Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மைக்ரோஸாப்ட் - விடலை விளையாட்டு
#1
[b]மைக்ரோஸாப்ட் - விடலை விளையாட்டு
கேட்பதற்குச் சிரிப்பை வரவழைக்கக் கூடும். ஆனால் இது பகடி இல்லை; நடந்திருக்கிறது. வான்கூவர், கனடாவில் வசிக்கும் மைக் ரோ (Mike Rowe) என்னும் பதினேழு வயதுச் சிறுவனை உலகின் மாபெரும் நிறுவனமான மைக்ரோஸாப்ட் நீதிமன்றத்திற்கு அழைத்திருக்கிறது.

காரணம். அவனுடைய பெயரில் அவனாகவே வடிவமைத்துக் கொண்ட (MikeRoweSoft.com) என்னும் இணைய தளம்.

microsoft.com என்னும் தங்களுடைய முதன்மை இணைய தளத்தின் உச்சரிப்பையட்டி இது அமைந்திருப்பதாகவும் இதனால் தங்களுடைய வாடிக்கையாளர்கள் குழம்பிப் போகக்கூடும் என்றும் மைக்ரோஸாப்டின் கனேடிய வழக்கறிஞர்கள் சிறுவனுக்கு அனுப்பிய நீதிமன்ற அழைப்பில் சுட்டியிருக்கிறார்கள். நடந்தது இதுதான்;

கடந்த ஆகஸ்ட் மாதம் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த மைக் ரோ-வுக்கு ஒரு எண்ணம் உதித்தது. உலகின் மாபெரும் கணினி நிறுவனத்தை ஒத்த பெயர் தனக்கு இருப்பதால் அந்தப் பெயரை ஒட்டிய (தன்னுடைய பெயரில்) ஒரு இணையதளம் அமைத்துக் கொள்வது தன்னுடைய பள்ளி நண்பர்களிடையேயும், அடுத்தவருடம் சேரப்போகும் பல்கலைக்கழகத்திலும் தன்னைப் பிரபலப்படுத்தும் என்று அவனுக்குத் தோன்றியது. அப்படியே செய்தான். பிறகு ஒரு நாள் அவனுக்கு கனேடிய வழக்கறிஞர்களிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் அவனுடைய இணையதளம் மைக்ரோஸாப்ட்டின் நலனுக்குப் பாதகம் விளைவிப்பதாகவும், அதனால் அவன் அதைக் கைவிட வேண்டுமென்றும் சுட்டியிருந்தார்கள். மைக்கிற்கு அதில் நம்பிக்கை இல்லை. எனவே, முடியாது என்று சொல்லிவிட்டான். அவர்களிடமிருந்து சில நாட்களில் இன்னொரு மின்னஞ்சல் வந்தது. அதில் அந்த இணைய தளத்தை அமைக்க அவனுக்கு ஆன செலவெல்லாம் திருப்பியளிப்பதாகவும், அந்தத் தளத்தை மைக்ரோஸாப்டிடம் கையளிக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தார்கள்.

மைக்கிறகுச் சிரிப்பு வந்தது. அதற்கு அவன் ஒத்துக் கொண்டால் அவனுக்குப் பத்து டாலர்கள் மைக்ரோஸாப்டிடமிருந்து கிடைக்கும். தான் அந்த தளத்தில் தகவல்களைச் சேர்க்க நிறைய நேரம் செலவிட்டிருப்பதாகவும், பத்து டாலர்கள் அதற்குப் போதாது, பத்தாயிரம் டாலர்கள் கொடுத்தால் தரமுடியும் என்றும் சொல்லிவிட்டான். தவறு இங்கேதான்.

நீண்ட நாட்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை. ஜனவரி பதினான்காம் தினத்தன்று அவனுக்கு ஒரு மாபெரும் வழக்கு அறிவிப்பு வந்தது. அதில் மைக்ரோ(வ்)சாப்ட் என்று வேண்டுமென்றே உச்சரிப்பு ஒப்புமை உள்ள தளத்தைப் பதிவு செய்து, அதன் மூலம் தங்களது கட்சிகாரருக்குத் (மைக்ரோஸாப்ட் நிறுவனத்துக்கு) தொல்லை கொடுக்க முயன்றதாகவும், பின்னர் அதை இலாபத்திற்கு விற்க முயன்றதாகவும் அவன்மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. தன்னையறியாமலேயே மைக் என்னும் சிறுவன், வழக்கறிஞர்கள் விரித்த வலையில் விழுந்துவிட்டான்.

அமெரிக்க வர்த்தச் சின்னங்கள் மற்றும் நிறுவனக் காப்புரிமைகள் சட்டப்படி, ஒரு இணையதளத்தை வேண்டுமென்றே இலாப நோக்கம் கருதிப் பிடித்து வைத்துக்கொண்டு விற்பனை செய்வது குற்றம். (புள்ளிவணி குமிழ் உடையாமல் பருத்துக் கொண்டிருந்த நாட்களில் பிரபலங்களின் பெயரிலும், அவர்கள் பெயரையட்டியும் இணைய தளங்களின் உரிமையைத் தங்கள் பெயரில் பதிவு செய்து வைத்துக்கொண்டு பின்னர் அவற்றை அதிக விலைக்கு விற்று பணக்காரர்கள் ஆனவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு வலைக்குந்துவோர் (cybersquatters) என்று பெயர்). பிரபலங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்க சில விதிகள் ஏற்படுத்தப்பட்டன). பத்தாயிரம் டாலர்கள் கொடுத்தால் தன்னுடைய தளத்தின் உரிமையை விட்டுக் கொடுப்பதாக மைக் சொன்னது இந்தச் சட்டத்தின்படி குற்றம் என்று வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, உதாரணமாக ஒரு தளத்தை நீங்கள் முப்பது டாலர்கள் கொடுத்து உங்கள் பெயரில் பதிவு செய்திருக்கிறீர்கள். அதில் கிட்டத்தட்ட நூறு மணி நேர சுயஉழைப்பைச் செலவிட்டு தகவல்களை ஏற்றியிருக்கிறீர்கள். ஒருவர் வலிய வந்து அவராகவே உங்களுக்கு முப்பது டாலர்கள் கொடுத்துப் பெற முயற்சித்தாலும், நீங்கள் ஐம்பது டாலர்கள் கொடுங்கள் (உங்கள் நூறு மணிநேர உழைப்பும் அதில் அடக்கம்), அதைப் பெற்றுக் கொள்கிறேன் என்று சொன்னால் அது சட்டப்படி குற்றம்.

இப்பொழுது மைக் நினைத்தால்கூட ஒன்றும் செய்யமுடியாது. இது வலைத்தளப் பெயர்களைப் பதிவு செய்யும் உலக அறிவுச்சொத்துரிமை கழகத்தின் (WITO, World Intellectual Propery Organization) தீர்ப்பில் விடப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கில் வெற்றி பெறும் சாத்தியங்கள் மைக்ரோஸாப்ட்டுக்கு மிகவும் குறைவு. முக்கிய காரணம் ஒலியப்புமை வாதம் எடுபடாது. அந்தச் சிறுவனின் பெயர் மைக் ரோ-வாக இல்லாமல் வேறாக இருந்து அவன் இந்தப் பெயரில் பதிவு செய்திருந்தால் அது ஒருக்கால் ஒத்துக் கொள்ளப்படலாம். அது அவனுடைய உண்மையான பெயர். எனவே, இது நிற்கும் சாத்தியங்கள் குறைவு.

O
கனேடிய விதிகளின்படி பதினேழு வயதுச் சிறுவனுக்குப் பணத்தாசை காட்ட முயன்றதாக வழக்கறிஞர்கள் மீதும் மைக்ரோஸாப்ட்டின் மீதும் எதிர்வழக்கு தொடுக்கச் சாத்தியங்கள் இருக்கின்றன. அவனுக்கு அனுதாபம் காட்டியிருக்கும் பலர், அவனுக்கு உளவியல் ரீதியான இழப்புகளைச் சுட்டி மறுவழக்கு தொடுக்கச் சொல்லுகிறார்கள். சிலர் அவனுக்குப் பண உதவியும் செய்திருக்கிறார்கள்.

இது போன்ற வலைத்தளப் பெயர் வழக்குகள் நிறைய இருக்கின்றன. பிரபலங்களின் பெயர்களைக் கொண்டவர்கள் தங்கள் பெயரில் தளங்களை அமைத்துக் கொள்வது சிக்கலாகி இருக்கிறது. உதாரணமாக Michelle Jackson என்ற பெயரைக் கொண்ட பெண் ஒருத்தியால் அவளுடைய பெயரில் தளம் அமைத்துக் கொள்வது சுலபமில்லை. அது மைக்கேல் ஜாக்ஸன் பெயரை ஒட்டியிருப்பதாகத் தடை செய்யச் சொல்லி வழக்கு தொடுப்பார்கள்.

இத்தகைய வழக்குகளை மிகவும் கீழ்த்தரமான ஒரு புதிய தளத்திற்கு மைக்ரோஸாப்ட் என்னும் மாபெரும் நிறுவனம் எடுத்துச் சென்றிருக்கிறது. பல சிறு நிறுவனங்களைத் தன்னுடைய பணபலத்தால் சிதைத்த மைக்ரோஸாப்ட், தனி நபர் தன்னுடைய பெயரின்மீது கொண்டாடும் உரிமைகளையும் சிதைக்க முயற்சி செய்கிறது.

நன்றி - Venkat Pvt Website
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)