Jump to content

தம்பியன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  46
 • Joined

 • Last visited

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

தம்பியன்'s Achievements

Explorer

Explorer (4/14)

 • First Post
 • Collaborator
 • Week One Done
 • One Month Later
 • One Year In

Recent Badges

7

Reputation

 1. தமக்கென்றோர் மொழி தமக்கென்றோர் கலாச்சாரம் தமக்கென்றோர் வாழ்வு முறை தன்னை வடிவமைத்து தன் போக்கில் வாழ்கின்ற இனக் குழுமம் ஒன்றை இடையிட்டுப் பெருகிவந்த இன்னோர் இனம் வந்து இடித்துத் தன் காலுள் கண் முன்னே போட்டுக் கதறக் கொழுத்தையிலே அமுக்கம் தாளாமல் அதை எதிர்க்க அவ்வினத்தின் உள்ளே இருந்தொருவன் எழுதல் உலக விதி அவனின் பின் முழு இனம் திரண்டு மூச்சைக் கொடுத்திடுதல் எழப் போகும் ஓரினத்தின் இருப்பின் வரலாறு நீண்ட போராட்ட நெடு வெளியில் மண்ணுக்காய் மாண்ட வீரர்கள் மன வலிமை ஓர்மத்தை தூண்ட, துவளாமல் தொடர்கையிலே அவன் பற்றி இடைவெளியில் மனம் சோர்ந்து இடிந்தோர் விதையற்று வடிக்கின்ற விமர்சனங்கள் வாய் நாற்ற வீணீர் தான் தவிர்க்கேலாதெனினும் ஓர் தடையல்ல, படிக்கற்கள் இதையெல்லாம் தாண்டியவன் எடுத்தாண்டு நகர்கையிலே இடைவெளியில் ஏதேனும் இடர்கள் நேர்ந்திடலாம் விடை கூடச் சொல்லாமல் விம்பம் மறைந்திடலாம் உடைந்துருகிச் சிலகாலம் ஒடுங்கிடலாம் அவன் படைகள் ஆனால் நாடென்றால் இது தான் நாமிதனை அடைவதற்கு நாடிய வழிமுறைகள் நம்பிக்கை இவைகள் தான் தேடி உலகெல்லாம் திரிந்தாலும் இறுதியிற் கை கூடும் வழி இது தான் என்கின்ற குறிப்பெங்கள் நாடி நரம்புகளில் நாளாந்தம் வளர்தசையில் ஓடித் திரிகிறது உள்ளே, அவன் இருப்பு இறுகிய பாறை அல்ல இயங்காமல் இருப்பதற்கு திறந்த குபுகுபுக்கும் நீரூற்று, அதிற் தோய்ந்த சிறந்த மன வேர்கள் சிந்தனைகள் எல்லாமே உகந்த ஓர் நாளில் ஒன்றாகும் அன்றைக்கு திறந்த வானிருந்து வருவது போலொருவன் பிறந்து வருவது போல் வருவான் அவனடுத்த படை நடத்திச் செல்வான் பார்த்துணர்ந்த மாதிரி யை உடைய வழியாலே ஒழுங்கமைப்பான் அவனொன்றும் வேற்றுக் கிரகத்தின்வாசியல்ல விழிப்படைந்த நேற்றுவரை எம்மோடு நிமிர்ந்து தோள் கொடுத்த நம்முள் ஒருவன் தான் நமக்காக வாழ்பவன் தான் காலம் அவன் பெயரைக் கட்டமைக்கும், அவனுடைய வானத்தில் நிற்பதற்கு வடிவமைத்த அவன் மேகம் கானகப் பரப்பினைக் கடக்கும், ஓர் நாளில் நாமெல்லாம் அதனை நம்தேச மேகம் தான் ஓம் என்று சொல்லி ஒன்றாய்க் கை கோர்க்கையிலே மேகம் திறந்து விடியல் மழை பொழிந்தெங்கள் தாகம் தணிந்து தளிர்க்கும் இது நடக்கும்.. – திரு- http://www.kaakam.com/?p=1827
 2. http://www.kaakam.com/?p=1814 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்பாக உலகந்தழுவி தமிழர்களின் அரசியல் பரப்பில் கூடுதலாக ஒலிக்கப்படுவதும், அதிலும் கூடுதலாக அதன் உட்கிடைசார்ந்து மலினப்படுத்தப்படுவதுமான சொல் யாதெனில் “தமிழ்த்தேசியம்” எனலாம். தமிழீழ விடுதலைப் போராட்டம் களத்தினில் உயிர்ப்புடன் இருந்த காலத்தில் தமிழர்தேசம், தமிழர் தாயகம், தன்னாட்சியுரிமை, தமிழீழ விடுதலை, தமிழின விடுதலை, தமிழினவெழுச்சி போன்ற சொற்களே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அடையாளப்படுத்துவனவாக அரசியல் அரங்கில் இடைவிடாது ஒலிக்கப்பட்டு வந்தன. தமிழிய சிந்தனைத்தளத்தில் செயலாற்றும் முனைப்புக்கொண்ட புரட்சிகரமானோர்களிடத்தில் தமிழ்நாடு விடுதலை, தமிழ்த்தேசிய மீட்சி போன்ற சொல்லாடல்கள் வெகுமக்களிடத்தில் பேசப்படும் நிலைக்கு எட்டாவிட்டாலும் பேசுபொருளாக இருந்தமையை இங்கு சுட்ட வேண்டும். மகாவம்ச மனப்பிறழ்வின் உச்சத்தில் நின்று வெறிபிடித்தாடிய சிங்கள பௌத்த பேரினவெறியின் நேரடி நரபலி வெறியானது தமிழர்களைக் கொன்றொழித்துத் தமிழர் தாயகநிலங்களை வன்கவர்ந்து, தமிழர்தேசத்தை இல்லாதொழித்து, முழு இலங்கைத்தீவினையும் சிங்கள பௌத்த நாடாக்கும் முனைப்பானது, பிரித்தானிய வல்லாண்மையாளரிடமிருந்து சிங்கள பௌத்த பேரினவாதத்திடம் ஆட்சியதிகாரம் ஒற்றையாட்சி வடிவமாக கைமாறப்பட்ட நாள்முதல் நடந்தேறி வந்ததால், தமிழர் அரசியலானது ஒரு தற்காப்பு நிலையில் அறவழியில் ஒப்பந்தங்கள் எனத் தொடங்கி அமைதிவழியில் போராட்டங்கள் என்றாகிப் பின் அமைதிவழியில் ஒத்துழையாப் போராட்டங்களாக வடிவமாற்றத்திற்குட்பட்டு, ஈற்றில் இலங்கைத்தீவில் தமிழினம் உளதாயிருப்பதற்கு பிரிந்துசென்று தன்னாட்சிகொண்ட தனியரசை அமைப்பதைத் தவிர வேறு வழியில்லையென்று அமைதிவழிப் போராட்டத் தலைமை 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தீர்மானம் நிறைவேற்றி, அதற்கு 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலைப் பயன்படுத்தி மக்களாணையையும் பெற்றுக்கொடுத்ததோடு, ஒட்டுமொத்த தமிழர்களும் இனித் தனிநாடு அமைப்பதொன்றே வழியென ஏற்றுக்கொண்டு தமிழர்களின் அரசியல் போராட்டமானது தமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற வழிமுறையேற்ற வரலாற்று முன்னகர்வு தமிழீழ அரசியலில் நடந்தேறியது. வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேறுவதற்கு முன்பாக, இலங்கைத்தீவில் தமிழர் அரசியலில் ஓரளவுக்கு நம்பிக்கையைப் பெற்றவர்களாக தமிழ்மொழிப் பற்றாளர்களோ அல்லது தமிழின உணர்வாளர்களோ தான் இருந்தார்கள். தமிழ்த்தேசியப் பற்றாளர்களோ அல்லது தமிழ்த்தேசிய அரசியற் பண்பாடோ வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு முன்பு இருக்கவில்லை. வேறுபடுத்தி உணர்க- தமிழ்மொழிப்பற்று, தமிழினப்பற்று, தமிழ்த்தேசியப்பற்று தமிழ்மொழிப்பற்றுக் கொண்டோர் எல்லோரும் தமிழினப்பற்றுடன் இருந்தார்கள் என்று சொல்வதற்கில்லை. தமிழினப்பற்றுக் கொண்டோர் தமிழ்த்தேசியக் கருத்தியலை உள்வாங்கியவர்கள் என்று முடிவு செய்வது மிகத் தவறானது. “எனது மொழி தமிழ்” என்ற பெருமித உணர்வாலோ, அல்லது தமிழ்மொழி சார்ந்த புலமையாலோ, மொழி குறித்த உணர்வாலோ, அல்லது தனது தாய்மொழியென்பதால் ஏற்பட்ட பற்றோ அல்லது மொழிகளுக்கெல்லாம் தாய் என்பதால் ஏற்பட்ட சிலிர்ப்பின் விளைவாலோ என்னவோ தமிழ்மொழி மீது பற்றுக்கொண்டோர் எல்லோரிடமும் தமிழினப்பற்று இருக்குமென்றில்லை. எடுத்துக்காட்டாக, சைவத்தமிழ் என்று வாயாரத் தமிழ்பேசி, தம்மை நன்கே இறைவன் படைத்ததே நன்கே தமிழ்செய்யுமாறே என தமிழை உயிராய் நேசித்து, கோயில் வீதிகளில் மேடை போட்டுத் தமிழ்மொழிப்பற்றை வெளிப்படுத்திய எத்தனையோ மொழிப்பற்றாளர்கள், அதே கோயிலுக்குள் உள்நுழைய அனுமதிக்கப்படாத “பஞ்சமர்” என்ற ஒதுக்கிவைக்கப்பட்ட சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் தமிழில் புலமையடைந்தாலோ அல்லது தமிழை வளர்த்தாலோ அதைக்கண்டு வெறுப்படைந்தவர்களாகவும் அவர்களிடத்தில் தமிழ் வளரக்கூடாதென்றும் சிந்தை கொண்டார்கள் என்பதை மறைக்க முடியாது. அப்படியாக, அவர்களின் தமிழ்மொழிப்பற்று என்பது இனத்துடன் எந்தவொரு தொடர்புமின்றி இருந்தது. தமிழினம் எழுச்சிகொள்ளல் என்ற சிந்தை அவர்களிடம் இருக்கவில்லை. தாம் பற்றுக்கொண்டிருக்கும் தமது தாய்மொழி தமிழால், அதே தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட அதே இனத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகங்கள் பெருமைகொள்ளக் கூடாது என்ற வஞ்ச உணர்வுகொண்ட, இனவுணர்வற்ற தமிழ்மொழிப் பற்றாளர்கள் இருந்துள்ளார்கள். இருக்கிறார்கள். தமிழினப்பற்றுக் கொண்டோரெல்லாம் தமிழ்த்தேசியர்கள் என்று சொல்ல முடியாது. பலருக்கு “நாம் தமிழர்கள்”, “நமது இனம் தமிழினம்” என்ற இனவுணர்வு இருக்கும். தமிழினப்பெருமை பேசுவார்கள். தமிழினம் தான் அறத்துடனும் மறத்துடனும் வாழ்ந்த தொன்மையான வரலாற்றினைக்கொண்டது எனவும் சிலாகிப்பார்கள். ஆனால், அவர்கள் தாம் இலங்கைத் தமிழர்கள் என்றும் இந்தியத் தமிழர்கள் என்று விளிப்பதைப் பற்றி சற்றும் கவலைகொள்ளார்கள். இலங்கைத்தீவில் வாழும் அத்தகைய தமிழினப் பற்றாளர்கள் சிறிலங்காவின் துடுப்பாட்ட அணி போட்டியில் வெல்ல வேண்டுமென காலையில் கோயிலுக்குப் போய்த் தேங்காயும் உடைப்பார்கள். சிறிலங்காவின் அறிவிக்கப்படாத தூதுவர்களாகச் செயற்படும் துடுப்பாட்ட வீரர்களை படமாகத் தமது வீட்டுச் சுவர்களில் மாட்டி அழகும் பார்ப்பார்கள். சிறிலங்காவுக்கு உலகளவில் புகழ்சேர்த்து “இனப்படுகொலை சிறிலங்கா” என உலகளவில் அறியப்படவேண்டிய சிறிலங்காவை “சிறிலங்கா கிரிக்கெட்” என மடைமாற்ற உதவும் சிறிலங்கா கிரிக்கெட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதையிட்டு சிறிதளவும் நாண மாட்டார்கள். முள்ளிவாய்க்காலில் வந்து விளக்கும் ஏற்றுவார்கள். இவர்களின் வர்க்கப் பண்பு, அரசியல் பண்பு, வாழ்நிலைப்பண்பு என்பன சார்ந்து இவர்கள் இலங்கைத்தீவில் தமிழர்களாக வாழுவதில் எந்தவொரு சிக்கலும் இவர்களுக்கில்லை எனத் திடமாக நம்புகிறார்கள். இவர்களால் இலங்கைத்தீவில் தமிழர்களாக மகிழ்வுடன் வாழ இயலுமென மனதார நம்புகிறார்கள். ஆனால், புரட்சி வேசத்திற்காக அதனை வெளியே சொல்லாமல் தமிழீழம் தான் தமக்கு வேண்டுமெனக் கதைவிடுவார்கள். இவர்களிடம் தமிழினப் பற்று அல்லது தமிழினவுணர்வு இருக்கலாம். ஆனால், தமிழ்த்தேசிய உணர்வு இருக்காது. அதேபோல், தமிழ்நாட்டில் வாழும் தமிழினவுணர்வாளர்களில் பலர் சீனா- இந்தியா, பாகித்தான் – இந்தியா எல்லையில் பதட்டம் என செய்தி வந்த மறுகணமே இந்தியப் பற்றில் மூழ்கிவிடுவார்கள். இந்தியத் துடுப்பாட்ட அணியை வெறித்தனமாக நேசிப்பார்கள். அவர்களிடம் இந்தியப் பற்று இருக்கும். இப்படியான தமிழினவுணர்வாளர்கள் அதிகம் பேர் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். அவர்கள் தமிழ்த்தேசியர்கள் அன்று. தமிழினவுணர்வாளர்களின் இந்தியப்பற்றிற்கு மூலம் எது? பிரித்தானியர்கள் இந்தியத்துணைக் கண்டத்திற்கு வரும் வரை இந்தியா என்ற ஒரு நாடு இருந்ததில்லை என்பதால் இந்தியப் பற்று என்பது தமிழர்களிடத்தில் எப்படித் தோன்றியது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். பிரித்தானிய ஏகாதிபத்தியம் தமது ஆட்சி நிருவாக நலன்களுக்காகவும் சந்தை நலனுக்காகவும் பிரித்தானிய இந்தியா என்பதை ஒரு நாடாகக் கட்டியாண்டார்கள். உண்மையில், இன்று இந்தியா எனக் குறிப்பிடப்படும் நாட்டு எல்லைக்குள் தமக்கெனத் தனித்த மொழியுடன் தேசிய இனங்களாக வளர்ச்சி பெற்ற பல தேசிய இனங்களும், தேசிய இனமாக வளர்ச்சியடையாத மரபினங்கள் மற்றும் பழங்குடிகள் போன்றோரே மக்கள் சமூகமாக வாழ்ந்து வந்தார்கள். அப்படியாக, பல்வேறு தேசிய இனங்களைச் சிறைப்படுத்தி இந்தியா என்ற நாட்டை உருவாக்கிய பிரித்தானிய, தமது முகவர்களான பிராமணிய- பனியா கும்பலிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். பிரித்தானியர் இந்தியாவை உருவாக்கும் போது அதற்குள் சிறைப்படுத்தப்பட்ட பல்வேறு தேசிய இனங்களுக்குள் தமிழ்த்தேசிய இனம் மட்டுமே ஒரு தேசமாகத் தன்னை வரலாற்றின் போக்கில் வளர்த்தெடுத்த வரலாற்றினைக் கொண்டிருந்தது. தமிழர்தேசத்தின் எல்லைகள் வரையறுப்பு, தமிழகம் என்ற சொற் பயன்பாடு என்பன ஏலவே தமிழர்களின் தொன்மையான இலக்கியங்களில் காணக்கிடைக்கிறது. ஆட்சிப்புல அடிப்படையில் தமிழர் நாடுகளாக எல்லைகள் மாறி வந்தாலும், தமிழர்கள் ஒரு தேசத்திற்குரிய பண்புகளைப் பெருமளவு கொண்டிருந்தார்கள். எனவே, “வெள்ளையனே வெளியேறு” என தமிழர்கள் போராடியது இந்தியப் பற்றால் அல்ல. மாறாக, வன்வளைத்த மாற்றாரை விரட்டியடிக்கும் தேசப் பற்றினாலேயே. பூலித்தேவன், வென்னிகாலாடி, வேலுநாச்சியார், மருது இருவர், அழகுமுத்துக் கோனார், தீரன் சின்னமலை போன்ற முன்னோர்கள் வெள்ளையனை எதிர்த்து மிகத்தீவிரமாக போராடியதோடு, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இந்திய தேசிய இராணுவத்தை நிறுவுவதற்கு அடித்தளமிட்டு அதனைச் சாத்தியமாக்கியவர் செண்பகராமன்பிள்ளை என்ற தமிழரே. இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து வெள்ளையனை விரட்ட செருக்களமாடித் தமது இன்னுயிர்களை நீத்தவர்களில் தமிழர்களே அதிகம். அக்களத்தில் தமிழர்களில் ஆதிக்கநிலையிலிருந்த சாதிச் சமூகங்கள் முதல் தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்த சாதிச் சமூகங்கள் என எந்தவொரு வேறுபாடும் அந்த விடுதலைப் போராட்டப் பங்களிப்பில் இல்லாதவாறு தமிழினம் போர்க்கோலம் கொண்டது. இதனாலேதான், இன்னொரு பிறவியெடுத்தால் தமிழனாகப் பிறக்க வேண்டும் என நேதாஜி சுபாஸ் சந்திரபோசே கூறியுள்ளார். இவ்வாறாக, இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து வெள்ளையனை விரட்டியடித்ததில் தமிழர்களின் பங்களிப்பு மிக மிக அதிகம் என்பதனால், தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களிடத்தில் இந்தியப் பற்றுக் குடிகொண்டு விட்டது. உண்மையில், பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து ஆட்சியதிகாரம் தமிழரின் வரலாற்றுப் பகையான ஆரிய- பிராமணிய அதிகாரக் கும்பலிடம் கைமாறியதை இந்திய விடுதலைக்காக உயிரைக்கொடுத்துப் போராடிய தமிழர்கள் உணராமையினால், இந்தியாவினைத் தாம் குருதி சிந்திப்பெற்ற தமது நாடு என தமிழர்கள் அப்பாவித்தனமாக நம்பித் தொலைத்துவிட்டார்கள். அதனால், எவ்வளவுதான் இனவுணர்வு மேலிட்டு வாழ்ந்து வரும் தமிழ்நாட்டுத் தமிழர்களில் பெரும்பாலானோரிடம் எல்லையில் பதட்டம் என்ற செய்தியைக் கண்டவுடன் இந்தியப் பற்று வந்துவிடுகிறது. இந்த மாயையானது, தமிழ்நாடு விடுதலை என்ற தேச விடுதலைப் பயணத்தில் இன்று வரை முட்டுக்கட்டையாகத் தொடர்கின்றது. எனினும், பிரித்தானியரிடமிருந்து தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவின் ஆட்சியதிகாரம் ஆரிய பிராமணிய- பனியாக்களிடம் கைமாறிய பின்பாக, அவர்கள் கைக்கொண்ட இந்து- இந்தி- இந்தியா என்ற அரசியலில், இந்தியா என்ற ஒற்றைச் சந்தைச் சூழ்ச்சியைப் புரிந்துகொள்ளாத தமிழர்களும், தமிழர் மெய்யியலை மடைமாற்றி வைத்திருக்கும் வைதீகக் குளறுபடிகளைப் புரிந்துகொள்ளாத தமிழர்களும் கூட, தமது தமிழ்மொழி மீதான இந்தியின் மேலாதிக்கத்தை உணர்ந்து அதனால் கொதிப்படைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை தமிழ்மொழிப் பற்றின் மேலீட்டால் எதிர்த்து உயிர்கொடுத்துப் போராடினார்கள். அந்த மொழியுணர்வை இனவுணர்வாக மெலெழ விடாமல், திராவிட வாக்குப் பொறுக்கும் அரசியலானது இல்லாத ஒன்றான திராவிடம் என்ற மாயையில் தமிழர்களை விழச் செய்து, தமிழ்நாடு என்ற தேசஅரசு அமைக்கும் அரசியலில் தமிழர்கள் அரசியல்மயப்படுவதை மடைமாற்றி திராவிட பொய்மைக்குள் தமிழர்களின் அரசியலை செயலற்றுப்போகச் செய்தது. அத்துடன், அரசறிவியலில் நல்ல புரிதல்கொண்ட தமிழறிவர்களிடத்தில் தமிழ்நாடு விடுதலை என்பதை வெற்று முழக்கமாக இல்லாமல் ஒரு தேச விடுதலையாக விளங்கி அந்த அரசியலை முன்னெடுக்கும் முனைப்பு இருந்தும் அது வெறும் பேச்சுகளுடன் கலைந்துவிட்டது. ஆனால், 1980 களின் தொடக்கத்தில் பாவலரேறு பெருஞ்சித்திரனார், புலவர் கலியபெருமாள் போன்ற தமிழறிவர்களால் ஊட்டி வளர்க்கப்பட்ட தமிழ்நாடு விடுதலைப்படையானது தோழர் தமிழரசன் தலைமையில் உயிரீகம் செய்யத் துணிந்து மறவழியில் போராட எடுத்த முயற்சிகள் முளையிலேயே கிள்ளியெறியப்பட காரணம் என்னவென்றால், தமிழ்நாட்டில் வெகுமக்களிடத்தில் தமிழ்நாடு தேசவிடுதலை பற்றிய தேவை உணரப்படாமல், தமிழ்நாட்டுத் தமிழர்களில் மொழி, இன உணர்வு கொண்டோரும் கூட தமிழ்த்தேசிய உணர்வு பெறாமல் வாழ்ந்தமை எனலாம். இதனாலேயே, ஆயிரங்குறைகள் கண்டும், தமிழீழத்தில் தந்தை செல்வா தலைமையிலான அமைதிவழிப் போராட்டத்தின் இயங்கியல் வளர்ச்சியானது, தமிழர் அரசியலை முன்னோக்கிக் கொண்டு சென்று வட்டுக்கோட்டைத் தீர்மானம் மூலம் தன்னாட்சியுரிமைகொண்ட நிகரமைத் தனிநாடு அமைப்பதென்பதே தமிழர்களுக்கான தீர்வு என்ற தெளிவு மக்களிடத்தில் ஏற்படுத்தப்பட்டு ஒட்டுமொத்த தமிழர்களும் அதற்கு மக்களாணையும் கொடுத்தனர். அதனாலே தான், ஈழத்தில் விடுதலை இயக்கங்கள் மேற்கொண்ட வங்கிக்கொள்ளைகளை, தமிழீழ தேசிய இனவிடுதலைக்கான பொருண்மிய அடித்தளத்தை அமைக்கும் அரசியற் செயற்பாடு என மக்கள் புரிந்துகொண்டார்கள். ஆனால், தமிழ்நாட்டில் தமிழர்களின் மொழிப்பற்றை தமிழினவுணர்வாகவும் அதைத் தொடந்து தமிழ்த்தேசிய உணர்வாகவும் வளர்க்காமல், எடுத்ததிற்கெல்லாம் பார்ப்பானைத் திட்டிவிட்டுக் கலைந்து செல்லும் திராவிட மாயை அரசியலில் தமிழர்கள் வீழ்த்தப்பட்டதால், தோழர் தமிழரசன் தலைமையிலான தமிழ்நாடு விடுதலைப்படை மேற்கொண்ட வங்கிக்கொள்ளையானது பொதுமக்கள் சொத்தைக் கொள்ளையடிக்கும் நிகழ்வாகப் பார்க்கப்படும் அவலம் நிகழ்ந்தது. ஏனெனில், தமிழீழத்தில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் வரை முன்சென்ற அரசியலானது தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படாமல் போனதால் தமிழ்நாட்டில் வெகுமக்களிடத்தில் தமிழ்நாடு தேசவிடுதலை குறித்த புரிதல் ஏற்படவில்லை. எனவே, தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியம் மலர வேண்டுமெனின், தமிழீழத்தில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் வரை முன்சென்ற அரசியல் போன்றொரு அரசியல் இலக்கையாவது நோக்கிப் பயணிக்கும் அரசியலானது தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட வேண்டும். தமிழ்த்தேசியம் என்றால் என்ன? தமிழ்த்தேசியம் என்பது தமிழர்தேசங்களை விடுதலையடையச் செய்வதற்கான கருத்தியல் என வரையறுக்கலாம். அதாவது, தமிழ்நாடு, தமிழீழம் என்ற தமிழர்தேசங்களினை இறைமையுடைய தன்னாட்சியுரிமை உடைய தேச அரசுகளாக நிறுவுவதனை இலக்காகக்கொண்டு பயணிப்பவர்களினை வழிநடத்தும் கருத்தியல் தமிழ்த்தேசியக் கருத்தியல் எனலாம். எனின், உலகம் தழுவி வாழும் தமிழர்கள் எல்லோரும் ஒரே அரசியற் பண்பும் அரசியற் தேவையும் கொண்டோரா எனத் தெளிந்து கொள்ளல் வேண்டும். உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களின் வேரானது தமிழீழத்திலேயோ அல்லது தமிழ்நாட்டிலேயோ தான் இருக்கும். தமிழர்கள் வெறுமனே ஒரு மரபினமோ அல்லது கலப்பினமோ அல்லது மதச் சிறுபான்மையினரோ அன்று. தமிழர்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் தமிழ்த்தேசிய இனத்தின் உறுப்பினர்கள் என்ற புரிதல் இன்றியமையாதது. ஒரு தேசம் என்பது ஒரு பொதுவான மொழி, தொடர்ச்சியான நிலப்பரப்பு, பொருண்மிய வாழ்வு மற்றும் பொதுப் பண்பாட்டில் வெளிப்படும் பொதுவான மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று அடிப்படையில் உருவாகிய நிலையான மக்கள் சமூகமாகும் என்பதற்கமைவாக, தமிழ்நாட்டிலும் தமிழீழத்திலும் தமிழர்கள் தேசமாக வாழ்கிறார்கள். எனவே, தமிழ்நாடு, தமிழீழம் என்ற இரு தமிழர்களின் தேசங்கள் தன்னாட்சியுரிமைக்கு இயல்பாகவே உரித்துடையவையாகின்றன. எனவே, இந்தியத்தின் நேரடி ஒடுக்குமுறையில் இருந்து தமிழ்நாடும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நேரடி ஒடுக்குமுறையிலிருந்து தமிழீழமும் தமது அடிமைத் தளைகளை உடைத்தெறிந்து தமிழ்நாடு, தமிழீழம் என்ற தேசஅரசுகளை நிறுவ வேண்டும். இலங்கைத்தீவில், மலையகத்தில் வாழும் தமிழர்கள் தமிழ்த்தேசிய இனத்தின் ஒரு உறுப்பு. அவர்கள் தமிழ்த்தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களெனினும் மலையகத் தமிழர் ஒரு தேசமாக இன்னமும் அரசியற் கட்டுறுதியைப் பெறவில்லை. அவர்கள் ஒரு தேசிய இனமாகத் தாம் வாழும் நாட்டின் எல்லைப் பரப்பிற்குள் அதிகாரப்பரவலாக்கம் வேண்டித் தம்மைக் கட்டுறுதியான அரசியற்சமூகமாக வளர்த்தெடுத்து தமிழ்த்தேசிய இனத்தின் ஒரு உறுப்பென தலைநிமிர்ந்து வாழும் வகையிலான அரசியலை உலகத் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டும். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அந்தந்த நாடுகளில் மொழிச்சிறுபான்மையினராக வாழ்ந்தாலும் அவர்கள் கொள்வினை, கொடுப்பினை கொண்டு உள்ளத்தால் பிணைந்திருக்கும் தமது தேசவிடுதலைக்குப் (தமிழீழம்/ தமிழ்நாடு) பாடுபட வேண்டும். தாம் வாழும் நாடுகளில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளைத் தன்னும் உச்ச அளவில் பயன்படுத்தித் தமிழ்த்தேசிய இனத்தின் உறுப்புகளாகத் தாம் வாழுவதை உறுதிப்படுத்த வேண்டும். வெள்ளையர் காலத்தில் மொரீசியஸ், பிஜித்தீவு, சிங்கப்பூர், மலேசியா, தென்னாபிரிக்கா எனப் புலம்பெயர்ந்து தலைமுறைகளாக அங்கு வாழ்வதால் தமது தாயகத்துடன் தொடர்பறுந்து போன தமிழர்கள் தம்மைத் தமிழ்த்தேசிய இனத்தின் உறுப்பாக அரசியற் கட்டுறுதி செய்து அந்தந்த நாடுகளில் இருக்கும் அதிகாரங்களைத் தம்மாலியன்றளவு பெற்று தமிழினவுணர்வு பெற்று வாழ வேண்டும். இப்படியாக உலகம் தழுவி வாழும் தமிழர்கள் வெவ்வேறு அரசியற் பண்பினைக் கொண்டிருந்தாலும் அவர்கள் தமிழ்த்தேசிய இனத்தின் இணை பிரியாத உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் தமிழர்கள் அரசியற் பார்வை பெற வேண்டும். 2009 இன் பின்பாக தமிழீழத்தில் நிகழ்வது என்ன வகையான அரசியல்? தமிழீழதேசத்தை சிங்கள பௌத்த பேரினவாத ஒடுக்குமுறையின் வன்கவர்வில் இருந்து மீட்டு தன்னாட்சியுரிமையுடன் தேச அரசமைப்பதில் கூடுதலான படிக்கட்டுகளில் ஏறிச்சென்ற தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல் இயங்கியலே தமிழ்த்தேசிய அரசியல் வழிப்பட்டது. மறவழியில் முன்னெடுக்கப்பட்ட அந்த தேசிய இனவிடுதலைப் போராட்டமானது தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவின் அரசியல் நலன்கட்காகவும் மற்றும் அதன் தமிழினப் பகைமையினாலும், உலக வல்லாண்மைகளின் சந்தை நலன்களுக்காகவும் அவர்களின் ஒத்துழைப்பால் சிங்கள பௌத்த பேரினவாதத்தால் முன்னெடுக்கப்பட்ட வெளிப்படையான தமிழினவழிப்பானது 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் உச்சத்தைத் தொட்டது. அப்படியொரு கொடிய இனவழிப்பைச் செய்து சிங்கள பௌத்த பேரினவாத அரசு தமிழீழதேசத்தை வன்கவர்ந்த பின்பு, தமிழினம் உளதாயிருப்பதற்கு தனியரசை நிறுவுதல் ஒன்றே அறம். வேறு தீர்வுகளில் இனப்படுகொலைக்குள்ளான இனம் நம்பிக்கைகொள்வதானது அந்த இனம் தற்கொலைசெய்துகொள்வதற்குச் சமம். எனவே, மறவழிப்போராட்டத்தை மீண்டும் முன்னெடுக்கும் ஆற்றல்வளம் கொண்ட தேசிய இயக்கம் தமிழர்களிடத்தில் இப்போதைக்கு உருவாக முடியாமலிருக்கின்றதெனின், அறவழியில் அந்த அரசியல் இலக்கை நோக்கித் தொடர்ந்து இயங்கும் தொடர்ச்சியைப் பேண 6 ஆம் திருத்தம் என்ற வாய்ப்பூட்டுச் சட்டம் இடந்தராது எனின், சிங்கள அரச நிருவாகங்களை முடக்கிப்போடும் ஒத்துழையாப் போராட்டங்களாயாவது முன்னெடுக்க வேண்டும். அதைவிடுத்து, சிறிலங்காவின் தேசிய ஒருமைப்பாட்டை மீறமாட்டேன் என உறுதிமொழி எடுத்து சிங்களப் பாராளுமன்றம் போய் கூச்சலிடுவதை அரசியலாக முன்னெடுக்க முனைவோர், வாக்குப் பொறுக்க “தமிழ்த்தேசியம்” என்ற சொல்லை மலினமாகப் பயன்படுத்தி அந்த உயரிய தேச அரசமைக்கும் விடுதலைக் கருத்தியலை பொருட்கோடல் செய்கின்றனர். தமிழ்மொழி உணர்வு, தமிழினவுணர்வு அரசியலைக் கூட சரியாக முன்னெடுக்க முடியாத கொழும்பு மேட்டுக்குடிகளைத் தலைமையாகக் கொண்ட கட்சிகள் “தமிழ்த்தேசியம்” என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி வருகின்றனர். உண்மையில்… தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவது இலங்கைத் தமிழரசுக் கட்சியே தமிழ்த்தேசியம் என்ற பெயரைப் பயன்படுத்தாமலே தான் தமிழ்த்தேசிய அரசியல் செய்வதாக நம்ப வைக்கும் விக்கினேசுவரன் என்ற அட்டைக் கத்தி ஒரு பொய்மையே இவ்வாறாக, தமிழ்த்தேசியம் எனும் சொல்லைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி இந்த வாக்குப் பொறுக்கிகள் செய்துவரும் அரசியல் என்பது சிறிலங்காவிற்குள் தமிழர்களுக்கும் அதிகாரப்பரவல் கோருவதான தமிழர்தேச விடுதலையைக் காயடிக்கும் அரசியலே. தமிழர்தேசத்தை விடுதலையடையச் செய்யும் கருத்தியலான தமிழ்த்தேசியம் என்ற சொல்லை இந்த வாக்குப் பொறுக்கிகள் முறைகேடாகவே பயன்படுத்துகிறார்கள். தமிழர்தேச விடுதலையை நோக்கி முனைப்புடன் செயலாற்ற வேண்டிய இளையோரை துண்டறிக்கை கொடுக்கவும், பதாகை வைக்கவும் தமக்கு வாக்குப் பொறுக்கவுமே பயன்படுத்தி அவர்களைக் குழுப்பிரித்து தமிழர்தேச விடுதலையை முன்னோக்கிச் செல்ல விடாமல் இடையூறு செய்யும் அரசியலையே தமிழ்த்தேசியத்தின் பெயரில் இந்த வாக்குப் பொறுக்கிகள் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படுவது தமிழ்த்தேசிய அரசியலா? தமிழ்நாட்டில் மறவழியில் தமிழர்தேச விடுதலை அரசியலை முன்னெடுத்து தமிழ்நாடு விடுதலை என்ற பெருங்கனவைச் சுமந்து போராட முனைந்த தமிழ்நாடு விடுதலைப்படை, தமிழ்த்தேசிய மீட்சிப்படை போன்றவை முளையிலே கருகியமைக்கு, தமிழீழத்தின் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு ஒத்த நிலைக்கு தமிழ்நாட்டின் அரசியல் வளர்த்தெடுக்கப்படாமையைக் காரணமாக மீள மீள வலியுறுத்திச் சுட்டுகிறோம். தமிழீழத்தில் தமிழினப்படுகொலை அதனது கோர வடிவத்தை 2009 இல் எடுக்கும் வரை தமிழ்நாட்டு அரசியல் திராவிட மாயையில் மூழ்கிக்கிடந்ததோடு, அந்த அரசியலை முன்னெடுத்தவர்கள் தில்லி அரசின் கங்காணிகளாகச் செயற்பட்டு வருவது தொடர்பில் பெரிய விழிப்பேதுமின்றித் தமிழ்நாட்டு அரசியல் தொடர்ந்தது. 2009 இல் தமிழீழத்தில் வெளிப்படையாக நடந்த இனவழிப்பின் சாக்காடுகளையும் குருதி வெள்ளத்தையும் கண்டு தமிழ்த்தேசிய மற்றும் தமிழினவுணர்வு கொண்டோர், தமிழினப்படுகொலையைத் தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று அங்கலாய்த்துக் கடைசியில் தமது இயலாமையை உணர்ந்துகொண்டார்கள். பழ. நெடுமாறன் போன்ற தமிழினவுணர்வாளர்கள் “இந்திய அரசே! உடனடியாகத் தலையிட்டு, எமது தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களை காப்பாற்று” என முழங்கும் போது, அதனை சிறிலங்கா மீதான மேலதிக்கத்தினை செய்யும் நோக்கிலான இந்தியாவுக்கு ஒரு நியாயப்படுத்தலுக்குத் தேவைப்படும் கோரிக்கையாக இந்தியா பயன்படுத்தி, சிறிலங்கா சென்று தமிழினப்படுகொலையின் பின் நடக்கவிருக்கும் மீள் கட்டுமான ஒப்பந்தங்களில் தமக்கான ஒப்பந்தங்கள் பற்றி பேசிவிட்டு சிறிலங்காவின் இனக்கொலைக்கு வாழ்த்தி விடைபெறும். “இந்திய அரசே! உனது தமிழினப்படுகொலையைத் தொடர நாம் அனுமதியோம்” என விடுதலை முழக்கம் எழுப்புவதே தமிழ்த்தேசிய அரசியல். தமிழ்நாட்டில் இருந்த தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக கள மருத்துவப் பொருட்கள், உணவு, உடை, எரிபொருள் போன்றவற்றை அனுப்பி உதவுதல் என்ற செயற்பாட்டை நெருக்கடிகளுக்குள் நடுவிலும் தொடர்ந்தார்கள். ஆனல், தமிழீழ விடுதலைக்கான உதவி என்பது தமிழ்நாடு விடுதலைக்காக போராடுவது தான் என்று தமிழ்நாட்டிலுள்ள தமிழ்த்தேசியர்கள் புரிந்துகொண்டாலும், அதனை முன்னெடுக்க முடியாமல் அவர்கள் கையறு நிலையில் இருந்தனர். உண்மையில் தமிழீழ விடுதலை இயக்கங்களை 1980 களின் தொடக்கத்தில் வளர்த்த தாய்மடி தாய்த்தமிழ்நாடே. விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் தமிழ்நாட்டில் இயங்கிய போது, ஊரிலுள்ள ஒரு அம்மா பயிற்சியில் ஈடுபடும் போராளிகளுக்கு முட்டைகள் கொண்டுவந்து கொடுப்பதும், இன்னொரு அம்மா வீட்டிலுள்ள பலாப்பழத்தைக் கொண்டு வந்து கொடுப்பதும், போராளிகள் பயணித்தால் பேருந்தில் பணம் வாங்காமல் பயணம் செய்ய அனுமதிப்பது என தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலை இயக்கங்களின் பயிற்சி முகாம்கள் அமைந்த பகுதிகளில் வாழ்ந்த மக்கள் உணர்வால் உயிரிழையான உறவைத் தமிழீழ விடுதலையுடன் வைத்திருந்தார்கள். ஆனால் ராசீவ் காந்தி செத்த பின்பாக ஏற்பட்ட சூழல் மாற்றங்களால் அந்த உணர்வை அந்த மக்கள் வெளிப்படுத்தாமல் நெஞ்சுக்குள் வைத்திருந்தார்கள். இதனை நன்கு புரிந்துகொண்ட தலைவர் பிரபாகரன் தமிழகப் பேராசிரியர் ஒருவருடன் தனிப்படப் பேசும் போது “தமிழ்நாட்டில் மக்களிடம் உள்ள தமிழ் உணர்வு என்பது நீறு பூத்த நெருப்பு. ஊதி விட்டாலே பற்றி எரியும்” என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் தழல்ஈகி முத்துக்குமாரன் தனது உடலை வைத்து இளைஞர்களையும் மாணவர்களையும் அரசியற்படுத்தி, இனவெழுச்சிகொள்ளச் செய்து தமிழினப்படுகொலையைத் தடுத்து நிறுத்துமாறு தன்னை எரியூட்டித் தன்னுயிர் மாய்த்தமையுடன், தமிழ்நாட்டிலுள்ள அரசியற்படுத்தப்படாத, எந்தவொரு அரசியல் ஈடுபாடோ அல்லது பொது அறிவோ அற்ற எண்ணற்ற மக்கள் ஈழத்தில் நடந்தேறும் தமிழினப்படுகொலைகள் குறித்த செய்திகளையும் காணொளிகளையும் பார்த்து அங்கு கேட்கும் அவலக்குரல் “அம்மா! முருகா! காப்பாற்று” என்று கேட்கும் போது சாவதும் கொல்லப்படுவதும் என்னினம் எனக் கொதித்தெழ, தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் கதையாக தமிழ்நாட்டில் ஒரு பெரும் உணர்வலை எழுந்தது. அப்போது கொதித்தெழுந்த இனவுணர்வலைகள் அமைப்பு வடிவம் பெறவோ அல்லது அதை முன்னெடுத்து சரியான அரசியலாகக் கொண்டு செல்லக்கூடிய ஆளுமையான தமிழ்த்தேசிய அமைப்போ தமிழ்நாட்டில் இல்லாத நிலையில், புகழ்வெளிச்சம் கொண்ட திரையுலகத்தினர் போன்றோர் அங்கங்கு ஒன்று கூடி உணர்ச்சியாகப் பேசும் போது உலகக் கவனம் ஈர்க்கப்பட்டது. அப்படியாகவே இராமேசுவரத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு கூட்டத்தில் பேசும் போது சீமான் அவர்கள், அதுவரை தமிழர்களின் உணர்வில் கொந்தளித்த நிலையிலிருந்த மனக்குமுறல்களை தமிழின உணர்வுமொழியில் வடித்த போது, தமது உள்ளக்கொதிப்பை ஒருவன் பேசுகிறானே என உணர்வால் உந்தப்பட்டு சீமான் அவர்கள் பின் ஒரு பெருங் கூட்டம் அவர்மீது நம்பிக்கை வைத்து அணிதிரள்கிறது. தமிழினப்படுகொலையை முன்னின்று நடத்திய அப்போதைய காங்கிரசு அரசாங்கமும் அதனது தமிழ்நாட்டுக் கங்காணி அரசான கருணாநிதி தலைமையிலான தி.மு.க வும் இனி வரலாற்றில் எப்போதும் ஆட்சிக்கட்டிலில் ஏற விட மாட்டேன் என பரப்புரை முழக்கம் செய்த சீமான் அவர்கள் இயக்க அரசியலாகத் தனது அரசியலைத் தொடராமல் தேர்தல் சேற்றில் தனது காலை நனைக்க தேர்தல் அரசியல் கட்சியாக “நாம் தமிழர்” எனும் கட்சியைப் பதிவுசெய்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டுச் செயலாற்ற வேண்டிய வரையறைக்குள் தன்பின்னே அணிதிரண்ட தமிழினவுணர்வாளர்களை இழுத்து வந்தார். உண்மையில், சீமானின் பரப்புரை முழக்கத்தைக் கேட்டு தமிழினவுணர்வெழுச்சியுடன் திரண்ட கூட்டத்தைத் தமிழ்த்தேசிய உணர்வுகொள்ளுமாறு அரசியற்படுத்தி அவர்களை தமிழ்த்தேசியத்தின் வழியில் முன்செல்லத் தலைமையேற்கும் ஆற்றலோ அத்தகைய அரசியலுக்காக ஈகம் செய்யும் உணர்வோ சீமான் அவர்களிடம் இருக்கவில்லை. அதனால் அவர் “நாம் தமிழர்” என்ற இயக்கத்தை அரசியற் கட்சியாகப் பதிவுசெய்து தேர்தலில் இறங்கித் தனது பாதுகாப்பை உறுதிசெய்து கொண்டார். சீமான் செய்யும் அரசியல் தமிழ்த்தேசிய அரசியல் இல்லையா? தமிழ்த்தேசிய அரசியலுக்குத் தலைமை தாங்கும் திடம் சீமான் அவர்களிடம் இல்லாமையால், அவர் தமிழின உணர்வைப் பேசும் தேர்தல் அரசியலை இந்தியத்திற்குட்பட்டு முன்னெடுத்து வருகின்றார். ஆனால், தமிழ்நாட்டை அதுவரை பீடித்திருந்த திராவிட அரசியற் பித்தலாட்டத்தைத் தோலுரித்து, தமிழர்களுக்கு தமிழினவுணர்வூட்டும் தொடர்பரப்புரைகளில் ஈடுபட்டு இளையோர்களிடத்தில் பெரும் தாக்கத்தைச் சீமான் ஏற்படுத்தினார். அதுவரை, ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழர் ஆட்சியதிகாரம் இழந்து மாற்றார்களின் ஆட்சியில் வாழ நேர்ந்ததால் தமிழர்களிடத்தில் ஏற்பட்ட அடிமை உளவியலும், திராவிட புரட்டர்களால் தமிழர்களுக்குத் தம்மீது குற்றவுணர்வு ஏற்படும் படியிலான கருத்துப்புரட்டுகளிலான தாக்கமும் தமிழர்களிடத்தில் தமது சொந்தப் பெருமைமிகு தொன்மையான அறிவுமைய வாழ்வியல் வரலாறு பற்றிய அறிவின்றி தாழ்ந்த உளவியற் சிக்கலுக்குள்ளாகி, தம்மால் எதுவுமே செய்ய முடியாதென்ற மனநிலையோடு ஆரிய- திராவிட கூட்டாட்சியில் அடிமையாக வாழப் பழகிக்கொண்டார்கள். ஆனால், சீமான் முழுநேர அரசியலுக்குள் வந்த பின்னர், தமிழரின் தொன்மை, நீண்ட நெடிய முன்னோரின் வரலாறு, மெய்யியல், கலை, பண்பாடு, அறம், மறம், உயரிய வாழ்வியல் நெறி என தமிழ்த்தேசிய அறிவர்கள் அரங்கக் கூட்டங்களிலும் ஆய்வு மாநாடுகளிலும் பேசிய விடயங்களைத் தொகுத்து மக்கள் மொழியிலும் செந்தமிழிலுமென மேடைகளின் முழங்கி, வெகுமக்களிடம் இவை குறித்து அறிவைப் புகுத்தி தமிழிளையோர் மனதில் எழுகை உளவியலை ஏற்படுத்தினார். இது உண்மையில், தேர்தல் அரசியலில் ஒரு கட்சி செய்யக்கூடிய இனவுணர்வு அரசியல் என குறிப்பிட்டாக வேண்டும். ஆனால், இவரால் இனவெழுச்சிகொண்ட இளையோர்கள் தமிழர்தேசத்தை விடுதலையடையச் செய்ய வேண்டும் என்ற உறுதியான முனைப்பில் தமிழ்த்தேசிய உணர்வுகொள்ளும் போது, அந்த இளைஞர்கள் மட்டுப்படுத்தப்பட்டார்கள், ஓரங்கட்டப்பட்டார்கள். இந்தியதேசியக் கொடியை எரிக்க வேண்டுமென வெஞ்சினம் கொண்டெழுந்த இளைஞர்களிடத்தில் இவர் தான் இந்தியத் தேசியக் கொடியை ஏற்றுவேன் என்றார். இவற்றைக் கேள்விக்குட்படுத்த முனையும் இளைஞர்களை சீமான் காயடிக்கச் செய்ததோடு, துண்டறிக்கை கொடுக்கவும், பதாகை வைக்கவும், வாக்குப் பொறுக்கவும், முகநூலில் பரப்புரை செய்யவுமே இளையோர்களைப் பழக்கப்படுத்தலானார். அத்துடன், எழுகை உளவியலை உருவாக்கப்பயன்பட்ட சொந்தப் பெருமை பேசுவதானது, தமிழ்த்தேசிய இனவுணர்வாக செயலுறுதி கொள்ளாமல், சமூகவலைத்தளங்களில் சொந்தப் பெருமை பேசி வெற்றுக்கூச்சலிடும் முகநூல் கூட்டமாகவே இளைஞர்களை ஆக்குவதில் சீமான் அவர்கள் அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குச் செல்லாமல் தொடர்ந்த அரசியல் வந்து நிற்கிறது. அத்துடன் தான் செய்யும் இந்தியத்திற்குட்பட்ட தமிழின, மொழி உணர்வு அரசியலை தமிழ்த்தேசிய அரசியலென திரிபுசெய்வதைத் தொடர்ந்த சீமான், தமிழர்தேச விடுதலையை மறவழியில் முன்னெடுக்க முனைந்து உயிரீகம் செய்த முன்னோர்களின் வழி எல்லாம் தோல்வியான வழிமுறை என தன்னைச் சூழவுள்ள இளையோரிடம் ஒரு கருத்தூட்டத்தையும் செய்யலானார். தனது தமிழினவுணர்வு பேசும் அரசியலைக் கூட சரியான அமைப்பியல் வடிவம் கொடுத்து வளர்த்தெடுக்காமல், தனது ஒற்றைத் தலைமையில் கேள்விகேட்போரையெல்லாம் விலக்கிவைத்து சரியான பொருண்மிய நிருவாகம் இல்லாமல் நம்பி வந்த இளையோர்களை சீமான் அவர்கள் சோர்வுக்குள்ளாக்கினார். தி.மு.க போன்ற கொள்ளையடிக்கும் நிதி மூலதனக் கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் (கொள்ளையடிப்பில் அ.தி.மு.க வும் அத்தகையதே. ஆனால் அதனிடம் அப்படியொரு கருத்தியல் பின்புலம் இல்லை. அது பச்சோந்தியாக கருத்தியல் மாற்றம் செய்யும் என்பதோடு தானாகவே அழிந்துபோகக் கூடியது) திராவிட மாயையில் மீண்டும் தமிழர்களை வீழ்த்தி, எழுந்துவரும் தமிழினவுணர்வு என்றுமே மேலிடாதவாறு செய்யக்கூடிய பேராபத்து இருப்பதால், இன்னும் இரண்டு ஆட்சிகளுக்கு அவர்கள் ஆட்சிக்கட்டிலில் ஏறாமல் பார்த்துக்கொண்டால், தமிழினவுணர்வு அரசியலைத் தன்னும் முன்னெடுக்கும் கட்சிகளே தமிழ்நாட்டின் மாநில அரச அதிகாரக் கட்டிலில் வருங்காலங்களில் ஏறுவார்கள். அதனால், தி.மு.க இனை ஆட்சிக்கு வராமல் செய்வதற்கு சீமான் அவர்கள் தலைமை தாங்கும் “நாம் தமிழர்” கட்சியின் தேர்தல் அரசியல் பயன்படுகிறது என்பதைத் தாண்டி சீமானின் அரசியலால் இனிச் சொல்லுமளவுக்கு எந்தப் பயனும் விளையாது எனக் கூற முடியும். அத்துடன், தமிழ்நாட்டுக்கு ஓரளவு மாநில அரச உரிமைகள் இருந்தாலும், கட்சி வேறுபாடின்றி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் ஆளுநரின் கையெழுத்திடாமல் எந்தவொரு சட்டசபைத் தீர்மானமும் சட்டமாகாது. தேர்தல் அரசியலில் அள்ளி வழங்கும் வாக்குறுதிகளான அதைத் தடுப்பேன்… இதைத் தடுப்பேன்.. எல்லாம் ஆளுநரின் கையெழுத்தைத் தாண்டி நடக்காதவையே. ஆளுநர் கையெழுத்திடாமல் குடியரசுத் தலைவரிடம் அனுப்பிவைத்து விட்டால் அதன் நிலை குறித்துக் கேள்வி கேட்கும் அதிகாரம் கூட மாநில அரசுகளிடம் இல்லை. அதுக்கு மேல் இந்திய நடுவண் அரசுடன் மோதினால், ஆளுநர் ஆட்சியைக் கலைத்துவிடுவார். எனவே, தமிழுணர்வு அரசியல் செய்யும் கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்தேசம் மீதான இந்தியத்தின் வன்வளைப்பை எதுவும் செய்துவிட முடியாது. எனவே, 100% உள்ளத்தூய்மையுடன் தமிழினவுணர்வுக் கட்சி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால், 1976 இல் ஈழத்தமிழர் அரசியலில் நடந்த வட்டுக்கோட்டைத் தீர்மானம் வரை தமிழ்நாட்டு மக்களை அழைத்துச் சென்று தமிழ்த்தேசிய அரசியலை, தேர்தல் அரசியலுக்கு வெளியே செய்யும் அரசியலுக்கான அறைகூவல் வரையே செல்லலாம். அப்படிச் செய்தால் தான், தமிழ்நாடு தேச விடுதலை என்பது வெகுமக்களிடம் எடுபடும் அரசியலாக இருக்கும். ஆனால், அப்படியொரு நிலைக்குச் செல்லக்கூடியவாறு நாம் தமிழர் கட்சி ஆளுமைமிக்க கட்சியாக இல்லை என்பதே உண்மை. நிலைமை அப்படியிருக்க, தேர்தலில் வாக்குப் பொறுக்குவதையே தமிழ்த்தேசிய அரசியல் எனக் கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாது. அப்படிக் கொச்சைப்படுத்தாமல், தமிழ்த்தேசியம் நோக்கிய அரசியலை மடைமாற்றாமல், தமிழினவுணர்வைத் தேர்தல் அரசியலில் நாம் தமிழர் கட்சி முன்னெடுப்பதில் தமிழ்த்தேசியர்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. இது குறித்து சீமான் அவர்கள் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஒப்பாக அரசியல் செய்யப்போவதாக சிலாகித்துக்கொள்ளும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசினர் தமிழின, மொழி உணர்வைக் கூட முன்னெடுக்க முடியாத வாக்குப் பொறுக்கும் அரசியல் சாக்கடைகள் என்பதை நாம் இங்கு சுட்ட வேண்டும். இறுதியாக, தேர்தல் அரசியலில் வாயடித்து வாக்கு வாங்குவோர் செய்யக்கூடிய ஆகப் பெரிய அரசியல் தமிழினவுணர்வு அரசியலே. அந்த அரசியல் தமிழ்த்தேசிய உணர்வைக் காயடிக்காத, மடைமாற்றாத வரைக்கும் தமிழ்த்தேசிய அரசியலுக்கு எந்தச் சிக்கலும் இல்லை என்பதுடன் ஓரளவு வலுச் சேர்க்கவும் கூடியது. தமிழர் தேசங்களை விடுதலையடையச் செய்யும் தமிழ்த்தேசிய அரசியல் என்பது இன்னமும் முன்னெடுக்கப்படாமல் வெற்றிடமாகவே உள்ளது. அறிவுத்தளத்தில் அதைப் பேசுவோரும் செயல் முனைப்பில் இல்லை. எனில், தமிழ்த்தேசிய அரசியலை ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் முன்னெடுப்பது எப்போது? -முத்துச்செழியன்- 2020-09-12 http://www.kaakam.com/?p=1814
 3. தமிழர் மெய்யியல் -செல்வி- July 17, 2020 Admins ஆய்வுகள், கட்டுரைகள் 0 காலாகாலமாக இனச்சிதைப்பிற்கு ஆட்பட்டும் அதை எதிர்கொண்டும் வரும் தமிழினம் மாற்றாரின் ஊடுருவல்களிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளவதற்கு தமிழினவரையியல் தொடர்ச்சியில் வழிவழி வந்த மெய்யியல் உறுதுணையாய் நிற்கும் என்ற கூற்றில் சிறிதளவும் மிகையில்லை. மண்ணினாலும் மொழியினாலும் மக்களின் வாழ்வியல் தொடர்ச்சிகளின் கூட்டிணைவாகவும் முகிழ்த்த அறிவுப்பேறு தமிழர்களின் மெய்யியலானது. மண்ணுரிமை என்பது மீமிசை அரசியல் என்று குறிப்பிடும் அறிவர் குணா அவர்கள், தமிழன் தன் உரிமையையும் கொற்றத்தையும் ஒற்றுமையையும் இழந்த வரலாறென்பது மண்ணை இழந்த வரலாறாகவே கருதப்படவேண்டும் என்கிறார். காலங்காலமாக படிப்படியாக நிகழ்ந்த மண்ணிழப்பின் தொடர்ச்சியே முள்ளிவாய்க்காலில் தமிழினவழிப்பின் உச்சமாகி இன்னமும் நேரில் வடிவில் ஆனால் மிகவும் கட்டமைக்கப்பட்டதாகத் தொடர்கின்றது. தமிழரினம் மீதான இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைக்கூடத்தின் வரலாற்றுப் பகையும் சிங்கள் பௌத்த பேரினவாதத்தின் கோரமும் உலக வல்லாண்மையாளர்களின் கூட்டிணைவுமென எல்லா வெறியாட்டங்களும் ஒன்றாகி தமிழ் இனத்தை ஈழதேசத்தில் வைத்து கொன்று குவித்தது. உழைக்கும் மக்களை இழிந்தவர்களாய் இழிவு செய்யும் வகையில் பிறப்பினடிப்படையில் மக்களைப் வகைப்படுத்தி வர்ணாசிரமம் எனும் இழிவை தமது கருத்தியலாக்கி தமது குமுதாய ஆதிக்கத்தை மேன்மைப்படுத்தும் இழிந்த சூழ்ச்சியை வேதங்களாக்கி ஆரியப் பிராமணியம் செய்த இழி கருத்தியலை ஆரியப் பண்பாடாக தமிழ்நாட்டுக்குள் காவி வந்தவர்கள் வடுக அநாகரிகர்களேவெனும் உண்மையை தமிழ்நாட்டில் இற்றைவரை சாகாதிருக்கும் திராவிட அரசியல் மூடிமறைப்பதால், வரலாற்றின் போக்கில் திராவிட பொய்மைக்குள் கட்டுண்டிருந்த தமிழர்களுக்கு தமிழின அறிவுமரபின் தொன்மையும் செழுமையும் உயிர்ப்பும் தெரியாதே போய்விட்டது. ஆரியப் பிராமணியம் தமிழர்களிடம் திருடியவையெல்லாவற்றையும் மீட்டெடுக்க வேண்டிய தமிழர்கள், திராவிடத்தின் பொய்மைக்குள் கட்டுண்டு அதெல்லாம் தமதல்ல என்று நம்பவைக்கப்பட்டு தமது வரலாற்றுப்பெருமையறியாது வெகுளியாகி தம்முன்னோர்களின் குருதியையும் உழைப்பையும் மாற்றார் திருடிச்செல்ல வாய்பேசாது பல்லிளித்து நின்றது. பண்பாட்டையும் வாழ்வியலையும் ஒழுங்குபடுத்திய தமிழர்களின் தொன்மையான அறிவுமரபினால் மட்டுமே மாற்றாரின் பண்பாட்டு ஊடுருவல்களையும் அதனால் விளைந்த அறிவுக்கொவ்வாத உள்நுழைவுகளையும் களைந்து தமிழர்களின் வரலாற்றை மீள எழுத முடியும். அறிவியல், மெய்யியல் மற்றும் வாழ்வியல் என்ற மும்மைகளை உள்ளடக்கிய தமிழர்களின் தொன்மையானது மீட்டுருவாக்கம் செய்ய வேண்டியது காலந்தாழ்த்தாமல் செய்யப்பட வேண்டியதொன்றாகவிருக்கிறது. மெய்யியல் என்பதை மதத்தின்வழி கட்டமைத்து தமிழர் மெய்யியல் என்பது எதுவென்றே அறியாத தமிழர்களாய், அறிவுமரபென்பது யாதென அறிந்திராத பிற்போக்குக் கருத்துமுதல்வாத அணுகுமுறையில் உலகம் தோன்றியது முதலான வரலாற்றை நோக்கும் வைதீக, சைன, பௌத்த, ஏபிரகாமிய மதங்களை நம்பும் மூடர்கூடத்தை அறிவாளிகளாக நோக்கும் நிலைக்கு வந்துநிற்கின்றோம். ஆகவே, தமிழர்களின் மெய்யியலை அவர்களின் வாழ்விலிருந்தும் அந்த வாழ்க்கையின் காலக் கண்ணாடிகளாக காலவோட்டத்தில் இன்று எம்மிடம் எஞ்சியிருக்கும் இலக்கியங்களிலிருந்தும் உய்த்தறிய வேண்டும். அந்தவகையில் இப்பத்தியானது, தமிழர் மெய்யியல் பற்றிய ஒரு அறிமுகத்தை தரமுயல்கிறது. (“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்ற வள்ளுவத்தினை விடவா அறிவு என்பதற்கு வரைவிலக்கணம் கூறிவிடப்போகிறார்கள். குறிப்பிட்ட சொல் தொடர்பான அறிமுகத்திற்கு மேலைத்தேயர்களை அடிக்கோடிடும் வழக்கத்தை தவிர்க்க வேண்டும்.) உலகைப் புரிந்துகொள்ள முயற்சித்த ஒரு முயற்சியின் பேறாகக் கிடைத்த முறையியலே மெய்யியல் என்று பொருள் கொள்ளலாம். தமிழர்கள் இவ்வுலகை எவ்வாறு புரிந்துகொண்டார்கள் என்றதன் அடிப்படையில் எழுந்த முறைமையாக தமிழர் மெய்யியல் அமைகிறது. மெய்யியல் என்பதற்கு மேலைத்தேயர்கள் முன்வைக்கும் வரைவிலக்கணங்களே மெய்யியலை அவர்கள் புரிந்துகொள்வதில் எவ்வளவு இடர்பாடுகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டும். அந்த வகையில் மெய்யியல் என்றால் என்னவென்ற புரிதலைப் பெற தமிழர் மெய்யியல் குறித்தான ஆழ்ந்த தேடலும் புரிதலும் இன்றியமையாதது. இந்த உலகை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ புரிந்துகொள்ள மாந்தர்கள் காலந்தோறும் முற்பட்டே வந்துள்ளார்கள். அதேபோல தமிழர்களும் முற்பட்டதன் விளைவாகவே சில முடிந்த முடிபுகளுக்குத் தமிழர்கள் வந்தனர். அவற்றையே தமிழர் மெய்யியல் என்கிறோம். தமிழர் மெய்யியல் வாழ்வு என்றால் என்ன என்பதற்கு, உழைப்பின் விளைவைப் பகிர்ந்துகொண்டு ஒருவர் மீது மற்றவர் வல்லாண்மை செலுத்தாத, இயற்கையோடியைந்த யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி என்றும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பரந்த சிந்தையையும் வாழ்வியலுக்குள் உள்வாங்கி வாழும் வாழ்வெனலாம். தமிழ்க்குமுகம் இன்று தன் அரசியலையும் பொருண்மியத்தையும் வாழ்வியல் முறைமையையும் தீர்மானிக்கும் நிலையிலில்லாமல், அடிமைப்படுத்தப்பட்டிருக்கின்றது. தமிழனது நுகர்வுப்பண்பாட்டினை உலக வல்லாண்மையாளர்கள் வடிவமைத்துக்கொண்டிருக்கிறார்கள். உலகை ஆண்ட இனம் என்ற வெற்றுப்பெருமைக்குள் குளிர்காய்ந்துகொண்டு வாழ்வியலை, வாழ்வியல் தொடர்ச்சியை இழந்துகொண்டிருக்கும் இந்நிலை தொடரின், மரபுவழித்தேசிய இனத்துக்குரிய கூறுகளை இழந்து, மொழியையும் மரபையும் இழந்துநிற்போம். ஆயின், எமது இற்றை வாழ்வியல் முறைமையை கேள்விக்குட்படுத்துவதன் மூலமே இந்த அழிவை நோக்கிய நிலையிலிருந்து மீள முடியும். தமிழர்களுடைய மெய்யியல் கோட்பாடுகளை திணைசார்ந்த வாழ்வியலிலிருந்தும் மெய்யியல் படிநிலைகளின் அடிப்படையிலும் அயன்மைத் தோற்றம் பெற்றவை என்பதுமாக மூவகை முன்வைப்பிலும் நோக்கலாம் என்பார் ஆதிசங்கரன் அவர்கள். திணைசார்ந்த வாழ்வியலிலிருந்த மக்கள் தமது திணைகளுக்கேற்ற வகையினாலான இயற்கோடியைந்த வாழ்வுமுறைகளையும் வழிபாடுளையும் நிகழ்த்தியிருந்தார்கள். இன்றைய தமிழர்களின் கைகளில் அவர்களது அரசியலும் பொருண்மியமும் இல்லாது ஆக்கப்பட்டமைக்கு பல ஏதுக்கள் இருப்பினும் வாழ்வியலுக்குள் ஊடுருவிய தீங்கான வைதீக கூறுக்களே முதன்மை ஏதுக்களாக இருந்தன. மக்களின் வாழ்வியலினுள் சமயங்கள் எவ்வாறு நுழைகின்றன என்பது பலருக்கும் எழும் கேள்வியாக இருக்கலாம். மாந்தன் தன் வலுவுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு ஆற்றலை நம்பும் கணத்திலேயே வாழ்க்கையினுள் வழிபாடு என்பது வந்துவிடுகின்றது. தன்னால் எதிர்க்க இயலாதவற்றையும் தன்னால் இயலாதவற்றை நிகழ்த்தியவைகளையும் புள்ளிகளாகக் கொண்டு வழிபாடுகள் தோற்றம் பெறுகின்றன. இயற்கையை போற்றியும், மக்களை இடர்பாடுகளிலிருந்து காப்பாற்றத் தம்மை ஒறுத்தோரை நடுகல்லாகவும் கொண்டு திணைகளுக்கு மரம், செடி, மலர் என்ற இயற்கைகளால் மருதம், குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை எனப் பெயர் சூட்டி அவற்றிற்கு இந்திரன், முருகன், திருமால், வருணன், கொற்றவை என திணைத் தெய்வங்களும் அமைத்து வழிபட்ட வழிபாட்டு மரபே தமிழர்களின் சங்ககாலத்தில் இருந்தது. அன்றி அந்த வழிபாடுகள் மதங்களாகவும், சமயங்களாகவும் நிறுவனமயப்படவில்லை. ஆயினும் நிறுவனமாகக்கூடிய நிலைக்குள் சமூகம் வந்தது. புறநானூற்றின்படி, ஓன்றாத் தெவ்வர் முன்னின்று விலங்கி, ஒளிறேந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக் கல்லேபரவின் அல்லது நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே’ (புறம் 335) என்று நடுகல் கடவுளரை நெல் தூவி வழிபடும் வழிபாடு இருந்ததைச் சுட்டுகின்றது. புறநானூற்றின் 306வது பாடலில் வரும் ‘நடுகல் கைதொழுது’ என்ற அடிகளின் மூலமும் வழிபாடுகள் இடம்பெற்றிருக்கின்றமைக்குரிய சான்றுகள் கிடைத்திருக்கின்றன. ஐந்து திணை மக்களும் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர் என்பதற்குரிய பல சான்றுகள் இருப்பினும் இவை சமயங்களாக நிறுவனமயப்படுத்தப்பட்டிருந்தன என்று சொல்வதற்கில்லை. குறிஞ்சியில் முருகனாகவும் முல்லையில் திருமாலாகவும் மருதத்தில் இந்திரனாகவும் நெய்தலில் வருணனாகவும் பாலையில் கொற்றவையாகவும் வழிபாட்டு முதன்மைகளாக இருந்ததே தவிர, இன்று எம் வழிபாட்டு முறைமைகளை வல்வளைப்புச் செய்த இந்துவும் சைவமும் (சைவம் என்ற சொல்லே பாளி மொழியிலிருந்து வந்தது தான்) சங்க இலக்கியங்களில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. தமிழர்களது அரசியல் வரலாறு என்பது வரலாற்று ஆவணங்களை அடிப்படையாக வைத்து எழுதப்படும் அதேவேளை சமூகப் பண்பாட்டு ஆவணங்கள் அந்த அரசியல் வரலாறுகளினுள் உள்வாங்கப்படாமையே எமது பண்பாட்டு வரலாற்றினை நாம் இன்னமும் சரியாக வாசிக்கமுடியாதிருப்பதற்கான காரணமாகும் என்பார் பக்தவக்சல பாரதி. தமிழர்களது வரலாறானது சங்ககாலத்துடன் முடிந்துவிடவில்லை. பிற்பட்ட காலங்களுக்கான வரலாறுகள் மதங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. தமிழர்கள் வாழ்வியலுக்குள் மதங்கள் எப்போது உள்நுழைந்தன? எப்போது கோலோச்சின? தொல்தமிழ் அறிவியலின் உள்ளீடுகளான எண்ணியம், சிறப்பியம், உலகாய்தம், ஏரணம் என இவ்வுலகின் அசைவியக்கத்தையும் அதன் உயிர்ப்பையும் புரிந்துகொள்ள முற்பட்ட நம்முன்னோர்கள் இவ்வாறான கோட்பாட்டுத்தெளிவுகளை உள்வாங்கித் தமது அறிவுமரபின் தேடலில் மெய்யியல்களைப் படைக்கலானார்கள். வழிபாடுகள் சமயமாக கட்டமைக்கப்படும் நிலைக்கு வந்த புள்ளியில் தமிழர்களின் வாழ்வியல் முறைமைகளின் கோட்பாடாக ஆசீவகம் எழுந்தது. அக்காலத்தில் வைதீகம், சைனம் (சமணம்), பௌத்தம் ஆகிய மதங்கள் புறத்தேயிருந்து தெற்குநோக்கி வந்து தமிழர்களிடத்தில் கடைவிரித்தன. கி.மு 3 ஆம் நூற்றாண்டுகாலத்தில் இவ்வாறான முனைப்பில் இங்கு வந்த அந்தந்த மதப் பரப்புரையாளர்கள், தமிழர் வாழ்ந்த பகுதிகளுக்கு வந்த பின்னர் அவர்கள் கண்டுகொண்ட தமிழர்களின் கோட்பாட்டுத் தெளிவுகளையும் அறிவு மரபுகளையும் கண்டு அதிர்ந்து வியந்து போனதுடன் தமது கடைவிரிப்பு தமிழர்களிடத்தில் எடுபட வேண்டுமெனின் அந்தக் கோட்பாட்டில் சிலவற்றை தம்மாலியன்ற அளவில் உள்வாங்க வேண்டுமெனப் புரிந்து அதனைச் செய்யவும் செய்தனர். உண்மையில் இன்று இந்து, சைவம் என்ற பெயரில் எமக்குள் உள்நுழைந்து இருக்கும் வைதீகம் என்றால் என்ன புரிதல் இது பற்றி மேலும் பேசும் எதையும் புரிந்துகொள்ளத் தேவையானது. இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்ற நால்வேதங்களையும் ஏற்றுக்கொண்டோர் வைதீகர் எனப்படுவர். இந்த நால் வேதங்களின் உட்கிடையென்னவென்றால் பிறப்பினடிப்படையில் உழைக்கும் மாந்தர்களை இழிவுபடுத்தி பிராமணன் என்ற ஆரிய அநாகரிகன் குமுக மேலாதிக்கத்தை அடைவதே. பிராமணன், வைசிகன், சத்திரியன், சூத்திரன் என்ற இந்த வர்ணாசிரமக் கோட்பாட்டின் மூலம் அநாகரிக ஆரியப் பிராமணன் குமுக மேலாதிக்கம் பெற்று உழைக்கும் மண்ணின் மக்களை இழிந்தோராக்கி அவர்களை அடிமைப்படுத்துவதே. உண்மையில் இந்த நால்வேதங்களை உள்ளாய்ந்து பார்த்தால் நாகரீகமடையாத நாடோடி வாழ்நிலையில் ஒழுக்கமென்றால் என்னவென்றறியாத ஒரு கூட்டத்திற்கான வேதங்களாய் அவை அமைவதைக் காணலாம். இந்த ஆரியப் பிராமணியத்திற்கான நால்வேதங்களில் அந்த அநாகரிகக் கூட்டம் சோம பானம் அருந்தி, பசுக்கன்றுகளையும், புரவிகளையும் வேள்வித் தீயில் இட்டுக் கொலைசெய்து வழிபடும் செய்திகள் விரவிக்கிடப்பதைக் காணலாம். இப்படியான வைதீக மதத்தின் வருகையை செம்மார்ந்த வாழ்வியல் ஒழுக்கங்களோடு அறமும் மறமும் அறிவுமரபும் என இயற்கோடியைந்து வாழ்ந்த தமிழர்கள் முதலில் ஏற்றுக்கொள்ளவேயில்லை. அதே காலப்பகுதியில் அதாவது கி.மு.3 ஆம் நூற்றாண்டளாவிலே, சைன (சமணம்), பௌத்த மதத்துறவிகளும் தமிழர்களிடத்திற்கு வந்து தமது மதக் கருத்துகளை இங்கு பரப்பினார்கள். இவர்கள் வைதீக மதத்தை இங்கு பரப்ப வந்த ஆரியப் பிராமணர்கள் போலல்லாது, தமது சைன, பௌத்த மதக் கருத்துகளைப் பரப்பத் தமிழ்மொழியை நன்கு பயன்படுத்தினர். இவர்களின் மதக் கருத்துகளை உள்வாங்கிய தமிழறிஞர்களைக் கொண்டு தமிழில் பல நூல்கள் செய்து தமிழோடியைந்து தமது மெய்யியல் கருத்துகளைத் தமிழர்களிடத்தில் பரப்பினர். ஆனாலும், மெய்யியல் கோட்பாடுகளால் இந்த உலகை பொருள்முதல்வாத முற்போக்குச் சிந்தனை மரபில் உலகைப் புரிந்துகொண்டு முன்னோரையும் அறிவர்களையும் (சித்தர்கள்) இயற்கையையும் போற்றி இவ்வுலக வாழ்வை அறிவார்ந்து மகிழ்வுடன் வாழ்ந்து வந்த தமிழர்களிடத்தில் இந்த சைன, பௌத்த மதங்களாலும் செல்வாக்குச் செலுத்தி வளர முடியவில்லை. பின்பு, கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டுக்குப் படையெடுத்து வந்த வடுக அநாகரிகரான களப்பிரர்கள் தமிழ்நாட்டின் பெரும்பகுதிகளை வன்வளைத்து ஆட்சி செய்தனர் (கி.பி.250-கி.பி.575). இந்தக் களப்பிரர்கள் அநாகரிகர்களாக இருந்ததோடு தமிழர்களின் செம்மார்ந்த வாழ்க்கையையும் அறிவுமரபையுங் கண்டு பொறாமையும் எரிச்சலுமுற்றதோடு தமிழர்கள் மரபிற்கு எதிரான அத்தனை செயல்களுக்கும் ஊக்கமளித்து வந்தனர். தமிழிசையை கர்நாடக இசையென வழங்கும் நிலையும் இதனாலே ஏற்பட்டது. இந்தக் களப்பிரர்களே சைன (சமணம்), பௌத்த மதங்களை தமிழ் மண்ணில் ஊக்குவித்து நல்லாதரவு வழங்கி வளர்த்து வந்தனர். களப்பிரர்கள் ஆட்சியிலேதான் இவ்வாறு சைன, பௌத்த மதங்கள் தமிழகத்தில் வளர்ந்தன. தமிழர்களின் மெய்யியற் கோட்பாடான ஆசீவகமும் அதன் வழிவந்த வழிபாட்டு செல்நெறியும் மோசமாக ஒடுக்கப்பட்டு அவை சைன, பௌத்தர்களால் வன்வளைக்கப்பட்டது. சைனர்கள் கொல்லாமை, புலாலுண்ணாமை என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்கள் என்பதும் புலாலுண்ணாமல் வாழும் பழக்கத்தை மிகவும் உறுதியாகக் கடைப்பிடித்தார்கள் என்பதும் பௌத்தர்கள் கொல்லாமையை வலியுறுத்தினார்கள் என்பதும் ஈண்டு நோக்கத்தக்கது. அதுவரை, சோமபானம் அருந்தி, பசுவதையும், புரவி பலியெடுப்பும் செய்ததோடு தமிழர்களின் வழிபாட்டு முறைகளைக் கேவலப்படுத்தி வந்த ஆரிய அநாகரிக வைதீகர்கள் களப்பிரர்களின் ஆட்சி வீழ்ச்சியடைவதுடன் நலிவுபெறத் தொடங்கிய பௌத்த, சைன (சமண) மதத்திலிருந்து பல விடயங்களை உள்வாங்கித் தாம் முன்னர் கீழ்மைப்படுத்திய தமிழர்களின் திணைவழிபாட்டையும் உள்வாங்கியதோடு தாம் முன்னர் வெறுத்தொதுக்கிய தமிழையும் பயன்படுத்திப் பக்தி இயக்கம் என்ற பெயரில் வைதீகத்தைப் பரப்பும் அமைப்பைத் தொடங்கியது. அவ்வாறே புலாலுண்ணாமை, கொல்லாமை போன்ற விடயங்களை வைதீகம் கைக்கொள்ளத் தொடங்கியது. ஏனெனில், சைன, பௌத்தம் கோலோச்சியிருந்த காலத்தில் தமிழ்மக்கள் அந்த வாழ்க்கை முறைக்குப் பழக்கப்பட்டுப்போனதால், அதை உள்ளீர்த்தே வைதீகம் வளர்ந்தது. வைதீகர்களைப் பொறுத்த வரையில் தமது ஆரியப் பிராமணர்கள் குமுக ஆதிக்கம் பெற வழிசெய்யும் நால்வேதங்களை உள்நுழைத்து ஏற்றுக்கொள்ளச் செய்தாலே போதுமென்ற சிந்தையிலே தான் பௌத்த, சமண, தமிழர் பண்பாடு என்பனவற்றை உள்ளீர்த்து சைவம், வைணவம் என்ற பெயரில் மதத்தைப் பரப்பினர். சங்க காலத்திலேயே தமிழர்கள் மருதநிலத் திணைத்தெய்வமாக வழிபட்ட இந்திரனை காமுகனாகக் கதை பரப்பியதோடு, நாம் சங்ககாலத்தில் ஈசன் எனவும் கோச்சடையன் எனவும் போற்றியவரை சிவன் என மாற்றி, எங்கள் கொற்றவை என்ற தாய்த்தெய்வத்தை அம்மன், பார்வதி என்றாக்கி சிவனுக்கு மனைவியெனக் கதைகட்டி, குறிஞ்சித் திணைத்தெய்வமாகித் தமிழர் தெய்வமான முருகனை அவனின் வள்ளி என்ற தமிழ்வேட்டுவிச்சி மனைவியை விட வட இந்திய தெய்வானையை இரண்டாம்தாரமென கதைகட்டி, திருமாலை விஸ்ணுவாக்கி மோகினியாக்கி சிவனுடன் புணர்ந்து பெற்றவனாக எம் ஆசிவக ஐயனார் (அறிவர்) இருப்பதாகக் கதைகட்டி, இவ்வாறு அத்தனை கூத்துமாடி கதைகட்டித் தாம் முன்னர் இழிந்துரைத்த தமிழர் திணைத்தெய்வங்களை வைதீகம் உள்வாங்கி, தமிழோடிசை பாடி தமது வைதீகத்தை பரப்பி வந்தனர். அதுவரை இருந்த சமண, பௌத்த கோட்பாடுகள் உண்மையில் தமிழர் சங்கவாழ்க்கை மரபிற்குப் பொருந்தாமையால் (துறவையும் வாழாதிருத்தலையும் முன்னைப்படுத்துவன) தமிழர்கள் மனதார அதை ஏற்று நடந்தாரெனச் சொல்ல முடியாது. அத்துடன், இவ்வுலக வாழ்வில் தமிழர்கள் கூடிய நாட்டம் கொண்டிருப்பதைக் கண்ட வைதீகம் அப்படி இவ்வுலக வாழ்வினூடு இலகுவாக கடவுளை அடையலாம் என சொல்ல, இறுக்கங்கள் அதிகமான சைன, பௌத்த மதங்களிலிருந்து விடுபட்டு வைதிகம் புதிதாகக் கட்டிய சைவம் (இதுவும் பாளிமொழிச் சொல்), வைணவம் (விண்ணவம் என்ற தமிழர் அறிவியலின் திரிபு) நோக்கி நகர்ந்தனர். இவ்வாறு தனக்கு கண்ணிலேயே காட்டக் கூடாதளவு வெறுப்பாயிருந்த தமிழர் வழிபாடுகளை உள்ளீர்த்தாவது வைதீகத்தை தமிழர்களிடத்தில் புகுத்தும் ஆரிய அநாகரிகச் சூழ்ச்சிக்குள் தம்மையறியது தமிழர்கள் வீழ்ந்து போயினர். தமிழர்களின் அறிவியலை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருந்த உலகாயதம், எண்ணியம், சிறப்பியம் போன்ற ஆசீவகம் உள்ளடங்கலான பொருள்முதல்வாத கோட்பாடுகள் சங்கம் மருவிய காலத்தில் பௌத்த, சைன எழுச்சியால் நலிவடையத் தொடங்குகிய பின்பாக, வைதீகத்தின் வன்வளைப்பில் ஆசீவகப் பெரும் கோட்பாடு மடைமாற்றப்பட்டது. அதை அரசும் அரச வல்லாண்மையும் எவ்வாறு நிகழ்த்தின என்பதனை நோக்குதலினூடாக, இழந்துபோன எமது பண்பாட்டு வரலாற்றை அறியமுடியும். இன்றைய அசைவியக்கத்தின் நுட்பங்களை அறிந்துகொள்வதற்கு அன்றைய வாழ்வியல் அசைவியக்கங்கள் பற்றி அறிந்திருக்கவேண்டும் என்று பக்தவக்சல பாரதி கூறுவது போன்று பல்துறை இணைவுப்போக்கில் இனவரலாறு, சமூக வரலாறு, பண்பாட்டு வரலாறு ஆகியவற்றை அணுகவேண்டும். பொருள்முதல்வாதக் கோட்பாடுகள் பற்றிய நூல்கள் எதுவும் ஆவணப்படுத்தப்படவில்லையாயினும் வரலாற்றின் பெரும் சான்றாகக் கொள்ளப்படும் இலக்கியங்களில் உலகாயுதக் கோட்பாடுகள் இருக்கின்றதா என்பதனை நோக்குவதன் மூலம் கோட்பாடுகள் சார்ந்த அறிவியல் நோக்கே மாற்றாரால் வன்வளைக்கப்படுமுன் தமிழர்களிடத்தில் இருந்ததது என்பதனைக் கூறமுடியும். பௌத்த நூலான மணிமேகலையும் சமண நூலான நீலகேசியும் உலகாய்தத்தை பேசுபொருளாகக் கொண்டிருக்கின்றன. சமணர்களும் பௌத்தர்களும் தங்களுடைய சமயக் கோட்பாட்டுகளிலிருந்து உலகாய்தக்கோட்பாடுகளை எதிர்க்கின்றனர். குறிப்பிட்ட ஒரு கோட்பாட்டினை எதிர்க்கவேண்டுமெனில் அந்தக்கோட்பாடு ஏதோவொரு வகையில் மிகவும் பலம் வாய்ந்ததாக இருந்திருப்பதாக உய்த்துணரலாம். ஆகவே, சமணம் பௌத்தத்திற்கு முந்திய ஆசீவகம் என்ற மெய்யியல் கோட்பாடு பொருள்முதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்டதா என்ற கேள்வியை எழுப்பி விடைகாண்பதன் மூலம் தமிழர்களின் அறிவுமரபு எத்துணை முற்போக்கானதென விளங்கிக்கொள்ளலாம். உலகாய்தம் என்ற பொருள்முதல்வாத நோக்கானது உலகமானது பொருட்களின் சேர்க்கையாலும் மாறுபாடுகளாலும் நிலைத்தும் இயங்கியும் இருக்கின்றன என்று சொல்கிறது. ஆனால், மாறாக உலகம் நிலைபெறுவதற்குரிய ஏதுவாக ஏதோ ஒரு அறிணைக் கருத்தொன்றின் மீது ஏற்றி அவற்றை ஆன்மா, கடவுள் என்ற பல நிழலுருக்களாக அடையாளப்படுத்துவதே அறிவுக்கொவ்வாத கருத்துமுதல்வாதம் என்ற பெருங்கதையாடல் ஆகின்றது. சங்கப்பாடல்களும் தமிழர் வழிபாடுகளும் சங்கப்பாடல்களில் தமிழர்களின் வாழ்வியலும் வாழ்வியலினூடே அவர்கள் கைக்கொண்ட கோட்பாடுகளும் விரவிக்காணப்படுகின்றன. அகம் என்னும் மக்களின் வாழ்வியல்பற்றி மட்டுமல்லாது மறத்திற்கும் சான்றுகளாக அமைவன சங்கப்பாடல்களே. பாடல்கள் மக்களுடைய அன்றாட வாழ்க்கை முதல் மன்னனுடைய போர், போரின் வெற்றி, இழப்பு என்று பல அடுக்குகளிலும் சங்ககாலத்தை நகலெடுத்து காட்டுகின்றன. மக்களுக்கும் மன்னனுக்கும் அறக்கருத்துகளை போதிப்பவர்களாக புலவர்கள் முதன்மைபெற்றிருக்கிறார்கள். சங்கப்பாடல்களிலே, குறிப்பாகப் புறப்பாடல்களிலே வாழ்க்கையைப் பற்றி புலவர்கள் என்ன கூறியிருக்கின்றார்கள் என நோக்கின் அவர்கள் இவ்வுலக வாழ்ககையைப் பற்றியே அதிகம் பேசியிருக்கிறார்கள். வாழ்க்கையை மறுத்த துறவறத்தையோ, தான் கொடுத்த தூண்டல்களுக்கு கிடைத்த துலங்கல்களுக்கு காரணம் கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒரு கடவுள் என்று தன் தவறுகளை மறைக்கவில்லை. சங்ககாலத்தில் தொன்மை சமுதாயம் உடைந்து நிலவுடைமைச் சமுதாயமாக மாறும் போது ஏற்பட்ட பொருண்மிய வேறுபாடுகளால் ஏற்பட்ட கருத்து முரண்களால் நிலவுடைமைச் சமுதாயத்திற்கும் தொன்மைச் சமூகத்திற்குமான முரண் உருவாக்கப்படுகின்றது. தொன்மைச்சமுதாயத்தில் சமயம் என்ற நிறுவனப்படுத்தப்பட்ட வழிபாட்டு முறைமை இருக்கவில்லை. மாறாக, சடங்குகளும் வழிபாடுகளும் இணைந்த ஒரு தொகுப்பே இருந்திருக்கிறது. இந்த இரண்டு வேறு பிரிவுகளுக்குமிடையிலான நோக்குநிலைகளின் முரண்களும் சங்கப்பாடல்களாக படைக்கப்பட்டிருக்கின்றன. நிலவுடைமைச் சமூகத்தின் வளர்ச்சிக்கு நேர்விகித சமனாக பண்பாடு மற்றும் சிந்தனை வளர்ச்சிகளும் வளர்ந்தன. அந்த நிலவுடைமைச் சமுதாயத்தின் வல்லாண்மையில் இனக்குழு முறைமை மறைந்துபோகத் தொடங்கியது. பேராசிரியர் வானமாமலை அவர்கள் பேராசிரியர் தேவிப்பிரசாத் சட்டோ அவர்களை மேற்கோள் காட்டி, இனக்குழு அழிவு முழுமையாக இராமல் அரைகுறையாக இருப்பின், இனக்குழு மக்களின் சிந்தனைகள், நம்பிக்கைகள், பண்பாட்டு எச்சங்கள் தொடர்ந்துவரும் சமுதாயத்திலும் எஞ்சி நிற்கும் என்று கூறுகின்றார். அவ்வாறாயின், இன்றுவரை எச்சங்களைத் தாங்கிய எம் வாழ்வியலின்வழி நோக்கின், பண்டைத் தமிழர்களின் கருத்துலகு உலகாயதம் என்ற பொருள்முதல்வாத கோட்பாட்டினடிப்படையில் இருப்பதைக் கண்டுகொள்ளலாம். புறப்பாடல்கள் நிலம், நீர், தீ, வளி, வான் என்ற ஐம்பூதங்களினையும் நடுவப்படுத்தியே பாடப்பட்டிருக்கின்றன. ‘மண் திணிந்த நிலனும் நிலம் ஏந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளித்தலை இய தீயும் தீ முரணிய நீரும், என்றாங்கு ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப் போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும் வலியும், தெறலும், அளியும் உடையோய்” என்ற புறப்பாடலை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். அதேபோல தமிழர்களின் வள்ளுவமானது அறம், பொருள், இன்பம் என்ற இவ்வுலக வாழ்க்கையைத் தான் வாழ்வியலாகக் கூறுகின்றதே தவிர, வாழ்க்கையைத் துறத்தலே இன்பம் என்று அவர் எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை. இவ்வாறு கண்ணுக்குப்புலனாகாத ஏதோவொன்றின் மீது பழியைப்போட்டு, வாழ்க்கையை யாரோ நடத்துவது போல தமிழர்கள் அன்று வாழவில்லை என்பதை நோக்கவேண்டும். 2500 ஆண்டுகளில் பன்மடங்கு விரிவாக்கத்துக்கு உட்பட்டிருந்த தமிழ்ச்சமூகம் வெவ்வேறு பண்பாட்டு உள்ளீடுகளை உள்ளீர்த்து, அதன்வழி தனது இயங்கியலைக் கட்டமைத்துக்கொண்டது. ஆயினும் முன்னரே குறிப்பிட்டது போல, தொன்மை இனங்கள் தமது தொன்மை எச்சங்களை மீள மீள உயிர்ப்பித்துக்கொண்டேயிருக்கும் என்ற கூற்றுக்கமைவாக, இப்போது வழக்கிலிருக்கும் அந்தத் தொன்மைகளை கண்டறிந்து இனமீட்பொன்றினைச் செய்வது இன்றியமையாதது. கூட்டுழைப்பு, கூட்டுணவு போன்ற இயக்கங்களால் கட்டமைக்கப்பட்ட அந்த மரபுவழிவந்த இனக்குழுக் கூட்டுவாழ்க்கையானது இன்று நினைவெச்சங்களாகவே எஞ்சியிருக்கிறது. அந்த இனக்குழு வாழ்க்கை முறையில் இருந்த வழிபாட்டு முறைமைகள் சமூக நடைமுறைகளுக்குள்ளால் நிறுவனப்படுத்தப்பட்டமையை நோக்குவோமாயின், தமிழர் மெய்யியல் எங்கே காணாமலாக்கப்பட்டது என்பதை விளங்கிக்கொள்ளலாம். இனக்குழு முறைமையிலிருந்து நிலவுடைமைச் சமுதாயமாக மாந்தர்கள் மாறிய போது, அவர்களுடைய பண்பாட்டு மடைமாற்றங்களால், உலகாயதக் கண்ணோட்டம் மாறத் தொடங்கியது. உலகாயதத்தின்வழி வந்த ஆசீவகம் என்னும் மெய்யியலின் வழி ஒழுகிய தமிழர்களிடத்தில் வைதீகம் நுழைக்கப்பட்டது. உலகின் தோற்றத்தையும் பொருட்களின் உற்பத்தி, தோற்றம், மறைவு என்பனவற்றை அணுவியற்கொள்கை மூலமும், உலக இயங்கியலைப் புரிந்தவாறு இயற்கையின் விளைவுகளை அறிவுக்கண்கொண்டு பார்க்கும் அறிவியலையும் கொண்டதே ஆசீவக மெய்யியல் கோட்பாடாகும். ஆசிவகக் கோட்பாட்டினை ஈண்டு ஆய்ந்து அதில் அறுவுபெற்றோர் அறிவர்களாகவும் அண்ணல்கள் என்றும் போற்றப்பட்டனர். எதனையும் பகுத்துப்பார்த்து விளங்கிக்கொள்வதினை அறிவாய்வு முறைமையாகக் கொண்டதே ஆசீவக மெய்யியல். ஆசீவகத்தினுள் இருக்கும் ஈவு என்பது வகுத்ததைக் குறிக்கும். இவ்வாறே தமிழர்கள் நிலத்தினை ஆய்ந்துகொள்ள அதனை ஐந்திணையாகப் பிரித்தது தொடக்கம் அத்தனையையும் பகுத்துப் பார்த்து ஆய்ந்துகொள்ளும் பகுத்தறிவு மரபே ஆசீவகம் எனப்படும். இவ்வாறாக நிலம், நீர், தீ, வளி என்பனவற்றின் சேர்க்கையே, உலகம் முதல் அதிலிருக்கும் பொருட்களிலிருந்து அத்தனை உயிரினங்களிலும் இருப்பதென்று ஆய்ந்த உலகாய்தத்தினுள் இன்னும் மேற்சென்று பகுத்து அது அணுக்களினால் ஆனது என்றவரைக்கும் பகுத்தாய்ந்த மரபு ஆசீவகக் கோட்பாடாய் தமிழர்களிடத்தில் கி.மு.3 ஆம் நூற்றாண்டிலேயே உருவாக்கம் பெற்றுவிட்டது. ஆசீவக அறிவர்கள் தலைமுறை தலைமுறையாக தமிழர்களின் வாழ்வியல் கோட்பாடுகளை கற்பித்தவர்களாவார். ஆசீவகம் என்ற சிந்தனைப் பள்ளியினை மையமாகக் கொண்டு கட்டப்பட்ட தமிழர்களின் மெய்யியலை, காலப்போக்கில் வைதீகம் என்ற மாயை காவுகொள்ளத்தொடங்கிற்று. பண்பாட்டு வரலாற்றில் குறிஞ்சி முதல் பாலை வரையிலான வாழ்வு முறைகளிலிருந்து இன்றைய தமிழர்களின் வாழ்வியல் வரையிலான இயங்கியலை நாம் நோக்குவோமாக இருப்பின், அந்தப் பண்பாட்டு மாற்றம் எங்கே எவ்வாறு நிகழ்ந்தது என்பதனைக் கூற முடியும். நடுகல் வழிபாட்டுடன் தொடங்கிய தமிழர்களின் வழிபாட்டு மரபுத் தொடர்ச்சியானது மெய்யியல் கோட்பாடுகளாக உருவாகின. வடஇந்தியாவிலிருந்து பௌத்த, சமண, வைதீக கோட்பாடுகள் தமிழர்களிடத்தில் இறக்குமதி செய்யப்பட்டன. ஏற்கனவே பண்பாட்டு ஊடுருவல்களால் ஆன்மீகம் சார்ந்த கருத்துமுதல்வாதத்தை ஏற்றுக்கொண்ட அரச வல்லாண்மை பௌத்த, சமண வல்வளைப்பிற்கு துணைபோயிற்று. மதம் என்னும் பெயரால், அதுவரை தமிழர் மரபில் கட்டமைக்கப்பட்டிருந்த உலகாயத வழிவந்த ஆசீவகக்கோட்பாடுகள் பௌத்த சமண கோட்பாடுகளால் மிகைநிரப்பப்பட்டது. சமண, பௌத்த துறவிகள் தமிழில் துறைபோந்து பல நூல்களை இயற்றி, தமிழனை அவனது மொழி மீதுள்ள பற்றால் மெள்ள மெள்ள அறிவார்ந்து ஆராயாது முடிவெடுக்கும் கருத்துமுதல்வாதத்தினுள் தமிழர்களின் சிந்தனை மரபு மழுங்கடிக்கப்பட்டது. உலகாய்தம் என்னும் பொருள்முதல்வாதத்தினைக் கற்பதற்காக வட இந்திய தத்துவ அறிஞர்கள் தமிழகம் வந்திருக்கிறார்கள் என்பர் வரலாற்றாய்வாளர்கள். அதுமட்டுமல்லாது சமசுக்கிருதச் சான்றுகளை அடிப்படையாகக்கொண்டு உலகாய்தம் மிகவும் தொன்மையானது எனவும் பேராசிரியர் வானமாமலை அவர்கள் குறிப்பிடுகின்றார். ஆயின் களப்பிரர்களின் ஆட்சிக்காலத்தில் பொருள்முதல்வாத சிந்தனைகள் அழிக்கப்பட்டன. ஆயினும் சமணம், பௌத்தம் இரண்டுமே பொருள்முதல்வாத கோட்பாடுகளில் சிலவற்றை உள்வாங்கியிருந்தன. அதனாலேயே வைதீக மெய்யியலானது சமண பௌத்த மதங்களின் வீழ்ச்சியின் பின்னரே தமிழர்களிடத்தில் மேலாதிக்கம்பெறத் தொடங்கியது. சிலப்பதிகாரம் என்னும் காப்பியம் தொன்மம், தேசியம், இலக்கியம் என்ற பன்முகப்பார்வையிலே நோக்கப்படவேண்டியதாக இருக்கின்றபோதிலும், அதன் உள்ளடக்கம் பேசுகின்ற அரசியலையும் நோக்கவேண்டும். கற்பில் சிறந்தவள் கண்ணகியா மாதவியா என்ற விவாதங்களுக்கான தலைப்புகளுக்காக மட்டும் உரியதல்ல சிலப்பதிகாரம். மண்ணையும் மொழியையும் காக்க எழுந்த காப்பியம், தமிழனது மெய்யியலை காக்கத் தவறிவிட்டது. இதில் தத்துவக்கோட்பாடுகள் அதிகம் பேசப்படவில்லையாயினும் தமிழனது தேசிய இருப்புக்கான எல்லாவற்றையும் பேசிய சிலப்பதிகாரம் சமயஞ்சார்ந்து நின்று தமிழனின் மெய்யியலைப் பேசத்தவறியிருக்கிறது. சிலப்பதிகாரத்தினுடைய இரட்டைக்காப்பியமான மணிமேகலையில் சமயக் கணக்கர் தம் திறங்கேட்ட காதையில் மணிமேகலைக்கு அளவைவாதம், சைவம், பிரம்மவாதம், வைணவம், வேதவாதம், ஆசீவகம், நிர்க்கந்தம், உலகாயதம் போன்ற கோட்பாடுகளைக் கற்பிப்பதாகவும் உலகாயதத்தைப் பற்றி பேசுகையில் அதற்கு கண்ணகி மறுத்துரைப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அத்தோடு கண்ணகி இறந்ததன் பின்னர் அவளுடைய தந்தை ஆசீவகத்தைப் பின்பற்றியதாகவும் சொல்லப்படுகின்றது. ‘கண்ணகி தாதை கடவுளர் கோலத் தண்ணலம் பெருந்தவத்தவத் தாசீவகர்முன் ’ என்ற அடிகளினூடாக இதனை நோக்கலாம். இவ்வாறு எம்மொழி கொண்டே எம் மெய்யியல் சிதைக்கப்பட்டுக்கொண்டே போயிற்று. ஆசீவகம் என்னும் தமிழர் மெய்யியல் பல மொழிக்குழப்பங்களுக்குள்ளும் உட்படுத்தப்படுகின்றது. திவாகர நிகண்டு என்னும் தமிழ்மொழி நிகண்டு, சாவகர் (சமண சமயத்தைப் பின்பற்றும் இல்லறத்தார்), அருகர் சமணர் ஆகும்;: ஆசீவகரும் அத்தவத்தோரோ’ என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதாவது சமணர் என்னும் சொல் சாவகர், அருகர், ஆசீவகர் ஆகியவர்களைப் பொதுமைப்படுத்தும் ஒரு சொல்லாகக் குறிப்பிட்டது. அந்தக் குழப்பத்தின் விளைவாக இன்றுவரையில் தொன்ம ஆய்வுகளில் சைனரும் ஆசீவகரும் ஒருவராகவே நோக்கப்பட்டனர். ஆசீவகத்தை அறிவுசார்ந்து எதிர்நோக்க முடியாதோர் இவ்வாறான பல கருத்துப்போலிகளை உருவாக்கினார்கள். எடுத்துக்காட்டாக ஆசீவகத்தின் ஊழ் குறித்த கோட்பாடானது மெய்யியலின்வழி இயற்கை நிகழ்வைப் பற்றிப் பேச, எதிரானவர்கள் பிறவிகள் தொடரும் பாவம் என்னும் ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ வைதீகக் கோட்பாடுகள் சார்ந்தவை என பொருட்திரிபு காட்டுகிறார்கள். ஆசீவக மெய்யியலின் அடிப்படையில் அமைந்த சொல்லான அமணர் எனும் சொல், அம்மணர் என்று ஆடையற்றதன்மையைக் குறிப்பதாக தவறாகச் சுட்டப்பட்டதனையும் குறிப்பிடலாம். இவ்வாறான ஆய்வுக்குழப்பங்கள் ஒருபுறமிருக்க, மக்களினூடே எவ்வாறு மெய்யியல் நீக்கம் நிகழ்ந்தது என்பதை நோக்குதல் வேண்டும். இயற்கையோடிணைந்த வாழ்வியலினுள் இருந்த மக்களது வழிபாடுகள் முன்னரே குறிப்பிட்டது போல அரச நிறுவனங்களாக மாற்றம் பெறத்தொடங்கின. இந்த நிறுவனமாக்கல் எனும் வடிவ மாற்றத்துக்குட்படாத சில வழிபாட்டு மரபுகள் கிராமிய வழிபாடுகள் என்ற வகையறாவினுள் உட்படுத்தப்பட, அரச விரிவாக்கலுக்கும் அதன் கருத்துருவாக்கங்களுக்குமான நிறுவனமாக உருவாக்கப்பட்ட பெருஞ்சமய மரபு, தமிழர்களது மெய்யியலை கேள்விக்குள்ளாக்கியது. இந்து என்னும் வன்வளைப்பு அரசியற் கருத்துருவாக்கத்திற்கு வைதீகம் என்னும் பொறிமுறை பயன்படுத்தப்பட்டது. திணைவழிபாட்டில் இருந்த தெய்வங்கள் பாலியல் குற்றவாளிகளாக்கப்பட்டு கொச்சைப்படுத்தப்படன. திருமாலும் முருகனும் இரண்டு மனைவியர் உள்ளவர்களாகவும் இந்திரன் பாலுறுப்புக்களைக் கொண்ட கடவுளாகவும் கொற்றவை அடங்காப்பிடாரியாகவும் திரிபுபடுத்தப்பட்டதோடு ஆரம்பித்த வைதீகத்தின் கொட்டம், இன்றுவரை தமிழர் மண்ணில் பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கின்றது. கண்ணுக்குப் புலனாகாதவற்றையெல்லாம் கேள்விக்குள்ளாக்கிய மெய்யியலின் அறிவியல் வழி வந்த தமிழர்களை, ஏதோவொரு பெரும் கடவுள் இருப்பதாக நம்பவைத்து, இல்லாத ஒன்றின்மேல் கேள்விகேட்பதை நினைக்கக் கூட முன்வராத முட்டாள்களாக்கி, சமயத்தின் மீது கேள்விகேட்கும் நிலையை அற்றுப்போகச்செய்தது வைதீகம். ‘இந்துக்கள்’ என்ற ஒற்றைச் சிறை தமிழர்களுக்குள் புகுத்தப்பட்டு, இனத்தின் அறிவியலைக் கடத்த வேண்டிய எங்களை கடவுளின் பேரால் கருத்துமுதல்வாதத்தின் காவிகளாக மாற்றச்செய்திருக்கிறது. பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகள் தமிழ்ச்சமூகத்தின் மெய்யியலாக இருக்கும்வரையிலும் தமிழ்ச்சமூகம் நல்ல கல்வியறிவையும் பெற்றிருந்தது என்று கூறப்படுகின்றது. ஆயின், சங்கமருவிய காலத்தில் அத்தனை கட்டமைப்புகளும் சரிந்துவிழத்தொடங்கின. தமிழர்களின் தொன்மங்களை தமிழர்களைக் கொண்டே சிதைத்து, சிதைவின்மேல் நின்றுகொண்டு மிகப்பெரிய அறிவியல் மரபில் வந்தோர் நாம் என்பதை மறந்து, வைதீகப் புனைவுகளுக்குள் ஆட்பட்டிருக்கிறோம். வாழ்வியலின் வழி கட்டமைக்கப்பட்டிருந்த மெய்யியல் கூறுகளை வைதீகசமய உருவாக்கத்தினுள் தொலைத்திருக்கிறோம். மரபுவழிப் பண்பாட்டுக்கூறொன்று வாழ்வியலின் வழி கட்டமைக்கப்பட்டதெனின் பிற கூறுகளின் ஊடுருவல் அவ்வளவு இலகுவானதல்ல என்பதையும் அத்தகைய மரபுவழி இனங்களின் இருப்பு பெரும் அரசுருவாக்கல் கொள்கைகளுக்கு குறுக்கீடெனவும் கருதிய அரசுகள் பெருஞ்சமயமரபுகளைக் கட்டமைத்து, அதனுள் மரபுவழிக்கூறுகளையும் உள்வாங்கின. வெளியிலிருந்து நோக்குகையில் எங்களுடைய முறைமை போலவே தோன்றிய அந்தப்பெருஞ்சமய மாயத்தினுள் இலகுவாக உள்நுழைய வைத்தன. ஆயினும் காலப்போக்கில் மரபுவழக்காறுகள் அந்தப் பெருஞ்சமயத்தினுள் கரைந்துபோயின. வாழ்வியலின் வழி வழிபாடுகளையும் கொண்டிருந்தபோது, இன அடையாளமும் மத அடையாளமும் ஒன்றாக இருந்ததனால், காலப்போக்கில் வைதீகத்தின் அடையாளங்கள் தமிழின அடையாளங்களாக்கபடும் நிலைக்கு தள்ளப்பட்டன. இந்தக் கருத்துருவாக்கத்தின் அடிப்படையிலேயே இந்து அடையாளங்கள் தமிழடையாளங்களாக மாற்றப்பட்டன. இனம் சார்ந்த அடையாளத்தை மாற்றுவதில் அரச வல்லாண்மையின் மத அடையாளங்கள் பெரும் பங்கினை வகிக்கின்றன. இந்துத்துவா என்னும் பெருங்கதையாடல் வழி திணிக்கப்பட்ட அடையாளங்கள் மறுத்துரைக்க இயலாத வகையில் வந்துநிற்கின்றன. வைதீகத்தின் தேவைக்காக நம் ஈசனின் பெயரை ஒத்தவாறு சிவனென்று உருவாக்கி அதை நடுவமாக வைத்துப் பலகதையாடி தமிழ்க் கடவுளரை கொச்சைப்படுத்தி நம்முன்னோர்களின் வழிபாட்டு மரபை வைதீகம் மடைமாற்றியது. சங்கம்மருவிய காலத்தில் மத அடையாளங்கள் வல்லாண்மை அரசியலின் அடையாளங்களாக மாற்றப்படும் படிமுறையின் விளைவாகவே இந்த அழித்தொழிப்பு நிகழ்த்தப்பட்டது. மதம் சார் படைப்புகளை அழிப்போம் என்ற போர்வையில் தன் தாய்க்கு தானே கொள்ளிவைத்ததை உணராதவர்களாக எம்மை ஆக்கி, மதத்தின் வன்மத்திற்கு தமிழ் தற்கொலைசெய்துகொண்டது. ஆயினும், சைவமும் தமிழும் இரு கண்கள் என்று சொல்லுமளவுக்கு தமிழர்களைக் குருடர்களாக்கி, தங்களுடைய மெய்யியல் புதையுண்டுபோனதைக் கூட உணரமுடியாத அளவுக்கு மதம் மக்களைக் கட்டிவைத்தது. தமிழ்மக்களை வர்ணங்களாக்கி சாதிகளாக பிரித்து, இனமாக ஒன்றுபடும் ஒவ்வொரு தருணத்திலும் ஏதோவொரு வகையில் சாதிய அரசியலை நிகழ்த்தும் பெரும் அவலத்தை நிகழ்த்தியது வைதீகம். ஆசீவகத்திலிருந்த வர்ணக்கோட்பாடு, ஆசீவகமென்னும் சிந்தனைப்பள்ளியில் கற்பவர்களின் படிநிலை வளர்ச்சியைக் குறிப்பவர்களுக்கானது. ஆனால் அதனைத் திரிபுபடுத்தி பெரும் அரச உருவாக்கத்தின் பொறியான இந்துத்துவாவின் முதன்மை கருவியாக சாதி என்னும் வர்ணாசிரமக் கோட்பாடே துருத்தி நிற்கின்றது. மொழியாலும் நிலத்தாலும் ஒன்றான தமிழர்களை தொழிலால் விலக்கி வைக்கும் கீழ்மையைச் செய்தது வைதீகம். இன்றுவரையிலும் தீண்டத்தகாதோர் என்று தமிழர்களிடத்தில் மிகப்பெரும் சாதிய அரசியலொன்று நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. தமிழ்த்தேசியத்தின் கூறுகளைச் சிதைப்பதில் இச்சாதிய அரசியலுக்கு பெரும்பங்குண்டு. தமிழர்களை, மக்களின் திணைவாழ்வின் தொடர்ச்சியை வழக்காறுகளை அவர்களிடமிருந்து பிரித்து, தனித்தனி மாந்தர்களாக்கியது இந்துத்துவா. கொற்றவை, கண்ணகி வழிபாடு கொற்றவையை தாய்த்தொன்மமாகக் கொண்டு வாழ்ந்த சங்ககாலத்தின் தொடர்ச்சியானது திட்டமிட்டு வைதீகர்களால் அழிக்கப்பட்டது. கண்ணகி என்னும் தொன்ம வழிபாட்டு மரபானது, நாகரிகமடையாதவர்களின் வழிபாடென்று கூறி, கண்ணகி சிலைகள் கடலில் எறியப்பட்டும், சில கண்ணகிகள் அம்மனாக உருமாற்றம் செய்யப்பட்டும் தமிழர்களின் பெரும் மரபொன்று அழிக்கப்பட்டுள்ளது. வைதீக மரபின்வழி தமிழர்களின் வழிபாட்டில் புகுந்துகொண்ட சமசுக்கிருதம் தாய்த்தொன்மையை வீதியில் எறிந்துவிட்டு வந்தேறியைக் காலில் விழுந்து கும்பிடும் அபத்தமொன்றை நிகழ்த்தியது. ஆரியர்களால் நன்கு திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்ட இந்த கண்ணகி என்னும் தொன்மத்தின் அழிப்பின் பின்னாலிருக்கும் வன்மம் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர் மெய்யியலின்பால் கொண்டிருக்கும் வெறுப்பின் ஒரு கூறேயாகும். குறிப்பாக ஈழத்தில் எம் வழக்காறொன்றை அழித்த ஆறுமுகநாவலர் சைவத்தையும் தமிழையும் வளர்த்த சான்றோராக போற்றப்படுவதுதான் நகைமுரண். மதம் செய்யும் இந்த நுண்ணரசியலானது இனம்சார்ந்த விடயங்களனைத்தையும் புறந்தள்ளி, மக்களை மதத்தின்பால் சிந்திக்கச்செய்யும். மெய்யியல் சார்ந்த சிந்தனைப்பள்ளியை வாழ்வியல் முறைமையாகக் கொண்ட தமிழினை சைவத்தமிழ் என்ற குறுகிய வட்டத்தினுள் அடக்கியது சமயம். வைதீகத்தின் புனைவுகளான புனிதங்கள் தமிழர்களின் தலைமீது ஏற்றப்பட்டதன் விளைவாக தமிழின் புனிதங்கள் உழைக்கும் வர்க்கத்தில் பெரும்பான்மையானோரையும் கோவிலுக்கு வெளியே நிறுத்தியதோடு, ஆதித்தமிழனின் பறையும் வீதியிலேயே நின்றுகொண்டது. தமிழகத்தில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்கம் சார்ந்த விழிப்புணர்வுகள் நிகழ்ந்திராவிடின் நாமும் இன்று மலையாளம் போன்றதொரு மொழியைப் பேசிக்கொண்டிருந்தாலும் வியப்பில்லை. இன்று தமிழ்மொழியில் தமிழ்மொழி போலவே கலந்திருக்கும் சமசுக்கிருதம் அதன் அடிப்படையான மதச்சார்பின் நிலைநின்று ஊடுருவியிருக்கின்றது. இனக்கலப்பிற்கு ஒப்பானதாகக் கருதப்படும் இந்த மொழிக்கலப்பினை விளங்கிக்கொள்ளமுடியாத அளவுக்கும் மக்களுக்கு மதம் பீடித்திருக்கின்றது. வைதீகத்தின் கண்ணில் சிக்குப்படாது எஞ்சியிருந்த ஒருசில வழக்காறுகளில் கோவில் சடங்குகள் முதன்மையானவை. கூடிப் புலாலுண்ணும் முறைமை சங்ககாலந்தொட்டு நிலவிவரும் வழிபாடு. அதன் எச்சமாக இன்றுவரை இருக்கும் மிருகபலிக்கு எதிராக அரச இயந்திரம் சட்டமியற்றுகிறது. மிருக பலியிடல் தடையின் பின்னாலிருக்கும் அரசியலைக் கட்டியமைத்த இந்துத்துவாவிற்கு இந்துத்துவத்தை கண்ணைமூடிக்கொண்டு பின்பற்றும் மூடர்கூடமாக மக்கள் இருக்கவேண்டும். கோமியம் என்று மாட்டு மூத்திரத்தை குடிக்குமளவிற்கு மதத்தின் அடிமையாகிவிட்ட மக்களின் மீதுதான் அடிமை அரசியலை நடாத்தமுடியும் என்பது அரச அதிகாரத்திற்கு தெரிந்த விடயம். எப்போதுமே அரச வல்வளைப்புகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவது குறிப்பிட்ட இனத்தின் எண்ணிக்கைப் பெரும்பான்மையான நடுத்தர வர்க்கத்தினர்தான். அந்த நடுத்தர வர்க்கம்தான் பண்பாட்டு ஊடுருவலுக்கு இடங்கொடுப்பதும். குறிப்பிட்ட அந்த நடுத்தர வர்க்கத்தினரை பேசாமக்கள் ஆக்குவதற்குரிய ஒரே வழி சமயஞ்சார்ந்து அவர்களைப் பிரிப்பதே என்று அறிந்த வல்லாண்மையாளர்கள், பலியிடலும் சடங்குமுறைகளும் காட்டுமிராண்டித்தனமானவை என்ற கருத்தியலை விதைத்துவிட, தங்களை மேட்டுக்குடியாக காட்ட எண்ணும் நடுத்தரவர்க்கமும் அந்த தடைகளை ஆதரிக்க, தமிழரின் மெய்யியலின் எச்சங்களைத் தாங்கிநிற்கும் உழைக்கும் வர்க்கம் தன் வழக்காறுகளை இழந்துகொண்டிருக்கின்றது. தமிழர்களுடைய உணவுப்பழக்கத்தையும் உணவுப்பழக்கத்தின்வழி வந்த தொடர்ச்சியையும் இடையறுத்து சமயஞ்சார்ந்த ‘கோவிற்புக்கை’ வழிவந்த நுகர்வுப்பழக்கமொன்றை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இங்கே புலாலுண்ணலின் பின்னாலுள்ள தூய்மைவாதத்தின் கருத்துருவாக்கம் மிருகங்களைக் காத்தல் என்ற ஒற்றைப்பொருளின்பாற்பட்டு வந்ததல்ல. மாறாக, தமிழ்த்தொன்மத்தினை உருமறைத்தலின் ஒரு பகுதியேயாகும். ‘அசைவ உணவு’ என்ற தூய்மைமறுப்பினை வைதீகத்தின்வழி பரப்பிய இந்துத்துவா, வடஇந்தியாவில் சமுத்திர புட்பம் என்று கூறி மீன்களை உண்ணுதலை, வெள்ளிக்கிழமைதோறும் வீடு கழுவி, பாத்திரங்கள் மாற்றி, அடுப்பு மெழுகி தூய்மையாளர்களாகக் காட்டிக்கொள்ளும் அப்பாவி மக்கள் அறியமாட்டார்கள். திணையோடிணைந்தவாழ்வில் கடலருகில் இருப்பவன் மீனைத்தான் சாப்பிடமுடியும். ஆனால் அவன் அசைவத்தை உண்ணுகையில் புனிதத்தை இழக்கிறான் என்று கட்டமைக்கப்பட்டதன் உள்ளிருக்கும் திணிப்பு உளவியலிலும் புரையோடிப்போய்க்கிடக்கிறது. தமிழர்களின் வழக்காறுகள் மீது திணிக்கப்படும் இந்த சமூக வன்முறையின் தொடர்ச்சியாகவே இறைச்சியும், மீனும், கள்ளும் உண்ட கிராமியக் கடவுளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆரியப் பிராமணனின் கைகளுக்குள் சென்றுகொண்டிருக்கின்றன. அண்மையில் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தமிழில் குடமுழுக்கு என்ற செய்தி பரவலாக எங்கும் அடிபட்டது. தமிழனின் மண்ணில், தமிழனின் வழிபாட்டுத்தளத்திலே தமிழிலே குடமுழுக்கு என்பது செய்தியாக வருமளவிற்கு சமசுக்கிருத வன்வளைப்பு நிகழ்ந்திருக்கின்றது. தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்குச் சென்றுவந்தவர்கள் அது கோயில் அல்ல, தமிழர்களின் கோட்டையாக இருந்த இடம் என்பதை இலகுவாக உணர்வார்கள். அந்தக் கோட்டையிலிருந்து மாற்றாரின் வன்வளைப்பிற்கெதிரான போரை எம் மூதாதையர் தொடுத்திருக்கக்கூடும். ஆனால் இன்று? புத்தர் சிலைகளும் இசுலாமியமும் கிறித்தவமும் எம் மக்களின் இயலாமைகளினூடே இருக்கும் இடைவெளிகளில் நுழைகின்றது எனச் சொல்லத் தெரிந்த எமக்கு, மேல்தட்டு வர்க்கத்தினருள் ஊடுருவியிருக்கும் சாயிபாபாக்களும் சீரடிபாபாக்களும் அனுமானும் கண்ணுக்குத் தெரிவதில்லை. மரபுவழி வழக்காறுகளை ஒதுக்கி, நாகரிகமடைந்தோர் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் சமூகம் சீரடி பாபாவுக்கு மதுவைப் படைத்து மகிழும் அளவில் கொண்டுவந்து விட்டிருக்கிறது இந்துத்துவா. அன்ன நடை நடக்கப்போய் தன் நடையும் கெட்ட கதையாக, தன் வழக்காறுகளையும் இழந்து வடஇந்திய வழக்காறுகளையும் ஏற்கமுடியாத நிலையிலிருக்கிறது மதத்தால் பிடியுண்ட எமது சமூகம். வைதீகப்பண்பாட்டு மடைமாற்றத்தின் அதிஉச்ச கேலிக்குரிய விடயம் திருமணத்தின்போது, பெண்கள் அணியும் பாணியிலான ஆடையை மணமகன் அணிவதுதான். அது மட்டுமல்லாது அன்றாட வாழ்வியலில் கூட பிறப்பு முதல் இறப்புவரைக்கும் ஊடுருவியுள்ள இந்த வைதீகத்தாக்கத்தினால் சமசக்கிருதமும் ஆரியப் பிராமணப் பண்பாடும் வாழ்வியல் முறைமையைத் தீர்மானிப்பனவாக மாறியிருக்கின்றன. வுழிபாட்டுமுறைகளும் மடைமாற்றங்களுக்கு உட்படுத்தப்படுகின்றது. முருக வழிபாடு முருகவழிபாடு என்பது திணைவழிபாடு என்பதற்கப்பால் அவன் தமிழர்களின் கடவுளாக இருந்ததனால் வைதீகம் அவனை கந்தபுராணத்தினூடாக (ஸ்)கந்தனாக்கி அவனையும் வைதீகத்தினுள் மடைமாற்றி உள்ளெடுத்துவிட்டது. தமிழர்களிடையே முருக வழிபாடு பண்டுதொட்டு வருகின்றது என்பதற்கு சங்கத்தமிழ் நூல்களில் சான்றுகள் இருப்பினும் முருகனது தோற்றம் தொடர்பாக திருமுருகாற்றுப்படை, பரிபாடல் போன்ற நூல்களுக்கும் அகம், புறம் நூல்களுக்குமிடையே வேறுபாடுகள் இருக்கின்றன. ஆயினும் ஆதிச்சநல்லூர் தாழி அடக்க காலத்திலேயே முருக வணக்கமுறை இருந்தது என்பதற்கு அகழ்வாராய்வு சான்றுகள் உள்ளன என்று பேராசிரியர் வானமாமலை அவர்கள் குறிப்பிடுகின்றார். மேலும் முருகன் வேலன் வெறியாட்டிலும் ஊர் முன்றலிலும் வழிபடப்பட்டிருப்பினும் முருகனுக்கு கோவில்களும் இருந்திருக்கின்றது என்பதனை முருகன் கோட்டம் என்ற சொல்லாடல் புறநானூற்றுச் செய்யுளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றதிலிருந்து கூறலாம் என்கிறார். ‘முருகு புணர்ந்தியன்ற வள்ளிபோல’ என்ற நற்றிணைப் பாடலின்வழி சங்க இலக்கியப்பரப்பில் முருகனுக்கு ஒரு மனைவியே கற்பனை செய்யப்பட்டிருக்கிறாள். வைதீகத்தின்வழி கட்டமைத்த கந்தனும் தமிழ்க்கடவுள் முருகனும் தமிழ்வழி வந்தோர்களாயினும் கந்தன் வைதீகப் புனிதத்தை தன்மீது ஏற்றி நிற்கின்றமையால் முருக வழிபாட்டை நாம் வரலாற்றுத் தொடர்ச்சியாக நோக்கி, மீட்டெடுத்தலும் காலத்தின் தேவையாகும். இந்து என்ற ஒற்றைச்சொல்லின் பின்னாலுள்ள அரசுருவாக்க பெரும் கோட்பாடும் அகண்ட பாரதக் கனவும் புரியாதவர்களாக இந்துக்களாக மாறிக்கொண்டிருக்கும் தமிழர்கள் இப்போதாவது விழிக்கவேண்டிய நிலைக்கு வந்துவிட்டோம். மொழியால், அரசியலால், ஆட்சியால் தமிழரை ஆண்டுகொண்டிருக்கும் இந்துத்துவா எமது மெய்யியலின் வழிவந்த வாழ்வியல் முறைகளையும் பறித்துக்கொண்டிருக்கின்றது. பட்டுவேட்டிக்கு விருப்பப்பட்டு கட்டியிழுந்த கோவணத்துண்டையும் பறிகொடுத்துவிட்டு, தனிநிலம் மட்டுமல்ல தனிமொழியைக் கூட இழந்துநிற்கப்போகிறோம். ஆரியத்தின் அரசியல்மொழியான இந்துத்துவா இந்தியா என்பதற்கான பொதுமொழியாக, பொது அரசியலாக இந்தியா என்ற பொது அடையாளத்தை உருவாக்குவதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. தேசிய இனங்களின் இறையாண்மையில் செல்வாக்குச் செலுத்துமளவிற்கு இந்துத்துவா தன் அரசியல் முன்னகர்வை தமிழகம், ஈழம் என தமிழர் வாழும் இடமெங்கும் நிகழ்த்தியுள்ளது. அரச பயங்கரவாதங்களின் கூட்டிணைவினூடு திணிக்கப்பட்டிருக்கும் நுண்ணரசியலான மதத்தினால், எம்மையே கருவிகளாக்கி எம் இனத்தை அழித்துக்கொண்டிருக்கின்றது. சித்தர்களும் புலவர்களும் பாடிய பாடல்களும் வாழ்வியல் கருத்துகளும் இருக்க, புரியாத மொழிகளிலே வழிபாடியற்றிக்கொண்டிருக்கும் மூடர்கூடத்தினுள் புதையுண்டு கிடக்கிறோம். உலகாய்தம், எண்ணியம், ஆசீவகம் போன்ற பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகள் வைதீகக் கருத்துகளாலும் களப்பிரர்களின் அரச வல்வளைப்புக்களாலும் சிதைக்கப்பட்டு, தமிழர் சமூகத்திலிருந்து வெளியேற்றப்பட்டன. எமது மரபைப் பொறுத்தவரையில், எமது வழக்காறுகள் அதன் இயங்கியல் சார்ந்து நெகிழ்வுத்தன்மை அற்றவை. வெளியிலிருந்து நோக்குகையில் அந்த நெகிழ்வற்ற தன்மை கட்டுப்பாடற்ற தன்மையாக தெரியக்கூடும். ஆனால் அந்த மரபானது கட்டிறுக்கமான மெய்யியலாலும் பண்பாட்டினாலும் பிணைக்கப்பட்டிருத்தலே பல பண்பாட்டு வன்வளைப்புகள் நிகழ்த்தப்பட்டபோதும் இன்றுவரைக்கும் ஆங்காங்கே எச்சங்களாகி நிற்கின்றது. அதனை மீட்டெடுத்தல் என்பது தமிழர்களின் இருப்பினை மீள வலியுறுத்தலுக்கான ஆரம்பப்புள்ளியாக அமையும். சங்ககாலத்திலே பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகளே ஆதிக்கம் பெற்ற கருத்தியலாக இருந்து வந்திருக்கின்றது. எனவே நாம் தேடும் எச்சங்கள் அந்தப் பொருள்முதல்வாத மெய்யியலின் கூறுகளாகவும் இருக்கக்கூடும். “தமிழம்” எனும் தமிழர்களின் மெய்யியல் இறையியலாக அமைப்பாக்கம் பெற வேண்டியது ஏன்? தமிழர் வழிபாடுகள் நிறுவனப்படுத்தப்படாமல் இருக்கின்றமையால் தான் நிறுவனப்பட்டிருக்கும் அயன் மதங்களும் அவைசொல்லும் கோட்பாடுகளும் ஊடுருவியிருக்கின்றன. வாழ்வியல்கள் செயற்கையாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் அந்த நிறுவனமாக்கலுக்குள் எமக்கான மெய்யியலை இழந்துவிடாமல், தமிழர் மரபிற்கியைந்த தமிழர் வழிபாட்டு முறைகளை ஒருசேர அமைப்பியலுக்குள்ளாக்கி அவை தமிழர்களுக்குரிய வழிபாட்டு முறையாகிய தமிழம் என்போம். பண்பாட்டுக் கலப்பினுள் வழக்காறுகள் மாறியிருப்பினும் தமிழர் மெய்யியலின் கூறுகள் தற்போது பயில்நிலையிலிருக்கும் வழக்காறுகளுக்குள் மறைந்திருக்கும். அந்த எச்சங்களை மீட்டெழுத்து ஒருங்கிணைத்து தமிழம் என்றும் தமிழர் சமயமொன்றைக் கட்டியெழுப்பப வேண்டியது தமிழ்த்தேசியம் எனும் தமிழர் வாழ்வியல் மற்றும் மக்கள்திரள் அரசியலுக்குத் தேவையாக இருக்கின்றதை யாரும் மறுக்க முடியாது. நாம் தமிழர். நமது இனம் தமிழினம். நமது மொழி தமிழ்மொழி. நமது பண்பாடு தமிழ்ப்பண்பாடு. நமது உணவுப்பழக்க வழக்கம் தமிழ் உணவுப்பழக்கம், நமது மருத்துவம் தமிழ் மருத்துவம். நமது மெய்யியல் தமிழ். நமது இறையியல் தமிழம். நமது சிந்தனைப்பள்ளி தமிழ்த்தேசிய சிந்தனைப் பள்ளி. நமது வாழ்வியல் தமிழ்த்தேசியம். -செல்வி– http://www.kaakam.com/?p=1792
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.