Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Rasikai

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Content Count

  3,798
 • Joined

 • Last visited

Blog Entries posted by Rasikai

 1. Rasikai
  இரண்டடிக்குள் இரண்டரை கோடி!

  நேற்றுத்தான் அவன் வீடு கட்ட கண்டேன்.....
  குடும்பத்தோடு வந்து இன்று குடிபுகுந்து விட்டான்!
  அவனும் கறுப்பு ..அவளும் கறுப்பு..
  மகனும் கறுப்பு..மகளும் கறுப்பு...

  ஆடம்பரம் ஏதுமற்ற வீடு...
  அருகில் நடப்பதை பற்றி எந்த அக்கறையும் அங்கில்லை...
  மின்சாரம் இல்லையென்ற கவலை இல்லை..
  மேதாவி தனமான பேச்சுகளும் அங்கில்லை...

  பசி என்று வந்துவிட்டால்- காதலுடன்..
  அவன் இதழால் அவளுக்கு ஊட்டிவிட..
  தான் பெற்றதை பிஞ்சுகளுக்கும்- இதழாலேயே பரிமாற
  ஒரு அள்ளு உணவுக்குள் நான்கு உயிர்கள் பசியாறுமா?

  அழகில்லைத்தான்..அசிங்கம்தான்...
  ஒளித்திருந்து பிறர் வாழ்வை பார்ப்பது..
  உதவாத பழக்கம் தான்...
  இருந்தும் மனம் ஏங்கியது...........

  அடடா....
  அழகிய வாழ்வென்பதை இவர்களின் பெயரில் மட்டும்
  எழுதி வைத்துவிட்டு ஒளிந்து கொண்டவனே..
  இறைவா... எங்களுக்கும் கொஞ்சம் தாவேன் என்றபடி!

  அங்கே என்னடி பராக்கு- அதட்டினாள் அம்மா..
  திரும்பி திரும்பி அவர்களை பார்த்தபடி வீட்டுள் நுளைந்தேன்!
  எம்முள் சிலருக்கு ஏன் இப்படி ஒருவாழ்வு இல்லை??
  வாழ தெரியவில்லை??
  ஆயிரம் ஆயிரம் கேள்விகள் என்னுள்..
  செவ்வந்தியை சுற்றிய தேனீக்களாய்..
  விடைமட்டும் கடலில் கரைத்த உப்பென இன்னும் காணோம்!

  இரண்டடி கூட கொள்ளா கூட்டுக்குள்
  இரண்டரை கோடி சந்தோசங்களா?
  ம்ம்ம்ம்ம்..........
  காகம் கொடுத்து வைத்த பிறவிதான்!!
 2. Rasikai
  ஜோசப் பரராஜசிங்கம்!
  --------------------
  சிங்கம் அவர் பெயருள் உண்டென்று உலகம் சொல்லும்....
  அவர் உடல் முழுக்க ஓடியது புலி இரத்தம்!
  எங்களுக்கு மட்டுமே அது புரியும்!!

  எத்தனையோ இரவுகளில் எமக்கு துணை நின்ற ஒளி விளக்கு...
  விடிகிறது என்று எம்முள் சிலர் நினைக்கையில் ..
  எப்படி விடை பெற்று போயிற்று

  தன் மானத்துடன் வாழ்பவனுக்கு...
  சாவுதான் பரிசென்ற சாபகேடா எம் வாழ்வு?

  யுத்தம் அழித்தது...
  மேகம் அழித்தது...
  கடலும் வந்து கொன்று எமை கரை மணலுள் புதைத்து போனது!

  இன்று எம் கூட நின்றவரையும் கொன்று - கர்த்தரே
  உன் காலடியில் அவர் ரத்தம் தெளித்து போகிறார்!

  அழிவென்றால் தமிழன் - என்று அகராதி
  ஒன்று ஆகிடுமோ?

  உம்மை அழிவு கொடுத்து எம்மை காத்தவரே - கர்த்தரே
  இப்போ நாமழிகிறோம்... வந்து
  எப்போது .............
  எமை காப்பீர்????
 3. Rasikai
  வா..வா!!
  ---------------
  கை குட்டையை கண்ணீரில் சலவை செய்த ஆண்டே
  2005 போய்வா தோழா!

  சுனாமி என்று ஆரம்பித்தாய் ஜோசப் பரராஜசிங்கம் வரை
  கொன்று தொலைத்தாய்!

  என்ன உனக்கு நாம் செய்தோம் ஏன் இப்படி?
  இருந்தாலும் போய்வா!

  2006 ஏ வா வா !
  வண்ணப்பூக்கள் கொண்டு எம் வாசலில் கோலம் போடுவாயா?

  வாழ நினைக்கும் எங்கள் நெஞ்சில் கூரிய வாளதை..
  பிறர் போல் மீண்டும் பாய்ச்சுவாயா?

  கெஞ்சி கேட்கிறோம்... நீயும் இரத்த சாரலை
  எம் முகத்தில் தூறாதே... தாங்கமாட்டோம்!

  வாய் மூடிபோன பீரங்கி வாய்களை
  ஒலிவம் கிளைகள் கொண்டு அடைத்துள்ளோம்!

  அதன் இலைகளை நெருப்பு கரம் கொண்டு இனியும்
  எரித்திடாதே.. அணைத்திடாதே!

  தர்மம் வெல்லும் என்று நினைத்தோம்-நினைக்கிறோம்..
  ஆனால் தர்ஷினிவரை இன்று பறி கொடுத்து நிற்கிறோம்!

  தமிழராய் பிறந்ததை தவிர தவறு வேறென்ன செய்தோம்?

  போனது போகட்டும்.. வாயிலில் கண்திறந்த
  மலர்கள் இனி குருதியில் குளிக்காது பூக்கட்டும்!

  சிரிப்பு பெரிதாய் எம் முகத்தில் இல்லாவிடினும்..
  செங்கம்பளம் விரித்து உன்னை வரவேற்கிறோம்..
  வா வா 2006 ஆண்டே!!
 4. Rasikai
  போ கடலே நீயுமா?
  =========================
  நீல வானம் குடை பிடிக்க
  நெடும் கழுத்து நாரைகள் உனை கடக்க..
  கொக்கின் தவம்..கரையில் ஒற்றை காலில் நின்று அடம் பிடிக்க
  கொள்ளை அழகு நீ என்று கொஞ்சி மகிழ்ந்தோம் கடலே..
  கொத்தும் குலையுமாய் எம்மை கொன்று சென்றாய் கடலே!

  ஈவு இரக்கம் என்னவென்று தெரியாதார் நாளும் - எமை

  நார்..நாராய் கிழிதெறிந்து நரபசி ஆறினரே...
  குமுறி குமுறி அழுது.. கூடெரிந்த குருவிகளாய்
  வழி தெரியாது நின்றோம் - கடலே
  நீயும் வந்து எங்கள் விழிகளில் தீ மூட்டி போனாயே...
  வெந்து ஆவியாய் போயேன் கடலே!

  அன்னை என்றோம் ..மாதா என்றோம்...
  தாய் என்றோம் ... எம் கரையை தாங்குபவள் என்றோம்...
  அத்தனை முறையும் எம்மை பெற்றவள் பெயர் கொண்டே..உனை அழைத்தோம்..

  பெற்றவள் பதற பிஞ்சினயும்..இன்னும் பேசவே தொடங்கா மழலை
  அழுது நிற்க பேறு கொண்டவளையும்...
  பெரிசுகளையும் ..சிறிசுகளையும்...
  கரை தாண்டி வந்து சுருட்டி சென்று..கருக்கு மட்டையில் அடித்து கொன்று
  காவு கொண்டு போனாய் கடலே!

  இனி என்ன பெயர் கொண்டு நாம் உனை அழைக்க
  நீயே சொல்லு கடலே!

  தலை மூடி போன போர் வெள்ளம் கொஞ்சம் வடிய...
  இனியாவது விடியாதா என்று ஏக்கத்தோடு நாம் நிமிர...
  தலை மீது நெருப்பள்ளி கொட்டி போனாய் கடலே...
  இனி உன்னை தாயென்று பாடமாட்டோம் கடலே!
 5. Rasikai
  என்ன செய்ய போகிறோம்?
  -----------------------------------------

  எவ்வளவு அழகிய பூமி.....என்னை சுற்றி இருப்பது!
  என்னதான் வாழ்கை பெரிய சுமையாக தெரிந்தாலும்..
  கொட்டுகின்ற பனியும்...அதனை கொஞ்சுகின்ற புல் தரையும் ..

  நான் நட்டு வைத்த செடியில் முதல் முதலாய் பூத்து....
  நாணத்துடன் சிரிப்பது போன்ற பூவும்...
  சின்ன குழந்தை முத்தமாய்..
  என் தேகம் நனைக்கும் மழை துளியும்..

  என்றோ பிரிந்து வந்தாலும்..
  இன்னும் என் இதயத்தின் வலி கொண்ட சிறகாய்.........
  இன்றும் என் உயிர் பிசையும்.....
  வாழ்ந்து விட்டு வந்த என் தேசத்து வசந்தமும்..

  ம்ம் எண்ணியே பார்க்கிறேன்.. இன்னும் ஏதோ இருப்பது போல்த்தான் இருக்கு வாழ்வில்..!

  ஆயினும்..
  நான் இரசித்த அழகுகள் எல்லாம் என்றும் அப்படியே இருக்க........
  தான் மட்டும் இருந்து கொண்டு பூமி .. எம்மை...
  காலம் வந்தால் கை அசைத்து வழி அனுப்பி வைக்கும்!!!
  கட்டாயம் அது நடக்கும்!!!

  இருட்டில் தொலைத்த கறுப்பு மலரா வாழ்வு என்றெண்ணி ...
  கனக்கிறது ...நிகழ் காலம்..!!

  எதிர் காலம்..........
  தன் ஒரு கரத்தினை தான் எங்களுக்காய் தரும்... !
  மறு கரத்தை...
  தனக்கும் கடவுளுக்கும் இடையில் செய்த ஒப்பந்தம் போலவே ஒளிச்சு வைக்கும்!!

  வாழ்வு என்ற படகு கால கடலில் மூழ்கையில்...
  நீ நீட்டுகின்ற கையை .. தட்டி விட்டு....
  அது தன் பாட்டில் நடை பயிலும்!!!

  பிறப்பு ..........ஆரம்பம்!
  இறப்பு... முடிவு!!
  வாழ்க்கை சிறு இடைவேளை!!
  பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் என்ன செய்ய போகிறோம்??

  நடப்பது நடக்கட்டும்... நம் கையில் என்னவென்று...
  உயிர் இருக்கயிலேயே உணர்வு செத்து போவாமா?
  இல்லை..... விதியை பிடித்து வந்து...தூக்கில் ஏற்றி...
  வெற்றி குதிரையின் முதுகில் பயணம் செய்து...
  உன்னையும் என்னையும் தந்த உலகிற்கு...
  உருப்படியாய் ஏதும் செய்வோமா?

  பச்சை பாய் விரித்த எங்கள் வயல் நிலமும்...
  பால் நிலவொளி கொண்டு கழுவிய எம் வீட்டு முற்றமும்...
  எப்படி பறி போனதென்று எழுதி வைப்போமா?
  இனி வரும் சந்ததி கையிலதை ஏடாய் ஆக்கி கொடுப்போமா?

  எப்படி உன் பாட்டன் திரும்ப திரும்ப அடி வாங்கினான்...
  எப்படி அவனை அடித்தவனை நாங்கள் திருப்பி அடித்தோம்..
  என்றும் மறக்காமல் சொல்வோமா?

  காதல்...காதல்..என்று மட்டும் பேசி காலத்தை கொல்வோமா?
  இல்லை....கணணி யுகத்துடன் சேர்ந்து ஓடி..
  நாமும் கொஞ்சம் வெல்வோமா?
  என்ன செய்ய போகிறோம்???
 6. Rasikai
  நன்றி கெட்ட நான்..!
  ================

  கண் மூடியபடி நான் பிறந்தேன்..அன்று முதல் - அம்மா
  தன் கண்களை தூக்கம் காவு கொள்ள விடாதிருந்து எனைக் காத்தாள்!
  எங்கே என்னை எறும்பு கடித்திடுமோ என்று பயம் அவளுக்கு..

  நான் தவழ தொடங்கினேன்..
  தரையோடு தனை விழுத்தி தானும் சேர்ந்து தவழ்ந்து..
  என் தத்தக்கா பித்தக்கா என்ற ஊர்தலில் தன் உயிர் மூச்சை
  ஒளித்து வைத்தாள் -அம்மா

  வளர்ந்தேன்...
  கங்காரு போல் எனை உடலில் காவி காவியே தான் மெலிந்தாள்.

  கண்ணு இல்ல.....செல்லம் இல்ல....
  காகம் சொல்லு...மேகம் சொல்லு.....
  அம்மா...என்னை பேச பழக்கினாள்!

  காலம் காற்றில் மிதக்கும் தூசி என பறந்தது!
  இப்போ அம்மா கை தடியுடன் நடக்கிறாள்....
  தட்டு தடுமாறி படியேறி வருகிறாள்..பிள்ளை
  சாப்பிட்டு போட்டு படியேன் என்கிறாள்......

  முகம் சிவக்கிறது எனக்கு..........
  "உன்னை பேசாம இரு எண்டு சொன்னன் தானேமா..
  பெரிய கரைச்சல்"

  எனக்கு பேச கற்று கொடுத்தவளை
  பேசாமல் இருக்க சொல்லி நான் நன்றி செய்தேன்!
  என்னை எறும்பு கடித்திடுமோ என்று பயந்தவள் மனசை
  இரை கவ்விய பாம்பாய் கொன்றேன்!

  ஓடி வாடி..ஓடி வாடி....
  அம்மா உலகத்தை மறந்து..என்னுள் மீண்டும் பிறந்து..
  நடை பழக்கினாள்!
  தன் இரு கை நீட்டி அதனிடையுள் என்னை நடக்கவைத்தாள்..
  எங்கே...நான் விழுந்து விடுவேனோ என்று பயம் ..அம்மாக்கு!

  வாழ்வு புத்தகத்தை கால காற்று மறுபடியும்..
  பக்கம் வேறாய் புரட்டுகிறது
  அம்மா தலை வெள்ளி சரிகை கொண்டு நெய்த
  கறுப்பு துணி என்றாகிறது!

  "பிள்ளை கால் வலிக்குது ஒருக்கா கடைக்கு போட்டு வாயேன்"
  இது..அம்மா!
  "எனக்கு ஏலாது சும்மா போமா"
  அது..நான்!

  முழங்கால் வலிக்க.. முக்கி முனகி அம்மா நடப்பாள் -கடை திசையில்!
  எனக்கு நடை பழக்கியவளை..பாதம் கொதிக்க நடக்கவிட்டு..
  நான் நன்றி செய்தேன்!

  திரும்பி வந்தபின் தேநீர் போடுவாள்- மூச்சு வாங்குமே!
  எனக்கு முதல் தந்துவிட்டு தான் குடிப்பாள்!
  கால் கடுக்க சென்றது அவள்....
  களைப்பாறியது ..நான்!

  எப்படிச் சொல்ல?

  இச்சென்று கன்னம் முத்தமிட்டாலும் சரி..
  இடியென்று அவள் தலையுள் நான் இறங்கினாலும் சரி..
  எதையுமே ஒன்றாய்தான் எடுப்பாள் - அம்மா!

  காலம் ஓடும் ...அம்மா
  ஒருபொழுதில் காலமாவாள்..
  கதறி அழுவேன் ..நான்

  அம்மா போயிட்டாளே என்றா?
  இல்லை இனி எல்லாம் நானேதான் செய்யவேண்டும் என்றுமா?

  கண்ணீருக்குள்ளும் சுயநலம்.. சீ..
  நன்றி கெட்ட நான்!!
 7. Rasikai
  யாழ் களம்!!
  -----------------
  இது எங்கள் தாய் களம்...
  தமிழால் நாமெல்லாம் உள்ளம்
  நனைக்க குதிக்கும் குளம்!
  ஒரு வகையில் புலம் பெயர்ந்த
  நமகெல்லாம்..
  தமிழை தமிழால் அர்ச்சிக்க
  வாயில் திறந்த புண்ணிய தலம்!

  இங்கே புதினங்கள் இருக்கிறது....
  புதிர்களும் உயிர்கிறது....
  வாழ்த்துக்களும் பொழிகிறது...
  வசைபாடலும் தொடர்கிறது...
  அறிவியலும் இருக்கிறது..
  அந்நியன் திரை படம் பற்றிய
  பேச்சும் இருக்கிறது...

  தேசத்தின் குரல் எடுத்து பாடும்
  தேசிய குயில்களும் வாழ்கிறது...
  தேசத்தை விற்று பிழைக்கும் ஒரு சிலர்
  தெரு கூத்தும் இடைக்கிடை நடக்கிறது!
  நாவில் நீர் ஊற வழி செய்யும்
  நள பாக முறையும் இருக்கிறது..
  நான்கு இமையும் மூடி சிரிக்க
  நல்ல நகைச்சுவையும் இருக்கிறது...

  ஒரு பொழுது இங்கு உள் நுளைய
  முடியாமல் போய்விட்டாலே
  உள்ளம் தெருவோரம் மகவை
  தொலைத்த தாயென பதறுகிறது!

  இருந்தும்...எம்மை மறந்து...
  இட்ட அடி பிரள விட்டு...
  எம் முகத்தில் நாம் அறைந்து...
  எமக்குள் மோதி ...
  ஏதோ வெற்றி பெற்றதாய்..
  எண்ணி இந்த சந்தன மேடையை சிலசமயம்
  சாக்கடை ஆக்கி போகிறோம்...
  சுகம் கொள்கிறோம்- பிறர் மனசை கொல்கிறோம்!
  தங்கத்தை காய்ச்சி முதுகில் வைத்தால்..
  சருமம் தீய்ந்து போகாதென்று நினைப்போ? தெரியவில்லை!

  எது எப்படியோ....
  அமெரிக்காவில் இருப்பவருடன்
  ஒரு செல்ல சண்டை..
  லண்டனில் இருப்பவருடன்
  ஒரு வாதம்..
  கனடாவில் வாழ்பவருடன்
  ஒரு கருத்து பகிர்வு...
  கொலண்டில் குடியேறியவருடன்
  ஒரு கொள்கை விவாதம்..
  ஜேர்மனியிலிருந்து வருபவரிடம்
  ஒரு நெஞ்சம் மகிழும் பாசம்...

  ஆகா..
  யாழ் களமே..உன் உடலில் பரந்திருப்பது...
  வெறும் தந்தி நரம்புகளல்ல...
  விதி என்று போனதால் தாய் நிலம்
  பிரிந்து துயருறும்
  ஒவ்வொரு தமிழனதும் விரல்கள்!

  உலகம் முழூதும் விரிந்து வாழும் எங்களை..
  ஒன்றாய் அணைப்பவளே...
  உன் விரல்களை பிடித்து கொண்டு நடை பயிலும் - சுகம்
  விஞ்ஞானம் அழியாதவரை எமக்கு வேண்டும்!

  கரும்பு காட்டிடையே அலையும்
  எறும்பு கூட்டத்தின் வாழ்வென இனிக்கிறது மனசு!

  தந்தையின் மார்பு மிதித்தேறி..
  தாயின் தோழில் தாவி...பின்..
  அவள் மடியில் குதித்துருண்டு சென்று...
  உடன் பிறந்தவர்களை அணைக்கும் சுகம்..
  உன்னால் கொண்டோம்!

  இது வெறும் வரிகளால் நிரப்பும் தளம் அல்ல...
  வரலாற்று ஆவணம்!
  அவதானமாய் சேகரித்தால்..
  அடுத்த சந்ததிக்கும் உதவாமல் போகுமா என்ன?
  உரியவர்கள் கவனம் எடுத்தால் உள்ளத்தால் அவர்க்கு ..
  நன்றி சொல்வேன்..உங்களுடன் சேர்ந்தே!!!
 8. Rasikai
  கவலை மறந்திரு!
  --------------------
  வயசாச்சு எனக்குத்தான்...
  நீ விடை பெற்று போன...
  உன் வீட்டு முற்றத்துக்கு அல்ல ...
  நீ அறிவாயா?

  காயும் பிஞ்சும் கடல் கடந்து ஓடினாலும்..
  எந்தன் நாடி நரம்பு தளர்ந்து ...
  நரை நிறைந்து உடல் வாடினாலும்...
  நீ திரும்பி வந்து அள்ளி விளையாட...
  நீ வளர்ந்த மண்ணை காத்து நிற்பேன்!

  உன் தாயை அன்று வயிற்றில் சுமந்தேன்..
  நீ தவழ்ந்த மண்ணை இன்று
  நெஞ்சில் சுமக்கிறேன்...!

  பாக்கு இடித்து சப்பும் பல்லில்லா கிழவி
  என்றா எனை நினைத்தாய்?
  ஏ.கே47 ம் நான் ஏந்துவேன்!
  பத்தோடு பதினொன்றாய் பாடை கொள்வேன்
  என்றுமா நினைத்து இருந்தாய்?
  மாட்டேன்....போர் செய்வேன்..!
  உன் சந்ததிக்காய்..!!!

  நாளை ஊர் திரும்பு...
  ஒரு வேளை நான் இருப்பேனோ..? என்னமோ?
  எங்கே உன் பாட்டி தன் இறுதி மூச்சை விட்டாள் என்று ..
  எவரும் கேட்டால்..
  நான் எரிந்த இடம் நோக்கி கை நீட்டு கண்ணே...
  என் மானம்தை காத்து ...
  அந்த மங்கல் கண் கொண்ட கிழவி ...
  இங்கேதான் இறந்து போனாள் என்றும் சொல்லு!

  உன் விரல் சுட்டிய இடத்தில் விடுதலைக்காய்..
  விறகாய் எரிந்த இவள்...
  கார்த்திகை பூவாய் மீண்டும் கண் மலர்வேன் - கண்ணே
  கவலை மறந்திரு...!!!
 9. Rasikai
  பூகம்பம் பிறந்த பொன்னாள்

  ======================
  வாழ்வு அழிந்தது....
  எங்கள் வளம் அழிந்தது...
  பூரண கும்பம் போன்ற எங்கள் ஜீவிதம் ...
  பொட்டிழந்த பூவை என பொலிவிளந்து கிடந்தது!

  மாவிலை தோரணம் கொண்டலங்கரித்தது போன்ற எங்கள் முற்றம்
  அலரி பூக்கள் நிறைந்து அழகிழந்து போனது!

  பார்த்து பார்த்து நாம் வாசலில் வளர்த்த ரோஜாவை ..சிங்களம்
  காலில் போட்டு நசுக்கி கழுத்தறுத்த பின்
  எம் தாயின் காலடியில் போட்டு சென்றது!

  தேம்பி தேம்பி அழுது நின்றோம்
  தெய்வமே காப்பாற்று என்று கதறி அழுதோம்!
  வானம் பிளந்தது ..
  வந்தேன் என்று சொல்லி வல்வை மண்ணில்
  சிவப்பு சூரியன் என எங்கள்
  தேவன் வந்து பிறந்தான்!
  தன் இரும்பு கரங்கள் கொண்டு ..
  எம் தேச எல்லைகள் எங்கும்
  வேலிகள் போட்டான்!

  சோற்றுக்கும் , சுருட்டுக்கும்...
  ஓட்டு வீட்டுக்கும் ...
  ஆழமில்லா கிணற்றுக்கும்..
  அதனருகே ஒரு தேசி மரத்துக்கும்
  மாய்ந்து மாய்ந்து உழைத்தால் போதும்..
  அதுவே வாழ்வென்று மண்டிக்கிடந்த இனத்தை..
  மானத்தின் தோழில் தாங்கினீரே..
  மண்டியிட்டு தொழுகிறோம் உம்மை!

  மண்ணில் பிறந்த மனிதன் எவனும்..
  தன் இனத்தின் பெயரால் அடையாளம் கொள்வான்..
  இங்கு ஒரு மனிதனின் பெயரால் ..
  ஒரு இனமே அடையாளம் கொண்டதே..
  கை கூப்பி வணங்கி நிற்கிறோம்
  கடவுளிலும் மேலானவரே!

  வெட்டியும் குத்தியும் ...
  கொன்று வீசியும் குதூகலித்து இருந்தவர் எல்லாம்..
  இப்போ எட்டி நின்று பேசுகிறார் எம்மை கண்டால்...
  பயம் கலந்த மரியாதை...
  மரியாதை கலந்த பயம்...
  என்ன தவம் செய்தோம்?
  உம் காலமதில் நாம் கண் மூடாதிருக்க!

  காட்டை எரித்து குளிர் காயலாம் என்று
  கனவு கண்டனர்!
  நெருப்பை தின்று நீர் குடிக்கலாம் என்று
  நினைத்து இருந்தனர்!
  அத்தனையும் நடந்திருக்கும்..
  நீர் அவதாரம் எடுக்காமல் போயிருந்தால்!

  கார்த்திகை - 26 உம் பிறந்த நாள் மட்டுமா?
  எம்மை கொன்று தின்ன வந்தவர் காலடியில் எல்லாம்
  பூகம்பம் பிறந்த பொன்னாள்..!

  வீரம் என்பது ஊர் அறிந்த மூன்றெழுத்து அல்ல!
  அது பிரபாகரன் என்று உலகம் அறிந்த
  ஆறு எழுத்திலும் அர்த்தம் கொள்ளும்!

  தலைவன் என்றானவன்..
  எப்பிடி இருக்க கூடாது என்பதற்கு
  உலகில் உதாரணம் பலர் உண்டு!
  ஒரு தலைவன் இப்படித்தான்
  இருக்க வேண்டும் என்பதற்கு ..
  உம்மை விட்டால் வேறு எவருண்டு?

  அகவை 51 ஆ உமக்கு?
  ஒரு போதும் இல்லை..
  உலகில் அடங்கி கிடந்து அல்லலுறும்
  ஒவ்வொரு மனிதன் தாய் வயிற்றிலும்
  உமக்கு ஒவ்வொரு நாளும் ஜனனம்.!
  அகவை ஒன்று கூட ஒரு போதும் ஆகாது உமக்கு!

  வீரம் விண் முட்டும் மாமலையே
  உந்தன் அடி வாரத்தில் நாணல்களாய்
  வாழ்ந்து உம் பக்கம் தலை சாய்ந்து- பின்
  காய்ந்து போவதில் கரையுள்
  அடங்க கௌரவம் கொண்டோம்!

  தமிழ் ஈழம் என்பது நீர் காதல் கொண்ட தேசம்!
  பிரபாகரன் தேசமே இனி பிறக்கும்
  தமிழன் ஒவ்வொருவருக்கும் தேசம்!

  வாழ்த்த வயசில்லை...
  போற்றி வணங்குகிறோம்!
 10. Rasikai
  நானும் அவனும்..!

  அன்னை ஒரு பிறவி தந்தாள்..
  அடுத்தொரு பிறவி நீ எனக்கு தந்தாய்..
  மண்ணில் இந்த பறவை வாழ...
  உந்தன் மனசில் கூடு ஒன்று எனக்களித்தாய்....
  மரணம் வரும் நாள் வந்தால்...
  கண்ணா ... உன் மடியில்
  சாகும் வரம் தாயேன்!

  தோள் உரசி நாம் நடக்க...
  சூரியன் மெல்ல மெல்ல கண் மூட...
  தொடுவானம் குங்கும குளத்தில் நீராட..
  தூரத்து நிலவு எறியும் ஒளியை...
  ஆளுக்கு பாதியாய்..
  அள்ளிக் கொள்வோமா..
  அழகிய முரடா?

  கடலோரம் ஒரு மாலை...
  நாம் நடை போட...
  கண் சிமிட்டும் விண் மீன்கள் ..
  எம்மை எடை போட...
  கால் தடுக்கி நான் விழுவேன்..
  கல கல என நீ சிரிப்பாய்...
  கரை மணலை அள்ளி உன் மேல் நான் விசிற...
  ஏய் வேணாம் அடிப்பேன்...
  என்று சொல்லி மீண்டும் சிரிப்பாய்...
  வாழ்வு என்பது எதுவடா??
  என் வசீகரா..
  உன்னோடு நான் வாழ்வதுதான் அல்லவா???

  கை கோர்த்து நாம் போக ...
  களவாய் தென்றல் வந்து என் கூந்தல் கலைக்க...
  உன் விரல் கொண்டு கோதி விடுவாய் மீண்டும்...
  வசந்தம் தோளில் வந்து கூடு கட்டுமே!!
  வானவில் போன்ற அழகிய பாசம்
  என்றென்றும் எனக்கு வேண்டுமே!!!
 11. Rasikai
  தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ..!!

  உலகில் வாழும் உயிரினங்களிலே மனிதன் உயர்ந்தவன். ஏனெனில் அவனுக்கு ஆறறிவுகளில் ஒன்றான பகுத்தறிவு என்ற மெய்யறிவு உண்டு. இதனையே தொல்காப்பியர் அவர்கள் இவ்வாறு கூறிகின்றார். " மக்கள் தாமே ஆறறிவுயிரே யாவும் மாக்களும் ஐயறிவினவே" இந்த பகுத்தறிவால்தான் மனிதனால் நல்லது எது ? கெட்டது எது? என பகுத்தறிந்து தனக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு வாழப் பழகிக்கொள்கிறான். இத்தகைய உயர்ந்த மனிதப்பிறப்பினுள் தமிழினம் என்றும் தனித்துவமானது.அதனால்தான் போல் ஒரு அறிஞன் கூறினான் " தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அதற்கொரு பண்புண்டு" என்று. ஔவையாரோ " அரிது அரிது மானுடராதல் அரிது" என்றார். அப்பர் சுவாமிகளோ " வாய்த்தது தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்" என்றார்.அத்துடன் மீண்டும் "இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே" என்றார். திருமூலநாயனாரும் திருமந்திரத்திலே மனிதப்பிறவியின் மாண்பு பற்றி நயம்படக் கூறியுள்ளார்.

  எனவே பெறுதற்கரிய பிறவியை பெற்ற நாம் எமக்கும் பிறார்க்கும் சமூகத்திற்கும் பயன்பட வாழ்ந்து எம் பண்பாட்டை பேண வேண்டும். "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுலகத்தில் தெய்வத்தில் வைக்கப்படும்" என்று வள்ளுவர் பெருந்தகை கூறியுள்ளார். அறம் , பொருள் , இன்பம், வீடுபேறு இவற்றை தனது முப்பால்களில் மிக அழகாக கூறியுள்ளார். ஏனைய தமிழ் நூல்களும் இதனையே வலியுறுத்துகின்றன. திருக்குறளை யாத்த திருவள்ளுவர் அறம் , பொருள் இன்பவழி நின்று அவற்றின் துணையால் ஈற்றில் வீடுபேற்றையும் பெறலாம் என்று தனது குறள்களில் கூறியுள்ளார். அறவழி நின்று தன்னைப்பேணி மாதா, பிதா, குரு, பெரியோர், அறிவோர் என்போர்க்கு உறுதுணையாய் வாழ்வது தமிழர் பண்பாடாகும். அதுமட்டுமன்றி பொய்யாமை, கள்ளாமை, கொல்லாமை என்று சொல்லப்படுபவற்றை தவிர்த்து வாழப்பழகியமை தமிழர் பண்பாடாகும். அத்துடன் நடை உடை பாவனை என்பவற்றையும் ஒரு பண்பாடகக் கொண்டு வாழ்வது தமிழர் சமுதாயம். "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்ற பரந்த மனப்பான்மையுடன் யாவரையும் கேளீர் ஆக்கிக் கொண்டு வாழ்வது தமிழர் பண்பாடு. இவ்வாறு தமிழர் பண்பாட்டைப் பற்றிக் கூறிக்கொண்டே போகலாம்.

  பல்லோர் போற்றப்பண்புடன் வாழ்ந்த எமது சமுதாயம் நாட்டில் ஏற்பட்ட கொடுங்கோண்மையால் பிறந்தகத்தை விட்டுப் புலம்பெயர்ந்து பல நாடுகளிலும் சென்று வாழும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு மேலைத்தேசங்களுக்கு இசைய வாழும் நிலை ஏற்பட்டாலும், தமிழர் பண்பாடு மாறுபடாது அமையவேண்டும். ஒர் இனத்தின் பண்பாட்டை அந்த இனத்தின் இலக்கியங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். பண்பாடு என்பது உலக மக்களிடையே மொழி, பழக்கவழக்கம், சூழல் அடிப்படையிலே வேறுபடுகின்றது என்பதை நாம் அறிவோம். இலக்கியம் என்பது முடிந்த கொள்கைகளையும் முதிர்ந்த கொள்கைகளையும் கொண்டு திகழ்வதாகும். மனிதனை மிருகத்திலிருந்து வித்தியாசப்படித்திக் காட்டுவது பண்பாடு. திரை கடல் ஓடியும் திரவியம் தேடிய தமிழர் அன்றும் தம் பண்பாட்டை மறந்திலர். இன்று எம்மவரிற் சிலர் புலம்பெயர்ந்த நாட்டில் தாய் மொழியாம் தமிழை மறந்து , பண்பாடான உடையைத் துறந்து, தம் ஊண் பெருக்கத்திற்கு தம் பிறிது ஊண் உண்டு கோயில் வழிபாடினின்றும் நீங்கி, கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழ்வதை காணக்கூடியதாக இருக்கின்றது

  அறிந்த கருத்துக்களையும், உணர்ந்த உணர்வுகளையும் அளந்து உரைப்பதற்கு பயன்படும் கருவியே மொழியாகும். உலக மொழிகளிலே முதல் பத்து மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாக அமைந்துள்ளது. தமிழ் மிகவும் பழமை வாய்ந்த மொழி. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வரலாறு படைத்த இனம் நம் தமிழினம். ஆரியர், போர்த்துக்கேயர் எனப் பலரது ஆதிக்கத்தையும் எதிர்த்து நிலை நின்று வளர்ந்து வரும் மொழி. திருக்குறள் பல மொழிகளிலே மொழி பெயர்க்கப்பட்டது. "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" தான் அறிந்த மொழிகளில் தமிழ் இனிமையானது என்ற புரட்சிக்கவி பாரதியின் முழக்கம் அன்றே தமிழின் தனிச்சிறப்பு. இத்தகைய சிறப்பு பொருந்திய தமிழ்மொழியை, தமிழ் சிறார்களில் சிலர் மறந்தும், கல்லாதும் ஆங்கிலத்தையே தமது பேச்சு மொழியாக்கிக் கொண்டுள்மையும் பெரிதும் வருந்தத்தக்கது. இதற்கு அவர்களின் பெற்றோர்களும் துணைபுரிவது மிகவும் வேதனையான செயலாகும். அவர்கள் பாடசாலகளிலின்றி
  வீடுகளிலும் ஆங்கிலத்தையே உரையாடுகின்றனர். அதையே
  மரியாதையாகக் கருதி தமிழில் பேசத் தயங்குகிறார்கள். உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு பேருந்து வண்டியில் பயணம்
  செய்யும் போது அவதானித்தீர்களாயின், அங்கு பலதரப்பட்ட மக்கள் பயண ப்பர். ஆனால் அவர்கள் தங்களது நண்பர்கள் உறவினர்களுடன் தமது சொந்த மொழியிலே உரையாடுவார்கள். ஆனால் எமது இனத்தவர்கள்தான் சொந்த மொழி தவிர்த்து ஏனைய மோழியில் உரையாடுவார்கள். இவ்வாறு எமது புலம் பெயர்ந்த மக்கள் எமது பண்பாடுகள் , மொழி என்பவற்றை மறந்து அந்நிய பண்பாட்டை பின்பற்றினால் எதிர்காலத்தில் தமிழினம் என்ற தகுதியையே இழந்து விடுவர்.

  தொடக்கமோ முடிவோ இல்லாத இந்த தமிழ்மொழியையும் , கலாச்சாரத்தையும் இன்று நாங்கள் உதாசீனம் செய்வதன் மூலம் புலம்பெயர் நாடுகளில் என்ன நன்மையை பெறுகின்றோம். எமது சமூகச் சீர்கேடு வரக்காரணம் மொழிப்பற்றின்மை, கலாச்சாரத்தை தகுந்த முறைப்படி பேணிப்பாதுகாக்காமை, வாழ்க்கைமுறை என்பனவாகும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை இன்று வரை புலம்பெயர் நாடுகளில் (கனடா) காணமுடியவில்லை. எங்கு பார்த்தாலும் பொய் , பித்தலாட்டம், சண்டை , பூசல்களாக இருக்கின்றது. ஒரு நாய் குரைத்தால் பல நாய் குரைக்கும் என்பது முது மொழி. ம்ம்ம்ம்... இதுவும் இங்கு சாத்தியமற்றது. ஏனெனில் நேரமின்மை. ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு கல்வி செல்வம் மட்டும் இருந்தால் போதாது. அவனுக்கு மொழிப்பற்றும், கலாச்சாரத்தின் மகிமையும் விளங்க வேண்டும். இல்லையெனில் மண்தோண்டி புதைக்க வேண்டும். கனடா வாழ் ஒரு சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ஆங்கிலத்தில் கல்வியை கற்று வருவது மட்டுமன்றி மேல்நாட்டவர்களின் பழக்க வழக்கங்களையும் கடைப்பிடிப்பதன் மூலம் பெரியவர்களாகி பெருமையோடு வாழ்வார்கள் என நினைக்கிறார்கள். அதன்மூலம் தாங்களும் பெருமைப்படுகின்றார்கள். எமது தாய் மொழியாகிய தமிழை மறந்துவிடக்கூடாதவாறு அதனைக்கற்றல் வேண்டும். எம்மவர்க்கு பெருமை சேர்ப்பது தாய்மொழியும், கலாச்சாரமும் ஆகும். அதுவே எமது தனித்தன்மையை உலகில் எடுத்தியம்ப வல்லது. 'நாம் யார், எமது அடையாளம் என்ன? எமது வரலாறு என்ன? எமது முகவி என்ன?' என்பதை ஏனைய மக்களுக்கு எடுததியம்பி எம்மையும் மரியதைக்குரிய இனமாக காட்ட உதவுவது எமது மொழியும் பண்பாடுமேயன்றி, வேறொன்றுமில்லை. இதனை அவர்கள் புரிந்து கொண்டு
  பிள்ளைகளுக்கு புத்திமதியையும் நல்லொழுக்கங்களையும்
  கற்பித்து அவர்களின் வாழ்க்கையை சிறப்புற வழி நடத்த வேண்டும். எத்தனையோ தமிழ் மக்கள் இன்று கனடாவில் கல்வித் துறையிலும் , கலாச்சாரம் மொழித்துறையிலும் பல முன்னேற்ற சாதனைகளை நிலைநாட்டிக்கொண்டிருக்கின்றனர்.


  அடுத்து இளைஞர்களை நோக்குவோமாயின் இங்கு கூடுதலான இளைஞர்கள் தங்கள் பொன்னான நேரத்தை வீதிகளிலும் , வியாபாரநிலையங்களிலும் , சினிமாகொட்டகைகளிலும் செலவிடுகின்றனர். இவர்கள் நம் தாய் நாட்டு இன்னல்களை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். எம்மைப் போன்ற இளைஞர்கள் சின்னஞ்சிறிசுகள், வயோதிபர்கள் எல்லோரும் எவ்வளவு கஷ்டத்தின் மத்தியில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் தமது பணத்தை வீணான முறையில் செலவு செய்யாது நம் நாட்டு மக்கள் நலன் கருதி நாடாத்தப்படும் கலை நிகழ்வுகளுக்கு தங்களாலன உதவிகளைச் செய்ய வேண்டும். ஏன் என்றால் தாயகத்தில் அல்லலுறுபவர்களும் எம்மவர்கள்தான். அவர்கள் எமது தாயக மண்ணிற்காக தம் உயிரையே துச்சமென மதித்து எந்நேரத்திலும் களத்திலே இறங்கி எதிரிகளை விரட்டியடிக்க முயலுகின்றனர். அத்தகைய நாட்டுபற்றாளர்களை நாம் மதித்தல் வேண்டும் தமிழெரெனக் கொண்டு வாழ்வோரை " பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சி சொல்லப் பான்மை கெட்டு நாமமது தமிழிரெனக் கொண்டு இங்கு வாழ்ந்துடுதல் நன்றே??' எனப் பரிகசிக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும்.

  எனவே புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் எம்மவர் நம் பண்டைய பண்பாடுகளை போற்றி, தாய் மொழியாம் கன்னித்தமிழை கண்ணெனக் கொண்டு தம் வழித்தோன்றல்களையும் அற நெறியில் நிறுத்தி வாழ் வேண்டும். " தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" என்ற பாரதியின் வீர முழக்கம் கேட்டு தமிழரே விழித்தெழுங்கள். தமிழ்மொழியையும் வருங்காலத்தில் ஒரு மொழியாக்கி தேமதிரை தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற பாரதியின் கனவை பூர்த்தியாக்க்குங்கள். தமிழ் வெண்ணெய் உருக்கி நெய்யாக்கி விளக்கேற்றி தமிழ் ஒளி தமிழனுக்கு மட்டுமல்ல தரணியெங்கும் பரவும் வகையில் செய்தல் வேண்டும். தமிழர்கள் ஆங்கிலேயர் போல் உடுத்து , உண்டு, குடித்தாலும் கூட ஆங்கிலேயராக முடியாது. நாம் தமிழர் என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும். நம் வருங்கால சந்ததியினருக்கு முன்மாதிரியாக திகழவேண்டும்.
 12. Rasikai
  வாழ்க்கை பொய்யா?

  அளவான ஆசை வாழ்க்கை
  அதிகமான ஆசை கனவு
  வாழ்வின் உண்மை முதல் வரி என்று தெரிந்தாலும்
  வாழ்வு என்னமோ
  கனவின் கை பிடித்தே நகரும்...

  கனவுகளில் பல மெய்யாவதில்லை
  அப்போ வாழ்க்கையும் பொய்யா??????????????
 13. Rasikai
  கரும்புலிகள்

  சென்றார்கள்
  திரும்பி வந்ததில்லை
  இவர்கள் தேகம் சிதறிய நாளில் எல்லாம்
  எங்கள் தேசம் விழித்ததே
  உங்களுக்கு நினைவிருக்கா??????
  பூ என்று ஒரு பொழுது வாழ்ந்தார்கள்...
  சருகென்று மறு பொழுதில் உதிர்ந்தார்கள்
  விடியலின் ஒளி வேண்டி திசைக்கொரு பறவையாய் தீ குளித்து
  தேசமே பெரிதென்று செத்தே போனார்கள்
  உங்களுக்கு உணர்விருக்கா????????
  அந்த சந்தன மரங்கள் சரிந்த பின்பும்
  இந்த செம்மண் பூமி எப்போதும்
  சிலிர்த்தே நிக்கும்
  எங்கள் நிலத்தை எவன் வந்து தொட்டாலும்
  உங்கள் சுவாசமதை உள்வாங்கி ஒவ்வொரு நொடியும் எதிர்த்து நிக்கும்!!!!!
 14. Rasikai
  காதல்
  ------------
  காதல் சிரிப்பில் தொடங்கும்
  அழுகையில் முடியும்!
  காதல்
  சிலருக்கு மட்டுமே சித்திரம் போன்ற தாஜ்மகால்
  பலருக்கு????
  தன்னம் தனியனாய்.......
  ஒற்றைப்போர்வைக்குள் முகம் புதைத்து
  ஓவென்று அழுது
  உலகம் அறியாமல்... தனக்குத்தானே கல்லறை கட்டி
  தன்னை அதனுள் புதைத்து
  மண்ணை மூடும் சிறகொடிந்த சிட்டுக்குருவி!
 15. Rasikai
  மாவீரர் நாள்

  இரு கண்கள் சிலையாய் நிற்க...
  இமைகள் இரண்டும் தீ பந்தம் போல் எரிய..
  இதயத்தை மட்டும் அழவிட்டு..
  எம் உயிர் காத்தவர் எண்ணி..
  உடலுக்குள் எரிமலை வெடிக்கும் ஒரு நாள்!

  நெடும் பனை என நேர் நடை கொண்டவனும்...
  இரட்டை ஜடை முளைத்த பட்டாம் பூச்சி என
  பறந்து திரிந்தவளும்...
  சுகங்களை எல்லாம் மூட்டை கட்டி விட்டு
  சுதந்திரத்துக்காய் எரிந்து போனார்களே..
  அந்த பூந்தளிர்கள் பொசுங்கி போனதை எண்ணி...
  எம் தேச வானம் நெருப்பு நிறத்தில் உடை கொள்ளும் நாள்!

  இங்கொரு விடுதலைக்காக...
  எங்கெல்லாமோ மறைந்து போனவர்களை..
  நரம்பெங்கும் தீ மூட்டி...
  நாமெல்லாம் தேடும் நாள்!

  எத்தனை தரம் முரட்டு சிங்களங்கள் முகத்தில் மோதி..
  அவன் முகம் பெயர்த்து... நீரும் சாய்ந்தீர் ..
  நீங்கள் மூச்சடங்கிப் போன இடம் எங்கும்...
  முல்லை பூக்கள் உயிர் கொள்ளும்
  என்னால் முடிந்ததை என் தாய்க்கு செய்து முடித்தேன்
  என்று சிரித்து கொண்டே உறக்கமா?
  எங்கள் கண்ணீரால் உங்கள் கல்லறை கழுவுவோம்!
  கோடி புண்ணியம் அதில் கொண்டோம்!

  உங்களின் சுவாசத்தை எங்கள்
  தேசத்து மலர்கள் கடன் கேட்கும்!
  உங்களின் துடி துடிப்பை எங்களின்
  தேச பறவைகள் யாசகம் வேண்டும்..
  உங்களின் மன ஆழத்தை எம்
  தேச கடல் தன் இரு கை ஏந்தி இரந்து நிக்கும்!
  உங்களுக்கு பிறப்பு மட்டுமே உண்டு..
  இறப்பு என்பது இல்லவே இல்லை!

  நெடுந்தூர விடுதலைப் பயணம் கொண்டீர்....
  களைத்து விழுந்த போதெல்லாம்..
  எங்கள் தேச காதலை தானே உணவாய் கொண்டீர்!
  வாழ்வுக்குள் சாவு கொள்பவர் பலர்..
  சாவுக்குள் வாழ்வு கொண்டவர் உம்மை போல சிலர்...
  தியாகம் என்ற சொல்லை பூமி இனி
  உங்களின் பெயர் கொண்டு உச்சரித்தால்தான் என்ன?????

  மீண்டும் வாருங்கள்..
  அந்த மெய் சிலிர்க்கும் நாட்களுக்காய்...
  கண்ணீரை கரம் கொண்டு துடைக்காமல்
  காத்துக்கொண்டிருக்கிறோம்!!!!
 16. Rasikai
  நெஞ்சினுள் முள்ளாய்.....

  கண்ணே மணியே என்றான்..
  கண்டவுடன் எனக்கு காதல் வரவில்லை..
  உன்னை காணாமல் நான் ஏங்கினேனே...
  அப்போதே காதல் என்னுள் கருத்தரித்தது
  என்றும் சொன்னான்...
  நீ அழுதால் உன் இரு விழி துடைக்க மாட்டேன்..
  நானும் சேர்ந்து அழுவேன் என்றான்!

  நட்ட நடு மழையில்
  தன்னிடம் இருந்த ஒற்றை குடையை நீட்டி...
  நீ பிடி... நான் நனைவேன்..
  என் வாழ்வு முடியும் வரை.. உனக்காய் என்றான்!

  கால நதி வாழ்வு விருட்சத்தின்
  ஆணி வேர்வரை அலசி செல்ல..
  என் காதலனும் எங்கோ தொலைந்தான்..!

  பிறர்க்கு சலனமற்று இருந்த இரவுகள்
  பல எனக்கு மட்டும்...
  சஞ்சலத்தை மணம் முடித்து வைக்க..
  கண்ணீருக்குள் தற்கொலை செய்து
  என் கால நிமிடங்கள் தொலைந்தன!

  ஒரு மாலை...
  மஞ்சள் சேலை கொண்டு வானம் மௌனமாய் ..
  உடை மாற்றும் வேளை..
  கண்டேன் அவனை....
  தன் காதலி(???) கரம் இறுக்கிப் பிடித்து கொண்டே
  அவன் எங்கோ சென்று கொண்டிருந்தான்..
  அவள் கண்ணை மூடி சிரிக்க..
  இவன் அவள் காதில் ஏதோ சொன்னபடி
  நகர்ந்து கொண்டிருந்தான்...
  அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்தேன்...
  பொட்டு வைத்த விதவை என்றானேன்..

  என்ன சொல்லி இருப்பானோ?
  என்னிடம் சொன்ன வார்த்தைகள் தானோ?
  அவை என்றும் குறையாத கையிருப்போ அவனிடம்?
  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
  சேர்ந்திருந்த நாட்கள்..
  நாம் சிரித்திருந்த நாட்கள்..
  சிந்திய மழைத்துளி எனக் காலம்
  சிதறியே மறைந்தாலும்..
  நெஞ்சினுள் முள்ளாய்
  அந்த நினைவுகள் என்னை கொல்லுமடா!
 17. Rasikai
  வணக்கம் எல்லோருக்கும்
  நலமா? ம்ம் ஜஸ்ட் ரெஷ்ரிங். சீக்கிரம் வாறன் ஆக்கத்தோடை
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.