Jump to content

ஈழப் போராட்டத்தின் முன்னோடி கி.பி.அரவிந்தன் காலமானார்


Recommended Posts

kipi.jpg

புதினப்பலகை ஆசிரியரும், புதினப்பலகை குழுமத்தின் முதன்மைப் பங்காளரும், ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவருமான கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோபர் பிரான்சிஸ்) சற்றுமுன்னர் காலமானார் என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் அறியத் தருகிறோம்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த அவர், பிரான்சில் உள்ள மருத்துவமனையில் சற்று நேரத்துக்கு முன்னர் காலமானார்.
 

கவிஞரும், எழுத்தாளருமான கி.பி.அரவிந்தன், ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர்.

அக்காலப் பகுதியில் சுந்தர் என அழைக்கப்பட்ட அவர், ஈழப்போராட்டத்தில், முதன்முதலில் சயனைட் அருத்தி உயிர்த்தியாகம் செய்த, ஈழப் போராட்ட முன்னோடியான பொன்.சிவகுமாரனுடன் இணைந்து செயற்பட்டவர்.
 

1990களின் முற்பகுதியில் பிரான்சில் குடியேறிய அவர், அங்கிருந்து கடைசி வரை ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக பணியாற்றி வந்தவராவார்.kipi1.jpg

1953ம் ஆண்டு கிறிஸ்தோபர் பிரான்சிஸ் என்ற இயற்பெயருடன் நெடுந்தீவில் பிறந்த இவர், பாடசாலைப் படிப்பை ஆரம்ப காலத்தில் நெடுந்தீவிலும் பிறகு மட்டக்களப்பிலும் முடித்தார்.
 

1972 ஆம் ஆண்டில் சிறிலங்காவின் 1972 அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான துண்டறிக்கையை விநியோகித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கைதான மூன்று தமிழ் இளைஞர்களில் கி.பி.அரவிந்தனும் ஒருவர்.
 

1976 ஆம் ஆண்டில் மீண்டும் கைதாகி டிசம்பரில் விடுதலையானார்.
 

அதையடுத்து, ஈரோஸ் அமைப்புடன் இணைந்து பணியாற்றிய அவர், 1990களின் ஆரம்பத்தில் பிரான்சுக்குப் புலம்பெயர்ந்தார்.

அங்கிருந்து அவர், பி.பி.சி. தமிழோசையின் பாரீஸ் நகர செய்தியாளராகப் பணியாற்றியதுடன், ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வந்தவர்.
 

ki-pi-french-book1.jpg


பிரெஞ்சு மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பு வெளியீட்டில் கி.பி.
 

பல கவிதைத் தொகுதிகளையும், நூல்களையும் எழுதியுள்ள கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் கவிதைகளின் பிரெஞ்சு மொழித் தொகுப்பு, ‘Le messager de l’hiver’, [‘ஓர் உறைபனிக்காலக் கட்டியக்காரன்’] என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
 

அப்பால்தமிழ் என்ற இணைய சஞ்சிகையை நடத்திய அவர், 2009ம் ஆண்டு புதினம் இணையத்தளம் நிறுத்தப்பட்ட பின்னர், புதினப்பலகை இணையத்தளத்தை வெளிக் கொணர்வதில் முக்கிய பங்காறி கடைசி வரை அதற்காக உழைத்து வந்தார்.

நன்றி்: புதினப்பலகை

Link to comment
Share on other sites

கி.பி. அரவிந்தன்: உறைபனிக் கால கட்டியக்காரனின் மரணம்


 
aravi1_2337354f.jpg
 

 

புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் எழுத்தாளர் கி.பி. அரவிந்தனுக்கு அஞ்சலி.
 

கிறிஸ்தோபர் பிரான்சிஸ் என்னும் இயற்பெயரை கொண்ட எழுத்தாளரும் போராளியுமான கி.பி. அரவிந்தன் மார்ச் 8 அன்று பாரீஸில் காலமானார். இலங்கையின் வரலாற்றுப் புகழ் மிக்க நெடுந்தீவில் பிறந்த இவர், 62 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்திருக்கிறார். ஆனால், நூறாண்டுகள் வாழ்ந்திருந்தால்கூட பெற முடியாத அனுபவத்தை 62 ஆண்டுகளிலேயே இவர் பெற்றுவிட்டார். அவர் வாழ்ந்த அன்றைய நாட்களில் ஈழத்துச் சூழல், ரத்தத்தை சிந்த வைத்து, ஆழ்ந்த அனுபவத்தைக் கற்றுத்தந்திருக்கிறது.
 

அரசியல் அனுபவத்தை இலக்கிய அனுபவமாக மாற்ற, சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது, லத்தீன் அமெரிக்கப் பெருவெளியில், இவ்வாறான தனித்துவங் களைக் காண முடியும். அரசியல் செயல்பாடு, இலக்கியச் செயல்பாடாக மாறி, அரசியல் விடுதலைக்கான விதைகள் அங்கு,உற்பத்தியாகின்றன. அரவிந்தனும் அர்ப்பணிப்புக்குப் பின்னர், அரசியல் கதவுகளைத் திறந்து, இலக்கியப் பெருவழியைச் சென்றடைந்து, விடுதலை முழங்கங்களைக் கடைசி நாள் வரை முழங்கி, தனித்துவத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்.
 

மரணத்தை அடிக்கடி முத்தமிட்டவர்

 

மார்க்சியத்தின் மீது தீராத ஈடுபாடு கொண்ட பல்கலைக்கழக மாணவப் பருவத்திலிருந்து, ஈழ விடுதலை நோக்கித் தனது பயணத்தை வேகப்படுத்திக்கொண்டார் அரவிந்தன். இதன் பின்னர் அமைந்த இவரது போராட்ட அரசியல் வாழ்க்கை, யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத அதிபயங்கரங்களைக் கொண்டிருந்தது. மரணத்துக்கு அருகில் அடிக்கடி சென்று திரும்பினார். சயனைட் அருந்தி முதலில் உயிர் தியாகம் செய்த, விடுதலைப் போராளி சிவகுமாரனுடன் தனது போராட்டப் பயணத்தைத் தொடங்கியவர்தான் அரவிந்தன்.

 

1972 - அரசியல்சட்டத் திருத்தம்

 

இலங்கை அரசியலில் 1972-ம் ஆண்டு ஓர் முக்கியமான காலகட்டம். அரசியல் சட்டம், தமிழ் மக்களுக்கு எதிரான வஞ்சகத்துடனேயே திருத்தப்பட்டது. அரசியல் சட்டம் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது என்ற வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கைளை அரவிந்தனும் அவரது தோழர்களும் விநியோகம் செய்தார்கள். பயங்கரவாதத்தோடு தொடர்புப்படுத்தப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டார். மீண்டும் 1978-ம் ஆண்டு, இலங்கை கப்பற்படையால் கைதுசெய்யப்பட்டு, சித்ரவதைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

‘லு மெஸாஜெ லு இவ’ (ஓர் உறைபனிக் காலக் கட்டியக்காரன்) என்னும் இவரது கவிதை நூல் பிரஞ்சு மொழியில் ‘றிவநெவ்’ என்னும் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு, அண்மையில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அரசியலை மானுட முகம் கொண்டதாக மாற்றிக்கொள்வதற்குக் கவிதையை ஆயுதமாகத் தேர்வு செய்துகொண்டவர்தான் அரவிந்தன். ‘இனியொரு வைகறை’, ‘முகங்கொள்’, ‘கனவின் மீதி’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் இதில் மிகவும் புகழ் பெற்றவை. பல்வேறு காலப் பின்னணிகளைக் கொண்ட இவரது பேட்டிகள் ‘இருப்பும் விருப்பும்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது.
 

சமூக மாற்றத்துக்கான விடுதலையை நோக்கிய இவரது படைப்புகள், ஆழத்தையும் விரிவையும் உள்ளடக்கியவை. குறி தவறாமல் இலக்குகளை நோக்கிப் பாய்ந்து செல்லும் எழுத்தின் வீரியம் இவருக்கு வாய்த்திருக்கிறது. ஆனால், எழுத்துகள் ஈழத்தின் ஏக்கங்களையும் மண்ணின் மணத்தையும் இயல்பாகவே பெற்றுள்ளன. இன்றைய காலத்தில் மறைந்துபோன ஈழத்துப் பழமொழிகள் பல இயல்பாகவே இவரது எழுத்தில் வந்துகொண்டேயிருக்கும்.

 

நாயைப் பிடிங்கோ

‘பிச்சை வேண்டாம் நாயைப் பிடிங்கோ’ என்ற வரிகள் இவரது கட்டுரை ஒன்றில் இடம்பெற்றிருந்தது. இதன் அர்த்தத்தை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை என்றாலும், இது ஒரு பழமொழி என்பதை மட்டும் புரிந்துகொண்டேன். அதன் உண்மை அர்த்தத்தை உணர்ந்துகொண்டபோது நான் பெரிதும் ஆடிப்போனேன். ஒருவன் பிச்சை கேட்டு வருகிறான். வீட்டுக்காரன் பிச்சை போடவில்லை. அதற்குப் பதிலாக, கட்டியிருந்த நாயை அவிழ்த்து, ஏவி விடுகிறான். “பசிக்கும் வயிற்றுக்குப் பிச்சைக் கேட்டுதான் வந்தேன். எனக்குப் பிச்சை வேண்டாம். நாய்க் கடியிலிருந்து தப்பித்தால் போதும், நாயைப் பிடியுங்கோ” என்கிறான் பிச்சைக்காரன். இந்திய அணுகுமுறையோடு ஒப்பிட்டு, இந்தப் பழமொழியைப் பயன்படுத்தியிருந்தார் அரவிந்தன்.

 

ஆற்றுப்படுத்தட்டும் அப்பால் தமிழ்!
 

‘அப்பால் தமிழ்’, இவர் உருவாக்கிய இணைய மின்னிதழ். இதன் குறிக்கோள் வாசகம் நம்மைப் பெரிதும் யோசிக்க வைக்கிறது.

“அப்பாலும் விரிகின்றது வேற்றுமை சூழல். அணையாமல் எரிகின்றது நெஞ்சினில் தணல். ஆற்றுப்படுத்தட்டும் அப்பால் தமிழ்.” இது உலகளாவிய தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாகவே தோன்றுகிறது. 2012-ல் பாரீஸ் நகரில் அவரது வீட்டில் நான் தங்கியிருந்தபோது, இதே உணர்வை அழுத்தமாக வெளிப்படுத்தினார் அரவிந்தன்.

 

குடும்பத்துடன் பல ஆண்டுகள் பிரான்சில் வசித்த போதும், குடியுரிமை பெறவில்லை. பனை மரக் காடுகளடர்ந்த, அந்த ஈழ மண்ணில் இறுதி மூச்சை விட வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்திருக்கலாம்.

 

- சி. மகேந்திரன், ‘தாமரை’ இதழாசிரியர், தொடர்புக்கு: singaram.mahendran@gmail.com

நன்றி: தமிழ் ஹிந்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்! 

 

தமிழரது விடுதலைகுறித்துச் சிந்தைகொண்டு செயற்பட்ட மூத்தலைமுறையைச் சேர்ந்தவரின் இழப்பு வருத்தத்திற்குரியதாகும். வாழ்வுகுறித்து

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.