எங்கள் மண்

தந்தை, தாய் முகம் அறியா... செஞ்சோலை சிறார்களின் இன்றைய நிலை

7 months 1 week ago
 

 

 

 

 

தந்தை, தாய் முகம் அறியா... செஞ்சோலை சிறார்களின் இன்றைய நிலை

ஈழப் போராட்டம் என்றவுடன் கூடவே செஞ்சோலை சிறுவர் இல்லமும் எம்முன் நிழலாடும்.

செஞ்சோலை அமைந்திருந்த பகுதியில் வளர்ந்த பிள்ளைகள், தற்போது வளர்ந்து குடும்பங்களாக வாழத்தொடங்கியுள்ளனர். எனினும், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் இன்னும் செய்துகொடுக்கப்படவில்லை. அதுகுறித்து இன்றைய ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது.

யுத்த காலத்தில் 400இற்கும் மேற்பட்ட சிறார்களை பராமரித்துவந்த செஞ்சோலை சிறுவர் இல்லம் யுத்தத்தின் போது படையினரால் கைப்பற்றப்பட்டது. கடந்த ஜனவரி மாதம்வரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த படையினர், தற்போது அதனை விடுவித்துள்ளனர்.

அவை தற்போது, செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வளர்ந்தவர்களைக் கொண்ட சுமார் 40 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை தமது சொந்த இடத்திற்கு திரும்பிய இவர்களுக்கு இன்னும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை.

சிதறிக்கிடந்த பறவையினம் ஒன்றாய் கூடியதுபோன்ற உணர்வுடன், சுமார் 40இற்கு மேற்பட்ட சிறார்கள், பெரியவர்களாகி தமது வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார்கள்.

இவர்களுக்கான வசதிகள் ஏற்படுத்தப்படாமல், பாதுகாப்பற்ற நிலையில் வாழும் காட்சிகள் எமது கமராவில் சிக்கின.

இவர்களின் வாழ்வில் விளக்கேற்ற புலம்பெயர் உறவுகள் மற்றும் அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை இன்றைய ஆதவனின் அவதானம் வலியுறுத்துகின்றது.

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் இன்று மீண்டும் இவர்களின் வாழ்வு குடும்பமாக ஆரம்பிக்கின்றது.

இவர்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்து உருவாக்கப்பட்ட செஞ்சோலை மீண்டும் சிதைக்கப்படாது, பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

http://athavannews.com/தந்தை-தாய்-முகம்-அறியா-செ/

 

நடுவீதியில் பாதுகாப்பு மின்கம்பி! – மக்கள் பயணிப்பது எவ்வாறு?

7 months 2 weeks ago
 

 

நடுவீதியில் பாதுகாப்பு மின்கம்பி! – மக்கள் பயணிப்பது எவ்வாறு?

அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது மக்களை எவ்விதத்திலும் அவை பாதிக்கக்கூடாது என்பது பொதுப்படை.

ஆனால், அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் அன்றாட செயற்பாடுகளுக்;கு குந்தகம் விளைவிக்கும் விடயங்கள் இடம்பெறவே செய்கின்றன.

அந்தவகையில், முல்லைத்தீவில் வீதிக்கு நடுவே பாதுகாப்பு மின்கம்பி போடப்பட்டுள்ளதால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக இன்றைய ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது.

முல்லைத்தீவு முறிகண்டி முனியப்பர் வீதியின் நடுப்பகுதியில் மின்கம்ப பாதுகாப்பு கம்பி காணப்படுவதால் மக்கள் போக்குவரத்து செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் ஏ9 வீதியிலிருந்து மக்கள் குடியிருப்புக்களுக்கு செல்லும் வீதியே இது.

யுத்தத்தின் தாக்கத்திற்கு பெருமளவில் முகங்கொடுத்த இம்மக்கள், நீண்ட காலத்தின் பின்னர் இங்கு குடியமர்த்தப்பட்டனர்.

மீள்குடியேற்றத்தின்போது குறித்த வீதியின் நடுப்பகுதியில் இவ்வாறு மின்கம்பத்தை பாதுகாக்கும் கம்பி பொருத்தப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த கம்பியை அகற்றி போக்குவரத்திற்கு இலகுபடுத்தி தருமாறு பலமுறை மக்கள் மின்சார சபையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 11.01.2019 அன்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரால் இவ்வாறு கடிதம் ஒன்றின் மூலமும் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை அதிகாரிகள் குறித்த கம்பியை அகற்றி மக்களுக்கு இலகுபடுத்தலை மேற்கொண்டு கொடுக்கவில்லை என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கும் போது, மக்களின் அன்றாட பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது பொறுப்புவாய்ந்த அதிகாரிகளினுடைய கடமை என்பதை இன்றைய ஆதவனின் அவதானம் வலியுறுத்துகின்றது.

http://athavannews.com/நடுவீதியில்-பாதுகாப்பு-ம/

கோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்ட பாற்பண்ணை விலங்குகளின் உறைவிடமானது

7 months 2 weeks ago
 

 

கோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்ட பாற்பண்ணை விலங்குகளின் உறைவிடமானது

மக்களின் தேவைக்காக ஏற்படுத்தப்படும் வசதிகள் தொடர்ச்சியாக பராமரிக்கப்படுகின்றனவா?

கோடிக்கணக்கில் செலவழித்து திறக்கப்பட்ட பாற்பண்ணைக் கட்டடமொன்று, இன்று மிருகங்களினதும் பறவைகளினதும் உறைவிடமாக மாறியுள்ளது.

அதுகுறித்து இன்றைய ஆதவனின் அவதானம் (04.02.2019) கவனஞ்செலுத்துகின்றது.

வவுனியா மருக்காரம்பளையில் சுமார் 4 கோடி ரூபாய் செலவில் அமைக்கபட்ட நவீன பாற்பண்ணை தொழிற்சாலையின் நிலையே இது.

மக்களின் தேவைக்காக கட்டப்பட்ட இக்கட்டடம், இன்று குளவிகளும் குரங்குகளும் குடிகொள்ளும் குகையாக மாறிவருகின்றது.

நீண்டகாலம் பயன்படாமல் இருக்கின்றமையால் இத்தொழிற்சாலையில் உள்ள பெறுமதிமிக்க இயந்திர பாகங்கள் பழுதடையும் நிலையில் உள்ளன.

நாளொன்றிற்கு 1500 லீற்றர் பால் பதனிடும் வகையில் இந்த பாற்பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் வவுனியா கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் பயனடையமுடியும். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து கவனஞ்செலுத்தாமல் உள்ளமை வேதனையானது.

நவீன பாற்பண்ணைகள் இல்லாமல் எத்தனையோ பிரதேசங்கள் அல்லலுறும் போது, கோடிக்கணக்கில் செலவழித்து நவீன முறையில் கட்டப்பட்ட இந்த பாற்பண்ணை இன்று கவனிப்பாரற்று கிடக்கின்றது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனஞ்செலுத்தி, தமது பிரதேசத்திற்கு கிடைத்த பாற்பண்ணையை உயிர்பெற செய்யவேண்டுமென்பதே இம்மக்களின் எதிர்பார்ப்பு

http://athavannews.com/கோடிக்கணக்கில்-செலவழித்/

ஒரு தமிழக தமிழரின் பார்வையில் ஈழமும் மக்களும்

7 months 2 weeks ago

#பயணங்கள்_முடிவதில்லை
#இலங்கை

சுமார் ஒரு மணி நேரத்தில் சென்னையிலிருந்து கொழும்புவில் சென்று இறங்கிவிடக்கூடிய ஃபாரின் தான் இலங்கை.

அந்த ஒரு மணி நேரத்திற்குள் சரக்கு விற்கிறார்கள். சைட் டிஷ் விற்கிறார்கள். மக்களும் வாங்கிக் குடித்து சைட் டிஷ் ஒரு வாய் போடுவதற்குள் கொழும்புவில் தரை இறங்குகிறோம் என்று கேப்டனின் அறிவிப்பும் வந்துவிடுகிறது. 50 எம் எல் குப்பி ₹500 + சைட் டிஷ் ஒரு ₹400 டாஸ்மாக்கைப் போலவே ப்ளாஸ்டிக் டம்ப்ளர் எல்லாம் கொடுத்து உபசரிக்கிறார்கள்.

கொழும்புவில் மட்டுமே தற்பொழுதைக்கு சர்வதேச விமான நிலையம் செயல்படுகிறது. (  
மற்ற இடங்களில் ஏர்ப்போர்ட் சிவிலியன்களுக்கு இல்லை.கூடியவிரைவில் செயல்படுமென்கிறார்கள். முக்கிய இடங்களில் ஏர்போர்ட் இருந்தாலும் உள்ளுர் விமானக்கள் சாமானியருக்கு கட்டுப்படியாகாது. பெரும்பாலும் ராணுவப்பயன்பாட்டிற்கானது. ) அது தென் கோடி. அங்கிருந்து வடக்கிலிருக்கும் ஜாஃப்னா என்றழைக்கப்படும் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணப்பட 395 கிலோமீட்டர்கள் பயணிக்கவேண்டும்.

நம்மூரில் 3லிருந்து அதிகபட்சம் 5 மணி நேரங்கள் ஆகும். இலங்கையில் கிட்டத்தட்ட 8 மணி நேரங்கள் ஆகிறது.

காரணம் அங்கிருக்கும் போக்குவரத்து விதிமுறைகள், ஒழுங்கு மற்றும் தனித்தனியாக போக, வர நம் ஊரைப்போல ஹைவேஸ் இல்லாமல் ஒரே பாதையாக இருப்பது.

போக வர ஒரே ஒரு சாலை. இருபக்கமும் சைக்கிள் அல்லது பைக் ஓட்டுபவர்களுக்கு கோடு போட்டிருக்கிறார்கள். சாலை நடுவில் ஒரு கோடு இதற்குள்ளாக விதிமுறைப்படி வாகனத்தை அனைவரும் ஓட்டவேண்டும். நம்ம ஊரிலும் இப்படித்தானே என்று தோன்றுகிறதல்லவா? ஆனால், இங்கே நாம் செல்வதுபோல கட்டுப்பாடற்ற வேகத்தில் அங்கே செல்ல முடியாது. அதிகபட்ச வேகம் 70கிமீ. கண்ட இடத்தில் ஓவர் டேக் செய்ய முடியாது. இடதுபக்கம் சைக்கிளோ, பைக்கோ ஓட்டும் நபர் எக்காரணம் கொண்டும் நடு சாலைக்கோ, திடீரென்று திரும்புவதோ இல்லை. அனைத்து வண்டிகளிலும் இண்டிகேட்டர் பயன்படுத்தியே ஓட்டுகிறார்கள். ஸீப்ரா க்ராஸிங் எனப்படும் மக்கள் சாலையைக் கடக்கும் இடங்களில் அவர்களுக்கே முன்னுரிமை. திடீரென்று ஒருவர் சாலையைக் கடக்க நேர்ந்தாலும் டேய் உங்கப்பா பாதர் உங்கம்மா மதர் என்று திட்டாமல், சண்டை போடாமல் ப்ரேக் மேல சகல சரீரத்தையும் செலுத்தி வண்டியை நிப்பாட்டி சாலையைக் கடக்கும்வரை காத்திருக்கிறார்கள்.

புளியோதரையோ, லேஸ் பாக்கெட்டோ, வாழைப்பழமோ தின்றுவிட்டு கார் கண்ணாடியை இறக்கி வெளியே சாலையில் தூக்கிப் போடுவதில்லை. சாலைகள் அனைத்தும் படு சுத்தம். இருசக்கர வாகன ஓட்டிகள் இருவரும் ஹெல்மெட் கட்டாயம் அணியவேண்டும். காரில் முன்னால் உட்கார்ந்திருப்பவர் இருவரும் கட்டாயம் சீட்பெல்ட் அணியவேண்டும்.

யாருமற்ற சாலையில் எவன் பார்க்கப்போகிறான் என்று ஆக்ஸிலரேட்டரை அழுத்த முடியாது. ஏதேனும் ஒரு புதரிலிருந்து ஹெல்மெட் மாட்டிய போலீஸார் டார்ச் அடித்து வண்டியை நிப்பாட்டி அபராதம் விதிப்பார். அல்பத்தனமான குறைந்தபட்ச அபராதமே ₹2000 என்றால் மற்றவற்றிற்கு கணக்குபோடுங்கள்.

கர்மசிர்த்தையாக இலங்கை போலிசாரின் இந்த போக்குவரத்து பரிசோதனைகள் தொய்வின்றி நடக்கிறது. இரவு 1.30 மணிக்குக் கூட ஆளறவமற்ற சந்தில் பரிசோதிக்கிறார்கள்.

எங்கு வேண்டுமானாலும் செக்கிங் இருக்கும் என்ற எண்ணமே ஒழுங்குமுறைகளை தன்னிச்சையாக வாகன ஓட்டிகளிடத்தில் கொண்டுவந்துவிடுகிறது.

இதன்காரணம் கண்ட இடங்களில் ஸ்பீட் ப்ரேக் எனும் ஹம்ப்கள் இல்லை. கொழும்பு முதல் யாழ்ப்பாணம் வரை ஒன்றைக்கூட நான் பார்க்கவில்லை. எந்த நேரத்திலும் எங்களை அழைத்துச்சென்ற நண்பர் 70கிமீ வேகத்தைத் தாண்டவில்லை. விதிவிலக்காக பேருந்துகள் மட்டும் கொஞ்சம் அதிவேகத்தில் சென்றதைப் பார்த்தேன். அவர்களையும் போலிஸார் பிடித்து அபராதம் விதித்ததையும் பார்த்தேன்.

இந்த சாலை விதிமுறைகள் மற்றும் சுத்தம் இலங்கையில் என்னைக் கவர்ந்த முக்கிய அம்சம்.

-@-

பொதுவாக இலங்கை நமக்கு வெளிநாடென்றாலும் மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற இடங்களுக்கு நாம் சென்றால் ஏற்படும் புது இடம், புதிய மொழி, மக்கள் என்ற பிரமிப்பு கூட இலங்கையில் வரவில்லை. 99% அது கேரளாவைப் போன்றே இருக்கிறது. வீடுகள், சாலைகள், மரங்களை நேசிப்பது, உணவு, நீர்நிலைகள் என்று ஒரு வித்தியாசமும் இல்லை.

போதாதகுறைக்கு எங்கெங்கு காணினும் தமிழ் அறிவிப்புகள் காணமுடிவதும், பேசமுடிவதும் சொந்த ஊரிலொரு பயணம் போன்றே உணரமுடிந்தது.

நம்மூர் அம்மா உணவகம் போல, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களைக் கொண்டு ஹோட்டல்கள் அரசாங்கம் அமைத்திருக்கிறார்கள். இலங்கையின் பாரம்பரிய உணவுகள் அங்கே சல்லிசு விலையில் சுவையாகக் கிடைக்கிறது. 

உணவகங்களில் என்ன கிடைக்கும் என்பதை சமைத்து காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். நாம் கேட்பதை எடுத்துத் தருகிறார்கள். காலை சமைத்து வைத்து விட்டார்கள் என்றால் அது தீரும்வரை அதுதான் நமக்கு சப்ளை ஆகிறது. சுடச்சுட என்ற பேச்சுக்கு இடமில்லை. இது பெரும்பாலான சிறிய கடைகளின் நிலை. ஆப்பத்தை எல்லாம் அடுக்கி வைத்து அதை மக்கள் பார்சல் வாங்கிச் செல்வதைக் காண முடிந்தது. 

போட்டப்ப சூடாதான் சார் இருந்துச்சி என்று பொய் சொல்லி வடையை கொடுத்து பில்போடும் நம்மூர் ஓட்டல்காரர்களுக்கு இலங்கை நல்ல வியாபாரஸ்தலம் என்றாலும். கைகளால் உணவுப்பதார்த்தங்களைத் தொட்டு மக்களுக்கு விற்பனை செய்து செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்திற்கு மெனெக்கெடுகிறார்கள். 

யாழ்ப்பாண பிரதான உணவாக புட்டு, மீன் உணவுகள், தோசை, சிகப்பரிசி சோறு, தேங்காய் என்று காரசாரமாக சுவையாக இருக்கிறது. கேரள சுவை இங்கே கிடைக்கும்.

தமிழ் மொழி இங்கே பேசப்படுவதற்கும் மற்ற இடங்களில் பேசப்படுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இலங்கை தமிழ் மக்கள் பேசும் தமிழ் இனிமையானதென்றால் யாழில் அது பேரினிமையாக இருக்கிறது. 

தேநீர் சாப்பிடலாமா என்றுதான் கேட்கிறார்கள். டீ குடிக்கலாமா என்ற நவீன தமிழ்நாட்டுத் தமிழ் அங்கே வழக்கிலில்லை. ஆங்கிலம் தெரியாத தமிழ் மக்கள், சிங்கள மக்கள் நிறைய உண்டு. 

எல்லா கருங்கல்லிலும், வேப்பமரத்திலும் விபூதி, குங்குமம் தடவி சாமியாக்குவதைப் போல ஆலமரத்தைக் கண்டால் பவுத்த கொடியைக் கட்டி புத்தம் சரணம் கச்சாமியாக்கிவிடுவதைக் கண்டேன்.

மரங்களின் மீது தீராக்காதல் இருக்கிறது. சிங்கள மக்களும் மரங்கள், இயற்கையை பெரிதும் நேசிப்பவர்கள் என்று சொல்லக்கேட்டேன். பார்க்கும்பொழுதும் அது தெரிகிறது.

ஊட்டியைப் போன்ற குளிரான டீ எஸ்டேட் மலைவாசஸ் ஸ்தலங்கள் முதல், கோவாவைப் போன்ற நல்ல பீச்கள் வெயிலடிக்கக்கூடிய இடங்கள், அடர்ந்த காடுகள் என்று பல பகுதிகளை உள்ளடக்கியதாக இலங்கை இருக்கிறது.

சிங்களப் பெண்கள் குறிப்பாக டீச்சர்கள் சிங்களப் பாரம்பரிய புடவைகளை அணிகிறார்கள். 

கல்வி என்ன மேற்படிப்பாக இருந்தாலும் அரசாங்கத்தால் இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. பள்ளிக் கல்விகளில் அவரவர் மத சமயங்களுக்கேற்ப ஒரு பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் தேவாரம், திருவாசகம் போன்றவற்றையும், கிறித்தவ மற்றும் இஸ்லாமியர்கள், சிங்கள மக்கள் அவரவர் சமயம் சார்ந்த விஷயங்களை தெளிவுறக் கற்கிறார்கள். சிங்கள மொழியில் எம் பி பி எஸ் கூடப் படிக்கமுடியும்.

அரசு மருத்துவமனைகள் சுத்தமாக இருக்கிறது. சிகிச்சைகள் அவற்றிற்கான பதிவேடுகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவக் குறிப்புகள் தெளிவாக இருக்கிறது.

அரசாங்கப் பரிந்துரைப்படி குறைவான சர்க்கரை சேர்க்கப்பட்ட ஒரு லோக்கல் கோலா விளம்பரத்தைப் பார்த்தேன். இனிப்பைக் குறைத்து உடல்நலம் பேணுங்கள் என்ற ஒரு பொது அறிவிப்பினையும் யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் அருகாமையில் கண்டேன்.

-@-

சிங்கள மக்கள் உணவு மூன்று வேளையும் சிகப்பரிசி சோற்றைக் கொண்டதாக இருக்கிறது. இனிப்புகளை தவிர்க்கும் அம்மக்கள். ப்ளாக் டீயை சர்க்கரை இல்லாமல் குடிக்கிறார்கள். தொட்டுக்கொள்ள தேவைப்பட்டால் பனைவெல்லம். வில்வமரத்தின் பூ மற்றும் பட்டைகள் கொண்டு ஒரு கஷாய பானம் ப்ளாக் டீ போலக் கொடுக்கிறார்கள். அருமையாக இருந்தது. இது ஹேங் ஓவர் மற்றும் வாயுத்தொல்லைகளுக்கு நல்ல மருந்தென்று கூடுதல் டிப்ஸும் சொன்னார்கள். சிவசம்போ.

மீன் அனைவருக்குமான பிரதான உணவாக இருக்கிறது. கேரளாவைப்போன்றே பல கோவில்களில் மேல் சட்டை அனுமதி இல்லை. நல்லூர் போன்ற கோவில்களில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தீபாராதனை நடைபெறுகிறது. வி ஐ பிக்களுக்கு பெரிய கற்பூரம், சாமானியர்களுக்கு ஜருகண்டி போன்றவைகள் இல்லை. கோவில்கள் சுத்தமாக இருக்கின்றன. எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் நல்லூர் கந்தசாமி கோவிலில் அர்ச்சனைக்கு ₹1 மட்டுமே வாங்குகிறார்கள்.

பல இடங்களில் புத்த ஆலயங்களும் இருக்கின்றன. சிங்கள மக்கள் பலர் தமிழ் கோவில்களில் பக்திப்பரவசமாக வழிபாடுகள் செய்வதைக் கண்டேன். பழக இனிமையானவர்கள், செய்நன்றி மறவாதவர்கள் என்று சிங்கள மக்களைப் பற்றிக்கூறும் நம் சகோதரர்கள் கூற்றையும் இங்கே பகிர்கிறேன்.

 அரசியல், சுயலாபத்திற்காக அடித்துக்கொண்டு பகை வளர்க்கும் மக்கள் இதில் சேர்த்தி இல்லை. அமீரகத்தில் ஒரே அறையில் ஒன்றாக உண்டு வேலை செய்யும் இந்திய பாகிஸ்தானிய மக்கள் நிலையிலிருந்து புரிந்துகொள்ளவேண்டிய வெகுஜன செய்தி மட்டுமே இது.

கொழும்புவிலிருந்து யாழ்ப்பாணம் பிறகு மட்டக்களப்பு பிறகு கண்டி இதற்கு முந்தைய பயணத்தில் நுவரலியா சுற்றுவட்டாரப் பகுதிகள் என்று இலங்கையின் நீள அகலமாக இவ்விரு பயங்களும் அமைந்தது. 

போருக்குப் பிறகான காலகட்டம் என்பதை மக்கள் பிரச்னை இல்லாத எதிர்காலத்திற்கான அனுக்கமான வழி என்ன என்பதாகத்தான் பார்ப்பதாகத் தெரிகிறது ( வேறு வழியில்லை) போர் நடந்த இடங்களில் பயணப்படவில்லை என்றாலும் மிக முக்கிய இடங்கள் வழி சென்றோம். ஆனையிறவு, கிளிநொச்சி, பராந்தன், அநுராதபுரம் துவங்கி, முதன் முதல் கரும்புலி தாக்குதல் நடத்திய பாடசாலை, புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த வீடு, யாழ் கோட்டை, காங்கேசன் துறைமுகம், திலீபன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த இடம், அவரின் நினைவிடம், இப்படிப் பல இடங்கள். ஓரிடத்தில் புலிகள் கேம்ப்பில் இலங்கை ஆர்மி அடித்த ஷெல் ஒன்று வெடிக்காமல் சுவற்றில் குத்தி இருந்ததை அபப்டியே நினைவுச்சின்னமாக்கி இருக்கிறார்கள்.

சுலபமாக இதைச் சொல்ல முடிந்தாலும், நாங்கள் பயணப்பட்ட சாலைகள் ஒருகாலத்தில் 100 மீட்டர் பயணப்படவே மரணத்தைச் சந்திக்கவும் தயாராக இருந்ததென்பதை சொல்லக் கேட்டபோது பெருந்துயரமாக இருந்தது. தொலைத்தொடர்பு, மின்சாரம், எரிபொருள், தொடர் சண்டை, தாக்குதல்கள், ரெய்டு என்று போர்க்கால அனுபவங்கள் மேலோட்டமாகச் சொல்லும்பொழுதே மனது கலங்கியது. அதைத் தொடர்ந்து விரிவாகக் கேட்க தெம்போ , மனமோ இல்லை என்பதால் அவர்களாகச் சொன்னதை உள்வாங்கிக்கொண்டேன்.

சிங்கள மக்கள் கூட வந்து பார்த்து அங்கிருந்த மண்ணை பொட்டலம் கட்டி எடுத்துச் சென்ற காட்சிகளால் தலைவர் பிரபாகரன் பிறந்த வீடு முற்றிலுமாக இடிக்கப்பட்டு ஒரு சிறிய சுவர் மட்டுமே அந்த வல்வெட்டித்துறை வீட்டில் எஞ்சியுள்ளது. 

-@-

ஊட்டி ரயில் போல சிறப்பான காட்சிகளூடே பயணப்படும் மலைப்பகுதி ரயில் துவங்கி, கொழும்பு யாழ் இடையேயான ரயில் சேவையும் உள்ளது. ரயிலோ பஸ்ஸோ பர்த் வசதிகளற்ற இருக்கை வசதிகள் மட்டுமே. கொழும்பு யாழ்ப்பாண இரவு பேருந்துகளில் இரவு முழுக்க கர்ண கொடூர ஒலியில் தமிழ் இளையராஜா பாடல்களை தெறிக்கவிடுகிறார்கள். நான் மட்டும் நித்திரைகொள்ளாமல் வண்டி ஓட்ட நீங்க மட்டும் உறங்கலாமா என்ற டிரைவரின் நல்லெண்ணம் அது. போக சைலன்ஸரில் ஒரு விஸிலைப் பொருத்திவிடுகிறார்களா என்று தெரியவில்லை. அப்பகுதி கனரக வாகனங்களில் உய்ய்ய் என்ற விஸில் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

சந்தித்த மக்கள் அனைவருமே இனிமையான பாசக்கார மக்களாக இருந்தார்கள். புதிய நிலத்தில், கலாச்சாரத்தைக் காண்கிறோம் என்ற எண்ணமே ஏற்படவில்லை. மும்பை, தில்லியை விட பாதுகாப்பாக சொந்த ஊரைப்போல இலங்கையில் உணர்ந்தேன்.

கொழும்புவில் சீனா மிகப்பெரிய அளவில் கடலில் ஒரு நிலப்பரப்பை உருவாக்கி ஒரு நகரை நிர்மாணிக்கும் பணியில் இருக்கிறார்கள். இந்தியாவும் போட்டி போட்டுக்கொண்டு வானளாவிய கட்டடங்கள் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஜப்பானிய வாகனங்கள் ஆக்கிரமித்த இலங்கையில் இந்திய வாகனமும் போட்டிபோடுகிறது. டாட்டா நாநோ இலங்கையில் ஈ எம் ஐ ல் வாங்க அவர்கள் பணத்தில் 9 லட்ச ரூபாய் ஆகுமென்றார்கள்.

இந்திய ரூபாயை 2.50 ஆல் பெருக்கினால் இலங்கை ரூபாய் மதிப்பு கிடைக்கும். 

பால் என்பதே காணக்கிடைக்கவில்லை. அனைவருக்கும் பவுடர் பால்தான்.

-@-

இலங்கையின் இறந்தகால பிரச்னைகள், தடயங்கள், அரசியல், சூழ்ச்சி, மீட்சி, இன்றைக்கு அது சார்ந்து நடைபெறும்/ அரங்கேறும் விஷயங்கள் அதன் எதிர்காலம், சிங்கள, தமிழ் அரசியல், பாதிப்புகள் போன்றவற்றிற்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஒரு சுற்றுலாப் பயணியாக நான் கண்டவற்றைப் பகிர்ந்திருக்கிறேன்.

தைரியமாக குடும்பத்துடன் ஒரு சுற்றுலா செல்ல அருகாமையிலிருக்கும் இலங்கை ஒரு நல்ல தேர்வு. 

டுயூட்டி ஃப்ரீ ஷாப்புகளில் விற்கப்படும் சாக்லெட் விலைகளைப் பார்த்ததும் பாரின் போய்விட்டு வருபவர்களிடம் எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க? என்று கேட்பது எவ்வளவு பெரிய பிழை என்பது புரிந்தது.

சுபம்.

சங்கர்ஜி

முகநூல்

பொன்னாலையில் படையினரால் படுகொலை செய்யப்பட்ட 11 கடற்றொழிலாளர்களின் நினைவேந்தல்

7 months 2 weeks ago
பொன்னாலையில் படையினரால் படுகொலை செய்யப்பட்ட 11 கடற்றொழிலாளர்களின் நினைவேந்தல்

January 31, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_3781.jpg?resize=720%2C405

படையினரால் படுகொலை செய்யப்பட்ட 11 கடற்றொழிலாளர்களின் நினைவேந்தல் பொன்னாலையில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது-

பொன்னாலையில் கடற்றொழிலுக்குச் சென்றபோது படையினரால் படுகொலை செய்யப்பட்ட 11 தொழிலாளர்களின் 22 ஆவது நினைவேந்தல் நிகழ்வு பொன்னாலை ஸ்ரீ கண்ணன் சனசமூக நிலையத்தில் நேற்று முன்தினம் (29) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.

நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் செ.றதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிதிநிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு உணர்வுபூர்வமாக வணக்கம் செலுத்தினர்.

;மேற்படி படுகொலையில் தனது தந்தை மற்றும் இரு சகோதரர்களை இழந்த நா.தேவராசா பிரதான சுடர் ஏற்றியதைத் தொடர்ந்து திருவுருவப் படங்களுக்கு அவர்களின் உறவினர்கள் சுடர்களை ஏற்றி மலர் மாலைகளை அணிவித்தனர். தொடர்ந்து ஏனையோர் மலரஞ்சலி செலுத்தினர்.

ஊடகவியலாளர் ந.பொன்ராசா பிரதான நினைவேந்தல் உரை ஆற்றினார். தொடர்ந்து ஸ்ரீ கண்ணன் சனசமூக நிலையத் தலைவர் த.பாஸ்கரன், ஸ்ரீ கண்ணன் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் க.ஸ்ரீஜெயராமச்சந்திரஅருட்சோதி, வெண்கரம் செயற்பாட்டாளர் மு.கோமகன் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றினர்.

கடந்த 1997 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் திகதி கடற்றொழிலுக்குச் சென்ற தொழிலாளர்கள் பொன்னாலை கொத்தத்துறை படை முகாமுக்கு முன்பாக பாஸ் பெறுவதற்காகக் காத்திருந்தபோது அப்பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதல் ஒன்றைத் தொடர்ந்து படையினரின் தாக்குதலில் 09 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதேபோன்று, 1985 ஆம் ஆண்டு கடற்றொழிலுக்குச் சென்ற தொழிலாளர்கள் மீது படையினர் நடத்திய தாக்குதலில் 2 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

IMG_3779.jpg?resize=720%2C405  IMG_3782.jpg?resize=720%2C405IMG_3785.jpg?resize=720%2C405IMG_3786.jpg?resize=720%2C405

 

http://globaltamilnews.net/2019/111795/

ஈழப்போர்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?

1 year 3 months ago
இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 01
April 5, 2018
ananthapuram-05.jpg

பீஷ்மர்

விடுதலைப்புலிகள் அமைப்பு யுத்தத்தில் தோல்வியடைந்ததை இன்னும் ஜீரணிக்க முடியாத, நம்ப முடியாதவர்கள் பலருள்ளனர். காரணம்- புலிகள் அவ்வளவு பலத்துடன் இருந்தார்கள். அவர்கள் யுத்தத்தில் தோல்வியடைவார்கள் என யாரும் கற்பனையே செய்திருக்கமாட்டார்கள்.

விடுதலைப்புலிகள் ஏன் யுத்தத்தில் தோல்வியடைந்தார்கள்?

இந்த கேள்விக்கு இன்றுவரை பலரிற்கு விடை தெரியாது. யுத்தத்தின் கடைசிக்கணங்கள் எப்படியிருந்தன? விடுதலைப்புலிகள் எங்கே சறுக்கினார்கள்? யுத்தத்தை புலிகளின் தலைமை எப்படி அணுகியது? ஏன் அவர்களால் வெல்ல முடியவில்லை? நெருக்கடியான சமயங்களில் புலிகளின் தலைமைக்குள் நடந்த சம்பவங்கள் என்ன?

பெரும்பாலானவர்களிற்கு மர்மமாக உள்ள இந்த விசயங்களை முதன்முதலாக பகிரங்கமாக பேசப் போகிறது இந்த தொடர். புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் என- வாராந்தம் இரண்டு பாகங்கள் பதிவேற்றுவோம். வாசகர்களின் ஒத்துழைப்பை பொறுத்து புதிதாக எப்படி செய்வதென்பதை தீர்மானித்துக் கொள்ளலாம்.

விடுதலைப்புலிகளை பற்றி இவர்கள் என்ன புதிதாக கூறப்போகிறார்கள்… பேஸ்புக்கை திறந்தால் இதுதானே நிறைந்து கிடக்கிறது என நீங்கள் நினைக்கலாம்.

ஆனால்- “கடைசிக்கணத்தில் மனைவியை அனுப்பிவிட்டு குப்பிகடித்த தளபதி“… “பிரபாகரனை ஏற்ற வந்த அமெரிக்க கப்பலின் பின் சீட்டில் இருந்தவரின் அதிர்ச்சி வாக்குமூலம்“, “முள்ளிவாய்க்காலில் நடந்தது தலைவரின் தீர்க்கதரிசனம்“ போன்ற பேஸ்புக்கில் பரவும் விசயமல்ல இது. இந்த தொடரை பற்றி நாமே அதிகம் பேசவில்லை. அடுத்தடுத்த வாரங்களில் நீங்களே பேசுவீர்கள்.

இறுதியுத்தததில் நடந்த சம்பவங்களையே அதிகம் இதில் பேசுவோம். ஆனால், தனியே அதை மட்டுமே பேசவும் போவதில்லை. விடுதலைப்புலிகளின் உள்விவகாரங்கள் பலவற்றையும்- அது புலிகளின் ஆரம்ப நாளாகவும் இருக்கும்- பேசப்போகிறோம். இந்த தொடர் விடுதலைப்புலிகள் பற்றிய கணிசமான புதிரை வாசகர்களிற்கு அவிழ்க்கும். புலிகளை பற்றிய பிரமிப்பை சிலருக்கும்… புலிகளை பற்றிய விமர்சனத்தை சிலருக்கும்… புலிகள் பற்றிய மதிப்பை சிலருக்கும்… புலிகள் பற்றிய அதிருப்தியை சிலருக்கும் ஏற்படுத்தும். ஏனெனில், விடுதலைப்புலிகள் பற்றிய முழுமையான குறுக்குவெட்டு தொடராக இது இருக்கும். இதுவரை புலிகள் பற்றிய வெளியான எல்லா தொடர்களையும் விட, இது புதிய வெளிச்சங்களை உங்களிற்கு நிச்சயம் பாய்ச்சும்.

z_p08-President2-300x200.jpg

இராணுவத்தின் 53வது டிவிசன் கட்டளை அதிகாரியாக இருந்தவர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண. அவரது நந்திக்கடலுக்கான பாதை நூலில் இறுதி யுத்தத்தில் புலிகள் எப்படி போரிட்டார்கள், புலிகளின் செயற்றிறன் எப்படியிருந்தது, புலிகளின் தளபதிகள் மற்றும் தலைமையின் முடிவு எப்படியமைந்தது என்பது பற்றி  எழுதியுள்ளார். அவர் எதிர்தரப்பில் நின்று போரிட்டதால் பல உள்விவகாரங்கள் தெரியாமல் போயிருக்கலாம்.

2006 இல் மன்னாரில் தொடங்கிய படைநடவடிக்கை வெள்ளாமுள்ளிவாய்க்காலில் 2009 இல் நிறைவடைந்தது. இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்நதது? அபாயத்தை புலிகள் உணராமல் இருந்தனரா? எதிரி தொடர்பாக பிழையான கணக்கு போட்டு விட்டார்களா?

அதனைவிட, விடுதலைப்போராட்டத்தின் வரலாற்று பாதையில் எந்த இடத்தில் சறுக்கியது? நீண்டநாள் நோவு உடலில் திடீரென ஆபத்தை ஏற்படுத்துவது போல எப்பொழுதோ விட்ட பழைய தவறுகள் எவையெல்லாம் பின்னாளில் பாதகமானது? எல்லாம் சரியாக இருந்து வெறு வெளிக்காரணிகள் பாதகமாக அமைந்ததா? என்ற நீண்ட கேள்விகள் உள்ளன.

இறுதி யுத்த மர்மங்கள் இன்னும் நீடிக்கிறது. பிரபாகரன் இருக்கிறாரா.. இல்லையா? இருந்தால் எங்கே? மரணமானால் எப்படி மரணித்தார்? இப்படி ஏராளம் கேள்விகள் தமிழ் சமூகத்தில் பூடகமாகவே உள்ளன. யதார்த்தத்தின் பாற்பட்டு சில விடயங்களை அனுமானிக்க முடிந்தாலும், நமது சமூகத்தில் அது பகிரங்கமாக பேசப்படாமலும் உள்ளது.

இந்த இரகசியங்கள் அவிழ்க்கப்பட வேண்டும். சரி, தவறு, வீரம், அர்ப்பணிப்பு, தியாகம் என ஏராளமானவற்றால் கட்டியெழுப்பப்பட்ட ஒரு சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியின் கணங்கள் மனம் நடுங்க வைப்பவை. தானே உருவாக்கிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியை தனிஆளாக கடைசி மட்டும் பார்த்துக் கொண்டிருந்த பிரபாகரன் என்ன செய்தார்? ஒவ்வொரு தளபதிகளாக வீழ்ந்து கொண்டிருக்க, பிரபாகரனின் மனநிலை எப்படியிருந்தது?

17264442_164116904104842_381124174577518

இதுபற்றியெல்லாம் பகிரங்கமாக பேச இதுவரை தமிழர்களிற்கு வாய்ப்பிருக்கவில்லை. புலிகள் அமைப்பில் முடிவுகளை எடுக்கும் தலைமைக்கு நெருக்கமாக இருந்தவர்கள் யாரும் இதுவரை அதை பேசவில்லை. அப்படியானவர்களுடன் பேசி, அமைப்பின் பல்வேறு பிரிவுகளிலும் இருந்தவர்களுடனும் பேசி, சம்பவங்களை யாரும் தொகுப்பாக்கவில்லை. அந்தகுறையை போக்கி, புலிகள் அமைப்பின் உள்வீட்டு தகவல்கள், இறுதி யுத்தகால சம்பவங்களை தொகுப்பாக்கியுள்ளோம். மிக நம்பகமான மூலங்களை கொண்டு தொகுக்கப்பட்டுள்ள இந்த தொடர், புலிகள் பற்றி வெளியாகியிருக்காத பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தும். குறிப்பாக இறுதி யுத்த தகவல்கள். புலிகள் பற்றி வெளியான தொடர்கள், புத்தகங்களுடன் ஒப்பிடும்போது இது பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதை நிச்சயமாக கூறலாம்.

விடுதலைப்புலிகளின் தோல்விக்கு பலரும் பலவிதமான காரணங்களை சொல்கிறார்கள். சர்வதேச கூட்டிணைவு, எதிர்பார்த்த உதவிகள் வராமை, காட்டிக் கொடுப்பு என ஏராளம் காரணங்கள். இந்த சரிவு ஏதோ எதிர்பாராத விதமாக ஏற்பட்டதாதை போன்ற தோற்றத்தை அந்த காரணங்கள் உருவாக்குகின்றன. ஆனால் அது உண்மையல்ல.

சமாதான பேச்சுக்கள் முறியும் தறுவாயிலேயே, பேச்சுக்களை முறித்தால் என்ன நடக்கும் என்பதை பிரபாகரன் அறிந்திருந்தார். யுத்தம் ஆரம்பிக்கும் தறுவாயில், அதிசயங்களை நிகழ்த்தாவிட்டால் என்ன நடக்குமென்பதை பிரபாகரன் அறிந்தே வைத்திருந்தார். அதை அவர் போராளிகள் மத்தியில் தெளிவாக சொல்லியிருந்தார்.

2008 இன் இறுதிப்பகுதி. பரந்தன் சந்தியை 58வது டிவிசன் படையினர் பூநகரி தொடக்கம் கரடிப்போக்கின் பின்பகுதி வரையான பகுதிக்குள்ளால் குறிவைத்து நகர்ந்து கொண்டிருந்தனர்.  கிளிநொச்சியில் புலிகள் கடுமையாக போரிட்டபடியிருந்தனர். அங்கு பலமான மண்அணைகள் அமைக்கப்பட்டிருந்ததால், 57வது டிவிசன் படையினர் முன்னேற முடியாமல் தேங்கி நின்றனர். 58வது டிவிசன் படையினர் பரந்தன் சந்தியை அடைந்தால் மாத்திரமே, இராணுவத்தால் அடுத்து ஏதாவது செய்ய முடியுமென்ற நிலைமை.

அந்த நாட்களில், முரசுமோட்டையில் அமைந்துள்ள ஒரு முகாமில்- முன்னர் பயிற்சி முகாமாக இருந்தது- களமுனை போராளிகளுடன் ஒரு அவசர சந்திப்பு நடந்தது. பிரபாகரனும் வந்தார். பெரும்பாலான முக்கிய தாக்குதல் தளபதிகள் நின்றார்கள். பொட்டம்மானும் வந்திருந்தார்.

அன்றைய கூட்டத்தில் பிரபாகரன் அதிகம் பேசவில்லை. கொஞ்சம் இறுகிய முகத்துடனேயே வந்தார். சலனமற்ற குரலில் உரையாற்றினார். மிகச்சுருக்கமாக அவர் ஆற்றிய உரையின் சாரம்- தொடர்ந்து இப்படியே பின்வாங்கிக் கொண்டிருக்க முடியாது. இராணுவத்தை ஏதோ ஒரு இடத்தில் நிறுத்தி, ஏதாவது அதிசயம் நடத்தி காட்ட வேண்டும். அதை என்னால் செய்ய முடியாது. நீங்கள்தான் செய்ய வேண்டும். நாம் எல்லோருமே இனிவரும் நாட்களில் அர்ப்பணிப்புடன் போரிடுவோம்.

இதை சொல்லிவிட்டு, தளபதிகளுடன் கொஞ்சம் கடிந்து கொண்டார்.

தளபதிகள் அனைவரையும் முன்னரணிற்கு அருகில் சென்று, போராளிகளுடன் தங்கியிருக்குமாறு சொன்னார். போராளிகளுடன் தளபதிகளும் நின்றால்தான், அவர்கள் உற்சாகமாக போரிடுவார்கள் என்றார்.

அந்த சந்திப்பில் பிரபாகரன் சொன்ன ஒரு வசனம் மிக முக்கியமானது. வரவிருக்கும் அபாயத்தை அவர் தெரிந்தே போரிட்டார் என்பதை புலப்படுத்தும் வசனம் அது.

“இனியும் பின்னால் போய்க்கொண்டிருக்க முடியாது. இப்பிடியே போய்க்கொண்டிருந்தால் விரைவில் எறும்பைப்போல நசுக்கி எறிந்து விடுவார்கள்“ – இது அன்றைய கூட்டத்தில் பிரபாகரன் சொன்ன வசனம்!

போராளிகளுடன் கலந்துரையாடிவிட்டு பிரபாகரன் அடுத்து செய்ததுதான் இன்னும் ஆச்சரியமானது.

நடக்கப்போவதை மட்டுமல்ல, அது எப்படி நடக்கப் போகிறது என்பதையும் பிரபாகரன் தெரிந்தேயிருக்கிறார் என்றும் சொல்லலாம். இது பிரபாகரனை மகிமைப்படுத்த சொன்ன வசனமல்ல. சம்பவத்தை சொல்கிறோம், நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

தான் எடுத்து வந்திருந்த – The Spartans என்ற திரைப்படத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான 300 வீரர்கள் திரைப்படத்தின் சில நிமிட காட்சியை திரையில் காண்பிக்க சொன்னார். படத்தின் இறுதிக்காட்சியே காண்பிக்கப்பட்டது. வாழ்வா சாவா என்ற நிலையில் உறுதியுடன் போராடி ஸ்பாட்டன் மரணமான காட்சி.

இந்த திரைப்படம் பிரபாகரனிற்கு மிகப்பிடித்தமான திரைப்படமாக இருந்தது.

FP3248_300_spartan-300x200.jpg

ஸ்பார்ட்டாவின் 300 வீரர்கள் தமது தாய் நாட்டிற்காக இலட்சக்கணக்கான பாரசீக படையுடன் கடைசிவரை போரிட்டு இறந்த கதை. 300 வீரர்களை தலைமை தாங்கிய மன்னனின் வீரரம் திரைப்படத்தில் வெகுஅழகாக காட்சிப்படுத்தப்பட்டது. அவனது இறப்பின் மூலம் அந்த நாட்டிற்கு உடனடியாக விடுதலை சாத்திப்படாவிட்டாலும், விடுதலைக்கான சூழலை ஏற்படுத்தியதுதாக திரைப்படத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. படத்தின் இறுதிக்கட்டத்தில் குறைந்த வீரர்களுடன் நின்ற ஸ்பார்டனை பாரசீகபடை சுற்றிவளைத்தது.

வெட்டைவெளியில் நடந்தது அகோரபோர். ஒவ்வொரு வீரராக வீழ, ஸ்பார்ட்டன் சளைக்காமல் போரிட்டு, கடைசியில் மடிந்தான். வெள்ளாமுள்ளிவாய்க்காலிலும் இறுதியில் அப்படியொரு சூழலில்த்தான் இறுதிப்போர் நிகழ்ந்தது.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/274/

 

தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.

2 years 8 months ago

தேசியத் தலைவர் பிரபாகரனின்,  முன்பு கண்டிராத.....  பல  படங்களை இணையத்தில் கண்டேன்.  
அவற்றை, ஒரு தொகுப்பில் இணைத்தால், பலரும் பார்க்கக் கூ டியதாக இருக்கும் என்பதால்.... 
இந்தத் தலைப்பில்,   இணைக்கின்றேன்.

Bild könnte enthalten: 1 Person, sitzt

Bild könnte enthalten: 1 Person, sitzt, isst und im Freien

Bild könnte enthalten: 1 Person, sitzt

Bild könnte enthalten: 4 Personen, Personen, die sitzen

Bild könnte enthalten: 5 Personen, Personen, die stehen und Text

கறுப்பு ஜுலை 1983 ஒரு அனுபவப் பகிர்வு !

6 years 1 month ago

black_july-600x197.jpg

ஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும், அவற்றுக்கெதிராக அவ்வப்போது சில அரசியல் தலைவர்களது குரல் ஒலிப்பதும், சில அற்பசொற்ப சலுகைகளுக்காக அடங்கிப்போவதும் நாம் கண்ட, காண்கிற அனுபவங்களானாலும், தமிழினத்தை தன்னிலைபற்றிச் சிந்தித்து, தனக்கென ஒரு நாடு தேவை என்ற தீர்வைக் கொடுத்தது என்னவோ, சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரது ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட ‘தரப்படுத்தல்” என்ற தமிழ் மாணவரது கல்வியை நசுக்கும் செயல்தான் என்பதை எவராலுமே மறுக்கமுடியாது.

தரப்படுத்தல் சிவகுமாரன் போன்ற மாணவர்களை அகிம்சை வழியிலிருந்து விலகி ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியது. அரச பயங்கரவாதச் சுரண்டல்களுக்குப் பரிகாரம் ஆயுதப் போராட்டமே என்ற எண்ணம் பல இளைஞருள்ளும் எழுந்தது. ஆனால் துணிவாக முன்வந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையினரே. அதுவும் அவர்களால் வெளிப்படையாக தம்மை இனங்காட்ட முடியவில்லை. ஏனெனில் அந்த இளைஞர்களின் செய்கைகளை அங்கீகரிக்கும் மனப்பக்குவம் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு இருக்கவில்லை.

இந்த நிலையில்தான் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு இருபத்திமூன்றாம் திகதி திருநெல்வேலி மண் ஈழத் தமிழினத்தின் போராட்டத்தைப்பற்றிச் சிந்திக்காத மனப்பான்மைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.திருநெல்வேலியில் பதின்மூன்று சிங்கள இராணுவத்தினர் அழிக்கப்பட்ட செய்தி கேட்ட தூங்கிக் கிடந்த ஈழத் தமிழினம் சோம்பல் முறித்துக்கொண்டது. அரச படை இயந்திரங்களை எதிர்த்துப் போரிட முடியுமா என்ற கேள்வியே ஈழத் தமிழினத்தால், குறிப்பாக தமிழின அரசியல் மேடைப்பேச்சுத் தலைவர்களால் நினைத்துப்பாராததொன்றாக இருந்தவேளையில், திருநெல்வேலித் தாக்குதல் ஒரு விடிவெள்ளியாகியது.

ஈழத்தமிழனின் கல்வியில் திணிக்கப்பட்ட தரப்படுத்தலானது இளைஞர்களை ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியதென்றால், திருநெல்வேலி தாக்குதலும் அதைத் தொடர்ந்து எழுந்த அரச பயங்கரவாத ஆதரவுடன் இடம்பெற்ற இனக்கலவரமும் போராட்ட அமைப்புகளின் தீடீர் வளர்ச்சிக்கு அல்லது திடீர் வீக்கத்துக்கு வழிவகுத்தது.
ஆயித்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு யூலைக் கலவரமானது பெரும்பாலான ஈழத் தமிழர்களுக்கு ஒவ்வொருவிதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கும். அந்தவகையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கே இரைமீட்க விரும்புகிறேன்.

அப்போது நான் கொழும்பில் தெமட்டகொட என்ற இடத்தில் ஒரு சிங்கள வீட்டு அறையொன்றில் வாடகைக்கு குடியிருந்தேன். மருதானையில் அமைந்துள்ள ‘தில்லீஸ் குறூப்” என்ற நிறுவனத்தின் கணக்குப் பகுதியில் கடமையாற்றிக்கொண்டிருந்தேன்.

‘தில்லீஸ் குறூப்”பின் கீழே பல வியாபார ஸ்தாபனங்கள் இயங்கின. அவற்றில் ஒன்று கல்கிசை என்னும் இடத்தில் கடற்கரையை அண்மித்திருந்த ‘தில்லீஸ் பீச் ஹோட்டல்” என்ற வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் தங்கும் நட்சத்திர ஹோட்டலாகும். அன்று 1983 யூலை 23ம் திகதி என்று நினைக்கிறேன். அதாவது இனக்கலவரத்துக்கு முதல்நாள். சில கணக்குச் சம்பந்தமான அலுவல்களுக்காக அங்கே சென்றுவிட்டு வீடு திரும்ப இரவு எட்டு மணியாகிவிட்டது. கல்கிசையில் இருந்து தெமட்டகொட வரவேண்டுமானால் 154 இலக்க வஸ் எடுக்கவேண்டும். அந்த வஸ் பொரளை என்ற இடத்தினூடாக தெமட்டகொடவுக்கு செல்லும். வஸ் பொரளையை அண்மித்தபோது அதன் வேகம் குறைந்தது. அது பொரளையில் கனத்தை மயானம் அமைந்துள்ள பகுதி. அங்கே பெருந்திரளான மக்களும் பொலீசாரும் திரண்டிருந்தார்கள். வாகனங்கள் அதற்கப்பால் செல்ல இயலாதவாறு ஒரே சன நெரிசல். திருநெல்வேலியில் பலியான இராணுவச் சடலங்கள் கனத்தை மயானத்தில் அடக்கம் செய்யப்பட இருந்ததால்தான் அந்தச் சனத்திரள் என்பதை மறுநாள்தான் என்னால் அறியமுடிந்தது. பஸ் வண்டி வேறொரு பாதை வழியாக தெமட்டகொடவை அடைய, வீடு செல்லக்கூடியதாக இருந்தது.

மறுநாள் காலை ஏழு மணியிருக்கும். வீட்டு உரிமையாளர் அவசரமாக அறைக்கதவைத் தட்டும் சத்தம்கேட்டு எழுந்தேன். அந்த சிங்களவர் தலையில் கையை வைத்தவாறு, ‘தெமட்டகொட சந்தியிலுள்ள தமிழ்க் கடைகள் யாவும் அடித்து நொறுக்கப்படுகிறதென்றும், பெரிய பிரச்சினை ஒன்று கொழும்பில் ஆரம்பமாகிவிட்டது” என்றும் கூறி, என்னை வெளியே போகாமல் பாதுகாப்பாக இருக்குமாறு சொல்லிவிட்டு சென்றார்.
ஒரு மணித்தியாலம் கழிந்திருக்கும். வெளியே சென்ற வீட்டு உரிமையாளர் வியர்த்து விறுவிறுக்க வந்தார்.

‘தமிழர்களை வைத்திருக்கிற சிங்களவர்களுடைய வீடுகளையும் எரிக்கிறார்களாம். அதனால் நீ இங்கிருப்பது எங்களுக்கு பயமாக இருக்கிறது” என்றார்.
மாதக் கடைசி. கையில் பணமில்லை.

வேலைத்தலத்தில் பணம் கேட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் மருதானையை நோக்கி விரைந்தேன். அனேகமாக வேலைக்கு ஒரு குறுக்குப் பாதை வழியாக நடந்துதான் போவேன். அந்தப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, வேகமாக வந்த ஓட்டோ ஒன்று விக்கித்து நின்றது.

அதிலிருந்து வியர்த்து விறுவிறுத்தவாறு இரண்டு சிங்களவர்கள் இறங்கி என்னை கூப்பிட்டு, தங்களுடன் சேர்ந்து அந்த ‘ஓட்டோ”வை தள்ளிவிடுமாறு கூறினார்கள். கைகளில் கத்தி பொல்லுகளுடன் விழிகள் சிவப்பைக் கக்க, விகாரமான முகங்களுடன் நின்றிருந்தவர்களுக்கு நான் தமிழன் என்று அடையாளம் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அந்த நேரம் என்னிலையை நினைத்துப் பார்க்கவே முடியாதிருந்தது.

மனதில் பயம் தோன்றினாலும், அந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு என்னை இனங்காட்டக் கூடாதென்ற நிலமையில் அவர்களுடன் ஒருவனாக அந்த ‘ஓட்டோ”வைத் தள்ள ஆரம்பித்தேன்.

அந்த ‘ஓட்டோ”வினுள் இரண்டு மூன்று பெரிய ‘சூட்கேஸ்கள் அரைகுறையாக திறந்தநிலையில் உடுபுடவைகளும் நகைகளுமாக வெளியே தெரிந்தன. அந்த ‘சூட்கேஸின்” வெளிப்பகுதி எங்கும் ஈரம் காயாத இரத்தக்கறைகள் வியாபித்திருந்து, எங்கோ ஒரு வீட்டில் தமிழுயிர்கள் அந்த இரு காடையரினால் கொடூர அவலத்துக்குள்ளாகி, தமது சொத்துக்களையும் பறிகொடுத்ததை எடுத்தியம்பின. சிலசமயம் அந்த உயிர்களும் பறிபோயிருக்கலாம்.

எனினும் என்ன பயன்?

எனது உயிர்ப் பாதுகாப்புக்காக அந்த ‘ஓட்டோ” தொடர்ந்து முன்னே செல்ல, கைகொடுத்துவிட்டு, கையாலாகாத்தனத்துடன் எனது வேலைத்தலத்தை நோக்கி விரையலானேன்.

அது திறக்கப்படவில்லை.

மீண்டும் வீட்டை அடைந்தேன். எனது நிலையைப் புரிந்துகொண்ட அந்த வீட்டு உரிமையாளர், கைச்செலவுக்கு சிறிதளவு பணத்தை கேட்காமலேயே தந்தார்.
எங்கே போவது? எவரிடம் உதவி கேட்பது?

யோசித்து முடிவெடுக்க முடியவில்லை.

வீதியால் செல்லும் வஸ் வண்டிகளிலிருந்து ‘ஜயவேவா, ஜயவேவா” என்ற பலநு}று குரலொலிகள் எழுந்து சூழ்நிலையின் பயங்கரத்தை உணர்த்திக்கொண்டிருந்தன.
வேலைக்கென வந்து மக்கள் வீதியெங்கும் கும்பல் கும்பலாக தமிழனின் அவலத்தை வேடிக்கை பார்த்தவாறு மெல்லமெல்ல நகர்ந்துகொண்டிருந்தார்கள்.
அப்போது ஒரேயொரு வழிதான் தென்பட்டது.

கல்கிசையில் அமைந்திருந்த ‘தில்லீஸ் பீச் ஹோட்ட”லுக்குச் செல்வது என்பதுதான். அது வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்கான ‘ஹோட்டல்” என்பதால், அதுவே பாதுகாப்பான இடம் என்று முடிவெடுத்தேன்.

தெமட்டகொடவிலிருந்து கல்கிசைக்குச் செல்லவேண்டும்.

பொரளையூடாகவும் போகலாம். மருதானை ஊடாகவும் செல்லலாம். கலவரம் ஆரம்பமான இடம் பொரளை என்பதால், மருதானை ஊடாகச் செல்ல ஆரம்பித்தேன். நடந்து செல்வதே பாதுகாப்பானதாகத் தோன்றியது.

மருதானை, நகரமண்டபம் எல்லாவற்றையும் கடந்து கொள்ளுப்பிட்டியை அடைந்தபோது, சில நு}று மீற்றர் முன்னால் காடையர் கூட்டமொன்று பல தமிழர் வர்த்தக ஸ்தாபனங்களைக் கொள்ளையிட்டு, அவற்றை எரித்தவாறு சென்றுகொண்டிருந்தது.

அவர்களின் பின்னால் ‘ஜயவேவா” என்ற கோசங்களுடன் ஒரு கூட்டம். அவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைக்கு வந்து, அலுவலகங்கள் திறக்காததால் திரும்பிச் செல்பவர்கள். தமிழரின்மீது நடாத்தப்படும் அராஜகங்களைப் பார்த்து வேதனைப்படும் சிங்கள மக்களும் அந்தக் கூட்டத்தில் இல்லாமலில்லை.

இராணுவத்தினர் ‘ட்ரக்”குகளில் பெற்றோலைக் கொண்டுவந்து அந்தக் காடையர்களுக்கு விநியோகிப்பதையும், ‘ஜயவேவா” என்று கத்தி உற்சாகமூட்டுவதையும் காணக்கூடியதாக இருந்தது.

பல சரக்குக் கடைகளைச் சூறையாடி அதிலிருந்த இனிப்பு, குமிழ்முனைப் பேனா போன்றவைகளை அந்தக் காடையர்கள் சனங்களை நோக்கி வீசுவதையும் அவற்றை அந்தச் சனங்கள் முண்டியடித்தவாறு பொறுக்கி எடுத்து ஆனந்தம் அடைவதையும் பார்த்தவாறு மெல்லமெல்ல அவர்களோடு ஒருவனாக நகர்ந்துகொண்டிருந்தேன்.

பம்பலப்பிட்டி என்ற பகுதியை அண்மித்தபோது காடையாரின் தொகையும், தாக்குதல்களும் மிகவும் அதிகரித்துவிட்டது. சுற்றிநிற்கும் கூட்டத்திலே எவராவது தமிழர்கள் உள்ளார்களா என நோட்டமிட ஆரம்பித்துவிட்டார்கள். சுற்றிநிற்கும் மக்களின் ஆதரவும், இராணுவத்தினரின் பெற்றோல் விநியோக உதவியும் காடையரின் உற்சாகத்தைக் கூட்ட, அவர்களின் வெறியாட்டம் உச்சகட்டத்தை அடைந்துகொண்டிருந்தது.

பம்பலப்பிட்டி சரஸ்வதி லொட்ஜ் என்ற தோசைக்குப் பெயர்பெற்ற அந்தச் சைவக் கடையின் பலகைக் கதவுகளை நொறுக்கித் திறந்து, உள்ளேயிருந்து வேட்டியணிந்த ஒரு பெரியவரை வெளியே இழுத்து வந்து ஏதோ செய்யுமாறு கட்டளையிட்டார்கள். பாவம் அந்தப் பெரியவர் அணிந்திருந்த வேட்டியைக் கழற்றி தலையில் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு, தேகம் நடுங்க அந்தக் காலி வீதியில் மண்டியிட்டு இருகரம் கூப்பி அந்தக் காடையர்களைக் கும்பிடலானார். அருகில் உடைந்து சிதறியிருந்த அந்தக் கடைக் கதவுப் பலகையொன்றால் அவரின் முகத்தில் ஓங்கி அறைந்தான் அந்தக் காடையர்களில் ஒருவன். இரத்தம் குபீரெனப் பாய்ந்தது.

கண் முன்னால் ஒரு கொலையொன்று நிகழப்போகிறதோ என்ற பீதியுடன் உடல் உறைய நின்றிருந்தேன்.

அப்போது சில சிங்களப் பெண்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்து பாய்ந்து வந்து அந்த முதியவருக்கும் காடையருக்கும் இடையே ஒரு பாதுகாப்புக் கவசமாக நின்றுகொண்டு, அந்தக் காடையரைப் பார்த்து ஏசிக் கத்தினார்கள்.
அங்கே அந்தத் தமிழ் முதியவரது உயிர் பிழைத்துக் கொண்டது.

அந்தச் சிங்களப் பெண்களின் தாய்மை உள்ளத்துக்கு மனதாரத் தலை வணங்கியவாறு, மேலும் அந்த வழியால் தொடர்ந்து செல்வது புத்திசாலித்தனமல்ல என்ற முடிவுடன் கடற்கரைவழியாகக் கல்கிசையை அடையலாம் என்ற முடிவில், கடற்கரையில் அமைந்துள்ள தண்டவாளத்தின் வழியாக கல்கிசையை நோக்கி நடக்கலானேன்.

வெள்ளவத்தையில் காலிவீதியிலிருந்து கடற்கரை நோக்கி குறுக்காக அமைந்த வீதியெங்கும் ஒரே புகைமயமாகவும், மக்களின் அபயக் குரல்களாகவும் அந்த கடல் காற்றிலே கலந்துகொண்டிருந்தது.

நான் ராஜசிங்க வீதியை அண்மித்தபோது பின்னால் ஏதோ சலசலப்புக் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.
சில காடையர்களும், ஒரு புத்த பிக்குவும் கையில் கத்தி பொல்லுகளுடன் வந்துகொண்டிருந்தார்கள்.

ஆபத்து பின்னால் நெருங்குவதை உணர முடிந்தது.
ஓடினால் ‘தமிழன்” என்று இனங்கண்டு துரத்திப் பிடித்துவிடுவார்கள்.
நடையின் வேகத்தை அதிகரித்தேன்.

எனினும் கல்கிசைக்கு இன்னும் து}ரமிருந்தது. அப்போது வெள்ளவத்தையில் போய்க்கொண்டிருந்தேன். கல்கிசையை அடைய தெகிவளை என்னும் இடத்தையும் தாண்டியாகவேண்டும்.

கல்கிசையை சென்றடைவேன் என்ற நம்பிக்கை பின்னால் வந்தவர்களின் தொடர்தலால் மெல்லமெல்ல அகன்று கொண்டிருந்தது.

வீதி எங்கும் சிங்களப் பேரினவாதிகளின் ஆதரவுடன் அரங்கேறிக்கொண்டிருந்த ஈழத்தழிழர்மீதான அட்டூழியங்களையும், அடாவடித்தனங்களையும் நேரடியாகவே பார்த்தவாறு வந்ததால், அந்த புத்த பிக்குவுடன் பின்தொடரும் காடையர்களால் எனக்கு என்ன நேருமோ என்ற எண்ணம் என் பதட்டத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது.

அப்போது இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை அண்மித்துக் கொண்டிருந்தேன். அதனுள் பல தமிழர்கள் அடைக்கலமாகியிருப்பது மண்டபக் கண்ணாடிச் சுவர்களினுாடே தெரிந்தது.
அப்போது யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் பிரயாணசேவையை நடாத்திக் கொண்டிருந்த பிள்ளையார் ஸ்ரோர்ஸ் சொகுசு வஸ் ஒன்று அரைகுறையாக எரிந்து புகைய, மண்டப முன் கண்ணாடிகள் நொறுங்கிப் போயிருந்தன.

அவசர அவசரமாக உள்ளே நுழைந்துவிட்டேன். அந்தக் காடையர்களும் உள்ளே நுழைந்தார்கள். அவர்களைக் கண்டு மண்டபத்தினுள்ளே இருந்த பெண்களும் குழந்தைகளும் கூச்சலிட ஆரம்பித்தார்கள். அப்போது அந்த மிஷன் சுவாமிகள் காவியுடையுடன் முகத்தில் அமைதி தவழ, அபயக் குரலெடுத்து அலறும் அந்த அப்பாவி தமிழர்களை விலத்தியவாறு, புத்த பிக்குவின் முன்னால் வந்து நின்றுகொண்டார்.

என்னை அழித்துவிட்டு, அப்பால் சென்று உங்களின் வெறியைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்னும் போக்கில் ஒரு காவியுடை தரித்த துறவி.
தமிழர்களை அழித்தே தீருவேன் என்னும் நோக்கில் இனவெறி கண்களில் தெறிக்கக் காடையருடன் இன்னொரு காவியுடை தரித்த புத்த துறவி.

இரண்டு வேறுபட்ட குணாம்சம் பொருந்திய துறவிகள் நேரடியாகச் சந்தித்தார்கள்.

அந்த புத்த துறவிக்கு அங்கே குற்றத்தை உணரும் மனப்பக்குவம் ஏற்பட்டதோ, என்னவோ, அவர் காடையர்களை அழைத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிட்டார்.சிறிது நேரத்தில் அங்கு கூடியிருந்த தமிழ் மக்கள் யாபேருக்கும் சுடச்சுடத் தேனீர் பரிமாறப்பட்டது.

பாலைவனத்தில் ஒரு துளி நீர் கிடைத்ததுபோன்ற உணர்வெழுந்தது.
சுற்றிலும் ஒரே புகைமயமாக இருந்தது. பல தமிழர்களின் உடமைகள் சூறையாடப்பட்டும் எரியூட்டப்பட்டும் மக்கள் அநாதரவாக இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகரித்துக்கொண்டிருந்தது.
குழந்தைகள் பசியால் கதற ஆரம்பித்துவிட்டார்கள். எல்லோரையுமே பசி வாட்டி வதைத்தது.
இனிமேல் என்ன நடக்கப் போகிறது, என்ன செய்யப் போகிறேன் என்பதைக் குறித்து என்னால் சிந்திக்க முடியாமல் இருந்தது.

இரவு எட்டு மணியிருக்கும்.

முன்னே பொலீஸ் ஜீப் வண்டி வர, பின்னால் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க லொறிகள் மூன்று வந்தன.அவற்றில் ஏற்றப்பட்டோம். அவை பம்பலப்பிட்டி இந்துக் கல்லுாரியைச் சென்றடைந்தன.

லொறிகளிலிருந்து பரபரப்பாக இறங்கிய அனேகர் முண்டியடித்தக்கொண்டு உள்ளே ஓடினார்கள். ஏதாவது உணவு வழங்குகிறார்களோ என்று நோட்டமிட்டேன். அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஒவ்வொரு வகுப்பறைகளாகத் தமக்கு இடம் ஒதுக்குவதில் ஈடுபட்டிருந்தார்கள்.

உடமைகளையும் கட்டிக்காத்த செல்வங்களையும் இழந்து அகதிகளாக அவலங்களுடன் எதிர்காலமே சூனியமாகிவிட்ட நிலையில், ஒரு வகுப்பறையின் வெறும்தரையில் கையோடு எடுத்துவந்த சில சில்லறைப் பொருட்களை வைத்து இடம் பிடிப்பதில் போட்டிபோட்டுக் கொண்டிருந்தார்கள்.இந்தப் போட்டியானது அப்போதிருந்து அகதி முகாமான பம்பலப்பிட்டி இந்துக் கல்லு}ரியில், ஒவ்வொரு சிறுசிறு விசயங்களுக்குமாய் சங்கிலிக் கோவையாய் பின்னிப்பிணைந்து வளர்ந்துகொண்டே சென்றது.

உறங்குவதில் இடம்தேடப் போட்டி. உணவு பெறுவதில் போட்டி. மலசல கூடம் செல்வதில் போட்டி. முகம் கழுவத் தண்ணீர் பிடிப்பதில் போட்டி. யாழ்ப்பாணம் செல்ல கப்பலுக்குப் பதிவு செய்வதில் போட்டி.

இத்தனைக்கும் மேலாக இலங்கைத் தமிழன், இந்தியத் தமிழன் என்று போட்டி. இத்தனை போட்டிகளும்அதனால் நிமிடத்துக்கு நிமிடம் உருவாகும் புதுப்புதுப் பிரச்சினைகளுமாக அகதிமுகாம் வாழ்வு வித்தியாசமான, அதேநேரத்தில் தமிழினம் எப்போது ஒற்றுமைப்படும் என்ற ஏக்கத்தையும் தந்ததென்றால் மிகையாகாது.

அழிவுகளும் அவலங்களும் ஈழத் தமிழினத்தின் சுயநல, சுகபோக தேடலை ஒருபுறமாகத் தள்ளி, விட்டுக்கொடுப்புக்களோடுகூடிய ஒற்றுமை உணர்வை வளர்த்தெடுக்குமா என்ற வினாவுக்கு ஒரு சாதகமான பதில் வெகுதொலைவிலேயே காத்திருப்பதான உணர்வு ஏற்பட்டது.ஒரு சம்பவம்…

ஒரு யாழ்ப்பாணக் குடும்பம். பல வருடங்களாக கொழும்பு வாழ்க்கை என்பதை அவர்களது செயற்பாடுகள் எடுத்தியம்பின. அவர்களுடன் ஒரு வீட்டுப் பணிப்பெண். அப்போது அங்கே எல்லோரும் அகதித் தமிழர்கள் என்றாலும், அவர்களைப் பொறுத்தளவில் அந்த இளம்பெண் பணிப் பெண்ணாகவே நடாத்தப்பட்டாள்.

பெரியதொரு கம்பளத்தை விரித்து அதிலே உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பெண் அவர்களுக்காக வரிசைகளில் நின்று தண்ணீர் என்றும் உணவென்றும், அவர்களின் உடுபிடவைகளைத் தோய்ப்பதென்றும் உழைத்துக் கொண்டிருந்தாள். இத்தனைக்கும் அவள் உணவருந்தினாளா, உறங்கினாளா என்பதைப்பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. அவள் என்னதான் பணிவிடை செய்தாலும், அவள்மீது வசைபாடுவதிலேயே கவனமாக இருந்தார்கள்.
அவளுக்கு அந்த முகாம் வதைமுகாமானது. அதிலிருந்து விடுபட அவளுக்கு தெரிந்த வழி அவளது வாழ்க்கையையே மாற்றியது. ஆம். அவள் அந்த முகாமில் ஒரு இளைஞனை திருமணம் செய்தாள். அந்தத் திருமணம் அங்கு கடமையிலிருந்த பொலிசாரின் முன்னிலையில் நிகழ்ந்தது.

அந்த யாழ்ப்பாணக் குடும்பத்தின் அதிகாரத்துக்கு அவள் தனது திருமணத்தின் மூலம் கடிவாளமிட்டாள் என்பதுதான் யதார்த்தம்.

இந்த ஆடிக்கலவரத்தை கறுப்பு யூலை என்கிறார்களே. இந்தக் கறுப்பு யூலையானது சிங்களப் பேரினவாதத்தால் தமிழினத்தின்மீது வாரியிறைக்கப்பட்ட கறுப்பா? அல்லது தமிழர் மனங்களில் ஆழப் புதைந்திருக்கும் கறுப்பை அகற்ற வந்த யூலையா?
யாழ்ப்பாணத்துக்கு சரக்குக் கப்பலில் செல்லவென கொழும்புத் துறைமுகத்தில் நானும் சில நண்பர்களும் நின்றிருந்தோம்.
பசித்தது.

துறைமுகத்தில் சாப்பாட்டுப் ‘பார்சல்”களை சிலர் மலிவு விலையில் விற்பதுண்டு. அங்கு கடமையிலிருந்த இரு சிங்கள இளைஞர்களிடம் விசாரித்தோம்.
அவர்கள் உடனே விரைந்து சென்று சில சாப்பாட்டு பார்சல்களை எடுத்துவந்து தந்தார்கள்.
பணத்தைக் கொடுத்தபோது வாங்க மறுத்தார்கள்.

‘இது நாங்கள் சாப்பிட வைத்திருந்தவை. இந்தக் கலவரத்துக்காக நாங்கள் கவலைப்படுகிறோம். இங்கு எல்லா மக்களும் சமமாக வாழவேண்டும் என விரும்புகிறோம். நீங்கள் மீண்டும் கொழும்புக்கு வரவேண்டும். அதுதான் எங்களுடைய விருப்பம்.”அவர்கள் கூறிக்கொண்டே போனார்கள்.

நாங்கள் அவர்களிடம் விடைபெற்று கப்பலில் ஏறினோம்.
கப்பல் காங்கேசன்துறையை நோக்கி நகர ஆரம்பித்தது.

|| தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ||

 

தேசக்காற்று  ( இணையம் )  &     தமிழீழப்பறவை கனடாவில் ( மூகநூல் )

Checked
Sat, 09/21/2019 - 02:49
எங்கள் மண் Latest Topics
Subscribe to எங்கள் மண் feed