Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒலிதான் நிரந்தரம்; வரிவடிவம் மாறக்கூடியது:
#1
ஒலிதான் நிரந்தரம்; வரிவடிவம் மாறக்கூடியது: தமிழ் எழுத்துச் சீரமைப்பு குறித்து வா.செ.கு.


சென்னை, மார்ச் 6: மொழிக்கு ஒலிதான் நிரந்தரம். வரிவடிவம் என்பது மாறக்கூடியது என கல்வியாளர் வா.செ. குழந்தைசாமி கூறினார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடத்திய ஆய்வரங்கத்தில் தமிழ் எழுத்துச் சீரமைப்பு குறித்து அவர் ஆற்றிய உரை:

இந்திய மாநில மொழிகளில் தமிழும் ஒன்று. அதன் இன்னொரு தகுதி அது உலகு தழுவிய அளவில் வாழும் தமிழ் மக்கள் பயன்படுத்தும் மொழி.

சீன வானொலி 43 மொழிகளில் ஒலிபரப்பாகிறது. அதில் உருது, வங்காளம் தவிர்த்து இந்திய மொழிகளில் ஹிந்தியும் தமிழும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. லண்டனில் உள்ள பிபிசி, பல மொழிகளில் ஒலிபரப்பைச் செய்து வருகிறது. இதிலும் இந்திய மொழிகளில் தமிழிலும் ஹிந்தியிலும் மட்டுமே ஒலிபரப்பு இருக்கிறது. யுனெஸ்கோ கூரியர் இதழ் 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளிவந்தது. இதிலும் இந்திய மொழிகளில் ஹிந்தியிலும் தமிழிலும் மட்டுமே இந்த இதழ் வெளிவந்தது. இதிலிருந்து தமிழ் மொழிப் பரவலைப் புரிந்துகொள்ள முடியும்.

உலகு தழுவிய மொழி என்ற தமிழின் தகுதியைக் காப்பாற்ற வேண்டும். அதற்கு தமிழர்கள் எங்கிருந்தாலும் தமிழைக் கற்றிருக்க வேண்டும். அனைவருக்கும் கல்வி என்ற குறிக்கோள் செயல்படுத்தப்படும் இச் சூழ்நிலையில் தமிழ் வரிவடிவத்தைக் கற்பது எல்லோருக்குமே எளிதாக இருக்க வேண்டும். இந்த அடிப்படையிலேயே தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் அமைகிறது.

எழுத்துச் சீரமைப்பு என்பது எழுத்துகளைக் குறைப்பது அல்ல. 247 எழுத்துகளில் எந்த எழுத்தும் குறையாது. சீரமைப்பது என்பது கற்பதை எளிதாக்குவதே.

1933-ல் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து பெரியார் வலியுறுத்தினார். 1978-ல் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை அப்போதைய முதல்வர் எம்ஜிஆர், பாதியளவு நிறைவேற்றினார். மீதி இருக்கும் சீர்திருத்தத்தைத்தான் நாம் இப்போது செய்ய வேண்டியுள்ளது.

தமிழ்நாட்டில் தமிழ்மொழி மாநில அரசின் அலுவலகங்களில் மட்டுமே ஆட்சி மொழியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலங்கை, சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளில் மட்டுமே தேசிய ஆட்சி மொழியாகத் தமிழ் இருக்கிறது. மலேசியா, மோரிஷஸ், ஃபிஜி, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட மொழியாகத் தமிழ் இருக்கிறது.

தமிழில் உள்ள 216 உயிர்மெய் எழுத்துகளின் வரிவடிவத்தில் சில சீர்திருத்தங்கள் செய்தாலே போதுமானது. இகர, ஈகாரம் மற்றும் உகர, ஊகாரத்தில் 72 தனிப்பட்ட விதமான குறியீடுகளைக் குழந்தைகள் மனப்பாடம் செய்ய வேண்டியுள்ளது. இதில் நான்கே புதிய குறியீடுகளைப் புகுத்துவதன் மூலம் 247 எழுத்துகளில் எதையும் குறைக்காமல், குறியீடுகளை மட்டுமே குறைத்து, தமிழ் கற்பதை எளிதாக்கலாம். இங்கு அந்த மாறுபட்ட குறியீடுகளைக் காண்பித்திருக்கிறேன். இதையே பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. இக் குறியீடுகள் எப்படி அமைய வேண்டும் என்பதை ஆராயக் குழு அமைத்து, அதன் அடிப்படையில் ஒரே மாதிரியான தரப்படுத்தப்பட்ட குறியீடுகளைப் பயன்படுத்தலாம்.

மொழிக்கு

ஒலிதான் அடிப்படை. வரிவடிவம் என்பது ஒலிக்கு நாம் கொடுக்கும் குறியீடு. ஒலி நிலையானது. வரிவடிவம் நிரந்தரமானது அல்ல. எனவே வரிவடிவத்தை மாற்றுவதில் தவறில்லை. தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் நம் காலத்தில் நடக்கிறதோ இல்லையோ, இந்த மாற்றம் நிச்சயம் வந்தே ஆகும்.

வழக்கறிஞர் ச. செந்தில்நாதன், "ஆராய்ச்சி' காலாண்டிதழ் ஆசிரியர் மே.து. ராசுகுமார் ஆகியோர் பங்கேற்றனர். கவிஞர் உதயை மு. வீரையன் வரவேற்றார். கவிஞர் நா. வீரபெருமாள் நன்றி கூறினார்.

நன்றி: தினமணி
<b>I would never die for my beliefs because I might be wrong</b>

- Bertrand Russell
Reply


Messages In This Thread
ஒலிதான் நிரந்தரம்; வரி - by thampu - 03-06-2004, 08:56 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)