எனது நாத்திகம் - சுப. சோமசுந்தரம்
எனது நாத்திகம்
- சுப. சோமசுந்தரம்
நாம் விரும்பாமலே நாத்திகம் எனும் வடமொழிச்சொல் வெகுசனத்திடம் பரவிவிட்டதால், இறை மறுப்பை நான் இங்கு ‘நாத்திகம்’ என்றே பதிவிடுகிறேன்.
‘கடவுள் உண்டா இல்லையா ?’ என்ற அருதப் பழசான விவாதத்தை ஆரம்பித்து, வாசிப்போரின் கழுத்தில் நரம்பு புடைக்க வைப்பது சாமி சத்தியமாக(!) இவ்வெழுத்தின் நோக்கமல்ல. “உண்டென்பார்க்கு உண்டு, இல்லையென்பார்க்கு இல்லை” என்று ஏனையோரிடம் உரக்கச் சொல்லிவிட்டு, “ஆனால் எனக்குத் தெரியும் இல்லையென்று” என எனக்குள் சொல்லி ‘கடவுளைக்’ கடந்து செல்பவன் நான். (ஆகையால் அது ‘கட உள்’ தானோ?)
‘நான் நாத்திகன் ஏன்?’ என்ற பகத்சிங்கின் அளவில் சிறியதொரு பெரிய படைப்பினை வாசித்த அனுபவம் எனது நாத்திகத்தையும் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்ததோ என்னவோ ! பகத்சிங் தமது சிந்தனையாலும் செயலாலும் தம் படைப்பினை உலகையே வாசிக்க வைத்தவர். குறைந்த பட்சம் நட்பு வாசக வட்டத்தில் அனுபவங்களைப் பகிரும் எண்ணமே எனது இந்த எழுத்து. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்வது நமக்குப் புதிதா என்ன?
எனக்கு விவரம் தெரிந்து சுமார் பன்னிரெண்டு வயது முதல் நான் நாத்திகன். இது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. என் வீட்டின் ஜனநாயகச் சூழலும், வீட்டில் பெரியாரையும் அண்ணாவையும் சிலர் பேசிக் கொள்ளும் சுமாரான அரசியல் சூழலும், எனக்கு வாய்த்த ஆசிரியர் ஒருவர் அந்நாளைய பள்ளி வரைமுறைகளைத் தாண்டி திராவிட இயக்க விதைகளை அவ்வப்போது தூவியதும் காரணமாய் அமைந்தன எனலாம். பசுமரத்தாணியாய்ப் பதிந்து நிற்கும் பருவம் அது. இறை நம்பிக்கையும் அப்படித்தானே ! குழந்தைப் பருவத்தில், “கண்ணு, சாமி கும்பிடு ! சாமி கும்பிடு !” என்று சொல்லி வளர்ப்பதே இறை, மத நம்பிக்கையாய் முகிழ்க்கும் என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை. பின்னர் அந்நம்பிக்கை சார்ந்த பெரியோரிடம் கற்றல், கேட்டல் மூலம் அது வலுப்பெறும். நிற்க.
இளம் வயதில் பெரியார், அண்ணாவிடம் படித்த பாடம் கல்லூரி நாட்களிலும் பின்னாளிலும் மேலும் கிடைத்த நூலறிவினால் வாழ்வியலானது. குறிப்பிட்டுச் சொல்வதானால் ஆபிரகாம் கோவூரின் ‘Gods, Demons and Spirits’, பெட்ரன்ட் ரஸலின் ‘Why I am not a Christian’, கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸின் ‘God is not great’ என்னை நல்வழிப்படுத்தியவை. ஆயினும் இந்த ஆன்றமைந்த கொள்கைச் சான்றோர் எனக்குப் போதித்ததைப் போல் நாத்திகத்தை நான் யாருக்கும் போதிக்கவில்லை. என் குழந்தைகளுக்குக் கூட, உண்டு அல்லது இல்லை எனப் புகட்டியதில்லை. எனது நடவடிக்கைகள் மூலம் அவர்கள் இறைமறுப்பின்பால் ஈர்க்கப்பட்டது எனக்கான பேறு. அதிலும் அவர்கள் பெண்பிள்ளைகள் என்பது பெரிதினும் பெரிதான பேறு. இதில் இறைநம்பிக்கையுள்ள எனது இல்லாளின் பங்களிப்பு அபரிமிதமானது. அவளும் தன் நம்பிக்கையைக் குழந்தைகளுக்கு ஏற்றியது இல்லை. இந்த ஜனநாயகம் எல்லோருக்கும் வாய்ப்பதிலை. ஆத்திகர்களின் மொழியில் சொல்வதானால், நான் இறை மறுக்க அவர்களது இறைவனாலேயே ஆசீர்வதிக்கப்பட்டவன் போலும்!
பெரும்பான்மைச் சமூகம் இறை நம்பிக்கை சார்ந்ததால், பெரும்பாலான இறை மறுப்பாளர்கள் தங்களை வெளிக்காட்டுவதில்லை. அது அவரவர் தனிப்பட்ட கருத்து எனும் நிலைப்பாடாக இருக்கலாம். இப்பூவுலகில் இவர்களோடுதானே வாழ வேண்டும் எனும் நடைமுறைச் சித்தாந்தமும் என் போன்றோர்க்கு ஏற்புடையதே. எனக்கு இறை நம்பிக்கை இல்லாவிட்டாலும் சமூகத்தில் பெரும்பாலானோர் அந்த நம்பிக்கையோடு வாழ வேண்டும் என்பது என் உள்ளக்கிடக்கை. அதற்கு நானாக வரித்துக் கொண்ட காரணங்கள் இரண்டு. ஒன்று, ‘மேலே ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்’ எனும் பயத்தினால் மட்டும் அதிகம் தவறு செய்யாமல் இருக்கும் வெகுசனம். இரண்டாவது, வாழ்வில் சொல்லொணாத் துயரத்தை எதிர்கொள்ள ‘மேலே இருப்பவன் பார்த்துக்கொள்வான்’ என்று பாரத்தைக் கற்பனையான தோள் மீது இறக்கி வைக்கும் மனோபாவம்; அக்கற்பனை தரும் ஆறுதலை அவர்களுக்கு என்னால் தர இயலாத கையறுநிலை. எனவே அறியாதாரை அறியாமை இருளிலேயே வைத்து நமக்கும் அவர்களுக்கும் துன்பமில்லாமல் வாழ நினைக்கும் சுயநலம் எனது. வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி நமக்கும் தான் வரும். அப்போது நமக்கு அந்த கற்பனைத் தோள் வேண்டாமா ? இல்லையென்று நம்பிக்கை(!) ஏற்பட்டு சுமார் ஐம்பது வருடங்களான பிறகு, இல்லாததைக் கற்பனை செய்ய இயலாது. வாழ்வில் ஏற்படும் இன்பத்தை அளவாய்த் துய்க்கத் தெரியும். துன்பத்தில் அழத் தெரியும், விழத் தெரியும், எழத் தெரிய வேண்டும். இது தான் பக்குவம் பெற்ற வாழ்விற்கான இலக்கணம் என்பது எனக்குப் பால பாடம்.
எனக்கு இலக்கிய ஆர்வம் உண்டாகையால் பக்தி இலக்கியங்களையும் விட்டு வைக்க மனம் வருவதில்லை. நான் உருகவில்லையாயினும் அவர்கள் எப்படி உருகுவார்கள் என்பதை உணரும் அளவு இலக்கியச் சுவை தெரிந்தவன். நாத்திகராயிருந்தும் கோயில்களையும் பக்தி இலக்கியங்களையும் சமயங்களின் அடிப்படைத் தத்துவங்களையும் உணர்ந்த அறிஞர் தொ. பரமசிவன் இவ்விடயத்தில் எனக்கான வழிகாட்டி. இவையனைத்தும் மக்களை வாசிக்க உதவும் கருவிகள் எனக் கொள்ளலாம். பக்தி இலக்கியம் பேசும்பொழுது, எழுதும் பொழுது நமது இறைமறுப்பை வெளிக்காட்டாது அவ்விலக்கியச் சுவை காட்டுவது கயிற்றின் மேல் நடப்பது. “கடவுள் இல்லை; இல்லவே இல்லை” என அறிவித்து மக்கட்சேவை செய்யும் நாத்திகப் பெரியோர் வீரமரபில் தோன்றிய சான்றோர். மக்கள் கூட்டத்திலிருந்து தனித்தியங்கும் ஆற்றல் பெற்றோர். அவ்வகையில் தமிழ்ச் சமூகத்தில் பெரியார் எஞ்சாமி(!). நடிப்பாற்றலால் வெகுசனத்தில் விரவி தன் அடையாளத்தைத் தொலைத்து வாழ்ந்து தொலைக்கும் நான் ஒரு கோழை.
இதுகாறும் எனது நாத்திகத்தில் பொதுவான விஷயங்களைப் பேசிய நான் இது தொடர்பில் ஒன்றிரண்டு நிகழ்வுகளை நினைவு கூற நினைக்கிறேன். இத்தகைய நிகழ்வுகளும் என்னைப் பெரிதும் செதுக்கியதாக உணர்கிறேன். அவை என் மனதில் காட்சிகளாய் விரிகின்றன.
காட்சி 1: இறை மறுத்து வளர, வாழ எனக்குச் சாதகமான சூழலே அமைந்தது எனக்கான வரம். அவ்வரம் எனக்கு பள்ளி, கல்லூரி வடிவிலும் அமைந்தது கூடுதல் சிறப்பு. உரோமன் கத்தோலிக்க நிறுவனங்களிலேயே நான் வளர்ந்தாலும், தம் மத நம்பிக்கைகளை என்மீது இம்மியளவும் அவர்கள் ஏற்ற முயற்சி செய்ததில்லை. கத்தோலிக்க மாணவர்களுக்கு வாரம் ஒரு மணி நேரம் கத்தோலிக்க மறை வகுப்பு நடைபெறும் பொழுது ஏனையோருக்கு நல்லொழுக்க வகுப்பு நடைபெறும். அவ்வளவே. ஒருமுறை கல்லூரியில் வகுப்புத் தோழன் ஒருவன் வேலைக்கு மனுச் செய்த போது அவனுக்கு நன்னடத்தைச் சான்றிதழ் தேவைப்பட்டது. கிறித்தவனான அவன் எங்களது தமிழ் ஆசிரியரும் அவனது விடுதிக் காப்பாளருமான பாதிரியாரிடம் சான்றிதழ் கேட்கப் போகும் பொழுது என்னையும் துணைக்கு அழைத்தான். நன்றாகப் படிக்கும் மாணவன் நல்ல மாணவன் என்ற வேடிக்கையான வரையறை அன்றும் இன்றும் உண்டே ! அதனால் பெரும்பாலான ஆசிரியர் பெருமக்களுக்கு என் மீது அன்பும் மதிப்பும் உண்டு என்பது என் கணிப்பு. பாதிரியார் அவனிடம், “எடேய், நீ ஜெபத்துக்கே வர மாட்டே ! உனக்கு எப்படி நான் காண்டக்ட் (conduct certificate) தரமுடியும்?” என்று கடிந்துகொண்டார். அவன் கூடப் போய் நான் அங்கு நின்றதே அநாகரிகம். அதையும் தாண்டி நான் அதிகப்பிரசங்கித் தனமாக அப்போது இடைமறித்துப் பேச வேறு ஆரம்பித்தேன். அவ்வயதில் எங்களுக்குத் தெரிந்த நாகரிகம் அவ்வளவுதான். “ ஃபாதர் ! ஒழுக்கத்திற்கும் ஜெபத்திற்கு என்ன தொடர்பு ? ஜெபம் ஒருவரின் தனிப்பட்ட விஷயம்தானே ?” – சாதாரணமாக ஒரு பாதிரியாரிடம் சராசரி மனிதர்கள் கேட்காத கேள்வி. என் மீது கொண்ட அன்பினால் அவர் கோபம் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். மாறாக, “நீ சிறிது நேரம் வெளியே நில்!” என்று சாந்தமாகச் சொல்லி அனுப்பிவிட்டு அவனிடம் பேசினார். பின்னர் அவனை அனுப்பிவிட்டு என்னை உள்ளே அழைத்துச் சொன்னார், “நீ சொன்னது உனக்குச் சரி, நான் சொன்னது அவனுக்குச் சரி. படிப்பெல்லாம் எப்படிப் போகிறது ? கம்பனில் நம் பாடப்பகுதியில் உள்ள அந்த சிறு பகுதியை நீ செமினார் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று வெகு சாதாரணமாய்ப் பேசி, புன்னகை மாறாமல் அனுப்பிவிட்டார். அவர் உள்ளே அழைத்ததும் எனக்கு கடவுள், ஜெபம் பற்றிய பாடம் எடுக்கப் போகிறார் என்று நினைத்தேன். தம் செயல்பாட்டின் மூலமாக அவர் எனக்குத் தந்த பாடம் ஜனநாயகம் என்று நம்புகிறேன். அன்று என்னுள் இருந்த இளைஞன் கபடமின்றி இப்படி யோசித்தான், “அவர் சான்றோர் என்பதில் ஐயமில்லை. கூடவே, அவரும் என்னைப் போல் இச்சமூகத்தில் ஒரு நாத்திக நடிகர்தானோ !”
காட்சி 2 : அடிப்படைக் கணிதக் கோட்பாடுகளை அழகுற எடுத்துச்சொல்லி அத்துறையில் நான் நானாக பெரிதும் காரணமானவர் எனது கணிதப் பேராசிரியர் திரு. ஜோதிமணி அவர்கள். இலக்கிய ஆர்வமும் உள்ளவர். சிந்தனைச் சிற்பியான அவர் வாழ்வியலிலும் எனக்கு ஆசான். பல்துறை சார்ந்த அறிவே சான்றாண்மை என்பதை எடுத்துக் காட்டியவர். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகும் அவருடன் தொடர்பில் இருந்தேன். நான் எங்கள் ஊரிலேயே புதிதாகத் தோன்றிய பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியனாய்ப் பணி அமர்ந்ததால் நாங்கள் குடும்ப நண்பர்கள் ஆனோம். அவர் ஞாயிறு தவறாமல் தேவாலயம் செல்லும் கிறித்தவர். வழியில் மாரி அம்மனையும் வணங்கும் விந்தை மனிதர். பேராசிரியர் தொ.ப விற்கு அடுத்தபடியாக சைவமும் வைணவமும் அவரிடம்தான் கேட்டிருக்கிறேன். இவ்வாறு நிரம்பிய நூலுடையோர் கேண்மை வாய்த்தது எனக்கான அடுத்த பேறாக அடுக்குவது, கூறியது கூறலாகவும் தம்பட்டம் ஆகவும் அமையும் என்பதால் தவிர்க்கிறேன் (!!!). பேரா. ஜோதிமணி அவர்களுக்கு என்னிடம் ஒரு சிறிய மனக்குறை உண்டு. அது என் இறை மறுப்பு. தம் கருத்தை மற்றவர்களிடம் வலிந்து திணிக்கும் இயல்புக்கு எதிரானவர் அவர். எனினும் இறையருளில் பரிபூரண நம்பிக்கை அவருக்கு இருந்ததால் அவ்வருள் எனக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்ற ஆதங்கம் அவருக்கு. சமயக் கருத்துகளையும் பக்தி இலக்கியத்தையும் அவர் மேற்கோள் காட்டும்போது மிகுந்த (நடிப்பில்லாத) ஆர்வத்துடன் நான் கேட்பதுண்டு. ஆகையால் இறைவன்பால் ஒரு நாள் என்னை ஈர்க்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகக் கூறினார். அவர் நம்பிக்கை அவருக்கு. சவால் விடும் தொனியில் இல்லாமல் நான் அவருக்குப் பதில் சொன்னேன், “இறையுணர்வை இத்துணைப் பகுத்தறிவுடன் அணுகும் உங்களை இறைமறுப்பின்பால் திருப்ப முடியும் என்று எனக்கும் தோன்றுகிறது”. இது குரு, சிஷ்யன் இருவரின் தன்னம்பிக்கையையும் ஒருவர் மற்றவர் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் குறிக்கிறது. இருவருமே தோற்கக்கூடாது என்பது இயற்கையின் நியதியோ என்னவோ, திடீரென்று ஒரு நாள் அவர் தமது கர்த்தருக்குள் நித்திரை கொண்டார். அந்த நேரத்தில் என் கைபேசியும் காலாவதியானதால் ஒரு வாரம் கழித்துப் புதிய கைபேசி வாங்கலாம் என்று சோம்பேறித்தனமாய் இருந்துவிட்டேன். அந்த நேரத்தில் அந்தப் படுபாவி காலன் என் கண்ணையும் காதையும் மறைத்து அவரைக் காவு கொண்டான். மரணச்செய்தி நேரில் ஆள் மூலம் வந்ததும் சென்றேன். எனினும் அவர் மருத்துவமனையில் இருந்த கடைசி நேரத்தில் அவரிடம் பேச முடியாத வருத்தம் எனக்கு நிரந்தரமாகி விட்டது. சோகத்திலும் கவித்துவமாய் அவலச் சுவையில் சொல்வதாய் இருந்தால் அவரது விருப்பத்திற்கு மாறாக நான் இறை மறுத்ததால் அவரது இறைவன் எனக்கு அளித்த தண்டனையோ ! அவர் சீக்கிரம் விடை பெறுவார் என்று எனக்குத் தெரிந்திருந்தால், நான் தோற்று விட்டதாக - அவரது இறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டதாக – நடித்திருப்பேன். உலகத்தாரிடம் அங்கங்கே நடிக்கும்போது எனது குருவானவரின் இறுதி நாட்களில் அவரது மன நிறைவுக்காக நடிக்கக் கூடாதா, என்ன ? ஆனால் அவர் அதை நம்புவது ஐயப்பாடே ! எனது குருவை நான் அறிந்தது போல் அவருக்கும் தமது சீடனைத் தெரியும். மேலும் தமது ஞானபுத்திரனாய் அவரால் அறிவிக்கப்பட்ட நான் கருத்தியலில் அவரிடம் தோற்பதை அவரே விரும்ப மாட்டார். அவரும் எஞ்சாமி !