கவிதைக் களம்

சரித்திரம் மீண்டும் சுழர்கிறது

4 months ago

சரித்திரம் மீண்டும் சுழர்கிறது 

 

 

 

உலக வரை படத்தில் 
ஒரு சிறு துளி போல் 
இலங்கை என்று 
ஒரு தீவு 
ஓடிக்கொண்டே 
இருக்கிறது இரத்தம் 
சிங்கள பெரும் தேசியமும் 
மதவாதமும்  இனவாதவும் 
வளர்ந்து விட்ட சிறு தீவில் 
சரித்திரம் மீண்டும் மீண்டும் 
சுழல்கிறது 
யாருக்குமே அமைதி 
இல்லாத தேசமாகிப்போனது 
விஷம் விதைத்தவர்கள் 
எல்லாம் வினையை 
அறுபடை செய்துகொண்டு 
இருக்கிறார்கள் 
அமைதியாகவே இருக்கிறார் 
புத்தர் மட்டும் 
அந்த ஆலமரத்தடியில் 
யாரும் அவர் வழியை 
பின்பற்ரவில்லை
என்ற கவலையோடு .

 

B.Uthayakumar

கவிதையைப் பிரித்த ஐபிஎல்

4 months 1 week ago

18301596_10155260027546950_2011145838085

கவிதையைப் பிரித்த ஐபிஎல்

தூய வெள்ளை அரம்பையர் நின்றுமே 
துணங்கைக் கூத்திட வீரர் குழாத்தினர்
ஆய தம்திறன் காட்ட, எறிந்த பந்(து)
அண்டை வந்திட வீசி அடித்ததை
பாயச் செய்து பவுண்டரி சிக்ஸராய்
பலத்தைக் காட்டும் ஐபிஎல் களமதில்
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் 
அணிதிரண்டு குதிக்குமழகிலே

நேயமுற்றனன் ஆதலினால் என்றன்
நெஞ்சை நீங்கினளாம் கவிக்காதலி

காலை மாலையிரவெனத் தேர்ந்திடாக்
காதல் மேவ ஐபிஎல் லைப் பார்த்ததால்
வேலையாவும் ஓர் மூலையிற் போனது
வேறு நற்செயலில்லை யென்றானது.
காலமோடியதாற் கவிக்காதலி
காத்திருக்க விருப்பிலளாயினள்
பாலையானது நெஞ்சப் பெருவெளி
பாடயாதும் வராது தவிக்கிறேன்

சீல மேவிய என் எழில் நங்கையை 
தேடி யெங்குமலைந்து திரிகிறேன்.

அன்னவட்கொரு அஞ்சலி செய்தென(து)
அருகில் வாவடியென்று துதித்திட
பின்னமுற்ற மனத்தினளாயவள் 
பிணங்கி யந்தத் துணங்கையை யாடிடும்
கன்னியர்க்கு உன் காதலைக் காட்டுதி
கவிதையேனுனக்கென்று சபித்தனள்
என்ன செய்வது என்று அறிகிலேன்
எனது வாழ்வில் அவளைவிட்டோர் துணை

இன்னுமுள்ளதுவோ இலை நெஞ்சமே!
எறியுனக்கினி ஐபிஎல் ஏன் கொலோ!

எந்த நிறம் இருந்தாலும் அவை யாவும் ஒரே தரம் அன்றோ

4 months 1 week ago

 

 


உயிர்த்த தினம் அன்று 
சிலுவையில் சிதறி கிடந்த 
சிவப்பு இரத்தத்தில் 
எதுகுமே தெரியவில்லை 
எவன் முஸ்லீம் 
எவன் கிறிஸ்தவன் 
எவன் இந்து 
எவன் கறுப்பு 
எவன் வெள்ளை என்று 
எல்லாமே ஒரே நிறமாக 
இருந்தது .

 


பா .உதயகுமார் .

மீன்பாடும் தேன்நாடு - வ.ஐ.ச.ஜெயபாலன்

4 months 2 weeks ago
மீன்பாடும் தேன்நாடு
- வ.ஐ.ச.ஜெயபாலன்
.
வங்கக்கடலுக்கோ வெண்பட்டு மணல்விரிப்பு
மலையகத்து அருவிகட்கோ பச்சை வயல்விரிப்பு
பாடும்மீன் தாலாட்டும் பௌர்ணமி நிலாவுக்கு
ஒயிலாக முகம்பார்க்க ஒய்யாரமாய்த் தூங்க
மட்டு நகரில் வாவியிலே நீர்விரிப்பு.
எங்கிருந்தோ வந்தவர்கள் எல்லாம் அனுபவிக்க
சொந்தங்கள் இங்கே துயரம் சுமக்கிறது.
காலமெல்லாம் இங்கே
கணபதியும் எங்கள் காக்கா முகம்மதுவும்
தெம்மாங்குபாட திசைகாணும் தாய் எருமை.
திசைதோறும் புற்கள் முலைதொட்ட பூமியிலே
கன்றை நினைந்து கழிந்தபால் கோலமிடும்.
.
காடெல்லாம் முல்லை கமழும் வசந்தத்தில்
வயல்புறங்கள் தோறும் வட்டக்களரி எழும்.
வட்டக்களரியிலே வடமோடிக் கூத்தாடும்
இளவட்டக்கண்கள்
தென்றல் வந்து மச்சியின் தாவணியை இழுப்பதிலே
தடுமாறும் கால்கள் தாளம் பிசகாது.
.
குதிரையிலேதாவி கொதிப்போடு இளவரசன்
போருக்குப் போவான்
கொடும்பகையை வென்றிடுவான்.
.
எட்டாக வட்டமிட்டு இறுமாப்பாய்த் தலைநிமிர்ந்து
செட்டாகப்பாடிச் செழிப்பார்கள் போர்வீரர்
அண்ணாவிதட்டும் மத்தளத்தின்
தாளத்தின் சொற்படிக்கு
எல்லாமே வட்டக் களரியிலே மட்டும்தான்,
படிக்கட்டில்
பொல்லாவறுமை பசியோடு இவனுடைய
கைகோர்த்துச் செல்லக் காத்திருக்கும் வேதனைகள்.
.
போடியாரின் மாளிகையில் போரடித்த நெல்குவித்து
நாடோடிப் பாடல் மகிழ்ந்து பசிமறக்கும்.
ஊரின்புறத்தே ஒருநாள் நடக்கின்றேன்,
.
எல்லைப்புற வயலும் எழுவான் கடற்கரையும்
செல்வங்கள் எல்லாம் சொத்தாய்ப் பிறர்கொள்ள
பொட்டல்வெளியில்
கணபதியும் எங்கள் காக்கா முகம்மதுவும்
சிண்டைப்பிடித்துக் கிடக்கின்றார், என் சொல்வேன்!
 
1982.

அல்லாவுக்கும் அந்தோனியாருக்கும் கொழுவல்.

4 months 2 weeks ago

அன்று..

புட்டுக்கும் தேங்காய் பூவுக்கும் கொழுவல்..

பரிகாரம்

சொந்த மொழி பேசிய சொந்தவனை

எதிரி என்று வரிந்து

பொது எதிரியை நண்பனாக்கி

காட்டிக் கொடுத்தோம்

வெட்டிக் கொன்றோம்

துரத்தி அடித்ததோம்

கள்ளமாய் காணி பிடித்தோம்..

கிழக்கின்

பூர்வகுடிகளை அகதியாக்கினோம்

வடக்கில்

பள்ளிவாசல்களில் ஆயுதங்கள் குவித்து

ஆயத்தமானோம்.

அதற்குள்..

வரிகளுக்கு விளங்கிவிட

கூட்டோடு காலி பண்ணி விட்டது

அசைவது அசையாதது இழந்து

புத்தளத்தை அடைந்தோம்.

 

அல்லாவின் நவீன தூதன்

அஷ்ரப்பின் உதவியுடன்

அடிப்படைவாத வெறிக்குள்

மூழ்கினோம்..

ஹிஸ்புல்லாவின் வழியில்

ஊர்காவல் படை அமைத்தோம்...

மிச்ச சொச்ச

சொந்த மொழி பேசும்

சொந்தங்களையும்

குந்த விடாமல்

குதறித்தள்ளினோம்..

சிவன் பிள்ளைகளை

அல்லாவின் சிஷ்யைகள் ஆக்கினோம்..

எங்கள் பிள்ளைகளுக்கு

காசும் கல்யாணமும் செய்து வைத்தோம்.

குடித்தொகையை

அளவு கணக்கின்றி பெருக்கித்தள்ளினோம்.

 

முள்ளிவாய்க்கால் என்பது

பெருந்துயர் என்கிறார்கள்

நாங்கள் பாட்டாசு போட்டவர்கள்

கூட்டத்தில்

பாற்சோறு உண்டோம்.

கூடிக் களித்தோம்..

கொண்டாடி மகிழ்ந்தோம்.

எமது காட்டிக் கொடுப்பை

உளவுப் பணி என்றோம்

சிறீலங்கா மாதாவுக்கான

சீரிய கடமை என்றோம்

எம்மை நாமே மெச்சி நின்றோம்..

பெரும் மானுடத் துயரை

சிம்பிளாய் கடந்து போனோம்.

 

காலச் சக்கரம்

கடந்து போனது..

எங்கள் உண்மை முகம் வெளியில்

வந்தது..

அல்லாவுக்கும் அந்நோனியாருக்கும்

கொழுவல் போட்டோம்..

மீண்டும்

சொந்த மொழி பேசியவனை

கொன்று குவித்தோம்.

புனிதப் போரின்

அத்தியாயம்

இஸ்லாமிய அரசின் கீழ் என்றோம்.

 

எங்கள் இரத்தமும்

அவன் இரத்தமும்

ஒன்றே என்பது மறந்தோம்..

எங்கள் தோலும்

அவன் தோலும்

ஒன்றே என்பது தொலைத்தோம்..

எங்கள் ஆடையும்

அவனின் ஆடையும்

ஒன்றே என்பது வெறுத்தோம்..

எங்கள் மொழியும்

அவன் மொழியும் 

ஒன்றே என்பதை கிடப்பில் போட்டோம்..

அராபிய எடுபிடிக்குள்

எண்ணெய் வள செல்வச் செழிப்புக்குள்

இஸ்லாமிய அடிப்படைவாதத்துள்

எம்மை மூழ்கி எடுத்தோம்

வார்ப்புக்களை வளர்த்து விட்டோம். 

 

இன்று..

நிம்மதி தொலைத்தோம்.

செய்த பாவத்தின்

பலனை அனுபவிக்கிறோம்..

நாமே நம்மை

இஸ்லாமிய ஆட்சியின்

குடிகளாகச் சூடிக் கொண்டதும்

வெறுப்பை வளர்த்ததும் தான் மிச்சம். 

போலி ஜனநாயகவாதிகள்

4 months 3 weeks ago

போலி ஜனநாயகவாதிகள் 

 


மத தீவிரவாதமும் 
ஏகாதிபத்திய நல 
சுரண்டல்களும் 
இன படுகொலைகளும் 
இருக்கும் வரைக்கும் 
இரத்தக்களரியை 
எந்த ஒர் தனி அரசாலும் 
நிறுத்தமுடியாது 
அணு குண்டோடும் 
ஆயுத விற்பனையோடும் 
மனிதர்கள் இருப்பதால் 
யாருக்கு தான் 
இருக்கப்போகிறது 
அன்பும் கருணையும் 
போலி ஜனநாயகத்தின்
பெயரால் வந்து 
ஒரு பூவை வைத்து விட்டு 
போங்கள் 
எங்கள் இரத்தத்தின் நடுவில் .

 

 


பா .உதயகுமார் 

முதுமையாகிலனோ

5 months ago

முதுமையாகிலனோ ———

 

அப்போ வாய் 
பொத்தியபடி 
என் கதை 
கேட்டவர்களிடம் 
இப்போ நான் 
வாய் பொத்தியபடி 
அவர்கள் கதை 
கேட்டுக்கொண்டு 
காலாவதியான 
பொருள்களைப்போலவே
காத்திருக்கிறேன்
தூக்கி எறியும் 
காலம் ஒன்றுக்காக.

 

 

பா .உதயகுமார் /OSLO 

கோடை காலம்

5 months 1 week ago

கோடை காலம் ——————————————————————————————————

 


என் வீட்டு வாசலில் பூக்கள் விரியும் 
முற்ரத்து மரங்களில் மூச்சுகள் கேக்கும் 
காலையில் வந்து இனி காக்கையும் குருவியும் பாடும்  
என் கதவை திறந்து ஒரு சூரியன் பூக்கும் 

 

கானகம் போல் ஒரு சோலை விரியும் 
காலத்தின் பிறப்பு ஒன்றை சொல்லி சிரிக்கும் 
கள்ளமாய் வந்து இனி தேனீக்கள் 
காலை பூக்களில் காதல் கீதம் இசைக்கும் 

 

கண்ணை பறித்திடும் கன்னியின் கூந்தலில் 
காலை மலர்ந்திட்ட  மல்லிகை வாசம் 
எண்ணக் கனவினை சொல்லி சிரித்திடும் 
எங்கள் மங்கையர் கோலங்கள் வாசலில் பூத்திடும்  

 

தென்னம் தோப்பினில் தொட்டிலை கட்டி 
சிட்டு குருவின் சிரிப்பு ஒலி கேக்கும் 
வானை திறந்து ஒரு வானவில் பூக்கும் 
வா என்று கை தட்டி பூமி சிரிக்கும்  

 

கடல் கரையினில் காதல் கிளிகள் 
கடலின் அலையில் விழிகள் நனைத்து 
கண்ணின் இமையால் எதோ சொல்லி 
காதல் மொழியில் துணையை தேடும்  

 

தென்றல் வந்து இனி என்னோடு பேசும் 
தெம்மாங்கு பாடல்  காதினில் கேக்கும் 
காலை கனவினில் கவிதைகள் சொல்லும் 
என் கதவை திறந்து ஒரு சூரியன் பூக்கும் .


——————————————————————————————————————

பா .உதயகுமார் /Oslo

வாழ்வு என்றும் வசந்தங்களே

5 months 1 week ago

வாழ்வு என்றும் வசந்தங்களே 

 

மல்லிகை பூ வாசனையும் 
வசந்தத்தின் புன்சிரிப்பும் 
உன் கண் வரைந்த சித்திரமும் 
கால் கொலுசு சந்தங்களும் 
இன்னும் என்னை விட்டு போகவில்லை 

 

கால்நடை கொஞ்சம் தளர்ந்து 
கட்டினிலே நான் படுத்தாலும் 
உன் பூ மணம் விட்டு போகுமோடி 
முடியாது போடி என் முழு நிலவின் சித்திரமே 

 

உன் கன்னத்தின் குழிகளிலே 
என் கவிதைகளை புதைத்தவளே 
காலம் ஒன்று இருந்தால் 
கல்அறையிலும் வாழ்வு செய்வோம் 

 

அதன் வழியால் செல்பவன்
 எவனாக இருந்தாலும் 
எழுதிவிட்டு செல்லட்டும்   
எம் கல்லறையின் நடுவினிலே 

 

வாழும் வரை காதல் செய்த 
வண்ணக் கிளிகள் நாங்கள் என்றும் 
காதல் கிளி இரண்டு 
கண் மூடி தூங்குதென்றும் 

 

காலத்தால் அழியாத இரு 
கவிதை தோப்பு துயலுதென்றும்  
எழுதி விட்டு செல்லுங்கள் 
எவரும் எம் தூக்கத்தை கலைக்காமல்.

 

 

பா .உதயகுமார் /Oslo

செந்தமிழ்த்தாயி

5 months 1 week ago

செந்தமிழ்த்தாயி

நாதவடிவானவளே செந்தமிழ்த்தாயி – எந்தன்

நாவில் உறைபவளே செந்தமிழ்த்தாயி

ஆதிமுதலானவளே செந்தமிழ்த்தாயி – நாவில்

அமிழ்தூறச் செய்பவளே செந்தமிழ்த்தாயி.

 

மன்னாதி மன்னரெல்லாம் செந்தமிழ்த்தாயி – உன்னை

வழுத்திடவே வாழ்ந்தவளே செந்தமிழ்த்தாயி

பொன்னான இலக்கியங்கள் செந்தமிழ்த்தாயி – புவி

போற்றிடவே தந்தவளே செந்தமிழ்த்தாயி

 

வெம்பாடு பட்டு உன்னைச் செந்தமிழ்தாயி –பலபேர்

வீழ்த்திடவே எண்ணுகிறார் செந்தமிழ்த்தாயி

அம்பா நீ அருள்புரிவாய் செந்தமிழ்தாயி- அந்த

அற்பர்களை ஒளித்திடம்மா செந்தமிழ்த்தாயி.

 

சாதி மதமொளித்துச் செந்தமிழ்த்தாயி – எங்கும்

சமநீதி காணவைப்போம் செந்தமிழ்த்தாயி

ஆதியிலே இருக்கலையே செந்தமிழ்த் தாயி – இந்த

அவமானச் சின்னமெல்லாம் செந்தமிழ்த்தாயி.

 

மனுநீதிப் பொய்மைக்கெல்லாம் செந்தமிழ்த்தாயி – நாம்

மருவாதை காட்டலாமோ செந்தமிழ்த் தாயி

தனி நீதி எமக்கிருக்கு செந்தமிழ்த்தாயி – தமிழன்

சங்ககால வாழ்விருக்கு செந்தமிழ்த் தாயி

 

சாதி பலபிரித்துச் செந்தமிழ்த்தாயி – உன்னைச்

சந்தி சிரிக்க வைத்தார் செந்தமிழ்த்தாயி

பேதம் பல கொணர்ந்தார் செந்தமிழ்தாயி – விழி

பிதுங்கிடவே உன்னை வைத்தார் செந்தமிழ்த்தாயி

 

 

எல்லாப் பழியுமினிச் செந்தமிழத்தாயி – உனக்கு

இல்லாமல் ஆக்கிடுவோம் செந்தமிழ்தாயி

பொல்லார் புகுந்து விட்டார் செந்தமிழ்த்தாயி –அவரை

பொறமுதுகிட்டோட வைப்போம் செந்தமிழ்த்தாயி.

 

ஆண்ட தமிழகத்தை செந்தமிழ்த்தாயி – நாங்க

மீண்டொருகால் ஆழவைப்போம் செந்தமிழ்த்தாயி

வேண்டும் எமக்கு இனி செந்தமிழ்த்தாயி - எங்க

வெவசாயத் தொழில் வளர்ச்சி செந்தமிழ்த்தாயி.

 

நாம் தமிழராயுதித்தோம் செந்தமிழ்த்தாயி – நமக்கு

நல்ல வழி காட்டிடம்மா செந்தமிழ்த்தாயி

சோம்பரில்லா விவசாயி சின்னத்தத் தாயி – நம்ம

தொகுதியெங்கும் வெல்ல வைப்பாய் செந்தமிழ்த்தாயி.

 

கரும்பு வெவசாயி சின்னத்தத் தாயி – நீ

கருணை கூர்ந்து காத்திடம்மா செந்தமிழ்த்தாயி

இரும்புறுதியோடு எங்கும் செந்தமிழ்த்தாயி – எங்கள்

இளைஞர் படை இருக்குதம்மா செந்தமிழ்தாயி

----------------------------------------------------------------.

காயப்படுத்திய உனக்கு.....

5 months 2 weeks ago

நீ
மௌனமாய் இருப்பதில்....
புரிகிறது என் காதலுக்கு....
மலரஞ்சலி வைத்தது....
நீ..........!!!

காதலுக்கு உரமே......
கனிவான பேச்சு......
காயப்படுத்திய உனக்கு.....
அதெல்லாம் எப்படி......
புரியும்........?

நீ
பார்த்தநாள்...!
மரணம் தாண்டி
வாழ்ந்த நாள்.....
இனி...............
இறந்தாலும்.......
உயிர்ப்பேன் ..........
உன் கண்ணை விட
கொடிய விஷம்
எதுவும் இல்லை ....!

@
இப்படிக்கு உன்.....
கவிப்புயல் இனியவன்

கோடுகள்

5 months 3 weeks ago

கோடுகள் 

ஒன்பதின்  வைகாசி

வைகாசியில்  அவனொருவன்  பெற்றது   ஒளி

 ஒளி அணைந்ததும் அதே   வைகாசி - எங்கள் வீடுகளில்

இன்னமும்  ஏற்றவில்லை  – காத்திருக்கின்றோம் நெஞ்சில்  தீயுடன்      

 

மேல் நொந்து போயிற்றே என்றால் -மீண்டும் எண்பத்து  மூன்றாம்

மாப்  புளிப்பது  தோசையின்  நலம்  நாடி 

அணைத்த  உலை - மீண்டும்  கொதிக்க  விறகை  தள்ளும்   நண்பா  – நன்றி 

இன்னமும்  ஏற்றவில்லை  – காத்திருக்கின்றோம் நெஞ்சில்  தீயுடன்      

 

இரு  கோடுகள்   சமன்  செய்    பாதைகள்   பல 

கோடொன்றை  சற்றே  நீட்டினால்  எல்லோரும்  நலமே 

மறு  கோட்டின்   நுனியை  சற்றே  தட்டினாலும்  முடிவு  ஒன்றே 

இன்னமும்  ஏற்றவில்லை  – காத்திருக்கின்றோம் நெஞ்சில்  தீயுடன்      

 

ஒன்பதின்   வைகாசி , நண்பன்  ஒருவனின்   தொலைபன்னி  அழைப்பு 

வேண்டும்  எனக்கு  ஆட்கள் பத்தும் ஆண்டுகள் சிலவும்

பறந்து  சென்று  கோட்டைத்  தட்டுவதே  சால  சிறப்பு  

இன்னமும்  ஏற்றவில்லை  – காத்திருக்கின்றோம் நெஞ்சில்  தீயுடன்      

 

வல்லூறுகள்  மீண்டும்  வட்டமிடத்  தொடங்கி  விட்டன

பீனிக்ஸ்     பறவையில்   மீண்டும்   ஒரு  உயிர்த் துடிப்பு 

உலை  கொதிக்கவும்  விறகுகள்  ஒரு பக்கம்   

இன்னமும்  ஏற்றவில்லை நாம்-  கையில்  அரிசியுடனும்  நெஞ்சில்  தீயுடனும்  

 

 

26 March 2019 …..

 

ஆத்தா.....நானும் பாசாயிட்டேன்!

6 months 1 week ago

மனதுக்கும்…..உதடுகளுக்கும் ,

தொடுசல் அறுந்து நாளாகி விட்டது!

 

வேடம் போடுவதில்,

நாடக நடிகர்களையும்….,

மிஞ்சியாகி விட்டது!

 

மாடு மாதிரி உழைச்ச,

களைப்புப் போக,

உல்லாசப் பயணம் போனால்…,

அந்தக் கடற்கரை…..,

ஊர்க் கடற்கரையிடம்…,

பிச்சை வாங்க வேண்டும்…,

போலத் தெரிகின்றது!

 

வசதியில்லாததுகள்,

வறுமையில் வாழ்பவர்கள்…,

விற்கின்ற பொருட்களை…,

அறாத விலை பேசி வாங்குவதில்…,

ஒரு திருப்தி…!

உறுத்துகின்ற மனதுக்கு..,

நாங்களும் வாங்கா விட்டால்…,

அதுகள் பட்டினி தான்…,

என்று ஒரு சமாதானம்!

 

வங்கியட்டைகளின் கனதி….,

வீட்டுக்கடனின் பரிமாணம்,

கட்ட வேண்டிய சிட்டைகளின்…,

கடைசித் திகதிகள்!

எல்லாமே மனதை அரித்தாலும்,

போலிக் கௌரவம் …..,

வேலி தாண்டு என்கிறது!

 

அபூர்வமான பொழுதுகளில்…,

அன்றைய வாழ்வின்,

நினைவுகள் வந்து போகும்!

 

இப்போதெல்லாம்…,

தபால் பெட்டியைத் திறக்கையில்..….,

தற்பாதுகாப்புத் தேடி…,

ஓடுகின்றது மனது..!

 

ஆறுதல் தேடி….,

ஊர் தேடிப் போகையில்…,

அங்குள்ள சொந்தங்கள்,

உங்களுக்கு என்ன குறை?

எங்களுக்கும்…,

அங்க வரத்தான் விருப்பம் !

 

உண்மையைச் சொன்னால்….,

நாங்கள் நல்லா வாறது..,

உங்களுக்கு எரிச்சல்...,

எண்டுதுகள்!

 

இப்போதெல்லாம் நானும்…,

உண்மை பேசுவதில்லை!

 

எங்காவது கணனி கிடைத்தால்,

வங்கிக் கணக்கை ஒருக்கால்…,

எட்டிப்பார்க்க வேணும்!

 

நாட்கள் போகப்போக …,

நானும் நல்ல நடிகனாகி விட்டேன்!

என்று வருவாய்?

8 months ago

கண்ணிற்குள் நின்றவள்
கருத்தினில் திரிந்தவள்
தூக்கத்திலும் துணையவள்
வார்த்தைகளின் வரமவள்

கற்பனையின் தாயவள்
இன்னொரு பெண்ணினை
அணைக்கையிலும் 
அகலாது நின்றவள்...

காமத்திலே பேசாது
சிரிப்பாள்
சோகத்திலே நான் ஊறங்க
மடி தருவாள்!

சொற்கள் இல்லை என்னிடம்
திருடிச் சென்றவளே
நீ எவ்விடம்?

பொருள் தேடி 
நான் போகையிலே
இருள் எல்லாம் 
எனக்குள் கொட்டி
அருள் இன்றிப்
போனாயடி...

இறைக்காத கிணறு போல்
பிறக்காத பிள்ளையை எண்ணிக்
கலங்கும் தாயைப் போல்
வார்த்தைகள் இன்றி
தவிக்கிறேனடி...

தாயே 
தமிழே 
என் தளர்வெல்லாம்
போக்கும் கவிதாயினியே

இனி என்று 
வருவாய் 
என்னிடம்...?

நெடுந்தீவு ஆச்சிக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன்

8 months 1 week ago

நெடுந்தீவு ஆச்சிக்கு கவிதை எனது முன்னோரின் மண்ணான நெடுந்தீவு படைகளின் கட்டுபாட்டில் இருந்த போது 1985ல் எழுதியது. குமுதத்தில் வெளிவந்தது.
.

நெடுந்தீவு ஆச்சிக்கு
- வ.ஐ.ச.ஜெயபாலன்
.

அலைகளின்மீது பனைக்கரம் உயர
எப்போதும் இருக்கிற
என்னுடைய ஆச்சி

காலம் காலமாய் உன்னைப் பிடித்த
பிசாசுகள் எல்லாம் தோற்றுப் போயின
போத்துக்கீசரின் எலும்புகள் மீதும்
தென்னம் தோப்பு
நானும் என் தோழரும்
செவ்விளநீர் திருடிய தென்னந் தோப்பு.

தருணங்களை யார் வென்றாலும்
அவர்களுடைய புதை குழிகளின்மேல்
காலத்தை வெல்லுவாள் எனது ஆச்சி.

என்ன இது ஆச்சி
மீண்டும் உன் கரைகளில்
நாங்கள் என்றோ விரட்டி அடித்த
போத்துக்கீசரா ?
தோல் நிறம் பற்றியும்
கண் நிறம் பற்றியும்
ஒன்றும் பேசாதே
அவர்கள் போத்துக்கீசரே.

எந்த அன்னியருக்கும் நிலை இல்லை
எனது ஊர் நிலைக்கும் என்பதைத்தவிர
எதனை எண்ணி நான் ஆறுதல் அடைவேன்.
நாளை இந்தப் போத்துக்கீசரும் புதைய அங்கு
கரும்பனைத் தோப்பெழும் என்பதைத் தவிர
எதனை எண்ணி நான் ஆறுதல் அடைவேன்.

ஆச்சி
என் இளமை நாள் பூராக
ஆடியும் பாடியும் கூடியும் வாடியும்
தேடிய வாழ்வெலாம்
ஆமை நான், உனது கரைகள் நீழ
புதைத்து வந்தேனே.
என்னுடன் இளநீர் திருட
தென்னையில் ஏறிய நிலவையும்
என்னுடன் நீர் விழையாட
மழை வெள்ளத்துள் குதித்த சூரியனையும்
உனது கரைகளில் விட்டுவந்தேனே
என் சந்ததிக்காக.

திசகாட்டியையும் சுக்கானையும்
பறிகொடுத்த மாலுமி நான்
நீர்ப் பாலைகளில்
கனவுகாண்பதுன் கரைகளே ஆச்சி

நீ நிலைத்திருப்பாய் என்பதைத் தவிர
எதனைக் கொண்டுநான்
மனம் ஆற என் ஆச்சி..

மார்கழி மாதக் கவிதை - வ.ஐ.ச.ஜெயபாலன்

8 months 3 weeks ago

 

பலவருடங்களின்பின்னர் மீண்டும் ஒரு மார்கழி மாதத்தில் ஒஸ்லோ வந்திருக்கிறேன். கொட்டும் பனியும் கடும் குளிரும் என்னை முடக்கிபோட கங்கனம் கட்டியபடி. 1990 ஆண்டு டிசம்பர் மாதமும் இப்படித்தான் இருந்தது. அப்ப நான் நோர்வீஜிய அபிவிருத்தி நிறுவனமான  நோறாட் அமைப்பில் பகுதிநேர ஆலோசகராகப் பணியாற்றினேன். நிறைமாதமாக இருந்த மனைவிக்கும் இரண்டு வயசுப் பயனான என் மகனுக்கும் இன்னும் விசா கிடைக்கவில்லை என்கிற கவலை மனசில். அந்த சமயத்தில் எழுதிய கவிதை. இக்கவிதையை எனது நண்பர் பேராசிரியர் ஒய்வின் புக்ளரூட் நோர்வீஜிஜ மொழி ஆக்கம் செய்தார். கவிதை நோராட் சஞ்சிகையில் வெளிவந்தது. குடிவரவு அலுவலக்த்தில்  புதிதாக பதவிக்கு வந்திருந்த செல்வி.நினிரொப் அவர்களை இக்கவிதை கவர்ந்தது. அவர் நோர்வீஜிய மொழியாக்கம் செய்யபட்ட எனது  கவிதைகளையும் செக்குமாடு குறுநாவலையும்  பிரதிகள் எடுத்து வெளிவிவகார அமைச்சு  மற்றும் நீதிஅமைச்சுக்கு அனுப்பிவைத்தார். அதேசயம் நோராட் என்னை தென்னாசிய நிபுணன் என்றும் என்னக்கு பிரதியீடாக தங்களிடம் வேறு யாரும் இல்லையென்றும் குடிவரவு அலுவலகத்துக்கு கடிதம் கொடுத்து அதை தொழில் அமைச்சும் அங்கீகரித்ததால் எனக்கு குடியேற்ற விசா தரப்பட்டது. அதனால் என் மனைவி மக்களுக்கும் விசா கிடைத்தது. எனினும் நாட்டு நிலவரங்களில் ஏற்பட்ட முரண்களாலும் என் இயல்பான கட்டற்ர போக்காலும்  தொடர்ந்தும் நோராட் நிறுவனத்தில் பணி செய்ய முடியவில்லை.   

விசாவுக்காக மொழிபெயர்க்கபட்ட  எனது `செக்குமாடு` குறு நாவல் பின்னர் புகழ் பெற்றது. செக்குமாடு குறுநாவலின்  நோர்வீஜிய மொழிபெயர்ப்புக்கு விருது தருவதற்க்காகவென்று நோர்வீஜிய எழுத்தாளர்  சங்கம்  சிறந்த வெளிநாட்டு எழுத்தாளருக்கான புதிய விருதை உருவாக்கி மகிழ்சிதந்தது.

சன்னல்: -இது ஒஸ்லோவில் 1990 டிசம்பர் எழுதப்பட்ட கவிதை. நண்பர் பேராசிரியர் ஒய்விண்ட் புக்ளரூட் சன்னல் கவிதையை நோர்வீஜிய மொழியாக்கம் செய்தார். சன்னலின் நோர்வீஜிய மொழியாக்கம் நோர்வீஜிய வெளிவிவகார அமைச்சின் ’நோராட்’ இதழில் வெளிவந்தது. இலக்கிய ஆர்வமுள்ள பெண்மணி செல்வி. நினி ரொப் எனது விசா அலுவலராக அமைந்தது அதிஸ்ட்டம் என்றே சொல்ல வேண்டும். சன்னல்கவிதை அவரைக் கவர்ந்ததது. அதனால் அவர் இக்கவிதையை குடிவரவு திணைக்கள் அதிகாரிகள் வெளிவிவகார அமைச்சு நீதி அமைச்சு அதிகார்களுக்கு பிரதி அனுப்பினார். இதனால் என் செல்வாக்கு உயர்ந்ததது. மட்டக்களப்பு அபிவிருத்தி தொடர்பான என்கட்டுரையின் பங்களிப்பின் அடிப்படையில் நோராட் என்னை தென்னாசிய நிபுணர் என கடிதம் தந்தது, அதன் அடிப்படையில் எனது கலைஞர்களுக்கான விசாவை வெளிநாட்டு நிபுணர்களுக்கான விசாவாக மாற்றபட்டது. அதைத் தொடர்ந்து எனது மனைவிக்கும் எனது மூத்தமகன் ஆதித்தனுக்கும் நோர்வே வர விசா அனுமதி வளங்கப்பட்டது. கவிதைக்கும் சக்தி உண்டு. 
.
சன்னல்
- வ.ஐ.ச.ஜெயபாலன்
.
துயில் நீங்கி
கனத்த மெத்தைப் போர்வைதனைப் புறம்தள்ளி
சோம்பல் முறித்தபடி எழுந்து
சன்னல் திரை தன்னை ஒதுக்கி விட்டேன்
இன்று கிறிஸ்மஸ் விடுமுறை நாள்.
.
புராணத்துப் பாற்கடலில்
சூரியனின்
பொற்தோணி வந்தது போல்
வெண்பனி போர்த்த உலகில் பகல் விடியும்.
வெள்ளிப் பைன் மரங்கள்.
இலையுதிர்த்த வெள்ளிப் பேச் மரங்கள்.
வெள்ளி வெள்ளிப் புல்வெளிகள்.
.
என்ன இது
பொன்னாலே இன்காக்கள் *
பூங்கா அமைத்ததுபோல்
வெள்ளியினால் வைக்கிங்கள்**
காடே அமைத்தனரோ.
காடுகளின் ஊடே குதூகலமாய்
பனிமேல் சறுக்கி ஓடுகின்ற காதலர்கள்.
பின் ஓடிச் செல்லும் நாய்கூட மகிழ்ச்சியுடன்.
.
நான் மந்தையைப் பிரிந்து வந்த தனி ஆடு.
போர் என்ற ஓநாயின்
பிடி உதறித் தப்பிய நான்
அதிட்டத்தால்
வாட்டும் குளிர் நாளில் கூட
வாழ்வை ரசிக்கும் கலையை அறிந்தவரின்
நாடு வந்தேன்.
.
வெண்பனியின் மீது சூரியன் விளையாடும்
நாட்கள் எனக்கு உவகை தருகிறது.
என் மைந்தன் என்னோடிருந்தால் இவ்வேளை
நானும் அவனும் இந்த
வெள்ளி வெள்ளிக் காடுகளுள்
விளையாடக் கூடுமன்றோ.
.
“சூரியனைப் பிடித்துத் தா” என்று அவன் கேட்டால்
வெண்பனியில் சூரியனை வனைந்து நான் தாரேனோ.
“ஏனப்பா இலங்கையில் வெண்பனி இல்லை” என்பானேல்
முன்னர் இருந்ததென்றும்
கொதிக்கின்ற சூரியனார் அதன்மீது காதலுற்று
அள்ளி அணைக்க அது உருகிப் போனதென்றும்
பின்னர் துருவத்தை வந்து அது சேர்ந்த தென்றும்
அதனாலே சூரியனார் துருவம் வரும்போது
வெப்பத்தை நம் நாட்டில் விட்டு விட்டு வருவதென்றும்
கட்டி ஒரு நல்ல கதை சொல்ல மாட்டேனோ ?
.
கருவில் இருந்தென் காதல் மனையாளின்
வயிற்றில் உதைத்த பயல்
நினைவில் இருந்தென் நெஞ்சிலன்றோ உதைக்கின்றான்.
நமக்கிடையே
ஏழு கடலும் இணைந்தன்றோ கிடக்கிறது
விசா என்ற பெயரில்.
வெண்பனி மீது
இன்னும் அந்தக் காதலரும் நாயும் களிப்போடு.

1990 Disamber

மரணம் திரும்பிச் சென்றது - நிழலி

8 months 4 weeks ago

இருள் கலந்த சாலையில்
ஒரு சிறு வளைவில்
எனக்கான மரணம்
இன்று
காத்திருந்தது

ஒரு கணப் பொழுதில்
தீர்மானம் மாற்றி
இன்னொரு நாளை
குறித்து விட்டு
திரும்பிச் சென்றது

பனியில் பெய்த மழையில்
வீதியின் ஓரத்தில்
மரணம் காத்திருந்ததையும்
என்னை பார்த்து புன்னகைத்ததையும்
பின் மனம் மாறி
திரும்பிச் சென்றதையும்
நானும் பார்த்திருந்தேன்


தூரத்தில் ஒலி எழுப்பும்
வாகனம் ஒன்றில் அது
ஏறி சென்றதையும்
ஏறிச் செல்ல முன்
தலை திருப்பி
மீண்டும் என்னை பார்த்ததையும்
நான் கண்டிருந்தேன்

எல்லாக் காலங்களிலும்
ஏதோ ஒரு புள்ளியில்
நானும் அதுவும் அடிக்கடி
சந்திக்க முயல்வதும்
பின்
சந்திக்காது பிரிவதும்
அதன் பின் இன்னொரு
சந்திப்பிற்காக காத்திருப்பதுமாக
வாழ்வு நீள்கின்றது

 

-----------

இன்று புதிதாக திறக்கப்பட்ட வீதியில் மோசமாக போயிருக்க கூடிய விபத்தில் சிறு நொடி வித்தியாசத்தில் உயிர் தப்பினேன்.

எத்தனை தடவை சொல்வேன் என் வயசை - வ.ஐ.ச.ஜெயபாலன்

9 months ago

 

 

13 டிசம்பர் இடம்பெற்ற என் பிறந்த தினத்தில் ”பல்லாண்டு ஜெயபாலன்” எனக் கூறி என்னை வாழ்த்தியபடி யாழ் நேயர்களுக்கு. 

”உங்க வயசென்ன அங்கிள்”

”எத்தனை தடவைதான் சொலித் தொலைப்பது என்வயசை. கேழ்”

.

நீலம்
- வ.ஐ.ச.ஜெயபாலன்
*

தோழி
காலமாய் நுரைகள் உடைகிற மணலில்
சுவடுகள் கரைய
சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா?
கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய்
நம்மிலும் எதோ படர்கிற தென்றேன்.
மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய்
உன் கண்களில் எனது பிம்பம் அசையும்.
*
ஆண்டு பலவாகினும்
நரையிலா மனசடா உனக்கென்றாய்.
தோழி
இளமை என்பது வாழும் ஆசை.
இளமை என்பது கற்றிடும் வேட்கை.
இளமை என்பது முடிவிலா தேடல்;
இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலும்.
இளமை என்பது வற்றாத ரசனை
இளமை என்பது நித்திய காதல்.
இளமை என்பது
அயராத ஆடலும் பாடலும் கூடலும் என்றேன்.
*
தோழா உனக்கு எத்தனை வயசு?
தோழி எனக்கு
சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு. 
2011

விடியா விடியலாய்

9 months 1 week ago

தூரத்து கானல்போல தெரிகிறது ஒரு முகம்
நெருங்க நெருங்க கானலும் காணாமல்ப் போக வெறுமைகள் தொடர்கிறது
சிறுகச் சிறுக சேர்த்துவந்த துளிரெல்லாம் கருகிச் சருகாக
மனம் வெதும்பித் தணிகிறது

சொன்னவையும் கேட்டவையும் ஆழ்கடல் தூரத்தில் எதிரொலிக்க
நியாயங்கள் கேட்டுக் கொல்வதோடு மட்டுமே இப்போது நாட்கள் கடக்கிறது
பதிலில்லாக் கேள்விகள் கேட்பதால் வெறுமையே பதிலாக - ஒரு மனதில்
கோபம் கொப்பளிக்கிறது

விதி பிய்த்தெறிந்து புதிதாக எழுது கதையொன்று
உலகத் தவறெலாம் சுரண்டியெடு -  அதைத்
 தலைமேல் கொட்டிக்கொண்டு ஆர்ப்பரி
கூடவே இரு தளிர் கொண்டு போ - உன்
துயர் சேர்த்துகரைத்து ஊற்று
அது அவற்றின் விதியென்று பறை !
விடியா விடியலாய் உதிக்கும் ஒரு உலகு - உனக்கு !

என்னை நானே வாசிக்கிறேன்

9 months 2 weeks ago

என்னை நானே வாசிக்கிறேன் என்ற தலைப்பின் கீழ் சின்னச்சின்னதாய் கவிதையில் படையல். இங்கே போர்முகம் இருக்காது...காதல் , நட்பு , சோகம், சுகம்,  தவிப்பு, அணைப்பு ,அழுகை , கனவு என்று பலதும் பத்துமாக அநுபவமும் இருக்கு அதி உச்ச கற்பனையும் மிதக்கும். வாசியுங்கள் சேர்ந்து அழுங்கள், சிரியுங்கள், என்னைப்போல தவியுங்கள் , காதல் கொண்டு கிறங்குங்கள், நட்பால் அணையுங்கள், சோகத்தில் சுகம் காணுங்கள். கவிதைகளை வாசித்து நீங்கள் குழம்பினால் நான் பொறுப்பில்லை.?
 

 

47350618_10155832345566551_1657003880354

Checked
Sat, 09/21/2019 - 02:49
கவிதைக் களம் Latest Topics
Subscribe to கவிதைக் களம் feed
texte-feed
https://www.yarl.com/forum3/forum/214-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/