நிலவைப் பெண்ணாகவும், குளிர்மையானதாவும் தான் கவிஞர்கள் வர்ணித்திருக்கிறார்கள். நிலவு குளிர்மையானதென்றால் , அந்த நிலவுக்கு யாரையாவது வெப்பத்தால் சுட்டெரிக்கும் தன்மை உள்ளதா? இல்லை. ஆனால் இங்கே கவியரசர் கண்ணதாசன் குறிப்பிடும் காதலர்கள், தமது காதல் துணையை சுட்டெரிக்கும் வண்ணம் நிலவிடம் விண்ணப்பிக்கின்றாகளே? இது சாத்தியமா? இல்லை. நிலவு இதம் தருமே தவிர வதை செய்யாது. உண்மையான காதலர்கள் தமது காதல் துணைக்கு கனவிலே கூட துன்பம் நினைக்கார். அதனால் தான் அவர்கள் தமது காதலரை சுட்டெரிக்கும் படி சூரியனிடம் கோரவில்லை. இதைத் தான் ஊடல் என்பது. இதோ அந்தப் பாடல்:
" அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னைப் போல் பெண்ணல்லவோ - நீ
என்னைப் போல் பெண்ணல்லவோ?"
அத்திக்காய் = அந்தப் பக்கமாக, அந்தத் திசையாக [காதலன் நிற்கும் பக்கம்]
இத்திக்காய் = இந்தப் பக்கமாக [ தான் நிற்கும் பக்கம்]
ஆல் = தொலைவு, அதிக தூரம், அங்கே
அங்கே காயும் நிலவே, நீயும் என்னைப் போல ஒரு பெண்தானே, ஆகவே, இந்த்தப் பக்கமாக [நான் நிற்கும் பக்கம்] வந்து என்னைச் சுடாதே. என் காதலர் நிற்கும் பக்கம் சென்று அவரைச் சுடு.