Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அம்பலமாகின்றது இன்னுமொரு சதி
#1
உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் எல்லோரும் தங்களின் எதிர்கால சுதந்திர வாழ்வைப்பற்றிக் கனவு கண்டுகொண்டிருக்க தமிழர்களின் மிகப்பெரிய சொத்துக்களில் ஒன்றும், இன்றைய போராட்டத்தின் உயிர்நாதமுமாகிய கல்வியை அழிக்க முனையும் சக்திகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போராட்டம் இன்றைய கால கட்டத்தில் மிக முக்கியமானது.

கடந்த 14.06.2004 முதல் யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக அங்கு பணிபுரியும் ஊழியர்களால் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது

யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை முற்றுமுழுதாக தரப்படுகின்றது.

பல்கலைக்கழக ஊழியர் சங்கம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

பல்கலைக்கழக சமூகத்தவர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும் 14.06.2004 முதல் தொடர்ச்சியான வேலை நிறுத்தம வித்திட்ட காரணிகள் (முக்கியமானவை மட்டும் கீழே தரப்பட்டுள்ளன)

1. பல்கலைக்கழக பதிவாளர் ஏழாட்டை விடுமுறையுடன் இணைந்த வெளிநாட்டு விமானப் பயணச்செலவை குறிப்பிட்ட நாட்டிற்கு செல்லாமலே பெற்றுக்கொண்டமை. இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்காததுடன் காலதாமதத்தின் மூலம் மோசடியை மூடிமறைக்க முனைகின்றமை.

2. பல்கலைக்கழக போதனைசாரா பணியாளர்களின் பணிகளை தனியார் மயமாக்குவதன் மூலம் பல்கலைக்கழக ஊழியர்களின் தொழிற்சங்க பலத்தை நசுக்க முனைவதுடன், அவ்வாறு தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளின் மூலம் பல்கலைக்கழக நிர்வாகத்சை; சார்ந்தவர்களும் அவர்களின் பங்குக் கூட்டாளிகளும் இலாபமீட்டல்.

உ-ம் 1. வெளிவாரி கற்கை நெறிஅலகில் துப்பரவாக்கல் பணிகளுக்கு தனியார் நிறுவனமொன்றிற்கு மாதமொன்றிற்கு ரூபா 14,700 + VAT (வரி) உள்ளக ஊழியர் ஒருவரை நியமித்தால் ஏற்படும் செலவு ரூபா 7,000 மட்டுமே.

உ-ம் 2. தனியார் வாகனமொன்றை வாடகைக்கு அமர்த்தியுள்ளமை. வாடகை நாளொன்றுக்கு ரூபா 500 பிரயாணத்தின்போது கிலோ மீற்றருக்கு ரூபா 5, தரி;த்து நிற்பதற்கு மணித்தியாலம் ஒன்றுக்கு ரூபா 124 ஆகவே நாளொன்றுக்கு குறைந்த பட்சம் ரூபா 1,500 10 கடமை நேரம் தவிர்ந்த பிற நேரப் பாவனைக்கு புறம்பான கட்டணம்.

வாகன உரிமைiயாளராகப் பல்கலைக்கழக காதிதாதி வழங்குனர் ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிகின்றோம். நிதிக்கிளையின் பெரும்புள்ளிகள் சிலரும் இவ்வாகன உரிமையுடன் சம்பந்தப்படவதாகவும் சில தகவல்கள் எமக்கு கிடைக்கப்பெற்றன.

பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான ஓட்டோ வாகனம் மாதக் கணக்காக உபயோகப்படாமல் உள்ளது. ஓட்டோ மற்றும் வாகனங்களுக்கென நாட் கூலி அடிப்படையில் பணிக்கமர்த்தப்பட்டுள்ள ஊழியரும் சேவைக்கு அழைக்கப்படுவதில்லை. பல்கலைக்கழகத்தின் வாகனங்கள் பயன்படுத்தக்கூடிய தருணங்களிலும் அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து இத்தனியார் வாகனம் பயன்படுத்தப்படுகின்றது.

உ-ம் 3. அரியாலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் குடியிருந்த அவரின் உறவினர் வீடு துணைவேந்தர் விடுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள வீட்டு உரிமையாளர் சிலர் விண்ணப்பித்திருந்த போதிலும் 5 கிலோமீற்றருக்கும் கூடிய தொலைவிலுள்ள இவ்வீடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இவ்வீட்டின் விடுதிக் காப்பாளராக 67 வயது முதியவர் நியம விதிமுறைகளுக்கு முரணான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

3. சகல பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ரூபா 1150/1000 சம்பளப்படி பிற பல்கலைக்கழகங்களில் நிலுவையுடன் வழங்கப்பட்டுள்ள போதும் எமது பல்கலைக்கழகத்தில் இதுவரை வழங்கப்படவில்லை.

4. சேவை மூப்பும் கல்வித்தகமையும் கொண்டோரைப் புறக்கணித்து குற்றவாளியாக தண்டனை வழங்கப்பட்ட சேவை மூப்புக்குறைந்த ஒருவரை பிரதம பாதுகாப்பு அதி;காரியாக எமது பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவு செய்தது. இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவரின் பிரத்தியேகக் கோவையில் பல பக்கங்கள் அகற்றப்பட்டிருப்பதாக எமக்கு நம்பகமாக தெரிய வந்துள்ளது. கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் அலுவலகத் தளபாடத் திருட்டு வழக்கி;ல் குற்றவிசாரணைக்கு உள்ளானவர். வேறொரு திருட்டுக்கு உடந்தையாக இருந்தமைக்காக ஒருவார சம்பளம் தண்டமாக விதிக்கபட்டவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் ஏராளமான திருகுதாளங்களில் ஈடுபட்டவர். பல்கலைக்கழக கடனொன்றைப் பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு பிரதேசங்களிலிருந்த அலுவலகங்களில் இக்கடனை இருமுறை (உண்மையான கடன்தொகையிலும் இருமடங்கு) பெற்றுள்ளார். இம்மோசடி கண்டு பிடிக்கப்பட்டது. இவருக்கும் எமது துணைவேந்தருக்கும் இருந்த நெருக்கத்தின் காரணமாக பிரதம பாதுகாப்பு அதிகாரியாகத் தெரிவு செய்யப்பட்டார். இந்த நெருக்கத்தின் பயனாய் இவர்கள் இருவரும் பெற்ற பலன்களும் விரிவாக ஆராயப்பட வேண்டியவை. எனினும் அழுத்தங்களின் காரணமாக இதுவரை இதுகுறித்த நியமிக்கும் மனுவை பேரவைக்கு சமர்ப்பிக்காது துணைவேந்தர் இழுத்தடித்து, ஒத்தி வைத்துள்ளார்.

5. பல்கலைக்கழக ஊழியர் சிலருக்கு குற்றப்பத்திரம் வழங்கப்படாமல் தண்டனை வழங்கப்பட்டது. இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கிய தீர்ப்பு இவ்வாறு தண்டனைக்கு வழங்கப்பட்டமை தவறானது என்பதை வெளிப்படுத்தியது. எனினும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்ப்பை அமுலாக்க மறுக்கும் நிர்வாகம் இத்தீர்ப்பு தொடர்பாக அறிக்கை வெளியிடுமாறு பல்கலைக்கழக பேரவையின் உறுப்பினர்கள் இருவரைப் பணித்துள்ளது. அவர்கள் இருவரும் 10 மாதங்களாக இந்த அறிக்கையை ஆராய்ந்து வருகிறார்கள்!!!

6. ஊழியர் இடர்கடன் மீளளிப்புத் தொகைக்கடன் வழங்கலுக்கு மீளப்பயன்படுத்த வேண்டும். ஆனால் அவ்வாறு பயன்படுத்தப்படவில்லை. மேலும் இடர்கடனுக்கும், ரூபா 12,200 கடனுக்கும் ஆவணங்கள் ஆதாரம் காட்டுமாறு கோரப்பட்டுள்ளன. இந்நடைமுறை ஏனைய பல்கலைக்கழகங்களில் பின்பற்றப்படுவதில்லை. இங்கும் இவ்வாறு ஆதாரம் காட்டாத அதிகாரிகள் சிலருக்கு இடர் கடன் வழங்கப்பட்டுள்ளன. மோட்டார் சைக்கிள் கடன் மீளளிப்பு தொகையும் பிற தேவைகளுக்கு பயன்படுகின்றது. போதனை சாரா ஊழியர் கணினிக்கடனைப்பெற சுற்றுநிருபத்தின் வாயிலாக தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்ட பின்னர் இக்கடன் வழங்கல் இப்பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்டது.

இது தவிர 30.01.2004 அன்று அங்கத்தவர்களுக்கு வெளியிட்ட பிரசுரத்தில் குறிப்பிட்ட கோரிக்கையில் தீர்க்கப்படாதவைகளும், 14.05.2004 பொதுச்சபை தீர்மானங்களும் எமது கோரிக்கையில் அடங்கும்.

ஏன் இந்தப்போராட்டம்?

நிர்வாகத்தில் காணப்படும் ஊழல்களை வெளிக்கொண்டு வருவதன் மூலம் தனியார் மயமாக்கலால் பாதிக்கப்படும் ஊழியர்களையும் அவர்களது நலனையும் காப்பாற்றுவதற்கான நடவடிக்கையாகும். இந்த ஊழியர்களின் பிரச்சனை அநேகருக்கு சாதாரண பிரச்சனைபோல் தோன்றலாம். இந்தப் பிரச்சனையின் தாற்பரியம் எவ்வாறு இருப்பினும் அவர்களால் வெளிக்கொண்டு வரப்பட்ட பிரச்சனைகளின் ஆழத்தினை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

நிர்வாகத்தின் ஊழல்!

ஒரு நிர்வாகத்தில் காணப்படும் ஊழல் என்பது பலருக்கு சாதாரண விடயமாக இருக்கலாம் ஏனெனில் இன்று ஊழல் என்பது இலங்கை அரச ஆட்சியில் எல்லா இடங்களிலும் பரவலாக மலிந்து காணப்படுகின்றது என்ற கருத்து நிலவுகின்றமையே ஆகும். ஆனாலும் 1995ற்கு முன்பு இவ்வாறானதொரு பிரச்சனை யாழ் பல்கலைக்கழக ஊழியர்களால் முன்வைக்கப்படவில்லை. அப்படியானால் அதற்கு பின்னர் ஏதாவது ஊழியர் போராட்டங்கள் இடம்பெற்றதா? என்ற கேள்வி எழும். ஆம் பல போராட்டங்கள் எழுந்தன அவை மிகச் சாதுரியமாக கையாளப்பட்டு தற்காலிக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. ஆகவே தற்போது ஊழியர்களால் வெளிப்படுத்தப்படும் யாழ் பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் சீர்கேடு என்பது இன்றைய அரசியல் நிலைமைகளில் முக்கியமானதொன்றாகும்.

நிர்வாகம் சரியில்லை என்றால் நிர்வாகியின் மீது உள்ள பிரச்சனையே! என்பது படித்தவர்கள் எல்லோருக்கும் எளிதில் விளங்கும். மேலும் இக்கூற்றை விளங்கப்படுத்துவதாயின் தமிழ் மூதாட்டி ஒளவை சொன்னது போல 'தலைவன் எவ்வழியோ குடிமக்களும் அவ்வழி" என்ற அனுபவமொழி நன்கு தெளிவுபடுத்தும். 1995ம் ஆண்டிற்கு பின் யாழ் பல்கலைக்கழகத்திற்கு தலைமை வகித்த, தலைமை வகிக்கின்ற உபவேந்தர்கள் இருவரும் பின்கதவால் பதவியில் அமர்ந்தவர்களே! தற்போது உள்ள துணைவேந்தர் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் மூன்றாது இடத்தைப்பெற்றவர் என்பதும், அவர் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரால் அமைச்சர் ஒருவரின் சிபாரிசு பெற்றுப் பதவியில் அமர்த்தப்பட்டவர் ஆவார். முன்னைய துணைவேந்தரும் மேற்படி அமைச்சரின் சிபாரிசில் பதவிக்கு அமர்த்தப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லோருக்கும் பதவியில் ஆசை இருப்பது சாதாரணம், இருப்பினும் தகுதியுடையவருக்கு அப்பதவியை வழங்குவதன் மூலமே நிர்வாகத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்த முடியும் என்ற உண்மை புரியாதவரல்ல அமைச்சர்!. ஆக, அப்பதவியை வழங்கியது என்பது திட்டமிட்ட செயல்.

பல்கலைக்கழக மாணவர்களின் எழுச்சியால் முதன் முதலாக பொங்குதமிழ் நிகழ்வு கொண்டாடப்பட்டு தமிழருக்கு இழைக்கப்டும் கொடுமைகள் உலகிற்கு வெளிக்கொண்டு வரப்பட்டன. பல்கலைக்கழகம் விடுதலைப் போராட்டத்திற்கு பல வழிகளிலும் உறுதுணையாக இருந்தது. ஆகவே விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானவர்களின் கவனம் பல்கலைக்கழத்தின் பக்கம் திரும்பியுள்ளமை ஆச்சரியத்திற்குரியதொன்றல்ல.

அண்மைக்காலமாக சில வெளிநாட்டு சக்திகள் தமிழர் போராட்டத்தை முற்றாக ஒழித்துக்கட்ட பல வழிகளிலும் முயற்சி செய்வது அனேகர் அறிந்த விடயம். அவ்வாறானவர்கள் நேரடியாக எந்தக் காரியத்தையும் செய்யமாட்டார்கள். தங்களை சிறந்த அறிவாளிகளாக எண்ணுவார்கள். ஏனெனில் சோவியத் யூனியனை (ரஷ்யா) சின்னாபின்னப்படுத்திய பின்பு தங்களின் எட்டு வருட முயற்சியை புத்தகமாக வெளியிட்டவர்கள். தங்களின் நலனுக்காக ஒரு இடத்தில் ஒரு நியாயமும் இன்னொரு இடத்தில் வேறு ஒரு நியாயமும் பேசுவார்கள். இவர்கள் நேரடியாகவே தமிழீழத்தில் வந்து தங்களது வேலைகளைச் செய்ய அவர்களது வெள்ளைத்தோல் இடமளிக்காது! அதனால் தான் காலத்திற்குக் காலம் இலங்கையில் பல துரோகிகள் இவர்கள் வசம் பணிந்துபோனதை வரலாறு குறித்து நிற்கிறது.

அதற்காக நம்மவர்களையே உபயோகப்படுத்துவது தவிர்க்க முடியாது. அந்த வகையில் தங்களை அறியாமலோ அல்லது அறிந்தோ செயற்படுபவர்கள் தான் எங்களுடைய படித்த கல்விமான்களில் சிலர். கல்விமான்களிடையே காணப்படுகின்ற பலவீனங்களுக்கு தீனிபோடுவதன் மூலம் காரியங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அதாவது உயர் பட்டங்களின் மீதுள்ள பற்று, உயர் பதவிகளின் மீதுள்ள பற்று, உடல் இச்சைகளின் மீதுள்ள பற்று இவற்றை நிறைவு செய்வதன் மூலம் தமிழர்களின் உயிர்நாதமாகிய கல்வியை சிதைப்பதற்கு கல்விமான்களின் உதவி பெறப்படுகின்றது. எத்தனையே ஆண்டுகளாக விலைகொடுத்து கட்டியெழுப்பபட்ட விடுதலை உணர்வை, இதுவரை கண்ட வெற்றிகளை, சுயலாபங்களுக்காகவும், தனிப்பட்ட குரோதங்களினாலும் இவர்கள் கூட இருந்து செய்கின்ற செயல்களால் சில காலங்களுக்குள் தீர்வு காணப்பட முடியாத நோய்கள் போல (எயிட்ஸ்) எமக்குள் இருந்து எம் இனத்தின் சுவடுகளை அழிக்கும்! வாழ்வை நாசமாக்கும்.

சாதாரண வியாபாரி தனது அன்றாட உணவுத் தேவைக்காக புலிகளின் முகாமைக்காட்டிக் கொடுத்த துரோகம், புலி உறுப்பினர்களை காட்டிக்கொடுத்த துரோகம், படித்த கல்விமான்கள் செய்யும் துரோகத்தோடு ஒத்துப்பார்க்கையில் மன்னிக்கக் கூடியதே! ஏனெனில் அவர்கள் படிக்காத பாமரர்கள், சாதாரண விடயங்களில் உள்ள அரசியல் நோக்கங்களை புரிந்து கொள்ள முடியாதவர்கள். படித்து பட்டம் பெற்ற கல்விமான்களை தமிழர் சமூகம் அவ்வாறு எண்ணக்கூடாது! துரோகம் செய்த பாமர மக்களையே தமிழ் சமூகம் மன்னித்தது கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்வியில் சிதைவை ஏற்படுத்துவது என்பது எந்த சாதாரண குடிமகனாலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத துரோகம். இன்றைய உலக ஒட்டத்தில் சிந்திக்கமுடியாதவர்கள் வாழ்ந்தால் அவர்கள் நாளுக்கு நாள் ஏமாற்றப்படுவதும் சிலரால் உறிஞ்சப்படுவதும் தவிர்க்க முடியாதது. அடிப்படையான, ஆரோக்கியமான கல்வியே ஒருவனைச் சிந்திக்கத் து}ண்டுகின்றது. அவ்வாறான கல்வியை வழங்கும் நிறுவனத்தில் ஏற்படுத்தப்படும் முறைகேடுகள், ஒழுக்கக் குறைவுகள் நிச்சயம் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வியின் தரத்தில் குறைவை ஏற்படுத்தும்!

இதற்கு சான்றாக பின்வரும் சம்பவம் விளங்குகின்றது.....

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஊழியர் போராட்டத்தைப்பற்றி மாணவர்களிடையே கருத்துக் கேட்டபோது ஒரு பகுதி மாணவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்கள். அவர்கள் கூறிய விளக்கம் 'நாங்கள் வீண் பிரச்சனைகளுக்கு தலைகொடுக்க விரும்பவில்லை, நிர்வாகத்தால் நாங்கள் பழிவாங்கப்படுவதை உங்களால் தடுக்கமுடியாது! அந்தக் கட்டிடத்தில் இறுதி வருட மாணவர்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் போய்க்கேளுங்கள்" என்றார்கள்.

மற்றைய பகுதியினர்

'நாங்கள் எவற்றிலும் தலையிடுவது கிடையாது. நாங்கள் காலையில் வந்தால் மாலையில் போய்விடுவோம், யாரும் என்னவாவது செய்யட்டும் எங்களுடைய படிப்பைக் குழப்பாது விட்டால் போதும்.." என்றார்கள். இந்த இருமாணவ குழுக்களின் கருத்து பல்கலைக்கழக நிர்வாகத்தால் எவ்வாறு மாணவர்கள் அடக்கி வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கான உதாரணமாகும்.

(சிந்தனைக்கு......

சீர்கெட்ட நிர்வாகத்தால் உருவாக்கப்படும் மாணவர்கள் சீராக இருப்பதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவு (நான்கு வருடம் வாழுகின்ற சூழல் நிட்சயம் நடத்தையில் மாற்றத்தைக் கொண்டு வரும்) அவ்வாறு வெளிவரும் மாணவர்கள் அநேகர் ஆசிரியர் பதவி பெற்று சேவையாற்றுவது பொதுவானது. இது இவ்வாறு இருக்க எப்படி ஒரு ஒழுங்கான சமுதாயத்தை இனிவரும் காலங்களில் உருவாக்க முடியும்?)

இதேவேளை பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட விளம்பரம் ஒன்றும் முக்கியமானது, ஊழியர்களை இடைநிறுத்துவது பற்றிய விளம்பரம். இதுவும் கிளர்ந்து எழுகின்ற மக்களை பயமுறுத்தி அடக்குவதற்கான செயற்பாடுகளில் ஒன்று.

<img src='http://www.tamilnatham.com/articles/kuru/uni/notice.jpg' border='0' alt='user posted image'>

இந்த விளம்பரத்தில் ஒன்று கூர்ந்து கவனிக்கப்படல் வேண்டும். அதாவது குடாநாட்டில் ஐந்து தினசரிகள் வெளிவருகின்ற போதும் ஒரு பத்திரிகையில் மட்டும் பல்கலைக்கழக உத்தியோகபூர்வ அறிக்கைகளை விடுவது என்பது பல்கலைக்கழகம் பிரச்சனைகளை எந்தவகையில் ஜனநாயக ரீதியாக கையாளுகின்றது என்பதற்கு எடுத்துக்காட்டு ஆகும்! (அரச பத்திரிகையில் வெளியிட்டிருக்கலாம் அல்லது எல்லா தனியார் பத்திரிகையிலும் வெளியிட்டிருக்கலாம்) இதற்கு சரியான விளக்கம் சொல்வார்களா?

ஊழியர்களால் வெளிப்படுத்தப்பட்ட ஊழல்களை மறைப்பதற்கும், தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு களங்கம் ஏற்படுத்தவும் பல உத்திகள் பல்கலைக்கழக நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்து.

1. ஊழியர்களிடையே பிரிவை ஏற்படுத்த சில ஊழியர்களை பதவிகளில் இருந்து இடைநிறுத்துவது.

2. மாற்றுக் குழுக்களை நிறுவி (10 தொடக்கம் 20 பேர் கொண்ட குழு) அவர்களின் மூலம் பத்திரிகைகளில் அறிக்கைகள் விடுவது, அதன் மூலம் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு பலமில்லை என்று வெளிப்படுத்துவது அல்லது இரண்டு அணி உள்ளது போன்ற தோற்றப்பாட்டைக்காட்டுவது. (இரண்டு மூன்று பேர் மட்டுமே தீவிரமாக செயற்படுவதாகவும் மற்றவர்கள் தங்களது மேலதிகாரிகளை திருப்திப்படுத்துவதற்காக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.)

சரி துணைவேந்தர் ஒருவர் மட்டும் எடுக்கும் முடிவை பல்கலைக்கழக சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை அதற்காக தானே பல்கலைக்கழக பேரவை (செனற்) இருக்கின்றது என்று எண்ணுபவர்களுக்கு..... அதற்குள்ளும் ஊழல்கள் இருப்பது அதிர்ச்சி தரும் செய்தி!

ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தை விழுங்கி ஏப்பம் விட்ட பிரபல பத்திரிகையின் நிர்வாக இயக்குனர் உட்பட பலரை அரசாங்கம் கடந்த ஐந்து வருட காலத்தில் பல்கலைக்கழக பேரவையில் அங்கம் வகிக்க அனுமதி அளித்துள்ளது! இவ்வாறான செயற்பாடுகளுக்கு பின்பும் பல்கலைக்கழக நிர்வாகம் சரியான முடிவுகளை எடுத்துத்தான் தனது நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மக்கள் எண்ணுவார்களே ஆயின் அது துரதிர்ஷ்டமே.

மற்றவர்களைப் பற்றி ஆராய்வதிலும் பார்க்க பிரபல பத்திரிகையின் நிர்வாக இயக்குனர் ஏன் பல்கலைக்கழக பேரவையில் அங்கம் வகிக்கவேண்டும் என்பதன் காரணத்தை பத்திரிகையாளன் என்ற வகையில் மக்கள் தற்போது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளோடு ஒத்துப்பார்ப்பதன் மூலம் அதன் உள்நோக்கத்தை இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும்!

1. பிரபல பத்திரிகை குடாநாட்டு மக்களின் மனதில் மிக ஆழமாகவே குடிகொண்டுள்ளது. ஏனெனில் சில காலமாக மக்களுக்கு அளப்பரிய சேவை ஆற்றியது என நம்பப்படுகின்றது. இப்பத்திரிகையில் குறிப்பிடப்படும் விடயங்கள் அனைத்தும் உண்மை என்று மக்கள் நம்புகின்றார்கள். (அமெரிக்காவிற்கு தப்பி ஒடிய இந்திய புலனாய்வு அதிகாரி பொற்கோயில் நடவடிக்கையில் நடந்து கொண்ட முறையால் இந்திய இராணுவத்தில் இருந்து இந்திய புலனாய்வுத்துறைக்கு மாற்றம் பெற்றமை போல - நன்றி ரிஷியின் புலனாய்வு அரசியல்)

2. மக்களிடம் செல்வாக்கு பெற்ற பத்திரிகையில் சில விடயங்கள் (அரசியல்) மட்டும் வெளிவர குடாநாட்டில் நடந்துகொண்டிருக்கும் சில விடயங்களைப்பற்றி மூச்சு விடாமல் இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. குறிப்பாக கல்வியி;ல் ஏற்படுத்தப்படுகின்ற அழிவு வேலைகள். அதேவேளை மக்களை வேறுபக்கமும் திசை திருப்பவேண்டிய தேவையும் இருக்கின்றது?

(முன்பு பித்தன் பதில்கள் என்று அப்பட்டமான ஆபாசமான பதில்களை பத்திரிகையூடாக வெளியிடுவதால் பாலியல் சார்ந்த விடயங்களை மக்கள் மத்தியில் மலினப்படுத்துவது, தற்போதும் சகோதர பத்திரிகை மூலம் செய்து வருகின்றது.)

3. எந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் எந்தச் செய்தியை பிரசரிக்காது விடவேண்டும் என்ற முடிவு நிர்வாகத்தாலே எடுக்கப்படுகின்றது. அதற்கு வேறு வகையான விளக்கமும் கொடுக்கப்படுகின்றது. (வியாபாரத்தை பாதிக்கும், சிலரின் எதிர்ப்பைச் சந்தித்தல் போன்ற சில போலிக் காரணங்கள்)

4. எல்லாச் செய்திகளையும் வெளியிட்டு நடுநிலைமை போல் காட்டிக்கொண்டாலும், வெளிவிடப்படும் செய்திகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் நிர்வாகத்தின் அல்லது ஆசிரியபீடத்தின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாகவே இருக்கின்றது.

அண்மையில் ஊழியர் சங்க போராட்டம் சம்பந்தமான அறிக்கைகளை உதாரணமாகப் பார்க்கலாம்.

(இரண்டு அறிக்கைகள்)

<img src='http://www.tamilnatham.com/articles/kuru/uni/uni3.jpg' border='0' alt='user posted image'>

(ஊழியர்களின் அறிக்கை மூன்று கொலம் 9 சென்ரிமீற்றர் அளவு)

<img src='http://www.tamilnatham.com/articles/kuru/uni/uni5.jpg' border='0' alt='user posted image'>

(ஊழியருக்கு எதிரான அறிக்கை மூன்று கொலம் 17 சென்ரிமீற்றர் அளவு)

<img src='http://www.tamilnatham.com/articles/kuru/uni/uni6.jpg' border='0' alt='user posted image'>

மேற்படி அறிக்கையானது பிரபல பத்திரிகை ஒன்றின் முன்பக்கத்தில் 21.06.2004 இல் பிரசுரிக்கப்பட்டது. இதன் தலையங்கத்தினை வாசிக்கும் ஒரு சாதாரண வாசகனுக்கு ஏற்படும் கருத்து என்பது முக்கியமானது.

சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் வெளியிடப்பட்ட மாணவர்களின் அறிக்கையானது, மக்களுக்கு ஊழியர்களின் மேல் எதிரான கருத்தினை தோற்றுவிக்கும் வகையில் தலைப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இன்னுமொரு பேரவை உறுப்பினரும் பிரபல சட்டவல்லுனர் ஒருவரின் செயலும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஊழியர் ஒருவருக்கு எதிராக நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராக ஊழியர் சங்கத்தினால் மனித உரிமைகள் குழுவிற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் முடிவு ஒன்று நிர்வாகத்திற்கு எதிராக அமையவே அம்முடிவை அமுல்படுத்துவதற்கு காலம் கடத்தும் நிர்வாகம் மனித உரிமைகள் நிறுவனத்தால் வழங்கப்பட்ட முடிவைப் பரிசீலிப்பதற்காக குறிப்பிட்ட பேரவை உறுப்பினரை அமர்த்தியது. ஆனாலும் பத்து மாதங்கள் கடந்தும் அம்முடிவுக்கான அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை!

மேலே விபரிக்கப்பட்டவை எல்லாமே அறிந்த, வெளிவந்த விடயங்கள் இன்னும் எத்தனை வெளிவராமல் மூடி மறைக்கப்டபட்டுள்ளன?

இவை தவிர இன்னும் சில.....

பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலை?

1. 300 மாணவர்கள் அடிப்படை ஆங்கில பாடத்தில் சித்தியடையவில்லை. மாணவர்கள் படிக்கவில்லை என்று காரணம் கூறினாலும் இத்தனை தொகையான மாணவர்கள் ஒரே தடவையில் சித்தியடையவில்லை எனின், அதற்குரிய போதனா ஆசிரியர்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள்?

குடாநாட்டு கல்வி வீழ்ச்சி அடைவதை ஆராய்வதற்கு ஜேர்மனியில் இருந்து வெளிநாட்டவர் வந்ததைப்போல் பல்கலைக்கழக கல்வித்தர வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்று அறிய வெளிநாட்டில் இருந்து யாரையாவது எதிர்பார்க்கிறார்களா?

2. யாழ் பல்கலைக்கழகத்தினை இலங்கையில் உள்ள மற்றைய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் அந்த மாணவர்கள் அனுபவிக்கும் பெரும்பாலான வசதிகளை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அனுபவிப்பதில்லை.

கணினி வசதிகள் இதுவரை காலமும் இல்லை (சமாதான சூழ்நிலை உருவாகி பல மாதங்களாகியும் தற்போது தான் நூலகத்தில் பொருத்துவதற்காக 100 இற்கும் அதிகமான கணினிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.)

தங்களுடைய பதவிகளுக்காக அமைச்சர்களுக்கும், ஜனாதிபதிக்கும் பின்னால் திரிபவர்கள் மாணவரின் நலன்களிலும் அக்கறை எடுப்பதும் நன்று)

3. அநேகமான நாடுகளில் பல்கலைக்கழகத்தில் தான் சமுதாயத்திற்கு தேவையான பல விடயங்களை ஆராய்கின்றார்கள். அதன் மூலம் கண்டுபிடிப்புகள் செய்கிறார்கள். ஆனால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நிலை வேறு அதாவது யப்பானிய மொழிக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு அது இது என்று ஆராய்வார்கள். வெளிநாடுகளில் வசிக்கும் எம் சகோதரர்களின் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஏதாவது ஆராய்ச்சி செய்தார்களா? அல்லது ஏதாவது கண்டு பிடித்தார்களா?

4. முன்னைய துணைவேந்தரால் புதிய புதிய கற்ககைநெறிகள் (இலங்கையின் ஏனைய பல்கலைக்கழகங்களில் இல்லாத) ஆரம்பிக்கப்பட்டன. அவற்றுள் 1. மீன்பிடியியல் டிப்ளோமா (தற்போது பட்டப்படிப்பாக மாற்றப்பட்டுள்ளது) 2. சித்திரமும் வடிவமைப்பும் (முதலாவது அணி வெளியேறியுள்ளது இதுவும் பட்டப்படிப்பு) 3. உடற்கல்வியில் டிப்ளோமா (பிசிக்கல் எடியுக்கேசன்) ஒரு வருட டிப்ளோமா கற்கைநெறி. இக்கற்கை நெறியில் இது வரை 300 மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர். இவர்களில் ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் இன்னும் வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவில்லை.

மேலும் இக்கற்கை நெறி தற்போது இரண்டு வருடங்களாக மாற்றப்பட்டுள்ளது அடுத்த ஆண்டு மூன்று வருட பட்டப்படிப்பாக மாற்றப்படவுள்ளது. (ஒரு ஆண்டுக்கு 7,500 வரை கட்டணம் யாழ்பல்கலைக்கழகத்தால் அறவிடப்படுகின்றது. ஒரு மாணவனுக்கு மொத்த செலவாக 40,000 தொடக்கம் 50,000 ரூபா வரை வருடம் ஒன்றிக்கு செலவாகின்றது.) பாடசாலைகளில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை இருந்தும் இவர்கள் எவருக்கும் இது வரை நியமனங்கள் வழங்கப்படவில்லை. இதற்கு கல்வித்திணைக்களம் சொல்லும் காரணம் அவதானிக்கவேண்டிய தொன்றாகும். அதாவது தங்களுக்கு கல்வி அமைச்சு யாழ் பல்கலைக்கழகத்தில் மட்டும் கற்பிக்கப்படும் உடற்கல்வி டிப்ளோமாவை கல்வித்தராதரமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதாகும்?

இந்த இடத்தில் தான் சந்தேகமே தோன்றுகின்றது அதாவது யாழ்ப்பாணத்து இளைஞர்கள் அநேகமானவர்கள் தாம் கற்கும் கல்வி தமக்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுத்தரும் என்ற இலக்கிலேயே கல்வி கற்கின்றார்கள். யாழ் மாணவர்களின் எதிர்பார்ப்பு அறியாதவரா முன்னாள் துணைவேந்தர்? ஏன் இவ்வாறான அரைகுறைக் கற்கைநெறிகளை யாழ் பல்கலைக்கழகத்தில் மட்டும் ஆரம்பிக்க வேண்டும்? தனது சொந்த சிந்தனையில் செயல்பட்டாரா? அல்லது மாற்றான் சிந்தனையில் செயல்பட்டாரா? தன்னுடைய காலத்தில் தொடக்கப்பட்ட கல்வி மாற்றங்களுக்கு விளக்கம் சொல்வாரா முன்னாள் துணைவேந்தர்..?

பல்கலைக்கழகத்தினுள் இன்னும் சில பேராசியர்கள் நேர்மையானவர்களாக இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களின் குரல்கள் வெளியில் கேட்காமல் தடுக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம்.

விஞ்ஞான பீடத்தின் அதிபதி ஒருவரே கடந்த பல்கலைக்கழக உபவேந்தருக்கான போட்டியில் அதிக வாக்குகளால் வென்றவர். அவருடைய நேர்மையான வாழ்வைப்பற்றி குடாநாட்டில் உள்ள கல்விசார் சமூகம் அனைவரும் அறிவர். மேற்படி பேராசிரியரை ஆசிரியராக கொண்டு வெளிவந்த பத்திரிகை இந்து சாதனம். ஆனால் குடாநாட்டின் பிரபல பத்திரிகை ஒன்றில் முகாமையாளராக பணிபுரியும் முன்னை நாள் கல்லூரி அதிபர் அவர்கள் பேராசியருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி அப்பத்திரிகையின் ஆசிரியர் பதவியை தனதாக்கிக்கொண்டார்!

அப்பேராசிரியர் தொடர்ந்து இந்து சாதனத்தின் ஆசிரியராக இருந்தால் உண்மைகள் ஏதாவது வெளிவரலாம் என்ற அச்ச உணர்வின் காரணமாக செய்யப்பட்ட அரசியல் நடவடிக்கையாகவே கருத இடமளிக்கின்றது?

வெளிநாட்டு உளவுப்படையால் செய்து முடிக்கப்பட்ட செயற்பாடுகளை ஒரே பார்வையில் பார்த்தால் இந்தியப் புலனாய்வு அமைப்பில் இருந்த உயர் அதிகாரி ஒருவரை பல வருடமாகப் பயன்படுத்தி இலங்கை உள்ளிட்ட இந்தியாவின் அயல் நாடுகளைப் பற்றி இந்தியப் புலனாய்வாளர்களால் பெறப்பட்ட தகவல்களை குறிப்பிட்ட வெளிநாடு பெற்றுக்கொண்டமை.

சில செய்தியாளருக்கும், அரச உயர் அதிகாரிகளுக்கும், சமய நிறுவனங்களைச் சார்ந்தவர்களுக்கும் உயர் கௌரவங்களை வழங்கி பெருமைப்படுத்துவதன் மூலம் தமக்கு எதிராக இருக்கும் உணர்வை மாற்றி அந்த அதிகாரிகளிடையே ஒரு நட்பை வளர்த்துக்கொள்வது! இதனால் தாம் செய்யப்போகும் காரியங்களுக்கு அவர்களால் வரக்கூடிய தடைகளை முன்கூட்டியே தடுப்பது அத்தோடு அவர்களின் ஆசீர்வாதங்களுடன் சில வேலைகளைச் செய்துகொள்வது.

தமது நாட்டில் உயர்படிப்பு, பட்டங்கள் பெற வாய்ப்பளிப்பது. தமது நேரடி உதவிகள் மூலம் சமூக அமைப்புக்களை, தனிநபர்களை தமக்கு விசுவாசமாக செயற்பட வைப்பது போன்ற வேலைகளை தமிழர் பிரதேசங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. புனர்வாழ்வுப் பணிகள் புலிகள் ஊடாக மட்டும் இடம்பெற்றால் தமது வேலைகளை செய்ய முடியாது போகும் என்ற காரணமும் சிரான் என்கின்ற புனர்வாழ்வு அமைப்பு செயல் இழப்பதற்கு ஒரு காரணமாகும்.

விடுதலைப்புலிகள் அல்லாத அமைப்பினரால் குடாநாட்டில் அல்லது தமிழர் பிரதேசங்களில் நடைபெறுகின்ற நடவடிக்கைகள் அனேகமானவை தமிழர்களின் நலனில் மட்டும் அக்கறை கொண்டு செய்யப்படுவதாக கருத முடியாது. அவற்றை வேண்டாம் என்று ஒதுக்குவதால் தமிழர்களுக்கு அவப்பெயரே உருவாகும். அதனால் மக்கள் விழிப்பாக இருப்பதே சிறந்த முடிவு !

இக்கட்டுரை மூலம் தெரிந்த பல தகவல்கள் அதனோடு தொடர்புடைய சில நடவடிக்கைகளை வெளிப்படுத்தியிருப்பது, குறிப்பிட்ட சிலருக்கு கசப்புணர்வையே வெளிப்படுத்தும். கோபமுற்று என்னுடைய உயிருக்கு அல்லது உடமைக்கு சேதம் ஏற்படுத்த அவர்கள் முனையலாம். அவ்வாறு நடந்தால் என்னுடைய பேனா தொடர்ந்து எழுதாது. ஆனாலும் இந்த உலகில் உள்ள நிரந்தரமானதும், தடுக்க முடியாததுமான மரணத்தை தழுவி என்னுடைய ஆன்மா விடுதலை அடையும் அதேவேளை என்னுடைய ஆன்மா இந்த உலகில் வாழும் மக்களின் ஆன்ம விடிவுக்காக பிரார்த்திக்கும்!


யாழிலிருந்து குரு...tamilnatham.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
அம்பலமாகின்றது இன்னு - by kuruvikal - 06-22-2004, 09:00 PM
[No subject] - by Mathivathanan - 06-22-2004, 09:04 PM
[No subject] - by kuruvikal - 06-22-2004, 09:10 PM
[No subject] - by Kanthar - 06-23-2004, 01:09 AM
[No subject] - by kuruvikal - 06-23-2004, 02:21 AM
[No subject] - by sOliyAn - 06-23-2004, 02:47 AM
[No subject] - by kuruvikal - 06-23-2004, 02:52 AM
[No subject] - by Mathivathanan - 06-23-2004, 03:57 AM
[No subject] - by Aalavanthan - 06-23-2004, 08:54 AM
[No subject] - by Mathivathanan - 06-23-2004, 09:32 AM
[No subject] - by Kanthar - 06-23-2004, 10:12 AM
[No subject] - by kuruvikal - 06-23-2004, 12:48 PM
[No subject] - by Eelavan - 06-23-2004, 05:37 PM
[No subject] - by Mathivathanan - 06-23-2004, 08:14 PM
[No subject] - by Kanthar - 06-24-2004, 02:48 AM
[No subject] - by Mathivathanan - 06-24-2004, 11:57 AM
[No subject] - by vallai - 06-24-2004, 02:36 PM
[No subject] - by Mathivathanan - 06-24-2004, 06:29 PM
[No subject] - by Mathivathanan - 06-24-2004, 11:20 PM
[No subject] - by Eelavan - 06-25-2004, 01:48 PM
[No subject] - by tamilini - 06-25-2004, 07:07 PM
[No subject] - by Mathivathanan - 06-25-2004, 07:32 PM
[No subject] - by vallai - 06-27-2004, 06:16 AM
[No subject] - by kuruvikal - 06-28-2004, 12:13 AM
[No subject] - by vallai - 06-28-2004, 07:23 AM
[No subject] - by tamilini - 06-28-2004, 12:02 PM
[No subject] - by kuruvikal - 06-28-2004, 02:31 PM
[No subject] - by tamilini - 06-28-2004, 04:40 PM
[No subject] - by kavithan - 06-28-2004, 08:13 PM
[No subject] - by tamilini - 06-28-2004, 09:21 PM
[No subject] - by kavithan - 06-28-2004, 09:25 PM
[No subject] - by tamilini - 06-28-2004, 09:29 PM
[No subject] - by kavithan - 06-28-2004, 09:47 PM
[No subject] - by tamilini - 06-28-2004, 09:49 PM
[No subject] - by kavithan - 06-28-2004, 10:03 PM
[No subject] - by tamilini - 06-28-2004, 10:14 PM
[No subject] - by kavithan - 06-28-2004, 11:00 PM
[No subject] - by tamilini - 06-29-2004, 11:06 AM
[No subject] - by vallai - 06-29-2004, 12:07 PM
[No subject] - by tamilini - 06-29-2004, 03:00 PM
[No subject] - by kavithan - 06-29-2004, 04:50 PM
[No subject] - by tamilini - 06-29-2004, 05:41 PM
[No subject] - by kavithan - 06-29-2004, 06:41 PM
[No subject] - by Eelavan - 06-30-2004, 06:29 AM
[No subject] - by kavithan - 06-30-2004, 07:28 AM
[No subject] - by Eelavan - 06-30-2004, 05:04 PM
[No subject] - by Paranee - 06-30-2004, 06:08 PM
[No subject] - by kavithan - 07-01-2004, 09:04 AM
[No subject] - by kavithan - 07-01-2004, 09:20 AM

Forum Jump:


Users browsing this thread: 7 Guest(s)