யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Leaderboard

 1. நவீனன்

  நவீனன்

  வரையறுக்கப்பட்ட அனுமதி


  • Points

   9,449

  • Content Count

   85,545


 2. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   9,159

  • Content Count

   46,952


 3. suvy

  suvy

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5,377

  • Content Count

   16,328


 4. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   4,644

  • Content Count

   27,445Popular Content

Showing content with the highest reputation since 10/30/2013 in all areas

 1. 30 points
  மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 17ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2016) 18ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. எமக்கு பலமாக இருக்கும் யாழ் இணைய உறவுகளுக்கும், யாழ் செழிப்புற வேண்டும் என பல்வேறு வகையில் ஆலோசனைகளைத் தந்து கொண்டு இருப்பவர்களுக்கும் மற்றும் காலநேரம் பாராது பல்வேறு சுமைகளுக்கு மத்தியிலும் களத்தினை வழிநடத்தும் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். கடந்த காலங்களில் கூறியது போன்றே எமது மண்ணோடும், எமது மக்களோடும் நாம் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாய், துணையாய் ஒற்றுமையாய் பயணிப்போம். கூட்டுமுயற்சியினால் கடந்த காலத்தில் ஒரு சில விடயங்களை தாயக மக்களை நோக்கிச் செய்திருந்தோம். எதிர் காலத்திலும் எம்மக்களின் துயர் துடைக்க ஒரு சிறு துளியாகினும் பொருளாதார ரீதியில் கைகொடுப்போம். அந்த வகையில் யாழ் இணையத்துக்கு கிடைக்கப்பெறும் ஒரு சில விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் பணம் தாயக மக்களுக்கான திட்டங்களில் இணைக்கப்படும். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்
 2. 30 points
  பேப்பர் கணணியில்.. ஒற்றைப் பக்கத்தில்.. கண் இமை அசைவால்.. முக அசைவால்.. நோண்ட நோண்ட வந்து போகும்.. ஓர் அற்புதமாகக் கூட எதிர்கால யாழ் இணையம்.. இருக்கலாம். யாழ் இணையம்.. இணைய உலகில்.. தமிழ் இணைய போறம்.. (இதற்கு தமிழ்சொல் என்னென்று தெரியவில்லை. கருத்துக்களம் என்றே சொல்வோமே) வகையில்.. ஒரு முன்னோடி என்றால் அது மிகையல்ல. மேலும்.. இணையத் தமிழ் வரவின் பெருக்கத்தின் ஒரு ஆரம்ப அத்தியாமுமாக அது இருந்து வருகிறது. தமிழ் மொழி 21ம் நூற்றாண்டுச் சவால்களை சந்தித்து மெருகு பெற்று முன்னேறி நிற்க.. ஒரு சிறப்பான பங்களிப்பையும் யாழ் தான் சார்ந்த மொழிக்கு செய்துள்ளது... செய்தும் வருகிறது. யாழ் கருத்துக்கள இணையத் தளமாக தோற்றம் பெற்ற 1998/99 காலப்பகுதிகளிலும் சரி.. பின்னரும் சரி.. இணைய உலகில் பல்வேறு வளர்ச்சிக்கட்டங்கள்.. மாற்றங்கள்..ஏற்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி கணணி தொழில்நுட்ப உலகிலும் பெருமளவு வளர்ச்சிகள் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஏற்பட்டும் வருகின்றன. உலகில் அதிகம் விரைந்து கூர்ப்படையும் துறையாக இத்துறையே அமைந்துள்ளது. மேலும் வலுவான.. சமூக வலைகளின் பெருக்கமும்.. இதர பொழுதுபோக்கு கணணி சார் சாதனங்களின் ஆதிக்கமும்.. இதே காலப் பகுதியில் இருந்துள்ளது. இந்தச் சவால்களை எல்லாம்.. பெரும்பாலும்.. ஒரு தனிமனிதனாக நின்று சமாளித்து.. ஒரு தமிழ் தேசிய உணர்வேந்தலுடன் கூடிய.. ஒரு இணையத்தை அதுவும் தமிழ் மொழியில்.. கொண்டு நடத்துவதென்பது.. ஒன்றும் இலகுவான விடயமல்ல. மேற்படி.. தொழில்நுட்ப காரணிகளுக்கு அப்பால்.. பல்வேறு அரசியல்.. சமூக.. பொருண்மிய காரணிகளின் தாக்கங்கள் மத்தியிலும் 16 ஆண்டுகளுக்கு.. வெற்றிகரமாக.. இதனை நகர்த்தி வருவதென்பது ஒரு மகத்தான சாதனையே. காலத்துக்கு காலம்.. தன்னையும் சூழலையும் அதில் நிகழும் மாற்றங்களையும்.. உணர்ந்து கொள்ளும் ஒரு உன்னிப்பான நுண்ணிய அவதானியால் தான்.. இதனை சாத்தியமாக்க முடியும். காலத்துக்கு காலம்.. மாறும்.. தொழில்நுட்ப விருத்தி.. மென்பொருள் விருத்தி.. வீக்கமடையும் செலவீனங்கள்.. நேரச் சுருக்கம்.. போட்டிகள்.. அழுத்தங்கள்.. இணைய ஆபத்துக்கள்.. அச்சுறுத்தல்கள் என்று எத்தனையோ சவால்களை வெளியில் இருந்தும்.. சொந்த வீட்டில் இருந்தான..நாம் அறிய முடியாத பல்வேறு அழுத்தங்கள் மத்தியிலும்.. ஒரு தனிமனிதனாக திருவாளர் மோகன் அவர்கள்.. இதனை முன்னெடுத்து வருவது இந்த முயற்சியை.. உண்மையில் வெறும் வார்த்தையில் போற்றுதல் என்பதன் ஊடாக வாழ்த்தி அமைய முடியாது. அது அதற்கும் அப்பாற்பட்டு.. ஒரு தேசிய இனத்தின் பெருமைக்குரிய அடையாளமாக அவரை முன்னிறுத்தி நிற்கிறது என்றால் மிகையல்ல. இன்று வரை மோகன் அண்ணாவுக்கு தமிழ் கூறும் நல்லுலகம்.. ஒரு பாராட்டுதலை நல்கி இருக்கோ என்றும் தெரியவில்லை. தமிழ் இனத்தில்.. பல விடயங்களில் முன்னோடியாக இருக்கும் அவருக்கு.. ஒரு சரியான கெளரவிப்பு இதுவரை வழங்கப்பட்டிருக்கோ என்றும் தெரியவில்லை. அவர் அவற்றை எதிர்பார்ப்பவராகவும் என்றும் இருந்ததில்லை..! ஆனாலும்.. இதே இன்னொரு இன மக்களாக இருந்தால்.. நிச்சயம் அவரின் இந்த பங்களிப்பை மனதார வாழ்த்தி அவரை கெளரவித்தும் இருப்பர். இருந்தாலும்.. இந்த வார்த்தை ஜாலங்கள் மட்டும் அவர் தொடர்ந்து யாழை இயக்கப் போதுமானவை அல்ல. நிகழ்கால.. எதிர்கால.. சவால்களை அவர் எப்படி எதிர்கொள்ளலாம்.. (யாழுக்கு வயது கூடக் கூட மோகன் அண்ணாக்கும் கூடுது என்பதையும் கருத்தில் கொள்ளனும். இங்குள்ள கருத்தாளர்களுக்கும் கூடுது என்பதையும்.. கருத்தில் கொள்ளனும்...).. வருங்கால.. நிகழ்கால..புதிய தலைமுறை ஏற்ப தொழில்நுட்ப.. பொருண்மிய.. சமூக தேவைகளுக்கு ஏற்ப இதனை.. இன்னும் இன்னும் வெற்றிகரமாக எப்படிக் கொண்டு செல்ல உதவ முடியும்.. என்பதை ஒரு பொழுதுபோக்கும்.. சுவாரசியமும்.. கற்பனையும் அதே நேரம் எதிர்வுகூறல்களை.. எதிர்காலத்தில் நிகழ வாய்ப்பை காட்டக் கூடியதுமான.. ஒரு விபரணக் கருத்தாடலூடாக இங்கு இனங்காட்டின் அது நன்மை பயக்கும். அதற்கு உதவியாக.. உங்கள் சொந்த கருத்துக்களோடு.. படங்கள்.. காணொளிகளை.. கட்டுரைகளை.. இணைக்கலாம். இதோ.. உங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அது யாழ்..அதன் எதிர்காலத்தை எதிர்கால சவால்களை சந்தித்து மிளரச் செய்ய உதவினால்.. அது நாமும் இங்கு இருந்தோம் அதனை வளர்த்தோம் என்பதற்கு ஒரு அடையாளமாகவும் இருக்கும். ஒரு காலத்தில்.. தன் மூதாதையோரை யாழ் நினைவு கூறும் போது நாமும் அதில் ஒரு சிறுபுள்ளியாக அடங்கி இருக்கலாம். எல்லோரும் ஒற்றுமையாக கூட்டாக.. முயற்சிப்போமே...! இந்த இடத்தில்.. யாழ் மோகன் அண்ணாவிற்கு.. எனது சிறப்பான பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு.. எதிர்காலத்தில்.. கலாநிதிப் பட்டம் ஒன்றைச் செய்யும் எண்ணம் உள்ளது. அந்தப் பட்ட ஆய்வு வெற்றியாக அமைந்தால்... அதனை மோகன் அண்ணாவுக்கு சமர்ப்பித்து.. வெளியிடுவேன் என்று உறுதி சொல்லியும் கொள்கிறேன். இது ஒரு கருத்தாளனாக நான் அவருக்கு அளிக்க விரும்பும் ஒரு கெளரவம் ஆகும். காலம் கூடி வந்தால்.. நிச்சயம்.. அதனை யாழ் உங்களுக்கு ஓர் நாள் தாங்கி வரும்.
 3. 28 points
  டிக் என்று வந்து விழுந்த மெசெஞ்சரின் சத்தம் அவளைத் திடுக்கிட்டு எழ வைத்தது. பதட்டத்துடன் கணவனை எட்டிப் பார்த்தவளுக்கு அவன் விழிக்கவில்லை என்று தெரிந்து நின்மதிப் பெருமூச்சு ஒன்று எழுந்தது. நல்ல காலம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார். இல்லை எனில் ஆரவன் உனக்கு இந்த நேரத்தில மெசேச் அனுப்புறான் என்று .......... எதேதோ கேட்டுப் பிரச்சனையாகியிருக்கும். போனை எடுத்து சத்தத்தை நிறுத்திவிட்டு மீண்டும் போர்வையைப் போர்த்தியவளுக்கு மனதில் சொல்லவொண்ணாத் துயரம் ஏற்பட்டது. முன்னர் இவளின் முகநூலில் 1300 பேர் நட்பில் இணைந்திருந்தனர். அவர்களில் பலரை இவளுக்கு தெரியாதுதான். ஆனால் அவர்கள் போடும் பதிவுகளைப் பார்த்தது, பிரச்சனை இல்லாதவர்கள் என்று மனதில் பட்டதில் நட்பில் இணைத்திருந்தாள். ஆனாலும் நல்லவர்கள் போல் மற்றவர்களுக்குக் காட்டிக்கொண்டு மெசெஞ்சரில் வந்து "அழகாய் இருக்கிறீகள், ஐ லவ் யூ மேடம். சாப்பிட்டீங்களா, உங்களை நினைத்தால் தூக்கமே வரமாட்டேங்குது" என்றெல்லாம் எழுதுபவர்களுக்குப் பதில் போடாது அவர்களை நீக்கியதில் ஒரு நானூறு பேர் குறைந்துவிட்டார்கள். ஆரம்பத்தில் தினமும் ஆறுபேர் காலை வணக்கம், இரவுவணக்கம் என்று போடுவது இவளுக்கு மகிழ்வாக இருந்தாலும் போகப்போகச் சலிப்புடன் எரிச்சலும் சேர்ந்துகொள்ள இரண்டு வாரங்கள் யாருக்கும் எதுவும் போடாமலே இருந்தாள். அதன்பின் மூவர் தாமாக நிறுத்திவிட மற்ற மூவர் மட்டும் சளைக்காமல் வணக்கம் போட்டுக்கொண்டே நலமா சிஸ்டர்? எங்கே உங்களைக் காணவில்லை சகோ என்றெல்லாம் எழுத இவளும் தொடரவேண்டியதாகிவிட்டது. சரி எனக்கு வணக்கம் போடுவதில் அவர்களுக்கு சிறு சந்தோசம் என்றால் அதை ஏன் கெடுப்பான். இதுவரை அவர்கள் எல்லை தாண்டவில்லையே எனத் தனக்குத்தானே சமாதானம் செய்தும் கொண்டாள். இவள் பத்து ஆண்டுகளாக முகநூலில் இணைந்திருந்தாலும் கடந்த நான்கு ஆண்டுகளாகத்தான் அதில் பதிவுகள் போடத் தொடங்கி. காலை ஆறு மணிக்கு அலாரம் அடிக்க, எழும்பியதும் உடனே கை நாடுவது செல்போனைத்தான். முகநூல் சென்று வணக்கம் போட்டு, பதிவு ஒன்று போட்டு, மற்றவரின் பதிவுக்கு லைக் செய்து என ஒரு பத்து நிமிடங்கள் செலவுசெய்த பின்னர் தான் பல்தீட்டவே செல்வது. அவள் பல்தீட்டும்போது கூட டிக் என்று சத்தம் கேட்டால் ஓடிப்போய் பார்க்கவேண்டும் போல் எழும் என்னத்தை அடக்கியபடி தன அலுவல்களை முடிப்பாள். காலையில் பள்ளிக்குப் போகும் பிள்ளைகளுக்கும் வேலைக்குப் போகும் கணவனுக்கும் தேநீர் உணவு எல்லாம் செய்து கொடுத்து அனுப்பிய பின் சோபாவில் வந்து இருந்தால் முகநூலில் லைக் செய்வது, மற்றவர் எழுதும் கொமன்ற்சுக்கு பதில் எழுதுவது, மற்றவர்களின் பதிவுகளைப் பார்ப்பதும் சிரிப்பதுமாக நேரம் போய்விடும். மதியம் சமைத்துச் சாப்பிட்டு வேறு அலுவல்கள் இருந்தால் செய்துவிட்டு மீண்டும் முகநூலை எட்டிப்பார்த்துவிட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு எழுந்து ஒரு தேநீர் குடிக்க கடைக்குட்டி பள்ளியிலிருந்து வந்துவிடும். அதன்பின் கணவன் பிள்ளைகள், இரவுச் சமையல், தொலைகாட்சி என்று சந்தோசமாகத்தான் போய்க்கொண்டிருந்த வேளையில் தான் அவளுக்கு முடிந்துபோன ஏழரைச் சனி மீண்டும் தொற்றிக்கொண்டது. கணவனுக்குப் பணிக்குறைப்பு ஏற்பட்டு வாரத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து வீட்டில் இருக்க அவளுக்கு வந்தது ஆப்பு. கணவனிடம் சிமாட் போன் இருந்தாலும் அந்தாள் தன் அவசர தேவைக்கு மட்டுமே அதைப் பயன்படுத்துவார். அதனால் முகநூல் பக்கம் எட்டிப் பார்த்ததோ முகநூல் கணக்கோ கூட இல்லை. இவளின் போனில் எல்லாம் இருந்து அடிக்கடி டிங் டிங் சத்தம் கேட்க இவள் போனைத் திறப்பதும் பார்ப்பதும், சிலருக்குப் பதில் எழுதுவதும், தனக்குத்தானே சிரிப்பதும் சந்தேகத்தை உண்டாக்கியதை இவள் அறியவில்லை. ஆரோடை நெடுக சற் பண்ணுறாய்? ஆரவன் உனக்கு நெடுக மெசேச் அனுப்புறான்? நான் வீட்டில் நிக்கிறன். என்னோடை கதைச்சுச் சிரிக்காமல் உதுக்குள்ளேயே கிடக்கிறாய். பத்துமணிக்குப் பிறகு போனைத் தொடக்குடாது, ரொயிலற்றைக் கழுவு, வீட்டை மப்பண்ணு என்று வேலை ஏவியதில் இவளுக்குக் கடுப்பானது. "நான் என்ன வேலைக்காரியே? எதுக்கு என்னை நெடுக ஏவுறியள்? மனிசரை ஒரு நிமிடம் கூட இருக்க விடாமல் ........ சமைச்சு வைக்கிறன், பாத்திரம் கழுவுறன், உடுப்புகள் எல்லாம் தோய்க்கிறதும் நான்தான். வீடுவாசலை எந்த நேரமும் கூட்டு கூட்டு என்றால் .... இது என்ன ஹோட்டலே பளிச் பளிச் என்று இருக்க" என்று இவள் கத்த, "உனக்கு இப்ப என்னை விட உந்த முகநூல் காறங்கள் பெரிசாப் போட்டாங்களோ? எத்தினை பேர் உங்கை வேலைவெட்டி இல்லாமல் நிக்கிறாங்கள். ஒருத்தனும் வேலைக்குப் போகாமல் நிண்டு கடலை போடுறாங்களோ.".......... இப்பிடி ஒவ்வொருநாளும் கைபட்டால் குற்றம். கால்படால் குற்றம் என்பது போல் ஆனது வாழ்வு. எனக்கு மாமியார் இல்லாத குறையை இந்தாள் தீர்த்துவைக்குது என்று மனதுள் மறுகியவள், இவருக்கு நான் அடிமையே இவர் சொன்ன உடன எல்லாத்தையும் நிப்பாட்ட என்று வீம்பு எழ, "நீங்கள் சொன்ன உடன எல்லாத்தையும் போட்டுட்டு இருக்க நான் சின்னப் பிள்ளை இல்லை. முதல்ல முகநூல் எண்டா என்ன என்று தெரிஞ்சு கொள்ளுங்கோ. அதுக்குப் பிறகு கதையுங்கோ" என்றதன் பின்னரும் மனுஷன் மூஞ்சியை நீட்டிக்கொண்டு சாப்பிடாது அடம்பிடிக்க, முதற்தடவையாக என்ன செய்வது என்று தெரியாது கோபம், ஏமாற்றம், பச்சாதாபம் எல்லாம் ஒருங்கே எழ, அடுத்துவந்த நாட்கள் கணவனின் வேலை நாள் ஆதலால் எந்தப் பிரச்சனையும் இன்றி நகர்ந்தாலும் அந்த இடைவெளியில் நாளும் பொழுதும் யோசித்ததில் புதிய வழி ஒன்று அவளுக்குக் கிடைத்தது. அடுத்தநாள் கணவன் வீடில் நிற்க "வாங்கோ உங்களோடை கதைக்கவேணும்" என்று கூறியபடி கணவன்முன் அமர்ந்தாள். இந்தாங்கோ உங்களுக்கு ஒரு முகநூல் கணக்கு திறந்திருக்கிறன். கிட்டத்தட்ட ஒரு இருநூறு பேரையும் அதில இணைச்சிருக்கிறன். ஒருமாதம் நான் முகநூல் பக்கமே போகேல்லை. ஐப்பாட்டில என்ர முகநூல் திறந்தபடியே இருக்கு. என்னட்டை எந்த ஒளிவுமறைவும் இல்லை. எனக்கு என்ர குடுப்பம் முக்கியம். அதேநேரம் என் சுதந்திரமும் எனக்கு முக்கியம்தான். என்னை அடிமை போல் நீங்கள் நடத்த முடியாது. ஒரு விடயத்தைப் பற்றிக் கதைக்கும்போது அதுபற்றித் தெரியாமல் கதைக்ககூடாது என்று இவள் முடிக்கும் முன்னரே எனக்கு உது தேவை இல்லை என்றபடி இவள் சொல்வதைக் கேட்காமல் முகத்தைத் திருப்பிய கணவனிடம் "ஒரு மாதம் போகட்டும் அதுக்குப் பிறகு நாங்கள் திரும்பவும் கதைப்பம்" என்று சொல்லிவிட்டுக் குசினிக்குள் செல்ல, அவள் பார்க்கவில்லை என்று எண்ணிக்கொண்டு போனை எடுத்து முகநூலைத் திறப்பதை இவள் சிரிப்புடன் பார்த்தாள். இப்ப மூன்று வாரங்களுக்குப் பிறகு, எனக்கு உந்த முகநூலும் கோதாரியும் வேண்டாம் என்று பிறியம்விட்ட மனிசன், காலமை பின்னேரம் என்று அதுக்குள்ளயே கிடப்பதும் வீடியோக்களைப் பார்ப்பதும் சிரிப்பதுமாக வீட்டில் உள்ளவர்களைக் கணக்கில் எடுக்காமல் இருக்க இன்னும் ஒருவாரம் போகட்டும் என்று இவள் கொடுப்புக்குள் சிரித்தபடி கடந்து செல்கிறாள்.
 4. 28 points
  கிராமத்தில் வாழும் மக்களுக்கு கிடைக்கும் பல சுக போகங்கள் நகரத்து மக்களுக்கு கிடைப்பதில்லை.அதிலே ஒன்றை எடுத்து விடலாம் என்று தொடங்குகின்றேன். எந்தக் காலங்களாலும் சரி ஏதோ ஒரு திருவிழா சன சமூக நிலையம் திறப்பு விழா அல்லது ஆண்டுவிழாஎன்று ஏதோ ஓர் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கும்.கோவில்களில் திருவிழா தொடங்கினால் கொடியேற்றத்தில் இருந்து பூங்காவனம் வரைக்கும் ஏட்டிக்கு போட்டியாக சிகரம்கள் கட்டி பெரிய மேளம் சின்னமேளம் கண்ணன் கோஸ்டி என்று விடிய விடிய கூத்துக்கள் நடக்கும்.இந்தக் காலங்களில் ஒவ்வொரு திருவிழாகாரரினதும் கூத்துக்களை விலாவாரியாக அச்சடித்து கார்களில் ஒலி பெருக்கி கட்டி காலையில் இருந்து மாலை வரை இடை இடையே பாட்டு சத்தங்களின் நடுவே அன்றைய நிகழ்ச்சி நிரலையும் சொல்லிக் கொண்டே போவார்கள். எமது ஒழுங்கைக்குள் ஒலி பெருக்கியில் பாட்டு கேட்டால் ஒன்றில் ஐஸ்பழ வானாக இருக்கும் அல்லது இப்படி ஏதாவது திருவிழா போன்ற கொண்டாட்டம் ஏதாவதாக இருக்கும்.ஆனால் என்ன சத்தம் கேட்டாலும் ஒழங்கையில் உள்ள பெடி பெட்டைகள் எல்லாம் பறந்து வந்து வாசலில் நிற்பார்கள்.பாட்டு சத்தம் எங்கோ கேட்டிருக்கும் ஆனாலும் வாகனம் வந்து சேர இன்னும் கொஞ்சம் நேரம் எடுக்கும்.சிலவேளை காவல் நின்றால் ஐஸ்பழ வான் தான் வரும்.அவனும் ஓரிரு நிமிடம் நிற்பாட்டி எட்டி பார்த்து கொண்டு நின்றுவிட்டு போவான்.நாங்களும் ஆளை ஆள் பாரத்து கொண்டு நின்றுவிட்டு போவோம்.யாராவது ஐஸ்பழ வான் வந்திருக்கு காசு தாங்கோ என்று கேட்டால் அடியில் அழுகைச் சத்தம் தான் கேட்கும்.பின்னர் சந்திக்கும் போது எப்படி ஐஸ்பழம் என்று கிண்டல் பண்ணுவார்கள். இதுவே காரில் ஒலிபெருக்கியுடன் வந்தால் நிச்சயம் ஏதோ ஒரு கூத்தைப் பற்றியதாக தான் இருக்கும்.இப்போ எல்லோருக்கும் ரொம்ப சந்தோசம்.கார் கிட்ட வந்ததும் காருக்கு பின்னால் அண்ணே நோட்டீஸ் அண்ணே என்று கத்திக் கொண்டு எறத்தள ஒரு மைலுக்கு காருக்கு பின்னால் எல்லோரும் ஓட்டம் தான்.அதில் ஒரு ஆள் நின்றால் மற்றவர்களும் படிப்படியாக நின்றுவிடுவார்கள்.கடைசியில் யார் யார் எத்தனை எத்தனை நோட்டீஸ் என்று எண்ணிப் பார்த்து கூடுதல் நோட்டீஸ் எடுத்தவர் மிகவும் சந்தோசமாக ஆகூ என்று கத்திக் குளறுவார். இதுவே கொஞ்சம் வளர்ந்த பின் எமுது ஊர் திருவிழா என்றால் திருவிழா செய்கிறவர்கள் ஊர்க்காரராக இருக்கும்.ஒரு மாதம் முதலிருந்தே அண்ணை நோட்டீஸ்போட நானும் வாறம் விட்டுட்டுப் போடாதைங்கோ என்று ஒரு மாதிரி காரில் ஏறி நசி பட்டுக் கொண்டிருக்கிறது.இப்போ நம்மைப் போல ஓடி வாறவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கும் போது சந்தோசம் என்றால் எழுத்தில் வடிக்க முடியாது.அன்று அறிவிப்பு முடிந்து வீடு போகும் போது தான் ஏனடா இந்தக் காரில் ஏறிப் போனேன் என்று பதுங்கி பதுங்கி போவேன்.நினைத்த மாதிரி எனக்காக ஒரு தடி காத்திருக்கும். இருந்தாலும் அந்தக் காரில் இருந்த போது அடைந்த சந்தோசத்துடன் பார்க்கும் போது இன்னும் எத்தனை தடவை வேணுமென்றாலும் அடிங்கப்பா என்று சொல்லத் தோன்றும்
 5. 28 points
  யாழ் கருத்துக்களத்தில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பற்றிய திரி ஒன்றில் எழுதப்பட்ட கருத்துக்களால் மனம் வருந்தி இப்பதிவினை இடவேண்டிய தேவையேற்படுகின்றது. அரசியல்வாதிகள் சிலர் செய்த தவறுகளுக்காக ஒட்டு மொத்தமாக ஒரு இனத்தினைத் தூற்றுவதும், குறைந்தபட்ச மனிதநேயமின்றி அரசியல் சாயம் பூசி எழுதுவதும் எமக்கிடையேயான இடைவெளியினை மேலும் அதிகப்படுத்தும் கருத்துக்களாகவே பார்க்க வேண்டியுள்ளது. நீண்ட கால நோக்கில் இவ்வாறான கருத்துக்கள் எம்மையும் தமிழக உறவுகளையும் அந்நியப்படுத்தும் என்பதைக் கவனத்தில் கொண்டு கள உறவுகள் தமது கருத்துக்களை சமூகப் பொறுப்புணர்வுடன் வைத்தல் வேண்டும். மேலும் எமது விடுதலைப் போராட்டம் சந்தித்த தோல்விக்கு, தோல்விக்கான காரணங்களைத் தெரிந்திருந்தும் தமிழக மக்களை ஒட்டுமொத்தமாக குற்றஞ்சாட்டுவது என்பது அறியாமையும் அபத்தமும் ஆகும். இச் சிறிய கருத்துக்களத்திலேயே எமக்கிடையே ஒற்றுமையைப் பேண முடியாது இருப்பதும் கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் எழுத்து / கருத்து நாகரீகத்தினை தாண்டுவதும் வருத்தத்திற்குரிய விடயமாகவே நாம் பார்க்கின்றோம். வெள்ளப் பெருக்கினால் உயிர் உடமைகளை இழந்து நிற்கும் தமிழக மக்களின் துயரங்களிலும் துன்பங்களிலும் யாழ் இணையம் பங்கு கொள்கின்றது என்பதை இத்தருணத்தில் மீண்டும் அழுத்திக் கூறிக் கொள்கின்றோம்.
 6. 28 points
  எனது மகள் படிக்கும் பாடசாலையில்.... பிரபலங்களின் பேட்டி அடங்கிய புத்தகம் ஒன்று தயாரிப்பதற்காக, அவரின் ஆசிரியர், எனது மகள் உட்பட... நான்கு மாணவர்களை தெரிவு செய்தார். ஒவ்வொருவரும்... ஜேர்மனியில் புகழ் பெற்ற ஐந்து பேரை பேட்டி கண்டு, எழுத வேண்டும். இவர் இருவரை பேட்டி கண்டு விட்டார். முதலாமவர் 2012´ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிப்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற... Marcel Nguyen. (இணையப் பேட்டி) https://www.youtube.com/watch?v=zVtYz0U49ZA ############################################### இரண்டாமவர்... ஜேர்மன் தொலைக்காட்சிகளில் அறிவியல் சம்பந்தமான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும்....Ranga Yogeshwar (தொலை பேசி பேட்டி) அவள் கேட்ட கேள்விகளைப் பார்த்து.... எனக்கே ஆச்சரியமாக போய் விட்டது. பேட்டி முடிந்தவுடன்... உச்சி முகர்ந்து ஆனந்தக் கண்ணீர் விட்டேன். https://www.youtube.com/watch?v=N_dJU-tcnCc இது ரங்கா யோகேஷ்வர், இணைந்து நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சி. 40´வது வினாடியில்... ரங்கா வருகின்றார்.
 7. 28 points
  யாழுக்கு நான் வருவதற்கு ஒரு நோக்கமுண்டு என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லிவருகின்றேன்.. கிட்டத்தட்ட 31 வருடங்களுக்கு மேலாக என்னுள் எரியும் நெருப்பு அது. அது தானாக வந்ததன்று. சிங்களம் அடித்து படிப்பித்தது அதை. 1983 இல் மிகவும் வசதியாக சிங்கள இசுலாமிய நண்பர்களுடன் பழகியபடி பம்பலப்பிட்டிய இந்துவில் படித்துக்கொண்டிருந்த என்னை.. உன் இடம் இதுவல்ல என சிங்களமும் இசுலாமிய நண்பர்களும் கோடிக்கணக்கான சொத்துக்களை எடுத்துவிட்டு உடுத்த உடுப்புடன் அனுப்பி வைத்தனர்.... அந்த கொடூர அனுபவமும் தொடர்ந்து நடந்த அழிவுகளும் என்னை ஒருவழித்தீர்வுக்கு மட்டுமே இட்டுச்சென்றன. அது தமிழரின் தாகம் தமிழீழம் என்பதாகும்..... இதை இன்றும் எங்கும் சொல்ல நான் தயங்குவதில்லை. அதற்காக உழைப்பதற்கோ அதற்காக உழைப்பவர்களுடன் கைகோர்க்கவோ என்றும் பின்னின்றதில்லை.... எனது உழைப்பில் ஒரு பகுதியை அதற்காக ஒதுக்க மறந்ததில்லை.... முள்ளிவாய்க்காலுக்கு பின் பலர் இதிலிருந்து விலகி ஒதுங்கி விட்டாலும் நான் அதிலிருந்து இம்மியளவும் விலகவில்லை ஆனால் அண்மைய காலங்களில் இதற்கு சில எதிர்ப்புக்கள் வருகின்றன. நான் இவ்வாறு இருப்பது சிலருக்கு இடைஞ்சலாக எரிச்சல் தருவதாக இருப்பதை அறியமுடிகிறது.. அதற்காக ஒரு விடயத்தை சொல்லலாம் என நினைக்கின்றேன்... எனது குடும்பத்தை சார்ந்தவர்களின் பிள்ளைகளுக்கு (எனது அண்ணர் மற்றும் அக்காமாரின் பேரப்பிள்ளைகள்) பிறந்தநாள் விழாக்கள் செய்யும் போது அவர்களுக்கு எனது தாகத்தை வெளிப்படுத்தும் வேரூன்ற வைக்கும் நோக்கத்துடன் ஒரு அணிகலனை (பென்ரன்) செய்து போடுவது வழமை. இதுவரை ஒரு 15 பேருக்கு செய்து போட்டிருப்பேன். அது முள்ளிவாய்க்காலுக்கு முன் பச்சையாக இருக்கும் முள்ளிவாய்க்காலுக்குப்பின் சிவப்பாக இருக்கும்........ எனது நண்பரின் நகைக்கடையில் தான் தொடர்ந்து அதைச்செய்து வருகின்றேன். இறுதியாக அந்த அணிகலனை நான் செய்தபோது அந்த முதலாளிக்கும் தொழிலாளிக்கும் நடந்த சம்பாசனையை எழுதி முடிக்கின்றேன்..... இந்த அணிகலனை நான் எடுக்கப்போயிருந்தபோது அதை என்னிடம் தந்த தொழிலாளி என்னிடம் கேட்டார் இன்னும் தமிழீழத்தை நம்புகின்றீர்களா அண்ணா என்று.... நான் பதில் சொல்லும் முன் அந்தக்கடை முதலாளியே பதில் சொன்னார். இந்தக்கேள்வி இவர் இதை என்னிடம் செய்யும்படி ஓடர் கொடுக்கும் போதெல்லாம் எனக்கும் வரும். ஆனால் இவர் ஒன்றை விதைக்கவிரும்புகின்றார் அதனாலேயே பெறுமதியானதைக்கொடுக்கின்றார் அதுவும் அடுத்த தலைமுறைக்கு கொடுக்கின்றார் இவருடைய ஆசை என்ன என்று கேட்டால் அத்தனை பிள்ளைகளும் சொல்வார்கள் தமிழீழம் என்று. முள்ளிவாய்க்காலுக்குப்பின் இவரது இந்த நடவடிக்கை தான் என்னுள் சில கேள்விகளை விதைத்தது அதுவே இவரது நோக்கமாக இருக்கும் என்றார்... இது தான் அந்த அணிகலன்... எங்காவது இதனுடன் நீங்கள் யாரையாவது கண்டால் அது என் குடும்பம் என்பதை அறிந்து கொள்ளலாம்.... முன்பக்கம் பின் பக்கம்..... (யாழ் களத்தில் எனது காலம் குறுகிவருகிறது. எழுதவேண்டும் போலிருந்தது.)
 8. 27 points
  கையில் பத்து நாட்களே நிரம்பிய பச்சைக் குழந்தை. மனம் நிரம்ப பயம். கண்களில் எதிர்காலம் பற்றிய ஏக்கம். வைத்தியசாலையிலிருந்து பெற்றவர்கள் வாழ்ந்த வீட்டு முற்றத்தைக்கூட மிதிக்க முடியாமல் விதி விரட்டி அடித்துக் கொண்டிருந்தது. ஓடி ஓடி வேலணை அராலி யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் தாண்டிக்குளம் என்று நாம் அனுபவித்த வேதனை நிரம்பிய அந்த நாட்களின் ஆரம்பமே எனது கடைசி மகளின் ஆரம்ப வாழ்க்கை. மழலைப் பருவத்திலேயே விதிவசத்தால் பெற்றவர்களைப் பிரிந்து இரண்டு வருடங்கள் என்னைப் பெற்றவர்களுடன் வாழும் நிலை ஏற்பட்டது. காலம் கைகூடி கனடாவில் குடியேறி தனது ஆரம்ப பாடசாலை வாழ்க்கையை இங்கு ஆரம்பித்தார். புதிதாகக் குடியேறிய நாட்டில் ஆரம்ப காலம் எல்லோரையும்போல எமக்கும் பல சவால்கள் நிறைந்ததாகத்தான் இருந்தது. அந்த நிலையிலும் படிப்பில் மட்டுமல்ல விளையாட்டுத் துறையிலும் பாடசாலையில் பல விருதுகளைப் பெற்று தன் திறமையை வெளிப்படுத்தினார். 12ம் வகுப்பில் ஒன்ராறியோ புலமைப்பரிசிலும் பாடசாலையில் அதி விசேட புள்ளிகளைப் பெற்ற மாணவியாகவும் தேர்வு செய்யப்பட்டார். யோர்க் பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டுகள் படித்து முடித்தபின் வின்சர் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்லூரியிலும் அமெரிக்க சட்டக்கல்லூரியிலும் ஒரே நேரத்தில் மூன்றாண்டுகள் கற்று இவ் வருடம் மே மாதத்தில் அமெரிக்காவிலும் யூன் மாதத்தில் கனடாவிலும் பட்டம் பெற்று சட்டத்தரணியாக வெளிவர உள்ளார். பசி வந்திட பத்தும் பறக்கும் என்பர் ஆனால் என் மகளுக்கு படிக்க தொடங்கினால் பசியே மறக்கும். நான் படி படி என்று சொல்லும்படி வைக்காமல் படித்தது போதும் நிற்பாட்டு என்று சொல்லும்படி செய்வார். படிக்கும் பொழுது அவருக்கு முன்னால் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும். அதை நான் பலமுறை கண்டித்திருக்கிறேன். அதற்கு அவரது பதில் தொலைக்காட்சிப் பெட்டியை நிறுத்தினால் தன்னால் படிக்க முடியாது என்பதுதான். சிறுவயதிலிருந்தே எனக்கு எவ்வித பிரச்சனையும் தராமல் எளிமையிலும் இனிமையாக வாழ்ந்த என் அன்பு மகள் தன் பதினைந்தாவது வயதிலேயே தந்தையை இழந்தாலும் மனம் தளராமல் இழப்பைக் கண்டு துவண்டு விடாமல் துணிவுடன் செயல்பட எனக்கு தூண்டு கோலாக இருந்தவர்கள் என் பிள்ளைகளும் என் உடன் பிறந்தவர்களது குடும்பங்களும். உறவுகளும் நட்புக்களும் கூட தம் அன்பாலும் ஆதரவாலும் எம்மை வழிநடத்தினர். என் வாழ்க்கையில் மிகவும் மகிழ்வான நாள் 'ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகளைச் சான்றோன் எனக் கேட்ட தாய்' என்ற குறளை எனக்கு சொந்தமாக்கிய இந்த நாள். தனது கனவு மெய்ப்பட்டு கருத்தினில் கொண்ட கொள்கையுடன் செயற்பட்டு சட்டத்தரணியாக பட்டம் பெறவுள்ள என் அருமை மகள் என் குடும்பத்திற்கு மட்டுமல்ல கனடா நாட்டிற்கும் எம் பிறந்த மண்ணிற்கும் எம் ஊருக்கும் சமூகத்திற்கும் சிறப்புற செயலாற்றி வளமோடு நலமோடு வாழ இறைஆசீர் நிறைவாகப் பெற வேண்டி வாழ்த்துகின்றேன்.
 9. 27 points
  "எங்களுடன் பயணித்தமைக்கு நன்றிகள் மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்"என்ற குரலைக்கேட்டு எல்லோரும் தங்களது இருக்கை பட்டிகளை சரிபார்த்து கொண்டனர்.நான் எனது இருக்கை பட்டியை போடாமல் இருந்தேன்.எத்தனை தரம் விமானத்தில ஏறி இறங்கிட்டன் ஒன்றும் நடக்கயில்லை பிறகு ஏன் இந்த பேல்ட் ,எனக்கு தேவையில்லை அவையளுக்கு தேவையென்றால் வந்து போட்டுவிடட்டும் என நினைத்தபடி மேலே பார்த்து கொண்டிருந்தேன். "சேர் வாசின்ட் யுஆர் சீட் பெல்ட்"என்ற படி பக்கத்தில விமானப்பணிப்பெண் புன்னகைத்தபடி நின்றாள்.உடனே நான் பேல்ட்டை தேடுவது போல நடித்து எடுத்து போட்டுக்கொண்டேன். இதுதான் உவரின்ட முதல் விமானப்பயணம் என்று சகபயணிகள் நினைத்துவிடுவார்கள் என்ற வெட்கத்தில் உடனே போட்டுவிட்டேன். முப்பது வருடங்களுக்கு முன்பு, முதல் விமானப்பயணம் சென்னையிலிருந்து கொழும்புக்கு ஏர்லங்கா மூலம் ஆரம்பமானது. மானிப்பாயிலிருந்து மினி வானில் தலைமன்னார் சென்று அங்கிருந்து கப்பலில் ராமேஸ்வரம் போய் ரயிலில் சென்னை போய் சேர்ந்தேன் போனபாதையால் திரும்பி ஊருக்கு வரமுடியாமல் போய்விட்டது.ராமானுஜம் கப்பல் திரும்பி ஓடும் என்று எதிர்பார்த்து காத்திருந்திருந்தால் இன்று அவுஸ்ரேலியா ஒரு சூப்பர்டூப்பர் எழுத்தாளனை இழந்திருக்கும் . இரண்டுவருடங்கள் வரை ஓடும் ஒடும் என காத்திருந்து எனது முதல் விமானப்பயணம் ஆரம்பமானது. விமானநிலையத்திற்கு வழி அனுப்ப நண்பர்கள் வந்திருந்தார்கள்.எல்லோரும் என்னை போல் கப்பலில் வந்து இந்தியாவில் தஞ்சமடைந்தவர்கள் .சிலருக்கு நாடு திரும்ப விமானம் ஏற வேண்டிய நிலை வேறு சிலருக்கு வெளிநாடு செல்ல விமானம் ஏற வேண்டிய நிலை. அந்த வயதில் பெண்களைப்பற்றிய கற்பனை அதிகமாக இருக்கும் .நண்பர்கள் ஒன்றுகூடினால் அதிகம் பெண்களைப்பற்றித்தான் பேசுவோம். பொழுது போக்காக சிலசமயங்களில் விடுதலை பற்றி பேசுவதுண்டு. டொக்டர்மாருக்கு பெண்களை தொட்டு பார்க்கும் சந்தர்ப்பம் அதிகம் என்றான் ஒருத்தன் ,இன்னோருத்தன் இல்லையடா பைலட்மாருக்குத்தான் நல்ல சான்ஸ் இருக்கு என்றான்.மற்றவன் ஒருபடி மேல போய் "மச்சான் ஏர்கொஸ்டரிடம் ஒரு கிஸ் கேட்டுப்பார் அவள் தருவாள்,அவையளின்ட டியுட்டி... கஸ்டமாரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் இல்லாவிடில் அவையளினட வேலை போய்யிடும்" என சொல்லி உசுப்பேத்தினான். எனக்கோ விமானத்தில் முதல்முதலாக பயணம் செய்ய போற பயமொன்று மனதை துளைத்தெடுத்துகொண்டிருந்தது. சுங்க சோதனைகள் ,குடியகழ்வு சோதனைகளை முடித்து, போர்டிங்க் பாஸ் கையிலிருந்தும் ஊரில் பஸ்ஸுக்கும் புகையிரதத்திற்கும் இடம் பிடிக்க முண்டியடித்துக் கொண்டு ஏறிய பழக்கம் தோசத்தில் இங்கேயும் ஒடிச்சென்று நுழைவாயிலில் நின்றுகொண்டேன். "இரு கை கூப்பி ஆயுபோவன் என்ற புன்னகையுடன் ஒருத்திவர‌ வேற்றாள்"என்னுடைய தமிழ்ப்பற்றை அடக்கி வைத்து கொண்டுபதிலுக்கு நானும் ஆயுபோவன் என்றேன். "போடிங்க்பார்ஸ் பிளிஸ்" பாஸ்போர்ட்டையும்,அவங்கள் தந்த வெள்ளை துண்டையும் சேர்த்து கொடுத்தேன்.பார்ஸ்போர்ட்டை திருப்பி தந்துவிட்டு வெள்ளைதுண்டை பார்த்துவிட்டு "யு அ சீட் நம்பர் .....டெர்ன் யு ரைட்" அவளுக்கு தெரியுமே, எனக்கு ரைட் லெவ்ட் பிரச்சனையிருக்கு என்று.ஒரு மாதிரி சமாளிச்சு சீட்டை கண்டுபிடித்து அமர்ந்து கொண்டேன். .விமானபணியாளர்கள் தங்கள் கடமைகளை செய்துகொண்டிருந்தனர். அந்த குளிருக்குள்ளும் எனக்கு வியர்க்க தொடங்கிவிட்டது.விமானம் புறப்பட தொடங்க முதல் பணிப்பெண் எனது சீட்டுக்கு முன்பு நின்று இருக்கை பட்டி போடும் முறையையும்,ஒட்சிசன் குறைந்தால் என்ன செய்ய வேண்டும் மற்றும் உயிர்காப்பு கவசம் அணிவது எப்படி என‌ விளக்கம்கொடுத்து கொண்டிருந்தார்.அவர் கூறிய எதுவும் எனது மனதில் பதியவில்லை எனது சிந்தனை முழுவதும் கொழும்பு விமான நிலயத்தில் இறங்கி வெளியே செல்லும் பொழுது இராணுவத்தொல்லை இருக்ககூடாது என்பதாகவே இருந்தது. உணவு பரிமாறினார்கள், முள்ளுக்கரண்டி கத்தி போன்றவற்றை பார்த்ததுண்டு ஆனால் அன்று பாவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது.அதுவும் முதல் அனுபவம் ஒரு மாதிரி உணவை போராடி சாப்பிட்டு முடித்துவிட்டேன் .சற்று குனிந்தேன் சேர்ட்டில் குழம்பு கறை பட்டிருந்தது.துடைத்து பார்த்தேன் கறை போகவில்லை.விமானப் பயணத்திற்காக வாங்கிய வெள்ளை சேர்ட் கறைபட்டு அழுக்காகியிருந்தது. சேர்ட்டில் கறை படிந்ததை விட ,கறையை பார்த்து விமானபணிப்பெண்களும் சகபயணிகளும் எனது பயணம் கன்னிப்பயணம் என்று கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற கவலை அதிகமாக இருந்தது. இன்னும் சில மணி நேரத்தில் கொழும்பு சர்வதேச விமானநிலையத்தில் இறங்கப்போகின்றோம் என விமானி அறிவிக்க ,எனது கைப்பையை எடுக்க‌ எழும்பினேன். பணிபெண் அருகே வந்து சொன்னாள் பிளேன் இறங்கப்போகுது இருக்கையிலிருந்து இருக்கை பட்டியை போடுமாறு. புகையிரதத்திலிருந்து இறங்குவதற்கு அடிப்பட்டு இறங்கிய பழக்க தோசம் இங்கயும் வந்திட்டு என்று நான் கவலைப்பட்வில்லை. சொறி என்று சொல்லி அமர்ந்துவிட்டேன். முன்சீட்டை இறுக்கமாக பிடித்துக்கொண்டேன் விமானம் ஒடுபாதையில் தரைதட்டும்பொழுது .விமானம் நின்று சகபயணிகள் எல்லொரும் எழுந்த பின்பு தான் நான் எழுந்தேன் .நன்றி சொல்லி விமான ஊழியர்கள் வழி அனுப்பிவைத்தனர்.ஏணியால் இறங்கும் பொழுது திரும்பி பார்த்தேன் இருபக்கத்திலும் ஆயுதம் தாங்கிய சீருடையினர். பக்கத்தில் நின்ற பஸ்ஸில் ஒடிப்போய் ஏறிக்கொண்டேன்.விமானப்படையனரின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. குடிவரவுக்கு போய் கடவுச்சீட்டை நீட்டினேன் .முகத்தையும் பாஸ்போர்ட்டையும் இரண்டு,மூன்று தடவை திரும்பி பார்த்தார் ,இனிமேல் இல்லாத அப்பாவி போன்று முகத்தை வைத்திருந்தேன். ஒரு முத்திரையை குத்திபோட்டு வேண்டா விருப்பா பாஸ்போர்ட்டை தந்தார்.அவர் சிரிக்கவில்லை என்றாலும் நான் சிரித்துபோட்டு போம ஸ்துதி சொல்லி வாங்கி வெளியே வர, கட்டிட நடைபாதையின் மேலே" போர் என்றால் போர் சமதானம் என்றால் சமாதானம்"என்று குரல் கொடுத்த ஜேஆரின் படம் தொங்கி கொண்டிந்தது.... அதே இடத்தில் இன்று மைத்திரியின் படம் தொங்கிகொண்டிருக்கின்றது."அடே உங்களை என்ன செய்யிறது என்றே விளங்குதில்லை.. எப்படி அழிச்சாலும் முளைச்சு வந்திடுறீயள்....ஈழம் என்று வெளிநாட்டுக்கு போனியள் இப்ப ஐக்கிய இலங்கை என்று திரும்பிவாறீயள்"கேட்பது போல இருந்தது. பதிலுக்கு நானும் மனதினுள் சிரித்தபடி யோவ் நாங்கள் இதுவும் செய்வோம் இன்னும் செய்வோம் இது "அப்பே ரட்ட....."
 10. 27 points
  ஈரநிலா உயிர் சுற்றிவர சிதறி விழுந்ததுபோலும், வழி தவறிய மூச்சு திகைத்து அப்படியே உறைந்ததுபோலும், இரத்தநாளங்களில் அதிர்வுகள் அடர்ந்ததுபோலும், விவரிக்க முடியாத வகையில் பிரித்தறியும் உணர்வு உறைந்ததுபோலும்…….. அந்தக் கணம் ஆட்டிப்படைத்தது. இதுவரை மானுட உணர்வில் அறியாத களேபரமாக மீனாவின் ஆன்மா தவித்தது. கசியலாமா என்று ஒரு விழியும், அகல அகன்று நோக்கலாமா என்று மறுவிழியும் உடன்பாடற்ற போட்டிக்குள் உட்பட்டிருந்த இத்தருணம்போல் அவள் இதுவரை அநுபவித்ததில்லை. அவளுக்குள் இல்லாத ஊமையை உருவாக்கி வேடிக்கை பார்த்தது விதி. ஒலி எழுப்பும் புலன் இல்லாத இடத்தில் வலி செய்தால் என் செய்யும்? அப்படி ஒரு நடப்பு அவ்விடத்தில் அரங்கேறியிருந்தது. இக்கொந்தளிப்பின் அடியில் கலங்கி ஓலமிட்டபடி மீனாவின் இன்னொரு முகம் அவளின் எண்ணங்களில் ஓங்கி அறைந்து அறைந்து அவளை இயல்பாக்கத் துடித்தது. எப்படி ஆயிற்று? சாத்தியமற்றதாகக் கருதப்பட்ட அந்தக்கணம்….. எதிர்வு கூறும் கற்பனைகளை நொருக்கிவிட்டு, நிகழ்காலமாக வியாபித்து அவளைத்தூக்கி தட்டாமாலை சுற்றியது. வீடு தேடி வந்தவனை……… வாய் திறந்து வரவேற்க மாட்டாளா............, என்ற தவிப்பில் அந்த முதுமையைத் தொடத் தொடங்கியவனின் எதிர்பார்ப்பு விழிகளுக்குள்ளால் எட்டிப்பார்த்தது. வினாடிகள் கழிவது வருடங்கள் கழிவதான காலவிரயம்போல் தோன்ற….., சிவா…. அவளின் பெயரைச்; சொல்லி அழைத்தான். எங்கோ ஆழக்கிணற்றுக்குள் இருந்து அவலஒலி எழுப்புவதுபோல் குரல் ஈனசுரத்தில் சிக்குண்டு சேதத்தை வெளிப்படுத்தியது. அந்தக்குரலின் ஒலித்தளம்பல் அவளுக்கு தன்நிலை உணர்த்தியதுபோல் சட்டென்று மீனா மீண்டு கொண்டாள். அவனின் நரைத்த மீசைக்குக் கீழான உதடுகளுக்குள் விரித்த கலவரத்துடனான புன்னகை அவளைத் தாக்கியது. அவளின் பார்வையை எதிர்கொள்ளும் திராணியற்றதாக சிவாவின் பார்வை மெல்ல தாழ்ந்து வாசற்கதவினைப் பற்றியிருந்த மீனாவின் கரங்களில் படிந்தது. அந்தக் கைகளின் உலர்வையும்; சுருக்கங்களையும் நோக்கும் அக்கணம் அவனுக்குள் மெலிதாக வலித்தது. “வாங்க வாங்க உள்ளே வாங்க” என்ற அவளின் குரலில் வெளிப்பட்ட கரகரப்பும் அவளை அவனுக்கு காட்டிக் கொடுத்தது. எத்தனை ஆண்டுகள்…… கண்வழி ஆரம்பித்து, கனவுகளில் வாழ்ந்து, குதூகலிக்கும் பொழுதிற்குள்ளாகவே பாதைகள் பிரிபட்டு, பயணங்கள் மாறுபட்டு, கண்டங்கள் விலகி எல்லாம் முடிந்து தசாப்தங்களும் கடந்து நேற்றைய கனவாக வாழ்வு நெடுந்தூரம் கடந்து போய்விட்டது. “என்ன வீட்டுக்குள் வந்துவிட்டு உட்கார மாட்டீர்களோ?” என்ற அவளின் விருந்தோம்பல் அவனுக்கு ஆணையாக மாற, அந்த வரவேற்பறையில் கிடந்த சோபாவில் மெல்ல அமர்ந்தான். அவனின் சிறு அசைவையும் தவறாமல் உன்னிப்பாக கவனித்தபடியே எதிர் இருக்கையில் அமர்ந்த அவளாலும் அதற்குமேல் பேச இயலவில்லை. கசியும் விழிகளையும், நடுங்கும் உதடுகளையும் கட்டுப்படுத்துவதற்காக அவள் தனக்குள் போராடுவதை சிவாவால் உணர முடிந்தது. தான் சற்றுத் திடமானவன் என்று நினைத்தபடி அருகில் சுவரில் பதித்திருந்த கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தவனின் காத்திரத்தை உடைத்துப் போட்டன கலங்கிச் சிவப்பேறிய அவன் விழிகள். இதுதான் காதலா? வாழ்க்கையின் முக்கால் கிணறு தாண்டும்வரை இருந்த உறுதி, இன்னும் தாண்ட இருக்கும் எதிர்காலத்தின் மீதான உறுதி… இன்னும் அசைக்கமுடியாததாகத்தான் இருக்கிறது…. எப்படி இந்தக்கணம் மட்டும் இப்படி?....... அவன், அவள், திடகாத்திரம் எதுவுமே இல்லாத ஆத்மவெளியில் உருவங்களைத் தொலைத்த இரண்டு ஆன்மாக்கள் மனித உடல்களின் ஐம்புலன்களையும் வைத்து பேசத் தொடங்கியதுபோல் இருந்தது அவனுக்கு அவளும் அவளுக்கு அவனும் புலப்படவில்லை நேசிப்பு ஒன்றுதான் சிம்மாசனமிட்டு ஆட்சி செய்தது. இருப்பினும் நேற்றைய காதல்...... உணர்வுகளில் குவிய எண்ணங்கள் அந்நியப்பட்டு விலகிக் கொண்டன. “உனக்கு நான் எனக்கு நீ ” என்று என்றோ பேசிய வார்த்தைகள்...., காலவெளியில் அள்ளுண்டு காணாமல்போய் இருவரும் வேறு வேறு துணைகளுடன் எல்லாம் பகிர்ந்து, விதி போட்ட முடிச்சுக்குள் வாழ்ந்த பின்னால்..................................., எதிர்பாராத இந்தச் சந்திப்பு. விருந்தினனாக வந்தவனுக்கு தேநீர் தயாரிக்கும் சாக்கில் தளர்ந்த தன்னுணர்வுகளை இறுக்கிக் கொண்டாள் மீனா. தன் கணவன் , பிள்ளைகள் பற்றிப்பேசி, அவன் மனைவி பிள்ளைகள் பற்றி பேசி அவன் நிலையையும் தேற்றினாள். மன அதிர்வுகளை மறைத்தபடி அவனுக்கான திடத்தையும், வழிகாட்டலையும் நோகாமல், அவனைச் சிதைக்காமலும் மேற்கொண்டு நல்ல நட்புடன் அனுப்பிவிட்டு, கதவைத் தாழிட்டவள் ஓடிவந்து அவன் இருந்த சோபாவை வருடிக் குப்புற விழுந்து குலுங்கி அழ ஆரம்பித்தாள். பிரிக்கப்பட்ட காதல், திணிக்கப்பட்ட வாழ்வு பெண் என்னும் பிம்பத்தால் பிய்த்தெறிய முடியாத உறவுச் சங்கிலிகள், வரங்களாகச் சொல்லப்பட்டு மற்றவர்களால் திணிக்கப்பட்ட சாபங்கள், விடுபடமுடியாத மனச்சுமைகள்…… சிறகுகளும் வானும் இருந்தும் பறக்கமுடியாது… எத்தனை ஆண்டுகாளாய் அடக்கி வைத்த அழுகை. அவளைக் கொஞ்சம் அழவிடுங்கள் ஆறாய் பெருகும் கண்ணீரில் முற்றுப்பெறாத அவளின் நேசிப்பு நிறையட்டும்.
 11. 27 points
  . விடியற்காலை ஆறு மணியளவில் வானொலியை போடுவார் அப்பா .மும்மத‌பக்திபாடல்களுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகும் .அப்பா காலைக்கடன் முடித்து தோட்டத்தில் ஒரு செம்பரத்தை பூவை பறித்து கொண்டு சாமி படத்திற்கு வைத்து போட்டு எழும்புங்கோ பள்ளிக்கூடத்திற்கு நேரமாகின்றது என்று சொல்லுவார்.அதன் பின்பு கையை காலை சோம்பல் முறித்து எழும்ப முயற்சிக்கும்பொழுது நித்திரா தேவி என்னை அறியாமலயே என்னை மீண்டும் அரவணைத்து கொள்வாள். வானொலியின் சத்தைதை கூட்டிவிடுவார் .இசை ஒலிபரப்பாகும் செய்தி ஆரம்பமாகப் போகின்றது என்பது இலங்கை வாழ் சகலரும் அறிந்த ஒன்று அதை தொடர்ந்து '"நேரம் ஆறு மணி முப்பது நிமிடங்கள் செய்திகள் வாசிப்பது...மையில்வாகனம் சர்வானந்தா" டேய் ரேடியோவில செய்தி போகுது எழும்புங்கோ என்ற அதிகார தோரணையில் சத்தம் வரும். காலைப்பொழுதை ரசிக்கும் வயதில்லை,கையை காலை சோம்பல் முறித்து எழும்ப முயற்சிப்பேன் ஆனால் மீண்டும் நித்திராதேவி என்னை அரவணைத்துக்கொள்வாள் .மரண அறிவித்தல் சொல்ல தொடங்க மீண்டும் திடுக்கிட்டு எழும்பி போர்வையை மெல்ல அகற்றி அம்மா எங்கே நிற்கிறார் என்று பார்ப்பேன் .கிணத்தடி பக்கம் போயிருந்தார் என்றால் ஆறுதலாக கட்டிலிருந்து மீண்டும் சோம்பல் முறித்து இன்னும் கொஞ்சம் படுத்தால் எப்படியிருக்கும் என மனதில் நினைத்துக்கொண்டு அரைத்தூக்கத்தில் வானொலியை கேட்டபடியிருப்பேன் . "பிறந்தநாள் இன்று பிறந்தநாள் பிள்ளைகள் போல தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்" என பாட்டுடன் பிறந்தநாள் வாழ்த்துகள் நிகழ்ச்சி தொடங்க கட்டிலை விட்டு எழும்பி கிணத்தடிக்கு போக அம்மா வீட்டுக்குள் வருவார். "என்ர ராசா இப்ப தான் எழும்பி வாரார் .கேதியா முகத்தை கழுவிபோட்டு வா, பள்ளிக்கு போக நேரமாகிறது " "ம்ம்ம்" பற்பசையை பிரஸ்ஸில போட்டு வாயில் வைத்து அதில முதலில் வரும் இனிப்பு தன்மையை சுவைத்தபடி மெல்ல‌ மெல்லமாக பல்லை தேய்த்தபடி கிணத்து கட்டில் போய்யிருப்பேன் .வாய் பற்பசையின் நுரையால் நிரம்பியவுடன் கிணத்தடிக்கு பக்கத்தில் நின்ற எலும்பிச்சை மரத்தின் அடியில் துப்பிவிட்டு மீண்டும் துலக்கி மீண்டும் மரத்தை அசிங்கப்படுத்தி தூரிகையை வாயில் வைத்தபடி கிணத்துவாளியை உள்ளே போடுவேன் .கப்பியின் கீறிச்சிட்ட சத்தத்துடன் வாளி தண்ணியினுள் போய்விழும்.அநேகமான‌ யாழ்ப்பாணத்து கிணத்து வாளிகள் க‌ல்லுப்பாறைகளில் அடிபட்டு உருமாறியிருக்கும் .தண்ணி வாளியினுள் நிறைந்தவுடன் கயிற்றை பிடித்து மேலே இழுக்கும் பொழுது கப்பி மேலும் சத்தம்போடும்.வாளியின் கைப்பிடியை பிடித்து தூக்கி சலவை தொட்டியின் கட்டில் வைப்பேன் சிலசமயங்களில் சமநிலை குழம்பி தண்ணி கீழே கொட்ட பார்க்கும் ஒரு மாதிரி சமநிலையில் வாளியை நிறுத்தி கை கால் கழுவி ,ஒரு செம்பரத்தை பூவை புடுங்கி கொண்டு ரெடியோவில் ஒலிக்கும் சினிமா பாட்டை விசில் அடித்துகொண்டு வீட்டினுள் போவேன் . "சாமி கும்பிட போகும் பொழுது தேவாரத்தை பாடிக்கொண்டு போகாமல் உது என்ன சினிமா "என அம்மாவும் அப்பாவும் கொரோசா குரல் கொடுப்பினம் உடனே விசில் அடிப்பதை நிறுத்தி சாமியறைக்கு சென்று பூவை வைத்து கடவுளே நல்லாய் படிப்பை தா என்று கேட்டு விபூதியை பூசிவிட்டு அதே சினிமா பாட்டை மீண்டும் விசிலடித்தபடி வெளியே வருவேன். இன்று பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்களுக்காக‌ . பி எச் அப்துல் ஹமீத்தின் குரலில் பிறந்த நாளுக்கு ஏற்ற பாடல் ஒன்று ஒலிபரப்பபடும். "காலையில செத்தவரின்ட பிள்ளைகள் ஐந்தும் டாக்குத்தரும் இஞ்னினியரும் தான்" "யார் பாட்டி செத்தது ,உங்களுக்கு தெரியுமோ செத்தவரை" "இல்லையடாப்பு உந்த ரெடியொவில மரண அறிவித்தல் சொன்னவையள் அதில கேட்டனான்." இன்று பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்களுக்காக‌ பி எச் அப்துல் ஹமீத்தின் குரலில் பிறந்த நாளுக்கு ஏற்ற பாடல் ஒன்று ஒலிபரப்பபடும். " இன்றைக்கு சுதா அண்ரியின்ட மகளின்ட பேர்த்டே இப்ப ரெடியோவில சொல்லித்தான் தெரியும்" என அக்கா சொல்லியபடி பாடசாலைக்கு கொண்டு போக வேண்டிய‌ புத்தகங்களை அடுக்கி கொண்டிருப்பார் ,,நானும் எனது புத்தகங்களை புத்தக பைக்குள் வைத்து விட்டு காலை சாப்பா ட்டுக்காக‌ அம்மாவிடம் சமையலறைக்கு சென்றுவிடுவேன். "அம்மா பொங்கும் பூங்குழல் தொடங்கிவிட்டது எழே கால் ஆயிற்று ஸ்கூலுக்கு நேரம்ப்போயிற்று கேதியா சாப்பாட்டை தாங்கோ" "அந்த மேசையில் போட்டு வைச்சிருக்கிறன் போய் சாப்பிடு ,லெட்டா எழும்பிபோட்டு பிறகு சத்தம் போடுறாய் நாளைக்கு வெள்ளன எழும்பி பள்ளிக்கு போற வேலையை பார்" "ஒமோம் நாளைக்கு,நாளைக்கு" சாப்பிட்டவுடன் புத்த பையை தோலில் போட்டுக்கொண்டு வாசலில் இருக்கும் பாட்டா செருப்பை கொழுவிக்கொண்டு படலையில் போய் நிற்பேன் .பொங்கும் பூங்குழலில் இரண்டு பாட்டு ஒலிபரப்பி முடியும் மட்டும் வாசலில் நிற்பேன் அதற்குள் பாடசாலை நண்பர்கள் இருவர் வந்து விடுவார்கள். வாசலில் நின்றபடியே அம்மா போயிற்றுவாரேன் என்று ஒரு கத்தல் ,அவரின் பதில் கிடைக்கும் முதல் நாங்கள் அடுத்த வீட்டு வாசலை தாண்டியிருப்போம்.அம்மா வெளியே வந்து எட்டிப்பார்த்து நான் பெடியங்களுடன் போகிறேன் என்று அறிந்த பின்புதான் நிம்மதியாக உள்ளே செல்வார் .சந்தியை தாண்டுபொழுது தேனீர் கடை வானோலியில் விளம்பரங்களுடன் நேரமும் சொல்லுவார்கள். "டேய் ராமன் தேடிய சீதை வரப்போகிறது " "நான் படம்பார்க்க வரமாட்டேன் அப்பா ஏசுவார்" "ஸ்கூலுக்கு வாரமாதிரி வந்திட்டு படத்திற்கு போவம்" "என்டா ராசா ஆளைவிடு உப்படி நினைச்சது என்று தெரிந்தாலே தொலைஞ்சன்" "டேய் உவன் சரியான பயந்தாங்கொள்ளி" பாடசாலைக்கு முன்னால் உள்ள சாத்ரியாரின் வானொலி "டி.எம் செளந்தராஜன் ,சுசிலா பாடிய இந்த பாடலுடன் நிறைவடைகின்றது பொங்கும் பூங்குழல் " " டேய் ஒடி வாங்கோட எட்டு மணியாகப்போகின்றது ஸ்கூல் தொடங்கப்போகின்றது " ஒருத்தன் ஞாபகப்படுத்த எல்லோரும் ஒடிப்போவோம் பாடசாலை மணியடிக்க சரியாக அசம்பிலியில் போய் நிற்போம் . பிந்தி வந்தால் வெளியில் நிற்க வேண்டும் அசம்பிலி முடிய ஆசிரியர் பிரம்புடன் வந்து மைதானத்தை சுற்றி நடக்கச்சொல்வார். சினிமா பாட்டு ஒலிபரப்பாமல், சங்கிதம் அல்லது சொற்பொழிவுகள் ஒலிப்பரப்பிலிருந்தால் ,காலை பத்துமணிக்கு மேலாயிற்று என்று எங்கள் எல்லொருக்கும் தெரியும். பதின்ரெண்டு மணியளவில் மதிய இடைவெளிக்காக பாடசாலை மணியடிக்கும் மீண்டும் வீட்டை ஒடிப்போவோம் மதிய சாப்பாட்டை முடித்து 12:45 செய்தி தொடங்கமுதல் பாடசாலையில் நிற்போம் ..பாடசாலையின் அரைவாசி மாணவர்கள் மைதானத்தில் நிற்பார்கள் இருபது டீமுக்கு அதிகமார் விளையாடுவார்கள். ஹிந்தி பாட்டு ஒலிபரப்பிலிருந்தால் பிற்பகல் ஒன்றைரைக்கும் இரண்டுக்கும் இடையில் என் கணக்குபோட்டுகொள்வோம்.மூன்று மணிக்கு பாடசாலை மணியடிக்கும் வீட்டை போகும் வழியில் மீண்டும் வானொலி நிகழ்சியை ரசித்தபடி நடப்போம் .பாடசாலை கடையடியில் தொடங்கினால் வீட்டை போய் இரவு படிக்க தொடங்கும் வரை வர்த்தக ஒலிபரப்பு எங்கன்ட பொழுதுபோக்கு.மாலை நேரத்தில் வளவில் விளையாடும் பொழுதும் பக்கத்து வீட்டு வானொலியின் மூலம் பாடல்கள் கேட்டபடியே விளையாடுவோம். மாலை நாலரைக்கு விளையாட்டு செய்திகள் தொகுத்து வழங்குவார் எஸ் .எழில்வேந்தன் .அதை அண்ணர் மற்றும் நண்பர்கள் ஒடிப்போய் கேட்பார்கள் .அநேகமாக அதில் கேட்ட கிரிக்கட் பற்றிய செய்திகளை விளையாடிய படியே பேசுவார்கள். வணக்கம்கூறி விடைபெறுவது கே.எஸ் ராஜா என்ற குரலுடன் வர்த்தக சேவையின் அன்றைய நிகழ்ச்சி முடிவுக்கு வந்து மாலை ஆறுமணி செய்திக்கான இசைய தொடங்குவார்கள் அநேகமான வீடுகளில் வானொலியை நிறுத்திவிடுவார்கள் .நாங்களும் மீண்டும் கை கால் கழுவி பாடப்புத்தகங்களை தூக்கி கையில் வைத்துக்கொள்வோம். அப்பா வரும்பொழுது நாங்கள் எல்லாரும் படித்து கொண்டிருக்க வேண்டும்... வரவேற்பறையில் வானொலியை மிகவும் மெதுவாக போட்டு பாட்டியும் அம்மாவும் கேட்டு கொண்டிருப்பார்கள்.எட்டு மணிக்கு முஸ்லிம் நிகழ்ச்சி குறிப்பும் சலவாத் ஒதலும் என்று தொடங்கும்.தண்ணி குடிக்க போற சாட்டில் இரண்டு மூன்று தடவைகள் மேசையை விட்டு எழுந்து போய் நேரத்தை பார்த்து கொள்வேன். முஸ்லிம் நிகழ்ச்சி என்றவுடன் எனக்கு பசிக்க தொடங்கி விடும் .அம்மா எல்லோரையும் சாப்பிட கூப்பிடுவார் .மேசையில் இருந்து சாப்பிட்ட படியே ஒவ்வொருத்தரும் தங்களது அன்றைய நிகழ்ச்சியை பற்றி பேசுவார்கள். அப்பா அரசியலைப்பற்றி பேசுவார்,அம்மா பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி நிகழ்ச்சி வந்தவற்றை அலச ,அக்கா இசையும் கதையும் பற்றி சொல்ல ,அண்ணர் விளையாட்டு செய்திகளை சொல்ல நான் சினிமா பாட்டைப்பற்றி சொல்லி அப்பாவிடம் திட்டு வாங்குவேன்.உந்த சினிமாவில இருக்கிற கவனம் உனக்கு படிப்பில இல்லை. தொழிற்சாலையில் வானொலி ஆங்கிலத்தில அலறும் ,என்ன பாட்டு என்றும் விளங்காது சிலர் ரசிப்பார்கள் நானும் ரசிக்கிற மாதிரி தலையை ஆட்டிகொண்டிருந்துவிட்டு சிறிது நேரத்தின் பின்பு இயர் பிளக் இரண்டு காதினுள்ளும் இறுக்கி போட்டு வேலையை செய்து கொண்டிருப்பேன்.மூன்று மணிக்கு ஐந்து நிமிடம் இருக்கும் பொழுது எர்லாம் அடிக்க கூடியதாக‌ மொபைலில் வைப்ரேசன் மோட்டில் எலார்ம் செட் பண்ணிவைத்துள்ளேன்.அது என்னை உழுக்கி டேய் வீட்டை போற நேரம் வந்திட்டடா என்று உணர்த்தியவுடன்,பாதுகாப்பு கவசங்களை எல்லாம் கழற்றி வைத்து போட்டு சி யு டுமாரோ,கவ் எ நைஸ் இவினிங் என்று சக தொழிலாளிமாருக்கு சொல்லி போட்டு வெளியே வந்து காரை ஸ்டாட் பண்ணுவேன் வானொலி அவுஸ்ரேலியா,அமெரிக்கா ஐரோப்பியா செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒலிபரப்புவார்கள்.நானும் கறுப்பு அவுஸ்ரெலியன் என்ற நினைப்பில சர்வதேச அரசியலை பற்றி மனதில் நினைத்தபடி வீட்டை நோக்கி காரை செலுத்துவேன். கையில் மொபைல் காதில் இரண்டு பக்கமும் சிறிய சிபிக்கர் மாட்டிய தலையை ஆட்டியபடி மொபைலை பார்த்து கொண்டு சிரித்த படி அறையிலிருப்பாள் மகள் என்னை கண்டவுடன் ஹலோ அப்பா என்பாள் .நானும் பதிலுக்கு ஹலோ சொல்லி போட்டு "ஏன் மொபைலை பார்த்து கண்ணை பழுதாக்கிறீர் டி.வி யை போட்டு பாருமன்" "தாத்தா பழைய படம் பார்க்கிறார் தட் இஸ் போரிங்" "மற்ற டி.வி அறையிலிருக்குதானே அதில போய் பார்க்கலாம் தானே" "அம்மா டெலி டிராமா பார்கின்றார் I hate it! " "லப்டொப் ,tablet, iPad அதுகளில் பார்க்கலாம்" "லப்டொப்போ அதைதானே நீங்கள் வைச்சு தட்டி கொண்டிருப்பியள்" " அப்பா இது Whatsapp" "அது என்ன" "It is a type of social media and you can only do it through your mobile phone " "எங்க அக்கா " "அவவின்ட அறைக்குள்ள இருக்கிறா" "என்ன செய்யிறாள்" "She is on Instagram" "வட் இஸ் தட்" "It is also a kind of social media" அக்கா அதில இருக்கிறா என்று எப்படி உமக்கு தெரியும் "I just texted her " "அந்த அறைக்கும் இந்த அறைக்குமிடையில் சோசல் மீடியாவில் கொமினிகேட் பண்ணுறீயள்" நானும் பேஸ்புக்கில் இருக்கிறன். உங்களை காணக்கிடைக்கிறதில்லை பேஸ் புக் அல்சோ சோசல் மீடியா நோ? அப்பா உங்களுக்கு விளங்கப்படுத்துறதிற்க்குள் அடுத்த சோசல் மீடியா வந்திடும் நீங்கள் இப்ப போய் பேஸ் புக்கில் வார கொமன்ட்ஸ்க்கு லைக் போடுங்கோ....
 12. 26 points
  கைத்தொலைபேசி காற்சட்டை பொக்கெற்றிலிருந்து சினுங்கியது.நம்பரை பார்த்தேன் மனவியின் தொலைபேசி, நிச்சயம் எடுக்க வேண்டிய அழைப்பு "ஹலோ" "இஞ்சயப்பா வீட்டை போகும் பொழுது முப்பது இடியப்பம் வாங்கி கொண்டு போங்கோ" "சரி"சொல்லி அலைபேசியை பொக்கற்றினுள் வைத்து விட்டு கையை வெளியே எடுக்க மீண்டும் அதே நம்பர் ""எந்த கடையில் இடியப்பம் வாங்கப்போறீயள்" "எந்த கடைக்கு முன்னாலா கார் பார்கிங் கிடைக்குதோ அங்க வாங்கிறேன்" "சு.த.இன்ட கடையில தான் நல்ல இடியப்பம் இருக்கு,கத்தரிக்காய் கறியும் வேணும் ஆனால அதை அங்க வாங்க வேண்டாம் ஒரே எண்ணையாக இருக்கும் அதை ப.தா இன்ட கடையில வாங்குங்கோ,ஆட்டாமா புட்டும் வேணும் அது உந்த இரண்டு கடையிலயும் சரியில்லை புட்டை மூக்கரினட கடையில வாங்குங்கோ" "ஒவ்வொரு கடையும் ஒவ்வோன்றுக்கும் திரியாமல் நீர் வீட்டில சமைச்சிருக்கலாம்." "நான் வேலையால் வந்து சமைக்க நேரமில்லை ,வேலைமுடிந்து முதல் வார நீங்களும் ஒன்றும் செய்ய மாட்டியள் "சொன்னவள் தொலைபேசியை துண்டித்தாள். கார் பார்க் பண்ணுவதற்காக இரண்டு மூன்று தரம் அந்த கடை தொகுதியை சுற்றிய பின்பு தொலைவில் ஒன்று கிடைத்து. நல்ல கறி மணம் மூக்கை துளைக்க தொடங்கியது ,கடை தொகுதியை நெருங்கியவுடன் இரும்பு தட்டுகளை தட்டும் ஒசை காதை செவிடாக்கியது .கடைக்காரர் போட்டிக்கு கொத்து ரொட்டி போடும் சத்தம் அது .ஆத்துக்காரி சொன்ன கடைகளில் இடியப்பம், புட்டு, கத்தரிக்காய் கறி போன்றவற்றை வாங்கி கொண்டு எனக்கு பிடித்த மட்டன் கொத்து வாங்க கொத்து ரொட்டி கடைக்கு போனேன். அங்கும் இடியப்ப கடைக்கு நின்ற அளவு சனம் வரிசையில் நின்றனர். ,மட்டன் கொத்துக்கு ஒடர் கொடுத்து போட்டு நின்றேன். புகையிரத நிலயத்திற்கு அருகாண்மையில் தான் இந்த கடைதொகுதி உள்ளது. கொத்து ரொட்டிக்கு ஒடர் கொடுத்து அது என்ட கைக்கு வரும்பொழுது குறைந்தது நாலு புகையிரமாவது வந்து போயிருக்கும். இந்தியாவிலா அல்லது சிறிலங்காவிலா நிற்கின்றேன் என்று எனக்கே ஒரு சந்தேகம் உண்டாயிற்று. "வீட்டை போகமுதல் அநேகர் அங்கு உள்ள கடைகளுக்கு வந்து போனார்கள் . "அண்ணே உங்கன்ட கொத்து ரெடி "என்று கடைச் சிப்பந்தி சொல்ல காசை கொடுத்து போட்டு வீட்டை போக வெளிக்கிட மீண்டும் அலைபேசி சினுங்கியது .நம்பரை பார்த்தேன் அதே சொப்பிங்லிஸ்ட் நம்பர். "ஹலோ" "இங்க கடையிலிருந்து வெளிக்கிட்டியளே " "இல்லை ஏன்" "நாளைக்கு பிரக்வெஸ்ட்டுக்கு மாலு பண் வாங்கி கொண்டு வாங்கோ,அப்படியே தமிழ் கடையில போய் முருங்கை காயும் ,10 கிலோ டைகர் பிரான்ட் அரிசியும் வாங்கி கொண்டு வாங்கோ" " மாலு பண் என்று சொல்ல வேண்டாம் என்று எத்தனை தரம் உம்மட்ட சொல்லுறது" "ஒம் உங்கன்ட தமிழ்பற்று எனக்கு விளங்குது,அது சரி எனக்கு ஒரு சந்தேகம்" " என்ன" " தண்ணியில சிங்கள பைலா பாட்டுக்கு கூத்தடிக்கும் பொழுது எங்க போனது உங்கன்ட தமிழ்பற்றுறுறு.......று" "சரி சரி வேற என்ன கடையில வேணும் ,ஓஓஓ டைகர் பிரான்ட் அரிசி" மாலு பண்னை தவிர எனையவற்றை கடைகளில் வாங்கி கொண்டு வீடு சென்றேன். இருபது வருடத்திற்கு முதல் இடியப்பம் வாங்குவது என்றால் இரண்டு நாட்களுக்கு முதலே ஒடர் கொடுக்க வேணும் அதுவும் சிலர் தங்களது வீடுகளில் வைத்துதான் செய்து கொடுப்பார்கள் கடைகளில் எடுக்கமுடியாது. தமிழ்கடைகளே இல்லை ஏன்றெ சொல்லலாம். மாலை ஆறு எழு மணிக்கே கடைத் தொகுதி வெறிச்சோடி போயிருக்கும் இன்று இரவு ஒன்பது மணிக்கும் திருவிழா போன்று மக்கள் நடமாடுவார்கள்.மசலா தோசை கூட ஒன்பது மணிக்கு எடுக்கலாம்.எங்கும் கறுப்பு தோல் மனிதர்கள் இந்தியாவா அவுஸ்ரேலியா என மீண்டும் மீண்டும் எண்ண வைக்கும். விடியற்காலை எட்டு மணிக்கு கடை தொகுதிக்கு மாலு பன் வாங்க சென்றேன்.சந்தனக்குச்சி வாசம்,அந்த பகுதியையே மணம் பரப்பிக்கொண்டிருந்தது.சீர்காழி கோவிந்தராஜனின் குரல் கணீர் என்று ஒலித்துக்கொண்டிருந்தது .ஊர்கடையில் விடியற்காலை பாண் வாங்க சென்ற ஞாபகம் வந்து போனது. வந்த புதுதில் ஒரு தொடர்மாடிக்குடியிருப்பில் வசிக்கும் பொழுது சாமியறையில் சந்தனகுச்சியை வைக்க அது பக்கத்து வீட்டுக்கு மணம் பரப்ப அந்த வீட்டுக்கார‌ பெண்மணி அழைப்பு மணியை அடித்து குறைப்பட்டுக்கொள்ள அன்றிலிருந்து சந்தன‌க்குச்சியை கொழுத்துவதை குறைத்து கொண்டேன். "ஹலோ மச்சான் என்ன இந்த பக்கம்" " தலைமயிர் வெட்ட வந்தனான்,வெட்டி போட்டு மதியத்திற்கும் எதாவது எடுத்து கொண்டு போவம் என்று வந்தனான்" " என்னடாப்பா நீங்கள் கில் டிஸ்ரிக்காரர் ,இந்த எரியா சரியில்லை என்றிட்டு போனீயள் எப்படியோ எங்கன்ட ஏரியாவுக்கு வரவேண்டித்தான் இருக்கு" "பின்ன!! எங்கன்ட சனம் இப்ப சலூன் ,இறைச்சிகடை,மீன்கடை,சாப்பாட்டுக்கடை,பலசரக்குகடை என்று எல்லாத்தையும் எடுத்து நடத்தினமல்லோ? அதுதான் இங்க வந்தனான்,மற்றவங்களின்ட விலைகளைளோட பார்க்கும் பொழுது என்கன்ட ஆட்களிட்ட கொஞ்சம் மலிவு" " பெற்ரோல் காசு கொடுத்து வந்து வாங்கிறீயள் என்றால் எங்கன்ட சனத்தின்ட கடையில விசயம் இருக்கத்தான் செய்யுது போல."
 13. 26 points
  இப்பணமானது யாழ் இணைய உறுப்பினர்கள் வாசகர்கள் மற்றும் யாழ் இணையத்தின் விளம்பரப் பணம் என அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு வாசம் உதவும் உறவுகள் மூலம் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் கணவனை இழந்து குடும்ப சுமைகளை தாங்கிய தாய்மார்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக 20 குடும்பங்களுக்கு கோழிக் கூடும் நாட்டுக் கோழி குஞ்சுகளும் வழங்கப்பட்டு அதனை பராமரிக்கின்ற பயிற்சியும் மிருக வைத்தியர் ஊடாக ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது
 14. 26 points
  கைபேசியில் அலாரமாக இந்த அழகான பாடல் காற்றில் மிதந்து காதில் வருட இன்று என்னவோ காலையில் எழுந்திருக்க மனமில்லாமல் மிகவும் அசதியுடன் தன் அதிகாலை பணிகளை நினைத்தவாறே திரும்பி நேரத்தை பார்க்கின்றாள் வைதேகி. இன்னும் சிறிது நேரம் செல்ல எழும்பலாம் என்று நினைத்து திரும்பி படுக்கும் போது அவளின் மன ஓட்டம் 30 வருடங்களை பின்நோக்கி இழுத்துசெல்கின்றது. என்ன அழகான ஒரு வாழ்க்கை! சிட்டுக்குருவிகளை போல் நண்பிகளுடன் சிறகடித்து எந்த கவலையும் இல்லாமல் பாடசாலை, மாலைநேர வகுப்பு என்று இனிமையான காலங்கள். அந்த இனிமைக்காலத்தில்தான் தன்னோடு படித்த வாமனை சந்திக்க நேர்ந்தது. அவனின் அமைதியும் அறிவும் இவளை காதலில் விழவைத்தது. அதே போன்று வாமனும் வைதேகியின் அன்பான குணத்தாலும் அழகாலும் தைதேகி மேல் காதல் கொண்டான். இருவரது வீட்டிலும் தம் காதலை சொல்லவே அவர்களது பெற்றோர் முதலில் மறுத்தாலும் பின்பு அவர்கள் இருவரும் படித்து முடித்தபின்பு திருமணம் செய்து தரலாம் என்று கூறியதால் இருவரும் மிகவும் மகிழ்வுடன் தம் படிப்பை தொடர்ந்தார்கள். காலமும் நேரமும் யாருக்கும் காத்திருக்காமல் கரைந்து செல்ல படிப்பை முடித்த வாமன் கனடாவிற்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. வாமனுடன் கூடப்பிறந்தவர்கள் ஆண் சகோதரர்கள் அதனால் அவனின் பெற்றோருக்கு பெண்பிள்ளைகள் என்றால் மிகவும் விருப்பம். தான் கனடா பயணிக்கும் முன் நாட்டுப்பிரச்சனை காரணமா வைதேகியை தன் அம்மாவுடன் கொழும்பிற்கு சென்று அங்கே அவர்களுடன் இருக்கும்படி ஆலோசனை கூற அவளும் அவர்கள் கூடவே கொழும்பிற்கு சென்று வேலைக்கு செல்லத்தொடங்கினாள். பிரச்சனைகளுக்கு மத்தியில் ஊர் விட்டு ஊர் போய் பல இடங்களில் இடம் பெயர்ந்தநேரங்களில் அவளுக்கு அடிக்கடி காய்ச்சல் வந்து போனது. கொழும்பிற்கு வந்த பின்பு வைத்தியரிடம் சென்றபோது இடப்பெயர்வுகளின் போது அருந்திய தண்ணீரால் அவளுக்கு மஞ்சள் காமலை வந்துள்ளதாகவும் அதனால் அவளது ஈரல் சிறிதளவு பாதிப்படைந்திருப்பதாகவும் சொல்லியபோது உலகமே தலைகீழாக சுத்தியது. இந்த விடயத்தை வாமனிடம் சொன்னபோது வாமனுக்கு உள்ளுக்குள் ஒரு வித பயம் ஏற்பட்டாலும் அதெல்லாம் இங்கு கனடா வந்தால் சரி செய்யலாம் பயப்பிடாமல் வருவதற்கு ஆயத்தங்களை செய்யும் படி வைதேகியிடம் கூறினான். ஒரு விதமாக வைதேகிக்கும் வாமனின் பெற்றோருக்கும் விசா கிடைத்து கனடாவிற்கு வந்து சேருகின்றார்கள். வாமன் வைதேகியின் திருமணம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. வாமன் வைதேகி பலவித மனக்கோட்டைகளுடன் தங்கள் இல்லற வாழ்விற்குள் அடியெடுத்து வைக்கின்றனர். திருமணம் முடிந்து மகிழ்வாக சென்ற அவர்கள் வாழ்வில் திரும்பவும் வைதேகிக்கு அடிக்கடி வயிற்றுவலி வர வைத்தியரை நாடியபோது தான் எடுத்து வரும் மாத்திரைகளுக்கு பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் இப்படியே தொடர்ந்தால் ஈரல் பாதிப்படையும் என்று வைத்தியர்கள் சொல்கின்றார்கள். அன்றிலிருந்து அவர் சாப்பாட்டில் உப்பு சேர்க்காமல் வைத்தியர்களின் அறிவுரைப்படி சாப்பிட்டு மருந்தும் எடுத்துவந்தாள் ஆனால் நாட்கள் செல்ல செல்ல வயிற்றுவலி அடிக்கடி வந்து பல முறை வைத்தியாலையில் அனுமதிக்கும் அளவிற்கு சென்றது. வாமனோ எந்த வித முகச்சுழிப்பும் இல்லாமல் 10 வருடங்கள் வைத்தியசாலையும் வீடுமாக வைதேகியை கொண்டுதிரிந்தான். வைத்தியர்களோ வைதேகிக்கு ஈரல் மாற்றவேண்டும் என்றும் அவளுக்கு சரியாக பொருந்து ஈரல் கிடைக்கும் மட்டும் மருந்தால் காலத்தை போக்கிக்கொண்டு இருந்தார்கள். வைதேகி இருந்த அழகிற்கு தற்போது மெலிந்து கண்கள் உள்ளுக்குள் போய் ஆளை அடையாளம் காணமுடியாதளவிற்கு ஆகியிருந்தாள். இன்னும் 6 மாதத்திற்குள் அவளுக்கு பொருத்தமான ஈரல் கிடைக்காவிட்டால் அவளை காப்பாற்றுவது கடினம் என்றும் அத்துடன் தைதேகிக்கு முன்னால் 200 பேர் வரை ஈரல் மாற்று சிகிச்சகைக்காக காத்திருப்பதாகவும் வைத்தியர்கள் வாமனிடம் சொல்லிவிட்டார்கள். வாமனோ முடிந்தவரை எந்த மனக்கஸ்டத்தையும் வைதேகியிடம் காட்டிக்கொள்ளாமல் மனதிற்குள் கவலையில் வாடிபோயிருந்தான். வாமனின் பெற்றோர் வைதேகியை மிகவும் அன்புடன் பாத்துக்கொண்டார்கள். திடீரென்று ஒரு நாள் காலையில் வைதியசாலையில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ஒரு 22 வயது இளைஞன் வாகனவிபத்தில் அகால மரணம் அடைந்துவிட்டதாகவும் அவன் தனது உறுப்புக்களை தானம் செய்வதாக எழுதிவைத்திருப்பதாகவும் அவனது இரத்தவகை வைதேகிக்கு பொருந்துவதாகவும் அவனது ஈரலில் ஒரு பகுதியை வைதேகிக்கும் இன்னும் ஒரு பகுதியை 10 மாத குழந்தை ஒன்றுக்கும் மாற்று சிகிச்சை செய்யப்போவதான சொல்கின்றார்கள். வாமனுக்கும் அவனது பெற்றோருக்கும் அந்த தொலைபேசி அழைப்பு கடவுளை நேரில் கண்டது போன்று தோன்றியது. அன்றே வைதேகியை அழைத்துகொண்டு வைத்தியசாலை செல்கின்றனர். மாற்று சிகிச்சைக்கு தேவையான அனைத்து ஆயத்தங்களையும் செய்து அறுவைச்சிகிச்சை 10 மணித்தியாளங்கள் நடைபெற்று வைதேகி சுகமடைந்தாள். வைதேகிக்கும் வாமனுக்கும் தமக்கு மீண்டும் வாழ்க்கை கிடைத்திருப்பதை நம்பமுடியவில்லை. நான்கு வருடங்கள் உருண்டோடிவிட வாமனுக்கும் வைதேகிக்கும் அழகிய ஆண்குழந்தை பிறக்கின்றது. இப்போது அவர்கள் மகனுக்கு 9 வயதும் ஆகிவிட்டது. வாமனுக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் ஆனால் வைதேகிக்கு வருத்தம் என்று வந்தபோது வைதேகி சுகமாக தன்னோடு இருந்தால் போதும் என்று மட்டுமே நினைத்திருந்தான். ஆனால் இரட்டிப்பு மகிழ்வாக குழந்தையும் சுகமே கிடைத்து அவர்களது வாழ்க்கை மீண்டும் பூத்துக்குலுங்கத்தொடங்கியது. திரும்பவும் அலாரம் அடிக்கவே பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த வைதேகி தன் பக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த மகனை முத்தமிட்டு எழுபியவாறு தனக்கு மீள் வாழ்வு தந்த அந்த இறந்து போன இளைஞனை மனதில் நினைத்து நன்றி சொல்லியவாறே அவன் அன்று அவனது உடல் உறுப்புக்களை தானம் செய்யாதிருக்காவிட்டால் இன்று தானும் இல்லை தன் குழந்தையும் இல்லை எல்லாம் அவனது தாராள உள்ளமே என்று நினைத்தபடி அன்றய நாளை மகிழ்வுடன் ஆரம்பித்தாள். -இது கதையல்ல நிஜம்- -முற்றும்- நாம் இறந்தபின்பு யாருக்கும் பயன்படமால் போகும் எம் உடல் உறுப்புகளை நாம் உயிருடன் இருக்கும் போதே தானம் செய்ய விரும்பம் தெரிவித்தால் நாம் இறந்த பின்பு எம் உறுப்பால் பலர் உயிர் வாழ்வார்கள் என்பதற்கு தைதேகியின் வாழ்வே ஒரு உதாரணம். அந்த இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருந்தது. நாம் இறந்தபின்பு வைதேகி போன்று பலருக்கு அவர்களது வாழ்வு திருப்பிகிடைக்குமென்றால் நாம் நம் உடலை தீக்கும் மண்ணுக்கும் இரையாக்குவது ஏனோ?
 15. 26 points
  யாழ்களம் நிழலியின் உதவியில் சத்துணவு வழங்கல் நிகழ்வு யாழ்கருத்துக்கள மட்டுறுத்தினர்களில் ஒருவரான நிழலி அவர்கள் 15.12.2014 அன்று தனது 40வது பிறந்தநாளில் 120 குழந்தைகளுக்கான சத்துணவு வழங்கியிருந்தார். போரால் பாதிக்கப்பட்ட குடும்பநல வாழ்வாதார உதவிகளை தனது சக்திக்கு மேற்பட்டு பலவகையில் உதவி வருவதோடு நின்றுவிடாமல் பல வகையில் செயற்பட்டு வரும் ஒருவர். 2009யுத்தத்தில் மாவீரர்களான குடும்பமொன்றின் குழந்தைகள் 2பேரை கடந்த 3வருடங்களுக்கு மேலாக மாதாந்த உதவி வழங்கி வருவதோடு மாவீரர்களின் தாயார் ஒருவருக்கும் மாதாந்தம் உதவிவருகிறார் நிழலி. நிழலியின் பணிகளுக்கு ஆதரவு வழங்கி வரும் அவரது துணைவியாரையும் இந்நேரம் நினைவு கொள்கிறோம். நிழலியின் உதவியில் கழுவங்கேணி 1குடும்பலநல உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட போசாக்கு குறைந்த குழந்தைகளை நேசக்கரம் தேன்சிட்டு உளவள அமைப்பானது ஒருங்கிணைத்து உணவு வழங்கலோடு உளவள கருத்தரங்கினையும் நடத்தியிருந்தது. கழுவங்கேணி கிராமமானது கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் அமைந்துள்ளது. இக் கிராமானது மட்டக்களப்பு நகரை அண்டிய ஒரு கிராமமாகும். 1300குடும்பங்களைக் கொண்ட இக்கிராமமானது மீன்பிடித் தொழிலையே பிரதான தொழிலாகக் கொண்டது. மிகவும் பின்தங்கிய இக்கிராமத்தில் 5சத வீதத்துக்குள்ளேயே கல்வித்தரம் இருக்கிறது. அரபு நாடுகளுக்கு செல்லும் தாய்மார் அதிகமாக இக்கிராமத்தில் இருக்கிறார்கள். தங்கள் குடும்ப வாழ்வாதாரத்தை உயர்த்தும் கனவோடு அரபு நாடுகளுக்குச் செல்லும் தாய்மாரின் குழந்தைகள் எதிர்நோக்கும் சிக்கல்களும் பாதிப்புகள் அதிகம். இங்கு அதிகளவிலான பெண்பிள்ளைகள் 15,16வயதுகளில் திருமணம் செய்துவிடும் அவலம் இன்னும் நடந்து கொண்டேயிருக்கிறது. திருமண வயதுக் கட்டுப்பாடு நாடெங்கிலும் சட்டத்தில் எழுதப்பட்டிருந்தாலும் இதுபோன்ற கிராமங்களில் இன்னும் மீறப்பட்டே வருகிறது. சுயபொருளாதார உயர்வு , கல்வியறிவு குறைந்த இத்தகைய கிராமங்களுக்கான நிரந்தர உளவள உயர்வு மேம்படுத்தப்பட வேண்டும். தங்களைத் தாங்களே சிந்திக்கவும் தங்களை வழிநடத்தவும் இவர்களுக்கு தற்போது வேண்டியது உளவள மேம்பாடு. தேன்சிட்டு உளவள அமைப்பின் செயற்பாட்டுக் குழுவினரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உளவள மேம்பாட்டு பயிற்சிகளுக்கான உதவிகள் கிடைக்கப்பெற்றால் இக்கிராமத்தையும் மேம்படுத்த முடியும். இக்கிராமத்தின் முதல் கருத்தரங்கை நடத்தவும் போசாக்கு குறைந்த குழந்தைகளுக்கான உணவையும் தந்து முதல் மாற்றத்தை ஏற்படுத்திய யாழ்கள மட்டுறுத்தினர் நிழலி அவர்களுக்கு எமது சிறப்பான நன்றிகள். http://nesakkaram.org/ta/nesakkaram.3753.html
 16. 26 points
  அன்பான உறவுகளுக்கு முதலில் மன்னிப்பு கோருகின்றேன். யாழ் கள உறவு சாகாறா அக்காவின் சரித்திர புகழ் வாய்ந்த விழாவில் பங்கெடுத்து விட்டு காணாமல் போனதற்காக... இது நாள் வரை யாழ் களத்தை தொலைபேசியினுடாகவே பாவித்து வந்தேன். தற்போது தமிழில் தட்டச்சு செய்யக்கூடிய வசதி தொலைபேசியில் இல்லாததால் களத்தில் பங்கெடுத்து கொள்ள இயலவில்லை. (கொஞ்சம் பின்னோக்கி செல்வோம்) காலம் : 2014 மாதம் மே சாகாறா அக்கா நூல் வெளியீடு பற்றி தோராயமாக சொன்னார் ஒகஸ்ட் மாதம் இறுதியில் நிகழ வாய்ப்பிருக்காலாம் என்று. சரி தங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள் தமையன் வரவேற்க காத்திருக்கிறேன் என்டு. வருவதற்கு முன்பு அறிய கிடைத்தால் நானும் சந்திக்க திட்டங்களை உருவாக்கி கொள்ளலாம் அல்லவா. வரும் முன்னம் சொல்லுங்கோ என்டு சொல்லியிருந்தேன். பிறகு நானும் மறந்துவிட்டேன். இடையில் அவரிடம் கதைக்கவில்லை. அதுவரை அவரை பற்றி பெரிதாக ஒன்றும் அறிந்திருக்கவில்லை கனடாவை வசிப்பிடமாக கொண்டவர் அபாரமான கவிதை எழுதும் திறனுடையவர் ஒரு பெர்ர்ரிய்ய்ய குடும்பத்தின் தலைவி என்பதை தவிர. ஒகஸ்ட் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் பாலக்காட்டில் இடைவிடாது கொட்டும் மழையின் ஈரலிப்பும், நீலகிரி மலைத்தொடரில் சறுக்கி வந்து நிலைகொண்ட மேகங்களும் குளிர்ச்சியுடைய கோயமுத்துரை மேலும் குளுமைபடுத்திக் கொண்டிருக்கும் முன்னிரவில் முகப்புத்தகம் பார்த்து கொண்டிருப்பதற்காக அம்மாவிடம் வசமாக வசை வாங்கி கொண்டிருந்த நேரத்தில் சென்னை வெயிலாக வந்து உட்பெட்டியில் விழுந்தது சாகாறா அக்காவின் தகவல். "தம்பியவை நான் இப்ப சென்னையில் நிக்கிறேன் என்டு, நான் இப்ப கோயமுத்தூரில் அம்மாவிடம் ஏச்சு வாங்கி கொண்டிருக்கிறேன் என்டு சொல்லி வேகமாக தொலைபேசி எண்ணை அனுப்பிவிட்டு பதிலுக்கு காத்திராமல் துண்டித்துவிட்டு அம்மா நான் தூங்கிட்டேன் என சொல்லவும் தலையனை முகத்தில் விழவும் சரியாய் இருந்தது. அடுத்த நாள் தொலைபேசி அழைப்புவரும் என எதிர்பார்த்து காத்திருந்தேன். வரவில்லை இரண்டொரு நாள் கழித்து திண்ணையில் வணக்கம் வைத்தார். கொஞ்சம் யோசித்து வணக்கம் வைத்து திரும்ப திண்ணையில் குருநாதருடனும் விசகு தாத்தா ராசவன்னியன் மாமாகாருவுடனும் ஐக்கியமாகி கவிதாயினியை கண்டு கொள்ளவில்லை. நேரமிருப்பின் பேசுங்கள் என்று மறைமுகமாக சொல்லிவிட்டு சென்றேன். அடுத்தநாள் முகப்புத்தகத்தில் விழா அழைப்பிதழை பார்க்க சற்று கிலியானது. அதில் அழைக்கப்பட்டுள்ளவர்களெல்லாம் அடிக்கடி தலைப்பு செய்தியில் கேட்ககூடிய பெயர்கள். ஆகா எவ்வளவு பெரிய ஆளிடம் இப்படி பரோட்டா சூரி மாதிரி லொடலொட என்டு பேசிட்டமென்டு குற்ற உணர்வு குறுகுறுக்க அக்கா நீங்க யாரெண்டு தெரியாம அறியா சிறுவன் தெரியாமல் பேசிட்டன் மன்னிச்சுகோங்கனு மடல் அனுப்பி பார்த்திருந்தேன். பாவ மன்னிப்பு வழங்கபடவில்லை என்பது படித்தும் பதிலனுப்பாததில் இருந்தே விளங்கியது. விழாவை தலைமையேற்க சொல்லி அழைப்பிதழில் அச்சடிக்காமல் புறக்கணித்த கோவம் ஒருபுறம் இருந்தாலும் அவரது மகள்கள் இருவரும் வரவிருப்பதாக ஒற்றுவர்கள் இரகசிய தகவலை தந்ததால் சாகாறா அத்தாச்சிக்கு அக்கணமே வருகையை அறிய தந்துவிட்டேன். தமிழ் என்னை தலைநகர் நோக்கி இழுத்தது... ஆனாலும் சென்னை செல்வதென்பதை உறுதிசெய்ய வேண்டுமென்றால் பிரம்மாக்களிடம் அனுமதி பெற வேண்டும். அது பற்றி நிச்சயமில்லாததால் யாழில் யாரிடமும் கதைக்கவில்லை. அனுமதி இல்லையென்றால் அவசர கால சிகிச்சை பிரிவில் அறைகுறை மயக்கத்தில் இருக்கிறேன் என்று சொல்லி சாமாளிக்க முடிவு செய்தாயிற்று. புத்தக வெளியீடு சென்னை கனடாவில் வசிப்பவர் இணைய நண்பர் என்பதையெல்லாம் அழகாக விவரித்தால் என்ன நிகழும் என்பது ஒரளவு யூகித்திருந்ததால் திருமணம் நண்பனின் அண்ணன் சென்னை என்று எளிமையாக முடித்து கொண்டேன். காலை 6,15 ரயில் புறப்படும் நேரம் 5,30 நிலையத்தை அடைந்தேன். பயணச்சீட்டை வாங்கும்போது மணி 6,20. வாங்கிய சீட்டை வெறித்தபடி இருந்தேன் அடுத்தநாள் ஒணம் என்பதால் கேரள நாட்டிளம் பெண்டிரால் சுழ்ந்திருந்தாலும் மனம் ஜென் நிலைக்கு போயிருந்தது. சென்னை வழியாக மங்களூர் வரைசெல்லும் திருவனந்தபுரம் சிறப்புரயில் 6,40 மணிக்கு நடைமேடை நாலில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தானே காத்திருந்தாய் விச்ச்சு ஒடு ஒடு என்று அசிரிரீ உள்ளே ஒலித்தது. அருகில் நின்றிருந்த சிறிய மலையாள குட்டியிடம் "என்ட ஹிருதயம் நிறைஞ்ஞ ஒண அஷம்ஷகள்" என வாழ்த்திவிட்டு இரயில் பயணங்களில் மூழ்கியிருந்தேன்... (நாளை சென்னையில்) # நூல் வெளியீட்டின் நடுவே எனது மானே தேனே பொன்மானே எல்லாம் பொறுத்து கொள்ளுங்கள்....
 17. 25 points
  வந்தனா கொஞ்சம் நில்லுங்கோ, இன்று எனக்கொரு பதிலைச் சொல்லி விட்டுப் போங்கோ. நான் என்ன சொல்ல வேண்டும் என்று எதிர் பார்க்குறீங்கள் சந்திரன். பிள்ளைகள் பள்ளிகூடத்தால வந்திருப்பினம், இனித்தான் நான் போய் சமைக்க வேண்டும். வந்தனா எத்தனை நாட்கள் நாங்கள் இந்தக் கந்தோரில இரவுப் பணியாற்றி இருக்கிறோம். என்னுடைய ஆசையை நான் கூறிவிட்டேன் , நீங்கள்தான் பிடிகொடுக்காமல் நழுவுறீங்கள். என் நிலைமையை புரிந்து கொள்ளுங்கோ சந்திரன். தெரியும் வந்தனா, உங்களுக்கு இந்த வேலைகூட நான்தானே வாங்கித் தந்தனான். வாறகிழமை 30ம் தேதி விடுமுறையும் கூட ஒருமுறை என்ன சொல்லுங்கோ. என்னால் வரமுடியாது சந்திரன். ஆனால் நான் உங்களுக்கு ஒரு உதவி செய்யலாம். என்ன என்ன உதவி, ஆசையாய் இருக்கு கெதியாய் சொல்லுங்கோ. சும்மா பறக்காதையுங்கோ சொல்லுறன். அன்று மாலை நாலு மணிக்கு பூங்கா வீதிக்கு வாங்கோ.நான் எனது சினேகிதியை உங்களுக்கு அறிமுகம் செய்து விடுறன். பிறகு என்னைத் தொந்தரவு செய்யக் கூடாது சரியா. சற்று நேரம் யோசித்த சந்திரன் சரி என்று விட்டு கண்ணடித்துக் கொண்டே செல்கிறான். 30ம் தேதி மாலை 3:58:40 க்கு சந்திரன் காரில் வந்து இறங்கி வாரான். அவனுக்கு முன்னதாகவே வந்தனா வந்து காத்திருக்கின்றாள். அருகில் ஒருத்தர் வண்டிலில் இளநி வித்துக் கொண்டு இருக்கின்றார். சந்திரன் இளநி குடிப்பமா என்று கேட்க்கிறான். வந்தனாவும் ம்... என்று சொல்லிவிட்டு காசை எடுக்க அவன் மறுத்துவிட்டு இரண்டு இளநி வாங்கி இருவரும் குடித்தனர். எங்கே அவ இன்னும் வரவில்லையா...! இல்லை இப்ப வந்திடுவா, இன்று வேலை கூட போலிருக்கு. அருகே ஒரு வாடகை வண்டி வந்து நின்றது. அதில் இருந்து நாகரிக யுவதி இறங்கி வந்தாள். வா சினேகா உனக்காகத்தான் காத்திருக்கிறோம். அவள் சந்திரன் அருகே வந்து நிக்க கண்களில் நீளமாய் கீறிய மையும், கன்னத்தில் சற்று தூக்கலாய் பூசிய பவுடரும், உதட்டில் அடர்த்தியான சிகப்பு சாயமும் அவளது வேலைக்கு விளம்பரமாய் இருந்தன.அத்துடன் அவளிடம் இருந்து வீசிய மட்டமான நறுமணம் அவனது நாசிக்குள் புகுந்து இளநியுடன் இதழ்பதிக்க வயிற்றில் இருந்த இளநி வாய்க்கு மீண்டு வாந்தியாய் வெளியேறவும் இவள் அவள்தான் என மூளை அறிவுறுத்தவும் சரியாய் இருந்தது. வந்தனா நீ என்னை அவமானப் படுத்தி விட்டாய். ஏன் இந்தப் பிள்ளைக்கு என்ன குறை, நிறமாகவும், அழகாகவும், அலங்காரமாகத்தானே இருக்கிறாள்.நீ கூப்பிடும் இடத்துக்கு உன்னோடு அவள் வருவாள். நீ பணம் கூட குடுக்க வேண்டாம். நான் குடுத்து விட்டேன். என்ன சொல்லுறாய் நீ .மனசுக்கு பிடிக்காத ஒன்றை எப்படி ஏற்பது. வாந்தி வந்ததை பார்த்தனிதானே. அன்று நீ என்னை அழைத்ததும் எனக்கும் அப்பிடித்தான் வாந்தி வந்தது. அடக்கிக் கொண்டேன். நான் இரு பிள்ளைகளுக்கு தாய். அன்பான கணவன்.எங்களை பற்றி தெரிந்தும் நீங்கள் அப்படிக் கேட்டது தப்பில்லையா.மன்னித்து விடுங்கோ வந்தனா.சந்திரன் அட்டமியாய் குறுகி நிக்க , இது எதுவும் புரியாத அந்தப் பெண் வாடகைக்கு காரின் கதவைத் திறந்துவிட்டு முன்னால ஏறுறீங்களா, பின்னால ஏறுறீங்களா என்றாள் அப்பாவியாய். ஒரு நிமிஷம் திகைத்த இருவரும் அடுத்தநொடி எல்லாவற்றையும் மறந்து சிரித்துக் கொண்டார்கள்.....! இது ஒரு சுய ஆக்கம். இதுக்கு காப்புரிமை, மோதிரஉரிமை எதுவும் கிடையாது. ஒரு அரும்பெரும் இலக்கியம் மலரக் காரணமான, உந்துசக்தியான நண்பர் இராசவன்னியனுக்கு சமர்ப்பணம். இங்கே சொந்த 'ஆக்கங்கள்', 'ஆக்கங்கள்' என குறிப்பிடுவது, கவிதைகளையா.. இது ராசவன்னியனின் கேள்வி....!
 18. 24 points
  எனக்கு முன்னால் இருந்த நாற்காலியில் முழுக்கை நீல நிற மேலங்கியுடன், மெல்லியதேகமும் நிமிர்ந்த பார்வையும் கொண்ட அவனின் கண்களை உற்று நோக்கினேன். எனது தேடலுக்கு எந்தவித பலனும் இல்லாமல் அவனது கண்கள் இருந்தன. மெல்லிய நீல வர்ண பூச்சுடன் இருந்த ஒரு தனியறையில் என்னையும் அவனையும் தவிர வேறு ஒருவரும் இல்லை. எமது உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டு கொண்டு இருந்தன. அவற்றில் 50 வீதத்துக்கும் அதிகமாக மௌனமே பதியப்பட்டிருந்தது. வாசலில் இரண்டு காவலர்கள் விசாரணை முடிவுக்காக அசைவின்றி காத்திருந்தார்கள். "நான் அதை செய்யவில்லை" என்பதை தவிர அவனிடம் இருந்து வேறு எந்த பதிலும் எனக்கு உருப்படியாக கிடைக்கவில்லை. அம்மான் கரும்புலிகளுக்காக ஆற்றிய உரையை பொதுவெளி இணைய பாவனையில் இருந்த ஒரு கணினியில் தரவேற்றம் செய்திருந்த குற்றத்திற்கான சந்தேகத்தின் பெயரில் அவனை கைது செய்திருந்தார்கள். அந்த துறை சார் நிர்வாகத்தில் துணைப்பொறுப்பாளர் இவன். அவன் புலம்பெயர் நாட்டில் இருந்து போராளியாக தன்னை இணைத்து கொண்டவன். அவனது குடும்பமே இயக்கத்துக்காக பல்வேறு பணிகளில் செயற்பட்டு கொண்டிருந்தார்கள். அவனது குடும்பத்தின் மீதிருந்த நம்பிக்கையும், மதிப்பும் அவன் அந்த குற்றத்தை செய்திருப்பதற்கான வாய்ப்புகளை மழுங்கடித்திருந்தன. இருந்தாலும் விசாரணை அனைவருக்கும் பொதுவானது. இதே சம்பவத்தில், இவனது பொறுப்பாளர் கைது செயற்பட்டு, ஆரம்பகட்ட விசாரணையின் பின்னர், தண்டனைக்காக பாலம்பிட்டி களமுனைக்கு அனுப்பப்படிருந்தான். களமுனையில் விழுப்புண் அடைந்த நிலையில் அவன் அனுப்பிய கடிதம் எங்களை வந்து சேரும் போது அவன் வீர மரணத்தை தழுவி இருந்தான். அவனது கடிதம், மற்றும் கணினி துறைசார் வல்லுநர்களின் ஆராய்ச்சிக்கு பிறகே குற்றவாளியாக இவன் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தான். பொறுப்பாளர்- துணை பொறுப்பாளர்களுக்கு இடையே இருந்த ஈகோ, தன்னைவிட கல்வியறிவில், துறைசார் அறிவில் குறைந்த ஒருவன் தன்னைவிட உயர்பதவியில் இருந்ததை ஒப்புக்கொள்ள மறுத்த மனதினால் எழுந்த வினையே இவனை அப்படி ஒரு காரியத்தை செய்ய தூண்டி இருந்ததாக முன்னைய விசாரணையாளர்கள் அறிக்கை என் முன்னே இருந்தது. இவன் தான் அந்த குற்றத்தை செய்திருந்தான் என்பதை கணினியே காட்டி கொடுத்த விண்டோஸ் log அறிக்கையும் சேர்த்தே இணைத்திருந்தார்கள். முழு அறிக்கையையும், சான்றாக கிடைத்த விண்டோஸ் log கோப்பையும் அவனிடம் கொடுத்தேன். வாசித்து முடித்த பின்னரும் அவன் கண்களில் எந்தவித சலனமும் இல்லை. எதற்காக இப்படி செய்தாய்.? உன்னால் ஒரு அருமையான போராளி தணடனை பெற்று களத்தில் காவியமானது கூட உன் மனதை சுடவில்லையா.? நான் ஐந்தாம் முறையாக அவனிடம் கேட்டேன். மீண்டும் அதே பதில் நான் இதை செய்யவில்லை. உண்மையில் அவன்தான் குற்றவாளி என்று நீக்கமற உறுதி செய்திருந்தாலும் அதை வெளியே சொல்லக்கூடிய தைரியத்தை அவனது ஈகோ தின்று விட்டு இருந்தது. இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமே இருக்கவில்லை. உனக்கான தண்டனையை நாளை இறுதி செய்வோம் என்று கூறிவிட்டு எழுந்தேன். பயம் அவன் கண்களில் லேசாக தெரிந்தது. காட்டி கொள்ளாமல் மேசையில் இருந்த குவளையில் தண்ணீரை மென்று குடித்தான். வெளியே வந்த நான், காவலர்களிடம் அவனது கழுத்தில் இருக்கும் சயனைட் வில்லைகளை கழற்றி விட்டு, 1-9 முகாமின் தனியறையில் காவலில் வைக்கும்படி கூறினேன். ஏனைய போராளிகள் அவனது முகத்தை காணாமல் இருக்க முகமூடி அணிவிக்கும்படி கூறினேன். அம்மானிடம் சென்று விசாரணை முழு அறிக்கையையும் கொடுத்துவிட்டு, இது எந்த வித தேச துரோக நடவடிக்கையும் இல்லை என்று தெளிவுற விளக்கினேன், நீண்ட கலந்துரையாடலின் பின்னர் அவனது போராடடத்துக்கான பங்களிப்பு, குடும்ப பங்களிப்பை கருத்தில் கொண்டு வேறு துறைக்கு மாற்றி விடுதலை செய்வது என்று முடிவு எடுத்திருந்தோம். இரவை தாண்டி இருந்தமையால் காலையில் அவனிடம் சொல்லி விடுதலை செய்ய அதிகாரி ஒருவரை நியமித்து விட்டு விடைபெற்றேன். அந்த அதிகாரி அதிகாலையிலேயே விடுதலை முடிவோடு 1-9 முகாமின் தனி அறையை திறந்தபோது, வாயிலே சயனைட் வில்லையுடன் அவனது உடலில் இருந்து உயிர் நிரந்தர விடுதலை பெற்று இருந்தது. அவன் அருகே இருந்த அந்த ஒற்றை காகிதத்தில், "நான் அதை செய்யவில்லை செய்தவனை கண்டுபிடியுங்கள் " என்ற ஒற்றை வாக்கியமே எஞ்சி இருந்தது. அந்த வாக்கியம் என் போன்ற எத்தனையோ விசாரணையாளர்களின் பல நாள் தூக்கத்தை தொலைத்திருந்தது.
 19. 24 points
  இருட்டடி பாகம் - 1 எங்கள் ஊரும் பிற ஊர்களைப் போலவே செழிப்பான தோட்டங்கள், தோப்புக்கள், பனங்கூடல்கள், வெட்டைகள், புல்வெளிகள் நிறைந்த ஒரு சாதாரண கிராமம். எல்லா ஊர்ப் பிள்ளைகளையும் போலவே பள்ளிக்குடம், ரியூசன் என்று இளம் பிராயத்து சிறுவர்கள் முதல் வளர்ந்த மாணவர்கள் வரை நித்தமும் படிக்கவென்று ஓடுப்பட்டுத் திரிந்தாலும், கிடைக்கும் சொற்ப இடைவேளைகளில் விளையாட்டுக்களுக்கும் வேறு பொழுதுபோக்குகளுக்கும் எங்களால் நேரத்தை ஒதுக்கக் கூடியதாகத்தான் இருந்தது. ஓவ்வொரு வயதுக் குழுவிலும் இருப்பவர்கள் காலநேரத்துக்கு ஏற்றபடி வேறுவேறு விளையாட்டுக்கள் விளையாடுவோம். கிட்டிப்புல், கிளித்தட்டு, சிரட்டைப்பந்து போன்ற கிராமத்துக்கேயுரிய பாரம்பரிய விளையாட்டுக்கள் முதல் கிரிக்கெற், உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம் போன்ற நகரத்து நாகரீக விளையாட்டுக்களும் எங்கள் ஊரில் இருக்கும் வெட்டை வெளிகளில் விளையாடித் திரிவதுதான் எமது முக்கிய பொழுதுபோக்கு. ஊரிலுள்ள பல வெட்டைகளை நாங்கள் பாவித்தாலும் பெரும் பனங்கூடல் ஒன்றுக்கு நடுவில் இருக்கும் 'குருவியன்' வெட்டைதான் நாங்கள் அதிகம் கிரிக்கெற், உதைபந்தாட்டம் விளையாடும் இடம். பெரும் பனங்கூடலுக்குள் இருக்கும் குருவியன் வெட்டையை அடைவதற்கு ஐந்தாறு ஒற்றையடிப்பாதைகள் ஒவ்வொரு மூலையிலிருந்தும், ஊர் மனைகளைப் பிரிக்கும் பிற ஒழுங்கைகளிலிருந்தும், பிரதான தெருக்கள் இரண்டைக் குறுக்கறுக்கும் கல்லுரோட்டில் இருந்தும் பிரிந்து பாம்புகள் பிணைந்து விலகுவதுபோல வளைந்தும் நெளிந்தும் செல்லும். இந்த ஒற்றையடிப்பாதைகளில் மிக வேகமாகவும், லாகவமாகவும், ஹாண்டில் பாரில் கையை வைக்காமலும் சைக்கிள் ஓடுவதும் எமது 'திரில்' பொழுதுபோக்குகளில் ஒன்று. பள்ளிக்கூட நாட்களில் பின்னேர ரியூசனுக்குப் போக முதல் கிடைக்கும் ஒரு மணித்தியாலத்தில் கூட உதைபந்தாட்டம் விளையாடி, வேர்க்க விறுவிறுக்க ரியூசன் வகுப்புக்களில் போய் குந்தி இருந்து படிப்பது எல்லோருக்கும் பழகிவிட்டது. ஆனாலும் வார இறுதி நாட்கள், பாடசாலை விடுமுறைக்காலம் என்றால் காலை பத்து மணிக்கெல்லாம் ஒன்றுகூடி 'கன்னை' பிரித்து கிரிக்கெற் விளையாடுவோம். கிரிக்கெற் முடிய வம்பளந்து இளைப்பாறுவோம். சிலவேளைகளில் கள்ள இளனி பிடுங்க அல்லது கள்ள மாங்காய் ஆய என்று ஊரிலுள்ள முள்ளுக்கம்பியாலும், அலம்பல் வேலிகளாலும் கட்டிக்காக்கப்படும் காணிகளுக்குள் போய்வருவோம். மாலை மங்கும் நேரத்தில் மீண்டும் உதைபந்தாட்டம் இருள் கவிந்து ஆளையாள் தெரியாதமட்டும் விளையாடித்தான் வீடு போய்ச்சேருவோம். குருவியன் வெட்டையில் வயதுக்கேற்றபடி மூன்று பிரிவுகளாகப் பிரிந்து விளையாடுவதுண்டு. பன்னிரண்டு வயதுக்குட்பட்ட தவ்வல்கள் ஒரு பிரிவிலும், பன்னிரண்டு வயது தொடங்கி O/L வரை அடுத்த பிரிவிலும், A/L படிப்பவர்கள் இன்னொரு பிரிவிலும் விளையாடுவது வழமை. நான் நடுப்பிரிவில் இருந்தேன். குறைந்த வயதுக்காரர்கள் எப்போதும் தங்களைவிட வயது கூடியவர்களுடன் விளையாட விரும்பினாலும், வயது கூடியவர்கள் விளையாட ஆட்கள் போதாமல் இருந்தால்தான் தங்களுடன் சேர்ப்பார்கள். மதியநேரத்தோடு பாடசாலை முடிவதால் இளம்பிராயத்து சிறுவர்கள் குருவியன் வெட்டையைச் சூழவுள்ள பனங்கூடலுக்குள் ஆமி-புலி போல ஒளித்துப் பிடித்து விளையாடுவதில்தான் அதிகம் மினக்கெடுவார்கள். பல ஒற்றையடிப்பாதைகள் குருவியன் வெட்டையைக் குறுக்கறுத்துப் போவதால், அடிக்கடி சனங்களும் எமது வெட்டையை குறுக்குப்பாதையாகப் பாவிப்பதுண்டு. இதனால் சைக்கிள்களில் போகின்றவர்களாலும், பொடிநடையில் போகின்றவர்களாலும் எமது விளையாட்டுக்கள் தடைப்படுவதுண்டு. இப்படிக் குருவியன் வெட்டைக் குறுக்குப்பாதையை தினந்தோறும் பாவிப்பவர்களில் "பெட்டைக் குயிலன்" என்று நாங்கள் பட்டப்பெயர் வைத்துக் கூப்பிடும் ஒரு நடுத்தர வயதுக்காரனும் ஒருவன். பெட்டைக் குயிலன் எப்போதும் ஒரு கருநீல நிறச் சாரமும், வெளிர்நீல நிறச் சேர்ட்டும் அணிந்திருப்பான். அவன் தினமும் காலையில் வடக்குப் பக்கத்திலுள்ள ஓர் ஊரிலிருந்து கட்டுவேலைக்காக தெற்குப் பக்கமும், மைம்மல் தாண்டிய பொழுதில் திரும்பவும் தனது ஊருக்கும் போய்வருவான். அவனது பெண்களைப் போன்ற இடுப்பை ஒடித்த ஒயிலான நெளிநடையும், கைகளை அபியம் பிடித்து ஆட்டியபடி குழைந்து பேசுவதும் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருக்கும். பனங்கூடலுக்குள்ளால் போகும்போது இராகம் இழுத்தவாறு ஏதாவது பாட்டை கொஞ்சம் சத்தமாகவே பாடிக்கொண்டு போவான். நாங்கள் விளையாடிக்கொண்டிருந்தால், வெட்டைக்கு நடுவாகப் போகாமல் ஓரமாக விலத்தித்தான் போவான். இதனால் நாங்கள் அவனை அதிகம் பொருட்படுத்துவதில்லை. சிலவேளைகளில் எங்களுக்கு வேறு பொழுதுபோக்குகள் இல்லாவிட்டால் அவனை வம்புக்கிழுப்பதற்காக "பெட்டைக் குயிலன்" என்று உரத்துக் கூச்சலிட்டும், மண்ணாங்கட்டிகளால் எறிந்தும் அவனை ஓட ஓட விரட்டுவதுண்டு. ஒரு சனிக்கிழமை காலை பதினொரு மணியளவில் கிரிக்கெற் விளையாடலாம் என்ற நினைப்போடு குருவியன் வெட்டைக்குப் போனபோது அங்கு கூட்டமாக நின்ற இளவயதுச் சிறுவர்கள் மிகுந்த கோபத்துடனும் ஆத்திரத்துடனும் கத்திக்கொண்டு நின்றார்கள். அவர்களின் சஞ்சலமான உரையாடல் காதில் விழுந்தபோது ஏதோ விபரீதம் நடந்திருக்கவேண்டும் என்று உணர்ந்து என்ன நடந்தது என்று அதட்டிக் கேட்டேன். அழுவாரைப் போல சிவந்த முழிக் கண்களுடன் நின்ற குழவியன் - கட்டையாகவும் உருண்டையான தோற்றம் உள்ளதால் வைத்த பட்டப் பெயர் - தாங்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது, வழமையாக ஓரத்தால் போகும் பெட்டைக் குயிலன் வெட்டைக்கு நடுவாக தங்களைக் குழப்புகின்ற மாதிரி வந்ததால், அவனை "பெட்டைக் குயிலன்" என்று பட்டம் தெளித்துக் கூப்பிட்டு வெட்டைக்கு வெளிப்பக்கத்தால் போகும்படி ஊண்டிச் சொன்னோம் என்றான். அப்படிச் சொன்னது பிடிக்காமல் பெட்டைக் குயிலன் கோபம் கொண்டு அடிக்க ஓடி வந்தபோது எல்லோரும் பனங்கூடலுக்குள் தலைதெறிக்க ஓடியபோதும், குழவியனை பெட்டைக் குயிலன் பிடித்துவிட்டான். "பெட்டையன் எண்டு இனிக் கூப்பிடுவியளோடா பாப்பம்" என்று பிலத்துக் கத்தியவாறே பிடிபட்ட குழவியனின் அரைக்காற்சட்டையை முரட்டுத்தனமாக உருவி, தொடைகளை இறுக்கிக் கசக்கி குஞ்சாமணியைப் பிடிச்சுப் பிசுக்கிப் பினைஞ்சு போட்டானென்று சொன்னார்கள். அந்தக் கதையைச் சொல்லும்போதே குழவியன் பெருத்த அவமானமும் கூச்சமும் அசூசையும் கலந்த உணர்வுகளை முகத்தில் அப்பிகொண்டு தேம்பித் தேம்பி கண்ணீர் விட்டு அழத்தொடங்கிவிட்டான். நடந்த கதையைக் கேட்டபோதே உடம்பெல்லாம் அதிர்ந்து ஆடுமளவிற்கு ஆத்திரம் வேகமாக வந்தது. பெட்டைக் குயிலன் விடுபேயன் போல இவ்வளவு காலமும் திரிந்தவன், இப்ப ஆருமே நினைச்சுப் பார்க்காத இப்படி ஒரு கூடாத செயலை, அதுவும் எங்கள் வெட்டையில வைத்து செய்தது, எங்கட ஊர் மானத்திற்கும் மதிப்புக்கும், பெருமைக்கும் விட்ட பெரிய சவால் மாதிரி இருந்தது. பெட்டைக் குயிலனுக்கு எங்கட ஊர்ப்பொடியளில கைவைக்கிற அளவுக்கு துணிவு வந்ததை சும்மா விட்டுவிடக்கூடாது. சூட்டோட சூடாக அவனுக்கு அவன்ரை வாழ்க்கையில கேள்விப்பட்டிருக்காத ஒரு பாடம் படிப்பித்து, அவனை எங்கள் வெட்டைப் பக்கம் சீவியத்திற்கும் தலைவைக்காமல் பார்ப்பதுதான் அடுத்த வேலை என்று கறுவிக்கொண்டே மனதுக்குள் சபதம் போட்டேன். குழவியனை சமாதானப்படுத்துவதற்காக "பெட்டைக் குயிலன் எங்களை ஆரெண்டு தெரியாமல், எங்கட பரம்பரை கத்தி எடுத்தால் தரம் பறிக்காமல் விடுறதில்லை எண்டு தெரியாமல் உனக்கு நுள்ளிப் போட்டான்; எங்களைத் தொட்ட அவனை இண்டைக்கே ரெண்டில ஒண்டு பாத்துவிட்டுத்தான் நித்திரைப்பாயிக்குப் போறது" என்று வீரவசனம் பேசினேன். பெட்டைக் குயிலன் வழமையாக ஏழு மணியளவில் இருட்டாக இருக்கும்போதுதான் திரும்பவும் பனங்கூடல் குறுக்குவழியில் தனது ஊருக்குப் போவது என்று தெரிந்திருந்ததால், உடனடியாகவே சரியான திட்டம் போட்டு நல்ல இருட்டடி கொடுத்து வாழ்க்கையில அவன் எங்கள மறக்கமுடியாத பாடம் கொடுப்பதுதான் சரி என்று எனக்குள் யோசித்தவாறே யார் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று சிந்தித்தேன். கனபேரைச் சேர்த்தால் திட்டம் பிசகிவிடும். என்றாலும் குறைந்தது ஒரு நாலுபேராவது இருந்தால்தான் வேகமான அதிரடித்தாக்குதலை செய்துமுடிக்கலாம் என்று தோன்றியது. பெட்டைக் குயிலன் ஏற்கனவே சின்னப்பொடியளோட தனகினபடியால் சிலநேரம் எங்களைப் போல பதினாலு-பதினைஞ்து வயதினரையும் கண்டு பயப்படாமல் இருக்கவும்கூடும். அதனால் எப்படியும் ஒரு பெரிய பொடியனையும் சேர்த்தால்தான் எங்களுக்கும் ஒரு பலமாக இருக்கும் என்று தீர்மானித்தேன். - தொடரும் -
 20. 24 points
  மனப்பொருத்தம் பூமிப் பந்தின் சுழற்சிக்கு ஏற்ப கால நிலை மாறுகிறது. அது போலவே மனிதனின் வாழ்வும் சுழன்று கொண்டே இருக்கிறது . வருடங்கள் காலச் சுழன்றோ ட சக்கரத்தில் மனிதனின் வளர்ச்சியும் மாறிக் கொண்டே இருக்கிறது ... மாற்றங்கள் எப்போதுமே மாறாதவை . கருணாகரன் க லாவதி தம்பதிகளும் ,போர்க் .காலச் சூழ்நிலையால் புலம் பெயர்ந்து பிரான்சின் நகரப்பகுதிக்கு அண்மையில் ,மூன்று பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தைக்ளுமாய் வாழ்வை ஆரம்பித்தார்கள். கருணாகரன் ஆரம்பத்தில் எந்த வேலை கிடைத்தாலும் செய்வான். பின்பு குடும்பத்தி ன் செல்வைக்க கட்டுப்படுத்தமுடியாமல் மேலும் ஒருபகுதி நேர வேலையாக கடைக்கு கணக்கு எழுதும் வேலையும் செய்து வந்தான் . அவர்கள் ஊதியமாக சிறு தொகை கொடுத்தாலும் "சந்தோஷமாக " ஒரு மதுப்போத்தலும் கொடுத்துவிடுவார்கள் . கடையின் அத்தனை கணக்கு வழக்குகளும் வரிக் கட்டுபாடடாளரின் கண்ணுக்கு தடுப்படாமல் சுழியோடி கணக்கை கச்சிதமாய் வரவு செலவு .. காட்டி விடுவான் . இதனால் அந்த கடைத் த்தொகுதியில் மிகவும் பிரபலமானான் .. வேலை . களைப்பு என்று ஆரம்பித்த மதுப் பழக்கம் ..போதை மயக்கத்தில் மறு நாள் வேலைக்கு போகாமல் இருப்பது என்ற நிலைக்கு ஆளாக்கியது ..நாட்கள் கிழமைகளாக வேலைக்கு போக முடியாது இருந்தான் ... .காலப்போக்கில் குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்கள் ஆயினர். முதல் மூன்று பெண் குழந்தைகளும் அடுத்த அடுத்த வருடங்களில் பருவ வயதை அடைந்தனர் .மிகவும் கட்டுப்பாடான குடும்ப கஷ்டம் உணர்ந்த பெண் மக வுகளாய் . அவர்கள் அழகிலும் ஆண்டவன் குறை வைக்காத அளவுக்கு கண்ணுக்கு இனிய இளம் குமாரத்தி கள் ஆகி னார் வீட்டுக் கஷ்டம் உணர்ந்து ..பகுதி நேரமாய் ...பள்ளிப்பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து தமது சிறு தேவைகளுக்கு பணம் சேர்த்துக் கொள்வார்கள் ...தங்கள் ஒரே தம்பி யையும் கவனமாய் பார்ப்பார்கள் . கஷ்டங்கள் மத்தியிலும் கலாவதி ..சிறப்பாக வளர்த்தாள் . ஒரு முறை கடைப் ப குதிக்கு சென்றவன் ...தெருவில் வீழ்ந்து கிடப் ப தாக செய்தி வரவே காலாவதி அங்கு நோக்கி போகையில் தயராக இருந் அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி கொண்டு ...... வைத்திய நிலையம் சென்றார்கள் . அங்கு மூன்று நாட்களின் பின் வைத்திய அறிக்கையில் மிகவும்பலவீனமாக் இருப்பதாகவும் ஈரல் மிக்வும்பதிப்புள்ளதாகவும் வைத்தியர் தெரிவித்தால் ..இனி வருங்காலத்தில் மதுவகை பாவிக்க கூடாதெனவும் கண்டிப்பான கடடளையோடு வீடு நோக்கி அழைத்து வரப்ப படடான் ஒழுங்காக இருந்தவன் . சில வாரங்கள் கிறிஸ்ம்ஸ பண்டிகையின் போது ..நண்பர்கள் அழைக்கவே சென்று மது போதையில் வந்தான் . மறு நாள் ஒரே வாந்தி ...அவசர அம்புலன்ஸ் அழைத்து வைத்ய சாலையில் அனுமதித்தார்கள் ... ஒரு வா ரம் படுக்கையில் இருந்தவன் ..மி கவும் பலவீனமானான் எந்த மருந்துக்கும் கட்டுப்படாமல் போகவே ..ஒரு ஞாயிறு அதிகாலை காலமானான் . நான்கு பிள்ளைகளும் மனைவியும் கதற ..ஊர்வலர்களும் ஒன்று கூடி மரண அடக்கம் நடந்தது .... காலம் உருண்டோடியது .மூத்தவள் திருமண வயதை எட்டி விடடதால் தந்தையின் சகோதரி .. தான் வாழும் கனடா நாட்டில் ..தூரத்து உறவு முறையில் ஒரு திருமணம் பேசி ..முடித்தார் .. இரு வீடடை சார்ந்தவரும் தொலைபேசி வழியே .. ஒழுங்காக்கி .நாள் குறித்து ... பின் தொழில் நுட்பம் மலிந்த இக்காலத்தில் ஸ்கைப் ..முக புத்தகம்.. போன்ற இணைய வழித் ...தொடர்பில் மணமக்கள் பேசிக் கொண்டனர் ...இருவருக்கும் பிடித்து போக வே வரும் கோடை விடுமுறையில் மணமகள் இங்கு வந்து பதிவு செய்ய ... ஒழுங்காகியது . இதற்கிடையில் மண மக ளின் தாயின் சகோதரி ..மணமகன் உள்ள கனடா நா ட்டிற்கு அழைக்கவே வந்தவர், மணமகனின் வீட்டிற்கும் உறவினரால் அழைத்து செல்ல படடார் , சென்றார் ....உறவுகளும் வந்திருந்தனர்....அதன் பின் அவர்களின் ...திருமண முயற்சியில் ...சிறு தடங்கல் ... .மனம் ஒத்து போனாலும் தோற்ற பொருத்தம் சிறு ,,குறை யாக தென் படடது . மணமகன் 4'11" ஆகவும் பெண் 5'2" ஆகவும் இருந்தனர் .....இனி அவர்களின் தேர்வு மணமகள் சம்மதத்தில தங்கி இருந்தது ..... அவள் மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்கு சென்று ..விடடாள் . ஒரு வா ரம் ஆகியது பையன் அழை ப்புக்காக காத்துக் கொண்டு இருந்தான். பெண் தாயிடம் சென்று நடந்த்து .விபரித்தார் ... இதனால் வேறிடம் பார்க்கலாம் என் சொல்லிவிடடார் ..... மணமகள் தீவிரமாய் சிந்தித்தாள் .ஒரு வேளை மணமகன் என்னை மறுத்திருந்தால் என் மனம் என்ன பாடு பட்டிருக்கும் ..பெ ண்ணுக்கு ஒரு மனம் ஆணுக்கு வேறு மனமா .? ஆசை கள் நிராகரிக்க படும்போது ...மனம் வாடுகிறது ...எத்தனை யோ குறைபாடுள்ளவர்கள் வாழ வில்லையா ....உயரம் ஒரு குறையா ..இரு மனம் கலந்ததே திருமணம் ... மறு நாள் விடிந்தது ..... அம்மாவிடம் தன மூடிவைத்து தெரிவித்தாள் மக ள் ...நான் அவரைத் தான் திருமண செய்வேன் வேறு எவரையும் செய்யமாடடேன் என்றாள் தீர்மானமாக ..... நான் அவரோடு பேசி என் முடிவு சொல்ல போகிறேன் என்று ...தொலைபேசியில் அழைத்தாள் ...இந்த அழைப்புக்காகவே காத்திருந்த மணமகன் ....பேசினான் .......வார்த்தைகள் முடிவுகளாகி ..திருமணம் இனிதே நடந்தேறியது ..... ஒரு வருட இன்பமான வாழ்வில் அழகான பெண் குழந்தை கையில் ...ஒரு திருமண வீட்டில் சந்தித்தேன்.தம்பதிகள் ...இனிதே வாழ்க ..அவளுக்கென்றொரு மனம் ...அது ஆழமான அன்புள்ள ..நேசிக்க தெரிந்த உள்ளம். திருமணங்கள் நறு மணம் வீசி மலர்வ்து இனிய நல்மனம் கொண்ட மலர்களால் ... படித்த அழகான மெல்லிய மாநிறமாக மணமகள் தேவை என் விளம்பரம் செய்யும இக்காலத்தில் இப்படியான நல்ல உள்ளம் கொண்ட மணமக்களும் வாழ்கிறார்கள்
 21. 24 points
  கணனித் திரையில் தனது அம்மாவைப் பார்த்து என் மனைவி கதைத்தபோது, நாளை நான் இருப்பேனா இல்லையோ என்ற அவரின் வயதிற்கேற்ற கூற்று என்மனைவியை ஆதங்கப்படுத்தியதில் வியப்பில்லை. அந்த ஆதங்கம் 90 வயதைத் தொடும் தனது அம்மாவைக் காணவேண்டும் என்ற தவிப்பை மேலோங்கச் செய்தது. தாய்தந்தையரை இழந்துவிட்ட எனக்கும் என் மாமிதான் தாயாக விளங்கினார். மனைவி துன்பப்பட்டால் தீர்த்துவைப்பேன் என்று திருமணத்தின்போது அய்யருக்குக் கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வந்து, கூடவே விடுமுறையும் வரவே, துணைவியையும் அழைத்துக்கொண்டு பிறந்தமண்ணுக்குப் பறந்தேன். விடிந்ததும் எழுந்து யாழில் செய்திகள் பார்த்துக் கருத்துக்களும் எழுதும் எனக்கு இனிச் சிலவாரங்கள் அது முடியாதே என்ற கவலை எழுந்தது. கைத்தொலைபேசி பாவிக்கவும் தயக்கமாக இருந்தது. சூடுகண்ட பூனை அடுப்பங்கரை நாடாது என்பதுபோல், சென்றதடவை யாழில்நின்று ஐரோப்பா, கனடா என்று ‘வொய்ப் சீப்‘ மூலம் கதைத்தபோது கட்டணம் 0 என்று சொல்லியது. செலவில்லாமலே தொர்புகள்... கேட்கவேண்டுமா! தாரளமாக தினமும் கதைத்துவிட்டு யேர்மனிக்குத் திரும்ப வந்தும், நூற்றுக்கணக்கான யூரோக்களை ‘வூடபோன்‘ என்னிடமிருந்து புடுங்கிக்கொன்டது. விமானப் பதிவை மேற்கொண்டபின், மட்டக்களப்பில் மறைந்த என் நண்பரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கச் செல்லவேண்டும் என்ற கடமை உணர்வும் எழுந்தது. ஆகவே, கொழும்பு வந்ததும் நேராக மட்டுநகர் விரைந்தோம். பெண்னுக்கு முதலிடம் என்பதால் என் மனைவி பிறந்த மண்ணுக்குச் செல்லும் சந்தர்ப்பமும் தானாக அமைந்தது. சிலகாலத்திற்கு முன்பாக நாங்கள் இலங்கை சென்றபோது, வழி நெடுகிலும் ஆமியும், காவல்துறையும் மறித்து மறித்துச் சோதனை என்ற பெயரில் செய்த கெடுபிடிகள் போன்று இல்லாது இந்தத்தடவை இராணுவத்துக்குப் பதிலாகச் சிங்கள மக்கள் மறித்து மறித்துத் தாகசாந்தி செய்துகொள்ளுமாறு வரவேற்றுக் கிரிபத்தும் தந்து உபசரித்ததைக் காண வியப்பாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. அது அவர்களுடைய வெசாக் கொண்டாட்டத்தின் வெளிப்பாடு என்பதை அறிந்துகொண்டேன். அரசியலுக்குள் வந்த சிங்கள அதர்மிகள் பதவியை அடைவதற்காக இனப்பிரச்சனையை ஊதிப் பெரிதாக்கி இலங்கையில் கலவரத்தை ஏற்படுத்தாது இருந்திருந்தால் இன்று சிங்களரும் தமிழரும் ஒன்றாக இணைந்து தங்கள் கொண்டாட்டங்களை எத்துணை மகிழ்வோடு கொண்டாடி மகிழ்ந்திருப்பார்கள் என்ற எண்ணத்தை அந்த வரவேற்பு ஏற்படுத்தியது. மட்டக்களப்பு நகரின் மாற்றம் என்னை அதிசயிக்க வைத்தது. அங்கு குச்சொழுங்கைகள் எல்லாம் அத்துப்படியான எனக்கு, கோட்டைமுனைப் பாலத்திற்குச் செல்வதற்கே வழிதேடவேண்டி இருந்தது. ஆற்றின் இருமருங்கிலும் பெரும் பெரும் கட்டிடங்கள் கொண்ட விற்பனை நிலையங்கள் பெரும் பட்டணம்போல் காட்சிதந்தது. அனேகமானவை முசுலீம்களுக்குச் சொந்தமாக மாறியிருந்தன. மட்டுநகரின் பிரதான வீதிகளூடாகச் செல்லும்போது, முசுலீம்கள் வாழும் நகரங்களின் இருபக்கங்களும் கடை கண்ணிகளும், தமிழர்வாழும் நகரங்களின் இருபக்கங்களிலும் அனேகமாக ஆலயங்களும், வீடுகளும் வெற்றுக் காணிகளுமாகக் காணப்பட்டன. மட்டக்களப்பு செல்பவர்கள் விசேடமாக வாங்கிச்செல்லும் பொருட்களில் முக்கியமானது தயிர். தயிரும், முந்திரிப்பருப்பும், அரிசியும் வாங்கி நாங்கள் பயணித்த சிற்றூர்தியில் ஏற்றிவிட்டு, மீன்பாடும் தேன்நாட்டில் தேன்வாங்கும் எண்ணமும் எழுந்தது. பனிச்சம்கேணித் தேன் சிறந்தது, சுவையானது போகும் வழியில் அங்கு வாங்கலாம் என்ற சாரதியின் அறிவுரையைப் பின்பற்றினோம். மிகுதி தேன்வாங்கிச் சுவைத்த பின்பு.
 22. 24 points
  கனடாவில் இசைக்கலைஞன் மீது கொலைவெறித் தாக்குதல் சித்திரை 15, 2015 கனடாவில் வசித்து (குப்பைகொட்டி) வருபவர் இசைக்கலைஞன் என்பவர். இவர் வேலை, அது இல்லாவிட்டால் வீடு, யாழ்களம் என்று தன்பாட்டுக்கு பொழுதை ஓட்டிக்கொண்டு இருப்பவர். யாருடைய வம்புக்கும் போகாதவர். இவருக்கு தமிழகத்தின் கோவை நகரில் ஒரு சீடர் மட்டும் உள்ளார். இப்படிப்பட்ட ஒரு அப்பாவியின்மீது அண்மையில் ஒரு பெண் கொலைவெறித் தாக்குதல் ஒன்றை நிகழ்த்தியுள்ள விடயம் கனடாவில் பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பெண் ஆதி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. நிலையான ஒரு இடத்தில் வாழாமல் அங்கும் இங்கும் சென்றுவரும் நாடோடி வாழ்க்கையை வாழ்ந்து வருபவர். சம்பவம் குறித்து காவல்துறையினர் அறிந்துகொண்ட விபரங்கள் பின்வருமாறு. அப்பாவி இசைக்கலைஞன் வீட்டில் புத்தாண்டு தினத்தை கொண்டாட முடிவெடுத்துவிட்டதால் வேறு வழியின்றி மருத்துநீர் பெறுவதற்காக கனடா கற்பக விநாயகர் கோயிலுக்குச் சென்றுள்ளார். அன்று பயங்கரமான மழை கொட்டியதால் அதிக மக்கள் நடமாட்டம் இருக்கவில்லை. மழைக்கு ஒதுங்கி கட்டடத்தின் ஓரமாக சென்றுள்ளார் பாதிக்கப்பட்டவர். அந்த இடத்தில்தான் கொலைவெறித்தாக்குதல் நடத்திய பெண் ஒளிந்துகொண்டு இருந்துள்ளார். இதைக் கவனியாது, சித்தன்போக்கு சிவன் போக்கு என்று சென்று கொண்டிருந்த வாலிபரைக் கண்ட சம்பந்தப்பட்ட பெண் தனது குழந்தையை திருட வந்த திருடன் என்று நினைத்து கொலைவெறித் தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளார். அருகில் வரும் வரையில் பொறுத்திருந்து நெஞ்சில் மூர்க்கமான ஒரு தாக்குதலை மேற்கொண்டபோது பாதிக்கப்பட்டவர் நிலைகுலைந்து என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் ஒருகணம் விளித்துக்கொண்டு நின்றார். தாக்குதலை நடத்திய பெண் அந்தப்பக்கமாக நிலையெடுத்து, 'மோதிப்பார்க்கலாம் வரியா..' என்று தலையை ஆட்டியுள்ளார். சாதாரணமாக விருந்தாளி வீட்டுக்குள் நுழையவே பத்துத்தரம் யோசிக்கும் இசைக்கலைஞனால் ஊடு கட்டியெல்லாம் அடிக்க முடியுமா? நைசாக அந்தப்பக்கமாக தள்ளி 20 அடி சுற்றி அந்தப்பக்கமாகப் போய்விட்டார். முறுகலை தவித்துக்கொண்ட இவரது செயலை காவல்துறை பாராட்டுகிறது. தாக்குதலுக்கு உள்ளானாலும்கூட மருத்து நீர் பெறுவதில் குறியாக இருந்த இசைக்கலைஞன் கோயிலுக்குள் சென்று (அங்கு ஏற்கனவே மருத்து நீர் எடுத்துக்கொண்டு நின்ற ஃபிகரை சைட் அடித்து வழிந்துவிட்டு ) வெற்றிகரமாகத் திரும்பிவந்தார். தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பிய இவரின் செயலை காவல்துறை வெகுவாகப் பாராட்டுகிறது. அதே சமயம் தாக்குதலில் ஈடுபட்ட பெண் தலைமறைவாகியுள்ளார். சந்தேகத்துக்கிடமான பெண் எவரையும் கண்டால் காவல்துறையிடம் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். அண்மையில் திருட்டு வழக்கில் கைதான பெண் ஒருவரின் படம் வெளியானதால் யாழ்களத்தில் பயங்கர கலகம் ஒன்று ஏற்பட்டிருந்தது. அவ்வாறான ஒரு கலகம் மறுபடியும் ஏற்படுவதை ஒன்ராரியோ காவல்துறை விரும்பவில்லை. ஆகவே, சந்தேக நபரின் புகைப்படத்தை மறைத்து வெளியிடுகிறோம். Spoiler
 23. 24 points
  அனைவருக்கும் வணக்கம், தமிழீழம் என்ற இலட்சியப் பயணத்தில் உயிர் நீத்த அனைத்து உறவுகளையும் இத்தருணத்தில் நினைவு கூர்ந்து கொண்டு மீண்டும் புதியதோர் ஆண்டில் யாழ் இணையம் நுழைகின்றது. ஆம்! யாழானாது 16 ஆண்டுகள் கழித்து தனது 17வது அகவையில் காலடி எடுத்து வைக்கின்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் சவால்களும் நெருக்கடிகளும் வந்தபோதும் அவை அனைத்தையும் தாண்டி யாழானது தொடர்வதற்கு யாழ் கள உறுப்பினர்களினதும் வாசகர்களினதும் அன்பும் ஆதரவுமே முக்கிய காரணங்கள் என்பதை நினைவில் கூருகின்றோம். யாழானது தனது கால ஓட்டத்தில் எம்மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்து கொண்டு வருவதுடன், பல எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் உருவாக்கியும், ஊக்குவித்தும், மற்றும் இலைமறைகாயாக இருந்தவர்களை வெளிக் கொணர்ந்தும் உள்ளது எனும் செய்தியினையும் சொல்லிக் கொண்டு, வருங்காலத்திலும் அந்தவகையிலேயே யாழானது தனது பணிகளைத் தொடரும். அத்துடன் மேலதிகமாக சில புதிய செயற்திட்டங்களையும் செய்யத் தீர்மானித்துள்ளது. வெறுமனே கருத்துக்களுடன் நிற்காது இனி வருங்காலத்தில் செயலிலும் எம்மக்களுக்கான பொருளாதார உதவிகளைச் செய்து கொள்ள விரும்புகின்றோம். அந்த வகையில் சில திட்டங்களை இங்கு குறிப்பிடுகின்றோம். யாழ் கள உறுப்பினர்களின் ஆலோசனைகளையும் உள்வாங்கி இத்திட்டங்கள் மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். ஆகவே உறுப்பினர்கள் அனைவரும் உங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். இது சம்பந்தமாக பல உறுப்பினர்கள் பல தடவைகள் கருத்துக்களையும் பதிவு செய்தும் உள்ளார்கள்; தவிர நேரடியாக கேட்டும் இருக்கின்றார்கள். எம் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட யாழின் இணையத்தின் திட்டங்களை யாழ் உறுப்பினர்கள் மட்டுமே பார்வையிட முடியும். நிறைவாக, எமக்கு பலமாக இருக்கும் யாழ் இணைய உறவுகளுக்கு எமது அன்பையும் நன்றியையும் நாம் தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல் யாழ் இணையத்தை மெருகேற்ற எமக்கு ஆலோசனைகளை வழங்கிவரும் அன்புள்ளங்களுக்கும் இந்த நேரத்தில் எமது நன்றியைச் சொல்ல விரும்புகிறோம். மற்றும் கருத்துக்களத்தில் மட்டுறுத்தல் பணியில் இணைந்து, தமது நேரத்தை அதற்காய் செலவிடும் மட்டுறுத்துனர்களுக்கும் எமது நன்றி. எமது மண்ணோடும், எமது மக்களோடும் நாம் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாய், துணையாய் ஒற்றுமையாய் பயணிப்போம். எம்மக்களின் துயர் துடைக்க ஒரு சிறு துளியாகினும் பொருளாதார ரீதியில் கைகொடுப்போம். நன்றி. யாழ் இணைய நிர்வாகம்
 24. 24 points
  கணவன் கடிந்து கொண்டான் மனைவியை எத்தனை தடவை சொன்னேன், அந்த கறுப்புப் பை கவனம் என்று மனைவி கவலைப்பட்டாள், அடடே அவர் சொல்லியும் நான் மறந்து விட்டேனே... காதலன் இறுக ஒரு முறைஅணைத்துக்கொண்டான் அவளோ அவன் இதழில் அழுத்திப் பதித்தாள் இன்னும் 10 நாட்கள் கடற்கரையில் உன்னை என்னசெய்கிறேன் பார் ரகசியம் பேசினாள் ... இன்னும் ஒருவன் கண்ணாடியை சரிசெய்து கொண்டு தொலைபேசி செய்தியில் மூழ்கிப் போனான் நாளைய நாள் கண் முன்னே நடமாடியது, அலுவலகத்தில் முக்கிய மூன்று சந்திப்பு, நண்பனை காண வேணும், பழைய கதைகள் பேச வேணும் அவன் விரும்பும் மதுப் புட்டி வாங்கவேணும் ... முதியவர் மனதுக்குள் பேசிக்கொண்டார், நேரத்துக்குப் போய்விட்டால் மகனுக்கு சுலபம் மருந்துகள் வாங்கவேணும், மனைவியும் பாவம், பேரக் குழந்தைகளை கவனிப்பதே அவள் வேலை அடுத்த வாரம் அவளை முருகனிடம் அழைத்துப் போகவேணும், உடைந்த மூக்குத்தியும் மாற்றவேணும் ... பாதிரியார் வந்தவரைய் பார்த்து முறுவலித்தார், கையில் இருந்த பைபிளில் தொலைந்து போனார் 26 அநாதை சிறுவர்கள், யார் யார்க்கு என்ன தேசமோ கவலையானார், இது பெரும் பொறுப்பு தான் நல்லபடியாக எல்லாம் அமைய வேணும் யேசுவே, கண் கலங்க மனதுக்குள் மன்றாடினார்... சிறுவன் கணணி விளையாட்டில் சாப்பிட மறுத்தான், அன்னை சலித்துக்கொண்டாள் அப்பாவிடம் சொல்லி உன்னை என்ன செய்கிறேன், பார் சிறுவனுக்கு பயம் காட்டினாள் அப்பா சிறுவனிடம் பாசமாக கெஞ்சினார், முதலில் சாப்பாடு அதன் பிறகு தான் விளையாட்டு ... உயரமாய் தெரிந்தவர் சிறுநீர் கழிக்க வரிசையில் போய் நின்றார், சாப்பாடு சுவையாய் இல்லை நொந்து கொண்டார் எதிரே இருந்த இளம் பெண்ணை பார்த்து ஆனந்தமானார், என்ன அழகு இவள் 24 இருப்பாளா ? பள்ளி நாட்களில் பழகிய ஒருத்தி, இவளை போலதான் இருப்பாள், பழைய நினைவோடு சிறுநீர் கழித்தார் ... யாரோ ஒருத்தி தலைக்கு மேல் இருந்த பெட்டியை தட்டி தடவி இறக்கிக்கொண்டு இருந்தாள் அதை இங்கு தான் வைத்தேனா, இல்லை பெரிய பெட்டியில் போட்டேனா, தலையை சொரிந்தாள், போன மாதம் வாங்கிய புகைப்பட கருவி, கொஞ்சம் கவலையானாள், எங்கும் போகாது காலையில் தேடுவோம் நினைத்துக்கொண்டாள்... கைக் குழந்தை சிணுங்கிற்று, அம்மா புட்டியில் பாலை ஊற்றி வாயில் திணித்தாள் குழந்தை அமிர்தம் கண்டது, அன்னையை பார்த்து கண்ணை சிமிட்டியது, பால் வெளியே வழிந்தது அன்னை குழந்தை முகத்தை கொஞ்சினால், தடவினாள் , கனவுகளோடு சஞ்சரித்து தூங்கிப் போனார்கள்.. அழகிய அந்த பெண் கள்ளம் கபடம் இல்லாமல் சிரித்தாள், ஓடி ஓடி உபசரித்தாள், சுத்தம் செய்தாள் குழந்தைகளுக்கு பரிசு தந்தாள், முதியவருக்கு போர்வை தந்தாள், விளக்கை அணைத்து வணக்கம் சொன்னாள், இன்னும் ஏதும் வேணுமா என்று திரும்ப கேட்டாள், அயர்ச்சியோடு பணிவிடை செய்தாள் .. ஒருவன் வக்கீல், ஒருவன் நோயாளி, ஒருவன் ஆசிரியன், ஒருவன் படைப்பாளி... ஒருத்தி மணப் பெண், ஒருத்தி கர்ப்பிணி, ஒருத்தி சினிமா பிரபலம், ஒருத்தி மூதாட்டி ... அவர் அவர் வாழ்க்கை, இயந்திரமாய் கரையும் பொழுதுகள், எல்லோரும் நல்லவரே ... எங்கோ ஒரு தேசம், இருள் சூழ்ந்த நேரம், தூரத்தில் இரைச்சல், இவன் தான் முதலில் அவதானித்தான் சிறிதாய் வெளிச்சம், அதுவாய் இருக்குமோ, பரபரப்பானான், செய்தி அனுப்பினான் அங்கே தாடியோடு இருந்தவன் சுருட்டை பற்ற வைத்தான், உள்ளே இழுத்து வெளியே புகையை விட்டான் உனக்கு பாடம் நான் போதிப்பேன் இன்று, மனதுக்குள் கருவிக்கொண்டான், எழுந்து சென்று கட்டளை இட்டான், இயந்திரங்கள் முடுக்கப்பட்டன, 300 கனவுகளை சுமந்து வந்த மலேசிய பட்சி நான் .. சின்னத் திரையில் தெளிவாய் முடக்கப்பட்டேன் உஷ்ணம் உணரப்பட ஒளிக் கீற்றுகள் சீரிப்பாய மரணத்தின் வாசனை மண்ணை தொட்டது, அனர்த்தம் நிகழ்ந்தது, அனைத்தும் அதிர்ந்தது அவள், அவன், பெரியவர், பாதிரி, குழந்தை, காதலன் .... எல்லோருக்கும் ஒரே புள்ளியில் அஸ்தமனம், நான் புள்ளியாய் சிறு புள்ளியாய் பஸ்மம் ஆகிறேன் மீண்டும் ஒருமுறை செய்தியாய் மாறுகிறேன்.. "Missile downed Malaysia Airlines" CNN, BBC அலறுகிறது!!
 25. 23 points
  பனிக்காலத்தில் வீட்டு வளவுக்குள் அதிகமாக போவதில்லை,அன்று நல்ல வெய்யில் அடிச்சுது ஒரு கோப்பியை போட்டுகொண்டு வெளியால வந்து தோட்டத்து கதிரையில் குந்தினேன்.வீட்டினுள் இருந்த வெப்பநிலையை விட வெளியில் மிகவும் இதமாக இருந்தது. எம்.ஜி. ஆர் காலத்து வாழை தண்டு போலஉடம்பு ஆளே,மடவாழை பாடல்களை முனுமுனுத்தபடி சீனியில்லா கோப்பியை ரசித்து குடிக்கதொடங்கினேன். 'வேதாளம்,வேதாளம்' என சத்தம் கேட்டுது.அக்கம் பக்கம் திரும்பி பார்த்தேன் ஒருத்தரையும் காணவில்லை. 'மரமண்டை,மரமண்டை' கிழக்கு பக்கத்தில இருந்து வந்திச்சு திரும்பி அந்த பக்கத்தையும் பார்த்தேன் ஒன்றையும் காணவில்லை. முதல்நாள் அடிச்ச தண்ணியின் வேளை போல கிடக்கு பெரும் குடிமக்கள் இதைதான் கங்கோவர் என்று சொல்லுறவங்களாக்கும் என நினைத்தபடி கோப்பியை குடித்தேன்.... 'வேதாளம்,மரமண்டை' என்ன மரம்மாதிரி நிக்கிறாய் என கோரோசா சத்தம் கேட்டுது. கோப்பி கப்பை கதிரையில வைச்சுப்போட்டு பக்கத்து சீனாகாரன்வீட்டு ,முன் வீட்டு, பின் வெள்ளைக்காரன் வீட்டு வளவுகளை எட்டிபார்த்தேன், ஒருத்தருமில்லை. மனிசி மனசுக்குள் திட்டினாலும் நிச்சயம் இப்படி வெளிப்படையாக திட்டாமாட்டாள் என்ற நம்பிக்கை இருந்தாலும் அவளையும் ஒருக்கா போய் பார்ப்போம் என உள்ளே சென்றேன் அவள் சமையல் செய்துகொண்டிருந்தாள். மீண்டும் சீனியில்லா கோப்பியை குடிக்க தொடங்கினேன் "அடே வேதாளம் ,நீ ஊரில இருந்துதானே வந்தனீ.....உனக்கு என்ட உசரம் ,சுற்றளவு ஒன்றும்தெரியாதோ.....உனக்கு குளிர் என்றால் கம்பளி ஆடையை போடுவாய் ,வெய்யிலென்றால் அம்மனமாய் திரிவாய் அதுதான் ஸ்டைலென்று வேறு புலம்புவாய்.....ஆனால் நாங்கள் அப்படியில்லை " "மாங்காய்மண்டை ,சீனியில்லா கோப்பி குடிக்கிற உன்னைதான்டா,கடத்தல் மன்னன்....உவங்கள் அவுஸ்ரேலியா காரங்கள் நீங்கள் களவாய் வந்து குடியேறுவியள் என்று பல சட்டங்களை இயற்றி தடுக்கிறாங்கள் ,அதேபோல எங்களை உள்ளவிடுவதற்கும் பல சட்டங்களை உருவாக்கி கட்டுப்படுத்துகின்றார்கள் ஆனால் நீ .உள்ளாடைக்குள் சுற்றி அவங்களை உச்சிப்போட்டு எங்களை கடத்தி கொண்டுவந்து படுத்துற தொல்லை தாங்க முடியல்ல.... .என்னை கடத்தி உன்ட கூட்டாளிமாருக்கு பிலிம் காட்டுறதைவிட கஞ்சாவை கடத்தியிருந்தால் நீ இன்று கோடிஸ்வரன்.... 'கஞ்சாவையா.....என்ட சிவனே' டேய்,டேய் ஏன்டா சும்மா இருக்கிற அந்த மனுசனை இதுக்குள்ள இழுக்கிறாய்.என்னை பொறுத்தவரை சட்டவிரோதமாய் எதை செய்தாலும் குற்றம்தான் " உன்ட ஊரில என்ட பரம்பரை எப்படி வாழ்ந்தது என்று உனக்கு தெரியும்தானே.எங்கன்ட இஸ்டத்திற்கு வளர்ந்து ,பருத்து பூத்து குலுங்கி காய்த்து கனியாகி பழமாகி எல்லோர் வாயிலும் இனித்து பேசு பொருளாக இருந்த எங்களை ஏன்டா கடத்தி கொண்டுவந்து தொல்லை தருகின்றாய். ஐந்து வருடத்திற்கு முதல் பூச்சாடி ஒன்றில என்னை புதைத்துவிட்டாய் கோடை காலம் என்றபடியால் நானும் விபரம் தெரியாமல் முளைத்துவிட்டேன்.பூச்சாடியில் பூமரங்கள்தானே வைப்பார்கள் நீ ஒருத்தன் தான் பூச்சாடியில் மாமரம் வைத்த புலம்பெயர்ந்த புண்ணாக்கு. ஆறு மாதக் கோடையில் பூச்சாடியை வெளியே எடுத்து வைத்து மீண்டும் குளிர்காலம் என்றவுடன் உள்ளே எடுத்து வைத்து முதல் இரண்டு வருடமும் தொல்லை கொடுத்தாய் இதைப்பார்த்து பக்கத்து வீட்டு மேரி காரணம் கேட்டதற்கு ,இந்த நாட்டு காலநிலைக்கு ஏற்றவகையில் இயயைபாக்கமடைவதற்காக அப்படி செய்வதாக சொல்லி அடுத்த வருடம் வீட்டு வளவு மூலையில் நட்டுவிட்டாய்.நான் வளரக்ககூடிய வளவாடா உன்ட வீட்டு வளவு. என்னை கடத்திகொண்டு வந்து கிட்டத்தட்ட ஆறு வருடமாச்சு ஒரு மீற்றருக்கு மேல வளரவில்லை.பனி,குளிர்,வெய்யில் இதெல்லாம் தாங்கி வாழ்ந்து கொண்டுருக்கிறேன் .இந்த கொடுமைகளை தாங்கி கொள்ளலாம் ஆனால் நீ நண்பர்களுடன் என்னை பற்றி பேசும் பேச்சுக்களை கேட்டு தாங்கமுடியாமல் இரத்தக்கண்ணீர் வடிக்கிறேன்டா... கடந்த ஆண்டு இரண்டு காய்கள் என்னால் உனக்கு தர முடிந்தது ,அதில் ஒன்று அழுகிவிட்டது மற்றது கனியானது.அதை நீ படம் எடுத்து முகப்புத்ததில் போட்டவுடன் உன் நண்பர்கள் உன்னிடம் என்னை பற்றி விசாரிக்க நீ அவர்களுக்கு விட்ட புளுகை நினைத்து நான் வெந்து வெதும்பி போனேன்டா. உன்ட ஊர் கறுத்தகொழும்பான் நான் என்றும் அதே சுவையுடன் இருக்கிறேன் என்று சொன்னீயே அதுதான்டா என்னால் தாங்கமுடியவில்லை.அடே இந்த பனிக்கும்,வெய்யிலிலும் எப்படி உனக்கு நான் உன்ட ஊர் கறுத்த கொழும்பானின் சுவையை தரமுடியும். நீயே உன்ட கலாச்சாரத்தை பண்பாட்டை,மொழியை இழந்து நிற்கிறாய்,காரணம் கேட்டால் சொல்கின்றாய் நாட்டுக்கு ஏற்ற மாதிரி வாழ வேண்டும் எண்டு....ஆனால் நாங்கள் மட்டும் அதே சுவையுடன் இருக்க வேண்டும் என நினைக்கின்றாய் ,தப்பட தம்பி தப்பு....... டேய் வேதாளம் ,சின்ன வயசில வேதாளம் முருங்கை மரத்திலெறிவிட்டது என அம்புலிமாமா கதைகள் உனக்கு சொல்லிதந்தவர்கள்தானே. உன்ட ஊர் வரன்ட பிரதேசம் அங்கு முருங்கையாகிய நான் நல்லாய்வளர்வேன் என்பது உனக்கு தெரிந்த உண்மை பிறகு ஏன் என்னை இந்த ஈரப்பதாமான நாட்டில் பரப்ப முயற்சிக்கிறாய்.... டேய் கறி! ஊரில நீ என்னை திரும்பியும் பார்க்கிறதில்லை,சாப்பாட்டுக்கோப்பையில் ஒரு கரையில தூக்கி வைத்துவிட்டு குப்பையில் எறிந்துவிடுவாய் ஆனால் இங்கு என்னை ஒரு மூலிகை மாதிரிபாவிக்கின்றாய்.நீரழிவுக்கு வியாதிக்கு கறுவேற்பிள்ளை நல்லம் என்று விளம்பரப்படுத்துகின்றாய்,ஆராச்சி செய்தா இந்த முடிவுக்கு வந்தாய் ?யாரொ சொன்னதை கேட்டு நீ ஒரு மருத்துவன் மாதிரி கதை விடுகின்றாய்.யாராவது பெண்கள் வந்தால் கொத்துக்கொத்தாக என்னை உடைத்து அவர்களிடம் கொடுப்பதுமட்டுமல்லாமல் எனது கன்றுகளையும் பிரித்துதெடுத்து அந்த பெண்களிடம் கொடுத்து நீ இன்பம் காண்கின்றாய். நீ சைட் அடிக்க நான் தான் கிடைத்தேனா? .ஊரில வீடு சின்னது வளவு பெரியது.ஆனால் இங்கு வளவு பூராவும் வீட்டை கட்டி வைச்சுப்போட்டு ஒரு சின்ன காணித்துண்டில,மா,பிலா முருங்கை,பப்பாசி ,கறி வேற்பிள்ளை எல்லாம் வைக்கவேண்டும் என நீ ஆசைப்படுகிறாய் ,ஆனால் எங்களுக்கு ஏற்ற கால நிலையா என்று சிந்தித்து பார்த்தாயா?உன்னால் உன்னுடைய கலை,கலாச்சரம்,பண்பாடு ,வழிபாட்டு முறைகள் எல்லாம் மாற்ற முடியும் ஆனால் எங்களால் மாறவும் முடியாது மாறவும் மாட்டோம் .உங்கள் பரம்பரை பணத்திற்காகவும்,புகழுக்காகவும் உலகில் எதையும் செய்யும் ஆனால் நாங்கள் அப்படியில்லை.....எங்களை சுதந்திரமாக வாழவிடுங்கோடா....உங்கன்ட இஸ்டத்திற்கு எங்களை மாத்தாதைங்கோட.......பிளிஸ் please leave us alone...சா...எவ்வளவு அழகாக தமிழில்பேசின என்னை இங்கிலிசில பேச வைச்சீட்டிங்களடா..... கறுப்பு வெள்ளை காகம் ஒன்று எனது தலையில் ஒரு கொத்து கொத்திவிட்டு பக்கத்திலிருந்த கோப்பியை தட்டிவிட்டு பறந்து போனது.திடுக்கிட்டு முழித்தேன் ஒரு 10 நிமிடம் பகல்கனவு கண்டிருக்கிறேன் என்று புரிந்து கொண்டேன்...
 26. 23 points
  இது ஒன்றும் பயண அனுபவமோ அல்லது பயணக் கட்டுரையோ அல்ல, இப்படி ஒரு இடம் இருக்கிறது இங்கு போய் வந்தேன் என உங்களுக்குச் சொல்வது தான் நோக்கம் . இம்முறை வசந்த கால விடுமுறைக்கு இத்தாலியின் கடற்கரை நகரங்களில் ஒன்றான ஜேசலோவிற்கு ஒர் ஐந்து நாள் பயணம் போய் வந்தோம். பயணத்திற்கான நோக்கம் பெரிதாக ஒன்றுமில்லை வீடு , வேலை, மன அழுத்தங்கள் எல்லாவற்றையும் மறந்து சில நாட் கள் ஒய்வெடுப்பது தான் நோக்கம்.எனது வேலை இடத்து நண்பன் ஒருவர் ஐந்தாறு தடவைகள் ஜேசலோவிற்கு சென்று வந்தது ஜேசலோவினை தெரிவு செய்தமைக்கான காரணமாக இருந்தது அத்துடன் எனது வீட்டிலிருந்து 600 km தூரத்திலிருந்ததும் ஒரு காரணம் எமது வீட்டிலிருந்து காரில் பயணம் 600km தூரம் ஏறத்தாள 7 மணித்தியாலப் பயண நேரம். சிறுவர்களுடன் பயணம், கடைசி மகளுக்கு 1 வயது, எப்படியும் பால் குடுக்க , பம்பர்ஸ் (நப்பி) மாற்ற என இரண்டு மூன்று தரிப்புகள் எடுக்க வேண்டி வரும், போக்குவரத்து நெரிசலும் ஒரு பெரிய பிரச்சனையாக வாய்ப்பு உள்ளது. எனவே பயண நேரம் 9 மணி நேரமாக இருக்கும் எனத் திட்டமிட்டு காலை 4 மணிக்கு புறப்படுவதாகத் திட்டமிட்டோம், பயணத்திற்கு முதல் நாள் காருக்கு ஓயில், தண்ணீர், ரயரின் காற்றழுத்தம் எல்லாம் சரி பார்த்துக்கொண்டேன் . இத்தாலி யில் பெருந்தெருக்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் பணமாகச் செலுத்தலாம், ஆனால் விடுமுறை காலங்களில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டி வரும் என எனது வேலைத்தள இத்தாலி நண்பன் எச்சரிக்க ,கார்ட்டில் செலுத்த முடிவெடுத்தேன், எல்லா இடங்களிலும் கடனட்டை பாவிக்க விருப்ப மில்லாததால் . இங்கே TCS இல் இத்தாலி பெருந்தெருக்களுக்கு கட்டணம் செலுத்த வியாகாட்(VIA CARD) என ஒன்று விற்பதாக அறிந்து 50 யூரோவிற்கு ஒரு வியாகாட் வாங்கிக் கொண்டேன். திட்ட மிட்ட படியே காலை 4 மனிக்கு புறப்படக்கூடியதாக இருந்தது மனைவி தான் பாவம் அதிக வேலைச் சுமை நான் 11.00 மணிக்குப் படுக்கச் செல்ல , அவர் தான் கடைசி நேர ஒழுங்குகளை யெல்லாம் பூர்த்தி செய்து 12.00மணிக்குப் படுத்து 2.30 மணிக்கு எழும்பி பிரசாக பானெல்லம் அவனில் போட்டு தேனீர் போட்டு என்னை 3.15 க்கு எழுப்ப நான் குளித்து தேனீர் குடித்து பான் எல்லாம் ஒரு கட்டு கட்டி மனைவியுடன் சேர்த்து பிள்ளைகளிருவரையும் தயார் படுத்தி காரில் ஏற 4.15 ஆகியது கார் புறப்பட இரண்டு திட்டங்கள் மனதில் ஓடியது சுவிசின் டொச் மொழி மாநிலங்களையும் சுவிசின் இத்தாலி மொழி மாநிலமான டிச்சினோ (Ticino ) வையும் பிரிக்கும் அல்ப்ஸ் மலைகுகையான 17 Km நீளமான "கொட்டார்ட்" குகையையும் , சுவிஸ் - இத்தாலி போடரினையும் எந்தவித போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் கடப்பது , என்பதே அது மனைவியும் இரு பிள்ளைகளும் காரில் பின்னாலேயே இருக்க நான் தனியே முன்னே . மனைவியும் , கடைசி மகளும் கார் புறப்பட்டு 10 நிமிடத்திலேயே நித்திரைக்குச் செல்ல மூத்த மகள் என்னுடன் கதைத்துக் கொண்டே வந்தா. அவருடன் கதைத்துக்கொண்டே காரும் சுவிஸ் கிராமங்களை மெல்லிருட்டில் கடந்து கொண்டிருந்தது..., நேரமும் 5.00 மனியை நெருங்க சூரிய கதிர்களும் வெளியே கசியத்தொடங்கின சற்றே காரின் வேகத்தைக் கூட்டி ஹைவேயைத் தொட்டு "கொட்டார்ட்" குகையை நெருங்க டிரபிக்கும் கூடியிருந்தது . கொட்டார்ட் குகை 17 km நீளமானது தரையிலுள்ள வாகனப்போக்குவரத்திற்கான குகைகளில் உலகிலேயே நான்காவது நீளமானது (முதலாவது நீளமான குகை(24.5 km) நோர்வேயிலுள்ளது) கொட்டார்ட் குகை யினுள் இரு வழிப் பாதை மாத்திரமே உள்ளது போக ஒன்று வர ஒன்று , ஹைவே யில் இரண்டு ட்ரெக்கில் வரும் வாகனங்கள் குகைக்கு வெளியே நிறுத்தப்பட்டு ஒரு ட்ரெக்கினூடகவே உள்ளே அனுமதிக்கப்படும் இதனால் குகைக்கு வெளியே ட்ரபிக் அதிகமாகும் விடுமுறை கால மென்றால் சொல்லத் தேவையில்லை கொட்டார்ட் குகை எவ்வளவு முயற்சி செய்தும் ட்ரபிக்கில் மாட்ட வேண்டி வந்து விட்டது . மெதுவாக உருண்டு கொண்டிருந்த கார் இப்போது நிற்க வேண்டி வந்து விட்டது. வீட்டிலிருந்து புறப்பட்டதுக்கு 2 மணித்தியாலம் கழித்து முதன் முதலில் கார் நிற்கிறது. மெதுவாக காரின் முன் பக்க ஜன்னல்கள் இரண்டையும் திறக்கின்றேன் அல்ப்ஸ் மலைகளினூடே தவழ்ந்து வந்த மெல்லிளங் குளிர் காற்றலைகள் என் முகத்தில் அறைந்து களைப்பை அள்ளிச் செல்கின்றன...., அதிக நேரம் எடுக்கவில்லை ஒரு அரை மணித்தியாலமே டிரபிக்கில் நிற்க வேண்டி வந்தது. ... இப்போது மெதுவாக ஊரத் தொடங்கிய கார் வேகம் பிடித்து 80 km/h இல் "கொட்டார்ட்" குகையினுள் நுழைகிறது இனி 17 km தூரத்திற்கு குகை தான்.... குகையின் அரைவாசித் தூரம் கடந்ததும் சுவிஸ் சின் டொச் மொழி மாநில எல்லை முடிந்து சுவிஸ் இத்தாலி மொழி மாநில எல்லை வரவேற்கிறது.... குகை முடிந்து சிறிதுதூரம் செல்ல 80 km/h வேக எல்லை முடிய , காரும் சுவிஸ் ஹைவேயின் அதி கூடிய வேக மான 120 km/h இனைத்தொடுகிறது.. இடையில் ஒர் ஹைவே எரிபொருள் நிலையம் தென்பட ஒரு எஸ்பிரசோ குடித்தால் நல்லா இருக்குமென மனம் நினைக்க ...., சுவிஸ் எல்லையை விரைவில் கடக்க வேண்டும் என்ற நிலையில் அடுத்த 100 km இனையும் நிற்காமல் ஓடுவதென முடிவெடுத்து நான் வேகம் பிடிக்க மற்றய பெரும்பாலான கார்கள் வேகம் குறைத்து ட்ரக் மாற்றி ரெஸ்டுரன்டை நோக்கி நகர்ந்தன.... ,அவை பெரும் பாலும் ஜேர்மனி,நெதர்லாந்து, பெல்ஜியம் கார்களாகவே காணப்பட்டன....., அவர்கள் சில வேளை அதிகாலை ஒருமணி, இரன்டு மணிக்கு வெளிக்கிட்டிருப்பார்கள் அவர்களுக்கு ஒரு பிரேக் தேவைப் பட்டிருக்கும், இப்போது காலை சூரிய வெளிச்சம் நன்கு பரவியிருக்க சுவிஸ் நாட்டின் ஒரெயொரு இத்தாலி மொழி பேசும் மாநிலமான டிச்சினோ இதமாக சூரியக்குளியல் செய்து கொண்டிருந்தது ஹைவேயில் அதிகளவில் வாகனங்கள் காணப்பட்டாலும் எல்லா வாகனங்களும் 120 km/h இலேயே போய்கொண்டிருந்தன இது மிகவும் ரசிக்கக் கூடியதாக இருந்தது. சுவிசிலுள்ள ஹைவே களில் டிச்சினோவிலுள்ள இந்த A2 ஹைவேயும் நல்ல அழகானது இரண்டு பக்கமும் கம்பீரமாய் நிற்கும் அல்ப்ஸ் மலைகளினூடு பயணிப்பது ஒரு இனிமையான அனுபவம் மகளுக்கும் நான் இடையிடேயே டிச்சினோ மாநிலத்தைப் பற்றிக் கூறிக்கொண்டே வந்தேன். இடையிடயே விழித்த மனைவி இப்போது நன்கு விழித்தெழுந்து தனது கால்களை hand break க்கு மேலால் முன்னால் நீட்டி லாவகமாக இருந்து கொண்டு இயற்கையை ரசித்துக் கொண்டே சிறிது சிறிதாக செய்து கொண்டு வந்த சான்ட் விச்சுகளை பரிமாறினா எனக்கும் பசி யெடுக்க ஒவ்வொரு வாய்க்கும் ஒவ்வொரு சான்ட் விச்சுகளை அனுப்பி கொண்டிருந்தேன் , டிச்சினோ மாநில தலை நகரான பெலின்சோனா வினை கார் கடந்து சென்று கொண்டிருந்தது காலைக் கதிரவனின் கதகதப்பில் பெலின்சோனா பள்ளத்தாக்கு பளபளத்துக் கொண்டிருந்தது. அதனழகு என்னை வசியம் செய்து இடம் கிடைத்தால் காரை ஒரம் கட்டி சில நிமிடம் நின்று ரசிக்கச் சொன்னது ஆனால் ஹைவேயில் அதற்கான இடமும் இல்லை , எனக்கு நேரமும் இல்லை மனம் ரசனையில் இருக்க காரின் வேகமும் இயல்பாகக் குறைய வீதியும் சற்று ஏற்றமாக ஏறிக்கொண்டே போக PS குறைந்த எனது கார் சற்று சிரமப்பட கியரை 4க்கு மாற்றி முடியாமல் போக 3 க்கு மாற்றி வேகம் எடுத்து டிச்சினோ மாநிலத்தின் பெரிய நகரான அழகிய லுகானோவைக் கடந்து கொண்டிருந்தது சுவிசில் எனக்குப் பிடித்த நகரம் எது எனக் கேட்டால் லுகானோ எனத்தான் சொல்வேன் அவ்வளவு ரம்மியமானது அது . பெலின்சோனா (Bellinzona) லுகானோ(Lugano) இப்போது கார் சுவிசின் எல்லைப்பபுர நகரான கியாசசோவினை அடைந்திருந்தது.பெரிதாக வாகன நெரிசல் இருக்கவில்லை கஸ்டம்சினூடாக 20 km/h கார் ஊர்ந்து கொண்டிருந்தது , கியாசோ கஸ்டம் அதிகாரிகளும் பொலிசும் கொஞ்சம் கடுமையானவர்கள் மோசமான இத்தாலி மாபியாக்களை கையாள்பவர்கள், மற்றும் எல்லை கடக்கும் சட்டவிரோத குடியேறிகளையும் சமாளிப்பவர்கள்...., ஆனால் என்னை போகச் சொல்லி கையசைத்தார்கள் கூடவே மகளுக்கும் கையசைத்து bye சொன்னார்கள் , மிகவும் மகிழ்ச்சியாகவே சுவிசுக்கு ஒரு bye சொல்லி இத்தாலிக்குள் நுழைந்தோம் ....., பெரிதாக வாகன நெரிசலுக்குள் சிக்காமல் வந்தது மிகப்பெரிய நிம்மதியாக இருந்தது 5 நிமிட ஓட்டத்தில் இத்தாலியின் கோமோ பிரதேசத்தில் முதலாவது எரிபொருள் நிலையம் மற்றும் ரெஸ்டுரன்ட் வர எனது காரும் அதனை நோக்கி சென்றது.... உள்ளே போனால் கார் விட இடமில்லை எல்லாம் நிறைந்து வழிந்தது பல கார்கள் தரிப்பிடம் தேடி அலைந்து கொண்டிருக்க ஒரு ஜேர்மன் இலக்கமுடைய BMW இன் பின்னே வெள்ளை லைட் தெரிய என் முகத்திலும் லைட் எரிய இப்போது எனது கார் அந்த இடத்தில், காரை அணைத்து, hand break ஐ இழுத்து , நான் கீழிறங்க எனது குட்டி மகளும் கண் விழிக்க எல்லாம் நலமே ....., கடைசி மகளையும் Bagஐயும்நான் தூக்க மனைவி பெரிய மகளை அணைத்த படி ரெஸ்டுரன்டினுள் நுழைய உள்ளே ஒரே சனக்கூட்டமும், கபே கப்புகளின் சத்தமும் பணியாளர்களின் இத்தாலி மொழி உரையாடலும் மனதுக்கு ஒரு வித கிளர்ச்சியைக் கொடுத்தது.... பாத்ரூம் சென்று முகத்தில் குளிர் தண்ணீரை அடித்து தலைக்கும் கொஞ்சம் தேய்த்து வெளியே வந்து சில வினாடி காத்திருக்க மனைவியும் பிள்ளைகளை கூட்டிச் சென்று பம்பர்ஸ் எல்லாம் மாற்றி வந்தார். காரினுள் சாப்பிட்டதால் பெரிதாக பசி இல்லை ஏதாவது குடிப்போம் என முடிவெடுக்க , இல்லை பிள்ளைக்கு முதலில் பால் குடுக்க வேண்டும் என மனைவி சொன்னா(அது தான் தாயுள்ளம் ) நீங்களும் பெரிய மகளும் ஏதாவது குடியுங்கோ நான் பால் குடுத்திட்டு வாறன் என அவா சொல்ல பால் போத்தலினுள் பால் கரைத்தால் ,பால் சூடு ஆற கொஞ்சம் நேரம் எடுக்கும் போல இருக்கவே நான் நேரம் போகிறது என மனைவியை அவசரப்படுத்த நாம் எல்லாரும் கோபி குடிக்க முடிவெடுத்து ஒரு லத்தே மக்கியாத்தோவும் (எனக்கு), இரண்டு ஓவல் மாட்டினும் வாங்கி குடித்து முடிக்கவும் .சிறிய மகளின் போச்சி பால் ஆறவும் சரியாக இருந்தது. நான் காரில் போய் மகளுக்கு பால் குடுக்கிறேன் நீங்கள் இருவரும் ஒரு 10நிமிடம் கழித்து வாங்கோ எனக்கூறி விட்டு மனைவி சிறிய மகளுடன் சென்று விட்டா, நான் மீண்டும் ஒரு எஸ்பிரசோ வினை வாங்கிக் குடித்து விட்டு செல்ல , மகளும் பால்குடித்து ரெடியாக இருந்தா அவாவைத்தூக்கி முதுகில் மேல்நோக்கி சில தடவைகள் தடவி ஏவறை (birth) எடுக்கச் செய்து maxi cosi இனுள் இருத்தி பெல்ட் போட்டு விட்டு , பின்னால் சென்று காரைத்திறந்து எனது bag இனுள் ரீசேட் ஒன்றை எடுத்து மாற்றிக் கொண்டேன், இப்போது புத்துணர்வு இன்னம் கொஞ்சம் கூடியிருந்தது . நான் காரை ஸ்டார்ட் செய்து பின்னோக்கி நகர்த்தி திருப்பவம் இன்னுமொருவர் முகமெல்லாம் பல்லாகா எனது இடத்தில் கொண்டு வந்து தனது காரை விட்டு எனக்கு நன்றி சொன்னார் ( பாவம் அதிக நேரம் இடம் தேடி அலைந்திருப்பார் போலும்) ரெஸ்டுரன்டின் அருகிலேயே இருந்த எரிபொருள் நிலையத்தினுள் ஒரு புல் டாங் பெற்றோல் அடித்து விட்டு , காரை இத்தாலி ஹைவேயில் ஏற்றுகின்றேன் , மனதிற்குள் பயணத்திட்டம் ஓடுகிறது இனி மிலானோ( Milan ) நோக்கிச் சென்று அங்கிருந்து வெனிஸ் (Venice) நகரை நோக்கிச் செல்லும் ஹைவே யினுள் ஏறி ஜேசலோ exit எடுக்க வேண்டும் மிலானோ ஒரு 50km , அங்கால ஒரு 300 km ஒடினால் போதும்... கிடைக்கும் நேரத்தினைப் பொறுத்து மிகுதியை தொடர்கிறேன்.....
 27. 23 points
  அண்டைக்கும் வழக்கம் போல குளிர் தான்! போதாக்குறைக்குக் காத்தும் கொஞ்சம் வேகமாக வீசிக்கொண்டிருந்தது! விடிய எழும்பும் போதே இண்டைக்குக் கட்டாயம் தடிமன் வரப்போகுது என்று தனக்குள் நினைத்துக்கொண்டான் சந்திரன்! அல்பேர்டன் சந்திக்கு ஓருக்காப் போனால்….ஒரு ஓமப் பக்கற்றும்...கொஞ்சம் ‘பேயாவ' சோடாவும் வாங்கிக் கொண்டு வரலாம் தான்! ஆனால், இந்தக் கண்டறியாத குளிரை நினைக்கத் தான் அவனுக்குத் தயக்கமாக இருந்தது! இரண்டு.. பிஞ்சு மிளகாய் போட்டால், திரளி மீன் சொதி நல்லா இருக்குமெண்டு அவனுக்குத் தெரிந்திருந்தாலும்/ இந்தக் குளிருக்குப் பயந்து...பிஞ்சு மிளகாய் இல்லாமலேயே அவன்பல நாட்கள் சொதி வைத்ததிருக்கிறான்!ஆனால் இண்டைக்குக் கட்டாயம் போகத் தான் வேண்டுமென நினைத்தபடி, லெதர் ஜக்கெட்டை அணிந்து கொண்டு வீட்டுக்கு வெளியே வந்தவன், மூக்கிலிருந்து வெளியே சிந்தத் தயாராகவிருந்த நீர்த்திவலைகள் மூக்கின் நுனியிலேயே உறைந்து போவதை உணர்ந்தான் ! ஒருவாறு கடைக்குள் நுழைந்தவனின் காதில்...ஒரு தமிழ் அக்கா,,அங்கே வேலை செய்யும் புதிதாக வந்த தமிழ் இளைஞர்களை, அதிகாரத் தொனியில் அதட்டிக் கொண்டிருந்தது கேட்டது! அந்த இளைஞர்கள், மருத்துவ...பொறியியல்...மற்றும் கணனியியல் மாணவர்களாகவோ மட்டுமன்றிப் பட்டதாரிகளாகக் கூட இருக்கக் கூடும்! ஏதோ சில காரணங்களுக்காக...அக்காவிடம் பேச்சு வாங்கிக் கொண்டிருந்ததைப் பார்க்க…சந்தர்ப்பங்கள் சரியாக அமைந்தால்….ஒரு தமிழன் இன்னொரு தமிழனை மிதிப்பதில்..ஒரு தனி மகிழ்ச்சி அடைவான் என்பது எவ்வளவு உண்மை என நினைத்துக்கொண்டே ஓமப் பக்கைற்றைத் தேடிக் கொண்டிருந்தவனை, பின்னாலிருந்து 'தம்பி என்னைத் தெரியுதோ' என்ற குரல் திரும்பிப் பார்க்க வைத்தது! அந்தக் குரலுக்குரியவரை உடனடியாக நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை எனினும் நீங்கள்..என்று அவன் இழுக்கவும்.. தம்பி.. என்ன ‘கறையான் பிட்டியையும்' மறந்து போட்டியோ எண்டதும்,,,,சோமண்ணையா நீங்கள்,,என்று கேட்டான்! என்ன மாதிரி,,,இங்க... என்று கேட்க...தம்பி..அதைப்பற்றி ஒரு மகாபாரதமே எழுதலாம் என்று கூறியவர்..தம்பி..அந்தத் தங்கச்சி எங்கட பக்கமே பார்த்துக் கொண்டிருக்குது போல கிடக்குது! பெரிய வில்லங்கமாய்ப் போயிரும்! உன்ர போன் நம்பரைத் தந்திட்டுப் போ...நான் வேலை முடிய உனக்கு அடிக்கிறன் என்று சொல்லியபடியே..அவனது போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டார்! குடிநீரைக் குடிச்சுப் போட்டு..நல்ல நித்திரையொண்டு அடிக்கவேணும் என்று நினைத்திருந்தவன் கனவெல்லாம்...கண் முன்னே தவிடு பொடியாவதை உணர்ந்தான்! இந்த ‘அடி' என்ற வார்த்தை எப்படியெல்லாம் வளைந்து கொடுக்கிறது,,என்று நினைத்த படி...இண்டைக்கு சோமண்ணை வந்த பிறகு...ஒரு முறையான அடி..அடிக்கத் தடிமன் இருந்த இடம் தெரியாமல் போயிரும் என்று தனக்குத் தானே, சமாதானமும் செய்து கொண்டான்! இரவு எட்டு மணி போல...வீட்டுக்கதவு தட்டப்படவே...யாரென்று கேட்காமலேயே சந்திரன் கதவைத் திறக்கவும்...பேபரில் சுத்திய நெப்போலியன் போத்திலுடன்...சோமண்ணை நின்றிருந்தார்! தம்பி...வர வர உலகம் சின்னதாகிக் கொண்டே வருகின்றது என்று கூறியவர், நீ வந்து கனகாலமெல்லே ...வலு பெரிய வீட்டில இருப்பாய் எண்டு நினைச்சுக்கொண்டிருந்தன்..என்று சொல்லி இழுத்தார்! தமிழனுக்கே எனச் சில தனிக்குணங்கள் உண்டு என்பதும்...அதை இலகுவில் மாற்றமுடியாது என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்ததால்...அதை விடுங்கண்ண,, உங்கட கதையைச சொல்லுங்கோ..என்று அவரிடம் சொன்னான்! தம்பி அதையேன் கேக்கிறாய்….நான் உலகத்திலை கேள்விப்படாத தேசங்களுக்கிள்ளாலை எல்லாம் பூந்து விளையாடியிருக்கிறேன்! சின்ன வயதிலை ஒரு சாத்திரி என்ர சாதகத்தைப் பாத்துப்போட்டு...தம்பி உனக்குப் பிற தேசம் போற பலனிருக்கெண்டு சொல்ல...அவருக்குப் பிடரியில ஒரு தட்டுத் தட்டிப் போட்டு...இனிமேல் ஒருத்தருக்கும் சாத்திரம் சொல்லக்கூடாது என்றும் சொல்லிப் போட்டு வந்தனான்! இப்ப பார்...பிரான்சுக்கில்லாள பூந்து லண்டனுக்கிள்ளை நிக்கிறன்! அண்ணை...உங்கட பக்கம் அவ்வளவு பிரச்சனை இருக்கேல்லைத்தானே என்று கேட்கவும்...இஞ்ச பார்...நான் சொல்லுறதைக் கவனமாய்க் கேள்! கம்பசுக்கு முன்னால ஒரு பஸ்ஸில வந்த நம்ம பெடியனை..பஸ்ஸை விட்டு இறக்கி ஆமிக்காரன் சுட்டவனெல்லே! நீயும் அப்ப அங்க தானே இருந்தனி? அந்த நேரம் நானும்...யோகர் கடைக்கு முன்னால நிண்டு சிகரட் பத்திக்கொண்டு நிண்டனான்! வெடிச்சத்தம் கேட்டவுடனேயே..யோகற்றை பின்வளவுகுள்ள ஒளிச்சுப்போட்டன்! கொஞ்ச நேரத்தால வெளியால வரவும் ஆமிக்காரர் பஸ்ஸுக்குள்ள இருந்ததைக் கவனிக்காமல் வெளியால வந்திட்டன்! அப்ப ஒருத்தர் என்னைப்பிடிச்சு..என்ன நடந்தது எண்டு விவரமாய் விசாரிக்க...நானும் மளமளவெண்டு...நான் கண்டதைச் சொல்ல வெளிக்கிட...இதைக்கண்ட ஒரு ஆமிக்காரன் துவக்கிக் கொண்டு வந்து என்ற நெஞ்சில வைச்சிட்டான்! என்னையறியாமலே கையைத் தூக்கிட்டன்! எனக்குத் தெரிஞ்ச சிங்களத்தில ஏதொ சொல்ல..அவனும் ...யன்ன..யன்ன..எண்டு என்னைக் கலைச்சு விட்டிட்டான்! அண்டைக்குத் தான் முருகனில எனக்கு முதன் முதலா நம்பிக்கை வந்திட்டுது! அடுத்த நாள்,வழக்கம் போல யோகர் கடைக்கு வந்தால்...எல்லாரும் என்னைப் பார்த்த படி..! நானும் பின்னால திரும்பிப் பாத்தன்...ஒருத்தரையும் காணேல்ல! சரி...இண்டைக்கு என்ன இழவோ தெரியாது எண்டு நினைத்தபடியே..ஒரு சிகரட்டைப் பத்த வைச்ச படி நடந்தன்! கடைக்குப் போனால்...அங்க வீரகேசரிப் பேப்பர்ல..என்ரபடம்..ஆமிக்காரன் எனக்கு முன்னால் துவக்கைத் தூக்கிப் பிடிச்சபடி …..! அப்பிடியே பேப்பரை வாங்கிக் கொண்டு வீட்டை வந்து...மனுசியிட்டைக் காட்டினால்...மனுசி சன்னதமாடத் தொடங்கீட்டுது! ஐயா பெரிய படிப்புப் படிச்சுப் பட்டம் வாங்கிக்கொண்டு வந்திட்டார்! அது தான் பேப்பரில படம் வந்திருக்குது! வழக்கமாய்..அவள் பேசுற போது...வலக்காதால வாங்கி இடக்காதால விட்டிருவன்! நான் கணக்கிலேயே எடுக்கிறதே இல்லை! ஆனால் அண்டைக்குப் பேசின பேச்சு...என்ர வேட்டியைக் கழட்டித் தலையில கட்டின மாதிரி இருந்திச்சுது! அது சன்னதமாடினால்...சன்னதம் முடியிற நேரம் வரைக்கும் நானே வாயே திறக்கிறது கிடையாது! சன்னதம் முடிஞ்சுது எண்டதை அறிவிக்கக் கடைசியாய் ஒரு வசனம் வரும்! 'அது தான் நான் உன்னைக் கட்டி என்னத்தைக் கண்டன்?' அண்டையான் பேச்சு...என்னை நல்லாச் சுட்டுப்போட்டுது! (இன்னும் கொஞ்சமிருக்கு! )
 28. 23 points
  பாடசாலை முடிவதற்க்கான மணிச்சத்தம் எப்படா கேட்க்கும் என்று இருந்த மாணவர்கள் மணி அடித்த அடுத்த நொடியே வெளி வாசலை நோக்கி ஓடினார்கள்.துர இடம் போகிறவர்கள் அருகில் வீடு உள்ளவர்கள் என்று பேதம் இல்லாமல் பாடசாலைக்கு முன் உள்ள சைக்கில் கடையில் கூடி விடுவார்கள்.சைக்கிளுக்கு காத்தடிக்வோ அல்லது லைக்கில் திருத்தவோ இல்லை அந்தக்டையில் விற்க்கும் குச்சி ஐஸ பழம் வாங்கத்தான் இவளவு வேகமும்.50 சதம் விற்க்கும் அந்தப்பழத்தை வாங்கிக் முழுவதுமாக குடித்து முடிப்பதற்குள் அரைவாசி கரைந்து ஓடி விடும்.கரைந்தது உருகியது எல்லாம் நக்கி முடிந்து வீதியோர தண்ணிக்குளாயில் கையை களுவிய பின் தான் தங்கள் வீிடு நோக்கி செல்வார்கள்.இவளவு கூத்துக்களையும் ஓர ஓரமாக நின்று எக்கத்துடன் பாத்துக்கொன்டிருப்பான் பாபு.காரனம் அவனிடம் 50 சதம் இல்லாதது அல்ல.மாறாக அவன் அதி பணக்காற வீட்டு பிள்ளையாக இருந்ததே.அவனைக் பாடசாலையிலிருந்த கூட்டிச் செல்வதற்க்கு கார் வரும்.அதால மற்ற பிள்ளைகளுடன் சோ்ந்து ஐஸ் பழம் குடிக்கும் பாக்கியம் அவனக்கு கிடைப்பதில்லை.ஒரு முறை இவனும் மறடறவர்களுடன் சோ்ந்து ஐஸ் பழம் குடிப்பதை பார்த்த சாரதி தகப்பனிடம் போட்டுக் கொடுத்ததால் அதுவே முதலும் கடைசி முறையுமாகப் போய் விட்டது.கால ஓட்டத்தில் அவன் தனது தகப்பனின் வியாபரத்தை நிர்வகிக்கும் பொறுப்பையேற்றுக் கொன்டான். இப்போது அவனது பொறுப்பில் பல வேலையாட்க்கள் உதவிக்குப் பலர்.அந்த 50 சத ஐஸ் பழ கனவு மடடும் இன்னும் தீரவில்லை. குற்றம் குறை மன்னித்தருள வேண்டும்
 29. 23 points
  ஒரு திடீர் இலங்கை பயணம். முக்கிய வேலை ஒன்றுக்காக இலங்கை சென்று வந்தேன். யாழில் இரு நாட்கள். ஆட்டோ காரர்கள் 'மீட்டர்' இல்லாமல் ஓட்டுகிறார்கள். வெளிநாடு என்று ஒரு பார்வையில் புரிந்து கொண்டு, பிறகு பார்த்து தாங்கோ என்பார்கள். முதலே பேசா விட்டால் அம்புட்டு தான். போகும் போதே, வீட்டில் கறுத்தக் கொழும்பு மாங்காய் பிடுங்கினனாங்கள், போகும் போது தந்து விடுகிறேன் என்று நீண்ட நாள் வியாபாரத்துக்கு அடித்தளம் போடுவார்கள். (மாங்காய் வரும் என்று ஆவென்று இருந்தால், நீங்கள் கெட்டிக் காரர் தான், போங்கள்) ஆனால் ஒருவரை மீண்டும் கூப்பிட முடியாத அளவிற்க்கு அவர்களது கட்டணம் இருக்கும். சாதாரணமாக கொழும்பில் 100 ரூபா வாங்கினால், யாழில் 350 ஆக இருக்கும். கொழும்பில் மீட்டர் ஆட்டோ பிடித்தால், கட்டணத்தினை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். எனினும் வெள்ளவத்தையில் இருந்து, புறக்கோட்டை செல்ல ஆட்டோ 1000 என்றார்கள். பின்னே வந்த பஸ்ஸில் ஏறினால் 12 ரூபா. சலூனில் ஷேவ் எடுக்கப் போனால், முதலே எவ்வளவு என்று கேட்டால், லோக்கல் ரேட் 100 ரூபா. முடிஞ்ச பிறகு கேட்டால் 300 முதல் 500 வரை. (ஷேவ் எடுத்துப் பாருங்கள், நெடுக ஸெல்ப் ஷேவ் எண்டு, வறாண்டிக் கொண்டு இருபவர்களுக்கு, நல்ல ஒரு அனுபவம். ஆனால், டிசு பேப்பர் பாவிக்க வேண்டும், ஜெல் கையினால் பூச வேண்டும், முகம் துடைக்க, அவர்களது துவாய் பாவிக்கப் படாது என்று சொல்லி வையுங்கள். அப்படியே ஒரு டிப்ஸ் கொடுத்து விடுங்கள். அடுத்த நாள் இன்னும் அமர்க்களமாய் எடுத்து விடுவார்.). ஹோட்டல் மிகவும் அதிகமாக அறவிடுகிறார்கள். நேரே போனால் அதிகமாக சொல்வார்கள் (களைப்புடன் வருபவர்கள் அங்க, இங்க போய் மினக்கட மாட்டர்கள் என்பது அவர்களுக்கு தெரிந்த வியாபார தந்திரம்). நான் booking.com மூலம், ஒரு ஹோடேலில் இருந்து மறு ஹோட்டலுக்கு போகும் முன்னர் புக் பண்ணிக் கொண்டே போனதால், மலிவான டீல்கள் கிடைத்தன. ஆகவே அங்கே இருக்கும் போதே, இவ்வகையில் புக் பண்ணுங்கள். ஆட்டோ, வாடகை கார்களுக்கு, கொண்டு வரும் வாடிக்கை யாளருக்கு, கொமிசனோ, ரெஸ்டாரன்ட் ஆயின், ஒரு சாப்பாடு பார்சலோ கிடைப்பதால், உங்களுக்கு பொருத்தம் இல்லாத இடங்களை காட்டி, கட்டி அடித்து விடுவார்கள். நான் booking.com மூலம் எடுத்த அதே $29 ரூம், நேரே சென்ற ஜேர்மன் தமிழருக்கு $70. ரயில் பயணம் சிறப்பு. அதிகூடிய விலை 1300 ரூபா. அதிகுறைந்த விலை 370 ரூபா. பஸ்கள் 1300 ரூபா, ஆனால், அந்த பணத்தினைக் கொடுக்கக் கூடிய வகையில் ஓரிரு நிறுவன பஸ்களே தரமானவையாக உள்ளன. அதாவது எல்லோரும் 1300 ரூபா அறவிடுவதால், பல தரமில்லாத பஸ்களும் ஓடுகின்றன. கொமிசன் அதிகமாக கிடைப்பதால், தரம் இல்லாத பஸ்களை, தரமானதாக சொல்லி விற்பார்கள். அண்மைய மழையில் பஸ்கள் ஒழுகி, மக்கள் பணத்தினைக் திருப்பக் கேட்டதால், சில பஸ்கள் ஓடாமல் இருந்தன. மேலும் இவ்வைகையான பஸ்களில் A/C புல்லாக போட்டு விடுவார்கள். மக்கள் குளிரில் நடுங்கி வெடவெடத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு கவலை இல்லை. மிக முக்கியமாக, கொழும்பு - யாழ், யாழ் - கொழும்பு பஸ் பதிவுகளில் கவனமாக இருங்கள். மிகச் சிறந்த பஸ்களை மட்டுமே கேட்டு பதிவு செய்யுங்கள். வெங்கடேஸ்வரா, குணசேகர பஸ்கள் நல்ல தரம் என்று சொன்னார்கள். ஒவ்வொரு இருக்கைகளுக்கும் தனித்தனியாக A/C கொன்றோல் பண்ண முடியும். நான் குணசேகர பஸ் லில் வரும் பொது பயணித்தேன். எனினும் புறக் கோட்டையில் இருந்து CTB பஸ்கள் மலிவு விலைகளில் செல்கின்றன (ரூபா 370?). பஸ் இலக்கம் 87. தரமில்லா 1300 ரூபா பஸ்களிலும் பார்க்க, இந்த அரச பஸ்கள் நன்றாக உள்ளன. நீண்ட தூரமாயின், விசேட இருக்கைகள் (சாய்ந்து படுக்கக் கூடியாவாறு) உள்ளன. நல்ல உணவு விடுதிகள் உண்டு. கொள்பிட்டியில் க்ரீன்கபே நன்றாக இருந்தது. ராஜ போஜன் உணவகம் ரூபா 1950 புபே. மிகவும் அதிக கட்டணம். curry leves வெள்ளவத்தையில் நன்றாக இருப்பதாக சொன்னார்கள். நான் போக முடியவில்லை. யாழ் சந்தையில் பலாப்பழம் ஒரு துண்டு வாங்கி, அந்த பாட்டியம்மா விடமே பேசி, கொஞ்சம் காசு கொடுத்து சுளை ஆய்ந்து வாங்கியதால், ஹோட்டல் கொண்டு போய் சுவைக்கக் கூடியதாக இருந்தது. மாம்பலமும் அவ்வாறே. இன்னும் முழு பலாப் பழ சீசன் வரவில்லை. யாழ் ரயில் நிலையத்தில் உத்தியோகத்தர்களாக, சிங்கள இளஞர்கள் டிக்கெட் வியாபாரம் செய்கிறார்கள். சிங்களத்தில் கேட்டால், தமிழில் பதில் அளிக்கிறார்கள். ஆச்சரியத்துடன் அவர்களது சூப்பெர்வைசெர் ஆயிருந்த தமிழ் அதிகாரியுடன் கதைத்த போது, இப்போதெல்லாம், அரச வேலைகள் பெறுவதாயின், தமிழர்கள் சிங்களமும், சிங்களவர்கள் தமிழும் சித்தி அடைய வேண்டுமாம். யாழ் நீதி மன்று பார்க்க போனேன். வாசில் இருந்த போலிஸ் கார் கூப்பிட்டு, சேட்டினை இன் பண்ணி போங்கோ என்கிறார் தமிழில். திரும்பி வரும் போது, கேஸ் முடிந்ததா என்றார். இல்லை, பல ஆண்டுகள் பின்னால் பார்க்க வந்தேன் என்றேன். ஆரவத்துடன் உரையாடினார். நாடு முழுவதுமே யுத்தத்தினால் பாதிக்கப் பட்டது. இன்று முழு நாடுமே நிமதியாக உள்ளது. விரைவில் தீர்வு வர வேண்டும் என்றார். தண்ணீர் போத்தல் ஒன்றையும் தந்தார். யாழில் சில இளையோரின் இன்றைய தளம்பல் நிலை, விரைவில் மாறும் என்றார் ஒரு லோயர். அவர்கள் இடையே நோக்கம் இன்றி தடுமாறு கின்றனர். நோக்கம் தெளிவாகும் போது தடுமாட்டம் நீங்கும் என்றார். பல புலம் பெயர்ந்தோர் முதலீடு செய்வதால் வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. அதே வேலை யாழில் இருந்த திறமையான, ஏலேக்ட்ரிசியன், பிளமேர், மேஸ்திரி மார் கொழும்புக்கு அதிக சம்பளத்துக்கு கடத்தப் பட, அங்குள்ள அப்பிரசெண்டிங்குகள் இங்கே வருகிறார்கள். அதனால் வேலைகளில் தரமில்லை. டியூஷன் சென்டர், அதன் விளம்பரங்கள் மட்டும் எந்த வித வித்தியாசமும் இல்லை. ஆளில்லா டீக்கடையில், யாருக்கு டீ ஆத்துகிறார்கள் என்ற வகையில், ஆக்களே வராத கோயில்கள் எல்லாம், கோபுரம், குளம், மதில் என்று பிரகாசிகின்றன. வெளிநாட்டார் உபயம். அருமையான ரோட்டுக்கள் அமைந்துள்ளன. ஆர்மிக்காரர், தாமும் தம் பாடும். அவர்களுடன் சொறியாவிடில், அவர்கள் ஏனப்பா சொறியப் போகினம் என்றார் ஒரு உறவுப் பெரிசு. நம்ம ஜீவன் சிவாவை சந்திக்க திட்டம் போட்டு, செவ்வாய் காலை ரயில், வெள்ளம் காரணமாக ரத்தாகியதால், ஒரு நாள் இழந்து, சந்திக்க முடியவில்லை.
 30. 22 points
  என்ன அண்ண ஆஸ்பத்திரி பக்கம் கந்தசாமியரோ கால்கிலோ கத்தரிக்காயும் கருவாடும் வாங்கிட்டு போக வந்தேன் இந்த குசும்பு தானே வேணாங்கிறது பின்ன ஆஸ்பத்திருக்கு வருவது என்னத்துக்காக இல்லை நீங்கள் ஆஸ்பத்திரி பக்கமே வாரது கிடையாது அதான் கேட்டேன் என்றார் விமலன் ஒன்றும் இல்லை லேசான தலைச்சுற்றாக இருந்தது அதுதான் வந்தன் என்றார் கந்தசாமியர் . ஓ அப்படியா உங்களுக்கு பிரசர் வந்திருக்கிறது சுகர், கொலஸ்ரோல் எல்லாம் செக் பண்ணுன நீங்களோ ?? இல்லை அந்த வருத்தங்கள் எல்லாம் இல்லையடா எனக்கு நீங்கள் சொல்லுவியள் ஆனால் உடம்ப செக் பண்ணுனால் தானே தெரியும் டகித்தர் வந்த பிறகு நான் கூட்டிக்கொண்டு கதைச்சு விடுறன் நீங்கள் இந்த வாங்கில இருங்கோ என்றுசொல்லி போனார் விமலன். விமலன் சொன்ன கதையை கேட்டு கந்தசாமியருக்கு உடம்பில் ஆட்டம் கொடுத்து விட்டது என்ன இவன் சாதாரண தலைச்சுற்றுக்கு வந்தால் ஆயிரம் கோதாரிகளை சொல்லிப்போட்டு போறான் என்று மனதுக்குள் ஏசி திட்டிக்கொண்டே இருந்தார் கந்தர் அவன் சொல்லுறதும் சரிதானே இப்ப உள்ள சாப்பாடுகளை தின்னுறதால உடம்பில வருத்தங்கள் தான் மிச்சம் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் பக்கத்தில் ஒருவர் வந்து உட்காருகிறார் கந்தரோ இருங்கள் என்று சொல்லி பக்கத்தில் அமர பேச்சுக்கொடுக்கிறார் உங்களுக்கு என்ன எனக்கு சீனி கூடிட்டுது உடம்பில போன‌ மாதம் தான் விரலை களற்றி விட்டார்கள் என்று காலை காட்டினார் பெரு விரல் கழற்றி எடுக்கப்பட்டு இருந்தது . கந்தருக்கு இருக்கிற தலையிடி உடம்பு முழுக்க இடிக்க தொடங்கியது இன்னும் கூடி காயம் ஆறாவிட்டால் முழங்காலுடன் கழட்டி விடுவார்கள் என்று சொல்ல கந்தருக்கு தூக்கி வாரிப்போட்டது என்னங்க இவ்வளவு சாதாரணமா சொல்ல்றீங்க பின்ன என்னங்க நாம் குடும்பத்துக்கும் பிள்ளைகளுக்கும் நாயா பேயா உழைக்கிறம் இந்த உடம்பில என்ன கோதாரி இருக்கிறது என்று எப்பாவாச்சும் பார்க்கிறமா இல்லையே பார்த்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது என்றார் அவர் . இப்ப பாருங்கள் மாதா மாதம் கிளின் என்று சொல்லி ஒரு கொப்பியை தந்து இருக்காங்கள் அதனால மாதா மாதம் வந்து போகிற வேலையா கிடக்கு ம்ம்ம்ம் நீங்கள் சொல்வதும் சரிதான் என்று சொன்ன கந்தர் டகித்தன் வந்த பிறகு எல்லாத்தையும் செக் பண்ண வேணும் என்ற நினைப்போடு இருந்தார் கந்தர் வைத்தியர் வரவே ஐயா ஒரே தலைச்சுற்றா இருக்கிறது என்னவெண்டு ஒருக்கா பாருங்கள் ஐயா என்றார் சரி ஐயா முதலில் இருங்கள் என்று அவரை சோதித்த போது இது இந்த வெயில்லுக்கு வாரதுதான் என்றார் வைத்தியர் வெயிலுக்குள்ள போறத்தை குறைங்க அப்போது விமலன் அங்கு வரவே ஐயா இவர் நம்மட சொந்த காரர்தான் இவரு ஆஸ்பத்திரி பக்கம் வந்ததே இல்லை ஒருக்கா ஆளை முழுசா செக் பண்ண சொல்லுங்களன் ஓ அப்படியா விமலனின் சிபாரிசு ஐயாவுக்கு கிடைக்க ,ரத்தம் ,சிறுநீர் எல்லாம் சோதிச்ச ,பிறகுதான் சொல்ல முடியும் ,இப்ப பிறசர் கட்டிப்பார்ப்போம் என்று வைத்தியர் கையை தூங்கி காட்டுங்கோ என்ற சொல்ல இவரும் கையை தூக்கி காட்டினார் பின்னர் பிறசர் கட்டிப்பார்த்தார்கள் ,கைப்பிறசர் இல்லை நோர்மல் தான் என்றார் வைத்தியர் ஓ அப்படியா ஐயா இப்பதான் எனக்கு நிம்மதி எதுக்கும் பிலட்டை செக் பண்ணிப்பார்ப்போம் என்ன சரி என்று சிறிஞ்சில் ரத்தம் எடுத்து கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில் அதிலும் அவருக்கும் ஒன்று இல்லை என்று வைத்தியர் சொன்ன பிறகே அவருக்கு உன்மையான மூச்சு வந்தது வருத்தம் இல்லாவிட்டாலும் உனக்கு அது வந்திருக்கு இது வந்திருக்கு என்று சொன்ன விமலை முறைத்து பார்த்தாலும் நமது உடம்பை இந்த காலத்தில் அடிக்கடி செக் பண்ண வேண்டும் என்று நினைத்து கொண்டுவந்த வீடு வந்த கந்தர் தன் மனைவி சுந்தரியை பார்த்து இனிமேல் சாப்பாட்டுல உப்பு , சீனி , உறைப்பு , எண்ணெய் இதெல்லாம் குறைச்சு போடு சரியா என்றார் சரி என்று அவரும் சொல்ல வருத்தம் வராமல் செத்து போகவேணும் காலை கழட்டி கையை கழட்டியெல்லாம் வாழ இயலாதுடி நாளைக்கு நம்க்கு பீ அள்ள மூத்திரம் அள்ள ஒருத்தரும் இல்லை நீயும் வா ஒருக்கா உன்னையும் செக் பண்ண வேணும் என்று சொல்லி கூட்டிக்கொண்டு போகிறார் ஆஸ்பத்திரிக்கு. எல்லாரும் சுய ஆக்கம் எழுதும் போது நம்ம பங்கிற்கு சும்மா கிறுக்கியது இந்த மெசின் வாழ்க்கையில் தன் உடம்பை கவனிக்காமல் இருப்பவர்களுக்கு நடந்த சில நிகழ்வுகளை சின்ன கதையாக
 31. 22 points
  இதுவரை என் வாழ்வில் சகல பிரச்சனைகளும் ஓய்ந்து விட்டது ஓர் தேடலைத்தவிர என்று வாழ்வை அமைதியாக கழிந்த நாட்களில் அந்த ஓர் அழைப்பொன்று வாழ்வின் அடிமனதில் புதைந்த ஓர் புதையலை மனதில் இருந்து மெதுவாக தோண்ட ஆரம்பிக்கிறது .ஹலோ வணக்கம் வணக்கம் நீங்கள் நான் கலியபெருமாள் பேசிறன்டா ஓ ஐயா சொல்லுங்க எப்படிடா இருக்க இருக்கன் ஐயா இருக்கன் நல்ல சுகம் நீங்கள் எப்படி நான் நல்லம் நலமா இருக்கிறன் என்ற பிள்ளைகள் உன்னை பார்க்க வேண்டுமாம் வாவன் உன்ற ரத்தமும் ஓடுது இங்க ஒருக்கா இந்தியா வந்துவிட்டு போவன் இல்லை ஐயா நான் இன்னும் பாஸ்போட் எடுக்கல எடுக்கவும் நினைக்கல எடுக்கணும் என்று நினைக்கிறன் நேரமும் கிடைக்கல அது எடுக்க போனால் இரண்டு மூன்று நாள் அங்க மெனக்கெடணும். அந்த கொழும்பில நிற்கிற நாளும் கஸ்ரமா இருக்கும் ஆனால் எடுப்பன் எடுத்திட்டு வருவன். சரி உடம்ப பார்த்துகொள் காலா காலத்துல கல்யாணம் கட்ட வேணும் சரியோ சரி ஐயா கல்யாணத்துக்கு சொல்லு கட்டாயம் வருவன் (ம்கும் பேச்சுக்கு சொல்லுது மனுசன் என்ற நினைப்பு என் மனதிற்குள்) சரி ஐயா அம்மா பிள்ளைகளை கவனமாக பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தேன் நான். அழைப்பை துண்டித்து அந்த ஓர் அறையினுள் ஓட்டை கதிரையில்வெறும் உரப்பையினால் ஆன சாய்ந்த கதிரையில் இருந்து அந்த புதையலை மூடியிருக்கும் மணல்களை மெதுவாக கிளறிக்கொண்டு இருக்கிறேன் . இப்போது நடந்தால் போல் ஓர் ஞாபகம். நாளைக்கு ஓர் படகு போகபோகிறதாம் இந்தியாவுக்கு தமிழரசா நீயும் போ நீ போன பிறகு அடுத்த படகு வெளிக்கிடக்குள்ள நாங்களும் அங்கு வந்து அகதிகளா சேருவம். என்று அம்மா சொல்ல இல்லையம்மா நான் உங்களை விட்டு போக மாட்டன் நீங்களும் வாங்க தம்பி நீ விசர் மாதிரி கதையாத நீ முதலில போ உன்ன வச்சிருக்கிறதுதான் இஞ்ச பெரும் பாடு அவனுகளும் விடமாட்டானுகள் இவனுகளும் விடமாட்டானுகள் ஏற்கனவே ரெண்டு பேரை கொடுத்திட்டன் எனக்கு நீ மட்டும் தான் இப்ப இருக்கிற நீயாவது வேண்டும் சரீயே சொல்லுற விளங்குதா ஓர் அன்னையின் கட்டளை போல் ஒலித்தது. நாங்க இங்குள்ள சொத்துக்களை ஆரிட்டையும்கொடுத்து விட்டு இல்லாட்டா வித்துவிட்டு அடுத்த செக்கனில் அங்கு நிற்பம் சரியா சரி அம்மா சொல்லுறத கேழு உன்ற நல்லதுக்குத்தான் சொல்லுறன் என்று சொல்லி அந்த மாலை வேலையில் கடற்கரைக்கு அழைத்து சென்றார்கள். மாலை இருளை கவ்விக்கொள்கிறது கன பேரின் வருகையை எதிர்பார்த்த எங்களுக்கு வெறும் 20 பேர்தான் வந்திருந்தார்கள் சிலரின் வருகையில் தடங்கலோ அல்லது சிக்கிவிட்டார்களோ தெரியாது சரி சரி கெதியா வாங்கோ கெதியா வாங்கோ என்று படக்குக்காரன் கத்திக்கொண்டு இருந்தான். ஒரு வழியாக எல்லோரும் ஏறும் போது அம்மாவை கட்டிப்பிடித்து அழுதுகொண்டேன் அழாத அம்மா வருவேன் நீ நல்லா படிச்சிருக்கிற அங்க போய் ஓர் வேலை தேடு நிலமை சரியான பிறகு ஊருக்கு வந்திடலாம் என்று சொன்னாலும் அந்த சூழல் என்னை உயிரை உடம்பில் வைத்துக்கொள்ள தப்பித்து ஓடிவிடு என்று சொல்ல அன்று கடல் வழி பயணம் தொடர்ந்தது . கொஞ்ச தூரம் சென்றது கடல் காற்று உப்பையும் மண்ணெண்ணை மணம் மெல்ல மெல்ல மூக்கின் நுனியில் இருந்து மெல்ல இறங்கி ஓங்காளங்களாக சத்தி எடுக்க ஆரம்பித்தனர் படகில் இருந்தவர்கள். அவர்கள் சத்தி எடுத்ததும் அதை பார்க்கவில்லை இருட்டில் அந்த சத்தம் என் குடலையும் குடைந்தெடுத்து சத்தியாக கொண்டுவந்தது வந்தது உணவல்ல வெறும் தண்ணியும் ரத்தமும்தான் மெல்ல தலை சுற்ற அந்த படகில் எனை அறியாமல் மயக்கமான ஓர் நித்திரை வந்தது அந்த நித்திரையானது என்னை கொலைசெய்து கடலில் தூக்கிபோட்டாலும் யார் என்று கண்டு பிடிக்க முடியாதளவுக்கு மயக்கமாக இருந்தது . தூரத்தில் கேட்ட ஓர் எஞ்சின் சத்தத்தில் எமது படகின் எஞ்சினின் சத்தத்தை நிறுத்துவது என் கண் முன்னால் ஓடியது யாரும் சத்தம் போட வேண்டாம் குனிந்து படுத்து கொள்ளுங்கள் ஏற்கனவே ஒருத்தர் தலையும் நிமிர்ந்தில்லை இதுக்குள்ள எங்க குனிந்து படுக்கிறதாம் அது கடற்படையின் ரோந்து கப்பல் தான் அவன் வேற திசையில் வேறு யாரையோ நோக்கி போய்க்கொண்டிருந்தான். ஒரு சில மணித்தியாலங்கள் பின்னர் அந்த படகு ஓர் மணல் திட்டில் கால் நடக்கும் பகுதியளவில் இறங்கி கொள்ளுங்கோ அந்த மணல் திட்டில் நின்றால் இந்திய நேவி வருவாங்கள் இல்லாவிட்டால் மீனவர்கள் உங்களை கண்டால் அகதி முகாம்களுக்கு சேர்த்துவிடுவார்கள் இன்று யார் செய்த புண்ணியமோ யார் கண்ணிலையும் நாம் அகப்படவில்லை போய் சேருங்கோ நாங்க அங்க போகணும். கெதியா இறங்குங்கோ என்றனர் அவர்கள் நாங்களும் பாதி மயக்கத்தில் மணல் திட்டில் வந்து அந்த உடுப்பு பையுடன் இறங்கி அந்த கூதல் காற்றில் அன்றைய இரவை கழித்தோம். அந்த மணல் திட்டில் அடுத்த நாள் காலை யாரும் வரமாட்டார்களா சாப்பாடும், தண்ணீரும் தா என வயிறு கேட்டுக்கொண்டது அப்போது அவ் வழியாக வந்த மீனவர்கள் எங்களை கண்டு கொண்டனர் அவர்களுக்கு சைகை காட்டி ஒரு வழியாக அவர்கள் வந்திறங்கி எத்தனை பேர் வந்து இருக்குறீர்க்ள் நாங்கள் 20 பேர் 15 பெண்கள் 4 சிறுவர்கள் நான் மட்டும் இருபத்து நான்கு வயது நிரம்பிய ஓர் இளைஞன் சரி வாங்கள் வந்து படகில் ஏறுங்கள் என்று சொல்லி ஏற்றிக்கொண்டார்கள் படகில் இருந்த உணவை தந்தார்கள் ஆனால் யாரும் சாப்பிட முடியவ்வில்லை காரணம் சத்தி எடுத்ததால் தொண்டையால் தண்ணி கூட இறங்குவது சிரமமாக இருந்தது. நானும் தண்ணீர் மட்டுமே குடித்தேன் குடித்த பின்பு அங்கே ஓர் முகாம் அருகே கொண்டு விட்டார்கள் அப்போதுதான் சோதனைகள் ஆரம்பிக்கின்றன இந்திய தேசத்தில் எல்லோரது பெயர்களும் பதியப்பட்டு பெண்களை விசாரிக்கின்றனர் குழந்தைகளை விட்டுவிட்டார்கள் என்னை மட்டும் வேற இடத்திற்கு கொண்டு சென்றார்கள் அவர் பொலிஸ்க்காரரா என்று எனக்கு தெரியாது சிவிலில் நின்றார் உன்ற பெயர் என்ன தமிழரசன் உன்ற சொந்த பெயரா இல்லை இயக்கம் வச்ச பெயரா என்ற சொந்த பெயர்தான் ஏன் இங்க வந்த நீ அங்க சரியான பிரச்சினையா இருக்கிறது எல்லா இடங்களிலும் ஷெல் அடிக்கிறாங்கள் இருக்க முடியல அதான் இங்க அகதியாக வந்தன் சரி இயக்கிதில இருந்த நீ யா? இல்லை உன்மைய சொல்லு இருந்த நீயா? இல்லை உன்மையை சொன்னால் கூட அடித்தார்கள் இத்தனைக்கும் அவர்களும் தமிழர்கள். ஈழத்தில் தமிழனுக்கு சிங்களவர்கள் கேள்விகேட்காமலே அடிக்கிரார்கள் என்றால் இங்கே தமிழர்கள் கேள்வி கேட்டே அடிக்கிறார்கள் இல்லை ஐயா. தீ வரும்
 32. 22 points
  இம்முறை கனடாவின் பனிக்காலம் மிகவும் உக்கிரமான குளிராக இருந்தது ...எத்தனை ஆடைகளுக்கு மேல் ஆடைகளாக துணி மூடடையாக உடுத்தினாலும் எலும்பை ஊடுருவும் குளிராக இருந்தது ...அது ஒரு மார்கழி மாதத்தின் இறுதி வாரம் ..வனிதாவின் கனடா வாழ்வின் ஏழாவது வருடம் ..தாயகத்தில் மூன்று அண்ணா மாருக்கு செல்லத்தங்கையாக வாழ்ந்தவள் . வான் மீகனுக்கு வாழ்க்கைப்பட்டு ஆறு வயதில் ஒரு மகளையும் .. தற்போது ஆறுமாதக் குழந்தையாய் ஒரு ஆண்மகவையும் பெற்று இருந்தாள் . நாட்டுக்கு வந்த தொடக்கத்தில் வெண் பனியை அள்ளி அழைந்து விளையாடியவள். தற்போது வெளியில் செல்லவே அஞ்சும் குளிராக மாறிவிட்டிருந்தது . வான்மீகனுக்கு இரண்டு பெண் சகோதரிகள் அவர்களது கலியாணம் வயதான பெற்றோரின் தேவைகள் அது இது என்று அவர்களை கரை சேர்த்து விட்டு ..அவன் திருமணம் முடிக்கும் போது முப்பத்தைந்து வயதாகி விட்ட்து ..வனிதாவும் வந்து தான் கற்ற கல்வியின் பயனால் வங்கியில் ஆரம்ப நிலை பணியில் சேர்த்துக்கொள்ள படடாள் . முதலில் மகள் பிறந்ததும் ..அவர்கள் இருந்த தொடர் மாடிக்கு குடியிருப்பில் ஒரே பூச்சி த் தொல்லை இந்த குழந்தையை வைத்து கொண்டு இங்கிருக்க வேண்டாம் என நண்பர்கள் சொன்னதால் ஒரு சிறு வீடடை கடன் பட்டும் கைமாற்றகவும் நண்பர்களின் உதவியினாலும் வாங்கி கொண்டனர் . மகள் பிறந்து ஒருவருட மகப்பேற்று விடுமுறை முடித்தும் வேலைக்கு செல்ல முயன்றவளை வான்மீகன் தடுத்தான் . இருந்தும் உறவுக்கார பெரியம்மா குழந்தையை பராமரிக்க முன் வந்ததினால் ..அவளும் வேலைக்கு சென்று நண்பர்களின் கடன் கட்டி முடித்தனர் . இருந்தும் குழந்தைகளின் செலவு வீட்டு அடமானக் கடன் மாதாந்த கடடணங்கள் தாய் தந்தைக்கு நல்ல நாள் பெருநாட்களில் அனுப்பும் சிறு தொகை என வனிதாவின் சம்பளம் கை கொடுத்தது . மீண்டும் ஒரு வாரிசு வேண்டும் என் எண்ணவே மகனும் பிறந்து ஆறுமாதங்களாயின. அதிகாலை ஆறுமணியிருக்கும் .. ஒரு வெளிநாட்டு தொல்லை பேசி அழைப்பு .. உறவினரின் அவசர அழைப்பாக இருக்கும் என எண்ணி .. எடுத்தவளுக்கு ஏன் அழைப்பை எடுத்தோம் என்றாகி விட்ட்து ... அப்போ து தான் இரவிரவாய் சளித்தொல்லையால் உறக்க மின்றி அழுத பிள்ளை உறங்க ஆரம்பித்திருந்தான். வான்மீகனும் இரண்டு வேலை செய்கிறான் குழந்தைகளின் செலவுக்காக . அவனும் இரவு வேலையால் வந்து அப்போது தான் உறங்கச் சென்று இருந்தான் . இந்த நேரத்தில் இப்படியும் சில மனிதர்கள் . ஊரில் பக்கத்து வீட்டு செல்வம் அக்கா .... கொஞ்சம் கஷ்டரமாய் இருக்கு உதவி செல்வீர்களா என் கேட்ட்பதற்காக எடுத்து இருந்தாள் . ...ஏற்கனவே ...ஒருதடவை கேட்ட் போது வான்மீகனிடம் சொல்லிவிட்டு அனுப்பி இருந் தாள் . மீண்டும் .... கணவன் வேறு பெண்ணுடன் ஓடி ..விடடான் .. ஒரு நேரக்கஞ்சி தான் குடிக்கிறோம் ...கூலி வேலைக்கு தான் போகிறேன் .. இரண்டு பிள்ளைகளுக்கும் பள்ளிக்கூட செலவு .. மாறி போடா யூனிபோம் இல்லை ஆன சப்பாத்து இல்ல ..lஎன்று அழுது மன்றாடினாள். கணவனுக்கு தெரியாமலே கொஞ்சம் பணம் அனுப்பி இருந்தாள் .... இப்பொது மூத்தவள் ஓடிபோய்வி டடாள் இருந்ததெல்லாம் விற்று ... அவள் போன இடத்தில் கண் கலங்க கூடாதென்று அவளை பொடியன் வீட்டாரிடம் அனுப்பி விடடேன் .. இப்பொது ...முன்பு போல வேலை செய்ய முடியவில்லை ..ஒரே நெஞ்சு நோ ... என் காலம் முடிவதற்குள் சின்னவளையும் க ட்டிக்கொடுக்க வேண்டும். என்று தன சோகத்தை சொல்லி அழுதாள். பிள்ளையை ஏதும் வேலைக்கு அனுப்பலாம்தானே? என்று சொன்னதற்கு மறு முனையில் பேச்சு இல்லை... தனக்கு தெரிந்த வேறு உறவினர் ஊரவர்கள் பெயரை சொல்லி அவர்களின் நம்பர் தாருங்கோ என்றும் கேடடாள் ... ..நன்றாக் வாங்கி ...அனுபவ பட்டு இருக்கிறா போல. இர ந்து வாழ்தல் பல வகை இதுவும் ஒரு வகையோ .. ... செல்வம் அக்கா போனை வையுங்கோ இவரிடம் கேட்டு பார்க்கிறேன் நானும் மகன் பிறந்து இருப்பதால் வேலைக்கு போவதில்லை எங்கள் பாடும் கஷ்டம் அக்கா என்று போனை வைத்து விடடாள் . ஊர வர்களிடம் வாங்கி வாழ்க்கையை கொண்டு செல்ல இருக்கும் இவர்களின் திறமையை எங்கோ போய் சொல்வது ... நாட்டுப் பிரச்சினைகளுக்கு பின் எத்தனயோ தொழிற் சார் நிறுவங்கள் வந்துவிட்ட்ன .. உழைத்து வாழ இவர்களுக்கு ஏன் தெரிவதில்லை. வெளிநாட்டிலும் கடுங் குளிர் ..கொடிய வெயில் கால நிலை தொல்லைகளுக்கு மத்தியில் இயந்திரத்தனமாக தானே வாழ்கிறார்கள் , உழைக்கிறார்கள் . ஏனொ இந்த ஜனங்களுக்கு உழைத்து வாழ்வை கொண்டு செல்ல மனம் வருவதில்லை .. எதுவரை இவர்களை தூக்கி விட முடியும். .இப்போது பிரச்சினைகள் தணிந்துவிட்ட்னவே ...ஒரு வழி அடைத்தால் மறு வழி திறக்க இவர்கள் பாடு படுவதே இல்லை . வாழ் நாள் முழுக்க பிறர் கையை நம்பி இருக்கலாமா ஏன் இவர்களைப் போன்ற்வர்களுக்கு புரிவதில்லை . முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் ..முடியும் வரை வாழலாம் . கடவுளே ...இந்த ஊரில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டில் காசு மரத்தில் காய்கிறது என்ற எண்ணம் போலும். வெளி நாட்டில் வேலை ..இயந்திரங்களோடு இயந்திரமாய் எட்டு பத்துமணி நேரம் கால் கடுக்க நின்று ..உழைத்து ..பின் வீட்டுக்கு வந்து .. சமைத்து குழந்தைகளை குளிக்க வார்த்து ..உணவூட்டி படுக்க விட்டு அப்பாடா என்று . காட்டிலில் சாய மணி பதினொரு ,பன்னிரண்டுமணியாகி விடும். அப்போது தான் உறங்கச் சென்றது போல் இருக்கும் அதிகாலை ஐந்து மணி என்று அலாரம் கிணுகிணு க்கும். கணவனை வேலைக்கு அனுப்பி குழந்தையை பாடசாலையில் விட்டு கைக் குழந்தையை தூங்க வைத்து வீடடை ....ஒழுங்கு படுத்தி . முடிந்ததை .சமைத்து .. அப்பாடா என்று உட்க்கார மற்ற குழந்தையை எடுக்கும் நேரம் வந்து விடும். நாட்கள் வாரங்களாகி ,வாரங்கள் மாதங்கள் ஆகி காலம் தான் வெகு வேகமாக ஓடுகிறது. .. .விடுமுறை காலத்தில் இங்குள்ளவர்கள் ஊருக்கு சென்று படங்காட்டுவது ...கடன் பட்டு சென்று செலவழிப்பது ...எல்லாம் மாயை என்று எங்கே அவர்களுக்கு விளங்க போகிறது ... காசு ..காசு ... வெளி நாட்டுக் காசு.. க ஷ்ர ரப்படடவர்களுக்கு ..உதவி ஒருமுறை செய்யாலாம் .இரு முறை செய்யலாம் . வாழ்நாள்மு ழுக்க கொடுத்துக் கொண்டே இருக்கமுடியுமா ?அதை விட அவரக்ளுக்கு ஒரு வேலை வாய்ப்பை வருமானம் ஈட்டும் முறைமையை ஏற்படுத்தி கொடுப்பது தான் ...புத்திசாலித்தனம். ஒரு மூத்தோர் வாக்கு மொழி இருக்கிறது ...பசி உள்ளவனுக்கு மீனைக் கொடுக்காதே மீனை பிடிக்க கற்றுக் கொடு ... என்று ...காசை கொடுத்துக் காடடாமல் ... வாழ வழியைக் காட்டுவோம்.
 33. 22 points
  ஒரு பிச்சைக்காறனின் வெட்கம்.... (சிறு கதை) ஒரு நாள் மனைவியுடன் புகையிரதத்தில் பயணித்துக்கொண்டிருந்தேன் கைத்தொலைபேசியில் முகநூலில் ஒன்றிப்போயிருந்த என்னை ஒரு தரிப்பிடத்தில் ஏறி பிச்சை கேட்கத்தொடங்கிய ஒருவரின் குரல் இடை மறித்தது அநேகமாக இவ்வாறானவர்களைக்கண்டால் வாகனத்தில் என்றால் ஐன்னல்களை மூடிவிடுவேன் புகையிரதத்தில் என்றால் தோழிலிருக்கும் துண்டால் மூக்கை மூடிக்கொள்வது தான் எனது வழமை புகையிரதத்தில் ஏறி பிச்சை கேட்பவர்கள் ஏதாவது ஒரு கதை சொல்வார்கள் இது வழமையானது தான் ஆனால் இவர் தனது வாழ்வு பற்றி சொல்லத்தொடங்கியது வித்தியாசமாக இருந்தது அவர் ஒவ்வொரு வார்த்தையையும் சொல்லும்போதும் அதன் வலியை உணர்ந்தது அதை சொல்ல மிகவும் சிரமப்பட்டது ஒவ்வொரு வார்த்தைக்கும் கண் கலங்கி வெட்கப்பட்டது அவர் இதை விரும்பவில்லை ஆனால் வேறு வழி இன்று தெரியவில்லை என்ற போது உடல் முழுவதும் கூசியது அந்த வலியை நானும் உணர்ந்தேன் இந்த நிலை எவருக்கும் வரக்கூடாது என்பதை வாழ்வில் முதன்முதலாக உணர்ந்தேன் பொக்கற்றுக்குள் கை வைத்த என்னை மனைவி கேட்டார் திடகாத்திரமான எவருக்கும் பிச்சை போடமாட்டீர்களே இன்று என்னாச்சு என்று? அவன் ரொம்ப வெட்கப்பட்டு பிச்சை கேட்கின்றான் எவருக்கும் இந்த நிலை வரக்கூடாது என்று காசு போடும் போது தான் பார்த்தேன் நான் மட்டுமல்ல பலரும் கண்களில் ஒருவித கனிவுடன் பணம் போட்டபடி இருந்தனர். (இந்தக்கதையை எழுதத்தூண்டிய தம்பி நிழலிக்கு நன்றிகள்)
 34. 22 points
  நான் ஒரு அசைவ பிரியன் அதே போன்று எனது நண்பர்களும் அசைவப்பிரியர்கள் .ஐந்து லாம்படிசந்தி நானா கடையில் கொத்துரொட்டி எங்களது அதிஉயர் கெளரவமான சாப்பாடு அன்றைய எங்களது பொருளாதர நிலையில் அதுதான் எங்களுடைய‌ சைனீஸ்,தாய்,இட்டாலியன் ரெஸ்ரோரன்ட்.ஆட்டிறைச்சி கொத்து என்று சொல்லுவோம் ஆனால் அவர் ஆட்டை போட்டாரா மாட்டைபோட்டரா என்று ஆராச்சி ஒன்றும் செய்வதில்லை.எங்களுடன் ஒரு ஐயர் பெடியனும் இருந்தவன் அவன் வரமாட்டான். டுயுசன் வகுப்பில் பெண்களின் இருக்கைக்கு பின்னால் இருக்கும் இருக்கையில் முதலாவதாக போய் இருப்பது அவன் தான்.வேறு குழப்படிகளுக்கு ஒத்தாசை செய்வான் அதாவது பெண்களுக்கு லவ் லெட்டர் கொடுப்பது ,அவர்களி பின்பு சைக்கிளில் திரிவது போன்ற செட்டைகளுக்கு ஆனால் சாப்பாட்டு விடயத்தில் மட்டும் மிகவும் கடுமையாயாக இருப்பான். டெய் நாங்கள் அப்பாட்ட சொல்ல மாட்டோம் நீ சாப்பிடு " " இல்லையடா கோவிலுக்கு போக வேணும்" "நாங்களும் கோவிலுக்கு போறனாங்கள் தானே" "இல்லையடா எங்கன்ட பரம்பரையே சாப்பிடுவதில்லை,ஆச்சார்மாக இருக்க வேணும்" அதன் பிறகு அவனை நாங்கள் வற்புறுத்தவில்லை . அவனுக்கு பூணுல் சடங்கு நடந்தபின்பு அவன் எங்களை மெல்ல மெல்ல புற‌க்கணிக்க தொடங்கினான். . அவனை எல்லோரும் ஐயா என்று அழைக்க தொடங்கிவிட்டார்கள் . நான் பெயர் சொல்லித்தான் அவனை அழைப்பேன்,ஆனால் அம்மா "ஐயா ஒர் அர்ச்சனை செய்ய வேணும் என்று தான் கேட்பார்"அவனும் மந்திரம் சொல்லி தீபத்தை காட்டுவான் பிறகு தொட்டு கும்பிடுவதற்காக எங்களிடம் கொண்டுவருவான் அம்மா மிகவும் பயபக்தியுடன் தொட்டு கும்பிட்டு தட்டில் தட்சணையும் இடுவார். கால போக்கில் நானும் அவனை ஐயா ஒரு அர்ச்சனை செய்யவேணும் என்று கேட்க வேண்டிய நிலைக்கு போய்விட்டேன். எங்களுடைய வீட்டுக்கு பின்னே கன்னியாஸ்திரிகள் மடம் இருந்தது .ஞாயிறு காலையில் குழுக்களாக வெள்ளை சட்டை அணிந்து கன்னியாஸ்திரிகள் செல்வார்கள் .கன்னியாஸ்திரிகள் என்று சொல்லுறாங்கள் ஆனால் வயசு போனவையள் எல்லாம் இருக்கினம் என்று எங்களுக்கு மனதினுள் ஒரே குழப்பம்.கன்னிகள் என்றால் இளம் பெண்கள் என்று எங்கள் மனதில் பதிந்துவிட்டது.பிறகு தமிழ் படங்கள் பார்க்க தொடங்க விளக்கம் தானகவே வந்திட்டுது. எங்களது வீட்டுக்கு முன்னே மகளிர் பாடசாலை .பாடசாலை தொடங்கும் பொழுது அல்லது முடியும் பொழுது எனது நண்பர்களுக்கு என்னிடம் கொப்பிகள் கடன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும்,அவர்களின் வருகையை எதிர் பார்த்து காத்திருப்பேன். சைக்கிள் மணிசத்தம் கேட்டவுடன் கையில் அகப்படும் கொப்பியை தூக்கி கொண்டு படலையடிக்கு சென்று சைக்கிள் மாநாடு நடத்துவோம்.ஆனால் அந்த மாநாட்டில் எடுத்த தீர்மாணங்கள் ஒன்றும் நிறைவடையவில்லை என்பதையிட்டு நாம் யாரும் இன்று வரை கவலைப்படவில்லை. ஒரு நாள் கெற்றின் கொழுவியை தட்டும் சத்தம் கேட்க யன்னலூடாக பார்த்தேன் வெள்ளை யூனிபோர்ம் தெரிந்தது ,மின்சாரம் தாக்கியது போன்றிருந்தது.எங்களது மாநாட்டின் முடிவுகளை அம்மாவிடம் சொல்ல வந்திருப்பார்கள் என்ற எண்ணத்தில் வளவின் பின்னே ஒடி ஒழிந்து கொண்டேன். "தம்பி கண்ணா எங்க போயிட்டா" என அம்மா கூப்பிட்டு கொண்டே வந்தார். "இங்க வந்து பார், யார் வ்ந்திருக்கிறது என்று" நான் இருக்கும் இடத்து கிட்ட வந்த சத்தம் கேட்க "வாரன் அம்மா ஆட்டுக்கு குழை ஒடிக்கிறன்,சும்மா ஏன் கத்திறீயள்" "நீங்கள் போங்கோ நான் கை காலை கழுவிபோட்டு வாரன் " " மினக்கெடாமல் வா" பயந்து கொண்டே வீட்டினுள் சென்றேன் ,கன்னியாஸ்திரிகளின் உடையுடன் முதியவரும் ஒர் இளையவரும் இருந்தார்கள். அவர்களை பார்த்தவுடந்தான் நிம்மதி பெருமூச்சு விட்டேன். மத போதனைக்கு வந்திருப்பார்கள் ஏன் அம்மா என்னை இதுக்குள் மாட்டிவிட்டவர் என நினைக்கும் பொழுதே "கண்ணன் என்னை தெரியுதோ" "இல்லை சிஸ்டர் " "என்னடா தெரியவில்லையடா " "யார் அம்மா சொல்லுன்கோவன்" "மட்டகளப்பு அக்ணஸ் " "ஹலோ அக்ணஸ் அக்கா எப்படியிருக்கிறீங்கள்" "நல்லாய் வளர்ந்திடீர்,இப்ப என்ன செய்யிறீர்" "இந்த வருடம் ஏ/எல் எடுக்கப்போரன்" "எப்படி தெரியும் நாங்கள் இந்த வீட்டில் இருக்கிறோம் என்று" "உங்களை அண்ரி போனகிழமை கெற்றடியில் கண்டனான் ,ஒவ்வோரு தடவையும் கண்ணை வாசலில் பார்க்கும் பொழுதும் இது உங்கன்ட வீடாக இருக்கும் என்று நினைக்கிறானான் போனகிழமை உங்களை கண்டபின்புதான் சுயராய் தெரிந்தது ,மதரிட்ட பெர்மிசன் எடுத்து போட்டு மிஸ்ஸுடன் வந்தனான் உங்களை மீட் பண்ணிட்டு போவம்மென்று." "டேவிட் அண்ணா என்ன செய்யிறார்" "பாதிரியாராக -------முனையில் இருக்கிறார்" அக்ணஸ் அக்கா விடை பெற்று சென்ற பின்பு . "இந்த பிள்ளை ஏன் இப்படி போச்சுதோ தெரியாது ,நல்ல வடிவான பிள்ளை ஏன் இப்படி போச்சுதோ,டேவிட் பாதிரியாரக வரவேணும் என்றுசின்ன வயசிலயே அவையளின்ட அம்மா விரும்பினவர் அதானால் அவர் பாதிரியாராக வந்திருப்பார்"எல்லாம் அவையளின்ட தலையெழுத்து என பெருமூச்சு விட்டபடியே அம்மா வீட்டு வேலைகளை கவனிக்க தொடங்கிவிட்டார். அக்ணஸ் அக்கா என்னைவிட ஐந்து வயது கூடியவர் அவரின் அழகு அவரைவிட வயது குறைந்தவர்களையும் சபலமடையச்செய்யும்.. `புகையிரதம் கொழும்பு நோக்கி போய்கொண்டிருந்தது.மெல்ல மெல்ல சிவப்பு வெள்ளை நிற கட்டிடங்களுடன் கோபுரங்களும் மறையத்தொடங்கின. இடையிடையே சிலுவையில் அறைந்த ஜேசுநாதர்,கையில் குழந்தையுடன் மாதா சொருபங்களும் வந்து போய்கொண்டிந்தது . காடுகளிடையே ஆலமரத்தடியில் பிள்ளையார் தனிதிருந்தார் சில இடங்களில் திரிசூலத்தை காணக்கூடியதாக இருந்தது.புகையிரதத்தின் தாலாட்டில் தூங்கிபோனேன்.முழித்த பொழுது காடுகளினுடாகவும் சிறு மலை தொடர்களினுடாக வண்டி சென்றுகொண்டிருந்தது.மலைகளின் உச்சியில் வெள்ளைநிற கோபுரங்களும் புத்தர் சிலைகளும் தெரியத்தொடங்கின.மஞ்சள் வர்ண காவியுடுத்து புத்தர் சிலையாக நிற்க அவரை தரிசிக்க காவியுடுத்த சிறுவர்கள் வரிசையாக படிகட்டில் ஏறிகொண்டிருந்த்தார்கள் . அந்த சிறுவர்கள் எதை தேடி ஏறுகிறார்கள், தேடச்சொன்னது யார் இன்றுவரை பதில்லை.சில இடங்களில் ஊரில் கண்ட மாதசொருபங்களும்,சிலுவையில் அறைந்த ஜெசுநாதரும் ,சில வீடுகளின் முற்றத்தை அலங்கரித்தார்கள்.அரசமரத்தடியில் புத்தர் உரிமையுடன் குடிகொண்டிருந்தார். தலைநகரம் பிக்குகள், பாதிரியார்கள் ,கன்னியாஸ்திரிகள் என நிறைந்திருந்தது விமானம் சவுதியரபியா நோக்கி பயணமானது.அநேகர் வேலைவாய்ப்பு தேடி சென்று கொண்டிருந்தார்கள் .பெரும்பாண்மையானவர்கள் இஸ்லாமியர்கள் .எனக்கு அருகில் இருந்தவர் மெல்ல கதையை தொடங்கினார். "கம கோயத" "யாப்பானய‌" "நீங்கள் தமிழா" " ஒம்,நீங்கள் எந்த இடம்" "நான் காலி" அந்த விமானத்தில் இருந்த அநேகர் தொப்பியணித்திருந்தனர். ஆனா இஸ்மயில் தொப்பிய்ணித்திருக்கவில்லை ,தாடியும் வைத்திருக்கவில்லை.அவரும் நான் வேலை தேடிசெல்லும் கொம்பனியில்தான் பணிபுரிய போகின்றார் என்பதை அறிந்து கொண்டேன். விமானநிலையத்தில் இறங்கியவுடன் கடவுச்சீட்டுக்களை கம்பனி பொருப்பெற்றுகொண்டது.சினேக பூர்வமாக பழகினார் தாடி வளர்த்திருந்தவர்களை நக்கலடித்தார். காலப்போக்கில் அவர .தாடி வளர்த்து, ஐந்து நேர‌ தொழுகைக்கு ஒழுங்காக செல்ல தொடங்கியிருந்தார்.ஒரு வெள்ளிக்கிழமை அரேபிய உடை அணித்து வந்திருந்த்தார். "என்ன இஸ்மயில் எப்ப தொடக்கம் அரபியா மாறினீங்கள்" அவர் இப்ப மெளலான பாந் ஒத பள்ளிக்கு போகின்றார் என பக்கத்தில் நின்ற மற்றைய இஸ்லாமிய நண்பர் சொன்னார். சவுதியில் அநேக பல்நாட்டு மெளலானக்களை பார்க்ககூடியதாக இருந்தது சவுதி வாழ்க்கையில் எதிர்காலமில்லை என்று தெரிய வர ,எனைய புத்தாசலி தமிழனை போன்றுநானும் அவுஸ்ரெலியாவுக்குள் குடிபெயர்தேன். பரமற்றா வில் ஒரு ரெஸ்ரோரன்டுக்கு மகள் அழைத்து சென்றாள் .சாப்பாட்டை ஒடர் செய்து விட்டு கதைத்துகொண்டிருக்கும் பொழுது "இது முந்தி சேர்ச்சாக இருந்தது இப்ப ரெஸ்ரோரன்ட் ஆக்கி போட்டினம் "என்று பெட்டர்காவ் சொல்ல நான் அங்கும் இங்கும் பார்த்தேன். "என்ன ஏமலாந்திரிய‌ள்" " ஒரு கன்னியாஸ்திரியையோ ,பாதிரியையோ காணவில்லை அது சரி இந்த இருபது வருசத்தில் அவுஸ்ரேலியா வீதியில் கன்னிகளை கண்டிருக்கிறன் கன்னியாஸ்திரிகளையோ பாதிரிமாரையோ காணக்கிடைக்கவில்லை எப்படி பழைய சேர்ச்சில் அவையளை தேடலாம்" "உந்த லொல்லுக்கு குறைச்சலில்லை சூடு ஆர முதல் சாப்பிடுங்கோ" .
 35. 22 points
  காலையில் வெளியே கொட்டியிருக்கிற பனியை கூட்டி விட்டு வேலைக்கு செல்ல போறேன் பிறகு பார்க்கலாம் வன்னியன் என்று திண்ணையில் தமிழ்சிறி அண்ணா சொல்லிடு போறத பாக்க மனதுக்கு கஷ்டமாகிட்டுது ஹ்ம்ம் என்ன பண்ணலாம் ? வேலை முடிஞ்சு வாரா சிரியண்ணைக்கு உற்சாக பானம் கலக்கி கொடுப்போம் வந்ததும் எடுத்து மடக் மடக் என்று குடிக்கும் சிறி அண்ணா குடித்த பின்பு சிறி அண்ணா நிலை நண்பரை காப்பாற்ற ஓடோடி வரும் வன்னியன் காரு பனி நாட்டிலிருந்து பறந்து வரும் குருநாதர் குடுக்காமல் குடித்த விட்டதால் கோபம் கொண்ட கு.சா தாத்தாவின் ஆட்டம் (உனக்கு வேணும்டி இதும் வேணும் இன்னமும் வேணும்) கு.சா வுடன் கூட்டணி சேர்ந்த வாலி அண்ணா ( நான் நல்லவனுக்கு நல்லவன் கேட்டவனுக்கு கேட்டவன் நான் நல்லவன்ன்ன்ன்ன்........ நான் கேட்டவன்ன்ன்ன்ன்..... லவ் பண்லாமா வேண்டாமா.....???? ) மப்பு தெளிந்த பின் விசயத்தை கேள்வி பட்டு திரும்ப மப்பான அர்யுன் அண்ணா விடுவாரா நவீனன் அவரும் வருகிறார் என்ன ஆச்சு என்று அக்கம் பக்கம் ஓடி விடுப்பு பார்த்து முகநூலில் நேரடி தகவல் போடும் துளசியக்கா சிக்கனமாய் வர மாட்டு வண்டி தான் சரி என்று உடையார் ஏறி உக்கார்ந்த மாட்டு வண்டியை பாருங்கோ என்ன சிக்கல்னு விஞ்ஞான விளக்கத்த குறிப்பெடுத்து கொண்டு வாற நெடுக்ஸ் அண்ணா பாழா போன டங்கு விட்டுட்டு போயிட்டாரே : நிழலி அண்ணா முதலில் வந்த புத்தன் அண்ணாவும் சுவியண்ணாவும் சிறியாருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்து போகின்றனர் வேலையிடத்தில் கையும் ஓடல காலும் ஓடல சோழியன் அண்ணனுக்கு, வேலையெல்லாம் தப்பு தப்பாய் முடிகிறது ஒல்லாந்து காரர் துங்கி வந்தவரை கொண்டு இழுத்து வருகிறார் கெதியில நண்பன போய் பாப்போம் எண்டால் இந்த மனுஷி விடுறா இல்ல : நந்தன் அண்ணா அசுர வேகத்தில் வருகிறார் மணிவாசன் அண்ணா
 36. 22 points
  ரயிலை பிடித்தாயிற்று, கெளதம் மேனனின் படங்களை போல் அதிசயத்தக்க அழகிகள் இல்லாமால் பாலாவின் திரைப்படங்களை போல் பிச்சைகாரர்களும், வறியவர்களும், நாடோடிகளும், வித்தைகாரர்களுமாய் இயல்பாய் இருந்தது. மெல்ல சிந்தனையோடியது, ஒரு வாரத்திற்கு முன் வருவதாக சொல்லியதோடு சரி அதன்பின் பேசவில்லை, இன்னமும் படுபாவி புலவர் தொலைபேசி எண்ணை கொடுக்கவில்லை, எங்கே போய் யாரை சந்திப்பது என்ற அச்சம் வேறு புகுந்துகொண்டது. குமரனிருக்க இடமில்லையேல் குன்றிற்க்கு பெருமையில்லை, இசை இல்லையேல் பயணங்களுக்கு சிறப்பில்லை. ஏதோ... மோகம் ஏதோ... தாகம் நேத்துவரை முளைக்களயே... ஆசைவிதை விதைக்களயே... சேதிதிதிதி....... என்னனன . . . . . . வனக்கிளியே....!!! ராஜாவின் பாடல்களால் சலனமடைந்த மனம் ஒருநிலைக்கு வந்தது. சென்னை நண்பனை அழைத்து ஒரு நிகழ்ச்சிக்கு உடன்வரும்படியும், விலாசத்தை சொல்லி இணையத்தில் போக வேண்டிய இடம், பேருந்து பற்றிய தகவல்களை பார்த்து வைக்க சொன்னேன். ரயில் சமிஞ்சைக்காக ஒரு மணி நேரம் காத்திருந்தது சென்னையின் புறநகர் பகுதியில், கடந்து சென்று கொண்டிருந்த மாநகர் உள்ளூர் சேவை ரயிலின் படிக்கட்டுகளில் ஆண்களும், பெண்களும், காதலர்களும் அநாயசமாக பயணம் செய்து கொண்டிருந்தனர். அதற்கு முந்தைய நிலையத்தில் ஏறிய ஒருவர் மதியம் இரண்டு மணியளவில் எல்.ஆர்.ஈஸ்வரியை "செல்லாத்தா செல்ல மாரியாத்தா" என்று கத்த விட்டு கொண்டிருந்தார். ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு போக போகிறோம் என்றேன். மேலும் கிழும் பார்த்தான். தலைநகரின் சுற்றாடல் மிக மிக மோசமாக இருந்த்து மெட்ரோ ரயில் பணிகளினால். எங்கும் புகை தூசி. நண்பனுடன் பேருந்தில் பயணபட தொடங்கினேன். கையில் அழைப்பிதழ் இல்லை, தொலைபேசி எண்ணில்லை ஒருவேளை உள்ளே நுழைய தடை போட்டுவிட்டால் எண்ண செய்வதென மனம் தரிகெட்டு பாய்ந்தது. இடையிடையே இரவு உணவு இருக்கு தானே என்று கேட்டு கொண்டிருந்தான். கனடாகாரர் கனக்க கவனிப்பினம் என்டு மனதில் நினைத்து அவனிடன் ஒம் ஒம் எல்லாம் இருக்கு என்று நம்பிக்கையூட்டி கொண்டிருந்தேன். ஊரிலிருந்து வரும்போதே உடனொருவன் வருவதாக சொல்லியிருந்தேன் அம்மாவிடம். அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது அவனிடமே கொடுத்து பேச சொன்னேன். அவனும் சமாளித்தான் இனி கவலையில்லை. குறிப்பிட்டிருந்த நேரத்திற்கு முன்னதாகவே நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு சென்றாயிற்று. வரவேற்பரையில் ஊழியரிடம் நிகழ்வை பற்றிய விடயத்தை சொன்னேன், மேலே முதல் மாடியில் என்றார். வரவேற்பரையிலேயே ஒரு சிறு வண்ணமயமான கூட்டம் அகமகிழந்து எதையோ குடித்தபடி இருந்தனர். அதில் இரண்டு சிறிய பெரிய சிறுவர்களும் இருந்தனர். என் பயணத்தின் இலக்கானவர் மெதுவாக திரும்பி பார்த்து மீண்டும் காகித குவளைக்குள் மூழ்கிவிட்டார். மேலே போகனுமடா என்று திரும்பினேன் ஆளை காணோம். மேலே போவதா அவனை தேடுவதா இல்லை தமிழிடம் போவதா என்று மனம் ஊசலாடியது பெண்டுலத்தின் துணையில்லாமல். சரியென்று மேலே படிக்கட்டிற்கு போவதுபோல் சென்று ஒரு அரைவட்டமடித்து அவர் முன்னேபோய் நின்றேன். நிமிர்ந்து பார்த்தவரிடம் ராஜன் விஷ்வா என்றேன். ஒ ஒ ராஜன் விஷ்வாஆஆஆ வாங்கோ வாங்கோ வணக்கம் என்று புன்னகைத்தார். நான் சுதாகரிப்பதற்குள் ஏவுகணை வேகத்தில் சில சொல்லாடலை முடித்திருந்தார் யாழ்பாண தமிழில், என்ன சொன்னார் என்று யோசிப்பதற்குள் மீண்டுமொரு பல்முனை ஏவுகணை தாக்குதலை முடித்திருந்தார். பிறகு பிள்ளைகளை அறிமுகம் செய்தார் கணவரிடம் அறிமுகம் செய்தார் இவர் தான் யாழ்கள இசையின் சிஷ்யபிள்ளை கோவயமுத்தூரிலிருந்து வந்திருக்கிக்கிறார். ராமனுக்கு அணிற்பிள்ளை உதவிசெய்து பெருமையடந்தை போல் குருநாதருக்கு சிறுதுளி பெருமை சேர்த்து இந்த சிஷ்யபிள்ளை பிறவிப்பயனைடைந்தது. என்னை பார்த்திருக்கிறீர்களா என்றவரிடம் ஒம் விவசாயி விக் அண்ணாவின் சந்திப்பில் களைத்துப் போயிருந்த கள உறவுகளுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் தந்த பாரியின் படங்களை பார்த்திருக்கிறேன் என்றேன். முதலில் நான் சாகாறாவின் அண்ணன் என்று குழப்படி செய்து பார்த்தார். எதிரிலிருந்து கண்ணை சுழற்று சுழற்றி வெருட்டினார் பிறகு சில நிமிடங்கள் கனத்த மவுனம். இருவரும் நகர்ந்து விட்ட பின் நானும் பெரிய மகனருகில் அமர்ந்து கொண்டேன். மெதுவாக அவதானித்தேன் அவர்களை. குடும்பமே தமிழர் உடையில் மிடுக்காய் இருந்தது. சாரம் உடுத்தியிருந்தார் தந்தை. பெரிய பிள்ளை தாவணி பாவாடையிலும், ஆண் பிள்ளைகள் குர்தா மாதிரியான உடையிலிருந்தனர். அவர்களுக்கும் அக்கா சாரம் கட்டிவிட்டிருந்தால் இன்னும் அழகாயிருந்திருக்கும். பெரிய மகள் கையில் போட வேண்டிய மருதாணியை தலைமுடிக்கு போட்டிருந்தார். சிறிய மகள் அனார்கலி வடிவ சுடிதாரில் கொள்ளை அழகில் துடுக்குடன் இருந்தாள். சிறிய மகன் அமைதியின் வடிவாய் சாந்தமாயிருந்தான் நல்ல பண்பான சிறுவன்போல் தோன்றியது. பெரிய மகன் என்னிடம் பேச முயன்றவர்போல் இருந்தது. முதலில் பெயர் கேட்டவர் பிறகு முகப்புத்தக முகவரி வாங்கி குறித்து வைத்து கொண்டவர் அத்திட்டத்தை இன்று வரை கிடப்பில் போட்டுவிட்டார். என்ன வேலை செய்கிறீர் என்றவரிடம் அது அதுவந்து அதாவது என்டு இழுக்க எளிதில் புரிந்து கொண்டார் வேலையில்லா பட்டதாரியென்டு, திடிரென்று அம்மா இவருக்கு இருபத்திமூன்று வயதாம் என்டு கத்திவிட்டார். அருகில் வந்த அக்கா நலம் விசாரித்தவர். இந்த மடிக்கணினியால் படங்களையேற்ற முடியவில்லையென கவலைப்பட்டார். எனக்கும் தான் யாழில் படங்களை ஏற்ற தெரியாது என்டு வெகுளியாய் சொல்ல பிறகு இத்தனை நாள் என்ன அங்க குப்பையா கொட்டுறியள் என்று கடிந்தார். ( நியானி: கருத்துக்கள விதிகளை மீறி சக கள உறவை ஒருமையில் திட்டியதற்காக கள உறுப்பினர் வல்வை சகாறாவிற்கு மூன்று எச்சரிக்கை புள்ளிகளையும், ஒரு மாத தடையும் தாராளமாக வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ) தொலைபேசியில் தான் வருகிறேன் என தெரிந்ததும் வருத்தம் தெரிவித்தார். பிறகு கனாடாவிலும் நடைபெற உள்ள நிகழ்வு பற்றியும் பேசி கொண்டிருக்க ஆளை காணமென்று தேடப்பட்ட நண்பன் ஆளுடன் பேசி முடித்து வந்தான். அவனை அறிமுகப்படுத்த பிறகு ஒவியர் புகழேந்தி அங்கு நின்றிருந்தார் பின்னால், அவரை பற்றி சொன்னார் எனக்கு பிடிபடவில்லை. பல அரசு விருதுகளெல்லாம் வாங்கியவர் என்டு எனக்கு விளங்கவைக்க கடினமாக முயன்று தோற்றுவிட்டிருந்தார். ஞாபக மறதிக்கு அம்மா வாங்கி கொடுத்த ஞாபக சக்தி மாத்திரையையே சாப்பிட மறந்துவிடும் நினைவாற்றல் உடையவன் நான். வெகுநேரம் கழித்துதான் அவரது ஒவியங்களை யாழில் பார்த்தது நினைவுக்கு வந்தது. அவர்தான் புத்தக அட்டைப்பட ஒவியம் வரைந்துள்ளார். விழாவிற்கு வர போகிறவர்களில் உன்னை மட்டும் தான் தெரியும் என்றபோது ஒருவேளை வராமல் போயிருந்தால் அவரிற்கு தனிமையுணர்வு எற்பட்டிருக்கலாம், தம்பி என்ற நிலையிலும் சக யாழ் கள உறுப்பினர் என்ற வகையிலும் அவர் சார்பாக கலந்து கொண்டது மனநிறைவை தந்தது. நண்பனுக்கு சூழல் புதியதாக இருக்க அவனை அழைத்து மேலே நிகழ்விடத்துக்கு சென்றுவிட்டேன். விழா நிகழ்விடம் எளிமையாக இருந்தது. சாகறா அக்கா சிரித்து கொண்டிருப்பது போல் ஒரு விளம்பரதட்டி அறிமுக புத்தக அட்டைப் படத்துடன் மேடைக்கு பின்புறம் தொங்கவிட்டிருந்தது. ஒரு பெரியவர் அவசரத்துடன் வருவதும் போவதுமாக இலங்கை தமிழிலும் தமிழக தமிழிலும் பேசி கொண்டிருந்தார். நாற்பது இருக்கைகள் வரை போடப்பட்டிருந்தது. அக்காவின் கணவர் சற்று கலவரத்துடன் காணப்பட்டார். முன்பே என்னிடம் விழாவிற்கு ஒப்பனை எதுவும் செய்யபோவதில்லை என்டு அக்க சத்தியம் சொன்னவர், சத்தியத்தை அப்பட்டமாக மீறியிருந்தார். உள்ளே வந்த சிறியவனை அழைத்து அருகில் அமர்த்தி எனது அதியுயர் ஆங்கில புலமையால் அவனது தமிழ் புலமையை சோதித்து கொண்டிருந்தேன். தமிழ் பட கதாநாயகிகளை போல ஒரளவு பேசினான். முதலில் வந்த கொளத்தூர் மணி அவர்கள் அப்போது தான் புத்தகத்தை எடுத்து ஆராய்ந்தார். பிறகு உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தனும் ஒவியர் புகழேந்தியும் மற்றவர்களும் வர துவங்கினர். ஐய்யா பழ.நெடுமாறன் வந்ததும் அனைவரும் எழுந்து நின்றனர். நெடுமாறன் ஐய்யாவும் மணி அவர்களும் தங்களது புதல்விகளுடன் வந்திருந்தனர். விழா ஆரம்பிக்க முன் அனைவருக்கும் பிரட் சான்ட்விச் பரிமாறப்பட்டது. இலங்கை தமிழிலும், தமிழக தமிழிலும் பேசி கொண்டிருந்தவர் விழாவின் துவக்க உரை வழங்கினார். அவர் சாகறா அக்காவின் தந்தையின் வகுப்பு தோழனாகிய கவிஞர் வல்வை.குமரன். பிறகு தந்தை பழ.நெடுமாறன் ஐய்யா அவர்களின் கரங்களால் வல்வை சாகறாவின் "காவியத் தூது" "வேங்கையன் பூங்கொடி" ஆகிய இரு நூல்களும் வெளியிடப்பட்டது. இது அவரது இலக்கிய வாழ்வின் ஒரு சிகரமாயிருக்கும் என்றும். மிகப்பெரும் சாதனையை சத்தமில்லாமல் செய்து தன் மண்ணுக்கு பெருமை தேடி தந்துள்ளார். ஐய்யா பழ.நெடுமாறன் முதல் சில நிமிடங்கள் பேச கடினப்பட்டது உடல் நலனில்லாமல் இருப்பதை உணர்த்தியது. அவரது குரலும் சற்று தழுதழுத்திருந்தது. தமிழ் உள்ளளவும் சாகறாவின் புகழ் நிலைத்திருக்கட்டும், தொடர்ந்து இலக்கியங்களை எழுத வேண்டுமென உளமாற வாழ்த்தினார். தொடர்ந்து ஒவியரும், உணர்ச்சி கவிஞரும், கொளத்தூர் மணி அவர்களும், பத்மாவதி என்ற விரிவுரையாளரும் பேசினர். நிகழ்ச்சியினூடே அந்த கட்டிடத்தின் மைதானத்தில் வெட்டவெளி திரையில் வேலையில்லா பட்டாதாரி ஒடிக் கொண்டிருந்ததால் அதன் ஒலி அவ்வப்போது இடையூறாக இருந்தது. சத்தம் அதிகமாக வரும் போதெல்லாம் முன்வரிசையில் அமர்ந்திருந்த சிறிய மகனும் மகளும் ஒன்றாக திரும்பி பார்ப்பதுமாக இருந்தனர். விழா முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த போது உணவு எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்ட நண்பன் கண்களால் கொலைமிரட்டல் விட்டு கொண்டிருந்தான். இடையிடையே நம்மைதான் பார்க்கிறார் அக்கா என்டு நான் அசட்டு சிரிப்பு சிரிப்பதும் முகத்தை அவா வேறுபக்கம் திருப்புவதும் வாடிக்கையாகிவிட்டிருந்தது. இறுதியில் நன்றியுரை சொல்ல வந்த நாயகி ஒரு அற்புதமான கவிதையொன்றை வாசித்தார். அதை பதிவிடும்படி தாழ்மையுடன் கேட்கிறேன். பிறகு புகைப்படங்கள் எடுத்து கொண்டனர். என்னை அழைத்து நீயும் எனக்கு மகன் மாதிரி தானே என்டு சொல்லி பிள்ளைகளுடன் சேர்த்து படமெடுத்துக் கொண்டார். அவசரத்தில் வாங்கிய அன்பளிப்பை கொடுப்பமா வேண்டாமா என்ற குழப்பத்திலே கொடுத்துவிட்டு நூல்களை அவரது கையெழுத்தில் பெற்றுகொண்டபின் அன்புகளை பரிமாறிக் கொண்டதும் விடைபெற்று பேருந்து நிலையம் நோக்கி நடக்க தொடங்கியபடி நினைவுகளில் மூழ்கினேன்.... யாழ் களம் தான் எத்தனை எத்தனை அன்பானவர்களை அறிமுகம் செய்துள்ளது. இவர் ஏன் நண்பர்கள் சொந்தங்களை இலக்கிய உலக சாதனையாளர்களை விடுத்து யாழ் உறவுகளின் வாழ்த்துக்களை தன் நூலில் அச்சேற்ற வேண்டும் ? அதிலும் என்னைபோன்ற சிறுவனின் எழுத்துக்களையும் கூட அச்சேற வாய்ப்பளித்துள்ளாரே...! எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை... பேருந்து நிலையத்தை அடைந்தபோது மழை பொழிந்தது. நல்லார் ஒருவர் காணும் புவிதனில் பெய்திடும் பூ மழை...! எது எப்படியோ இன்று குருகுலத்தின் பெருமையை உலகறிய செய்த உளமகிழ்வு அடியேனுக்கு... எல்லா புகழும் குருவிற்கே... குருவே சரணம்... சரணம் சரணம்
 37. 22 points
  நடந்து முடிந்த ஆறாம் வகுப்புக் கணிதப்பரிட்சையில் வெறும் எண்பது புள்ளிகள் மட்டும் எடுத்திருந்தமை சிறுவனின் வீட்டில் கலம்பகமாகியிருந்தது. ஆர்ப்பாட்டங்கள், திட்டல்களின் பின்னர், கணக்கில் நூறு எடுக்கவேண்டியதன் அவசியம் எடுத்தியம்பப்பட்டு அன்றைய இரவு ஓய்ந்திருந்தது. விக்கிக்கொண்டு சிறுவன் தூங்க முயன்றுகொண்டிருந்தான். உலகை நோக்கி ஒரு ஆவேசம் அவனுள் உணரப்பட்டது. "நெற்றிக்கண் பெறுவதற்கு வழியிருப்பின்…" பெருமூச்சு விட்டபடி, நெற்றியினைச் சுருக்கி, அறையின் ஜன்னல் மீது தனது கற்பனைக் கண்ணைப் பிரயோகித்தான். வீடே அதிர்ந்தது. குறிப்பாக ஜன்னல் கண்ணாடி நொருங்கி விழுவது திண்ணம் என்பது போல் அந்த அதிர்வு இருந்தது. வீட்டை உடைத்துவிட்டோமோ என்ற பதைபதைபதைப்பில், மேலும் அடிவாங்காது தப்பிக்கொள்வதற்காக, கண்களை இறுக்க மூடிக்கொண்டு நித்திரை போல் பாசாங்கு செய்ய ஆரம்பித்தான். வீடு மீண்டும் களேபரப்பட்டது. கூடத்தில் அப்பாவும் அம்மாவும் தாத்தாவும் பரபரக்கப் பேசிக்கொண்டிருந்தார்கள். சில கணத்தில் வேறும் சில குரல்கள். பக்கத்து வீட்டு அன்ரியும் அம்மம்மாவும் வந்துவிட்டார்கள். முன்வீட்டு அண்ணையும் அவர்கள் பக்கத்துவீட்டு அண்ணையும் கூட வந்துவிட்டார்கள். அதிர்ந்தது இவர்கள் வீடு மட்டுமல்லவாம். அயலே அதிர்ந்ததாம். உடல் தெப்பமாய் நனைந்திருந்தது, உடலில் இருந்து பல்வேறு திரவங்கள் அவ்வெள்ளத்தை உருவாக்கியிருந்தன. குழறி அழுதுவிடவேண்டும் போல் தோன்றியது. வேண்டுமென்று நான் செய்யவில்லை என விம்மி அழவேண்டும் போலிருந்தது. இன்னமும் எவரும் தன்னை எழுப்ப வராதமை சற்று நம்பிக்கை தந்தபோதிலும், தனது அழிவுக்கான நேரம் நொடிகள் மட்டுமே என மனம் மிரட்டிக்கொண்டிருந்தது. "நாசமாப்போன கணிதம்" என்று பற்களை நறும்பிக்கொண்டு சிறுவன் குலுங்கி அழத் தொடங்கினான். அவனது அழுகையின் ஒலியினை இதற்குமெலால் அவனால் கட்டுப்படுத்தமுடியவில்லை. குரலெடுத்து அழத்தொடங்கினான். யாரோ ஓடி வருவது கேட்டது. அம்மாவந்து அணைத்துக்கொண்டார். "அப்பன் அழாதை, சண்டை இஞ்சையில்லையப்பு, அது எங்கையோ தூர நடக்குது. நீ பயப்பிடாத." அம்மா சமாதானப்படுத்தினார். சுவிட்ச்சைப் போட்டது போல் அழுகை நின்றது. அம்மாவிற்குத் தனது அணைப்பின் பெருமை தலைக்கனம் தந்தது. சிறுவன் எழுந்து அம்மாவுடன் கூடத்திற்கு வந்து கூட்டத்தில் சேர்ந்து கொண்டான். அடுத்த ஒரு மணிநேரம் வரை, மேலும் ஒலிகளிற்காய் காது குடுத்தபடி கூட்டம் கூடியிருந்தது. எதுவும் இல்லாது போக. இரவு தூக்கத்துள் புகுந்து கொண்டது. கூடத்தில் பரபரப்புக்கேட்டு, சிறுவன் பதைத்து எழுந்தான். அப்பா பத்திரிகை வாங்கக்கடைக்குச் சென்று, பத்திரிகை தீர்ந்துபொனதால் தான் செய்தி காவிப் பத்திரிகையாய் மீண்டிருந்தார். "துன்னாலைப் பொடியனாம், நெல்லியடி அமோக வெற்றியாம்" என்பது சாராம்சயமாய இருந்தது. ---------------------------- சொந்தத் தோட்டத்தில் விளைந்த சின்ன வெங்காயத்தை, இரவில் தெரியும் நட்சத்திரங்கள் அளவிற்குச் சின்னதாய் வெட்டி, கொல்லையில் நின்ற செடியில் இருந்து அப்போது தான் பிடுங்கி வந்த பச்சை மிழகாயினை நீழக்கோடுகளாய் அரிந்து, வீட்டுக்கோழி போட்ட சிவத்தை முட்டையில் இரண்டை நல்லெண்ணையோடு சேர்த்துத் தான் சிறுமியின் அம்மா அவளிற்காய் எப்போதும் முட்டை பொரிப்பார். அதை அரிசிமாப் புட்டோடு சேர்த்து உண்பது சிறுமிக்கு மிகப்பிடித்த உணவு. உண்ணும் போது புராணக் கதைகளை அம்மா அவளிற்குச் சொல்லிக் கொண்டிருப்பாள். அருகே இருக்கும் அம்மம்மா ஒவ்வொரு கதைக்குள்ளும் உதிரிக்கதை சொல்லுவார். அன்றிரவும் அவ்வாறு தான் சிறுமிக்கு அவர்கள் உணவூட்டிக்கொண்டிருந்தார்கள். அநீதி எப்போதும் தோற்கும் என்று நரசிம்மன் கதை தத்ரூபமாகச் சொல்லப்பட்டுக்கொண்டிருந்தது. முகட்டில் எலி கலைத்துச் சென்ற பூனைக் குட்டி தவறிக் கோப்பைக்குள் விழுந்து சிறுமியின் புட்டும் முட்டைப்பொரியலும் கொட்டிப்போனது. ஆத்திரத்தில் சிறுமி நரசிம்மனாகி, இடுப்பில் கைவைத்த படி, பூனையினைப் பார்த்துக் கோரப்பார்வையினைப் பிரயோகித்தாள். பூனை தாவி ஜன்னலில் இருந்தது. சிறுமி பார்வையால் பூனையினைத் தொடர்ந்து ஜன்னலை அடைந்தபோது, வீடு அதிர்ந்தது. ஜன்னல் உடைந்து நொருங்கி விடும்போல் இருந்தது… ----------------------------------------- ஆழ்மனதின் ஆழத்தில், எங்கோ ஒரு மூலையில், மில்லரின் வெடிப்பில் தன் நெற்றிக்கண் ஆற்றிய பங்கு நம்பிக்கையாய் சிறுவனிற்குள் வளர்ந்தது. ஆழ்மனதில் ஆழத்தில், எங்கோ ஒரு மூலையில், மில்லரின் வெடிப்பில் தன் நரசிம்மன் அவதாரம் ஆற்றிய பங்கு நம்பிக்கையாய் சிறுமிக்குள் வளர்ந்தது. ------------------------ முதற்பனி தூவியிருந்த கனேடிய மாலை. பருவத்தின் மிழிர்ச்சிகள் அத்தனையும் உச்சத்தில் இருந்த பல்கலைக்கழக மண்டபம். தமிழ் மாணவர் மன்றத்தின் கலையிரவு ஆரம்பமாகியிருந்தது. என்னதான் வெள்ளச்சியாய் வாழினும் சேலைகட்டிப் பொட்டு வைத்ததும் தமிழிச்சிக்குள் ஏதோ ஒன்று நடந்து தான் விடுகிறது. “தந்தன தந்தன தாளம் வரும் ஒரு ராகம் வரும்" பாடல் ஏ.ஆர்.றகுமானால் றீமிக்ஸ் செய்யப்பட்டு அவளிற்குள் ஓலித்துக் கொண்டிருந்தது. விளக்குகள் அணைந்திருந்த அறைக்குள் யாரோ பிந்தி வந்தவர்கள் திறந்த கதவின் நீக்கலிற்குள்ளால் நுழைந்த ஒளி அவள் முகத்தில் பட்டபோது, கடைசி வரியில் நண்பர் மத்தியில் அமர்ந்திருந்த அவனின் கண்கள் பாலுமகேந்திராவின் கமராவாய் ஆகி அவள் முகத்தை மந்த ஒளியில் கவ்விக் கொண்டன. “வளையோசை கலகலகலவென…" பாடல் ஏ.ஆர்.றகுமானால் றீமிக்ஸ் செய்யப்பட்டு அவனிற்குள் ஒலிக்கத் துவங்கின. “Excuse me, is that seat taken?”, மாதக்கணக்கில் மறைந்திருந்து பார்ப்பதற்கு அவனென்ன தண்ணியில்லாக் காட்டிலா இருக்கிறான். பின்வாங்குப் பையன் இப்போ அவளருகில் இருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்து கலைநிகழ்வு பார்க்கத் தொடங்கினான். ------------------------------------- "Grit தான் வாழ்வில் வெற்றிக்கு அத்தியாவசியம். அறிவு ஆற்றல் என்பனவெல்லாம் வெறும் அலட்டல்கள். Grit இல்லாத எவரும் வாழ்வில் அடையக்கூடிய அனைத்தையும் அடைந்துவிடுவதில்லை. கணக்கில் தொண்ணூற்றைந்து காணாது. நீ நூறு எடுப்பது முற்றிலும் சாத்தியம். அதற்கு நீ கடினமாய் சீராய் உழைக்கணும். " ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த பையனிற்கு மேசையில் இருந்து அவன் அப்பா பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். “அம்மா I just can't get enough of your முட்டைப் பொரியல்" தாயால் உணவு தீத்ததப் பட்டுக்கொண்டிருந்த சிறுமி தாயோடு செல்லம் கொட்டிக்கொண்டிருந்தாள். ரொனேடோ ஒன்று எங்கோ கடந்து செல்வதன் குறியாய் காற்றுச் சுழன்று அடித்தது. திடீரென கோடை இடி முழங்கி வீடு அதிர்ந்தது. நெற்றிக்கண்ணனின் முகத்திலும் நரசிம்மியின் முகத்திலும் அதே யோசனை ரேகைகள், எப்போதும் போல் படர்ந்தன. துன்னாலை என்பது எங்கிருக்கிறது என்று தெரியாது வளர்கின்ற சிறுவனும் சிறுமிறும் என்றோ ஒரு நாள் வியந்து கேட்க இருக்கின்ற துன்னாலைப் பொடியனின் கதை பல்கலைக்கழக்க கலைவிழாவில் சந்தித்து அம்மா அப்பாவாகியிருக்கும் சிறுவனிற்குள்ளும் சிறுமிக்குள்ளும் அடைகாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன…
 38. 21 points
  உ சிவமயம். திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம். "வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்" அன்புறவுகளுக்கு , நான் கடந்த ஆவணி மாதம் மனைவி மற்றும் மகனுடன் ஊருக்கு போய் இருந்தேன். அதை ஒரு பயணம் என்று சொல்வதைவிட கோவில் சுற்றுலா என்பது பொருந்தும். ஆவணி மாதத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கும் பெரும்பாலான ஆலயங்களில் உற்சவங்கள் நடைபெறும்.ஊர் முழுவதும் ஒரே கோலாகலமாக இருக்கும். கோவில்கள் எல்லாம் புதிதாக வர்ணங்கள் பூசி மிக அழகாக இருந்தன.நானும் பல வருடங்களின் பின் அங்கு சென்றதால் ஒருவித பரவச நிலையில் இருந்தேன் . அந்த நெகிழ்ச்சியான அனுபவங்களை யாழ் இணையத்தின் 21 வது அகவையில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன். நானும் மனைவியும் இரு மகன்களும்தான் செல்வதாக ஏற்பாடு. ஆனால் கடைசி நேரத்தில் சின்ன மகனுக்கு (கவனிக்கவும் கடைசி என்று குறிப்பிடவில்லை. நாளை நடப்பதை யார் அறிவார்). கடைசி நேரத்தில் அவரது படிப்பு சம்பந்தமானதும், இஷ்டமானதுமான பொறியியலாளர் வேலை கிடைத்தது. அதனால் அவர் வரவில்லை. பயணசீட்டையும் ரத்து செய்ய வேண்டியதாய் போய் விட்டது. அவர் இங்கு பிறந்தவர். ஊரைப் பார்க்க மிகவும் ஆவலுடன் இருந்தார்.கொஞ்சம் பிசகி விட்டது. யாத்திரை தொடரும்.......! நிரவாகம். தயவு செய்து உரிய இடத்துக்கு மாற்றிவிடவும். பின் அங்கிருந்து தொடர்கின்றேன்.
 39. 21 points
  வசந்தகாலச் சோதனை நான் பிரான்சுக்கு வந்து 3 வருடங்கள் ஆகிவிட்டிருந்தன. இளமைப் பருவம், அரைகுறை பிரெஞ்சு மொழி அறிவு, கொஞ்சம் படிப்பு, சிறு சிறு வேலைகள். ஊர்சுற்றல் என்று சுதந்திரப் பறவையாகப் பறந்து திரிந்த காலம் அது. அன்றொருநாள் வசந்த காலத்தில் காட்டுப் பகுதியில் நடக்கும் காணிவேல் ஒன்றிற்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். என்னிடம் இருந்த் 50 பிராங்கில் சாண்ட்வீச் வாங்கிச் சாப்பிட்டது போக மீதியை விளையாட்டுகளுக்குக் கொடுத்துத் தோற்றுவிட்டு காட்டுப் பாதையால் வீடு நோக்கி நடந்துகொண்டிருந்தேன். சில நாட்களாகவே தடிமன் போன்று மூக்கு வடிந்தபடியும் இருமல் போன்றும் இருந்தது. அதுவரை அதைப்பற்றிக் ககவலைப் படவில்லை. ஆனால் அன்று வழமைக்கு மாறாக வித்தியாசமாக இருந்தது. மூச்சு விடக் கடினமாக இருந்தது. வீட்டை நெருங்கியதும் பேச முடியாத அளவு மூச்சு இறுகியது. எனது அக்கா அவசர மருத்துவரைத் தொலைபேசியில் அழைத்தார். ஒரு மணிரேரத்துக்குள் ஒரு மருத்துவர் வீட்டுக்கு வந்தார். நிலமையைப் பார்த்துவிட்டு முதுகில் ஊசி ஒன்று போட்டார். சில நிமிடங்களில் மூச்சு வந்தது. பின்னர் எனது வழக்கமான மருத்துவரைச் சென்று பார்க்குமாறு கூறிவிட்டு மருத்துகள் சிலவற்றை எழுதித் தந்தார். அந்த மருந்துகளுடனேயே வாழ்க்கை முழுவதும் வாழப் போகிறேன் என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை. முன்கதை எனக்கு விபரம் தெரிந்த நாள்முதல் ஏனைய சிறுவர்கள் போல் ஓடியாடி விளையாடியதில்லை. விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டதில்லை. ஏனென்றால் வலிமையாக ஏதாவது செய்தால் மூச்சு முட்டும். தொய்வு என்று சொல்வார்கள். எனது வகுப்பில் ஏனையவர்கள் விளையாடும்போது நான் ஓரமாக நிற்பேன். அல்லது அவர்களது விளையாட்டில் சும்மா நிற்கக் கூடிய கௌரவ பாத்திரம் ஏதாவது தருவார்கள். எனது அப்பா ஊர் வைத்தியம் முதல் வைத்தியசாலை வரை பல மருத்துவர்களிடம் கூட்டிச் சென்று சிகிச்சை செய்தார். சில தற்காலிக நிவாரணம் கிடைத்ததே தவிர நிரந்தரப் பயன் தரவில்லை. எனது அப்பப்பா என்னை பஸ்ஸில் ஏற்றிக் கொண்டு பல கோவில்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்தார். பஸ் பயணத்தில் ஜன்னலூடாகப் பார்த்த காட்சிகள், கோயில் கிணறுகளில் குளித்தது, கோபுரங்களை வலம் வந்தது என பல காட்சிகள் இன்னும் பசுமையாக மனதில் நிற்கிறது. தற்செயலாக ஆர்வக் கோளாறில் ஓடி விளையாடினால் மூச்சு அடைக்கும். அம்மாவிடம் ஓடி வருவேன். அவர் பசுப்பாலைச் சூடாக்கித் தருவார் அல்லது முட்டை ஒன்றை அரை அவியலாக்கித் தருவார். அதைச் சாப்பிட சிறிது நேரத்தில் பழைய நிலைக்கு வருவேன். அது ஏனென்று இன்றுவரை புரியவில்லை. 10 வயதளவில் இலங்கையின் மேற்குப் பகுதியில் சென்று குடியேற வேண்டி இருந்தது. அங்கு குடியேறிய சில நாட்களிலேயே இதுவரை நான் அனுபவித்த அவஸ்தையை ஏறத்தாள மறந்து விடக்கூடிய அளவுக்குத் தொய்வு நோய் முற்றாக மறைந்து விட்டிருந்தது. விளக்கமும் சமரசமும் உலகில் 24 கோடிப் பேர் ஆஸ்மாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத் தொகை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. இதற்கான முக்கிய காரணியாக உலகில் அதிகரித்து வரும் மாசுபடுதலைக் குறிப்பிடலாம். சுற்றாடலிலுள்ள மாசுகளினால் ஒவ்வாமை - அலர்ஜி உருவாகிறது. ஒவ்வாமையைச் சரியான முறையில் முணமாக்காவிட்டால் அது ஆஸ்மா போன்ற வியாதிகளைக் கொண்டுவரும். எனக்கும் நேர்ந்தது இதுதான். நான் வடபகுதியில் வசித்தபோது ஏதோ ஒரு பொருள் எனக்கு ஒவ்வாது இருந்தது. இலங்கையின் மேற்கிற்குக் குடிபெயர்ந்தபோது அது இல்லாமை போனது. பின்னர் பிரான்சிற்கு வந்தபோது மீண்டும் ஒவ்வாமை ஏற்பட்டது. ஆஸ்மாவைச் சரிசெய்ய வேண்டுமானால் முதலில் ஒவ்வாமையக் குணப்படுத்த வேண்டும். எனது மருத்துவர் சில பரிசோதனைகளைச் செய்துவிட்டு எனக்குச் சில மரங்களிலிருந்து வரும் மகரந்தமே பிரச்சனை தருவதாகக் கண்டுபிடித்தார். அதற்கான பலதரப்பட்ட மருத்துவமும் சில வருடங்களாகச் செய்யப்பட்டது. ஒன்று முடிய இன்னொன்றாக ஒவ்வாமை மாறிமாறிப் புதிய பிரச்சனைகளைக் கொடுத்தது. ஓமியோபதி. அக்குபங்சர் என்று எல்லாம் முயற்சி செய்துவிட்டேன். இதற்கிடையில் ஆஸ்மா நிரந்தரமாக என்னில் குடியேறி விட்டது. உடற்பயிற்சி நல நிவாரணி என்று பரவலாகப் பேசப்படுகிறது. சரி அதையும் முயற்சி செய்து போர்க்கலாம் என்று காலையில் ஒவ்வொரு நாளும் அர மணி ரேரத்திற்கு முன்னர் எழுந்து 15 நிமிடம் ஓடினேன். அது இன்னும் பிரச்சனையையே தந்ததால் சில நாட்களில் அதனையும் கைவிட்டேன். இறுதியில் ஒவ்வாமையையோ ஆஸ்மாவையோ முற்றாக ஒழிக்கும் திட்டங்கள் தோல்வியுற்றதால் இவை இரண்டின் வக்கிரத்தைத் தணிக்கும் மருந்துகளுடன் தொடர்ந்து வாழ்வதாக என் ஆஸ்மாவுடன் சமரச ஆனது. 20 வருடங்களுக்கு மேலாகப் பலதரப்பட்ட மருந்துகளுடன் வாழ்க்கை ஓடுகிறது. அவசர நிவாரணத்துக்காக எனது பையிலும் காரிலும் வேலைத் தளத்திலும் ventoline ஸ்பிறே எப்போதும் தயாராக இருக்கும். ஓடினேன் ஓடினேன்… சென்ற வருடம் மே மாதம் நான் வேலை செய்யும் நிறுவனத்தில் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். சக வேலையாட்களை 10 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டது. 3 மாதங்களுக்கு ஒரு குழுவில் உள்ளவர்கள் செய்யும் உடற்பயிற்சியை அவர்களது மொபைலில் உள்ள மென்பொருள் கணித்து புள்ளிகளை வழங்கும். இதில் சைக்கிள் ஓட்டம், காலோட்டம். கால் நடை என்று பல வகை உடற்பயிற்சிகள் இருந்தாலும் காலோட்டமே அதிக புள்ளிகளைக் கொடுத்தது. கொஞ்சனேனும் எமது குழுவுக்குப் புள்ளி சேர்க்க வேண்டும் என நானும் ஓடுவது என்று தீர்மானித்தேன். வேகமாக ஓடினால் மூச்சு வாங்கும். தேவையான மருந்துகளை முன்கூட்டியே எடுத்துவிட்டு மெதுமெதுவாக ஓடினேன். அப்போது நான் பல பிரச்சனைகளில் மாட்டி மன உளைச்சலுடன் இருந்ததால் ஓடுவது மனதுக்கு இதமாக இருந்தது. வழக்கமாகப் 15 நிமிடங்கள் ஓடுவேன். அன்றொருநாள் நேரம் போனதே தெரியவில்லை, 20 நிமிடங்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தேன். என்னுள் ஒரு மாற்றம். இதுவரை மூச்சு இரைக்க ஓடிக் கொண்டிருந்த எனக்கு இப்போது மூச்சு விடுவது சற்றுச் சுலபமாக இருந்தது. ஆர்வம் ஏற்பட 30 நிமிடங்களாக ஓடிக் கொண்டிருந்தேன். வேகமாகச் சுவாசித்துக் கொண்டிருந்தாலும் எந்தவித இடையூறும் இன்றிச் சாதாரணமாகச் சுவாசிக்க முடிந்தது. ஆச்சரியத்துடன் வீடு திரும்பினே. பரிசோதனை 3 - 4 தடவை இதே போல் முயன்று விட்டேன். என்னால் நம்பவே முடியவில்லை. மருந்து பாவிக்காமலே ஒரு தடவை முயன்று பார்க்கலாம் என்று தோன்றியது. அன்று இரவு வேலை முடிந்து வந்தபின் ஓடத் தொடங்கினேன். மிகவும் கடினமாக இருந்தது. வேகத்தை மேலும் குறைத்து ஓடினேன். சரியாக அரை மணி நேரத்தின் பின்னர் சாதாரணமாக மூச்சு வந்தது. சில நாட்களின் பின்னர் 2 நாட்கள் மருந்து எடுப்பதை நிறுத்திப் பார்த்தேன். இறுதியில் 3 மாதங்களில் போட்டி முடிந்தபோது மருந்துகளைப் பாதியாகக் குறைத்திருந்தேன். மருத்துவரிடம் ஆலோசனை கேட்டேன். அவரும் மருந்து உனக்குத் தேவையில்லை என்று தோன்றினால் முற்றாக நிறுத்திக் கொள் என்றார். நானும் மேற்கொண்ட பரிசோதனைகளின்படி 5 நாளைக்கு 1 தடவை 1 மணி நேரம் ஓடினால் முற்றாக மருந்துகளிலிருந்து முற்றாக விடுதலை பெறலாம் என்ற சமன்பாட்டை உறுதி செய்தேன். 7 மாதங்களாக இதையே கடைப்பிடிக்கிறேன். உதிரி எனது இந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தூண்டுதல் வர வேறு காரணங்களும் உண்டு. - ஓடும்போது மனது ஒருநிலைப்பட்டு இனிமையான எண்ணங்கள் தோன்றும் - கணுக்காலில் நெடு நாளாகச் சுழுக்கு போன்ற ஒரு சிறிய வலி இல்லாமல் போய்விட்டது - எல்லையைக் கடக்கும் நிலையில் இருந்த கொலஸ்ரரோலும் சீனியும் முற்றாகக் கட்டுப்பாட்டில் உள்ளன - சந்தர்ப்பம் கிடைக்கும்போது கொழுப்பான அல்லது இனிப்பான உணவுகளைத் தயக்கமின்றி உண்ண முடிகிறது - விளையாட்டு என்றாலே எட்டாக் கனியாக இருந்த எனக்கு அரை மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றும் (கடைசி ஆளாக ஓடி முடிக்கினும்) அளவு தைரியம் வந்துள்ளது முற்றும்.
 40. 21 points
  அண்ணனின் முகத்தினை மீண்டும் மீண்டும் பார்க்கின்றேன் நெற்றி அப்படியே இருக்கின்றது. வழக்கமாக அவன் வைக்கும் சந்தனப் பொட்டின் இடம் மட்டும் வெறுமையாக தெரிகின்றது நெற்றியின் கீழ் ஆழமாக காயம் தொடங்குகின்றது மூக்கும் வாயும் சிதைந்து போகத் தொடங்கி பின் வாயின் கீழ் உருக்குலைந்து கிடக்கின்றது காதுகள் இருந்த இடம் தெரியவில்லை. நிண நீரால் நிறைந்து கிடக்கின்றது அவன் முகம். கவனமின்றி தண்டவாளங்களினூடாக அவன் நடக்கையில் ஒரு ரயில் அவனை மிதித்து இருக்கலாம், அல்லது எவனோ அவனை தள்ளியும் விட்டு இருக்கலாம். இல்லை அம்மா இன்னொருவருடன் இருப்பதைக் கண்டு வெறுத்து அவன் அதற்கும் முன் பாய்ந்து செத்து இருக்கலாம். அவன் உடலை தலையின் கீழ் பகுதியில் பக்கவாட்டாக ரயில் பிளந்து விட்டிருந்தது. காணாமல் போய் 30 நாட்களின் பின் தான் அவன் உடலை கண்டு பிடிக்க முடிந்திருந்தது. காணாமல் போய் அவனை தேடும் பொழுது அவன் ரயிலால் மோதுண்டு இறந்து இருப்பான் என்று நாம் நினைக்கவில்லை. கொழும்பின் கனத்தை மயானம் அருகில் இருக்கும் ரேய்மன் மலர்சாலையில் எம்பார்ம் பண்ணுவதற்காக வளர்த்தி இருந்தது. எம்பார்ம் பண்ணுகின்றவர்கள் அறைக்குள் வருகின்றார்கள். சாராயம் குடித்து இருந்தார்கள், அது குடிக்காவிடின் அவர்களால் இந்த வேலையை செய்ய முடியாது. நானும் நண்பன் ரஜீசும் பிரேத அறைக்குள் நின்று கொண்டு இருந்தோம். நாமும் குடித்து இருந்தோம். எம்மை வெளியே போகச் சொல்லிக் கேட்கின்றார்கள் அண்ணனின் உடலில் இருந்து வெளியேறிய பழுப்பு நிற புழுவொன்று என் கால் பெருவிரலில் தன் உடலின் முன் பக்கத்தினை உயர்த்தி பின் பக்கத்தினை நகர்த்தி ஏறிக் கொண்டது. ---------------- அண்ணா கானாமல் போன அந்த இரவில் அவனை இறுதியாக வெள்ளவத்தை பொலிஸ் நிலையம் அருகில் தான் கண்டேன். ரோட்டில் பெடியங்களுடன் நிற்கும் போது "கெதியன வீட்டை போ...அம்மா தேடுவா" என்று சொல்லிப் போட்டு வந்த பேருந்தில் ஏறி போய்விட்டான். நானும் இரண்டு மணி நேரம் கழித்து வீட்டை போய் பார்க்கும் போது அவன் வீட்டுக்கு வந்து இருக்கவில்லை. "என்னை கெதியன வீட்டை போகச் சொல்லிவிட்டு ஆள் நல்லா ஊர் சுத்துறான்' என்று நினைத்து விட்டு அம்மாவிடமும் எதுவும் சொல்லாமல் படுக்கப் போய் விட்டேன். உண்மையில் அம்மாவிடம் சொல்லுவதற்கு எமக்கு எந்த வார்த்தைகளும் இருக்கவில்லை. அல்லது நெஞ்சுக்குள் அடை காத்துக் கொண்டு இருந்த வார்த்தைகள் நெருப்பாக பொழிந்து விடுமோ என்று பயத்தில் கொஞ்ச நாட்களாக அம்மாவிடம் எதுவும் கதைப்பதும் இல்லை. அம்மாவும் எம்முடன் அதிகமாக கதைப்பதை நிறுத்தி விட்டார். அப்பா தனக்குள் அமுங்கி போய் பல வருடங்களாகி விட்டமையால் அவரும் யாருடனும் அதிகம் கதைப்பது இல்லை. ஊரில் இருக்கும் போது, பல வருடங்களுக்கு முன்னர் வெளியே போனவரை ஆமி பிடிச்சு வைச்சு அடி அடியென அடிச்சு துவைச்சு போட்டு ஒரு உடுப்பும் இல்லாமல் ரோட்டில் போட்ட பின் அவர் தனக்குள் நொருங்கி கடும் அமைதியாக போய் விட்டார். அப்பர் அதுக்கு முதல் வெறுமேலுடன் கூட விறாந்தைக்கு வராதவர். கண்ணியம் உடுப்பிலும் இருக்க வேண்டும் என்று நினைச்சவர். அம்மாதான் பாவம், அப்பா நொருங்கிய பின் எம்மை தாங்கி நின்றவர். எங்கள் இருவரில் அண்ணாவையாவது முதலில் லண்டனில் இருக்கும் அண்ணரிடம் அனுப்பினால் அங்கு அவன் போய் என்னையும் கூப்பிட்டு விடுவான் என்ற நினைச்சு ஓடுப்பட்டு திரிந்தவர். ------------------------------------- வெளியில் நிற்கின்றோம். பிணவறைகளின் அருகே இருந்து வரும் நாற்றம் கொடியது. மூக்கினில் ஏறி மண்டையின் உச்சி வரைக்கும் போய் வாழ் நாள் முழுதும் நிலைத்து இருக்கும் நெடி அது. மணத்தினை விரட்டுவதற்காக ஒன்றன் பின் ஒன்றாக சிகரெட் குடித்துக் கொண்டு இருந்தோம். பெருவிரலில் ஏறிய புழு எங்கு போய் விட்டது என தெரியவில்லை. ஆனால் அது ஊரும் போது இருந்த வழுவழுப்பு இன்னும் பெருவிரலில் ஊர்ந்து கொண்டே இருக்கு என்ற பிரமையைத் தந்தது. அண்ணாவின் உடலை அணு அணுவாக புசித்து கொழுத்த புழு அது. அண்ணாவை 30 நாட்களாக இதே பிணவறையில் தான் வைத்து இருந்து இருக்கின்றார்கள். அவனை காணவில்லை என்று தேடத் தொடங்கி இரண்டாம் நாளே கொழும்பாஸ்பத்திரியின் இதே பிணவறைகளில் வந்து தேடியிருக்கின்றேன். இன்று காலை அவன் உடலை எடுத்து வெளியே காட்டிய அதே லாச்சியை (பிணங்களை வைத்திருக்கும் லாச்சி) திறந்தும் பார்த்து இருக்கின்றேன். அண்ணா போட்டு இருந்த வெளிர் நீல ஷேர்ட்டுடனும் கருப்பு டெனிமுடனும் முகத்தின் கீழ் பகுதி இரண்டாக பிளந்து இருந்த ஒரு உடலையும் கண்டும் இருந்தன். --------------------------------------------- இரண்டு தடவைகள் அண்ணா லண்டனுக்கு வெளிக்கிட்டு இடையில் பிழைத்துப் போய் மீண்டும் இலங்கைக்கே திரும்பி வந்து இருந்தான். இரண்டு தரமும் கூட்டிக் கொண்டு போன கணேசன் அண்ணா இடையில் ஏமாற்றிப் போட்டார் என்று பிறகு தான் தெரிந்தது. இரண்டாம் தரமும் பிழைச்சுப் போன நாளில் அம்மா பெரிய குரல் எடுத்து கத்தி அழுதுகொண்டு இருந்தவர். அப்பா வழக்கம் போல மெளனமாக இருந்து கொண்டு இருந்தார். கண்களின் ஓரப் பகுதியில் ஈரமாக இருந்த மாதிரி எனக்கு இருந்தது. ஆனால் சரியாக தெரியவில்லை. பிறகு அப்பா எழும்பிப் போய் கோப்பையை எடுத்து இரவுச் சாப்பாட்டை போடப் போகும் போது அம்மா பொறுக்க முடியாமல் 'சனியனே நான் ஒருத்தி கிடந்து அழுது குளறுறன் .. ஒரு கவலையும் இல்லாமல் சாப்பிடப் போறியா நாயே" என்று பேசி கோப்பையை தட்டி விட்டார். அதுக்குப் பிறகு அப்பா இரவில் சாப்பிடுவதும் இல்லை, பசிக்குது என்று கேட்பதும் இல்லை. அம்மா போட்டு வைச்சால் சாப்பிடுவார் இல்லாட்டி பேசாமல் படுத்து விடுவார். நானோ அண்ணாவோ சாப்பிடுங்கோ என்று எவ்வளவு கெஞ்சினாலும், இல்லை சாப்பாட்டை போட்டுக் கொடுத்தாலும் சாப்பிட மாட்டார். சில இரவுகளில் அவர் வயிறு அழும் சத்தம் மெதுவாகக் கேட்கும். அதைக் கேட்ட பிறகு எனக்கு நித்திரை வராது. ----------------- எம்பார்ம் பண்ணி முடிச்சாச்சு என்று சொன்னார்கள். எங்களை உள்ளே பார்க்க விடவில்லை. நாங்களும் போக விரும்பவில்லை. மனம் மிகவும் வெறுமையாக இருந்தது. பெருவிரலில் அந்தப் புழு ஊர்வது போன்று இருக்க இடைக்கிடை காலை பலமாக உதறி விட்டுக் கொண்டு இருந்தன். ---------------------------- அண்ணா காணாமல் போய் விட்ட நாட்களில் கொழும்பில் இருக்கக் கூடிய பொலிஸ் நிலையங்கள், இராணுவ முகாம்கள், ஈபிடிபி முகாம்கள் என்று எல்லா இடங்களிலும் தேடிக் கொண்டு இருந்தன். அப்பா என்னுடன் எல்லா இடங்களுக்கும் வந்தாலும் ஒரு வார்த்தை கூட கதைக்க மாட்டார். யாரோ தனக்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை தேடுகின்றேன் என்ற மாதிரி முகத்தை வைத்து இருப்பார். இடையில் ஒரு இரவு அண்ணாவை எங்கும் காணவில்லையே என்று நான் மெதுவாக அழும் போது கிட்ட வந்து தலையை தடவி விட்டார். கூர்ந்து பார்த்தேன் அவர் கண்களில் சலனம் இருக்கவில்லை. என்ன நடந்து இருக்கும் என்று அப்பாவுக்கு தெரிந்து இருக்குமோ என்று அவர் முகத்தைப் பார்க்கும் போது லேசாக சந்தேகம் வந்தது. அம்மா அண்ணாவை தேடும் இடங்களுக்கு வரவில்லை. எப்பவும் கண்ணீர் விட்டுக் கொண்டு ஒரு மூலைக்குள் முடங்கியிருந்தார். மனசால் மிகவும் அடிபட்டு போயிருந்தார். --------------------------------------- அண்ணாவை மீண்டும் லண்டனுக்கு அனுப்ப மூன்றாவது தடவையாக முயன்று கொண்டு இருந்தார் அம்மா. லண்டனில் இருக்கும் மாமாவோ, இது தான் கடைசி தரம் இனி தன்னால ஒரு சதமும் தர முடியாது என்று சொல்லிப் போட்டார். அவர்தான் பாவம் முதல் இரண்டு தரமும் காசு அனுப்பினது. இந்த முறை ஏஜென்சி வேலை செய்கின்ற ரவிந்திரன் நல்ல கெட்டிக் காரன் என்று சொல்லிச்சினம். வீட்டை வரும் போதெல்லாம் சிரிச்சு சிரிச்சு கதைப்பார். அப்பாவுக்கு வருத்தம் வந்த பிறகு அம்மா சிரிச்சது அவர் சொன்ன கதைகளைக் கேட்டுத்தான். அம்மா சின்ன வயதிலேயே கலியாணம் முடிச்சவர். அப்பா தனக்குள் அமுங்கிப் போகும் போது தன் முப்பதின் ஆரம்பத்தில் இருந்தவர். இப்ப தான் கன நாட்களுக்கு பிறகு சிரிக்கின்றார், கொஞ்ச நாட்களாக அப்பா மத்தியான நேரங்களில் வீட்டை இருக்காமல் வெளியே போய்விடுவார். அண்ணா கம்யூட்டர் கிளாசுக்கு போனார் என்றால் பின்னேரம் தான் வருவார். நான் ஏ லெவல் செய்கின்றபடியால ஒரே கிளாஸ் கிளாஸ் என்று போய்விடுவன். மூன்று நாட்களுக்கு முதல் மத்தியானம் அண்ணா வீட்டை வந்து உள்ளே போன போது அம்மா நிறைய சிரிச்சுக் கொண்டு இருந்து இருக்கின்றார், அதுக்கு பிறகு அண்ணா அம்மாவுடன் கதைப்பது இல்லை. நாலாம் நாளில் இருந்து அவனைக் காணவில்லை. ---------------------------------------------------------------------- மீண்டும் காலை உதறி விடுகின்றேன். திரும்பத் திரும்ப புழு ஊருகின்றமாதிரியே இருக்கு. அண்ணாவின் உடம்பை அவர் காணாமல் போய் இரண்டாம் நாளே பிணவறைக்குள் கண்டு இருந்தன். ஆனால் என் புத்தி அதனை ஏனோ அண்ணாவென்று ஏற்கவில்லை. முகம் நெற்றியின் கீழ் சிதைந்து இருந்ததால் அவனை மாதிரி இருக்கு என்று மனம் சொன்னாலும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. எப்படியும் உயிருடன் வருவான் என்று நினைச்சு இந்த 28 நாளும் ஒவ்வொரு கணமுமாக தேடியிருக்கின்றன். என் அண்ணா, எனக்கே எனக்கான அண்ணா. உயிரும் உணர்வுமான அண்ணா. செத்தே போயிருந்தான். நேற்று மீண்டும் வெள்ளவத்தை பொலிசுக்கு போய் விவரம் ஏதும் தெரிந்ததா என்று கேட்கும் போதுதான் ஒரு மாசத்துக்கு முதல் இரவு ரயிலில் ஒருவர் மோதுண்டு செத்தவர் என்றும் அவரது உடைந்து போன மணிக்கூடு இது தான் என்றும் காட்டிய போதுதான் என் புத்தி அந்த உடம்பு அண்ணாவினது என்று உணர்த்தியது. உடம்பை அடுத்த நாளே எரிக்கச் சொல்லியிருந்தார்கள். அவசர அவசரமாக இறுதிக் கிரியைகள் எல்லாம் செய்தோம். அம்மா ஒவ்வொரு அரை மணித்தியாலத்துக்கும் ஒரு முறை மயங்கி மயங்கி விழுந்து கொண்டு இருந்தார். அழக்கூட பலம் இருக்கவில்லை. அப்பா நிலை குத்தின விழிகளுடன் தேவாரம் பாடிக் கொண்டு இருந்தார். ------------------ நான் இப்ப லண்டன் வந்து விட்டேன். அண்ணா வர இருந்த லண்டன் எனக்கு மட்டும் வாய்த்தது. இங்கு வந்த பிறகும் கூட காலை அடிக்கடி உதறி விட்டுக் கொண்டே இருந்தன். இன்னும் பெரு விரலில் உயிர்ப்பாக அந்த புழுவின் ஊரல் இருந்தது. பிறகு ஒரு நாள் மத்தியானம் தொலைபேசி அழைத்தது மறுமுனையில் இருந்தவர் அம்மா ஊரில் தவறிவிட்டதாகச் சொன்னார். என் கால் பெருவிரலில் இருந்து ஒரு புழு கீழே இறங்கிச் சென்றது. அண்ணாவை புசித்த புழு. --------------------------------------------- மார்ச் 18, 2014
 41. 21 points
  அவர்கள் அவரை பீற்றர் என்று சத்தமாக அழைத்தமையால் தான் அவர் இருக்கும் திசையை நான் பார்க்க தொடங்கினேன். அதுவரைக்கும் நான் புத்தகம் வாசித்து கொண்டு இருந்தமையால் அவரை கவனிக்கவில்லை. அங்குள்ள பாதுகாப்பு உத்தியோகத்தவர்களுக்கு அவர் நன்கு பரிச்சயமானவர் போல அவர்கள் தோழமையுடன் அவரை அணுகிக் கொண்டு இருந்தனர். இப்படியானவரை எப்படி இங்கு அனுமதிக்கின்றார்கள் என புரியவில்லை. மனசுள் கொஞ்சம் கோபமும் எழத் தொடங்குகியது. நேரம் நடு இரவு 10 மணியை தாண்டி சென்று கொண்டு இருந்தது. 8 மணிக்கே அருகில் இருக்கும் பொது மருத்துவமனையின் அவசர பிரிவுக்கு சிகிச்சைக்காக வந்து விட்டேன். எல்லாம் பார்த்து என்ன பிரச்சனை என்று சொல்ல இன்னும் நான்கு மணி நேரமாவது செல்லும் சில வேளைகளில் என்னை மறிச்சு வைத்து சில நாட்கள் சிகிச்சை அளித்தாலும் அளிப்பார்கள். அப்படி தங்க வேண்டி வந்தால் லப் டொப்பை (Laptop) கொண்டு வர மனைவிக்கு சொல்ல வேண்டும். சில தினங்களுக்கு முன்னர் வேலையில் இருக்கும் போது பகல் 10 மணி இருக்கும், திடீர் என்று தலை சுற்றியது. கண்ணுக்குள் நட்சத்திரங்கள் பறந்தன. உடல் தன் சமநிலையை தொலைத்து விட்டது போன்று இருந்தது. எல்லாம் மூன்று வினாடிகள் தான். பிறகு சரியாகி விட்டது. பிறகு பின்னேரம் 5 மணி இருக்கும் அதே மாதிரி ஒரு தலை சுற்றல், நட்சத்திரங்கள் பறப்பு, சமநிலை குழம்புதல்.. எல்லாம் மூன்று வினாடிகள் தான், பிறகு சரியாகி விட்டது அடுத்து வந்த சனி ஞாயிறு தினங்களில் தலை சுற்றல் வர வில்லை. இடையில் ஒருக்கால் பிரஷர் செக் பண்ண வேண்டும் என்று நினைத்தும் நேரம் கிடைக்கவில்லை. திங்கட் கிழமை வேலைக்கு வந்த பிறகும் பிரச்சனை ஒன்றும் இருக்கவில்லை. பின்னேரம் வேலையில் இருந்து வீட்டுக்கு காரில் ஹை வேயில் 120 கிலோ மீற்றர் வேகத்தில் போய்க் கொண்டு இருக்கின்றேன். திடீர் என்று மீண்டும் அதே தலை சுற்றல், கண்கள் இருட்டிக் கொண்டு வந்தமாதிரி இருக்கின்றது, வெள்ளிக் கிழமை வந்த அதே நட்சத்திரங்க்கள் திரும்பவும் வந்து மின்னிக்கொண்டு நின்றன.. பாதை ஒரு சுழட்டு சுழற்றியது...ஆனால் எல்லாம் மூன்று வினாடிகள் தான். அடுத்தது என்ன செய்வது என யோசித்தேன். காரை ஓரமாக நிப்பாட்டிட்டு கொஞ்ச நேரம் பொறுத்து பார்ப்பமா என நினைத்தேன். ஆனால் ஒரு அசட்டு தைரியம் (அல்லது முட்டாள் தனம்). காரை நிறுத்தாமல் வீட்டுக்கு அதே வேகத்தில் வந்து சேர்ந்து விட்டேன். வீட்டை வந்தும் ஒன்றும் சொல்லாமல் மனைவியை வோல் மார்ட்டுக்கு (Walmart) வா என்று கூட்டிக் கொண்டு போய் அங்கு பிரஷரை செக் பண்ணினால் அது தாறு மாறாக 182/120 என்று காட்டியது. அவ்வளவு தான் அடுத்த வினாடியே அவசர பிரிவுக்கு மனைவி அழைத்துக் கொண்டு வந்து விட்டார். கனடாவில் அவசர பிரிவுக்கு வந்தால் முதலில் தாதி வந்து பிரஷர் / இதய துடிப்பு, உடல் வெப்ப நிலை எல்லாம் செக் பண்ணி பார்ப்பார். ஒன்றும் பெரியளவு பயப்படும் படி இல்லை என்றால் மருத்துவர்களை சந்திக்க ஆகக் குறைந்தது 5 மணித்தியாலங்களாவது காத்திருக்க வேண்டும். சில வேளை 8 மணித்தியாலங்களும் எடுக்கும். இடையில் வருத்தம் கூடுவது போன்று இருந்தால் போய் சொன்னால் கவனிப்பார்கள். நேரம் கனக்க போகும் என்று தெரியும் என்பதால் தமிழ் நதியின் 'பார்த்தீனியம்' நாவலை வாசிக்க தொடங்குவம் என்று கையோடு கொண்டு போயிருந்தேன். இரவில் பிள்ளைகள் தனிய வீட்டில் விட கூடாது என மனைவியை வீட்டுக்கு அனுப்பி விட்டு ஆஸ்பத்திரி கதிரையில் இருந்து அங்கும் இங்கும் நோட்டமிட்டேன். கண்ணுக்கு குளிர்ச்சியா ஒருத்தியும் இல்லை. எல்லா கதிரைகளும் நிரம்பி வழிந்தன. ஒவ்வொருவரது முகங்களும் ஒவ்வொரு விதமான வேதனைகளை கேள்விகளை எழுப்பிக் கொண்டு இருந்தன. ஒரு வயதான பெண்மணி தொடர்ந்து இருமிக் கொண்டு இருந்தார். ஒரு குழந்தை தன் அப்பாவுடன் மாத்திரம் வந்து அவரது மடியில் தலை வைத்து படுத்துக் கிடந்தது. என் மகளின் நினைவு வந்தது. நான் திரும்பி போகும் மட்டும் முழித்து இருக்க கூடிய சீவன் அது. ஒருவர் காலில் பெரிய காயத்துடன் வந்து இருந்தார். ஒரு சோடி தம்மை மறந்து முத்தமிட்டுக் கொண்டு இருந்தனர். அதில் இருந்த பெண்மணி இடைக்கிடை தான் முத்தம் கொடுப்பதை மற்றவர்கள் பார்க்கின்றனரா என்று நோட்டம் வேறு விட்டுக் கொண்டு இருந்தார். சுவாரசியமாக எதுவும் இல்லாமையால் பார்த்தீனியத்தை வாசிக்க தொடங்கி அதற்குள் மூழ்கி கொண்டு இருக்கும் போது தான் "பீற்றர் பீற்றர்" என்று அவரை கொஞ்சம் சத்தமாக அழைத்தது கேட்டது. யாரந்த பீற்றர் என நோட்டமிட்டேன். ஒன்றுக்கு மூன்று அழுக்கடைந்த உடுப்புகளை அணிந்து கொண்டு, தாடிக்குள் முகத்தின் முக்கால்வாசியை மறைத்துக் கொண்டு ஒருவர் அமர்ந்து இருந்தார். அவர் அருகில் எவரும் அமர்ந்து இருக்கவில்லி. ஒரு நைந்து போன ஸ்கூல் பாக் ஒன்றும் இருந்தது. அவர் வீடற்ற ஒருவர் என உடனே புரிந்து போனது. அத்துடன் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று இருந்தார். இடைக்கிடை அவர் பெரும் சத்தம் எழுப்பினார். அழுகின்றார் போன்றும் இருந்தது. திடீர் என்று தனக்கு முன்னால் இருந்த பெரும் இலையான் கூட்டத்தை கலைப்பது போன்று இரண்டு கைகளாலும் எதையோ விரட்டினார். கத்தினார், சத்தமிட்டார், அழுதார், சிரித்தார் பின் அமைதியானார். அவர் குறிப்பிட்ட இடைவெளி விட்டு மீண்டும் மீண்டும் கத்திக் கொண்டும் எதையோ / எவரையோ விரட்டிக் கொண்டும் இருந்தார். அப்படி ஒவ்வொரு முறை செய்யும் போதும் பாதுகாப்பு உத்தியோகத்தவர்கள் அவரை கொஞ்சம் கண்டிப்புடன் "பீற்றர் பீற்றர்" என அழைத்து அதட்டினர். ஒவ்வொரு அதட்டலின் பின்பும் அவர் அமைதியானார்.. ஏற்கனவே சனம் வருத்தத்துடன் வந்து இருக்கு, இவர்கள் ஏன் இவரை விரட்டாமல் உள்ளே வைத்து அனுமதிக்கின்றார்கள் என எரிச்சல் வந்தது. "ஏன் இப்படியானவர்களை விரட்டி விட்டு உன்னை மாதிரி ஆக்களுக்கு மட்டும்தானா இந்த உலகம் மிஞ்ச வேண்டும்" என்று இன்னொரு மூலையில் இருந்து புத்தி கேள்வி கேட்டது என்னால் அதன் பின் புத்தகம் மீது கவனத்தை செலுத்த முடியவில்லை. ஏதோ ஒன்று அவர் பால் ஈர்த்துக் கொண்டே இருந்தது. அவர் என்ன செய்கின்றார், எப்படி கண்களை மூடுகின்றார், எப்ப கைகளை ஆட்டி ஆட்டி விரட்டுகின்றார்" என அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தேன். அதுவும் சுவாரசியமாக இருந்தது 'க்ளக்' என்று ஒரு சத்தம் அருகில் இருந்த சோடி தாம் ஆளாளுக்கு பருக்கிக் கொண்டு இருந்த கோப்பியை தவறுதலாக சிந்தி விட்டார்கள். தரையெல்லாம் கோப்பி. . 'ஒரு கோப்பியை கூட ஒழுங்காக ஆளாளுக்கு பருக்க தெரியவில்லை...உதுக்குள ஆளாளுக்கு முத்தம் வேற...மூதேசிகள்' சிந்திய கோப்பியில் இருந்து வந்த மணம் வயிற்றை புரட்டுவது போல இருந்தது. கொஞ்சம் அங்கால பார்த்தால் ஒருவர் தான் சாப்பிட்டுக் ககொண்டு இருந்த பொப் கோர்னை சிந்தி விட்டு இருந்ததும் தெரிந்தது. நடு இரவையும் தாண்டி பலர் காத்திருப்பதால் பலர் பசிக்கு ஏதாவது வாங்கி உண்டு கொண்டு இருந்தனர். சிந்திய உணவு பலரது இருக்கைகளின் கூழ் இருந்தது. 'சாப்பாட்டை கூட சிந்தாமல் சாப்பிட தெரியாத சனம்". நேரம் போக போக எதுக்கெல்லாமோ மனம் எரிச்சலடைந்து கொண்டு இருந்தது. பீற்றரின் இருக்கையின் கீழ் எதுவும் இருக்கவில்லை. சுத்தமாக இருந்தது. சில நிமிடங்களில் என் பெயரை சொல்லி உள்ளே அழைக்கின்றார்கள். டொக்டர் என்ன நடந்தது எனக் கேட்டு லைட்டை அணைத்தார் (ரேப் பண்ண போறாரோ) பின் கண்களை அங்கால இங்கால உருட்டி பிரட்டி பார்க்க சொன்னார் (மாறி கண் வைத்தியரிடம் வந்து விட்டேனா). மூக்குக்கு முன்னால் நேராக விரலை வைத்து அதையே உத்து பார்க்க சொன்னார். தன் தலையை சிலுப்பி கொண்டார். "பிரஷர் கூடவா டொக்டர்" எனக் கேட்டேன். "இல்லை, பிரஷர் கூடினால் ஒரு நாளும் தலை சுற்றல் வராது. நீ தலை சுற்றியதால் பயந்து போய் விட்டாய், அதுதான் உன் பிரஷர் கூடக் காட்டியது. ஆனால் 182/120 எல்லாம் அதிகமாக பயப்படும் அளவுக்கானது இல்லை." என்றார் (அப்ப பிரசர் கூடி நெஞ்சு பிளந்தால் தான் அடுத்த முறை வர வேண்டும் போல) "எதுக்கும் இரத்தம் சோதித்து பார்க்க வேண்டும்" என்று தாதியை கூப்பிட வந்த தாதியும் வஞ்சகம் இல்லாமல் நாலு சிறு போத்தல்களில் இரத்தம் எடுத்துக் விட்டு "ரிசல்ட்ஸ் வரும் வரைக்கும் வெளியே காத்திரு" என்றார் "எவ்வளவு நேரம் எடுக்கும்" "ஒன்றரை மணித்தியாலமாவது எடுக்கும்' மணி 12:30 தாண்டி விட்டு இருந்தது. மீண்டும் காத்திருப்போருக்கான வராந்தாவுக்கு வருகின்றேன். வராந்தா பளிச் என்று இருக்குது. கீழே கொட்டப்பட்ட உணவு, கோப்பி, பொப் கோர்ன் என்று எதுவுமே இல்லை. எல்லாம் துடைத்து துப்பரவாக இருந்தது. "இந்த இரவிலும் சுத்தப்படுத்தி இருக்கின்றார்கள்... கனடா கனடா தான்" என நினைத்து கொண்டு பீற்றர் இன்னும் இருக்கின்றாரா என பார்க்கின்றேன். அந்த சுத்தமான இடத்தில் ஒரு அழுக்கு மூட்டையாக அவர் அமர்ந்து இருந்தார். மீண்டும் எரிச்சலாக இருந்தது. "ஏன் இன்னும் இந்த மனுசனை விரட்டாமல் விட்டு இருக்கின்றார்கள்" கொஞ்சம் களைப்பாக இருந்தது. பாவி மகள் 4 போத்தல் இரத்தம் எடுத்ததால் இருக்குமோ என நினைத்து உள்ளே இருக்கும் கோப்பி கடைக்கு போய் ஒரு டபிள் டபிள் கோப்பி வாங்கி வந்து குடிக்க தொட்ங்கினேன் என் மொபைல் அடித்தது. மனைவி நிலவரம் அறிய தொலைபேசினார். கால்களுக்கு இடையில் கோப்பியை வைத்து விட்டு அவருடன் கதைத்து முடித்தேன். பின் நாளைக்கு வேலைக்கு லேட்டாக வருவன் என்று ஒரு மெயிலையும் மானேஜருக்கு அனுப்பி விட்டு கால்களை மாற்றி வைக்கும் போது கோப்பியை தட்டி விட்டேன். நிலத்தில் கோப்பி சிறு உலகப் படம் போல திக்குகள் நீள பரவியது "இவனுக்கு கோப்பியை கூட ஒழுங்காக குடிக்க தெரியவில்லை" என சனம் நினைக்கும் என்றெண்ணி பார்க்கின்றேன். ஆரும் என்னை கவனித்த மாதிரி தெரியவில்லை. அவரவருக்கான உலகில் அவர்கள் இருந்தனர். கனடா மக்களின் பொதுவான சுபாவம் அது. எல்லாரும் அமர்ந்த இடங்கள் சுத்தமாக இருக்க என் இருக்கையின் கீழ் கோப்பி சிந்தி அழுக்காக கிடந்தது. பீற்றர் என்னை பார்க்கின்றாரா என கவனித்தேன். அவர் மீண்டும் எதையோ காற்றில் கலைத்து கொண்டு இருந்தார். மெதுவாக எழும்பி இன்னொரு இருக்கைக்கு சென்று நல்ல பிள்ளையாக அமர்ந்து விட்டேன். ஒருவரும் கவனிக்கவில்லை. ஒரு மணித்தியாலம் கழிய என் பெயரை மீண்டும் அழைக்கின்றனர். இரத்த பரிசோதனையிலும் ஒரு பிரச்சனையும் இல்லை. "அப்ப ஏன் டொக்டர் தலை சுற்றியது"? "உனக்கு வெர்ட்டிகோ (Vertigo) பிரச்சனை.." என்றார் "அப்படி என்றா;..."? "காதுக்குள் உடலை சமனிலையில் பேணும் திரவம் இருக்குது..அது சில நேரம் குளம்பிவிடும் ..அதுதான் தலை சுற்றியது உனக்கு" "அப்ப இதுக்கு மருந்து ஏதும்" "ஒன்றும் தேவையில்லை..இதில் சொல்லியிருக்கிற இலேசான உடற்பயிற்சியை செய்..அதோட கொஞ்சம் உயரமான தலையணை போட்டு படு" என்றார் டொக்டர்'. அத்துடன் மீண்டும் பிரஷர் செக் பண்ணும் போது அது நல்ல பிள்ளை போல 132/90 என்று காட்டியது..." மனசு நிம்மதியானது. ஐஞ்சு மணித்தியாலம் காத்திருந்தது வீண் என நினைத்தாலும் உடம்புக்கு ஒன்றும் இல்லை என்று மனம் அறிந்து சந்தோசப்பட்டது. வாயில் "ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேகம் நீ தான் " எனும் பாடல் வந்து ஒட்டிக் கொண்டது. வராந்தாவுக்கு வந்து வெளியேறும் கதவை அடையும் போது தான் பீற்றரின் நினைவு வந்தது. மீண்டும் வராந்தவுக்குள் வந்து பீற்றர் அமர்ந்து இருந்த இடத்தை பார்க்கின்றேன் அதில் அவர் இல்லை எங்கே போயிருப்பார் என சுற்றும் முற்றும் பார்க்கின்றேன் பீற்றரை காணுகின்றேன்.. . நான் முன்னர் அமர்ந்து இருந்த இடத்தில் குனிந்து இருந்த படி ஏதோ செய்கின்றார் என்ன செய்கின்றார் என வடிவாக பார்க்கின்றேன் நான் கொட்டிய கோப்பியை ஒரு துணியால் துடைத்து விட்டு எழுந்து கொள்கின்றார் வராந்தா மீண்டும் பளிச் என்று ஆகின்றது .
 42. 21 points
  முதல் பயணம் பற்றி எழுத முன்பாக ஒரு சத்தியம்: இந்த சிறு பதிவையாவது முழுமையாக எழுதுவேன் என புங்கையூரன் மேல் சத்தியம் செய்து விட்டு ஆரம்பிக்கின்றேன் (என் அம்மா மேல கனக்க தரம் பொய் சத்தியம் செய்து இருக்கின்றேன். இப்ப அம்மாவுக்கு 73 வயதாகின்றது) முதல் பயணம். 2007 ஏப்ரலில் இலங்கையை விட்டு டுபாயிற்கு நான் புறப்படும் போது என் பாஸ்போர்ட்டில் கனடாவுக்கான தற்காலிக வதிவிட வீசாவும் குத்தப்பட்டு இருந்தது. அப்படி புறப்படும் காலத்தில் தான் இலங்கையில் கொழும்பிலும் நாடு எங்கிலும் தமிழர்கள் வீதி வீதியாக சுட்டுக் கொல்லப்பட்டும், காணாமல் போக்கடிக்கப்பட்டும் கொண்டு இருந்தார்கள். ஊடகவியலாளார்களும் முஸ்லிம் வியாபாரிகளும் கடத்தப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். மகிந்தவுக்கும் கோத்தாவுக்கும் எதிராக சுச்சாவிட நினைப்பவர்கள் கூட களையெடுக்கப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். மாவிலாற்றில் பெருக்கெடுக்கத் தொடங்கிய போர் தமிழர்களின் இரத்தத்தினால் இலங்கையை குளிப்பாட்டிக் கொண்டு இருந்தது. விமானத்தில் வைத்தே மனதுக்குள் சத்தியம் செய்து கொண்டேன், இனி இலங்கை பக்கம் 10 வருடமாவது தலை வைத்தும் படுக்க கூடாது என. இந்த உறுதி 2009 மே மாதத்தின் பின் வாழ்க்கையில் இனி எப்போதுமே இலங்கைக்கு செல்லக் கூடாது என்ற சத்தியமாக மாறி விட்டுருந்தது. எப்படியாவது அம்மாவையும், அக்கா குடும்பத்தினையும் கனடாவுக்கு கொண்டு வந்து விட்டால் போதும் இனி அந்தப் பக்கம் போகக் கூடாது என்று மனசுக்குள் உறுதி எடுத்திருந்தேன். ஒரு வேளை இடையில் அம்மாவுக்கு ஏதும் நடப்பினும் கூட அங்கு போகப் போவதில்லை என முடிவு செய்து இருந்தேன். இதை அம்மாவிடமும் சொல்லி இருந்தேன்.அப்படி போனால் ஒரு போதும் உயிருடன் திரும்ப முடியாது என நான் நினைத்து இருந்ததற்கான காரணங்களும் வலுவானைவையாக இருந்தன. ஆனால் காலம் எல்லாவற்றையும் அடிச்சு நொறுக்கிக் கொண்டு தான் நினைத்ததையே சாதித்துச் செல்லும் என்பதற்கு இணங்க இடையில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. ஊருக்கு போக வேண்டும் என்ற நினைப்பும், இலங்கையில் மகிந்தவின் ஆட்சி இல்லாமல் போனதன் பின்னான சூழ்நிலைகளும் என் உறுதிமொழியை இருந்த இடம் இல்லாமல் ஆக்கிவிட்டது. முன்னர் சாத்தியமாகும் என்று நினைத்த பல விடயங்கள் நிர்மூலமாகிப் போன அதே நேரத்தில் முன்னர் சாத்தியப்படாது என நினைச்ச பல விடயங்கள் நடக்கவும் தொடங்கியிருந்தன. என்னுடன் உடன் பிறந்த ஒரே உறவான அக்காவை 9 வருடங்களாக நான் சந்திக்கவில்லை என்ற ஏக்கமும் ஒரு புறம் வளர்ந்து இனி பார்க்காமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு என்னக் கொண்டு வந்து விட்டது. அவர் இருப்பது சென்னையில் என்பதால் அங்கு சென்று விட்டு, இடையில் ஒரு வாரம் இலங்கைக்கு செல்வது என முடிவு செய்து இருந்தேன். மொத்தமாக இரண்டு வார லீவில் (17 நாட்கள்) தான் செல்லக் கூடியதாக அலுவலக வேலைகள் நெரித்துக் கொண்டு இருந்தன. ஆக இரண்டு வாரத்தில் ஒரு வாரம் சென்னையில், ஒரு வாரம் இலங்கையில், பயணத்துக்கு மூன்று நாட்கள் என்ற கணக்கில், மகனையும் இணைத்துக் கொண்டு என் பிரயாணத்தினை திட்டமிட்டேன். அம்மாவுடன் என் மனைவி கவிதாவும் மகள் இயலினியும் துணையாக கனடாவில் நிற்க நானும் மகனும் செப்ரம்பர் 16 அன்று சென்னையை நோக்கி எங்கள் பயணத்தினை ஆரம்பித்தோம். (மிகுதி பிறகு) ------------ தொடர்ச்சிகள்: சென்னை உங்களை வரவேற்கின்றது
 43. 21 points
  இந்த தலைப்பைப் பார்க்கும் பலருக்கு இதில என்ன புதினம் இருக்கு என்று நக்கல் நழினமாக பார்க்கலாம். ஆனால் என்னோடு ஒத்த வயதினருக்கு இந்த லோங்ஸ்இன் வலி புரிந்திருக்கும். ஏறத்தாள 45 வருடங்கள் முன்பாக யாரும் நினைத்த நேரத்தில் இந்த லோங்சை மாட்ட முடியாது.அதை மாட்டுவதற்கு ஒரு தகுதி இருக்க வேண்டும் என்று எழுதாத சட்டம் ஒன்று இருந்தது. பாலர் வகுப்பிலிருந்து பத்தாவது வகுப்பு வரை சந்தோசமாக போகும் பள்ளி வாழ்க்கை ஜீசிஈ எனும் பரீட்சையில் வந்து தடம் புரழும். இதுவரை அரைக் காற்சட்டைளோடு சுதந்திரமாக திரிந்தவர்கள் இந்த பரீட்சையில் சித்தியெய்தினால் மட்டுமே அடுத்த கட்ட படிப்பு மாத்திரமல்ல எதிர் காலமே சூனியமாகிவிடும். இந்த சோதனைகளில் சித்தியடைந்தவர் மட்டும் புதிதாக லோங்ஸ் மாட்டிக் கொண்டு வருவார்கள்.மற்றையவர்கள் அதே அரைக் காற்சட்டையோடு கொஞ்ச காலம் பின்னர் வெளியில் வேட்டி வீட்டிலும் ஊரிலும் சாரம் தான். அந்த நேரங்களில் யார்யார் சோதனை பாசாகிட்டார்கள் என்று உடுப்பிலேயே தெரியும்.இஞ்சை பார்ரா லோங்ஸ் போட்டிருக்கிறான் என்றால் அவன் பாசாகிட்டான் என்றே அர்த்தம். இதே மாதிரி மணிக்கூடு கட்டியிருந்தால் அவர் ஏஎல் பாசாகிட்டார். பெண்கள் தாவணி போட்ட ஞாபகம்.வீட்டிலும் பள்ளியிலும் பெண்கள் இல்லாதபடியால் சரிவர தெரியவில்லை.இதை பெண்கள் தான் எழுத வேண்டும். இப்போது பிறக்கும் போதே விரும்பிய உடுப்புகள் போடலாம். நானும் 1971 இல் லோங்ஸ் போட்டேன்.மணிக்கூடு கட்ட முடியாமல் போய்விட்டது.அந்த நேரம் தான் பெல்பொட்டம் வந்த நேரம் மாட்டிக் கொண்டு சுற்ற வேண்டியது தானே. யாழ் களத்திலும் இப்படி அனுபவப்பட்ட புங்கை குமாரசாமி தமிழ்சிறி சுவியர் இன்னும் பலர் இருக்லாம்.உங்கள் அனுபவத்தையும் கொட்டுங்கள் பார்க்கலாம்.
 44. 21 points
  பால் சுரக்கும் ஆண்கள். தாத்தாவை சீண்டி விட்டு தாவி ஓடுகையில் தாவிவரும் கைத்தடியும் காலில் பட்டுவிட பாதத்தில் பால் சுரக்கும். அழுக்கு முந்தானையில் அதிரசம் முடிந்து வைத்து உனக்குத்தான், ஒழிச்சு சாப்பிடு என்ற பாட்டியின் பாசத்தில் - என் கேசத்தில் பால் சுரக்கும். கன்னத்தில் நீர் உறைந்திருக்க கட்டிலில் தான் படுத்திருக்க தான் அடித்த தழும்பில் பரிவுடன் தடவிடும் தந்தை கையில் பால் சுரக்கும். அண்ணனுக்கு அடித்ததென்று கன்னத்தில் அடித்துவிட்டு கிட்ட வந்து பாக்கட்டில் பணம் வைக்கும் சித்தப்புவிடம் பால் சுரக்கும். ஆடுபுலி ஆடடத்தில் அளாப்பி விளையாட அக்காவும் அழுதுநிக்க அங்குவரும் மாமாவின் கையின் கிளுவந் தடியில் பால் சுரக்கும். எண்ணை வைக்க அடம்பிடிக்கும் என்னை இழுத்துவைத்து ரண்டு குட்டும் நாலு குத்தும் அம்மா போட உச்சியிலும் முதுகிலும் உண்மையாய் பால் சுரக்கும். களைத்து வரும் வேளை காத்திருந்து முத்தத்தால் முகம் துடைத்து கட்டியவள் காப்பிதர இரு கண்களிலும் பால் சுரக்கும். எகிறிவரும் எட்டுவயது மகள் பாய்ந்து மார்பினில் ஒட்ட பக்குவமாய் பற்றிக் கொள்ளும் பத்து விரலும் பால் சுரக்கும். எழுதும் பேனாவை ஒன்று பறிக்க - எழுதிய தாளை இரண்டு இழுக்க தாத்தாவை தள்ளி விட்டு முதுகில் துள்ளியாட பேரனின் தேகமெங்கும் பால் சுரக்கும்....! யாழ் இணையம், சுய ஆக்கம் சுவி....!
 45. 21 points
  பதினாறு வயது என்பது எல்லோருக்கும் ஒரு அழகைக் கொடுக்கும் வயதுதான். இளம் காளையர்கள் எல்லாம் நின்று திரும்பிப் பார்க்கும் வயது. நின்று திரும்பிப் பார்க்கத் துணிவற்றவர்கள் கூட பதினாறு வயது மங்கையைக் கண்டால் கடைக்கண்ணால் தன்னும் பார்த்துக்கொண்டு போகும் அழகு. இயற்கையான அழகு இல்லாதவர் கூட அந்த வயதுக்கான ஒரு தளதளப்பில் ஒரு மினுக்கத்தில் அழகாகத் தெரிவர். தூக்கக் கலக்கத்தில் அவர்களைப் பார்த்தாலும் கூட அழகாகத்தான் தோன்றும். நிலாவும் அப்படித்தான். பேரழகி என்று கூற முடியாவிட்டாலும் கடந்து போகும் ஆண்கள் எல்லாம் அவளைத் திரும்பிப் பார்க்காது செல்ல முடியாது. அவளூரில் மிதியுந்தில் செல்பவர்கள் மிகச் சிலரே. அதிலும் அவள் மிதியுந்தில் செல்லும் வேகம் பார்த்து ஆண்களே, டேய் தள்ளி நில்லுங்கடா என்று கேலி பேசுவதும் உண்டு. அவள் அவர்களது கேலியை சட்டை செய்யாதவளாக அப்பாற் சென்றாலும் மனதுக்குள் அவர்களின் கேலிகள் எல்லாம் பிடித்துத்தான் இருந்தது. அவள் பாடசாலைக்கு பள்ளிக்கூடப் பேரூந்தில் போய்வந்தாலும் இதுவரை எவரிடமும் மாட்டுப்பட்டதில்லை. பாடசாலை முடிந்து வீடுவரும் போதெல்லாம் எத்தனையோபேர் பேருந்துக்குப் பின்னாலேயே மிதியுந்தில் வந்து, அவள் தரிப்பிடத்தில் இறங்கி பிரதான சாலையில் இருந்து வீட்டுக்குச் செல்லும் பாதை வரை காவலுக்கு வந்துவிட்டுச் செல்வார்கள். அவளுக்கு மனதில் ஒரு கிளுகிளுப்பும் பெருமிதமும் ஊற்றெடுக்கும். ஆனாலும் அவர்களை சட்டை செய்யாது நடப்பாள். அவளோடு வரும் நிரஞ்சி கூட அடிக்கடி எரிச்சல் படுவாள். இவங்களுக்கு வேறை வேலை இல்லை என்று. அப்போதெல்லாம் இவள் வேண்டுமென்றே நிரஞ்சியைச் சீண்டுவாள். பாவமப்பா அவர்கள் உமக்குப் பின்னால் வருகிறார்கள் என்று. எனக்குப் பின்னால வாறவங்கள் என்ர வீடு வந்தவுடன திரும்பிப் போகாமல் ஏன் உம்மட வீடு வரையும் வாறாங்கள் என்பாள். இவளுக்கு உள்ளுக்குள் கர்வமாக இருந்தாலும், அவங்கள் எங்கள் வீட்டடியால போவது கிட்ட எண்டு வாறாங்கள் போல என்று இன்னும் நிரஞ்சிக்குக் கடுப்பேற்றுவாள். இந்த வருடம் ஓ லெவல் பரீட்சை வருகிறபடியால் இனி கொஞ்சம் கவனமாப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவளும் இப்ப ஒன்றையும் விளையாட்டாய் எண்ணுவதில்லை. ஊரில் உள்ள நண்பி ஒருத்தியுடன் சேர்ந்து கணிதமும் விஞ்ஞானமும் ரியூசன் எடுக்க ஒரு வீட்டுக்குச் செல்ல வேண்டி இருந்தது. நிலாவும் தாரணியும் ஒன்றாகவே அங்கு போய் வருவார்கள். தாரணிக்கு தந்தை இல்லை. ஆனபடியால் தாய் அவளை மிகக் கட்டுப்பாட்டுடன் வளர்த்ததனால் அவளுக்கு நிலாவைப்போல் துணிவும் இல்லை. எந்தப் பெடியனையும் நிமிர்ந்தும் பார்க்க மாட்டாள். அதனால் அவளை நம்பி நிலாவை அவளுடன் அனுப்பிவிட்டு தாயார் நின்மதியாக இருப்பார். அங்குதான் அவள் வாழ்வு திசை மாறப் போகிறது என்று அப்போது அவளுக்குத் தெரியாது. முதல் நாள் கொஞ்சம் சுவாரசியம் இல்லாது போய்க்கொண்டு இருந்தது. போகப்போக இவளுக்கு எல்லாம் எல்லோரும் பழகி அந்த வகுப்பில் இவளைப் பிடிக்காதவர் யாரும் இல்லாமல் செய்துவிட்டாள். விளங்காத எதையும் துணிவுடன் ஆசிரியர்களிடம் கேட்டதனால் அவர்களுக்கும் இவள் பிடித்த மாணவியானாள். மாலை ஐந்து மணியிலிருந்து ஆறரை மணிவரை விஞ்ஞானம். ஆறரையிலிருந்து எட்டு வரை கணிதம். கணித பாடம் முடிய இருட்டிவிடுவதால் அங்கே பயன்படுத்தும் பெற்றோல் மக்ஸ் விளக்கை மாணவர்கள் கொண்டுவந்து இவர்கள் போகும் பாதையில் பிடித்துக்கொண்டு நிற்பார்கள். இவளும் நண்பியும் கொஞ்சத் தூரம் போனதும் மீண்டும் உள்ளே கொண்டு செல்வார்கள். வீட்டுக்குப் போய்ச் சேரும் மட்டும் இருட்டில் தான் போகவேண்டும் அது வேறு கதை. மாணவர்களுக்கு அதில் ஒரு சந்தோசம். ஒருமாதம் செல்ல இவர்களின் டியூசன் சென்டரின் பக்கத்து வீட்டுக்கு ஒரு குடும்பம் புதிதாகக் குடி வந்தது. அவர்களைப் பார்த்தாலே எதோ தடிப்புப் பிடிச்ச சனம் என்றே மற்றவர்களுக்கு எண்ணத் தோன்றியது. அந்த வீட்டில் இரண்டு ஆண்கள் ஒரு பெண். அடுத்தடுத்த நாள் பார்த்தால் இவர்கள் வரும் நேரம் எல்லாம் தம் வீட்டு வாசலில் இன்னும் இரண்டு மூன்று நண்பர்களுடன் அந்த வீட்டின் இரண்டாவது மகன் கதைத்துக்கொண்டு நிற்பான். இவளோ நண்பியோ அவர்களைக் கணக்கெடுப்பதே இல்லை. ஒரு மாதம் செல்ல இவர்கள் வீட்டுக்குப் போகும் நேரம் அவனும் தன் வீட்டு வாசலில் நண்பர்களுடன் நின்று சிரித்துப் பேசியபடி இருப்பான். இவளும் நண்பியும் இரட்டைச் சடைதான் போட்டிருப்பார்கள். அடுத்த சில நாட்களில் இவர்கள் வரும் நேரம் பார்த்து இரட்டைப் பின்னல் என்று கூறிச் சிரிப்பார்கள். இவளுக்குக் கடுப்பாகிவிடும். ஆனாலும் அவர்கள் யாரைச் சொல்கிறார்கள் என்று தெரியாமல் ஏசவும் முடியாமல் நண்பிக்கு ஏசியபடி வருவாள். அவங்கள் எங்கட பேரைச் சொல்லவில்லைத்தானே பேசாமல் வா என்று நண்பி நிலாவை அடக்கிவிடுவாள். இவளும் சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்தாள். எளியவங்கள் நக்கலா அடிக்கிறியள் என்று மனதினுள் கறுவிக்கொண்டாள். வகுப்பு முடிந்து இவர்கள் வெளியே வர மாணவர்கள் வழமைபோல் பெற்றோல் மக்ஸ் விளக்கைத் தூக்கிய படி வர, அந்தப் பக்கத்து வீட்டுக்காரன், ஏன்ரா நீங்கள் விளக்குப் பிடிக்காட்டி உவைக்குப் போகத் தெரியாதோ என்றான். நிலாவுக்கு வந்த கோவத்தில், ஏன்ரா உன்னை யாரும் விளக்குப் பிடிக்கச் சொன்னவையோ என்றாள் பலத்து. சுற்றிவர நிற பெடியள் எல்லாம் சிரிக்கத் தொடங்க அவன் அவமானமாக உணர்ந்தானோ என்னவோ உடனே, வாயை மூடிக்கொண்டு போடி என்றான் இவளைப் பார்த்து. எனக்கு போகத் தெரியும் நீ முதல்ல வாயை மூடிக்கொண்டு போடா என்று இவள் சொல்ல, தாரணி இவள் கையை இழுத்துக்கொண்டு வாயை மூடிக்கொண்டு வாடி என்று கூட்டிக்கொண்டு போனாள். நிலாவுக்கும் மனதுள் கொஞ்சம் பயம் எட்டிப் பார்த்ததுதான். அதையும் மீறி ஒரு சந்தோசமும் நிறைவும் மனதில் ஏற்பட்டது. அடுத்தநாள் மாலை வகுப்புக்குப் போகும்போது முதலே தாரணி கூறிவிட்டாள். வாயை மூடிக்கொண்டு என்னோட வாறதெண்டால் வா. அல்லது நான் தனியப் போவிடுவன் என்று. நான் ஏனடி கதைக்கப்போறன் என்று இவள் சமாதானம் சொன்னாலும் மனது ஒரு இனம் தெரியாத உணர்வு எட்டிப் பார்த்தது. தூரத்தில் வரும் போதே அவன் வீட்டு வாசலில் தனியாக நிற்பது தெரிந்ததும் ஒரு பதட்டம் வந்தாலும் வேறு யாரும் இல்லை என்பதில் ஒரு நின்மதியும் எட்டிப் பார்த்தது . நான் உனக்குப் பயப்படவில்லை என்று காட்டுவதற்கு இவள் நிமிர்ந்து பார்த்தபடியே வந்துகொண்டிருந்தாள். கிட்ட நெருங்க அவன் இவளையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. இவளுக்கு மனதில் எதோ ஒரு உணர்வு வந்து போனது. இவள் தலையைக் குனிந்துகொண்டு நண்பியுடன் வந்து அமர்ந்தாள். அவனுக்கு என்னடி பெயர் என்று தாரணியைக் கேட்டாள். எனக்குத் தெரியுமே நானும் உன்னோடதானே வாறன். அவனுக்கு என்ன பெயர் எண்டால் என்ன பேசாமல் இரு என்று அவள் கூறியபின் இவள் அவளிடம் எதுவும் கேட்கவில்லை. பாடம் முடிந்து வீட்டுக்குப் போகும் போது இவள் கண்கள் அவன் நிற்கிறானா என்று தேடியது. அவனையோ நண்பர்களையோ காணவில்லை. இவளுக்கு கொஞ்சம் ஏமாற்றமாகவும் இருந்தது. தாரணியிடம் சொல்வோமோ என்று எண்ணிவிட்டுப் பின் ஒன்றும் சொல்லாமல் அவளுடன் நடந்தாள். அடுத்தநாள் வகுப்புக்கு வரும் போதும் அவனைக் காணவில்லை. நீ குடுத்தது நல்லது தானடி. இரண்டு நாளா ஆக்களைக் காணேல்லை என்று தாரணி கூற, ஓ நீயும் கவனிக்கிறாயா என்று மனதில் எண்ணியபடி ஓம் என்று மட்டும் சொன்னாள். அவனின் பெயர் மதுரன் என்றுவிட்டு நிலாவைப் பார்த்த தாரணி, அவளின் முகக் குறிப்பைப் பார்த்ததும் கனக்கக் கற்பனை செய்யாதே. என் அண்ணனின் வகுப்பில் சேர்ந்திருக்கிறானாம். அண்ணாவுடன் இன்று அவனைக் கண்டதும் கேட்டேன். அண்ணாதான் அவனைப் பற்றிச் சொன்னான் என்று நிறுத்தினாள். அப்ப யாழ் பல்கலைக் கழகம் போகிறானா என இவள் மனதுள் எண்ணிக்கொண்டாள். மதுரன், ஆளுக்கேற்ற பெயர்தான் என்று இவள் மனதுள் எண்ணினாலும் வெளியே சொல்லவில்லை. தூரத்தில் அவன் மதுரன் நிற்பது தெரிந்தது. இன்று இவனைப் பார்ப்பதில்லை என்று மனதில் எண்ணியபடியே வந்தாலும் அவன் தன்னையே பார்ப்பதுபோல தோன்றியதால் அவனைக் கடக்கும்போது தன்னை அறியாமலேயே தலை நிமிர்த்தி அவனைப் பாத்துவிட்டாள். அவன் இவளையே பார்ப்பது தெரிந்ததும் இவள் மனம் படபடக்கத் தொடங்கியது. என்ன இது எனக்கு அவன் மேல் கோபமே இல்லையா ??? அவனைப் பார்க்கவேண்டும் போல் மனம் சொல்கிறதே என்று தன்னைத்தானே மனதுள் திட்டியும் கொண்டாள். நல்ல காலம். தாரணி இவளைக் கண்டுகொள்ளவில்லை என்பது மனதுக்கு நின்மதியைத் தந்தது. அடுத்தநாள் காலை பள்ளி செல்லும்போது வீட்டிலிருந்து சிறிது தூரம் சென்றிருப்பாள். மோட்டார் சயிக்கிள் சத்தம் பின்னால் கேட்டது. இவளுக்கு அருகில் வந்ததும் சிறிது சத்தம் குறைய பார்த்தால் மதுரன். நிலா பகல்ல நடந்து போகுது என்று சிரித்தபடி கூறிவிட்டு இவளைக் கடந்து சென்றுவிட்டான் அவன். இவள் மனதெங்கும் மகிழ்வு பொங்கி வழிந்தது. ஆள் கம்பீரமாகத்தான் இருக்கிறான். என் பெயரைக் கண்டு பிடித்துவிட்டான் என்னும் உவகையும் ஏற்பட்டது. பள்ளிப் பேருந்தில் ஏறி பள்ளி சென்ற பின்னும் அவளால் மனக் கொந்தளிப்பை அடக்க முடியவில்லை. எப்ப பள்ளி முடிந்து வீட்டுக்குப் போவோம், இல்லை இல்லை டியூசனுக்குப் போவோம் என்றிருந்தது. மாலை தாரணி இவளின் மாற்றத்தைக் கண்டு பிடித்துவிட்டாள். என்னடி முகம் எல்லாம் பளிச் எண்டு இருக்கு. என்ன விஷயம் என்றதும் இவளுக்கும் தன் உணர்வை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் இருந்ததுதான். இண்டைக்கு விடிய மதுரன் வந்த கதையையும் அவன் கூறியதையும் சொன்னவுடன், தாரணி அதைப் பெரிதாக எடுக்கவில்லை. அப்ப அவனுக்கு உன்னில் கோவம் இல்லை என்றதுடன் கதையை முடித்துக் கொண்டாள். இவளுக்கு மேற்கொண்டு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. வகுப்புக்குப் போகும்போது அவன் நண்பர்களுடன் நின்று கதைத்துக்கொண்டு நிற்பது தெரிந்தது. இவள் பார்த்தும் பார்க்காதது போல் போனாலும் கூட அவன் இவளையே ஊடுருவிப் பார்ப்பது நன்றாகவே புரிந்தது. வகுப்புக்குச் சென்று அமர்ந்தபின் கூட இவளால் மனதை ஒருமுகப்படுத்த முடியவில்லை. பாடம் எதுவும் மனதிலும் பதியவில்லை. பரீட்சை வேறு வருகிறது. என்ன இது என்று மனம் தவித்தது . அவனைப் பார்க்கவே வேண்டும் போல் மனதில் ஏற்படும் உந்துதலை அவளால் அடக்கவே முடியவில்லை. காலையில் அவன் இவளைக் கடந்து போவது இப்பொழுதெல்லாம் நிரந்தரமாகியது. இருவரது பார்வைகள் பரிமாறப்படுவதும், பார்வையே ஆயிரம் வார்த்தைகளை அவனுடன் பேசுவது போல் இன்பத்தைக் கொடுப்பதும், தனக்குத்தானே அவனது நினைவில் கரைவதுமாக ஒரு மாதம் ஓடிப்போனது. நண்பியிடம் கூட தன் உணர்வை மறைத்து ஒன்றும் தெரியாதவளாக இருக்க முயன்றாள். ஆனால் இவளின் மாற்றம் இத்தனை நாட்கள் பழகிய நன்பிக்குத் தெரியாதா என்ன?? என்னடி ஒழுங்காப் படிக்கிறியோ ???இன்னும் ஆறு மாதம் தானடி. படிப்பைக் கோட்டை விட்டுவிடப் போறாய் என்றுவிட்டு இவளைப் பார்த்தாள் தாரணி. நான் என்னடி செய்ய. மதுரன் ஒவ்வொரு நாளும் விடிய வாறார். இன்னும் வாய் திறந்து கதைக்கேல்லயடி. ஆனால் பாக்காமல் இருக்கவும் எல்லாதடி என்று இவள் அழுவாரைப் போல் கூறியதும், உன்ர அம்மா எனக்குத்தான் திட்டப்போறா. உதெல்லாத்தையும் விட்டுட்டு படி. உதெல்லாம் பிறகு பாக்கலாம் என்றாள். அவளுக்குச் சரியடி என்று கூறிவிட்டு போய் இரவு படுத்தாலும் தூக்கம் வர மறுத்தது. நாளைக்கு மதுரனிடம் இனிமேல் வரவேண்டாம் என்று கூறிவிட வேண்டும் என்று முடிவு எடுத்தபடி தூங்கி விட்டவள், காலையில் எழுந்து மதுரனிடம் எப்படிச் சொல்வது என மனதில் ஒத்திகை பார்த்துக்கொண்டு சென்றாள், அவனின் மோட்டார் சயிக்கிள் சத்தம் கேட்கவே மனம் தடதடத்து வேர்த்தது. அவன் தன்னைக் கடந்து சென்றாலும். அதற்கிடையில் சொல்லிவிட வேண்டும் என்று இரு வினாடி தரித்து நின்றவளுக்கு அருகே வண்டியை நிறுத்தியவன், உமக்கும் விளங்கி விட்டுதோ என்றபடி இவளின் கைகளை எடுத்து கடிதம் ஒன்றை வைத்து, வடிவா வாசிச்சுப்போட்டு முடிவைச் சொல்லும் நிலா என்றுவிட்டு உடனே சென்றுவிட்டான். இவள் இதை எதிர் பார்க்காததால் படபடப்புக் கூடிப்போய் யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்தாள். வீதியில் யாரும் இல்லை. உடனே அக்கடிதத்தை தன் கொப்பி ஒன்றில் வைத்துவிட்டு சாதாரணாமாக நடந்து செல்ல முயன்றாள். கால்களை எடுத்து வைக்க முடியாமல் கால்கள் தடுமாறின. என்ன எழுதியிருப்பான் என்று உடனே பார்க்க வேண்டும் போல் இருந்தாலும் அது முடியாத காரணத்தால், திரும்ப வீட்டுக்குப் போவோமா என்று கூட ஒருகணம் யோசித்தாள். தாயாரின் கேள்விகளுக்குப் பதில் கூற முடியாது. எதற்கும் பள்ளிக்கே செல்வோம் என்று எண்ணி நடக்கத் தொடங்கினால் புத்தகப் பை பாறாங்கல்லாகக் கனத்தது. ஆனாலும் மனம் மட்டும் அந்தரத்தில் பறப்பதுபோல் உணர்ந்தது. பள்ளியும் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. கடிதத்தை அடை காப்பதுபோல் கொப்பியுள்ளும் வைத்திருக்க முடியவில்லை. கொப்பியை விட்டுவிட்டு அங்கால் இங்காலும் போக முடியவில்லை. உணவு இடைவேளை வந்ததும் வயிற்றுவலி என்று ஆசிரியரிடம் கூறிவிட்டு நண்பிகளிடம் கூடச் சொல்லாமல் வீடுவந்து சேர்ந்தாள். நல்ல காலம் அவள் வீடு வந்தபோது யாரும் வீட்டில் இல்லை. அம்மம்மா மட்டும் பக்கத்து வீட்டில் இருந்தார். இவள் வயிற்றுவலி என்றதும் அவர் இஞ்சி குத்தி தேநீர் போட்டு இவளுக்குக் கொடுத்துவிட்டு முன் பக்கம் போய்விட்டார். யாருமற்ற வீட்டில் கூட கடிதத்தைப் பிரிக்க இவளுக்கு கைகளும் மனமும் நடுங்கியது. அன்பே நிலா, உன்னைப் பார்க்காது என்மனம் எதையும் பார்க்க மறுக்கிறது. உன் நினைவில் பித்துப் பிடித்தவனாகி விட்டேன் நான். நீயின்றி இனி நான் இல்லை என்று எனக்கு நன்றாகத் தெரிகிறது. உன்னிலையும் அதுதான் என்று நான் உணர்ந்தாலும், அதை உன் வாயால் கேட்க ஆசை. உன் மதுரன் நிலா கடிதத்தை மூன்று நான்கு தடவைகள் படித்துப் பார்த்தாள். மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றியது. வானத்தில் பறப்பதுபோல் எழுந்த உணர்வை அடக்க முடியவில்லை. இதயத்துடிப்பு வேகமாக கால்கள் சோர, தன் கட்டிலில் இருந்து மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தாள். எத்தனை தடவை வாசித்தாலும் அலுக்கவில்லை அவளுக்கு. இரவுமுழுதும் தூக்கமும் வரவில்லை. மாலை வகுப்புக்குப் போகவில்லை. வயிற்று வலி என்று கூறியபடி படுத்தே கிடந்தாள். என்ன செய்வது என்று இரவு முழுதும் யோசித்து விடியும் நேரம் அவள் மனதில் ஒரு தெளிவு பிறந்தது. காலையில் கொஞ்சம் வெள்ளன எழுந்து தாரணியின் வீட்டுக்குச் சென்றபோது என்னடி விடிய வெள்ளன என்றபடி தாரணி இவளை உள்ளே வரும்படி அழைத்தாள். உள்ளுக்குள் வேண்டாமடி என்று சொல்லியபடி, எடி மதுரன் நேற்று கடிதம் ஒன்று தந்தவர் என்றதும் நீ வாங்க்கீட்டியோ என்றாள் தாரணி. ஓமடி இந்தா வாசிச்சுப் பாரடி என்றதும் வாங்கி வாசித்துவிட்டு, நல்லாத்தான் எழுதியிருக்கிறான். எதுக்கும் இரண்டு நாள் வடிவா யோசியடி. இது சும்மா விளையாட்டில்லை. அவசரப்படாதை என்றாள். அன்று மாலை டியூசனுக்குப் போகும்போது என்னடி யோசிச்சனியே என்று தாரணி கேட்டதற்கு, நிலா பதில் கூறாது தலை குனிந்தாள். என்னடி நான் சொன்னது உனக்குப் பிடிக்கேல்லையே. நான் உன்ர நன்மைக்குத்தான் சொல்லிறன் என்று கூறி முடிக்கமுதல், அடி நான் காலமை உன்னட்டை வந்துவிட்டுப் போகும்போது மதுரநிட்ட எனக்கு விருப்பம் என்று கடிதம் குடுத்திட்டன் என்று கூறும் நிலாவை வாய் பிளந்து பார்த்தபடி நின்றாள் தாரணி.
 46. 20 points
  பெறுபேறு /பெரும்பேறு. ஈன்றபொழுதிலும்....பின்னர் அவர்களே இன்பமென்று இருந்த பொழுதுகளிலும்... என்னை தாங்கும் வேரென நிறைந்த பொழுதிலும்..பெரிதாய் இருக்கிறது இன்று. அமுதாய் இனிக்கிறது. என் பிள்ளைகளின் எதிர்காலம் எனக்கு ஒரு கனவு..அக்கறை..கடமை என்பதும் என்னை பழியுரைத்தோர்..எனது வீழ்ச்சி விரும்புவோர் முன்னே ஒரு சவால். வைராக்கியம். என்னை இந்த உலகிற்கு கொண்டுவந்த அம்மாவும்..என் பிள்ளைகள் உலகிற்கு வர காரணமானவனும் கூட ' எங்க உன்ர பிள்ளைகள் படிக்கிற கெட்டிதனத்தை பார்ப்பம்...என்றதுவும். தனியே நீ என்ன சாதிப்பாய். ...அடங்கி போ..என்று மிரட்டியவர்களிற்கும் முன்னே செயல் மூலமான பதிலாக ...எனது இத்தனை நாள் தவத்திற்கு வரம் கிடைத்தது. இன்றைய எனது நாட்குறிப்பில் இப்படிதான் எழுதுகிறேன். கண்ணீரே வாழ்வாகி வற்றிப்போன எனது கண்களிலும் சுரக்கிறது ஆனந்த கண்ணீர் ... ********************* 03.03.2017 மகள் வவுனீத்தாவின் பரீட்சை முடிவுகள் வெளியாகும் நாள். நேரம் நெருங்க நெருங்க நெஞ்சுக்குள் ஒருவித பதட்டம். பன்னிரண்டாம் வகுப்பு வரையும் ஒவ்வொரு வகுப்பேற்ற பெறுபேறுகள் வெளியாகும் நாளில் பாடசாலை வாகனத்தரிப்பிடத்தில் நின்றே பிள்ளைகளை வரவேற்பேன். வகுப்பில் வாங்கிவரும் தேர்வறிக்கையினை கையில் ஏந்தி வந்து முகம் நிறைந்த மகிழ்வோடு தந்த பொழுதுகளிலெல்லாம் என்னை மறந்திருக்கிறேன். இந்தமுறை வவுனீத்தாவின் தேர்வறிக்கையோ அப்படியானதொன்றில்லை. அவளதும் எனதும் பார்த்திபனதும் அவளை நேசிக்கும் ஒவ்வொருவரின் கனவும் எதிர்பார்ப்புமாக இருந்தது. இறுதியாண்டு தேர்வறிக்கை. இருந்த போதிலும் நேரில் சென்று பிள்ளையை வரவேற்க முடியவில்லை. வேலை என்ற ஓர் நிர்ப்பந்தச் சுழலில் சிக்கிக்கொண்டிருந்ததால் அதிலிருந்து வெளியேற முடியாமல் அந்தரித்துக் கொண்டிருந்தது. அடிக்கடி அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த பரீட்சை முடிவே எனது மகளின் பல்கலைக்கழகக் கனவையும் என் வாழ்நாள் கனவையும் நனவாக்கும் முடிவு. காலை 10.56மணிக்கு எனது தொலைபேசிக்கு அவளின் செய்தி வந்தது. அம்மாவுக்கு நன்றி. அம்மா நான் உங்களை நேசிக்கிறேன்.அவள் எழுதிய குறுஞ்செய்தியை பார்த்த போது பெருமிதமானேன். வேலை முடிந்ததும் முதல் ஆளாக வெளியேறினேன். மகளை தொலைபேசியில் அழைத்தேன். 'அம்மா நான் பாஸ். அவள் அழுதாள். சத்தமிட்டு கத்தி என் குழந்தையின் பரீட்சை பெறுபேற்றினை சொல்ல வேண்டும் போலிருந்தது. என் தோழனை அழைத்து மகளின் பெறுபேறு விபரத்தைச் சொன்னேன். என்போல அவளது பரீட்சை முடிவை அவனும் எதிர்பார்த்துக் காத்திருந்தான். (தோழன் பற்றிய குறிப்புகள் பின்னர்) உலகில் எனக்காக உயிரையும் தரக்கூடியவன். பிள்ளைகளின் கல்வியும் இறுதியாண்டுத் தேர்வும் அவர்கள் வாழ்வில் எத்தனை முக்கியமானது. ஆனால் கல்வியொன்றையே வாழ்நாள் கனவாக கொண்டியங்கும் எனது பிள்ளைகளுக்கு அவற்றை மன அமைதியுடன் தொடர முடியாதிருந்தது கடந்தகாலம். பார்த்திபனின் இறுதியாண்டு தேர்வுக்காலம் நினைவில் வந்து நெருடுகிறது. அம்மா நான் படிக்க வேணும் அம்மா நான் படிக்க வேணும் என என் குழந்தை கெஞ்சியதும், அதற்காக அவன் போராடியதும் இன்னும் வலிக்கும் நினைவுகளாகவும் இருக்கின்றன. இந்தக்கால கட்டத்தில் தான் எனது வாழ்வில் எதிர்கொண்ட சோதனைகளுக்கு தெளிவாக பதில் எழுத வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தேன். 'அப்பு நீங்கள் உங்களோடை படிக்கிற பிள்ளையள் ஆரிட்டையும் கேளுங்கோ. சோதினை முடியும் மட்டும் ஆற்றையேன் வீட்டில இருந்து படியுங்கோ. நான் காசு தாறன்' முதல் முதலில் அம்மாவையும் தங்கையையும் விட்டுப் பிரிய அவனால் முடியவில்லை. அழுதான். நீங்கள் எப்பவோ உவரை விட்டிருக்கலாம். எல்லாம் உங்கடை பிழை. இது பார்த்திபன். நானும் அண்ணாவும் எப்பவோ சொன்னம் நீங்கள் தான் கேட்காமல் பாவம் பாத்தனீங்கள். உவர் திருந்தமாட்டார் உவர் நடிப்பு எல்லாம்பொய். என்றாள் வவுனீத்தா. நான் காத்த பொறுமையும் அதன் விளைவுகளும் தங்கள் நிம்மதியைக் கெடுப்பதாக பிள்ளைகள் இருவரும் குறைசொன்னார்கள். இது எப்போதோ எடுத்திருக்க வேண்டிய முடிவுதான். அவர்களுக்கு விபரம் தெரியாத வயதில் இந்த முடிவை எப்போதோ நான் எடுத்திருந்தால் அவர்கள் எனது முடிவை தவறென்று யோசித்திருக்கவும் கூடும். அம்மா இது அண்ணாவின்ரை வாழ்க்கை அவன்ர München Universität கனவு. கொஞ்சநாளைக்கு அவன் வெளியில இருந்தால் தான் அவன் படிக்கலாம். மகனைப் பிரிதல் என்பது அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை. ஆனாலும் எனது பிள்ளையின் எதிர்காலத்திற்காய் அதைச்செய்ய வேண்டியே இருந்தது. பிள்ளையின் படிப்பை குழப்புவேன் அதுவே என்னை தோற்கடிக்க இருக்கும் இறுதி வழியென்பதை புரிந்து என்னை பழிவாங்க காத்திருந்தவன் வெல்லக்கூடாது. அதற்காக பிள்ளையின் பிரிவைத் தாங்க வேண்டும். 'பாதகம் செய்பவரைக் கண்டால் பயங்கொள்ளலாகாது பாப்பா மோதி மிதித்துவிடு முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா' பாரதியார் பாடல்கள் பக்கத்துணையாய் இருந்தன. 000 000 000 24.12.2016 நத்தாருக்கு முதல் நாள். வளமைபோல நிறைவெறியில் கதவுகளை அடித்து கண்ணாடிகளை உடைத்து அட்டகாசம் பண்ணிக்கொண்டிருந்தான். மேலே மகன் இறுதியாண்டு தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தான். அவனது படிப்பு குழம்பக்கூடாது என்பதற்காக அமைதியாய் இருக்கும்படி மன்றாடிய போது...., 'உன்ர பிள்ளை பெயில் விட்டா திரும்பி படிக்சொல்லடி....' அவனுக்கு துணையாக ஒருத்தி என் வீட்டில் வந்து இருந்து என்னை அதிகாரம் செய்தாள். காதல் உலகில் எவ்வளவோ நல்லதையெல்லாம் சாதிக்குமாம். ஆனால் எனதும் எனது குழந்தைகளின் வாழ்வையும் தெருவில் போட்டே தன் பழைய காதலை அவள் வெல்ல எதையும் செய்யத் துணிந்தாள். அவளுக்கும் ஒரு ஆண்குழந்தை இருந்தது. இயன்றவரை பிள்ளைகள் இருவரையும் அமைதிப்படுத்தி அவர்களை இடம் மாற்ற வேண்டும். அதற்கான வழிகளைத் தேடினேன். என் பிள்ளை பரீட்டையை நல்லபடியாக எழுத வேண்டும். பார்த்திபன் தனது நண்பர்களிடம் விடயத்தை தெரிவித்தான். அவனைத் தாங்க அவனது நண்பர்கள் முன்வந்தனர். தாயும் தந்தையும் மருத்துவர்களான அவனது தோழியின் பெற்றோர்கள் அவனைத் தங்கள் 3பிள்ளைகளோடு 4வது பிள்ளையாக ஏற்றுக் கொள்கிறோம் என தங்களோடு அவனை விடுமாறு சொன்னார்கள். பரீட்சைக்கு ஒருமாதம் இருந்தது. இந்த நிலையில் பாடசாலைக்கு விடயம் தெரிந்தால் பரீட்சை எழுத அனுமதி கிடைக்காது. அதனால் வீட்டு விடயங்களை பாடசாலை நிருவாகத்திற்கு தெரியாமல் பாதுகாத்ததில் என்பிள்ளையை பொறுப்பெடுத்த குடும்பத்திற்கு பெரும் பங்குண்டு. என் வாழ்வில் மறக்க முடியாத நன்றிக்குரிய குடும்பங்களில் அந்த யேர்மனியக் குடும்பத்தை என்றும் என்னால் மறக்க முடியாது. மன அழுத்தம் நித்திரை இழப்பென பிள்ளைகளின் அமைதி குலைந்து அவன் பரீட்சையை எப்படி எழுதப்போகிறான் ? நொடிக்கு நொடி அந்தரித்துக் கொண்டிருந்தேன். என்னையும் தங்கையையும் பார்த்தால் அவன் அங்கே நித்திரை கொள்வதில்லையாம் தானாக இயங்கவோ உண்ணவோ முடியாது அவன் குழம்பிவிடுவதாக அவனை பொறுப்பெடுத்த அம்மா என்னை வெளியில் ஒரு நண்பர் வீட்டில் அழைத்து சொன்னார். அவன் பரீட்டை முடியும் வரை அவனை நானும் மகளும் சந்திக்கவோ தொலைபேசி தொடர்புகளோ வைக்காமல் இருந்தால் நல்லமென ஆலோசனை சொன்னார். மனசை கல்லாக்குதல் என்பதை பிள்ளையுடனான தொடர்பாடலை தவிர்க்க வேணுமென்ற போதே உணர்ந்தேன். காவல்துறையின் உதவியை நாடி சட்டத்தரணியின் ஆலோசனைப்படி அடாவடித்தனங்களை எதிர்கொண்டேன். வீட்டில் தன் விருப்பத்திற்கு சாப்பிடும் பிள்ளை இன்னோரிடத்தில் எப்படி எதிர்கொள்வானோ என்பது முதல் எப்படி இருப்பானோ என்ற துயரம். என் வழியெல்லாம் கண்ணீரோடு கரையத் தொடங்கியது. எதைச் சமைத்தாலும் பிள்ளை சாப்பிடாத உணவு ஒவ்வொன்றும் எனக்கு விசமாயிருந்தது. அம்மா நீங்களும் கொஞ்ச நாளைக்கு அண்ணாமாதிரி வேற இடத்தில இருப்பியளோ ? இந்தப் பிரச்சனை முடியுமட்டும் நீங்கள் அமைதியாக படிக்க வேணும். மகளிடம் கேட்டேன். நான் உங்களை விட்டிட்டு போகமாட்டேன். நீங்கள் தனிய. அவள் என்னைவிட்டு போகமாட்டேனென்று முடிவாக சொல்லிவிட்டாள். மகள் என்னை விட்டு போகாமல் என்னோடே இருந்தாள். மரணத்தை நெருங்கும் நாட்களாகவே அன்றைய நாட்கள் எனக்கும் எனது குழந்தைகளுக்கும். பரீட்சை வந்தது. பர்த்திபன் பரீட்சை எப்படி எழுதினான் ? கேட்ட போது வந்த பதில் பயமென்றால் என்னவென்று உணர வைத்தது. அவன் ஆசைப்படி infomatik கற்றலுக்கு போதுமான புள்ளிகளில் இருந்து சில புள்ளிகள் போதாமல் இருந்தது. என் பிள்ளையை தங்கள் பிள்ளையாக பாதுகாத்த தாயும் தந்தையும் பாடசாலை நிருவாகத்தினரிடம் நேரில் சென்று நிலமைகளைச் சொல்லி போதாத புள்ளிகளை சமப்படுத்த மறுபரீட்சையை எழுத அனுமதிக்குமாறு கோரினார்கள். infomatikபாடத்தில் ஏற்கனவே அவன் செய்திருந்த பிரத்தியேக பரீட்சையில் முழுமையான புள்ளகளைப் பெற்றிருந்தான். பாடசாலையின் அனைத்து ஐகெழஅயவமை தொடர்பான பணிகளைச் செய்திருந்தமையாலும் குறைந்த புள்ளிகளை இட்டுநிரப்ப உதவியது. பார்த்திபன் என்றால் பாடசாலையில் சின்னப்பிள்ளைகள் முதல் ஆசிரியர்கள் வரை அறிவார்கள். அவன் சிறந்த பெறுபேறுகள் பெறுவான் என்பது அவர்களது நம்பிக்கை. அவனது தன்னார்வ பணிகள் முதல் infomatik இல் ஏற்கனவே நடந்த பரீட்சைகளில் அவன் மொத்தப்புள்ளிகளையும் பெற்று நம்பிக்கையை கொடுத்திருந்தான். அவன் அங்கேயொரு சின்னக்கதாநாயகன். ஆனால் எல்லோரின் எதிர்பார்ப்பாக இருந்த அதிசிறந்த பெறுபேறுகளை அவன் அடைய முடியவில்லை. இன்றுவரை அவனை கவலையடையச் செய்யும் அந்த நாளை அவன் தனது தற்போதை பல்கலைக்கழக படிப்பிலிருந்து சரி பறவாயில்லையென சற்று சமாதானமடைகிறான். இப்போது பல்கலைக்கழகத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெறுகிறான். என் பிள்ளையின் பரீட்சைக்கால அமைதியிழப்பு என்னோடு அருகிருந்து சாப்பிட்டு நிம்மதியாக பரீட்சை எழுத முடியாத தொல்லையை தந்தவன் தந்தவளை என் சாவிலும் மன்னிக்கும் மனநிலையை எனக்குள் வளர்த்துக் கொள்ளும் எண்ணம் ஒருபோதும் வராது. மனஅழுத்தம் மருத்துவம் என பிள்ளைகளையும் என்னையும் பழிவாங்கியவன் தங்கள் வெற்றிகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் மேடையேறி சான்றிதழ் வாங்கிய மேடைக்கு அவனை பிள்ளைகள் அழைக்கவேயில்லை. இன்று நாங்கள் வென்ற இந்த வெற்றி எங்கள் அம்மாவின் வெற்றி எனச்சொல்லி என்னை மகிழ்வால் அழவைத்த என் பிள்ளைகளே என் வாழ்நாள் சாதனை. 'அண்ணா எடுக்காத புள்ளிகளை நான் எடுப்பனம்மா' என் கண்ணீரை தன் வார்த்தைகளால் நம்பிக்கை தந்த மகள் அதிசிறந்த பெறுபேறுகள் பெற்று என்னை வானத்தில் மிதக்க வைத்திருக்கிறாள். தங்கையின் பெறுபேறுகளைப் பார்த்து தங்கையின் வெற்றியை தனதாய் மகிழும் என் மகன். எல்லோரின் எதிர்பார்ப்புகளும் ஏன் ஏன் ? என்ற கேள்விகளும் அவனுக்கு கிடைக்கவிருந்த புலமைப்பரிசில் கிடைக்காமல் போனதில் அடைந்த துயரையும் தங்கையின் பெறுபேறுகளைப் பார்த்து மகிழ்கிறான். 24.03.2017 பல்கலைக்கழகத்திலிருந்து ஒருநாள் விடுமுறை எடுத்துக் கொண்டு வந்து தங்கையோடு நின்று அவளை வாழ்த்தி அடுத்த அவளது பல்கலைக்கழக கற்றலுக்கான ஆலோசனைகள் கொடுத்து அடுத்த கட்டத்திற்கு தங்கையை தயார்படுத்தினான் என் பார்த்திபன். பார்த்திபன் என்ற பெயர் கடவுளின் பெயரல்ல. திலீபன் என்றொரு தியாகதீபம் தமிழர்களின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து தனையீந்தார். அவரது நாமத்தையே அவனுக்குச் சூட்டினேன். சிறுவயதிலிருந்து அவனது பெயர் தொடர்பாக அவனோடு நான் உரையாடுவதுண்டு. 'திலீபன்மாமா எனக்கு பிடித்த அரசியல் போராளி. அவரது இயற்பெயர் பார்த்திபன் அவரது நினைவாகவே உனக்கு பார்த்திபன் என பெயரிட்டேன்' அவனது பெயர் பற்றி குழந்தைக்காலத்தில் சொன்னதை பார்த்திபன் என்ற பெயருக்கான காரணத்தை தனது நண்பர்கள் தொடக்கம் ஆசிரியர்கள் கேட்போருக்கெல்லாம் சொல்லுவான். என் மகளுக்கும் கூட ஒரு காரணப்பெயராகத் தான் வவுனீத்தா என பெயரிட்டேன். நான் நேசித்த என்னை அதிகமாய் நேசித்து 1997இல் வன்னி ஏ9 வீதியில் தன்னுயிரை விதைத்து வீழ்ந்த நேசிப்பிற்குரியவனின் நினைவாகவும் வீரம் நிறைந்த வன்னிமண்ணின் ஞாபகமாகவும் அமைகிறது. அந்த மண்ணில் வாழ்ந்த அனைத்து வீரர்களின் ஞாபகமும் என் மகள் வவுனீத்தாவின் பெயரில் என்னோடு வாழ்கிறார்கள். என் குழந்தைகளுக்கு மாமாக்களாய் சித்திகளாய் உறவுகளாய் இருந்த பலர் இன்று உயிரோடு இல்லை. பலர் மாவீரர்கள். பலர் காணாமற் போனோர்களாய்.... இன்னும் பலர் இன்றும் எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் நன்மையே செய்தபடி எங்கள் மீதான நேசிப்போடு துணையாய் இருக்கிறார்கள். பிள்ளைகளுக்கென எதையும் சேர்த்துவைக்கவில்லையென்றாலும் தேடற்கரிய பல நல்ல உறவுகளைச் சேர்த்து வைத்திருக்கிறேன். வன்னிக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்லக் கிடைத்த மூன்று தடவைகளில் அவர்கள் சந்தித்த மனிதர்களும் அவர்களுடனான உறவுகளும் மிகப்பெறுமதியானது. யேர்மனியில் பெற்ற மதிப்பேட்டு அறிக்கையினை காட்டி மகிழ்ந்ததும் இன்னும் படியுங்கோ நாட்டுக்கு நிறைய செய்ய வேண்டுமென்று அவர்கள் வாழ்த்தியதும் மறக்க முடியாதது. உலகால் அதிசயித்து பார்க்கப்பட்டவரும் உள்ளிருப்பவர்கள் கூட நெருங்கிப்பழகும் வாய்ப்பு கொடுக்காதவரும் எனது பிள்ளைகளைத் தனது மருமக்களாய் தோழ்காவித்திரிந்ததுவும் விளையாடியதும் பெருங்கொடையே. என் பிள்ளைகள் நாட்டுக்கு பயனுள்ளவர்களாய் வரவேண்டும் என பலர் கடிதங்களாய் வாழ்த்துக்களாய் பலவருடங்கள் முன் எழுதி மாவீரர்கள் ஆனவர்களின் கடிதங்கள் வாழ்த்துக்களை பத்திரப்படுத்தி கொடுத்திருக்கிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளின் பின்னர் என் பிள்ளைகள் பல்கலைக்கழகம் முடித்து பட்டமளிப்பு விழாவில் அம்மாவின் வாழ்வின் முழுமையையும் தருவார்கள் என்ற நம்பிக்கை இன்னும் வலுக்கிறது. 20வருட உழைப்பு சேமிப்பு , என் குழந்தைகளினதும் எனதும் நிம்மதி அமைதி யாவையும் கொண்டு தொலைந்தவனின் ஒருசத உதவியும் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் வாழுவோம் என என் கடின உழைப்பின் மூலம் கொடுக்கும் உதவியில் படிக்கும் பிள்ளைகள். தேவைகள் நிறைய இருக்கிறது. ஆனால் என்னால் இயலும் அடுத்த ஐந்து வருடம் இன்னும் அதிகம் நான் உழைக்க வேண்டும். எனக்கு ஆதரவு தரவேண்டிய அம்மாவே எவனுக்காகவோ என்னை எதிர்த்தார். என்னை மகளாகப் புரிந்து கொள்ளாமல் ஆண் பெண்ணென்ற விதத்தில் தனது நியாயங்களை என்னுள் நிர்ப்பந்தித்தார். ஆணென்றால் இப்படித்தான் இருப்பார்கள். நாங்கள் தான் சமாளிக்க வேணும். பிள்ளைகளை இழந்தாலும் பிள்ளைகளின் எதிர்காலம் பாழானாலும் பறவாயில்லை பெயருக்கு ஒரு ஆண் குடும்பத்தலைவனாய் இருக்க வேண்டும். அது போன்றொரு போலி வாழ்வே சமூக தகுதியென்று கருதினா. 'பிள்ளைகளை ஆண்துணையில்லாமல் வளத்துக் காட்டு பாப்பம் என சாபமிட்டு சபித்த என் அம்மாவின் சாபம் , என் நடத்தை பற்றி ஊரெங்கும் பழிசொல்லித்திரியும் டென்மார்க்கில் வாழும் அம்மாவின் கூடப்பிறந்த சகோதரியும் அவர்களது குடும்பமும் இன்னும் என் வீழ்ச்சியில் கைதட்ட காத்திருந்த அனைவருக்கும்....., இதோ நான் சாதித்துக் காட்டியிருக்கிறேன். உங்கள் யாரின் ஆதரவும் இல்லாமல் தனியொருத்தியாக என் பிள்ளைகளை உயர்த்தியிருக்கிறேன். உங்களைக் கூடாதெண்டு சொன்ன அம்மம்மாவும் எல்லாரும் எங்களைத் தேடிவாறமாதிரி நாங்கள் படிப்பமம்மா. என் மகள் சொல்லும் வார்த்தைகள் கடவுளின் வார்த்தைகள். என்னை பழிசொன்னவர்களே , என் அம்மா உட்பட அனைவரும் எனது மரணத்தில் கூட உங்கள் மூச்சுக்கூட எட்டக்கூடாது. சாந்தி நேசக்கரம் பார்த்திபன் , வவுனீத்தாவின் அம்மாகவும் , வாழ்வில் எனக்கு கிடைத்த நட்புக்கு அர்த்தம் தந்தவனின் தோழியாகவுமே நான் சாக வேண்டும். பிற்குறிப்பு :- என் தோழமை பற்றி. அன்பையும் ஆதரவையும் பலத்தையும் தந்து என்னைத் தாங்கிச் சுமக்கும் உறவு என் தோழன். ஆண்வழியான நான் உணராத அப்பா , அண்ணா , தம்பி அனைத்து உறவுகளின் அன்பையும் ஒன்றாய் தந்தவன். எனக்குப் பறக்கும் வலுவைத் தந்த இறகுகள் அவனது. உடையாத உறுதியைத் தந்த உறவு அவன். என் அமைதியும் நிதானமுமே என் பிள்ளைகளை நிம்மதியாக வாழ்விக்கும். அடிக்கடி என் அருகில் இருந்து என்னை ஆற்றுப்படுத்திய என் தோழன். சாகும் வரையும் அவனுக்கு பட்டகடனை என்னால் திரும்பி கொடுக்க முடியாத கடன். நட்பென்றால் உலகில் நான் காட்டும் முதலும் கடைசியுமான உறவு அவன். எத்தனையோ பழி , வலி யாவும் தாங்கி நான் வீழாமல் என்னைத் தாங்கிய விழுது. என் கண்ணீரை வாங்கிக் கொண்டு புன்னகையைப் பரிசளித்தவன். எல்லாமுமாய் என்னைத் தாங்கிய என் தோழன் இல்லையென்றால் சிலவேளை இன்ற நான் சிறையில் கூட இருந்திருப்பேன்.
 47. 20 points
  அனுபவம் 1. இன்னும் இளையவனாக இருப்பதாலும்.. தனியப் போக வேண்டி இருந்ததாலும்.. எங்கும் இல்லாத அனுபவம் சொறீலங்கா மண்ணை தொட்டதுமே வரத்தொடங்கிவிட்டது. சொறீலங்கா... விமான நிலையத்தில்.. குடிவரவுத்றையில்.. சி ஐ டி யிடம் கையளிப்பு என்ற வெருட்டல்.. காசு பறிப்பில் போய் முடிந்தது. சமயோசிதமாகச் செயற்பட்டதால்.. கொண்டு போன கரன்சியில்.. பெருமளவு தப்பியது. இல்ல.. 15 இலச்சங்கள் வரை பறிச்சுட்டுத்தானாம் விடுவார்கள். இத்தனைக்கும் அந்த நாட்டை விட்டு சட்டபூர்வமாக வெளியேறி.. சட்டபூர்வமாக போனது... அதுதான் செய்த தப்பு. அங்குள்ள சில அதிகாரிகளுக்கு நெருங்கிய நபர்களின் தகவலின் படி... வெளிநாடுகளில்.. போராட்டங்களில் எடுக்கப்படும் ரகசியப் புகைப்படங்கள் அங்கு காசு பறிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறதாம். பல நபர்களின் புகைப்படங்கள் உருப்பெருத்து வைக்கப்பட்டிருக்காம். ஆனால்.. இந்த தகவலை உறுதி செய்ய முடியவில்லை. அனுபவம் 2. சொறீலங்கா சர்வதேச விமான நிலையம்.. ஒரு மீன் சந்தை. ஆட்கள் வெளியேற பல மணி நேரமாகும். பொதிகள் வந்து சேர... காத்துக்கிடக்க வேண்டும். வெளிய போனால்.. ஓடு ஓடுன்னு அடித்து விரட்டாத குறையாக தற்போது அங்கு நிகழும் திருத்தவேலைகளால் எழுந்துள்ள நெருக்கடியை சரிவரக் கையாளத் தெரியாமல்.. பயணிகளை அவலப்படுத்துகிறார்கள். அரச ரக்சிகள் இயங்குகின்றன.. விமான நிலையத்தில் இருந்து தூர இடத்துக்கு. அவை ஓரளவு செலவு குறைவானவை. மேலும் வேக வீதியில் செல்ல 250 ரூபா சிறிய வாகனங்களுக்கும் 300 ரூபா வான் வகைகளுக்கும் மேலதிகமாக வாங்கிறார்கள். அனுபவம் 3. வீதிகளில் பயணிக்கும் போது இராணுவ வாகனங்களில்... செல்வோர்.. கையடக்கத் தொலைபேசிகளால்.. ஆட்களை படமெடுக்கிறார்கள். என்ன மண்ணாங்கட்டிக்கு என்பது தெரியவில்லை. யாரை எடுக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. அனுபவம் 4. வடக்கில்.. சிங்கள காவல்துறையின் செயற்பாடுகள்.. மக்கள் சிநேகிதத்தை விட பெரும்பான்மை.. அதிகாரத் திமிரில் இருப்பதை அப்பட்டமாகக் காண முடிகிறது. அனுபவம் 5. இன்ரசிற்றி குளிரூட்டி தொடரூந்து வெள்ளவத்தை ஊடாகப் போகிறது. ஆளுக்கு 1500 ரூபா.. யாழ் போவதற்கு. அது வெள்ளவத்தை தொடரூந்து நிலையத்தில்.. அவதி அவதியாக நின்று அவதி அவதியாகவே போகும். சனங்களின் தொகைக்கு ஏற்ப ஒரு மரியாதை நேர ஒதுக்கம் இல்லை.. பயணிகள் செளகரியமாக ஏற. அத்தோடு அது ஒவ்வொரு தடவையும் நின்று இயங்கும் போது இடிமுழக்கச் சத்தத்தோடு தான் கிளம்பும். அனுபவம் 6. யாழ் நகரில்.. வாகனங்களின் நெருக்கடி அதிகம். மக்களிடம் வீதி ஒழுங்கை பின்பற்றும் பண்பு வெகு குறைவு. வாகனங்கள்.. சிற்றூர்திகள் எதுக்கு கோர்ன் அடிக்கினம் என்றே தெரியாது. ஒரே கோர்ன் சத்தம். அனுபவம் 7. ஓட்டோக்கள் ஏராளம். பல முஸ்லீம்களின் தொழில் அதுவாகவும் உள்ளதை அவதானிக்க முடியுது. இவை தாம் அதிகம் போதைப்பொருள் சப்பிளையில் இருக்காம்.. என்று உள்ளூர் மக்கள் அங்கலாய்க்கினம். அனுபவம் 8. அத்தியாவசிய பொருட்களின் விலை அசுர வளர்ச்சி கண்டிருக்க.. ஆடம்பரப் பொருட்களின் விலை அவ்வளவாக மாறி இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு கொத்துரொட்டி.. 200 ரூபா. ஒரு லட்டு 60 ரூபா. அனுபவம் 9. நவீன அங்காடிகள் மேற்கத்தைய தரப் பொருட்களோடு சேவைகள் வழங்குகின்றன. யாழிலும் கொழும்பிலும். விலையும் பறுவாயில்லை. அனுபவம் 10. கே எவ் சியில்.. சிக்கன் புரியாணி 350 ரூபா. காசுக்கு ஏற்ற உணவும் சுகாதாரத்தையும் காண முடிந்தது. சேவையும் நன்று. அனுபவம் 11. நவீன மருத்துவ வசதிகள் யாழ் நகரில் கொழுப்பில் பெருக்கம் அடைந்துள்ளன. நவீன கட்டடங்களுக்கும் வசதிகளுக்கும் குறைவில்லை. அனுபவம் 12. யாழ் நகர் வீதிகளில் பெண்களும் ஸ்கூட்டியும் கூடப் பிறந்தவை ஆகி இருப்பது கண்கூடு. அனுபவம் 13. ரியூசன் கொட்டில்களும்.. சைக்கிளில் சமாந்திரமாக வீதியில் போவதும்.. பழைய முறை போலவே நடக்குது. ஆனால் சில வீதிகளில் சைக்கிளில் பயணிக்க வீதி ஒழுங்கை அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக.. ஆரிய குளத்தை அண்டி.. பலாலிவீதியில்.. இதனைக் கவனிக்கலாம். அனுபவம் 14. யாழ் தொடரூந்து நிலையத்தை அதிகம் மக்களை விட இராணுவம்.. சிங்களப் பயணிகளும்.. இதர படைத்தரப்பும் பாவிப்பது அப்படியே தெரிகிறது. இதனை கிளிநொச்சி.. வவுனியாவிலும் காண முடியுது. அனுபவம் 15. இராணுவ நிரந்தர நிலைகள் எல்லாம் மாடமாளிகைகளாக எழுதுள்ளதுடன் அதனை அண்டி தடாகங்களும்.. பூங்காக்களும்.. வீதி அலங்கரிப்புகளும்.. சுத்தப்படுத்தல்களும்.. சொல்லி வேலை இல்ல. எங்கும் வெற்றிப் பிரதாபம்.. அடையாளப்படுத்தப்படுகுது. அனுபவம் 16. வன்னிப் பெருநிலப் பரப்பினூடாக.. தொடரூந்தில் செல்லும்.. போது எப்படி இந்த நிலத்தை நாம் இழந்தோம் என்ற ஏக்கமே இருந்தது. அந்தளவுக்கு பச்சைப் பசேல் என்று காடுகள் அடங்கி இயற்கை செழிக்கக் கிடக்குது. அனுபவம் 17. வன்னிப் பெரு நிலத்தில்.. வவுனியாவை தாண்டினால்.. நில மட்ட காவலரண்கள் எல்லாம் சீமெந்தால் அமைக்கப்பட்டு.. நிரந்தர இராணுவ இருப்புக்களை காண முடிகிறது. பெரு வீதிகளை அண்டிய மக்கள் நடமாட்டம் தவிர அங்கு மக்கள் நடமாட்டம் குறைவு. அனுபவம் 18. வன்னி நிலப்பரப்பில் இராணுவம் சைக்கிள் சவாரியில் போகிறது. ஆனையிறவை அண்டி இதனை அவதானிக்க முடிந்தது. அனுபவம் 19. வடக்கில்.. விவசாயம் கொஞ்சம் கொஞ்சமா வழமைக்குத் திரும்புது. அனுபவம் 20. யாழ் நகரப் பள்ளிக்கூடங்கள் எல்லாம் வெளிநாட்டுக் காசில்.. செழிப்புற நிற்கின்றன. யாழ் நகர்.. சாவகச்சேரி நகர்.. என்று எல்லா நகர்களும்.. புதுப்பொலிவை காட்டி நிற்கின்றன. ஆனால் வன்னி நிலப்பரப்பில் தப்பி உள்ள வீடுகளை எல்லாம் பார்த்தால்.. ஓடுகளில்.. செஞ்சிலுவை சங்க அடையாளம் இன்னும் இருப்பதை காணலாம். அவை தான் தப்பி இருக்கின்றன. சிலவற்றின் மீது செல்லும் விழுந்து பாதிப்படைந்த சாட்சியமும் கிடக்கு. அனுபவம் 21. வன்னி நிலப்பரப்பில் காட்டுப்பகுதிகளை அண்டி.. பழுதடைந்த நிலையில் சில இடங்களில் பேரூந்துகள் குவிக்கப்பட்டுக் கிடக்கின்றன. எங்கிருந்து வந்தன என்று தெரியவில்லை. ஏன் அங்கு கிடக்கின்றன என்றும் புரியவில்லை. அனுபவம் 22. சிங்களப் பகுதி தொடரூந்து நிலையங்கள்.. எந்த அபிவிருத்தியும் இன்றி அப்படியே காலங்காலமாகக் கிடப்பது தெரிகிறது. ஆனால்.. வடக்கில் வவுனியாவை தாண்டினால்.. நவீன தொடரூந்து நிலையங்கள்.. போரின் பலனாகக் கிடைத்துள்ளன. அனுபவம் 23. சில ரயில் சேவைகளை தவிர மிச்ச எல்லாம்.. கறள் கட்டிய நிலையில் ஓடுகின்றன. ஒரு சில நவீன ரயில்களை விட்டு.. அரசியல் நடத்தியது அப்பட்டமாகத் தெரிகிறது. சிங்களப் பகுதிகளில் அது கூட இல்லை. அங்கு இன்னும் கறள் கட்டின ரயில் தான். அனுபவம் 24. இப்ப எல்லாம் தமிழ் பாட்டு போட்டுக் கொண்டு மொரட்டுவ தமிழ் மாணவ சமூக.. ஆக்கள் வாரத்துக்கு ஒருக்கா ஊருக்கு போய் வர ரயிலை பாவிக்கினம். சோடி சோடியா லப்டப்பும் கையுமா திரியினம். அனுபவம் 25. வெள்ளையளும் உல்லாசப் பயணம் போகினம் யாழ்ப்பாணம். யாழ் பண்ணை வீதி நன்கு திருத்தப்பட்டு வீதி இரு மருங்கிலும் நடைபாதை அமைக்கப்பட்டு.. ஒரு உருப்படியான வேலை அதில் நடந்தது தெரியுது. அனுபவம் 26. இப்ப எல்லாம் யாழ்ப்பாண நகரில் என்றில்லை.. எல்லா சிற்றூரிலும் ஓட்டோ தான். மக்கள் நடக்க சரியான பஞ்சி. அனுபவம் 27. சிறீலங்கா முப்படை ஆட்களும் யாழ் நகரில் சர்வ சாதாரணமாக திரியினம்.. போகினம்.. வ்ருகினம்.. பொருள் கொள்வனவு செய்யினம்.. எம்மவர்களும் மதிப்பு மரியாதையோட தான் நடத்தினம். அனுபவம் 28. மக்கள் இப்ப எல்லாம்.. விடுதலைப் புலிகளைப் பற்றி வெளிப்படையா தமக்குள் கதைக்கினம். அவர்கள் இல்லாத ஏக்கம் பலரிடம். சிலரிடம் அதுவே அட்டகாசத்தின் உச்சத்துக்கு அவர்களை தள்ளி விட்டிருக்குது. அனுபவம் 29. கோவில்கள் பல நிறைவடைந்து.. கம்பீரமாக எழுந்து நிற்பதோடு.. மின்விளக்குகளால் எரியூட்டி நிற்கின்றன. அனுபவம் 30. இப்ப மின்சாரம் தடையின்றி வருகிறது. லக்ஸபான மின்சாரம் என்று சொல்லினம். மின்சாரச் செலவு பொருட் செலவோடு ஒப்பிடும் போது அதிகமாகத் தெரியவில்லை. அனுபவம் 31. வீதி அகட்டிப்பு என்று.. மக்களின் காணிகள்.. மதில்கள்.. வேலிகள்.. எல்லாம் பறிபோய்க்கிட்டு இருக்குது. மக்கள்.. ஏதோ வீதி அகலுது என்று கதைக்கப் பேச ஆளின்றி.. மெளனித்துக் கிடக்கிறார்கள். அனுபவம் 32. யாழில்... பெண் பிள்ளைகள் எல்லாம்.. சில புலம்பெயர்.. உள்ளூர் ஊடகங்கள் சொல்லுற மாதிரி ஆடிக்கிட்டுத் திரிவதாகத் தெரியவில்லை. ஒரு சிலது திரியலாம். பொரும்பான்மை பிள்ளைகள் நல்லாத்தான் இருப்பதாகத் தெரியுது. அனுபவம் 33. படி.. படின்னு.. இப்ப முன்னிலைப் பாடசாலைப் பிள்ளைகளையும் ரியூசனுக்கு விடுவது அவலம். அனுபவம் 34. யாழ் நகர.. கொழும்பு.. பள்ளிப் பிள்ளைகளிடம் நல்ல ஆங்கில மற்றும் கணணி அறிவும் நவீன தொழில்நுட்பக் கையாடல் அறிவும் வளர்ந்திருப்பது.. வளர்ந்து வருவது ஆரோக்கியம். அனுபவம் 35. யாழ் பல்கலைக்கழகம் அப்படியே கிடக்கு. வர்ணம் மட்டும் பூசி இருக்காங்க. அனுபவம் 36. யாழ் நகர ஒழுங்கைகள் எல்லாம் புது வீடுகளால் நிரம்பி இருக்குது. ஆனால் சில இடங்கள் அதே தகர வேலிகளோடு தான். அனுபவம் 37. யாழ் நகர்.. மற்றும் அதனை அண்டி நவீன வியாபார நிலைகள் பெருகி வருகின்றன. முதலீட்டாளர்களுக்கு அங்கு நல்ல வாய்ப்புள்ளது. கொழும்பில்.. காலி வீதி நவீனமாகி இருக்குது. அனுபவம் 38. கொழும்பில் இன்னும் வீதி போக்குவரத்து நெருசல் குறையவில்லை. காலையும் மாலையும்.. பல மணி நேரம் தாமதங்கள். ஓட்டோக்கள்.. கடற்கரை வீதியை இப்ப பாவிக்கினம். மற்றும்படி காலி வீதி பிசி. அனுபவம் 39. கொழும்பு வாழ் எம்மவர்கள் வெளிநாட்டுத் தமிழர்களை கொப்பி பண்ணுவதில்.. அதாவது வீடுகளில் பாத்ரூம் அமைப்பதில் இருந்து.. பிள்ளைகளை பள்ளிக்கூடம் கொண்டு போய் விட்டு கூட்டிக் கொண்டு வருவது உள்ளிடங்க.. துடியா துடிச்சுச் செய்கிறார்கள். தப்பில்லை. நல்ல வழிக்கு போனால் நல்லது. அனுபவம் 40. நம்ம வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அங்க வந்தால்.. அங்கலாய்க்கலாமே தவிர.. அங்க உள்ள மக்கள் இவர்களைப் பார்த்து அங்கலாய்த்த காலம் மலையேறிவிட்டது. இப்ப வெளிநாட்டுக்காரரை.. அங்குள்ள இளையவர்கள்.. கணக்கிலும் எடுப்பதில்லை. அதனால்.. அங்கு போனதும்.. லோக்கலா மிங்கிள் ஆகிடுவது நல்லது. அனுபவம் 41. காலநிலை மழை. ஊரிலும் மழை கொழும்பிலும் பிற்பகலில் மழை. ஊரில் நுளம்புத் தொல்லை அதிகமாக இருந்தது. நுளம்பு வலை நல்ல தூக்கத்துக்கு உதவும். நுளம்பு வத்தி தலையிடிக்கும். ஆனால்.. நுளம்பு ஸ்பிரே பறுவாயில்லை. மற்றும் பள்ளிக்கூடங்கள்.. 7:30 காலை தொடங்கி 1:30 முடியுது. பெற்றோரில் பெரும்பான்மையானோர் இதனை வரவேற்கினம். அனுபவம் 42. திரும்பி வரும் போது விமான நிலையத்தில் ஒரு புடுங்குப்பாடும் இல்லை. சுமூகமாக வந்து சேர்ந்தம். உள்ள போகும் போது தான் கறப்பது நிகழும் கவனம். குறிப்பாக தனிய போய் வரும் இளையவர்களுக்கு.
 48. 20 points
  அதிகாலைப் பனியில் அரை றாத்தல் பாணுக்காய் ஆலாய்ப் பறந்த அம்மையாரின் காலம். கூப்பன் அரிசியில் அரை வயிற்றுக் கஞ்சியும் மரவள்ளிக் கிழங்கும் மக்கள் உயிர்வாழ ஒத்துழைப்புச் செய்தன. பத்தாம் வகுப்புச் சித்தியடைந்தபின் தொடர்ந்து படிக்க வேண்டுமென்ற எனது ஆசை நிறைவேற்றப்படாமல் ஆண்டொன்று கழிந்தது. காரணம் எங்கள் கிராமப் பாடசாலையில் அப்பொழுது உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப் படவில்லை. தினமும் நகரப் பள்ளிகளுக்குச் சென்று வருவதும் கடினம். ஏனக்கோ எப்படியாவது உயர்தரம் படித்து ஓர் ஆசிரியையாக வரவேண்டுமென்ற கனவு. எனது விருப்பப்படி எப்படியோ ஓர் கல்லூரியில் அனுமதியும் கிடைத்து விட்டது. ஆனாலும் அங்கு தங்கிப் படிக்க வீட்டு நிதிநிலமை இடம் தராது. எனவே அதிபர் ஆசிரியர்களின் ஆலோசனையுடன் என்னைப்போல எதிர்காலக் கனவுகளுடன் நான்கு மாணவிகள் ஒன்று சேர்ந்து தங்கிப் படிக்க இடம் தேடினோம். இறுதியில் பாடசாலைக்கு அண்மையாக ஓர் அம்மாவும் மகளும் குடியிருக்கும் ஓர் வீட்டின் அவுட் கவுஸில் இரண்டு அறை சமையலறை குளியலறை என சகல வசதிகளுடன் கிடைத்தது. நான்கு பேரும் வாடகையைப் பங்கு போடுவதென்றும் சேர்ந்து சமைத்து சாப்பிடுவதென்றும் முடிவாகியது. ஏமக்கு எப்படியாவது படிப்பைத் தொடர்ந்தால் போதும் என்ற நிலை. அந்த அம்மா நாள் பார்த்து பால் காய்ச்சி நாம் குடிவர அனுமதி கொடுத்து அட்வான்ஸ் பணமும் பெற்றுக் கொண்டு திறப்பைக் கையளித்தார். நால்வரும் எமது பெட்டி படுக்கை மண்ணெண்ணை அடுப்பு சகிதம் கதவைத் திறந்து வலதுகாலை? வைத்து வீட்டிற்குள் பிரவேசித்தோம். நேரம் மதியத்தை அண்மித்துக் கொண்டிருந்தது. அந்த அம்மாவின் அழகிய மகள் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு திருமண நாளுக்காய் காத்துக்கொண்டிருந்தார். முன்பின் அறிமுகமில்லாத அந்தப்பெண் எமது குடியிருப்புக்கு முதன்முதலாக விஜயம் செய்திருந்தார். ஆம் பால் காச்சும் அந்த வைபவத்திற்கு அவர் வந்திருப்பது எமக்கு விளங்கியது. அவரை உபசரித்து அமரச் சொல்ல எம்மிடம் கதிரை இல்லை. எனவே வாசல் படியில் அனைவரும் இருந்து எம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். எம்மில் ஒருவர் மெதுவாக சமையலறைக்குச் சென்று மண்ணெண்ணைக் குக்கரைப் பற்றவைத்து சோஸ்பேனில் தண்ணீரை வைத்துவிட்டு வந்தோம். சற்று நேரத்திற்கு ஒருவராக உள்ளே சென்று அடுப்பை பரிசோதித்து விட்டு வந்தோம். நேரம் ஓடிக்கொண்டிருந்தது. அந்த அக்கா உள்ளே எட்டிப் பார்ப்பதும் எம்முடன் உரையாடுவதுமாக இருந்தார். நேரம் ஓடிக்கொண்டிருந்ததே தவிர பால் கிண்ணம் வந்தபாடில்லை. காரணம் அடுப்பில் பால் இ;ல்லை. அந்த புதிய இடத்தில் எங்குபோய் பால் வாங்குவது என்ன செய்வது என்று ஒன்றும் எமக்குத் தெரியாது. அடுப்பில் தண்ணீரும் வற்றிப் போனது. ஆந்த அக்காவும் என்ன நினைத்தாரோ தெரியாது “நான் போயிற்று வாறன்” என்று சொல்லிப் பார்த்தார். நாங்கள் அசடு வழிய தலையை ஆட்டி வைத்தோம். அதற்குமேல் ஏதாவது சொல்லவோ செய்யவோ எமக்கு வயதும் அனுபவமும் போதவில்லை. அதன் பின் அந்த அக்கா திருமணமாகிப் போகும்வரை எம்முடன் புன்னகையை மட்டும் பரிமாறிக் கொள்வார். இருந்தும் அம்மாவிடம் ஏதும் சொல்லவில்லை என்று விளங்கியது. அன்று நடந்த பால் இல்லாமல் பால் காய்ச்சும் வைபவம் இன்றும் மனதில் பசுமையாய் தினமும் பால் காய்ச்சும் வேளைகளில் மனதில் காயும். அந்த இளமைக்கால நினைவலைகள் இன்னும் இதயத்தில் ஈரமாய் ............
 49. 20 points
  கிருபன், சுகன், ரதி, ஜீவா, சுபேஸ், ஜஸ்ரின், நிழலி, தப்பிலி, நந்தன், தும்பளையான், சாத்திரி, நுணாவிலான், காவலுர்கண்மணி, பகலவன், ஷாந்தி, சஹாரா, ஈசன், அர்யுன், கோமகன், சுவைப்பிரியன், ஈழத்திருமகன், குளக்காட்டான், மீராபாரதி, தயா, வினித், சபேசன், இளங்கோ, நாரதர், விசுகு, சுவி, புத்தன், புங்iயூரான், மாப்பிள்ளை, சினேகிதி, தமிழிச்சி, சாணக்கியன், பண்டிதர், இணையவன், மோகன், இசைக்கலைஞன், வல்க்கேனோ, அபராஜிதன், வசிசுதா, தூயவன், எழுஞாயிறு, காவடி, அறிவிலி, குறுக்காலபோவான், ஐ.வி.சசி. ப்பிறியசகி, வசம்பு, ஜோக்கர், கரு, துல்பன், ஸ்மோல்பொயின்ற், ஓல்ற்றனேற்றிவ், பரணி, ஆதித்தியஇளம்பிறையன், ஜமுனா, சுண்டல், புலவர், கோஷன், உடையார், வாத்தியார், கறுப்பி, மருதன்கேணி, மாதரசி, யாயினி, நொச்சி, குட்டி, குமாரசாமி, சின்னக்குட்டி, குக்கூ, வசீ, துளசி, சோளியன், பொயெட், சுமேரியர், விசசாயிவிக், அஞ்சரன்.... பத்து வருடங்களாகின்றன யாழில் அங்கத்தவனாகி. இணையவெளி இந்தப் பத்துவருடங்களில் பெரிதும் மாறிவிட்டது. யாழிலும் அந்த மாற்றம் வெட்டவெளிச்சமாக வெளித்தெரிகிறது. எவரிற்கும் நீண்ட நெடிய விவாதங்களில் ஈடுபடுவதில் அவ்வளவு ஆர்வமில்லை. இரு வினாடிகளிற்குள் பார்த்துப் பச்சை குத்திவிட்டு நகரும் போக்கே உலகில் வியாபித்திருக்கிறது. வாசிப்பதற்குப் பதில் வீடியோக்களையே மக்கள் நாடுகிறார்கள். அந்தவகையில் யாழும் ஒரு முகநூல் போன்று மட்டும் தொழிற்படுவது தவிர்க்கமுடியாதது தான். இருப்பினும், பத்து வருடங்கள் என்பது நீண்ட காலம். அந்தவகையில் யாழ் சார்ந்தே பல ஞாபகங்கள் இருக்கவே செய்கின்றன. நான் மேலே பட்டியலிட்ட பெயர்களில் எத்தனை டுப்பிளிக்கேட் பெயர்கள் என்று தெரியவில்லை ஆனால் மூன்று ஐடிக்கள் தற்போது உயிருடன் இல்லை. முன்பெல்லாம் எதையாவது எழுதும் போது, இன்னார் இந்தக் கேள்வி கேட்பார்கள் எனத் தோன்றும். அவர்கள் கேள்விகளிற்கான பதிலை ஆரம்பப்பதிவிலேயே உள்ளடக்கிப் பதிவிடத் தோன்றும். விவாதங்கள் நாம் சிந்திக்காக கோணங்களில் சிந்திக்கத் தூண்டும். சில வாசகரின் கேழ்விகள் திணறடிக்கும்—எமது நிலை சார்ந்தும், நாம் முன்வைத்த கருத்துச் சார்ந்தும் ஆழ்ந்து சிந்திக்க நிர்ப்பந்திக்கும். இதனால் யாழிற்கு வருவது ஒரு போதை போன்று நாளாந்தம் நிகழும். தற்போது யாழில் விவாதங்கள் வெகுவாக அருகிவிட்டன. இன்னமும் சொல்வதானால், காத்திரமான பின்னூட்டங்கள் அருகிவிட்டன. எவரும் எவரையும் சவாலிற்கு அழைப்பதில்லை என்றே சொல்லலாம். யாழை விடுவோம், தமிழ் இணையவெளியில் எங்கேயாவது காத்திரமான விவாதங்களிற்கான முனை தெரிகிறதா என்று தேடினால் அப்படி எதுவும் கண்ணில் படுவதாக இல்லை. எனவே எழுத்து என்பதை விடுத்து எங்காவது எப்போதாவது அலைவரிசை ஒத்தவர்களைக்கண்டால் அவர்களுடன் விவாதிப்பது என்பதோடு தமிழ் மொழி விவாதம் நின்றுவிடுகிறது. இது தமிழ் இணையவெளிக்கு மட்டுமானதல்ல. சந்தை மீண்டும் தனது வெற்றியினை அறிவித்துக்கொள்கிறது. இணையவெளியினை முடக்கி மீண்டும் காத்திரமான விவாதங்களைப் பல்கலைக்களகங்களிற்குள்ளும் பிரத்தியேக விடுதிகளிற்குள்ளும் ஆனவையாகப் பூட்டிக்கொள்கிறது. இணையம் பரபரப்புடன் புரட்சி போல ஆரம்பித்துப் பிசுபிசுத்துப் போகிறது. "சிந்திப்பவர்கள்" என்பவர்கள் மீண்டும் எலீற்றுக்களாக மட்டும் சிறு குழுமங்களிற்குள் தங்கிவிட, சந்தை பெரும்பான்மையினரை நுகத்தில் பூட்டி உழுதபடி நகருகிறது... புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவரிற்கும்.
 50. 20 points
  விழித்துக்கொண்டே இறந்தேன்! பச்சையம்மா அரவணைத்தாள்! - கடைசி கருத்து (18+ வயதினருக்கு மேல் மட்டும் வாசிக்கவும்) *இது 18+ வயதினர் மட்டும் கதை. இது பெரியவர்களுக்கான கதை. இங்கு இறப்பு சம்பந்தப்பட்ட பதிவுகளை பதியும் மற்றும் அதன் கீழ் மிகவும் அழகாக கருத்தாடும் யாழ் கள உறவுகள் இசைஞானி, கோமகன், தமிழ் சிறி, விசுகு, சகாரா, சாந்தி, நெடுக்காலபோவான், நுனாவிலான், மல்லையூரான், யாழ் அன்பு, தமிழரசு, குமாரமசாமி,துளசி, கிருபன், பனங்காய், தமிழ் சூரியன், தமிழன்பு, மற்றும் மெசுப்பதேமிய சுமேரியர் போன்றோரின் கருத்துக்களை 2008ம் வருடம் தொடக்கம் யாழில் வாசித்து வருகிறேன். அதை பற்றி சிந்த்தித்தாலும் அந்த தலைப்பிற்குள் கருத்து பதியும் நேரம் இன்று மட்டும் வரவில்லை. பலகாலமாக வேலை செல்லும் போதும் வரும்போதும் ஏதாவது பெரிய விபத்தை பார்த்தவுடன் இந்த தலைப்பு என்னை வந்து பிடிக்கும். அல்லது இராணுவத்தால், ஒட்டுக்குழுக்களால் கொல்லப்பட்ட குடும்பத்தினர், நண்பர்களை பற்றி சிந்தனை வந்தால், இந்த கருத்து பற்றி சிந்திக்க தொடங்கிவிடுவேன். இது தான் எனது யாழ் களத்திற்கான கடைசி கருத்து என்பதால் அந்த தலைப்பிற்கு கருத்து போடும் நேரம் வந்துவிட்டது. பதிவு நாள் இன்று மூத்தக்காவின் 27வது ஆண்டு நினைவு நாள். இந்த திரியை பி(இ)றப்பை பற்றிய ஆக்கபூர்வமான கருத்தாடலுக்கு பாவியுங்கள் . நன்றி. ********************************************************************************************** பெரூவியன் சோளத்தை பொறியாய் வைத்தாள்..... இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டு, தகவல் தொழில் நுட்பத்தில் 32 பில்லியன் டொலர் பெறுமதிமிக்க விவசாய, உணவு தகவல்கள், உணவு பாதுகாப்பு தகவல்களை கவனித்துவரும் முகாமையாளராக இருந்தேன். அதனால் ஒவ்வொரு நாளும் ஒண்டாரியோ, கனடா, உலக உணவு செய்திகள் அரசியல் செய்திகளை கவனிப்பது எனது தொழிலின் ஒரு பகுதி. அப்போது பி பி சியில் மட்டும் பனி துருவத்தில் 200 மில்லியன் டொலரில் விதை சேமிப்பு வங்கி ஒன்று ஆயுத பாதுகாப்புடன் கட்டப்படும் செய்தி உறுத்தியது. அந்த செய்தியை ஆராய்ச்சி செய்ய போய் மரபணு விதை மூலம் உலகின் 70% விகித உணவை தரும் சிறு விவசாயிகளை நசுக்கும் திட்டம் தெரிந்து அதிர்ந்தேன். அன்று முதல் அந்த ஆராய்ச்சியை தொடர்ந்தேன். அமெரிக்க விவசாய புள்ளி மெக்சிகோ, மத்திய மற்றும் தென் அமெரிக்க சோள சிறுவிவசாயிகளை முடக்கி அமெரிக்காவிற்கு தேவையான நல்ல வேலையாளிகளை பிடிக்கும் திட்டம் தெரிந்தது அன்றிலிருந்து சோளத்தின் ஊற்றாம் மத்திய, தென் அமெரிக்காவின் உணவு, அரசியலை ஊன்றி கவனித்தேன். ஒரு நாள் வேலை உணவகத்தில் மிகவும் அழகான சோளங்களை கூடையில் அழகு பொருட்களாக வைத்திருந்தார்கள். அவற்றை பற்றி சமையல் காரரிடம் கேட்டேன், அவருக்கு தெரிந்திருக்கவில்லை. "அதை பற்றி சோளத்தை உலகத்திற்கு தந்தவர்களை கேட்கவேண்டும்" பின்னாலிருந்து சிரித்து கொண்டே சத்தம். திரும்பினேன், விக்டர் நின்றான். "நான் பெரூவியன் என்று உனக்கு தெரியாதா?" வியந்தான். "இல்லை. விக்டர், நீ கொலம்பியன் என்று நினைத்தேன்" சமாளித்தேன். பின் இருவரும் உணவை எடுத்துகொண்டு போய், எனக்கு தெரிந்தவற்றை கொட்டி தீர்த்தேன். அவருடைய முகத்திலும் கவலை கோடுகள் ஓடின. "நீ கலியாணம் கட்டவில்லை தானே. நீ ஏன் என்னுடன் ஊருக்கு விடுமுறையில் வந்து இந்த சோள விதைகளை சேகரிக்க கூடாது? நான் சுத்த மலை கிராமம். என்னுடனே தங்கி என்னுடனே பாதுகாப்பாக எல்லா இடமும் சுற்றலாம். " சின்ன தீர்வை வைத்தார். இரண்டு மாதத்தில் இருவரும் பெரூவியன் மலைகள் ஊடாக ஜீப்பில் ஒரு நாள் பூரா பயணித்து ஒரு கெச்சுவ விவசாய கிராமத்திற்கு வந்திருந்தோம். அழகோ அழகு கொள்ளை அழகு. எனக்குள் எதோ இந்த இடம் எனக்கு மிகவும் பரிச்சியமான இடமாக உணர்ந்தேன். கிராமத்தில் இருக்கும் பெரிய குடிசை தான் நண்பரின் வீடு. "உனது ஒரு மாத சம்பளத்தில் ஒரு மாளிகை வீடு இங்கு கட்டலாமே?" கேட்டேன். நண்பரின் முகத்தில் ஒரு சுழிப்பு தெரிந்தது. "எங்களுக்கு மாளிகை வீடுகளிலும் பார்க்க இந்த குடிசை வீடுகள் தான் பிடிக்கும்." "அப்போது என்னத்திற்கு மினக்கெட்டு படித்து கனடா வந்து வேலை செய்கிறாய்?" மடக்கினேன். நண்பர் மௌனமானார். அதன் பின் அந்த பகுதி விவசாயிகளுடன் கலந்துரையாடல், விழிப்புணர்வு கூட்டங்கள், இயற்கை விதை சேகரிப்பு, வன சுற்றுலா என்று இரண்டு கிழமை ஓடிவிட்டது. அடுத்த நாள் திரும்பி போகவேண்டும். மனமே வரவில்லை. ஒரு இங்கா பெண்ணை கைபிடித்து அங்கே வாழவும் ஆசை வந்து போனது. ஆனால் ஒருத்தியும் எனது இடுப்புக்கு மேல் தேறவில்லை. ************************************************* பச்சையம்மாவின் சா(வு)மன் வந்தார்....... அடுத்த நாள் காலை செல்ல கொண்டுவந்த உடுப்புகள், வாங்கிய கலை பொருட்கள், விதைகள் மற்றும் அவற்றுக்கான விண்ணப்பங்கள் எடுத்து அடுக்குவதில் மும்முரமாக குடிசைக்குள் இருந்தேன். "சாமன் வருகிறார், சாமன் வருகிறார்" குடிசைக்கு வெளியே கிசு கிசுத்து கேட்டது. யாரிவர்? எல்லோரும் ஏன் குடிசைகளுக்குள் திரும்பி சென்றுவிட்டார்கள். உடுப்புகளை அடுக்கி கொண்டே யோசித்தேன். எனது நண்பர் குடிசைக்குள் இருந்து பாய்ந்து வெளியே வந்து மரியாதையுடன் சாமனை வரவழைத்து, வெளியே இருக்கும் கட்டிலில் இருத்தினார். நானும் ஆர்வ மிகுதியில் வெளியே வந்தேன். ஐம்பது வயது மிக்க பெரியவருக்கு "ஓலா, கொமாஸ்டா?" போட்டேன். நண்பர் உடனே பதறி, "இவர் எமது பிராந்தியத்தின் சாமன். எங்கள் இயற்கை தெய்வத்தின் தூதுவர். எங்களுக்கு வாழும் கடவுள் போல. இவர் தான் என்னை வெளிநாடு சென்று விவசாய துறையில் வேலை செய்ய கட்டளையிட்டவர். மரியாதை குடு" ஆங்கிலத்தில் பதறி முடித்தார். நானும் உடனே கை கூப்பி தலை வணங்கினேன். "நான் உன்னை பார்க்க தான் வந்திருக்கிறேன்." சொன்னார் சாமன். நான் நண்பரை திரும்பி பார்த்தேன். "இல்லை, உன்னைத்தான்!" இப்போது நான் குழம்பினேன். "என்னையா?" இப்போது நண்பரும் குழம்பி இருந்தார். "ஓம், உன்னைத்தான். என்னை பச்சையம்மா அனுப்பியிருக்கிறாள். உன்னை அயவாஸ்கா அருந்த சொன்னாள்." என்னையே புன்முறுவலுடன் பார்த்து கொண்டிருந்தார். நான் அது என்ன என்று கேட்பதற்கு முன், "ஐய்யா, இவரையா அருந்த சொன்னாள்?" முகத்தில் கலக்கத்துடன் நண்பர் கேட்டார். எனக்கும் கலக்கியது. ஆக்கள் கட்டை என்றாலும் ஒரு நச்சு தவளை தடவிய ஊசியால் போட்டு தள்ளிவிடுவார்கள். "யாரிந்த பச்சையம்மா? எனது மொழியில் பச்சை தாய் என்று அர்த்தம்" நான் நண்பரின் கேள்வியை முடித்தேன். "உண்மை. அவளின் மொழி தான் உனது தாய் மொழியும். அவள் மொழியிலும் சோக்ள என்று தான் சோளத்தை அழைப்பாள்." சிரித்துக்கொண்டே தீர்க்கமாக சாமன் பார்த்தார். எனது ஆவலை அடைக்க முடியவில்லை ஆனால் இந்த பானத்தை பயணிப்பதற்கு முதல் நாள் அருந்த தயக்கம். அதை உணர்ந்த சாமன் "பயப்படாதே. அவள் உனது வாகன விபத்தின் பின் இடது தோள் தொடர் வலியை நீக்குவதற்கே அருந்த சொல்கிறாள். மற்றும் உனது குடிப்பழக்கத்தை குறைக்கவும்." தீர்க்கமாக சொன்னார் சாமன். "விபத்தை பற்றி எப்படி தெரியும்?அதனால் அவருக்கு என்ன பயன்?" சந்தேகத்தை கேட்டேன். குடிப்பழக்கத்தை தொட்டதும் சந்தேகத்தை சூடாக்கியதற்கு காரணம். "அப்படியென்றால் தான் நீ இயற்கை விவசாயி ஆகும்போது உடல் உபாதைகள் இருக்காது. நீ இன்னும் நூற்றுக்கணக்கான இயற்கை விதைகளை சேகரித்து பாதுகாத்து வைத்திருப்பாய், இலட்சக்கணக்கான இயற்கை விவசாயிகளை உருவாக்குவாய்.." எதோ எனது வருங்காலத்தை பார்த்து ஒளிபரப்புவது போல் சொன்னார். அவர் பொறுமை இழப்பதை நண்பர் கவனித்தார். "என் வாழ் நாளில் சாமன் இப்படி வற்புறுத்தி பார்த்ததில்லை. அவரிடம் தான் போய் கெஞ்சவேண்டும். அம்மா உனக்கு எதையோ காட்ட விரும்பிறார்." தெம்பூட்டின்னார். "கனடா திரும்பியதும் நிறைய வேலைகள் இருக்கிறது. என்னால் முடியுமோ தெரியாது." நழுவ பார்த்தேன். "பச்சையம்மாவிற்கு இவ்வளவு சக்தி இருந்தால் ஏன் என் முன் தோன்றவில்லை?" அன்று பூரா தண்ணி போடுவது தான் திட்டம் என்ற படியால் சாமி குற்றத்தை தவிர்க்க பார்த்தேன். "விக்கி இந்த அயபாஸ்கா திரவத்தில் இருக்கும் காபி எனும் மூல பொருள் எமது மூழையில் டி எம் ரி எனும் இரசாயனத்தை சுரக்க வைக்கும்." நண்பர் விவரித்தார். "இந்த இரசாயனம் நாம் பிறக்கும் போதும், இறக்கும் போதும், மற்றும் கனவு காணும் போது தான் சுரக்கும். பச்சையம்மாவின் உலகம் இந்த மூன்றுகுள்ளும் தான் இருக்கிறது" நண்பர் விடுவதாயில்லை. "நாங்கள் உலகத்திற்கு முதல் மூன்று வயதில் ஐம்புலன்களை பழக்கிவிடுகிறோம். அதனால் அவர் அப்படி தோன்றினாலும் எமது அக கண்கள் அவரை தரிசிக்க அயபாஸ்கா தேவை. சாமனை நம்பு. நான் உறுதியளிக்கிறேன்." சரியென்று தலையாட்டினேன். *************************************** பச்சையம்மாவிற்கு அயபாஸ்கா பூசை...விவசாயி விக்கிக்கு பலிகடா பூசை.... "காலையில் குளித்தாயா?" சாமன் கேட்டார். ஓம் என்று பலிகடாவா தலையாட்டினேன். "மாமிசம் உண்டாயா? காலையில் தண்ணி போட்டாயா? குளுசைகள் ஏதாவது பாவிக்கிறாயா?" அடுத்தடுத்த கேள்விகள். இல்லையென்று தலையாட்டினேன். "உனக்கு அய(ஆத்மா)பாஸ்கா(கொடி)வுடன் 'சளிபொங்க' இலையும் சேர்த்து சென்ற கிழமையே தயாரித்து விட்டேன்.. அது உனது உடலில் உள்ள குடியால் வந்த தேவையில்லாத சளிகளை வெளிக்கொண்டு வரும்." சாமன் சொன்னார். "சளி என்றால் எனது மொழியிலும் அதே அர்த்தம்" அதியசத்தோடு சொன்னேன். சாமன் தெரியுமென்று சிரித்தார். சாமன் தனது நன்றிகளை தாய்க்கு ஓதி முடித்து, எல்லா இடமும் புகை போட்டு சுத்தம் செய்தார். பெண்கள் ஓடிவந்து ஒரு சிறு கதிரையை வைத்து என்னை இருத்தினார்கள். பின் மிக அழகான சிறகுகளை கொண்ட மாலைகள், காதணிகள், கிரீடம் எல்லாம் வைத்து பலிகடாவிற்கு நெற்றியில் குங்கும பொட்டு வைக்காத குறையாக இருந்தேன். ' சாமன் பூசையில் கவனமா இருந்தார். ஆயுள்வேத இலைகளால் வேப்பில்லை அடித்து மூலிகை புகையை எனக்கு காட்டிவிட்டு பச்சையம்மாவிற்கு படைத்து வைத்த 'சிச்ச'வை(மது) எடுத்து மண்ணுக்கு 'சல'(ம்) கொடுத்தார். பின் சுற்றியிருந்த கிராமத்து பதினான்கு பேரும், நானும் சாமனிடம் சிச்ச பெற்று சல நிலத்திற்கு கொடுத்து பருகினோம். அதன் பின் எல்லோரும் சொல்லி வைத்தது போல் சாமனுக்கும், பலிகடாவிற்கும் தலைவணங்கி சென்றார்கள். நான், சாமன், நண்பர் மட்டும் குடிசைக்குள். என்னை பெரிய லாமா தோலில் இருக்க வைத்தார் சாமன். "தேவை ஏற்படும்போது நீ படுத்து கொள்ளலாம்." அட பார்டிக்கு முன்னமே படுத்தியவர் இவரா தான் இருக்கும் என்று நினைத்து சொகுசான அந்த கம்பளத்தில் இருந்தேன். "அவளை நினைத்து கொண்டு பருகு. அரை மணித்தியாலத்தில் உனக்கு உரு வரும். மொத்தமாக ஆறு மணித்தியாலத்தில் முடிந்துவிடும். பின் இந்த வாளிக்குள் வாந்தி எடு" சாமன் முடித்தார். "வாளிக்குள் வாந்தியா?" வாய் மூடவில்லை. "ஓம். பேர்ச் நடக்கும்போது உனது உடலில் உள்ள அத்தனை கெட்ட சக்திகளும், சளிகளும், குடல் பூச்சிகளும் சுத்திகரிக்கப்படும்" சாமன் தொடர்ந்தார். "கவனிக்க, இனி உனக்கும், ஊராருக்கும் சிறு தீவில் நடந்த கொடுமைகள் கனவா வராது." "ஏன்?" வழி மறித்தேன். "மம்மா சொல்வாள். அவளின் பாதி பச்சகமக்(காரர்) தான் உனது இனத்தின் ஆண் கடவுள்." ஒருவித சாந்தத்துடன் சொன்னார். எனக்கும் நம்பிக்கை கூடியது. இருநூறு உணவு ஆராய்ச்சியாளர்களை இயக்குனராக மேய்க்கும் விக்டரும் கை கட்டி இருந்து மேலும் கீழும் தலையாட்டி கொண்டிருந்தார். . சரியென்று வாயில் வைத்தேன். அம்மா தாயே என் வாழ் நாளில் அப்படி ஒரு மருந்தை பருகியதே இல்லை. வேப்பெண்ணெய் எல்லாம் தேன் போல் இனிக்கும் ஒப்பிட்டால். சாமன் என்னிடம் வட அமெரிக்க விவசாய வியாபாரம், சோளம், உருளை கிழங்கு மற்றும் எப்படி இங்கா இராய்ச்சியம் 7 வருடங்களுக்கு உணவை பாதுகாத்து வைத்திருக்கும் நுணுக்கங்களை பாவித்தார்கள் என்று விளக்கினார். "7 வருடமா? ஒன்டாரியோவில் 3 நாட்களுக்கு தான் உணவுண்டு!" அதிசயத்தேன். அடுத்த வரியை கூறு முன் பலிகடா கம்பளத்தில் சரிந்தது. விழித்து கொண்டே இறந்தேன்! ***************** நான் யார்? என்ன நேரம்?...... அடுத்த வரியை சொல்லு முன் சடார் என்று ஒரு கறுப்பு சூழல் சூழ்ந்தது அப்படியே கம்பளத்தில் வீழ்ந்தேன். கண்ணை மூடினேன். எனக்கு எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை. நான் இருந்தேன் ஆனால் நான் யார் என்று தெரியவில்லை. என்ன நேரம் தெரியவில்லை! நான் யார்? எனது பெயர் என்ன? கடினமாக யோசித்தேன். பிடிபடவில்லை. இங்கு நேரம் இல்லை. உலக நேரத்தில் ஒரு நிமிடம் இங்கு பல நூறாண்டுகளாக இருக்கலாம். நான் தான் நேரம். நான் இல்லாவிட்டால் நேரம் இல்லை. ஒரு கறுப்பு பிரபஞ்ச வெளியில் நிற்கிறேன். வெளிச்சம் இல்லை ஆனால் எல்லாம் தெரிகிறது. பெயர், நேரம் தெரியாத நான் மட்டும் உலாவுகிறேன். இறந்துவிட்டேனோ?! எங்கே, வெளிச்ச குழாய் ஒன்று வந்து என்னை எடுத்து செல்லாதோ? எங்கே போவது? நான் தானே எல்லா இடமும் இருக்கிறேன். ஒருவித பயம் சூழ்ந்தது. நான் யார்? திடீரென்று முருகன் கோவில் மண்டப கூரை வட்ட தாமாரை சித்திரங்கள் சுத்த தொடங்கின. அத்தனையும் ஊரில் இருக்கும் கோவில்களில் இருக்கும் சித்திரங்கள். பயம் கொஞ்சம் குறைந்தது, ஆர்வம் கூடியது. அந்த கோவில் சித்திரங்களில் இருக்கும் இயற்கை கோண கேத்திரகணிதம் (Fractal Geometry) அப்படியே முதல் முறை எனது கண்ணுக்கு தெரிகிறது. ஆற்றின் சிற்றலைகளில் இருக்கும் கேந்திர கணிதம் தெரிகிறது, அதில் தெறிக்கும் சூரிய கற்றைகளில் தெரிகிறது, மர பட்டைகளின் வெடிப்பில் தெரிகிறது, அந்த மரத்தின் கொப்பில்லும் தெரிகிறது, அதன் இலைகளிலும் தெரிகிறது. எங்கும் எதிலும் ஒரு கணிதம். ஒரு திட்டம். முருகன் கோவில் கூரை சித்திரங்கள் திரும்பவும் தோன்றின, சுற்றி சுற்றி திடீரென்று ஒரு கறுப்பு விந்து போன்ற உருவம் வந்தது. நான் விளக்கை பார்த்த விட்டில் பூச்சி போல் பார்த்து கொண்டிருந்தேன். குழப்பமாக இருந்தது. திடீரென்று சாமனின் முகம் தோன்றி ஆறு தலைகளாகி சுற்ற தொடங்கியது. இப்போது எனக்குள் பொறி தட்டியது. நான் யார் என்று தெரிந்தது. உற்சாகம் கூடியது. ஆனால் அதை முன்பு போல் உணர முடியவில்லை. உடம்பின் சூடு கூடுவது தெரிகிறது. ********************* ஐம்புலன்களும் ஒன்றானது..... சத்தத்தை பார்த்தேன்.... மணத்தை ருசித்தேன்... சாமனை கண்டதும் பேச முற்பட்டேன். முடியவில்லை. அவரின் தலை கோவில் சித்திரங்கள் போல் சுற்றிக்கொண்டே இருந்தன. சாமன் இக்காரோ மந்திரங்களை ஓதி கொண்டிருந்தார். அவை என் கண் முன் அலையாக சென்று கொண்டிருந்தது. சத்தம் பார்த்தேன். எல்லாம் டொல்பி டிஜிடல் தரத்தில் தெரிந்தது. முதல் முறை கண்ணால் கேட்டேன்! இப்போது திடீரென்று சத்த அலைக்குள் இன்னொரு அலை மிகவும் அழகான நிறங்களுடன் வந்து கொண்டிருந்தது. ஆனால் இந்த அலையை எனது வாயால் ருசிக்க முடிந்தது. ஒரு குழந்தையாக மாறினேன். வெளிச்சத்தையும், சத்தத்தையும், மணத்தையும், கையால் கலைத்து விளையாடினேன். எல்லாம் ஒரு இராணுவ கட்டுபாட்டுடன் இயற்கை கோண கேத்திரகணித சித்தாந்தை இஞ்சி பிசகாமல் கடைப்பிடித்தன. இது தானா பிரபஞ்ச இரகசியம். எங்கும் கடவுளின் துகள்கள், எதிலும் கடவுளின் துகள்கள். மெய்யுக்கும் பொய்யுக்கும் வித்தியாசம் தெரிந்தது. உயிரின் உணர்ச்சியை உணர முடிந்தது. அப்படியே முதல் முறை நம்பிக்கையுடன் பிரபஞ்ச கடலில் மூழ்கினேன். கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள. -திருக்குறள் **************************** இறந்துகொண்டு எனக்கே மருத்துவம் பார்த்தேன்! ஊஊவ்வ்வ் ஆஆஅ..... ஊஊவ் ஆஆ..... ஊஊவ் ஆஆ...... திடீரென்று எனது உடலுக்குள்ளால் இரத்தம் பாய்வதை கேட்டேன். முதல் முறை நான் ஒரு பக்டீரியா சேப்பியன் என்று உணர்கிறேன். அரண்டு கண்விழித்தேன். சாமான் சிரித்துக்கொண்டே "உனது உடலை இப்போது உணர்கிறாய். உன் கையை உணர்" கண்ணை மூடினேன். ஊஊவ்வ்வ் ஆஅ....ஊஊவ்வ் ஆஆ.... இரத்தம் முழுதாக எனது உடலுக்குள்ளால் ஓடி இடது கையில் வந்து ஒருக்கால் கையை உலுக்கி விட்டு சென்று கொண்டிருந்தது. கையும் பல டிரில்லியன் செல்கள் நிறைந்த ஒரு செயல்பாட்டு குழுவாக செயல்பட்டுக்கொண்டிருந்தது. அப்படியே தோள்மூட்டு பக்கம் சென்றேன். விபத்தின் போது பாதுகாப்பு பட்டியால் கிழிக்கப்பட்ட சவ்வுகள் தெரிகிறது. அவை மிகவும் வேகமாக தம்மை திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தன. சவ்வு செல்கள் வேறு இனம், வேறு கலாச்சாரம், வேறு உடல் கட்டுமானம். எனது ஈரல் செல் இனமும், கண் செல் இனமும் மதுவால் பாதிக்கப்பட்டு மஞ்சளாக தெரிகிறது. அவையும் இருப்பதை வைத்து அடித்துபிடித்து தமது இனத்தை வளர்த்து வேலை செய்ய பார்க்கின்றன. இன்றைக்கு அவர்களுக்கு பச்சையம்மா ஜெனோசைட் விடுமுறை! செருக்கை சக்தியாக கண்டேன். காசை சக்தியாக கண்டேன். சத்தத்தை சக்தியாக கண்டேன். அண்டத்தை சக்தியாக கண்டேன். செருக்கு சக்தி என்னிடம் கூடி இருந்தது. சகோதரங்கள் எல்லோரையும் பல்கலைக்கு அனுப்பியது, படித்து முடித்து பெரிய வேலை எடுத்தது. பள பளா வள வளா கார். கை நிறைய காசு. வெயர் இஸ் தி பார்டி டுனைட் என்று அலைந்தேன். கிளப்பில் இருக்கும் செருக்கு சக்தியும், மது தரும் செருக்கு சக்தியும் தெரிகிறது. குடல், ஈரல் மதுவால் பாதிக்கப்பட்ட செல்கள் சங்கமும் மூளை ஐ. நா. அமைப்பில் முறையிடுவது தெரிகிறது. எனக்குள் இருக்கும் செல்கள் உலகம் தெரிகிறது. நான் நானா? இல்லை, 100 ட்ரில்லியன்களுக்கு மேற்பட்ட செல்கள் வாழும் ஒரு உலகத்தை, கூண்டை இயக்கும் சக்தி. ஒவ்வொரு அந்த செல்களுக்கும் ஒரு காரணம், ஒரு உலகம். அவை எல்லோரும் நான் தான். எப்படி 8 பில்லியன் மனித இனம் ஒரு உலகமாக சுற்றி வேலை செய்கிறதோ, அதே போல் 100 ட்ரில்லியன்களுக்கு மேற்பட்ட செல்கள் சுற்றி எனது உலகை கவனித்துகொண்டிருந்தன. அதிலும் பார்க்க மிக அதிசயம் என் குடலுக்குள் கண்டேன் அங்கே 200 ட்ரில்லியன்களுக்கு மேற்பட்ட உயிரினங்கள் வேலை செய்து கொண்டிருந்தன. அவையும் குடி அன்று இல்லாத படியால் என்னவோ மிக வேகமாக வேலை செய்து கொண்டிருந்தன. அவற்றுள் நல்லவையும் இருந்தன. தீயவையும் இருந்தன. குடிப்பழக்கம், கண்டபாட்டுக்கு வெளியில் சாப்பிடுவது போன்றவை நிறைய தீய உயிரினங்களை உருவாக்கி இருந்தன. அட... அப்ப நான் தான் இந்த 275 டிரில்லியன் உயிரினங்களுக்கு அரசன், அதிபர், சனாதிபதி, சி.இ.ஒ! அவர்கள் தான் இந்த உலகில் நான் உலாவ மினக்கெடும் கூடு, வாகனம், உயிர் இயந்திரம். மூன்று வருடத்திற்கு ஒருமுறை எல்லா செல்களும் புதுக்க பிறந்து ஒரு புது கூடாக எங்களுக்கு உழைக்கும் உயிரினங்கள். நாம் செத்த பின் எம்மை உக்க வைக்கும் செல்கள் வயிற்றுக்குள் தெரிந்தன. குடியால் பாதிக்கபட்ட மனித எரிசக்தி பிறப்பிக்கும் உயிரனங்களும் தெரிகின்றன. அவை எனது உணவை ஒழுங்காக பிரிக்காமல் கொழுப்பு வயிற்றை சுற்றி கட்டி இருப்பதும் தெரிகிறது. திடீரென்று எழுகிறேன், சாமன் வாளியை வாயடியில் வைத்தார் சத்தி எடுத்தேன். இது குடித்துவிட்டு எடுக்கும் உவாக் வாந்தி போலில்லாமல் எவ்வளவோ பாரம் எனது உடலை விட்டு போவது போல் இருந்தது. ஒருவித சுதந்திரம் அடைந்த உணர்வு. எனது உடல் செல் நாடுகள் விடுதலை பெற்ற வெற்றி களியாட்டம் உடலில் உணர்கிறேன். வாந்தி எடுப்பது ஜாலி என்று சொன்ன முதல் குடிமகனா நானா தான் இருப்பேன். "தோள் நோ இனி வராது. இனி நீ கண்டபாட்டுக்கு குடிக்க முடியாது, தலையிடி வராது. குளுசைகள் போட தேவையில்லை". சாமன் சொன்னார். **************************** பச்சையம்மா அரவணைத்தாள்.....நீட்டு வானவில் சீலைகாரி அணைத்தாள்.... முப்பது நிமிடங்கள் உலக நேரத்தில் ஓடியிருந்தன. உரு தாண்டவம் ஆட தொடங்கியிருந்தது. என்னை சுற்றி எல்லா அலைகளும் பொங்க தொடங்கியது. ஒளி அலைகள் மிகவும் மந்தமாக ஆடி அசைந்து சென்றன சுற்றம் எல்லாம் இந்த பிரபஞ்சத்தின் நாத அலைகளாக தெரிந்தன. அப்படியே நான் அவதார் பெண் போல் நிலத்துடன் சங்கமித்தேன். அந்த பிரதேச மலைகள், மரங்கள், ஊற்றுகள், எரிமலை படிமங்கள் எல்லாம் தெரிகிறது. தங்க படிமங்கள், உலோக படிமங்கள் எல்லாம் உணர முடிந்தது. எட்ட உயரத்தில் வித்தியாசமான ஒரு கழுகு சுற்றி கொண்டிருந்தது. இது மிகவும் பெரிய கழுகு. மூன்று கொண்டை கொண்ட கழுகு. சுற்றுகிறது. அது உயரத்தில் இருந்தாலும் எனது அக கண், அந்த கழுகின் கண்ணை நோக்கியது. ஒளி தாக்கியது. பயந்தேன். "பயப்படாதை! அது கார்பி கழுகு. அது தான் காற்றின் தூதுவன். அம்மா உனக்கு நல்ல சகுனம் காட்டுறா! சரணடை!" சாமன் சாந்தபடுத்தினார். இக்காரோ மந்த்திரத்தை இப்போது குரலை உயற்றி பாடுகிறார். இப்போது கழுகை காணவில்லை ஆனால் என்னை எனது தாயார், பாட்டியார் அரவணைக்கும் சூட்டை உணர்ந்தேன். குழந்தையாக தாயின் கருவில் சூடான திரவத்தில் மிதக்கும் உணர்வை பெற்றேன். உடல் சூடேறியது. கண்ணால் கண்ணீர் வழிய தொடங்கியது. "பச்சையம்மா வந்திட்டாள். சொன்ன மாதிரியே வந்திட்டாள்" சாமன் பயபக்தியுடன் குதூகலித்தார். இக்காரோ மந்திரங்களை பிலத்து ஓதினார். எனக்கு எனது உணர்ச்சியை அடக்க முடியவில்லை. இந்த உலகமே, இந்த பிரபஞ்சமே நான் தான் என்று பச்சையம்மாவின் அரவணைப்பில் உணர்ந்தேன். அந்த சுகத்தில் திளைத்தேன். அகிலத்தை ஆழும் ஈஸ்வரியாம் அகிலாண்டேஸ்வரியை கண்டேன்... என் நாக பூசணியை கண்டேன்... என் மடு மாதாவை கண்டேன்.... உலகத்தை பெற்ற அம்மனை கண்டேன்.... இந்த பிரபஞ்சத்தின் பராசக்தியை கண்டேன்.... அவள் தான் அன்பு, ஆத்திரம், பொறாமை, அழுகை, சிரிப்பு, மகிழ்ச்சி, சோகம் எல்லாம் சேர்ந்த கலவை.... அவளுடன் பேச தேவையில்லை....எல்லாவற்றையும் உணர்ந்தேன்..... முதல் முறை எண்ட ஐய்யோவை கண்டேன்!! ************************************************* கலா அண்ணாவை காணவில்லையாம்.... 27, ஜூலை, 1983.... காலை 6 மணி..... வயது 8... பாயில் படுத்திருக்கிறேன். எட்டத்தில் ஆடி ஆடி மட்டை வண்டில் வந்து கொண்டிருப்பது கேட்கிறது. அதன் சில்லு கீச்சு சத்தமும், ஒவ்வொரு பத்தடிக்கு ஒருக்கால் ஒரு குழியில் விழும் சத்தமும் பெருத்து கொண்டு வந்தது. அம்மா பிடிச்சு மட்டை வாங்கி அடுக்கி வைக்க சொல்ல போறா என்ற படியால் நானும், சகோதரனும் எழும்புவதாக திட்டம் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு நடிக்கிறோம். "விக்கி... மட்டை வண்டில் வருது. 100 மட்டை பறிக்க சொல்லு" அம்மா. "எப்பவும் எனக்கே சொல்லுங்கோ" என்று புறுபுறுத்துகொண்டு தெருவிற்கு செல்கிறேன். "அண்ணை..100" பறித்த மட்டைகளை எடுத்து வைக்க சகோதரனும் சித்தப்பரும் வந்தார்கள். சித்தப்பர் ஆளுக்கு ஐந்து மட்டைகளை கையில் வைக்க, எடுத்து கொண்டு போய் ஆட்டு கொட்டிலுக்குள் அடுக்கினோம். திடீரென்று சித்தப்பருக்கு தெரிந்தவர் ஒருவர் சைக்கிளில் வீட்டு கேட்டை தள்ளி கொண்டு வந்தார். அவரின் முகத்தில் ஒரு பதட்டம். சித்தப்பரின் காதில் எதோ சொல்ல அவரும் திகைத்தார். எங்களை மட்டை அடுக்க சொல்லிவிட்டு.... பக்கத்து வீட்டுக்கு சென்றார். எங்களுக்கு கோபம். இவர் என்ன நழுவிறார் என்று கலா அண்ணா வீட்டு வாசல் பக்கம் இரகசியமாக சென்று நிற்கிறேன். "ஆச்சியக்கா" சித்தப்பா. "அப்பு எங்களுக்கு மட்டை இந்த முறை வேண்டாம்" ஆச்சியக்கா. "அதில்ல அக்கா" சித்தப்பா. "என்னப்பு?" வெளியில் வந்தார். "இப்ப தான் கலாவிண்ட கொழும்பில படிக்கிற பொடியன் வந்தவன்" தயங்கினார் சித்தப்பா. "வந்து?" ஆச்சியக்காவின் முகம் மாறியது. "கலாவை காணவில்லையாம்..." சித்தப்பர் தளும்பினார் "கடைசியாக பாக்க அவனை யட்டியோட ஓட... கலைச்சு கொண்டு போனவங்களாம்" இப்போது சித்தப்பர் விக்கி விக்கி அழுதுகொண்டிருந்தார். எனக்கு தலை விறைத்துவிட்டது. எங்கள் தெருவின் கிரிகெட் கவாஸ்கர், பட்டங்களின் தலைவன், பத்தாம் வகுப்பு குமரிகளின் இரகசிய கனவு நாயகன், மாங்காய் வத்தல் அரசன், குழந்தை குட்டிகளை மேய்க்கும் தாதியை காணவில்லையா? ஆச்சியக்காவின் குரலை கேட்கவில்லை... வாசலில் தோன்றினேன். ஆச்சியக்கா கல்லாக உறைந்து நிலத்தில் மண்டியிட்டு இருந்தார். என்னை கண்டவுடன் விறைத்து பார்த்தார். அப்படியே ஓங்கி நெஞ்சில் மாறி மாறி குத்துகிறார். அழவில்லை. வெறி பிடித்த கண்களோடு ஓங்கி ஓங்கி குத்துகிறார். ஒவ்வொரு குத்தும் மனித நெஞ்சு தோல் பறையில் டமார் டமார் என்று விழுகிறது. குத்திய அழுத்தமோ என்னவோ முதல் "எண்ட ஐய்யோ!" என்ற ஒலி பீறிட்டது. எனது ஊரின், எனது தெருவின் சாகச வாழ்கை ஒலி அன்றுடன் அடங்கியது. ******************************************************************************** எனக்கு உடல் பதற தொடங்கியிருந்தது. கண்ணால் கண்ணீர் கொட்டுகிறது. சாமான் இக்காரோ மந்திரங்களை பிலத்து ஓதி கொண்டு, மூலிகை புகையை எனது தலைக்கு ஊதினார். அது மின்ட் பபிள் கம் வாய்க்குள் தரும் உணர்ச்சி போன்று தலைக்கும், மூளைக்கும் கொடுத்தது. அடங்குகிறேன். திரும்பி அந்த நாளுக்கு போன தளர்ச்சி அடங்கியது. சாமன் இப்போது வேறு ஒரு சாந்தபடுத்தும் தேவாரத்தை பாட தொடங்கினார். நானும் எனது நினைவுகளில் இருந்து மீள முடியாத ஒளி நாடா போல் ஓடிக்கொண்டிருந்தேன். இப்போது அடுத்த பசுமையான நிகழ்வு வந்து எனது சகோதரத்தின் குழந்தை சத்தம் கேட்கிறது. **************************************************************************************** "சன்னதிக்கு பக்தர்கள் போயினம்"... ************************ வீட்டு வெராந்தாவில் பாட்டி, பாட்டியின் நண்பிகள் ஊர் பூராயங்கள், தோட்ட விடயங்கள் பற்றி கதைத்துகொண்டிருந்தார்கள். நானும், சகோதரமும் முற்றத்தில் விளையாடிகொண்டிருந்தோம். தாயார் எனது குழந்தை சகோதரத்தை நித்திரைக்கு அறையில் படுத்தி, உருளாமல் இருக்க சிவர் ஓரம் படுக்க வைத்து தலையணைகளால் அணைகட்டிவிட்டு, வீட்டுக்கு பின் சம்பல் இடித்து கொண்டிருந்தார். அப்போது ஒரு புதிய, பெரிய சொகுசு வண்டி மிகவும் குறைந்த வேகத்தில் எங்கள் வீட்டை தாண்டி சென்றது. உடனே நானும் சகோதரமும் கேட் பக்கம் ஓடி கம்பிகள் ஊடாக டா டா சொன்னோம். வாகனத்தில் எல்லோரும் ஆண்களாக இருந்தார்கள். பட்டு வேட்டி, சட்டை, நெற்றி நிறைய விபூதி. "சன்னதிக்கு பக்தர்கள் போயினம்" பாட்டி சொன்னார். எல்லா பாட்டிகளும் ஓம் போட்டு, பாக்கு இடிப்பதிலும், பேச்சிலும் திரும்ப கவனத்தை செலுத்தினார்கள். திரும்பவும் சொகுசு வண்டி ஊர்ந்து வீட்டை தாண்டி சென்றது. நானும் சகோதரமும் திரும்பவும் கேட்டுக்கு ஓடுகிறோம். "என்னடி..டிரைவருக்கு வழி தெரியாது போல" பாட்டி சொல்லி முடிக்க, வாகனம் எங்கள் வீட்டுக்கு முன் நின்றது. திடீரெண்டு வாகனத்தின் கூரை திறந்தது மெசின் துவக்கு ஒன்று எட்டி பார்த்தது, நேராக ரோட்டுக்கு சுட்டது. சட் சட சட....சட்..சட். சட...சட.... நாம் அரண்டோம்..."உள்ளுக்கு ஓடுங்கோ....உள்ளுக்கு ஓடுங்கோ". நானும் சகோதரமும் பாட்டிகளும் அம்மாவும் வீட்டுக்குள் ஓடுகிறோம். இதை கவனித்த துவக்கு எங்களை நோக்கி திரும்பியது. சன்னங்கள் சீறுகின்றது. கண்ணாடிகள் தெறிக்கின்றன. அப்படியே ஒரு குண்டு கதவை ஓட்டை வைத்து எனது தலைக்கு அரை அடி மேலால் உள் அறை கதவை துளைக்கிறது. எத்தனையோ குண்டுகள். ஆனால் எங்களுக்கு புகை கூண்டுக்கு கீழ் பதுங்குவது குறிகோளாக இருந்ததால் எப்படியோ தப்பித்து சேர்ந்தோம். திடீரென்று குழந்தையை நினைத்த தாய், துப்பாக்கி சன்னங்கள் என்றும் பார்க்காமால் திரும்பவும் முன்னறைக்கு ஓடி சென்று, தலைக்கு மேல் அரை இஞ்ச் சுவற்றில் வெடி வாங்கி, சிமெந்து பறந்த முகத்துடன் வீறிடும் சகோதரத்தை, அள்ளி கொண்டு பாய்ந்து வந்தாள். அவள் எங்கள் அம்மன். இப்போது துவக்கு எல்லா வீடுகளுக்கும் விபூதி சந்தனம் தெளித்திருந்தது. சட் சட சட....சட்..சட். சட...சட.... மயான அமைதி. காக்கா, குருவி கூட இல்லை. கதவுகள் திறந்து சத்தம். பின் சிங்களத்தில் ஒருத்தன் கட்டளையிட மற்றோர் எதையோ பக்கத்து வீட்டுக்கு முன்னாள் செய்தார்கள். சைக்கிள் பெல்கள் சில இழுத்து போடும் சத்தத்தில் கேட்டது. "யாரோ பாவி பெத்த பிள்ளைகளை சுட்டு போட்டாங்கள்" ஒரு பாட்டி கிசு கிசுத்தார். எல்லோரிலும் ஒரு வெறி கலந்த சாந்த கண்கள். எனது சகோதரமும் அடங்கியிருந்தது. "கெரசின் கொண்டுவாங்கடா" கத்தியது துவக்கு பிடிப்பாளன். ஒரு சத்தமும் இல்லை. "இப்ப கெரசின் கொண்டுவராட்டா...வீடு புகுந்து எல்லோரையும் இந்த ஏரியாவில் சுடுவம்" அவன் பொய் சொல்லவில்லை. திடீரென்று புகை கூண்டடியில் இருந்த மண்ணெய் கானை எடுத்து கொண்டு எனது பாட்டி வெளிக்கிட்டாள். அம்மா தடுத்தார். "சும்மா இரடி....அவங்கள் என்னை ஒண்டும் செய்ய மாட்டாங்கள். பிள்ளையள், உன்னை ஏதாவது செய்து போடுவாங்கள்" பதிலுக்கு எதிர்பாராமல் தன் வருங்காலங்களை காக்க தன்னை காணிக்கையாக்க துணிந்து சென்றாள் எனது அம்மனின் அம்மன். அவளும் ஒரு தற்கொடையாளி தான். நாங்கள் எல்லோரும் அழ தொடங்கியிருந்தோம். "நீ புத்திசாலி மனுசி. கேட்டடியில் வைத்துவிட்டு திரும்பி போ" துவக்கு கட்டளையிட்டது. இதை கேட்டவுடன் அழுகை நின்றது. பயங்கலந்த காவல் தொடங்கியது. சிங்களத்தில் துவக்கு கனைத்தது. நெருப்பு சுவாலை சத்தம் கேட்டது....டயர் எரியும் வாசனை தொடர்ந்தது. டயரோடு மனித மயிர் எரியும் வாடையும் வீசுகிறது. பக்தர்கள் நிரம்பிய வாகனம் திதியை முடித்து சென்றது. எங்களை வெளியே விடவில்லை. சிறிது நேரத்தில் பல குடும்பங்கள் கூடின, எரியும் டயர்களை விலக்கி உறவுகளை தேடின. திரும்பவும் நெஞ்சு பறையில் தமிழச்சிகள் வெறி பிடித்து பறை அடித்தார்கள். "எண்ட ஐய்யோ" என்று கூடி அகிலம் அதிர அழுதார்கள். *************************************************************** மூத்தக்காவிற்கு கை போச்சாம்.... ************************** ஒபெரசன் லிபரேசன் என்று கேட்காமலையே எங்களை விடுவித்து சுதந்திரம் தருகிறோம் சாமி என்று கெலியில் இருந்து வெடி வைத்து, ஆட்டிலறி செல் அடித்து, எம்மை கொன்று, எம் நிலத்தை பிடித்து, எம் கல்லூரியிலேயே முகாம் அமைத்து இருந்தான் எதிரி. வரணிக்கு ஓடும் போது வீழ்ந்த செல் சன்னம் ஒன்று காலில் பட்டு, அது சீழ் பிடித்து எனக்கு யானை கால் போல் ஒரு வீக்கம். அப்போது ஒரு மருத்துவரும் இல்லையென்ற படியால் பாட்டி வைத்தியப்படி காரை செடி இலையும், மஞ்சளும் அவித்து கட்டி வைத்திருந்தேன். அந்த நாள் தமிழரின் வீர வரலாறில் முக்கியமான நாள். ஒரு தமிழன் 332 எதிரிகளை சாம்பலாக்கிய நாள். அந்த ஒருவன் உலக இராணுவ தற்காப்பு முறைகளை மாற்றியமைத்த நாள். அந்த நாள் மாமா, மாமியாரின் கல்யாண நாள். செல் ஓட்டை விழுந்த, கண்ணாடி இல்லாத வீடுகளுக்கு திரும்பி வந்து சில கிழமைகள் தான். அப்போது தான் ஓடிப்போனவர்கள் எல்லோரும் திரும்பி வந்தும் இருந்தார்கள். நிறைய குழந்தைகள், நாம் சிறுவர்கள் இருந்த படியால் அன்று பாயாசமும், மைக் மோகன் படமும் என்ற திட்டம். மணி எட்டிருக்கும்... ஒரு இருபது சுற்றத்தார் 22 இன்ச் டிவியில் மலையோரம் வீசும் காற்று பாட்டை, மோகன் கடற்கரையில் நின்று நதியாவிற்கு பாடிகொண்டிருப்பதை ரசித்து கொண்டிருந்தோம். டுட்.டக.டுட்.டுட்... "அதென்ன சத்தம்?" கேட்டார் சுற்றத்தாரில் ஒருவர். நான் ஓடிப்போய் நிறுத்துகிறேன். சித்தப்பர் வாசல் சென்று வீட்டு தென்னைகள், தோட்டங்கள் ஊடாக மைல் தூர பாடசாலை முகாமை பார்க்கிறார். இருபது செக்கண்ட் சென்றிருக்கும். "அதொண்டும் இல்லை. வெறில சும்மா சுடுவாங்கள். அப்பு படத்தை போடு" ஒரு சுற்றத்து அம்மணி ஏவினார். மற்றைய அம்மணிகள் தலையாட்டினர். நானும் பாய்ந்து சென்று தட்டிவிடுகிறேன். இப்போது மைக் மோகன் உணர்ச்சிவசபட்டு மலையோரம் வீசும் காற்று என்று இழுக்கிறார். படாய்ய்ய்ய்ய்ய்ங்ங்ங்ங்ங்ங்....................ஒளி பிழம்பு ஒன்று கிழம்பியது! எங்கும் வெளிச்சம்.... அந்த சத்தம் மற்றைய குண்டு சத்தம் போல் இல்லை. சத்தத்தை உணரும் அளவிற்கு சக்தி வாய்ந்தது. மேலேயிருந்த ஃபான் என் தலைக்கு மேல் விழுந்தது. ஓட்டு கூரைகள் சரிந்தன! சுற்றத்தார் சுதாகரித்தோம். எல்லோரும் எங்கள் ஓட்ட பையை(துணி,முறுக்கு, தண்ணி)எடுத்து கொண்டு ஓட தயார். வெளியூரில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு ஓட திட்டம். அவர் வீட்டை சுற்றி பனை மரங்களும்... பெரிய கொங்கிரீட் வெராந்தா... பெரிய பங்கர்... கணிப்பில் காரணங்கள். அம்மணிகள் மண்வெட்டிகளுடன் தங்க புதையல் எடுக்க பாய்ந்து கோடிகளுக்கும், இரகசிய இடங்களுக்கும் சென்று தோண்டி கொண்டிருந்தார்கள். வெடிகள் வெடிக்க தொடங்கியிருந்தன. திடீரென்று மந்திகையில் இருந்து செல்கள் எங்கள் வீடுகளை நோக்கி பறக்க தொடங்கின. ஆச்சியக்கா வீட்டில் முதலாவது வீழ்ந்தது. பட்டகாலிலே திரும்பவும் பட்டது. "அம்மன் கோவிலுக்கு ஓடுங்கோ" யாரோ கத்தினார்கள். "அம்மன் கோவில் செல்லடி தாங்காது. சேர்ச்சுக்கு ஓடுங்கோ" இன்னொருவர் கத்தினார். சேர்ச்சில் கொங்கிரீட் கூரை, ஆர்மி வந்தால் கதைக்க பாதிரியார் இருந்த துணிவு. "நீங்களும் உங்கட நகையளும்... சேர்ச்சுக்கு ஓடுங்கடி" பாட்டன் விரட்டினார். சேர்ச்சுக்கு ஓடுகிறோம். எனக்கு ஒரு கால் யானைகாலாக்கி கிடந்ததும் தெரியாமல் இயேசுவின் வீட்டுக்கு ஓடுகிறேன். டமார்.....டமார்........டமார்...... முதல் இரண்டு டமாரும் இயேசுவின் வீட்டுக்குள் விழுகிறது.... அடுத்தது வெளி வாசலில் விழுகிறது..... நான் தூக்கி வீசபட்டேன்.... அப்படியே தெருவில் கிடந்தேன்.... எல்லாம் கேட்கிறது....ஆனால் கிடந்தேன்... திடீரெண்டு சித்தப்பர் என்னை தூக்கி தோளில் போட்டு கொண்டு குறுக்கு தெருவில் இயேசுவையும், வீட்டையும் கைவிட்டு ஓடுகிறார். நான் தோளில் தொங்கியபடியே இரத்தம் சொட்ட எங்களை தாண்டி ஓடுவோரை பார்க்கிறேன். அடுத்த நாள் காலை எழுந்தேன். பலர் அந்த வீட்டில் இருந்தார்கள். மொத்தமா 60 பேர் என்று காலை உணவிற்கு பெண்கள் தயார் செய்து கொண்டிருந்தார்கள். நான் எழுந்து என்னை சோதனை பண்ணி பார்த்தேன். அப்பாடா ஓட்டை ஒண்டும் இல்லை. காலை பார்த்தேன். சீழ் வெடித்து ஓடி இரத்த கறை தெரிந்தது. விண் விண் என்று முதல் இருந்த வலி இல்லை. ஒரு செல் சன்னம் மற்ற காலை சிராய்த்து சென்று காயம். டெற்றோல் போட்டால் போச்சு. ஓடி போய் காம்ப் அடி விடயங்களை அறியும் நோக்கில் மூத்தவர்கள் கதைக்கும் இடத்திற்கு பக்கத்தில், சின்னவர்களுடன் விளையாடுவது போல் ஒற்று கேட்டேன். "ஒருத்தர் தப்பவில்லையாம். முன்னூறுக்கு மேல ஆர்மி சரியாம். செய்ததது எங்கட துன்னாலை பொடியனாம்" ஒருத்தர் பெருமையா சொன்னார். "எப்படியோ, எங்களுக்கு தெரியாமல் செய்து போட்டாங்கள்!" ஆதங்கப்பட்டார் இன்னொருவர். திடீரென்று ஒருத்தர் முன் கதவை திறந்து கொண்டு வந்தார். "மூத்தக்காவிற்கு கை போச்சாம்" கிளி குஞ்சு பிடிச்சாலே, அதன் தாய் தந்தையர் எவ்வளவு பாடுபடுவர் என்று உணர்த்தி பொந்துக்குள் திருப்பி விடவைப்பவர். ஊர் குழந்தைகளுக்கு இலவச கல்வி தந்தவர். அவர் முகத்தில் எப்பவும் ஒரு சிரிப்பும் தெய்வீக களையும் இருக்கும். ஊருக்கே மூத்தக்காவாக இருந்தார். பெண்கள் தம் பிரச்சினைகளை கொட்டி தீர்வு வாங்கி செல்லும் நீதிபதி அவர். ஊர் நல்ல காரியங்களில் மூத்தக்காவிற்கு முதலிடம். எம் பெண்கள் யாரை பற்றி ஊரில் கதைத்தாலும், மூத்தக்கா என்றால் ஒரு பயபக்தி வந்துவிடும். அவரை போற்றுவார்கள். அவரின் வெளிநாட்டு குழந்தைகளின் சாதனைகளை பட்டியலிடுவர். இந்த உலகத்திற்கு எம் அவலங்களை பறையும் ஊடகத்தினரை பெற்றவர் அவர். உலக நீதிமன்றுகளில் எங்களுக்காக போராடும் பேரனை பெற்றவர். "டேய்..விக்கி ஜம்புக்காய் வீணா போகுது. வந்து பிடுங்கி கொண்டு போ" என்று என்னை ஊரில் கேட்டவர் அவர் ஒருத்தர் தான். மற்றோர் வீட்டில் களவாடி தின்பதில் ஒரு இன்பம். நான் விளையாட்டை நிறுத்தினேன். தலை திரும்பவும் விறைத்தது. கால் திரும்பவும் விண் விண் என்று வலிக்க தொடங்கியது. வெளியே கொட்டிலில் சமைத்து கொண்டிருந்த பெண்களை நோக்கி ஓடுகிறேன். "மூத்தக்காவிற்கு கை போச்சாம்" கொட்டடியில் இருந்த சந்தை சத்தம் அடங்குகிறது. இப்போது தகவல்காரரை சுற்றி 60 பேர். "எங்கட தெருவில யோகண்ணா வீட்டில தான் எங்கட ஆச்சிகள் இருக்கினம். இப்ப அவ அங்க தான். நல்லா ரத்தம் போயிட்டுது. அத்தான் நல்லா பயந்து போய் இருக்கிறார். அக்காவை மடியில் வைச்சு அழுது கொண்டிருக்கிறார்." சொன்னார் தகவல். "அவ வீட்ட கொங்கிரீட் கூரை இருக்கே. எப்படி பட்டது?" அறுபதில் ஒன்று கேட்டது. "அவ அத்தான் வேண்டாம் வேண்டாம் எண்ட, அவர் இரவும் சாப்பிடவில்லை என்று சான்ட்விச் செய்ய போனவா. குசினி பக்கமா விழுந்திட்டுது." தகவல் சொன்னவருக்கு தளுதளுத்தது. பெண்கள் கண்கள் கலங்கி நின்றார்கள். பாட்டனார் மற்றும் இரு மூத்தவர்கள், தகவலுடன் திரும்பி சென்று கந்தையா அண்ணரின் வண்டிலில் மந்திகைக்கு கொண்டு செல்லும் திட்டத்துடன் வெளிக்கிட்டனர். "ஆனால் மெயின் ரோட்டால போகேலாது... கெலி அடிப்பான்"வந்தவர் சொன்னார். அம்புலன்ஸ் குழுவில் எல்லோரும் நிதானித்தார்கள். "எனக்கு இங்க இருந்து உள்ளுக்கால போக தெரியும்" நான் முன் வருகிறேன். எனது ஜம்பு காய் தாய்க்காக துணிந்து முன் வருகிறேன். எல்லோரும் காலை பார்க்கிறார்கள். "அது ஒண்டும் பெரிசா இல்லை. டெற்றோல் போட்டால் சரி" அவர்களை திருப்தி படுத்த முயல்கிறேன். "சரி. நானும் இவனோட வாறன். யோகண்ணா வீட்டோட திரும்பி வாறம்" சித்தப்பர் எனக்கு உதவியாளர் ஆனார். குழு கிழம்பியது. எனக்கு எங்களது கோட்டத்தில் உள்ள அத்தனை மாமமரம், நெல்லிக்காய், இளநி, அன்னாமுன்னா, கொய்யா, இலந்தை, நாவல், ஜம்புக்காய் மரங்களின் ஜி. பி. எஸ். கேந்திரங்கள் தெரியும். அவற்றை எப்படி மெயின் ரோட்டில் தோன்றாமல் கள்ளமாக அணுகுவதும் என்று தெரியும். இப்போது கை கொடுக்கிறது. யோகண்ணா வீடு. "அக்கா எங்க?" சித்தப்பர் கேட்கிறார். எனக்குள் ஒருவித பதட்டம். வேலிகள் பாய்ந்து வரும் போது இருந்த உற்சாகம் இல்லை. எனது கொய்யாக்காய் களவு லோயரை பார்க்கும் துணிவு இல்லை. "உள்ளுக்க கட்டிலில. நல்ல இரத்தம் போயிட்டிது" சொன்னார், ஒரு ஓடமுடியாமல் கொங்கிரீட் கூரை அறைக்குள் தஞ்சம் எடுத்திருக்கும் வயோதிபர். நான் வாசலில் இருந்து, அறையை பிரிக்கும் சுவர் சித்திர வேலைப்பாட்டு ஓட்டைகள் ஊடாக பார்க்கிறேன். ஒரு துணியால் மூடி இருந்தார். கணவரின் தோளில் படுத்திருந்தார். இடது கை பக்கம் இரத்த கறை துணியில் தெரிகிறது. முகத்தில் தெய்வீக களை இல்லை. இரத்தம் போன, போகும் களைப்பு மட்டும். அதற்கு மேல் என்னால் என் ஊர் குல தெய்வத்தை பார்க்க முடியாமல் போய் விட்டது. கண்ணில் குளம். சித்தப்பர் வெளியில் வருகிறார். அவரின் கண்ணிலும் குளம். அவசரமாக பனைகளின் பாதுகாப்பிற்கு திரும்புகிறோம். ஹெலி சூடுகள், செல் அடிகள் தொடர்ந்தன. பங்கருக்குள் குழந்தைகள், இளம்பெண்கள், தாய் மார். மற்றோர் கொங்கிரீட் வெராண்டாவின் கீழ் இருந்து ஒவ்வொரு குண்டுக்கும் முருகனுக்கு அரோகரா போட்டு தேவாரம் பாடி கொண்டிருந்தார்கள். இரவு சூழ்ந்தது..பாட்டனார் அம்புலன்ஸ் குழு திரும்பிவந்தது. முகத்தில் சோகம், ஒரு தோல்வி. "கந்தையா மாட்டை அவிட்டு விட்டுட்டார்...நாங்கள் வெள்ளை கொடி கட்டி இழுத்து கொண்டு போனாங்கள். அவங்கள் ஹெலியில இருந்து சுட்டு ஆச்சிரமத்திற்கு பக்கத்தில மரத்திற்கு கீழ நிண்டனாங்கள். கந்தையாவிற்கும் முதிகில வெடிபட்டு காயம்." "அப்ப அக்கா?" எல்லோரின் கண்களும் கேட்டன. பாட்டனார் தலை குனிந்தார். அவரின் கன்னத்தில் நீரோடை ஓடுகிறது. தமிழச்சிகளின் தேசிய கீதம் மீண்டும் ஒருமுறை ஒலிக்கிறது. "எண்ட ஐய்யோ!" ********************************************************************************** இப்போது...வானவில் சேலை கறுப்பாக மாறுகிறது.... அதில் தணல்கள் தெறிக்க தொடக்கி இருந்தன... சாமன் வேறு ஒரு இக்காரோ பாட்டு பாட தொடங்கினார்... கறுப்பு கரும்புலி ஒன்று தோன்றி தாயை வாஞ்சையோடு அரவணைக்கிறது... சாமன் வேறு மூலிகை போட்டு தலைக்கு புகை போட்டார்....அடங்குகிறேன் *********************************************************************************************** இரத்த நிற சூரியகாந்தி.... பிரச்சினை நேரம். ஊரில் ஒரு மில்லும் இயங்கவில்லை. எங்களுக்கு சுவர் போட்ட கிரிக்கெட் விளையாடும், பட்டம் ஏற்றும், புறா அடித்து கறி வைத்து உண்ணும் இடமாகியது. நாங்கள் அன்று கிரிகெட் விளையாட சென்ற மில்லை சுற்றி இளநீர் மரங்கள், மாமரங்கள், கொய்யாக்கள் இருந்தது. கிரவுண்ட் தெரிவில் அவைகளும் காரணிகள். விளையாட்டு சூடு பிடிக்கிறது. திடீரென்று தமிழருக்கு சுதந்திரம் தர துடிக்கும் விமானம் தோன்றுகிறது. முதலில் போறான் என்று கவனிக்கவில்லை. ஆனால் வட்டம் அடிக்கும் சத்தம் கேட்டவுடன் சுதாகரிக்கிறோம். "பொம்பர் சுத்துறான்" ஒரு விளையாட்டு வீரன் சொன்னான். "மரத்திற்கு கீழ போவமே?" இன்னொருத்தன் கத்தினான். "வேண்டாம். அவன் பருத்தித்துறை பக்கம் சுத்துறான்" பட்ஸ்மன் கத்தினான். அவனுக்கு பந்தை அடித்து எங்களை அலைக்கழிக்கும் ஆசை . அடுத்த பந்து அவனை நோக்கி போகிறது. அவன் தூக்கி பின்னுக்கு அடித்தான். அது போய் நெல் தேக்கி தொட்டிகளை தாண்டி விழுகிறது. "டேய். நீதான் போய் அந்த பந்தை எடுக்கோணும்" கோரசாக கத்துகிறோம். அப்போது விமானம் இன்னும் சுற்றி எங்களுடைய பகுதியை இலக்கு எடுத்ததை கவனித்து யாரோ கத்தினான். "டேய் மரத்திற்கு ஓடுங்கடா". சிட்டு குருவிகள் போல் பறந்து சுவர் தாவி தென்னைகள் தாண்டி மாமரத்தின் கீழ் சேருகிறோம். நாம் எல்லோரும் அங்கு, பட்ஸ்மனை தவிர. பதட்டம் அடைகிறோம். "டேய் மில்லுக்கு குத்துறாண்டா.... ஓடுங்கடா" நெல்லு தொட்டிகளின் பின் இருந்து பட்ஸ்மன். படாய்ய்ய்ங்ங்.....எல்லாம் அதிர்ந்தது. சுவருக்கு அங்கால் கொங்கிரீட் சுவாலை கிளம்பியது. நாம் நிலத்தில் படுத்திருந்தோம்.....விமானத்தின் சத்தத்தை மட்டும் உற்று கேட்டோம். சத்தம் தொலைவிற்கு செல்கிறது. "டேய்...வாடா வீட்டுக்கு போவம்" பட்ஸ்மனை அழைக்கிறோம். பதில் இல்லை. " டேய்ய் " கோரசாக அழைக்கிறோம். வீட்டை போயிட்டானோ? நான் மற்றோரை மரத்தின் கீழ் நிற்க சொல்லிவிட்டு நெல்லு தொட்டிகள் இருந்த பக்கம் சென்று சுவரில் ஏறினேன். கூரைகள் பறந்திருந்தன. சுவர் எல்லாம் அம்மை விழுந்தது போல் சன்ன காயங்கள். குண்டு விழுந்த இடத்தை பார்க்கிறேன். கொங்கிரீட் மில் நிலத்தில் ஒரு குழி. குழியை சுற்றி இரத்த சிதறல்கள். இரத்த நிற சூரியகாந்தி பூ....... எனக்கு தலை சுற்றுகிறது. சுதாகரிக்கிறேன். "டேய் குமாரிண்ட அப்பாவை கூட்டிவாங்கோ" கத்திவிட்டு என்னுடைய சூரியகாந்தி பூவை நோக்கி ஓடுகிறேன். இரத்த துண்டங்கள்.....தலை விறைக்கிறது. மில்லு கேட் திறக்கும் சத்தம், பெற்றோர் உறவினர் பாய்ந்து வருகிறார்கள். என்னை இழுத்து கொண்டு போய் மேடையில் குமாரின் தாயோரோடு விடுகிறார்கள். "அண்ணை அக்கா இங்க வராதிங்கோ " ஒரு உறவு பதறுகிறது. "ஏன்? எண்ட பிள்ளைக்கு என்ன நடந்தது? எண்ட குமார் எங்கே?" அலறுகிறாள் பாவப்பட்ட தமிழ் தாய். என்னை பார்க்கிறார். "டேய்..எங்கேடா குமார்?" வெறியோடு அதட்டுகிறாள். என்னால் பேசமுடியவில்லை. குமார் சூரியகாந்தி பூவாகிவிட்டான் என்று எப்படி சொல்வது. "அண்ணை....இங்க வாங்கோ" நெல்லு தொட்டிக்கு பின்னால் துர்அதிட்ட சுதந்திர வெற்றியாளார் செல்கிறார். பெத்தவள் இன்னும் பதட்டம் அடைகிறாள். எனக்கு அவள் என்னத்திற்கு தயாராகிறாள் என்று தெரியும். தந்தை திரும்பி வருகிறார். தாயை பார்க்க திராணியில்லை. தலை தூக்கவில்லை. வெறியோடு நிலத்தில் தனது சூரிய காந்தியை தேடுகிறார். தாயார் கையை பிடித்த உறவை உதறிவிட்டு தொட்டிகளுக்கு பின் ஓடினாள். ஐந்து நொடியில்லை. "எண்ட ஐய்யோ" **************************************************************************** இப்போது இன்னும் நிறைய சிவப்பு தணல்கள் தெறிக்கின்றன. நான் எழுந்திருக்க முயல்கிறேன். ஆனால் கறையான் புத்து பிடித்த மரக்கட்டை போல் நிலத்துடன் ஒட்டி இருக்கிறேன். இப்போது இக்காரோ தேவாரம் திரும்பவும் மாறுகிறது. இந்த முறை கொஞ்ச நேரம் எடுத்தது. தாயே எனது மண்டைய கழட்ட விரும்பவில்லை என்று நினைக்கிறேன். திரும்பவும் அடங்குகிறேன். **************************************************************************** ஆர்மி வரட்டாம்..... ************************** இரண்டு பாடசாலையை சேர்ந்த நூற்றுகணக்கான மாணவர்கள் சந்தி நடுவில் தார் தெருவில் இருக்கிறோம். வெய்யில் சூடு முழங்காலை பதம் பார்த்தது. புத்தகங்களை வைத்து முழங்காலை பாதுகாத்தோம். அதை பார்த்த, வலிந்து சுதந்திரம் தரும் இராணுவத்தினன், மாட்டு தடியால் விளாச தொடங்கினான். புத்தகத்தை எடுத்துவிட்டு முழங்காலை மாற்றி மாற்றி தூக்கி வேர்த்து விறு விறுத்து இருக்கிறோம். இரண்டு மணிகள் கழிந்தது அதற்குள் சில மாணவர் மயங்கி விழுந்து கிடந்தனர். அந்த பகுதியிலேயே படிப்பிற்கு பெயர் போன பத்தாம்வகுப்பு அண்ணா எழும்பினார். "ஏன் எங்களை இப்படி இருத்தி வைச்சிருக்கிறீங்கள்?" சுதந்திரம் தர வந்தவன் வேகமா வந்தான் கன்னத்தை பொத்தி ஓங்கி கொடுத்தான், அந்த மலையன். அண்ணர் தடங்கி விழுந்தார். அப்படியே தர தர என்று காம்பிற்குள் இழுத்து சென்றான். நாம் உறைந்தோம். முழங்கால் சூடு இப்போது ஒருத்தருக்கும் இல்லை. வேர்வை மட்டும் கூடியிருந்தது. பயத்துடன் வாசல் படலையை பார்க்கிறோம். அண்ணரின் குழறல் சத்தம் கேட்கிறது. "டேய்....விடுங்கடா என்னடா செய்யுறீங்கள்? டேய் விடுங்கடா..... டேய் போத்தில அடிகாதை.....டே....ஐய்யோ....அம்மா" சத்தம் அடங்குகிறது. எங்களுக்கு இது தான் எங்கள் எல்லோருக்கும் கதி என்று பயம். பிலத்து பல பொடியள் அம்மா என்று மாட்டு கன்றுகள் கூப்பிடுவது போல் ஓலம் இடுகிறார்கள். சுதந்திர வீரனின் சீட வீரன் துப்பாக்கி பிடியால் ஓலமிட்ட ஒரு கன்றின் மூஞ்சியில் ஓங்கி குத்துகிறான். திரும்பவும் சத்தம் அடங்குகிறது. தர தர தர சத்தம் கேட்கிறது. அண்ணர் பாண்ட்ஸ் இல்லாமல் போட்ட வெள்ளை சேர்டுடன் மட்டும் எங்களுக்கு முன்னால் கிடக்கிறார். கால்களால் ரத்தம் வழிந்து ஓடுகிறது. ஆனால் காயங்கள் இல்லை. இரத்தம், மூல ஊற்றின் பிறப்பு. அங்கே ஒரு கொக்க கோலா போத்தல். சுதந்திர மலையன் வருகிறான். எங்களை விறைத்து பார்க்கிறான். திடீரெண்டு திரும்பி அண்ணரின் வயித்தில் ஓங்கி சப்பாத்து காலால் மித்திக்கிறான். மீண்டும் மீண்டும் கொலை வெறியுடன் மிதிக்கிறான். முனகல் மட்டும் சுதந்திரம் பெற்ற தமிழ் மாணவனிடம் இருந்து வருகிறது. எங்களுக்கு வகுப்பெடுத்தார் சுதந்திர மலையன். படிப்பினை: கேள்வி கேட்க கூடாது! ஒரு மணித்தியாலம் இருக்கும் வெறித்து பார்த்து கொண்டு இருக்கிறேன். மற்றோர் கண் மட்டும் எங்கேயோ பார்த்துகொண்டிருக்கிறது. எங்கள் பாடசாலை அண்ணனை பார்க்கிறேன். எனது ரெண்டு ரூபா கன்டோஸ் அண்ணனை பார்க்கிறேன். வாத்தி பிடிச்சு வெளியில் விட்டாலும் 'வா சிரமதானம் பண்ணுவம்' என்று கூட்டி சென்று எனக்கு சமூக சேவை சொல்லி தந்தவர். அவரின் தலை மட்டும் தெரிகிறது. அவர் சுருண்டு வயித்தை கட்டிபிடித்துகொண்டு இருக்கிறார். உடல் மூச்சுவிடுவது தெரிகிறது. இப்போது எல்லோரையும் வெளிகிடுத்துகிறார்கள். கன்றுகளின் ஓலம் கேட்டு தாய், பாட்டி படை வந்து சென்றிக்கு வெளியில் இருந்து ஒப்பாரி வைத்துகொண்டிருந்தது. வரிசையில் வெளிகிடுகிறோம். ஒவ்வொருவரா குழந்தைகளுடன் வெளிகிடுகிறார்கள். நான் வரிசையில் தொற்றாமல் எனது சில நண்பர்கள் சிலரோடு இழுபட்டு இழுபட்டு கடைசி மட்டும் நத்தை கூடு போல் சுருண்டிருந்த அண்ணரை பார்க்கிறோம். திடீரென்று கொக்குத்தடி போல் விறைத்தார். அடங்கினார். நாங்கள் ஆளை ஆள் பார்க்கிறோம். வரிசையில் சேர்ந்து வெளியேறுகிறோம். வெளியே அண்ணரின் வீட்டு அம்மன்கள் மட்டும் முகத்தில் கலக்கத்துடன். நாங்கள் ஆர்மி நின்ற படியால் பேச முடியாது. தலையை குனிந்து அழுது கொண்டு எங்கள் வீட்டு தாய்களிடம் தஞ்சம் அடைகிறோம். பரபரத்து சென்றி ஆர்மியையும் பொருட்படுத்தாது தள்ளி கொண்டு சந்திக்கு ஓடுகிறார்கள் தமிழச்சிகள். ஈழ தமிழரின் சுதந்திர தேசிய கீதம் திரும்பவும் ஒலிக்கிறது. "எண்ட ஐய்யோ" ********************************************************************************* என்னால் தாங்கமுடியவில்லை. ஒவ்வொரு நினைவாக நான் மறந்திருந்து, கெட்ட கனவாக மட்டும் வந்த விடயங்கள் திரும்பவும் நிசத்தில் நடக்கின்றன. ஆனால் இந்த பிரபஞ்சத்தோடு கொங்கிரீட் சவப்பெட்டியில் கிடக்கிறேன். என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கட்டாயம் எல்லா நனவும் வந்து தான் சேரவேண்டும். ********************************************************************************* பிரபுவும் தலையாட்டியும்..... இப்போது இன்னொரு நாட்டில் இருந்து எங்களுக்கு சுதந்திரம் கொடுக்க இன்னொரு கூட்டம் வந்திருந்தது. இந்த கூட்டமும் எங்களுக்கு சுதந்திரம் தருவதில் நல்ல மும்முரம் காட்டியது. எங்களை சுற்றி நிறைய நல்லவர்கள், வில்லங்க படுத்தி சுதந்திரம் தந்தார்கள். மூன்று உறவுகளை கையூட்டு கேட்டு, திருப்பி திருப்பி கொடுத்து களைத்து விட்டார்கள். கடைசியாக வந்த செஞ்சேனை தலைவரும் வற்புறுத்தினார். அவர் முகாமிற்குள் ஒரு வீட்டில் இருந்து சென்றியை கடக்கும் பொடிகளை பிடிப்பது, கையூட்டு பெறுவது என்று ஒரே அட்டகாசம். அவர் தன்னை கடவுள் லெவலுக்கு பில்டப் கொடுத்து வைத்திருந்தார். தன் ஆணைக்கு செவி மடுக்காத மூன்று உறவுகளை மரவள்ளி தோட்டத்திற்குள் ஓடவிட்டு சுட்டார். பெரிய மாவீரன். மார்க்ஸ் இருந்திருந்தால் பெருமைபட்டிருப்பார். தொழிலாள வர்க்கத்திற்கு அவரின் கட்சி(?!) எவ்வளவு சேவகம் செய்கிறது என்று பார்த்து உச்சி மோந்திருப்பார். ஊரை ரவுண்டப் பண்ணி யார் யார் எவ்வளவு வைத்திருக்கிறார்கள் என்று கணக்கு போட திட்டம். இதற்கு வல்லரசின் சுதந்திர தியாகி கொமான்டரும் உடந்தை. மகாத்மா காந்தி இருந்திருந்தால் பாரத ரத்னா பட்டம் இவருக்கு தான். எல்லோரும் வரிசையில். செஞ்சேனை ரத்தத்தின் ரத்தம் ஒன்று தலையாட்டி முகமூடியை போட்டு கொண்டு சும்மா இல்லை இல்லை என்று தலையாட்ட எல்லோரின் பேரும், தொழிலும் குறிக்கபடுகிறது. எங்கள் வரிசை முடிந்து ஆட்டு மந்தைகள் வீடு திரும்புகிறோம். எல்லோருக்குள்ளும் ஒரு நிம்மதி. அடுத்த வரிசையில் பிரபு, காது கேட்காத, வாய் பேசாத மாற்று திறனாளி. ஆனால் மிகவும் அழகான முகத்தில் எப்போதும் ஒரு சாந்தம் குடிகொண்டிருக்கும். தெருவின் வேலைகாரனாக கடைக்கு போக, சந்தைக்கு போக, மருத்துவமனைக்கு போக யார் கேட்டாலும் சைக்கிளில் வாசலில் நின்று மணி அடிப்பார். 17 வயதிலும் அவரில் ஒரு முதிர்ச்சி. நல்லவர்களுக்கு தான் சுதந்திரம் தேடி வந்தது. தலையாட்டி யாருக்காவது ஒருத்தருக்கு தலையாட்டுவது தான் அந்த தமிழ் ரசியன் ருலட் விளையாட்டின் விதி. இவரை கேள்வி கேட்க, இவர் திணற, சேகுவாராவின் புரட்சி வீரன் தலையாட்டுகிறார். ஊரார் அவன் செகிடன்...செகிடன் என்று கத்த உள்ளுக்கு இழுத்து செல்லபடுகிறார். சில நாட்களில் கொடுமையின் கோரம் தாங்காமல் அங்கு குண்டிருக்கு, இங்க கிரனட் இருக்கு என்று வாகனத்தில் போகும்போது கொடுமை இருக்காது என்ற காரணத்தால் பொய் சொல்லுகிறான் ஊமை. அவரின் நண்பர்கள், சுற்றத்தில் கொஞ்சம் வளர்ந்த பொடிகள், உள் தெரு சொந்தங்கள் வீட்டுக்கு அனுப்பு படுகிறார்கள். நானும் உள் தெருவில் பதுங்குகிறேன். ஒரு கிழமை கழித்து பிரபுவின் தந்தையார் வாசலில், "உன்னை வரட்டாம்" "யார்?" "பிரபு" தந்தை அவசரமா சொல்லுறார். "நான் என்னத்திற்கு?" என்னையே காட்டிகொடுத்துவிட்டானா நண்பன்? "அவன் என்னையும், உன்னையும் பார்க்க வேணுமாம். நானும் வாறன் வா." கெஞ்சுகிறார். "அவனுக்கு உன்னில நல்ல பாசம். தாயை கூட பார்க்க கேட்கேவில்லை" அவனுக்கு தாயை பார்க்க திராணியில்லை என்று தெரியும். அவனுக்கு அவன் குடும்பமும், சொந்தங்களும் தான் சொர்க்கம். போகாவிட்டால் செஞ்சேனை வீர குழு வீடு வந்துவிடும் என்ற பயம். பாட்டியும் பாதுகாப்பிற்கு வருவது என்று திட்டம். எனக்கு குலை நடுக்கம். சென்றியடியில் தந்தையை கண்டவுடன் ஒரு செஞ்சேனை வீரர் எங்களை கொமாண்டரிடம் அழைத்து செல்கிறார். தந்தையார் ஒரு மஞ்சள் முருகன் படம் போட்ட பையை கொடுக்கிறார். "போய்...பின்னுக்கு பாத்திட்டு உடனே போயிடனும். இரண்டு நாளில் விட்டுவிடுவம்" கொமாண்டருக்கு பக்கத்தில் நின்ற தமிழ் ஸ்டாலின் சொல்கிறார். அடித்துபிடித்து கொண்டு தந்தை ஒரு கிழமையாக பார்க்காத மகனை பார்க்க ஓடுகிறார். நான் அவருடன் ஒட்டி கொண்டே ஓடுகிறேன். பயம். வாசலுக்கு வெளியே நாங்கள். வாசலை பார்த்து. சிறு நேரத்தில் தள்ளாடி கொண்டு ஒரு உருவம். முகத்தில் சாந்தம் இல்லை. ஒரு களைப்பு. ஏன் தமிழனா பிறந்தோம் என்றொரு வெறுப்பு தெரிகிறது. தந்தையும் தனயனும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து கண்ணீர் வடிக்கிறார்கள். நெருங்க பார்த்தவர்களை சுதந்திர துப்பாக்கி பிடிகள் தடுக்கின்றன. நான் பிரபுவின் கைகளையே கூர்ந்து பார்க்கிறேன். ஊத்தை துணியால் சுத்தி இருந்தது. ரத்த பொட்டுக்கள் தோன்றியிருந்தன. எனக்கு அந்த பிரபுவை பார்க்க பிடிப்பில்லை. கைகளையே பார்த்து கண் தொடர்பை தவிர்க்கிறேன். "எப்படியப்பு இருக்கிறாய்?" தந்தை. "அப்பே...எ விரல வெட்....." அழுது கொண்டே கையை தூக்குகின்றான். அதுதான் எங்களின் கடைசி சந்திப்பு. முதல் முறை ஒரு தந்தை எங்கள் தேசிய கீதத்தை இசைத்தார். "எண்ட அப்பு, ஐய்யோ" ************************************************************************************** நான் ஒரு கருவியாக எல்லா விடயங்களையும் கக்குகிறேன். அவதார் படத்தில் மரத்தின் விழுதின் ஊடாக இயற்கையுடன் பேசுவது போல். உணர்கிறேன். நான் அந்த வாழ்க்கையை திரும்பவும் வாழ்கிறேன். இப்போது என் உள்ளங்காலிலும் புகை அடித்து தலை உடம்பெல்லாம் அடித்து கொண்டே பாடுகிறார் உரத்த குரலில். கரும்புலி தாயின் காலடியில் படுக்கிறது. ************************************************************************************** அறிவாலயத்தை திறந்ததற்கு உன்னை போட போறாங்களாம்...... ************************************************************************************** என்னதான் இறந்தாலும், செல் அடித்தாலும், சுட்டாலும், பள்ளியில் பங்கர் வெட்டி வைத்து படிக்கும் இனம் நாங்கள். பெரிய தெருக்களை பாவிக்காமால் எப்பவும் உள் ஒழுங்கைகள் ஊடாக பள்ளி சென்று பின் டியூசன் சென்று வருவோம். எங்களின் டியூசன் பக்கம் அறிவாலயம் ஒன்று வேற்று நாட்டு சுதந்திர வீரர்கள் வந்து அடித்து நொறுக்கி மூடி கிடந்தது. பின்னுக்கு பல மாமரங்களும், கொய்யாக்களும் இருந்தன. அதனால் நாங்கள் எப்போதும் டியூசனுக்கு முதல் அங்கு சென்று மேய்ந்துவிட்டு செல்வோம். ஒரு நாள் வீட்டுக்குள் இருந்து சத்தங்கள் கேட்க உள்ளே எட்டிப்பார்த்தால். அந்த பக்க நாய்கள் எல்லாம் கூட்டம் கூட்டமாக அறைகளுக்குள் புணர்ந்து கொண்டிருந்தன. எங்களுக்கு லொட்டரி விழுந்த சந்தோசம். கல்லு, தடி பொல்லுகளை தேடி ஓடுகிறோம். நாய்களுக்கும் எங்கள் வாசம் தெரியும். அவைகளும் தப்பி கூட்டமா ஓட முற்படுகின்றன. ஒரு மணித்தியாலத்திற்கு எங்களுக்கு பம்பல் தான். பின் உள்ளுக்கு சில அம்புலி மாமா புத்தகங்கள் தெரிய உள்ளடுகிறோம். பின் அறை ஒன்றில் பல பெட்டிகள் பூராக ஒரே சிறுவர் புத்தகங்கள். அறிவாலயம் எங்களது இரகசிய வாசிகசாலையாகிறது. டியூசனில் கதிர் என்று ஒரு மாணவன், என்னோடு கடைசி வாங்கிலில் இருப்பான். அவனது ஒரு தமையன் ஒரே குடியும் கூத்தும். வீட்டுக்காரர் பேச அவர் போய் ஒட்டுகுழுவில் சேர்ந்துவிட்டார். அதன் பின் கதிர் ஒரு துரோகியாக பார்க்கப்பட்டான். ஒருத்தரும் அவனுக்கு முன் ஒரு பிரச்சினை பற்றியும் கதைப்பதில்லை. வாத்திமார் அவனை அடிப்பதில்லை. எனது நண்பர்களும் சரி, மொத்த டியூசனும் சரி அவனை ஒரு பயத்தோடு பார்க்கும். எனக்கு கதிர் மேல் வெறுப்பு இல்லை. தமையன் செய்யும் கொடுமைக்கு அவன் எப்படி பொறுப்பாக முடியும். இரகசியமாக மாங்காய் கொடுப்பேன். பாத்தடிக்க கையை தூக்கி பதில் காட்டுவேன். சத்திய பிரமாணம் செய்த இரகசிய வாசிகர்கள் குழுக்கு தெரியாமல் அறிவாலய அம்புலி மாமாக்களையும், 007, மாயாவி புத்தகங்களையும் பகிர்ந்தேன். அவனுக்கும் எனக்கும் வெளியில் தெரியாத இரகசிய நட்பு. அறிவாலய வாசகர் குழு பட பட என்று வளர்ந்தது. நாங்கள் சுற்றத்தாரிடம் சேர்த்த புத்தகங்கள், மாங்காய், இளனி, நெல்லிகாய்க்கு பண்டமாற்று செய்த புத்தகங்கள் என்று எல்லா அறையும் பிசியாகியது. பக்கத்து வீடுகளில் இருந்த இளைப்பாறியோரை பிடித்து இருத்தி அறிவாலயம் மீண்டும் முன் கதவு திறக்காமல் இயங்கியது. காலையில் அறிவாலயத்திற்கு பின்னுக்கு பாசன் புருட் கொடி நட இடத்தை சுத்தம் பண்ணிகொண்டிருக்கிறேன். பத்தாம் வகுப்பு அக்காக்கள் சிலர் வந்து எங்களுக்கு உதவி கொண்டிருந்தார்கள். திடீரென்று அரக்க பரக்க கதிர் ஓடிவந்தான். எல்லோரும் பயத்துடன் அவன் ஏன் இங்க வந்தான் என்று பார்க்கிறார்கள். "உன்னோட கதைக்கோணும்" என்னை காட்டுகிறான். "சொல்லு" அவனை நைசா தள்ளி கொண்டு எட்ட போகிறேன். "எண்ட அண்ணன் நேற்று வெறியில் வீடு வந்தவன்... நீ அறிவாலயத்தை திறந்ததற்கு உன்னை போட போறாங்களாம்" கதிர் பயந்து பயந்து சொன்னான். என்னால் நம்ப முடியவில்லை. அப்படி என்ன பெரிய குற்றம் செய்தேன்? "நான் சொன்னது என்று சொல்லி போடாதை" பயத்துடன் சொன்னான் என் கர்ணன். எனக்கு உதறுகிறது. அவனை அனுப்பி விட்டு. ஓடி போய் சகோதரிகளுக்கு இனி அறிவாலயத்திற்கு விடுமுறை என்கிறேன். அவர்களும் விடயத்தை விளங்கி வெளிகிடுகிறார்கள். நான் வீடு சென்று நல்ல பிள்ளையாக இருக்கிறேன். மத்தியானம் மட்டும் ஒன்றும் இல்லை. சித்திமார்,மாமிமார், அவர்களின் சுற்ற நண்பிகள், பாட்டி, பாட்டன் என்று பெரிய கூட்டம் நின்றதால் ஒரே பம்பலாக இருந்தது. வெளியே பல சைக்கிள்கள். திடீரென்று நாய்கள் எலார்ம் அடிக்க தொடங்கின. வீட்டுக்குள் சந்தை சத்தம் அடங்கியது. எல்லா காதுகளும் தெரு நடமாட்டத்தை நாய்களின் கண்கள் ஊடாக பார்க்க தொடங்கி இருந்தன. தெருநாய்களின் கண்கள் எங்கள் வீட்டை நெருங்கி வந்து கொண்டிருந்தன. இப்போது எல்லோரும் வீட்டுக்குள் வந்து கதவுகள் பூட்டப்படிருந்தன. எங்கள் வீட்டு நாய் மட்டும் வாசலில் மெத்தபடித்த மனிதரிலும் பார்க்க விசுவாசத்துடன் தனது வீட்டை, குடும்பத்தை காக்க சத்தம் போட்டுக்கொண்டிருந்தது. அந்த படிக்காத சீவன், நாங்கள் எல்லாம் புத்திசாலிகளாக ஓட, வீட்டு வாசலில் படுத்து கிடந்து, விடுதலை எறிகணைகள் வீட்டின் மேல் விழும்போது காதுகள் செகிடாகி இருந்தது. இருந்தும் வாசலில் துணிந்து நின்று குரைத்து கொண்டிருந்தது. "புலி வந்தால் திறந்து வைத்துருப்பீங்கள்..... நாங்கள் வந்தால் பூட்டி வைச்சிருப்பீங்கள்.... கதவை திறவுங்கடி வே*களா" கடைசி வார்த்தையில் ஒட்டுக்குழு தலைவன் கதவு பூட்டலின் காரணத்தை அறியாமல் கத்துகிறான். ஒருத்தரும் அவனின் கட்டளையை ஏற்கவில்லை. எனக்கு மட்டும் யாரை அவன் குறிக்கிறான் என்று தெரியும். நேராக வந்து எங்கள் வீட்டு கேட்டை எட்டி மிதிக்கிறான். பாட்டியாரும், பாட்டனாரும் வீட்டு வாசல் கதவிற்கு வருகிறார்கள். அவர்களின் பின் தாயார். அவர்களின் பின் இளம்பெண்கள் கூட்டம். அவர்களின் பின் நான் ஒளிக்கபடுகிறேன். "இங்க ஏன் இத்தனை சைக்கிளுகள்.... புலி கூட்டம் நடக்குதோ?" வீட்டுக்குள் புகுந்ததிற்கு காரணம் கற்பிக்கிறான். எங்கள் வீட்டு படிக்காத விசுவாசியின் பயங்கரவாதத்தை எதிர்க்க சுடுகிறான். எங்கள் காவல் தெய்வம் அடங்குகிறான். வீட்டுக்குள் இளம்பெண்கள் அழ தொடங்கியிருந்தனர். எனக்கு முடிவு தெரிகிறது. இன்னும் ஏழெட்டு செஞ்சேனை குழு வெறியில் உள்ளுக்கு வந்திருந்தது. வெளியில் தெளிவாக நிலையெடுத்து பத்து பேருக்கு கிட்ட தோழர்கள் நின்றார்கள். அவர்களுக்கு புலி பயத்தில் அடித்த சாராயம் தெளிந்திருக்கவேண்டும். ஆனாலும் அன்று தம்மில் ஏழு பேர் போய் சேர்ந்து ,அவர்களின் தலைவர் ஒருவருக்கு இடது கை பறக்க போவது தெரிந்திருக்கவில்லை. பனங்காட்டுக்குள் நீதிபதிகள் பதுங்கி இருந்ததும் தெரிந்திருக்கவில்லை. கொம்றேட் ஒருவர் மாகாத்மா காந்தியின் தளபதிக்கு நாய் சுட்ட விடயத்தை அறிவிக்கிறார். "கதவை திற..." உறுக்குகிறான் ஒட்டுக்குழு தலைவன். பாட்டியார் திறந்து முன் செல்கிறார். "என்னப்பு வேணும்?" "புலியை ஒளிச்சு வைச்சுக்கொண்டு நடிக்கிறியே?" பாட்டியாரை தள்ளி விடுகிறான். பாட்டியார் சைக்கிள்கள் மேல் விழுகிறார். நான் முன்வருகிறேன். வாசல்படியில், தாயும் பாட்டனாரும் என் கையை பிடித்துகொண்டு நிற்கின்றார்கள். "தம்பி....எல்லாம் படிக்கிற பிள்ளையள் அப்பு" ஓடிவந்து கார்ல் மார்க்சின் சீடனின் காலில் விழுகிறார். சாராய வாடை என் முகத்தில் வீசிகொண்டிருக்கிறது. எனது 12 வருட தோழனை, குடும்ப காவலனை சுட்ட துவக்கு என் நெஞ்சில் தள்ளாடிகொண்டிருந்தது. "டேய்...எங்கேடா உண்ட கிரனேட்?" போட்டுத்தள்ளுவதற்கு ஏற்பாடு செய்யும் முதல் ஸ்டாண்டர்ட் கேள்வியாக அந்தகாலகட்டத்தில் இருந்ததால் நான் பதில் சொல்லவில்லை. தாயை பார்க்கிறேன். பாட்டனாரை பார்க்கிறேன். விடுதலை வசந்தம் தர அடம்பிடிப்பவனின் காலில் கிடக்கும் பாட்டியை பார்க்கிறேன். "அப்பு...அவன் ஆறாம் வகுப்பு படிக்கிற குழந்தையப்பு" தனது பேரனின் உயிர் மட்டும் தான் பாட்டியின் குறியாக இருக்கிறது. தன்னை பற்றிய சிந்தனை தென்படவில்லை. நான் அழவில்லை. அமைதியாக பார்க்கிறேன். முழங்கால் அடியில் எதோ சலனம். உற்று பார்க்கிறேன். எனது கைகள் பதறிகொண்டிருந்தன. என்னால் உணர முடியவில்லை. திரும்பவும் எனக்காக உயிரை பேரம் பேசும் பாட்டியை பார்க்கிறேன். "பொய் சொல்லாதையடி...வே*" எட்டி சப்பாத்து காலால் மிதிக்கிறான். இந்த முறை முகத்தில் பட்டு பாட்டி அப்படியே திரும்பவும் சைக்கிள்கள் மேல் விழுகிறார். நியூட்டனின் விதி தெரிந்ததோ இல்லையோ, விழுந்த வேகத்திலேயே திரும்பி எழும்பி வந்தாள் தமிழச்சி. காலை இறுக்கி பிடிக்கிறாள். முகம் முழுக்க ரத்தம். பல்லுடைந்த பொக்கை வாயோடு அழுகிறாள். இப்போது கேட் பக்கம் சில உருவங்கள் தோன்றின. திரும்புகிறேன். சாப்பிட்ட, கை கழுவாத, சட்டை போடாமல் சாரத்தில் திரு அண்ணா. அவர் பல வாகனங்கள் வைத்து சுய உழைப்பால் வளர்ந்தவர். பிள்ளைகள் எல்லாம் நல்லா படித்து பெயர் பெற்றவர்கள். ஊரில் கை சுத்தமானவர் என்று பலரும் அவருடன் வியாபாரம் செய்தவர்கள். புதுசா வந்த மாவோவின் மொட்டை கடித செக் பவுன்ஸ் பண்ணியதே அவர் அங்கு தோன்றியதற்கு காரணம். திரு அண்ணா அங்கு நின்று என்னை பார்க்கிறார். இங்கிருந்து நான் பார்க்கிறேன். எங்களுக்குள் ஏதோவொரு சாந்தம். போய் சேர்வதற்கு தயாராகிறோம். ஆனால் திரு அண்ணா தான் என் உயிரின் காப்புறுதி என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை. "அப்பு...அவன் படிக்கிற பிள்ளையப்பு...அவனுக்கு உதெல்லாம் தெரியாது. அப்பு இந்தா எண்ட நகை எல்லாம் எடப்பு... அவனை ஒண்டும் செய்யாதை...படிக்கிற பிள்ளையப்பு" சங்கிலி, தாலி, தோடுகள், காப்பை மிக வேகமாக களட்டுகிறாள். எனது தாயும் நகைகளை கழட்டி பாட்டியின் கையில் போடுகிறாள். பாட்டி எனது உயிருக்கு கையூட்டாக நகைகளை கொடுக்க முனைகிறாள். பாட்டியின் கண்ணீர், வாய் இரத்தத்துடன் சேர்ந்து நகைகளை நனைத்திருந்தது. வீட்டுக்குள்ளும், வெளியிலும் அழுகை கோரசாக வந்து கொண்டிருந்தது. முதலாளித்துவ எதிர்பாளியின் பார்வை என்னை விட்டு இப்போது பாட்டியின் கையூட்டின் மேல் பதிகிறது. "கொமாண்ட்டர் கூப்பிடுறான்" வாசல் வோக்கி டோக்கி கத்தியது. பாட்டியின் கையில் இருந்ததை பறித்து கொண்டு எனது தலையில் ஓங்கி துப்பாக்கி பிடியால் ஒரு குத்து விட்டான். அவன் கண்களில் கடைசி அறிவுறுத்தல் தெரிகிறது. சரிகிறேன். தோழர்கள் கிழம்பினார்கள். அவர்களுக்கு காப்புறுதியாக திரு அண்ணா. தூசணத்தில் ஏசிக்கொண்டு சந்தியை நோக்கி செல்கிறார்கள். வீட்டுக்குள் நாம். "அது திருவே நிண்டது? " பாட்டனார் கேட்டார். "பாவம். நல்லவர். குடும்பம் குட்டிகள். அண்ணி பாவம்" எல்லோரும் சொல்லி வைத்தது போல் குழுவா சிந்தித்தோம். நாய் எலார்ம்கள் சந்தியை சுத்தி அடித்தது. "ஓடுடா....வே* மேனே... சொன்னால் ஓடமாட்டியா?" சத்த வெடி வைக்கிறான் எங்கள் தமிழ் சே குவாரா. டுட் டுட்.......................டுட். கடைசியா தலை வெடி....... டட். "மூதேசிகள்...சனியன்கள்" பாட்டி ரத்த கறை வாயோடு திட்டினாள். எனது புத்தகசாலை கனவின் பரிசாக வீங்கி மூடி கிடந்த இடது கண்ணை வருடி கொடுத்தாள். "நெற்றில பிள்ளைக்கு தைய்யல் போடோணும்" பல சாபங்களை புறுபுறுத்தாள். பனங்காட்டு நீதிமன்றை நோக்கி சாராயத்தின் துணிவில் செல்கிறார்கள் சிவப்பு மாவோயிஸ்டுகள். விதி அன்று உடன் நீதி வழங்கியது. நீதியடிதடி சத்தங்கள் பிலத்து கேட்க தொடங்கியிருந்தன. நாய் எச்சரிக்கை மணிகளும் அடங்கியிருந்தன. பதினைந்து நிமிடங்கள் செல்லவில்லை.... திரு அண்ணாவின் குடும்பம் தெருவால் அழுது கொண்டு சந்தியை நோக்கி ஓடியது. ஒருத்தரும் வீட்டை விட்டு வெளிவரவில்லை. என் குடும்பத்தின் ஓலமாக இருக்கவேண்டியது அன்று திரு அண்ணாவின் குடும்பத்திடம். "மதியத்திற்கு வாய்க்கு சோறு போட்டவள் , இரவிற்கு வாய்க்கு அரிசி போட கூடாது" என்று ஏதோ புலம்பிக்கு கொண்டு ஓடினாள் அண்ணி. எல்லாரையும் தாண்டி முன்னுக்கு ஓடினாள். அண்ணியின் குரல் சந்தியில் இருந்து எல்லோரிலும் பார்க்க பெரிதாக கேட்கிறது. "எண்ட ஐய்யோ" *************************************************************************************************** இப்போது என்னால் அடக்க முடியாமல் எழுந்து சத்தி எடுக்கிறேன். வாளியை பிடித்தார் சாமன். நனவு நிழற்படங்களை கழுவிய அழுக்கு தண்ணி வெளியேறியது போல் ஒரு உணர்வு. விக்டர் எதோ கதை குடுக்க முற்பட்டார். தாய் என்னை கடைசி அதி உச்ச கெட்ட கனவை காட்ட திருப்பி அணைக்கிறாள். இப்போது சூடு திரும்பவும் அதிகரிக்கிறது. சாமானுக்கும் தெரிகிறது. அவரும் சாந்தபடுத்த பாடதொடங்குகிறார். ***************************************************************************************************** பச்சகமக்கை கொன்றுவிட்டீர்கள்.......என் பாதியை கொன்றுவிட்டீர்கள்..... **************************************************** எனது அறிவாலய குட்டு வெளிக்கிட்டு, பலர் குட்டி, நான் உள் தெருவொன்றில் வசித்த சித்தியாரின் வீட்டுக்கு பாட்டி பாட்டன் பாதுகாப்புடன் அனுப்பி வைக்க படுகிறேன். சகோதரத்திற்கும் ஆபத்து என்று அவரும் என்னுடன் உள் தெரு வீட்டுக்கு அனுப்பபட்டார். தெரு பக்கமோ, முன் வாசல் பக்கமோ தலை வைக்க கூடாது என்று சட்டம். ஊருக்கு தொண்டு செய்ய போய் மூடி கிடந்த வீங்கிய கறுப்பு கண், வெடித்த நெற்றி நோ அந்த சட்டத்தை நடை முறை படுத்தியது. ஒரு கிழமையாக சித்தியாரின் வீட்டில் இருந்த ஒரு மரமும் விடாமல் ஏறி இறங்கி இருந்தோம். முக்கியமாக பிடுங்கும் காய், பழங்களை குரங்குகள் போல் பின் காணி மூலையில் இருந்த நுணா மர உச்சி கொப்பு நிழலில் இருந்து பாதுகாப்பாக உண்போம். அதில் இருந்து இருந்து மூன்று பக்கம் இருந்த வீடுகளையும் மற்ற பக்கத்தில் இருந்த தோட்டங்கள், குளத்தை காணலாம். அந்த மரத்திற்கு இன்னொரு வசதி இருந்தது, அது தான் தோட்ட அண்ணாவின் குடிசை இருந்த எல்லையில் இருந்தது. அவரது காணி முன்பக்கத்தை ஒரு சின்ன ஒழுங்கையால் தான் அடையலாம். அவரின் அழகான குடிசையை சுற்றி பச்சை பசேல் என்று ஒரே பழ மரங்களும், பனைகளும், தென்னைகளும், செவ்வரத்தம் பூ, தேமா மற்றும் நந்தியாவட்டை பூ மரங்களும் வளர்ந்திருந்தன. அவர்களின் குடிசை வாசல் மல்லிகை வராந்தா மிகவும் பெரியது. அவற்றின் கீழ் கோழிக்குஞ்சுகள், தாயுடன் மேய்ந்துகொண்டிருக்கும். பக்கத்தில் அவர்களின் சின்ன கூடை குடிசை. அந்த மல்லிகை இரவில் பூக்கும் போது அந்த சுற்றம் எல்லாம் கம கமக்கும். தோட்டஅண்ணி (இருவரது பேரும் எனக்கு தெரியாது.) ஊரில் எல்லோருக்கும் அந்த மல்லிகை பதிவு வைத்து இலவசமாக கொடுப்பார். அவரிடம் ஒரு ஊர் பெண்களின் பெரிய பட்டியல் பூ, பழ, தென்னங்கன்றுகளுக்கு காவல் இருந்தது. தோட்ட அண்ணா ஊரில் தோட்ட வேலைகளுக்கு பெயர் போனவர். கொத்துவது, பாத்திகட்டுவது போன்ற வேலைகள் செய்து வந்தார். தன் காணியிலும் பின்னுக்கு சின்ன தோட்டம் வைத்து சந்தையில் விற்று வந்தார். அவர் தனது வருமானத்தில் சிக்கனமாக தனது இரண்டு குழந்தைகள் மற்றும் தாயை கவனித்து வந்தார். எப்போதும் காலையில் அம்மன் கோவிலுக்கு பூ எடுத்து சென்று திருநீறு பட்டையுடன் பகலவன் எழு முன் தோட்டத்திற்கு வந்துவிடுவார். அவரின் பேரிற்கு இந்த ஒழுக்கமும் ஒரு காரணம். அவரின் பள பளக்கும் கொத்து மண்வெட்டியுடன் வந்துவிடுவார். அவருடன் குழுவா கொத்த வட்டாரத்தில் ஒரு சிலருக்கே தெம்பு இருந்தது. அந்த குடும்பம் ஊரார் வம்பிற்கு போகாமல் எப்போதும் மகிழ்ச்சியாக தம் சிறிய விவசாய உலகில் வாழ்ந்தார்கள். கொழுத்தும் வெய்யில் அன்று, மண் தணலா சுட்டது. பின் பக்கம் வீட்டுக்கும், பொயிலை கொட்டிலுக்கும் இடையில் இருந்த கொய்யா மரத்தில் நானும் சகோதரமும் சல்லடை போட்டு முத்திய காயை தேடுகிறோம். ஒன்று எனது ஒற்றை கண்ணுக்கு தெரிகிறது, அதை இரட்டை கண் சகோதரம் கவனித்து பாய்ந்து பிடுங்குகிறது. திடீரென்று உள் தெரு எச்சரிக்கை மணிகள் குரைக்க, பருந்தை கண்ட தாய் கோழி போல் பாய்ந்து வந்தார் பாட்டியார். எங்களை தள்ளி கொண்டு பொயிலை கொட்டிலுக்குள் போகிறார். பாட்டனாரும் பின் வேலியில் ஆட்டுக்கு குளை பறித்து கொண்டிருந்தவர், கொக்கதடியோடு ஓடிவருகிறார். எங்களை நெல் மூட்டைகளுக்கு பின்னால் பதுக்கிவிட்டு கொட்டில் வாசலை பார்த்தபடி பாட்டியார் இருக்கிறார். எதோ தேவாரத்தை முணுமுணுத்து கொண்டிருந்தார். "இந்திய ஆர்மி காரன் இப்ப டாங்கை ரோட்டில ஓடாமல் வீட்டு பின் பக்க வேலிகள் ஊடக ஓடி திரியுறாங்கள்" குளை பறித்து முடிக்காத கோபத்தில் புறுபுறுக்கிறார். சில மூன்று தலை சிங்கங்கள் டாங்கியில் உறுமி கொண்டு செல்வது கேட்கிறது. பாட்டனாரும் எத்தனை வேலிகள் பிரிக்கபடுகின்றன என்பதை எண்ணி கொண்டிருப்பது தெரிகிறது. உறுமல் அடுத்த தெருவில் நிற்பது கேட்கிறது. இப்போது ஒருவித இறுக்கம் எங்களை சூழ்கிறது. தமிழருக்கு விசுவாசமாக இருக்கும் ஒரே இனம், குரல் ஓங்கி கொடுக்கிறது. சில ட்ரக் வாகனங்களும் வந்து சுற்றத்தில் நிற்பது கேட்கிறது. பாட்டியின் தேவாரத்தில் இப்போது நடுக்கம் தெரிகிறது. குஞ்சை திரும்பவும் கொத்த வந்துவிட்டார்கள் என்ற பயம். எனக்கும் தலை திரும்பவும் விறைக்க தொடங்குகிறது. "இண்டைக்கு தப்ப முடியாது" என்னையே திரும்பவும் தேற்ற முயற்சிக்கிறேன். ஆனால் குறி அன்று நானில்லை. தோட்ட அண்ணா வீட்டு ஒழுங்கையால் மகாத்மா காந்தியின் அமைதி படை எதையோ இந்தியில் கத்தி கொண்டு வர தமிழ் பேசும் ஒட்டுக்குழு அதை மொழி பெயர்த்து கத்தி கொண்டு வந்தார். எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை ஆனால் விபரீதம் நடக்க போகிறது என்று உறுத்தியது. "போன கிழமை வேண்டி கட்டினதோட அந்த குழு ஓடிட்டுது. இப்ப புதுசா யாரையோ கொண்டு வந்திட்டாங்கள். சந்தையில திருப்பியும் இலஞ்சம் கேட்டு அட்டாகசமாம்" பாட்டனார் புறுபுறுக்கிறார். "வெளில வாடா நாயே. கள்ள கரண்ட் எடுக்கிறியோ?" புதுசா வந்தவர் வெருட்ட புதிய பொறி முறையுடன் வந்திருந்தார். தோட்ட அண்ணாவின் குரல் பெரிதாக கேட்கவில்லை. சாந்தமான மனுசன். "பொய் சொல்லாதையடா. வர சொன்னால் வராமல் இங்க ஒளிச்சிருக்கிறியோ?" இன்னொரு பொறி முறையை பாவித்தார் புதுசா வந்த செஞ்சேனை தோழர். தோட்ட அண்ணி அழுவது கேட்கிறது. பின்னுக்கு கோரசாக குழந்தைகளும், மாமியாரும் விசும்புவது கேட்கிறது. "இந்த அப்பாவி வீட்டுக்கு ஏன் வந்தாங்கள்? கோதாரி பிடிச்சவங்கள்" பாட்டி தேவாரத்தை நிறுத்தி சபித்தார். அவருக்கும், எங்களுக்கும் பதில் தெரியும். "பின்னுக்கு வாடா!" கட்டளையிட்டார் புதுசா வந்தவர். இப்போது அமைதி படை அதிகாரி எதையோ இந்தியில் சொல்ல தட தட வென்று பின் நுணா மரம் தொடக்கம் எல்லா இடமும் பாதுகாப்பு கொடுக்கிறார்கள். பின் வேலிக்கு கிட்ட வந்தபடியால் மூச்சு விடக்கூட பயத்தில் உறைந்தோம். பாட்டியாரும் தேவாரத்தை முணுமுணுப்பதை நிறுத்தி ஒட்டு கேட்கிறார். "ம்ம்ம்.. வெட்டுடா கிடங்கை" புதுசா வந்தவர் கட்டளை இட்டார். "தம்பி... நான் குழந்தை குட்டி காரன்" தோட்ட அண்ணா எல்லா தமிழ் தந்தையாரும் பாவித்த வசனத்தை பாவித்தார். "என்னட்ட தர ஒண்டும் இல்ல தம்பி. நான் கிடந்த நகையை முந்தி இருந்தவரிட்ட கொடுத்திட்டம். என்னட்ட ஒண்டும் இல்லை தம்பி" கெஞ்சினார். "வெட்டுட்டா வே...மேணே" குரலை தூக்கினார் சுதந்திர படையின் பகடை. மண்வெட்டி இறுகிய மண்ணில் விழுகிறது. "தம்பி, இந்த மண்வெட்டி சரி வராது. இது மொட்டையாகிடும். தொழிலுக்கு வேணும்" அவர் ஓங்கி கொத்தும் போது வேலிக்கு மேலால் பள பளக்கிறது மண்வெட்டி. அவரது வாழ்வாதாரத்தின் முதலீடு. "உனக்கு கேட்டதை குடுக்க வக்கில்லை. மண்வெட்டி கேட்குதோ? எனக்கு விசர் ஏத்தாதை" கொதித்தான். இந்தியில் எதோ கட்டளைகள் பறந்தது. இப்போது தோட்ட அண்ணா கெஞ்சலாக "ஐயா...ஐயா... காசு இல்லை ஐயா. இருந்த காசை சந்தையில வைச்சு குடுத்திட்டன் ஐயா" யாரோ ஒரு அமைதி படை கூலி துவக்கால் இடிக்கிறது. "ஆஆ....ஐயா" விவசாயி அலறினார். "என்னங்கோ....என்னங்கோ......" அண்ணி. "அப்பா...அப்பா..." குழந்தைகள். "ஐயா....என்ட புருசனை ஒண்டும் செய்யாதிங்கோ" அண்ணி ஓடிவருவது கேட்கிறது. கூலிகள் கூவினார்கள். "திரும்பி போடி வே... வீட்டோட எல்லாரையும் கொழுத்திபோடுவன்! என்னை யாரெண்டு நினைசீங்கள்" வீரம் காட்டினார் கையூட்டு பெற வந்தவர். அண்ணியை யாரோ குடிசைக்கு இழுத்து போவது அவரது அழுகை சத்தத்தை வைத்து தெரிகிறது. "வெட்டுடா நாயே" ஊருக்கு உணவு போட்டவருக்கு மரியாதை கொடுக்கப்பட்டது. "தம்பி...என்னால் ஓரடிக்கு மேல வெட்ட முடியாது. ஒரே கல்லு. தம்பி காசை எப்படியாவது தருறன் தம்பி" தன் குடும்பத்திற்காக கெஞ்சினார் தோட்ட அண்ணா. "ம்ம்ம்... நீ நல்லா தருவாய்... உனக்கு குடுக்கிறதில எல்லாரும் தானா வந்து தருவினம்" கணக்கு போட்டார் புதுசா வந்த ஆயுதமேந்திய சேவகன். ஒழுங்கை வாசலில் இந்தி சத்தம். தமிழில் புதுசா வந்தவரின் வலது கை "கொமாண்டர் வரட்டாம்" தோட்ட அண்ணா கலவரபட்டார். குடிசைக்குள் குடும்பத்தின் ஓலம். "ஐயா....ஐயா....சின்ன குழந்தைகள் ஐயா... என்ட குடும்பத்தை பார்க்க ஒருத்தரும் இல்லை ஐயா" "தம்பி...தம்பி என்னை ஒண்டும் செய்யாதை தம்பி. நான் ஒரு சோழி சுரட்டுக்கும் போறதில்லை தம்பி" ""டேய்...கிடங்குக்க இருடா" ""தம்பி வேண்டாம்... வேண்டாம். என்ட குடும்பம், தோட்டம் துரவு என்று வாழுறவன். ......தம்பி நான் ஒரு கமக்......" டுட் டுட்... டுட்..... தலை வெடி.... டட் அண்டம் அடங்கியது. ஒரு சத்தம் இல்லை. நாய், குருவி, காக்கா சத்தம் இல்லை. மயான அமைதி. எதோ ஒன்று உலகத்தில் இருந்து அகற்றபட்ட உணர்வு. நுணா மரத்திற்கு கீழ் அண்ணியின் குரல் ஓங்கியது. "என்ட தெய்வமே!" "பூவார் சென்னி மன்னன்எம் புயங்கப் பெருமான் சிறியோமை ஓவா துள்ளங் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால் ஆவா என்னப் பட்டன்பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமின் போவோம் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே"** *********************************************** இப்போது எங்கும் இருந்த வர்ண நிற சோளக்காடு பொசுங்குகிறது. எனக்கு வாழ்நாளில் தெரிந்த எல்லோரும் வாடி வதங்கி கன்னம் இடிந்து சுருங்கி அப்படியே வெட்கையில் உருகினார்கள். அந்த உருகிய திரவமும் வறண்டு, கருகிய வண்டல் மண் மாறி செவ்வாய்க்கிரக நிலத்தில் இருப்பது போன்ற நிலத்தில் இருக்கின்றேன். எல்லாவற்றையும் அழித்துவிட்டோம். நான் மட்டும் அந்த சிவந்த உயிரற்ற தரையில். இனி வாழ்ந்து என்ன பிரயோசனம்? எல்லாம் இருந்தும் அழித்துவிட்டோம். திடீரென்று ஒரு வெள்ளை ஒளி ஒன்று தோன்றி இந்த சிவப்பு கிரகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. எல்லாம் சரியாக வரும் என்ற ஒரு நம்பிக்கை பூவாக நெஞ்சுக்குள் மலர்ந்தது. அப்படியே பல நினைவுகள்,காட்சிகள் ஓட தொடங்கின. பல விடயங்களை கற்று தர தொடங்கினாள். எனது மூளை அவ்வளவையும் தரவேற்றம் செய்து கொண்டிருந்தது. கிரகிக்க நேரம் தேவை. பல வருடங்கள் தேவை. சாமனின் தேவாரம் திரும்பவும் கேட்க தொடங்கிறது. ஆனால் இப்போது சத்தமாக மட்டும் கேட்கிறது. புகை வாசமும் மூக்கால் மணக்கிறது. கண்ணை விழிக்கிறேன்! பொய்யை பார்க்கிறேன். *********************************************** நன்றி. வணக்கம். *********************************************** பின்குறிப்புகள்: *********************************************** **பூவார் சென்னி மன்னன்எம் புயங்கப் பெருமான் சிறியோமை ஓவா துள்ளங் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால் ஆவா என்னப் பட்டன்பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமின் போவோம் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே." அழகிய பூசனை மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட சடையும் பாம்பணிந்த புஜமும் கொண்ட எங்கள் பெருமான் சிறியோர் ஆகிய‌ எம் உள்ளத்திலே, உணர்வுமயமாகிக் கலந்து ஓயாமல் உருக்குகின்றான். இது கண்டு அவன் ஐயோ என இரங்கி, அவன் பெருங்கருணையினால் அவன் அன்பில் ஆட்பட்டீர். அவன் அன்பில் ஆட்பட்டவரே.. பொய் என்னும் இவ்வாழ்வு விட்டு மெய்யாகிய எம்மிறைவன் திருவடி அடையும் காலம் இதுவே. அந்த‌ யாத்திரை வாருங்கள். *********************************************** மிக முக்கிய தகவல்: அயவாஸ்கா போதை பொருள் அல்ல. இதை விளையாட்டாக பாவிக்க கூடாது! மெக்சிகோ, கொஸ்ட ரீக்கா, பேரு போன்ற நாடுகளில் மருத்துவரின் ஆலோசனை மற்றும் அங்கீகாரம் பெற்ற சாமனிடம் மட்டும் போகவேண்டும். பல போலி சாமன்கள் சுற்றுலா பயணிகளை ஏமாற்றி களவு செய்வார்கள். இது போதை பொருள், மது அடிமைகளுக்கு அருமருந்து. கான்சருக்கும் இதை மருந்தாக பாவிக்கிறார்கள். http://en.wikipedia.org/wiki/Ayahuasca *********************************************** சகுனம் பற்றி படிக்க பவலோ கொஎலொவின் அல்கெமிஸ்ட் படியுங்கள். *********************************************** DMT: The Spirit Molelcule (Documentary on Netflix) *********************************************** அவதார் படத்தில் கமெரோன் மரத்தின் கொடியுடன் தொடர்பை ஏற்படுத்துவது போல் காட்டுகிறார். அந்த மரத்தின் கொடியும், ஆதிவாசிகளின் தலையில் தொங்கும் கொடியும், அயவாஸ்கா கொடி போல் இருக்கும். விஞ்ஞானியும் கடைசியில் பச்சையம்மாவுடன் கலப்பார். கமெரோன் இந்த படத்தில் நிறைய இயற்கை கேந்திர கணித தொழில் நுட்பங்களை புகுத்தியிருந்தார். *********************************************** Key food crops head to Arctic 'doomsday vault' http://www.bbc.com/news/science-environment-26338709 *********************************************** The Pyramid Code : 5 Part Series (NetFlix) *********************************************** The Secret of Nikola Tesla (The Movie) *********************************************** Fractals The Hidden Dimension *http://youtu.be/lmxJ1KDR_s0 *********************************************** மேலுள்ள படங்கள் யாவும் கூகிளில் தேடியவை. அவற்றின் உரிமை அதன் உரிமையாளர்களுக்கே சொந்தம்.
யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு