Jump to content

பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    80
  • Joined

  • Last visited

Everything posted by பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம்

  1. சோமசுந்தரனார் அவர்கள் இன்பத்துப்பாலின் சிறந்த கவிநயங்களை கூர்நோக்கால் சிறப்புறக் காட்டி, நம்மையெல்லாம் மகிழ்விக்கும்போது, பேரின்பத்துப்பாலில் அதற்கிணையான கவித்துவப் படைப்பு ஒன்று அரைகுறையாக நினைவில் விக்க, அது எதுவென நினைவுகூர, ஓரிரு நாட்கள் ஆயின. சோமசுந்தரனார் போன்ற இலக்கியச் சுவைஞரின் கட்டுரைக்கு, பொருத்தமான பின்னூட்டம் எழுத, மீளவாசிப்பும், மறுவாசிப்பும் தேவைப்படுகிறது. அன்னார் சிறப்புறக் காட்டிய "இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து" - குறள் 1091 "ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள" - குறள் 1099 ஆகிய இரு குறள்களிலிருந்து பிறந்த கவிதையே "காதன்மை கண்ணுளே அடக்கிக் கண்ணெனும் தூதினாற் துணிபொருள் உணர்த்தித் தான்தமர்க்கு ஏதின்மை படக்கரந்திட்ட வாட்கண் நோக்கு ஓத நீரமுதும் உலகும் விற்குமே" என்னும் சீவக சிந்தாமணி பாடல். (இச் சுவைக்கு இணையான கவித்துவம் கொண்டதோர் படைப்பு மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - "உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்து ஈயின் ஒப்பாய் விழைதருவேனை விடுதிகண்டாய்" என்று தொடங்கும் 46வது பாடல். இப்பாடலின் பேரின்பத்துக் கவித்துவத்தை விளக்கப் புகுந்தேன். அதுவே ஒரு பெரிய கட்டுரையாக விரிந்ததால், ஒருவார காலத்துக்குள் செப்பனிட்டு, தனியாகப் பதிவிடுகின்றேன். அக்கட்டுரை, சோமசுந்தரனாருக்கு சமர்ப்பணம். நிற்க. ) சோம சுந்தரனாரின் இலக்கியக் கட்டுரை, எனது கட்டுரைக்கு ஊக்கியாக அமைந்ததுபோல், திருத்தக்கத்தேவரின் சீவகசிந்தாமணி காப்பியம், சேக்கிழாரின் பெரியபுராணம் காப்பியத்துக்கு ஊக்கியாக அமைந்த வரலாறை இங்கு பதிவு செய்து, எனது பின்னூட்டத்தை நிறைவு செய்கிறேன். சீவகசிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கத்தேவரின் கவியின்பத்தில் மயங்கி, எந்நேரமும், சீவசிந்தாமணி இலக்கியச்சுவையின்பத்தில் மூழ்கிக் கிடந்தான் குலோத்துங்கச் சோழன் மாமன்னன் அநபாயன். எங்கே சோழநாட்டை மீண்டும் சமணம் ஆட்கொண்டுவிடுமோ என்ற பேரச்சத்தில் மூழ்கியிருந்த சோழநாட்டு முதலமைச்சர் அருண்மொழித்தேவர், அநபாயன் மன்னனுக்கு சைவ அருளாளர்கள் 63 நாயன்மார்கள் குறித்து கவித்துவமாக எடுத்துரைக்க, அவர்கள் வரலாற்றை காவியமாகப் படைக்க முதலமைச்சர் அருண்மொழித்தேவரையே வேண்டினான் சோழ மன்னன். திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம் பிறந்த வரலாறு இதுதான். சீவகசிந்தாமணிக்கும், கம்பராமாயணத்துக்கும் இணையான கவித்துவம் கொண்ட திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் இயற்றிய அருண்மொழித் தேவருக்கு "சேக்கிழார்" என்ற திருநாமம் சூட்டினான் சோழன்.
  2. கட்டுரை ஆசிரியரின் வழக்கமான (அன்னாரது பட்டறிவின் அடிப்படையில் எழுதும்) நடையிலிருந்து வேறுபட்டு, கற்றதும், கேட்டதும், உற்றதும், உயிர்த்ததும் கொண்ட பொருண்மையால்,, சற்றே வேகம் குறைந்துள்ள எழுத்துநடை என்னை வியக்க வைத்தது. சுலோச்சனா முதலியார் பாலத்தின் வரலாறு தொட்டு, பாளையம்கோட்டையின் வரலாற்றுச் சுவடுகள் பலவும் ஆசான் தொப-வின் நினைவுகளோடு இழையாடிச் சென்றது மனதுக்கு இன்னும் அணுக்கமாக இருந்தது. மேடைப் போலீஸ் ஸ்டேஷன் என்ற அளவில் பாளையம்கோட்டையை அறிந்த என போன்றோருக்கு பேராசிரியர் சோமசுந்தரம் அவர்களின் இத்தொடர் ஓர் சிறந்த பெட்டகம். இடைவெளி எடுத்துப் படித்தாலும், மீள்வாசிப்புக்குத் தகுதியான சிறந்த படைப்பு என்பதில் ஐயமில்லை. இப்போதே இருமுறை மீள்வாசிப்பு செய்ய வைத்த காந்த சக்தி, இக்கட்டுரையின் வரலாறு சொல்லும் மொழி நடையே. அடுத்த பதிவுக்காகக் காத்திருக்கிறோம்.
  3. "சான்றாண்மை" குறித்த ஓர் முழுமையான சிறந்த இக் கட்டுரை தந்த சில சிந்தனைகள்: சான்றாண்மை என்ற சொல் சான்று+ஆண்மை என்று விரியும். ஏனையோர் பின்பற்றும்படி சான்றாக வாழ்ந்துஇ நடந்து காட்டிய ஆண்மை என்று பொருள். என்றாலும்இ சான்ற என்ற சொல் “சிறந்த” என்ற பொருளிலேயே பெரும்பாலும் கையாளப் பெற்றிருக்கின்றது. சங்ககால வீரனுக்குச் சிறந்த குணங்கள் "போரில் புறங்காட்டாமை"; 'போரில் பங்கு பெறாத எவரையும் கொல்லாமை" என்பதாகக் கற்பிக்கப்படுகிறது. இத்தகைய சிறந்த கற்பிதங்கள் சான்றாண்மை ஆகும். தமிழகத்தின் பெருஞ் சொத்தான திருக்குறளின் திரண்ட கருத்துஇ "மக்களாய்ப் பிறந்தவர்கள் அனைவரும் மக்கட் பண்போடு வாழவேண்டும்" என்பது. மக்கட்பண்புகளில் சிறந்த பண்பாம் சான்றாண்மையுடையவரே சான்றோர் ஆவர் . வேழ முடைத்து மலைநாடுஇ மேதக்க சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல்தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து சான்றோரே தமிழகத்தின் செல்வம். நிலவளமாகிய நெல்லும், மலை வளமாகிய யானையும், கடல் வளமாகிய முத்தும், மக்கள் வளமாகிய சான்றோரும், தமிழகத்தின் செல்வங்கள் என்ற உண்மையை ஒளவையார் வாக்கிலிருந்து நன்கு உணரலாம். "சான்றாண்மை என்ற சொல் தமிழ்மொழி ஒன்றுக்கே உரியது. சான்றாண்மைத் தன்மை தமிழ் மக்களின் கலை. சான்றாண்மைப் பண்பு தமிழகத்தின் தனிப்பட்ட சொத்து. சான்றாண்மை என்ற சொல்லைக்கூடப் பிற மொழிகளில் மொழிபெயர்க்க முடியாது. மொழி பெயர்த்துக் கூறினாலும் அச்சொல்லில் தமிழ் கூறும் பொருள் இராது." என்பது முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் வாக்கு. கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும் என்ற ‘படைச்செருக்கு’ என்ற அதிகாரத்தில் வந்துள்ள திருக்குறளில் "தன்னைக் கொல்லவந்த பகைவனது யானை மீது கைவேலை குறிபார்த்து எறிந்தான். யானையொடு வேலும் போய் விட்டது. வெறுங்கையனானான். கைவேலை எறிந்து போக்கி விட்டு, வெறுங்கையுடன் ஆயுதமின்றி வரும் (வருபவன்) வீரன் மார்பின் மீது, மறைந்திருந்து பகைவனால் எறியப் பெற்ற வேல் ஒன்று பாய்ந்தது. சற்றும் கலங்காத வீரன் அதனைப் பிடுங்கிக் கொண்டு நகைத்தான்" என்கிறார் வள்ளுவர். வேலைப்பறித்துக் கையிற் பற்றிக்கொண்டு, வேல் எறிந்த வீரன் தன்முன் இல்லாமை கண்டு, "மறைந்திருந்து தாக்கும் இழிமக்களும் இவ்வுலகில் உள்ளார்களே?" என எண்ணிப் புண்பட்ட மனத்தோடு நகைத்திருப்பானோ அவ் வீரன்? எனக்கென்னவோ, "இராமன் மறைந்திருந்து எய்த அம்பு, மாவீரன் வாலியின் மார்பைத் துளைத்தபோது, இராமனின் அம்பைப் பிடுங்கி, மாவீரன் வாலி நகைத்த செயலை" நினைந்து வள்ளுவனார் இக்குறளை இயற்றியிருப்பாரோ என்றே தோன்றியது. “மெய் வேல் பறியா நகும்” என்ற நான்கு சொற்களுக்குள், இத்துணை சிந்தனை ஓட்டங்களையும் நம்முள் எழுப்புகின்ற வள்ளுவரது புலமையும், திறமையும் எண்ண எண்ண வியப்படைக்கிறேன். பழங்காலத்துத் தமிழ் மக்களில் ஆண்இ பெண் ஆகிய இருபாலரிடத்துங் காணப்பெற்ற சிறந்த வீரச் செயல்களைப் புறநானூற்றுப் பாடல்கள் அறிவிக்கின்றன. எனினும் வள்ளுவரது குறள் அதனை இன்னும் தெளிவாக்கிக் காட்டுகிறது. மோசமான விளைவுகளைத் தவிர்க்கும் வண்ணம் பண்டைக் காலத்தில் சில அறம் சார்ந்த வரையறை சான்றாண்மைகளோடு, போர்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. போர் தொடங்குவதற்கு முன்னர்ப் போரைப் பற்றி அறிவித்து, கொல்லக்கூடாத உயிரினங்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுமாறு எச்சரிக்கை விடப்பட்டது. இது போரின் அறத்தாறு எனக் குறிப்பிடப்படுகிறது. “ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும்இ பெண்டிரும் பிணியுடையீரும்இ பேணித் தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர் பெறாஅதீரும்இ எம் அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின் என அறத்தாறு நுவலும் பூட்கை” என்று நெட்டிமையார் பாடிய புறநானூற்றுப் பாட்டினால் அக்காலப் போர்களில் எவ்வாறு 'அறப்போர்' என்ற சான்றாண்மைக் கருத்து செயல் வடிவம் பெற்றது, எவரையெல்லாம் கொல்லக்கூடாது என்றுக் கருதினார்கள் எனத் தெளிவாக விளக்குகிறது. தமிழர் முயலைக் கொன்று வெற்றிபெறுவதைவிட, யானையை எய்து தோல்வியடைவதையே பெருமையாகக் கருதும் கொள்கை கொண்டவர். தம்மின் வலிமைகுறைந்த எவரையும் தமிழர் தாக்குவதில்லை. மெலியோர் தம்மைத் தாக்க முன்வந்தபோதும் வலியோர் அவர்களைத் தாக்காது, அவர்களை நோக்கி, “போர் எண்ணங்கொண்டு என்முன் நில்லாதே. நின்றால் மடிந்து மண்ணிற் புதையுண்டு நடுகல்லாக நிற்பாய்” என வழிகூறி அனுப்பிடுவர். அவரது அறம் அத்தகையது. தம்மோடு ஒத்த அல்லது உயர்ந்த வலிமையுடையவரோடு மட்டுமே போரிடுவர். அப்போதுங்கூடப் பகைவரது வலிமை குறைந்துவிட்டால் மேலும் தாக்காமல் "இன்று போய் நாளை வா" என்று அவர்களை அனுப்பி வைப்பர். அவரது போராண்மை அத்தகையது. வாலியின் மேல் மறைந்திருந்து வாளி(அம்பு)விட்ட இழிசெயலைச் சமன்செய்யும் பொருட்டு, இந்தச் சான்றாண்மையை இராமன் மேல் ஏற்றி, கவிச்சக்கரவர்த்தி கம்பன் படைத்த பாடல் 'ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த பூளை ஆயின கண்டனை; இன்று போய்இ போர்க்கு நாளை வா' என நல்கினன்--நாகு இளங் கமுகின் வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல். ஏன் கோசல நாடுடை வள்ளல் என்கிறார் கம்பர்? அயோத்தி பரதனுக்கும், மிதிலை சனகருக்கும், வெல்லப்போகும் இலங்கை வீடணுக்கும் ஈந்த இராமபிரானுக்கு, தாய் கோசலையின் நாடு ஒன்றே உள்ளது என்று குறிப்பால் சிறப்பிக்கிறார் கவிச்சக்கரவர்த்தி . என்னதான் கம்பனின் கவிதையை இரசித்தாலும், இன்றுவரைஇ வாலியை மறைந்திருந்து அம்பு எய்து கொன்ற இழிசெயலை மறக்காத தமிழர்கள் உள்ளங்களை, இராமனால் வெல்லவே முடியவில்லை. அதுதான் தமிழரின் தனித்துவம்! தமிழரின் சான்றாண்மை குறித்த இத்துணை சிந்தனைகளும் ஐயா சுப. சோமசுந்தரனார் படைத்த கட்டுரைக்கே சமர்ப்பணம்.
  4. கட்டுரை ஆசிரியரின் 'உண்டால் அம்ம இவ்வுலகம்!" தந்த சிந்தனைகளின் தொடர் ஓட்டம்: இந்த 'அம்ம'-தான் எடுத்த மாற்றங்கள் : தொல்காப்பியர், சங்க காலத்தில் அம்ம என்பது ஓர் வியப்பிடைச் சொல் (கேட்டற்பொருளைத் தழுவிவரு மிடைச்சொல். அம்ம கேட்பிக்கும் (தொல். சொல். 278). அச்சொல்லே ஓர் அதிசயக் குறிப்பாக, "விதியினார்க்கு யான் அம்ம செய்கின்றதோர் அளவுண்டோ" (கந்தபு. அசுரர்தோற். 14) என்று கந்தபுராணத்தில் ஆளப்பட்டது. நன்னூல் சூத்திரம் அம்ம என்பது ஓர் உரையசைச்சொல் என்கிறது. (நன். 437, மயிலை.) தொடர்ந்த காலங்களில், "அம்ம" என்ற சொல் அம்மோ(An interjection expressing pity -இரக்கக்குறிப்புச் சொல்) , அம்மவோ (An exclamation of pity-ஓர் வியப்பு இரக்கக்குறிப்பு- "அம்மவோ விதியே யென்னும்" (கந்தபு. அக்கினி. 194)), அம்மனோ, அம்மனே, அம்மகோ(An exclamation of pity-ஓர் வியப்பு இரக்கக்குறிப்பு - அம்மகோவெனும் விழுமழும் (குமர. பிர. மதுரைக்கல. 14), அம்மல் (An exclamation of concern or circumstance or condition - மேகம் மந்தாரமாயிருத்தல், தடிமன், தலைப்பாரம் போன்றவற்றைக் குறிக்கும்), அம்மாடி (An exclamation of surprise, pity, or relief - அதிசய, இரக்க, ஆசுவாசக் குறிப்பு) என்று பல மாற்றங்களை அடைந்து, சூழலுக்கு ஏற்ப அச்சம், இழிவரல், நகை, வியப்பு, பேரச்சம் . . எனப் பல பிறவும் குறித்தது. மக்கள் இவ்வாறு மொழிவதால் மொழிவளம் ஆயிற்று போலும். -அம்ம நாம் வியந்தவாறே!
  5. பூவினத்தொடும் புள்ளினத்தொடும் - அருமையான தமிழ் நயம்; தொல்காப்பியம் தொட்டு flora மற்றும் faunaவுடன் இயைந்த தமிழரின் தொல்மரபு பண்பாட்டு அசைவுகளை புறநானூறு, திருக்குறள் உள்ளிட்ட தொல்லிலக்கியங்கள் வழியே நம்மை இட்டுச் சென்ற பூவின- புள்ளின சங்ககால வாழ்வியல் உலா (flora and fauna Safari thorugh the passage of Sangam literature) என்றால் மிகையில்லை. ஒரு சிறிய பார்வை: "அம்ம நாணுதும் நும்மொடு நகையே" - என்பதில் வரும் "அம்ம" என்னும் சொல்லாடல், வியப்பைக் குறிப்பதைக் காட்டிலும், "ஐயோ! எனக்கு வெட்கமாயிருக்கு!, ஐயோ! எனக்கு அச்சமாக இருக்கு!, சேச்சே! என்னால அங்க வைச்சு இதைச் செய்ய முடியாது!" போன்ற உணர்ச்சிக் குறிகளைக் வெளிப்படுத்தும் சொல்லாடலாகும். காட்டாக, திருவாசகத்தில், மாணிக்கவாசகர் பெருமான், புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்! பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்! கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி மற்றும்ஓர் தெய்வம் உண்டென நினைந்து எம்பெம்மாற்கு அற்றில்லாதவரைக் கண்டால் அம்ம நான் அஞ்சுமாறே! என்ற அச்சப்பத்து பதிகத் திருவாசகத்தில் "அம்ம நான் அஞ்சுமாறே!" என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகிறார். சங்க இலக்கியத்தின் மரபுகள் அவ்வாறே பக்தி இலக்கியங்களில் ஆளப்படுவதால், இப் பார்வையை முன்வைக்கிறேன்.
  6. //"சமூக ஒடுக்குமுறை குறித்த குற்றவுணர்வும், சாதி பேதமற்ற சமூகத்திற்கான முனைப்பும் உயர்சாதியினரிடம் அமைதல் வேண்டும்.// ஒருக்காலும் நடக்காத விடயம். "தலையில் பிறந்தவன்; ஆக உயர்ந்தவன்" என்று குழந்தைப் பருவத்திலேயே மூளை ச் கலவையான ஆரிய பார்ப்பனக் கூட்டமும், அவர்தம் அடிவருடி சற்சூத்திர உயர்சாதி சங்கிகளும் ( நம் உறவுகள்) நாய்-வால்கள். நிமிர்த்த விழைகிறீர்கள். உங்கள் முயற்சி நடந்தால் மகிழ்ச்சிதான். இவர்கள் மேன்மக்கள் இல்லை. குறுக்கு வழியில் மக்களை ஏமாற்றி, மதத்தின் பெயரால், மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்ட உயர்சாதி அரசியல் செய்வது இவர்கள் பிறவிக் குணம்; அது மாறாதையா மாறாது.
  7. "சிதைக்குத் தீ மூட்டி, நீரினில் மூழ்கி, இறந்த உறவினரின் நினைப்பு ஒழிந்தாலும், இந்த சாதி,மத இந்துத்துவ வருணாசிரமக் கருமாந்திர வெறுப்பு அரசியலின் நினைப்பு ஒழியா மன நோயாளிகளாக அலையும் கூட்டத்தை அப்பட்டமாகத் தோலுரித்து தொங்கவிட்டுவிட்டீர்கள். இந்தக் கூட்டம் உறவாக இருக்கும் பாவப் பிறவிகளுள் நானும் ஒருவன். இத்தகைய நிகழ்வுகளை நானும் கண்ணுற்று இருக்கிறேன். நான் ரசித்த வரிகள்: //சூழ்நிலை காரணமாக தமிழ்நாட்டில் அமைந்த அடிமை அரசினைக் கொண்டு அதிகாரப் பொறுப்புகளில் தங்களின் கோட்பாட்டினைத் (!) தழுவியவர்களை ஆங்காங்கே விதைத்ததும் தூவியதும் அவர்கள் நாஜிக்களிடம் கற்ற பாலபாடம். இச்சூழலில் பெரியாரையும் அண்ணாவையும் இன்றைய தமிழ் இளைஞர்களிடம் கொண்டு செல்வதே தமிழின உய்விற்கான வழியாக இருக்க முடியும். வலதுசாரிகளின் இன, மத, உயர்சாதி அரசியலைத் தமிழ் மண்ணில் எதிர்கொள்ள இடதுசாரிகளே இன்று கையில் எடுக்க வேண்டிய ஆயுதங்கள் பெரியார், அண்ணா போன்றோரே. இவ்விருவரும் வாழ்ந்து காட்டாத மண்ணுக்கான மார்க்சியம் உலகில் உண்டா என்ன ?// Writing on the wall.
  8. இப்படியாய், வாழ்வை சுதந்திரமாய் வாழும் சூழலைத் தோற்றுவித்த திராவிடப் பெரியாரும், பேரறிஞர் அண்ணா வும் உழுது பண்படுத்திய மண்ணில் உதித்த இரு கிறித்தவப் பாதிரிமார்கள் கிறித்துவரல்லாத மாணவர்களை எவ்வாறு கண்ணியமாக அவரவர் பாதைகளில் சுதந்திரமாக வாழ வழி நடத்தினர் என்பது தமிழ்ச் சமூகத்தில் திராவிட இயக்கத்தின் தாக்கம் என்றால் மிகையில்லை. திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் தமிழ் மண்ணில் விளைந்த பன்முகத் தன்மைக்கோர் நற்சான்று இந்நிகழ்வுகள். "நீ சொன்னது உனக்குச் சரி. நான் சொன்னது அவனுக்குச் சரி" என்ற இரு வரிகள் எவ்வளவு பட்டவர்த்தனமான வாழ்வியல் யதார்த்தம். உளவியல் அடிப்படையில், மதவாதம் பேசும் பிஜேபி ஏன் தமிழ் மண்ணில் காலூன்ற இயலவில்லை என்பதை இக்கட்டுரையை வாசிப்போர்க்கு நன்கு விளங்கும்.
  9. இந்த மகத்தான கதைசொல்லியின் அற்புதமான மனித வாசிப்பில் உருவான இப் படைப்பு, யாழ் வாசகர்கள் முன்பு எழுத்து வடிவில் தரப்படும் முன்னரே, செவிவழியாக நேரில் கேட்கும் வாய்ப்புப் பெற்றவன் என்ற முறையில் சொல்கிறேன்: எழுத்தாளரின் சொல்லோவியமும், எழுத்தோவியமும், கல்கியின் "பொன்னியின் செல்வன்" படைப்பாற்றலை நினைவூட்டியது.
  10. அன்புள்ள ஐயா!

    தங்கள் வாழ்த்துக்கும், ஊக்கம் தந்தமைக்கும் மிக்க நன்றி!

    அன்புடன்

    ந. கிருஷ்ணன்

  11. அன்புள்ள நவீனன் அவர்களுக்கு,

    வணக்கம். இன்றுதான் யாழ் உறுப்பினன் ஆனேன். தி இந்து தமிழ் நாளிதழில் நான் எழுதிய 'வான் கலந்த மாணிக்க வாசகம்' தொடரை யாழ்-சேர்த்தமைக்கு என் நன்றிகள். இன்று 'கவிஞர் வைரமுத்துவும் தமிழாண்ட ஆண்டாள் நாச்சியாரும் -   சங்கே முழங்கு!' என்னும் கட்டுரையை யாழ்-இல் பதிவு செய்துள்ளேன்.  விளரிப்பாலை[சிந்தனைக்களம்] உறுப்பினராவது எப்படி என்று விளக்கி உதவ வேண்டுகிறேன்.

    அன்புடன்

    பேரா.ந. கிருஷ்ணன் 

    1. நவீனன்

      நவீனன்

      வணக்கம் பேரா.ந. கிருஷ்ணன் அவர்களே

      நீங்கள் எழுதியதை களபொறுப்பாளர் மோகனுக்கு அனுப்பி உள்ளேன்.

      அவர் உங்களுக்கு வேண்டிய உதவி செய்வார்.

      நட்புடன்

      நவீனன்

    2. பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம்

      பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம்

      வணக்கம் நவீனன் ஐயா அவர்களே

      தங்கள் உதவிக்கு மிக்க நன்றி.

      அன்புடன்

      பேரா.ந.கிருஷ்ணன்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.