Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Leaderboard

 1. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   3,101

  • Posts

   36,219


 2. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   2,388

  • Posts

   61,645


 3. suvy

  suvy

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   2,044

  • Posts

   21,877


 4. goshan_che

  goshan_che

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   1,799

  • Posts

   9,292


Popular Content

Showing content with the highest reputation since வியாழன் 26 நவம்பர் 2020 in Posts

 1. இந்தக் கட்டுரையை சென்ற வருடம் இதே நாளில் எழுதியிருக்க வேண்டியது, கொரோனா வந்து திசைமாற்றி விட்டது. எழுத நினைத்த கட்டுரையை ஒரு வருடத்தின் பின்னர் வேறு விதமாக எழுதுகிறேன். ஐம்பதிலும் ஆசை என்பதில் எனக்கு உடைபாடில்லை. சென்ற வருடம் ஐம்பதாவது வயதை எட்டியிருந்தேன். முன்பெல்லாம் ஒவ்வொரு பத்தை எட்டும்போதும் வயதாகிக் கொண்டே போகிறதே எதையும் சாதிக்கவில்லையே என்ற விரக்தியும் எதிர்பார்த் இலக்குகளை எட்டவில்லையே என்ற கவலையும் தோன்றும். இப்போது ஆறுதலாக நான் கடந்துவந்த பாதையை யோசித்துப் பார்க்கும்போது பரவாயில்லையே என்று தோன்றுகிறது. எனது பாட்டனார் எனக்குச் சின்ன வயதில் தனது அனுபவங்களைக கதை போல் சொல்வார். பன்றி வேட்டையாடியது, வயலில் சூடு அடிக்கும்போது யானை வந்தது, சகோதரங்களுடன் முரன்பட்டு வேறு ஊர் சென்று கடின உழைப்பால் முன்னேறியது போன்ற பல கதைகள் சொல்வார். அன்று ஆவற்றைப் பெரிதாகக் காதில் வாங்கியதில்லை. அவர் சொன்னவற்றில் நினைவில் இருந்த சிலவற்றை பல வருடங்கள் கழித்து மீட்டபோது அவரைப்போல் எனக்கு சொல்லத்தக்கவாறு அனுபவங்கள் எதுவும் இல்லையே என்று தோன்றும். இப்போது அந்த ஏக்கம் இல்லை. இப்போது என்ன நிலையில் உள்ளேனோ அதைத் திருப்தியாக ஏற்றுக் கொண்டு அதனை மேம்படுத்தி எதிர்காலத்தைத் திட்டமிடுவதே புத்திசாலித்தனம் என்பதில் உறுதியாக உள்ளேன். வாழ்வதற்கு வாழ்க்கை இன்னும் ஏராளம் உள்ளது. அதற்கு எனது உடல் ஆரோக்கியம் முக்கியம். என்னுடைய உடலைக் கவனமாகப் பார்க்காவிட்டால் உள்ளத்தால் என்னை நிறைவாக உணர முடியாது. எனது இனம் நிலைக்க வேண்டுமானால் முதலில் நான் நன்றாக இருக்க வேண்டும். ஏனென்றால் எனது இனத்தில் நானும் ஒரு அங்கம். *** முன்பு ஒரு திரியில் ஓட்டப் பயிற்சி செய்வதாக எழுதியிருந்தேன். ஆரம்பத்தில் 15 நிமிடங்கள் - 2 கிலோமீற்றர் தூரம் ஓடினேன். ஓடி முடிந்ததும் மிகக் களைப்பாக இருக்கும். அதன்பின்னர் இன்னும் தூரம் ஓட வேண்டும் என்பதற்காக 3 கிலோமீற்றராக மாற்றிக் கொண்டேன். அது காலப்போக்கில் கடினமான பிரயத்தனத்துடன் 35-40 நிமிடங்களில் 5 கிலோமீற்றர்களாக ஆக மாறியது. அதுவே எனது அதி உச்ச எல்லை என்று நினைத்திருந்தேன். சில காலங்களின் பின்னர் படிப்படியாக நின்று ஓய்வெடுத்து ஒரு மணி நேரம் 7 கிமீ வரை ஓட முடிந்தது. இப்படியே சுமார் ஒரு வருடம் சென்றது. நான் இருக்கும் ஊரில் ஒரு உடற்பயிற்சி நிலைய உறுப்பினர்கள் சிலரைத் தற்செயலாக சந்திக்க நேரிட்டது. ஓட்டப் பயிற்சி செய்தால் இன்னும் முன்னேறலாம் என்று உற்சாகப் படுத்தினார்கள். அது நகரசபையால் நடத்தப்படுவதால் வருடத்துக்கு 75 யூரோ, முயற்சித்தும் பார்ப்போம் என்று ஆரம்பித்தேன். வாரத்தில் 3 நாள் பயிற்சி. மாலை 6.30 க்கு ஆரம்பிக்கும். வேலை காரணமாக வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு தடவைகள் மட்டுமே பங்குபற்ற முடியும். 6 மாதப் பயிற்சியின் பின் 10 கிமீ ஓட்டப் போட்டி ஒன்றில் பங்குபெற முடிந்தது மட்டுமல்லாது சில மாதங்களுக்குப் பின்னர் அரை மரதன் ஓடும் அளவுக்கு வந்துவிட்டேன். முதலாவது 10 கிமீ போட்டி சரி, 50 வயதாகிறது ஒரு தடவை மரதன் ஓடினால் என்ன என்று தோன்றியது. மரதன் ஓடுபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு இருக்கும். ஓடியோ நடந்தோ தவழ்ந்தோ முடிவு எல்லை ஓட வேண்டும் என்பதே எனது இலக்கு. இந்த எல்லையைத் தாண்டுவதென்பது விவரிக்க முடியாத இனிய அனுபவம் என்று ஓடி முடித்தவர்கள் கூறிக் கேட்டுள்ளேன். சிலர் எல்லையில் காத்திருக்கும் தமது பிள்ளைகள், மனைவி அல்லது உறவினர்களைக் கட்டி அணைத்துக் ஆனந்தக் கண்ணீர் வடிப்பதைக் காணொலிகளில் கண்டிருக்கிறேன். ஆகவே கால்கள் சரியாக இயங்கும்போதே வாழ்க்கையில் ஒரு தடவை ஓடிப் பார்க்க முடிவு செய்தேன். எனக்குப் பயிற்சி தருபவராகிய ஸாஹிர் என்பவனிடம் சொன்னேன். மகிழ்ச்சியாக உற்சாகப்படுத்தினான். ஆனால் கடுமையான பயிற்சியைப் பின்பற்றினால் நான் நிர்ணயித்த இலக்கை விட நன்றாக ஓடலாம் என்றான். அதன்படி பரிசில் ஏப்ரல் 2020 இல் நடக்கவிருந்த சர்வதேச மரதன் போட்டியில் பதிவு செய்தேன். உலகம் முழுவதிலும் இருந்து 65 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்தனர். இது மரதன் வரலாற்றில் உலகில் அதிகம் பேர் பங்குகொள்ளும் மிகப் பெரிய போட்டியாகக் கருதப்பட்டது. போட்டிக்கு 4 மாதங்களுக்கு முன்னர் கடுமையான பயிற்சி ஆரம்பமாகியது. மழை குளிர் காற்று என்று எதையும் பார்க்க முடியாது. ஓட வெளிக்கிட்டால் ஓட வேண்டியதுதான். கிளப் உறுப்பினர்கள் 3 குழுவாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். முதலாவது குழு முயல் வேகத்தில் ஓடக் கூடியது. நான் 3 ஆவது ஆமை வேகக் குழு. நான் ஒரு தடவை முதல் முழுவோடு சேர்ந்து ஓடி ஆவஸ்தைப்பட்ட அனுபவம் இருந்ததால் அவர்களோடு சேர்வதில்லை. மழையிலும் பனி உறைந்த குளிரிலும் கொட்டும் வியர்வையுடன் அன்றொருநாள் மார்கழி மாதம் குளிர் மழை தூறிக்கொண்டிருந்தது, சிலர் பயிற்சிக்கு வரவில்லை. வேகமாக ஓடுபவர்களே அதிகமாக இருந்தனர். பழைய உறுப்பினர் ஒருவவன் அன்று வந்திருந்தான். அவன் பெயர் பிரெடெரிக், கரிபியன் தீவைச் சேர்ந்தவன். தனது ஊரில் சில காலம் தங்கிவிட்டு பிரான்சுக்குத் திரும்பியிருந்தான். அன்றைய இருளில் அவனது முகம் சரியாகத் தெரியவில்லை. அதிகம் நின்று பேசிக் கொண்டிருந்தால் குளிரில் நடுங்கத் தொடங்கும் ஆகவே மெதுவாக ஓட்டத்தை ஆரம்பிப்போம் என ஸாஹிர் கூறிவிட்டு பிரெடெரிக்கை அறிமுகப்படுத்தி நீங்கள் இருவரும் மட்டுமே இரண்டாவது முழுவில் பயிற்சி செய்யப் போகிறீர்கள் என்று கூறி நாங்கள் ஓட வேண்டிய பாதையையும் வேக மாற்றங்களையும் அவசரமாக் விளக்கிவிட்டு முதல் குழுவுடம் பறந்துவிட்டான். நானும் பிரெடெரிக்கும் தனியே நின்றிருந்தோம். ஓரிரு வார்த்தைகள் பரிமாறிக் கொண்டு ஓட ஆரம்பித்தோம். வீதியின் மின் வெளிச்சத்தில் சில நிமிடங்கள் மௌனமாக ஓடிக் கொண்டிருந்தோம். பிரெடெரிக் மெதுவாக ஓடுவதற்கே சற்றுச் சிரமப் படுவதாகத் தோன்றியது. 15 நிமிடங்களுக்குப் பிறகு வேகத்தைச் சற்றே அதிகரிக்க வேண்டும் ஆனால் வேகம் அதிகரித்ததாகத் தெரியவில்லை. 30 நிமிடத்தின் பின் வேகம் அடுத்த கட்டத்தை அடைய வேண்டும். ஆனால் அவன் கொஞ்சம் மூச்சு வாங்குவது தெரிந்தது. பேசாமல் முதல் குழுவோடு ஓடியிருக்கலாம் என்று தோன்றியது. பேச்சு வாக்கில் உனக்கு எத்தனை வயது என்று கேட்டேன். 71 என்றான். ஒரு கணம் எனது நாடி நரம்புகள் எல்லாம் செயலிழந்து அதிர்ச்சியிலிருந்து மீழ சில வினாடிகள் ஆனது. வாயிலிருந்து அப்படியா, நன்றாக ஓருகிறாய் என்ற வார்த்தைகள் மட்டுமே வந்தது. ஓடுவதற்கு வயது எல்லை கிடையாது என்பதை அன்றுதான் புரிந்து கொண்டேன். இன்றுவரை பிரெடெரிக் எனக்கு மரியாதைக்குரிய நண்பனாகவும் அறிவுரை கூறும் ஆசானாகவும் இருக்கிறான். படத்தில் இடது பக்கத்தில் பிரெடெரிக் பயிற்சி தொடர ஆர்வம் அதிகரிக்க இலக்குகளும் மாறிக்கொண்டிருந்தன. மரதன் ஆரம்பமாவதற்குச் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது. *** ஓட்டப் பயிற்சியோ போட்டியோ ஏனைய விளையாட்டுகள் போல் போட்டி மனப்பான்மையுடன் அமைவதல்ல. ஒவ்வொருவரும் தமது தகமைக்கேற்ப தாங்களே ஒரு வரயறையை அல்லது தமது சொந்த இலக்கை வைத்து ஓடுவதால் மனதளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. இன்னொருவர்போல் ஓடவேண்டும் என்ற போட்டி மனப்பான்மையும் ஏற்படாது. மரதன் போட்டியிலும் 50 ஆயிரம் பேர் ஓடினால் அதில் முதல் 100 பேருக்குள்தால் சரியான போட்டி இருக்கும். ஏனையவர்கள் தமது சொந்த இலக்கை வைத்தே ஓடுவார்கள். ஆகவே 5கிலோமீற்றர் ஓடும் ஒருவர் ஒருவர் தன்னால் 10 கிலோமீற்றர் ஓட முடியவில்லையே என்ற கவலை தேவையில்லை. உடல் அமைப்பும் இவ்வாறுதான். எல்லோருக்கும் உடல் அமைப்பு ஒரே மாதிரி இருக்காது. என்னை விட உயரம் மிகக் குறைந்த ஒருவர் என்னைவிட மிக வேகமாக ஓடுகிறார். அதேபோல் என்னைவிட எடை கூடிய ஒருவர் என்னைவிட வேகமாக ஓடுகிறார். அதற்காக நான் இந்த இருவரையும் விட வேகமாக ஓட முடியவில்லையே என்று ஏங்க முடியாது. ஓடுவதால் உள்ள நன்மைகளில் முக்கியமானவை சில வேக ஓட்டத்தின்போது இதயம் அதிகமான இரத்தத்தினை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதால் இதயத் தசைகள் வலுவடைந்து இதயம் விரிவடைந்து ஒரே இதயத்துடிப்பில் அதிகமான இரத்தைதை உடலுக்கு வழங்கம் ஆற்றலைப் பெற்றுக் கொள்ளும். இதன் மூலம் இதயத்துக்கும் வேலைப்பழு குறைந்து நீண்ட காலம் இயங்கும் ஓடும்போது கால்கள் தரையில் படும்போது ஏற்படும் மைக்க்ரோ அதிர்வுகளால் தசைகளும் எலும்பும் சிறிய சிதைவுகளுக்குள்ளாகொன்றன. பின்னை ஓய்வின்போது சிதைவுகள் மறுசீரமைக்கப்பட்டு தசைகளும் எலும்புகளிம் புத்துயிர் பெறுகின்றன இரத்தத்தில் மேலதிக சீனியும் கொலஸ்ரரோலும் சக்தியாக எரிக்கப்படும் போட்டி மனப்பான்மையற்ற பயிற்சியாதலால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். ஒவ்வொரு பயிற்சியின்போதும் ஓடும்போது ஏற்படும் களைப்பு சோர்வு ஏக்கம் தளர்வு அவஸ்தை எல்லாவற்றையும் ஓட்ட முடிவில் மறந்து வர்ணிக்க முடியாத மகிழ்ச்சியை உணர முடியும் நோய்களை எதிர்க்கும் ஆற்றல் அதிகரிக்கும். இன்னும் பல உடலை அசைத்து அதிக நேரம் வேலை செய்கிறேன், ஆகவே உடற்பயிற்சி தேவையில்லை என்று நினைப்பது தவறு. இரண்டும் ஒன்றல்ல. 1 மணி நேர உடற்பயிற்சியினால் கிடைக்கும் நன்மைகள் உடலை வருத்திச் செய்யும் வேலையால் கிடைக்காது. *** ஆரம்ப ஓட்டப் பயிற்சி இது ஓட விருப்பம் இருந்தாலும் தயங்குபவர்களுக்கும் நாளைக்கு ஓடலாம் என்று இன்றுவர ஆரம்பிக்காமல் இருப்பவர்களுக்கும். முக்கிய குறிப்பு : உடல், இதயம் பலவீனமானவர்கள் உங்களது வைத்தியரின் ஆலோசனைக்குப் பின்னர் இதனைப் பின்பற்ற வேண்டும். சரியான சப்பாத்து உடை மற்றும் இதர உபகரணங்கள் இருந்தால்தான் ஓடுவேன் என்று நினைக்க வேண்டாம். இதையெல்லாம் பின்னர் பார்க்கலாம். முதலில் இருப்பவற்றை அணிந்து கொண்டு வெளியே வாருங்கள். எப்போது உங்கள் வயது, உயரம், நிறை, உருவம் எல்லாவற்றையும் விட்டு ஓட முன்வருகிறீர்களோ அதுவே உங்களது முதல் வெற்றி. உங்கள் உடையையோ உடலையோ ஓட்டத்தையோ பார்த்து யாராவது சிரிப்பார்களோ என்ற தயக்கம் சிறிதும் வேண்டாம். எல்லா அனுகூலங்களும் இருந்தும் ஓட்டத்தால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் புறக்கணித்து ஓடாதிருக்கும் கோடிக்கணக்கானவர்கள் மத்தியில் நீங்கள் ஓட முன்வந்துள்ளீர்கள். பாராட்டுக்கள். எடுத்த உடனேயே ஓட முயற்சிக்க வேண்டாம். தசைகளையும் இதயத்தையும் தயார்படுத்த வேண்டும். படிப்படியாகப் பயிற்சியை ஆரம்பிப்போம். நாள் 1 15 நிமிட வேக நடை அதைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் உங்களால் எவ்வளவு மெதுவாக ஓட முடியுமோ அவ்வளவு மெதுவாக ஓடுங்கள். அது வேகமாக நடப்பதை விட வேகம் குறைந்ததாகக் கூட இருக்கலாம். இந்த 10 நிமிடங்களை எட்ட முடியாமல் போனல் நீங்கள் மெதுவாக ஓடவில்லை என்று அர்த்தம். 10 நிமிடம் சாதாரண நடை நன்றாகச் சாப்பிட்டு நிறைய நீர் அருந்தி நன்றாகத் தூங்குங்கள். நாள் 2 பயிற்சி இல்லை நாள்3 1 மணி நேர வேக நடை நாள் 4 பயிற்சி இல்லை நாள் 5 15 நிமிட வேக நடை 30 நிமிட ஓட்டமும் நடையும். 1நிமிட மெதுவான ஓட்டம், 30 விநாடிகள் நடை என்பதைச் சுழற்சியாகச் செய்யுங்கள் 15 நிமிட நடை நாள் 6 பயிற்சி இல்லை நாள் 7 10 நிமிட வேக நடை விரும்பிய அளவு நேரம் மெதுவான ஓட்டம். கடைசி 1 நிமிடத்தை உங்களால் முடிந்தவரை வேகமாக ஓடுங்கள். 10 நிமிட நடை மெதுவாக ஓடும்படி வற்புறுத்தக் காரணம் அதிகமாகக் களைத்து அரைவாசியில் பயிற்சியை முடிக்கக் கூடாது என்பதற்காக. அத்துடன் மெதுவான ஓட்டம் என்பது ஓட்டப் பயிற்சியில் முக்கியமான அங்கம். மெதுவாக ஆரம்பிப்பது படிப்படியாக இதயத் துடிப்பை அதிகரிப்பதற்கு. சடுதியாக ஆரம்பித்தால் 10 நிமிடத்தில் களைப்பு ஏற்பட்டு பயிற்சியைத் தொடர முடியாமல் போய்விடும். தொடரும் நாட்களில் வேகத்தையும் நேரத்தையும் படிப்படியாக அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். *** வேகத்தை அதிகரிப்பதற்கான பயிற்சி இதும் ஏற்கனவே ஓரளவு ஓட முடியுமானவர்களுக்கானது. ஆரம்ப நிலையில் ஓடுபவர்களும் தாராளமாகச் செய்யலாம். பயிற்சியின் அங்கங்கள். A. Warm up : மிக மெதுவாக ஆரம்பித்து படிப்படியாக இதயத் துடிப்பை அதிகரித்து அதிக வேகம் எடுக்காமல் அதிக களைப்பு இல்லாமல் ஓடுவது. இது இதயத்தை சாதாரண நிலையில் இருந்து வேகத் துடிப்பிற்குத் தயார் படுத்துவது மட்டுமே. உங்கள் அதிகபட்ச வலுவில் 50-60% போதுமானது. B. மெதுவான ஓட்டம் : ஓட்டப் பயிற்சியில் இதுவும் மிக முக்கியமானது. இதயத் துடிப்பைக் குறைத்து தொடர்ச்சியாக சக்தியை உடலுக்கு வழங்குவது. மெதுவான ஓட்டத்தின் இறுதியில் களைப்பு உண்டாகக் கூடாது. C. தயார்படுத்தல் 1 - கால்களைப் பின்னால் மடித்து ஓடுதல். முன்னர் குறிப்பிட்டது போல இந்தத் தடவை கால்களை எந்த அளவு பின்னால் மடிக்க முடியுமோ அவ்வளவு மடித்து வேகமாகக் கால்கள அசைக்க வேண்டும். ஒவ்வொர அடிக்கும் (steps) 20 - 30 cm அளவான தூரம் நகர வேண்டும். D. தயார்படுத்தல் 2 - முழங்கால்களை உயர்த்தி ஓடுதல். முழங்கால்களைச் சமாந்தரமாக மேலே தூக்கி வேகமாக ஓடுதல். ஒவ்வொரு அடிக்கும் (steps) 20 - 30 cm அளவான தூரம் நகர வேண்டும். ஏறத்தாள நின்ற இடத்திலேயே ஓடுவது போன்றது. E. தயார்படுத்தல் 3 - கால்களை மடிக்காமல் ஓடுதல். முழங்கால்களை மடிக்காமல் கால்களை முன்னே மட்டும் உயர்த்தி வேகமாக ஓட வேண்டும். ஒவ்வொரு அடிக்கும் (steps) 20 - 30 cm அளவான தூரம் நகர வேண்டும். கிட்டத்தட்ட நின்ற இடத்திலேயே ஓடுவது போன்று இருக்கும். இந்த 3 பயிற்சிகளும் (C, D, E) இந்த வீடியோவில் 1:22 முதல் 2:18 வரை உள்ளது. F. Jamping jack - இது உங்களுக்குத் தெரிந்திருக்கும். G. ஓய்வு : கை கால்களைத் தளர விட்டு ஆழமாகச் சுவாசித்தல். நீர் அருந்தலாம். H. Stretching - அவசியமில்லை. செய்வதாக இருந்தால் 2 மணி நேரத்துக்குப் பிறகு அல்லது அடுத்த நாள் செய்யலாம். இனி பயிற்சியை ஆரம்பிக்கலாம். நீங்கள் ஏற்கனவே நன்றாக ஓடுவதால் நேரடியாகவே இரண்டாவது நிலை பயிற்சிக்கே போகலாம். 1 வாரத்தில் 4 நாட்கள் செய்ய வேண்டியவை. பயிற்சி 1 15 நிமிட Warm up (A) 1 நிமிட ஓய்வு 15 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 15 வினாடிகள் C 15 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 15 வினாடிகள் D 15 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 15 வினாடிகள் E 30 வினாடிகள் ஓய்வு. நீர் அருந்தலாம். மேலே குறிப்பிட்ட 15 வினாடிப் பயிற்சிகளை மீண்டும் 2 தடவை செய்யுங்கள் மிகவும் களைப்பாக இருக்கும். 15 நிமிட மெதுவான ஓட்டம் B. பயிற்சி முடிவடைகிறது. அடுத்த நாள் கால்களில் வலி இருக்கும். ஒரு நாள் ஓய்வெடுக்கலாம். பயிற்சி 2 10 நிமிட Warm up (A) 1 நிமிட ஓய்வு 1 நிமிட Jamping jack F 1 நிமிட மெதுவான ஓட்டம் B 1 நிமிட Jamping jack F 1 நிமிட மெதுவான ஓட்டம் B 30 நிமிட ஓட்டம். முதல் 10 நிமிடங்கள் உங்கள் உச்ச வலுவில் 60 வீதமாக இருக்க வேண்டும். அடுத்த 7 நிமிடங்கள் 70 வீதமாக அதிகரியுங்கள். அதற்கடுத்த 7 நிமிடங்கள் உங்களால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு ஓட வேண்டும் ஆனால் களைத்து ஓட்டத்தைக் கைவிடும்படியாக ஓடக் கூடாது. மீதி நேரத்தை மெதுவாக ஓடி முடிக்க வேண்டும். பயிற்சி முடிவடைகிறது. அடுத்த நாள் ஓய்வெடுக்கலாம். பயிற்சி 3 interval running 20 நிமிட Warm up (A) 30 வினாடிகள் ஓய்வு. 30 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 30 வினாடிகள் வேகமான ஓட்டம். இந்த 30 விநாடி ஓட்டங்கள் இரண்டையும் 10 தடவைகள் நிற்காமல் மாறி மாறிச் செய்ய வேண்டும். வேகமான ஓட்டத்தின்போது 80-90 வீதமான உச்ச வலுவுடன் ஓடலாம். 10 தவடவை ஓடி முடிக்க முடியாது போனால் நீங்கள் 90 வீதத்துக்கு மேலான வலுவுடன் ஓடியிருக்கிறீர்கள் என்று அர்த்தம். மறுபடி இன்னொரு தடவை 30 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 30 வினாடிகள் வேகமான ஓட்டம். இந்த 30 விநாடி ஓட்டங்கள் இரண்டையும் 10 தடவைகள் நிற்காமல் மாறி மாறிச் செய்ய வேண்டும். 5 நிமிட மெதுவான ஓட்டம் B. பயிற்சி முடிவடைகிறது. மிகவும் களைப்பாக இருக்கும், அடுத்த 1 அல்லது 2 நாள் ஓய்வெடுக்கலாம். பயிற்சி 4 விரும்பியபடி ஓட்டம் உங்க விருப்பத்திற்கேற்ப நேர எல்லை வைத்தோ தூர எல்லை வைத்தோ விரும்பிய வேகத்தில் ஓடலாம். இந்த 4 பயிற்சிகளையும் சுழற்சியாகச் செய்யுங்கள். *** ஐம்பதுக்கு வருவோம். பிள்ளைகள் வளர்ந்து விட்டனர். ஊரில் இருந்திருந்தால் பிள்ளைகளின் படிப்பு முடிந்தால் அவர்களுக்கான வேலை, திருமணம், செலவு பற்றியெல்லாம் நினைத்துக் கவலைப்பட வேண்டும். இங்கு அதொன்றும் இல்லை. பொருளாதார ரீதியாக சாதாரனமாக வாழ்வதற்கான தன்நிறைவை அடைந்துவிட்டேன். வேலையிலிருந்து ஓய்வு பெறும் எல்லை தொலைவில் தெரிகிறது. எனக்கான எதிர்காலத்தைத் திட்டமிட்டு விட்டேன். என்மேலுள்ல அழுத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைவதுபோல் உணர்வு. சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் மனதில் இளமையுடனும் வாழ்க்கையைத் தொடர இதுவே பொற்காலம். நீங்களும் வாருங்கள் ஓடி வாழ்ந்திடலாம்.
  33 points
 2. அன்று போருக்கும் போராடியவர்களுக்கும்.. அதற்கு துணை நின்றவர்களுக்கும் கை தடியாய் நின்றது யாழ். இன்று போர் செய்தவர்களும் இல்லை, போராடியவர்களும் இல்லை.. போராட்டுத்துக்காக குரல் கொடுத்தவர்களும் இல்லை. கைத்தடி மட்டும் தனியே நிற்கிறது. கை தாங்கலாய் போராட்டத்தை தாங்கியவர்கள் எல்லோருமே உடலாலும் மனதாலும் கை கால் இழந்து நிற்கின்றனர், இழந்தது மட்டும் இல்லை அது தரும் வலியைகூட வெளியே சொல்ல முடியாமல் அவஸ்தை படுகின்றனர். பலர் நம்பிக்கையிழந்து இந்த மாற்று திறனாளி வாழ்வு இனிமே வேண்டாம் என்று ஓடியே போய்விட்டனர். சிலர் மாற்றங்கள் இனிமேலும் வரும் என்ற ஒற்றை புள்ளி நம்பிக்கையில் இந்த கைதடியை பிடித்தபடி காலம் கழிக்கின்றனர். அன்று நமக்கெதிராய் சிவப்பு புள்ளி உயிர் செலவாய் தெறித்த போரில் கோபம் கொண்டு இக் களத்தில் ஒன்று சேர்ந்தவர்கள், இனிமே எதுவும் ஆகபோவதில்லை என்று ஓடியே போய்விட்டனர். அவர்கள் ஓடி போன பின்பும் பச்சை புள்ளிகளை மட்டும் வரவாய் வைத்துக்கொண்டு சிலர் இந்த தளத்தில் உயிர் நகர்த்துகிறார்கள். எங்களுக்கு வடக்கு அரசியல்வாதிகளை பிடிக்காது, கிழக்கு அரசியல் வாதிகளையும் பிடிக்காது, எங்களுக்கு பிடித்தது எல்லாம் வடக்கு கிழக்கு என்ற வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாதபடி வரிபுலி சீருடையில் இருந்த போராளிகள் மட்டுமே. இன்று வடக்கும் கிழக்கும் எங்கள் தாயகம் என்று போரிட்ட எம் தேச வீரர்களும் எங்கள்கூட இல்லை. ஆனால் அவர்கள் விரும்பியிருக்காத பிரதேச வாதங்கள் மட்டும் வடக்கும் கிழக்கும் சேர்ந்த சிலரிடம் விரும்பபட்டு எங்கள்கூட பயணிக்கிறது. அவர்களுக்கு சொல்ல விரும்புவது ஒன்றுதான்.. உதிப்பது கிழக்கு, மறைவது மேற்கு, இதுக்கு சம்பந்தமேயில்லாம வடக்கு கிழக்கு பிணக்கு பற்றி பேசுகிறவர்கள் உருபடாதவர்கள், அவர்கள் கருத்துக்கள் சபையேறாது. யாழ் எனும் கைத்தடி தனிப்பட்ட எவருக்கும் உரித்தானதொன்றல்ல, இனவிடுதலையில் சோர்வானவர்கள் எவர் வேண்டுமானாலும் அதை பற்றிக்கொண்டு ஓய்வெடுத்துவிட்டு மறுபடியும் அவர்கள் பணத்தில் நகரலாம் என்று நம்புகிறவர்களில் நானும் ஒருவன். அகவைகள் வருசம் வருசம் அதிகரிக்கும்போது சராசரி மனிதனுக்கு நாடி நரம்பு தளர்ந்து வயசாகிறது என்றே பொருள்படும். ஆனால் இனத்துக்கான காலபதிவுகளை ஒரு பணியாக தொடரும் தளங்களுக்கு காலம் செல்ல செல்ல நரம்புகள் இன்னும் முறுக்கேறுமே தவிர முடிவுக்கு வராது., வாழிய உங்கள் இன பணி.
  31 points
 3. நீண்ட நாட்களின் பின்பு முருகனிட்ட விசிட் பண்ணினேன்.கொரானாவை சாட்டாக வைத்து அவரிட்ட போகாமால் காலம் கடத்திக்கொண்டுவந்தேன்.மனைவி முருகன் கோவிலுக்கு போக கேட்டாலும் முருகன் ஒன்லைனில் என்னிட்ட வாரார் ஏன் நான் போக வேண்டும் என்று கேட்டு கடத்தி வந்தேன் .இனிமேலும் காலம் கடத்தினால் எம்பெருமான் ஆத்திரமடைந்து என்னை மறந்து விடுவார் பயம் காரணமாக 2021 இங்கிலிஸ் வருடப்பிறப்புக்கு சென்றேன் .முருகன் தமிழ் கடவுள் ,நான் சைவதமிழன் ஏன் போக வேண்டும் என்று மனசு கேள்வி எழுப்ப "டேய் அவங்கன்ட லீவுகளை வீட்டிலிருந்து உற்சாக பாணம் அடிக்க பாவிக்க முடியும், என்னிடம் வாரது என்றால் மட்டும் நீ சைவம் /தமிழ் என்று எஸ்கியுஸ்களை தெடுகின்றாய் என்ன ?"அதே மனசு மல்டிபல்பெசனல்டிக்கு மாறி கேள்வி கேட்க நான் பயந்து வருடப்பிறப்புக்கு விசிட் பண்ண முடிவெடுத்தேன். "மாஸ்க் எடுத்தாச்சே" அர்ச்சனைக்கு சாமாங்களை எடுத்தாச்சே என்ற காலம் போய் மாஸ்க் எடுத்தாச்சோ என்று வந்திட்டு என புறுபுறுத்தபடி "போட்டாச்சு" என்றேன் "வெள்ளை வேஸ்டி நீல சேர்ட் போட்டுவிட்டு ஏன் கறுப்பு மாஸ்க் போட்டிருக்கிறீங்கள் ,நீல மாஸ்க் புதுசு வாங்கி காரில் வைத்திருக்கிறேன் போய் போடுங்கோ" ரொம்ப முக்கியம் என்ற படி "சரி கோவிலுக்கு கிட்ட போய் போடுவோம்" "என்ன புறுபுறுக்கிறீயள் ,காரில் கான்ட் சனிட்டைசர் இருக்குத்தானே" "முடியப் போகின்றது நாளைக்கு புதுசு வாங்குவோம்" "என்னை மட்ச் பண்ணுகிற மாஸ்க் போட சொல்லி போட்டு ,நீர் மல்டி கலர் மாஸ்க் போட்டிருக்கிறீர்" "பிளவுஸின்ட கலர் இந்த மாஸ்கில் இருக்கு ,உங்களுக்கு இந்த லெடஸ்ட் வசயன்கள் ஒன்றும் தெரியாது" "வழமையா பிரசாதம். எதாவது கொண்டு போவீர் இன்றைக்கு எங்க ஒன்றையும் காணவில்லை" "கொரானாவால் பிரசாதம் கோவிலில் கொடுக்க கூடாதாம் அரசாங்க சட்டமாம்" "அரசாங்க சட்டங்களை சுழிச்சு ஒடுறதில் நாங்கள் கில்லாடிகள் ஆச்சே" "உண்மைதான் ஆனால் உந்த கொரானா எங்களுக்கு நல்ல பாடம் கற்று தந்துவிட்டது" கோவிலுக்கு முன்னாலயே வாகன தரிப்பதற்க்கு இடமிருந்தது, வழமையாக இப்படி இலகுவாக கார் பார்க் பண்ணகூடியதாக இருப்பதில்லை கொரணா காரணமாக முருகனிட்ட வருகின்ற விசிட்டர்கள் குறைந்து விட்டார்கள் . கார்கள் குறைவாக இருந்தது ஆனால் முருகனின் வாசல்படியில் வரிசையாக‌ மக்கள் நின்று கொண்டிருந்தார்கள்.நானும் போய் வரிசையில் நின்றேன் .முருகனை கொள்ளையடிக்க வந்தமாதிரி எல்லோரும் முக கவசம் அணிந்திருந்தார்கள் யார் முன்னுக்கு நிற்கிறார்கள் ,மனைவிக்கு பின்னால் யார் நிற்கிறார்கள் என்று தெரியாமல் இருந்தது.தொண்டர் ஒருவர் நெற்றிக்கு அருகாண்மையில் துப்பாக்கி மாதிரி ஒன்றை கொண்டுவந்தார் நான் திடுக்கிட்டு போனேன் பிறகு சுதாகரித்து கொண்டு "முபத்தாறோ,முப்பதேழே என்றேன் " "35 நல்ல கூலா இருக்கிறீயள் போல " "முருகனிட்ட வந்தா கூல் தானே அவனே கூலானவ‌ன் தானே" மனிசி பின்னுக்கு நின்று கிள்ளி முழிசி பார்த்த படியே ,மாஸ்க் போட்டபடி முழிசினால் எப்படியிருக்கும் "கோவிலுக்குள்ள வந்தாலும், உந்த லொள்ளு நக்கல் கதையை விடாமாட்டியள் என்ன‌ ?" "டேய் உங்கன்ட தொல்லை தாங்க முடியாமல் தான் இதை செய்தன் ஆனால் நீங்கள் என்னடா என்றால் மாஸ்க்,சனிட்டைசர் எல்லாம் போட்டு கொண்டு வந்து என்னை தொல்லை படுத்துறீங்களேயடா?" "எல்லாம் உன் மீது கொண்ட அன்பு " " அன்போ? வார கோபத்துக்கு தும்மி விட்டன் என்றால் தெரியும்" " முருகா முருகா முருகா ஏன் இந்த ஆவேசம்" " பின்ன ? கொரனா என்று கொஞ்சம் நிம்மதியா இருப்பம் என்றால் நீங்கள் உங்கன்ட வழமையான பிரச்சனை கொண்டு வந்து மூட்டை மூட்டையாக கொட்டுறீயள்" முந்தி மாஸ்க் போடாமல் நீங்கள் சொல்லுறதையே கேட்கிறதே கஸ்டம்,மாஸ்க் போட்டுகொண்டு நீங்கள் கேட்கிற இந்த கேள்விகள் எனக்கு புறியப்போகுதே? எப்ப பிளைட் ஓடும் எப்ப கொமிட்டி கூடும் எப்ப தேர் கட்டலாம் எப்ப திருவிழா வைக்கிறது ,எவன் அடுத்த கொமிட்டி தலைவன்,எப்ப வக்சீன் வரும்,வக்சீன் போடலாமா? oh my dad lord Siva முருகன் புலம்ப தொடங்க நான் நடுங்கிபோனேன்
  28 points
 4. பரிசு. விழியில் விழுந்து இதயம் கலந்த உறவு. அன்று எனது பிறந்தநாள் நிறைய நண்பர்கள், நண்பிகள் ஏராளம் ! வாழ்த்துக்கள்,பரிசுகள் தங்க ஆபரணங்கள் தங்கி விட்டன தந்தப் பேழையில் வெள்ளிப் பாத்திரங்கள் படுத்திருக்கின்றன பரண்மேல் எதுவும் என் இதயத்தில் தங்கவில்லை ! தங்கியது பாவையவள் பரிசளித்தாள் வாசமுள்ள ரோஜா மலர் மலரின் மணம் நாசிகளில் மங்கை முகம் மனக்கண்ணில் இதயம் சுமந்து கொண்டிருக்கின்றது விலை மதிப்பற்ற அம் மலரை மட்டும் இன்று --- அவள் சங்கு கழுத்தில் முகம் புதைக்க மூச்சின் சுவாசம் சீராகியது செவ்விதழில் முத்தமிட செவ்வாயில் அமிலம் சுரந்தது பிடியிடை தழுவிட மூலாதாரம் முழுதும் துடிக்குதடி கண்ணை விட்டு தூரம் நீ மறைந்தாய் கண்களுக்குள் நிறைந்து நின்றாய் கண்களுக்குள் உன்னைப் பார்த்து யானை பார்த்த குருடனானேன்......! யாழ் அகவை 23 க்காக ஆக்கம் சுவி.......!
  27 points
 5. லொக்டவுண் வதனிக்கு அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டது. பக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த நந்தனை திரும்பிப் பார்த்தாள் நல்ல தூக்கம். இன்று சனிக்கிழமை வேலையில்லாததால் அசந்து தூங்கிக்கொண்டிருந்தான். இப்பொழுதெல்லாம் இந்த லொக்டவுணால் வீட்டில் இருந்தேதான் வேலை செய்கிறார்கள். வீட்டில் வேலை செய்வதென்பது இலேசான காரியமில்லை. வேலையிடத்துக்கு போனோமா வேலை செய்தோமா நாலு நண்பர்களுடன் அரட்டை அடித்து வெளி உலகம் பார்த்து கடைக்கு போய் மாலையில் பிள்ளைகளுடன் விளையாடி என்று இருந்த காலம் மாறி இப்பொழுதெல்லாம் வீடே கதி என்று வீட்டின் சுவர்களுக்குள்ளேயே முட்டி மோதி பேசிக்கொண்டு சீ இதென்ன வாழ்க்கை? அடிக்கடி மனதுக்குள் அங்கலாய்ப்;பு ஏற்பட்டாலும் இதுவும் கடந்து போகும் என்று மனதைத் தேற்றிக்கொண்டனர். வதனியும் வீட்டில் வேலை செய்தாலும் இப்பவெல்லாம் விதவிதமாகச் சமையல் செய்வதும் பழைய நண்பிகளையெல்லாம் தேடிப்பிடித்து கதைப்பதுமாக ஒன்லைன் வட்ஸ்அப் என்று ஒருமாதிரி பொழுதைப் போக்கிக் கொண்டாள். இந்த வருடம் நந்தனின் 50வது பிறந்த நாளை பெரிய மண்டபம் எடுத்து விமரிசையாகக் கொண்டாட வேண்டுமென்ற அவளது கற்பனைகளெல்லாம் கனவாகிப் போகுமென்று யார் நினைத்தார்கள். இத்தனை வருடமாக அவர்களது வாழ்க்கையில் எத்தனையோ மேடு பள்ளங்கள் வந்தபோதும் இருவரும் மனம் ஒத்த தம்பதிகளாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பிள்ளைகள் இருவரும் படித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் படித்து முடிக்கும்வரை தம் பொறுப்புக்களை உணர்ந்து தம் பிள்ளைகளை வளர்ப்பதிலேயே அவர்களது இத்தனை ஆண்டுகளும் கழிந்து விட்டன. நேற்று நந்தனுக்கு 50வது பிறந்தநாள். நாள் முழுவதும் தொலைபேசியிலும் வட்ஸ்சப்புக்களிலுமாக வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருந்தன. வதனியும் தன் பங்கிற்கு கேக் இனிப்புவகைகள் பிரியாணி என்று செய்து அசத்தியிருந்தாள். இருந்தாலும் வதனி நந்தனுக்குத் தெரியாமல் பிள்ளைகளுடன் சேர்ந்து நந்தனின் பிறந்தநாளை வீட்டிலாவது பெரிதாகக் கொண்டாட வேண்டுமென்று திட்டமிட்டாள்;. அந்த திட்டத்திற்கு ஆப்பு வைப்பதுபோல் “வீட்டிற்குள் இருங்கள் வெளியே திரியாதீர்கள்” என்று மேஜர் முதல் பிரதமமந்திரி வரை தொலைக் காட்சிகளில் அறிவித்து மக்களின் நலனைப் பாதுகாக்கும்படி அறிவுறுத்தியது மட்டுமன்றி வீட்டிலும் 5 பேருக்கு மேல் ஒன்றுகூடுவது தண்டனைக்குரிய குற்றமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் வதனிக்கோ எப்படியாவது சேப்பிரைஸ் பாட்டி வைத்து நந்தனை பிரமிக்க வைக்க வேண்டுமென மனம் குறுகுறுத்துக் கொண்டிருந்தது. புது வீடு வாங்கியபின் வீட்டில் எந்த கொண்டாட்டமும் வைக்க அவளுக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. உறவுகளைச் சந்தித்தும் பல மாதங்களாகி விட்டன. எனவே நெருங்கிய உறவுகளை நந்தனுக்குத் தெரியாமல் ரகசியமாக சனிக்கிழமை வீட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தாள். அத்துடன் நந்தனை மகிழ்விப்பதற்காக அவனது நண்பர்கள் தனது நெருங்கிய நண்பிகள் என்று ஒவ்வொன்றாக சொல்லி 20-25 பேர் ஆகி விட்டது. சனிக்கிழமை மதியம் வரை வீட்டில் எந்த மாறுதலும் தெரியாதபடி ரகசியமாகவே அனைத்து ஆயத்தங்களும் நடந்தன. வீடும் என்றும் போல் அமைதியாக இருந்தது. மத்தியானத்துக்கு மேல் ஒரு நண்பன் மூலம் நந்தனை வெளியே அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்திருந்தபடி அனைத்து திட்டங்களும் சரியாக நடைபெற்றுக்கொண்டிருக்கவும் வதனி பூரண திருப்தியுடன் மளமளவென்று காரியங்களை மேற்கொண்டாள். அவசர அவசரமாக வீட்டை அலங்கரித்து ஓடர் பண்ணியிருந்த கேக்கை மேசையில் வைத்து அலங்கரித்து மற்றைய ஒழுங்குகளையெல்லாம் சரிவர செய்து முடித்தாள். திட்டமிட்டபடி அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றன. மத்தியானத்துக்குமேல் ஒரு நண்பனின் மூலம் நந்தனை வெளியே வெளியே அழைத்துச் செல்லவும் திட்டமிட்டிருந்தாள்; நீண்ட நாட்களின் பின் சந்தித்த நெருங்கிய நண்பனுடன் தத்தமது 50 வயது அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டே சுற்றியதில் நேரம் போனது தெரியவில்லை. மாலை மங்கத் தொடங்கியதும் வீட்டிற்கு போகலாம் என நந்தன் கேட்கவும் சரி என்ற நண்பனும் வதனிக்கு மெசேஜ் அனுப்பி விட்டு நந்தனுடன் வீட்டிற்கு வந்தான். வீடு அமைதியாகத்தான் இருந்தது. தன்னுடன் வந்த நண்பனை வீட்டிற்குள் அழைப்பதா விடுவதா என நந்தன் சிந்தித்த மறுகணம் நந்தன் தன்னை பின் தொடர்வதைக் கவனித்து “ வா வா வந்து ரீ குடிச்சிற்றுப் போகலாம்” என அழைத்தான். வீட்டின் கதவைத் திறக்கவும் “சேப்பிரைஸ்” என்று அனைவரும் கூக்குரலுடன் கைதட்டி நந்தனை வரவேற்கவும் நந்தன் திகைப்பில் திக்குமுக்காடிப் போனான். என்ன இது? லொக்டவுண் காலத்தில் இப்படிச் செய்கிறார்களே என மனம் அங்கலாய்த்தாலும் நீண்ட நாட்களாகச் சந்திக்காத நண்பர்களையும் உறவுகளையும் சந்தித்த சந்தோசத்தில் மனம் குதூகலமாகி மகிழ்ச்சியில் மூழ்கிப் போனான். வீட்டிற்குள் கலகலப்பும் சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது. எங்கட ஆக்களின்ர பிறந்தநாள் கொண்டாட்டம் என்றால் சும்மாவா? ஏல்லோரும் வண்ண வண்ண உடைகளுடனும் விதவிதமான அலஙகாரங்களுடனும் வந்து இறங்கி வீட்டிற்குள் செல்வதையும் வீட்டிற்குள் நடந்த குதூகலத்தையும் அவதானித்த யாரோ காவல் துறைக்கு செய்தி அனுப்பி விட்டார்களோ அல்லது தற்செயலாக அந்த வீதியில் பயணித்த காவல் துறையினருக்கு மூக்கில் வியர்த்து விட்டதோ யாரறிவார்? மக்களின் நலனுக்காகத்தானே சட்டங்களும் ஒழுங்குகளும் என்று சிந்திக்காமல் மனம் போல திட்டமிட்ட வதனி கதவைத் தட்டிய காவல் துறையினரைக் கண்டதும் திகைத்து விட்டாள். வீதியில் நிறைய வாகனங்களைக் கண்ட காவல் துறையினர் சந்தேகத்தில் ஒவ்வொரு வீடாக தட்டி சோதித்ததில் இவர்கள் வீட்டில் அதிகம் பேர் நின்றது கையும் மெய்யுமாக பிடிபட்டு விட்டது. என்ன செய்வது என்ற தெரியாமல் சிலர் மேல் அறைகளுக்குள்ளும், சிலர் நிலக்கீழ் அறைகளுக்குள்ளும் ஓடி ஒழிந்தனர். இருந்தும் யாராலும் காவல் துறையினரை ஏமாற்ற முடியவில்லை. அனைவருக்கும் குற்றப் பணமாக ஆளுக்கு ஆயிரம் டொலர் ரிக்கற் எழுதி கொடுக்கப்பட்டது. உறவுகள் நட்புக்கள் அனைவரும் திகைத்து என்ன செய்வது என்று அறியாது வருத்தத்துடனும் ஏமாற்றத்தடனும் நிற்க வதனியோ பலமுறை காவல் துறையினரிடம் மன்னிப்புக் கேட்டும் அவர்கள் எதற்கும் செவிசாய்க்கவில்லை. தமது கடமையில் கண்ணாயிருந்த காவல்துறையினர் இறுதியில் நந்தனின் கையிலும் பத்தாயிரம் டொலருக்கான குற்றப்பணத்திற்கான ரிக்கற்றை திணிக்கவும்; நந்தன் வெலவெலத்துப் போனான். காவல் துறையினர் தமது கடமையை முடித்து விட்டு வெளியே போய் நின்று அனைவரையும் வெளியேறும்படி பணித்து விட்டு தம் வாகனத்தினுள் காத்திருந்தனர். நந்தன் வதனியை திரும்பிப் பார்த்த பார்வையில் வதனி எரிந்து போகாத குறை. வந்திருந்த அனைவரும் தலையைத் தொங்கப் போட்டபடி வெளியேற வதனியோ கையைப் பிசைந்தபடி கண்கலங்க பார்த்துக்கொண்டு நின்றாள். உறவுகள் சிலர் “அவள் வதனிதான் கூப்பிட்டாள் என்றால் எங்களுக்கு எங்கே அறிவு போனது” என்று தம்மை நோவது போல வதனியை திட்டியபடி வெளியேறினர். ஆசைஆசையாக பார்த்துப் பார்த்து செய்த அலங்காரங்கள் கேக் இனிப்பு பலகாரங்கள் உணவுகள் அனைத்தும் தேடுவாரற்று கிடந்தது. இத்தனை ஆண்டு வாழ்வில் இதுவரை நந்தனின் இந்தமாதிரியான கோபத்தைப் பார்த்தறியாத வதனிகூட ஒருகணம் திண்டாடிப் போனாள். மெதுவாக பக்கத்தில் போய்” என்ன நந்தன் நான் உங்கட பிறந்தநாளை வடிவாகக் கொண்டாட வேணுமெண்டுதானே இப்படிச் செய்தனான்” என்ற ஆரம்பிக்கவும் நந்தன் கட்டுக்கடங்காத கோபத்துடன் “உன்னை நான் கேட்டனானா பிறந்தநாள் கொண்டாடச் சொல்லி அறிவு கெட்ட ஜென்மம்”என்று ஆவேசத்துடன் அவளைப் பிடித்து தள்ளி விட்டான். இந்த தாக்குதலை எதிர் பார்க்காத வதனி நிலை தடுமாறி பக்கத்தில் இருந்த மேசையைப் பிடிக்க முயற்சித்தும் பிடி நழுவிப் போக அவளுக்கிருந்த மனக் குழப்பமும் சோர்வும் அவளை பெலவீனப்படுத்த தட்டுத் தடுமாறி அருகிலிருந்த சுவரில் மோதி கீழே விழுந்து விட்டாள். சத்தம் கேட்டு பிள்ளைகள் ஓடி வந்தனர். நந்தனும் ஒருகணம் திகைத்தாலும் ஆத்திரம் அடங்காமல் விறைப்புடன் நின்றான். வதனியின் தலையிலிருந்து இரத்தம் கொட்டியதை கண்ட பின்தான் நந்தனுக்கு நிலமையின் தீவிரம் மனதை உறுத்தியது. உடனடியாக அவளைத் தூக்கி செற்றியில் படுக்கவைத்துவிட்டு அம்புலன்சுக்கு அழைத்தனர். இந்த கொரோனா காலத்தில் அவசர சிகிச்சைப் பிரிவுகளும் அதிக வேலைப் பழுவுடன் இருப்பதால் சிறிது தாமதித்தே உதவி கிடைத்தது. வதனியை அம்புலன்சில் ஏற்ற, நந்தனை கைது செய்து பொலிஸ் விசாரணைக்காக கொண்டு சென்றனர். நந்தன் இதை எதிர்பார்க்கவில்லை. நந்தன் திட்டமிட்டு எதுவும் செய்யா விட்டாலும் குற்றவாளியாகத்தான் பார்க்கப்பட்டான். நந்தன் பயத்திலும் திகைப்பிலும் உறைந்து போனான். தன் பிறந்தநாள் கொண்டாட ஆசைப்பட்டு வதனிக்கு இப்படி ஆகிவிட்டதே என்று நினைக்க வேதனையில் துவண்டு போனான். நிறைய இரத்தம் இழந்து விட்டதால் வதனியும் மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். நந்தனையும் விசாரணை முடியும்வரை பொலிஸ் காவலில் வைத்து விட்டார்கள். பிள்ளைகளோ என்ன செய்வதென்று தெரியாத நிலையில் . இதில் யாரை நோவது? கணவனது பிறந்தநாள் கொண்டாட ஆசைப்பட்ட வதனியையா? ஆத்திரப்பட்ட நந்தனையா? அல்லது அவனது 50வது பிறந்த நாளையா? லோக்டவுணையா? எதை?
  27 points
 6. முதியோர் சங்கம் சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம் யாழ்ப்பாணம்.(தற்காலிக முகவரி) PULAR Charitable Trust Non Profit Charitable Trust கிழமை பட வாழ் (உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்) pulartrust@gmail.com மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பு அறக்கட்டளையின்/அமைப்பின் பெயர் புலர் அல்லது புலர்வு (விடியலின் ஒத்த சொல்) அறக்கட்டளையின் நோக்கம் உடனடி உதவிகள் மாற்றுத்திறனாளிகளிற்கான பொருளாதார ஆதரவு. (மருத்துவம், கல்வி, படுக்கை வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தல், வேறு ஏதேனும் குறிப்பிடத் தகுந்த தேவைகள்.) நீண்டகால திட்டங்கள் பெற்றோரை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளையும், பெற்றோர்(முதுமை காரணமாக) இருந்தும் மாற்றுத்திறனாளிப் பிள்ளைகளை பேணமுடியாதவிடத்து அவ்வாறு உள்ள மாற்றுத்திறனாளிகளையும் பாதுகாக்க காப்பகம் அமைத்து பேணுவது. இக்காப்பகமானது விஸ்தீரணமான இடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பகம், நீச்சல் தடாகம், உடற்பயிற்சி கருவிகளுடனான கூடம், பாரம்பரிய மூலிகைகள் மற்றும் இயற்கை முறையிலான தோட்டம் அமைப்பதோடு அங்கிருந்தே சமையலுக்கு தேவையானவற்றை பெறுதல். பயன்தரும் கால்நடைகளை வளர்க்க முயன்று அவற்றின் பயன்களையும் பெற்றுக் கொள்ளல். இவை எல்லாமே இயற்கை சார்ந்தே நடைபெறும்.(இரசாயன பூச்சிக்கொல்லி, செயற்கை உரம் நிரந்தர தடை) காப்பகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளில் திறமையுள்ளோரை அவர் சார்ந்த துறைகளில் மேலும் கற்று வளர ஊக்குவித்து உதவுதல். மருத்துவ சேவைகளை இலகுவாக பெறுவதற்கு வழிவகைகளை உருவாக்குதல். (சிறப்பு துறை சார் மருத்துவர்கள் குழு ஒன்றை எமக்காக உதவ ஒழுங்குபடுத்துதல்) பெரிய மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பிரிவுகளை உருவாக்கக் கோருவது. உதவி பெறும் மாற்றுத்திறனாளியின் குடும்ப நிலை பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மாற்றுத்திறனாளிகள் மட்டுமே இவ் அமைப்பின் உதவி பெற தகுதியுடையோர். அவர்களை அக்கிராம சேவகரது உதவியோடு நேரடி சரிபார்ப்பின் மூலமும் தெரிவு செய்யவேண்டும். இவ்வமைப்புகான நிதி திரட்டலை உறவுகள், நண்பர்கள் மூலமாக முதலில் சிறிய அளவிலும் செயற்பாடுகளும் தேவைகளும் அதிகரிக்க அதிகரிக்க பலரை இணைத்து நிதி திரட்டவும் எண்ணியுள்ளோம். ஒவ்வோராண்டும் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி 15 வரை நிதி திரட்டலை முன்னெடுக்கவுள்ளோம். மார்கழி 31 இற்குள் கணக்கு சரி பார்த்து (சேர்ந்த பண விபரம், செலவு செய்த விபரம்) உதவிய அனைவரும் பார்க்கும் வண்ணம் குழுக்களிலும் இணையத்திலும் பகிரப்படும். உள்நாட்டில் இருக்கும் கொடையாளர்கள் மாதம் 500 ரூபா வீதம் வருடத்திற்கு 6000 ரூபாவினையும் வெளிநாட்டில் இருக்கும் கொடையாளர்கள் 10 $,€,£ வீதம் வருடத்திற்கு 120 $,€,£ நன்கொடையாக தந்து உதவுமாறு வேண்டிக் கொள்கிறோம். மேற்குறிப்பிட்ட தொகையை விட மேலதிகமாக நன்கொடை அளிக்க விரும்பும் கொடையாளர்கள் கூடிய தொகையையும் தந்து உதவலாம். இந்நிதி திரட்டும் கோரிக்கை 5-10 ஆண்டுகள் வரை தொடர்ந்து பெரும் நிதியைத் திரட்டும் நோக்கம் உள்ளது. நிர்வாகத்தில் இருக்கும் அனைவரும் அமைப்பிலிருந்து எந்த ஒரு உதவியையும் பெற்றுக்கொள்ள முடியாது. நிதிக் கொடுக்கல் வாங்கல் அனைத்தும் வங்கியினூடாகவே மேற்கொள்ளப்படும். அமைப்பின் வங்கிக் கணக்கிற்கு மட்டும் நிதியை வழங்குமாறு கொடையாளர்களை கேட்டுக் கொள்கிறோம். தனிப்பட்ட நிர்வாகிகளின் வங்கிக் கணக்கிற்கு எக்காரணத்தை முன்னிட்டும் ஒரு போதும் அனுப்பவேண்டாம். "அனைவருடைய கூட்டு முயற்சியால், எல்லோருடைய நம்பிக்கையையும் பெற்று, மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சிக்காக, மேன்மைக்காக, அவர்களை காப்பதற்காக அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம்" தன்னலம் இல்லாத பொதுநலம், தடுமாற்றம் இல்லாத நம்பிக்கை, குறைகள் இல்லாத கூட்டு முயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம். அதிலும் நான் என்பது நாம் ஆக மாறும்போது தொடங்கப்படும் கூட்டு முயற்சிகள் மாபெரும் வெற்றிகளைத் தரும். இது போன்ற அமைப்புகளில் செயற்பட்ட/அனுபவமுள்ள யாழ் உறவுகள் திட்டமிடலில் உங்கள் ஆலோசனைகளை தந்து உதவுங்கள்.
  26 points
 7. உடையார் அண்ணை அவசரப்பட்டு சொல்லிப்போட்டியளோ! இப்ப தான் 1 மாதம் தொடங்கி, விசேட தேவையுடையோருக்கு உதவியள் செய்வதோட நீண்ட கால நோக்கில விசேட தேவையுடையோருக்கான காப்பகம் அமைப்பது தான் நோக்கம். உடையார் அண்ணாவை தனிப்பட தெரியும், அவரிடம் அமைப்பின் யாப்பு எழுதுவது தொடர்பாக உதவி கேட்ட போது கோஷான் & கற்பகதரு இருவரிடம் கேட்டுப் பார்க்கச் சொன்னார். நான் கோசான் அண்ணரிடம் மட்டும் தனிமடலில் தொடர்பு கொண்டேன். சில ஆங்கில இணைப்புக்களை தந்தவர், தமிழில் மொழி மாற்றம் செய்து தர கேட்டேன். அதையும் செய்து தந்தார். மிக்க நன்றி கோசான் அண்ணை. யாழின் நேசக்கரமும் எங்களுக்கு ஒரு வழிகாட்டி, அதன் ஊடாகவும் தம்பி சில உதவிகள்/ஒருங்கிணைப்புகள் செய்தவன் என்று நினைக்கிறேன். நாங்கள் இப்ப 8 கிராமசேவகர் பிரிவிற்குள் செயற்பட முடிவு செய்துள்ளோம். அதனால தான் யாழின் உதவியை நாடவில்லை. வேலைத்திட்டங்கள் கூடும்போது யாழின் துளித்துளியாய் பகுதியில் கட்டாயம் உதவிக் கோரிக்கை வைப்பேன். அப்போது யாழ் உறவுகள் உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கோ. இப்போது இரண்டு விசேட தேவையுடைய பெண் பிள்ளைகள்(படுக்கையில் இருக்கிறார்கள்) 18,22 வயது. பெற்றோர் நாள் வேலைக்கு போறவர்கள். பிள்ளைகளுக்கு பம்பர்ஸ், மெத்தை வாங்க உதவும்படி கேட்டார்கள். பம்பர்ஸ் வாங்க மாதம் 2000 ரூபாய் தாய்மாரின் தபாலக சேமிப்புக் கணக்கிற்கு Standing order வங்கியில் போட்டிருக்கு. மெத்தையும் ரபர் சீற்றும் நேற்று வாங்கி கொடுத்திருக்கிறோம். மேலும் பொருளாதார ரீதியில் பின்னடைந்துள்ள பயனாளிகளை தெரிவு செய்து வழங்க உள்ளோம். உடையார் அண்ணாவும் 75281 ரூபாயை நன்கொடையாக வழங்கி உதவியுள்ளார். மிக்க நன்றி அண்ணா.
  26 points
 8. முற்குறிப்பு: சிலருக்கு வாசிக்கும் போது சங்கடமாக இருக்கலாம் கதை: வழக்கமாக ராசுக்குட்டி சுச்சு போகின்றபோது ஒரு பாட்டை விசிலடிச்சுக் கொண்டோ, இல்லை ஊரில சுவரில் எட்டுப் போட்ட காலத்தை நினைச்சுக் கொண்டோ அல்லது விட்டத்தை பார்த்துக் கொண்டோ தான் போவது வழக்கம். ஆனால் அன்றைக்குப் பார்த்து ஏதோ ஒரு நினைவில் போய் கொமர்ட்டில் (commode) நீரில் கலந்தும் கலக்காமலும் விட்ட சுச்சுவை உற்றுப்பார்த்து வினையை தேடிக்கொண்ட கதைதான் இப்ப நான் சொல்லப் போற கதை. உற்றுப்பார்த்த ராசுக்குட்டிக்கு திடுக்கிட்டுப் போனார். சிவப்பாக ஒன்றிரண்டு துளிகள் சின்னஞ் சிறு வட்டங்களாக மிதந்து கொண்டு இருந்ததை கண்டு வெலவெலத்துப் போனார். ஐயய்யோ சுச்சுவில் இரத்தம் கலந்து வருகின்றதோ என்று ஆடிப்போயிட்டார். வாழ்வே மாயம் படத்தில் கமலஹாசன் இருமின பின் இரத்தம் வெளியேறிய சீனை தன் மனக்கண் முன் கொண்டு வந்து பார்த்தார். இது புற்று நோயாக இருக்குமோ அல்லது வேறு ஏதும் பாரதூரமான பிரச்சனையோ என்று ஒரு கையால பிடிச்சபடியே யோசிச்சுக் கொண்டு இருந்த ராசுக்குட்டியை, "என்னப்பா இவ்வளவு நேரம் என்ன செய்றீஙள்..." என்று கேட்ட மனைவியின் குரல் தான் மீண்டும் தன் நிலைக்கு கொண்டு வந்தது, ஆனாலும் பயம் விடவில்லை ராசுக்குட்டிக்கு. வீட்டில் நண்பர் குடும்பம் வந்து கதைத்து கொண்டு இருக்கும் போது தான் இது நிகழ்ந்து இருந்தது. ராசுக்குட்டி அவர்களுடன் கதைத்துக் கொண்டு இருந்த விடயத்தை மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தாலும் மனசில் சிவப்பாக பயம் மிதந்து கொண்டுதான் இருந்தது. எப்படியும் இது என்ன என்று அறியாவிடின் தலை உடனே சுக்கு நூறாக உடைந்து சிதறி விடுமோ என்று உள்ளூர அஞ்சிக் கொண்டு இருந்தார். எப்ப நண்பர் குடும்பம் போகும், எப்ப கூகிள் ஆண்டவரிடம் போய் என்ன விடயம் என்று அறியலாம் என்ற நினைப்பிலேயே இருந்தமையால் சரியாக அவரால் கதைக்க கூட முடியவில்லை. நண்பர் குடும்பம் அரை மணி நேரம் மேலும் கதைத்து விட்டு போன மறுகணம், ஓடிப் போய் தன் மொபைலில் இணையத்தில் கூகிள் ஆண்டவரை கூப்பிட்டு "blood in the urine" (சிறு நீரில் இரத்தம்) என்று டைப் செய்து தேடு பொறியை தட்டி விட்டார். கூகிள் ஆண்டவரும் வஞ்சகம் இல்லாமல் பின்வருவன ஒன்று காரணமாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்களோ காரணஙள் என்று பட்டியலிட்டார்: 1. தொற்று - Urinary tract infections 2. சிறு நீர்ப்பையில் கல்லு -A bladder or kidney stone 3. சிறு நீரகத்தில் தொற்று Kidney infections (pyelonephritis). 3. புரஸ்ரேட் பெரிசாவது -Enlarged prostate. 4. புற்றுநோய் - Cancer 5. சீறு நீரக காயங்கள்- Kidney injury என்று வகை வகையாக பட்டியலிட்டார் கூகிள் ஆண்டவர். அவ்வளவு தான் ராசுக்குட்டி ஆடிப் போயிட்டார். அவர் மனக் கண் முன் மனைவியும் பிள்ளைகளும் பரதேசி கோலத்தில் நிற்பது போலவும், ஹீமோ தெரபி எடுத்து தலை முடி எல்லாம் உதிர்ந்து வயக்கெட்டுப் போய் தான் படுக்கையில் கிடப்பது போலவும், நண்பர்கள் எல்லாம் கண் ஓரத்தில் கண்ணீர் வழிய தான் வளர்த்தப்பட்டு இருக்கும் பெட்டியை சுற்றி ஒரு வட்டம் போட்டு நடப்பது போலவும் காட்சிகள் வழியத் தொடங்கி விட்டன ராசுக்குட்டிக்கு. முதல் வேலையாக உடனடியாக உயில் எழுதி வைக்க வேண்டும் என நினைத்தார். பின் அப்படி உயில் எழுதும் அளவுக்கு ஒரு சொத்தும் இல்லையே என அங்கலாய்த்தார். சொத்து கித்து சேர்த்து வைக்காமல் குடும்பத்தை நடுத்தெருவில் விடப்போகின்றேனே என தழுதழுத்தார். ஆயுள் காப்புறுதியில் கிடைக்கும் சில இலட்சங்கள் குடும்பத்துக்கு போதுமாக இருக்குமா என கணக்குப் போட்டார். தான் செத்த பின் எப்படியும் மறுமணம் செய்து கொள் என்று மனிசியிடம் சத்தியம் வாங்க வேண்டும் என உறுதி பூண்டார். புரண்டு புரண்டு படுத்தார், நடுக் கட்டிலில் எழும்பி இருந்து தன்னை தொட்டுப் பார்த்து எல்லாம் சரியாக இருக்குதோ என்று செக் பண்ணினார். இறுதியில் அடுத்த நாள் எழும்பியவுடன் குடும்ப மருத்துவருக்கு போன் போட்டு விடயத்தை சொல்லி உடனடியாக மருத்துவம் செய்ய தொடங்க வேண்டும் என்று நினைத்தார். எந்த நோயும் ஆரம்பத்தில் கண்டு பிடிக்கப்பட்டால் அதில் இருந்து பிழைக்கலாம் என எங்கோ வாசித்ததை பல தரம் மீள மனக்கண் முன் கொண்டு வந்து வாசித்தார். அப்படி நினைத்தது கொஞ்சம் மனசுக்கு ஆறுதல் கொடுக்க படுக்க போனார். நித்திரையானார். தான் செத்துப் போன பின் நண்பர்கள் எல்லாம் பியர் அடிச்சு அதைக் கொண்டாடுகின்றனர் என கனவு ஒன்றைக் கண்டு திடுக்கிட்டு எழும்பினார். உலகமே இப்படித்தான் போலியானது என்று கவலைப்பட்டார். சுருண்டு படுத்தார். அடுத்த நாள் மருத்துவரிடம் கதைக்க, மருத்துவர் இவர் சொல்வதை பெரிசாக கணக்கெடுக்கவில்லை போலிருந்தது. கொரனா காலத்தின் முதல் மாதம் என்பதால், மருத்துவர் கடும் யோசனையின் பின் இவர் கொடுத்த ஆக்கினையால "சரி வா வந்து சிறுனீரில் ஒரு டெஸ்ட் எடு... அதுக்குப் பிறகு பார்ப்பம் ": என்று சொல்லிய அடுத்த அரை மணி நேரத்தில் கிளினிக்கு போய் விட்டார். சிறு நீர் டெஸ்ட் செய்தார், 10 நிமிடங்களில் அதன் ரிசல்ட்ஸ் வந்தது. (தொடரும்....)
  26 points
 9. காவலூர்க் கனவுகள் கடலோரம் அலைவந்து கரைமீது மோதும் காதோரம் ஆலய மணி வேதம் ஓதும் இனிதான தென்றலும் இடை வந்து வீசும் எங்கெங்கு நோக்கினும் தெய்வீகம் பேசும் இல்லங்கள் எங்குமே இறை புகழ் பாடும் இயம்பிடும் செபமாலை தினம் சாரல் தூவும் அதிகாலைத் திருப்பலி அரங்கேறும் நேரம் அற்புத கானங்கள் அகமெங்கும் மோதும் நிலவோடு கடல் வந்து நிதம் சங்கமிக்கும் கடலோடு மேகங்கள் தலை கோதிச் செல்லும் செம் பருத்திப் பூக்கள் வேலியில்; ஆடும் செவ்வந்திப் பூக்களும் பொன் அள்ளித் தூவும் அதி காலைச் சேவல்கள் அறை கூவிப் பாடும் அதை மிஞ்சும் திருந்தாதி மணி நாதம் கேட்கும் வான் முட்டும் ஆலய கோபுரம் நான்கும் ஆன்மீக தாகங்கள் தீர்த்திடும் பாங்கும் அறிவூட்டும் அதிசய கலைக்கூடம் எங்கள் அறிவுக்கண் திறந்திடும் அற்புதம் செய்யும் குயிலோசை காதிலே இன்னிசை பாடும் அலையோசை காற்றோடு சுதிதாளம் போடும் வெள்ளிக் கொலுசொலி வீதியில் சிந்தும் துள்ளும் வனிதையர் சிரிப்பொலி மிஞ்சும் காலைச் சந்தையும் களைகட்டிக் கூடும் காவலூர்த் துறைமுகம் கலகலப் பூட்டும் மாலைச் சூரியன் மறைந்திடும் வேளை மஞ்சள் குளித்திடும் கடல் மகள் நாணம் கண்டு களித்திட காளையர் கூடும் கடற்கரை பொன்மணற் பரப்பென மின்னும் பூவரசம் பூக்கள் சாமரம் வீசும் மாமரக் காற்றிலும் தமிழ் மணம் வீசும் காவலூர்க் கனவினைக் கண்களில் சுமக்கும் கண்மணிகள் வாழ்வில் வசந்தமே வீசும் --
  26 points
 10. அன்புள்ள அம்மா அறிவது! நான் நல்ல சுகம். அது போல் நீங்களும் நீங்கள் விரும்பிய இறைவனின் பாதடியில் இளைப்பாறுவீர்கள் என நம்புகின்றேன். அம்மா நீங்கள் என்னை/எங்களை பிரிந்த மாசி மக நாள் வருகின்றது. அம்மா நீங்கள் நான் தினசரி வணங்கும் தெய்வம். அம்மா நான் உங்களுக்கு கடிதம் எழுதி நீண்ட காலமாகிவிட்டது. அதனால் நிறைய எழுத வேண்டும் போல் இருக்கின்றது. அம்மா நான் உங்கள் கடைசிப்பிள்ளை. அதனால் அதிக செல்லம் தந்து வளர்த்து விட்டீர்கள் .அந்த வாழ்க்கை இனி வராது. பொறுப்புகள் கூடி விட்டது.அக்கா அண்ணா பாசங்கள் விரிவடைந்து விட்டது.ஒரு முற்றத்தில் தவழ்ந்து விளையாடிய நாங்கள் வெவ்வேறு உலகில் இருக்கின்றோம். வெவ்வேறு கலாச்சாரத்துக்குள் கட்டுப்பட்டு விட்டோம். சகோதரங்களுடன் முன்னரைப்போல் கதைக்க முடியவில்லை அம்மா.அவர்களுக்கும் எனக்குமிடையில் பெரிய பாசங்கள் குறுக்கிட்டுவிட்டதுஅம்மா.பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என்கிறார்கள். எனது உரிமையை அவர்கள் எடுத்து விட்டார்கள் அம்மா. அன்றிருந்த ஒரு முற்றத்து பாசங்கள் இன்று இல்லையம்மா. உலகம் நாடு ஊர் எல்லாம் இருந்த இடத்தில் இருக்கும் போது பாசங்களும் பிணைப்புகளும் மட்டும் விரிந்து விரசல்கள் ஆகி விட்டதம்மா. அம்மா நீங்கள் அன்று அது உனக்கு இது உனக்கு என எனக்காக சேர்த்ததெல்லாம் இன்று எனக்காகவே இல்லையம்மா. என்னிடமும் இல்லையம்மா. என்னால் அதிகம் எழுத முடியவில்லையம்மா. பலர் வயது போய் விட்டது என்கிறார்கள் அம்மா. ஆனால் நான் உங்களுக்கு இன்றும் பாலகன் தானே அம்மா. இன்னும் புதினம் சொல்வேன் அம்மா......
  26 points
 11. ஏராளனுக்கு வாழ்த்துகள் ஊரில் புலர் எனும் அமைப்பை தொடங்கி, மாற்றுதிறனாளிகளுக்கு உதவிகள் செய்து கொண்டிருக்கும் ஏராளனுக்கும் அவரின் நண்பர்களுக்கும் வாழ்த்துகள் உங்கள் நல்ல மனதிற்கு உங்கள் குடும்பத்தினருடன் நீடூழி வாழ்க உங்கள் உதவிகள் தொடர வாழ்த்துக்கள்
  24 points
 12. காலம் தான் எவ்வளவு விரைவாக ஒடி விடுகின்றது....? இப்போதெல்லாம் இந்தக் கடற்கரை வெறிச்சுப் போய்க் கிடப்பது போல அவனுக்கு ஒரு பிரமை...! அந்த நாட்களில் எத்தனை கிடுகுக் கொட்டில்கள் இதே இடத்தில் முளைத்திருந்தன? மயிலிட்டி, வடமராட்சி, பேசாலை, வங்காலை போன்ற இடங்களிலிருந்தெல்லாம் சூடை மீனும், கீரி மீனும் அள்ள வந்தவர்களுடன் உள்ளூர் மீனவர்களிளின் கொட்டில்களும் நிறைந்திருக்கும்! ஒருவரும் தீண்டாத சாளை மீன்களையும் கொழும்பு கோழித்தீன் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்வார்கள்! அரை வாசி வள்ளங்கள் கடலில் நங்கூரமிட்டிருக்க, மிச்சக் கட்டு மரங்கள் கரைகளில் கிடந்தது வெயில் காயும்! கிடுகு பின்னுபவனிலிருந்து...கள்ளிறக்குபவன் வரைக்கும் முகமெல்லாம் புன்னகை நிறைந்திருக்கும்! சுருக்கமாகச் சொல்லப் போனால்....அந்தக் காலப் பகுதியில் புங்குடுதீவின் பொருளாதாரம்....அதி உச்சத்துக்கு உயர்ந்து போயிருக்கும்! சந்திரனின் மனதிலிருந்து ஒரு பெரு மூச்சு அதிக வெப்பத்தைச் சுமந்தபடி வெளியில் போனது! நீண்ட நாட்களின் பின்னர் நெடுந்தீவு போகும் வள்ளத்திற்காகக் குறிகாட்டுவான் கரையில் அவன் காத்திருக்கிறான்! இராஜேஸ்வரி, சில்வர் ஸ்பிறெ, அலை அரசி, குமுதினி, எலாறா என்று வள்ளங்களின் பெயர்கள் நினைவில் வந்து போயின! குமுதினியின் நினைவு வந்த போது...கண்களில் இரண்டு துளிகள் கண்ணீர்த் துளிகள் தோன்றிக் கீழே விழுவதா என்று யோசித்தன!! அவனுக்குச் சிறுவயதில் படிப்பித்த அந்த ஆசிரியையின் முகமும் ஒரு கணம் தோன்றி மறைந்தது! தம்பி...என்ன கனவு கொண்டிருக்கிறீரோ என்று ஒரு பெரியவரின் குரல் அவனை இவ்வுலகத்துக்குக் கொண்டு வந்தது! வள்ளம் வெளிக்கிடப் போகுது...கெதியா ஓடி வாரும்! அந்தக் காலத்தில்...வள்ளத்தின் கொண்டக்ரரிலிருந்து வள்ளத்தின் ஓட்டுனர் வரை, எல்லாரது பெயரும் அவனுக்கு அத்து படி..! இப்போது அவனை ஒருவருக்கும் தெரியாது..! ஆரோ வெளிநாட்டுக்காரர் போல கிடக்குது என்று யாரோ ஒருவர் சொல்லுவது கேட்டது! சில வருடங்கள் அவனை ஒரு வெளிநாட்டுக் காரனாக்கி விட்டதை நினைக்கக் காலம் எவ்வளவு வலிமையானது என தனக்குள் நினத்துக் கொண்டான்! வள்ளம் புறப்பட்ட போது ...தன்னை யாரும் அடையாளம் கண்டு விடக் கூடாது என்பதற்காக...தனது கறுப்புக் கண்ணாடியை ஒரு முறை துடைத்து விட்டுப் போட்டுக் கொண்டான்! நயினாதீவு நாக பூஷணி அம்மனின் கோபுரம் கிட்டக் கிட்ட நகர்ந்து வந்தது! அம்மன் கோபுரத்தைப் பார்க்கும் ஒவ்வொரு தடவையும்...இடையில் நகர்ந்து போய் விட்ட வருடங்களை நினைத்துக் கொள்வான்! ஒவ்வொரு தடவையும்...அந்தக் கோபுரம் உரு மாறிக் கொண்டேயிருக்கும்! நயினாதீவு மக்களின் பொருளாதர நிலையையும். அவர்கள் அப்போதைய மனோ நிலையையும் அந்தக் கோபுரம் பிரதி பலிப்பதாக, அவன் நினைத்துக் கொள்வதுண்டு! தேர்த் திருவிழா பார்க்க வந்து அனியாயமாகக் கடலில் சங்கமித்த அந்த இருபத்தியொரு பேரும் ஒரு முறை வந்து நினைவில் போனார்கள்! வள்ளம் எழாத்துப் பிரிவைத் தாண்டும் போது..தாலாட்டும் அந்தத் தாலாட்டு அவனுக்கு எப்போதுமே மிகவும் பிடித்தமான ஒன்று! இன்றும் அப்படித் தான்! ஒரு மெல்லிய தூக்கம் கூட அப்போது எட்டிப்பார்த்த்து! கண்களை மூடிய படியே சிந்தனையில் மெதுவாக மூழ்கத் தொடங்கினான்! கொஞ்சம் தங்களைச் சிலாகித்துக் கொண்ட ஊரவர்கள் சிலர், வள்ளத்தின் மேல் தளத்திலிருந்து '304' விளையாடத் தொடங்க, அவர்களுக்கிடையே கதையும் களை கட்டத் தொடங்கியது! முதலாமவர் ...இந்த வள்ளங்களுக்கு ஏன் இந்த அறுவாங்கள் பொம்பிளையளின்ர பேரை மட்டும் வைச்சுத் துலைக்கிறாங்க்ளோ தெரியாது! இரண்டாமவர்.... அதுக்கு இப்ப என்ன பிரச்சனை...சூறாவளியளுக்கும் தானே...அவையளின்ர பேரை வைக்கிறாங்கள்! முதலாமவர்.....அது பரவாயில்லை...வள்ளங்களுக்குப் பொம்பிளைப் பெயர் இனிமேல் வைக்கக் கூடாது எண்டு சட்டம் கொண்டு வர வேண்டும்! இரண்டாமவர்....உம்மட மனுசி உம்மை விட்டிட்டு ஓடிப் போனத்துக்காக இப்பிடியே..! முதலாமவர்.. உனக்கு விசயம் விளங்கேல்லைப் போல கிடக்கு...நீ எப்பவுமே ரியூப் லயிற் தானே! இந்தப் பேருகளை வைக்கிறதால மாததத்திலை இரண்டு மூண்டு நாளைக்கு வள்ளம் ஓடாமையெல்லோ கிடக்குது! வள்ளத்தில் உள்ளேயிருந்த பலர் சிரித்தார்கள்....சில பெண் பயணிகள் மெதுவாக நெளிந்தார்கள். அவர்களில் ஒருவர்...அப்புமாரே...கதையை மாத்துங்கோ....உங்கட எலாறா மட்டும் பெரிசாக் கிழிச்சு விட்டுதாக்கும்! இந்தக் கதைகள் பொழுது போவதற்காகவே கதைக்கப் படுகின்றன என்று எல்லோருக்கும் தெரிந்தாலும், சில வேளைகளில்....அடிபிடியிலும் முடிந்த நாட் களும் இல்லாமல் இல்லை! இடையில் கொஞ்சம் அவன் அயர்ந்து போயிருக்க வேண்டும்! தூரத்தில்...பனை மரங்கள் பச்சை வரிசையாகத் தெரியத் தொடங்கி விட்டன! ஊரைக் கண்ட புழுகத்தில்...கறுப்புக் கண்ணாடியைக் கொஞ்சம் கழற்றினான்! அப்போது ஒரு இளம் பெண் சந்திரனைப் பார்த்துச் சிரிக்க...அவனும் மரியாதைக்காகப் பதிலுக்குச் சிரித்து வைத்தான்! இப்போதெல்லாம் அவனுக்குள், அவனையறியாமலே ஒரு விதமான பயம் வந்து குந்திக் கொண்டது! அவனது சாதகக் குறிப்பை எழுதிய பண்டிதர் ஒருவர்....சாதகன் பிறக்கும் போது கன்னி ஸ்தானத்தில் சந்திரன் உச்சம் பெற்று நின்ற காரணத்தால்...சாதகன் குளிர்ந்த கண்களை உடையவனாகவும், பர தார மனம் கொண்டவனாகவும் இருப்பான் என்று எழுதியிருந்தார்! பர தார மனம் என்பதன் பொருள் அவனுக்கு விளங்கா விட்டாலும், ஏதோ பாரதூரமான வார்த்தை என்ற அளவில் அவனுக்குப் புரிந்திருந்தது! சாதகங்களை அவன் நம்புவதில்லை எனினும்....மனதில் ஒரு விதமான பயம் நிரந்தரமாகவே குடி கொண்டு விட்டது! தனது உணர்ச்சிகளை வெளியே காட்டாது மறைக்கும் எண்ணத்துடன்...கறுத்தக் கண்ணாடியை எடுத்து மீண்டும் போட்டுக் கொண்டான்! மாவலி இறங்கு துறையில், கால் வைத்தவுடன்...உடம்பெல்லாம் ஒரு விதமான புத்துணர்ச்சி ஒன்று தோன்றியது போல இருந்தது! அருகிலிருந்த குமுதினிப் படகில் இறந்தவர்களின் நினைவுக் கல்லைக் கண்டதும்...அந்த உணர்ச்சி வந்த மாதிரியே போயும் விட்டது..! அதிலிருந்த பெயர்களை ஒரு முறை வாசித்துப் பார்த்தான்! பல பெயர்கள் மிகவும் பரிச்சயமாக இருந்தன! அந்த ஆசிரியை, மீண்டுமொரு முறை நினைவில் வந்து போனார்! சங்கக்கடைக்குப் பக்கத்திலிருந்த பொன்னம்மா ஆச்சியின் கடையை இப்போது காணவேயில்லை! அந்த நாட்களில் பணம் எதுவும் வாங்காமலே, யானை மார்க் ஒரேன்ஜ் பார்லியை அந்த ஆச்சி அன்புடன் உடைத்துத் தரும்போது, வள்ளத்தில் வந்த களைப்பு உடனேயே பறந்து போய் விடுவது நினைவுக்கு வந்தது! அடுத்த பகுதியில் முடியும்…!
  23 points
 13. தமிழீழத்தில் உவர் மண்ணை வண்டல் மண்ணாகும் திட்டம் இது எனது கள உறவுகள் கோசன் சே மற்றும் தனிக்காட்டுராஜா வேண்டுகோளின் பேரில் தொடங்குகின்றேன். இது "நான்" இல்லாமல் யாழ் கள உறவுகள் "நாம்" செய்யும் திட்டமாக செயற்படுத்துவதாக உத்தேசம். எமது திட்டங்கள் பல வன்னி மற்றும் யாழை சுற்றி இருப்பதால் பல கிழக்கு மாகாண கிராமங்கள் பலன் பெறாமல் செல்கின்றன. நான் இரண்டாம் தடவை சென்ற வருடம் சென்று 3 கிழமைகள் நைனா தீவு தொடக்கம், மன்னார், சிலாபம், திருகோணமலை மற்றும் பாசிக்குடா பகுதிகளை சென்று பார்த்தேன். முக்கியமாக பயணத்தில் விவசாயத்தை மற்றும் மக்களின் அடிப்படை தேவைகள் முன்வைத்து பயணித்தேன். முதலில் தமிழீழ விவசாய பிரச்சினைகளை கூறு போடுவோம். எல்லா இடமும் நான் கண்ட விவசாய பிரச்சினைகள்: 1) விவசாய தொழில்நுட்ப தட்டுப்பாடு - இப்போதும் பாத்தி கட்டி கையால் வெங்காயம் நடுகிறார்கள். 2) அதீத இரசாயன பாவனை - மருந்து இப்பவும் அடித்து தள்ளுகிறார்கள். உரம் அடிக்கிறார்கள். 3) விவசாய தொழிலாளர்கள் - ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள். பாதுகாப்பு உபகரணங்கள் (சுவாச முகமூடி, சப்பாத்து இல்லை) . பலர் காலில் ஆறாத காயங்களுடன் திரிகிறார்கள். 4) நீர் பாவனை - பாத்தி முறை என்ற படியால் ஒவ்வொரு நாளும் இறைத்து தள்ளுகிறார்கள். பாத்திகளில் வெள்ளையா கல்சியம் படிந்திருக்கும். 5) விதைகள் - கைபிரிட் என்று சொல்லி இப்போது ஜி எம் ஓ புகுத்தி விட்டார்கள். பல விவசாயிகள் சிறு நீராக பாதிப்பால் இறக்கிறார்கள். 6) சந்தை படுத்தல் - இதில் பல இடை தரகர்கள் இருப்பதால் விவசாயிக்கு இலாபம் இல்லை. 7) சூழல் பாதிப்பு - பறவைகள் காணாமல் போகின்றன, நன்னீர் உவர் நீராக மாறுவது, இரசாயன பாவனையால் மண் பாதிப்பு (கவனிக்க: நான் ஏதாவது சுட்டி காட்ட தவறினால் தயவு கூர்ந்து அதை இந்த திரியில் சேருங்கள். நான் ஒருங்கிணைக்கிறேன்) மேலே குறிப்பிட்ட விடயங்கள் யாவும் நன்னீர் உவர் நீராக மாற காரணிகள். நாம் மண்ணை வண்டல் மண்ணாக்கி விட்டு தொடர்ந்து செய்வதை செய்தால் திரும்பவும் பாதிப்பு ஏற்படும். ஆதலால் நாம் நல்ல விவசாய முறைகளை பாவிக்கவேண்டும். எப்படி எம் மண் உவர் மண்ணாக மாறுகிறது? ஒவ்வொரு தாவரமும் நைட்ரஜன்(மா சத்து), பொஸ்பரஸ்( புரதம்), பொட்டாசியம்(கொழுப்பு) என்ற மூன்று முக்கியமான சத்துக்களை பெற்று வளரும். பிரச்சினை என்னவென்றால் செயற்கை நைட்ரஜன் கூட பாவிக்கும் போது தாவரம் நிறைய நீரை குடித்து பெரிதாக வளரும். இங்கு தான் பிரச்சினையே நாம் மனிதர் நிறைய குப்பை சாப்பாடு சாப்பிட்டு 200 கிலோ பருமன் பெற்றால் மூடு வலி, அழுத்தம், சளி என்று பல வருத்தங்களுக்கு குழுசை போடவேண்டும். அதே போல் தாவரங்களும் உடல் பருமன் பெற்று குண்டாக பூச்சிகளின் பூஞ்சணங்களில் தொல்லை அதிகரிக்கும். அதனால் தான் கண்ட பாட்டுக்கு கிருமி நாசினி தெளிக்கிறோம். பூச்சிகள் ஒரு போதும் ஒரு இயற்கையா வலிமையாக வளர்ந்த தாவரத்தை தாக்காது. அவர்களுக்கு பழுத்த வெம்பிய மற்றும் பருத்து பலவீனமான தாவரங்கள் தான் விருப்பம். மற்றும் அவர்களது சுவைக்கும் நாக்கு அவர்களின் காலில் இருக்கும் ஒரு இலையில் நின்று காலால் சுவைத்து மொட்டை போடுவார்கள். விதையை விக்கும் உலக அசுர நிறுவனங்களே உங்களுக்கு கிருமி நாசினியும், செயற்கை உரமும் விற்பதால் அவர்கள் அந்த பாவனையை ஊக்குவித்து இலாபம் அடைகிறார்கள். அவர்கள் விவசாயிகளுக்கு "விளைச்சல்" என்ற ஒரு கரட்டை முன் ஆட்டி ஆசை காட்டி விற்பார்கள். அவர்களது ஆராய்ச்சிகள் பல பொய். ஆதாலால் இரசாயன/இயற்கை சேர்த்து வெளிநாடுகளில் செய்வது போல் முதலில் மாற்றத்தை கொண்டுவருவது முக்கியம். கனடாவில் தாவர சுழற்சி, தாவர உரம்(அல்பல்பா, பக் வீட்) , ஆடு/கோழி அடைப்பு என்று செயற்கையின் தாக்கத்தை குறைக்க இயற்கையையும் பாவிக்கிறார்கள். எப்படி உவர் மண்ணை மீட்பது? இதற்கு நான் நத்தார் நேரம் தமிழ் விவசாய அறிஞர் ஒருவரிடம் பேசி பெற்றது என்னவென்றால் இதை நாம் இலகுவாக செய்யலாம். தமிழீழ விவசாயம் பெரும்பான்மையாக கிணத்து நீரை நம்பி இருக்கிறது. கிணறுகள் கீழே உள்ள நீர் தாங்கிகளில் இருந்து வரும் ஊற்றில் இருந்து நீரை பெறுகின்றன. இப்போது பல அடிமட்டத்திற்க்கு போய் கடலில் இருந்து நீரை அதற்குள் பெற தொடங்கிவிடும். முன்பு எல்லா வயல்களில் திறந்த கேணிகள் இருக்கும் அவை மழை நீரை சேமித்து திரும்பி எமது ஊற்றுகளுக்கு நீர் வழங்கும். இப்போது குழாய் கிணறு என்பதால் நீர் தேக்கங்கள் அரிது. நான் முதலில் டொரோண்டோவில் விவசாயம் செய்யும் போது இங்கு 250 அடிக்கு நிலத்தடி நீர் தேக்கங்கள் காய்ந்துவிட்டன என்று தெரிந்தேன். அதனால் நாம் குளம் கட்டி நீர் தேக்கி அடுத்த வருடம் விவசாயம் பார்த்தோம். அவர் பெரிய அளவில் ஈடுபட்டு $300 மில்லியன் டொலர் பெற்று கொடுக்க அந்த ஒப்பந்தத்தை தம் குடும்பத்திடம் கொடுக்க வற்புறுத்தி தட்டி கொட்டிவிட்டார் எமது அரைசியல்வாதி ஒருவர். அந்த காசில் நீர் தேக்கங்களில் இருந்து குழாய் வைத்து உவர் மண்ணில் வரம்பு கட்டி நீரை நிறைப்பது. அந்த நீர் கீழ் வடிந்து செல்லும் போது நாம் மேல் கொண்டு வந்த உவர்ப்பு மற்றும் கல்சியம் போன்றவற்றை கீழே அனுப்புகிறோம். நாம் எப்படி உவர் மண் பகுதிகளில் செலவு அதிகம் இல்லாமல் வண்டல் மண்ணாக்கலாம்? (கவனிக்க: இது நாம் கனடாவில் செய்த யுக்திகள் இவை. நீங்கள் தாராளமாக ஆராய்ச்சி செய்து இங்கு இணையுங்கள். நாம் அதை அலசி சேர்ப்போம்) நாம் கனடாவில் ஓர்கானிக் பத்திரம் பெறவேண்டும் என்றால் அந்த நிலத்தில் குறைந்தது 3 வருடங்களுக்கு செயற்கை விவசாயம் நடந்திருக்க கூடாது. அதில் பத்தை புதராக இருந்து பின் அதை நாம் பிரட்டி தாழ்ப்போம். ஆதலால் இயற்கையாக ஒரு உவர் நிலத்தை மாற்ற மூன்று தொடக்கம் ஐந்து வருடங்கள் எடுக்கும். இங்கு நான் இயற்கை விவசாயி என்ற படியால் குழாய் வைத்து நீர் கொண்டுவரும் யுக்தியில் பெரும் ஆர்வம் இல்லை. எமக்கு நீரை எம் பூமி தாய் வானத்தில் இருந்து இயற்கையாக கொட்டுறாள் அதை ஏந்தி பிடிக்க தெரியாமல் இருக்கிறோம். மற்றும் மண்ணில் முதல் பத்து இஞ்சியில் தான் உரம் இருக்கும் அதற்கு கீழே களி மண் தான். அதனால் இந்த உலகமே உயிருடன் இருப்பதற்கு காரணம் அந்த வண்டல் மண் தான். அதனில் இருக்கும் நுண்ணுயிர்கள் தான் உயிர்! அந்த நுண்ணுயிர்களை தாக்கினால் பின் இரசாயன நிறுவனத்திற்கு காசு அளவேண்டும். நாம் இங்கு மூன்று விடயங்கள் செய்தாலே பெரும் பயன் கிடைக்கும். 1) வரம்பு கட்டி மழைக்கால நீரை அந்த நிலத்தில் தேக்கி வைப்பது. அது வடிந்து போய் கொண்டிருக்கும். 2) நிலம் காய்ந்திருக்கும் நேரம் இலை தளைகளை போட்டு இயற்கை உரத்தால் 10 இஞ்சிக்கு நிரப்புவது. இதனால் நீர் ஆவியாக போகாமல் பிடித்து வைத்து, நுண்ணுயிர், பூச்சிகளின் வளர்ச்சியை கூட்டி உக்கவைப்பது. 3) மற்றும் ஆடு, மாடுகளை அடைப்பது. இவை நிலத்தை மிரித்து பிரச்சினையான களைகளை தடுக்கும். மலமும் சலமும் சத்தை கூட்டும். நாம் இந்த முறைகளை பாவித்து கனடாவில் இரசாயன ஜி எம் எமோ உரங்களால் மணலாக இருக்கும் மண்ணை வண்டலாக்குவோம். (கவனிக்க: வேறு யுக்திகளை தாராளமாக இணையுங்கள். ) சரி அப்ப அடுத்து என்ன செய்யலாம்? இங்க தான் எங்கட கோசன் அண்ணையும் தனிக்காட்டு ராஜா அண்ணையும் வருகினம். நாம் ஒரு சோதனை திட்டம் கிழக்கில் செய்யலாம். அந்த செலவுகளை நான் பொறுப்பேற்கிறேன். உவர் மண்ணால் நீர் தட்டுபாடால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தை தெரிவு செய்து தாருங்கள். எனக்கு கிழக்கில் உயர் அரசாங்க அதிகாரிகள் உறுதுணை இருக்கிறது. அதனால் வேறு திட்டங்களையும் அந்த கிராமத்திற்கு பெற்று கொடுக்கலாம். இதை விளம்பரப்படுத்தி எம் திட்டத்தை மற்றைய பகுதிகளுக்கு பரப்ப யாழ் தளத்தை பாவிப்போம். அப்ப என்ன இயற்கை விவசாயத்தை தொடங்குவமே?
  22 points
 14. ஊரில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும்,…..நெடுந்தீவின் அடிப்படை அடையாளங்கள் இன்னும் மாறாது அப்படியேயிருந்தன ! கற்களால் அடுக்குப்பட்ட பயிர் வேலிகள், எவரோ தாட்டு விட்டுப் கிழங்கு பிடுங்க மறந்து போன பனம் பாத்திகளிலிருந்து முளைத்த பனங்கூடல்கள், மாட்டு வண்டித் தடங்கள் என்பன இன்னும் இருந்தன! முள்ளிவாய்க்காலில் மரணித்துப் போனவர்களில், விகிதாசார அடிப்படையில் பார்த்தால், நெடுந்தீவு தான் அதிக விலை கொடுத்தாக இருக்கும் என்பது சந்திரனின் அனுமானமாக இருந்தது! ஸ்ரீ மாவோ அம்மையார் கொண்டு வந்த மரவள்ளி வளர்க்கும் திட்டத்தினாலும் , முத்தையன்கட்டுப் பிரதேசத்தில் இலவசக் காணி பகிர்ந்தளிப்புத் திட்டத்தினாலும் கவரப்பட்டு அங்கு சென்றவர்களில் பலரும் , அவர்களது சந்ததியினரில் சிலரும் அவர்களுக்குள் அடங்குவர்! குறிப்பாக, இசைப்பிரியா போன்றவர்களின் இழப்பு அவனை மிகவும் பாதித்திருந்தது! தம்பி, இஞ்சையோ நிக்கிறியள் என்று கேட்ட படியே, குறிகாட்டுவானில் வள்ளத்துக்கு வரும்படி கூப்பிட்ட அந்தப் பெரியவர் அருகில் வந்தார்! வந்தவர், எங்க தங்கப் போறீங்கள் தம்பி என்று கேட்டார் ! மகா வித்தியாலயத்துக்குப் பக்கத்தில , எங்கையாவது ஒரு ஹோட்டல்ல நிக்கலாம் எண்டு யோசிக்கிறன்! தம்பி, இப்ப வெளிநாட்டுக் காசு புழக்கத்துக்கு வந்த பிறகு எல்லாம் அவையின்ர ஹோட்டல்களாய்த் தான் இருக்குது! தம்பிக்குக் கனநாள் நிக்கிற பிளானோ? அந்தப் பெரியவரது பேச்சின் சாராம்சம் அவனுக்குள் ஓடி வெளிப்பதற்கு அவனுக்குக் கொஞ்சக் கால அவகாசம் தேவைப் பட்டது! அவையின்ர என்றால்…...ம்ம்ம்….இன்னும் நெடுந்தீவு மாறவேயில்லை என்று தனக்குள் நினைத்துக் கொண்டான்! அது சரி…..இவருக்கு எப்படித் தெரிந்தது , நான் அவையின்ர ஆக்களில் ஒருவன் இல்லையென்று…! அவன் யோசிக்கும் போதே பெரியவர் தொடர்ந்தார்! தம்பி, நெழுவினிப் பிள்ளையார் கோவிலடிக்குப் பக்கத்தில ஒரு வீடு இருக்குது! வீட்டுக்காரர் எல்லாரும் வெளிநாட்டிலை தான் இருக்கினம்! இப்ப வீடு சும்மாதான் கிடக்குது! உங்களுக்கு விருப்பமெண்டால் தாராளமாக அங்கு நிற்கலாம்! வேணுமெண்டால் என்னிட்ட ஒரு மோட்டச் சைக்கிளும் இருக்குது! உங்களுக்குத் தேவையான இடத்தில நான் கொண்டுபோய் இறக்கி விடுவன் என்றும் கூறினார்! சரி பெரியவர், எவ்வளவு காசு எண்டும் பேசுவமே என்று சந்திரன் சொல்லவும், என்னடா தம்பி….மீன் கரைஞ்சா எங்க போகப்போகுது….ஆணத்துக்கை தானே கிடக்கப் போகுது! நீங்களாய்ப் பாத்துத் தாறதைத் தாங்கோவன் எண்டு சொல்லவும் சந்திரனுக்கு கொஞ்சம் உதறலெடுக்கத் தொடங்கியது! ஒரு வேளை பெரியவர் தன்னைப் பற்றி ஏதாவது மணந்து கிணந்து இருப்பாரோ? இருந்தாலும் குறுக்கால வந்த தெய்வத்தையும் திருப்பி அனுப்ப மனம் வரவில்லை! பெரியவரே, நான் நீங்கள் சொல்லுற இடத்தில நிக்கிறன்! ஆனால் ஒரு கொண்டிசன்! எனக்கு உங்கட பழைய சைக்கிள் ஏதாவது இருந்தால் அதைத் தந்தால் போதும்! சாப்பாட்டுக்கு கிட்டடியில கடையள் ஏதாவது இருக்கும் தானே...என்று கேட்கவும்….என்ன தம்பி நீர், நாங்கள் என்னத்துக்கு இருக்கிறம்? நீர் என்ன விருப்பம் எண்டு சொல்லும் , நான் செய்விச்சுத் தாறன் எண்டு சொல்ல சந்திரனும் சம்மதித்தான்! இருந்தாலும் , பெரியவரை ஒரு முறை ரெஸ்ற் பண்ணிப் பார்க்கவேணும் என்று நினைத்தவனாக, ஐயா….ஒருக்கால் ஈச்சங்காட்டுப் பக்கம் போகவேணும், கொண்டு போய் விடுவீங்களோ எண்டு கேட்கவும் , பெரியவர் திடுக்கிட்டவர் போலச் சந்திரனைப் பார்த்தார்! தம்பிக்கு இடங்கள் தெரியுமோ என்று மிகவும் ஆச்சரியமாகக் கேட்கவும்….இவனுக்கு கொஞ்சம் மனதில் நிம்மதி வந்தது! இல்லை ஐயா, எனது நண்பனொருவன் தன்னுடைய பழைய வீடடைப் பார்த்து வரும்படி சொல்லியிருந்தான்! ஈச்சங்காட்டில எவடம்? விளாத்தி மரத்துக்கு கிட்டவாக! சரி, எதுக்கும் இதை வைச்சிருங்கோ எண்டு சொல்லி கொஞ்சக் காசை அவரிடம் கொடுக்க, அவர் என்ன தம்பி இப்பவே எண்டு சொல்லிக் சிரிக்கப் பெரியவருக்கு கடவாய்ப்பற்கள் ஒன்று கூட இல்லை என்பதும் அவனுக்கு நன்றாகத் தெரிந்தது! உடனேயே அங்கே நின்ற பெடியன் ஒருவனைக் கூப்பிட்டுத் தம்பி இந்த ஐயாவைக் கொண்டு போய் ஈச்சங்காட்டிலே இறக்கி விடு என்று கூற…..அவனும் பின்னால் திரும்பிப் பார்த்து விட்டுத் தான் தான் அந்த ஐயா என்று உறுதி படுத்திய பின்னர் மோட்டார் சைக்கிளில் லாவகமாக ஏறி அமர்ந்து கொண்டான்! ஈச்சங்காட்டில் ஒரு ஈச்ச மரங்களையும் இப்போது காணவில்லை! விளாத்தி மரத்தடியில் வீடு இருந்த இடம் வெறிச்சோடிப்போய்க் கிடந்தது! அந்த விளாத்தி மரம் மட்டும் இன்னும் அப்படியே நின்றது! தனது மூதாதைகளின் மூச்சுக்காற்றை இந்த மரமும் சுவாசித்திருக்கும் என்ற நினைவே...அவனுக்கு இதமாக இருந்தது! இங்கு தான் இந்தக் கதையின் கதாநாயகியை அடிக்கடி சந்திரன் இரகசியமாகச் சந்திப்பதுண்டு! இவன் கதைகள் சொல்லும்போது விழிகளை அகல விரித்தபடியே...அவள் கேட்டுக் கொண்டிருப்பாள்! இந்த விளாம்பழங்களை யானை எப்படிச் சாப்பிடும் எண்டு உனக்குத் தெரியுமா? இல்லை என்று அவள் தலையாட்ட ‘ஒரு சின்ன ஓட்டை மட்டும் போட்டுவிட்டு, அதன் உள்ளடையை அப்படியே உறிஞ்சி எடுத்து விடும்! அப்போ விதைகளை என்ன செய்யும்? அதை அப்படியே பழத்துக்குள் விட்டு விடும்! அவள் , அது உனக்கெப்படித் தெரியும்? சாப்பிட்ட பழத்தை யானை ஒருமுறை குலுக்கிப் பார்க்கும்! அப்போது அருகில் நிற்பவர்களுக்குக் கிலுக்கட்டி கிலுக்குவது போல ஒரு சத்தம் கேட்கும்! இதிலிருந்து உனக்கு என்ன தெரிகின்றது? அவளின் பதில் உடனடியாகவே வந்தது! யானை தனது அடுத்த தலைமுறையை மனதில் கொண்டு….விதைகளைச் சாப்பிடாமல் அப்படியே விட்டு விடுகிறது…! அடுத்து வரும் மழைக்கு விளாம்பழத்தின் கோது உடைய விளாத்தி மரங்கள் முளைக்கும்! இப்படியான பதில்கள் தான்...சந்திரனுக்கு அவளிடம் ஒரு விதமான ஈர்ப்பை உருவாக்கியிருக்க வேண்டும்! அவளை முதலில் சந்தித்த சம்பவம் இன்னும் தெளிவாகவே அவனது நினைவில் இருந்தது! வீட்டில் விருந்தினர்கள் வந்திறங்கியிருந்தார்கள்! பொழுது பின்னேரமாகி விட்டிருந்தது! சந்திரனின் தாயார் சந்திரனிடம் கொஞ்சம் காசைக் கொடுத்துத் தம்பி, கடற்கரைக்குப் போய் மீன் ஏதாவது வாங்கிக் கொண்டு வா என்று கூற….அம்மா உங்களுக்கென்ன விசரே, இந்த நேரத்தில கடற்கரையிலே ஒரு வள்ளமும் வராது என்று பின்னடிக்க அம்மாவும், ஆராவது வீச்சு வலைக்காரர் நிப்பாங்கள், போய்ப்பார் என்று சொல்லத் தயக்கத்துடன் கடலுக்குப் போனவனுக்கு ஆச்சரியமாக இருந்தது! அவன் அம்மா சொன்ன மாதிரியே ஒரு வீச்சு வலைக்காரன் நின்று கொண்டிருந்தான்! அவனது இடுப்பில் தொங்கிய பறியும் காற்றில் அசையவில்லை! ம்ம்ம்...பறிக்குள்ள என்னவோ பாரமான சாமான் என்னவோ கிடக்குது! பிரச்சனை என்னவென்றால், அவன் கரைக்கு வரும் வரை பார்த்துக் கொண்டிருந்தால், கரையில் கன சனம் நிண்டு...மீனுக்கு விலையைக் கூட்டிப் போடும்! கடல் கொஞ்சம் வத்தாக இருந்ததால்...மீன் காரனிடம் நடந்தே போக முடிவு செய்தான்! மீன் காரனுக்கு கிட்டப் போனதும் அவனது அதிஸ்ட்டத்தை நினைத்து...தனது முதுகில் தட்டித் தன்னைத் தானே பாராட்டியும் கொண்டான்! ஆம், அந்த மீன் பறிக்குள் ஒரு பால் சுறாவும் இருந்தது! பால் சுறா, அதுவும் ஆண் சுறா எல்லாருக்கும் பிடிக்குமென அவனுக்குத் தெரியும்! பின்னேரமானதால் ….குழல் புட்டும் அவித்து சுறா வறையும் வைக்க அந்த மாதிரி இருக்கும்! விலையும் சரியாக இருக்கவே...வாலைப் பிடித்த படி...அந்தப் பால் சுறாவைத்...தண்ணீருக்குள் விட்ட படி இழுத்துக் கொண்டு கரைக்கு நடந்து வந்தான்! அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன! ,முதலாவது சுறா பழுது படாமல் இருக்கும்! இரண்டாவது…..தமிழர்களுக்கே ,,தனித்துவமான குணமான...ஆற்றையும் கண்பட்டு விடக்கூடாது என்ற ஆதங்கமும் தான்! கரைக்கு ஒரு இருபதடி தூரம் கூட இருக்காது! ‘கிளிக்’ என்றொரு சத்தம் கேட்டது! தண்ணீரில் ஒரு வட்டம் போட்டுவிட்டுப் பால் சுறா, அவைனப் பார்த்துக் கண்ணை ஒரு முறை அடித்து நன்றி சொல்லி விட்டுப் போயே விட்டது! இப்போது அவனிடம் காசுமில்லை! கறிக்குச் சுறாவுமில்லை! கண்ணீரும் கட்டுப்படுத்த முடியாமல்…...வரத் தொடங்கியது! அப்போது ‘கிளுக்” என்று யாரோ கரையில் நின்று சிரிப்பதும் தெளிவாகச் சந்திரனுக்குக் கேட்டது! அடுத்த பகுதியில் தொடரும்….!
  22 points
 15. இனி இளவேனில் காலம் - நிழலி வெயில் சரம் பிடித்து நிலம் நோக்கி இறங்குகின்றது வானை வகுந்தெடுத்து பெரும் காற்று வீசுகின்றது பனிக்காலத்தை பெயர்த்து இளவேனில் விதைகளை விதைத்து செல்கின்றது வசந்தகாலத்தின் முதல் பாடல்களை சுமந்த வண்ணம் வனக் குருவிகள் ஊர் திரும்புகின்றன குளிர்காலம் இராப்பாடகனின் தொலைதூர குரலை போல் மெல்ல தேய்கின்றது முதன் முதலில் குறுக்கு கட்டியவளின் மார்பின் சரிவுகளில் தேங்கிய நீர்த் துளி போல் இலைகள் துளிர்க்க தொடங்குகின்றன வனம் இனி சூல் கொள்ளும் சிற்றாறுகள் உறைவிலிருந்து உருக்கொள்ளும் முத்தங்களுக்கிடையில் பரிமாற ரோசாக்கள் பூக்கத்தொடங்கும் கட்டைக் கால் தாராக்கள் குஞ்சுகளுடன் வெளிவரும் ரக்கூன்கள் குட்டிகளுடன் முற்றத்தில் வந்து நின்று விடுப்பு பார்க்கும் ஒரு நாளும் கேட்காத பாடல்களை சிறுகுருவிகள் பாட புதிய காலைகள் மலரும் பகல் ஒரு நீண்ட ரயிலாக வளைந்து செல்ல இரவு கடைசிப் பயணியாக வந்து அமரும் காலம் மீண்டும் தப்பாமல் இளவேனில் காலத்தை கொண்டுவரும் (இன்று நீண்ட நாட்களின் பின் வெப்பநிலை நேர் 11 இற்கு வருகின்றது. என் சிறு பூந்தோட்டத்தின் செடியில் இவ் வருத்தின் முதல் துளிர் தெரிகின்றது)
  22 points
 16. புரட்டாதி 2020 ஐரொப்பா எங்கும் கொரோனா பயங்கரமாக தலைவிரித்தாடிய மாதம் ஐரொப்பிய நாடுகள் தம்மிடையேயும் பிற நாடுகளுக்கிடையேயும் எல்லைகளை மூடியும் விமானப்பறப்புக்களை புறக்கணிக்கவும் தொடங்கிய நேரம். பிள்ளைகளுடன் ஆவணி மாத விடுமுறை முடியும் வேளை நான் 10 நாள் வேறு ஒரு பயணம் போகப்போறேன் என்றேன் அதிசயமாகப்பார்த்தார்கள் (ஆனால் ஆவணி மாதமே வழமையாக பூட்டப்படும் எனது தொழில் புரட்டாதி மத்திவரை பூட்டப்பட்டது அவர்களுக்கு ஏற்கனவே கேள்விக்குறி ஒன்றை தந்திருந்தது) விமானம் ஓடாது என்றார்கள் விமான ரிக்கற் ஏற்கனவே எடுத்தாச்சு என்றேன். விமானம் ஓடாவிட்டால் என்றார்கள் காரில் போவேன் என்றேன் (அப்பா 1400 கிலோமீற்றரை 9 மணித்தியாலத்தில் போவார் என்பதால் எதிர்ப்பில்லை) அப்போ அங்க நீங்கள் சந்திக்கப்போறவரின் வயது கருதி உங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யணும் என்றார்கள். அதற்கென்ன செய்தாப்போச்சு என்றவுடன் மலைப்பகுதியிலேயே பரிசோதனைக்கு நேரம் எடுத்து தந்தார்கள் கொரோனா தொற்று இல்லை என்று வைத்தியர் தந்த அந்த பத்திரத்தை கவனமாக என்னுடன் வைத்துக்கொண்டேன் (விமான நிலையத்தில் உதவலாம் என்பதற்காக) ஓய்வு முடித்து வந்த அடுத்த நாள் விமானநிலையத்தில் விட்டு விட்டு சென்றார்கள் (அவர்களுக்கு நம்பிக்கையில்லை நான் பறப்பேன் என்று) விமான நிலையத்தில் எந்த எதிர்ப்புமில்லை. தொடர்ந்து ஒவ்வொரு வாசலாக முன்னேறிக்கொண்டிருக்கின்றேன். விமானம் ஏறும் கடைசி வாசலைப்பார்க்கின்றேன் நீண்ட வரிசையில் நிற்க வைத்து துப்பாக்கி போல் எதையே நெற்றியில் வைக்கிறார்கள். ஏற்கனவே Mask போட்டிருப்பதால் மூச்சு சூடாக இருக்கு அது வேற நெற்றியை சூடாக்கிக்கொண்டிருக்கு அதைவிட வெய்யில் வேற??? நெற்றியை தொட்டுப்பார்க்கிறேன் சூடாகத்தான் இருக்கு அடப்பாவிகளா அவ்வளவு தானா??? ஆனால் அடிக்கடி பிரெஞ்சு அரசாங்கம் சொன்னபடியே உள்ளது வயதானவர்களை இந்த நேரத்தில் அரவணையுங்கள் சென்று பாருங்கள் அவர்களை தனிமையில் விட்டு விடாதீர்கள்... அது ஒன்று மட்டுமே எனது மனதில் ஓடியபடி???? தொடர்வோம்
  22 points
 17. முழுப்பெயர் - முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் ... அண்மையில் பிள்ளைகளுடன் எனது பெயர் பற்றிய உரையாடல் வந்தது. அவர்களுக்கு எனது முதற்பெயர் என்ன என்பதில் குழப்பம். ஆனால் அதை தெளிவாக்க முயன்று இன்னும் குழப்பிவிட்டேன் என்று நினைக்கின்றேன். இந்தப் பெயர்ச் சிக்கல் தமிழர்களுக்கு நிறையவே உண்டு. புலம்பெயர்ந்து வரும்வரை பிரச்சினை தராத பெயர், இலண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் பாஸ்போர்ட் இல்லாமல் வந்து இறங்கியதும் பிரச்சினையாகி விட்டது. சகாரா பாலைவனத்தின் வெம்மையை பல்லாயிரம் அடிகளுக்கு மேலால் பறந்துகொண்டிருந்த விமானத்தில் உணர்ந்தபோதே விமானத்தின் ரொய்லட்டில் பாஸ்போர்ட்டை, அதை வெட்டிக்கிழிக்க என்று முன்னேற்பாடாக எடுத்துச்சென்ற சின்னக்கத்தரிக்கோலால் வெட்டி ஃபிளஷ் பண்ணிவிட்டேன்! ஆனால் எங்கிருந்து விமானம் வந்தது, பாஸ்போர்ட் கிழித்தது எல்லாம் “ரூட்” அடிபடக்கூடாது என்று குடிவரவு அதிகாரிகளுக்குச் சொல்லவில்லை. ஆவணங்கள் இல்லாமல் வந்து இறங்கியவர்களை விசாரித்து அனுபவப்பட்டவர்கள். வழமையான முதலாவது கேள்வியாக பெயரைக் கேட்டபோது எனது ஒற்றைப்பெயரைச் சொன்னேன். அது போதாது இரண்டு பெயர்களையும் சரியாகச் சொல்லுங்கள் என்றபோது, எனக்கு “திக்” என்றது. எனக்கு இரண்டு பெயர்கள் இருப்பதை (பெயர் இடையில் மாற்றப்பட்டது தனிக்கதை) என்னுடன் கூட வந்தவர்களே அறியாதபோது எப்படி இவர்கள் கண்டுபிடித்தார்கள் என்று ஆடிப்போய் முழியைப் பிதுக்கினேன். இரண்டு பெயர்கள் வந்த கதையைச் சொல்லும் அளவுக்கு ஆங்கில அறிவும் இல்லை, தவிர அதைச் சொல்லும் நோக்கமும் துளியும் இல்லை என்பதால் திரும்பவும் எனக்கு ஒரு பெயர்தான் என்று எனது ஒற்றைப்பெயரைச் சொன்னேன். அவர்களின் பார்வை அப்பன் பெயர் தெரியாத அனாதைப்பயலைப் பார்க்கிற மாதிரித் தெரிந்தது. தங்கள் நேரத்தை வீணாக்கவேண்டாம் என்று கொஞ்சம் மிரட்டுவதுபோல எனது முழுப்பெயரை எழுதச் சொன்னார்கள். குடும்பப்பெயரையும் அடிக்கோடிடவேண்டும் என்றார்கள். முழுப்பெயர் விளங்கியது. அது என்ன குடும்பப்பெயர்? இப்படி ஒன்றும் எங்கள் குடும்பத்தில் இல்லையே! தமிழர்களின் முழுப்பெயர்கள் இன்னாரின் பிள்ளை இவன்/இவள் என்று இருக்கும் அல்லது இன்னாரின் மனைவி இவள் என்று இருக்கும். தந்தை அல்லது கட்டிய கணவன் பெயர் முன்னுக்கும் பிள்ளைகளினதும் மனைவியினதும் பெயர் பின்னுக்கும் எழுதுவதுதான் மரபு. உதாரணமாக செல்லையாவின் செல்லமகள் சிவகாமி என்றால் முழுப்பெயர் “செல்லையா சிவகாமி” என்று இருக்கும். அதுவே சிவகாமி செந்தூரனைத் திருமணம் செய்தால் “செந்தூரன் சிவகாமி” என்று மாறிவிடும். இப்படி முழுப்பெயர் எழுதும்முறை தெரிந்திருந்தாலும், எனது பெயரை எண்சோதிடப்படி பாட்டனார், தந்தையாரின் முதலெழுத்துக்களுடன் பாவிக்கவேண்டும் என்று பெயர் மாறியபோது வீட்டில் சொல்லியிருந்ததால் பாட்டனார், தந்தையார் பெயர்களுடன் எனது பெயரையும் எழுதினேன். இடமிருந்து வலமாக மூன்றாவதாக இருந்த எனது தனிப்பெயருக்கு அடிக்கோடிட்டேன். இப்படியாக, எனது தனிப்பெயர் குடும்பப்பெயராகியது! அப்படியே வங்கி, கல்லூரி, பல்கலைக்கழகம், வேலை என்று எல்லா ஆவணங்களிலும் முழுப்பெயர் மூன்றாகவும், எனது பெயர் குடும்பப்பெயராகவும் வருமாறு பார்த்துக்கொண்டேன். எனினும் விமானப் பயணச் சீட்டுக்கள் பதிவு செய்யும்போதும், விசா எடுக்கப் போகும்போதும் படிவங்கள் நிரப்புவதில் குழப்பங்கள் வரும். நான் மூன்று பெயர்களை வேறு வைத்திருப்பதால் படிவங்களில் உள்ள கட்டங்கள் கூட போதாமல் இருக்கும். எனது முழுப்பெயரை ஆங்கிலத்தில் எழுத இரண்டு இடைவெளிகளுடன் 31 கட்டங்கள் வேண்டும்! நண்பன் ஒருவனின் பாட்டன் தனது தமிழ் மீதான பற்றைக்காட்ட நச்சினார்க்கினியனார், பரிமேலழகனார் என்று அதி நீளமான பெயர்களை வைத்ததுபோல, எனது பாட்டனார் செய்யவில்லை. என்றாலும் தனது முப்பாட்டன் முருகன் மேல் கொண்ட பக்தியால் முருகனின் பெயர்களையே மூன்று ஆண் பிள்ளைகளுக்கும் வைத்திருந்ததால் கடைக்குட்டியான தந்தையாருக்கு ஒரு முருகனின் பெயர்! அது எனது முழுப்பெயரின் நடுவில் உள்ளது. சிங்களவர்களில் சில பிரபலங்களின் பெயர்கள் இன்னும் நீளமாக இருப்பதால், உதாரணமாக வர்ணகுலசூரிய பத்தபெந்திகே உஷாந்த ஜோசேஃப் சமிந்த வாஸ், அவர்களுடன் ஒப்பிடும்போது பரவாயில்லை என்று சமாதானம் அடைந்துவிடுவேன். பிச்சைக்காரன் தன்னைவிட வசதிகுறைந்த பிச்சைக்காரனைப் பார்த்துத்தானே திருப்தியடைய முடியும். அதிலும் இவர்கள் சிங்களவர்கள் வேறு! முன்னைய காலங்களில் தமிழின் மீதான பற்றினால் பொதுவாக நீளமான பெயர்களைத் தமிழர்கள் விரும்பி வைப்பதுண்டு. எனினும் பெயர்களின் நீளங்கள் சமூகக்கட்டமைப்பின் பிரமிட் நிலையையும் காட்டும் குறிகாட்டிகளாகவும் கருதப்பட்டதுண்டு. சமூகப்படிநிலையில் கீழே இருப்பவர்கள் நீளமான பெயர்களை வைக்க விரும்பி விண்ணப்பித்தவேளைகளில், பதிவாளர்களாக இருந்த உயர்குடியினர் கந்தன், செல்லன் என்று சுருக்கிவிட்ட வரலாறும் தமிழ் சமூகத்தில் உண்டுதானே. இப்படியாக நீளமான பெயர் ஒருபக்கம் பிரச்சினையாக இருந்தாலும் முக்கியமாக குடும்பப்பெயர் என்று ஒன்றில்லாதது பொதுவாக தமிழர்களுக்கான பிரச்சினையாக இருக்கின்றது போலுள்ளது. இணையத்தில் தேடினால் தமிழர்களைப் போலவே வேறு இனங்களிலும் குடும்பப்பெயர் எழுதுவது ஒரு சிக்கலாக இருப்பதாகத் தெரிகின்றது. சிங்களவர்களும், வட இந்தியர்களும், ஐரோப்பியர்களின் கொலனியாக இருந்த காலத்தில் அவர்களுக்கு சேவகம் செய்தவர்களும், மதம் மாற்றப்பட்டவர்களும் குடும்பப் பெயர்களைப் பாவித்து வருகின்றார்கள். தமிழர்களுக்குத்தான் இந்த Last name/Surname/Family name என்று ஒன்றில்லை. அதனால் தமிழருக்கு இந்த குடும்பப்பெயர் விடயம் இன்னும் நீடித்துக்கொண்டிருக்கும் சிக்கலாக இருக்கின்றது! எனக்குத் தெரிந்து தமிழ் மக்கள் எல்லோருக்குமே ஒரேயொரு பெயர்தான். சுருக்கியபெயர், செல்லப்பெயர், பட்டப்பெயர், புனைபெயர், இயக்கப்பெயர் இதெல்லாம் கணக்கில் எடுப்பதில்லை. இலங்கையில் பிறந்திருந்தால் சட்டபூர்வமாக பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் இருக்கும் Given name என்பதுதான் எங்களைக் குறிக்கும் தனிப்பெயர். ஆறுமுகம், கந்தசாமி என்று எதுவானாலும் ஒரே ஒரு பெயர்தான். நாங்கள் பெயர் எழுதும் முறையில் எங்கள் தனிப்பெயர் குடும்பப்பெயராக வருவதும் குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. மேற்கத்தையரின் வழக்கப்படி ஒரு குடும்பத்தில் எல்லோருக்கும் குடும்பப்பெயர் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் நாங்கள் எங்கள் தனிப்பெயரை தமிழ் மரபுப்படி பின்னுக்கு எழுதி குடும்பப்பெயராகப் பாவிக்கும்போது கணவன், மனைவி பிள்ளைகளுக்கு வேறு வேறு குடும்பப்பெயர்கள் வந்துசேர்கின்றது. மேற்கத்தையர் ஒரு மாதிரி மேலேயும் கீழேயும் எங்களைப் பார்க்கவைக்கின்றது. சகோதரர்களுக்கு ஸ்பொன்சர் கடிதம் எழுதும்போது அவர்கள் தங்கள் தனிப்பெயரை குடும்பப்பெயராகப் பாவித்தால், குடும்பப்பெயர் ஏன் வேறாக இருக்கின்றது என்பதற்கு கூடுதலாக விளக்கம் வேறு கொடுக்கவேண்டும். இதை நான் கவனமாகச் செய்ததுண்டு. அதிலும் சகோதரர்கள் என்னைப்போல மூன்று பெயர்களைப் பாவிக்காமல் தந்தை, தமது பெயர் என்று இரண்டுடன் உள்ளதால் (எதை குடும்பப்பெயராகப் பாவிக்கின்றார்கள் என்பதே இன்னமும் குழப்பம்தான்) விலாவாரியான விளக்கங்கள் கொடுத்திருக்கின்றேன்! புலம்பெயர் நாட்டில் வசிக்கும் ஒருவர் தனது தந்தையின் பெயரை குடும்பப்பெயராக வைத்திருந்தால், அவர் இலங்கைசென்று திருமணம் முடித்து வரும்போது, கட்டிய மனைவி தனது மாமானாரின் பெயரைத் தனது குடும்பப்பெயராக வைத்திருக்க சங்கடப்படுவதும் உண்டு. உதாரணமாக கந்தசாமி மகன் கேதீஸ்வரன் குடும்பப்பெயராக கந்தசாமி என்று பாவித்தால் அவர் சுப்பிரமணியம் மகள் வதனாவை திருமணம் செய்த பின்னர், வதனா குடும்பப்பெயரை மாற்றினால் “வதனா கந்தசாமி” என்று வரும். இதில் கேதீஸ்வரன் பெயரே காணாமல் போய்விடும்! வதனா மாமனாரின் பெயரை தனது குடும்பப்பெயராக எழுதுவதை விரும்பாமலும் இருக்கலாம்! அதே போல பிள்ளைகள் பிறக்கும்போது பிள்ளைக்கு வைக்கும் பெயரை முதற்பெயராகப் பாவிப்பதா அல்லது குடும்பப்பெயராகப் பாவிப்பதா என்பதிலும் குழப்பங்கள் உண்டு. தந்தையின் பெயரைக் குடும்பப்பெயராக வைத்தால் ஒவ்வொரு தலைமுறைக்கும் குடும்பப்பெயர் மாறிக்கொண்டிருக்கும். இது குடும்பப்பெயரின் நோக்கமாகிய பரம்பரையை இலகுவாக அறிவதையே இல்லாமல் ஆக்கிவிடும். மறுவளமாக எங்கள் தனிப்பெயரை குடும்பப்பெயராக மாற்றியதுபோல, பிள்ளைகளின் தனிப்பெயரை குடும்பப்பெயராக மாற்றினாலும் நிலைத்த குடும்பப்பெயர் உருவாகாது. அதுவே பெண்பிள்ளையாக இருந்தால் அவரின் தனிப்பெயரை குடும்பப்பெயராகவும் வைப்பதும் சிக்கல்தான். ஏனெனில் பெண்பிள்ளைகளின் பெயரை குடும்பப்பெயராகப் பாவிக்கும் நடைமுறை இல்லை. உதாரணத்திற்கு ஞானவேல் மகன் எழில்வேந்தன் தனது பெயராகிய எழில்வேந்தனை குடும்பப்பெயராகக் கொண்டிருக்கின்றார் என்று வைப்போம். அவருக்கு மூத்த பிள்ளையாக பிறந்த மகனுக்கு அர்ஜுன் என்று பெயர்சூட்டி, பிள்ளையின் தனிப்பெயரையே குடும்பபெயராகவும் பதிந்துவிட்டார். பின்னர் பெண்பிள்ளை பிறந்தபோது சஹானா என்று பெயரைவைத்து பெண்பிள்ளை என்பதால் தனது பெயராகிய எழில்வேந்தனை குடும்பப்பெயராக வைத்தால் பிள்ளைகள் இருவருக்கும் வேறு வேறு குடும்பப்பெயராகிவிடும். இவ்வாறு பல வேறுபட்ட குழப்பங்கள் நம்மவரிடையே உண்டு. கணணிமயமாக்கப்பட்ட இக்காலத்தில் பெயர்களில் குடும்பப்பெயர்தான் தரவுத்தளங்களில் முதன்மைத் திறவியாக (primary key) உள்ளது. எனவே, குடும்பப்பெயர்களை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதில் கவனம் தேவை. முழுப்பெயர் பொதுவாக இரண்டு அல்லது மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. முழுப்பெயர் மூன்று பகுதிகளாக எழுதும்போது இப்படி வரும்: [முதற்பெயர்] [நடுப்பெயர்] [குடும்பப்பெயர்] முழுப்பெயர் இரண்டு பகுதிகளாக எழுதும்போது நடுப்பெயர் இல்லாது வரும்: [முதற்பெயர்] [குடும்பப்பெயர்] ஆங்கிலத்தில் First name, Forename, Given name, Christian name என்று விதம்விதமாகச் சொல்லப்படுபவை எல்லாம் ஒருவரை அழைக்கும் முதற்பெயரைத்தான் குறிக்கின்றன. அதேபோல Last name, Second name, Surname, Family name என்று சொல்லபடுபவை எல்லாம் குடும்பப்பெயரைத்தான் குறிக்கின்றன. Middle name கிறீஸ்த்த மதத்தினர் ஞானஸ்நானத்தின்போது பெற்றுக்கொள்ளும் பெயர். எனினும் வேறு வகைகளிலும் இதனைப் பாவிக்கலாம். அவை பற்றியும் பின்னர் சுருக்கமாகப் பார்க்கலாம். அத்துடன் குடும்பப்பெயரைத் தவிர மற்றைய பெயர்கள் அனைத்தையும் முதற்பெயர் என்றும் கொள்ளலாம்! இப்படி பெயர் என்பதே ஒரே குழப்பம் நிறைந்து இருக்கின்றது! இந்த முழுப்பெயர் எழுதும் முறை வந்த வரலாற்றைப் பார்ப்போம். ரோமானிய ஆண்கள் மூன்று பெயர்களைக் கொண்டிருந்தார்களாம். ஒருவரை அடையாளப்படுத்தும் தனிப்பெயர் (praenomen); அவரது குடும்பப்பெயர் (nomen); அவரது குடும்பக்கிளைப் பெயர் (cognomen). அதிகமான குடும்பக்கிளைப் பெயர்களைக் கொண்டு ஒருவரின் பெயர் மிக நீளமாக அமைந்திருந்தால் அவரின் சமூக மதிப்பு கூடியிருக்கும். ஏனெனில் நீளமான பெயர் வம்ச விருட்சத்தை (family tree) இலகுவாக அடையாளம் காண உதவும். ஆனால் பெண்களுக்கு அவர்களது தனிப்பெயரும் குடும்பப்பெயரும் மட்டும்தான் இருந்தன. அடிமைகளுக்கோ வெறும் தனிப்பெயர்தான்! இப்படிப் பெயரானது பல பெயர்களின் தொடராக குறிப்பிடப்படும் மரபு 17-18 ஆம் நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகளுக்கும் பரவியது. அதிகாரம் மிக்க பிரபுத்துவ வம்சத்தினர் தமது குழந்தைகளுக்கு மிக நீளமான பெயர்களைச் சூட்டி சமூகத்தில் தமது உயர்நிலையை உறுதிப்படுத்தினர். அது இன்றளவும் தொடர்கின்றது. பிரித்தானிய இளவரசர் வில்லியத்தின் மகன் இளவரசர் ஜோர்ஜின் முழுப்பெயர் George Alexander Louis Mountbatten-Windsor என்றுள்ளது. ஸ்பானியர்களும், அரேபியர்களும் தமது குழந்தைகளின் பெயர்களில் தந்தைவழியோடு, தாய்வழி பரம்பரைப் பெயர்களையும் சூட்டி வம்ச விருட்சங்களை பெயர்களிலேயே நிலைநிறுத்தினர். எனினும் ஐரோப்பியர்கள் இடைப்பெயராக (Middle name) எதைச் சூட்டுவது என்பதில் ஆரம்பத்தில் சற்றுக் குழம்பியதாகத் தெரிகின்றது. குடும்பக் கிளைப்பெயரையா அல்லது புனிதர்களின் (saint) பெயரையா சூட்டுவது என்று தீர்மானிக்க முடியாமல், பின்னர் ஞானஸ்நானப் பெயரை இடைப்பெயராகச் சூட்டினர். இவ்வாறு முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் என்று பெயர் வைக்கும் மரபு அமெரிக்கா போன்ற குடியேற்ற நாடுகளுக்கும், ஐரோப்பியர்களின் கொலனிகளுக்கும் பரவியது. எனினும் இக்காலத்தில் பலர் இடைப்பெயரை சுத்தமாகப் பாவிப்பது இல்லை. அத்தோடு பலர் மதம் சார்ந்த இடைப்பெயரைத் தவிர்த்து வேறு புதுமையான முறைகளில் இடைப்பெயர்களைச் சூட்டிக்கொள்கின்றார்கள். பொதுவாக தாயின் கன்னிப்பெயரை (Maiden name) இடைப்பெயராக பாவிக்கும் வழக்கம் அதிகரித்து வருகின்றது. திருமணமான பெண்கள் கணவர்களின் குடும்பப்பெயரை ஏற்றுக்கொள்வது வழமை. ஆனாலும் பெண்கள் தங்கள் தனித்துவத்தை இழக்க விரும்பாத தற்காலத்தில் கன்னிப்பெயரை தொடர்ந்தும் குடும்பப்பெயராக பாவிப்பதும், அல்லது கன்னிப்பெயரை இடைப்பெயராகப் பாவிப்பதும் உண்டு. உதாரணமாக முன்னாள் சிறிலங்கா ஜனாதிபதியின் முழுப்பெயர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க என்றுள்ளது. இதில் அவரின் கன்னிப்பெயர் இடைப்பெயராக அமைந்துள்ளது. பெயர் வைப்பதில் இவ்வளவு சிக்கல்கள் இருக்கும் என்பதை தமிழர்கள் அறிந்திருக்கவில்லை போலிருக்கின்றது. ஏற்கனவே வேறு எவருக்குமில்லாத பெயராக இருக்கவேண்டும், பிறந்த நேரத்துக்கான நட்சத்திரப்படி பஞ்சாங்கத்தில்/சாதகத்தில் உள்ள எழுத்துக்கள் வரத்தக்கதாக பெயர் இருக்கவேண்டும், ஆங்கிலத்தில் எழுதும்போது எண்சாத்திரத்திற்கு அமைவாக இருக்கவேண்டும் என்று ஒருவரைச் சுட்டும் தனிப்பெயரான முதற்பெயருக்கே மூளையைக் கசக்குகின்றவர்கள், இடைப்பெயர், குடும்பப்பெயர் என்று இன்னும் பலவற்றை ஆராயவெளிக்கிட்டால் கதிகலங்கித்தான் போயிருப்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி இந்தப் பெயர்ச்சிக்கலைக் கையாளுகின்றார்கள். சில ஐரோப்பிய நாடுகளில் தந்தையாரின் பெயர் அல்லது கணவனின் குடும்பப்பெயராக விளங்கும் கணவனின் தந்தையின் பெயரைக் குடும்பப்பெயராக்க கட்டாயப்படுத்துகின்றார்கள். இதுவே இப்போது தமிழர்களிடையே பொதுவான நடைமுறையாக உள்ளது. எனினும் பிரித்தானியாவில் எதுவிதமான கட்டாயப்படுத்தல்களோ, வழிமுறைகளோ இருப்பதாகத் தெரியவில்லை. நான் எனது தனிப்பெயரை குடும்பப்பெயர் (Surname) ஆகவும், எனது தந்தையின் பெயரை இடைப்பெயராகவும் (Middle name) ஆகவும், பாட்டனாரின் பெயரை முதற்பெயர் (First name) ஆகவும் ஆரம்பத்தில் பாவித்தேன். இது ஒன்றும் திட்டம்போட்டுச் செய்ததில்லை. தமிழர்கள் வலமிருந்து இடமாக தந்தை பெயர், எம்மைச் சுட்டும் தனிப்பெயர் என்று எழுதும் பழக்கத்தால் வந்தது. கூடுதலாக பாட்டனாரின் பெயரும் இருப்பதால் அது முதலாவதாக வந்துவிட்டது! ஆனாலும் இடைப்பெயர் குழப்பமாக இருந்ததால், இடைப்பெயரைக் கைவிட்டு பாட்டனாரினதும் தந்தையாரினதும் பெயர்களையே முதற்பெயராக இப்போது எழுதுகின்றேன். இந்த மூன்றையும் சேர்த்து எழுத நீளமாக வரும் என்பது வேறு ஒரு பிரச்சினை! ஐரோப்பிய நாட்டில் இருப்பதாலும், எனது பெயர் நூற்றாண்டுகளாக நிலைத்து இருக்கவேண்டும் என்ற சிறிய ஆசை உள்ளதாலும் எனக்கு இடையில் வைத்த பெயரையே எனது குடும்பப்பெயராக்கி உள்ளேன். அதற்காக குடும்பப்பெயரை சுருக்கி/வெட்டி, ஆங்கிலப் பெயர் மாதிரி உச்சரிப்பு வரும்மாதிரிச் செய்ய எல்லாம் விருப்பமில்லை. பிறநாட்டவரின் நாக்கு சுளுக்கிக் கொண்டாலும் இதுவே தலைமுறை தலைமுறையாக நிலைத்து நிற்கட்டும்! ஆயினும் முழுப்பெயர் கட்டாயமாகக் கொடுக்கவேண்டி ஏற்படாத இடங்களில் எல்லாம் முதற்பெயராக இருக்கும் பாட்டனாரின் பெயரை பாதியாகக் கத்தரித்து பாவிக்கின்றேன்!. தந்தையாரின் பெயர் எனது சுருக்கிய முதற்பெயரில் இருந்து சுத்தமாக நீங்கிவிட்டது! மேற்கத்தேயரின் வழக்கப்படி பொதுவாக மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யும்போது முதற்பெயரையும், குடும்பப்பெயரையும் கட்டாயம் சொல்லி மரியாதை செய்யவேண்டும். முதற்பெயரை மிக நெருங்கியவர்கள்தான் அழைப்பதற்குப் பாவிப்பார்கள். நமது முதற்பெயரை (அதையும் நாம் சுருக்கி ஓரசை, ஈரசை என வைத்திருந்தாலும்) சொல்லவே பிறநாட்டவருக்கு நாக்கு சுளுக்கிவிடுகின்றது. இதற்குள் பல அசைகள் (syllables) உள்ள எங்கள் குடும்பப்பெயரை சொல்ல அவர்கள் முயலும்போது நமக்கே கேட்கச் சிரமமாக இருக்கும். எனது ஆஸ்திரிய நண்பர் ஒருவர் என்னுடைய நீண்ட குடும்பப்பெயரை மிகவும் எளிதாகச் சொன்னபோது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எப்படி கற்றுக்கொண்டாய் எனக்கேட்டபோது, எனது நண்பர் சொன்னபதில் இன்னும் ஆச்சரியமாக இருந்தது. அவர் எனது குடும்பப்பெயரை எழுத்துப் பிழைகள், உச்சரிப்புப் பிழைகள் இன்றி எழுதுவதற்கும், சொல்லுவதற்கும் அரைமணி நேரத்துக்கும் மேலாக பயிற்சியில் செலவளித்தாராம். முதற்பெயரையும், குடும்பப்பெயரையும் மரியாதையுடன் சொல்லவேண்டும் என்பதற்காகவே ஐரோப்பியர் இப்படியும் கஸ்டப்படுகின்றார்கள். தமிழர்கள் மத்தியில் பெயர் குறித்த விழிப்புணர்வு மிகக் குறைவு. தமது பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் வைப்பது அரிதிலும் அரிது. இதனால் அடுத்து வரும் தலைமுறைகளை சேர்ந்த தமிழர்களுக்கு தமது பூர்வீகமே மறந்து போகலாம். பிறகு மரபணுச் சோதனை செய்து தான் அவர்களது வேர்களைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். எனினும், சரியான பெயர் எழுதும் முறை எதுவென்று இலகுவாகச் சொல்லமுடியாது. தமிழர்கள் தங்கள் தனித்துவத்தைப் பேணும் வகையிலும், பரம்பரையை அடையாளம் காணும் வகையிலும் ஒரு பெயர் வைக்கும் பொறிமுறையை உருவாக்குவது பற்றிச் சிந்திக்கவில்லை என்றுதான் தோன்றுகின்றது. ஆகவே, பெயர்க் குழப்பங்கள் தொடர்கதையாகவே இருக்கும். குறிப்பு: எனது பெயர் மாறிய கதையை எழுதவேண்டுமென்றால் பெயர்களை வெளிப்படுத்தாமல் எழுதுவது இலகு அல்ல! ——
  22 points
 18. மீண்டும் அந்த பாழடைந்த கொட்டிலில் உள்ள இழையறுந்த மின்குமிழ் மங்கலான ஒளியில் அங்குமிங்கும் ஆடத்தொடங்கியது, மின்தொடுப்பற்று இருந்த ரோனியோ இயந்திரத்தின் கைப்பிடி சுழல தொடங்க , எலும்பும் தோலுமாக கிடந்த இரு நாய்களும் அந்த அரவம் கேட்டு கோரைப்பற்கள் வெளியே தெரிய வில்லிருந்து கிளம்பிய அம்பு போல் சீறிப்பாய்ந்தன, சபை பொறுப்பாளருக்கு விளங்கி விட்டது, இனி ஆட்டம் ஆரம்பம் என்று...... (தொடரும்) சொந்த அனுபவம், செவிவழி,கற்பனை கலந்து யாழின் 23 ம் அகவைக்காக அக்னி எழுதும் அமானுஷ்ய தொடர்
  21 points
 19. நாமும் நம் பழக்க வழக்கங்களும்.. அனேகமாக நான் ஏதாவது எழுதினால் அது அப்படியே தேடுவார் இல்லாமல் கிடப்பதை பல முறை அவதானித்த படியால் தனித்து எழுத மனம் எழுவதில்லை.. ஆனாலும் சில சங்கடங்களை சந்திக்கும் போது எழுத வேண்டும் போலவும் இருக்கிறது.. எழுதுகிறேன்.. ஆண்டவன் படைப்பில் ஆண், பெண் என படைப்பில் அவை அவைக்கு ஏற்ப அவயவங்களையும் சேர்த்தே படைத்திருக்கிறார்.அதை நாம் இடம் பொருள் ஏவல் அறியாது நாகரீகமற்ற முறையில் பேபசிக்கொள்வது அவர்கள் மேல் உள்ள மதிப்பை எப்படியும் குறைத்து விடும். அதுவம் நாம் போகும் கடை தெருக்களில் பேசும் போது மிகவும் கவனமாக ஒன்றுக்கு இரண்டு தடவைகள் யோசித்து பேச வேண்டும்.. சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றம் வேண்டும்,மாற வேண்டும்.. நேற்று நான் ஒரு தமிழ் கடைக்கு போயிருந்தேன்.அங்கு மூன்று வாடிக்கையாளர்கள் நின்றோம்.இருவர் பெண்கள் ஒருவர ஆண்.அந்ந ஆண் முக கவசத்தை சரியாக அணியாமல் வநீதிருந்திருந்தார்.எனக்கு சற்று தள்ளி நின்ற பெண் பிள்ளை கவனித்து விட்டார் போலும்.மாஸ்க்கை சரியாக பார்த்து போடுங்கள் என்றார். சொன்னது தான் தாமதம் அந்த ஆண் நீங்கள் விட்டால் கால் சட்டைக்குள் போடடு இருப்பதையும் கழட்டி மாத்தி போடச் சொல்லுவீங்க போலிருக்கே என்று சத்தம் போட்டார்.. கொரோனாவோடு எல்லோருக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது.அவ்வப்போது குடுத்தால் தான் அடங்குவார்களாம். அது உங்கள் வீட்டுப் பெண் பிள்ளையாக கூட இருக்கலாம், இல்லாமலும் போகலாம் கொஞ்சம் அனுசரிப்பு வேண்டாமா.வெளியில் கேட்பவர்களுக்கு எவ்வளவு அசௌகரியம் புரிகிறதா. கடைக்காரருக்கு எப்படி சமாளிப்பது பேச்சை என்ற மாதிரி நின்றார்.ஏன் தமிழ் மக்களே போகும் இடத்திலுமா நாம் இப்படித் தான் என்பதை காட்ட வேண்டுமா...எப்போ மாறப் போகிறோம்..???
  21 points
 20. பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு. "மிஷேல்" ஒரு குடும்பத் தலைவன். சாதாரண... வேலை பார்க்கும், இழகிய மனம் கொண்ட பண்பான மனிதன் அவனுக்கு... அன்பான மனைவியும், பத்து வயதை நெருங்கிய... மகனும், மகளும் உண்டு. வாடகை வீட்டில் வசிக்கும் மிஷேலுக்கு... ஒரு கவலை. தனது வருமானத்தால், தன் குடும்பத்திற்கு, சொந்தமாக... ஒரு வீடு வாங்க வேண்டும் என்று, கிழமைக்கு ஒரு முறை... லொத்தர் போட்டு வருவது வழக்கம். நல்ல மனிதர்களுக்கு... "கூரையை... பிச்சுக் கொண்டு கொடுப்பாளாம், லட்சுமி அம்மாள்" என்ற மாதிரி... மூன்று மில்லியன் ஐரோ.... பரிசு விழுந்து விட்டது. தான்... கும்பிட்ட தெய்வம், தன்னை கைவிட வில்லை என்று.... ஆனந்தப் பட்டு, தன்னிடம் அதிக வேலை வாங்கி... குறைவான சம்பளம் தந்த, முதலாளிக்கு... "நடு விரலை காட்டி", போய்யா... நீயும், உன் சம்பளமும்... நானும், உன்னை மாதிரி... முதலாளி ஆகி காட்டுறேன் என்று... "சணல் பறக்க" பேசி விட்டு... வந்து விட்டான். மிகுதி... அடுத்த... வெள்ளிக் கிழமைக்குள், தொடரும்... யாழ். களத்தின், சுய ஆக்கத்திற்காக.. தமிழ் சிறி.
  21 points
 21. சுதந்திரம் எம் சுவாசம். "சுதந்திரம் விரும்பி சுவாசத்தை நிறுத்திய அத்தனை வீரர்களுக்கும் வந்தனம்". மரத்தினின்று வீழ்ந்த பழுத்த சருகுகள் வேருக்கு உரமாகின்றன மரணித்த வீரனின் பாச நினைவுகள் மனதில் தடுமாறுகின்றன சுதந்திரம் ஒரு பசுஞ்சுனைதான் அதை நோக்கி நாம் கொடும் பாலையில் அல்லவா நடக்கின்றோம் கண்தொடும் தூரம் கானல் நீர் நாம் எதைத் தொலைத்தோம் எங்கே தொலைந்து போனோம் எம் மூதாதையர் வாழ்ந்தார்களே நிறைவாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்தார்களே சுதந்திரமாய் வாழ நினைத்தோமே சுவாசத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்திவிட முயன்றோமே யூதாசும்,ப்ரூட்டசும், எட்டப்பனும் காக்கை வன்னியனும், கருணா நிதியும் நிதிக்காகவே அலைவார்களா --- நிகரில்லா சுதந்திரத்தை விற்பார்களா காலங்கள் தோறும் பிறந்து வருவார்களா ஓ ....வீரனே ...... திறந்திருக்கும் உன் விழிகளில் இலட்சிய ஒளி மட்டுமல்ல --- களமாடி விழுந்து கிடக்கும் உன் உடல்கூட முட்களையும், கற்களையும் ஓநாய்களையும், நரிகளையும் --- எமக்கு இனம் காட்டி விட்டல்லவா விதையாகியது.......! யாழ் அகவை 23 க்காக ஆக்கம் சுவி.........!
  21 points
 22. 31.03.2020 மாலை 17.22. எனது செல்லுலாபேசி ஒலிக்கிறது. கைகளில் இருந்த கையுறைகளைக் கழற்றி எறிந்துவிட்டு தொலைபேசியைப் பார்த்தேன். பார்த்திபனின் அழைப்பது. அது எனது தனிப்பட்ட தொலைபேசி. அந்த இலக்கம் பிள்ளைகள் இருவருக்கும் இன்னும் மூன்று பேருக்கு மட்டுமே தெரிந்த இலக்கம். அப்போது பகுதிநேர வேலையை ஆரம்பித்து 22நிமிடங்களாகியிருந்தது. 29.02.20 தொடக்கம் இன்று வரை ஒருமாதமாக இடையிடை வட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறான். இன்று தான் நீண்ட நாளின் பிறகு தொலைபேசியில் அழைத்திருந்தான். பார்த்திக்குட்டி..., அழைத்தவுடனேயே ஓம் என மறுமுனையில் அவன் குரல் வந்தது. எப்பிடி செல்லம் இருக்கிறீங்கள் ? நல்ல சுகம் . நீங்கள் ? அவன் தொடர்ந்து கதைத்துக் கொண்டு வந்தான். இடையில் கேட்டான். தங்கைச்சி எல்லாம் சொன்னவா தானே ? இல்லைக்குட்டி. என்ன ? சொல்லுங்கோ ? ஓகே. எனக்கும் என்ர றூம்மேற்சுக்கும் கொரோனா வந்தது. அவனது நண்பன் ஒருவனின் பெயரைச் சொல்லி 'அவர் கொஸ்பிற்றலில இருந்து வந்திருக்கிறார். அவருக்கு கொஞ்சம் கடுமையா இருந்தது. மற்றைய நண்பனுக்கும் கடுமை தான். ஆனால் இப்ப பறாவாயில்லை. நாங்க வெளியில போகேலாது. அடுத்தவனையும் தன்னையும் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறையால் வீட்டில் தனிமைப்படுத்தி விட்டுள்ளதாகச் சொன்னான். அப்ப சாப்பாடுகள் என்னமாதிரி செல்லம் ? பிள்ளைகள் கொண்டு வந்து தருகினம். நாங்கள் வெளியில போகேலாது. தடை போட்டிருக்கினம். வெளியில நாங்கள் போனால் போலிஸ் பிடிக்கும் தண்டனைக்காசு கட்ட வேணும் , சிறையில அடைச்சிடுவினம். அவன் சொல்லச் சொல்ல நெஞ்சு பதறத் தொடங்கியது. கால்களைத் தாங்கிக் கொண்டிருந்த நிலம் என்னை தூரமாய் இழுத்துச் செல்வது போலிருந்தது. எங்கெல்லாமோ வந்த செய்தி என் குழந்தைக்கும் வந்துவிட்டதை நம்ப முடியவில்லை. வந்த அழுகையை அவனுக்கு வெளிக்காட்ட முடியாதிருந்தது. எனக்குள் நிகழ்ந்த அதிர்வை பயத்தை கண்ணீரை எனக்குள்ளேயே விழுங்கிக் கொள்கிறேன். கவனமா இருங்கோ செல்லக்குட்டி. பிள்ளைக்கு அம்மாவும் தங்கைச்சியும் இருக்கிறம். ஓண்டுக்கும் யோசிக்க வேண்டாம். பிள்ளையளிட்டைச் சொல்லி நல்ல சாப்பாடு வாங்கிச் சாப்பிடுங்கோ குட்டி. நீங்களும் கவனமாயிருங்கோ. எல்லா இடமும் தான் இது பரவுது. ஓம்குட்டி அம்மா கவனமாயிருக்கிறேன். பிள்ளைக்கு காசு கூட தேவையெண்டா சொல்லுங்கோ அம்மா அனுப்புவன் செல்லம். ஒண்டும் யோசிக்க வேண்டாம் செல்லக்குட்டி அம்மா இருக்கிறன் பிள்ளையளுக்காக. நான் ஒருக்கா உங்களைப் பாக்க வரலாமோ செல்லம் ? இங்கை ஒருவரும் வரேலாது பொலிஸ் தடைபோட்டிருக்கினம். இந்த செமெஸ்டரும் படிக்கேலாது போல. பாப்பம். நான் தங்கைச்சிக்கு கதைக்கப் போறன். உங்களுக்கு இன்னொருநாள் திரும்ப எடுக்கிறன். நீங்கள் கவனமாயிருங்கோ. கண்டபடி வெளியில திரியாதையுங்கோ. கனக்க வேலை செய்யாமல் வீட்டில இருங்கோ. பலமுறை கவனம் சொல்லி 14.நிமிடம் 52 வினாடிகள் கதைத்தான். அவன் விடைபெற்றுக் கொண்டு தொலைபேசியழைப்பை நிறுத்தினான். என்னால் நிற்க முடியவில்லை. தலைசுற்றியது. வயிற்றினுள் ஏதொவெல்லாம் செய்தது. உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அங்கிருந்த கதிரையொன்றில் இருந்து கால்களை மேலுயர்த்திச் சாய்ந்தேன். தாழ் இரத்த அழுத்தத்தை உணர்கிறேன். கண்முன்னால் நீலநிறத்தில் பூச்சிகள் பறக்கத் தொடங்கியது. காதுக்குள் கூவென்ற இரைச்சல் ஆழமாக ஆழமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. கைகள் கால்கள் உடலெல்லாம் தளர்ந்து சோர்கிறது. என்னை நானே நினைவிழக்க விடாமல் காக்க வேண்டிய கட்டாயத்தை உணர்கிறேன். கண்களை மூடி என்னை ஆசுவாசப்படுத்த முயல்கிறேன். அரைமணித்தியாலத்திற்கும் மேலாக அப்படியே இருந்தேன். ஓரடி நிமிர நாலடி வீழ்த்திவிடுகிற காலத்தை நினைக்க நினைக்க கோபம் வருகிறது. கடந்த வருடம் அவன் இளமானிப்பட்டப்படிப்பை முடிக்கும் பரீட்சைக் காலத்தில் நடந்த விபத்து , இதேகாலம் என் குழந்தை தன்னை மறந்து போயிருந்தான். என் இருள் நிறைந்த நாட்களின் சூரியனாக இருந்தவன். வவுனீத்தாவின் ஒரே நம்பிக்கை வேராக நின்ற எங்கள் இருவரின் எல்லாமுமானவன். அவனைக் காலம் தன் கைகளிலிருந்து இடுங்கி வீழ்த்திய காலமது. அவனைத்தேடித் தெருத்தெருவாய் அலைந்த இதே நாட்கள் ஒவ்வொன்றாய் நினைவுகளிலிருந்து இறங்கிக் கண்ணீராக வழிந்து கொண்டிருந்தது. எல்லாம் ஒரு மர்மமாக கிட்டத்தட்ட 11மாதங்கள் கண்ணீரோடு வவனீத்தாவும் நானும் அழுதழுது அலைந்த காலங்கள் மாறியதாக 2019 நவம்பர் 25ம் திகதி அவன் கணிசமானளவு ஞாபகங்களை மீளப்பெற்று அம்மா தங்கைச்சியை ஏற்றுக் கொண்டான். இன்னும் மர்மமாகவே அந்தக் காலத்தின் முடிச்சுகள் முழுமையாக தழராத கதைகள் கோடியுண்டு. அவன் மீண்டு வந்தது போதுமென்றேன். பரீட்சையெழுத தயாராயிருந்தவன் படித்த படிப்பையெல்லாம் மீளவும் படிக்க வேண்டுமென்ற போது அவன் சோர்ந்து போகாமல் படிக்க முடிவெடுத்தான். ஒருவருடகால போராட்டம் தன்னைத் தானே தேடிக்கண்டடைந்து எங்கள் நம்பிக்கையை மீண்டும் அவன் தான் புதுப்பித்தான். அவனை அழுத்திய பொருளாராதச் சுமையை எனது ஒருபகுதி உதவியோடு வாரம் 40மணித்தியாலம் வேலைசெய்து முழுநேரம் பல்கலைக்கல்வியையும் தொடர்ந்து கொண்டிருந்தான். அவனது ஓய்வற்ற உழைப்பை நினைக்காத நொடியில்லை. நின்றால் நடந்தால் இயங்கினால் எல்லா நேரமும் அவன் தான் எனக்குள் அந்தக் காலத்துயரைக் கடந்துவர நான் அடைந்த சுமைகள் இதுவரை கால அலைவுகளெல்லாம் ஒற்றைத்தூசியாயிருந்தது. மருத்துவ உலகம் கைவிட்ட பிறகு அவன் தன்னைப் புதுப்பிக்க தன்மீதுதான் நம்பிக்கையோடு போராடினான். அவனது நம்பிக்கை அவனது துணிச்சல் அவனை எங்களுக்குத் திரும்பத் தந்தது. முன்பைவிட அவன் பலமடங்கு உடல் உள ஆரோக்கியத்தோடு தன்னை மீட்டான். எங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தவன் அம்மாவை தங்கைச்சியை தன் உறவுகளாக ஏற்றுக் கொண்டது எனக்கும் வவுனீத்தாவுக்கும் எதுவும் வேண்டாம் அவன் மட்டுமே போதுமென்ற அமைதி. 2020 தொடக்கம் எங்களுக்கு நிமிர்வு காலம் இனி வீழமாட்டோமெனப் பிள்ளைகளுக்குச் சொன்ன எனது வார்த்தைகளைக் கண்ணீர் துடைத்தெடுத்துக் கொண்டிருந்தது. என் குழந்தை தனிமையில் வலிப்பட ஒரு தேனீர் கூட வைத்துக் கொடுக்க முடியாத துயரை எந்தச் சொற்களாலும் மொழிபெயர்க்கத் தெரியாத துயரம். துயரை என்னுள் தொடர்ந்து புதைத்து அழ வைக்கும் காலத்தின் தொடர் தொல்லைகளை ஒவ்வொன்றாய் தாண்டுகிற போதும் இனிமேல் துயரில்லை. இப்படித்தான் நினைத்துக் கொள்வேன். ஆனால் காலம் ஏனோ என்னோடு மல்லுக்கு நிற்கிறது. அடுத்து மகள் அழைத்தாள். செல்லக்குட்டி அண்ணா எடுத்தவனம்மா நான் சொல்ல அவளும் தொடங்கினாள். அம்மா நீங்கள் யோசிக்காமல் இருங்கோ. அண்ணா சுகமாகீட்டார். அண்ணா மீண்டது அதிசயமம்மா. மற்றவையளுக்கு கூட அண்ணாவுக்குத்தான் தாக்கம் குறையவாம். அவர் சுகமாகினது போதும். அதைவிட வேறையேதும் நினைச்சு யோசிக்காமல் இருங்கோ. எல்லாம் நல்லதே நடக்கும். ஏன் பிள்ளை எனக்கு நீங்கள் சொல்லேல்ல ? அண்ணா முதல் கேட்டவர் உங்களுக்குச் சொல்லட்டோண்டு. நான் தான் சொன்னனான் கொஞ்சம் பொறுக்கச் சொல்லி. நீங்கள் முதல் சொல்லியிருந்தா உடனும் ரெயினேறி போயிருப்பீங்கள் எங்களுக்கும் சொல்லாமல் அதுதானம்மா உங்களுக்குச் சொல்லேல்ல. அண்ணா தொடர்ந்து என்னோடை கதைச்சுக் கொண்டிருந்தவரம்மா. என் தேவதை என்னை ஆறுதற்படுத்திக் கொண்டிருந்தாள். நான் யோசிக்கக்கூடாதென்று நினைக்கிறாள். அவனுக்கு சாதாரணமாக காலநிலை மாறும் போது வரும் காச்சல் இருப்பதாக 2வாரங்கள் முதல் சொல்லியிருந்தாள். நானும் அப்படித்தான் நம்பியிருந்தேன். ஆனால் மனம் அமைதியைத் துறந்து நித்திரையைப் பறித்து நானடைந்த மனவுளைச்சல். தினமும் ஏதாவது பயங்கரமான கனவுகளால் நித்திரையறும் போதெல்லாம் எழுந்திருந்து நெஞ்சு பதறும் அந்தரத்தை பிள்ளைகளுக்குச் சொல்லாமல் என்னோடு மறைத்து உலவிக் கொண்டிருக்கும் காலமிது. எனினும் உலகை உலுக்கும் கொரோனா என் வீட்டுக்குள் வராதென்ற துணிச்சலில் இருந்தேன். அது என் நம்பிக்கையை உடைத்து என்னைச் சோர வைத்துள்ளது. கடுமையான கட்டத்தை கடந்து அண்ணா வந்திட்டாரம்மா. இனி பயமில்லை. சீனாவுக்கு அடுத்து இத்தாலி உலகை மிரட்டிக் கொண்டிருக்கிறது. அந்த இத்தாலியில் இருந்து கொண்டு என்னை என் மகள் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள். அம்மா நீங்கள் அமைதியா வேலையை முடிச்சிட்டு வீட்ட வந்து எடுங்கோ கதைப்பம். சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்தாள் வவுனீத்தா. எனக்கு ஆறுதல் சொல்லும் என் மகள் தனிமையில் அண்ணாவுக்காக அழுவாள் என்பது தெரியும். அவள் அழுதால் என்னால் இனி இயங்கவே முடியாதென்பதை அறிவேன். அவளோடு இயல்பாக இயன்றவரை பேசி முடித்தேன். என்னால் தொடர்ந்து வேலையைச் செய்ய முடியாதிருந்தது. மனம் அடைந்த அந்தரிப்பை பயத்தை துயரை வெளியில் காட்ட முடியவில்லை. ஓடியோடி வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தேன்.வேலை முடிந்து வீட்டுக்கு வந்தும் மனம் ஆறாத அந்தரிப்பு தொடர்கிறது. இன்னும் நித்திரை வரவில்லை. விழித்திருக்கிறேன். இப்போது விடியற்காலை 3.47. அன்றைக்கு பிறகு ஒருவாரம் கழித்து பார்த்திபன் சட்பண்ணினான். இன்னும் ரெண்டு கிழமையில நான் எனக்கு வேண்டிய எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவிடுவேன். கொரோனா யாருக்கும் வரக்கூடாது. அதுவொரு பொல்லாத நோய். நான் மற்றவைக்கு இனி உதவப் போறன். கவனமாயிருங்கோ. கண்டபடி வெளியில போக வேண்டாம். என் பாதுகாப்பை அடிக்கடி சொல்லிக் கொண்டான். கொரோனா வந்தவர்களுக்கு உதவுதற்கு வானொலிகள் அழைக்கிறது. துணிந்து செல்ல யாரும் அதிகம் விரும்பாத காலமிது. என் குழந்தை அவர்களுக்கு தானாக உதவப் போகிறேன் எனச் சொன்னதை மறுக்க முடியவில்லை. 08.04.20 மீண்டும் பார்த்திபன் தொலைபேசினான். நீண்ட நேரம் சட்பண்ணினான். நான் திரும்பப் படிக்க வேணும். இன்னும் 2 தொடக்கம் 3 வருடங்கள் படிக்க வேணும். முழுநேரம் வேலைசெய்து கொண்டு படிக்க கஸ்ரமாயிருக்கு. நீங்கள் எவ்வளவு காலம் எனக்கு உதவ முடியும் ? நான் படிச்சு முடிய உங்களுக்கு எல்லாம் திருப்பித் தருவன். அவன் மீண்டும் படிக்க வேண்டுமென்ற தன் கனவைச் சொல்லிக் கொண்டிருந்தான். நீங்கள் படிச்சு முடியும் வரை அம்மா உதவுவேன் செல்லம். நீங்கள் அமைதியா வடிவா சாப்பிட்டு நிம்மதியா இருந்து படியுங்கோ. எனக்கு நீங்கள் ஒண்டும் திருப்பித் தரத்தேவையில்லை. நீங்கள் ஆரோக்கியமா இருந்தால் அதுவே எனக்குக் காணும் செல்லம். காலம் மீண்டும் என்னையும் என் குழந்தைகளையும் எழுந்து ஓட வைத்திருக்கிறது. ஓடத் தொடங்கியிருக்கிறேன். நாங்கள் 3பேரும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் காலமொன்று எங்களை ஒரு புள்ளியில் சேர்க்குமென்ற நம்பிக்கையை இன்னும் அதிகமாக விதைத்தபடி ஓடுகிறேன். அச்சம் துரத்தும் கனவுகளை ஆழ்மன வெளியின் அலைவுகளை கனவுகள் பெருகிக் கண்களை நிறைத்துக் கண்ணீர் கடலாய் இரவின் கருமையில் நிறைகிற பொழுதையும் தாண்டிக் கடந்தோடும் தைரியத்தைத் தரும் பிள்ளைகளின் ஞாபகங்கள் அவர்களது வெற்றிகள் பற்றிய நினைவுகளோடு நதியாகி ஓடுகிறேன். 02.05.2020 சாந்தி நேசக்கரம்
  21 points
 23. ஒரு வளியாக இந்த வருடம் பரிசில் நடைபெற்ற மரதன் போட்டியில் கலந்து கொள்ள முடிந்தது. 3 மாத கடும் பயிற்சியின் பின் சென்ற ஞாயிறு ஓடி முடித்துள்ளேன். கோவிட் காரணமாக இந்தத் தடவை சுமார் 30000 பேர் மட்டுமே போட்டியில் பங்குபற்றினர். 3 மணித்தியாலங்களும் 39 நிமிடங்களும் ஓடி 6890 ஆவது இடத்துக்கு வந்துள்ளேன். இதோ சில படங்கள்
  20 points
 24. ஈழப் போராட்டம் பற்றி செயற்கையான புனைவுகள், அந்நியமான வசன நடைகள், வரலாற்றுக்கு புறம்பான பதிவுகள் இல்லாமல், தெளிவான கதை சொல்லும் பாங்குடன், முடிந்தளவு யதார்த்ததை ஒட்டி இதுவரை வந்த ஆகச்சிறந்த திரைப்படம் எது என்றால் கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம் - மேதகு. முதல் பிரேமிலேயே தமிழரின் தொன்மையை தொட்டு படம் ஆரம்பிக்கிறது. குமரிக்கண்டம் வரை ஆண்ட இனம் என்ற முகவுரை படத்தின் வரலாற்றுப் புரிதல் பற்றிய ஐயப்பாட்டை ஆரம்பத்தில் தோற்றுவித்தாலும், அடுத்த காட்சிலேயே - 1995 இன் மதுரை மாவட்ட கிராமம் ஒன்றில் நடக்கும் “மாவீரன் கூத்தோடு” அண்மைய வரலாற்றில் ஆழமாக படம் இறங்கும் போது அந்த ஐயப்பாடு மறைந்து விடுகிறது. குழந்தை பிறந்து, வளரும் பருவம் என்று மெதுவாக நகரும் கதை, சிறுவன் பிரபாகரன் “ நாம் ஏன் அப்பா திருப்பி அடிக்கவில்லை” என்று கேட்கும் காட்சியில் இருந்து டாப் கியரில் எகிறுகிறது. படத்தின் அத்தனை பாத்திரத்தேர்வுகளும் அபாரம். குறிப்பாக அந்த பதின்மவயது பிரபாகரன் வேடம் ஏற்கும் கதாநாயகன், முக அமைப்பும், வார்த்தை தேர்வும், தொனியும், உடல் மொழியும், கண் அசைவும், தலைவரை பின்னாளில் கண்ட பலர் கற்பனை செய்து வைத்திருக்கும் “தம்பி”யை அப்படியே கண் முன் கொண்டு வருகிறார். அதே போல் பார்வதி அம்மாள், வேலுப்பிள்ளை ஐயா, தந்தை செல்வா, துரையப்பா, சிறிமா, பண்டரநாயக்க, குட்டிமணி பாத்திரங்களும் கச்சிதம். பொதுவாக பெரிய பாத்திரங்கள் எல்லாமுமே 70-90% ஈழத்தமிழை ஒத்து பேசுவது சிறப்பு. அதுவும் அந்த பார்வதி அம்மாள் பாத்திரத்தின் ஈழத் தமிழ் அதி சிறப்பு. சில இடங்களில் இலக்கிய தமிழ் வலிந்து தொனிப்பதாக படுகிறது. குறிப்பாக சிறு பாத்திரங்களில். பெளத்த பிட்சுகள் பேசும் சிங்களம் கர்ணகடூரமாக இருக்கிறது. ஒருவகையில் பழி தீர்கிறார்களோ என்னமோ. படத்தை நகர்த்தி செல்லும் கூத்து ஒரு நல்ல கதை சொல்லும் உத்தி. ஆனால் அரிதாக சில இடங்களில் கொஞ்சம் இழுபடுவதான உணர்வு. பச்சை நிற பஸ், யாழ் மாவட்ட சூழலில் காடு, மலை என்று பொருத்தாமல் இருந்தாலும், இவை கதை ஓட்டத்தை பாதிக்கவில்லை. இளவயது பிரபாகரன் கடற்கரையோரத்தில் தன் தந்தைக்கு தன் நியாயத்தை எடுத்து சொல்லும் காட்சியை இன்னும் அழகாக செதுக்கி இருக்கலாம். சில காட்சிகளுக்கு கொஞ்சம் சினிமாதனமும் தேவைதான். இந்த காட்சியில் அதற்குரிய பவர் மிஸ்ஸிங். தியாகி சிவகுமாரனுக்கு அவருக்குரிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது . படத்தின் மைனஸ் என்றால் அந்த தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை காட்சிகள்தான். வரலாற்றுக்கு அமைவாகவும் இல்லாமல், நாடகதனமாக காட்சிகள் அமைகிறது. ஆனால் ஸ்ரீ எதிர்ப்பு கலவர காட்சிகள் தத்துரூபமாக படமாக்கப்பட்டுள்ளன. படம் ஒரு சாராரின் கருத்தை மட்டுமே பதிகிறது என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆனால் பிராசார படம் போல கொள்கை முழக்கம் செய்யாமல், தமது பார்வையை மட்டுமே முன் வைக்கிறது. படம் நாயகர்கள் என்றும் வில்லனகள் என்றும் துரோகிகள் என்றும் வர்ணிப்பவர்களை பெரும்பாலனா ஈழத்தமிழ் மக்களும் அவ்வாறே கருதுவார் என்பது என் முடிவு. முடிவாக இதுவரை இந்தியாவில் இருந்து வந்த ஈழம் பற்றி பேசிய படங்களை விட மட்டும் அல்ல, நிதர்சனம் படைப்புகளை விடவும் கூட இந்த படம் ஒரு படி மேல் என்றேபடுகிறது. மேதகு - பெயர் சொல்லும் பிள்ளை
  20 points
 25. பிலோமினாவின் தந்தையாருடன் அளவளாவிக் கொண்டிருந்த சந்திரன் ஒரு சிறுவன் வீட்டை நோக்கி ஓடி வருவதை அவதானித்தான்! அதே சுருண்ட முடியும், நீல நிறக் கண்களும்...! அந்தக் குழந்தை யாருடையது என்பதற்குப் பெரிய அறிமுகம் எதுவும் அவனுக்குத் தேவைப்படவில்லை! சந்திரனைக் கண்ட குழந்தையின் கண்களில் ஒரு மிரட்சி தெரிந்தது! அப்பன் பயப்பிடாதை...இவர் உனக்கு மாமா! வெளி நாட்டில இருந்து வந்திருக்கிறார்! குழந்தை தாத்தாவைக் கட்டிப் பிடித்த பிடித்த படி....அவனைக் கூர்ந்து கவனித்தபடியே இருந்தது! இருவரில் ஒருவருமே...பிலோமினாவைப் பற்றிய கதையை ஆரம்பிக்கவில்லை! நான் அப்ப போயிற்று...நாளைக்குக் காலமை வாறன்! பிலோமினா நிப்பா தானே எனச் சந்திரன் கேட்கவும், தந்தையார் ஓமோம்...நான் அவவிட்டைச் சொல்லி விடுகிறன் மகன் என்று கூறினார்! அவரது கண்களில் ஏதாவது செய்தி இருக்கின்றதா என்று உற்றுப் பார்த்த போதும் ஒரு வெறுமை மட்டுமே....அதில் தெரிந்தது! பின்னர் சைக்கிளை உழக்கும் போது கொஞ்சம் எதிர்க் காத்து வீசவே, சைக்கிளைத் தூக்கித் தோள்களில் வைத்த படி நடக்கலாமா என்று யோசித்தவன்...தான் இன்னும் சிறு பிள்ளையில்லை என்று நினைத்துச் சைக்கிளை உருட்டிய படியே நடக்கத் தொடங்கினான்! செல்லும் வழியில் சில வீட்டுத் தோட்டங்கள் தெரிந்தன! பொதுவாகச் சின்ன வெங்காயமும், மிளகாய், கத்தரி, வெண்டி போன்ற சில மரக்கறி வகைகளும் நடப்பட்டிருந்தன! அதன் பின்னால் உள்ள உழைப்பின் அளவை அவன் ஓரளவுக்குத் தெரிந்திருந்தான்! வெறும் கல் படர்ந்த நிலத்தின் மீது கொஞ்சம் மண்ணை உயர்த்தி..அதன் மீது தான் நாற்றுக்களை நட்டிருப்பார்கள்! தரவை நிலங்களில் நிறையக் காய்ந்த எருக்கள் கிடைக்கும்! அதையும் மழையையும் மட்டும் நம்பியே அந்தத் தோட்டங்கள் இருந்தன! வீட்டுக்கு வந்த பின்னரும் பிலோமினாவைப் பற்றிய சிந்தனை அவனை விட்ட பாடில்லை! இன்னும் நல்ல வெளிச்சம் இருந்ததால்...கால் போன திசையில் கொஞ்ச நேரம் நடக்கத் தொடங்கினான்! வீதிக்குக் கொஞ்சம் தார் காட்டியிருந்தார்கள்! இப்போதெல்லாம் வீட்டு நாய்களைக் காணும் போது...உள்ளுக்குள் கொஞ்சம் பயமாக இருந்தது! அந்த நாட்களில் நாய்கள் துரத்தும் போது, கால்களைத் தூக்கிச் சயிக்கிள் ஹாண்டிலில் வைத்து ஓடி, நாய்களுக்கே நிலாக் காட்டியதை நினைத்துப் பார்த்தான்! ஓரு இடத்தில் நிறைய ஆவரம் மரங்கள் சிறு..சிறு பற்றைகளாக இருந்தன! இவற்றின் காய்கள் சீயாக்காய் போல நீளமாக இருக்கும்! இவற்றைத் தலையில் வைத்துக் கழிகளில் குளித்ததும் நினைவுக்கு வந்தது! இப்போதும் அவ்வாறு குளிக்க வேண்டும் போல இருந்தது! இப்போது அவனுக்கு ஒரு உண்மை...ஓடி வெளித்தது! எவ்வளவு நாட்கள் பிற தேசங்களில் வசித்தாலும்...இளமைக் கால நினைவுகள் ஒரு போதும் அழிந்து போவதில்லை! அதே சூழலுக்குள் திரும்பப் போகின்ற போது...அந்த நினைவுகள் அப்படியே திரும்பவும் வரும்! இப்போது பிற் காலத்தில் இங்கு வந்து வசிக்க வேண்டும் என்ற அடி மனத்து ஆசை மேலும் வீறு கொண்டெழுந்தது! மறு நாள் காலையில் விடிந்தும் விடியாத வேளையிலேயே கண் விழித்தவன் இன்றைய நாளைப் பெரும் எதிர்பார்ப்புகளோடு வரவேற்றான்! அவனுக்கே பிடித்தமான பிட்டும், கப்பல் வாழைப்பழமும், சம்பலும் பெரியவர் அவனுக்காகச் செய்து வைத்திருந்தார்! பின்னர் காலையின் வாசனையை முகர்ந்த படியே சைக்கிளை எடுத்துக் கொண்டு அவன் புறப்படவும்....வெளியே யாரோ வருவது போல அரவம் கேட்கவே, பிலோமினாவும் அவளது குழந்தையைக் கையில் பிடித்த படியே நடந்து வந்து கொண்டிருந்தாள்! அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவனின் மனதில் பெரியவரின் நினைவு திடீரென வந்ததும், அவளை வரவேற்பதற்காக வெளியே ஒடினான்! அதற்குள் பெரியவர் முந்திக்கொண்டார்! என்ன பிள்ளை இந்தப் பக்கம்? பேச்சு நடை விபரீதமாகப் போய் விடக் கூடாது என்பதற்காக, இவ எனது நண்பனின் உறவினர்...என்னிடம் தான் வந்திருக்கிறா என்று கூறியவன் பிலோமினாவை அழைத்துக் கொண்டு விறாந்தையில் கிடந்த கதிரையில் உட்காரச் சொன்னான்! அவனது கைகளில் தோன்றிய நடுக்கம்...வெளியே தெரிந்து விடுமோ என்று அவன் அஞ்சிய மாதிரித் தெரிந்தது! தான் எவ்வளவு கோழையாகிப் போனேன் என்று அவனுக்கே வெட்கமாக இருந்தது! பெரியவரிடம் இவள் என்னோடு ஒரே பாடசாலையில் படித்தவள் என்றோ....எனக்கு மிகவும் நெருக்கமானவள் என்றோ அறிமுகப் படுத்தியிருக்கலாமே என்று மனதுக்குள் புழுங்கிக் கொண்டான்! ஒரு ராஜதந்திரப் பார்வை ஒன்றை அவள் மீது வீசிய படியே பெரியவர் அப்பால் நகர்ந்து போனார்! பெரியவர் போன பின் அவளது கரங்களை இறுகப் பற்றிய படியே வெகு நேரம் நின்று கொண்டிருந்தவனை....எப்படி இருக்கின்றீர்கள் என்ற அவளது குரல் இவ்வுலகத்துக்கு அவனை திரும்பவும் கொண்டு வந்தது! ஓம்...ஓம்...சுகத்துக்கு ஒரு பிரச்சனையும் இல்லை! நான் உங்களை மறந்து போகேல்லை! ஆனாலும் வெளி நாடு சென்றதும் எதிர்பாராத எவ்வளவோ பிரச்சனைகள், படிப்பு...வேலை என்று சிந்திக்கவே நேரம் கிடைக்கேல்ல! தமிழனுக்கே உரித்தான தனித்துவமான பொறுப்புக்கள், எதையுமே நனைச்சுச் சுமக்க வைக்கும் எமது சமுதாய அமைப்பு எல்லாமே சேர்ந்து எனது வாழ்வைத் தின்று விட்டன! எல்லாம் முடிந்து கண்ணாடியைப் பார்த்த போது....காதோரத்தில் நரை முடி அரும்பிப் போயிருந்தது! அவன் சொல்லி முடிக்க, அவளும் சிரித்த படியே தனது புத்தம் புதிய நரை முடிகளைத் தடவிக் கொண்ட்டிருந்தாள்! இதையெல்லாம் பற்றி நீங்கள் கவலைப் படவே வேண்டாம்! எழுதிச் செல்லும் விதியின் கை, யாருக்காகவும் எழுதுவதை நிறுத்துவதில்லை! எப்படி உங்கள் குடும்பம் என்று அவள் விசாரித்த போது...அவனது மௌனமே அவளுக்கான பதிலாக அமைந்தது! அதன் பின்னர் அவளும் அந்தக் கேள்வியை மீண்டும் கேட்கவேயில்லை! வானத்துச் சந்திரனைப் போலவே.....நீங்கள் என்னிடமிருந்து வெகு தூரம் போய் விட்டீர்கள்! நீங்கள் அண்மையில் இருந்திருந்தாலும் இந்த உலகம் எம்மிருவரையும் சேர்ந்து வாழ ஒரு போதும் அனுமதித்திருக்க மாட்டாது! ஏன், இன்றும் கூட அது பெரிதாக மாறி விடவில்லை! நான் இந்த வீட்டின் படலையத் தாண்டி வந்த போது...அந்தப் பெரியவரின் முகத்தில் தோன்றிய கோடுகளை, நீங்களும் பார்த்தனீங்கள் தானே? நீங்கள் வெளி நாடு போய், ஐந்து வருடங்கள் ஆனதும், எங்களுடன் படித்த பீற்றர் என்னைக் கட்டித் தரும்படி அப்பாவிடம் கேட்க, நானும் கழுத்தை நீட்டினேன்! பீற்றரும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு வள்ளம் வாங்கி வைத்திருந்தார்கள்! பிடிக்கும் மீன்களை எல்லோருமே பங்கிட்டுக் கொள்வார்கள்! ஒரு வருடத்துக்கு முன்பு வரை எல்லாமே நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது! ஒரு நாள் இந்திய இழுவைப்படகுகள் இவர்கள் போட்டிருந்த வலைகளை அப்படியே சேதப் படுத்தி விட்டுப் போய் விட்டன! இவர்களது வலைகள் மட்டுமல்ல, இன்னும் பலரது வலைகளுக்கும் அதே கதி தான்! இப்போதெல்லாம் இந்தியப் படகுகள் கரைக்கு அருகேயே வருகின்றன! நீங்கள் வந்து பார்த்தால் அவற்றின் எஞ்சின் சத்தத்தைக் கூடக் கரையிலிருந்தே நீங்கள் கேட்கலாம்! சந்திரன் நீண்ட நேரம் யோசித்து விட்டு....என்னால் ஓரளவுக்கு உதவ முடியும்! ஆனால் இதை நீங்கள் நிச்சயம் மறுக்கக் கூடாது என்றான்! இதைக் கேட்டுத் திடுக்கிட்ட பிலோமினா, சந்திரன் நீங்கள் எந்தப் பிராயச்சித்தமும் செய்ய வேண்டிய அவசியமில்லை! உங்கள் மீது எந்தத் தவறுகளும் இல்லையே என்று கூறினாள்! இல்லை, எனது ஆத்ம திருப்திக்காக என்னால் முடிந்த ஒரு உதவியை உனக்காகச் செய்ய என்னை அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தவே, அவளும் ஒரு நிபந்தனையுடன் ஒப்புக் கொண்டாள்! மறு நாள் வங்கிக்குச் சென்று பிலோமினா பெயரிலும், அவளது குழந்தையின் பெயரிலும், அவனது பெயரிலும் ஒரு வங்கிக்கணக்கு ஒன்றைத் திறந்து வலைகளுக்குத் தேவையான பணத்துடன் மேலதிகமாகக் கொஞ்சப் பணத்தை மேலதிகமாகவும் போட்டு, மாதம் ....மாதம் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை அந்தக் கணக்குக்குத் திரும்பக் கட்டுமாறு கூறியவன்...அந்தக் கடன் கட்டி முடியும் வரை...அந்த வங்கிப் புத்தகம் தன்னிடமேயிருக்கும் என்றும் கூறிய படியே, அந்தக் குழந்தையின் தலையை வருடிய படியே விடை பெற்றான்! சில நாட்களின் பின்னர்..அவனது வீட்டில் அவன் விடிகாலையில் நித்திரையால் கண் விழிக்கும் போது, அவனது மனைவி 'என்னப்பா...ராத்திரி முழுக்கப் பிலோ...பிலோ எண்டு பினாத்திக் கொண்டிருந்தீங்கள், தலைகணி விலகிப் போச்சோ என்று கேட்கவே, ம்ம்...தலையே விலகிப் போச்சுது என்ற படி....அன்றைய நாளுக்கான கடமைகளில் மூழ்கத் தொடங்கினான்! அடுத்த வருசம் இந்தப் பாஸ் புத்தகத்தை எப்படியாவது பிலோமினாவிடம் சேர்த்து விட வேண்டும்! இனிமேல் அவன் ஊருக்குப் போக மாட்டான்! முற்றும்....!
  20 points
 26. நம்பினால்... நம்புங்கள். யாழ்ப்பாணத்தில்... வீட்டுடன் உள்ள பெரிய காணி. அங்கு வசித்தவர்கள்... புலம் பெயர்ந்து வெவ்வேறு நாடுகளுக்கு சென்று விட. ஊரில்... இருக்கும் அவர்களின் உறவினர், அந்த வீடு, சும்மா இருக்கப் படாது என்று, பல்கலைக் கழக மாணவர்களுக்கு, சிறிய வாடகையுடன் கொடுத்து வந்ததுடன், மூன்று, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை... அந்தக் காணியையும்... சுற்றிப் பார்த்து விட்டு வருவார். எல்லாம்... நல்ல படியாக இருந்ததால், அவரும், அங்கு போவதை சிறிது குறைத்துக் கொண்டார். இப்படியிருக்க.... ஸ்ரீலங்காவில், ஒரு ஐரோ..... 235 ரூபாய் போகுது என்றவுடன், அந்தக் காணிக்கு... இப்ப ஒரு, சுற்று மதிலை கட்டுவம் என்று, ஊரில், உள்ள உறவினருக்கு... சொல்ல, அவரும், நல்ல விசயம். உடனே செய்வம் என்று, ஆட்களைப் பிடித்து, நல்ல நாள் ஒன்றில்... வேலையை ஆரம்பித்து, மதில் கட்ட... வேலியை வெட்டி, அத்திவாரம் கிண்டும் போது, அயல் காணியில் இருந்து... ஒரு குழாய், குறுக்கே வந்து நிற்கிறது. அவரும்... அதைப் பார்த்து, திகைத்துப் போய்... "தொல் பொருள் ஆராய்ச்சி திணைக்களத்துக்கு", அறிவிக்க வேண்டிய... விசயம் போலுள்ளது , என்று குழம்பி நிற்க... பக்கத்து காணிக்காரன், தனது காணியில்.. "கக்கூசை" கட்டி விட்டு, பராமரிப்பு அற்று இருந்த, அயல் வீட்டு காணியில்... குழாயை நீட்டி... ஆழமாக "கக்கூஸ்" குழியை, தோண்டி.. தனது, அன்றாட... மலசல கடன்களை, சிறப்பாக செய்து கொண்டிருந்ததை... காலம் கடந்து அறிந்தார். இது... என்ன கோதாரியாய் கிடக்கு, "போனது... போனது தான்", அதனை திருப்பி... அவனது காணிக்குள், தள்ள முடியாது. இதுக்கு.... வக்கீல் வைத்து, நீதிமன்றத்துக்குப் போனால்... தீர்ப்பு வர, பத்து வருசம் எடுக்குமே, என்று விட்டு... யாழ். மாநகரசபைக்குப் போய்... நடந்த விடயத்தை சொல்ல, அவர்கள்... அந்த விடயத்தை, தமது, அதிகாரத்துக்கு உட்பட்டு... உடனே... தீர்த்து, வைத்து விட்டார்கள்.
  20 points
 27. 1960களின் கடைசியில் யாழ் இந்துவில் இருந்து வெளியே தலைகாட்ட தொடங்கிய நேரம். முதலாவது பாடம் முடிந்ததும் ஆசிரியர் வெளியேற ஓரிரு நண்பர்களும் நானும் அவர் பின்னாலேயே வெளியேறிவிடுவோம். ஆரம்பத்தில் ஒரு பாடம் இரண்டு பாடமாக தொடங்கி நாளடைவில் அரைநாள் முழுநாளாக மாறிவிட்டது. பாடசாலைக்கு 2 வருடமாக வாகனத்திலேயே வந்து போனேன்.அப்போது மாதம் 10 ரூபா மட்டுமே.வீட்டிலிருந்து வாகனம் வந்துபோகும் பாதை மாத்திரமே தெரியும்.வேறு பாதை தெரியாது. ஒருநாள் படம் பார்க்க போகலாமா என்று நண்பர் கேட்டார்.அவர் மனோகரா திரையரங்குக்கு அருகாமையில் வசிப்பராகையால் யாழில் கூடுதலான இடங்கள் தெரியும். சரி நண்பன் தான் கேக்கிறானே ஆனால் ரிக்கற் எவ்வளவு அதுக்கு என்ன செய்வது என்று யோசிக்க உங்களிடம் காசில்லாவிட்டால் பரவாயில்லை நாளைக்கு தாங்கோ என்றான்.நானும் மற்ற நண்பனும் கோவில் மாடு போல தலையாட்டினோம். ஒரு நண்பனின் தலமையில் பின் தொடர்கிறோம்.பெருந் தெருக்களுக்கு போகாமல் சிறிய ஒழுங்கைகள் வழியாக 10.30 க்குத் தான் படம் தொடங்கும் 10.25 க்கு போனால் சரி என்றான்.நெஞ்சு திக்குதிக்கென்று இருந்தாலும் படம் பார்க்க போகிறோமே என்று சந்தோசமும் ஏதோ சாதனையுமாக இருந்தது. நாங்களும் உள்ளுக்கு போக முதலாவது மணியும் அடிக்கிறது.படம் தொடங்கிய பின் தான் ஒரு ஆங்கிலப் படத்துக்கு வந்திருக்கிறோமே என்று.முதன்முதலாக களவாக பார்த்த படம் ஜேமஸ் பாண்ட் நடித்த கோல் பிங்கர்(Gold Finger) படம் முடிந்து பிற்பகல் முதல்பாடம் இடாப்பு கூப்பிட முதல் போக வேண்டுமே என்று ஓட்டமும் நடையுமாக போய் சேர்ந்துவிட்டோம். அன்று வீட்டுக்குப் போனால் 65 சதம் கொடுக்க வேண்டுமே எப்படி கொடுப்பது?இரவுவரை ஒரு வழியும் தெரியவில்லை. காலையில் குளித்து சாமி கும்பிடும் போது தான் ஒவ்வொரு சாமிப்படத்தின் முன்பும் சில்லரை காசுகள்.ஆகா இதைவிட்டால் வேறு வழியே கிடையாது.பொறுக்கி எடுத்து காற்சட்டை பொக்கற்றுக்குள் போட்டு கிலிங்கி சத்தம் கேக்காமல் ஒரு நுhலாலும் கட்டி கடன் கொடுத்தாயிற்று. இது தான் பள்ளியிலும் வீட்டிலும் தொடங்கிய முதல் களவு.முதல் தவறு செய்வது தான் மிகவும் கஸ்டம்.அப்புறம் அதுவே பழக்கமாயிடும். பின்னர் வின்சர் ராஜா திரையரங்குகளில் 10.30 படம்.காசில்லை அல்லது புதுப்படம் வரவில்லை என்றால் எங்காவது சும்மா சுற்றுவது. ஒருநாள் கஸ்தூரியார் வீதி வழியாக வின்சர் திரையரங்கு நோக்கி போகும் போது நிறைய நேரமிருக்கு என்று அதற்கு முதல் சந்தியில் இடதுபக்கமாக திரும்பி போனால் சிறிய வாசிகசாலை பெயர் அண்ணா அறிவகம். வாசிகசாலை சிறிதாக இருந்தாலும் நிறைய புத்தகங்கள் குறைந்த சனம்.புத்தகங்களுடன் இருந்தில் நேரம் போனதே தெரியவில்லை.படத்துக்கும் நேரம் போய்விட்டது. இதுக்குப் பின் படம் இல்லாவிட்டால் அண்ணா அறிவகம் என்றாகிவிட்டது.நாளாந்தம் போகப் போக படத்துக்கு போகாவிட்டாலும் வாசிகசாலைக்கு போய்வந்தோம். இதுவரை யாழ் பொதுசன நுhலகத்திற்குப் போனதில்லை. ஆனாலும் அண்ணா அறிவகம் மாதிரி ஒரு வாசிகசாலையை இன்னமும் காணவில்லை.அனேகமாக சுவியருக்கு இந்த வாசிகசாலையும் இடங்களும் நன்கு தெரிந்திருக்கலாம்.
  20 points
 28. கொவிட்-19 க்கு எதிரான தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நடவடிக்கைகள் உலக அரங்கில் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் வகையில்.. யாழ் கள உறவுகள் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது.. இன்னும் தடுப்பூசி போடாதவர்களுக்கு அறிவூட்டலையும் அச்ச நீக்கத்தையும் அளிக்க உதவும். உங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். எனது அனுபவம்... கடந்த வாரம்.. முன்கள உயிரியல், மருத்துவ சுகாதாரப் பணியாளர் என்ற வகையில்..எனக்கான தடுப்பூசியை இங்கிலாந்தில் ஒரு தேசிய சுகாதார சேவை மருத்துவமனையில் போட்டார்கள். Primary vaccine - முதல் தடுப்பூசி போடப்பட்டது. Pfizer - ஆர் என் ஏ தடுப்பூசியே தரப்பட்டது. உங்களுக்கு தடுப்பூசி போட முதல் ஒவ்வாமை.. மற்றும் நீண்ட நாட்பட்ட நோய்கள் மற்றும்.. சிலவகை மருந்துகளை எடுக்கிறீர்களா.. 28 நாளைக்குள் கொவிட்-19 கண்டதா.. அல்லது வேறேதும் தடுப்பூசி பெறப்பட்டதாக போன்ற கேள்விகள் கேட்கப்படும். நீங்கள் உங்களின் நிலைமைக்கு ஏற்ப உள்ளபடி உங்கள் பதிலை அளியுங்கள். தடுப்பூசி போட்டுக் கொள்ள.. உங்களின் தேசிய சுகாதார சேவை இலக்கம் (NHS number) அவசியம். அதன் பின்.. இணையவழி பதிவின் மூலம் நேரமும் திகதியும் பதியப்பட்டு.. தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போடும் போது எந்தச் சிக்கலும் இல்லை. போட்ட பின் 15 நிமிடங்கள் ஏதேனும் ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதற்காக காத்திருக்கும் அறையில் காத்திருக்கச் சொல்வார்கள். ஒவ்வாமை பிரச்சனை இல்லை என்றால்.. தரப்பட்ட தடுப்பூசி போட்டது என்பதை உறுதிப்படுத்தும் பத்திரத்தோடு பணிக்குச் சொல்ல அனுமதித்தார்கள். தடுப்பூசி போட்ட பின் உடனடியாக எந்த தாக்கமும் உணர முடியவில்லை. ஆனால் ஒரு 6 மணித்தியலாங்கள் கழித்து தடுப்பூசி போட்ட இடத்தில் நோவு ஆரம்பித்தது. அதன் பின் அன்றைய தினம் இரவு லேசான காய்ச்சல்.. மற்றும் தலையிடி. வாய் கசப்பு இருந்தது. அதற்கு எந்த மருத்துவமும் எடுக்கவில்லை. மறுநாள் காலையில்... தடுப்பூசி போட்ட கையை உயர்த்த முடியாத அளவுக்கு நோவு இருந்தது. சுடு நீர் சவர் எடுத்தேன். சிறிதளவு தலைச் சுற்றும் இருந்தது. காய்ச்சல் லேசாக நீடித்தது. இருந்தாலும் நல்ல உணவு.. மற்றும் போதிய அளவு நீர் ஆகாரங்களை எடுத்துக் கொண்ட பின் நிலைமை சீரடைந்தது. தடுப்பூசி போட்டு 3ம் நாளில் இருந்து எந்தப் பிரச்சனையும் உணரப்படவில்லை. எம்மோடு தடுப்பூசி போட்டுக் கொண்டோரில்.. எல்லாருக்கும் இருந்த பொது அறிகுறி.. ஊசி போட்ட கைப் பகுதியில் வீக்கமும் நோவும்... தான். அதுவும் 48 மணி நேரத்தில் சரியாகிவிட்டது. ஒவ்வொருவரின் உடல் நிலைக்கும் உடல் வலுமைக்கும் ஏற்ப இந்த தடுப்பூசிக்குப் பின்னான குணம் குறிகள் மாறுபடலாம். secondary vaccine (Booster)- இரண்டாம் தடுப்பூசி.. இது தற்போதைய நடமுறையில்.. முதல் தடுப்பூசி எடுத்து 12 வாரங்களில் போடப்படும். அதற்கான முன்பதிவை முதல் தடுப்பூசி எடுத்ததும் அல்லது எடுக்க முன்பதிவு செய்ததும் மேற்கொள்ள முடியும். இதேபோல்.. உங்கள் அனுபவங்களையும் பகிருங்கள்.. நன்றி.
  19 points
 29. நான் பார்த்த ஒரு விசர் வேலையாலை உங்களை எல்லாம் தேட வைச்சிட்டன். பார்க்க கவலையாக இருக்கின்றது. தேடிய உறவுகளுக்கு,சொந்தங்களுக்கு கோடானு கோடி நன்றிகள். சிறித்தம்பி நீங்கள் தொலைபேசியில் என்னை தேடிய எண்ணிக்கையை பார்க்கும் போது கண்கள் குளமாகின்றது. எனது இடத்தில் வெள்ளம் இல்லை. ஆனால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட எனது சொந்தங்களை எனது வீட்டுக்கு கூட்டி வரப்போய் ஆமி/பொலிசிட்டை அடி வாங்காத குறையாய் வந்து இருக்கிறன். அவரசத்திலை ரெலிபோனை வேறை இடத்திலை விட்டுட்டு போனதால வந்த குளறுபடி.
  19 points
 30. ஊர் வம்பும், கைபேசியும்..! ********************* அந்தக்காலம்.. நல்லதண்ணிக் கிணத்தில நாலுபேர் கூடுமிடத்தில பக்கத்து வீட்டு பழசுகள்-2 பவ்வியமாய் வந்தாலே குலநடுங்கி போகுமாம் குடும்பங்கள் எல்லாம். மூல வீட்டுப் பெட்ட முளங்காலுக்கு மேல போடுது சட்ட ஓல வீட்டுப் பொடியன் ஒருத்தியோட ஓடிட்டான். வேலைக்கு அவன் போக-வீட்ட வேறொருவன் நிக்கிறான் காலக் கொடுமையென கதிராச்சி முடிக்க முன்ன.. குப்பத்தொட்டியில ஒரு குழந்த கிடந்தது-அது பக்கத்து வீட்டு பணக்காரச் சமாச்சாரம். எண்டு தொடங்கி எல்லா வரலாறும் சொண்ட நெளிச்சு சொல்லி முடிக்குமாம் மற்றது.. கடுகளவு உண்மையை மடுவளவு பெரிதாக்கி வதந்திய பரப்பிவிட்டு வாயமூடு நமக்கேன்-ஊர் வம்பு என்று சொல்ல.. வந்த சனமெல்லாம் வாயும் காதும் வைத்து சொந்தங்களுக்குள்ளே சொறிநாயாய் கடிபட்டு வெட்டுக்குத்தில போய்-ஊரே வெடிச்சு பிளந்து உண்மை பொய் தெரியாமல் ஓராயிரம் பிரச்சனைகள். கலியாணக்குளப்பமும் கருமாரியும்-வதந்தி கதை பேச்சால் நடந்த அந்தகாலம். இன்றும் வேறு வடிவில வீட்டுக்குள்ள திரியுதாம் எச்சரிக்கை.. கையில இருக்கிற கை பேசியை நம்பிறதால் பொய் வதந்தியெல்லாம் பொட்டளமாய் கொட்டி குடுப்பத்தை குலைத்து கொடுமை நடக்கிறது. கணவனுக்கு போண் வந்தால் மனைவிக்கு தூக்கமில்லை மனைவிக்கு மெசேச் வந்தால் கணவனுக்கு வாழ்க்கையில்லை. உள்ளத்து தூய்மையில்லா உணர்வு எமக்கிருந்தால் கள்ளப் போண் வருகுதென்று கணவன் மனைவிக்கே கை பேசி மூட்டி விட்டு-பல கலவரங்கள் அது பார்க்கும். பிள்ளைகளை வழி நடத்த முதலில்.. பெற்ரோரே முடிவெடுங்கள் இல்லையேல் ஒவ்வொரு மூலையாய் உங்களைப் போல் பிள்ளைகளும். குரோதம் தவிர்த்து குடும்பத்துக்குள்ளே திறந்த மனதுடன் திறப்பின்றிப் “போணை” அனைவரும் பார்க்க அனுமதித்தாலே வதந்திகள் பயப்படும் வாழ்வே ஒளி பெறும். அன்புடன் -பசுவூர்க்கோபி- 07.03.2021
  19 points
 31. உலகம் பூராவும் வயதானவர்களையும் குழந்தைகளையும் தாக்கும் முக்கியமான நோய் தாக்கங்களில் ஒன்றாக செப்சிஸும் (Sepsis) மாறி வருகிறது.. செப்சிஸ் என்பது நுண்ணுயிர் நோய் தொற்றும் அதற்கு எதிரான உடலின் வினைத்திறனாற்றலும்.. மோதிக்கொள்ளும் போது.. குறிப்பாக உடலின் நோய் எதிர்ப்பு தன்மை குறைவடையும் வேளையில்..உடல் பகுதி பகுதியாக செயலிழந்து இறப்பு ஏற்படுகிறது. செப்சிஸ் காரணமாக ஒருவர் சில மணி நேரத்தில் இருந்து சில வாரங்களுக்குள் இறப்பை சந்திக்கலாம். அதிதீவிர சிகிச்சையும் உடலின் நோய் எதிர்ப்பு வலிமையும் இதில் இருந்து மீள உதவலாம். குறிப்பாக பிறந்த குழந்தைகளிலும்.. வயதானவர்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால்.. உடலில் உள்ள சாதாரண பக்ரீரியாக்கள் கூட உடலின் பிறபகுதிகளுக்குள் செல்வதால் கூட இந்த நிலை ஏற்படலாம். குறிப்பாக குடலில் உள்ள பக்ரீரியாக்கள்.. இரத்தத்தை அடைவதால் கூட.. அவை உடலால் அழிக்கப்படாது பல்கிப் பெருகி உடலங்கங்களை பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்தலாம். குறிப்பாக வயதானவர்களில்.. (60 வயதினருக்கு மேல்) நோய் எதிர்ப்பு சக்தி குன்றியவர்கள்.. நாட்பட்ட நோய் கண்டவர்கள்.. தொடர்ந்து படுக்கையில் இருக்கும் வயதானவர்கள்.. நடமாட்டம்.. உடற்பயிற்சி அற்ற நிலையில் வாழ வேண்டி உள்ள வயதானவர்கள்.. நீரிழிவு நோய் கண்டவர்கள்.. தைரொயிட் உட்பட்ட ஹார்மோன் பிரச்சனை உள்ளவர்கள்.. உடற்தசையிழப்பை கண்டு வரும் நோயாளிகள்.. விற்றமின் டி குறைபாடுள்ளவர்கள்.. போதிய உணவின்மை.. போதிய ஊட்டச்சத்தின்மை.. வைத்தியக் கவனிப்பு சரிவரயின்மை.. போதிய சுகாதார வசதிகள் இன்மை.. தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வாழுதல்.. போதிய வைத்திய பரிசோதனைகள் இன்மை.. இப்படி பல காரணிகள் தனித்தோ கூட்டாகவோ.. இந்த செப்ஸிஸ் உருவாக வாய்ப்பளிக்கின்றன. செப்சிஸ் தாக்கத்தின் பொதுவான அறிகுறிகளாவன.. 1.காய்ச்சல்/ குளிரும் காய்ச்சலும் 2. உடற்சோர்வு 3.சிறுநீர் உற்பத்தி குறைவு 4.மயக்க நிலை 5. அதிகரித்த இதயத்துடிப்பு 6. வாந்தி மற்றும் பேதி 7. தோலின் நிறம் வெளிர்ப்படைதல் 8. குறை குருதி அழுத்தம் சுவாசத்தொற்று எனில் சளி.. மூச்சு விடுவதில் சிரமம்.. மூச்சடைப்பு இவையும் சேர்ந்து கொள்ளும்.. அம்மாவின் விடயத்தில்.. அவருக்கு தைரொயிட் பிரச்சனை இருந்தது உண்டு. நடமாட்டம் வீட்டுக்குள் மையப்படுத்தி தான் இருந்தது. ஆனால் தொடர் வைத்திய கண்காணிப்பு.. மற்றும் எல்லா அடிப்படை வசதிகளும் கொடுக்கப்பட்டே வந்தன. அப்போ எப்படி செப்ஸிஸ் வந்தது.. எப்படி அதனை வைத்தியர் கண்டுபிடிக்கத் தவறினார்..??! இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன் தோல் சம்பந்தப்பட்ட சின்னப் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதன் விளைவாக.. காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. ஆனால்.. இது தொடர்பாக குடும்ப வைத்தியர் வந்து காய்ச்சலுக்கு மருந்து கொடுத்துச் சென்றிருக்கிறார்.. ஆனால்.. குருதி பரிசோதனையோ.. சிறுநீர் பரிசோதனையோ செய்யவில்லை. சில நாட்களின் பின் உடல்நிலை தீவிரமாக பாதிப்பட்ட நிலையில்.. அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் உயிரைக் காக்க முடியவில்லை. செப்சிஸ் (Sepsis).. செப்சிஸ் தாக்கம்/ அதிர்சி (Septic shock) என்பது.. குறிப்பாக.. சுவாச பாதிப்பை அதிகம் ஏற்படுத்தும்.. அதற்கு அடுத்த படியாக.. சிறுநீரகத்தை பாதிக்கும். அதன் தொடர்ச்சியாக இதயத்தாக்கு ஏற்படும்.. மூளை செயலிழப்பு ஏற்படும். இதில் குருதி நஞ்சாதல்.. என்பது சிறுநீரக பாதிப்பின் விளைவாக ஏற்படுவதோடு.. சிறுநீர் தொற்று.. சிறுநீர் உற்பத்தி அளவு குறைவு என்பன செப்சிஸ் தாக்க விளைவுகளாகின்றன. குறிப்பாக மருந்துகளுக்கு எதிர்ப்புக்காட்டும் பக்ரீரியா வகை நுண்ணங்கள் உடலில் தொற்றாகி பெருகுவதால்.. சரியான பகுப்பாய்வுகள் செய்யப்பட்டால் அன்றி சரியான மருந்துகளை கொடுக்க வைத்தியரால் முடியாது. அந்த வகையில்.. குருதிப் பரிசோதனை மற்றும் Blood culture மற்றும்.. சிறுநீர் பரிசோதனை மற்றும் சிறுநீர் மாதிரியில் இருந்தான Urine culture என்பன செய்யப்படுதல்.. செப்சிஸ் தாக்கத்தினை இலகுவாக ஆரம்பத்தில் கண்டறிந்து கொள்ளலாம். ஆனால்.. இலங்கையில் வைத்தியர்கள்.. Blood culture மற்றும் Urine culture செய்வதை அரிதாகவே காண முடிகிறது. அதிலும் High Risk நோயாளிகளுக்கு கூட இவற்றை பரிந்துரைப்பதில்லை. அம்மா விடயத்தில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட வேளையில்.. குருதிப் பரிசோதனை.. சிறுநீர் பரிசோதனையுடன் Urine culture மற்றும் Blood culture செய்யப்பட்டு தொற்றுக்கான நோய்க்காரணி கண்டறியப்பட்டு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பின் அவரின் வாழ்நாளை நிச்சயம் அதிகரித்திருக்க முடியும். அதைவிடுத்து.. அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்துச் சென்ற பின்.. பரிசோதனைகளையும்.. கண்காணிப்பையும் செய்வதால் மட்டும் High Risk நோயாளிகளை பாதுகாக்கலாம் என்பது சரியான வழிமுறையாக தெரியவில்லை. உலகில் எங்கு என்றாலும் செப்சிஸ் மரணங்கள் வயதானவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில்.. இந்த அனுபவப் பகிர்வு உங்களுக்கும் உதவலாம்.. என்பதால் பகிர்ந்து கொள்கிறோம். தீவிரமான உடற்தொற்று கண்டால்.. நிச்சயமாக உங்கள் வைத்தியர்.. குருதி.. சிறுநீர் பரிசோதனைகளுக்கு மேலதிகமாக.. Urine culture செய்யச் சொல்லி கோருவது.. தேவை எனின் Blood culture செய்யச் சொல்லிக் கோருவது சரியான நோயாக்கியை கண்டறியவும் சரியான மருந்துகளை கன்டறிந்து.. தெரிவு செய்து வழங்கவும்.. உதவும். இது நோயாளிகளின் சடுதியான தேவையற்ற மரணங்களை கட்டுப்படுத்த உதவும். உசாத்துணை: https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3956061/ (யாழிற்கான சுய ஆக்கம்)
  18 points
 32. வேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள். locakdown காலத்தில் முடங்கி இருக்கும் போது, சும்மா வெட்டியாக பொழுதை போக்காமல், உங்கள் skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள். இந்த ஜனவரி மாதம், நிலைமை கொரோனாவுக்குள் சிக்காமல் இருந்திருந்தால், போரிஸ் ஜான்சன் IT skills வேலைகளுக்கு தெரசா மே கொண்டு வந்திருந்த விசா தடைகளை நீக்கி இருப்பார். இந்திய IT காரர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். கொரோன தடை போட்டுவிட்டது. அமேரிக்காவில் IT காரர்களுக்கான H1B விசாவுக்கான புதிய வழிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளன. இந்திய IT காரர்கள் எதிர்பார்ப்பது போல, பைடேன் பெரிய மாறுதல்களை செய்ய மாட்டார். காரணம் இந்த முடிவுகள் ஒரு ஆய்வுக்குழுவினால் எடுக்கப்பட்டது. ஆகவே, இந்த அருமையான சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ளுங்கள். கனேடிய, பிரிட்டிஷ் கடவுசீட்டு வைத்திருக்கும் இந்தியர்கள், மிக சரியாக இந்த சந்தர்ப்பங்களை பயன்படுத்துகிறார்கள். இன்னும் முக்கியமான விடயம். ஒன்லைன் வேலைகள் மூலமாக, ஒருவர், விசா, இம்மிகிரேஷன் எல்லாம் தாண்டி, பிறிதொரு நாட்டில் வேலை செய்யக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது என்பதை கவனியுங்கள். இன்று Aamazon Web Services (AWS), Azure கிளவுட் தொடர்பான வேலைகள் சும்மா துள்ளி ஆடுது. ஒரு நாளுக்கு, £500 முதல் £1,000 வரை போகிறது. சும்மா, வெட்டி பொழுதினை போகாமல், உருப்படியாக எதையாவது செய்வோமா? Software Engineer/Developer - Devops - Cloud - AWS Location - Remote Rate - £600 per Day Our client, a leading bank is looking for a talented Software Engineer/Developer, who has a strong passion for cloud, Devops and AWS. They are a focused team of exceptionally talented engineers, developers and designers committed to helping deliver value through use of latest technologies and ideas including blockchain, AI, Chatbots, Big Data etc. and developing our team through continued learning and challenging the ways of working to accelerate innovation trough agility, design thinking and hypothesis driven development. Technical Solutions Architect - Urgent! Remote - £650 p/Day ContractPosted by: Cloud Consulting Posted: Wednesday, 20 January 2021 IT என்றவுடன் இந்தியர்கள் என்று நினைப்பதும் தவறு. தென் ஆப்பிரிக்கர்கள் முதல், சிம்பாபே வரை உள்ளே வருகின்றனர். அண்மையில் நைஜீரியா காரர்கள் அதிகமாக வருகின்றனர். நம்மவர்களோ, நியாப்பிளப்புகளிலும், சப்பைக்கட்டுதல்களிலும் பொழுதை போக்குகின்றனர். முக்கியமாக, எம்மவர்களின் ஒரே தொழில் தரும், கணக்கியல்துறை, மென்பொருள் வளர்ச்சியினால் பெரும் ஆபத்தினுள் சிக்கி உள்ளது. கேட்டால், நான் டபிள் அக்கௌன்டன்ட், பீலா வேறு. வருமுன் காப்போன் ஆக இருங்கள்.
  18 points
 33. நான் என்ன மதம்? நான் படுக்கும் விதம் அகமது நான் உண்ணும் மாமிசம் கலால் நான் கை கழுவுவது ஐந்து தரம் நான் முகம் கழுவுவது ஐந்து தரம் நான் கடவுளை புகழ்வது என்னேரமும் நான் உண்ணும் உப்பு கோசர் நான் தவிர்க்கும் உணவு பன்றி நான் சனியில் தவிர்ப்பது தொழில்நுட்பம் நான் இழவு வீட்டில் இருப்பது சிவா நான் ஒப்புக்கொள்வேன் எல்லா பாவங்களையும் நான் பாவிக்கும் பெயர் யேசுவின் நான் படித்த பள்ளி வேதம் நான் படித்த புத்தகம் பைபிள் நான் கொண்டாடும் பண்டிகை நத்தார் நான் முட்டை தேடுவது ஈஸ்டருக்கு நான் விரதம் இருப்பது போயா நான் தவிர்க்க முற்படுவது தீயோரை நான் மனதை வைத்திருப்பது சாந்தியாக நான் இருப்பதை இடுவது பிச்சையாக நான் நேசிப்பது எல்லா உயிர்களையும் நான் விதைப்பது மூன்று சகோதரிகள் நான் ஆடுவது பூர்வீக பாவ்வாவ் நான் பூசிப்பது சுற்றியிருக்கும் இயற்கையை நான் செய்வது பூர்வீகத்திற்கு தொண்டு நான் படிப்பது பூர்வீகங்களின் பாசை நான் பிறந்தது சைவ குடும்பத்தில் நான் அணிவது நீறு சந்தனம் நான் விரதம் இருப்பது திவசத்திற்கு நான் செல்வது சைவ கோவில்களுக்கு நான் கும்பிடும் குலத்தெய்வம் அம்மன் நான் என்ன மதம்?
  18 points
 34. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2021 இறுதி நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 வாதவூரான் 100 2 முதல்வன் 94 3 ஏராளன் 90 4 எப்போதும் தமிழன் 90 5 நந்தன் 87 6 நீர்வேலியான் 85 7 ரதி 85 8 பிரபா சிதம்பரநாதன் 85 9 நுணாவிலான் 84 10 கறுப்பி 83 11 வாத்தியார் 82 12 கல்யாணி 81 13 மறுத்தான் 80 14 சுவைப்பிரியன் 78 15 கிருபன் 78 16 தமிழ் சிறி 77 17 அஹஸ்தியன் 74 18 ஈழப்பிரியன் 73 19 கோஷான் சே 73 20 குமாரசாமி 70 21 பையன்26 68 22 சுவி 64 உலகக் கிண்ணத் தொடரில் சாதனை படைக்கும் பல அணிகளையும் வீரர்களையும் சரியாகக் கணித்தும், 100 புள்ளிகளை எடுத்தும், தொடர்ந்து பல நாட்கள் முன்னணியில் நின்ற @நந்தன் மற்றும் @முதல்வன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2021 இல் வெற்றியைத் தட்டிச் செல்லும் @வாதவூரான் க்கு வாழ்த்துக்கள்! போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றிகள்.
  17 points
 35. எமது ஊரில் பலருக்கும் தெரிந்த எல்லோருக்கும் உதவியாக இருந்த அதிலும் எமது பெற்றோருக்கு நற்பணிகள் பலவும் செய்த ஒருவரும் அவரது குடும்பத்தினரும் கடைசி காலத்தில் சாப்பாட்டுக்கு கஷ்டப்படாமல் வாழட்டும் என்பதற்காக அவர்களுக்கு செலவுக்கு பணத்தை அனுப்புவதை விடுத்து அவர்களின் நிலை அறிந்து அவர்களின் விருப்பு முயற்சி ஆளுமையை கேட்டு கண்டறிந்து உதவுவோம் என்ற நிலைப்பாட்டுக்கு ஏற்ப அங்குள்ள எங்கள் பெரியப்பாவின் பேரன் நேரில் சென்று அவர்கள் அனைவரையும் ஒன்று கூடி பேசி அவர்கள் தமது கடைசி மகளின் வீட்டில் தான் (வன்னியில்) இன்று வரை வாழ்ந்து வருகின்றனர். எனவே அவர்களது ஒருமித்த வேண்டுகோளுக்கு இணங்க அவர்களது கடைசி மகளது வீட்டிலேயே அவர்களது நீண்ட நாள் கனவான கோழிப்பண்ணை ஒன்றை உருவாக்கி தாருங்கள் என்று ஒருமித்த குரலில் கேட்டதற்கு இணங்க அம்மாவின் முதலாவது துவசமான இன்று கோழிக்கோடு. - ‪140 000‬ ரூபாய்கள் கோழிகள் - ‪100 000‬ ரூபாய்கள் ‪60 - 6‬ மாதக்கோழிகள் 40 - முட்டை இடும் கோழிகள் 10 - சேவல்கள் குழாய்கிணறு - ‪110 000‬ ரூபாய்கள் மொத்தம் = ‪350 000‬ ரூபாய்கள் (அத்துடன் 3 மாதத்துக்கு தேவையான கோழிகளுக்கான உணவு, மருந்துகள் மற்றும் உணவு, தண்ணீர் கொடுக்க தேவையான பாத்திரங்களும் வாங்கி கொடுக்க பட்டுள்ளது) அத்துடன் அம்மாவின் முதலாவது துவசமான இன்று அந்த பகுதியில் வாழும் 100 பேருக்கு அம்மாவின் நினைவாக சாப்பாடு கொடுக்க போதுமான அரிசி, அனைத்து மரக்கறிகள் மற்றும் தேவையான பொருட்கள் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. அம்மாவின் நினைவாக அம்மாவின் பிள்ளைகள் அனைவரும் ஒன்றிணைந்து பங்களித்து இது போன்ற ஒரு குடும்பத்துக்கு வாழ்வின் இறுதிக்காலத்தில் தாமே உழைத்து மகிழ்வாக வாழ உதவ முடிந்ததில் மிகவும் மன மகிழ்வடைகின்றோம். https://photos.app.goo.gl/zRtFeueuLGfzmn5x6 தகவல் : விசுகு
  17 points
 36. நான் ஜிம்மாவுக்கு போய் வருகிறன் கடை பூட்டித்தான் இருக்கிறது நீ வெளியில் இரு. சரி காக்கா. அந்த மனுசன் கடவுளுக்கு மிக பயந்தவர் 5 வேளையும் தொழுது கொண்டே இருப்பார். நான் சிறையிலிருந்து வந்து பல இடங்களில் வேலை தேடினேன் கிடைக்கவில்லை யாரும் கொடுப்பதாகவும் இல்லை போராளிகளுக்கு வேலை கொடுத்தால் எங்களுக்கு பிரச்சினை வரும் என்று சொன்ன கூட்டங்களுக்காக போராடினோமே என நினைக்கும் போது மனத்துக்குள் எனக்கு நானே காறி உமிழ்ந்து கொள்கிறேன். சிறையிலிருந்த‌ சிங்களவராகட்டும் , சிறைக்காவலராகட்டும் , அடிமை என நினைத்தாலும் மனிதராக பார்த்தார்கள் தமிழர்களோ மனிதராக பார்க்காமல் விரோதியாகவும் , துரோகியாவுமே பார்த்தார்கள் இதில் தமிழர்களின் பழக்கம் ஒன்று இருக்கிறது எப்பவும் வெளித்தோற்றத்தை வைத்து ஒருவரை கணித்து விடுவது, அல்லது இப்படித்தான் நடந்து இருக்குமெனவும் எண்னி கணித்தும் விடுவார்கள் இதுதான் இன்றுவரைக்கும் தொடர்கிறது என நினைத்து. வெளியில் இருந்த ஒரு உடுப்பு மூடையில் சாய நித்திரை வருகிறது எப்போதும் வேலை நேரத்திலே நித்திரை வரும் .நித்திரைக்கு போனால் நித்திரை வரவே வராது எனக்கு. பலர் ஏன் மதம் மாறுகிறார்கள் இனத்தை விட்டு தூர செல்கிரார்கள் என மெல்ல எனக்கும் புரிய வைத்தது அந்த வேலைத்தள சம்பவங்கள் எப்போதும் கஸ்டத்தில் இருப்பவர்களை கண்டு கொள்ளாது நம்ம சமூகம் அவன் வேறு மதத்தை தளுவிக்கொண்டால் அவன் வம்சத்தை இழுத்து கழுவிதிரிவார்கள் , காவியும் திரிவார்கள். நித்திரை மெல்ல கண்ணை அரட்ட என் இருண்ட வாழ்வு கனவு வெளிச்சத்தில் நிழலாக மிதந்து வருகிறது. எடேய் சின்னவோவ்!!................ அவன காணல்ல அம்மா என்ற சத்தத்தோடு பெரியவன் வருகிறான் அவன கண்ட நீயா? பள்ளிவிட்டு வந்தான் இந்தா புத்தக பைய எறிஞ்சு போட்டு , சோத்துக்கோப்பையும் கழுவல விளையாட ஓடிட்டான் நீ வெளிய எங்கயும் போகாத எங்க தங்கச்சி? இந்தா உள்ள இருக்கா சரி ரெண்டு பேரும் வீட்டில இருங்க அவனுக்கு ரெண்டு போட்டு ஆள கூட்டுக்கொண்டு வாரன் என செல்கிறாள் பொன்னி . பொன்னி வாழ்வது படுவாங்கரையில். படுவாங்கரையென்பது மட்டக்களப்பில் சூரியன் எழும் பகுதி எழுவாங்கரையெனவும் மறையும் பகுதி படுவாங்கரையெனவும் அந்த காலத்திலிருந்து சொல் வழக்கில் வருகிறது படுவாங்கரையில் அழகிய கிராமம் தும்பங்கேணி. பொன்னியும் அவள் மூன்று பிள்ளைகளும் வாழ்ந்து வருகிறார்கள் . மூத்தவன் ( மோகன் ) சின்னவன் ( கீரன் ) புள்ள ( கீதா) தன் பிள்ளைகளை பெயர் சொல்லி அழைக்கமாட்டாள் பொன்னி மூத்தவனை மூத்தவன் எனவும் , இளையவனை சின்னவன் எனவும் பெண் பிள்ளையை புள்ள எனவும் செல்லமாக கூப்பிடுவாள். ஊரவர்களும் அப்படியே கூப்பிடுவார்கள் மூத்தவன் உயர்தரம் படிக்க, இளையவன் தரம் 10 படிக்க , பெண் புள்ள தரம் 8 படிக்கிறாள் . தகப்பனாரோ விறகு வெட்ட காடு சென்றவர் இதுவரை வீடுதிரும்பல இவர்களும் தேடாத காடு இல்லை. சின்னவனை தேடிச்சென்ற பொன்னிக்கு அவன் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தான் எடேய் இப்ப வரப்போறியா இல்ல கம்ப முறிச்சு வெளுக்கட்டுமா உனக்கு? நான் வரமாட்டன் போ போ என்றான் அவன். எடேய் நீ எங்க விளையாடுனாலும் ராவைக்கு வீட்டுக்குத்தானே வரணும் வா உனக்கு அப்ப பூச தாரன் . ஒரு வழியாக அவனும் வர எடேய் கெதியா வாடா வீட்டுக்கு விசயம் ஒன்று சொல்லுறன் என்ன சொல்லுங்கவன் ஊட்ட வா சொல்லுறன் ம் வீட்டை வந்தடைந்ததும் முதலில் வாசலில் இருந்த முருங்க கம்பை முறிச்சு நாலு அடி போட்டாள் பொன்னி அவனும் அடியாதீங்க அம்மா அடியாதீங்க அம்மா என கத்தினான் . அடேய் நாளைக்கு பொடியனுகள் ஆள் பிடிக்கப்போறாங்களாம் உங்க மாமா வந்து சொல்லிட்டு போனான். உங்கள கவனமா இருக்கட்டாம் நீ சொன்ன கேட்கமாட்டியா உங்க அப்பன தொலச்சிட்டு நான் படுற பாடு காணாத நீங்களும் போகப்போறிங்களா? அவனுகள் வேற வீட்டுக்கு ஒருவர் வந்து போராட்டத்துக்கு வாங்க என கூப்பிடுறானுகள் உங்க மாமாவ‌ அம்மம்மா காறி கொடுத்துட்டு இப்பவும் அழுது கொண்டிருக்கிறது நீங்க பார்க்கலயா? நானும் அது போல வாழ்நாள் முழுக்க அழணுமா? சொல்லு சொல்லு என கண்னைக்கசக்கினாள் பொன்னி. நீ இங்க படிக்காத கல்லடி சிவானந்தா கொஸ்டலில் படி இளையவா அண்ணா இங்க படிக்கட்டும் வீட்ட ரெண்டு பொடியனுகள் இருந்தால் விடமாட்டானுகள் எப்படியும் பிடிச்சிட்டு போயிடுவானுகள் . சொல்லுறது விளங்குதா ம்ம் அங்க உங்க அப்பாட சொந்தங்கள் எல்லாம் இருக்கு அவங்க கிட்ட போகவேணாம் போனால் எப்படியும் நாலு கத கத கதைக்கும் காது பட. நீ கொஸ்டலில இருந்து படி அப்பாவும் இல்லலெண்டால் படிக்க இடம் தருவாங்கள் நான் இங்க ஆட , மாட வச்சி இவங்களுக்கு சோறு கொடுப்பன் . உன்னை நாளைக்கு கொண்டு போய் அங்க சேர்க்கிறன் என்ன ம்ம் என்றான் இளையவன். ஆட்டம் தொடரும்
  17 points
 37. பெ ண்மை எனும் நல் மனையாள் . பெண் என்பவள் ,என் தாய்க்கு பிறகு , அவளுக்கு நிகராக, என்னையும் எல்லா விதத்திலும் கரிசனை கொள்ள வந்த தாரமானவள். என் மனைவி , எனக்கானவள் . என்னை நம்பி வந்தவள். என் உயிர் தாங்கி பத்து மாதம் சுமந்து வலி தாங்கி என் மகவை பெற்றவள் . செல்வி என வாழ்ந்தவள். திருமதியானவள். தன் பெயர் மாற்றி என் பெயர் தாங்கியவள். (ஒரு சில விதிவிலக்குண்டு ) என் பசியாற்றுபவள் என் வாரிசுகளுக்கு அம்மா . என் மகனுக்கு/மகளுக்கு , அப்பா என அறிமுகம் செய்தவள்.தாலி எனும் வேலி தாங்கி எனக்காக வாழ்பவள். தன பசி மறந்து நம் பசி போக்கியவள். உதிரத்தை பாலாக்கி உணவூட்டியவள். விலையில்லாதவள் . என் தாய்க்கு மகளாக என்தந்தைக்கு மறு மகளாக (மரு மகளாக ) என் மக்களுக்கு தாயாக வாழ்ந்தவள் . ஆண்மைக்கு உயிர் கொடுத்தவள் தனக்கு நிகராக என்னையும் மக்களையும் நேசித்தவள் சபையிலே எனக்கு கெளரவம் தந்தவள் . மக்கள் பேற்றின் மூலம் உலகை உருவாக்கியவள் . என் குடும்ப நிர்வாகி , நல்ல வழி காட்டி. தாய்மையை போற்று வோம் . சகல பெண்களுக்கும் இன்றைய தினத்தில் சமர்ப்பணம். இப்படிக்கு ஆண்மை (ஆண்மக்கள் )
  17 points
 38. வணக்கம் உறவுகளே! என் பல வருடக் கனவு இது. இன அழிப்புப் போரில் நாங்கள் பட்ட இன்னல்களை எங்கள் இளந்தலைமுறைக்குச் சொல்ல ஏதாவது வழி உண்டா என்று தேடிய போது எனக்குத் தெரிந்த "கதைகூறல்" மொழியில் "எறிகணை" நாவலைப் படைத்துள்ளேன். இந்த இணைப்பில் சென்று நீங்கள் புத்தகத்தை எளிதாக வாங்க முடியும்! ஈழத்தில் உள்ள நண்பர்கள் பலர் கேட்டவாறு உள்ளார்கள். பொது முடக்கம் முடிந்ததும் விரைவில் அனுப்பி வைப்பதற்கான சூழ்நிலைகளைப் எதிர்பார்த்தவாறு உள்ளோம். வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் வகை: நாவல் ஆசிரியர் : தியா விலை.ரூ.180 "கொண்டாட்டமும் பண்பாடும் என வாழ்ந்த ஓர் ஈழக் குடும்பத்தைத் துரத்துகிறது ‘எறிகணை’! வழிநெடுகிலும் சிந்தப்படுகிற குருதியும், தொலைக்கப்படுகிற உயிர்களும் அதிர்வை உண்டு பண்ணுகின்றன. ஈழப் போர் தொடங்கி முடியும் காலம் முழுவதும் பரவிச் செல்கிற இந்தக் கதை, போரின் நெடுக்குவெட்டு முகத்தையும் காண்பிக்கிறது. எளிய மொழியில், எளிய கதையாக உருப்பெற்றுள்ள இந்த நாவல் ஏற்படுத்துகிற தாக்கமோ உக்கிரமானது. ஈழ நிலத்தில் இனஅழிப்புப் போரினால் ‘சனம் பட்ட கதை’யைச் சொல்வதில், ‘எறிகணை’ முக்கியத்துவம் வாய்ந்த நாவலாக நிலைத்திருக்கும்." -தீபச்செல்வன்- https://play.google.com/store/apps/details?id=com.bookpalace
  16 points
 39. 2 குழாய்கிணறுகளின் வேலைகளும் பூர்த்தி செய்யப்பட்டன. அம்மாவின் திவசம் மற்றும் பெரியக்காவின் 75வது பிறந்தநாள் சார்ந்த உதவிகளின் படி 2 குழாய்க்கிணறுகளை செய்வதற்கான காலம் ஆனி என கணிக்கப்பட்டது. அதாவது இதற்கு முன்னர் தண்ணீருக்கான துவாரம் போடும் போது மழைத்தண்ணீர் மேலே நிற்பதால் தண்ணீரை தொடர்ந்து பெற முடியாது போய் விடும் என்பதால் தண்ணீர் கீழிறங்கும்வரை பொறுக்கவேண்டியதாயிற்று. ஆனால் அதற்கிடையில் கொரோனா காரணமாக உள்ளிருப்பு அறிவிக்கப்பட்டதால் மேலும் தள்ளிப்போடவேண்டி வந்து விட்டது. ஆனாலும் இனியும் தாமதித்தால் மீண்டும் மழை வந்தால் மீண்டும் ஒரு வருடம் தோண்டமுடியாது போய் விடும் என்பதால் கொரோனா உள்ளிருப்பு காலத்தில் ஏற்பட்ட விலையேற்றத்தையும் பாராமல் வேலைகளை முடிக்க முயற்சிக்கும்படி நான்கேட்டுக்கொண்டதற்கு இணங்க எமது ஏற்கனவே கணிப்பிடப்பட்ட 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாவிலிருந்து 1 லட்சத்து 56ஆயிரம் ரூபாயாக ஒரு குழாய்க்கிணற்றுக்கான செலவு செய்யப்பட்டு 120 அடி ஆளத்துக்கு குழி தோண்டப்பட்டு 2 குழாய்கிணறுகளும் பூர்த்தி செய்யப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது. இந்த 2 குழாய்க்கிணறுகளாலும் அந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள 10 குடும்பங்களுக்கு மேல் பயன் பெறமுடியும் என்று அறிந்தபோது மட்டற்ற மகிழ்ச்சி. அத்துடன் இங்கிருந்து ஒரு பார்சலும் அனுப்பியிருந்தேன் அதுவும் கிடைக்கப்பெற்றுள்ளது. 200 கோழிகள் 20 சேவல்கள். 2 குழாய்க்கிணறுகள் மற்றும் பணம் பொருட்கள் என கிட்டத்தட்ட 1 மில்லியன் ரூபாய்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது மட்டுமன்றி அதை அது சம்பந்தமாக படித்து பட்டம் பெற்றவர்களைக்கொண்டு திறமாக நிர்மானித்து உடனடியான பலன்களை அவர்கள் பெறும் வகையில் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. (குழாய்க்கிணறுக்கான இன்னும் சில பூச்சு வேலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.) (விீடியோக்களை இணைக்கமுடியவில்லை. அதனால் படங்கள் மட்டும்) நன்றி
  16 points
 40. இன்று எனது பெரியக்காவின் அதாவது எனது இரண்டாவது அம்மாவின் 75 வது பிறந்தநாள். அவர் கர்ணனைப்போன்றவர் எவர் இரங்கி எதைக்கேட்டாலும் கொடுத்து உதவும் மனம் கொண்டவர். இப்படியான மனம் கொண்டவர்களை இன்று பார்ப்பதே அருகிவரும் நிலையில்..... எமது அம்மாவின் துவசத்தன்று நாம் கோழிப்பண்ணை ஒன்றை உருவாக்கி கொடுத்தவரின் மகன் தனது மனைவியை இழந்து தாயாரில்லாத 6 பிள்ளைகளுடன் (4 பெண் பிள்ளைகள் 2 ஆண்பிள்ளைகள்) வாழ்வாதாரத்துக்கு சிரமப்படுவதாக கூறி அவர்களது வீட்டிலேயே கோழிப்பண்ணை ஒன்றை உருவாக்கி தாருங்கள் என்று ஒருமித்த குரலில் உதவி கேட்டதை அக்காவுடன் நான் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது தம்பி எனது 75வது பிறந்தநாள் வருகின்ற ஆனி 16இல் வருகிறது. அதனை நாம் கொண்டாட வேண்டாம். இந்த குடும்பத்துக்கு உதவுவோம் என்றவர் உடனேயே அதற்கு தேவையான பணத்துக்கும் ஏற்பாடு செய்தார் தனது பிறந்தநாளை எளிமையாக்கி தனது பிறந்தநாளன்று ஒரு குடும்பத்துக்கு வழி காட்டணும் என்ற அவரது விருப்பப்படி அவருக்கு வரும் மிகச்சிறிய பென்சன் பணத்தில் சிறுக சிறுக சேமித்து............... பெரியக்காவின் 75வது பிறந்தநாளான இன்று .... கோழிக்கோடு. கோழிகள் (110) குழாய்கிணறு என மொத்தம் = ‪350 000‬ ரூபாய்கள் முதலீடு செய்யப்பட்டு ஒரு கோழிப்பண்ணையாக அவரது பிறந்த நாளான இன்று அவர்களுக்கு உடனடியாகவே வருமானம் தரும் வகையில் உருவாக்கி கொடுக்கப்பட்டள்ளது அத்துடன் 3 மாதத்துக்கு தேவையான கோழிகளுக்கான உணவு, மருந்துகள் மற்றும் உணவு, தண்ணீர் கொடுக்க தேவையான பாத்திரங்களும் வாங்கி கொடுக்கப் பட்டுள்ளது. பெரியக்காவின் 75வது பிறந்தநாளான இன்று அவர் செய்த இது போன்ற ஒரு குடும்பத்துக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கி தந்து மகிழ்வாக வாழவும் அந்த 6 பிள்ளைகளும் தமது படிப்பு மற்றும் இதர தேவைகளுக்காக எவரிடமும் கையேந்தாது தாமே உழைத்து வாழ உதவியதை இங்கு பதிவிடுவதுடன் அக்கா இன்னும் பலகாலம் நோய் நொடியின்றி வாழ அவரது கிராஞ்சியம்பதி முருகனை வேண்டுகின்றோம் https://i.postimg.cc/T11nHyZV/IMG-20210413-WA0010.jpg https://i.postimg.cc/90ky3mhv/IMG-20210413-WA0000.jpg https://i.postimg.cc/MGYR6bw0/IMG-20210413-WA0008.jpg https://i.postimg.cc/MGYR6bw0/IMG-20210413-WA0008.jpg https://i.postimg.cc/bvLDcy03/IMG-20210413-WA0017.jpg https://i.postimg.cc/DfRcY6wm/IMG-20210413-WA0013.jpg https://i.postimg.cc/d1kNSSGm/IMG-20210615-123618.jpg
  16 points
 41. ஒரு டாக்குத்தரின் பெரு விளையாடல் திருட்டு என்பது சிலருக்கு ஒரு மன வியாதி. ஒரு சிறிய பொருளாயினும், அதனை திருடிக்கொண்டு சேர்ப்பது ஒரு திரில். அந்த திரிலுக்காகவே தமது கல்வி, வேலை அனைத்தையுமே இழந்து நாசமாகும் பலரையும் காண்போம். இதனை மருத்துவ உலகு அங்கீகரித்தாலும், அதில் உள்ள நடைமுறை சிக்கல் காரணமாக, அதனை சட்டம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்று நினைக்கிறேன். சரி விசயத்துக்கு வருவோம். ஒரு பிபிசி நிகழ்ச்சி பார்த்தேன். பாலியல் பலாத்கார வழக்கு. ஒரு பெண். அவரது வீட்டில் ஒரு சிறிய பிரச்சனை. அதனை திருத்த ஆள் வேண்டும். சூப்பர்மார்கெட் நோட்டீஸ் போர்ட்டில் ஒரு விளம்பரம். அந்த வகை வேலைகளை சிறப்பாக செய்யும் ஒருவர் குறித்து தொலைபேசி இலக்கத்துடன் இருந்தது. பேசினார். தனது பெயர் மக்தி அஹமத் என்றும் தான் ஒரு பதிவு செய்யப்பட்ட மருத்துவர் என்றும், ஒரு பரீட்சைக்கு தயாராவதால், சம்பளம் இல்லாத லீவு எடுத்து உள்ளதாகவும், இது தனது பொழுது பொக்கு என்பதால், கைச்செலவுக்காக செய்வதாகவும் சொன்னார். அவரது பேச்சு, மனேர்ஸ் அவர் உண்மையிலேயே படித்தவர் என்பதை சொல்ல, வீட்டு முகவரியும் கொடுத்தார் அவர். வந்தவர் சிறப்பாக அந்த பிரச்சனையை தீர்த்துக் கொடுத்தார். அதே வேளை அந்த இளம் பெண் தனியே இருப்பதனையும் உறுதி செய்து கொண்டார். போகும் போது, நாளை இந்த பக்கம் வருவேன், இதனை மீண்டும் செக் பண்ணி, எல்லாம் ஓகேயா என்று பார்க்கிறேன், நீ இருப்பாயா என்று கேட்க, அவரும், ஆமாம் இருப்பேன். எங்கேயும் போகமாட்டேன், என்றார் வரப்போகும் பெரும் வில்லங்கத்தினை உணராமல். அடுத்த நாள் வந்தார். செக் பண்ணினார். பாத்ரூம் போகலாமா என்றார். மேலே இருக்கிறது என்றார் பெண். போனார். வேறு யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி இருப்பார் போலும். இதைப் பார்த்தீர்களா, பெண்ணை மேலே அழைத்தார். பெண்ணும் சென்றார். 24 மணி நேரம், பெண்ணை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து, பல முறை பாலியல் வக்கிரம் செய்தார். வெளியேறினார். பெண் பித்து பிடித்தவர் போல இருத்திருக்கிறார். பல மணி நேரத்துக்கு பின்னரே, போலீசாரை அழைத்து இருக்கிறார். **** அந்த பெண்ணின் நிலையினை உணர்ந்த போலீசார், ஆன் எனும் போலீஸ்காரியை விசாரணைக்கு பொறுப்பாக அமர்த்தினார்கள். ஆனுக்கு முன் பெரிய சவால். இரண்டு முக்கிய விடயம் மட்டுமே அவரிடம் இருந்தன. மக்தி என்னும் பெயர், முகத்தில் வலது பக்கத்தில் ஒரு மரு. போன் இயங்கவில்லை. நோட்டீஸ் போர்ட்டில் போட்ட போது, cctv இருக்கவில்லை அல்லது இயங்கவில்லை. ஆகவே அங்கேயும் சிக்கவில்லை. வேறு யாருக்கும் இவர் சேவை செய்தாரா என்று கேட்பதில் பலன் இல்லை. ஆகவே என்ன செய்வது. அவர் ஒரு டாக்டர் என்று பொய் சொல்லி இருக்கலாம். அவர்கள் இப்படி கீழ்த்தரமான கிரிமினல் வேலைகளை செய்வார்களா என்ன என்று நினைத்திருந்தார். வீட்டில் இருந்து டீவியை பார்த்தவாறே யோசித்துக் கொண்டிருந்தார். செய்தியில், இங்கிலாந்தின் பொது மருத்துவ கவுன்சில் அதிகாரி ஒரு கேள்விக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தார். பொறி ஒன்று தட்டியது. மறுநாள் அவர்களது அலுவலகத்தினை அழைத்தார். மக்தி அஹமத் என்ற பெயரில் உள்ள சகல டாக்டர் பெயர் லிஸ்ட் வேண்டுமே. வந்தது. மருத்துவ கவுன்சில், பதிவு இருந்தால் மட்டுமே வேலை செய்ய முடியும். பதிவுக்கு படங்கள் கொடுக்க வேண்டும். படம் என்றால், முகத்தில் அந்த மரு இருக்குமே.... இருந்தது ஒருவருக்கு..... மீண்டும் அழைத்தார், அந்த நபர் எங்கே வேலை செய்கிறார் என்று சொல்ல முடியுமா? சில கண நேர மௌனம். நூறாண்டுகள் செல்வது போல தவித்தார் ஆன். மன்னிக்க வேண்டும், ஆபிசர் ஆன், திருட்டு ஒன்று காரணமாக, அவர் பதிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இனி அவர் வேலை செய்ய முடியாதே. 'எப்போது நடந்தது அது'..... 'ஐந்து வருடமாகிறது'. சாண், ஏற முலம் சறுக்கியது. அடுத்து என்ன..... காபி மெசின் பக்கம் போனார். அழுத்தினார். எடுக்காமலே யோசனையில் இருந்தார். பின்னால் வந்தார் இன்னோரு அதிகாரி. என்ன, ஆன் கப்பினை எடுக்காமலே யோசனையிலே இருக்கிறாய் என்றார் அவர். விசயத்தினை சொன்னார். **** அட இதுவா விசயம். இப்ப, ஆள் விசயம், கைவிரல், எல்லாமே நம்ம போலீஸ் டேட்டாபேஸில் இருக்குமே.... அட.... ஆமால்ல... காபி கப்பினை வீசி விட்டு விரைந்தார். அந்த பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்தார்.... பல படங்களை வைத்தார், மரு உள்ள படங்கள். அதில் மக்தி படமும் இருந்தது. 24 மணிநேரம் மிக அண்மையாக இருந்த ஒருவர், மறக்க முடியுமா? இவன்தான் என்று கை காட்டினார். சரி நெருங்கியாகி விட்டது, ஆள் எங்கே என்று தேடுவது. மண்டையை போட்டு உடைத்தார். போன் நம்பர்.... கம்பெனிக்கு அடித்தார்... அது PAY AS YOU GO: இலக்கம். முகவரி இராது. ***** அவரது பழைய வேலை இடத்துக்கு சென்று, நண்பர்கள் இருப்பார்களா என்று விசாரித்தால், அனைவரும் ஒதுங்கிக் கொள்கிறார்கள். அவருக்கு 3 மாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு இருந்தது. 6 வாரத்தில் வந்து இருந்தார். கிரிமினல் ரெகார்ட் காரணமாக இவர் வீடுகள் எடுத்து இருக்க முடியாது. ஆகவே யாராவது நண்பர்கள் உதவி இருக்க வேண்டும். மிக கடுமையான தேடல்களின் பின்னர், இவர் தங்கி இருந்த முகவரி கிடைத்தது. போனார். ஆள் இல்லை. இரண்டு வருடத்துக்கு முன்னரே போய் விட்டாரே. ம்ம்ம்.. நன்றி சொல்லி, கிளம்பிய போது... ஒரு நிமிடம்... தனக்கு வரக்கூடிய கடிதங்களை தனக்கு forward பண்ணுமாறு ஒரு முகவரி தந்து போனார். அந்த முகவரிக்கு சென்றார் ஆன். அது பெட் & பிரெக்பாஸ்ட் அமைப்பு. ஆமாம், இந்த படத்தில் உள்ள நபர் இங்கே இருந்தார். பணம் தர முடியாததால், போனவாரம் அனுப்பி வைத்தோம். ஒரு காரில் கிளம்பி சென்றார், எங்கே போனார் என்று தெரியவில்லை. cctv பார்த்து, கார் இலக்கம் பிடித்து, காரை பிடித்து.... ட்ரைவரை கண்டு பிடித்து..... .... கேட்டால் தனது நண்பர் ஒருவரின் மூடப்பட்ட ரெஸ்டாரண்ட் ஒன்றின் மேல்தளத்தில் தங்கி இருக்கிறார் என்று தகவல் கிடைத்தது. போலீசார் சென்றபோது, நல்ல உறக்கத்தில் இருந்தார் டாக்டர் மக்தி அஹமது MBBS. கட்டிலில் என்று நினைப்பீர்கள். இல்லை. அவரது கல்விக்கும் பொருத்தம் இல்லாத ஒரு கேவலமான நிலையில், ஒரு அழுக்கான இடத்தில், ஒரு மேசையின் கீழ், ஸ்லீப்பிங் பை ஒன்றினுள் குறுக்கியபடியே படுத்திருந்தார். பத்து வருட தண்டனை வழங்கப்பட்டு உள்ளே இருக்கிறார். இளமையில் திரில் காரணமாக திருடியது, தனது வாழ்வினையே நாசமாக்கியது என்று சொல்லி அழுதார். திருட்டு விடயமாக சிக்கியபின்னர், தனது மனைவி, பிள்ளையுடன் தன்னை விட்டு நீங்கி, விவாகரத்து செய்து விட்டதாகவும் அழுதார் அவர். எல்லாம் இழந்த பின்னர், இனி என்ன வாழ்வு என்று விரக்தி கொண்டே, மேலும் தவறுகள் இழைத்ததாகவும் சொன்னார் அவர். ஒரு டாக்டர். மிகச்சிறப்பான பல்கலைக்கழக கல்வி. பிரயோசனம் இல்லாமல் போய் விட்டதே. **** இதனை எழுதும் போது, தமிழ் சிறியர் சொன்ன ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. மைதானத்தில் ஒரு பேனையினை கண்டு எடுத்துக் கொண்டு வீடு போயிருக்கிறார். அதனை இருந்த இடத்திலேயே வைத்து விட்டு வருமாறு இரவு நேரத்தில் தந்தை திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார். **** சிறு, சிறு திருட்டுகளை சிரித்து ஊக்குவிக்க கூடாது. உடனேயே அதனை கண்டித்து திருத்த வேண்டும், இல்லாவிடில் முதலுக்கே மோசமாகிவிடும் என்பதே இந்த கதை சொல்லும் கருத்து.
  16 points
 42. மனித மா கொண்டாடியது மாட்டு பொங்கல் (கற்பனையா நியாமா என்பது அவரவர் கருத்து) மே 29, 1954 மாண்டபெர்க் நெதர்லாந்து மாண்டபெர்க் உலக மனித விவசாயிகள் சங்க சந்திப்பு உலகின் மனிதரை சொந்தமாக வைத்திருக்கும் 30 உலக பெரும் தோட்ட விவசாயிகள் 20 பெரு நாடுகளில் இருந்து வட்ட மேசையில் சுத்தி இருந்தனர். முதலில் அமெரிக்க பெரிய விவசாயி கே பி மோகன் தொடங்கினார். "உலக மனித விவசாயிகளே நாம் திட்டமிட்டபடி உலக போர் இரண்டு இனிதே ஆறு வருடத்தில் முடிந்தது. நாம் ஐரோப்பாவில் இருந்த 400 மில்லியன் மாடுகளில் 85 மில்லியன் மாடுகளை களையெடுத்து தோட்டங்களுக்கு புது வேலி போட்டாச்சு" எல்லோரும் கை தட்டினர். பிரித்தானிய விவசாயி சோத்துசைல்டு "நான் மாடுகளின் லண்டன் பால் சந்தையை சில்லறைக்கு வாங்கி அமுக்கிவிட்டேன். மாடுகளுக்கு கசாப்பு கடை பூட்டினது தெரியாது. இராணி மாடே என் காலடியில்" எல்லோரும் பெரிதாக சிரித்தார்கள். ஜேர்மனிய விவசாயி பேயர் "நாங்கள் மாட்டுக்கு விச புகை, கிருமிகள் , உரம் குண்டுகள் போட்டு நல்ல வருமானம். என்ன இனி நாம் என்ன செய்யவேண்டும் என்று திட்டமிட வேண்டும். கையை கடிக்க கூடாது" அமெரிக்க விவசாயி சொக்கர்பாலர் "நாங்கள் இனி அடுத்த 70 வருடங்களுக்கு நல்ல கறவை மாட்டு வளர்ச்சியை கூட்டி உலக பால் உற்பத்தியை கூட்டவேண்டும். எங்களுக்கு இந்த மாடுகளை இன்னும் இலகுவாக மேய்த்து கட்டி வைக்க தொழில்நுட்பம் தேவை" அமெரிக்க விவசாயி கிளிண்ட் "எண்ட ஐ பி மா இயந்திரங்கள் ஒரு மாட்டு கொட்டில் அளவு அதை நாம் 70 வருடத்தில் நுனி விரல் அளவிற்கு கொண்டுவருவோம். அதற்கு நிறைய முதலீடு தேவை. " ஜேர்மனிய விவசாயி மேர்சல் பன்சு "என்ன எங்கட திட்லெர் போல மாடு அடிக்க ஆளில்லை. கிளிண்ட் நீ எங்களுக்கு இந்த யூத மாடுகளை காட்டி தந்ததற்கு நன்றி. எங்களுக்கு நீ இன்னும் உதவ வேண்டும்" அமெரிக்க பிரெஞ்சு விவசாயி குடுப்போன்ட் "நாங்கள் கன காலமா வெடிமருந்து மற்றும் இரசாயனம் தயாரித்து நல்ல காசு பாத்திட்டம். என்ன இனி பெரும் கசாப்பு கடை இல்லை என்றால் நான் என்ன செய்வது?" யப்பான் விவசாயி குறுக்கிட்டோ கவலையோடு "என்னை நீங்கள் சீன மாடு, பிலிப்பினோ தோட்டம் எல்லாம் பிடிக்கவிட்டு பிறகு பறிச்சு போட்டீங்கள்" சீன விவசாயி சாவோ "பயப்படாதே உனக்கு மேல் போர் குற்றம் சுமத்த மாட்டேன். மஞ்சூரியாவை அமுக்கி சீன கான் மாடுகளின் கையில் தந்ததற்கு நன்றி" ரசிய விவசாயி குருசேவா "இந்த கொம்யூனிச சமத்துவ மாட்டு தொழுவம் நல்லா ஓடுது. நல்ல பால் கறவை. சும்மா ஒரு கட்டு வைக்கோல் மட்டும் சமத்துவ பேரில் போட்டுவிட்டு ரத்தம் வரும் வரை பால் கறக்கலாம். அவை மார்க்சு மார்க்சு என்று கத்தி தாமே கறந்து தருங்கள். மற்றோரும் இந்த விவசாய முறையை பயன் படுத்துங்கோ" சீன விவசாயி சாவோ " ஓம் உண்மை. தெரு மாடுகளை சேர்த்து சிறு மாட்டு விவசாயிகளை அடித்து துரத்தி இப்ப எல்லா கொட்டிலிலும் இயேசு படத்திற்கு என் படம் தான். இப்ப ஒரு தோட்டம்!" சிரித்தார்கள் எல்லோரும். அமெரிக்க விவசாயி வாபர்க் "நானும் கேபி மோகனோட சேர்ந்து ஒரு தனியார் கூட்டாட்சி வங்கி தொடங்கிவிட்டோம். மோகனும் 1920 பெரிய வைக்கோல் தட்டுபாடடை வைத்து எல்லா மாட்டு துறைகளையும் மடக்கிவிட்டார். நாங்கள் மாட்டுக்கு சுதந்திரம் கொடுப்போம் ஆனால் இல்லை" எல்லோரும் சிரித்தார்கள். கனடிய விவசாயி யோய் பொம்சன் பெருமையாக "அமைதி. நாம் 1900ல் தன்சார்பா 90% விகிதமாக பரவி கிடந்து மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை உலக கசப்பு கடை ஒன்று மற்றும் இரண்டில் எமது கொட்டில்களுக்குள் கொண்டுவந்து விட்டோம். கனடிய மாடுகளுக்கு இரண்டு கசாப்பு கடை வரியும் போட்டு மூக்கணாங்கண்கயிறு கட்டியாச்சு. இப்ப ஒரு பத்து விகிதம் தான் வெளியே மேயுது" பிரித்தானிய விவசாயி சோத்துசைல்டு "உலகத்தில் கடந்த 500 வருடங்களாக நாம் பல இலட்ச்சம் சின்ன விவசாய தோட்டங்களை பிடித்து பெரிதாக பால் கறக்காதாக பூர்வ குடிகளை போட்டு தள்ளியாச்சு. இப்ப எங்கட 200 தோட்டங்கள் தான் மிச்சம். இதை இன்னும் இரண்டு தலைமுறைக்கு வளரவிட்டு பின் ஒரு உலக வேலி இல்லா தோட்டம் ஆக்கவேண்டும். எல்லா மாடுகளிடம் இருந்து 75% பாலை அதுகளுக்கு தெரியாமல் கறக்கவேண்டும்" இந்திய பார்சி விவசாயி பாட்டா " நாங்களும் எங்கட பார்சி மகாத்மா குந்தியை வைத்து பிரித்தானிய உதவியுடன் இந்திய தோட்டத்தை ஒன்றாக்கிவிட்டோம். 300 மில்லியன் மாடுகளை ஒரு இலட்ச்சம் பிரித்தானிய மேய்ப்பாளர் இலகுவாக வைத்து கறந்தார்கள். எல்லாம் எங்கட குந்தி மாடு முட்ட கூடாது என்று ஏமாற்றி தான் அதுகளை மேய்க்க முடிந்தது" எல்லோரும் சிரித்து இந்திய மாடுகளை ஏமாற்றியதை புகழ்ந்தார்கள். அமெரிக்க விவசாயி சொக்கர்பாலர் "நாம் முக்கியமாக இந்த ஆப்பிரிக்க தென்னமெரிக்க பூர்வீக மாடுகளை கன்று போட விடக்கூடாது. பாலும் பெரிதாக இருக்காது மற்றும் சொல்வழி கேட்க மாட்டார்கள். அதனால் மூன்றாம் கசாப்பு கடை திறப்பிற்கு பின் அவற்றை இயற்கையாக சினை சேர்க்க விடக்கூடாது. அதன் இனம், கறவை திறம், குணம் பார்க்கவேண்டும். அப்படி சினை சேர்த்தாலும் செயற்கையா சோதனை குழாயில் கலந்து பாத்தாயிரம் டொலர் அறவிடவேண்டும் . அப்போது தான் நல்ல கறவை மாடுகளை கொண்டுவரலாம். அவர்களிற்கு சுதந்திரம் இருக்கு ஒரு மாயையை உருவாக்கி வைத்திருக்க வேண்டும்." அமெரிக்க விவசாயி கிளிண்ட "தொழில்நுட்பத்தை வளர்த்து கரண்ட் கம்பிக்குள்ளால் எல்லா மாட்டு தொழுவத்தையும் கொழுவி நாங்கள் நிய நேரத்தில் எந்த மாடு என்ன செய்யுது, எவ்வளவு கறக்குது, குழப்படியா என்று கவனிக்கலாம். மற்றும் சுவரில் பிம்ப பெட்டி கொழுவி ஆடி பாடி கறக்கும் மாடுகளை வைத்து அவற்றை சும்மா நின்று அசை போட வைக்கலாம். இப்ப உள்ள சுதந்திர மாட்டு தாள்களை பின் நாம் வாங்கி பீதி கிளப்பலாம்" எல்லோரும் எழுந்து நின்று கை தட்டினார்கள். கிளிண்ட் பெருமையாக எல்லோருக்கும் தலையாட்டினார். அமெரிக்க விவசாயி கேபி மோகன் "இந்த புஸ்லா எண்டவன் இலவசமாக காற்றால் கரண்ட் அனுப்ப கண்டுபிடிச்சவன். நான் அவற்றை அமுக்கி பின் அவனை வைச்சு கரண்ட் கம்பியால் அனுப்பினான். இலவசம் முதலில் எப்போதும் மாடுகளுக்கு ருசி பிடிக்க மட்டும் தான் பின் பால் கறந்தால் தான் கிடைக்கும். இலவசமா காடு மேயும் விளையாட்டு வேண்டாம்" சீன இந்திய விவசாயிகள் பாட்டா மற்றும் சாவோ சேர்ந்து "எங்கட நாட்டில நிறைய தண்டசோறு மாடுகள் இருக்கு கசாப்பிற்கு அனுப்ப வேண்டும். 70 வருசத்தில் எங்கட தோட்டங்கள் வீங்கி வெடித்துவிடும்" பிரித்தானிய சோத்துசைல்டு "நாம் 2020 இல் எமது மூன்றாம் கசாப்பு கடையை திறந்து தேவையில்லாத நாண்பன் மாடுகளை போருக்கு அனுப்பி ஒரு பெரும் ரீசெட் செய்வோம். உலக மாட்டு தொகையை அரை பாதியாக்கி ஒரு உலக அமைப்பிற்குள் கொண்டுவருவோம்." இவ்வளவு நேரமும் அமைதியா இருந்த இத்தாலிய விவசாயி மெடிசி "கேள்வி, தொழில்நுட்பம் வளர்ந்து எல்லா மாடுகளும் தொலைத்தொடர்பு கொண்டு கதைத்தால் எங்கட திட்டங்களை கண்டுபிடிக்காதா? விடயம் தெரிந்து வேலியை பிச்சு கொண்டு போகாதா? எப்படி அவற்றை அடக்குவது?" அமெரிக்க விவசாயி கிளிண்ட் " நாங்கள் நிறைய குப்பைகளை கொட்டி குழப்புவோம். கன்றுகளை மேய தெரியாமல், கறவை வரி கணக்கு போட தெரியாமல் செய்து குடும்பங்களை உடைத்து தனி மாடாக்குவோம். எல்லா தனி மாட்டுக்கும் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்று ஒரு மாயையை உருவாக்குவோம். எங்க போகுது என்ன செய்யுது என்று அதன் காலில் கால் பேசியை கட்டி கவனிபோம்.. போலி மாடுநாயகம் தொடக்கி அவர்களை வைத்து எங்கட கைப்பாவை மாட்டை கொண்டு வருவோம் " சுவிஸ் விவசாயி மெஸ்லே " அடுத்த 70 வருடங்களுக்கு மாட்டு தீவன தரைகளில் குண்டுக்கு பாவித்த யூரியாவை போடுவோம், கிருமி நாசினிகளை தெளிப்போம். கொஞ்சம் கொஞ்சமா மாடுகளை பலவீன படுத்தி பின் ஏதாவது ஒரு வைரஸை உருவாக்கி மிரட்டுவோம். இதனால் இங்கிருக்கும் எல்லாருக்கும் இலாபம்" இத்தாலிய விவசாயி மெடிசி குறுக்கால "மாடுகளுக்கு நஞ்சை சாப்பிடுகிறோம் என்று கூடவா 2020 இல் தெரியாமல் இருக்கும் நம்ப முடியவில்லையே?" அமெரிக்க பிரெஞ்சு விவசாயி குடுப்போன்ட் "அது பிரச்சினை இல்லை. மாடுகளுக்கு சீருடை அணிந்தால் மண்டை மந்தமாகி நம்பிவிடுங்கள். வெள்ளை கோட்டை போட்டு மாட்டு வைத்தியரை மற்றும் ஓடலிகளை வைத்து ஏமாற்றலாம்!" வாடிகன் மாட்டு பூசகர் தங்க நாற்காலியில் இருந்து "நாங்களும் மற்றைய மதங்களோடு சேர்ந்து அவற்றை பால் கறக்கும் பசுக்களாகுவோம். எங்களுக்கு எதிரா போனா மாட்டு நரகத்திற்கு போவினம் என்று ஏமாற்றி வெருட்டுவோம். அங்க எமன் பேர்கர் ஆக்கிப்போடுவார் என்றால் பதறி தட்டில் நெய்யய் கொட்டுங்கள்" எல்லோரும் இப்போது திரும்பி உலகின் கால் பங்கு மேய்ச்சல் நிலத்தை பிடிச்சு வைத்திருக்கும் மாட்டு இராணியை பார்க்கிறார்கள். "எல்லா திட்டமும் நல்லா இருக்கு. இந்த உரையாடலை சாத்தம் வீடு சத்தியத்தை செய்து பேசாமல் இருக்கவேண்டும். இங்கு ஒருத்தரும் எவ்வளவு உழைக்கிறோம் என்று சொல்ல கூடாது நாம் ஏழை என்று நாடுகளிடம் இருந்து கறந்து இலவசமா எப்போதும் வாழவேண்டும். 500 வருடத்தில் பத்தாயிரம் பாசை பேசிய பல்லின மாடுகளை ஒரு பாசை பேச வைத்து ஒரு பால் வங்கி வைத்து ஒரு சுகாதார அமைப்பு வைத்து ஒரு உலக தொழுவத்திற்குள் கொண்டுவரவேண்டும். பின் அவற்றை ஒரு கலவை மாடாக்கி 75% பாலை கறக்கவேண்டும்.. இது தான் என் கடைசி ஆசை. " எல்லோரும் எழும்பி மாட்டு ராணிக்கு தலை வணங்கி சியர்ஸ் சொல்லி விடைபெற்றார்கள். ************************************************** ஜனவரி 16 2020 மாட்டு பொங்கல் மனித மாட்டுக்கு கோவிண்டா வந்து மேய்ச்சல் நிலம் தோட்டங்கள் எல்லாம் வெறிச்சோடி கிடந்தது. சுவரில் பிம்பம் தொழுவத்திற்குள் அடைந்திருந்து பால் கறக்க சொன்னது. விக்கியெனும் கனடா மாடு தோய்ந்து வெளிக்கிட்டது. மற்றைய மாடுகள் ஐயோ கோவிண்டா பிடிக்கும் தொழுவத்தில் இரு என்று மிரட்டியது. விக்கி மாடும் முகமூடி அணிந்து சென்றது. முதலில் தனது தோட்டத்திற்கு சென்று தொழுவத்திற்கு வரி கட்டிவிட்டு பின் வண்டிலுக்கு பலகை வரி கட்ட சென்றது. பின் வண்டியைதோட்ட வரி கட்டிய தெருவால் விட்டு மாகாண வரி பெருந்தெருவிற்கு வந்தது. வண்டிக்கு இலவசமா நிலத்தில் இருந்து கிடைக்கும் எண்ணெய்க்கு வரி கட்டியது. பின் அந்த எண்ணெய் காற்றை அசுத்தமாக்கிறது என்று காற்றுக்கு வரி கட்டியது. கொஞ்சம் புண்ணாக்கு தண்ணி வேண்டி அதற்கும் வரி கட்டியது. பின் சந்தைக்கு சென்று நஞ்சு தெளிச்ச இரசாயன உரம் போட்ட ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் வாங்கி வரி கட்டியது. மாட்டு பொங்கல் கொண்டாட பக்கத்துக்கு தோட்டத்திற்கு செல்லும் போது பனியில் வண்டில் நிக்காமல் சறுக்க சமிஞை விளக்கு கமெரா படமெடுத்து தண்ட வரி வீட்டுக்கு அனுப்பியது. வண்டியில் காற்றில் இருந்து மாடுகள் செய்தி தமக்கு கோவிண்டா ஊசி தேவை எவ்வளவு பால் வேண்டுமென்றாலும் எடுங்கள் என்று வற்புறுத்தின. தொழுவத்தில் மிருக மாடுகள் அடுக்காக கட்டி 5 அடி பத்தடி கூண்டுக்குள் நின்று ஜி எம் ஓ சோளம் சாப்பிட்டுக்கொண்டிருந்தன. இரண்டே இன மாடுகள் தான் இருந்தன. அவைகள் மனித மா கொண்டுவந்த பழங்களின் மணத்தால் ஈர்த்து ஆர்பரித்தன. ஒவ்வொன்றாக ரசித்து ரசித்து சாப்பிட்டன. அதை பார்த்து மகிழ்ச்சியடைந்த மனிதமா மிருகமாட்டு தொழிற்சாலையில் இருந்து வெளியேறி மனித மாட்டு தொழிற்சாலைக்கு சென்றது. அங்கு அதற்கு ஒரு கடுதாசி பெரிய விவசாய கறவையாளரிடம் இருந்து "சென்ற வருடம் நீ 400 கலன் பால் கறந்திருக்கிறாய் ஆதலால் உன் பட்டுவாடா கணக்கின் படி எங்களுக்கு 160 கலன் பால் கட்டவேண்டும். கட்டாவிட்டால் பால் வரி கூடிக்கொண்டே போய் சிறை செல்வாய் " தொலைக்காட்சியில் மாட்டு ஹொக்கி கட்டு தொடங்கமுன் ஒன்று பாடியது கேட்டது. God keep our land glorious and free! (கடவுளே எம் மகிமை நிறைந்த நிலத்தை சுதந்திரமா வைத்திரு!)
  16 points
 43. கவலையில்லாத மனிதன் சந்திரபாபு அவர்கள் முக்கியக் கதாபாத்திரமாக நடித்து 1960 ம் வருடம் வெளியான படத்தின் தலைப்பு. இத்தலைப்புக்கு முழுத்தகுதியான ஒரு மனிதரை நெடுங்காலம் எனக்கு மிக அருகிலேயே பார்த்திருக்கிறேன். எனது அடுத்த வீட்டின் உரிமையாளரும் அங்கேயே நீண்ட காலம் வசித்தவருமான திரு. ரங்கசாமிதான் அவர். அந்தக் குடியிருப்புப் பகுதியில் 1982ல் முதலில் வீடு கட்டி வந்தவர் அவர்தான். 12 வருடங்கள் கழித்து அவருக்கு அண்டை வீட்டுக்காரனாகும் பேறு பெற்றவன் நான். அவர் உயர்ந்த கொள்கை பிடிப்புள்ளவர் என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை. ஆனால் அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த விஷயங்கள் ஒன்றிரண்டு உண்டு. அதனால் அவர் சில விஷயங்களில் எனக்கு முன்மாதிரி என்றே இன்றளவும் வைத்துள்ளேன். நான் அங்கு குடிவந்தபோதே அவரது ஐந்து பிள்ளைகளும் வேலையிலோ திருமண பந்தத்திலோ கட்டுண்டதால், அவரும் அவரது மனைவியும் மட்டுமே அவ்வீட்டில். பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் அவ்வப்போது வந்து போவார்கள். அவரும் அவரது மனைவியும் அரசுப் பணியில் இருந்தார்கள் அப்போது. துணைவியார் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவும் நமது கதாநாயகர் வருவாயித்துறையில் இளநிலை உதவியாளராகவும் இருந்தனர். “முப்பத்தி மூணு வருஷ சர்வீஸ்” என்று அவர் பெருமையாகக் கூறியதும் நான் தயங்கியபடி கேட்டேன், “சார், உங்கள் துறையில் இத்தனை வருஷமாகவா பதவி உயர்வு தராமல் Junior Assistant ஆகவே வைத்திருப்பார்கள்?” பொதுவாக ஒருவரின் பதவி நிலை, பணி உயர்வு போன்ற தனிப்பட்ட விஷயங்களுக்குள் போவது அநாகரிகம் என்று நினைக்கும் நானே அடக்கமாட்டாமல் கேட்டு விட்டேன். முப்பத்து மூன்று வருடங்கள், ஆரம்ப நிலையான இளநிலை உதவியாளர் என்னும் கொடுமையை என்னாலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் மனிதர் ஒரு மந்தகாசச் சிரிப்புடன் அக்கேள்வியைக் கடந்து சென்றார் பாருங்கள், “தம்பி, நான் அந்த நேரத்தில் நியமனம் ஆன முறைப்படி (ஏதோ 10A1, வழக்கு, கோர்ட் தீர்ப்பு என்றெல்லாம் சொன்னார்) Junior Assistant தான் எனக்கு கியாரண்டி. அடுத்த நிலைக்குச் செல்ல ஏதோ டெஸ்ட் எழுதணுமாம். அதெல்லாம் படிக்க எனக்குப் பொறுமையில்லை; சரக்குமில்லை. அப்புறாம் பதவி உயர்வு கொடுத்து இடமாற்றம் வேற பண்ணுவான். போதும் தம்பி ! நமக்கு என்ன குறை?” என் தந்தை இதே துறையைச் சார்ந்தவர். இவரைப் போலவே இளநிலை உதவியாளராய்ச் சேர்ந்து படிகள் சில கடந்து அப்போது வட்டாட்சியராய் இருந்தார்கள். அவர்கள் சொன்னது, “ஒரு முறை அலுவலக நண்பர்கள் ரங்கசாமியை வலுக்கட்டாயமாகத் தேர்வு எழுத வைத்து, புத்தகங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து, காபி டிபனெல்லாம் வாங்கி வந்து எழுத வைத்தார்கள். மனிதர் சாவகாசமாய் அமர்ந்து அவற்றையெல்லாம் சாப்பிட்டு விட்டு, “வே! உங்களையெல்லாம் மறக்க முடியாது வே!” என்று உணர்ச்சிப்பூர்வமாக நன்றி சொல்லி, விடைத்தாளில் ஏதோ கிறுக்கிவிட்டுச் சென்று விட்டார். நான் அதுகுறித்துக் கேட்டேன். “தம்பி ! அந்தப் புத்தகங்களில் விடை எங்கே இருக்கிறது என்று எவனுக்குத் தெரியும்? அவற்றைக் கொண்டு வந்த நம்ம ஃப்ரெண்ட்ஸ்கே தெரியல!”. பொதுவாக இப்படிப்பட்டவரை ‘சோம்பேறி’ என்றுதான் உலகம் விளிக்கும். அவரை அருகிலிருந்தே பார்ப்பதால் எனக்கு என்னவோ அப்படித் தோன்றவில்லை. பதவி உயர்வுகளை உரிய நேரத்தில் பெற்ற என் தந்தையாரை விட அவர் மகிழ்ச்சியாகவே தோன்றினார். பணியில் சேர்ந்த நாள் முதல் ‘Enterprising’, ‘Active’ என்ற பெயரில் எதையோ விரட்டிக் கொண்டே திரியும் நிம்மதியிழந்த ஜீவன்களை விட அவர் ஒரு உயிர்ப்புள்ள மனிதராகவே தெரிந்தார். சரி, இதிலிருந்து கிடைத்த பாடம்? பணி மேம்பாடு பக்கமே போகாமல் நானும் சித்தராகத் திரிந்தேனா? அவ்வளவு நான் முத்தி அடையவில்லை. அடுத்த நிலைக்கான சிறிய முயற்சியை மேற்கொள்ளாமல் இல்லை. ஆனால் அதையே நினைத்து வாழ்க்கையை வீணாக்காமல் தப்பினேன். ஒரு விரிவுரையாளனாய்ப் பணியில் சேர்ந்த நான் அதே நிலையில் ஓய்வு பெறும் மனநிலை பெற்றேன். அதையும் மீறி வந்த உயர்வினை ‘இலாபம்’ என்று எழுதினேன். அலுவலகம் எனும் உலகில் அமைதியான வாழ்வைப் பெற்றேன். உபயம் : உயர்திரு. ரங்கசாமி அவர்கள். பயன் : அதிகார வர்க்கத்திடம் தேவையில்லாமல் நான் சமசரம் செய்ததில்லை; மனநிறைவுடன் ஒரு தொழிற்சங்கவாதியாய் வாழ்ந்தேன். இளைய தலைமுறைக்கும் இத்தாரக மந்திரத்தைக் கடத்த முற்பட்டேன். அதன் பொருள் புரிந்தோர் பேறு பெற்றோர். சரி. மீண்டும் புகைப்படக் கருவியை (Camera) ரங்கசாமியின் பக்கம் திருப்புவோம். பிரச்சினையே இல்லாத மனிதன்தான் கவலையில்லாத மனிதனாய் வாழ முடியும் என்று நீங்கள் நம்பினால், ஒரு நொடி உங்களைக் கண்ணாடியில் பார்த்து நீங்களே சிரித்து விட்டுத் தொடருங்கள். இல்லறம் நல்லறமாய் அமையாத துர்பாக்கியசாலி அவர். அதற்கு அவரும் காரணமாய் இருந்திருக்கலாமே! இருக்கலாம். இல்லை என்று தீர்ப்பு வழங்க நான் நீதிமான் இல்லை. எது எப்படியாயினும் அது அவருக்கும் துன்பம்தானே ? இங்கு ஒரு நிகழ்வைப் பதிவு செய்ய விழைகிறேன். அவர்கள் வீட்டில் தென்னை நன்றாகக் காய்த்து என் வீட்டு மாடியில் தண்ணீர்த்தொட்டியின் குழாயை அவ்வப்போது பதம் பார்த்தது. ஒரு நாள் முற்றத்தில் நின்று கொண்டிருந்த அந்த அம்மாவிடம் சொன்னேன். உடனே சீற்றத்துடன், “நீங்கள் புதுசு புதுசா ரூம் எடுப்பீர்கள். எங்களுக்கு வேறு வேலையில்லையா?” என்றார் அந்த அம்மா. “என்னது, சம்பந்தமில்லாமல் பேசுகிறார்?” என்று யோசித்த பின்தான் தெரிந்தது; என் வீட்டில் அந்தப் புதிய தண்ணீர்த் தொட்டியே மாடியில் புதிய அறை கட்டியதால்தானே வந்தது ! பின்னர் ரங்கசாமி ஆளை அழைத்து வந்து தேங்காய் பறிக்கச் செய்தார். என்னிடம் சொன்னார், “தம்பி ! அவளிடம் பேசி உங்கள் மரியாதையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். என்னிடம் சொல்லுங்கள்”. இந்த நிகழ்வை நான் இப்போது சொன்னது, வாசிக்கும் உங்கள் நியாயத் தராசு ஒரு பக்கமாய்ச் சாயட்டுமே என்ற எனது அரசியலாக இருக்கலாம். 24x7 அந்த அம்மா கரித்துக் கொட்டுவதைச் சட்டை செய்யாமல், தேய்த்து வாங்கிய சட்டையை மடிப்புக் குலையாமல் எடுத்து அணிவார். சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட வாசனைத் திரவியத்தை அள்ளித் தெளித்து, தினமும் சவரம் செய்து பளபளப்பாக வைத்திருக்கும் முகத்தில் பவுடரால் (அதுவும் வாசனையுடன்) மெருகேற்றிக் கிளம்பி விடுவார். அது அலுவலகத்திற்கு அல்லது கடைத்தெருவில் நட்பு வட்டத்துடன் அரட்டையடிக்கும் தேநீர்க் கடைக்காக இருக்கலாம். அவருக்கு மகிழ்ச்சி எங்கே கிடைக்கிறதோ அங்கேதானே போக முடியும்! வெளியே செல்ல முடியாத நேரமாயிருந்தால் அவரும் குரலை உயர்த்துவார். கவலையில்லாத மனிதர் ஒருவரை சந்திக்கக் கிடைத்தது எனக்கு வாய்த்த பேறு என்றால், தினமும் அவர்களுக்கு இடையில் பரிமாறப்படும் வசவுகள் என் காதில் விழுவது நான் செய்த பாவம். பிள்ளைகள், பேரன், பேத்தி எல்லாம் ஏற்படுவதற்கு மனதளவில் கணவன் - மனைவி ஆக வேண்டிய அவசியமில்லை என்பதை அவர்களிடம் தெரிந்து கொண்டேன். எல்லா வீடுகளிலும் கோப தாபங்கள் எல்லாம் சகஜம்தானே என்று நீங்கள் கேட்கலாம். ஹலோ ! உங்கள் வீட்டில் ஏற்படும் அந்த நிகழ்வுக்குப் பெயர் ஊடல். அது உளவியல் அறிவியல் சார்ந்தது. இவர்கள் வீட்டில் நடப்பதற்குப் பெயர் யுத்த காண்டம்; வெகு சில வீடுகளிலேயே இது அரங்கேறும். கொதி நிலை என்ற ஒன்று உண்டே ! இருவரும் பணி ஓய்வு பெற்றபின் விவாகரத்து வழக்கு நீதிமன்றம் சென்றது. ஒரு மகள் மட்டும் அவர் பக்கமும், மூன்று பிள்ளைகள் தாயின் பக்கமும், ஒரு மகள் நடுநிலை வகித்தும் குடும்பம் சின்னா பின்னமாகியது. வீட்டின் மீது உரிமை கோரும் வழக்கும் பதிவானது. வழக்கு முடியும் வரை தம் பக்கம் நின்ற மகள் வீட்டோடு சென்றார் ரங்கசாமி. அந்த அம்மா மட்டும் இவ்வீட்டில். அவருக்கு யாருடனும் ஒத்துவராது என்று அவரே சொல்லிக் கொள்வார். ஆகையால் மற்ற பிள்ளைகள் அவரவர் வீட்டில். ஒரு நாள் திடீரென்று இரவில் மாரடைப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்; அந்த அம்மா நீள்துயில் கொண்டார். அண்டை வீடு என்பதால் முதலில் கண்டுபிடித்த துர்பாக்கியசாலி நானேதான். அந்த அம்மாவைச் சார்ந்து நின்ற பிள்ளைகளுக்குத் தகவல் கொடுத்தேன். வந்தார்கள். வீட்டுக் கதவை உடைக்கத் தயங்கினார்கள். அப்பா போலீஸில் பொய் வழக்குக் கொடுத்துத் தங்களுக்குப் பிரச்சனை ஏற்படுத்துவார் என்று பேச ஆரம்பித்தார்கள். நான் அவரிடம் சென்று பேசினேன். ‘அக்கம் பக்கத்தார் சாட்சியாக உங்கள் முன்தான் கதவு உடைக்கப்பட்டது என்று இருக்கட்டும்’ என்று அழைத்தேன். “தம்பி ! நீங்கள் வந்து அழைப்பதால் வருகிறேன். மற்றபடி அந்த உறவெல்லாம் எனக்கு முடிந்துவிட்டது. அவளுடன் வாழ்ந்து வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தொலைத்தது போதும்” என்று கிளம்பினார். சுமார் முப்பத்தைந்து வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்காக இல்லாமல், ‘அவருக்கு யாரோ’ எனும் நான் அழைத்ததால் வந்தார் என்பது அவர்களுக்கு இடையில் உள்ள வெறுப்பின் குறியீடு. கதவை உடைத்த பின் அவர் வீட்டின் உள்ளேயே செல்லாமல் போய் விட்டார். “இனி இந்தப் பயலுக என்னை அநாகரிகமாகப் பேச ஆரம்பிப்பானுக. நான் போறேன், தம்பி!” என்று மட்டும் சொன்னார். வீடு அவருக்கே உரியது என நீதிமன்றத்தில் தீர்ப்பானது. சில நாட்களில் வீட்டை விற்றுவிட்டார். அப்புறம் எங்கே சென்றார் என்று எனக்குத் தெரியாது. சுமார் மூன்று வருடங்கள் கழித்து ஒரு நாள் சந்தடி மிகுந்த சாலையில் நான் நடந்து செல்லும் போது ஒரு கார் என்னருகில் வந்து நின்றதை உணர்ந்தேன். அதிலிருந்து முன்பு போல் ‘மேக்-அப்புடன்’ நம் கதாநாயகர் இறங்கினார். “தம்பி, நல்லா இருக்கீங்களா?” என்று கை குலுக்கினார். சில வருடங்கள் கழித்துப் பார்த்த மகிழ்ச்சியை நானும் வெளிப்படுத்தினேன். “ஏய் ! கொஞ்சம் இறங்கு” என்று காரில் அமர்ந்திருந்த சுமார் 55-60 வயது மதிக்கத்தக்க அம்மணியிடம் கூறினார். அந்த அம்மா இறங்கி எனக்கு வணக்கம் தெரிவிக்க, நானும் புன்னகையுடன் வணக்கம் சொன்னேன். “தம்பி! இவள் என் மனைவி. நாங்கள் திருமணம் செய்து ஒரு வருஷம் ஆகுது. இவளும் டீச்சர்தான். இன்னும் ரெண்டு வருஷம் சர்வீஸ் இருக்கு.” நான் அவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தேன். அந்த அம்மாவிடம் சொன்னேன், “நீங்கள் கொடுத்து வைத்தவர். இந்த உலகில் மிக சந்தோஷமான மனிதரைக் கல்யாணம் பண்ணி இருக்கிறீர்கள்”. - சுப. சோமசுந்தரம்
  16 points
 44. இஞ்சாருங்கோ!! இஞ்சாருங்கோ! பிரித்தானிய பிரஜைகளுக்கான‌ பயணத்தடையை இலங்கை அரசு விலத்தி இருக்கிறதாம் இலங்கைக்கு போவமே!! என்றாள் சாரதா ஏன்? எதற்கு? இப்ப என்ன அவ்வளவு அவசரம் என்றார் மாணிக்கவாசகர். இல்லங்க போனவருசம் போக இருந்தம் இந்த பாழாய் போன கொரானா வந்ததால ஊருக்கும் போகமுடியல நம்ம மகனுக்கும் வயசாகிறது. கல்யாணம் கட்டிக்கொடுக்க வேண்டுமே . ம் அங்க போனால் வெளிநாட்டு சனம் வந்துட்டுது என்று அங்க‌ சனம் ஓடுதாம் கொரானா பயத்தால். அதுமட்டும் இல்லாமல் தனிமைப்படுத்தி விடுவாங்களாம். நாமதானே இங்க ஊசி போட்டுட்டம் அங்க போய் ஊசி போட்டதை காட்டினால் உள்ள விடுவாங்களாம் என்று சொல்லுறாங்களே? அதுமட்டும் இல்லாமல் இலங்கையில இறப்பு வீதம் கூட இங்கத்தயமாதிரி இல்ல குறைஞ்சிட்டுது . நீ ஊருக்க போக பிளான் பண்ணிட்ட சரி நடக்கட்டும் என்றவர். ஊரில உன்ற மகனாருக்கு ஆர் பொண் கொடுப்பார்கள் நான் பரிமளம் அக்காகிட்ட சொல்லிட்டன் அவா பார்த்திருக்கா ஒரு பெண். ஆரு நம்ம குமாரசாமியின்ற மனிசியோ ஓம் ஓம் அவதான் . உன்ற மகன் இங்க திரியுற திரிச்சலுக்கு நாள் தோறும் போதை , கிளப் அது இது என்று இவன் கிடக்குறான் சேருர கூட்டமும் அவனுகள் பழக்க வழக்கத்திற்கும் . ஊரில யாரும் பொண்ணு கொடுப்பாங்களோ? லண்டன் என்று சொன்னால் கொடுப்பாங்கள் தானே!. உனக்கு விசயம் தெரியாதுடி இப்ப அங்குள்ள சனம் வெளிநாடுகள பற்றி நல்லா படிச்சிட்டுதுகள் அதுமட்டும் இல்லாமல் அக்குவேர் ஆணிவேரா எல்லாம் துருவி ஆராய்ஞ்சும் வச்சிருக்குதுகள். நீ என்ன கல்யாணம் கட்டக்க துள்ளிக்குதிச்ச நீதானே இதானா? லண்டன் சைக் இந்த நாட்டில ஆர் இருப்பாங்கள் கதைக்க கூட ஆட்கள் இல்ல கறிவாங்கயும் ஆட்கள் இல்ல என ஞாபகம் இருக்கா?. ஓ அதெல்லாம் நாளாக நாளாக பழகிட்டுதானே .ம் பிள்ள என்ன செய்யுதாம் பிள்ள கிறயுவேற்றாம் ஓ.... ! பிள்ளையும் நல்ல பிள்ளையாம் ஓ! இப்ப ரீச்சிங் கிடைச்சிருக்காம் அது மட்டும் இல்ல நம்ம சாதிதானாம் ஓ! சாதி வரைக்கும் விசாரிச்சு இருக்கிற........... பின்ன நம்ம பிள்ளைக்கு நல்ல இடம் தானே பார்க்கணும் .ம்ம் சரி ஒன்லைனில ரிக்கட் விலையையும் நாட்டில என்ன மாதிரி நிலமையென பார்க்க போணை எடுத்தவருக்கு நாட்டில இருந்து முகநூலில் ஒரு நண்பர் மூலமாக‌ மெசேச் வீடியோவாக வருகிறது அதைப்பார்த்ததும் மாணிக்க வாசகர் அடியேய் அந்த பிரசர் குளிசையை எடுத்துட்டு ஓடிவாடியென அலறினார். இந்த பிக்குவின் வீடியோ தான் முற்று முழுதாக இனவாததை கக்கிய வீடியோவே அது ........... தொடரும் ...
  16 points
 45. இன்று அவுஸ்ரேலியாவில் என்ன நடக்கிறது என உங்களுக்கு தெரியவில்லை.. ஏழாவது கிழமையாக NSW lockdown.. AstraZeneca பற்றி இங்கே பயமுறுத்தி வைத்திருப்பதால் எல்லோரும் Pfizerதான் போடுவோம் என இருக்கிறார்கள்.. பாதிக்கப்பட்டுள்ளது நடுத்தர மற்றும் வறிய மக்களே.. அவுஸ்ரேலியா முன்னேறிய நாடு எனக்கூறினாலும் இங்கே உள்ள அரசாங்கம் இந்த தடுப்பு ஊசி விடயத்தில் எத்தனை பிழைகள் விட்டது என்பதை இங்குள்ளவர்கள் அறிவார்கள்.. போதாக்குறைக்கு தடுப்பு ஊசி போடமாட்டோம்.. lockdown எதிர்த்து ஊர்வலம் கூட வைத்திருக்கிறார்கள் இந்த முன்னேறிய நாட்டில் வாழும் மக்கள்..ஊசியும் போடுகிறார்கள் இல்லை, lockdown restrictions ஒழுங்காக கடைப்பிடிக்கிறார்களும் இல்லை.. இந்த நிலையில் அவுஸ்ரேலியா ஒரு பிழையான உதாரணம்.. மேலும், நீங்கள் ஒன்றை கவனத்தில் கொண்டால் மிகவும் நல்லது.. இன்றைய நிலையில், இலங்கையில் இருக்கும் அதுவும் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்பவர்களின் உரிமை, சுதந்திரம் எந்த நிலையில் உள்ளது என்பதையும், சும்மாவே விதிமுறைகளை கடைப்பிடிக்காமலும், தடுப்பு ஊசி போடுவதில் தயக்கம் உள்ள இடத்தில் அது சரியில்லை.. இது பிழை.. எங்களுக்கு AstraZeneca அல்லது Pfizerஅதன் வேண்டும் என்றால் தரவிருக்கும் ஊசியை கூட தராமல் போகும் அரசாங்கமே உள்ளது.. ஒவ்வொரு முறையும் நான் எனது தந்தையுடனும் தங்கையுடனும் கதைக்கும் பொழுது “ இங்கே தரும் ஊசியை தானே போட முடியும்” என அவர்கள் கூறும் பொழுது அவர்களின் குரலில் இருக்கும் இயலாமையை என்னால் உணரமுடியும்.. அந்த சமயத்தில் நான் அவர்களிடம் இந்த ஊசி சரியில்லை என கூறமுடியுமா? எங்களின் அரசியல் தலைவர்களும் சரியில்லாது இருக்கும் பொழுது மக்கள் தங்களுக்கு கிடைக்கும் வசதிவாய்ப்புக்களிற்கேற்பவே நடக்கமுடியும்.. எத்தனை விழிப்புணர்வு நடவடிக்கைகளை செய்தும் என்ன இந்த மாமாங்கம் கோவிலில் நடந்தது என்ன? ஆலய நிர்வாகம் சரியான முறையில் நடந்திருந்தால் இந்த நிலமை வந்திருக்குமா? நல்லூரில் நாளை திருவிழாவிற்கு உபயகாரர் மட்டுமே கோயில் உட்பிரகாரத்திற்கு செல்லமுடியும்.. ஏன் இந்த மாதிரி ஒரு செயலை மாமாங்கம் செய்ய முடியவில்லை.. இப்படியெல்லாம் நடக்கும் பொழுது இந்த ஊசி சரியில்லை வினைத்திறன் இல்லாத ஒன்று என கூறி ஊசி போடவருபவர்களையும் தடுப்பது சரியா?
  15 points
 46. மாலதி அதிகாலை விழித்து விட்டாள் .எழுந்து காலைக்கடனை முடித்தவள், அடுப்பை பற்ற வைத்து , தேநீருக்கான ஆயத்தங்கள் செய்தாள். அப்போது மாமியார் பசுக்களில் பால் எடுத்துக்கொண்டு பாற்செம்புடன் வந்தாள். அவர் வாடிக்கைக்காரர் இருவருக்கு போத்தலில் பாலை நிரப்பி மீதியை மாலதியுடம கொடுக்க அவள் அவற்றை காய்ச்சி குழந்தைகளுக்கும் மாமனாருக்கும் தேநீர் தயாரித்து கொடுத்தாள். தன் மாமியார் பங்கை கொடுக்கவும் அதை வாங்கி ....பருகிக்கொண்டே " மாலதி ...இன்று பட்டணம் போக வேணும் என்று சொன்னனீர். எத்தனை மணிக்கு போகவேனும். ......வரும்போது இவருக்கு ஒரு சாரமும்( லுங்கி) ..மறக்காமல் வாங்கி வாரும். என்றாள். சம்மதம் சொன்ன மாலதி உடுப்பு மாற்றி வெளிக்கிட தயாரானாள் நாலு வயது ரோகிணியும் இரண்டு வயது ரோஷானும் இவளது குழந்தைகள். அவர்களுக்கே உரிய துடுக்கு தனம் உடையவர்கள். மாமனார் பால் போத்தல்களுடன் விநியோகிப்பதற்காக புறப் பட்டார். காலை உணவை எல்லோருக்கும் கொடுத்து தனது பங்கையும் முடித்து கொண்டவள்.ஒன்பது மணி பஸ்சுக்காக புறப்படும் போது பிள்ளை களையும் அமைதிபடுத்தி "விளையாட்டு பொருட்கள் வாங்கி வர வேணும் அம்மா" என்னும் வேண்டுதல் வழியனுப்புதலோடு பஸ் தரிப்பு நோக்கி புறப்பட்டாள் . பஸ் வண்டியும் நேரத்துடன் வரவே ...அதில் ஏறி உட்கார்ந்தாள். பற்றுச்சீ ட்டை பெற்று கொண்டவள் எண்ணம் கடந்த காலத்தை நோக்கி சிறகடித்தது................. தன் பெற்றவரை மீறி மகேந்திரனை கைப்பிடித்துக் கொண்டவள் தான் மாலதி.இவள் பிறந்த வீட்டில் வசதி வாய்ப்புகளை கொண்டவள் . சற்று வசதியானவள். மகேந்திரனை காதலித்தபோது ...அந்தஸ்த்து காரணமாய் மறுக்கவே ஒருநாள் ஓடிபோய் திருமணம் செய்து கொண்டாள். அதே ஊரில் இருந்தாலும் இவளது பெற்றோரும் சகோதரார்களும் இவளை சேர்ப்பதில்லை . கைப்பிடித்த நாள் முதல் மகேந்திரனும் இவளை கண்கலங்காமல் பாதுகாத்தான். மகேந்திரன் , சாதாரண விவசாயக் குடிமகன். தாய் தந்தைக்கு ஒரே பிள்ளை . சற்று வசதி வாய்ப் புகள் குறைவு என்பதால் ஓலை வீட்டிலேயே வாழ்ந்தார்கள். இதனால் தான் மாலதி வீட்டுக் காரர் இந்த திருமணத்தை விரும்பவில்லை. தங்கள் அந்தஸ்துக்கு ஏற்ற மாதிரியில்லை என்பதால். மண முடித்து இரு குழந்தைகளும் பிறந்த பின் , தன் வாழ்வுக்காகவும் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் பலத்த முயற்சியின் பின் வெளி நாட்டுக்கு புறப்பட்டான் . வாழ்வில் அவன் தாய் தந்தையை பிரிந்த துயரம் ...வேலையின் கடின உழைப்பு துயரை தந்தாலும் எதிர்காலத்துக்காக தாங்கி கொண்டான். மாலதி அவன் அனுப்பிய காசு வங்கியில் பெற்றுக்கொள்வதற்காக தான் பட்டணம் செல்கிறாள். புது வருடம் பிறக்க போகிறது மூத்தவள் ரோகினியை பாடசாலயில் சேர்க்க வேண்டும் ......மாமனார் ..மாமியாருக்கு துணிமணிகள் எடுக்கவேண்டும். மகன் ரோஷன் ...ஒரு மூன்று சில்லு சைக்கிள் வண்டி கேட்டுக்கொண்டிருந்தான்...........அத்தோடு இந்த பணத்தில் மகேந்திரன் போவதற்காக் பட்ட கடனுக்கும் கொஞ்சம் கட்டவேண்டும்......... வங்கிக்கு சென்று பணத்தை பெற்றவள் பெரும் பகுதியை ஒரு இறுக்கிய இணைப்பு கொண்ட கைப் பையினுள் மறைத்து வைத்தாள் மீதியில் தேவையான பொருட்களை வாங்கினாள் .இரண்டு கையிலும் பொருட்களின் சுமை . மனதில் வீடு நோக்கிய அன்புச்சுமை ...........அன்று ஏனோ வஸ் வண்டி மிகவும் ஊர்ந்து செல்வது போல் இருந்தது..வீட்டில் மாமியார் மதிய உணவை பேரப் பிள்ளைகளுக்கு ஊட்டி விட்டு, தான் உண்ணாமல் இவளுக்காக காத்திருப்பார்."அம்மா" என்று அழைத்துக்கொண்டு என் மருமகள் வருவாள் என்று பசியோடு வாசலை பார்த்து கொண்டிருப்பார் என்பது ...மனதை மெல்ல நெருடிக்கொண்டு இருந்தது . ஆம் இவள் தன் மாமியாரை " அம்மா " என்று தான் அழைப்பாள். அவரும் தனக்கு பெண் குழந்தை இல்லயே என்ற கவலை தீர்க்க வந்த இன்னொரு) மகள் என்று தான் உறவு பாராட்டுகிறார்கள். மாமி மருமகள் என்றாலும் வேற்றுமை பாராட்டுவதில்லை . .....மாலதிக்கு அவர் இன்னொரு அம்மா..... சில குடும்பங்களில் பெண்ணுக்கு பெண்களால் தான் எதிரி . எதிலும் குறை சொல்வது . பிழை பிடிப்பது மச்சாள் ( நாத்தனார் ) இருந்துவிடடால் போதும் தனது செல்வாக்கை கைப்பற்ற வந்த எதிரி என்றே எண்ணுவார்கள். அவளுக்கும் ஒரு காலம் வரும் .......நல்ல வாழ்வு வரும் . வாழ்வு வந்தால் இழந்த சொந்தங்கள் தேடி வரும். ..
  15 points
 47. சிறக்குதனை விரித்து நாம் பறப்பதெப்போ சுதந்திரமாய் நாமெம்மை உணர்வதெப்போ சிந்தனைச் சிறகை ஒடித்து வைத்து அடக்குமுறைக்குள் எமைச் சிறைப்பிடித்து அழகாய்ப் பூட்டி வைத்துவிட்டார் ஆண்கள் பெண்கள் இன்றி பேரண்டமும் இல்லை உலகில் மனிதப் பெருக்கமும் இல்லை மகிழ்வு கொள்ளவும் எதுவுமே இல்லை மானிட வாழ்வில் பெருமையும் இல்லை உணர்வுக் குவியலின் உன்னதமும் அவள் உறவைப் பிணைத்திடும் ஊக்கியும் அவளே உயிர் காத்திடும் மருந்தும் அவளே உலக மாந்தரின் உயிர்ப்பும் அவளே உணர்வுகள் தந்து உறவுகள் காக்க தன்னைக் கரைத்து தவறுகள் மறந்து சொந்தம் காக்க சொற்கள் குறைத்து பந்தம் போற்றப் பலதும் துறந்து உதிரம் தந்துயிர் தந்திடுவாள் பெற்றவர்க்காகப் பெருமை துறந்து மற்றவர்க்காக மனதைப் புதைத்து கற்றிருந்தாலும் கலைகள் மறந்து பற்றியிருக்கும் பணிகள் நிறைந்து பார்த்திருக்கும் கண்கள் நிறைக்க பாரங்கள் பலவும் சுமந்திடுவாள் குடும்பங் காக்கும் இயந்திரமாய் அவள் தன்னிகரில்லா பெண்ணின் தாய்மை தயங்காது உழைத்திடும் அவளின் மேன்மை திடமாய்க் கொண்டிடும் அவளின் வாய்மை தேசங்கள் எங்கிலும் தெரிந்த உண்மை ஆயினும் அவள் இன்றும் ஆணின் அடிமை கனவுகளும் கற்பனைகளும் காட்சிகளாய் விரிவது பெண்மனம் காரணங்கள் தேடி அலைவதும் கட்டுடைத்துப் போவதும் கொண்டாடி மகிழ்வதும் கொதித்து எழுவதும் அவளே கண்டங்கள் தாண்டிய கற்பனைகளில் விரிவதும் காட்சிகள் கொண்டு கனவாய் இசைபவளும் அவளே திண்ணிய மனதுடன் திடமாய் இருப்பவள் மற்றவர்களுக்காய் மயங்கியே மானமிழந்தே வாழ்கின்றாள் பத்து மாதங்கள் பத்திரமாய்ப் பிள்ளைகளைச் சுமந்திடுவாள் பாசத்துடன் வேடமேற்றுப் போற்றியும் வளர்த்திடுவாள் பருவம் கடந்தபின்னும் பிறந்த குழந்தையாய்ப் பார்த்திடுவாள் பேரன் பேர்த்தி கண்ட பின்னும் பிள்ளைகள் நலனை புறம் தள்ளி சும்மா இருந்து சுகம் காண என்றும் அவளால் முடிவதில்லை கொடிய விலங்குகள் சூழ நின்றிட அச்சம் இன்றியே கூட்டத்தின் தலைவியாய் குடும்பம் காத்தாள் அன்று கட்டியே போட்ட குடும்ப அமைப்பில் அத்தனை பேரிடம் குட்டுகள் வாங்கியே குனிந்த தன் தலையை நிமிர்த்தவும் அஞ்சிக் குனிந்தே வாழ்கின்றாள் இன்றும் பெண்ணுக்காய் அவளின்றி மேன்மை கொண்டிட அத்தனை பேருக்கும் அவள் வேண்டும் எனினும் பொத்திப் பொத்தியே வீட்டினுள் வளர்க்கும் பெற்றோர் ஆணவம் கொண்டு அவளை அடக்கிடும் அறிவற்ற கணவன் ஆதிக்கம் கொண்டே அவளை ஏய்த்திடும் பிள்ளைகள் ஆராதிப்பதாய்ப் பூட்டி வைக்கும் உறவுகள் இப்படி உலகம் முழுதும் பெண்ணை அடக்கிட நடிப்பவர் அதிகம் உன்னால் முடியும் உணர்ந்துகொள் எல்லாம் முடியும் எழுந்து நில் பெண்ணே உன் பலம் தெரியவிடாது உறவுகள் உன்னைச் சூழந்திடும் மண்ணில் உன்னை மேன்மை கொள்ள விடாது உன்னைக் காத்திடும் மாயப் பிம்பம் பலதும் காட்டி மயக்கம் கொள்ள வைத்திடும் தேடித் தேடிக் கதைகள் சொல்லி தெரியாதவளாய் ஆக்கிடும் கூடிக் கூடிக் கதைத்தே உன்னைக் குற்றுயிராயும் ஆக்கிடும் பேதை என்று பேடியர் கூடப் பிதற்றித்திரிய வைத்திடும் காமம் கொண்ட கண்கள் பலதும் முன்னும் பின்னும் பார்த்திடும் பொறாமை கொண்டு பொருமியபடியே மண்ணில் புதைக்கக் காத்திடும் ஆதலால் உன்னை திமிராய் நீ உணர்ந்து கொள் பெண்ணே ஊனம் எதுவும் உன்னிடம் இல்லை உயிர்ப்புடன் நீ எழுந்திடு எத்தனை பேரின் எள்ளல் கண்டும் ஏக்கம் துறந்து மீண்டிடு உறவுகள் எல்லாம் உடன் வரமாட்டா உண்மை அதை உணர்ந்திடு உயிர் வாழும் காலம் கொஞ்சம் உன்னை நீயும் அறிந்திடு துணிவு கொண்டு துயர் கடந்து தூக்கம் கலைந்து எழுந்திடு காலம் கடந்து எண்ணுவதெல்லாம் கானல் நீராய் ஆகிவிடும் கவலை கொண்டே நீயும் இருந்தால் உன் கோலம் கூட மாறிவிடும் கட்டிப்போட்ட கயிறுகள் அனைத்தும் நீயே அறுத்திட வேண்டுமடி காலம் தானாய்க் கனிந்திடாது காத்திருப்பும் மீண்டிடாது காற்றாய் நீயும் மாறிவிடு கனவுகள் எல்லாம் நினைவுகள் ஆகி துயரங்கள் எல்லாம் தூசாய் மாற உன் நினைவுகள் மட்டும் போதாது மனம் என்னும் மாயக் குதிரையின் மகுடியில் நீயும் மயங்காது அறிவின் ஆழம் தனைக் கடைந்து துணிவின் தூரம் தொட்டுவிட சிந்தனை என்னும் சிறகை விரித்து சிகரம் தொடும் தூரம் வரை பெண்ணே நீயும் தலை நிமிர்ந்து தடைகள் தாண்டிப் பறந்துவிடு
  15 points
 48. கொவிட் 19 அல்லது கொரானோ பலருக்கு பதட்டம். சிலருக்கு உயிர்க்கொல்லி. நமக்கு விளையாட்டு. தினமும் கொவிட் பி சி ஆருடன் (PCR- Polymerase Chain Reaction) காலை தொடங்கி மாலை வரை.. முதலில்.. கோழி உரிப்பது போல கொவிட்டை உரித்தல்.. அல்லது கொழுக்கட்டையை பிய்ப்பது போல் பிய்த்தல்... கொவிட்டை உரித்து.. இதற்கு எக்ஸ்ராக்சன்.. extraction என்பது. கொவிட் கோதை உடைத்து அதன் உள்ளீட்டில் உள்ள ஆர் என் ஏ (RNA- Ribo Nucleic Acid)யை அதாவது கொழுக்கட்டையை பிச்சு உள்ளீட்டை எடுத்து அதற்குள் உள்ள அவித்த பயறைப் பொறுக்கி உண்பது போல்... தனியாக்குதல். இதனை நாம் செய்யத் தேவையில்லை. ஒரு ரோபோவே செய்யும்... இவர் தான் அவர்.. இவர் இந்த அலுவலை ஒரு மணி நேரத்துக்குள் செய்திடுவார்.. அதன் பின்... பிரித்தெடுத்த கொவிட் ஆர் என் ஏ ( RNA) ஐ.. வைச்சுக் கொண்டு வாய்தான் பார்க்கனும்.. ஏனெனில் ஆர் என் ஏயை அப்படியே பெருக்கி எடுக்க இன்னும் வழிமுறைகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றே சொல்லலாம்.. இங்கும் இயற்கை மனிதனை வென்றுவிடுகிறது.. அதனால்.. கில்லாடி மனிதன்.. என்ன செய்கிறான் என்றால்.. ஆர் என் ஏ யை டி என் ஏ.. கொம்பிலிமென்ரரி (Complementary DNA) cDNA ஆக்கி இந்த கொவிட் 19 இன் மரபணுத்தகவல்கள் கொப்பிகளை மில்லியன் கணக்கில் உருவாக்கிக் கொள்கிறான். இந்த ஆர் என் ஏ அல்லது சி டி என் ஏ யோ தொற்றாது. கொவிட் கொழுக்கட்டையாக இருந்தால் மட்டுமே தொற்றும். அதனை கோது.. உள்ளீடு என்று பிரித்துவிட்டால்.. ஆள் காலி. இதனையே மேலே உள்ள ரோபோ செய்கிறது. இதன் பின் பிரித்தெடுத்த ஆர் என் ஏயை பயன்படுத்தி.. மேற்சொன்ன சி டி என் ஏ யை உருவாக்கி.. கொப்பி பண்ணி அதில் உள்ள கொவிட் தனித்துவ ஜீன்களை அடையாளம் கண்டு.. கொவிட் தொற்றை அடையாளம் காண வேண்டும். இந்த வேலைகளையும் ஒரு ரோபோவே செய்யும்.. அவர் இவர் தான். இவர் தன் தொழிலை ஆட்டம் 1 மற்றும் ஆட்டம் 2 என்று ஆடி முடிப்பார். இதற்கான மொத்த நேரம் 2 மணித்தியாலங்கள். இவருக்குள் பல அயிட்டங்கள் வைக்கப்பட்டால் தான் அவர் இந்த வேலையை செய்வார்.. இவரை கணனி கட்டுப்படுத்தும்.. இவருக்குள் இத்தனை அயிட்டங்களை அடக்கனும். இல்லாவிடில் இவருக்குரிய வேலையை இவர் செய்யமாட்டார். இதற்குள்.. ஆர் என் ஏ யை சி டி என் ஏ ஆக்கி பல்கிப் பெருகச் செய்யும் அதன் பின்.. பல்கிப் பெருகின சி டி என் ஏ யில்.. கொவிட் 19 ஐ அடையாளம் காட்டக் கூடிய அதற்கு என்றே தனித்துமான அடையாள அறிகுறிகளை கண்டறியச் செய்யச் செய்வது. அதாவது தனித்துவமான மரபணுக்களை (Genes) தெரிவு செய்து அடையாளம் காட்டுதல். கொவிட்டை அடையாளம் காண இரண்டு அல்லது அதற்கு மேலதிகமான.. தனித்துவமான மரபணுக்கள் பாவிக்கப்படுகின்றன. கொவிட்-19 தெரிவு மரபணுக்களின் தொகையை இந்த வரைபுகள் மூலமாக நமக்கு கணனிகள் கணித்துக் காட்டும். இதில் குறித்த கொவிட் 19 ஜீன் வரைபுகளில் Ct (Cycle Threshold value) அளவீடு..9 தொடங்கி 30 க்குள் அமையின் அதனை கொவிட் 19 தொற்று பாசிட்டிவ் என்று கொள்வார்கள். குறிப்பாக Ct குறைவாக இருப்பின் தொற்று அதிகம்.. கூடியதாக இருப்பின் தொற்றுக் குறைந்து செல்கிறது என்று அர்த்தப்படுத்தப்படும். தொற்றின் மிக ஆரம்பத்திலும் Ct கூடியதாக இருக்கலாம். அதலால் இதனை வாசிப்பதில் கவனமாக இருப்பது அவசியம். ஆக இந்த பி சி ஆர் (இங்கு உண்மையில் பாவிக்கப்படுவது.. rRT-PCR (The COVID-19 RT-PCR test is a real-time reverse transcription polymerase chain reaction (rRT-PCR)) ஆகும். மேற்சொன்ன முறையில் இதனைச் செய்து முடிக்க.. கிட்டத்தட்ட 4 மணி நேரங்கள் எடுக்கும். இதனை விட குறுகிய நேரத்தில் செய்யக் கூடிய வழிமுறைகளும் உண்டு. ஆனால்.. இந்த முறையில்.. சென்சிர்ரிவிற்றி -sensitivity அதிகமாகும். எனி மாறல்கள் தொடர்பில் பார்ப்போம்.. என்னதான் மாறல் (variant).. தோற்றம் மாறிய கொவிட் என்று உலகம் உங்களை வெருட்டினாலும்.. அதன் சில ஜீன்கள் அப்படியே தனித்துவமாகவே தான் உள்ளன. இந்த மாறல்கள்..கொவிட் 19 இல் வெளித்தள்ளிக் கொண்டிருக்கும்.. ஒட்டும் கிளைகோபுரதத்தில் (Glycoprotein -Spike) தான் மாறல் வருகிறது. அதன் ஒட்டும் தன்மையில் தான் தொற்றும் தன்மை உள்ளது. கொவிட் 19 வெறும் 30 ஆயிரம் bp (base pairs)தான்.. 30 ஆயிரம் மரபணு அலகுகள் என்று வைச்சுக் கொண்டால்.. இது ஆட்டிப்படைக்கும் மனிதனில் இதே 6.4 பில்லியன் bp கள். கொவிட் - 19 எமது உடலுக்குள் போடும் ஆட்டத்தை விளங்கிக் கொண்டாலே.. போதும்.. இவரை மடக்கிற பல வழிகளை கண்டறியலாம். எல்லா வைரஸ் போலவும் கொவிட் டும் கொட்டிக்காரன் அல்ல அல்ல சுழியன். எமது உடலுக்குள் நுழைந்து எமது கலங்களில் உள்ள இரசாயனப் பொறிகளை பயன்படுத்தி தன் இனத்தைப் பெருப்பித்துக் கொள்கிற.. திறமை உள்ள சுழியன். சரி.. எனி எப்படி கொவிட் இருக்கா இல்லையா என்று சொல்லுறது.. கொவிட் எல்லா கலங்களிலும் தொற்ற முடியாது. அவரின் ஒட்டுந்தன்மையுள்ள முள்ளுத்தொப்பியில் உள்ள முள்ளு ஒட்டக்கூடிய கலங்களை தான் அவர் ஆரம்பித்தில் தாக்குவார். அது எமது சுவாசப்பாதை வழி மென்மையான இழையங்கள்.. அமைந்திருப்பது அவருக்கு இந்தச் செயலைச் செய்ய இலகுவாகிவிட்டது. எனவே சுவாசப் பாதையில்.. குறிப்பாக உள் மூக்குத்துவாரங்கள்.. அடித்தொண்டைப் பகுதியில் இருந்து பெறப்படும்.. பரிசோதனை மாதிரிகள் அடங்கிய காதுக்குடம்பி போன்ற ஆனால் இதற்கு என்று தயாரித்த மென் குடம்பிகளை (swab) பயன்படுத்தி செய்வார்கள். மேலே படத்தில் இருப்பது துரித பரிசோதனை (Rapid test kit or Lateral flow test kit) தொகுதி. இதனை வீட்டிலேயே செய்யலாம். இதில் கொவிட் அன்ரிஜென் (Antigen) இருக்கா என்று அதாவது கொவிட் தொற்றி இருக்கா என்று கண்டுபிடிக்கலாம். இதனை வெறும் 30 நிமிடத்துக்குள் செய்யலாம். ஆனால்.. உண்மையில் 10 நிமிடத்துக்குள் முடிவை சொல்லலாம். இதற்கு மேலதிகமாக.. அன்ரிபாடி.. (antibody test) ரெஸ்ட் செய்வது. அதாவது எமது உடலில் கொவிட் -19 க்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருக்கான்னு கண்டறிதல். இதற்கு சில துளி இரத்த மாதிரிகள் போதும். இறுதியாக.. என்னதான் கொவிட் 19 தோடு விளையாடினாலும்.. பாதுக்காப்புக் கவசங்கள் அணிந்து கொண்டு போர்க்களச் சண்டைக்கு போவது போல் தான் போக வேண்டி இருக்குது. காரணம்.. கொவிட் நேரடியாக விளைவிக்கும் பாதிப்பை விட எமது உடல் கொவிட்டுக்கு எதிராக அபரிமிதமாக தொழிற்பட ஆரம்பித்தால் தான்.. எமது உடல் எம்மையே அதிகம் பாதிக்கச் செய்துவிடும். அதனால்.. கொவிட்19 தொற்றுக்கண்டால்.. அச்சம் தவிர்த்து நோயெதிர்ப்பு சக்தி/ நிர்பீடணச் செயற்பாட்டை அதிகரிக்கவல்ல.. உணவுகளை உட்கொள்வதோடு.. தொண்டை.. நாசிப் பகுதியில் இருக்கும் கிருமிகளை கொல்லக் கூடிய அல்லது வெளியேற்றக் கூடிய.. உணவுகளை.. சிகிச்சை முறைகளை முன்னெடுக்கலாம். சுவாச அல்லது நாட்பட்ட நீண்ட கால நோயாளிகள்.. நிர்பீடணம் அல்லது நோய் எதிர்ப்புசக்தி.. பலவீனமானவர்கள்.. கொவிட் 19 எதிரான அவர்களின் உடற்தொழிற்பாடு காரணமாக.. பாதிப்பை அதிகம் சந்திக்க வாய்ப்புள்ளது. அவர்கள்.. தேவை உணர்ந்து வைத்திய சேவைகளிடம் உதவி நாட வேண்டும். சரி.. எனி தனிமைப்படுத்தல்... முகக்கவசம் அணிதல்.. கைகழுவுதல்.. தனிமனித இடவெளி.. இதெல்லாம்.. தொற்றுக்கான வாய்ப்பை.. குறைக்கும் வழிமுறைகளே தவிர.. இவை தொற்றுக்களை முற்றாக தடுக்காது. எனி வக்சீனுக்கு (vaccine) வருவோம்.. பெறப்பட்டுள்ள வக்சீன்கள்.. இந்த வைரசின்.. சில ஆர் என் ஏ பகுதிகளை பயன்படுத்தி.. அதனை பிரதிநிதித்துவப்படுத்தும்.. கூறுகளை உருவாக்கி.. பெறப்பட்டதே இந்த வக்சீன். ஆனால் வேறு சில வழிமுறைகளிலும் இந்த வக்சீன்கள் பெறப்படலாம். இந்த வக்சீனை செலுத்தினால்.. உங்கள் உடல் இந்த வைரசுக்கு எதிரான அன்ரிபாடிகளை உருவாக்கி வைச்சுக் கொள்ளும். ஒருவேளை உடலில் வைரஸ் தொற்று ஏற்பட்டால்.. உடனடியாகவே இந்த அன்ரிபாடிகள் தொழிற்பட ஆரம்பிப்பதால்.. இந்த வைரஸ்கள் உடலுக்குள் புகுந்து பெருகிக் கொள்ள முதலே அழிக்கப்பட்டு விடும். அதனால்.. இதன் தாக்கத்தில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். இந்த வக்சீன்களை எடுப்பதால்.. பின்விளைவுகள் வருமா என்றால்.. பாரிய பின்விளைவுகள் வர வாய்ப்புக்குறைவு. ஆனால்.. தனிப்பட்ட நபர்களின் உடல்நிலைகு ஏற்ப இதனை தெரிவு செய்வது நல்லம். குறிப்பாக சிலருக்கு.. பென்சிலின் அலேர்ஜி (Allergy)/ ஒவ்வாமை இருந்தால்.. எப்படி பென்சிலின் எடுக்க முதல் பரிசோதித்து எடுக்கச் சொல்வார்களோ அப்படி. இந்த வக்சீன்கள் எமக்கு புதிதல்ல. நாம் பிறந்த காலத்தில் இருந்து பல வக்சீன்கள் எமக்குள் ஊட்டப்பட்டே உள்ளன. சில வக்சீன்கள்.. உடலில் மாறா வடுக்களை ஏற்படுத்தி இருப்பதையும் பார்ப்பீர்கள். அந்தளவுக்கு இது இல்லை. மேலும்.. குருதிப் பிளாஸ்மா (Blood Plasma) ஏற்றுதல்.. கொவிட் 19 தொற்றுக்கண்டு.. தேறிய 35 வயதுக்கும் மேற்பட்ட ஆண்களின் குருதியில் இருந்து பெறப்படும் பிளாஸ்மாவை பயன்படுத்தி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் கொவிட் நோயாளிகள்.. கொவிட்டை எதிர்த்துப் போராடக் கூடிய அன்ரிபாடிகளை கொடுப்பதுண்டு. ஏலவே இப்படியான வழிமுறைகள் வேறு சில நோய்களுக்கு எதிராகவும் பாவிக்கப்படுவதுண்டு. சரி.. இத்தோடு.. கொவிட்-19 முள்ளுப்பந்து விளையாடி முடிந்துவிட்டது. இயன்றவரை எளிமைப்படுத்தி தனித்தமிழில் தர முயன்றிருக்கிறோம். எமது சமூகம்.. இந்த கொவிட் 19 சார்ந்தும்.. அதன் தற்போதைய நிலவரம் குறித்தும் அறிந்து அச்சம் நீக்கி வாழ. ஆக்கம்.. யாழிற்காக.. நெடுக்ஸ்.
  15 points
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.