புதிய அரசியல் யாப்பில் பௌத்தத்துக்கு முதலிடம் என்பதை ஏற்றுக்கொண்டு பின், அனைத்து மதங்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்று சப்பைக்கட்டு கட்டுவதில் உள்ள ஆபத்தை இந்த ஒளிப்பதிவைப் பார்த்துப் புரிந்து கொள்ளலாம். "இலங்கையில் ஆமத்துருவுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியாதா?" என்று, ஒரு பிக்கு மிரட்டுகிறார். முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து, விகாரை அமைத்துத் தங்கியிருந்த பிக்கு ஒருவர் இறந்து போக, அவரின் உடலை அங்கு எரிக்க முடியாது என்ற நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்றும் முழுமையாக அனுபவிக்காது பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்ட ஞானசார தேரர் தலைமையில், வழக்கறிஞர்கள், மக்கள் என்று பலரின் எதிர்ப்பையும் மீறி தகனம் செய்யப்பட்டுள்ளது. கடந்த வரவுசெலவு திட்டத்தில், வடகிழக்கில் 1000 விகாரைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தபோதும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காது மக்களால் தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்பு ஆதரவு வழங்கியதன் விளைவு, விகாரைகள் தோன்றுவதைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. சமய விதிகளுக்கு மாறாக எமது வழிபாட்டிடங்கள் அவமதிப்புச் செய்யப்படுவதைத் தடுக்கவும் முடியவில்லை. புராதன வழிபாட்டிடங்களும் விகாரைகளாகவே மாற்றப்படுகின்றன. 2017 மே, 03 இல் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில், யாழ்-6, கிளிநொச்சி-03, மன்னார்-20, வவுனியா-35, முல்லைத்தீவு-67 என்ற வகையில் 131விகாரைகள் வடக்கில் இருப்பதாக அல்லது இருந்ததாக தொல் பொருள் திணைக்களத்தின் அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டு பேசப்பட்டது. இதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன பதில் சொன்னார்கள் என்று தெரியவில்லை. மேலதிகமாக, நாவற்குளியில் பிரதேச சபையின் அனுமதியின்றி விகாரை கட்டப்பட்ட போது, அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை மீளப்பெற்று, அவ்விகாரைத் திறப்புவிழாவிலும் கூட்டமைப்பு கலந்து கொண்டது. ஆக, யாரை நொந்து என்ன பயன் ?

Posted by Darshini Rajh on Monday, September 23, 2019