Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பழந்தமிழர்களின் காலடிச்சுவடுகள்
#1
பழந்தமிழர்களின் காலடிச்சுவடுகள்

இயற்கையை எதிர்த்துப் போராடி வளர்ந்ததே மனித வரலாறு. இயற்கை கடுமையானத் தாக்குதலை மனித சமுதாயத்தின் மீது தொடுக்கும் போதெல்லாம் துவண்டு விழும் மனிதன், அதே வேகத்தில் திரும்ப எழுந்து நின்று, தன்னையும் தன் சக மனித இனத்தையும் பாதுகாத்துக் கொள்ள கடுமையாகப் போராடுகிறான். சுனாமிக்குப் பின் மனிதகுலம் எழுந்து நிற்க முயற்சிப்பதும் அவ்வகையிலேயே. பல்லாயிரக்கணக்கான உயிர்களைத் தூக்கி சாப்பிட்ட சுனாமிக்கு எதிராக களம் அமைக்க உலகம் முழுக்கப் பல்வேறு திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கின்றனர்.

அதில் ஒன்று, சுனாமி அலைகளைக் கண்டறியும் கருவிகளைக் கடலுக்குள் நிறுவுவது, (பெரும்பாலான நாடுகளில் இத்திட்டத்தை தான் பரிசீலித்துக் கொண்டுள்ளனர். சுனாமி பேரலைகள் கடலில் உருவாகும் போதே, கடலுக்குள் பொருத்தப்பட்டுள்ள கருவிகள் அடுத்த நிமிடமே கரைக்குத் தகவல் அனுப்பிவிடும். கரையோரங்களில் வசிப்பவர்கள் வீடு-வாசல் அனைத்தையும் விட்டு ஓடிப் போய் பிழைத்துக் கொள்ளலாம்.



ஆனால் இலங்கையில் தமிழர் பகுதிகளைத் தங்கள் வசம் வைத்திருக்கும் விடுதலைப்புலிகள் கொஞ்சம் வித்தியாசமான முயற்சியில் இறங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். மண்ணைப் பயன்படுத்தி கடற்கரையோரத்தில் சுவர் அமைக்கப் போவதாக அந்த அமைப்பின் பொறியியல் மற்றும் கட்டுமானப்பிரிவு அறிவித்துள்ளது. முதலில் கேட்டால் யாருக்கும் சிரிப்பு வரும். பொங்கி வரும் கடல் அலைகளை மண் வைத்து தடுக்க முடியுமா? எனக் கேள்வி எழுப்பலாம். இந்த கேள்விக்கு விடை தேட வேண்டுமானால், வரலாற்றைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் ஒரு விஷயம் புரியும். தமிழர்கள் அந்தக் காலத்தில் இன்றைக்கு நாம் மலைத்துப் போய் பார்க்கும் தொழில்நுட்பங்களை மிகச் சாதாரணமாக அன்றைக்குச் சாதித்திருக்கிறார்கள். அவ்வகை தொழில்நுட்பத்தை தான், இன்றைக்கு விடுதலைப்புலிகள் பயன்படுத்தப் போவதாய் அறிவித்திருக்கின்றனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சிந்தித்து செயல்படுத்திய ஒரு தொழில்நுட்பம் இன்றைக்குப் பொருந்துமா? என்று ஹைடெக் தமிழர்கள் கேட்பதும் புரிகிறது. முடியும் தமிழர்களே! இயற்கையை ஒட்டிய தொழில்நுட்பத்தை வடிவமைத்துப் பாருங்கள். பஞ்சபூதங்கள் பணிவாக உங்கள் முன் கைகட்டி நிற்கும். எப்படி சாத்தியம்? அன்றைக்கு , 2000 ஆண்டுகளுக்கு முன் கரிகாலன் என்ற சோழ நாட்டு அரசன் வடிவமைத்திருக்கும் கல்லணையே அதற்கு சாட்சி! 1830 ஆம் ஆண்டு சர் ஆர்தர் காட்டன்(Sir Arthur Cotton) என்ற பிரிட்டிஷ் பொறியியல் வல்லுநர் இந்தியாவில் நீர் அணைக்கட்டுகளை வடிவமைக்க இங்கிலாந்திலிருந்து வந்தார். கல்லணைக்குச் சென்றவர், அணையின் பக்கவாட்டுப் பகுதியில் தோண்டினார். மலைத்துப் போனார். அப்படி ஒரு தொழில்நுட்பத்தை அதற்கு முன் அவர் சிந்தித்ததும் இல்லை; கேள்விப்பட்டதும் இல்லை.அந்த தொழில்நுட்பம் இது தான்:

காவிரி ஒடும் பகுதியில், நீர் வேகமாக ஓடிக் கொண்டிருந்த காலத்தில் வரிசையாக, பெரிய பாறைக்கற்களைக் கொண்டு அடுக்கியிருக்கிறார்கள், தண்ணீரின் வேகத்தில் பாறைகளின் கீழ் உள்ள மணல் அரித்துக்கொண்டு ஓட,ஓட அப்படியே அந்த பாறைகள் தரையில் அழுந்த ஆரம்பித்தன; பல அடிகள் கீழ் அழுந்திய பாறைகளின் மேல், ஒரு வகையான களிமண் கலவையை (மணல்,கருப்பட்டி, வெள்ளைச்சுண்ணாம்பு,பதநீர் கலந்த சக்தி வாய்ந்த இயற்கையான சிமெண்ட் கலவை) பூசி, அதன் மீது மீண்டும் பாறைகளை அடுக்கியிருக்கிறார்கள். இவ்வாறு மீண்டும் பாறைகள்,கலவை என ஒன்றன் மேலொன்றாக அடுக்கடுக்காக அமைக்கப்பட்டதால், தொடக்கத்தில் அடுக்கி வைத்த பாறைகளின் வரிசை, பூமியில் ஆற்றின் கீழே மணல் பகுதியைக் கொஞ்சம்,கொஞ்சமாகத் தாண்டி அடிஆழத்தில் கடினமான தரையில் போய் அருமையாக உட்கார்ந்து கொண்டது. தயாராகி விட்டது அணை.

1080 நீளத்தில், 50 அடி அகலத்தில், 18 அடி உயரத்தில் வலிமையாக நின்று கொண்டிருந்த அந்த இரண்டாயிரம் ஆண்டு கால அணை, சர் ஆர்தர் காட்டனின் உள்ளத்தில் பிரமிப்பினால் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே இருந்தது. தன்னுடைய வாழ்க்கைச்சரித்திரத்தில் அச்சம்பவத்தினை "எவ்வளவு ஆழம் என்று கண்டுபிடிக்க முடியாத மணற்படுகையில் எப்படி அடித்தளம்(foundation) அமைப்பது என்ற தொழில்நுட்பத்தினை இந்த அணையைக் கட்டிய தமிழர்களிடமிருந்து தான் நாம் தெரிந்து கொண்டோம்; இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தான் ஆற்றின் மீது பாலங்கள், அணைக்கட்டுகள் போன்ற நீரியல் தொழில்நுட்பக் கட்டுமானங்களை மேற்கொண்டோம். இம்மகத்தான சாதனையைப் புரிந்த முகம் தெரியாத மனிதர்களுக்கு நாம் என்றென்றும் நன்றிக்கடன்பட்டுள்ளோம்" என British Irrigation Works in India என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்."


இப்படிப்பட்ட புகழ் வாய்ந்த தமிழர்களின் கட்டடக்கலை, கல்லணையோடு நிற்கவில்லை. தஞ்சை,கங்கை கொண்ட சோழபுரம், மதுரை, இராமநாதபுரம், திருச்சி, திருநெல்வேலி நகரங்களில் இன்றும் நிமிர்ந்து நிற்கும் கோயில்களே இதற்கு சாட்சி. ஒற்றைக்கல்லில் கோவிலின் மேல் கோபுரம் (தஞ்சை) அமைந்துள்ள கட்டடக்கலை இதற்கு ஓர் அற்புத டுத்துக்காட்டாகும். மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை இரண்டு பழந்தமிழ் இலக்கிய நூல்களும் தமிழர்களின் கட்டடக்கலை தொழில்நுட்பத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.



காலத்தால் அழியாத தமிழர்களின் அன்றைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே, இலங்கையின் வடகிழக்கில் கடலோரப் பகுதிகளில் தடுப்புச் சுவர் அமைக்கப் போவதாக புலிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. முல்லைத் தீவு பகுதியில் சுமார் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு வலுவான மண் சுவரைக் கட்ட விடுதலைப் புலிகள் முடிவு செய்துள்ளனர். கடலிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள நிலப் பகுதியில் இந்த தடுப்புச்சுவர் கட்டப்படுகிறது. 3 மீட்டர் உயரம், 2 மீட்டர் அகலத்தில் இந்த தடுப்புச்சுவர் அமையவுள்ளது. பழங்காலத்து தமிழர் கட்டடக் கலையைப் பயன்படுத்தி இந்தத் தடுப்புச் சுவர் முற்றிலும் மண்ணால் கட்டப்படவுள்ளது.

மணல், கருப்பட்டி, வெள்ளைச் சுண்ணாம்பு, பதநீர் உள்ளிட்டவற்றை கலந்து அமைக்கப்படவுள்ள இச்சுவர் கான்கிரீட் சுவரை விட மிகவும் வலுவானதாகவும், உறுதியானதாகவும் அமையும். செலவும் மிக மிக குறைவாகவே இருக்கும் என தமிழர் மறுவாழ்வு அமைப்புத் தலைவர் சிவனடியார் அறிவித்துள்ளார். அது மட்டுமன்றி கட்டப்படவுள்ள அம்மண் சுவர், நமது மூதாதையர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும் என அவர் கூறியுள்ளார். சுவர் கட்டுவது மட்டுமன்றி, அவற்றை ஒட்டி மாங்குரோவ் காடுகளை வளர்க்கவும்,தென்னை மரங்களை நடவும் திட்டமிட்டுள்ளனர். சுனாமியை இவ்வாறு இயற்கையான முறையில் தடுக்க முடியும் என்பது தான் உண்மை.

இயற்கையை அதன் போக்கிலேயே சந்தித்த நாகரிகப்பின்னணி கொண்ட நம் தமிழினம், இன்றைக்கு ஆயிரக்கணக்கில் அருமையான உயிர்களைப் பறிகொடுத்து நிற்கின்றது. இயற்கையின் ஆன்மாவை அசைத்துப் பார்க்கும் முயற்சியில் ஈடுபடாமல், இயற்கையை சமாளிக்கும் வித்தையை நம் முன்னோர்கள் நமக்கு நிறையவே விட்டுச் சென்றுள்ளனர். அந்த காலடித்தடங்களைப் பின்பற்றினால், காற்று கூட கைகளில் வந்து அடங்கும்.....


இரா.குறிஞ்சிவேந்தன்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)