யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Leaderboard

  1. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      1,511

    • Content Count

      45,565


  2. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      956

    • Content Count

      15,849


  3. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      954

    • Content Count

      26,872


  4. ஈழப்பிரியன்

    ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      487

    • Content Count

      6,629



Popular Content

Showing content with the highest reputation since 07/28/2018 in all areas

  1. 21 points
    உ சிவமயம். திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம். "வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்" அன்புறவுகளுக்கு , நான் கடந்த ஆவணி மாதம் மனைவி மற்றும் மகனுடன் ஊருக்கு போய் இருந்தேன். அதை ஒரு பயணம் என்று சொல்வதைவிட கோவில் சுற்றுலா என்பது பொருந்தும். ஆவணி மாதத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கும் பெரும்பாலான ஆலயங்களில் உற்சவங்கள் நடைபெறும்.ஊர் முழுவதும் ஒரே கோலாகலமாக இருக்கும். கோவில்கள் எல்லாம் புதிதாக வர்ணங்கள் பூசி மிக அழகாக இருந்தன.நானும் பல வருடங்களின் பின் அங்கு சென்றதால் ஒருவித பரவச நிலையில் இருந்தேன் . அந்த நெகிழ்ச்சியான அனுபவங்களை யாழ் இணையத்தின் 21 வது அகவையில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன். நானும் மனைவியும் இரு மகன்களும்தான் செல்வதாக ஏற்பாடு. ஆனால் கடைசி நேரத்தில் சின்ன மகனுக்கு (கவனிக்கவும் கடைசி என்று குறிப்பிடவில்லை. நாளை நடப்பதை யார் அறிவார்). கடைசி நேரத்தில் அவரது படிப்பு சம்பந்தமானதும், இஷ்டமானதுமான பொறியியலாளர் வேலை கிடைத்தது. அதனால் அவர் வரவில்லை. பயணசீட்டையும் ரத்து செய்ய வேண்டியதாய் போய் விட்டது. அவர் இங்கு பிறந்தவர். ஊரைப் பார்க்க மிகவும் ஆவலுடன் இருந்தார்.கொஞ்சம் பிசகி விட்டது. யாத்திரை தொடரும்.......! நிரவாகம். தயவு செய்து உரிய இடத்துக்கு மாற்றிவிடவும். பின் அங்கிருந்து தொடர்கின்றேன்.
  2. 20 points
    தமிழ் சிறி அவர்களின் மகன் பட்டப் படிப்பில் வைத்தியருக்கான பட்டம்பெற்றுத் தற்போது வைத்தியராகச் சேவையாற்றத் தொடங்கியுள்ளார். அவரது மகள் வாகன உற்பத்தி தொழிற்சாலையில் (Mercedes Benz) பொறியியலாளராகத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். அங்கு தேர்ந்து எடுப்பதற்கு நடாத்தப்பட்ட பரீட்சையில் அவர் அனைவரையும் விடக் கூடுதலான புள்ளிகளையும் பெற்று முதலாவதாக வந்து சிறப்புப் பாராட்டையும் பெற்றுள்ளார். இவர்கள் மேலும் உயர்வடைந்து எங்கள் மண்ணின் பெருமையையும் உயர்வடையச் செய்யவேண்டுமென வாழ்த்துகிறேன்.!!
  3. 18 points
    "லண்டனிலிருந்து சுதா வந்திருக்கிறாள் வீ க்கென்ட் பின்னேரம் வாறீயா போய் சந்திப்போம்" "யார் மச்சான் சுதா" "டேய் டேய் சும்மா பம்மாத்து விடாத முந்தி நீ சுழற்றிகொண்டு திரிஞ்சாய் கலா, அவளோட போவள் 'இரட்டை பின்னல்' அவளைத்தான் சொல்லுறன்" "கலா ...." " டேய் நீ எனக்கு விசரை கிளப்பாதை" "யாரப்பா போனில் சுதா,கலா என்று முழுசிக்கொண்டிருக்கிறீயள்" "மச்சி வைடா மனிசி வாராள் பிறகு ,நான் எடுக்கிறன்" "குகன் எடுத்தவன் யாரோ கலாவின்ட பிரண்டாம் சுதா லண்டனிலிருந்து வ‌ந்திருக்கிறாளாம், மீட் பண்ண வரட்டாம்." "போய் மீட் பண்ணுங்கோவன்" "மீட் பண்ணலாம் , சுதா யார் என்று யோசிக்கிறன்" "என்ன உங்களுக்கு டிமஞ்சியா கிமஞ்சியா எதாவது வந்திடுதே" " ஏனப்பா அப்படி கேட்கிறீர்" "பின்ன என்ன கலியாணம் கட்டின புதிசில ஒரு நாள் நித்திரையில் புலம்பினீங்கள் 'சுதா பிளீஸ் கலாவிட்ட கேட்டு சொல்லும் என்று' அதுகளா தான் இருக்கும்" "ஓமடியாத்த ஞாபக‌ம் வருது நீர் இன்னும் மறக்கவில்லை,அப்ப போய் மீட் பண்ணிவிட்டு வாரன் இரும் குகனுக்கு சொல்லுவம் சனிக்கிழமை சந்திக்க வாரன் என்று" "மச்சி நான் வாரன் என்ன கொண்டு போவம்? போத்தலை வாங்கி கொண்டு போவமோ" "இல்லை மச்சி தனியா வந்திருக்கிறாள்" "அப்ப நான் கட்டாயம் வாரன்" "சனிக்கிழமை உமக்கு எதாவது புராகிராம் இருக்கோ டாலிங்" " இல்லை நானும் உங்களாட‌ வாரது என்றால் வாரன்" "அவள் தனியா வ‌ந்திருக்கிறாளாம் ,குகனும் தனியத்தான் வாரானாம்" "யாருடன் வந்து நிற்கிறாளாம்" "அவளின்ட அக்கா சிட்னியில் இருக்கிறாளாம் அங்க தான்" "பின்ன சரி நீங்கள் அவளை போய் சந்தியுங்கோ நான் என்ட அக்கா வீட்டை போய்யிட்டு வாரன்" சனிக்கிழமை எழுந்தவுடன் மனைவியடமும் சொல்லாமல் சலூனுக்கு சென்றான். "ஐயா வாங்கோ ,வழமையா வெட்டுறமாதிரி நல்லா ஒட்ட‌ வெட்டிவிடவோ" "சீ சீ மீடியத்தில வெட்டிவிடும் தம்பி" வெட்டி முடிந்தவன் கண்ணாடியை பின்னுக்கு வைத்து "இந்த வெட்டு சரியோ" "அளவு சரி ,ஆனால் நரை நல்லாய் தெரியுது போல கிடக்கு" "டை அடிச்சு விடட்டே" "அடிச்சுவிடடா தம்பி, இந்த மீசையையும் டிரிம்ப் பண்ணி அதுக்கும் உந்த சாயத்தை பூசி விடு" "என்ன ஐயா வழமையா உதுகளை நீங்கள் செய்யிற இல்லை என்ன விசேசம்" "அடுத்த கிழமை கலியாணவீட்டை போகவேணும் அதுதான்" "இப்ப எங்கன்ட ஆட்களின் கலியாண சீசன் முடிஞ்சுதே ஐயா ,யார் வெள்ளைக்காரங்களின்ட கலியாணமோ" "ஒம் ஒம் வெள்ளையின்ட " சொல்லியபடியே கண்ணடியை பார்த்து 'லுக் சொ ஸ்மார்ட்' என மனதில் நினைத்து சிரித்து கொண்டான். "எவ்வளவு தம்பி" "40 டொலர்" "வழமையா 15டொலர்தானே எடுக்கிறனீர்" . "டை அடிச்சது மீசை டிரிம்ப் பண்ணினது அதுதான் ஐயா" கடன் ம‌ட்டையை தேச்சுப்போட்டு நன்றி சொல்லி விட்டு வீடு திரும்பினான். "இது என்னப்பா புதுசா இன்றைக்கு டை அடிச்சு இருக்கிறீயள் " "சும்மா ...பாபர் கேட்டான் அடிக்கட்டோ என்று ஒம் என்று சொல்லி போட்டன்" "நான் எத்தனை தரம் சொன்னனான் டை அடியுங்கோ எண்டு " "அது இன்றைக்கு பின்னேரம் சுதா வை மீட் பண்ணவேணும் " "நான் சொல்லும் பொழுது,புத்தர் சொன்னவர் இயற்கையோட வாழவேண்டும் எண்டு சொல்லி போட்டு இப்ப டை அடிச்சிருக்கிறீயள்" "கி கி கி ம்ம்ம்ம்ம்ம்" " போர போக்கை பார்த்தால் சுதாவுடன் ஒடிவிடுவியள் போல கிடக்கு.. பின்னேரம் நானும் வாரன்" "போடி விசரி ,கண நாளைக்கு பிறகு சந்திக்க போறன் அதுதான்" "இஞ்சருங்கோ உங்களான, என்னோட படிச்ச பெடியள் யாரும் வந்து நான் கொஞ்சம் மெக்கப் போட்டுக் கொண்டு தனியா போறன் என்றால் விடுவியளே" "நீ அப்படி போக மாட்டாய் என்று தெரியும் தானே ,நீ டமிழ் பெண்ணாச்சே" "ஆம்பிளைகள் எல்லாம் சிங்களேமே" "சரியப்பா நீரும் உம்மட பெடியள் வந்தா போய் ச‌ந்தியும்" "எனக்கு வேற வேலையில்லை,உந்த 96 படம் வந்திச்சிதே அதுக்கு பிறகு உந்த கிழடுகளுக்கு எல்லாம் சுதி வ‌ந்திட்டுது" எனகூறியபடியே சமையல் வேலைகளை கவனிக்க சென்று விட்டாள். "இஞ்சாரும் இந்த பாண்ட்ஸ்க்கு இந்த சேர்ட் மச்ச பண்ணுமே" "மாப்பிள்ளை இன்றைக்கு ஒரே குசியா தான் இருக்கிறார், மட்ச் பண்ணுது போடுங்கோ" ஆடைகள அணிந்து வாசனை திர‌வியங்களை அடித்து விட்டு இர‌ண்டு மூன்று தடவை கண்ணாடியில் பார்த்து விட்டு "டார்லிங் எப்படி ஸ்மார்ட்டா இருக்கிறனோ" "ஓம் நல்ல ஸ்மார்ட்டா இருக்கிறீயள் என்ட கண்ணே பட்டிடும் போல கிடக்கு ,உங்களையா குகனையா கட்டி பிடிச்சு முத்தம் கொடுக்கிறது என கொன்வூயூஸ் ஆக போறாள் சுதா" "தாங்ஸ்" "உந்த செல்லத்துக்கு குறைச்சல் இல்லை,அது சரி நீங்கள் குகனை கூட்டிக்கொண்டு போறீயளோ அல்லது அவர் வருவாரோ" "அவன் தன்னூடைய பெண்ஸ் காரை கொண்டு வாரன் என்று சொன்னவன் ,அதில போவம்" " இப்ப இரண்டு பேருக்கும் போட்டி வரும் போல் கிடக்கு" குகனின் கார் குறித்த நேரத்திற்கு முதலே வந்துவிட்டது. "குகன் வந்திட்டான் நான் போயிட்டு வாரன்" "ஒம் ஒம் போன மாதிரியே திரும்பி வந்திடுவேணும்" "பயப்பிடாதயும், சுதா தான் வந்திருக்கிறாள் கலா வந்திருந்தால் சில நேரம் அவளோட ஒடியிருப்பேன் கி கி கி கி" "அடி செருப்பால , போயிட்டு வாங்கோ போன உடனே டெக்ஸ்ட் பண்ணுங்கோ" குகன் அழைப்பு மணியை அடித்தான்.சுதாவின் அக்கா கதவை திறந்து இருவரையும் வரவேற்றாள். "இருங்கோ சுதா பிள்ளைகளோட டெலிபோனில் கதைக்கிறாள் வந்திடுவாள்" சொல்லி முடிக்க முதலே மாடியிலிருந்து இறங்கி வந்தாள் சுதா சுதாவை கண்டவுடன் இருவரும் திகைத்து விட்டார்கள் முன்பு இருந்ததை விட மிகவும் அழகாக இருந்தாள்,இரட்டை பின்னல் போய் தலைமுடி மிகவும் அழகாக வெட்டப்பட்டிருந்தது ,உடல் நிறமும் கொஞ்ச‌ம் கூடியிருந்தது அத்துடன் லண்டன் ஆடை அவளின் அழகை மேலும் மெருகூட்டியது. "ஹலோ குகன் எப்படி சுகம் ஒடி வந்து கையை குழுக்கினாள்" "ஹலோ சுரேஸ் உங்களில் அவ்வளவு மாற்றமில்லை அப்ப பார்த்த மாதிரியே இருக்கிறீயள்" "அவ‌ன் மார்க்கண்டேய‌ர் பரம்பரையை சேர்ந்தவன்" என்றான் குகன் , மூவரும் பழைய நண்பர்கள் நண்பிகளை பற்றி விசாரித்து அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிவதில் ஆர்வம் காட்டினார்கள். "உங்களுடன் வரும் கலா இப்ப எங்க இருக்கிறாள்" "எனக்கு வடிவாய் தெரியவில்லைஊரில் தான் இருக்க வேணும் என்று நினைக்கிறன்" "ஏன் அவளுக்கு வெளிநாடுகளுக்கு போக சந்தர்ப்பம் கிடைக்கவில்லையோ" "அவள் அங்க டீச் பண்ணுவதாக கேள்விப்பட்டனான் ஆனால் ஒரு தொடர்புமில்லை" "வட்ஸ் அப், பேஸ் புக் என்றும் ஒரு தொடர்புமில்லையோ" "சீ சீ" "நாங்கள் பெடியங்கள் எல்லாம் சேர்ந்து 72 கிளப் என்று வைச்சிருக்கிறோம் நீங்களும் ஜொய்ன்ட் பண்ணலாம்" என்றான் குகன். "நோ நோ , இதால நான் பெரிய பிரச்சனையில் மாட்டுப்பட்டு இப்ப தான் வாழ்க்கை சுகுமா போகுது" "அப்படி என்ன பிரச்சனையை நாங்கள் தரப்போறம்" "எல்லா ஆண்களும் ஒரு மாதிரியில்லை...." அந்த பதிலுக்கு பிறகு சுரேஸ் கலாவைப்பற்றி கேட்கவில்லை. தேனீர் அருந்திய பின்பு இருவரும் விடை பெற்றனர். காரில் பயணிக்கும் பொழுது "மச்சான் இப்பவும் கலா ஊரில் தான் இருப்பாளே" "என்னை கேட்கிறாய்,அவளின்ட சினேகிதி சுதாவுக்கே தெரியவில்லையாம் பிறகு எனக்கு எப்படி தெரியும்" "அடுத்த மாதம் ஊருக்கு போறன் போய் பார்க்கலாம் என்று யோசிக்கிறன்" " தனிய போறீயோ குடும்பத்துடன் போறீயோ" "குடும்பத்தோட போறன்" "மனிசி விட்டால் போய் சந்திச்சு போட்டு வா" "மனிசி ஒன்றும் சொல்லமாட்டாள்" "பிறகு என்ன ,போய் அப்ப சொல்லாத லவ்வை இப்ப சொல்லி பார் கி கி கி ....." வீட்டில இறக்கும் பொழுது குகன் நக்கலாக‌ "குட் லக் மச்சி"என்றான். "இஞ்சாரும் உவள் கலா ஊரில் தான் இருக்கிறாளாம்" "அப்ப அடுத்த மாதம் ஐயா கலாவை சந்திக்கப்போறார்"
  4. 18 points
  5. 17 points
    பாலைவன தடங்கள் ................................... 2003 உயர்தர பரீட்சை ஒரு படியாக 2 கொடியுடன் கையில் சேர்ந்தது. எப்பவும் விளையாட்டுத்தான் உனக்கு என ஏச்சும் பேச்சும் காதை நிறைத்த வண்ணம் வீட்டில் ஓயாத ரேடியோ பெட்டி போல எந்த நேரமும் ஒலித்துக்கொண்டிருந்தது. காரணம் விளையாட்டில் அதிக மோகம் ஒரு பைத்தியம் போல இருந்துவிட்டேன் அதனால் என்னவோ சமாதான காலத்தில் கிளிநொச்சி வரைக்கும் சென்று விளையாடி வர சந்தர்ப்பம் கிடைத்தது . 2004ல் சமாதான காலம் வெள்ளைப்புறா சிறகடித்து பறந்து திரிந்த காலம் அது. அதன் சிறகுகள் மெல்ல மெல்ல களையப்பட்டு , வேட்டையாட காத்துக்கொண்டிருந்தது மாவிலாறு பகுதியில் சமாதான புறா மெதுவாக இறக்க ஆரம்பிக்க வெள்ளைவான் ஊர்வலம் வரத் தொடங்கியது கிழக்கு வீதிகளில். யார் யார் உலா வருகிறார்கள் என்று தெரியாமல் கண்டம் விட்டு கண்டம் பாய்வது போலும் ஊரை விட்டு அயல் முஸ்லீம் ஊர்களில் ஒழித்துக்கொள்வோம் பகல் , இரவு வேளைகளில் அந்த நாட்களில் . (காலத்தில்) இப்படி இருக்க வேண்டாம் எங்கேயாவது போய்விடு என்று அம்மா சொல்ல கடனையும் வாங்கி ,இருந்த நகைகளையும் வித்து மத்திய கிழக்குக்கு போக தயாராகுகிறேன் . மெடிக்கல் , பாஸ்போட் என எல்லாம் கொழும்பில் வைத்து எடுத்து பயணம் 2004 ... . ....ல் ஆரம்பமாகிறது போகும் இரவு நேரத்தில் மட்டக்களப்பை தாண்டியதும் வெடியோசைகள் காதை கிழிக்க ஆரம்பித்தது என்னவோ ஏதோ? என மனது அடித்துக்கொண்டாலும் உயிரை தப்பித்துக்கொள்ள எங்கேயாவது ஓடிடு என்ற குரல் மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தது மனதுக்குள் எல்லா சோதனைகளை தாண்டி அதிகாலை கொழும்பை அடைந்ததும் மட்டக்களப்பில் சண்டைகள் அரங்கேற்றப்பட்டு இருந்தது என்று அறிய முடிந்தது . விமான நிலையம் போக பஸ்ஸை தவற விட்டு ஆட்டோ ஒன்றை பிடித்தாலும் விமான நிலையம் இருக்கும் அந்த பாதையோ மிக வாகன நெருசல் மிக்க தாக இருந்தது விமான நிலய அருகாமையில் இருக்கும் சோதனை சாவடியில் வைத்து என்னை மட்டும் இறக்கி நீ யாருடைய ஆள் என வினாக்கள் தொடுக்கப்பட்டது பிரபாகரன் ஆளா? அல்லது கர்ணா ஆளா என?. என்னடா எனக்கு வந்த சோதனை என முழுசிக்கொண்டு இருந்தன் . பிறகே நான் யாருடைய ஆளும் இல்லை படித்து முடித்து விட்டேன் ஊர்பக்கம் பிரச்சினை அதுதான் வெளிநாடு செல்ல போகிறேன் என்றேன் அவனும் ஒரு மணி நேரம் வரை வைத்துவிட்டு நாட்டை விட்டு செல்வது அவர்களுக்கு நல்லதென்று பட்டுதோ என்னவோ சரி போ என தூரம் வைத்திருந்த அப்பா, சித்தப்பாவிடம் அனுப்பினார்கள் . அந்த நேரம் விமான நிலையம் கண்ணாடி பொருந்த்தப்படவில்லை வெறும் பலகைகளாலும் மட்டைகளாலும் வைத்து மறைக்கப்பட்டிருந்தது , அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் கையை அசைத்துவிட்டு புறப்படலாகினேன் . அங்கேயும் போகும் வழியில் ஒரு நன்றாக தமிழ் தெரிந்த புலனாய்வு துறை ஒருவர் வந்து மீண்டும் கூட்டிக்கொண்டு விசாரித்தார் எந்த ஊர்? எந்த ஏரியா என? அவர் எங்கள் பகுதியில் இருந்திருப்பார் என்னவோ தெரியாது! சகல இடங்களையும் விசாரித்து விட்டு விலாசத்தையும் மனதுக்குள் முணுமுணூத்து பார்த்துவிட்டு விட்டு விட்டார் அவர் தமிழ் தெரிந்த சிங்களவர் அல்ல அவர் ஒரு தமிழர் என்பது அவர் பேசிய மொழி பாஷையில் அறிய முடிந்தது எனக்கு . தொடரும்.....
  6. 17 points
    உ சிவமயம் பெர்லின் மேற்கு ஜெர்மனி 15.10.1982 அன்புள்ள என்ரை செல்லக்குட்டி பரிமளம் அறிவது! நான் நல்ல சுகம். அது போலை நீங்களும் நல்ல சுகமாய் இருக்க அரசடி பிள்ளையாரை வேண்டுறன் நான் புதன்கிழமை விடியப்பறம் ஜேர்மனிக்கு வந்து சேர்ந்தேன். என்னோடை வந்த இரத்தினத்துக்கு தெரிஞ்ச ஆக்கள் வீட்டிலை இப்ப நிக்கிறன். எப்பிடியும் வாறகிழமையளவிலை பரீசுக்கு ரிக்கற் எடுத்து தல்லாம் எண்டு வீட்டுக்காரர் சொன்னவர். சரியான குளிராய் இருக்கு.....வீட்டுக்குள்ளை கீற்ரர் போட்டுத்தான் இருக்க வேணும்.சாப்பாடுகள் பரவாயில்லை.சொண்டு வெடிச்சுப்போச்சுது. குளிருக்கு வெடிக்குமெண்டு இஞ்சை சொன்னவை. இஞ்சத்தையான் குளிருக்கு மெத்தையிலை போர்த்து மூடிக்கொண்டு படுக்க நல்ல சுகமாயிருக்கு.என்ரை செல்லம் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம். எனக்கு விலாசம் கிடைச்சவுடனை தெரியப்படுத்துறன். உங்களுக்கு நான் கடிதம் போட்டதை என்ரை வீட்டுக்கு சொல்ல வேண்டாம். அவையைப்பற்றி தெரியும் தானே. என்ரை செல்லம் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம். இப்படிக்கு அன்பு அத்தான் குமாரசாமி அடுத்த கடிதம் வரும்......
  7. 17 points
    மனிதர் ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாளம் உண்டு; அந்த அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமே நமது தனித்துவமாக உலகிற்கு தோன்றுகிறது. நமது அடையாளத்தில் மிதமிஞ்சி கவனம் செலுத்தும்போது அங்கே ஆணவம் ஊற்றெடுக்கிறது. அப்போது தான் மற்றவர்களின் தனித்துவத்தை அலட்சியம் செய்யும் மனப்பான்மை உருவாகிறது. சக மனிதர் யாவரினதும் அடையாளத்தை நாம் அடையாளம் கண்டு புரிந்துகொள்ளும் தருணம் அவர்களை மதிக்கவும், அங்கீகரிக்கவும் ஏதுவாகின்றது; அவர்களின் 'குறைகள் என்று ஏனையோரால் சொல்லப்படுபவை' குறைகளாகத் தோன்றாது; முழுமையான மனிதராக அவர்கள் காட்சியளிப்பர். எனினும் அவர்கள் மீது பொறாமை ஏற்படாது. மற்றவர்களின் அடையாளத்தை புரிந்து கொள்ளும்/புரிய முயற்சிக்கும் மனது அன்பின் ஊற்றாகிறது. ஒருவர் தனது அடையாளம் எது என்று தெரியாமல் தவிக்கையில், அதைக் கண்டறிய வழி காட்டுபவர் நல்ல ஆசானாகிறார். இவ்வாறாக ஒருவரின் அடையாளத்தை மதித்தலும், அதற்கான வழிகாட்டுதலும் ஆகிய குணங்கள் ஒரு சமூகத்தில் பரவும்போது அச்சமூகம் ஆரோக்கியமான, நல்லிணக்கமான சமூகமாக வளம்பெறும். அன்பெனும் இன்ப ஊற்று தனி ஒருவரின் தாகத்தை மட்டுமல்ல ஒரு பெரிய சமூகத்தின் தாகத்தையும் தணிக்கவல்லது. எதற்கான தாகத்தை? ஒவ்வொருவரினதும் தனித்துவம் / அடையாளம் புரிந்து கொள்ளப்படாதா என்ற தாகத்தைத் தான். இவ்வாறு ஏனையோரின் அடையாளங்களை புரிந்து கொள்ளும் தன்மையானது குடும்பம், நிறுவனம், வகுப்பறை உள்ளடங்கலாக பல்வேறு வகையான சூழல்களில் பயனுள்ளதாக அமையும். இது இலகுவான ஒரு பண்பு அல்ல; சவால்கள் வரலாம். எனினும், இறுதியில் நமக்கும், நம்முடன் பழகுவோர்க்கும் இடையான உறவை மேலும் மேன்படுத்த உதவும்.
  8. 17 points
    உன் தோள் சாய ஆசைதான்.... காலை எழுந்ததிலிருந்து சுந்தரத்தின் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. காரணம் என்னவென்று சொல்லத் தெரியவில்லை. வீடு அமைதியாக இருந்தது. முன்பெல்லாம் தாத்தா தாத்தா என்று தோள்மீதும் மார்மீதும் புரண்டு மடிமீது தவழ்ந்த செல்லப் பேரன்கள் இருவரும் இ;ப்பொழுது தம் தேவைகளைத் தாமே கவனிக்கும் அளவு வளர்ந்து விட்ட பின்பு அவரை திரும்பியும் பார்ப்பதில்லை. காரணம் அவர்கள் கைகளில் பல தொழில் நுட்பச் சாதனங்கள். காலை எழுந்ததும் அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொண்டு வேகவேகமாக தத்தமது கருமங்களை கவனித்தபடி 'போய் வருகிறேன்' என்று சொல்லக் கூட நேரமில்லாமல் 'அப்பா யாராவது கதவைத் தட்டினால் பார்த்து திறவுங்கள் கவனம்' என்று சொல்வதைத் தவிர நின்று நிதானித்து 'அப்பா சாப்பிட்டீங்களா? இரவு தூங்கினீங்களா? உங்கள் தேவை என்ன? என்று கேட்டுச் செல்லக்கூட நேரமில்லாத அவசரம். இப்பொழுது அவர் பகுதி நேரமாக சில நாட்களில்தான் வேலைக்கு போய் வருவார். சாரதா இருக்கும் வரை சுந்தரத்திற்கு உலகமே அவள்தான். தான் உண்டு தன் கடமை உண்டு என்று வேலைக்குப் போய் சம்பாதிப்பதை அவளின் கையில் கொடுத்து விட்டு நிம்மதியாக தன் வாழ்க்கையை கழித்து விட்டார். அவரது தேவை அறிந்து சேவை செய்ய அவளை மிஞ்ச யாருமில்லை. சாரதாவும் அரசாங்க திணைக்களத்தில் தொழில் புரிந்தவள்தான். வேலைக்குச் செல்லுமுன் சுந்தரத்தையும் தன் ஒரே மகள் சுஜாவையும் கவனித்து அவர்களது தேவைகளையெல்லாம் கவனித்து விட்டுத்தான் செல்வாள். 'அப்பா அம்மா என்று அன்புடன் கொஞ்சி மகிழ்ந்த ஒரே மகள் சுஜாவிற்கு கல்வியுடன் நல்ல பண்புகளையும் ஊட்டி வளர்த்த சுந்தரமும் சாரதாவும் அவள் வளர வளர அவளது வளர்ச்சி கண்டு பூரித்தனர். தமது ஒரே மகளுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைத்துக் கொடுப்பதிலேயே அவர்களது மன எதிர்பார்ப்பு இருந்தது. அவர்கள் விரும்பியபடி சுஜாவுக்கு கனடாவிலிருந்து நல்லதொரு வரனும் வந்தமைந்தது. மகளுக்கு தமக்கு தெரிந்த இடத்திலேயே திருமணம் அமைந்ததில் திருப்திப்பட்ட பெற்றோர் தம் ஒரே மகளை கனடாவிற்கு அனுப்ப தயங்கவில்லை. சுஜா கஜனின் திருமணம் மிக விமரிசையாக நடந்ததை நேரில் பார்க்க முடியவில்லை என்ற ஆதங்கம் இருந்தாலும் மனதை திடப்படுத்திக்கொண்டு சுந்தரமும் சாரதாவும் தம் கடமைகளை தொடர்ந்தனர். சுஜா தாயாகப் போகிறாள் என்ற செய்தி வந்ததும் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி ஒருபுறம் பேரப் பிள்ளையை எப்ப பார்க்கப்போகிறோம் என்ற எதிப்பார்ப்பு ஒருபுறம் அவர்கள் மனம் அலைபாயத் தொடங்கியது. தினமும் தொலைபேசியில் கதைக்கும் பொழுது சுஜா தனியாக இருப்பதையும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் கஜனும் பக்கத்தில் இருக்க முடியாத சூழ்நிலையையும் அறிந்ததும் சுந்தரமும் சாரதாவும் மனச்சஞ்சலம் அடைந்தனர். சுஜாவும் பெற்றவர்கள் பக்கத்தில் இல்லையே என்ற ஏக்கத்தை தெரிவிக்கவும் பெற்ற மனம் பித்தாகியது. இறுதியில் சுந்தரமும் சாரதாவும் வேலையிலிருந்து கட்டாய ஓய்வெடுத்து கனடா வந்து சேர்ந்தனர். வந்ததும் சுந்தரம் சுறுசுறுப்பாக இயங்கினார். நேரத்தை வீணாக்காமல் வாகனம் ஓடப் பழகினார். தனியார் நிறுவனமொன்றில் கணக்காளராக வேலை செய்தார். சாரதாவும் சுஜாவுக்கு உதவியாக இருந்ததில் கஜனுக்கும் மிக மகிழ்ச்சி. பெற்றவர்கள் அருகாமையால் சுஜாவும் கஜனும் தத்தமது கடமைகளைச் செய்ய எதுவித தடைகளும் இருக்கவில்லை. காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. காலம் உருண்டோட இப்பொழுது இரு பேரக்குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியாகி பேரக்குழந்தைகளுடன் பொழுது சந்தோசமாகக் கழிந்தது. பேரக் குழந்தைகளும் தவழ்ந்து நடந்து ஓடி விளையாடி பாடசாலை செல்ல ஆரம்பித்தனர். விதி என்பது புயலைப் போன்றது. அது எப்படி யாரை எப்போது தாக்கும் என்று சொல்ல முடியாது. அதுதான் சுந்தரத்தின் வாழ்க்கையிலும் நடந்தது. திடீரென்று ஒருநாள் மாரடைப்பினால் அவதிப்பட்ட சாரதா சில மணி நேரங்களுக்குள் எல்லோரையும் தவிக்க விட்டு இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டார். சுந்தரத்துக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் ஆகிவிட்டது. அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ..என்ற வாசகங்களை அடிக்கடி நினைத்து தான் வாழ்ந்த காலங்களின் நினைவுகளுடன் நாட்களை கடத்தத் தொடங்கினார். பேரப்பிள்ளைகளின் அருகாமை துயரை மறக்க வைத்தாலும் காலப் போக்கில் அவர்களும் அவரை விட்டு விலகத் தொடங்கவும் தனிமை அவரை கொடுமையாகத் தாக்கியது. சாரதா இருக்கும் பொழுது காரை எடுத்துக் கொண்டு அவளுடன் கோவில் கடைத்தெரு என்று எங்காவது போய் வருவார். இடைக்கிடை உறவினர் வீடுகளுக்கும் செல்லத் தவறுவதில்லை. சாரதாவின் இழப்பின் பின் சுந்தரத்தை தனிமை வாட்டத் தொடங்கியது. தனிமையில் துவளும் சுந்தரத்திற்கு நான்கு சுவர்களே அரணாயின. மனைவியின் பிரிவு சுந்தரத்தை ஆட்டிப் போட்டு விட்டது. இப்பொழுதெல்லாம் கோவிலுக்குச் செல்வதையும் கடைத்தெருவுக்குச் செல்வதையும் கூட தவிர்த்தார். வீட்டில் கேட்கவே வேண்டாம். எத்தனை நேரம்தான் தொலைக்காட்சியையும் வானொலியையும் மாறி மாறி பார்ப்பதுவும் கேட்பதுவும். மனம் வெறுமையாகி விட்டது. ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் இருந்துமென்ன வேரென நீ இருந்தால் அதில் நான் வீழ்ந்து விடாதிருப்பேன் என்ற பாடல் வரிகளை அடிக்கடி முணுமுணுப்பார். காலநிலை நன்றாக இருந்தால் பக்கத்திலுள்ள பூங்கா வாங்கில் சென்று அமர்வார். தனிமை அங்கும் அவரைத் துரத்திச் செல்வதை விடவில்லை. எங்கே நிம்மதி எங்கே நிம்மதி என்று எங்கெங்கு அலைந்தாலும் தன் கூட, தன் சுக துக்கங்களில் பங்குபெற, தன் தேவைகளை நிறைவேற்ற, தன்னுடன் பாசமுடன் பேசி மகிழ, தன் மனப் பாரங்களை மனம் திறந்து உரையாட, நட்புடன் உறவாட, தன் அருகாமையைப் புரிந்து நடக்க, தன்னுடன் சேர்ந்து பயணிக்க தனக்கு ஓர் துணை வேண்டுமென்ற உண்மை உறைக்கத் தொடங்கியது. கொஞ்சக் காலமாக மனதில் வந்து போய்க் கொண்டிருந்த இந்த நினைவு இதை செயல்படுத்தினால் என்ன? என்ற ஆதங்கத்தை ஏற்படுத்தியது. மகள் ஏதாவது நினைப்பாளோ? மருமகன் ஏதாவது சொல்வானோ? பேரக்குழந்தைகள் அங்கீகரிப்பார்களோ? உறவுகள் பரிகசிப்பார்களோ? ஏன்ற சிந்தனைகளையெல்லாம் மிஞ்சி எனக்கென்று ஓர் வாழ்க்கை உண்டு என் வாழ்க்கையை நான் ஏன் அர்த்தமாக்கிக் கொள்ள முடியாது? என்று சிந்தித்தார். முடியாதென்று எதுவுமில்லை. என் மனம் புரிந்து என்னுடன் இணைந்து வாழ என்னுடன் சேர்ந்து பயணிக்க ஏன் நான் ஒரு துணையை ஏற்படுத்திக் கொள்ள முடியாது? சிந்தனைகளை அசை போட்டு போட்டு சில நாட்கள் கடந்தன. வாழ்க்கையின் பொருள்தான் என்ன? வாழ்ந்துதான் பார்த்தாலென்ன? என்ற எண்ணம் மனதுக்குள் சிம்மாசனமிட்டு அவரை தட்டி எழுப்பியது. பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளவும் புரிந்து கொள்ளவும் சாய்ந்து கொள்ளவும் ஓர் தோள் வேண்டும் இதுவரை மற்றவர்களுக்காக வாழ்ந்த வாழ்க்கையை இனி இருக்கும் கொஞ்சக் காலத்திலாவது தனக்காக தன் மன நிம்மதிக்காக வாழ்ந்தால் என்ன? சாரதாவிடமும் மனதுக்குள் பேசிப் பார்த்தார். அவரும் புன்னகையுடன் கையசைத்து வாழ்த்தியதான பிரேமை. மனச்சஞ்சலம் நீங்கியவராக புத்துணர்ச்சியுடன் செயற்பட ஆரம்பித்தார். முதற்கட்டமாக பத்திரிகையில் மணமக்கள் தேவை பகுதியைப் பிரித்து அதில் கண்களை ஓட விட்டார். 'நாற்பத்தைந்து வயதான கனடாவில் வசிக்கும் தன் சகோதரிக்கு பண்பான அன்பான ஒரு துணையை அவரது சகோதரன் தேடுகிறார்.' இந்த வாசகம் கண்ணில் பட்டதும் ஏன் நான் இந்த விளம்பரத்தை அழைத்து பேசக்கூடாது என்ற எண்ணம் மின்னலென மனதில் தோன்றியது. தன் மனதில் தோன்றிய எண்ணத்தை செயலாக்கும் முடிவுடன் தன் கைத் தொலைபேசியை எடுத்து அதிலுள்ள இலக்கத்தை அழுத்தத் தொடங்கினார். ----------------------x-----------------x-----------------x---------------------x----------------------
  9. 17 points
    இந்தத் தென்னைகளே சாட்சி.. பல வீடுகளுக்கு குண்டுகள் வைத்து தகர்த்தவன் யார் என்பதற்கு. அயராத மக்கள் இன்னும் ஊரில் இருக்கிறார்கள். புகையிலை தோட்டம். தொண்டமனாறுக்கு குறுக்கே பாலம். செல்வச்சந்நிதி. ஈஸ்டாமில் ஒரு குட்டி எஸ்ரேட் ஏஜென்ட் வைச்சிருந்து எப்படியோ செல்வம் திரட்டி.. வேலணை சாட்டியில் உல்லாச விடுதி நடத்தும் ரில்கோ. செங்கரங்கள் நீட்டி.. பனைக் கறுப்பிகள் கூந்தல் தடவி.. ஒளித்து விளையாடும்.. சூரியன். வேலணை சாட்டி.. அந்திசாயும் வேளை. யாழ்ப்பாண கடைசி தமிழ் மன்னனின் சமாதி என்று சொல்லப்படுகிறது. சுற்றி நிற்பதை யமுனா ஆறு என்கிறார்கள். தமிழரின் வாழ்வு போல் சிதைந்து நிற்கும் சங்கிலியனின் சரித்திரம். விட்டால்.. இன்னும் கொஞ்ச நாளில்.. புத்தர் விகாரையின் சாயல் என்று இடித்துப் புத்தர் விகாரை அமைந்தாலும் வியப்பில்லை. செம்பருத்தியின் அழகு. செவ்வரத்தை. தலைதொலைத்தது.. தமிழர்கள் மட்டுமல்ல.. தமிழர் நிலம் வாழ் பனைகளும் தென்னைகளுமே. நல்லூரான் அன்றும் இன்றும் என்றும் பொலிவோடு. பணக்காரக் கந்தனிடம் அர்ச்சனை ரிக்கெட் 1 ரூபா. அன்னதானக் கந்தன்.. கதிர்காமத்தின் காபன் கொப்பி..செல்வச்சந்நிதியான். பறவைகளின் உல்லாச புரி. பண்ணை. இன்னும் யாழ் நகரை காத்து நிற்கும்.. கண்டல் தாவரங்கள். பண்ணையில் மீன்பிடி. மரபுவழியோ...?! வடக்கில் மட்டுமல்ல.. மத்தியிலும் மாஓயாவை அண்டி மணல் அள்ளும் அரசியல் ஆசாமிகள். அமைதியாக ஓடும் மாஒயா. வெளிநாடுகளில்.. பல பத்து பவுன்கள் செலவழிச்சு வளர்க்கும் தாவரங்கள்.. மத்திய இலங்கையில்.. காடுபத்தி. மூங்கில் உரசல். மத்திய இலங்கை. பச்சைப்பசேள் என்று. இவ்வளவு வளமிருக்க எதுக்கு தமிழரின் நிலத்தை பிடிக்கனும் என்ற பேராசை. பலாக் காடு. தானே வளரும் வெற்றில்லை - மத்திய இலங்கை. அழகிய.. கண்டல் தாவரங்களை நிறைந்த.. புங்குடுதீவு - நயினாதீவு நெடும் வீதி... உல்லாசப் பயணிகளின்.. பிளாஸ்ரிக் குப்பைக்கூடம். நயினாதீவை இன்னும் தமிழர்களதும் என்றாக்கி நிற்கும் அம்மாளாச்சி. அழகிய பண்ணைக் கடற்கரை. செயற்கையாக ஒதுக்கிய பணங்களும்.. வசதிகளும்.. பராமரிப்பற்று.. உடைந்து போய். படகுச் சவாரி கூட நின்று போய். ஆனால்.. இயற்கையான வளங்கள் மட்டும் இன்னும் கடற்கரையை அழகுபடுத்திய படி. தூரத்தே கடல்நடுவே உல்லாச விடுதி. அமைத்தோர் யாரா இருக்கும்..??! எங்கள் வீட்டு முற்றத்தில் பிள்ளைகளை பிரதிநிதித்துவம் செய்து வளரும் தென்னம்பிள்ளை. பின்னே உடைக்கப்பட்ட வீட்டின் கற்குவியல். அதற்குள் கதை அமைத்தால்.. ஆயிரம் திரைப்படங்கள் எடுக்கலாம். அழகிய பனங்கூடல். இதன் அருகே மிக ஆடம்பர சிங்கள இராணுவ வளாகம். பயிற்சிக் கூடங்கள்.. இயற்கையான தடாகங்கள் புடைசூழ. ஆக்கிரமிப்பும் அழகு பார்க்கும். கமுகம்பிள்ளை. தாரவங்களையும் பிள்ளைகளாகக் கருதிய உயிர்நேய சமூகம் தமிழ் சமூகம். இன்று.. வாள்வெட்டு.. போதையென்று.. சீரழியுது. சேவலும் மயிலும்.. கதிரேசன் கோவில் செல்லப் பிராணிகள். (கொழும்பு 04) விகாரையோ.. புத்தரோ நமக்குப் பகையல்ல. இவற்றை எல்லாம் தமிழன் என்ற சக மனிதனுக்கு எதிரான கருத்தியலுக்கும் அவனின் சுதந்திரத்தை பறிக்கவும் பாவிப்பத்தே பகை. பாவிப்பவர்களே பகையாளிகள். என்ன வேடிக்கை என்றால்.. இங்கே புத்தருக்கு அருகில் பிள்ளையார் வாசம் செய்கிறார். இது குருணாகல். அதேவேளை வடக்கே நாயாற்றில்.. கோவிலை இடித்துவிட்டு தான் புத்தர் வருவன் என்கிறார். ஆக இது தான் இனவாதம். வடக்கே ஒரு சிந்தனை.. தெற்கே ஒரு சிந்தனை.. ஒரே மொழி பேசும் சிங்களவர்களிடம்.... விதைக்கப்பட்டுள்ளது. பேரலையாக எழும் இந்து சமுத்திரம் - களுத்துறை - இங்கு விகாரையை விட மசூதி மின்னுகிறது மிகப் பெரிதாக. அழகிய குருணாகல். செழிப்புற இருக்கும் விகாரை. குருணாகலை காப்பதுவாம். குன்று போன்ற ஒரு கல் மீது வீற்றிருக்கும் புத்தர். இதன் அடிப்படையில் வந்தது தான் குருணாகல் என்ற பெயர் சிங்களவர்களே சொல்கிறார்கள். (குறுநா கல்) மாவும் தென்னையும். மிகுதி..பார்த்துத் தொடர்வம்.....................................
  10. 16 points
    வணக்கம் போர் முடித்து வைக்கப்பட்ட பின்னரும் ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது படும் துயரங்களை அவ்வப்போது அறிந்து கொள்வதும் அவர்களுக்கு உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பதும் பின்னர் அவை அப்படியே தொடர்ச்சியாக விடுபட்டுக் கொண்டிருப்பதுவுமாகத் தான் நடைமுறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த காலங்களில் ஒரு சில அவசர உதவிகளுக்காக உறவுகளுடன் கேட்டு அவர்கள் நிறையவே உதவிகளும் செய்து அந்த உதவிகளும் உரியவர்களுக்குப் உரிய நேரத்தில் போய்ச் சேர்ந்திருந்தது. யாழ் இணையம் மூலம் நேரடியாக தொடர்ந்தும் தாயக மக்களுக்கு உதவி செய்ய விரும்பினாலும் அது பல்வேறு சட்டச் சிக்கல்களும் நிர்வாகச் சிக்கல்களும் உள்ள ஒரு விடயமாக உள்ளபடியால் யாழ் இணையம் மூலம் விளம்பர சேவைகளை வழங்கி அதன் மூலம் கிடைக்கப்பெறும் பணத்தினை ஏதாவது ஒரு அமைப்பிற்கு நேரடியாக வழங்குவதன் மூலம் தாயகத்தில் உள்ள மக்கள் பயன் பெறுவார்கள் என்பதுடன் நாம் சட்டச்சிக்கல்களையும் தவிர்த்துக் கொள்ள முடியும். அந்த வகையில் யாழில் விளம்பரங்கள் மூலம் கிடைக்கப்பெறும் பணம் TNRA அமைப்பிற்கே போய் சேரும் வகையில் விளம்பரப் பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. யாழ் கள உறுப்பினர்களிடம் இருந்து கேட்பது என்னவெனில் உங்கள் பகுதிகளில் இருந்து விளம்பரங்களை யாழில் இணைப்பதற்கு உங்களுக்குத் தெரிந்தவர்கள் நண்பர்களிடம் இது பற்றிக் தெரியப்படுத்துங்கள். விளம்பரங்களையாழ் இணையத்தின் மூலம் பிரசுரிப்பதன் மூலம் அத் தகவலினை உலகமெங்கும் வசிக்கும் உறவுகள் தெரிந்து கொள்ள வழியேற்படும் என்பதுடன் கிடைக்கும் பணம் நல்நோக்கத்திற்கே பயன்படப்போகின்றது என்பதையும் தெரியப்படுத்துங்கள். இன்னமும் என்ன செய்யலாம் என்ன மாதிரி செய்யலாம் என்பதையும் கள உறுப்பினர்கள் ஆலோசனைகளாக இங்கு வைக்க முடியும். உங்கள் பகுதிகளில் இதற்கு என விளம்பரங்களை பெற்றுத் தர நீங்கள் இணைய விரும்பினால் சேவை அடிப்படையில் இணைந்து கொள்ள முடியும். https://yarl.com/order/ எனும் முகவரியில் விளம்பரங்களை இணைத்துக் கொள்ள முடியும்.
  11. 16 points
    அனைத்து யாழ் உறவுகளையும் அன்புடன் அழைக்கிறேன்
  12. 16 points
    கணனியில் அதிகம் பயிற்சி எடுத்த களம் என்றால்.. அது யாழ் களம் தான். குறிப்பாக தமிழ் விசைப்பலகையில் ஆரம்பித்து... தமிழ் யுனிக்கோட் எழுத்துரு உருவாக்கத்தில்... ஆரம்ப காலத்தில்... நண்பர்களுடன் இணைந்து பணியாற்றியது ஈறாக.. வலைப்பூக்கள் அமைப்பு.. படங்களை மீள் வடிவமைத்தல்.. அசைவியக்க படங்கள் உருவாக்கம்.. தமிழ் மூல.. வின்டோஸ் அப்பிளிகேசன் மென்பொருள் பாவனை என்றும்.. கணணி வன்பொருள் அறிவு பெற்றமை.. கணனிக்குரிய பகுதிகளை வாங்கிப் பொருத்தி சொந்தமாக கணனி.. உருவாக்குதல் என்று.. போய்.. யாழுக்கு அப்ஸ் உருவாக்கும் வரை என்று நிறைய கணணி சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள யாழ் இடமளித்திருக்கிறது கடந்த பல ஆண்டுகளாக. இந்தப் பின்னணிகள் மற்றும் கல்வியிடங்களில் பெற்ற கணனி அறிவு.. மற்றும்.. வேலையிடங்களில் பெற்ற கணணி மென்பொருள் அறிவு எல்லாத்தையும் கலந்தடித்து சமர்ப்பித்ததன் அடிப்படையில்.. பிரிட்டிஷ் கம்பியூட்டர் சாசைட்டி.. The British Computer Society.. BCS இல்.. நிரந்தர அங்கீகாரங்களில் ஒன்றான.. AMBCS நிலை அண்மையில் கிடைக்கப் பெற்றது. கணணி சார் பட்டப்படிப்பு எதனையும் கொண்டிராத நிலையில்.. இந்த தகுதி நிலையை அடைவதற்கு இடையறாது.. கணணி பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆர்வம்.... இந்த அங்கீகாரத்துக்கான அடிப்படையாகும். அதுக்கு யாழும் உதவி புரிந்துள்ளது. The benefits of Associate (AMBCS) membership Associate membership delivers a range of services designed around the professional needs of today’s competent IT practitioners. Professional recognition Tools to gain recognition within the industry include post nominal letters AMBCS, and a defined path to Chartered status via Professional membership. Career development To plan and track progression, members use our Personal Development Plan (PDP), the CPD portal and gain full access to Browse SFIAplus, the online tool that allows them to explore the industry framework for IT skills, training and development. Networking Top people, great ideas and the latest thinking locally, nationally and online - our global networking opportunities are unrivalled and include branches, specialist groups and the Member Network. Knowledge and best practice From the latest industry news to our massive online library, the Institute’s information services keep members up to date with best practice, and at the cutting edge of IT. Exclusive discounts and offers Adding even more value to membership, our discounts and free services enable members to enjoy savings both at work and at home. Upgrading to Professional (MBCS) membership At any time during their free year’s membership, candidates who are eligible can upgrade to Professional (MBCS) membership. (MBCS subscription payment is required). யாழில் எழுத ஆரம்பித்த ஆர்வத்தின் மிகுதியால் கிடைக்கும் இரண்டாவது அங்கீகாரம் இதுவாகும். முன்னர் விஞ்ஞானச் செய்திகளை.. ஆக்கங்களை படித்து.. மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தமைக்கும் ஒரு அங்கீகாரம் கிடைத்தது. அது Royal Society of Biology வாயிலாகக் கிடைத்தது. இவை போக.. தமிழகத்தில்.. ஆனந்த விகடனில்.. யாழில் எழுதி வந்த விஞ்ஞான ஆக்கங்களை... எளிமையான மொழிபெயர்ப்புக்களை.. கொண்டு வந்த எங்கள் வலைப்பூவும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்தது. இவை போக.. யாழிலிலும் பகிர்ந்து கொள்ள என்று பிடிக்கப்பட்ட இரண்டு.. உயிரியல் சார்ந்த படங்கள்.. The Biologist என்ற இரு மாதங்களுக்கு ஒரு தடவை வெளியாகும் ஏட்டிலும் இரு வேறு படங்கள்.. இரு வேறு தடவைகள்.. பிரசுரமாகியுள்ளன. யாழ் ஒரு பொழுதுபோக்கு களம் என்பதற்கும் அப்பால்.. பலரும் பல்வேறு நிலை விருத்திக்குப் பயன்படுத்திய.. படுத்தக் கூடிய.. நுண்மைகள் பொருந்திய இடமும் கூட. இவற்றையும் யாழின் 21 ஆண்டு கால சாதனைகளில் சேர்ந்துக் கொண்டமைக்கு யாழுக்கும் யாழை உருவாக்கி.. நிர்வகித்து நடத்துவோருக்கும்.. செந்நன்றிக்கடனாக்கிக் கொள்கிறோம்.
  13. 15 points
    அழியாத கோலங்கள். புலம்பெயர்ந்து ஒரு தசாப்தமாயிற்று. காலவோட்டத்தில் நிற்காமலேயே நாட்கள் மின்னி மறைந்துபோயின. இளமைக்காலங்களில் அனுபவித்து மகிழத் தவறிய சந்தர்ப்பங்கள் குறித்த ஏக்கங்களும், ஆற்றாமைகளும், சிறியகாயங்களும் அவ்வப்போது வந்துபோயினும் புலம்பெயர்ந்த செயற்கை வாழ்க்கை இது எதையுமே நினைக்க விடவில்லை. வந்துவிட்டோம், வாகனமும், வீடும், வேலையும் சமூக அந்தஸ்த்தும் தேடித் தேடியே நாட்கள் தொலைந்துதான் மிச்சம். இடையிடையே கவலைகள் மனக்கசப்புகள் வேதனைகள், ஆற்றாமைகள், கோபங்கள், ஏமாற்றங்கள், வெறுப்புகள், விரக்திகள் என்று வாழ்க்கை தெருக்களிலெல்லாம் சிந்திக்கொண்டே போயிருக்கிறது. மறக்க விரும்பிய கணங்கள், நினைக்கத் தோன்றா தருணங்கள், மிண்டும் வாழ்ந்துபார்க்க விரும்பும் பொழுதுகள் என்று எத்தனையோ கணங்கள் வந்து போய்விட்டன. எவை வந்துபோயினும் கூடவே இழையோடியிருக்கும் ஒரு வெறுமை. எதுவென்று சொல்லத் தோன்றாத ஒரு ஏக்கம். நிறைவடையாத மனது. முடிவில்லாத தேடல்கள். இப்படி ஏதோவொன்று தொடர்ந்தும் என்னுடன் வந்துகொண்டிருக்கிறது. நீ அடைந்திருப்பவை எதுவுமே நீ தேடுபவை அல்ல என்று எனக்குச் சொல்கிறது. எனது தேடல்களின் இறுதி எதுவென்று எனக்குத் தெரியாது. பொருள்சார்ந்த தேடல்களில் எனக்கு எப்போதுமே விருப்பு இருந்ததில்லை. ஆனால், மனிதர்களில் இதுவரையில் தோழமையுடன் வந்தவர்கள் வெகு சிலரே. வந்தவர்களும் பாதியிலேயே விட்டகல வெறும் தனிமைதான் கூட வருகிறது. உறவுகள் இறுதிவரையென்றாலும், தனிமனித விருப்பு வெறுப்புகள் அவற்றையும் தேடல்களின் பட்டியலிலிருந்து நீக்கிவிடுகின்றன. அதனால் எனது தேடல் இன்னமும் தொடர்கிறது.
  14. 15 points
    அன்று மிஸ்டர் ஆபீசர் தனது அலுவலக உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்ற நாள். நெருங்கிய சில அலுவலக சகாக்களுடன் மதிய உணவை முடித்துக் கொண்டு விடைபெற்று வீடு வந்தபோது அவர் மனைவி உமாவும், ஒரே ஒரு மகள் கவிதாவும் இன்னும் வேலையில் இருந்து வீடு திரும்பியிருக்கவில்லை. வீட்டுக்கு வெளியே இருந்த சாய்மனைக் கதிரையில் சாய்ந்தவர் தனது அலுவலக நினைவுகளை அசை போட்டார். நிர்வாக உதவியாளராகத் தொடங்கிய அவரது பணிக்காலத்தின் இடையே கம்ப்யூட்டர் மயமான பொழுதில் தொழிநுட்பத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் போக இறுதி வரை சாதாரண அலுவலராகவே வேலை செய்து ஒய்வு பெற்றார். (எனினும் அலுவலக உத்தியோகத்தர் என்னும் திமிர் அவரிடம் எப்போதுமே குடி கொண்டிருந்தது. வேலை தவிர்ந்த வெளியிடங்களில் நண்பர்கள், உறவினருடன் உரையாடும்போதும் 'எந்த ஆபிசில...' என்று ஆரம்பித்து தான் அலுவலகத்தில் வேலை செய்வதைக் காட்டிக்கொள்வார்). இதனால் தான் இவருக்கு மிஸ்டர் ஆபீசர் என்ற பட்டப்பெயர் கிடைத்தது என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். இவரது வீம்புப் பேச்சினாலேயே இவரது அலுவலகத்தில் சில ஊழியருடன் இவருக்குக் கருத்துவேறுபாடு முற்றி நிம்மதி இழந்து இன்று அறுபதாவது வயதில் ஓய்வெடுக்கும் நிலைக்கு வந்துள்ளார். அலுவலக நினைவுகளில் இருந்து மீண்டவருக்கு 'ஒய்வு பெற்றுவிட்டோம், இனி மேல் என்ன செய்யலாம்?. என்ன தான் இருந்தாலும் அலுவலகம் சென்று போது நேரம் போவது தெரியவில்லை. இனிமேல் வாழ்க்கை வெறுமையாக இருக்கப்போகிறதே. பொழுதுபோக்குக்காவது எதாவது வேலை செய்தாக வேண்டுமே' என ஆழ்ந்த யோசனையில் இருக்கும்போது உமாவும், கவிதாவும் வருவதைக் கண்டார். அவர்கள் வந்தவுடனே இருப்புக்கொள்ளாமல் தனது மனதில் வந்த குழப்பத்தை அவர்களிடம் இவ்வாறு பகிர்ந்தார்: "உமா, கவிதா இஞ்ச வாங்கோ. ஓய்வு பெற்று ஒரே விசராய்க்கிடக்கு. அலுவலக வேலைபோல, ஆனால் அழுத்தம் (stress) இல்லாமல், ஆனால் ஒரே இடத்தில் இருந்து செய்யும் வேலை ஏதும் தேடுவம் என்று நினைக்கிறன். சம்பளம் பற்றிக் கவலை இல்லை. ஏதாவது செய்தாக வேணும்' என்றார். உடனே மகள் கவிதா சொன்னாள் "அதுக்கு முகநூலில் (Facebookல்) இணைந்தாலே போதும். நீங்க விரும்பினமாதிரி வேலை பார்க்கலாம்". அதற்கு ஆபீசர் சொன்னார்: "முகநூலா? என்ர அலுவலகத்திலும் அதைப்பற்றி எல்லாரும் சொல்லி இருக்கினம். உள்ள சோலியோட அதைப்பற்றி யோசிக்க நேரம் இருக்கேல. இருக்கிற வேலையையே ஒழுங்கா கம்ப்யூட்டர்ல செய்யக் காணேல. அப்படி முகநூலில் என்ன தான் விஷேஷம் இருக்கு?" அதன் அருமை பெருமைகளை மனைவியும், மகளும் எடுத்துச் சொல்லலாயினர்; கவிதா சொன்னாள் 'இருந்த இடத்தில் இருந்தே உலகத்தைப் பார்க்கலாம்!' "ஒரு சத்தமும் இல்லாமல் கொசிப் அடிக்கலாம்!" என்று உமா அடித்துவிட, "24 மணி நேரமும் திறந்து இருக்கும் - விரும்பிய நேரத்துக்கு வேலைக்குப் போய் வரலாம்!, கிட்டத்தட்ட உங்கட சொந்த பிஸ்னசை மனேஜ் பண்ற மாதிரி!" என்று டெலிமார்க்கெற்றர் போல எடுத்து விட்டாள் கவிதா. "பக்கத்து வீட்டுப் பெடியனிட்ட ஏதும் உதவி தேவை எண்டா உதில call பண்ணியும் கதைக்கலாம் - அவன் எங்க நிக்கிறானோ இல்லையோ முகநூலில் மட்டும் 24 மணி நேரமும் இருப்பான்!" என்று உமா சொல்லவும் இறுதியாக மிஸ்டர் ஆபீசர் முகநூலில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்தார். முகநூலில் அவருக்கு Profile ஒன்று open பண்ணி, மகளும், மனைவியும் தெரிந்த நண்பர்கள், உறவினர்களை அவருக்கு நண்பர்களாக இணைத்து விட்டனர். ஆபீசர் விதம் விதமான படங்களை எடுத்துப் போட்டார்; அலுவலகத்தில் ரை கட்டியபடி எடுத்த ஒரு போட்டோ, பார்க்கில, பீச்சில மனைவி, மகளுடன் ஒரு செல்பி என குளியலறை, பள்ளியறை தவிர்த்து எல்லா இடங்களிலும் படம் எடுத்து முகநூலில் பகிர்ந்தார். அநீதிக்கு எதிராகப் போராடினார், முகநூலில் வீராவேசமான கருத்தெழுதி. மனித உறவுகளின் உன்னதத்தைப் பற்றி நிலைத் தகவலில் சிலாகித்து எழுதினார், இங்கே மனைவி, மகளுடன் நேரத்தைச் செலவிட நேரமின்றி. லைக்குகளும் ('Like's), வாழ்த்துக்களும் இன்ன பிற கமெண்ட்ஸ்ம் (comments) குவிந்தன. பசித்திரு-தனித்திரு-விழித்திரு என ராமலிங்க அடிகளார் ஆன்மிகத்தில் உபதேசித்ததை முகநூல் வாழ்வில் கடைப்பிடித்தார் ஆபீசர். போதாக்குறைக்கு அவரது பிறந்த நாளன்று வெளியே dinnerக்கு போக உமாவும், கவிதாவும் கேட்ட போது, "வெளி உலகத்திலை என்ன இருக்கு? இவ்வளவு காலமும் ஆபிஸ் ஆபிஸ் என காலத்தை வெறுமனே ஓட்டிட்டன். இங்க தான் (முகநூலில்) சுவாரசியமான உலகமே இருக்கு. இப்ப தானே இதுக்குள்ள இறங்கினனான். ஒரு கை பார்த்திட்டு தான் மற்ற வேலை" என்று சொல்லிவிட்டு பிறந்த நாளுக்கு வாழ்தியவர்களுக்கு நன்றி சொல்ல ஆயத்தமானார், முகநூலில். "இந்த முகநூலில் இவரை இணைத்தது பிழையாப் போச்சு" எனக் கவிதா சலித்துக்கொள்ள, "ஓமோம், நீ தானே எல்லாத்துக்கும் காரணம்; இந்த மனுசன் ஓய்வு பெற்றால் சமையல், தோய்சல் எண்டு எனக்கு உதவியா இருக்கும் எண்டு கனவு கண்டுகொண்டிருந்தன்..." என உமா பெருமூச்சு விட்டுக் கொண்டு சமையலறைப் பக்கம் சென்றார். நாட்கள் சில சென்றன. ஒருநாள் வைகறைப் பொழுதில் மிஸ்டர் ஆபீசரின் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்த உமாவும், கவிதாவும் திடுக்கிட்டு விழித்தெழும்பி அவரது அறையை நோக்கி ஓடினர். அங்கே ஆபீசர் தனது தலையில் கைவைத்தபடி தன் கொம்ப்யூட்டரின் திரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். "என்னப்பா உங்கட முகநூலை யாராவது ஹக் (hack) பண்ணிட்டாங்களா?" என்ற படி அவரருகே உமா சென்றாள், அப்படியாவது மனுசன் முகநூல் போதையை விட்டிடும் என்ற நப்பாசையில். "இல்லைப் பாரும், இந்த மூண்டு பேரும் எனக்கு நட்புக்கு அழைப்புக் (friend request) கொடுத்திருக்கிறாங்கள்" என்று அலறினார் ஆபீசர். "யாரப்பா அது?" என்று கவிதா கேட்க, "என்ர அலுவலகத்தில என்னோட வேலை செய்தவங்கள். இவங்களால எப்போதும் எனக்கு வேலையில் நிம்மதி இருக்கவில்லை. என்னை எப்பவும் மனேஜரிட்ட மாட்ட வைத்துக்கொண்டே இருப்பாங்கள். இவங்கட கரைச்சல் தாங்காமல் தான் நான் கொஞ்சம் வெள்ளனவே ஓய்வெடுத்திட்டன் (retired) எண்டு சொன்னனான் தானே. இப்ப முகநூலிலையும் வந்து கரைச்சல் குடுக்கிறாங்கள். ராகு, கேது, சனி மூன்றும் வந்து friend request குடுக்கிறது போல இருக்கு" ஒரே மூச்சில் சொன்னவர் "கட்டாயம் இந்த நட்பு அழைப்புக்களை ஏற்றுக்கொள்ள(accept) வேண்டுமோ?" என கவிதாவைப் பார்த்து அப்பாவித்தனமாகக் கேட்டார். அவள் தான் இந்த விசயத்தில் அவருடைய ஆலோசகர். கவிதா யோசித்துவிட்டுச் சொன்னாள் "ஏற்றுக்கொண்டால் அவங்கள் உங்களுக்கு முகநூலிலும் கரைச்சல் கொடுப்பாங்கள். ஏற்காமல் மறுத்தால் (reject) அதுவும் அவங்களுக்குத் தெரியும்" என்று சொல்ல ஆபீசர் குறுக்கிட்டு "இப்ப என்ன தான் செய்ய பிள்ளை?" என்று ஏக்கத்துடன் கேட்டார். "நீங்கள் ஒண்டுமே பண்ண வேண்டாம். அப்படியே விட்டிடுங்க. அப்படியே விட்டாலும் எப்படியாவது நோண்டப் பார்ப்பாங்கள். ஆகவே இனி முகநூலைப் பாவிக்கிறதைக் குறைத்துக் கொள்ளுங்கோ" என்று கவிதா கூற உமாவும் அதை ஆமோதித்தாள். இது ஆபீசருக்குச் சற்று அதிர்ச்சியாக இருத்தாலும், சற்று நேரம் யோசித்துவிட்டு நடிகர் திலகம் அழுகையை அடக்கிப் பேசும் தொனியில் சொன்னார் "எனது முகநூல் நான் கடந்த மூன்று மாத காலமாகக் கட்டியெழுப்பிய அறிவு சார்ந்த சொத்து (intellectual property). அதை இலகுவாக விட்டுவிட முடியாது. எனினும் இந்த இக்கட்டான நிலையில் அதில் அதிக நேரம் செலவிடாது, ஏதாவது ஓர் தொண்டு நிறுவனத்தில் பகுதி நேரமாகத் தொண்டரா (voulnteer) வேலை செய்தாலும் நல்லது தானே". உமாவும், கவிதாவும் இதை ஆமோதித்தனர். "இப்ப தான் உங்களைப் பிடித்த சனி (முகநூல் போதை) விலகியிருக்கு" என உமா சொல்ல, "எல்லாம் அந்த ராகு, கேது, சனியால் தான்" என ஆபீசர் குறும்பாகச் சொல்ல எல்லோரும் கலகலப்பாகச் சிரித்தனர். "இதற்குத் தான் நான் முகநூல் பாவிக்கிறது குறைவு; யாழ் இணையத்தில தான் என்ர பொழுது போக்கு - அது எவ்வளவோ திறம்" என கவிதா சொல்ல "அது என்ன யாழ் இணையம்?" என ஆபீசர் ஆச்சரியமாகக் கேட்க, உமா ரகசியமாக கவிதாவைப் பார்த்து முறைத்து விட்டு ஆபீசரிடம் "அதை விடுங்க; இன்று உங்களுக்குப் பிடித்த அல்வா செய்து தரப்போறன், வாங்கோ" என்று அவரை சமயலறைப் பக்கம் கூட்டிச் சென்றாள். (பின் குறிப்பு: இக்கதை முழுக்க முழுக்கக் கற்பனையே. யாரையும் தனிப்படக் குறிப்பிடும் நோக்கிலோ அல்லது, நோகடிக்கும் நோக்கத்திற்காகவோ சித்தரிக்க முனையவில்லை. எனினும், மிஸ்டர் ஆபீசர் போன்றோரை நாம் நம் வாழ்வில் பல இடங்களில் பார்த்திருக்கலாம். மிக முக்கியமாக நமக்குள்ளேயே பார்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! நன்றி )
  15. 15 points
    கடவுள் படைக்காத மனிதர்கள்! அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதியாக வரும் முன்னர் சில ஆண்டுகள் முன்பிருந்தே அடிப்படை வாதக் கிறிஸ்தவர்களின் (evangelical Christians) கை கொஞ்சம் கொஞ்சமாக ஓங்க ஆரம்பித்து விட்டது. இவர்களின் பழமை வாதக் கொள்கைகளும் அக்கொள்கைகளை மதச் சார்பின்மையுடய அமெரிக்க சட்டத்தினுள் குறுக்கு வழிகளில் புகுத்தி மற்றவர்களின் நம்பிக்கைகளைத் தாங்கள் தீர்மானிக்கும் தீவிரமும் இவர்களை நான் "கிறிஸ்தவ தலிபான்கள்" என்று அழைக்கக் காரணங்கள். இந்தப் பழமை வாதக் கிறிஸ்தவர்களின் நீண்ட கால இலக்குகளில் ஒன்று டார்வினின் கூர்ப்புக் கோட்பாடு (theory of evolution). 1859 இல் சார்ள்ஸ் டார்வின் உயிரியல் உலகின் மிக முக்கியமான முன் மொழிதலான "உயிரினங்களின் கூர்ப்பு" எனும் தியரியை ஒரு நூலாக வெளியிட்டார். "கடவுளின் சாயலாக மனிதன் ஒரே நாளில் படைக்கப் பட்டான், அதன் பிறகு கடவுள் மனிதனுக்குப் பயன்படும் வகையில் மற்றைய உயிரினங்களைப் படைத்தார். இவையெல்லாம் ஏழே நாட்களில் நடந்து முடிந்தன" என்று பைபிள் கூறுகிறது. இந்த பைபிள் நம்பிக்கை மீது விழுந்த முதல் பாரிய அடியாக டார்வினின் கூர்ப்புக் கொள்கை இருந்தது. டார்வினின் கூர்ப்புக் கொள்கையை, வேறும் சில விஞ்ஞானக் கருது கோள்கள், அவதானங்களோடு இணைத்துப் பார்த்தால் பின்வரும் உயிர்களின் பயணச் சுவடு தெரிகிறது: ஒரு ஒற்றைக் கல உயிரினமாக ஆதிக் கடலில் உருவான முதல் உயிர், பல கலங்களாக மாறி, பின் முள்ளந்தண்டு உருவாகி, நுரையீரல் வளர்ந்த போது, தரையில் ஊர்வனவாக மாறியது. இந்த ஊர்வன பின்னர் குட்டி போட்டுப் பால் கொடுக்கும் நிலை கொண்ட பாலூட்டிகளை உருவாக்கின. இந்தப் பாலூட்டிகளில் சில மரத்தில் தொங்கி திரிந்து வாழ ஆரம்பித்த போது மந்திகள் உருவாகின. மந்திகளில் சில தொப்பென்று தரையில் விழுந்து அரைவாசி நிமிர்ந்த நிலையில் ஆதிப் புல் வெளிகளில் அலைந்து திரிய ஆரம்பித்த வேளையில் ஆதி மனிதர்கள் உருவானார்கள். இந்தப் பயணச் சுவட்டின் இன்றைய உச்சம், ஹோமோ சேபியன்ஸ் (Homo sapiens) எனப்படும் நாங்களாக இருக்கிறோம். ஒரு அறிவியல் கொள்கை மத நம்பிக்கையை அச்சுறுத்தும் போது நிகழும் எல்லாம், டார்வினின் கூர்ப்பியலுக்கும் நிகழ்ந்தன. ஆனால், கூர்ப்பு நிகழ்ந்திருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்று நிரூபிக்கும் சான்றுகள் கடந்த 150 ஆண்டுகளில் ஏராளமாக வெளிவந்து விட்டன. உதாரணமாக மூளையை எடுத்துக் கொள்ளுங்கள். நவீன மனிதர்களான எங்களுடைய மூளையில் மூன்று பிரதானமான பகுதிகள் இருக்கின்றன. (மூளையைப் பல பகுதிகளாக வகைப் படுத்தலாம், நான் இங்கே குறிப்பிடும் வகைப் படுத்தல் கூர்ப்பியல் படிமுறையை எடுத்துக் காட்ட மட்டுமே என்பதைக் கவனிக்கவும்). எங்களிடம் இருக்கும் மூளையம் சார்ந்த மூளைத்தண்டுப் பகுதியை "ஓணான் மூளை" என்று அழைக்கலாம். சுவாசம், இதயத் துடிப்பு, உடல் அசைவு என்பவற்றைக் கட்டுப் படுத்தும் இந்தப் பகுதி ஊர்வனவற்றிலேயே உருவான ஆதி மூளை என்பதால் இப்படி அழைக்கலாம். பிறகு "நாய் மூளை" என்று நாம் பட்டப் பெயர் கொண்டழைக்கத் தக்க பெருமூளைப் பகுதியும் எங்களிடம் உண்டு. ஸ்பெஷலாக விருத்தியான முன் மூளைப் படை (prefrontal cortex) எனப்படும் அதி விசேட பகுதி மனிதர்களுக்கு மட்டுமே உரித்தான ஒரு பகுதி. சுருக்கமாகச் சொன்னால், ஒரு பழைய கணணிக்கு கட்டம் கட்டமாக RAM பொருத்தி அதனை செயற்றிறன் மிக்க கணணியாக மாற்றும் வேலை எங்கள் மூளையில் கூர்ப்பினால் செய்யப் பட்டிருக்கிறது. கூர்ப்பியல் சார்ந்த இந்த இலகுவான விளக்கத்தை அடிப்படை வாதக் கிறிஸ்தவர்கள் ஏற்க மறுத்து Intelligent Design எனும் தங்கள் கற்பனைக் கொள்கையொன்றை ஊக்குவிக்கிறார்கள். இன்ரெலிஜென்ட் டிசைன் கூர்ப்பினால் மனிதன் பெற்ற சிறப்புகளின் உரிமையை அப்படியே தங்கள் கடவுளின் கைவண்ணமாகச் சித்திரிக்கிற ஒரு நொண்டி முயற்சி. அமெரிக்காவின் சில தென் மானிலங்கள், தமது பாடசாலைகளில் கூர்ப்புக் கொள்கையின் "நன்மை தீமைகளை" ஆராயும் பாடங்கள் கற்பிக்கப் பட வேண்டுமென்று சட்டமியற்றியிருக்கின்றன. இதன் நீண்ட கால இலக்கு, மத நம்பிக்கையின் பால் பட்ட இன்ரெலிஜென்ற் டிசைன் ஒரு மாற்றுத் தியரியாக திணிக்கப் பட்டு குழந்தைகளை அதை ஏற்கச் செய்வதாக இருக்கிறது. டார்வின் கூர்ப்பினால் தக்கன பிழைத்து சூழலுக்கு இயைபாக்கம் அடைந்து புதிய உயிரினங்கள் உருவாகின்றன என்று ஊகித்த போது "ஜீன்" என்ற ஐடியாவே உருவாகியிருக்கவில்லை. ஆனாலும், இயற்பியலில் ஐன்ஸ்ரைனின் கோட்பாடுகள் நவீன பௌதீகவியலாளர்களால் இன்றும் நிரூபிக்கப் பட்டுக் கொண்டிருப்பது போல, டார்வினின் கூர்ப்பியல் நூல் வெளியாகி சரியாக நூறு ஆண்டுகளில் பின்னர் டி.என்.ஏ (DNA) மூலக்கூறினை விஞ்ஞானிகள் வாட்சனும் கிறிக்கும் கண்டு பிடித்து, கூர்ப்பின் மூலக்கூற்று அடிப்படையை ஆரம்பித்து வைத்தனர். தற்போதைய கூர்ப்பை நிரூபிக்கும் ஆய்வுகள், வெளித்தோற்றங்களைத் தாண்டி, நேரடியாக டி.என்.ஏ மூலக் கூறுகளையே ஆய்வு செய்து பல தகவல்களை உறுதி செய்கின்றன. இந்தக் கட்டுரை எழுதத் தூண்டுதலாக இருந்ததும் அப்படியான ஒரு டி.என்.ஏ சார் கூர்ப்பியல் ஆய்வு தான். ரஷ்யாவுக்கும் மொங்கோலியாவுக்கும் இடையே இருக்கும் டெனிசோவா எனும் பனி உறைந்த குகையொன்றை மனித வரலாறு தொடர்பான ஆய்வாளர்கள் 1980 இல் இருந்து அகழ்வு செய்து ஆராய்ந்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக அங்கே கண்டெடுக்கப் பட்ட என்புத் துகள்கள், மற்றும் கல்லாயுதங்கள் என்பவற்றை அவை அங்கே படிமமாகிய காலக் கணிப்பீட்டோடு ஆய்வு செய்யப் பட்ட போது பல சுவாரசியமான , மனிதக் கூர்ப்பின் படிமுறைகளை உறுதி செய்யும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அந்தக் குகையில் கிடைத்த ஒரு என்பின் டி.என்.ஏயின் படி, ஹோமோ சேபியன்ஸுக்கு நெருக்கமான டெனிசோவியன்ஸ் என்ற ஆதிமனிதர்களும் அவர்களுக்கு முன்னைய ஆதி மனிதர்களான நியண்டதால் (Homo neanderthalensis) மனிதர்களும் இனப் பெருக்க ரீதியில் கலப்பில் ஈடு பட்டிருக்கிறார்கள் (அதான்பா, அந்தக் குஜால் மேட்டர்!) என்பது தெளிவாகியிருக்கிறது. இது, மனிதனின் கூர்ப்பில் மிகவும் முக்கியமான ஒரு கண்டு பிடிப்பு. ஏன்? கூர்ப்பு என்பதன் அடிப்படை "ஒரு இனம் கொஞ்சம் கொஞ்சமாக இன்னொரு இனமாக, இன்னொரு வேர்சனாக (version) மாறுவது" என்பதாகும். இந்தப் படிமுறை மாற்றத்தை மனிதனில் டி.என்.ஏ வடிவில் நிரூபித்திருக்கும் முதல் கண்டு பிடிப்பு இது. டெனிசோவியன்கள் எனப்படும் புதிய மனித இனமும், நியண்டதால் என்ற ஆதியான இனமும் கலந்து, உருவான சந்ததிகளில் நியண்டதாலின் இயல்புகள் புதிய வாழ் நிலைமைகளுக்கு ஏற்புடையவையாக இருக்காமையால், அந்த மனித இனம் அருக, டெனிசோவியன்கள் பெருக எங்கள் நவீன ஹோமோ சேபியன்ஸ் இனம் உருவாகியிருக்கிறது. இந்த டெனிசோவாக் குகைகளில் நடந்த இன்னுமொரு ஆய்வில், 50,000 வருடங்களுக்குள் வாழ்ந்திருக்கக் கூடிய நவீன ஹோமோ சேபியன்ஸ் இனத்துடன் தொடர்பான கல்லாயுதங்களும் கண்டெடுக்கப் பட்டிருப்பது, இந்த ஊகத்திற்கு மேலதிக உறுதி சேர்க்கிறது. நாம் பல இடங்களில் காண்பது போல, அறிவியல் ஆய்வு முயற்சிகள் கடினமானவை, நீண்ட முயற்சியை வேண்டுபவை. அந்த அறிவியல் வியர்வை சிந்தி வெளிக்கொண்டு வரும் எமது கதையை கடவுளின் பக்தர்கள் தங்கள் அடிப்படை வாதத்தை வளப்படுத்தப் பாவிப்பது இன்னும் தொடரும் என நம்பலாம். இந்த இறுதிக் கண்டு பிடிப்பு இன்ரெலிஜென்ற் டிசைன் காரர்களுக்கு எப்படி உதவப் போகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆதாரங்கள்: 1. Dating of hominin discoveries at Denisova, Dennell, R. Nature, vol 565, 571–572 (2019). 2. Timing of archaic hominin occupation of Denisova Cave in southern Siberia, Nature, vol 565, 594–599 (2019) .
  16. 14 points
    இன்றைய தகவல் தொழிநுட்ப உலகில் பொழுதுபோக்கு ஊடகங்கள் மலிந்து கிடக்கின்றன. வேலை / வகுப்பு முடிந்து வீடு வந்து தான் தொலைக்காட்சியில் அல்லது கணினியில் நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க வேண்டும் என்ற நிலை மாறி யூடியூப் (YouTube), முகநூல் (Facebook) போன்ற சமூக ஊடகங்களின் அபரிமிதமான வளர்ச்சியாலும், ஸ்மார்ட்போன்களின் (smartphones) உதவியுடனும் நாம் எங்கு சென்றாலும் எந்த நேரத்திலும் விரும்பிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கக் கூடியதாக இருக்கிறது. கடைக்காரர் கொத்துரொட்டி போடும் ஓர் பத்து நிமிட இடைவெளியில் வடிவேலுவின் பழைய பகிடி ஒன்றை யாழில் கள உறவு ஒருவர் பகிர்ந்ததை கைத்தொலைபேசியில் பார்த்துச் சிரிப்பதை ஓரிரு தசாப்தங்களுக்கு முன்னர் நினைத்திருப்போமா?! இவ்வாறு கேளிக்கை ஊடகங்கள் நம் வாழ்வுடன் இரண்டறக் கலந்த இக்காலத்தில், நாம் முன்பொருகாலத்தில் பொறுமையாக நல்லதோர் திரைப்படத்தை நண்பர்கள், உறவினருடன் கண்டு ரசித்த அனுபவத்தை நம்மில் பலர் மறந்திருப்போம். தற்போதும் கூட சினிமாவுக்குச் சென்றோ அல்லது வீட்டிலிருந்தோ திரைப்படங்களை கண்டு களிக்கிறோமே என்கிறீர்களா? இந்தச் சமூகவலை உலகில் நாம் திரைப்படங்களை ரசிக்கும் அனுபவ உணர்வும் மாறிவிட்டது. உதாரணத்துக்கு நாகேஷ், கவுண்டமணி - செந்தில், வடிவேலு, விவேக் போன்ற சிறந்த நகைச்சுவையாளர்களை ரசித்த நாம் இன்றைய திரைப்படங்களில் வரும் மொக்கையான நகைச்சுவைகளை வேறு வழியின்றி ரசிக்கப்பழகிவிட்டோம். அழுத்தங்கள் நிறைந்த, எந்திரத்தனமான வாழ்க்கைச்சூழல் எதற்கெடுத்தாலும் சிரிக்கப் பழகவேண்டும் என்று கற்றுக்கொடுத்துவிட்டதோ தெரியவில்லை, இன்றைய காலத்தில் இது தான் 'Trend' என்கிறார்கள். ஆக, பொழுதுபோக்கிற்குப் பல தெரிவுகள் உள்ள (அத்துடன் குப்பைகளும் நிறைந்த) இன்றைய காலத்தில் நாம் இளைப்பாறி சிறந்த தமிழ்த் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தைப் பெறுவது எப்படி? இதற்கு சிறந்த திரைப்படங்களைத் தெரிந்தெடுக்கும் திறன் மட்டுமல்ல பல சந்தர்ப்பங்களில் ஒரு திரைப்பத்தில் நாம் எவற்றை எதிர்பார்க்கின்றோம் / எதிர்பார்க்கலாம் என்ற தெளிவும் நமக்குத் தேவை. இது பற்றி கீழ்வரும் பகுதிகள் விளக்கும்: படத் தெரிவு புதிதாக வெளியாகும் திரைப்படங்களைத் திரையில் பார்க்கும் முன்னர் அது வெளியானவுடன் வரும் விமர்சனங்களை முதலில் படிப்பேன் / யூடூபில் (YouTube) பார்ப்பேன். நண்பர்களின் முகநூல் நிலைத்தகவல்கள், செவி வழியான கருத்துக்களைக் கேட்டறிந்தாலும் அது அவர்களின் தனிப்பட்ட அபிப்பிராயம். ரஜினி, விஜய், அஜித் என அவர்களின் அபிமான நடிகர்களின், அல்லது சங்கர், மணிரத்னம் என தம் மனம் கவர்ந்த இயக்குனர்களின் படத்தை அநேகமாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள் தானே! (இதையே பிடிக்காத திரைக்கலைஞர்களின் திரைப்படமென்றால் எதிராகவும் சொல்வார்கள்). எனவே, இவ்வாறு பிரபலங்களின் திரைப்படம் பற்றிய அவர்களின் விமர்சனத்தை மூளையின் ஒரு பகுதியில் போட்டுவிட்டு, யூடூபில் நமது 'தலை' 'நீலச்சட்டை' மாறனின் (Tamil Talkies) விமர்சனத்தை பார்ப்பேன். அவரது விமர்சனம் பார்ப்பதே எனக்கு ஒரு கேளிக்கை தான்! ஆனால், அவர் படத்தின் கதையையும் சொல்வார். எனவே அப்பகுதிகள் நீங்கலாக முழு விமர்சனத்தையும் கேட்பேன். நான் பார்த்ததில் மிகவும் நேர்மையான விமர்சனங்கள் என்று மாறனுடையதை அடித்துச் சொல்வேன். அவர் 'வழக்கம் போல ஹீரோ....., 'வழக்கம் போல லூசுத்தனமான ஹீரோயின்', 'வழக்கம் போல கதை...' என்று தொடங்கினாலே அந்தப் படத்தை பார்க்கவேண்டியதில்லை என்று அர்த்தமெடுக்கப் பழகிவிட்டேன்! அவர் சிறந்த படங்கள் என்று கூறியவை என்னை ஏமாற்றியதில்லை. தவிரவும் இந்துவின் கார்த்திக்கும் ஓரளவுக்கு நம்பகமான விமர்சனங்களைக் கொடுக்கிறார். எனவே என்னதான் நல்ல விமர்சனங்கள் நண்பர்கள், முகநூல் மூலம் கேட்டறிந்தாலும் அநேகமான வேளைகளில் இந்த இரு விமர்சகர்களின் தீர்ப்புத் தான் ஒரு புதிய திரைப்படத்தை சினிமாவில் பார்ப்பதா, அல்லது ஆறுதலாக வீட்டில் பார்ப்பதற்கு நல்ல பிரதி வரும் வரை காத்திருப்பதா அல்லது பார்ப்பதே இல்லையா என்ற முடிவை எடுக்கவைக்கும். நல்ல கதை, திரைக்கதை, சிறந்த நடிப்பு, லாஜிக் மீறல்கள் இன்மை என்று மிகத்தரமான திரைப்படத்தைத் தேர்ந்தெடுத்துப் பார்ப்பவர்கள் இவர்களின் விமர்சனத்துடன், IMDB வலைப்பக்கத்தில் திரைப்படம் பற்றிய மதிப்பீடு, விமர்சனங்களை வாசித்தறியலாம். இன்னொரு பக்கம் இன்றைய காலத்தில் குறைந்த பட்ஜெட்டில் உருவான, பிரபலமற்ற நடிகர்கள், இயக்குனர்களின் தரமான திரைப்படங்களுக்கும் வாழ்வு கிடைத்துள்ளது. மசாலா படங்களையே பார்த்துச் சலித்தவர்களுக்கு ஒரு மாறுதலாக வித்தியாசமான கதைக்களம், திரைக்கதை கொண்ட இப்படங்கள் ஆறுதலாக அமையும். உதாரணமாக கடந்த வருடம் வெளியான 'பரியேறும் பெருமாள்', 'மேற்குத் தொடர்ச்சி மலை' போன்ற திரைக்கவியங்களைச் சொல்லலாம். எனினும் பிரபலமற்றவர்களின் திரைப்படம் என்பதால் புலத்தில் உள்ள பலருக்கு இவற்றைத் திரையில் கண்டு களிக்கும் அனுபவம் கிட்டாது என்பது துரதிஷ்டம் தான். பலருக்கு இவ்வாறான திரைப்படங்கள் வெளியானது கூடத் தெரியாமல் இருக்கலாம் அல்லது தெரிய நீண்ட நாளாகலாம். Tamil Talkies மாறன் போன்றோர் இப்படியான தரமான திரைப்படங்களை விமர்சனம் செய்வதால் அவர்களின் YouTube பகுதில் சென்று அறிந்து கொள்ளலாம். (கடந்த காலங்களில் வெளியான புதிய, பழைய திரைப்படங்களுக்கும் இது பொருந்தும்). இவ்வாறான திரைப்படங்களின் எழுச்சி இனிவரும் காலங்களிலும் இருக்கும் என்பது எனது நம்பிக்கை. இது நீண்ட காலத்தில் தமிழ் சினிமாவின் தலைவிதியையே மாற்றுமா எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். திரைப்படங்களைத் தெரிவு செய்யும் போது நாம் எந்த நேரத்தில், என்ன மனநிலையில் இருந்து ரசிக்கப்போகிறோம் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். அழுத்தம் நிறைந்த வேலை நாளின் முடிவில் மாலை வீடு வந்தால் நகைச்சுவையான படங்கள், ரஜினி, விஜய் போன்றோரின் மனதை இலேசாக்கும் திரைப்படங்கள், அல்லது நல்ல பாடல்கள், அழகான காட்சிகள் நிறைந்த திரைப்படங்கள் மன அமைதி தரலாம். மாறாக ஓர் திகில், மர்மம் நிறைந்த அனுபவத்தை வார இறுதி இரவொன்றில் அனுபவிக்க விரும்பின் பரபரப்பான / ஆவிகள் சம்பந்தமான திரைப்படங்களைத் தேர்தெடுக்கலாம். எனினும், அபிமான நடிகரின் திரைப்படத்தை சினிமா சென்று முதற் காட்சியில் பார்ப்பதற்கு நேர காலம் தேவையில்லை தானே! எதிர்பார்ப்பும் / கண்ணோட்டமும் வாழ்க்கையில் நமக்கு எப்படி நியாயமான எதிர்பார்ப்பு தேவையோ, ஒரு திரைப்படம் பார்க்கும் அனுபவத்திலும் நமது எதிர்பார்ப்பு பற்றிய தெளிவு இருத்தல் அவசியமானது. ஒரு ரஜனி படத்திற்குச் சென்று விஜய் சேதுபதி படங்கள் போன்று கதையம்சம் இல்லையே என வருத்தப்படுவதை விட விஜய் சேதுபதியின் எதாவது படத்தை ரசிப்பதே புத்திசாலித்தனமானது (மறுதலையும் உண்மை!). ரோமாபுரியில் இருக்கும்போது ரோமனாக இரு என்பது போலத்தான், இதுவும் ஓர் எழுதப்படாத விதி. இது மிக வெளிப்படையான உதாரணம். மற்றய படங்களை எப்படி பார்ப்பது? இங்கு தான் நீங்கள் என்ன மாதிரியான அனுபவத்தை பெற விரும்புகிறீர்கள், என்ன மன நிலையில் இருக்கிறீர்கள் என்று உங்களை நீங்களே கேட்டுத் தெளிந்த பின் ஒரு திரைப்படம் பற்றிய தகவல்களை மேலுள்ள பகுதிகளில் கூறியது போல் அறிந்து அது உங்கள் எதிர்பார்ப்புக்கு உகந்ததா என முடிவு செய்ய வேண்டும். பொருத்தமில்லாத திரைப்படத்தை 2,3 மணித்தியாலங்கள் இருந்து பார்ப்பது என்பது இந்தக் காலத்தில் ஓர் வாய்ப்புச் செலவு (opportunity cost) தான்! இதைவிட தரமான பொழுதுகளை உங்கள் குழந்தையுடன் செலவளித்திருக்க முடியுமல்லவா? தரமான திரைப்படங்கள் எனப் பரவலாகச் சொல்லப்படுபவை எல்லாம் நமது எதிர்பார்ப்புக்கு அமையவேண்டிய அவசியமில்லை.தெளிவான எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் திரைப்படத்தை மட்டுமே நல்ல படம் என்கிறோம். மேலும், ஒருவரது பார்வை காலத்துக்குக் காலம் மாறுபட மாறுபட ஓர் திரைப்படம் பற்றிய பார்வையும் மாறலாம். அதாவது 10 வருடங்களுக்கு முன்னர் ரஜினி படங்களை ரசித்த ஒருவர் தற்போது கமல் ரசிகராக மாறியிருக்கலாம். அவரது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள், அறிவு முதிர்ச்சி, வயது என்று இன்னும் பல காரணிகள் வாழ்வை புதியதொரு கண்ணோடத்தில் பார்க்கவைப்பதைப் போல, திரைப்படங்கள் மீதான பார்வையையும் மாற்றி இருக்கலாம். இன்னும், ஓர் காலத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்கள் இன்று புறக்கணிக்கப்படலாம். உதாரணமாக 80களில் பிரபலமான மோகனின் 'பயணங்கள் முடிவதில்லை' திரைப்படத்தை இன்று பார்த்தால் 'இதையா அன்று கொண்டாடினார்கள்?' என்று தோன்றும். அப்போது பலருக்குப் தெரியாத படங்கள், இப்போது கொண்டாடப்படுவதும் உண்டு. விஜய் சேதுபதி முதலில் கதாநாயகனான 'தென்மேற்குப் பருவக்காற்று' (2010) திரைப்படம் ஓர் எடுத்துக்காட்டு. எனவே, கால ஓட்டத்தில் ஏற்படும் ரசனை மாற்றங்களையும் கருத்தில் கொள்ளல் வேண்டும். சுருங்கச் சொல்லின் , பல்வேறு பொழுதுபோக்கு ஊடகங்கள் நம்மை ஆக்கிரமித்திருக்கும் இக்காலத்தில் தரமான திரைப்படங்களைத் தெரிவு செய்யும் திறனும், அவற்றில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கிறோம் என்ற தெளிவும் நமக்கிருந்தால் நல்ல திரைப்படங்கள் பார்க்கும் அனுபவம் நமக்குக் கிடைக்கும். (குறிப்பு: எனது அனுபவத்தில் தோன்றியவற்றை எழுதியுள்ளேன். நான் மேலே குறிப்பிட்ட திரைப்படங்கள், நடிகர்கள், இயக்குனர்கள் பெயர்கள் உதாரணத்திற்காக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. சுருக்கம் கருதி நிறைய உதாரணங்கள் குறிப்பிடவில்லை. உங்கள் அனுபவங்களையும் இங்கு பகிர்ந்துகொள்ளலாம். நன்றி )
  17. 14 points
    நான் பிறந்தநாட்டுக்கு எந்தநாடு தான் பெரிது.இலங்கை போவதானால் அங்கு பிறந்த எல்லோருக்குமே ஒரு சந்தோசம்.ஆனால் ஐரோப்பாவில் இருப்பவர்களுக்கு ஒரு பயணம்.அமெரிக்க கண்டத்திலிருப்பவர்களுக்கு இந்தப் பயணம் எறத்தாள ஒரு தண்டனை என்றே கூறலாம்.இங்கிருந்து புறப்பட்டு இடைத்தங்கலில் நின்று மீண்டும் புறப்பட்டு கொழும்பு போக 25-30 மணி நேரமாகிவிடும்.பின்னர் விமானநிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் போவதற்கு 8-9 மணிநேரமாகும்.இதனால் பயணுத்துக்காக 35-40 மணிநேரம் தொடர் பயணமென்பது சந்தோசமான தண்டனையாக ஏற்றுக் கொண்டு புறப்பட வேண்டியது தான். இந்தப் பயணம் சரியாக 70 நாட்கள் திட்டமிட்டு எதிகாட்விமானத்தில் போய் வருவதற்கு விமான சீட்டும் இணைய மூலமாக எடுத்தாகிவிட்டது.இனி பெட்டி படுக்கைகள் என்று வீட்டில் ஒரு அறையே ஒதுக்கியாச்சு.யார் யாருக்கு என்னென்ன கொடுக்க வேண்டும் என்று எழுத்துவழக்கு கணக்கெல்லாம் மனைவியின் வேலை.அமெரிக்கா கனடாவிலிருந்து போகிறவர்கள் 50 இறாத்தல் எடை கொண்ட இரு பொதிகளும் கையிலே இழுத்துக் கொண்டு போக 15 இறாத்தல் பொதியும் முதுகிலே போட ஒரு புத்தகப்பை.இது நிறுப்பதில்லை.எவ்வளவு நிறை தான் கொண்டு போக அனுமதித்தாலும் கொஞ்சம் என்றாலும் கூடுதலாக சுழித்துக் கொண்டு போனால்த் தான் அதில் சந்தேசம் கெட்டித்தனம்.வீட்டிலேயே தராசு இருக்கிறபடியால் அடிக்கடி பார்த்து பார்த்து வைத்து அப்பவும் கடைசி நேரத்தில் கொஞ்சம் கூடிப் போட்டுது என்று சிரிப்பு வேறை.சரி சரி நான் பார்க்கிறன் விடு என்று நல்ல பாரமான சாமானாக எடுத்து புத்தகப் பையில் போட்டு அவர்களுக்கு காட்டுவதற்காக எல்லா பொதிகளுமே சரியாக இருந்தது.உள்ளுக்குப் போனபின் நிறை கூடியதை எடுத்து இழுத்துக் கொண்டு போறதற்குள் போட்டால் சரி. இந்தப் பயணத்தில் மூத்தமகள் கணவர் கடைசிமகள்(இப்போதைக்கு எம்பெருமான் எப்பவும் கொடுக்கலாம்) மூவரும் தாங்களும் இருகிழமைக்கு வரப் போவதாகவும் இந்த தடவை இலங்கையை சுற்றி பார்க்க வேண்டும்.ஆனாலும் நல்லூர் தேர் தவறவிடக் கூடாது.எங்கெங்கே எத்தனை நாட்கள் என்ற விபரத்தையும் மட்டும் தாங்கோ என்றார்கள்.இரண்டு கிழமைகளுக்கு சிங்கப்பூர் விமானம் மூலம் வந்து போக ரிக்கற்றும் எடுத்துவிட்டார்கள்.இப்போ விடுதிகள் எடுக்க வேண்டும் எப்ப எப்ப எங்கு தங்குதென்ற விபரம் தாங்கோ என்றால் எனக்கு தலையைச் சுத்துது.யாழ்-கொழும்பு என்றால் பரவாயில்லை.இப்ப தான் நானும் சுத்தப் போகிறேன் ஆனபடியால் இலங்கை போனதும் விசாரித்து தகவல் அனுப்புகிறேன் பின்பு செய்வதைச் செய்யுங்கோ என்று சொல்லியாச்சு. புறப்படும் நாள் இரவு 11 மணிக்கு தான் விமானம்.வீட்டிலிருந்து 15 நிமிடம் தான் விமானநிலையம்.மகனும் மருமகளும் வந்து ஏற்றி இறக்கிவிட்டார்கள்.மகன் என்னை சாமானுகள் தூக்கவிடமாட்டான்.அதனால் தானும் உள்ளுக்கு வந்து போடிங்பாஸ் எடுத்து உள்ளேபோகும் வரை நின்று அங்கையும் ஒன்றும் தூக்கிப்பறித்து நாரியை உடைக்காமல் போட்டருக்கு 6-8 டொலரைக் கொடுத்து பொதிகளைக் கொண்டு போங்கோ என்று விடை பெற்று போனார். 10 மணி போல் விமானத்தில் ஏற்றத் தொடங்கினார்கள்.வாசலில் போடிங்பாஸ் சரிபார்த்து உள்ளுக்குப் போனால் இரண்டு வழியால் விமானத்தில் ஏறுகிறார்கள்.அதிலே போய் கொஞ்சம் முளிசிக் கொண்டு நின்றதும் அதில் நின்ற பணிப்பெண் ஏதோ அப்பதான் தூக்கத்திலிருந்து எழுந்தவராக பிஸ்னஸ்கிளாஸ் திஸ் வே பிளீஸ் என்றதும் எனக்கு ஒருமாதிரி போய்விட்டது.உள்ளே போய் பார்த்ததும் தான் முழுவிபரமும் முழுமையாக விளங்கியது.இது ஒரு இரட்டைத்தட்டு பஸ் மாதிரி.எமது இருக்கை 62ம் வரிசை.மனைவிக்கு எப்ப விமானமேறினாலும் யன்னல் கரையோரம் உள்ள இருக்கை தான் வேண்டும்.இருந்து கொண்டு தான் விமான விபரமட்டை எடுத்து பார்த்தால் எ380 எயரபஸ் என்று எல்லா விபரங்களும் இருந்தது.ஆட்கள் ஏறிஏறி புறப்படும் நேரம் வந்ததும் மனைவி ஏதொ கூட்டிக் கழித்துக் கொண்டிருந்தா.நான் ஏதோ காசுக் கணக்குத் தான் பார்க்கிறா என்று நினைத்து வெளிக்கிட்டு விமானம் வரை வந்து இருந்துகொண்டா கணக்குப் பார்க்கிறாய் என்று கேட்டால் இல்லை இல்லை நாங்கள் இருக்கிற நீட்டுக்கே 10 சீற் என்றால் மேலையும் கீழையும் ஆக்கள் ஒவ்வொருவரின் கொண்டுவாற சாமானுகள் இவை எல்லாத்தோடும் இந்த பிளேன் மேல போகுமா?எப்படி போகும் என்று கணக்கு போட்டுக் கொண்டிருந்தா. ஒருமாதிரி 11 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் அரை மணிநேரம் தாமதமாக 11.30 ஓடுபாதையை நோக்கி நகரத் தொடங்கியது.கொஞ்சம் கொஞ்சம் நகர்வதும் நிற்பதுமாக மெதுவாக நகர்ந்தது.இடைஇடையே ஓடுபாதையில் திருத்தவேலைகள் வேலைகள் செய்வதால் கொஞ்சம் தாமதம் என்று சொல்லிச் சொல்லியே எம்மை ஏமாற்றி கடைசியில் ஒன்றரை மணிநேரம் தாமதமாக 12.30 மணிக்குத் தான் புறப்பட்டது. இப்போ எனக்கு யோசனை என்னவென்றால் அபுதாபியில் ஒன்றரை மணிநேரமே இடைத்தங்கல் ஏற்கனவே ஒன்றரைமணி நேரம் தாமதமாகிவிட்டது.ஒரே யோசனை தொட்டுவிட்டது.விமானம் மேலெழும்பி சில்லுகளும் உள்ளே போற சத்தம் கேட்க மனைவியும் செருப்போ சப்பாத்தோ களட்டிவிட்டு சப்பாணி போட்டுடவா.வெளியே வெளிச்சங்கள் மறையும் மட்டும் பார்த்திருந்துவிட்டு சாப்பாடுகள் கொண்டுவரும் போது எழுப்புங்கோ என்று சொல்லிவிட்டு தூங்கிவிடுவா.எனக்கு எங்கையாவது நீட்டி நிமிர்ந்து போர்வையால் ஆளை சுத்திக் கொண்டு படுத்தா தான் நித்திரை வரும்.இல்லாவிட்டால் எத்தனை மணிநேரம் பிரயாணம் செய்தாலும் கோழித் தூக்கம் தான்.விமானத்தில் நன்றாக கவனித்தார்கள்.நல்ல சாப்பாடு. ஒருமாதிரி அரைமணி நேரமிருக்கும் போது வந்து இறங்கியாச்சு.இறங்கியவுடன் இழுத்துக் கொண்டு ஓடவேணும் தயாராக இரு என்று எழும்பி நின்றால் முன்னே உள்ளவர்கள் இறங்கினால் தானே நாங்களும் இறங்கலாம்.இப்ப பார்த்து எமக்காக எல்லோரும் மெதுவாக இறங்குவது போல இருந்தது.இதிலேயே அரைமணி நேரம் ஓடிவிட்டது.சரி முயற்சி செய்து பார்ப்போம் என்று பாக்கையும் இழுத்துக் கொண்டு ஓட்டம் தான்.அடுத்த கதவுக்கு போவதற்கு இடையில் செக்கிங் வேற.அதையும் முடித்துக் கொண்டு அடுத்த கதவுக்கு கிட்ட போக ஒருவர் கொழும்பு கொழும்பு என்று ஓடிவாறார்.களைப்பில கதையும் வருதில்லை யேஸ் யேஸ் என்றதும் தானும் ஒரு பாக்கை வாங்கி தயாராக நின்ற பஸ்சில் ஏற்றிவிட்டார்.நாங்களும் போய் எறினதும் விமானம் புறப்பட்டுவிட்டது.இப்ப அடுத்த யோசனை நாங்கள் போய்ச் சேர எமது பொதிகள் வந்து சேருமா? தொடரும்.
  18. 14 points
    இரண்டு ஆண்டுகள் முன்பு பிரித்தானியாவில் நடந்த சம்பவம் இது. பிரிட்டிஷ் இராணுவத்தில் கப்ரனாகப் பதவி வகித்த இளம்பெண் நைய்மா முகமட்டிற்கு இரண்டாம் தடவையும் மார்பகப் புற்று நோய் வந்து விடுகிறது. அவரது மருத்துவர்கள் தமது முயற்சிகளின் இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்ட நிலையில், நைய்மா இணையத் தேடலில் மாற்று மருத்துவ முறைகளைத் தேட ஆரம்பிக்கிறார். அமெரிக்காவில் ஒரு மாற்று மருத்துவ நிலையம் நடத்தும் ரொபர்ட் யங் என்பவருடன் தொடர்பை ஏற்படுத்தி, தனது புற்று நோய்க்கு மாற்று மருத்துவம் செய்ய ஆரம்பிக்கிறார் நைமா. உடலில் அமிலத் தன்மையைக் குறைத்து காரத் தன்மையை அதிகரித்தால் சகல நோய்களும் குணமாகும் என்று தானும் நம்பி, அந்த நம்பிக்கையை மற்றவர்களுக்கும் விற்றுப் பெரும் காசு பார்ப்பவர் றொபர்ட் யங். நைய்மாவின் மார்பகப் புற்று நோய்க்கு அவர் அனுப்பி வைத்த மருந்து சோடியம் பைகாபனேற் எனப்படும் அப்பச் சோடா கலந்த நீர்! பல ஆயிரம் டொலர்களை இதற்காக வசூலித்த யங், மரணப் படுக்கையில் இருந்த நைய்மாவை அமெரிக்காவுக்கு வரவைழைத்து தன் சிகிச்சையைத் தொடர இருந்த வேளையில் நைய்மா மரணமாகிறார். விடயம் வெளியே தெரிந்ததும் உள்ளூர் சுகாதாரத்துறையினர் அனுமதிப் பத்திரமின்றி மருத்துவத் தொழில் செய்தமைக்காக றொபர்ட் யங்கைக் கைது செய்து, வழக்குப் போட்டு, இப்போது சிறையில் இருக்கிறார். மூன்று வருடங்களில் வெளியே வந்து தன் தொழிலை வேறொரு வழியில் தொடர்வார் யங். ஏன் தொடர்வார் எனின், றொபர்ட் யங்கின் இந்த நிரூபிக்கப் படாத (இது பற்றிப் பின்னர் அடிப்படை உயிரியல் ரீதியில் பார்க்கலாம்) மூடத்தனமான கருத்தை சில அமெரிக்க விளையாட்டுத் துறைப் பிரபலங்களும், ஹொலிவூட் நடிகையொருவரும் தொடர்ந்து ஆதரித்துப் பரப்பி வருகிறார்கள் என்பதாலாகும். அதிசயிக்கத் தக்க விதமாக, எங்கள் தமிழ் மக்களிடையே, அதிலும் புலம் பெயர்ந்து தகவல் தொழில் நுட்பத்தில் மிதந்து வாழும் மக்களிடம் ஏராளமான போலி மருத்துவக் கருத்துகள் இலகுவாகப் பரவுகின்றன. இதன் அடிப்படைக் காரணங்கள்: நவீன மருத்துவத்தின் மீதான நம்பிக்கையின்மை, இயற்கையானது எல்லாம் நல்லதே என்கிற நம்பிக்கை, மற்றும் எளிமையான அலட்சியம். ஒவ்வொரு முறையும் யாராவது ஒரு நிரூபிக்கப் படாத மாற்று மருத்துவ முறையை இங்கே பதிவிடும் போது, அதற்குத் தனியாகப் பதில் கொடுக்க நேரமின்மை தடுக்கிறது. அதனால், சில அடிப்படையான விடயங்களை இந்தப் பகுதியில் பதிவு செய்து வைக்கும் முயற்சி இது. இந்த அடிப்படைத் தகவல்கள், போலியான, சில சமயங்களில் ஆபத்தான மருத்துவ நம்பிக்கைகளை நீக்க எங்களில் ஒருவருக்கு உதவினால் கூட, இந்தப் பதிவின் பயன் பூரணமடையும். இங்கே எழுதப் போகும் கருத்துகளைத் தெளிவாக விளங்கிக் கொள்ள, இந்த மூன்று பதங்களையும் இப்போதே விளக்கி விடுகிறேன்: மாற்று மருத்துவம் (alternative medicine), நவீன மருத்துவ முறைகளில் இருந்து வேறுபடும் மருத்துவம், நவீன மருத்துவர்களால் கடைப்பிடிக்கப் படாதது. இயற்கை மருத்துவம் (naturopathy) அல்லது மூலிகை (herbal) மருத்துவம், இயற்கையான பொருட்கள் கொண்டு செய்யப் படுவது, ஆயுர்வேதம், சித்த மருத்துவம், ஹோமியோபதி என்பன இதற்குள் அடங்கும். நவீன மருத்துவம் (modern medicine) - ஆங்கில மருத்துவம், மேற்கத்தைய மருத்துவம் என்று பொதுவாக அழைப்படுவது. நான் நவீன மருத்துவம் என்பதன் காரணம், இது கிரேக்கர், அரேபியர், ஒல்லாந்தர் எனப் பலராலும் கட்டமைக்கப் பட்ட ஒன்று- ஆங்கிலேயருக்கு தனியே உரித்தான ஒன்றல்ல!. தற்போது, ஒருங்கிணைக்கப் பட்ட அல்லது பூரணத்துவம் நோக்கிய மருத்துவம் (integrative or complementary medicine) என்ற பதமும் பயன் பாட்டில் இருக்கிறது. பொதுவாக இது நவீன மருத்துவ முறைகளுடன், சில பயன் உறுதி செய்யப் பட்ட மாற்று மருத்துவ முறைகளையும் இணைத்து வழங்கும் ஒரு மருத்துவ ஏற்பாடு! மருந்து மாத்திரைகளோடு, யோகாசனம், தியானம் போன்ற மன உடல் சிகிச்சைகளை வழங்குவது ஒருங்கிணைக்கப் பட்ட மருத்துவத்திற்கு ஒரு உதாரணம். எழுதுபவர் ஒரு போடியத்தில் நின்று, கீழே அமர்ந்திருக்கும் கேட்போரை நோக்கிப் பேசுவதாக இது இருக்க கூடாது என்பதால் இதை வட்ட மேசை என அழைக்கிறேன். சுடு சொற்களோ அதிகாரமோ இங்கே இருக்காது! தொடர்ந்து இணைந்திருங்கள்! - வரும்.
  19. 14 points
    எம் குழந்தைகளின் எதிர்கால கனவுகளும் நாமும் காலம் தன்போக்கில் கடந்து செல்ல நாமும் எம் வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயங்களையும் கடந்து எம் குழந்தைகளின் வளர்ச்சிகளில் மகிழ்வை காணும் தருணம் இப்போது. எம்மில் பலருக்கு வரும் ஏக்கம் எமது குழந்தைகளின் எதிர் காலம் எப்படியிருக்கும்? எந்த துறையை தெரிவு செய்யப்போகின்றர்கள் என்பது. எம்மில் எத்தனை பேர் எம் குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ற துறையை தெரிவு செய்ய விட்டுவிடுகின்றோம்? அப்படி விடுவதில் பெற்றோருக்கு சிலவேளைகளில் எந்த பிரச்சனையும் இருக்காது ஆனால் உறவினர் அயலவர் என்ன சொல்லுவார்களோ என்ற கவலை தான் பெரிது. வைத்தியர் வக்கீல் போன்ற சில குறிப்பிட்ட தொழில்துறைகளைத்தான் எல்லோரும் தம் குழந்தைகளிடம் தெரிவு செய்யவேண்டும் என்பது அதிகமான பெற்றோர்களின் ஆசை. பெற்றோர்கள் ஆசைப்படுவதில் தவறில்லை ஆனால் அதை தம் குழந்தைகளிடம் திணிப்பது மிகவும் கவலையான விடயம். கடந்த சில வருடங்களில் எத்தனை பிள்ளைகள் தம் பெற்றோரின் ஆசைக்காக அவர்களின் வற்புறுத்துதல்களால் சில துறைகளை தெரிவுசெய்து அதை அவர்களால் சரியாக படிக்க முடியாமல் மனவுளைச்சளாகி தற்கொலை வரை போயுள்ளார்கள்?. அதே நேரம் தம் பிள்ளைகளின் விருப்பத்திற்கு அவர்களின் கல்வியை தொடர விட்டிருந்தால் அநியாயமாக தம் குழந்தைகளை அந்த பெற்றோர்கள் இழந்திருக்கமாட்டார்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான திறமைகள் நிச்சயமாக இருக்கும் அதில் அவர்கள் சாதிக்க விரும்பும் போது நாம் அதற்கு தடையாக இருப்பது முற்றிலும் தவறானது. நாம் படிக்கமுடியாததை நம் குழந்தைகள் மூலம் நிறைவேற்றவேண்டும் என்று நினைப்பது சரியா?. பெற்றோர்கள் ஆசைப்படும் துறையை எந்த வற்புறுத்தலும் இல்லாமல் குழந்தையும் விருப்பி படித்தால் எந்த பிழையும் இல்லை ஆனால் அப்படி எத்தனை வீட்டில் நடக்கின்றது? பிடிக்காத துறையை படித்து மனவுளைச்சலுடன் தன் எதிர்காலத்தை நகர்த்துவதை விட அவர்களுக்கு பிடித்த துறையில் முழு ஈடுபாட்டுடன் மகிழ்வாக அவர்கள் வாழ்க்கை அமையும் என்பதை நம்மில் சிலர் ஏற்றுக்கொள்வதில்லை. சில தொழில்களில் அதிக வருமானம் வரும் ஆனால் வருமானம் மட்டுமே வாழ்க்கையை மகிழ்வாக வாழ்ந்து விட வழிசமைக்காது. மனதுக்கு பிடித்த தொழில் செய்வதில் வரும் மகிழ்ச்சி வருமானத்தால் வரும் மகிழச்சியை விட பன்மடங்கு பெரியது. எம்மில் பலர் எம் குழந்தைகளின் எதிர்கால கனவுகளை நனவாக்க உறுதுணையாக இருப்போம் என்று நம்புகின்றேன். தயவுசெய்து உங்கள் குழந்தைகளின் ஆசைகளை நீங்களே அடக்கிவிடாதீர்கள். அவர்கள் விரும்பிய துறையில் அவர்களை படிக்கவிடுங்கள் …..எதிர்காலத்தில் நிச்சயம் அவர்கள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்!
  20. 14 points
    மலேரியா போய் கஞ்சா வந்தது! உலகளாவிய ரீதியில் மக்களின் ஆரோக்கியத்தைக் குறைக்கும் அல்லது மரணத்தை ஏற்படுத்தும் காரணிகளை ஆராய்ந்தால் வளர்ந்த மேற்கு நாடுகளிலும் அபிவிருத்தியடையாத ஆபிரிக்க, ஆசிய நாடுகளிலும் வெவ்வேறு விதமான காரணிகள் பிரதானம் வகிப்பதைக் காணலாம். மேற்கு நாடுகளில், மூன்றில் ஒரு பங்கினர் உடல் எடை அதிகரித்தவர்களாகவும் அதனால் வரும் உடல் நோய்களால் அவதியுறுவோராகவும் உள்ளனர்: இதய நோயும், புற்று நோய்களும் முதன்மையான மரண காரணிகளாக அமெரிக்காவில் இருக்கின்றன. ஆபிரிக்காவிலும் அபிவிருத்தியடையாத தெற்கு-தென்கிழக்காசிய நாடுகளில் தொற்று நோய்கள் முதன்மையான சவால்களாக இருக்கின்றன. நீர்மூலம் பரவும் வயிற்றோட்ட வகை நோய்கள் ஒரு புறமும், பூச்சிகளால் பரவும் மலேரியா போன்ற இரத்தத் தொற்றுகள் மறு புறமும் இந்த ஏழை நாடுகளைப் பந்தாடுகின்றன. இலங்கையில் வசித்த வேளையில் மலேரிய காய்ச்சல் வந்து அவதிப் பட்டோருக்கு அந்தக் காய்ச்சலின் அனுபவம் சட்டென்று நினைவில் வரும்- அந்தளவுக்கு உடலை வருத்தி முறித்துப் போடும் காய்ச்சல் அது! காய்ச்சல் அப்படியென்றால் அத்ற்கு எடுத்துக் கொள்ளும் குளோரோகுயின் மாத்திரையின் கசப்புத் தன்மை அதை விடக் கொடுமையானது-வாந்தி வர வைப்பது. மலேரியா எதிர்ப்பு அமைப்பு (Anti Malaria Campaign) என்ற அரச நிறுவனம் 1930 இல் இருந்து ஆற்றிய பணியின் விளைவாக 2016 இல் உலக சுகாதார அமைப்பு இலங்கையை "மலேரியா ஒழிக்கப் பட்ட" நாடாகப் பிரகடனம் செய்திருக்கிறது. இந்தப் பிரகடனம் நல்ல விடயம் என்றாலும், அது நிரந்தரமான ஒன்றல்ல என்பதைக் கவனிக்க வேண்டும். ஒரு நாட்டில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு உள்நாட்டில் பரவிய மலேரியா நோயாளிகள் யாரும் கண்டறியப் படாவிட்டால், உலக சுகாதார அமைப்பு இந்தப் பிரகடநதை வழங்கும்: இலங்கையில் 2012 இலிருந்து மலேரியா கேஸ்கள் பதிவு செய்யப் படவில்லை என்பதே இதன் அர்த்தம். நுளம்பினால் மலேரியா பரவுகிறது, அந்த வகையான நுளம்புகள் இன்னும் இலங்கையில் இருக்கின்றன- இதனால் மலேரியா அபாயம் நீங்கி விடவில்லை! இன்னும் ஒரு படிமேல் போய், விளக்கமாக நோக்கினால், மோசமான மலேரியா நோய் பரவும் நாடாக இலங்கை மாறக்கூடும். மலேரியா நோயை உருவாக்கும் கிருமி பிளாஸ்மோடியம் எனப்படும் ஒரு ஒற்றைக் கல உயிரினம். தென்னாசியாவில் மலேரியாவை உருவாக்கும் பிளாஸ்மோடியம் (Plasmodium vivax) வகையை விட தீவிரமான நோயை ஏற்படுத்தும் பிளாஸ்மோடியம் (Plasmodium falciparum) இனம் ஆபிரிக்க நாடுகளிலும் கிழக்காசியாவிலும் பரவலாகக் காணப்படுகின்றது. மூளை மலேரியா (cerebral malaria) எனப்படும் இந்த மோசமான மலேரியா, ஆபிரிக்காவில் மட்டும் வருடாந்தம் 400,000 மரணங்களுக்குக் காரணமாக இருக்கிறது. இது ஏன் இலங்கையில் பரவலாக இல்லை? இந்த இடத்தில் தான் vector எனப்படும் நோய் காவியான நுளம்பின் பங்கு முக்கியமாகிறது. மூளை மலேரியாவைப் பரப்பும் நுளம்பினம் சாதாரண மலேரியாவைப் பரப்பும் நுளம்பினத்தை விட வேறான ஒரு வகை. இந்த வகை நுளம்புகள் இலங்கையில் இருப்பதாக அறியப் படவில்லை- ஆனால் இந்த நிலை 2017 இல் மாறுவதற்கு, மன்னாரில் நடத்தப் பட்ட நுளம்பினப் பரம்பல் பற்றிய ஆய்வு கட்டியம் கூறுகிறது. அந்த ஆய்வில், மன்னாரின் பல பிரதேசங்களில் எடுக்கப் பட்ட நுளம்பின் குடம்பி மாதிரிகள் (இவை நுளம்பின் இளம் வடிவங்கள், இவையே தேங்கிய நீரில் வாழ்பவை) அனோபிலிஸ் ஸ்ரிபென்சி (Anopheles stephensi) என்ற புது நுளம்பினத்தின் குடம்பிகளாக அடையாளம் காணப்பட்டன. கவலைக்குரிய விடயம் என்னவெனில், இந்த வகை நுளம்புகள் கிழக்காசிய நாடுகளில் மூளை மலேரியாவைப் பரப்பும் இயல்புடையவையாக அறியப் பட்டிருக்கின்றன என்பது தான். பெரும்பாலும் குடி தண்ணீர்க்கிணறுகளில் அடையாளம் காணப்பட்ட இந்த நுளம்பினக் குடம்பிகள் உண்மையிலேயே மூளை மலேரியாவை இலங்கையிலும் பரப்புமா என்பதை எதிர்வரும் வருடங்களில் நடக்கும் மலேரியாக் கண்காணிப்புத் தான் தீர்மானிக்கும். இலங்கை ஒரு தீவாக இருப்பதால் பல தொற்று நோய்களைக் கட்டுப் படுத்துவது ஒப்பீட்டளவில் இலகுவானது (மாலை தீவுகளும் மலேரியா ஒழிக்கப் பட்ட ஒரு நாடு என்ப்தை இங்கே குறிப்பிட வேண்டும்). எப்படி புது நுளம்பினம் வந்திருக்கக் கூடும்? தற்போதைய மாதிரிகளின் படி, இந்தியாவின் வழியாகவே இது இலங்கைக்கு வந்திருக்கலாம் என்ற ஊகம் இருக்கிறது. இங்கே தான் இலங்கையின் மன்னாருக்கும் இந்தியாவின் தென் முனைக்கும் இடையே நடைபெறும் கட்டுப் பாடற்ற கடற் போக்கு வரத்தின் இன்னொரு ஆபத்து வெளிப்படுகிறது. எல்லை தாண்டிய மீன்பிடி, பொருட் கடத்தல், தினசரி செய்திகளில் அறிக்கையிடப் படும் கேரள கஞ்சாக் கடத்தல் என்பன வடக்கிலும் இலங்கையிலும் பேரிடர்களை உருவாக்கும் நோய்களையும் நாட்டினுள் கடத்திவருகின்றன. இத்தகைய கடத்தல் குற்றச் செயல்களின் பின்னால் ஒளிந்திருக்கும் பேராபத்தை வடக்கின் கடற்பரப்பைக் கட்டுப் படுத்தும் காவல்படையினர் எப்போது உணர்வர் என்பதே இப்போதுள்ள கேள்வி! ஆதாரமும் மேலதிக தகவல்களும்: 1. Genotype and biotype of invasive Anopheles stephensi in Mannar Island of Sri Lanka. Surendran et al., Parasit Vectors, 2018, 11:3 2. First record of Anopheles stephensi in Sri Lanka: a potential challenge for prevention of malaria reintroduction. Dharmasiri et al., Malaria Journal, 2017, 16:326
  21. 13 points
    உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பது பலருக்கு ஆவலாக இருந்தாலும் அதற்கான முயற்சியில் இறங்குவது கடினமானது. உடல் எடையைக் குறைக்கப் பல விதங்களாக முயன்று பார்த்திருப்பீர்கள். உணவின் அளவையும் கலோரிகளையும் கட்டுப் படுத்தி உடலையும் மனதையும வருத்தி மெலிய வைப்பது கடினம். எமது உடல் மிகவும் புத்திசாலியானது. உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும்போது தனக்குக் கிடைக்கும் சொற்ப உணவைக் கொழுப்பாக மாற்றி உடலில் சேமிக்க முயலும். இவ்வாறு சேமிக்கப்பட்ட கொழுப்பை மீண்டும் கலோரிகளாக மாற்றி இலகுவில் பாவிக்க முடியாது. நீண்டநேர உடற்பயிற்சி நல்ல பலனைத் தரும். கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் எடை மீண்டும் ஏறிவிடும். முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் கொழுப்பைக் கொழுப்பால் கரைக்கும் முறை தற்போது மேலை நாடுகளில பரவி வருகிறது. நானும் இதனை முயன்று பார்க்கலாமே என்ற மூன்று மாதங்கள் இந்த முறையை பின்பற்றிய எனது அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நான் மருத்துவ நிபுணர் கிடையாது, வாசித்துக் கேட்டு அறிந்து கொண்டவற்றைக் கொண்டு பரீட்சித்துப் பார்த்து அந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே இதனை எழுதுகிறேன். இதன் கருப் பொருளில் உறுதியாக இருந்தாலும் சில குறிப்புகளின் தவறுகள் இருக்கலாம். மருத்துவம் தெரிந்தவர்கள் அவற்றைத் தாராளமாகச் சுட்டிக் காட்டலாம். எச்சரிக்கை இம் முறையைப் பின்பற்றுபவர்கள் இக் கட்டுரையை முழுமையாகப் படித்தபின் முடிவெடுங்கள். இணையத் தளங்களிலும் இது பற்றிய ஏராளமான தகவல்கள் உள்ளன. இது பற்றி முழுமையான புரிதலின்பின் முயற்சி செய்யுங்கள். கொலஸ்ரரோல் நீரிழிவு தைரொயிட் போன்றவற்றிற்கு மருந்து பாவிப்பவர்கள் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றுங்கள். குறிப்பு சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் உணவு முறை இன்றுள்ளதை விடத் முற்றிலும் மாறுபட்டதாக இருந்துள்ளது. அதாவது 20-40 வீதமாக இருந்த காபோஹைதரேற்றின் அளவு இன்ற 55 வீதத்தைத் தாண்டியுள்ளது. அதிலும் தமிழரின் உணவில் சுமார் 60 வீதத்துக்கு மேல் காபோஹைதரேட் உள்ளது. மனித வரலாற்றில் இதுவரை இந்த அளவு சீனி, மா, அரிசி போன்றவற்றை நாம் உண்டதில்லை என்றே தோன்றுகிறது. எனது பாட்டனார் தனது வாழ்நாள் முழுவதும் சாப்பிட்ட மொத்தச் சீனியை இன்று எனது பிள்ளை 7 வயதுக்குள் சாப்பிட்டு விடுகிறது. உடலுக்குப் பிரதான எதிரி சீனியே தவிர கொழுப்பில்லை. உடலுக்கான சக்தியின் தேவை பிரதானமாக இரண்டு வழிகளில் எமது உடல் தனக்குத் தேவையான சக்தியைப் பெற்றுக் கொள்கிறது. 1. முதலாவது காபோஹைதரேட் இதற்குள் அரிசி கோதுமை போன்ற தானியங்கள், சீனி மற்றும் பழங்களில் உள்ள இனிப்பு (fructose), பால் (lactose) போன்றவை பிரதானமானவை. இவை தவிர மரக்கறி வகைகளிலும் கணிசமான அளவு உண்டு. சுருக்கமாகச் செமிபாட்டினை விளக்குவதானால், காபோஹைதரேட்டின பெரும் பகுதி செமிபாட்டுத் தொகுதியால் குளுக்கோசாக மாற்றப்பட்டு இரத்தத்தில் ககலக்கப்படுகிறது. இரத்தத்திலிருந்து ஒரு பகுதி குளுக்கோசை ஈரல் சேமித்து வைத்திருக்கும். மீதியானவை தசைகளில் சேமிக்கப்படும். அளவுக்கு மிஞ்சிய குளுக்கோஸ் உடலுக்கு நஞ்சு போன்றது. இரத்தத்தில் அதிகமான சீனி ஈரலைப் பாதிக்கும். ஈரலுக்கு அதிக வேலைப்பளவைக் கொடுக்கும். அத்தருணத்தில் இன்சுலின் சுரக்கப்பட்டு மிதமிஞ்சிய குளுக்கோள் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமிக்கப்படும். சேமிக்கப்பட்ட இந்த வகையான கொழுப்ப்பபினை உடல் மீண்டும் சக்தியாக்கிப் பாவிக்கப் பஞ்சிப்படும். குறிப்பாக வயிற்றுப் பகுதியில் சேமிக்கப்படும் கொழுப்பால் தொந்தி ஏற்படும். ஒரு கிராம் காபோஹைதரேட் ஒட்சிசனோடு சேர்ந்து 4 கிலோ கலோரி (கி.கலோரி) சக்தியை வெளியிடுகிறது. 2. இரண்டாவது கொழுப்பு. முளுக்கோஸ் இரத்தத்தில் தீர்ந்துபோகும் தருணத்தில உடல் வேறு வழிகளில் சக்தியைத் தேடவேண்டிய தேவைக்குத் தள்ளப்படுகிறது. அப்போது உடலில் தங்கியிருக்கும் கொழுப்பு அமிலங்கள் இரத்தத்தில் கலக்கத் தொடங்கும். இரத்தம் மூலம் இக் கொழுப்பு மூலக்கூறுகள் ஈரலைச் சென்றடைய அங்கு ஈரல் அதனை ketone கூறுகளாகப் பிரித்துவிடும். ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பதுபோல் குளுக்கோஸ் இல்லாமல் சக்திக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் உடல் ketone கூறுகளைச சக்திக்காகப் பயன்படுத்த ஆரம்பிக்கும். ஈரல் கொழுப்பை உருக்கும் கருவியாக மாறிவிடும். ஒரு கிராம் கொழுப்பு 9 கி.கலோரி சக்தியினை வெளியிடும். வரலாற்றுக் குறிப்பு ரோமர் காலத்தில் சில சிறுவர்கள் பேய் அறைந்ததுபோல் இருந்தார்கள். அவர்களுக்குப் பேய் பிடிப்பதாகவே கருதப்பட்டது. பேயை அகற்றுவதற்காக அவர்களைகக் கூண்டில் அடைத்து வைத்துப் பட்டினி போடுவார்கள். சில நாட்களில் பேய் தானாகவே அகன்றுவிட அச் சிறுவர்கள் குணமடைந்தனர். 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் Russell Wilder என்ற வைத்தியர் இவ்வாறு பேய் பிடித்தவர்களை ஆய்வு செய்து பட்டினி போடாமல் பலவிதமான பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார். அவ்வாறு ஒரு சாராருக்குக் கொழுப்பு உணவை மட்டும் கொடுக்கப்பட்டது. கொழுப்புணவை மட்டும் உட்கொண்டவர்கள் கணிசமான அளவு குணமடைவதை அவதானித்தார். குளுக்கோஸ் மூலம் இயக்கப்படும் மூளைக்கு குளுக்கோஸ் சரியான முறையில் வழங்கப்படுதலில் ஏற்படும் தடையால் epileptics என்ற இந்த நோய் உருவாகிறது. குளுக்கோசுக்குப் பதில் ketone மூலம் மூளைக்குப் போதுமான சக்தி கிடைத்ததும் மூளை சரியாக இயங்கத் தொடங்குகிறது. இன்று கூட குளுக்கோஸ் இல்லாமல் மூளை இயங்க முடியாது என்று பலரும் தவறாகக் கருதுகின்றனர். சில உறுப்புக்களுக்குக் குளுக்கோஸ் அத்தியாவசியமானது. அது முற்றாக இல்லாதபோது தேவையான சிறிதளவ குளுக்கோசினைப் புரதத்திலிருந்து உடல் தானாகவே உருவாக்கிக் கொள்கிறது. ஒப்பந்தம் கொழுப்பு மூலம் கொழுப்பைக் குறைக்கும் நுட்பம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். குளுக்கோசைத் தராது கொளுப்பை மட்டும் கொடுத்து உடலை ketone மூலம் மட்டுமே இயங்கப் பழக்கி விட்டால் பிரதான சக்தி வழங்கியாகக் கொழுப்பு மாறிவிடுகிறது. ஆகவே உடலில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பை உடல் தேவைப்படும்போது தானாகவே எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் இலகுவாக எடையைக் குறைக்கலாம் அல்லவா ? இதன் மூலம் அனுகூலங்களும் தீமையும் உண்டு. அதனால்தான் இது பற்றிய பூரண அறிவு தேவை. என்ன வகையான உணவுகளைச் சாப்பிடலாம் எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். உடலைக் ketone நிலைக்கு மெதுமெதுவாகக் கொண்டு செல்ல வேண்டும். பெரும்பாலும் 2 மாதங்கள் இந்த நிலையில் இருப்பது போதுமானது. சிலர் நிரந்தரமாக இதனைப் பின்பற்றுகின்றனர். 2 மாதங்களின்பின்னர் படிப்படியாகக் கொழுப்பைக் குறைத்துப பழைய நிலைக்கு மீண்டும் வராமல் கொழுப்பு / சீனி விகிதாசாரத்தை அரைவாசிக்குக் கொண்டு வந்தால் ஆரோக்கியமாக வாழலாம். சமன்பாடு கொழுப்புச் சாப்பிட்டால் உடல் பெருக்கும் என்ற நம்பிக்கை பொதுவாக உண்டு. உண்மையில் கொழுப்பை விட காபோஹைதரேட்டே உடல் எடையை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. ஒரு நாளைக்கு ஒருவருக்கு 2000 கி,கலோரி தேவைப்படும் என்று எடுத்துக் கொண்டால், அவரின் மதியச் சாப்பாடு பின்வருமாறு இருப்பதாக எடுத்துக் கொள்வோம். ஒரு கோப்பைச் சோறு 350 முதல் 400 கிராம் = 500 கி.கலோரி 150 கிராம் கோழி = 350 கி.கலோரி ஏனைய மரக்கறிகள் (தாழித்த எண்ணை உட்பட) = 250 கி.கலோரி ஒரு நேரச் சாப்பாட்டிலேயே 1000 கி.கலோரிகள் தாண்டப்பட்டு விட்டன. இதில் சாப்பாட்டுக்குப் பின்னர் ஒரு பழம் அல்லது இனிப்புப் பலகாரம் ஒன்றைச் சாப்பிட்டால் கணக்கு எங்கோ போய்விடும். மேலதிகமான ஒவ்வொரு 90 கி.கலோரிகளும் 10 கிராம் கொழுப்பாக உடலில் சேமிக்கப்படுகிறது. இதுவே காபோஹைதரேட் தவிர்ந்த உணவாக இருந்தால் 1000 கி,கலோரியை எட்டுவது கடினம். உடலுக்குத் தேவையான மிகுதி சக்திக்காகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பு உருக்கப்படுகிறது. மேலதிகமாகத் தேவைப்படும் ஒவ்வொரு 90 கி.கலோரியும் 10 கிராம் எடையைக் குறைக்கும். அதனால்தான் கொழுப்பு உணவை உட்கொண்டால் கலோரிகளை எண்ண வேண்டிய கவலை இல்லை. கண்ணை மூடிக் கொண்டு வயிறு நிறையச சாப்பிடலாம். அத்துடன் சிறிய உடற்பயிற்சி ஒன்றையும் செய்வீர்களாக இருந்தால் இரடிப்பு லாபம். ஒரே நாளில் உடலிலிருந்து சுமார் 100 கிராம் கொழுப்பு வரை வெளியேற்றலாம் . அனுகூலங்கள் கொழுப்பு உண்பதால் வேறு பல நன்மைகளும் உள்ளன. நன்றாகச் சாப்பிட்டுக் கொண்டே உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம் கலோரிக் கட்டுப்பாடு தேவையில்லை இரத்தத்தில் கொழுப்பின் அளவு குறையும் (triglycerides) இரத்தத்தில் சீனியின் அளவு குறைந்து விடுவதால் இன்சுலின் சுரப்பிக்கு அதி வேலை இல்லாமல் போகிறது மேலே சொன்ன epileptics நோய் கட்டுப்படுத்தப் படுவதுபோல் குளுக்கோஸ் வழங்கல் தடையால் ஏற்படும் அல்சைமரின் ஆரம்ப நிலையிலும் இதனைக் கட்டுப்படுத்தலாம். சில வகையான புற்றுநோய் மேலும் பரவாமல் தடுக்கப்படலாம். ஏனைய உடல் கலங்கள் போல் புற்றுநோய்க் கலங்கள் புதுப்பிக்கப்படுவதும இல்லை இறப்பதும் இல்லை, இவை பெரும்பாலும் குளுக்கோசினால்தான் உயிர்வாழ்கின்றன, குளுக்கோஸ் இல்லாத கட்டத்தில் புற்றுநோய்க் கலங்கள் நலிவடைந்து மேலும் பரவாமல் தடுக்கபொபடுகிறது சில வகையான கட்டிகள் வீக்கம் போன்றவை குறைந்து விடும் ஈரல் வேலைப்பளு குறைந்து இலகுவாகச் செயல்படும். இன்னும் பல… தீமைகள் உடலில் நீர்த்தன்மை குறையும். தினமும் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும் நார்ப்பொருள் குறைவாக உட்கொள்ளப்படுவதால் மலச்சிக்கல் ஏற்படலாம். போதுமான அளவு கீரை பச்சை மரக்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும் கொழுப்பு உணவில் சில விற்றமின்களும் கனியுப்புகளும் குறைவாக இருக்கும், அதற்கேற்றவாறு உணவுகளைத் தெரிவு செய்ய வேண்டும். படிப்படியாகக் காபோஹைதரேட்டைக் குறைத்து keto diet இன் உச்ச நிலைக்குச் செல்லும்போது சிலருக்குக் களைப்பு போன்ற உணர்வு அல்லது காய்ச்சல் போன்ற உணர்வு ஏற்படலாம், இதனை ketone காய்ச்சல் என்று சொல்வார்கள். எந்த ஆபத்தும் இல்லை இரண்டு மூன்று நாட்களில் இல்லாமல் போய்விடும். இனி keto diet இனை எப்படிச் செயற்படுத்துவது, எதை உண்பது, எதைத் தவிர்ப்பது என்பதையும் எனது அனுபவத்தினையும் எழுதுகிறேன். தயவு செய்து இதன் இரண்டாம் பகுதியையும் எழுதியபின் உங்கள் கேள்விகளை முன்வையுங்கள். தொடரும்.
  22. 13 points
    உலகில் பிறந்த எத்தவொரு மனிதனுக்கும் தாய் மொழி என்பது உரித்தானது. மனிதன் தன் உணர்வுகளையும் உள்ளக் கிடக்கைகளையும் வெளிக்காட்டுவதற்கு மொழி உதவுகின்றது . 1999 ஆம் ஆண்டு நடந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21-ம் நாளை உலக தாய்மொழி தினம் என்று அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு தொடக்கம் இத்தினம் உலகமெலாம் கொண்டாடப்படுகிறது. நம்முடைய தாய்மொழியாம் தமிழ் மிகவும் தொன்மையானதும், இனிமையானதும் ஆகும். தாய்மொழியில் எழுதவும் பேசவும் சிறப்புற்ற மனிதனின் சிந்தனை ,செயல் என்பன சிறப்பானதாகவே இருக்கும். தாய்மொழி கற்றலில் சிறந்த மனிதனால் வேற்றுமொழிகளையும் சிறப்புற கற்க முடியும் என்பது உளவியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கின்றது. நம் தாய் மொழியாம் தமிழின் மீதான பற்று தமிழர் எல்லோருக்கும் இருக்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் எம் சிறார்கள் வாழிடமொழியிலேயே தம் கல்வியை தொடர வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளார்கள். பிறமொழியை அவர்கள் கற்றாலும், எம் தமிழ் மொழியை அவர்கள் கற்பதற்கு நாம் ஊக்கப்படுத்த வேண்டும். தாய்மொழி பேணல் மூலமே எம் கலாச்சாரம், பண்பாடு என்பவற்றை காக்க முடியும் என்பது எனது நம்பிக்கை. புலம்பெயர் மண்ணில் இன்றைய இளம் பிராயத்தினரில் பெரும்பாலானோர் பெற்றோரின் வற்புறுத்தலின் பேரின் தமிழ் கற்பதை கண்கூடாக காண்கின்றோம். இவர்களை அடுத்து வரும் தலைமுறை தமிழ் பேசுமா? என்பது ஐயமாக உள்ளது. தமிழை விருப்புடன் கற்க நாம் தூண்டவேண்டும். தாய் மொழியை பிழையின்றி பேசவும், எழுதவும் எம் இளைய சமுதாயத்தை நாம் தயாராக்க வேண்டும். ஒவ்வொருவரும் நம்முடைய தாய்மொழியாம் தமிழ் மொழியை பேணிப்பாதுகாக்க இந்நாளில் உறுதிகொள் வோம்.
  23. 13 points
    மனிதாபிமானம் (சிறு கதை) அண்மையில் ஒரு உணவகத்தில் சாப்பிடச்சென்றிருந்தேன். அது ஒரு அல்யீரிய நாட்டவருக்கு சொந்தமான உணவகம். அன்று PSG இன் உதை பந்தாட்டம் இருந்ததால் உணவை ஓடர் செய்து விட்டு அவரது அகண்ட திரையில் விளையாட்டையும் பார்க்க தயாரானேன். சிறிய நேரத்தில் அந்த உணவக முதலாளி ஒருவரை அழைத்து வந்து எனக்குப்பக்கத்து மேசையில் இருந்தி விட்டு என்ன சாப்பிடுகின்றீர்கள் என்று கேட்க அவரும் ஒரு சிறிய சாப்பாட்டை சொல்லி இன்று இது மட்டும் போதும் எனக்கு என்றார். குடிக்க என்ன வேண்டும் என்ற கேள்விக்கு ஒன்றும் வேண்டாம் என்றபடி முதலாளியை இரு கையெடுத்துக்கும்பிட்டார். அப்பொழுது தான் அவரை கவனித்தேன். அவர் வீதியில் நின்று வயலின் வாசித்தபடி பிச்சை எடுக்கும் ஒரு பிரெஞ்சுக்காறர்.. வழமையாக நடப்பது போல் எனது தோளிலிருந்த துணியால் மூக்கை மூடிக்கொண்டேன். அவரது வயலினும் தோள்ப்பையும் அவருடனேயே இருந்தன. எனக்கும் அவருக்கும் சாப்பாடுகள் வந்தன. அவர் கேட்டதைவிட அதிகமான சாப்பாடும் குடிக்க Juice d'Orange ஒன்றையும் வைத்து விட்டு போக மீண்டும் அவர் கையெடுத்துக்கும்பிட்டார். அதிலிருந்து இது அடிக்கடி நடப்பது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. தனது கடைக்குள் கொண்டு வந்து இலவசமாக சாப்பாடு போடும் முதலாளியின் மனதாபிமானமும் அவனது நாட்டில் அவரை கண்டவுடன் மூக்கை பொத்தும் எனது மனநிலையும் வெட்கித்தலைகுனிய வைத்தன. சாப்பிட்டு முடிய எனக்கு மட்டுமே பில் வந்தது. பில்லுக்கு அதிகமான பணத்தை வைத்து விட்டு விடை பெற மேலதிக பணம் வேண்டாம் இது எனது சிறு உதவி என்றார் முதலாளி. பரவாயில்லை இன்று மட்டும் எனது என்றபடி வந்து விட்டேன். மனிதாபிமானம் இன்றும் வாழ்கிறது செய்யும் ஒருவர் மூலம் அது மற்றவர்களையும் பற்றிக்கொள்கிறது. எனவே உதவுவோம். உதவுவோம்.
  24. 13 points
    யாத்திரை ....(18). பிள்ளையாரையும் நன்றாகத் தரிசித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு புளியங்குளம் வீதியூடாக வவுனியா வந்து கொழும்பு நோக்கி செல்கின்றோம். அங்கு வவுனியா பன்சாலையை (விகாரை) கடந்து போகும்போது அன்று அங்கிருந்த தேக்கங்காடும், பின்னால் இருந்த பெரிய கருங்கல்லுக்குழியும் (எந்நேரமும் நீர் நிறைந்திருக்கும். புதிதாய் யாராவது அந்த நீரில் புழங்கினால் சலக்கடுப்பு இலவசம்).அதைச் சுற்றி வாழ்ந்த மக்களும் நினைவில் வந்து போகின்றார்கள். கொழும்பில் சகோதரியின் வீட்டில் தங்கி சிரமபரிகாரம் செய்து இரவு உணவையும் முடித்துக் கொண்டு நள்ளிரவில் விமானநிலையம் வந்து மீண்டும் கட்டார் விமானத்தில் பயணம் செய்து பாரிஸ் வருகின்றோம்.விமானத்தில் விஷாலின் " துப்பறிவாளன்" மற்றும் அமிதாப் நடித்த இன்னொரு படமும் பார்த்தேன். விமானத்தை விட்டிறங்கி வெளியே வர எனது மகளும் பேரனும் வந்திருந்து வரவேற்கிறார்கள்....! பாரிஸில் எனது பெறாமகளின் திருமணம்.அதற்காக அவசரமாய் வரவேண்டி இருந்தது. அது முடிந்து அடுத்தடுத்த நாள் மீண்டும் விமானத்தில் பெர்லின் நகருக்கு பயணமாகின்றோம்.ஜன்னலால் கீழே பார்க்கின்றேன். " தலையின் மேல் நின்று கூத்தாடும் மேகங்கள் காலின் கீழ் நகரும் விமானத்தில் பறக்கும்போது " கவிதையாய் மனசு பறக்கின்றது.அங்கு எனது மச்சாளின் வீடுகுடிபூரல். அதற்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றன. அங்கு நாங்களும் மச்சாள் சகலன் எல்லோருமாய் பெர்லின் முருகன் கோவிலுக்கு செல்கின்றோம். அங்கும் ஒரு ஆச்சரியம் காத்திருக்கு எனக்கு. வசந்த மண்டபத்தில் பூசை நடக்கின்றது. அன்று கோவில் திருவிழா நடந்து கொடி இறக்கும் நாள். அந்த கோவிலிலும் நல்லூர் திருவிழாக்களின் வரிசைப்படிதான் திருவிழா நடப்பது வழக்கம். ஐயரும் பஞ்சபுராணம் படிக்க அழைப்பு விடுகின்றார். அடியேனும் சற்றும் தாமதிக்காமல் அங்கிருந்த பக்தர்களிடம் நான் பாடவா என்று கேட்கிறேன்.அவர்களும் பெரிய மனதுடன் எனக்கு வழிவிட ஒலிபெருக்கியில் மெய்சிலிர்க்க கண்களில் நீர் வடிய பாடுகின்றேன் . பின்பு சுவாமி எழுந்து வந்து பார்த்திருக்க கொடி இறக்கம் நடைபெறுகின்றது. கொடியேற்றம் பார்ப்பவர்கள் கொடி இறக்குவதும் பார்ப்பது சிறப்பு. எங்களுக்கும் நல்லூர் முருகனின் கொடியேற்றமும் பெர்லின் முருகனின் கொடியிறக்கமும் தரிசிக்கும் பெரும்பேறு கிட்டியது முன் செய் புண்ணியம். வான்முகில் வழாது பெய்க மலிவலஞ் சுரக்க மன்னன் கோன்முறை அரசுசெய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஒங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்......! இதுவரை என்னுடன் சேர்ந்து எங்களுடைய திவ்ய தேசத்தின் சில திருத்தலங்களை தரிசித்து வந்த அனைத்து உறவுகளையும் நன்றியுடன் என்றும் நினைத்திருப்பேன்.எங்காவது பிழைகள் இருந்தால் தயவுடன் பொறுத்தருள வேண்டும். கோயில் யாத்திரை சிலருக்கு சில சமயம் சலிப்பு தட்டலாம் என நினைத்ததால்தான் என் வாழ்வின் ஒரு சில சம்பவங்களை உங்களுடன் சேர்ந்து நானும் நினைவு கூர்ந்தேன்.அவற்றையும் நீங்கள் ரசித்து படித்தும் ஊக்கமும் தந்திருக்கின்றிர்கள். உங்களுக்கும் எல்லா நலன்களும் கிட்டட்டும். நன்றி.... சம்பவம் : முல்லைத்தீவில் அத்தான் ஒரு கந்தோரில் வேலை செய்கிறார்.அவர் அந்த சுற்றுவட்டாரம் முழுதும் பிரசித்தமானவர்.அவர் அங்கு என்னை ஒரு கராஜில் சேர்த்து விட்டார். அப்போது அந்த ஒரு கராஜ்தான் அங்கிருந்தது. காலையில் அவருடன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வது மாலையில் பேரூந்தில் வீட்டுக்கு வருவது.(5 கி.மி.இருக்கும்).அங்கு ட்ரக்டர் வேலைகள் ஈஸியாக இருந்தது.பக்கத்தில் ஒரு தியேட்டர்.மாலை ஆறு மணியானால் ஊரெல்லாம் கேட்கும்படி "நிலவோ அவள் இருளோ " என்னும் பாடல் ஒலிக்கும்.தினமும் இதே பாடல்தான். கையை கழுவிட்டு கிளம்பிடுவேன். ஒருநாள் பஸ் இல்லை. அங்கிருந்து நடந்து வீட்டுக்கு வருகின்றேன்.அதுவும் ஒவ்வொரு அடியையும் எண்ணிக்கொண்டு.அதுக்கு பதிலா "ராமா ராமா" என்று சொல்லியிருந்தாலும் ராமன் தரிசனம் தந்திருப்பான். அங்கு தினமும் மாலையில் நாலைந்து உத்தியோகத்தர்கள் எங்கள் வீட்டில் கூடுவார்கள். எல்லோரும் காட்ஸ் விளையாடுவார்கள். நான் அங்கு 304 நன்றாகவும், பிரிட்ஜ் சுமாராகவும் விளையாட கற்றுக்கொண்டேன். பின்னாளில் நான் திருமணமாகி நல்லூரில் இருக்கும் பொழுது இந்தியன் ஆர்மி அடிக்கடி ஊரடங்கு சட்டமும்,ஆறுமணி ஊரடங்கு சட்டமும் போடுவார்கள்.அப்போது அங்கு எனக்கு பொழுது போகவில்லை.நிறைய மச்சாள்மார். எல்லோருக்கும் 304 விளையாட பழக்கி விட்டேன்.அவர்களும் சில நாளிலேயே சிறப்பாக கற்று கொண்டார்கள்.அவர்களில் சிலர் பிரான்ஸ் வந்திருந்தனர்.எல்லோரும் ஒன்றாக ஒரே வீட்டில் இருந்தோம். அப்போதும் காட்ஸ் விளையாட கை குறையும் பொது கை கொடுத்து உதவினார்கள். ஏதோ என்னால் முடிந்த உதவி. பின்பு தண்ணீரூற்றில் இருக்கும் அத்தானின் நண்பர் தனது கராஜில் வேலை செய்ய என்னை தரும்படி அத்தானிடம் கேட்க அவரும் முல்லைத்தீவு முதலாளியிடம் சொல்லி விட்டு தண்ணீரூற்றில் வேலை செய்தேன். அது வீட்டுக்கு பக்கத்தில் சைக்கிளில் போய் வந்தேன்.தினமும் அந்த கோயில் தொட்டிகளில்தான் தோய்ந்து குளிக்கிறது. எமது விட்டு கிணறு சுமார் நாற்பது முழ ஆழம். ஒரு வாளி தண்ணி ஊற்றிவிட்டு அடுத்தது அள்ளுவதற்கிடையில் மேல் காய்ந்து விடும். ஒருநாள் இரவு எனது நண்பன் என்னை தேடி கொண்டு ஓடி வாரான். டே சுவி அந்த ஐயர் நான் காரில் வரும்போது தடுமாறி கார்மேல் விழுந்திட்டார்.நான் பயத்தில் என்று ஓடி வந்திட்டேன் என்று சொன்னான். நீ வீட்டுக்குள் இரு நான் பார்த்துட்டு வாறன் என்று அங்கு போனேன்.அவர் மிகவும் வயதானவர். சாந்தியை கண்டால் சைக்கிளில் இருந்து இறங்கி வளைவு தாண்டி சென்று பின் ஏறி ஓட்டுபவர்.சந்தியில் அப்படி இறங்கும் போதுதான் தடுமாறி காரின் மேல் விழுந்துடார். சிலர் அங்கு நிக்கினம். நான் அவரை கூட்டிக் கொண்டு அவரது சைக்கிளை பக்கத்தில் ஒரு வீட்டில் விட்டுவிட்டு ஆஸ்பத்திரி ஓடலி ஒருவர் அங்கிருந்தவர்.அவரிடம் கூட்டிச்சென்று சில சிராப்புகள்தான், மருந்து போட்டு விட்டு வீட்டில் விட்டு விட்டு வந்தேன்.அடுத்த நாள் நண்பனுடன் சைக்கிளையும் எடுத்து சென்று குடுத்து கதைத்து விட்டு வந்தோம். அதன் பின் அந்த ஐயர் சைக்கிள் ஓடுவதே இல்லை.......! யாழ் இணையம் அகவை 21 ஆக்கம் சுவி......!
  25. 12 points
    அண்மையில் சிட்னியிலிருந்து தாயகம் சென்று கர்நாடக இசை நிகழ்ச்சி(பாட்டுக்கு ஒரு புலவன்) ஒன்றை துர்க்கா மணிம்ண்டபத்தில் எமது குழந்தைகள் நடத்தினார்கள்.இதில் பங்கு பற்றிய அனைவரும் அவுஸ்ரெலியாவில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பது குறிப்படத்தக்க விடயமாகும் ...யாழ்நகரில் சிவபூமி முதியோர் இல்லம்,நாவற்குழி திருவாகச அரண்மனை,துர்க்கா மணிமண்டபம் ஆகிய் இடங்க‌ளிலும்,கொழும்பில் சைவ மங்கையர்கழகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. எனது புதல்விகள் இருவர் இதில் பங்கு பற்றினார்கள் ..... பாடல்களுக்கு தமிழில் விளக்கம் கொடுக்கும் இருவரும் எனது மகள்மார்..... நன்றி சிவன் தொலைகாட்சி நிறுவனத்தினருக்கு
  26. 12 points
    பாசமலர்ச் சோலை கை நிறைய மலர்கள் புன்னகையின் இதழ்கள் கண்களிலோ மொழிகள் கலகலக்கும் ஒலிகள் பாசமலர்ச் சோலை பால் மணக்கும் மழலை நேசமுடன் வருடும் மயிலிறகாய் விரல்கள் சிரிப்பினிலோ உவகை சிணுங்கலிலோ உரிமை மொழிகளில்லா உலகில் மோகனமாய் விழிகள் பஞ்செனவே கால்கள் பழங்களென விழிகள் பிஞ்செனவே விரல்கள் கொஞ்சுகின்ற பார்வை கண்சிமிட்டும் அழகு கை அசைப்பில் அழைப்பு சிந்துகின்ற சிரிப்பு சேய் அவனின் துடிப்பு அபிநயமோ வேதம் அணைப்பினிலோ மோகம் என்னவென்று வியக்கும் எடுத்தணைத்தால் மயக்கம்
  27. 12 points
    கஞ்சா விற்கும் காஞ்சனாவும் கண்ணி வைக்கும் காவலனும்,,,,,,,, ! போதை தரும் வாதை சிரிப்புக்குமட்டும்,சிந்திக்கக்கூடாது......! ..............(1) அந்த நீதிமன்ற வளாகம் அன்று காலை ஒரே பரபரப்பில் இருக்கின்றது.வக்கீல்களும், தரகர்களும்,கட் சிக்காரர்கள் வாதிகள்,பிரதிவாதிகள்,வேடிக்கை பார்க்க வந்தவர்கள்,சின்னசின்ன வியாபாரம் செய்பவர்கள் என்று பலராலும் நிரம்பி வழிகின்றது.அது தற்காலிக கட்டிடத்தில் நடைபெறுவதால் இடப்பற்றாகுறை காரணமாக ஒரே அமளிதுமளிதான். அதன் முதலாம் மாடியில் சில வழக்குகள் நடைபெற இருக்கின்றது.எல்லோரும் வந்து தங்களின் ஆசனங்களில் அமர்ந்திருந்து நீதிபதியின் வருகைக்கு காத்திருக்கின்றனர்.நீதிபதி ஈஸ்வரதாசன் நிதானமாக நடந்துவர எல்லோரும் எழுந்து நிக்கின்றனர்.அவரும் தனது இருக்கையில் அமர்கின்றார். தனது பையில் பொடிமட்டையை எடுத்து இரு விரல்களால் கிள்ளி எடுத்து காரம் சிரசில் அடிக்க இரு மூக்குத்துவாரத்திலும் நிரப்பிவிட்டு குமாஸ்தாவைப் பார்க்கிறார்.நீதிபதியின் பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்ட குமாஸ்தாவும் தயாராக இருந்த வழக்கு கட்டுகளை எடுத்து கூப்பிடுகின்றார்.பெரும்பாலும் அபராதம் கட்டுபவர்கள், வாய்தா வாங்குபவர்கள் மற்றும் சில வழக்குகள் என்று ஆரவாரமாய் போகிறது. . வழக்கு எண் 108. வாய்க்கால் வழக்கு. என குமாஸ்தா அழைக்கவும் சிவஞானமும் செல்லையாவும் வந்து வாதி பிரதிவாதி கூண்டுகளில் ஏறி நிக்கின்றார்கள். நீதிபதி: யாரப்பா வக்கீல், வந்து வழக்கை சொல்லவும். வக்கீல் 1: ஐயா, எதிரி கூண்டில் நிக்கும் செல்லையா என்பவர் எனது கட்சிக்காரரின் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர்.இரண்டு வீட்டின் எல்லைகளுக்கு இடையில் பொதுவான ஒரு வாய்க்கால் இருக்கு. அதை இவர் ஆக்கிரமித்து தனது வீட்டுடன் சேர்த்துக் கொண்டுள்ளார் எஜமான்.அதற்கு நியாயம் வேண்டித்தான் வழக்கு தொடரப்பட்டிருக்கு. நீதிபதி: அந்த வாய்க்கால் யாருக்கு சொந்தமானது என்று ஆவணம் சொல்லுது . வக்கீல் 2: (குறுக்கிட்டு)அது பொதுவானது எஜமான். நீதிபதி: பொதுவானது என்றால் .......! வக்கீல் 1:அரசுக்கு உரித்தானது. நீதிபதி: அரசுக்கு சொந்தமான சொத்தை ஆட்டையை போடலாமா செல்லையா. அது தப்பில்லையா. அப்படியே சிவஞானத்தை பார்த்து உம்மை நான் மெச்சுகின்றேன்.ஒரு குடிமகனானவன் அநீதியை கண்ட விடத்து அதைத் தைரியமாக வெளிக்கொண்டுவர வேண்டும்.என்று சொல்ல .... எங்கோ பராக்கு பார்த்து கொண்டிருந்த வக்கீல் 1 அவசரமாய் குறுக்கிட்டு அதற்கில்லை எஜமான், செல்லையா முழு வாய்க்காலையும் தானே அபகரிப்பது அநியாயம்.நடுவில் எல்லையிட்டு பாதியை தனக்கு தரவேண்டுமென்று எனது கட்சிகாரர் கேட்கிறார். வக்கீல் 2 குறுக்கிட்டு அதெப்படி தரமுடியும்.எனது கட்சிகாரர் இருநூறு லொறி செம்மண் போட்டு நிரப்பியுள்ளார் வாழை நடுவதற்காக. நீதிபதி குறுக்கிட்டு காலை வெட்டுவன், வாழை நடப்போறாராம் வாழை,இரு வக்கில்களையும் பார்த்து கேஸ் என்றவுடன் எல்லாத்தையும் எடுக்கிறதா,இந்தகேஸ் நிக்காதென்று உங்களுக்கே தெரியும் அவர்களுக்கு சொல்லி புரியவைக்க வேண்டாமா. கட்சிக்காரர்களைப் பார்த்து எச்சரிக்கை செய்து ஒரு அரச அதிகாரியின் முன்னால் அந்த வாய்க்காலை பழையபடி செப்பனிட வேண்டும்.மேலும் இந்த வழக்கிற்கான செலவுகளை இருவரும் பங்கிட்டு நீதிமன்றத்துக்கு செலுத்தவேண்டும். (அவர்கள் புறப்பட்டுப் போக, குமாஸ்தாவை பார்க்கிறார்) வழக்கு எண் 762. கஞ்சா விற்ற வழக்கு. நீதிபதி : யாரப்பா போலீஸ்... வந்து வழக்கை சொல்லவும். இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் முன்னால் வந்து ஒரு பையை மேசையின்மேல் விரித்து வைக்கிறார்.அதற்குள் கஞ்சா பொட்டலங்கள் இருக்கின்றன.அதை நீதிபதி ஈஸ்வரதாசன் பார்க்கிறார். பின்னால் இரண்டு காவலர்கள் ஒரு இளம் பெண்ணை அழைத்து வருகின்றனர். அவள் குற்றவாளிக் கூண்டில் ஏறி நிக்கிறாள். ரவீந்திரன் இன்னொரு கூண்டில் ஏறி நின்று வணக்கம் ஐயா,இந்தப் பெண் வீதியில் நின்று கஞ்சா விற்று கொண்டிருக்கும் போது கைது செய்தேன். அந்தப் பையும் அதிலுள்ள கஞ்சா பொட்டலங்களும் இவளுடையதுதான். நீதிபதி: உன் பெயர் என்னம்மா... பெண் : காஞ்சனா ஐயா. நீதிபதி: நீ என்னம்மா சொல்கிறாய்.உனக்காக வாதாட வக்கீல் வந்திருக்கிறாரா....! காஞ்சனா: இல்லை ஐயா. நான் விக்கவில்லை. நீதிபதி: அப்படியென்றால் இந்த பையும் கஞ்சாவும் உன்னுடையதில்லை என்கிறாயா....! காஞ்சனா: ஆமாம். நான் அப்போதுதான் அதை கீழே கிடந்து எடுத்தேன். அப்போது அங்குவந்த காவலர் ஐயா என்னை பிடித்து கொண்டுவந்து விட்டார். நீதிபதி: நீங்கள் இவரை பிடிக்கும்போது பக்கத்தில் சாட்சிகள் யாராவது....! ரவீந்திரன்:இல்லை ஐயா. நீதிபதி: உங்களைக் கண்டதும் ஓடவோ அல்லது பொருளை மறைக்கவோ முயற்சித்தாரா...! ரவீந்திரன்: யோசித்து.... இல்லை ஐயா. நீதிபதி: அதிகமாய் பணம் ஏதாவது வைத்திருந்தாரா....! ரவீந்திரன்: இல்லை ஐயா. நீதிபதி: நீங்கள் இந்த வேலைக்கு புதிதாய் சேர்ந்திருக்கிறீர்களா....! ரவீந்திரன்: ஆமாம் ஐயா. நீதிபதி: போலிஸைப் பார்த்து நீங்களாவது சொல்லி இருக்கக் கூடாதா, ஒரு வழக்கை எப்படி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று. பின் குமாஸ்தாவை பார்த்து கேட்கிறார் இந்தப் பெண்மீது பழைய வழக்குகள் ஏதாவது இருக்கா....! குமாஸ்தா: இல்லை ஐயா....! நீதிபதி:காஞ்சனாவிடம் இந்தா பாரம்மா, கீழே ஏதாவது பொருள் இருந்தால் போலீசுக்கு அறிவிக்க வேண்டும். அதை அவர்கள் வந்து எடுத்து பிரித்து கொள்வார்கள். நீயே எடுத்துக் கொண்டு போகக் கூடாது.ஏதாவது குண்டு கிண்டு கிடந்து தொலைக்கப் போகுது. சரியான ஆதாரங்கள் இல்லாததால் நீ போகலாம். இன்ஸ்பெக்ட்டரும் காவலரும் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு வெளியே போகிறார்கள். நீதிபதியும் உள்ளே போக எழுந்தவர் மேசையில் கிடந்த பையைப் பார்த்துவிட்டு இந்த கருமாந்திரத்தையும் எடுத்து கொண்டு போங்கோ என்று சொல்லிவிட்டு உள்ளே போகிறார். காஞ்சனாவும் ஓடிப்போய் அந்த பையை எடுத்துக்கொண்டு வேறு வாசல் வழியாக வெளியேறுகிறாள். ........வளரும்......!
  28. 12 points
    பிள்ளையார் துணை பிறேமன் மேற்கு ஜேர்மனி 19,10.1982 அன்புள்ள தேன் பரிமளம் அறிவது! நான் நல்லசுகம்.உங்கடை சுகங்கள் எப்பிடி? என்னையும் இன்னும் கொஞ்ச ஆக்களையும் நாங்கள் ரயிலிலை பரீஸ் போய்க்கொண்டிருக்கேக்கை பொலிசு பிடிச்சுப்போட்டார்கள்.நீங்கள் பொலிசு எண்டவுடனை கனக்க யோசிக்க வேண்டாம். அகதியாய் வந்தால் இஞ்சை இப்பிடித்தானாம்.எங்களை விசாரிச்சுப்போட்டு ஒரு பெரிய காம்பிலை விட்டிருக்கினம். இஞ்சத்தையான் பொலிசு நல்லவங்கள்.அடிக்கேல்லை.நல்ல அன்பாய் கதைக்கினம். காம்பிலை கனசனம் இருக்கினம்.எல்லாம் வேறை வேறை நாட்டுக்காரர். எங்கடை சனமும் கனபேர் இருக்கினம்.அதாலை ஒரு பயமும் இல்லை. கடியன் கந்தையாவின்ரை மூத்த பெட்டையும் இஞ்சைதான் நிக்குது. நான் திரும்பியும் பாக்கேல்லை.நான் இருக்கிற றூமிலை 8பேர் இருக்கிறம்.புங்குடுதீவு,அரியாலை,கொழும்புத்துறை,மானிப்பாய்,முல்லைத்தீவு,கொழும்பு,பூநகரி எண்டு எல்லாரும் வேறைவேறை இடத்து ஆக்கள்.பழகிறதுக்கு நல்லவை போலை கிடக்கு. இஞ்சை வரவர குளிர் கூடுது.குளிருக்கு பியர் நல்லதெண்டு அரியாலைப்பொடியன் ஈழக்குமார் சொன்னவர்.ஒரு சில ஆக்கள் பியர் ரின் வாங்கி குடிப்பினம்.நான் குடிக்கிறதில்லை.இஞ்சையெல்லாம் பியர் குடிக்கிறது கெட்டபழக்கம் இல்லையாம்.இஞ்சை காம்பிலை மூண்டு நேரமும் பெட்டிச்சாப்பாடு தருவினம்.மாதம் 75ருபாயும் கைச்செலவுக்கு தருவினமாம். நான் உங்களுக்கு கடிதம் போடுறது ஒருத்தருக்கும் சொல்லவேண்டாம்.பீயோன் ஏகாம்பரம் ஐயாவிட்டை எல்லாம் விபரமாய் சொல்லியிருக்கிறன்.அவர் இரகசியமாய்த்தான் கடிதங்களை கொண்டுவந்து தருவார்.நீங்கள் கடிதம் எனக்கு போடேக்கை அவரிட்டையே குடுத்து விடுங்கோ.அவர் முத்திரை ஒட்டி எனக்கு போடுவார்.என்ரை செல்லம் நீங்கள் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம்.வேலை கிடைச்சவுடனை நான் எல்லாத்தையும் பாக்கிறன்.கொஞ்ச நாள் போக ஒவ்வொருத்தருக்கும் வீடடிச்சு விடுவினமாம்.அதுக்குப்பிறகு வேலை தேடி எடுக்கலாமாம்.இல்லாட்டி சுவீஸ் போகலாம் எண்டு கதைக்கினம். என்ரை வில்லன் அதுதான் உங்கடை பொடிகாட் கொண்ணர் என்ன செய்யிறார்? நான் இல்லாதது அவருக்கு ஒருசோலி முடிஞ்சிருக்கும் எண்டு நினைக்கிறன். நான் என்ரை மாம்பழம் உங்கடை நினைப்பிலை தான் இருக்கிறன்.அதை ஒருத்தராலையும் ஒண்டும் செய்யேலாது. சரி செல்லலம் கனக்க எழுதிப்போட்டன் போலை கிடக்கு. இப்ப இஞ்சை நேரம் இரவு ஒன்பதரை.மற்றவை காட்ஸ் விளையாடிக்கொண்டிருக்கினம்.நான் படுக்கப்போறன்.என்ரை தற்போதைய விலாசம் பின்பக்கம் எழுதிவிடுறன்.பதில் கடிதத்தை ஏகாம்பரம் ஐயாவிட்டை குடுத்து விடுங்கோ.உங்கடை பதில் கடிதம் காண வழிமேல் விழிவைத்து காத்திருப்பேன் அன்பே. என்ரை ராசாத்திக்கு ஆயிரம் முத்தங்கள். இப்படிக்கு அத்தான் குமாரசாமி
  29. 12 points
    நுவரெலியா நோக்கி போகும் போது இராவணன் சீதையை கொண்டு வந்து வைத்திருந்த இடம் எல்லோரும் போய் பார்ப்பார்கள் நாங்களும் பார்த்துவிட்டு போகலாம் என்று சாரதி சொன்னார்.சரி என்று போய்க் கொண்டிருந்தால் பெரியதொரு நீர்வீழ்ச்சி நியைற கூட்டம் நடைபாதை வியாபாரிகள் இறங்கி பார்க்கும் போது நல்லதொரு இயற்கை காட்சியாக நிறைய பேர் இறங்கி குளித்தும் கொண்டிருந்தனர்.பிள்ளைகள் எல்லோரும் இறங்கி குளித்தனர். நீர்வீழ்ச்சியில் அதிகநேரம் போய்விட்டதால் சீதா சிறை இருந்த இடத்தை முழுமையாக பார்க்கவில்லை.நுவரெலியாவில் ஒழுங்கு செய்திருந்த வீடு ஒரு பங்களா.இருப்பிடத்துடன் சமையல்காரரும் சேர்த்தே பணம் அறவிட்டிருந்தனர். அவர்களது தொலைபேசிக்கு அழைத்து பேசியபோது அவர்கள் தமிழர்கள் ஆக இருக்க தமிழில் பேசியதும் அவர்களுக்கு நல்ல சந்தோசம்.எமக்கும் தான்.நாங்கள் இத்தனை மணிக்கு வருவோம் சமையல் சாப்பாடு ஏதாவது ஒழுங்கு பண்ணமுடியுமா கடையில் வாங்கிவரவா என ஐயா உங்களுக்கு என்ன என்ன வேண்டுமென்று மட்டும் சொல்லுங்கோ எல்லாம் வாங்கி சமைத்து வைத்திருப்போம் கடையில் எதுவுமே வாங்க வேண்டாம் சாமானுகளுக்கு பில்லைத் தருகிறோம் நீங்கள் வந்த பின் பணத்தைத் தாங்கோ என்றார்கள்.இரண்டு மூன்று நாள் சரியாக சோறுகறி சாப்பிடவில்லை ஆதலால் எல்லோருக்கும் சோறுகறி தான் விருப்பம்.மீன் கோழி பருப்பு சலாட் இவை முக்கியம் முடிந்தால் ஏதும் பலகாரம். நீங்கள் வரும்போது எல்லாமே தயாராக இருக்கும் வாங்கோ என்றார்கள். தேயிலைத்தோட்டத்துக்குள்ளால் ஓடி ஒரு பங்களாவை சென்றடைந்தோம்.எவ்வளவு பெரிய பங்களா.வெள்ளைக்கார துரைமார் இங்கிருந்து தான் எமது மக்களின் முதுகுகளில் சவாரி விட்டிருக்கிறார்கள் என எண்ணும் போது கோபமாக இருந்தது.இங்கும் பெரிய பெரிய அறைகள்.சாரதிக்கு தனியாக பாத்ரூமுடன் கூடிய அறை.சாப்பாட்டறையே ஒரு வீடு மாதிரி.வீடு பராமரிப்பவர் ஒரு சிங்களவர்.நன்றாக பழகினார்.இரு ஆண்கள் ஒரு பெண் சமையலுக்கும் உதவிகளுக்கும்.ஒருவர் காவல் கடமைகளுக்காக.அமெரிக்காவிலிருந்து வருவதாக சொன்னதும் ஏதோ வெள்ளைக்காரர் தான் வரப் போகிறார்கள் என்று நினைத்துவிட்டார்கள்.இரண்டு நாட்கள் இங்கு நின்றோம்.விதவிதமான சாப்பாடு பிள்ளைகள் சொல்லச் சொல்ல வேறு என்ன வேண்டும் என்று கேட்டு கேட்டுச் செய்தார்கள்.தேயிலை தொழிற்சாலை பார்க்க ஒழுங்குபண்ணி தந்தார்கள்.இரண்டு நாள் சுற்றிதிரிவதும் அந்த மாதிரி சாப்பாடு. வெளிக்கிடும் நாள் வந்ததும் எத்தனையோ காலமாக வேலை செய்கிறோம் இந்த முறை தான் மனதுக்கு மிகவும் சந்தோசமாக இருப்பதாக சொன்னார்கள்.புறப்படும் போது எல்லோருக்கும் நிறையவே அன்பளிப்பு கொடுத்தோம்.அந்த அம்மா எதிர்பாராமல் காலில் வந்து வீழ்ந்தா.எனக்கு என்ன செய்வதென்றே தெரியலை.கண்கள் குளமாகிவிட்டன.நாங்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் தேயிலை வாங்க தலவாக்கலைக்கு ஒருவரை கூட அனுப்பி வைத்தார்கள்.அவருடன் நம்பர் வண் தேயிலை என்று வாங்கித் தந்தார்.எல்லோருக்கும் தேவையான தேயிலை இங்கு நண்பர்களுக்கு என்று நிறைய வாங்கினார்கள். அவரிடமிருந்தும் விடை பெற்று கண்டி நோக்கி போக வெளிக்கிட இருந்தா போல பின்னுக்கிருந்தவர்கள் எல்லாம் ஐயோ அம்மா குய்யோ என்று ஒரோ கதறல்.எடுத்த வானை நிற்பாட்டி நானும் பரபரத்துக் கொண்டு இறங்க சனமும் கூடிவிட்டது. தொடரும்.
  30. 12 points
    ஏற்கனவே வான் வைத்து ஓடுபவர் ஒருவரிடம் எனது வருகையைப் பற்றி சொல்லி எனது போன் நம்பர் எல்லாம் கொடுத்திருந்தேன்.வீட்டில் கொண்டு போய்விட ஏசி இல்லாமல் 14000 ரூபா.ஏசி போட்டா 16000 ரூபா என்று கட்டணமும் கூறியிருந்தார்.நியூயோர்க் விமானநிலையத்திலிருந்து வைபர் மூலம் கதைத்த போது தன்னால் வர முடியால் இருப்தாகவும் தனது நண்பர் நம்பிக்கையானவர் அவர் வருவார் உங்கள் நம்பர் கொடுத்துள்ளேன் என்று அவரின் நம்பரையும் தந்தார் அமெரிக்காவிலுள்ளவர்களுக்காக இலங்கை தூதுவராலயம் ஒரு சலுகை செய்துள்ளது.ஒரு முறை விசா எடுத்துவிட்டு உடனேயே மல்ரிப்பிள் என்றிக்கு 100 டெலர்கட்டி எடுத்தால் அடுத்த 5 வருடத்துக்கு எத்தனை தடவை வேண்டுமானாலும் போகலாம் ஒரு தடவை போனால் 6 மாதத்திற்கு நிற்கலாம்.இதை அவுஸ்திரேலியா இங்கிலாந்து கனடா போன்ற நாடுகளிலுள்ளவர்கள் முயற்சி செய்தும் கொடுக்கவில்லை. கொழும்பு விமானநிலையத்தில் இறங்கி பொதி வந்திருக்குமோ என்ன செய்வது வான்காரன் வேறை வந்து நிற்பானே வீட்டிலுள்ளவர்களுக்கு ஏன் கஸ்டமென்று அவர்களுக்கும் சொல்லவில்லை என்று ஆளையாள் பார்த்து முழிசிக் கொண்டு இமிகிரேசன் தாண்டி பொதி எடுக்கப் போனால் ஆச்சரியம் கடைசியில் போட்டதாலோ என்னவோ எமது பொதி முதலாவதாக வந்திருந்தது.நல்ல சந்தோசம்.50 இறாத்தல் 4 பொதியை போட்டு தள்ளிக் கொண்டுவந்து உள்ளுக்கு நின்றே வான்சாரதியுடன் குறுந் தகவலில் வந்துவிட்டோம் உங்கள் வானின் இலக்க தகடை அனுப்புமாறி சொல்லி வெளியில் போக ஏதோ பக்கத்தில் நின்றவர் மாதிரி உடனேயே வந்துவிட்டார். ஆளைப்பார்க்க நல்ல வாட்டசாட்டமாக இளந்தாரியாக இருந்தார்.அவராகவே பொதிகளெல்லாம் எடுத்து வைத்து உதவி செய்தார்.நேரம் காலை 4 மணிதான்.ஊர் பத்திரிகைகளில் எயர்போட்டுக்கு வாறபோற வாகனங்கள் அடிக்கடி அடிபடுவதாக செய்திகள் வாறபடியால் முன்னுக்கிருந்து கதைத்துக் கொண்டு போவோம் என்று முன்சீற்றிலே இருந்தேன்.எனக்கும் நித்திரை வராது.அவர்ஆள் இளந்தாரியாக இருந்தாலும் மிகவும் அவதானமாக ஆறுதலாக ஓட்டினார்.சில நேரங்களில் இன்னும் கொஞ்சம் விரைவாக ஓடலாமே என்று சொல்ல வேண்டும் போல இருக்கும்.காலைச் சாப்பாடு அனுராதபுரத்திலுள்ள(வெளிநாட்டுப பாணி) ஒரு பேக்கரியில் நல்ல இடம் பாதுகாப்பு சுத்தம் என்று அங்கேயே சாப்பிட்டோம்.காசும் பெரிதாக ஒன்றுமில்லை.நான் எப்போதுமே யாருக்காவது அன்பளிப்பு கொடுப்பதென்றால் முதலேயே கொடுத்துவிடுவேன்.இவருக்கும் சிறுதொகை பணத்தை கொடுத்தேன். இலங்கையை எப்படி சுற்றலாம் எத்தனை நாளாகும் என்று அவருடன் கதைத்த போது ஓரளவு புரிந்து கொண்டேன்.இடையிடையே நடந்த யுத்தம் தற்போதய நிலை என்று நிறையவே சொன்னார்.ஓரளவுக்கு நாம் அறிந்தவைகள் என்றாலும் சிலவற்றைக் கேட்க சங்கடமாக இருந்தது.முருகண்டி பிள்ளையாரை பார்த்தா கொஞ்சம் வெளிக்கிட்டு நிக்கிறமாதிரி இருந்தது.பிள்ளையாரையும் கும்பிட்டு கொஞ்ச கடலையும் வாங்கி கொறித்துக் கொண்டு வீடு போய் சேர 12.30 மத்தியானம். எனக்கென்று அண்ணன் ஒருவரே.அவரும் சிட்னியில்.அப்பா அம்மா முதலே இறந்துவிட்டார்கள்.எமது வீட்டில் உறவினர் ஒருவரை இருத்தியிருந்தோம்.இப்போது மனைவி வீட்டில் தான் போய் இறங்கினோம்.திடீர் என்று கண்டதும் அவர்களுக்கு ஒரே ஆச்சரியமும் சந்தோசமும்.குசலம் விசாரிப்பது தொடங்கி ஊர் நடப்பு அதுஇதென்று நீண்ட நேரம் பின்னர் சாப்பிட்டுவிட்டு எனது வீட்டுப் பக்கம் போய் பார்த்து பொழுதுபட நித்திரை வெறியாகிவிட்டது.வேளைக்கே படுத்துவிட்டேன். காலையில் எழும்பினால் எவரும் எழும்பிய மாதிரி தெரியவில்லை.இன்னும் முற்றாக விடியவில்லை எப்படி வெளியே போவது?கொஞ்ச நேரத்தில் ஒவ்வொருவராக எழும்பினார்கள்.முதல் நாள் பிற்பகல் மாட்டை மேச்சலால் கொண்டுவந்து கட்டினார்கள்.அந்த ஞாபகம் வர மாடு எங்கை வயலுக்கையா கட்டுறநீங்கள் என்று கேட்டு ஒரு வேப்பங்கொப்பில் தடிமுறித்து சப்பிக் கொண்டு சின்ன துவாயையும் தோளில் போட்டுக் கொண்டு மாட்டுக்கு கொஞ்ச தண்ணீரும் வைத்து வயலுக்குள் கட்டிவிட்டு வரலாம் என்று மாட்டை அவிழ்துக் கொண்டு கொஞ்ச தூரம் போக பெறாமகன் கத்திக் கொண்டு வாறான்.என்னடா என்றால் இப்ப ஒருவரும் சேட்டில்லாமல் திரியிறேல்லை சேட்டை போட்டுக் கொண்டு போங்கோ என்று சேட்டைத் தந்தான்.ஊருக்குள் திரியும் போது சேட்டுடன் திரிவது குறைவு.இப்போ சேட்டே இல்லாமல் வெளிய போகேலாதா?ஓரிரு நாட்கள் போனபின் தான் கூலி வேலை மேசன் சீவல் தொழிலாளி எல்லோருமே பெனியனோ சேட்டோ போட்டிருக்கிறார்கள்.மாட்டுடன் வயலுக்கு போனால் முன்னர் பச்சைப்பசேலென்றிருந்த வயல் வெளி இப்போ காய்ந்து கருவாடாக கிடக்கிறது.பழைய தோட்டம் செய்த ஞாபகம் பார்க்க பார்க்க மிகவும் கஸ்டமாக இருந்தது.கிணற்றை சுற்றி தென்னைகள் ஒரே முள்ளுகள் தட்டித் தட்டி கிணற்றங்கட்டிலிருந்து யோசிக்க போன ஆளைக் காணல்லையே என்று தேடிவாறங்கள். தொடரும். சிறி ஒரு சின்ன உதாரணம் இரவில் கறன்ற் இல்லை என்றால் தற்காலிகமாக பாவிக்க சிறிய ரியூப் லைற் மாதிரி வாங்கிக் கொண்டு போனால் அங்கே அதே மாதிரி பெரிய லைற் வைத்திருக்கிறார்கள்.பெரிய வெக்கக்கேடு.
  31. 12 points
    1988 ஆடி மாதம் சனிக்கிழமை. வேகமாக துவிச்சக்கரவண்டியில் வந்த சங்கரை மறித்தான் கோபால். என்ன மச்சான் கிளாசுக்காப் போகிறாய்? ஓமோம் சோதியற்ற பிஸிக்ஸ். உமக்கு ? எனக்கு பொருளியல் கிருஸ்ணானந்தான் ஆசிரியரின் கிளாஸ். அங்க பார் ஆமிக்கார்கள், எல்லோரையும் மறிக்கிறாங்கள். இன்றைக்கு கிளாசுக்கு போனபாடுதான். சங்கர் க.போ.த உயர்தரம் கணிதபிரிவில் கல்வி கற்கிறான். பொறியிலாளராக வேண்டும் என்ற விருப்பம். கோபால் யாழ்மத்திய கல்லூரியில் வர்த்தகதுறையில் உயர்தரம் படித்துக்கொண்டிருக்கிறான் . நன்றாகப் படித்து பல்கலைக்கழகம் சென்று கற்று தனது சகோதரிகளை கரைசேர்க்கவேண்டும் என்று விரும்பினான். கோபாலின் அப்பா ஒரு சட்டத்தரணி. பலருக்கு பல்வேறு விதமாக உதவும் எண்ணம் கொண்டவர். தகப்பனைப்போல கோபாலும் சமுகத்தின் மீது பற்றுள்ளவன். எல்லோருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். கோபாலுக்கு ஈரோஸ் இயக்கத்தில் பல நண்பர்கள் இருந்தார்கள். அவர்களுடன் அடிக்கடி திரிவதுண்டு. மல்லாகச் சந்தியில் இருந்து சுன்னாகம் போகும் வழியில் வலதுபக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் உள்ள மரத்தின் கீழ் பலர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். சுன்னாகச் சந்தையில் மரக்கறி வாங்கி வந்தவர்கள், தனியார் கல்லூரிகளில் கல்வி கற்கும் மாணவர்கள் உட்பட வயது வேறுபாடின்றி ஆண்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு காவலாக இந்திய இராணுவத்தின் சீக்கியர்கள் துப்பாக்கி ஏந்தியவண்ணம் இருந்தார்கள். இராணுவத்துக்கு வழிகாட்டியாக இருந்த ஈபிஆர் எல் எவ் அமைப்பினர், தடுத்து வைத்திருப்பவர்களை விசாரித்துக் கொண்டிருந்தார்கள். சங்கரின் பாடசாலை நண்பர் சிவனேசனை கறுத்த மெல்லிய சுருள்முடியுடன் இருந்த இளைஞன் ஒருவன் விசாரித்துக் கொண்டிருந்தான். எந்த ஊர்? குப்பிளான். லோலாவைத் தெரியுமா? தெரியாது. "டேய் பொய் சொல்லாதே. அதில போய் நில்லு" என்று சொல்லிவிட்டு அந்த இளைஞன் சங்கரைக்கூப்பிட்டான். உடல் நடுக்கத்துடன் சங்கர் எழுந்தான். அப்பொழுதுதான் அந்த இளைஞன் சங்கருக்கு அருகில் இருந்த கோபாலைக் கண்டான். 'கோபால் நீ எங்கே இங்கை". "கிளாசுக்கு போய்கொண்டிருந்தனான். எனக்கு கிளாசுக்கு நேரமாயிட்டுது" 'நீ கிளாசுக்குப் போகலாம்" "இவர் என்ற நண்பர் சங்கர்" " ஒ கே , இவரையும் கூட்டிக்கொண்டு போகலாம்" சங்கரும் தப்பினேன் பிளைத்தேன் என்று நினைத்து துவிச்சக்கர வண்டியை நோக்கிப் போனான். "உனக்கு எப்படி உவனைத் தெரியும்?" "அது ரவி. உனக்கு பிறகு சொல்கிறேன். கிளாசுக்கு நேரமாகிவிட்டது" என்று சொல்லி கோபால் துவிச்சக்கரவண்டியில் பறந்தான். ------------------------------------------------------- 1986 சித்திரை மாதம் மாலை நேரம். க.போ.த சாதாரணதரம் சமுகக்கல்வி புத்தகத்தினை கோபால் வாசித்துக் கொண்டிருந்தான். மார்கழியில் பரீட்சை. நல்ல பெறுபேறுகள் எடுக்க வேண்டும் என்று படித்துக்கொண்டிருந்தான். யாரோ பின் கதவினைத் தட்டும் சந்தம் கேட்டது. "யாரது?" "கோபால் நான் ரவி" இவனேன் முன்கதவினைத் தட்டாது பின்கதவினைத் தட்டுகிறான் என்று நினைத்து , அங்கே சென்றான். இரத்தக் காயங்களுடன் ரவி அங்கே நின்று கொண்டிருந்தான். விடுதலைப்புலிகளினால் டெலோ இயக்கம் தடைசெய்யப்பட்ட காலம். இதனால் ஏற்பட்ட மோதலில் காயப்பட்டு உயிர் தப்பி கோபாலிடம் உதவி கேட்க வந்திருந்தான். கோபாலும் ரவியை, வீட்டு மாட்டுக் கொட்டில் ஒருவருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்து தெரிந்த வைத்தியர் ஒருவர் மூலம் சிகிச்சை வழங்கி காப்பாற்றினான். காயங்கள் ஆறியபின்பு ரவியைப் பாதுகாப்பாக சாவகச்சேரியில் ரவிக்கு தெரிந்த ஒருவரிடம் ஒப்படைத்தான். டெலோவில் இருந்த ரவி, பிறகு இந்திய இராணுவ வருகையின் போது , இந்திய இராணுவத்துணைக்குழுவான ஈபிஆர் எல் எவ்வுடன் சேர்ந்து வந்தான். ----------------------------- 1988 புரட்டாதி மாதம், சுன்னாகம் வினாயம்ஸ் கல்வி நிலையம் அருகில் ஈபி ஆர் எல் எவ்வினர் ஆயூதங்களுடன் நடமாடினார்கள். துவிச்சக்கரவண்டியில் சங்கருடன் வந்த கோபால், ரவியைக் கண்டதும் "என்ன பிரச்சனை. யாரைப் பிடிக்கப் போறீர்கள்" என்று வினாவினான். "உந்த மதிலுக்குப் பக்கத்திலை யாரோ புலி ஒன்று குண்டை வைத்திட்டுப் போட்டுது . நல்ல காலம் வெடிக்கவில்லை. அதுதான் தேடுகிறோம்" என்று சொல்லி வேகமாக ரவியும், மற்றைய ஈபி ஆர் எல் எவ்வினரும் அவ்விடத்தினை விட்டு சென்றார்கள். "உனக்கு தேவையில்லாத கேள்வி. உவங்கள் எக்கேடு கெட்டாலும் கெடட்டும். உவன் ரவி எத்தனை அப்பாவிகளை சித்திரவாதை செய்து போட்டிருக்கிறான். உவனோட தொடர்புகளை வைக்காதே' என்று சங்கர் புத்திமதி சொன்னான். ----------- 1989 தை மாதம். மாலை நேரம் 7 மணி சங்கர் வீட்டில் இருந்து படித்துக் கொண்டிந்தான். சட புட என்று துப்பாக்கி வெடிக்கும் சத்தத்தினைக் கேட்டான்.மனதுக்குள் ஏதோ செய்தது. யாரையோ சுட்டுப்போட்டாங்கள். மாலை 9 மணியிருக்கும். சங்கரின் வீட்டின் முன்கதவினை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அங்கே கோபாலின் அத்தான் மிகவும் பதற்றத்தோடு நின்றுகொண்டிருந்தார். "பின்னேரம் டியூசனுக்குப் போன கோபாலை இன்னும் காணவில்லை. அதுதான் தேடி வந்தனான்". "கோபாலை நான் நேற்றுத்தான் பார்த்தனான். நீங்கள் வேறு யாரையும் விசாரித்தனீங்களா?" "கிளாஸ் முடிய மோகனுடன் மல்லாகச்சந்தியில் டீ குடித்ததாக மோகன் சொன்னார். பலரையும் விசாரித்துவிட்டேன் எங்கே போயிட்டான் என்று தெரியவில்லை." "ஈபி ஆர் காம்பிலையும் போய் விசாரித்தேன். ரவியை அங்கு கண்டேன். தான் காணவில்லை. நாங்கள் ஒருவரும் கோபாலைப் பிடிக்கவில்லை என்றும் சொன்னான்". மறு நாள் ஏழாலைக்கும் சுன்னாகத்துக்கும் இடையில் புகையிரதத் தண்டவாளத்துக்கு அருகில் கோபாலின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் சித்திரவாதைகள் செய்து மிருகத்தனமாக கோபால் கொல்லப்பட்டிருந்தார். நிகங்கள் பிடுங்கப்பட்டிருந்தன. கைகள் முறிக்கப்பட்டிருந்து. முகத்தில் பல காயங்கள். ரவி கொல்லப்பட்டிருந்த இடம் இந்திய இராணுவம், ஈபி ஆர் எல் எவ் முகாம்களுக்கு மிக அருகில். கோபாலுடன் வேறு இருவரும் அன்று கொல்லப்பட்டிந்தார்கள். துப்பாக்கிச்சத்தம் கேட்க முன்பு, மாலை 6மணியளவில் கோபாலை ரவி கூட்டிக்கொண்டு சென்றதினைக் கண்டவர்கள், சிலர் சொன்னார்கள். துப்பாக்கி சத்தம் கேட்டு தண்டவாளத்துக்கு அருகில் இருந்த வீட்டில் உள்ளோர்கள் ,அவ்விடத்தில் ஈபிஆர் எல் எவ்காரர்கள் திரிவதைக் கண்டதாகவும் சொன்னார்கள். கோபாலின் கைக்கடிகாரம், பாதணிகள், மோதிரம், துவிச்சக்கரவண்டியும் களவாடப்பட்டது. கோபாலின் துவிச்சக்கரவண்டியில் ஈபி ஆர் எல் எவ்வினர் சவாரி செய்வதினை கோபாலின் நண்பர்கள் பிறகு பார்த்திருக்கிறார்கள். வடகிழக்கு மாகாணத்தில் முதல் அமைச்சராக ஈபிஆர் எல் எவ்வின் வரதராஜப் பெருமாள் அப்பொழுது இருந்தார். யாழ் மாவட்டத்தில் வேறு கட்சிகள் போட்டியிடாததினால், போட்டியின்றி ஈபி ஆர் எல் எவ் அனைத்து இடங்களையும் வென்றது. 89 பெப்ரவரியில் இலங்கையின் பாராளுமன்றத்தேர்தலில் ஈபி ஆர் எல் எவ் , தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட்டது. விடுதலைப்புலிகளின் ஆதரவுடன் ஈரோஸ் இயக்கம் அத்தேர்தலில் போட்டியிட்டது. இதனால் ஈரோஸ் இயக்கத்தினர், ஆதரவாளர்கள் சிலர் இந்திய இராணுவத்தின் துணைப்படைகளினால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 86ல் கோபால் தனது நண்பன் ரவியினைக் காப்பாற்றினான். ஆனால் 89ல் ரவி?. --------------------------------------- ஆவணி மாதத்தில் நடைபெறவிருக்கும் பரிட்சைக்கு படிக்க முடியாமல் சங்கர் அவதிப்பட்டான். புத்தகத்தினைத் திறந்தால் கோபாலின் சகோதரிகள், பெற்றோரின் முகங்கள் , அவர்கள் சங்கரை கண்டால் கதறி அழுவது, சங்கரால் படிக்கமுடியவில்லை. மேலும் மேலும் துயரச்செய்திகள் வந்துகொண்டிருந்தன. சங்கரின் ஆரம்பகாலத்து பள்ளி மாணவனும், முரசொலி பத்திரிகை ஆசிரியர் திருச்செல்வத்தின் மகன் அகிலன்( பரியோவான் கல்லூரி மாணவன்), முரசொலிப்பத்திரிகையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான சந்திப்பு பற்றிய செய்திவெளியிட்டதினால் இந்திய இராணுவ துணைப்படைகளினால் கொல்லப்பட்டார். யூனியன் கல்லூரி பிரேமானந்தன் உட்பட 90 பேர் தெல்லிப்பளையில் வைத்து அமைதிப்படையினால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். அமைதிப்படையும் இலங்கையினை விட்டு சென்று பல வருடங்கள் ஆகிவிட்டது. பிரேமானந்தன் பற்றிய செய்தி இன்னும் தெரியவில்லை. பிரேமானந்தன் கைதானதற்கு பிறகுவந்த அவனது பிறந்த நாளில் அவரது தகப்பன், மகன் பிரிவால் மாரடைப்பினால் காலமானது சோகத்தின் மேல் சோகம். பரிட்சை நாட்கள் நெருங்க நெருங்க ஈபி ஆர் எல் எவ்வினால் வீதிகளில் சென்ற இளையோர்கள் பிடிக்கப்பட்டு துணை இராணுவத்தில் சேர்க்கப்பட்டார்கள். இதனால் தனியார் கல்வி நிலையங்களில் பெண்கள் மட்டுமே படிக்கச் சென்றார்கள். முக்கியமான படங்கள் கற்காமல் ஆண்கள் பரீட்சை எழுத வேண்டியிருந்தது. சங்கரின் நண்பர்கள் பலர் படிப்பும் வேண்டாம் ,தப்பினால் போதுமென்று கொழும்புக்கு ஓடி வெளினாடு சென்றார்கள். சிலர் பிடிபட்டார்கள். சிலர் காணாமல் போனார்கள். ------------------------------------------ பொறியியாலாளாராக வரவிரும்பிய சங்கரின் எண்ணம் நிறைவேறவில்லை. சங்கரைப்போல வலிகாமம் வடக்கில் பல இளைஞர்களின் கனவுகள் நிறைவேறவில்லை. கொழும்புக்கு சென்ற சங்கர் ஒரு உணவகத்தில் வேலை செய்துகொண்டு கணக்கியலைப் படித்தான். மாசி மாதம் 89ல் நடந்த பாராளுமன்றத்தேர்தலில் யாழ் நகரில் பதினொன்றுக்கு 8 இடங்களை ஈரோஸ் பிடித்து வெற்றி பெற்றது. சுரேஸ் பிரேமசந்திரன் , ஆனந்த சங்கரியின் சகோதரர் யோகசங்கரி உட்பட மூவர் ஈபி ஆர் எல் எவ் அணியில் வெற்றி பெற்றார்கள். சுரேஸ் பிரேமச்சந்திரனால் வழிகாட்டலுடன் இயங்கிய மண்டையன் குழுவில் இருந்த ரவியினால் கொல்லப்பட்டவர்கள் அதிகம். இந்திய இராணுவம் ஈழத்தினை விட்டு வெளியேறியதும், ரவி இலங்கை இராணுவத்தின் துணைப்படையில் சேர்ந்தான். விடுதலைப்புலிகளினால் ரவி கொல்லப்பட்டதாக ஒரு தகவல். யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரபல்யமான பொருளியல் ஆசிரியர் கிருஸ்ணானந்தன் ஆசிரியரும் அவரது வீட்டில் ஈபி ஆர் எல் எவ்வினால் சுட்டுக்கொல்லப்பட்டார். ----------------- 2019 மாசி மாதம். வலைகுடா நாடொன்றில் கணக்காளராக சங்கர் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு கீழே கிட்டத்தட்ட 50 கணக்காளர்கள் வேலை செய்கிறார்கள். வேலையில் இருக்கும் சங்கரின் கைத்தொலைபேசி அழைப்பு வந்தது. மச்சான் என்ன நித்திரை கொள்ளவில்லையா? இப்ப எத்தனை மணி? . நாளைக்கு வேலையில்லையா? சிட்னியில இப்ப 11 மணியாகிறது. நித்திரை வரவில்லை. மனுசியும் பிள்ளைகளும் படுத்திட்டார்கள். எங்கட கிளாஸ்மேட்டுகளோட கதைச்சனியே? குமாருடன் கதைத்தேன். இப்ப ஆள் பிரின்சிப்பலாக இருக்கிறார். அவருடைய தகப்பன் செல் விழுந்து செத்துப்போனார். பாவம் குமார்தான் குடும்பத்தினைப் பார்த்து எம் எஸ் இ வரை படித்திருக்கிறான். தேவா இறுதி யூத்தம் வரை வன்னியில் இருந்து கஸ்டப்பட்டிட்டான். மயூரன் மாவீரர் ஆகிவிட்டார். குப்பி இப்ப நியூசிலாந்தில் இருக்கிறான்.மப்பு ஜேர்மனியில. மான்ஸ் திருக்கோணமலையில இருக்கிறான். பிரபா இப்ப கனடாவில இருக்கிறான். நல்ல கெட்டிக்காரன். உனக்கு தெரியும்தானே. ஓம் முதல் தரம் எடுக்கேக்க பிசிக்கல் சயன்ஸ் கிடைத்தது. இரண்டாவது தரம் எடுக்கேக்க பேரதேனியா கிடைத்தது. ஆனால் மறுமொழி வரமுன்பு பிசிக்கல் சயன்சுக்கு ஓமென்று சைன் வைத்திட்டான். படிக்கும் போது அவனுடைய தகப்பன் இறந்திட்டார். குடும்பத்தினைப் பார்க்க வெளினாடு போய் இப்ப கனடாவில படித்தவேலையும் செய்யாமல் குளிருக்க கஸ்டப்படுகிறான். எங்கட பச்சில மூன்று பேர் பேராசிரியர்கள் என்பது சந்தோசம். யாழ், வன்னி, கிழக்குப் பல்கலைக்கழகங்களில் வேலை பாக்கினம். எல்லோரையும் பார்த்து 30 வருடங்களாகிவிட்டது. பார்க்க ஆசையாக இருக்கிறது. 86காரங்கள் 50 பேர் ஆண்கள் பெண்கள் என கம்போடியா, தாய்லாந்து, மலேசியா என்று போய் வந்தார்கள். 87காரர்கள் எல்லோரும் சந்தித்து புத்தகம் ஒன்று வெளியிட்டார்கள். 88காரர்கள் இந்தவருடம் எதோ பெரிதாக செய்வதாக கேள்விப்பட்டேன். நாங்களும் எல்லோரும் சந்தித்தால் என்ன? சந்திப்போம். இலங்கை வேண்டாம். எல்லாம்போய்விட்டது. போனால் கவலைவரும். உனக்கு ஊரில ஆக்கள் இல்லை. வெளினாட்டிலதான் இருக்கினம். எங்கட உறவுகள் இலங்கையிலதானே இருக்கினம். அதோட உவன் சித்தங்கேணி,விஜயகுமார் எல்லாம் ஊரிலதானே. அவங்களால வெளினாடு வரமுடியுமே? நித்திரை கொள்ளமால் யாரோட அலட்டிக்கொண்டிருக்கிறியள் என்று மனுசி திட்டும் குரல் கேட்கிறது. பிறகு கதைப்போம். ஒம் எனக்கும் இப்ப வேலையில மீட்டிங் இருக்கிறது. குட் நைட்.
  32. 12 points
    யாத்திரை ......(13). இன்று நல்லூர் கொடியேற்றம்.எனது மனைவியும் இந்தப் பயணத்தில் முருகனின் சில திருவிழாக்கள் என்றாலும் பார்த்தே தீருவது என்று பிடிவாதமாய் இருந்தாள்.ஏராளமான பக்தர்கள்,எப்படியோ கோவிலின் உள்ளே மிக அருகே சென்று அமர்ந்து கொண்டோம்.சுமார் மூன்று தசாப்தங்களுக்கு பின் இந்த சந்தர்ப்பம் கூடி வருது. கண்கள் குணமாகி பார்வை மறைக்கிறது."முருகனுக்கு அரோகரா" எனும் சொல்லைத் தவிர்த்து வேறு எதுவும் என்னிடத்தில் இல்லை. பறவைகள் எவ்வளவு தூரம் பறந்தாலும் இளைப்பாற தான் பிறந்த மரத்துக்குத்தான் வந்து சேரும். வசந்த மண்டப பூசை முடித்து என் அருகாக அழகிய மயில் வாகனத்தில் முருகப் பெருமானும் பின்னால் வள்ளி தெய்வானையும் வந்து கொடிமரத்துக்கு பக்கத்தில் நிக்கிறார்கள். அர்ச்சகர்களின் வேத மந்திர ஒலியுடன் மேளதாளங்கள் முழங்க பக்தர்களின் அரோகரா என்னும் கோஷத்துடன் கொடி ஏறுகின்றது. கண்கள் குளிரத் தரிசித்து விட்டோம். இனி திருவிழா முடிந்து கொடி இறக்கும்போது ஊரில் நிக்க மாட்டோம் என நினைக்கையில் மனதில் சிறு சலனம். முருகா என்று நெஞ்சம் விம்ம உள்வீதி வலம் வந்து வெளியே வருகின்றோம். அடுத்தநாள் மனைவியும் மகனும் பாசையூர் அந்தோனியார் சர்ச்சுக்கு போய் விட்டு வருகிறார்கள். எனக்கு வேறு வேலைகள் இருந்ததால் போக முடியவில்லை. மகன் இரண்டு கிழமை விடுமுறையில் வந்ததால் அவரை வழியனுப்ப மீண்டும் கொழும்புக்கு வானில் வருகின்றோம். வரும் வழியில் வவுனியாவில் எனது மச்சாள் வீட்டிற்கு செல்கின்றோம்.(அவர் அங்கு ஒரு பாடசாலை அதிபராக கடமையாற்றுகின்றார்).அங்கு அக்கா தங்கை என்று பல உறவினர்கள் இருக்கின்றனர்.நான் அங்கு இருக்கும்போது எல்லோரும் ஒரே அயலுக்குள்தான் இருந்தோம். அப்போது எல்லோரும் சிறு பிள்ளைகள்.இப்ப அவர்களில் அநேகமானோர் வவுனியாவில் அங்கங்கே இருக்கின்றார்கள். நேரம் இரவாகி விட்டது.நானும் மோட்டுத்தனமாக அறிவிக்காமல் போய் இறங்கி விட்டேன். அவளுக்கு எதிர்பாராமல் என்னையும் தமக்கை மற்றும் மகனையும் பார்த்ததும் அளவற்ற சந்தோசம்.என் பிள்ளைகளை தூக்கி வளர்த்தவர்கள். அவள் கணவர் உடனே போன் எடுத்து எல்லோருக்கும் சொல்லுகின்றார்.அத்தான் அக்கா வந்திருக்கினம்.இரவாயிட்டுது எல்லா இடமும் வர ஏலாது நீங்கள் வாங்கோ என்று. அடுத்த ஒரு மணித்தியாலத்துக்குள் அவர்கள் அவர்களின் மருமக்கள் பேரன் பேத்திகள் என்று நாற்பது ஐம்பது பேர் வந்து இறங்குகின்றார்கள். ஒவ்வொருவர் கையிலும் அவர்கள் இரவு சாப்பாட்டுக்கு தயாராக வைத்திருந்த அத்தனை உணவுப்பதார்த்தங்களும் இருக்கின்றன. நான் என்ன புண்ணியம் செய்தேன் இவர்களை உறவாய் பெறுவதற்கு. இரவு ஒரு மணியளவில் விடை பெற்று புறப்பட்டோம் மேலும் கொழும்பிலும் பல உறவினர் வீடுகளுக்கு செல்ல வேண்டும். நாளை மறுநாள் அவருக்கு விமானம்.அதனால் இன்று காலை கொழும்பில் கொட்டகேனா அந்தோனியார் சர்ச்சுக்கு சென்றோம்.அங்கு உப்பும்,மிளகும் காணிக்கை வைத்து வணங்கினோம். பின்பு முன்னால் இருக்கும் வீரமாகாளி அம்மன்கோவிலுக்கும்,பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலுக்கும் சென்று அர்ச்சனைகள் செய்து வணங்கி விட்டு வந்தோம். பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலின் வெளியே சனீஸ்வரப் ப்ரிதிக்காகவும் தோஷ நிவர்த்திக்காகவும் ஒரு பெரிய காகத்தின் சிலை வைத்து அதைச்சுற்றி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்குகின்றனர்.நாங்களும் தீபமேற்றி வணங்கி விட்டு வருகின்றோம். வெளியே கடையில் தேனீர் வடைகள் சாப்பிட்டு விட்டு அருகில் இருக்கும் மணிக்கடைகளில் இவர்கள் ஞாபகார்த்தமாக சில பொருட்களை வாங்குகின்றனர். நான் கொஞ்சம் பெரிய மடுமாதா சுருவம் ஒன்று வாங்குகின்றேன். யாத்திரை தொடரும்.....! சம்பவம் : (1) 1988/89 ம் ஆண்டு என நினைக்கின்றேன்.அன்றும் நல்லூர் கொடியேற்றம். நான் எனது மகளுடன் தனியாக வந்து கொடிக்கம்பத்துக்கு அருகில் நிக்கிறேன்.அவளோ சிறுமி.எனது தோளில் இருக்கின்றாள்.கொடியேற்றம் முடிந்ததும் சனம் தள்ளு முள்ளுப்பட்டு நெருக்குகின்றது.ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் தாள முடியவில்லை.அவளை அந்த கம்பிக்கு உள்ளே இறக்கி விட்டு விட்டேன்.அது சிரித்துக் கொண்டு நிக்குது.அபாயம் புரியாமல், நான் தாக்குப்பிடித்து சனம் குறைத்ததும் தூக்கிக் கொண்டுவந்து விட்டேன். இன்று நினைக்கையிலும் வேர்க்கிறது.....! சம்பவம் : (2) பிரான்சில் நான் இருக்கும் இடத்துக்கு அருகே ஒரு மலையில் ஒரு மாதா கோவில் உண்டு.கதிரை மாதா என்று சொல்லுவோம்.பாலகன் ஜேசுவை மடியில் வைத்துக் கொண்டு கதிரையில் அமர்ந்திருப்பார். அங்கு ஒரு கண்ணாடி அறையில் பல இடங்களில் இருக்கும் பிரசித்தமான மாதா,அந்தோனியார்,ஜோசெப்,மைக்கல் சம்மனசு மற்றும் புனிதர்களின் சுருவங்கள் இருக்கின்றன.அவற்றை பார்க்கும் போது நினைப்பதுண்டு நான் நாட்டுக்கு போனால் மடுமாதாவின் சுருவம் ஒன்று வாங்கி வந்து அவர்களின் அனுமதி பெற்று அங்கே வைக்க வேண்டும் என்று. நாங்கள் ஒவ்வொரு செவ்வாயும் தவறாமல் அங்கு போய் வருவது வழக்கம். இப்போதும் அங்கு சென்று வந்துதான் எழுதுகின்றேன். அங்கே அந்த மடுமாதா ஜம் என்று விற்றிருக்கின்றா. நான் மடு பக்கத்தில் சுமார் ஒரு வருடம் காட்டிலாகா வேலைகள் செய்திருக்கின்றேன்.தினமும் மடுக்கோவிலில்தான் குளிக்கிறதும் குடிப்பதற்கு தண்ணீரும் ட்ராக்ட்டரில் எடுத்து கொண்டு வாடிக்கு போவது வழக்கம்.அதனால் அவவின் மீது மிகுந்த அன்பு உண்டு.
  33. 12 points
    தண்ணிய குடியேன்டா நானும் எத்தின தடவையம்மா குடிச்சிட்டன் இந்த விக்கல் போகமாட்டேன் என்கிறது இந்தா கொஞ்சம் சீனியை வாய்க்க போடு ம் தாங்கோ அப்பவும் நிக்காட்டி கொஞ்சம் நித்திரைய கொள்ளு சரி சரி என கட்டிலில் சாய்ந்து படுக்க ஆரம்பித்தாலும் விக் இக் விக் என விக்கல் விடுவதாக இல்லை அப்படியே தலையணையை பிடித்து முகத்தை இறுக்கிய படி கண்களை மூட நித்திரை இறுக பிடித்துக்கொண்டது பல மணிநேரம் கழிந்த பிறகு எழுந்தேன் எல்லாம் இருட்டாக இருந்தது மின் ஆழியை அழுத்திய போது மின்சாரம் இருக்க வில்லை கும் இருட்டில் தட்டி தடிவி ஒரு சிமிழி விளக்கை கதவு மூலையில் இருந்து எடுத்து நேரத்தை பார்க்க நேரமோ நிற்காத மேகமாய் ஓடியோடி களைப்பில்லாத மூன்று கால் குதிரை போல மரதன் ஓடி இரவு பன்னிரண்டு முப்பதை காட்டியது மறைந்து போன விக்கலை நினைத்தேன் அது தொலைந்து போய்விட்டது சாப்பிடவும் இல்லை வயிறோ குடித்த தண்ணிரை இறைத்து விட்டு வந்து படு என மூளைக்கு கதவை திறந்து விட்டிருந்தது வெளியே போகவே தூரத்தில் மணி கட்டிய மாடுகள் ஊரை சல்லடை போட்டு தேடுதலில் இறங்கிருக்கும் போல நாய்கள் நன்றியை வீட்டுக்கும் பகையை எதிரிக்கும் செலுத்திக்கொண்டிருப்பதில் தெரியவந்தது விளக்கு எரிவதை கண்டால் இந்த நேரத்தில் யாரோ எதோ அலுவல்களை பார்க்கிறான் என்று உள்ளே வந்து விடுவார்கள் என்று எண்ணி கடனை இறைத்து விட்டு எதிர்வீட்டில் ஏதும் மணியோசை கேச்கிறதா என காதை விட்டு பார்த்தேன் எந்த சத்தமும் இல்லை மெதுவாக வந்து மெல்ல அந்த சிமிழி விளைக்கை அணைத்து விட்டு தூங்க ஆரம்பிக்கிறேன் . வயிற்றில் இருந்த புழுக்களோ வயிற்றில் உணவில்லாமல் ஊளை இடுவது எனக்கு மட்டும் தெரியவே அணைந்த விளக்கோ என் அகத்தில் எரிய தொடங்குகிறது . 2009 யுத்தம் முடிவடைக்கிறது ஆர்ப்பரித்த கடல் போல போர் ஊரை சாம்பலாக்கி உயிர்களை காவு வாங்கி உடமைகளை உருக்குலைத்து உள்ளங்களை ஊமையாக்கி அங்கங்களை கடன் வாங்கி தின்று முடிந்து இருந்த வேளையது மழை ஓய்ந்தாலும் தூவானம் ஓயாத நிலையாக எனது ஊரில் தளம்பலிலிருந்தது எங்கள் ஊருக்கு எந்தன் வீட்டுக்கு முன் உள்ள வீட்டில் ஒரு குடும்பம் வருகிறது இடம்பெயர்ந்து அதை வீடு எனபதை விட ஒரு கொட்டில் போல இருக்கும் இருக்கலாம் வசிக்க முடியாது வந்தவர்கள் இருவரும் வயது போனவர்கள் வந்ததும் வீட்டை துப்பரவு செய்து வாசல்களை கூட்டி சுத்தமாக வைத்திருந்தார்கள் அடுத்த நாள் காலையில் அந்த வீட்டு வாசல் முன் படலையில் ஒரு மணி கட்டி தொங்க விட்டிருந்தார்கள் நானோ சிறுவயது 2009 எனக்கு 8 வயது மூன்றாம் வகுப்பு பள்ளி விட்டு வரும் போது அந்த மணியை ஆட்டிவிட்டு ஓடிவிடுவது வழமை அந்த மணி சத்ததிற்கெல்லாம் அந்த ஆச்சி ஓடி வந்து பார்ப்பாவு நானும் அந்த மணி ஆடு மாடுகள் உள்ளே வராமல் தடுக்கவே அந்த மணிகள் கட்டியிருக்கிறார் என நாள் தோறும் பாடசாலை விட்டு வரும் போது போகும் போது தட்டி விட்டு ஒளிந்து கொள்வது வழமை ஒரு நாள் என்னை பிடிக்க மனிசி ரெடியாக அதே நேரத்தில் எனக்கு பின்னால் ஒளிந்திருக்கிறார் என்று எனக்கு தெரியாது நானும் மணியை ஆட்டிவிட்டு ஓட எத்தனிக்கும் போது கையும் களவுமாக பிடித்து விட்டார் என்னை. அவர் வீட்டுக்குள் அழைத்து சென்றார் வாடா வடுவா உன்ற புடுக்கை இண்டைக்கு நான் வெட்டுற என்று சொல்லி இழுத்துக்கொண்டு போன அவ இரும் இவ்விடத்தில் இரும் என்றா நானும் உன்மையாகத்தான் அறுக்க போகிறாறோ என நினைத்து காற்சட்டை பைக்குள் இருந்து கையை எடுக்கல. அறுத்து விடுவாவோ என்ற பயத்தில தொடரும் ..
  34. 11 points
    நண்பரே இது ஒரு ஆணாதிக்க சிந்தனையாக இருந்தாலும் கூட அரைவாசி ஆண்கள் இதை மறுக்க மாட்டார்கள். ஆனால் யாழில் பெண்கள் ஒத்து வருவார்களா கத்தியால் குத்த வருவார்களா என்பதற்கு என்ன உத்தரவாதம். இதை நானோ நீங்களோ தீர்மானிக்க முடியாதுதானே..... சட்ட சிக்கல் வேற இருக்கு.....! ஆனாலும் முயற்சித்து கொண்டுதான் இருக்கின்றோம். சமீபத்தில் இம் முயற்சியில் நான் ஊர் போயிருந்தபோது, என்னை கண்டதும் அப் பெண் பின்னங்கால் பிடரியில் பட ஓடிவிட்டார்.....! (திவ்யதேசம்) எனது நண்பர் இதற்காக தனது மனைவியையும் அழைத்து கொண்டு ஊருக்கு சென்றபோது அவரது காதலி அவரை தெரியாது என்றே கூறிவிட்டார்.....!(கலா). இன்னொரு நண்பர் கடிதத் தொடர்பில் இருக்கிறார்.கதை முடியும்போதுதான் தெரியும் அவருக்கு என்ன மாதிரியான முடிவு என்று.....! ( அன்புள்ள பரிமளம். இன்னும் முடிவு த எட்டப்படவில்லை). இதற்கான ஆவணங்கள் யாழ் அக்காவை 21ல் காணக் கிடைக்கிறது. தேடித் பார்க்கவும்.....!
  35. 11 points
    "பல தடவைகள் தாயகம் சென்று வந்த சுரேஸுக்கு இந்த தடவை போவது ஒரு வித புத்துணர்ச்சியை அவனுக்கு கொடுத்தது.சில சமய‌ங்களில் அவனை அறியாமலயே சிரிப்பதும் உண்டு.ஏன் சிரித்தேன் என்று எண்ணும் பொழுது அவனுக்கே வெட்கமா இருந்தது. "இஞ்சாரும் ஊருக்கு போற நாள் வந்திட்டுது டிக்கட் அலுவல் எல்லாம் பார்த்தாச்சோ" "காசு டிரான்சவர் பண்ண வேணும் அதுக்கு இப்ப கனகாசு போகப்போகுது" "போகவெளிக்கிட்டால் காசு போகத்தானே செய்யும்" "என்ன இந்த முறை ஊருக்கு போறது என்றவுடன் என்னை விட நீங்கள் உசாரா இருக்கிறீயள் போல" "இஞ்சாருமப்பா இந்த தடவை சிறிலங்கா போகும் பொழுது கொழும்பில் ஒரு நாள் நின்று போட்டு அடுத்த நாள் ஊருக்கு போவம்" "இதென்ன புதுக்கதையா இருக்கு நீங்கள் தானே வழமையா . ஒரு கிழமைஅக்காவுடன் நிற்கவேணும் என்று சொல்லுறனீங்கள்" "போனவருசம் போய் நின்டனாங்கள் தானே,,திரும்பி வந்து நிற்க்கலாம் " "எனக்கு பிரச்சனை இல்லை எல்லோரும் தூரத்து சொந்தங்கள், கொழும்பில் ஒரு நாள் நிற்கிறதைப்பற்றி கவலை படுகிறீயள், இரண்டு கிழமை இந்தியாவில நிற்க வேண்டி வரப்போகுதே " "நான் சொன்னனான் அல்ல இந்தியாவுக்கு வரும் பொழுது போவம் என்று" " இந்தியாவில சொப்பிங் செய்து கொண்டு போனால் தானே,, உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க வசதியாக இருக்கும் " "இங்க வாங்கி கொண்டு போகலாம் தானே" "டோலரில் வாங்கி கொடுக்கிறதிலும் பார்க்க இந்தியன் ருப்பீஸ்ஸில் வாங்கி கொடுத்தால் மலிவா விசயம் முடிஞ்சுடுமல்ல" "அவுஸ்ரேலியாவில இருந்து போறனாங்கள் அவுஸ்ரேலியன் பொருட்களை கொடுத்தால் ந‌ல்லம் " "சும்மா போங்கப்பா உவங்க‌ளிட்ட என்ன கிடக்கு ,எல்லாம் சீனாக்காரனின்ட சமான்கள் ,அதுக்கு காசு கொடுக்கிறதிலும் பார்க்க ,அந்த காசில இந்தியாவில நல்ல சீலைகளை வாங்கி கொடுக்கலாம்" தொடர்ந்து மனைவியுடன் விவாத்தித்து வெல்ல முடியாது என நினைத்தவன் "நீர் நினைச்சதை தான் செய்து முடிப்பீர் ,என்னத்தையும் செய்து முடியும்" கலாவை வெகு சீக்கிரத்தில்ச‌ந்திக்க வேணும் என்ற ஆதங்கத்தில் இருந்தவனுக்கு அத‌ற்கு காலதாமத‌ங்கள் ஏற்படுகின்றது என்ற ஆத்திர‌த்தில் கையிலிருந்த தேத்தண்ணீர் கோப்பையை மேசையில் டமார் என சத்தம் வரும்படி வைத்தான். "இப்ப ஏன் கோவப்படுறீயள் " "நான் கோவப்பட‌வில்லை ,ஊருக்கு போவதற்கு தாமதமாகுது " "உன்னான எனக்கு விளங்கவில்லை வழமையாக ஊருக்கு போவது என்றால் பஞ்சிபடுவியள் இந்த‌ தடவை ஏன் அந்தரபடுறீயள்" "அதோ ,போனதடவை போய் ஒரு சின்ன வீடு செட் பண்ணி போட்டு வந்தனான் அதை பார்க்கத்தான்" "உந்த மூஞ்சிக்கு அது ஒன்றுதான்இல்லாத குறை " "இஞ்சாரும் என்ட மூஞ்சிக்கு வராட்டியும் அவுஸ்ரேலியன் பாஸ்போர்ட்டுக்கு சனம் லைனில வரும்" "ஓஓஒ ,உங்களுக்கு கலியாண வயசு சனம் லைனில வரப்போகுது" "சும்மா விசர் கதை கதையாமல் போற அலுவலை போய் கவனியும்" ம்ம்ம்ம் உதுல நின்று உங்களோட கதைச்சுகொண்டிருந்தால் ஊருக்கு போக முதல் டிவோர்ஸில் தான் முடியும் என புறு புறுத்தபடியே மேசையில் இருந்த தேத்தண்ணீர் கோப்பையை எடுத்துக் கொண்டு குசினிக்குள் சென்றவள் ,தனது கோபத்தை கொப்பைகள் மீது காட்டினால். குறைந்த செலவில் நிறைந்த இன்பம் என்ற கோட்பாட்டில் அவள் டிக்கட்களை எடுத்திருந்தாள். "எயர்போர்ட்டுக்கு டக்சியை புக் பண்ணி போவமோ" "என்ன புதுக்கதை வழமையா என்ட தம்பி அல்லது தங்கச்சி தானே கூட்டிக்கொண்டு போறவையள்" "அவயளுக்கு ஏன் கரைச்சலை கொடுப்பான் " "20 கிலோவும் கான்ட் லகேட்ஜ் ம‌ட்டும் தான் கொண்டு போகலாம்"என்றாள் உடனே சீனாக்காரனின்ட கடைக்கு ஒடிப்போய் ஒரு ஸ்கேலையை வாங்கி கொண்டு வந்தான் சுரேஸ்.ஒவ்வோருமுறையும் ஒரு ஸ்கேல் வாங்குவான் பயணம் முடிய அது உடைந்து விடும் ,ஐந்து டொலருக்கு ஏற்ற வேலையையத்தான் அதுவும் செய்ய முடியும்.எல்லோருடைய ல‌க்கேஜும் ச‌ரியா 20 கிலோ இருக்குமாறு செய்துவிட்டு கைப்பொதிகளையும் 7 கிலோ இருக்கும்மாறு ஒழுங்கு படுத்திவிட்டு சமான்கள் எல்லாம் வைச்சாச்சோ லொக்கை போடட்டோ என்றான். "ஏன் அந்தரப்படுறீயள் அப்பா" அவனது பிள்ளைகளும் மனிசியும் கோரசா குரல் கொடுத்திச்சினம் "அப்பாவுக்கு எல்லாத்திற்கும் டென்சனும் அந்தரமும்" "இப்பவே எல்லா லக்கேஜும் 20 கிலொ வ‌ந்திட்டு இனி எங்க வைக்கிறது "அப்பா உங்கன்ட உடுப்புகளை குறைச்சு போட்டு உதுகளை வையுங்கோவன், நீங்கள் அங்க போய் வாங்கலாம் தானே" "ம்ம்ம் கடைசில நான் தான் அதற்கும் தியாகம் பண்ணவேணும்" " சூவிட் அப்பாவல்லோ" இழுபறிபட்டு அவர்களது பயணம் தொடங்கினது.இரண்டு கிழமை(உந்த இர‌ண்டு கிழமையும் உவன் சுரேஸ் என்ன செய்திருப்பான் என்று பிறகு எழுதுகிறேன்) கழித்து சென்னையிலிருந்து கொழும்பு பயணம். "இஞ்சாரும் இந்தியாவில சீலைகள் எல்லோருக்கும் அளவா வாங்கினீறோ அல்லது எக்ஸ்ராவா ஒன்று இரண்டு வாங்கினீரோ" "ஒம் ஐந்தாறு எக்ஸ்ராவா வாங்கினனான் , ஏன்? என்னப்பா இந்த முறை உங்கன்ட போக்கு ஒரு மாதிரி கிடக்கு" "சும்மா கேட்டனான் ,ஊரில் சொந்த பந்தங்களுக்கு கொடுக்க" "உங்களுக்குத்தானே ஒருத்தருமில்லையே ,இருக்கிற சொந்தங்களுக்கும் நான் தான் பார்த்து கொடுக்கிறன் இப்ப என்ன புதுசா" "சும்மா கேட்டனான் அடிஆத்த" விமானப்பணிப்பெண் உங்களுக்கு என்ன குளிர்ப்பாணம் வேணும் என கேட்க தனக்கு பிடித்த குளிர்பானத்தை கேட்டு வாங்கி அருந்த தொடங்கிவிட்டான். கலாவுக்கு ஒரு சீலையை கொடுக்க வேணும் என்று நினைத்து அவன் சீலைகளின் எண்ணிக்கையை அறிந்தவன்,அதை எப்படி மனைவியிடம் கேட்பது என்ற தர்ம சங்கடத்திலிருந்தான் ... . பல தடவைகள் போய் வந்தமையால் விமானநிலையம் கொஞ்சம் பழக்கப்பட்டு விட்டது சுரேஸுக்கு. குடிவரவு திணைக்கள வேலைகளை முடித்து கொண்டு பொதிகளையும் எடுத்து சுங்க பரிசோதணையாளர்களை பார்த்து ஒரு புண்சிரிப்பை விட்டான் அவர்களும் தங்களது கடமையை சரியாக செய்வது போல அவனை அழைத்து எங்கேயிருந்து வாறீங்கள் என‌ கேட்டார்கள்,சென்னை என்று சொல்லாம் சிட்னி என்றான் ,நேராக வெளியே செல்லும்படி கையை காட்டினார்கள். வெளியே அவனது சகோதரி தனது மக‌னுடன் அவனுக்காக காத்திருந்தாள். "மாமா என்ன நல்லா மெலிந்து போனீங்கள்" நீ நல்லா வெயிட் போட்டிட்டாய் , உனக்கு அம்மாவின்ட சாப்பாடு ,எனக்கு மனிசியின்ட சாப்பாடு அதுதான்" "மாமி ,மாமா சொன்னது கேட்டதே" "ஒமடா உவர் உப்படி கணக்கா சொல்லுவார்,அங்க இவ்வளவு காலமும் காத்து தானே குடிச்சுக்கொண்டிருந்தவர்" "டேய் நாளைக்கு யாழ்ப்பாணம் போகவேணுமடா டிரெயின் புக் பண்ண ஏலுமோ" "இல்லை மாமா உடனே புக் பண்ணுறது கஸ்டம், வான் பிடிச்சு போங்கோ" "முதல் முல்லைதீவுக்கு போக வேனுமல்லோ அப்பா ....முதலே சொன்னான் அல்லேஉங்களுக்கு இப்ப எல்லாம் மறந்து போகுது டிமன்சீயா கிமன்சீயா வரப்போகுதோ தெரியவில்லை" "மறந்து போனன் அப்ப முல்லைத்தீவுக்கு டிரேயின் புக் பண்ணடா" என்றவன் கண்னை மூடிக்கொண்டு சீட்டில் சாய்ந்து விட்டான்.எல்லோருக்கும் புரிந்து விட்டது கிழவர் கொதியில் இருக்கிறார் என்று ஆகவே அமைதி காத்தனர் வாகனத்தில். சகோதரியின் வீட்டில் சமான்களை இறக்கி வைத்து விட்டு குளித்து உணவு உட்கொள்ள அமர்ந்தனர்.. "மாமா நாளைக்கு முல்லைதீவுக்கு வான் புக் பண்ணவே" "ஓம் புக் பண்ணு எவ்வளவு காசு என்று கேள்' "அப்பா வவுனியாவுக்கு போவம் அங்கயிருந்து முல்லைதீவுக்கு போக எங்கன்ட மச்சானை வானை கொண்டு வரச்சொல்லுவோம்" " அட கட‌வுளே இப்ப வவுனியாவிலும் நாலு நாள் நிற்கப்போறீரோ" "இல்லை சொந்தங்களின்ட வீட்டை டீ குடிச்சு கொண்டிருக்க முல்லை மச்சான் வானை கொண்டு வந்து எங்களை கூட்டிகொண்டு போவார்,தெரிஞ்ச ஆட்களோட அங்க போறது பயமில்லைத்தானே" " ம்ம்ம்ம் ..." அடுத்த நாள் காலை வானில் வவுனியா புறப்பட்டனர் அங்கு மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுதே முல்லை மச்சான் தனது வாகனத்துடன் வந்தார்.அவரும் விருந்தில் கலந்து கொண்டார் .பிள்ளைகளுக்கு அவர்களை அறிமுகப்படுத்தினாள் சுரேசின் மனைவி. மாமாவின் மகள்,சித்தாப்பாவின் மகன் என்று சொல்ல பிள்ளைகளுக்கு அடியும் விளங்கவில்லை நுனியும் விளங்கவில்லை எல்லோருக்கும் ஹாய் ஹாய் என்று சொல்லி விட்டு தமிழில் உறையாட தொடங்கிவிட்டனர்.நல்லா தமிழ் கதைப்பினம் போல கிடக்கு எப்படி?என்றனர் உறவினர். வீட்டில நாங்கள் தமிழில் கதைக்கிறனாங்கள் ,மற்றது நாங்கள் த‌மிழை ஒரு பாடமாக எடுத்னாங்கள் என்று அவையளின்ட தமிழ் புலமைக்கு விளக்கம் கொடுத்தனர். முல்லை மச்சான் வெளிக்கிடுவோமா என்று கேட்க எல்லோரும் நாங்கள் ரெடி என்றனர் . மீண்டும் பைகளை ஏற்றி கொண்டு முல்லை நோக்கி பயணமானார்கள் சுரேசுக்கு கலாவை சந்திக்க வேணும் என்ற ஆர்வம் மேலும் மேலும் அதிகரித்தது.போகும் பாதையில் உள்ள தமிழ் பாடசாலைகளை பார்த்த‌வுடன் இங்கு அவள் ஆசிரியராக கடமை புரிவாளோ என்று எண்ணதொடங்கி விடுவான்.அவள் பின்னால் அழைந்து திரிந்தவை எல்லாம் ஞாபக‌ம் வரத்தொடங்கிவிட்டது. "உங்களுக்கு முல்லை தீவில் யாழ்ப்பாணத்து டீச்சர்மார் யாரையும் தெரியுமோ" "இல்லை என்ட தங்கச்சி டீச்சர் அவளிட்ட கேட்டு பாருங்கோவன்" "இன்னும் ஒரு மணித்தியாலத்தில் போய்விடுவம் என்ன" "ஒம் ஓம் ,மச்சாளை பார்க்க வேணும் என்று சொன்னவள் தங்க‌ச்சி வீட்டை வந்து நிற்பாள் கேட்டு பார்ப்போம்" அந்த ஒரு மணித்தியாலம் ஒரு வருடம் போல தோன்றியது அவ‌னுக்கு வீடு போய் சேர்ந்தவுடனே சுகம் விசாரிக்க எல்லோரும் ஒன்று கூடிவிட்டார்கள்.பொதிகளை இறக்கி வைத்து விட்டு கிணற்றடியில் குளித்து விட்டு இருக்கும் பொழுது சுடச்சுட் தேனீருடன் டிச்சர் வந்தார். "டீச்சர் உங்கன்ட ஸ்கூலில் யாழ்ப்பாணத்து டீச்சர்மார் படிப்பிக்கினமே" "ஓம் அண்ணே ஐந்தாறு டீச்சர்மார் இருக்கினம்" அவ‌னுக்கு ஒரு நிமிடம் கலாவை கண்ட சந்தோசம் வந்து போனது தொடரும் (நாங்களும் டிராமா பார்க்கிறமல்ல)இன்னும் ஒரு பகுதியுடன் கிறுக்கல் முடிவடையும்... இந்த கிறுக்கல் 100 வீதம் யாவும் கற்பனை என்பதை சகல வாசகர்களுக்கும் அறியத்தருவதில் மற்றட்ட மகிழ்ச்சி யடைகிறேன் .
  36. 11 points
    2019சென்னை புத்தகக் கண்காட்சியில் விடியல் பதிப்பக வெளியீடாக வெளிவந்த சிவா சின்னப்பொடியின் “நினைவழியா வடுக்கள்“ என்ற நூலின் அறிமுக நிகழ்வு நேற்று பாரிசில் இடம்பெற்றது.நீண்டகால தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் முகுந்தன்,அரசியல் விமர்சகரும் பொதுவுடைமை செயற்பாட்டாளருமாகிய ரயாகரன்,நூலாசிரியரின் மகனும் அரசியல் தத்துவத்துறையை சோர்ந்தவருமான வசந்த ரூபன்,எழுத்தாளரும் இடதுசாரி செயற்பாட்டாளருமாகிய வி.ரி. இளங்கோவன் ஆகியோர் இந்த நூல் சார்ந்தும் ,இந்த நூலில் குறிப்பிடப்படும் சமூகப் பிரச்சனை சார்ந்தும் தமது மதிப்புரைகளைத் தெரித்தனர். வரலாற்றுப் பதிவுகளை நேர்மையுடனும் துணிச்சலுடனும் பதிவு செய்துள்ள இந்த நூல் ஒரு வரலாற்றுப் பொக்கிசம் என்று பாராட்டிய முகுந்தன் இந்த நூலின் 5 ம் அத்தியாயத்தில் குறிப்பிடப்படும் கந்த முருகேசனாருடைய கல்வி முறையை நமது பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இலங்கைத் தமிழர்கள் எழுதியுள்ள நூல்களில் "நினைவாயா வடுக்கள்" என்ற சிவா சின்னப்பொடியின் நூல் தனித்துவமிக்கது. ஈழத்துச் சாதிய அனுபவத்தைப் பதிவாக்கியுள்ள முதல் நூல் என்று குறிப்பிட்ட ரயாகரன் தமிழ்ச் சமூகத்தின் அக ஒடுக்குமுறைகளை வரலாற்றுரீதியான அதன் பன்முகத்தன்மையைப் பற்றிப் பேசும், நூலாக இருக்கிறது என்றும் “இந்த நூல் சாதிய ஒடுக்குமுறையையொட்டிய பல புதிய தரவுகளைக் கொண்டு இருப்பதுடன், அவை வரலாற்றுக்கு புதியவை”. என்றும் கூறினார் இதன் உண்மைத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்க யாராலும் முடியாது. என்று குறிப்பிட்ட ரயாகரன் “இலங்கை வாழும் தமிழ் மக்களும், இலங்கை வாழ் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்” என்றும் . சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான போராட்டமின்றி, இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் போராட்டமும் சரி, இலங்கையில் வர்க்கப் போராட்டமும் வெற்றி பெற முடியாது என்பதையும் வலியுறுத்தினார். 1981 ல் தனது தந்தை உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியாத நிலையில் வாழ்ந்த தான்,1983 ல் அவரது குரல் போராளிகளால் உருவாக்கப்பட்ட தமிழீழத்தின் குரல் வானொலியில் ஒலித்த போது, தன்னுடைய நண்பர்கள் தன்னை போராளியின் மகன் என்று தோளில் தூக்கிக் கொண்டாடியதை நினைவு கூர்ந்த நூலாசிரியரின் மகன் வசந்த ரூபன்1980 களின் நடுப்பகுதியில் தஞ்சாவூரிலிருந்த தனது தந்தையின் வீரியத்தையும் போர் குணத்தையும் ஆளுமையையும் அவர் பிரான்சுக்குப் புலம் பெயர்ந்து வந்தபின்னர் பார்க்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டார்.தனக்கு ஊர் மற்றும் சாதிய அடையாளங்கள் கிடையாதென்றும் தமிழ்த் தேசிய அடையாளம் என்ற ஒன்றுதான் தனக்கு இருப்பதாகவும் அவர் கூறினார். தமிழீழத்தில் இப்போது சாதிக்கொரு கோவில்,சாதிக்கொரு திருமண மண்டபம், சாதிக்கொரு மயானம் கூட கட்டப்படும் நிலையை விரி.இளங்கோவன் எடுத்துரைத்தார். இறுதியாக ஏற்புரை வழங்கிய சிவா சின்னப்பொடி அவர்கள் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்ததுடன் தன்னுடைய மகனின் குற்றச்சாட்டைத் தான் ஏற்பதாகவும் புலத்தில் நேர்மையற்ற போலிகளை வெல்லமுடியாமல் போனது தனது தோல்வி என்பதையும் ஒத்துக்கொண்டார். இந்த நிகழ்வை முன்னாள் போராளி அமலன் தொகுத்து வழங்கினார். https://www.facebook.com/pg/நினைவழியா-வடுக்கள்-2122148908082914/photos/?ref=page_internal
  37. 11 points
    கொல்வது கொலை விடிகாலை இருள் விலகும் தருணம். அந்தத் தென்னந்தோப்புக்குள் நிலை எடுத்தபடி அவள் அவதானமாக நகர்ந்தாள். கைகள் பிஸ்டலில் பதிந்திருக்க விழிகள் தூரத்தில் நாய்கள் குரைக்கும் திசை நோக்கி உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்ததன. ஒரு இராணுவப் படைநகர்வு பாரிய அளவில் முன்னெடுக்கப்படுவதற்கான ஆயத்த கூப்பாடுகள் அந்த விடிகாலை இருளைக்கிழித்தன. அரவம் காட்டக்கூடாது என்ற மேலிடத்துக்கட்டளை அவளை அசைவித்துக் கொண்டிருந்தது. பெக்கி சேர்ட், இலகுவாக ஓடுவதற்கும் தடை தாண்டுவதற்கும் ஏற்றாற்போல் பான்ட், இடுப்பிலே கட்டப்பட்டிருந்த பெல்டின் இடது பக்கம் பிஸ்டல் வலதுபக்கம் இரண்டு கிரனைட்டுகள் கழுத்தில் குப்பி. மிடுக்கான தோற்றம், பெண்மையை வெளிப்படுத்தாத பிரிதொரு கம்பீரம். விழிகளில் மருட்சி இல்லை, அவதானம் ,எச்சரிக்கை உணர்வு, நடுக்கமில்லாத மூச்சுக்காற்று, கத்தரிக்கப்பட்ட கூந்தல் தனி மிடுக்கைக் கொடுத்து மீள மீள அந்தப் பெண் போராளியை நோக்கத்தூண்டுவதாக அமைந்திருந்தது. எதிர்ப்புறத்தை நோக்கி கொண்டிருந்தவளுக்கு பின்பக்கமாக அசைவு தெரிய அந்த இருளில் அசையாமல் நிலத்தோடு ஒட்டிக்கொண்டாள். நாய்களின் குரைப்பொலி பின்பக்கம் கேட்காததால் நிச்சயமாக அது இராணும் இல்லை என்பதை உள்ளுணர்வு உணர்த்தியது. யாரோ நம்மாட்களாக இருக்கும் என்று எண்ணியபடி மெல்லத் திரும்பியவளின் முகத்தைத் தாக்கியது ஒரு கனமான பொருள். சட்டென ஒலியின்றி சுருண்டது அவள் தேகம். முனகலுடன் அவள் விழித்தபோது அவள் எதிரே அவன் இரண்டு கொங்கிரீட் கற்களை அடுக்கி அமர்ந்திருந்தான். அவனைக்கிரகித்து எழுவதற்கு முயன்றவளின் உடல் அசைக்க முடியாமல் வலித்தது. கைகால்கள் பின்புறமாகக் கட்டப்பட்டு இடுப்பில் கட்டியிருந்த பெல்ட் கழட்டி எடுக்கப்பட்டிருந்தது. ஏன் ? இவன் எதற்கு? ஏகப்பட்ட குழப்பங்களுடன் நிமிர்ந்தவளைப் பார்த்து புன்னகைத்தான் அவன். அவனை அவளுக்குத் தெரிந்திருந்தது. அவன் போக்கு சரியில்லை என்பதும் அவன் ஒழுக்கம் பற்றியும் அமைப்பிற்குள் அரசல் புரசலாக சில கதைகள் அண்மைகாலத்தில் அலைவதையும் அறிந்திருந்தாள். மற்றப்படி அவனை அவள் அதிகம் அறிந்திருக்கவில்லை. ஆனால் இப்போது அவன் அவளைத்தாக்கி இந்த இராணுவ நகர்வுப்பாதையில் கட்டிப்போட்டிருப்பது திகைப்பையும் அச்சத்தையும் உருவாக்கத்தவறவில்லை. அப்படியானால் இவன் ஒழுக்கந்தவறியதற்கு அப்பால் காட்டிக்கொடுக்கும் துரோகியா? அவன் அவளையே வைத்தகண் மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தான். எத்தனை காலமாக அவளைக் குறிவைத்திருந்தான். இப்போது மான் மாட்டியிருக்கிறது. இராணுவ நகர்வு அண்மித்துக் கொண்டிருந்தது. அவன் அச்சமின்றி அமர்ந்திருந்தான். அவனுடன் இன்னும் சிலர் அவனுக்கு பாதுகாப்பாக… அவர்களை இராணுவம் நகரும் திசைநோக்கி நகரச் சொல்லி இந்தப்பக்கம் இராணுவம் வராமல் இருக்க அவர்களைத் திசைமாற்றி குறிப்பறிவிக்கச் சொன்னான் எப்படியாவது அவளைத் தன்வலையில் வீழ்த்த இராணுவ நகர்வைப் பயன்படுத்திவிடவேண்டும் என்பது அவன் எண்ணம். அதுவரை இராணுவத்திடம் அகப்படாமல் அவளை வைத்திருக்கத் திட்டமிட்டு, அவள் வாயில் துணியை அடைத்தான். தென்னோலைகள் கொண்டு அவளை மூடி நகர்ந்தான். அவன் நினைப்பிற்கு மாறாக அவன் மீது சந்தேகப்பார்வையை படர விட்டபடி அந்த இராணுவப் பெண் கொமாண்டர் சுற்றிலும் நோட்டம் விட்டாள். வெறுப்புடனும் விருப்பமில்லா சிரிப்புடனும் அவனுக்கு கைகுலுக்கிக் கொண்டு அந்தப் பெண் கொமாண்டர் அவன் வந்த திசை நோக்கி நகர்ந்து முன்னேறினாள். அவள் விழிகள் கொடூரத்தன்மையை வெளிப்படுத்த இதழ்கடையில் குரூரமாக புன்னகைத்தாள். சட்டென்று அந்தத் தென்னந்தோப்புக்குள் சில இராணுவர்களுடன் நுழைந்து நோட்டம் விட்டாள் சற்று மேடாகத் தெரிந்த ஓலை அவளின் சந்தேகப்பார்வைக்குள் விழ தனக்கு அருகாமையில் இருந்த இராணுவனுக்கு கண்களால் ஆணையிட்டாள். சரசரவென ஓலைகள் அகற்றப்பட முக்கில் இரத்தம் ஒழுக, முகம் வீங்கிய நிலையில், கைகளும் கால்களும் பின்புறமாக அசையமுடியாதபடி கட்டப்பட்டிருந்த வாயில் துணி அடைக்கபட்டிருந்த போராளிப்பெண் குப்புறவாக கிடந்தாள். அருகே வந்த கொமாண்டர் அவள் வாயில் இருந்த துணியை அகற்றி அவளை வானம் பார்க்க நிமிர்த்திப் போட்டு விசாரிக்க ஆரம்பித்தாள். கொமாண்டரின் விசாரணைகள் எதற்கும் பதில் அளிக்காமல் இறுக்கமாக மௌனத்திற்குள் இருந்தாள் போராளி. கொமாண்டர் அவனைச்சுட்டிக்காட்டி அவன்போல் நீயும் எங்களுடன் சேர்ந்து விடு, உனக்கு வசதியான வாழ்க்கை அமைத்துத்தருகிறோம். இங்கு வாழ விரும்பாவிட்டால் இந்தியாவில் நீ அழகான வாழ்க்கை அமைத்துக் கொள்ளலாம் என்றாள். அப்பட்டமான துரோகத்தால் வீழ்த்தப்பட்ட அந்தப்பெண் போராளி ஆணித்தரமான மறுப்பை தலையை அசைத்து வெளிப்படுத்தினாள். இராணுவப் பெண்கொமாண்டருக்கு சினம் கூடியது. ஆத்திரத்துடன் கம்பி நறுக்கும் நீண்ட கொறடை எடுத்து போராளி அருகே வந்து அவள் கழுத்தில் வைத்து மிரட்டினாள். அவள் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் தன்னினத்திற்கே துரோகியாக மாறிய அவனை பார்த்தாள். “ஏய் என்ன அவனை முறைக்கிறாய்? எங்களோடு சேர் இல்லையென்றால் இந்தக்கட்டரால் உன் கழுத்தை அறுத்துவிடுவேன்” என்றாள். முடியாது என்று உரக்கக்கூறினாள் போராளி. அடுத்த கணம் கழுத்தில் இருந்த கட்டரை சற்று சாய்வாக்கி கழுத்தின் நரம்பை அறுத்தாள் கொமாண்டர். குபுகுபுவென்று இரத்தம் பாய்ந்தோட அந்தப்பெண் போராளி கைகால்கள் கூட அசைக்கமுடியாமல் கிடந்தாள். அவள் கண்கள் எதிரியை நோக்கவில்லை துரோகியை காறி உமிழ்ந்தது. கொமாண்டர் விலகி நடந்தாள். அவளுடன் சில இராணுவர் அகல, சிலர் கைகால்கள் கட்டப்பட்டு குற்றுயிராக கிடந்த அவளை நெருங்கினர். கை கால்களின் கட்டுகளை விடுவித்து ஆடைகளைக் கிழித்து நிர்வாணம் ஆக்கி குற்றுயிராய் கிடக்கும் அவள்மேல் சிறுநீர் கழித்து எங்களோடு சேராத உனக்கு இதுதான் தண்டனை என்று சொல்லி அவள் உடலெங்கும் சப்பாத்துக் கால்களால் மிதித்தனர். சற்றுத்தூரத்திலிருந்து அவன் பார்த்துக்கொண்டிருந்தான். ஆசைப்பட்டது தனக்கு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தைத்தவிர அவனுக்கு எதுவும் தோன்றவில்லை. அவள் அன்றே இறந்தும்போனாள். புழுதி படிந்த சாய்வு நாற்காலி, அதிகாரம் இழந்த ஆணவம், எல்லோராலும் ஒதுக்கப்பட்ட தனிமை, களையிழந்த முகம், ஒளி குன்றிய கண்கள், நடுத்தர வயதின் முடிவு நரையும் ,வழுக்கையும் போட்டியிடும் தலை, மனஉளைச்சல்களின் கதக்களியில் மூப்பெய்திய அவன். கேட்க ஒரு நாதியற்ற மானுட அவலத்தில்,……. நேற்றாடிய துரோகத்தால் இன்னும் அவன் உயிரோடு கிடந்தான். அவன் தனித்திருந்தான் சூழ இருந்த பலங்கள் காரியம் முடிந்ததும் காணாமல்போயின. , மெல்ல மெல்ல மன உளைச்சல் அவனிடத்தில் குடியேறி அவன் துரோகத்தை படிப்பினையாக்கி கொண்டிருந்தது. ஆண் என்ற ஆணவமும், வாழ்வேன் என்ற வன்மமும் புழுதி படிந்து அந்த சாய்வு நாற்காலியைப்போல்…. கூட இருந்தவர்களைத் துரோகத்தால் வீழ்த்திய வரலாறு பெருஞ்சாபமாய் தலையில் விடிந்தது. கைகால்கள் மரத்துக் கொண்டன. வாயில் நா ஒரு பக்கமாக இழுத்துக்கொண்டது. உடல் நிலத்தில் வீழ்ந்தது. நீண்ட நேரமாகியும் எவரும் வரவில்லை. ஒரு நாய் மட்டும் அருகே வந்து மணந்து தனது பின்னங்காலைத்தூக்கி சிறுநீர் கழித்துவிட்டு நகர்ந்து மறைந்தது. மூளை கிரகித்துக் கொண்டது. அசைய முடியாதபடி கைகால்கள் கட்டப்பட்டு கழுத்து நரம்பு அறுக்கப்பட்ட பெண்போராளி புன்னகையுடன் அவனை விழித்துப் பார்த்தாள்.
  38. 11 points
    கவிதையோ கவிதை கதையோ கவிதையோ எதுவோ ஒன்று இணையம் 21 க்கு இயற்றிடலாம் என்று தண்டோரா போட்டு விட்டனர் இன்று பண்புடன் ஏற்று அதை செப்புதல் நன்று மண்ணில் விதையிடில் மரம் முளைக்கலாம் மரத்தின் கிளையில் கவிதை பறிக்கலாமோ மயங்கிய மதியை மனசுக்குள் தேற்றி அறிவெனும் ஒளியை அகலினில் ஏற்றி ஒரு கை பார்க்க புடைத்தது நெற்றி கொப்பியடித்தால் கிடைத்திடும் வெற்றி காலம் கடந்த பட்டுக்கோட்டை பாடல்களை பக்குவமாய் தறித்து இட்டு கட்டிடலாமோ காலத்தால் அழியாத கண்ணதாசன் கவிதைகளை கன்னா பின்னா என்று உரு மாற்றிடலாமோ அவதாரபுருஷன் வாலியின் வாலிப வரிகளை வாலைப் பிடித்து வளைத்து போடலாமோ வைரமுத்துவின் சத்தான செய்யுள்களை கொத்தாக உருவி கெத்தாய் விடலாமோ நா.முத்துக்குமாரின் நயமான கவிதைகளை நசுக்கிடாமல் சுட்டு அரங்கேற்றிடலாமோ எண்ணியெண்ணி ஏங்கித் தவிக்கிறேன் என் தூக்கம் கேட்டு எதுவும் எழுதிலேன் ஆங்கிலக் கவிதைகளை அலேக்காய் துக்கலாம்தான் அதிலொரு பிரச்சினை எனக்கு அம்மொழியும் அரைகுறை.....! யாழ் இணையம் அகவை 21. ஆக்கம் சுவி.......!
  39. 11 points
    இரு வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நின்றபோது பெரும்பாலும் ஓட்டோவில தான் திரிந்தது. பணச்செலவுதான் அதிகமே தவிர தாங்கமுடியாத வெய்யிலில் நடந்து செல்வதோ அல்லது பஸ்சுக்காகக் காத்திருப்பது கொடுமையிலும் கொடுமை. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கணவருடன் சென்றபோது அந்தாள் என்னை ஓட்டோவே பிடிக்க விடாமல் பஸ்சிலும் சைக்கிளிலும் கொண்டு திரிந்து சிலோனே வெறுத்துப்போயிருந்த எனக்கு, கணவன் இல்லாமல் தனியாகச் சென்றது ஒருவித சுதந்திரமாகவும் நின்மதியாகவும் இருந்தது. அதுக்காக அதிக பணம் கொடுத்து ஓட்டோவில் திரியவில்லை. எங்கள் அயலில் ஓட்டோ ஓடுபவர் நியாய விலையைக் கூறியதால் நின்ற இரு வாரங்களில் பன்னிரண்டு நாட்கள் அதிலேதான். மனுசனுக்கு குர்தா தைக்க யாழ்ப்பாணத்தில் ஒரு கடையில் கொடுத்திருந்தேன். அடுத்தநாள் வரச்சொல்லிப் போனால் அக்கா இன்னும் ஒன்று முடியவில்லை. ஒரு இரண்டு மணி நேரத்தில் வருகிறீர்களா என்று கேட்க,சரி என்றுவிட்டு வெளியே வந்தால் மணி 10.15. வெய்யில் தொடங்கிட்டுது. ஓட்டோவில திரும்பப் போட்டு வர வீணா 400 ரூபா. எதுக்கும் ஓட்டோவை அனுப்பிவிட்டு ஒரு படத்தைப்பார்த்துவிட்டு வருவம் என முடிவெடுத்து. காகில்சுக்கு விடுங்கோ தம்பி என்றேன். அங்கு சென்றால் அக்கா படம் பத்து நிமிடத்துக்கு முதல் தொடங்கீட்டுது. ஒண்டரைக்கு அடுத்தது தொடங்குது. ஒண்டரைக்கு வாறீங்களோ என்கிறான் தியேட்டர் காரன். படம் தொடங்கினாய் பரவாயில்லை. டிக்கற் தாங்கோ என்று வாங்கி உள்ளே சென்றால் இருந்தது ஒரு இருப்பது பேர் மட்டிலும் தான். எனது சீட் கடைசிவரிசைக்கு முதல் வரிசை. நல்லகாலம் எனக்கு இரண்டு பக்கமும் யாரும் இல்லை என நின்மதி பெருமூச்சு விட்டபடி இருந்தால் அப்பத்தான் எழுத்தோட்டம் அரைவாசி போகுது. எனது பக்கத்து சீற்றுக்கு நேரே பின்னே ஒருவன். மற்றபடி யாரும் பின்னுக்கு இல்லை. படம் தொடங்கி ஒரு பத்து நிமிடம் போயிருக்கும். எனக்கு தூர பார்வை தெளிவில்லை என்பதால் படம் பார்க்கக், கார் ஓட எல்லாம் கண்ணாடிதான். கொஞ்ச நேரத்தில் பார்த்தால் என் கண்ணாடியில் ஒரே வெளிச்சம் திரையை வடிவாகப் பார்க்க முடியாமல். யாராவது லைட் அடிக்கிறார்களோ என்று பார்த்தால் உடனே வெளிச்சம் நிண்டிட்டுது. மீண்டும் சிறிது நேரத்தில் வெளிச்சம். இம்முறை தலையைத் திருப்பிப் பார்த்தால் எனக்குப் பின்னால் இருக்கும் எருமையின் போனில் இருந்துதான் வெளிச்சம் வருகிறது என்று தெளிவானவுடன் ஏற்பட்ட எரிச்சலை ஒருவாறு அடக்கிக்கொண்டு மீண்டும் திரையில் கண்களை பதிக்கிறேன். மீண்டும் ஒரு ஐந்து நிமிடத்தில் வெளிச்சம் வர, அண்ணை கண்ணுக்குள்ள குத்துது. உந்த லைற்ரை நிப்பாட்டுங்கோ எண்டன். நான் சொன்னதைக் கேட்டானோ இல்லையோ யாருடனோ அவன் கதைப்பது தெரிய, நான் தலையைத் திரைக்குத் திருப்பினன். கொஞ்ச நேரம் ஒன்றும் இல்லை. திரும்ப வெளிச்சம் எரிய நான் திரும்பி அண்ணை போனைக் கீழை வையுங்கோ. படம் பாக்க ஏலாமல் இருக்கு என்று கூறு வாயை மூடிக்கொண்டு படம் பார் என்கிறான். எனக்கு வந்த கோபத்தில் இனி வெளிச்சம் எரிஞ்சால் வெளியில போய் கெம்ப்ளெய்ன் பண்ணுவன் என்று கொஞ்சம் உறுக்கியே சொன்னன். ஆனால் அவன் அசைஞ்சாத்தானே. திரும்ப போன் வர லையிற் பத்திக்கொண்டே இருக்குது.அவன் போனை எடுக்கவும் இல்லை நிப்பாட்டவும் இல்லை. உடனே நான் கோபத்தோட எழும்ப, எனக்குப் பக்கத்தில இருந்தவர் கொஞ்சம் அதட்டலாக அவர் பக்கம் திரும்பி போனை நிப்பாட்டுங்கோ அல்லது வெளியில போய்க் கதையுங்கோ என்றதும் லைற்றும் போனும் நிண்டிட்டுது. ஆனாலும் மனதுக்குள் கொஞ்சம் பயம் தான். ஆளைப் பார்த்தால் கொஞ்சம் அப்பிடி இப்பிடி. தனியா வேற வந்திருக்கிறன். நண்பர்கள் யாரையும் கூப்பிட்டு ஏதும் செய்திடுவானோ என்று எண்ணிவிட்டு, தமிழர் தானே எல்லாரும் ஏன் பயப்பிடுவான் என எண்ணிக்கொண்டிருக்க இன்டெர்வல் விட்டிட்டிது. அவன் எழுந்து செல்வது கடைக் கண்ணில் தெரிய நானும் எழுந்து சென்று எங்காவது தென்படுகிறானா என்று பார்த்தால் அவனைக் காணவில்லை. பெப்ஸியும் பொப்கோனும் வாங்கிக்கொண்டு வந்து கதிரையில் இருக்க படம் தொடங்கிவிட்டுது. படம் தொடங்கி கொஞ்ச நேரம் சென்ற பிறகுதான் அவன் வந்து இருக்க, நான் ஒருக்காத் திரும்பி அவனின் முகத்தைப் பார்த்தேன். ஆனால் இருட்டுக்குள் முகம் தெரியவில்லை. படம் முடியும் மட்டும் வேறு எந்த போனும் அவனுக்கு வரவில்லையோ அல்லது போனை நிப்பாட்டி வைத்திருந்தானோ சத்தம் எதுவும் கேட்கவில்லை. படம் முடிந்தவுடன் அவனின் முகத்தைப் பாக்கவே வேண்டும் என்னும் எண்ணத்துடன் விடுவிடுவென்று வெளியே வந்தால் அவன் வருவதாய்க் காணவில்லை. சரி பார்ப்போம் என்று லிப்ட் இருக்கும் இடம் வந்தால் இன்னும் இரண்டு இளைஞர்கள் காத்திருக்கிறார்கள். லிப்ட் வந்ததும் நான் முன்னே சென்று பின் பக்கத்தில் சென்று திரும்பி வாசலையே பார்த்துக்கொண்டிருக்க, ஓடிவந்து தலை குனிந்தவாறு உள்ளே வருகிறான் அவன். நான் வடிவாக துணிவாக அவனைப் பார்க்க அவனோ பயந்தபடி குனிந்த தலையை நிமிர்த்தாமலே வெளியே செல்ல, அட அவனுக்கும் எதோ ஒரு பயம் ஏற்பட்டதனால்த்தான் தலையை நிமிர்த்தவே இல்லை என்று தோன்ற, நின்மதியாக வெளியே வருகிறேன் நான்.
  40. 11 points
    விசித்திரமான கனவொன்று இடையிலே குழம்பி அதிகாலை அலாரச்சத்தம் கேட்டுத் திடுக்கென விழித்தெழுந்தான் வசந்தன். சில வினாடிகள் மட்டுமே நீடித்த அக்கனவை அவனால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை; காட்சிகளும் நினைவில் இல்லை. மிகவும் பிரயத்தனப்பட்டு மீண்டும், மீண்டும் யோசித்து என்ன கனவு என்று யூகிக்க முனைந்தான். எனினும் 'தாயகத்தில், அவனது ஊரில் அவனுக்கு ஏதோ ஒரு புதையல் ஒன்று எதிர்பாராத விதமாகக் கிடைக்கப்போகிறது' என்பதை மட்டும் அந்தக் கனவில் கண்டதாக உணர முடிந்தது. இவ்வாறு அவன் சிந்தித்துக்கொண்டிருக்கையில், குளியலை முடித்துவிட்டு அவனிடம் படுக்கையறைக்கு வந்த அவன் மனைவி கல்யாணி "என்னப்பா விடிய எழும்பினதும் கையுமா யோசிச்சுக்கொண்டு இருக்கிறீங்கள்? நேரம் 6:10 ஆச்சு. வேலைக்குப் பிந்தப் போகுது. ஓடிப்போய் குளியுங்கோ" என்றாள். உடனே அவளுக்குத் தான் கண்ட கனவை விபரித்தவனை "ஊர்ல உங்களுக்குப் புதையலாம். முப்பாட்டன், பேர்த்தி காலக் கதை போல எல்லா இருக்கு" என்று பரிகாசித்தாள் கல்யாணி. "சும்மா பகிடி விடாதையும். அதிகாலைக் கனவு பலிக்கும் என்று சொல்லுவாங்கள். மற்றவங்களுக்குப் பலித்திருக்கோ, இல்லையோ எனக்கு நிறையப் பலித்திருக்கு; இங்க அவுஸ்திரேலியாவில சிட்னிக்கு வருவேன் எண்டும், எனக்கு அடுத்த நாள் வேலை கிடைக்கும் என்றும் இப்படி நிறையக் கனவுகள் பலித்திருக்கு" என்று சொன்னவனை, "என்னைத் தவிர மற்றதெல்லாம் உங்களுக்குக் கனவில வரும்" என்று இடைமறித்துச் சிரித்தாள் கல்யாணி. "இல்லை கல்யாணி, இந்தக் கனவும் அதிகாலையில் கண்ட கனவு; நிச்சயமாக இதில ஏதோ செய்தி இருக்கு. புதையல் எண்டது பழங்கால விஷயம் தான். ஆனாலும் இந்தக் கனவை நான் நம்புறன். முந்தி பிரச்சினை காலத்தில எங்கட பாட்டி பின் காணிக்க புதைச்சு வச்ச நகையா இருக்குமோ?, அல்லது ஏதும் ஏன்ர அப்பா முந்தி யாருக்கோ கொடுத்த கடன் பணம் திரும்ப அவர் இல்லாத காலத்தில இப்ப எனக்கு கிடைக்கப் போகுதோ?, வேறு ஏதும் சொத்தோ?. இப்படி பல மாதிரி பல அர்த்தம் எடுக்கலாம் தானே?" என்றவனை "ஊர்ல ஒண்டும் வேண்டாம் எண்டு தானே உதறித்தள்ளிவிட்டு என்னையும் கூட்டிக்கொண்டு வந்தனீங்கள். 1999இல இங்க வந்ததுக்கு திரும்ப ஊருக்குப் போகவே இல்ல. இப்போ ஊரோட பெரிசா ஒரு தொடர்பும் இல்லை, உங்கட சித்தியைத் தவிர. சரி, அதைப் பற்றி பின்னேரம் பேசலாம். இப்போ போய்க் குளித்து வேலைக்கு வெளிக்கிடுங்கோ" என்று அவசரப்படுத்தினாள் கல்யாணி. குளிக்கும் போதும் மீண்டும், மீண்டும் அந்தக் கனவு பற்றியே சிந்தித்த அவன் மனம் அவனைச் சிட்னியை விட்டுத் தாயகத்தில் யாழ்ப்பாணத்துக்கு - கிட்டத்தட்ட 20 வருடங்கள் பின்னோக்கிய நினைவுகளுக்குக் கொண்டு சென்றது. (புதையலுக்கான தேடல் தொடரும்...)
  41. 11 points
    யாத்திரை .....(14) இன்று இரவு மகனை விமானத்தில் வழியனுப்பிவிட்டு மீண்டும் யாழ்ப்பாணம் வருகிறோம். ஒரு செவ்வாய்கிழமை எதிர்பாராமல் ஜீவனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு.எங்கை அண்ணை நிக்கிறீங்கள், உங்களை சந்திக்க வேண்டும் என்கிறார்.நானும் நீங்கள் வாருங்கோ நானும் சற்று நேரத்தில் வீட்டுக்கு வந்து விடுகின்றேன் என்கிறேன். நானும் வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் அவரும் ஒரு ஸ்கூட்டரில் இன்னொரு ஸ்மார்ட்டான யங்மான் உடன் வந்திறங்குகின்றார். கொஞ்சம் புரிந்தாலும் அவரின் அறிமுகத்துக்காக காத்திருந்தேன்.அவர் எங்கள் இருவரையும் அறிமுகப்படுத்தினார். நிஜமாகவே ஆச்சரியமான விடயம்."முனி" என்றும் "தனி" என்றும் யாழில் பெயர்கொண்ட கனிவான அந்த இளைஞர் பெயருக்கு ஏற்றாற் போல் ராஜாவாகவே இருந்தார். வீட்டில் இருந்து கதைத்து கொண்டிருந்தோம். வெய்யில் நேரமாய் இருந்ததால் ஜூஸ் ட்ரேயில் வந்தது.மூவரும் எடுத்து குடித்துக் கொண்டே கதைத்தோம்.(இப்படி விருந்தினர் வரும் போதுதான் எனக்கும் ட்ரேயில் உபசரிப்பு நடக்கும்). பின்பு வெளியே நடந்து இந்து மைதானத்துக்குள்ளால் சென்று பள்ளிக்கூடத்தையும் பார்த்து கதைத்து கொண்டே கே .கே . எஸ் வீதிக்கு வந்தோம். அருகே நீலாம்பரி ஹோட்டலுக்கு போகலாம் என்று ஜீவன் அழைத்துச் சென்றார். அங்கு வேலை செய்ப்பவர்கள் எல்லோருக்கும் ஜீவனை நன்றாக தெரிந்திருக்கின்றது. அங்கு வடையும் பால் தேநீரும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தோம். மீண்டும் நாளை கண்டிப்பாக சந்திக்கலாம் என்று கூறி பிரிந்து சென்றோம். நானும் அடுத்தநாள் அவர்களுக்கு ஒரு நினைவுப்பரிசு கொடுக்கவேண்டும் என்று தயார் நிலையில் இருந்தேன்.ஆனால் பின்பு அவர்களை சந்திக்க முடியவில்லை. தனி அவசரமாக ஊருக்கு போய் விட்டதாக ஜீவன் தகவல் சொன்னார். இன்று புதன்கிழமை காலை நான் சைக்கிளை எடுத்து கொண்டு கிளம்பினேன்.ஓட்டுமடத்தில் ஒரு நண்பரை சந்தித்துவிட்டு அப்படியே காக்கைதீவு வழியாக கல்லுண்டாய் வைரவர் கோவிலுக்கு சென்றேன். அந்த வழியெங்கும் யந்திரங்களுடன் உதவியுடன் பெரிய பெரிய குழாய்கள் தாட்டுக் கொண்டிருந்தார்கள்.ஒருவேளை காரைநகருக்கு குடிநீர் விநியோகத்துக்காக இருக்கலாம்.அதேபோல் பண்ணைக்கடல் பக்கமும் செய்கிறார்கள். கோவிலில் சனம் இல்லை. சிதறு தேங்காய் போட்டு கற்பூரம் ஏற்றி வணங்கி விட்டு வயல் வெளியைக்கடந்து, சரியான காற்று.அந்த வெளியில் எதிர்திசையில் சைக்கிள் மிதிப்பதே கஷ்டமாய் இருக்கிறது. அங்கும் ஒரு நண்பரின் வீட்டுக்கு சென்று விட்டு நவாலி மூத்தவிநாயகர் கோவிலுக்கு வருகின்றேன். அந்த கோயில் குளத்தில் நீர் வற்றிப்போய் தாமரை கொடிகள் எல்லாம் காய்ந்து போய் கிடக்கின்றன. கிணற்றில் நீர் அள்ளி கை ,கால் அலம்பி கோயிலுக்குள் சென்று வணங்கிவிட்டு, (பொதுவாய் நான் எல்லா கோவிலுக்கும் சிதறுதேங்காய் போட்டு கற்பூரம் ஏற்றி வழிபடுவதே வழக்கம்). மானிப்பாய் விதியை பிடித்து ஆறுகால் மடம் கோம்பையன் மணல் சுடலைக்கு வந்தேன்.அந்த சுடலை வைரவரையும் வணங்கி கொஞ்ச நேரம் அங்கு உட்க்காந்திருந்து விட்டு ஐயனார் கோயிலடிக்கு வந்தேன்.அங்கு ஒரு பெட்டிக்கடையில் அருமையான ருசியுடன் மோர் விற்கிறார்கள்.அமிர்தமாய் இருந்தது. தாகம் தீர வாங்கிக் குடித்து விட்டு வீட்டுக்கும் பைக்கட்டில் தயிர் வாங்கிக் கொண்டு ஐயனாரையும் தரிசித்து விட்டு தட்டாதெரு சந்தியால் வீட்டுக்கு வந்தேன். சுமார் பத்து கிலோ மீட்டருக்கு மேல் சைக்கிள் ஓடியது எனக்கே வியப்பாய் இருந்தது.......! யாத்திரை தொடரும்......! சம்பவம் : நான் முன்பு வேலை செய்யும் காலத்தில் இரவிரவாக வேலைகள் செய்வது வழக்கம். அந்நேரத்தில் வாகனங்கள் ஓடி பரிசோதிப்பதற்காக காக்கைதீவு வீதியைத்தான் பயன்படுத்துவது. அப்போது கல்லுண்டாய் வைரவர் கோவில் மிகவும் சிறிது. மாலை நேரமானாலே அங்கு யாரும் போய்வர மாட்டார்கள். ஆனால் இரவு ஒரு மணிக்குக் கூட நானும் எனது நண்பரும் (அப்போது அவர் நவாலியில் இருந்தார்).அங்கு போய் கும்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் படுத்திருந்துவிட்டு வருவோம்.....! அதுபோல் நவாலி மூத்தவிநாயகர் கோவில் குளத்திலும் மாரிகாலத்தில் தண்ணீர் மேலால் தளும்பும்.தாமரை பூக்களும், இலைகளும் நிறைந்து மிக மிக அழகாய் இருக்கும்.தாமரைக்குளத்தில் அந்தக் குளிர்ச்சியில் நீந்திக் குளிப்பது ஒரு சுகம். வயலில் வேலை செய்பவர்கள் என்று நிறைய ஆட்கள் வந்து நீராடுவார்கள். நான் பல தடவை அங்கு நீராடியிருக்கின்றேன்.எனது தந்தையாரும் வவுனியாவில் ஒரு குளத்தில் நண்பர் ஒருவருக்கு உதவி செய்யப்போய்த்தான் குளத்தில் கொடிகளில் சிக்குப்பட்டு இறந்தவர்.....! கோம்பையன் மணல் சுடலையில் பல பெரிய பெரிய தென்னைகள் இருக்கின்றன. அதில் ஒரு தென்னை மரம் எனது தந்தையாரை புதைத்த இடத்தில் வைத்தது. இறந்த உறவினர்களைத் தகனம் செய்ய போகும் சமயங்களில் பெரியவர்கள் சொல்வார்கள்.அவர் அகால மரணம் அடைந்ததால் தகனம் செய்யவில்லை. நான் எப்பொழுது அங்கு சென்றாலும் அதன் கீழ் சாய்ந்து நிப்பது வழக்கம்.......!
  42. 11 points
    யாத்திரை.....(7). பின்பு நாங்கள் ஒரு ஆட்டோவில் பெரிய கடைக்கு (டவுனுக்கு) சென்று காசை மாற்றுகிறோம். அன்று ஒரு ஈரோ அண்ணளவாய் இருநூறு வரை போகின்றது.அதிலும் பெரிய தாளுக்கு ஒரு விலை,சிறிய தாளுக்கு ஒரு விலை. எனது பர்ஸ் நிறைய பணம்.எனக்கு சந்தோசம் பிடிபடவில்லை. பர்சில் இவ்வளவு பணம் நான் கனவிலே கூட வைத்திருந்ததில்லை. மனைவியும் மாத்திக்கொண்டு வருகின்றா. பக்கத்தில் லிங்கம் கூல்பாரில் ஐஸ்கிரீம், சர்பத் என்று ஆளாளுக்கு விரும்பியதை வாங்கி சாப்பிடுகின்றோம். நானும் டயபடிஸ் சுக்கு டாட்டா காட்டிவிட்டு சாப்பிடுகிறன். மனிசி பில்லுக்கு காசை குடப்பா என்று சொல்ல நானும் நோ ...நோ நீ உன்ர காசை குடு. இது முழுதும் என்ர செல்வ் செலவுதான்.நான் கண்கடை தெரியாமல் "உல்லாச உலகம்" தங்கவேலு ரேஞ்சில் நிக்கிறன். உடனே மச்சாளும் தங்கையிடம் பொறடி இவர் நாலு நாளைக்கு கிலுக்குவார்.பிறகு காய்ஞ்சு போய் உன்னட்ட வரேக்க நீ குடுக்காத என்று புத்தி சொல்லுறா.நான் அதை காதிலேயே வாங்க வில்லை. அங்கு உறவினர் வீடுகளும் கோவிலும் என்று திரிவதால் சாக்ஸ்சும் சப்பாத்தும் அசௌகாரியமாய் இருக்கு. அதனால் செருப்பும் இரண்டு சேர்ட்டும் வாங்க ஐயாயிரம் ரூபா பில். சந்தோசமாய் இழுத்து குடுத்தன்.பின்பு போனுக்கு சிம்கார்ட் ,சார்ஜ், இன்டர்நெட் இரண்டாயிரத்து ஐந்நூறு, மீண்டும் ஆட்டோவில் வீடு வர பத்தாயிரம் காலி. (30 வருடத்துக்கு முன் எனது 8 மாதச் சம்பளம்). மச்சான் வீட்டில் இரவு சாப்பாடு கதைகள் என்று அன்றையநாள் போகிறது. அங்கு பின் வளவில் அன்று நாங்கள் பாவித்த வாகனங்களில் சில லொறி, கார், ஸ்கூட்டர்,சயிக்கிள் எல்லாம் கறல் பிடித்து போய் வெறும் இரும்பாய் கிடக்கின்றன.பார்க்க கண்கள் பணிக்கின இன்று காலை தோய்ந்து சரியாக கிழக்கு பார்த்து நின்று வணங்கி விட்டு எனது குருநாதரையும் சில நண்பர்களையும் பார்க்க பரிசுப்பொருட்களுடன் சயிக்கிள் எடுத்து கொண்டு கிளம்பினேன்.அவர்களை சந்தித்து கடைகளில் சாப்பிட்டு நன்றாக பொழுது போனது.அவருக்கு ரொம்ப வயதாகி விட்டிருந்தது.என்னை கண்டதும் சந்தோசமாய் என் கையை பிடித்து கொண்டு நெடுநேரம் கதைத்து கொண்டிருந்தார்.அவருக்கு உபயோகமான சிறப்பான பரிசு பொருட்கள் குடுத்தேன்.பின் எனது பால்ய நண்பனை போய் சந்தித்தேன்.இவர் எனது குருநாதரின் பெறாமகன். என்கூட லிபியாவிலும் வந்து வேலை செய்தவர். பின்பு அங்கு பிரச்சினை வர ஊர் வந்து மீண்டும் அவர் லிபியா போகவில்லை. பிள்ளைகளும் வளர்ந்து விட்டினம். அங்கேயே மீண்டும் கராஜ் போட்டு நடத்திக் கொண்டிருக்கின்றார். சிறு வயதில் இருந்து ஒன்றாக ஓடி விளையாடி ஒன்றாக படங்கள் பார்த்து,ஒருத்தர் வீட்டில் ஒருத்தர் சாப்பிட்டு சேர்ந்து தொழில் செய்து முன் பின்னாய் திருமணமும் செய்து....... இருவரும் நிறைய நேரம் அளவளாவினோம். கன காலத்தின் பின் சேர்ந்து போய் கடையில் சாப்பிட்டோம். பின் அவரது மோட்டர் சைக்கிளில் சென்று மேலும் சில நண்பர்களை பார்த்து பரிசுப்பொருட்கள் குடுத்து கதைத்து விட்டு வந்தேன். யாத்திரை தொடரும்......! சம்பவம்: எனது நண்பன் காதலித்த காலங்களில் அவருக்கு நான்தான் காதல் காதல் கடிதம் எழுதித் தருவது."அலைகடல் வற்றினாலும் அன்புக்கடல் வற்றாத" என்ற பிரசித்தமான வசனத்தின் முன்னோடிகள் நாங்களே.இப்படியே அவர்கள் காதல் வளர்ந்ததும் அது திருமணத்தில் முடிந்ததும் தனிக்கதை. ("பொன்மணி" என்று ஒரு ஈழத்து தமிழ்ப்படம் அன்றுதான் ஆரம்பம்.). அன்று மாலை அந்தப்படத்தை நானும் அவனுமாய் பார்க்கிறோம். அதில் வந்த முதலாவது காட்சியே எங்களை அதிர்சிக்குள்ளாக்குகின்றது. ஒரு சோமர்செட் கார் ஒரு பெண்ணுடன் கோட்டை முனியப்பர் வீதியால் வேகமாய் போகின்றது. இதே சம்பவம் இன்று அதிகாலைக் கருக்கலில் அதே வீதியில் நடந்தது. காரின் நிறம்தான் வேறு. இது எப்படி சாத்தியம். இதன் தொடர்பு என்ன தெரியாது. மேலும் இன்று ஏன் இந்தப் படத்திற்கு நாங்கள் வர வேண்டும். எம்மை எது அழைத்து வந்தது....இன்றுவரை புரியவில்லை.....! நான் கடிதம் எழுதி குடுத்ததே தவிர அவாவை நான் ஒருநாளும் பார்த்ததில்லை. அன்று வருடப்பிறப்பு. மருதடி விநாயகர் தேர். n .r .t .b யில் வேலை. நான் ஓடும் பஸ்ஸில் இருந்து ஸ்டைலாய் குதித்து(அது அப்ப எழுதப் படாத விதி) கோவிலுக்குள் சென்று கும்பிட்டுவிட்டு வெளியே வருகின்றேன்.சனக் கூட்டம். ஒரு பெண் ஓடிவந்து அண்ணா என்று என் கையை பிடிக்கிறாள். மறுகையில் பிள்ளை ஒன்று. எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் முழுச அண்ணா "அலைகடல் வற்றினாலும்" என்று சொல்ல அப்பவும் புரியவில்லை. என்பின்னால் இருந்து நண்பன் வெளிப்பட்டு "டேய் கழுதை இது என்ர மனிசியும் பிள்ளையும்" என்கிறான். நானும் நண்பனும் அப்பப்ப சந்திப்பதுண்டு.ஒரே நகரத்தில்தான் வாழுகின்றோம்.ஆனால் சுமார் மூன்று வருடத்தின் பின் அவர் மனைவியை பிள்ளையுடன் முதன் முதலாய் பார்க்கிறேன். அவனை தள்ளி கூட்டிப்போய் "எருமை நான்தான் கடிதம் எழுதினது எண்டு சொல்லிபோட்டாய்" போல. அதெல்லாம் அப்பவே சொல்லிட்டன்.முதலிரவன்று வேறு என்னத்தை கதைக்குறதாம்.....!
  43. 10 points
    பிடரிப்பகுதியிலே -எனக்குப் பெரியதாய் ஒரு தசைப்பிடிப்பு. ஆட்டிச் சொல்ல முடியுதில்லை- தலையை ஆம் என்றும், இல்லை என்றும். பின்னாலே பார்ப்பதற்கு நான் பிரள வேண்டும் பாதி வட்டம். முயன்றுதான் பார்த்தேன்- பல மருந்தும் முன்னேற்றம் மட்டும் பூச்சியமே. வாட்டி இழு எருக்கிலையை வலி மறையும் என்றார் பாட்டி. வாட்டி,வாட்டி இழுத்துப் பார்த்தேன் -பிடரி மயிரெல்லாம் எரிந்து போச்சு. வா வீ கியூ மணம் வருதே நானும் வரட்டா ஒரு பிடிபிடிக்க என மயிரெரியும் வாசனையை என் மச்சான் வா வி கியூ என நினைத்துக் கேட்டான். டைகிளோ பீனைல் போடு என ரை கட்டிய நண்பன் சொன்னான். போட்டுத்தான் பார்த்தேன் நானும் ம்கும் போகவில்லை தசைப்பிடிப்பு. பிசியோ தெரபி சிகிச்சை செய்யும் பிரிந்து போன பழைய காதலி சொன்னாள். செய்துதான் பார்த்தேன்- செலவாய்ப் போச்சு பெருமளவு. தலையணையை மாற்றுங்கள் அத்தான் தயவாய் எந்தன் மனைவி சொன்னாள். மாற்றினேன் தலையணையை-அதிசயம், மாயமாச்சு தசைப்பிடிப்பு. கட்டிப்பிடித்து உம்ம்ம்மா கொடுத்து காரணம் என்ன என்று கேட்டேன். தலையணைக்கும் மெத்தைக்கும் சரியான பொருத்தமில்லை, மற்றையவர் பொருந்தாட்டியும் நமக்கும் வலிகள் வரும். மனைவி சொன்னாள் இந்த உண்மை. மெத்தையை மாற்றுதற்கு மெத்தச் செலவு , அதனாலேதான்- தலையணையில் கையை வைத்தேன் தயங்காமல் இதையும் சொன்னாள். மனைவி சொல் மந்திரமாம் -மட்டுமில்லை மனைவி சொல் மருந்துமாகும். ஆதலினால் மனைவி சொல்லைக் கருத்தில் கொள்ளும் -அது உங்கள் துன்பம் போக்கும்,துயரம் தீர்க்கும் !.
  44. 10 points
    துர்க்கை அம்மன் துணை கரணவாய் சென்ரல் கரணவாய் 2.11.1982 அன்புள்ள ஆசை அத்தானுக்கு. நான் இங்கு நல்ல சுகம் அது போல் நீங்களும் சுகமாயிருக்க அம்மனை வேண்டுகின்றேன். உங்கள் பொன்னான மூன்று கடிதங்களும் என் கைக்கு கிடைத்தது. உங்கள் முத்து முத்தான முத்தங்களை அள்ளி பகிர்ந்தேன். உவ்விடம் கடுமையான குளிர் என எழுதியிருந்தீர்கள். நல்ல உடுப்புகள் வாங்கி போடுங்கோ. சாப்பாடுகள் எல்லாம் என்ன மாதிரி? கூடாத சாப்பாடுகளை சாப்பிட வேண்டாம். புட்டு இடியப்பம் எல்லாம் தருவார்களோ? உங்களுக்கு முட்டுக்காய் தேங்காய் துருவல் போட்ட புட்டு நல்ல விருப்பம் என்று உங்கடை அம்மா சொன்னவ . செவ்வாயும் வெள்ளியும் மச்சம் சாப்பிட வேண்டாம்.நான் இப்ப அம்மனுக்கும் முருகனுக்கும் விரதம் பிடிக்கிறன். சொண்டு வெடிச்சுப்போச்சுதெண்டு எழுதியிருந்தீர்கள்.டாக்குத்தரிடம் போய் மருந்து எடுங்கோ. உங்கை பாசைப்பிரச்சனை இல்லையோ? கடியன் கந்தையாவின்ரை மகள் கதை கேட்டாலும் கதைக்க வேண்டாம்.வேறு இடம் மாற முடியுமென்றால் இடம் மாறவும்.அவள் உங்கடை அறைக்கு பக்கத்திலையா இருக்கிறாள்? அய்யாவும் அம்மாவும் சுகமாய் இருக்கினம்.நீங்கள் சுகம் கேட்டதாய் சொன்னேன். சந்தோசப்பட்டினம். அய்யா உங்கடை அய்யாவோடை எங்கடை கலியாணத்தை பற்றி கதைக்கப்போறன் எண்டு சொன்னார். தங்கச்சி வசந்தி உங்களைப்பற்றியே நெடுக விசாரிச்சுக்கொண்டிருப்பாள்.நீங்கள் சுகம் விசாரிச்சதாய் சொன்னேன். அவளுக்கும் நல்ல சந்தோசம். அத்தான் என்னைத்தான் எண்ட பாட்டை நான் பாட அவளும் சேர்ந்து பாடுவாள். சின்னப்பிள்ளை தானே. நீங்கள் இருக்கிற அறையிலை எட்டுப்பேர் என எழுதியிருந்தீர்கள். எல்லாரும் உங்கடை வயதுக்காரார்களோ? எல்லாரும் குடிக்கிறவையோ? நீங்கள் கவனமாய் இருங்கோ.நீங்கள் கெட்ட பழக்கம் பழக என்ரை அம்மன் விடமாட்டா. இருந்தாலும் நீங்கள் கவனமாய் இருக்கவும்.பியோன் ஏகாம்பரம் நல்ல மனிசன்.அய்யாட்டை வாற சாட்டிலை உங்கடை கடிதத்தை என்னட்டை ஒருத்தருக்கும் தெரியாமல் தெரியாமல் தருவார். எனது அண்ணா சுகமாக இருக்கிறார்.அண்ணா எங்கள் காதல் விவகாரம் தெரிந்து உங்களை சைக்கிளால் தள்ளிவிட்டு அடித்ததை என் வாழ்க்கையில் மறக்க மாட்டேன். அதை நினைக்கும் போதெல்லாம் என் இதயம் வெடிக்கும்.எல்லாம் எனக்காகத்தானே தாங்கிக்கொண்டீர்கள்.வசந்தியும் என்னுடன் சேர்ந்து கவலைப்படுவாள். இப்பவும் நோகுதா அத்தான்? நான் எத்தனை முறை தடவினாலும் அந்த வலி ஆறாது என்பது எனக்குத்தெரியும் அத்தான். இதை எழுதும் போது என்மனம் அழுகின்றது அத்தான்.உங்களை கட்டிப்பிடித்து அழவேண்டும் போலிருக்கின்றது அத்தான். ஆயிரம் முத்தங்கள் என் அத்தானுக்கு. நீங்கள் எனக்கு கைச்செலவுக்கு தந்த பத்தாயிரம் ரூபாய் அப்பிடியே வைச்சிருப்பன்.அதை செலவழிக்க மாட்டன்.உங்களுக்கு சொந்தமான 85 ஏக்கர் முரசுமோட்டை வயலை உங்கடை தங்கச்சிக்கு எழுதினதை ஊரிலை பெரிசாய் கதைக்கினம். அண்ணா என்றால் இப்படித்தான் இருக்கோணுமாம். பளையில் இருக்கும் தென்னம் தோப்புகளை என்ன செய்யப்போகின்றீர்கள். அதையும் தங்கச்சிக்கு எழுதி விடுறது நல்லது என நான் நினைக்கின்றேன். அத்தான் உடம்பை கவனியுங்கோ.நேரத்துக்கு சாப்பிடவும். உங்களை காணாதது எனக்கு ஏதோ விடியாதது மாதிரி இருக்கின்றது.இத் துடன் முடிக்கின்றேன். உங்கள் பதில் கடிதம் கண்டதும் முத்த மழை பொழிவேன். அன்பு ஆசை அத்தானுக்கு அளவில்லா முத்தங்கள். இப்படிக்கு உங்கள் அன்பு வருங்கால துணைவி பரிமளம்
  45. 10 points
    இயந்திர மயமான வெளிநாட்டு வாழ்க்கையில் காலம் தொலைந்து போகிறது இன்று தான் வெள்ளிக் கிழமை மாலை, நாளை சனிக்கிழமை வார விடுமுறை ஆரம்பிக்கிறது . வெளி நாட்டு வாழ்க்கையில் சனி ஞாயிறுக் கிழமைகள் எப்படி பறந்து போகிறதென்றே தெரியவில்லை. தி ங்கள் மீண்டும் ஓடத்தொடங்க வெள்ளி வந்துவிடும். வா ரங்கள் மாதங்கள் என்றுஆகி வருடங்கள் உருண்டோடி விடுகின்றன. அன்று சனிக்கிழமை விடுமுறை என்று காலையில் ஆறுதலாக பரபரப பில்லாமல் .. எழுந்தாள் மைதிலி ...கணவனுக்கும் காபி கலந்து வெளியே இயற்கையை ரசித்தவாறு பருகிக் கொண்டு இருந்தார்கள். வசந்தத்தின் முடிவும் கோடையின் ஆரம்பமாகவுள்ள உள்ள காலம் . கண்ணாடி ஜன்னலால் பார்க்கும்போது அழகழகாய் றோஜா க்கள் பூத்திருந்தன . கணவன் மாதவன் மாலைநேரங்களில் கவனித்து வளர்த்த பூங்கன்றுகள். வெளிநாடுவந்து இருபத்தைந்துவருடங்கள் ...மேனன் ஐந்து வயதும் மிதுனன் மூன்று வயதுமாக இருந்தார்கள் , புலம் பெயர்ந்து கனடாவுக்கு வந்த போது ... ஆரம்பம் மிகவும் கஷ்டமாக தான் இருந்தது ...சிறுவர் பள்ளி கல்லூரி என்று என்று படிப்பித்து ஆளாக்கி விடடார்கள். தற்போது மூத்தவருக்கு முப்பதுவயது ...நின்று ஒருகேள்விக்கு பதில் பெறமுடியாது . வயது வந்துவிட்ட்து .கலியாணம் பற்றி ..பேச்சு வந்தது . தட்டிக் கழித்துக் கொண்டே இருக்கிறார். தாமாக விரும்பி இருந்தால் செய்து வைப்பதற்கும் பெற்றவர் தயார். ஆ னால் அவரோ ஒரு முடிவும் சொல்வதாயில்லை . ஆனால் கணவரோ அவர்கள் வீட்டை விட்டு போக எண்ணம் வரும் போது போகட்டும் நாமாக அனுப்புவதுபோல் ஆகிவிடாதா? ...இல்லை அந்தந்த காலத்தில் செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்பது மனைவியின் வாதம். விடுமுறையில் இருவரும் வாக்குவாதப்படுவதே வேலையாகி விட்ட்து. தற்கால இளையோருடைய மன நிலையை எப்படி புரிந்துகொள்ள லாம் ? சில இளையோர் தாமாகவே துணையை தேடி ... பள்ளிக் கடன் கட்டி ...சேமித்து ஒரு இல்லிடத்தை தேட விழைகின்றனர் ..சிலர் அப்படித் தேடி வாடகைக்கு விட்டு பின் தங்களுக்கு தேவை வரும்போது ..பயன் படுத்துகின்றனர் . சிலர் காதலித்துக் கொண்டே நாட்களைக் கடத்துகின்றனர் . திருமணம் செய்ய காசு சேமிக்கிறார்களாம். சிலர் விரைவில் ஏன் இல்லற பந்தத்தை அவசரப்பட்டுக் தேடிக் கொள்வான் இன்னமும் காலம் இருக்கிறது என வாழ்கிறார்கள். சடங்கு சம்பிரதாயம் என்பன எல்லாம் அர்த்தமற்ற தாகி போய் கொண்டே இருக்கிறது அவர்களுக்கு . திருமணம் ஆகினாலும் குழந்தை தேவை இல்லை என்ற மனப்பாங்கும் இருக்கிறது .. மிகவும் வசதியான வீட்டுப்பெண் மூன்று பெண்களில் மூத்தவர் .. காதலித்தார் ..பையன் இந்து, பெண் கிறிஸ்டியன் சமய துறவியின் முன்னிலையில் நிச்சயாத்தம் நடந்தது . மோதிரம் மாற்றிக் கொண்டார்கள் . அடுத்த வருடம் தாலிகட்டிக் கலியாணம் என்ற நிலையில் ..பெண்ணுக்கும் தந்தைக்கும் வாக்குவாதம். சிங்க பூருக்கு வா நகை வாங்க ..என்றார் தந்தை . பையனும் இந்துமதப்படி தாலிகட்டிடலாம் என்கிறார். ஆனால் மணப்பெண்ணோ எனக்கு மினுங்கும் நகை தேவையில்லை .. ( தாலி உட்பட ) தற்போதும் போடுவதில்லை. இனியும் போடப் போவதில்லை. நாங்களும் கொஞ்சம் சேமித்து வைத்திருக்கிறோம் . மண்டபம் எடுத்து ஆடம்பரம் தேவையில்லை. தருவதை தாருங்கள் ஒரு கொண்டோ ( தொடர்மாடிக் கட்டிடம் ) வில் எங்கள் வாழ்வை ஆரம்பிக்கிறோம் என்கிறார்கள். உற்றார் உறவினர் சூழ மாலையும் கழுத்துமாய் மகிழ்வாய் நடத்தி வைக்க ஆசைப்படும் பெற்றோர் விருப்பம் என்னாவது ? ... எங்கள் இளையோருடைய வாழ்வு எங்கே போகிறது ...? .உங்களுக்கும் பிள்ளைகள் இருக்கலாம் ஒரு பெற்றோராக இப்படியான பிரச்சினைகளை எப்ப டிக் கையாளலாம் ? தற்போதுள்ள அசுர வளர்ச்சியில் ...தொலைபேசி முக்கிய இடத்தி வகிக்கிறது ..வளர்ச்சியிலும் முன்னேறி கெட்டு சீரழிவதிலும் முக்கிய இடம் வகிக்கிறது ...பெற்றோர் பிள்ளைகளின் ... உரையாடல் கூட .. mom what is for dinner ...பிட்டும் ..சிக்கன் கறியும் ...வேண்டுமென்றால் மூடடை பொரி த்து தருகிறேன். .. no mom I am not hungry .. Ill eat ..bread and sausage curry .. or Ill go out for dinner... என்று மெசேஜ் சொல்கிறது..... உறவுகள் மேம்பட பேசுங்கள் ..அல்லது ..தொல்லைபேசியை தூர எறி ந்து விடுங்கள்... எட்டு மாதக் குழந்தைக்கு உணவூட்ட் தொலைபேசியில் பாட்டு வே ண்டி இருக்கிறது. குழந்தையை அமைதிப்படுத்த செல்போன் தேவையாய் இருக்கிறது . கால ஓட்ட்த்தில் .இப்படியே இடைவெளிகள் நீண்டு சென்றால் சந்த திகளின் எதிர் காலம் என்னாகும்...
  46. 10 points
    இல்லாத ஊருக்கு வழி சொல்லும் கதைகள்! செப்ரெம்பர் 11, 2001 இல் நான்கு விமானங்களைப் பயங்கர வாதிகள் கடத்திச் சென்று அமெரிக்காவின் கிழக்குக் கரைகளில் இருந்த இலக்குகளைத் தாக்கியதை யாவரும் அறிவர். கடத்தப் பட்ட விமானங்களுள் ஒன்று அமெரிக்காவின் பென்ரகன் எனப்படும் பாதுகாப்புத் தலைமையகத்தின் மேற்குப் பகுதியைத் தாக்கியதில் ஒரு பாரிய ஓட்டையுடன் கட்டிடத்தின் பெரும்பகுதி இடிந்து வீழ்ந்தது. ஜெசி வென்சுரா, இப்போதும் வாழும் 67 வயது முன்னாள் அமெரிக்க அரசியல் வாதி. தனது அரசியல் பதவிகள் தீர்ந்து போன பின்னர், தொடர்ந்து பொது வாழ்வில் நிலைக்க அவர் தேர்ந்தெடுத்த பாதை சதித்திட்டங்கள் (conspiracy theories) குறித்த விவரணப் படங்கள் தயாரிப்பது. 9/11 தாக்குதல் உண்மையில் அமெரிக்க அரசின் உளவுத் துறையினால் மேடையேற்றப் பட்ட நாடகம் என முதலில் தியரியை வெளியிட்டார் வென்சுரா. இந்தச் சதித் திட்டத் தியரியை முன்னிறுத்த அவர் பல காரணங்களை முன்வைத்தார். அதில் ஒரு காரணம் இப்படி இருக்கிறது: "ஒரு பாரிய போயிங் 757 விமானம் மோதிய பென்ரகன் கட்டிடத்தில், விமானத்தின் சிதைவுகளைக் காணவில்லை, ஆனால் அந்த விமானம் உட்புக இயலாத ஒரு சிறிய ஓட்டை மட்டுமே காணப்படுகிறது. எனவே பென்ரகனை விமானம் தாக்கவில்லை- சி.ஐ.ஏ தான் வெடி வைத்துத் தகர்த்து விட்டது". இதைக் கேட்டவர்களில் பலர் இன்றும் இந்த சதித் திட்ட தியரியை நம்ப உறுதியான காரணமாக இதை வைத்திருக்கிறார்கள். ஆனால், வென்சுராவும் அவரது விவரணப் படத்தை தயாரித்த சில டசின் நபர்களும் முட்டாள்களல்ல இதை நம்ப. கிழக்குக் கரையில் இருந்து புறப்பட்டு சில நிமிடங்களுள் கடத்தப் பட்ட நான்கு விமானங்களும் மேற்குக் கரையில் இருக்கும் கலிபோர்னியாவுக்குச் செல்வதற்குத் தேவையான பெருமளவு ஜெற் எரிபொருளுடன் (jet fuel) தான் கடத்தப் பட்டு, கட்டிடங்களில் மோதப் படுகின்றன. ஜெற் எரிபொருள் திரவ எரிபொருட்களிலேயே உயர்ந்த தீப்பிடிக்கும் திறனுடைய எரிபொருள். இதனாலேயே பென்ரகனைத் தாக்கிய விமானமும் , பென்சில்வேனியாவில் விழுந்த விமானமும் பெருஞ்சோதியாக எரிந்து சாம்பலாகின. இதைச் சொன்னால் தனது சதித்திட்டத் தியரியை விற்க முடியாது என்று தெரிந்த வென்சுரா இதைத் தவிர்த்து விட்டார். ஒரு சதித் திட்டத் தியரியின் அடிப்படையே இது தான்: சில உண்மையான சம்பவங்கள் இருக்கும், சில உண்மையான தகவல்கள் தவிர்க்கப் படும், சில கடந்த கால சென்ரிமென்ற் விடயங்கள் தடவப் படும்- பல தவறான தகவல்கள் பீசாவில் சீஸ் போல தூவப் படும்- voila! தயாராகி விட்டது ஒரு சதித்திட்டத் தியரி! ஒவ்வொரு சதித் திட்டத் தியரியும் இதே அடிப்படையில் உருவானாலும் யார் அவற்றை ஏற்றுக் கொள்கிறார்கள்? அதிசயிக்கத் தக்க விதமாக அமெரிக்காவைப் பொறுத்த வரை, சில ஆய்வுகளில் மூன்றிலொரு பங்கு மக்கள் ஏதோவொரு சதித் திட்ட தியரியை நம்புவர்களாக இருக்கிறார்கள். யார் எதை நம்புகிறார்கள் என்பதைப் பொறுத்த வரையில் தான் வேறு பாடுகள். ஜனநாயகக் கட்சியும், தற்போது ஜனாதிபதியாக இருக்கும் ட்ரம்பின் குடியரசுக் கட்சியும் அமெரிக்காவின் பிரதான கட்சிகள். ஒரு உதாரணமாக, வென்சுராவின் 9/11 தொடர்பான சதித் திட்டத்தை நம்பும் பலர் ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள்-ஏனெனில் ஜோர்ஜ் புஷ் குடியரசுக் கட்சிக் காரர். "ஒபாமா வெளிநாட்டில் பிறந்தார், அவரது பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அமெரிக்க அரசினால் போலியாகத் தயாரிக்க பட்டது" என்று நம்பும் பலர் குடியரசுக் கட்சியை ஆதரிக்கிறார்கள். அதிர்ஷ்ட வசமாக ஒருவரின் கல்விப் பின்னணியும் இந்தச் சதித் திட்ட தியரியை நம்புவாரா என்பதைத் தீர்மானிக்கிறது. கல்வி நிலையில் கீழ் நிலையில் இருப்போரில் 42% பேர் சதிகள் பற்றிய கதைகளை நம்பினால், பட்ட படிப்புப் படித்தவர்களில் 20% மட்டுமே இக்கதைகளை நம்புகின்றனர். இவையெல்லாம் அமெரிக்காவில் செய்யப் பட்ட ஆய்வுகளின் முடிவுகள். இவை சலிப்பூட்டும் புள்ளி விபரங்கள். ஏன் நாம் தரவுகள், உண்மைகளால் சாட்சி பகராத கதைகளை நம்புகிறோம்? இதுவே சுவாரசியமானது. புள்ளி வைத்தால் கோலம் போட்டு விடும் படைப்புத் திறன் மிக்கது எங்கள் மூளை. இது சில பத்து ஆண்டுகளாகவே தெரிந்த தகவல் என்றாலும், இக் கோட்பாட்டின் நரம்புயிரியல் (neuro-biology) இப்போது தெளிவாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது. றே கர்ஸ்வைல் (Ray Kurzweil) மனிதக் குரலை கணணிகள் கேட்டுப் புரிந்து கொள்ளும் வகையிலான கண்டுபிடிப்புகளை உருவாக்கி செயற்கை நுண்ணறிவுத் (AI) துறையில் சாதனைகள் புரிந்து வரும் ஒருவர். 14 வயதிலேயே neocortex தியரி எனும் கருதுகோள் மூலம் மனித மூளை தகவல்களை உள்வாங்கிக் கிரகிக்கும் முறையை ஆராய ஆரம்பித்த ஒரு prodigy இவர். இவரது கருத்தின் படி மனித மூளையின் விருத்தியடைந்த பகுதியான நியோகோர்ரெக்ஸ் தான் காணும்/கேட்கும்/உணரும் தகவல்களில் "கோலங்களை"த் (patterns) தேடிக் கண்டு பிடிக்கும் ஒரு இயந்திரம். "அ" என்ற எழுத்தின் செங்குத்துக் கோட்டையும், மேல் சுழியையும் போடாமல் ஒரு குறியீட்டைக் கண்டால், எங்கள் மூளை மில்லி செக்கன்களில் அதை "அ" அல்லது "ஆ" என்று ஊகித்துக் கொள்ளும் வகையில் வேலை செய்கிறது. இது hierarchical ஆன ஒரு செயற்பாடு. இதன் அர்த்தம் என்னவெனில், ஒரு எளிமையான குறியீட்டை ஊகிப்பதில் காட்டும் அதே படைப்புத் திறனை, எங்கள் மூளை சிக்கலான, அருவமான கருத்துருவங்களை (abstract) சில துண்டு துணுக்குகளில் இருந்து ஒரு கதையை உருவாக்குவதிலும் காண்பிக்கிறது. இங்கே தான் ஒரு கணணியில் இருந்து மனித மூளை வேறு பட்டு, சதித் திட்டக் கதைகளை நிஜத்தில் இருந்து வேறான ஒன்றாக உருவாக்குகிறது. மூளை ஒரு super computer போல மட்டுமே தொழிற்பட்டால் அது யதார்த்தத்திற்கு மிகவும் நெருக்கமான கதையைப் பின்னும். எமது உணர்ச்சிகள், கடந்த கால அனுபவங்கள் விருப்பு வெறுப்புகள் என்பனவற்றின் பின்புலத்தில் மூளை புள்ளிகளை இணைத்துப் போடும் கோலத்தில் நிஜத்தை விடவும் எங்கள் விருப்பு வெறுப்புகளும் உள்ளக் கிடக்கைகளும் அதிகம் விரவிக் கிடக்கையில், நாமும் சதித் திட்டக் கதைகள் போன்ற தரவுகள் அற்ற கதைகளை நம்பவும், ஆதரிக்கவும் ஆரம்பிக்கிறோம். மனவியல் சமூகவியல் ரீதியில் மிகையான சந்தேகம் (paranoia) பல சதித் திட்டக் கதைகளுக்கும் ஒரு அடிப்படையான மனநிலை. இது கூர்ப்பியல் ரீதியிலும் விளங்கப் படுத்தக் கூடிய ஒரு மன நிலை என்கிறார்கள். மனிதனோ ஆதி மனிதனோ தங்கள் பாதுகாப்பை உறுதிப் படுத்த தங்கள் போட்டியாளர்களை மிகையான சந்தேகத்துடன் பார்க்க வேண்டிய தேவை இருந்தது. இப்போது சக்தி மிக்க அரசுகள், நிறுவனங்கள் மீதான சந்தேகம் பல சதித் திட்ட தியரிகளுக்கும் மையமாக இருப்பதை கூர்ப்பின் வழி வந்த ஒரு சாதாரன நீட்சி என்கிறார்கள் சமூகவியல் ஆய்வாளர்கள். எனவே மிகையான சந்தேகம் என்பது இப்போது ஒரு மன நோயின் அறிகுறியாக இல்லாமல், சாதாரண மனநிலையின் அங்கம் என்கிறார்கள். சதித் திட்டக் கதைகள் சர்வசாதாரணமாக வலம் வருகின்ற தற்காலத்தில் அவற்றின் அடிப்படையைப் புரிந்து கொண்டால் நாம் இக்கதைகளின் போஷகர்களாக மாறாமல் இருக்கும் பலம் எமக்குக் கிடைக்கக் கூடும். இல்லாத ஊர்கள் ஏராளம் இருக்கின்றன. அவற்றுக்கு உங்களை அழைத்துச் செல்லக் காத்திருக்கும் கற்பனாவாதிகளால், உங்கள் கண்முன்னே இருக்கும் அழகான காட்சிகளை இழந்து விடாதீர்கள் என்று எச்சரிக்கவே இந்த ஆக்கம்!. -முற்றும்.
  47. 10 points
    மன்னித்துப் பார் வளங்கள் பலவும் பெருகும் வாழ்வின் அர்த்தங்கள் புரியும் மன்னித்துப் பார் இறுகிக் கிடக்கும் பாறையென இதயம் கனத்துக் கிடக்கிறதா? பனியாய் உருகி பாசத்ததைப் பகிர்ந்திட மன்னித்துப் பார் ஏழு தரமல்ல எத்தனை தரம் வேணுமென்றாலும் மன்னித்துப் பார் மனிதம் புனிதமடையும் மரணம் கூட மகத்தானதாய் அமையும் மலரைப்போல மனம் மென்மையடையும் மன்னித்துப் பார் இறுக்கங்கள் தளரும் இதழ்களில் புன்னகை அரும்பும் பேச்சினில் இனிமை கூடும் அணைப்பினில் அன்பு பெருகும் மன்னித்துப் பார் மகிழ்வான தருணங்கள் மனதை வருடும் புலரும் பொழுதுகள் கூட புன்னகை பூக்கும் மன்னித்துப் பார் மன அழுக்குகள் அனைத்தும் அகன்றே போகும் சினம் சீற்றம் எல்லாம் விலகியே ஓடும் மன்னித்துப் பார் பாலைவன வாழ்க்கை பசும் சோலைவனமாய் மாறும் வாழ்க்கையை ரசிக்கவும் ருசிக்கவும் விடைபெறவும் வேண்டுமா மன்னித்துப் பார் புகைபோல மறையும் பகை வாழ்க்கையை வளமாக்கும் சாபங்களைத் தூரமாக்கும் மன்னித்துப் பார் மன்னிப்பதால் நட்டமில்லை மனம் இறுகிக் கிடப்பதோ எவருக்கும் இஸ்டமில்லை ஆமை ஓட்டுக்குள் அடங்கிக் கிடப்பது போல் அன்பை அகந்தைக்குள் அடக்குவதால் பயனென்ன? அன்பெனும் கரங்களை அகலத் திறந்து பண்பெனும் பாதையில் பாசமுடன் நடக்கலாம் மன்னித்துப் பார் விரிசல்களும் வேதனைகளும் விலகிப் போக வேண்டுமா உறவுகளுள் உரிமையுடன் நேசிப்பு வேண்டுமா மன்னித்துப் பார் பழிக்குப் பழி என்றும் இரத்தத்திற்கு இரத்தமென்றும் பகைமை உணர்வுகள் பண்பினை அழித்து விடும் விட்டுக் கொடு தட்டிக் கொடு கரம் குலுக்கு கட்டி அணை துன்பத்தில் துணைகொடு இன்பத்தில் பங்கெடு பாசத்தைப் பகிர் புன்னகையை வரமாக்கு புறம் பேசுவதை நிறத்து பண்பாகப் பழகு இனம் மதம் இல்லாது செய் அன்பில்லாத மனம் என்று ஏதுமில்லை அன்பால் ஆளுமை செய் மன்னிக்கும் மனம் மட்டும் இருந்து விட்டால் உலகில் போர் பஞ்சம் பகை ஏழ்மை என்ற அனைத்தும் அகன்று விடும் மனச் சாளரங்களைத் திறந்து மழலைகள் போல் மனம் தூய்மைபெற வேண்டுமா மன்னித்துப்பார் மன்னிப்பது போல் ஒரு மருந்தில்லை பகை மறப்பது போல் ஒரு வரமில்லை. மன்னித்துப் பார்
  48. 10 points
    யாத்திரை ......(12). இன்று ஆடி அமாவாசை. நானும் மனைவியும் மகனுமாய் பஸ்ஸில் கீரிமலை சென்றோம். நான் அங்கு ஒரு குருக்களுடன் இருந்து கொண்டு எமது தந்தையருக்கு எள்ளும் நீரும் இறைத்து ஈமக்கடன்கள் செய்து கடலில் நீராடிக் கொண்டிருக்கும் பொழுது முதலில் விநாயகர் வர அடுத்தடுத்து சிவன் பார்வதி, முருகன் வள்ளி தெய்வானை என நிறைய தெய்வங்கள் எல்லாம் ஒருவர் பின் ஒருவராக வந்து உரிய இடங்களில் கொலுவிருக்கின்றனர். பின் கடலில் தீர்த்தமாடல் நடை பெறுகின்றது.அர்ச்சகர்கள் பக்தி சிரத்தையுடன் கடலில் செய்து பூசை கொண்டிருந்தார்கள்.ஏராளமான பக்தர்களுக்கிடையில் நானும் நெருக்குப்பட்டுக்கொண்டு முன்னால் நின்று கண்குளிர தரிசிக்கின்றேன். அதே நெருக்குதல்களுடன் ஒரு போத்திலில் தீர்த்தம் எடுத்து கொண்டு வெளியே வருகின்றோம். கேணியிலும் ஏராளமான சனம் நீராடுகின்றனர். தாய்க்கும் தண்ணீருக்கும் தோஷம் கிடையாது.பார்க்கவும் கூடாது. மனசுக்கு மிகவும் நிம்மதியாக இருக்கிறது. தண்ணீர் பந்தலில் சுட சுட கோப்பியும் வாங்கி குடித்து விட்டு நகுலேஸ்வரர் ஆலயத்துக்கு வருகின்றோம். உள்ளே சென்று அர்ச்சனைகள் செய்து வணங்கி விட்டு வீட்டுக்கு வருகின்றோம். அடுத்தடுத்த நாட்கள் உறவினர் வீடுகள், நண்பர்கள் மற்றும் நல்லூரில் எமது காணிகள்,வீடுகள் என்று பார்த்து விட்டு வந்தோம். பெரும்பாலும் நானிங்கு சைக்கிளில்தான் சுற்றித் திரிவது. இங்கு ஒரு மூன்று கி.மீ ஓட களைப்பு வந்திடும், வியர்வை வராது.அங்கு நன்றாக வியர்க்கிறது. யாத்திரை தொடரும்......! சம்பவம் : எனது சிறிய வயதில் தாயார் மறுமணம் புரிந்து தெல்லிப்பளை வந்திருந்தார்.நான் அம்மம்மா, மாமாவுடன் யாழ்ப்பாணத்தில் படித்து கொண்டு இருந்தேன். (அப்போது மூன்று வயதில் அரிவரி வகுப்பு போகிறதென்று நினைக்கிறன். பதினாலு வயதில் . s .s .l .c எடுத்தனான். எட்டாம் வகுப்பின் (jsc) பின் ஒன்பதாம் வகுப்பு (prop) இருமுறை படிக்க வேண்டும்). எனது சின்னையா ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் வந்து என்னை அங்கு கூட்டிக்கொண்டு போய் இருந்துவிட்டு பின் திங்கள் காலை என்னை இங்கு கொண்டுவந்து விடுவார்.ஒவ்வொரு வருடமும் அவருடன்தான் ஆடிஅமாவாசை அன்று கீரிமலை போய் வருவது வழக்கம். அதுவும் வீட்டில் இருந்து கொல்லங்கலட்டி ஊடாக கல்லுக்காட்டு பாதையில்தான் போய் வருவது.சின்னையா என்னை தோளில் தூக்கிக்கொண்டுதான் போவார்.நான் தந்தையை கண்டதில்லை ஆனால் சின்னையாவும் ஆத்தையும் (அவரின் தாயார்) என்னை தந்தை தாயை விட மேலாக அப்படித் தங்குவார்கள். பிறகு அவர் ஒரு சைக்கிள் வாங்கி விட்டார்.அவர் ஒரு சைக்கிள் ஓட்ட வீரன். அங்கிருந்து மடு, வவுனியா எல்லா இடமும் அதில்தான் போய் வருவார். அங்கு எப்படியும் மாதம் ஒருமுறை பங்கு இறைச்சி போடுவார்கள்.அதை அம்மா சமைத்து வாழை இலையில் கட்டி மோட்டர் மா (ஹார்லிக்ஸ்) போத்தலில் எலும்பு சூப் எல்லாம் வைத்து குடுத்து விட்டால் அதை அந்த தெய்வம் இங்கே எனக்கு கொண்டுவந்து தந்து விட்டுத்தான் போய் அவர் சாப்பிடுவார். ஒவ்வொரு விடுமுறைக்கும் அவர் யாழ்ப்பாணம் வந்து என்னை கூட்டிக்கொண்டு போவது வழக்கமாகி விட்டது.நானும் வளர்ந்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் காலை நாலுமணிக்கு என்ன குளிர் எண்டாலும் சரி, மழை எண்டாலும் சரி தலையில் கோணிச்சாக்கை போட்டுக்கொண்டு கையில் அரிக்கன் லாம்புடன் எங்களுடைய பனங்காணிகளுக்கு சென்று ஓலைகள், மட்டைகள், பன்னாடைகள், சாணிகள் எல்லாம் பொறுக்கி உரிய இடத்தில் போட்டு விட்டு, வேலிகளின் குப்பைகள் எல்லாம் கூட்டிப் போட்டு விட்டு வர எட்டு மணியாகிவிடும்.(இவையெல்லாம் பெண்களின் தனியான வருமானம்). பின்பு சின்னையாவுடன் சேர்ந்து வேலைக்கு போவேன். மாலையில் வரும்பொழுது அவர் கொட்டிலில் நல்லா கள்ளு குடிப்பார். எனக்கு டேஸ்ட்டுகள் வாங்கி தருவார். அப்போது அவரிடம் இருந்து கணீரென்ற குரலில் காத்தவராயன் கூத்து, ஏழுபிள்ளை நல்லதங்காள்.அரிச்சந்திரன் மயான காண்டம், பட்டி விக்கிரமாதித்தன் என்று தங்கு தடையின்றி ஒரு பிசிறின்றி பாடுவார். வீட்டிலும் அக்கம் பக்கத்தவர்கள் வந்திருந்து பாடல்கள் கேட்பதற்காகவே கள்ளு வாங்கி குடுப்பினம். சில வருடங்களின் எனக்கு தம்பியும், மேலும் சில வருடங்களின் பின் இரணைப்பிள்ளைகளாக இரு தங்கைகளும் பிறக்கின்றார்கள். எங்கள் வீட்டின் அருகில் ஒரு காளி கோவில் உண்டு. அந்த கோவிலின் விளக்குகள்,தீபங்கள்,தட்டங்கள் எல்லாம் நானும் இன்னும் ஓரிரு பொடியாளும் சேர்ந்து புளி போட்டு கழுவுவோம். அந்தக்கோவிலின் திருவிழாவில் வைந்தன் அடி என்று சொல்லப்படும் கோலாட்டம் மிகவும் பிரசித்தமானது.நிறைய கூத்துக்கள் நடைபெறும். இப்பொழுது அந்தக்கோயில் கொஞ்சம் சிதிலமடைந்து காடு மண்டிப்போய் இருக்கின்றது.பார்க்கும்போது மனம் மிகவும் வேதனையாய் இருந்தது.பின்னாளில் ஆத்தையும் சின்னையாவும் காலமாகிவிட அம்மாவும் தம்பி தங்கைகளுடன் யாழ்ப்பாணம் வந்து விட்டார்.அங்கே மறக்க முடியாத பல நினைவுகள் என்னை ஆக்கிரமிக்கின்றன.....!
  49. 10 points
    விழி விரித்தாய் பார்த்ததுமே பரவசத்தில் உடல் சிலிர்த்தாய் மோகமானாய் - பெரும் தாகத்தடன் கட்டுடைத்து என்னங்கம் மேய்ந்தாய் ஆசையோடு அழுத்தினாய் தழுவலிலே தளர்வறிந்தாய் தீண்டியும், நிமிண்டியும் – எனைத் திரள வைத்தாய். உன் விரல்களிடை என் இதழ் குவித்தாய் விதவிதமாய் இரசித்து உன்னுதடழுத்திக் கவ்வினாய் உரசலிலே தீ மூட்டி – எனை உன்மத்தம் கொள்ள வைத்தாய் என் தகிப்பில் தணல் வைத்தாய் உறிஞ்சினாய் , உள்ளிழுத்தாய் மினிக்கி ஆடும் எனை இழுத்து - உன் சுவாசத்துள் சிறைப்பிடித்தாய் தெரிந்தும்….. எனைச் சரணடைந்தாய் கணம் பிரிய மறுத்தபடி யாசகம் கேட்கிறாய் அன்பே, உன் உயிரள்ளிப் போகும்வரை உன் உதட்டோரம்……… நான் இதழ் குவிப்பேன். ?
  50. 10 points
    துடிப்பில்லாத இதயமும் சில எலும்புத்துண்டுகளும் துடிப்பில்லாத இதயமும் சில எலும்புத்துண்டுகளும் போர்த்தியிருக்க ஒரு துண்டுத் தோலும் போதும் என்கிறதுமனம் உணர்வெல்லாம் விற்று வெறுமை வாங்கி சாம்பல் வெளியொன்றில்-அது புரண்டிடத் துடிக்கிறது விழி திறந்த வேளைகளில் வெறுமைகள் தேடி பிரபஞ்சம் எல்லாம் அலைந்து - அது சலித்துக் கொள்கிறது போதும்...போதும் என்று ஆர்ப்பரித்து புழுதி புரண்டழுகிறது வர்ணமெல்லாம் சேறுபூசி தூரவெறிந்த தூரிகைகளை தேடியெடுத்து கோபத்தோடு எரிக்கிறது குருடனனான உனக்கு வர்ணம் ஒரு கேடாவென்று- எள்ளி நகையாடி கெக்காளமிட்டுதச் சிரிக்கிறது இந்தப் பாழாய்ப்போன மனம் ஒரு கைப்பிடிச் சாம்பலும் சில எலும்புத்துண்டுகளும் போர்த்தியிருக்கத்தோலும் கூடவே துடிப்பில்லாத இதயமும் போதுமென்று புலம்புகிறது ! என்னை ஆக்கிரமி ! வா, வந்து முற்றாக என்னை ஆக்கிரமி என் உணர்வெல்லாம் பந்தாக்கி மனவறையில் எறிந்து விளையாடு உனது தேடல்களின் சாயல் என்று எனை அழை அடிக்கடி எனக்கதை நினைவூட்டு ரத்தமும் சதையுமான என் இதயத்தை சருகாக்கு உனது தேடல்களின் தெருக்களின் ஓரத்தில் அதை எறிந்துவிட்டுப் போ உனது தேடல்கள் தொடரத்தும் முடிவில் எவருமே இல்லை என்றால் அதே தெருக்களில் நடந்து வா வந்து உனக்காகக் கத்திருக்கும் எனதியத்தை தேடியெடு பத்திரப்படுத்து அப்போதாவது உனது தேடல்களின் முடிவு நான் என்று சொல் எனது இதயம் மீண்டும் துளிர்க்கும்
யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு