Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிளாலி பயணம்
#1
ஓடுகிற வண்டியோட...- மீளும் நினைவுகள் - 1

மதி அக்கா தனது யாழ்ப்பாண கொழும்புப் பயணம் பற்றி எழுதினாலும் எழுதினா,எனக்குள்ளும் ஒரு ஆசை,நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியூர் வந்தது அண்மைக் காலமேயென்றாலும்,நிறைய வித்தியாசமான அனுபவங்களை கண்டிருக்கிறேன்.அவற்றையெல்லாம் குடிலிலை எழுதினா சொந்த ஊருக்குப் போக விருப்பம் இருந்தும் போக முடியாமல் கொஞ்சப்பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு,ஊர் போய் வந்த திருப்தி கிடைக்கும்.

சரி எழுதலாம் எங்கேயிருந்து ஆரம்பிப்பது.எதைச் சொல்லவருகிறாயோ அதிலிருந்து தொடங்கவேண்டியதுதானே என்று சொல்லுவது கேட்கிறது.அதுதானே பிரச்சனையே.இதிலே எத்தனை பேருக்கு யாழ்ப்பாணம் கொழும்பு பிரயாணம் தெரியும்.அப்ப அவையளுக்கு எதிலிருந்து சொல்லுவது.சரி எல்லோருக்கும் விளங்கட்டும்.விளங்கிறமாதிரி சொல்லுவம்.

முதல்ல யாழ்ப்பாணத்திலையிருந்து கொழும்பு பயணம் மதி அக்கா சொன்ன மாதிரியோ அல்லது ரமணி அண்ணா மறுமொழியிலை சொன்னமாதிரியோ புகைவண்டிப்பிரயாணமாகத் தான் இருந்ததாம்.அது என்ன இருந்ததாம்?அதைத் தான் நான் பார்க்கேலையே பிறகு எப்பிடி இருந்தது என்று சொல்லுறது அதுதான் மற்றவர்களை மேற்கோள் காட்டி இருந்ததாம்.

<img src='http://kavithai.yarl.net/archives/jaffna_map.jpg' border='0' alt='user posted image'>

படம் பார்த்தா கொஞ்சம் விளங்கும்

காங்கேசன் துறையிலிருந்து தொடங்குகிற புகைவண்டி அப்படியே யாழ்ப்பாணம் மத்தி வந்து(இடையிலை நிறைய இடமிருக்கு சொன்னால் குழம்பிவிடும்) ஆனையிறவுப் பாதையாலை வவுனியா போய் அப்பிடியே கொழும்பு போகும் என்பது செவி வழிக்கதை.

<img src='http://kavithai.yarl.net/archives/srilanka_train.jpg' border='0' alt='user posted image'>

எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்முதலா யாழ்ப்பாணத்திலை ஒரு சில நாள் புகைவண்டி பார்த்திருக்கிறேன் போனதில்லை.ஒரு கட்டத்திலை வவுனியாவுக்கு இங்காலை புகைவண்டி மறிக்கப்பட்டாச்சு.கொஞ்ச நாள் தண்டவாளம் இருந்திச்சு பிறகு அதையும் அண்ணன்மாரும் பொதுமக்களும் எடுத்துக் கொண்டு போயிட்டினம்.வழித்தடம் மட்டும் அநாதையா இருந்திச்சுது இப்ப அதையும் மூடி மரங்கள் பற்றைகள் வளர்ந்திட்டுது,இந்தா இதாலைதான் முந்தி ரயின் ஓடிச்சுது எண்டு அம்மாமார் பிள்ளைகளுக்குக் காட்டுறதுக்கு கூட ஒண்டுமில்லை.

அப்ப பிறகு யாழ்ப்பாணத்திலை இருந்து ஒருத்தரும் கொழும்பு போகேலையோ.நீங்கள் கேட்பீர்கள் போனவை ஆனா பெரும் சாகசங்கள் செய்துதான் போகவேண்டியிருந்தது அந்த சாகசங்கள்
தொடரும்............

<b>நன்றி - ஈழநாதனின் வலைப்பூ</b>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
ஓடுகிற வண்டியோட...- மீளும் நினைவுகள் - 2

ம்ம் எதிலை விட்டனான்? ஆனையிறவுப் பாதை அடைபட்டதோடை விட்டனான் ஒரு கேள்வியோடை.ஆனையிறவுப் பாதை அடைபட்ட பிறகு யாழ்ப்பாண மக்கள் எப்படி கொழும்பு போனவை என்ற கேள்வியோடை.

அதுக்குப் பதில் சொல்ல முதல் ஒரு சின்ன விளக்கம்.வெறுமனே யாழ்ப்பாணத்திலியிருந்து கொழும்பு போறதுக்கு ஏன் இவ்வளவு கஷ்டம்?, இவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் கொழும்பு போகவேணும்?.உத்தியோக இடமாற்றம்,உயர்கல்வி போன்ற சின்னச் சின்னக் காரணங்கள் இருந்தாலும் சனம் அள்ளுகொள்ளையாக கொழும்பு போக வெளிக்கிட்டதுக்குக் காரணம் யுத்தத்தால் யாழ்ப்பாணத்திலை வாழ முடியாதென்று கொழும்புக்கோ வெளிநாடுகளுக்கோ வெளிக்கிட்டவை பாதிப்பேர்.
இப்படி வெளிநாடு போய் உழைச்சு அனுப்புறவையின்ரை காசிலை யாழ் மக்கள் தங்கியிருக்கவேண்டியதொரு காலம் வந்தது அதுதான் பொருளாதாரத்தடைக் காலம் .அதாவது யாழ்ப்பாணது உற்பத்தி வெளியிடத்துக்குப் போகாமலும் வெளியிடத்து உற்பத்தி உள்ளே வராமலும் அரசாங்கத்தால் தடுக்கப்பட்டது.இதோடை வாழ்க்கைச்செலவும் அதிகரிச்சதாலை,தன்னிறைவுப் பொருளாதாரமாக இருந்த யாழ்ப்பாணப் பொருளாதாரம் தங்கியிருத்தல்ப் பொருளாதாரம் ஆக மாறின காலம்.

இப்படி வெளிநாடுகளிலிருந்து வரும் காசிலை வாழ்க்கை நடத்த வேண்டி இருந்ததாலை பெரும்பான்மையான யாழ்ப்பாணத்தவர் கொழும்பு போய் வரவேண்டி இருந்தது.வெளிநாட்டிலை இருக்கிற மகனோடையோ மகளோடையோ கதைக்க வேணுமெண்டால் கூட யாழ்ப்பாணத்து ஆட்கள் கொழும்பு அல்லது வவுனியா போய்த் தான் கதைக்கவேண்டியிருந்தது.இப்படிப்பட்ட காரணங்களாலை வெட்டினாலும் வளரும்மரம்போலை கொழும்பு போரதுக்கு ஒரு வழி அடைபட்டால் மறுவை கண்டுபிடிச்சு ஆகவேண்டிய கட்டாயம்.

அந்தக் நேரத்திலை உதவினதுதான் கொம்படி ஊரியான் பாதையும் பூநகரிப்பாதையும்.இவையெல்லாம் கடனீரேரிப் பிரதேசங்கள்.கடல் பாதி சேறு பாதியாய் இருக்கும் கடலுக்குள்ளை பாதித் தூரம் போட்டைத் தள்ளிக் கொண்டு போய்த்தான் ஏறவேணும் இடுப்பளவு சேற்றுக்கை இறங்கித் தள்ளுறதுக்குள்ளை பாதி உயிர் போய்விடும்.

<img src='http://kavithai.yarl.net/archives/boat.jpg' border='0' alt='user posted image'>

இவ்வளவு கஷ்டத்துக்கை போற ஆட்களின்ரை எண்ணிக்கை குறைஞ்சிருக்கவேணுமெண்டா அதுதான் இல்லை ஏனெண்டா முன்னிலும் மோசமாக போர் நடக்கத் தொடங்கிவிட்டது எப்படியெண்டாலும் உயிர் தப்பினால் காணும் எண்ட நிலையிலை சனம் கொழும்புக்கு அள்ளுப்பட்டுது.

பூநகரிப்பகுதியிலை இருந்த ஆர்மியின்ரை முகாமாலை அந்தப் பாதைகளால் நடந்த போக்குவரத்தும் முடிவுக்கு வந்தது.அடுத்து என்ன வழி ..... கொஞ்ச நாள் பொறுங்கோ

<b>நன்றி - ஈழநாதனின் வலைப்பூ</b>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
ஓடுகிற வண்டியோட...- மீளும் நினைவுகள் - 3

பூநகரி ஆர்மியாலை பூநகரிப்பாதையால் நடைபெற்ற படகுப் போக்குவரத்து முடிவுக்கு வந்ததென்று சொல்லி நிறுத்தினேன்.அது எவ்வாறான பிரச்சனை என்று சொல்லவில்லை.படகுகள் இக்கரையிலிருந்து புறப்பட்டதும் அவற்றுக்கு வழிகாட்ட எந்தவொரு வசதியும் இல்லை அக்கரையில் தெரியும் ஒளிப்பொட்டுக்களை வைத்தே அடையாளம் கண்டு பிடித்துச் செல்லும்.இப்படிச் செல்லும் போது தெரியும் ஒளிப்பொட்டுக்கள் நிச்சயம் அடுத்த கரையிலுள்ள இறங்கு துறையாகத் தான் இருக்கவேண்டும் என்பதில்லை.சிறிது காற்றுப் பலமாக அடிச்சுதென்றால் போய்ச்சேர்றது பூநகரி முகாமாகத்தான் இருக்கும்.அப்படிப் போய் உயிர்விட்ட கதையும் உண்டு.அதோடை இந்தப்படகுப் போக்குவரத்தை குழப்பவென்றே.பூநகரியின் பக்கத்தில் நாகதேவன் துறை என்ற இடத்திலை நவீன வசதிகளோடை கடற்படை முகாமொன்றும் அமைக்கப்படதும் சனத்துக்கு அந்தப் பாதையை தொடர்ந்து பயன்படுத்திறது பாதுகாப்பா தெரியேலை.

அதாலை சனம் கிளாலி என்ற இடத்திலை ஓரளவு வசதியா இருந்த இடத்தைப் படகுப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தத் தொடங்கிச்சுது.இந்த இடத்தாலை முந்தி வன்னிக்கு வத்தைகளிலை போக்குவரத்து நடந்ததாம் ஓரளவு ஆழம் குறைந்த கடற்பகுதி.இங்கேயும் அதே நிலைமைதான்.ஓரளவு இளைஞர்களாக இருக்கிறவை படகை தள்ளிக் கொண்டு இடுப்புக்கு மேல் தண்ணீர் வருமளவுக்கும் போகவேணும் அதுக்குப் பிறகே படகு ஓடத்தொடங்கும்.

சனம் பூநகரிப் பாதையை விட்டு கிளாலியாலை போறது ஆர்மிக்கும் தெரிஞ்சிட்டுது.சும்மா இருப்பானோ?எப்படியாவது யாழ்ப்பாண மக்களைப் பட்டினி போட வேண்டுமென்று தீர்மானிச்சவன்.மக்கள் இப்படி கொழும்பு போய் வெளிநாடுகளிலிருந்து வாற காசிலை ஓரளவுக்காவது சாப்பிட்டு உயிர்வாழுறது அவனுக்கு கண்ணுக்கை குத்திச்சுது.

பிறகென்ன தொடர்கதைதான் ஆனையிறவாலையும் பூநகரியாலையும் வெளிக்கிட்டு வாற கடற்படைப் படகுகள் பயணிகள் போற படகுகளைத் துரத்தத் தொடங்கியது.சனமும் ஆர்மிக்குப் பயந்து பகலிலை போறதை நிற்பாட்டி இரவிலை போக வெளிக்கிட்டுது.இதிலை போக்குவரத்துக்குப் பயன்படுத்தின படகுகளைப் பற்றியும் கொஞ்சம் சொல்லவேணும்,யாழ்ப்பாணத்தின்ரை கரையோரப்பகுதிகளிலை இருந்து மீன்பிடியைத் தொழிலாகக் கொண்ட மக்கள்,ஆர்மி கடலிலை இறங்கி மீன் பிடிக்கிறதைத் தடை செய்ததாலை வேறு வழியில்லாமல் தாங்கள் மீன் பிடிச்ச படகுகளைக் கொண்டுவந்து கிளாலியில் போக்குவரத்துக்குப் பயன்படுத்துச்சினம்.இதுக்குப் பிறகும் நான் அந்தப் படகுகளின் திறத்தைச் சொல்லத் தேவையில்லை.

<img src='http://kavithai.yarl.net/archives/kilali_boat.jpg' border='0' alt='user posted image'>


படகு ஓட்டிகளுக்கு குடும்பம் வாழவேண்டுமானால் இப்படி ஏதாவது செய்யவேண்டிய நிலை,போறவைக்கு கொழும்பு அல்லது வவுனியா போனால்தான் பணம் பெறலாம் அல்லது வெளிநாடுகளுக்குப் போனால்தான் உயிர்தப்பலாம் எண்ட நிலை இதாலை யாரும் உயிருக்குப் பயந்தார்களெண்டாலும் போக்குவரத்தைக் கைவிடவில்லை.

<img src='http://kavithai.yarl.net/archives/payanam.jpg' border='0' alt='user posted image'>

இக்கரையில் பயணத்திற்காகக் காத்திருக்கும் மக்கள்

1992 ம் ஆண்டு மார்கழி மாதமளவில் புலிகளால் நடத்தப்பட்ட தாகுதலுக்குப் பழிவாங்கும் முகமாக கிளாலியில் பொதுமக்கள் பயணம் செய்த படகு ஒன்றை வழிமறித்த சிறீலங்காக் கடற்படையினர் 15 இற்கும் மேற்பட்ட பொதுமக்களை ஈவு இரக்கமின்றிக் கொன்று குவித்தனர்.கிளலியில் நடைபெற்ற இந்தப்படுகொளையானது யாழ்ப்பாணம் முழுவதும் எதிரொலித்தது ஏனெனில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மக்கள் அன்று பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.இப்படி நடந்திட்டுதாம் என்ற செய்தி கேட்டதுமே அவர்களின் சொந்தபந்தமெல்லாம் அலறியடித்துக் கொண்டு வந்து கிளாலிக் கரையில் கூடிச்சுது.எங்கும் ஒரே ஓலம் ஒப்பாரி செத்தது யார் உயிர் தப்பினது யார் என்றே தெரியாமல் இருந்திச்சு அடுத்தநாள் விடியக்காலமை புலிகளின் படகுகளும் சில மீனவர்களின் படகுகளும் போய் உயிரிழந்தவர்களுடன் படகைக் கட்டியிழுத்து வரும்வரைக்கும் ஒரே அல்லோலகல்லோலம்.

இது நடந்து சில நாட்களுக்குப் படகுப் போக்குவரத்து நிற்பாட்டப்பட்டிட்டுது.படகு ஓட்டிகள் மட்டுமில்லை சனத்துக்கும் போறதுக்குப் பயம்.இருக்கிறதாலை உயிருக்கு ஆபத்து என்று வெளிநாடு போக வெளிக்கிட்டா போகிற வழியிலை உயிர் போய்விடுமோ என்கிற நிலமை.

சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் படகுப் போக்குவரத்து ஆரம்பிச்சுது.புலிகளின்ரை ஆலோசனையின் பேரிலை படகிலை.காற்றடைத்த டியூப்,வெற்றுக் கான் என்பன உயிர்காக்கும் மிதவைகளாக கொண்டு செல்லப்பட்டன கொஞ்சநாள் நிம்மதியாய்ப் போச்சுது.அதற்குப் பிறகும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு சம்பவங்கள் நடந்தன.அக்கரை என்று நினைத்து காற்றினால் அள்ளுண்டு பூநகரி முகாமுக்கே போனது ஒரு படகு.

திரும்பவும் 1993 ம் ஆண்டு தை மாதம் 3ம் திகதி யாழ்ப்பாணத்து மக்களுக்கு ஒரு துக்கதினமாக விடிந்தது.அன்று இரவு (2ம்திகதி) பயணம்செய்த படகுகள் சிறிலங்காக் கடற்படையாலை வழிமறிக்கப்பட்டு கொத்திக் குதறப்பட்டனர்..இதிலை ஓட்டியளோடை நீந்தத் தெரிஞ்சசிலபேர் கடலிலை குதிச்சுத் தப்பப் பார்த்திருக்கினம்,அவர்களுக்கு மேலால் கடற்படைப் படகுகள் ஓட்டப்பட்டு சின்னபின்னமாக்கப்பட்டனர்.அப்படியும் தப்பி வந்த சிலர் சொன்ன சம்பவம் தான் இது.இதிலை 50 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியானார்கள்,15 இற்கும் மேற்பட்டோர் வெட்டுக்கயங்களுடன் உயிர் தப்பினர்.இதில் இறந்த பலரது உடல்கள் யாழ்ப்பாணக் குருநகர்ப் பகுதியிலும் கிளாலி அக்கரையிலும் கரையொதுங்கின .

<img src='http://kavithai.yarl.net/archives/Skull.jpg' border='0' alt='user posted image'>

பல நாட்கள் நீருள் கிடந்து உருக்குலைந்த சடலமொன்று படத்தில் காணப்படுகிறது.

யாழ்ப்பாணமே சோகத்தில் மூழ்கியது.இறந்தவர்கள் பற்றின கவலை ஒருபக்கம் இனி எப்பிப் போறது என்ற கவலை மறுபக்கமாய் சனம் அலைக்கழிந்தது.இந்தச்சம்பவம் பற்றிப் பாராளுமன்றத்தில் பிரஸ்தாபித்தபோது அவை மக்கள் பயணம் செய்த படகுகள் அல்ல புலிகள் பயணம் செய்த படகுகள் என்று கதை சொல்லப்பட்டது.தமது தலைவிதியை நொந்து கொள்வதைத் தவிர மக்களுக்கு வேறு வழி தெரியவில்லை.
சில வாரங்களாகத் தடைப்பட்ட போக்குவரத்து மீண்டும் ஆரம்பித்தது என்ன செய்வது போய்த்தான் ஆகவேண்டும் என்ற நிலை.இப்போது மக்களுக்கு வழிப்பயணத்திற்குப் பாதுகாப்பு வழங்க புலிகளின் கடற்படைப் பிரிவு முன்வந்தது.

பொதுமக்கள் பயணம் செய்யும் படகுகள் வலுக்குறைந்த இயந்திரங்கள் மூலம் இயக்கப்படுபவை.அவை ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு சிறிது வலுக்கூடிய வெளியிணைப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்டன.வழி மாறிவிடாமல் இருப்பதற்காக வழித்தடம் ஓலைகளால் அடையாளப்படுத்தப்பட்டது.மக்கள் பிளாஸ்ரிக் கான் காற்றடைத்த ரியூப் என்பவற்றைத் தம்முடன் எடுத்துச் சென்றனர்.கொழும்பு அல்லது வெளியிடங்களுக்கு புறப்படுபவர்களைப் பார்த்து மற்றவர்கள் அண்ணை மறக்காமல் இரண்டு "ஒல்லித் தேங்காய்" எடுத்து வையுங்கோ என்று பகிடி பண்ணுவார்கள்.அந்தளவுக்குப் பாதுகாப்பில்லாமல் மாறிப்போனது பயணம்.

பயணம் தொடரும்...........

<b>நன்றி - ஈழநாதனின் வலைப்பூ</b>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#4
ஓடுகிற வண்டியோட...- மீளும் நினைவுகள் - 4

கொழும்பு போகும் சனம் ஒல்லித்தேங்காயுடன் பயணம் போனது என்று சொன்னேன்.ஒல்லித்தேங்காய் எதற்கு என்று சொல்லவில்லை.தேங்காயில் இடையிலேயே பழுதடைந்த தேங்காய்கள் அவற்றை மூடியுள்ள தும்புடன் நீரில் போட்டால் நன்கு மிதக்கக் கூடியவை.இப்படியான இரண்டு தேங்காய்களை கயிற்றால் பிணைத்து அவற்றை இடுப்பிலை கட்டி நீந்தப்பழகுறதுக்கு பயன்படுத்துவினம்.ஆமி வந்தவுடனை கடலுக்கை குதிச்சு நீந்தாட்டிலும் மிதக்கிறதுக்காவது பயன்படுமே என்று தான் இவற்றையும் கொண்டு போனவை.

தொடர்ந்த இழப்புகளாலை சனம் கிளாலிப் பாதையென்றாலே ஏதோ யமலோகம் போறமாதிரிப் பயப்படத் தொடங்கீட்டுது.கொழும்பு போற ஆக்களை வழியனுப்ப வாறவை.போறவையை ஏதோ பலிக்களத்துக்குப் போற ஆடுகள் மாதிரிப் பார்த்திச்சினம்.

கிளாலி Map
இதாலை விடுதலைப்புலிகளுக்கும் பெரும் பிரச்சனையாகப் போச்சுது உவ்வளவு வீரம் காட்டிறியள் உதிலை வாற நேவிக்கு அடிக்கக் காணேலை என்று சனம் நேரடியாகக் கேட்கத் தொடங்கீட்டுது.இந்தப்பிரச்சனையை பாராளுமன்றத்திலை கொண்டு போச்சினம் இரண்டு எம்பிமார்.அதுக்கு அரசங்கம் சொன்ன பதில் ஆனையிறவுப்பாதையாலை ஏ 9 றோட்டாலை சனம் போக விடாமல் புலிகள் இயக்கம் தான் தடுத்து வைச்சிருக்கு,கிளாலிப் பிரதேசம் தடை செய்யப்பட்ட பிரதேசம் எண்டு எண்டு அவையள் போகாத ஊருக்கு வழி சொல்லிச்சினம்.இதுவும் புலிகளுக்கு பெருத்த பிரச்சனையாகப் போச்சுது தாங்கள் களத்திலை இறங்கினாத்தான் சரி என்ற முடிவுக்கு வந்திச்சினம்.அப்ப இவ்வளவு நாளும் புலிகள் பாதுக்காப்புப் குடுக்கேலையோ என்று கேட்பியள் சும்மா இரண்டு படகு அங்கையும் இங்கையும் ஓடித்திரியும் .நேவிட்டையோ அல்லது கெலியிலை வாற ஆமிட்டையிருந்தோ பாதுகாப்பு குடுக்கிற அளவுக்கு அவயிட்டை வசதி இருக்கேலை.இப்ப தவிர்க்க முடியாத கட்டம் வந்தவுடனை கடற்புலிகள் காவலுக்கு வந்திச்சினம்.

<img src='http://kavithai.yarl.net/archives/seatigers.jpg' border='0' alt='user posted image'>

சனத்துக்கும் கொஞ்சம் நம்பிக்கை ஏனெண்டா வல்வெட்டித்துறை முல்லைத்தீவு பகுதியளிலை கொஞ்ச நாள்களுக்கு முதல்தான் நேவிக்கப்பல்கள் கடற்புலியளிட்டை அடிவாங்கியிருந்தவை அதாலை சனம் கடற்புலிகளை நம்பி கிளாலிப்பாதையை பயன்படுத்தத் தொடங்கியது.

நான் முதல் சொன்ன மாதிரி வலுக் கூடிய இயந்திரங்கள் பூட்டப்பட்டு ஒன்றோடை ஒண்டு கட்டப்பட்டு படகுகள் பயணம் போகத் தொடங்கிச்சுது.வழியடையாளம் ஓலைகள்.கடற்புலிகளின்ரை படகுகள் ரோந்து போகத் தொடங்கிச்சினம்.புலியளின்றை படகுகள் களத்திலை இறங்கின உடனை அதுவே ஆமிக்கும் வாய்ப்பாப் போச்சுது ஏனென்டா கடற்புலியளிட்டை இருக்கிற பெரிய படகுகள் ஆழம் குறைஞ்ச பகுதியிலை போக மாட்டுது ஆனால் நேவி வைச்சிருந்த வோட்டர் ஜெற் எண்டு சொல்லுற அதிவேகப்படகுகள் ஒரு அடி ஆழத்தண்ணிக்குள்ளையும் போகும்.இதாலை நிலமையைத் தனக்குச் சாதகமாய்ப் பயன்படுத்தி காவலுக்கு வரும் கடற்புலியளை அழிக்கவும் போக்குவரத்து செய்யுற பொதுமக்களை சாட்டோடை சாட்டா கொன்று தள்ளவும் நேவி முயன்றுது.


கிளாலிப் பாதை இரண்டு பக்கமும் தங்கடை பலத்தை பரீட்சை செய்து பார்க்கிற களமா மாறிப் போச்சுது தினம் தினம் சண்டைதான்.இரவு 8 மணியளவிலை புலியளின்ரை படகுகள் உலாப்போகும் போய் நேவி தென்படவில்லை என்ற உடனை ஒரு தொகுதி பொதுமக்களின்ரை படகுகள் போகும்.இது பூநகரியிலையும் ஆனையிறவிலையும் இருக்கிற நேவியின்ரை ராடரிலை தெரிந்தவுடனை நேவிப்படகுகள் தயாராகும் சனத்தின்ரை படகுகள் கடல் மத்திக்கு வரும் வரை பார்த்திருந்து விட்டு நேவிப்படகுகள் பாய்ந்துவரும் பிறகென்ன கடற்புலியளின்ரை படகுகள் துரத்தும் இவர்கள் ஓட அவர்கள் கலைக்க அவர்கள் ஓட இவர்கள் கலைக்க கிளாலி அல்லோலகல்லோலப்படும்.சனம் உயிரைக் கையிலை பிடிச்சுக் கொண்டு பயணம் போகும்.இப்பிடி சண்டைக்கு இடையிலை அம்பிட்டு கொஞ்சப்பேர் செத்துப் போனார்கள்.சண்டையிலை தங்களுக்குத் தோவியெண்டா ஆனையிறவிலையிருந்தும் மண்டைதீவிலையிருந்தும் கிளாலிக்கு ஷெல் அடிப்பாங்கள் அதிலையும் கொஞ்சம் காயப்பட்டும் செத்தும் போனது.

இப்படியாக வெறுமனே போய் வாற பாதைக்குக் கூட தைழ்ச் சனம் நிறைய விலை குடுக்கவேண்டியிருந்தது.அக்கரையிலும் இக்கரையிலும் இருக்கிற உறவுகளை இணைக்கும் ஒரே வழியான கிளாலியே சிலவேளைகளில் உறவுகளை நிரந்தரமாகப் பிரித்துவிடும் இடமாகவும் மாறியது.அப்பா வியாபார நிமித்தம் அடிக்கடி கொழும்பு போவார் நான் மோட்டார் சைக்கிளில் ஏத்திக் கொண்டு போய் கிளாலியின் இக்கரையில் விடுவேன்.அப்போது ஊரடங்கு எதுவும் இல்லை அதாலை நடு இரவிலையும் திரும்பிப் போகலாம் நான் போகமாட்டன்.இப்படிப்பட்ட பாதையாளை அப்பாவை விட்டுவிட்டு எப்படி நான் மட்டும் நிம்மதியாக வீடு போக முடியும் வீட்டில் அழுது கொண்டிருக்கும் அம்மாவின் முகத்தை விடியும் வரை பார்த்துக் கொண்டிருப்பதைவிட கிளாலியின் இக்கரையில் இருந்து நடப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பது நல்லதாகப் பட்டது.அதைவிட முக்கியமான ஒன்று அன்று இரவு எந்தவித அசம்பாவிதமும் நடக்கேலையெண்டா அப்பா நல்லபடி அக்கரை போய்ச்சேர்ந்திட்டார் என்று அர்த்தம் அந்த நல்ல சேதியை விடிந்தவுடனை ஓடிப்போய் அம்மாவிடம் சொல்லி அம்மாவின் முகத்திலை தோன்றும் நிம்மதியைப் பார்ப்பது என் மனதுக்கு ஆறுதலாக இருந்தது.

இந்த நேரத்திலை எனக்கு நிறைய கடற்புலி அண்ணாமார் பழக்கமாய்ச்சினம்.என்ன அண்ணாமார் என்று சொல்கிறேன் என்று பார்த்தீர்களா அப்போதுதான் எனக்கு 12 வயது 12 வயதில் எப்படி மோட்டார் சைக்கிள் ஓட்டலாம் என்றெல்லாம் கேட்கவேண்டாம் ஏனென்றால் நான் அதை 10 வயதிலை இருந்தே ஓட்டத் தொடங்கீட்டன் லைசென்ஸ் என்றெதுவும் யாழ்ப்பாணத்தில் தேவைப்படவில்லை.

தங்களுடைய வலுக்குறைந்த படகுகளுடனும் ஆயுதங்களுடனும் படையினரைச் சமாளிக்க முடியாது என்பது தெரிந்தபோது கடற்புலிகளால் களத்தில் இறக்கப்பட்டவர்களே கடற்கரும்புலிகள் என அழைக்கப்படும் விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதல் பிரிவினர்.கரும்புலிகள் என அழைக்கப்படும் இயக்கத்தின் ஒரு படைப்பிரிவினர் கடற்புலிகளுடன் சேர்ந்து மக்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதில் இறங்கினர்.இவர்கள் வெடி மருந்து நிரப்பப்பட்ட சிறு படகுகளை ஓட்டியபடி கிளாலிக் கடற்பரப்பில் வலம்வந்தனர் இலங்கை இராணுவத்தின் கடற்படைக் கலங்கள் சண்டைக்கு வந்ததும் இவர்கள் தங்களது வெடிமருந்து நிரப்பப்பட்ட படகுகளைக் கொண்டுபோய் அவர்களது படகுகள் மீது மோதி வெடித்தனர்.இதனால் கிளாலிக் கடற்பரப்பில் கடற்படையினரின் நடமாட்டம் குறைந்தது.மக்களும் புலிகளும் வெடிமருந்து நிக்கப்பட்ட இப்படகுகளை "இடியன்கள்" என அழைத்தனர் பெயரைக் கேட்டாலே சிறீலங்கா நேவிக்கலங்கள் ஓடுமளவுக்கு பயங்கரம் நிறைந்தவை இந்த "இடியன்கள்".கிளாலியின்ரை இக்கரையிலை நிக்கிற சனம் நேவி பற்றிக் கதை வரும்போது இண்டைக்கு "இடியன்கள் "உலாவுது பயமில்லை அவங்கள் ஆமியை பார்த்துக் கொள்ளுவாங்கள் என்று கதைப்பதை கேட்டிருக்கிறேன்

வெளிநாடுகளில் வசிக்கும் யாழ்ப்பாணத்திலிருந்து அக்காலத்தில் இடம்பெயர்ந்த எவரும் தம்மைப் பாதுகாப்பாக வழியனுப்புவதற்கு தம்முயிரைக் கொடுத்த இந்த "இடியன்களை" மறந்திருக்கமாட்டார்கள்.விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் என அழைக்கப்படும் தற்கொலைப்படையைப் பற்றிப் பலரும் பலவிதக் கருத்துகளையும் விமர்சனங்களையும் சொல்லும்போது நான் நினைத்துக் கொள்ளும் ஒரு முகம் இந்த "இடியன்களில்" ஒன்று நான் கும்பிடுற தெய்வம் தான் காப்பாத்திச்சுது என்று சொல்லும் ஒவ்வொருத்தரும் இந்த இடியனுக்காகவும் ஒருகணம் பிரார்த்த்னை செய்திருப்பர் என்றே நினைக்கிறேன்.

இவர்களை நாம் நேரில் பார்த்திருப்போம் ஆனால் அவர்கள் கரும்புலிகள் எண்டு தெரிஞ்சிருக்காது சாதாரணமா புலியள் மாதிரி திரிவினம்.இரவானா படகெடுத்துக் கொண்டுபோய் இண்டைக்கு நேவி சிக்குமா என்று கடலில் காவலிருப்பார்கள்.இரவில் வெடியோசை கேட்கும் போது யார் பெத்த பிள்ளையோ என்று சொல்லும் வாயோடை கண்ணிலை வழியும் நீரைத்துடைச்சுவிட்டவர்களை நான் பார்த்திருக்கிறேன்.

<b>நன்றி - ஈழநாதனின் வலைப்பூ</b>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#5
இந்த தொடரின் மற்றய பாகங்களை தொடர்ச்சியாக ஈழநாதனின் வலைப்பூவில் படிக்கலாம். ஈழநாதனுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்

http://kavithai.yarl.net/
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#6
உண்மையிலேயே வாசிக்கும்போது நேரில் நடப்பது மாதிரியெ இருந்தது. இங்கு வரும் இடியன்களை அனுபவப்பட்டவர்கள் யாரும் மறக்கமாட்டார்கள் என நினைக்கிறேன்.
...... 8)
Reply
#7
ஓடுகிற வண்டியோட- இது கதையல்ல நிஜம்


அது 1993ம் ஆண்டு தை மாதத்தின் நடுப்பகுதி.கொழும்பு செல்லும் அப்பாவை ஏற்றிக்கொண்டு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன்.பிரதான பாதையிலிருந்து கிளாலி செல்லும் கிளைப்பாதை பிரியும் இடத்தில் நான் முதன்முதலில் அந்த அண்ணனைச் சந்தித்தேன்.

இருபது அல்லது இருபத்தி ஒரு வயது இருக்கும் படிய வாரிய தலையும் இளைய அரும்பு மீசையும் காய்ந்து கறுத்திருந்த தேகமும் "புலி"யண்ணன் என்பதை சொல்லாமல் சொல்லின.

திடீரெனக் கைகாட்டி மோட்டார் சைக்கிளை நிறுத்தினான்.என்னை ஒருமுறை பார்த்துவிட்டு அப்பாவுடன் கதைக்கத் தொடங்கினான்.
"அண்ணை கிளாலிக்கோ போறியள்"
"ஓமோம்"
"நாங்கள் வந்த மோட்டச்சைக்கிள் பழுதாகிப்போச்சுது.கூட வந்த பொடியன் கராச்சுக்குக் கொண்டு போயிட்டான்,நானும் உங்களோடை வரட்டோ."

அப்பா எதுவும் பேசவில்லை,ஏறிக்கொள் என்கின்ற மாதிரி முன்னால் நகர்ந்தார்.
"அண்ணை தம்பி ரண்டு பேரையும் வைச்சு ஓடமாட்டார் நான் ஓடுறன் என்ன"?
ஏற்கனவே எப்படி ஓடுவது என்ற யோசனையில் இருந்த நான் எதுவும் பேசாது பின்னால் நகர்ந்து கொண்டேன்.
மோட்டார் சைக்கிள் கிளாலியை நோக்கி விரைந்தது.குண்டும் குழியுமான வீதியில் லாவகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திக் கொண்டே பொதுவாக பேச்சை ஆரம்பித்தான்.
"இறன்டு பேரும் போறியளோ"
"இல்லை நான் மட்டும்" அப்பா பதில் சொன்னார்
"அண்ணை அடிக்கடி போவியளோ"
"ஓமோம் பிஸ்னஸ் விசயமா அடிக்கடி போவன்"
"இப்ப கொஞ்சம் பயம் என்ன? கொஞ்ச நாளைக்கு முன்னுக்குத் தனே நேவி சனத்தின்ரை போட்டுகளை அடிச்சது".
அப்பா பதில் பேசவில்லை.
கிளாலிக்கரையில் இறங்கியவுடன் "நன்றி அண்ணை" என்றவாறே பதிவுகளை மேற்கொள்ள அமைத்திருந்த கொட்டிலை நோக்கிப் போகின்றான் அவன்.அப்பா கொட்டிலின் ஓரத்தில் நீண்டிருந்த வரிசையில் சேர்ந்து கொண்டார்.நான் வழமையாக மோடார் சைக்கிள் விடும் இடத்தில் நிற்பாட்டிவிட்டு வரிசையின் அருகில் நின்று கொண்டேன்.

கொட்டிலின் உள்ளே இருந்து வெளியே வந்த அவன் நீண்டிருந்த வரிசைக்கருகில் வந்து சுற்றும் முற்றும் பார்த்தான்.ஒரு ஓரத்தில் நின்றிருந்த என்னை அடையாளம் கண்டு கொண்டவனாக என்னருகில் வந்தான்.பக்கத்திலேயே நின்றிருந்த அப்பாவிடம்
"அண்ணை சின்ன உதவியொண்டு."
"சொல்லுங்கோ" இது அப்பா
"கராச்சுக்கு ஒருக்காப் போகவேணும் மோட்டச்சைக்கிளைத் தாறியளோ"
அப்பா பதில் சொல்லவில்லை.
அவன் கேள்விக்குறியுடன் அப்பாவை நோக்கியவனாக.. "தம்பியும் வரட்டும்"
அப்பா சரி எனத் தலை அசைக்கின்றார்.

இப்படித்தான் அந்த இளைஞன் எனக்கு அறிமுகமானான்

கராச்சுக்குப் போய்த் திரும்பும் வரை கேள்விகள் கேள்விகள் கேள்விகள்
"தம்பி என்னடா செய்யுறாய்"?
"படிக்கிறன்"
"எங்கை"?
பாடசாலை பெயர் சொல்கின்றேன்.
"எத்தனையாம் வகுப்பு?"
"6 ஆம் வகுப்பு"
"நல்லாப் படிப்பியோ"?
"ஓம்"

இதற்குள் நானும் கொஞ்சம் சகஜமாகக் கதைக்க ஆரம்பித்திருந்தேன்.எனக்கு ஒரு பழக்கம், ஒருவர் கொஞ்சம் அறிமுகமாகிவிட்டால் பலநாள் பழகியவன் போல் கதைக்க ஆரம்பித்துவிடுவேன்.பார்த்தால் அந்த அண்ணன் என்னைவிட இதில் கெட்டிக்காரனாக இருந்தான் குறுக்கும் மறுக்குமாக நிறையக் கேள்விகள் கேட்டான் "படித்து என்னவாக வரப்போறாய்"?,"யாராவது புலியண்ணாக்கள் சொந்தமோ"?,இப்படிநிறைய

எனக்கும் ஏதோ ஒரு ஈர்ப்பு இவ்வளவு சகஜமாக ஒருவனால் கதைக்க முடியுமா.எதைச் சொன்னாலும் முகபாவனை அப்படியே இருக்கும் குரல் மட்டும் ஏறி இறங்கும்.
கராச்சால் திரும்பி வரும் போது திடீரெனக் கேட்டான்
"நீ கொழும்புக்குப் போகேல்லையோ"?
ஏன் அப்படிச் சொன்னேன் என்பது தெரியவில்லை ஆனால் வெடுக்கெனப் பதில் சொன்னேன். "நீங்கள் பாஸ் தரமாட்டியளாம்"

.அவன் சடாரெனத் திரும்பி என்னைப் பார்த்தான் முகத்தில் மட்டும் அந்தப்புன்னகை மாறாமல்.

மறுபடியும் கிளாலிக்கரை வந்து சேர்ந்தோம்.நான் மோட்டார் சைக்கிளை வழமையான இடத்தில் விட்டுப் பூட்டி விட்டு கொட்டிலை நோக்கி நடந்தேன்.அப்பா பதிவுகளை முடித்துக் கொண்டு படகில் ஏறியிருந்தார்.கரைக்கு அண்மையில் பதிவு இல்லாமல் யாரும் படகில் ஏறிவிடாமல் தடுப்பதற்காக தடிகள் நட்டு கயிற்றினால் எல்லைப் படுத்தியிருந்தது.நான் அந்தக் கயிற்றினைப் பிடித்தபடி படகைப் பார்கிறேன் அப்பா ஏறியிருந்த படகில் அனேகம் பேர் பெண்களாக இருந்தனர் ஓட்டிகள் இருவரும் இன்னும் ஒருவருமே இளைஞர்கள்.கரையையே பார்த்துக் கொண்டிருந்த அப்பா என்னைக் கண்டுகொண்டவராக கையசைத்தார்.படகு புறப்படுவதற்கு ஆயத்தமாக ஓட்டியும் அந்த இளைஞனும் படகை நீரில் தள்ள ஆரம்பித்தனர்.அது ஆழம் குறைந்த கடற்பகுதி இடுப்புவரை நீரில் படகைத் தள்ளிய பின்னரே எஞ்சின் உதவியால் ஓட ஆரம்பிக்கும்.

படகு கனம் காரணமாக அசைய மறுத்தது.அணியத்தில் நின்றிருந்த ஓட்டி அப்பாவை நோக்கி கத்தினான் "அண்ணை கொஞ்சம் இறங்கித் தள்ளுங்கோ".அப்பா கலக்கத்துடன் இறங்க முயலும் வேளையில் எனக்குப் பின்னால் குரல் கேட்டது
"டேய் ஏன்ரா அந்த வயசானவரைக் கஸ்டப்படுத்துறியள்? பொறு நான் வாறன்".

என்னுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் கூட இன்னொருவனுடன் கடலுள் இறங்கித் தள்ள ஆரம்பிக்கின்றான் சரியான ஆழம் வந்ததும் படகு ஓட ஆரம்பிக்கின்றது.நான் வழமையாக நான் படுத்திருக்கும் பூவரசு மரத்தின் அடியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

பூவரசின் ஓரத்தில் ஓட்டோக்கள் கார்கள் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.கொழும்பால் வருபவர்களை ஏற்றிச்செல்வதற்கு காத்திருந்தன.வழமையாக அப்பாவை கிளாலிக்கரையில் கொண்டுவந்து விட்டவுடன் நான் திரும்பிப் போவதிலை விடியும்வரை அங்கேயே இருந்துவிட்டு காலையிலேயே வீடு செல்வேன் இரவு அந்தப்பூவரசின் அடியில் தான் கழியும் ஓட்டோ ஓட்டுபவர்கள் ஓரமாக உட்கார்ந்து கடதாசி விளையாடுவார்கள்.கொட்டிலில் வைக்கப்படிருக்கும் பெற்றோல்மாக்சின் வெளிச்சம் பூவரசின் ஓரம் நீளும்.வெளிச்சம் கண்ணைக் குத்தாத மறைவில் உட்கார்ந்து கையுடன் கொண்டுவந்த வானொலியைத் திருப்புகின்றேன்.

"டேய் நீ வீட்டுக்குப் போகேல்லையோ"? மீண்டும் அதே குரல் அனேகமாக எல்லோரும் போய்விட்டிருந்ததால் வெறிச்சோடியிருந்த பதிவுக் கொட்டிலிலிருந்து அவன் நடந்து வந்துகொண்டிருந்தான்.
நான் இல்லையெனத் தலையசைக்கின்றேன்
"ஏன் தனியப் போகப் பயமோ? ஆரோடையாவது சேர்த்து விடட்டுமோ"?
நான் சிரித்தவாறே "இல்லை விடியத் தான் போவன்"
"ஏன்"?
"சும்மா இதிலை இருந்து பார்த்திட்டுப் போவம் எண்டுதான்"
"அப்பசரி"
"இதென்ன றேடியோ சினிமாப் பாட்டுக் கேட்கிறியோ"?
"இல்லை புலிகளின் குரல்"
"நல்லதாய்ப் போச்சு நானும் கேட்பம். அதுசரி அப்போதை பேர் கேட்க மறந்து போனன் என்ன பெயர்"?
நான் சொல்கிறேன்...
நம்பாமல் பார்க்கிறான்
"பேப்பரோ"? (ஈழநாதம் பத்திரிகை)
"இல்லை ....உண்மைப் பெயர்,உங்கடை பெயர் என்ன"?
"என்னத்துக்கு"?
"கூப்பிடத்தான்"
"இப்ப எப்பிடிக் கூப்பிடுறாய்"?
"அண்ணையெண்டு"
"அப்பிடியே கூப்பிடன்"
இப்போதுதான் அவன் சுபாவம் தெரிந்துகொண்டேன். என்னை மாதிரியே வெடுக் வெடுக்கெனப் பதிலளிப்பான். என்னை மடக்கிவிட்ட சந்தோஷம் முகத்தில் தெரிந்தது.
"அப்போதை என்ன சொன்னனீ"
"எப்ப"?
"மோட்டச்சைக்கிள்ளை திரும்பி வரேக்கை"
நான் பதில் சொல்லவில்லை என்ன சொன்னேன்?,....யோசித்தேன்
"நீங்கள் கொழும்பு போக பாஸ் தரமாட்டியளாமோ"?
"ஓம் அது உண்மைதானே"
"நீங்களெல்லாம் கொழும்பு போனா ஆர் இஞ்சையிருந்து போட் தள்ளிவிடுறது"?
என்னால் பதில் சொல்ல முடியவிலை.
"நீ படி நல்லாப் படிச்சு எங்கடை நாட்டுக்கு சேவை செய்"
நான் விளங்கியமாதிரித் தலையாட்டுகின்றேன்.

அன்றைய இரவு உரையாடல்களிற் கழிந்தது பலதும் பத்தும் கதைத்தான் என்ன படிக்கின்றேன் பாடங்கள் பற்றியெல்லாம் விசாரித்தான் அவனைப் பற்றி நான் துருவியபோதெல்லாம் வேறேதாவது சொல்லி மடக்கினான்.அவனைப் பற்றி நான் தெரிந்து கொண்டது இரண்டே இரண்டு விசயங்கள் தான் ஒன்று அவனது சொந்த இடம் மட்டக்களப்பு,மற்றது இராணுவ நடவடிக்கை ஒன்றில் ஒரு காலை இழந்து செயற்கைக் கால் பொருத்தியிருந்தான்.பெற்றோரை இழந்துவிட்டிருப்பான் என ஊகித்தேன் கடைசி வரை தன் பெயரைக் கூட சொல்லவில்லை.

அவனுக்கு நான் வைத்த பட்டப்பெயர் "பிரைம் மினிஷ்டர்".அதற்குக் காரணமாக இருந்தது இந்தக் கேள்வியும் பதிலும்.நீங்கள்
"ஏன் இயக்கத்திலை சேர்ந்தனீங்கள்"?
மௌனம்.... தொலைவை வெறித்தபடி ஒன்றும் பேசாமலிருந்தான்.
அடுத்த கேள்வி "இயக்கத்திலை சேராமல் இருந்தால் இப்ப என்ன செய்து கொண்டிருந்திருப்பியள்?"
"ஆ..............பிரைம் மினிஷ்டர் ஆகியிருப்பேன்"
சிரிக்காமல் ஆனால் அதே மலர்ச்சியுடன் பதில் சொன்னான்.
எனக்கு வெட்கமாகப் போய்விட்டது இவனை மடக்கவே முடியாதா.அன்று அவனுக்கு வைத்த பெயர் "பிரைம் மினிஷ்டர்".இரவு இருவரும் சேர்ந்து சாப்பிட்டோம் ஒன்றாகப் புலிகளின் குரல் கேட்டோம் கதைகளின் நடுவே மாறி மாறித் தூங்கி வழிந்தோம்.

இப்படியாகத் தான் நான் அந்த அண்ணனை "பிரைம் மினிஷ்டரை"ச் சந்திக்க நேர்ந்தது.அப்பா அடிக்கடி கொழும்பு போவதால் நானும் அடிக்கடி கிளாலிக் கரைக்குப் போனேன் போனபோதெல்லாம் என் கண்கள் கொட்டிலில் "பிரைம் மினிஷ்டரைத்" தேடும் சில வேளைகளில் நிற்பான்.நின்றால் என்னைக் கண்டவுடன் நக்கலாக சல்யூட் ஒன்ரை அடித்து விட்டு வேலைகளில் மூழ்கிவிடுவான் ஆளடங்கிய பின்னர் பூவரசின் அடியில் இருவரும் கதைத்துக் கொண்டிருப்போம்.அவனுக்கு போராட்டம் பற்றி நிறைய விடயங்கள் தெரிந்திருந்தன தனக்குத் தெரிந்ததைச் சொல்வதை விட என் வாயைக் கிண்டுவதில் தான் அவனுக்கு சந்தோஷம்.ஒவ்வொரு முறையும் தன் கேள்விகளாலும் பதில்களாலும் என்னை மடக்கி விட்டு சிரிப்பான்.

நாட்கள் நகர்ந்தன தொடர்ந்தாற்போல சில வாரங்கள் காணமற் போனான் மறுபடியும் வந்தபோது கேட்டேன்
"எங்கை கனநாளாக காணவில்லை"?
"சரியான வேலையடாப்பன்".
அன்று ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி என நினைக்கின்றேன்.அப்பாவைக் கரையில் இறக்கிவிட்டு மோடார்சைக்கிளை விட்டுப் பூட்டிவிட்டு கொட்டிலை நோக்கி வந்தேன்.அன்றைக்கு முன்பு சிலநாட்கள் தொடர்ச்சியாக நேவியும் விமானங்களும் பயணிகள் மீது தாக்குதல் நடத்தியிருந்ததால் கொழும்பு செல்லும் பயணிகள் குறைவாகவே இருந்தனர்.அனைவர் முகத்திலும் கலக்கம் குடிகொண்டிருந்தது நான் அப்பாவைப் பார்த்தேன் அப்பாவின் முகத்திலும் சிந்தனைக் கோடுகள்.
வரும் போதே அம்மா சொல்லிக் கொண்டிருந்தா

"கொஞ்சநாள் கழிச்சுப் போகலாம் தானே"

அப்பா அம்மாவைச் சமாதானப்படுத்திவிட்டு வந்திருந்தாலும் அவர் மனது குழம்பியிருந்தது தெரிந்தது.நான் கொட்டிலில் பிரைம் மினிஷ்டரைத் தேடினேன் காணவில்லை கடைசியாக ஒருநாள் வீடியோ கமெராவுடன் பார்த்ததுதான் அதன் பின்னர் பார்த்ததில்லை ஏதாவது கடுமையான வேலையாக இருக்கும்.

அப்பா பதிவுகளை முடித்துக் கொண்டு என்னை நோக்கி வந்தார்
"தம்பி இண்டைக்கு இஞ்சை நிற்கவேண்டாம் வீட்டை போம்"
"ஏனப்பா"?
"செல் அடிப்பாங்கள் நேற்றும் ரண்டு மூண்டு செல் விழுந்ததாம்"
"பங்கர் இருக்குத் தானே நான் இருப்பன்"
அப்பா பதில் பேசவில்லை.

முதலில் ஒரு தொகுதி படகுகள் புறப்பட்டுப் போயின.அப்பாவுக்கு இரண்டாவது தொகுதி.நடுச்சாமத்திற்கு கொஞ்சம் முன்னதாக அப்பாவை ஏற்றிய படகுத் தொகுதி புறப்பட்டுப் போனது.
நான் என்னுடைய இடத்தில் வந்து அமர்ந்து கொள்கின்றேன்.மனம் இருப்புக் கொள்ளவில்லை அப்பா ஏன் அப்படிச்சொன்னார்.எழுந்து சென்று சிறிது தள்ளி வெட்டப்பட்டிருந்த ஒடுங்கிய பதுங்குகுழியை நோக்கி நடதேன்.மணற்தரை ஆகையால் சிறிது தூர்ந்திருந்தது ஆனாலும் இரண்டு மூன்று பேர் பதுங்கலாம்.திரும்பவும் பூவரசின் அடியில் வந்து அமர்ந்து கொள்கின்றேன்

சிறிது நேரம் கழிந்திருக்கும் திடீரென பூநகரிப்பகுதியிலிருந்து தேடுதல் வெளிச்சம் கடலில் பாய்ந்தது.அது படிப்படியாக படகுகள் செல்லும் பாதையை நோக்கி வருவது தெரிந்தது.கொஞ்ச நேரம்தான் கிளாலிக் கடனீரேரி அல்லோலகல்லோலப்பட்டது துப்பாக்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டன கடலின் இருளைக் கிழித்துக் கொண்டு வாணவேடிக்கை போல ஒளிப்பொட்டுக்கள் சிதறின.

"நேவியை இவங்கள் மறிச்சு அடிக்கிறாங்கள் போல".மரத்தடியில் இருந்த ஒருவர் சொன்னார்.எனக்கும் அப்படிப் போல்தான் பட்டது சரமாரியாக குண்டுகள் வெடிக்கும் ஓசை எழுந்தது இரவைப் பகலாக்கும் வண்ணம் சரம் சரமாக ஒளிப்பொட்டுகள் சிதறின.

"கடவுளே அப்பா போன போட்டுக்கு ஒண்டும் நடக்கக் கூடாது".நான் வேண்டிக்கொண்டேன்.ஒருகணம் வேட்டொலி குறைந்த மாதிரித் தெரிந்தது மறுகணம் காதைப்பிளக்கும் பேரோசையுடன் கடனீரேரி ஒளிவெள்ளமாக மாறியது "கரும்புலி" அடிச்சிருக்கும் என் மனது சொல்லிக் கொள்கிறது.ஓய்ந்த வேட்டொலி உக்கிரமடைகின்றது.மண்டைதீவிலிருந்தும் பலாலியிலிருந்தும் ஏவப்பட்ட ஷெல்கள் கரையோரத்தில் விழுந்து வெடித்தன போதாக்குறைக்கு கடல் மீது தாழப்பறந்த உலங்கு வானூர்தியொன்று ரொக்கட் தாக்குதலை ஆரம்பித்தது ஏறக்குறைய அரைமணிநேரம் சண்டை நடந்தது நேவி பின்வாங்கிச் செல்வது குறைந்துவரும் சத்தத்திலிருந்தும் படகுப்பாதையை விட்டு விலகிச் செல்லும் நேவிக்கலங்களின் வெளிச்சப்பொட்டுகளிலிருந்தும் தெரிந்தது.மீண்டும் ஒரு இடியோசை காதைச் செவிடு படுத்தும் ஒலியுடன்.. வேட்டொலிகள் உக்கிரமாகச் சீறிவிட்டு ஓய்ந்து போகின்றன.அங்கொன்றும் இங்கொன்றுமாக விட்டு விட்டு வேட்டோலி கேட்டது.நான் இருந்த இடத்தில் குப்புறப் படுத்திருந்தேன்.பதுங்கு குழிக்குப் போகவில்லை.

மனம் ஒரே பாரமாக இருந்தது.அப்பாக்கு என்ன நடந்ததோ தெரியாது.அதிகாலையளவில் அக்கரையிலிருந்து வந்த போட்டுகள் சேதி சொல்லின.சனத்தின்ரை போட்டுகளை இடையிலை தாக்க வந்த ஆமியை கடற்புலிகள் மறித்து சண்டையிட்டிருக்கிறார்கள்.கடற்கரும்புலித்தாக்குதலும் நடந்திருக்கிறது பயணிகள் எவருக்கும் சேதமில்லை.என் மனதில் நிம்மதி.விடிந்ததும் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்படுகின்றேன்.

ஊரை அடைந்த போது நன்றாக விடிந்துவிட்டிருந்தது கடையில் வாங்கிய ஈழநாதம் பத்திரிகையில் தலைப்புச் செய்தி
"கிளாலிக் கடனீரேரியில் தாக்குதல் இரண்டு கடற்படைக் கலங்கள் மூழ்கடிப்பு"
பத்திரிகையை வாங்கிக் கண்களை ஓடவிடுகின்றேன்.
செய்திகளின் கீழே "தாக்குதலில் வீரகாவியமான இரு கரும்புலிகள்" என இருவரின் படம் போட்டிருந்தது.
இருவரில் ஒருவனாக......... அதே புன் முறுவலுடன்............
"பிரைம் மினிஷ்டர்"..........
கடைசிவரை எனக்குப் பெயர் சொல்லாமல் போய்விட்ட "பிரைம் மினிஷ்டர்"

http://www.kavithai.yarl.net
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#8
எமது பழைய நினைவுகளை மீண்டும் மீட்டி பார்க்க வைத்தது. நன்றி பீ பீ சி, வாலைப்பூ. கிளாலியில் முடியவிருந்த எமது வாழ்வை கூட ஓரு தடவை குருவி படகு ஓன்று காப்பாற்றிய ஓரு இனிய கதை உண்டு.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
அட அங்கையும் குருவி இல்ல....எங்கையும் குருவிகள் பாருங்க....அவை உங்களை காப்பாற்றும் பாருங்க....!

அதென்னங்க வாலைப்பூ...வாழைப்பூ ஞாபகம் வந்திட்டுதோ... :wink:

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
தவறு திருத்தியமைக்கு நன்றிகள்.
என்னது ஞாபகம் வந்திட்டுதோ?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#11
kuruvikal Wrote:அட அங்கையும் குருவி இல்ல....எங்கையும் குருவிகள் பாருங்க....அவை உங்களை காப்பாற்றும் பாருங்க....!

அதென்னங்க வாலைப்பூ...வாழைப்பூ ஞாபகம் வந்திட்டுதோ... :wink:

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

காப்பாற்றும் என்கிறீங்கள்?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#12
அப்ப இருந்த குருவி இப்பையும் தானே இருக்கு...அப்ப நாளைக்கும் அப்படி ஒரு நிலை வந்தா உங்களைக் காப்பாற்றும் தானே...இப்ப கேள்விக்கு விடை கிடைத்திருக்குமே...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)