கவிதைக் களம்

என் சில கிறுக்கல்கள் - நிழலி

8 months 2 weeks ago

யன்னல்களால் வெளியே
ஓங்கி வீசும்
பெருங்காற்றின் சத்தங்களை
தடுக்க முடியுது இல்லை

...

பிணைச்சல்களையும் பூட்டுக்களையும்
கடந்து வீட்டின் உள்ளே
நுழைந்து
மாடிப்படிகள் ஒவ்வொன்றிலும்
நிதானமாக ஏறி
என் அறையின் வாசல் கதவு
வரைக்கும் வந்து
நிற்கின்றன காற்றின்
சத்தங்கள்

படுத்துக் கிடக்கும் எனை
எழுப்ப விருப்பமின்றியும்
சொல்ல வந்த பெருங்கதையை
சொல்லாமல் போக மனமின்றியும்
அறையின் கதவோரங்களில்
காத்து நிற்கின்றன

விடிந்த பின்
கதவை திறக்கும் போது
அவை மீண்டும்
யன்னல்களினூடு
வெளியேறிச் செல்லும்
கொண்டு வந்த கதைகளை
சுமந்து கொண்டு

அவை சொல்ல
எத்தனிக்கும் கதைகளையும்
சங்கதிகளையும்
கேட்க
விருப்பமின்றி
என் நாட்கள் கடந்து
செல்லும்......

-June 02,2019

 

இலங்கையின் நீதி

8 months 3 weeks ago

சட்டமும் ஒழுங்கும் 

சட்டம் அனைவருக்கும் சமம் என்கிறார்கள் 
பின்பு ஏன் பிக்குமாரை 
பின் கதவால் திறந்து விடுகிறார்கள் .

 

நீதியும் அரசியலும் 

என்ன தீர்ப்பை இலங்கை நீதியரசர்கள் 
எழுத வேண்டும் என்று 
ஏற்கனவே எழுதி இருப்பர் 
இலங்கை அரசியல் வாதிகள் .

 

நீதி 

எ .வி .டைசியின் சட்ட புத்தகம் 
இலங்கையில் செல்லுபடியாகாது 
இங்கு நீதி என்று எங்கும் இல்லை .

 

அரசியல் கைதிகள் 

அரசியல் கைதிகளுக்கு 
விடுதலை இல்லை 
அவர்கள் தமிழர்கள் என்பதால் 
அப்படித்தான் 
அந்த அரசியல் அமைப்பு 
எழுதி இருக்கிறது .

பா .உதயகுமார் .

பால்ராஜ் அமரனுக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன்

9 months ago
மே.20.2008 அஞ்சலி
.
பால்ராஜ் அமரனுக்கு
- வ.ஐ.ச.ஜெயபாலன்
.
அமரா
நீ மீட்ட ஆனையிறவில்
தரை இறங்கும்
செங்கால் நாரைகள் போல்
வன்னியெங்கும்
தாயின் மணிக்கொடிகள் பதிகின்றனவே.
என் கவிதையிலே நீ இருக்க
ஈழம் கதறியழும் நியாய மென்ன.
.
நீயோ முடங்கிய காலில்
மூண்டெரிந்த விடுதலைத் தீ.
தீவெட்டியாய் உன்னைச்
சுமந்து சென்ற தோழருக்கு
'இத்தாவில்' பகையிருட்டில்
வெற்றியின் பாதை விளங்க வைத்த மாவீரா.
உன்னை எழுதாமல் இந்தத் தமிழ் எதற்கு.
களம் களமாய்த் தோழர் உன்னைச் சுமந்ததுபோல்
காலங்கள் ஊடே
என் கவிதை இனிச் சுமக்கட்டும்
.
அவனை ஆழப் புதைக்காதீர்
ஆலயங்கள் கட்டாதீர்.
நாளை மணலாற்றை மீட்டு
வாழ திரும்புகையில் நம் சனங்கள்
மசிரை விட்டுதுகள் தம்
மனம் நிறைந்த நாயகனை.
மணலாற்று அகதிகளின் புதையல்
ஆழப் புதைக்காதீர்.

முள்ளி.. வாய்க்கால்

9 months ago

தமிழீழ மூச்சே

எதுக்கம்மா

போனாய் முள்ளி வாய்க்கால்.

ஊரின் பெயரே

உன்னை எச்சரிக்கவில்லையோ...

இல்லை..

முள்முடி தரித்த

தூதரின் நிலை போல்

முள்ளி மேல் நடக்கப் பிரியப்பட்டனையோ..?!

சத்திய சோதனைக்கு

சுய பரிசோதனைக்கு

அதுவா வேளை..??!

 

நாலாம்

இராணுவ வல்லரசையே

வன்னிக் காட்டுக்குள்

கட்டிப் போட்டு

கால் பறித்து

கதறி ஓட வைத்த அனுபவம் இருந்தும்..

ஆழ ஊடுருவல்

அங்கொன்றும் இங்கொன்றும் இருந்ததுக்காய்

எதுக்கம்மா காலி செய்தாய்

காட்டை..!

இன்று வன்னிக்காடுகள்

கண்ணீர் விடுகின்றன

காவல் தெய்வங்கள்

இல்லா நிலையில்

தம் கால் தறிபடும் தறிகெட்ட தனம்

தலைவிரித்தாடுவதால். 

 

தமிழீழத் தாயே

உன் மூச்சுத் தாங்கி...

தோப்பாய் நின்ற சனம்

தொப்புத் தொப்பு என்று

சரிந்து வீழ

தரிசான முள்ளி வாய்க்கால்

முத்தாய்ப்பாய் அமைந்து விட்டதே.!

யார் விரித்த வலையோ

யார் விதித்த சதியோ..

மேற்பார்வையாளர் என்று வந்த

மேலை நாட்டு மேட்டுக் குடிகள்

வசதியாக.. 

மெளனித்து  விட்டனர்

தேவ தூதனுக்கே முள்முடி சூடி

சிலுவையில் ஏற்றிய

கூட்டங்களின் வாரிசுகளோ அவர்கள்..?!

 

ஐநா சபையாம்

கணக்கு போடுது

எத்தனை சிறுவர் போராளி

எத்தனை கரும்புலின்னு..

அடப்பாவிகளா

சனம் ஆயிரக் கணக்கில்

கண் முன்னே வீழ்ந்ததில்

அத்தனையும் காட்சியாய் உங்களிடம் இருக்க

எதுக்கடா... 

வெட்டிக்கணக்குப் போட்டு

வேளை கடத்தி

கூட்டு இனக்கொலைக்கு

இணக்கம் கற்பிற்கிறீர்கள்..?!

 

பூமிப் பந்து

இயற்கையானது

சுத்தமானது

பொறுமையானது

வேற்றுமையற்றது

ஆனால்

அதனையும் தன் சொத்தென்று

சொந்தம் கொண்டாடும்

கொடிய மிருகம்

மனிதனே

இன்று எல்லாம்

அழித்து

தானும் அழியும் நிலைக்கு

வல்லரசு.. ஆயுதம்.. ஆக்கிரமிப்பின்னு

சுயநலக் கருவிகளால்

கர்வம் கொண்டியங்கும்

இந்த நாளில்..

 

சோழப் பெரும்பாட்டனின் 

வாரிசுகள்

மீண்டும் நாடாள்வதோ

உலகாள்வதோ

என்று வெறுப்பில்..

அடுத்தவரின் தேவைக்கான

பயங்கரவாதத் திணிப்பில்..

தமிழீழ மூச்சே

நீ மூச்சிறைத்திருக்கலாம்

ஆனால்

மூச்சிழக்கவில்லை..!

முள்ளிவாய்க்கால்

உனக்கு முடிவும் அல்ல..!!

மூச்சிழந்தோர்

தந்த உயிர் மூச்சு

உன்னை காத்து நிற்கும்

காலம் காலமாய்..!!!

 

ஆக்கம் நெடுக்ஸ்: 19.05.2019

மே 18

9 months ago

ஈழத்து சிறுமியின் டயறி மே 18ம் நாள் 

 


மே 18 ம் நாள் 
காலை பொழுது ஒன்றில் 
கையில் இரத்தங்களுடன் 
கடந்து போகின்றன 
பேரிரைச்சலோடு 
இராணுவ வண்டிகள் 
சாம்பல் மேடுகளை 
தாண்டியபடி 
அந்த ஊழியின் கடைசி 
தினம் அன்று 
பாதி பாண் துண்டை 
என் தம்பியின் கையில் 
கொடுத்து விட்டு 
நானும் தம்பியுமாக 
அம்மாவை பார்த்தபடி 
அந்த பதுங்கு குழியில் 
என்று தொடங்கும் 
அவளது டயரி குறிப்பு 
அன்று ஒரு நாள் 
அந்த நாசி படைகளுக்கு 
அஞ்சியபடி 
அந்த அவுஸ்வைஸ் சிறையில் 
இருந்து எழுதிய சிறுமி 
அன்னா பிராங்கின் 
யுத்த கால டயரி 
குறிப்புகள் போலவே இருந்தன .

போரோய்ந்த பூமியிலே

9 months ago
60767204_10212024103671492_6662493964093

 

போரோய்ந்த பூமியிலே வேறொன்றும் ஓயவில்லை
நாளாந்த வாழ்வினையும்
நீங்களும் வாழவில்லை
வேரோடிப் போன மண்ணில்
வீரர்கள் சாகவில்லை
மண்விட்டுப் போனபின்னும்
மானத்தைக் காத்திடவே
விழுதுகள் தாங்கி உங்கள்
வேதனை போக்கிடவே
ஊரோய்ந்து போனபின்னும்
உங்களைத் தாங்கிடவே
உங்களின் பிள்ளைகளாய்
நாங்கள் இருக்கிறோம் - உமக்காய்
நாங்கள் இருக்கிறோம்

சொந்த மண் தானிழந்து
சுற்றங்களும் இழந்து
சோர்ந்து நீர் தோள் சாய
சொந்தச் சுவர் இழந்து
ஊரூராய்த் திரியும் எங்கள்
உதிரத்து உறவுகளே
உங்களின் இருப்புக்காய்
உணர்வுகள் தனைத்தாங்கி
ஓய்ந்த உம் தலைசாய்த்து
ஆறுதல் கொண்டிடவே
உங்களின் உறவுகளாய்
நாங்கள் இருக்கிறோம் - உமக்காய்
நாங்கள் இருக்கிறோம்

செங்குருதி தோய்ந்து அன்று
சிவப்பாகிப் போன தேசம்
உடல்கள் சிதறி எங்கும்
வெடிப்பாகிப் போன தேசம்
உன்னத வீரர்கள்
உயிர்களைக் கொடுத்த தேசம்
உருக்குலைந்தே போக
உறவுகள் விடமாட்டோம்
உங்களின் வலி போக்கி
உயிர்ப்புடன் உலவுதற்கு
ஊக்கியாய் நாமிருந்து
உதவிகள் புரிவதற்கு
உங்களின் உறவுகளாய்
நாங்கள் இருக்குறோம் - உமக்காய்
நாங்கள் இருக்கிறோம்

அனைவருக்கும் அஞ்சலிகள்

9 months ago

எப்படிச் சொல்வோம் எம் இழப்பை
ஏதிலியாகி நாம் ஊரூராய் அலைகையில்
எப்படிச் சொல்வோம் எம் இழப்பை

பத்து ஆண்டுகள் பறந்தே போனது
நடந்தவை அனைத்தும் மறந்தும் போனது

நமக்கேன் நாடு என்றும் கேட்கிறார்
நாடு காட்டிப் பிழைக்கும் எம்மவர்

நன்றாய் இருக்குது நாடும் ஊரும் 
என்று சொல்லி எங்கும் திரிகிறார்
எந்த இழப்பும் அற்ற எம்மவர்

நாவாந்துறையில் பிடித்த மீனும்
நண்டு கணவாயும் நல்லாய் தின்று
நாடு நல்லாய் இருக்கென்று நாம் கூறலாமோ???

கோழைகள் போல் ஓடிவந்தவர் 
கோடிகளாய்க் கொட்டிக் கொடுத்து
கொலிடே போக மட்டும் நாடாம்

வெட்கம் கெட்ட தமிழர் நாங்கள்
வேருடன் அழித்தவர் ஊர்கள் பார்க்க
வெளிநாட்டில் இருந்து விருப்பாய் போகிறோம்

வெடிகள் பட்டவர் முடமாய் இருக்க
வெடிகள் கொழுத்தி விழாவெடுக்கிறோம்
விழலாய் எம் பணத்தை இறைக்கிறோம்
வரிகளில் மட்டும் வேதனை கொள்கிறோம்

விழித்தெழு தமிழா இனியும் வீணராய் போகாது
வல்லமை கொண்டே உன் வளங்கள் பெருக்கி
வாழ்விழந்து தவிக்கும் எம்மினம் சீர்பெற
வருந்தி நீயும் உழைத்திடாயோ மானிடா

பாடா அஞ்சலி - வ.ஐ.ச.ஜெயபாலன்.

9 months ago

TAMIL ORIGINAL
பாடா அஞ்சலி
வ.ஐ.ச.ஜெயபாலன்.
.
உதிர்கிற காட்டில் 
எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன்? 

சுனாமி எச்சரிக்கை கேட்டு
மலைக் காடுகளால் இறங்கி
கடற்கரைக்குத் தப்பிச் சென்றவர்களின் 
கவிஞன் நான்.
பிணக்காடான இந்த மணல் வெளியில் 
எந்த புதைகுழியில் எனது மலர்களைத் தூவ 
யாருக்கு எனது அஞ்சலிகளைப் பாட.
.
வென்றவரும் தோற்றவரும் புதைகிற உலகோ
ஒரு முதுகாடாய் உதிர்க்கிறது. 
எந்தப் புதைகுழியில் என் மலர்களைச் சூட
எந்த இலையில் என் அஞ்சலிகளை எழுத... 
.
இந்த உலகிலும் பெரிய இடுகாடெது?
பல்லாயிரம் சாம்ராட்சியங்களைப் புதைத்து
புதிய கொடிகள் நாட்டப்படுகிற 
பெரிய அடக்கத் தலம் அது.
நடுகற்களின் கீழ்
அடிபட்ட பாம்புகளாய் 
கிழிந்த எங்களூர்ச் சிறுமிகளின் 
இறுதிச் சாபங்கள் அலைகிறதே.
எந்த சாபத்துக்கு நான் கல்வெட்டுப் பாடுவேன்.
.
அகலும் வலசைப் பறவைகளின்
புலம்பல்கள் தேயும் மண்ணில்
மொட்டை மரங்கள் பாடுகின்றன
”வரலாறு காடுகளைப் பூக்கச் செய்யும்.”
- 2017

Eloge funéraire
Non chanté
In Tamil V.I.S.Jayayapalan
French Translation by Vasu Devan 
****
Dans une forêt qui s'effeuille,
à quelle feuille chanterais-je l'éloge funéraire ?
*
Je suis le poète de ceux qui, descendant des coteaux boisés, 
se sont réfugiés à la plage,
en ayant entendu l'alerte au tsunami. 
*
Quant à ce monde, au sein duquel s'enfouissent 
les perdants et les gagnants, il s'effeuille telle une vieille forêt. 
Sur quelle tombe déposerais-je mes fleurs ?
Sur Quelle feuille rédigerais-je mes éloges funéraires ? 
*
Quel est le cimetière qui soit plus grand que ce monde ? 
C'est le lieu où se dressent de nouveaux drapeaux 
sur d'innombrables empires enfouis. 
*
Voici errent tels des serpents sous des pierres tombales 
les malédictions lancées 
Par les fillettes déchirées de nos villages, 
*
Sur une terre où s'estompent les lamentations 
des oiseaux migrateurs,
chantent les arbres nus.
"Histoire fera fleurir les forêts"

சரித்திரம் மீண்டும் சுழர்கிறது

9 months ago

சரித்திரம் மீண்டும் சுழர்கிறது 

 

 

 

உலக வரை படத்தில் 
ஒரு சிறு துளி போல் 
இலங்கை என்று 
ஒரு தீவு 
ஓடிக்கொண்டே 
இருக்கிறது இரத்தம் 
சிங்கள பெரும் தேசியமும் 
மதவாதமும்  இனவாதவும் 
வளர்ந்து விட்ட சிறு தீவில் 
சரித்திரம் மீண்டும் மீண்டும் 
சுழல்கிறது 
யாருக்குமே அமைதி 
இல்லாத தேசமாகிப்போனது 
விஷம் விதைத்தவர்கள் 
எல்லாம் வினையை 
அறுபடை செய்துகொண்டு 
இருக்கிறார்கள் 
அமைதியாகவே இருக்கிறார் 
புத்தர் மட்டும் 
அந்த ஆலமரத்தடியில் 
யாரும் அவர் வழியை 
பின்பற்ரவில்லை
என்ற கவலையோடு .

 

B.Uthayakumar

கவிதையைப் பிரித்த ஐபிஎல்

9 months 1 week ago

18301596_10155260027546950_2011145838085

கவிதையைப் பிரித்த ஐபிஎல்

தூய வெள்ளை அரம்பையர் நின்றுமே 
துணங்கைக் கூத்திட வீரர் குழாத்தினர்
ஆய தம்திறன் காட்ட, எறிந்த பந்(து)
அண்டை வந்திட வீசி அடித்ததை
பாயச் செய்து பவுண்டரி சிக்ஸராய்
பலத்தைக் காட்டும் ஐபிஎல் களமதில்
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் 
அணிதிரண்டு குதிக்குமழகிலே

நேயமுற்றனன் ஆதலினால் என்றன்
நெஞ்சை நீங்கினளாம் கவிக்காதலி

காலை மாலையிரவெனத் தேர்ந்திடாக்
காதல் மேவ ஐபிஎல் லைப் பார்த்ததால்
வேலையாவும் ஓர் மூலையிற் போனது
வேறு நற்செயலில்லை யென்றானது.
காலமோடியதாற் கவிக்காதலி
காத்திருக்க விருப்பிலளாயினள்
பாலையானது நெஞ்சப் பெருவெளி
பாடயாதும் வராது தவிக்கிறேன்

சீல மேவிய என் எழில் நங்கையை 
தேடி யெங்குமலைந்து திரிகிறேன்.

அன்னவட்கொரு அஞ்சலி செய்தென(து)
அருகில் வாவடியென்று துதித்திட
பின்னமுற்ற மனத்தினளாயவள் 
பிணங்கி யந்தத் துணங்கையை யாடிடும்
கன்னியர்க்கு உன் காதலைக் காட்டுதி
கவிதையேனுனக்கென்று சபித்தனள்
என்ன செய்வது என்று அறிகிலேன்
எனது வாழ்வில் அவளைவிட்டோர் துணை

இன்னுமுள்ளதுவோ இலை நெஞ்சமே!
எறியுனக்கினி ஐபிஎல் ஏன் கொலோ!

எந்த நிறம் இருந்தாலும் அவை யாவும் ஒரே தரம் அன்றோ

9 months 1 week ago

 

 


உயிர்த்த தினம் அன்று 
சிலுவையில் சிதறி கிடந்த 
சிவப்பு இரத்தத்தில் 
எதுகுமே தெரியவில்லை 
எவன் முஸ்லீம் 
எவன் கிறிஸ்தவன் 
எவன் இந்து 
எவன் கறுப்பு 
எவன் வெள்ளை என்று 
எல்லாமே ஒரே நிறமாக 
இருந்தது .

 


பா .உதயகுமார் .

மீன்பாடும் தேன்நாடு - வ.ஐ.ச.ஜெயபாலன்

9 months 2 weeks ago
மீன்பாடும் தேன்நாடு
- வ.ஐ.ச.ஜெயபாலன்
.
வங்கக்கடலுக்கோ வெண்பட்டு மணல்விரிப்பு
மலையகத்து அருவிகட்கோ பச்சை வயல்விரிப்பு
பாடும்மீன் தாலாட்டும் பௌர்ணமி நிலாவுக்கு
ஒயிலாக முகம்பார்க்க ஒய்யாரமாய்த் தூங்க
மட்டு நகரில் வாவியிலே நீர்விரிப்பு.
எங்கிருந்தோ வந்தவர்கள் எல்லாம் அனுபவிக்க
சொந்தங்கள் இங்கே துயரம் சுமக்கிறது.
காலமெல்லாம் இங்கே
கணபதியும் எங்கள் காக்கா முகம்மதுவும்
தெம்மாங்குபாட திசைகாணும் தாய் எருமை.
திசைதோறும் புற்கள் முலைதொட்ட பூமியிலே
கன்றை நினைந்து கழிந்தபால் கோலமிடும்.
.
காடெல்லாம் முல்லை கமழும் வசந்தத்தில்
வயல்புறங்கள் தோறும் வட்டக்களரி எழும்.
வட்டக்களரியிலே வடமோடிக் கூத்தாடும்
இளவட்டக்கண்கள்
தென்றல் வந்து மச்சியின் தாவணியை இழுப்பதிலே
தடுமாறும் கால்கள் தாளம் பிசகாது.
.
குதிரையிலேதாவி கொதிப்போடு இளவரசன்
போருக்குப் போவான்
கொடும்பகையை வென்றிடுவான்.
.
எட்டாக வட்டமிட்டு இறுமாப்பாய்த் தலைநிமிர்ந்து
செட்டாகப்பாடிச் செழிப்பார்கள் போர்வீரர்
அண்ணாவிதட்டும் மத்தளத்தின்
தாளத்தின் சொற்படிக்கு
எல்லாமே வட்டக் களரியிலே மட்டும்தான்,
படிக்கட்டில்
பொல்லாவறுமை பசியோடு இவனுடைய
கைகோர்த்துச் செல்லக் காத்திருக்கும் வேதனைகள்.
.
போடியாரின் மாளிகையில் போரடித்த நெல்குவித்து
நாடோடிப் பாடல் மகிழ்ந்து பசிமறக்கும்.
ஊரின்புறத்தே ஒருநாள் நடக்கின்றேன்,
.
எல்லைப்புற வயலும் எழுவான் கடற்கரையும்
செல்வங்கள் எல்லாம் சொத்தாய்ப் பிறர்கொள்ள
பொட்டல்வெளியில்
கணபதியும் எங்கள் காக்கா முகம்மதுவும்
சிண்டைப்பிடித்துக் கிடக்கின்றார், என் சொல்வேன்!
 
1982.

அல்லாவுக்கும் அந்தோனியாருக்கும் கொழுவல்.

9 months 2 weeks ago

அன்று..

புட்டுக்கும் தேங்காய் பூவுக்கும் கொழுவல்..

பரிகாரம்

சொந்த மொழி பேசிய சொந்தவனை

எதிரி என்று வரிந்து

பொது எதிரியை நண்பனாக்கி

காட்டிக் கொடுத்தோம்

வெட்டிக் கொன்றோம்

துரத்தி அடித்ததோம்

கள்ளமாய் காணி பிடித்தோம்..

கிழக்கின்

பூர்வகுடிகளை அகதியாக்கினோம்

வடக்கில்

பள்ளிவாசல்களில் ஆயுதங்கள் குவித்து

ஆயத்தமானோம்.

அதற்குள்..

வரிகளுக்கு விளங்கிவிட

கூட்டோடு காலி பண்ணி விட்டது

அசைவது அசையாதது இழந்து

புத்தளத்தை அடைந்தோம்.

 

அல்லாவின் நவீன தூதன்

அஷ்ரப்பின் உதவியுடன்

அடிப்படைவாத வெறிக்குள்

மூழ்கினோம்..

ஹிஸ்புல்லாவின் வழியில்

ஊர்காவல் படை அமைத்தோம்...

மிச்ச சொச்ச

சொந்த மொழி பேசும்

சொந்தங்களையும்

குந்த விடாமல்

குதறித்தள்ளினோம்..

சிவன் பிள்ளைகளை

அல்லாவின் சிஷ்யைகள் ஆக்கினோம்..

எங்கள் பிள்ளைகளுக்கு

காசும் கல்யாணமும் செய்து வைத்தோம்.

குடித்தொகையை

அளவு கணக்கின்றி பெருக்கித்தள்ளினோம்.

 

முள்ளிவாய்க்கால் என்பது

பெருந்துயர் என்கிறார்கள்

நாங்கள் பாட்டாசு போட்டவர்கள்

கூட்டத்தில்

பாற்சோறு உண்டோம்.

கூடிக் களித்தோம்..

கொண்டாடி மகிழ்ந்தோம்.

எமது காட்டிக் கொடுப்பை

உளவுப் பணி என்றோம்

சிறீலங்கா மாதாவுக்கான

சீரிய கடமை என்றோம்

எம்மை நாமே மெச்சி நின்றோம்..

பெரும் மானுடத் துயரை

சிம்பிளாய் கடந்து போனோம்.

 

காலச் சக்கரம்

கடந்து போனது..

எங்கள் உண்மை முகம் வெளியில்

வந்தது..

அல்லாவுக்கும் அந்நோனியாருக்கும்

கொழுவல் போட்டோம்..

மீண்டும்

சொந்த மொழி பேசியவனை

கொன்று குவித்தோம்.

புனிதப் போரின்

அத்தியாயம்

இஸ்லாமிய அரசின் கீழ் என்றோம்.

 

எங்கள் இரத்தமும்

அவன் இரத்தமும்

ஒன்றே என்பது மறந்தோம்..

எங்கள் தோலும்

அவன் தோலும்

ஒன்றே என்பது தொலைத்தோம்..

எங்கள் ஆடையும்

அவனின் ஆடையும்

ஒன்றே என்பது வெறுத்தோம்..

எங்கள் மொழியும்

அவன் மொழியும் 

ஒன்றே என்பதை கிடப்பில் போட்டோம்..

அராபிய எடுபிடிக்குள்

எண்ணெய் வள செல்வச் செழிப்புக்குள்

இஸ்லாமிய அடிப்படைவாதத்துள்

எம்மை மூழ்கி எடுத்தோம்

வார்ப்புக்களை வளர்த்து விட்டோம். 

 

இன்று..

நிம்மதி தொலைத்தோம்.

செய்த பாவத்தின்

பலனை அனுபவிக்கிறோம்..

நாமே நம்மை

இஸ்லாமிய ஆட்சியின்

குடிகளாகச் சூடிக் கொண்டதும்

வெறுப்பை வளர்த்ததும் தான் மிச்சம். 

போலி ஜனநாயகவாதிகள்

9 months 3 weeks ago

போலி ஜனநாயகவாதிகள் 

 


மத தீவிரவாதமும் 
ஏகாதிபத்திய நல 
சுரண்டல்களும் 
இன படுகொலைகளும் 
இருக்கும் வரைக்கும் 
இரத்தக்களரியை 
எந்த ஒர் தனி அரசாலும் 
நிறுத்தமுடியாது 
அணு குண்டோடும் 
ஆயுத விற்பனையோடும் 
மனிதர்கள் இருப்பதால் 
யாருக்கு தான் 
இருக்கப்போகிறது 
அன்பும் கருணையும் 
போலி ஜனநாயகத்தின்
பெயரால் வந்து 
ஒரு பூவை வைத்து விட்டு 
போங்கள் 
எங்கள் இரத்தத்தின் நடுவில் .

 

 


பா .உதயகுமார் 

முதுமையாகிலனோ

10 months ago

முதுமையாகிலனோ ———

 

அப்போ வாய் 
பொத்தியபடி 
என் கதை 
கேட்டவர்களிடம் 
இப்போ நான் 
வாய் பொத்தியபடி 
அவர்கள் கதை 
கேட்டுக்கொண்டு 
காலாவதியான 
பொருள்களைப்போலவே
காத்திருக்கிறேன்
தூக்கி எறியும் 
காலம் ஒன்றுக்காக.

 

 

பா .உதயகுமார் /OSLO 

கோடை காலம்

10 months 1 week ago

கோடை காலம் ——————————————————————————————————

 


என் வீட்டு வாசலில் பூக்கள் விரியும் 
முற்ரத்து மரங்களில் மூச்சுகள் கேக்கும் 
காலையில் வந்து இனி காக்கையும் குருவியும் பாடும்  
என் கதவை திறந்து ஒரு சூரியன் பூக்கும் 

 

கானகம் போல் ஒரு சோலை விரியும் 
காலத்தின் பிறப்பு ஒன்றை சொல்லி சிரிக்கும் 
கள்ளமாய் வந்து இனி தேனீக்கள் 
காலை பூக்களில் காதல் கீதம் இசைக்கும் 

 

கண்ணை பறித்திடும் கன்னியின் கூந்தலில் 
காலை மலர்ந்திட்ட  மல்லிகை வாசம் 
எண்ணக் கனவினை சொல்லி சிரித்திடும் 
எங்கள் மங்கையர் கோலங்கள் வாசலில் பூத்திடும்  

 

தென்னம் தோப்பினில் தொட்டிலை கட்டி 
சிட்டு குருவின் சிரிப்பு ஒலி கேக்கும் 
வானை திறந்து ஒரு வானவில் பூக்கும் 
வா என்று கை தட்டி பூமி சிரிக்கும்  

 

கடல் கரையினில் காதல் கிளிகள் 
கடலின் அலையில் விழிகள் நனைத்து 
கண்ணின் இமையால் எதோ சொல்லி 
காதல் மொழியில் துணையை தேடும்  

 

தென்றல் வந்து இனி என்னோடு பேசும் 
தெம்மாங்கு பாடல்  காதினில் கேக்கும் 
காலை கனவினில் கவிதைகள் சொல்லும் 
என் கதவை திறந்து ஒரு சூரியன் பூக்கும் .


——————————————————————————————————————

பா .உதயகுமார் /Oslo

வாழ்வு என்றும் வசந்தங்களே

10 months 1 week ago

வாழ்வு என்றும் வசந்தங்களே 

 

மல்லிகை பூ வாசனையும் 
வசந்தத்தின் புன்சிரிப்பும் 
உன் கண் வரைந்த சித்திரமும் 
கால் கொலுசு சந்தங்களும் 
இன்னும் என்னை விட்டு போகவில்லை 

 

கால்நடை கொஞ்சம் தளர்ந்து 
கட்டினிலே நான் படுத்தாலும் 
உன் பூ மணம் விட்டு போகுமோடி 
முடியாது போடி என் முழு நிலவின் சித்திரமே 

 

உன் கன்னத்தின் குழிகளிலே 
என் கவிதைகளை புதைத்தவளே 
காலம் ஒன்று இருந்தால் 
கல்அறையிலும் வாழ்வு செய்வோம் 

 

அதன் வழியால் செல்பவன்
 எவனாக இருந்தாலும் 
எழுதிவிட்டு செல்லட்டும்   
எம் கல்லறையின் நடுவினிலே 

 

வாழும் வரை காதல் செய்த 
வண்ணக் கிளிகள் நாங்கள் என்றும் 
காதல் கிளி இரண்டு 
கண் மூடி தூங்குதென்றும் 

 

காலத்தால் அழியாத இரு 
கவிதை தோப்பு துயலுதென்றும்  
எழுதி விட்டு செல்லுங்கள் 
எவரும் எம் தூக்கத்தை கலைக்காமல்.

 

 

பா .உதயகுமார் /Oslo

செந்தமிழ்த்தாயி

10 months 1 week ago

செந்தமிழ்த்தாயி

நாதவடிவானவளே செந்தமிழ்த்தாயி – எந்தன்

நாவில் உறைபவளே செந்தமிழ்த்தாயி

ஆதிமுதலானவளே செந்தமிழ்த்தாயி – நாவில்

அமிழ்தூறச் செய்பவளே செந்தமிழ்த்தாயி.

 

மன்னாதி மன்னரெல்லாம் செந்தமிழ்த்தாயி – உன்னை

வழுத்திடவே வாழ்ந்தவளே செந்தமிழ்த்தாயி

பொன்னான இலக்கியங்கள் செந்தமிழ்த்தாயி – புவி

போற்றிடவே தந்தவளே செந்தமிழ்த்தாயி

 

வெம்பாடு பட்டு உன்னைச் செந்தமிழ்தாயி –பலபேர்

வீழ்த்திடவே எண்ணுகிறார் செந்தமிழ்த்தாயி

அம்பா நீ அருள்புரிவாய் செந்தமிழ்தாயி- அந்த

அற்பர்களை ஒளித்திடம்மா செந்தமிழ்த்தாயி.

 

சாதி மதமொளித்துச் செந்தமிழ்த்தாயி – எங்கும்

சமநீதி காணவைப்போம் செந்தமிழ்த்தாயி

ஆதியிலே இருக்கலையே செந்தமிழ்த் தாயி – இந்த

அவமானச் சின்னமெல்லாம் செந்தமிழ்த்தாயி.

 

மனுநீதிப் பொய்மைக்கெல்லாம் செந்தமிழ்த்தாயி – நாம்

மருவாதை காட்டலாமோ செந்தமிழ்த் தாயி

தனி நீதி எமக்கிருக்கு செந்தமிழ்த்தாயி – தமிழன்

சங்ககால வாழ்விருக்கு செந்தமிழ்த் தாயி

 

சாதி பலபிரித்துச் செந்தமிழ்த்தாயி – உன்னைச்

சந்தி சிரிக்க வைத்தார் செந்தமிழ்த்தாயி

பேதம் பல கொணர்ந்தார் செந்தமிழ்தாயி – விழி

பிதுங்கிடவே உன்னை வைத்தார் செந்தமிழ்த்தாயி

 

 

எல்லாப் பழியுமினிச் செந்தமிழத்தாயி – உனக்கு

இல்லாமல் ஆக்கிடுவோம் செந்தமிழ்தாயி

பொல்லார் புகுந்து விட்டார் செந்தமிழ்த்தாயி –அவரை

பொறமுதுகிட்டோட வைப்போம் செந்தமிழ்த்தாயி.

 

ஆண்ட தமிழகத்தை செந்தமிழ்த்தாயி – நாங்க

மீண்டொருகால் ஆழவைப்போம் செந்தமிழ்த்தாயி

வேண்டும் எமக்கு இனி செந்தமிழ்த்தாயி - எங்க

வெவசாயத் தொழில் வளர்ச்சி செந்தமிழ்த்தாயி.

 

நாம் தமிழராயுதித்தோம் செந்தமிழ்த்தாயி – நமக்கு

நல்ல வழி காட்டிடம்மா செந்தமிழ்த்தாயி

சோம்பரில்லா விவசாயி சின்னத்தத் தாயி – நம்ம

தொகுதியெங்கும் வெல்ல வைப்பாய் செந்தமிழ்த்தாயி.

 

கரும்பு வெவசாயி சின்னத்தத் தாயி – நீ

கருணை கூர்ந்து காத்திடம்மா செந்தமிழ்த்தாயி

இரும்புறுதியோடு எங்கும் செந்தமிழ்த்தாயி – எங்கள்

இளைஞர் படை இருக்குதம்மா செந்தமிழ்தாயி

----------------------------------------------------------------.

காயப்படுத்திய உனக்கு.....

10 months 2 weeks ago

நீ
மௌனமாய் இருப்பதில்....
புரிகிறது என் காதலுக்கு....
மலரஞ்சலி வைத்தது....
நீ..........!!!

காதலுக்கு உரமே......
கனிவான பேச்சு......
காயப்படுத்திய உனக்கு.....
அதெல்லாம் எப்படி......
புரியும்........?

நீ
பார்த்தநாள்...!
மரணம் தாண்டி
வாழ்ந்த நாள்.....
இனி...............
இறந்தாலும்.......
உயிர்ப்பேன் ..........
உன் கண்ணை விட
கொடிய விஷம்
எதுவும் இல்லை ....!

@
இப்படிக்கு உன்.....
கவிப்புயல் இனியவன்

கோடுகள்

10 months 3 weeks ago

கோடுகள் 

ஒன்பதின்  வைகாசி

வைகாசியில்  அவனொருவன்  பெற்றது   ஒளி

 ஒளி அணைந்ததும் அதே   வைகாசி - எங்கள் வீடுகளில்

இன்னமும்  ஏற்றவில்லை  – காத்திருக்கின்றோம் நெஞ்சில்  தீயுடன்      

 

மேல் நொந்து போயிற்றே என்றால் -மீண்டும் எண்பத்து  மூன்றாம்

மாப்  புளிப்பது  தோசையின்  நலம்  நாடி 

அணைத்த  உலை - மீண்டும்  கொதிக்க  விறகை  தள்ளும்   நண்பா  – நன்றி 

இன்னமும்  ஏற்றவில்லை  – காத்திருக்கின்றோம் நெஞ்சில்  தீயுடன்      

 

இரு  கோடுகள்   சமன்  செய்    பாதைகள்   பல 

கோடொன்றை  சற்றே  நீட்டினால்  எல்லோரும்  நலமே 

மறு  கோட்டின்   நுனியை  சற்றே  தட்டினாலும்  முடிவு  ஒன்றே 

இன்னமும்  ஏற்றவில்லை  – காத்திருக்கின்றோம் நெஞ்சில்  தீயுடன்      

 

ஒன்பதின்   வைகாசி , நண்பன்  ஒருவனின்   தொலைபன்னி  அழைப்பு 

வேண்டும்  எனக்கு  ஆட்கள் பத்தும் ஆண்டுகள் சிலவும்

பறந்து  சென்று  கோட்டைத்  தட்டுவதே  சால  சிறப்பு  

இன்னமும்  ஏற்றவில்லை  – காத்திருக்கின்றோம் நெஞ்சில்  தீயுடன்      

 

வல்லூறுகள்  மீண்டும்  வட்டமிடத்  தொடங்கி  விட்டன

பீனிக்ஸ்     பறவையில்   மீண்டும்   ஒரு  உயிர்த் துடிப்பு 

உலை  கொதிக்கவும்  விறகுகள்  ஒரு பக்கம்   

இன்னமும்  ஏற்றவில்லை நாம்-  கையில்  அரிசியுடனும்  நெஞ்சில்  தீயுடனும்  

 

 

26 March 2019 …..

 

Checked
Thu, 02/20/2020 - 14:35
கவிதைக் களம் Latest Topics
Subscribe to கவிதைக் களம் feed
texte-feed
https://www.yarl.com/forum3/forum/214-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/