Jump to content

Leaderboard

  1. ரசோதரன்

    ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      284

    • Posts

      195


  2. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      275

    • Posts

      28979


  3. ஈழப்பிரியன்

    ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      181

    • Posts

      15422


  4. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      150

    • Posts

      43062


Popular Content

Showing content with the highest reputation since 02/29/24 in Posts

  1. வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு…. இலங்கைப் பயணகட்டுரை ஹீத்துரோவில் விமானம் ஏறும் போது ஏதோ இனம்புரியாத ஒரு உணர்வு மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இலங்கையும் புதிதில்லை, விமானப்பயணமும் புதிதில்லை. ஆனாலும் கொவிட் பெருந்தொற்றுக்கு பின்னான முதல் இலங்கைப்பயணம். ஒதுங்கி வாழ்வதே வாழ்க்கை என ஆகி விட்ட அந்த இரு வருடங்களில் இப்படி ஒரு பயணம் இனி ஒரு முறை அமையுமா என்பதே நம்பிக்கை இல்லாமல் இருந்தது. அந்த நிலை கடந்து, கொஞ்சம் கொஞ்சமாக குட்டி போட்ட பூனை போல் ஐரோப்பாவையே சுற்றி வந்த நிலையும் கடந்து….இதோ இலங்கைக்கான நெடு-நாள் பயணம் ஆரம்பமாக போகிறது. கடந்த முறை கட்டுநாயக்காவில் இருந்து வெளியேறும் போது சுவரில் மைத்திரிப்பால சிரிசேன சிரித்து கொண்டிருந்தார். அப்போ, மீண்டும் இலங்கை மீள, இப்படி ஒரு நீண்ட இடைவெளி விழும் என எதிர்பார்த்திருக்கவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில்தான் நாட்டில் எத்தனை மாற்றங்கள். ஒரு தொடர் குண்டு வெடிப்பு, ஒரு ஆட்சி மாற்றம், பெருந்தொற்று, பொருளாதர நெருக்கடி, ஒரு அற(ம்)(ர)களை, இன்னொரு ஆட்சி மாற்றம்…. நாட்டில் மட்டும் அல்ல, இந்த இடைவெளியில் என் மனதில் கூட பல போபியாஃக்கள் வந்து குடியேறி, ஆட்சி அமைக்கவும் உரிமை கோரிக்கொண்டிருக்கிறன. தெனாலி கமல் போல, வைரஸ் எண்டால் பயம், டெங்கு எண்டாலும் பயம், ரேபீஸ் நாய்க்கடி என்றால் மெத்த பயம் எனக்கு என்பதாக இந்த போபியா லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. என்னதான் ஒரு காலத்தில் அந்த நாட்டில் நுளம்புகளோடு தாம்பத்தியமே நடத்தி இருந்தாலும், போரின், இடப்பெயர்வின், சாவின் வடுக்களை அனுபவித்திருந்தாலும், சில தசாப்த புலம்பெயர் வாழ்வின் ஒப்பீட்டளவிலான பாதுகாப்பு, மனதை மென்மையாக்கியே விட்டுள்ளது. உண்மையில் இந்த பயணம் பல மட்டங்களில் எனக்கு ஒரு மீள் வருகைதான். நான் பிறந்த நாட்டுக்கான சில வருடங்களின் பின்னான பெளதீக மீள் வருகை மட்டும் அல்ல, உள ரீதியில் ஒரு தென்னாசியனாக என் இயற்கை வாழ்விடத்துக்கும், முன்னர் எனக்கு பழகி இருந்த அந்த வாழ்விடத்தின் அசெளகரியங்களுக்கும் கூட, இது ஒரு மீள் வருகைதான். இந்தத்தடவை தமிழ் நாடு போய், கப்பல் அல்லது விமானம் மூலம் யாழை சென்றடைய முயற்சித்தாலும் அது கை கூடவில்லை. புலம் பெயர் நாட்டில் இருந்து இந்த பயணங்களை இந்த தடத்தில் ஒழுங்கு செய்வது கொஞ்சம் கடினமாக, மிகவும் அயர்ச்சி தருவதாக இருந்தது. கப்பல் போக்குவரத்து இந்திய அரச கப்பல் நிறுவனம் செய்வதாக சொல்லி இருந்தாலும் அதன் இணைய தளத்தில் அந்தமான் சேவை பற்றி மட்டுமே அறிய கிடைத்தது. ஒரு வாட்சப் நம்பரை தேடி எடுத்து தொடர்பை ஏற்படுத்த முனைந்தும் பதில் ஏதும் இல்லை. அதே போல் விமான சேவை செய்யும் அலையன்ஸ் ஏர் டிக்கெட் விற்கும் இணையதளம் செயல்பட்ட வேகமும், முறையும் நம்பிக்கை தருவதாக இருக்கவில்லை. மேலும் எத்தனை கிலோ எடுத்து போகலாம் என்பது பற்றிய நிச்சயமின்மை, சென்னையில் இடைத்தரிக்கும் நேர அளவு, self transfer என்பதால் ஏற்பட கூடிய அனுகூல இழப்புகள், யாழிற்கு நேரே போனாலும் எப்படியும் கொழும்புக்கு வர வேண்டி இருந்தமை, இந்தியன் வீசா கட்டணம் இப்படி பலதை கருத்தில் எடுத்தபோது, இந்த முறையும் நேரே கொழும்புக்கு போவதே உசிதமான தெரிவாக இருந்தது. ஹீத்துரோவில் தானியங்கி செக்கின் முறையில் ஏதோ குளறுபடி என ஒரு முப்பது நிமிடம் அளவில் தாலியை அறுத்தாலும், இந்த குளறுபடியில் நாற்பது கிலோவுக்கு பதிலாக நாற்பத்தைந்து கிலோவை லெகேஜில் தள்ளி விட முடியுமாக இருந்தது ஒரு சின்ன வெற்றியே. அதுவும் அந்த ஒயிலான இந்திய வம்சாவழிப் பெண் ஊழியை உதவிக்கு வந்தமை, இன்னொரு முப்பது நிமிடம் தாமதித்தாலும் பரவாயில்லை என்றே எண்ண வைத்தது. ஒரு வழியாக போர்டிங் வெட்டி, ஏழு கிலோவுக்கு பதில் பதினொரு கிலோ ஹாண்ட்லெகேஜுடன் விமான இருக்கையை வெற்றிகரமாக அடைந்து, முதல் ஆளாக போய் துப்பராவான கழிவறையை பாவித்து விட்டு, இருக்கை பட்டியை அணிந்து, விமான இருக்கை முன் உள்ள சின்ன திரையை நோண்ட ஆரம்பிக்க, விமானத்தின் சக்கரங்கள் ஓடுபாதையில் மெதுவாக உருள ஆரம்பித்தன. (தொடரும்)
    19 points
  2. பாகம் II ஒருவருக்கு நீண்ட கால்கள் இருப்பது சில அனுகூலங்களையும், சில பிரதிகூலங்களையும் தரவல்லது. விமானப்பயணத்தில் பிரதிகூலம் என்னவெனில், எக்கானாமி இருக்கைகள் இடையேயான இடைவெளி போதாமையால், மடக்கி கொண்டிருக்கும் கால்கள் வலிக்கும். அதே விமானப்பயணத்தில் அனுகூலம் யாதெனில், இந்த கால் வலிக்கும் பிரச்சனயை சாட்டி, சிப்பந்திகள் பகுதியில் போய் நின்றபடி, அவர்களிடம் கோப்பி வாங்கி குடித்துக்கொண்டே கடலை போடலாம். இப்படியாக இந்த பயணத்தில் அமைந்த கடலைக்காரிதான் தமாரா. பெயருக்கேற்ற தாமரை இலை போன்ற அகன்ற முகம், அதில் சிங்கள வெட்டோடு அழகிய கண்கள். கொஞ்சம் உதட்டாலும், அதிகம் கண்களாலும் பேசிக் கொண்டாள். சீனி மட்டும் இல்லை, பால் இல்லாமல் குடித்தும், அன்று அந்த கோப்பி கசக்கவே இல்லை. மத்திய கிழக்கு விமானங்களில் இலங்கையர்கள் பணிப்பெண்களாக பொதுவாக வேலை செய்வதில்லை. இதை தமாராவிடம் கேட்ட போது, தானும் சிறிலங்கனில்தான் முன்பு வேலை செய்ததாயும், நிச்சயமற்ற நிலை காரணமாக இங்கே மாறி வந்ததாயும் கூறிக்கொண்டாள். அப்படியே பேச்சு வாக்கில், சிறிலங்கனில் டிக்கெட் போடாதே, செலவை மிச்சம் பிடிக்க they are cutting corners in maintenance (விமானப் பராமரிப்பில் கைவைக்கிறார்கள்) என்பதாயும் ஒரு எச்சரிக்கையை தந்து வைத்தாள் தமாரா. நீ இங்கே இருக்க நான் ஏன் சிறிலங்கனில் புக் பண்ண வேணும் என ஒரு அசட்டு ஜோக்கை அடித்தாலும், தமாரா தந்த அறிவுரையும், இதுவரை வாசித்து அறிந்த விடயங்களும் இலங்கையில் இந்த முறை நிலைமை மிக மோசமாக இருக்கும் என்பதையே கட்டியம் கூறுவதாக மனது நினைத்துகொண்டது. தமாராவை தவிர அதிகம் அலட்டி கொள்ள ஏதுமற்ற விமானப்பயணம் ஒருவழியாக முடிந்து, கட்டு நாயக்க நோக்கி விமானம் கீழிறங்கி, தென்னை மர உச்சிகள் கண்ணில் புலப்படத்தொடங்க, அத்தனை கிலேசங்களையும் தாண்டி மனதில் ஒரு நேச உணர்வு படர ஆரம்பித்தது. கட்டுநாயக்காவில் அதிக மாற்றம் ஏதும் இல்லை. பேப்பர் தட்டுப்பாட்டால் உள் நுழையும் சீட்டு முன்னர் தருவதில்லை என்றனர், ஆனால் இப்போ அது தாராளமாக சிதறி கிடந்தது. ஏலவே நுழைவு அனுமதி எடுத்தபடியால், அதிக அலுப்பின்றி குடிவரவை கடந்து, பொதிகளை எடுத்து கொண்டு, முப்பத்தியொரு டொலருக்கு இரெண்டு வாட் 69 போத்தல்களையும் வாங்கி கொண்டு, அழைக்க வந்திருந்த நண்பனின் வாகனத்தில் ஏறினால்….கண்களின் முன்னே காட்சியாக விரிந்தது இலங்கை. முதலில், முகத்தில் அறைந்தது போல் ஒரு நல்ல மாற்றம்…விமான நிலையத்தில், வழமையாக ஜனாதிபதிகளின் படம் இருக்கும் இடத்தில் ரணிலின் படத்தை காணவில்லை. அதேபோல, முன்னர் போல் வீதிகளிலும் தலைவர்களின் ஆளை விட பெரிய பதாதைகளை காணவில்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும் அதுவும் சிரச டீவி தனது விளம்பரத்துக்காக “பசில் திரும்பி வந்து விட்டார்” என்பதாக ஒரு பாரிய படத்துடன் கூடிய பதாதையை வைத்ததை கண்டேன். களனிப் புதியபாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதன் வழியே நேரடியாக ஏர்போர்ட் ஹைவேயில் இருந்து பேஸ்லைன் வீதிக்கு வாகன நெரிசலை ஓரளவு தவிர்த்து இறங்க கூடியதாக உள்ளது. இங்கே இருந்து பொரளை வழியாக, தமிழர் தலைநகரமாகிய வெள்ளவத்தைக்கு போகும் வழியில், 2010களுக்கு முந்திய காலம் போல அன்றி, கடைகள், வீடுகள் என பலதில் வெளிப்படையான தமிழர் அடையாளங்களினை பார்க்க முடிகிறது. நரெஹேன்பிட்ட, கிருலப்பன, திம்பிரிகசாய, ராஜகிரிய வரையும், மறுபுறம் பம்பலபிட்டிய தொடங்கி, கிட்டதட்ட இரத்மலான தாண்டி, மொரட்டுவ ஆரம்பம் வரையும் காலி வீதியின் இருமருங்கிலும் தமிழர் “ஆக்கிரமிப்பு”🤣, நடந்துள்ளமையை தெளிவாக காணமுடிகிறது. களனிப் பாலமும், அதன் நேர் எதிர் திசையில் இருக்கும் தாமரை கோபுரமும் இரவில் அலங்கார விளக்குகளால் ஜொலி, ஜொலிக்கிறது. மின்சார தட்டுப்பாடு உள்ள நாட்டில் இது ஏன்? யாரும் கவலை கொள்வதாக தெரியவில்லை. போன மாதம் மக்களுக்கான மின்சார கட்டணத்தை 25% ஆல் குறைத்ததாக ஒரு செய்தியையும் படித்தேன். இந்த முறை யாழ்பாணம் போனால் எப்படியும் ஒரு டிஜே நைட்டில் கலந்து கொள்ளவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் யாழில் இப்படி எதுவும் நானிருந்த காலத்தில் ஏற்பாடாகவில்லை. ஆனால் ஒரு கலை நிகழ்ச்சிக்கு விஐபி வரிசையில் டிக்கெட் இனாமாக வந்தது என போய், பெரும்பாடாகி போய்விட்டது 🤣. இனாமாக டிக்கெட் தந்தவருக்காக மேலதிக தகவல்களை தவிர்கிறேன். ஆனால் கொழும்பில் சில தமிழ் டிஜே நைட்டுகளில் கலந்து கொள்ள முடிந்தது. ஆண்களும், பெண்களும் வரம்பை மீறியும் மீறாமலும் மகிழ்ந்திருந்தார்கள். வெளிப்படையாக அதீத போதை பொருட்கள் பாவிப்பதை இந்த இடங்களில் நான் காணவில்லை. ஆனால் எங்கும் பரவலாக சிவ மூலிகைப்பாவனை இருக்கிறது. மது, தண்ணீராக ஓடுகிறது. யாழிலும் எல்லாரும் போதை பொருளை இட்டு கதைக்கிறார்கள். ஆனால் ஐரோப்பிய நகர்களில் வெள்ளி இரவுகளில் தெரிவதை போல் அப்பட்டமாக இது தெரியவில்லை. ஆனால் ஒவ்வொருவரும் அவர்கள் நட்பு வட்டத்தில் இப்படி நாசமாகிய ஒரு இளையோரை பற்றி சொல்லும் அளவுக்கு நிலமை மோசமாகவே உள்ளது. கொழும்பில் மூலைக்கு மூலை பெட்டிங் (சூது) கடைகள், ஸ்பா எனப்படும் மசாஜ் மையங்கள் உள்ளன. வடக்கு, கிழக்கில் இதை நான் காணவில்லை. ஆனால், யாழிலும், மட்டகளப்பிலும் சில பிரபல விடுதிகளை சொல்லி, அங்கே பள்ளிகூட வயது பெண் பிள்ளைகள் வந்து போவார்கள் என சிலர் சொன்னார்கள். எந்தளவு உண்மை என தெரியவில்லை. ஆனால் வடக்கு, கிழக்கில் ஒவ்வொரு முறை போகும் போதும், சில விடயங்கள் மேலும் மேலும் தளர்வதை உணர முடிந்தது. ஆனால் புலம்பெயர் நாட்டில் சிலர் சித்தரிப்பதை போல், எல்லாமும் நாசாமாகி விட்டது என்பதும் இல்லை. கொழும்பு, மேல் மாகாணத்தை தாண்டியும் சில சிங்கள பகுதிகளில் இந்த முறை நேரம் செலவிட்டேன். அம்பலாங்கொட போன்ற 99% சிங்கள மக்கள் வசிக்கும் இடங்களில் அடுக்கடுக்காக தமிழர் நகைக்கடைகள் இருந்தன. அதே போல் அனுராதபுரத்தில், பொலநறுவையில், கெக்கிராவ போன்ற இடங்களில் முஸ்லிம் மக்கள், வியாபாரங்கள், மசூதிகள் என பரவலாக வெளிப்படையாக காண முடிந்தது. சிலாபம் போன்ற இடங்களில் தமிழ், முஸ்லிம் பெயர்களில் கடைகளை கண்டேன். பெளத்த மதத்தின் மீதான பற்று, சிங்கள மக்கள் மத்தியில் இன்னும் அப்படியே உள்ளதை மத அனுஸ்டானங்களும், ஞாயிறு பள்ளிகளும் காட்டி நிற்கிறன. கொழும்பின் மதச்சார்பற்ற பிரபல பாடசாலைகளில் கூட, மாதாந்த பிரித் உட்பட பல வகையில் மதம் புகுத்தபடுவதாக பலர் விசனப்பட்டனர். மேல்மாகாண, மலையகத்தில் இருந்து மேல்மாகாணம் வந்த தமிழர்கள் ஒவ்வொரு மட்டத்திலும் ஒரு படி மேலே போயுள்ளனர். அதே போல் முஸ்லிம் சமூகம், வியாபாரத்தில் பல படி உயர்ந்து நிற்கிறது. வட கிழக்கு தமிழ்ச் சமூகமும் அவ்வளவு மோசமில்லை. ஆனால் ஓட்டு மொத்த இலங்கையும் வெளி நாட்டு மோகத்தில் தவிக்கிறது. நிற்க, நாட்டில் வறுமை தலைவிரித்தாடும், வீதி எங்கும் பிச்சைகாரர் இருப்பர், 80 களில் சென்னை தி. நகர் போனால் கிடைக்கும் அனுபவம் கிடைக்கும் என நினைத்துப்போன எனக்கு, அப்படி எந்த அனுபவமும் கிடைக்கவில்லை. பிச்சைகாரர் எண்ணிக்கை முன்னர் போலவே உள்ளது. இலண்டனில் வீதி விளக்கில் நிற்போர் அளவுக்குத்தான் இருப்பதாக படுகிறது. அடிக்கடி வேலை நிறுத்தங்கள் வருகிறது. ஆனால் ஓடும் போது ரயில் பஸ்சுகள் ஓரளவு நேரத்துக்கு ஓடுகிறன. யாழ், கல்முனை/அக்கரைபற்றுக்கு நல்ல பஸ்சுகள் ஓடுகிறன. அதுவும் அக்கரைபற்றுக்கு, தெற்கு விரைவு சாலை வழியாக, விரைவாக, சுகமாக போக முடிகிறது. குருநாகலவில் ஒரு கொஞ்ச தூரம் கண்டி விரைவுச்சாலையின் ஒரு பகுதி மட்டும் பாவனைக்கு வந்து, தொங்கி கொண்டிருக்கிறது. ஆனால் யாழ் பஸ் புத்தளம் வழியேதான் போகிறது. புத்தளம், அனுராதபுரம் இடையே உள்ள சேர்வீஸ் நிலையம், நல்ல தரமாயும், சுத்தமான கழிவறையுடனும் உள்ளது. அதேபோல் மாத்தறை விரைவுச்சாலையில் மேநாட்டு பாணியில் மிக திறமான சேர்விஸ் நிலையங்கள் இரு பக்கமும் உள்ளன. மருந்துகள் உட்பட எந்த பொருளும் இல்லை என்று இல்லை. ஆனால் எல்லாமுமே 2019 உடன் ஒப்பிடின் குறைந்த பட்சம் மூன்று மடங்கால் அதிகரித்துள்ளது. மேநாடுகளில் சாமான்யர்களின் பொருளாதாரத்தை பாணின் விலையை கொண்டு மதிப்பீடு செய்யும் ஒரு அடிப்படையான முறை உள்ளது. இலங்கையில் அதை மாட்டிறைச்சி கொத்து ரொட்டியின் விலையை கொண்டு அணுகலாம் என நினைக்கிறேன். முன்னர் 250-350 என இருந்த விலை இப்போ, 850-1000 ஆகி உள்ளது. அதே போல் 100க்கு கீழே இருந்த லீட்டர் பெற்றோல், இப்போ 400க்கு அருகே. ஆனால் மாதச்சம்பளம் இந்த அளவால் அதிகரிக்கவில்லை. ஆனாலும் பட்டினிசாவு, பிச்சை எடுக்கும் நிலை என்று பரவலாக இல்லை. அப்படியாயின் எப்படி சமாளிக்கிறார்கள்? பலரிடம் நயமாக கேட்ட போது, ரோலிங், கடன் அட்டை, சிலதை குறைத்துள்ளோம் என்பது பதிலாக வருகிறது. இதில் முதல் இரெண்டையும் அதிக காலம் செய்ய முடியாது. உண்மையில் மாத சம்பள ஆட்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. ஆனால் சமாளிக்கிறார்கள். சகல கடைகளிலும், நாடெங்கிலும் சனம். பொருட்கள் வாங்குதலில், உணவு கடைகளில், விழாக்களில், திருவிழாக்களில், திருமணங்களில்….ஒரு குறையும் தெரியவில்லை. ஒரு எள்ளுபாகு 50 ரூபாய் என்றதும் ஒரு கணம் ஜேர்க் ஆகவே செய்தது. ஆனால் கல்கிசை-வெள்ளவத்த பஸ் கட்டணம் 70 ரூபா என்றால் கணக்கு சரியாகவே தெரிந்தது. அம்மாச்சியில் மட்டும் எல்லாமுமே கொள்ளை மலிவு. வெளியே குறைந்தது 400 விற்கும் பப்பாசி பழ ஜூஸ், இங்கே 100! எப்படி முடிகிறதோ தெரியவில்லை. பொரித்த கச்சான் 100 கிராம் 100 ரூபாய், மஞ்சள் கடலை 100 கிராம் 150 ரூபாய், அவித்த சுண்டல் குறைந்த அளவு விலை 100 - என முன்னர் 20 ரூபாய் இருந்த இடத்தில் இப்போ 100 ரூபாய் இருக்கிறது. வாகனங்கள் இறக்குமதி இல்லை என்பதால் இன்னும் அதிகமாக விலை ஏறி உள்ளன. தகவல் தொழில் நுட்ப disruptive technologies ஆகிய ஊபர், ஊபர் உணவு, பிக் மி என்பன யாழ் உட்பட எங்கும் கிடைக்கிறது. ஓரளவு பெயர் உள்ள கடைகளில் எல்லாம் contactless அட்டைகள் நாடெங்கும் பாவிக்க முடிகிறது ( தனியே பூட்சிட்டி, கீள்ஸ் மட்டும் அல்ல, உள்ளூர் ஆட்களின் சுப்பர் மார்கெட்டுகளிலும், பேக்கரிகளிலும் கூட). யாழில் காங்கேசந்துறை கடற்கரையை நேவி பராமரிப்பில் மக்கள் பாவனைக்கு விட்டுள்ளார்கள். ஒரு இராணுவ நகரின் (cantonment) நெடி இருக்கத்தான் செய்கிறது. உள்ளூர்வாசிகளும், இராணுவத்தினரை காண வரும் சிங்கள குடும்பத்தினரும் என ஒரு கலவையாக இருக்கிறது அந்த இடம். நேவியே கோப்பி, சோர்ட் ஈட்ஸ் விற்கிறது. பண்ணை கடற்கரை பூங்கா அதே போல் தொடர்கிறது. நான் கண்டவரை முன்னிரவில் ஜோடிகள் சுதந்திரமாக கைகோர்த்தபடி ஆபாசம் இல்லாமல் மகிழ்ந்திருக்கிறார்கள். அருகேயே உணவு கடைகளும், சிறுவர் பூங்காவும், நடை பயிலும் பாதையும், அங்காடி பெட்டி கடைகளும் என சந்தோசமாக மக்கள் இருப்பதை காண சந்தோசமாக இருந்தது. ஆரிய குளமும் நன்றாக உள்ளது. நடைபாதை அருகே பெஞ்சுகள், மின் விளக்குகள், உணவு வண்டிகள் என நன்றாக உள்ளது. எமிரோன் என்ற ஒரு யாழ் நொறுக்குதீனி கடை மேற்கத்திய பாணியில் பல கடைகளை திறந்துள்ளார்கள். கொழும்பில் கூட. அதே போல் தினேஸ் பேக்கவுசும் ஒரு பாரிய தொகுதியை கொக்குவிலில் திறந்துள்ளனர், மேலும் மூன்று கிளைகள் உள்ளன. யாழுக்கு பீட்சா ஹட் இரெண்டு வந்துள்ளது. இலங்கையில் தன் முகவரான அபான்ஸ் உடன் முறுகிகொண்டு மக்டொனால்ஸ் தன் கடைகளை மூடியுள்ளது. யாழின் பொருளாதாரம் அசுர பாய்ச்சல் பாய்வதாகவே நான் உணர்கிறேன். வலிகாமத்தில் யாழ் நகரை அண்டிய சிறு நகர்களில், பிரதான வீதியோர காணிகள், கண்ணை மூடி கொண்டு பரப்புக்கு ஒரு கோடி என்கிறார்கள். மட்டு நகரை அண்டிய வீதியோர காணிகளிலும் பேர்சுக்கு இதே விலைதான். யாழ் தனியார் பேரூந்து நிலையம் இயங்குகிறது. ஆனால் ஒருமாதம் முன்பும், பொது பேரூந்து நிலையத்தை அடைத்து, தனியார் ஆட்கள் போராட்டம் நடத்தி கலைந்து சென்றார்கள். தனியார் மருத்துவமனை வியாபாரமும் நாடெங்கும், குறிப்பாக யாழில், மட்டக்களப்பில் கொடி கட்டி பறக்கிறது. அதே போல் மேல் மாகாணத்தில் இருக்கு சில திருமண மண்டபங்கள்….இலண்டனில் கூட அந்த வகை ஆடம்பரமாக இல்லை. நீர்கொழும்பு பெரிய முல்ல பகுதி கிரீஸ், சைப்பிரஸ் போல ஒரு இரவு வாழ்க்கை மையம் போல மாறியுள்ளது. தென்னிலங்கையில், களுத்தற முதல் காலி, மிரிச, வெலிகம வரை ரஸ்யர்களால் நிரம்பி வழிகிறது. கடைகளில் சிங்களம், ஆங்கிலம், ரஸ்யனில் போர்டு வைப்பது சாதாரணமாக உள்ளது. ரஸ்யர்கள் தாமே வியாபாரங்களில் ஈடுபட்டு தமது வருவாயை குறைப்பதாக சுதேசிகள் முறையிட்டு இப்போ அரசு விசாரிக்கிறது. சகலதும் விலை கூடினாலும் வேகமாக ஓடி பொலிசிடம் மாட்டுப்பட்டால் கொடுக்கும் விலை மட்டும் இன்னும் 1000 ரூபாயாகவே உள்ளது. பொலிஸ் நிலையம், ஓய்வூதிய அலுவலகம், பட்டினசபை - மூன்றுக்கும் போன அனுபவத்தில் அலட்சிய போக்கு முன்பை விட குறைந்துள்ளதாக பட்டது (எனது அதிஸ்டமாகவும் இருக்கலாம்). அண்மையில் கொழும்பு, யாழ், கண்டி, காலியில் பெரும் கிரிகெட் போர்கள் (பிக் மேட்ச்) நடந்தன. நான் போனவற்றில் மது ஆறாக ஓடியது. ஆனால் ரகளை குறைவு, இல்லை என்றே சொல்லலாம். எல்லாரும் ரணில் அல்லது ஏகேடி என்றே சொல்கிறார்கள். சொந்த வீடு உள்ள, வாடகைக்கு அடுத்த வீட்டை விடும் ஆட்கள் கூட ஏகேடி ஆதரவாய் இருப்பது முரண்நகையாக படுகிறது. ஆனால் மேல்தட்டு வர்க்கம் ரணிலின் பின்னால் நிற்பது கண்கூடு. முடிவுரை வெளியில் இருந்து நினைத்தை போல் நாட்டின் நிலை அவ்வளவு மோசம் இல்லை. அல்லது மோசமாய் இருந்து, ரணில் வந்த பின் முன்னேறியுள்ளது. நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது. (முற்றும்) 🙏 சுக்ரியா மேரே (b) பையா🙏. பிளேன் எடுக்க முன்னம் நிறையை மீண்டும் அளந்து, போதிய எரிபொருளோடுதான் எடுப்பினம் என நினைக்கிறன். அத்தோட எல்லாரும் முழு அளவுக்கு வெயிட்டோட வாறேல்ல தானே. கூடவே சின்ன பிள்ளையள், குழந்தையள் எல்லாம் சேர்த்தா…நோ பிராப்ளம்.
    15 points
  3. இந்தின் இளம்பிறை -------------------------------- ஒரு உறவினர்களின் திருமண விழா மெக்ஸிக்கோவில் உள்ள ஒரு இடத்தில் நடந்தது. இப்பொழுது சில பிள்ளைகள் வேறு தேசம் ஒன்று போய், அங்கு விழா வைப்பதையே விரும்புகின்றனர். திருமண விழா முடிந்து அடுத்த நாளும் நான் அந்த விழா நடந்த இடத்திற்கு போயிருந்தேன். அன்று அந்த இடம் மிகவும் பரிதாபமாக இருந்தது. ஆதலால், நான் அந்த இடத்தை இரண்டு படங்கள் எடுத்தேன், இன்று நானாவது எடுப்போமே என்று. நேற்று ஒரு சோடி செருப்பு அங்கே காணாமல் போயுள்ளது, அதைக் கண்டால் எடுத்து வரவும் என்ற தகவலையும் கையோடு வைத்திருந்தேன். கடலோர மணல் மேல் போட்டிருந்த மேடை இன்னமும் அங்கேயே இருந்தது. ஆனால் கடற்கரை வெள்ளை மணல் திட்டு திட்டாக மேடையெங்கும் ஏறி ஒழுங்கில்லாமல் பரவிக்கிடந்தது. மேடை மேலே கட்டியிருந்த முக்கால்வாசி அலங்காரத் துணிகள் விழுந்து அங்கங்கே குவியலாகக் கிடந்தன. இன்னும் விழாமல் இருந்தவை இனிமேல் விழுவதற்காக கடல் காற்றில் பறந்து கொண்டிருந்தன. ஒரு கிரேக்கச் சிலையில் இருந்து அதன் கடைசி உடுபுடவையும் காற்றில் பறக்கத் தயாராக இருப்பது போல. நான் படமெடுக்கும் போது இரண்டு உல்லாசப் பயணிகள் அந்த மேடையின் ஓரத்தில் அமர்ந்து அருந்திக் கொண்டிருந்தனர். இதற்கு முந்தைய நாள், திருமண நாளன்று, மேடையில் இவர்கள் இருவரும் இருந்து அருந்திக் கொண்டிருக்கும் இடத்திற்கு கொஞ்சம் உள்ளே புரோகிதர் அமர்ந்திருந்தார். அவருக்கு முன் சிறிய நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. இந்த இரு பயணிகளின் இடத்தில் நான் அமர்ந்திருந்தேன். புரோகிதர் குஜராத்தை சேர்ந்தவர் என்றும், அவர் இப்பொழுது மெக்ஸிக்கோவில் வசிப்பதாகவும் அங்கே சொல்லியிருந்தனர். புரோகிதர் ஒரு கையில் தேங்காயையும், இன்னொரு கையில் கல் ஒன்றையும் கொடுத்து, அந்தத் தேங்காயை சரியாக அவர் சைகை செய்யும் நேரத்தில் என்னை உடைக்கச் சொன்னார். தேங்காயை சரி வட்டப் பாதிகளாக உடைக்க வேண்டும் என்ற அழுத்தம் இலங்கை மீதான சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தம் போன்ற தவிர்க்க முடியாத ஒன்றாக இரண்டு மூன்று நாட்களாக என்னை தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. புரோகிதர் கொடுத்த கல்லுக்கு நிகரான கல்லை நான் ஊரில் மயிலியதனைப் பக்கம் இருக்கும் மண்டபக்கிடங்கு பகுதியில் சிறு வயதில் பார்த்திருக்கின்றேன். எல்லாப் பக்கமும் கூரான, எங்கே பிடிப்பது எங்கே அடிப்பது என்பதைக் கண்டுபிடிக்க முடியாத ஒரு மர்மக்கல் அது. மயிலியதனைக்கும், மெக்ஸிக்கோவிற்கும் 'ம' வரிசையில் ஆரம்பிக்கின்றன என்ற ஒற்றுமையுடன், கல்லிலும் இன்னொரு ஒற்றுமையும் இருந்தது. புழுக்கொடியலுக்கு தோதான சில்லுச் சில்லாக தேங்காய் சிதறப் போவது திண்ணம் என்று தெரிந்தது. முக்கிய பார்வையாளரான என் துணைவி மற்றும் இதர பார்வையாளர்களுக்கு மண்டபக்கிடங்கு கல் தான் என் கையில் இருக்கும் ஆயுதம் என்று தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. நடப்பவை நடந்த பின் முழுப்பழியையும் சுமக்க வேண்டியது தான். இயேசு பிறப்பதற்கு முன், அவர் பிறந்த தேசத்தில், ஆடுகள் மீது மனிதர்களின் பாவங்களும் பழிகளும் ஏற்றப்பட்டு, அவை பாலைவனத்திற்குள் துரத்தி விடப்பட்டன என்று சொல்கின்றனர். பின்னர் எல்லோருடைய பாவங்களையும் ஏற்க பாலன் இறங்கி மனிதனாக வந்தார். இன்று சனத்தொகை எக்கச்சக்கமாக எகிறி ஏறி விட்டதால், தேவபாலன் தனியாக எல்லாவற்றையும் சுமக்க முடியாமல் திக்குமுக்காடிப் போய் நிற்கின்றார். இந்த தேங்காய் உடைப்பதில் ஏதும் பிழை, பாவம் வந்தால் நானே தான் சுமக்கவேண்டும் ஓங்கி அடிக்கின்ற அந்தக் கணத்தில் தேங்காய் முழுதாக கையை விட்டுப் பறந்தது. அன்று புரோகிதரின் இடுப்பு எலும்பு தப்பியது ஒன்பதாவது அதிசயம். மயிரிழையில் தப்பினார். புரோகிதர் என்ன நடந்தது என்று கூட்டிப் பெருக்கி உணர்வதற்குள், நான் தேங்காயை பாய்ந்தெடுத்து சில்லுச் சில்லாக குத்தி தட்டில் போட்டுவிட்டேன். மிக அருமையாக தேங்காயை உடைத்ததற்காக எல்லோரையும் கை தட்டுமாறு புரோகிதர் சொன்னார். மறுபேச்சில்லாமல் கூட்டமும் தட்டியது, ஐயர் சொல்லிவிட்டாரே. எல்லாம் முடிந்த பின், தனியாக இருந்த புரோகிதரிடம் மெதுவாகக் கேட்டேன். 'குஜராத்தில் கல்யாண வீட்டில் தேங்காயை கல்லால் தான் குத்துவீர்களா?' 'குஜராத்தா, அது எங்கேயிருக்கின்றது?' 'அப்ப நீங்கள் இந்தியர் இல்லையா?' 'மெக்ஸிகன்.' இங்கு ஏற்கனவே பல அர்த்தங்கள் ஏற்றப்பட்டு விட்ட ஒரு கனமான சொல் இது. அந்தச் சொல்லுக்கு இருக்கும் அர்த்தங்களை மீறி புதிதாக எதையும் சிந்திக்க முடியவில்லை. எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சமூகநீதிச் சட்டம் தமிழ்நாட்டில் இருப்பது தெரியும். ஆனால் பழைய அர்ச்சகர்கள் கோயில் நடையைப் பூட்டுவதும், நீதிமன்றம் மீண்டும் திறப்பதும் என்று, அங்கே அதுவே இன்னும் ஒரு இழுபறியில் தான் போய்க் கொண்டிருக்கின்றது. இது இன்னுமொரு பரிமாணம். 'அப்ப இந்த மந்திரங்கள், சுவாஹா, ராதா, கிருஷ்ணா, பிரபஞ்சம்,....' 'நான் சில காலம் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கூட்டத்தில் இருந்தேன்.' 'அ.....' 'இந்த மாதிரி சிலவற்றை அங்கே கேட்டிருக்கின்றேன். இப்ப எல்லாம் ஃபோனிலும் இருக்குது தானே. அப்படியே பார்த்து வாசிக்க வேண்டியது தான்.' 'ம்.....' அப்படியே தொலைந்து போனதாகச் சொன்ன சோடிச் செருப்பை தேடத் தொடங்கினேன்.
    14 points
  4. உ மயிலம்மா. நினைத்தால் இனிக்கும் மோகனம் .....! மயிலிறகு ....... 01. அந்தக் இரும்பாலான வெளிக்கதவின் கொழுக்கியைத் தூக்கிவிட்டு வீதியில் இருந்து உள்ளே வருகின்றாள் கனகம். அவளுடன் சேர்ந்து வீட்டுக்குள் வர முன்டிய பசுமாட்டை மீண்டும் வீதியில் துரத்தி விட்டிட்டு படலையைக் கொழுவிக் கொண்டு வீட்டுக்குள் வருகிறாள். வரும்போதே மயிலம்மா மயிலம்மா என்று கூப்பிட்டுக் கொண்டு வீட்டின் பக்கவாட்டால் நடந்து குசினிக்கு வருகிறாள். அது ஒரு பழமையான பெரிய வீடு. ஆனால் வீட்டுக்குள் குசினி கிடையாது. அது மட்டும் தனியாக வீட்டின் பின் விறாந்தையில் இருந்து சிறிது தள்ளி இருக்கு. மண்சுவரும் பனைஓலைக் கூரையுமாக சுவருக்கும் கூரைக்கும் இடையில் வரிச்சுப்பிடித்த பனை மட்டைகளுடன் தனியாக இருக்கின்றது. குசினிக்கு முன்னால் ஒரு பெரிய மா மரமும் அதிலிருந்து சிறிது தூரத்தில் பெரிய குளம் ஒன்று முன்னால் உள்ள வீதியில் இருந்து வீட்டையும் கடந்து இருக்கின்றது. மழைக்காலத்தில் ஏராளமான பறவைகள் அங்கு வந்து தங்கிச் செல்வதைக் காணலாம். குசினியின் மறுபக்கத்தில் ஒரு எலுமிச்சை மரமும் அதன் கீழே மீன் இறைச்சி போன்றவை அறுத்துக் கழுவுவதற்குத் தோதாக அரிவாள் ஒன்றும் கிணறும் இருக்கின்றது. அதைத் தாண்டி சிறு பற்றைக் காடுகளும், பாம்புப் புற்றும் அடுத்து ஒரு பத்து ஏக்கர் நிலத்தில் நெல் வயல் இன்னும் சில மாதங்களில் அறுவடைக்குத் தயாராகி வருகின்றது. பனிக்காலத்தில் சமைக்கும் போது அடுப்பில் இருந்து மேல் எழும் புகை கூரைக்கு மேலால் பரந்து பனியை ஊடறுத்து செல்வதை தாய் வீட்டின் விறாந்தையில் இருந்து அலுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கலாம் அப்படி ஒரு அழகு. உலை வைப்பதற்காக அடுப்பில் பானையை வைத்து தேவையான அளவு தண்ணீரை விட்டு காற்சட்டியால் மூடிவிட்டு, அடுப்புக்குள் ஈர விறகும் அதன்மேல் காய்ந்த சுள்ளிகளும் இடையிடையே பன்னாடைகளையும் செருகி தீக்குச்சியால் நெருப்பு மூட்டி ஊது குழலால் மயிலம்மா கண் எரிய ஊதிக்கொண்டிருக்கும்போது கனகத்தின் குரல் கேட்டதும் கனகம் நான் இஞ்ச இருக்கிறன் உள்ளே வா என்று குரல் குடுக்க கனகமும் உள்ளே வருகிறாள். அவளிடம் தேத்தண்ணி குடிக்கிறியே என்று கேட்டு அவள் பதிலை எதிர்பாராமல் கிளை அடுப்பில் கேத்திலையும் வைக்கிறாள். என்ன விஷயம் ஏதாவது அலுவலோ என்று மயிலம்மா கேட்க அதொன்றுமில்லை மயூரி ஆம் அவள் உண்மையான பெயர் "மயூரி"தான் கனகமும் அவளும் சிறுபிராயத்தில் இருந்தே தோழிகள் என்பதால் கனகம் அவளை மயூரி என்றுதான் அழைப்பது வழக்கம். ஆனால் மயிலம்மாவின் திமிரான நடையும் அதிகாரத் தொனியிலான பேச்சும் எடுப்பான அழகும், பின்னழகைத் தொடும் நீண்ட தோகை போன்ற அடர்த்தியான கூந்தலும் ஆண்கள் வட்டத்தில் மயிலு மயிலம்மா என்றே அழைத்துப் பிரபலமாகி விட்டிருந்தது. நான் சும்மா வந்தனான் என்று கனகம் சொல்ல, தண்ணி கொதித்ததும் மயிலம்மா உலையில் அரிசியை அரிக்கன் சட்டியில் இருந்து களைந்து போடுகிறாள். அப்போது கனகம் எங்கட வேலர் அப்பாவுக்கு சேடம் இழுக்குதாம் அநேகமாக இண்டைக்கு ஆள் முடிஞ்சிடும் என்று கதைக்கினம். அப்படியே மனதுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்து இன்று ஏகாதசி அப்படி நடந்தால் நல்லதுதான் அவரும் எவ்வளவு காலமாய் பாயும் நோயும் என்று துன்பப் படுகிறார் என்று சொல்லும் போது மேலே கூரையில் இருந்து ஓலை சரசரக்கும் சத்தம் கேட்டு இருவரும் மேலே பார்க்கின்றனர். மயில் ஆடும் .........🦚
    14 points
  5. ஆதி அறிவு ------------------- இப்பொழுது வரப்போகும் புகைவண்டி மூன்றாவது தடத்தில் வந்து கொண்டிருக்கின்றது. முதலாவது மேடையில் நிற்பவர்கள் மேம்பாலத்தில் ஏறி அடுத்த பக்கம் போகவும் என்ற அறிவிப்பு தலைக்கு மேலேயிருந்து வந்து கொண்டிருந்தது. அங்கு முதலாவது தடம், இரண்டாவது தடம், மூன்றாவது தடம், முழு நிலையத்திற்கும் சேர்த்து நான் ஒருவனே முதலாவது மேடையில் நின்று கொண்டிருந்தேன். மனிதர்களின் குறுக்கீடுகள் எதுவும் இல்லாமல், இது செயற்கை நுண்ணறிவு கொண்ட ஒரு இயந்திரம் செய்யும் அறிவிப்பாகக் கூட இருக்கலாம். சுற்றிவர மெல்லிய இருட்டு கவிழ்ந்து கொண்டிருந்தது. இப்பொழுது திடீரென ஒருவர் முன்னால் தோன்றி, எனக்கு ஏதாவது சில்லறைகள் கொடு என்று கேட்கக்கூடும். கேட்பதைக் கொடுத்தால், தோன்றியது போலவே மறைந்தும் விடுவார்கள். ஆனால் ஒரு டாலர் கூட கையிலோ, பையிலோ இல்லை. கடன் மட்டைகள், காசு மட்டைகள் செல்லாத இடம் இது. வந்து கேட்பவர் என் வங்குரோத்து நிலை கண்டு கோபப்படவும் கூடும். இந்த நிலையில் 'நோ இங்கிலீஸ்' என்று சொல்வது தான் உசிதம். முழுதும் துறந்து தெருக்களில் வாழும் இந்த மனிதர்களிடம் மொழிப்பற்று, தீவிரம் இருக்க சாத்தியமில்லை. இங்கு எவரும் எவரையும் ஆங்கிலம் தெரியாது என்பதற்காக அடித்ததாகவோ அல்லது சுட்டதாகவோ நான் இதுவரை கேள்விப்பட்டதும் இல்லை. மூன்றாம் மேடைக்குப் போக முன், முதலாம் மேடையின் பின்புறம் பிரயாணச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்று இன்னும் ஒரு அறிவிப்பு மேலிருந்து என் மீது இறங்கியது. தனி ஒரு மனிதனுக்காக அரசு இயந்திரம் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தது. அறிவிக்கும் குரல் இருமி, கம்மி, புகைவண்டி நிற்கப் போகும் அடுத்த அடுத்த தரிப்பிடங்களைச் சொன்னது. உலகில் செயற்கை நுண்ணறிவு இன்னமும் இருமத் தொடங்கவில்லை, ஆதலால் இந்த இடத்தில் இன்னும் ஒரு சாதாரண மனிதனும் என்னுடன் இருக்கின்றார் என்ற அந்த நினைப்பே ஆறுதலாக இருந்தது. இன்னும் ஒருவர் அவசரமாக வந்தார். வீடு வேண்டாம் என்று வீதியில் வாழ்பவர்களை அடையாளம் காண்பது மிகவும் இலகு. இவர்கள் ஒரு வீட்டுச் சாமான்களை தங்களுடன் எப்போதும் சுமந்து கொண்டு திரிவார்கள். சுமக்கும் தள்ளு வண்டி கூட அருகில் இருக்கும் பெரிய கடைகளில் ஒன்றினுடையதாக இருக்கும். வந்தவர் கடகடவென்று என்னைத் தாண்டி, உயர்த்தியில் ஏறி, அவசர அவசரமாக உயர்த்தியின் கதவை மூடி, மேம்பாலத்தில் ஓடி நடந்து, மறுபக்க உயர்த்தியால் இறங்கி, மூன்றாவது மேடையில் உயர்த்தியின் பின்பக்கம் ஒளித்து நின்றார். புகைப்பதைத் தவிர, செயல்கள் என்று இவர்கள் வேறு எதுவும் செய்வதில்லை. பல புகைத்தல்கள் இங்கே சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டும் உள்ளது. ஒளித்து நின்று புகைக்க வேண்டிய கட்டாயமும் இவர்களுக்கு இல்லை. இலங்கையில் 28 கோடி ரூபாய்கள் பெறுமதியான ஆணிகளை ஒரு பாலத்தில் இருந்து சிலர் திருடிச் சென்றுள்ளனர் என்ற சமீபத்திய செய்தி நினைவில் மின்னி மறைந்தது. பார்த்துக் கொண்டே இருக்க, நீளம் பாய்தலுக்கு ஓடி வருபவர் போன்று ஒரு பெண்மணி ஓடி வந்தார். நின்றார். 'ஜேக்கப், உன்னை எனக்கு அக்கு வேறு ஆணி வேறாகத் தெரியும். (தடை செய்யப்பட்ட வார்த்தை). (தடை செய்யப்பட்ட வார்த்தை). நீ அந்த உயர்த்தியின் பின்னால் ஒளிந்து நிற்கின்றாய். (இரண்டு தடை செய்யப்பட்ட வசனங்கள்). ஜேக்கப் வெளியில் வரவேயில்லை. புகைவண்டி வந்து கொண்டிருந்தது. ஜேக்கப் அங்கே தான் ஒளித்து இருக்கின்றார் என்று அந்தப் பெண்ணுக்கு எப்படித் தெரியும் என்று எனக்கு விளங்கவில்லை. வாழ்க்கை வீடோ வீதியோ, ஜேக்கப்பிற்கும் இது என்றும் விளங்கப் போவதில்லை.
    13 points
  6. முடிவிலி ------------- சமீபத்தில் இங்கே ஒரு பாதிரியாருக்கு பெரிய மாரடைப்பு வந்து கொஞ்ச நேரம் இறந்து போய்விட்டார். பின்னர் அவருக்கு உயிர் திரும்பவும் வந்துவிட்டது. இப்படித்தான் வைத்தியசாலையில் சொன்னார்கள். இது செய்திகளிலும் வந்து இருந்தது. பாதிரியாரும் இடைப்பட்ட, அவர் இறந்திருந்த, நேரத்தில் அவர் வேறு ஒரு இடத்திற்கு போய் வந்ததாகச் சொன்னார். இதை Near Death Experience (NDE) என்று சொல்கின்றனர். இந்த வாழ்வின் முடிவில் இருந்து சாவின் விளிம்பு வரை போய் வருதல். அடிக்கடி உலகில் எங்காவது நடக்கும் ஒரு நிகழ்வு இது. பொதுவாக இந்த அனுபவம் பெற்றவர்கள் அநேகமாக வெளிச்சமான, பிரகாசமான, பூந்தோட்டங்கள் நிறைந்த, வாசனைகள் பரவும், ஒளி சுற்றிச் சுழலும், தெரிந்தவர்கள் மற்றும் முன்னோர்கள் மிதந்து கொண்டிருக்கும் ஒரு இடத்திற்கே போய் வந்ததாகச் சொல்வார்கள். அவர்கள் போய்ப் பார்த்து வந்த இடம் சொர்க்கம் என்பதன் விளக்கம் இது போலும். ஆனால் இந்தப் பாதிரியார் தான் நரகத்திற்கு போய் வந்ததாகச் சொல்கின்றார். ஒரே இருட்டு, அதைத் தாண்டினால் மனிதர்கள் நான்கு கால்களில் நடக்கின்றார்கள், அவர்களின் கண்கள் வெளியே தள்ளப்பட்டிருக்கின்றன, சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கின்றார்கள், நெருப்பில் விழுகின்றனர் என்று பாதிரியார் அவர் போய் வந்த இடத்தை விபரித்திருந்தார். இதற்கு முன்னர் வாழ்வின் முடிவு வரை போய் வந்தவர்கள் சொன்னவற்றை வைத்து, இங்கே பூமியில் என்ன செய்தாலும், என்ன கூத்து ஆடினாலும், கடைசியில் எல்லோரும் சொர்க்கத்திற்கு தான் போவார்கள் போல என்று அசமந்தமாக இருந்துவிட்டேன். மற்ற இருட்டான இடத்திற்கும் ஆட்கள் அனுப்பப்படுகின்றனர் என்று இப்பொழுது தான் தெரிய வந்துள்ளது. 40 வயதிற்கு மேல் ஒருவரது விதிப்பயனை, ஊழ்வினையை மாற்றவே முடியாது என்று தமிழ்நாட்டின் இன்றைய முன்னணி சிந்தனையாளர், தத்துவஞானி, ஆன்மீக அறிஞர் ஒருவர் சமீபத்தில் சொல்லியிருக்கின்றார். இந்த அறிஞரைப் பார்த்து, 'என்ன உங்களின் தத்துவம் எல்லாம் ஒரே ஓட்டை ஒடிசலாக இருக்குதே. சுட்ட தோசையையே திருப்பி திருப்பி சுடுகிறீர்களே' என்று ஒரு சாதாரண மனிதன் கேட்டுவிட்டார். சினம் கொண்ட அந்த அறிஞர் அந்த சாதாரண மனிதன் நரகத்திற்கு போவார் என்பதையே இப்படிப் பூடகமாகச் சொன்னாராம். நரகம் போய் வந்த பாதிரியார் தான் இங்கு வாழ்க்கையில் விட்ட பிழைகள் என்ன என்னவென்று சொன்னதிலிருந்து அறிவது என்னவென்றால், நான் அங்கு போகும் பொழுது இந்த அறிஞர் கூட அங்கு நாலு கால்களில் நடந்து கொண்டிருப்பார் என்றே தெரிகின்றது. கிட்டத்தட்ட எனக்குத் தெரிந்த எல்லோரும் அங்கே தான் இருப்பார்கள் அல்லது எனக்குப் பின்னால் வரப் போகின்றார்கள். இதே கூட்டம் தான் அங்கேயும், முடிவற்ற ஒரே வாழ்க்கை. இனிமேல் இதிலிருந்து தப்புவதற்கு வழியில்லை என்றாலும், இப்பவே கொஞ்சம் கொஞ்சமாக பழகிக் கொள்ளலாம். ஒரு கிழமைக்கு மூன்று தமிழ்ப் படங்களும் மூன்று தெலுங்குப் படங்களும் விடாமல் பார்த்து வந்தால், நரகத்தைக் கூட ஒரு கலைக் கண்ணோட்டத்தில் பார்க்கும் பக்குவம் வந்துவிடும்.
    13 points
  7. நான் இந்தியா செல்வது இது ஐந்தாவது தடவை. முதல் தடவை சென்றது என் பதினைந்தாவது வயதில் என் அம்மா மற்றும் தம்பியுடன். இணுவிலில் இருந்த சண்முகலிங்கம் என்பவர் ஆட்களை குழுவாக இந்தியாவின் பல தலங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் கூட்டிச் செல்பவர். அந்தமுறை என் அம்மா கற்பித்த ஆரம்பப் பள்ளியின் ஆசிரியர்கள் சேர்ந்து ஒரு பத்துப்பேர் சேர்ந்து இந்தியச் சுற்றுலாவுக்குத் திட்டமிட்டிருந்தனர். என் வயதின் காரணமாக என்னைத் தனியே விட்டுச் செல்ல என் அம்மா விரும்பவில்லை. அதனால் எனக்கு அடித்தது அதிட்டம். எனக்குப் பின் பிறந்த ஒரு தம்பியையும் இரு தங்கைகளையும் அம்மாவின் பெற்றோர் சகோதரிகளுடன் விட்டுவிட்டு ஆறே வயதான என் கடைக் குட்டித் தம்பியையும் எம்மோடு அழைத்து வந்திருந்தார். முதலில் ஊரில் இருந்து கிளம்பி தலை மன்னார் சென்று அங்கிருந்து கப்பலில் இராமேஸ்வரம் சென்று அங்கிருந்து தொடருந்தில் பயணம் எது பின்னர் எமக்காக ஒழுங்கு செய்திருந்த மகிழுந்தில் ஒவ்வொரு ஊராகச் சென்று மீண்டும் ஒரு மாதத்தின் பின்னர் ஊர் வந்து சேர்ந்தோம். முதலாவது அந்தக் கப்பல் பயணமே எனக்கு எத்தனையோ அனுபவங்களையும் மகிழ்ச்யையும் தந்தது என்றாலும் அதுபற்றி எழுதும் ஆர்வம் எனக்கு இதுவரை எழுந்ததில்லை. அதன் பின் பதினாறு ஆண்டுகளின் பின்னர் திருமணமாகி கணவர் பிள்ளைகளுடன் சென்றபோது என் தந்தையும் கணவரின் பெற்றோரும் எம்முடன் வந்தனர். அப்போது என் நண்பியின் தமக்கை போர் சூழல் காரணமாக இந்தியா சென்று அங்கு ஒரு சொந்த வீட்டையும் கட்டி மேல்மாடியில் உள்ள மூன்று அறைகளை இந்தியாவுக்கு வருபவர்களுக்கு வாடகைக்கு விடுவார். எமக்கும் அது பாதுகாப்பு என்று கருதியதால் நாமும் மகிழ்வாகவும் நிம்மதியுடனும் அங்கு இருக்க முடிந்தது. அடுத்த நாளே அவரிடம் கதைத்தபோது அவரே ஒரு டாடா சுமோ ஜீப் ஒன்றை எங்களுக்காக ஒழுங்குசெய்து தந்தார். ஒருமாதம் மீண்டும் கோவில்கள் அரண்மனைகள் முக்கிய இடங்கள் என்று அதில் திரிந்தபோதும் பார்த்த இடங்களை மீண்டும் பார்த்தபோதும் எனக்குச் சலிக்கவில்லை. ஆனால் ஜீப்புக்கு செலுத்திய தொகைதான் தலைசுற்ற வைத்தது. ஆனாலும் அதுபற்றி என் கணவரைத் தவிர யாரும் கவலைப்படவில்லை. ஆனாலும் மீண்டும் இனி இந்தியா போவதே இல்லை என்று என் கணவர் கூற எனக்கோ மீண்டும் போய் இந்தியா முழுவது திரிந்துவிட்டு வர வேண்டும் என்னும் அவா கூடியது. எல்லோரும் இருந்து இதுபற்றிக் கதைத்துக்கொண்டிருந்தபோது அந்த எம்மூர் அக்கா “நீர் இங்கை ஒரு பாங்க் ஏக்கவுண்ட் திறந்துபோட்டுப் போனால் வருஷா வருஷம் கொஞ்சக் காசை அனுப்பினால் உமக்கு ஊர் சூத்திப் பாக்க காசும் சேர்ந்திடும்” என்று சொல்ல எனக்கும் அது நல்ல யோசனையாகத் தெரிய ஒருவாறு கணவரை சம்மதிக்க வைத்து வங்கிக் கணக்கொன்றை எங்கள் இருவரின் பெயரிலும் திறந்தாச்சு. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு ஐநூறு டொச் மாக்குகள் மட்டும் அனுப்பி அதன்பின் 2001 இல் கணவரின் தம்பியின் திருமணத்துக்குச் சென்றபோது இன்னும் ஒரு ஆயிரம் என்று போட்டாலும் மனிசன் மட்டும் எங்கட நாடும் இல்லை. உன்ர விசர் கதையைக் கேட்டு எக்கவுண்டில காசைப் போட்டாச்சு. திரும்பக் கிடைக்குமோ இல்லையோ என்று எப்பவும் எதிர்மறையாக ஏச, கடைசிவரையும் போகாது என்று மனிசனுக்குக் கூறினாலும் எனக்கும் ஒரு வீதப் பயம் இருந்தது என்னவோ உண்மை. அதன்பின் 2014 இல் என் நூல் வெளியீட்டுக்குச் சென்றபோது மனிசன் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் கேளாமல் இன்னும் ஒரு இரண்டாயிரம் பவுண்சுகளையும் கொண்டுசென்று முன்னர் போட்டவைகள் எல்லாவற்றையும் சேர்த்து மூன்று ஆண்டுகள் நிரந்தர வாய்ப்பில் இட்டுவிட்டு வந்தாச்சு. மூன்று ஆண்டுகளின் பின்னர் தானாகவே புதுப்பிக்கப்படும். அப்போது உங்களுக்குக் கடிதம் மூலம் அறியத் தருவோம் என்றதுடன் சரி. எந்தக் கடிதமும் வரவில்லை. இப்ப மனிசன் எதுவும் சொல்லாமலே எனக்குப் பயம் எழ, வங்கி முகாமையாளருடன் தொலைபேசியில் கதைக்க அவரும் நீங்கள் பயம் கொள்ள வேண்டாம். உங்களுக்கு நான் மெயில் ஒன்று போடுகிறேன் என்று சொன்ன கையோடு அதுவும் வந்து சேர, அதன் பின்தான் எனக்கு நிம்மதி வந்தது. அது நடந்து படிக்கட்டு ஆண்டுகளாகியும் மீண்டும் இந்தியா செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. ஏனெனில் என் கணவருக்கு இந்தியா என்றாலே வேப்பங்காயாகவே இருந்ததும் பிள்ளைகள் கல்வி, திருமணம் என்னும் சுழலும் இந்தியாவைப் பற்றி நினைக்கவே நேரம் இல்லை என்றானது. கடந்த ஆண்டு நான் ஆறு மாதங்கள் இலங்கை சென்ற போது எனது சுவிஸில் இருக்கும் நண்பி ஒருத்தியும் நானும் உன்னுடன் வர ப்போகிறேன் என்றதும் உடனே எனக்கு அவளுடன் இந்தியா செல்ல வேண்டும் என்னும் அவா எழ அவளிடம் கேட்கிறேன். அவள் இதுவரை இந்தியா சென்றதில்லை. இனிச் செல்லும் ஆர்வமும் தனக்கு இல்லை என்று கூற சரி இலங்கையிலாவது இருவரும் சேர்ந்து திரிந்து இடங்கள் பார்க்கலாம் என்றதுடன் நான் எங்கெங்கு செல்லலாம் ஆவலுடன் பட்டியலிட்டயபடி காத்திருக்க, அவளோ கடைசி நேரத்தில் தான் தனிய இலங்கை வருவது தன் கணவருக்குப் பிடிக்கவில்லை என்று கூறி வாராமலே விட்டது வேறு கதை. இம்முறை என் வளவில் மேலதிக மரக்கன்றுகள், செடி கொடிகள் எல்லாம் வைப்பதற்கு ஏற்ற காலம் ஒக்டோபர் என்பதால் நான் விமானச்சீட்டு முதலே எடுத்து வைத்தபடி காத்திருக்க, வாங்கிய வீட்டையும் வளவையும் நான் வடிவாப் பார்க்கவே இல்லை. நானும் உன்னுடன் வாறன் என்று மனிசன் சொல்ல சரி என்று அவருக்கும் பயணச் சீட்டு எடுக்க வெளிக்கிட இப்ப நான் வர ஏலாது. டிசம்பர் அல்லது தை மாதம் போவம் என்று கூற நான் ஏற்கனவே ஒக்டோபருக்கு எடுத்திட்டனே என்கிறேன். பரவாயில்லை மாத்து என்று சொல்ல, டிசம்பரில் விலை ஆயிரம் தாண்டியது. சரி தை மாதம் போடுவோம் என்று இணையத்தில் தேடினால் எல்லா 23-30 kg மட்டுமே கொண்டுபோகலாம் என்று காட்ட 40kg பொதிகள் கொண்டுபோகக் கூடிய விமானம் எமிரேட்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இரண்டும் தான். அதில் என் தேர்வு எமிரேட்ஸ் தான். ஏனெனில் உணவும் கவனிப்பும் நன்றாக இருக்கும் என நான் எண்ணினேன். எல்லாம் எதிர்மாறாக இருந்தது வேறுகதை. வரும்
    12 points
  8. எச்சரிக்கை ----------- வீட்டில் குடியிருக்கும் எலிகளுக்கு நான் விடுக்கும் கடைசி எச்சரிக்கை இது எச்சரிக்கை நீங்கள் இங்கிருப்பது எனக்குத் தெரியும் அங்கங்கே இருக்கும் கறுப்பு எச்சங்கள் உங்களின் மிச்சங்களே இருட்டில் உருட்டுவதும் பகலில் ஒழிவதுமாக நீங்கள் ஓடித் திரிவதும் தெரியும் தக்காளிச்செடியில் நின்றதாகவும் அம்மணி அழுதார் எலிக்கு ஏனய்யா தக்காளி? ஏக பிரதிநிதியாக இங்கு எல்லாம் உங்களுக்காகவா? முட்டைக்கோதுகள் ரேடியேட்டருக்குள் கிடக்க 'என்ன பாம்பு வளர்க்கிறீர்கள்?' என்று தள்ளி நின்று கேட்டார் மெக்கானிக் பின்னர் மொத்தமாக ஒரு பில் கொடுத்தார் இனிமேலும் பொறுக்க முடியாது நேற்றிரவு கூரைக்குள் உங்களின் இரு குரல்கள் ஒன்று கொஞ்சம் சிணுங்கியது ம்ம் ......... குடும்ப வாழ்க்கை ஆரம்பிக்கிறீர்கள் போலிருக்கு ஒரு பூனையைக் கொண்டு வந்தால் உங்கள் கதை முடியும் பின்னர் பூனையை என்ன செய்வது? பகலிலும் பிராண்டுமே பூனை ஒரே வழி பொறி தான் உள்ளே வா உட்கார்ந்து சாப்பிடு என்று கூப்பிட்டு போட்டுத் தள்ளலாம் என்றிருக்கின்றேன் இப்பவும் நீங்கள் தப்பி வாழ ஒரு வழியிருக்குது அம்மணியின் கண்ணில் விழாதே அவவின் பொருட்களை தொடாதே சத்தமில்லாமல் ஓரமாக இருந்து விட்டு போங்கள் நான் பொறியை திருப்பிக் கொடுக்கின்றேன்.
    12 points
  9. தம்பி நீ கனடாவோ? வருடங்கள் உருண்டு விட்டன வயது போகுமுன் வருவேன் ஊருக்கென்று வாக்குக் கொடுத்தேன் வந்து இறங்கியும் விட்டேன்… வடிவான ஊராகிவிட்டது நம்மூரு.. வலம் இடம் தெரியவில்லை… வடிவான வீடும் ஆட்களும் வசதியாக வாழும் நம் சனத்தையும் கண்டு வாய் நிறைந்த சிரிப்புடன் வணக்கமும் சொன்னேன்.. வந்தார் கந்தையா அண்ணர் வயதும் வட்டுக்கை போயிட்டுது வந்தவுடன் கேட்ட கேள்விதான் வயித்தை கலக்கிப் போட்டுது விசிட்டர் விசாவில் வந்த பேரப் பொடியன் கனடாவில் நிக்கிறான் கண்டனியோ… போத்தல் தண்ணி குடித்து தவண்டை அடித்த வாய்க்கு… கோயில் கிணத்தில் தண்ணி குடிக்கப் போக…. கைமண்டையில் தண்ணி ஊத்திய ஆச்சி கேட்டா.. ஆறுமுகத்தின்ரை மருமோன் விசிட்டர் விசாவிலை வந்தவர்…. வேலை கீலை ..செய்யிறாரோ…. பொட்டுக்கடை பொன்னையர் வீட்டடியால் போகையில் பொன்னற்றை…பூட்டப் பொடியனாம் தான் அண்ணை ..அண்ணை… அண்ணன் விசிட்டர் விசாவில் வந்தவர் வன்கூவரில்தான் ..இருக்கிறார்… அவர் எப்படி அண்ணை இருக்கிறார்.. பந்தடி வெட்டைக்குப் போகவும் பயமாக்கிடக்கு.. படிச்ச பள்ளிக்குடப் பக்கம் போகவும் கூச்சமாக் கிடக்கு பள்ளித் தோழரையும் காணப் போகவும் பயமாக்கிடக்கு.. பலகால ஆசை….சொந்தங்கள் பந்தங்கள் ….காணுகின்ற ஆசை கனடா விசிட்டர் விசாவால். பாதியில் முடிந்ததுவே… ஏனென்று…கேட்பியள் முப்பது வருசம் முந்தி வந்த என்னிடம்.. மூத்தவனின் பேரனைத்தெரியுமோ மருமோனைத் தெரியுமோ வன்கூவர் அண்ணனைத் தெரியுமோ என்றால் நான் என்ன சொல்லமுடியும்… தம்பி நீ கனடாவோ என்ற கேள்வி வருமுன்… பாதியில் பயணத்தை முடித்துவிட்டேன்..
    11 points
  10. சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தளம் முன் போல இயங்கும் என நம்புகின்றேன். மெருகேற்றலையும் தாண்டி வேறு பிரச்சனைகள் வழங்கியில் ஏற்பட்டிருந்தது.
    11 points
  11. மயிலிறகு......... 04. அப்போது கனகம் என்ன மயூரி பூவனத்தின் கல்யாண விடயங்கள் எப்படிப் போகுது என்று கேட்கிறாள். அதுதான் கனகம் நானும் யோசிக்கிறன். ஒரு வழியும் காணேல்ல. மாப்பிள்ளை பொடியன் நல்ல பிள்ளை. அவை சீர்செனத்தி என்று எதுவும் கேட்கேல்ல, அதுக்காக நாங்கள் பிள்ளையை வெறுங்கழுத்தோட அனுப்ப ஏலுமே. ஏதோ அவளுக்கு செய்யவேண்டியதை செய்துதானே அனுப்பவேணும். ஓம் அதுவும் சரிதான் மயூரி, நீ தினமும் கும்பிடுகிற அம்பாள்தான் உனக்கு ஒரு வழி காட்டுவாள். கனக்க யோசிக்காத என்று சொல்கிறாள். பின் இருவரும் நீராடி ஈரஉடுப்புகளையும் எடுத்துக் கொண்டு வருகிறார்கள். அப்ப நான் போட்டு பிறகு வாறன் மயூரி என்று சொல்லி கனகம் செல்ல அவள் பின்னால் கோமளமும் தாயுடன் போகிறாள். மயிலம்மாவும் ஒயிலாக நடந்து படியேறி வீட்டுக்குள் வர முன் அறையில் இருந்து வாமனும் சுந்துவும் போனமாதம் நடந்த ஒரு சம்பவம் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். சுந்து வாமனிடம், எட வாமு, நாங்கள் அந்த மதகில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தால் அவருக்கென்ன வந்தது அவற்ர வீட்டுக்குள்ளேயே போனனாங்கள். அது இல்லடா சுந்து நாங்கள் அந்த மாங்காய்க்கு கல் எறிந்ததுதான் பிரச்சினை. திண்ணையில் ஆச்சி இருக்கிறா, இங்கால அவற்ர வைப்பு நிக்குது அதுதான். ஓ....அப்ப அவற்ர வைப்பாட்டிக்கு கெத்து காட்ட எங்களை பேசிபோட்டுப் போறார் என்கிறாய். ஓமடா .....எண்டாலும் நீ ஒண்டைக் கவனிச்சனியே அந்தப் பெண் இஞ்சாலுப் பக்கமாய் வந்து ரெண்டு மாங்காயை மதிலுக்கு மேலால் போட்டுட்டு மற்றதுகளைப் பொறுக்கிக் கொண்டு போனதை. ஓமடா....நானும் பார்த்தனான்.....எண்டாலும் நீ தடுத்திருக்கா விட்டால் அடுத்த கல்லால அவற்ர மண்டையை உடைத்திருப்பன். போடா ....உனக்கு விஷயம் தெரியாது சுந்து....நான் பகுதி நேரமாய் வேலை செய்கிற அரசு விதானையார் இருக்கிறார் எல்லோ அவரிட்ட இவர் ஒருநாள் ஒரு ஆலோசனை கேட்க வந்தவர்.அவரும் இவரோட கதைத்து அனுப்பினாப்பிறகு என்னிடம் சொன்னவர், இப்ப வந்தவர் யார் தெரியுமோ, இவர்தான் வைத்திலிங்கம். ஆனால் எல்லோருக்கும் காசை வட்டிக்கு விட்டு தொழில் செய்கிறவர்.அதால இவருக்கு "வட்டி வைத்தி"என்றுதான் சொல்லுறவை.உவங்களோட வலு கவனமாய் புழங்க வேண்டும்.கொழுவுபட்டால் "பிலாக்காய் பிசின்மாதிரி" லேசில பிரச்சினை தீராது.உவர் கொஞ்ச காலத்துக்கு முந்தித்தான் ஒரு பிள்ளையை அவளின் பெற்றோரிடம் இருந்து உங்கட வட்டிக்கும் முதலுக்குமாய் இவள் என்னோட இருக்கட்டும் என்று சொல்லி கொண்டு வந்திட்டார். அதால அவற்ர மூத்த சம்சாரமும் பிள்ளைகளும் பேச்சுப்பட்டு அடிபாடுகளுடன் இருக்க நான் போய்த்தான் அவர்களின் பிரச்சினையை தீர்த்து வைத்தனான். பிறகு அவளுக்கு தனியாக வீடு வளவும் குடுத்து வைத்திருக்கிறார். அது இதுவாகத்தான் இருக்கும். அவையளுக்கும் நிறைய சொத்து பத்தெல்லாம் இருந்தது எல்லாம் இவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி வட்டி குடுத்து எல்லாம் பறிபோட்டுது.பத்தாதற்கு பெட்டையையும் கூட்டிக்கொண்டு வந்து வைத்திருக்கிறார் என்று சுந்துவுக்கு வாமு சொல்கிறான். இவர்கள் கதைப்பது தன்பாட்டுக்கு காதில் விழ பக்கத்து அறையில் மயிலம்மா ஈரப்பாவாடையை கால்வழியே கழட்டி விட்டுட்டு வேறு ஆடைகளை எடுத்து அணிந்து கொள்கிறாள்.ஒரு கனம் அங்கிருந்த நிலைக்கண்ணாடியில் தன் பிம்பம் தெரிய தன்னை மறந்து ரசித்தவள்..... ம்.....என்று ஒரு பெருமூச்சு அவளிடம் இருந்து வெளிப்படுகிறது. பொடியங்கள் கதைக்கும் "வட்டி வைத்தி" பற்றி அவளுக்கும் தெரியும்.அவரின் மனைவியுடன் மயிலம்மா நல்ல பழக்கம். அவர்களின் வயல் அறுவடைக்காலங்களில் மயிலம்மாவும் கனகமும் அங்கு சென்று வேலை செய்துவிட்டு கூலி வாங்கிக் கொண்டு வருவது வழக்கம். அவர் வைத்திருக்கும் பொடிச்சியைப் பற்றியும் அவர் மனைவி மயிலம்மாவிடம் மனம்விட்டு கதைக்கும் நேரங்களில் சொல்லி இருக்கிறா. அதுவும் வைத்தி வயல் பக்கம் வந்துட்டு விசுக்கென்று மோட்டார் சைக்கிளை திருப்பி சீறிக்கொண்டு போகும்போது ....ம் ...."சொந்தக் காணிக்குள் உழமுடியாத மாடு வெளியூருக்கு போச்சுதாம் பவிசு காட்ட " என்று ரெண்டு கையையும் விரிச்சு நெளிச்சுக் காட்டுவாள்..... என்னக்கா இப்படிச் சொல்லுறியள் என்று கேட்டால் பின்ன என்னடி, அந்தப் பொடிச்சிதான் பாவம். இது அங்க போய் மூக்கு முட்ட குடிச்சுட்டு சோத்தையும் விரலால அலைஞ்சு போட்டு அப்படியே வேட்டி போனஇடம் தெரியாமல் குப்புறப் படுத்திட்டு சாமத்தில எழும்பி வரும். இதெல்லாம் சும்மா ஊருக்கு பவிசு காட்ட வேறு ஒன்றுமில்லை என்று சொல்லுவாள். அங்கால பூவனம் இருவருக்கும் தேநீர் கொண்டுவந்து தருகிறாள். சுந்து அவளிடம் இப்ப எங்களுக்கு வேண்டாம் எடுத்துக்கொண்டு போ என்று சொல்ல அவளும் எனக்குத் தெரியும் நீங்கள் என்ன குடிக்கிறீங்கள் என்று சொல்லி நெளித்துக் கொண்டு போகிறாள். அப்போது வாமு சுந்துவிடம் டேய் , உன்ர தங்கச்சி பூவனத்தின்ர சம்பந்தம் எந்தளவில இருக்குது என்று கேட்கிறான்.... அதெடா நல்ல சம்பந்தம்தான் ஆனால் நடக்கிறது சந்தேகமாய்தான் இருக்கு......ஏனடா ......வேறை என்ன பணம்தான் பிரச்சினை. உனக்குத்தான் தெரியுமே அப்பா நல்லா சம்பாதித்தவர்தான், அம்மாவையும் வேலை செய்ய விட்டதில்லை.எங்களையும் நல்லா பார்த்துக் கொண்டவர். ஆனால் சொத்தென்று பெரிதாய் எதுவும் சேர்த்து வைக்க வில்லை.அவர் எதிர்பாராமல் இறந்து போனபடியால் எங்களிடம் மிஞ்சியது இந்த வீடும் வளவும் பின்னால் இருக்கும் வயலும்தான். இந்த நிலைமையில் அம்மா எங்களை ஆளாக்கி படிப்பிக்கிறதே பெரிய காரியம். நானும் இனி பல்கலைக்கழகத்துக்கு போகவேணும். அந்தக் கடிதத்தைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறன். அது வந்தாலும் அங்கே போறதுக்கு கூட என்ன வழியென்று தெரியவில்லை. அப்படி கடிதம் வந்தாலும் நீ யோசிக்காத சுந்து. நான் மோட்டார் சைக்கிள் வாங்கவென்று சேர்த்து வைத்திருக்கிற காசை உனக்குத் தருவன். அதுக்கில்லையடா வாமு, சிலரிடம் பணம் தானாய்ப் போய்க் குவியுது, நாங்கள் முயற்சி இருந்தும் கால்காசுக்கு கல்லில நார் உரிக்க வேண்டிக் கிடக்கு. வாழ்க்கை என்றால் அப்படித்தான் சுந்து. நாளைக்கு நீயும் பெரிய ஆளாய் வருவாய்.வறுமையும் இப்படியே நீடிக்காது.........! மயில் ஆடும்.........! 🦚
    11 points
  12. மயிலிறகு........ 03. அப்போது மயிலம்மாவின் மகன் சுந்தரேசன் என்னும் சுந்துவும் அவன் நண்பன் வாமதேவனும் சைக்கிளில் வந்து இறங்குகின்றனர்.அம்மா வேலர் அப்பா இறந்துட்டாராம்.....உங்களிடம் சொல்லச் சொன்னவை என்று சுந்து சொல்கிறான். எப்படியும் இன்று பின்னேரம் எடுத்து விடுவார்கள். சரியில்லை, எதுக்கும் நாங்கள் நேரத்துக்கு போவம் என்னடி கனகம். ஓம் மயூரி, நான் போய் சீலை மாற்றிக்கொண்டு வருகிறன்.பக்கத்தில் இருக்கும் தன் வீட்டுக்கு போக கிளம்பியவளை நில்லடி நானும் உன் கூடவாறன் என்று சொல்லி விட்டு இரண்டு பொடியலையும் பார்த்து பிள்ளைகள் நான் சமைச்சு வைத்திருக்கிறன், வடிவாய் போட்டு சாப்பிடுங்கோ என்று சொல்லும் போது மயிலம்மாவின் மகள் பூவனமும் கனகத்தின் மகள் கோமளமும் தனித்தனி சைக்கிளில் வந்து இறங்குகின்றனர். அம்மா வேலர் அப்பா செத்துட்டாராம் இண்டைக்கே எடுக்கினமாம் என்று சொல்ல ....ஓம் இப்பதான் அண்ணன்மார் சொன்னவங்கள். சரி, நீங்களும் அண்ணன்மாரோட கொழுத்தாடு பிடிக்காமல் இருக்கிறதை போட்டுச் சாப்பிடுங்கோ. நாங்கள் அங்க போயிட்டு வாறம் என்று வீட்டினுள் போகிறாள். அறைக்குள்ளே கொடியில் கிடந்த பாவாடையை எடுத்து அதில் இருந்த கிழிசலை ஒருபக்கம் மறைவாக விட்டு கட்டிக்கொண்டு இருப்பதிலேயே நல்லதொரு வெள்ளைப் புடவையை எடுத்துக் கட்டிக் கொள்கிறாள். மயிலம்மா மகள் பூவனம் பெரியவளான நாள் தொட்டு தனக்கென ஒரு சீலையோ நகையோ வாங்கியதில்லை.கிடைக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து அவளுக்கென ஆடைகளும், நகைகளும் வாங்கி விடுவாள். மேலும் சுந்தரேசனின் படிப்புக்கும் காசு தேவையாய் இருக்கும். ஆனாலும் அவை போதாது என்று அவளுக்கும் தெரியும். அவள் வெளிக்கிட்டு வெளியே வரும்போது மயிலம்மாவிடம் ஒரு கம்பீரமும் சேர்ந்து வருகின்றது. இனி அந்த அயலைப் பொறுத்தவரை எங்கும் அவள் பேச்சு செல்லும். அனைவரும் அவளுக்கு மரியாதை குடுத்து நடந்து கொள்வார்கள். கணவன் இருக்கும்வரை அந்த ஊரில் நடக்கும் எல்லா நல்லது கெட்டதுக்கும் அவர்கள் முதன்மையானவர்களாக இருந்திருக்கிறார்கள். ஒருநாள் அவள் கணவன் லொறியால் மோதுண்டு இறந்தபின் அவள் தானாகவே சிலபல நல்ல காரியங்களில் முன்னுக்கு நிற்பதில் இருந்து ஒதுங்கிக் கொண்டாள். மயிலும் கனகமும் தாழ்வாரத்தில் கிடந்த "பாட்டா"வைப் போட்டுக் கொண்டுவந்து படலையைத் திறக்க வெளியே அவர்களின் பசுமாடு கன்றுடன் நிக்கிறது அவற்றை உள்ளே விட்டு சத்தமாய் பிள்ளை லெச்சுமி வருகுது கட்டையில் கட்டிப் போட்டு குண்டானுக்குள் இருக்கும் கழனிய எடுத்து வை என்று சொல்லி படலையை சாத்தி கொழுவிவிட்டு வெளியில் இறங்கி நடக்கிறார்கள்.பக்கத்தில் அம்மன் கோயில் குறுக்கிட அங்கு டேப்பில் சன்னமாய் தேவாரப்பாடல் ஒலிக்கின்றது.அங்கு வந்த மயிலம்மா ஐயரிடம் ஐயா வேலர் மோசம் போயிட்டாராம் என்று சொல்லிவிட்டு, இனி ஐயா பிணம் சுடுகாட்டில் தகனமாகும் வரை நடை திறக்க மாட்டார் என்று கனகத்திடம் சொல்லிக்கொண்டு சுவாமியைப் பார்த்து கன்னத்தில் போட்டுகொண்டு செத்த வீட்டுக்குப் போகிறார்கள். அங்கு சின்ன சின்ன சண்டை சச்சரவுகளுடன் கிருத்தியம் முடிந்து பாடை வேலியைப் பிய்த்துக் கொண்டு போக இவர்கள் இருவரும் கிளம்பி வீட்டுக்கு வருகிறார்கள்.செத்தவீட்டால் வர நாலு மணிக்கு மேலாகி விட்டது. வீட்டில் நாலு பொடியலும் வெகு மும்மரமாய் தாயம் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.ஒரே சத்தமும் கும்மாளமுமாய் இருக்குது.அதைப் பார்த்த கனகம் ஓமனை உந்த மும்மரத்தை படிப்பிலே காட்டினால் எங்கேயோ போயிடுவீங்கள்,இதுக்கு ஒன்றும் குறைச்சலில்லை என்று சொல்ல, விடு கனகம் அதுகளும்தான் என்ன செய்யிறது.சும்மா விளையாடட்டும் நீ வா நாங்கள் குளத்துல தோய்ஞ்சு போட்டு வருவம் என்று கனகத்தையும் கூட்டிக்கொண்டு போகிறாள். போகும்போது எட்டி அடியெடுத்து நடக்க மயிலம்மாவின் பாட்டா செருப்பு அறுந்து விடுகிறது.உடனே அவள் தடுமாறி விழ இருந்து சமாளித்துக் கொள்கிறாள்.பிள்ளைகள் சிரிக்க வாமன் எழுந்து வந்து அந்த அறுந்த செருப்பை எடுத்து யாரிடமாவது ஒரு ஊசி இருந்தால் தாங்கோ என்று கேட்க மயிலம்மாவே தனது சட்டையில் குத்தியிருந்த ஊசியை கழட்டி அவனிடம் தருகிறாள். வாமனும் அதைக்கொண்டு செருப்பை சரிசெய்து அவளிடம் தர அவளும் போட்டுகொண்டு கனகத்தின் பின்னால் போகிறாள். குளத்தில் இருவரும் ஆடைகளைக் களைந்து அலம்பிக் கரையில் வைத்து விட்டு நன்றாக முங்கி நீந்தித் தோய்கிறார்கள்........! மயில் ஆடும்....... 🦚
    11 points
  13. ஒரு கொய்யா மரத்தின் விவரம் ----------------------------------------------- நான்கு சிறு துளிர் இலைகளுடன் நிற்கும் போதே அது ஒரு கொய்யா மரம் என்று தெரிந்துவிட்டது. ஊரில் மரங்களோடும், நிலங்களோடும், கடலோடும் ஒட்டி ஒட்டியே வாழ்ந்ததால் கிடைத்த பயன் இது. மரங்களும், மண்ணும், கடலும் நன்கு பழகினவையாக, எது எது என்று தெரிந்தவையாக இருக்கின்றன. ஒரு சிசு போல பரிசுத்தமாக, எந்தப் பயமும் இல்லாமல் அது அங்கே நின்று கொண்டிருந்தது. ஒவ்வொரு பறவையும் ஐந்நூறு மரங்களை உண்டாக்குகின்றன என்று சொல்வர். ஒரு பறவையின் ஐநூறில் ஒன்று இது. முன்னும் பின்னும் கான்கிரீட் சூழ்ந்த ஒடுக்கமான ஒரு மண் கீலத்தில் பறவை ஒன்று போட்ட வித்தில் இருந்து முளைத்திருந்தது. எல்லாக் கொய்யா மரங்கள் போலவும் இதன் இலைகள் கூராக இல்லாமல், இதன் இலைகள் அகன்றதாக வந்து கொண்டிருந்தன. இளமரத்திலேயே பட்டைகள் உண்டாகி, அவை உரிந்து வீழ்ந்தன. அதனால் மரம் எப்போதும் வழுவழுப்பாக இருந்தது. அதன் காலம் வர, அது பூக்கத் தொடங்கியது. மற்றவை போலவே பூக்கள் வெள்ளையாகவே இருந்தாலும், ஓரிரு நாட்களிலேயே பூக்கள் கருகிப் போயின. பூக்களின் காம்புகள், கொஞ்சம் வித்தியாசமாக, சின்ன விரல் அளவு தடிப்பில் இருந்தன. சில மரங்கள் பூப்பதில்லை. சில மரங்கள் வெறுமனே பூக்கும், காய்க்காது. இந்த மரம் பூக்கும், காம்புகள் வரும், பின்னர் கருகி விடும், அவ்வளவுதானாக்கும் என்று விட்டுவிட்டேன். சில நாட்களின் பின் எதேச்சையாக அந்தப் பக்கம் எட்டிப் பார்த்தால் ஒவ்வொரு காம்பிலும் இரண்டு மூன்று காய்கள். நல்லையா மாஸ்டர் கீறும் வட்டங்கள் போல ஒழுங்கான உருவங்களில் நேர்த்தியான உருண்டையாகக் காய்த்திருந்தன. காய்கள் கடும் பச்சையிலிருந்து வெளிர் பச்சையாகி, பின்னர் இளமஞ்சளாகி, கடைசியில் கடும் மஞ்சள் ஆகின. பழத்தின் வாசம் வீடெங்கும் பரவியது. அங்குதான் பிரச்சனையும் ஆரம்பம் ஆகியது. ஒருவருக்கு வாசம் என்பது இன்னொருவருக்கு மணமாகவோ அல்லது நாற்றமாகவோ ஆகலாம். இங்கு ஆகியது. வேறு கொய்யா மரங்களும் வீட்டில் இருப்பதால் இந்த மரத்தை வெட்டி எறிவதென்ற முடிவு எடுக்கப்பட்டது. வீரம், விவேகம், அறம், தர்மம் என்று சதாகாலமும் படிப்பிக்கப்பட்டு, பலவீனமானவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்ற பாடப்புத்தக முடிவுடன் இருந்த என்னால், அதுவாகவே முளைத்து ஆளான அழகான ஒரு கொய்யா மரம் அநியாயமாக வெட்டப்படுவதை தடுக்க முடியவில்லை. ஆகக் குறைந்தது, அன்றைய முதல்வர் கருணாநிதி செய்தது போல ஒரு அடையாள உண்ணாவிரதம் கூட நான் இருக்கவில்லை. வெட்டினாலும் அடி மரத்திலிருந்தும், அதன் வேர்களிலிருந்தும் மீண்டும் மரம் முளைக்கும் என்று ஒரு கறுப்பு இரசாயனம் அதன் அடிக்கட்டை மேல் கவிழ்த்து ஊற்றப்பட்டது. பல வல்லுநர்கள் சேர்ந்து இந்த முடிவை எடுத்து நடைமுறைப்படுத்தினர். பின்னர் இந்த ஊரில் நான்கு வருடங்கள் மழையே இல்லை. எங்கும் புழுதி எழும்பிப் பறக்கும் நிலங்கள். இரசாயனம் ஊற்றா விட்டால் கூட, அந்த மரம் வெட்டிய பின் பிழைத்திருக்கும் என்று நான் நம்பவில்லை. ஐந்தாவது வருடம் சேர்த்து வைத்தது போல மழை கொட்டியது. ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வழிந்தன. புழுதி பறந்த நிலங்களை பச்சை புற்கள் மூடி வளர்ந்தன. மீண்டும் ஒரு நாள் எதேச்சையாக அந்தப் பக்கம் பார்த்தால், அதே அழகுடன், அகன்ற இலைகளுடன் அந்தக் கொய்யா மரம் மீண்டும் வளர்ந்து கொண்டிருந்தது. மொட்டும், பூவும் கூட இருந்தன. அருகே சென்றேன், 'நானும் தான் இங்கே வாழ்ந்து விட்டுப் போகின்றேனே' என்று சொல்வது போல அதன் சிறு கிளைகள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன.
    10 points
  14. நாங்கள் புலம் பெயர்ந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. ஊரில் வாழ்ந்த காலத்தை விட, வெளியில் வாழ்ந்த காலமே அதிகம் என்றாகிவிட்டது. தெரிந்தவர்கள் பலர் வாழ்க்கை முடிந்து போகவும் ஆரம்பித்துவிட்டார்கள். என்னதான் வெளிநாடுகளில் எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலும், மனங்கள் என்றும் ஊரையும், அந்த நினைவுகளையுமே அசை போட்டுக் கொண்டிருக்கின்றன. நாங்கள் என்றும் புலம் பெயரவே இல்லை என்னும் அளவிற்கு ஊர் நினைவுகள் அப்படியே ஒட்டியிருக்கின்றன. சில வேளைகளில் பார்த்தால், உண்மையில் கடைசிப் புகை மட்டும் தான் புலம் பெயர்ந்தது, அந்தந்த நாடுகளில் கலந்து விடுகிறதோ என்று தோன்றுகின்றது. ******************** புலம் பெயர்ந்த புகை ---------------------------------- இங்கு வந்த நாங்கள் இப்பொழுது இறக்க தொடங்கி விட்டோம் கடைசியில் ஒரு இடு வீட்டில் ஒரு வாரம் விறைப்பாக கிடந்து அங்கிருக்கும் புகை போக்கியால் எரிந்த மெய் புகையாக போகின்றது நாளை வாழ்வோம் நாளை வாழ்வோம் இன்று ஓடுவோம் இன்றே தேடுவோம் என்றிருக்க வாழ்க்கை ஓடியே போக காலம் முடிந்து விடுகின்றது இன்றே ஏன் வாழக்கூடாது எவருக்கும் சொல்லத் தெரியவில்லை இன்று அவர் ஓடுகின்றார் ஆகவே இவரும் ஓடுகின்றார் இன்று அவர் வாங்குகின்றார் ஆகவே இவரும் வாங்குகின்றார் பின்னர் ஒரு நாளில் ஊர் மண்ணை போய் சேர மீண்டு வரும் சொர்க்கம் என்று எண்ணி எண்ணி இருக்க அந்த நாள் என்றும் வருவதில்லை திடீரென பெய்த மழையில் கொத்தாக குருவிகள் ஒதுங்கின வீட்டுக் கூரைக்குள் கிச் கிச் கீச்சென்று ஒன்றையொன்று தள்ளி இடம் பிடித்தன துளி விழுந்து துள்ளி ஓடி வந்தது வெளியே போன குஞ்சு ஒன்று அகமும் விழியும் இருந்தால் இந்த வாழ்க்கை சமமே இங்கும் அங்கும்.
    10 points
  15. மயிலிறகு.........02. இந்தப் பக்கம் அடுப்பின் மேல் புகட்டில் குளத்தில் பிடித்த பெரிய பெரிய யப்பான் மீன்கள் கீறி உப்பில் போட்டுப் பிரட்டி எடுத்து பனைநாரில் கோர்த்து தொங்குது. அங்கால வாழைத்தார் ஒன்றும் கயிற்றில் தொங்குது. அதி ஒரு எலி இடைப்பழம் ஒன்றை கொறித்து சுவைத்துக்கொண்டிருக்கு. அப்போது எவ்வித அசுமாத்தமும் இன்று ஒரு சாரைப் பாம்பு அந்த எலியைப் பார்த்துக் கொண்டு மெதுவாக நகருது. அதைக் கண்ட கனகம் அம்மாடி பாம்பு என்று கத்திக் கொண்டு மயிலம்மா அருகில் எட்டி அடியெடுத்து வருகிறாள். அந்த சலசலப்பு கேட்டு எலியும் திரும்பி பாம்பைப் பார்த்து வாழைத்தாரில் இருந்து எதிர் வளைக்குத் தாவ சடாரென பாம்பும் இரண்டு முழ நீளத்துக்கு தனது உடலை வீசி அந்தரத்தில் வைத்தே லபக்கென்று எலியைக் கவ்விப் பிடித்து சரசரவென பனைமட்டையில் சறுக்கி சுவரில் ஊர்ந்து குசினி மூளைக்குள் சுருண்டு கொள்கிறது. இவ்வளவும் ஒரு கனப் பொழுதுக்குள் நடந்து முடிகின்றது. காணக்கிடைக்காத காலமெல்லாம் மறக்க முடியாத ஒரு காட்சி அதுபாட்டுக்கு இயல்பாக நடந்து முடிந்தது. கனகம் ஒரு எட்டில் கதவால் பாய்ந்து முத்தத்துக்கு வர மயிலம்மா கேத்திலுக்குள் கொஞ்சம் தேயிலையும் போட்டு பனங்கருப்பட்டியையும் எடுத்துக் கொண்டு பதட்டமில்லாமல் வெளியே வருகிறாள். என்ன மயூரி மெதுவாக வருகிறாய், பாம்பு பாய்ந்து புடுங்கினால் அப்ப தெரியும் உனக்கு. பதறாத கனகம். அது குட்டியாய் இருந்து இங்கினதான் தெரியுது. முன்பு ஒருநாள் அதை உடும்போ பிராந்தோ கடித்து குற்றுயிரும் குலையுயிருமாய் இந்தத் தாழ்வாரத்தில் வந்து கிடந்தது நாய் குரைக்குது, பூனை சீறுது அப்போது நானும் வாமனும் ஓடிவந்து பார்த்தால் இது சுருண்டு கிடக்குது. எனக்கு அதை அடித்துக் கொல்ல மனம்வரவில்லை. வாமன் அதுக்கு ஒரு சிரட்டையில் பால் ஊத்தி வைக்க குடிச்சுது. பிறகு அதை ஒரு பெட்டியில் போட்டு நான் கொஞ்சம் சாம்பலும் மஞ்சலும் கலந்து கொட்டி விட்டன். சில நாட்களாக அதுக்கு வாமனும் நானும் தினம் ஒரு மீனும் ஒரு முட்டையும் குடுத்து வர அதுவும் தேறி வந்திட்டுது.என்ர மகன் சுந்து அதுக்கு கிட்டவும் வரமாட்டான் அவ்வளவு பயம்.பூவனம் அதைத் தொடமாட்டாள் ஆனால் பயமும் இல்லை.அது அவள் அருகாகப் போய் வரும்.எங்கட நாயும் பூனையும் கூட அதோடு சேட்டைகள் செய்வதில்லை. வாமு கண்டான் என்றால் அதோடு தூக்கி விளையாடாமல் போகமாட்டான். இந்தக் கூத்து எப்ப நடந்தது.எனக்குத் தெரியாதே. அது நீ கலியாணம் கட்டி புகுந்தவீடு போன நாட்களில் நடந்தது.. இப்ப நீ இங்கு வந்து ஒரு வருசம் இருக்குமா .....ம்.....இருக்கும். காலம் போற போக்கு....என்று சொன்ன கனகம் உனக்கு இரவில பயமில்லையா .....இல்லை. அது இரவில் வீடுகளில் தங்காது. மேலும் அதுக்கு இங்கு புழங்கும் ஆட்களையும் மிருகங்களையும் நன்றாதத தெரியும். நீ இந்த தேத்தண்ணியைக் குடி என்று குடுக்கிறாள். இவர்கள் கதைத்துக் கொண்டு தேநீர் குடித்துக் கொண்டிருக்கும் போது பாம்பும் குசினிக்குள் இருந்து வெளியேறி பின்னால் காட்டுக்குள் உள்ள புற்றுக்குப் போகிறது.........! மயில் ஆடும்........! 🦚
    10 points
  16. நானும் ஒரு அடிவிட்டன் எண்பத் தைந்துகளின் பிற்பகுதி பள்ளிக்கூடக் காலத்தில் கலக்கல் கோலி… கொழும்பில் இருந்தாலும் அவசர அழைப்பில் அல்வாயில் நிற்கும் காலம்… இறுதி ஆட்டமொன்று.. இறுக்கமான இரண்டு குழுவும்… இடையில் நடுவராக உடுப்பிட்டியின் உயர்ந்த ஜம்பாவான்…. ஆறடிக்கு மேல் உயரம்… அதுதான் பரவாயில்லை.. பிரதம அதிதி. பொலிசு அதிகாரி… அம்பயரின்…மைத்துனரம்.. அதுவும் பெரும்பான்மை இனம்.. மோதும் அணி இரண்டும் ஏலவே பிக்கல் புடுங்கல் உள்ளவை நடத்தும்..அணியும் நமக்கெதிரானதுதான்…. ஆட்டம் ஆரம்பம்…. அடி உதையும் நடக்குது…. முதல் கோல் நமக்கு… அம்பயரோ…ஆஃப்சைடு என்கிறார்…. கோல் அடித்தவனோ..இல்லை கோல் அம்பயர் ..மறுக்க அடிதடி… கோலிக்கு நின்ற எனக்கு கோபத்தின் உச்சம்… கோதாரி விழுந்தது.. கோலிக்கு நின்ற நான் ஹோலி யாகமாறி.. ஆறடி அம்பயரின் பிடரியில் அசத்தலான அடிவிட்டேன்.. ஆட்டமே அல்லோல கல்லோலம் அம்பயர் சொன்னார் ஆரடித்தாலும் பரவாயில்லை அலிஷ்பாண்ட் போட்ட பிளேயர் அடித்ததுதான் பொறுக்க முடியவில்லை.. அந்த பொலிசு அதிகாரியும் அம்பயர்…என் மைத்துனன் அவனை என் கண்முன்னால் அடித்த அந்த பிளேயர் ஆரென்றாராம்… ஆரவாரம் இப்ப டி இருக்க.. ஆட்கள் என்னைப் பிடித்து அலிஸ்பாண்டையும் பறித்து ஆளையும் உருமாற்றி அல்வாயுக்கு அனுப்பிய கதை.. அப்புறம் ஆறடி அம்பயர் என்றால்.. அந்தப் பக்கமே அடியேன் இல்லை…
    9 points
  17. புலி வாழ்ந்த மண்.. யாழ்ப்பாணத்தின் மண்டைகாய்கள்.. இப்படி எல்லாம் பெருமைப்பட்டுக் கொண்ட பூமி தான் வல்வை. அண்மையில் அந்தப் பூமிக்குப் போன போது.. வல்லை வளைவை வளைஞ்சு எடுத்தது இந்தளவு தான். அதிலும் வடமராட்சி மக்களின் அன்புடனான வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அதன் பின்னர் ஆஞ்சநேயர் தான் வரவேற்றார் வல்லை சந்தியில்.. தலைவர் வாழ்ந்த வீட்டுப் பக்கம் காப்பெட் எட்டியும் பார்க்கல்ல.. அவர் வாழ்ந்த வீடு காடுபத்திப் போய் கிடக்கு. முன்னால் எம் ஜி ஆர் பாவம் சிலை கூட இல்லை திருவுருவப்படமாகவே நிற்கிறார். வல்வை முதல்.. காங்கேசந்துறை செல்லும் கடற்கரை வீதியும்.. கொஞ்சம் கார்பெட்.. மிகுதி இல்லை. என்னடா கார்பெட் என்று பார்த்தால்.. இருமருங்கும் சொறீலங்கா.. இராணுவ பயிற்சிக்கூடங்களும்.. தலைமையகங்களும்... ஏக்கர் கணக்கில் காணிகள் இன்னும் இராணுவம் வசம். கடற்படை வேறு கடல் பக்கமா அபகரிச்சு நிற்குது. எல்லா இடமும் புத்தர் ஒவ்வொரு அரசமரமா குந்தி இருக்கிறார். உவங்கட விசுவாசத்தை பார்த்தால்.. புத்தரே தலை சுத்தி விழுந்துடுவார். ஆனால்.. செல்லடிச் சுவடுகளும்.... கன்போர்ட் எறிகணை சிதறல்களும் இல்லாத மதில்கள் இல்லை இப்பவும். புதிய அடிக்குமாடி மனைகளை மக்கள் எழுப்பி வருகினம். நல்லது தான். மக்கள் இப்போ பிடிக்க வந்த பிசாசோடு வாழப் பழகிவிட்டார்கள். மதியம் பசிக்கும் தானே. அப்போ.. சாப்பிட ஒரு இடம் போனம். விளம்பரத்துக்காக இல்லை. உண்மையாகவே இடமும் உணவும் இயற்கை காட்சிகளும் மனதுக்கு குளிர்ச்சியாக இருந்திச்சு. உள்ளூர் தகவலின் படி (உண்மை பொய் உறுதிப்படுத்தப்படவில்லை) புலம்பெயர் நபரின் முதலீட்டில் உருவான.. ஒரு விடுதியுடன் கூடிய உணவகம் கிடைத்தது. வெள்ளையள் அங்கும் சைக்கிளில் ஓடி ஓடி பேரம் பேசிக்கிட்டு இருப்பதைக் காண முடிக்கிறது. வெள்ளைக்காரனாவது காசை விடுறதாவது. உணவகத்தின் உள்.. எல்லாம் நல்லாத் தான் இருக்குது. உணவும். விலையும் பறுவாயில்லை. ஆனால் உணவகத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள சிங்களப் படைமுகாமில் இருந்து ரபான் ப்ரித்.. நாள் முழுவதும். செவிக்கும் மனதுக்கும் எரிச்சலூட்டுவதாகவே இருந்தது. சிங்கள பெளத்தர்களே இல்லாத இடத்தில் எதுக்கு இந்த வேலை. மிக வரைவில்.. அந்த இடத்தில் புத்தர் நிரந்தரமாக குடியிருக்கக் கூடிய வாய்ப்புக்களே அதிகம். சரி.. என்று சற்றே நடந்து சுவர்களை நோக்கினால்.. வட ஹிந்திய நடிகைகளுக்கும் ஹிந்திய தலைவர்களுக்கும் முன்னிடம். மோடி ஜீ வேற இருக்கிறார். ஈழத்தமிழர்கள் கப்பல் வரலாறும் ஒரு பக்கம் போட்டிருக்கு. தமிழன் சுழியன்.. என்றது அப்பவே தெரியும். ஆனால் வல்வை மாதிரி சுழியனாக இருப்பது கடினம் தான். அழகான வல்வைக்கடல். ஏனே ஆர்ப்பரிப்பதை நிறுத்திவிட்டது. அதற்கும் வீரம் வீழ்ந்துவிட்டதோ என்னவோ..??! (காட்சிக்கு ஏற்ற வசனம்.. அப்புறம் வல்வை மக்கள் தங்கள் வீரத்தைப் பற்றி கதைப்பதாக சண்டைக்கு வரக்கூடாது. உங்கள் வீரத்தை உலகறியும்.) இந்த விடுதியின் கண்ணாடிக் கூட்டில் இருந்தான பார்வை. இங்கு சிங்களவர்களும்.. குறிப்பாக இராணுவ முகாம்களுக்கு வரும் இராணுவத்தின் உறவினர்கள் பெருமளவில் வந்து போகினம். உண்மையில்.. யாழ்ப்பாணம் காண ஆசையில் வரும் சிங்களவர்களும் உண்டு. அவர்களை வரவேற்பதில் தவறில்லை. நாம் தென்னிலங்கையை ரசிக்கவில்லையா..??! இந்தப் பக்கம் இருந்து தான் அந்த எரிச்சலூட்டும் ரபான் பிரித் வந்தது. ஒரு கடற்கரையை சோலையாக்கி வாழும் வல்வை மக்களுக்கு சலூட். இஸ்ரேலாம் இஸ்ரேல். வல்வையோடு நிற்காமல்.. தீவகமும் போனது.. நயினை.. அம்மாளாச்சி நல்ல பெயிட் கியின்ட் எல்லாம் அடிச்சு நல்ல களையா இருக்கா. என்ன அவாவின் பக்தர்களை காவிக் கொண்டு போற படகுகளுக்கு தான் யாரும் பெயின்ட் அடிக்கிறாங்கள் இல்லை. நயினாதீவு இறங்கு துறையும் இப்ப நல்லா இருக்கு. ஆனால்.. சில அடிப்படை பழவழக்கங்களை மாத்திறது கஸ்டம். எங்கும் கச்சான் கோதும் கஞ்சலும். சிங்களவர்களும் அதே. நயினை நாகபூசனி அம்மன் கோவில்... தற்போது. அம்மனை தரிசிக்க வந்த கணவாய். நாகபூசனி அம்மனுக்கு அருகில் வந்துவிட்ட புத்தர். வெள்ளைவெளேர் என்று பரந்து காட்சி அளிக்கிறார்... சாரி காலை நீட்டி படுத்திருக்கிறார். தீவகத்தின் அழகிய சன் - செட் உடன் முடிச்சுக் கொள்ளுறம். ஆக அலட்டினால்.. வாசிக்கவும் நேரமில்லை.. மிணக்கடவும் நேரமில்லை. இறுதியா.. ஒன்று சொல்ல மறந்தது.. தீவகத்தில் இருந்து அராலிப்பக்கமா தனிச்சிங்களத்தில் எதையோ எழுதி வைச்சு கொப்பேகடுவ.. போய் சேர்ந்த இடத்தை சிங்களவருக்கு மட்டும் திறந்து விட்டிடுருக்கிறாங்கள். ஐயாவுக்கு சிலை வைச்சு புகழஞ்சலியோ இல்லை.. குடியேற்றமோ தெரியாது. எங்கட டமிழ் டேசியக் கட்சிகளுக்கு தமது தேசத்தில் நடப்பத்தைக் கவனிக்க நேரமில்லை. கட்சி பிரிக்கவும் கன்னை பிரிக்கவும் தான் நேரம் போதும். இதனையே சிங்களவர்கள்.. ஹிந்தியா.. சீனா.. சர்வதேசம்.. மட்டுமல்ல.. தமிழர்களில் சிலரும் விரும்பினம். தமிழன் பலமாகக் கூடாது. அதை களத்தில் நல்லாச் செய்யுறாங்கள்.
    9 points
  18. அன்றுபோல் இன்று இல்லையே! *************************************** அதுவொரு கடல் சூழ்ந்த அழகிய கிராமம் அதிகாலைப் பொழுதும் அந்திமாலையும் அத்தியும்,இத்தியும் ஆலமரமும் அதிலிருந்து கத்திடும்,கொஞ்சிடும் பறவை இனமும் ஏரும் கலப்பையும் வண்டிலும் மாடும் உழைப்போர் வியர்வையில் வளரும் சாமையும்,வரகும்,குரக்கனும்,சோளனும் பனையும்,தென்னையும் பனாட்டும்,ஒடியலும். வேலிகள் தோறும் கொவ்வையும்,குறிஞ்சாவும் தரவை நிலமெங்கும் மூலிகைச் செடிகளும் கடலும் காற்றும் மீன்களும்,இறாலும் இயற்கை மாறாத மாரியும்,கோடையும் இனிமை தருகின்ற கருப்பணிக் கள்ளும் இனிக்க இனிக்க பேசிடும் தமிழும் கொடுத்து கொடுத்தே மகிழ்திடும் மனிதரும் குடும்பங்கள் பிரியா வாழ்ந்த இணையோரும். உறவும் உரிமையும் கூட்டுக் குடும்பமும் உயிர்கள் அனைத்திலும் காட்டிடும் அன்பும் பொருட்களை மாற்றும் பண்டமாற்றமும் பொழுது முழுதும் உழைத்திடும் தன்மையும் பள்ளியும் படிப்பும் உள்ளத்து தூய்மையும் பண்பும் அடக்கமும் மரியாதைச் சொற்களும் பாயில் கிடக்காத பலமுள்ள தோற்றமும் நோயில்லா உணவும் நூறாண்டு வாழ்வும். ஆயுள்வேதமும் ஆயாக்கள் மருந்தும் வீட்டில் பிறந்தே விளையாடும் குழந்தையும் தலைமுடி கொட்டாத ஆவரசுக் கொழுந்தும் தாவணி மயில்களும் தமிழ் கலாச்சார உடையும் கிட்டியும் புள்ளும் தாச்சியும் கொடியும் கிராமத்து பேச்சும் கிளு கிளு கொஞ்சலும் சுத்தக் காற்றும் சுதந்திரப் போக்கும்-எம் பக்கத்தை விட்டு பறந்துமேன் போனதோ? -பசுவூர்க்கோபி.
    9 points
  19. பொருளாதார ரீதியாகவோ அல்லது பிராந்திய ரீதியாகவோ முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளுக்கே சர்வதேசம் முன்னுரிமை கொடுக்கிறது, தமக்கு முக்கியத்துவம் இல்லாத நாடுகளில் பல ஆயிரக்கணக்கில் செத்து கிடந்தாலும் முக்கியத்துவம் தராத உலகம் , தமது ஆளுமை அல்லது பின்புலம் கொண்ட நாடுகளுக்கு ஒன்றென்றால் நேச நாடுகள் என்று சொல்லி படை திரட்டி முட்டி மோத வருகிறது. எமது நிலையும் அதுதான் மன்னார் வளைகுடாவில் எண்ணெய் வளத்தை ரில்லியன் டொலர் கணக்கில் எடுக்க முடியும் நிலை என்ற ஒன்று வந்தால் சிங்களம் அதனை தம்முடன் பகிர்ந்து கொள்ள மறுத்தால் இலங்கை தமிழருக்கு ஒரு பிரச்சனையென்றால் அதனை ஒரு போர் பிரகடனமாகவே மேற்குலகம் எடுக்கும். பாலஸ்தீன பிரச்சனை என்பது இஸ்ரேலின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை, இஸ்ரேல் என்பது மேற்குலகின் முற்றுமுழுதான ஆசீர்வாதம் பெற்ற பிரதேசம், பாலஸ்தீனம் என்பது தனி ஒரு பிராந்தியமல்ல, முற்றுமுழுதாக அரபுநாடுகளின் அனுதாபம் பெற்ற பிரதேசம், அரபு நாடுகளென்பது அமெரிக்காவின் மறைமுக ஆளுகைக்கு உட்பட்ட வலயம், எப்படி முக்கியத்துவம் தராமல் இருப்பார்கள்? எமது போராட்டமும் பிராந்தியமும் எந்த வகையில் அவர்களுக்கு முக்கியத்துவம் தருகிறது? அகதிகளாய் எம்மவர்கள் தஞ்சம் கோருவதால் மட்டுமே ஓரளவாவது உற்று நோக்குகிறார்கள், இல்லையென்றால் அதுவும் இல்லை. பாலஸ்தீனத்திற்கு கொஞ்சமும் குறையாத படுகொலைகள் கொங்கோவிலும்,கம்போடியாவிலும்,உகண்டாவிலும், சோமாலியாவிலும் அரங்கேறியது அரங்கேறுகிறது எவர் கண்டு கொண்டார்கள்? இழவு வீடென்றாலும் வசதியுள்ளவன் செத்தால் வரிசை கட்டி ஓடி வரும் சமூகம், இல்லாதவன் செத்தால் அனாதை பிணமாகவே விட்டுவிடும், அது சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல சர்வதேசத்துக்கும் பொருந்தும்.
    9 points
  20. ஆழ்ந்த அனுதாபங்கள். இங்கே மரதன் என்று குறிப்பிடப்படுவது 42 கிலோமீட்டர் தூர ஓட்டப் போட்டியாக இருக்காது என்று ஊகிக்க முடிகிறது. விதுர்ஷனின் வயது 16 ஆக இருப்பதும் ஓடி முடிந்ததும் பாடசாலை வகுப்புக்குச் சென்றதும் இதனை உறுதிப்படுத்துகின்றன. இலங்கை இந்தியாவில் 10 கிலோமீற்றர் ஓட்டப் போட்டியையும் மரதன் என்று சொல்வார்கள். இந்தியாவில் 5 கிலோமீட்டரை மினி மரதன் என்று சொல்லக் கேட்டுள்ளேன். எதுவாயினும் தற்போதுள்ள வெக்கை காலத்தில் 10 கிமீ ஓடினாலும் அதிகமான வியர்வையுடன் பெருமளவு உப்புகள் உடலிலிருந்து வெளியேறும். சிறிய தூரமாக இருந்தாலும் வெக்கை காலத்தில் இவ்வாறான போட்டிகள் தவிர்க்கப்பட வேண்டும். அல்லது அதற்கேற்ற மருத்துவ முன்னேற்பாடுகளும் போட்டியாளர்களுக்குப் போதுமான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். மரதன் ஓடுவதற்குப் பொதுவாக 3 அல்லது 4 மாத பயிற்சி தேவைப்படும். பயிற்சியின் போது ஒருபோதும் 42 கிமீ ஓடுவதில்லை. 8 முதல் 20 கிமீ தான் ஒவ்வொரு பயிற்சியின்போதும் ஓடுவது வழக்கம். வாரத்தில் 3 நாள் தொடங்கி போட்டி நெருங்கும்போது 5 நாட்கள் வரை ஓட வேண்டும். இதன்போது மெதுவான ஓட்டம், வேகம் கலந்த ஓட்டம் (interval training) மேடு பள்ளமான பாதை வழிவே ஓடுதல் போன்ற எல்லா விதமான இடையூறுகளையும் உடலுக்குப் பழக்கப் படுத்தப்படும். வாரத்தில் ஒரு தடவை தூர ஓட்டம் 20 கிமீ ஓட வேண்டும். போட்டிக்கு இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு தடவை மட்டும் 25 கிமீ ஓடலாம். இது இறுதிப் போட்டியின்போது என்ன வேகத்தில் ஆரம்பிப்பது ஓடி முடிப்பது போன்றவற்றைக் கணிப்பிட உதவும். நான் 30 கிமீ ஓடியிருந்தேன். இவ்வாறான பயிற்சிகள் சாதாரண மரதன் போட்டியாளர்களுக்கானதே. இரண்டு இரண்டரை மணி நேரத்தில் மரதன் ஓடுபவர்களுக்கான பயிற்சி முற்றிலும் வேறானது. விதுர்ஷனின் துரதிஷ்டமான மரணம் ஓட்டப் பயிற்சி செய்பவர்கள் மீதான பயத்தை ஏற்படுத்தக் கூடாது. மாறாக பயிற்சியாளர்களும் ஏற்பாட்டாளர்களும் மருத்துவர்களும் தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து வரும்காலத்தில் இவ்வாறான தவறுகள் நடக்காமல் பார்க்க வேண்டும். பயிற்சிகளும் போட்டிகளும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
    9 points
  21. இது கனியுப்புக்களின் அசம நிலை (electrolyte imbalance), முக்கியமாக சோடியம், பொட்டாசியம் அசம நிலை காரணமாக நிகழ்ந்த மரணமாக இருக்குமென ஊகிக்கிறேன். இலங்கையில் அதிக வெப்ப நிலை கொண்ட வானிலை நிலவுகிறது என்கிறார்கள். மரதன் ஓடி, சோடியத்தை வியர்வை மூலம் நிறைய இழந்த பின்னர், சாதாரண தண்ணீரைக் குடித்தால் மூளை வீக்கம், இதய தொழில்பாட்டில் பாதிப்பு என்பன எந்த வயதினருக்கும் ஏற்படலாம். இதற்கு உடனடி சிகிச்சையாக சுவாச உதவியோடு, குறைந்தது சாதாரண சேலைனாவது ஏற்றியிருக்க வேண்டும். 3 மணி நேரம் இவையெதுவும் செய்யாமல் சும்மா வைத்திருந்தார்கள் என்பது உண்மையானால், அது தீவிரமான அலட்சியம். மரதன் ஓடுவோர், வியர்வை சிந்தி உழைப்போர் எப்படி சோடிய இழப்பை மரணம் வரை கொண்டு போகாமல் காக்க வேண்டுமென அறிந்திருக்க வேண்டும். Gatorade போன்ற கனிய உப்புக்கள் கொண்ட பானங்களை அருந்துவது மிக எளிமையான ஒரு வழி.
    9 points
  22. இந்த ஏழு நாட்கள் ----------------------------- ஏழு நாட்களை வெற்றிகரமாக முடித்து விட்டாய் என்று கள நிர்வாகம் ஒரு பதக்கம் கொடுத்திருக்கின்றார்கள். வெறும் ஏழே ஏழு நாட்கள் தான் ஆகியிருக்கின்றதா? ஏதோ ஒரு யுகம் இங்கே உருண்டு பிரண்டு கிடந்தது போல மனம் நினைக்கின்றது. பல வருடங்களாக தினமும் பார்க்கும் 50 தளங்களில் இதுவும் ஒன்றாகவே இருந்தது, போன வாரம் வரை. அப்படியே முகப்பிற்கு வந்து, பிடித்ததை வாசித்து விட்டு போய்க் கொண்டிருந்தேன். உறுப்பினராக உள்ளே வந்து பார்த்தால்.........பெரும் பிரமாண்டம்.....👏👏 நல்ல ஒரு கட்டமைப்பும், வசதிகளும் உள்ள ஒரு தளம். கணினி மென்பொருள் துறையில் நீண்ட கால அனுபவம் உண்டு. நான்கு பக்கம் உள்ள ஒரு இணைய தளத்தை உருவாக்கி, அதை வெளியில் விட்டாலே, ஓராயிரம் பிரச்சனைகள் பின்னால் வரும். ஆனால் யாழ் களம் 'வேற லெவல்', தொழில் நுட்பத்திலும்......👍👍 பங்களிக்கும் பலரும் பெரும் விருட்சங்களாக இருக்கின்றனர். என் அப்பாச்சி வீட்டில் நின்ற இரண்டு பெரிய புளிய மரங்கள் போல. எவ்வளவு காலமாக, எவ்வளவை பங்களித்திருக்கின்றனர். இன்னும் அதே ஆர்வத்துடன் இருக்கின்றனர்......👍👍 எனக்கும் இன்றிருக்கும் ஆர்வம் என்றும் இருக்க வேண்டும் என்று......வேற யாரை கேட்பது......மேலே இருப்பவரை தான் கேட்கின்றேன். அவர் சிலதை கொடுப்பார். வேறு சிலதை கேட்காத மாதிரி இருந்து விடுவார்.....😀🤣 மிக்க நன்றி கள உறவுகளே....🙏
    9 points
  23. நான் கண்ட யாழ்ப்பாணம்!! 40 வருடங்களின் பின்பு ஒரு மாத சுற்றுலாவாக இலங்கை சென்றேன். நான் 75, 80ளில் பார்த்த அதே கோலத்தில் தான் யாழ்ப்பாணம் இன்றும் இருக்கின்றது. கார்பெட் ரோட்டுக்களையும் வீடுகளின் வாசல் கேட்டுக்களையும் தவிர பெரிய மாற்றம் ஒன்றும் நடந்து விடவில்லை. உலக நகர வளர்ச்சியுடன் ஒப்பிடும் பொழுது யாழ்ப்பாணம் மிகவும் பின்தங்கிய நிலையில் தான் இருக்கின்றது. அங்கே இருப்பவர்களுக்கு அதன் தாக்கம் தெரியாது உலக நகரங்களை பார்த்த ஒருவருக்கு இதன் தாக்கம் நன்கு தெரியும். யாழ்ப்பாண நகரத்து கடைகளில் முன்னால் உள்ள குப்பைகளும் அசுத்தமும் யாழ் மாநகர சபையின் செயல் திறன் எப்படி இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டியது. மட்டக்களப்பு நகரம் யாழ்ப்பாண நகரத்தை விட சுத்தம் சுகாதாரத்தில் மேலோங்கி இருந்ததை அவதானிக்க முடிந்தது. யாழ்ப்பாணம் பஸ் தரிப்பிட அழகும் தனியார் பேருந்துகளின் அழகும் அலங்கோலமாக இருந்தது. ஆபிரிக்க நாடுகளைத் தவிர மற்றய நாடுகளில் தனியார் பஸ்களும் அரசு பஸ்க்களும் போட்டி போட்டு வீதிகளில் ஓடுவதை பார்க்க முடிவதில்லை. அரசு பேருந்துகளும் டிப்பர் வாகனங்களும் ரோட்டில் வரும்பொழுது எமன் எதிரே வருவது போல எண்ணம் தோன்றுகிறது. அவ்வளவு ஆபத்து நிறைந்ததாக வீதிகளில் ஓடுவதை நான் நேரடியாக பார்த்தேன். அரசு பேருந்துகள் போதையில் ஓட்டுபவர்களை விட மிகவும் ஆபத்தான முறையில் ஓட்டுகிறார்கள் என்பதை எல்லா இடங்களிலும் அவதானிக்க முடிந்தது. ராணுவ முகாங்கள் எல்லா இடங்களிலும் அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. பூங்காக்கள் போல ராணுவ முகாங்கள் இருப்பது மிகவும் அழகாக இருக்கிறது. ஆனாலும் இவ்வளவு ராணுவ முகாங்கள் வட பகுதிக்கு தேவையா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. பலாலியில் ஒரு வீதி நேரடியாக ராணுவமுகாமுக்கே சென்றுவிட்டது. பின்பு நான் சுதாஹரித்துக் கொண்டு பாதையை மாற்றினேன். வீதி பிரியும் இடத்தில் எந்தவித அடையாளமும் இல்லாததால் நான் ராணுவ முகாமுக்குள் சென்று விட்டேன். ஆனாலும் அங்கே காவலுக்கு நின்றவர்கள் எந்தவித பதட்டப்படவும் இல்லை. புண்முகத்துடன் நின்றார்கள். நானும் அவர்களுக்கு கைகாட்டி விட்டு திரும்பி வேறு பாதையால் சென்றுவிட்டேன். அவர்கள் எல்லோரும் தங்கள் பாட்டில் தங்கள் கடமையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களுடன் எந்தவித பிரச்சனையோ அல்லது சோதனைகளோ நடைபெறுவதாக தெரியவில்லை. ஆனாலும் ராணுவ முகாங்கள் அதிகமாகத்தான் இருக்கின்றது. வன்னியில் காடுகள் சார்ந்த பல பகுதிகளில் ராணுவ முகாங்கள் மிகவும் அழகாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த சிறிய நாட்டுக்கு இவ்வளவு ராணுவ முகாங்கள் தேவையா என்று எனது மனதுக்குள் கேள்வி எழுந்தது. உலகம் மாறிவிட்டது, உணவு வழங்கும் முறைகள் உணவு உண்ணும் முறைகள் எல்லாம் மாறிவிட்டது. ஆனாலும் யாழ்ப்பானத்தில் உள்ள எந்த ஒரு உணவகத்திலும் அல்லது டீக்கடையிலோ பேப்பர் கப்பில் ஒரு காப்பியையோ அல்லது டீயையோ ( Take away ) பெற்றுக் கொள்ள முடியவில்லை. இது நல்ல சுகாதார தரத்துக்கு இன்னும் இவர்கள் முன்னேறவில்லை என்பதை காட்டியது. அதனால் நான் எந்த ஒரு கடையிலும் டீயோ காப்பியோ குடிக்கவில்லை. காரணம் சாதாரண கடைகளில் டீ கப்பை சுத்தம் செய்யும் முறை சுகாதாரத்துக்கு ஏற்ற முறையல்ல. யாழ்ப்பாணத்தில் யாரும் முகம் பார்த்து புன்னகைத்துக் கொள்வதில்லை. ஒருவரை ஒருவர் முறைத்து பார்ப்பது போலத்தான் பார்த்துக் கொள்கிறார்கள். காரணம் ஒருவரை ஒருவர் தெரியாததாகவும் இருக்கலாம் அல்லது பயமாகவும் இருக்கலாம் அல்லது இவரை பார்த்தால் தனக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்றும் எண்ணலாம் எப்படி இருந்தாலும் மகிழ்ச்சி இல்லாதவர்களாகவும் மற்றையவர்களை பார்த்து புன்னகைக்க தெரியாதவர்களாகவும் இருப்பது கவலையாக இருந்தது. உண்மை உரைகல்
    9 points
  24. மயிலிறகு ....... 05. எடேய் ....அப்போது நீ கவனிச்சனியே அவன் தன்ர மோட்டர் சைக்கிள் சைட் பெட்டியில் இருந்து ஒரு மஞ்சள் பை எடுத்து அவளிடம் பணம் பத்திரம், கவனமாய் கொண்டுபோய் பெட்டியில் வை என்று கொடுத்ததை. தோராயமாய் பார்த்தாலும் ஐந்தாறு லட்சங்களாவது இருக்கும் இல்லையா.....அதை சொல்லும்போது சுந்துவின் குரலில் ஒரு அவாவும் தடுமாற்றமும் இருக்கு. ஓமடா .....நானும் கவனித்தனான் ஆனாலும் அதடா என்பவனை இடைமறித்து அதுமட்டும் கிடைத்தால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துடுமடா. பூவனத்தின் கல்யாணம்,என்ர படிப்பு,உன்ர மோட்டார் சைக்கிள் மற்றும் ஊருக்குள் ஒரு மளிகைக் கடை என்று எல்லாம் செய்யலாம்டா...... சுந்துவுக்கு கொஞ்சம் வெறி ஏறீட்டுது. டேய் வாமு அவன்ர சேட்டைக்கு எப்படியாவது அதை அடிச்சுக்கொண்டு வரவேணும். குரல் உசாராய் சத்தமாய் வருகிறது. உனக்கென்ன பைத்தியமாடா சுந்து ....அப்படி ஏதாவது நடந்தால் உடனே அவருக்குத் தெரிந்து போயிடும் நாங்கள்தான் செய்திருப்பம் என்று...... பிறகு உன்ர படிப்பு, தங்கச்சியின் கல்யாணம் எல்லாம் பாழாகிடும்.இப்ப நீ ஒன்றுக்கும் யோசிக்காமல் போய்ப்படு.பிறகு பார்க்கலாம் என்று சொல்கிறான். மயிலம்மா அறைக்குள் தன் அலுமாரியில் எதையோ தேட பூவனம் அங்கு தேநீர் கோப்பைகளுடன் வருகிறாள்.தாயைப் பார்த்து என்னம்மா தேடுகிறாய் .....இல்லையடி இன்று முழுதும் செத்தவீடு, மார்அடிச்சு அழுதது, நடை என்று ஒரே அலுப்பாய் இருக்கு அதுதான் இந்த மருந்துப் போத்தலை இங்கினதான் எங்கேயோ வைத்தனான் காணேல்ல ஓ......அதுவா அதைத்தான் அவங்கள் இரண்டு பேரும் எடுத்து குடிச்சுட்டு அலட்டிக் கொண்டிருக்கிறாங்கள். அப்படியே.....சரி சரி அத விடு, உந்தத் தேத்தண்ணியைத் தா குடிப்பம். நீ அவங்களுக்கு நல்லா இடங் குடுக்கிறாய் சொல்லிப் போட்டன் என்று தாய்க்கும் தேநீரைக் குடுத்துட்டு தனது தேநீரை எடுத்துக் கொண்டு வெளியே போகிறாள் பூவனம். அடுத்தநாள் காலை பத்து மணியளவில் தபால்காரர் சைக்கிளில் மயிலம்மா வீட்டுக்கு முன் வந்து நின்று மணியடிக்க பூவனம் சென்று அவரிடமிருந்து பதிவுத்தபால் ஒன்றை கையெழுத்திட்டு வாங்கி வருகிறாள். வரும்போதே அண்ணா உனக்கொரு கடிதம் வந்திருக்கு வந்து பாரேன் என்று அழைக்கிறாள். அடுக்களையில் இருந்து மயூரியும் சுந்துவும் ஒரே நேரத்தில் வெளியே வருகிறார்கள். சுந்து வந்து தங்கையிடம் இருந்து கடிதத்தை வாங்கிக் கவனமாகப் பிரித்துப் படிக்கிறான்.அதில் அவன் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் படிப்பதற்குத் தேர்வாகி இருப்பதாகவும் வரும் திங்கள் கிழமை குறிப்பிட்ட ஆவணங்களுடன் வந்து சேந்து கொள்ளும்படி தெரிவிக்கப் பட்டிருந்தது.அதை அறிந்ததும் அவர்களுக்கு மிகவும் சந்தோசமாய் இருக்கு. அம்மா நான் இந்த நல்ல செய்தியை வாமனிடம் போய் சொல்லிப்போட்டு வாறன்.இதைக் கேட்டதும் அவன் மிகவும் சந்தோசப்படுவான் என்று சொல்லிவிட்டு தாயைப் பார்க்க அவளும் இருடா வாறன் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று கொஞ்ச பணம் எடுத்துவந்து மகனிடம் குடுக்கிறாள். பணத்தை வாங்கியதும் சுந்து சந்தோசத்துடன் சைக்கிளில் சிட்டாய்ப் பறக்கிறான்.இதை பார்த்த பூவனம் அம்மா இவங்கள் குடிக்கப் போறாங்கள், நீ வேற அவங்களுக்கு காசு குடுக்கிறாய்.... நீ சும்மா இருடி அவங்கள் என்னண்டாலும் செய்யட்டும். அங்க படிக்கப்போனால் இனி எப்ப அவனைப் பார்க்கபோறோமோ....நீ போய் அடுப்பில மா அவிய வைத்தனான் என்னெண்டு போய்ப் பார்....நான் ஒருக்கால் கனகத்தைப் பார்த்துட்டு வருகிறேன்.....பக்கத்து வீட்டுக்கு நடந்து செல்கையில் அவளின் மனம் கணக்குப் போடுகிறது. இன்று வெள்ளி அடுத்து சனி,ஞாயிறு பின் திங்கள் வந்துடும்.இதற்குள் பணத்துக்கு என்ன செய்வது. இப்ப ஒரு இரண்டாயிரம் இருந்தால் கூட போதும் பிறகு பார்த்து நிலத்தை ஈடு வைத்து எண்டாலும் பிள்ளையின் படிப்புக்கு உதவ முடியும். அவன் படித்து ஆளாயிட்டான் என்றால் எங்கட பஞ்சம் தீர்ந்திடும்.அதுக்குள் இவளின் சம்பந்தம் வேற நான் முந்தி, நீ முந்தி என்று நிக்குது.எல்லாவற்றையும் நினைக்க நினைக்க மயூரிக்கு மண்டை விறைக்குது. அங்கு வீட்டு வாசலில் கனகம் நிற்பதைக் கண்டு விரைவாக நடக்கிறாள். வாமு வீட்டை போன சுந்து அங்கு அவனைக் காணாது அவனின் தாயிடம் விசாரிக்க அவவும் அவன் அரசு விதானையார் கூப்பிட்டு போயிட்டான். இப்ப வரும் நேரம்தான் நீ உந்த வாங்கில இரு தம்பி. நான் தேத்தண்ணி போட்டுக்கொண்டு வாறன் என்று உள்ளே போகிறாள். சிறிது நேரத்தில் வாமுவும் சைக்கிளில் வந்து இறங்குகின்றன். அவனைக் கண்டதும் ஓடிச்சென்று வாமுவைக் கட்டிப்பிடித்த சுந்து தனக்கு பல்கலைக்கழகத்துக்கு வரச்சொல்லி கடிதம் வந்திருக்கு என்று சொல்லிவிட்டு சட்டென்று அமைதியாகின்றான்.அவனின் முகவாட்டத்தைப் பார்த்த வாமு என்னடா சொல்லு என்று கேட்க அவனும் வாற திங்கள் போகவேணும் இன்னும் இரண்டு நாள்தான் இருக்கு அதற்குள் பணத்துக்கு என்ன செய்யிறதென்றுதான் யோசிக்கிறன். எட மடையா, அதெல்லாம் வெல்லலாம், நீ ஒன்றுக்கும் யோசிக்காத.நீ இருந்து தேத்தண்ணியைக் குடி நான் உடுப்பு மாத்திக்கொண்டு வாறன் என்று உள்ளே போகிறான்.சிறிது நேரத்தில் இருவரும் தாயிடம் சொல்லிக்கொண்டு சைக்கிள்களில் வெளியே போகின்றார்கள். அந்த ஊரில் இருக்கும் ஒரேயொரு பாரில் சுந்து ஒருபோத்தல் சாராயம் வாங்கப் போக வாமு அவனிடம் கணக்க வேண்டாம் அரைப் போத்தல் வாங்கு போதும் என்று சொல்லி அரைபோத்தல் சாராயமும் இரண்டு பிளாஸ்டிக் கப்பும் அத்துடன் குடல் கறியும் வாங்கிக்கொண்டு வருகிறான். இருவரும் அங்கிருந்த சிறு மேசையில் அமர்ந்து கொள்கிறார்கள். பக்கத்தில் ஒரு மேசையில் நாலுபேர் ஊர் உலகத்தில் நடக்கிற பல விஷயங்களையும் கதைத்து சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். சுந்துவும் போத்தலை எடுத்து உள்ளங்கையில் ரெண்டு குத்து குத்தி மூடியிலும் குத்திவிட்டு மூடியைத்திருக அதுவும் மெல்லிய இழை தளர்ந்து புதுமணப்பெண்போல் முனகிக் கொண்டு திறந்து கொள்கிறது.ஒரு சுகந்தமான வாசனை அவர்களைச் சூழ்ந்து கொள்கிறது. அப்படியே அந்தப் பொன்னிறத் திரவத்தை இரண்டு கிளாஸ்களிலும் பாதி பாதியாக ஊற்ற வாமுவும் பக்கத்து மேசையில் இருந்து தண்ணி வாங்கி அதில் கலந்து விடுகிறான்.இருவரும் ஆளுக்கொரு மிடறு குடிக்கிறார்கள்.பின் வாமு பொக்கட்டில் இருந்து சிகரெட் பெட்டியை எடுத்து அவனுக்கும் ஒன்றைக் குடுத்து தானும் ஒன்றை வாயில் வைத்துக் கொண்டு தீப்பெட்டி தேட பக்கத்து கதிரையில் இருந்தவர் இங்காலுப்பக்கம் திரும்பாமல் தன்னிச்சையாய் தனது சிக்ரெட்டை நெருப்புடன் இவனிடம் தருகிறார். வாமனும் அதை வாங்கி தன் வாயில் இருந்த சிக்ரெட்டைப் பற்றவைத்து சுந்துவிடம் குடுத்துட்டு அவனிடமிருந்த சிக்ரெட்டை வாங்கி தான் பத்தவைச்சுக்க கொண்டு அவரிடம் அவருடையதைக் குடுத்து விடுகிறான். 🦚 மயில் ஆடும் ........!
    9 points
  25. புலம் பெயர்ந்த மக்கள் தொகையில் கால் பங்கு உயிராபத்தை தவிர்க்க இருக்கும் வசதியை கொண்டோ எவர்கிட்டையாவது கடன் வாங்கியோ மேற்குலகம் நோக்கி நகர்ந்தவர்கள் என்றால் மீதி முக்கால் பங்கு நிச்சயமாக வசதியான வாழ்வை தேடி புலம்பெயர்ந்தவர்களே அதில் மறுப்பதற்கு ஏதுமில்லை. இங்கு வேலை செய்துகொண்டு தனிமனிதனாக வாழும்வரை வாகனம் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டமாய் வாழலாம் மறைக்க ஒன்றுமில்லை. தாயகத்திலும் அதே நிலைதான் தனி ஒருவனாக வாழும்வரை நட்பு வட்டம் வாகனம் ஆட்டம் பாட்டம் பொழுதுபோக்குதான் பிரச்சனைகள் ஆரம்பிப்பது ஒவ்வொரு மனிதனுக்கும் குடும்பம் என்று ஆகும்போதுதான். தாயகத்திலிருப்பவர்களுக்கும் இங்கு இருப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம் இங்குள்ள அடிப்படை வசதிகளே இலங்கையில் மிக பெரும் கோடீஸ்வரர்கள் அனுபவிக்கும் ஆடம்பர வசதிகள். அதற்காக அதனை ஆடம்பர வாழ்க்கை என்றோ அல்லது வசதியான வாழ்வென்றோ கருதினால் அவற்றை ஒதுக்கி வாழ முற்பட்டால் ரயில் நிலையங்களிலும் வணிக வளாகங்களின் ஓரங்கள், பாலங்களின் அடியில்தான் குடும்பத்துடன் தூங்கவேண்டும். கார் வைத்திருப்பதினால் இங்கு ஒருத்தன் ஆடம்பர வாழ்வை சுவைப்பவன் என்று ஆகிவிட முடியாது , கார் இல்லையென்றால் இங்கு ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவைக்கான பயணங்களின்போது அவன் பாதிநாள் தெருவிலேயே கழிந்துவிடும். ஒருவாரம் வேலைக்கு போகாவிட்டால் ஒவ்வொரு சாதாரண மனிதனுக்கும் அதனால் ஏற்பட்ட பண நெருக்குவாரம் தொடர்கதையாகவே செல்லும், ஏனென்றால் சாதாரண வேலை பார்ப்பவர்களுக்கு மேலதிக வருவாயை ஈட்டுவது என்பது சுலபமான காரியமல்ல , அதைவிடுத்து வருத்தின் 60%மான காலம் வாழ்க்கையோடு போராடிக்கொண்டு காலநிலையுடனும் போராடவேண்டும், இந்த இரண்டுடனும் போராடிக்கொண்டே தாயக போராட்ட காலத்திலும், பிற்பட்ட காலத்தில் தம்மால் முடிந்த அளவிற்கு உதவிக்கொண்டும் இருப்பவர்கள் ஏராளம் ஏராளம், எடுத்த எடுப்பில் நாம் ஒரு முடிவாக வார்த்தைகளை வீசினால் நிச்சயம் அது பலரின் உயர்வான எண்ணத்தை உதவும் குணத்தை ஏளனபடுத்தும் செயலாகவே அமையும். இங்கே வணிகம் செய்து வாழ்பவர்கள் அனைவருமே பணத்தை மூட்டை கட்டி வைத்திருப்பவர்களல்ல, பெரும்பாலானோர் பண புரட்டல் வண்டி ஓட்டுகிறவர்கள் அவர்கள் வாழ்வு தனி மனிதரைவிட மிகவும் அபாயமானது எந்த நிமிடம் வேண்டுமானாலும் மீளவே முடியாத அதல பாதாளத்தில் சிக்கி கொள்ளும் நிலை வரலாம் மாணவர்களாயிருப்பவர்களும், கல்வியினால் தொழில் வாய்ப்பு பெற்றவர்களினதும் நிலமை மிகவும் இக்கட்டானது சாதாரண மக்களாவது நிதி நெருக்கடி என்று வரும்போது எந்த கடினமான தொழில் என்றாலும் இறங்கி செய்து வண்டியோட்ட முயற்சிப்பார்கள், ஆனால் மேற்குறிப்பிட்டவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்துகொண்டு நெஞ்சுக்குள் இடி இடிக்க யோசித்துக்கொண்டு நிற்பார்கள், இங்கே ஏற்ற குறைவாய் யாரையும் குறிப்பிடவில்லை, அவர்கள் வாழ்வு முறையும் உடல் தகுதியும் ஒத்துழைக்காது என்பதையே குறிப்பிட்டேன். இத்தனையும் கடந்தும் சுமந்தும்தான் இங்குள்ளவர்கள் தாயக மக்களையும் மனதில் நினைத்து செயல்படுகிறார்கள், இலங்கைதமிழரின் சூடு சுரணையான போராட்டங்கள் மெளனித்தபோதும் இன்றுவரை இலங்கை அரசு பயப்படும் ஒரேயொரு திசை புலம்பெயர்ந்தவர்கள் நோக்கித்தான், அதற்கு காரணம் அவர்கள் வசதி வாழ்க்கை கிடைத்துவிட்டது என்று தூங்கவில்லை தாம் வாழ்ந்துவிட்டு வந்த மண்ணின் நினைப்பாக சர்வதேச மட்டத்தில் தலைவலி தருகிறார்கள் என்பதுஎம்மைவிட சிங்களவனுக்கு நன்கு தெரியும். கொரோனா காலத்தின் பின்னர் உலக அளவில் அனைத்து நாடுகளில் வாழும் மக்களின் நிலையும் தினமும் போராட்டம்தான், எந்த பொருள் எடுத்தாலும் மூன்று மடங்குவிலை, வீட்டு வாடகை, மின்சாரம், குடிநீர், குடும்ப செலவுகள் என்று அனைத்து கட்டணமும் அதிகரித்து புலம்பெயர் சமூகம் விழி பிதுங்கி நிற்கிறது, ஒவ்வொரு யூரோவும் ம் டாலரும் எண்ணி எண்ணியே செலவிடவேண்டியிருக்கிறது, வெளியே சிரிப்பதுபோல் காட்டிக்கொண்டாலும் ஒவ்வொரு மனிதர் வாழ்விலும் தினமும் பதட்டம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தினமும் ஓட்டம். இத்தனைக்கு மத்தியிலும் கணிசமான மக்கள் தமது முகம் தெரிந்த தெரியாத உறவுகளுக்கு தம்மால் முடிந்ததை உதவிக்கொண்டுதானிருக்கிறார்கள், இலங்கையின் பிற இனத்தவர்களை எடுத்து பாருங்கள் பக்கத்துவீட்டுக்காரன் செத்து கிடந்தாலும் தமிழர்களைபோல் தெரியாத உறவுகளுக்கு கூட தொடர்ச்சியாக உதவும் குணம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள். அப்படி என்றால் இலங்கயில் வந்து வாழலாமே என்று யாரும் கேட்கலாம், இலங்கையில் மட்டும் என்ன வாழ்கிறது? நிச்சயமாக இங்கு வாழ்ந்து இங்கு இறந்துபோவது வசதியான வாழ்வல்ல நிம்மதியான வாழ்வு. ஏனென்றால் சாதி,மதம், அரசியல் இனம், வட்டாரம் மாகாணம் மொழி என்று கீழ்தரமான மோதலில் நிம்மதியில்லாமல் வாழவேண்டிய நிலமை இங்கு ஏறக்குறைய இல்லவே இல்லை, அந்த ஒன்று இருந்தாலே போதுமே மனிதன் உணவு தன்னீருக்கு சிரமப்பட்டாலும் நிம்மதியாய் வாழ்து சாகலாம்.
    9 points
  26. எந்தக் கப்பல் என்றால் என்ன ஒரு நாட்டுக்குள் போகும்போது குறிப்பிட்ட கடல் எல்லையில் இருந்து சிறிய படகில்வந்து எந்த துறைமுகத்துக்கான போட்கப்ரின் என அழைக்கப்படுபவரின் கட்டளைப்படி தான் கப்பல் கொண்டுபோய்க் கட்டப்படும். அதே மாதிரி துறைமுகத்திலிருந்து கப்பலை வெளியே கொண்டு வந்து குறிப்பிட்ட தூரம் வரை கொண்டுபோய் விடுவதும் போடகப்ரனின் பொறுப்பே. இதே கட்டளைகளைத் தான் விமான ஓட்டிகளும் பின்பற்றுகிறார்கள். குறிப்பிட்ட எல்லைக்குள் வந்தால் கொன்றோல்ரவரில் இருப்பவரின் கட்டுப்பாட்டுக்குள் விமானம் வந்துவிடும். இந்தக் கப்பல் வர முதலே கப்பல் பற்றிய சகல தரவுகளும் அந்த துறைமுகத்துக்கு கிடைக்கும்.பெரிய கப்பல் தண்ணீர் போதாது கீழே மேலே முட்டும் என்பது துறைமுகத்தில் உள்ளவர்கள் ஆய்வு செய்து தான் அனுபதிப்பார்கள். சாமானுடன் வந்த கப்பல் வெறுமையாக போனால் பல அடி உயரத்துக்கு எழும்பி நிற்கும். இப்போது அது வந்த பாலத்தை கடக்க முடியுமா என்றதை எல்லாம் துறைமுகத்தவர் கணிக்க வேண்டும்.
    8 points
  27. (குறுங்கதை) ஒரு பொய் ---------------- 'இது மைக்கேல். இன்றிலிருந்து இவர் உங்களுடன் வேலை செய்யப் போகின்றார்' என்று மைக்கேலை ஒரு நாள் வேலையில் எனக்கு அறிமுகப்படுத்தினர். ஆரம்ப நல விசாரிப்புகளின் பின், மைக்கேலை அவனுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த மேசைக்கு கூட்டிச் சென்றேன். மைக்கேல் தனது தோள் பையிலிருந்து ஒரு பெட்டியை வெளியே எடுத்தான். அதனுள்ளே மெல்லிய ஈரமுள்ள கடதாசிகள் ஒரு கட்டாக இருந்தன. மேசை, கதிரை, அவனுக்கு வழங்கப்பட்டிருக்கும் கணினி மற்றும் திரைகள் என்று எல்லாவற்றையும் அழுத்தமாக, சுத்தமாக துடைத்தான். அப்பொழுது தான் ஞாபகம் வந்தது, நாங்கள் இருவரும் இன்னும் கைகுலுக்கவில்லை என்று. நிரந்தரமாக பலர் வேலை செய்யும் அந்த நிறுவனத்தில் சில வேளைகளில் தற்காலிகமாகவும் சிலரை, வேலையின் அளவைப் பொறுத்து, வேலைக்கு எடுப்பார்கள். மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் என்று அவர்களுக்கு வேலை இருக்கும். அதை தாண்டியும் சிலர் இருப்பார்கள். இரண்டு பக்கங்களுக்கும் பிடித்துப் போக, நிரந்தரமாகவே அந்த நிறுவனத்தில் இணைபவர்களும் உண்டு. மைக்கேல் ஆறு மாத வேலைத் திட்டம் ஒன்றிற்காக வந்திருந்தான். வேலையில் அவனின் இடத்தையும், பொருட்களையும் சுத்தப்படுத்துவதற்கு அதிகமாகவே நேரம் எடுத்துக் கொண்டாலும், மைக்கேல் வேலையில் மிகவும் திறமையானவனாக இருந்தான். அவனின் குடும்பம் நீண்ட நாட்களின் முன்னர் சோவியத் ஒன்றியத்தில் இருந்து இங்கு குடி வந்துள்ளனர். அவன் பெரும்பாலான பாடசாலை மற்றும் பல்கலை கல்வியை இங்கே அமெரிக்காவிலேயே கற்றிருந்தான். பொதுவாக என் அனுபவத்தில் நான் கண்ட ரஷ்யர்களுக்கு இருக்கும் அபரிதமான கணித ஆற்றல் அவனிடமும் இருந்தது. ஆனாலும், தான் ஒரு ரஷ்யன் இல்லை என்றும், தான் ஒரு உக்ரேனியன் என்றும் என்னிடம் ஒரு தடவை தெளிவாகச் சொன்னான். அப்பொழுது ரஷ்யா - உக்ரேன் சண்டை ஆரம்பித்திருக்கவில்லை, ஆனால் சோவியத் ஒன்றியம் உடைந்து, இவை இரண்டும் தனித்தனி நாடுகளாக இருந்த காலம் அது. ஒழுங்காக தினமும் நேரத்திற்கு வந்து, மிகவும் நன்றாக வேலை செய்து கொண்டிருந்த அவன் திடீரென இரண்டு நாட்கள் வேலைக்கு வரவில்லை. எங்களுக்கு அறிவிக்கவும் இல்லை. மூன்றாம் நாள் அவனை தொலைபேசியில் கூப்பிட்டேன். உடனேயே தொலைபேசியை எடுத்தவன், தன்னுடைய வீடு எரிந்து விட்டதாக சொன்னான். இங்கு வீடு எதுவும் எரிந்ததாக உள்ளூர் செய்திகளில் நான் பார்க்கவில்லை, ஆதலால் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எரிந்த எல்லா வீடுகளையும் செய்திகளில் காட்ட வேண்டும் என்றும் இல்லைத்தான். பின்னர் வீடு எரிந்திருப்பதை காட்டும் சில படங்களை எனக்கு அனுப்பினான். அதன் பின்னர் ஒரு வாரம் ஒழுங்காக வேலைக்கு வந்தான். அந்த ஒரு வாரமும் நன்றாக வேலை செய்தான். மீண்டும் இரண்டு நாட்கள் அவனைக் காணவில்லை. தற்காலிகமாக வேலைக்கு வருபவர்கள் வராத நாட்களில் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கத் தேவையில்லை என்றாலும், நாங்கள் செய்து முடிக்க வேண்டிய வேலை நிறையவே இருந்தது. மைக்கேலின் திறமையைப் பார்த்து, அவனை வைத்தே அதில் பெரும் பகுதி ஒன்றை முடித்து விடலாம் என்றும் திட்டமிட்டிருந்தேன். அவன் ஒரு தடவை எங்களின் அடுத்த தளத்தில் ஒரு ரஷ்யர் வேலை செய்வதாகச் சொன்னான். நான் எனக்கு அவரை தெரியாது, உனக்கு எப்படி தெரியும் என்று கேட்டேன். அந்த மனிதனின் கண்களை தான் பார்த்ததாகவும், அதில் ஒரு தீராத கோபம் தெரிந்ததாகவும் அவன் சொன்னான். அந்தக் கோபம் ரஷ்யர்களுக்கு மட்டுமே உரியது என்றான். ரஷ்யாவிற்கும், உக்ரேனுக்கும் என்ன வித்தியாசம் என்று அன்று எனக்கு தெரியாது, இரண்டும் ஒன்றே எனக்கு அன்று. நான் ஏன் நீ வேலைக்கு வரவில்லை என்று கேட்க, இவர்களின் தீராத கோபத்தை என் மீது இறக்கி விடுவார்களோ என்று ஒரு யோசனையாகவும் இருந்தது. இந்த தடவை அவனின் கார் களவு போய் விட்டதாக சொன்னான். சில நாட்கள் தொடர்ந்தும் வேலைக்கு வராமல் தன்னுடைய காரை தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்னான். அவனின் கார் ஒரு கறுப்பு நிற பிஎம்டபிள்யூ. ஒரு நாள் என்னை தொடர்பு கொண்டு, அவனின் காரை மெக்சிக்கோ எல்லைக்கு அருகே கண்டு பிடித்து விட்டதாகவும், தான் அடுத்த நாளிலிருந்து வேலைக்கு வந்து விடுவதாகவும் சொன்னான். அடுத்த நாளும் அவன் வேலைக்கு வரவில்லை. மீண்டும் அவனே தொடர்பு கொண்டான். இந்த தடவை தான் மருத்துவமனையில் இருப்பதாகச் சொன்னான். என்ன நடந்தது என்றேன். கால் உடைந்து விட்டது என்றான். எப்படி உடைந்தது என்று கேட்டதிற்கு, தான் தன்னுடைய காரை காலால் அடித்ததாகவும், அப்பொழுது வலது கால் பாதம் உடைந்து போய் விட்டதாகச் சொன்னான். இதைச் சொல்லி விட்டு, தனக்கு தன்னுடைய காரின் மேல் கோபம் வந்ததால், காரை உதைத்ததாகச் சொன்னான். இது தான் தீராத கோபம் போல. அவன் இப்படியே ஏதாவது சொல்லி வேலைக்கு வராமலேயே இருந்தான். ஒரு நாள் அவனை வேலையில் இருந்து நிற்பாட்டுவதாக அவனுக்கு செய்தி அனுப்பினோம். சில மாதங்களின் பின்னர், ஒருவர் என்னை தொடர்பு கொண்டார். அவர் தனது பெயர், நிறுவனத்தின் பெயர் மற்றும் தனது பதவி பற்றிச் சொல்லிய பின், 'உங்களுக்கு மைக்கேலை தெரியுமா?' 'ஆ...., நல்லாவே தெரியும்' என்றேன் நான். 'மைக்கேல் எங்களின் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்திருக்கின்றார்.' 'நல்ல விடயம்.' 'உங்களை தான் ஒரு பரிந்துரையாளராக போட்டிருக்கின்றார். நான் உங்களிடம் சில தகவல்களை கேட்கலாமா?' 'நிச்சயமாக, நீங்கள் தாராளமாக கேட்கலாம்.' மைக்கேலின் தொழில்நுட்ப அறிவு, திறமைகள் பற்றியே எல்லா கேள்விகளும் இருந்தன. அதில் மைக்கேலிடம் எந்தக் குறையும் இருக்கவில்லை. உண்மையில் நான் பார்த்தவர்களில் அவன் மிகவும் திறமையானவன். கடைசி கேள்வி: 'மைக்கேல் திரும்பவும் உங்கள் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்தால், நீங்கள் அவனை வேலைக்கு எடுப்பீர்களா?' 'நிச்சயமாக எடுப்பேன்' என்றேன் எந்தத் தயக்கமும் இல்லாமல். இன்றைய உலகில் பொய் கூட ஒரு தயக்கமும் இல்லாமல் வருகின்றது.
    8 points
  28. ஓம் நீங்கள் சொல்லுறது சரி. ஆனால் பிந்திய ஞானோதயத்துடன் இன்று எதிரிகளாலும் மதிக்கப்படும் மதிப்புக்குரிய அமைப்பை சில்லறைத்தனமாக எல்லா இடங்களிலும் இழுக்கக்கூடாது என்பது என் கருத்து. இயக்கத்தை இழுக்காமல் அவருக்கு மட்டும் தனிக்கருத்து எழுதியிருக்கலாம். நீங்கள் புலிகளை இழுத்ததால் அது எல்லோரையும் தாக்கும். 😢
    8 points
  29. வெறுப்பு! *********** அரசமரக் கன்றுகளை அழித்துக்கொண்டிருந்தான் அந்தத்தேசத்து மனிதனொருவன் எத்தனையாண்டுகள் வாழும் மரத்தை ஏன்.. அழிக்கிறாய்யென்றான் வழிப்போக்கன். எனக்கும் கவலைதான் என்னசெய்வது வருங்காலப் பிள்ளைகளும் வாழவேண்டுமே என்று பெரு மூச்சுவிட்டான் அந்த மனிதன். அன்புடன் -பசுவூர்க்கோபி.
    8 points
  30. சர்வதேச மகளீர் தினம்(08.03.2024) அதற்காக எழுதிய கவிதையை இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்சியடைகின்றேன்.நன்றிகள். தாயின்றி நாமில்லை.! ************************ பூமித்தாய் என்று சொல்லும் புவிகூடத்தாய் தானே-வானில் பொட்டதுபோல் சுற்றிவரும் நிலவுகூட பெண்தானே நீலத்தால் சாறிகட்டி நிலம் காக்கும் கடல் அவளும் தாய் தானே நித்திலத்தில் தாய்க்கு நிகர்-எதுவும் இல்லை என்பேன் சரிதானே. சிந்து,கங்கை,யமுனை,சரஸ்வதி சித்தப்பா பிள்ளைகளா? காவேரி,குமரி,கோதவரி,நர்மதா. பெரியப்பா பிள்ளைகளா? இல்லை இல்லை இயற்கை ஈண்றெடுத்த நதித் தாய்கள் இவைகளும் பெண் பெயாரால் உயிர்த்தார்கள். பூமிதன்னில் பெண்ணினமே இல்லையென்றால் போட்டியிடும் ஆண்களெங்கே? பொறுமையெங்கே? ஆணினம்தான் அகிலத்தில் தனித்திருந்தால் அன்பு எங்கே? காதல் எங்கே? இனிமை எங்கே? கற்பனைக்கு பெண் இனமே இல்லையென்றால் கவிஞரெங்கே?கலைஞர் எங்கே? கலைதானெங்கே? கர்ப்பத்தில் எமைத் தாங்கி வளர்க்காவிட்டால் கல்வியெங்கே? கருணையெங்கே? காசினிதானெங்கே? பொன்னுலகம் பெண் இனத்தை மறந்திருந்தால் புதுமையெங்கே,புலமையெங்கே புரட்சியெங்கே? மண்ணகமும் வாழ்வதற்காய் படைத்து தந்த மாதவத் தாய்யினத்தை மதித்து வாழ்வோம். அன்புடன் -பசுவூர்க்கோபி.
    8 points
  31. 27.02.2024, அழைப்பு மணி அடித்தது. கதவைத் திறந்த கிளவ்டியாவுக்கு (65) ஆச்சரியமாக இருந்தது. சிறப்பு அதிரடிப்படையினர் ஆயுதங்களுடன் நின்றனர். அதிர்ந்து போன அவளுக்கு இமைகளை மூடித் திறக்கக் கூட அவகாசம் கிடைக்கவில்லை. அவளது கைகளில் விலங்கை மாட்டிவிட்டார்கள். கிளவ்டியா பெர்னாடி இத்தாலி நாட்டைச் சேர்ந்தவள். கடந்த இருபது வருடங்களாக யேர்மனியில்தான் வாழ்கிறாள். கிழக்கு - மேற்கு யேர்மனியைப் பிரித்திருந்த சுவர் உடைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அருகாமையில், 1962 இல் எந்த இடத்தில் சுரங்கம் அமைத்து கிழக்கு யேர்மனியில் இருந்து மேற்கு யேர்மனிக்கு தப்பிக்க முயன்றார்களோ அதற்கு அருகாமையில் உள்ள செபஸ்ரியான் வீதியில் இருக்கும் குடியிருப்பில் ஐந்தாவது மாடிதான் அவளது இருப்பிடம். அவளுக்குத் துணையாக இருந்தது அவளதுபெரிய வெள்ளை நிறமான ‘மலைக்கா’ என்ற நாய் மட்டுமே! கிளவ்டியா, எல்லோருடனும் மிக அன்பாகப் பழகுவாள். புத்தக வாசிப்புகளில் கலந்து கொள்வாள். அவள் நடன வகுப்பும் நடத்திக் கொண்டிருந்தாள். சிறார்களுக்கு படிப்பும் சொல்லித் தந்தாள். யேர்மனியில் மட்டுமல்ல பிறேஸிலில் நடைபெறும் கார்னிவெல், களியாட்ட விழாக்களில் எல்லாம் ஆர்வத்துடன் பங்கேற்பாள். தான் பங்குபற்றும் நிகழ்வுகளின் படங்களை மறக்காமல் முகநூலிலும் பதிந்து நண்பர்கள் தெரிந்தவர்களுடன் மகிழ்ந்திருப்பாள். “எதற்காக என் கையில் விலங்கு மாட்டியிருக்கிறீங்கள்?” “உங்களைக் கைது செய்யிறதுக்கு மட்டுமல்ல, உங்களின்ரை வீட்டைச் சோதனை செய்யிறதுக்கும் எங்களுக்கு அரச சட்டத்தரணி அனுமதி தந்திருக்கிறார்” கிளவ்டியாவின் புருவம் மேல் ஏறி கீழ் இறங்கியது. “நான் நினைக்கிறன், நீங்கள் விலாசம் மாறி வந்திருக்கிறீங்கள் எண்டு” “இல்லையே. செபஸ்ரியான் வீதி, இலக்கம் 73, ஐந்தாம் மாடி, கிளவ்டியா பெர்னாடி எல்லாமே சரியாகத்தானே இருக்கிறது” கிளவ்டியாவை, பொலீஸ் வாகனத்தில் ஏற்றும் போது, அவளது கையில் விலங்கு மாட்டிய பொலீஸ் அதிகாரி அவளிடம் கேட்டார், “ உங்களுக்கு டேனிலா கிளெட்டைத் தெரியுமோ? முப்பது வருடங்களாக அவரைத் தேடிக் கொண்டிருக்கிறோம்” என்று. இடதுசாரித் தீவிரக் கொள்கையைக் கொண்ட செம்படை அமைப்பு (Red Army Faction) யேர்மனிய அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்திருக்கிறது. மூன்று தசாப்தங்களாக, கொலைகள், கடத்தல்கள், கொள்ளைகள் என செம்படையின் செயற்பாடுகள் தொடர்ந்திருக்கின்றன. அதிலும், குறிப்பாக 1977இன் பிற்பகுதியில் அவர்களது செயற்பாடுகள் மிகவும் மோசமாக இருந்திருக்கின்றன. அந்தக் காலத்தை யேர்மனியின் 'இலையுதிர் காலம்' என்று யேர்மனியில் அடையாளப் படுத்தியிருக்கிறார்கள். இந்தச் செம்படை அமைப்பில்தான் டேனிலா கிளெட் இருந்தாள். அவளது தாயார் ஒரு பல் வைத்தியர். போதுமான வருமானம். நிறைந்த வாழ்க்கை. டேனிலா கேட்பவை எல்லாம் வீட்டில் கிடைத்தன. ஆனாலும் அவள் விரும்பியது ஒன்று அவளுக்குக் கிடைக்கவில்லை - அது எல்லோருக்குமான ‘சம உரிமை’. அதற்காகத்தான் படிப்பு, குடும்பம், ஆடம்பரமான வாழ்க்கை எல்லாவற்றையும் விட்டு விட்டு அவள் தன்னை செம்படையில் இணைத்துக் கொண்டாள். 20 ஏப்ரல் 1998 அன்று, ஜெர்மனிய மொழியில் தட்டச்சு செய்யப்பட்ட எட்டுப் பக்கங்கள் அடங்கிய செய்தி ஒன்று ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தொலைநகல் மூலம் வந்திருந்தது. அதில் செம்படை கலைக்கப்பட்டுவிட்டதாக RAF இன் இலச்சினையுடன் கையொப்பமும் இடப்பட்டிருந்தது. அதன் பிறகு யேர்மனி, தனது இளவேனிற் காலத்தை அனுபவிக்க ஆரம்பித்தது. ஜூலை 30, 1999இல் ஒரு கோடை காலத்தில் செம்படையின் சில நடவடிக்கைகள், அவர்கள் இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறார்கள் என்று அடையாளம் காட்டின. அந்த வருடத்தில், டியூஸ்பேர்க் நகரத்தில் நடந்த ஒரு கொள்ளையில் செம்படை உறுப்பினர்களான, எர்ன்ஸ்ட்வோல்கர் ஸ்டாப், புர்ஹாட் ஹார்வெக், மற்றும் டேனிலா கிளெட், ஆகிய மூன்று பேரும் அந்தக் கொள்ளையில் ஈடுபட்டதற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. பணப் பரிமாற்றம் செய்யும் வாகனத்தில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான பணம் கொள்ளை இடப்பட்டதாக பொலீஸ் அறிக்கை வெளிவந்தது. யேர்மனியப் பொலீஸாரால் கொள்ளையிடப்பட்ட பணத்தை மீட்கவும் முடியவில்லை, அந்த மூன்று பேர்களையும் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. அந்தக் கொள்ளைக்குப் பிறகு, நீண்ட காலமாக எந்தவிதமான சம்பவங்களிலும் RAF அமைப்பின் உறுப்பினர்களாக இருந்த எவரும் எந்தச் செயலிலும் ஈடுபட்டதாகத் தகவல்களும் வெளிவரவில்லை. 2016, மே மாதம் 25ந்திகதி, மீண்டும் ஒரு பணப் பரிமாற்றம் செய்யும் வாகனத்தைத் தாக்கி 400,000 யூரோக்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. தலைமறைவாக வாழும் செம்படை உறுப்பினர்களுக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் இந்த முறையிலான கொள்ளைகளில் அவர்கள் ஈடுபடுகிறார்கள் என்பது தெளிவானது. இந்தக் கொள்ளைகளை நிறுத்துவதற்காக, எர்ன்ஸ்ட்வோல்கர் ஸ்டாப், புர்ஹாட் ஹார்வெக், மற்றும் டேனிலா கிளெட் ஆகிய மூவரைப் பற்றிய புகைப்படங்களுடன் அவர்கள் பற்றிய விபரங்களையும் வெளியிட்டு தகவல் தருவோருக்கு 150,000 யூரோக்கள் தருவதாக யேர்மனியப் பொலீஸ் திணைக்களம் அறிவித்தது. பலன் கிடைக்கவில்லை. ஆனால் கொள்ளைகள் தொடர்ந்து இடம்பெறவில்லை என்பது ஆறுதலாக இருந்தது. PimEyes, இரண்டு போலந்து நாட்டு அறிவியல் பட்டதாரிகளால், 2017 இல் வடிவமைக்கப்பட்ட ஒரு கணினி மென்பொருள். PimEyes மென்பொருளில் ஒரு புகைப்படத்தைக் கொடுத்தால், அது எவ்வளவு பழமையானதாக இருந்தாலும் கூட, சில விநாடிகளிலே அந்தப் படத்தில் உள்ளவரின், கண்ணின் குழிகள், கன்னத்தின் எலும்புகளின் உயரம், வாயின் பக்கங்கள் போன்றவற்றை அளவிட்டு அவரையோ, அல்லது அவரை மிக ஒத்த புகைப்படங்களையோ வெளிக் கொணர்ந்து விடும். இன்று அநேகமானவர்கள் தங்கள் படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதால், PimEyes மென்பொருள் இலகுவாக செயற்பட அது வாய்ப்பாக அமைகிறது. தங்களது ஆபாசப் படங்களையும், தேவையில்லாத சில புகைப்படங்களையும் இணையத்தில் இருந்து அகற்றுவதற்காக இந்த மென்பொருளைப் பலர் பயன்படுத்துகிறார்கள். மூன்று மாதங்களுக்கு முன்னர், ஊடகவியாலாளரான மைக்கேல் கோல்போர்ன், தற்செயலாக தேடப்படுபவர் பட்டியலில் இருந்த டேனிலா கிளெட்டின் படத்தைக் கண்டு, PimEyes மென்பொருளில் அதைத் தரவிட, அது முகநூலில் இருந்த டேனிலா கிளெட்டின் பல புகைப்படங்களை வெளிக் கொணர்ந்தது. ஆனால் அவை இத்தாலி நாட்டைச் சேர்ந்த கிளவ்டியா பெர்னாடியின் புகைப்படங்களாக இருந்தன. பொந்துக்குள் பதுங்கியிருந்த பாம்பு ஒன்று, வெளியே வந்து, தான் எடுத்த படத்தை முகநூலில் போட்டு ஆடப் போய் மாட்டிக் கொண்டது. ‘பதுங்கி வாழ்வார்கள்’ என்று பொலிஸார் நிலத்தடியில் தேடிக் கொண்டிருக்க அவர்கள் வெளி உலகில் சர்வசாதாரணமாக வாழ்ந்திருக்கிறார்கள். கிளவ்டியா பெர்னாடி, “ எதற்காக என் கையில் விலங்கு மாட்டியிருக்கிறீங்கள் ?” என்று கேட்டதற்கு பொலீஸார் பதில் சொல்லாமல் இருந்ததற்கு காரணம் இப்பொழுது புரிந்திருக்கும். கிளவ்டியா பெர்னாடி வீட்டில் இருந்து கைப்பற்றப் பொருட்களின் பட்டியல், துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள், கைக்குண்டுகள், பெருமளவு பணம், 1200 கிராம் தங்கம் என நீண்டு கொண்டிருக்கிறது. நாட்டை, பெயரை மற்றினாலும் கைரேகையை மாற்ற ஒருவரால் முடியாதுதானே. பெரியளவில் விளம்பரப் படுத்தப்பட்டு யேர்மனி முழுதும் தேடப்பட்ட ஒருவர், யேர்மனியின் தலை நகரமான பேர்லினில் அதுவும் பலர் வந்து பார்த்துப் போகும் பிரபலமான இடத்தில் மிகச் சாதாரணமாக இருபது ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து கொண்டிருந்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சாதாரணமாக யேர்மனியில், 65 வயதில் ஓய்வூதியம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கிளவ்டியா பெர்னாடி என்கின்ற டேனிலா கிளெட்டின், 65 வயதில் சிறைக்குப் போகிறார். பொலீஸ் திணைக்களம் அறிவித்ததன்படி ஊடகவியாலாளரான மைக்கேல் கோல்போர்னுக்கு 150,000 யூரோக்கள் கிடைக்கத்தானே வேண்டும். 'எர்ன்ஸ்ட்வோல்கர் ஸ்டாப், புர்ஹாட் ஹார்வெக் இருவரும் பேர்லினில்தான் இருக்கிறார்கள். அவர்களைத் தேடுகிறோம். விரைவில் கைது செய்துவிடுவோம்' என்று ஒவ்வொரு நாளும் காலையில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
    8 points
  32. மயிலிறகு............ 11. மூவரும் வீட்டிற்குள் வருகிறார்கள். மயிலம்மா கேட்கிறாள் நீங்கள் ஆடுகள் கோழிகள் விக்கிறனீங்களோ என்று. ஓம் அக்கா ஏன் என்று கேட்க சிலநேரம் வீட்டு விசேசங்களுக்கு தேவைப்படும் அதுதான் விசாரிச்சானான். அங்கு ஒரு மூலையில் பெட்டியில் விசேஷ சாராயங்கள் இருக்குது.வாமன் அவற்றைப் பார்ப்பதைக் கண்ட அஞ்சலா வேணுமென்றால் ரெண்டு போத்தல் எடுத்துக் கொண்டு போ என்கிறாள். அவன் தயங்குவதைப் பார்த்து தானே எழுந்து சென்று ரெண்டு போத்தல் எடுத்து வந்து அவனிடம் தருகிறாள். பின் அவர்கள் அங்கிருந்த ஆச்சியிடம் சொல்லிவிட்டு அவளிடம் விடை பெற்றுக்கொண்டு செல்கிறார்கள். போகும்போது ரொம்ப நன்றி பிள்ளை ஏதாவது உதவிகள் தேவையென்றால் யாரிடமாவது சொல்லியனுப்பு நாங்கள் வந்து செய்து தருகிறோம். வெளியே மாலைச் சூரியனின் பொன்னிற வெய்யில் இதமான சூடாக இருக்கின்றது. இருவரும் தங்கள் வந்த வேலை முடிந்த மகிழ்ச்சியில் கதைத்துக் கொண்டு பழையபடி சைக்கிளில் வருகின்றார்கள். என்னடா உன்ர உடுப்புகள் அவியவிட்ட நெல்லுமாதிரி நாறுது.அது மயிலம்மா அந்தப் பம்மில் இருந்து திடீரென்று தண்ணி பாய்ந்து வந்ததா அந்தப் பெட்டை பயந்து என்னையும் தள்ளிக்கொண்டு சாக்குகளுக்கு மேல விழுந்திட்டுது.அதால சாக்கெல்லாம் ஈரமாகி நாங்களும் நனைஞ்சிட்டம். அதுதான் இப்ப காத்துக்கு காய காய மணக்குது. கெதியா வீட்டுக்கு போய் குளத்திலே முழுக வேண்டும் என்று சொல்லிக்கொன்டு வருகிறான். அப்போது எதிரில் வந்த டிப்பர் லொறிக்கு வழி விட்டு ஒதுங்க அது வீதிப் பள்ளத்தில் இருந்த வெள்ளத்தால் இவர்களைக் குளிப்பாட்டிவிட்டு போகின்றது. சடுதியாக அவள் லொறிக் காரனைத் வாயில் வந்தபடி திட்ட வாமன் வாய்விட்டு சிரித்துக் கொண்டே என்ன மயிலம்மா இப்ப எப்படி இருக்கு என்று சொல்ல ....சீ .....சும்மா போடா, சிரிச்சி எண்டால் கொன்னுடுவன் என்கிறாள் செல்லக்கோபத்துடன். வரும் வழியில் ஒரு ஆற்றுப்பாலம் குறுக்கிட எட அந்த ஆற்றங்கரைக்கு விடு கொஞ்சம் கை கால்களை சுத்தமாக்கிக் கொண்டு போவம் என்கிறாள்.அவனும் வீதியில் இருந்து சரிவில் சைக்கிளை இறக்கி ஆற்றங்கரையில் நிப்பாட்டி இருவரும் இறங்குகின்றார்கள். ஆற்றில் தண்ணி குடித்துக் கொண்டிருந்த மாடுகள் இரண்டு இவர்களைத் திரும்பிப் பார்த்து விட்டு மீண்டும் நீரருந்துகின்றன. வாமன் சாறத்தையும் சேர்ட்டையும் கழட்டி கரையில் போட்டுவிட்டு ஆற்றுக்குள் பாய்ந்து குதித்து நீந்துகிறான்.மயிலம்மாவிம் அங்கு நின்ற பனைமர மறைவில் அடைகளைக் களைந்து பாவாடையை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு கீழே கிடந்த ஆடைகளை எடுத்துக் கொண்டு கரையில் கிடந்த அவனது உடுப்புகளையும் பொறுக்கிக் கொண்டு வந்து நீருக்குள் இறங்கி நின்று கரையில் இருக்கும் கல்லில் அவற்றைப் போட்டு கும்மி நன்றாகப் பிழிந்து அங்கிருந்த பற்றைகளின் மேல் விரித்து காய விடுகிறாள்.பின் மயிலம்மா பாவாடை கிழிசல்களை ஒரு பக்கம் ஒதுக்கிக் கொண்டு வந்து ஆற்று நீருக்குள் தன்னை மறைத்துக் கொள்கிறாள். அவளும் நன்றாக நீந்தக் கூடியவளாகையால் நீருக்குள் முங்கி முங்கி நீந்தி மேலே வருகிறாள்.இருவரும் அந்த ஆழமான இடத்தில் மார்பளவு நீரில் இடைநீச்சலில் நின்று கொண்டு கதைத்தபடி உடம்பை கைகளால் உரஞ்சி முதுகு தேய்த்து விட்டு முங்கிக் குளிக்கிறார்கள். ஆற்றுமீன்கள் அவர்களுக்கு இடையில் புகுந்து கொத்திக் கொத்தி கிச்சு கிச்சு மூட்டி செல்கின்றன. ஒரு கட்டத்தில் இருவரும் ஏதேதோ கதைக்கிறார்கள் தவிர அவர்களுக்கு போதை தலைக்கேறி இருக்கு. மெல்ல மெல்ல பாறைக்குள் ஊடுருவிப் போகும் வேர் ஆங்காங்கு விரிசல்களை ஏற்படுத்தி நின்று நின்று போவதுபோல் விரல்கள் நகர்ந்து நகர்ந்து பழத்துக்குள் தங்கிய வண்டுபோல் சிறைப்படுகின்றன. அன்று நடந்த சம்பவம் உடலை சூடேற்ற அவனுக்கு அவள் அஞ்சலாவாகவே தெரிகிறாள். அவளுக்கு ஓர் ஆணின் அருகாமையும் அவனின் ஸ்பரிசமும் நெடிய தோள்களும் அகன்ற மார்புகளும் அவளை அலைக்கழிக்க அவள் அவள்வசம் இல்லை.இருவரும் ஒருவரிடம் ஒருவர் மிகவும் நெருக்கமாகி இருந்தனர்.எப்போது கரையேறினார்கள், எப்படி அங்கு தரைக்கு வந்தார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. ஆற்றுமீன்கள் உலவிய உடலெங்கும் விழிமீன்கள் மேய்கின்றன. கலவியில் கசிந்த வியர்வை ஊர்ந்து உருண்டு புற்களின் வேரில் விழுந்து கலந்து கலைந்து காய்ந்து போகின்றது. "பசுவின் மடிக்குள் இருக்கும் பால் எப்போதும் சூடாகவே இருக்கும், ஒருபோதும் பழுதாகுவதில்லை" அதுபோல் பயன்படுத்தாத காமமும் நினைவுகளின் வெப்பத்தில் உடலுக்குள் கனன்று கொண்டே இருக்கும். மயிலம்மாவிடம் மின்னல் போல் தோன்றிய மின்சாரம் காலங்களை மறக்கடிக்க அதன் வெப்பம் காலாக்கினியாகி அக் காலாக்கினி இருவரின் உடலையும் சேர்த்து எரிக்கின்றது.அஞ்சலா அவனுள் போட்ட விதை விருட்சமாய் விரிகின்றது. மேகம் கறுத்துவர மோகம் பெருகுது. உயிர்கள் ஊசலாட மனங்களும் மானங்களும் துகள்களாகி பறந்து மறைகின்றன.இடைகள் இணைந்து இழைந்து உடைகள் நெகிழ்ந்து தரையில். அந்திக் கருக்கலில் அந்த நான்கு கண்களும் அந்தகன் களாக அங்கும் இங்கும் அலையும் நகக்கண்களின் விழி திறக்கின்றது.அங்கங்கள் தம் ரகசியங்களை இழக்கின்றன.மரம், கிளை, இலை, கிளி எல்லாம் அவனுக்குத் தெரிகின்றது. அவளுக்கு கிளியும் தெரியவில்லை அதன் ஆரம் மட்டுமே தெரிகின்றது.அர்ச்சுனனாய் அவன்மேல் நின்று மலரம்புகளால் தாக்கிக் கொண்டே இருக்கிறாள்.வண்டிடம் தேன் இழந்த மலர் ஒருபோதும் களைப்பதில்லை மாறாக சிலிர்த்து எழுந்து நிக்கின்றது. ஆணும் பெண்ணுமாய் இணைந்து சொண்டை சொண்டால் கொத்தும் குருவிகளாய் மாறி உடலுடன் உடல் முறுக்கி ஊரும் அரவங்களாய் புணர்ந்து ஆயகலைகளில் சில கலைகளைப் பயின்றதால் நரம்புகள் புடைத்து தேகம் களைத்து சிதறிக் கிடக்கின்றனர் இருவரும். சற்று முன் அவள் துகிலுடன் இருக்கக் கண்டு விலகிச் சென்ற தென்றல் இக்கனம் அத் துகில்கள் விலகியது கண்டு அங்கமெங்கும் உரசிச் செல்கின்றது. பழக்கமில்லாதவன் பனை உச்சியில் இருந்து இறங்கினால் அவன் மார்பிலும் முகத்திலும் நிறைய கீறல்களும் சிராய்ப்புகளும் இருக்கும் அவன் உடலும் அப்படி இருக்கின்றது. தன் மார்பைத் தழுவிக்கிடக்கும் அவள் கையைத் தூக்கிப் பார்க்கிறான். அதில் சில நகங்கள் உடைந்துபோய் இருக்கின்றன. பெண்மான் பெற்ற மயில் அம் மானாய் குழல் தோகை விரித்துக் கிடக்கிறாள்.எதிரே வானளாவி நிக்கின்றது மயில் தோகைபோல் ஓலைகளை விரித்தபடி பனைமரம்.அதில் தெரிகிறாள் , "பனையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பணிமலர்ப் பூம் கனையும் கருப்புச் சிலையும் மென் பாசாங்குசமும் கையில் அணையும் திரிபுர சுந்தரி" அவளை அந்தரங்கமாய் தரிசித்த ஆனந்தத்தில் குரல் ஓலமிட தூரத்தில் இருந்து பள்ளியறைப் பூசைக்கு கோவில் மணி ஒலிக்கின்றது ...........! 🦚 மயில் ஆடும்........! 11.
    8 points
  33. பாம் ஸ்பிறிங் பயணத்தின் போது இரு நாட்கள் இந்த தேசிய பூங்காவுக்கும் போனோம்.இந்த தேசிய பூங்கா 795000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது.முழுக்க முழுக்க பாலைவனமாகவே காட்சியளிக்கிறது. ஒரு வருடத்துக்கு 6 அங்குல நீர்வீழ்ச்சியே கிடைக்கிறது.எனவே தண்ணீரில்லாமல் வளரக் கூடிய ஜோசுவா என்கிற மரமே 90 வீதம் நிற்கிறது.இந்தமரம் ஏறத்தாள எமது ஊர் தாளமரம் மாதிரியே இருந்தது. ஜோசுவா மரம் இந்தமரத்திலிருந்து வரும் பழங்களை கூடுதலாக மிருகங்களும் எஞ்சியிருக்கும் சிலதை அங்குள்ளவர்களும் உண்ணுகிறார்கள்.ஒரு வருடத்துக்கு 1-3 அங்குலம் தான் வளருகிறது.ஆனாலும் நீண்ட ஆயுள் உள்ளதாக சொல்கிறார்கள்.ஏறத்தாள 150-200 வயதுவரை வாழக் கூடியது. ஜோசுவா மர பழங்கள். அமெரிக்க தேசிய பூங்காவுக்கு உள்நுழைவதற்கு 30 டாலர்களில் இருந்து பலவிதமான கட்டணங்கள் அறவிடுகிறார்கள். இதில் ஒரு விசேட சலுகையும் தருகிறார்கள்.மூத்த குடிமக்களுக்கென்று வாழும்வரை உபயோகிக்கக் கூடிய மாதிரி 80 டாலருக்கு தருகிறார்கள்.பல வருடங்களுக்கு முன்பே நானும் உறுப்பினராகியுள்ளேன்.இதை உபயோகப்படுத்தும் போது என்னுடன் வாகனத்தில் இருக்கும் அத்தனை பேருமே இலவசமாக உள்நுழையலாம்.இந்த அனுமதி சீட்டு ஒரு கடனட்டை வடிவில் இருக்கும். மகளுக்கு நடைப்பயணம் ரொம்பவும் பிடிக்கும்.எனக்கும் இது சவாலாக இருந்தாலும் பிடிக்கும்.சன்பிரான்ஸ்சிஸ்கோவை சுற்றி ஒரே மலைகளாகவே உள்ளதால் நேரம் கிடைக்கும் போது நடைப்பயணம் தான். ஜோசுவாவிலும் நிறைய நடைபாதைகள் நிறைய உள்ளன.பேரக் குழந்தைகளையும் கொண்டு போனதால் பெரியபெரிய இடங்களை தவிர்த்துக் கொண்டோம்.இளம் பெடிபெட்டைகள் செங்குத்தாக உள்ள மலைகளில் ஏறிக் கொண்டிருந்தனர்.பார்க்கவே கால் கூசியது. இப்படியாக இரண்டு நாட்கள் தேசியபூங்காவில் பொழுதைப் போக்கினோம். முற்றும். https://en.m.wikipedia.org/wiki/Joshua_Tree_National_Park மேலதிக விபரங்களுக்கு மேலே உள்ள சுட்டியை அழுத்தவும்.
    8 points
  34. கனடாவில் கார் களவு.-_ அண்மையில் இரண்டு நாள் கனடா என்று புறப்பட ஆயத்தமானோம்.அயலில் உள்ள நண்பருக்கு பயணம் பற்றி சொல்லி ஏதாவது வாங்கிவரவா என்றேன். நாங்களும் அடுத்த கிழமை போக இருக்கிறோம்.ஆனபடியால் எதுவும் தேவையில்லை.காரில போறீங்கள் கவனமா போட்டு வாங்கோ. எதுக்கும் திரும்பி வரும்போது பஸ்சிலதான் வாறீங்களோ தெரியாது.கார் கொள்ளை தலைரித்தாடுது.எனது தம்பியின் றைவேயில் நின்ற புதுக்காரை சொந்த கார் எடுக்குமாப் போல கொண்டு போட்டாங்கள்.கமராவில் எல்லாம் தெளிவாக விழுகுது.முக மூடிகளை போட்டிருக்கிறார்கள்.இனி யாரைப் பிடிக்கிறது.களவு போய் 3 மாதமாச்சு எந்த தகவலும் இல்லை என்கிறார்களாம். சரி என்று கனடா(மிசிசாக்குவா) போனால் ஸ்ரேறிங் லொக் வைத்திருக்கிறீங்களோ?இஞ்சை கார் களவு சரியான மோசம். பொலிஸ்காரனே சொல்லுறான் வீட்டை உடைத்து கார் திறப்பு கேக்கிறாங்கள்.கார் திறப்புகளை முன்னுக்கே வையுங்கோ என்று. இது எப்படியான பாதுகாப்பென்றே விழங்கவில்லை. இதைவிட காருக்குள்ளேயே திறப்பை வைத்துவிட்டே வரலாமே?வீணாக உடைத்த கதவுகளை யன்னல்களையும் திருத்தத் தேவையில்லை. கனடா உறவுகளுக்கும் இதுபோல ஏதாவது நடந்ததோ? நடந்தா வெட்கப்படாம சொல்லுங்க.
    7 points
  35. பிஞ்சுக் காதல்… பள்ளிப் பருவம் துள்ளித் திரிந்த காலம்.. மெள்ள எட்டிப் பார்த்தது காதல் ஆசை மெல்லத் தூண்டி விட்டான் சினேகிதம்… மெதடித்த மாணவி.. மாதவி நடிகையின் போட்டோக் கொப்பி போற வாற இடமெல்லாம் துப்புத் துலக்கியாச்சு.. என்னவென்று தொடங்குவது அய்டியாவையும் தந்தான் அந்தப் பாவிமகன் முதலில் வெற்றுத் தாளை கசக்கி காலடியில் போடு.. எடுத்தால் வெற்றி உனக்கென்றான்…. காலால் மிதிபட்டு கதியால் வேலிக்குள் கிடந்தது காகிதக் கசக்கல்… மூளையை கசக்கி பிழிந்து எப்பிடியோ பிறந்த நாள் கண்டு பிடிச்சிட்டம்.. பரிசு கொடுக்கும் அய்டியா.. பொடிநடையாய் நடந்து திருமகள் கடையில் கே.ஜி பேனையும் வாங்கியாச்சு… காலடியிலும்….போட்டு கையாலும் எடுத்துவிட்டது பிகர் இனி லைன் கிளீயர்.. அடுத்து ..கைக்குட்டை குடுக்கிற பிளான் நல்ல லேஞ்சி வாங்க நெல்லியடியில் அலைஞ்சு கண்மணியின் கையிலை கொடுத்து ஐ.லவ் யூவும் சொல்லியாச்சு… பதில் சிரிப்பே தவிர…. நோ ...வாய் மொழி… லேஞ்சி கொடுத்தால் காதல் முறியும்..என்பதை லேட்டாத்தான் வாசியாலை பேப்பரிலை…பார்த்தம் சாத்திரம் உண்மைதான்.. இரண்டாம்நாள் இன்னொருவர் மூலம் என் கையில் பேனாவும் லேஞ்சியும்.. ஏனாம் ஏற்கனவே அவவுக்கு லவ்வு இருக்காம்… அப்ப ஏன்… அவரு பசையுள்ள ஆளாம்.. நான்.. கே ஜீ ப்பேனைக்கும் லேஞ்சிக்கும் கடன் பட்ட ஆள்தானே…. எப்படி நான் மாதவிக்கு வலைவிரிக்க மூடியும் காதல் தோல்வியில் தாடி வளர்த்து வாழ்வே மாயம் பாடுவமென்றால் எட்டாம் வகுப்பு படிக்கிற எனக்கு தாடியும் வளருமோ மீசையும் வளருமோ… பிஞ்சுக்காதல்…இல்லை இது பிறரைப் பார்த்து ஆசைப்பட்ட நப்பாசை…. கூடா நட்பால் வந்தவினை பூவரசம் கம்பால் வாங்கித் தெளிந்து.. கொழும்புக்கு பெட்டி கட்டினதுதான்…மிச்சம் (கற் பனையன்றி வேறொன்றுமில்லை)
    7 points
  36. காந்தி கணக்கு ------------------------- 'ஓஷோவைத் தெரியுமா?' அந்தப் பெயரில் ஒரு ஆள் இந்தச் சுற்று வட்டாரத்தில், இந்தக் கூட்டத்தில், என்னுடைய இருபதுக்கும் மேலான வருட பழக்கத்தில் இருந்ததாக ஞாபகம் இல்லை. கால்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிரிக்கெட் இப்படி எந்த விளையாட்டிலும் இந்தப் பெயரில் எவரையும் நினைவில் இல்லை. 'ஓஷோ என்ன விளையாடுகிறவர்?' 'இல்லை, இல்லை, ஓஷோ விளையாடுகிறவர் இல்லை. ஓஷோ ஆசிரமம் வைத்திருந்தார். தாடி வைத்திருந்தார். தத்துவப் புத்தகங்கள் எழுதியிருக்கின்றார்.....' அந்த ஓஷோவா, அந்த தாடி வைத்த ஓஷோ இங்கே இப்பொழுது எதற்காக வருகின்றார் என்று முன்னுக்கு நின்ற புதிய பஞ்சாபி நண்பரை உற்றுப் பார்த்தேன். எனக்குத் தெரிந்த பஞ்சாபி நண்பர்கள் ட்ரக் ஓடுவார்கள், பெரிய தோட்டங்கள் செய்வார்கள், எல்லா விளையாட்டுகளிலும் அசத்துவார்கள். இரவில் நித்திரைக்குப் போகும் முன் தவறாமல் ஒரு கலன் பால் குடிப்பார்கள். இதைவிட மகாத்மா காந்தியைப் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம் கெட்ட கெட்ட வார்த்தைகளால் அவரை திட்டுவார்கள். இல்லையப்பா, அவர் அது செய்யவில்லை என்று நான் காந்திக்காக ஒவ்வொரு முறையும் ஆஜராகி, அந்த வழக்கு இன்னும் ஒரு முடிவில்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது. ஓஷோவைப் பற்றிய விசாரணை இதுவே முதல் தடவை. ஜலியான்வாலா பாக் படுகொலை, பகத்சிங் அவர்களின் தூக்கு தண்டனை மற்றும் இன்னும் சில விடயங்களால் காந்திக்கும் சீக்கியர்களுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருந்து வருகின்றது. காந்தி காலனிய ஆட்சியாளர்களை கண்டிக்காதது மட்டும் இல்லாமல், வெள்ளை இன ஆட்சியாளர்களுக்கு இந்த விடயங்களில் ஆதரவாக இருந்தார் என்ற கோபம் சீக்கிய மக்களிடையே சாம்பல் மூடிய தணலாக இன்றும் தகித்துக் கொண்டிருக்கின்றது. 'ஆ, தெரியும் ஓஷோவை. சில புத்தகங்கள் வாசித்திருக்கின்றேன்.......' ஓஷோவைப் பற்றித் தொடர்ந்தார் புதிய நண்பர். ஓஷோ வாழ்க்கையை அனுபவிக்க சொல்லியிருக்கின்றார், அழகை ரசிக்க சொல்லியிருக்கின்றார், சிரிக்கச் சொல்லியிருக்கின்றார், சிந்திக்கத் தேவையில்லை என்றிருக்கின்றார், இப்படியே வரிசை நீண்டது. நண்பருக்குத் தெளிவான ஆங்கிலம், மன்மோகன்சிங் குடும்பமாக இருப்பாரோ என்றும் ஒரு நினைப்பு வந்தது. 'எங்கேயும் எப்போதும் எப்படி இருந்தாலும், ஆனந்தமாய் இருங்கள்' என்று ஓஷோ சொல்லியிருக்கின்றார் என்றார் புதிய நண்பர். 'மகனே, இப்ப நடந்து கொண்டிருக்கும் இந்தப் போட்டியில் உங்கள் அணி தோற்றால், நீங்கள் நடுவரை படுத்தப் போகும் பாடு இருக்குதே, அது தான் உங்களின் ஆனந்தம்' என்று மனதிற்குள்ளேயே நினைத்துக் கொண்டேன். விளையாட்டில், போட்டியில் தோற்பவர்கள் முதலில் நடுவரைத்தான் குற்றம் சொல்வார்கள், அது கிட்டத்தட்ட ஒரு பொதுவான உலக வழக்காக ஆகிவிட்டது. 'அங்கே பார்' என்றார். அவர் காட்டின திசையில் ஒரு பெண் ஓடிக் கொண்டிருந்தார். கோடைகால இரவு, இன்னும் வெக்கை குறையாத நேரம், அந்தப் பெண் மிகக்குறைந்த, கண்டிப்பாகத் தேவையான உடைத் துண்டுகள் மட்டுமே அணிந்திருந்தார். நண்பர் பார்த்துக் கொண்டேயிருந்தார். தன்னையும் மறந்து, என்னையும் மறந்து விட்டார். நண்பரை மெதுவாகத் தட்டினேன். 'என்ன......' என்று திரும்பினார். 'மகாத்மா காந்தியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?' என்று கேட்டேன்........ ஓஷோவாலும் காந்தியை காப்பாற்ற முடியவில்லை. சில ரணங்கள் தலைமுறைகள் தாண்டியும், தத்துவங்கள் தாண்டியும் காயாமல் காயமாகவே நீடிக்கும் போல.
    7 points
  37. எனக்கே அடையாளம் தெரியாமல் முகத்தில் நன்கு ஐந்து இடங்களில் வீங்கிப்போய் இருந்தது. பிள்ளைகளுக்கு அனுப்புவதற்குப் படமெடுத்து அனுப்பிவிட்டு படத்தை பார்க்கச் சகிக்காது உடனேயே போனில் இருந்து அழித்துவிட்டேன் என்றால் பாருங்களன். அன்றே ஒன்லைனில் வேறு ஒரு தங்குவிடுதியை புக் செய்து போகும்போது வரவேற்பில் நின்றவரிடம் இரவு முழுதும் சரியான நுளம்புக்கடி என்கிறேன். நுளம்பே இல்லையே மடம் என்கிறார். அப்ப இரவு போய் படுத்துப்பாரும் என்றுவிட்டு வெளியேறி அடுத்த தங்குவிடுதிக்குச் சென்று சூட்கேசை வைத்துவிட்டு குளியலறையில் யன்னல் பூட்டக் கூடியதா என்று பார்த்துவிட்டுத்தான் பதிவே செய்தது. அதுமுடிய அறைக்குள் சென்றவுடன் பழைய தங்குவிடுதியின் இணையத்தளத்துக்குச் சென்று உள்ளதை உள்ளபடி விமர்சனம் எழுதி முடித்தபின்தான் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது. அன்று பகல் வங்கிக்குச் சென்று எமது பணத்தைப் பற்றிக் கதைத்தால் அந்த அலுவலை முடிக்க ஆறு நாட்கள் செல்லும் என்றார்கள். அத்தனை நாட்கள் சென்னையிலேயே நின்று என்ன செய்வது? அதனால் எங்காவது போய் வருவோம் என்றால் மனிசன் மதுரை போவோம் என்கிறார். எனக்கும் கீழடியைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் பலநாட்களாக இருக்க, நானும் சம்மதிக்க இருவரும் சென்று ஒரு பயண முகவர் ஒருவரைச் சந்தித்து அன்றைய இரவு பத்து மணிக்கு படுக்கையுடன் கூடிய சொகுசு உந்தில் மதுரை செல்லப் பயணச் சீட்டு எடுத்துவிட்டு மதிய உணவை உண்டுவிட்டு வந்து கொண்டுவந்த கைப்பொதியில் இரு நாட்களுக்கு உரிய உடைகளையும் முக்கிய பொருட்களையும் எடுத்து அடுக்கிவிட்டு படுத்துக் குட்டித் தூக்கம் ஒன்றும் போட்டு எழுந்தால் அப்பதான் மூன்று மணி. வெளியே கடைகளுக்குச் செல்ல மனமில்லை. படம் பார்க்கப் போவோமா என்கிறேன். இங்கே பக்கத்தில சினிமா இருக்கோ தெரியவில்லை என்று மனிசன் பின் வாங்க, வரவேற்பில் போய் கேட்டுக்கொண்டு வாங்கோ என்கிறேன். போன மனிசன் ஐந்து நிமிடத்தில் வந்து பத்து நிமிட நடையில் கிரிஷ்ணவேணி என்ற சினிமா இருக்காம், நாலரைக்குப் படம் இருக்காம் என்கிறார். என்ன படம் என்று எதுவும் கேட்கவில்லை. பெரிய பயணப்பொதியை இரண்டு நாட்களில் திரும்ப வருவோம் என்று கூறி கீழே வரவேற்பில் கொடுத்துவிட்டு கைப்பொதியை இழுத்தபடி செல்கிறோம். போகும் வழியில் உணவகத்தில் மனிசன் பரோட்டவும் நான் பூரியும் உண்டுவிட்டுத் தேனீரும் அருந்தி, இரவு உண்பதற்கு வடை, போண்டா எனச் சில சிற்றுண்டிகளையும் தண்ணீர் போத்தலையும் வாங்கிக்கொண்டு படம் பார்க்கச் செல்கிறோம். நாம் நின்ற இடத்திலிருந்து அரைமணி நேரத்தில் சென்று மகிழுந்தைப் பிடித்துவிடலாம். கோயம்பேடு சந்தைக்கு அருகில் தான் பஸ்கள் தரிப்பிடம் என்று எமக்குச் சொல்லப்பட்டது. அதனால் சாவகாசமாகப் படம் முடிந்து போகலாம் என்று போய் படமும் பார்க்க ஆரம்பிச்சாச்சு. சினிமா என்பதனால் போனின் சத்தத்தையும் நிறுத்தியாச்சு. ஆறரை மணிக்கு இடைவேளையில் மனிசன் சென்று பொப்கோனும் நெஸ்கபேயும் வாங்கிவர, இரசிச்சுக் குடிச்சு மீண்டும் படம்பார்க்க ஆரம்பிக்கிறோம். நாலரைக்கு படம் தொடங்கும் என்று போட்டாலும் 15 நிமிடம் விளம்பரங்களுக்குப் பின்னர்தான் படம் ஆரம்பித்தது. அதனால் இடையில் எத்தனை மணி என்று பார்க்க போனை எடுத்தால் 5 மிஸ்டு கோல்கள். என்ன ஏது என்று பார்த்தால் அப்ப ஏழரை மணி. படம் முடிய இன்னும் அரை மணி நேரமாவது செல்லும். ஏதோ மனதில் பிரையாணம் தொடர்பானதுதான் என்று தோன்ற போனை எடுத்துக் காதில் வைத்து ஏன் போன் செய்தீர்கள் என்று கேட்க, பஸ் கோயம்பேடில் நிக்காது மடம். அதுதான் உங்களையும் பிக் பண்ணிக்கொண்டு போக போன் செய்தோம் என்கிறான் அந்த பஸ்ஸின் ஓட்டுனர். நாங்கள் சினிமா பார்த்துக்கொண்டு இருந்ததில் கேட்கவில்லை. எனக்குப் பதட்டமாகிப் போகிறது. நான் வெளியே வந்து எடுக்கிறேன் என்றுவிட்டு மனிசனிடம் விடயத்தைச் சொல்லி, படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே இருவரும் வெளியே வந்து போன் செய்ய மீண்டும் அதையே சொல்கிறார் ஓட்டுனர். இப்ப எங்கே வந்து பஸ்சைப் பிடிப்பது என்று கேட்கிறேன். கீழாம்பாக்கம் என்ற இடத்துக்கு வரவேணும் என்று கூற எவ்வளவு தூரம் என்று கேட்கிறேன். ஒரு மணி நேரத்தில் வந்துவிடலாம் என்றுகூற எனக்குப் பதட்டமாகிறது. ஒரு மணிநேரம் என்றால் தூரமாகத்தானே இருக்கும் என்று எண்ணியபடி நடக்க, பொறு எங்கட சூட்கேசை எடுத்துக்ககொண்டு வாறன் என்றபடி சினிமாவின் ரிக்கற் கவுண்டருக்கு அருகில் சென்று அங்கு அவர்களிடம் கொடுத்தவற்றை எடுத்துக்கொண்டு வர நான் என்னதை இழுத்துக்கொண்டு போகிறேன். சினிமா அரங்குக்குப் பக்கத்தில் தான் நாம் ரிக்கற்றைப் பெற்ற கடை. இப்ப கடை பூட்டி இருக்கும் என்கிறார் கணவர். எதுக்கும் போய் பார்ப்போம் என்று சென்றால் திறந்து இருக்க எதுக்கு பிழையான இடத்தைச் சொன்னீர்கள் என்கிறேன். என்னம்மா சொல்றீங்க. புரியும்படியா சொல்லுங்க என்கிறார். நான் விபரம் சொல்ல, பக்கத்தில் நின்ற ஒருவர் இப்பல்லாம் பஸ் இங்க நிக்கிறதில்லையே என்கிறார். முகவர் சமாளித்தபடி காலைல புக் பண்ணும்போது இங்கேதான் போட்டிருந்தாங்க. திடீர்னு மாத்தீட்டாங்க என்கிறார். இப்ப எப்பிடிப் போறது என்கிறேன் நான். ஓட்டோவில போங்க என்று கூற ஓட்டோவுக்கு எவ்வளவு என்கிறார் மனிசன். இரவு நேரம் டபுளா கேட்பாங்க என்றுவிட்டு ஒரு ஓட்டோவை நிறுத்த அவ்வளவு தூரம் வரமுடியாது என்கிறான் ஒருவன். நேரம் எட்டுமணியாகிவிட எனக்குப் பதட்டம் ஏற்பட முதலே சரியான இடத்தைச் சொல்லியிருக்கவேணும் என்கிறேன் முகவரைப் பார்த்தபடி. என் கோபம் புரிய நான் உங்களை ஏற்றாமல் போகக் கூடாது என்று இப்பவே சொல்கிறேன் என்றபடி போன் செய்கிறார். அவர் பேசி முடிய அவரை நம்பாமல் எனக்கு போன் வந்த இலக்கத்தை அழுத்தி இன்னும் நாங்கள் ரி நகரில் தான் நிற்கிறோம். வந்துவிடுவோம். என்று கூற உங்களை ஏற்றாமல் பஸ்சை எடுக்கமாட்டேன் மடம், வாங்க. என்றுவிட்டு போனை வைக்க, நீங்கள் தான் ஓட்டோ பிடித்துத் தரணும் என்கிறேன். சரிம்மா என்றுவிட்டு ஓட்டோவை நிறுத்துகிறார். பலரும் வர மறுக்க, ஏன் வரமறுக்கிறார்கள் என்று கேட்கிறேன். அவ்வளோ தூரம் போயிற்று திரும்பிவர சவாரி கிடைக்காட்டி நட்டம் என்று ரொம்பக் கேக்கிறாங்கம்மா என்கிறார். பரவாயில்லை நிறுத்துங்கள் என்றதும் ஓட்டோவை நிறுத்தப் போகிறார். சாதாரணமா ஒரே றபிக் அங்கிட்டுப் போக என்கிறார் எமக்குப் பக்கத்தில் நின்றவர். அப்ப டாக்ஸி பிடித்தால் விரைவாகச் செல்லலாமே என்றுவிட்டு முகவரிடம் டாக்ஸியை அழையுங்கள் என்கிறேன். டாக்சி ஸ்ராண்ட் பக்கத்தில இல்லை. பத்து நிமிடம் அங்கிட்டுப் போகணும். அதுக்கு ஓட்டோலையே போயிடுங்க. இதோ ஒண்ணு வந்திட்டுது என்றபடி ஒன்றை நிறுத்துகிறார். நானும் கணவரும் ஏறி அமர்கிறோம். வரும்
    7 points
  38. நேரான நீண்ட ஒரு நடைபாதை. நேர் என்றால் அடிமட்டம் வைத்து கோடு போட்ட ஒரு நேர். இரண்டு பக்கங்களிலும் அடுக்கி வைத்தது போல வீடுகள் அடுக்கடுகாக இருக்கின்றன. நான் தினமும் கடந்து நடக்கும் வீட்டு வாசல்கள். வாசல்கள் அதன் உள்ளிருக்கும் வீடுகளை மறைத்து வைத்திருப்பது போல, முகங்களும் அகங்களை பெரும்பாலும் மறைத்து வைத்து இருக்கின்றனவோ என்று தோன்றும். அகத்தின் அழகோ அல்லது சிக்கல்களோ முகத்தில் அவ்வளவாக வெளிப்படுவதில்லை. தேடித்தான் கண்டறிய வேண்டியிருக்கின்றது. ***** வாசலும் வீடும் ----------------------- வாசல்கள் அழகானவை ஒழுங்கானவை நேர்த்தியாக அடுக்கப்பட்டவை வாசல்களின் உள்ளிருக்கும் வீடுகள் உள்ளே தலைகீழாக எவ்வளவு புரட்டிப் போடப்பட்டிருந்தாலும் பூந்தொட்டிகள் தொங்கும் செடிகள் கஞ்சல்கள் இல்லாத கால்மிதிகள் வாசலில் அவசரத்தில் பார்த்தால் அநேக வாசல்களும் அழகே நிதானத்தில் பார்த்தால் பல வாசல்களும் ஒன்றே என்றும் எல்லாமே ஒரு ஒப்பனையோ என்றும் தோன்றும் வெகுசில வாசல்கள் பயத்தை தருகின்றன தனித்தவர்களும் துணிந்தவர்களும் அதன் உள்ளே வாழ்கின்றனர் எப்போதும் கரப்பான் மருந்துகள் வைக்கப்பட்டிருக்கும் வாசல்கள் வேரோடி வெடித்து கவனம் இன்றி கைவிடப்பட்ட சில வாசல்கள் ஒரு வாசலில் மண்டையோடும் இருந்தது இன்னொன்று அகலிகையுடன் கல்லாகி இன்று வரை உயிர் கொடுக்கப் போகும் ஒருவருக்காக காத்துக் கிடக்கின்றது வாசல் தாண்டி வீடுகளுக்குள் மனிதர்கள் வருகின்றனர் போகின்றனர் வாழ்கின்றனர் பிரிகின்றனர் குப்பை ஆகின்றன வீடுகள்.
    7 points
  39. மயிலிறகு......... 12. சில நாட்களாக வாமன் மயிலம்மா வீட்டுப் பக்கம் போகவில்லை.அவனுக்கு அதிகமான வேலைப்பளுவும் ஒரு காரணம்.அன்று அரசு விதானையுடன் சென்று இரு சகோதரர்களுக்கான எல்லைப் பிரச்சினையைத் தீர்த்து விட்டு அவர்கள் கோழி அடித்து விருந்து வைக்க சாப்பிட்டுவிட்டு இருவரும் விதானையாரின் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கிறார்கள்.அப்போது விதானையார் ஒரு பேரூந்து தரிப்பிடத்தில் வண்டியை நிறுத்தி இந்தாடா வாமு நான் கனநாளாய் உனக்கு காசு தரவில்லை, இப்ப இதை வைத்துக்கொள் பிறகு கணக்கு பார்த்துக் கொள்ளலாம்.இப்பவெல்லாம் நீ தனியாக சென்று வேலைகள் செய்யுமளவு தேறி விட்டாய். அநேகமாய் இந்த வாரத்தில் கூட உனக்கு வேலைக்கு கடிதம் வந்து விடும். நீ தினமும் தபால்காரரை விசாரித்துப் பார்.இப்ப எனக்கு இங்கால சில வேலைகள் இருக்கு, நீ பேரூந்தில் வீட்டுக்குப் போ என்று சொல்லி விட்டுப் போகிறார். அவன் பேரூந்தை எதிர்பாராமல் வழியில் வரும் சைக்கிள்களிலோ ட்ராக்டர்களிலோ செல்லலாம் என்று நினைத்து நடந்து வருகிறான். அப்படி வரும் வழியில் வட்டி வைத்தி வீட்டை கடக்கையில் ஒரு பெண் ஓடிவந்து அவனை மறித்து அண்ணா உங்களை அம்மா ஒருக்கால் வந்துட்டுப் போகட்டாம் என்று சொல்ல, அவள் அன்று அந்த அம்மா மயங்கி விழுந்த போது ஓடிவந்து ஒத்தாசை செய்த பெண் என்று கண்டு என்ன மோட்டார் வேலை செய்யவில்லையா என்று கேட்கிறான். சீச்சீ அதெலாம் நல்லா வேலை செய்யுது நீங்கள் வாங்கோ என்று சொல்லி முன்னாள் போகிறாள். வீட்டுக்கு வர கேட்டுக்கு அருகில் அஞ்சலா நிக்கிறாள். என்ன பிறகு உன்னை இந்தப் பக்கம் காணேல்ல....சரி....சரி ...உள்ளேவா உனக்கு நன்றி சொல்லத்தான் கூப்பிட்டானான். வேறு ஒன்றுமில்லை என்பதை நமுட்டுச்சிரிப்புடன் கொஞ்சம் அழுத்திச் சொல்கிறாள். எதுக்கு நன்றி......உண்மையிலேயே நாங்கள்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.இக்கட்டான நேரத்தில் நீங்கள் செய்த உதவி பேருதவி. (இருவரும் திண்ணையில் அமர்கிறார்கள். அவளின் தாயார் அருகில் கால்களை நீட்டியபடி வெற்றிலை இடித்து கொண்டிருக்கிறார்). அதை விடுடா ....அதெல்லாம் தொழில். நான் ஒன்றும் சும்மா செய்யவில்லை.வட்டிக்குத்தான் தந்தனான்.இன்னும் காணி உறுதி என்னிடம்தான் இருக்கு மறந்திடாத. இது அதில்லை.அண்டைக்கு நீ வரப்பில் மயங்கி விழுந்த என்ர அம்மாவை தகுந்த நேரத்தில் காப்பாற்றிக் கொண்டு வந்து விட்டதாக இவளும் அம்மாவும் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.அது எவ்வளவு பெரிய உதவி தெரியுமா. அது நான் என்ர அம்மாவாய் இருந்தால் செய்ய மாட்டனா, யாராய் இருந்தாலும் அதை செய்திருப்பார்கள். அவள் அருகில் நின்ற பெண்ணைப் பார்த்து எடி கவிதா, உள்ளே போய் பால் தேத்தண்ணியும் போட்டுகொண்டு பனங்காய் பணியாரத்தையும் ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு வா என்று சொல்ல அவளும் உள்ளே போகிறாள். அம்மா சுகமாக இருக்கிறாவா .....ஓம் இந்த நீரிழிவு வருத்தத்தால கொஞ்சம் கவனமாய் அவவைப் பார்த்துக் கொள்ள வேணும்.ஆனாலும் மனுசி சொல்வழி கேட்கிறேல்ல....ஒளிச்சு வைச்சு இனிப்புகள் சாப்பிடுது. அப்போது வீதியால் ஒரு நாய் போக மோட்டார் சைக்கிள் அருகில் படுத்திருந்த ஜிம்மி ஆக்ரோஷமாய் குரைக்கிறது. ஜிம்மி சும்மா இரு என்று அடக்கிய அஞ்சலா இதுக்கொன்றும் குறைச்சலில்லை அவரைமாதிரி குரைக்கத்தான் தெரியும் ஒரு சதத்துக்கு பிரயோசனமில்லை என்று சொல்ல அது புரிந்ததுபோல் எழுந்து வாலை பின்னங் கால்களுக்குள் மடக்கிக் கொண்டு அப்பால் போகிறது. திண்ணையில் இருந்த மோட்டார் சைக்கிளைப் பார்த்த வாமன் நீங்கள் இது ஓட்டுவீங்களா என்று கேட்கிறான்...... இல்லை சைக்கிள் ஓட்டுவன்.அதில்தான் பாடசாலைக்கும் போய் வந்தனான். உன்ர வேலைகள் எல்லாம் எப்படிப் போகுது......இப்பவும் வேலையாலதான் வருகிறேன். விதானையார் என்னை பேரூந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டுட்டுப் போகிறார். பஸ்ஸை காணேல்ல வந்தால் மறித்து ஏறுவம் என்றுதான் நடந்து வந்தனான். அப்ப இண்டைக்கு உனக்கு நல்ல விருந்து சாப்பாடும் தண்ணியும் கிடைத்திருக்கும் இல்லையா. ....ம்.....அதெல்லாம் கிடைத்ததுதான், ஆனால் இப்ப சாராயம் குடிக்க வெறுக்குது. சும்மா அவங்களுக்காக கொஞ்சம் எடுத்தனான். பின் அந்த மோட்டார் சைக்கிளைப் பார்த்தபடி நீங்கள் இதை விக்கிற எண்ணமிருந்தால் எனக்குத் தருவீங்களா என்று கேட்கிறான். எனக்கு அதை விக்கிற யோசனையில்லை.என்ன இருந்தாலும் அவர் பாவிச்சது.அவற்ர பிள்ளைகளும் இருக்கினம்.அண்டைக்கு ஒருநாள் சரியான மழை அவர் நல்ல வெறியில இந்த சைக்கிளோட சறுக்குப்பட்டு பள்ளத்துக்க விழுந்து எழும்ப முடியாமல் அப்படியே இறந்து போனார்.அப்போது இரவுநேரம் அருகில் யாரும் இல்லை. இதுவும் சேதமாயிட்டுது. பின் உதை அப்படியே கொண்டுவந்து திண்ணையில் விட்டதுதான்.அப்படியே நிக்குது. அதுக்கில்லை ஓரு மோட்டார் சைக்கிள் வாங்கத்தான் பார்த்துத் திரியிறன். ஒன்றும் தோதாக அம்பிடவில்லை. அதுவும் இப்ப வேலையும் அதிகம். அத்துடன் விரைவில் கிராமசேவகர் வேலையும் கிடைத்து விடும்.வெறும் சைக்கிளுடன் அந்த வேலை பார்க்கிறது சிரமம். அதுதான் கேட்டனான். ஓ......இப்பதான் ஞாபகம் வருது, நீ மோட்டார் சைக்கிள் வாங்க வைத்திருந்த காசைத்தான் உன்ர நண்பனுக்கு குடுத்ததாக அக்கா சொன்னவ. உண்மைதான் .....நானும் சுந்துவும் சிறுவயதில் இருந்தே அவ்வளவு பிரியமான நண்பர்கள். அவனளவு எனக்கு வேறு நண்பர்கள் கிடையாது.அப்படித்தான் அவனுக்கும். அவனது படிப்பை விட மோட்டார் சைக்கிள் ஒன்றும் பெரிதில்லை. (அப்போது கவிதா மூவருக்கும் பால்தேநீரும் பணியாரத் தட்டையும் கொண்டு வந்து வைத்து சீனி போடாத தேநீரை ஆச்சியின் அருகில் வைத்த விட்டுப் போகிறாள்). சரி...நீ முதல்ல அதை எடுத்து திருத்தி கொஞ்சநாள் ஓடிப்பார். பின்பு உனக்குப் பிடித்திருந்தால் நான் அக்காவிடம் கதைத்து விட்டு பிறகு விலையைப் பேசிக்கொள்ளலாம். அவன் கண்கள் மின்ன இப்பவே எடுக்கவா........ ....ம் பாரேன் அவற்ரை அவசரத்தை...... சரி போய் எடு. அவன் எழுந்து சென்று அந்த ஹோண்டா 200 மொடல் மோட்டார் சைக்கிளை செல்லமாய் வருடிவிட்டு மெதுவாக உருட்டிக்கொண்டு வந்து முற்றத்தில் நிறுத்தி விட்டு சாவியைப் போட்டு பட்டனை அமுக்கினால் அது இயங்கவில்லை. அதை உதைத்துப் பார்த்தும் ம்கூம்..... பின் அவன் அதன் பெட்டியைத் திறந்து பார்க்க அதற்குள் சாராயப்போத்தல்,மிக்ஸர் பைக்கட், ரெண்டு ஜட்டி, ஒரு வேட்டி துவாய் அவற்றின் அடியில் சில சாவிகள் குறடு,திருப்புளியுடன் சில தாள்காசுகள் சில்லறைகள் என்று இருக்கின்றன.அவன் ஆயுதங்களை தவிர்த்து ஏனையவற்றை எடுத்து அவளிடம் தருகிறான். அவளும் அவைகளை வாங்கிக் கொண்டு இன்னும் எந்தெந்தக் கடங்காரங்களின் வீட்டில் ஜட்டிகளும் வேட்டிகளும் கிடக்குதோ தெரியாது என்று சொல்லியபடி அவற்றை வாங்கிக் கொண்டு உள்ளே போகிறாள்........! 🦚 மயில் ஆடும்.............. 12.
    7 points
  40. இலையுதிர் காலம் எங்கும் உள்ளது தான். நாட்டுக்கு நாடு இது எந்த மாதங்கள் என்பதில் தான் ஒரு மாறுதல் இருக்கும். கொட்டோ கொட்டென்று கொட்டும், அள்ளிக் கொண்டே இருக்க வேண்டியது தான். கொட்டுவதும், பின்னர் துளிர்ப்பதுமாக மரங்கள் இருக்கும். உயிர்களும் போவதும், பின்னர் புதியன வருவதுமாக தெருக்களும் இருக்கின்றன. ** இலை என்றால் உதிரும் -------------------------------------- என்ன அழகு என்று தினம் மாறும் வர்ணங்கள் பார்த்து நிற்க இலைகள் கொட்ட ஆரம்பித்தன வாசல்களும் தெருக்களும் விழுந்த இலைகளால் நிரம்பி வழிந்தன என்றாலும் என் வீட்டில் அதிகம் என்றே தோன்றியது அயல் வீட்டு சருகுகளும் என் வாசலிலேயே ஒதுங்குவது போன்றும் இருந்தது நின்று கூட்டியால் நின்று நின்று கூட்டி அள்ளி அள்ளி குவிக்க அன்றைய பொழுது முடிந்து கொண்டிருந்தது அக்கம் பக்க வீடெல்லாம் குப்பையாக தெருவெல்லாம் சருகாக கிடக்க என் வீடு மட்டும் பளிச்சென்று இருந்தது 'அப்பாடா, முடிந்தது' என்று அண்ணாந்து வானம் பார்த்து நிற்க மெல்லிய காற்று ஒன்று முகம் வருடிச் சென்றது காற்று வந்து கொண்டேயிருந்தது இலைகள் புதிதாக விழுந்து கொண்டேயிருந்தன பொழுது சாய மனமும் சாய இனி இன்னொரு நாள் கூட்டி அள்ளுவோம் என்று சலிப்புடன் அன்று முடிந்தது கனவில் ஒருவர் வந்தார் அரைக்கண் மூடி நீண்ட காது தொங்க இருந்தார் இதுவரை இலையே விழாத பெருமரம் ஒன்றிலிருந்து ஒரு இலை எடுத்து வா என்றார் எடுத்து வந்தால் என் மரத்திலிருந்து இலை விழாமல் இனிமேல் பார்க்கின்றேன் என்றார் நீங்கள் ஓடித் தப்பி விட்டு அதைக் கொண்டு வா இதைக் கொண்டு வா என்கின்றீர்கள், பெருமானே.
    7 points
  41. ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து இருந்தேன். என்ன பார்ட்டி இது,? எதுக்கு அப்பா இதை ஏற்பாடு செய்கிறார்? அப்பா ஏன் ரிஸ்க் எடுக்கிறார்? இது கொஞ்சம் வேறு மாதிரி மாறிவிடும் அல்லவா? என்று மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டாலும் அப்பா சரியாக செய்து முடிப்பார் என்று பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தார்கள். அப்பாமாருக்கு பிடித்த சாப்பாடுகள் மற்றும் குடிவகைகள் அனைத்தும் மேசையில் இருக்கவேண்டும் என்றும் சொல்லியிருந்தேன். எனது மக்கள் மருமக்களுடன் மருமக்களின் தகப்பனார்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம் என்று கண்டிப்பாக சொல்லி விட்டிருந்தேன். அவரவர் மாமனார்களை அழைத்து வரவேண்டியது அந்தந்த மக்களின் வேலை என்றும் பிரித்துக் கொடுத்து இருந்தேன். பார்ட்டி ஆரம்பிக்கும் நேரம் எல்லோரும் வந்து அமர்ந்தார்கள். மேசையில் மக்கள் மற்றும் மருமக்கள் எமக்கு பிடித்த பல உணவுகளை தாமே சமைத்து கொண்டு வந்து வைத்திருந்தார்கள். அத்துடன் பலவகையான குடிவகைகளும் வைக்கப் பட்டிருந்தன. பார்ட்டி ஆரம்பித்தது. இங்கே யாரும் எதுவும் சொல்லக் கூடாது. போதும் என்று கையை காட்டுவது கண் சிமிட்டுவது என்று எதுவும் எவரும் சொல்ல வேண்டாம். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் குடிக்கலாம். மக்களிடம் கேட்டேன் கேள்வி ஏதாவது இருந்தால் கேளுங்கள் பதில் சொல்கிறேன் என்று. சாப்பிட குடிக்க இந்த பார்ட்டி செய்யவில்லை என்று தெரியும் அப்பா. அப்படியானால் ஏதோ வேறு காரணம் இருக்கும் அது என்ன என்று மகன் கேட்டான். அப்பாக்கள் தமக்கு என்று எதுவும் கேட்கமாட்டார்கள். நாங்கள் இறந்த பின்னர் நீங்கள் எங்களுக்கு என்ன செய்தும் பிரயோசனம் இல்லை எனக்கு அவற்றில் நம்பிக்கையும் இல்லை. இன்றைக்கு நீங்கள் விரும்பி உங்கள் கைகளால் சமைத்து பரிமாறி இருப்பதும் எமக்கு என்ன பிடிக்கும் என்று பார்த்துப்பார்த்து வாங்கி மேசையில் வைத்திருப்பதும் தான் எமக்கான படையல். இருக்கும் போது கொடுக்கப்படுவது மட்டுமே சாலச்சிறந்தது. அதுவே தேவையும் கூட. நன்றாக குடித்து வயிராற சாப்பிட்டு சந்தோசமாக விடைபெறும் போது சொன்னார்கள் மறக்க முடியாத அனுபவம் என்று. கலந்து கொண்டவர்கள் என் சம்பந்திமார் மூவர். பார்ட்டியின் பெயர் சம்பந்தி பார்ட்டி. 🙏
    7 points
  42. அண்மையில் Plam Spring California என்ற இடத்தில் போய் 4 நாட்கள் தங்கியிருந்தோம். இந்த தேசம் முழுவதும் பாலைவனமாக காட்சியளிக்கிறது. ஒரு இடத்தில் நன்றாக காற்று வீசக் கூடிய இடத்தில் Windmills Farm என்று சிறிய காற்றாலைகளில் இருந்து பெரிய பெரிய காற்றாலைகள் வரை பூட்டி மின்னுற்பத்தி பண்ணுகிறார்கள். ஒருநாள் இதைப் பார்க்க போயிருந்தோம். அவர்களின் உத்தரவுடன் வாகனத்திலேயே பயணித்தபடி பார்வையிடலாம். அவர்களின் அலுவலகத்துக்குள் போனால் காற்றாலை எப்படி இயங்குகிறது.எவ்வளவு மின்சாரத்தை பெற முடியும்.காற்றே இல்லை என்றால் எப்படி மின்சாரம் வழங்குவது. மிக முக்கியமாக இதில் பிரச்சனை வரும்போது எப்படியெல்லாம் திருத்த வேலைகள் செய்யலாம்.உள்ளே போவதற்கு எப்படி போவது. இதுவரை ஏதோ சும்மா சுற்றுது மின்சாரம் வருகுது என்று தான் நினைத்தேன்.அலுவலகத்தில் இருந்த காணொளியைப் பார்த்தால் தலை சுற்றியது.இதுவரை எண்ணியதெல்லாம் தவிடுபொடியானது. பெரிய காற்றாலையின் அடிப்பகுதியைப் பார்க்கவே எமது ஊர் கிணறுகள் மாதிரி பெரிதாக இருந்தது.பெரிய காற்றாலைகளின் சிறகுகள் தனித்தனியே ஒரு ரெயிலரில் கொண்டு போக முடியாது.இதற்கென்று தனி ரெயிலர்கள் தேவை.அவ்வளவு பெரிதாக இருந்தது. அடிப்பாகத்திலிருந்து ஏதாவது திருத்த வேலைகளுக்கு கீழே இருந்து மேல்தட்டுவரை நிரந்தரமாக ஏணியிருக்கிறது.நமது ஊர் பனை மரங்கள் போல உயரமாக இருந்தது. ஏணியில் ஏறி உள்ளே போனால் பெரிய பெரிய இயந்திரங்கள்.சிறகுகள் பூட்டியிருக்கும் பகுதி கீழே நின்று பார்க்க சிறியதாக இருக்கும்.ஆனால் உண்மையிலேயே இது ஒரு பேரூந்து அளவு இருந்தது.அதற்குள் எப்படியெல்லாம் இயந்திரங்களைப் பூட்டி மின்சாரம் பெறுகிறார்கள். யாருக்காவது இவைகளை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் தவறவிடாமல் போய் பாருங்கள். சிறிய காற்றாலையின் சிறகு. காற்றாலைத் தோட்டத்தின் ஒரு பகுதி. ஓரளவான காற்றாலையின் முழுத் தோற்றம். திருத்த வேலைக்காக உள்நுழையும் பாதை.
    7 points
  43. மயிலிறகு........07. மயூரியும் வாமனும் தனித்து இருக்கிறார்கள்.அப்போது அவனிடம் மயூரி அப்பன் இப்ப கொஞ்சப் பணம் அவசரமாய்ப் புரட்ட வேணும். என்னிடம் கொஞ்ச நகைகள் இருக்கு. பின்னுக்கு இருக்கும் பத்து ஏக்கர் காணியில் ஐந்து ஏக்கர் காணியை எங்காவது ஈடு வைத்து பணம் புரட்டலாம் என்று நினைக்கிறன். நீ என்ன சொல்கிறாய். கொஞ்சம் என்றால் எவ்வளவு தேவைப்படும் உத்தேசமாய் என்று வாமன் கேட்கிறான். எனக்கும் வடிவா சொல்லாத தெரியேல்ல, கல்யாண வீட்டு செலவுகள் உடுப்புகள் நகைகள் என்று, பின் நாலாம் சடங்குக்கு மச்சம் மாமிசம் சமைச்சுக்க குடுக்க வேணும். ஏன் அவையள் கலியானச் செலவில பாதி தரமாட்டினமோ......நான் ஒன்றும் அதுபற்றிக் கேட்கேல்ல.....வாறகிழமை அவையள் வருவினம் அப்ப நீயும் வா இதுபற்றிக் கதைப்பம். அண்ணனும் (கனகத்தின்ர புருசன்) இது போன்ற காரியங்களில் நியாயமாய் கதைக்கக் கூடியவர். எப்படியெண்டாலும் நாங்களும் கையில காசு வைத்திருக்க வேணுமெல்லோ. ஒரு ஐம்பது அறுபதாயிரம் எண்டாலும் கொஞ்சம் சமாளிக்கலாம் பின் மனதுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்து ம்கூம் பத்தாது இப்ப சாமான் சட்டுகள் எல்லாம் விலை கூடிப்போச்சு....கோயிலில் வைத்து தாலி கட்டினாலும்கூட ஒரு லட்சமாவது தேவைப்படும். வாமுவும் யோசித்தபடி ஓம் என்று தலையாட்டுகிறான். அப்பன்.....நீ உந்த விதானையோட எல்லாம் நாலு இடத்துக்கும் போய்வாறனிதானே உனக்கு யாரையும் தெரியுமோ என்று கேட்கிறாள். ஏன் மயூரம்மா உங்களுக்கு அந்த "வட்டி வைத்தி"யின் பொஞ்சாதி நல்ல பழக்கம்தானே, அங்கு கேட்டுப்பார்த்தால் என்ன......நானும் அதை யோசித்தனான்.அவ நல்ல பழக்கம்தான் ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் நான் ஒருநாளும் அவையலிட்டை போய் நின்றதில்லை. அதோட அவையும் அறா வட்டி வாங்குவினம். வட்டி வைத்தியும் செத்துட்டாரெல்லோ அது உங்களுக்குத் தெரியுமோ......ஓம்.....நான் செத்த வீட்டுக்கும் போனானான். கொஞ்ச சனம்தான் அவற்ர சா வீட்டுக்கும் வந்தது. உந்தக் கொடுக்கல் வாங்கலால கனபேர் வரவில்லை. ஒரு மனிதனின் செத்த வீட்டில்தான் தெரியும் அவர் வாழ்ந்த வாழ்க்கை. அது கிடக்கட்டும். எங்களுக்கு குறைந்த வட்டியில் யாரும் தருவினமாய் இருந்தால் நல்லதுதானே. சரி.....நாளைக்கு மதியத்துக்கு மேல் நீங்கள் தயாராய் இருங்கோ ஒரு இடத்துக்குப் போய் கேட்டுப் பார்ப்பம். சரிவந்தால் நல்லது, இல்லையென்றால் மேற்கொண்டு விதானையாரிடம் விசாரிக்கலாம். நான்போட்டு நாளைக்கு வாறன் .....! அடுத்தநாள் வாமு சொன்னபடியே இரண்டுமணிபோல் மயூரியின் வீட்டுக்கு வருகிறான். மயிலம்மாவும் இருப்பதில் நல்லா சேலை சட்டை அணிந்து தயாராக வருகிறாள்.அவள் முன் பாரில் அமர்ந்து கொள்ள வாமன் சைக்கிளை நேராக வைத்தியின் வீட்டுக்கு கொண்டுவந்து மதில் அருகில் நிறுத்தி இருவரும் இறங்குகிறார்கள். அவன் அந்த கேட்வழியே உள்ளே பார்க்க நேற்று பெய்த மழையில் மா மரத்தில் இருந்து நிறைய பூக்களும், பிஞ்சுகளும் கொட்டுண்டு தரை முழுதும் பரவிக் கிடக்கிறது. திண்ணையில் வைத்தியின் மோட்டார் சைக்கிள் நிக்க அதன் அருகில் ஒரு நாய் படுத்திருக்கு. வேற்று மனிதரைக் கண்ட அசுமாத்தத்தில் அது அதிக ஆக்ரோஷமில்லாமல் வீட்டுக்காரரை அழைப்பதுபோல் குரைக்கின்றது. கேட்டை திறக்கப்போன வாமன் கொஞ்சம் தயங்கி நிக்க, நாயின் குரைப்புச் சத்தம் கேட்டு வைத்தியின் இரண்டாம் தாரமாய் இருக்கும் அந்த இளம்பெண் "யாரது" என்று கேட்டுக்கொண்டே வெளியே வருகிறாள். வாமனைக் கண்டதும் ஓ.....நீயா உள்ளேவா, இனி நீ கல்லெறிந்து மாங்காய் அடிக்கத் தேவையில்லை நானே பறித்துத் தருகிறேன் என்கிறாள். அவன் நாயைப் பார்க்க அது ஒன்றும் செய்யாது, பயப்பிடாமல் வா என்று சொல்ல வாமனும் கேட்டைத் தள்ளிக்கொண்டு உள்ளே செல்கிறான். அதுவரை மதில் அருகில் நின்ற மயிலம்மாவும் அவன் பின்னால் வருகிறாள். அப்போதுதான் அவளைக் கண்ட அந்தப் பெண் திண்ணையை விட்டு இறங்கி வந்து வாங்கோ வாங்கோ என்று வரவேற்கிறாள்.மாலை நேரத்துக்கு முன்னான சூரியன் வைரம்போல் ஒளிர்ந்து தகிக்கின்றது. அப்போதுதான் தலைக்கு தோய்ந்து விட்டு வந்திருப்பாள் போல. தலைமுடியின் ஈரம் போக ஒரு துணியையும் அதோடு சேர்த்து முறுக்கி கொண்டை போட்டிருந்தாள். தலையின் ஈரம் தோள்களில் விழுந்து சற்று நின்று கழுத்தால் வடிகின்றது. குரைக்கிற நாயைப் பார்த்து திரும்பி நின்று ஜிம்மி சும்மா இரு என்று அதட்ட அது வெளியே போகின்றது. நீல நிறத்தில் நைலான் சாறியும் அதுக்குத் தோதாய் கருப்பு பிளவுசும் அணிந்திருக்கிறாள். அந்த ப்ளவுஸ் முதுகில் அரை வட்டமடித்து தோள்களில் இருந்து இடைவரை தசைகளின் திரட்சியை எடுப்பாக காண்பிக்குமாப் போல் இறுக்கமாய் இருக்கின்றது. பின் திரும்பி இவர்களை பார்க்கிறாள். அவள் முகத்துக்கு நேரே சூரியன். மார்பில் இருந்து முத்து முத்தாய் உருளும் நீர்த் திவலைகளுக்குள் ஆயிரம் சூரியன்கள். அவைகள் ஒவ்வொன்றாய் மார்புக்கும் அந்த கருப்பு ப்ளவுசுக்கும் நடுவில் இருக்கும் கருங்குழியால் ஈர்க்கப்பட்டு நகர்ந்து மறைகின்றன...........! 🦚 மயில் ஆடும்..........! 07.
    7 points
  44. மயிலிறகு ......... 06. அவர்களுடைய சம்பாஷணை மேலும் தொடர வாமுவும் சுந்துவும் மெல்லமாக கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அப்பொழுது அவர்களின் பேச்சில் "வட்டி வைத்தி"யின் பெயர் காதில் விழ வாமுவும் நண்பனை ஜாடையால் மறித்து அவர்களின் பேச்சைக் கவனிக்கச் சொல்கிறான். அவர்களில் ஒருத்தர் எங்கட வட்டி வைத்தி செத்துட்டார் எல்லோ .....மற்றவர் அந்தக் குத்தியன் என்னெண்டு செத்தவன்.....ஆரும் வெட்டி கிட்டி போட்டாங்களோ என்று கேட்க இன்னொருவர் அவனை யார் வெட்டுறது.அந்தத் தைரியம் இங்கு யாருக்கு இருக்கு.....அது நடந்து ஒருமாதத்துக்கு மேல் இருக்கும், அண்டைக்கு நல்ல மழை அவர் மோட்டார் சைக்கிளில் வேகமாய் வந்திருக்கிறார் அது சறுக்கி ரோட்டுக் கரைப் பள்ளத்துக்குள் விழுந்திட்டுது அவருக்கு மேல சைக்கிள். அடுத்தநாள் விடியலுக்க வேலைக்குபோனவைதான் கண்டு தகவல் குடுத்தவை. துலைவான் எத்தனை பேரிட்ட அறா வட்டி வாங்கி அந்தக் குடும்பங்களை அழிச்சவன். அவன் செத்தது நல்லதுதான் என்று இப்படிப் போகுது கதை......சுந்து வாமுவிடம் என்னடா விஷயம் என்று கேட்க அவர்தாண்டா மாங்காய்க்கு கல் எறிய வந்து துள்ளினார் அந்த வட்டி வைத்தி கொஞ்ச நாட்களுக்கு முன் செத்துட்டாராம். எண்டாலும் பாவம்டா அந்தப் பெண்.சின்ன வயது என்று வாமு சொல்கிறான். பின் இருவரும் வெளியே வருகினம். அப்போது வாமன் தன் பொக்கட்டில் இருந்து ஒரு கவர் எடுத்து சுந்துவிடம் தந்து இந்தா இதை வைத்துக் கொண்டு எதையும் யோசிக்காமல் பல்கலைக்கழகத்துக்கு சென்று கவனமாய்ப் படி. நான் அடிக்கடி சென்று உன் வீட்டைப் பார்த்துக் கொள்கிறேன்.ஏதாவது அவசரம் என்றால் விதானையார் வீட்டுக்கு போன் செய்து கதைக்கலாம். ( அங்கு சில இடங்களில் மட்டும்தான் தொலைபேசி வசதி உண்டு). வாமு நீ என்ர நல்ல நண்பன்டா. நீ உனக்கு மோட்டார் சைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த காசை எனக்குத் தருகிறாய்.எனக்கும் தற்போது வேறு வழியில்லை.உனக்கு என்ன கைம்மாறு செய்யப்போறேனோ தெரியவில்லை. விடுடா அதை....வா நான் உன் வீடுவரை வந்துட்டுப் போகிறேன். திங்கள் கிழமை உன்னை வழியனுப்ப வருகிறேன் என்று சொல்லி இருவரும் சைக்கிள்களில் செல்கிறார்கள். வீட்டுக்கு வந்த சுந்தரேசன் தன் தாயிடம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். வாமன் பணம் தந்தவன், இந்தாங்கோ இதை நீங்கள் கவனமாய் வைத்திருந்து நான் போகும்போது தாருங்கோ என்று சொல்லி மயிலம்மாவிடம் கொடுக்கிறான். அவளும் அதை வாங்கிக் கொண்டு அவன் வரேல்லையே என்று வினவ அவன் என்னோடு வீடுவரைக்கும் வந்திட்டு வேறு அலுவலாய்ப் போகிறான் என்று சொல்லிவிட்டு உள்ளே போகிறான். அட அவன் வந்திருந்தால் ஒரு வாய் தேத்தண்ணி குடிச்சுட்டுப் போயிருப்பான் என்று அவள் சொல்ல கூட இருந்த பூவனம் போம்மா நீயும் உன்ர தேத்தண்ணியும், அவங்கள் நீ குடுத்த காசை வீணாக்காமல் "புல்" அடித்து விட்டு வாறாங்கள்.....சும்மா போடி உனக்கு அவங்களைக் குறை சொல்லாட்டில் செமிக்காது.... ஒரு வழியாக அடுத்து வந்த திங்களில் சுந்தரேசனும் வாமுவுடன் சேர்ந்து சென்று புகையிரதத்தில் கிளம்பி விட்டான். வாமனும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுந்துவின் வீட்டுக்கு சென்று சிறிது நேரம் கதைத்துக் கொண்டிருந்து விட்டு வருவான். இடைக்கிடை விதானையார் வீட்டுப் போனிலும் நண்பனுடன் கதைத்து விட்டு அந்த செய்திகளையும் இவர்களுக்கு சொல்லிவிடுவான்.அப்படித்தான் சுந்து அங்கு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து விட்டதையும் "பகிடி வதை"யெல்லாம் பகிடியாய் போய் இப்ப வகுப்புகள் எல்லாம் நல்லபடியாய் போவதாகவும் சொல்லியிருந்தான். ஆனால் தனக்கு தனியாக நடந்த பகிடிவதைகளின் ரகசியங்களை வாமனிடம் மட்டும் பகிர்த்திருந்தான். வாமனும் அவற்றை யாருக்கும் சொல்லவில்லை. வாமனுக்கும் இப்போதெல்லாம் வேலை அதிகமாகிறது.அரசு விதானையும் அவன் கெதியாய் கிராமசேவகர் ஆகிவிடுவான் என்பதால் அவனுக்கு பலதரப்பட்ட வேலைகளையும் பழக்கி விடுவதில் ஆர்வமாகி அவனைத் தனியாகவும் வேலைகளைக் கவனிக்க அனுப்பி வைப்பதுண்டு.ஆகையால் மயிலம்மாவின் வீட்டுக்கு முன்பு போல் போய்வர நேரம் கிடைப்பதில்லை. அப்படித்தான் அன்று வேலை முடிந்து கிடைத்த நேரத்தில் மயிலம்மா வீட்டுக்கு வந்திருந்தான்.அங்கு மயூரியும் கனகமும் கவலையுடன் திண்ணையில் இருந்து கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை பார்த்து என்ன விசயம் நீங்கள் கவலையாய் இருக்கிறதுபோல் தெரியுது. அதொன்றுமில்லையடா வாமு நேற்று பூவனத்தின்ர கலியாணம் சம்பந்தமாய் மாப்பிள்ளையின் தாய் தேப்பன் வந்து கதைத்தவை. அவையின்ர பாட்டி இப்பவெல்லாம் அடிக்கடி சுகயீனமாய் கிடக்கிறாவாம்.தான் சாகமுன் பேரனின் கலியாணத்தைப் பார்க்க ஆசைப்படுகிறாவாம். அதனால் வாறமாதம் ஒரு பொதுநாளாய்ப் பார்த்து கலியாணத்தை வைத்தால் நல்லது என்று சொல்லி எங்களையும் அதற்கேற்றாற் போல் ஆயத்தப் படுத்தும்படி சொல்லிபோட்டுப் போகினம். நானும் இப்பதான் என்ர மகனும் மேற்படிப்புக்கு வெளியூர் போயிருக்கிறான், ஒரு ஆறுமாதம் பொறுத்தால் நல்லது என்று சொல்லவும் அவர்கள் அதை காதில் வாங்கியது மாதிரித் தெரியேல்ல. அதுதான் ஒரே யோசனையாய் கிடக்கு. அதுக்குள்ளே இவள் கனகத்தின்ர புருசனும் நேற்று பின்னேரம் நல்ல வெறியில மதவடி வீதியால் வர எதிரில் ஒரு மாடு வந்திருக்கு, இவர் அதோட சொறியப் போக அது இவரை முட்டி மதகில விழுத்திட்டுப் போயிட்டுது. இவருக்கு முன்வாய் பல்லு ரெண்டு உடைஞ்சிட்டுது. அவர் இப்ப எங்க ஆஸ்பத்திரியிலோ என்று வாமு கேட்க கனகமும் அந்தாள் உந்தப் பரியாரியிட்ட மருந்து வாங்கிப் போட்டுகொண்டு வந்து வீட்டில படுத்திருக்கு என்று சொல்லிப்போட்டு சரி நீங்கள் இருந்து கதையுங்கோ நான் போய் அவர் சாப்பிட ஏதாவது கஞ்சி வைச்சுக் குடுக்கப்போறன்........! 🦚 மயில் ஆடும் ......!
    7 points
  45. தோற்கும் விளையாட்டு ------------------------------------ விளையாட்டு வீரர்கள் என்றாலே ஆஸ்திரேலியர்கள் தான் அதன் வரைவிலக்கணம். ஒரு சாதாரண ஆஸ்திரேலியரே எந்த விளையாட்டையும் நன்றாக விளையாடுவார், அப்படியே அதிகமாக கோபப்பட்டு போட்டி போடுவார். இவர்கள் ஒரு பொழுதுபோக்கிற்காக விளையாடுவது கூட வெளியில் நின்று பார்க்கும் ஒருவருக்கு ஏதோ ஒரு தனிப்பட்ட பிரச்சனைக்கு இரண்டு பக்கங்கள் மல்லுக்கட்டி நிற்பது போலவே தெரியும். சில வருடங்களின் முன் சிட்னி நகர் பகுதியில் தனியாகவோ அல்லது பலவீனமாகவோ அகப்படும் இந்தியர்களை சில ஆஸ்திரேலியர்கள் தாக்கினார்கள். இது சில காலம் தொடர்ந்து அங்கு நடந்தது. இந்திய நண்பன் ஒருவனின் மனைவியின் தம்பிக்கு சிட்னியில் ஒரேயொரு குத்து ஓங்கி விழுந்தது. தம்பி மதுரை மருத்துவமனையில் பல நாட்கள் படுத்திருந்து, பின்னர் எழும்பி நடமாடினார். குத்துச் சண்டையும் இவர்கள் எல்லோருக்கும் தெரியுமா என்று வியக்க வைத்தது. சிட்னியுடன் எனக்கு சில தொடர்புகள் இருப்பது தெரிந்திருந்த அதே நண்பன் ஆஸ்திரேலியாவிற்கு போகும் மற்றும் அங்கு குடியேறும் வழிவகைகளை என்னிடம் விசாரித்தான். மதுரைக்கார நண்பன் அங்கு போய் பழிக்கு பழி வாங்கப் போகிறார் போல என்ற அனுமானத்தில் இருந்த எனக்கு, 'இல்லை, மாமாவை (நண்பனின் அக்காவின் கணவர்) அங்கு அனுப்பலாம் என்று இருக்கின்றேன்' என்று பதில் வந்தது. ஆஸ்திரேலியர்கள் விளையாட்டுகளில் ஏன் இவ்வளவு ஆக்ரோஷத்துடனும், ஆவேசத்துடனும் இருக்கின்றார்கள் என்பது முதலில் புரியவில்லை. ஒரு விடயம் புரியாவிட்டால், அந்த விடயத்திற்கான காரணம் மரபணு அல்லது தலைவிதி அல்லது நெற்றியில் எப்பவோ எழுதப்பட்டு விட்டது என்ற வசனம் போன்றவை ஏற்றுக்கொள்ளத்தக்க விளக்கங்கள். இவை மூன்றும் தக்காளிச்சாறு போல, எங்கும் ஊற்றலாம், எதனுடனும் தொடலாம். ஆஸ்திரேலியர்களின் மரபிலேயே கடும் போட்டி இருக்கின்றது என்றார்கள். விளையாட்டுகளில் பணம் கட்டுவது, பந்தயம் பிடிப்பது இன்று மிக வேகமாக எல்லா நாடுகளிலும் பரவி வருகின்றது. இது இன்று அமெரிக்காவில் மட்டும் பல பில்லியன் டாலர்கள் அளவிலான ஒரு வியாபாரம். கனடாவிற்கு என்று தனி வழி இல்லை, அமெரிக்காவின் வழியே அதன் வழியும் கூட. இந்தியாவில் கிரிக்கெட் மீதான சூதாட்டம் வெட்ட வெட்ட முளைக்கும் அசுரனின் தலை போல அழிக்கப்பட முடியாமல் இன்னும் இன்னும் வளர்கின்றது. குதிரைப் பந்தயம் ஆரம்பமான நாட்களிலிருந்து, 1810 ம் ஆண்டு, இன்று வரை உலகிலேயே விளையாட்டுகளின் மேல் தலைக்கு அதிக பணம் பந்தயம் வைப்பவர்கள் யார் தெரியுமா? ஆஸ்திரேலியர்களே. சீன இன மக்களின் சூதாட்டத்தின் மீதான நாட்டம் வேறு வகையானது, பாரதத்தில் தர்மர் உருட்டிய தாயக்கட்டை வகை அது. ஒரு விளையாட்டின் மேல் இருக்கும் விருப்பத்தில் அல்லது ஒரு அணியினது அல்லது ஒரு வீரரின் ரசிகராக இதுவரை நாளும் விளையாட்டுகளை பார்த்து வந்த பார்வை இன்று இந்தப் பந்தயங்களால் வெகுவாக மாறிவிட்டது. எண்களே இன்று முக்கியம். களத்தில் ஆடும் அணியை விட, என்னுடைய கணக்கு, என்னுடைய பந்தயம் வெல்கிறதா என்பதிலேயே பலரினதும் கவனம் இருக்கின்றது. பந்தயங்களின் உலக தலைநகரான லாஸ் வேகாஸ் பற்றிச் சொல்லும் போது, லாஸ் வேகாஸ் என்றும் தோற்பதில்லை என்பார்கள். பந்தயம் கட்டுபவர்களே என்றும் இறுதியில் தோற்று நிற்பார்கள் என்கின்றனர். ஒரு தனிமனிதன் தோற்றுப் போனால், அம்மனிதனுக்கு அடுத்த அடுத்த தடவைகள் ஆவேசம் கொஞ்சம் அதிகமாக வருவது இயற்கைதானே. ஆஸ்திரேலியர்களுக்கும் அதுவே.
    6 points
  46. கண்டால் வரச் சொல்லுங்க… கார் களவெடுக்கும் தம்பி… கண்டால் வரச் சொல்லுங்க… கனடா…கார் களவெடுக்கும் தம்பியை.. கண்ட இடமும் அலையாமல் நேராய் வரச் சொல்லுங்க.. முத்தத்தில் மூணுகாரு.. மினுக்கிக் கொண்டு நிற்கும்… முதல் ஆளு..கமரி பார்க்கப் பளபளப்பா நிற்பார்.. பற்ரறி மாத்தவேணும்.. மூணு நாளைக்கு ஒருக்கால் ஒயில் விடவேணும்.. பார்ட்ஸ் எல்லாம் பழசு.. பார்த்துத் தூக்கு தம்பி.. அக்கூரா அடுத்து நிற்பார்.. ஆளு வாட்ட சாட்டமாய் இருப்பார்.. இப்பதான் அடிவாங்கி ஆசுபாத்திரியால் வந்திருக்கார்.. அவர் சுக நலம் இன்னும் எனக்கே தெரியாது… பார்த்து எடுடா தம்பி… பார்ட்ஸ் ஏதாவது கழண்டும் விழலாம்.. பலமான அடிவாங்கிய ஆள் தம்பி.. மூணாவது பி .எம் டபிள் யு.. தளுக்கி மினுக்கி சும்மா தகதக வென்று .. மினுங்குவார்… இவர் ..சுக நலம் நானறியேன்… வந்து மூன்று நாள்தான். என்னைக்கேட்டால் எதுவும் தெரியாது.. ஏனெனில் அது நிலக்கீழ் வீட்டுகாரனுடையது…. கராச்சுக்குள் .. இரண்டுபேர் நிக்கினம்.. இரண்டு பேரும் புது இறக்குமதி… தொட்டால் சுள்ளிடும்.. கிட்டப் போனாலே குய்யோ முறையோ என்று சத்தமும் போடுவினம்… அதைவிட … இந்தக் கார்களில் நீ கைவைத்தால் நான்தான்…வாங்கிக் கட்ட வேணும்.. அதாலை நான் நைற் வாச்சர். யாராவது ..கண்டால் வரச்சொல்லுங்க கனடா கார் கள்ளனை கண்டவுடன்… நான் இதில் சொன்னதையும் சொல்லிவிடுங்க….அவனை கண்டால் வரச்சொல்லுங்க.. காண ஆசையாய் ..இருக்கென்று.. வேண்டாமிந்த விபரீத ஆசை (யாவும் கற்பனையே)
    6 points
  47. மணி(யம்)வீடு ——————— வந்து வரைபடம் கீறி வடிவாய்க் கட்டிய வசதியான வீடு ஹோலின் நடுவே குசினி குசினிக்கடுத்து குளியலறை பேசிய படியே பெரியறை எங்கோ சின்னறையானது நீரும் நெருப்பும் மேலும் கீழும் பாரும் இது பழுதாகலாம் யாருமொரு சாத்திரி பார்த்தால் பறவாயில்லை பக்கத்து வீட்டவர் பலமுறை சொன்னார் மூன்று கோடி முழுதாய் முடிந்ததாம் கடைசிமகன் பிரான்சும் கனடா மகளும் கடைமணியத்தார்க்கு கட்டிக்கொடுத்த வீடு குடிபூரல் என்று குடும்பத்தோடு வந்து கூத்தும் கும்மாளம் ஆறறை மேலே ஐந்தறை கீழே வேறறையிரண்டு வெளியில் போறறையெல்லாம் போக்கிடம் தொடுப்பு விளக்குகள் பற்றி விளக்கவே வேண்டாம் ஏறினால் எரியும் இறங்கினால் அணையும் கூறினால் என்ன? குழப்படி வீடு மாதங்கள் மூன்றாய் மகனும் மகளும் கீதங்கள் போட்டு கிடாயையும் போட்டு விருந்துகள் வைத்து மகிழ்ந்தது வீடு கழிந்தன நாட்கள் கடனைக்கட்ட கனடாவும் பிரான்சும் பறந்தன மீண்டும் விளக்குமில்லை விழாவுமில்லை மனையில் மணியம் தனியாய்ப்போனார் கூட்டித்துடைக்க ஆளில்லாமல் கூடைக்கதிரை ஒன்றுக்குள்ளே குசினி லைற்றின் சுவிச்சைத் தேடி களைத்து மனிசன் சோர்ந்து போனார் மூன்று கோடி முடிந்த வீடு முனிவீடாய் மாறிப் போச்சு மணியத்தாரின் தனிமைப்பரப்பு அறைகள் கணக்கில் அகலமாய்ப் போச்சு மணியம் உணர்ந்தார் Money யில் இல்லை மகிழ்ச்சியென்று. வாட்ஸ் அப்பில் வந்தது.
    6 points
  48. இது கொஞ்சம் ரூ மச்சாக தெரியவில்லையோ நெடுக்கர்😎? நீங்களுட்பட இங்கேயிருக்கும் பலர், தீவிரமான இன அழிப்பு யுத்தம் நடந்த காலப் பகுதியில், அதே இனவெறி அரசின் பரீட்சைத் திணைக்களத்தின் பரீட்சையை எழுதி, சித்தி பெற்று, மஹாபொலவும் பெற்று, பிறகு அதே இனவெறி அரசின் தென்பகுதிப் பல்கலையில் படித்து, அந்த மூலதனத்தில் வெளிநாட்டுப் பிரஜைகளாகி , பவுண்டசையும், டொலரையும் விசுக்கி சிறி லங்கா ரூர் எல்லாம் போய் வருகிறீர்கள்! ஆனால், அங்க இருக்கிறவன், இலவசமாக ஹெலியில் ஊர் பார்க்கும் வாய்ப்பை உதறாவிட்டால், தூங்கில் தொங்க வேணும்? யார் உண்மையில் முதலில் தொங்க வேணும்😂?
    6 points
  49. தூய அடையாளம் ----------------------------- 10ம் வகுப்பு சோதனைக்காக அடையாள அட்டை ஒன்றை எடுக்குமளவும் ஒவ்வொரு மனிதனுக்கும் அடையாளம் என்று ஒன்று இருக்கின்றது, அது மிகவும் தேவையானது என்று உணர்ந்திருக்கவில்லை. அந்த விண்ணப்ப படிவத்தில் முழுப்பெயர் தப்பாக இருக்கின்றது என்று ஆசிரியர் சொல்ல, பின்னர் அதை மாற்றுவது கூட முடியாமல் போனது. முதன்முதலாக இலங்கையில் வேறு இன மக்களின் நடுவில் வாழ ஆரம்பித்த பொழுது தான், அடையாள அட்டையை தாண்டிய விடயங்கள் தெரியவந்தது. மொழி, உணவு, மதம் என்பன மட்டும் இல்லை, இனக் குழுக்களின் நடை, உடை, பாவனைகளில் கூட தனித்துவம் இருந்தது. பொதுவான மொழியான ஆங்கிலத்தில் ஒரு சொல்லை ஒருவர் சொன்னாலே, அவர் இந்த இனமா அல்லது அந்த இனமா என்று கணிக்கக்கூடிய வகைகளில் மனிதர்களுக்கு இடையே தனித்துவம் இருந்தது. புலம் பெயர்ந்த பின், குடியேறிய நாடுகளில் ஒரு அடையாளம் வழங்கப்பட்டது. பெரும்பாலும் 'இந்தியர்' என்ற ஒரு வகைக்குள் நாங்கள் அடக்கப்பட்டோம். இந்தியர்கள் தென்னிந்தியாவா என்று கேட்டனர், தென்னிந்தியர்கள் கேரளாவா என்றனர், இல்லை இல்லை ஶ்ரீ லங்கா என்று என் அடையாளத்தை நிலைநிறுத்தவே நிறைய சக்தி தேவைப்பட்டது. ஒரு தடவை ஒரு பங்களாதேஷ் நண்பரை நீ இந்தியாவா என்று தெருவில் ஒருவர் கேட்க, அவர் மிகவும் கோபப்பட்டு, எகிறிக் குதித்து பனியில் சறுக்கி விழுந்து போனார். அவருக்கு அவரின் அடையாளம் அவ்வளவு அவசியமான ஒன்றானதாக இருந்திருக்க வேண்டும். உண்மையில் எங்களின் தலைமுறைக்கு அடையாளம் என்பது ஒரு பெரிய பிரச்சனை இல்லை. நாங்கள் அங்கிருந்து கொண்டு வந்த அடையாளங்களுடனேயே இங்கும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். புலம்பெயர் தேசங்களில் இன்னும் இன்னும் அடையாளத்துடன் அதிகமாக ஒட்டியுள்ளோம் என்று தான் சொல்லவேண்டும். இப்படியே எங்களின் வாழ்க்கைகள் முடிந்தும் விடும். ஆனால், பிரச்சனை அடுத்த மற்றும் பின் வரப் போகின்ற தலைமுறைகளுக்கே. இங்கு ஒரு பல்கலையில் இந்த விடயத்தை ஆராய்ந்து கட்டுரைகள் வெளியிட்டிருக்கின்றார்கள். ஸ்பானிஷ் மொழி பேசும் தென்னமெரிக்காவில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்களின் இடையே இந்த ஆய்வைச் செய்துள்ளனர். ஸ்பானிஷ் மொழி பேசும் ஒரு பெரும் சமூகமே இங்கிருப்பதால், அவர்களின் அடுத்த அடுத்த தலைமுறைகளில் அடையாளம் என்பது ஒரு சிக்கலான ஒரு விடயமாக இருக்காது என்றே உடனே எண்ணத் தோன்றும். ஆனால், அவர்களின் நிலைமையும் எங்களின் நிலைமையும் ஆச்சரியமாக ஒன்றாகவே இருக்கிறது. அச்சு அசலாக ஒன்றாக இருக்கின்றது. புதிய தலைமுறை ஒரு லத்தீன் அமெரிக்கராக இருக்க வேண்டிய அளவிற்கு லத்தீன் அமெரிக்கராக இல்லை என்று புலம் பெயர்ந்த தலைமுறை குற்றம் சாட்டுகின்றது. புதிய தலைமுறைக்கு ஸ்பானிஷ் மொழியே சரியாகத் தெரியவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கின்றது. புதிய தலைமுறையோ எங்களுக்கு ஸ்பானிஷ் முற்றாகவே விளங்குகின்றது, ஆனால் நாங்கள் ஸ்பானிஷில் பதில் சொன்னால் இவர்கள் எங்களின் உச்சரிப்பை நக்கலும், நையாண்டியும் செய்கின்றார்கள் என்று முந்தைய தலைமுறையை நோக்கி விரலை நீட்டுகின்றனர். அமெரிக்கர்களோ எங்களின் சில ஆங்கில வார்த்தைகளைக் கேட்டுச் சிரிக்கின்றனர். நாங்கள் அங்கும் இல்லாமல், இங்கும் இல்லாமல் தொங்கிக் கொண்டிருக்கின்றோம் என்று ஆதங்கப்படுகின்றனர். மொழி விடாது போல.
    6 points
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.