Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

அருள்மொழிவர்மன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  109
 • Joined

 • Last visited

Everything posted by அருள்மொழிவர்மன்

 1. @ தமிழ் சிறி, உண்மைதான் நெருப்பை மூட்டி விட்டதால் தீ பற்றத்தான் செய்யும். அவர்களைப் பற்றி எழுத நமக்கு அருகதை இல்லைதான், ஆனாலென்ன சொல்ல வந்ததைச் சொல்லிச் செல்வதுதான் முறை. சலமா அவர்கள் நாவலில் அப்படியொன்றும் தவறாகக் குறிப்பிடவில்லை, பெண்கள் மீதான சுரண்டல் இசுலாமிய சமூகத்தில் மட்டும் அன்றி அனைத்து சமூகத்திலும் பரவலாக உள்ளது. வீட்டிலும் நாட்டிலும் நடப்பதை அல்லது நடந்தவற்றையே கூறியுள்ளார். தேள் கொட்டியவனுக்கு வலிக்கத் தான் செய்யும். இத்தகைய சுரண்டல் மதம், பண்டிகைகள், சடங்குகள் மூலமாக எளிதாக நிறைவேற்றப்பட்டு வருவது கவலைக்குறியது. குடும்ப அமைப்பில் பெண்களைச் சுற்றியுள்ள வலை ஆண்களால் நேர்த்தியாகப் பின்னப்பட்டுள்ளது. இது இன்று நேற்று மட்டுமல்ல நூறாண்டு காலமாக தொடர்ந்து அமைக்கப் பெற்று வந்துள்ளது. ஆண் பெண் இருவருக்கும் பொதுவான நியதியென்று எதுவுமில்லை, அனைத்திலும் பாரபட்சம்! கணவன் மனைவிக்கு இடையான உடலுறவுக்குப் பின், உடுத்திய ஆடையிலிருந்து பயன்படுத்திய பாய் வரைக்கும் அவள் தான் சுத்தம் செய்ய வேண்டும் என்பது அச்சமூகத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆண்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு, இது பெண்களுக்கான வேலை - அப்படித்தான் நமது திருமணம், குடும்ப அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் சண்டைக்கு வரும் பட்சத்தில் வாய்-போர் செய்துதான் பார்ப்போமே !!
 2. இது முற்றிலும் பெண்களால் நிரப்பப்பட்ட நாவல். பெண்ணின் அகவுலகை ஆணின் பார்வையிலிருந்து பார்த்துப் பழகிய நமக்கு இதுவொரு புது அனுபவமாக இருக்கும். நாவலின் மையக்கருத்தை பின்னட்டையிலிருக்கும் குறிப்பிலிருந்து ஓரளவு அறிய முடிகிறது. இஸ்லாமிய சமூகத்தைப் பற்றிய படைப்பாக்கப் பிரதிகள் தமிழில் அதிகம் வெளியாவதில்லை, வெளிவந்தவையும் ஓர் ஆணின் பார்வையிலிருந்தே அமைந்து வந்துள்ளது. முன்னுரையில் குறிப்பிட்டது போன்று "முதல் ஜாமத்தைக் காட்டிலும், விபரீதமானது - கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்". அது எல்லைகளற்றது, கட்டுப்படுத்த முடியாதது, தணல் போன்றது, ஆழ்ந்த நினைவுகளைக் கிளறிக் கொணர்வது. நாவலில் வரும் பகுதிகளைக் குறிப்பிடாமல், என்னுள் உணர்ந்தவற்றை இங்கு குறிப்பிட்டுள்ளேன். ராபியா என்ற சிறுமியிலிருந்து தொடங்கும் நாவல், அவளிடமிருந்தே முற்றுப் பெறுகிறது. இக்கதையில் கதாநாயகன்/நாயகி என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது, கதையில் பயணிக்கும் கதைமாந்தர்கள் அனைவரும் ஒரு பகுதியில் கதாநாயகராவதும் பின்பு கதையில் சக பயணிகளாகத் தொடர்வதுமாக அமைந்துள்ளது. பெண் உலகம் - சூழ்ச்சி, அடிமைத்தனம், ஏமாற்றம், சுரண்டல் மற்றும் வலிகளால் சூழப்பட்டுள்ளது. நமது குடும்ப அமைப்பில் பெண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் (ஒதுக்கப்பட்டிருக்கும்) இடத்தைப் பற்றியும், குடும்பம் மட்டுமின்றி வெளிச்சமூகத்திலிருந்து அவர்களுக்கு இழைக்கப்படும் கட்டுப்பாடுகள், சுதந்திரமின்மை, தொடர்ந்து விதிக்கப்படும் பாரபட்சங்கள் மற்றும் சமத்துவமின்மையைப் பற்றி விரிவாகக் கூறுகிறது. திருமண உறவின் மூலம் ஏற்படுத்தப்படும் இறுக்கம், உடலியல் சார்ந்த துன்பங்கள், மறுக்கப்படும் காமம், அவளைச் சுற்றி நிகழும் சுரண்டல்கள் என பல்வேறு விடயங்களை பகிங்கரமாகச் சொல்கிறது. பெரும்பாலும் பெண்கள் ஆண்களின் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர், இன்றும் அது தொடர்ந்துகொண்டே வருகிறது. பெண்ணுலகம் முற்றிலும் வேறுபட்டது, பெண்கள் தனியாகக் கூடுமிடத்தில் பேசக்கூடிய விடயங்கள் நம் கற்பனைக்கு முற்றிலும் அப்பாற்பட்டது. அந்தரங்க விடயங்களை குழுமமாகப் பேசுவது விசித்திரமானதாகத் தோன்றினாலும், அது விரக்தியின் வெளிப்பாடாகவுள்ளது. நாவலாசிரியர்: சல்மா பதிப்பகம்: காலச்சுவடு பெண்களால் பெண்களுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் ஆண்களால் இழைக்கப்படுவதைக் காட்டிலும் மிகுதியானது. ஆண்கள் இழைக்கும் தவறுகளைப் பெண்கள் ஏற்றுக் கொள்வதும், அதைத் தொடர்ந்து ஆதரிப்பதுமானக் குடும்பப் பின்னல் அமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பூப்பெய்தியவுடன் அவர்களின் கல்வியும் மறுக்கப்பட்டு, சிறுவயதிலேயே திருமணத்திற்கு தள்ளப்படும் நிர்பந்தமே பரவலாக உள்ளது. தனது மகளின் திருமண விவகாரத்திலும் கணவனின் தலையீடே அதிகமுள்ளது, அது தவறெனத் தெரிந்தும் தடுக்க இயலாத நிலையே உள்ளது. இஸ்லாமிய ஆண் ஒருவன் வேற்று மத பெண்ணை வைப்பாட்டியாக வைத்திருப்பது அவர்களுக்குத் தவறாகப் படவில்லை, அதே சமயம் வேற்று மதத்தினரைக் காதலித்து மணப்பது மிகப்பெரிய குற்றமாகக் கருத்தப்படுகிறது. கணவனை இழந்த பெண்ணிருவர் வேறொரு ஆணுடன் தொடர்ப்பிலிருப்பதும், இறுதியில் துர்மரணமடைவதுமாக உள்ளது. மரபு மீறல்கள் ஆங்காங்கே வந்து செல்வது தவறாகத் தோன்றவில்லை, (பெண்களுக்கான) மரபு என்பது ஆண்களால் வகுக்கப்பட்ட ஒன்றுதான். வைப்பாட்டி வைப்பதும், கருக்கலைப்பு செய்வதும் மரபு மீறல்கள் தான்! நாவல் முழுவதும் பெண்ணுலகின் துன்பங்கள், வலிகள் பற்றி விரிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது இஸ்லாமிய சமூகப் பெண்களுக்கு மட்டுமின்றி பெரும்பான்மையான பெண்களுக்கும் பொதுவானதாக உள்ளது. நாவலாசிரியர்கள் தொடத் தயங்கும் சிக்கலான கருக்களத்தை நேர்த்தியாகக் கொண்டு சென்றது மிகவும் பாராட்டுக்குரியது. இஸ்லாமிய சமூகத்தில் நேரிடையான அல்லது மறைமுக எதிர்ப்பைப் பெற்றிருக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை. வலைதள உலாவலில் பெரும்பாலும் எதிர்மறை விமர்சனங்களையே காணமுடிகிறது. இதில் இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று இது ஒரு பக்கச்சார்பு கொண்ட கோணல் கதை என்றும் விமர்சித்துள்ளனர். ஆனால் எனது பார்வையில், இந்நாவல் இஸ்லாமிய சமூகத்தைப் பற்றியது மட்டுமல்ல இன்னபிற சமூகத்திலும் இதுபோன்ற கொடுமைகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இந்நாவல் பெண்களுக்கெதிரான சுரண்டல், ஆணின் வன்மம் முதலியவற்றை மதம், சமூகத்தின் போக்கு மற்றும் குடும்ப அமைப்பின் மூலம் அவர்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் வலை பற்றி விரிவாகக் கூறுகிறது. இந்நாவலை மற்ற நாவல்களைப் போல் அணுகாமல், பெண்ணியக் கூறுகள், உடலியல் சார்ந்த நோக்கில் வாசிக்கப் பட வேண்டும் என்பதுவே எனது பரிந்துரையாகும். வாசித்துப் பாருங்கள், பெண்களின் அகவுலகை அறியும் போது அவர்களைச் சுற்றி நாம் ஏற்படுத்தியிருக்கும் அடிமைத்தனத்தை உணரமுடியும்.
 3. மௌனம் பேசும் வார்த்தைகள் தொலைந்து நின்ற தருணங்கள் கண்ணாடியில் மறைந்த வெட்கங்கள் கனவில் கலந்த ரகசியங்கள் உள்ளம் கேட்கும் ஓசையில் அடங்கிப் போகும் - உனக்குள் எனைத் தொலைத்த நாட்கள்!
 4. ஆம்பலின் இதழில் துளிரும் வெட்கம் செல்லக் குழந்தையின் சிணுங்கல் ஓய்ந்த ஆழியின் நிசப்தம் இருண்ட வெளியில் தொலைந்த ஒளிக்கீற்று மாற்றத்தைத் தேடும் மருண்ட விழிகள் பூரணம் உணர்வாய் - இத்தீண்டலில் பெண்ணே!
 5. நண்பருக்கு வணக்கம், எனது விளக்கத்தை கீழுள்ள மறுமொழிப் பகுதியில் குறிப்பிட்டுள்ளேன். நீங்கள் அளித்துள்ள எடுத்துக்காட்டுகள் அருமை, மிக்க நன்றி. இறுதி யாத்திரை - மங்கலம் என்ற பிரிவிற்க்குள் இருக்குமென்று நினைக்கிறேன்.
 6. நண்பர் வாதவூரான் குறிப்பிட்டது சரி. இடக்கரடக்கல் (1), மங்கலம், குழூஉக்குறி மூன்றும் தகுதி வழக்கின் பிரிவுகள். (2) மங்கலம் - மங்கலம் அல்லாத அமலங்கச் செய்தியாக இருந்தால், பண்பாடு கருதி, மங்கலமாகச் சொல்லுதல் எ.கா. தாலி பெருக்கிற்று - கணவனை இழந்த பெண்ணைக் குறிப்பிடுவது (3) குழூஉக்குறி - ஒரு குழு அல்லது ஒரு கூட்டத்தாருக்குள் பயன்படுத்தப்படும் வழக்கு, அவர்களுக்குள் மட்டும் பொருள் விளங்கிக் கொள்ளப் பயன்படுத்துவது. எ.கா. ஆடை - காரை (யானைப்பாகர் பயன்படுத்துவது) இளைஞர்கள் பயன்படுத்தும் இரட்டை அர்த்த வார்த்தைகள் இதற்குள் அடங்கும் என நினைக்கிறேன் இடக்கரடக்கல், மங்கலம் - இவையிரண்டும் மிக நெருக்கமானவை. மங்கலம்/அமங்கலம் அற்று குறிப்படப்படும் சொற்கள் இடக்கரடக்கலுக்குள் அடங்கும். இறைவனடி சேர்ந்தார் (இறந்துவிட்டார்) என்பது இடக்கரடக்கல் அல்ல, அது 'மங்கலம்' என்ற பிரிவுக்குள் அடங்கும். மேலுள்ள பதிவில் தவறுதலாகக் குறிப்பிட்டுள்ளேன்.
 7. இடக்கரடக்கல் என்பது பேச்சு வழக்கில் நாம் அன்றாடம் பயன்படுத்திவரும் ஒரு தகுதி வழக்கு. இடர்பாடாகத் தோன்றும் சொற்கள் அல்லது சொற்றொடர்களைக் குறிப்பிடும்போது அதற்குரிய இயல்பான சொற்களைக் கொண்டு நேரடியாகக் கூறாமல், நாகரிகம் கருதி மாற்றுச் சொல் கொண்டு குறிப்பிடுவது இடக்கரடக்கல் என்பதாகும். இத்தகைய பழக்கத்தை இலக்கணம் வகுத்து நெறிப்படுத்தியிருப்பது தமிழ்ப் பண்பாட்டின் உயர்வைச் சுட்டுகிறது. இடக்கர்+அடக்கல் => இடக்கர் என்பது “சொல்லத்தகாத”, இடக்கு அடக்கல் என்பது “அடக்கி” அவையில் அல்லது பிறருக்கு மத்தியில் சொல்லத்தகாத சொல்லைக் கூறாமல் அதை அடக்கி, அதற்குரிய மாற்றுச் சொல்லைப் பயன்படுத்துதல். அதாவது ‘நாசுக்காக’ கூறுவது. எ.கா. (*) கோழியும் சேவலும் ஒன்று சேர்தலை ‘சேவல் அணைந்தது’ என்று கூறுவது வழக்கம். (*) மலம் கழிக்கப் போனான் என்பதை “காட்டுக்குப் போனான்”, “வெளியே போனான்” அல்லது “கால் கழுவி வந்தான்” என்று கூறுவது (*) அமங்கலத்தை மங்கலமாகக் கூறுதல் – இறந்துவிட்டார் என்பதை “இறைவனடி சேர்ந்தார் அல்லது “உயிர் நீத்தார்” (*) தீபத்தை அணை என்பதை “தீபத்தை குளிர வை” என்று கூறுவர் (*) வாய் கழுவி வந்தான் – வாய் பூசி வந்தான் ஆங்கில இலக்கணத்தில் இதனை யூஃபமிசம்(euphemism) என்பர். E.g. (*) kick the bucket – the death of a person (*) downsizing - firing employees (*) special child- disabled/ learning challenged இடக்கரடக்கல் தொடர்பான சுவாரசியமான எடுத்துக்காட்டுகள்/உதாரணங்களை யாழ்தள நண்பர்கள் இங்கு குறிப்பிட்டால் சிறப்பாக இருக்கும் !!
 8. இருபாலரும் திருமணத்திற்கு முன்பு வைத்திய பரிசோதனை செய்து கொள்வது நடைமுறைக்கு வந்தால் மிக்க நன்று. வழக்கம் போல கற்பனையை கலந்து எழுதினேன். தகாத செயலின் காரணமாக வாலிபன் ஒருவனுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதும், அதனால் விளையும் குற்ற உணர்ச்சியில் அவன் மடிந்து போவதாகக் கூறியுள்ளேன். அத்தகைய ஒருவனின் மனநிலை எப்படி இருக்குமென்பதை வேறொரு கோணத்தில் படைத்துள்ளேன்.
 9. முற்பிறவியின் மேல் எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை, ஆனாலும் கருமம் பின்தொடர்வது போன்ற ஐயப்பாடு. ‘எண்ணித் துணிக கருமம்’ – வினையின் பலனை முன்கூட்டியே எண்ணிச் செயல்பட்டிருந்தால் ஒருவேளை இதிலிருந்து தப்பியிருக்கலாம். சிந்தித்துப் பார்த்தால் இதுபோன்ற தவறுகளை எவ்வித குற்றவுணர்வும் இன்றி தொடர்ந்து செய்து வந்துள்ளேன். காலப் போக்கில் செய்த தவறுகளெல்லாம் மறைந்து அழிந்துவிடும் என்ற அசட்டு தைரியத்தில்! இவ்வாறான தொடர் சிக்கல்கள் என்னை மேலும் மேலும் பாதித்துக் கொண்டே இருக்கிறது. மனச்சிக்கலில் இருந்து வெளிவர முயற்சிக்கும் போதெல்லாம் என் நிலையை எண்ணி அவமானமாக உணர்கிறேன். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு! தவறினால் விளைந்த சங்கடங்கள் திருமணத்தில் வந்து முடியுமென்று எள்ளளவும் எண்ணவில்லை. ஒருவேளை இதுதான் பிறவிப் பயன் என்பதா! வாலிபத்தின் காரணமாக விளைந்த சிந்தனை தடுமாற்றத்தின் வினைதான் இத்தொற்று. இருவருக்கும் இடையேயிருந்த இறுக்கத்தின் காரணமாக மனதில் மறைந்திருந்த இச்சை இரகசியமாய் எட்டிப் பார்த்தது, தொடக்கத்தில் இருந்த தயக்கம் சட்டென்று விலக, வேட்கையும் விரகமும் ஒருசேர இணைந்து என்னை முன்னிருத்திச் சென்றது. தேகச் சூட்டில் எனை மறைந்து இன்பத்தில் இலயித்திருந்தது நினைவில் உள்ளது. இதைப் பற்றி திருமணத்திற்கு முன்னரே மனைவியிடம் சொல்லியிருக்கலாம், என்னுடைய தவறினால் அவளும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது வேதனையாக உள்ளது. மனதிற்குப் பிடித்தவர்களிடமிருந்து விலகிச் செல்வதை வலியின் உச்சமாக எண்ணுகிறேன். அம்மாவும் அப்பாவும் இதை எப்படித் தாங்கிக் கொள்வார்கள், நாளை இச்சமூகம் அவர்களை எப்படி நடத்தும்! நான் இழைத்த தவறுக்கு காலமெல்லாம் அவர்களும் தண்டனை அனுபவிப்பதை நினைத்தால் என் மீதான வெறுப்பு அதிகரிக்கிறது. நடந்து முடிந்ததை இன்றெண்ணிப் பார்ப்பதில் எவ்வித பயனுமில்லை. தீவினையின் முடிவில் நன்மை விளைவதில்லை. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும். விலகிச் செல்ல துணிந்த பின் திரும்பத் திரும்ப எண்ணுவதில் பலனில்லை. என்னுள்ளிருக்கும் இந்தக் குற்றவுணர்வு என்னுள்ளே மடிந்து அழியட்டும் !!
 10. மதமாற்றத்தை திணிக்கும் விஷமிகளின் இச்செயல்கள் கண்டிக்கத்தக்கது. ஈழப்பிரியன் குறிப்பிட்டதுபோல இது காலங்காலமாக நடந்து வருகிறது.
 11. அருமையான விளக்கம் - அம்பல், அலர்..காதலில் பிறர் தூற்றல் என்பது இயல்பே. அடுத்தவர் விடயம் தொட்டு நக்கச் சுவையானது! வாழ்த்துகள், தொடர்ந்து எழுதுங்கள் கிருபன். எம் போன்ற தமிழ் மாணாக்கர்களுக்கு மிகவும் பயனள்ளதாகவுள்ளது.
 12. வரவேற்கப்பட வேண்டிய நல்லதொரு முயற்சி..ஒரு சில வார்த்தைகளுக்கு இன்னும் சரியான அர்த்தம் கொடுக்கப்படவில்லை, முயற்சிக்கு வாழ்த்துகள். செய்யுள்களை மேற்கோள் காட்டிக் குறிப்பிட்டுள்ளது பாராட்டுதலுக்கு உரியது. எ.கா. தொன்மை1 toṉmai, பெ. (n.) 1. பழைமை (திவா.);; oldness, antiquity. தொன்மை யுடையார் தொடர்பு(நாலடி, 216);. 2. உரைவிரவிப் பழைமையாகிய கதை பொருளாகச் செய்யப்படுவது (தொல். பொருள். 549);; narrative poem interspersed with prose, having for its subject an ancient story. [தொல் → தொன்மை (வே.க. 274);] தொன்மை2 toṉmai, பெ. (n.) தன்மை (சங்கற்ப நிராகரணம்);; nature. தொன்மை நாடி நன்மைவிடாதே (பழ.);. [தொல் → தொன்மை] --------- தொன்மை2 toṉmai, பெ. (n.) தன்மை (சங்கற்ப நிராகரணம்);; nature. தொன்மை நாடி நன்மைவிடாதே (பழ.);. [தொல் → தொன்மை]
 13. சிறப்பான பதிவு. ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலப் புத்தாண்டின் தொடக்கத்தில் இதைப் பற்றிய விவாதங்களும், பதிவுகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அன்றைய தமிழர் பண்டிகைகள் அனைத்துமே இந்துப் பண்டிகைகளாகவே இருந்தன என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. மேலும் இதுபோன்ற பண்டிகைகள் பழந்தமிழரின் வாழ்வியலை ஒத்தே பின்பற்றப்பட்டு வந்துள்ளன. இதைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் திரிபு நிலையில் உள்ளது என்பது என் கருத்து. பொங்கல் பண்டிகையை தமிழ்ப் புத்தாண்டாக முன்னிருத்திவது ஏற்புடையதாக இல்லை, ஆனால் தக்க சான்றுடன் விளக்கினால் தெளிவாக இருக்கும். பகிர்வுக்கு நன்றி கிருபன்.
 14. தாங்களும் புத்தக விரும்பி என்பதில் மகிழ்ச்சி. நீங்கள் குறிப்பிட்டது சரிதான், காகிதத்தில் இருக்கும் சுவை மின்னூலில் கிடைப்பதில்லை. வாசிப்பு தொடர்ந்து செழித்திட வாழ்த்துகள். யாழின் நூற்றோட்டப் பகுதியில் நூல்கள் பற்றிய பதிவுகள் உள்ளன. நேரம் கிடைக்கும்போது வாசிக்கும் எண்ணம் உள்ளது.
 15. நெடுந்தூண் சிற்பமும், நெடுநல்வாலை பற்றியக் காட்சியும் விளக்கமும் சிறப்பு. மேற்குறிப்பிட்ட இடம் ஆவுடையார் திருக்கோயில் என்பது ஆத்மசாமி கோயிலா அல்லது ஆ ளுடைய பரம சாமி கோயிலா, அல்லது இவ்விரண்டும் ஒன்றுதானா? இக்கோயிலில் அருவ வழிபாடு பின்பற்றப்படுவதாக அறிந்தேன். இங்கு 10-15 வளையங்கள் கொண்ட ஒரே கல்லிலான கற்சங்கிலி செதுக்கப்பட்டு உயரத்தில் பொறுத்தித் தொங்க விடப்பட்டுள்ளது. இதுபோன்ற பற்பல சிறப்புகளைக் கொண்ட கோயிலை அவசியம் தரிசிக்க வேண்டும். பகிர்விறகு நன்றி @ புரட்சிகர தமிழ்தேசியன்
 16. "இந்திபேசும் மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வருவதையும் உலகம் முழுக்கச் சென்று தமிழர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தித் திணிப்பு எதிர்ப்புத் தியாகிகளின் தியாகம் உணரலாம்." எழுத்தாளர் மைக்கேல் மேற்குறிப்பிட்டது உண்மைதான், ஆங்கிலம் படித்ததால் பல்வேறு நாடுகளுக்கும் சென்று பிற நாட்டவர்க்கு இணையாக வேலை செய்து திறமையை வளர்த்துக் கொள்கின்றனர். உலகெங்கும் கம்ப்யூட்டர் மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாக விளங்கும் தமிழர்கள் எண்ணிக்கை எண்ணிலடங்கா!
 17. நல்வரவு கிருபன்.. 6174 வாசிப்பின் போதும் அதற்குப் பிறகும் கூகிளில் எனது தேடல் தொடர்ந்து கொண்டே செல்கிறது. ஜெமோ வின் விஷ்ணுபுரம் நாவலின் வாசிப்பு முடிவுறும் நிலையில் உள்ளது. அதைப் பற்றிய விமர்சனத்தை இன்னும் விளக்கமாக எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். என்னைப் போன்ற சாதாரண வாசகர்களுக்கு இந்நாவல் மிகவும் கடினமானதாகத் தோன்றுகிறது. பல்வேறு புதிய சொற்களைப் பற்றி ஆராய்வதிலும், ஆசிரியரின் விவரிப்பைக் கற்பனை செய்துகொள்வதிலுமே பெரும்பாலான நேரம் சென்றுவிடுகிறது. முற்றிலும் சவால் நிறைந்த நாவல் !!
 18. எனக்கும் ஆசிரியரைப் பற்றி அதிகம் பரிட்சயமில்லை....இப்புத்தகம் தமிழ் எழுத்துலகில் ஒரு புது முயற்சியாக இருப்பதால், நாமும் ஆதரவு அளித்து வரவேற்கலாம் என்பது என் அபிப்பிராயம்..
 19. அரு*மை*, கலைவாணர் NSK பற்றிய பகிர்வுக்கு நன்றி.
 20. இப்பட்டியலில் சவுதி அரேபியா இல்லாமலிருப்பது ஆச்சரியமளிக்கிறது.
 21. பயனுள்ள பதிவு. தண்ணீரின் முக்கியத்துவத்தை இன்னும் மனித ஜந்துக்கள் உணரவில்லை. எதிர்காலச் சந்ததிகள் நீரின்றி தவிக்கும் நிலைக்கு நாமும் நம் அலட்சியப்போக்கும் காரணமாக அமையும். "நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு "
 22. புத்தக வாசிப்பு என்பது பெரும்பாலும் ஒருவித தூண்டலின் பேரில் வருவதாக எண்ணுகிறேன். ஒரு குறிப்பிட்ட புத்தகத்தைத் தேர்ந்தெடுத்துப் படிக்க மிக முக்கியக் காரணிகளாக நான் கருதுவது அதன் ஆசிரியர், நாவலின் வகை, தலைப்பு, முன்னிருத்தப்பட்ட விமர்சனங்கள் மற்றும் நண்பர்களின் பரிந்துரைகள் போன்றவைகள் ஆகும். 6174 நாவலை நான் வாசிக்கக் காரணம் அதன் தலைப்பும், நாவலைப் பற்றி இணையத்தில் பரவியிருந்த நல்ல விமர்சனங்களாகும். தமிழில் இது போன்று அறிவியல் சார்ந்த த்ரில்லர் நாவல்களை வாசித்தது நினைவில்லை. வாசகர்கள் அறிந்திருந்தால் பின்னூட்டத்தில் இணைக்குமாறு வேண்டுகிறேன். அறிவியல் புனைவு சார்ந்த தலைப்பில் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரும் நிச்சயம் வாசிக்க வேண்டிய நாவல் 6174. இந்நாவல் நமக்குப் பரிட்சயமில்லாத பல்வேறு விடயங்களை சுவாரசியத்துடன் உள்ளடக்கியது. இதுவே ஆசிரியரின் முதல் நாவல் என்பதில் ஆச்சரியமாக உள்ளது. லெமூரியாவில் துவங்கும் கதை, நிகழ்காலத்தில் பல்வேறு குறியீட்டுச் சொற்கள் அடங்கிய புதிர்களைப் பற்றிய தேடலில் சுழன்று, உலக அழிவை எதிர்நோக்கும் ஒரு தீவிரவாதக் கூட்டத்தினிடமிருந்து இவ்வுலகைக் காப்பாற்றுவதைப் பற்றியது. இந்நாவலில் ஆசிரியர் பல்வேறு சுவாரசியமான விடுகதைக் குறிப்புகள், சித்திரப்புதிர், கணித சூத்திரம், சங்க இலக்கிய வெண்பாக்கள் ஆகியவற்றைக் குறிச்சொற்களாக்கி, புதிர்களாக அமைத்து பரபரப்புக் குறையாமல் நகர்த்திச் செல்கிறார். லெமூரிய கண்டத்தில் தொடங்கி, பிரமிடு, பிரம்மி எழுத்துகள், கோலங்கள், வடிவக் கணக்கியல், ஸ்பெக்ட்ரோமீட்டர், விண்கற்கள், செயற்கைக்கோள், சீலகந்த் மீன்கள், ஹர்ஷத் எண், கேப்ரிகர் எண், லோனார் ஏரி, படிகங்கள் (crystal), ஆனைக்கொன்றான் பாம்பு (Anaconda), இந்தியக் கடற்படைப் போர் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல், விமானப் படை, கணிதக் குறியீடுகள், ஆகம விதிகள், மண்டுக மாண்டலம், மியான்மார் பகோடா என்று சாதாரண வாசகனுக்கு முற்றிலும் பழக்கமில்லாத, ஆனால் சுவாரசியமான அறிவியல் களஞ்சியங்களை உள்ளடக்கியப் புதினத்திற்குள் மூச்சிடுவதற்கும் நேரமளிக்காமல் வாசகர்களை இழுத்துச் செல்கிறார். ஒவ்வொரு பக்கத்தைத் திருப்பும்போதும் ஆசிரியர் இதற்கான ஆராய்ச்சிகளுக்காக அதிகம் மெனக்கெட்டிருப்பதை உணர முடிகிறது. தமிழ்ப் பெண்களிடும் சாதாரணக் கோலத்தையும் அதனுடன் ஃபிபனாக்கி எண்களை ஒளித்திருப்பது வியப்பாக இருந்தது. வியப்பு குறைவதற்குள் தொடர்ச்சியான புதிர்களை அடுக்கடுக்காக அமைத்து வாசகர்களுக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது. கணிதவியலில் இந்தியர்களின் பங்காற்றலை கேப்ரிகர் மற்றும் ஹர்ஷத் எண்கள் பற்றிய புதிர்களில் அழகாக இணைத்திருப்பது கவனத்திற்குரியது. "தன்னிலே பிரிந்துகூடிப் பின் பகுக்க தன்னை இயல் தோற்றும் தசம் ஆதி ஆதியின் முதல்வர்க்கம் சூடிய அறைதனிலே சீரிய கட்டமதில் தடயம் காண்" ஹர்ஷத் எண், எ.கா. 18 -> 1 + 8 = 9 ; 18/9 = 2 21 -> 2+1 = 3 ; 21/3 = 7 "தலைவால் நேராகி தன்வாலே தலையாகி தன்னிலே தான் கழிய தானேயாய் நின்றிடுமே நல்லார வட்டத்துக்குள் நாலே எண்ணாம்" கேப்ரிகர் எண், எ.கா. 1897 1897 -> 9871 (reverse order) - 1789 = 8082 -> 8820 - 0288 = 8532 -> 8532 - 2358 = 6174 கதை மாந்தர்களை அமைத்த விதமும், அவர்களுக்குள் நடைபெறும் உரையாடல்களும் சுவாரசியத்தை சிறிதுக் குறைப்பதாக உணர்ந்தேன். கதையின் தொடக்கமும், முடிவுப் பகுதியும் வாசிப்பில் சிறிது தொய்வை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் புதிர்கள் மற்றும் அதற்கான விடைகளை எளிமையாக அமைத்த விதம் பாராட்டப்படக்குரியது. முதல் வாசிப்பில்நாவலின் முழுமையை நிச்சயம் அடைய முடியாது, குறைந்தது இரண்டாவது முறை வாசிக்கும்போது முழுமையடையும் என்பது என் கருத்து. வாசிப்பின் முடிவில் National treasure: Book of Secret & Dan Brown படங்களைப் பார்த்தது போன்ற உணர்வு எழுவதை மறுக்க இயலாது. தமிழ் எழுத்துலகில் இதுபோன்ற அறிவியல் சார் புனை நாவல்கள் உருவாக இந்நாவல் ஒரு அடிக்கல்லாக அமையும். ஒவ்வொரு பக்கங்களிலும் நாவலின் சுவை குன்றாமல், அடுக்கடுக்காக புதிர்களை அமைத்து, வாசிப்பவரின் ஆர்வத்தைத் தூண்டி, நாவலில் வரும் குறியீட்டுச் சொற்களைப் பற்றிய தேடலை நம்முள் விளைவிக்கிறார். வாசித்த பின் வாசகர்களாகிய நாம் கூகிளின் துணை கொண்டு குறிச்சொற்களைத் தேடிப் பயணிப்பதே இந்நாவலின் வெற்றியாக நான் உணர்கிறேன். தமிழ் எழுத்துலகில் க. சுதாகர் அவர்கள் நிச்சயம் ஒரு சிறந்த எழுத்தாளராக வளர வாழ்த்துகள். தமிழ் வாசகர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு முக்கிய நாவல் இது.
 23. பதிவிற்கு நன்றி கிருபன். தமிழீழ வரலாற்றில் பொன். சிவகுமாரன் என்னும் பெயர் நிச்சயம் நிலைத்து நிற்கும். அவரின் போராட்டத்தைப் பற்றிய வரலாற்றை விவரமாகப் பகிர்ந்தால் சிறப்பாக இருக்கும்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.