Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    18308
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Everything posted by ஏராளன்

  1. 27 NOV, 2023 | 08:17 PM இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே புதன்கிழமை மூன்று நாள் விஜயமாக வடக்கு மகாணத்திற்குச் செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் முதன் நாளான நாளையதினம் மதவாச்சியில் பாடசாலைகளுக்கான உதவித்திட்டங்களை கையளிக்கவுள்ளதோடு, அதனையடுத்து மன்னார் பியர் பகுதிக்கும், பின்னர் திருக்கேதீச்வரர் ஆலயத்துக்கும் செல்லவுள்ளார். தொடர்ந்து முதன்நாளின் இறுதி நிகழ்வாக இரவு நேர விருந்துபசாரத்துடன் வடக்கு மாகாண அரசியல்தரப்பினரைச் சந்தித்து உரையாடவுள்ளார். இரண்டாவது மற்றும் மூன்றாம் நாளான 30ஆம் மற்றும் முதலாம் திகதிகளில் நயினாதீவுக்குக்கான விஜயமொன்றை அவர் மேற்கொள்ளவுள்ளதோடு நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்துக்கும், நாகவகாரைக்கும் விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். தொடர்ந்து , யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நூறு பேருக்கான புலமைப்பரிசில்களை கையளிக்கும் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதோடு, தெரிவு செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு உதவிப்பொருட்களையும் கையளிக்கவுள்ளார். இதனைவிடவும், மதத்தலைவர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, டிசம்பர் மாதத்துடன் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இலங்கைக்கான கடமைகளை பூர்த்தி செய்யவுள்ளதோடு அதனையடுத்து அவர் அவுஸ்ரேலியாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமனம் பெற்றுள்ளார்.இந்நிலையில், உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயின் வடக்கிற்கான இந்த விஜயமானது பரியாவிடையளிப்பதாகவும், தனது காலத்தில் கிடைக்கப்பெற்ற ஒத்துழைப்புக்களுக்கு நன்றிகளை செலுத்தும் முகமாகவும் இடம்பெறவுள்ளது. முன்னதாக, இந்திய வெளிவிவகார அமைச்சானது, பெல்ஜியத்தில் தூதுவராக கடமையாற்றி வரும் சந்தோஷ் ஜாவை இலங்கைக்கான தனது நாட்டின் புதிய உயர்ஸ்தானிகராக பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/170408
  2. 27 NOV, 2023 | 04:44 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) நடிகர் அஜித் நடித்த ''சிட்டிசன்'' என்ற படத்தில் ''அத்திப்பட்டி''என்ற கிராமத்துக்கு நேர்ந்த கதியே இன்னும் 50 வருடங்களுக்கு பின்னர் மன்னார் தீவுக்கும் ஏற்படும். மன்னார் தீவு இருந்ததற்கான அடையாளங்களையே இல்லாமல் செய்யும் பணிகளை அவுஸ்திரேலியாவின் நிறுவனமும், அரசும் கனிய மணல் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் மன்னார் தீவில் முன்னெடுக்கிறது. மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் முன்னெடுக்கப்படும் இந்த அகழ்வாராய்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (27) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் சுற்றாடற்றுறை மற்றும் வனஜீவராசிகள், வனவிலங்குகள் பாதுகாப்பு அமைச்சுக்கான செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, மன்னார் தீவில் கனிய மணல் அகழ்வு அல்லது கனிய மணல் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் அவுஸ்திரேலியாவின் டைட்டானியம் சாம்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனம் அங்கு அகழ்வுப்பணிகளை முன்னெக்கிறது. மன்னார் தீவு மக்களின் விருப்பத்துக்கு மாறாக, அவர்களின் எதிர்ப்பையும் மீறி மன்னார் மாவட்டம் ஒரு காலத்தில் முற்றாக கடலுக்குள் மூழ்கக் கூடியவாறு இந்த கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான திட்டமிடல்கள் அரசின், அரச நிறுவனங்களின் ஆதரவோடு டைட்டானியம் சாம்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் துணை நிறுவனங்களோடு சேர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. மன்னார் மாவட்ட மக்கள் இந்த அகழ்வாராய்ச்சி பணியை நிறுத்தக்கோரி பாரிய ஆர்ப்பாட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அரசு அபிவிருத்தி என்ற பெயரில் அல்லது அங்கே கனிய மணல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக இந்த ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொள்கின்றது. இதனூடாக அங்குள்ள சாதாரண மக்களை ஏமாற்றி சுமார் 2000 முதல் 3000 ஏக்கர் வரையான காணிகளை அந்த மக்களின் வறுமைஇ அவர்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களிடம் விலை பேசி ஏறக்குறைய மன்னார் தீவில் மட்டும் 2600 மில்லியன் ரூபாவுக்கு காணிகள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் இந்த அமைப்புக்களினால் முன்னெடுக்கப்படுகின்றன. ஆழ்துளை கிணறுகள் மூலமாக இந்த அகழ்வாராய்ச்சி பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டாலும் அது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. சுமார் 40 அடி ஆழத்தில் இந்த அகழ்வாராய்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இது ஒருகட்டத்தில் நிச்சயமாக நன்னீரும் கடல் நீரும் கலந்து குடிநீர் பிரச்சினை ஏற்படுவதற்கான நிலையை உருவாக்குகின்றது. இதனால் மன்னார் தீவு மக்கள் மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். அரசு எந்த வகையில் இதற்கான அனுமதியை வழங்கியது என்பதுவே எமது கேள்வி. தென்னிந்திய நடிகர் அஜித் நடித்த ''சிட்டிசன்''என்ற படத்தில் ''அத்திப்பட்டி''என்ற கிராமமே காணாமல் போகும். அரசியல்வாதிகள் அதிகாரிகள் ஆகியோரின் ஊழல் மோசடியால் இந்த கிராமம் அழிந்தது. கிராமத்திலிருந்து மக்களை வெளியேற்றி தமது சொந்த நலன்களுக்காக அரசியல்வாதிகள் அந்தக் கிராமத்தை முற்றாக்கக்கடலுக்குள் அமிழ்த்தி விட்டு செய்த ஒரு காரியம்தான் தற்போது மன்னார் தீவிலும் நடக்கின்றது. இன்னும் ஒரு 50 வருடங்களுக்கு பின்னர் மன்னார் தீவு அங்கு இருக்காது. அப்படி ஒரு தீவு இருந்ததற்கான அடையாளங்களையே இல்லாமல் செய்கின்ற திட்டத்திற்கு இந்த சுற்று சூழல் அமைச்சும் அரசும் உடந்தையாக இருக்கின்றன. அரச அதிகாரிகளும் அது அரசின் உத்தரவு, மேலிட உத்தரவு எனக்கூறிக்கொண்டு வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றனர்.இந்த திட்டங்களை மன்னார் தீவு மக்கள் விரும்பவில்லை. மீன் வளம் இல்லாது போகும் என மீனவர்கள் கூறுகின்றனர். எனவே இந்த அகழ்வாராய்ச்சி பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.மன்னார் தீவு காப்பாற்றப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/170394
  3. மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் ஹர்திக் பாண்டியா - பின்னணியில் நடந்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் குஜராத் டைட்டன்ஸ்அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் திரும்பியுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் யார்? மும்பை இந்தியன்ஸ் அணி அன்று 10 லட்ச ரூபாய்க்கு வாங்கி ஹர்திக் பாண்டியாவை திரும்பப் பெற தற்போது எவ்வளவு பணம் கொடுத்துள்ளது? பின்னணியில் நடந்தது என்ன? ஐபிஎல் 2024ம் ஆண்டு சீசனுக்காக வரும் டிசம்பர் 19-ம் தேதி மினி ஏலம் துபாயில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, ஒவ்வொரு அணியிலிருந்து வீரர்களை விடுவித்தல், வீரர்களை பரிமாற்றம் செய்தல் போன்றவை அணிக்குள்ளாகவே பரஸ்பரத்துடன் நடந்து வருகிறது. ஐ.பி.எல். மினி ஏலம் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த பரஸ்பர பரமாற்றம் டிசம்பர் 12ம் தேதிவரை நடத்திக்கொள்ளலாம். அதன்பின் டிசம்பர் 19ம் தேதி நடக்கும் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்கள் வசம் இருக்கும் தொகைக்கு ஏற்ப வீரர்களை ஏலத்தில் விலைக்கு வாங்க முடியும். அந்த வகையில் நேற்று ஐபிஎல் அணிகளுக்கு இடையே வீரர்களைப் பரிமாற்றம் செய்தல், விடுவித்தல், விலைக்கு வாங்குதல் போன்றவை நடந்தன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் விடுவித்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை மீண்டும் வாங்க குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் விருப்பம் தெரிவித்தது. ஹர்திக் பாண்டியா - பின்னணியில் நடந்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES இது தொடர்பாக இரு அணிகளின் நிர்வாகிகளுக்கும் இடையே நேற்று நடந்த பேச்சுவார்த்தை முடிவில் எந்த உறுதியான முடிவும் எட்டாததையடுத்து, மாலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியே ஹர்திக் பாண்டியாவை தக்கவைப்பதாக அறிவித்தது. ஆனால், கடைசி கட்டப் பேச்சுவார்த்தையில் ஹர்திக் பாண்டியாவை வாங்கிய ரூ.15 கோடிக்கும் அதிகமாக விலை கொடுத்து வாங்க மும்பை இந்தியன்ஸ் முன்வந்ததாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால், ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்வது குறித்து மும்பை அணி நிர்வாகவோ, குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகமோ இன்று காலை வரை அதிகாரபூர்வமாக அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா பட மூலாதாரம்,GETTY IMAGES இந்நிலையில், ஐபிஎல் நிர்வாகம் இன்று காலை வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கையின்படி “ குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக கடந்த 2 சீசன்களாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா, தான் முதன்முதலாக இருந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கே திரும்புகிறார். இது தொடர்பாக இரு அணி நிர்வாகிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முடிந்தது. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 2 சீசன்களாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாகச் செயல்பட்டார். முதன் முதலில் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா அணிக்காக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து கடந்த சீசனில் பைனல்வரை அணியைஅழைத்துச் சென்றார். மற்றொரு தனி வர்த்தகத்தில் மும்பை இந்தியன்ஸ் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனை ஆர்.சி.பி. அணி விலைக்கு வாங்கியுள்ளது. கடந்த டிசம்பரில் கேமரூன் கிரீன் ரூ.17.50 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்டார்” என்று தெரிவித்துள்ளது. மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் பட மூலாதாரம்,EMPICS மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீடா எம் அம்பானி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “ ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வரவேற்கிறோம். மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தில் மீண்டும் அவரை இணைப்பது மகிழ்ச்சிக்குரிய தருணம். மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திரமான ஹர்திக் இன்று இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம். அவரின் வருகை எங்களுக்கு உற்சாகமளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஆகாஷ் அம்பானி ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் “ மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியாவை மீண்டும் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மகிழ்ச்சியான தாய்வீடு திரும்புதல், ஹர்திக் அணியில் இருந்தாலே அணிக்குள் சமநிலையான போக்கு எந்த அணிக்கும் ஏற்படும். மும்பை அணியில் ஹர்திக் இருந்த போது வெற்றிகரமாக இருந்தது, 2வது முறையாக அணிக்குத் திரும்பிய ஹர்திக் பெரிய வெற்றியைத் தருவார் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார் ஹர்திக் பாண்டியாவுக்கு 15 கோடி ரூபாய் தவிர , பரிமாற்றக் கட்டணத்தையும் சேர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கி இருப்பதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அன்று ரூ.10 லட்சம் இன்று ரூ.15 கோடி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த இரு சீசன்களில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகச் செயல்பட்டு, 30 இன்னிங்ஸ்களில் 833 ரன்கள் சேர்த்துள்ளார். ஹர்திக் பாண்டியா சராசரி 41.65 ஆகவும், 133 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளார், 11 விக்கெட்டுகளையும் ஹர்திக் வீழ்த்தியுள்ளார். 2015ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.10 லட்சத்துக்கு ஹர்திக் பாண்டியா அன்கேப்டு வீரராக வாங்கப்பட்டார். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்ற 2015, 2017, 2019, 2020ம் ஆண்டுகளில் அணியில் முக்கியமான இடத்தை ஹர்திக் பாண்டியா பெற்றார். இதையடுத்து, 2021ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஹர்திக் பாண்டியாவை விடுவித்து அவரை ஏலத்தில் மும்பை அணி எடுத்து பின்னர் 2022ம் ஆண்டு விடுவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய அங்கமாக இருந்த ஹர்திக் பாண்டியாவை அந்த அணி நிர்வாகம் விடுவித்தது அனைவருக்குமே வியப்பாக இருந்தது. 2021 ம் ஆண்டு ஏலத்தில் மும்பை அணி நிர்வாகம் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், பும்ரா, சூர்யகுமார் யாதவ், பொலார்ட் ஆகியோரை மட்டும் தக்கவைத்து பெரும்பாலான வீரர்களை விடுவித்தது. இதைத் தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.15 கோடிக்கு ஹர்திக் பாண்டியாவை ஏலத்தில் எடுத்து தங்கள் அணியின் கேப்டனாக நியமித்தது. கேப்டனாக செயல்பட்ட முதல் சீசனிலேயே ஹர்திக் பாண்டியா குஜராஜ் டைட்டன்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்து அசத்தினார். கடந்த சீசனில், பைனல் வரை குஜராத் அணியை அழைத்துச் சென்ற பெருமை ஹர்திக் பாண்டியாவையே சாரும். கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி முக்கிய வீரர்கள் இல்லாமல் மிகவும் மோசமாகச் செயல்பட்டது. நாக்அவுட் சுற்றுக்குள்கூட முன்னேற முடியாமல் வெளியேறியது. இதைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 19 மினி ஏலத்துக்குள் ஏதேனும் பெரிய முடிவுடன் மும்பை இந்தியன்ஸ் வரும் என்று தகவல்கள் வெளியாகின. அதன்படி, ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி நிர்வாகம் மீண்டும் அணிக்குள் கொண்டு வந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியை மீண்டும் அணிக்குள் கொண்டுவருவதற்காக 11 வீரர்களை விடுவித்து ரூ.15.25 கோடியை பெற்றுள்ளது. இது தவிர கேமரூன் கிரீனை ரூ.17.50 கோடிக்கு ஆர்சிபி அணியிடம் விலைக்கு விற்பதால் கூடுதலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கையிருப்பு அதிகரிக்கும். குஜராத் அணிக்கு புதிய கேப்டன் பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் ஹர்திக் பாண்டியா சென்றுவிட்டதையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 2024 சீசனில் யார் தலைமையில் களமிறங்கும் என்ற கேள் வி எழுந்தது. இதனிடையே, 2024 ஐபிஎல் சீசனுக்கு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக சுப்மான் கில்லை குஜராத் அணிநிர்வாகம் நியமித்து அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக அவர் இருந்துள்ளார். சீனியர் கிரிக்கெட்டில் சுப்மான் கில் முதல்முறையாக கேப்டன் பதவியை ஏற்க உள்ளார். அணி கேப்டனாக குஜராத் அணி நிர்வாகம் நியமித்தது குறித்து சுப்மான் கில் கூறுகையில் “குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பு ஏற்பதில் பெருமை கொள்கிறேன். என்னை அணித் தலைவராக நியமித்த அணி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். இரு சீசன்கள் அற்புதமாக இருந்தது. எங்களின் அற்புதமான அணியை வழிநடத்திச் செல்ல அடுத்த சீசனை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES சுப்மான் கில்லின் கேப்டன் அனுபவம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மான் கில்லுக்கு ஏற்கெனவே கேப்டன் அனுபவம் இருந்துள்ளது. 2018ம் ஆண்டு நடந்த 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனாக சுப்மான் கில் செயல்பட்டுள்ளார். அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்தது பிரித்வி ஷா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த துலீப் டிராபி கோப்பைக்கான தொடரில் இந்தியா ப்ளூ அணிக்கு கேப்டனாகவும் சுப்மான் கில் செயல்பட்டுள்ளார். 2019ம் ஆண்டு நடந்த தியோதர் டிராபியிலும், இந்தியா –சி பிரிவு அணிக்கும் கேப்டனாக சுப்மான் கில் இருந்து அணியை வழிநடத்தியுள்ளார். இளம் வயதிலேயே இந்திய அணியை வழிநடத்திய பெருமை சுப்மான் கில்லுக்கு உண்டு. இதற்கு முன் விராட் கோலி 21 வயது 124 நாட்களில் 2009-10ம் ஆண்டு தியோதர் டிராபில் கேப்டனாக இருந்திருந்தார். அவரை முறியடித்த சுப்மான் கில் 20 வயது 57 நாட்களில் தியோதர் டிராபியில் இந்திய –சி அணிக்கு கில் கேப்டனாக செயல்பட்டார். https://www.bbc.com/tamil/articles/c4n02z16xypo
  4. தங்கைக்கு வாழ்த்துக்கள். எங்களிடம் பொதுவான நிதிக்கட்டமைப்பு ஒன்று தேவை. (தனிநபர்கள் கையாடல் செய்ய முடியாதவாறு) அதனூடாக கல்வி, மருத்துவம், நிலமற்ற ஏழைகளுக்கு நிலம்(வீட்டுத்திட்டம் வரும்போது அரசு வீடு கட்டிக் கொடுக்கும்) போன்றவற்றுக்கு உதவலாம். மேலே குறியிட்ட நன்றி விருப்புக்குறி அக்னிக்கானது.
  5. Published By: VISHNU 27 NOV, 2023 | 02:28 PM உறவுகளை தகுந்த முறையில் நினைவு கூருவதற்கு எவ்விதமான தடைகளும் இல்லை என கட்டளை வழங்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தெரிவித்தார். பொலிஸார் பல்வேறு தடைகளை விதிக்கின்றார்கள் என கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் எல்லா வழக்குகளிலும் நகர்த்தல் பத்திரம் மூலம் தாக்கல் செய்து நீதிமன்றத்தின் இடம்பெற்ற கட்டளையின் பின்னர் இவ்வாறு தெரிவித்தார், தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இன்றையதினம் (27) முல்லைத்தீவு நீதவானால் மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பாக 24.11.2023 வழங்கப்பட்ட இடைக்கால கட்டளை தொடர்பாக எங்களால் பிரஸ்தாபிக்கப்பட்டது. குறித்த கட்டைளையை ஒவ்வொரு நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரிகளும், ஒவ்வொரு விதமாக கூறி பொதுமக்களின் செயற்பாட்டுக்கு இடையூறாக இருக்கின்றார்கள் என்பது தொடர்பாக நீதவான் கவனத்திற்கு கொண்டுவந்தோம். குறிப்பாக சிவப்பு, மஞ்சள் கொடிகளை கட்டுவதற்கும், கார்த்திகை பூ வைப்பதற்கும், துயிலும் இல்லம் எனும் வசனம் தாங்கிய பதாதை காட்சிப்படுத்துவது. இறந்தவர்களை நினைவு கூரும் விதமாக இசைக்கப்படும் சோக கீதம் இசைக்க தடை என பொலிஸார் பல்வேறு தடைகளை விதிக்கின்றார்கள் என கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் எல்லா வழக்குகளிலும் நகர்த்தல் பத்திரம் மூலம் தாக்கல் செய்துள்ளோம். இதனை ஏற்ற கொளரவமன்று தெளிவான கட்டளை ஒன்றை ஆக்கியிருக்கின்றது. பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காத வண்ணம் இறந்த ஆன்மாக்களுக்கு நினைவு கூருவதற்கு எவ்விதமான தடைகளும் இல்லை எனவும், எம்மால் கூறப்பட்டவாறு கார்த்திகை பூவினை இறந்தவர்களின் ஆத்மா நினைவிடத்திற்கு பாவிப்பதற்கும், சிவப்பு மஞ்சள் கொடி பாவிப்பதற்கும்,சோக இசைகள் ஏற்றவாறு ஒலிப்பதற்காக ஒலிபெருக்கியை பயன்படுத்தவும்,மாவீரர் எனும் வசனம் பாவிக்காது துயிலும் இல்லம் எனும் பதாதையை வைக்கவும் மன்று அனுமதி வழங்கி இருக்கின்றது. இது உண்மையில் இறந்தவர்களின் உறவுகளுக்கு நல்ல செய்தி என்பதும் அவர்கள் தங்களுடைய உறவுகளை தகுந்த முறையில் நினைவு கூருவதற்கும் நீதிமன்றினால் வழங்கப்பட்ட கட்டளையாகும். இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் பலர் என்னுடன் இணைந்து ஆஜராகி இருந்தார்கள்.இந்த வழக்கிலே யாருக்கு எதிராக கட்டளை வழங்கப்பட்டதோ அவர்கள் இங்கே முன்னிலையாகி இந்த வழக்கிற்கான தீர்ப்பினை பெற்றுக் கொண்டோம் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/170367
  6. படக்குறிப்பு, விடுதலை செய்யப்பட்ட பாலத்தீனப் பெண் கைதி சாரா அல்-சுவைஸா 2 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்துவந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, இருதரப்பும் தாம் சிறைப் பிடித்த மக்களை கடந்த வெளிக்கிழமையிலிருந்து (நவம்பர் 27) விடுதலை செய்து வருகின்றனர். போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி, ஹமாஸ் 50 பணயக் கைதிகளை விடுவிக்க, இஸ்ரேல் 150 பாலத்தீனக் கைதிகளை விடுவிக்க வேண்டும். இது நான்கு நாட்களுக்குள் முடிக்கப்படவேண்டும். இதுவரை, இஸ்ரேல் தனது சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 117 பாலத்தீனக் கைதிகளையும், ஹமாஸ் தாம் பணயக் கைதிகளாகப் பிடித்துவைத்திருந்த 40 பேரையும் விடுவித்திருக்கின்றன. இரு தரப்பிலிருந்தும் விடுவிக்கப்பட்டவர்கள் தாம் அனுபவித்த துயரங்களைப் பகிர்ந்துகொண்டனர். விடுவிக்கப்பட்ட பாலத்தீனக் கைதிகள் இன்று (நவம்பர் 27) ஹமாஸ் 17 பணயக்கைதிகளை விடுவித்ததற்குப் பதிலாக, இஸ்ரேல் 39 பாலத்தீனக் கைதிகளை விடுவித்திருக்கிறது. இதன்படி, வெள்ளிக்கிழமையிலிருந்து விடுவிக்கப்பட்ட மொத்தக் கைதிகளின் எண்ணிக்கை 117 ஆகியிருக்கிறது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலிருக்கும் ராமல்லாவில் அவர்கள் விடுவிக்கப்பட்டதும் அங்கிருந்த மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரத்துடன் அவர்களை வரவேற்றனர். விடுவிக்கப்பட்ட பாலத்தீனக் கைதிகள் அழைத்துவரப்பட்டப் பேருந்தைச் சுற்றிக் கூடிய மக்கள் ஆரவாரம் செய்தும், கொடிகளை அசைத்தும் அவர்களை வரவேற்றனர். ஹமாஸுடன் செய்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல், சிறையிலிருந்து விடுவிப்பதற்காக 300 பாலத்தீனக் கைதிகளின் பட்டியலைத் தயார் செய்திருக்கிறது, அதில் பெரும்பாலானவர்கள் பதின்பருவ ஆண்கள். அதன்படி பாலத்தீனர்களை விடுவித்து வருகிறது. ‘இஸ்ரேல் சிறையில் அவமானம், சித்திரவதைகள்’ இஸ்ரேலால் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்ட முதல் பாலத்தீனக் கைதிகளில் ஒருவர், பெண் கைதியான சாரா அல்-சுவைஸா. இவர் ஒரு மாதம் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாகக் கூறினார். அவர், இஸ்ரேல் சிறையில் இருந்தது மிகவும் ‘அவமானகரமான’ அனுபவமாக இருந்தது என்றார். பாலத்தீனக் கைதிகள் ஒருவரை ஒருவர் அடையாளம் காணவோ, உதவி செய்து கொள்ளவோ முடியாதபடி வைக்கப்பட்டிருந்ததாகவும், சிலர் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். கைதிகளின் மீது ‘பெப்பர் ஸ்ப்ரே’ எனப்படும் மிளகாய்ப் பொடி ஸ்ப்ரே அடிக்கப்பட்டது என்றார் அவர். மேலும், பாலத்தீனக் கைதிகளை இஸ்ரேல் அதிகாரிகள் இருட்டு அறைகளில் அடைத்து வைத்திருந்ததாகவும், அவர்கள் குளிரில் அவதிப்பட்டதாகவும் தெரிவித்தார். “ஹமாஸ் தான் எங்கள் துயரத்தைப் புரிந்துகொண்டனர்,” என்றார் அவர். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, விடுவிக்கப்பட்ட பாலத்தீனக் கைதிகள் அழைத்துவரப்பட்ட போது மக்கள் ஆரவாரம் செய்தும், கொடிகளை அசைத்தும் அவர்களை வரவேற்றனர் வீட்டுகாவலில் இருந்து விடுவிக்கப்பட்ட சிறுவன் கடந்த ஆகஸ்ட் மாதம் இஸ்ரேலிய குடியிருப்புப் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச முற்பட்டதாகக் கைதுசெய்யப்பட்ட 14 வயது சிறுவனான அப்துல்ரகுமான் அல்-ஸகல், வீட்டுக்காவலில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டார். அல்-ஸகல் தலையில் சுடப்பட்டும், உடலின் கீழ்ப்பகுதியில் அடுபட்டும், கிழக்கு ஜெருசலேமின் சில்வான் கிராமத்தில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் மருத்துவமனையில் இருந்ததனால், அவர் இல்லாமலே அவருக்கு எதிரான வழக்கு நடந்துகொண்டிருந்தது. ஆனால், அவரது குடும்பத்தினரின் கூற்றுப்படி அந்தச் சிறுவன் ரொட்டி வாங்குவதற்காகக் கடைக்குச் சென்றிருந்தபோது இஸ்ரேலியப் படையினரால் சுடப்பட்டார். அவர் விடுவிக்கப்பட்டதன் அடையாளமாக, தனது காலில் மாட்டப்பட்டிருந்த ஒரு மின்னனு பிரேஸ்லெட்டைக் கழற்றினார். ‘முழுமையான மகிழ்ச்சி இல்லை’ இஸ்ரேல் விடுவித்திருக்கும் மற்றொரு சிறார் கைதியான முகமது அல்-அன்வரின் தாய், தம்மால் முழுமையாக மகிழ்ச்சியடைய முடியவில்லை என்றார். “காஸாவில் இத்தனை மக்கள் கொல்லப்பட்டிருக்கும் போது எங்களால் முழுமையாக மகிழ்ச்சியாக இருக்க முடியாது,” என்று ஒரு காணொளியில் அவர் பேசினார். பட மூலாதாரம்,FAMILY OF ELMA AVRAHAM படக்குறிப்பு, ஹமாஸ் விடுவித்தபின் அவ்ராம் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார் ‘ஹமாஸ் விடுவித்த பெண் மோசமான நிலையில் உள்ளார்’ இதேபோல், ஹமாஸ் இஸ்ரேலியப் பணயக்கைதிகளை மிகவும் மோசமாக நடத்தியிருப்பதாக இஸ்ரேலியத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஹமாஸ் குழுவால் விடுவிக்கப்பட்ட 84 வயதான எல்மா அவ்ராம் என்ற பெண், ‘மருத்துவ ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக’ இஸ்ரேலிய மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஹமாஸ் இன்று விடுவித்த 17 பணயக்கைதிகளில் ஒருவரான அவ்ராம், ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அம்மருத்துவமனையின் தலைமை மருத்துவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவ்ராமின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவரது உயிர் ஆபத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அவருக்கு அவசரச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறியிருக்கிறார். பட மூலாதாரம்,FAMILY HANDOUT படக்குறிப்பு, மாயன் ஸின், இத்தனை நாட்கள் தனது மகள்களின் நிலையை எண்ணி பெரும் அச்சத்தில் இருந்ததாகவும், எதுவும் நிச்சயமில்லாமல் இருந்ததாகவும் கூறினார் தாயுடன் ஒன்றிணைந்த மகள்கள் பணயக் கைதிகளாகப் பிடித்துவைத்திருந்த 8 வயதான எலாவையும், 15 வயதான டாஃப்னாவையும் ஹமாஸ் இன்று விடுவித்தது. அவர்களது தாய் மாயன் ஸின், இத்தனை நாட்கள் தனது மகள்களின் நிலையை எண்ணி பெரும் அச்சத்தில் இருந்ததாகவும், எதுவும் நிச்சயமில்லாமல் இருந்ததாகவும் கூறினார். “51 நாட்கள் நம்பிக்கையிலும் அவநம்பிக்கையிலும் மாறிமாறி இருந்தோம். இப்போது அவர்கள் திரும்பி வந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். ஆனால். அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப சிலகாலம் ஆகும்,” என்றார். மேலும், இன்னும் விடுவிக்கப்படாத பணயக்கைதிகளை நினைத்து வருந்துவதாகவும், அவர்கள் திரும்பி வரும்வரை என் இதயம் முழுமையடையாது,” என்றார். பட மூலாதாரம்,FAMILY HANDOUT படக்குறிப்பு, அவிகைல் இடான் கடத்தப்பட்டபோது அவருக்கு மூன்று வயதுதான் ஆகியிருந்தது. ஹமாஸின் பிடியிலிருந்தபோது அவருக்கு 4 வயதானது ஹமாஸ் பிடியில் பிறந்த நாளைக் கழித்த 4 வயது சிறுமி ஹமாஸ் விடுவித்த பணயக்கைதிகளில் 4 வயதான அமெரிக்க-இஸ்ரேலியச் சிறுமி அவிகைல் இடானும் ஒருவர். அவர் கடத்தப்பட்டபோது அவருக்கு மூன்று வயதுதான் ஆகியிருந்தது. ஹமாஸின் பிடியிலிருந்தபோது அவருக்கு 4 வயதானது. கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி, தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்தியபோது, இடானின் வீட்டில் புகுந்து அவரது பெற்றோரைக் கொலைசெய்துவிட்டு குழந்தையைக் கடத்திச் சென்றனர். இடானின் குடும்பம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் நிம்மதியை விவரிக்க வார்த்தைகள் இல்லையென்று கூறியிருக்கின்றனர். இடான் விடுவிக்கப்பட்டதைப் பற்றிப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், குழந்தை அவிகைல், ‘கொடூரமான அதிர்ச்சியில்’ இருப்பதாகவும், அவள் அனுபவித்த துயரத்தை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்றும் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cd1pe3yvenwo
  7. Published By: VISHNU 27 NOV, 2023 | 03:13 PM மட்டக்களப்பு மாவடிமுன்மாரி, தாண்டியடி, தரவை மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தல் நினைவேந்தல் செய்வதற்கு அனுமதியளித்ததுடன் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் சின்னங்கள் கொடிகள் படங்கள் பயன்படுத்த கூடாது திங்கட்கிழமை (27) ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் இன்று நினைவேந்தல் செய்வதை தடைசெய்ய கோரி வாழைச்சேனை, வவுணதீவு, சந்திவெளி, கொக்கட்டிச்சோலை, வாகரை, பொலிசார் இன்நாள் முன்னாள் நா.உறுப்பினர்கள் மற்றும் தமிழ் கட்சிகளின் செயற்பாட்டாளர்கள் உட்பட ஒவ்வொரு பொலிஸ் நிலையமும் தலா 20 பேருக்கு எதிராக மட்டக்களப்பு ,வாழைச்சேனை, நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருந்தனர். இந்த நிலையில் இந்த தடை உத்தரவுக்கு எதிராக இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி நா.உறுப்பினர் எஸ்.கஜேந்திரன், கட்சி தேசிய அமைப்பாள் த.சுரேஸ், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின்களான ஞா.சிறிநேசன், பா.அரியேந்திரன் உட்படவர்கள் சிரேஷட் சட்டத்தரணி பிறேம்நாத், விஜயகுமார் உட்பட 7 சட்டத்தரணிகள் மூலம் நீதிமன்றில் முன்நகர்வு பத்திரம் விண்ணப்பித்தனர். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் இறந்தவர்களுக்கு நினைவேந்தல் செய்ய உரிமையுண்டு எனவும் குறித்த மாவீரர் துயிலும் இல்லங்களில் மக்கள் சுயமாக நினைவேந்தலை அனுஸ்டிக்க முடியம் எனவும் அதற்கு அனுமதியளித்ததுடன் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் சின்னங்கள்,கொடிகள், புகைப்படங்கள் பயன்படுத்தகூடாது எனவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார் எனவே மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு வருகை தந்து நினைவேந்தலில் அலை அலையாக திரண்டு ஈடுபடுமாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணி நா.உறுப்பினர் எஸ்.கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின்களான ஞா.சிறிநேசன், பா.அரியேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/170371
  8. அமெரிக்காவில் பாலஸ்தீன பல்கலைகழக மாணவர்கள் மூவர் மீது துப்பாக்கிசூடு Published By: RAJEEBAN 27 NOV, 2023 | 09:54 AM அமெரிக்காவின் வேர்மன்டில் உள்ள பல்கலைகழகமொன்றிற்கு அருகில் மூன்று பாலஸ்தீனிய மாணவர்களை இலக்குவைத்து துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. வேர்மன்ட் பல்கலைகழக வளாகத்தில் நபர் ஒருவர் பாலஸ்தீன மாணவர்கள் மூவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அராபிமொழியில் உரையாடிக்கொண்டிருந்தவேளை அராபிய ஸ்கார்வ் அணிந்திருந்தவேளை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது ஒருவர் கடும்காயங்களுக்குள்ளாகியுள்ளார் சந்தேகநபரை தேடிவருகின்றோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெறுப்புணர்வின் காரணமாக இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என குடும்பத்தவர்கள் வேண்டுகோள் விடுத்ள்ளனர். https://www.virakesari.lk/article/170328
  9. 27 NOV, 2023 | 11:19 AM 25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காத்தான்குடியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார். காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் வவுனியாவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்து புதிய காத்தான்குடி கர்பலா பகுதிகளில் வைத்தே ஐஸ்போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/170348
  10. Published By: RAJEEBAN 27 NOV, 2023 | 11:11 AM மாவீரர் நாள் மரணமான உறவினர்களைத் தமிழர்கள் நினைவுகூரும் நாள் மட்டுமன்றி தமது எதிர்காலத்தைத் தாமே தீர்மானித்து அரசின் அடக்குமுறை இன்றி வாழும் அரசியல் சட்டகத்தைப் புரிந்து தமிழ்த் தேசத்தைப் பலப்படுத்துவதற்கான நாளாகவும் அமைகிறது என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பான பேர்ள் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இன்று மாவீரர் நாளில், இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும், புலம்பெயர்ந்தும் வாழும் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் ஒன்றுசேர்ந்து, சிங்கள பௌத்த தேசியவாத அரச அடக்குமுறையில் இருந்து தமிழர்களை விடுவிக்கப் போராடியவர்களை நினைவுகூருகிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மரணமான முதல் போராளியான லெப். சங்கரின் நினைவு நாளான இந்நாள், இலங்கை அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் மரணமான அனைவரையும் நினைவுகூரும் நாளாகவும் விளங்குகிறது. நினைவேந்தல்களைச் சட்டப்படி தடை செய்வதற்கு முயற்சிகள் தொடரும் நிலையிலும், தற்காலிக நினைவுவிடங்கள் பாதுகாப்புப் படையினரால் வன்முறையான வழியில் அழிக்கப்படும் சூழலிலும், அரசின் தலைமையில் இடம்பெறும் அச்சுறுத்தல், கண்காணிப்பு, துன்புறுத்தல் என்பவற்றை மேலும் ஒரு வருடகாலம் எதிர்த்து, நினைவேந்தலுக்கான தமது உரிமைக்காகத் தமிழர்கள் எப்போதும்போல் துணிவுடன் இருக்கிறார்கள். ஆயுதப் போர் முடிவடைந்து ஏறத்தாழ 15 வருடங்களாகும் நிலையில், சிங்கள பௌத்த தேசியவாத நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்திட்டம் முழுவீச்சில் தொடர்கிறது. தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தில் பெருமளவான சிங்களமயமாக்க முயற்சிகள் இடம்பெற்று, காணி அபகரிப்பு, தமிழர் வழிபாட்டு இடங்கள் அழிக்கப்படுதல், சட்டவிரோதமாக பௌத்த விகாரைகள் கட்டப்படுதல் என்பன அதிகரிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சிங்கள கொள்கை வகுப்பாளர்களும், பௌத்த பிக்குகளும் வன்முறைத்தன்மை அதிகரிக்கும் சிங்கள பௌத்த தேசியவாத கருத்துகளைப் பிரபல்யப்படுத்துகிறார்கள். மீளிணக்கம், தமிழர் விடயங்களில் முன்னேற்றம் என்பன குறித்த உறுதிமொழிகளைச் சர்வதேச சமூகத்திற்கு வழங்கும் இலங்கை அரசு, மறுபுறம் நம்பகத்தன்மையுள்ள வகையில் குற்றம் சுமத்தப்பட்ட போர்க் குற்றவாளிகளை அதிகாரமுள்ள அரச உயர் பதவிகளுக்கு வெளிப்படையாக நியமிக்கிறது. பாதுகாப்புக்கான வீங்கிய நிதி ஒதுக்கீடும், தமிழர் வாழும் வடக்குக் கிழக்கில் நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது விகிதாசாரத்திற்கு அதிகமான இராணுவ மயமாக்கலுமாக முன்னைய அரசுகளினதும், தற்போதைய அரசினதும் சிங்கள பௌத்த தேசியவாத கொள்கைகள் நாட்டில் தொடர்ந்தும் அழிவை ஏற்படுத்துகின்றன. இலங்கை முழுவதையும் பாதிக்கும் சிங்கள பௌத்த பெரும்பான்மைவாத கட்டமைப்புக்குத் தமிழர்களின் எதிர்ப்புப் பலமானதாகவும், வளங்குன்றாததாகவும் விளங்கிறது. தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் தமிழ் இளையோர் ஆயுதம் ஏந்துவதற்குப் பல தசாப்தங்களுக்கு முன்பே ஆரம்பமாகியது. 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு நடைமுறையில் இருந்த தமிழர்களின் அரசு, பன்முகத்தன்மை கொண்டிருந்து, சில வருடங்கள் மட்டும் நீடித்தாலும், தமிழர்கள் சுதந்திரத்தை அனுபவித்ததுடன், அடிமட்ட ஆதரவுடன் அது கட்டியெழுப்பப்பட்டது. இந்தக் கட்டமைப்புகள் அழிவடைந்துவிட்டாலும், தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தயக்கமின்றித் தொடர்வதுடன், தமிழர்களின் தேசிய நாட்காட்டியில் மிக முக்கியமான நினைவேந்தலாக மாவீரர் நாள் விளங்குகிறது. மாவீரர் நாள் மரணமான உறவினர்களைத் தமிழர்கள் நினைவுகூரும் நாள் மட்டுமன்றி, தமது எதிர்காலத்தைத் தாமே தீர்மானித்து, அரசின் அடக்குமுறை இன்றி வாழும் அரசியல் சட்டகத்தைப் புரிந்து, தமிழ்த் தேசத்தைப் பலப்படுத்துவதற்கான நாளாகவும் அமைகிறது. இலங்கை அரசுக்குப் பொறுப்புள்ள போர்க் குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை போன்றவற்றுக்கு இலங்கை அரசிடம் இருந்து தமிழர்களுக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. இலங்கையின் ஒற்றையாட்சி முறையில் நிலவும் - இனவாதமும், பகுத்தறிவற்றதும், உறுதித்தன்மையைச் சீர்குலைப்பதுமான - ஆட்சி, கடுமையாக இராணுவ மயமாக்கப்பட்ட வடக்குக் கிழக்கில் தமிழர்களையே மிக அதிகமாகப் பாதிக்கிறது. இலங்கைத் தீவின் பொருளாதார, அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு, பன்முகத்தன்மை கொண்டதும், இராணுவ நீக்கம் செய்யப்பட்டதும், அதிகாரங்கள் பகிரப்பட்டதுமான எதிர்காலம் குறித்த தொலைநோக்குத் தேவைப்படுகிறது. தமிழ்த் தேசம், கொழும்பு அரசின் தோல்வியடைந்த கொள்கைகளில் இருந்து தப்பி, உலகுடன் அரசியல் பொருளாதார தொடர்புகளைக் கொண்டிருப்பதை உள்ளடக்கிய அதிகாரப் பகிர்வும் அர்த்தமுள்ள சுயநிர்ணய உரிமையுமே தமிழர்களுக்கான நிலையான அரசியல் தீர்வுக்கான ஒரே வழியென்பது தெளிவாகிறது. சுதந்திரத்திற்கான போராட்டம் தொடரும் நிலையில்கய, உலகெங்கும் உள்ள தமிழர்கள் நினைவேந்தலுக்கென ஒன்றுதிரள்கிறார்கள். https://www.virakesari.lk/article/170345
  11. 27 NOV, 2023 | 10:54 AM யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் பிரதான மின் வடத்தில் (வயர்) தீ பற்றியமையால் சில மணி நேரம் அப்பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டு இருந்தது. கோப்பாய் , இராச வீதி பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரதான மின் வடத்தில் தீ பற்றியதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் உடனடியாக மின்சார சபையினருக்கு அறிவித்ததை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த மின்சார சபை ஊழியர்கள் , மின்சாரத்தை துண்டித்து , மின் வடத்தில் பற்றிய தீயை அணைந்தனர். பின்னர் மீள அவற்றை சீர் செய்து அப்பகுதிக்கான மின்சாரத்தை வழங்கினர். குறித்த சம்பவத்தால் , அப்பகுதியில் சில மணிநேரம் மின் தடை ஏற்பட்டது. https://www.virakesari.lk/article/170331
  12. ரிங்கு சிங்: மரண ஓவர் அதிரடி பற்றி தோனி கூறிய அறிவுரை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் 18-ஆவது ஓவரில் இந்திய அணி 190 ரன்கள், 20வது ஓவர்கள் முடிவில் 235 ரன்கள் என்றால் நம்பமுடிகிறதா? ரிங்கு சிங் 9 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததே காரணம். ஐசிசி முழுநேர உறுப்பு நாடுகளுக்கு எதிராக ஹர்திக் பாண்டியாவுக்குப் பின் 9 பந்துகளில் 30 ரன்களுக்கு மேல் அடித்த 2வது பேட்டர் ரிங்கு சிங்தான். திருவனந்தபுரத்தில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு முக்கியக் காரணமாக இருந்தது ரிங்கு சிங்கின் அதிரடி ஆட்டம்தான். முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது. ஏறக்குறைய பந்துகளைவிட இருமடங்கு ரன்கள். 236 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடின இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு191 ரன்கள் சேர்த்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணி முன்னிலை இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்திய அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்து 25 பந்துகளில்53 ரன்கள் சேர்த்தும், இரு அருமையான கேட்சுகளைப் பிடித்த ஜெய்ஸ்வால் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி சேர்த்த 5-வது அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது. இந்திய அணி வலுவான ஸ்கோர் சேர்ப்பதற்கு ஜெய்ஸ்வால்(53), கெய்க்வாட்(58), இஷான் கிஷன்(52) ஆகிய 3 பேரும் முக்கியக் காரணமாக அமைந்தனர். இதில் கெய்க்வாட் பொறுமையாக ஆடி கடைசி நேரத்தில்தான் அரைசதத்தை பதிவுசெய்தார். ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் விளாசல் ஆனால், கடந்தகால சேவாக்கின் ஆட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் ஆடிவரும் ஜெய்ஸ்வால், தொடக்கத்திலேயே எதிரணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கி 25 பந்துகளில் அரைசதத்தை விளாசி வலுவான அடித்தளத்தை உருவாக்கிக் கொடுத்தார். அதேபோல இஷான் கிஷன் முதல் 22 ரன்களைச் சேர்க்க 26 பந்துகளை எடுத்துக்கொண்டாலும், அடுத்த 10 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து அரைசதத்தை நிறைவு செய்தார். இந்திய அணி மட்டும் கடைசி 7 ஓவர்களில் மட்டும் 111 ரன்கள் சேர்த்தது. இந்த ஸ்கோர் உயர்வுக்கு ஃபினிஷிங் டச் கொடுத்தவர் ரிங்குசிங்தான். பட மூலாதாரம்,GETTY IMAGES ஃபினிஷிங் டச் ரிங்கு சிங் 9 பந்துகளை மட்டும் சந்தித்த ரிங்கு 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 18 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 190ரன்கள்தான் சேர்த்திருந்தது. ஆனால், 2 ஓவர்களில் மட்டும் 45 ரன்களைச் சேர்த்தது என்றால் அதற்கு முக்கியக் காரணம் ரிங்குசிங்தான். அதிலும் அபாட் வீசிய 19-வது ஓவரில் மட்டும் 2 சிக்ஸர்கள், 3பவுண்டரிகள் என 25 ரன்களை ரிங்கு சிங் சேர்த்தார். நெருக்கடி தரும் பந்துவீச்சு இந்திய பேட்டர்கள் மிகப்பெரிய ஸ்கோரை அமைத்துக்கொடுத்ததால்தான் பந்துவீச்சாளர்களால் நெருக்கடி இன்றி நேற்று பந்துவீச முயன்றது. பேட்டர்கள் அமைத்துக்கொடுத்த ரன்கள் பந்துவீச்சாளர்களுக்கு “குஷன்” போன்று அமைந்தது. ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர். அதிலும் நடுப்பகுதியில் அக்ஸர் படேல், ரவி பிஸ்னோய் அளித்த நெருக்கடி ஆஸ்திரேலிய பேட்டர்களை விக்கெட்டுகளை இழக்க வைத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES மிரட்டிய டேவிட்-ஸ்டாய்னிஷ் கூட்டணி இந்திய அணிக்கு நெருக்கடி அளித்தது என்பது ஸ்டாய்னிஸ்- டிம் டேவிட் கூட்டணி மட்டும்தான். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 38 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். ஆனால், பிஸ்னாய் ஓவரில் டேவிட் 37 ரன்களிலும், முகேஷ் குமார் ஓவரில் ஸ்டாய்னிஷ் 45 ரன்களில் ஆட்டமிழந்ததும் ஆஸ்திரேலிய அணியின் போராட்டமும் முடிவுக்கு வந்தது. 16 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் 35 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலிய அணி, அடுத்த 23 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின்புதான் ஸ்டாய்னிஷ்-டேவிட் கூட்டணி அணியைத் தூக்கி நிறுத்தி 81 ரன்கள் சேர்த்தனர். ஆனால், இருவரும் ஆட்டமிழந்தபின், விரைவாக 5 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா பறிகொடுத்தது. 139 ரன்கள் வரை 5 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்திரேலிய அணி, அடுத்த 16 ரன்களில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து. பட மூலாதாரம்,GETTY IMAGES அக்ஸர், பிஷ்னோய், பிரசித் பந்துவீச்சு திருவனந்தபுரம் க்ரீன்பீல்ட் ஆடுகளம் பேட்டர்களுக்கு சொர்க்கபுரி. இந்த ஆடுகளத்தில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணியின் பேட்டர்களுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் பந்துவீசியது உண்மையில் பாராட்டுக்குரியதுதான். பிரசித் கிருஷ்ணா தொடக்கத்தில் ரன்களை வாரி வழங்கினாலும், தனது 2வது ஸ்பெல்லில் கட்டுக்கோப்பாக துல்லியமான யார்கர்களாக வீசி டெய்லண்டர்கள் பேட்டர்களை வெளியேற்றினார். ஆஸ்திரேலிய பேட்டர்களின் சரிவுக்கு முக்கியக் காரணமாக இருந்தது ரவி பிஷ்னோய் லெக் ஸ்பின்தான். டிம் டேவிட், ஷார்ட், இங்கிலிஸ் ஆகிய 3 பேட்டர்களையும் விரைவாக வெளியேற்றி திருப்புமுனையை ஏற்படுத்தினார். நடுப்பகுதியில் அக்ஸர் படேல் வீசிய சில ஓவர்கள்தான் ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. கட்டுக்கோப்பாகப் பந்துவீசிய அக்ஸர் படேல் 4 ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து மேக்ஸ்வெல் விக்கெட்டையும் வீழ்த்தி முக்கியப் பங்காற்றினார். பேட்டர்களுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் அக்ஸர் படேல் மட்டும்தான் மிகுந்த கட்டுக்கோப்புடன் பந்துவீசியுள்ளார். மற்றவகையில் இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவருமே ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல்தான் வழங்கினர். வேகப்பந்துவீச்சாளர்கள் கடைசி டெத் ஓவர்களில் மட்டுமே ஓரளவுக்கு சிறப்பாகப் பந்துவீசினர், தொடக்கத்திலேயே இந்த ஒழுக்கத்தை வெளிப்படுத்தி இருந்தால், ஆஸ்திரேலிய அணி இன்னும் குறைந்த ரன்களில் சுருண்டிருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆஸ்திரேலியாவை ஏமாற்றிய வானிலை இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். ஆனால், நேற்று பனிப்பொழிவும் பெரிதாக இல்லை, காற்றில் ஈரப்பதமும் குறைவாக இருந்தது. இதனால் ஆஸ்திரேலிய கேப்டன் நினைத்ததற்கு மாறாக அனைத்தும் நடந்து சுழற்பந்துவீச்சுக்கு நன்றாக மைதானம் ஒத்துழைத்து, விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய அணி இழந்தது. இதனால் வெற்றிக்குத் தேவைப்படும் ரன்ரேட் 12க்கும் மேல் அதிகரித்ததால் நெருக்கடி ஏற்பட்டு விக்கெட்டுகளை இழந்தது. ஒரு கட்டத்தில் 31 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி பயணித்த ஆஸ்திரேலிய அணி அடுத்த 27 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது, தேவைப்படும் ரன்ரேட் அதிகரித்தது முக்கியக் காரணமாகும். ரன்களை விரைவாகச் சேர்க்க வேண்டும் என்ற நெருக்கடியில் பவர்ப்ளே ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய அணி இழந்தது தோல்விக்கு முக்கியக் காரணமாகும். தோனிக்கு அடுத்தாற்போல் ஃபினிஷர் தோனிக்கு அடுத்தாற்போல் இந்திய அணிக்கு ஒரு “ கிரேட் ஃபினிஷர்” உருவாகி வருகிறார் என்றால் அது ரிங்கு சிங்தான். முதல் டி20 போட்டியில் கடைசிப் பந்தில் ஒரு ரன் வெற்றிக்குத் தேவை என்றபோது, சீன் அபாட் ஓவரில் லாங் ஆன் திசையில் சிக்ஸர் விளாசி ரிங்கு சிங் அணியை வெற்றி பெறச் செய்தார். அதன்பின அது நோபாலாக அறிவிக்கப்பட்டதால், சிக்ஸர் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து அர்ஷ்தீப் சிங் , ரிங்கு சிங்கிடம் ஓய்வறைக்குச் சென்றபின் நோபால் தெரிவித்துள்ளார். ஆனாலும் அது குறித்து கவலைப்படாத ரிங்கு சிங், இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டதே அதுபோதும் என்று ஓய்வறையில் தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது.அந்த போட்டியில் 14 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்து ரிங்கு சிங் கிரேட் ஃபினிஷராக ஜொலித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES 344 ஸ்ட்ரைக் ரேட்டில் பயணித்த ரிங்கு திருவனந்தபுரத்தில் நடந்த ஆட்டத்திலும் 9 பந்துகளில் 31 ரன்கள் விளாசி இந்திய அணி இமாலய ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக அமைந்தார் ரிங்கு. அதிலும் 19-வது ஓவரில் ரிங்கு சிங் அடித்த 25 ரன்களும், கடைசி ஓவரில் வெளுத்த ரன்களும் கிரேட் ஃபினிஷிங் டச்சுக்கு உதாரணமாகும். ரிங்கு சிங்கின் நேற்றைய ஸ்ட்ரைக் 344 ஆகும். ஹர்திக்கிற்கு அடுத்து ரிங்கு ஐசிசி முழுநேர உறுப்பு நாடுகளுக்கு எதிராக 9 பந்துகளில் ஹர்திக் பாண்டியா சேர்த்த 32 ரன்கள்தான் அதிகபட்சம். அதற்கு அடுத்தார்போல் தற்போது ரிங்கு சிங் 31 ரன்களைக் குவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் ரிங்கு சிங் இந்திய டி20 அணியில் அறிமுகமாகினார். இதுவரை 4 போட்டிகளில் மட்டுமே ஆடிய ரிங்கு சிங் 128 ரன்கள் குவித்து, 216 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார், ஒருமுறை மட்டுமே அவுட் ஆகியுள்ளார். இந்த ரன்களை ரிங்கு சிங் சேர்த்தபோது, அவர் 5முதல் 7-வது பேட்டராக களமிறங்கி சேர்த்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் ரிங்கு சிங்கின் ஆட்டம் பெரிதாக பார்க்கப்பட்டு, அனைவராலும் கவனிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் சயத் முஸ்தாக் அலி கோப்பையில் லக்னௌ அணிக்காக விளையாடி, 2வது அதிகபட்சமாக 256 ரன்களைச் சேர்த்ததும் ரிங்கு சிங்தான், இதலும் ரிங்கு சிங்கின் ஸ்ட்ரைக் ரேட் 170 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES தோனியின் அறிவுரை தோனியின் அறிவுரையை தொடர்ந்து பின்பற்றுவதால்தான் என்னால் இப்படி சிறப்பாக ஆட முடிகிறது என்று ரிங்கு சிங் பிசிசிஐ சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில் “ஒருமுறை மகிபாயிடம்(தோனி) சென்று கடைசி சில ஓவர்களில் மட்டும் எவ்வாறு அதிரடியாக பேட் செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு மகிபாய் என்னிடம் “ கடைசி ஓவர்களில் பேட் செய்யும்போது அமைதியாக, மனதை ஒருமுகப்படுத்தி இருக்க வேண்டும், பதற்றப்படக்கூடாது. பெரும்பாலும் ஸ்ட்ரைக் ஷாட்களாகவே அடிக்க முயல வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். இன்றுவரை மகிபாய் கூறிஅறிவுரைப்படியே விளையாடுகிறேன். கடைசி ஓவர்களில் பேட் செய்யும்போது அமைதியாக இருப்பேன், எந்த உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல் இருக்க முயல்வேன், இது எனக்கு பெரிதாக உதவியது” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ரிங்குவை புகழ்ந்த சூர்யகுமார் ரிங்கு சிங் குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவும் புகழ்ந்துள்ளார். வெற்றிக்குப்பின் சூர்யகுமார் கூறுகையில் “ விசாகப்பட்டிணத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் ரிங்கு சிங் பேட் செய்ய களமிறங்கியபோது, இந்திய அணி வெற்றிக்கு 22 பந்துகளில் 44 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ரிங்கு ஆடியவிதம், அற்புதமானது, கடைசி இரு ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிவிட்டார். அதுபோலத்தான் 2வது டி20 ஆட்டத்திலும் கடைசி இரு ஓவர்களில் ஆட்டத்தின் போக்கை திருப்பிவிட்டார் ரிங்குசிங். இவரின் பினிஷிங் யாரையோ எனக்கு நினைவூட்டுகிறது” எனத் தெரிவித்தார். டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் 6 மாதங்களே இருக்கும்நிலையில் ஹர்திக் பாண்டியா “ஆங்கர் ரோல்” எடுத்தாலும், இந்திய அணிக்கு மிகச்சிறந்த ஃபினிஷர் தேவை. அந்தவகையில் தோனிக்கு அடுத்தார்போல் “ கிரேட் ஃபினிஷராக” ரிங்கு சிங் உருவாகலாம். https://www.bbc.com/tamil/articles/c2821l1ygwjo
  13. India 235/4 Australia (5.5/20 ov, T:236) 53/3 Australia need 183 runs in 85 balls. Current RR: 9.08 • Required RR: 12.91 • Last 5 ov (RR): 42/3 (8.40)
  14. ஆஸி.க்கு எதிரான 2-வது டி20: ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், ரிங்கு சிங் அதிரடியால் இந்தியா இமாலய ரன் குவிப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES 17 நிமிடங்களுக்கு முன்னர் பவர் ப்ளேவில் சரவெடியாக வெடித்த ஜெய்ஸ்வால் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் பெஹரன்டார்ப்புக்குப் பதிலாக ஆடம் ஸம்பாவும், ஹார்டிக்குப் பதிலாக மேக்ஸ்வெலும் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்தியத் தரப்பில் எந்த மாற்றமும் இல்லை. கெய்க்வாட், ஜெய்ஸ்வால் ஆட்டத்தைத் தொடங்கினர். ஸ்டாய்னிஸ், நாதன் எல்லிஸ் வீசிய முதல் இரு ஓவர்களில் பெரிதாக ரன்கள் ஏதும் இந்திய பேட்டர்கள் சேர்க்கவில்லை. 3-வது ஓவரை மேக்ஸ்வெல் வீசினார். இந்த ஓவரை சரியாகப் பயன்படுத்திய ஜெய்ஸ்வால் 2 பவுண்டரிகளும், கெய்க்வாட் ஒரு பவுண்டரியும் என15 ரன்கள் சேர்த்தனர். கெயில் அபாட் வீசிய 4-வது ஓவரை ஜெய்ஸ்வால் உரித்து எடுத்துவிட்டார். ஹாட்ரிக் பவுண்டரிகளை வெளுத்த ஜெய்ஸ்வால், 4வது பந்தில் ஒரு சிக்ஸரும், 5-வது பந்தில் ஒரு சிக்ஸரும் என விளாசி தள்ளி 24 ரன்கள் சேர்த்தார். ஆடம் ஸம்பா வீசிய 5-வது ஓவரில் ஜெய்ஸ்வால், கெய்க்வாட் இருவரும் தலா ஒரு பவுண்டரி என 10 ரன்கள் குவித்தனர். நாதன் எல்லீஸ் 6-வது ஓவரை வீசினார். முதல் பந்தில் ரன் அடிக்காத ஜெய்ஸ்வால், மீண்டும் ஒரு ஹாட்ரிக் பவுண்டரி விளாசி, 24 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். அதைஓவரின் கடைசிப் பந்தில் ஜெய்ஸ்வால் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் ஸம்பா கேட்ச் பிடிக்கவே ஜெய்ஸ்வால் 53ரன்களில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 9பவுண்டரி, 2சிக்ஸர்கள் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு கெய்க்வாட், ஜெய்ஸ்வால் கூட்டணி 77ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். பவர்ப்ளே முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் குவித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES இஷான் கிஷன் அதிரடி அடுத்து இஷான் கிஷன் களமிறங்கி, கெய்க்வாட்டுடன் சேர்ந்தார். இருவரும் சேரந்து நிதானமாக ஆடியதால் ரன்ரேட் வேகம் குறையத் தொடங்கியது, பவுண்டரி, சிக்ஸர்கள் பெரிதாக ஏதும் அடிக்கவில்லை. 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் சேர்த்தது. மேக்ஸ்வெல் 14-வது ஓவரை வீசியபோது அவரை இஷான் கிஷன் குறிவைத்தார். மேக்ஸ்வெல் ஓவரில் 2-பந்தில்சிக்ஸர் விளாசிய இஷான், 3-வது பந்தில் பவுண்டரி விளாசினார். கெய்க்வாட் தனது பங்கிற்கு ஒரு சிக்ஸர் விளாசினார். மேக்ஸ்வெல் ஓவரில் மட்டும் 23 ரன்கள் சேர்த்தனர். தன்வீர் சங்கா வீசி 15-வது ஓவரில் இஷான் கிஷன் 2 சிக்ஸர் விளாசி 29 பந்துகளில் அரைசதம் விளாசினார். அதன்பின் நீண்டநேரம் இஷான் கிஷன் நிலைக்கவில்லை. ஸ்டாய்னிஷ் வீசிய 16-வது ஓவரில் எல்லிஸிடம் கேட்ச் கொடுத்து இஷான் கிஷன் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 4 சிக்ஸர், 3பவுண்டரிஅடங்கும். 2வது விக்கெட்டுக்கு கெய்க்வாட், இஷான் கிஷன் 87 ரன்கள் சேர்த்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES சூர்யகுமார் ஏமாற்றம் அடுத்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். ஸடாய்னிஷ் வீசிய அந்த ஓவரில் சூர்யகுமார் யாதவ் தான் சந்தித்த முதல் பந்திலேயே ப்ளிக் ஷாட்டில் லெக் சைடில் ஒரு சிக்ஸர் விளாசினார். ஆடம் ஸம்பா வீசிய 17-வது ஓவரில் சூர்யகுமார் ஸ்ட்ரைட் திசையில் சிக்ஸர் விளாசி அந்த ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட்டது. 18-வது ஓவரை எல்லீஸ் வீசினார், அரைசதத்தை நெருங்கிய கெய்க்வாட், ஒரு ரன் சேர்த்து 39-பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். சூர்யகுமார் யாதவின் பலவீனமான ஸ்லோவர் பால் என்பதைத் தெரிந்து கொண்டு அவருக்கு தொடர்ந்து ஸ்லோ பவுன்ஸராக எல்லீஸ் வீசனார். இதனால் சூர்யகுமாரும் பெரிய ஷாட்களுக்கு சென்று ஏமாற்றம் அடைந்தார். ஆனால், 4-வது பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசையில் தூக்கி அடிக்க சூர்யகுமார் முயன்று, ஸ்டாய்னிஷிடம் கேட்சானது. சூர்யகுமார் 19 ரன்னில் ஆட்டமிழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசிக் கட்டத்தில் ரிங்கு சிங் அதிரடி இந்திய அணிக்கு கடைசிக் கட்டத்தில் ரிங்கு சிங் அதிரடி காட்டினார். அவர் தான் சந்தித்த பந்துகளை எல்லாம் எல்லைக்கோட்டிற்கு அனுப்பி வைத்த வண்ணம் இருந்தார். 9 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 31 ரன்கள் சேர்த்தார். கடைசிக் கட்டத்தில் 2 பந்துகளை எதிர்கொண்ட திலக் வர்மா ஒரு சிக்ஸர் அடித்தார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்களை குவித்தது. https://www.bbc.com/tamil/articles/c3g28mzjyvpo
  15. பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ 26 NOV, 2023 | 06:46 PM விடுதலைப்புலிகளின் தலைவர்வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69-வது பிறந்தநாள் விழா இன்று அனுசரிக்கப்பட்டது. அப்போது பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் எனவும் பிரபாகரன் திரும்பி வருவார் என்றும் அந்த நம்பிக்கையுடன் நாங்கள் உள்ளோம் என்று மதிமுக செயலாளர் வைகோ கூறி உள்ளார். சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதிமுக கட்சித் பொதுச் செயலாளர் வைகோ அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மதிமுக கட்சித் பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்கள் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இலங்கை தமிழர்களுக்காக போராடிய எங்கள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் இன்னும் எண்ணத்துடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். பழ நெடுமாறன் போன்றோர் விடுதலைப் புலிகளுடன் பல ஆண்டுகளாக இருந்தவர்கள் அவர்கள் யாரும் பொய் சொல்ல வேண்டும் என எந்த அவசியமும் கிடையாது. பிரபாகரன் திரும்பி வருவார் எனும் நம்பிக்கையுடன் நாங்கள் உள்ளோம். அவர் உயிருடன் இருக்கின்றார் என்பதே எங்களது கருத்து என வைகோ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/170322
  16. இஸ்ரேல் - ஹமாஸ்: போர் நிறுத்தம் முடிந்து தொடங்கும் தாக்குதல் மேலும் பேரழிவுகரமாக இருக்குமா? பட மூலாதாரம்,REUTERS/IBRAHEEM ABU MUSTAFA படக்குறிப்பு, காஸா மீதான இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், பீட்டர் ஆர் நியூமேன் பதவி, லண்டன் கிங்ஸ் கல்லூரியில் பாதுகாப்பு ஆய்வுகள் துறை பேராசிரியர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே பல வாரங்களாக எதிர்பார்க்கப்பட்ட தற்காலிக போர் நிறுத்த உடன்படிக்கை அமல்படுத்தப்பட்டு இரண்டு நாட்கள் கடந்துவிட்டன. ஹமாஸ் வெள்ளிக்கிழமை நான்கு தாய்லாந்து குடிமக்கள் உட்பட 24 பணயக் கைதிகளை விடுவித்தது. அவர்களில் 13 பேர் இஸ்ரேலிய குடிமக்கள். இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 39 பாலத்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்டதற்கு ஈடாக அவர்கள் விடுவிக்கப்பட்டனர். போர் நிறுத்த உடன்படிக்கையின் கீழ், இந்த நான்கு நாட்களுக்கு தாக்குதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த இடைவெளியில் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் இருநூறு டிரக்குகள், நான்கு எரிபொருள் லாரிகள் மற்றும் நான்கு டிரக்குகள் தினமும் காஸாவுக்குள் நுழைய வேண்டும். இந்தக் காலகட்டத்தில், இரு தரப்பினரும் வடக்கு மற்றும் தெற்கு காஸாவில் எந்தத் தாக்குதல் நடவடிக்கையும் மேற்கொள்ள மாட்டார்கள் என்பதுடன் இஸ்ரேலும் காஸா மீது கண்காணிப்பு ட்ரோன்களை பறக்கவிடாது. ஆனால், நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற 97 டிரக்குகளை வடக்கு காஸாவிற்கு செல்லவிடாமல் இஸ்ரேல் தடுத்து நிறுத்தியதாகவும், தெற்கு காஸா மீது ஆளில்லா விமானங்களைப் பறக்கவிட்டதாகவும் ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் மறுத்துள்ளது. பட மூலாதாரம்,HOSTAGES AND MISSING FAMILIES FORUM படக்குறிப்பு, வெள்ளிக்கிழமை, ஹமாஸ் 13 இஸ்ரேலிய குடிமக்களை விடுவித்தது. இந்தப் போர் நிறுத்தம் ஹமாஸுக்கு ஒரு வியூக ரீதியிலான சாதகமாகவும் உள்ளது. இது பல வாரங்களாக நீடித்து வந்த கடுமையான தாக்குதலில் இருந்து மீண்டுவர ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு உதவும். ஏனெனில் போர் நடந்த காலகட்டத்தில் அது இஸ்ரேலிய தாக்குதலில் சிக்கி பல இழப்புகளை எதிர்கொள்ள நேரிட்டது. ஹமாஸ் தனது கட்டளைச் சங்கிலி அமைப்பை மீண்டும் உறுதியாக நிறுவுவதற்கும், முன்னேறும் இஸ்ரேலிய ராணுவத்துக்கு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தக்கூடிய இடங்களுக்குத் தனது போராளிகளை நிலைநிறுத்துவதற்கும் இந்த போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. எஞ்சியுள்ள பணயக் கைதிகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றும் வாய்ப்பையும் இந்தப் போர் நிறுத்தம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதும், இஸ்ரேலுக்கு அவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்பதும் முக்கிய விஷயங்களாகப் பார்க்கப்படுகின்றன. சுருக்கமாகச் சொன்னால், இதிலிருந்து வேறு எந்தப் பலன்களும் அறிவிக்கப்படாவிட்டாலும், பணயக் கைதிகள் விடுதலை ஒப்பந்தம் ஹமாஸுக்கு கணிசமான வியூக ரீதியிலான மற்றும் உத்தி ரீதியிலான ஆதாயமாகும். பணயக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் விடுதலைக்கு இது ஒரு நல்ல செய்தி என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும், அந்த பணயக் கைதிகளை விடுவிப்பது மிகவும் கடினமாகவும் பெரும் விலை கொடுக்கப்படும் விஷயமாகவும் மாறும் என்பதே கசப்பான உண்மை. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த போர் இடைநிறுத்தம் தற்போதைய பாதிப்பில் இருந்து இரு தரப்பினருக்கும் நிவாரணம் அளித்துள்ளது. ஆனால் இது மிகவும் மோசமான நெருக்கடியின் முடிவு அல்லது அந்த முடிவின் தொடக்கம் என்று பொருள்படாது. அதே நேரம் இந்தத் தாக்குதல் நிறுத்தம் ஹமாஸ் அமைப்புக்கு பல வழிகளில் பயனளிக்கும். இந்த நான்கு நாட்களில் ஹமாஸால் பணயக் கைதிகளாக இருந்த டஜன் கணக்கான முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்பட்டிருப்பது இஸ்ரேலியர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இதன் பொருள் ஹமாஸ் 150க்கும் மேற்பட்ட பணயக் கைதிகளை இன்னும் வைத்திருந்தாலும், அதிக எண்ணிக்கையிலான பணயக் கைதிகளை வைத்திருப்பதைவிட இது அவர்களுக்கு அதிக லாபம் தரும் ஒப்பந்தமாக இருக்கலாம். ஏறத்தாழ 240 பணயக் கைதிகளை வைத்திருப்பது எந்தவொரு அமைப்புக்கும் பெரும் சுமையாகும். இந்த பணயக் கைதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும், தேவைப்பட்டால், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டும். பட மூலாதாரம்,HOSTAGES AND MISSING FAMILIES FORUM படக்குறிப்பு, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் குடிமக்கள் வெள்ளிக்கிழமை ஹமாஸால் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் வயதானவர்களாக இருக்கலாம், நோய்வாய்ப்பட்டவர்களாக இருக்கலாம், அல்லது ஏதேனும் சிறப்பு சிகிச்சை தேவைப்படும் நிலையில் இருந்தால், அது நிலைமையை மேலும் சிக்கலாக்கும். சிறப்பு கவனிப்பு தேவைப்படுபவர்களை "விடுதலை" செய்வதன் மூலம், ஹமாஸ் தாராள மனப்பான்மையைக் காட்டவில்லை. மாறாக மற்ற இடங்களில் தேவைப்படும் வளங்களை முதன்மையாகப் பெறுகிறது என்பதே உண்மை. தாய்லாந்து மற்றும் நேபாளத்தை சேர்ந்த சுமார் இரண்டு டஜன் தொழிலாளர்களின் விஷயத்தில் இது குறிப்பாக மிகப்பெரிய உண்மையாக இருக்கிறது. அவர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்துச் செல்வது ஹமாஸுக்கு எந்த வியூகரீதியிலான பயன்களையும் கொண்டிருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் இஸ்ரேலியரோ அல்லது யூதரோ அல்ல. மற்றொரு காரணம் என்னவென்றால், எஞ்சியிருக்கும் பணயக் கைதிகளை வைத்திருப்பதற்கு அவர்களுக்கு ஒரு 'எளிதான வாதம்' கிடைக்கும். ஏனென்றால் அவர்களில் பெரும்பாலோர் இஸ்ரேலிய வீரர்கள் அல்லது போருக்குப் பயன்படும் வயதுடையவர்கள். அவர்கள் "எதிரி வீரர்கள்" அல்லது போர்க் கைதிகள் என்று ஹமாஸ் வாதிட முடியும். படக்குறிப்பு, எகிப்துடனான ரஃபா கடவுப் பாதையில் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் டிரக்குகள் வரிசையாக நின்றுகொண்டிருந்தன. மேலும் இது கைதிகளைப் பரிமாறிக்கொள்ள பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கத்தின் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும். கடந்த காலத்தில் நடந்தது போல், ஒரு சில இஸ்ரேலிய வீரர்களுக்கு ஈடாக நூற்றுக்கணக்கான பாலத்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டபோது, ஒரு சந்தர்ப்பத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் விடுவிக்கப்பட்ட சம்பவமும் நடந்திருக்கிறது. இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஹமாஸ் உறுப்பினர்களை விடுவிக்க அந்நாட்டு அரசை ஹமாஸ் வலியுறுத்தும். போர் நிறுத்தத்தின் இரண்டாவது நாளில் ஜெருசலேமில் இருந்த பிபிசியின் யோலண்டே நெல் அளித்த தகவல்களின்படி, எகிப்தின் ரஃபா கடவுப் பாதையில் இருந்து காஸாவுக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்ல ட்ரக்குகள் மற்றும் லாரிகள் வரிசையாக அதிகாலையில் இருந்து காத்திருந்தன. நான்கு டேங்கர் டீசல் மற்றும் எல்பிஜி கேஸ் ஏற்றப்பட்ட நான்கு டிரக்குகளை நிவாரணப் பொருட்களுடன் காஸாவுக்குள் நுழைய இஸ்ரேல் அனுமதித்துள்ளது. நிவாரணப் பொருட்களை ஏற்றிய சுமார் 200 டிரக்குகள் சனிக்கிழமை காஸாவுக்குள் நுழைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, காஸாவின் வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பயணம் மேற்கொண்டவர்கள் தற்காலிக கூடாரங்களில் தங்கியுள்ளனர். போர் தொடங்கிய பின்னர் அக்டோபர் 21ஆம் தேதி காஸாவுக்கு உதவிப் பொருட்கள் வரத் தொடங்கியதில் இருந்து முதன் முதலாக இவ்வளவு பெரிய அளவில் நிவாரணப் பொருட்கள் வந்துள்ளன என வெள்ளிக்கிழமை, ஐக்கிய நாடுகள் சபை கூறியது. பாலத்தீன அகதிகளுக்கான அமைப்பான UNRWA-வின் செய்தித் தொடர்பாளர் ஜூலியட் டூமாவின் கருத்துப்படி, இந்த நேரத்தில் அனைத்து வகையான உதவிகளும் மிக முக்கியமாகத் தேவைப்படுகின்றன. இது தொடர்பாக அவர் பேசுகையில், “அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள், ரேஷன், மருந்துகள், குடிநீர். தூய்மைக்குத் தேவையான சுகாதாரப் பொருட்கள் அடங்கிய பெட்டி போன்றவை மிகவும் முக்கியமானவை,” என்றார். காஸாவில் உள்ள பெரும்பாலான தங்குமிடங்கள் நிரம்பி வழிகின்றன. சுமார் 10 லட்சம் இடம்பெயர்ந்த மக்கள் அங்குள்ள பள்ளிகளிலும் மற்ற இடங்களிலும் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர் என்று ஐ.நா.வின் பாலத்தீன அகதிகளுக்காக நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் அமைப்பு கூறுகிறது. காஸாவில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாகக் கூறினர். பெரும்பாலானோர் குளிக்கவும், துணி துவைக்கவும்கூட முடியாமல் தவிக்கின்றனர். போர்நிறுத்தம் தொடங்கியதில் இருந்து, பாலத்தீனர்கள், தங்களுடைய அழிக்கப்பட்ட வீடுகளுக்குத் திரும்புவது, குப்பைகளில் பயனுள்ள எதையும் தேடுவது போன்ற அவநம்பிக்கையான காட்சிகளை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். பட மூலாதாரம்,GETTY IMAGES பட மூலாதாரம்,GETTY IMAGES இது போன்ற ஒரு சூழ்நிலையில், தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த பின் என்ன நடக்கும் என்பது பெரும் குழப்பத்தை அளிக்கும் விஷயமாகவே நீடிக்கிறது. இஸ்ரேல் மீண்டும் போரைத் தொடங்கினாலோ, காஸாவின் தெற்கு பகுதியை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தினாலோ, முன்பைவிட இழப்புகள் பேரழிவுகரமாக அதிகரிக்கும் என்ற அச்சமும் சர்வதேச அளவில் நீடித்து வருகிறது. காஸாவின் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகர்ந்த பொதுமக்கள், வரவிருக்கும் குளிர்காலத்தை எப்படித் தாக்குப்பிடிப்பார்கள் என்பதும், கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் ஓரிடத்தில் குவியும்போது அங்கே ஏற்படவிருக்கும் புதிய தேவைகள் மற்றும் நெருக்கடிகளைச் சமாளிப்பது பெரும் சவாலாக மாறும். மறுபுறம், இஸ்ரேல் மீண்டும் தரைவழித் தாக்குதலைத் தொடங்கினால், அதற்கு சர்வதேச சமூகமும், அது இஸ்ரேலின் நட்பு நாடாகவே இருந்தாலும் அந்நாட்டிலிருந்து பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எந்த அளவுக்கு ஆதரவு கிடைக்கும் என்பதும் கேள்விக்குறியாகவே தொடர்கிறது. இருப்பினும், சர்வதேச அழுத்தங்களுக்கு பெஞ்சமின் நெதன்யாகு அடிபணிய மாட்டார் என்றும், அதை இஸ்ரேலியர்களும் விரும்புவார்கள் என்றும் நம்பப்படுகிறது. https://www.bbc.com/tamil/articles/c132rejen66o
  17. ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகும் பிரபல கிரிக்கெட் வீரர் 17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வரும் இந்த கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதாக காணப்படுகின்றது. 17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19ஆம் திகதி டுபாயில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில், அடுத்த வருடம் இடம்பெறவுள்ள ஐபிஎல் போட்டியில் இருந்து இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட் விலகியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக ஜோ ரூட் விளையாடி வந்தார். ஜோ ரூட்டின் இந்த தீர்மானத்தினை ஏற்றுக்கொள்வதாக ராஜஸ்தோன் ரோயல்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/282464
  18. 2024 மகளிர் பிரீமியர் லீக்: ஏலம் டிசம்பரில் இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆடவருக்கான ஐ.பி.எல். தொடர் 16 ஆண்டுகள் தொடர்ந்து நடைபோட்டு வருகிறது. இதேபோன்று, மகளிருக்கான டி-20 போட்டியை முதல்முறையாக இந்த ஆண்டு பி.சி.சி.ஐ. வெற்றிகரமாக நடத்தியது. இதில் மும்பை, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ,லக்னோ ஆகிய 5 அணிகள் முதல் சீசனில் விளையாடியது. ஐ.பி.எல். போட்டிக்கு இணையாக நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் மும்பை அணி கோப்பையை வென்றது. இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலம் மும்பையில் டிசம்பர் 9 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/282379
  19. உலகின் மிகப்பெரிய பனிப்பாறை மிதக்கத் தொடங்கியுள்ளது சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து மிதக்கத் தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்டார்டிகாவைச் சேர்ந்த இந்த மிகப்பெரிய பனிப்பாறை A23a என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது 1,540 சதுர மைல் அளவு கொண்டது. பனிப்பாறையின் தடிமன் 1,312 அடி. இந்த பனிப்பாறை கடந்த 30 ஆண்டுகளாக கடற்பரப்புடன் இணைந்திருந்ததாகவும், தற்போது புவி வெப்பமடைதல் மற்றும் பனி உருகுவதன் விளைவாக உடைந்து மிதந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் மேலும் விளக்கமளிக்கின்றனர். https://thinakkural.lk/article/282455
  20. நுரைச்சோலை மூன்றாவது மின்பிறப்பாக்கி மூன்று தினங்களில் செயற்படும்! பராமரிப்பு பணிகள் காரணமாக தற்போது செயலிழந்துள்ள நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தித்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கி எதிர்வரும் 29 ஆம் திகதி தேசிய மின்கட்டமைப்புடன் இணைத்துக் கொள்ளப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அத்துடன், அண்மையில் செயலிழந்த நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்க மேலும் 14 நாட்கள் தேவைப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து, எமது செய்திச்சேவை அந்த சபையின் உயர் அதிகாரியை தொடர்பு கொண்டு வினவிய போதே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/282458
  21. கிராம சேவகர் பதவி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து கிராம சேவகர் பதவி வெற்றிடங்களும் பூர்த்தி செய்யப்படும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். வென்னப்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2021ஆம் ஆண்டு விண்ணப்பங்களை அனுப்பிய தகுதியான பரீட்சாத்திகளுக்காக கிராம அலுவலர் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 02ஆம் திகதி பரீட்சைகள் திணைக்களம் நடத்தவுள்ளது. இந்த பரீட்சை ஊடாக 2,238 கிராம சேவகர்கள் உள்வாங்கப்படவுள்ளனர். https://thinakkural.lk/article/282445
  22. 26 NOV, 2023 | 05:35 PM போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றினை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நிலத்தை தோண்டும் நடவடிக்கை கடந்த 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்று (25) மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை பணிகள் இடைநிறுத்தப்பட்டு, மீண்டும் இன்றைய தினம் (26) நான்காவது நாளாக அகழ்வுப் பணிகள் தொடர்கின்றன. இது தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸ் விசேட புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த விடயம் கடந்த 19ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு, குறித்த பகுதியில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களை புதைத்து வைத்துள்ளதாக நம்பப்படும் இடத்தில் நிலத்தை தோண்டுவதற்கு நீதிமன்றத்தில் அன்றைய தினமே நீதிபதியின் அனுமதி பெறப்பட்டிருந்தது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் பொலிஸார், விஷேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர், கிராம சேவையாளர், தொல்லியல் திணைக்களத்தினர், சுகாதார பிரிவினர், தடயவியல் பொலிஸார் பிரசன்னத்துடன் குறித்த அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/170304
  23. 26 NOV, 2023 | 04:10 PM யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) நோயாளர் காவு வண்டியுடன், மேலும் இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளாயின. நோயாளர் காவு வண்டிக்குப் பின்னால் வந்த முச்சக்கரவண்டி, நோயாளர் காவு வண்டியை முந்திச் செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த வாகனத்துடன் மோதி, நோயாளர் காவு வண்டிக்கும் எதிரே வந்த வாகனத்துக்கும் இடையில் சிக்கி விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/170297
  24. சந்தேக நபரை துரத்திச் சென்றபோது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் இறுதிக்கிரியை இன்று 26 NOV, 2023 | 03:59 PM சந்தேக நபரை துரத்திச் சென்றபோது காணாமல்போய் சடலமாக மீட்கப்பட்ட ஜா - எல பொலிஸ் உத்தியோகத்தரான 26 வயதுடைய கிருஷ்ணமூர்த்தி பிரதாபனின் இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்றது. உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை பூரண அரச மரியாதையுடன் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன் பொலிஸ் திணைக்களத்தினர் இறுதி மரியாதையை செலுத்தினர். இறுதிக் கிரியையின்போது, மேல் மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கலந்துகொண்டு உயிரிழந்தவருக்கு இறுதி மரியாதை செலுத்தி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறி ஒரு தொகை பணத்தையும் கையளித்தார். உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கிருஷ்ணமூர்த்தி பிரதாபன் பொலிஸ் சார்ஜன்டாக பதவி உயர்வு பெற்றுள்ளதுடன், அவருக்குரிய கொடுப்பனவுகள் கிடைக்கப்பெறும் என மேல் மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் குடும்பத்தினருக்கு வாக்குறுதியளித்தார். மேலும், பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகள், வட மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் இறுதிக்கிரியையில் கலந்துகொண்டனர். உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளின் பூதவுடல் அரச மரியாதையுடன் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் இன்று பகல் தகனம் செய்யப்படவுள்ளது. கடந்த வியாழக்கிழமை (23) குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மேலும் சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஜா-எல பகுதியில் நீரோடை மூலம் தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை துரத்திச் சென்ற போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். https://www.virakesari.lk/article/170290
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.