Jump to content

Leaderboard

  1. ஈழப்பிரியன்

    ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      15416


  2. மெசொபொத்தேமியா சுமேரியர்

    மெசொபொத்தேமியா சுமேரியர்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      8472


  3. ரசோதரன்

    ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      194


  4. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      3

    • Posts

      43059


Popular Content

Showing content with the highest reputation on 03/29/24 in all areas

  1. ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன. அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை. இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை. வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது. இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. - தொடரும்
    3 points
  2. 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும். நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது. '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....' என்ற வரிகளில் அவர் தெரிந்தார். ************* உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797
    2 points
  3. தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    2 points
  4. எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    2 points
  5. தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள். எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன். பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள். அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள். வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள். பாகம்1
    1 point
  6. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.
    1 point
  7. அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)
    1 point
  8. மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது. போர் மூலம் வந்த வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு பிற்காலத்தில் நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!
    1 point
  9. கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    1 point
  10. தேர்தல் வருகின்றது என்பதற்காகவா.............🙃.........சரத் வீரசேகர உட்பட இன்னும் பலர் தொடர்ச்சியாக இப்படியான கருத்துகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்களே. நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன். தேர்தல் முடிந்த பின், இவருக்கு ஒரு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் திட்டமும் இருக்கலாம். அமெரிக்கா, இந்தியா, இலங்கை - இந்த மூன்று இடங்களில் இருந்து வரும் அரசியல் செய்திகள் ஒரே மாதிரியே இருக்கின்றன......😀
    1 point
  11. சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    1 point
  12. தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    1 point
  13. வெளியே ஒரு அரை மணி நேரம் சுற்றிவிட்டு சொல்லும்படியாக எதுவும் இல்லாததனால் மீண்டும் நாம் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று அங்கிருந்த உணவகத்துக்குச் சென்றால் அங்கும் ஒரே ஒருவர் மட்டும் எதையோ உண்டுகொண்டிருக்கிறார். மெனுவில் இருந்த பரோட்டாவும் மட்டன் கறியும் கணவர் ஓடர் செய்ய நான் எனக்கும் அதையே கொண்டுவரும்படி சொல்கிறேன். அரைவாசி எலும்புகளுடன் கறி ஏதோ சுவையுடன் இருக்க, ஆட்டிறைச்சியை இப்படியா இவர்கள் உண்கின்றனர் என்கிறேன். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி. குறை சொல்லாமல் சாப்பிடு என்கிறார். மனிசன். நல்லதை நல்லதென்று நான் சொல்வதே இல்லையா என்கிறேன். சாப்பிட்டு முடிய ஒரு மணிநேர ஓய்வின் பின் மீண்டும் டாக்ஸி ஓட்டுனருக்கு போன் செய்து Fatehpur Sikri, Agra fort, Anguri Bagh போன்றவற்றைப் பார்த்துவிட்டு வரலாம் என்கிறோம். தான் எம்மை இறக்கிய இடத்துக்கு வரும்படி கூற பொடி நடையாய் நடந்து செல்கிறோம் மிகச் சிறிய கடைகளும் அதன் அருகிலே சிறிய வீடுகளும் சுத்தமற்ற இடங்களும் முகம் சுழிக்க வைக்க பிரதான சாலை வந்ததும் டாக்ஸி எங்கே நிற்கிறது என்று பார்க்க, தூரத்தில் இருந்து அவர் கையசைக்க அங்கு செல்கிறோம். ஒரு நாற்பது நிமிடங்களின் பின் Fatehpur Sikri என்னும் 16 ம் நூற்றாண்டில் தன் மூன்றாவது இந்து மனைவிக்காக இஸ்லாமிய மன்னன் கட்டிய ஜோர்டா பாயின் அரண்மனைக்கு செல்ல என ஓரிடத்தில் இறக்கிவிட அது காடு போல இருக்கிறது. இவர்கள் உங்களை இனி அழைத்துச் செல்வார்கள் என்று கூற ஏன் நீ வரவில்லையா என்று கேட்கிறேன். இவன் உன்னை அழைத்துச் செல்வான் என்று கூறி ஒரு பெடியனைக் கைகாட்டுகிறார் ஓட்டுனர். பான்பராக் போட்டபடி திருடன் போல தெரிய என் முகத்தின் நம்பிக்கையின்மையைக் கண்டு, பயப்பிட வேண்டாம் என்கிறார். அங்கிருந்து ஒரு சிறிய பஸ் போன்றதில் எம்மைக் கொண்டுபோய் ஏறும்படி கூற எனக்கு இவன் எம்மைக் கடத்திக்கொண்டு சென்றால் என்ன செய்வது என்னும் எண்ணமும் எழ, பஸ்சையும் எம்முடன் வந்தவனையும் படம் எடுக்கிறேன். டோன்ட் வொறி மடம் என்று கூறி அவன் சிரிக்க, புது இடம் அதுதான் என்று சமாளித்தபடி வண்டியில் ஏறி அமர்கிறேன். ஒரு பத்து நிமிடத்தில் அரண்மனைக்கு அருகில் வண்டி நிற்க நடந்து அரண்மனைக்குள் செல்கிறோம். கட்டடங்கள் சித்திர வேலைப்பாடுகளுடன் அழகாகத் தெரிய அங்கு ஒரு மணிநேரம் செலவிட முடிகிறது. அதன் பின் அதற்கு அருகிலுள்ள இன்னொரு அரண்மனையின் உள்ளே முஸ்லிம் வழிபாட்டுத்தலம் இருக்க அங்கு எம்மைக் கரிசனையாய் கூட்டிச் செல்கின்றனர். அது மதசார்பற்ற வழிபாட்டுத் தலம் என்றும் குழந்தைகள் இல்லாத அக்பரை மூன்றாவதாக இந்து இளவரசியைத் திருமணம் செய்தால் குழந்தை கிடைக்கும் என்று கூறியவருக்காக மன்னன் அமைத்துக் கொடுத்தது என்றும் கூறப் போய் பார்ப்போம் என்கிறேன். உள்ளே தொட்டம் தொட்டமாக சாதாரண துணிகள், பட்டுத்துணிகள் விலைக்கு ஏற்றபடி அடுக்கி வைக்கப்பட்டிருக்க, எம்மை ஒருவரிடம் அழைத்துச் சென்று இங்கக்கு விற்கும் துணிகள் ஏழைக்களுக்குக் கொடுக்கப்படுகின்றன என்றுவிட்டு எம்மையும் ஒரு துணியை வாங்கிக் கொடுக்கும்படி கூற நான் எனக்கு நம்பிக்கை இல்லை என்கிறேன். தலையைக் குனி தலையைக் குனி என்று கூற எதற்கு என்கிறேன். உன்னை துணி விற்பவர் ஆசீர்வதிக்க வேண்டும் என்கிறான் எம்மைக் கூட்டி வந்தவன். எனக்கு வேண்டாம் என்று நான் குனிய மறுக்க, என்ன மடம்?உன்னை ஒருவன் மதித்தால் அவனை நீயும் மதிக்க வேண்டாமா என்கிறான். குனியப்பா என்றபடி மனிசன் குனிய நானும் குனிய ஒரு பாத்திரம்போல் இருந்ததை எந்தலையிலும் கணவர் தலையிலும் வைத்து முணுமுணுக்கிறான். இவர்கள் ஏமாற்றப் போகிறார்கள் என மனதுக்குப் படுகிறது. நான் வேறு வழியின்றி ஒரு துணியை எடுக்க, 2000 ரூபாய்கள் என்கிறான். சென்னையில் 300 ரூபாவுக்கு அதை வாங்க முடியும். உது வேண்டாம் வேறு எடுக்கிறேன் என்று கூற, மடம் எடுத்ததை வைக்காதே என்று துணியை வைக்கவிடாது பிடிக்க என்னிடம் பணம் இல்லை என்கிறேன். காட் இருக்கா என்று கேட்க நான் இல்லை என்று கூறுமுன் கணவர் ஊம் என்கிறார். ஏன் ஓம் எண்டு சொன்னீங்கள் என்று மனிசனை முறைக்க, நாங்கள் தனிய வந்திருக்கிறம். தெரியாத ஊர். உன்ர வீரம் ஒண்டும் இங்க எடுபடாது. பேசாமல் காசைக் குடுத்து துணியை வாங்கிக் குடுத்துட்டுப் போவம் என்கிறார். நான் இல்லை எண்டு சொல்லீற்றன். நீங்கள் காட்டில குடுங்கள் என்கிறேன். சரிகாட்டால் பே பண்ணுகிறோம் என்றதும் ஒருவன் காட் மிசினைக் கொண்டு வருகிறான். நாம் கொண்டு சென்றது மொன்சோ என்னும் காட். போனில் அளவளவாக பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்பதுடன் அதற்குக் குறைவான கட்டணமே வெளிநாடுகளில் செலவிடும்போது எடுப்பார்கள் என்பதனால் வரும்போது அதைத்தான் கொண்டுவந்தோம். கணவர் காட்டைப் போட்டு பின் நம்பரை அழுத்தினால் சுற்றிக்கொண்டே இருக்க, நெற் கிடைக்கவில்லை என்று இன்னொருவனைக் கூப்பிட அந்த மெசினும் சுற்ற, இவங்கள் காசை இரண்டுதரம் எடுத்தால் என்னப்பா செய்யிறது என்கிறேன். பயப்பிடாதை. அதில கனக்க இல்லை என்கிறார். நான் முதலே சொன்னேனே வேண்டாம் என்று என்கிறேன் அவனைப் பார்த்து. அவனோ விடுவதாய் இல்லை. மடம் நீங்கள் உள்ளே சென்று துணியைக் கொடுத்து வணங்கிவிட்டு வாருங்கள். கீழே சென்றால் நெட் வேலை செய்யும் என்கிறான். உள்ளே சென்று பார்த்தால் ஆட்களிடம் வாங்கும் துணிகளை அங்காங்கே அடுக்கியும் நடுவில் உள்ள வழிபாட்டுத் தளம் போல இருந்த ஒன்றின் மேல் விரித்தும் போட்டிருக்கிறார்கள். அங்கு நின்ற ஒருவர் இது உங்கள் பெயரால் ஒரு ஏழைக்குச் செல்கிறது கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என்று சொல்லிவிட்டு ஏழைகளுக்கு டொனேஷன் ஏதும் தர விரும்பினால் அங்கு சென்று செலுத்தும்படி கூற நாம் எதுவும் சொல்லாது வெளியே வருகிறோம். நேரத்தைப் பார்க்கிறேன். மாலை நான்காகிவிட இனி வேறு இடம் ஒன்றுக்கும் போவதில்லை என்று முடிவெடுத்து மனிசனிடமும் சொல்ல அவரும் சம்மதிக்கிறார். வெளியே வந்தவுடன் அவன் எமக்காகக் காத்திருக்கிறான். இனிப் போவோம் என்கிறேன் நான். சரி என்று கீழே நடந்துசெல்லும்போது இன்னொருவன் எமக்குக் கிட்டவாக உந்துருளியைக் கொண்டுவந்து நிறுத்த, இவன் அவன் கொண்டுவந்த மிசினை வாங்கி மனிசனிடம் நீட்ட மனிசன் மீண்டும் காட்டைப் போட்டு இலக்கங்களை அழுத்த மீண்டும் சுற்றிக்கொண்டே இருக்க, காசைத் தூக்கிக் குடு என்கிறார் மனிசன். என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்கிறேன் நான். உள்ளுக்குள் பயம் இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. மீண்டும் வந்து பஸ்சில் ஏறிய பின் எம்முடன் வந்தவனும் வந்து ஏறுகிறான். பஸ்சை விட்டு இறங்கியபின் நாம் வந்து ஏறிய இடத்துக்குக் கிட்ட வந்துவிட்டோம் என்று புரிகிறது. எமது டாக்ஸி ஓட்டுனரிடம் பணத்தைக் வாங்கிவிட்டு எம்மைக் கொடுக்கச் சொல்கிறான் என்று பார்த்ததால் அந்த இடத்துக்கு அருகில் இருக்கும் கடை ஒன்றுக்கு அழைத்துச் செல்கிறான். அங்கு காட் வேலை செய்கிறது. அதன்பின் நாம் அவனுக்குக் கொடுக்க வேண்டிய 1000 ரூபாய்களை என் பையில் இருந்து எடுத்துக் கொடுக்கிறேன். எமது டாக்ஸியில் ஏற இனி எங்கே என்கிறார் அவர். வேறு இடம் செல்ல விருப்பம் இல்லை. நேரே கோட்டலுக்கு போகலாம் என்கிறார் கணவர். முன்னர் போலவே நாம் செல்ல போகும் வழியில் பெரிய உணவகம் ஒன்று தென்பட அங்கே நிறுத்தச் சொல்கிறோம். நாண் உடன் கோழிப் பிரட்டல் ஒன்றும் மரக்கறி ஒன்றும் எடுக்கிறோம். நாணும் கோழியும் நன்றாக இருக்க கணவர் தேனீரும் நான் கோப்பியும் எடுக்கிறோம் . ஓரளவு நன்றாக இருக்கிறது உணவும் பானமும். ஓட்டுனரை உண்ண வரும்படி அழைத்தும் அவர் வரவில்லை. பணத்தைத் தாருங்கள். தான் பின்னர் உண்பதாகக் கூற கணவர் அவருக்குப் பணத்தைக் கொடுக்கிறார். தங்குவிடுதிக்குச் செல்ல மாலை ஆறுமணியாகிறது. களைப்புடன் சென்று கட்டிலில் விழுந்ததுதான். அடுத்தநாள் காலை ஆறுமணிவரை நல்ல தூக்கம் தூங்கி எழுந்து காலை ஏழுமணிக்கு உணவகம் வந்தால் அப்போதும் நாம் மட்டும்தான். பத்து மணிக்கு எமது டெல்லி போகும் தொடருந்து. ஆகவே வெள்ளனவே எழுந்து தயாராகிவிட்டோம். என்ன உண்ணலாம் என்று யோசித்து காலையில் ரொட்டி உண்ண விருப்பமின்றி தோசை என்று ஒன்று இருக்க அதை ஓடர் செய்கிறோம். ஒரு பதினைந்து நிமிடங்களின் பின் வெள்ளையாகத் தோசை வருகிறது. அத்துடன் சாம்பார் என்னும் பெயரில் எதுவோ வருகிறது. இரண்டு நிறங்களில் சட்னி வைத்திருக்க தோசையைப் பிய்த்து சடனியைத் தொட்டால் குளிர்ந்துபோய் இருக்கிறது. வெறும் தோசையை உண்டுவிட்டு வெளியே வந்து எமது டாக்ஸியை வரும்படி கூறிவிட்டு பயணப் பொதியை எடுத்துக்கொண்டு வந்து வரவேற்பில் நாம் கிளம்புகிறோம் என்று சொல்லிவிட்டுத் திரும்ப, மடம் நீங்கள் இன்னும் பே பண்ணவில்லை என்கிறான் ஒருவன். நேற்றே கொடுத்துவிட்டோமே என்கிறேன். நாம் எப்போதும் போகும்போதுதான் பணத்தைப் பெற்றுக்கொள்வோம் என்கிறான். நேற்று நின்றவரைக் கூப்பிடு என்கிறேன். அவர் இன்று மாலைதான் வருவார் என்கிறான். நான் நிமிர்ந்து பார்க்கக் கமரா தெரிகிறது. கமராவில் பார் நான் நேற்றுத் தந்துவிட்டேன். காட்டில் பே பண்ணுகிறோம் என்று என் கணவர் சொல்ல காட்டில் எடுப்பதில்லை என்று கூறிப் பணமாக வாங்கினார்களே என்கிறேன். இருக்காது மேடம் பொறு உனக்கு கமராவைப் காட்டுகிறேன் என்று உள்ளே சென்றவன் பத்து நிமிடத்தின்பின் வந்து என்னையும் கணவரையும் ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று கமராவை ஓட விடுகிறான். நானும் கண்ணை வெட்டாமல் பார்க்கிறேன். நான் பணம் குடுத்தது பற்றிய எதுவுமே இல்லை. மீண்டும் சுற்றி சத்தத்தைப் போடச் சொல்கிறேன். சத்தத்தைத் தாம் பதிவு செய்வதில்லை என்கிறான். இவங்கள் வீடியோவை எடிட் செய்து விட்டார்கள். அதை நின்று பார்த்து சண்டை போட்டால் எம் தொடருந்தையும் விமானத்தையும் விடவேண்டிவரும் என்கிறார். போலீசைக் கூப்பிடுவோமா என்கிறேன் நான். உன்னிடம் ரிசீட் இல்லை. அவர்கள் ஒரே இனத்தவர். உனக்காகவா கதைக்கப்போகின்றனர் என்கிறார். கணவரை வீடியோ எடுக்கச் சொல்லிவிட்டு வேறு வழியற்று மீண்டும் 3000 ரூபாயைக் கொடுத்துவிட்டு ரிசீற்றைத்தா என்கிறேன் கடுப்புடன். ரிசீற் கொடுப்பதில்லை என்கிறான் அவன். நீங்கள் எம்மை ஏமாற்றுகிறீர்கள். எனக்கு நேரம் இல்லாமையால் உன்னை ஒன்றும் செய்யாமல் போகிறேன். நீ ரோட்டில் நின்று பிச்சை எடுக்கலாம் என்று கூற, பேசாமல் வா என்று கணவர் என்னை இழுத்துக்கொண்டு போகிறார். டாக்ஸி ஓட்டுனருக்குக் கூற ஏன் நீங்கள் ரிசீட் வாங்கவில்லை என்கிறார். கோட்டல்களில் ரிசீட் கொடுப்பதில்லை. எத்தனை கோட்டல்களில் நின்றிருப்போம். ஒருவரும் ஏமாறவில்லை. உங்கள் ஆட்கள் தான் சீட் பண்ணி விட்டார்கள் என்று கூற அவர் ஒன்றும் சொல்லாமல் வருகிறார். மூண்டும் இரண்டும் ஐயாயிரம் கோட்டை விட்டுவிட்டோம் என்கிறார் கணவர். பின் நாம் தொடருந்தில் நிஜாமுதீன் வந்து அங்கிருந்து இன்னொரு டாக்ஸி பிடித்து டெல்லி வந்து விமானம் சென்னையில் இறங்கியதும் தான் மனம் நிம்மதியடைந்தது.
    1 point
  14. தொடருந்து நின்றதும் நான் முன்னால் இறங்கி நடக்கிறேன். குளிர்வதுபோல் இருக்க அப்போதுதான் ஏன் எல்லோரும் குளிராயடைகளை அணிந்திருந்தனர் என்று புரிகிறது. எல்லாம் பார்த்த நாங்கள் வெதரையும் பாத்திருக்கவேணும் என்கிறார் கணவர். முன் வாசலுக்கு வந்து சேரந்தவுடன் கம் வித் மீ மடம் என்று என்னருகில் ஒரு குரல் கேட்கிறது. நான் திரும்பி அவனை ஒருவாறு பார்த்துவிட்டு இல்லை நாம் டாக்ஸியில் தான் போகப் போகிறோம் என்கிறேன். என்னிடம் டாக்ஸி இருக்கு என்றுகூற, இல்லை நான் ஸ்டாண்டில் போய் பிடிக்கிறேன் என்கிறேன். கணவர் அருகில் வந்து உவன் நீ இறங்கின நேரம் தொடக்கம் உன்னை மற்றவர் அண்டாமல் பாதுகாப்பாகக் கூட்டிக்கொண்டு வந்தவன் என்கிறார் சிரித்தபடி. மடம் அங்க தான் டாக்ஸி ஆபீஸ் இருக்கு. என்கூட வாங்க என்றுவிட்டு அங்கு போய் ஏதோ இந்தியில் கதைத்துவிட்டு இந்தாங்க மடம் றிசீற். 200 ரூபா முதல் கட்டணும் என்று கூறக் கணவர் 200 ரூபாய்களை எடுத்துக் கொடுக்கிறார். பின் எம்மை அழைத்துக்கொண்டு சென்றால் நடப்பதற்கு இடமின்றி அடுக்கியபடி டாக்ஸிகள். நாம் ஏறி அமர்ந்து எவ்வளவு நேரம் இங்கிருந்து தாஜ்மகால் போக என்கிறேன். ஒரு பதினைந்து நிமிடத்தில் போய்விடலாம் என்கிறான். தாஜ்மகாலுக்குப் பக்கமாக ஒரு நல்ல ஹோட்டலுக்கு எம்மைக் கூட்டிப் போகும்படி கேட்க, பக்கத்திலே எந்த கோட்டலும் இல்லை. ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் நல்ல கோட்டல் எல்லாம் இருக்கு மடம் என்கிறான். அவன் காட்டியதில் அருகருகே இரண்டு கோட்டல்கள் இருக்க ஒன்றைத்தெரிவு செய்கிறோம். கீற்றர் இருக்கா, சுடுதண்ணீர் வருகிறதா என்று கேட்டதற்கு ஓம் ஓம் என்றார்கள். 3200 ரூபாய்களுக்கு அறை நன்றாகத்தான் இருக்க வந்த பயணக் களைப்புப்போகக் குளிப்போம் என்றால் தண்ணீர் கடுங்க குளிர். பைப்பில் சுடுநீரே வரவில்லை. அவர்களுக்குப் போன் செய்தால் பார்ப்பதற்கு ஒருவர் வருகிறார். ஒரு பதினைந்து நிமிடமாவது உள்ளே நின்று ஏதோ செய்து சுடுநீரை வரச் செய்துவிட்டுப் போக குளித்து வெளியே வந்தால் குளிர். கீற்றர் வேலை செய்யவே இல்லை. மணி ஏளாகி இருட்டி விட்டதால் வெளியே செல்லவும் மனமின்றி பசியும் இன்றி கட்டிலுக்குப் போனால் போர்வை குளிருக்கு ஏற்றதாக இல்லை. மீண்டும் போனடித்தால் அவர்கள் எடுக்கிறார்களே இல்லை. இரவு முழுவதும் தூங்காது புரண்டு படுத்து காலை ஆறு மணிக்கே எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு ஏழுமணிவரை நடுங்கிக்கொண்டு இருந்துவிட்டு காலை ஏழுக்குத்தான் தங்கள் உணவகம் திறப்பார்கள் என்று கூறியதால் உணவகத்தைத் தேடிச் செல்கிறோம். அங்கு சென்றால் யாரையுமே காணவில்லை. பழைய காலத்துத் தளபாடங்களுடன் தூசிகள் நிறைந்ததுபோல் காணப்படுகிறது அந்த உணவகம். இன்னும் சிறிது நேரம் பார்த்துவிட்டு வெளியே செல்வோம் என்று எண்ண ஒரு முப்பது மதிக்கத்தக்க ஒருவன் வருகிறான். காலை உணவு உண்ண வேண்டும் என்றதற்கு ஒரு மெனு காட்டைத் தருகிறான். அதில் சான்விச் ஒன்றுதான் தெரிந்த பெயராக இருக்க முட்டை ஒம் லெற்றும் ரோஸ்ற் உம் உண்டு கோப்பியும் குடித்துவிட்டு அறைக்கு வந்து அந்த டாக்ஸி ஓட்டுனருக்கு போன் செய்து கடைக்குப் போகவேண்டும் என்கிறோம். கடைகள் ஒன்பதுக்குத்தான் திறக்கும் என்று கூற மீண்டும் கட்டிலில் அமர்கிறோம். சாதாரணமாக இருக்க முடியாதவாறு குளிர். நிலத்தில் வெறுங் காலை வைக்கவே முடியவில்லை. டாக்ஸி ஓட்டுனர் 8.45 இக்கு வர அவருடன் சென்றால் நாம் நினைத்ததுபோல் ஒரு கடைக்கூடத் தென்படவில்லை. வீதிகளில் ஒன்று இரண்டு பேரைத் தவிர யாரையும் காணவில்லை. முக்கியமாகப் பெண்களை. கடையின் உள்ளே சென்றால் பழங்கடை போன்ற தோற்றம். வேறு பெரிய கடைகள் இல்லையா என்று கேட்க இதை விட்டால் 20 கிலோ மீற்றர் போகவேண்டும் என்கிறான். வேறு வழியின்றி எனக்கும் கணவருக்கும் யம்பர் மற்றும் சொக்ஸ், சோல் என்பவற்றை வாங்கி வந்து அணிந்துகொண்டு எமது பயணப் பொதியையும் எடுத்துக்கொண்டு கோட்டலை விட்டுப் போகிறோம் என்று சொல்லித் திறப்பைக் கொடுத்துவிட்டு வந்து டாக்ஸியில் ஏற, ஏன் மடம் வக்கேட் செய்திடீங்களா என்கிறார். கடுங் குளிர் என்கிறேன். மடம் வேறு கோட்டல் காட்டவா என்று கூற நாமே பார்த்துவிட்டோம் என்று கூறி தாஜ்மகாலுக்கு நடந்து போகும் தூரத்தில் இருக்கிறது என்கிறேன். அவனுக்கு போனைக் காட்ட இந்த இடத்துக்கு கார் போகாது மடம் என்கிறான். சரி நீ இறக்கிவிடும் தூரத்தில் இருந்து ஓட்டோ பிடிக்கிறோம் என்று கூற கார் பத்து நிமிட ஓட்டத்தில் ஒரு பெரிய வீதியில் நிற்க, பக்கத்தில் நின்ற சைக்கிள் ரிக்சாவில் இருந்து இறங்கி வந்து வாருங்கள் என்கிறான். நாம் டாக்ஸி ஓட்டுனரைப் பார்க்க, பயப்பிடாமல் போங்க என்கிறார். அதில் இருந்து ஒரு ஐந்து நிமிடத்தில் நாம் சொன்ன கோட்டல் சித்தார்த்தா வருகிறது. பார்க்க நல்லதாக இருக்க அங்கும் போய் அறையைப் பார்த்தபின் வரவேற்புக்குச் சென்று விபரங்களைக் கொடுத்துவிட்டு எமது கடவுச் சீட்டுகளை வாங்கிப் படம் எடுத்துவிட்டு அறைக்குப் போக எமது பயணப் பொதிகளைத் தூக்குகிறான் ஒருவன். பே பண்ணவேண்டும் என்று சொல்ல கணவர் வங்கி அட்டையை எடுக்க, காட் பேமெண்ட் நாம் எடுப்பதில்லை என்கிறான். உடனே நான் எனது கைப்பையில் இருந்து 3000 ரூபாய்களை எடுத்துக் கொடுத்துவிட்டு அறைக்குச் செல்கிறோம். அறையில் பயணப் பொதிகளை வைத்துவிட்டு அதிலிருந்து ஐந்து நிமிட நடையில் இருக்கும் தாஜ்மகாலைப் பார்க்கக் கிளம்புகிறோம். பெண்களும் ஆண்களுமாய் அந்தக் காலையிலேயே நிறையப் பேர் வந்தவண்ணம் இருக்க நிறையப்பேர் காலையில் வெள்ளனவே வந்து சூரிய உதயம் பார்த்துவிட்டுக் கிளம்புகின்றனர். நான் ஏற்கனவே எத்தனையோ இடங்களில் சூரிய உதயம் பார்த்ததனாலும் குளிராடைகள் வாங்காததனாலும் அதிகாலை செல்ல முடியவில்லை. இந்தியர்களுக்கு 200 ரூபாய்கள். எமக்கு 1250 ரூபாய்கள். உள்ளே செல்ல சனம் கும்பல் கும்பலாக நின்று படம் எடுப்பதில் மும்மரமாக இருக்கின்றனர். எம்மிடமும் ஒருவர் வந்து படம் எடுக்கக் கேட்கிறார். 15 படங்கள் எடுக்க 1500 ரூபாய்கள். அவர்களே எம்மை ஆங்காங்கே நிற்கவைத்துப் படம் எடுக்கிறார். நாம் எனக்கு தங்கி இருக்கிறோம் என்று கேட்டு அதற்குப் பக்கத்தில் தான் தனது ஸ்டூடியோ. தான் மகன் படங்களைக் கொண்டுவந்து தருவான். அப்போது பணத்தைக் கொடுங்கள் என்கிறார். எப்பிடி ஒரு காசும் வாங்காமல் விட்டார் என்கிறேன் கணவரிடம். எங்கட படத்தை விட்டுவிட்டுப் போக மாட்டோம் என்று அவர்களுக்குத் தெரியும் என்கிறார். படங்களில் டிவி இல் பார்த்த சுற்றுப்புறம் நேரில் பார்த்ததிலும் அழகாய் இருந்ததாக எனக்குத் தெரிகிறது. படிகளில் ஏறி மேலே செல்ல அங்கு ஒரு பாதுகாப்புப் பிரிவு. எம்மை ஸ்கான் செய்தே விடுகின்றனர். போதாததற்கு காலில் அணிந்து செல்வதற்கு பொலிதீனும் 20 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டு சென்று அருகில் செல்கிறோம். காவலுக்கு துப்பாக்கியுடனும் ஆட்கள் நிற்கின்றனர். அழகாய்த்தான் இருக்கிறது பளிங்குக் கட்டடம். பின் பக்கம் சென்று யமுனா நதியைப் பார்த்தால் அது தன் பாட்டுக்கு வெட்டவெளியில் ஓடிக்கொண்டிருக்கு. பெரு மரங்களோ அல்லது செழிப்போ இல்லாத ஆறும் கரையும் என்னை எந்தவிதத்திலும் கவரவே இல்லை. சுற்றி வந்து உள்ளே செல்கிறோம். நான் வேறுவிதமாகக் கற்பனைசெய்து வைத்ததனாலோ என்னவோ என்னை எதுவும் பெரிதாக ஆச்சரியத்தில் ஆழ்த்தவில்லை. உள்ளே இரு சமாதிக்கள் மட்டுமே வைக்கப்பட்டிருக்கின்றன. அதிக நேரம் நிற்க அவர்கள் விடவில்லை. படம் எடுப்பதும் தடை என்று, போட்டிருக்க சுற்றிவரப் பார்க்கிறேன். மேலே கமரா ஒன்று எம்மைப் பார்த்துக்கொண்டிருக்க படம் ஒன்றும் எடுக்காது வெளியே வருகிறோம். பகல் 11 மணிக்கே வெயில் கொழுத்துகிறது. ஒரு இருக்கையில் அமர்ந்து சிறிது நேரம் அவதானித்தபின் கீழே இறங்கி வர மரங்கள் இருப்பதனால் சிறிது ஆறுதலாக இருக்க மர நிழலில் நடக்கிறோம். பின் மீண்டும் திரும்பி தாஜ்மகாலை வடிவாகப் பார்த்துவிட்டு வெளியே வர இவ்வளவுதானா என்னும் எண்ணம் மனதில் எழாமல்இல்லை. வரும்
    1 point
  15. நாம் இலங்கை திரும்ப இன்னும் நான்கு நாட்கள் இருக்க தாஜ்மகாலை இன்னும் நாம் பார்க்கவில்லை. போய் பார்க்கலாம் என்கிறேன். யாரிடம் அங்கு போவது பற்றி விசாரித்தாலும் காரைப் பிடித்துக்கொண்டு போங்கள் என்கின்றனர் எமக்குத் தெரிந்த எம்மவர்கள். விலையை விசாரித்தால் ஒரு இலட்சம் இந்திய ரூபாய்களைத் தாண்டி விலை சொல்ல, இன்னொருவர் தனக்குத் தெரிந்த டிராவல் ஏஜெண்ட் இருக்கிறார். அவர்கள் எல்லா வசதியும் செய்து தருவார்கள் என்கிறார். அவர்கள் வெளிநாட்டினர் என்றதும் இன்னும் அதிக விலை சொல்ல, வேண்டாம் என்றுவிட்டு போனில் ஒன்லைனில் புக் செய்ய முயன்றால் அதிலும் விலை அதிகமாகக் காட்ட, உது சரிவாராது என்று எண்ணி நாமே நேரில் T நகரில் உள்ள ஐந்து டிராவல் ஏஜெண்ட்டிடம் போய் விசாரித்ததில் ஐந்தாவதாகப் போனவர் நியாய விலை சொல்கிறார். வெளிநாட்டு என்று கூட்டிப் போடாதீர்கள் என்றதற்கு நீங்கள் பக்கத்தில் வந்து இருந்தே பாருங்கள் என்கிறார். சென்னையில் இருந்து மூன்று நாட்கள் தொடருந்தில் போகலாம். அது சீப். ஆனால் உடனே ரிக்கற் எடுக்க முடியாது என்கிறார். எமக்கு மூன்று நாட்கள் போவது சரிவாராது. விமானத்தையே பாருங்கள் என்கிறேன். ஆக்ராவுக்கு நேரே விமானச் சேவை இல்லை. நீங்கள் டெல்லி போய் அங்கிருந்து தொடருந்தில் தான் போக வேண்டும் என்கிறார். விமான மற்றும் தொடருந்து இரண்டுக்குமான விலை 36 ஆயிரம் முடிய மகிழ்வோடு ரிக்கற்களை வாங்கிக்கொண்டு வருகிறோம். சென்னையில் இருந்து அடுத்தநாள் அதிகாலை விமானம். ஹோட்டலில் இருந்து ஊபர் போட 565 ரூபாய்களுக்கு வருகிறது. கிட்டத்தட்ட மூன்று மணிநேரப் பயணம். விமானத்தில் தண்ணீர் மட்டும் இலவசம். இந்திராகாந்தி விமான நிலையம் நன்றாகத்தான் இருக்கிறது. அங்கிருந்து வெளியேவந்து தொடருந்தைப் பிடிக்க அரை மணிநேரம் டாக்ஸியில் பயணம் செய்து நிசாமுதீன் என்னும் தொடருந்து நிலையத்தை அடைந்தால், அது சேரியைப் போன்று காட்சியளிக்கிறது. சேறும் சகதியும் நாற்றமும் சனக் கூட்டமும்...........அப்படி ஒரு இடத்தை இதுவரை நான் காணவே இல்லை. அதிகாலையில் புறப்பட்டதால் காலை உணவும் உண்ணவில்லை. எனக்கோ பசி. இன்னும் எமக்கு ஒன்றரை மணி நேரம் இருக்கு. வடிவா உணவகம் ஒன்றில் உந்துவிட்டுப் போவோம் என்று இருவரும் முடிவெடுத்து எமது கைப்பொதியை நிலத்தில் வைத்து உருட்டாது கையில் தூக்கியபடி நல்ல உணவகத்தைத் தேடினால் ஒன்றுகூடச் சொல்லும்படியாக இல்லை. ஓட்டோக்காரர் வேண்டுமா வேண்டுமா என்று கரைச்சல் வேறு. அவர்களைப் பார்க்கவே காட்டுமிராண்டிகள் போன்ற தோற்றம். படங்களில் வரும் வில்லன்கள் கூட அப்படி இருக்க மாட்டார்கள். ஓட்டோவில் ஏறி வேறு இடம் சென்று உணவகம் தேடி உண்ணவே பயமாக இருக்க அங்கேயே ஒரு ஓட்டலில் அமர்ந்தால் நெருக்கமான மேசை கதிரை. ரொட்டி வகைகளே அதிகமிருக்க பூரியைத் தெரிவு செய்கிறோம். அப்படி ஒரு உணவை என் வாழ்நாளில் உண்டதே இல்லை. எண்ணெயில் குளித்த பூரிக்கு சாம்பார் போல ஒன்று. அதைவிட இரு நிறங்களில் சட்னி போல ஒன்று. அதைவிட ஊறுகாய். என்னடா கறுமம். பூரிக்கு யாராவது ஊறுகாய்தொட்டு உண்பார்களா என எண்ணியவுடன் சென்னை உணவகங்களின் சுத்தமும் சுவையுமே கண்முன் வந்தது. வேண்டா வெறுப்பாக பூரியை உண்டுவிட்டு கோப்பியும் குடித்துவிட்டு வெளியே வர, இன்னும் நேரம் இருக்கு. வா அந்தப் பக்கம் இருக்கும் கடைத் தெருவைப் பார்த்துவிட்டு வரலாம் என்கிறார் மனிசன். கடைகளில் உடைகளும் சரி உணவுப் பொருட்கள் சரி மிகச் சொற்பமகவே இருக்கின்றன. பழங்கள் வாங்குவோம் என்று பழத்தைத் தொட்டுப் பார்த்தால் குளிரூட்டியில் இருந்து எடுத்தவை போல் குளிர்கின்றன. சரி கச்சான் வாங்குவோம் என்று எண்ணி ஒரு பையை எடுத்துக்கொண்டு பார்ப்பதற்கு ஒன்றுமே இல்லை என்றபின் தொடருந்து நிலையத்துள் நுளைகிறோம். எக்கச்சக்கச் சனம் போவதும் வருவதுமாக இருக்க பயணிகள் இருப்பதற்கான அறை ஒன்று தெரிகிறது. அங்கு சென்று வெறுமையாக இருந்த இருக்கையில் அமர்கிறோம். கணவர் சென்று எத்தனையாவது இலக்க நடைமேடை என்று பார்த்துவிட்டு வருகிறார். இன்னும் முக்கால் மணி நேரமிருக்க ஆண்கள் பலரும் பலவிதமான குளிராடைகளையும் தொப்பிகளையும் அணிந்திருக்க, இவர்கள் ஏன் இதை அணிகிறார்கள் என்று எண்ணினேனே தவிர யாரையும் கேட்கவில்லை. பெண்களும் தடிப்பான சால்வைகளையும் ஒன்றுக்கு இரண்டு ஆடைகளையும் அணிந்திருக்க பான் காத்து இதுகளுக்குக் குளிருதுபோல. றெயினுக்குள்ளும் ஏசி வேலைசெய்யும்போல என்கிறேன். ஒரு பதினைந்து நிமிடம் இருக்க நாம் எழுந்து எமது தொடருந்து நடைமேடைக்குப் போய்ப் பார்க்கிறோம். பெரும்பாலான தொடருந்துகள் மிக மிக நீளமானவையாக இருக்கின்றன. எமது விரைவுத் தொடருந்து. ஆனாலும் ஆக்ரா செல்ல கிட்டத்தட்ட நான்கு மணிநேரம். தொடருந்தில் ஏறி அமர்ந்ததும் அதன் வசதியைப் பார்த்து மகிழ்வு ஏற்பட்டது. இடைஞ்சல் இல்லாமல் வசதியான சாய்ந்து தூங்கக்கூடியதாயக இருக்க மனதில் நிம்மதி ஏற்பட்டது. இருமருங்கும் கண்ணுக்கு எட்டிய தூரம் விவசாய நிலங்களில் பல பயிர்கள் நடப்பட்டிருக்க எங்கும் பச்சைப் பசேல். ஆனால் தொடருந்துத் தடத்துக்கு அண்மையில் சேரிகள் போன்று வடிவமற்ற வீடுகளும் ஆட்களும். நீர்கள் தேங்கி இருந்த இடங்களில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்க தமிழ் நாட்டின் செழிப்பும் மக்களும் தான் மனக்கண்ணில் வருகிறார்கள். தொடருந்து கிளம்பி ஒரு மணி நேரம் போக உணவுகள் வருகின்றன. எம்மை முதலே பயண முகவர் உணவும் ஓடர் செயவா என்று கேட்க சுத்தமாக இருக்காது என்று வேண்டாம் என்றுவிட்டோம். ஆனால் அவர்கள் பரிமாறிய உணவு மற்றும் முறைகளைப் பார்த்தபின் அதுவும் அக்கம்பக்கம் உணவு வாசனை எம் பசியைக் கிளற, நாமும் உணவை வாங்கி உண்கிறோம். முன்னரே ஊடர் செய்திருந்தால் 200 ரூபாய்கள். இப்ப செய்வதால் 250. ஆனால் நினைத்ததுபோல் இல்லாமல் உணவு நன்றாக இருக்க, சிறிது நேரம் செல்லத் தேனீர்,தண்ணீர் போத்தல் எல்லாம் தருகின்றனர். சிறிது நேரம் தூங்கி வெளியே பார்த்து ஆக்ரா வரும்வரை நேரம் போவதே தெரியவில்லை. வரும்
    1 point
  16. ஒரு பத்து நிமிட ஓட்டத்தில் கோயில் வந்துவிட்டது இறங்குங்கள் என்று கூற இறங்குகிறோம். முன்னர் தூர நின்று பார்த்தாலே கோபுரம் தெரியும். இது தெற்கு வாசலோ மேற்கு வாசலோ என்று ஓட்டுனர் கூறியதும் மறந்துவிட்டது. ஒரே திருவிழாக் கூட்டம். கட்டடங்களும் வீதியோரக் கடைகளுமாக முன்னர் பார்த்த கோயில் வீதி இல்லை அது. எனக்கு சந்தேகமாக இருக்க மீனாட்சி அம்மன் கோவில் தானே என்று பக்கத்தில் நின்ற ஒருவரைக் கேட்க, அவர் என்னை ஒரு மாதிரிப் பார்த்துவிட்டு நடந்து போங்கம்மா வரும் என்கிறார். காலை ஒன்பதுக்கே வெயில் கொழுத்துகிறது. செருப்புகளை கழற்றி விடும் இடத்தில் கொடுத்துவிட்டு அதற்குரிய அட்டையை வாங்கிக்கொண்டு திரும்பினால் உங்கள் போன் ஒன்றும் கொண்டுபோக முடியாது. அங்கே கொடுத்து ரிசீட் வாங்கிக்கங்க என்கிறார் ஒருவர். கொடுத்து றிசீற் வாங்கிக்கொண்டு வாசலைத் தேடினால் எல்லாப் பக்கமும் மூடி அடைத்து ஆட்கள் கோவிலுக்கு உள்ளே போவதற்கு பாதுகாப்புப் பரிசோதனை வேறு. பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனியாக வரிசை. ஆண்கள் வரிசையில் ஒன்று இரண்டு பேர்தான். பெண்கள் வரிசையைப் பார்த்தால் நீண்டதாக இருக்க போய் நிற்கிறேன். பத்து நிமிடக் காத்திருப்புக்குப் பின் என் முறை வந்தால் அந்த டிவைஸ் கீ கீ என்கிறது. என் கைப்பையை வாங்கி திறந்து உள்ளே கைவிட முயல நான் எடுத்துக் காட்டுகிறேன் என்று தடுக்க, சரி எல்லாவற்றையும் வெளியே எடுக்கச் சொல்கிறார் அந்தப் பொலீஸ்காறி. நான் கைவிட்டுக் கிளறினால் என் போர்ட்டபிள் சார்ஜர் வருகிறது. இதை ஏன் கொடுக்கவில்லை என்கிறா இன்னொரு போலீஸ்காறி. போனைத்தானே கொண்டுபோகக் கூடாது என்றார்கள் என்கிறேன். சரி சரி படம் எடுத்துடாதீங்க என்கிறா மற்றவ. இதில் எப்பிடிப் படம் எடுக்க முடியும் என்று கூறியபடி வெளியே வந்த பொருட்களை உள்ளே வைத்து என் கைப்பையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றால் அங்கும் வாசலில் டிக்கற் கவுண்டர். ஒருபக்கம் இலவசமாக வணங்கும் மக்களுக்கான வரிசை. மறு பக்கம் 50, 100, மற்றும் சிறப்புத் தரிசனத்துக்கான வழி. சிறப்புத் தரிசனத்துக்குப் போனால் விரைவில் போய்விடலாம் என்கிறேன். போய் என்ன செய்யப் போறாய்? இன்று முழுவதும் இதுதான் வேலை என்று சொல்லும் மனிசனுடன் 100 ரூபாய் டிக்கற் எடுத்து வரிசையில் நிற்கிறோம். சில அகலமான இடங்களில் எம்மை முந்திக்கொண்டு போகிறார்கள். உள்ளே செல்லச் செல்ல காற்றோட்டமே இன்றி வியர்க்கிறது. தண்ணீர்ப் போத்தலையும் கணவர் தன் பையுடன் கொடுத்துவிட்டார். சில்வர் அண்டா போன்ற ஒன்றில் நீரைக் கொண்டுவந்து ஊற்றுகிறார்கள். பலரும் எடுத்துக் குடிப்பதனால் அதைக் குடிக்கவே தோன்றவில்லை. கற்பக்கிரகம் இருக்கும் இடத்துக்கு போவதற்குள் சீ என்று போய் விட்டது. ஐயர்மார் இருவர்தான் தெரிக்கிறார்கள். போங்கம்மா போங்கம்மா என்று ஐயர் ஒருவர் கூற போகாமல் இங்கேயா நிற்கப்போறம் என்கிறேன். என்னை ஒருமாதிரிப் பார்த்துவிட்டு திரும்பிக்கொள்கிறார். மீனாட்சியையோ சுந்தரேசரையோ பார்க்காமல் வெள்ளியே வந்து வெளி மண்டபத்துக்கு வந்தால் அங்கே பொங்கல்,கேசரி, ஆப்பம் என்று விற்கிறார்கள். ஆங்காங்கே வேறு சிலரும் நிலத்தில் சப்பாணி கட்டியபடி அமர்ந்திருக்க அதில் வாங்கு போல இருந்த ஒன்றில் நானும் கணவரும் அமர்கிறோம். போவோர் வருவோரைப் புதினம் பார்த்தபடி ஒரு பத்து நிமிடம் இருக்க ஒரு வயதுபோன பெண் வந்து சுவாமியை வைக்கும் இடத்தில் இருக்கிறீங்களே. எந்திரிங்க என்று கூற சிரித்தபடி எழுந்து வர தாமரைப்பூக்கள் அற்ற பொற்றாமரைக் குளம் பச்சை நிறத்தில் தெரிகிறது. அதன் கரையில் அமர்ந்தபோது முன்னர் வந்த நினைவுகள் எழுகின்றன. முன்னர் கீழே சென்று காலை நனைத்துவிட்டுத்தான் கோவிலின் உள்ளே சென்றோம். இப்போ கீழே செல்ல முடியாதவாறு கம்பி வேலி போட்டிருந்தார்கள். கோயில் தொன்மையானதாக இருந்தாலும் வருமானம் ஈட்டுவதே குறிக்கோளாக கோயில் என்று உணரவே முடியாததாக இருக்க மனதில் ஒரு ஏமாற்றமும் தோன்றியது. கணவர் வாங்கிவந்த பொங்கலும் கேசரியும் கூடச் சுவையாக இல்லை. வெளியே வந்து ஒரு கடையில் பழச்சாறு வாங்கி அருந்திவிட்டு வெளியே வருகிறோம். மனிசன் மீண்டும் ஊபர் அப்பில் ஓட்டோவை அழைக்க ஓட்டோ அகப்படுதே இல்லை. பின் வீதியில் சென்று மறித்தாலும் நிற்கவில்லை. அன்று சனிக்கிழமை ஆதலால் சரியான கூட்டம். தமிழர்கள் மட்டுமன்றித் தெலுங்கு மக்களும் நிறையப்பேர் வந்திருந்தனர். அருகில் ஒருவரிடம் ஓட்டோ எங்கே பிடிப்பது என்றதுக்கு எதிர்ப்பக்கம் போனா ஓட்டோ ஸ்டாண்ட் வரும் என்று கூற அந்த மதிய வெயில் எதையும் இரசிக்க முடியாது செய்கிறது. மறுபடியும் ஓட்டோக்காரர் அறுநூறு சொல்லி ஐநூறுக்கு சம்மதித்து கோட்டலுக்குப் போய் இறங்க பசியே இல்லாது இருக்க போய் சாப்பிட மனமின்றி முகம் கைகால் கழுவிவிட்டு கட்டிலில் போய் விழுகிறோம். எழுந்தால் மணி மூன்று என்கிறது போன். எங்கே போகலாம் என்று யோசித்தாலும் போக மனமின்றி இருக்கிறது. சரி வெளியே போய் நல்ல கோட்டலில் உண்போம் என்றுவிட்டு சென்று உண்டுவிட்டு தெப்பக்குளம் பார்க்கப் போவோம் என்று முடிவெடுத்துப் போய் பாத்துவிட்டு - முன்னர் பார்த்ததை விட குளமும் கோவிலும் அழகாகப் பாராமரிக்கப்பட்டிருக்க மனம் சிறிது நிம்மதியடைகிறது. வைகை அணை, திருமலை நாயக்கர் அரண்மனை, அழகர் கோவில் எல்லாம் பலதடவை பார்த்து அலுத்துப்போயிருந்ததால் போகாது சமணர் மலையைப் போய் பார்ப்பமோ என எண்ணினால் மாலை ஐந்துமணிக்கு போய் பார்க்க நேரம் போதாது என எண்ணி சினிமா ஒன்றுக்குப் போலக்காம் என முடிவெடுத்து ஓட்டோக்காரரிடம் கேட்டால் இப்ப ஆறரை சோ இருக்கு. வெற்றி சினிமா நன்றாக இருக்கும் என்று கூற அங்கு செல்கிறோம். இந்தியாவில் சினிமாத் தியேட்டர்களில் படம் பார்ப்பது அலாதியானதுதான். ஆனாலும் அன்று பார்த்த படம் என்ன என்று இன்றுவரை எனக்கு ஞாபகம் வரவில்லை என்பது வேறு. அடுத்தநாள் காலை எழுந்து காலை உணவை அங்கேயே உண்டுவிட்டு கோட்டல் கணக்கைத் தீர்த்துவிட்டு ஓட்டோ ஒன்றை 1000 ரூபாய்க்குப் பேசி திருப்பரங்குன்றம் சென்று அங்கும் கூட்ட நெரிசலில் சிக்கி வெளியே வந்து சொல்லும்படியான கோட்டல் ஒன்றுகூட இல்லாமல் அலைந்து திரிந்து ஒரு உணவகத்தில் உண்டுவிட்டு தங்குமிடம் தேடினால் ஒன்றுகூட நன்றாக இல்லை. அங்கிருந்து கீழடி ஒரு 20 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்ததால் கொஞ்சம் வெயில் தணியச் செல்லலாம் என்று கிடைத்த ஓரளவு சுத்தமான கோட்டலில் இரண்டு மணிநேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு ஊபர் காரில் கீழடிக்குச் சென்றால் ஏமாற்றம்தான். ஒரு பத்து மீற்றர் நீள அகலத்தில் ஆறு அகழ்வாய்வு செய்யப்பட்ட குழிகள் மட்டும் இருக்க மிகுதி எல்லாம் அடையாளமற்று மூடிய நிலமாக இருக்க இதைப் பார்க்காமலே இருந்திருக்கலாம் என்னும் எண்ணம்தான் வந்தது. அங்கு அகழ்வாய்வாளர்களுக்கு உதவிக்கு நின்ற ஒருவருடன் கதைத்தபோது இதைக் கூட மூடச் சொல்லீட்டாங்க. சென்றல் கவுண்மென்ட் எதையுமே செய்ய விடமாட்டேனக்கிறாங்க என்றார். அதிலிருந்து ஒரு பத்து நிமிட நேரத் தூரத்தில் ஒரு மியூசியம் ஒன்று அமைத்து சில பொருட்களையும் அங்கு வைத்துள்ளார்கள். அதைக் கூட அங்கு அமைப்பதற்கு மத்திய அரசு முதலில் தடை போட்டதாம். அதன் பின் கனத்த மனதுடன் பேருந்து நிலையம் வந்து படுத்துத் தூங்கியபடி சென்னை வந்து சேர்கிறோம். இனி தாஜ்மகால் வரும்
    1 point
  17. சிறிது நேரம் யாருமே பேசவில்லை. ஓட்டோ ஓட்டுனர் : கீளாம்பாக்கம் தானே? கணவர்: ஓம் ஓ ஓ : எங்க போறீங்க கணவர்: மதுரை நான்: அந்த இடம் தெரியும்தானே? ஓ ஓ : ஆமா ஆமா. கீளாம்பாக்கத்தில ஆறு மாசம் முன்னாடிதான் புதிசா கலைஞர் கருணாநிதி நினைவா தொறந்து வைச்சாங்க. ரொம்பப் பெரிசு. மின்னாடியே உங்களுக்குத் தெரியாதா? கணவர்: தெரியாது. கோயம்பேடு என்று சொன்னாங்களே. ஓ ஓ: அங்க இப்ப யாரையும் ஏத்தக் கூடாது. எந்த பஸ்சும் வராது. நான்: ரிக்கற் போட்டவர் பொய் சொல்லீட்டார் கணவர்: ஒரு மணித்தியாலத்தில போகலாமோ? ஓ ஓ: இன்னிக்கி வெள்ளிக்கிழமை. ரொம்ப ராபிக்கா இருக்கும். எப்பிடியும் நான் ஒண்ணரை மணி நேரத்தில கொண்டு போயிடுவன். அன்று போய் சேர ஒன்றே முக்கால் மணிநேரம் பிடிக்க நான் டென்ஷன் ஆனதுக்கு அளவே இல்லை. அப்பா! மிகப் பிரமாண்டமாக ஒரு விமானநிலையம் போல வடிவமைத்திருந்தார்கள். நானும் லண்டன் விக்டோரியா கோச் நிலையம் போல ஒரு பத்து சொகுசு பஸ்கள் நிற்கும் என்று பார்த்ததால் - சினிமாவில் கூட அப்படிப் பார்த்ததில்லை. மிகப் பிரமாண்டம். ஒரு நூறு பஸ்கள் ஆவது நிற்கும். மற்றும் வேளையென்றால் இறங்கி நின்று படமோ வீடியோவோ எடுத்துவிட்டுத்தான் போயிருப்பேன். என் பஸ்சைப் பிடிக்கும் அவசரத்தில் வேறு எதுவுமே தோன்றவில்லை. உள்ளே சென்றால் ஒரு ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் நிற்கக்கூடியதாக பெரிதாக இருந்தது மண்டபம். மலசலகூடமும் மிகச் சுத்தமாக இருக்க நம்ப முடியாததாக இருக்க கணவரிடம் வாய்விட்டுச் சொல்கிறேன். இன்னும் ஒரு வருடம் போகட்டும். அதன்பின் வந்து பாரன் என்கிறார். எமது பஸ்ஸைத் தேடிப் பிடித்து உள்ளே சென்றால் நாம் மட்டும் தான் உள்ளே. யாரையும் காணவில்லை. எல்லா ஏசியையும் போட்டு குளிர் தாங்கவே முடியவில்லை. 96 ம் ஆண்டு இத்தாலி செல்லும்போது தான் முதன்முதல் தொடருந்தில் தூங்கிக்கொண்டு வந்தோம். இதுவே பேருந்தில் தூங்கியது முதல் அனுபவம். நாம் கொண்டுபோன விரிப்பை விரித்துவிட்டு திரைச் சீலையையும் இழுத்துவிட்டுப் படுத்தபின்தான் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். நான் நினைத்ததுபோல இல்லாமல் சுத்தமாக இருந்தது. ஆனாலும் அந்த ஏசியிலும் ஒரு நுளம்பு ஓடி ஓடிக் கடிக்க மனிசன் ஒரு இருபது நிமிடப் போரில் நுளம்பை வெல்ல அதன் பின் நிம்மதியான தூக்கம்தான். காலை ஆறு மணிக்கு மதுரை போகும் என்று சொன்னாலும் ஆறரைக்கே பேருந்து போய் சேர்ந்தது. பேருந்துத் தரிப்பிடம் போல் இல்லாமல் ஒரு வெட்டவெளியில் நிறுத்த, நாம் இறங்க இரண்டு மூன்று ஓட்டோக்காரர் என்னிடம் வாங்க, என்னிடம் வாங்க என்கின்றனர். அதில் ஒரு அப்பாவிபோல் இருந்த ஒருவரை கணவர் தெரிவு செய்ய, நாம் ஏறி அமர எங்கே போகணும் என்கிறார் அவர். மீனாட்சி அம்மன் கோவில் பக்கமாக நல்ல கோட்டல் ஒன்றுக்குக் கூட்டிச் செல்லுங்கள் என்கிறார் கணவர். கோவிலுக்குக் கிட்ட கோட்டல்கள் இல்லீங்க. ஒரு கிலோமீற்றர் தூரத்தில் தான் கோட்டல் எல்லாம் இருக்கு. கோயிலுக்கு அங்கிருந்து 200 ரூபா தான் என்கிறார். இரண்டு மூன்று கோட்டல்கள் தொடர்ந்து இருக்க, ஓட்டுனர் சென்று இரண்டு கோட்டல்களில் கேட்க எல்லாம் புல் என்கின்றனர். மூன்றாவதில் இடம் இருக்க நான் உள்ளே சென்று அறையைப் பார்க்கவேண்டும் என்கிறேன் வரவேற்பில். தாராளமாகப் பாருங்கள் என்கின்றார். அறை என்னவோ பரவாயில்லை. ஆனால் போகும் வழியில் சுத்தம் இல்லாமல் இருக்க இது வேண்டாம் என்கிறேன். இன்னிக்கி சனிக்கிழமை வெளியூர்காரங்க வந்திருப்பாங்க. வேறு இடம் பார்க்கலாம் என்று இரண்டு மூன்று பார்த்து நான்காவதாக 3700 ரூபாய்கள் காலை உணவுடன் என்று கூற அதைத் தெரிவு செய்கிறோம். அறையில் குளித்து ஆடைமாற்றிக்கொண்டு கீழே வர உணவகம் கூட மிக நேர்த்தியாக இருக்கிறது. பபே என்றாலும் கேட்டுக்கேட்டு தோசை, பூரி என்று கொண்டுவந்து தருகின்றனர். அவர்களின் உபசரிப்பில் மனமும் வயிறும் நிறைந்து போகிறது. சரி இனி மீனாட்சி அம்மனிடம் செல்வோம் என்கிறார் கணவர். அவரது போனில் ஊபர் அப் இருக்கு. எனவே ஊபர் கிளிக் செய்ய அதில் ஓட்டோவும் வர ஓட்டோவுக்குப் போடுவம் என்று போட 157 ரூபாய்கள் என்றும் பணமாகக் கொடுக்கலாம் என்னும் ஒப்ஷன் வர, மனிசனும் மலிவாக இருக்கு என்று சந்தோசப்படுறார். 7 நிமிடத்தில் வருவதாகக் காட்டிய ஓட்டோ மூன்று நிமிடத்தில் தானாகவே கான்சல் ஆகிது. திரும்ப ஒன்று போட அதுவும் அப்படி இப்படி என்று எழு நிமிடத்தில் கான்சல் ஆக எனக்குக் கடுப்பு ஏற்பட, ரோட்டில் போய்நின்று பிடிப்போம் என்று ரோட்டுக்குச் சென்றால் அங்கு வந்த ஓட்டோ ஐநூறு கேட்கிறது. மனிசன் கூட என்று சொல்ல எவ்ளோ தருவீங்க என்று கேட்க மனிசன் இருநூறு என்கிறார். வேறு ஓட்டோ பாருங்க என்று கூறிவிட்டு அவன் கிளம்ப, வாற இடத்தில கஞ்சத் தனத்தைக் காட்டாதைங்கோ என்று எரிச்சலுடன் சொல்கிறேன். அடுத்த ஓட்டோவில் நானூறு சொல்ல மனிசன் கதைக்க முதலே நான் ஏறி அமர்கிறேன். உனக்கு எதிலும் அவசரம் என்று மனிசன் புறுபுறுக்க இது எங்கட ஊர் இல்லை. எங்களுக்கு அலுவல்தான் முக்கியம் என்கிறேன். சனி தொடரும்
    1 point
  18. எனக்கே அடையாளம் தெரியாமல் முகத்தில் நன்கு ஐந்து இடங்களில் வீங்கிப்போய் இருந்தது. பிள்ளைகளுக்கு அனுப்புவதற்குப் படமெடுத்து அனுப்பிவிட்டு படத்தை பார்க்கச் சகிக்காது உடனேயே போனில் இருந்து அழித்துவிட்டேன் என்றால் பாருங்களன். அன்றே ஒன்லைனில் வேறு ஒரு தங்குவிடுதியை புக் செய்து போகும்போது வரவேற்பில் நின்றவரிடம் இரவு முழுதும் சரியான நுளம்புக்கடி என்கிறேன். நுளம்பே இல்லையே மடம் என்கிறார். அப்ப இரவு போய் படுத்துப்பாரும் என்றுவிட்டு வெளியேறி அடுத்த தங்குவிடுதிக்குச் சென்று சூட்கேசை வைத்துவிட்டு குளியலறையில் யன்னல் பூட்டக் கூடியதா என்று பார்த்துவிட்டுத்தான் பதிவே செய்தது. அதுமுடிய அறைக்குள் சென்றவுடன் பழைய தங்குவிடுதியின் இணையத்தளத்துக்குச் சென்று உள்ளதை உள்ளபடி விமர்சனம் எழுதி முடித்தபின்தான் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது. அன்று பகல் வங்கிக்குச் சென்று எமது பணத்தைப் பற்றிக் கதைத்தால் அந்த அலுவலை முடிக்க ஆறு நாட்கள் செல்லும் என்றார்கள். அத்தனை நாட்கள் சென்னையிலேயே நின்று என்ன செய்வது? அதனால் எங்காவது போய் வருவோம் என்றால் மனிசன் மதுரை போவோம் என்கிறார். எனக்கும் கீழடியைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் பலநாட்களாக இருக்க, நானும் சம்மதிக்க இருவரும் சென்று ஒரு பயண முகவர் ஒருவரைச் சந்தித்து அன்றைய இரவு பத்து மணிக்கு படுக்கையுடன் கூடிய சொகுசு உந்தில் மதுரை செல்லப் பயணச் சீட்டு எடுத்துவிட்டு மதிய உணவை உண்டுவிட்டு வந்து கொண்டுவந்த கைப்பொதியில் இரு நாட்களுக்கு உரிய உடைகளையும் முக்கிய பொருட்களையும் எடுத்து அடுக்கிவிட்டு படுத்துக் குட்டித் தூக்கம் ஒன்றும் போட்டு எழுந்தால் அப்பதான் மூன்று மணி. வெளியே கடைகளுக்குச் செல்ல மனமில்லை. படம் பார்க்கப் போவோமா என்கிறேன். இங்கே பக்கத்தில சினிமா இருக்கோ தெரியவில்லை என்று மனிசன் பின் வாங்க, வரவேற்பில் போய் கேட்டுக்கொண்டு வாங்கோ என்கிறேன். போன மனிசன் ஐந்து நிமிடத்தில் வந்து பத்து நிமிட நடையில் கிரிஷ்ணவேணி என்ற சினிமா இருக்காம், நாலரைக்குப் படம் இருக்காம் என்கிறார். என்ன படம் என்று எதுவும் கேட்கவில்லை. பெரிய பயணப்பொதியை இரண்டு நாட்களில் திரும்ப வருவோம் என்று கூறி கீழே வரவேற்பில் கொடுத்துவிட்டு கைப்பொதியை இழுத்தபடி செல்கிறோம். போகும் வழியில் உணவகத்தில் மனிசன் பரோட்டவும் நான் பூரியும் உண்டுவிட்டுத் தேனீரும் அருந்தி, இரவு உண்பதற்கு வடை, போண்டா எனச் சில சிற்றுண்டிகளையும் தண்ணீர் போத்தலையும் வாங்கிக்கொண்டு படம் பார்க்கச் செல்கிறோம். நாம் நின்ற இடத்திலிருந்து அரைமணி நேரத்தில் சென்று மகிழுந்தைப் பிடித்துவிடலாம். கோயம்பேடு சந்தைக்கு அருகில் தான் பஸ்கள் தரிப்பிடம் என்று எமக்குச் சொல்லப்பட்டது. அதனால் சாவகாசமாகப் படம் முடிந்து போகலாம் என்று போய் படமும் பார்க்க ஆரம்பிச்சாச்சு. சினிமா என்பதனால் போனின் சத்தத்தையும் நிறுத்தியாச்சு. ஆறரை மணிக்கு இடைவேளையில் மனிசன் சென்று பொப்கோனும் நெஸ்கபேயும் வாங்கிவர, இரசிச்சுக் குடிச்சு மீண்டும் படம்பார்க்க ஆரம்பிக்கிறோம். நாலரைக்கு படம் தொடங்கும் என்று போட்டாலும் 15 நிமிடம் விளம்பரங்களுக்குப் பின்னர்தான் படம் ஆரம்பித்தது. அதனால் இடையில் எத்தனை மணி என்று பார்க்க போனை எடுத்தால் 5 மிஸ்டு கோல்கள். என்ன ஏது என்று பார்த்தால் அப்ப ஏழரை மணி. படம் முடிய இன்னும் அரை மணி நேரமாவது செல்லும். ஏதோ மனதில் பிரையாணம் தொடர்பானதுதான் என்று தோன்ற போனை எடுத்துக் காதில் வைத்து ஏன் போன் செய்தீர்கள் என்று கேட்க, பஸ் கோயம்பேடில் நிக்காது மடம். அதுதான் உங்களையும் பிக் பண்ணிக்கொண்டு போக போன் செய்தோம் என்கிறான் அந்த பஸ்ஸின் ஓட்டுனர். நாங்கள் சினிமா பார்த்துக்கொண்டு இருந்ததில் கேட்கவில்லை. எனக்குப் பதட்டமாகிப் போகிறது. நான் வெளியே வந்து எடுக்கிறேன் என்றுவிட்டு மனிசனிடம் விடயத்தைச் சொல்லி, படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே இருவரும் வெளியே வந்து போன் செய்ய மீண்டும் அதையே சொல்கிறார் ஓட்டுனர். இப்ப எங்கே வந்து பஸ்சைப் பிடிப்பது என்று கேட்கிறேன். கீழாம்பாக்கம் என்ற இடத்துக்கு வரவேணும் என்று கூற எவ்வளவு தூரம் என்று கேட்கிறேன். ஒரு மணி நேரத்தில் வந்துவிடலாம் என்றுகூற எனக்குப் பதட்டமாகிறது. ஒரு மணிநேரம் என்றால் தூரமாகத்தானே இருக்கும் என்று எண்ணியபடி நடக்க, பொறு எங்கட சூட்கேசை எடுத்துக்ககொண்டு வாறன் என்றபடி சினிமாவின் ரிக்கற் கவுண்டருக்கு அருகில் சென்று அங்கு அவர்களிடம் கொடுத்தவற்றை எடுத்துக்கொண்டு வர நான் என்னதை இழுத்துக்கொண்டு போகிறேன். சினிமா அரங்குக்குப் பக்கத்தில் தான் நாம் ரிக்கற்றைப் பெற்ற கடை. இப்ப கடை பூட்டி இருக்கும் என்கிறார் கணவர். எதுக்கும் போய் பார்ப்போம் என்று சென்றால் திறந்து இருக்க எதுக்கு பிழையான இடத்தைச் சொன்னீர்கள் என்கிறேன். என்னம்மா சொல்றீங்க. புரியும்படியா சொல்லுங்க என்கிறார். நான் விபரம் சொல்ல, பக்கத்தில் நின்ற ஒருவர் இப்பல்லாம் பஸ் இங்க நிக்கிறதில்லையே என்கிறார். முகவர் சமாளித்தபடி காலைல புக் பண்ணும்போது இங்கேதான் போட்டிருந்தாங்க. திடீர்னு மாத்தீட்டாங்க என்கிறார். இப்ப எப்பிடிப் போறது என்கிறேன் நான். ஓட்டோவில போங்க என்று கூற ஓட்டோவுக்கு எவ்வளவு என்கிறார் மனிசன். இரவு நேரம் டபுளா கேட்பாங்க என்றுவிட்டு ஒரு ஓட்டோவை நிறுத்த அவ்வளவு தூரம் வரமுடியாது என்கிறான் ஒருவன். நேரம் எட்டுமணியாகிவிட எனக்குப் பதட்டம் ஏற்பட முதலே சரியான இடத்தைச் சொல்லியிருக்கவேணும் என்கிறேன் முகவரைப் பார்த்தபடி. என் கோபம் புரிய நான் உங்களை ஏற்றாமல் போகக் கூடாது என்று இப்பவே சொல்கிறேன் என்றபடி போன் செய்கிறார். அவர் பேசி முடிய அவரை நம்பாமல் எனக்கு போன் வந்த இலக்கத்தை அழுத்தி இன்னும் நாங்கள் ரி நகரில் தான் நிற்கிறோம். வந்துவிடுவோம். என்று கூற உங்களை ஏற்றாமல் பஸ்சை எடுக்கமாட்டேன் மடம், வாங்க. என்றுவிட்டு போனை வைக்க, நீங்கள் தான் ஓட்டோ பிடித்துத் தரணும் என்கிறேன். சரிம்மா என்றுவிட்டு ஓட்டோவை நிறுத்துகிறார். பலரும் வர மறுக்க, ஏன் வரமறுக்கிறார்கள் என்று கேட்கிறேன். அவ்வளோ தூரம் போயிற்று திரும்பிவர சவாரி கிடைக்காட்டி நட்டம் என்று ரொம்பக் கேக்கிறாங்கம்மா என்கிறார். பரவாயில்லை நிறுத்துங்கள் என்றதும் ஓட்டோவை நிறுத்தப் போகிறார். சாதாரணமா ஒரே றபிக் அங்கிட்டுப் போக என்கிறார் எமக்குப் பக்கத்தில் நின்றவர். அப்ப டாக்ஸி பிடித்தால் விரைவாகச் செல்லலாமே என்றுவிட்டு முகவரிடம் டாக்ஸியை அழையுங்கள் என்கிறேன். டாக்சி ஸ்ராண்ட் பக்கத்தில இல்லை. பத்து நிமிடம் அங்கிட்டுப் போகணும். அதுக்கு ஓட்டோலையே போயிடுங்க. இதோ ஒண்ணு வந்திட்டுது என்றபடி ஒன்றை நிறுத்துகிறார். நானும் கணவரும் ஏறி அமர்கிறோம். வரும்
    1 point
  19. முடிவிலி ------------- சமீபத்தில் இங்கே ஒரு பாதிரியாருக்கு பெரிய மாரடைப்பு வந்து கொஞ்ச நேரம் இறந்து போய்விட்டார். பின்னர் அவருக்கு உயிர் திரும்பவும் வந்துவிட்டது. இப்படித்தான் வைத்தியசாலையில் சொன்னார்கள். இது செய்திகளிலும் வந்து இருந்தது. பாதிரியாரும் இடைப்பட்ட, அவர் இறந்திருந்த, நேரத்தில் அவர் வேறு ஒரு இடத்திற்கு போய் வந்ததாகச் சொன்னார். இதை Near Death Experience (NDE) என்று சொல்கின்றனர். இந்த வாழ்வின் முடிவில் இருந்து சாவின் விளிம்பு வரை போய் வருதல். அடிக்கடி உலகில் எங்காவது நடக்கும் ஒரு நிகழ்வு இது. பொதுவாக இந்த அனுபவம் பெற்றவர்கள் அநேகமாக வெளிச்சமான, பிரகாசமான, பூந்தோட்டங்கள் நிறைந்த, வாசனைகள் பரவும், ஒளி சுற்றிச் சுழலும், தெரிந்தவர்கள் மற்றும் முன்னோர்கள் மிதந்து கொண்டிருக்கும் ஒரு இடத்திற்கே போய் வந்ததாகச் சொல்வார்கள். அவர்கள் போய்ப் பார்த்து வந்த இடம் சொர்க்கம் என்பதன் விளக்கம் இது போலும். ஆனால் இந்தப் பாதிரியார் தான் நரகத்திற்கு போய் வந்ததாகச் சொல்கின்றார். ஒரே இருட்டு, அதைத் தாண்டினால் மனிதர்கள் நான்கு கால்களில் நடக்கின்றார்கள், அவர்களின் கண்கள் வெளியே தள்ளப்பட்டிருக்கின்றன, சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கின்றார்கள், நெருப்பில் விழுகின்றனர் என்று பாதிரியார் அவர் போய் வந்த இடத்தை விபரித்திருந்தார். இதற்கு முன்னர் வாழ்வின் முடிவு வரை போய் வந்தவர்கள் சொன்னவற்றை வைத்து, இங்கே பூமியில் என்ன செய்தாலும், என்ன கூத்து ஆடினாலும், கடைசியில் எல்லோரும் சொர்க்கத்திற்கு தான் போவார்கள் போல என்று அசமந்தமாக இருந்துவிட்டேன். மற்ற இருட்டான இடத்திற்கும் ஆட்கள் அனுப்பப்படுகின்றனர் என்று இப்பொழுது தான் தெரிய வந்துள்ளது. 40 வயதிற்கு மேல் ஒருவரது விதிப்பயனை, ஊழ்வினையை மாற்றவே முடியாது என்று தமிழ்நாட்டின் இன்றைய முன்னணி சிந்தனையாளர், தத்துவஞானி, ஆன்மீக அறிஞர் ஒருவர் சமீபத்தில் சொல்லியிருக்கின்றார். இந்த அறிஞரைப் பார்த்து, 'என்ன உங்களின் தத்துவம் எல்லாம் ஒரே ஓட்டை ஒடிசலாக இருக்குதே. சுட்ட தோசையையே திருப்பி திருப்பி சுடுகிறீர்களே' என்று ஒரு சாதாரண மனிதன் கேட்டுவிட்டார். சினம் கொண்ட அந்த அறிஞர் அந்த சாதாரண மனிதன் நரகத்திற்கு போவார் என்பதையே இப்படிப் பூடகமாகச் சொன்னாராம். நரகம் போய் வந்த பாதிரியார் தான் இங்கு வாழ்க்கையில் விட்ட பிழைகள் என்ன என்னவென்று சொன்னதிலிருந்து அறிவது என்னவென்றால், நான் அங்கு போகும் பொழுது இந்த அறிஞர் கூட அங்கு நாலு கால்களில் நடந்து கொண்டிருப்பார் என்றே தெரிகின்றது. கிட்டத்தட்ட எனக்குத் தெரிந்த எல்லோரும் அங்கே தான் இருப்பார்கள் அல்லது எனக்குப் பின்னால் வரப் போகின்றார்கள். இதே கூட்டம் தான் அங்கேயும், முடிவற்ற ஒரே வாழ்க்கை. இனிமேல் இதிலிருந்து தப்புவதற்கு வழியில்லை என்றாலும், இப்பவே கொஞ்சம் கொஞ்சமாக பழகிக் கொள்ளலாம். ஒரு கிழமைக்கு மூன்று தமிழ்ப் படங்களும் மூன்று தெலுங்குப் படங்களும் விடாமல் பார்த்து வந்தால், நரகத்தைக் கூட ஒரு கலைக் கண்ணோட்டத்தில் பார்க்கும் பக்குவம் வந்துவிடும்.
    1 point
  20. இலையுதிர் காலம் எங்கும் உள்ளது தான். நாட்டுக்கு நாடு இது எந்த மாதங்கள் என்பதில் தான் ஒரு மாறுதல் இருக்கும். கொட்டோ கொட்டென்று கொட்டும், அள்ளிக் கொண்டே இருக்க வேண்டியது தான். கொட்டுவதும், பின்னர் துளிர்ப்பதுமாக மரங்கள் இருக்கும். உயிர்களும் போவதும், பின்னர் புதியன வருவதுமாக தெருக்களும் இருக்கின்றன. ** இலை என்றால் உதிரும் -------------------------------------- என்ன அழகு என்று தினம் மாறும் வர்ணங்கள் பார்த்து நிற்க இலைகள் கொட்ட ஆரம்பித்தன வாசல்களும் தெருக்களும் விழுந்த இலைகளால் நிரம்பி வழிந்தன என்றாலும் என் வீட்டில் அதிகம் என்றே தோன்றியது அயல் வீட்டு சருகுகளும் என் வாசலிலேயே ஒதுங்குவது போன்றும் இருந்தது நின்று கூட்டியால் நின்று நின்று கூட்டி அள்ளி அள்ளி குவிக்க அன்றைய பொழுது முடிந்து கொண்டிருந்தது அக்கம் பக்க வீடெல்லாம் குப்பையாக தெருவெல்லாம் சருகாக கிடக்க என் வீடு மட்டும் பளிச்சென்று இருந்தது 'அப்பாடா, முடிந்தது' என்று அண்ணாந்து வானம் பார்த்து நிற்க மெல்லிய காற்று ஒன்று முகம் வருடிச் சென்றது காற்று வந்து கொண்டேயிருந்தது இலைகள் புதிதாக விழுந்து கொண்டேயிருந்தன பொழுது சாய மனமும் சாய இனி இன்னொரு நாள் கூட்டி அள்ளுவோம் என்று சலிப்புடன் அன்று முடிந்தது கனவில் ஒருவர் வந்தார் அரைக்கண் மூடி நீண்ட காது தொங்க இருந்தார் இதுவரை இலையே விழாத பெருமரம் ஒன்றிலிருந்து ஒரு இலை எடுத்து வா என்றார் எடுத்து வந்தால் என் மரத்திலிருந்து இலை விழாமல் இனிமேல் பார்க்கின்றேன் என்றார் நீங்கள் ஓடித் தப்பி விட்டு அதைக் கொண்டு வா இதைக் கொண்டு வா என்கின்றீர்கள், பெருமானே.
    1 point
  21. அண்மையில் Plam Spring California என்ற இடத்தில் போய் 4 நாட்கள் தங்கியிருந்தோம். இந்த தேசம் முழுவதும் பாலைவனமாக காட்சியளிக்கிறது. ஒரு இடத்தில் நன்றாக காற்று வீசக் கூடிய இடத்தில் Windmills Farm என்று சிறிய காற்றாலைகளில் இருந்து பெரிய பெரிய காற்றாலைகள் வரை பூட்டி மின்னுற்பத்தி பண்ணுகிறார்கள். ஒருநாள் இதைப் பார்க்க போயிருந்தோம். அவர்களின் உத்தரவுடன் வாகனத்திலேயே பயணித்தபடி பார்வையிடலாம். அவர்களின் அலுவலகத்துக்குள் போனால் காற்றாலை எப்படி இயங்குகிறது.எவ்வளவு மின்சாரத்தை பெற முடியும்.காற்றே இல்லை என்றால் எப்படி மின்சாரம் வழங்குவது. மிக முக்கியமாக இதில் பிரச்சனை வரும்போது எப்படியெல்லாம் திருத்த வேலைகள் செய்யலாம்.உள்ளே போவதற்கு எப்படி போவது. இதுவரை ஏதோ சும்மா சுற்றுது மின்சாரம் வருகுது என்று தான் நினைத்தேன்.அலுவலகத்தில் இருந்த காணொளியைப் பார்த்தால் தலை சுற்றியது.இதுவரை எண்ணியதெல்லாம் தவிடுபொடியானது. பெரிய காற்றாலையின் அடிப்பகுதியைப் பார்க்கவே எமது ஊர் கிணறுகள் மாதிரி பெரிதாக இருந்தது.பெரிய காற்றாலைகளின் சிறகுகள் தனித்தனியே ஒரு ரெயிலரில் கொண்டு போக முடியாது.இதற்கென்று தனி ரெயிலர்கள் தேவை.அவ்வளவு பெரிதாக இருந்தது. அடிப்பாகத்திலிருந்து ஏதாவது திருத்த வேலைகளுக்கு கீழே இருந்து மேல்தட்டுவரை நிரந்தரமாக ஏணியிருக்கிறது.நமது ஊர் பனை மரங்கள் போல உயரமாக இருந்தது. ஏணியில் ஏறி உள்ளே போனால் பெரிய பெரிய இயந்திரங்கள்.சிறகுகள் பூட்டியிருக்கும் பகுதி கீழே நின்று பார்க்க சிறியதாக இருக்கும்.ஆனால் உண்மையிலேயே இது ஒரு பேரூந்து அளவு இருந்தது.அதற்குள் எப்படியெல்லாம் இயந்திரங்களைப் பூட்டி மின்சாரம் பெறுகிறார்கள். யாருக்காவது இவைகளை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் தவறவிடாமல் போய் பாருங்கள். சிறிய காற்றாலையின் சிறகு. காற்றாலைத் தோட்டத்தின் ஒரு பகுதி. ஓரளவான காற்றாலையின் முழுத் தோற்றம். திருத்த வேலைக்காக உள்நுழையும் பாதை.
    1 point
  22. மழைப் பாடல்கள் ---------------------------- மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் ..... என்று சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் ஆரம்பித்திருப்பார். மங்கல வாழ்த்தில் திங்களையும் ஞாயிறையும் போற்றிய பின், மழையைப் போற்றி, பின் சிலம்பின் காப்பியம் கதையை ஆரம்பிக்கும். இங்கு இப்பொழுது ஒவ்வொரு திங்களில் இருந்து ஞாயிறு வரையும் விடாமல் பெய்து கொண்டிருக்கும் மாமழை கண்டு, இளங்கோவடிகள் இப்பொழுது இருந்திருந்தால், அவரே சலித்துப் போய் 'மாமழை போதும், மாமழை போதும்' என்று பாடியிருப்பார். உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. இங்கு தினமும் வானம் பிளந்து கொட்டிக் கொண்டிருக்கின்றது. வானிடிந்தால் என்னவென்று அன்றொரு நாள் நவகவிஞன் விறைப்பாக நின்றார். அவருக்கென்ன, அவருக்குத் தான் அச்சம் எதிலும் இருக்கவில்லையே. அரை அங்குல தடிப்பு கூட இல்லாத மெல்லிய கூரையில் ஓயாமல் அடித்து ஊற்றிக் கொண்டிருக்கும் மழையால் கூரை பிளந்தால் பாரதியும் இளங்கோவடிகளுமா கூடமாட உதவிக்கு வரப் போகின்றனர்? காப்புறுதி நிறுவனத்தின் தொலைபேசி எண்ணை நாலு இடங்களில் எழுதி வைத்திருக்கின்றேன். தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. இது அய்யன் வள்ளுவன் எழுதியது. அம்மா வாசுகி சாமி எதுவும் கும்பிடாமல், அய்யனை மட்டுமே கும்பிட்டு வாழ்ந்திருக்கின்றார். ஆதலால் அம்மா கேட்கும் போதெல்லாம் மழை பெய்தது என்று அய்யன் சொல்லியிருக்கின்றார். பெண் உரிமைச் சங்கங்கள் இந்தத் திருக்குறளை இன்னும் உயிரோடு விட்டு வைத்திருப்பதை எண்ணி எண்ணி அய்யனின் ஆத்மா எங்கிருந்தாலும் மகிழவேண்டும். வாசுகி அம்மா நில்லென மழை நின்றும் இருக்கும். ம்.... அது ஒரு காலம். இன்றும் தொலைக்காட்சிகளில் காலநிலை அறிக்கைகளை ஏன் பெண்கள் மட்டுமே வாசிக்கின்றார்கள் என்பதன் பின்னால் இருக்கும் மெய்ஞானம் இது. தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. நல்ல நெல்லிக்கனி ஒன்றை மன்னனிடமிருந்து பெற்ற பின், காலக் கணக்கில்லாமல் வாழ்ந்து, எல்லாவற்றிற்கும் காரணங்கள் சொன்ன பாட்டி அவ்வை சொன்னவற்றில் ஒன்று இது. இங்கு நாலைந்து வருடங்களாக மழையே இல்லை. வெடித்த பூமியும் வெளுத்த வானமுமாக இருந்தோம். போகிற போக்கில் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே குளிக்கலாம் என்ற கட்டுப்பாடு கூட வரக்கூடும் என்று பேசிக் கொண்டனர். ஒரு நல்லவர் கூட இங்கு சுற்றுவட்டாரத்தில் இல்லாமல் போய்விட்ட நிலைமை. திடீரென இங்கு இப்பொழுது இரண்டு வருடங்களாக நாற்பது வருட மழை ஒன்றாகச் சேர்ந்து பெய்து கொண்டிருக்கின்றது. பலரும் இந்த இரண்டு வருடங்களில் இங்கு நல்லவர்களாக மாறி விட்டனரோ? ம்ஹூம்.... அமெரிக்க உளவுத்துறை யாரோ நாலு நல்லவர்களை கடத்தி வந்து இங்கு மறைத்து வைத்திருக்கின்றார்கள் போல.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.