யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

சுப.சோமசுந்தரம்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  201
 • Joined

 • Last visited

 • Days Won

  1

சுப.சோமசுந்தரம் last won the day on May 5 2018

சுப.சோமசுந்தரம் had the most liked content!

Community Reputation

193 Excellent

About சுப.சோமசுந்தரம்

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male
 • Location
  Tirunelveli, Tamilnadu, India
 • Interests
  Literature - Classical and Modern, Social and Union Activities
 1. உலகத்தைப் (சமூகத்தை) பற்றி சிந்திக்கும் உங்களைப் போன்றோர் சமூகத்தின் மீது அவநம்பிக்கை கொள்ள வேண்டாம். ஊதுகிற சங்கை ஊதத்தான் வேண்டும். சமூக அக்கறையுள்ளோருக்கு நேரம் காலம் கிடையாது; சோம்பல் (மடி), மானம் இவையெல்லாம் பார்த்தால் எடுத்த காரியம் கெடும் என்பான் நம் முன்னவன் வள்ளுவன் : குடி செய்வார்க்கு இல்லை பருவம் மடி செய்து மானம் கருதக் கெடும். அதிகாரம்: குடிசெயல் வகை.
 2. உலகத்துக்கானவர்கள் ஒவ்வொரு நாளையும் வருத்ததுடனும் சோகத்துடனும் தொடங்கி அன்றைய நாளுக்கான அலுவல்களில் மூழ்கி (அலுவல்களில் பின்னால் ஒளிந்து கொண்டு என்பதே பொருந்தும்) சிறிது மறந்திருந்து உறங்கச் செல்லுகையில் மனதின் பாரம் பாதியாய்க் குறைந்து, மறுநாள் காலை தினமும் மறதியைக் காரணம் காட்டித் தப்ப முயலும் அக்குற்றவுணர்வு முழுவதுமாக என்னை ஆட்கொள்வதுமாகக் கழிந்த சில பல நாட்களின் முடிவாகிப் போன ஏதோ ஒரு நாளில்தான் நான் அம்முடிவை எடுத்திருக்க வேண்டும். ‘உலக நடப்புகளை இனி கவனிப்பதில்லை’ – கண்களை இறுக மூடிக் கொள்ளும் முட்டாள்தனத்தைச் செய்ய எத்தனித்தேன்…. உலகம் இருண்டு விட்டது என்று நினைக்க அல்ல; உலகமெங்கும் உவகையும் வெளிச்சமுமே நிறைந்து இருக்கிறது என்று நம்புவதற்கு. சமூக வலைதளங்களின் வலையில் சிக்க மறுத்ததால் நான் புறக்கணிக்க வேண்டியவை தொலைக்காட்சியையும் நாளிதழ்களையும். இதுதான் எளிதாயிற்றே ! இப்படித்தான் நினைத்துக் கொண்டேன். ஆனால் ஆழ்மனதின் தூண்டுதலால் நான் மறக்க விரும்பிய அல்லது மறந்துவிட்டதாய் மனதுக்குள் சொல்லிக் கொண்ட அம்மனிதர்களையும் அவர்கள் தொடர்புடைய செய்திகளையும் பற்றிய நூல்களை உலகத் திரைப்படங்களை நாடிச் சென்ற மனதை நான் தாமதமாகத்தான் உணர்ந்து கொண்டேன். ‘அம்மனிதர்கள்’ – உலகத்துக்கானவர்கள். அடையாளம் தொலைத்து நிற்பவர்களை உலகம் தனது கதகத்தப்பான கரங்களால் வாரியணைத்துக் கொள்ள வேண்டாமா? அதை விடுத்து… ‘நாடற்றவர்கள்’ – இச்சொல் பிடிக்கவில்லை. அவர்களது இழப்பை மீண்டும் மீண்டும் நினைவுகூறும் பொருளில் விளிப்பது சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஏன் ஒவ்வொரு நொடியும் உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் அனைத்தையும் இழந்தவராகிறார்? யாருக்கோ யாருடனோ பிணக்கு. தமது நிலங்களை அடையாளங்களை உரிமைகளை மீட்டெடுக்கும் விடுதலைக்கான அறப் போர்; அதை எதிர்த்து அடக்கி ஒடுக்கும் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான போர்; அதிகாரத்தின் தலைமையிடம் யாருக்கானது என்பதற்கான போர்; இயற்கை வளங்களை அபகரிக்கும் போர்; என்னுடைய கட்டுக்கதைதான் சிறந்தது என்று (உருவில்லா / உரு கொடுக்கப்பட்ட) கற்பனைகளின் பெயரில் நடக்கும் புனிதப் போர்…. இதில் முதல் பிரிவில் வரும் வணக்கத்திற்குரிய போராளிகளை விடுத்து இதர பிரிவுகளில் வரும்…… என்ன பெயர் சொல்லி விளிப்பது இப்பேய்களை ? அதிகார அட்டைகள், கண்றாவி கம்பிளிகள், பித்துப்பிடித்த பிசாசுகள்….. அடச்சே! இந்தக் கருமாந்திரங்களுக்கு ஏன் பெயர்சூட்டு விழா நடத்த முற்படுகிறேன்? வேர்கள் வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்படும்போது உண்டாகும் வலிக்கு நிகரானது, பாதுகாப்பின் பொருட்டு வேர்களைத் தாமே உதறித் தள்ளித் தொலைக்க வேண்டிய நிலைக்கு ஆளாவது. இன / மதக் கலவரங்கள், போர், மனித உரிமை மீறல் மட்டுமல்ல….. பஞ்சம், இயற்கை பேரழிவுகள், நெருக்கடி நிலை, பிழைப்புக்கு வழியில்லாமை – இவற்றில் ஏதோ ஒன்று கூட மனிதர்களை வேறு நாடுகளுக்கு இடம் பெயரச் செய்யலாம். இயற்கை பேரழிவுகள் தவிர்த்து மற்றவை எல்லாம் மனிதனால் உருவாக்கப்பட்ட ஆனால் கட்டுப்படுத்தக்கூடிய சூழ்நிலைகள். வேறு நாடுகளுக்குப் புலம் பெயரும் அந்தப் பயணமே அவர்களைப் பாதி கொன்றுவிடும். வான்வழிப் பயணத்தில் அதிகாரிகளிடம் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால் பெரும்பாலும் சாலை/தரை வழிப் பயணம் அல்லது கடல் வழிப் பயணம் என்ற யோசனைக்கே வந்து நிற்க வேண்டியிருக்கும். தரை வழிப்பயணம் : சுற்றி என்ன இருக்கிறது? வெளியே மழையா? வெயிலா? குளிரா? என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படும் மனநிலையில் இல்லாத அவர்கள் இடித்துப் பிடித்து அமர்ந்து முழங்கால்களுக்கிடையில் தலை புதைத்து, வழியில் எங்கேனும் சோதனைச் சாவடியில் மாட்டிக்கொண்டு முகாமுக்கு அனுப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தில் இரு கைகளாலும் படபடக்கும் நெஞ்சையும் உயிரையும் பிடித்தவாறே அந்த இருட்டடைந்த டிரக்கினுள் தம் வாழ்வு வெளிச்சத்தை நோக்கிப் பாதுகாப்பாகப் பயணித்துக் கொண்டிருப்பதாக நம்ப விழைவது …. கடல் வழிப்பயணம் : ஆழியினால் சூழப்பட்ட இக்கள்ளத் தோணி புணரியின் முனிவுக்கு இரையாகாமல் நல்லதொரு நிலத்தைக் கண்டடைய வேண்டும்; இத்தோணியில் இருந்து இறங்குகையில் தமது உடலில் உயிர் இருக்க வேண்டும்; அந்நிலத்தில் தமக்காகக் காத்திருக்கும் (கண்டிப்பாய்க் காத்திருக்கிறது என்ற நம்பிக்கையுடன்) நல்வாழ்வை இருகரங்களாலும் இறுக அணைத்துக் கொள்ள வேண்டும் போன்ற வேண்டுதல்களால் நிரம்பியது கடல் வழிப் பயணம். இவ்வேண்டுதல்களைத் தாங்கிச் செல்லும் கனத்த இதயங்களின் சுமைகளைத் தாங்க இயலாமல் கொஞ்சம் தள்ளாடித்தான் போகும் தோணி. ‘வேறு வழியே இல்லை, உயிரை இழக்காதிருக்க மற்ற எல்லாவற்றையும் இழக்கத்தான் வேண்டும்’ என்று உணர்ந்த பின் புலம் பெயர வேண்டிய கட்டாயத்தை எதிர்கொள்ளும் ஒரு குடும்பத்தின் வலியை அவ்வளவு எளிதில் எழுத்தில் வடிக்க இயலாது. தன்னை ஈன்றெடுத்த மண்ணை, தான் ஒவ்வொரு முறையும் தடுக்கி விழுந்த போது தாங்கிப் பிடித்த மண்ணை, நீண்ட நெடிய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கொண்டிருக்கும் மண்ணை, அம்மண்ணுக்கே உரிய தனித்துவமான வாசத்தை, தனது உலகமாகிப் போன ஊரை, தன் ஊருக்கே உரித்தான மரம் செடி கொடிகளை, அவை வீசிய தென்றல் காற்றை, நீச்சல் பழகிய கிணற்றை, மீன் பிடித்த குளத்தை, குறுக்கும் நெடுக்குமாக வளைய வளைய ஓடி விளையாடிய ஒழுங்கைகளை….. நெருப்புக்கோழி முட்டை சமைக்கும் போதெல்லாம் தனது வீட்டுக்கும் கொடுத்து அனுப்பும் ஃபர்ஹானா அத்தையை, சைக்கிள் ஓட்டக் கற்றுத் தந்த செழியன் அண்ணாவை, தினமும் மதிலின் மீது எட்டி எட்டிப் பார்த்து ‘டாட்டா’ சொல்லும் நிலா குட்டியை, ஒவ்வொரு ஈஸ்டர் திருவிழாவுக்கும் கேக் கொண்டு வரும் ஏஞ்சல் அக்காவை…. (இவர்களும்தான் சிதறப் போகிறார்கள் என்றாலும் கூட…) – இவ்வாறு எல்லோரையும் எல்லாவற்றையும் விட்டுச் செல்வது என்பது தன்னை இழப்பதுதானே? புலம் பெயர்வது என்று முடிவான பின்னும் கூட அனைவரும் சேர்ந்து செல்லும் வசதியோ சூழலோ அமையாமல் போகலாம். ஒவ்வொருவராகச் செல்வது என்னும் முடிவு அதனுடன் எதிர்காலம் குறித்த நிலையற்ற தன்மையையும் அச்சத்தையும் சேர்த்து இழுத்துக் கொண்டு வரலாம். குடும்பத்தலைவர் தாம் முதலில் சென்று தம்மை அரவணைத்துக் கொள்ளும் ஒரு நாட்டில் தம்மை ஓரளவு நிலைபடுத்திக் கொண்ட பின் குடும்பத்தினரை வரவழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை ஒன்றை மட்டுமே நம்பிச் செல்வாராய் இருக்கலாம். சென்றவரிடமிருந்து பல காலமாக ஒரு தகவலும் வராமல் போகையில், இவ்வுலகில் அன்னாரது இருப்புக்கான கேள்விகளை எழுப்பும் வலிமை இல்லாது அதையும் தாண்டி, ‘தாம் இப்போது வேறு இடத்திற்குப் புலம் பெயர்வதா ?’ அல்லது ‘அவர் வந்து தேடும் போது தாம் இங்கு இல்லாதது கண்டு செய்வதறியாமல் திகைத்து நிற்பார் ஆகையால் இங்கேயே கிடந்து உயிர் விடுவதா?’ என்னும் குழப்பங்கள் எழலாம். ஏனெனில் அக்குடும்பத்தையும் தலைவனையும் இணைக்கவல்ல ஒரே சாதனம் அவ்விடம் மட்டுமே. ‘இது தற்காலிகமான ஏற்பாடா?’ அல்லது ‘காலாகாலத்திற்கும் இங்குதானா?’ போன்ற கேள்விகள் தலையினுள் சுற்ற ஆரம்பிக்கும் முன்னரே அவர்கள் முகாம் வாழ்விற்குப் பழக வேண்டும். அருவியில் களித்துக் குளித்துப் பெற்ற கட்டுக்கடங்காத உற்சாகத்தை ஒரு வாளித் தண்ணீரில் கட்டாயம் பெற்றே ஆக வேண்டும். நதிக்கரையில் குப்புறப்படுத்து தலையை மட்டும் முழுவதுமாக நீரினுள் விட்டு மூச்சை அடக்கி வேண்டுமட்டும் நீரைப் பருகித் தீர்த்துக் கொண்ட தாகத்தை அன்றாடம் தரப்படும் ஒரு பாட்டிலில் தணித்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். மண்ணின் சுகந்தத்தின் மூலம் தன் வரவை முன்னரே அறிவித்து குதியாட்டம் போட வைத்த மழைக்கு இப்போது பயந்தே ஆக வேண்டும்…. டென்டிடுள் நீர் புகுந்து விடுமோ என்று. தமது செல்லப் பெயரின் மூலம் தமது ஊர்க்காரர்கள் அனைவருக்கும் பரிச்சயமாகிப் போனவருக்கு இப்போது தம்மை ‘அகதி’ என்று நிலைநாட்டிக் கொள்ள எப்போதும் நாற்பது ஐம்பது காகிதங்களுடன் இருக்க வேண்டியிருக்கும். எல்லாவற்றையும் இழந்து நிற்கும் ஒருவர், தமது கையறு நிலையைப் பிரகடனப் படுத்த, அத்தியாவசப் பொருட்கள் வாங்க, பத்து டென்ட் கழித்து இருக்கும் தமது புதிய நண்பரைச் சந்திக்கச் செல்லுகையில் எதிர்ப்படுவோரிடம் காட்ட….. என எல்லாவற்றிற்கும் அவர் கையில் ஒரு கத்தைக் காகிதக் குப்பையைத் திணித்திருக்கிறது உலகம். ஏன் ? ஏன் ? ஏன் ? இவையெல்லாம் ஏன் நடக்கின்றன ? என்று உரக்கக் கத்திக் கேட்டாலும் சமாதானம் தரும் பதில் கிடைப்பதே இல்லை. இதற்குச் சமாதானம் தரும் பதில் என்று ஒன்று இருக்கவா செய்கிறது ? பூமிப்பந்தில் நாம் வரைந்து தொலைத்த அத்தனை கோடுகளையும் அழிப்பது மட்டுமே தீர்வாகத் தோன்றுகிறது. காகிதங்களில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் வறட்டுச் சட்ட திட்டங்களை ஒழித்துக் கட்டி ‘மனிதர்கள் எங்கு பாதுகாப்பாக உணர்கிறார்களோ அங்கு எவ்விதத் தடையுமின்றி வசிக்கலாம். யாரிடமும் கேட்க வேண்டியதில்லை’ என்ற பொதுவானதொரு சட்டம் இருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்? இவ்வளவிற்கும் பெரும்பாலும் காரணமாகிப் போகும் அதிகாரப் பிரியர்களை வெறியர்களை வறுத்தெடுக்கும் உன்னத பணியை இதை விட கூர்மையான வலிமையான பேனாவிற்கு விட்டுவிடுகிறேன். எனது நோக்கம் உலகம் முழுதும் ஆங்காங்கே நிராதரவாகப் பரிதவித்து நிற்பவர்களை அணைத்து நம் மனங்களை (கொஞ்ச நேரத்திற்கேனும்) அவர்களோடு இருத்தி வைப்பது. இருப்பினும்….. மனிதத்தையும் மனிதகுலத்தையும் குலைத்துச் சிதைக்கும் நோக்கில் ஒவ்வொரு அடியாக முன் எடுத்து வைக்கும் சர்வாதிகாரிகளிடம், எதேச்சதிகாரிகளிடம், தீவிரவாதிகளிடம் ஒரே ஒரு கேள்வி – “என்னதான்டா வேணும் ஒங்களுக்கு?” - சோம.அழகு நன்றி, கீற்று
 3. இனப்பெருக்க அடிப்படையில் சமநிலை (Balancing ற்கு எனது சுமாரான மொழிபெயர்ப்பு) என்னும் அணுகுமுறையில், ஓரினச்சேர்க்கை விடயத்தில் நான் இன்னும் எனக்குள் கருத்தினை அமைத்துக் கொள்ளவில்லை. ஆனால் இயற்கைக்கு முரணான அல்லது ஒழுக்கக் கேடான என்னும் கோணத்தை நான் ஏற்கவில்லை. மனிதர்கள் தங்களுக்குள் பிரச்சினைகளைத் தவிர்த்து பரஸ்பர அன்புடனும் அமைதியுடனும் வாழ உறவு முறைகள் கொண்ட சமூகத்தையும் அதற்கான விதிகளையும் அமைத்தார்களே, அது இயற்கைக்கு முரண் இல்லையா ? ஆடை உடுத்தியது முதற்கொண்டு மனித நாகரிகமே இயற்கைக்கு முரண்தானே ? மேலும் வியப்பாக, சூழ்நிலை அடிப்படையில் விலங்குகளிடம் ஒருபால் உறவு நடவடிக்கைகள் காணப்பட்டுள்ளது. ஒழுக்கம் என்றால் அது இடத்தையும் காலத்தையும் பொருத்தது. உதாரணமாக 'ஒருவனுக்கு ஒருத்தி' என்பது எண்ணிக்கையில் பால்நிலைச் சமன்பாடு உள்ள சமூகத்திற்கானது (தங்கள் எண்ணிக்கையைப் பெருக்க இதில் சமயக் கோட்பாடுகள் வகுப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்பது வேறு விடயம்). பாலியல் விலகல்களில் (sexual deviations) Paedophilia (குழந்தைகளிடம் ஈர்ப்பு எனும் கயமை), Beastiality (விலங்குகளை நோக்கிய ஈர்ப்பு) , sexual sadism (உடலுறவில் மற்றவரைப் துன்புறுத்தல்) போன்றவற்றை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவற்றில் அறியாதார்க்கும், வலிமை குறைந்தோர்க்கும் அநீதி இழைக்கப்படுவது தெளிவு. இத்தகைய பாலியல் விலகல் உணர்வுகள் சிலரிடம் இயற்கையாய்த் தோன்றினாலும் அவற்றை எதிர்த்துப் போராடத்தான் வேண்டும் - மனித நாகரிகத்தைப் போல. மற்றபடி காதல், அன்பு, புரிதல் இவையெல்லாம் வயதிலும் அறிவிலும் முதிர்ந்தோரிடையே ஏற்படின், அன்னார் எப்பாலினத்தவராயினும், அவர் உரிமையில் தலையிட சமூகத்திற்கு உரிமையுண்டா என்ன ? பரஸ்பர சம்மதத்தில் உறவு கொள்ளும் வயது வந்தோர் விடயத்தில் சட்டம் எனும் பெயரில் சாவித் துவாரம் வழியாகப் பார்க்கும் அநாகரிகத்தை மனித சமூகம் என்று கைவிடப் போகிறது?
 4. உங்கள் பின்னூட்டம் என்னை இன்னொரு சிறிய கட்டுரை எழுதத் தூண்டுவது உண்மை. அலுவல் காரணமாகச் சிறிது தாமதம் ஏற்படுவதால், ஒன்றிரண்டு விடயங்களை இங்கு பதிவு செய்ய எண்ணுகிறேன். (1) இராமனின் (குரலில் மாரீசனின்) அபயக் குரல் கேட்டும் செல்லாத இலக்குவனிடம் சீதை "அண்ணன் இறந்த பின் என்னைப் பெண்டாள நினைத்தாயோ?" எனக் கேட்பது வால்மீகி ராமாயணத்தில். ஆரிய மண்ணில் தோன்றிய கதையைக் கம்பன் இயன்றவரை நம் மண்ணுக்கேற்ப மாற்றியதாலும், கம்பனே நம் மூதாதையன் என்பதாலும் அவன் கண்ட களத்திலேயே நிற்பது நமக்கு ஏற்புடையது. கம்பன் காவியத்தில், " ஒரு நாள் பழகியோரே (குகன் போல்) உயிரைத் தரத் தயாராக இருக்கும் போது, அண்ணனின் நிழலான நீ அவனைக் காக்கச் செல்லாதது நெறிமுறையன்று" என்ற முறையிலேயே கடுமையாகப் பேசுகிறாள். (2) இராமனின் சுடுசொல் தாங்காது இலக்குவனிடம் தீ மூட்டுமாறு சொல்பவள் சீதையே. மனம் ஒப்பாத இலக்குவன் அண்ணன் இராமனை நோக்க, பார்வையிலேயே அவன் சம்மதம் தருகிறான். 'இராமனே சொன்னான்' என்று நீங்கள் குறித்தவாறு எடுப்பதில் தவறில்லை. தானே சொன்னால் என்ன, சம்மதித்தால் என்ன எல்லாம் ஒன்றுதான். (3) இலக்குவன் விடயத்தில் வால்மீகி சீதையைக் கைவிட்டாலும், கம்பன் கைவிடவில்லை. ஆனால் இராமன் அவ்வளவு பாக்கியசாலி இல்லை. சீதையை மீட்டதும் இராமனிடமிருந்து வரும் சொல்லம்புகளை அப்படியே பதிவு செய்து விட்டான் கம்பன்.
 5. கிருபன் அவர்கள் பதிவிட்ட செய்தி நமக்குத் தெரிந்தமையால், மேலோட்டமாக வாசித்ததில் தஜிந்தர் சிங் பெயர் வரும் இரண்டாம் பத்தியைக் கவனிக்கவில்லை. நீங்கள் வேடிக்கையாய்க் கேட்டதற்கு நான் முனைப்புடன் பதிலிறுத்துவிட்டேன். எனினும் தஜிந்தர் சிங் குறிப்பிடுவது, இந்திரா காந்தியின் Operation Bluestarக்கு பழி வாங்கும் விதமாக இந்திரா தமது மெய்க்காப்பாளராயிருந்த இரண்டு சீக்கியர்களால் கொல்லப்பட்டவுடன் வெடித்த கலவரத்தில் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டதை, என நினைக்கிறேன். இந்திரா மறைந்ததும் உடனே ராஜீவ் காந்தியைப் பிரதமராக்கித் தீவிர அரசியலுக்கு இழுத்து வந்தார்கள். டெல்லி கலவரம் காங்கிரஸின் முக்கியப் பிரமுகர்களாலேயே அரங்கேற்றப்பட்டது. அப்போது கொலைகாரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. "ஒரு பெரிய ஆலமரம் விழும்போது பூமி அதிரத்தான் செய்யும்" என்று பிரதமர் ராஜீவ் வேறு திருவாய் மலர்ந்தருளினார்.
 6. இந்திரா காந்தி காலத்தில்தான் 'Operation Bluestar' நிகழ்ந்தது. இந்தியப் படை பொற்கோவிலுக்குள் சென்று பிந்தரன்வாலே மற்றும் அவன் ஆட்களை ஒழித்தனர். அரசியல் காரணத்தால் பிந்தரன்வாலே இந்திரா அரசினால் ஒரு காலத்தில் உருவாக்கப்பட்டவன்தான் - அமெரிக்கா‌ ஒரு காலத்தில் ரஷ்யாவிற்கு எதிராக பின்லேடனை உருவாக்கியதைப் போல. இரண்டுமே வளர்த்த கிடா மார்பில் பாய்ந்த கதை.
 7. தங்களின் கருத்துக்கள் தாங்கள் ஆரம்பத்தில் தயக்கம் கொண்டது போல் தவறானவையோ, ஏறக்குறைய மக்களால் பேசப்படாதவையோ அல்ல. நீங்கள் கூறியவற்றைப் பரந்த அளவில் மேற்குறிப்பிட்ட மூன்று தலைப்புகளில் பகுத்துள்ளேன். இவற்றையொட்டி என் சிந்தனைகளை எனக்கென்று உள்ள பாணியில் எழுத நினைக்கிறேன். அது உங்களுக்கான பதில் அல்ல. நீங்கள் சொன்னதில் எனக்கு மாறுபாடு இல்லாதபோது எப்படிப் பதிலாக அமைய முடியும்? இலக்கியங்களில் நம் பார்வைகள் சற்று வேறுபடலாம் ; பெரும்பாலும் முடிவான முடிவு என்று இருப்பதில்லை. சில இடங்களில் நியாயப்படுத்த நாம் முயற்சிக்கலாம் ; சில இடங்களில் நியாயப்படுத்த வழியே இல்லை என்று ஒதுங்கலாம். மேம்போக்காகவே இவ்வளவு நீளம் பேசுகிறேன் என்றால், எனக்குள் நீங்கள் தூண்டிய சிந்தனைகளைப் பதிவு செய்ய பின்னூட்டம் என்னும் பகுதி பொருந்தாது. விரைவில் சிறிய கட்டுரையுடன் உங்களைச் சந்திக்கிறேன். பின்னூட்டம் தந்த ஒருவர் கட்டுரை தருவது எனக்கு முதல் முறையாக இருக்கும். நன்றி.
 8. நான் கட்டுரையில் குறிப்பிட்டதைப் போல் நிகழ்வுகளில் உள்ள irony யை ரசிப்பது மட்டுமே நம் நோக்கம். இளங்கோவைப் பொறுத்தமட்டில் அவர் நோக்கங்களில் ஒன்றே சமணக் கோட்பாட்டின் வழி ஊழ்வினையை வலியுறுத்துவதாதலின், அவருக்கு அது முரணன்று. கம்பனைப் பொறுத்தமட்டில் (கட்டுரையில் நான் குறிப்பிட்டவாறு) கட்டுரையின் நோக்கம் கருதி நான் அடக்கி வாசித்த விடயங்களை, பின்னூட்டத்தில், தங்களைப் போன்று கற்றார் ஒருவர், அறியாதாரும் அறியச் செய்தல் நலம்தானே !
 9. இரண்டு சொல்லாடல்களும் (ironyக்கு) உண்டு எனக் கேள்வியுறுகிறேன். சான்றாக ஒரு இணைப்பை அனுப்புகிறேன். இருப்பினும் அதனைப் பலமான சான்றாக நான் நினைக்காததால், எனக்கு வாய்த்த சான்றோர் கேண்மையில் மேலும் விளக்கம் கிடைத்தால் எழுதுகிறேன். நீங்களும் சொல்லலாம்.https://www.google.com/amp/s/dailyreflections365.wordpress.com/2014/01/15/daily-reflections-day-15/amp/
 10. என்னே இந்த நகைமுரண் ! ( What an irony! ) - சுப.சோமசுந்தரம் வீட்டிற்கு உறவினர் வந்திருந்தனர். உறவுமுறையில் எனக்கு மருமகளான பெண்ணொருத்தி தூங்குகின்ற தன் கைக்குழந்தையை அறையொன்றில் விட்டுவிட்டு முன்பக்க அரங்கில் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தாள். தற்செயலாக அறைக்குச் சென்றதால் குழந்தையைப் பார்த்த நான் அவளிடம் சொன்னேன், "குழந்தையைத் தனியே விட்டிருக்கும் பட்சத்தில் இடையிடையே பார்த்துக்கொள்; சன்னல் வழியே எப்போதாவது பூனை வருவதுண்டு". இதைத் தொடர்ந்து என் மனதில் ஏதோ ஒரு காட்சி ஓடியது- சிலப்பதிகாரத்தில் பெண்ணொருத்தி குழந்தையைத் தனிமையில் விடுத்து நீர்நிலைக்குச் சென்று வந்ததும், குழந்தையைத் தீண்ட வந்த அரவத்தைக் கீரிப்பிள்ளை கொன்ற கதையும்; சங்கிலித் தொடர் போல் வேறு கருத்தும் வேறொரு இலக்கியக் காட்சியும். எழுதுகிற எல்லோருக்கும் இப்படித்தான் ஏதோ நிகழ்வொன்று கருவாக அமையுமோ? அல்லது நான் எழுத்துலகில் பழகுநர் என்பதாலோ என்னவோ, எனக்கு இப்படித்தான் இந்தக் கட்டுரைக்கான பொருள் தோன்றியது. இந்த எழுத்துக்கான பீடிகை கூட நான் கணித ஆசிரியன் என்பதால் அமைந்ததோ? பொதுவாக வயதிற் குறைந்த என் ஆசிரிய நண்பர்களுக்குச் சொல்வேன் - ஒரு ஆசிரியன் எந்தக் கணித வினாவிற்கும் தீர்வை மட்டும் சொன்னால் போதாது; அத்தீர்வு எப்படித் தோன்றியது என்பதை இயன்றவரை சொல்லுதல் நலம். இனி என் காட்சிப் படலம். காட்சிக் களம் சிலம்பில் மதுரைக் காண்டம் அடைக்கலக் காதையில் கோவலனிடம் மாடலமறையோன் கூற்றாக அமைவது. " பிள்ளை நகுலம் பெருபிறிதாக எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல - - - - - - - - - - - - - - - - - - - - - கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத் தானஞ் செய்தவள் தன்துயர் நீக்கிக் கானம் போன கணவனைக் கூட்டி ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ" ( நகுலம்-கீரி ) குழந்தைக்குத் தீங்கிழைக்க வந்த அரவத்தைக் கொன்ற கீரி, வாயில் அந்த இரத்தத்துடன் வந்து, தன்னையும் பேணிய, நீர்நிலை சென்று திரும்பும் தாயைக் காண வெளியே வந்து நிற்கிறது. தாயான அப்பார்ப்பனப் பெண், கீரிப்பிள்ளை தன் குழந்தையைத்தான் கடித்து விட்டதாய் எண்ணி கீரியைக் கொன்று விடுகிறாள். ஆராயாமல் கொன்ற கொடிய பாவத்திற்கு ஆளாகியதால், அப்பெண்ணின் கணவன் அவளைப் பிரிந்து செல்கிறான். மேலும், பிரிந்து செல்கையில் பார்ப்பனனான அம்மறையவன் பாவ நிவர்த்தியாக ஆற்ற வேண்டிய தரும காரியங்களை வடமொழியில் எழுதி அவளிடம் தந்து உரிய செல்வமும் மனமும் கொண்டோரை அணுகி இறைஞ்சுமாறு சொல்லிச் செல்கிறான். புகார் நகரத்தில் பெருவணிகர் வாழும் இடங்களில் அந்த அபலைப் பெண் அலைந்து திரிகிறாள். இதனைக் கேள்வியுற்ற கோவலன் அப்பெண்ணின் குறையறிந்து, அவளின் சார்பாக தான தருமங்களைச் செய்து அவள் கணவனையும் வருவித்து, பெரும்பொருளீந்து அவர்களை நல்வழிப் படுத்தி வாழச் செய்கிறான். எனவே மாடல மறையோனால் " செல்லாச் செல்வ " (செல்லாத-குறையாத-செல்வமுடையவன்) என வாழ்த்தப் பெறுகிறான். ஆராயாமல் கீரியைக் கொன்ற பார்ப்பனப் பெண்ணுக்கு உய்வினை அளித்த கோவலன் என்னும் செல்லாச் செல்வன்,செல்வம் வேண்டி சிலம்பினை விற்க கண்ணகியுடன் மதுரை வந்ததும், பாண்டிய மன்னனால் ஆராயாமல் கொலைக்களப்பட்டதும் என் மனதிற்பட்ட நகைமுரண். இம்முரண் களைய முற்படின், கையறு நிலையில் மாடல மறையோன் கோவலனுக்கு உரைத்த கூற்று அன்றி எம்மிடம் வேறொன்றுமில்லை: " இம்மைச் செய்தன யானறி நல்வினை உம்மைப் பயன்கொல் ஒருதனியுழந்து இத் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது " இளங்கோவடிகளைத் தொடர்ந்து சங்கிலித் தொடர் போல் அடுத்து என் மனதில் முரண் தொடுப்பவன் கம்ப நாடன். இவ்விரண்டாவது காட்சியின் திறப்புக் களம் பால காண்டம் அகலிகைப் படலம். இந்திரனால் ஏமாற்றப்பட்ட அகலிகை, தனக்கு துரோகம் இழைத்ததாக, அவளது கணவன் கௌதம முனிவரால், கல்லாய்ச் சமைய சபிக்கப்பட்டாள். முனிவர்களின் வேள்விகளுக்கு இடையூறு விளைவித்த அரக்கியான தாடகையை வதம் செய்து ராமன் தன் இளவல் இலக்குவனோடும் மகரிஷி விஸ்வாமித்திரரோடும் மிதிலை நோக்கி வருகிறான். அவன் பாதம் பொருந்திய தூசி பட்டு அகலிகை உயிர் பெறுகிறாள். தாடகை வதத்தையும் அகலிகை உயிர்த்தெழுதலையும் குறித்து விஸ்வாமித்திரர், " கைவண்ணம் அங்கு கண்டேன் கால்வண்ணம் இங்கு கண்டேன் " என்பது ஈண்டு நினைவிற் கொள்ளத்தக்கது. பின் கௌதம முனிவரை வரவழைத்து, " நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக என்ன " ( மனதினால் பிழை செய்யாத இவளை நீ அழைத்துக் கொள்வாயாக என இராமன் கூற ), பின்னர் " கஞ்சமா மலரோன் அன்ன முனிவனும் கருத்துள் கொண்டான் " எனவும் " மாசறு கற்பின் மிக்க அணங்கினை(அகலிகையை) அவன்(கௌதமன்) கை ஈந்து..... " இராமன் அச்சோலை நீங்கி மிதிலையின் புறமதிலை அடைந்தான் எனக் குறிக்கிறார் கம்பர். நமக்கு இக்காட்சியின் நிறைவுக் களம் யுத்த காண்டம் மீட்சிப் படலம். இராவணனை வதம் செய்து இலங்காபுரியின் ஆட்சியை வீடணனிடம் தந்த பின் சீதை வீடணனால் இராமனிடம் அழைத்து வரப் பெறுகிறாள். கற்பினுக்கு அணியான அத்தலைவி தன் கற்பின் திறம் காட்ட " மனத்தினால் வாக்கினால் மறு உற்றேனெனின் சினத்தினால் சுடுதியால் தீச் செல்வா........................ " என்று தீயிடைப் புகத் துணிகிறாள். மௌனம் சம்மதம் என்பது இராமனின் நிலைப்பாடு. எரியிடை மாசற்று விளங்கிய தலைவியை தலைவன் இராமன் மனமுவந்து ஏற்கிறான். மெய்யால் பிழையினும் மனதால் பிழையாளாயின், தலைவன் இராமனைப் பொறுத்தமட்டில் மாசறு கற்பின் மிக்க அணங்கானாள் அகலிகை. மெய்யாலும் மனத்தினாலும் வாக்கினாலும் பிழையாத தலைவி சீதைக்கு எரிதழல் சோதனை. ஈது நகைமுரணன்றி வேறு யாது? இந்நிகழ்வில் சீதை இராமனைக் கண்டதும் இறும்பூதெய்தலும், இராமன் சீதையைக் கொடுஞ்சொற்களால் கடிதலும், அதன் பின்னரே சீதை எரியிடைப் புகுதலுமான கம்பனின் செய்திகள் நான் அடக்கி வாசித்தவை. அதன் காரணிகள் இரண்டு. முதலாவது, நம் காவியத் தலைவன் இராமன் பல்லோர்க்கும் பிரான்; அவனை மக்கள் நியாயப்படுத்துதலில் என் இலக்கியப் பார்வை காணாமல் போகும். இரண்டாவது, நம் காவியத் தலைவி சீதையே முன் வந்து, உலகோர் அறியவே தான் அவ்வாறு செய்ததாக, நம்மை விடுத்துத் தன் தலைவனையே சார்ந்து நிற்பாள். சூடாமணிப் படலத்தில் அசோகவனத்தில் அனுமனிடம், " எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் சொல்லினால் சுடுவேன் அது தூயவன் வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன் " என விளம்பியவள் ஆயிற்றே! இவ்விரு காப்பியங்களிலும் கதாப்பாத்திரங்களில் குறை காண்பது நம் நோக்க்கமல்ல. குறிப்பாக சீதையின் எரி புகுதலில் இராமன் குற்றவாளியா இல்லையா என்பதெல்லாம் ஆண்டாண்டு காலமாகப் பட்டிமன்றங்களில் சான்றோர் பெருமக்கள் பேசியும் கருத்தாக்கங்களில் எழுதியும் புளித்து ஏப்பம் விட்ட கதை. ஒவ்வொன்றிலும் இரண்டு நிகழ்வுகள் முரண்களாய் அமைவதைச் சுட்டுவதும் ரசிப்பதுமே நம் நோக்கம். கதாபாத்திரங்களை இந்த நகை முரண்களோடு பொருத்துவதானால், அவர்கள் மீது வீசுவது அனுதாப அலை மட்டுமே. இம்முரண்களோடு இக்காவியங்களைத் தூக்கி நிறுத்துவது ஆக்கியோரின் சான்றாண்மை; மொழியின் சிறப்பு. முன்னதில் முரண் அமைந்து சிறப்பு; பின்னதில் முரண் அமைந்தும் சிறப்பு.
 11. 96.12க்கும் 98.56 கற்கும் பெரிய வேறுபாடு தெரியவில்லை. மேலும் இந்தத் தேர்ச்சி விகிதங்கள் மொத்தத்தில் செயற்கையாகவே தோன்றுகின்றன.
 12. மகாத்மா காந்தி கூறியதைப் போல் ஒரு பெண் தனியாக இரவில் சாலையில் எந்தப் பிரச்னையுமின்றி நடந்து செல்லக்கூடிய நாள் வரவேண்டும். அதுவரை,சகோதரி, தக்க பாதுகாப்புடனேயே செல்லுங்கள். இயற்கை ஆணைக் காட்டிலும் பெண்ணை உடலளவில் சற்று பலவீனமாகவே படைத்துத் தொலைத்துள்ளது. ஏனைய விடயங்களில் மானிட சமூகம் முன்னேறும் வேளையில், பெண்ணின் நிலை பின்னடைவதாகத்தான் உலக நிகழ்வுகள் சுட்டுகின்றன. கல்வி நிலையிலும் பொருளாதாரத்திலும் முன்னேறிய நாடுகளும் விதிவிலக்கில்லை. எனவே நாம் எதிர்பார்க்கும் நாள் வெகுதூரத்தில்தான் இருக்கிறது. நல்லோர் முயற்சியால் காலம் ஒரு நாள் மாறும். நம்பிக்கைதானே வாழ்க்கை!
 13. இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படியே பேசிக்கொண்டு இருக்கப் போகிறோம் - தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாதாக்கும் என்றெல்லாம் ? 'நமது இந்து மதம்' என மார்தட்டுகிறவர்கள் பசு ரட்சகர்களுக்கும் சங்கிகளின் மத வெறி செயல்பாடுகளுக்கும் குறைந்த பட்சம் கண்டனமாவது தெரிவித்தால், அந்த மத வெறியர்கள் இவ்வளவு வளர முடியுமா ? அதுபோல் மதவாதிகள் பர்தா அணியச் சொன்னால், எதிர்ப்பு தெரிவிக்காமல் மூன்று வயதுக் குழந்தைக்கும் மாட்டிவிட்டு ஒத்துழைப்பு நல்குகிறார்கள். உலகில் ஏதாவது அரசு பர்தா தடைச் சட்டம் கொண்டு வந்தால், இந்த இசுலாமியப் பொதுமக்கள்தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நீங்கள் பூணூல், திருநீறு, நாமம், குல்லா, தாடி என்று உங்கள் மதச் சின்னம் எதையும் அணிந்து விட்டுப் போங்கள். ஆனால் மற்றவரைப் பயமுறுத்தும் பர்தா தீவிரவாதத்தின் முதற்படி என்பதை உணர்வதில்லையா ? இப்படி மதத்தின் பெயரால் தீவிரவாதம் செய்பவர்கள் அந்தந்த மத நம்பிக்கையுள்ளவர்களின் ஒத்துழைப்புடன்தான் செய்கிறார்கள். எனவே அந்தந்த மதம் சார்ந்தவர்களைத்தான் நாம் கேட்க வேண்டும்; கண்டிக்க வேண்டும். அதை விடுத்து தீவிரவாதம் வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை போல் தீவிரவாதிகளை எதிர்கொள்ள நினைப்பது, ஒரு இருட்டு அறையில், இல்லாத ஒரு கறுப்புப் பூனையைத் தேடுவது. இனிமேலாவது, மதச் சிறுபான்மையினர் என்றால் தூக்கிப் பிடிப்பது அதிமேதாவித்தனம் என்ற நிலையைக் கைவிட வேண்டும்.
 14. https://tamil.thehindu.com/opinion/columns/article26940022.ece https://tamil.thehindu.com/opinion/columns/article26937721.ece நான் இந்துத்துவாவிற்கு எதிரானவன். இடதுசாரி மற்றும் திராவிட இயக்க சிந்தனைகளின் கலவை என்று என்னை நான் வரித்து வைத்துள்ளேன். இருப்பினும் நான் சார்ந்த இவ்விரு இயக்கத்தாரிடமும் நான் கேட்க நினைக்கும் கேள்விகள் இரண்டு : 1. மக்கள் என்ன உண்ண வேண்டும் என்பதை RSSம் சங் பரிவார் அமைப்புகளும் எவ்வாறு தீர்மானிக்க முடியும் என்று குரல் எழுப்புகிறோம். ஆனால் உல்மாக்களும் வஹாபிகளும் இஸ்லாமியப் பெண்கள் என்ன உடையணிய வேண்டும் என்பதை எப்படித் தீர்மானிக்க முடியும் என்று கேட்பதில்லையே ? எல்லாம் சிறுபான்மை இன உரிமையா ? 2. இந்துத்துவா தீவிரவாத்தை எதிர்த்துக் குரலெழுப்பும் நாம் இசுலாமியத் தீவிரவாதத்தின் போது, 'தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது; எனவே அத்தீவிரவாதிகளுக்கும் இசுலாமியர்களுக்கும் சம்பந்தம் கிடையாது. இஸ்லாமியத் தீவிரவாதம் என்று சொல்வதே தவறு' என்று சப்பைக்கட்டு கட்டுவது ஏன் ? இக்கேள்விகளுக்கு நம்மை விட இந்த இரு இசுலாமியப் பெண் எழுத்தாளர்களும் ஆணித்தரமாக பதிலளிப்பதாகத் தோன்றுகிறது.
 15. மனிதன் தேவையில்லை எனவும், இவர்களது கற்பனையில் வன்முறையே வடிவாக உறையும் இறைவன் போதும் எனவும் வெறி பிடித்து அலையும் இந்தப் பிறவிகளோடும், மதம் பிடித்த இவர்களது மதங்களோடும் இந்தப் பூமி எத்தனைக் காலத்திற்கு சுழலப் போகிறது? ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருக்கும் விடயம் இந்த மர/ மத மண்டைகளில் ஏறுமா? உலகத்தாரின் பொறுமையை இவர்களால் எத்தனைக் காலத்திற்கு சோதிக்க முடியும்? மனிதனுக்கே வெளிச்சம் (மதம் பிடித்தவன் எவனும் மனிதனில்லை). பாதிக்கப்பட்ட இலங்கைச் சொந்தங்களுக்குத் தர எம்மிடம் கண்ணீரைத் தவிர வேறு என்ன உண்டு?