Jump to content

தமிழ்நிலா

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    122
  • Joined

  • Last visited

Posts posted by தமிழ்நிலா

  1. உங்களை இழந்த இந்நாளில்(30.10.2021) உங்களை நினைவு கூருகின்றோம்😢😢😢🙏வீரவணக்கங்கள் வரதா அக்கா🙏

    லெப். கேணல் வரதா / ஆதி...!

    தமிழீழத்தின் முக்கிய துறைமுகப் பட்டணங்களில் ஒன்றான வல்வெட்டித்துறை தனியானதொரு பண்பாட்டின் உறைவிடம்.வல்லவர்களின் துறை வல்வெட்டித்துறை என்பது சாலவும் பொருந்தும்.திரைகடல் ஓடியும் திரவியம் தேடுவதில் வல்லவர்கள் மட்டுமல்ல,வரலாற்றில் பல தசாப்தங்களுக்கு முன்னரே கப்பல் கட்டும் தொழில் நுட்பத்தில் தலை சிறந்தோரையும் கொண்டது தான் வல்வைபூமி.எவருக்குமே கிடைத்தற்கரிய கலியுகக் கடவுளான எமது ஒப்பற்ற பெருந் தலைவன் தமிழீழத் தேசியத் தலைவர் பிறந்த ஊராகவும் இது திகழ்வதால் தமிழீழச் சரித்திரத்தில் இவ்வூர் அழியாப் புகழைப் பெறுகின்றது.

    இத்தகைய வரலாற்றுப் பெருமை மிக்க இந்த ஊரிலே தான் திரு.திருமதி யோகராசா இணையருக்கு ஒரு அக்கா, இரண்டு அண்ணாக்களுடன் கடைசிச் செல்வப் புதல்வியாக சந்திரகுமாரி எனும் நாமத்துடன் 01.11.1969 இல் எங்கள் வரதா அக்கா வந்துதித்தார். அவர் எமது தேசியத் தலைவருக்கு நெருங்கிய உறவினர் என்ற பெருமையையும் பெரும் பேற்றையும் தமதாக்கிக் கொண்டுள்ளார். அதன் காரணத்தினால் சந்திரகுமாரி அக்காவுக்கு சிறு வயது முதல் இயல்பாகவே மிகுந்த நெஞ்சுரமும் தலைமைத்துவப் பாங்கும் இரத்தத்தில் ஊறியே காணப்பட்டது. அவரது குடும்பமானது மாமிச உணவு உண்ணாத பரம்பரைச் சைவக் குடும்பம் ஆகும். அவரது தந்தையார் அரசாங்க எழுதுவினைஞராகக் கொழும்பு மாநகரத்திலே பணியாற்றி வந்தார். இதனால் சந்திரகுமாரி அக்காவும் தனது சிறு வயதுக் கல்வியை கொழும்பிலே கற்றார்.

    பின்பு 1977ஆம் ஆண்டு தமிழருக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட மிகப் பாரதூரமான இனக் கலவரத்தின் காரணத்தினால் அவரது குடும்பம் கொழும்பை விட்டு இடம்பெயர்ந்து மீண்டும் வல்வெட்டித்துறையில் வசித்து வந்தனர். சந்திரகுமாரி அக்காவும் தனது மிகுதிப் பாடசாலைக் கற்கை நெறியினை வல்வெட்டித்துறையிலுள்ள மிகவும் பிரபல்யம் பெற்ற கல்லூரியான சாரண இயக்கத்தில் அகில இலங்கை வரை சென்று சாதனை படைத்த யாழ். வல்வை சிதம்பராக் கல்லூரியில் தொடர்ந்தார்.

    எம் தலைவன் பிறந்த மண்ணிலே பிறந்த காரணத்தினால் “கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்” என்ற முது மொழிக்கேற்ப சந்திரகுமாரி அக்காவும் சிறு வயது முதல் வீரத்தில் மட்டுமல்ல கல்வியறிவிலும் விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்கினார். பாடசாலையில் நடைபெறும் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகளின் போது தட்டெறிதல், குண்டெறிதல், மரதன் ஓட்டப்போட்டி போன்றனவற்றில் பங்குபற்றி மிகச் சிறப்பாக விளையாடி தனது இல்லத்திற்கு பல பரிசுக் கேடயங்களையும் பெருமையையும் பெற்றுக் கொடுத்தார். படிப்பிலும் குறை வைக்கவில்லை. 1985ஆம் ஆண்டில் அவர் க.பொ.த சாதாரணதரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த போது இடம்பெற்ற வல்வை நூலகப் படுகொலை அவர் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும் தனது கல்வியை மனந் தளராது தொடர்ந்து க.பொ.த சாதாரணதரத்தில் தோற்றி சிறந்த பெறுபேற்றைப் பெற்று க.பொ.த உயர்தரத்தில் 1988வது அணியில் வர்த்தகப் பிரிவைத் தேர்ந்தெடுத்து கல்வி கற்று வந்தார்.

    இவர் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் 1987 – 1988 களில் இந்திய வல்லாதிக்க இராணுவத்தினரின் கெடுபிடிகளினால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டிருந்தார். இந்திய இராணுவத்தின் அத்தனை கெடுபிடிகளுக்குள்ளும் தனது கல்வியறிவைப் பூர்த்தி செய்து முடிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் கல்வி கற்று 1988இல் க.பொ.த உயர்தரத்தில் தோற்றி சிறந்த பெறுபேற்றைப் பெற்றும் இலங்கை அரசினால் தமிழ் மாணவர்களின் மீது திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட தரப்படுத்தல் கொள்கை மூலம் ஏற்பட்ட வெட்டுப்புள்ளிப் பிரச்சனையினால் பல்கலைக் கழகத்திற்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். பின்பு 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது பெண் போராளிகளின் சுதந்திரப் பறவைகள் அமைப்பில் இணைந்து பணியாற்றி வந்தார்.

    12.05.1985 இல் க.பொ.த சாதாரணதரம் படிக்கும் போது நடைபெற்ற வல்வை நூலகப் படுகொலை, தரப்படுத்தலின் விளைவாக 1988 இல் க.பொ.த உயர்தரத்தில் ஏற்பட்ட பிரச்சனை, 02.08.1989 இல் நடைபெற்ற வல்வைப் படுகொலை போன்ற நிகழ்வுகளினால் ஏற்பட்ட தாக்கங்கள் அவரை எமது போராட்டத்தின் பால் ஈர்த்தது.

    இதன்பால் 1990 இல் இரண்டாம் கட்ட ஈழ யுத்தம் ஆரம்பித்த காலப்பகுதியில் சந்திரகுமாரி அக்காவும் “அடுப்பங்கரைகளிலும், சினிமா கொட்டகைகளிலும் சிந்தைகளைப் பறி கொடுத்து தூங்கிக் கிடந்திடாமல் அலங்கார ஆடைகளையும் அழகு ஆபரணங்களையும் அணிந்து திரிந்து போலித்தனமான புளகாங்கிதம் அடையாமல் புரட்சிகரக் கருத்துக்களை உறுதியாகப் பற்றி போர்க் குணம் கொண்ட மங்கையாய்க் களம் புகுந்து எமது நீதியான யுத்தத்தின் மூலம் அநீதியான யுத்தமனைத்திற்கும் முடிவு கட்டலாம்” என்றும் “நாட்டின் விடுதலைப் போராட்டம் என்பது நாயகன் கடமை மட்டுமல்ல நமது கடமையுமாகும்” என்பதனையும் உணர்ந்து எழுச்சி கொண்டு மகத்துவம் மிக்க எம் பெருந் தலைவன் அணியில் இணைந்து மகளிர் பயிற்சிப் பாசறையில் 11வது அணியில் அடிப்படைப் பயிற்சியை நிறைவு செய்து கொண்டு வரதா எனும் பெயர் கொண்டு வரிப்புலியாகினார்.

    பின்னர் அவர்களது பயிற்சி முகாமிலேயிருந்து 150 போராளிகளைத் தேர்ந்தெடுத்து எந்த ஆபத்தான போர்ச் சூழலையும் எதிர் கொண்டு நிற்கவல்ல துணிவாற்றலுள்ள போராளிகளாக மாற்றும் மிகத் திறமையான கடுமையான விசேட பயிற்சிகள் அளிக்கப்பட்டு பலாலிப் பகுதி, யாழ். கோட்டைப் பகுதி போன்ற இடங்களில் போர் முன்னரங்கப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். அதில் வரதா அக்காவும் 7 பேர் கொண்ட அணி ஒன்றிற்கு அணித் தலைவியாக சிறிது காலம் யாழ். கோட்டைப் பகுதிக்கு அனுப்பப்பட்டார். பின்பு பலாலிப் பெருந்தளத்தின் போர் முன்னரங்கப் பகுதிகளில் நிலை கொண்டிருந்த பெண் போராளிகளின் போர் அணிகளுடன் இணைந்து இலங்கை இராணுவத்தின் மினி முகாம்கள் மீது துணிகரத் தாக்குதல்களை நடாத்திச் சாதனைகள் படைத்தார்.

    மேலும்,அவர் சைவ உணவு உண்ணுபவராக இருந்ததால் தனக்குரிய சைவ உணவு கிடைக்காத பட்சத்திலும் தான் பசியிருந்தபடி பலாலிப் போர் முனையில் நிற்கும் தனது அணியின் சக போராளிகளுக்கு ஒரு அணித் தலைவி எனும் பொறுப்புடன் ஒரு தாயாக நேரம் தவறாது பெரும் சிரமங்களுக்கு மத்தியில் இராணுவத்தினரின் பதுங்கித் தாக்குதல்களினை வெகு சாமர்த்தியமாகச் சமாளித்துக் கையாண்டு உணவுப் பொட்டலங்களை எடுத்துச் செல்லும் தன்னலமற்ற சேவையையும் புரிந்தார். எமது அமைப்பின் பெண் போராளிகளின் படையணிகள் வளர்ச்சி பெற்று விரிவாக்கம் கண்டதுடன் விடுதலைப் போரிலும் முக்கிய பங்காற்றியது 10.07.1991 இல் தொடங்கிய ஆகாய கடல் வெளிச் சமரின் போது இனங் காணக் கூடியதாக இருந்தது.

    இப் பெருஞ் சமரில் பெண் போராளிகளைக் கொண்ட பல படைப் பிரிவுகள் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு துணிவாற்றலுடன் வீர சாதனைகள் படைத்தன.இச் சமரில் வரதா அக்காவும் 7 பேர் கொண்ட அணிக்கு அணித்தலைவியாகப் பொறுப்பேற்றுச் சென்று நெஞ்சுறுதியுடனும் ஓர்மத்துடனும் சமரிட்டு வீர சாதனை படைத்தார். இதன் மூலம் சர்வதேச இராணுவ – அரசியல் விமர்சகர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து ஒன்று உருவானது.அதாவது புலிகள் ஒரு முழு அளவிலான மரபுவழி இராணுவத்தைப் போன்று செயற்பட்டிருக்கின்றார்கள் என்றும் இந்தச் சமரை அவதானிக்கும் போது இலங்கைத் தீவில் இரண்டு இராணுவங்கள் உள்ளது போல் தோன்றுகின்றது என்பதும் ஆகும்.இந்தக் கருத்தானது எமது புரட்சிகர இயக்கத்துக்கு கிடைத்த ஒரு பெரும் வெற்றியே ஆகும்!.

    ஆனையிறவுச் சமரில் பெண் போராளிகள் முக்கிய பங்கு வகித்ததைத் தொடர்ந்து இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட “மின்னல் இராணுவ நடவடிக்கை” என்ற பெயரால் தமிழீழத்தின் “இதயபூமி” என்றழைக்கப்படும் மணலாற்றில் நடைபெற்ற நடவடிக்கைக்கு எதிராக நடாத்தப்பட்ட தற்காப்புச் சமரிலும் லெப். கேணல் அன்பு அண்ணா தலைமையில் பெண் போராளிகள் பங்கு கொண்டனர். இலங்கை இராணுவத்தின் இவ் இராணுவ நடவடிக்கையின் நோக்கம் வட தமிழீழத்தையும், தென் தமிழீழத்தையும் இரண்டாகப் பிரிப்பதும் எம்மை பலவீனப்படுத்தி அதன் மூலம் யாழ் மாவட்டத்தைக் கைப்பற்றுவதாகும். பெண் போராளிகளுக்கு இம் முறியடிப்புச் சமரானது புதுமையான காட்டுச் சமர் அனுபவமாக இருந்தது. ஏனெனில் காட்டுச் சமர்களில் அவர்கள் அதுவரை பங்கு பெறவில்லை. அக்காட்டைப் பொறுத்தவரை திக்குத் திசை தெரியாது; சூரியன் எங்கே உதிக்கிறது மறைகிறது எனத் தெரியாது; இராணுவம் எங்கிருந்து வருவார்கள் எனத் தெரியாது; காயமடைந்த வீரச்சாவடைந்த போராளிகளைப் பின் தளத்திற்கு நகர்த்துவதற்குப் பாதைகள் இல்லை; இதைவிட இராணுவம் ஏவிய எறிகணைகள் மரங்களில் வீழ்ந்து வெடிப்பதால் அதிக இழப்புக்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. இருந்தாலும் இக் களமுனையின் முக்கியத்துவத்தை உணர்ந்து போராளிகள் வரைபடங்களின் உதவிகளுடனும் இராணுவத்தின் நகர்வுகளை தொலைத் தொடர்புக் கருவியூடாக (monitoring) ஒட்டுக் கேட்டும் இத் தாக்குதலின் விநியோக நடவடிக்கையை தடையற மேற்கொண்டும் மற்றும் விழுப்புண்ணடைந்த, வீரச்சாவடைந்தவர்களையும் பின் நகர்த்தியும் கடுமையாக நெஞ்சுறுதியுடன் போரிட்டனர்.

    இச் சமரில் வரதா அக்காவும் ஒரு அணிக்கு தலைவியாகப் பொறுப்பேற்று மிகுந்த ஒர்மத்துடனும் உத்வேகத்துடனும் துணிவாற்றலுடனும் சமரிட்டு பின்பு இடது கையில் பாரிய விழுப்புண்ணடைந்து மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு பின் நகர்த்தப்பட்டார். ஆனையிறவுச் சமரின் பின் வெடிபொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிய காலப்பகுதியிலும் இப் பாரிய முன்னேற்ற நடவடிக்கையை முறியடித்தமை எமக்கு பெரும் வெற்றியே! பின்னர் வரதா அக்கா இடது கையில் ஏற்பட்ட பாரிய விழுப்புண்ணின் காரணத்தினால் அக்கையானது சரிவர இயங்க முடியாமல் இருந்த படியால் 1991 இலிருந்து 1993 ஆம் ஆண்டு ஆரம்ப காலப்பகுதி வரை நீண்ட காலம் மருத்துவ சிகிச்சையிலே இருந்தார்.

    பின்னர் நிதித்துறை மகளிர் பிரிவுக்கு தகுதி வாய்ந்த ஒருவர் பொறுப்பாளராக பதவி வகிக்க தேவை என்றபடியால்,வரதா அக்காவின் தலைமையேற்று நடாத்தும் பாங்கு, பொறுமை, சகிப்புத் தன்மை கல்வித் தகுதி போன்றன இனங் காணப்பட்டு 1993இல் நிதித்துறை மகளிர் பிரிவுக்கு பொறுப்பாளராக உள்வாங்கப்பட்டார். எமது நிதித்துறை மகளிர் பிரிவிலே ஆரம்பத்திலே கணக்காய்வுப் பகுதி, ஆயப்பகுதி போன்ற பகுதிகள் மட்டுமே இருந்தன. வரதா அக்கா கணக்காய்வுப் பகுதியைப் பொறுப்பேற்று நிர்வகித்தார். ஆயப்பகுதியை லெப்ரினன்ட் சாந்தாக்கா பொறுப்பேற்று நிர்வகித்தார். பின்பு லெப்ரினன்ட் சாந்தா அக்கா களப் பணிக்கு சென்றதும் வரதா அக்காவே ஆயப்பகுதியையும் சேர்த்து திறம்பட நிர்வகித்தார். பின்பு எமது நிதித்துறை மகளிர் பிரிவானது கணக்காய்வுப் பகுதி, தையல் பகுதி, உணவு வழங்கல் பகுதி, நகைத் தொழிலகம் ஓட்டுனர் பயிற்சிக் கல்லூரி எனப் படிப்படியாக விரிவாக்கம் கண்டது.

    1993 தொடக்கம் 2001 கடற்கரும்புலிகள் அணிக்குச் செல்லும் வரை அவையனைத்தினதும் நிர்வாகப் பணியினையும் திறமையாக மேற்கொண்டதுடன் அத்தகைய நிர்வாகப் பளுவுக்குள்ளும் யாழ்ப்பாணத்தில் நகைவாணிபம், சேரன் களஞ்சியங்கள், கலியுக வரதன் உதிரிகள் வாணிபம், எழிலகம் புடவை வாணிபம் போன்றவற்றிலும். 1996இற்குப் பின்னர் வன்னியில் இளவேனில் எரிபொருள் வாணிபம், கலியுகவரதன் உதிரிகள் வாணிபம் போன்றனவற்றிலும் கணக்காய்வுப் பணியைத் திறம்பட மேற்கொண்டார்.

    மேலும் தனது போராளிகளை துறை சார் வல்லுனர்களாக உருவாக்க வேண்டும் என்ற கொள்கையில் 1994 இல் யாழ் உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் தானும் கற்கை நெறியை மேற்கொண்டு ஏனைய போராளிகளையும் அக்கற்கை நெறியினை மேற்கொள்ள வழிகாட்டினார். அத்துடன் எமது கணக்காய்வுப் பகுதி பெண் போராளிகளுக்குத் தேவையான மேலதிக வகுப்புக்களுக்கு கற்பிப்பதற்கு யாழில் பிரசித்தி பெற்ற வர்த்தகம், கணக்கியல், ஆங்கிலம் தொடர்பான ஆசிரியர்கள், விரிவுரையாளர்களை ஒழுங்குபடுத்திக் கொடுத்ததுடன் தானும் அவர்களுடன் இணைந்து அக்கற்கை நெறியினை மேற்கொண்டு தனது அறிவாற்றலையும் வளர்த்துக் கொண்டார்.

    எனக்கும் வரதா அக்காவுக்குமான உறவானது 1995 மார்கழி மாதத்திலிருந்து தான் (நாங்கள் அடிப்படைப் பயிற்சி முடித்து நிதித்துறை கணக்காய்வுப் பகுதிக்கு வந்ததிலிருந்து) ஆரம்பித்தது. நாங்கள் 17 வயதில் எமது குடும்ப உறவுகளைப் பிரிந்து முற்றிலும் வித்தியாசமான போராட்ட வாழ்க்கையினில் காலடியெடுத்து வைத்து ஆரம்பித்த போது வரதா அக்கா தான் எங்களை ஒரு தாயைப் போன்ற பரிவுடனும் பாசத்துடனும் அரவணைத்தார். எமக்குத் தாயில்லாக் குறையை அவரே நிவர்த்தி செய்தார். அவருக்கு கோபம் என்பது வந்து நான் ஒருபோதும் கண்டதில்லை. அப்படி கோபம் வந்தாலும் அதனை அடக்கி ஒரு சிறிய சிரிப்புடன் சமாளித்துவிட்டுச் செல்லுவார். அவரிடம் எப்போதும் ஒரு அன்புடன் கலந்த கண்டிப்பும் ஆளுமையும் காணப்படும். அவர் எப்போதும் எங்களை தான் ஒரு பொறுப்பாளர் என்ற ரீதியில் அதிகாரம் செய்து கட்டளையிட்டதும் இல்லை. நாமும் ஒரு போதும் அவரது கட்டளையை மீறியதும் இல்லை. எப்பொழுதும் நாம் செய்யும் சிறு சிறு குறும்புகள், குழப்படிகளை ஒரு தாயைப் போன்ற உணர்வுடன் ரசிப்பார். அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைக் கூறுகின்றேன்.

    எங்கள் முகாமில் ஒரே வயதுடைய மற்றைய போராளிகளை விட வயதில் குறைந்த ஏழெட்டுப் பேர் இருந்தோம். அதனால் நாங்கள் அந்த வயதிற்குரிய குறும்புகள், குழப்படிகளுடனேயே எப்போதும் காணப்படுவோம். ஒரு நாள் இரவு நேரத்தில் எமது பணி முடித்து முகாம் திரும்பி இரவு உணவினை உட்கொண்டு விட்டு ஒரு அறையில் எல்லோரும் சேர்ந்திருந்த குஷியில் பாட்டு,நடனம் என அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தோம். மற்றைய அறையில் சில வயதில் கூடிய போராளிகள் தமது வாணிபங்களின் ஆவணங்களை முகாமில் கொண்டு வந்து வைத்திருந்து பொறுப்பாகப் பணி புரிந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எங்களின் சத்தமானது இடைஞ்சலுடன் கூடிய தொந்தரவாக இருந்ததின் காரணத்தினால் எங்களை அமைதியாக இருக்கச் சொல்லுமாறு வரதா அக்காவிடம் சென்று புகாரளித்தார்கள். இதனால் வரதா அக்கா எங்களது மகிழ்ச்சியையும் கலைக்க விரும்பாமல் பணிபுரிபவர்களையும் சமாளிக்க வேண்டும் என நினைத்து, முதலாம் கட்டமாக ஒரு போராளியை எச்சரிக்கை செய்ய அனுப்புவார். ஆனால் வந்தவரும் எங்களுடன் சேர்ந்து அந்த அமர்க்களத்தில் ஈடுபடுவார். பின்பு மற்றுமொருவரையும் அனுப்பி அவரும் முதல் அனுப்பியவரை ஒப்பி எங்களுடன் சேர்ந்து அமர்க்களத்தில் ஈடுபட்டதும் இறுதி எச்சரிக்கையாக தானே வரதா அக்கா களத்தில் குதிப்பார். எங்களுடைய மகிழ்ச்சியை உடனேயே தடை செய்யவும் விரும்பாமல் கொஞ்ச நேரமாவது நீடிக்கட்டும் என்று இடைவெளி விட்டு பணி புரியும் மற்றைய போராளிகளின் மனதையும் நோகடிக்காமல் தானே எங்களிடம் வந்து திட்டுவது மாதிரி நடித்து (வாய் மட்டும் தான் எங்களைப் பேசும் அதேவேளை அவரது மூக்கும் கண்ணும் சிரிக்கும்) அதிக பட்ச தண்டனையாக வாய்க்கு துவாய் கட்டும் தண்டனையை மட்டும் தான் தருவார். நாங்கள் அந்தத் துவாயை வாயில் கட்டிக் கொண்டும் எங்கள் அமர்க்களத்தைத் தொடருவோம்.

    வரதா அக்கா தான் பொறுப்பாளர் என்ற சலுகையை ஒரு போதும் எடுத்துக் கொண்டது இல்லை.தன்னைப் போலவே தான் மற்றப் போராளிகள் என்று நினைப்பார். அவர் சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவராக இருந்ததால் எமக்கு உணவு வழங்கல் பகுதியினால் வரும் உணவில் மரக்கறி உணவினை சிலவேளைகளில் அவர் பணி முடிந்து வரத் தாமதமானால் உணவு முடிந்துவிடும் என்ற காரணத்தினால் ஒரு போராளி எடுத்து ஒளித்து வைப்பதுண்டு. ஆனால் வரதா அக்கா இப்படி தனக்காக பிரத்தியேகமாக உணவு எடுத்து வைப்பதை எப்போதும் விரும்புவதில்லை. நாமும் சில வேளைகளில் பணி முடித்து வரத் தாமதமானால் கறி தீர்ந்து விடும். அதனால் நாங்கள் பசியில் வரதா அக்காவுக்காக எடுத்து ஒளித்து வைத்திருக்கப்படும் கறியினை எப்படியோ தேடிக் கண்டுபிடித்து எடுத்து உண்டு விடுவோம். அதனைக் கண்டதும் வரதா அக்காவுக்கு கறி எடுத்து ஒளித்து வைத்த போராளி எங்களைத் திட்டுவார். ஆனால் வரதா அக்கா “பிள்ளைகளுக்கில்லாத உணவு எனக்கெதுக்கு… அவர்கள் சாப்பிடட்டும்… அவர்களைத் திட்டாதே” என அந்தப் போராளிக்கு கூறிவிட்டு சோற்றுடன் கறிக்குப் பதிலாக பச்சை மிளகாய், வெங்காயத்துடன் தனது உணவினை முடித்துக் கொள்ளுவார்.

    எல்லாப் போராளிகளையும் போலவே வரதா அக்காவும் மக்களை நேசித்த போராளி. எமது வாணிபங்களில் காலாண்டு,அரையாண்டு, ஆண்டிறுதி காலப்பகுதிகளில் இருப்பெடுத்தல் நடவடிக்கைகள் நடைபெறுவதுண்டு. இதனால் பணி முடிய இரவு நேரமாகி விடும். ஆதலினால் அங்கு பணி புரியும் பெண் பணியாளர்களை வரதா அக்காவே தனது உந்துருளியில் ஏற்றிச் சென்று அவர்களது வீட்டில் பாதுகாப்பாக இறக்கிவிட்டு வருவார். அதனால் பணியாளர்களின் பெற்றோர்களும் அவர் மேல் தீராத அன்பும் நன்மதிப்பும் வைத்திருந்தார்கள்.

    மேலும் ஒருமுறை வரதா அக்கா இரவு நேரத்தில் பணி முடித்து ஒரு போராளியுடன் உந்துருளியில் பணியிடத்தில் சைவ உணவு கிடைக்காத படியால் மதிய உணவையும் உண்ணாத காரணத்தினால் மிகுந்த பசியுடன் முகாம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு முன்னால் ஒரு உந்துருளியில் பொது மகன் ஒருவர் தனது நிறை மாதக் கர்ப்பிணி மனைவியை ஏற்றிக் கொண்டு உந்துருளியின் முகப்பு விளக்கு பழுதடைந்த காரணத்தினால் இருட்டில் தட்டுத் தடுமாறிச் சென்று கொண்டிருந்தார். இதனை அவதானித்த வரதா அக்கா அவர்களிடம் முகவரியைக் கேட்டு அவர்களது வீடு எமது முகாமிலிருந்து சிறிது தூரத்தில் தான் உள்ளது என்பதை அறிந்து அவரைப் பின் தொடர்ந்து சென்று அவருக்கு தனது உந்துருளி முகப்பு விளக்கின் மூலம் வெளிச்சத்தைப் பாய்ச்சியபடி தனது கடும் பசியையும் மறந்து அவர்களது வீடு வரைக்கும் கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டுத்தான் வந்தார். அந்தளவுக்கு சாதாரண பொது மக்களை நேசித்த போராளி அவர். இச் சம்பவத்தை அவருடன் வந்த போராளி எமக்கு போட்டுக் கொடுத்து அன்று தொடக்கம் நாங்கள் வரதா அக்காவைக் கண்டால் “குமார் குமார் லைற் அடி கோழிக் கூட்டுக்கு லைற் அடி” என்ற பாடலைப் பாடி கிண்டலடிப்போம். அவரும் “வாறனடி உங்களுக்கு” என்று செல்லமாக கோபித்தபடி, எங்களது கிண்டலை ரசித்தபடி செல்லுவார்.

    எமது பிரிவிலிருந்து களப் பணிகளுக்குப் போய் ஒவ்வொரு போராளியும் வீரச்சாவடையும் போதும் “சேயை இழந்த தாய்ப் பசுவின் வலிக்கொப்பான” வேதனையடைவார். எமது பிரிவிலிருந்து வீரச்சாவடைந்த எல்லா மாவீரர் குடும்பங்களின் இல்லத்திற்கும் தானும் செல்வதோடு மட்டுமல்லாது எங்கள் எல்லோரையும் கட்டாயம் செல்லுமாறு கூறி அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் தானே முன்னின்று செய்து எங்களையும் செய்விக்க வைப்பார். காலையில் எழுந்து சத்தியப் பிரமாணத்தை முடித்துக் கொண்டதும் எங்கள் எல்லோரையும் ஓட்டப் பயிற்சிக்கு அனுப்பிவிட்டு முகாமில் உள்ள மாவீரர் மண்டபத்திலுள்ள மாவீரர் படங்களுக்கு தனது கையாலே பூக்கொய்து வைத்து கடவுளர்கள் மாதிரி கௌரவித்து வணக்கம் செலுத்தி விட்டுத் தான் தனது அன்றைய பணியை ஆரம்பிப்பார். அத்துடன் மற்றைய புதிய போராளிகளுக்கு மிகவும் அன்பாகவும் ஆர்வத்துடனும் மிகத் தெளிவாக புரியக் கூடிய வகையிலும் கணக்காய்வுப் பணியைக் கற்றுக் கொடுப்பதிலும் வல்லவர். நானும் 1997 இல் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றி விட்டு வரதா அக்காவுடன் தான் முதன் முதலில் கலியுகவரதன் உதிரிகள் வாணிபம், இளவேனில் எரிபொருள் வாணிபம் போன்றவற்றில் பணிக்குச் செல்லும் பேற்றைப் பெற்றேன். அங்கு அவர் எனக்கு கணக்காய்வுப் பணியினையும் பணியாளர்களுடன் அணுகும் முறையினையும் மிகவும் அன்புடனும் ஆர்வத்துடனும் தெளிவாகவும் கற்றுக் கொடுத்தார்.அவருடன் பணி புரிந்த ஒரு வருடத்திலேயே வாணிபங்களின் இலாப நட்ட முடிவுக் கணக்குகளை என்னால் தனியே தயாரித்து முடித்துக் கொடுக்கும் அளவிற்கு என்னை ஆற்றலுடன் வளர்த்து விட்டிருந்தார். அன்று அவர் ஊட்டிய ஊக்குவிப்பும் அறிவும் ஆளுமையும் தான் பின் நாளில் நானும் ஒரு கணக்காய்வு அணியின் அணிப் பொறுப்பாளராக உருவாகுவதற்கு அடித்தளமாக இருந்தது. இப்படி போராளிகளை பணி ரீதியிலும் வளர்த்து விடுவதில் வல்லவர் அவர்.

    எமது போராட்டத்தில் இணைந்த காலம் தொட்டு வரதா அக்காவுக்கு கரும்புலிகள் அணியில் இணைய வேண்டும் என்ற கனவு இருந்து கொண்டேயிருந்தது.எமது தேசியத் தலைவருக்கு ஐந்தாறு தடவைகள் கடிதம் அனுப்பி அனுமதி மறுக்கப்பட்டு வந்தும் மனம் சோராமல் திரும்பத் திரும்ப தன்னைக் கரும்புலிகள் அணியினுள் உள்வாங்குமாறு கடிதம் அனுப்பிக் கொண்டேயிருந்தார். அவரது விடாமுயற்சியினாலும் தான் கரும்புலிகள் அணியில் இணைய வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்ததாலும் 2001ஆம் ஆண்டு ஆரம்ப காலப் பகுதியில் அவரை கடற்கரும்புலிகள் அணியில் உள்வாங்கப்படுவதற்கு அனுமதிக் கடிதம் தேசியத் தலைவரிடமிருந்து வந்தது. வரதா அக்காவுக்கோ தனது ஆசை நிறைவேறி விட்டதையிட்டு மிகப் பெரிய சந்தோசம். ஆனால் எமக்கோ தாயைப் போல பரிவு காட்டிய எங்கள் வரதா அக்காவைப் பிரியப் போகிறோம் என்கிற கவலை. ஆனால் போராளிகள் என்றால் பிரிவும் மறைவும் சகஜம் தானே! நாம் அதனை வலிந்து ஏற்றுக் கொண்டு எமது துயரங்களை மனதில் அடக்கிக் கொண்டு வரதா அக்காவிற்கு விடை கொடுத்தோம்.

    பின்பு கடற்கரும்புலிகள் அணியில் இணைந்து கடல் நீச்சற் பயிற்சி, கடல் கனரக ஆயுதப் (Heavy Weapon) பயிற்சி போன்ற அனைத்துப் பயிற்சிகளினையும் தனது சரிவர இயங்க முடியாத இடது கையுடன் தன்னை விட வயது குறைந்த இளம் போராளிகளுக்குச் சமமாக ஈடுகொடுத்து உத்வேகத்துடனும் அர்ப்பணிப்புடனும் துணிவாற்றலுடனும் மிகுந்த ஈடுபாட்டுடனும் நிறைவு செய்து கொண்டு தனது இலக்கிற்காக காத்துக் கொண்டிருந்தார். அத்துடன் (ரேடார் RADAR) மின் காந்த அலைக் கருவியூடாகக் கடற்படைக்கலன்களின் நகர்வினை அவதானித்து கட்டளையிடும் அதிகாரியாகவும் பணியாற்றினார்.

    2001 இல் எமது போராட்டமானது பரிணாம வளர்ச்சியடைந்து நாம் யாழ் குடா நாட்டைக் கைப்பற்றும் அளவுக்கு பலமாக இருந்தோம். இலங்கை இராணுவமானது பலவீனமடைந்து காணப்பட்டது. இதன் காரணத்தினால் யாழ் குடாநாட்டையும் மொத்த தமிழீழத்தையும் நாம் மீட்டெடுத்து விடுவோம் என்று பயமடைந்து அப்போதைய இலங்கைப் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க நரி மூளையுடன் நோர்வே அரசின் தலையீட்டுடன் 22.02.2002 இல் நிரந்தரமான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் எம்முடன் இணைந்து கையெழுத்திட்டார். இதனால் மக்கள் இலங்கை அரசின் கபடத் தனத்தை உணராமல் தமக்குத் தீர்வு கிடைத்து விட்டது என மகிழ்ச்சியில் திகழ்ந்தார்கள். 2004 காலப் பகுதியில் வரதா அக்காவும் திருமண வயதைக் கடந்து விட்ட காரணத்தினால் அவரின் தந்தையாரின் வேண்டுகோளிற்கிணங்க தேசியத் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் கட்டளைத் தளபதி ஒருவரை இணையேற்றார். திருமணம் ஆகிவிட்டாலும் அவர் கடற்புலிகள் மகளிர் அணியிலேயே தனது பணியினைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்திருந்தார்.

    2006 இல் மீண்டும் மூண்ட நாலாம் கட்ட ஈழப் போரின் காரணத்தினால் A9 பாதை மூடப்பட்டு மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்தன. இதன் காரணத்தினால் எமது போராட்ட மரபுப்படி “துணைவனும் – துணைவியும் நடைமுறை வாழ்விலும் நாட்டை மீட்கும் மகத்துவமான விடுதலைப் போரிலும் சம பங்கு கொண்டு புறப்பட வேண்டிய வேளை இது தான் புறப்படுவோம்” என்று வரதா அக்காவும் அவரது துணைவரும் தத்தமது படையணிகளுடன் இணைந்து தமது பணியினை செவ்வனே மேற் கொண்டனர். அந்த வகையில் வரதா அக்காவும் கடற்புலிகள் மகளிர் படையணியுடன் இணைந்து (ரேடார் RADAR) மின் காந்த அலைக் கருவியூடாக அவதானிக்கும் தொலை தூர நோக்கி கண்காணிப்பு பிரிவில் கட்டளையிடும் அதிகாரியாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டார். 30.10.2006 இல் மட்டக்களப்பில் இருந்து வன்னி நோக்கி காட்டு வழியாக நகர்ந்து வந்து கொண்டிருந்த போது எங்கள் வரதா அக்கா மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் அரவம் தீண்டி எம்மையெல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்தி விட்டு மீளாத் துயில் கொண்டு விட்டார்.

    நினைவுப்பகிர்வு: நிலாதமிழ்.

    • Thanks 1
    • Sad 1
  2. மறைந்தும் மறையாத வரலாற்றுக் காவியம்- ஈழத்துக் கொற்றவை

    ஈழத்துக் கொற்றவைகள் தெய்வங்களாகப் போற்றப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கு துயிலுமில்லங்களில் நினைவுக் கற்களோ கல்லறைகளோ இருக்காது. இவர்கள் வீரச்சாவடைந்தால் நினைவுநாட்களில் பெயர்களோ அடையாளங்களோ தகவல்களோ வெளிப்படுத்தப்பட மாட்டாது.  எப்போதாவது எதிரி தன் விசாரணையில் சம்பந்தப்பட்டவரின் அடையாளங்களை உறுதிப்படுத்தினாலொழிய இவர்கள் பற்றிய தரவுகள் எந்தக் காலத்திலும் வெளிவராது. ஊரறியாமல் உறங்கும் உண்மைகள் இவர்கள். ஊமையாய் இருந்து ஒரு பெரும் சரித்திரத்தைப்  படைத்துவிட்டுச் செல்வார்கள்.  கல்லாகிக் கிடக்கும் கடவுளர்களை மறந்துவிட்டு கல்லறை கூட இல்லாத எம்மின கொற்றவை தெய்வங்களை வணங்குவதே என்றும் போற்றுதற்குரியது.

    அவ்வாறாகப் போற்றப்பட வேண்டிய ஈழத்துக் கொற்றவைத் தெய்வங்களில் ஒருத்திதான் "சாதனா". பெயருக்கேற்ற வகையில் மாபெரும் வரலாற்றுச் சாதனை படைத்து வரலாறாகிப் போவாள் என்று அவளின் பெற்றோர்கள் அன்று அவளுக்குப் பெயர் சூட்டும்போது நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார்கள்.

    தமிழர் தலைநகரான திருகோணமலையில் தான் இவள் வீரப்பிறப்பெடுத்தாள். சாதனாவின் தந்தையார் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தாயார் முல்லைத்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவளது இரண்டு வயது வரைக்குமான வாழ்க்கைப் பராயம் திருகோணமலையில் தான் இனிதே கழிந்தது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களினால் வன்கவரப்பட்டுக் கொண்டிருந்த இவளது தந்தையின் சொந்த ஊரிலே தான் இவளது குழந்தைப் பருவத்தின் முதலிரண்டு ஆண்டுகள் கழிந்தன. இவளது குடும்பத்தினர்  ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக உதவிச் செயற்பாடுகளில் ஈடுபட்டதால் சிங்கள இராணுவப் புலனாய்வாளர்கள், காடையர்கள், இராணுவத்தினரின் கொடும் கெடுபிடிகளுக்கு ஆளானார்கள். இதனால் இவர்கள் அங்கு தொடர்ந்து வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் சாதனாவின் தாயாரின் பிறப்பிடமான முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து சென்று குடியேறினார்கள். அங்கு பெயர் சொல்லக்கூடிய மிகவும் செல்வாக்கான வசதிமிக்க குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் தான் அவளின் தாயின் குடும்பத்தினர். பல ஏக்கர் கணக்கான விளைநிலங்களும் மாட்டுப் பண்ணையுமென செல்வம் படைத்த, பாரம்பரியமிக்க விவசாயக் குடும்பத்தினராகவும் அவ்வூரிலேயுள்ள ஏழை எளியவர்கள் இல்லை என்று வந்து நிற்கும் போது அள்ளிக் கொடுப்பவர்களாகவும் இவர்கள் விளங்கினார்கள்.

    சாதனா சிறுவயதிலிருந்தே மற்றச் சாதாரண  குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது வேறுபட்ட சிந்தனையுடைய ஒரு அசாதாரண குழந்தையாகவே காணப்பட்டாள். வீட்டிலே அதிகாலையிலே எழும்பி தாயாருக்கு உதவியாகப் பால் கறப்பது. தந்தையாருக்கு உதவியாக வயல் வேலைகளுக்குச் செல்வது. அவ்வேலைகளை முடித்துவிட்டு வந்து  பாடசாலை செல்வது என்று வீட்டிலே பொறுப்புமிக்க மனமுதிர்ச்சி கொண்ட ஒரு குழந்தையாகவே வளர்ந்து வந்தாள். முல்லைத்தீவு மாவட்டத்திலேயுள்ள மிகவும் பிரபல்யமான ஒரு பாடசாலையிலேயே சாதனா தனது கல்வியினை சிறுவயது முதல் கற்று வந்தாள். கல்வி, விளையாட்டு, ஓவியம் வரைதல், சிறுகதைகள்,  கவிதைகள் எழுதுதல் போன்ற பல்துறைகளிலும் ஆற்றல்மிக்கவளாக விளங்கியதோடு மட்டுமன்றி ஆசிரியரை மதித்து நடத்தல், சகமாணவரை அனுசரித்துப் போதல், அவர்களுக்கு ஏதாவது கஷ்டங்கள், பிரச்சனைகள் ஏற்படும்போது முதல் ஆளாக நின்று உதவி செய்தல் போன்ற காரணங்களினால் கல்லூரியிலேயே அனைவராலும் விரும்பப்படும் ஒரு மாணவியாகத் திகழ்ந்தாள்.

    பொதுவாகவே அவளிடம் மக்களுக்கு சேவை செய்யும் மனப்பாங்கு  காணப்பட்டது. அதாவது வயது முதிர்ந்தவர்களைக் கண்டால் ஓடிப்போய் உதவி செய்தல், உணவின்றி கஷ்டப்படுபவர்களுக்கு தனது  வீட்டிலிருந்து உணவு எடுத்துக்கொண்டு சென்று கொடுத்து உதவுதல் போன்ற இரக்கமான மனப்பாங்கு கொண்டவளாகக் காணப்பட்டாள். இந்திய இராணுவத்தினரால் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள், உயிர்க்கொலைகள், மற்றும் சிறீலங்கா இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட  எறிகணை வீச்சுகள், விமானக்குண்டு வீச்சுகளால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமை போன்ற காரணங்களினால்  உளத்தாக்கமடைந்து "கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா...?அவர் இருக்கிறார் என்றால் இவ்வளவு அநியாயங்களையும் பார்த்துக் கொண்டு சும்மா தானே இருக்கிறார்" என்று அடிக்கடி சொல்லிக் கவலைப்படுவாள். இதன் காரணத்தினால் தாயார் கோவிலுக்குச் சென்றுவரக் கூப்பிட்டால் "இராணுவம் இத்தனை அப்பாவி மக்களைக் கொல்லும் போது உந்தக் கடவுள் சும்மா தானே பார்த்துக் கொண்டிருந்தவர்....அதனைவிட தன்னின மக்கள் கொல்லப்படுவதைப் பார்த்து பொறுக்க முடியாமல் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து தன் மண்ணிற்காக மக்களிற்காக தம்முயிரை ஈந்த மாவீரர்களைக் கும்பிடலாம்" என்று மறுத்துக் கூறி இறைவழிபாட்டை வெறுத்து மாவீரர் துயிலுமில்லங்களுக்கே சென்று கல்லறைகளுக்கு மலர் வைத்து வழிபடுவாள்.

    பாடசாலைகளில் தமிழீழ மாணவர் அமைப்பினால் ஒழுங்குபடுத்திக் கொடுக்கப்படும் முதலுதவி வகுப்புகள் மற்றும் சிரமதானப்பணிகள் போன்றவற்றிலும் மிகவும் ஈடுபாட்டுடன் செயற்பட்டு வந்தாள். இச்செயற்பாடுகளை மேற்கொள்ளும் போதுதான் சாதனாவுக்கும்  போராளிகளுக்கும் இடையிலான உறவு ஆரம்பித்தது. போராளிகளின் தன்னலமற்ற உதவிபுரியும் மனப்பாங்கு, அவர்கள் மக்கள் மீது வைத்திருக்கும் தூய்மையான அன்பு, நீதி, நேர்மை, தனிமனித ஒழுக்கம், கட்டுப்பாடுகள் போன்றனவற்றின்பால் ஈர்க்கப்பட்டு தானும் ஒரு போராளியாக வேண்டும் என்ற விருப்பு அவள் மனதில் ஏற்பட்டது.

    அதன் காரணத்தினால் தனது 15 ஆவது அகவையில் 9 ஆவது வகுப்பில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைவதற்காகச் சென்றாள். அவளது வயதினையும் கற்றலின் முக்கியத்துவத்தினையும் கருத்தில் கொண்டு  விடுதலைப்புலிகள் அமைப்பு க.பொ.த சாதாரணம் படித்து முடித்துவிட்டு வரும்படி திருப்பி அனுப்பியது. சாதனாவும் இடைப்பட்ட ஒன்றரை வருட காலப்பகுதியில் தான் கொண்ட உறுதியில் தவறாது தொடர்ந்து க.பொ.த சாதாரணம் பயின்று பொதுத்தேர்வில் தோற்றி தேர்வுகள் முடிந்த மறுநாள் மீண்டும் வந்து அமைப்பில் இணைந்துகொள்கின்றாள். தமிழீழ விடுதலைப்புலிகள்  அமைப்பில் இணைந்த பிறகு அவளது க.பொ.த சாதாரண பரீட்சை தேர்வு முடிவுகள் வெளிவருகின்றது. அந்த மிகவும் பிரபல்யமான பாடசாலையிலேயே அதிகூடிய பெறுபேறுகள் பெற்றவர்களின் பட்டியலில் அவளின் பெயரும் இடம்பெற்றது. அடிப்படைப் பயிற்சி முகாமில்  அடிப்படைப்பயிற்சிகளை மேற்கொண்டு புடம் போடப்பட்டு ஒரு உறுதியான போராளியாக உருவாக்கப்படுகின்றாள்.  எந்தக் கடின பயிற்சிகளிலும் பின்வாங்காத உறுதி, இராணுவக்கல்விக் கற்கைநெறிகளை மிகுந்த ஈடுபாட்டுடன் உள்வாங்கும் விதம், சகிப்புத்தன்மை, இரகசியம் காத்தல் போன்ற ஒவ்வொரு திறமைகளும் அடிப்படைப் பயிற்சிமுகாமில்  அவதானிக்கப்பட்டு பயிற்சிகள் நிறைவடைந்தவுடன் புலனாய்வுத்துறைக்குள் உள்வாங்கப்படுகின்றாள்.

    அங்கு மறைமுகக் கரும்புலிகள் தொடர்பான நிருவாகப்பணிகளை மேற்கொள்ளும் போராளி ஒருவருக்கு உதவியாளராக சாதனா செயற்படுகின்றாள். முகாமில் மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவளாகவும் அறிவுத்தனமான உரையாடல்களில் மட்டுமே பங்கு கொள்பவளாகவும் தனது குடும்பம், அன்பு, பாசப்பிணைப்புகள் பற்றி எவரிடமும் கதைக்காத தன்மை கொண்டவளாகவும் தேசியத்தலைவர் சிந்திப்பது போலவே ஒவ்வொரு விடயத்தையும் ஆராய்ந்து நிதானமாக சிந்தித்து தெளிவான முடிவு எடுப்பவளாகவும் ஒரு மனமுதிர்ச்சியடைந்த போராளியாக அவள் காணப்பட்டாள்.

    அவளிடம் ஓவியம் வரைதல், உருவப்பொம்மைகள் செய்தல் போன்ற தனித்திறமைகளும் காணப்பட்டன. தான் ஓய்வாக இருக்கும் போது எமது மக்களின் இன்னல்கள் போராட்டங்களைச் சித்தரிக்கும் ஓவியங்கள் வரைவாள். உபயோகித்து முடித்த பிளாஸ்ரிக்காலான வெற்று பொன்ட்ஸ் பவுடர்  (ponds powder) போத்தல்களை பிளேட்டினால் (blade) வெட்டி பெண் முதல் மாவீர வித்தான 2ம் லெப்ரினன்ட் மாலதி, தியாகச் செம்மல் லெப்.கேணல் திலீபன், முதலாவது தரைக்கரும்புலி மாவீரரான லெப்.கேணல் போர்க் போன்றவர்களின் உருவங்களை மிக அழகாகச் செதுக்கி உருவப்பொம்மைகளாக்கி தனது பணியிடம் முழுவதும் ஓவியங்களாலும் உருவப்பொம்மைகளாலும் அலங்கரித்து வைத்து அவர்களின் நினைவிலேயே தானும் மனதில் உறுதியேற்றியபடி வாழ்ந்திருந்தாள். அதைவிட சிறுகதைகள்,கவிதைகளாலும் தனது நாளாந்தக் குறிப்பேடுகளை நிரப்பி வைத்திருந்தாள்.

    அங்கே பணிமுடித்து ஓய்வான நேரங்களில் சாதனா உலக புலனாய்வு அமைப்புகள் தொடர்பான நூல்களை விரும்பி வாசிக்கின்றாள். மேலும் அவ்வமைப்புகள் தொடர்பான மேலதிக தகவல்கள், கேள்விகள், சந்தேகங்களை மிகவும் ஈடுபாட்டுடன் தனது பொறுப்பாளரிடம் துருவித் துருவிக் கேட்டுத் தெளிந்து கொள்கின்றாள். இதன் காரணத்தினால் அவளுக்கு மறைமுகக் கரும்புலிகள் அணியில் தானும் சேரவேண்டும் என்ற ஈடுபாடு வருகின்றது. அதனைத் தனது பொறுப்பாளரிடம் தெரிவிக்கின்றாள். இது தொடர்பில் அவளது தேடல்,  அதீத ஈடுபாட்டினைக் கண்ட பொறுப்பாளரும் துறைசார் முதன்மைப் பொறுப்பாளருக்கு அதனைத் தெரிவிக்கின்றார். அவரும் அவளை ஒருமுறை நேரில் சந்தித்துக் கதைத்துப் பார்த்து அவளது சுயதேடல், மனவுறுதி, விடுதலைப்போராட்டத்தின் மீதும் மக்கள் மீதும் கொண்டிருந்த பற்று என்பனவற்றை இனங்கண்டு மறைமுகக் கரும்புலிகள் அணிக்குள் உள்வாங்கப்பட அனுமதியளிக்கின்றார்.

    பின்பு சாதனா மறைமுகக் கரும்புலிகள் அணியின் சிறப்புப் பயிற்சிகள், கற்கைநெறிகளுக்குள் உள்வாங்கப்படுகின்றாள். அங்கு இரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது ஒருவர் பற்றி இன்னொருவருக்கு தெரியக்கூடாது என்ற காரணத்தினால்  வழங்கப்படும் தனிக் கொட்டில் வாழ்வு, உருமறைப்பிற்கான மூடிய ஆடைகள் எனச் சென்ற அந்தப் பயிற்சிக் காலம் என்பது அவளுக்குள் தன்னை மறைத்து, தன்னை ஒறுத்து, தமிழீழ விடுதலைக்காய் வெளியே தெரியாத வெளிச்சமாகிப் போகும் வாழ்விற்கு அவளை அணியப்படுத்தியது.

    மறைமுகக் கரும்புலிகள் அணியில் சாதனாவின் பயிற்சிகள் நிறைவுற்றதும் மொழிகள் (ஆங்கிலமொழி, சிங்களமொழி)  தொடர்பான அறிவு பெறுவதற்கு அனுப்பப்படுகின்றாள். அங்கு சிங்களமொழி கற்பிப்பதற்கு ஆசிரியரை ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு மாதம் தாமதமாகின்றது. அந்தக் காலத்தை வீணடிக்காது, ஒரு மாதத்திலேயே சிங்களமொழி நூல்களை படிப்பகத்திலிருந்து பெற்று சுயமாகவே கற்றுத் தேர்ச்சியடைகின்றாள். பின்பு சிங்களமொழி ஆசிரியரால் மொழி கற்பிக்கப்படும்போது  ஏற்கனவே சிங்களமொழி நன்றாகக் கற்றுத் தேர்ந்த ஒருவரைப்போல அவளது மொழி தொடர்பான அதீத திறமையைக் கண்டு அவர்  திகைப்படைகின்றார். இப்படியாக எதனையும் சுயமாகவே முயன்று கற்றுக் கொள்ளும் ஆற்றல் அவளிடம் காணப்பட்டது.

    பின்பு அவளுக்குரிய இலக்கு வழங்கப்பட்டு வெளிநடவடிக்கை ஒன்றிற்காக  சிங்களமொழி பேசும் ஒரு இடத்திற்கு அனுப்பப்படுகின்றாள். அங்கே அவள் மறைப்பில் இருந்தகாலத்தில் தொழினுட்பக் கல்லூரியொன்றில் கல்விகற்று சான்றிதழும் பெற்றுக் கொள்கின்றாள். மக்களோடு மக்களாக எதிரிக்கு சந்தேகம் வராத மாதிரி சாதாரண வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டு தனது இலக்கிற்குத் தேவையான தகவல்களையும் பெற்றுக் கொள்கின்றாள்.

    க.பொ.த சாதாரணதர சிறந்த பெறுபேறு, தொழில்நுட்பக்கல்லூரியில் கிடைக்கப் பெற்ற தகைமைச் சான்றிதழ் என்பனவற்றைக் கொண்டு கொழும்பில் மிகப்பிரபல்யமான மேல்தட்டுவர்க்கத்தினரின் பிள்ளைகள் கல்வி கற்கும் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் இணைந்து கல்வியைத் தொடர்ந்துகொண்டு இலக்கினை நோக்கி அணியப்படுத்திக்கொள்ளுமாறு அவளை அவளின் பொறுப்பாளர் பணிக்கிறார். அவளும் அவ்வாறே செய்கிறாள்.

     சாதனாவின் ஆங்கில மொழிப் புலமை, சிங்கள மொழிப் புலமை, அமைதியுடன் கூடிய அழகிய தோற்றம் போன்றவற்றினால் அவளில் எவருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. அங்கே கற்கைநெறியினை மேற்கொள்ளும்போது சாதனாவுக்கு நிறைய மேல்தட்டுவர்க்க சிங்கள நட்புகள் கிடைக்கின்றன. எவருமே போகமுடியாத முக்கிய நகரப்பகுதிகளில் உள்ள பல சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்லும் இடங்களான விளையாட்டரங்குகள், உயர்தரக் கேளிக்கை விடுதிகள் போன்ற இடங்களுக்கு தனது சிங்கள நண்பர்களுடன் சென்று தனது இலக்கிற்கான தகவல்களை மிகவும் திறமையாகச் சேகரிக்கின்றாள். பாதுகாப்புக் காரணங்களினால் வெளிநாடு ஒன்றிலிருந்து மிகச் சுருக்கமாகப் பரிமாறப்படும் தகவல்களின் மூலமாக மட்டும் தன்னுடைய பொறுப்பாளருடனும் துறைசார் பொறுப்பாளருடனும் தொடர்பினைப் பேணியவாறு தனது இலக்கினை நோக்கிச் செயற்பட்டு வந்தாள். அவளுக்கு வழங்கப்பட்ட இலக்கிற்கான தகவல்கள் வாய்ப்புகள் மட்டுமல்லாது வேறு இலக்குகளுக்கான தகவல்கள் வாய்ப்புகளும் வெற்றியளித்த பல நடவடிக்கைகளுக்கான தகவல்கள் வாய்ப்புகளும் சாதனாவின் அதீத திறமையினால் அவள் சார்ந்த துறை மேலாளருக்கு அவளால் வழங்கப்பட்டன.

    இந்தப் பணிகளை மேற்கொள்ளும்போது சாதனா வெறும் 20 அகவையினையே அடைந்திருந்தாள். அவள் கல்வி கற்குமிடத்தில் அவளுடன் கூடப் படிக்கும் வகுப்புத் தோழன் ஒருவன் இவளது அழகு, உதவும் மனப்பாங்கு , கற்றலில் உள்ள திறமை இவற்றைக்கண்டு சாதனாவின் மேல் காதல் வயப்படுகின்றான். அவள் அதனை முதிர்ச்சியுடன் கையாண்டு அவனைத் தனது இனிய நண்பனாகவும் சகோதரனாகவும் ஏற்றுப் பழகிக்கொண்டு அவனின் உதவியாலும், அவனின் அறிவுக்கு எட்டாத வகையிலும், சந்தேகம்வராத வகையிலும் தனது இலக்கிற்கு தேவையான தகவல்களைச் சேகரித்துக் கொள்கின்றாள்.  பருவகால இளவயது, மனதை மாற்றக் கூடிய சூழல்கள், காதல் போன்றவற்றினைச் சந்தித்த போதும் தனது கொள்கையில் இருந்து சிறிதும் வழுவாது, சிறப்புப் பயிற்சிகளின் முடிவில் அவள் உறுதிமொழியேற்கும் போதிருந்த அதே உறுதியுடன் மிகத்தெளிவாக தனது சரியான இலக்கை நோக்கி செயற்பட்டுக்கொண்டிருந்தாள்.

    சிங்களமொழி பேசும்  இடங்களில் வசித்ததால் சாதனாவிடம் சிங்கள நாளிதழ்கள் வாங்கி வாசிக்கும் பழக்கம் காணப்பட்டது. அப்போது தான் சிங்கள மக்கள் அப்பாவிகள் இல்லை என்பதும் அவர்கள் தமிழ்மக்களுக்கெதிராக கடும் மனவெழுச்சி கொண்டிருந்ததும் கருத்தியல் ரீதியாக அவளுக்குப் புரிந்தது. மற்றும் வன்னியில் சிங்கள இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதல்களால் தனது மக்களும் போராளிகளும் கொல்லப்படுவதைக் கண்டு அவளது உள்ளம் உலைக்களமாகக் கொதித்தது. அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்ற வெறி அவளது உள்ளத்திலே ஆழ வேரூன்றியது. அதற்குச் சரியான வழி சிங்கள இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியின் பயிற்சி முகாமிலேயே வைத்து அவர்களை அழிப்பது என்று உணர்ந்து அந்த இலக்குத்  தொடர்பான தகவல்களையும் தானே முன்னின்று சேகரித்துத் தலைமைக்கு  கொடுத்து அது தொடர்பான வெற்றித் தாக்குதல்களுக்கும் வழியமைத்துக் கொடுத்தாள்.

    அவளுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்த மேல்தட்டுவர்க்க சிங்கள நண்பி ஒருவரின் விருந்துபசார விழா ஒன்றிற்கு சென்றபோது அங்கே ஒரு இராணுவ அதிகாரியை அவள் தற்செயலாகக் காணக் கிடைத்தது. தென்தமிழீழத்தில் படுகொலைகளை முன்னின்று நடாத்தி எமது மக்களை நேரில் நின்று கொன்றுகுவித்த சிங்கள இராணுவ அதிகாரி தான் அவன் என தான் முன்னர் வாசித்துத் துன்பப்பட்ட தென்தமிழீழப் படுகொலைகள் தொடர்பான குறிப்புகளை மீள்நினைவூட்டி உறுதிப்படுத்திக்கொண்டாள். அவனைப் பற்றிய நெருக்கமான தகவல்களைத் திரட்டியதோடு அவனை அணுகக் கூடிய வாய்ப்பும் அவளுக்குத் தற்செயலாகக் கிடைத்தது. அவளது மனதில் ஈவிரக்கமற்றுப்  பொது மக்களைக் கொன்று குவித்த  அந்த இராணுவ அதிகாரியை அழிக்க வேண்டும் என்ற வன்மம் உருவாகுகின்றது.  அந்த இராணுவ அதிகாரியை தானே சுட்டுக் கொல்ல தலைமையிடம் அனுமதி கோருகின்றாள். ஆனால் தலைமை அவளுக்கு வழங்கப்பட்ட இலக்கு வேறு என்பதால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டால் அது பாதிக்கப்படும் என்று விளக்கங்கூறி அதற்கான அனுமதி அவளுக்கு மறுக்கப்படுகின்றது. ஆனால் சாதனா தனது இலக்கினைப் பாதிக்காத வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறேன் என்று உறுதியளித்து அனுமதி  வாங்கி அதற்கான ஆயுதத்தினை வாங்கி பாதுகாப்பாக வைத்துக் கொண்டு அந்த இராணுவ அதிகாரி தொடர்பான தகவல்களைச் சேகரிக்கின்றாள். அவனது நாளாந்த நடவடிக்கைகள், பொழுதுபோக்குகள் என்பவற்றினை அவதானித்து தெளிவான இலக்கிற்காக காத்திருக்கின்றாள். ஒருநாள் அந்த அதிகாரி தனது வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் நாளிதழ் கடையில் நாளிதழ் வாங்கிக் கொண்டு திரும்பி வரும்போது அவரைச் சுட்டுக் கொல்லக்கூடிய  தெளிவான இலக்கு அமைகின்றது. மிகத் திறமையாக இலக்குப் பிசகாது அந்த இராணுவ அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பியோடுகின்றாள். அன்று அந்தத் தாக்குதல் வெற்றிகரமாக அமைந்தது அவளுக்கு மிக்க மகிழ்வாக இருந்தது.

    அந்தக் கொலைக்கான சூத்திரதாரியை சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்கள் மூலை முடுக்கெல்லாம் தேடித் திரிந்தார்கள். அவர்களால் அவளைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாதிருந்தது. அவளின் பாதுகாப்பு கருதியும் அவளைப் போன்ற திறமையுடைய அனுபவமுடைய போராளியால் மட்டுமே இன்னும் பல போராளிகளை உருவாக்கலாம் என்பதைக் கருதியும்   இந்தத் தாக்குதல் வெற்றியடைந்ததே போதும் அவளது இலக்கை வேறொரு மறைமுகக் கரும்புலியிடம் கையளிக்கலாம் என்று கருதியும் சாதனாவைத் திரும்பி வன்னிக்கு வருமாறு தலைமையிடமிருந்து  பணிப்பு வந்தது. ஆனால் அவளோ தனது இலக்கை அடையாமல் திரும்பி வரமாட்டேன் என்று தனது இலக்கிற்காகக் காத்திருந்தாள். கடைசியில் அவளது உறுதியின் முன்னால் தலைமையால் ஒன்றும் செய்ய முடியாமல் அவளது இலக்கை அவள் தொடர்ந்து மேற்கொள்ள அனுமதியளித்தது. அவள் காத்திருந்த இலக்கும் ஓர்நாள் வந்தது. வெகுமகிழ்வுடன் அதற்குரிய ஆயத்தங்களுடன் இலக்கை நோக்கிச் செல்கின்றாள். ஆனால் அவளால் அதனை நெருங்க முடியவில்லை. திரும்பியும் செல்ல முடியாத நிலையில் தன்னையே உயிராயுதமாக்கி வெடிக்க வைத்து வீரச்சாவைத் தழுவி வீரவரலாறாகின்றாள்.

    16 வயதில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து மிகக் குறுகிய காலத்தில் எவருமே செய்ய முடியாத சாதனை படைத்து வரலாறான  சாதனாவின் வரலாற்றைப் படிக்கும் ஏனைய போராளிகள் இன்னும் புடம் போடப்பட்டு உத்வேகத்துடன் உருவாகுவார்கள். சாதனா மறைந்தும் மறையாத வரலாற்றுக் காவியமான புலனாய்வுப் போராளியாக என்றும் எல்லோரின் மனங்களிலும் வாழுகின்றாள்.

    "உயிர் மின்னல் கீறும்

    ஒரு  ஓவியம்...

    அது வரைகின்ற நேரம்

    பெரும் காவியம்...

    திரை மூடி வாழும்

    ஒரு ஜீவிதம்...

    வெளி தெரியாமல் ஆடும்

    உயிர் நாடகம்….

    புரியாத புதிராக

    ஒரு தென்றல் போகும்...

    புயலாகும் நேரத்தில்

    இடியாக மாறும்...

    அழியாத கதையாகி

    வரலாறு மீளும்...

    அவர் நாமம் ஒரு காலம்

    தமிழீழம் பேசும்!"

    யாவும் கற்பனை அல்ல...

    -நிலாதமிழ்(தமிழ்நிலா).

    • Thanks 1
  3. On 12/2/2020 at 23:09, உடையார் said:

    கப்டன் றெஜி

    Captain-Regi.jpg

    விதைத்த விதைகளில் விருட்சமாக எழுந்தவர் கப்டன் றெஜி.

    21.04.87 காலை, ஈழமுரசு பத்திரிகையில் ஒட்டிசுட்டான் படைமுகாம் தாக்குதலில் படையினர் பலர் பலி. 4 மணிநேரத் தாக்குதல். நாற்பதுக்கு மேற்பட்ட மோட்டார்களை போராளிகள் பயன்படுத்தினர். என்ற செய்தியை வாசித்தேன்.

    ஒரு ஏ.கே கூட இல்லாமல் நாங்கள் இதே கட்டத்தை எமது சொந்த ஆயுதங்களுடன் தாக்கி வெற்றி பெற்ற அந்த நினைவுகள் என்னுள் எழுந்தன.

    ஒட்டிசுட்டான் படைமுகாம் தாக்குதல் வெற்றியில் றெஜியின் பங்களிப்பு பெரிது. அவர் வன்னியில் செயற்பட வந்த காலங்களில் ஏதாவது தாக்குதல் நடத்தவேண்டும் என்த் துடியாகத் துடித்தார். அவர் ஒட்டிசுட்டானில் கண் வைத்தார். அன்றிலிருந்து ஒட்டிசுட்டான் தாக்கப்படும்வரை ஒய்வொழிச்சல் இல்லாது வேலைசெய்தார். ஒட்டிசுட்டான் தாக்குதல் பற்றி கதைக்கும் போது பையன்கள் றெஜி அண்ணாவைப் பற்றி கட்டாயம் குறிப்பிடுவார்கள்.

    பொதுவாக றெஜி அண்ணாவைச் சந்திக்கும் பையன்கள் பயப்படுவார்கள். ஏனெனில் தன்னைப் போலவே எல்லோரும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் தன்மை இவரிடமிருந்த்து.

    றெஜி கட்டுப்பாட்டைப் பற்றி எமது மூத்த உறுப்பினர்கள் கதைக்கும் போது முன்பு இயக்கத்தில் சேருவது மிகக் கஷ்டம் ஒவ்வொருவரையும் நீண்ட காலத்தின் பின்னரே முழு நேர உறுப்பினராகச் சேர்த்துக் கொள்வார்கள். பகுதிநேர உறுப்பினராக இருந்த றெஜின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. பின்பு, றெஜிக்கு சிங்கப்பூர் போக சந்தர்ப்பம் கிடைத்தது. றெஜி நிலைமையைச் சொல்லி தன்னை முழு நேரமாகச் சேர்த்துக்கொண்டால் தனது பயணத்தை ரத்துச் செய்வதாக கூறினார்.

    தகப்பன் இல்லாத குடும்பம், வீட்டிற்காக உழைக்க வேண்டி தேவையும் இருந்தது. எப்போதும் தன்னை சேர்ப்பதாக சொல்லுகிறார்களோ அப்போதே உடனே நான் வந்துவிடுகிறேன். என்று றெஜி சொன்னார். அந்தக் காலத்தில் இயக்கக் கட்டுப்பாடுகளைப் பற்றி கொஞ்சம் கூடுதலாகச் சொல்லி வைப்பது வழக்கம் எனவே அங்கே கண்டபடி படம் பார்க்கக்கூடாது என்றெல்லாம் அறிவுறுத்தப்பட்டது. றெஜி இயக்கக் கட்டுப்பாடு என்பதற்காக ஒரு படம் கூடப் பார்க்காமல் இருந்திருக்கிறார். றெஜி வந்ததும் கட்டுப்பாட்டைப் பற்றிச் சொன்னவர் “றெஜி சும்மா ஒரு கதைக்குச் சொன்னால் நீ அப்படியே இருந்துவிடுவதா?” எனக் கேட்டார் என்று குறிப்பிடுவார்கள்.

    சிங்களக் குடியேற்றங்கள் றெஜிக்குச் சினத்தை கொடுக்கும் சமாச்சாரம். எனது மண்ணை படிப்படியாக அபகரிக்கும் திட்டத்தை தவிடு பொடியாக்க வேண்டும் என் றெஜி அடிக்கடி சொல்வார். இதற்கான நடவடிக்கைகளை இவரே மேற்கொண்டார்.

    கொக்கிளாய் தாக்குதலில் காயப்பட்ட நிலையிலும் வீராவேசமான இவரது தாக்குதல்களைக் கண்டு நாம் மெய் சிலிர்த்தோம். புதிய புதிய இராணுவ யுத்திகளைக் கையாள்வதிலும் இவரது கவனம் எப்போதும் இருக்கும்.

    அன்றொருநாள், ஆமி வந்திருக்கிறார்கள் என்று மக்கள் தகவல் தந்தனர். றெஜி அண்ணாவோடு இன்னும் சில பையன்கள் இருந்தார்கள். பையன்கள் தாங்கள் சென்று பார்த்துக் கொண்டு வருவதாகச் சொன்னார்கள். இவர் “தான் சென்று பார்க்கிறேன் பிரச்சனையில்லை என்றால் அதற்குப் பிறகு நான் வந்து உங்களைக் கூட்டிக்கொண்டு போகிறேன்” என்று சொல்லிவிட்டு போனார். பையன்களைப் பலி கொடுக்க விரும்பால் ஏதாவது நடந்தாலும் அது தனக்கு நடக்கட்டும் தனது உயிரை பணயம் வைத்து முன்னே சென்றார்.

    மறைந்திருந்த இராணவம் முற்றுகையிட்டது நாங்கள் புலிகள் என்பதை செயலில் நிருப்பித்தார் றெஜி. அவர் தன்னை இம்மண்ணுக்காக அர்ப்பணித்துக் கொண்டார்.

    இன்று கூட கட்டுப்பாட்டைப் பற்றி கதைக்கும் போது றெஜி அண்ணாவைப் பற்றி எல்லாரும் குறிப்பிடுவார்கள்.

    பழைய, பழைய உறுப்பினர்களை இழந்த போதிலும் எமது போராட்டம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டே சென்றது. இந்த மூத்த உறுப்பினர்கள் விதைத்த விடுதலை விதைகள் பெரும் விருட்சமாக மாறிவந்தன.

    கப்டன் றெஜி அவர்கள் 02.12.1985 அன்று “இதயபூமி” மணலாறு கோட்டத்தில் பட்டிக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் பதுங்கியிருந்து தாக்கியதில் காயமடைந்து அதன்பின் சயனைட் உட்கொண்டு வீரச்சாவடைந்தார்.

    நினைவுப்பகிர்வு: குட்டி
    நன்றிகள் – ஈழமுரசு இதழ் (05.07.1987), சூரிய புதல்வர்கள் (2004).

     

    https://thesakkatru.com/captain-regi/

    வீரவணக்கம்🙏

  4. லெப்ரினன்ட் புகழினி

    புகழினி என்றவுடன் எமக்கு நினைவுக்கு வருவது அவளது அழகான தெத்திப் பல்லு தெரிய சிரிக்கும் கள்ளமில்லா வெண் சிரிப்பும் "லொட லொட" என்று எந்நேரமும் வாயோயாமல் அலட்டும் பேச்சும் கட்டைக் காலை வைத்துக் கொண்டு பாதம் பெடல் கட்டையில் முட்டக் கஷ்டப் பட்டு "தெண்டித் தெண்டி"சைக்கிள் ஓடும் அழகும் தான்.அவளிடம் அணியும் ஆடை,செய்யும் வேலை எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருக்கும்.

    எந்நேரமும் அயர்ன் பண்ணி(ironing) மடிப்புக் கலையாத ஆடை தான் அணிவாள்.எந்த வேலையென்றாலும் நாளைக்குச் செய்து முடிப்போம் என்று எண்ணாமல் அன்றே செய்து முடிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவள்.எங்களின் நாவற்பழ நிறத்தழகி அவள்.தெற்றுப் பல் தெரிய அவள் சிரிக்கும் அழகோ அழகு தான்....பார்த்துக் கொண்டே இருக்கலாம்.அவள் சராசரி உயரத்தை விட சற்றுக் குறைவான குள்ளமான உருவத்தை உடையவள்.இதனால் அவள் பல சிரமங்களை சந்திக்க வேண்டி இருந்தது.உதாரணத்துக்கு சைக்கிள் ஓட்டுவதற்குக் கூட ஏதாவது ஒரு புட்டியான இடம் பார்த்து தான் ஏறி ஓடுவாள்.இதனால் எல்லோரிடமும் நல்ல அறுவையையும் வாங்கிக் கட்டுவாள்.

    எல்லோரையும் போலவும் தான் புகழினியின் பிள்ளைப் பராய வாழ்க்கையும் இன்பத்துடன் அமைந்தது.அம்மா,அப்பா,தம்பி,அவள் என அழகிய சிறிய குடும்பம் அவளுடையது.அவளது சொந்தப் பெயர் மேரி கொன்ஸ்ரலின்.வீட்டில் ஒரேயொரு பெண்பிள்ளை என்பதால் சரியான செல்லமாக வளர்ந்தாள்.அவளது சொந்த இடம் வலிகாமப் பகுதியில் சில்லாலை என்ற கிராமம்.அவள் தனது கல்வியை பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியில் கற்றாள்.வலிகாமம் பகுதியில் ஏற்பட்ட போர்ச் சூழல் காரணமாக அடிக்கடி இடப்பெயர்வு ஏற்பட்டதின் காரணத்தினால் அவளாலும் ஒழுங்காக கல்வி கற்க முடியாத சூழ்நிலை காணப்பட்டது.
    1994 க.பொ.த சாதாரண தரத்தில் தோற்றி சித்தியடைந்து க.பொ.த உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்றுக் கொண்டிருந்தாள்.

    1995ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது விடுதலைப் போராட்டமானது மிகவும் உச்ச நிலையை அடைந்திருந்தது.வலிகாமப் பகுதியில் எதிரியானவன் எம் நிலத்தை நோக்கி முன்னேறி வந்து கொண்டிருந்த போது எமது போராட்டத்தின் உண்மை நிலையை உணர்ந்து பல்லாயிரக் கணக்கான இளைஞர்,யுவதிகள் தாமாகவே மனமுவந்து வந்து எமது அமைப்பில் இணைந்து கொண்டார்கள்.அந்த வகையில் மேரி கொன்ஸ்ரலினும் "வண்ணக் கனவுகள் தன்னில் கரைந்துமே பெண்மை கரைந்தது போதும்....இனி கண்ணைத் திறந்தொரு மின்னல் எழுந்திட விண்ணை விழுத்தலாம் வாரும்....பூகம்பமே என்னில் சூழட்டும் நெஞ்சில் போர் எனும் தீ வந்து மூழட்டும்"என்று 1995ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் எமது அண்ணன் கரிகாலன் சேனையில் இணைந்து கொண்டாள்.அங்கு அவள் மகளிரணியின் 30ஆவது பயிற்சிப் பாசறையில் புகழினி எனும் நாமத்துடன் போராளியாக புடம் போடப்பட்டாள்.

    பின்பு 1995ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் நிதித்துறை மகளிர் கணக்காய்வுப் பகுதி முகாமுக்கு அனுப்பப்பட்டாள்.புகழினி கணக்காய்வுப் பகுதிக்கு வந்த காலம் தொட்டு நீண்ட காலம் மருந்து பால்மா கணக்காய்வு அணியிலேயே என்னுடன் இணைந்து கணக்காய்வை மேற் கொண்டாள்.அவள் பணியிடத்தில் பணியாளர்களிடம் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் அதேவேளை தேவைப்படும் போது கண்டிப்பாகவும் பணியை மேற்கொள்ளுவாள்.அவள் கணக்காய்வில் மட்டுமல்ல மற்ற இதர செயற்பாடுகளிலும் தன்னை வளர்த்துக் கொண்டாள்.

    தற்காப்புக்கலையிலும் திறம்பட பயின்று கறுப்புப் பட்டி வரை பெற்றவள்.அது மட்டுமல்ல அவள் முறிப்பு நடனம்(break dance)ஆடுவதிலும் நல்ல தேர்ச்சி பெற்றவள்.எங்கள் முகாமில் நத்தார்தின நிகழ்வுகள் நடைபெறும் போது அதில் முறிப்பு நடனமாடி அவள் தான் கதாநாயகியாக திகழ்வாள்.மேலும் அவள் வாகன ஓட்டுனர் பயிற்சிக் கல்லூரியிலும் பயின்று உழவு இயந்திரமும் நன்றாக செலுத்துவாள்.இயக்கத்துக்கு வரும் போது புகழினிக்கு சைக்கிள் கூட ஓட்டத் தெரியாது.ஆனால் பின்பு உழவு இயந்திரம் செலுத்தக் கூடிய அளவுக்கு அவளை எமது அமைப்பு வளர்த்து விட்டிருந்தது.

    1996ஆம் ஆண்டு ஆரம்ப காலம் தொடக்கம் 2000 ஆண்டு வரை நானும் புகழினியும் ஒன்றாகவே மருந்து பால்மா கணக்காய்வு அணியில் கணக்காய்வு பணி மேற்கொண்டமையினால் எனக்கும் அவளுக்குமான உறவானது பலமானதாகவும் பல இனிமையான தருணங்களைக் கொண்டதாகவும் இருந்தது.அதில் சிலவற்றை அவளது ஞாபகமாக பகிர்ந்து கொள்ள அவாக் கொண்டுள்ளேன்.

    1996ஆம் ஆண்டு வன்னிக்கு வந்த புதுசில நானும் புகழினியும் மருந்து பால்மா கணக்காய்வு அணியில் தான் கணக்காய்வை மேற் கொண்டோம். எங்களுக்கு பணிக்குச் செல்வதற்கு சைக்கிள் கூட இல்லை.நானும் புகழினியும் சைக்கிள் இல்லாத காரணத்தினால் நடராசாவில்(நடையில்) தான் பணிக்குச் செல்வோம்.எங்களின் முகாமில் உள்ள போராளிகள் அனைவருக்கும் ஒவ்வொரு பட்டப் பெயர் வைத்து தான் கூப்பிடுவோம்.புகழினிக்கு
    "பேணி"தான் பட்டப் பெயர்.(எந்த நேரமும் "லொட லொட" என்று தகர டப்பா மாதிரி அலட்டுவதால் அவளுக்கு "பேணி" என்ற பட்டப் பெயர் உருவானது).என்னைப் பேணி "அரியத்தார்" என்று தான் கூப்பிடுவாள்.பின்பு பணிக்குச் செல்வதற்கு இரண்டு பேருக்கு ஒரு சைக்கிள் என்ற ரீதியில் கொடுக்கப்பட்டது.அதில் நானும் பேணியும்(புகழினி)தான் ஒன்றாக பணிக்குச் செல்வோம்.வழமையாக அவளை மருந்து பால்மா கடையில் விட்டு விட்டு நான் பொன்னம்பலம் வைத்தியசாலைக்குச் செல்வேன்.

    நாங்கள் பணி முடித்து விட்டு மதிய உணவு நேர இடை வேளைக்கு முகாமில் சென்றுதான் சாப்பிடுவோம்.அப்போது சாப்பிடும் தட்டுக் கழுவிற பஞ்சியில நானும் புகழினியும் ஒரு தட்டில தான் உணவு உண்ணுகின்றனாங்கள்.சாப்பிட்ட தட்டைக் கழுவோணும் என்ற கள்ளத்தில நான் முதலாவதாகச் சாப்பிட்டிட்டு தட்டை அவளிடம் தள்ளி விட்டு ஓடி விடுவேன்.அவள் என்னைத் திட்டிக் கொட்டிப் புறுபுறுத்தபடி ஒருவாறு தட்டைக் கொட்டிக் கழுவிப் போட்டு வருவாள்.அவ்வாறு அவளது புறுபுறுப்பைக் கேட்பதிலே எனக்கு பெரிய ஒரு சந்தோசமாக இருக்கும்.


    1997ஆம் ஆண்டு நாங்கள் க.பொ.த உயர்தரத்தை முடிக்காமல் எமது அமைப்பில் இணைந்த படியால் பணித்தேவையின் தகுதி கருதி உயர்தரப் பரீட்சையில் தோற்றுவதற்கு பணிக்கப் பட்டோம்.எங்களுடன் புகழினியும் இணைந்து கல்வி கற்றாள்.அவள் இயல்பாகவே மிகவும் கூச்ச சுபாவமும்,இரக்க குணமும்,பயந்த சுபாவமும் உடையவள். அதனாலேயே அவளை எந்நேரமும் கிண்டலடிப்பது தான் எமது பொழுது போக்கு.

    உயர்தரம் படிக்கும் போது எமது பொறுப்பாளரால் நாம் வெளியே செல்வதற்கு தடை விதிக்கப் பட்டிருந்தது.ஆனால் எமக்கோ வெளியில் விடுப்பு பார்க்காமல் இருக்க முடிவதில்லை.எங்கள் முகாம் முற்றத்திலே பெரிய அடர்ந்து செழித்து வளர்ந்த மாமரம் ஒன்று உண்டு.அதிலே ஏறிப் பார்த்தால் வெளியே குறிப்பிட்டளவு தூரம் மட்டும் என்ன நடந்தாலும் தெரியும்.அதனால் நாங்கள் மாமரத்துக்கு மேல ஏறி அமைதியாக இருந்து படிக்கிறம் என்று கதை விட்டு மாமரத்துக்கு மேல ஏறி இருந்து விடுப்புப் பார்த்துக் கொண்டு படிப்பதுண்டு.புகழினிக்கு மாமரத்தில எங்களோட சேர்ந்து ஏறி இருந்து விடுப்பு பார்க்க ஆசை....ஆனால் ஏறத் தெரியாது.அதனால் நாங்கள் இரண்டு பேர் அவளை மேலேயிருந்து அவளது இரண்டு கைகளையும் பிடித்து இழுக்க கீழே இருந்தும் ஒராள் தள்ளி விட்டு ஒரு மாதிரி ஏற்றிப் போடுவோம்.

    மேலேயிருந்து படிக்கிறம் என்று போட்டு நாங்கள் மரத்தில இருக்கிற மாம்பிஞ்சுகளால றோட்டால மோட்டார் சைக்கிளில போற எங்கட இயக்க அண்ணாக்களுக்கு எறிவதுண்டு.அண்ணாக்களும் எறிவது நாங்கள் என்று தெரிந்தாலும் பாவம் பிள்ளைகள் தானே என்று விட்டுக் கண்டும் காணாத மாதிரி போய் விடுவினம்.

    ஆனால் புகழினிக்கு நன்றாக இலக்கு பார்த்து எறிய தெரியாது.அவள் ஒரு மோட்டார் சைக்கிளுக்கு மாம்பிஞ்சால எறிய வெளிக்கிட்டு அது போய் பின்னால சைக்கிளிலே வந்த அப்பு மேல பட்டு அந்த அப்பு வந்து பொறுப்பாளரிட்ட வந்து பிள்ளையள் மாம்பிஞ்சால எறிஞ்சு போட்டுதுகள் என்று சொல்லிக் கொடுத்து புகழினியால நாங்கள் நான்கு பேரும் நூறு தோப்புக் கரணம் போட்டதை இப்பவும் மறக்க முடியாது.

    புகழினிக்கு எங்களோட சேர்ந்து கள்ள வேலைகள் செய்வதற்கு சரியான பயம்.நாங்கள் வலுக்கட்டாயமாக இழுத்தாலும் வரமாட்டாள்.எங்களது முகாமில் இருக்கும் போராளிகளின் பெற்றோர் அவர்களின் பிள்ளைகளைப் பார்க்க வரும் போது சாப்பிடுவதற்கு நிறைய உணவுப் பொருட்கள் கொண்டு வந்து தருவதுண்டு.அதை தமா அன்ரா தான்(ஒரு அக்காவின் பட்டப் பெயர் தான் தமா அன்ரா)எல்லோருக்கும் பிரித்துக் கொடுப்பார்.அவர் எல்லோருக்கும் அளவாகக் கொடுத்து விட்டு மிகுதியை ஒரு மேசையில் கடைசி இழுப்பறையில் ( இலாச்சி) பதுக்கி வைப்பார்.அதில் கடைசி இலாச்சிக்கு மட்டும் தான் பூட்டு உள்ளது.மற்றைய இரண்டு இலாச்சிகளுக்கும் பூட்டு இல்லை.தமா அன்ரா கடைசி இலாச்சியில் வடிவாக வைத்து பூட்டிப் போட்டு அங்கால போனதும் நாங்கள் பூட்டில்லாத மேல் இலாச்சியைக் கழட்டிப் போட்டு கீழ் இலாச்சியில் உள்ள தின்பண்டங்களை எல்லாம் எடுத்துச் சாப்பிடுவோம்.புகழினியை இதுக்கு கூட்டுச் சேர்த்தால் வரவும் மாட்டாள் நாங்கள் கொண்டு போய்க் கொடுத்தாலும் சாப்பிடவும் மாட்டாள்.சாப்பிட்டால் பிறகு தமா அன்ராவிடம் நல்ல கிழி வாங்க வேண்டிவரும் என்ற பயம் அவளுக்கு.(எங்களுக்கு எவ்வளவு கிழி வாங்கினாலும் சாப்பாட்டு விசயத்தில சொரணை வராது).

    எங்கட முகாமுக்கு பின் புறத்தில் இரண்டு பெரிய பலா மரமும் உண்டு.அதில் நிறைய பலாப்பழங்கள் கனிந்து தொங்குவதுண்டு.எங்கள் முகாம் வளவுக்கு சொந்தக்கார ஆச்சி முகாமுக்கு பக்கத்து வீட்டில தான் இருக்கிறவர்.அவர் அடிக்கடி முகாமுக்கு வந்து எத்தனை பலாப்பழம் காய்த்து இருக்கிறது என்று கண்காணிச்சுக் கொண்டு தான் இருப்பார்.எங்களுக்கோ அந்தப் பலாப்பழங்களைக் கண்டால் வாயூறும்.ஆச்சியின் கண்ணில மண்ணைத் தூவிப் போட்டு அந்த பலாப்பழங்களை அடிக்கடி நாங்கள் பிடுங்கிச் சாப்பிடுவதுண்டு.இந்தப் பலாப்பழம் பிடுங்குகின்ற நிகழ்வானது அடிக்கடி எங்கட இரவு நேரக்காவற்கடமை நேரத்தில் தான் நிகழும்.

    மற்ற குழப்படி வேலைகளுக்கு பயப்படுகின்ற புகழினி பலாப்பழத்தில இருக்கிற அலாதிப் பிரியத்தில இதுக்கு மட்டும் எங்களோட கூட்டுச் சேருவாள்.பலாப்பழம் ஏறிப் பிடுங்கவோ வெட்டவோ வரமாட்டாள்...நாங்கள் ஏறிப் பிடுங்கி வெட்டி வைத்தால் மற்றைய எங்கட கூட்டுக் களவாணிகளை(முகாமில இருக்கிற எல்லோரையும் நாங்கள் இந்த நிகழ்வுக்கு சேர்ப்பது இல்லை...பல விசுவாசக்குஞ்சுகளும் இருந்ததால் போட்டுக் கொடுத்து விடுவினம் என்ற பயம்)நித்திரையில் இருந்து எழுப்பிக் கூட்டி வந்து அவைக்கும் பரிமாறி தானும் சாப்பிடுகின்ற வேலையை மட்டும் தான் பார்ப்பாள்.

    இப்படித்தான் ஒருநாள் இரவு காவற்கடமை நேரத்தில் பலாப்பழத்தை இறக்கிச் சாப்பிட்டுப் போட்டு பலாச்சக்கையை புகழினியின் மொக்கை ஐடியாவால பக்கத்து வீட்டு வளவுக்கை தூக்கிப் போட்டு அந்த பக்கத்து வீட்டுக்கார அக்கா முகாம் வளவுக்கு சொந்தக்கார ஆச்சியிடம் போட்டுக் கொடுத்து அந்த ஆச்சி முகாமுக்கு வந்து பொறுப்பாளரிடம் சொல்லி சண்டை பிடித்து பொறுப்பாளர் ஆச்சியை ஒரு மாதிரி சமாளிச்சு அனுப்பின கதையை இப்பவும் மறக்க முடியாது.(எங்களின் பொறுப்பாளர் சாப்பாட்டு விசயங்களில எங்களுக்குத் தண்டனை தருவது இல்லை).இப்படி புகழினியால நாங்களும் மாட்டுப் பட்ட சம்பவங்கள் நிறைய உண்டு.

    புகழினியின் குடும்பத்தின் சூழ்நிலையானது மிகவும் கவலையளிக்கக் கூடியதாகவே காணப்பட்டது.அவளது குடும்பம் சொந்த இடத்தில் இருந்த போது சொந்த தொழில் செய்து வந்த படியால் நல்ல வசதியாகத் தான் வாழ்ந்து வந்தார்கள்.பின்பு வன்னிக்கு இடம்பெயர்ந்து வந்ததால் புகழினியின் அப்பாவிற்கு தொழில் வாய்ப்பின்றி அன்றாட உணவுத் தேவைக்குக் கூடக் கஷ்டப்பட்டார்கள்.புகழினியின் அம்மா மகள் இயக்கத்துக்கு வந்ததாலே யோசித்து யோசித்து இருதய நோய் மற்றும் ஆஸ்துமா நோய் பீடிக்கப் பட்டு மிகவும் கஷ்டப்பட்டார்.அப்பா தான் ஓலைப் பாய்,பெட்டி இழைத்து விற்றுபிழைப்பு நடத்தி வந்தார்கள்.புகழினியின் தம்பியோ மிகவும் சிறிய பையன்.அப்போது பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருந்தான்.இதனால் நாங்கள் புகழினியுடன் அவளது வீட்டுக்குச் செல்லும்போது புகழினியின் அம்மா"என்ரை மகள் வீட்டை இருந்திருந்தால் படித்து உழைத்து எங்களைப் பார்த்திருக்கலாம் தானே" என்று சொல்லி அழுது கவலைப்படுவார்.ஆனால் புகழினியோ "வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்குத் தேவை தானே"உங்களுக்கு தம்பி இருக்கிறான் தானே என்று சொல்லி சிரித்து சமாளித்து விடுவாள்.

    புகழினி எமது தலைவர் மீதும் போராட்டத்தின் மீதும் எல்லாப் போராளிகளைப் போன்றே மிகுந்த பற்றும் விசுவாசமும் உடையவள்.எமது தலைவரின் புகைப்படங்களைச் சேகரித்து அதை ஒரு செருகேடாக(album) வைத்து இருந்தாள்.சில போராளிகள் வீட்டில "அம்மாவாணை "என்று சத்தியம் செய்வதைப் போல இயக்கத்திலே "அண்ணையாணை "என்று கதைப்பதுண்டு.அது புகழினிக்குப் பிடிக்காது.சும்மா அண்ணையை போட்டு உங்கட லூசுக் கூத்துக்களுக்கு இழுக்காதையுங்கோ என்பாள்.

    எங்களின் பொறுப்பாளர் புகழினியின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவளைச் சண்டைக் களங்களுக்கு அனுப்புவதில்லை.1999ஆம் ஆண்டு எங்கள் முகாமில் இருந்து சிலபேர் நெடுங்கேணிப் பகுதிக்குச் சண்டைக் களத்திற்குச் சென்ற போது பொறுப்பாளர் புகழினியை அங்கே செல்வதற்கு அனுமதிக்கவில்லை.ஆனால் அவள் அழுது சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து அவரோடு சண்டை பிடித்து சண்டைக் களத்துக்குச் சென்று அங்கு திறம்பட செயற்பட்டு முகாமுக்கு திரும்பினாள்.

    பொதுவாக நாங்கள் வெளிப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் பெரிய பெரிய வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளின் போது போராளிகள் பற்றாக்குறை காரணமாக உடற் குறையுள்ள விழுப்புண்ணடைந்த மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்கும் மட்டும் தேவையான கொஞ்சப் பேரை மட்டும் முகாமில் விட்டு விட்டு மிகுதிப் பேரை இடையிடையே போர்ப் பயிற்சிகள் தந்து களப்பணிகளுக்கு இணைத்துக் கொள்வார்கள்.எங்களுக்கும் களப்பணிகளில் ஈடுபடுவதில்லை என்று குற்றவுணர்ச்சி ஏற்படுவதால் இப்படி இடையிடையே இணைப்பதால் நாங்களும் மிகவும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் களப் பணிகளுக்குச் சென்று வருவோம்.எமது தலைவரும் ஒரு போராளிக்கு வெளி நிர்வாகப் பணிகளில் மட்டுமல்ல களப்பணிகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவார்.

    அந்த வகையில் நிதித்துறை மகளிர் அணியைச் சேர்ந்த நாங்கள் 2000 ஆம் ஆண்டு மே மாதத்தில் மாலதி படையணியுடன் இணைந்து வலிந்த தாக்குதல் நடவடிக்கை ஒன்றிற்காக சுண்டிக்குளம் பகுதியில் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம்.அதே வேளை எங்கள் புகழினி ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியில் பயின்று கொண்டிருந்த படியால் அவர்களுடன் சேர்ந்து பளைப் பகுதியில் போர் முன்னரங்கப் பகுதியில் எம் மக்களின் காவற் தேவதையாக காவற்கடமை புரிந்து கொண்டிருந்தாள்.

    29.05.2000அன்று எங்களுக்கு "புகழினி வீரச்சாவாம் " என்ற கொடிய செய்தி வந்தடைந்தது.எல்லோரும் கலங்கிப் போய் நின்றோம்.பளைப் பகுதியில் போர் முன்னரங்கப் பகுதியில் அவள் காவற்கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது எதிரியின் ஆழ ஊடுருவும் அணியின் சுற்றிவளைப்பின் போது எதிரியுடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரமுடனும் தீரமுடனும் போராடி எங்களின் புகழினி லெப்ரினன்ட் புகழினியாக வீரமரணத்தைத் தழுவிக் கொண்டாள்.

    பின்பு நாங்கள் அனைவரும் எங்களது பயிற்சி முகாம் பொறுப்பாளரிடம் ஒரு நாள் அனுமதி கேட்டு புகழினியின் இறுதி வணக்க நிகழ்வுக்குச் சென்றோம்.அங்கே எங்கள் புகழினியின் வித்துடலை கடைசியாகக் கூட பார்க்க முடியாமல் வித்துடல் பேழை அடைக்கப்பட்டிருந்தது.அதைவிட புகழினியின் அப்பா என்னைப் பார்த்து "பிள்ளை உன்னோட தானே என்ரை மகள் ஒன்றாகத் திரியுறவள் நீ மட்டும் தான் வந்திருக்கிறாய் என்ரை மகள் எங்கே"என்று என்னைக் கட்டிப் பிடித்துக் கதறி அழுததும் நானும் குற்றவுணர்வால் அழுததும் நான் சாகும் வரை என் நினைவை விட்டுப் போகாது.பின்பு2002ஆம் ஆண்டு புகழினியின் அப்பா பொன்னம்பலம் வைத்தியசாலையில் நான் பணியை மேற்கொண்டிருந்த போது என்னை வந்து சந்தித்து பிள்ளை தாங்கள் அனைவரும் சொந்த இடத்திற்கு (சில்லாலைக்கு)செல்லப் போறோம் என்று சொல்லி விட்டு "என்ர பிள்ளையில்லாமல் போகப் போறேன் "என்று கதறி அழுததை இன்றும் நினைத்தால் மனதை பாறாங்கல்லால் வைத்து அழுத்தியது மாதிரி ஒரு உணர்வைத் தருகிறது.

    எங்களின் அன்புத் தோழி புகழினியே.... உன்னை இழந்த இந்த நாளில் மட்டுமல்ல எங்கள் வாழ்நாட்கள் முழுக்க எந்நாளுமே எங்கள் பழைய தோழிமார் யாரோடு கதைத்தாலும் உன் நினைவைத்தான் மீட்டிக் கொண்டிருக்கின்றோம்.உன்னைப் போன்ற ஒன்றாய்க் கூடி வாழ்ந்த தோழர்கள்,தோழியர்களை இழந்து விட்டு நாங்கள் மட்டும் தப்பி வந்து குற்றவுணர்வுடன் நடைப்பிணங்களாக எங்களின் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக புன்னகை என்னும் அரிதாரத்தைப் பூசிக் கொண்டு மனதுள்ளே எரிமலை போன்று குமுறிக் கொண்டு உயிர் இருந்தும் ஜடமாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.இப்பொழுதும் நீ என்னை "அரியத்தார்" என்று கூப்பிடும் ஒலி காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

    எம் தமிழீழ வரலாற்றில் என்றும் உன் கதை எழுதி வைக்கப்படும்.

    -தமிழ்நிலா.

    32 minutes ago, ஈழப்பிரியன் said:

    எப்படி வந்தோமே அப்படியே தான் போக வேண்டும்.
    அதற்கிடையில் தான் எத்தனை குத்துப்பாடு வெட்டுப்பாடு போட்டி பொறாமை.

    உங்கள் எழுத்துக்கள் அனுபவம் மிக்கதாக தெரிகிறது.
    ஏனைய பகுதிகளிலும் தொடர்ந்து எழுதுங்கள்.

    மிக்க நன்றிகள்

    • Like 2
    • Thanks 2
  5. இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கங்கள்🙏🙏🙏

    இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கங்கள்🙏🙏🙏

  6. மாலதி அக்காவே

    ஈழத்தமிழ் நாட்டில் ஈழத்தமிழ் மக்கள் படுந் துயர் கண்டு இழந்த எம் உரிமை எய்திட நீ துடித்தாய்!!!!

    மணவறை நாடி மற்றவர் கனவு காண உன் நினைவறை தேடி வந்த ஈழ அன்னையை குடியமர்த்தி சுதந்திர தமிழீழ கனவு நீ கண்டாய்!!!!!

    எம்முரிமை களைய வந்த மாற்றானுக்கு பிணவறைப் பயமூட்டி அவன் கனவறையிலும் எம் வீரத் தமிழீழ மறத்திகளின் நினைவில் பதறிக் கலங்கிட நீ செய்தாய்!!!!!

    நெஞ்சில் ஈழக்கனவு என்றும் நீங்காத கடமையுணர்வு வீரம் எனும் சொற் குமிழியிடும் சிதையாத நாட்டுணர்வு துஞ்சா இருவிழிகள் தொய்ந்து விழா நற்தோள்கள் அஞ்சுதல் இன்றி வளைக்கரங்களில் துப்பாக்கி ஏந்தி அயர்வின்றி போர்க்களமாடி எம் தமிழ் பெண்டிர்க்கு உணர்வூட்டி கோப்பாயில் பெண் மாவீர முதல் வித்தாய் நீ வீழ்ந்தாய்!!!!!

    எஞ்சுகின்ற காலமெல்லாம் விஞ்சுகின்ற உம் ஈழக்கனவை கருக் கொண்டு நஞ்சு மனங்கொண்ட மாற்றான் நடுக்கமுறும் செந்துணிவு எம் மக்கள் கொள்வர் என்றெண்ணி உன்னுயிர் நீ ஈந்தாய்!!!!!

    உன் கனவு பலிக்கும் எம் தமிழ் மண் விடுதலை கொள்ளும் எம் தமிழர் மனங்கள் நிறையும் உலகந் தழுவி எம் தமிழ் மக்கள் மனங்களில் என்றும் விடுதலைத் தாயாய் நீ வாழ்வாய்!!!!!

    • Like 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.