• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. நெற்கொழு தாசன்

  நெற்கொழு தாசன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   487


 2. நவீனன்

  நவீனன்

  வரையறுக்கப்பட்ட அனுமதி


  • Points

   4

  • Content Count

   85,545


 3. nochchi

  nochchi

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   2

  • Content Count

   3,494


 4. கிருபன்

  கிருபன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   1

  • Content Count

   19,100Popular Content

Showing content with the highest reputation on 11/04/2015 in Posts

 1. 4 points
  இந்தக் கதைக்கும், கதைசொல்லியான எனக்கும் ஏதாவது ஒரு தொடர்பு இருக்கும் என்று, இந்தப் பிரதியை வாசிக்கும் போது நீங்கள் நினைக்கக் கூடும் என்ற நினைப்போடுதான் இப்பிரதியினை உருவாக்கத் தொடங்குகிறேன். எவ்வகையானதொரு நோக்கு நிலையில் நின்று நீங்கள் இதனை வாசிப்பீர்கள் என்ற ஒரு சந்தேகமும் என்னுள் எழாமல் இல்லை. ஏனென்றால் நான் கூட புதிய கதைசொல்லிகளின் கதைகளை, வாசிப்பின் ஆரம்ப காலங்களில் அதிகளவு ஈடுபாட்டுடன் வாசித்ததில்லை. பின்நவீனத்துவம் ,பெருங்கதையாடல்களின் முடிவு, பிரதியினை கட்டுடைத்தல், மையசிதைவு அல்லது மையமின்மை போன்ற பல்வேறு உத்திகளுடன் ஒரு கதையை ஆரம்பித்து நகர்த்துதல் என்ற பல்கோட்பாட்டு நிலையில், ஒரு சிறுகதைக்கான கட்டமைப்பு மீதான கரிசனம் அதிகரித்தபின் கண்ணில் படும் எந்த ஒரு பிரதியையும் வாசிக்க தவறியதில்லை. உண்மையில் இன்றைய இந்த நிலைக்கு நான் பாரிசில் சந்தித்த ஒரு ஈழக் கதைசொல்லி தான் காரணம். தொண்டைமனாற்று செல்வச்சன்னதி கோவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி நீளும் அந்த பிரதான பாதையின் குறியீட்டு இலக்கம் சி 15. சன்னதி கோவிலின் முகப்பில் இருந்து ஆரம்பித்தால் வரும் முற்சந்தியில் இடதுபக்கம் திரும்பி ஒரு ஐந்து நிமிட நடைதூரத்தில் இருக்கும் வளைவினூடாக பயணித்து அங்கிருந்து சுமார் இருபது நிமிட தூரத்தில் வயல்வெளிகளையும் கல் வீடுகளையும் சிறிய சிறிய பற்றைகளையும் ஒரு தனியார் கல்வி நிலையத்தையும் கடந்தபின் யாழ் பருத்தித்துறை பிரதான வீதியோடு நீங்கள் பயணித்துவந்த பாதை இணையும். அது ஒரு முற்சந்தியாகவும் அதன் மையத்தில் ஒரு நூலகமும் பிரதான வீதியின் அருகில் இரண்டு தனியார் கடைகளும், ஒரு பேருந்து தரிப்பிடமும் இருக்கும். 15 ம் கட்டையடி என்று அழைக்கப்படும். அந்த இடம் தான் இந்தக் கதை ஆரம்பிக்கும் தளம். இப்படித்தான் இந்தக் கதையின் ஆரம்பத்தினை ஆரம்பித்தேன். முழுதாக மூன்று மாதங்களும் பதினைந்து நாட்களும் இணைய இணைப்பு இல்லாமல் இருந்தமையால் இதை முழுதுமாகவே மறந்துவிட்டிருந்தேன். பின்னொரு நாளில் மீண்டும் உத்வேகத்தோடு ஏதாவது எழுதிவிடவேண்டும் என்ற நிலையில் கோப்புக்களை பிரட்டித் தேடி எடுத்தபோது எழுதிக் குறையில் நின்றிருந்த இந்தக் கதை கண்ணுக்குள் உறுத்தியது. ஆரம்பித்த முறையையும், கதையின் கருவையும் மறந்துவிட்டிருந்த நிலையில் கதைக்காக, ஆரம்பித்த நாளிளிலிருந்த மனநிலைக்கு என்னை கடத்திப்போக முயன்றேன். கால நீட்சி உணர்வுகளை சிதையப்பண்ணி இருந்தமையாலும், இலங்கையில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த அவதானங்களாலும் கதையினை கண்டடைதல் என்பது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து வந்து நின்ற பேருந்தில் 15 கட்டை இறக்கம் என்ற நடத்துனரின் குரலினைக்கேட்டு இருக்கையில் இருந்து எழுந்து வாசல்படியை அடைந்த நடேசன் நிதானமாக பேருந்திலிருந்து இறங்கினான். நல்ல வெயில். முன்னர் போல வீதி வெறிச்சோடிக் கிடக்கவில்லை. வெயிலையும் பொருட்படுத்தாமல் கனரக வாகனங்களும் மொட்டார்சைக்கிள்களும் ஓரிரு சைக்கிள்களும் இடைவிடாது வீதியில் ஓடிக்கொண்டு இருந்தன. அந்த இடத்தின் சூழலை மெதுவாக எடைபோட்டான் நடேசன். 15 மைல் என்று எழுதி அடையாளமிட்டு நடப்பட்டிருந்த கல்லை தேடினான். காணவில்லை. நேரே அந்தக் கல் இருந்த இடத்தை நோக்கி நடந்து போனான். கைகால் குறண்டுவது போலவும் ஆமை தன் தலை மற்றும் கால்களை உள்ளுக்குள் இழுத்துவிடுவது போலவும் தனக்குள் ஒடுங்கி விடுவதாயும் உணர்ந்தவன் மைல் கல் இருந்த இடம் நோக்கி மெதுவாக நடக்கத்தொடங்கினான். சரியாக இருபத்து எட்டு ஆண்டுகளுக்கு முன், பதினைந்து வயதில், பாடசாலை முடிந்த குதூகலத்துடன் மிக வேகமாக சைக்கிளில் வந்தவன் இதே சந்தியில் குழுமி நின்ற மக்கள் கூட்டத்தை கண்டதும் சைக்கிளை மெதுவாக நிறுத்தி அருகில் நின்ற பெரியவரிடம் என்ன நடந்தது என்று கேட்டான். காட்டிக் குடுத்தவனை ஊர்வலமாக கொண்டுவந்து கண்ணை கட்டி வைச்சிருக்கிறாங்கள் என்றார். சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு கூட்டத்துக்குள் நுழைந்து ஒருவாறு கண்ணைக் கட்டிய அந்த நபரை பார்ப்பதற்கு வசதியாக நின்றுகொண்டான் நடேசன். புலம்பெயர்ந்த பின்னான காலம் உண்மையில் எனக்கு ஒரு பொற்காலம் தான். கதை சொல்லி ஒருவரின் நெருக்கமும் இங்கே தான் கிடைத்தது. ஊரில் இருந்தவரை வாசிப்புக்களோ அல்லது இலக்கிய உரையாடல்களோ குறைந்த பட்சம் ஒரு புத்தகத்தைப் பற்றி கதைக்கவோ யாரும் இருந்தததில்லை. எந்த நேரமும் படி படி என்று ஆக்கினை செய்யும் அப்பாவின் குரலும், சாப்பிடு சாப்பிடு என்று தொடரும் அம்மாவின் குரலும் டேய் பான் வேண்டிவாடா, பருப்பு வேண்டிவாடா என்ற அக்காவின் குரலும் புகையிலை தோட்டத்தில் கெட்டு உடைத்தபடி நல்லதம்பி பேசும் தூசனங்களும் மட்டுமே இலக்கியங்களாக இருந்ததெனலாம். ஆக மிஞ்சிப்போனால் கடலைவாத்தி மேடையில் பேசின பேச்சுக்கள் மட்டும்தாம் மிகப்பெரிய இலக்கிய ஆதர்சமாக இருந்த காலம் அது. எழுத்தாளனின் தகுதி என்ன எடுத்த எடுப்பிலேயே அந்த கதைசொல்லியிடம் கேட்டேன். என்னை மேலும் கீழும் பார்த்த கதை சொல்லி தேநீரைக் குடித்தபடி இலகுவாக "ஒன்றுமில்லை. அப்படி இருந்தால் சொல்லுங்கள் நானும் இனிக் கடைப்பிடிப்பம்" என்று இலகுவாக நிறுத்தி விட்டு, நீங்கள் இப்போது வாசிக்கும் புத்தகம் என்ன என்று கேட்டார். புத்தகத்தை சொன்னேன். சிரித்துவிட்டு ஓய்வுநாளில் வீட்ட வாங்க தேவையான புத்தகங்களை எடுத்துசென்று வாசிங்க, என கூறினார். அடுத்த திங்கள் லீவு அன்று வருகிறேன் என்று கூறியபடி விடைபெற்றேன் கதைசொல்லியிடமிருந்து. வாசலில் சைக்கிளைப் போட்டுவிட்டு ஓடிய நடேசன் தாயின் கையை இறுக்கிப்பிடித்தான். மகனின் முகத்தையும் கை நடுக்கத்தையும் கண்ட தாய் பதறி என்னடா நடந்தது ஏன் இப்படி ஓடிவாராய் முகம் எல்லாம் எல்லாம் வெளிறிக்கிடக்கு என்னாச்சப்பன். என கேட்டபடி தலையை தடவினார். அம்மா 15 கட்டை சந்தியில இயக்கம் ஒரு ஆளைக் கொண்டுவந்து வெட்டினவங்கள் அந்த இடமெல்லாம் ஒரே இரத்தம் அந்தாள் சாப்பிட்ட சோறு கழுத்தால கொட்டுப்பட்டு ரத்ததில மிதந்து கிடந்தது. ஏனம்மா இப்படி வெட்டுகினம். எனக் கேட்டான். ஐயோ கடவுளே எப்ப நடந்தது நீ ஏன் அதப் பார்க்கப்போனனி. பேசாமல் வீட்ட வாறது தானே என்றபடி நடேசனை அழைத்துசென்று முதல் குளிச்சிட்டு வா. என்றபடி கிணற்றடிக்கு அனுப்பினாள். நீண்ட ஒரு தயக்கத்துடன் கிணற்றை நோக்கி சென்ற நடேசன், அலைந்த மனதுடன் நீரை அள்ளி தலையில் ஊற்றி தோயத்தொடங்கினான் போய் சாமி கும்பிட்டுவாங்கோ அதெல்லாம் ஒன்றுமில்லை. அம்மா சோறு தல்லாம் சாப்பிடலாம். என்று குளித்துவிட்டு வந்த நடேசனிடம் கூறினார். தாய் குழைத்து வைத்திருந்த சோற்றினை பார்த்த நடேசன் ஓங்காளித்து வாந்தி எடுத்தான். அன்றிலிருந்து ஐந்து நாட்கள் இந்திராணி மாவட்ட வைத்தியசாலையில் காச்சலுக்கு கிசிச்சை பெற்றான். ஊரின் நிலைமைகள் கொஞ்சம் கொஞ்சமாக மோசமாகத்தொடங்கின. எங்கும் தண்டனைகளும் கொலைகளும் நிறைந்து போயின. மக்களில் ஒரு சாராரும் கல்விமான்களில் ஒரு சாராரும் மௌனமாக இருந்தனர். மறுதரப்பினர் பொடியள் செய்வது சரி, இப்படி தண்டனைகள் கொடுத்தால் தான் எல்லோரும் திருந்துவினம் என்று கொக்கரித்து வழிமொழிந்தனர். நடேசன் தன் பதினாறாவது வயதில் சொந்த கிராமத்தை விட்டு தாய், தந்தையை, சகோதரியை விட்டு வெளியேறினான். நான் பாரிஸில், நாட்கள், பொழுதுகள் இரவு பகல் என்றில்லாமல் வாசிக்கத்தொடங்கினேன். கண்டதெல்லாம், தெரிந்ததெல்லாம் வாசித்தேன். இந்த நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக எழுதவும் தொடங்கி இருந்தேன் என்பதனை கூச்சத்துடன் சொல்லிக்கொள்கிறேன். எழுத ஆரம்பித்த நாட்களில் ஒவ்வொருவரும் கண்ணுக்குள் வருவார்கள் ஒரு பந்தியினை எழுதி முடிந்ததும் இவர் என்ன சொல்லுவார், அவர் என்ன நினைப்பர் ,இதைப் பார்த்தால் ஊரில என்ன நினைப்பினம் என யோசிக்கவும் வேண்டி வந்தது. ஒவ்வொருவருக்காவும் எழுத்தின் சாரத்துக்களை மாற்றி எல்லோரையும் திருப்திப்படுத்தும் வகையில் எழுதி முடித்து விட்டு, இரண்டு மூன்று நாட்களின் பின் மீண்டும் வாசிக்கையில் உயிரோட்டமில்லாத ஒரு சவக்களை உடைய எழுத்தாகவே அமைந்திருந்ததை உணர்ந்தும் கொண்டேன். பாரிஸ். உலக கலைகளின் இருப்பிடம். எந்த துறையை எடுத்தாலும் அதில் பாரிஸின் பங்களிப்பு பிரமிக்க வைக்கும். பாரிஸில் வாழ்ந்த அறிஞர்களை பட்டியலிட்டால் இந்த பக்கம் முழுவது நிறைந்துவிடும். பெருமை மிக்க பாரிஸில் தமிழர்களும் தம் கலைசார்ந்த நிகழ்வுக்கு பெரும் பங்களிப்பினை செய்துவந்தனர். மற்ற எந்த நாட்டிலும் இல்லாத வகையில் தமிழின் கலைகளில் பரிஸ்வாழ் தமிழர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகவும் வியக்கவைப்பதாகவும் இருந்தது. இப்படிப்பட்ட ஒரு தளத்தில் நானும் இயங்கத் தொடங்கினேன். அப்படியான ஒரு வாசிப்பு நாளில் பாரிஸில் இருந்து வெளியாகிய அம்மா ஓசை எக்ஸில் உயிர்மெய் குமுறல் எரிமலை சமர் என சில சஞ்சிகைகள் கிடைத்தன. நடேசன் தன்பதினேழாவது வயதில் ஊரை விட்டு வெளியேறினான். இருபதாவது வயதில் பாரிஸ் வந்தடைந்தான். பாரிஸ் நடேசனை "நாடா" வாக்கியது. இதிலிருந்து கதைமாந்தன் நாடா என்றே அழைக்கப்படுவான். வழமையான புலம்பெயர் வாழ்வியலை நாடாவும் அனுபவித்தான் கொண்டாடினான். பல நாடுகளுக்கும் சுற்றுலா தளங்களுக்கும் சென்றான். தமக்கைக்கும் திருமணம் பேசி பரிஸுக்கே கூப்பிட்டான். திருமணம் முடித்தான். தாய் தந்தையரை அழைத்து தன்னோடு வைத்துக்கொண்டான். பாரிஸின் புறநகர் ஒன்றில் நிலவீடு வாங்கி சராசரியான ஒரு தமிழனாக தன்னையும் மாற்றிக்கொண்டான். பிள்ளைகளை இருவரும் வளர்ந்து தங்கள் அலுவல்களை தாங்களே செய்யும் நிலைக்கு வந்துவிட்டிருந்தனர் . அவ்வாறாதொரு நாளில், லாசெப்பல் சாப்பாட்டுக் கடையில் மதிய உணவினை சாப்பிட்டுக்கொண்டு இருந்தான். தம்பி ஒரு மரக்கறி சாப்பாடு என்ற குரலினை கேட்டு நிமிர்ந்து பார்த்தான் நாடா. தனக்கு முன்னால் வந்தமர்ந்த நபரை எங்கேயோ பார்த்தது போன்ற நினைவு வர மீன்டும் மீன்டும் யோசித்தான், உணவு வந்துவிட நிமர்ந்து மீண்டும் முன்னால் இருந்த நபரைப் பார்த்தான். அந்த நபரோ தன உணவிலேயே கவனமாக இருந்தார். சோற்றில் பீட்ரூட் கறியினை கலந்து குழைக்க சோறு சிகப்பாகியது. முகத்தை நிமிர்ந்து பார்த்தான். குடல்மேல் எழும்பி தொண்டையை அடைத்தது. முகம் நினைவுக்கு வந்தது. வம்பில பிறந்தது என்றபடியே கதிரையை தள்ளி எழுந்த நாடா வாயைப்பொத்தியபடி ஓடிப்போய் கடைவாசலில் வாந்தி எடுத்தான். வாந்தியோடு சோறும் கலந்து வந்தது. கண்கள் கலங்கி சிவந்து உதடுகள் துடிக்க, 15 கட்டை நினைவுக்கு வந்தது. குருதியில் மிதந்த சோறு நினைவுக்கு வந்தது. சன்னிதி கோவில் முகப்பிலிருந்து கழுத்தில் தொங்கிய மட்டையோடு கைகள் கட்டப்பட்ட நிலையில் பெருத்த மனிதர் நடந்துவர சனங்கள் கூட்டமாகவும், அந்தக் கூட்டத்தினிடையே பெண்ணொருத்தியின் விம்மி அழும் குரலும் கேட்டது. அதன் பின் எதுவுமே நினைவில் வர மறுக்க தளர்ந்து ஒடுங்கிப் போய் கடையில் ஓரத்தில் இருந்த கதிரையில் அமர்ந்தான் நாடாவாகிய நடேசன் நடேசனுக்கு மிக நெருக்கமாக மக்கள் கூட்டத்தின் மத்தியில் அவர்கள் நின்றிருந்தார்கள். மக்கள் சுற்றி வர கூட்டமாக முனுமுனுத்தபடி நின்றனர். கைகள் பின்னால் கட்டப்பட நிலையில் கண்களை சுற்றி கறுத்த துணியால் கட்டியிருந்தனர். அவரின் பருத்த தேகத்திலிருந்து வியர்வை வழிந்துகொண்டிருந்தது. ஒரு பழைய சாரத்தினை மட்டும் கட்டியிருந்த அந்த மனிதர் கால்களில் வெள்ளைப் புழுதிபடிந்திருந்தது. அந்த வெள்ளை புழுதிகளில் வியர்வை கோடு கோடாக இறங்கிக் கொண்டிருந்தது. என்ன நடக்கபோகிறது என்று தெரியாமலேயே மௌனமாக அவமானப்படுத்தப்பட்ட ஒரு உணர்வற்ற நிலையில் அவரது உடல் குறுகி நின்றது. உடல் மொழியில் இருந்து நாளை இந்த மக்கள் முன்னால் எப்படி நடமாடப்போகிறேன் என்ற கேள்வியே எழுவது போல இருந்தது நடேசனுக்கு. ஒற்றையில் எழுதி வந்து எதோ வாசித்தார்கள் அவர்கள். தண்டனை வழங்க தீர்மானிக்கப்பட்டது என்ற சொல் மட்டும் தெளிவாக விளங்கியது நடேசனுக்கு. அவர்களில் இருவர் நடேசனை பின்னாலிருந்து தள்ளி, 15 மைல் கல்லின் மேல் கழுத்து இருக்கும்படி குனிய வைத்து பிடித்தனர் ஒருவன் தலைமுடியை இழுத்துப்பிடித்திருந்தான். கல்லின் மேல்பகுதியில் கழுத்து வாகாக பொருந்தி இருந்தது. ஆளுக்கு நல்ல அடிவிழப்போகுது போல அதுதான் ஆடாமல் அசையாமல் பிடிக்கினம் என நினைத்தபடி அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான் நடேசன். சனங்களுக்கிடையில் இருந்து ஒருவன் நான்காவது ஆளிடம் ஒரு உரப்பையை கொண்டுவது கொடுத்தான். தனது பிஸ்ரலை கழட்டி அந்த ஆளிடம் கொடுத்துவிட்டு வளம் பார்த்து நின்றுகொண்டான் அந்த நான்காவது ஆள். உரப்பையை உதறியபோதுதான் நடேசனுக்கு விபரீதம் புரிந்தது. திரும்பி ஓட முயன்றான். பலவகை குரல்கள் சனக்கூட்டத்திருந்து கேட்டுக்கொண்டு இருக்க அந்த நான்காவது ஆள் கையில் இருந்த வாளை உயர்த்தி அந்த மனிதனின் கழுத்தில் சரியாக இறக்கினான். 15ம் மைல் கல் ரத்தத்தில் குளித்தது. ஒருபக்கம் மலைபோல உடல் கிடந்தது துடித்துக்கொண்டு கிடக்க, தலையை கையில் பிடித்திருந்தவன் கிழே போட்டான். துள்ளி உருண்ட தலை அடங்கியபோது நடேசனின் காலடியில் கிடந்தது. திடீரென மிக வேகமாக வந்து நின்ற வானில் அந்த ஐவரும் சிரித்தபடியே ஏறினர். வாகனத்தின் அடர்ந்த புகை அந்த கூட்டதிருந்த மக்களின் முகங்களை விட வெள்ளையாக இருந்தது. அவர்கள் போய் விட்டனர் . நடேசன் சைக்கிளை எடுத்து வீடு நோக்கி ஓடினான். அந்த தனியார் கல்விநிலைய சந்தியில் தலைவிரி கோலமாக தாயும் சிறு பெண் குழந்தையும் ஓடிவருதையும் கண்டான். வேறு எதுவும் காணவில்லை அல்லது உணரும் நிலையில் மனம் இருக்கவில்லை. பாரிஸிலிருந்து வெளியாகும் ஏதாவது ஒரு சஞ்சிகைக்கு ஒரு கதை எழுதிவிட வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. புலம்பெயர் தமிழ் இலக்கியத்தளத்தில் சிறு சஞ்சிகைகளின் தாக்கம் வரையறைக்குற்பட்டதல்ல. அரசியல் என்றாலும் இலக்கியம் என்றாலும் மாற்றங்களை ஏற்படுத்தி கொண்டே இருப்பவை மட்டுமல்ல, சர்ச்சைகள் புதிய புதிய இலக்கிய முயற்சிகள் என சிறு சஞ்சிகைகளின் போக்குகள் அந்த சூழலை மாற்றி அமைத்துவிடும். அப்படியான சஞ்சிகைகள் கைக்கு கிடைத்ததும் அந்த சஞ்சிகைகளின் ஆசிரியர்களின் நட்பினை தேடி அலையத் தொடங்கினேன். ஏதாவது ஒரு சஞ்சிகையில் நானும் ஏதாவது ஒரு கதையை எழுதிவிட வேண்டும். எனது கதை சொல்லும் தகுதியை நிருபிக்கவேண்டும் என்ற ஆசை பல மடங்கு பெரிதாகி நின்றது. ஒரு நாள் தொடரூந்தில் தாஸ்தயேவ்ஸ்கியின் "அருவருப்பான விவகாரம் " என்ற புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். திடீரென ஒரு குரல், தம்பி என்ன புத்தகம் வாசிக்கிறீங்க ? புத்தகத்தை காட்டிவிட்டு அவரைப் பார்த்தேன். திகைத்தேன். ஈழத்தின் மூத்த கதைசொல்லி. பழகினேன். பழகினார் . அன்று தொட்டு பலதும் கதைத்தோம். இலக்கியம் அரசியல் எல்லாம் கதைத்தோம். கொஞ்சம் கொஞ்சமாக எனக்குள்ளும் நம்பிக்கை வரத்தொடங்கியது நானும் என்றாவது ஒரு நாள் ஒரு கதையை எழுதி விடுவேன் என. இப்படியான நாளில் தான் அவரிடம் கேட்டேன் எழுத்தாளனின் தகுதி என்ன என்று. கடையில் வேலை செய்யும் மனிதர் நடாவுக்கு இஞ்சி போட்ட தேநீர் கொண்டுவந்து கொடுத்தார். நடாவின் பார்வை கடைக்குள் திரும்பியது. அவன் அமைதியாக சாப்பிட்டுக்கொண்டு இருந்தான். மெதுவாக எழுந்து காசினை கொடுத்துவிட்டு கடையில் வேலை செய்யும் அந்த மனிதரிடமே யார் ஆள் என அவனைக் காட்டி கேட்டான் நாடா. அவரைத் தெரியாதா இங்கை பெரிய ஆள். இயக்கத்தினர முக்கிய பொறுப்பு. இப்பவும் வேலை செய்கிறார். நல்ல காசு வைச்சிருக்கிறார். நல்ல மனுசன். ஏன் உங்களுக்கு அவரைத் தெரியுமோ என் கேட்டுவிட்டு கடையின் உள்ளே சென்றார். எனக்கு தெரியுமோ, எனக்கு அவனைத் தெரியுமோ, என்ன கேள்வி இது. எப்படி மறக்க. வெட்டிக்கொண்ட பாவியை எப்படி மறப்பது. அதுவும் ஒரு அப்பாவியை ..நல்ல மனுசனாம் சீ. அதில இப்பவும் இயக்கத்துக்கு வேற வேலை செய்கிறானாம். நடாவுக்கு புழுதி படிந்திருந்த காலில் வியர்வைக் கோடுகள் நினைவுக்கு வந்தது. பசிக்குது என்று வந்த வேறொரு இயக்கப்பொடியனுக்கு ஒரு கிழமை ஒளிச்சு வைச்சிருந்து சாப்பாடு கொடுத்ததுதான் அந்த பெருத்த மனிதர் செய்த தப்பு. அதை எல்லைத்தகராறு காரணமாக ஏற்கனவே சண்டைபிடித்திருந்த பக்கத்து வீட்டுக்காரன் பயன்படுத்தி தன் செல்வாக்கையும் சேர்த்து சொல்லிக்குடுத்து விட, இவங்களும் தங்கட ஆளைக் குளிரவைக்க என்றேல்லோ சொன்று போட்டவங்கள். அங்கை ஒரு அப்பாவியின் வாழ்க்கையை குலைத்துப்போட்டு இங்கை வந்து தாங்கள் மட்டும் சந்தோசமாக பிள்ளை குட்டிகளோடு.... கொஞ்சம் கூட குற்றவுணர்வு இல்லாமல் எப்படி இவங்களால் இருக்கமுடிகிறது. கதையை திட்டமிட்டு எழுததொடங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக கதை வளர்ந்தது. இப்போது எந்த சஞ்சலமும் இல்லை.கதை எப்படியாகவும் இருந்துவிடட்டும் எவரைப் பற்றிய நினைவுகளும் இல்லை. யார் என்ன சொன்னாலும் கதை எழுதி முடித்துவிடுவதுதான் என்ற வைராக்கியம் எழுந்து பூதாகராமாகி நின்றது. மைல் கல் இருந்த இடத்தை அடைந்த நடேசன் அவ்விடத்திலேயே நின்றான். எந்த ஒரு அடையாளங்களும் இல்லாமல் கல் இருந்த இடம் அழிந்துபோய் கிடந்தது. இதேபோலத்தானே அந்த மனிதரும் எந்த ஒரு தடயமும் இல்லாமல் மறைந்து போய் இருப்பார். இப்படி எத்தனை எத்தனை மனிதர்கள். நாளைய காலத்தில் எல்லாமும் இப்படித்தான் மறைந்து போகுமோ என எண்ணிய நடேசன், அந்த மனிதரின் நினைவுகளை எப்படியாவது பதிவு செய்து விடவேண்டும் என தனக்குள் எண்ணிக்கொண்டான். அந்த மனிதரின் வரலாற்றை பதிவு செய்துவிடவேண்டும் என்ற நினைவு வந்ததும் மனதில் இருந்த பாரம் குறைவது போல உணரவே, ஆழமாக ஒருமுறை மூச்சினை இழுத்து விட்டான் நடேசன். திரும்பிப் பார்த்தான். வீடு செல்லும் பாதை நீண்டு கிடந்தது. நடந்து போவார் எவருமில்லை. எல்லோரும் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். மிக வேகமாக வீட்டை நோக்கி நடக்கத்தொடங்கினான் நடேசன். நான் கதையை எழுதி முடித்துவிட்டேன். எழுத்துப்பிழைகள் கொஞ்சம் இருந்ததை அவதானித்துவிட்டு அவற்றை திருத்தும் நோக்கில் கதையினை மீள வாசிக்கத்தொடங்கினேன். விரைவில் அந்தக் கதையினை பாரிஸில் வெளியாகும் சஞ்சிகை ஒன்றில் நீங்கள் வாசிக்கலாம். அந்தக் கதை இப்படி ஆரம்பித்திருந்தது. பாரிஸின் பிரபல உணவு விடுதி ஒன்றில் அந்தக் கொலைகாரனை சந்திப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. எதிர்பாராமல் நிகழந்த அந்த சந்திப்பில் அவனுடைய கண்களில் இருந்து கொலைவாள் ஒன்று இறங்கி என்னை நோக்கி வருவதைக் கண்டேன்.
 2. 2 points
  சைவநெறி வரலாற்றையும், தமிழர் கலாச்சார பெருமையையும் எடுத்துரைத்த பேர்லின் தமிழாலயம்யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழ் பேர்லின் நகரில் இயங்கும் ” தமிழாலயம் பேர்லின் ” நேற்றைய தினம் 31.10.2015 சனிக்கிழமை அன்று தமிழாலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் வாணிவிழாவை மிகச்சிறப்பாக கொண்டாடியது .பெற்றோர்கள் ,மாணவர்கள் , ஆசிரியர்கள் என எல்லோரும் கலாச்சார உடையணிந்து குழுமியிருக்க வாணிசரஸ்வதியை வணங்கி கலைநிகழ்வுகள் மேடையில் அரங்கேறின . தமிழாலய மாணவச் செல்வங்கள் மிக குறிகிய நாட்களில் தமது கலைப் படைப்புகளுக்கு பயற்சி எடுத்து அவைகளை அரங்கேற்றியது பெற்றோர்களை பெருமை கொள்ள வைத்தது .தமிழாலய கலைப்பிரிவின் ஏற்பாட்டில் பாடல்கள் , நடனங்கள் , கவிதைகள் ,பேச்சுக்கள் என மிகச் சிறப்பாக அனைத்து நிகழ்வுகளும் நடைபெற்றன .சைவநெறி வரலாற்றையும், தமிழர் கலாச்சார பெருமையையும் எடுத்துரைக்கும் முகமாக அனைத்து நிகழ்வுகளும் அமைந்திருந்தது. இறுதியாக கலைநிகழ்வுகள் நிறைவுபெற இரவு போசணமும் வழங்கப்பட்டு பகிர்ந்துண்டபின் விழா இனிதே நிறைவெய்தியது . புதிய தமிழ்த்தளிர்களுக்கு தமிழாலய மூத்த ஆசிரியர்களால் வித்தியாரம்பமும் சென்ற வாரம் வழங்கப்பட்டு ,மாணவச் செல்வங்களுக்கான கோயில் வழிபாடும் தமிழாலய நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது . SONY DSC http://www.kuriyeedu.com/archives/22949
 3. 1 point
  விண்ணை அளந்திடும் புள்ளினம் போல் மனம் எண்ணிலா எண்ணம் கொண்டு மிதந்திடும்; மண்ணில் சூரியக் வெளிச்சமும் விழு முன்னே கண்ணும் விழித்த கணமே துள்ளி எழ வைக்கும்; திண்ணிய மனதுடன் எண்ணிய கருமத்தை வண்ணமுறச் செய்திடும் துணிவையும் தந்திடும்; தன்னைக் கற்றுணர்ந்து கொண்ட இலட்சியம் உண்மையென நம்பி உழைக்கும் மனிதர்க்கு! *** எழிலினை எதனிலும் கண்டு நயந்திடும் பார்வையும் முழுமையிலா அவனியின் தன்மை உணர் புன்னகையும் அழுக்காறு களைந்து பிறரை வாழ்த்திடும் உள்ளமும் ஆழ்மனம் சொல்லும் வழி விலகாத வாழ்வும் கொள்ள அளவில்லாக் களிப்பில் ஆன்மா முழுமை கொள்ளும்! *** எல்லைகள் தெரியா விரிந்த வான வெளி - ஆங்கே எல்லையாய் உந்தன் மனம் இடும் வேலி. வண்ணங்கள் ஏழு அழகு வானவிலில் - உன் எண்ணக் கனவின் வண்ணங்கள் எண்ணில; கணந்தொறும் இவ்வுலகில் தேவைகளும் கணக்கில. உள்ளத்தே உதித்த வண்ணக் கலவைகளை அள்ளித் தெளித்திடு அன்புடன் நாள்தொறும்! வையகமும் வளமாய் வண்ணப் பொலிவுறும்! - மனம் எல்லையில்லாக் களிப்பினில் வானத்தே பறந்திடும்!
 4. 1 point
  இதமான வசந்த காலம் தன் வனப்பை இழந்து நொடிந்து போகிறது தெளிவான அந்த நீல வானமும் கருமையை வேண்டி பூசிக்கொள்கிறது குதூகலிப்புடன் பூத்து குலுங்கிய மலர்களும் தன் சோபையை பறிகொடுத்து வாடி வதங்குகின்றன பச்சை வர்ண இலைகள் மண்ணில் விழுந்து ஒப்பாரி வைக்கிறது அதெப்படி முடிகிறது ? வசந்தகாலத்தில் இலையுதிர்காலம் எப்படி நுழைந்தது ? நேற்றைய சந்தோஷ வானில் இன்று மின்னலுடன் கூடிய பேரிடி ! நட்சத்திர விளக்குகள் அத்தனையும் அணைந்த நிலையில் வானமும் இருண்ட நிலையில் ! என் சந்தோஷ இறகுகள் விரிக்க திரணியற்று வலுயிழந்து போன நிலையில் உணர்வலைகளும் தோற்றுப் போய்விட்டன இன்று நட்பாக வந்த நல்ல இதயம் நஞ்சு ஊறிப்போய் தன் சுயநல போர்வையில் நினைவுகளுக்கு சுகமான ராகம் மீட்ட நினைத்த வேளையில் நரம்பருந்த வீணையின் முகாரி ராகம் உன்னிலை உனக்கு அன்றே தெரிந்திருந்தால் நட்புக்கரம் எதற்கு ? வீசிக் கொண்டிருந்த மென்காற்றில் புயல் வந்து மோதியிருக்காது நீ தந்த வலியினால் தானே இன்று என் இலைகளை உதிர்த்து பட்டமரமாய் காயப்பட்டு கண்ணீருடன் காட்சியளிக்கிறேன் ஆனாலும் பரவாயில்லை உறைந்த பனிக்காலத்தின் பின் மீண்டும் தளிர்கள் தளிர்க்கலாம் சோபையிழந்த வாழ்வில் மீண்டும் இளவேனிற்காலம் வரமாய் வரலாம் காத்திருப்பில் காலம் கனியட்டும் . - மீரா குகன் - ஜேர்மனி
 5. 1 point
  ம து போதையில் மாரடைத்துப் போன பரமேஸ்வரன் நாயருக்கு, சவரம் செய்து மூக்குச்சளி குண்டிப்பீ துடைத்து குளிப்பாட்டி பவுடர் போட்டு கை கால் பெருவிரல்கள் சேர்த்துக் கட்டி உடை மாற்றி சென்ட் அடித்து பிரேதத்தை கருநீள பெஞ்சில் நீளமாக படுக்கவைத்துவிட்டு கொஞ்சம் அருசியுடன் வந்தார் அப்பா. அன்னைக்கு ராத்திரி வீட்டில சோறு. பூரா பொண நாத்தம். ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள். பெரும் மனச்சிதைவை உருவாக்கிய ஒரு கவிதைத்தொகுதி. முதல் இரண்டு கவிதைகளுடன் வாசிப்பதை நிறுத்திவிட்டு பாரிஸின் புறநகர் நோக்கி சென்றுகொண்டிருந்த நீண்ட தொடரூந்தின் யன்னல் ஊடாக பார்வை வெளியே விழுத்தி என்னை ஆற்றுப்படுத்தினேன். அன்றொருநாள் பெரியம்மாவின் இறுதிக் கடமையை முடித்த பின் "திரும்பிப் பாராமல் போங்க " என ஒலித்த குரலை சுமந்த முகம் அந்தக் கணத்தில் எப்படி இருந்திருக்கும் என்ற நினைவே வந்து வந்து சென்று கொண்டிருந்தது. முன் எப்போதோ நிகழந்த ஒன்றை கிளர்த்தி நினைவுகளை உறையப் பண்ணும் கவிதைகளையும் கடந்துவிடலாம். அல்லது இனி நிகழப்போகும் ஒரு சம்பவத்தை எதிர்வு கூறிய கவிதைகளைக் கூட நினைவில் கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு கணமும் திரும்ப திரும்ப நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த கவிதைகளை என்ன செய்வது. எப்படிக் கடந்து செல்வது. ஒரு கவிதைச் செயல் வாசகனுக்கு எதை தரவேண்டும் என்ற கேள்வி காலகாலமாக கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. என்னளவில் ஒரு கவிதைச்செயல் வாசகனை உடைத்து தன்பக்கம் திருப்பவேண்டும் அல்லது பரவசப்படுத்தி தன்னோடு அழைத்துச்செல்லவேண்டும். விமர்சனப்பாங்கோடு வாசகன் கவிதைச்செயற்பாட்டை அணுகுதல் என்பது அந்த கவிதையின் அனுபவங்களை சிதைத்துவிடும். கவிதைக்கான விமர்சனம் என்பது வேறு. வாசிப்பு அனுபவம் என்பது வேறு. ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள் என்ற கவிதைப் பிரதியின் இயங்கு தளமும், எழுப்பும் கேள்விகளும் இந்த சமூகத்தின் முகத்தில் காறி உமிழ்கின்றன. சக மனிதனை, அவனின் உணர்வுகளை, அவனின் ஆதங்கங்களை, சராசரி மனிதனாக வாழும் உரிமையை அடக்கிவிட்டு ஒரு கட்டுக்கோப்பான பண்பாடு மிக்கதான என போலி வேசங்கொண்டு இயங்கும் இந்த சமூகத்தினை அம்மணமாக்கி சொற்களால் அடிக்கிறது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் தேர்ந்த சித்த வைத்தியர்களாக, கலைஞர்களாக இருந்த ஒரு சமூகத்தை வெறுமனே குடிமகன்கள் என்ற நிலைக்கு இறக்கி வைத்திருக்கும் பண்பாட்டினை தன் கேள்விகளால் சிதைத்து சிதையில் ஏற்றுகிறது. ஒடுக்கப்பட மக்கள் திரளின் குரலாக, அந்த மக்களின் வட்டாரமொழியில் எழுந்திருக்கும் கவிதைகள் பல இடங்களில் தன் இனம் சார்ந்த மக்கள் அடையாளங்களை இழந்துபோய் அல்லது மறைத்துக்கொண்டு வாழ முற்படுவதையும் குத்திக் காட்டுகிறது. எவ்வாறு இழி நிலையையை இந்த சமூக பண்பாடு வழங்கி இருந்தாலும் அதையும் மீறி நின்று இனத்தின் பெருமையை பேசுகிறது. குனிந்திருந்து கீழ் பார்த்து தொங்கும் கொட்டை மயிருகளை அரைகுறையாக வெட்டி தள்ளுவது போல் அல்லாமல் கண்ணாடியில் முகம் பார்த்து கம்பீரமான முறுக்கு மீசை மேல் நோக்கி நிற்பதற்கு கத்தரிப்பது போல் உங்கள் கவனத்தை வேண்டி நிற்கிறது இப் பதிவு. என்று கேட்கும் கலைவாணரின் கவிதைகள். இன்னொரு இடத்தில், அடையாளம் இழந்துபோய் உலக மயமாக்கலின் விளைவுகளுக்குள் சிக்கிப்போன தன் சமூகத்தின் நிகழ்காலத்தை இப்படி அங்கதமாக குறிப்பிடுகிறார். கல்யாணத்துக்கு முத நாளு பொண்ணுக்க அக்குளும் அடிமுடியும் வழிக்க போவா எங்க லீலா சித்தி அவ போறதும் வாறதும் யாருக்கும் தெரியாது இப்ப நாசுவத்திய கூட காத்துக் கிடக்காளுவ கண்டவளுக பியூட்டிபாலர்ல்ல, நாவிதர், சவரக்காரர் இன்னும் விளக்கமாக யாழ்ப்பாண சாதிய மொழியில் சொல்வதென்றால் அம்பட்டர் என்ற அந்த தொழில்சார் சமூக குழுமத்தினரின் பெருமைகளை, அவர்களின் வரலாறுகளை அவர்களால் இந்த சமூகத்துக்கு வழங்கப்பட அளவற்ற பண்பாட்டியக்கங்களை மறைத்துவிட்டு அல்லது மழுங்கடித்துவிட்டு வெறும் சிகையலங்கரிப்பாளர் என ஒரு சொல்லாடல் மூலம் கௌரவப்படுத்திவிட்டதாக ஏமாற்றிக்கொள்ளும் இன்றைய சமூக இயக்கத்தை எந்த தீயால் சுடுவது. பண்டிதன் முண்டிதன் இங்கிதன் சங்கிதன் நால்விதன் தெரிந்தவனே நாவிதன் வேறு எவனுக்கும் இல்லை இவை. (பண்டிதம் -பண்டுவம் ,மருத்துவம் , முண்டிதன் -சவரம் அழகுக்கலை , இங்கிதன் -சடங்குகள் முறைகள் , சங்கிதன் -இசை கலைகள் ) குலப்பெருமையை மட்டுமா இந்தக் கவிதை பேசுகிறது. ஒரு மருத்துவனாக, ஒரு சடங்குகள் முறைகள் செய்பவனாக இசைகளை கலைகள் மூலம் ஆற்றுப்படுத்துபவனாக சமூகத்தில் இயக்கத்தை கொண்டுநடத்தியவர்கள். இதை ஒரு கவிதையில் அழகாக சொல்லிருக்கிறார். குழந்தை பிறந்தபின் நச்சுக்கொடியை மண்ணில் புதைத்து அதன்மேல் கல்லை வைத்து குழைந்தை பெற்ற தாயை அதற்கே உரிய பக்குவங்களோடு குளிப்பாட்டி குழந்தைக்கும் தாய்க்கும் பதினைந்து நாட்களுக்கு சிரட்டையில் விளக்கு வைத்து பின் இருபத்தெட்டாம் நாள் நூல்கட்டி சடங்கு செய்து என்று குழந்தை பிறந்ததில் இருந்து ஆரம்பிக்கும் ஒவ்வொரு சடங்கையும் செய்து வளர்ந்து ஆளாகி இறக்கும் வரை நிகழும் ஒவ்வொறு சடங்கிலும் தீட்டுக் கழித்தல் என்ற பண்பாட்டோடு தொடர்புபட்டவர்கள். இன்று இந்த சமூகம் இவர்களுக்கு வழங்கி இருக்கும் நிலையை, இயலாமையை வறுமையை என ஒவ்வொரு நிகழ்வுகளையும் கவிதையாக்கி இருக்கிறார். சலூனின் நிகழ்வுகள் ஒரு தேர்ந்த திரைப்படம் போல கவிதைகளில் பயணிக்கிறது. அங்கு நிகழும் அரசியலும் பெருமிதங்களும் நிதர்சனமாக முன்னால் நிகழ்கின்றன. ஊரு மருத்துவிச்சியாக அம்மா பிரசவம் பார்த்து பூச்சு பறக்கி போட்ட எல்லா குந்திராண்டங்களும் இப்ப வளர்ந்து ஆளுகொரு பனை மரத்தில பூதங்களாக தொங்குது. என்றும், சவரம் பண்ணி மீசை செதுக்கி மூக்கு காது முடி வெட்டி முகத்தில தண்ணியடிச்சு சீனாக்காரம் தடவி குட்டி குரா பவுடரும் போட்டு ஸ்னோவும் போட்டு எழுப்பி நிறுத்தி அக்குளும் வழிச்ச பொறவு அவரு சுருட்டிக்கொடுத்த அஞ்சு ரூபாய அப்பா முதுகு வளைஞ்சு வாங்கும் போது ராஜ ராஜ சோழன் சிலைய செய்தவன் பிச்சை எடுத்தது போல இருந்தது. என்றும் உள்ளெழும் கோபத்தை ஆதங்கத்தை காட்டுகிறார். கால காலமாக அடிமைப்படுத்தபட்ட வலியை இறக்கிவைக்கிறார். இந்துதத்துவ பண்பாட்டின் மூலம் கட்டமைக்கப்பட்ட சாதியம் மிக நுண்மையான வெளிப்பாடுகளை கொண்டுடிருக்கிறது. தொழில் சடங்கு தீட்டு சம்பிரதாயம் என வேறு வேறு வடிவங்களை கொண்டு இயங்குகிறது. இவற்றையெல்லாம் கவிதைகள் மூலம் கொண்டுவந்து எம் நெற்றியல் ஆணியால் அறைகிறார் கவிஞர். அதிகாரம், பணபலம், கல்வியறிவு போன்ற இதர காரணிகள் சாதியத்தை மறைத்துவிட்டாலும் உள்ளிருந்து அது கணன்று கொண்டிருப்பதையும் எழுதுகிறார். லொறியில் கிளினராக வேலை பார்த்த காலத்தில் குளித்துக்கொண்டிகையில் சாதியை சுட்டிக்காட்டி சவற்கார நுரையுடன் வெளியே தள்ளி விடுகிறார்கள். அந்தக் கணத்தில் நினைக்கிறார் கௌரவமாக "அப்பாக்க வேலைக்கே போயிருக்கலாமோ" என்று இப்படியாக சமூகத்தின் கொடுமைகளையும் தொழில் பெருமைகளையும் பதிவு செய்கிறார். கவிதையென்பது ஒரு நெடிய பயணம். தன் சிறகுகளை பலதடவை கழற்றியும், புதிதாக அணிந்தும் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கவிஞரும் தங்கள் மொழி இயல்பால் ஒவ்வொரு தளங்களுக்கு கவிதைகளை எடுத்துச்செல்கிறார்கள். சிலருடைய பாதை முன்வந்தோரை தழுவிப் போகிறது, சிலருடைய பாதை தனியே செப்பனிட்டுக்கொண்டு கொண்டுபோகிறது, இன்னும் சிலருடைய பாதை ஒரு பாச்சலை நிகழ்த்தி பயணத்தை மேற்கொள்கிறது. வாசகர்களும் அந்த கவிதைகளோடு பயணித்து படைப்பாளியின் நிகழ்வுக்குள் நுழைந்துவிடுகிறார்கள். வியந்து நின்று பார்த்துக்கொண்டுமிருக்கிறார்கள். கலைவாணர் தனக்கென ஒரு கவிதை மொழியை கொண்டு இயங்குகிறார். அந்த மொழி மூலம் ஒடுக்கப்பட்ட தன் இனத்தின் பாடுகளை வெளிக்கொண்டுவருகிறார். சமூக மீட்சிக்கு அந்த மொழியை பயன்படுத்துகிறார். ஓடுக்கப்பட்டவனின் குரலாக, தனக்கான உரிமையை கேட்டும் குரலாக, தான் தார்ந்த இனத்தின் பெருமைகளை பாடும் குரலாக கலைவாணரின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. அப்பா வெட்டியும் வழித்தும் பெருக்கி கூட்டி மூலையில் வைத்திருக்கும் கறுப்பும் வெள்ளையுமான மயிர்களின் வயலில் அரிசியும் கிழங்கும் விளைந்தன பிறகு அது என் உடலில் இரத்தமுன் சதையுமானது. இந்த ஒரு கவிதை போதும் கலைவாணரின் கவிதைகளை இனம் காண்பதற்கும் பேசுவதற்கும். அறம் பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த தொகுப்பில் தன்னைப்பற்றி குறிப்பிடுகையில் “என்னைப்பார்க்கனும், என் கூடப்பேசணும் என்று தோணிச்சு என்றால் ரோட்டு சைட்டுல வந்துபாரு நீயும் உன் அப்பனும் தூக்கி சுமந்த ஜாதி பேய்களும் வாழவழி இல்லாம ஆக்கியிருக்க உன் அரசாங்கமும் பாழடைஞ்சு போன குடியும் சேர்ந்துட்டு விரட்டி அடிச்சதில ஓட களியாம ஏதாவது கடையிலோ தின்னையிலயோ குப்போ தொட்டிகிட்டயோ உடுதுணி இல்லாம பெண்டு மொண்டு ஈச்ச மொய்க்க ஒருத்தன் கிடப்பான் அவன் மூஞ்சிய மெதுவா திருப்பிப்பாரு அது நானாட்டு இருப்பேன் இல்லேன்னா அவன் என்னைப்போலவே இருப்பான்”. என்கிறார். இந்த கவிதைத்தொகுப்பு தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பிரிவின் பாடத்திட்டத்திலும் சேர்க்கப்பட்டிருக்கிறது. என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு கவிதைகளும் கடந்த நிகழ்வுகளை உயிர்ப்பிக்கின்றன. வலிகளை உருவாக்குகின்றன. ஊரில் வீடு தேடிவந்து மயிர் வெட்டும் சண்முகம் என்ற அந்த மனிதரின் முன் எவ்வளவு திமிருடன் கண்ணாடியைப் பிடித்துக்கொண்டு இருந்திருக்கிறேன். தோட்டத்தில் விளையும் பயிரின் அறுவடையின் குடிமகன்களின் காணிக்கை என்று வழமையைவிட அதிகமாக கொடுத்துவிட்டு அதனை எத்தனை பெருமையாக நினைத்திருந்திருகிறேன். மிக அருவருப்பான ஒரு நிலையில் என்னையே திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது இந்த கவிதை தொகுப்பு. இனியொருமுறை என் சிகை கொய்யும் பொழுதில் அந்த அகன்ற கண்ணாடியில் என் முகத்தைப்பார்க்க முடியுமோ தெரியவில்லை. அந்த சிகைஅலங்கரிப்பு நிலையத்தில் இருக்கின்ற நிழல்படங்களின் கண்களை தன்னும் நேரில் பார்க்கும் தைரியம் வருமோ தெரியவில்லை தொ குப்பினை வாசித்து முடிந்ததும் ஊரில் இருக்கும் நண்பனுக்கு தொலைபேசி எடுத்து டேய் மச்சான் சண்முகத்தின் போன் நம்பர வேண்டி அனுப்படா என்றேன், மறுகரையில் இருந்து அம்பட்டன் சண்முகமோ என்று அவன் கேட்டதுதான் காதில் விழுந்தது என்னை அறியாமலேயே அழைப்பை துண்டித்தேன். அப்போதும் கூட, எல்லாவனும் தின்னு போட்ட எச்சி இலையை கடவத்தில எடுக்க சொன்னான் அவியலு மாடசாமி நாசுவப் பய வந்து இலை எடுக்காத கல்யாணம் அவனுகளுக்கு தரக் குறைவாம் தின்னுகிட்டு ஏப்பத்தோட போற தாயோளி சொல்லிட்டுப்போறான் என்ற கவிதைதான் நினைவுக்கு வந்தது. நன்றி, பொங்குதமிழ் இணையம்.
 6. 1 point
  பசியில் இருக்கும்போது திரியை திறந்துவிட்டேன் .... பசி வயிறாய் கிள்ளுகிறது ...... இந்த கரி வாசத்துடன் மக் டாக்டோனல்ட்ஸ் போவதை நினைக்க இப்போவே வாந்தி வருகிறது. இன்று அதுதான் தஞ்சம்.
 7. 1 point
 8. 1 point
  நன்றி உன்னையே நீ அறிவாய்...., என் அறிவுக்கு அதை அறிய முடியல்ல...!
 9. 1 point
  யுத்தத்திற்குப் பின்னரான யாழ். நகரம்: வாய்ப்புக்களும் சவால்களும் – கலாநிதி.கோ. அமிர்தலிங்கம்NOV 01, 2015 ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தின் படி நேற்று அக்டோபர் 31 ஆம் நாள் உலக நகரங்களின் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் யுத்தத்திற்குப் பின்னரான யாழ்.நகரத்தினை மையப்படுத்திய இக்கட்டுரை முக்கியத்துவம் பெறுகின்றது. இக்கட்டுiரையானது இங்கிலாந்தின் சர்வதேச அபிவிருத்திக்கான திணைக்களம் மற்றும் கனடாவின் சர்வதேச அபிவிருத்தி ஆய்வு மையம் என்பவற்றின் நிதியுதவியுடன் இலங்கையின் இனக்கற்கைகளுக்கான சர்வதேச ஆய்வு மையமானது“விருப்பமற்ற மீள்குடியேற்றம்: நகரப் பிரதேசங்களிடையே காணப்படும் சமத்துவமின்மையும் வறுமையும்”என்னும் தலைப்பில் மேற்கொண்டுள்ள ஆய்வினை அடிப்படையாகக் கொண்டதாகும். இவ்வாய்வின் குழுத்தலைவராக கலாநிதி ரஜித் லக்ஸ்மன் அவர்களும் சிரேஷ்ட ஆய்வாளர்களாக கலாநிதி கோ. அமிர்தலிங்கம் மற்றும் திரு.தனேஸ் ஜயதிலக அவர்களும் ஆய்வு உதவியாளர்களாக திரு ந. குருசாந், திரு ம. விஜேந்திரன் மற்றும் திரு செ. அமலதாஸ் ஆகியோரும் பணிபுரிகின்றனர். இவ்வாய்வுக்காக தொளாயிரம் குடும்பங்களைப் பற்றிய தகவல்கள் யாழ் .மாநகரசபைக்குள் உள்ளடங்கும் யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேசசெயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட முப்பத்தியெட்டு கிராமசேவகர் பிரிவுகளில் கருத்தாய்வு மற்றும் விரிவான நேர்முகக் கலந்துரையாடல்கள் மூலம் திரட்டப்பட்டன. 1983 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாண மாவட்டமே யுத்தத்தின் மையப் பிரதேசமாக விளங்கியது. யுத்தத்தினால் மக்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பாரிய சவால்களைச் தொடர்ந்தும் சந்தித்தபோதிலும் 1990 ஆண்டிலிருந்து தொடங்கிய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் இடம்பெயர்வு 2009 ஆண்டில் இடம்பெற்ற இறுதியுத்தத்தின் போது உச்சக்கட்டத்தினை எட்டியபோதும் இக்காலகட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் பல்வேறு கட்டங்களில் மீளக்குடியேற்றப்பட்டமையும் தொடர்ந்து கொண்டிருந்தது. ஆயினும் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததிலிருந்து குடியேற்றங்களுக்குத் தடையாகவிருந்த உயர்பாதுகாப்பு வலயங்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு யாழ். நகரத்தை அண்மித்த கரையோரப்பகுதிகள் அனைத்திலும் மக்கள் குடியேற்றம் பெருமளவிற்கு நிறைவுபெற்று விட்டது. யுத்தம் முடிவடைந்து மீள் குடியேற்றம் முடிவுக்கட்டத்தினை நெருங்கினாலும் யுத்தம் மற்றும் இடம்பெயர்வுகளால் ஏற்பட்ட துன்பங்களும் சுமைகளும் இன்றும் மக்கள் மனதைவிட்டு நீங்காமல் வடுக்களாகவே உள்ளன. இவ்வாய்வானது யுத்தம் மற்றும் இடம்பெயர்வுகளால் ஏற்பட்ட வாழ்வாதாரப் பிரச்சினைகள், கல்வி நிலைமைகள், இளைஞர்களின் நடத்தை, வன்முறையின் பருமன் மற்றும் போக்கு என்பன உள்ளடங்கலாக பல்வேறுபட்ட தகவல்களை விஞ்ஞான ரீதியாக வெளிக்கொணர முற்படுகின்றது. யுத்தகாலத்தில் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட யாழ்.நகரையொட்டிய கரையோரப் பிரதேசத்தின் வாழ்வாதாரம் மீன்பிடியினை மையமாகக் கொண்டிருந்தமையினால் உயர்பாதுகாப்பு வலய அமுலாக்கம், கடல்வலயத் தடைச்சட்டங்கள், மீனவர்களின் உயிரிழப்புக்கள், நவீனமீன்பிடிக் கருவிகளைப் பயன்படுத்த முடியாமை, நிச்சயமற்றதன்மைகள், ஏற்றுமதி வாய்ப்புக்கள் இன்மை போன்ற காரணங்களினால் இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் யுத்தத்திற்குப் பின்னர் நிலைமைகள் வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன. உயர்பாதுகாப்பு வலயம்,மற்றும் கடல் வலயத் தடைச்சட்டம் என்பன நீக்கப்பட்டு விட்டன. நவீன மீன்பிடிக் கருவிகளைக் கொள்வனவு செய்வதிலோ அல்லது மீன்களை நாட்டின் தென்பகுதிக்கு ஏற்றுமதி செய்வதிலோ எவ்வித தடைகளும் காணப்படவில்லை. ஆனாலும் மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தில் இன்னும் பிரச்சினைகள் இருப்பதாகவே குறிப்பிடுகின்றனர். கடலில் மீன்பிடி வளம் பெருமளவுக்கு குறைந்து விட்டதாகவும் சுனாமிக்குப் பின்னர் நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்திய மீனவர்களினதும் ஏனைய பிரதேசத்து உள்ளுர் மீனவர்களினதும் அத்துமீறல்கள் தமது வாழ்வாதாரத்தினை அதிகம் பாதிப்பதாக ஆய்வுப் பிரதேச மீனவர்கள் குறைப்படுகின்றனர். மீன்பிடியும் அதனுடன் தொடர்புடைய வருமானமும் குறைந்து வருவதால் குறிப்பாக இளைஞர்கள் புதிய தொழில்களை தேடிச் செல்வதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர். ஆரம்பகாலம் தொட்டு யாழ். மாவட்டம் கல்வித்துறை வளர்ச்சிக்கு பெயர் பெற்றதாகும். ஆனால் யுத்தகாலத்தில்நிச்சயமற்றதன்மை,போக்குவரத்துக் கட்டுப்பாடுகள், ஆசிரியர்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் புலம்பெயர்வு, வளப்பற்றாக்குறைகள் போன்ற காரணங்களினால் யாழ். மாவட்டத்தின் கல்விநிலைமை மோசமடைந்தது. யுத்தகாலத்தில் மாணவர்கள் சுதந்திரமாக நடமாடமுடியாத நிலைமை காணப்பட்டது. ஆனால் யுத்தம் முடிவடைந்ததுடன் நிலைமை படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருகின்றது. குறிப்பாக நிச்சயமற்ற நிலைமை நீங்கி மாணவர்கள் விரும்பிய பாடசலைகள் மற்றும் பகுதிநேர வகுப்புக்களுக்குச் சென்று அச்சமின்றி கல்விகற்கக் கூடியநிலை தற்போது காணப்படுகின்றது. ஆனால் வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகஇளைஞர்கள் தெரிவிக்கின்றனர். யுத்தம் முடிவடைந்து போக்குவரத்துத் தடைகள் யாவும் நீங்கிய பின்னர் பல புதிய வாய்ப்புக்கள் உருவாகிய போதும் யுத்தகாலத்தில் தொழில்சார் தகைமைகளைப் பெற்றுக் கொள்வதில் யாழ்.மாவட்ட இளைஞர்களுக்கு வாய்ப்புக்கள் காணப்படாமையினால் தற்போது தொழில் தகைமைசார் வேலைகளுக்கு வெளிமாவட்டங்களைச் சோந்தவர்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளப்படுவதாகவும் தமக்கு வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகக் காணப்படுவதாகவும் சிலர் குறைப்படுகின்றனர். அத்துடன் நாட்டின் தென் பகுதியிலிருந்துபொருட்கள் சேவைகள் உள்ளுர் சந்தைக்கு அதிகம் வருவதால் தமக்குரிய வாய்ப்புக்கள் பாதிக்கப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிப்பதுடன் அது உள்ளூர் வேலைவாய்ப்புக்களிலும் தாக்கம் செலுத்துவதாக பலர் குறிப்பிடுகின்றனர். புலம்பெயர்வு என்பது யாழ். மாவட்டத்தினைப் பொறுத்து பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. காலனித்துவ ஆட்சிக்காலத்திலிருந்து 1981 ஆம் ஆண்டு வரை இலங்கையில் கொழும்புப் பெரும்பாக நகரப்பகுதிக்கு அடுத்தபடியாக சனத்தொகை ரீதியில் யாழ்ப்பாண நகரமே இரண்டாவது இடத்தில் இருந்தது. ஆனால் 2010 ஆம் ஆண்டு குடித்தொகை மதிப்பீட்டின்படி யாழ்ப்பாண நகரத்தின் தரவரிசை பதின்னாகாவது இடத்திற்குபின்தள்ளப்பட்டுள்ளது. யுத்தத்தினால் ஏற்பட்ட புலம்பெயர்வே இதற்குரிய பிரதான காரணியாகும். புலம்பெயர்வினால் ஏற்பட்ட சனத்தொகை வீழ்ச்சியினால் யாழ். நகரமும் முழு மாவட்டமும் பின்னடைவினைச் சந்தித்த போதும் யுத்தகாலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதில் புலம்பெயர்ந்தோர் தமது உறவினர்களுக்கு அனுப்பிய பணம் மிகுந்த பங்களிப்பினை வழங்கியுள்ளது. யுத்தகாலத்தில் புலம்பெயர்ந்தோரின் பணம் பெரும்பாலும் நுகர்வுத் தேவைக்கும் திருமணங்களுக்கும் தமது உறவினர்களை வெளிநாடுகளுக்கு அழைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது. யுத்தம் முடிந்தபின் புலம்பெயர்ந்தோரின் பணம் முதலீட்டுத் தேவைகளுக்கும் சமூகத்தின் கல்வி உள்ளிட்ட ஏனைய சமூகநலன்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் புலம்பெயர்ந்தோர் தமது உறவுகளுக்கு அனுப்பும் பணம் இங்குள்ளவர்களை சோம்பேறிகளாக்கி உழைப்பின் அருமை தெரியாமல் இளைஞர்கள் பிழையான வழிகளில் செல்லவும் வழிவகுக்கின்றது என்னும் குற்றச்சாட்டும் எழாமலில்லை. யாழ்ப்பாணத்தில் யுத்தத்தின் பின்னர் அளவுக்கதிகமான வங்கிக் கடன் மற்றும் லீசிங் வசதிகள் பிரச்சினைக்குரிய விடயங்களாகவே மக்களால் அடையாளங்காணப்படுகின்றன. மக்கள் அளவுக்கதிகமாக கடனாளிகளாக ஆகிக் கொண்டிருப்பதாகவே தொடர்ந்தும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி 2014 ஆம் ஆண்டில் வங்கி அடர்த்தியானது (தலா 100,000 பேருக்கான வங்கிகளின் எண்ணிக்கை) மேல் மாகாணத்தில் 21.1 வீதமாகக் காணப்படுகையில் வடமாகாணத்தில் 21.6 வீதமாக காணப்படுகின்றது. இதன்மூலம் மேல் மாகாணத்தினைவிட நாட்டிலேயே வங்கியடர்த்தி கூடிய மாகாணமாக வடமாகாணம் திகழ்கிறது. வடமாகாணத்திலேயே சனத்தொகையிலும் நகர மயமாக்கத்திலும் யாழ். மாவட்டம் முக்கியத்துவம் பெறுவதால் அளவுக்கதிகமான வங்கிச்சேவைகளின் விரிவாக்கம் யாழ்.நகர மக்களால் பிரச்சினைக்குரியதாகவே பார்க்கப்படுகின்றது. சமூகமும் சமூகஉறவுகளும் மிகவேகமாக மாற்றமடைந்து கொண்டிருக்கின்றன. கடன்கள் மற்றும் சீட்டுக்கள் பாரிய பிரச்சினைகளாக உருவாகிக் கொண்டிருக்கின்றன. கடன்கள் மற்றும் சீட்டுக்கள் காரணமாக நம்பிக்கைத் துரோகங்களும் ஏமாற்றுதல்களும் சமூக உறவுகளை சீர்குலைக்கின்றன. யுத்தத்திற்குப் பின்னர் இளைஞர்களின் நடத்தையில் பாரிய மாற்றங்கள் காணப்படுகின்றன. சில இளைஞர்களின் மதுப்பாவனை,மற்றும் போதைவஸ்துக்கு அடிமையாதல் அதனுடன் கூடிய திருட்டுக்கள், குழுச் சண்டைகள் என்பன சமூக ஒழுக்கத்திற்கு பங்கம் விளைவிக்கின்றன. சினிமா மோகம், இணைய வசதியுடன் கூடிய செல்போன்களின் பாவனை அதிகரிப்பு இளைஞர் குழாத்தினை மிகமோசமாகப் பாதிப்பதாக பெற்றோர்களுக்கும் சமூகத்தலைவர்களும் குறிப்பிடுகின்றனர். முன்னைய ஆட்சிக் காலத்தில் மதுப்பாவனை மற்றும் போதைவஸ்துக்கள் என்பனவற்றுக்கு அடிமையாகி திருட்டுக்கள் மற்றும் குழுச்சண்டைகளில் ஈடுபடும் இளைஞர்களுக்கும் சில பொலிஸ் மற்றும் இராணுவ உத்தியோகத்தர்களுடன் தொடர்பு இருந்ததாகவும் ஆய்வுப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை பொலிசாரிடம் ஒப்படைத்த சில மணித்தியாலங்களில் அவர்கள் வெளியில் வந்தசந்தர்ப்பங்களையும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் 2015, ஜனவரியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதிலிருந்து இந்நிலைமை பாரியளவுக்கு நீங்கி சாதகமான மாற்றங்கள் தெரிவாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு யுத்தமுடிவானது யாழ். நகர மக்களுக்கும் ஒட்டுமொத்த யாழ். மாவட்ட மக்களுக்கும் பாரிய வாய்ப்புக்களை திறந்து விட்டிருந்தபோதிலும் அவ்வாய்ப்புக்களுடன் பல சவால்களும் சேர்ந்தே காணப்படுகின்றன. வாய்ப்புக்களை உச்சப்படுத்துவதிலும் சவால்களை வெற்றி கொள்வதிலுமே யாழ். நகரத்தினதும் மாவட்டத்தினதும் எதிர்கால சுபீட்சம் தங்கியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மையாகும். – கலாநிதி.கோ. அமிர்தலிங்கம் கொழும்புப் பல்கலைக்கழகம். http://www.puthinappalakai.net/2015/11/01/news/10864
 10. 1 point
  ஒடியல் புட்டு...பழஞ்சோத்தோடை பச்சைமிளகாய்....பனங்கிழங்கு துவையல்......இப்பிடி இன்னும் எக்கச்சக்கம்
 11. 1 point
  Colomares Castle, Benalmadena, Andalusia - Spain
 12. 1 point
  உலக மசாலா: முள்ளை முள்ளால் எடுக்கும் சிகிச்சை... தென்கொரியாவில் தற்கொலை எண்ணம் வருகிறவர்களுக்கான புதிய சிகிச்சை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. சவப்பெட்டிக்குள் படுக்க வைத்து, மரண அனுபவத்தை ஏற்படுத்தும் இந்தச் சிகிச்சை மிகப் பெரிய அளவில் தற்கொலைகளில் இருந்து மனிதர்களைக் காப்பாற்றுகிறது. தென்கொரியாவில் தினமும் 40 பேர் தற்கொலை செய்துகொள் கிறார்கள். சியோல் ஹைவோன் ஹீலிங் சென்டர் இவர்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் யார் வேண்டுமானாலும் இங்கே வரலாம். ஒரு பெரிய அறையில் வரிசையாக மேஜை, நாற்காலிகள் போடப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மேஜைக்கு அருகிலும் ஒரு சவப்பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அனைவரும் அமைதியாக நாற்காலியில் அமர வேண்டும். பங்கேற்பாளர்கள் அனைவரும் சவப்பெட்டிக்குள் படுத்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு உயிலோ, தங்கள் பிரியத்துக்கு உரியவர்களுக்குக் கடைசிக் கடிதமோ எழுத வேண்டும். சத்தமாக எல்லோருக்கும் கேட்பது போலப் படிக்க வேண்டும். விளக்குகள் அணைக்கப்பட்டு, மெழுகுவர்த்திகள் ஏற்றப்படும். மரண தேவதை என்ற பெயரில் ஒரு பெண் அறைக்குள் நுழைவார். எல்லோரும் மீண்டும் சவப்பெட்டிக்குள் படுக்க வேண்டும். ஒவ்வொருவரின் இமைகளையும் மரண தேவதை மூடிவிடுவார். 10 நிமிடங்களில் மரணத்துக்குப் பிறகு ஒன்றுமே இல்லை என்பதை எல்லோரும் அறிந்துகொள்வார்கள். ’உயிர் வாழ்தல் எவ்வளவு மகத்தானது என்பதை அறிந்தவர்கள் வெளியே வரலாம்’ என்று அறிவிப்பு வரும். எல்லோரும் மரணத்தில் இருந்து மீண்ட உற்சாகத்துடன் சவப்பெட்டியில் இருந்து வெளியே வருவார்கள். முள்ளை முள்ளால் எடுக்கும் சிகிச்சை… ரஷ்யாவைச் சேர்ந்த 6 வயது விர்சவியா போரனுக்கு இதயமும் குடலும் உடலுக்கு வெளியே உருவாகியிருக்கிறது. 10 லட்சம் மனிதர்களில் ஒருவருக்கு வரக்கூடிய அரிய வகை குறைபாடு இது. உடலுக்கு வெளியே துருத்திக்கொண்டிருக்கும் இதயம் மெல்லிய தோலால் மூடப்பட்டிருக்கிறது. இதயம் துடிப்பதை நேரடியாகவே பார்க்க முடிகிறது. ’’குழந்தை பிறக்கும் போதே பல்வேறு குறைபாடுகள் இருந்தன. அவற்றில் இதயம் வெளியே வந்தது மிக மோசமான குறைபாடு. மருத்துவத்துக்காக அமெரிக்கா வந்தேன். ஆனால் குழந்தையின் உடல் இருக்கும் நிலையில் அறுவை சிகிச்சை செய்ய இயலாது என்று கூறிவிட் டனர். இவள் வயிற்றில் இருந்தபோதே மருத்துவர்கள் குறைபாட்டைச் சொல்லி, இந்தக் குழந்தை பிழைப்பதற்கான வாய்ப்பே இல்லை என்றார்கள். 6 ஆண்டுகளைக் கடந்துவிட் டாள். இத்தனைப் பிரச்சி னைகள் இருந்தாலும் அற்புதமாக வரைகிறாள், பள்ளிக்குச் செல்கிறாள், பாடுகிறாள், ஆடுகிறாள். ஒரு குழந்தையாக அவள் எந்தக் குறையையும் எங்களுக்கு வைக்கவில்லை. 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய முடியுமா என்று பார்க்கலாம்’’ என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார் அம்மா டாரி போரன். உங்களின் நம்பிக்கை வீணாகாது டாரி போரன்… http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-முள்ளை-முள்ளால்-எடுக்கும்-சிகிச்சை/article7829478.ece?homepage=true&relartwiz=true