Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஹிட்லரை மன்னிப்புக் கேட்க வைத்த தமிழர்
#1
ஹிட்லரை மன்னிப்புக் கேட்க வைத்த தமிழர்

இரா. சிவக்குமார்

இந்தியா விடுதலையடைந்து 58 ஆண்டுகளாகிவிட்டன. வெள்ளை அரசின் அடக்குமுறைகளுக்கு அஞ்சி பிறந்த மண்ணில் அடிமைகளாகவும், ஏதிலிகளாகவும் வாழ்ந்த கொடுமையான வரலாற்றை இன்றைய தலைமுறை மறந்திருக்கலாம். பேசுவதற்கும், எழுதுவதற்கும் மட்டுமல்ல, வாழ்வதற்கும் கூட வெள்ளை ஏகாதிபத்தியத்தின் சுண்டு விரலசைவுக்கு காத்திருந்த காலம் ஒன்றுண்டு. அடிபட்டு, மிதிபட்டு, ஆண்டாண்டு காலமாய்ச் சிறைப்பட்டு, எண்ணற்றோர் குருதி சிந்திய கொடுமையான சரித்திரத்தைக் கொண்டது இந்திய மண். மண்ணை, மானத்தை,மனிதத்தை மீட்க நடத்திய பெரும் போரில் உற்றார், உறவினர்களை இழந்து, நண்பர்களை இழந்து ரணங்களோடும், தழும்புகளோடும் தியாகப் பரம்பரைத் தலைமுறையினர் மறைந்து கொண்டிருக்கும் தருணம் இது.

இந்திய துணைக்கண்டமே அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில், ஆங்காங்கே பீறிட்டெழுந்த விடுதலை உணர்ச்சியில் ஒட்டுமொத்த இந்தியாவும் கிளர்ந்தெழுந்தது. காந்தியடிகளின் தலைமையை ஏற்று ஒன்றுபட்ட பெரும் போராட்டம், பிரிட்டிஷ் அரசிற்குப் பெரும் தலைவலியாய் அமைந்தது. எத்தனையோ அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்தபோதிலும் சுடர்விட்டு ஒளிர்ந்த விடுதலை கனலை அணைக்க இயலவில்லை.

பிறகு எந்த மாகாணத்துக்கும் சற்றும் குறைவின்றி, சொல்லப்போனால் இன்னும் கூடுதலாக, தமிழகம் முன்னெடுத்த சுதந்திரப் போர், பெருமை கொள்ளத்தக்கது. கும்பினியாரை எதிர்த்த பூலித்தேவன் தொடங்கி, வரி கேட்டு மிரட்டிய வெள்ளையனை `வந்து பார்' என்று விரட்டிய பாஞ்சாலக்குறிச்சி கட்டபொம்முவின் முழக்கமே, மதப் பகைமையை உண்டாக்கி அதில் குளிர் காய நினைத்த குள்ளநரிகளின் தந்திரத்திற்கு வேட்டு வைத்த வேலூர்க் கோட்டைச் சிப்பாய்க்கலகமும், வட நாட்டில் ஜான்சிராணியா.. இதோ தமிழ்நாட்டில் வீரமங்கை வேலுநாச்சியும் வெள்ளைப் படைக்கு முறம் காட்டினாளே! அங்கே தாகூரா.. இங்கே பாரதி முண்டாசு கட்டிக் கொண்டு, தனது சொற்சாட்டைகளால் பிரிட்டிஷ் பேரரசை சுழற்றியடித்தானே! சுதேசியம் பேசிய வடநாட்டுத் தலைவர்களை மிஞ்சி மக்களைப் பங்குதாரராக்கி கப்பல் விட்டுப் பெருமை பெற்றானே வ.உ.சி. செக்கிழுத்து, மூத்திரம் குடித்து தொழு நோயாளியாய் சிறையிலிருந்து வெளியே வந்து, சற்றும் குறையாத கர்வத்துடன் மறைந்தானே சுப்ரமணிய சிவா!உயிர் போகும் நிலையிலும் கொடியின் மானம் காத்து, வரலாற்றில் உயர்ந்து நிற்கிறானே குமரன்! மிதவாதிகளின் போராட்டம் ஒரு புறமிருக்கையில், கலெக்டர் ஆஷ் துரையைக் கொன்று வாஞ்சி மணியாச்சியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறானே வீரன் வாஞ்சிநாதன்!

இம்மண்ணின் விடுதலைக்காக கணக்கற்ற புதல்வர்களை தமிழன்னை வாரிக் கொடுத்திருக்கிறாள். பறங்கிக் கூட்டத்தை விரட்டியடித்து, சுதந்திரக் கொடியேற்ற நாஞ்சில் நாட்டிலிருந்தும் உலகம் போற்றிய உன்னத மகவு ஒன்றை தமிழகம் ஈன்றெடுத்தது. சின்னச்சாமி - நாகம்மாள் என்ற சாதாரண ஏழைத்தாய்- தந்தையருக்குப் பிறந்த அம்மாவீரன், பின்னாளில் ஜெர்மனியின் சர்வாதிகாரி, உலக நாடுகளையெல்லாம் குலைநடுங்க வைத்த ஹிட்லரையே தலைவணங்க வைத்தான் என்ற வரலாறு எத்தனை பேருக்குத் தெரியும்? "ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அடிமைப்பட்ட மக்கள் உலகின் எந்தக் கோடியில் இருந்தாலும் அங்கே சென்று, அவர்களின் அடிமைத் தளைகளைத் தகர்த்தெறிவேன்" எனச் சூளுரைத்த அந்த நாஞ்சில் நாட்டு வீரன்தான் `எம்டன்' ஜெய்ஹிந்த் செண்பகராமன்.

1914 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22 ஆம் நாள் எம்டன் என்ற நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்து, சென்னையிலுள்ள செயின்ட் ஜோர்ஜ் கோட்டையைத் தகர்க்க வெடிகுண்டு வீசிய பெருவீரன்தான் செண்பகராமன் . இந்த அளவில் மட்டும்தான் செண்பகராமன் குறித்த வரலாறு நமக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதற்கும் மேலாக இந்திய நாட்டின் விடுதலைக்காக வெளிநாடுகளில் அவன் மேற்கொண்ட முயற்சிகளும், அதனால், அவன் பட்ட வேதனைகளும் மறைக்கப்பட்டுவிட்டன அல்லது மறக்கப்பட்டுவிட்டன.

தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்களுக்காகக் காந்தியடிகள் நடத்திய போராட்டத்திற்குச் சற்றும் குறையாமல், அமெரிக்கப் பேரரசின் இனவெறியில் சிக்கி நாள்தோறும் செத்துப் பிழைத்த நீக்ரோ மக்களுக்காகக் குரல் கொடுத்தார், அருந்தமிழ்ப் புதல்வன் செண்பகராமன். அப்போதைய அமெரிக்க குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சனைச் சந்தித்து, கறுப்பின மக்களின் துயரங்களை எடுத்துரைத்தார். "பெரும்பான்மை மக்களின் கருத்திற்கு மாறாக தாம் நடந்து கொள்ள இயலாது" என்று உட்ரோ வில்சன் மறுத்துரைத்துவிட்டார். இருந்தும் சோர்வுபடாமல், தன்னைக் கொலை செய்யக் காத்திருக்கும் இனவெறியர்களின் மிரட்டலை மீறி, செண்பகராமன் ஊர் ஊராகச் சென்று நீக்ரோ மக்களைச் சந்தித்துத் தனது வலிமையான கருத்துப் பிரசாரத்தை நடத்தினார்.

முதலாம் உலகப்போர் தொடங்கிய 1914 ஆம் ஆண்டு, இந்தியாவிற்கு வெளியே, ஜெர்மன் மன்னர் கெய்சரின் ஆதரவோடு முதன் முதலாக `இந்திய தேசியத் தொண்டர் படை' என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். செண்பகராமன் வழி நடத்திய ஐ.என்.வி. என்ற இந்திய தேசியத் தொண்டர் படையின் பேராற்றலைக் கண்டு பிரிட்டிஷ் அரசு கலக்கம் அடைந்தது. வங்கச் சிங்கம் சுபாஷ் சந்திரபோஷின் ஐ.என்.ஏ. இற்கு செண்பகராமன் அமைத்திருந்த ஐ.என்.வி.யே முன்னோடியாக அமைந்திருக்கிறது. 1933 ஆம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற மாநாட்டில் சுபாஷும் செண்பகராமனும் நாட்டு விடுதலை குறித்து ஆராய்ந்த போது, செண்பகராமன் வகுத்துத் தந்த திட்டம் சுபாஷ் சந்திரபோஸைக் கவர்ந்தது ஒன்றே இதற்குச் சான்று.

இந்திய நாட்டின் விடுதலையைத் தனது உயிர் மூச்சாய்க் கொண்ட இம்மாவீரன், தென்னாபிரிக்காவிற்கும் பயணம் மேற்கொண்டு அங்குள்ள கறுப்பின மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தார். கென்யாவில் டாக்டர் செண்பகராமன் நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க பேருரையைப் பற்றிக் கேள்விப்பட்ட காந்தியடிகள், அவரைப் பெருமையோடு பாராட்டியிருக்கிறார். ஜவஹர்லால் நேரு தனது சுயசரிதையில், "நாஜிகளுடன் கலந்து, சற்றும் பயமின்றிப் பணிபுரிந்த சொற்ப இந்தியர்களில் செண்பகராமன் முதன்மையானவர்" என்று புகழ்ந்து எழுதியிருக்கிறார்.

"விடுதலை பெறக்கூடிய தகுதி இந்தியர்களுக்குக் கிடையாது" என்று சொன்னதற்காக ஹிட்லரிடம், இந்தியா பற்றியும் அதன் தலைவர்கள் குறித்தும் ஆணித்தரமான தகவல்களைக் கூறி செண்பகராமன் வாதம் புரிந்தார். அவரின் கூர்மையான வாதத்திறமைக்கு முன்னர் ஹிட்லரின் பேச்சு எடுபடாத காரணத்தால், எழுத்து மூலமாக செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினார் ஹிட்லர். ஜெர்மன் நாஜிகளுக்கு இந்தச் சம்பவம் எரிச்சலூட்டிய காரணத்தால், செண்பகராமனைக் கொலை செய்யத் திட்டம் தீட்டி உணவில் விஷம் வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றனர். 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாள் அவரது அன்பு மனைவி இலட்சுமி பாயின் மடியில் உயிர் துறந்தார்.

"சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்" என்ற ஜெர்மன் மன்னர் கெய்சரின் விருப்பம் நிறைவேறாமற் போனாலும், "சுதந்திர இந்தியாவில், நாஞ்சில் தமிழகத்து வயல்களிலும், கரமனை ஆற்றிலும் எனது சாம்பலைத் தூவ வேண்டும்" என்ற செண்பகராமனின் விருப்பம் மட்டும் 1966 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 19 ஆம் நாள் இந்திய அரசின் உதவியோடு நிறைவேறியது.

உலக நாடுகளுக்கெல்லாம் பயணம் செய்து, உலகத் தலைவர்களைச் சந்தித்து இந்தியாவின் விடுதலைக்காக ஆதரவு திரட்டிய செண்பகராமன் என்ற பெருமகனின் வரலாறு, மிக விரிவான அளவில் ஆராயப்பட்டு பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என அனைத்து நிலையிலும் உள்ள பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் செண்பகராமனின் தியாகத்திற்கும் அவர் தம் குடும்பத்தாருக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும்.

- தினமணி
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#2
ம்ம்ம் தகவலுக்கு நன்றி

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)