்கிறீங்க.. எழுந்து சமையல் வேலையை நான் சொன்ன மாதிரி செஞ்சி எனக்கு போட்டோ அனுப்புங்கள்..!" என அன்புக் கட்டளை. தட்டிக்கழிக்க முடியுமா..?

"அட இரும்மா..நீ சொன்னமாதிரி நான் சமையல் செய்யுறேன், நீ பேரனை கவனி.." எனக் கூறிவிட்டு மடமட குளித்துவிட்டு சமையல் வேலைகளை தொடங்கினேன்..

பல நாட்கள் கேஸ் ஸ்டவ் பயன்படுத்தாததால் அது மக்கர் செய்தது.. சரிசெய்துவிட்டு 'ஒழுங்காக வேலை செய்கிறதா..?' என உறுதிபடுத்தினேன்..

ஃப்ரிட்ஜிலிருந்து இட்லி மாவு பாக்கெட்டை உடைத்து, இட்லி அடுக்கில் ஊற்றி குக்கரில் வைத்து அடுப்பை இயக்கினேன்.. அது பாட்டுக்கு வேக ஆரம்பித்தது..

அடுத்து 'தொட்டுக்கொள்ள தேங்காய் சட்டினி எப்படி தயார் செய்வது..?'

இது எனக்கு மிகப் பெரிய சவால்..!

இவ்விசயத்தில் மனைவி சொல்லே மந்திரம்..!

அவர்கள் சொன்ன அறிவுறைகளின்படி ஒருவழியாக கண்ணீருடன்(?) சட்டினியை தயாரித்து, இட்லியை வேகவைத்து சமையலை முடித்தேன்..!

 

IMG-20200424-073449.jpg   IMG-20200424-075541.jpg   Idli.jpg 

 

சூடாக இருந்த இட்லி குக்கரின் மூடியை திறந்து, இட்லியை இறக்க முயன்றபோது கையில் சூடுபட்டு சிவந்துவிட்டது.. ஒருவழியாக துணிகளை சுற்றி பிடித்துக்கொண்டு மூடியை திறந்தபோது, பலநாள் பசியாய் இருந்து சாப்பாட்டைக் கண்டது மாதிரி ஒரே மகிழ்ச்சி..

உங்கள் மொழியில் "சொல்லி வேலையில்லை..!"   mange7.gif

'ஆகா நாமளும் இட்லி அவித்துவிட்டோம்.. சாப்பாட்டுக்கு அலையாமல் இந்த ரமலான், கொரானா கடை அடைப்புகளை சமாளித்து வெல்ல முடியும்' என்ற நம்பிக்கை வந்தது..!

'ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண் இருக்கிறாள்' என்பது எவ்வளவு யதார்த்தம் என்பதை இந்த சிறிய விடயத்தில் உணர முடிந்தது..!

என் மனைவிக்கு நன்றி..!!  vil-donnecoeur.gif

"இது குழந்தை பாடும் தாலாட்டு.." என  என் சமையல் கலை(??????)யை பொறுமையாக வாசித்த உங்களுக்கும் நன்றி..!!!  5.gif

.

வெகுமதி

6 months ago

செயற்கை சுவாசக்கருவி மூலம் மூச்சு உள்ளே சென்று வெளியே வருகின்றது.

ஒவ்வொரு மூச்சுமே ஒரு போராட்டம்.

சுயநினைவு திரும்புமா? தெரியாது.

ஆனால்,

திரும்பவேண்டும்.

பின்பு...?

கண்கள் விழிக்கவேண்டும். சாதுவாக அல்ல, அவை நன்றாய் அகல விழிக்கவேண்டும். ஆட்கள், பொருட்கள் தெளிவாய், துல்லியமாக தெரியவேண்டும். 

மேலும்?

காதுகள் கேட்கவேண்டும். இரண்டு காதுகளும் கேட்கவேண்டும். மனித குரல்கள், குருவியின் ஓசை, கோயில் மணியோசை, வாகன இரைச்சல் அனைத்துமே காதுகளில் ஒலிக்கவேண்டும்.

இவை மட்டும் போதுமா?

இல்லையே. 

படுத்த படுக்கையாக சரிந்த ஆள் மீள எழவேண்டும். எழுந்து நடமாடவேண்டும். நாளாந்த வாழ்க்கை வழமைக்கு திரும்பவேண்டும். சிரித்து கதைத்து பேசவேண்டும். ஒன்றாக அமர்ந்து படம் பார்க்கவேண்டும். நடக்க செல்லவேண்டும். முன்புபோல் இன்னும் பலநூறு காரியங்கள் சேர்ந்தே செய்யவேண்டும்.

இதற்கு என்ன செய்யலாம்?

கோயிலிற்கு சென்று ஒரு அர்ச்சனை செய்யலாமா?

இல்லை, கோயில் திறந்து இருக்குமா என்பதே நிச்சயம் இல்லை. 

ஆட்களுக்கு சொல்லி கூட்டு பிரார்த்தனை செய்யலாமா?

ஜெபிக்க சொல்லலாமா?

வேறு ஏதாவது...

என்ன செய்யலாம்?

அவசரமாக ஏதாவது செய்தாக வேண்டும்.

முயற்சி  பயன் அளிக்குமோ தெரியாது. ஆனால், எங்கள் மனம் அமைதி அடைவதற்கு எதையாவது செய்து பார்க்க வேண்டும். எமது அன்புக்குரியவர் பிழைக்கவேண்டும்.

நேற்றுவரை உலகம் நன்றாகவே சுழன்றது.

இன்று ஏன்? இப்படி?

நோய், துன்பம், பிணி, இறப்பு, சாக்காடு இயல்பு நிலை. அது ஏன் எமக்கு வரும் என்பதை உணரமுடியாமல் போனது?

மற்றவர்களுக்கு அவை நடக்கும்போது அதன் தாக்கம் உணரப்படமுடியவில்லை. எமக்கு ஒன்றும் நடக்காது என்பதையே நம்பி இவ்வளவு காலமும் ஓடியது.

என்றாலும் கடைசியில்.. 

எமக்கு விரித்த வலையின் விரிப்பினுள் எதிர்பாராத தருணத்தில் கால்கள் முடங்கிவிட்டன?

இனி என்ன செய்வது?

மனம் சுதாகரித்தது.

பரிவு, பரபரிவு நரம்புத்தொகுதி புத்துணர்ச்சி பெற்றதோ? நீளவளைய மையவிழையத்தில் ஏதேனும் அதிசயம் நடந்ததோ? மூளையில் எந்தப்பகுதியில் என்ன நடந்தது? தெரியவில்லை.

இப்போது..

உலகம் தேவலோகமாக தெரிகின்றது.

நேற்றைய நரக வாழ்க்கை இன்று சொர்க்கமாகி விட்டது.

எவ்வளவு காசு இருந்து என்ன. பட்டங்கள் பெற்று என்ன. சுற்றங்கள் அமைந்து என்ன. அவை கிடைத்து என்ன.. கிடைக்காவிட்டாலும் என்ன..

அப்பாடா சாமி. எல்லாமே போதும். போதும். போதும். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

நிம்மதியாக படுத்து எழும்ப வேண்டும். வயிறு பசியார உண்ண உணவு வேண்டும். 

வேறு என்ன? 

வியாதி ஒன்றும் வேண்டாம். 

சுவாசப்பைகள் நன்கு தொழிற்படட்டும். இதயம் தொடங்கி தோல், தசை, கைகள், கால்கள், சிறிது பெரிதென என வியாபித்துள்ள உடல் உறுப்புக்கள் எல்லாம் சீராக செயற்படட்டும். புலன்கள், மூளை எல்லாம் நேர்த்தியாக இயங்கட்டும். 

ஆளை தனிமைப்படுத்தி வெண்டிலேட்டரில் வதக்கி எடுக்கும் நிலமை வரவே வரக்கூடாது.

இன்றைய நாள் நல்ல நாள்.

இன்றைய பொழுது நல்ல பொழுது.

இருப்பதை மறந்துவிட்டு இல்லாததை தேடி ஓடும் வாழ்க்கை நிலை மாறி,

நம்மிடம் நமக்கு வாய்த்த அரிய பொக்கிசங்களை இனம் கண்டும்,

அவற்றின் நன்மைகளை எண்ணிப்பார்த்தும்,

மகிழ்கின்ற..

உணர்கின்ற..

வாழ்கின்ற..

தருணம்

இது!

:100_pray::100_pray::100_pray:

"அப்பாவுக்கு.... தலைமயிர் வெட்ட, ஆருக்கு விருப்பம்?

6 months ago

Auch Scholz schneidet Haare selbst | „Bin froh, wenn ich wieder ...

(ஜேர்மன் நிதியமைச்சர்)

என்னுடைய... தலை மயிரும், கனக்க வளர்ந்து... 
காதை  மூடும் போல இருப்பதை பார்க்க,அரியண்டமாக இருந்தது. வழக்கமாக போகும்... 
"மசூதி சலூனுக்கும்" போக பயமாக இருந்த படியால்...
சென்ற.. திங்கள் கிழமை, ஈஸ்டர் லீவு என்ற  படியால்.... 

பிள்ளைகள் குழந்தைகளாக இருந்த போது...  25 வருசத்துக்கு முதல், 
அவர்களுக்கு... தலைமயிர் வெட்ட வாங்கின  "மெசின்  ஒன்று"...  
நில அறையில்... இருந்தது நினைவுக்கு வர, அதை எடுத்துக் கொண்டு வந்து,
முயற்சி பண்ணிப் பார்த்தால்... படத்தில் உள்ளதை போல, வந்திட்டுது. :grin:

இனி... யோசிக்க, நேரமில்லை என்று விட்டு...
பிள்ளைகளும் வீட்டில் நின்ற படியால்....
"அப்பாவுக்கு.... தலைமயிர் வெட்ட, ஆருக்கு விருப்பம்?...  என்று, ஒருமுறை தான்... கேட்டேன். ❤️
ஒவ்வொரு அறையிலிருந்தும்... நான் வெட்டுகின்றேன் என்று, 
மூன்றும்.... பாய்ந்து வந்து விட்டதுகள். 💕

வந்தவர்களை... ஏமாற்றப் படாது என்று, 
இருக்கிற, பொட்டல் காணியை...  😎
இடது பக்கம், வலது பக்கம், பிடரி பக்கம் என்று.. பிரித்து கொடுத்து,
இனி வெட்டுங்கோ... என்று சொன்ன போது,
அவர்கள்... குழந்தைகளாக இருந்த நேரத்தில்...  குழறக்  குழற... 
நான், மயிர் வெட்டிய... நினைவுகள், எல்லாம் வந்திருக்கும் போலை...
பிரித்து... மேய்ந்து விட்டார்கள். 😅

ஒராள்... மயிர் வெட்ட,  சும்மா நின்ற ஒராள்... வீடியோ எடுக்குது,
மற்ற ஆள்... கணனியில், பழைய நாடகத்தை... மீண்டும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த,
மனைவியிடம்... "அப்பாவுக்கு... தலைமயிர் வெட்டுறம்,  நீங்களும்  வந்து பாருங்கோ... "
என்று சொல்லி முடிக்க முதல்.... 💥

மனிசி... குளியலறைக்குள், புயலென வந்து.... 🗯️ 
வருசப் பிறப்பான இன்று...தலை மயிர் வெட்டுறீங்களோ...
நேற்று, முந்தநாள்... எல்லாம்,  இந்த யோசனை வரமால்,
கொம்புயூட்டருக்குள்ளை தலையை, வைத்துக் கொண்டு இருந்து போட்டு,
இண்டைக்கென்று... இதை செய்ய வெக்காமையில்லை? 👁️‍🗨️
வி*ர்  பிடிச்ச மனிசன், ச**ன் பிடிக்கிற வேலை பாக்குது...  என்று, பேசத்  தொடங்கி விட்டது. 😢

இதென்ன.... கோதாரியாய் கிடக்கு, 
அடுத்த வீட்டுக்கு... சத்தம் கேட்கப் போகுது  என்ற பயத்திலையும்,
நான் சாரத்துடன்.... அரைவாசி தலை மயிர் வெட்டின நிலைமையில்....
கட்டி அணைத்து, முத்தம் 💋 கொடுத்து...  சமாளிக்கவும் முடியாமல்...
தேவாங்கு...👽 மாதிரி முழித்துக்  கொண்டிருந்த போது.... 💀

மனிசியின்...  ரெலிபோன்,  "கிணிங்  கிணிங்" என்று அழைத்தது. 
பொறுங்கோ... வாறன், எண்டிட்டு போன, இடை வெளியில்...
ஆர்....  எடுத்தது என்று, பிள்ளைகளிடம், கேட்ட போது...
கனடாவில் இருந்து... சின்ன மாமி கதைக்கிறா.. என்று சொன்னார்கள்.  

அப்பாடா..... தப்பினேன் பிழைத்தேன்... என்று சந்தோசப் பட்டேன். :grin:

மனிசி.... தன்ரை, தங்கச்சியுடன் கதைத்தால்,கன நேரம் எடுக்கும்.
என்ரை... மச்சாள் (தமிழ் நாட்டில்.. சகலை) என்னை, 
அந்த.. இக்கட்டில் இருந்து, காப்பாற்றி விட்டாள். 🤣

இந்த... இடைவெளியில்,  மிச்ச மயிரையும்...  
முழு மொட்டை  அடித்து விட்டு, கண்ணாடியில் பார்த்து ரசிப்பதும்... ஒரு அழகு தான். 🤪

பிற் குறிப்பு:  இந்தக் கதையை... எழுத,
குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்கில் வந்த படம்  தான்... காரணம். 

டிஸ்கி:  நடந்த சம்பவங்கள்...  70 % உண்மையில் நடந்தது. 
மிகுதி 40 % வாசகர்கள்... கொடுப்புக்குள், சிரிக்கக் கூடியதாக.. புனையப்  பட்டது. :)

ஆடாமல் ஆடுகிறேன்

6 months 1 week ago

                                                              ஆடாமல் ஆடுகிறேன்

swinging.jpg

 

என்ன நடந்தது இந்த இளவேனிலுக்கு
என்னை ஏன் மறந்தனர் இத்தனைபேரும்
நான் என்ன துரோகம் செய்தேன்
யாரையாவது வைதேனா? வதைத்தேனா?
இல்லை வம்புதான் செய்தேனா?
எனக்குள் ஏன் இத்தனை வெறுமை
நானோ இளந்துளிர்கால தேடலில்
என் தேவதைகளோ ஊடலில்;
பூப்பூவாய் எத்தனை பட்டாம் பூச்சிகள்
என்னைத்தேடி என்னிடம் நாடி
என்னிலே ஆடி நண்பரைக் கூடி
மழலைகள்முதல் முதியவர்வரை
என் மடிதவழும் உல்லாசம் எங்கே?
நானோ தன்னந்தனியாக ஆடிக்கொண்டிருக்கிறேன்


வசந்தம் வந்துவிட்டால் என் வீட்டில் சுகந்தம்
என்னைச் சுற்றி கண்கொள்ளாக் காட்சிகள்
காலாற நடப்பது கைப்பிடித்து மகிழ்வது
ஓடிப் பிடிப்பது உடற்பயிற்சி செய்வது
மந்திகளாய் தொங்குவது மனம் விட்டுப் பேசுவது
மேலிருந்து வழுக்குவது மேல் கீழாய் ஆடுவது
என் நிழலில் இளைப்பாற பறவைகள் வருகின்றன
அணில்கள் ஓடி விளையாடுகின்றன
ஆளில்லாத பொட்டல் வெளியில்
அந்நியப்பட்டு நிற்பதற்கு நான் செய்த பாவம் என்ன?
வெறுமையாக ஆடிக்கொண்டிருக்கிறேன்


கடந்து சென்ற கடுங்குளிர் காலமெல்லாம்
கூடிக் குதூகலிக்க என் குழந்தைகள் வருவார்கள்
என்மேல் ஆடிமகிழ என் மழலைகள் வருவார்கள் என
நான் கண்ட கனவு காட்சிப் பிழையாகிப்போன
காரணமென்ன?
தனிமையில் நடப்போர்கூட
நான் தனியாக வெறுமனே ஆடுவதைப் பார்த்து
ஏக்கப் பெருமூச்சு விடுவதுகூட
எனக்குக் கேட்காமலில்லை
ஆயினும் என்ன?
என்னில் அமர்ந்தாட எவருக்கும் பிடிக்கவில்லையா?
என்அருகே கைகோர்த்து கட்டிப் பிடித்து
நெருங்கி அணைத்து நேசமாய்ப் பேசி
கொஞ்சிக் குலாவிய அத்தனைபேரும்
வாயுறையும் கையுறையுமாய்
வார்த்தைகளுக்கப் பஞ்சமாய்
எதிர் கொண்டு வருபவருக்கு
எதிர்திசையாய் நடந்து
என்ன நடக்குதென்று எனக்குப் புரியவில்லை
நானோ தனியாக ஆடிக்கொண்டிருக்கிறேன்


என்னில் அமர்ந்து மகிழ்ந்தாடும் மழலைகளின்
மென்மையான ஸ்பரிசமும் குறும்பான பேச்சும்
என்னைத் தழுவிடும் காலம்
இவ் வசந்தத்திலும் வருமோ ?
இல்லை மறுவசந்தம் வரை
நான் வெறுமனே தனியாக
ஆடிக்கொண்டிருப்பதுதான் என் விதியோ?

டொயிலட் டிசு

6 months 1 week ago

எப்ப இளைப்பாரலாம் என்ற சிந்தனையுடன் கட்டிலை விட்டேழுந்தேன்.எனது வயதையும் இளைப்பாறுவதற்கு அரசாங்கம் வைத்திருக்கும் வயதெல்லையையும் எண்ணிபார்த்தேன் இன்னும் 10 வருடங்கள் வேலை செய்தால் தான் ஓய்வுதியம் கிடைக்கும் என்பதை உணர்ந்தேன் .சிறிலங்காவிலிருந்தால் நான் இப்ப‌ பென்சனியர் ஆனால் இங்க பொல்லுபிடிச்சு கொண்டு வேலைக்கு போகவேண்டி இருக்கு என சலித்தபடியே காலைக்கடன்களை முடிக்க தொடங்கினேன்.

"டேய் நீ சிறிலங்காவிலிருந்தால் உனக்கு அரசாங்க உத்தியோகம் கிடைத்திருக்குமா?அரச உத்தியோகம் இல்லாவிடின் பென்சனே இல்லை"..

மனச்சாட்சியின் அதட்டலினால் காலைகடன்களை விரைவாக முடித்து கொண்டு வேலைக்கு புறப்பட தயாரானேன்.

"இஞ்சயப்பா வரும் பொழுது வூலியில் டொய்லெட் டிசுவும்,தமிழ் கடைகளில் போய் அரிசி ,பருப்புகளை வாங்கி வாங்கோ"

"போனகிழமைதானே எல்லாம் வாங்கினாங்கள் ,நீர் தானே எல்லாத்தயும் வாங்கி கொண்டு வாரனீர் என்ன புதுசா என்னை  வாங்கச் சொல்லுறீர்"

"என்னப்பா நீங்கள் நியுஸ் பார்க்கவில்லையே "

"பார்த்தனான் இவன் ட்ரம்ப் என்னவோ அலட்டிக்கொண்டிருந்தான்,சைனாவில கொரானா நோயினால் ஆயிரம் பேர் செத்து போய்விட்டனர் என்றாங்கள் அதற்கும் எங்கன்ட சொப்பிங்க்கும் என்ன தொடர்பு, அதுவும் முக்கியமா டொய்லட் டிசுவுக்கும்"

"நேற்று இரவு சுதா சொன்னாள் கடையில் சனம் டொயிலட் டிசுவுக்கு அடிபட்டுதுகளாம்"

" எனக்கு உந்த  டியுசு பிரச்சனையா இருக்காது ...அரிசி பருப்புக்களை வாங்கி கொண்டு வாரன்"

 சொல்லியபடி வேலைக்கு புறப்பட்டேன்.வழ‌மையாக காலையில் வேலைக்கு போகும் பொழுது பக்தி பாடல்களை கேட்டுக்கொண்டு செல்வது வழ‌க்கம்..அன்று அவுஸ்ரேலிய தேசிய வானோலியை  ஒன் செய்தேன்.

"கொரானா எனைய நாடுகளுக்கும் பரவ தொடங்கிவிட்டது..அவுஸ்ரேலியாவில் ஒருவர் மரணம்,50 பேர் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர்..."

இந்த செய்தி கேட்ட பின்பு கொரனாவினல் அன்றாட வாழ்க்கை பாதிப்படைய போகின்றது என உணர்ந்தேன்.

வேலைக்கு போனவுடன் எல்லோரையும் மீட்டிங்க்கு வரசொன்னார்கள் .நாங்களும் சம்பளத்தை கூட்டி தரப்போகிறார்கள் என எண்ணியபடி சென்றோம்.எல்லோரையும் பக்கவார்ட்டில் கை நீட்டி நிற்கும் படி சொன்னார்கள்.ம‌னிதவள அதிகாரி கையில் சில கோப்புக்களுடன் வந்தார்.

கொரானா நோய் பரவுவதை தடுக்க சில வழிமுறைகளை சொன்னார்.கை குழுக்குதல்,முத்தமிடல்,நெருக்கமாக இருந்தல் போன்றவற்றை தடுக்கும் படி .‌

எனது பாசத்தை சக தொழிலாளிக்கு குறிப்பாக பெண் தொழிலாளருக்கு  தெரிவிக்க முடியாமல் செய்து விட்டதே இந்த கொரனா என்ற உள்ள குமுறலுடன் வெளியேறினேன்.

மதிய இடைவெளிக்கு அருகான்மையிலிருக்கும் கொஸ்ட்கோ,வூல்வேர்த் போன்றவற்றில் டொயிலட் டிசு வாங்கலாம் என சென்றேன் .வாகனங்கள் வரிசையாக த‌ரித்து நின்றன .கடைகளை விட்டு வெளியேறுபவ‌ர்கள்  இரண்டு மூன்று பெரிய டொயிலட் டிசுக்களை எடுத்து சென்று கொண்டிருந்தனர் .அவர்களில் அநேகர் ஆசியவம்சவாளியினராக இருந்தனர்.டொயிலட் டிசு வாங்கும் எண்ணத்தை கைவிட்டு மீண்டும் வேலைஸ்தலத்திற்கே சென்றேன்.

மீண்டும் மேலதிகாரி வந்தார் அவரின்ட மேலதிகாரி மீட்டிங் வைக்க போறாராம் எல்லோரயும் அழைத்து கொண்டு மீட்டிங் ரூமூக்கு வா என்றார்...மீட்டிங் ரூமில் தள்ளி தள்ளி அமர்ந்தோம் CEO.... வந்தார்

"ஏற்கனவே புஸ்வயர் காரணமாக எமது பிசினஸ் பாதிப்படைந்துள்ளது ,இப்பொழுது கொரனா என்ற புது பிரச்சனை வந்துள்ளது  நீங்களே பார்த்திருப்பீர்கள் ..உற்பத்தி செய்யும் பொருட்களை வைப்பதற்கே இடம் இல்லாது இருக்கின்றது.விற்பனை அதிகமில்லாத காரணத்தால் நாம் உற்பத்தியை தற்காலிகமாக குறைக்கவுள்ளோம் அதன் விளைவாக தற்காலிக தொழிலாளர்களை வேலையிலிருந்து நிறுத்தபோகின்றோம். நிரந்த பணியாளர்களை பற்றி நாளை அறியத்ருகிறோம்" என்றார்..

நடக்கிறது நடக்கட்டும் என்று மனத்தை திடப்படுத்திக்கொண்டு வீடு  செல்ல தயாரானேன்.மனைவி கூறிய பொருட்களின் ஞாபக‌ம் வரவே வீடு செல்லும் வழியில் வரும் முதலாவது கடைக்கு போனேன் மாலை நேரம் என்றபடியால் சனம் குறைவாக இருக்கின்றதாக்கும் என எண்ணியபடி உள்ளே சென்றேன்,வழமைக்கு மாறாக பொருள்கள் இல்லாத செல்வ்கள் தான் இருந்தன.ஏமாற்றத்துடன் அடுத்த கடைக்கு காரை விட்டேன்.அங்கும் அதே நிலை அன்று மட்டும் நான் நாலு ஐந்து கடைக்கு போனேன் எதிலும் டொயிலட் டிசு கிடைக்கவில்லை.

மனிதன் உணவை அழைந்து திரிந்து சேர்த்து வைப்பதில் நியாயம் உண்டு அவசியம் தேவையான ஒர் விடயமும் ஆகும்,. டொயிலட் டிசுக்கு அழைந்து திரியும் என்னை நினைத்து சிரிப்பதா அழுவதா குழம்பி போயிருந்தேன்.

வீட்டுக்கு அருகில் உள்ள கடையில் அரிசி பருப்பு சீனி போன்றவற்றை சற்று அதிகமாக வாங்கி கொண்டு வந்தேன்.

கைதொலைபேசி அடித்தது

"‍ஹலோ சொல்லும்"

"எல்லாம் வாங்கிட்டிங்களோ?"

"  தமிழ் கடை சமான்கள் மட்டும் வாங்கினான் அங்கையும் சமான்கள் முடியுது"

"எல்லா கடையிலயும் பார்த்தீங்களே,நாளைக்கு கெர்வூயு போடப்போறாங்கள் போல இருக்கு "

"கனகுமாமா சொன்னவர்"

"என்ன உம்மட மாமாவே   பிரைமினிஸ்டர்"

"உந்த ளொள்ளுக்கு மட்டும் குறைச்சல் இல்லை,மாமா நாலு 32 இருக்கிற பக் வாங்கிட்டாராம்"

"அது தான் எனக்கு கிடைக்கவில்லை"

"சும்மா அவரை சாட்டாதையுங்கோ நீங்கள் முதலே போய்யிருந்தால் கிடைச்சிருக்கும்"

"அவர் நாலு வைச்சிருக்கிறார் தானே மருமகளுக்கு ஒன்றை  தரச்சொல்லும்"

"அவர் வாங்கினதை உங்களுக்கு ஏன் தரவேணும் சரி சரி இன்னும் அரைமணித்தியாலத்தில் என்னை வந்து பிக்கப் பண்ணுங்கோ"

"ம்ம் பொம்பிளை பிக்கப் பண்னுறதில்லையே என்ட காலம் போகுது ,சரி போனை கட் பண்ணும் வீட்டு போன் அடிக்கின்றது."

ஒடிப் போய் நம்பரை பார்த்தேன் மாமா என்று இருந்தது.நான் அதை எடுக்கவில்லை.சிறிது நேரத்தில் நின்றுவிட்டது.

மீண்டும் கைதொலைபேசி அடித்தது,

‍"ஹலோ இப்பதானே கதைச்சி போட்டு வைத்தனீர்"

"இஞ்சயப்பா கிச்சினுக்குள்ள போய் நொட்டை தீணிகளை சாப்பிட முதல் குளியுங்கோ மற்றது உடுப்பையும் வொசிங் மெசினுக்குள் போடுங்கோ"

"என்ன  இதையும் மாமாவே சொன்னவர்"

"உங்களுக்கு அவரோட ஒரு இராத்தல் ஏனோ தெரியவில்லை ,அது சரி யார் வீட்டு போனுக்கு அடிச்சவையள்?"

"வேற யார் உம்மட மாமா தான்"

" ஏன்னவாம்'

" நான் எடுக்கவில்லை சும்மா அலட்டிகொண்டு இருப்பார்"

"பாவமப்பா எடுத்திருக்கலாமே வயசு போனதுகள் ஏதாவது கதைக்க ஆசைபடுங்கள் "

"உமக்கு தெரியும்தானே எனக்கு  ஆட்களுடன் கதைக்கிறது என்றால் அலர்ஜி என்று"

"ஓ ஓ தெரியும் தெரியும் அவரோட தண்ணி அடிக்கிற பொழுது யார் அதிகம் அலட்டுறது என்று  ...  வீட்டு போன் அடிக்கிறது மாமாவாகத்தான் இருக்கும் போய் எடுங்கோ "

"‍ஹலோ அண்ணே எப்படி"

"தம்பி என்னடாப்பா கொரானா உலகத்தையே தலைகீழாக மாற்றிவிட்டுது போல கிடக்கு டொயிலட் டிசு ஒரு இடத்திலயும் இல்லையடாப்பா"

"என்ன அண்ணே டொயிலட் டிசு  கடையில் இல்லை என்றா போல உலகம் தலைகீழா போயிற்று என்று அர்த்தமெ"

"நீ செய்தி ஒன்றும் கேட்கிறதில்லையே இன்றைக்கு ம்ட்டும் உலக பொருளாதரத்தில் நூறு பில்லியன் வருமானம் விழுந்து போய்ட்டாம்  இப்படியே மூன்று மாசம் போனால் உலகேமே படுத்திடும்"

"உந்த டிசுவில் இவ்வளவு விசயம் இருக்கே?..பிறந்த நாளிலிருந்து ஒரு முப்பது முப்பதைந்து வருசமா தண்ணீரில் தானே எல்லாம் ...இங்க வந்த பின்பு தானே டிசு விளையாட்டு"

"உனக்கு தண்ணீர் சரியா இருக்கும் எனக்கு டிசு முக்கியம் நான் வந்து 40 வருசமாகிறது....தண்ணீர் என்று சொல்லத்தான் ஞாபகம் வருகின்றது எங்கன்ட மற்ற தண்ணி வாங்கி வைச்சிருக்கிறீயோ"

"அண்ணே சும்மா போங்கோ ,ம‌னிசி ஏற்கனவே கொதியில் நிற்கின்றார் சொன்ன சமான்களை வாங்கி வைக்கவில்லை என்று இதுக்குள்ள நான் கிளாஸை தூக்கினால் ,சன்னதம் ஆடுவாள்"

"என்னடா சும்மா பயந்து சாகிறாய் ,உனக்கு இரண்டு பக் டொயிலட் டிசு ,இரண்டிலும்32 இருக்கு கொண்டு வாரன்

நீ இரண்டு கிளாசை ரெடி பண்ணு"

"அப்ப உங்களுக்கு டிசு தேவையில்லையோ"

"  நாளைக்கு காலையில் போய் இன்னும் நாலு வாங்கி கொண்டு வ‌ந்திடுவன் நீ நான் சொன்னதை ரெடி பண்ணு"

"நான் போய் உங்கன்ட மருமகளை கூட்டிகொண்டு வாரன் ,நீங்கள் டிசுவை மறக்காமல் கொண்டு வாங்கோ"

 

அரை போத்தலில் டிசு கிடைச்சிட்டுது என்ற மகிழ்ச்சியுட‌ன் மனைவியை அழைத்து வர‌ சென்றேன் ,இரண்டு மூன்று தடவை கைத்தொலைபேசி சிணுங்கியது பெயரை பார்த்தேன் ஆத்துக்காரியின் பெயர்.

வேலை முடிந்து வாசலில் வந்து நின்றாள் அவளை ஏற்றிக் கொண்டு வீடு சென்றேன்.

"எத்தனை தரம் போண் பண்ணினேன் ஏன் எடுக்கவில்லை"

"எடுத்தனீரோ கேட்கவில்லை "

" காரை  கடைக்கு விடுங்கோ சமான்கள் வாங்க வேணும்"

"  .அங்க ஒரு சாமனும் இல்லையப்பா .அரிசி பருப்பு எல்லாம் வாங்கிட்டன்..கனகண்ணர் வாரன் என்று சொன்னவர் கெதியா வீட்டை போவம்"

"இப்ப அவர் ஏன் வாரார்? வீட்டை சாமன்கள் இல்லை சொப்பிங் போகவேணும் நீங்கள் அவரைச் வர‌ச் சொல்லி போட்டு வந்திருக்கிறீயள்...அந்த மனுசன் வந்தால் போகாது கதைச்சுகொண்டு இருக்கும் உங்களுக்கு எப்ப என்னசெய்யிறது என்று தெரியாது "

கோபத்தில காரின்ட சட்டேர்ஸை இறக்கி ஃரேஸ் காற்றை அனுபவித்தாள்.

"ஏன் சட்டேஸை இறக்கினீர் பூட்டும்,டஸ்ட் வருது"

சட்டேர்ஸை பூட்டியபடியே

"இப்ப அவர் வந்து வேற அலட்டிக் கொண்டு இருப்பார்,சொல்லிப்போட்டன் அவரை கண்டவுடம் இளிச்சுகொண்டு கிளாசை தூக்கிறதில்லை"

"நீர் தானே சொன்னீர், பாவம் வயசு போன நேரத்தில் கதைக்க ஆள் வேணும் அவருக்கு என்று"

"கடைசியில என்னில பிழை போடுங்கோ "

"என்ட மாமா இல்லை உம்மட மாமா....பாவம் தானே"

"ஏன் கொதிக்கீறீர் ... டிசு இல்லாட்டி ,தண்ணீயை பாவிக்க வேண்டியாண்"

" சும்மா ஊர் காய்களை மாதிரி ஊசூரு கதைகளை கதைக்க வேண்டாம் ...தண்ணீரை பாவிக்க சொல்லுறீயள் எதோ வீட்டு டொயிலட்டில் bidet fix பண்ணியிருக்கிற மாதிரி"

 " கொரானா பிரச்சனை முடியட்டும் அதை ஒன்று போடத்தான் வேணும்"

வீட்டு வாசலில் மூன்று பெரிய பன்டில் டொயிலட் டிசு உடன் கனகர் நின்றார்.

 

" டொயிலட் டிசுவை கண்டதில் மனிசி என்னை மறந்து, மாமா வாங்கோ இருங்கோ சாப்பிட்டு விட்டுதான் போகவேணும் என பாசமழை பொழிய நான் எனது பங்குக்கு

"மாமா வாங்கோ"...என அழைத்தபடி இரண்டு கிளைசை  செல்வில் இருந்து எடுத்தேன்...

கனகுமாமாவுடன் கொரானா ஆராச்சியும் உலகபொருளாதார‌ அலட்டலும் அடுத்த முறை தொடரும்🤣

      பெரிய அளவிற் பேசப்படாத "வாகை சூடவா " திரை விமர்சனம்

6 months 1 week ago

       

            பெரிய அளவிற் பேசப்படாத வாகை சூடவா – திரை விமர்சனம்

உங்க வீட்டுப்பிள்ளை படம் திரையில் போகிறது. அதிலே  எம்ஜிஆரை நம்பியார் சவுக்கால் அடிக்கிறார். அதனைப் பொறுக்காது படம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு ரசிகன் சுடுகலனால் சுடத் திரை பற்றி எரிகிறது. இப்படித்தான் காட்சி தொடங்குகின்றது. 2011 இல் வெளியாகிய இந்தத் திரைப்படத்தை கொறோனா முடக்கத்தால் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. 

கற்றலின் அவசியத்தை வலியுறுத்தி எடுத்துள்ள திரைப்படம். ஏழைத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வியை மறுக்கும் கிராமத்துத் தலையாரி. படிக்காத பாமர மக்களை மட்டுமன்றி அவர்களது பிள்ளைகளையும் வயது வித்தியாசமின்றிக் கற்சூளையில் வேலைசெய்ய நிர்பந்திக்கப்பட்ட கிராமத்தை நோக்கி உதவி நிறுவனமொன்றின் வழிகாட்டலோடு அந்தக் கிராமத்திற் குமூக சேவையாக  ஆறுமாதம் வேலை செய்வதூடாக ஒரு சான்றிதழைப் பெற்று அரசுப்பணியில் இணைவதை நோக்காக் கொண்டு வாத்தியார் வேலுத்தம்பி வருகிறார். அந்தக் கிராமத்துக்கு ஒரு வழிகாட்டி போல இருக்கும் வைத்தியர், ஒரு ஆட்டுக்கொட்டகையைத் தங்குவதற்குக் கொடுக்கிறார். அதையே படுக்கவும் படிப்பிக்கவுமாகப் பயன்படுத்துகிறார்.உணவுக் கடைவைத்திருக்கும் மதியிடம் உணவுக்கு பணம் கொடுத்து உண்பதும் மோதல் ஏற்படுவதும் பின் காதல் ஏற்படுவதுமாக ஆங்காங்கே ஏற்படும் திருப்பங்கள் தொடர விமலின் தந்தையார் கிராமத்துக்கு வருகிறார். கிராம மக்களின் உரிமைகள் பற்றிப் பேசுகிறார். என்னுடைய மகனாக இருந்தும் நீயாவது சொல்லக் கூடாதா?  

வாத்தியாரான தனது மகனுக்கு அரசவேலை கிடைத்துவிட்டதைக் கூறி அந்த பணியிணைவுக் கட்டளையை கோவிலில் சாமியின் பாதத்தில் வைத்து தனதுநேர்த்தியை முடித்துவிட்டுவருவதாகவும்ளூ பேரூந்து தரிப்பிடத்திடத்திற்கு வருமாறு கூறிச் செல்லக் காலையில் வாத்தியாரும் புறப்பட்டுச்  செல்லும் வழியில், அவர் கற்பித்த சிறுவர்களில் ஒருவன் தனக்கு ஒருவாரத்தில் திரும்பி வரும்போது ஒரு இரட்டைவரிக் கொப்பி எழுதிப்பழக வாங்கி வருமாறு சில்லறைகளைக் கொடுக்கின்றான். ஒருவாரத்தில் தான் வருவதாகப்  பிள்ளைகளுக்காக் கூறியதை நம்பிவிட்டார்களே என்று எண்ணிய  வாத்தியார்ளூ தான் அந்தக் கிராமத்துக்குச் சென்றது முதல் தற்போதுவரையான சம்பவங்களை மீட்டியவாறு பேரூந்து தரிப்பிடத்துக்கு வரும் அவர், தான் மீண்டும் அந்தக் கிராமத்துப் பிள்ளைகளுக்குக் கற்பிக்கப் போவதாகக் கூறித் தந்தையைச் சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டுத் திரும்புகிறார். 

திருப்பங்கள் மட்டுமல்ல இனிமையான இசை சிறுவர்கள் வாத்தியாரோடு விடும் அங்கதம் மென்மையான காதல் காட்சியமைப்பு மற்றும் சர சர சாரக் காத்து.....போறானே போறானே.... ஆனா ஆவன்னா...... என கேட்கத் தூண்டும் பாடல்கள் என ஒரு சிறந்த திரைப்படமாக எனது பார்வையில் வாகை சூட வா. இயக்குனருக்கு இது 2ஆவது திரைப்படமென்றால், இசையமைப்பாளருக்கு 1ஆவது திரைப்படமாகும். 

மனித வாழ்வியலப் பேசவேண்டிய கலை; இன்று பேசினாலும் பேசப்படுவதில்லை என்பது வருத்தத்திற்குரியது.  மக்கள் விழிப்படைந்துவிட்டால் சுரண்ட முடியாதே.

நன்றி
நட்புடன்
நொச்சி

குறிப்பு: 22ஆவது அகவைநிறைவுக்குப் பொருந்தவிடின் நகர்திவிடுமாறு வேண்டுகின்றேன்.- நன்றி-

 

காமரூபிணியும் கற்சிற்பியும்.

6 months 2 weeks ago

                     
                             உ.

 காமரூபினியும்  கற்சிற்பியும்.


அயிரை மீன்கள் உருண்டு பிரண்டு 
நிரை நிரையாய் விளையாடும் ஆறு.
கரையினில் குறுமணல் மேடுதனில் 
தரையிலே இருந்தது தங்குமோர் குடில்.

கற்சிற்பியவன் கலங்கி நின்றான் --- கையில் 
சிற்றுளி கொண்டு செதுக்கி செப்பனிட்ட 
கற்சிற்பத்தை கண்ணால் வருடியபடி 
கண்ணில் நீர் ஒழுகியபடி.
மெய்தீண்டாது வான் பார்த்து சிந்தனையுடன்.

அலைபுரண்டோடும் ஆற்றின் 
கரைபுரண்டு தெறிக்கும் திவலையின் 
நுரைகளுடன் கையளைந்து 
நிரை கொங்கைகள் சதிராட 
நீந்திக் களிக்கும் மங்கையவள் 
ஈரேழு அகவையவள் இளமைப் 
பருவத்தின் தலைவாசல் தீண்டுவாள்.

சிற்றிடை தள்ளாட தண்டை கிண்கிணியென ஒலிக்க 
சின்ன பாதங்களால் தாவி கரையேறி --- அவள் 
எடைபோல் குறைந்த உடையுடன் 
குடில் நோக்கி வருகின்றாள் குமரி 
குங்குமம் இட்டறியாத பிறைநுதலாள்.  

வைத்த விழி வாங்காது 
கன்னிச் சிற்பத்தைப் பார்த்து 
நிற்கின்றான் கட்டிளங்காளை 
முகத்தில் கவலையின் ரேகை --- அதனால் 
அருகில் வந்த அதிசயத்தையும் கண்டிலன்.

கைவளை ஒலியெழுப்ப கடைக்கண் நோக்கியவனின் 
முழுக்கண்ணையும் ஈர்க்கின்றாள் மோகனப் புன்னகையால் 
முணுமுணுக்கின்றான் யார் நீ , உனக்கென்ன வேண்டும் 
வினா தொக்கி நிற்க விழி தொங்காத அழகை தொட்டு வர.

அற்புதம்: இந்த அழகிய சிலையை நீதான் செதுக்கினாயா 
சிற்பம் கேட்க சிற்பியும் தன்னிலை மீண்டான் 
ஆமாம், நான்தான் செதுக்கினேன் ஆயினும் 
அதில் ஒரு சிக்கல் நவின்று நின்றனன்.

நன்றாகத்தானே இருக்கின்றது பின் ஏன் இந்த விசனம் 
நன்றாகத்தான் இருக்கின்றது ஆனால் நீ நன்றாகப் பார்த்தாயா 
கற்குவியலின் மேலே கடுகி ஏறினள் கன்னி 
சிற்பத்தின் முன்னால் ஒரு சிற்பமாய் நின்றனள் 

நெற்றி அழகாய் இருக்கிறது என்கிறாள் 
அவன் விழியருகே தன் இடையசைய 
ம்....நெற்றி வடிப்பது சுலபம் --- அதன் மேல் 
ஜடை இழைப்பது கடினம்.
ஆம் :கச்சிதமாய் பின்னியிருக்கிறாய் 

கண்கள் அழகாய் இருக்கின்றன 
ஆனால் கருமணிகள் தெரியவில்லை.
ஆம் பெண்ணே; 
ம்....ரூபிணி. காமரூபிணி என் நாமம்.
நல்லது ரூபிணி: சிலை பூர்த்தியடைந்த பின்தான் 
கண்கள் திறக்கும் கருவிழிகள் கதை பேசும்.

ஓ....அப்படியா....!
ஆம்....அப்படித்தான் சிற்பசாஸ்திர வேதம் சொல்கிறது....!

பவளஇதழ்களை பக்குவமாய் வடித்திருக்கிறாய் 
ஆம் ரூபிணி, அதைவிட உதட்டுக்குள் சிரிக்கும் 
பற்களை வடிப்பது சிரமம்.
உதடுகளின் செம்மை எப்படி சாத்தியம் சிற்பி. 
அவற்றில் சிலமூலிகைகள் வெற்றிலைச்சாறு 
சுண்ணாம்புடன் எனது உதிரமும் கலந்திருந்தது.

ஆமாமாம், சிலையின் சிரிப்பு கிறங்கடிக்குது.
தாடையும் கழுத்தும் காதுகளும் கன்னங்களும் 
அங்கலட்ஷணமாய் இருக்கின்றன சிற்பி.
உண்மைதான், அவைகள் சிறிது பிசகினாலும் 
அவலட்ஷணமாய் ஆகிவிடும். காதில் தோடும் 
கழுத்தில் நகைகளும் செதுக்க கஷ்டப்பட்டேன்.

நெடிய தோள்களும்  அபிநயிக்கும் கரங்களும் 
அதில் ஓடும் நரம்புகளும் அற்புதம் சிற்பி .
ஆம் ரூபிணி: அந்த கை வளையல்களை 
தட்டிப்பார் அசைந்து அசைந்து ஒலியெழுப்பும்.

அசைத்து பார்த்தவள் ஆச்சரியத்துடன் 
ஓமோம் அவைகள் கற்களா...!
இங்கு கற்களைத்தவிர வேறொன்றும் 
கிடையாது ரூபிணி.

தயங்குகிறாள் வந்தவள்.... என்ன ரூபிணி 
என்ன தயக்கம் சொல்லு....!
வந்து....பெண்ணின் கொங்கைகள் 
கொப்பளித்து நிற்கின்றனவே--- எனில் 
மிகக் காமம் கொண்டு செதுக்கினீரோ.
 
காமம் கொண்டல்ல, கவனம் சிதறாமல் 
அதை செப்பனிட்டேன். கொங்கைகளின் 
மேலால் நழுவும் துகிலை நீ பார்க்கவில்லையா 
அதை வடிக்க சில மாதங்கள் சென்றன தெரியுமா.
ஓ...ஆமாமாம், இது ஒரு விந்தைதான்.
இதை நீ எங்கு கற்றாய்....!

எங்குமில்லை இங்குதான். தேடல் உள்ளவனுக்கு 
இயற்கை கற்றுத்தரும்.
சொல்லியபடியே  அவளைப் பார்த்தவன் 
ஆங்கே கல்மேல் கிடந்த ஆடியை (கண்ணாடி)
எடுத்து அவள் முன் பிடிக்கிறான்.அதில் அவள் 
தன்னைப் பார்க்கிறாள். ரவிக்கையணியாத 
அவள் மேனியில் மார்பை மூடியபடி துகில் 
தோளில் சரிகிறது.ஈரத்துகிலினுடாக மார்பகங்கள் 
மதர்த்து நிற்கின்றன. சட்டென்று  கைகளால் 
புள்ளடியிட்டுக் கொள்கிறாள்.

நிலைமையை மாற்ற எண்ணி, மெலிந்த இடையும் 
நாபிச் சுழியும் நயமாகப் படைத்திருக்கிறாய் நீ ....!
ஆமாமாம், அந்த ஒட்டியாணம் பார்த்தாயா....!
பார்த்தேன், அதில் பூக்கள் எல்லாம் வெறும் 
மொட்டுகளாக இருக்கின்றன.மலரவில்லை.....!
நான் வடித்த கன்னியும் இன்னும் மலராத மொட்டுத்தான்....!


நாணத்துடன் தலை கவிழ்ந்தவளின் கவனத்தை 
பாதங்களும் சிலம்பும் ஈர்க்கின்றன.
ஆகா, பாதங்களும் அவற்றின் விரல்கள் நகங்கள் 
எல்லாம் அளவோடு அழகழகாய் இருக்கின்றன சிற்பி.
அப்படியே அந்தக் கொலுசை உரசிப்பார்.
சுட்டுவிரலால் எட்டித் தொட்டுப்பார்க்க கொலுசில் இருந்து 
கல்லினாலான மணிகள் கலகலக்கின்றன.....!

ஓ......கடவுளே, நீதான் எவ்வளவு திறமையானவன்.
கெண்டைக்கால் தொடை இடை பிருஷ்டம் எல்லாம் அந்தந்த 
அளவுப் பிரமானங்களில் செதுக்கியிருக்கிறாய். பின் ஏன் 
இந்த விசனம், கண்திறந்துவிட என்ன தயக்கம்......!

ஏறிநின்ற கல்லிலிருந்து ஒய்யாரமாய் சாய்ந்தபடி கேட்கிறாள்.
சிற்பம் இன்னும் பூர்த்தியாகவில்லை ரூபிணி.சிறு வேலை 
பாக்கியிருக்கிறது.அதை நீ பார்க்கவில்லையா....!
ம்....ம்.....பார்த்தேன், ஏன் உனக்கு அதில் அறிவில்லையா 
அல்லது அனுபவமில்லையா.....!
ஆம் உண்மைதான், எனக்கு அதில் அனுபவமில்லை,அறிவுக்காக 
பல ஏடுகளைப் புரட்டினேன், அவைகள் பூடகமாக தெரிவித்தனவே தவிர 
புதிரை விடுவிக்கவில்லை.பல மாதங்கள் கடந்து சென்று விட்டன.
இன்றும் முடியாவிட்டால்  இனி இந்தச் சிலையை உடைத்து விடுவது 
என்னும் முடிவில் உறுதியாய் இருக்கிறேன்.

அவள் சாய்ந்து நின்ற கல்லின் மேல் இருந்த சுத்தியலையும் 
உளியையும் எடுக்கிறான்.கொஞ்சம் பொறு சிற்பி,
அவள் அவன் கையைத் தடுக்க  உளி தவறி அவள் கால்விரல்மீது 
விழுகின்றது.இரத்தம் கொப்பளிக்க அவள் அம்மா என்றலறியபடி 
குந்திய வேகத்தில் காற்றிலே காய்ந்திருந்த துகில் சற்றே நழுவிய 
ஒரு நொடிப்பொழுதில் ....அந்த ஒருநொடியில் அவன் முகத்தில் பிரகாசம்.
அவளைப் பொருட்படுத்தாமல் உளியை எடுத்தவன் சிலையின் இடையில் 
ஒரு விரற்கிடை யளவில் துகில் மறை காயாக அல்குலை செதுக்க 
உளியில் இருந்த அவள் உதிரமும் அதில் இழைந்து சிலை பூரணமாகி 
கண் திறக்கிறது.
அவள் நினைவு வர திரும்பிப் பார்க்கிறான் அவள் எட்டச் செல்கிறாள்.
ரூபிணி நில் போகாதே ....!
என்ன இயற்கை உனக்கு கற்பித்து விட்டது போல.....!
ஆமாம் அறிவைத்தான் தந்திருக்கிறது.ஆனால்.....!
நின்று திரும்பிக் கேட்கிறாள், ஆனால் என்ன ....!
அனுபவத்துக்கு நீ வேண்டும்....நீதான் வேண்டும் ரூபிணி.....!
எதுவரை......!
என் உயிர் உள்ளவரை,நீ உயிர் குடுத்த சிலை உள்ளவரை,
 நிலமும் நீலவானம் உள்ளவரை......!

யாழ் 22 அகவைக்காக.....!
ஆக்கம்......!
சுவி......! 
 

தலைமுறைகள் விடைகாண்பர்!

6 months 2 weeks ago

தலைமுறைகள் விடைகாண்பர்!
----------------------------------------------------------------------

விடுதலைக்கு உரமான வீரத் தளபதிகாள்
கலையாது நினைவுகளில் வாழும் வீரர்களே
விழிநீரால் நினைந்துருகும் நிலையாகப் போனவரே
கலையாத கனவொருநாள் மெய்ப்படும் வேளைவரும்
உறங்காத உணர்வுடனே உயிர்பெறும் பொழுதினிலே
விடிவுபெறும் தேசத்தில் விழிதிறப்பீர் வீரர்களே!

விழிதிறக்கும் வழிகாணும் தலைமுறைகள் எழும்போது
விலங்குடைத்து நிமிர்கின்ற வழிதேடி விடைகாண்பர் 
புலமெங்கும் வளம்பெற்று நிமிர்கின்ற இளையோரும்
தாய் நிலமெங்கும் தமிழோடு வாழ்கின்ற இளையோரும்
அறிவோடு இணைந்தே அறப்போரைத் தொடுத்தாலே
நிலத்துயரை நீக்கிவிடும் நிலைகாண வழிபிறக்கும்!

சாவுகளை எதிர்கொண்டு சரித்திரமாய் வாழ்பவரே
உயி ரீகங்கள் ஒருநாளும் இலக்கின்றி தூங்காது
காலங்கள் கடந்தாலும் கண்மலர்கள் விழித்தெழுந்தே
யாகத்தின் பயனடையும் வேதத்தைப் படைத்திடுவார்
யாதும் ஊரேயென யாக்கைபோகும் வழி போகாது
ஆற்றல் அறிவுகொண்டே தாயகத்தை மீட்டெழுவர்!

ஆனந்தபுர நாயகரே வீரவணக்கம்!

எண்ணப் பகுப்புகள்

6 months 2 weeks ago
எழுதவேண்டும் என்று
எண்ணும் பொழுதுகளில் எல்லாம்
என் முன் வந்தமர்ந்துவிடுகிறது
ஆண் என்ற முகமும்
அதன் அகங்காரமும்
 
எத்தனையோ வார்த்தைகளை
மனதின் எழுத்தாணி
எழுதித்தான் விடுகின்றது
ஆயினும் அத்தனையிலும்
எத்தனை எழுத்தை
சுதந்திரமாய் நான் எழுத
உன்னால் அனுமதிக்க முடியும்
என்பது எனக்கு மட்டுமே
தெரிந்த இரகசியம்
 
என்ன எண்ணுவார்களோ?
எப்படி அர்த்தம் கொள்வார்களோ?
என்னுடையதாக எண்ணுவார்க்களோ?
இப்படி எண்ணி எண்ணியே
ஒவ்வொன்றாய் நீக்கி நீக்கி
எதுவுமற்று எஞ்சியிருக்கும் சிலதும்
ஏதும் அர்த்தமற்றதாய்ப் போக
எல்லைகளின்றி நீண்டுகொண்டிருக்கின்றது
எழுத முடியாத வார்த்தைகள்
 
  •  
  •  

இல்லறம்

6 months 3 weeks ago

     tantra-couples-retreat.jpg         

        

                               இல்லறம்

இருமனம் இணைந்த திருமண வாழ்வில்
   இது ஒரு சுகராகம்
பிரிவினை விரும்பும் இருவரின் வாழ்வில்
   இது ஒரு பெரும் சோகம்
சரிநிகர் என மன உணர்வினை மதித்தால்
   இது ஒரு மலர்த் தோட்டம்
பெரியவர் நான் என ஒரு மனம் நினைத்தால்
   இது ஒரு சிறைக் கூடம்
அன்பெனும் கடலில் இதயங்கள் மிதந்தால்
   இல்லறம் ஒரு சொர்க்கம்
துன்பங்கள் அங்கு தொடர்கதையானால்
   நிரந்தரமாய் நரகம்

வாதங்கள் இல்லா வாழ்க்கையில் என்றும்
   வாசங்கள் பாரங்கள்
பேதங்கள் எல்லாம் நேசங்களாக
   நெஞ்சினில் தாபங்கள்
ராகங்கள் இசைக்க வாத்தியம் தேவை
   தாளங்களும் தேவை
பாசங்கள் நெஞ்சில் பூத்திடும் வேளை
   சோகங்கள் தூரங்கள்

தமிழொடு இனிமை இணைந்தது போல
   தம்பதிகள் இணைந்தால்
அமிழ்தோடு தேனும் அருந்துதல் போல
   ஆனந்தம் பெருகி வரும்
பெருகிடும் அன்புக் கடலினில் இதயம்
   மிதந்து வரும் வாழ்வில்
இருமனம் இணைந்த இல்லறம் என்றும்
   இணைபிரியா இன்பம்.

கலையாத கனவு

6 months 3 weeks ago

                                                                             கலையாத கனவு
                                                                             ----------------------------  
என்றுமில்லாத ஒரு பரவசத்தில் தமிழீழமெங்கும் மகிழ்ச்சிப் பிரவாகம். பார்க்கும் முதன்மை வாய்ந்த இடங்களில் எல்லாம் தமிழீழ தேசியக்கொடி பட்டொளிவீசிப் பறந்து கொண்டிருந்தது. மாவீரர்துயிலும் இல்லங்கள் மஞ்சள் சிவப்பு வண்ணக்கொடிகளால் அழகூட்டப்பட்டு, வித்துடல்கள் உறங்கும் கருவறைகள் எங்கும் மலர்கள் தூவித் தீபங்கள் ஏற்றப்பட்டு உற்றார் உறவுகளின் விசும்பலும் மக்களின் வாழ்த்தொலியுமாக ஒருபுறமென்றால், குடாரப்பு, திருகோணமலை, மன்னார், காங்கேசன்துறை எனக் கடலிலே காவியமான மாவீரர்களுக்கும் வானிலே மேலெளுந்து காவியமானோருக்கு இரணைமடுவிலுமென மக்கள் தமது நன்றிக் கடனைச் செலுத்த, ஆலயங்கள் தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் தோறும் சிறப்பு வழிபாடுகள் முதல் அன்னதானம் வரை எங்கும் மறுபுறமாக ஒரே அமர்க்களம்.  அதேவேளை ஆங்காங்கே இருந்த பௌத்த ஆலயங்களிலும் பிரித்தோதும் ஓசையுமாக இலங்கைத்தீவில் சிறீலங்கா -  தமிழீழம் என்ற தேசங்களாகியதான அறிவிப்பு நள்ளிரவில் வெளியாகியதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவுக்குப்பின் தொடங்கிய இந்த ஆரவாரம் மெதுவாகப் பரவித் தமிழீழ தேசத்தில் மட்டுமல்ல மலையகம் உட்பட இலங்கையில் தமிழ்மொழிபேசுவோர் வாழும் கிராமங்கள்தோறும் கொண்டாட்டமாகவே இருந்தது. 
 
கொறோனாவால் திடீரென மாற்றம் கண்ட உலகஒழுங்கும் சிறீலங்காவின் அரச ஆட்சியாளர் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தோரென பல்வேறு தரப்பினர் மீதான உறுதிப்படுத்தப்பட்ட இனப்படுகொலைத் தரவுகளின் அடிப்படையில் தமிழ்ப் புலமையாளர்கள் சட்டவல்லுனர்கள் பல்கலைக் கழக குமுகாயம் சிங்கள முற்போக்குச் சக்திகள் தமிழகத்தின் பல்வேறுகட்சிகள் மனித உரிமை அமைப்புகள் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் என ஒன்றிணைந்து உலக குமுகாயத்துக்குக் கொடுத்த அழுத்தம் கரணியமாக சிங்கள அரசதரப்பு இரண்டு திட்டங்களை முன்வைத்தது. அதில் உள்ளக சுயநிர்ணயமும் போர்க்குற்ற விசாரணையும் அல்லது வெளியக சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பு என்று முன்வைத்த திட்டங்களை ஏலவே பெற்ற பட்டறிவின்பாற்பட்டு ஆய்வுசெய்த புலமையாளர்கள் முதலில் வெளியசுயநிர்ணய உரிமையை அடைந்து, அதன் மூலம்; அனைத்துலக குமுகாயத்தில் ஒரு அதிகாரமுள்ள தரப்பாகி இனப்படுகொலையாளர்களுக்கு தண்டனை வேண்டிக்கொடுக்கலாம் என்ற சிந்தனையின் அடிப்படையில் ஏற்பட்ட முடிவின் வெளிப்பாடாய் ஏற்பட்டுள்ள மாற்றமே  எங்கள் சனத்தின் இந்த அமர்க்களத்துக்குக் கரணியமா என்ற வினாவோடு, அமைதியாகப் பல களமுனைகளைக் கண்ட தமிழ்மாறன் தனது மனைவியையும் பிள்ளைகளையும் இதேநாளில் புதுக்குடியிருப்பிலே பறிகொடுத்ததை எண்ணியவாறு, தன்னோடு களத்திலே நின்று ஒரு காலையும் கண்ணையும் இழந்தும் புலம்பெயர் தமிழர்கள் சிலரது ஆதரவோடு சுயதொழில் முயற்சியாக மீன் பண்ணையமைத்து தன்போன்ற பலரையும் இணைத்துச் செயற்படும் கதிராளனின் பண்ணையை நோக்கிச் சென்று கொண்டிருந்தவனை, ஏய் டமில்மாற, ஏய் டமில்மாற என்ற குரலொலி கேட்டு நித்திரையிலிருந்து திடுக்குற்று எழுந்தவன் சட்டையை அணிந்துகொண்டு, நாடாளுமன்றத் தேர்தலில் கோத்தாவின் கட்சி சிங்களவர்களது வாக்குகளால் வென்று ஆட்சியமைத்து ஒரு வாரம்தானேயாகிறது என்று சிந்தித்தவாறு குடிசையின் வாசலுக்குச் செல்லவும் படைப்புலனாய்வுக்குழு வாசலுக்கு வரவும் சரியாக இருந்தது.  வந்தவன் கதவைத் திறந்து „என்ன?' என்று கேட்கின்றான்.  „எங்களுக்குக் கோத்தா மாத்தயாட்டையிருந்து உத்தரவு வந்திருக்கு! உங்களைப் போன்றவர்களை மீண்டும் கைது செய்யச் சொல்லி' என்று அழைத்துச் செல்கின்றனர். அவன் சிந்தனை தான் காலையிற் கண்ட கனவைச் சுற்றிச் சுழல்கிறது. கனவுமெய்ப்படும் என்று அவன் ஆழ்மனது சொல்கிறது. 


யாவும் கற்பனை


நட்புடன்
நொச்சி  

சற்றே நில் ! திரும்பிப் பார்!

6 months 3 weeks ago

 
நீரோடடத்தில் செல்லும் துரும்பாக

இயந்திரங்களோடு இயந்திரமாய்  

கால  நிலையோடும்  போட்டி போட்டு

ஓடி யோடி உணவு  உறக்கமின்றி

எந்திரமாய் உழைத்த மனிதா

 

வங்கியிலே பணம்  பகடடான  வீடு

களி த்திருக்க மனைவி பிள்ளைகள்

மதி  மயங்க  மது வகைகள்

பவனி செல்ல படகு போன்ற கார்  

என மமதை கொண்ட மானிடா


சற்றே நில் ..எல்லாம் உனக்கே

நானே ராஜா ..எனக்கே ராச்சியமென

 உண்டு களித்து  உலகை ஆண்ட மானிடா


  அறிவியல் கொண்டு ஆயுதங்கள் செய்து
 
 அணுகுண்டுகள் போர்க் கப்பல்கள்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவு கணை கள்

 .ஏழைகளை சுரண்டி  ஏகாதிபத்திய ஆடசி

 

 பெரியவன் என்னை விட யாரும் இல்லை

என்னால் எதையும் அழிக்க முடியும்

 என ஆயுதங்களைக்  குவித்தவனே

 எந்த ஆயுதமும் வைரசை அழி க்காது


இன்று ..வைரஸ்எனும்  கண்ணுக்கு தெரியாத

எதிரி ஒன்று  பலி  எடுக்க வந்திருக்கிறது

உறவுகளைப் பிரித்து  தனிமையில்  தவிக்க விட்டு

தனி வழியே தகனம் நோக்கி அனுப்பு கிறது

 

 தாயும் கூட வராள்  தந்தையும் கூட வரார்

கட்டிய மனைவியும் பெற்ற  பிள்ளைகளும்

 உடன் பிறந்த உறவுகளும் , ஊரவரும்

 உயிரற்ற உடலம் மண்ணு க்கு செல்லும்
 

 சற்றே நில் ...திரும்பி பார்  மமதையை அடக்கு

மன்னிப்பை கேளு படைத்த வனை நினை

தான  தர்மம் செய்  உறவுகளை மதி

மனம் வருந்து செய்த பாவங்களுக்காய்


தொடக்கம் என்று ஒரு  நிலை இருந்தால்

முடிவு என்று ஒரு நிலை இருக்கும்

ஒரு வழி அடைத்தால் மறு  வழி  திறக்க

பாவ  வழியை விட்டு பரம்பொருளை  நாடு

பருவக்காத்திருப்பு

6 months 3 weeks ago

மங்கை அவளது அகமது புதிராகிடும்
விழிகளிரண்டில் கணை தொடுப்பாள் 
கார்மேகக் கூந்தலின் பூவும் கமழும்
இடையின் வளைவுகள் கண்டு
கம்பனும் மயங்கிக்கிடக்க
சாரை போல் நடந்து வருகையில் ஊரும் திகைக்க.....கவர்ந்திடும் புருவங்கள் புருசர்களையும் ஈர்க்க
நாணமும் நாணித்திட .... தவம் கிடக்கிறாள் மனம் கவர்ந்தவனை அடைந்திட......

எனது குடும்பத்திற்கு, கொரோனா ஏற்படுத்திய மரண பயம். - தமிழ் சிறி.-

6 months 3 weeks ago

 எனது குடும்பத்திற்கு, கொரோனா ஏற்படுத்திய  மரண பயம். - தமிழ் சிறி.- 

2019´ம்  ஆண்டு விடை பெற்று, செல்லும் போது..... 
2020´ம் ஆண்டை வரவேற்க உற்சாகமாக இருந்த நேரம்.

இப்படியான... ஆண்டு மாற்றங்கள், நடக்கும் தருணங்களில்....
எனது பிள்ளைகள்... சிறுவர்களாக இருக்கும் போது.. 
அவர்களுக்கும், எனக்கும்..  உற்சாகமாக இருப்பதற்காக,
நிறைய... வாண வேடிக்கைகள் செய்து, புத்தாண்டை வரவேற்போம்.

இப்பிடி,  "காசை கரியாக்தேங்கோ... " என்று, மனைவி சொன்னாலும்,   
வழக்கம் போல்... ஒரு காதால்.. வாங்கி, மறு  காதால், வெளியே விட்டு விடுவேன்.
அதை நான்... கணக்கில் எடுப்பதில்லை. (அதுதான்... காதல், என்பார்கள்)

ஆனால்.... கடந்த சில ஆண்டுகளாக, பிள்ளைகளுக்கு
படிப்பில்... கவனம் செலுத்த வேண்டியிருந்ததால் அந்த, ஆசையே வரவில்லை.

2020 பிறக்கும் போது.....   எனக்கு, இன்ப அதிர்ச்சி  ஊட்டுவதற்காக...
மூன்று  பிள்ளைகளும், "அப்பா.... வாங்கோ... வெடி கொளுத்துவோம்" என்றார்கள் 
அண்டைக்கு..... சரியான குளிராக இருந்த படியால்...

நீங்கள்.... கொளுத்துங்கோ...
நான்... "யன்னலாலை..." எட்டிப் பாக்கிறன், என்று சொல்லி விட்டேன். 
அவர்கள்.....  வெடித்த,  "சீனா"  வெடிகளை மனைவியும் ரசித்தார்.

வெடி கொழுத்தப் போன... ஆட்களுக்கு, சாம்பிராணி குச்சி 

மனைவியின் அனுமதி இல்லாமல், அங்கு இருந்து...
ஒரு பொருளும்.... நகர முடியாது. என்பது.. நமக்கு... நன்கு தெரியும். 
அப்படி இருந்தும்....

(தொடரும்)

 

 

விதியே கதை எழுது……..

6 months 3 weeks ago

விதியே கதை எழுது……..

( 1 )
வானத்தில் வட்டநிலவு இரவல் ஒளியில் எறித்துக் கொண்டிருந்தது.
கட்டிலில் விழி மூடாமல் விழித்திருந்தாள் கவிதா.
வானில் ஓடி மேகத்திரையில் முகம் மறைத்து விளையாடிக்கொண்டிருக்கும் வெண்நிலவின் அழகை ரசிக்க மனமின்றி மேகக் கூட்டத்தை வெறித்து நோக்கிக் கொண்டிருந்தன அவள் விழிகள்.
ஒரு காலத்தில் வெள்ளி நிலா பவனி வரும் அழகை ரசித்து ரசித்து கவிதை எழுதி அந்த மோகத்தைத் தூண்டுகின்ற முழுமதியின் அழகில் மனதைப் பறி கொடுத்து மனம் லயித்துக் கிடந்தவள் அவள்.
அதிலும் பனிக்காலம் முழுவதும் பார்க்க முடியாத அந்த நிலவு வசந்தகாலத்தில் பார்க்கக் கூடியதாக மூடிக்கிடந்த சாளரங்கள் திறக்கப்பட்டு திரைச் சீலைகள் விலக்கப்பட்டு வானத்திரையின் நீல வண்ணத்தை ரசிக்கும் யாருக்கும் மனம் லயிக்கும்.
ஆனால் கவிதாவின் மனதில் வெறுமை மிஞ்சி கிடந்தது.
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எத்தனை தடைகளைத் தாண்டி வந்திருக்கிறாள்
நினைவலைகள் மனதில் மோதி இருபத்தைந்து ஆண்டுகள் வேகமாகப் பின்னோக்கி ஓடின.
கவிதாவும் அவளது தோழிகளுமாய் பறந்து திரிந்த பள்ளிக்காலம்.
துடிப்பும் துருதுருவென்ற தோற்றமும் மிடுக்கான நடையும் கொண்ட கவிதா பதினைந்து வயதிலேயே வயதுக்கு மீறிய வளர்ச்சியுடன் அறிவிலும் அதி விவேகியாக விளங்கினாள்.
அன்று வகுப்பறை என்றமில்லாதவாறு ஏதோ அமைதியுடனும் மாணவர்கள் முகத்தில்  பலத்த சிந்தனையுமாக காணப்பட்டது.
“என்னப்பா இண்டைக்கு ஒருநாளுமில்லாமல் வகுப்பு அமைதியாக் கிடக்கு”
“நீர் நேற்று வராதபடியால உமக்கு தொரியாதென்று நினைக்கிறேன். நேற்றிலிருந்து எங்களுக்கு ஒரே யோசனையாக் கிடக்குது.”
“ ஓ, நான் நேற்று ஒருநாள் பள்ளிக்கூடம் கட் அடிச்சவுடன் இங்க என்ன நடந்தது?”
கவிதா நகைச்சுவையாகத்தான் கேட்டாள்.
அப்பொழுது நாடெங்கும் இராணுவக் கெடுபிடிகளும் கைதுகளும் கண்ணிவெடித் தாக்குதல்களும் விமானத் தாக்குதல்களும் ஆரம்பித்திருந்த காலம்.
“இங்க எல்லோரும் இயக்கங்களைப் பற்றியும் போராட்டம் பற்றியும்தான் ஒரே கதையாக் கிடக்கு.
“என்னவாம் நாங்களும் எங்கட விடுதலைக்காகப் போராடத்தானே வேணும்” கவிதா சாதாரணமாகத்தான் சொன்னாள்.
வகுப்பில் சில மாணவ மாணவிகள் தீவிரமாக போராட்டத்தைப் பற்றி பேசத் தொடங்கினர்.
( 2 )
கவிதாவுக்கும் தானும் நாட்டிற்காக போரட வேண்டுமென்ற எண்ணம் இருந்தாலும் அவளது அடிமனதில் இருந்து அதற்கு தடையாக மனம் தடுமாறியது.
காரணம் சிறிது காலமாக அவளது பாடசாலையில் உயர் வகுப்பில் படிக்கும் சுரேசிடம் நாட்டம் ஏற்பட்டிருந்தது.
இருவரும் ஒருவரை ஒருவர் நோக்குவதும் புன்னகைப்பதுமம் ஒருவர் மனதை மற்றவருக்கு வெளிப்படுத்த போதுமானதாக இருந்தது.
தாய் மண்ணில் தணியாத தாகமாய் மண்தாகம்.
அன்று பாடசாலை முடிந்ததும் கூட்டம் நடைபெற்றது.
இரு இளைஞர்கள் வந்து மாணவர்களுடன் கலந்துரையாடினர். மாணவ மாணவிகள் தீவிரமானார்கள்.
நாட்டில் நடைபெறம் நிகழ்வுகள் அவர்கள் மனங்களில் போராட்ட உணர்வை தோற்றுவித்தது.
“எத்தனை நாட்களுக்குத்தான் அடிக்க அடிக்க பார்த்துக்கொண்டு சும்மா இருப்பது.
இளம் இரத்தம் எதையும் சிந்திக்கவில்லை.
எழுச்சியுடன் செயற்பட ஆரம்பித்தனர்.
மாணவர்கள் மட்டுமல்ல மாணவிகளும் தமது பெயர்களை பட்டியலிடத் தொடங்கினர்.
சுரேஸ் ஏற்கெனவே பெயரை பதிவு செய்து விட்டதை அறிந்த கவிதா என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தாள்.
பெற்றவர்கள் மத்தியில் பிள்ளைகளை  தாய்மண்காக்க அனுப்புவதா? அல்லது தடை செய்வதா? ஏன்பதே பெரும் மனப் போராட்டமாக போய்விட்டது.
“அம்மா வகுப்பில எல்லோரும் பெயர் கொடுத்திற்றினம்” மெதுவாகத் தாயிடம் தன் எண்ணத்தை வெளிப்படுத்த நினைத்தாள் கவிதா.
ஒரே மகள் என்று கண்ணும் கருத்துமாக பொத்திப் பொத்தி வளர்த்த மகள் கேட்ட விதம் அன்னையின் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியது.
“கவிதா நீ படித்து பெரிய ஆளாக வர வேணுமென்றுதானே அப்பா இவ்வளவு கஸ்ரப்பட்டு உழைக்கிறேர்.”
“அம்மா இப்பிடி எல்லாரும் சொன்னா யாரம்மா எங்கட மண்ணுக்காகப் போராடிறது”
அம்மாவுக்கு நிலமையின் தீவிரம் தெரிய இந்த நிலையில் பேசாமல் இருப்பதுதான் நல்லது என நினைத்து மௌனமானார்.
அடுத்த நாள் வீதியில் சுரேஸ் எதிர்ப்பட கவிதா தயங்கி நின்றாள். சுரேஸ் எதுவும் பேசவில்லை. அவனது கனிவான பார்வையில் காதல் தெரிந்தாலும் அதனை மிஞ்சிய விடுதலை வேட்கை கொழுந்து விட்டு எரிவதை அவதானித்தாள்.
“என்ன நீங்களும் பேர் கொடுத்திற்றீங்களா?”
கவிதாவின் கேள்வியில் வேதனை கலந்த அன்பு.
“என்ன செய்யிறது இந்த காலக்கட்டத்தில எங்கட சந்தோசத்தை விட எம் மக்களின் எதிர்காலத்திற்காக நாம் போகத்தான் வேணும்”
“அப்ப நான்”?
கவிதா தயக்கத்துடன் சுரேசை ஏறிட்டாள்.
“உமக்கும் விருப்பமெண்டால் பேர் கொடுக்கலாம்” ஆனால்…சுரேஸ் தயக்கத்துடன் இழுத்தான்.
“என்ன ஆனால்?” கேள்வியைப் பதிலாக்கினாள் கவிதா.
“இல்லை நீர் நல்லா படிப்பீர் எண்டு தெரியும். அதிலும் ஒரே பிள்ளை .”
அதற்குமேல் வீதியில் ஆள்நடமாட்டம் இருந்ததால் இருவரும் விழிகளால் விடைகொடுத்தனர்.


( 3 )

கவிதாவும் பெயர் கொடுக்கப் போகிறாள் என்ற செய்தி நண்பிகளுடாக கவிதா வீட்டிற்கும் எட்டி விட்டது.
அப்பா கார்த்திகேசு வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் கமலம் “என்னப்பா எனக்கு பெரிய கவலையாக் கிடக்கு. இங்க பள்ளிக்கூடத்தில பிள்ளைகள் எல்லாம் பேர் கொடுக்கினமாம். நீங்க கேள்விப்படஇல்லையே”
“கேள்விப்படாமல் என்ன? நாட்டு நிலமை அப்பிடிக் கிடக்குது. ஏன் கவிதா ஏதும் சொன்னவளே?”
ஆதங்கத்துடன் கார்த்திகேசு கேள்வியைத் தொடுத்தார்.
“எனக்கென்னவோ இவளும் பேர் கொடுக்கப்போறதா சந்தேகமாக் கிடக்கு. பக்கத்து வீட்டு ராஜியும் சாடமாடையாச் சொன்னவள்”
“இளம் இரத்தம். விடுதலைக்காகப் போராட வேணுமெண்டு எல்லோருக்கும் விருப்பம்தான். ஆனால் எங்களுக்கு கவிதாவை விட்டா யார் இருக்கினம்.”
அம்மாவும் அப்பாவும் அங்கலாய்ப்புடன் பேசிக் கொண்டிருப்பதை தூங்குவதுபோல் பாவனை செய்தபடி கவிதா தூங்காமல் கேட்டுக் கொண்டிருந்தாள்.
சுரேசே பேர் கொடுத்திற்றான் இனி நான் ஏன் யோசிப்பான் என்று ஒரு பக்கமும் அப்பா அம்மா பாவம் . என்னை எத்தனை எதிர்பார்ப்போடு தாங்கித் தாங்கி வளர்த்தார்கள்.
அவர்களது எதிர்பார்ப்பினை ஏமாற்றுவதா? ஏன்ற இன்னொரு பக்கமுமாக இருதலைக் கொள்ளி எறும்பாக அந்த இரவுப் பொழுது கழிந்தது.


(4)

இரு நாட்களின் பின் ஊரே அல்லோலகல்லோகப் பட்டது.  இராணுவம் சுற்றி வளைத்து இளைஞர்களையும் யுவதிகளையும் கைது செய்து விசாரணைக்காகக் கொண்டு போவது தொடர்ந்தது.
பக்கத்து வீட்டு ராஜியும் லைப்ரரிக்கு போய் விட்டு வரும் வழியில் மறித்து விசாரித்துவிட்டு விடுவதாகக் கூறி இராணுவம் கொண்டு சென்று விட்டது.
கவிதாவின் அப்பாவும் அம்மாவும் இரவுமுழுவதும் தூங்கவில்லை. விடிந்ததும் விடியாததுமாக கையில் கிடைத்த பொருட்களுடன் கவிதாவையும் கூட்டிக் கொண்டு பக்கத்து கிராமத்திற்கு பாதுகாப்பாகச் சென்று விட்டனர்.
ஏப்பிடி கவிதாவைக் காப்பாற்றுவது என்பதே இருவருக்கும் பெரிய கவலையாகப் போய் விட்டது.
“என்னப்பா அங்க இவ்வளவு; சனமிருக்கு. நாங்க மட்டும் இங்க வந்திற்றம். என்ர படிப்பும் வீணாகப் போகுது.” கவிதா மெதுவாக முணுமுணுத்தாள்.
“அது சரி பிள்ளை படிப்பு வீணாகப் போகுதெண்டு பார்த்தால் நாங்க உன்னையும் பறி கொடுத்திருவம்”
எதுவும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட கார்த்திகேசு பெருமூச்சு விட்டார்.
அம்மா கமலமோ எப்பிடியாவது மகளை காப்பாற்ற வேண்டும் .எப்படி காப்பாற்றுவது என்று கடவுளை கை எடுத்து கும்பிட்டபடி இருந்தாள்.
அவர்கள் தங்கி இருந்த உறவினர் வீட்டில் இன்னும் ஒரு குடும்பமும் தங்கி இருந்தனர்.
அம்மாவின் அங்கலாய்ப்பைக் கேட்ட அந்தப் பெண் “கமலம் அக்கா எனக்குத் தெரிந்த இடத்தில மாப்பிள்ளை ஒன்று இருக்கு. பொடியன் கனடாவில இருந்து வந்திருக்கிறான்.
பொம்பிளை தேடிக் கொண்டிருக்கினம். உங்களுக்கு விருப்பமெண்டா சொல்லுங்கோ. கதைக்கிறன்.

(5)


துடுப்பில்லாமல் மூழ்கும் நிலையில் இருப்பதாகக் கலங்கிக் கொண்டிருந்த கமலம் இத் துடுப்பை இறுக்கிப் பிடித்தக் கொண்டாள்.
“என்னப்பா கவிதாவுக்கு ஒரு நல்ல இடத்தில மாப்பிள்ளை இருக்காம்.”
கமலம்; சொல்லி முடிக்க முதலே “என்ன மாப்பிள்ளையே உனக்கென்ன விசரே?
அவளுக்கு இப்பதான் பதினாறு வயது அதுக்குள்ள கலியாணக் கதை கதைக்கிறாய” கார்த்திகேசு எரிந்து விழுந்தார்.
“உங்களுக்கு எப்பிடி விளங்கப் படுத்திறது எண்டு  எனக்குத் தெரியல்லை. இவள் கவிதா இயக்கத்திற்கு பேர் கொடுக்கத் துணிந்திற்றாள். அதோட ஆமியின்ர கண்ணில இருந்தும் எப்பிடிப் பாதுகாக்கிறது எண்டும் தெரியல்ல.”
“அதுக்கு” கையறு நிலையில் கார்த்திகேசு மனைவியை ஏறிட்டார்.
“ஒரு கலியாணத்தைக் கட்டிக் கொடுத்திற்றால் பிள்ளை எங்கையாவது பத்திரமா இருக்குதெண்டாவது நிம்மதி கிடைக்கும்.”
கார்த்திகேசின் மறுப்பு கமலத்தின் நியாயத்திற்கு முன் எடுபடவில்லை.
எப்பிடி எப்படியோ அழுது அடம்பிடித்து கெஞ்சி கொஞ்சி எல்லா வழிகளிலும் முயற்சி செய்தும் கவிதாவின் கோரிக்கை எடுபடவில்லை.
ஒருகணம் சுரேசின் முகம் நினைவில் வந்து போனது.
ஏன்ன செய்தும் பெற்றவளின் பிடிவாதத்திற்கும் அன்பிற்கும் முன்னால் கவிதா எதுவும் செய்யத் திராணியற்றுப் போனாள்

பதினாறு வயதுப் பருவம். இல்லறம் பற்றியோ குடும்ப வாழ்வு பற்றியோ எவ்வித அறிவோ எதிர்பார்ப்போ இல்லாத இளமைப் பருவம்.
முன்பின் தெரியாத அதிலும் வயதிலும் சரிபாதி கூடிய முகமறியாத ஒருவனை மணமகனாக ஏற்றுக் கொள்வது கவிதாவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதியின் மனநிலையை ஒத்திருந்தது.
திருமண ஏற்பாடுகள் மளமளவென்று நடைபெற்றன.
கவிதாவோ எதுவும் செய்ய முடியாமல் எடுப்பார் கைப் பிள்ளையாக நடைப்பிணமாக நடமாடினாள்.


( 6 )

திருமணநாளும் வந்தது.
பட்டுப் புடவை நகை  பூ பழம் மாலை மரியாதை ஊர்வலம் எல்லாமே மிக விமரிசையாக நடைபெற்றது.
“கவிதா நல்ல வடிவா இருக்கிறாள்”
“மாப்பிள்ளை கொடுத்து வைத்தவர்”
கவிதாவுக்கு என்ன குறை சொத்து சுகத்துக்கு கறை இல்லை”
வந்திருந்த அமைவரும் சொத்து சுகம் பற்றியும் வசதி வாய்ப்புகள் பற்றியும் வாய் கிழியக் கதைத்தனரே ஒழிய கவிதாவுக்குள்ளும் ஒரு மனம் இருப்பதை எவரும் கண்டு கொள்ளவில்லை.
மாலையானதும் மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்தனர்.
பெற்றவர்களைப் பிரிந்து செல்வது வேதனையாக இருந்தாலும் கவிதாவால் இவ் அவசரத் திருமணத்தையோ பெற்றவர்கள் தனக்கு நன்மை செய்வதாக செய்த இந்த ஏற்பாடுகள் பற்றியோ மனதார ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
சிந்தித்து செயற்படாமல் ஏதோ அவசரம் அவசரமாக தமது பொறுப்புக்களை தட்டிக் கழித்ததாகவே எண்ணத் தோன்றியது.
அலங்காரச் சிலையாக கவிதாவை ஒப்பனை செய்தனர்.
சின்னஞ்சிறு பெண்ணாக தன் கனவுகள் அனைத்தும் சிதைக்கப்பட்ட ஓர் ஓவியமாக திருமண பந்தத்தை சுமக்கத் திராணியற்று மாப்பிள்ளையின் முகத்தைக்கூட முழுதும் பார்த்தறியாத ஓர் பரிதாபத்துக்குரிய பாவையாக புகுந்த வீட்டில் மருமகளாக காலடி எடுத்து வைத்தாள்.
மாப்பிள்ளை கண்ணன் கனடாவில் குடிபுகுந்து ஜந்து வருடங்களாகின்றன.
ஊரில் பத்தாம் வகுப்பு  படித்தபின் மேலே படிக்க விருப்பமில்லாததாலும் நண்பர்கள் சேர்க்கை நல்லதாக அமையாததாலும் பெற்றவர்கள் அவனை கனடா அனுப்பி விட்டனர்.
அவனும் அங்கு சென்ற இந்த ஜந்து வருடங்களில் நண்பர்களுடன் சேர்ந்து ஒரே அறையில் வாழ்ந்து பலவித பழக்கங்களிலம் ஈடுபட்டு மது மாது சிகரட் என்று எல்லாவித கெட்ட பழக்கங்களுக்கும் ஆளாகி இருந்தான்.
ஆனாலும் ஊரிலும் வீட்டிலும் உள்ளவர்களுக்கு அவன் கனடா மாப்பிள்ளை.


( 7 )
தாம்பத்திய உறவு பற்றியோ பாலியல் அறிவு பற்றியோ எதுவும் அறிந்திராத பதினாறு வயது நிரம்பிய அந்த பிஞ்சு மனதில் எத்தனையோ உணர்வுகள்.
பயம், அதிர்ச்சி, கோபம், வெறுப்பு, களைப்பு, இப்படி அத்தனையும் கலந்த ஓர் அயர்ச்சி.
அந்த சின்னப் பெண்ணை அழகாக அலங்கரித்து வேள்விக்கு அனுப்பும் ஆடுபோல ஆயத்தங்கள் நடந்தன.
நேரமாக ஆக அவள் வேதனை பெற்றவர்கள் மேல் கோபமாக மாறியது.
“கவிதா கொஞ்சமாவது சாப்பிடு. நீ காலையிலிருந்து சரியா சாப்பிட இல்லை”
அம்மா ஆதங்கத்துடன் நெருங்கி வந்தாள்
“எனக்கு வேணாம் நீங்களே சாப்பிடுங்க”
“ஏன் கவிதா கோவமா?”
“இல்லை சந்தோசம்” வெறுப்புடன் பதிலளித்தாள்.
முதலிரவுக்கான அறை ஆயத்தமாக இருந்தது.
வீட்டு மண்டபத்தினுள் கண்ணனின் உடன்பிறப்புகள் உறவுகள் அனைவரும் கூடியிருந்து கண்ணனுடன் கும்மாளமிட்டுக் கொண்டு இருந்தனர்.
கண்ணனோ கனடா கதைகளை அவர்களுக்கு கூறி ஏதோ சொர்க்கத்தின் கதவுகள் தூரமில்லை என்ற தோரணையில் கதை அளந்து கொண்டிருந்தான்.
கவிதா தனிக்காட்டில் அகப்பட்ட மான்போல மிரள மிரள விழித்துக்கொண்டிருந்தாள்
இரவு சாமப் பொழுதாகிக்கொண்டிருந்தது.
கவிதாவோ சோர்ந்து துவண்டு ஒரு மூலையில் ஒடுங்கி அமர்ந்திருந்தாள்.
மாப்பிள்ளை கண்ணன் வயிறு நிறைய சாப்பிட்டு ஏப்பம் விட்டபடி முதலிரவு அறைக்குள் பிரவேசித்தான்.
அவன் பார்தத முதல் பார்வையிலேயே கவிதா மிரண்டு போனாள்.
அவனது கண்கள் சிவந்திருப்பதை பார்த்தவள் அவன் குடித்திருப்பானோ என்று நினைத்தாள்.
அவளது மிரட்சியான கண்களைப் பார்த்தவன் “ ஏன் இப்பிடி பயப்படுபகிறாய்”என்றபடி தமது சேட்டை கழட்டி கங்கரில் மாட்டினான்.
அவனது கழுத்தில் புதிதான தங்கச் செயின் பளபளத்தது.
கவிதா குனிந்து தனது கழுத்தில் தொங்கும் தாலிச் சரடைப் பார்த்தாள்.
அதுவும் பளபளவென்று தன்னைப் பார்த்த சிரிப்பது போல உணர்ந்தாள்.
அவளைப் பற்றியோ அவளது உணர்வுகளைப் பற்றியோசிறிதும் சிந்தனை அற்றவனாய் கண்ணன் தன் லீலைகளை ஆரம்பிக்க கவிதாவோ பொறியில் சிக்கிய எலிபோல தன் எதிர்ப்புக்களை ஆரம்பித்தாள்.
கண்ணனின் ஆண்மைக்கு முன் சிறுபெண்ணான கவிதாவின் வீரம் எடுபடவில்லை.
சில திரைப்படங்களில் பெண்களை ஆண்கள் துரத்திப் பிடித்து துகிலுரிவதுபோல் அவளது நிலையும் ஆனது.
ஒரு கட்டத்துக்குமேல் எதுவும் செய்யத் திராணியற்று செயலிழந்து விட்டாள்.
கவிஞர்கள் இதைத்தான் சொர்க்கத்தின் திறப்பு விழா என்று பாடினார்களோ.
இது நரகத்தின் திறப்புவிழா என்று எந்தக் கவிஞனும் பாடாதது ஏன்?
அவள் உடலின் வேதனையை விட மனதின் வேதனையை அதிகமாக உணர்ந்தாள்.
தனது தேவை நிறைவேறிய திருப்தியுடன் அவளைப்பற்றி சிறிதும் சிந்தனை அற்றவனாய் கண்ணன் நிம்மதியாக உறக்கத்தை அணைத்துக் கொண்டான்.

அவளோ யாரை நோவது.? பெற்றவர்களையா? தெய்வத்தையா? அல்லது எமது மண்ணின் அவலத்தையா? யாரை நோவது?
விடிய விடிய என்னென்னவோ எண்ணங்களினால் அலக்கழிக்கப்பட்டு எதிர் காலத்தை எண்ணி ஏக்கத்துடன் விழிகளில் வழியும் கண்ணீரைக்கூட துடைக்க மனமின்றி துவண்டு கிடந்தாள்.
( 8 )

விடிந்தது.
திருமண வீட்டின் கலகலப்புக்கு குறைவில்லை.
கவிதாவும் தன் வேதனைகளை விழுங்கியபடி முகத்தில் செயற்கைச் சிரிப்புடன் பெற்றவர்களையும் மற்றவர்களையும் சந்தோசப்படுத்த தன் கவலைகளை தனக்குள் புதைத்தபடி வலம் வந்தாள்.
அம்மா அப்பாவின் முகத்தில் நிம்மதிப் பெருமூச்சு.
பெற்றவர்கள் ஏன் இப்படி பிள்ளைகளின் உணர்வுகளை சிந்திக்க முடியாதவர்களாய் இருக்கிறார்கள் என்று புரியவேயில்லை.
வீதியில் மாணவ மாணவிகள் பாடசாலை சீருடையுடன் போகும் பொழுதெல்லாம் ஏக்கம் அவள் இதயத்தை பிராண்டும்.
இவர்களைப்போல் கவலைகள் ஏதுமற்று சிட்டுக்குருவிகள் போல் பறக்க இனி தனக்கு இறக்கைகள் முளைக்காதா? ஏன்று மனம் அங்கலாய்க்கும்.
“கவிதா நீயும் கண்ணனோட கோயிலுக்கு போயிற்று வா” மாமியாரின் கோரிக்கையை தட்ட முடியாமல் கவிதாவும் பட்டுப்புடவை நகைகள் தலையில் பூ என புதுப்பெண்ணின் அலங்காரத்துடன் புறப்பட்டாள்.
வீதியில் செல்பவர்கள் எல்லோரும் தன்னைப் பார்க்கும் பார்வையில் பரிவா? பாசமா? பரிகாசமா? எதுவென்று புரியாத உணர்வில் கவிதா தனக்குள் ஒடுங்கிப் போனாள்.

( 9 )

ஊரிலும் அமைதி குலைந்து ஆங்காங்கே கைதுகளும் சுற்றி வளைப்புக்களும் வெடியோசைகளுமாக இருந்தது.
கண்ணனும் கனடா புறப்படும் நாளும் நெருங்கியது.
இப்பொழுதெல்லாம் வெள்ளம் தலைக்கு மேல் போனபின் சாண் ஏறினால் என்ன? முழம் ஏறினால் என்ன? என்ற மனநிலையில் கண்ணன் எது சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அடைந்து விட்டாள்.
சரி இந்த மட்டிலாவது தனக்கு விடுதலை என்ற எண்ணமே அவள் மனதில் மண்டிக் கிடந்தது.
உறவினர் வீட்டிற்கு பயணம் சொல்ல போவதற்காக கண்ணனுடன் கவிதாவும் புறப்பட்டு சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர்.
எதிர்த் திசையிலிருந்து சீருடை அணிந்த வீரர்கள் சிலர் வரிசையாக வந்து கொண்டிருந்தனர்.
அவர்களை ஏக்கத்துடன் ஏறிட்டு நோக்கிய அவள் விக்கித்துப் போனாள்.
சுரேசின் உறுதியான விழிகள் தன்னை உற்று நோக்குவதை அவதானித்தாள்.
அவனது விழிகளை சந்திக்க திராணியற்று தலை குனிந்தாள்.
சுரேசின் முகத்தில் தடுமாற்றம் தெரிந்தாலும் தன்னைச் சுதாகரித்துக் கொண்டான்.
கண்ணன் இவர்களது மனப் போராட்டம் ஏதும் அறியாதவனாய் சைக்கிளை உழக்கியபடி
வீரர்களுக்கு கை அசைத்து விடை கொடுத்துக் கொண்டிருந்தான்.
கவிதா தன் கண்களில் முட்டிய நீரை கண்களில் தூசு விழுந்ததைப்போல் துடைத்துக் கொண்டாள்.
கண்ணன் கனடா போகுமுன் அவளையும் அங்கு எடுக்கும் நடவடிக்கைக்கு ஏதுவாக அவளது தேவையான பத்திரங்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டான்.
அவளுக்கு எதிலும் வெறுமையாக இருந்தது.
தன் சின்னஞ் சிறிய உலகத்தை விட்டு பெரிய வான்பரப்பில் திக்குத் திசை தெரியாத பறவைபோல திக்கு முக்காடி தவித்துக் கொண்டிருந்தாள்.
நாட்கள் மாதங்களாகின.
இந்த ஒரு வருடத்திலும் அவளை காலம் எவ்வளவோ மாற்றிப் போட்டு விட்டது.
அவளது கையில் மழலையாக தவழும் கோகுல் அவளுக்கு ஒரு புதிய உலகைக் காட்டினான்.
கோகுலின் சிரிப்பும் விளையாட்டும் அவளது கவலைகளை மறக்க வைத்தது மட்டுமன்றி அவளது மனதில் தாய்மை என்னும் புதிய உறவையும் மனைவி என்ற அந்தஸ்தையும் நிலை நாட்டியது.
தான் தனக்காக இல்லா விட்டாலும் தன் கோகுலுக்காகவாவது குடும்பம் என்ற வட்டத்துக்குள் வாழத்தான் வேண்டும் என்ற முடிவுடன் நாட்களை கழித்தாள்.
கண்ணனும் கனடா போய் இருவருடங்களாகி விட்டது.
கவிதாவுக்கு கனடா செல்வதற்கான விசாவுக்கு ஆயத்தமாக மெடிக்கல் இன்ரவியூ என்று அனைத்தும் ஒழுங்காக நடைபெற்றுக் கொண்டிருந்தன.
வீட்டிலோ அப்பா அம்மாவுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி  மறுபுறம் பிரிவுத் துயர்.
ஓருபடியாக எல்லா ஆயத்தங்களும் முடிந்து கவிதாவும் கனடா செல்வதற்கான நாளும் வந்தது.

( 10 )
கண்ணன் பியர்சன் எயாப்போட்டில் அவளையும் குழந்தையையும் சந்திக்த அந்தக் கணத்தில் ஏதோ ஒரு ஒளிமயமான எதிர்காலம் கண்முன் விரிவதாய்க் கற்பனை.
இதுதான் பெண்மையின் பலவீனமா?
மகனைக் கண்டதும் பாசத்துடன் ஓடி வந்து வாரி அணைப்பான் என்ற எதிர் பார்ப்பும் அங்கு பொய்த்துப் போக அவளது மனதின் எதிர்பார்ப்பும் காற்றுப் போன பலூனாய் சோர்ந்து போனது.
அவனது அப்பாட்மென்டுக்கு சென்றால் அது ஒழுங்கற்று இருந்தது. அவள்
 இதை எதிர்பார்த்ததுதான்.இருந்தாலும் குடியும் குடித்தனமுமாக இருக்கும் கணவனை கொஞ்சமாவது மாற்றி எடுக்கலாம் என்ற நப்பாசையுடன் செயற்பட்டாள்.
நாளுக்கு நாள் நிலமை மோசமாகியதே தவிர மாறியதாகத் தெரியவில்லை.
அடிக்கடி குடிபோதையில் அவளைக் கண்டபடி பேசுவதும் மனதைக் காயப்படுத்தும் சுடு சொற்களால் புண்படுத்துவதும் வழக்கமாகியது.
கோகுல் பாவம். அப்பாவுடன் அன்னியோன்னியமாகப் பழகுவதற்குப் பதில் அப்பாவைக் கண்டால் பயந்து வெருண்டு முகத்தை இறுக்கமாக வைத்துக் கொள்வான்.
குழந்தை அம்மாவுடன் ஒட்டியபடியே இருப்பதை பொறுக்காத கண்ணன் குடிபோதை தலைக்கேறினால் “என்ர பிள்ளையெண்டாத்தானே என்னோட ஒட்டும்” என்ற வார்த்தைகளால் அவளை வதைக்கவும் செய்வான்.
அவன் வேலைக்கு சென்று வருமட்டும் அவளும் கோகுலும் வீட்டைப் பூட்டியபடியே காத்திருப்பது வழக்கமாகி விட்டது.
அப்பாட்மென்ட் பல்கனியால் வெளியே பார்க்கும்  வேளைகளில் குதூகலமாக செல்லும் குழந்தைகளையும் பெற்றவர்களையும் கை கோர்த்தபடி செல்லும் இளம் ஜோடிகளையும் பார்த்து பெருமூசு;சு விடுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாது தவிப்பாள்.
கண்ணன் அவளை வெளியே எங்கும் கூட்டிப் போவதில்லை.
வேலையால் வந்தபின்பும் அவளுடன் அன்பாய் ஆதரவாய் பேசுவதும் இல்லை.
வீட்டில் உள்ள ஜடப் பொருட்களில் ஒன்றாகத்தான் அவளையும் நடத்தினான்.
ஏதோ கடமைக்காக சமைப்பது சாப்பிடுவது படுப்பது உறங்குவது என்ற இயந்திரத்தனமான இருப்பு.

( 11 )

பெற்றவர்களைப் பிரிந்து வாழ்வது மனதுக்குள் மிகுந்த வேதனையாக இருந்தாலும் தனது உணர்வுகளை மதிக்காத அவர்களை நினைக்கும் பொழுது சில சமயம் கோபம் வருவதுண்டு இருந்தும் கண்ணனின் உதாசீனம் அவளை வருத்தியது.
தாய் மடியில் தலைசாய்த்து தன் வேதனைகளை கொட்டி தீர்க்க முடியாதா என்று அடிக்கடி மனம் ஏங்கும்.
எப்பவாவது தொலை பேசியில் தொடர்பு கொள்ளும் போது தான் நலமாக இருப்பதாக கூறி அவர்களை சந்தோசப்படுத்தி விடுவாள்.
இப்பொழுதெல்லாம் நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான சூழ்நிலைகளை கேட்டும் அறிந்தும் அவளால் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை.
தானும் தனது மண்ணுக்காக போராடச் சென்றிருக்கலாமோ என்று மனம் தத்தளிக்கும்.
சென்றமுறை அம்மா கதைக்கும்பொழுது அப்பாவுக்கும் நல்ல சுகமில்லை என்று கூறி இருந்தது நினைவுக்கு வர அப்பாவின் சுகத்திற்காக கடவுளை வேண்டினாள்.
ஒரு முறை சென்று பார்க்க முடியுமா? ஏன்ற ஏக்கத்தை மனதுக்குள் புதைத்துக் கொண்டாள்.
நாளடைவில் வெள்ளி சனி இரவுகளில் ஓரிரு நண்பர்களாக வீட்டிற்கு அழைத்து வர ஆரம்பித்தான்.
வீட்டில் இரவு வெகு நேரம் வரை பார்ட்டியும் காட்ஸ் விளையாட்டுமாக பொழுது போக்கினர்.
ஆரம்பத்தில் கவிதாவுக்கு வியப்பாக இருந்தது.
தொடர்ந்து வந்த நாட்களில் அதுவே பழகிப் போய்விட்டாலும் அவர்களின் சிரிப்பும் பார்வையும் அச்சமூட்டியது.
“ ஏய் கவிதா கெதியா இரண்டு முட்டை பொரிச்சு எடுத்து வா”
“ இண்டைக்கு இறைச்சி வாங்கினனான் பிரட்டல் செய்து வை”
இப்படி தமக்கு தொட்டுக் கொள்ள சுவையான உணவு தயாரிக்க ஓடர் பிறப்பிக்க ஆரம்பித்தான்.
நண்பர்களும் குடிபோதையில் உணவின் சுவையை பாராட்டுவதுடன் அவளையும் விமர்சிக்க ஆரம்பித்தனர்.
சில சமயம் குடிபோதையில் பிதற்றுவதுடன் உணவு பரிமாறும் போது அவளையும் தொட்டு விட முயற்சி செய்தனர்.
இது எதையும் கண்ணன் கண்டு கொள்வதில்லையா அல்லது கண்டும் காணாததுபோல பாவனை செய்கிறானா என்ற கவிதாவுக்கு புரியவில்லை.
கண்ணனோ நண்பரைக் கண்டு விட்டால் கவிதாவையோ கோகுலையோ பொருட்படுத்தாமல் தனது கேளிக்கையிலேயே கருத்தாய் இருப்பான்.
கவிதா இதைப்பற்றி ஏதாவது கண்ணனிடம் முறையிட ஆரம்பித்தால் கண்ணன் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் கவிதாவையே ஏதாவது குறை கண்டு பிடித்து எரிந்து விழுவான்.
அவளுக்கோ தர்ம சங்கடம்.

( 12 )

அன்று  கண்ணனுக்கு பிறந்தநாள்.
பார்ட்டி களை கட்டியது.
உணவுகளும் விதவிதமாக ஓடர் பண்ணி எடுத்ததுடன் வீட்டிலும் கவிதாவிடம் சொல்லி பிரட்டல் பொரியல் என்று விதவிதமாக தயாரித்து வைத்திருந்தான்.
நேரம் போகப்போக அனைவருக்கும் நல்ல போதை.
கண்ணன்  சுயநினைவை இழக்கும் நிலையில் இருந்தான்.
போதை முற்றிய நண்பர்கள் “ தண்ணி வேணும்”
“யூஸ் வேணும் “ என்று அடிக்கடி கவிதாவை அழைத்தனர்.
கோகுலும் நித்திரையாகி விட்டான்.
இவர்களின் நச்சரிப்பைத் தாங்க முடியாமல் கவிதா அறைக்குள் சென்று கோகுலுடன் படுத்து விட்டாள்.
கண்ணனும் போதை தலைக்கேறி செற்றியில் விழுந்து கிடந்தான்.
நண்பர்களோ வீட்டுக்கு போவதாய் இல்லை.
கவிதா வெளியே வந்து “ நேரம் போச்சுது. நீங்க வீட்ட போனால் நான் கதவைப் பூட்டி விட்டு படுக்கலாம்” என்று கூறிப் பார்த்தாள்.
போதையில் இருந்த நண்பர்களுக்கோ இவள் கூறியது எதுவும் காதில் ஏறவில்லை.
அவர்களது பார்வையும் சிரிப்பும் அவளுக்கு அருவருப்பாக இருந்தது.
அவள் மீண்டும் மீண்டும் கேட்க அவர்கள் மனமில்லாதவர்களாக தட்டுத் தடுமாறிக் கொண்டு புறப்பட்டனர்.
அவளோ முன் கதவை தாழிட்டு விட்டு அறைக்குள் சென்றாள்.
நாள் முழுவதும் வேலை செய்த களைப்பும் மனச் சோர்வுமாக கட்டிலில் விழுந்தவள் உறங்கி விட்டாள்.

 

( 13 )
காலை
சுயநினைவுக்கு வந்த கண்ணன் சுற்றும் முற்றும் பார்த்தான்.
வாசல் கதவு பூட்டி இருந்தது.
நண்பர்களைக் காணவில்லை.
உணவு பொருட்களும் வெற்றுப் போத்தல்களும் கிளாசுகளமாக வீடு அலங்கோலமாகக் கிடந்தது.
“ஏய் கவிதா” ஆத்திரத்துடன் அலறினான்.
திடுக்கிட்டு முழித்த கவிதா பயத்துடன் ஓடிவந்தாள்.
“ஏனடி அவங்களெல்லாம் எங்க?”
கவிதாவுக்கு பதில் சொல்லப் பிடிக்கவில்லை.
“என்ன நான் கேக்கிறன் உனக்கு பதில் சொல்ல கஸ்ரமாக்கும்”
கவிதாவுக்கு ஆத்திரமாக வந்தது,
“என்ன சொல்ல? நீங்க மதியில்லாமல் கிடந்ததையா?”
இனிமேல் இப்படிப் பார்டிகள் வீட்டில வைக்க வேணாம்”
“ஓ அதுதான் என்ர பிரண்ட்ஸ் எல்லோரையும் கலைத்து விட்டிட்டியாக்கும்”
“எல்லாருக்கும் நல்ல வெறி. வீட்டுக்கு போகாமல் இங்க என்ன செய்யிறது.”
“எனக்குத் தெரியும் என்ர பிறந்தநாள் கொண்டாட்டம் என்றதும் உனக்கு பிடிக்கஇல்லை.”
“எனக்கு பிடிச்சதை மட்டும்தான் நீங்க செய்யிறீங்களாக்கும்” கவிதாவால் பொறுமையுடன் பதில் சொல்ல முடியவில்லை.
“ஏன் உனக்கு பிடிச்சதையும் செய்யலாம். அதுதான் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேனே. நீ என்னை கவனிக்க மாட்டாய். ஆனால் என்ர பிரண்ட்ஸ் வந்தா விழுந்து விழுந்து கவனிப்பாய்.”
ஆத்திரம் புத்தியை மறைக்க அவளை புண்படுத்த வேணுமென்று மென்மேலும் வார்த்தைகளை கொட்டத் தொடங்கினான்.
கவிதா தன் காதுகளை இறுகப் பொத்திக் கொண்டாள்.
தானே நண்பர்களைக் கூட்டி வந்து விரும்பின சாப்பாடு செய்யச் சொல்லி கட்டாயப் படுத்தி அவங்களைச் சரியாக கவனிக்காட்டி அதற்கும் தன்மேல் சீறிப்பாய்ந்து இப்ப இப்படி அவதூறு சொல்கிறானே என்ற மனம் வெதும்பினாள்.

( 14 )

நாளுக்கு நாள் கவிதாவால் கண்ணனது சித்திரவதைகளையும் மனதை தைக்கும் வார்த்தைகளையும் பொறுக்க முடியவில்லை.
தினம் தினம் தனது நண்பர்களுடன் அவளை சேர்த்து வைத்து பேசுவதும் குத்தல் பேச்சக்களால் அவளை வருத்துவதுமாக இருந்தான்.
அன்றும் அப்படித்தான் வேலையால் வரும்பொழுதே குடித்து விட்டு வந்தான்.
கவிதா அவனது சிவந்த விழிகளைப் பார்த்து பயந்து சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.
“என்னடி என்னைக் கண்டால் பதுங்கிறாய் அவங்கள் வந்தால் மட்டும் பல்லைக் காட்டி சிரிக்கிறாய்”
“நான் எப்ப சிரிச்சனான். நீங்கதான் அவங்களைக் கூட்டிக்கொண்டு வந்து குடிச்சு கும்மாளமிடுறீங்கள்”
“என்ன கும்மாளமிடுறனோ? நீ அடிக்கிற கும்மாளமெல்லாம் எனக்குத் தெரியோதோ?”
கண்ணனின்  பேச்சு கவிதாவை ஆத்திரமூட்டியது. அவளுக்கு கோவம் எரிச்சல் வெறுப்பு
“ஓம் நான் கும்மாளமடிப்பன். அதுக்கு இப்ப என்ன?”
இந்தப் பதிலை எதிர்பார்க்காத கண்ணன் “என்ன சொன்னனீ” என்று ஆத்திரத்துடன் அவளது தலை முடியைப் பிடித்து தலையை சுவரில் ஓங்கி அடித்தான்.
நெற்றி உடைந்து இரத்தம் கொட்டத் தொடங்கியது. கோகுல் வேறு பயத்தில் அலறத் தொடங்கினான்.
கண்ணனோ “ இப்பிடியே கிடந்து சாவு” என்றபடி வெளியேறி விட்டான்.
கவிதா ஒரு கையால் காயத்தை பொத்திப் பிடித்தபடி மறுகையால் கோகுலை அணைத்தபடி
சென்று தொலைபேசியில் 911 என்ற இலக்கத்தை அழுத்தி தனது வீட்டு விபரத்தை சொன்னாள்.

(  15 )

மெள்ள மெள்ள தன் உக்கிரத்துடன் கிளை விடத் தொடங்கிய தீ அவள் அணிந்திரந்த ஆடைகளில் தொடங்கி உடலில் தன் சூட்டைப் பரப்பத் தொடங்கியது.
அவளது மனமோ உடலில் பரவும் சூட்டைவிட மிகத் தீவிரமான தீயில் தீய்ந்து கொண்டிருந்தது.
அந்தத் தீயின் முன் உடலில் பரவிய சூடு குறைவாக இருப்பதாகவே அவள் உணர்ந்தாள்.
எத்தனை தடவை எண்ணி எண்ணி கை விட்ட அந்த எண்ணம் இன்று தாள முடியாத வலியுடன் அரங்கேறியுள்ளது.
குத்திக் காயப்படுத்துவது ஒருமுறையா? இருமுறையா? ஏவ்வளவுக்குத்தான் அவளால் தாங்க முடியும்.
இனியும் இப்படி தினம் தினம் தீக்குளிப்பதை விட ஒரேயடியாகத் தீயுடன் சங்கமமாவது அவளுக்கு ஒன்றும் அசாதரணமாகத் தெரியவில்லை.
சுடட்டும் நன்றாகச் சுடட்டும்.
நாவினால் சுடும் வடுக்களைத் தாங்கி வலிகளை வலிந்து தழுவி ஆரம்பத்தில் கண்களில் உருண்ட கண்ணீரும் வற்றி அனலில் காய்ந்து வெடித்த விளைநிலமாய் மனம் பிளவு பட்டுக் கிடந்தது.
தனக்கென்று இனி யாருமில்லை.
இறைவனும் கேட்க நாதியற்று போனதாய் உணர்ந்தாள்.
இது தனக்கல்ல. தன்னை கடிமணம் புரிந்து கனவுகளைச் சிதைத்து மனதைக் கடற்பாறை கொண்டு பிளந்து தான் மட்டும் தன் சுகம் மட்டும் போதும் என நினைக்கும் அவனுக்கான தண்டனை.
ஒருகணம் கோகுலின் முகம் வந்து மறைந்தது.
அவனே வேணாம். பிள்ளை எதற்கு?
உலகை வெறுத்ததனால் உறவுகளும் தொலைந்து போன உணர்வு.

( 16)
நேற்றுவரை நிகழ்ந்தவைகள் அனைத்தும் நிழற்படமாய் கண்களுக்குள் ஒருகணம் வந்து போயின.
எங்கோ மேலே மேலே போய்க்கொண்டிருந்தவளை யாரோ கையில் கட்டி எழுப்புவது போல இருந்தது.
யாராயிருக்கும்?
நெற்றியில் விண்விண் என்று வலித்தது. மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தாள்.
பக்கத்தில் வைத்தியர்  மறுபுறம் தாதி கையினில் குற்றியுள்ள ஊசியின்மூலம் மருந்து
ஏறிக்கொண்டிருந்தது.
சந்தேகத்துடன் தன் முகத்தையும் கைகளையும் தொட்டுப் பார்த்தாள்.
தீ சுட்டதற்கான எந்த தடயமுமில்லை.
எப்படி எனது எண்ணத்தில் இப்படி ஒரு நினைவு வந்தது. எனது கோகுலை விட்டுவிட்டு எப்படி நான் இப்படி ஓர் முடிவெடுக்கக் கூடும்.
தலையில் அடிபட்ட மயக்கத்தில் தன் மனதின் நிழலாக வந்த கனவினை எண்ணி வேதனைப்பட்டாள். அத்தனை கோழையா நான்?
“கோகுல் கோகுல்”; அவளது உதட்டசைவை அவதானித்த தாதி கோகுலைத்  தூக்கி வந்தாள்.
குழந்தை அம்மாவைக்கண்டதும் மகிழ்ச்சியுடன் சிரித்தது.
கையை நீட்டி குழந்தையை அணைத்து மகிழ்ந்தாள்.
வாழ்க்கையின் பொருள்தான் என்ன? வாழ்ந்துதான் பார்த்தாலென்ன?
சோதனைகள் வாழ்வின் முடிவல்ல.
சாதனைகளின் ஆரம்பம்.
மனதில் உறுதியுடன் எதிர்காலக் கனவுகளுடன் கோகுலை இறுக்கி அணைத்து முத்தமிட்டாள்.

 

இயற்கையே சக்தி தா!

6 months 4 weeks ago

இயற்கையே சக்தி தா!
-----------------------------------------------
காலையைக் கடந்து 
செல்லும் பொழுது
மலர்கள் மலர்ந்திருக்கின்றன
கதிரோன் காலாற நடக்கின்றான்
மனித மனங்கள் வாடியிருக்கிறது
தெருக்கள் வெறிச்சோடியிருக்க
நாயை நடப்பதற்கு 
அழைத்துச்செல்லும் முதியவர்
ஆனந்தமாகப் புகைவிட்டவாறு
சிறியதொரு குளிரோடு
காற்று மெதுவாக வீசுகிறது
வீட்டுக்குள் சிறைப்பட்ட சூழல்
கொறொனாவை இந்த உலகு
வென்று நிமிரும் காலம்
விரைந்து வர வேண்டும்
இயற்கை அதற்கான 
சக்;தியைத் தர வேண்டும்!
ஒடுங்கி மடியும் உலகு
உயிர்பெற்று உயர்வடைய
இயற்கையே சக்தி தா!
உன்னுள் ஒளிந்திருக்கும்
புதிரகன்று புத்தொளி பரவிட
இயற்கையே சக்தி தா!
எல்லையற்று விரிகின்ற
உயிரிழப்பை நிறுத்தும் வகை
இயற்கையே சக்தி தா!
உன்னுக்குள் மகிழ்வாக
வாழ்ந்த மானிடரை
மீண்டெழச் சக்தி தா!
கொறோனோக் கொடுமையைக்
கொன்றொழித்து எழுகின்ற
உறுதிபெறச் சக்தி தா!

உறவுகளே  
நட்புடன்
நொச்சி

25.03.2020
 

கொரோனோ காலத்தின் கதையொன்று.

6 months 4 weeks ago

கொரோனோ காலத்தின் கதையொன்று.
----------------------------------------------
போர்க்காலத்தில் பிள்ளைகளை உறவுகளைப் பிரிந்திருந்து அவலமுற்ற அம்மமாக்களும் உறவுகளும் இப்போது கொரோனோ காலத்தை கடந்து செல்ல அடையும் துயரத்தை எழுதவோ விளக்கவோ வேண்டியதில்லை.

கொரோனோ காலம் எனக்குத் தந்த அனுபவம் பற்றியதே இப்பகிர்வு.

மகள் இத்தாலி றோம் நகரின் பல்கலைக்கழகம் ஒன்றில் ஒருவருட  கல்விக்காக கடந்த வருடம் போயிருந்தாள். இவ்வருடம் யூன்மாதம் படிப்பு முடிந்து திரும்பவிருக்கிறாள்.
யேர்மனியில் படித்தவரை மாதம் ஒருமுறை மவளைச் சந்திக்க ரயிலேறிவிடுவேன். அதுபோல மகனையும் சந்திக்க ரயிலேறுவது வளமை.  அந்த நாட்களை எண்ணியபடியே எல்லாத் துயர்களையும் கடக்கும் தைரியம் பிள்ளைகளும் அவர்களது சந்திப்புகளும் தான்.

இத்தாலிக்கு மாதமொருமுறை போய்வரும் நிலமையில்லை. விமானமேறி அடிக்கடி போய்வர பொருளாதாரம் இடம்தராத நிலமை. இதோ இன்னும் 4மாதம் 3மாதம் என காலத்தை எண்ணிக் கொண்டிருக்க இத்தாலி உட்பட ஐரோப்பிய நாடுகள் தங்கள் எல்லைகளைப் பூட்டிவிட்டது.

பல பிள்ளைகள் நாடு திரும்பிக் கொண்டிருக்க மகளையும் ...,

வாங்கோவனம்மா திரும்பி ?

கேட்ட போது அவள் சொன்ன பதில்.
அம்மா உலகமெல்லாம் கொரோனோ பரவிக் கொண்டிருக்கு. நான் யேர்மனி வந்தாலும் இத்தாலியில் இருந்தாலும் ஒன்றுதான். நீங்கள் பயப்பிடாமல் யோசிக்காமல் இருங்கோ. முடிந்தவரை தற்பாதுகாப்பு சுத்தத்தை பேணுங்கோ. அதைமீறி வந்தால் வரட்டும். இங்கே என்னோடு 3பிள்ளைகள் இருக்கினம். அவையும் அவையின்ரை வீடுகளுக்கு போகேலாது இஞ்சை தானிருக்கினம்.

இதற்கு மேலும் பலதடவை பிள்ளை அருகில் வந்திருந்தால் போதுமென்ற மனநிலையில் கேட்டும் அவள் மறுத்துவிட்டாள்.

என்னைப்போல இங்கையும் மனிதர்கள் தானம்மா இருக்கினம். அவைக்கானது தான் எல்லோருக்கும் என்றாள்.

அவள் வெளியில் போவது உணவுப் பொருட்கள் கொள்வனவு செய்ய மட்டுமே. அதுவும் 2மீற்றர் இடைவெளிவிட்டு வரிசையில் மணித்தியாலக்கணக்காக காத்திருந்து பொருட்களை வாங்கி வந்து சமைத்துச் சாப்பிடுவதை அடிக்கடி வட்ஸ்அப்பில் காட்டுவாள்.

மகன் படிக்கும் யுனி. சார்லாண்ட் மானிலத்தில். தற்போது அதிகம் கொரோனா எச்சரிக்கையும் ஊரடங்கு தடையும் விதிக்கப்பட்ட இடம். அவனும் வீட்டில் இருக்கிறான். மகள் போலவே தற்பாதுகாப்பு சுத்தம் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ளச் சொல்லி இருக்கிறான்.

ஒருதடவை மகனைப் போய் பார்த்துவரலாமெனக் கேட்டால் அந்த நகருக்குள் போவது தடைசெய்யப்பட்டிருப்பதால் அனுமதி இல்லை.

நாங்கள் 3பேரும் 3திசைகளில் இருக்கிறோம். ஒவ்வொரு தடவையும் சமைக்கிற போது சாப்பிடுகிற போது பிள்ளைகள் ஞாபகத்தில் வந்துவிடுவார்கள். பிள்ளைகளின் ஞாபகங்கள் கண்ணீரை வரவைக்கிறது. எதுவோ ஒன்றாயிருந்தால் போதுமென்கிறது மனசு.

ஆனால் கொரோனோ பற்றிய நக்கல் நையாண்டிளை எழுதும் பகிரும் உறவுகளை நினைக்க வருத்தமாக இருக்கிறது. 

உலகமே இந்தக் கொள்ளை நோயிலிருந்து மீளும் வகைதேடி அவலமுறும் இத்தருணத்தில் மீம்ஸ் போடுவதும் ரசிப்பதும் அதற்கென்றே ஒரு குழுமம் மினக்கெடுவதும் நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமன்றி தொலைபேசியில் அல்லது தொடர்பூடகங்களில் அழைத்து...,

இன்னும் கொரோனோ உங்களுக்கு வரேல்லயோ ? 

என்ற எரிச்சலூட்டும் கேள்விகளையும் கடப்பதே பெரும் சவாலாக இருக்கிறது.

உலகமே சாவின் கணங்களை எண்ணிக் கொண்டு உயிர்காக்கும் அவசரத்தில் இருக்க மனிதாபிமானமே இல்லாத நக்கல் நையாண்டிகளைப் பார்க்க இப்படி செய்வோருக்கு இந்த நோய் வந்து இவர்களுக்கு அனுபவத்தைக் கொடுக்காதா இயற்கை ? 

இப்படியும் எண்ணுகிறது மனசு.
இது மனிதாபிமானமில்லாத சிந்தனையாக இருக்கும் பலருக்கு. 

ஆனால் பலரது கண்ணீரை அந்தரிப்பை ரசிக்கும் மனநிலையாளர்களுக்கு வேறெந்த அனுபவம் வேண்டும் ?

நோயோ அல்லது உயிரிழப்போ பிரிவுகளோ அவற்றை அனுபவிக்காதவரை யாருக்கும் அது புரியாது.

அதற்காக இறந்துதான் மரணத்தின் துயரை அறிய வேண்டுமென்றில்லை. இந்தக்கால அவலத்தை புரிந்து செயற்படுவோம்.

எங்கோ ஒரு மூலையில் எத்தனையோ அம்மாக்களும் உறவுகளும் தங்கள் பிள்ளைகளுக்காக அவர்களின் அமைதிக்காக பாதுகாப்புக்காக கண்ணீர் விடுவதையும் அந்தரிப்பதையும் அம்மாவாக நான் புரிந்து கொள்கிறேன்.

சாந்தி நேசக்கரம்
24.03.2020

நீங்கள் என்ன செய்கிறீர்கள்????? கொரோனாவைத் தடுக்க

6 months 4 weeks ago

யாழ் கள உறவுகளே!

பலரும் இப்போது வீடுகளில் வேலைவெட்டி இல்லாது சும்மா தான் இருப்பீர்கள். அதனால் உங்கள் கருத்துக்களைப் பதிவதற்கான போதிய நேரம் உங்களுக்கு இருக்கும். கொரோனாவிலிருந்து தப்புவதற்கு நீங்கள் என்ன வழிமுறைகளைக் கையாளகிண்றீர்கள் என்று பதிவிடுங்கள். அது மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.சிலநேரம் உங்களுக்கும் உதவக்கூடியதாக இருக்கும்.

நானும் பிள்ளைகளும் வீட்டைவிட்டு  செல்வது குறைவு. கணவர் மட்டும் இன்னும் வேலைக்குச் செய்கிறார். வீட்டில் நிற்கச் சொன்னானும் கேட்கிறார் இல்லை. தான் ஆட்களுடன் நெருக்கமாக நின்று வேலை செய்வதில்லை என்று சாட்டுப்போக்குச் சொல்கிறார். அவர் வீட்டுக்குள் வந்தவுடன் நேரே  கைகளையும் முகத்தையும் காதையும் நன்கு கழுவிய பின்னர் தான் தன் கோட்டைக் கழற்றுகிறார். பின்னர் மேலேசென்று உடைகளைக்கலைந்து குளித்துவிட்டு வந்தபின்தான் அவர் வரவேற்பறையில் அமர அனுமதி. அவர் வந்தபின் நான் முன் வாசல் கைப்பிடியை கையுறை போட்டு சோப் போட்டு நன்கு துடைத்துவிடுகிறேன். ஆனால் அவரின் கோட்டைத் தினமும் துவைக்க முடியாதுதானே??? அதற்கு சிறிது நேரம் கெயாறையர் பிடித்துவிட்டுக் கொழுவி விடுகிறேன். எல்லோரும் ஒவ்வொருநாளும் குளித்த்துச் சுத்தமாக இருக்கிறோம்.நாள் உணவுகளை சமைத்து உண்கிறோம். வேறென்ன செய்யவேண்டும் என்று நீங்கள் தான் கூறவேண்டும் ??????

Checked
Fri, 10/23/2020 - 02:28
யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள் Latest Topics
Subscribe to யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள் feed