Jump to content

சுப.சோமசுந்தரம்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    414
  • Joined

  • Last visited

  • Days Won

    4

Everything posted by சுப.சோமசுந்தரம்

  1. சான்றாண்மை - சுப. சோமசுந்தரம் தற்காலத்தில் சான்றாண்மை எனும் சொல் அறிவுக் களத்தில் சிறந்து நிற்றலையே குறிக்கிறது. பரிமேலழகர் காலத்திலேயே இப்பொருள் மட்டும் குறிக்கும் வழக்கம் பரவலாக ஏற்பட்டிருக்க வேண்டும். "ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்" (குறள் 69; அதிகாரம்: மக்கட்பேறு) எனும் பொய்யாமொழிக்கு உரை சொல்ல வந்த பரிமேலழகர் "தன் மகன் கல்வி கேள்விகளால் நிறைந்தான் என்று அறிவுடையார் சொல்லக் கேட்ட தாய் தான் அவனைப் பெற்ற பொழுதை விட மகிழ்வாள்" என்றுரைக்கக் காணலாம். மணக்குடவர் 'சான்றோன்' என்பதனை விரித்துரையாமல் குறளில் உள்ளவாறு சான்றோன் என்றே தம் உரையில் சுட்டுகிறார். பெரும்பாலான உரையாசிரியர்கள் சான்றோன் என்பதன் பொருளை பரிமேலழகர் வழிநின்றே உரைக்கின்றனர். மு.வரதராசனார் போன்ற வெகுசில உரையாசிரியர் பெருமக்களே 'நற்பண்பு நிறைந்தவன்' என்று மேற்கூறிய குறளில் வரும் சான்றோனைக் குறிக்கின்றனர். பரிமேலழகர் காலமானாலும் தற்காலமானாலும், 'சான்றோர்' என்பது நூலுடையாரை (நூலறிவுடையாரை) மட்டும் குறிக்காமல், கற்றலும் கற்றவழி நிற்றலும் உடையாரைக் குறிப்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய்த் தெள்ளிதின் விளங்கி நிற்பது. வள்ளுவத்தில் 'சான்றாண்மை' அறிவுக்களம் மட்டுமின்றி பரந்துபட்ட பொருளிலேயே காணப்படுகிறது. அஃது சால்புடைமையாகவே கொள்ளப்படுகிறது. 'சால்புடைமை' இன்றளவும் தகைசால் பண்புகளைக் குறிப்பதாகவே வழக்கில் உள்ளது. "கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு" (குறள் 984; அதிகாரம்: சான்றாண்மை) "சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல்" (குறள் 986; அதிகாரம்: சான்றாண்மை) "இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு" (குறள் 987; அதிகாரம்: சான்றாண்மை) "இன்மை ஒருவற்கு இழிவன்று சால்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்" (குறள் 988; அதிகாரம்: சான்றாண்மை) எனும் குறட்பாக்களில் 'சான்றாண்மை' குறிக்க வந்த வள்ளுவன் சால்புடைமையையே குறிக்கிறான். அவ்வதிகாரத்தில் 'சான்றாண்மை' எனும் சொல்லாட்சி வரும் வேறு சில குறட்பாக்களுக்குச் சொல்ல வந்த உரையில் உரையாசிரியர் மு.வரதராசனார் சால்புடைமையையே குறிப்பதும் குறித்து நோக்கத்தக்கது. "ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும்" எனும் வள்ளுவனின் வாக்கு முன்னோர் மொழியாய் "ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே" என்றும் "ஈன்ற ஞான்றினும் பெரிதே" என்றும் புறநானூறில் ஒலிக்கக் காணலாம். "நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள் முளரி மருங்கின் முதியோள் சிறுவன் படைஅழிந்து மாறினன் என்றுபலர் கூற மண்டமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன் முலைஅறுத் திடுவென் யான்எனச் சினைஇக் கொண்ட வாளொடு படுபிணம் பெயராச் செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய படுமகன் கிடக்கை காணூஉ ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே" (புறநானூறு 278) எனும் புறநானூற்றுப் பாடலில் செருகளத்தில் புறமுதுகிட்டான் தன் மகன் எனத் தவறான செய்தி கேட்டு வெகுண்டெழுந்த தாய் களத்திற்கே சென்று அவன் மார்பில் புண்பட்டு வீரமரணம் எய்தியதைக் கண்டதும் அவனை ஈன்ற பொழுதினும் பெரிதும் மகிழ்ந்தாள் என்று வருகிறது. இதுபோலவே "மீன் உண் கொக்கின் தூவியன்ன வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன் களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே" (புறநானூறு 277) எனும் பாடலில் களிற்றியானையைக் கொன்று தன் மகன் இறந்துபட்டான் எனக் கேட்டதும் அவள் பெற்ற உவகை அவனைப் பெற்ற போது அடைந்த மகிழ்வினும் பெரிது என அறிவிக்கப் பெறுகிறது. மேற்கூறிய இரு புறநானூற்றுப் பாடல்களிலும் ஈன்ற ஞான்றினும் எய்திய உவகை, மகன் போர்க்களத்தில் வீரனாய் நின்றமைக்கே ! அறிவுக் களத்தில் சார்புடையோன் அறிஞனாகவும், போர்க்களத்தில் சால்புடையோன் அப்பொருகளத்தின் அறம் அறிந்தொழுகும் வீரனாகவும் நிற்பதுதானே இயல்பு ! எனவே அவை அறமும் போர் அறமும் சான்றாண்மையின்பாற் கொளல் தகும். முன்னோர் மொழி பொன்னே போல் போற்றிய வள்ளுவன், ஈன்ற பொழுதினும் உவகை தந்த சான்றோனைக் குறித்தது இவ்விரு பொருள் பற்றி மட்டுமல்லாமல், 'தகைசால் பண்புடையோன்' என்று அனைத்து அறங்களையும் உள்ளடக்கியது போலும். அங்ஙனம் கொள்வதே புறநானூறு தோன்றிய சங்க காலத்தும் வள்ளுவம் தோன்றிய சங்க மருவிய காலத்தும் பொருந்தி வருவது. சான்றோர் சிலரும் அவ்வாறு கொண்டது இக்கருத்திற்கு மேலும் வலு சேர்ப்பது. நிறைவாக இக்கருத்தை வலியுறுத்த அன்னையரில் ஒருவரையே அழைக்கலாமே ! "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" ‌(புறநானூறு 312) எனும் பாடலில் பெண்பாற் புலவரான பொன்முடியார் தாமே தாய்மையின் குறியீடு ஆகிறார்; உருவகம் ஆகிறார். இங்கு சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே என்னும் இடத்தில் வீரனாய் ஆக்குதல் தந்தையின் கடமை என்றே பொருள்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் தந்தையரில் சாமானியர் அனைவரும் அறிவுக் களத்தில் முன்னின்று இருக்க வாய்ப்பில்லை. ஆனால் காதலும் வீரமும் முன்னின்ற சமூகத்தில் ஆணுக்கான முதன்மைத் தகுதியாய் வீரமே கொள்ளப்பட்டதால், தந்தையர் வீரராய்ப் போற்றப்பட்டு அங்ஙனமே மகனை உருவாக்குவர் எனக் கொள்வதே இயல்பு. எனினும் சங்கப் பாடல்கள் காலத்தைக் கடந்து நிற்கும் தன்மையன எனும் நோக்கில் வீரம், கல்வி மற்றும் உயர்பண்புகள் அனைத்தையும் இப்பாடல் குறிப்பதாய்க் கொள்வது தற்காலத்திற்கான சிறப்பு. "வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடனே" என்றது வீரம் பற்றியதாகவே இருப்பினும், அவனுக்கான களத்தை அமைத்துத் தருதல் இச்சமூகத்தின் கடமை என்றும், "களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" என்றது வினைமுடித்து வருதல் மகனின் கடமை என்றும் உருவகிப்பது அறிவுலகில் வழக்கம்தானே ! அதுபோல் வீரமாய் முன்னின்ற 'சான்றாண்மை' இன்று பரந்து பட்டது எனலாமே !
  2. உரை அறிமுகவுரை -சுப. சோமசுந்தரம் எனது நண்பரும் ஆசானுமான ஆங்கிலப் பேராசிரியர் ச.தில்லைநாயகம் அவர்கள் திருக்குறளுக்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் இயற்றிய உரையை என்.சி.பி.எச் நிறுவனம் வெளியிட்டிருந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) அந்நூலுக்கான அறிமுக விழாவைத் தனது நெல்லை வி.மு.சத்திரம் கிளையில் நிகழ்த்தியது. அறிமுக உரையாற்ற எனக்கு அவர்கள் அளித்த வாய்ப்பு நான் ஈட்டியது என்றே சொல்ல வேண்டும். அவ்வுரையை எழுதும்போது பேரா.தில்லைநாயகம் அவர்கள் பத்துப் பத்து அதிகாரங்களாக எனக்கு அனுப்பி எனது கருத்தினை அளிக்க உரிமையோடு பணித்திருந்தார். நான் அளித்த கருத்துகளை சில இடங்களில் ஏற்று அவற்றை உரையில் ஏற்றியிருந்தார்; சில இடங்களில் காரணத்துடன் விளக்கி அவரது கருத்தினை நான் ஏற்கச் செய்திருந்தார். ஒத்திசைவு (Harmony) என்பது அதுதானே ! உரை நிறைவு பெற்றதும் நானே அந்நூலுக்கு அணிந்துரை எழுத வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். "என்னது நானா ?" என்று கேட்டதே நான் உடனடியாக ஆற்றிய எதிர்வினை. சமீப காலங்களில் இந்தக் கேள்வியை நான் கேட்டது இது இரண்டாவது முறை. சில வருடங்களுக்கு முன்பு கல்லூரியொன்றில் பட்டமளிப்பு விழாப் பேருரை நிகழ்த்த நான் அழைக்கப்பட்டபோது இதே கேள்வியைக் கேட்டது முதல் முறை. தற்காலத்தில் நிறையப் பேர் பட்டமளிப்பு விழாப் பேருரையை ஒரு சம்பிரதாயமாக உணர்வின்றி வாசிப்பதைப் பார்த்தால், நான் அக்கேள்வியைக் கேட்டிருக்க வேண்டிய அவசியமில்லைதான். ஆனால் பள்ளி நாட்களில் பாடப் புத்தகத்தில் கட்டுரையாக வாசித்த பேரறிஞர் அண்ணாவின் பட்டமளிப்பு விழாப் பேருரை என் நினைவிலேயே தங்கி விட்டதால், அவர் இடத்தில் நானா என்பதே என் கேள்விக்கான பொருள். எனினும் பேரா.தில்லைநாயகம் அவரது திருக்குறள் உரைக்கான அணிந்துரை தர உற்றவன் நான்தான் எனத் தீர்மானித்துவிட்டபடியால் அவர் இட்ட பணியை சிரம் மேற்கொண்டு செய்திருந்தேன். அணிந்துரை என்ற பெயரில் எழுதினாலும் அதனை நூலுக்கான அறிமுக உரையாகவே எழுதியிருந்தேன். எனது குருநாதரின் நூலுக்கு அணி சேர்க்க நான் யார் ? எனவே தமுஎகசவின் நூல் அறிமுக விழாவில் அறிமுக உரையாற்ற நான் பொருந்தி அமைந்தேன். நான் ஏற்கனவே நூலில் எழுதியிருந்த அணிந்துரை/அறிமுக உரையை ஒட்டி வெட்டிப் பேசுவது எனக்கு எளிதாய் அமைந்தது. இவ்வையத்திற்கு வாழ்வியல் பாடம் சொன்ன நூல் திருக்குறள் என்பதும், அது காலந்தோறும் காலத்திற்கு ஏற்ப சான்றோரால் பல மொழிகளில் உரை செய்விக்கப்பட்டது என்பதும் உலக அளவில் அறிஞர் பெருமக்களும் தமிழ் கூறும் நல்லுலகில் பாமரரும் கூட அறிந்த ஒன்று. அவ்வாறு நம் காலத்திற்கு உகந்த பார்வையுடன் பேரா.ச.தில்லைநாயகம் அவர்கள் பாமரரும் உணரும் செவ்விய உரையினைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் தர வருகிறார் எனக் கட்டியம் கூறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தமை என் பேறு. முன்னர் குறித்தது போல உரையின் உருவாக்க காலத்திலேயே வாசித்துப் பின்னூட்டம் அளித்தமையால், நான் ஒரு வாசகனாக மட்டுமல்லாமல் ஒரு விமர்சனப் பார்வையுடனும் உரைநூலை அணுகலானேன். இந்த அணுகு முறையில் எனக்கு நான்கு கோணங்கள் இருந்தன. முதலாவது, உரையாசிரியரின் முக்கிய நோக்கமான பாமரரையும் சென்றடையும் எளிமை. இரண்டாவது, திருக்குறளுக்கு உரை செய்யும் எந்த ஒரு உரையாசிரியருக்கும் உரித்தான காலம் தழுவியமை; அஃதாவது, மூலக்கருத்திலிருந்து விலகாமல் தம் காலத்திற்கு ஏற்றவாறு உரை செய்தல். மூன்றாவது, தமிழ் உரைக்கும் ஆங்கில உரைக்குமான இணக்கம் பற்றியது; வேறுபாடு இன்மை பற்றியது. நான்காவது, பாட வேறுபாடு இன்றி அமைவது. முதல் இரண்டு கோணங்களும் நேர்மையான அணுகுமுறையிலும் பின்னிரண்டும் எதிர்மறைப் பார்வையிலும் விளைவன. அதாவது முன்னிரண்டான எளிமையும் காலந் தழுவியமையும் இருப்பதால் உரை சிறப்புப் பெறுவது; பின்னிரண்டில் மொழியினால் பொருள் வேறுபாடும், எவ்விடத்திலும் பாடவேறுபாடும் இல்லாததால் சிறப்புப் பெறுவது. உள்ளதால் அமையும் சிறப்பிற்கு இவ்வுரையின் மேற்கோள்களும், இல்லாததால் அமையும் சிறப்பிற்கு இருக்கும் வேறு உரைகளின் மேற்கோள்களும் பொருந்தி அமைவன. தீமையின்மையை விளக்க தீமை யாது என்பதை சொல்லித்தானே ஆக வேண்டும் ! இவ்வுரையின் சிறப்பியல்பான எளிமை எனும் பண்பு உள்ளங்கை நெல்லிக்கனியாய்க் காணக் கிடைக்கும் ஒன்று. தமிழானாலும் ஆங்கிலமானாலும் உரையை வாசித்தவுடன் பொருளுணர்ந்து வாசகன் ஒவ்வொரு குறளையும் சரளமாகக் கடந்து செல்லுகையில் உணரற்பாலது இந்த இனிமை கலந்த எளிமை. குறிப்பாக ஆங்கில உரையைச் சொல்வதானால் எளிமையும் உயர்தரமும் (simple and elitist) வாய்க்கப் பெற்றது எனக் குறித்தே ஆக வேண்டும். எளிமையும் உயர்தரமும் ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றுகின்றனவே ! இது எவ்வாறு கைகூடும் என்று கேட்டால், அது வாசித்துப் பார்த்தால் புரியும் என்பதைத் தவிர என்னிடம் வேறு பதில் இல்லை. மேலும், அது பேரா.தில்லைநாயகம் ஒரு சிறந்த ஆங்கிலப் பேராசிரியர் என்பதற்குச் சான்று பகர்வது என்றும் நான் தப்பித்துக் கொள்ளலாம். எனவே இது காலத்துக்கேற்ற உரை எனும் கருத்தினை ஒன்றிரண்டு மேற்கோள்களுடன் சுட்டுவது இந்த அறிமுக உரைக்குப் பொருந்தி அமையும். இஃது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்க்கும் முயற்சியாம். "ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்" "மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்" என நவிலும் 'மக்கட்பேறு' அதிகார உரைகளில் பரிமேலழகர், மணக்குடவர் போன்ற பழம்பெரும் உரையாசிரியர்களும், மு. வரதராசனார், கலைஞர் கருணாநிதி, சாலமன் பாப்பையா போன்ற சில இக்கால உரையாசிரியர்களும் உள்ளது உள்ளவாறு 'மகனை'யே குறிக்கின்றனர். சிற்பி பாலசுப்பிரமணியம் போன்ற தற்கால அறிஞர் பெருமக்கள் மகனுக்குச் சொன்னவாறே உரைத்து, மகளுக்கும் பொருந்தும் எனச் சுட்டுகின்றனர். நம் உரையாசிரியர் பேரா. தில்லைநாயகம் அவர்கள் 'மகன்' என்ற இடத்தில் பிள்ளைகள் என்று உரைக்கும் உரிமையை எடுத்துக் கொள்வது குறிக்கத்தக்கது. குறள் தோன்றிய காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விதிவிலக்குகள் தவிர சான்றோர் அவையிலும், சமர்க்களத்திலும் ஆண்மகனே வந்து நின்றான். எனவே இவ்வகை அறங்களை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்பது அன்றைக்கு செயற்கையானதொரு படைப்பிலக்கியத்திற்கு வழி கோலுவதாய் அமைந்திருக்கும். "இலக்கியம் காலம் கடந்து நிற்க வேண்டியதில்லை" என்று யவனிகா ஸ்ரீராம் என்ற தற்காலக் கவிஞர் 'தடம்' ஏட்டின் நேர்காணலில் சொன்னதை வாசித்த ஞாபகம். படைப்பாளி தன் காலத்திற்குத்தானே எழுத முடியும் ? ஊகத்தின் அடிப்படையில் எதிர்காலத்தை எப்படி அவன் நிர்ணயிக்க முடியும் ? படைப்பு அவனது காலத்தைக் கடந்து நின்றால், அது அவனை மீறிய தற்செயல் நிகழ்வாகத்தானே அமையும் ? காலச்சிறையில் வள்ளுவனே கட்டுண்ட சில இடங்களில் அவனை விடுவிப்பதற்கான நமது உரையாசிரியரின் முயற்சி போற்றத்தக்கது. அவ்விடுதலையே தற்காலச் சமூக விடுதலைக்கு வித்திடும் என உணர்வது ஒரு உரையாசிரியரின் கடமையாகிறது. அதேவேளை பண்பாட்டு மாற்றத்தை அளவறிந்தே செய்துள்ள விதமும் குறிக்கத்தக்கது. எடுத்துக்காட்டாக 'வாழ்க்கைத் துணைநலம்' அதிகாரத்தில் பெண்ணுக்கு சொல்லப்பட்டதே ஆணுக்கும் என்று ஆசிரியர் மெனக்கிடவில்லை. அக்கனவு மெய்ப்படும் வருங்கால உரையாசிரியர்களுக்கு அதனை முன்பதிவு செய்து வைப்பதே இயற்கையானதாய் அமையும்; ஈண்டு அமைந்துள்ளது. மேலும், திருக்குறள் கூட அனைத்து இடங்களிலும் காலத்தைக் கடந்து யோசிக்க இயலாது என்பதை வாசகனுக்கு எங்காவது உணர்த்தத்தானே வேண்டும் ! "தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை" என்ற இடத்தில், "இத்தகையவள் பெய் என்றவுடன் மழை பெய்யும்" என்று உயர்வுநவிற்சியாகப் பெரும்பாலும் ஏனையோர் கூற, நம் உரையாசிரியர், "இத்தகையவள் கணவன் விரும்பும்போதெல்லாம் பெய்யும் மழை போன்றவள்" என்று இயல்பு கூட்டுகிறார். அவ்விடத்தில், "இத்தகையவள், வேண்டும் நேரத்தில் வேண்டிய அளவு பெய்யும் மழை போன்றவள்" என்று மெருகேற்றலாமோ என்று நம் சிந்தனைக்கு வித்திடுகிறார். தன் காலத்தின் பகுத்தறிவுவாதியான வள்ளுவன், பெரிதும் ஆணாதிக்க சமூகமாக இருந்த கால கட்டத்தில் ஆணுக்குச் சொன்னதை இப்போது பொதுவில் வைப்பது வள்ளுவனுக்கும் உடன்பாடாகத்தான் இருக்க வேண்டும். எனவே இவ்விடயத்தில் அவனை, காலத்தை வென்று நிற்க வைத்துள்ளது பாடபேதம் ஆகாது என்பதையும் குறித்தாக வேண்டும். காலம் கருதிய பொருள் கொண்டமைக்கு மேலும் சில மேற்கோள்கள் இவ்வறிமுகவுரைக்கு வலு சேர்க்கும் என நினைக்கிறேன். "மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ டியைந்துகண் ணோடா தவர்" (அதிகாரம்: கண்ணோட்டம்; குறள் 576), "உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃ தில்லார் மரம்மக்க ளாதலே வேறு" (அதிகாரம்: ஊக்கமுடைமை; குறள் 600), "அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர்" (அதிகாரம்: பண்புடைமை; குறள் 997) என்ற மூன்று குறட்பாக்களிலும் அநேகமாக உரையாசிரியர் அனைவரும் முறையே இரக்கமற்ற, உணர்வற்ற மற்றும் பண்பற்றோருக்கு மரத்தையே உவமையாகக் கூறியுள்ளனர். இயற்கையில் மரத்தின் மேன்மை கருதிய நம் உரையாசிரியர், வள்ளுவர் இவ்விடங்களில் கூறிய 'மரம்' என்பதை பட்டமரம், மரக்கட்டை என்றே விரிவுரைத்தமை அவரது நுண் மாண் நுழைபுலத்திற்குச் சான்று பகர்வது. "நும்மினுஞ் சிறந்தது நுவ்வையாகும்" என்று நற்றிணைத்தாய் (நற்றிணை பாடல் 172) தன் மகளிடம், தான் சீராட்டி வளர்த்த மரம் அம்மகளை விடச் சிறந்தது என்றும் அவளது தமக்கையாகும் என்றும் சொல்வதால், மரம் எப்படி உணர்வற்றதாகும் ? "கரிபொய்த்தான் கீழிருந்த மரம் போலக் கவின்வாடி" என்று பாலைக்கலியில் (பாடல் 34) வருவது போல் தன் கீழிருந்து ஒருவன் பொய் சாட்சி சொன்னதால் வாடிய மரம், எப்படிப் பண்பற்றதாகும் ? இங்ஙனம் மானிடரால், குறிப்பாகத் தமிழ் சமூகத்தால் கொண்டாடப் பெறும் மரத்தின் மாண்பினை உணர்ந்து வள்ளுவரும் மேற்கூறிய குறட்பாக்களில் மரம் எனக் குறித்தது சினையாகு பெயராய் மரக்கட்டையை என்று கொள்வது, நமது உரையாசிரியர் உணர்வுபூர்வமானவர் என்று நமக்கு அடையாளப்படுத்துகிறது. பெண்வழிச்சேறலில் (அதிகாரம் 91) மனைவி சொற்படி நடப்பவரைப் பொத்தாம் பொதுவாக இழிவாகக் கூறாமல், பண்பற்ற மனைவியின் சொற்படி நடத்தலை இழிவு எனக் கூறுவது நம் கருத்தினைக் கவர்வது. "மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது" என்பதில், "மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர் சிறந்த பயனை அடைய மாட்டார்" என்று கூறும் உரைகளுக்கு மாறாக, "இல்லற சுகத்தில் அளவுக்குமீறி ஈடுபடுவோர் புகழ்பெறார்" என்று உரையாசிரியர் ச.தில்லைநாயகம் அவர்கள் கூறுவது சமூகத்தில் மனையாளின் மாண்பினையும் காத்து நிற்கும் திறம். வரைவின் மகளிரையும் (அதிகாரம் 92) தற்கால நோக்கில் பாலியல் தொழிலாளர்களாக அணுகும் பாங்கினைக் காணமுடிகிறது. அதே சமயம் அவர்களிடம் மதிமயங்குவதை எக்காலத்திலும் நியாயப்படுத்த இயலாது என்பது மட்டுமின்றி, சில இடங்களில் நியாயப்படுத்துதல் பாடபேதம் ஆகும் என்பதையும் உணர்ந்து கயிற்றின் மேல் திறம்பட நடக்கிறார் நம் ஆசிரியர். உரைக்கான நமது அணுகுமுறையில் மூன்றாவது கோணமான தமிழ் உரைக்கும் ஆங்கில உரைக்குமான இணக்கத்திற்கு வருவோம். ஆங்கிலப் பேராசிரியரான ச.தில்லைநாயகம் அவர்கள், ஓரளவு சுமாரான ஆங்கிலம் அறிந்தவர்கள் கூட புரிந்து கொள்ளும் வண்ணம் ஆங்கிலத்தில் உரை செய்திருப்பது இவ்வுரைக்கு அணி சேர்ப்பதாகும். மேலும், தமிழ் உரைக்கும் ஆங்கில உரைக்கும் இடையே, சொற்தேடலில் பொருள் சிறிதளவும் வேறுபடவில்லை என்பது சிறப்பு. உதாரணமாக, ஜி.யு. போப் அவர்கள், "தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது" எனும் குறளுக்கு "தம் மக்களின் அறிவுடைமை, தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கெல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்" என்று தமிழ் உரையில் பொருள் கொண்டுள்ளார். இஃது "தம்மக்கள் அறிவுடைமை தம்மின் மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இனிது" என்று கொண்டுகூட்டிப் பொருள் கொள்வதாகும். "Their children's wisdom greater than their own confessed through the wide world is sweet to every human breast" என்று ஆங்கிலத்தில் தந்துள்ளார். இஃது "தம்மின் தம்மக்கள் அறிவுடைமை" என்று நேரடிப் பொருள் கொள்வதாகும். இந்த இரண்டிலும் உள்ள பொருள் வேறுபாடு நமது உரையாசானிடம் தென்படவில்லை. இறுதியாக நாம் கவனத்தில் கொள்ள எண்ணிய பாடபேதம் அல்லது பாடவேறுபாடு பற்றிக் கூற வேண்டுமேயானால், அது உரையில் எவ்விடத்தும் தென்படவில்லை என்று அறுதியிட்டுக் கூறலாம். பொதுவாக கவனக் குறைவாலோ அல்லது தனிப்பட்ட விருப்பு-வெறுப்பினாலோ (personal agenda) உரையாசிரியர்களிடம் பாட வேறுபாடு தோன்றுவது உண்டு. இவ்விரு குறைகளும் அற்றவர் நம் ஆசிரியர் என்பதால்தான் அவரது உரையில் பாடவேறுபாடு தோன்றாமல் போனதோ என்னவோ ! பாடவேறுபாடு என்பது ஒரு உரையாசிரியர் எத்துணைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது பெரும் பெயர் பெற்ற உரையாசிரியர்களிடமே இக்குறைபாடு ஏற்படுவதால் காணலாம். "ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்" (குறள் 133) எனும் குறட்பாவில் உயர்குலம், தாழ்குலம் என்பவை ஒழுக்கத்தினால் ஏற்படும் பாகுபாடாய் வள்ளுவனாலும், ஆன்றமைந்த உரையாசிரியர்களாலும் வரையறுக்கப் பெறுகின்றன. பரிமேலழகர் உரையில் 'தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை' என்று வள்ளுவன் சுட்டாத வருணக் கோட்பாடு வலிந்து திணிக்கப்படுவதைக் காணலாம். "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு" (குறள் 110) எனும் குறட்கருத்து புறநானூறில் (பாடல் 34) தோன்றுகிறது. "எந்த அறம் தவறியோர்க்கும் உய்வுண்டு; செய்நன்றி அறிதல் எனும் அறம் தவறியோர்க்கு உய்வில்லை" என்பதில் "எந்த அறம் தவறியோர்க்கும்" என்று வள்ளுவன் சுருங்கச் சொல்கிறான். மேற்கூறிய புறநானூற்றுப் பாடலில் மூன்று வகையான அறப்பிறழ்வுகள் அடுக்கப் பெறுகின்றன. அதில் மூன்றாவதாக, "குரவர் தப்பிய கொடுமையோர்க்கும்" என்பது, புறநானூற்றுப் பாடலை மேற்கோளாய்க் கொள்ள வந்த பரிமேலழகரால் "பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும்" எனக் குறிக்கப்படுகிறது. குரவர் என்பது மூத்தோரைக் குறிக்கும் சொல். இங்கு பெற்றோரைக் குறிப்பது. "பெற்றோர்க்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் தவறிய கொடுமையோர்" என்பது "பார்ப்பனர்க்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் தவறிய கொடுமையோர்" என ஆனது. பார்ப்பார் தப்பியோர் எங்ஙனம் கொடுமையோர் ஆனார் என்பது விந்தையிலும் விந்தை. புறநானூற்றில் இப்பாடவேறுபாடு பரிமேலழகரால்தான் ஏற்பட்டதா என்பது நாம் அறியோம். அவர் காலத்திலேயே நிகழ்ந்திருக்கிறது என்பதே நம் கருத்து. பாடவேறுபாடு செய்யும் கொடுமையோராய் நம் உரையாசிரியர் பேரா.ச.தில்லைநாயகம் துளியளவும் இல்லை என்பதில் நமக்கு எள்ளளவும் ஐயமில்லை. விமர்சனப் பார்வை என்று சொல்லிவிட்டு சிறப்புகள் மட்டும்தானே இங்கு பேசப்பட்டன ? உரையாசிரியர் என் நண்பரும் குருநாதரும் என்பதாலா ? இல்லை. சான்றாண்மை தழுவிய சிறப்புகள் வாய்க்கப் பெற்றவர் என்பதாலேயே அந்தப் பூவோடு இந்த நார் சேர்ந்து கொண்டது என்பதுதான் உண்மை. எனவே பொய்யாமொழிக்குத் தற்காலத்தில் எழுதப்பட்ட சிறந்த உரைகளின் வரிசையில் புதிய பரிமாணங்களுடன் இந்நூல் மிளிரும் என்பதில் ஐயமில்லை. இச்சீரிய இலக்கியப் பணியை சமூகப் பணியாக சிரம் மேற்கொண்ட பேரா.ச.தில்லைநாயகம் அவர்களுக்கு நம் பாராட்டும் வாழ்த்தும்.
  3. நீங்கள் சொல்வது சரி. மேற்கோளாக சங்கப் பாடலே என் நினைவுக்கு வருகிறது. 'கடலுள் பாய்ந்த பாண்டியன் இளம்பெருவழுதி' என்னும் (குறுநில ?) மன்னன் இயற்றிய புறநானூற்றுப் பாடல் அது (புறம் 182). (புலவர்க்குப் புரவலராய் மன்னர் பெருமக்கள் இருந்ததோடு சில மன்னரே புலவராய்த் திகழ்ந்தமை சங்க கால மற்றும் பக்தி இலக்கியச் சிறப்புகளில் ஒன்று). "உண்டால் அம்ம இவ்வுலகம்" என்று தொடங்குகிறது பாடல். அப்பாடலை இப்போது நான் குறிப்பிட்டுள்ளதால், முன்பு நான் வாட்சப் குழுமங்களில் பதிவு செய்ததை இங்கு மீள்பதிவு செய்கிறேன். அனைவரும் அப்பாடலையும் ரசிக்க ஏதுவாய் அமையும் : "உண்டால் அம்ம, இவ்வுலகம்! இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்; துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சி; புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின், உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்; அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கென முயலுநர் உண்மை யானே !" ----புறநானூறு 182. (பொருள் கருதி சீர் பிரித்து எழுதப்பட்டுள்ளது) பாடற்பொருள் :- " இவ்வுலகம் உண்டெனில் இதனால்தான் !" (உண்டால் அம்ம இவ்வுலகம் - அம்ம என்பது வியப்பு குறித்த அசைச்சொல்) எனத் தொடங்குகிறது பாடல். இத்தன்மை உடையோரால்தான் இவ்வுலகம் இயங்குகிறது என்று அத்தன்மைகளைப் பட்டியலிடுகிறார். அவையாவன : இந்திரலோகத்து அமிழ்தமே கிடைத்தாலும், சுயநலத்துடன் இனியது எனத் தாம் மட்டும் உண்ண மாட்டார்கள்; பிறரிடம் சினம், வெறுப்பு கொள்ள மாட்டார்கள் (முனிவிலர்); தாம் மேற்கொண்ட பணியில் சோம்பல் பாரார்(துஞ்சலுமிலர்); பிறர் (நல்லோர்) அஞ்சும் தீமைக்குத் தாமும் அஞ்சுவர்; உலகம் புகழும் நற்செயல்களை மேற்கொள்ள உயிரையுங் கொடுப்பர்; பழிச்சொல் தரும் செயல்களுக்கு உலகையே பரிசாகக் கொடுத்தாலும் ஏற்க மாட்டார்கள்; செயல்திறனில் சோர்வு இலாதார் (அயர்விலர்); இந்த மாண்புகள் பொருந்தியவராகி, வலிமையான முயற்சி (நோன் தாள்) உடையவரெனினும், தமக்கென முயலாமல் பிறர்க்கென உண்மையாகவே முயலும் தன்மையர். இத் தகைசால் பண்புகள் வாய்க்கப் பெற்றவர்களாலேயே இவ்வுலகம் இயங்குகிறது. பின்குறிப்பு:- 'தன் பெண்டு தன் பிள்ளை' என்று மட்டும் வாழாமல், பிறர்க்கெனவும் வாழ்பவரால்தான் இவ்வுலகம் இயங்குகிறது என்பதுவே இப்பாடலில் சான்றோர் உலகத்துப் பேசுபொருள். அஃதாவது பொதுவுடைமைவாதிகளாலேயே இவ்வுலகம் இயங்குகிறது எனக் கொள்ளலாம் (மக்களுக்காக நிற்கும் எவரும் பொதுவுடைமைவாதி என்பதே அதற்கான வரையறை). ஒரு கூட்டத்தில் இப்பாடலைப் பின்வருமாறு குறித்த நினைவு வருகிறது: மன்னரையும், நிலவுடமையாளரையும், முதலாளி வர்க்கத்தையும் பொதுவாக 'பூஷ்வா' (Bourgeoisie) எனக் குறிப்பிடுவோம். அப்படி நாம் அழைக்கும் பூஷ்வாவான பாண்டியன் இளம்பெருவழுதிதான் முதல் மானிட பொதுவுடமைவாதியோ!
  4. பூவினத்தொடும் புள்ளினத்தொடும் - சுப. சோமசுந்தரம் உலகில் எந்த ஒரு தொன்மையான மனித நாகரிகமானாலும், அந்த 'நாகரிக' மனிதர்களின் வரையறையின்படி இப்போதும் 'நாகரிகமடையாத' தொல் பழங்குடி இனமானாலும் தாவரங்களுடனும் விலங்குகளுடனும் மனிதன் ஒரு இயைந்த வாழ்வையே கொண்டிருக்க வேண்டும் என்பது இயற்கை நியதி. இந்த இணைப்பை நாம் தமிழ் இலக்கிய உலகில் நின்று ரசிக்கும்போது இது தொடர்பில் தமிழர்தம் மாண்பையே கூறுவதாய் அமைவது தவிர்க்க இயலாதது. இவ்வாறே ஏனைய மனிதர்க்கும் எனக் கொள்ளுதல் சிறப்பு - அனைவரும் இவ்வாறு இலக்கியமாய் எழுதி வைக்கவில்லை என்பதைத் தவிர. மேலும் நமக்கு வாய்த்ததை நாம் அனுபவித்துப் பெருமிதம் கொள்ளாவிட்டால் இங்கு பிறந்துதான் என்ன பயன் ! தமிழன் பூவினத்தோடு உரையாடுவதை "நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள்" ---------(குறள் 1111; நலம் புனைந்துரைத்தல்) எனும் இடத்தால் அறியலாம். "அனிச்ச மலரே ! மிகவும் மென்மையான நீ நீடு வாழ்க ! உன்னை விட மென்மையானவள் யான் விரும்பும் என் தலைவி" என்கிறான் தலைவன். அவன் புள்ளினத்தோடு உரையாடுவதற்கு மேற்கோளாய் நாரை விடு தூது எனும் சங்க காலப் பாடலில் சக்திமுத்தப் புலவர் தமது மனைவியிடம் நாரையைத் தூது விடுவதன் மூலம் அறியலாம். மழை பொய்த்து தம் ஊரில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக பாண்டிய மன்னன் மாறன் வழுதியைக் கண்டு தம் வறுமை போக்கச் செல்கிறார் புலவர். கூடல் மாநகரில் மன்னனைக் காணும் முன் தம்மை அந்நாரை கண்டதைத் தமது மனைவியிடம் சென்று கூறுமாறும், தமது துயர நிலையை எடுத்துரைக்குமாறும் நாரையிடம் புலம்புகிறார். சங்கப் பாடலேயாயினும் இன்றும் அனைவரும் உணரும் எளிய நடையில் விளங்கக் காணலாம். தற்காலத்துக்கேற்ற நடையில் அமைந்ததே இப்பாடலின் கூடுதல் சிறப்பெனவும் கொள்ளலாம். "நாராய்! நாராய்! செங்கால் நாராய் பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் செங்கால் நாராய் ! நீயுநின் மனைவியும் தென்றிசை குமரியாடி வடதிசைக்கு ஏகுவீ ராயின் எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு எங்கோன் மாறன் வழுதிக் கூடலில் ஆடை யின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்திக் காலது கொண்டு மேலது தழீஇப் பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும் ஏழை யாளனைக் கண்டனம் எனுமே". பொருள் : நாரையே ! செங்கால் நாரையே ! பழுத்த பனங்கிழங்கைப் போல் பவளக் கூர்வாய் கொண்ட செங்கால் நாரையே ! நீயும் உன் துணையும் தென்திசையில் உள்ள குமரியில் களித்திருந்து வடதிசை நோக்கிச் செல்வீர் என்றால் எமது ஊரான சத்திமுத்தத்தின் குளத்தில் தங்கி, நனைந்த சுவற்றின் மீதுள்ள கூரையின் மேல் இருக்கும் பல்லி எழுப்பும் சத்தத்தின் பலனைப் பார்த்திருக்கும் என் மனைவியைக் கண்டு (கணவன் வருவதற்கான அறிகுறி தென்படுகிறதா என்று பல்லியின் சத்தம் கேட்டிருப்பாளாம்), "மன்னன் மாறன் வழுதியின் கூடல் மாநகரில் நல்ல ஆடையின்றி குளிரினால் உடல் மெலிந்து கைகளைக் கொண்டு உடலினைப் போர்த்தி கால்களைக் கொண்டு மேனியைத் தழுவி பேழையுள் பாம்பினைப் போல் உயிருடன் இருக்கும் ஏழையான என்னைக் கண்டதைச் சொல். பூவினம் வாட தன் மனம் வாடும் தமிழன் தகைமையினை, படர்தற்குக் கொழுகொம்பின்றி வாடிய முல்லைக்கொடிக்குத் தன் தேரினையே ஈந்த பாரிவேளிடம் காணலாம். இத்தகைசால் நிகழ்வு செவிவழிச் செய்தியாய்ப் பாமரரிடமும் ஆண்டாண்டு காலமாய் வழங்கி வருவதாயினும், புறநானூற்றில் கபிலர் கூற்றாய்க் காணக் கிடைப்பது. இலக்கியம் சார்ந்த எழுத்தில் இலக்கிய வழி நிறுவுதல் நம் கடமையாகிறது. தந்தையை இழந்த பாரி மகளிர்க்கு உற்ற தந்தையாய்த் திகழும் கபிலர் அவர்களை விச்சிக்கோன் என்னும் குறுநில மன்னனுக்கு மணம் பேச முனைகிறார். அம்மன்னனிடம் பாரி மகளிரை முன்னிறுத்தி, "கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த பரந்துஓங்கு சிறப்பிற் பாரி மகளிர்" (புறநானூறு பாடல் 400) (பொருள் : ஒலிக்கின்ற மணியினைக் கொண்ட (கறங்குமணி) நெடுந்தேரைக் கொள்க எனக் (முல்லைக்கு) கொடுத்த, உலகிற் பரந்துபட்ட ஓங்கிய புகழ் என்னும் சிறப்பினைப் பெற்ற பாரியின் மகளிர்) என்று பாரியின் புகழ் பாடி அன்னவன் மகளிர் என்று அன்னவர் சிறப்பைச் சொல்கிறார். அடுத்து மன்னன் இருங்கோ வேளிடம் பாரி மகளிரை அறிமுகம் செய்கிறார். "இவர் யார் என்குவை ஆயின் இவரே ஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன் முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசைப் படுமணி யானைப் பறம்பிற் கோமான் நெடுமாப் பாரி மகளிர்" புறநானூறு பாடல் 201. பொருள் : இவர் யார் என கேட்பாய் ஆயின், இரப்போர்க்கு ஊரையும் முல்லைக்குத் தேரையும் ஈந்து அழியாப் புகழ் (செல்லா நல்லிசை) பெற்றவனும் ஒலிக்கும் மணியுடைய யானைகளைக் கொண்ட பறம்பு நாட்டின் அரசனும் ஓங்கிய புகழுடையவனும் ஆன பாரியின் மகளிர். முல்லைக்குத் தேர் தந்து பூவினம் பேணிய பாரியுடன், மயில் குளிரில் நடுங்குவதாய் எண்ணிப் பரிவுடன் அதற்குப் போர்வை அளித்துப் புள்ளினம் பேணிய பேகனும் பாடப் பெறுகிறான். இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் இருவரையும் சிறப்பிக்கும் பாடல் : "வானம் வாய்த்த வளமலைக் கவாஅன் கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் பெருங்கல் நாடன் பேகனும் சுரும்புஉண நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச் சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய பிறங்குவெள் ளருவி வீழும் சாரல் பரம்பின் கோமான் பாரியும் ........" (சிறுபாணாற்றுப்படை; வரிகள் 84-91). பொருள் : வானம் வாய்த்த வளமலைக் கவாஅன் - மழை வளம் பொருந்திய மலைப் பக்கத்தில்; கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய - கான மயிலுக்குப் போர்வை தந்த; அருந்திறல் - அரிய ஆற்றலுடைய; அணங்கின் - அழகிய தோற்றமுடைய; ஆவியர் பெருமகன் - ஆவியர் குலப் பெருமகனான; பெருங்கல் நாடன் பேகனும் - பெரிய மலைநாட்டுத் தலைவனான பேகனும்; சுரும்புஉண - வண்டு உண்ணும் தேனையும்; நறுவீ உறைக்கும் - நறுமணத்தையும் கொண்ட பூக்கள் நிறைந்த; வீ - பூ; நாக நெடுவழி - சுரபுன்னை மரங்கள் கொண்ட நெடுவழியில்; சிறுவீ முல்லை - சிறிய பூக்களையுடைய முல்லைக் கொடிக்கு; பெருந்தேர் நல்கிய - தனது பெரிய தேரினைக் (கொழுகொம்பாகக்) கொடுத்த; பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல் - பெருக்கெடுக்கும் வெள்ளிய அருவி விழும் மலைப்பகுதி; பறம்பின் கோமான் பாரி - பறம்பு மலையின் தலைவன் பாரி. பேகனின் நற்செயலை நத்தத்தனார் பாடியது போதாதென்று பரணரும் பாடுகின்றார். "மடத்தகை மாமயில் பனிக்குமென்று அருளிப் படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக் கடாஅ யானைக் கலிமான் பேக" (புறநானூறு;பாடல் 145; வரிகள் 1-3) பொருள் : மடத்தகை - மென்மைத் தன்மையுடைய; மாமயில் - கருநீல நிற மயில்; பனிக்குமென்று அருளி - குளிரில் நடுங்குமென்று இரங்கி; படாஅம் - போர்வை; ஈத்த - கொடுத்த; கெடாஅ நல்லிசை - அழியா நற்புகழ்; கடாஅ யானைக் கலிமான் பேக - மதம் பொழியும் யானைகளும் வீரியமிக்க குதிரைகளும் உடைய பேகனே ! இந் நிகழ்வுகள் பற்றி இத்துணை பேசிய பின் இது தொடர்பில் பின்வரும் சிந்தனையையும் குறிப்பெடுத்துச் செல்லுதல் பொருந்தி அமையும். பாரி மற்றும் பேகனின் இச்செயல்கள் பூவினத்தோடும் புள்ளினத்தோடும் அவர் கொண்ட பரிவிற்கான குறியீடேயாம். முல்லை படர்வதற்கு ஆவன செய்வதும் குளிரில் மயிலின் துன்பம் போக்க ஆவன செய்வதும் மன்னர்க்கு அரிதான ஒன்றல்ல. இருப்பினும் தம் தேரினை, தம் போர்வையினை ஈவது அல்லது உயர்வு நிகழ்ச்சியாய் அவர்கள் குறித்து இச்செயல்கள் ஏற்றப்பட்டது ஒரு தகைசால் பண்பின் மாண்பை மாந்தர்க்கு உணர்த்துதற்கே எனக் கொள்ள வேண்டும். அறிந்தும் அறியாதார் போல் அன்னார் நிஜத்திலோ கற்பனையிலோ செயல்பட்டமை அறிமடம் எனப்பட்டது. இவ்வறிமடமும் சான்றோர்க்கு அணி சேர்ப்பது என்பதைப் பின்வரும் பாடலால் அறியலாம். "முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் தொல்லை அளித்தாரைக் கேட்டறிதும் சொல்லின் நெறிமடல் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப அறிமடமும் சான்றோர்க்கு அணி" (பழமொழி நானூறு; பாடல் 361). (தொல்லை அளித்தாரை - முன்னொரு காலத்தில் அளித்தாரை; சொல்லில் - இதைப் பற்றிச் சொல்வதானால்; நெறிமடல் பூந்தாழை - முறையின் அமைந்த மடல்களையும் பூக்களையும் உடைய தாழைகளைக் கொண்ட; நீடு நீர் சேர்ப்ப - கடற்கரையின் தலைவனே !) பூவினத்தொடும் புள்ளினத்தொடும் மன்னர்தாம் பரிவு கொண்டார் என்றில்லை; சாமானியரும் கொண்டார் என்னும் வகையாகப் போர்க்களம் சென்று வினைமுடித்துத் திரும்பும் தலைவன் தேர் மணியின் நா ஒலிக்காதவாறு அதனைக் கட்டி வைத்துக் கிளம்புகிறான். அந்தக் கார் காலத்தில் வழியிலுள்ள சோலைகளில் மலர்களில் உள்ள தேனை உண்ணும் வண்டுகள் தத்தம் துணையுடன் கூடியிருக்க, மணியொலியானது அவற்றைக் கலக்கமுறச் செய்யும் என அஞ்சி அவ்வாறு மணிநாவைக் கட்டுகிறான். கார்காலத்தில் தலைவியைத் தேடிச் செல்லும் தலைவனின் உளவியலைக் கூறுவதோடு, பிறிதின் நோய் (துன்பம்) தன்நோயாகக் கொள்ளும் தகைமையும் புலனாகிறது. "பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த தாதுஉண் பறவை பேதுறல் அஞ்சி மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்" (அகநானூறு பாடல் 4; வரிகள் 10-12) (பூத்த பூங்கர் - பூத்துக் குலுங்கும் சோலையில்; துணையோடு வதிந்த - தன் துணையுடன் கூடிய; தாது உண் பறவை - (மலரில் உள்ள) தேனையுண்ணும் வண்டு; பேதுறல் அஞ்சி - கலக்கமுறும் என அஞ்சி; மணிநா ஆர்த்த - தேரின் மணியில் உள்ள நாவினைக் கட்டிய; மாண்வினைத் தேரன் - மாட்சிமை பொருந்திய வினை செயல்வகை கொண்ட, தேரினையுடையவன்). இது காறும் தாவரங்களோடும் பறவைகளோடும் வண்டினத்தோடும் தமிழன் ஒரு பரிவு சார்ந்த உறவே பேணக் கண்டோம். அதையும் தாண்டி அவற்றுடன் மேலும் உளப்பூர்வமான நெருக்கத்தை நற்றிணை, கலித்தொகை முதலிய சங்கப் பாடல்களில் காணலாம். தலைவியைத் தேடி வந்த தலைவன் ஒரு புன்னைமர நிழலில் அவளுக்காகக் காத்திருக்கிறான். அப்போது தலைவியின் சார்பாக அவளது தோழி வந்து அவனிடம், தலைவியின் அன்னையால் பேணி வளர்க்கப்பட்ட இம்மரம் தலைவியின் தமக்கையாவாள் என்றும் இம்மரத்தின் கீழ் தலைவனைச் சந்திக்க தலைவி நாணுகிறாள் என்றும், ஆகையால் கடற்கரையில் வேறு மர நிழலில் தலைவன் - தலைவி இணைந்திருக்கலாம் என்றும் கூறுகிறாள். இம்மரம் தலைவியின் தமக்கை என்பது அன்னையின் கூற்றாகத் தோழியால் சித்தரிக்கப்படுகிறது. இஃது பூவினத்தோடு தாய்-மகள், தமக்கை-தங்கை உறவென தமிழனிடம் சூழலியல் அறிவும் உணர்வும் சங்க காலத்திலேயே வேரூன்றி இருந்ததன் அறிகுறி. "விளையா டாயமொடு வெண்மணல் அழுத்தி மறந்தனம் துறந்த காழ் முளை யகைய நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப நும்மினுஞ் சிறந்தது நுவ்வை யாகுமென்று அன்னை கூறினள் புன்னையது சிறப்பே அம்ம நாணுதும் நும்மொடு நகையே விருந்திற் பாணர் விளரிசை கடுப்ப வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த் துறைகெழு கொண்கநீ நல்கின் நிறைபடு நீழற் பிறவுமா ருளவே". (நற்றிணை; பாடல் 172) பொருள் : தோழியரோடு (ஆயமொடு) வெண்மணலில் விளையாடும்போது புன்னைக்காயை மணலில் அழுத்தி அதனை மறந்து விட்டோம். அதன் விதை (காழ்) முளைவிட்டுக் கிளை விட்டது (அகைய). "நெய்யும் சுவையான பாலும் (தீம்பால்) ஊற்றி (பெய்து) இனிதாய் வளர்த்து வந்தேன். அது உன்னை விடச் சிறந்தது; உனது தமக்கையாகும் (நுவ்வையாகும்)" என்று தலைவியிடம் அப்புன்னையின் சிறப்பை அன்னை கூறினாள். எனவே தலைவி அம்மர நிழலில் உன்னோடு சிரித்துக் கூடி மகிழ்ந்திருக்க (நும்மொடு நகையே) நாணுகிறாள் (அம்ம நாணுதும் - 'அம்ம' என்றது இங்கு வியப்பைக் குறிக்கும் சொல்). விருந்தினராக வந்த பாணர்தம் இனிய மெல்லிய இசை போல (விளர் இசை கடுப்ப) வலம்புரிச் சங்கானது உயர்ந்த இசையினைத் (வான்கொடு நரல்) தரும் கடற்கரைத் தலைவனே (இலங்குநீர்த் துறைகெழு கொண்க) ! நீ விரும்பினால் (நீ நல்கின்) நிறைந்த நிழல் (நிறைபடு நீழல்) வேறும் இங்கு உண்டு(பிறவுமார் உளவே) - அஃதாவது வேறு மரங்களும் இங்கு உண்டு என்று தோழி உரைக்கிறாள். மனிதனின் எண்ணவோட்டத்தினால் அவனது முகத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கூட அவன் வளர்க்கும் பிராணிகள் புரிந்து கொள்வது அநேகமாக அனைவருக்கும் தெரிந்த ஒன்று அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று. அவனது எண்ண அலைகள் தாவரங்களிலும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்ற அறிவியல் சங்க காலத்தும் புழக்கத்தில் இருந்தது போலும். தலைவி கூற்றாகப் பின்வரும் பாடலே சான்று. "பிரிவுஅஞ்சா தவர்தீமை மறைப்பென்மன் மறைப்பவும் கரிபொய்த்தான் கீழிருந்த மரம்போலக் கவின்வாடி" (கலித்தொகை (பாலைக்கலி) பாடல் 34) பொருள் : பிரிவிற்கு அஞ்சாத அவரது தீமையை (அத்தீய தன்மையை) வெளிக்காட்டாமல் இயன்றவரை மறைக்கிறேன். இருப்பினும் தனக்குக் கீழ் நின்று பொய்சாட்சி சொன்னவனை (கரிபொய்த்தான்) மரமானது தான் வாடிக் காட்டிக் கொடுப்பதைப் போல என் முகம் வாடி (கவின் வாடி) நான் மறைத்த அவரது தீமையை உலகோர்க்குப் பறைசாற்றுகிறது. பொய்சாட்சி சொன்னவனின் உள்ளத்திலும் உடலிலும் ஏற்படும் மாற்றங்கள் மரத்தைப் பாதித்ததோ என்னவோ ! மோப்பக் குழையும் அனிச்சமும் தொட்டாற்சிணுங்கிச் செடியும் இது இலக்கிய ரசனை சார்ந்த மரபு மட்டுமன்றி அறிவியல் பூர்வமாகவும் சரியாக இருக்கலாம் என்னும் எண்ணத்தை தோற்றுவிக்கின்றன. அன்பின் வழியது உயிர்நிலை எனும் நோக்கில் இயற்கையோடு ஒன்றிய வாழ்வினை உலகோர்க்குச் சாற்றுவது தமிழர்தம் மாண்பு.
  5. ஆணிப்பொன்னாய் ஆணித்தரமாய் - சுப. சோமசுந்தரம் தலைப்பைத் தொட்டு ஒன்றிரண்டு வார்த்தைகள் சொல்லத்தான் வேண்டும். முன்னர் ஆனிப்பொன் என்றே எண்ணியிருந்தேன். தவறு சுட்டப்பேற்றேன். "மாணிக்கம் கட்டி வைரம் இடைகட்டி ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுதொட்டில்" என்று பெரியாழ்வார் திருமொழியிலும் "ஆணிப்பொன்னம்பலக் காட்சி" என்று திருவருட்பாவிலும் உயர் மாற்றுத் தங்கம் ஆணிப்பொன் எனக் குறிக்கப்படுகிறது. ஏன், "ஆணிப்பொன் கட்டில் உண்டு" என்ற வரி திரையிசையிலேயே ஏறியுள்ளது. ஆணி என்பதற்கு உயரிய என்ற பொருள் உண்டு. இப்பொருள் தொட்டது 'ஆணிப்பொன்'. 'ஆணித்தரமாய்' என்பது உறுதிப்பாடு பற்றியது; ஆணி அடித்தாற் போன்ற உறுதியாய்க் கொள்ளலாம்; இதன் வேர்ச்சொல் சுவற்றில் அடிக்கும் ஆணியாய் இருத்தல் வேண்டும். உயரிய பொருளை உறுதிப்பாட்டுடன் வள்ளுவன் சொல்வது இன்று நம் பேசுபொருள் என்பதால், 'ஆணிப்பொன்னாய் ஆணித்தரமாய்' என்பது நம் தலைப்பு. ஒரு பொருளைத் தேர்ந்து தெளிந்தபின் அதனை ஒரு கொள்கையாய் அறுதியிட்டுக் கூறும் உறுதி அனைவரிடமும் அமைவதில்லை. வள்ளுவப் பெருந்தகையிடம் உண்டு. பெரியார், மார்க்ஸ் போன்ற கொள்கைச் சான்றோரிடம் உண்டு. அவ்வுறுதி அடிப்படைவாதமோ பிடிவாதமோ அன்று. சிந்தனைத் தெளிவின் வெளிப்பாடு. ஆய்ந்தறிந்த கருதுகோளை ஆணித்தரமாய்க் கூறுவது அக்கருத்து பற்றியது மட்டுமன்று; கொண்ட கொள்கையில் சமரசமில்லாத உறுதிப்பாடு பற்றிய பாடமாகவும் அமைவது. வள்ளுவன் வழிநின்று அவன் குறிக்கும் சிற்சில இடங்களைப் பகிர்வதன் மூலம் அப்பாடத்தைப் பயில்வதே இக்கட்டுரையின் நோக்கம். 'அறன் வலியுறுத்தல்' எனும் தலைப்பே பேசுகிறது - அறத்தை ஆணித்தரமாய் அடித்துச் சொல்லியே ஆக வேண்டும் என்று. அன்புடைமை, இனியவை கூறல், செய்ந்நன்றி அறிதல், ஈகை என எத்தனையோ அறங்களை வகுத்தாலும் அத்தனைக்கும் அடிப்படையாயும் தலையாயதாயும் வள்ளுவன் சுட்டுவது மனதளவிலும் குற்றமற்று இருத்தலேயாம். "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் ஆகுல நீர பிற". (குறள் 34; அறன் வலியுறுத்தல்) அஃதாவது மனத்துக்கண் மாசு இன்றி வாழ்தலே அனைத்து அறமும் ஆவது; ஏனையவை ஆரவாரம் மிக்கவை. இதன் பொருள் ஏனைய அறங்கள் தேவையில்லை என்பதன்று. மனதில் அழுக்காறு (பொறாமை), வெகுளி (கோபம்) போன்ற மாசுடன் செயல்படுத்தும் எந்த ஒரு அறச்செயலும் அறமன்று; ஆரவாரம் மிக்கது என்பதே. இல்வாழ்க்கையின் மேன்மையைப் பேச வந்தவன் அறம் சார்ந்த இல்வாழ்க்கையை விட மேலான வாழ்க்கை முறை உண்டோ என்று விடை தெரிந்த ஐயவினாவாகக் குறித்தல் சிறப்பு. "அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன்" (குறள் 46; இல்வாழ்க்கை) இல்வாழ்வின் ஒன்றிணைந்த பகுதியாய் அறத்தினை அறிவிக்கும் முகமாய் "அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை" என்று குறள் 49 ல் மீண்டும் வலியுறுத்துவது கூர்ந்து நோக்கத்தக்கது. ஆதலினால்தானே அது இல்லறம் ! ஒருவனது மேன்மையான வாழ்வில் மனையாளின் பங்கு அளப்பரியது எனச் சொல்ல வேண்டி, "ஒருவனது மனையாள் மேன்மை பொருந்தியவள் எனில் அவனது வாழ்வில் இல்லாத சிறப்பு என்று உலகில் ஏதேனும் உண்டா ? அவளிடம் மேன்மை இல்லை எனில் அவனுக்கு உள்ள சிறப்பு என்று ஏதேனும் உண்டா ?" என்று மீண்டும் விடையறிந்த வினாவாக வலியுறுத்துகிறான் வள்ளுவன். "இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை" (குறள் 53; வாழ்க்கைத் துணைநலம்). ஆணுக்கு வாழ்க்கைத் துணைநலம் பற்றிப் பேசியவன் பெண்ணுக்குச் சொல்லவில்லையே என்றால், அது வரையறுக்கப்பட்ட ஆணாதிக்கச் சமூகத்தில் எழுதப்பட்டது; வள்ளுவன் உட்பட எந்த ஒரு படைப்பாளியும் தன் காலத்தை மிகவும் கடந்து நிற்க இயலாது என்றே கொள்ள வேண்டும். இல்லறத்தில் ஒருவனுக்கு அமைப்பு என்பது மனையாளுக்குப் பின் மக்கட்பேறுதானே ! "அறிவாற்றல் மிக்க மக்கட்பேற்றை விட ஒருவன் பெறத்தக்க பேறு யாமறிந்த வரை வேறில்லை" என்று உரத்து உறுதியாய் ஒலிப்பது குறளோனின் குரல். "பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற" (குறள் 61; மக்கட்பேறு) அறம் பேசுபவன் ஈகை எனும் அறத்தினைத் தவிர்க்கக் கூடுமா என்ன ? ஈகை பேச வந்த வள்ளுவன் அதன் சிறப்புகளைக் கூறும் முன் எடுத்து எடுப்பிலேயே அதனை வரையறுக்கிறான். "இல்லார்க்குத் தருவதே ஈகை; இருப்போர்க்குத் தருவது பயனை எதிர்பார்த்துக் கொடுப்பது" என்று ஆணி அடிக்கிறான். "வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து" (குறள் 221; ஈகை). வாய்மையின் பெருமையுணர்த்த வந்தவன் அதைவிடச் சிறந்த பண்பு தான் மெய்யாய் அறிந்த வரை வேறில்லை என்று பொட்டில் அறைந்து சொல்கிறான். "யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற" (குறள் 300; வாய்மை) அறன் வலியுறுத்தல் மட்டுமன்றி பொருள் வலியுறுத்தலிலும் சளைத்தவன் அல்லன் வள்ளுவன். "கண்ணின் பயன் கற்றலேயாம்; கற்றல் இல்லாத கண்கள் முகத்தில் இரண்டு புண்களே" என்று முகத்திற்கு நேரே சொல்கிறானோ ! "கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்" (குறள் 393; கல்வி). மேலும், "கல்வி ஒன்றே அழியாத செல்வம்; மற்ற எவையும் செல்வமாகா" என்று செல்வத்திற்கு முன்னுரையும் முடிவுரையும் எழுதுகிறான். "கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை" (குறள் 400; கல்வி) இப்பூவுலகில் உழவின் சிறப்பை எடுத்தியம்ப வந்தவன் ஏனைய தொழில் அனைத்தும் இரண்டாவது பட்சம் தான் என்று அறைவதன் மூலம் உழவுத் தொழிலின் இன்றியமையாமையைச் சுட்டுகிறான். "எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்" என உடலின் உறுப்புகள் அனைத்திலும் தலையை முன்னிலைப்படுத்துவது போல, மற்ற தொழில் முனைவோர் உழவனைத் தொழுது உண்டு செல்வோர் என்கிறான். "வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்" என்னும் பாரதியின் ஆதங்கம் முன்னோர் மொழியாய் வள்ளுவனிடத்தில் ஒலிக்கிறதோ என்னவோ ! ஏனைய தொழில் முனைவோரைக் குறைத்து மதிப்பிடுவதாகுமே என்று நம்மிடம் உள்ள தயக்கமோ பாசாங்கோ வள்ளுவனிடத்தில் இல்லை. தேடிச்சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசித் திரியும் வேடிக்கை மனிதர் நாம்; சமரசமில்லாத் துலாக்கோல் வள்ளுவன். "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்" (குறள் 1033; உழவு). பிரிவாற்றாமையினால் வள்ளுவன் காட்டும் தலைவி கூட வெட்டு ஒன்று துண்டு இரண்டாய்த் தனது நிலைப்பாட்டில் நிற்கக் காணலாம். பொதுவாக பிரிவாற்றாமைத் தலைவி பசலை கொள்வதும், உடல் மெலிந்து கைவளை பிறரறிய நிலத்தில் கழன்று விழுவதுமாய் வாழ்வதும் இலக்கிய மரபு. பிரிந்தால் வாழ மாட்டேன் எனும் நிலைப்பாடு இலக்கியங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் காணக் கிடைப்பது. வள்ளுவத்தில் கிடைக்கிறது. "நான்தான் குறுகிய காலத்தில் திரும்பி வந்து விடுவேனே !" என்று தலைவன் எவ்வளவோ தேற்றியும் தலைவி தேறவில்லை. பிரியும் அந்நாளும் வந்து தொலைக்கிறது. உற்றார் உறவினரிடம் விடை பெற்றவன் இறுதியாக அவளிடம் வருகிறான். அவன் பேச ஆரம்பிக்கும் முன் அவள் பேசுகிறாள், "நீ மனதை மாற்றிக்கொண்டு செல்லவில்லை என்றால் மட்டும் என்னிடம் சொல். மற்றபடி 'சீக்கிரம் வந்து விடுவேன்' போன்ற உன் வல்வரவு பற்றிய செய்தியை நீ வரும்போது வாழப் போகிறவர்களிடம் சொல் !" - நெத்தியடி. இங்கு நல்வரவிற்கு எதிர்ச்சொல்லாய் வல்வரவு எனும் சொல்லாக்கம் வள்ளுவனுக்கே உரியது போலும். தலைவன் மீண்டு வருவது எங்ஙனம் வல்வரவாகும் ? அவள் இல்லாத வீடு இழவு வீடுதானே ! "செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை" (குறள் 1151; பிரிவாற்றாமை) பொய்யாமொழியானின் ஆணிப்பொன்னான கருத்துச்செறிவும் சிந்தனைத் தெளிவும் ஆணித்தரமான உறுதிப்பாட்டுடன் தெறிக்கும் விதத்திற்கு மேற்கண்டவை சிற்சில இடங்கள். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறுதானே பதம் ! இங்கு கைப்பிடியளவு பதம் கண்டோமே ! அவன் படைத்த அனைத்தையும் அள்ளிப் பருகி ஆனந்தம் கொள்வது இதுகாறும் வாசித்தோரின் விருப்பமும், ஊருக்குச் சொல்ல ஆசைப்பட்டு இதனை எழுதியவனின் கடமையும்.
  6. நான் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் பக்தன் (I mean, follower) அல்லன். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் காடு ஆக்கிரமிப்புப் பற்றிய குற்றச்சாட்டில் அவர் தாம் நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும் அல்லது தண்டனக்கு ஆளாக வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. மூளைச்சலவை செய்து இளையோரைத் தவறாக வழிநடத்தும் கொடிய குற்றச்சாட்டுகளில் சிக்கிய அவர் மீது எனக்கு வெறுப்பே உண்டு என்பதையும் முதலில் பதிவு செய்தே ஆக வேண்டும். இவற்றிற்கு அப்பாற்பட்டு அவருடைய கருத்துகளில் தெளிவும் பகுத்தறிவும் உள்ளதை என்னால் அங்கீகரிக்காமல் இருக்க முடியவில்லை. வேறு எந்த நவீன காலத் துறவியிடமும் இச்சிறப்பை நான் கண்டதில்லை (ஓஷோவிடம் இருக்கலாம்). ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல கிருபனின் பதிவைக் கொள்ளலாம். மேலும் ஒரு மேற்கோளைச் சுட்ட விழைகிறேன். "கடவுள் என்ற ஒன்று உண்டா ?" என்ற கேள்விக்கு ஜக்கி வாசுதேவ் அவர்களின் பதில், "அப்படியொன்று பற்றிய நினைவே இல்லாமல் உங்கள் கடமையைச் செய்து மகிழ்ச்சியாய் இதுவரை உங்களால் வாழ முடிகிறதென்றால், அதைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும் ? அப்புறம் கடவுள் இருந்தாலென்ன இல்லாவிட்டால் என்ன ? அவர் உங்களைத் தொந்தரவு செய்யாதபோது நீங்கள் ஏன் அவரைத் தொந்தரவு செய்கிறீர்கள் ? மகிழ்ச்சியாய் மனநிறைவுடன் வாழ்வதே முக்கியம். இறை நம்பிக்கையின் அடிப்படையும் அதுவே ". (அவர் சொன்ன கருத்தை என் மொழியில் சுருக்கமாக எழுதியிருக்கிறேன். அவரது "அத்தனைக்கும் ஆசைப்படு" நூலில் வாசித்த நினைவு). அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணியில், சாத்தான் வேதம் ஓதுவதாகக் கொண்டால் கூட அது நல்ல வேதமாக இருக்கிறது என்பது என் கருத்து.
  7. சிறந்த முடிவு. சிறப்பான அனுபவப் பகிர்வு. வாழ்த்துகள். குடும்ப, உறவு அமைப்புகள் பெரும்பாலும் எல்லைக்கோடுகளை மதிப்பதில்லை. மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதும், ஒருவருக்கு எதிர்பாராத இன்னல் வரும்போது இயன்றவரை மற்றவர்கள் தாங்கிப் பிடிப்பதுமே உறவுமுறை; மற்றபடி ஒருவர் வாழ்க்கையை எப்படி அமைக்க வேண்டும் என்று மற்றவர்கள் தீர்மானிப்பதற்காக அல்ல. நம் வாழ்க்கை தொடர்பான முடிவுகளை நம் மீதே திணிக்கும் உறவுகளைத் தூக்கி எறிவதே அமைதியான வாழ்க்கைக்கு வழிகோலும். மேலும் சமூகக் கட்டமைப்பிற்காக முற்றிலும் பொருந்தாத திருமண பந்தத்தில் வாழ்ந்து தொலைப்பது கூட யாருக்கும் பலன் தராது.
  8. பொய்மையும் வாய்மையிடத்த - சுப. சோமசுந்தரம் "வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இல்லாத சொலல்" ------(குறள் 291; அறத்துப்பால்; அதிகாரம் : வாய்மை) திருமணப் பத்திரிகைகளில் ஒவ்வொருவரும் அவரவர்க்குப் பிடித்த ஏதோ ஒரு பாடலுடன் தொடங்குவார்களே, அதுபோல் இக்கட்டுரைக்கு மேற்கண்ட குறளே நாம் போடும் பிள்ளையார் சுழி (!). இப்பீடிகையைப் பார்த்தாலே தெரிய வேண்டும் - இவன் சில பொய்களுக்குப் புடம் போட்டு, முடிந்தால் நமக்கு மூளைச்சலவை செய்து ஏதோ கருத்தியல் சார்ந்த சுழலில் தள்ளப் பார்க்கிறான் என்று. ஏமாற்ற நினைப்பது உண்மைதான். பின்னர் ஏன் இந்த முன்னறிவிப்பு ? ஏமாற விருப்பமில்லையெனில் ஆரம்பத்திலேயே சுழலில் சிக்காமல் நீங்கள் கரையில் நின்று வேடிக்கை பார்க்கலாமே என்ற நல்லெண்ணமும் உண்டு. காட்சி 1 : காலம் - சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு; இடம் - நெல்லையில் நான் பிறந்து வளர்ந்த எங்களது பூர்வீக வீடும் அதன் சுற்றுப்புறமும். காலங்காலமாக அங்கேயே வாழ்ந்து வந்ததால் சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் சுற்றத்தினராகவே வாழ்ந்தமை அக்கால இயல்பு. பாசப்பிணைப்பு, சண்டையிடல் என அனைத்து அம்சங்களுடன் வாழ்ந்த ஒரு கூட்டம். "எல்லாம் அந்தக் காலம் !" என்று அந்தக் காலப் பெரியவர்கள் போல் பெருமூச்சுடன் ஒரு முறை அங்கலாய்த்துப் பார்க்கிறேனே ! எங்கள் வீட்டில் இருந்து இரண்டு வீடுகள் தள்ளி வாழ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் திட்டமிடாத வாழ்க்கையாலோ என்னவோ, பெரும் கடன் சுமையில் மாட்டிக்கொண்டார். வெளியில் தலைகாட்ட முடியாமல் மூட்டைப்பூச்சி மருந்தைக் குடித்து விட்டார். இந்த மாதிரி திடீர் 'நோயாளிகளை' இயன்றவரை போராடிக் காப்பாற்ற ஒரு மருத்துவமனை அக்காலத்தில் அங்கு இருக்கவே செய்தது. முடிந்தவரை 'தற்கொலை' செய்தி வெளியில் வராமல் கையாளும் திறமையும் அம்மருத்துவமனை நிர்வாகத்திற்கு இருந்திருக்கும். எனினும் இந்த ஆசிரியர் விஷயத்தில் எமனுடன் பெரிதும் போராடி நான்கு நாட்கள் மட்டுமே அவர்களால் 'வாய்தா' வாங்க முடிந்தது. ஆதரவின்றி விடப்பட்ட அவரது மனைவிக்காகவும் நான்கு குழந்தைகளுக்காகவும் தெருவே அழுதது. கடன் கொடுத்தவர்கள் பெரிய மனது வைத்து (அந்தக் காலம் என்பதாலோ !) விலகிக் கொண்டார்கள். அதனால் அவர்களது பூர்வீக வீடு தப்பியது. அரசிடம் இருந்து அவருக்கு வரவேண்டிய பணப் பலன்களும் அவர்களுக்குக் கிடைக்க வாய்ப்பு உண்டு; ஆனாலும் பணிக்காலத்தில் மரணம் அடைந்ததால் மேலதிகார விசாரணை என்ற நடைமுறை இருந்தது. தற்கொலை என்றால் சில சலுகைகள் குடும்பத்திற்குக் கிடைக்க வாய்ப்பில்லை. வந்த அதிகாரி விவரங்கள் ஓரளவு கேள்விப்பட்டுதான் வந்திருப்பார். இறந்தவர் வயிற்றுக் கடுப்பு நோயினால் பாதிக்கப்பட்டதாகவே சான்று அளிக்கப்பட்டிருந்தது. சுற்றி வசித்தவர்களுக்கும் அவ்வாறே சொல்லப்பட்டிருந்தது அல்லது சொல்லச் சொல்லப்பட்டிருந்தது. எவரிடமெல்லாம் விசாரிக்கப்பட்டது, பெறப்பட்ட தகவல்கள் யாவை போன்றவற்றைப் பதிவு செய்வது விசாரணை அதிகாரியின் கடமை. ஆசிரியரின் வீட்டில் விசாரித்ததுடன் மேலும் அக்கம் பக்கம் இரண்டு வீடுகளில் விசாரித்தார். எங்களுக்கு அடுத்த வீட்டு ஆச்சியிடம் விசாரிக்க வந்தார் (வயதான பெண்களை ஆச்சி என்று விழிப்பதும், உரிமையோடு அவர்களை ஒருமையில் குறிப்பிடுவதும் சுற்றி அமைந்த அச்சமூக வழக்கு). அந்த ஆச்சி கல்லூரி மாணவனான என்னை அழைத்தாள். "படிச்சவுக வந்திருக்காக. எனக்கு வாசிக்கவும் தெரியாது; ஒரு எழவும் தெரியாது. வாய்யா ! செத்துப்போனவன் குடும்பத்துக்கு நம்மாலான உவகாரத்தச் செய்வோம்" என்றாள். அவளது அனுபவ அறிவுக்கு ஒரு பல்கலைக்கழகத்தின் உயரிய பட்டமே ஈடாகாது என்பது அவளுக்குத் தெரியாது; எனக்குத் தெரியும். சென்று அமர்ந்தேன். அந்த அதிகாரிக்கும் எனக்கும் கைச்சுற்று முறுக்கும் கடைந்தெடுத்த மோரும் தந்து உபசரித்தாள். அவர் கேட்டதற்கெல்லாம் பிசிறு தட்டாமல் தெளிவாகப் பதில் சொன்னாள் - வயிற்றுக் கடுப்பு நோயினால் இறந்தவர் பட்ட பாடுகள் (!) உட்பட. பொய்யைப் புடம் போட்டு இவள் விவரித்த முறையை நான் ரசித்தது போலவே அந்த அதிகாரியும் ரசித்தார் என்றே நினைக்கிறேன். ஒரு சம்பிரதாயத்துக்காக, "அந்த மருத்துவமனையில் இறந்ததால் ........." என்று இழுத்தார் அதிகாரி. அவ்வளவுதான். ஆச்சி அவரது கைகளைப் பிடித்து, "ஐயா உங்களுக்கு என் கடைசி மகன் வயசுதான் இருக்கும். அந்த வீட்ல செத்தவன் நாலு புள்ளைகள அம்போனு விட்டுட்டுப் போயிட்டான். என்னத்தப் போட்டு இப்புடி விசாரிக்குறீக ?"என்று மன்றாடும் தொனியில் சொன்னாளே பார்க்கலாம். ஏதோ ஒரு வீட்டில் நிகழ்ந்த சோகத்திற்காக இவள் உருகினாள். உணர்ச்சியில் அந்த அதிகாரியின் கண்களும் பனித்தன. ஆச்சியின் பாதங்களைத் தொட்டு வணங்கி, "அம்மா ! நானும் புள்ள குட்டிக்காரன்தான். மேற்கொண்டு யார் கேட்டாலும் நீங்கள் எந்த அளவுக்குத் தெளிவாகச் சொல்வீர்கள் என்பதற்காகத்தான் கேட்டேன். நீங்கள் சொன்ன விவரங்கள்தான் என் இறுதி அறிக்கை" என்று வாக்களித்துச் சென்றார். அக்குடும்பத்திற்கு அனைத்துப் பலன்களும் சலுகைகளும் விரைவில் கிடைத்தன என்பது இக்கதையின் பிற்சேர்க்கை. அந்த ஆச்சியால் அங்கு அழைக்கப்பட்ட நான் எதுவும் பேச அவசியம் ஏற்படவில்லை. தன் பேரன் உடன் இருக்கிறான் என்ற மன தைரியம் மட்டுமே நான் அங்கு சென்றதால் அவளுக்குக் கிடைத்த பலனாக இருக்கும். எனக்குக் கிடைத்த பலன் "பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்" என்ற குறளின் உண்மைப் பொருள். காட்சி 2 : அதே தெருக்கோடியில் ஒரு நேர்மையான, மனிதாபிமானமுள்ள வருவாய்த்துறை அதிகாரியின் வீடு இருந்தது. அவரும் பரம்பரையாக அங்கு வாழ்பவர். எனது தந்தையாரின் நெருங்கிய நண்பர் என்பதால் எங்களது குடும்ப நண்பரும் கூட. நான் அவரை மாமா என்றும் (அங்கிள் என்னும் செயற்கைத்தனம் அப்போது இல்லை) அவர் என்னை மருமவனே என்றும் உறவு பாராட்டும் உரிமை உண்டு. 1990களில் நான் ஆசிரியர் பணியில் சேர்ந்த சமயம் அவர் தமது பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். ஓய்வு பெற்று சுமார் பத்து வருடங்கள் கழித்து அவருக்கு அலுவலக முறையில் ஏற்பட்ட சிறிய பிரச்சினை ஒன்றை என் தந்தையாருடன் விவாதித்துக் கொண்டிருந்தார். பணிக்காலத்தில் அவருக்கு நன்கு தெரிந்த ஒரு வறிய, வயோதிகப் பெண்மணிக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்திருந்தார். அப்போது அத்தொகை மாதம் சுமார் இருநூறு ரூபாய்தான் என்றாலும் அக்கால கட்டத்திற்கு ஓரளவு அது ஒரு உதவித் தொகைதான். அப்போது அந்த ஆச்சிக்கு ஒரே ஒரு அறை கொண்ட ஓடு வேய்ந்த ஒரு குச்சு வீடு சொந்தமாக இருந்தது. மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வேறு எந்த வருமானமும் இல்லை. தமது வீட்டை ஒட்டி அந்தக் குச்சு வீடு இருந்ததால் அந்த இடத்தையும் தம் வீட்டுடன் சேர்த்தால் வசதியாய் இருக்கும் என்று எண்ணிய ஒரு நபர் ஆச்சியிடம் வீட்டை விலை பேசி இருக்கிறார். ஆச்சி தனக்குக் குடியிருக்க வீடு வேண்டும் என்பதால் விற்க முடியாது என்று உறுதியாய் மறுத்துவிட்டாள். பெரிய வீடு கொண்ட அந்த சிறிய மனதுக்காரர் ஆச்சிக்குச் சொந்தமாய் வீடு இருக்கும் தகவலை மாவட்ட ஆட்சியருக்கு எழுதிப்போட்டு விட்டார். முதியோர் உதவித்தொகை பெற ஒருவருக்கு எந்த சொத்தும் இருக்கக் கூடாது என்ற விவரம் தெரிந்த வில்லத்தனம். சுமார் இரண்டு ஆண்டுகளில் உதவித்தொகை நிறுத்தப்பட்டது. இழுத்தடித்து விசாரணை நடந்த நேரத்தில் தற்செயலாக அந்த ஆச்சி வீடுபேறு (!) அடைந்து விட்டாள். இருப்பினும் அவள் வாழ்ந்த வரை பெற்ற சுமார் ஐயாயிரம் ரூபாயை நான் மாமா என்று உரிமையுடன் அழைக்கும் அந்த அதிகாரி கட்ட வேண்டும் என்று உத்தரவானது. இவர் ஓய்வு பெற்றே பத்து வருடங்கள் கழிந்து விட்டதால் பொதுவாக அரசாங்கத்தில் சிறிது காலம் கழித்து அத்தொகையைத் தள்ளுபடி செய்து விடுவார்கள் என்றும், எனவே அந்த உத்தரவைக் கண்டு கொள்ள வேண்டாம் என்றும் என் தந்தையார் யோசனை சொல்லிவிட்டார்கள். நான் ஆர்வ மிகுதியால் வழக்கமான உரிமையுடன் அந்த மாமாவிடம் கேட்டேன், "மாமா ! குச்சு வீடு சொந்தமாக இருப்பது தெரிந்துதான் அந்த ஆச்சிக்கு உதவித்தொகை கிடைக்கப் பரிந்துரைத்தீர்களா ?". அவரது பதில், "மருமவனே ! அவ பிச்சை எடுக்கும் நிலையில் இருந்தால்தான் கொடுக்கணும்னு ரூல்ஸ் புத்தகத்தை அப்படியே வாசிக்க முடியுமா ? ஏதோ மனசுக்குத் தோணுச்சு, செய்தேன். இதுக்கெல்லாம் புகார் செய்யும் அளவுக்கு ஈனர்கள் இருப்பார்கள் என்று நெனச்சுப் பார்க்கல". மேலும் சுமார் பதினைந்து வருடங்கள் கழித்து அந்த மாமாவும் எனது தந்தையாரும் அடுத்தடுத்து இயற்கை எய்தினார்கள். எங்கள் தாலுகாவின் வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அதிகாரியுடன் அந்தப் பழைய கணக்கிற்காக வந்தார். தற்செயலாக நான் அவர்களை எதிர்கொள்ள நேர்ந்தது. மேலுலகத்தைக் கைகாட்டி விட்டு நான் ஒதுங்கி இருக்கலாம். ஆனால் நான் அவர் கொண்டு வந்திருந்த அரசு ஓலையைப் பெற்றுக்கொண்டு மறுநாள் அவர் சொன்னவாறு முறையாக அரசுக் கணக்கில் அந்தப் பணத்தைக் கட்டி விட்டேன். அரசாங்கம் பெரிய மனது வைத்து முப்பது வருடங்களுக்கான வட்டியெல்லாம் கேட்கவில்லை என்பதால் சுமார் ஐயாயிரம் ரூபாய் எனக்கு அப்போது சிறிய தொகை என்பதாலும், எனது பெருமதிப்பிற்குரிய அந்த மாமா இறந்த பின்பு அரசாங்கத்துக்குக் கூட கடன் பட்டவராய் இருக்கக் கூடாது என்று எனது உள்ளுணர்வு சொன்னதாலும் அந்தப் பணத்தைக் கட்டினேன். மேலும், சிறிய தொகையில் ஒரு பெரிய காரியத்தில் அந்த மாமாவுடன் பங்கு கொள்ளக் கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்ற அற்ப ஆசையும் உண்டு. காட்சி 3 : என்னுடன் பல்கலைக்கழகத்தில் வேறு ஒரு துறையில் பணியாற்றிய பேராசிரியர் நண்பர் ஒருவர் தமது துறைக்குத் தலைவரானார். தமது துறையின் ஆசிரியர் அனைவரும் கற்பிப்பதிலும் ஆராய்ச்சிப் பணியிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் திகழ்வதை எப்போதும் உணர்ந்தவர் அவர். அத்தனைப் பேரும் அவ்வாறு ஒருசேர அமைந்தது அவருக்கான வியப்பும் துறைக்கான பெரும்பேறும். தமது துறையைச் சார்ந்த ஒவ்வொரு ஆசிரியரின் அறையிலும் துறைத் தலைவரான தமது அறையில் உள்ளது போலவே குளிர்சாதனப் பெட்டியை அமைத்துக் கொடுக்க விரும்பினார். நெல்லையில் வருடத்தில் நான்கு மாதங்கள் கடுமையான வெப்பம் நிலவும். ஆசிரியர்களுக்கான கோடை விடுமுறையில் கூட துறையில் வந்து ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் அவர்களுக்குக் குளிர்சாதனம் ஊக்கம் தரும் விதமாகவும் அவர்களது பணித்திறனை மேம்படுத்தும் விதமாகவும் இருக்கும் என எண்ணினார். பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளில் அன்றைய தினம் அதற்கு வழியில்லை. ஆய்வுத் திட்டங்கள் (projects) கிடைப்பது எளிதான சில துறைகளில் அத்திட்டங்களின் கீழ் வாங்கப்படும் கருவிகளை ஆசிரியர்களது அறைகளில் வைத்து அவற்றுக்கான குளிர் சாதனத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களும் குளிர்காய்வது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் விவேகமான நடைமுறைதான். ஆனால் ஆய்வுத் திட்டங்கள் அரிதாய்க் கிடைக்கும் தமது துறையில் என்ன செய்வது என யோசித்தார் நமது மேற்கூறிய நண்பரான துறைத்தலைவர். நான் எனக்குத் தெரிந்த யோசனையைச் சொன்னேன் (நமக்குதான் மூளை இப்படியெல்லாம் வேலை செய்யுமோ !). அவரது துறையில் இரண்டு கணினி மையங்கள் இருந்தன. இரண்டிலும் சேர்த்து மொத்தம் நான்கு பழைய குளிர்சாதனப் பெட்டிகள் இருந்தன. நான்கும் நல்ல நிலைமையில் 'Old is gold' என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தன. எனினும் குறிப்பிட்ட கால அளவைக் கடந்து விட்டதால் அவற்றைக் கழித்து விட்டதாகக் கணக்குக் காட்டலாம்; அந்த இடத்தில் புதிய குளிர்சாதனங்கள் வாங்கிப் பொருத்திவிட்டு, கழித்த பழைய சாதனங்களை நான்கு ஆசிரியர்கள் அறையில் பொருத்திவிடலாம் என்பதே எனது உலக மகா யோசனை. "பிரச்சனை வந்தால் பார்த்துக் கொள்ளலாம்; சிறிய பிரச்சனைகள் கூட இல்லாமல் வாழ்வதற்காகவா பிறந்தோம் ?" எனும் எனது அசட்டுத் தைரியம் வேறு. இருப்பினும் பணிமூப்பில் கடைசியில் இருக்கும் இரண்டு ஆசிரியர்களுக்கு கொடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் துறைத் தலைவருக்கு. அவரது நல்ல மனதுக்கு அவர் கும்பிடும் சாமியே அவருக்கு உதவுவார் போல. மூத்த ஆசிரியர்கள் இருவர் குளிர்சாதனம் தங்களது உடல் நிலைக்கு ஒத்துக் கொள்வதில்லை எனக் கூறியதால் நமது பேராசிரியருக்கு அளப்பரிய ஆனந்தம். நினைத்ததை சாதித்தார். நினைத்தது போல் அவருக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை. கால ஓட்டத்தில் இப்போது குளிர்சாதனமெல்லாம் சாதாரண விஷயமாகிவிட்டது. இருப்பினும் "பொய்மையும் வாய்மையிடத்த" எனும் பொய்யாமொழி இங்கு பொருந்துமா என்பது ஐயப்பாடே ! நன்மை பயத்தது உண்மை. புரைதீர்ந்த நன்மைதானா ? நாம் முன்னம் கண்ட இரண்டு காட்சிகள் வாழ்வில் அடிப்படைத் தேவைகள் தொடர்பானவை. இது வசதி சம்பந்தப்பட்டது ஆயிற்றே ! கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல்தானே இதுவும் ! இப்படியெல்லாம் கன்னா பின்னாவென்று யோசித்து நானோ எனது நண்பரான அத்துறைத்தலைவரோ நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எங்கள் கருத்தின்படி அடுத்து ஏதாவது நல்ல காரியத்தை (!) யோசிப்போமா ?
  9. https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0pytBBATUQy6FPiB8ciMm9Wnbia5KvnSzJEmqBi3PfanL4w9nMhCAF3TGzCYgKXAql&id=100083780391980&mibextid=Nif5oz
  10. உங்கள் வாசிப்புக்கும் பாராட்டுக்கும் நன்றி. உங்கள் தகவலுக்கு: நான் ஒரு பணி ஓய்வு பெற்ற கணித ஆசிரியன். எண்ணுக்கும் எழுத்துக்கும் வெகுதூரம் இல்லையே. இரண்டு கண்களுக்கு இடையே உள்ள தூரம்தானே !
  11. கார் மயக்கம் -சுப.சோமசுந்தரம் களவியலிலும் கற்பியலிலும் பிரிவாற்றாமை எனும் நோய் தரும் வலி அக இலக்கியங்கள் முழுவதும் விரவிக் கிடப்பது. குறிப்பாக இலக்கியங்களில் அந்நோய் பெண்ணையே தாக்குவதாய் உணர்கிறோம். நிதர்சனமும் அவ்வாறே இருக்கலாம். அது ஆணாதிக்க சிந்தனையின் விளைவு என எளிதாய்ப் புறந்தள்ளுவதற்கில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலியல் வேறுபாட்டைப் போல் உளவியல் வேறுபாடும் உண்டே! பொருளாதாரம், பாதுகாப்பு முதலியவை குறித்து ஆணுக்குப் பொறுப்புணர்வு அதிகமாகவும் பெண்ணுக்கு மென்மையான உள்ளுணர்வுகள் அதிகமாகவும் அமைந்தது இயற்கையே. எனவே நாட்டிற்கும் வீட்டிற்கும் தனது பொறுப்புணர்வு காரணமாக அவன் அவளை அவ்வப்போது பிரிந்ததும், அவள் அவனது பிரிவினால் வருந்தி உழன்றதும் உலகோர்க்குப் பேசுபொருளாகவும் பாவலர்க்குப் பாடுபொருளாகவும் அமைந்ததில் யாதொரு வியப்புமில்லை. திணையின்பாற்பட்டு பிரிவாற்றாமை வகைப்படுத்தப்படலாம். இக்கட்டுரையில் நாம் எடுத்தாள எண்ணுவது முல்லைத்திணை நவிலும் பிரிவாற்றாமையாம். முல்லைத் திணையில் முதற் பொருளில் கார்காலமும், உரிப்பொருளாக (ஆற்றி) இருத்தலும் இருத்தல் நிமித்தமும் அமைந்த பின்னணியில் முல்லை நிலத்தின் பிரிவாற்றாமையும் அமையக் காணலாம். கார்காலத்திற்குள் மீண்டு வருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் கார்காலத்திலும் திரும்பாததால் தலைவி பெருந்துயருற்று ஆற்றி இருத்தலும் அது தொடர்பானவையும் 'இருத்தலும் இருத்தல் நிமித்தமும்' என்று குறிக்கப்பெற்றன. விலங்கினங்கள் தம் இணைகளைத் தேடும் காலம் குறிப்பாகக் கார்காலம் என்பது சான்றோர் மட்டுமின்றி இயற்கையறிவு பெற்ற பாமரரும் அறிந்ததே. சமூக விலங்கான மனிதன் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன! ஏனைய விலங்கினங்களுக்கு இதனை வெறும் உடலியல் சார்ந்த ஒன்றாகக் கொள்ளுவதும், தனக்கு மட்டும் 'உளவியலும் சார்ந்த ஒன்றாக்கும்!' எனும் மானிடக் கற்பனையும் மனிதனுக்கான உரிமை, பெருமை, இன்பம் அனைத்தும். தமிழ் கூறும் நல்லுலகத்தைப் பொறுத்தமட்டில் இப்பெருமையையும் இன்பத்தையும் இலக்கியங்களில் வலை வீசித் தேட வேண்டியதில்லை. முன்னர் கூறியது போல் அக இலக்கியங்கள் முழுவதும் காணக் கிடைப்பது. தமிழ் இலக்கிய உலகத்தின் ஆழமும் அகலமும் தமிழுக்கான சிறப்பு. எனவே ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தொட்டுச் செல்வதே உலகளவைக் காட்டும் கையளவுக் கட்டுரையாய் அமையும். இக்கட்டுரையின் நோக்கமும் அதுவே. கருதுபொருள் சிறு சிறு தலைப்புகளாய் மனத்திரையில் ஓடுகிறது. சிறுவயதில் கட்டுரைகள் எழுதிப் பழகிய பள்ளி நாட்களின் மலரும் நினைவுகளோ என்னவோ! கார் வந்தது காதலன் வரவில்லை : கார்காலம் வந்தமைக்குக் கட்டியம் கூறுகிறது முல்லைப்பாட்டின் இறுதியில் அமைந்த இரு வெண்பாக்களில் ஒன்று. "...................துன்னார் முனையுள் அடல்முகந்த தானை அவர்வாரா முன்னம் கடல்முகந்து வந்தன்று கார்". பொருள்: செறுகளத்தில் (துன்னார் - பகைவர்; துன்னார் முனை - போர் முனை) பகைவரின் அழிவினை முகந்த சேனை (அடல் - அழிவு; தானை - சேனை) திரும்பி வரும் முன் கடலினை முகந்து வந்தது கார்மேகம். தலைவன் பிரிந்து செல்வது போர் மேற்கொண்டு அல்லது பொருள் தேடக் கடல் கடந்தும் வாணிகம் செய்யும் பொருட்டு என அமைவது இயல்பு. நாம் முன்னம் கண்ட முல்லைப்பாட்டு சுட்டும் தலைவி போர்க்களம் சென்ற தலைவனால் பிரிவுத் துயரம் கொண்டாள். இப்போது நாம் காணப்போகும் குறுந்தொகைத் தலைவி இரண்டாவது ரகம். வேனிற்காலத்தில் பிரியும் போது கார்காலத்திற்குள் மீண்டு விடுவதாய் வாக்களித்த தலைவன் திரும்புவதற்குள் கார் சூழ்ந்து கலக்கமுற்றாள் தலைவி. மழைக்காலம் தொடங்கியதும் முல்லைக்கொடியில் மொட்டுகள் அரும்பின. அம்மொட்டுகளை ஒளி பொருந்திய முத்துப் போன்ற பற்களாகக் கொண்டு கார்காலமே தனது துயர நிலை கண்டு நகையாடுமே என்று தோழியிடம் புலம்புகிறாள் தலைவி. "இளமை பாரார் வளம்நசைஇச் சென்றோர் இவணும் வாரார் எவண ரோஎனப் பெயல்புறம் தந்த பூங்கொடி முல்லைத் தொகுமுகை இலங்குஎயிறு ஆக நகுமே தோழி நறுந்தண் காரே" ---------- குறுந்தொகை 126. பொருள்: இளமைப் பருவம் வீணாவதையும் அவர் கருத்தில் கொள்ளவில்லை. பொருள் வளம் விரும்பிச் (நசைஇ) சென்றவர் இங்கும் (இவணும்) வரவில்லை. எங்கு இருக்கிறாரோ (எவணரோ)? மழை (பெயல்) முல்லை நிலமெங்கும் (புறம்) முல்லைப் பூங்கொடியில் கொத்துக் கொத்தாக (தொகு) அளித்த அரும்புகளை (முகை) ஒளிரும் (இலங்கு) பற்களாகக் (எயிறு) கொண்டு நறுமணமும் குளிர்ச்சியும் பொருந்திய கார்காலம் (நறுந்தண் கார்) நகையாடுமே தோழி! ("எனது நிலை கண்டு நகையாடுமே!" எனக் கொள்க). தலைவன் வாராத காலம் நீண்டு கொண்டிருக்க மேலும் மேலும் துயர் உருகிறாள். "நான் உயிர் பிழைக்க மாட்டேனோ!" என்று தோழியிடம் மறுகுகிறாள். "மழைவிளை யாடும் குன்றுசேர் சிறுகுடிக் கறவை கன்றுவயின் படரப் புறவிற் பாசிலை முல்லை ஆசுஇல் வான்பூச் செவ்வான் செவ்வி கொண்டன்று உய்யேன் போல்வல் தோழி யானே" ------ (குறுந்தொகை 108) பொருள்: மழை மேகம் விளையாடும் குன்று அமைந்த தலைவியின் சிற்றூரில் (சிறுகுடி) கறவைப் பசு தன் கன்றின் இடத்தை (கன்று வயின்) நோக்கிச் செல்கின்றது (படர). அம்முல்லை நிலத்தில் (புறவில்) பசுமையான இலைகளை (பாசிலை) உடைய முல்லைக்கொடியின் தூய்மையான (ஆசு இல் - குற்றமற்ற) வெண்பூக்கள் (வான் பூ) செவ்வானம் தோன்றிய மாலை வேளையில் (செவ்வான் செவ்வி) பூத்திருக்கின்றன. (கார்ப் பருவத்தின் இக்காட்சிகள் என்னை வாட்டுவதால்) நான் உயிர் வாழ மாட்டேன் (உய்யேன்) போல் தோன்றுகிறது தோழி! பிரிவுத் துயரம் வாட்ட தலைவியின் உடலில் பசலை படர்வதும், உடல் மெலிந்து கைவளைகள் பிறர் அறிய நிலத்தில் கழன்று விழுவதும் சங்க காலத்திலும் சங்கமருவிய காலத்திலும் இலக்கிய உலகில் பரவலாய்க் காணக் கிடைப்பவை. பிரிவுத் துயரினால் அவள் உயிர்வாழாள் என்னும் எச்சரிக்கை மணி அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கேட்கலாம். மேற்கூறிய குறுந்தொகைப் பாடல் ஒரு சான்று. "செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை" ------------------------ (குறள் 1151) என்று தலைவி கூற்றாக வரும் பிரிவாற்றாமை குறளும், "வருவை யாகிய சின்னாள் வாழா ளாதல்நற் கறிந்தனை சென்மே" -----------(நற்றிணை 19; ஈற்றடிகள்) என்று தோழி கூற்றாக வரும் நற்றிணைப் பாடலும் இவ்வகை வருவன. இல்லை இல்லை கார் வரவில்லை : அல்லலுற்ற மனம் ஆறுதல் தேடும். தன் மனமே தனக்கு ஆறுதல் சொல்வதும், தன்னைச் சார்ந்தோர் தேற்ற ஆறுதல் கொள்வதும் உளவியல் மற்றும் உலகியல் நடைமுறை. பொய்யான தேறுதல் கூட மெய்யான ஆறுதல் தரும். அவ்வாறே குறுந்தொகைத் தலைவியொருத்தி, "கொன்றை மரம் சூழ்ந்த காடு புதிதாய்ப் பூத்துக் குலுங்கி கார்காலத்தை அறிவித்தாலும் நான் நம்பப் போவதில்லை. கார்காலத்திற்குள் திரும்பி வருவேன் என்று சொல்லிச் சென்ற என் தலைவன் பொய் சொல்வதில்லை" என்று அரற்றுகிறாள். பிரிவாற்றாமையின் வலி அவளுக்குதானே தெரியும்! "..............புதுப்பூங் கொன்றைக் கானம் கார்எனக் கூறினும் யானோ தேறேன்அவர் பொய்வழங்கலரே" ------------------------ குறுந்தொகை 21 தன்னைத்தானே தேற்ற முயன்றும் தேறாத மனதுக்குத் தேர்ந்து தெளிந்த நட்புதானே மருந்து! ஆங்கே இடுக்கண் களைய தோழி முற்படுகிறாள். "மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை கல்பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய பருவம் வாரா அளவை நெரிதரக் கொம்புசேர் கொடிஇணர் ஊழ்த்த வம்ப மாரியைக் கார்என மதித்தே" -------------------- குறுந்தொகை 66 பொருள்: பரந்த அடியினையுடைய (தடவுநிலை) கொன்றையானது, ஏதும் விளையாத கற்கள் நிறைந்த பாலை நிலம் (கல்பிறங்கு அத்தம்) சென்ற தலைவன் திரும்பி வருவதாகக் கூறிய கார்ப்பருவம் வரும் முன்பே (சென்றோர் கூறிய பருவம் வாரா அளவை), உறுதியாகப் (மன்ற) பேதலித்தது (மடவ). கொம்புகளில் சேர்ந்த கொடி போல் நெருக்கமாய், சரம்சரமாகப் (நெரிதர) பூத்துக் குலுங்கியது (இணர் ஊழ்த்த). காலமல்லாத காலத்தில் பெய்த மழையினை (வம்பமாரி) கார் என மதித்ததால் இப்பேதைமை கொன்றைக்கு ஏற்பட்டது. தலைவியைத் தேற்றுவதில் ஐங்குறுநூறில் வரும் முல்லை நிலத் தோழியும் சளைத்தவளா என்ன! "ஏதில பெய்ம்மழை காரென மயங்கிய பேதையம் கொன்றைக் கோதைநிலை நோக்கி எவன்இனி மடந்தைநின் கலிழ்வே நின்வயின் தகையெழில் வாட்டுநர் அல்லர்" ------------------ ஐங்குறுநூறு 462 பொருள்: காரணமின்றிப் பெய்யும் மழை (ஏதில பெய்ம்மழை) கண்டு கார்காலம் என மயங்கிய பேதையான கொன்றை பூத்த நிலை (கொன்றைக் கோதை நிலை) நோக்கி நீ வருந்துவதால் (நின் கலிழ்வே) என்ன பயன் (எவன் இனி), மடந்தையே? உன்னிடம் அமைந்த (நின் வயின்) மேதகு அழகினை (தகை எழில்) அவர் வருத்துபவர் அல்லர். அவன் வருவான் தோழி! தலைவியை மேலும் தேற்றுகிறாள் தோழி. "இனையல் வாழி தோழி எனையதூஉம் நின்துறந்து அமைகுவர் அல்லர்" ------------------ ஐங்குறுநூறு 461. பொருள்: அழாதே! (இனையல்). நீ நீடூழி வாழ்க, தோழி! என்ன நடந்தாலும் (எனையதூஉம்) உன்னை மறந்து (நின் துறந்து) வாழ மாட்டார் (அமைகுவர் அல்லர்). கார் வந்த பின்பும் தலைவன் வாராது சிறிது காலம் தாழ்த்தியமைக்குக் காரணமும் ஊகித்து இயம்பலானாள் ஐங்குறுநூறு காட்டும் தோழி. "புதல்மிசை நறுமலர் கவின்பெறத் தொடரிநின் நலமிகு கூந்தல் தகைகொளப் புனைய வாராது அமையலோ இலரே நேரார் நாடுபடு நன்னலம் தரீஇயர் நீடினர் தோழிநம் காத லோரே" ------------------ ஐங்குறுநூறு 463. பொருள்: புதர்களில் பூத்திருக்கும் நறுமணம் பொருந்திய மலர்களை (புதல்மிசை நறுமலர்) அழகுறத் தொடுத்து (கவின் பெறத் தொடரி) உன் நலம் மிக்க கூந்தலில் மேலும் அழகு பெறச் சூட (தகைகொளப் புனைய) வாராது இருக்க மாட்டார் (வாராது அமையலோ இலரே). தோழி! பகைவர் நாட்டின்கண் உள்ள (நேரார் நாடுபடு) நற்செல்வங்களைக் கொணரும் பொருட்டே (நன்னலம் தரீஇயர்) காலம் நீட்டித்தார் காதலர். கார் வந்தது காதலனும் வருகிறான்: மெல்லியலார் தலைவியும் தோழியும்தான் வருந்துவர் என்றில்லை. தலைவியின் துயர் இத்தன்மையது என உணர்ந்த தலைவனும் தலைவிக்காகப் பெரிதும் வருந்துகிறான். "எவன்கொல் மற்றுஅவர் நிலைஎன மயங்கி இகுபனி உறைக்கும் கண்ணொடு இனைபுஆங்கு இன்னாது உறைவி தொல்நலம் பெறூஉம் இதுநற் காலம் .................." ------------- அகநானூறு 164; 8-10. பொருள்: அவர் நிலை என்னவாயிற்றோ (எவன்கொல்) எனக் கலக்கமுற்று நீர் வழியும் (இகுபனி உறைக்கும்) கண்ணோடு அங்கு அழுது (இனைபு ஆங்கு) துன்பத்துடன் வாழ்பவள் (இன்னாது உறைவி) தனது முந்தைய பொலிவினைப் (தொல்நலம்) பெறும் நற்காலம் இது (அஃதாவது அவன் கார்காலத்தில் திரும்பி விடுவதாய் முன்பு வாக்குரைத்தமையால் அது அவளுக்கு நற்காலம்தானே!). போர் முடிந்து அல்லது கார்காலத்திற்காகப் போர் நிறுத்தம் ஏற்பட்டு தலைவன் தனது முல்லை நிலம் நோக்கித் தேரில் புறப்படுகிறான். அப்போது தேரினை விரைவாய்ச் செலுத்துமாறு தேரோட்டியைப் பணிக்கிறான். அவன் அவசரம் அவனுக்கு! "அரும்படர் அவலம் அவளும் தீரப் பெருந்தோள் நலம்வர யாமும் முயங்க ஏமதி வலவ தேரே மாமருண்டு உகளும் மலரணிப் புறவே" ------------------ ஐங்குறுநூறு 485. பொருள்: பிரிவினால் பெரிதும் துயருற்ற அவளது அவலம் (அரும்படர் அவலம்) தீரவும், தொய்வுற்ற அவளது பெருந்தோள் நலம் பெறுமாறு யான் அவளை அணைக்கவும் (முயங்க) விலங்கினங்கள் மருண்டு திரியும் (உகளும்), மலர்களால் பொலிவு பெற்ற முல்லை நிலத்தின் (புறவு) வழியே தேரினை ஏவுவாயாக (ஏமதி), தேரோட்டியே (வலவ)! அவ்வாறு செல்லும்போது சோலைப் பூக்களில் கலவயின்பம் கொள்ளும் வண்டினங்கள் தேரின் மணியொலியில் கலக்கமுறும் என அஞ்சி அந்த மணியில் உள்ள நாவினைக் கட்டி வைத்துத் தேரினைச் செலுத்துகிறான். இதுவயின் தலைவியைக் கண்டடையச் செல்லும் தலைவனின் மனநிலையைப் படம் பிடிக்கிறான் புலவன். பிறிதின் நோய் தந்நோயென உணரும் சூழலும் அது. "பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த தாதுஉண் பறவை பேதுறல் அஞ்சி மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்" ----------------- அகநானூறு 4; 10-12. பொருள்: பூத்துக் குலுங்கும் சோலையின்கண் (பூத்த பொங்கர்) தன் துணையோடு இணைந்த (வதிந்த), மலரின் மகரந்தத்தை உண்ணும் பறவையாகிய (தாது உண் பறவை) வண்டு கலக்கமுறும் (பேதுறல்) என அஞ்சி தேரின் மணியிலுள்ள நாவினைக் கட்டி வைத்த (மணிநா ஆர்த்த) மாட்சிமை பொருந்திய வினை செயல்வகை கொண்ட தலைவன் (மாண்வினைத் தேரன்). மேற்கூறிய பாடலில், "இத்தகைய கருணையுள்ளம் கொண்டவன், நீ பிரிவாற்றாமையால் வாட எங்ஙனம் பொறுப்பான்? அவன் உறுதியாய் விரைவில் வருவான்" என்று தோழி தலைவியைத் தேற்றுவதாகத்தான் இருக்கிறது. எனவே இதற்கு முந்திய தலைப்பிலேயே இப்பாடல் பொருந்தி அமையும். எனினும் கடந்த காலத்தில் அவனது மேன்மையான செயல்பாடு தற்போது அவனது மாண்பினை முன்னிறுத்துவதால் ஈண்டு இறந்தகாலம் நிகழ்காலமாய் ஆக்கப்பட்டது எனலாம். தோழி கூறுவதாய் உள்ளது மறைக்கப்பட்டு அவளது கூற்றில் உள்ள நிகழ்வே முன்னிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு உணர்வுபூர்வமான நிகழ்வு இக்கட்டுரைக்கு நிறைவுரையாய் அமைவது ஏற்புடைத்தே. கண் களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகத்தினும் பெரிதென வள்ளுவப் பெருந்தகை கூறி அனைவரும் அறிந்ததே. முல்லைத் திணையில் காமத்தில் கார் கொள்ளும் சிறுபாகமும் உணர்ந்து நோக்கற்பாலதே.
  12. பஞ்சாயத்துக்கு என்னை நினைந்து அழைத்தமைக்கு நன்றி, நண்பரே ! நானும் உங்களைப் போல் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறேன். அதே காவல் நிலையத்தில் கொலை முயற்சி (நம் மொழியைக் கொல்ல அவர்கள் முயல்வதுதான்) குறித்துப் புகாரளிக்க எண்ணம். ஒழுங்காக வழக்கை விசாரித்தால் தவறு எப்படி நடந்தது என்று தெரிய வரலாம். 😂
  13. இப்பாடல் காட்சியானது பாடலுடன் ஓரளவு தொடர்புடைய குறுந்தொகைப் பாடலொன்றை நினைவு படுத்துகிறது. சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு புலனக்குழுக்களில் நான் சிறிய விளக்கத்துடன் பதிவு செய்ததை இங்கு மீண்டும் பதியத் தோன்றுகிறது : "யாரும் இல்லை; தானே கள்வன்; தானது பொய்ப்பின், யானெவன் செய்கோ? தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே!” ----------குறுந்தொகை, பாடல் 25. பாடற் குறிப்பு : பாடியவர் - கபிலர். தலைவன் தன்னைத் திருமணம் செய்யக் காலம் தாழ்த்துவதால், கலக்கமுற்ற தலைவி தன் தோழியிடம் புலம்புகிறாள். பாடற் பொருள் : அவன் என்னை மணந்த போது (மணந்த ஞான்றே), அவ்விடத்தில் யாருமில்லை; அக்கள்வன், தான் மட்டுமே இருந்தான் (தானே கள்வன்). அவனே பொய்த்து விட்டால் (தான் அது பொய்ப்பின்) நான் என்ன செய்ய முடியும் (யான் எவன் செய்கோ)? தினையின் தாள் போல சிறிய, பசுமையான (tender, not green) கால்களையுடைய நாரையும் (குருகும்) அங்கே உண்டு. அதுவும் ஒழுகுகின்ற நீரோட்டத்தில் ஆரல் மீனைத் தேடிக் கொண்டிருந்தது (அதுவும் எங்களைப் பார்க்கவில்லை). பின்குறிப்பு : (1) மணந்த போது என்பது 'உள்ளத்தாலும் உடலாலும் ஒன்றிய போது' என்பதற்கான இடக்கரடக்கல். (2) பலவீனமான சாட்சியானது குருகு. அது சாட்சி சொல்லுமா ? அது கூட இவர்களைப் பார்க்கவில்லை. (3) களவியல், உடன்போக்கு, கற்பியல் என்று செவ்விய சங்க கால வாழ்வில், சில நெறி பிறழ்வுகள் நிகழ ஆரம்பித்ததைத் தொல்காப்பியம் சுட்டுகிறது, "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம்". அஃதாவது சமூகத்தில் பொய்யும், ஏமாற்றுதல் போன்ற குற்றங்களும் (வழு) தோன்றிய பின்னர் பெற்றோர், உற்றோர் போன்ற மூத்தோர் (அய்யர்) மணமுறைகளை (கரணம்) வகுக்க ஆரம்பித்தனர். பொய்யும் வழுவும் தமிழ்ச் சமூகத்தில் தோன்றியமைக்குக் கட்டியம் கூறுவதே இப்பாடலில் தலைவியின் கலக்கம்.
  14. இவர்கள் விடுதலையானதில் நல்லுள்ளம் படைத்தோர் அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்படுவதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. இருப்பினும் அது ஒரு சோகம் இழையோடும் மகிழ்ச்சி. வாழ்க்கையின் மிக முக்கிய பகுதியை அவர்களிடமிருந்து பறித்து விட்ட சோகம்; அவர்கள் வாழ்க்கை அங்கேயே முடியாமல் இப்போதாவது சுதந்திரக் காற்றை சுவாசிக்க விட்டோமே என்ற மகிழ்ச்சி. யாராலோ கண்கள் பறிக்கப்பட்ட அவர்களுக்கு நம்மால் இயன்ற ஊன்றுகோல் கொடுத்த மகிழ்ச்சி. நான் மரணப்படுக்கையில் கிடக்கையில் என் மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் சுற்றி நிற்க அந்தக் கடைசி மூச்சில் நிலைகுத்திய என் கண்களில் தெரியும் மகிழ்ச்சி. இனி ஒரு புது உலகம் அந்த எழுவருக்கும் அமைய வேண்டும் என்று ஏங்கும் நம் மனதின் ஒரு மூலையில் இனம் புரியாத மகிழ்ச்சி.
  15. பதிவில் உள்ள செய்தி அருமை. பதிவையும் யாழ் சொந்தங்களின் பின்னூட்டங்களையும் வாசித்தபின் பின்வருமாறு எழுதத் தோன்றுகிறது : "வாழ்வில் நமக்கு ஒப்பீட்டுக் கவலை அவசியமில்லை. நமது முயற்சிகளும் மனநிறைவுமே நமது ஆளுமையில் உள்ளவை" என்பதுவே பதிவின் மையக் கருத்து. மற்றபடி "இறைவன் கணித்து வைத்தவை" என்பதும், "விதிக்கப்பட்டவை" என்பதும் அவரவரின் வேறுபட்ட வெளிப்பாடுகள்; நம்பிக்கை சார்ந்தும் இருக்கலாம். மேற்குறிப்பிட்ட பதிவில் நம்பிக்கை சார்ந்ததாகவே தோன்றுகிறது. நான் பொதுவாக இவற்றை சமூக மரபு சார்ந்த கவித்துவ வெளிப்பாடாகக் கொள்வதுண்டு. உதாரணமாக "அட கடவுளே !" மற்றும் "அப்பணிக்குப் பிள்ளையார் சுழி போட்டாயிற்று" போன்ற மரபுச் சொல்லாடல்களை நான் பயன்படுத்துவதுண்டு. இத்தகைய பயன்பாட்டால் நான் இறை நம்பிக்கை உள்ளவன் என்று பொருளில்லை. ஒரு மொழி தரும் அழகியலை நான் இழக்கத் தயாரில்லை. அவ்வளவே.
  16. காட்டில் வாழ்ந்து திரிந்த மனிதன் நாகரிகமடைந்து தற்போதுள்ள நிலையை எட்டியுள்ளான். நாகரிகமும் தொடர்கதையாகத்தானே இருக்க முடியும் ? மனம் மென்மேலும் விரிவடைந்து மானிடம் மென்மேலும் பண்படும் என்பதற்கான சான்றுகளே இத்தகைய நிகழ்வுகள்.
  17. "இது ஒரு காலத்தில் செய்தியாக்கும் !" என்று சமூகம் வியக்கும் காலம் தொலைவில் இல்லை. மனமொத்த இரு மானிடர் உடலளவிலும் ஈர்க்கப்பட்டு சில காலமோ உயிருள்ள வரையிலோ இணைந்து வாழ்தல் இயற்கையான ஒன்று என அப்போது சமூகம் இந்நிகழ்வுகளைக் கடந்து செல்லும். இவற்றிற்கான வாழ்த்துச் செய்தி யாழ் இணையத்திலும் பகிரப் படலாம். இக்காலகட்டத்தில் இதற்கு மேல் என்ன சொல்ல ?
  18. ஒரு ஆசிரியரின் நாட்குறிப்பு - சுப. சோமசுந்தரம் இதை எழுதும் நான் ஒரு ஆசிரியன். எழுதுவதன் நோக்கம் நான் சார்ந்த ஆசிரியர் வர்க்கத்திடம் தகவல் பரிமாற்றம். ஊக்கமளிப்பதாக இருக்கலாம்; எச்சரிக்கை மணியாகவும் இருக்கலாம். இன்று நான் நானாக இச்சமூகத்தில் உலவி வருவது எனது ஆசிரியர் பெருமக்கள் சிலரால் என அறுதியிட்டுக் கூறுபவன் நான். எல்லோரும்தான் இதைச் சொன்னார்கள் - பலர் சம்பிராதாயத்துக்காக. இதயபூர்வமாக, ஆணித்தரமாக நம்புகிறேன் நான். ஆதாரங்களும் உண்டு. நான் கணிதம் பேசும் போது என்னை மிகவும் கவர்ந்த ஒரு குறிப்பிட்ட கணித ஆசிரியரின் முறையைப் பின்பற்றுவதை (காப்பியடிப்பதை) நானே உணர்ந்து இருக்கிறேன்; பிறர் சொல்லவும் கேட்டிருக்கிறேன். தமிழோ ஆங்கிலமோ பேசும்போதும் அப்படியே. நற்குணங்களும் அப்படியே. எனது நாட்குறிப்பில் (டைரியில்) வெவ்வேறு நாட்களில் நான் எழுதிய ஒன்றிரண்டு நிகழ்வுகளை இங்கு காட்சிகளாய் விரிக்கத் தோன்றுகிறது. காட்சி 1: எனது ஊரான நெல்லை மாநகரின் ஒரு பிரபல ஜவுளிக்கடையில் இருந்து வெளியே வருகிறேன் (நாட்குறிப்பில் ஜவுளிக்கடையின் பெயர் எல்லாம் உண்டு; இங்கு பொது வெளியில் தவிர்க்கிறேன்). முப்பது வருடங்களுக்கு முன்பு பள்ளியில் எனக்குக் கணிதம் சொல்லித் தந்த ஆசிரியர் ஒருவர் தமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் உள்ளே வருகிறார். சுமார் எண்பத்தைந்து வயதிருக்க வேண்டும். நேருக்கு நேராக வந்த அந்த ஆசிரியருக்கு நான் ஞாபகத்திற்கு வர வாய்ப்பு இல்லை. அவரிடம் பயின்றபோது நான் அத்துணை ஒளிரவில்லை என்பது காரணமாக இருக்கலாம். என்னைக் கணிதத்தை நோக்கி ஈர்த்தவர் என்று அவரை நான் பெரிய அளவில் நினைத்ததில்லை. பாடத்தில் இருந்ததைப் பிழையின்றி சொல்லித் தந்தவர் என்பது எனது கணிப்பு. இதையெல்லாம் தாண்டி, மாணவர்களை மதித்தவர்; குற்றம் செய்த மாணவனையும் திருத்தும் நோக்கத்துடன் மட்டுமே சிறிய தண்டனைகளை அளித்தவர் என்பதும் அவரைப் பற்றிய பொதுவான கணிப்பு. சுருக்கமாய்ச் சொல்வதானால் ஒரு மரியாதைக்குரிய ஆசிரியர். அவரைத் திடீரென்று பல வருடங்கள் கழித்துப் பார்த்த உவகையில் குனிந்து அவரது காலைத் தொட்டு வணங்கினேன். சிறிய அறிமுகம் செய்து கொண்டேன். வாழ்த்தினார். தமது குடும்பத்தினரைப் பார்த்து சிறிய புன்னகை முகம் காட்டினார். அதில் வெற்றிக் களிப்பு தெரிந்தது எனது கற்பனையாக இருக்கலாம். அவரது மகள் என்னிடம் கூறினார், "சார் ! அப்பாவை இன்னும் இரண்டு நாட்களுக்குக் கையில் பிடிக்க முடியாது". அவர் சொன்னது உண்மையானால் ஓய்வு பெற்று 25 வருடங்கள் கழித்து ஒரு ஆசிரியரின் நியாயமான பெருமிதம்தானே ! காட்சி 2: ஒரு நாள் மாலையில் எனது இருசக்கர வாகனத்தில் சந்தடி இல்லாத ஒரு தெருவில் வந்து கொண்டிருந்தேன். ஓய்வு பெற்ற எனது கல்லூரி கணிதப் பேராசிரியர் ஒருவர் துணைவியாருடன் நடைப்பயிற்சியாக எதிரே வந்து கொண்டிருந்தார். வண்டியை நிறுத்திவிட்டு இறங்காமலேயே எனது கைகளை அவரது பாதங்களை நோக்கிப் பாவனை செய்து எனது கண்களில் ஒற்றிக்கொண்டேன். "எடுத்ததற்கெல்லாம் பொசுக் பொசுக்கென்று காலில் விழுந்து விடுவான் போல !" என்று நினைக்கத் தோன்றுகிறதா ? பெற்றோர், முன்னாள் ஆசிரியர்களைத் தவிர வேறு யாரையும் அப்படி வணங்கியதாக நினைவில்லை. நாட்குறிப்பும் அவ்வாறே சொல்கிறது. சரி, கதைக்கு வருவோம். கல்லூரி நாட்களில் படிப்பிலும் ஏனைய சில விடயங்களிலும் எனக்கு நல்லதொரு முகவரி இருந்ததால் எனது கல்லூரி ஆசிரியர்கள் அனைவர் நினைவிலும் நான் உண்டு. மேலும் அதே ஊரில் பல்கலைக்கழகம் தோன்றிய போது அதில் ஆசிரியராக வேறு அமர்ந்து விட்டேன். எனவே அவர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு அமைந்ததால் அவர்களது நினைவுத் திரையில் பதிந்து போனேன். சந்தடி இல்லாத தெரு என்பதால் எனது குரு பக்தியில் இறும்பூதெய்திய பேராசிரியர் தமது மகிழ்ச்சியை உரத்த குரலில் தமது துணைவியாரிடம் வெளிப்படுத்தினார், "பாருடீ ! உனக்குதான் இந்த வாத்தியான் அருமை தெரியல. ஒரு யுனிவர்சிட்டி புரொபசர் என் காலத் தொட்டுக் கும்பிடுறான். அவன் என்ன சாதாரண ஆளா ? நான் வளர்த்த புள்ளடீ !". நான் கேள்விப்பட்டவரை ஒன்று இரண்டு பொது இடங்களில் கூட இந்த சாதாரண நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு என்னைப் புகழ்ந்தார்; தாமும் பெருமிதம் கொண்டார். உரிய பருவத்தில் உயர் கணிதத்தில் சில அடிப்படைகளைக் கற்பித்த ஆசிரியரிடம் நான் வெளிப்படுத்திய தினைத்துணை நன்றியை அவர் பனைத்துணையாய்க் கொண்டது எனக்கான பேறு. வள்ளுவத்தில் தினைத்துணை, பனைத்துணை சொல்லாடல்கள் ஈண்டு யான் எடுத்தாண்டதினின்றும் சற்றே வேறுபட்ட பொருளினது என்பது என் தமிழாசிரியர் தந்த பாடம். அடுத்து அவரிடமே வருகிறேன். காட்சி 3: முதல் இரண்டு காட்சிகளில் எனது கணித ஆசிரியர்கள். இப்போது ஓரளவு மொழி ஆளுமையிலும் சமூக அரங்கிலும் என்னை நிமிர்ந்து நிற்க வைத்த தமிழாசிரியர். எண்ணும் எழுத்தும்தான் சிறந்த வாழ்வாக அமைய முடியும் என்பது என் கருத்து. இவருக்கு மட்டும் ஒரு பெயர் கொடுக்கத் தோன்றுகிறது. ஒரு சிறிய வட்டத்திலாவது எனக்கென்று ஒரு பெயர் ஏற்பட இவர் ஒரு காரணம் என்று நான் நினைப்பதாலோ என்னவோ ! எனவே இவரை ரொட்ரிகோ என்று கொள்வோம். கற்பனைப் பெயர்தான். அது என்ன போர்த்துக்கீசியப் பெயர் ? அவருடைய இயற்பெயரும் அப்படித்தான். போர்த்துக்கீசியர் வருகையினால் நெல்லை, குமரி மாவட்டக் கடலோர கிராமங்களில் போர்த்துக்கீசியப் பெயர்கள் நிறைய உண்டு. நிற்க. உணர்வுடன் அமைவது இலக்கியம் என்பதை உணர்ந்து இலக்கிய உணர்வைப் பள்ளிப் பருவத்திலேயே எனக்கு ஏற்படுத்தியவர் எனது ஆசிரியர் திரு ரொட்ரிகோ. இன்றும் மரபு இலக்கியம், பின்நவீனத்துவம் இரண்டையும் நான் ரசிப்பதற்கு முதல் காரணம் அவரே. வளர்ந்த பின் அறிஞர் தொ.பரமசிவன் போன்ற சான்றோர் கேண்மையினால் என்னை நான் மேலும் தீட்டியது வேறு கதை. கணிதத்தை ரசித்தது போலவே இலக்கணமும் ரசனைக்கான ஒன்று என்பதையும் எனக்கு உணர்த்தியவர் திரு. ரொட்ரிகோ. இவை தவிர திராவிட இயக்க உணர்வை என் போன்றோர்க்கு ஊட்டியவர் அவரே. கார்ல் மார்க்ஸை எனக்கு அறிமுகம் செய்தவர் தோழர் பொன்னுராஜ் (இயற்பெயர்தான்) என்றால், அறிஞர் அண்ணாவையும் பெரியாரையும் அறிமுகம் செய்தவர் ஆசிரியர் ரொட்ரிகோ அவர்களே. என்னுள் எப்போதோ முகிழ்த்த நாத்திகம் வேர் பிடித்து உறுதிப்பட்டது மார்க்ஸ், அண்ணா, பெரியார் மூலமாகத்தான். இறை நம்பிக்கை, நம்பிக்கையின்மை இவையெல்லாம் ஒரு மனிதனின் வாழ்வில் ஏதோ சாதாரண கருத்துருவாக்கங்கள் அல்ல. நாத்திகம் இவ்வுலக வாழ்வில் எனக்கான வரம். எல்லோருக்கும் அமைவதில்லை. இவ்வரம் எனக்குக் கிட்டுவதில் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகக் காரணி ஆனவர் எனது தமிழ் ஆசிரியர் திரு.ரொட்ரிகோ. திரு.ரொட்ரிகோ அவர்களுக்குக் கோரமான ஒரு முகமும் உண்டு. பள்ளிப்பருவத்தில் மாணவர்களின் பக்குவமின்மை காரணமாக சில சமயங்களில் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் பொதுவாக எந்த ஒரு ஆசிரியருக்கும் ஏற்படலாம். அது மாணவனைத் திருத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு வரம்புக்குள் அமைய வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. ஆனால் கேள்விக்குப் பதில் தெரியவில்லை, புத்தகம் கொண்டு வரவில்லை என்று மாணவனின் சிறு தவறுக்குக் கூட கோர தாண்டவம் ஆடுவது ரொட்ரிகோவிற்கு வாடிக்கையான ஒன்று. எதிரே நிற்பவன் மாணவன் என்றில்லாமல் அவனைத் தமது எதிரியாக்கிக் கொள்வார். மாணவனின் சிறு தவறைக் கூட தமது கௌரவப் பிரச்சினையாக எடுத்துக் கொள்வார் போலும். வகுப்பில் மாணவர் பிரதிநிதியாக இருப்பவன் மாணாக்கர்க்கு அவ்வப்போது இவர் விதித்த தண்டத் தொகையில் மரத்தினாலான பத்து அளவுகோல்களை வாங்கி வைத்திருக்க வேண்டும். ஒரு மாணவனை அவர் அடிக்கும் போது குறைந்தபட்சம் ஒரு அளவுகோலாவது உடையும். உடனே மாணவர் பிரதிநிதி அடுத்த அளவுகோலைத் தர வேண்டும். மரியாதை துளியும் இல்லாமல் மாணாக்கர்க்கு அவர் மீதும் அவரது வகுப்பின் மீதும் பயம் மட்டுமே உண்டு. பயத்தை எல்லாம் மீறி அவரிடம் தமிழ் உணர்வை நான் பெற்றதற்கு எல்லாப் புகழும் எனக்கே; அவருக்கு அல்ல. பயத்தை மரியாதை போல் காட்ட நிறையப் பேர் சமூகத்தில் உண்டே ! அதற்கான பயிற்சியை மாணாக்கரில் நிறையப் பேர் இவர் வகுப்பில் எடுத்துக் கொள்வர். மாணவனை ஆசிரியர் அடிப்பது கிரிமினல் குற்றம் என்ற சட்டம் தமிழகத்தில் வந்த போது என்னைப்போல் குதூகலித்தவர் உலகில் யாரும் இருக்க முடியாது. அதற்கு முழுமுதற் காரணம் திரு.ரொட்ரிகோ. இவரிடம் நான் படித்து முடித்து வெகு காலத்திற்குப் பின்னரே அச்சட்டம் இயற்றப்பட்டது என்பதுதான் எனது மனக்குறை. பள்ளி வகுப்புத் தோழன் ஒருவன் வெளிநாட்டில் இருந்து நீண்ட இடைவெளிக்குப் பின் பேசினான். நண்பர்களைப் பற்றி விசாரித்தான். ஆசிரியர்களை பற்றிக் கேட்டான். அவர் எப்படி இருக்கிறார், இவர் எப்படி இருக்கிறார் என்று மற்றவர்களை விசாரித்தவன், "அவன் இன்னுமா இருக்கிறான் ?" என்று திரு.ரொட்ரிகோவைப் பற்றி வெறுப்புடன் ஒருமையில் விசாரித்த போது தெரிந்தது - சிறுபிராயத்தில் மனதில் விதைக்கப்படும் வன்மம் காலம் கடந்தும் கடல் கடந்தும் விளைந்து நிற்கும் என்று. நான் அதே ஊரில் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளனாகச் சேர்ந்த சமயம். ஒரு நாள் நகரப் பேருந்தில் எனக்கு அடுத்த இருக்கையில் வந்தமர்ந்த திரு.ரொட்ரிகோவை நான் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவர் என்னை நினைவில் வைத்திருக்க வாய்ப்பே இல்லை. இச்சமூகத்தில் நான் நானாக உருவெடுக்கத் தமது பங்களிப்பை அளித்த அவரை யாரோ ஒரு சக பயணி என்று ஆக்கினேன். அவருக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் என் அளவில் இயன்ற பழி தீர்த்தல் அவ்வளவே. "கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்" எனும் வள்ளுவத்தைப் பேருந்தின் ஜன்னல் வழியாகத் தூக்கியெறிந்தேன்; மாணாக்கர்க்கு அக்குறள் தரும் நீதியைச் சொல்லும் பொறுப்பிலுள்ள ஆசிரியனான நான் அந்நீதியைத் தூக்கியெறிந்தேன்; எனக்கு அதைச் சொல்லித் தந்த ஆசானின் கண் முன்பே தூக்கியெறிந்தேன். இப்போது எனது அகவை அறுபத்திரண்டு. என் மனதில் திரு.ரொட்ரிகோ மீதான வன்மம் தவறு என்று, எஞ்சியிருக்கும் என் வாழ்நாளில் எப்போதாவது தோன்றினால் இதனை வாசிக்கும் உங்களுக்குச் சொல்லி அனுப்புகிறேன்.
  19. இச்செய்தியை சற்று தாமதமாகத்தான் பார்த்தேன். தாமதமானாலும் நானும் ஒரு ஆசிரியன் என்ற முறையில் என் கருத்தினைப் பதிவு செய்வது பொறுப்பாகக் கருதுகிறேன். ஆசிரியர் பொறுப்பு என்பது உலகில் அனைத்திலும் தலைசிறந்த ஒன்று. வெற்றி, தோல்வி, மேடு, பள்ளம் அனைத்தையும் சமநிலையுடன் பார்க்கும் பக்குவத்தைப் பிஞ்சு உள்ளங்களில் விதைக்கும் கடமை ஏற்றவர் ஆசிரியர். நடைமுறை உலகில் திறமைக்கும் அதன் பயனாகிய அங்கீகாரத்திற்கும் தெளிவான சமன்பாடு இருந்தேயாக வேண்டும் என்பதில்லை. கற்றலும் கற்ற வழி நிற்றலுமே நமக்கான உரிமையும் பெருமையும். துறைத்தலைவர் என்பது கூடுதல் பொறுப்பு. அவ்வளவே. அப்பொறுப்பினைக் கொடுத்தால் பணி செய்வோம். இல்லையென்றால் மாணவர்க்கும் மக்கள் சமூகத்துக்கும் ஆற்ற வேண்டிய பணிக்கு இன்னும் நேரம் அதிகம் கிடைத்துள்ளது எனக் கொள்வோம். இவற்றையெல்லாம் மற்றவர்க்கு எடுத்துச் சொல்லும் நிலையிலுள்ள ஆசிரியர் ஏதோ கூடுதல் பொறுப்பு கிடைக்காத விரக்தியில் தற்கொலை வரை போவது சிறுபிள்ளைத்தனமாகவே தோன்றுகிறது. பணி ஓய்வு பெற்ற பின் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கையில், "இதற்காகவா அன்றைக்கு நேரத்தையும் நிம்மதியையும் இழந்து தவித்தோம்?" என்று அவரே வெட்கப்படப் போகும் நிகழ்வு இது. ஆசிரியர் பதவியே கிடைத்து விட்டது. வேறு என்ன வேண்டும் உலகில் ? எல்லோருக்குமா கிடைத்தது ? பெரியதொரு உலகிற்குச் சொந்தக்காரர் தம்மைச் சிறு கூட்டுக்குள் அடைக்க ஏங்குவது வேடிக்கையும் வேதனையும்.
  20. முற்றிலும் உண்மை. ஆயுதப் போராட்டங்கள், சில வன்முறைகள், உண்ணாநிலை போன்ற அறப்போராட்டங்கள் இவை கையறுநிலைக்குத் தள்ளப்பட்டதால் முகிழ்க்கலாம். மேலும் ஒரு வெளிப்பாடு எனக்குத் தோன்றுகிறது. அஃது கையறு நிலையில் தனது இறைவனிடமோ இறைவனைப் போல் தான் மதிக்கிற மனிதரிடமோ தஞ்சம் அடைவது. அரசவையில் துச்சாதனன் பாஞ்சாலியின் துகிலுரிய முனைய, பாஞ்சாலி கையறு நிலையில் 'கோவிந்தா, கோவிந்தா !' என்று இறைவனைச் சரணடைவது இதற்கான சிறந்த மேற்கோள். "ஆறாகி இரு தடங் கண் அஞ்சன வெம் புனல் சோர, அளகம் சோர, வேறான துகில் தகைந்த கை சோர, மெய் சோர, வேறு ஓர் சொல்லும் கூறாமல், 'கோவிந்தா! கோவிந்தா!' என்று அரற்றி, குளிர்ந்து நாவில் ஊறாத அமிழ்து ஊற, உடல் புளகித்து, உள்ளம் எலாம் உருகினாளே !" ----பாஞ்சாலி சபதம் பாடல் 246.
  21. கையறுநிலை (Helplessness) - சுப. சோமசுந்தரம் ஏதோ ஒரு சூழ்நிலையில் செய்வதறியாது திகைக்கும் கையறுநிலை நாம் அனைவரும் அவ்வப்போது எதிர்கொள்வதே. சூழ்நிலைகளைப் பொறுத்து கையறுநிலையைப் பல்வேறு வகைப்படுத்தலாம். சிலவற்றிற்குத் தீர்வும் பலவற்றிற்குத் தீர்வு இல்லாமலும் போகலாம். இன்றைக்கு இந்திய சமூகத்தில் அரங்கேறும் மதவாதம், தனியார்மயம், பொருளாதாரச் சீர்குலைவு ஆகிய தீமைகளைப் பார்த்து நம்முள் ஏற்படும் அதிர்வு சமூக அவலம் சார்ந்த கையறுநிலை. கையறுநிலையின் வெளிப்பாடு ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரி. உலகில் பசிப்பிணி கண்டு வாளாவிருக்க மாட்டாமல் "தனியொருவனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம்" என்ற பாரதியின் கையறுநிலையை அறச்சீற்றமாய்க் காண்கிறோம். இதே அறச்சீற்றம் மனிதனுக்குத் தன் இறைவன் மீதே ஏற்படுவதும் உண்டு. சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகும்போது, "அட ஆண்டவனே ! உனக்குக் கண் இருக்கா ? நீ நாசமாப் போக !" என்று உரிமையோடு அவனிடம் வெகுண்டு எழுவது நாட்டார் வழக்காற்றியலில் உண்டு. இஃது கையறுநிலையின் நிந்தனை அல்லது சாப வெளிப்பாடு. "இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்" (குறள் 1062; அதிகாரம் : இரவச்சம்) என்பதும் ஈதன்றி வேறென்ன ? [குறளின் பொருள் : மற்றவரிடம் கேட்டுப் பெற்றே (இரந்தும்) ஒருவன் உயிர் வாழும் நிலை ஏற்படுமானால், இவ்வுலகைப் படைத்தவன் (உலகு இயற்றியான்) எங்கும் அலைந்து திரிந்து (பரந்து) கெடுவானாக ! ] வறியோர்க்குக் கொடுக்கப்படும் பொருள் கண்டு பொறாமை கொள்கிறவனைக் காணச் சகிக்காத வள்ளுவனின் கையறுநிலை கொண்ட மனம் "கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்" (குறள் 166; அதிகாரம்: அழுக்காறாமை) எனச் சபிக்கிறது. அவ்வாறு அழுக்காறு கொண்டவன் தான் கெடுவது மட்டுமல்ல, தன்னைச் சார்ந்தோரும் உடுப்பதற்கும் உண்பதற்கும் இன்றிக் கெடக் காரணமாய் அமைவான் என்பது கையறுநிலையின் மற்றுமொரு சாப வெளிப்பாடு. கையறுநிலையின் வெளிப்பாடு தீமை கண்டு வாளாவிருத்தல் மட்டுமல்ல. சில இடங்களில் சினத் தீ வெகுண்டெழுந்து அழிவினையும் ஏற்படுத்த வல்லது போலும். தன் கணவனை ஆராயாது கொன்ற மன்னன் மீது மட்டுமல்லாமல் அதனைத் தட்டிக் கேட்காத நகரத்தார் மீதும் அத்தீ கொழுந்து விட்டு எரிவதை இளங்கோவடிகள், "பட்டாங்கு யானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும்" என்றும் "யானமர் காதலன் தன்னைத் தவறு இழைத்த கோநகர் சீறினேன் குற்றமிலேன் யான்" என்றும் கண்ணகி வாயிலாகச் சித்தரிக்கின்றார். அன்பும் அமைதியும் வடிவான கண்ணகியின் கையறுநிலை சாது மிரண்ட காவியமானது. அழுக்காறு (பொறாமை) உடையவன் கெடுவதும் அஃதில்லாதவன் நல்வாழ்வு பெறுவதும்தானே இயற்கை அறமாக இருக்க முடியும் ? அதற்குப் புறம்பாகவும் உலகில் நிகழ்வதைக் கண்ணுற்ற வள்ளுவன் எந்த வகையில் அதனை நியாயப்படுத்துவான் ? கையறுநிலைக்குத் தள்ளப்பட்ட வள்ளுவன், "அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப்படும்" (குறள் 169; அதிகாரம்: அழுக்காறாமை) என்று அமைதியாய் முடித்து விட்டான் போலும். அதாவது இயற்கை நீதிக்குப் புறம்பாக நிகழ்வது (மக்களால்) நினைக்கப்படும் என்கிறான். எவ்வாறு ? பொறாமை உடையவன் மேன்மை பெறுவது (அவ்விய நெஞ்சத்தான் ஆக்கம்), "போயும் போயும் இவனுக்கு வந்த வாழ்வைப் பார் !" என்று மக்களால் நினைக்கப்படும்; அஃதில்லாத செம்மையானவன் தாழ்வது (செவ்வியான் கேடு), "ஐயோ ! இவனுக்கா இந்த இழிநிலை ?" என்று நினைக்கப்படும். இவ்வாறே கையறுநிலையின் அமைதி வெளிப்பாடாக " அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின் எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின் வென்றெறி முரசின் வேந்தர்எம் குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே" (புறநானூறு பாடல் 112) என்று தந்தையை இழந்த பாரி மகளிரின் சோகம் அரங்கேறக் காணலாம். நிறைவேறாத காதல், பிரிவாற்றாமைக் காதல் என மனிதனைக் கையறுநிலையில் கொண்டு நிறுத்தும் நிகழ்வுகள் அக இலக்கியங்களில் பரவலாகக் காணலாம். இஃது பெரும்பாலும் புலம்பலாகவே காணக் கிடைப்பது. மேற்கோளுக்கு ஒன்றிரண்டு இடங்களைச் சுட்டுவது இங்கு பொருந்தி அமையும். தலைவனின் மனம் அவன் வசமே இருக்கையில், தன் மனம் மட்டும் தன் வசமின்றி அவன் வசமே சென்ற தலைவியின் புலம்பல் "அவர்நெஞ்சு அவர்க்குஆதல் கண்டும் எவன்நெஞ்சே நீஎமக்கு ஆகா தது" (குறள் 1291; அதிகாரம்: நெஞ்சொடு புலத்தல்) என வெளிப்படக் காணலாம். தலைவனும் தலைவியும் களவொழுக்கம் மேற்கொண்டு மகிழ்ந்திருந்தபின் பிரிந்து சென்ற தலைவன் திரும்பி வாராத நிலையில், "அப்போது அங்கு யாரும் இல்லை; அவனே கள்வன்; அவனும் ஏமாற்றி விட்டால் நான் என் செய்வேன் ?" என்ற தலைவியின் கையறுநிலை "யாரும் இல்லை தானே கள்வன் தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ" (குறுந்தொகை பாடல் 25 ன் பகுதி) என்று மற்றுமொரு புலம்பல். கண்ணகியை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக ஊரைவிட்டு மதுரை நோக்கிச் செல்லும் கோவலனுக்கு மாதவி விடுக்கும் மடலில், "மூத்தோர்க்கு (குறிப்பாக பெற்றோர்க்கு) ஆற்ற வேண்டிய பணியினை (குரவர் பணி) மறந்தது மட்டுமல்லாமல், குலமகளோடு (கண்ணகியோடு) இரவோடு இரவாக ஊரை விட்டுத் தாங்கள் செல்லும் அளவு (இரவிடைக் கழிதற்கு) நான் செய்த பிழை அறியேன் (என் பிழைப்பு அறியாது). நிலை கொள்ளாது தவிக்கும் என் மனதின் (கையறு நெஞ்சம்) வாட்டத்தினைத் தாங்கள் போக்க வேண்டும் (கடியல் வேண்டும்) எனும் பொருள்பட "குரவர் பணி அன்றியும், குலப்பிறப்பாட்டியோடு இரவிடைக் கழிதற்கு என் பிழைப்பு அறியாது கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்" என்று வரைந்தாள். இதில் தன் கையறு நெஞ்சத்தைத் தெளிவாக வெளிப்படுத்தினாள் மாதவி. காதலில் கையறு நிலை பெண்மைக்கு மட்டுமே உரியது என்று எழுதாச் சட்டம் உள்ளதா என்ன ? தனது நிறைவேறாக் காதலை ஊரார் முன் வெளிப்படுத்தி அவர்கள் துணைக் கொண்டு நிறைவேற்ற முற்படும் தலைவன் மடல் ஏறுதல் அகப்பாடல்களில் ஓர் அங்கம். அந்நிலையில் ஊராரிடம் புலம்பும் அவனது உள்ளத்தின் வெளிப்பாடே மடலேறுதல் அன்றி வேறென்ன ! "காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடல்அல்லது இல்லை வலி" (குறள் 1131; அதிகாரம்: நாணுத் துறவுரைத்தல்) [பொருள்: காதலில் உழன்று வருந்துகிறவர்களுக்கு மடலேறுதல் அன்றி வலிமையான துணை (ஏமம்) வேறு இல்லை]. மானிட சமூகத்தின் பிரதிபலிப்புதானே இலக்கியமாய் அமைய முடியும் ! எனவே சமூகத்தில் வெவ்வேறு சூழலில் மனிதன் எதிர்கொள்ளும் கையறுநிலையின் வெளிப்பாட்டை அச்சூழலும் மனிதனின் உளவியலுமே தீர்மானிக்கவல்லது. மேலே சுட்டிய இலக்கியக் காட்சிகளில் நிந்தனையாக, சினத்தீயாக, அமைதியாக, புலம்பலாக அவ்வெளிப்பாடு அமைவதைக் காண்கிறோம். வேறு எவ்வகைகளில் எல்லாம் அமையும் என்று தீர்மானிக்க நாம் உளவியலாளர்களா என்ன ?
  22. நலத்திட்டம் இலவசமா ? - சுப. சோமசுந்தரம் 'இலவசங்கள்' பற்றிப் பெரிய அளவில் சர்ச்சை ஏற்பட்டு (உபயம் : இந்திய ஒன்றிய அரசும் தமிழக நிதி அமைச்சர் திரு பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அவர்களும்) சற்றே ஓய்ந்திருக்கிறது. சற்று தாமதமானாலும் கூட நாமும் பேசாவிட்டால் எப்படி என்ற எண்ணத்தின் விளைவே இக்கட்டுரை. சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டவற்றை தொகுத்தளிப்பதாக அமையலாம். புதிதாக நம் சிந்தனையும் சேரலாம். எவ்வாறாயினும் ஒரே கருத்தைச் சொல்வதில் ஒவ்வொருவருக்கும் தனியானதொரு பாணி என்று உண்டே ! இதோ : வளர்ச்சித் திட்டம் எதுவும் பற்றி எட்டு ஆண்டுகளாக சிந்தித்தே பாராத ஒரு இந்திய ஒன்றிய அரசு மதவெறியைத் தூண்டுவதும், மக்களுக்கு இன்னல் விளைவிக்கும் மாற்றங்களையே தொழிலாகக் கொண்டு திரிவதும் வாடிக்கையாக்கிப் போன ஒன்று. 'சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தாண்டா ஆண்டி !' என்ற கதையாக சமீபத்தில் திருவாய் மலர்ந்து சமூக நலத்திட்டங்களை 'இலவசங்கள்' என்று குறிப்பிட்டு அவற்றைத் தவிர்க்க அறிவுரை சொன்னது அந்த ஒன்றிய அரசு. அதிலும் தனது முகமான பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடியின் வாயிலாகவே. இது போதாதென்று இலவசங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்ட கவலை வேறு; அதன் தொடர்ச்சியாக இலவசங்களை ஒழுங்குபடுத்த ஒரு வல்லுனர் குழு பற்றிய ஆலோசனையும் வழங்கியது. தமிழக நிதி அமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன் 'இந்தியா டுடே' தொலைக்காட்சி விவாதத்தில் பதிலடி கொடுத்தது இந்தியத் திருநாடு முழுவதும் பேசு பொருளானது வரலாற்று நிகழ்வு. செல்வந்தரிடம் நியாயமான வரியாகப் பொருள் பெற்று வறியோர்க்குப் பகிர்ந்தளிப்பது சோஷலிச ஜனநாயகம். 'ஜனநாயகம்' என்பது சோஷலிசத்திற்கான பாதை என்ற காரல் மார்க்ஸின் கூற்றுப்படி பார்த்தால், 'சோஷலிச ஜனநாயகம்' என்ற ஒரு பொருள் பலமொழி அவசியம் இல்லைதான். 1920 ல் நீதிக்கட்சி ஆட்சியில் அன்று மேயராக இருந்த திரு பி.டி. தியாகராஜன் அவர்களால் சென்னையில் சில நகராட்சிப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம் 1925 ல் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டு மீண்டும் அனுமதிக்கப்பட்டது. பிற்காலத்தில் காமராஜர், திரு. எம்.ஜி. இராமச்சந்திரன் இருவரின் ஆட்சிக் காலங்களில் தங்களின் கட்சியினரே எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் பெரும் அளவில் போராடி இத்திட்டத்தினை அமல்படுத்தினர். காமராஜர் காலத்தில் பொதுவுடமைவாதிகளே எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கேள்வி. ஆனால் எம்.ஜி.ஆர் காலத்தில் பெரிய கட்சிகளில் பொதுவுடமைவாதிகள் மட்டுமே ஆதரித்தனர். ஆதரித்ததற்கு அவர்கள் சொன்ன காரணம் அன்று கல்லூரி மாணவனாய் இருந்த எனக்கு மிகவும் ஏற்புடையதாய்த் தோன்றியது; இன்றும் தோன்றுகிறது : "வளர்ச்சித் திட்டங்கள் அடித்தட்டு மக்களைச் சென்றடைய நீண்ட காலமாகும்; சென்றடையாமலும் போகலாம். ஆனால் நலத்திட்டங்கள் அவர்களை நேரிடையாகச் சென்றடைபவை". அதன்பின் கலைஞர் கருணாநிதி ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக் காலங்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு இன்று இந்தியத் திருநாட்டிற்கே முன்னோடியாய்த் திகழ்வது வரலாறு. இதன் மூலமாக மாணவர் கல்வி இடைநிற்றல் பெருமளவில் குறைந்ததும், மாணவர்தம் ஊட்டச்சத்து முன்னேற்றமும் ஆய்வுகளில் நிறுவப்பட்டமை திட்டத்தின் பெருவெற்றி. இந்த நலத்திட்டத்தையும் இவர்கள் இலவசத்தில்தானே வரிசைப்படுத்துவார்கள் ! 'இலவசங்கள்' என்று கூச்சலிடும் பலர் அரசுக் கல்வி நிலையங்களிலோ அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களிலோ குறைந்த கல்விக் கட்டணத்தில் படித்தபோது அவர்களுக்கு உறைத்ததில்லை அரசு அவர்களின் கல்விக்காகக் கொடுத்த மானியம் 'இலவசம்' என்று. அரசு மருத்துவமனைகளில் ஏழைகளுக்குக் கிடைக்கும் மருத்துவ வசதியை 'இலவசம்' என்று பார்த்தவர்கள், கொரோனா காலத்தில் தனியாரிடம் செல்லப் பயந்து அரசு மருத்துவமனைகளில் தஞ்சம் புகுந்தபோது அவர்களுக்குத் தெரியவில்லை அரசிடம் அவர்கள் வேண்டி நிற்கும் உயிர்ப்பிச்சை ஒரு 'இலவசம்' என்று. தமிழக அரசின் நியாயவிலைக் கடையில் வரிசையில் நின்று சர்க்கரை வாங்கும் அன்பர் ஒருவர் தற்போது சர்ச்சையான 'இலவச' பேசுபொருளை கையில் எடுத்து ஒன்றிய அரசை நியாயப்படுத்தியது பெரும் வேடிக்கை. வரிசையில் நின்ற இன்னொருவர், "அப்படிங்களா சார் ? இந்த வரிசையில் கால் கடுக்க நின்று சர்க்கரை கிலோவுக்கு ரூபாய் 13.50 என்று வாங்குவதற்குப் பதிலாக பக்கத்துக் கடையில் ரூபாய் 45 க்கு நீங்கள் வாங்கலாமே ! இங்கே உங்களுக்குக் கிடைக்கும் ஐந்து கிலோவில் குறைந்தது 150 ரூபாய் இலவசம் என்பது உங்களுக்குத் தெரியுமா ?" என்று 'இலவச' எதிர்ப்பாளருக்கு இலவசமாய்க் கணக்குப் பார்த்துச் சொன்னது மனதிற்கு ஆறுதல். (இலவசம் என்று பொருமியவரின் இலவச லாபத்தை குறைக்கும் நோக்கிலோ என்னவோ அரசு சர்க்கரை விலையை ரூபாய் 25 என உயர்த்தி உள்ளதாகப் பெட்டிச் செய்தி கூறுகிறது. அவரைப் போன்றோர் அதிகப் பிரசிங்கித்தனத்தால் ஏழைகளின் வயிற்றில் அடித்து சர்க்கரைப் பையுடன் பாவமூட்டையையும் சேர்த்துச் சுமப்பதாக !) மாணாக்கர்க்குப் புத்தகம், மடிக்கணினி, மிதிவண்டி, காலணி எனத் தருவதால் கிராமப்புற, நகர்ப்புற என்று அனைத்து ஏழை மாணவர்களும் பயன் பெறுவது உள்ளங்கை நெல்லிக்கனி. கல்வி சார்ந்த இத்தகைய உதவிகள் வளர்ந்த நாடுகளிலேயே அளிக்கப்படுகின்றன. ஐரோப்பியக் கூட்டமைப்பினுள் பொருளாதாரத்தில் வலுவான நிலையில் இல்லாத இத்தாலி போன்ற நாடுகளிலேயே பல்கலைக்கழக உணவகங்களில் மாணாக்கர்க்குச் சலுகை விலையில் உணவு அளிக்கப்படுகிறது. சமீபத்தில் வல்லரசான அமெரிக்காவில் மாணவர்களின் கல்விக் கடனை ஜனாதிபதி ஜோ பைடன் அவர்கள் தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டது செய்தியானது. அங்கு அது வாடிக்கையான நலத்திட்டமாகவும் இருக்கலாம். இவ்வளவிற்கும் மேற்குறிப்பிட்ட நாடுகளில் ஆட்சிக்கட்டிலில் இருப்பவை சிறிய, பெரிய அளவில் வலதுசாரி அரசுகளே என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறே முதியோர் நலத் திட்டங்களும் வளர்ந்த, வளரும் நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறை என்பது மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. "தொலைக்காட்சிப் பெட்டி, மிக்ஸி, கிரைண்டர் போன்றவை அடிப்படைத் தேவைகள் அல்லவே ! பின் இவற்றை வழங்குவது இலவசம் அன்றி வேறென்ன ?" என்ற கேள்வி எழலாம். ஏழையொருவன் அடிப்படைத் தேவைகள் பெற மட்டுமே தகுதியானவன் என்பதே ஒரு பொருளாதார உயர்வர்க்கச் சிந்தனை; சமத்துவத்திற்கு எதிரான சிந்தனை. கேளிக்கை உரிமையோ தகவலறியும் உரிமையோ அவனுக்கு இல்லை என்னும் கருத்து எவ்வகையில் சரி ? அவன் வாழ்நாளில் எண்ணிப் பார்க்க முடியாத இவற்றை ஒரு ஜனநாயக அரசால் அவன் வரை கொண்டு போக முடிவதும் சிறப்புதானே ! அதுவும் தமிழக நிதி அமைச்சர் சொன்னது போல இவற்றைக் கொடுக்காத மாநில அரசுகளை விட கொடுக்கும் தமிழக அரசு எந்தத் துறையிலும் பின்தங்கி விடவில்லையே ! இப்பொருட்களைக் கொடுப்பதை விட இவற்றை வாங்கும் திறனை அவனுக்கு அளிக்க வேண்டும் என்று சொல்வது கொள்கை அளவில் சரிதான். நடைமுறையில் ? அந்த நீண்ட கால முயற்சியும் ஒருபுறம் நடைபெற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அந்த இலக்கை அடையும்வரை அவனை இலவு காத்த கிளியாக வைத்தே அழகு பார்க்க வேண்டுமா ? இம்மாதிரியான நலத்திட்டங்கள் பொருளாதாரத்தில் ஓரளவு மேம்பட்டோரையும் சென்று சேர வாய்ப்புள்ளதே எனலாம். எந்தத் திட்டத்திலும் முழு நிறைவு (perfection) என்பது சாத்தியமில்லை. வளர்ச்சித் திட்டங்களில் கூட கமிஷன், அதன் காரணமாகத் திறமின்மை என்பவை ஏற்படவே செய்கின்றன. நிறைவை நோக்கிய நகர்வும் இருக்கத்தான் வேண்டும். பதருடன் நெல்மணியும் வீணாகிறது என்பதால் நெற்பயிரை வளர்க்காமல் விடுவோமா ? அரிசி, கோதுமை போன்ற அடிப்படைத் தேவையான பொருட்களின் விலையை அரசு கட்டுக்குள் வைப்பது என்பது ஒருவகையில் விவசாயியின் வயிற்றில் அடித்து ஏனையோருக்காக முட்டுக் கொடுப்பதேயாம். இதன் பயனை அனுபவிப்போர், உழைப்புக்கான முழுப்பயனையும் தராத விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவது தமக்கான இலவசமே என்பதை உணராமல் போவது எங்ஙனம் ? தனியாருக்குத் தாரை வார்த்ததற்கு முந்தைய காலகட்டத்தில் பெட்ரோல், டீசலுக்கான அரசு மானியத்தால் பெரிதும் பயனடைந்தோர் பொருளாதார நடுத்தர வர்க்கத்தினரும் உயர் மட்டத்தினருமே என்பதை அவர்களே உணர்ந்ததில்லை. எனவே தமக்கான சாலை வசதி, குடிநீர் வசதி போன்றவை மட்டுமே வளர்ச்சித் திட்டங்கள் என்று கணிப்பதை விடுத்து, ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கான நலத்திட்டங்களும் வளர்ச்சித் திட்டங்களே என்பதை சமூகம் உணர்தல் வேண்டும். தமக்கு உகந்த ஒரு முதலாளித்துவ அரசு 'இலவசங்கள்' என்று நலத்திட்டங்களுக்கு எதிராகப் பேசினால் தாமும் அவ்வாறே பேச வேண்டும் என்ற எண்ணம் கொண்டோர், மன்னர்கள் காலத்திலிருந்தே அளிக்கப்பட்ட சதுர்வேதி மங்கலங்களைப் பற்றியோ கோயில்களில் வழங்கப்பட்ட சட்டிச்சோறு உரிமையைப் பற்றியோ பேசுவதில்லை. பெரும் முதலாளிகளின் இலட்சம் கோடி வங்கிக் கடன்களை எந்தக் குற்றவுணர்ச்சியும் இன்றி சுயலாபத்துக்காகத் தங்களின் மனம் கவர்ந்த அரசு தள்ளுபடி செய்வதைக் கண்டுகொள்வதில்லை. பரம்பரை பரம்பரையாகத் தனக்கு வேலை செய்ய ஒரு அடிமை வர்க்கம் வேண்டும்; அவ்வர்க்கத்தினர் மேலே எழுந்து வர உருவாக்கப்படும் நலத்திட்டம் எதுவும் தனக்கு எதிரானது என்னும் எண்ணம் கொண்டதே முதலாளித்துவம். அம்முதலாளித்துவத்திற்கு நமது கையறு நிலையில் வள்ளுவனின் வாசகமே பொருந்தி அமைவது : " கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்" (குறள் 166; அதிகாரம் : அழுக்காறாமை)
  23. நன்னீரை வாழி அனிச்சமே ! --- சுப. சோமசுந்தரம் நம் பாட்டுடைத் (!) தலைவன் சங்கமருவிய காலத்தவனாய்த் தோன்றுகிறான். சான்றோர் கேண்மையினாலும் நிரம்பிய நூலுடைமையினாலும், சங்க கால வாழ்வியலும் சங்கத்தமிழும் சற்று அறிந்தவன் போலும். "நெய் பெய் தீம்பால் பெய்து நீ இனிது வளர்த்த இம்மரம் உனது உடன் பிறப்பாவாள்" என்று நற்றிணைத்தாய் தன் மகளிடம் இயம்பியதை நூல்வழி அறிந்தவன். "தலைவனே! தன் உடன்பிறப்பான இம்மரத்தின் நிழலில் உன்னோடு மகிழ்ந்திருக்க தலைவி நாணுகிறாள்" என்ற நற்றிணைத் தலைவிதன் தோழியின் கூற்றும் அறிந்தவன் அவன். "கரி பொய்த்தான் கீழிருந்த மரம் போலக் கவின் வாடி" எனச் சாற்றும் பாலைக்கலியைப் பாடிப் பார்த்தவன். அஃதாவது தனது நிழலில் நின்று பொய்யுரைத்த ஒருவனது இதயம் படபடக்க, அவனது உடலியல் மாற்றத்தின் விளைவாக மரம் வாடி நின்ற கதை அது. ஒருவன் பொய்யுரைத்ததை உலகிற்குப் பறைசாற்றிய பொய் காண் கருவியாய் (Lie detector) மரம் நின்ற அறிவியல் அது. இங்ஙனம் இயற்கையுடன் மனிதன் சங்க காலத்தில் கொண்ட மேதகு உறவினை சங்கமருவிய காலத்தும் கொண்டு செல்லும் வேட்கையும் சான்றாண்மையும் படைத்தவன் நம் தலைவன். தற்காலத்தில் காதலின் நுட்பம் அறிந்த தலைவனொருவன் ஒரு நாள் முழுதும் தானே தலைவிக்காக சமையல் செய்வதாகவோ அல்லது இன்னபிற குற்றேவல்கள் செய்வதாகவோ உறுதி ஏற்பதில்லையா ? அதுபோல நமது அக்காலத் தலைவன் தானே மலர்கள் கொய்து மாலையாக்கித் தலைவிக்குச் சூட ஆவலுற்றான். அவன் வாழ்ந்த இடச்சூழல், அப்பருவச் சூழல் இவற்றின் தாக்கத்தினால் சோலை எங்கும் அனிச்சத்தின் ஆட்சி மலர்ந்திருந்தது. பூவினத்தில் மென்மையானது எனப் பார் போற்றும் அனிச்சத்தின் ஆட்சி வன்முறை ஏதுமற்ற மென்முறை ஆட்சி. மலர் கொய்யவே செடியினை அணைந்து நின்றவன் மலரினின்றும் விலகி நின்றான். மோப்பக் குழையும் அனிச்சம் என்பதினால் மூச்சுக்காற்றும் தீதாம் எனும் அச்சம். அகலாது அணுகாது தீக்காய்வார் போல் பூக்காய்ந்தான் போலும். நற்றிணை மாந்தர் மரஞ்செடி கொடிகளுடன் உறவாடியதைப் போல் மலரிடம் உரையாடினான், "ஏ அனிச்சமே ! உன் மென்மையுடன் மேன்மையாய் நீ வாழ்க ! எனினும் உன்னை விட மென்மையானவள் நான் வீழும், வாழும் என் தலைவி" என அவன் அவளின் நலம் புனைந்துரைத்தான். வேறு மானிடரிடம் சென்று இவ்வாறு உரைப்பதுதானே தற்பெருமையாகவும் முதிர்ச்சியின்மையாகவும் அமையும் ? தன் மனதிடம் உரைப்பது போல் மலரிடம் உரைப்பது கலைநயம் அன்றி வேறென்ன ! "நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள்" ----(குறள் 1111; களவியல்; அதிகாரம்: நலம் புனைந்துரைத்தல்) மலர் கொண்டவன் மாலை கட்டினான். அக்கலை அவளிடமே அவன் கற்றது. கட்டும்போது கவனமாக ஒவ்வொரு மலராகக் காம்பினைக் களைந்தான். அவன்தன் மனத்திரையில் பழங்காட்சியொன்று விரிந்தது. அனிச்சமலரை மட்டுமே தாங்கும் வல்லமை பெற்ற மெல்லிடையாள் அவள். எனவே ஒரு முறை அனிச்சத்தைச் சூட முனைந்த அவளிடம் சொன்னான், "காம்பினைக் களையாமல் சூடிக் கொண்டாயானால், நல்ல பறை ஒலியாது; சாப்பறைதான் (இழவுக் கொட்டுதான்) ஒலிக்கும்". அதாவது மலரின் எடை தாங்கும் அவளின் இடை, மலர்க்காலின் எடை தாங்காது முறிந்திடுமாம்; அப்புறம் இழவுதானாம். "அந்தப் பாறாங்கல்ல நீ தூக்ககுனே, அப்புறம் எழவுதாம்லே !" என்று இக்காலத்தில் கூட நண்பனிடம் சொல்வதில்லையா ? அப்போதும் அதே சொல் வழக்கு ! "அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை" ---(குறள் 1115) (நுசுப்பு - இங்கு இடைவருத்தத்தைக் குறித்தது) பெருந்தடாகக் கரையின் அமைந்த பொழில் அது ஆதலின், ஆங்கு மணலானது அனிச்சத்தினும் மென்மையாய் அமைந்ததோ, என்னவோ ! மேலும் தடாகத்தின்கண் நீந்தும் அன்னப் பறவைகளின் மென்மையான இறகுகள் அம்மணற் பரப்பில் விரவிக் கிடந்தன; கூடவே அனிச்சத்தின் இதழ்கள் வேறு. மாலையுடன் தலைவியின் வரவுக்காகக் காத்திருந்த தலைவன் மணற்பரப்பில் பரவியிருந்த அனிச்ச இதழ்களையும் அன்னத்தின் இறகுகளையும் இயன்றவரை நீக்கி அச்சோலையை மேலும் செம்மைப்படுத்தினான். அனிச்சமும் அன்னத்தின் தூவியும் கூட தலைவிதன் மென்மையான பாதங்களை வருத்துமாம், உதிர்ந்த நெருஞ்சிப் பழம் நம் பாதங்களை உறுத்துவது போல. "அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்" ----(குறள் 1120) அன்றிலிருந்து இன்று வரை நிலவும் ஆணாதிக்க சமூகத்தில் தலைவிதானே தலைவனின் வழிமேல் விழி வைத்து நிற்பாள் ? அன்றே அதில் மாற்றத்தை நிகழ்த்திய நம் தலைவன் தன்னேரில்லாத் தலைவனே ! அந்தி மாலையில் அவன் கோர்த்த மாலைக்காகவே வந்தது போல் தலைவியும் வந்தாள். மாலை சூடினான் மனம் கவர்ந்த மன்னன் அவன். பொய்கைக் கரைக்கு அவனையணைந்து சென்று அமர்ந்தாள் பதுமை அவள். அவளிடம் படுபாவி (!) என்னென்ன பிதற்றினானோ, அக்கற்பனை உலகில் கூட அவை நம் காதில் விழவில்லை. விளைவு மட்டும் கண்கூடாய்த் தெரிந்தது. அவன் நெஞ்சமதில் பாவையவள் தஞ்சமானாள். நம் மனத்திரைக்குத் தணிக்கை எதுவும் இல்லை. அம்பலத்தில் சொல்ல தணிக்கை உண்டே ! எனவே அக்காட்சிக்கு இவ்விடத்தில் நிறைவுத் திரை போடும் கையறு நிலை நமக்கு. நூறாண்டு பல கழிந்து தலைவனின் வழிவந்த ஒருவன் "அனிச்சம் பூவழகி ----------------------------------- ------------------------------------ கிறங்க வைக்கும் பேரழகி" என்று வெள்ளித்திரையில் பாடியபோது ஏற்பட்ட நம் எண்ண அலைகளின் பதிவே மேற்கூறியதாம்.
  24. நூல் அறிமுகம் - சுப.சோமசுந்தரம் எனது நெருங்கிய நண்பர் பேரா.ச.தில்லைநாயகம் அவர்கள் திருக்குறளுக்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் காலத்துக்கேற்ற எளிய உரையொன்று அளித்திருக்கிறார்கள். இவ்வுரைநூல் இம்மாதம் (ஜூலை 2022) 'நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்' நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்திற்கு அடியேன் அளித்துள்ள அணிந்துரையும், நூலாசிரியர் பேரா.ச.தில்லைநாயகம் அளித்துள்ள நூன்முகமும் நூலுக்கான சிறந்த அறிமுகமாக இருக்கும் என நினைக்கிறேன். அணிந்துரை இவ்வையத்திற்கு வாழ்வியல் பாடம் சொன்ன நூல் திருக்குறள் என்பதும், அது காலந்தோறும் காலத்திற்கு ஏற்ப சான்றோரால் பல மொழிகளில் உரை செய்விக்கப்பட்டது என்பதும் உலக அளவில் அறிஞர் பெருமக்களும் தமிழ் கூறும் நல்லுலகில் பாமரரும் கூட அறிந்த ஒன்று. அவ்வாறு நம் காலத்திற்கு உகந்த பார்வையுடன் பேராசிரியர் ச. தில்லைநாயகம் அவர்கள் பாமரரும் உணரும் செவ்விய உரையினைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் தர வருகிறார் எனக் கட்டியம் கூறும் வாய்ப்பு எனக்கு கிடைத்தமை என் பேறு. இவ்வுரையின் சிறப்பியல்புகளான எளிமையையும், காலம் தழுவியமையையும் எடுத்தியம்புவது இந்த அணிந்துரையின் மூலமாக எனது சீரிய பணியாக அமையும் என நம்புகிறேன். அதிலும் இங்கு எளிமை எனும் பண்பு உள்ளங்கை நெல்லிக்கனியாய்க் காணக் கிடைக்கும் ஒன்று. தமிழானாலும் ஆங்கிலமானாலும் உரையினை வாசித்தவுடன் பொருளுணர்ந்து வாசகன் ஒவ்வொரு குறளையும் சரளமாகக் கடந்து செல்லுகையில் உணரற்பாலது இந்த இனிமை கலந்த எளிமை. எனவே இது காலத்துக்கேற்ற உரை எனும் கருத்தினை ஒன்றிரண்டு மேற்கோள்களுடன் சுட்டுவது இந்த அணிந்துரைக்குப் பொருந்தி அமையும். இஃது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்க்கும் முயற்சியாம். "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்" "மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்" என நவிலும் 'மக்கட்பேறு' அதிகார உரைகளில் பரிமேலழகர், மணக்குடவர் போன்ற பழம்பெரும் உரையாசிரியர்களும், மு. வரதராசனார், கலைஞர் கருணாநிதி, சாலமன் பாப்பையா போன்ற சில இக்கால உரையாசிரியர்களும் உள்ளது உள்ளவாறு 'மகனை'யே குறிக்கின்றனர். சிற்பி பாலசுப்பிரமணியம் போன்ற தற்கால அறிஞர் பெருமக்கள் மகனுக்குச் சொன்னவாறே உரைத்து, மகளுக்கும் பொருந்தும் எனச் சுட்டுகின்றனர். நம் உரையாசிரியர் பேரா. தில்லைநாயகம் அவர்கள் 'மகன்' என்ற இடத்தில் பிள்ளைகள் என்று உரைக்கும் உரிமையை எடுத்துக் கொள்வது குறிக்கத்தக்கது. குறள் தோன்றிய காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விதிவிலக்குகள் தவிர சான்றோர் அவையிலும், சமர் களத்திலும் ஆண்மகனே வந்து நின்றான். எனவே இவ்வகை அறங்களை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்பது அன்றைக்கு செயற்கையானதொரு படைப்பிலக்கியத்திற்கு வழி கோலுவதாய் அமைந்திருக்கும். "இலக்கியம் காலம் கடந்து நிற்க வேண்டியதில்லை" என்று யவனிகா ஸ்ரீராம் என்ற தற்காலக் கவிஞர் 'தடம்' ஏட்டின் நேர்காணலில் சொன்னதை வாசித்த ஞாபகம். படைப்பாளி தன் காலத்திற்குத்தானே எழுத முடியும்? ஊகத்தின் அடிப்படையில் எதிர்காலத்தை எப்படி அவன் நிர்ணயிக்க முடியும்? படைப்பு அவனது காலத்தைக் கடந்து நின்றால், அது அவனை மீறிய தற்செயல் நிகழ்வாகத்தானே அமையும்? காலச்சிறையில் வள்ளுவனே கட்டுண்ட சில இடங்களில் அவனை விடுவிப்பதற்கான நமது உரையாசிரியரின் முயற்சி போற்றத்தக்கது. அவ்விடுதலையே தற்காலச் சமூக விடுதலைக்கு வித்திடும் என உணர்வது ஒரு உரையாசிரியரின் கடமையாகிறது. அதேவேளை பண்பாட்டு மாற்றத்தை அளவறிந்தே செய்துள்ள விதமும் குறிக்கத்தக்கது. எடுத்துக்காட்டாக 'வாழ்க்கைத் துணைநலம்' அதிகாரத்தில் பெண்ணுக்கு சொல்லப்பட்டதே ஆணுக்கும் என்று ஆசிரியர் மெனக்கெடவில்லை. அக்கனவு மெய்ப்படும் வருங்கால உரையாசிரியர்களுக்கு அதனை முன்பதிவு செய்து வைப்பதே இயற்கையானதாய் அமையும்; ஈண்டு அமைந்துள்ளது. மேலும், திருக்குறள் கூட அனைத்து இடங்களிலும் காலத்தைக் கடந்து யோசிக்க இயலாது என்பதை வாசகனுக்கு எங்காவது உணர்த்தத்தானே வேண்டும்! "தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை" என்ற குறளுக்கு, "இத்தகையவள் பெய் என்றவுடன் மழை பெய்யும்" என்று உயர்வுநவிற்சியாகப் பெரும்பாலும் ஏனையோர் கூற, நம் உரையாசிரியர், "இத்தகையவள் கணவன் விரும்பும்போதெல்லாம் பெய்யும் மழை போன்றவள்" என்று இயல்பு கூட்டுகிறார். அவ்விடத்தில், "இத்தகையவள், வேண்டும் நேரத்தில் வேண்டிய அளவு பெய்யும் மழை போன்றவள்" என்று மெருகேற்றலாமோ என்று நம் சிந்தனைக்கும் வித்திடுகிறார். தன் காலத்தின் பகுத்தறிவுவாதியான வள்ளுவன், பெரிதும் ஆணாதிக்க சமூகமாக இருந்த கால கட்டத்தில் ஆணுக்குச் சொன்னதை இப்போது பொதுவில் வைப்பது வள்ளுவனுக்கு உடன்பாடாகத்தான் இருக்க வேண்டும். எனவே அவனை, காலத்தை வென்று நிற்க வைத்துள்ளது கருத்து வேறுபாடு ஆகாது என்பதையும் குறித்தாக வேண்டும். காலம் கருதிய பொருள் கொண்டமைக்கு மேலும் சில மேற்கோள்கள் இவ்வணிந்துரைக்கு அணி சேர்க்கும் என நினைக்கிறேன். “மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ டியைந்துகண் ணோடா தவர்” (அதிகாரம்: கண்ணோட்டம்; குறள் 576) "உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃ தில்லார் மரம்மக்க ளாதலே வேறு" (ஊக்கமுடைமை; குறள் 600), "அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர்" (பண்புடைமை; குறள் 997) என்ற மூன்று குறட்பாக்களிலும் அநேகமாக உரையாசிரியர்கள் அனைவரும் இரக்கமற்ற, ஊக்கமில்லாத மற்றும் பண்பாற்றோருக்கு மரத்தையே உவமையாகக் கூறியுள்ளனர். இயற்கையில் மரத்தின் மேன்மை கருதிய நம் உரையாசிரியர், வள்ளுவர் இவ்விடங்களில் கூறிய 'மரம்' என்பதை பட்டமரம், மரக்கட்டை என்று விரிவுரைத்தமை அவரது நுண்மாண் நுழைபுலத்திற்குச் சான்று பகர்வது. பெண்வழிச்சேறலில் (அதிகாரம் 91) மனைவி சொற்படி நடப்பவரைப் பொத்தாம் பொதுவாக இழிவாகக் கூறாமல், பண்பற்ற மனைவியின் சொற்படி நடத்தலை இழிவு எனக் கூறுவது நம் கருத்தினைக் கவர்வது. "மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது" என்பதில், "மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர் சிறந்த பயனை அடைய மாட்டார்" என்று கூறும் உரைகளுக்கு மாறாக, "இல்லற சுகத்தில் அளவுக்குமீறி ஈடுபடுவோர் புகழ்பெறார்" என்று உரையாசிரியர் ச. தில்லைநாயகம் அவர்கள் கூறுவது சமூகத்தில் மனையாளின் மாண்பினையும் காத்து நிற்கும் திறம். வரைவின் மகளிரையும் (அதிகாரம் 92) தற்கால நோக்கில் பாலியல் தொழிலாளர்களாக அணுகும் பாங்கினைக் காணமுடிகிறது. அதே சமயம் அவர்களிடம் மதிமயங்குவதை எக்காலத்திலும் நியாயப்படுத்த இயலாது என்பது மட்டுமின்றி, சில இடங்களில் நியாயப்படுத்துதல் கருத்து வேறுபாடு ஆகும் என்பதையும் உணர்ந்து கயிற்றின் மேல் திறம்பட நடக்கிறார் நம் ஆசிரியர். ஆங்கிலப் பேராசிரியரான ச. தில்லைநாயகம் அவர்கள், ஓரளவு சுமாரான ஆங்கிலம் அறிந்தவர்கள் கூட புரிந்து கொள்ளும் வண்ணம் ஆங்கிலத்தில் உரை செய்திருப்பது இவ்வுரைக்கு அணி சேர்ப்பதாகும். மேலும், தமிழ் உரைக்கும் ஆங்கில உரைக்கும் இடையே, சொற் தேடலில் பொருள் சிறிதளவும் வேறுபடவில்லை என்பது சிறப்பு. உதாரணமாக, ஜி.யு. போப் அவர்கள், "தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது" எனும் குறளுக்கு "தம் மக்களின் அறிவுடைமை, தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கெல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்" என்று கொண்டு கூட்டித் தமிழிலும், "Their children's wisdom greater than their own confessed through the wide world is sweet to every human breast" என்று ஆங்கிலத்திலும் தந்துள்ளார். இந்த இரண்டிலும் உள்ளது போன்ற பொருள் வேறுபாடு நமது உரையாசானிடம் தென்படவில்லை. எனவே பொய்யாமொழிக்குத் தற்காலத்தில் எழுதப்பட்ட சிறந்த உரைகளின் வரிசையில் புதிய பரிமாணங்களுடன் இந்நூல் மிளிரும் என்பதில் ஐயமில்லை. இச்சீரிய இலக்கியப் பணியை சமூகப் பணியாகச் சிரம் மேற்கொண்ட பேரா.ச. தில்லைநாயகம் அவர்களுக்கு நம் பாராட்டும் வாழ்த்தும். சுப.சோமசுந்தரம் கணிதப் பேராசிரியர் (ஓய்வு) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திருநெல்வேலி. நூன்முகம் அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள். திருக்குறளின் செழுமையையும் செறிவையும் பலநூற்றாண்டுகளுக்கு முந்தைய தமிழ் மூதாட்டி அவ்வையின் குறட்பா அமைப்பில் அமைந்த இவ்வரிகளைவிட சுருக்கமாகவும் திருத்தமாகவும் யாராலும் சொல்லிவிட முடியாது. இதற்கும் மேலாக இக்குறட்பா பண்டைத் தமிழர்களின் கவித்துவத்துக்கும் அறிவியல் தொழில்நுட்பத்திறனுக்கும் தலைசிறந்த சான்று. பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய மணக்குடவர், பரிமேலழகர் போன்றோர் முதல் இன்றைய பல்வேறுபட்ட தமிழ்ச் சிந்தனையாளர்களும் தமிழர் அல்லாதவர்களும் திருக்குறளுக்கு உரை எழுதுவதிலும் பிறமொழிகளுக்குப் பெயர்த்துவதிலும் ஈடுபட்டு வருகின்றனர். இருபதாம் நூற்றாண்டில் பேராசிரியர் மு. வ. வின் “திருக்குறள் தெளிவுரை” தற்காலத் தேவைக்கேற்ப எளிமையான மாற்றம் பெற்றது. கடந்த பலபத்தாண்டுகளில் தமிழாசிரியர்கள் மட்டுமின்றிப் பிறதுறை தமிழறிஞர்களும் பிறமொழி தமிழ்ப்பற்றாளர்களும் திருக்குறளுக்கு எண்ணற்ற உரைகள் எழுதியுள்ளனர். பரிமேலழகரைப்போலவே இவர்களும் தாம் புரிந்து கொண்டவாறு பொருளும், தம் நோக்கத்திற்கு உகந்தவாறு விளக்கங்களும் கொடுத்துள்ளனர். அயல்மொழிகளில் திருக்குறளின் முதல் மொழிபெயர்ப்பு மலையாளத்தில் 1595இல் தோன்றியது. வீரமாமுனிவர் 1730இல் லத்தீன் மொழியில் அறிமுகப்படுத்தினார். 1794இல் கிண்டெர்ஸ்லி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முதல்வராகிறார். தொடர்ந்து பிற மொழி பேசும் இந்திய மற்றும் அயலகத் தமிழ் ஆர்வலர்களும் இதன் மொழிபெயர்ப்பில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். உலகப்பொதுமறை என்ற புகழுக்கு ஏற்ப பைபிளுக்கும், குரானுக்கும் அடுத்தபடியான இடத்தை மொழிபெயர்க்கப்பட்ட உலகமொழிகளின் எண்ணிக்கையிலும் மொழிபெயர்ப்புகளின் எண்ணிக்கையிலும் பெற்றுள்ளது. திருக்குறளுக்கு எனது சிறிய பங்களிப்பாக தமிழ், ஆங்கில உரைகளோடு ஒருசில வரிகளில் ஒவ்வொரு அதிகாரத்தின் கருத்தையும் கொடுத்துள்ளேன். . ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருந்தும் இன்றளவும் தமிழில் வெளியாகும் நூல்களில் திருக்குறளே அதிக அளவில் எடுத்தாளப்படும் பெருமைக்குரியதாக இருக்கின்றது. ஆண்டுதோறும் திருக்குறளை மையமாக வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவருகின்றன. தமிழகக் கோவில்களிலும் பொதுவெளிகளிலும் திருக்குறள் சொற்பொழிவுகள் பெருமளவில் நடைபெறுகின்றன. ஒரு சில குறள்களையாவது மனத்தில் இருத்தி வேண்டிய வேளைகளில் பொருத்தமாகப் பயன்படுத்தாத தமிழர்களே இல்லை எனலாம். ஒருவரை அறிவுரை சொல்லித் திருத்த வேண்டிய வேளையில் திருக்குறளின் துணையை நாடுவோரை எங்கும் பார்க்கலாம். குறள்களில் காணப்படும் கருத்தைக் கவித்துவத்துடன் எளிதாக விளக்கிச்சொல்லும் பல சொற்றொடர்கள் தமிழ்ப் பேச்சுவழக்கில் எண்ணிலடங்கா. எடுத்துக்காட்டாக, ‘நீர் இன்றி அமையாது உலகு’, ‘கற்க கசடற’, ‘கற்றனைத்தூறும் அறிவு’, ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ போன்றவற்றைக் குறிப்பிடலாம். தமிழகத்தின் தலையாயச் சிந்தனையாளர்களும் அறிவாளிகளும் தாம் திருக்குறள் வாசிப்பிலிருந்து பெற்ற பயன்களை மிகச்சிறப்பாக இயம்புகின்றனர். பல அறிஞர்களின் நுட்பமான, புதுமையான, வியக்கத்தக்க விளக்கங்கள் நம் சிந்தனையைத் தூண்டிப் பரவசப்படுத்துவதாக இருக்கின்றன. அதேநேரத்தில் தமிழகத்தை ஆளத்துடிக்கும் அரசியல்வாதிகள் தமிழக மக்களைத் திசைதிருப்பி தம்வயம் கொண்டுவருவதற்கும் திருக்குறளைப் பயன்படுத்துகின்றனர். இன்றைய சூழலில் நானும் திருக்குறளின் பெருமைகளைப் புகல்வது மிகையானது. ஆனால் இந்நூலை முயன்று முடித்ததற்கான காரணம் என்னிடமும் சில புதிய விளக்கங்கள் உள்ளதால் தான். “தொட்டனைத்தூறும் மணற்கேணி” எனும் வள்ளுவர் வாய்மொழிக்கு வள்ளுவமே நிகரற்ற சான்று.. திருக்குறளை அறிந்துகொள்ள ஆர்வம் அதிகரித்து வரும் இச்சூழலில் நான் பல தமிழ், ஆங்கில உரைகளைப் படித்த போது அவற்றைவிட இன்னும் எளிமையாக, தெளிவாக, சுருக்கமாக மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சொல்லமுடியும் என்று தோன்றிய நம்பிக்கையும் இம்முயற்சிக்கு மற்றொரு காரணம். இந்நூலின் தனித்துவம், திருக்குறளை இன்றைய முற்போக்குக் கருத்துக்களுக்கும் பெண்ணுரிமைச் சிந்தனைகளுக்கும் இடம்கொடுத்து முற்போக்காளர்களும் பெண்ணியமும் முன்னெடுத்தச் சொற்களைப் பயன்படுத்தி உரை காணமுடியுமென்று காட்டியுள்ளதே. எந்தவொரு பிரதியும் வாசகனின் வாசிப்பில் தான் பொருள் கொள்கிறது. இவ்வழியில் அறநூல்களின் எல்லாக்காலத்துக்குமான பொருத்தப்பாட்டையும் தேவையையும் நிலைநாட்ட முடியும். இந்நூல்வழி தமிழக மக்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். உரையாடலில் முடிந்தளவு ஆங்கிலக்கலப்பைத் தவிருங்கள். தமிழிதழ்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் முதலாக எங்கும் எதிலும் காணப்படும் கட்டுப்பாடற்ற ஆங்கிலக்கலப்பு தமிழ்மொழியை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் என்பது திண்ணம். “சூப்பர்”, “ரீட்பன்னி”, “ரைட்பன்னி” போன்ற சொல்லாடல்களையாவது முற்றிலும் நீக்கிவிடுங்கள் என வேண்டி நிற்கிறேன். அன்புடன், ச. தில்லைநாயகம்
  25. ஆறு வயதில் விதவையான ஒரு பாட்டி எங்கள் அருகாமையில் வாழ்ந்தார்கள். அக்கொடுமையையெல்லாம் நம் சமூகம் கடந்து வர எத்தனையோ காலம் ஆனது. அதுபோல் இதுவும் கடந்து போம். ஆங்கிலத்திற்கு மன்னிக்கவும் - Robert Frost ன் வரிகளைச் சுட்டு இவ்வாறு சொல்லத் தோன்றுகிறது: Miles to go before you sleep And miles to go before you sleep with the gender you like. அடிக்கோடிட்ட பகுதி அடியேன் சேர்த்தது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.