Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நான் என்னை நானே
#1
<b>நான் என்னை நானே நக்கிக் கொள்ளும் நாய்</b>

உங்களில் அனேகம் பேருக்கு நாய் பூனை வளர்த்த அனுபவம் இருக்கும்.மிருகக் காட்சிச் சாலையிலேயோ தொலைக்காட்சியிலோ மிருகங்களின் வாழ்வியலை அவதானித்த அனுபவம் இருக்கும்.

நீங்கள் யாராவது காயம்பட்ட நாயோ,பூனையோ,புலியோ, சிங்கமோ காலைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குப் போனதைப் பார்த்திருக்கிறீர்களா?.நீங்களாகச் சிலவேளை உங்கள் வளர்ப்புப் பிராணியை சிகிச்சைக்காகக் கொண்டு போயிருக்கலாம் ஆனால் அவை தமது நோய்களுக்கோ,காயங்களுக்கோ மருத்துவரை நாடுவதில்லை.

அவை என்னதான் செய்கின்றன?.காயம் பட்ட வேளையில் தம்மைத் தானே நக்கிக் கொள்கின்றன.காயம் ஆறும் வரையில் நாயாகிலும் சரி புலியானாலும் சரி சிங்கமானாலும் சரி காயத்தை நக்கி நக்கியே குணப்படுத்துகின்றன.அடிபட்ட பூனையைப் பாருங்கள் அது தனது உடல் முழுவதும் நாவால் நக்கி நக்கியே உடல் நோவைக் கூடக் குணப்படுத்துகிறது.

அடிபட்ட போது மட்டுமென்றில்லை.அழுக்கடைந்த போது கூட மிருகங்கள் தம்மைத் தாமே நக்கியே சுத்தப்படுத்துகின்றன

இது என்ன மருத்துவ முறை என்று கேட்கிறீர்களா ஜெயகாந்தன் கூட்டத்திலே சொன்ன தம்மைத் தானே நக்கிக் கொள்ளும் நாய் முறை.

ஜெயகாந்தன் இழிவுக்காக இதனைச் சொன்னார் என்றுதான் நான் நினைக்கிறேன்.தமிழ்ப்பாதுகபபு இயக்கத்தை முடிந்தளவு இழிவுபடுத்துவதற்காக இதனைச் சொல்லியிருக்கக் கூடும் ஆனால் தம்மைத் தானே நக்கிக் கொள்வதில் எந்த இழிவுமில்லை என்று அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.ஏனென்றால் அடிபட்ட போதெல்லாம் மற்றவனிடம் ஓடி மருந்திட்ட அனுபவம் தான் அவருக்கு இருக்கும்.இல்லாது போனால் ஏதாவது தேவைக்காக மற்றவன் காலை நக்கிய அனுபவம் இருக்கும்.அதைவிட இது கேவலமில்லை என்று உணர்ந்திருந்தால் இதைச் சொல்லியே இருக்கமாட்டார்

நாய் பூனைகளை ஒழுங்காக அவதானித்தவர்களுக்கு ஒன்று புரியும் நாய் செயற்கரிய வீரச்செயல்களை ஏதாவது செய்துவிட்டுத் தன்னைத் தானே நக்கிக் கொள்வதில்லை.அப்படி ஏதாவது செய்தால் கம்பீரமாக ஒரு குரைப்புக் குரைக்கும் வேறு என்னவோவெல்லாம் செய்யும் ஒரு போதும் தன்னைத் தானே நக்கிக் கொள்வதில்லை.தன் மகவு மீதான பாசத்தை அவற்றை நக்கித் தெரிவிக்கின்றன.ஆனால் தம்மீதான பாசத்தை தம்மைத் தாமே நக்கித் தெரிவிப்பதில்லை

பூனை சிங்கம் புலி எல்லா மிருகங்களுமே இதனைத்தான் செய்கின்றன அவை ஒரு போதும் மகிழ்ச்சியில் தம்மைத் தாமே நக்குவதில்லை.காயம்பட்ட வேளையிலேயே தம்மைத் தாம் நக்குகின்றன,

அதே நிலைதான் காயம்பட்ட நாயின் நிலைதான் இன்று எங்களுக்கும் எங்கள் மொழிக்கும் ஏற்பட்டிருக்கிறது.அழியும் தறுவாயில் மொழி இருக்கிறது என்பதை கேள்விப்படுவதை விட நோயின் தீவிரத்தைக் காட்ட வேறு சொல் வேண்டாம்.
இது நம்மை நாமே நக்கிக் கொள்ளவேண்டிய வேளை.எங்கள் வீரச்செயல்களை மற்றவர்கள் கைகளை நக்கிப் பிரகடனப்படுத்தும் நேரமல்ல .எங்கள் மொழி காயப்பட்டுக் கிடக்கிறது அதை மற்றவர்கள் வந்து நக்கிக் குணப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது எங்களை நாங்களே நக்கித்தான் குணப்படுத்த வேண்டும்.

ஒரு நாயைப் போல,ஒரு சிங்கத்தைப் போல எங்களை நாங்களே நக்கித்தான் அந்தக் காயத்தை ஆற்றவேண்டியிருக்கிறது

தமிழ் மொழி மாசடைந்துகொண்டிருக்கிறது ஒரு பூனையைப் போல தன்னைத் தானே நக்கித் தான் அதனைச் சுத்தப்படுத்த வேண்டும்.

கடைசியாக ஒரு விடயம் பூனை காயப்பட்டால் நாய் வந்து நக்காது,சிங்கம் காயப்பட்டால் புலி வந்து நக்காது.ஏன் ஒரு நாய் இன்னொரு நாயிடமிருந்து ஒரு துண்டு எலும்பையும் சண்டையிட்டுப் பறிக்குமே தவிர நாய் கெஞ்சி மன்றாடி வாங்கியதைப் பார்த்திருக்கிறீர்களா.சிங்கம் பிடித்த இரையை புலி அதனுடைய காலை நக்கி இரந்துண்டு வாழ்ந்ததைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இல்லை. இல்லவே இல்லை ஏனென்றால் அவை ஜெயகாந்தன் பேச்சைக் கேட்டதில்லை.

நான் "தன்னைத் தானே நக்கிக் குணப்படுத்தும் நாயாக" இருக்க ஆசைப்படுகிறேன். ஜெயகாந்தனாக அல்ல

நன்றி - ஈழநாதன்
http://kavithai.yarl.net/archives/003070.html#more

அண்மையில் தமிழ்மணத்தில் வாசித்தவற்றில் என்னை வெகுவாக கவர்ந்த சிறந்த ஆக்கம் இது. யாழ்கள உறவினர்களுடன் இதை பகிர்ந்து கொள்கிறேன்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)