• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

பரியாரி

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  271
 • Joined

 • Last visited

Everything posted by பரியாரி

 1. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றினார் ரஞ்சன் ராமநாயக்க! In இலங்கை August 5, 2019 9:29 am GMT 0 Comments 1608 by : Benitlas பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று(திங்கட்கிழமை) உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார். ஸ்ரீஜயவர்தனபுர கோட்டே பிரதேசத்திலுள்ள ஆனந்த பாலிகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள, பரீட்சை மத்திய நிலையத்திலேயே அமைச்சர் ரஞ்சன் பரீட்சைக்கு தோற்றியுள்ளார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று காலை ஆரம்பமாகியுள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள இரண்டாயிரத்து 678 பரீட்சை மத்திய நிலையங்களில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். 315 பரீட்சை இணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/உயர்தரப்-பரீட்சைக்கு-தோற/
 2. சஜித்துடன் இணையவுள்ளதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்தது சுதந்திர கட்சி! In இலங்கை August 5, 2019 9:52 am GMT 0 Comments 1275 by : Benitlas சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய கூட்டணி ஒன்றினை உருவாக்கவுள்ளதாக வெளியான தகவலினை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முற்றாக மறுத்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இவ்வாறு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்க வேண்டிய அவசியம் சுதந்திர கட்சிக்கு கிடையாது. பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி சாத்தியமாவதற்கு வாய்ப்பில்லை. தனித்து பயணிப்பது தொடர்பாக மத்திய குழு கூட்டத்தில் ஆராயப்படும். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் போது சஜித் பிரேமதாஸவை பிரதமராகப் பதவியேற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி கேட்டிருந்தார். இதனை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறான உண்மைக்கு புறம்பான செய்திகள் பரப்பப்படுகின்றன. தற்போது ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முரண்பாடுகள் எழுந்துள்ளது. இந்நிலையில், மீண்டும் ஐ.தே.கவுடனோ அல்லாது சஜித்துடனோ இனியொருபோதும் சுதந்திர கட்சி இணையாது என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாகவுள்ளோம்’ என அவர் தெரிவித்துள்ளார். http://athavannews.com/சஜித்துடன்-இணையவுள்ளதாக/
 3. தனி நபர்களுக்கு அதிகாரத்தை வழங்கும்பொருட்டு எவரும் வாக்களித்துவிடக்கூடாது – அநுர In இலங்கை August 5, 2019 8:48 am GMT 0 Comments 1287 by : Benitlas இந்த ஜனாதிபதித் தேர்தலில் தனி நபர்களுக்கு அதிகாரத்தை வழங்கும்பொருட்டு, எவரும் வாக்களித்துவிடக்கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘சாதாரணமாக முன்னரெல்லாம், தேர்தல் காலத்தில்தான் தேர்தல் சமர் இடம்பெறும். ஆனால், இப்போது அது மாற்றமடைந்து தேர்தலுக்கு முன்னரே கட்சிகளுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி, உடன்பாடொன்றை ஏற்படுத்தி பாரிய கூட்டணியுடன் தேர்தலில் களமிறங்குவோம் என்று அறிவித்தது. 5 ஆம் திகதி ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதாகவும் அந்தக் கட்சிக் கூறியது. ஆனால், தற்போது பிரச்சினைகள் காரணமாக அனைத்தும் இல்லாது போய்விட்டது. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இன்னும் அங்கு போட்டித்தன்மை நிலவிக்கொண்டு வருகிறது. அதேபோல், மஹிந்த ராஜபக்ஷவும் இன்னும் தமது தரப்பில், ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படவில்லை என்று கூறிவருகிறார். கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதே ஒழிய, இன்னும் இறுதித் தீர்மானம் அங்கு எடுக்கப்படவில்லையாம். உண்மையில், வேறு ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க மஹிந்தவுக்கு விருப்பமில்லை. அவரைப் பொறுத்தவரை அவர் மட்டும்தான் இந்த நாட்டை ஆட்சி செய்ய வேண்டும். இனிமேல் இந்தத் தரப்புக்களை நம்பி பலன் இல்லை. தனித்தனி நபர்களுக்கு அதிகாரத்தைக் கையளிப்பதை விடுத்து, அனைவரும் இணைந்து ஒரு பொதுவான நிலைப்பாட்டுக்கு வரவேண்டும். பிரமதாஸவின் பின்னால் சென்றோம். பின்னர் சந்திரிக்காவின் பின்னால் சென்றோம். அடுத்ததாக மஹிந்த, ரணில் என அனைவரின் பின்னாலும் சென்றுவிட்டோம். எனினும், நாட்டை அபிவிருத்தி செய்ய எம்மால் முடியாமல்தான் போனது’ எனக் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/தனி-நபர்களுக்கு-அதிகாரத்/
 4. புர்கா, நிகாப் உடைக்கு நிரந்தர தடையுத்தரவு வரக்கூடாது – ஹக்கீம்! In இலங்கை August 5, 2019 8:37 am GMT 0 Comments 1312 by : Benitlas முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் புர்கா, நிகாப் உடைக்கு நிரந்தர தடையுத்தரவு வரக்கூடாது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கையில் மாத்திரம் இந்த சட்டத்தை கொண்டுவருவதற்கு அவசியமில்லை. நிரந்த தடைக்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படபோது, அதற்கான மாற்றுவழி குறித்து தீர்மானிப்பதற்கு ஒருவாரம் காலஅவகாசம் கோரியிருக்கிறேன். அதற்குள் இதற்கான நிரந்தர தீர்வுகுறித்து நாங்கள் ஒரு முடிவுக்கு வரவேண்டும். ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த தாக்குதல் என்பது வெளிச்சக்திகளின் சதியின் ஒரு வெளிப்பாடு. அதில் பகடைகளாக பாவிக்கப்பட்டவர்கள் ஒரு கூலிப்படையினர். இந்த தீவிரவாதம் வெளிப்படுவதற்கான அறிகுறிகள் விடயத்தில் நாங்கள் சிறிது அசட்டையாக இருந்துவிட்டோம். ஆனால், ஜம்மியத்துல் உலமா ஜனவரி மாதத்திலேயே இதுகுறித்து அபாய அறிவிப்பை விடுத்திருந்தது. பயங்கரவாதத்துக்கு இஸ்லாத்துக்கும் முடிச்சுப்போடுவதற்கு எத்தனிப்பவர்கள், முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் மீது கைவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த விடயங்களைப் பார்த்து பதற்றப்படுவதை நாங்கள் முதலில் நிறுத்தவேண்டும். இஸ்லாம் வளர்ந்தமைக்கு பிரதான காரணம் சகிப்புத்தன்மையாகும். ஒருசில பித்தலாட்டக்காரர்களின் செயற்பாடுகளினால் நாங்கள் எல்லாவற்றையும் இழந்துவிடுவோம் என்ற மனப்பாங்கை கைவிடவேண்டும். பல்லின சமூகங்கள் வாழும் நாட்டில் எங்களது உரிமைகளுக்காக அத்தனை பலங்களையும் பிரயோகித்து போராட வேண்டும். இந்தப் போராட்டம் அரசியல், ஆன்மீக, தொழில்சார் ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டும். தெளிவான முறையில் பேசுவதன்மூலம் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணலாம் என்பதில் நாங்கள் பூரண நம்பிக்கைகொள்ள வேண்டும். அமைச்சு பதவிகளை பொறுப்பெடுத்த மறுநாள் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், நிகாப் மற்றும் புர்கா உடையை நிரந்தரமாக தடைசெய்வதற்கான உத்தரவை அமைச்சர் தலதா அத்துகோரல சமர்ப்பித்திருந்தார். அவசரகாலச் சட்டம் தளர்த்தப்பட்டால் நிகாப், புர்கா தடை இல்லாமல் போய்விடும். அதன்பின்னர் நாட்டிலுள்ள பேரினவாத அமைப்புகள் அதை தூக்கிப்பிடித்து பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தில் அதை நிரந்தரமாக தடைசெய்வதற்கு அரசாங்கம் முனைப்புக் காட்டுகிறது. குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை நான் வாசித்துப் பார்த்தபின், இந்தப் பிராந்தியத்தில் நிகாப், புர்கா ஆடைகளை தடைசெய்யும் முதலாவது நாடாக இலங்கை வருவதற்கு எந்த தேவையுமில்லை என்பதை நான் சுட்டிக்காட்டினேன். ஜனாதிபதிதான் இந்த விடயத்தை அவசரப்படுத்துவதாக தலதா அத்துக்கோரல சொன்னார். நான் ஜனாதிபதியிடமும் விடயத்தை எடுத்துக்கூறி, சம்பந்தப்பட்ட தரப்பிடம் பேசி மாற்றுவழி குறித்து தீர்மானிப்பதற்கு ஒருவாரம் காலஅவகாசம் கேட்டிருக்கிறேன். இந்த சட்டமூலம் குறித்தும் நான் பிரதமரிடம் சில விடயங்களை தெளிவுபடுத்தியிருக்கிறேன். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் முஸ்லிம் பெண்களின் கண்ணியத்திற்கு சில சோதனைகள் வரலாம். இந்த சூழ்நிலையில் முகம் மூடுவதை தற்காலிகமாக தவிர்ந்துகொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமாவும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் பெண்களுக்கு அறிவிறுத்தியிருந்தன. நிகாப், புர்காவுக்கு நிரந்தர தடையுத்தரவு வரக்கூடாது என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. தனிமனித உரிமைகளில் கைவைக்க முடியாது. அது அடிப்படை மனித உரிமை மீறலாகவே கருதப்பட வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/புர்கா-நிகாப்-உடைக்கு-நி/
 5. ஜனநாயக தேசிய முன்னணி குறித்து ரணில் முக்கிய அறிவித்தல்! In ஆசிரியர் தெரிவு August 5, 2019 8:00 am GMT 0 Comments 1251 by : Benitlas ஜனநாயக தேசிய முன்னணி இம்மாத இறுதிக்குள் உதயமாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் ‘ஜனநாயக தேசிய முன்னணி’ கூட்டணிக்கான ஒப்பந்தம் இன்று(திங்கட்கிழமை) கைச்சாத்திடப்படும் என, ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது. எனினும், கூட்டணி தொடர்பாக எழுந்த சர்ச்சை காரணமாக குறித்த நிகழ்வு மற்றுமொரு தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி நேற்று அறிவித்தது. இந்தநிலையில் இதுகுறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் ஏனைய அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கவுள்ள கூட்டணிக்கான ஒப்பந்தம் இம்மாத இறுதிக்குள் கைச்சாத்திடப்படும் எனவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். புதிய கூட்டணி ஒன்றினை அமைப்பது குறித்த யாப்பில் காணப்படும் குளறுபடிகள் காரணமாக, கூட்டணி அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/ஜனநாயக-தேசிய-முன்னணி-குற/
 6. இளம் தாய்மார்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி! In ஐரோப்பா August 3, 2019 3:42 am GMT 0 Comments 1130 by : Benitlas சுவிஸில் இளம் தாய்மார்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுவிஸில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைய சுவிஸில் 20 வயதுக்கு உட்பட்ட இளம் தாய்மார்களின் எண்ணிக்கை 0.8 சதவீதம் என தெரிவிக்கப்படுகின்றது. இது ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்பதுடன், ஐரோப்பியாவிலேயே இளம் தாய்மார்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என கருதப்படும் டென்மார்க்கில் 1 சதவீத இளம் தாய்மார்களே உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், ஐரோப்பிய நாடுகளில் இளம் தாய்மார்களின் எண்ணிக்கை சராசரியாக 4 சதவீதம் எனவும் கூறப்படுகிறது. இதேவேளை, பல்கேரியா மற்றும் ருமேனிய நாடுகளில் இளம் தாய்மார்களின் எண்ணிக்கை 12 சதவீதம் எனவும் தெரியவந்துள்ளது. http://athavannews.com/இளம்-தாய்மார்களின்-எண்ணி/
 7. ஹீத்ரோ விமான நிலையத்தின் சில விமான சேவைகள் இரத்து! In இங்கிலாந்து August 3, 2019 7:23 am GMT 0 Comments 1091 by : Benitlas ஹீத்ரோ விமான நிலையத்தின் சில விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து ஹீத்ரோ விமான நிலைய ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக முன்னரே அறிவித்திருந்தது. எதிர்வரும் 5, 6, 23, 24 ஆம் திகதிகளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காவலர்கள், பொறியியலாளர்கள், பயணிகள் சேவை செயற்பாட்டாளர்கள் மற்றும் சாரதிகள் உட்பட 4000 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதன்காரணமாக ஹீத்ரோ விமான நிலையத்தின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தநிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்தின் சில விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக எதிர்வரும் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் 172 விமான சேவைகள் இவ்வாறு இரத்துச் செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. http://athavannews.com/ஹீத்ரோ-விமான-நிலையத்தின்/
 8. ஆந்திரா சிறையில் 27 கைதிகளுக்கு எய்ட்ஸ் – பிணை வழங்கக் கோரி மனுத்தாக்கல் In இந்தியா August 3, 2019 7:08 am GMT 0 Comments 1128 by : Yuganthini ஆந்திரா சிறையில் 27 கைதிகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் சார்பில் பிணை செய்யகோரி மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம்- ராஜமுந்திரியிலுள்ள மத்திய சிறைச்சாலையில் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களில் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த சல்லா எடுகொண்டலும் ஒருவர் ஆவார். கொலை வழக்கு ஒன்றில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்ற இவர் கடந்த ஆண்டு பெப்ரவரி 2ஆம் திகதி முதல் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தனக்கு எய்ட்ஸ் நோய் சிகிச்சை பெற வேண்டியுள்ளமையினால் பிணையில் செல்ல அனுமதி வழங்க வேண்டுமென ஆந்திரா உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தார். இவ்விடயம் குறித்து சிறை அதிகாரிகளிடம் மொத்தம் எத்தனை கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் உள்ளது? அவர்களுக்கு என்னென்ன மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகிறதென நீதிமன்றத்தினால் விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கு சிறையில் மொத்தம் 27 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக சிறை அதிகாரிகள் பதில் அளித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர். இவ்விடயம் குறித்து சிறை கண்காணிப்பாளர் ராஜாராவ் தெரிவித்துள்ளதாவது, “எய்ட்ஸ் பாதிப்புள்ள 27 கைதிகளில் 19 பேர் தண்டனை காலத்தை அனுபவிக்கவரும் போதே அவர்களுக்கு நோய் இருந்தது. ஏனைய 8 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்ற அனைவருக்கும் வாரம் ஒரு முறை அரச வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது” என்றார். ஆனால் சிறையில் கைதிகளுக்கு போதிய மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு வசதிகள் இல்லை எனவும், சிறையிலுள்ள வைத்தியசாலை வைத்தியர்கள் பணியில் இருப்பதில்லை என்றும் முறைப்பாடுகள் எழுந்துள்ளன. மேலும் சிறையில் ஓரினச்சேர்க்கை உள்ளிட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் நடப்பதாகவும் கைதிகளுக்கு ஒழுங்காக உணவு வழங்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த முறைப்பாடுகளை மறுத்துள்ள சிறைத்துறை அதிகாரிகள், கைதிகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுவதாகவும், நோய் தடுப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர். http://athavannews.com/ஆந்திரா-சிறையில்-27-கைதிகள/
 9. திருட வந்த மளிகை கடையில் கொள்ளையன் செய்த வேலையால் கடலூரில் பரபரப்பு In இந்தியா August 3, 2019 8:26 am GMT 0 Comments 1655 by : Yuganthini ‘உயிரை பணயம் வைத்து திருட வந்த என்னை ஏமாற்றலாமா?’ என்று மளிகை கடைக்காரருக்கு கொள்ளையன் ஒருவன் கடிதம் எழுதி வைத்து அதிர்ச்சி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் கடலூர் பிரதான வீதியருகில் மளிகை கடையொன்றை நடத்தி வருகிறார். கடந்த 1ஆம் திகதி இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலையில் வந்து வழக்கம்போல கடையை திறந்தபோது, பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது, அரிசி, கோதுமை மாவு, கடலை மாவு மூட்டைகளை கிழித்து வாரி இறைக்கப்பட்டிருந்தன. அதோடு, கடையின் மேற்கூரையில் இருந்த ஓடுகளும் பிரிக்கப்பட்டிருந்தன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெயராஜ், இவ்விடயம் குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த மந்தாரக்குப்பம் பொலிஸார், கடையை பார்வையிட்டனர். அப்போது கடையிலுள்ள கல்லா பெட்டியில் ஒரு கடிதம் இருந்தது. அந்தக் கடிதத்தில், ‘உயிரை பணயம் வைத்து திருட வந்தால், காசு இல்லாமல் கல்லாவை துடைத்து வைத்து என்னை ஏமாற்றலாமா? அதுக்குதான் இந்த குரங்கு வேலை’ என எழுதப்பட்டிருந்தது. இதன் ஊடாக கடந்த 1ம் திகதி இரவு, ஜெயராஜ் கடையை பூட்டி விட்டு சென்ற பின்னர் நள்ளிரவில் ஓட்டை பிரித்து கடைக்குள் கொள்ளையன் இறங்கி இருப்பது தெரியவந்தது. வழக்கமாக ஜெயராஜ், கடையில் வசூலாகும் பணத்தை எடுத்து சென்றுவிடுவார் என்பதால், கல்லா பெட்டியில் பணம் இல்லை. இது கொள்ளையனுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையன், கடை உரிமையாளருக்கு கடிதம் ஊடாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளான். கடிதத்தில் குறிப்பிட்டதை போன்று குரங்கு வேலையாக, அங்கிருந்த அரிசி உள்ளிட்ட மூட்டைகளை பிளேடால் வெட்டி சென்று இருக்கிறான். இந்நிலையில் கடிதம் எழுதுவதற்கு பயன்படுத்திய மார்க்கர் அங்கே கிடந்தது. அதில் கொள்ளையனின் கைரேகை பதிவாகி இருக்கும் என்பதால் அதைக் கைப்பற்றி பொலிஸார் விசாரித்து வருகின்றனர். குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/திருட-வந்த-மளிகை-கடையில்/
 10. காலநிலை மாற்றம் காரணமாக கடற்றொழில் பாதிப்பு – அம்பாறை மீனவர்கள் கவலை In அம்பாறை August 3, 2019 10:27 am GMT 0 Comments 1033 by : vithushan கடந்த இரு தினங்களாக நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) மருதமுனை, பாண்டிருப்பு,பெரியநீலாவணை சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, நிந்தவூர், ஒலுவில், பொத்துவில் போன்ற பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு, கடல் நீரின் தன்மை வழமைக்கு மாறாக குளிர்ச்சியாக காணப்படுதனால் மீன்பிடி குறைவடைந்துள்ளது. மேலும் இதனால் கரைவலை மீனவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாயவலை மீனவர்கள் சில இடங்களில் மீன்பிடியில் ஈடுபட்டு வருமானம் ஈட்டி வருகின்றனர். அத்துடன் மீன்பிடி உபகரணம் உள்ளிட்ட படகுகள் கரையோரங்களில் மூடி வைக்கப்பட்டுள்ளது. தமது பிரச்சினைகள் தொடர்பாக மீனவர்களில் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “திடீரென கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் மீன்பிடித்தொழில் வீழ்ச்சியடைந்திருப்பதுடன் அன்றாட மீன்பிடி குறைவடைந்துள்ளதனால் நாளாந்த வருமானமும் பாதிப்புற்றுள்ளது. கடல் நீரோட்டத்தின் தன்மையின் மாற்றம் காற்றின் வேகம், நீரின் தன்மையின் மாறுதல் போன்ற காரணிகளால் கடற்றொழில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளனர். http://athavannews.com/காலநிலை-மாற்றம்-காரணமாக/
 11. தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் கிழக்கு மக்களை ஏமாற்றுகின்றனர் – வியாழேந்திரன் In இலங்கை August 3, 2019 10:32 am GMT 0 Comments 1035 by : Dhackshala தமிழ் அரசியல்வாதிகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் கிழக்கு மக்களை ஏமாற்றுவதே நிதர்சனமான உண்மையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார். ஆதவனின் நிலைவரம் நிகழ்ச்சியில், தொலைப்பேசியூடாக கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கில் இணக்க அரசியல் என்ற போர்வையில் தஞ்சமடைந்த அரசியலையே மேற்கொண்டு வருகின்றனர். நாங்கள் இணக்க அரசியல் என கூறுகின்றோம். அவர்கள் தங்களுடைய இராஜதந்திரம் மாகாணத்தை ஆட்டிப்படைப்போம் என்கின்றனர். எனவே, இங்கு ஏமாறுவது மக்களே. தமிழ் அரசியல்வாதிகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஏமாறவில்லை. அவர்கள் இருவரும் தமிழ் மக்களையே ஏமாற்றுகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை” என மேலும் தெரிவித்துள்ளார். http://athavannews.com/தமிழ்-முஸ்லிம்-அரசியல்வா/
 12. வவுனியாவிலும் 5ஜி கோபுரமா? – மக்கள் அச்சம்! In இலங்கை August 3, 2019 8:06 am GMT 0 Comments 1305 by : Dhackshala வவுனியா திருவாற்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கோபுரம், 5ஜி கோபுரம் என உறுதிப்படுத்தப்பட்டால், அக்கோபுரம் உடனடியாக அங்கிருந்து அகற்றப்படுமென வவுனியா நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவித்தார். வவுனியா நகரசபைக்குட்பட்ட நகர்ப்பகுதிகளான பண்டாரிக்குளம், திருநாவற்குளம் ஆகிய பகுதிகளில் 5ஜி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தைச் சூழவுள்ள குடும்பங்களுக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 5ஜி கோபுர வலையமைப்பினால் உடல், உள ரீதியான பாதிப்புக்கள் ஏற்படவாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுவதாக ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளதென்றும் இந்நிலையில் தமது பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கோபுரம் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் இதனை அகற்றிவிடுமாறும் அப்பகுதியிலுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்விடயங்கள் குறித்து வவுனியா நகரசபை உறுப்பினர் சு.காண்டீபனிடம் கேட்டபோதே திருவாற்குளம் விளையாட்டு மைதானம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கோபுரம் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் 5ஜி கோபுரம் என்று உறுதிப்படுத்தப்பட்டு ஆவணம் வழங்கும் பட்சத்தில் அக்கோபுரம் உடனடியாக அங்கிருந்து அகற்றப்படும் என தெரிவித்தார். இதேவேளை பண்டாரிக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 5ஜி கோபுரம் குறித்து நகரசபை உறுப்பினர் கே.சுமந்திரனிடம் கேட்டபோது அவ்விடத்தில் அமைக்கப்பட்டுள்ள கோபுரத்தினை அகற்றுவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். http://athavannews.com/வவுனியாவிலும்-5ஜி-கோபுரம/
 13. சுற்றுலாப் பயணத் தடையை தளர்த்தியது சிங்கப்பூர் அரசு In இலங்கை August 3, 2019 7:45 am GMT 0 Comments 1323 by : vithushan ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து தமது நாட்டு பிரஜைகள் இலங்கைக்கு சுற்றுலா செல்வதை எச்சரித்து விடுத்திருந்த சுற்றுலாப் பயணத் தடையை சிங்கப்பூர் அரசாங்கம் தளர்த்தியுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் இலங்கையில் பாதுகாப்பு பிரச்சினைகள் இல்லை என்பதனால் இலங்கை மீதான பயணத்தடை நீக்கியுள்ளதாக சிங்கப்பூர் அரசாங்கம் இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. இருப்பினும் தற்போது அங்கு அவசரகால சட்டம் அமுலில் இருப்பதனால் வழிபட்டு ஸ்தலங்கள், சுற்றுலாத் தளங்கள் மற்றும் விமான நிலையங்களில் முப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பயணிகள் போதுமான விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது. அத்தோடு ஏற்கனவே இலங்கையில் உள்ள சிங்கப்பூர் நாட்டவர்கள், விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் சிங்கப்பூர் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் சிங்கப்பூர் அரசாங்கம் தமது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. http://athavannews.com/சுற்றுலாப்-பயணத்-தடையை-2/
 14. கோரிக்கைகளை நிறைவேற்றிய அரசாங்கமா? இருண்ட யுகமா? மக்களே தீர்மானிக்க வேண்டும் – பிரதமர் In இலங்கை August 3, 2019 8:18 am GMT 0 Comments 1293 by : vithushan மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிய அரசாங்கத்திடம் நாட்டை கொடுப்பதா அல்லது இருண்ட யுகத்திற்குள் நாட்டை மீண்டும் தள்ளுவதா என மக்கள் தீர்மானிப்பார்கள் என பிரதமர் ரணில் விகிரமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “உலகில் உள்ள பெரும்பாலான அரசாங்கங்கள் தேர்தல்களின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் சிறிதை நிறைவேற்றுவதில்லை. என்றாலும், தற்போதைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம், அதன் வாக்குறுதிகளை அவர்கள் வழங்கிய விதத்தில் நிறைவேற்றிய ஒரு அரசாங்கமாகமாகும். தற்போதைய அரசாங்கத்தினால் அனைத்து துறைகளையும் அபிவிருத்தி செய்ய முடிந்தது. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அவர்களின் பத்து ஆண்டு ஆட்சியின் போது செய்ய முடியாததை தற்போதைய அரசாங்கம் குறுகிய காலத்தில் நிறைவேற்றியுள்ளது. மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரு அரசாங்கத்திடம் நாட்டை ஒப்படைத்து இந்த அரசாங்கத்தை கொண்டு செலவதா? அல்லது நாட்டை இருண்ட யுகத்திற்கு அழைத்துச் செல்லும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டுமா? என மக்கள் எதிர்காலத்தில் முடிவு செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார். http://athavannews.com/கோரிக்கைகளை-நிறைவேற்றிய/
 15. மத்திய மாகாண ஆளுநர் இராஜினாமா In இலங்கை August 3, 2019 8:51 am GMT 0 Comments 1258 by : vithushan மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வருடம் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்த அவர் தனது இராஜினாமா கடிதத்தினை இன்று (சனிக்கிழமை) ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) ஊவா மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/மத்திய-மாகாண-ஆளுநர்-இராஜ/
 16. யாழ்.பேருந்து நிலையத்தில் மோதல்: நடத்துனர் படுகாயம் – மூவர் கைது In இலங்கை August 3, 2019 10:00 am GMT 0 Comments 1144 by : vithushan யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இரு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற மோதலையடுத்து நடத்துனர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவத்தையடுத்து தாக்குதலை நடத்திய கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பேருந்து நிலையத்துக்குள் அழகுசாதனப் பொருள்களை விற்பனை செய்பவர் சிலர் தமது வாகனத்தை பேருந்து நிலையத்துக்குள் கொண்டு செல்ல முற்பட்டனர். அதற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் அனுமதிக்கவில்லை. அதனால் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் அவர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு கூடிய இ.போ.ச. சாரதிகள், நடத்துனர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு ஆதரவாக நின்றனர். அதனால் வியாபாரிகள் சிலர் மற்றும் முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவரும் சேர்ந்து கடைகளுக்குள் இருந்த கம்பிகள், கத்தரிக்கோலை எடுத்து வந்து பாதுகாப்பு உத்தியோகத்தரையும் நடத்துனரையும் கண்மூடித்தனமாகத் தாக்கினர். சம்பவத்தையடுத்து படுகாயமடைந்த நடத்துனர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். தாக்குதலை நடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகள் தொடர்வதாக பொலிஸார் தெரிவித்தனர். http://athavannews.com/யாழ்-பேருந்து-நிலையத்தில/
 17. இரு தேர்தல்களும் ஒரே நாளில் நடத்தப்படாது – மஹிந்த In இலங்கை August 3, 2019 8:35 am GMT 0 Comments 1279 by : vithushan மாகாண சபைத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது தொடர்பாக கவனம் செலுத்தவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்தகைய திட்டம் தேர்தல் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று (சனிக்கிழமை) ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். இதேவேளை அடுத்த வாரம் தேர்தல் கண்காணிப்பாளர்களுடன் சந்திப்பு நடக்கவுள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார். கடந்த இரு நாட்களுக்கு முன்னர், ஜனாதிபதித் தேர்தலையும் மாகாண சபைத் தேர்தலையும் ஒரே தினத்தில் நடத்துமாறு தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். இவ்வாறு இரு தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவதன் மூலம் அரசாங்கம் 20 பில்லியன் ரூபாயினை சேமிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இரு-தேர்தல்களும்-ஒரே-நாள/
 18. இந்துக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர் – மைத்திரி, ரணில், மோடிக்கு அவசரக் கடிதம்! In இலங்கை August 3, 2019 8:37 am GMT 0 Comments 1355 by : Dhackshala வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளை தடுத்து நிறுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்து அமைப்புக்களின் ஒன்றியம் அவசரக்கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு அந்த அமைப்பினால் அவசரக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சமீபகாலமாக வரலாற்றுக் காலம் முதல் அமைக்கப்பட்டிருந்த இந்து ஆலயங்கள் அழிக்கப்படுவதும் ஆலய வளைவு உடைக்கப்படுவதும் பௌத்தர்கள் வாழ்ந்திராத பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதும் இலங்கை வாழ் இந்துக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பின்வரும் வலுவான கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு உரிய நடவடிக்கையை மேற்கொண்டு இந்துக்கள் அனைவரும் அச்சமின்றி சமய வழிபாடுகளில் ஈடுபடுவதை உறுதிப்படுத்தி உதவுமாறு தயவாக வேண்டுகின்றோம். 01)இலங்கை வேந்தன் இராவணண் காலம் முதல் இந்துக்களால் பாதுகாக்கப்பட்டு பாராமரிக்கப்பட்டு வந்த கன்னியா வெந்நீருற்றுப் பகுதியையும் அங்கிருந்த ஆலயங்களையும் தடையேதுமின்றி மீளவும் அமைத்து வழிபாடு செய்வதற்கும் இந்தப் பகுதி சைவத் தமிழரின் நிர்வாகத்தின் கீழ் தொடர்ந்து இருப்பதையும் உறுதிப்படுத்தல். இந்தப் பிரதேசத்துக்கு அண்மையில் பௌத்த விகாரைகள் அமைத்தலைத் தடுத்தல். 02) வெடுக்குநாறி சிவன் ஆலயத்துக்குச் செல்லும் பாதையூடாக தடையின்றி போக்குவரத்துச் செய்வது, அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்குச் செல்வதற்கான ஏணிப் படிகளை அமைக்க பொலிஸாரும் தொல்லியல் திணைக்களமும் தடை ஏற்படுத்தாது இருத்தல். 03) மத நல்லிணக்கத்தைச் சிதைக்கும் நோக்கில் இடித்து அழிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீச்சர ஆலய வளைவை முன்பிருந்த இடத்தில் சமாதானமான முறையில் மீள அமைப்பதற்கு ஏற்பாடு செய்து மத நல்லிணக்கத்தைப் பேணுதல். 04) தொல்லியில் திணைக்களம் நடுநிலைமை தவறி பக்கச்சார்பாகச் செயற்பட்டு பௌத்த வரலாற்றுச் சின்னங்கள் காணப்படாத இடங்களில் விகாரைகள் அமைப்பதை ஊக்கப்படுத்தி வருவதை வன்மையாகக் கண்டிப்பதோடு அத்திணைக்களத்துக்கு தகுதியான சைவத் தமிழர்களையும் நியமித்து குறித்த திணைக்களம் பக்கச்சார்பின்றி செயற்படுவதை உறுதிப்படுத்துதல். 05)சைவத் தமிழ் மக்களின் வாழ்விடங்களில் போலியான வரலாற்றை உருவாக்கி விகாரைகள் அமைத்தலை நிறுத்துதல், புதிதாக 1000 விகாரைகள் அமைக்கும் அரசின் திட்டம் வடக்கு, கிழக்கு தமிழ் பகுதிகளில் அமுல் செய்வதைத் தவிர்த்தல். 06) மதமாற்றங்களைத் தடை செய்தல். 07) முல்லைத்தீவு செம்மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ள நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு செய்யாதிருத்தல். 08) நீராவியடிப்பிள்ளையார் ஆலயப் பகுதியில் பௌத்த மத வழிபாட்டுத் தலங்கள் இருந்தமைக்கான ஆதாரமே இல்லை என்று தொல்பொருள் திணைக்களமே கூறியுள்ள நிலையில் அங்கு விகாரைகள் அமைத்தலைத் தடை செய்தல். 09) வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளை நிறுத்துதல். மேலே விவரிக்கப்பட்ட எமது நியாயமான கோரிக்கைகளை சாதகமாகப் பரிசீலித்து அவற்றைச் செயற்படுத்துவதற்குரிய பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்து மத நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தித்தருமாறு வேண்டிநிற்கின்றோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/பௌத்த-மேலாதிக்க-செயற்பாட/
 19. ஆயுத கொள்வனவு செய்தபோதும் பொருளாதாரத்தை எமது அரசாங்கம் பலமாகவே வைத்திருந்தது – சந்திரிக்கா In இலங்கை August 3, 2019 9:42 am GMT 0 Comments 1112 by : Dhackshala 3 தசாப்தக் கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான, முழுமையான ஆயுதங்களைக் கொள்வனவு செய்தும் நாட்டின் பொருளாதாரத்தை தமது அரசாங்கம் பலமான நிலையிலேயே வைத்திருந்தாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “நாட்டின் பொருளாதாரத்தை முற்றாக சீரழித்துவிட்டே, கடந்த கால தரப்பினர் ஆட்சியை ஒப்படைத்தார்கள். 2005 ஆம் ஆண்டு நான், ஆட்சியை ஒப்படைக்கும்போது இலங்கையின் பொருளாதாரம் சிறப்பான நிலையில் இருந்தது. 3 தசாப்த காலமாக நீடித்த யுத்தத்தை, நிறைவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து ஆயுதங்களும் எனது அரசாங்கத்தின் காலத்திலேயே கொள்வனவு செய்யப்பட்டன. இவ்வாறான முதலீடுகளை மேற்கொண்டும், எம்மால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமாகவே அன்று இருந்தது. எமது காலத்தில் நாட்டின் தனிநபர் வருமானம் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டது. அரச சேவையாளர்களின் சம்பளம் 5 மடங்குகளாக அதிகரிக்கப்பட்டன. இதன் பின்னர், இவ்வாறான முன்னேற்றங்கள் நாட்டில் ஏற்படவில்லை. எந்தவொரு அரசாங்கமும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவில்லை. தூர நோக்கத்துடன் ஆட்சியை மேற்கொள்ளாதமையே இவற்றுக்கு எல்லாம் காரணமாக கருதப்படுகிறது. அத்தோடு, கொள்ளை, ஊழல்களும் இடம்பெற்றன. இந்த அரசாங்கமும் சில குற்றங்களை இழைத்திருந்தாலும், கடந்த அரசாங்கத்தின் காலத்தில்தான் பாரியளவிலான குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன” என மேலும் தெரிவித்தார். http://athavannews.com/ஆயுத-கொள்வனவு-செய்தபோதும/
 20. பொருளாதாரத்தில் சரிவை நோக்கி பயணிக்கிறது இந்தியா! In இந்தியா August 2, 2019 9:11 am GMT 0 Comments 1053 by : Krushnamoorthy Dushanthini உலக வங்கி வெளியிட்டுள்ள 2018ஆம் ஆண்டுக்கான பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா பின்னோக்கி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பட்டியிலின்படி 2017ஆம் ஆண்டு 5ஆம் இடத்தில் இருந்த இந்தியா 2018ஆம் ஆண்டு 7 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொருளாதார வல்லுநர்கள், அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருவதே பொருளாதார மொத்த மதிப்பு சரிய காரணம் என தெரிவித்துள்ளனர். மேலும் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சியானது 7 வீதமாக குறையும் என மதிப்பிடப்பட்டிருந்தாலும், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா முக்கிய இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. பொருளாதார ஆய்வு நிறுவனம் வெளியிட்ட கணிப்பின்படி, 2019 ஆம் ஆண்டில் இங்கிலாந்தை பின் தள்ளி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வரும் என்றும் 2025 ஆம் ஆண்டில் ஜப்பானை பின் தள்ளி மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இடம்பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இதேவேளை 2018 பட்டியலின் படி பொருளாதாரத்தின் மொத்த மதிப்பாக 20.5 ட்ரில்லியன் டொலர்களை கொண்ட அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 13.6 ட்ரில்லியன் டொலர்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், 5 ட்ரில்லியன் டொலர்களுடன் ஜப்பான் 3வது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/பொருளாதாரத்தில்-சரிவை-நோ/
 21. காங்கிரஸின் தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை – பிரியங்கா திட்டவட்டம்! In இந்தியா August 2, 2019 8:27 am GMT 0 Comments 1067 by : Krushnamoorthy Dushanthini காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் கூடவுள்ள காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தற்காலிக காங்கிரஸ் தலைவர் ஒருவரை தேர்வு செய்ய கட்சி உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர். இதன்படி காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான தலித் இனத்தைச் சேர்ந்த முகுல்வாஸ்னிக் தற்காலிக தலைவராக தேர்வு செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் சுசில்குமார் ஷிண்டே, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக்கெலாட், இளம் தலைவர்களான சச்சின் பைலட், ஜோதிர்ராஜசிந்தியா ஆகியோரது பெயரும் காங்கிரஸ் தற்காலிக தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இடைக்கால தலைவராக பிரியங்கா காந்தியை நியமிப்பதற்கு கட்சி தலைவர்கள் உத்தேசித்துள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், பிரியங்கா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி 17ஆவது மக்களவை தேர்தலில் தோல்வியடைந்ததன் காரணமாக தலைவர் பதவியை இராஜினாமா செய்த நிலையில், குறித்த தலைவர் பதவிக்கு வெற்றிடம் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/காங்கிரஸின்-தலைவர்-பதவி-2/
 22. ஆண்களின் துணையின்றி பயணிக்க சவுதிப்பெண்களுக்கு அனுமதி! In உலகம் August 2, 2019 9:29 am GMT 0 Comments 1036 by : Benitlas சவுதி அரேபியாவில் ஆண் பாதுகாவலரின் துணையின்றி பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணிப்பதற்கு முதன்முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 21 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் ஆண் பாதுகாவலரின் அனுமதியின்றி கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் இன்று (வெள்ளிக்கிழமை) சவுதி அரேபிய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபிய ஆண்களைப் போன்றே பெண்களும் எவ்வித வேறுபாடுமின்றி வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கு இதன் மூலம் அனுமதி கிடைத்துள்ளது. தங்களது திருமணம், குழந்தை பிறப்பு மற்றும் விவாகரத்தை பதிவு செய்யும் உரிமையும் சவுதி பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சவுதியில் பணியிடங்களில் பெண்களுக்கான வாய்ப்புகளை வழங்குவது தொடர்பான மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம், சவுதி அரேபியாவைச் சேர்ந்த அனைவரும் பாலினம், வயது, மாற்றுத்திறன் உள்ளிட்ட எவ்வித வேறுபாடுமின்றி வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. http://athavannews.com/ஆண்களின்-துணையின்றி-பயணி/
 23. முஸ்லிம் மக்களை அ.தி.மு.க அரசு ஏமாற்றுகிறது – ஸ்டாலின் குற்றச்சாட்டு! In இந்தியா August 2, 2019 5:39 am GMT 0 Comments 1135 by : Krushnamoorthy Dushanthini முத்தலாக் சட்டமூல விவகாரத்தில் அ.தி.மு.க முஸ்லிம் மக்களை ஏமாற்றிவிட்டதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து ஆம்புர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொகுதிகளில் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்ட அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “முத்தலாக் தடை சட்டமூலத்தை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் எப்படி இரட்டை ஆட்சி நடைபெறுகிறதோ அதேபோல் இந்த விடயத்திலும் அ.தி.மு.க அரசு இரட்டை வேடம் போடுகிறது. தி.மு.க. மட்டுமல்ல ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க.வும் இந்த சட்டமூலத்தை எதிர்க்கப்போகின்றது என்றுதான் நாம் நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் இறுதியில் இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்தபொழுது அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். மாநிலங்களவையில் இருக்கக்கூடிய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தார்கள் என்றால் இந்த சட்டம் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்காது” என தெரிவித்துள்ளார். http://athavannews.com/முஸ்லிம்-மக்களை-அ-தி-மு-க-அ/
 24. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆறு பேர் விண்ணப்பம்! In கிாிக்கட் August 2, 2019 5:02 am GMT 0 Comments 1166 by : Anojkiyan இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆறு பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த 30ஆம் திகதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட, அவருடன் 6 பேர் பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் உள்ளனர். ஐ.பி.எல்.லில் ஐதராபாத் அணியின் பயிற்சியாளராக இருக்கும் டொம் மூடி, நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெஸ்சன், தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டன், இலங்கை முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன, இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ரொபின் சிங், லால்சந்த் ராஜ்பூட் ஆகியோர் பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் அளித்து உள்ளனர். கபில்தேவ், கெய்க்வாட் உள்ளிட்டோர் அடங்கிய 3 பேர் கொண்ட குழு பயிற்சியாளரை தேர்வு செய்து வருகிறது. 13 அல்லது 14ஆம் திகதி நேர்காணலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல பந்து வீச்சாளர் பயிற்சிக்கு வெங்கடேஷ் பிரசாத்தும், களத்தடுப்பு பயிற்சிக்கு தென்னாபிரிக்காவின் ஜோன்டி ரோட்சும் விண்ணப்பித்து உள்ளனர். உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரோடு இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்தரி, பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், துடுப்பாட்ட பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், களத்தடுப்பு பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலம் முடிந்தது. எனினும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான தொடர் வரை அவர்களின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. உலகக்கிண்ணத்தை இந்தியக் கிரிக்கெட் அணி வென்றிருந்தால், ரவி சாஸ்தரி மற்றும் அவரின் உதவியாளர்களின் பதவிக்காலம் தொடர்ந்து நீடிக்கப்படிருக்கும். ஆனால் இந்தியா அணி, அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்ததால் அணி நிர்வாகம் மீது விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பயிற்சியாளர்கள் பதவிக்கான விண்ணப்பங்களை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ளது. இதனால் ரவி சாஸ்திரியும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவருடன் துணைப் பயிற்சியாளர்களும் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். வரவேற்கப்படும் விண்ணப்பங்கள் அடிப்படையில் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ரவி சாஸ்திரி, பரத் ஸ்ரீதர், சஞ்சங் பாங்கர் ஆகியோர் மீண்டும் விண்ணப்பம் செய்தால் போதுமானது. அவர்களுக்கு தொடக்க நிலை தேர்வு நடத்தப்படாமல் நேரடியாக தேர்வுக்கான பட்டியலில் இடம் பிடிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷங்கர் பாசு, பிசியோ பாட்டிரிக் பர்கட் ஆகியோருக்குப் பதிலாக புதியவர்களை நியமிக்கவும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை திட்டமிட்டுள்ளது. ரவி சாஸ்திரி கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்றார். இவரின் பதவிக்காலத்தில்தான் இந்தியா அணி, அவுஸ்ரேலியா மண்ணில் முதன்முதலாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தது. இதேவேளை, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர் ஒருவர் குறைந்தது மூன்று வருடங்கள் ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்கும் அணியொன்றை பயிற்றுவித்திருக்க வேண்டும் என்பது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தமது அணியின் பயிற்சியாளராக வரக்கூடிய நபருக்கு இருக்க வேண்டிய கட்டாய தகைமைகளில் ஒன்றாக குறிப்பிட்டுள்ளது. இதேநேரம், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர் இரண்டு வருடங்கள் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணியொன்றை பயிற்றுவித்திருக்க வேண்டும் அல்லது மூன்று வருடங்கள் அங்கத்துவ நாடு ஒன்றினையோ அல்லது ஏ அணி ஒன்றினையோ பயிற்றுவித்திருக்க வேண்டும் என்பது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தமது தலைமை பயிற்சியாளராக வர விண்ணப்பிப்பவருக்கு இருக்க வேண்டிய வேறு தகுதிகளாக குறிப்பிட்டிருக்கின்றது. அதேவேளை, குறித்த பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர் குறைந்தது 30 டெஸ்ட் போட்டிகள் அல்லது 50 ஒருநாள் போட்டிகள் என்பவற்றிலும் விளையாடியிருக்க வேண்டும் என்பதும் முக்கியமான விடயமாகும். இதில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன, ஐ.பி.எல். தொடரின் மூலம் தான் சிறந்த பயிற்சியாளர் என உலகிற்கு அறிய தந்தவர். இவரின் வழிநடத்தலின் மூலம் இரண்டு முறைகள் மும்பை இந்தியன்ஸ் அணி, சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது. மேலும், கேரி கிஸ்டன் இந்திய அணி, 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெல்லும் போது அதன் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். கேரி கிஸ்டன் தற்போது ஐ.பி.எல். அணிகளில் ஒன்றான றோயல் செலஞ்சர்ஸின் பயிற்சியாளராகவும் உள்ளார். http://athavannews.com/இந்திய-கிரிக்கெட்-அணியி-5/
 25. வங்காள விரிகுடாவில் தாழமுக்க நிலை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! In இலங்கை August 2, 2019 9:34 am GMT 0 Comments 1044 by : Litharsan வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் தாழமுக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் எதிர்வரும் சில தினங்களில் காற்றின் வேகம் அடிக்கடி 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் கடல் பிரதேசம் அடிக்கடி கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், புத்தளத்தில் இருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையிலான கடல் பிரதேசம் மற்றும் அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலான கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் அடிக்கடி 55 கிலோமீற்றர் தொடக்கம் 65 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும். இந்த பிரதேசங்களில் அடிக்கடி கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும்பொழுது கடும் காற்று வீசக்கூடும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்த கடல் பிரதேசம் தற்காலிகமாக கொந்தளிப்புடன் காணப்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை குறைப்பதற்காக அவர்களைத் தெளிவுபடுத்தும் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கடற்தொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலீப்வெத ஆராய்ச்சி கடற்தொழில் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த காலநிலை தொடர்பாக கடற்தொழில் திணைக்களம் வழங்கும் ஆலோசனைக்கு அமைய செயற்படுமாறு அவர் கடல் தொழிலாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். எதிர்வரும் சில தினங்களில் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறு அனைத்து கடல் தொழிலாளர்கள் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோரிடம் கடற்தொழில் திணைக்களத்தின் தேடுதல் நடவடிக்கை பிரிவினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்புக்கு அமைய கடற்தொழில் திணைக்களத்தில் தேடுதல் நடவடிக்கை பிரிவு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. http://athavannews.com/வங்காள-விரிகுடாவில்-தாழம/