Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழுக்கு வந்த சோதனை- தொல்காப்பியரும் தமிழன் இல்லையாம்
#1
[size=15]இடைக்காலத்தில் இருவேறு கருத்துக்கள் தோன்றி வளரலாயின. ஒன்று ஒருவன் அறிஞனாக இருந்தால் அவன் பார்ப்பன குலத்தவனாக இருக்க வேண்டும். மற்றொன்று தமிழில் நூல் செய்தால், அது வடமொழியில் இருந்து மொழிபெயர்த்ததாகவோ அல்லது தழுவலாகவோ இருக்கவேண்டும்.

தொல்காப்பியம் எமக்கு இன்று கிடைத்துள்ள நூல்களில் காலத்தால் முந்தியது என்பதை எல்லாத் தமிழறிஞர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதுமட்டும் அல்லாது தொல்காப்பியம் நீர்மையும் தண்மையும் வண்மையும் தொன்மையும் நிறைந்த தமிழ்மொழியின் எழுத்துச் சொல் இலக்கணத்தையும் தமிழ்மக்களின் வாழ்வியல் இலண்கணத்தையும் (பொருள்) விளக்கும் சிறந்த நு}ல் ஆகும். மொழி, வாழ்வு இரண்டையும் இணைத்து இலக்கணம் சொன்ன சிறப்பு தொல்காப்பியத்துக்கு மட்டுமே உண்டு.

எழுத்ததிகாரம் ஒலி அளவு, உயிர், மெய் என்ற பிரிவுகள், குறில், நெடில். வல்லினம், மெல்லினம், இடையினம், குற்றியலுகரம், குற்றியலிகரம், மொழிமரபு, புணரியல் போன்றவற்றுக்கு இலக்கணம் சொல்கிறது.

சொல்லதிகாரத்தில் தமிழ்ச் சொல்லின் சிறப்பும் திணை பால் முதலிய உயிர்ப்புகுப்பு உயிரியல் பகுப்பு முறையும் கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, ஒவ்வொரு சொல்லும் பொருள் குறித்துக் காரணத்தோடு அமைக்கப்பட்டுள்ளன என்பவற்றை விளக்கிக் கூறுகிறது.

பொருளதிகாரம் நிலம் பொழுது, கருப்பொருள், உரிப்பொருள், அகத்திணை, புறத்திணை, களவியல், கற்பியல், பாவின் பண்பு, மெய்ப்பாடு, உவமயியல், மரபியல் பற்றிச் சொல்கிறது.

<b>இவ்வளவு சீரும் சிறப்பும் நிறைந்த நூலைத் தமிழ்ப் புலவர் ஒருவர் இயற்றி இருப்பாரா? ஒருக்காலும் இருக்காதே! இருக்க முடியாதே! பின் தொல்காப்பியர் எழுதாவிட்டால் யார் அதனை இயற்றி இருப்பார்?
தொல்காப்பியத்தை எழுதியவர் தொல்காப்பியர் அன்று, அதை எழுதியவர் திரணதூமாக்கினி என்பவர், அவரது தந்தையார் பெயர் சமதக்கினி. அதாவது நூலாசிரியர் ஒரு ஆரிய முனிவர்! வடமொழியில் பாணினி எழுதிய பாணினியமே தொல்காப்பியத்துக்கு வழி நூல்.! </b>


<b>தொல்காப்பியர் வரலாறு போலவே திருக்குறளை எழுதிய திருவள்ளுவரது புகழைக் கண்டு மனம் புழுங்கியவர்கள் </b>முதல் குறளில் உள்ள ஆதிபகவன் என்னும் தொடரைப் பயன்படுத்தி திருவள்ளுவரை ஒரு பிராமணனுக்குப் பிறந்தவராகவும் அதே சமயத்தில் ஓர் இழிகுலத்தவராகவும் காட்டல் வேண்டிக் கட்டுக் கதைகள் கட்டிவிட்டனர்.

திருவள்ளுவர் <b>யாளிதத்தன் என்ற பிராமணனுக்கும்</b> சண்டாளப் பெண்ணுக்கும் பிறந்ததாக ஞானாமிர்தம் (6 ஆம் நூற்றாண்டு) தெரிவிக்கிறது. அதற்குப் பிந்திய கபிலர் அகவல் 'அருந்தவ முனியும் பகவற்குப் பருவுூர்ப் பெரும் பதிக்கட் பெரும்புலைச்சி ஆதி வயிற்றினில்" பிறந்தார் என்றும் அவரது பெற்றோர் தங்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளைப் பிறந்த இடத்திலேயே விட்டு விட்டுப் போய்விடுவதால் 'தொண்டை மண்டலத்தில் வண்தமி;ழ் மயிலைப் பறையரிடத்தில் வள்ளுவர் வளர்ந்தார்" எனக் கூறுகிறது.

<b>மேலும் திருவள்ளுவரையும் திருக்குறளையும் இழித்துப் பழிக்கும் முகமாக திருக்குறள் அறத்துப் பால் இராமாயணம், மகாபாரதம், பராசர சம்கிதை, பாகவதம், இருக்கு வேதம், மனு ஸ்மிருதி போன்ற சாத்திரங்களைத் தழுவியது என்றும் பொருட்பால் சாணக்கியன் இயற்றிய அர்த்த சாஸ்திரம், காமந்தக நீதி, சுக்கிர நீதி, போதாயன ஸ்மிருதி ஆகியவற்றில் இருந்து கடன் வாங்கப்பட்டதென்றும் காமத்துப்பால் வாத்ஸ்யாயனார் வடமொழியில் இயற்றிய காமசூத்திரத்தின் தழுவல் என்றும் வடமொழிப் பற்றாளர்கள் பகர்கிறார்கள். </b>

வாதஸ்யாயனார் கூறும் பிறன்மனை நயத்தலை திருவள்ளுவர் அறத்துப் பாலில் கண்டிக்கிறார். அப்படியிருக்க வள்ளுவரின் காமப் பால் காமசூத்திரத்தில் இருந்து எப்படி வந்திருக்க முடியும்?

திருக்குறளில் வலியுறுத்தப்படும் அறம் என்ற சொல்லுக்கு விளக்கம் கூற வந்த பரிமேலழகர் தனது உரைப் பாயிரத்தில் 'அவற்றுள் அறமாவது, மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியது ஒழித்தலும் ஆம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்.

<b>அவற்றுள், ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார், தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்ற, அவற்றிற்கு ஓதிய அறங்களில் வழுவாது ஒழுகுதல்" எனப் பாலில் நஞ்சு கலப்பது போன்று ஆரிய நச்சுக் கருத்துக்களை முதலும் இடையும் முடிவுமாகப் புகுத்தி தமிழுக்கும் தமிழர்க்கும் கேடு விளைவித்துள்ளார். திருக்குறளை ஊன்றிப் படிப்பவர்களுக்கு இந்த உண்மை புலப்படும். </b>

இவ்வாறு தமிழில் ஒன்றுமில்லை அது சூத்திரர் பேசும் நீச பாஷை வடமொழியே நிலத் தேவர் பேசும் தேவ பாஷை என்பது தமிழையும், தமிழரையும் வெறுப்பவர்களின் மத்தியில் நீண்ட காலமாகப் பேசப்பட்டு வருகிறது.

நன்றி: தமிழ்நாதம்- கனடா
Reply


Messages In This Thread
தமிழுக்கு வந்த சோதனை- தொல்காப்பியரும் தமிழன் இல்லையாம் - by Aaruran - 01-20-2006, 07:00 AM
[No subject] - by Luckyluke - 01-20-2006, 07:10 AM
[No subject] - by Sukumaran - 01-20-2006, 09:30 AM
[No subject] - by Luckyluke - 01-20-2006, 09:33 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)