விண்ணை அளந்திடும் புள்ளினம் போல் மனம் எண்ணிலா எண்ணம் கொண்டு மிதந்திடும்; மண்ணில் சூரியக் வெளிச்சமும் விழு முன்னே கண்ணும் விழித்த கணமே துள்ளி எழ வைக்கும்; திண்ணிய மனதுடன் எண்ணிய கருமத்தை வண்ணமுறச் செய்திடும் துணிவையும் தந்திடும்; தன்னைக் கற்றுணர்ந்து கொண்ட இலட்சியம் உண்மையென நம்பி உழைக்கும் மனிதர்க்கு!
***
எழிலினை எதனிலும் கண்டு நயந்திடும் பார்வையும் முழுமையிலா அவனியின் தன்மை உணர் புன்னகையும் அழுக்காறு களைந்து பிறரை வாழ்த்திடும் உள்ளமும் ஆழ்மனம் சொல்லும் வழி விலகாத வாழ்வும் கொள்ள அளவில்லாக் களிப்பில் ஆன்மா முழுமை கொள்ளும்!
***
எல்லைகள் தெரியா விரிந்த வான வெளி - ஆங்கே எல்லையாய் உந்தன் மனம்