வண்ணத் திரை

முதல் பார்வை: வாட்ச்மேன்

3 days 11 hours ago
முதல் பார்வை: வாட்ச்மேன்
watchmanjpgjpg

30 ஆயிரம் ரூபாய் கடன் கிடைக்காமல் தவிக்கும் இளைஞன் திருட நினைத்தால், அதனால் அவன் சில ஆபத்துகளில் சிக்கினால் அதுவே 'வாட்ச்மேன்'. 

ஜி.வி.பிரகாஷ் படத்தின் ஆரம்பத்திலிருந்து பார்க்கவே ரொம்ப பரபரப்பாக இருக்கிறார். 30 ஆயிரம் ரூபாய் கடன் கிடைக்குமா என்று அலையும் அவருக்கு எந்த வழியும் பலன் தரவில்லை. இதனால் திருடியாவது பணத்தை எடுப்போம் என்று முடிவெடுத்து ஒரு வீட்டுக்குள் நுழைகிறார். ஆனால், அந்த வீட்டில் ஏற்கெனவே இருக்கும் சில ஆபத்துகளால் ஜி.வி.பிரகாஷ் என்ன ஆகிறார், அவருக்கான பணச் சிக்கல் ஏன் வந்தது, அந்த வீட்டில் உள்ள ஆபத்து என்ன போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை. 

ஜி.வி.பிரகாஷ் ஹீரோயிஸம் செய்யவோ, ஹீரோ என்பதை நிறுவவோ சாத்தியமில்லாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இயக்குநர் விஜய் உடனான நட்புக்காக நடித்திருக்கிறாரோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. பெரும்பாலான நேரங்களில் பதட்டமாகவும், பயந்த மாதிரியும் இருப்பதே ஜி.வி.பிரகாஷுக்கு கொடுக்கப்பட்ட வேலை. அதை மட்டும் கச்சிதமாக செய்திருக்கிறார். 

வில்லன் ராஜ் அர்ஜுன் பார்ப்பதற்கு டெரராக இருக்கிறார். ஆனால், அந்த டப்பிங் டெக்னிக் எடுப்டவில்லை.  வில்லன் கேங்கில் இருக்கும் யார் முகமும் பதிவாகாத அளவுக்கே கடந்து போகிறார்கள். 

படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ப்ரூனோ என்கிற நாய். அது தன்னோட வேலையை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறது.  தியேட்டர்ல நிறைய அப்ளாஸ் வாங்கும் ஒரே கதாபாத்திரம் ப்ரூனோதான். யோகி பாபு காமெடி தேவையில்லாத ஆணி.

பாடல்கள் இல்லாத படம். அதே நேரத்தில் ஜி.வி.யின் பின்னணி இசையைக் குறை சொல்ல முடியாது. அந்தந்தக் காட்சிக்கு தேவையான பதற்றத்தை பின்னணியில் கொடுத்து அதிர வைக்கிறார். நீரவ் ஷாவோட ஒளிப்பதிவும், ஆண்டனியின் எடிட்டிங்கும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன. இருட்டின் அடர்த்தியை நீரவ் ஷாவின் கேமரா அழகாகப் படம் பிடித்துள்ளது. 

ஜி.வி.கேரக்டருக்கான பிரச்சினை, அவர் திருடலாம் என்று முடிவெடுக்கும் சூழ்நிலை, அந்த வீட்டை அவர் தேர்ந்தெடுக்கக் காரணம் போன்றவை நம்பும்படியாக இருக்கிறது. ஆனால், கடன் கொடுத்தவர் நள்ளிரவு 12 மணி வரைக்கும் அடிக்கடி அவருக்கு போன் செய்து வெறுப்பேற்றுவதை நம்ப முடியவில்லை.  

ஜி.வி., ப்ரூனோ தவிர மற்ற கதாபாத்திரங்களின் கேரக்டர்களில் ஈர்ப்பும் இல்லை. அதனால் படத்துடன் நம்மைத் தொடர்புபடுத்திக்கொள்ள முடியவில்லை. ப்ரூனோ நாய் செய்யும் சில விஷயங்களில் மட்டும் சுவாரஸ்யம் தெரிகிறது. மற்றபடி அழகான அம்சங்களோ, த்ரில் விஷயங்களோ, பதற்றமோ, பரபரப்போ படத்தில் ரொம்பக் குறைவு. தொழில்நுட்ப ரீதியில் தரமான இருக்கும் படம் இயக்குநர் வடிவமைத்த காட்சி ரீதியாக கொஞ்சம் பின்வாங்குகிறது. 

விஜய்யுடன் சமீபத்திய சில படங்களுடன் ஒப்பிடும்போது கொஞ்சம் நல்ல படம். ஆனால், சொல்ல வந்த விஷயத்தை பெரிய டீட்டெய்ல் இல்லாமல் உடனடியாகச் சொல்லி முடிக்கிற ஃபாஸ்ட் ஃபுட் த்ரில்லர் படம் 'வாட்ச்மேன்'.

 

https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article26819452.ece

திரை விமர்சனம்- கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்

3 days 11 hours ago
திரை விமர்சனம்- கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்
0cab8d0bP2176074mrjpg

தன்னுடன் கல்லூரியில் படிக்கும் இப் ராஹிம் (அசோக்) மீது காதல்கொள் ளும் ஜெயா (பிரியங்கா ரூத்). இஸ் லாத்துக்கு மாறி, ராசியா என்று தனதுப் பெயரை மாற்றி, குடும்பத்தைப் பிரிந்து காதலனைக் கரம் பற்றுகிறாள். மனைவி யின் மீது மிகுந்த அன்புடன் இருக்கும் இப்ராஹிம், ஹெராயின் விற்பனையில் ஈடுபடும் கும்பலின் தலைவர் ராவுத்தரிடம் (வேலு பிரபாகரன்) பணியாற்றுகிறான். அவனை சூழ்ச்சியில் சிக்க வைத்து போலீஸ் என்கவுன்ட்டரில் கொலை செய்கின்றனர்.

தன் கணவன் சாவுக்கு காரணமான ராவுத்தரையும் அவனது இரண்டு மகன் களையும் கொல்ல முடிவெடுக்கிறாள் ராசியா. ராவுத்தரின் முன்னாள் கூட்டாளி யான பாக்ஸி (டேனியல் பாலாஜி), ராவுத்தரால் துரத்தியடிக்கப்பட்டு மும்பையில் தலைமறைவாக வாழ் கிறான். ராவுத்தரை வீழ்த்தி போதை மருந்து மாஃபியாவைக் கைப்பற்றும் தருணத்துக்காகக் காத்திருக்கிறான் பாக்ஸி. ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்கிற முறையில் பாக்ஸியைத் தேடி மும்பைக்குச் செல்லும் ராசியாவுக்கு, சண்டை போடவும் துப்பாக்கி சுடவும் பயிற்சியளிக்கிறான் பாக்ஸி. இறுதியில் ராசியா வென்றாளா? வீழ்ந்தாளா என் பதை ரத்தம் சொட்டச் சொட்ட சொல் கிறது ‘கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’.

இதுவரை வந்த பெரும்பாலான தமிழ்ப் படங்களில் யாரையாவது பழி வாங்கத் துடிக்கும் பெண்கள், திட்டம் தீட்டுபவர்களாகவும் பின்னால் இருந்து இயக்குபவர்களாகவுமே இருந்திருக் கிறார்கள். அவற்றுக்கு மாறாக ஒரு பெண்ணே களத்தில் இறங்கி தன் உயி ரைப் பணயம் வைத்துப் பழிவாங்குவ தாகக் காட்டியிருக்கிறது ‘கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’. அதுவே இந்தப் படத்தை ஒரு வழக்கமான பழிவாங்கல் கதையா கவோ, கேங்ஸ்டர் படமாகவோ கடந்து போகவிடாமல் தடுக்கிறது. இப்படி ஒரு கதையை வைத்துக்கொண்டு சிறப்பான ஒளிப்பதிவும், தரமான இசையும், சில ஊகிக்க முடியாத திருப்பங்களும் கைகொடுக்க ஒரு தரமான கேங்க்ஸ்டர் படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் சி.வி.குமார்.

தொடக்கக் காட்சிகளில் சிறுவயதில் இருந்தே ‘திருப்பி அடிக்கும்’ முனைப்பு இருப்பவராக ராசியாவைக் காட்டியிருப் பது அந்தக் கதாபாத்திரத்தின் தன் மையை வெகுஇயல்பாக உள்வாங்க வைத்துவிடுகிறது. இதனால், கணவ னைக் கொன்றவர்களை இந்த அளவுக்கு கொடூரமாகப் பழிவாங்க வேண்டுமா என்ற கேள்வி எழுவது தவிர்க்கப்படு கிறது. புது மணத் தம்பதியர் நெருக்க மாக இருக்கும் காட்சிகளுக்கு போதிய இடமளித்திருப்பது அந்தப் பெண்ணின் இழப்பின் வலியை ரசிகர்கள் உள் வாங்க உதவுகிறது.

பழிவாங்க முடிவெடுத்தவுடன் களத் தில் இறங்காமல் முறையாகப் பயிற்சி எடுத்து, பின்பு தன் இலக்குகளை நோக்கி செல்வதுபோல் காட்டி தேவை யற்ற சூப்பர் ஹீரோத்தனங்களைத் தவிர்த்திருப்பதும் பாராட்டுக்குரியது. ஆனால் படத்தில் மாஸ் காட்சிகள் இல்லா மல் இல்லை. பாக்ஸியின் குழுவில் தன் னிடம் தவறாக நடந்துகொள்பவரை ராசியா புரட்டிப் போடுவதும் இடை வேளைக் காட்சியில் இரண்டு பேரைக் கொன்றுவிட்டு அலட்டிக்கொள்ளாமல் சென்று, தட்டில் மிச்சமிருக்கும் பிரியாணி யைச் சாப்பிடுவதும் அசலான மாஸ் காட்சிகளாக ரசிகர்களின் பலத்த கரகோஷத்தைப் பெறுகின்றன.

இவ்வளவு யோசித்த இயக்குநர் பழிவாங்கு படலத்தில் நம்பகத்தன்மைக் குக் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். ஒருகட்டத்துக்குப் பின்பு நாயகி நினைப்பதெல்லாம் எளிதாக நடந்துவிடு கிறது. எல்லாமே அவருக்கு சாதகமாகி விடுகின்றன. எதிர்த்தரப்பு சுதாரித்துக் கொண்டுவிட்ட பிறகும் அதனால் ஏற் படும் ஆபத்துகளையும் நாயகி எளி தாகக் கடந்துவிடுகிறார். இரண்டாம் பாதியில் நிறைய கிளைக் கதைகள் சேர்க்கப்பட்டிருப்பது திரைக்கதை இலக்கற்றுப் பயணிப்பது போன்ற உணர்வைத் தருகிறது.

வன்முறையை இவ்வளவு விரிவாக வும் கொடூரமாகவும் காட்சிப்படுத்த வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. படத்தில் கொடூரக் குற்றங்கள் செய்பவர் கள் அனைவரும் குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது நெருடலாக இருக்கிறது. பகவதி பெரு மாள் பாத்திரத்தின் மூலம் அதை சற்றே ஈடுகட்டுகிறார்கள். இறுதியில் நாயகிக்கு நேரும் முடிவும் ஏற்கத்தக்கதாக இல்லை. கதையின் நகர்வு சென்னை களமாக காட்டினாலும், முற்றிலும் மும்பை நகருக்குள் நடக்கும் ஒரு கதை என்ற ஓர் உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

மொத்த படத்தையும் தோளில் சுமக் கிறார் ராசியாவாக வரும் பிரியங்கா ரூத். கவர்ச்சி ததும்பும் காதலில் தொடங்கி, கணவனை இழந்து தவிக்கும் தருணத் துக்கு மாறி, கொலை வெறியைக் கண் களில் படர விட்டு கம்பீரமாய் திரிகிறார் பிரியங்கா ரூத். சண்டைக் காட்சிகளிலும் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். வேலு பிரபாகரனின் அறிமுகக் காட்சியே வன்மத்தின் உச்சம். அலட்டாமல் அசர வைக்கிறார். டேனியல் பாலாஜி, பி.எல். தேனப்பன், ஆடுகளம் நரேன், ஈ.ராமதாஸ் என அனைவரும் தங்களது பங்களிப்பை நிறைவாக செய்திருக்கின்றனர்.

ஷ்யாமளாங்னின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலுவூட்டுகின்றன. ஒளிப் பதிவாளர் கார்த்திக் குமார் பயன்படுத்தி யிருக்கும் வண்ணங்கள் நிழலுலகத்தை கச்சிதமாகப் படம்பிடித்துள்ளன. சில காட்சிகளில் ஒளிப்பதிவு திரையோடு நம்மை ஒன்ற வைக்கிறது.

கேங்க்ஸ்ட்ர் பட விரும்பிகளுக்கு ‘கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ ஒரு கொண் டாட்டம். வன்முறையைக் கொஞ்சம் மட்டுப்படுத்தி இரண்டாம் பாதி திரைக் கதையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் இந்தப் படம் ஈர்த்திருக்கும்.

markJPG

 

 

https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article26834148.ece?utm_source=HP-RT&utm_medium=hprt-most-read

மகேந்திரனின் செல்லுலாய்டு பெண்கள்!

5 days 19 hours ago
மகேந்திரனின் செல்லுலாய்டு பெண்கள்!
23.jpg
முகேஷ் சுப்ரமணியம்

உலகின் வேகத்துக்குப் படைப்பைக் கொடுப்பவன் நல்ல கலைஞன் அல்ல. தன்னுடைய படைப்பின் வேகத்துக்கு, அதன் நேரம் மற்றும் வெளிக்குள் பார்வையாளனை நடமாட விட வேண்டும் (எந்த வழிகாட்டலுமின்றி). அபூர்வமாய் சிலருக்கு மட்டுமே கைகூடும். இந்த தேர்ச்சியும், அதன் வழியே பனிக்குள் மெளனித்திருக்கும் இயற்கை போன்ற உலகப் பார்வையும் தான் ஒரு படைப்பாளனை மாஸ்டர் என்ற இடத்தில் வைத்து கொண்டாட வைக்கிறது.

உண்மையில் மகேந்திரனின் மறைவு, மற்ற ஆளுமைகளின் மறைவைப் போல அதிர்ச்சியாகவோ படக்கென உதிரும் கண்ணீராகவோ அல்லாமல் அவரது திரைப்படங்களின் இறுதி காட்சிகள் போல வாழ்வின் ஓர் அங்கமாக, நீண்ட பெருமூச்சுடனும் அமைதியுடனுமே மனதை ஆட்கொள்கிறது. உதிரிப்பூக்களில் விஜயன் சாவுக்கு முன் பார்க்கும் ஓடும் ஆற்றைப் போல.

மகேந்திரன் காட்டிய பெண்களின் பன்முகத்தன்மை தமிழுக்குப் புதிது. அவர் தீவிரமாய் இயங்கிய காலத்தில், தமிழில் வந்த படங்களில் பெண்களுக்கான இடம் எவ்வளவு என்பதை சற்று நோக்கினாலே தெரியும்.

நகரத்துக்குச் சென்று வந்த அல்லது நகரத்திலிருக்கும் ஹீரோயின் - பார்ட்டி, ஸ்டார் ஹோட்டல்களில் நடனமென வாழ்ந்துகொண்டிருக்க, கதாநாயகன் அவளுக்குப் பெண் என்பவள் யாரென உணர்த்துவார். திருமணத்துக்குப் பின் தடாலடியாய், மீரா சீயக்காய்தூள் விளம்பரத்தில் வருவது போல உடனே மாறிவிடுவார்கள். அதே சமயம், சீரியஸான இயக்குநர்கள் தங்கள் படங்களில் இந்த மசாலா சினிமாக்களிலிருந்து விலகி பெண்களைப் பொம்மை போல் அல்லாமல் முதன்மை பாத்திரங்களிலும் அர்த்தமுள்ள தொனியிலும் மேம்படுத்தினார்கள்.

மகேந்திரனின் சமகாலத்தவர்களாகிய பாலசந்தர், பாலு மகேந்திரா, பாரதிராஜா, பாக்யராஜ் போன்றோர் பெண்களுக்கான சினிமாவில் முக்கியமாகப் பேச வேண்டியவர்கள். பாலசந்தர் மற்றும் பாரதிராஜாவின் பெண்கள் அப்படியே இயக்குநர்களின் பெண் வடிவமாகவே அவர்களது ஆளுமையிலிருந்து வந்திருப்பார்கள். பாலு மகேந்திரா, அவரது தனிப்பட்ட வாழ்வில் ஆதிக்கம் செலுத்திய பெண்களின் பாதிப்பிலிருந்து உருவாக்கியிருப்பார். அவரது ஐரோப்பிய தாக்கங்கள் மீதான விமர்சனங்கள் ஓரளவுக்கு ஏற்கும்படி இருப்பினும், அவற்றைக் கடந்து பார்த்தால் அழியாத கோலங்கள், மறுபடியும் முக்கியமான படைப்புகள். பாக்யராஜ் படங்களில் கலவையான தன்மைகள் இருப்பினும், ஓரளவுக்கு மேல் முதன்மைக் கதாபாத்திரங்களை விட அவரது துணைக் கதாபத்திரங்களின் வழியே சாத்தியப்படுத்தி இருப்பார். குறிப்பாக அவரது கிராமத்து சினிமாக்களில்...

மகேந்திரன் எவ்வாறு வேறுபடுகிறார்?

23a.jpg

அனைத்துப் பிரச்சினைகளையும் பெண்களின் வழியாகவே பார்ப்பது, ஒரு பெண்ணின் முகம் எப்படி அதை ரியாக்‌ஷனாக வெளிப்படுத்துகிறது என்பதே மகேந்திரனின் திரைமொழியாக இருக்கிறது. நண்டு திரைப்படத்தில் வடக்கிலிருந்து வரும் கதாநாயகன் தான் தங்கியிருக்கும் மேன்ஷனிலுள்ள பெண்ணின் பிறந்த நாளுக்காகப் பாடும் ‘கைஹ்ச கஹூன் குச் கஹ்னா சஹூன்’ என்ற பாடலின் காட்சியமைப்பை உதாரணமாகச் சொல்லலாம். அப்பாடலின் தொடக்க நிமிடங்களில், அங்கிருக்கும் பெண்கள் அப்பாடலை எப்படி உள்வாங்குகிறார்கள் என்பதை மட்டுமே படம் பிடித்திருப்பார். ஒரு கலை தேர்ந்த ரசிகனால் மட்டுமே நிஜத்தில் மட்டுமே நிகழும் அந்த அபூர்வ தரிசனங்களை சினிமா எனும் மறு உருவாக்கத்தில் சாத்தியப்படுத்த முடியும்.

எப்போதும் கனவுகளைக் கண்களுக்குள் ஒளித்துவைத்துக் கொண்டு குடும்ப அமைப்புக்குள் தங்களை பலியாக்கிக் கொண்டவர்கள் மகேந்திரனின் பெண்கள். இந்தக் குடும்ப அமைப்புக்குள்ளிருக்கும் பந்த வன்முறை, ஜமீன்தார் மனநிலையிலிருக்கும் ஆண்கள், எப்போது வேண்டுமானாலும் பெண்களுக்குப் பறிபோகும் குடும்ப ஸ்தானம் என அன்றாட வாழ்வியலையும் அதனூடே பிரச்சாரமின்றி வெளிப்படும் அரசியலும் பிரமிக்க வைப்பவை. அந்த குடும்ப / சமூக ஏமாற்றத்தை துளிகூட வெளிப்படுத்தாமல் ஒரு ஜென் கழுதை போல அடுத்த நாளை சுமந்து செல்கிறார்கள் மகேந்திரனின் பெண்கள்.

இவரது சினிமாக்களின் வழியாக தொடந்து நம் அம்மாக்களையும், அத்தைகளையும், பக்கத்து வீடுகளில் நாம் சிறு வயதில் பேசத் தயங்கிய ஏங்கிய ‘வாழாவெட்டி’ எனப் பட்டம் சூட்டப்பட்ட அக்காக்களையும் மறுபார்வை பார்க்கலாம். எப்போதாவது சிரித்து விட மாட்டார்களா என நாம் பேராசைப்பட்டு கால்களைச் சுற்றிக்கொண்டிருக்கும்போது எதிர்பாரா நேரத்தில் உதிருமே ஒரு புன்னகை... (சிற்பங்களிலுள்ள அம்பாள் போல்) அந்த அபூர்வ கணங்களை செல்லுலாய்டில் பதிவு செய்த நுட்பமான கலைஞன். சமயங்களில் அந்த சிரிப்பு உங்களின் வாழ்வு மீதான பார்வையை கூட மாற்றலாம்.

உதிரிப் பூக்களில் தாயிழந்த பிள்ளைகள் இரவில் நடந்து சென்று சித்தி வீட்டின் கதவைத் தட்டுகின்றன. இந்த நேரத்தில் வரும் தன் அக்கா பிள்ளைகளை பார்த்து சித்தி என்னவென்று கேட்க, ‘தங்கச்சிக்குப் பசிக்குதாம்’ என்கிறான் சிரித்தபடியே அண்ணன். தங்கை சிரிக்கின்றாள்.. அந்த சிரிப்பு ஏற்படுத்தும் சலனம் எத்தனை கண்ணீராலும் ஒரு பார்வையாளனை அடைந்திருக்காது.

மகேந்திரனின் ‘அம்மா’ என்ற படிமம்!

23b.jpg

தாயிழந்த பிள்ளைகளின் மேல் மகேந்திரன் காட்டும் கம்பேஸன் (compassion) அவ்வளவு மென்மையானது. அவரது முக்கிய படைப்புகளான ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப் பூக்கள்’, ‘ஜானி’, ‘நெஞ்சத்தை கிள்ளாதே’, ‘மெட்டி’ என இதில் வரும் பிரதான பாத்திரங்கள் அம்மாவை பாதியில் இழந்த (‘உதிரிப் பூக்கள்’, ‘மெட்டி’), ஆரம்பத்திலிருந்தே அம்மாவை இழந்து தாய்மைக்காக ஏங்கும் பாத்திரங்கள் (‘ஜானி’, ‘மெட்டி’) . நண்டு படத்தில் லக்னோவிலிருந்து குடும்பத்தைப் பிரிந்து சென்னை செல்லும் மகனை கடைசியாகப் பார்க்க ரயில் நிலையத்துக்கு ஓடி வரும் கதாநாயகனின் அம்மா என தாய் மீதான இவரது சித்திரம் மிக நெருக்கமானது. கொடுமைக்காரக் கணவர்களுக்கு வாக்கப்பட்டு காலமெல்லாம் கண்ணீர் வடிக்கும் அம்மாக்கள் மீது சிறுவயதிலிருந்தே மகேந்திரனுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். உதிரிப் பூக்கள் விஜயனைப் போல ஒரு கண்டிப்பான அப்பா வாழ்ந்த வீட்டு சூழலுக்குள் தான் வளர்ந்ததாக ஒரு பேட்டியில் அவரே கூறியிருக்கிறார். அந்த கெட்ட அப்பா, நல்ல மகன் என்ற இருண்மைக்குள் நம்மால் எளிதாகப் பொருத்திப்பார்க்க முடியும்.

ஜானி படத்தில் வரும் ரஜினியின் அம்மா வீணை வாசிக்க ரஜினி மெய்மறந்து கேட்பதையும், அதே போன்று தன் ஆதர்சமான ஸ்ரீதேவி பியானோ வாசிப்பதை ரசித்துக் கேட்பதையும் ஒரே நேர்கோட்டில் வைத்துப் பார்க்க தோன்றுகிறது. அந்த இசையின் வழியே தாய்மை மீட்டெடுக்கப்படுகிறது, அதன் நீட்சியே ஸ்ரீதேவியுடனான அன்பையும் வளர்க்கிறது. தாய்மையின் வழியே காதலைப் பார்ப்பது மகேந்திரனின் அகப்பார்வையே.

23c.jpg

அதே சமயம் தாய்மையற்ற பெண்ணின் அவஸ்தைகளைக் கூறும் ‘பூட்டாத பூட்டுகள்’, ‘சாசனம்’ என மற்றொரு தளத்திலிருந்தும் பேசியிருப்பார். அவர் வடித்த அம்மா கதாபாத்திரங்கள் கடைப்பிடிக்கும் அமைதி, நம் அமைதியைக் குலைக்கச் செய்யும்.

“மெளனம் என்பது

சும்மா இருப்பதல்ல

அது ஒரு ஸ்தாயி.

குறிப்பிட்ட ஸ்தாயியில்

கற்கள் கூட உடையும்.”

என்ற லா.ச.ராமாமிருதம் வார்த்தைகளிலும் இதைக் கூறலாம்.

மெட்டி திரைப்படத்தில் இரண்டாம் தாரமான சி.ஆர்.ராஜகுமாரியை வயிற்றிலொரு பிள்ளையும் கையிலொரு பிள்ளையுமாக செந்தாமரை அடித்து துரத்த, வேறொரு ஊருக்குச் சென்று மகள்களை வளர்த்து வருகிறாள். ஆனாலும் ஊராரின் நாக்கு யாரை தான் வாழ வைத்திருக்கிறது? கல்யாண வயதான மகள்களின் எதிர்காலத்துக்காக தற்கொலை செய்கிறாள். அம்மாவின் இறப்புக்குப் பின் வடிவுக்கரசி, ஒளி குறைந்த ஓர் அறையின் வாயிலில் சுவரோரம் அமர்ந்து அழுதுகொண்டிருப்பார். Frame within a frameஇல் ஒளியும் இருளும் மாறி மாறி இருக்கும். நடைபாதையில் தங்கை ராதிகா நடந்துவந்து மற்றொரு தூணருகே எதிரில் அமர்வார்.

ராதிகா: வாக்கா சாப்பிடலாம்... அம்மாவ நெனைச்சு இன்னும் எத்தன நாளைக்கு தான் அழுதுக்கிட்டிருக்க முடியும்?

வடிவுக்கரசி: நான் அம்மாவ நெனைச்சு அழலை..

(அதிர்ச்சியில் ராதிகா வடிவுக்கரசியைப் பார்த்து!)

ராதிகா: அப்போ..

வடிவுக்கரசி: அம்மா வாழ்ந்த வாழ்க்கைய நெனச்சு அழறேன்..

இந்தக் காட்சியின் ஒளியமைப்பிலும் வசனத்திலும் அடங்கியுள்ள எளிமையும் உண்மையும்தான் மகேந்திரனின் யதார்த்த சினிமாவை கட்டமைக்கிறது.

23d.jpg

ஆனாலும், எனக்கு சில முரண்பாடுகளுண்டு. பெரும்பான்மையான பெண் கதாபாத்திரங்கள் தங்கள் விதியென தலையெழுத்தைச் சாடி மீண்டும் அதே ஆட்டத்தில் சேர்வதை இக்கால கட்டத்தோடு இணைத்துப் பார்க்கும்போது சிறு மனகசப்பு ஏற்படுகிறது.

மகேந்திரன் தன் சினிமாக்களின் வழியாக நம் குடும்ப அமைப்பை விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறார். மிடில் கிளாஸ் அறத்தைத் தன்னளவில் தளர்த்த எத்தனிக்கிறார். அதன் வேர்களை முடிந்தளவு பெண் கதாபாத்திரங்களின் வழி அசைத்துப் பார்த்து ஒரு முயற்சி செய்கிறார். அது தோல்வியா, வெற்றியா என்ற மெட்டீரியலிஸ்ட் கேள்வி வகையறாவுக்குள் செல்லாமல் இருண்ட தண்ணீருக்குள் மகேந்திரன் வீசிய கல்லின் வீச்சை நாம் இனம் காண வேண்டும்.

80களின் இலக்கியத்தின் தீவிர பாதிப்புகளுக்கு ஆளான மகேந்திரன், இலக்கியத்தின் வழி தன் சினிமாக்களை வடிவமைக்க முயன்றிருக்கிறார். அவரது பெண்கள் மீதான பார்வையில் தமிழ் இலக்கியம் பெருமளவில் ஒளி வீசியிருக்கிறது.

இந்த சினிமாக்களின் வழி பெண்களைப் புரிந்துகொள்வதன் வாயிலாக ஒரு துளி நகர்வும், ஆண்மன கரைதலும் மன்றாடலும் ஏற்பட்டால் அதுவே ஆசானுக்குச் செய்யும் தொடக்க மரியாதை.

 

https://minnambalam.com/k/2019/04/12/23

 

அதிமுகவுக்கு எதிராக ரசிகர்கள்.. அமைதியாக உசுபேற்றும் விசய்..!

6 days 21 hours ago

அதிமுகவினருக்கு எதிராக களமிறங்கும் ரசிகர்கள்..! அமைதியாக இருந்து உசுப்பேற்றும் விசய்..!

vijay_1200x630xt.jpg

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் வெளிப்படையாகவே திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

2011 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் அரசியல் நிலைப்பாடு எடுத்திருந்தார். 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு விஜய் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார்.

2014 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் கோவைக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக சந்தித்து பாஜக கூட்டணிக்கு ஆதரவு என்பதை மறைமுகமாக உணர்த்தியிருந்தார். இதனைப் புரிந்துகொண்டு நடிகர் விஜய்யின் ரசிகர்களும் கடந்த முறை பாஜக கூட்டணிக்கு வாக்களித்தனர்.

ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது நடிகர் விஜய் எவ்வித அரசியல் நிலைப்பாடும் எடுக்கவில்லை. தற்போதைய நாடாளுமன்ற தேர்தலின் போதும் விஜய் அரசியல் குறித்து எதுவும் பேசாமல் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.

ஆனால் அவரது ரசிகர்களும் ஆங்காங்கே அதிமுக கூட்டணிக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர். மதுரை மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் வெங்கடேசனை சந்தித்த விஜய் ரசிகர் மன்றத்தின் மாவட்ட தலைவர் ஆதரவு தெரிவித்தார்.

இதுகுறித்து விசாரித்தபோது வெங்கடேசனின் நண்பர் என்ற முறையில் தான் ஆதரவு தெரிவித்ததாக விஜய் ரசிகர் மன்ற தலைவர் கூறினார். ஆனால் உண்மை வேறு. சர்க்கார் திரைப்படம் வெளியானபோது நடிகர் விஜய்க்கு எதிராக சமூக வலைதளங்களில் அதிமுகவினர் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். 

இதன் பின்னணியில் தற்போதைய மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும் அக்கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளருமான ராஜ் சத்யன் இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இதற்கு பதிலடியாகவே விஜய் ரசிகர்கள் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதேபோல் அரக்கோணம் தொகுதியில் விஜய் ரசிகர்கள் திடீரென திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து களத்தில் இறங்கியுள்ளனர்.

ரசிகர்கள் வெளிப்படையாக திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் நடிகர் விஜயும் சரி அவரது மக்கள் இயக்கத் தலைமையும் சரி அது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வருகிறது. இதற்கு காரணம் நடிகர் விஜயின் அரசியல் நிலைப்பாடு அதிமுகவிற்கு எதிரான தான் என்கிறார்கள். அதனால்தான் ரசிகர்களை வேலை பார்க்க விட்டுவிட்டு விஜய் வேடிக்கை பார்த்ததாகவும் பேசிக் கொள்கிறார்கள்.

https://tamil.asianetnews.com/politics/aiadmk-against-vijay-fans-pptynv

டி.ராஜேந்தரின் மகன் குறளரசன் மதம் மாறியது இதுக்குத்தானாம்.... காதலித்த இஸ்லாமிய பெண்ணை கரம் பிடிக்கிறார்

1 week 3 days ago

டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன், தான் காதலித்த இஸ்லாமியப் பெண்ணை திருமணம் செய்கிறார். இதற்காகத்தான் குறளரசன் சமீபத்தில் தானும் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

 

D3hBDV5U0AAoHDd.jpg

டி.ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன், இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். சிம்பு ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்கினார். 2016-ல் இந்தப் படம் ரிலீஸானது. அதன்பிறகு வேறெந்த படத்துக்கும் இசையமைக்காத குறளரசன், தற்போது ஆல்பம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.


இந்நிலையில், குறளரசனுக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது. தான் காதலித்த இஸ்லாமியப் பெண்ணையே திருமணம் செய்யவுள்ளார் குறளரசன். அதற்காகத்தான் கடந்த பிப்ரவரி 16-ந்தேதி தம் பெற்றோர் டி.ராஜேந்தர் - உஷா முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன். ஆனாலும், குறளரசன் என்ற தன்னுடைய பெயரை மாற்றிக் கொள்ளவில்லை.

மணப்பெண்ணின் பெயர் நபீலா ஆர். அஹமத். பி.காம். முடித்துள்ள நபீலாவின் பெற்றோர் பெயர் ரஃபி அஹமத் - ரெஹ்மத் அஹ்மத் ஆவர். இவர்களுடைய திருமண வரவேற்பு, வருகிற 29-ந் தேதி சென்னை கிண்டியிலுள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது.

இதற்காக . திருமண அழைப்பிதழை விஐபிக்களுக்கு வழங்கும் வேலையில் டி.ராஜேந்தரும் குறளரசனும் மும்முரமாகி உள்ளனர். நேற்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த்தை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்த நிலையில் இன்று நடிகர் ரஜினியைச் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

குறளரசன் திருமணத்தில் அரசியல், திரையுலக பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் டி.ராஜேந்தரின் மூத்தo கனும் குறளரசனின் அண்ணனுமான சிம்புவுக்கு இன்னும் திருமணமாகாத நிலையில் அண்ணனுக்கு முந்தி தம்பிக்கு கண்ணாலம் நடக்க உள்ளது.

https://tamil.thesubeditor.com/news/general/12466-actor-t-rajendars-younger-son-kuralarasan-marry-islamic-girl.html

தமிழ் திரையுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் மகேந்திரன் காலமானார்

2 weeks 3 days ago
தமிழ் திரையுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் மகேந்திரன் காலமானார்
பிரபல தமிழ் திரை இயக்குநர் மகேந்திரன் காலமானார்

மூத்த தமிழ் திரையுலக இயக்குநரும், நடிகருமான மகேந்திரன் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் காலமானார்.

கடந்த சில நாட்களாக அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக‌ அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து அண்மையில் வெளிவந்த 'பேட்ட' திரைப்படத்தில் மகேந்திரன் நடித்திருந்தார். மேலும் தெறி, சீதக்காதி,மிஸ்டர் சந்திரமௌலி போன்ற பல அண்மை திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்.

தமிழ் திரையுலகில் மிகவும் சிலாகிக்கப்பட்ட திரைப்படமான 'உதிரிப்பூக்கள்' திரைப்படம் மகேந்திரன் இயக்கிய சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை உள்பட பல திரைப்படங்களையும் இவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படங்களில் மகேந்திரனின் இயக்கும், ரஜினிகாந்தின் நடிப்பு மற்றும் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவரது மகனான ஜான் மகேந்திரனும் சச்சின் உள்ளிட்ட சில திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-47781942

முதல் பார்வை: சூப்பர் டீலக்ஸ்

2 weeks 6 days ago
 
super-deluxjpgjpg
 

 

சமந்தாவும், அவருடன் கல்லூரியில் படிக்கும் ஒரு பையனும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். ஆனால், பெற்றோர்கள் சம்மதிக்காததால், ஃபஹத் ஃபாசிலுக்கும் சமந்தாவுக்கும் திருமணம் நடைபெற்று விடுகிறது. திடீரென ஒருநாள் பழைய காதலனிடம் இருந்து சமந்தாவுக்கு போன். அவன் கஷ்டத்தில் இருப்பதாகச் சொல்ல, அவனுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தவிக்கும் சமந்தா, வீட்டுக்கு வரச் சொல்கிறார். வந்த இடத்தில் இருவருக்கும் இடையே உடலுறவு நடந்துவிடுகிறது.

சமந்தா இரண்டாவது ஆட்டத்தைத் தொடங்கும்போது, அவன் இறந்துவிடுகிறான். என்ன செய்வதென்று தெரியாமல், அவனை ஃப்ரிட்ஜுக்குள் வைத்துவிடுகிறார் சமந்தா. வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பும் ஃபஹத், ஃப்ரிட்ஜுக்குள் ஒருவன் பிணமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார். ஃபஹத்திடம் சமந்தா உண்மையைச் சொல்லி, தான் போலீஸிடம் சரணடைவதாகக் கூறுகிறார். ஆனால், அதை மறுக்கும் ஃபஹத், பிணத்தை எங்காவது டிஸ்போஸ் செய்துவிட்டு, இருவரும் விவாகரத்து பெற்றுவிடலாம் என்கிறார்.

 

இன்னொரு பக்கம், பள்ளிச் சிறுவர்கள் 5 பேர் சேர்ந்து, பள்ளிக்குச் செல்லாமல் நண்பனின் வீட்டில் ஆபாசப் படம் பார்க்கலாம் என்று முடிவு செய்கின்றனர். படம் தொடங்கும்போது, படத்தில் இருக்கும் நடிகை அந்தச் சிறுவர்களில் ஒருவனின் அம்மா (ரம்யா கிருஷ்ணன்) என்பது தெரிகிறது. கோபமாகும் அந்தச் சிறுவன், டிவியை உடைத்துவிட்டு வீட்டுக்கு ஓடுகிறான். ரம்யா கிருஷ்ணனைக் கொல்வதற்காக ஸ்க்ரூ ட்ரைவருடன் ஓடும் அவன், படியில் கால் தடுக்கி விழ, அந்த ஸ்க்ரூ ட்ரைவர் அவன் வயிற்றிலேயே குத்திவிடுகிறது.

அவனைக் காப்பாற்ற மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், ரம்யா கிருஷ்ணனின் கணவரான மிஷ்கின், ‘கடவுள் பிள்ளையைக் காப்பாற்றுவார்’ என்று சொல்லி, அந்தச் சிறுவனை திருச்சபைக்குத் தூக்கிச் சென்றுவிடுவார். மிஷ்கினிடம் இருந்து சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கும் ரம்யா கிருஷ்ணன், அங்கு கட்ட பணமில்லாமல் பரிதவிப்பார். டிவி உடைந்தது தெரிந்தால் அப்பா அடிப்பார் என டிவிக்குச் சொந்தக்காரச் சிறுவன் அழ, எப்படியாவது புது டிவி வாங்கி மாட்டிவிட வேண்டும் என 3 சிறுவர்களும் சம்பவம் செய்யவும் திருடவும் கிளம்புவார்கள்.

மற்றொரு புறம், மனைவியையும் (காயத்ரி) குழந்தையையும் விட்டுவிட்டு ஓடிப்போன மாணிக்கம் (விஜய் சேதுபதி), 7 வருடங்களுக்குப் பிறகு ஊர் திரும்புவதாகத் தகவல் வரும். மாணிக்கத்துக்காகக் குடும்பமே காத்திருக்க, அவனோ திருநங்கையாக (ஷில்பா) மாறியிருப்பதைக் கண்டு எல்லோரும் அதிர்ச்சியாவார்கள். ஆனால், அவன் குழந்தை மட்டும் அவனிடம் ஒட்டிக் கொள்ளும். தன்னை டெஸ்ட் ட்யூப் பேபி என்று கிண்டல் செய்யும் பள்ளித் தோழர்களிடம், ‘இவர்தான் என் அப்பா’ என்று காண்பிப்பதற்காக விஜய் சேதுபதியை அழைத்துச் செல்வான் குழந்தை. போகிற வழியில் சந்தேகப்பட்டு விஜய் சேதுபதியைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் போலீஸ்.

அங்கு தன் ஆசைக்கு விஜய் சேதுபதியை இணங்க வைப்பார் சப் இன்ஸ்பெக்டரான பக்ஸ். அந்த வலியைத் தாங்கிக்கொண்டு பள்ளி செல்லும் விஜய் சேதுபதியை, அங்கிருக்கும் எல்லோரும் கிண்டல் செய்வார்கள். இதனால், மனம் வெறுத்துப்போகும் விஜய் சேதுபதி மறுபடியும் மும்பை திரும்புவதற்காக டிக்கெட் புக் செய்வார். அதைப் பார்த்துவிடும் குழந்தை, வீட்டுக்குத் திரும்பும் வழியில் காணாமல் போய்விடும்.

மேற்கண்ட 3 முக்கியக் கதைகளும் ஒரு புள்ளியில் இணைவதுதான் ‘சூப்பர் டீலக்ஸ்’.

Superajpg
 

இந்த உலகத்தில் அனைத்துமே ஒன்றுதான். ஆண், பெண், மண், மரம் யாவும் வேறு வேறில்லை. சரியென்றும் தவறென்றும் எதுவுமில்லை. ஒருவருக்கு நன்மையாக இருக்கும் ஒரு விஷயம், மற்றொருவருக்குத் தீமையாக அமையும் என்ற கருத்தை, மிகச்சரியாக, பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு சொன்ன வகையில் இந்தப் படம் வெற்றி பெற்றிருக்கிறது. ஏற்கெனவே சில படங்களில் சொன்ன கருத்தியல்தான் இது என்றாலும், நவீனத்துவமாகச் சொன்ன உத்தியில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா.

படத்துக்கு மிகப்பெரிய பலம், யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை. 3 மணி நேரப் படத்தை, பொறுமையுடன், சுவாரசியமாகக் கொண்டுசெல்ல யுவன்தான் மிக முக்கியமான காரணம். நிசப்தமான காட்சிகளில் கூட, எங்கோ இருந்து ஒரு பாடலையோ, சப்தத்தையோ ஒலிக்கவிட்டு, அந்தக் காட்சியின் இயல்புத்தன்மையை உணர்த்துகிறார்.

தியாகராஜன் குமாரராஜா எழுதிய கதைக்கு மிஷ்கின், நலன் குமாரசாமி, நீலன் கே.சேகர், தியாகராஜன் குமாரராஜா ஆகிய 4 பேரும் சேர்ந்து திரைக்கதை எழுதியுள்ளனர். ஒவ்வொரு காட்சிக்கும் மிகக் கடுமையாக உழைத்து, சின்னச் சின்ன விஷயங்களில் கூட டீட்டெய்ல்ஸ் சேர்த்திருக்கின்றனர்.

விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன், சமந்தா, காயத்ரி, மிஷ்கின், பகவதி பெருமாள், விஜய் சேதுபதியின் குழந்தையாக நடித்திருக்கும் சிறுவன், பள்ளிச் சிறுவர்கள் 5 பேர் தவிர, சின்னச் சின்னக் கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் கூட தங்கள் பங்கை சிறப்பாகச் செய்திருக்கின்றனர். ஒருவர் நன்றாக நடித்திருக்கிறார், இன்னொருவர் சிறப்பாக நடிக்கவில்லை என்று யாரையுமே குற்றம் சொல்ல முடியாத அளவுக்குத் தங்கள் கதாபாத்திரங்களின் நிலை உணர்ந்து நடித்துள்ளனர். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், விஜய் சேதுபதியின் குழந்தையாக நடித்திருக்கும் சிறுவனின் நடிப்பு அபாரம்.

பி.எஸ்.வினோத், நிரவ் ஷா என இருவரின் ஒளிப்பதிவும் கண்களை உறுத்தாவண்ணம், தெளிவாக இருக்கிறது. கல்லூரிக்கால காதலனுடன் சமந்தா உடலுறவு கொள்ளும் காட்சியில், அந்த வீட்டையே கேமரா ஒருமுறை சுற்றிவரும். ஒரு சுற்று முடியும்போது, அவர்களும் முதல் ரவுண்ட் ஆட்டத்தை முடித்திருப்பர். இப்படிக் கவனிக்கிற வைக்கிற நுணுக்கமான காட்சிகள் படத்தில் ஏராளமாக உள்ளன.

Super-Deluxe-Movie-Images-5png
 

படத்தின் நீளம், கொஞ்சம் பொறுமையைச் சோதிக்கிறது. மூன்று கதைகளையும், இது கொஞ்சம், அது கொஞ்சம் எனக் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்வதால், காட்சிகளுக்கு இடையேயான இடைவெளி காரணமாக சில இடங்களில் சுவாரசியம் குறைந்துவிடுகிறது.

ஒரே நாளில் நடக்கும் கதை என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர். அப்படியானால், சப் இன்ஸ்பெக்டரான பகவதி பெருமாள், ஒரே நேரத்தில் சமந்தா - ஃபஹத் ஃபாசிலுடனும், போலீஸ் ஸ்டேஷனில் விஜய் சேதுபதியுடனும் எப்படி இருக்க முடியும்? காலையிலேயே பாஸ்போர்ட் விசாரணையை முடித்துக்கொண்டு போன சப் இன்ஸ்பெக்டர், மறுபடியும் சமந்தா வீட்டுக்கு வருவது ஏன்? ஃபஹத்தையும் சமந்தாவையும் வீடியோ எடுத்துக்கொண்டு பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்கும் சப் இன்ஸ்பெக்டரை, அவர்கள் ஒருமுறை கூட கவனிக்கவில்லையா? போன்ற கேள்விகளுக்கு விடையில்லை.

அதேபோல், கதை நிகழும் காலகட்டம் எது என்பதிலும் தெளிவில்லை. சில காட்சிகளில் பழைய காலகட்டமும், சில காட்சிகளில் புதிய காலகட்டமும் இருப்பதுபோல் தோன்றுகிறது.

கீழ் வீட்டுக்கு விருந்தினர்களாக வந்தவர்கள் தங்கள் வீட்டுக்குள் இருக்கும்போதே, ஃபஹத்தும் சமந்தாவும் பிணத்தை அறுக்க முயற்சிப்பது, அப்புறப்படுத்துவது, பட்டப்பகலிலேயே பெட்டுக்குள் இருக்கும் பிணத்தை வெளியே எடுத்து ஜீப்புக்குள் வைப்பது போன்ற காட்சிகள் நம்பும்படி இல்லை. அதேபோல் பிணத்தை ஜீப்பில் வைத்துக்கொண்டு அவர்கள் இருவரும் கேஷுவலாக இருக்கும் காட்சிகளும் உறுத்துகின்றன.

அதேசமயம், தான் கல்லூரிக்காலக் காதலனிடம் உடலுறவு கொண்டதைக் கணவனிடம் சமந்தா சொல்வதும், அதை ஏற்றுக்கொள்ளக் கஷ்டமாக இருந்தாலும், மனைவி சிக்கலில் மாட்டிக்கொள்ளக்கூடாது என்று பிணத்தை டிஸ்போஸ் செய்தபின் விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்யும் ஃபஹத்தும், நவீனகால மேல்வர்க்கத்து இளைஞர்களின் மனநிலையை வெளிப்படுத்துகின்றனர்.

‘ஒருநாள் தாலியைக் கட்டிட்டு தினம் தினம் என் தாலிய அறுக்குறான்’, ‘ஆண்டவன் செருப்பை மாத்திப் படைச்சுட்டான்’, ‘நீ ஆம்பளையாவோ, பொம்பளையாவோ இரு. ஆனா, எங்க கூடவே இரு’, ‘லட்சம் பேரு படம் பார்க்க இருக்கும்போது, நாலு பேரு அதுல நடிக்கவும் இருப்பாங்க’ என்பது போன்ற வசனங்கள் கைதட்ட வைக்கின்றன.

எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக்கொள்ளப் பழகிவிட்டால், வாழ்க்கையை வாழலாம் என்று புத்தியில் உறைக்கிற மாதிரி சொல்லியிருக்கிறது ‘சூப்பர் டீலக்ஸ்’.

https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article26676463.ece?utm_source=HP&utm_medium=hp-cinema

நடிகை நமீதா காரில், பறக்கும் படையினர் அதிரடி சோதனை.. நடுரோட்டில் கடும் வாக்குவாதம்

3 weeks ago
Bildergebnis für நமà¯à®¤à®¾ நடிகை நமீதா காரில், பறக்கும் படையினர் அதிரடி சோதனை.. நடுரோட்டில் கடும் வாக்குவாதம்

கணவருடன் ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்ற நடிகை நமீதாவின் காரை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதிமுக கட்சியில் இணைந்த நடிகை நமீதா, கடந்த தேர்தலின்போது நட்சத்திர பேச்சாளராக வாக்கு சேகரித்தார். ஆனால், நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு யாருக்கும் ஆதரவு இல்லை என ஒதுங்கி உள்ளார்.

இந்த நிலையில், அவரின் காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், நடுரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க சேலம் மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சேலம் புலிகுத்தி தெரு பகுதியில் பறக்கும் படை அலுவலர் ஆனந்த யுவனேஸ் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்

அப்போது, அந்த வழியாக வந்த சொகுசு காரை சோதனை செய்வதற்காக அதிகாரிகள் நிறுத்தினர். அந்த காரில் நடிகை நமீதா மற்றும் அவருடைய கணவர் உட்பட 4 பேர் இருந்தனர். இதனையடுத்து, அந்த காரை சோதனை செய்ய அதிகாரிகள் முயன்றனர். இதற்கு நமீதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் நடுரோட்டில் வாக்குவாதம் ஏற்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தான், வாகன சோதனை நடத்தப்பட்டு வருவதாக அவர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, நமீதாவின் காரில் சோதனை நடத்தப்பட்டது. நமீதா வைத்திருந்த பையை பெண் போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது, அவர்களிடம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம், நகை எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இதனை அடுத்து பறக்கும் படையினர் அந்த காரை செல்ல அனுமதித்தனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/salem/loksabha-elections-2019-elections-flying-squad-checked-in-actress-namitha-car/articlecontent-pf363437-345263.html?c=hweather

ஐரா: முதல் பார்வை

3 weeks ago
 
 
nayanjpgjpg
 

பேய் இருப்பது போன்று வீடியோக்களை எடுத்து மக்களை ஏமாற்றி யூ டியூபில் காசு பார்க்கும் நயன்தாரா, நிஜமாகவே பேயிடம் சிக்கினால்..?

மீடியாவில் வேலை பார்க்கும் யமுனாவுக்கு, பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கின்றனர். யூ டியூப் ஆரம்பிக்கலாம் என்ற அவரது ஐடியாவை, அலுவலகத்தில் ஏற்க மறுக்கின்றனர். இதனால் வெறுத்துப்போய் பொள்ளாச்சியில் இருக்கும் தன் பாட்டி வீட்டுக்குப் போகிறார் யமுனா.

 

பாட்டி வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில், தன் நிழலைப் பார்த்து தானே பயப்படும் யமுனாவுக்கு, இதையே வீடியோவாக்கி காசு பார்க்கலாம் என்ற ஐடியா தோன்றுகிறது. அதன்படி தன் பாட்டி மற்றும் யோகி பாபுவுடன் பேய் வீடியோ எடுத்து யூ டியூபில் பிரபலமாகிறார் யமுனா.

ஒருநாள் நிஜமாகவே பேய்வந்து யமுனாவைத் துன்புறுத்த, அதிர்ச்சியாகிறார்.

இன்னொரு பக்கம், சென்னையில் வசிக்கும் அமுதனைச் சுற்றி மர்ம மரணங்கள் நிகழ்கின்றன. அவர் சம்பந்தப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் ஒவ்வொருவராக இறக்கின்றனர். அதற்கான காரணம் புரியாமல் பரிதவிக்கிறார் அமுதன்.

இரண்டு சம்பவங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை எனத் தெரியவரும்போது, ஃப்ளாஷ்பேக் விரிகிறது. மர்ம மரணங்களுக்கும் யமுனாவுக்கும் என்ன சம்பந்தம்? யமுனாவைப் பேய் துரத்துவது ஏன்? பேயிடம் இருந்து யமுனா தப்பித்தாரா, இல்லையா? ஆகிய கேள்விகளுக்கு விடை சொல்கிறது இரண்டாம் பாதி திரைக்கதை.

யமுனா, பவானி என முதன்முதலாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் நயன்தாரா. ஸ்டைலிஷ் சிட்டி கேர்ள் யமுனா, கிராமத்துக் கருப்பழகி பவானி என இரண்டு கதாபாத்திரங்களுக்கும் நிறையவே வித்தியாசம் காட்டியுள்ளார் நயன்தாரா. அதுவும் அந்தக் கிராமத்துக் கருப்பழகி பவானி, துடைத்துவைத்த குத்துவிளக்கு போல் ‘பளிச்’சென இருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்துக்காக விதவிதமான உணர்ச்சிகளை வெளிக்காட்டி, தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறார். குறிப்பாக, அவரைப் பெண் பார்க்கும் படலத்தில் நயன்தாரா வெட்கப்படும் இடங்கள் கொள்ளை அழகு.

airaa-nayanjpg
 

படம் முழுக்க நயன்தாராவே நிறைந்திருக்க, கிடைத்த கேப்பில் ஸ்கோர் செய்துள்ளார் கலையரசன். அவரின் பாத்திரப்படைப்பு கச்சிதமாக இருந்தாலும், இன்னும் கொஞ்சம் அவருக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. ‘கோலமாவு கோகிலா’ வெற்றி சென்டிமென்டால் யோகி பாபுவுக்கு நான்கைந்து காட்சிகளைப் புகுத்தியுள்ளனர். ஆனால், சிரிப்பே வரவில்லை. நயன்தாராவின் பாட்டியாக நடித்திருக்கும் குலப்புள்ளி லீலா, அப்பா ஜெயப்பிரகாஷ், அம்மா மீரா கிருஷ்ணன் ஆகியோர் சில காட்சிகளில் வந்து போயுள்ளனர்.

திரைக்கதையின் சொதப்பல், படத்துக்கு மிகப்பெரிய பலவீனம். படத்தின் இடைவேளையில்தான் கதைக்குள்ளேயே செல்கிறார்கள். அதற்குள் பார்வையாளர்களில் பாதி பேர் தூங்கி விடுகின்றனர். ஏகப்பட்ட லாஜிக் சொதப்பல்கள். நயன்தாரா பிறந்ததும், ஊரைக்கூட்டி சாப்பாடு போட்டு, நயனின் பெற்றோர் அவரைத் தூக்கிக்கொண்டு சென்னைக்குக் கிளம்பி விடுகின்றனர். அப்போதுதான் நயனைக் கடைசியாகப் பார்த்தேன் என பாட்டி கூறுகிறார். ஆனால், சில வருடங்கள் வளர்ந்த பிறகும்கூட தன் பெற்றோருடன் பாட்டி வீட்டில் நயன் இருக்கும் காட்சிகளும் காண்பிக்கப்படுகின்றன.

அதேபோல், ஃப்ளாஷ்பேக் ஆரம்பித்தால், முழுவதுமாக அதைச் சொல்லி முடித்துவிட்டு, அதன்பிறகு நிகழ்கால கதைக்குள் வரலாம். ஆனால், ஃப்ளாஷ்பேக் கொஞ்சம், நிகழ்காலம் கொஞ்சம் என மாற்றி மாற்றிப் பயணிப்பது, படம் பார்ப்பவர்களுக்கு அயற்சியை உண்டாக்குகிறது.

இரவில்தான் பேய் வரும் என்ற ஆதிகாலத்து மரபை இன்னும் பின்பற்றுவதும், அதற்கு ஏற்றதுபோல் எல்லாக் காட்சிகளும் இரவில் நடப்பதாக அமைத்திருப்பதும் போரடிக்கிறது. சும்மா சும்மா பட்டாம்பூச்சியைப் பறக்கவிட்டு வெறுப்பேற்றும்போது, ‘முதல்ல அந்த பட்டாம்பூச்சிய கொல்லுங்கடா’ என்ற குரல்கள் தியேட்டரில் ஒலிக்கின்றன.

airaa-nayanthara-1jpgjpg
 

சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவு, பொள்ளாச்சியின் அழகை அதிஅற்புதமாகப் படம்பிடித்திருக்கிறது. ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தியும் போட்டிபோட்டு இருளின் திகிலை நமக்குள் கடத்த முயற்சி செய்துள்ளனர். பொள்ளாச்சியைக் காண்பிக்கும்போது ஒவ்வொரு முறையும் காற்றாலை, வயல்வெளி என்று இழுப்பதைக் கத்தரித்திருக்கலாம்.

வழக்கமான பேய் பழிவாங்கும் கதை, அதன் முடிவு எப்படியிருக்கும் என்று தெரிந்த கதையில், எதற்காகக் பழிவாங்கத் துடிக்கிறது என்பது மட்டுமே சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால், சுவாரஸ்யம் தெரிய வரும்போது, ‘இதுக்கெல்லாமா பேய் பழிவாங்கும்?’ என்று உப்புச் சப்பில்லாமல் போகிறது. ஒருவேளை அந்த விஷயம் நடந்திருந்தால், அடுத்தடுத்து மகிழ்ச்சியான தருணங்கள் அமைந்திருக்கும் என்று காண்பித்தாலும், மனது ஏனோ இந்தப் பழிவாங்கலை ஏற்றுக் கொள்ளவில்லை.

பலம் பொருந்திய ‘ஐராவதம்’ யானையின் பெயரில் இருந்து இந்தப் படத்துக்கு ‘ஐரா’ எனத் தலைப்பு வைத்திருப்பதாகக் காரணம் சொன்னார் இயக்குநர் கே.எம்.சர்ஜுன். நயன்தாரா எனும் வெற்றி யானைக்கு, இந்தப் படத்தில் அடி சறுக்கியிருக்கிறது.

https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article26664798.ece?utm_source=HP&utm_medium=hp-cinema

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் மகேந்திரன் கவலைக்கிடம்

3 weeks 1 day ago

'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1978-ம் ஆண்டு ‘முள்ளும் மலரும்’ படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் மகேந்திரன். அதனைத் தொடர்ந்து 'உதிரிப்பூக்கள்', 'ஜானி', 'நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'கை கொடுக்கும் கை' என பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்.

 

முன்னதாக, 'சபாஷ் தம்பி', 'நிறைகுடம்', 'கங்கா', 'திருடி' உள்ளிட்ட சில படங்களுக்கு கதையும் எழுதியுள்ளார். கதையாக எழுதி கிடைத்த வரவேற்பைவிட, இயக்குநராக அவருக்குக் கிடைத்த இடம் மிகவும் பெரியது. 2006-ம் ஆண்டு வெளியான 'சாசனம்' என்ற படம்தான் மகேந்திரன் இயக்கிய கடைசிப் படமாகும். இதில் அரவிந்த் சாமி, கெளதமி, ரஞ்சிதா உள்ளிட்ட பலர் நடித்தனர்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த 'தெறி' படத்தின் மூலம் நடிக்கவும் தொடங்கினார் மகேந்திரன். அதனைத் தொடர்ந்து 'நிமிர்', 'Mr. சந்திரமெளலி', 'சீதக்காதி', 'பேட்ட' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது கரு.பழனியப்பன் இயக்கிவரும் 'புகழேந்தி எனும் நான்' படத்தில், அருள்நிதியுடன் நடித்து வருகிறார்.

இயக்குநர் மகேந்திரனுக்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே மிகவும் உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனைத் தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. வயது அதிகமாகிவிட்டதால், டயாலிசிஸ் சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை.

இன்று (மார்ச் 27), அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் பூரண நலம் பெறவேண்டும் என்று திரையுலகினர் தெரிவித்து வருகின்றனர்.

https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article26654354.ece?utm_source=HP&utm_medium=hp-cinema

கமலால் அவ்வளவு பெரிய அசிங்கத்திற்கு ஆளான டைரக்டர் ஷங்கர் .. !

3 weeks 2 days ago

கமலால் அவ்வளவு பெரிய அசிங்கத்துக்கு ஆளான டைரக்டர் ஷங்கர்....!

Indain-2_1200x630xt.jpg

இந்தியன் 2’ என்ற படத்துக்கு பெரிய தொகையாக அட்வான்ஸ் வாங்கியிருக்கிறோம். அப்படம் துவங்கி ஒரு வார கால படப்பிடிப்பு கூட நடக்காமல் அந்தரத்தில் நிற்கிறது என்கிற எண்ணம் துளியும் இல்லாமல் அரசியலில் கமல் முழு மூச்சில் இயங்கிக்கொண்டிருக்க, பட இயக்குநர் ஷங்கரோ கமலால் தொடர்ந்து சில அவமானங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்.

ஷங்கர் இயக்கத்தில். கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும்  ’இந்தியன் 2’ கடந்த ஜனவரி 18,  படப்பிடிப்பு சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கி ஒருவார கால படப்பிடிப்புக்குப் பின்னர் நொண்டியடிக்க ஆரம்பித்தது. அப்போது எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்ததபோது கமலின் ஒப்பனை பொருத்தமில்லாமல் இருந்ததாகவும்  அதனால் அதைச் சரி செய்து படப்பிடிப்பு தொடங்கும் என்றார்கள். அதன்பின் கமல் அரசியல் வேலைகளில் ஈடுபட்டதால் படப்பிடிப்பு தாமதம் என்றார்கள்.

இந்தக் காரணங்கள் ஓரளவே  உண்மை என்றாலும் இதைத் தாண்டி ஒரு பெரிய விசயம் நடந்திருக்கிறது.

படப்பிடிப்பு தொடங்கியவுடன் நிறுத்தியதோடு, கமலின் ஒப்பனை உட்பட கூடுதலாக செலவு பிடிக்கும் சில விசயங்களை செய்ய வேண்டும் என்று இயக்குநர் ஷங்கர் கேட்டவுடன் கடுப்பாகிவிட்டதாம் தயாரிப்பு நிறுவனம். அத்தோடு கமல் வரும் வரை காத்திருக்காமல் அடுத்த படத்தில் நடிக்கச்செல்லும் மற்ற நடிகர்களை புதிதாக ஒப்பந்தம் செய்யவேண்டியிருக்கும் என்றும் ஷங்கர் தரப்பில் சொல்லப்பட்டதாம். இது அந்நிறுவனத்தை இன்னும் எரிச்சலுக்குள்ளாக்கியது.

உடனே சுதாரித்துக்கொண்ட லைகா நிறுவனம் , இவ்வளவு தொகைக்குள் இந்தப்படத்தை எடுத்து முடிப்பேன் அதற்கு மேல் செலவானால் அதற்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று ஒரு ஒப்பந்தம் தயாரித்து ஷங்கரிடம் கொடுத்துவிட்டார்களாம். இதில் கையெழுத்துப் போட்டால் படப்பிடிப்பை நடத்துவோம் இல்லையென்றால் இப்படியே போய்விடலாம் என்று சொல்லிவிட்டார்களாம்.

அதிர்ந்து போன ஷங்கர் சில நாட்கள் யோசனைக்குப் பிறகு அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டாராம். இதுவரை 13 படங்கள் வரை  எந்த தயாரிப்பாளருக்கும் பட்ஜெட் சொல்லாமல் இஷ்டத்துக்கு எடுத்து வந்த ஷங்கர் கமல் செய்யும் குளறுபடிகளால்  14 ஆவது படத்தில் இப்படி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடும் நிலைக்கு ஆளாகிவிட்டார் என்கிறார்கள்.

https://tamil.asianetnews.com/cinema/kamal-v-s-director-shankar-pp0em1

டிஸ்கி :

லைட்டாக ஆப்பு வச்ச லைக்காவுக்கு வாழ்த்துக்கள் ..💐 

"வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு..! " 😎

ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் ஷூட்டிங்: ஏப்ரல் 10-ம் தேதி தொடக்கம்

3 weeks 2 days ago
  •  
 
Rajinikanth-nayantharajpgjpg
 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் ஷூட்டிங், ஏப்ரல் 10-ம் தேதி தொடங்குகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘சர்கார்’. விஜய் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்தார். வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.

 

‘சர்கார்’ படத்துக்குப் பிறகு, ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படம் அரசியல் சம்பந்தப்பட்டது எனவும், அதற்கு ‘நாற்காலி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், அதை ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்துள்ளார்.

இதுவரை படத்தின் முன்தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்த படக்குழு, தற்போது படப்பிடிப்புக்குத் தயாராகிவிட்டது. வருகிற ஏப்ரல் 10-ம் தேதி, மும்பையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏற்கெனவே வெளியான ‘துப்பாக்கி’ படம், மும்பையை கதைக்களமாகக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ‘பேட்ட’ படத்துக்கு இசையமைத்த அனிருத், இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article26645223.ece?utm_source=HP&utm_medium=hp-cinema

நயன்தாரா குறித்த அவதூறு பேச்சு: ராதாரவியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது தி.மு.க

3 weeks 3 days ago
 
நயன்தாரா

திரைப்பட நடிகைகள் குறித்து அவதூறாகக் கருத்துக்களை வெளியிட்ட நடிகர் ராதாரவியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது தி.மு.க.

இது தொடர்பாக தி.மு.கவின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடிகர் ராதாரவி தங்கள் கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டுவருவதாகக் கூறி, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவர் தற்காலிகமாக நீக்கிவைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

ராதா ரவிபடத்தின் காப்புரிமை Getty Images Image caption ராதா ரவி

இந்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், "பெண்ணுரிமையை முன்னிறுத்தும் தி.மு.கவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்.

நயன்தாரா நடித்த கொலையுதிர்காலம் என்ற படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நயன்தாரா உள்பட படத்தின் கலைஞர்கள் அனைவரும் பங்கு பெற்றனர். இதில் நடிகர் ராதாரவியும் கலந்துகொண்டார்.

Nayanthara kolaiyuthir kaalam

அவர் பேசும்போது, "நயன்தாராவைப் பற்றி வராத செய்தியில்லை. அதையெல்லாம் தாண்டி நிற்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் இதையெல்லாம் நான்கு நாட்களுக்குத்தான் ஞாபகம் வைத்திருப்பார்கள். பிறகு விட்டுவிடுவார்கள். நயன்தாரா பேயாவும் நடிக்கிறாங்க. அந்தப் பக்கம் சீதாவாவும் நடிக்கிறாங்க. முன்னாடியெல்லாம் சாமி வேஷம் போடனும்னா கே.ஆர். விஜயாம்மாவைத் தேடுவாங்க. இப்ப அப்படியில்ல. யார் வேணும்னாலும் போடலாம் சாமி வேஷம். பார்த்தவுடனே கும்புடுறவங்களையும் போடலாம். பார்த்தவுடனே கூப்புடுறவங்களையும் போடலாம். இப்ப அப்படி ஆயிடுச்சு" என்று கூறினார்.

மேலும், "நியாயப்படி பார்த்தால் பேயை நேரே கூட்டிவந்தால் அது நயன்தாராவைப் பார்த்து பயந்து ஓடிவிடும். அப்புறம் அக்ரிமென்ட் போடும்போதே, ஹீரோவோ, வில்லனோ தொடுவாங்க.. நடவடிக்கை எடுக்கக்கூடாதுன்னு கையெழுத்து வாங்கிக்க.." என்றும் "ஒரே நேரத்தில ஒரு பொண்ணைக் கெடுத்தா அது சின்னப் படம். ஒரே நேரத்தில பொள்ளாச்சி மாதிரி 4 பேரக் கெடுத்தா அது பெரிய படம். எல்லாம் பெருசு பெருசாக் காட்டனும்.. நிறையக் காட்டனும்" என்றும் தொடர்ச்சியாக பேசினார் ராதாரவி.

அவரது இந்தப் பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அவரது இந்தப் பேச்சை கீழே அமர்ந்திருப்பவர்கள் கைதட்டி ரசிக்கும் சத்தமும் இந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. ராதாரவியின் பேச்சு சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனத்திற்கு உள்ளானது.

Chinmayi

சின்மயி, சித்தார்த், டாப்ஸீ உள்ளிட்டவர்கள் ராதாரவியின் இந்தப் பேச்சுக்குக் கடும் கண்டணம் தெரிவித்தனர். இந்த நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலினையும் அக்கட்சியின் மகளிரணித் தலைவர் கனிமொழியையும் குறிப்பிட்டு, தனது வருத்தத்தைப் பதிவுசெய்ததோடு, நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரியிருந்தார். "மரியாதைக்குரிய இரு தலைவர்களும் பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் விவகாரத்திற்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்திருந்தீர்கள். ஆணாதிக்கவாதியும் பாலியல்மேலாதிக்கவாதியுமான ராதாரவி மேல் நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? தயவுசெய்து நடவடிக்கை எடுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

நயன்தாராபடத்தின் காப்புரிமை Vignesh Shivan

2017ஆம் ஆண்டில் ராதாரவி ஒரு கூட்டத்தில் பேசும்போது சிறப்புத் திறன் படைத்த குழந்தைகள் குறித்து கேலி செய்து மிக மோசமாகப் பேசியது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

நடிகர் ராதாரவி தற்போது தமிழ்நாடு டப்பிங் யூனியனின் தலைவராக செயல்பட்டுவருகிறார்.

இதனிடையே, தாமே திமுக-வில் இருந்து விலகிக்கொள்வதாக கூறிய ராதாரவி, தன் பேச்சுக்கு நயன்தாராவிடமும், விக்னேஷ்சிவனிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்

இந்த விவகாரம் தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் நாசர் ராதாரவிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "இந்த மேடையில் மட்டுமல்ல, பல காலங்களாக தங்களுடைய இணையதள நேர்காணல்களிலும் பொது மேடைகளிலும் திரைப்பட விழாக்களிலும் இதுபோல இரட்டை அர்த்த வசனங்களையும், பெண்களைக் கொச்சைப்படுத்திப் பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள்.

இது ஒட்டுமொத்தத் திரைத்துறைக்கும் மற்ற நடிகர்களுக்கும் அதில் பங்காற்றக்கூடிய பெண்களுக்கும் ஒரு அவமானமான சூழ்நிலையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தித்தருகிறது என்பதை ஏன் உணரவில்லை? இதுபோன்ற செயல்களில் நீங்கள் தொடர்ந்து ஈடுபடுவீர்கள் என்றால் தென்னிந்திய நடிகர் சங்கம் திரைத்துறையில் தங்களுக்கு தொழில் ஒத்துழைப்பு தருவது பற்றி தீவிரமாக முடிவுசெய்ய வேண்டியிருக்கும்" என கூறியிருக்கிறார்.

https://www.bbc.com/tamil/india-47690405

மீண்டும் திரைப்பட பாடல்களை எழுதுவதற்கு தயாராகிவிட்டேன்- வைரமுத்து அறிவிப்பு

4 weeks ago
மீண்டும் திரைப்பட பாடல்களை எழுதுவதற்கு தயாராகிவிட்டேன்- வைரமுத்து அறிவிப்பு

கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக, இருபதிற்கும் மேற்பட்ட தமிழ் இலக்கிய ஆளுமைகளைப் பற்றி தமிழாற்றுப்படை கட்டுரைகளை படைத்து முடித்து விட்டேன். தற்பொழுது மீண்டும் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காகவும்,  கவிதை எழுதுவதற்கும் காத்திருக்கிறேன். இளம் இயக்குநர்களும், இளம் இசையமைப்பாளர்களும் என்னை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். 

அண்மையில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற ‘நெடுநல்வாடை’ படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இதன் போது, விழாவில் சிறப்பு அதிதியாக பங்கு பற்றிய வைரமுத்து தெரிவிக்கையில்,

image_cinema_21319.jpg

“நெடுநல்வாடை’ என்ற இந்த படத்தின் தலைப்பிற்காகவே இயக்குனருக்கு தமிழ் இலக்கிய உலகம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு மொழி பேசும் போதும், புழங்கும் போது தான் உயிர்ப்புடன் இருக்கிறது. அந்த வகையில் 2000 ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட நெடுநல்வாடையை இன்றைய டிஜிற்றல் யுகத்தில் ஒரு திரைப்படத்திற்கு தலைப்பாக்கி அதனை மீண்டும் உயிருள்ளதாக ஆக்கியதற்காக இயக்குனருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் கி ராஜநாராயணன் போலவோ, ஜெயகாந்தன் போலவோ, புதுமைப்பித்தன் போலவோ, தி ஜானகிராமன் போலவோ முழுநேர நாவலாசிரியரோ அல்லது சிறுகதை ஆசிரியனும் அல்ல. அடிப்படையில் நான் ஒரு கவிஞன். பாட்டு எழுதுவதில் சுகம் காண்பவன்.  பாடல் எழுதுவதில் இலாபம் காண்பவன்.

தமிழ் திரைப்பட பாடல்கள் சற்று தொய்வடைந்து இருப்பதாக நான் கருதுகிறேன். ஒரு படத்தில் இடம்பெறும் பாடல்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டிருக்கிறது .எண்ணிக்கை குறைந்தாலும் பரவாயில்லை எண்ணங்கள் குறையாத பாடல்கள் வேண்டுமே என்பதுதான் என் போன்ற தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. திரைப்படப் பாடல்கள், தமிழர்களுக்கு கவிதை செய்யும் வேலையை மாறுவேடமிட்டு செய்து கொண்டிருக்கிறது.

தமிழாற்றுப்படை யை நான் இன்றுடன் நிறைவு செய்து இருக்கிறேன். தொல்காப்பியர், கபிலர், அவ்வையார், இளங்கோ, கம்பர், திருவள்ளுவர், ஆண்டாள் ,அப்பர், திருமூலர், வள்ளலார், பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், ஜெயகாந்தன், அப்துல் ரகுமான், அண்ணா என இந்த வரிசையில் கடைசியாக பெரியாரை பற்றி தமிழாற்றுப்படை கட்டுரையுடன் நிறைவு செய்கிறேன்.

பெரியாரை பற்றிய தமிழாற்றுப்படை, மே மாதம் 5ஆம் திகதி திருச்சியில் அரங்கேற்றுகிறேன். அத்துடன் தமிழாற்றுப்படையின் ஒரு பெரும் பணி தற்காலிகமாக நிறைவடைகிறது. இது நூலாக ஜூலை 12ஆம் திகதி அன்று வெளியாகிறது. இனி முழுக்க தமிழ் திரையுலகில் பாடல்களை எழுதுவதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன். எம்மை தயாராக் வைத்துக் கொண்டிருக்கிறேன். இளம் இயக்குனர்கள் இளம் படைப்பாளிகள் இளம் இசையமைப்பாளர்கள் என்னை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.

 

http://www.virakesari.lk/article/52374

முதல் பார்வை: இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

1 month ago
முதல் பார்வை: இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்
உதிரன்சென்னை
ispade-rajavum-idhaya-raniyum-15JPGjpg

அளவுக்கு அதிகமாக நேசித்த காதலியை விட்டு காதலன் விலக நேர்ந்தால் அதுவே 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்'.

முரட்டுத்தனமும் முன்கோபமும் கொண்ட இளைஞன் கௌதம் ( ஹரிஷ் கல்யாண்). ஃபேஷன் டிஸைனிங் படிக்கும் கல்லூரி மாணவி தாரா (ஷில்பா மஞ்சுநாத்). தமிழ் சினிமாவின் எழுதப்படாத 555-வது விதிப்படி இவர்கள் இருவரின் முதல் சந்திப்பு மோதலில் முடிய, அடுத்தடுத்த சந்திப்புகள் நட்பாகவும் காதலாகவும் மலர்கிறது. ]

அம்மாவின் பிரிவை ஹரிஷ் கல்யாணால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த ஏக்கத்துடனும் காயத்துடனும் வாழும் ஹரிஷ், காதலி ஷில்பா எந்த சமயத்திலும் தன்னை விட்டு விலகிப் போய்விடுவாரோ என்று அஞ்சுகிறார். அதனால் ஏற்படும் பதற்றத்திலும் சோகத்திலும் விரக்தியிலும் ஒவ்வாத சில செயல்களில் ஈடுபடுகிறார். இதனால் ஷில்பா காயப்படுகிறார். இந்த சூழலில் ஷில்பாவுக்கு வேறு ஒருவருடன் திருமண  ஏற்பாடு நடக்கிறது.

தன்னைத் தொடர்ந்து காயப்படுத்தும் காதலனை ஷில்பாவால் ஏற்க முடிந்ததா,  பெற்றோர் நலனுக்காக அவர்கள் பார்த்து வைத்த மாப்பிள்ளையைக் கரம் பிடிக்கிறாரா, காதல் பிரிவில் வாடும் ஹரிஷ் கல்யாண் என்ன ஆகிறார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

'புரியாத புதிர்' மூலம் இயக்குநரான ரஞ்ஜித் ஜெயக்கொடியின் அடுத்த படம் இது. காதலும் காதல் நிமித்தமுமாக ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார். ஆனால், இதற்கு எதற்கு இரண்டரை மணி நேரம் தேவைப்பட்டது என்பதுதான் புரியாத புதிர்.

'பொறியாளன்', 'வில் அம்பு', 'பியார் பிரேமா காதல்' படங்களின் மூலம் அழுத்தமாகத் தடம் பதித்த ஹரிஷ் கல்யாண் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தின் ஆரம்பக் காட்சிகளில் வெகுவாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார். எந்த பிரச்சினையென்றாலும் தனி நபராக எதிர்கொள்வது, யாருக்கும் கட்டுப்படாமல் இருப்பது, நண்பர்கள் தீர்க்க முடியாத பிரச்சினைகளை சில நிமிடங்களில் தீர்த்து ஆபத்பாந்தவனாகக் காப்பாற்றுவது என கெத்தான இளைஞராக வலம் வருகிறார். ஹரிஷ் காதலில் விழுந்த பிறகு அவரின் வேறு ஒரு பரிணாமத்தைப் பார்க்க முடிகிறது. ஆனால், அது சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

மிகச்சிறந்த காதலனாக தன்னை நிறுவ வேண்டிய இடங்களில் எல்லாம் சம்பந்தமில்லாமல் கோபத்தில் வெடிக்கும் இளைஞராகவும், ஆவேசத்தில் ஈகோவில் அடுக்கடுக்கான தவறுகளைச் செய்பவராகவும் இருக்கிறார். கதாபாத்திரக் கட்டமைப்பில் இயக்குநர் சறுக்கியிருந்தாலும் நடிப்பிலும் ஹரிஷ் தனித்தடம் பதிப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போகிறது.

கள்ளம் கபடமற்ற தூய்மையான காதலியின் மனநிலையை, குணத்தை ஷில்பா மஞ்சுநாத் அப்படியே பிரதிபலிக்கிறார்.  புரியாமல் பேசும் ஹரிஷ் கல்யாணை அவர் எதிர்கொள்ளும் விதம் பக்குவமானது. காதலனின் நிலை தெரிந்த பிறகும் அவனுக்காக எல்லை தாண்டிய தேடலில் ஈடுபடுவது அவருக்கும் அவர் நடிப்புக்கும் வலு சேர்க்கிறது.

மாகாபா ஆனந்தும், பால சரவணனும் உச்சகட்ட அலுப்பை வரவழைக்கிறார்கள். பொன்வண்ணன், சுரேஷ் ஆகிய சீனியர் நடிகர்கள் இருந்தும் அவர்களுக்குப் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. மாகாபா ஆனந்தின் காதலியாகவும், மஞ்சுநாத்தின் தோழியாகவும் திவ்யா நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். 

கவின்ராஜ் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ். இசையும் படத்துக்குப் பலம். கண்ணம்மா பாடல் மட்டும் கவனிக்க வைக்கிறது. பவன்ஸ்ரீகுமார் கத்தரி போடுவதில் இன்னும் கண்டிப்பு காட்டியிருக்கலாம்.

ராஜன் ராதாமணாளன், ரஞ்ஜித் ஜெயக்கொடி ஆகிய இருவரும் இணைந்து வசனங்களை எழுதியுள்ளனர். காதலின் மகத்துவம் குறித்தோ அதன் ஆழம் குறித்தோ வசனங்கள் எந்தவிதத்திலும் ஈர்ப்புடன் இல்லை.

அம்மா பிரிந்துபோனதற்கான காரணம் தெரிந்த பிறகும் பால்ய காலத்தில் தொலைத்த மகிழ்ச்சிக்காக ஹரிஷ் கல்யாண் வருத்தப்படுவதில் நியாயம் இருக்கிறது. ஆனால், வளர்ந்த பிறகும் அவர் பக்குவமின்மையால் தொடர்ந்து செயல்படுவது ஏன் என்பது புரியவில்லை.

காதலியின் பிரிவுக்கான சமிக்ஞைகள் எதுவும் தெரியாத நிலையில் உடனுக்குடன் ஹரிஷ் கல்யாண் எதிர்வினை ஆற்றுவது, பதிவுத் திருமணம் செய்துகொள்ளத் துடிப்பது, வீட்டுக்குள் கல்லெறிந்து கலாட்டா செய்வது என வினோதமாகச் செயல்படுவது திரைக்கதைக்குப் பாதகமான அம்சங்கள்.

பிரிவதற்கான எந்தப் புள்ளியும் இல்லாத போது ஹரிஷின் நடவடிக்கைகளே பிரிவுக்குக் காரணமாக அமைந்து விடுகிறது. காதல் குறித்தும், காதலி குறித்தும் எந்தப் புரிதலும் இல்லாமல் ஹரிஷ் தீய பழக்கத்துக்கு ஆளாவதும் கதையின் தடுமாற்றத்துக்குக் காரணம். மோதல் - காதல்- பிரிவு என்ற வழக்கமான காதல் கதை ஏன் குழப்பத்துடனும் மந்தகதியிலும் செல்ல வேண்டும் என்பது தெரியவில்லை.

அன்பின் அடர்த்திக்கான நியாயமான காரணங்கள் இல்லாமல் காதல் குறித்த சுவாரஸ்யங்களும் இல்லாமல் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படம் கடந்து போகிறது.

 

https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article26544927.ece

 

'இளையராஜா மாதிரி இசையமைக்க ஆளே இல்லை!’ - நெகிழ்ந்து அழுத எஸ்.பி.பி

1 month ago
ilayaraaja-spb

இளையராஜா - எஸ்.பி.பி.

  • வி.ராம்ஜி
  • Posted: 15 Mar, 2019 11:41 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

’இளையராஜா எப்போதுமே சம்திங் ஸ்பெஷல். அவர் மாதிரி இசையமைக்க ஆளே இல்லை. அவருக்கு எத்தனை முறை தேசிய விருதுகள் கொடுத்தாலும் தகும்’ என பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

 

தனியார் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

இதில், ’ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்’ என்கிற ‘நினைவெல்லாம் நித்யா’ பாடலை சிறுவன் வெகு அழகாகப் பாடி அசத்தினான்.

அந்தப் பாடல் பாடி முடித்த போது, நெக்குருகி அழுதேவிட்டார் எஸ்.பி.பி.

அப்போது எஸ்.பி.பி. பேசியதாவது:சில விஷயங்களை மனம் விட்டுச் சொல்லவேண்டும். அது எத்தனை முறையாக இருந்தாலும் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். அப்படிச் சொல்லவில்லையெனில் அவன் கலைஞனே கிடையாது.

நானும் ஒரு மியூஸிஸியன்தான். ஆகவே நுணுக்கங்களை என்னால் அறிய முடியும். 'என்ன இவரு... எப்பப் பாத்தாலும் இளையராஜாவைப் புகழ்ந்து பேசிக்கிட்டே இருக்காரு’ என்று சிலர் நினைக்கலாம். எம்.எஸ்.வியைப் பற்றியும் அதிகம் பேசியிருக்கிறேன்.

ஒரு சம்திங் ஸ்பெஷல் இளையராஜாவிடம் எப்போதுமே உண்டு. அதைச் சொல்லாமல் போனால், பாராட்டாமல் இருந்தால், அதுவே ஒரு ஆதங்கமாகிவிடும். நோயாகிவிடும். நாம் நோயாளியாகிவிடுவோம். ’நினைவெல்லாம் நித்யா’ படத்தில் வந்த ‘ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்’ பாடலை இப்போதும் கேட்டிருப்பீர்கள். என்ன கம்போஸிங் கவனித்தீர்களா? ஒவ்வொரு வார்த்தைகளிலும் அப்படியொரு சங்கதியை, சின்னச்சின்ன சங்கதியைப் போட்டிருப்பார். ஒவ்வொரு இசைக்கருவியின் நுணுக்கங்களை அழகாகக் கையாண்டிருப்பார். இப்படியொரு இசையை இளையராஜாவைத் தவிர, வேறு யாராவது கம்போஸ் செய்திருக்கிறார் என்று நீங்களே சொல்லுங்கள்.

பாடலின் ஒவ்வொரு வரிகளிலும் சின்னச்சின்ன சங்கதிகள் போட்டிருப்பார் இளையராஜா. அவையெல்லாம் இளையராஜாவுக்கு மட்டுமே தனி ஸ்பெஷல். இதையெல்லாம் பார்க்கும் போது, இளையராஜாவுக்கு எத்தனை முறை தேசிய விருது கொடுத்திருக்கவேண்டும் என யோசித்துப் பாருங்கள்.

இளையராஜா, இன்னும் பல சாதனைகள் புரியவேண்டும். இன்னும் இன்னும் பல இசைகளைத் தரவேண்டும். இளையராஜா நீடூழி வாழவேண்டும்.

இவ்வாறு எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

https://www.kamadenu.in/news/special-articles/21007-ilayaraaja-spb-2.html

முதல் பார்வை: சத்ரு

1 month 1 week ago
முதல் பார்வை: சத்ரு
உதிரன்சென்னை
sathru-1jpg

குழந்தைகளைக் கடத்தும் குற்றவாளிகளைத் தண்டிக்கும் காவல் உதவி ஆய்வாளரின் கதையே 'சத்ரு'.

ராயபுரத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிகிறார் கதிரேசன் (கதிர்).  அவர் நேர்மைக்குப் பரிசாக பணியில் சேர்ந்து 2 ஆண்டுகளில் 2 முறை சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். பிரபாகரன் (லகுபரன்) தன் நண்பர்கள் 4 பேருடன் இணைந்து பணத்துக்காகப் பள்ளிக் குழந்தைகளைக் கடத்துகிறார்.  லகுபரன் 5 கோடி பணம் வேண்டும் என்று டீல் பேசுகிறார். இந்த சூழலை சாமர்த்தியமாகக் கையாண்டு குழந்தையையும், பணத்தையும் மீட்கிறார் கதிர். இதில் லகுபரனின் நண்பன் கொல்லப்படுகிறார். இதனால் ஆவேசமாகும் லகுபரன், கதிர் குடும்பத்தைக் கொலை செய்யப் போவதாக சவால் விடுக்கிறார்.

கதிர் தன் குடும்பத்தைக் காப்பாற்றினாரா, லகுபரன் ஆவேசம் என்ன ஆனது, குழந்தைகளைக் கடத்தும் கும்பலில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை. 

மாஸ் போலீஸ் கதைகள் அதிகம் தமிழ் சினிமாவில் வந்துள்ளன. ஆனால், 'சத்ரு' படத்தில் சம்பந்தமில்லாத பில்டப், பன்ச், சாகசக் காட்சிகள் என எதுவும் இல்லை. இயக்குநர் நவீன் நஞ்சுண்டன் யதார்த்த வார்ப்பாக இப்படத்தைக் கொடுக்க முயற்சித்துள்ளார். ஆனால், திரைக்கதையில் தொழில்நுட்ப அளவிலான போலீஸ் மூளை செயல்படாதது ஏமாற்றம். 

'மதயானைக்கூட்டம்', 'கிருமி', 'பரியேறும் பெருமாள்' படங்கள் மூலம் பரவலான வரவேற்பைப் பெற்ற நாயகன் கதிருக்கு 'சத்ரு' 4-வது படம். காவல் உதவி ஆய்வாளருக்கான தோரணையில் கெத்து காட்டுகிறார். ஆனால், பதற்றத்தையும் பரபரப்பையும் கடத்த வேண்டிய நேரத்தில் உணர்வுகளைக் கடத்தாமல் வெறுமனே கடந்து போகிறார். அப்பாவை இழந்த துயரத்தைக் கூட சரியாக வெளிப்படுத்தவில்லை. 

சிருஷ்டி டாங்கேவுக்கு படத்தில் எந்த வேலையும் இல்லை. நீலிமா இசை சில காட்சிகளில் கண்கலங்கியபடி வந்து போகிறார். பொன்வண்ணன் மகனுக்காக மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுத்து சாய்ந்து விடுகிறார். சுஜா வாருணி கொடுத்த கதாபாத்திரத்தில் மிளிர்கிறார். 

'ராட்டினம்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆன லகுபரன் இதில் வில்லனாக தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார். நண்பனை இழந்த சோகத்தில் எதிரியைப் பழிவாங்கும் வன்மத்தைக் கண்களில் கடத்துகிறார். ராணுவ வீரனாக பவன் பொருத்தம். மாரிமுத்து கச்சிதமான நடிப்பை வழங்கியுள்ளார். 

பார்த்துப் பார்த்துக் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்திருக்கிறார் இயக்குநர் நவீன் நஞ்சுண்டன். ஆனால், அவர்களிடம் தேவையான நடிப்பைப் பெறுவதில் சறுக்கியிருக்கிறார். சில வசனங்கள் மூலம் நாயகன் கதிரின் கதாபாத்திரத்துக்கான இமேஜ் உயர்கிறது. ஆனால், அடுத்தடுத்த காட்சிகளில் அதற்கான எந்த நியாயத்தையும் செய்யவில்லை.

மகேஷ் முத்துசாமி ஆக்‌ஷன் த்ரில்லர் படத்துக்கான அம்சங்களில் படத்துக்கு வலு சேர்த்துள்ளார். அம்ரிஷ் இசையில் அச்சம் நீக்கி பாடலும், பின்னணி இசையும் கவனிக்க வைக்கின்றன. பிரசன்னாவின் எடிட்டிங் நேர்த்தி.

பிக் பாக்கெட் சிறுவன் கதிருக்கு உதவுவது, குப்பைத்தொட்டி அருகே இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் பணத்துக்கு ஆசைப்படாமல் சாப்பாடு மட்டுமே தேவை என்பதை உணர்த்துவது, ஆபத்து சமயத்தில் ரிஷி கதிருக்கும் அவரது நண்பருக்கும் உதவுவது போன்ற சில நல்ல அம்சங்களும் படத்தில் உள்ளன. ஆப்ரேஷன் ஆம்லா சக்சஸ் என்று சொல்லிக்கொண்டு குற்றவாளிகளைத் தப்பிக்க வைத்த போலீஸையும் படத்தில் நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். 

தன் குடும்பத்தைப் பழிவாங்கியே தீருவேன் என்று வில்லன் சவால் விட்ட பிறகும் கதிர் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காதது பெருங்குறை.  எந்த ஒரு விசாரணைக்கும் சம்பவ இடத்துக்கும் தானே நேரில் செல்வதால் அங்கே ஏதேனும் ஓர் அசம்பாவிதம் நிகழ்வதால் படத்தின் நாயகன் மீதான சாகசத்தன்மை கேள்விக்குள்ளாகிறது. 

எம்.எல்.ஏ, கமிஷனர் மகன்களை எல்லாம் ஒரு வழி பண்ணியவர் கதிர் என்று வசனத்தின் ஊடாகச் சொல்லப்படுகிறது. ஆனால், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அவர் எந்தவித புத்திசாலித்தனமான விஷயங்களையும் ஏன் மேற்கொள்ளவில்லை? பொன்வண்ணனுக்காக அருகில் உள்ள காவல் நிலையத்தை நாடி இருக்கலாம். அவ்வளவு பெரிய தனியார் மருத்துவமனையில் ரவுடிகள் அப்படி சர்வ சாதாரணமாக நடமாட முடியுமா? சிசிடிவி கேமராவே இல்லையா? போன்ற லாஜிக் கேள்விகள் எழுகின்றன. 

குற்றவாளிகளின் பின்னணியையும், குற்றத்தின் வீரியத்தையும் இன்னும் சரியாகச் சொல்லியிருந்தால் 'சத்ரு' சமகாலத்தில் அழுத்தமான சினிமாவாகத் தடம் பதித்திருக்கும்.

 

https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article26470892.ece?utm_source=HP-RT&utm_medium=hprt-most-read

 

திருமணம் சில திருத்தங்களுடன் - திரை விமர்சனம்!

1 month 2 weeks ago
திருமணம் சில திருத்தங்களுடன் - திரை விமர்சனம்!
59.jpg
திருமணம் நடக்கும் விதத்தில் உள்ள சிக்கல்களைப் பற்றிப் பேசும் படம் எப்படி இருக்கிறது?

திருமணம் நடத்துவது நிச்சயம் எளிமையான விஷயம் அல்ல. காதலர்கள், வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்வதுகொள்வது என்பதும் கடினம்தான். அப்படி ஒரு திருமணத்தில் எத்தனை தடங்கல்கள் ஏற்படும் என்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்தான் திருமணம் சில திருத்தங்களுடன்.

உமாபதி ராமையா, காவ்யா சுரேஷ், சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, மனோபாலா முதலானோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க, கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் சேரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ஜமீன் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, அக்காவின் பாசத்தம்பியாக அன்பிலும் ஆடம்பரத்திலும் வாழ்ந்து, பண்பலைத் தொகுப்பாளராகப் பணியாற்றுபவர் மகேஷ் (உமாபதி ராமையா). அவரது காதலி ஆதிரா (காவ்யா சுரேஷ்) சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இருவரும் வீட்டில் தங்கள் காதலைச் சொல்கிறார்கள். அதற்கு எதிர்ப்பு ஏதும் வரவில்லை. ஒரு வார காலம் அவகாசம் எடுத்துக்கொண்டு, விசாரித்துத் திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் சம்மதிக்கின்றனர்.

தன் தம்பியின் திருமணம் ஆடம்பரமாக நடக்க வேண்டும் எனக் கதாநாயகனின் அக்கா மனோன்மணி (சுகன்யா) விரும்புகிறார். ஒரு நாள் கூத்திற்காக அத்தனை பணம் செலவழிக்க வேண்டுமா எனக் கதாநாயகியின் அண்ணன் அறிவு (சேரன்) நினைக்கிறார். இவர்களுக்கு இடையில் ஏற்படும் கருத்து வேறுபாடு, ஒரு கட்டத்தில் திருமணம் தடைபடும் அளவிற்குப் போகிறது. கருத்து வேறுபாடு தீர்ந்ததா, திருமணம் நடைபெற்றதா என்பதைச் சொல்கிறது படம்.

வாழ்க்கையில் திட்டமிடலின் அவசியம், திருமணத்தில் ஏற்படும் ஆடம்பர அனாவசியச் செலவினங்கள் போன்றவற்றைச் சுட்டிக்காட்டியிருப்பது பாராட்டத்தக்கது. திருமண அழைப்பிதழுக்காகச் செய்யப்படும் செலவு, வீணாகும் உணவு முதலான பல விஷயங்களைப் படம் கவனப்படுத்துகிறது. சேரனின் கஞ்சத்தனம் ஆரம்பத்தில் நகைப்பூட்டினாலும் சிந்திக்கவும் வைக்கிறது. சேரனுக்கும் சுகன்யாவுக்கும் இடையில் இருக்கும் முரண்கள் சமகால வாழ்க்கை பற்றிய பல முக்கியமான விஷயங்களை முன்னிலைப்படுத்துகின்றன. திருமணம் நடக்குமா, நடக்காதா என்னும் கேள்வி படத்தை நகர்த்திச் செல்ல உதவுகிறது.

பொதுவாக இயக்குநர் சேரனின் திரைப்படங்களில் பார்க்க முடிகின்ற குடும்பப் பின்னணியை இதிலும் பார்க்க முடிகிறது.

காதலிப்பதை வீட்டில் பாட்டுப் பாடித் தெரியப்படுத்துவதும், அதற்கு மறு பாட்டுப் பாடி வீட்டில் உள்ளவர்கள் பதில் கூறுவதும் யதார்த்தமாகவும் இல்லை, ரசிக்கும்படியும் இல்லை.

59a.jpg

படத்தில் வரும் ‘ஆல் த பெஸ்ட்’ பாடலைக் கேட்கும்போது மீம் கிரியேட்டர்ஸுக்காகவே எழுதி இயக்கப்பட்ட பாடல் போலத் தோன்றியது. பாடல்களில் சித்தார்த் விபின் இன்னும் நல்ல கவனம் செலுத்தியிருக்கலாம். இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து வரும் பாடல்கள் படத்தின் ஓட்டத்தைப் பெரிதும் பாதிக்கின்றன.

வானுயர்ந்த மலை மீது தழுவிச் செல்லும் இருள் சூழ்ந்த மழை மேகம், பசுமைப் போர்வை போர்த்திய மரங்கள், இதமான ஒலி எழுப்பி ஒன்றாய்ப் பறந்து செல்லும் பறவைகள், மாடுகள், வைக்கோல் என்று திரையில் தோன்றும் காட்சிகளில் இயற்கை அழகு மிளிர்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் கேமிராவின் மாயம் தெரிகிறது. ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவைப் பாராட்டியே ஆக வேண்டும்.

டிரைவராக வரும் பால சரவணன் ஓரிரு இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறார். 96 திரைப்படம் பார்த்தபோது ஆட்டோகிராஃப் படம் நினைவிற்கு வந்தது என்று கூறிக் கதாநாயகி சிரிக்க வைக்கிறார். சுகன்யாவின் நடிப்பு அவரின் பழைய திரைப்படங்களை நினைவூட்டும்படி அமைந்துள்ளது. எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா இருவரும் தாங்கள் தேர்ந்த நடிகர்கள் என்பதனை மீண்டும் நிரூபித்துள்ளனர். கதாநாயகி காவ்யா சுரேஷ், தான் பரதநாட்டியக் கலைஞர் என்பதனை படத்தில் நிரூபித்துள்ளார்.

திருமணத்தை முன்வைத்துச் சிக்கனத்தை வலியுறுத்த முயலும் இப்படம், மெகா சீரியல் பார்ப்பது போன்ற உணர்வைப் பல காட்சிகளில் ஏற்படுத்துகிறது. படத்தில் எல்லோரும் வாய் ஓயாமல் பேசுகின்றனர். வெறும் பேச்சு அல்ல. சலிக்கச் சலிக்க அறிவுரைகள். பல காட்சிகள் செயற்கையாக உள்ளன. இவற்றையெல்லாம் தவிர்த்துச் சம்பவங்கள் மூலம் இயல்பாகக் கதை சொல்லியிருந்தால், திருமணம் சில திருத்தங்களுடன் திரைப்படம் வலுவாக இருந்திருக்கும்.

 

https://minnambalam.com/k/2019/03/02/59

 

90 எம்எல்: திரை விமர்சனம்!

1 month 2 weeks ago
90 எம்எல்: திரை விமர்சனம்!
27.jpg
பாலுறவு உள்ளிட்ட சிக்கல்களைப் பெண்களின் பார்வையில் பேசும் இந்தப் படம் எப்படி உள்ளது?

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஓவியா கதாநாயகியாக நடித்திருக்கும் படம் 90 எம்.எல். அனிதா உதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கும்படியாக ஏ சான்றிதழுடன் வெளியாகியுள்ளது. நிவிஸ் என்டர்டெய்ன்மென்ட் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

அபார்ட்மென்ட் ஒன்றில் வசிக்கும் நான்கு தோழிகளுடன் புதிதாக வந்த ரீட்டா நட்பாகிறார். அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக வலம் வரும் ரீட்டாவை மற்ற பெண்களுக்குப் பிடித்துப் போகிறது. அவளைப் போல் தம்மால் இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கிறது. ரீட்டாவின் குணநலன்கள் அவர்களையும் மாற்ற, துணிச்சலுடன் சுதந்திரமாக செயல்படத் தொடங்குகின்றனர். அவர்களுக்கு உள்ள ஒவ்வொரு பிரச்சினையையும் ரீட்டா தன் பாணியில் கையாண்டு சுமுகமாக முடித்துவைக்கிறார்.

ஐந்து தோழிகளை மையமாகக் கொண்ட கதையாக இருந்தாலும் அவர்களுடைய பிரச்சினைகள், அவற்றைச் சமாளிக்கும் விதம் ஆகிய எல்லாமே வயது வந்தோர்களுக்கான சமாச்சாரங்களாகவே உள்ளன. உறவுச் சிக்கல்கள், தன் பாலினத் திருமணம் என வெளிப்படையாகப் பல விஷயங்களைப் பேசியுள்ளது படம்.

27a.jpg

தோழியின் கணவன் மற்றொரு பெண்ணுடன் உறவு வைத்துள்ளான் என்பதை அறிந்ததும் தோழிகள் நேராக அவனது வீட்டிற்குச் சென்று சண்டை போடுவது, இரவு முழுவதும் போதையில் சென்னையைச் சுற்றி வருவது, பாண்டிச்சேரிக்குச் சென்று காதலர்களை ஒன்று சேர்க்கத் திட்டம் போடுவது என சற்று மிகையான காட்சியமைப்புகளும் உள்ளன.

பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதைக் காட்டுவதற்காக ஆரம்பம் முதல் மது, கஞ்சா பழக்கத்தை பின்பற்றுபவர்களாகக் காட்டப்படுகின்றனர். கொண்டாட்டம், சுதந்திரம் எல்லாமே மது பாட்டிலோடு சுருக்கப்படுவதாக உள்ளன. படம் முழுவதும் போதையைக் கடைபரப்பிவிட்டுக் கடைசியில் இது உடல் நலத்திற்கு தீங்கு என்று கூறுவது போலித்தனமாக உள்ளது. தன் பாலினத் திருமணம் பற்றி வெகுஜன சினிமாவில் காட்சிகள் வைத்தது வரவேற்க வேண்டிய விஷயம் என்றாலும் ஆரம்பத்தில் சில காட்சிகளில் அதை நகைச்சுவைக்காகப் பயன்படுத்தியது அந்த உறவைக் கொச்சைப்படுத்துவதாகவே உள்ளது.

நாயகியை மையமாகக் கொண்டு உருவாகும் பெரும்பாலான படங்கள் பெண்ணை மனதில் கொண்டு கதை எழுதாமல் கதாநாயகனுக்காக உருவாக்கப்பட்ட கதையில் நாயகியைப் பொருத்துவது போன்று அமைந்திருக்கும். இந்தப் படத்திலும் அந்த பிரச்சினை உள்ளது. திருமணத்தின்போது காரில் கல்யாண ஜோடியைக் கடத்தி வருவது, ரவுடி கும்பல்களிடம் நேருக்கு நேர் சண்டை போட்டு ஜெயிப்பது என தமிழ் சினிமா கதாநாயகன் தன் நண்பர்களுடன் செய்துவந்ததை ஓவியா தனது தோழிகளுடன் இந்தப் படத்தில் செய்கிறார்.

27b.jpg

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவிற்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டம் உருவானதற்கு முக்கியக் காரணம், அவருடைய இயல்பான நடவடிக்கைகள். தன் இயல்பை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன்; தனக்கு பிடித்ததைத் துணிந்து செய்வேன் என்ற ரீதியில் அவர் செயல்பட்டதுதான். அதே வார்ப்பில் இந்தப் படத்தின் நாயகி ரீட்டாவின் பாத்திரத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர். எனவே, ஓவியாவுக்கு ‘நடிக்க’ வாய்ப்பு அதிகம் இல்லை. தன் பாத்திரத்தை இயல்பாகவே வெளிப்படுத்துகிறார். ஒரு சிலகாட்சிகளில் வரும் தேவையில்லாத ‘ஹீரோ’யிசத்தைத் தவிர்த்திருந்தால் இந்தப் பாத்திரம் வலுவாக இருந்திருக்கும்.

அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக்குகிறது. சிம்புவின் இசையில் பாடல்கள், பின்னணி இசை கவனம் ஈர்க்கிறது.

பாலுறவு உள்ளிட்ட உறவுச் சிக்கல்களைப் பெண்களின் பார்வையில் வெளிப்படையாகப் பேசிய படங்கள் தமிழ் சினிமாவில் மிகக் குறைவு. அத்தகைய முயற்சியில் இறங்கிய இப்படத்தில் அதற்கான பாசாங்கு மட்டுமே உள்ளது. ஆபாச நெடி அடிக்கும் வசனங்கள், போதையில் மிதக்கும் காட்சிகள் ஆகியவற்றுக்கு நடுவே பெண் விடுதலை, உறவுச் சிக்கல் என்றெல்லாம் பேசுவதற்கான பாவனைகளைச் செய்துள்ளார் இயக்குநர். ஆனால், இந்தப் பிரச்சினைகளோ விடுதலைக் குரலோ எடுபடாமல், மலினமான விஷயங்கள் மட்டுமே ஓவர் டோஸ் ஆக உள்ளன.

- மதரா

 

https://minnambalam.com/k/2019/03/02/27

 

முதல் பார்வை: தடம்

1 month 2 weeks ago
முதல் பார்வை: தடம்
உதிரன்சென்னை
Thadam-Movie-Stills-14JPGjfif

ஓர் உரு இரட்டையர்களில் யார் கொலையாளி என்பதை போலீஸ் கண்டுபிடித்ததா இல்லையா என்பதே 'தடம்' படத்தின் கதை. 

எழில் (அருண் விஜய்) ஐஐடியில் இன்ஜினீயரிங் படித்துவிட்டு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். கவின் (அருண் விஜய்) நண்பன் யோகி பாபுவுடன் இணைந்து சின்னச் சின்ன திருட்டு வேலைகளில் ஈடுபடுகிறார். எழில் தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு அருகில் திரைப்பட விமர்சகராக வேலை பார்க்கும் தீபிகாவை (தான்யா ஹோப்) காதலிக்கிறார். 

கவின் நிறைய பெண்களுடன் பழகி அவர்களை வலையில் விழ வைக்கிறார். ஒரு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஆகாஷ் என்பவர் தன் சொகுசு வீட்டில் படுகொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். போலீஸ் கொலை செய்தது யார் என்று ஆதாரங்களைத் தேடுகிறது. 

அப்போது கிடைத்த ஒரு செஃல்பியைக் கொண்டு எழிலைக் கைது செய்கிறது போலீஸ். அதே ஸ்டேஷனில் மதுபோதையில் விபத்து ஏற்படுத்தியதாக கவினும் வந்து சிக்குகிறார். ஒரே உருவ ஒற்றுமை கொண்ட இருவரில் யார் கொலையாளி என்று கண்டுபிடிப்பதில் போலீஸ் திணறுகிறது. 

இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் ('பெப்ஸி' விஜயன்) தனிப்பட்ட முன் பகையின் காரணமாக எழிலை கொலை வழக்கில் சிக்கவைக்கப் பார்க்கிறார். உண்மையில் நடந்தது என்ன? ஆகாஷ் கொலையானதற்கான பின்னணி என்ன, குற்றவாளி யார், யாருக்கு தண்டனை கிடைத்தது போன்ற கேள்விகளுக்குப் பரபர பாணியில் பதில் சொல்கிறது திரைக்கதை.

சிக்கலும் குழப்பமும் மிகுந்த ஒரு கொலை வழக்கை போலீஸ் புலனாய்வு செய்யும் விதத்தை மிகத் துல்லியமாகப் பதிவு செய்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி. 

சவாலான இரட்டைக் கதாபாத்திரங்களில் கச்சிதம் காட்டி ஈர்க்கிறார் அருண் விஜய். நடை, உடை, பாவனைகளிலும் போலீஸாரை எதிர்கொள்ளும் விதத்திலும் அருண் விஜய் தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார். 

தான்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட் என்று இரண்டு ஹீரோயின்கள் படத்தில் இருந்தாலும் எஸ்.ஐ.ஆக திறமை காட்டி நடிப்பில் மிளிர்கிறார் வித்யா ப்ரதீப். கோபாலகிருஷ்ணன் கேரக்டரில் பெப்ஸி விஜயனும், கவின் நண்பனாக சுருளி கதாபாத்திரத்தில் யோகி பாபுவும் நிறைவாக நடித்துள்ளனர்.

'அம்மா அப்படிப்பட்ட பொம்பளை இல்லடா' என்று மகனிடம் சொல்லும் சோனியா அகர்வாலின் கேரக்டர் ஸ்கெட்ச் மட்டும் புரியாத புதிர். 

புகை பிடிக்கும் காட்சிகளில் தில்லாக வந்து போகும் மீரா கிருஷ்ணன் கதையின் ஓட்டத்தில் காணாமல் போகிறார். 

கோபிநாத்தின் ஒளிப்பதிவும் ஸ்ரீகாந்தின் எடிட்டிங்கும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன. அருண்ராஜ் இசையில் இணையே உயிர்த்துணையே பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையில் அருண்ராஜ் டெம்ப் ஏற்றாமல் வேடிக்கை பார்த்திருக்கிறார். கவினும் எழிலும் மோதிக்கொள்ளும் சண்டைக் காட்சியில் ஸ்டண்ட் சில்வாவின் உழைப்பு பாராட்டுக்குரியது. 

வழக்கம் போல் ரொமான்ஸ் காட்சிகளில் தனி முத்திரையைப் பதித்திருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி. கொலை வழக்கு முதலில் மந்தமாகச் செல்வது, முழு டீமும் மும்முரமாக இறங்கிய பிறகு வழக்கின் கோணம் மாறுவது, தடயத்தைத் தேடி போலீஸார் அலைவது பின் வழக்கை விசாரிக்க ஆரம்பித்த இடத்திலேயே மீண்டும் வந்து சேர்வது, அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கப் புரியாமல் திணறி நிற்பது என புலனாய்வு செய்யும் விதத்தின் நுட்பங்களை விரிவாகச் சொல்வது படத்தின் பெரும் பலம். 

கவினா, எழிலா யார் குற்றவாளி என்பதில் இருவர் மீதான பிளஸ், மைனஸை அலசிய விதம் படத்துக்கு கூடுதல் சுவாரஸ்யம் தருகிறது. திரைக்கதை ட்விஸ்ட்டுகள் அத்தனை முன்முடிவுகளையும் மாற்றும் அளவுக்கு மிக வலுவாக உள்ளது. தீர்ப்புக்குப் பிறகான உண்மையைச் சொன்ன விதத்திலும் இயக்குநர் தனித் தடம் பதிக்கிறார். 

அருண் விஜய் தான்யா ஹோப்பை தேநீர் அருந்தச் செல்லலாமா? என்று கேட்கும் கேள்விகளும் அதற்கான பதிலும் எளிய இனிய கவிதை. அந்த தப்புதண்டா பாடல் மட்டும் காட்சிகளுக்கு இடையே வேகத்தடை. சோனியா அகர்வால் ஏன் சூதாடுகிறார் என்பது குறித்த டீட்டெயில் இல்லை. அதனால் வரும் பின்விளைவுகளும் அழுத்தமாக இல்லை. முதல் பாதியில் இருக்கும் மந்த நிலையையும் கொஞ்சம் கத்தரி போட்டு சரி செய்திருக்கலாம்.  இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் விறுவிறுப்பான ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக தடம் டைட்டிலுக்கு ஏற்றவாறு  'தடம்' பதித்துள்ளது.

 

https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article26404925.ece

 

Checked
Fri, 04/19/2019 - 06:20
வண்ணத் திரை Latest Topics
Subscribe to வண்ணத் திரை feed