• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

சுப.சோமசுந்தரம்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  273
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Everything posted by சுப.சோமசுந்தரம்

 1. 'மாப்பிள்ளை அவர்தான். ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது' என்று ரஜினி - செந்தில் பட (படையப்பா) காமெடி போல் வருகிறதே ! சரி, உங்கள் மகன் மற்றும் மருமகளை வாழ்த்த வேறு பாடல் போடுகிறேன் : "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்" -----------பெரியாழ்வார்.
 2. சிறப்பான திருமணம். பொருத்தமான இணை. ஈழப்பிரியன் அவர்கள் மகள் திருமணம் எப்போது நிகழ்ந்திருந்தாலும், இந்த யாழ் சொந்த இல்ல விழாவிற்கு இப்போது என் வாழ்த்துக்கள், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரிகளில் : "ஒரு மனதாயினர் தோழி இந்தத் திருமண மக்கள் என்றும் வாழி பெருமனதாகி இல்லறம் காக்கவும் பேறெனப்படும் பதினாறையும் சேர்க்கவும் ஒரு மனதாயினர் தோழி !"
 3. நீங்கள் எழுதுவது தவறில்லை. ஏனெனில் அது உங்களுக்கு ரசிக்கிறது; எழுதுகிறீர்கள். வருடங்கள் உருண்டோடும் போது, அதில் பழக்கமில்லாத இளைய தலைமுறையினருக்காக நீங்களும் ரசனையில் சமரசம் செய்வது தேவையாகலாம். நான் அந்த இணையத்தை விமர்சித்ததற்குக் காரணம் உண்டு. அவர்கள் கொள்கையளவில் ஆரியப் பார்ப்பனியத்தைத் தூக்கிப் பிடிப்பவர்கள். ஆகவே பெரியார் சொன்ன சீர்திருத்தம் என்பதற்காகவே மாற்ற மறுக்கிறார்கள் என்பது என் கருத்து. அரசும் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்து விட்டதால், மாற்றத்தைக் கேள்விக்குள்ளாக்கி விமர்சித்து இறுதியில் அதனை ஏற்றமைவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். அதிலும் ஒரு பொதுத்தளத்தை உருவாக்கி நடத்துபவர்கள் பொது வழக்கத்தின்படி எழுதுவதே மக்களுக்குத் தேவையற்ற இன்னல்களைத் தவிர்க்கும்.
 4. தம் மரபு, பழக்க வழக்கங்கள், (மூட நம்பிக்கைகள் தவிர்த்து) நல்ல நம்பிக்கைகளின் வழியில் தம் அடையாளங்களை வேர் பிடிக்க வைக்கும் முனைப்பு எந்த மானிட சமூகத்திலும் இருக்கும், இருக்க வேண்டும். மாற்றங்கள் ஒன்றே மாறாதவை என்பது ஏற்புடைய கருத்துதான். ஆனால் எந்த மாற்றத்தையும் கேள்வி கேட்காமல் கடந்து போவதும், வேறு வழியில்லை என்று கையறு நிலையில் ஏற்றுக் கொள்வதும் அந்த இனத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் கேட்டினை விளைவிக்கும் என்பது என் கருத்து. பையன் அவர்கள் சமூகத்தைக் கேள்வி கேட்கிறார். நல்ல கேள்வி. பையனாய் இருக்கும் போதே கேட்பது கூடுதல் சிறப்பு ! ('பையனாய்' என்று அவர் குறித்த பெயரை வைத்துச் சொன்னேன். அவ்வளவே )
 5. மக்கள் எதையெல்லாம் கண்டு பயந்தார்களோ, அதையெல்லாம் தெய்வமாக்குவர். பேய்ச்சி, முண்டக்கண்ணி இவையெல்லாம் அப்படித்தான் வந்தன. சின்னம்மை, பெரியம்மை நோய்கள் பெரியளவில் தாக்கியபோது, அம்மன் என்று வழிபட்டார்கள். அந்நோய் தாக்கிய வீட்டிலிருந்து யாரும் பிறர் வீட்டிற்குச் செல்வதில்லை; பிறரும் நோய்கண்ட வீட்டிற்கு வருவதில்லை. தெய்வ குற்றம் ஆகிவிடும் என்ற (மூட) நம்பிக்கையைப் பரப்பியதால், அத்தொற்றுக்கு அக்காலத்திலேயே சமூக விலகல் சாத்தியமாயிற்று. இப்போது அறிவியல் பூர்வமாக கொரோனா தொற்று பற்றி விளக்கினால், அதெல்லாம் நமக்கு வராது என்ற தொனியில் நடந்து கொள்கிறார்கள் பெருவாரியான மக்கள். முகக் கவசம் அணிந்தால் உறுதியாக தொற்று ஏற்படாது என்றெல்லாம் நம்புகிறார்கள். எனவே மக்களிடம் பகுத்தறிவும் பொறுப்புணர்வும் ஏற்படும் வரை (ஏற்படும் என நம்புவோம்), கொரோனாவைக் கடவுளாக்கி மக்களை மிரட்டிப் பணிய வைப்பது சிறந்த வழிதானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. நம் முன்னோர் இப்படித்தான் தெரிந்தே மூட நம்பிக்கைகளைப் பரப்பிய புத்திசாலிகளோ என்னவோ !
 6. இன்றைய திருமண நிகழ்வுகள் பற்றிய உங்கள் ஆதங்கத்தில் உள்ள நியாயம் எனக்குப் புரிகிறது. உங்கள் தரப்பு நியாயத்தைப் பிரதிபலிக்கும் வகையில், எனது மகள் சோம.அழகு வேறு இணையத்தில் எப்போதோ அங்கத நடையில் (sarcastic) வரைந்த கட்டுரையின் இணைப்பு : http://puthu.thinnai.com/?p=34480 அந்த இணையத்தில் இன்னும் (வேண்டுமென்றே) பழைய எழுத்துக்களையே பயன்படுத்துகிறார்கள். மன்னிக்கவும்.
 7. இது இலங்கை சார்ந்த விடயம் மட்டுமல்ல. பரப்பளவில் தமிழ்நாடு இலங்கையைப் போன்று எத்தனை மடங்கோ, அதை விட அதிக மடங்கில் துரோகங்கள் இந்து மகாசமுத்திரத்தின் இப்பக்கம் உண்டு. வழக்கில் உள்ளவாறு 'இது நமது இனத்தின் சாபக்கேடு' எனலாம், தோழர் ! (இலக்கண வழி 'எமது' என்பது 'நமது' என்றும் பொருள்படும் என்பது வேறு விடயம்).
 8. கருணாவையும் ஆதரிக்க மக்கள் சிலர் உண்டு என்பது புரியாத புதிராகவே உள்ளது. பிரபாகரன் அவர்களை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாகக் கருணாவை ஆதரிக்க மாட்டார்கள். பிரபாகரனை விரும்பாத தமிழர்கள் கூட ஒரு துரோகியை எப்படி ஆதரிக்க முடியும்? பிரபாகரனின் வழிமுறைகள் ஒரு காலகட்டத்தில் ஒத்துவராவிட்டாலும், பாரதத்தில் கர்ணனைப் போல் கருணா நின்றிருந்தால் பாராட்டலாம். குறைந்தபட்சம் ஈழப்போரிலிருந்து விலகி இருந்திருக்கலாம் (களத்தில் புலிகள், சிங்கள நரிகள் இருதரப்பிலிருந்தும் கருணாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால், இது நடைமுறைச் சாத்தியமற்றது; எனினும் கொள்கையளவில் ஏற்கலாம்). ஆனால் காட்டிக் கொடுக்கும் துரோகியை, அறம் சார்ந்து சிந்திக்கும் யாரும் எவ்வாறு ஏற்க முடியும் ?
 9. என் தோழர்களின் மனசாட்சிக்கு : சீனாவில் எப்படி எதிர்கொண்டார்கள் அல்லது எதிர்கொள்கிறார்கள் என்று ஊடகங்களுக்குத் திறந்து காட்டினார்களா? மற்ற நாட்களில் உன் இரும்புத் திரையைப் போட்டுத் தொலை. இப்போது மனித குலத்தின் உயிர் காக்க "எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயார்" என்ற வாய் ஜாலம் தவிர வேறு என்ன வந்தது? கடவுள் இல்லையென்ற கார்ல் மார்க்ஸே கடவுள் என வாழும் என் போன்றோராலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என் தோழர்கள் சீனாவைப் பற்றி வாய் திறப்பதில்லை. முதலாளித்துவத்தை இறுதி மூச்சு வரை எதிர்ப்பதில் உறுதி கொண்டவன்தான் நான். அமெரிக்க நகரிலிருந்து இந்த வைரஸ் கிளம்பியிருந்தால், அமெரிக்காவை நார் நாராகக் கிழித்திருக்க மாட்டோமா? இப்போது அரசியல் பேசும் நேரமல்ல, உலகமே எழுந்து நின்று மனித குலத்தைக் காக்கும் போரில் கைகோர்க்க வேண்டிய நேரம் என்று ஏன் நழுவ வேண்டும் ? இந்த ஊழிக் கூத்தில் பிழைத்தால், மீண்டும் தோழர்களிடம் பேசுவோம்.
 10. நட்பென்ன உறவென்ன ! - சுப. சோமசுந்தரம் எனது இந்த அறுபதாம் அகவையில் சமூக விலங்காக எல்லோரையும் போல் நான் வாழ்ந்ததைத் திருப்பிப் பார்க்கிறேன். எத்தனை உறவுகள் எத்தகைய நட்புகள், அத்தனையும் ஒரு பெரிய புத்தகமாக எழுதித் தள்ளும் அளவிற்கு என் மனத்திரையில் ஓடுகின்றன. வாசிப்பவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு என்னால் எழுத முடியும் என்ற தன்னம்பிக்கை, ஏன் இறுமாப்பே உண்டு என வைத்துக் கொள்ளலாம். புத்தக அளவிற்கு எழுத வேண்டியதை ஒரு கட்டுரையில் சுருக்க நினைக்கும் பேராசை இப்போது. உறவோ நட்போ, நம் வாழ்வில் இவை ஏற்படுத்தும் தாக்கங்கள் (படுத்தும் பாடுகளும்) அளப்பரியன. உறவுக்கும் நட்புக்கும் பெரிய வேறுபாடு ஒன்றுண்டு. நட்பு நமது தெரிவு (choice). நமது இயல்புக்கு ஒத்து வருவதை நாம் தெரிந்து தெளிதலே நட்பு. உறவு நமது தெரிவில்லை. முகம், நிறம் போன்று நமது பிறப்பாலோ அல்லது அதன் நீட்சியாக திருமணம் என்ற சமூக ஏற்பாட்டினாலோ அமைவது; சில நேரங்களில் அமைந்து தொலைவது. அமைந்த நட்பு ஏதோவொரு தருணத்தில் சரியாக வரவில்லையென்றால், அது தேரான் தெளிவு; நம் குற்றம். அமைந்த உறவு ஒத்து வரவில்லையென்றால், அது விதியின் விளையாட்டு; கருவின் குற்றம். அதிலும் தவிர்க்க முடியாத உறவுகளான தாய், தந்தை, கணவன், மனைவி, குழந்தைகள் என்ற வகையில் இந்நிலை ஏற்படின், அது உருத்து வந்து ஊட்டும் ஊழ்வினையன்றி வேறென்ன ! உறவோ, நட்போ நாம் கடந்து வரும் சிலர் நமது விருப்பப் பட்டியலில் இல்லையென்றால், அன்னார் ஏதோவொரு வகையில் தீயோர் என்றோ, குறையுள்ளோர் என்றோ பொருளில்லை; நாம் நல்லோர் என்றோ, குறையற்றோர் என்ற பொருளுமில்லை; நமக்கு ஒத்து வரவில்லை, அவ்வளவே ! (கூட்டுக்) குடும்ப உறவு என்னும் அமைப்பு நமது நாட்டில் மிக வலுவானது என மார் தட்டுகிறோம். இது சங்க கால நிலைமையாயிருக்கலாம். என் ஆச்சிமார் தாத்தாமார்களிடம் கேட்ட வரை நம் குடும்ப முறை ஆண்டான் – அடிமை நெறிமுறையாகவே இருந்து வந்திருக்கிறது. தொழிற்புரட்சிக்குப் பின் முதலாளிகள் வெளியே உருவாயினர். அதற்கு முன் நிலவுடைமைச் சமூகத்தில் குடும்பத்தினர் கூட்டாக இருந்து பாடுபட, சொத்துரிமையாளர்களான பெற்றொரும் உற்றோரும் முதலாளிகளாகவும் ஏனையோர் தொழிலாளர்களாகவும் – பெரும்பாலும் அடிமைகளாகவும் – அமைந்தனர். இந்த வாழ்க்கையில் பெரிதும் பாதிக்கப்பட்டவள் பெண்தான் என்பது தனியாக வேறு தலைப்பிட்டு எழுதப்பட வேண்டிய விடயம். அடிமையின் மனைவி அடிமைதானே ! அதிலும் பெண்ணடிமை ! உறவுகளுக்குள் – அன்றைய காலத்து அடிமைகளுக்குள் – போட்டியும், பொறாமையும், போட்டுக் கொடுத்தலும் வாழ்வின் அங்கமாகவே பெரும்பாலானோர் வாழ்ந்திருக்கின்றனர். இன்றைக்கும் அலுவலகத்தில் பார்க்கிறோமே ! போட்டியும் பொறாமையும் மனிதன் உட்பட அனைத்து விலங்கினங்களிடமும் உள்ள இயற்கை உணர்வு. ஒரு குழந்தையைத் தூக்கினால் இன்னொரு குழந்தைக்குக் கோபமும் அழுகையும் வருகிறதே ! பெரும்பாலான விடயங்களில் இயற்கையோடு ஒன்றிய வாழ்வு எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் சில விடயங்களில் வேறுபட்டு நிற்பது. இயற்கையை எதிர்த்து சட்டை போட்டுக் கொள்ளவில்லையா ! அதுபோல் வளரும் போது பொறாமை போன்ற தீவினைகள் அகற்றிப் பக்குவமடைவதாலேயே விலங்கிலிருந்து மாறுபட்டு மனிதம் ஆரம்பமாகிறது. இப்பக்குவத்தை வெகு சிலர் அடைவதும் பெரும்பாலானோர் அதனை எட்டாமலேயே வாழ்ந்து மடிவதும் உலக நியதி. நிலவுடைமைச் சமூகத்தில் பக்குவமடைந்த மனிதன் கூட அடிமைச் சங்கிலியை உடைத்து அல்லது தனக்கு ஒத்துவராதவரிடமிருந்து தன்னை விடுவித்து மகிழ்ச்சியான வாழ்வை நோக்கிப் பயணிக்க இயலாத கையறு நிலை. ஆனால் பொருளாதார விடுதலை பெற்ற தற்காலத்திலும் தனது தலையில் ஏற்றப்பட்ட விரும்பத்தகாத உறவுச் சுமைகளை இறக்கி வைக்காமல் தவிப்பது, தவறான கற்பிதங்களால் ஏற்பட்ட பழமைவாத நீட்சி (Hangover) அன்றி வேறென்ன ? முன்பே கூறியதைப் போல் நமது பொறுப்புகளுடன் கூடிய உறவுகளான தாய், தந்தை, கணவன், மனைவி, குழந்தைகள் பற்றி இங்கு பெரிதும் பேச வரவில்லை. விதியின்பாற் பட்டு இவ்வுறவுகளே சுமையானால், எவ்விதப் பொறுப்புத் துறப்புமின்றிக் கடமையாற்றி இரு தரப்பிலும் நிம்மதிக்கு இடையூறின்றி, நாம் வாழ்வதும் அவர்களை வாழ்விப்பதும் நம் கடமையாகிறது. இதை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதெல்லாம் அவரவர் சூழ்நிலையும் முதிர்ச்சி நிலையும் தீர்மானிக்கும். உலகில் எல்லாவற்றையும் பட்டியலிட முடியுமா என்ன ? ஏனைய உறவுகள் நல்லெண்ணம் என்னும் வலுவான சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பின், அஃது நமக்கான அரும்பெறல். நூலிழையில் நிற்பது அறுந்து போகக் கடவது அல்லது வேறு வழியின்றி அறுத்து விடக் கடவது. இவ்வுலகில் நம் மகிழ்ச்சிக்குத் தடைக்கல்லாக எதுவும் இருக்க முடியாது. இருப்பின் அதனைப் புறந்தள்ளுவதே விவேகம். இரு தரப்பினரும் நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கே கால அளவில் மிகக் குறுகிய இவ்வுலக வாழ்க்கை; புகார் கூறியும் புறங்கூறியும் வீணடிப்பதற்காக அல்ல. மேற்கூறியவை நட்பிற்கும் பொருந்தும். ஆனால் மேற்கூறிய சூழ்நிலைகள் நட்பில் அருகியே வரும். அதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, முன்னர் கூறியதைப் போல நமது தேர்ந்து தெளிதலால் ஏற்படுவது நட்பு. இரண்டு, நட்பில் அநேகமாக எதிர்ப்பார்ப்பு இல்லை. எதிர்ப்பார்ப்பு இல்லாத உறவோ நட்போ ஆல்போல் தழைத்து நிற்க வல்லது. இனி என் தனிபட்ட அனுபவங்களைத் தொட்டுச் செல்லலாம் என நினைக்கிறேன். நட்பில் நான் தோற்ற கதையுண்டு. அது தேர்வில் நான் வல்லவன் அல்லன் என எனக்குச் சுட்டியது. அத்தருணத்தில் துரோகத்தைக் கடந்து செல்லுகையில் கிடைத்த அனுபவங்களை என் சேமிப்பில் வைத்ததுண்டு. உறவுகளில் நான் எந்த எதிர்ப்பார்ப்பும் வைத்தது இல்லை. எல்லை தாண்டியதில்லை. உடன் பிறந்தவர்களிடம் கூட அவரவர் விவகாரங்களில் அவர்களே சொன்னால் தவிர அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியதில்லை. நட்போ உறவோ அவர்கள் நம்மை எங்கே நிறுத்தி வைக்க நினைக்கிறார்களோ, அங்கே நின்று கொள்வதே நாகரிகம் என்று நினைக்கிறேன். அவர்களிடமும் அவ்வாறே எதிர்பார்ப்பதற்குப் பெயர் ‘எதிர்ப்பார்ப்பு’ என்றால், என்னிடமும் எதிர்ப்பார்ப்பு உண்டு என்று முன்னர் கூறியதற்கு மாறாக திருத்திக் கொள்கிறேன். ஒரு குரூர வேடிக்கையாக சமீபத்திய நிகழ்வொன்றைக் கூறி நிறைவு செய்கிறேன். என் இல்ல விழா ஒன்று கூடி வந்தது. உறவுகளில் நல்லோர் உளப்பூர்வமாய் வாழ்த்தினர். சிலர் தங்கள் எல்லை மீறி அங்கும் இங்கும் விசாரணையை ஆரம்பித்து என் வீட்டு நிகழ்வுக்கு அவர்கள் பரபரப்பானது என் செவியில் சேர்ந்தது. எதிர்ப்பார்ப்புகள் இல்லாத என் தரப்பின் மீது பல எதிர்ப்பார்ப்புகளை வைத்துப் புகார்களும் புறங்கூறல்களும் பரிமாறப்பட்டன. என் உள்மனது சொன்னது, “இத்தகையோர் வராத விழா எத்துணை நன்றாயிருக்கும்?” அவ்வாறே நிகழ்ந்தது. அன்றைய தினம் கொரோனா நோய்த் தடுப்பாக மக்களே சுய ஊரடங்கு நிகழ்த்த அரசு கேட்டுக் கொண்டது. ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட இல்ல விழாக்களை அரசு அனுமதித்தது. யாரெல்லாம் வர வேண்டாம் என்று நினைத்தேனோ, அவர்கள் கொரோனா பயத்தில் வரவில்லை. யார் வரவேண்டும் என்று நினைப்பேனோ, அவர்களிலும் சிலரால் வர இயலவில்லை என்பது வேறு விடயம்; அவர்களின் வாழ்த்து தொலைபேசியில் கிட்டியது. குறைந்த வருகையுடன் விழா வெகு விமர்சையாக நடந்தேறியது. எனக்கான நீதியை மக்களைக் கொல்லும் கொரோனா தந்த நகைமுரண் பற்றி மகிழ்வது மனித மனத்தின் குரூரம். “அந்த விழாவிற்கு வந்த யாருக்கேனும் நோய்த்தொற்று வந்தால் அல்லது உனக்கே வந்தால்?” என்ற கேள்விகளுக்கெல்லாம் என்னிடம் பதில் இல்லை. ‘The Alchemist’ என்ற புகழ்பெற்ற நாவலில், “When you want something, all universe conspires in helping you achieve it” என்று நம்பிக்கை தரும் (optimistic) கவித்துவமான வரி நினைவுக்கு வருகிறது. நாம் வெறுக்கும் ஒரு கொடுமை தற்செயல் நிகழ்வாக எனக்கு ஒரு சிறு நன்மையைத் தந்தது என்ற மட்டில் நிறுத்திக் கொள்கிறேன். நமக்குச் சரியாக வராத உறவு, நட்பு இவற்றை எவ்வித ஆய்வுக்கும் உட்படுத்தாமல், பெரும்பாலானோர் லாவகமாக விலக்கிச் சென்று கொண்டுதான் இருப்பீர்கள். முடிவு செய்யத் தெரியாத பாமரர்களுக்கு நான் எழுதியதாக வைத்துக் கொள்ளலாம். ‘டைட்டானிக்’ திரைப்படத்தில் கடைசியில், “யாராவது உயிருடன் இருக்கிறீர்களா?” என்று ஒலிபெருக்கி சாதனத்தில் கேட்பார்களே, அதுபோல் “யாராவது அறியாத பாமரர்கள் இருக்கிறீர்களா?” என்று கேட்டுச் சொல்லிக் கொள்கிறேன், “உறவுகளுடனும் நட்புகளுடனும் ஒட்டி வாழுங்கள். தேவையானால் வெட்டி விட்டும் வாழுங்கள். மிக முக்கியமானது - வாழுங்கள்!”
 11. உண்மை. இவற்றில் சில Indian English என்றே நினைத்துக் கொண்டேன். நன்றி திரு. கோஷன் சே !
 12. தவறை உணர்வதற்கும் கூட சான்றாண்மை வேண்டும். அது உங்களிடம் நிரம்ப உள்ளது, அருள்மொழிவர்மன் ! வாழ்த்துக்கள். ஆங்கிலத்தில் இடக்கரடக்கல் சாதாரணமாக உண்டு. Gone to the rest room, to powder his nose போல. மங்கல வழக்கு அருகியே வரும்; இல்லை எனவே சொல்லலாம். உதாரணம் கூட Indian English ல் தான் தெரிகிறது. இருப்பினும் இடக்கரடக்கல், மங்கல வழக்கு இரண்டும் ஆங்கிலத்தில் euphemism என்ற ஒரே வகைப்பாட்டிலேயே அமையும் என்று கேள்வி.
 13. படுத்த படுக்கையாகி வெகு நாட்கள் மரணம் போராட்டத்தில் இருப்பவர்களை எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி இளநீர் கொடுக்கும் வழக்கம் தென்மாவட்டங்களில் அக்காலத்தில் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உடலைக் குளிர்ச்சியாக்குவது எனக் கூறிக் கொள்வார்களாம். முடிந்தால் அம்முதியோர்க்கு விருப்பமானவற்றைச் செய்து/கொடுத்து மனதையும் குளிர்விப்பார்களாம். படத்தில் காட்டுகிற மு. இராமசாமி போன்று ஓரளவு ஆரோக்கியமானவர்களுக்குச் செய்ததாய்த் தான் கேள்வியுறவில்லை என்று என் 99 வயது ஆச்சி (பாட்டி; படத்தின் ஒரு பகுதியை கணினியில் காண்பித்தேன்; ஏனெனில் மு.இராமசாமியின் வீடு எங்களுக்கு அருகாமையில்) கூறுகிறாள். எனினும் இதனை நான் நியாயப்படுத்தவில்லை. எப்படிச் செய்தாலும் கொலை கொலைதான். கருணைக் கொலைக்கு அனுமதியுள்ள இடங்களில் கூட, அவர்களின் விருப்பத்தின் பேரிலேயே நடைபெற வேண்டும் என்ற கருத்துள்ளவன் நான்.
 14. கண்டிப்பாக ஏமாற மாட்டீர்கள். உறுதிப்பாடு எனது. நான் சமீபத்தில் குடும்பத்துடன் (திரைப்படம் பார்க்கக் குடும்பத்துடன் செல்வதே என் வழக்கம். அதுவும் வாய்ப்பு அமைந்ததால், தமிழ்ப் படங்களைத் திரையரங்கத்திற்குச் சென்றுதான் பார்ப்போம்) கண்டு களித்த, உணர்ந்த படங்கள் இவையிரண்டும். நிழலி தம் விமர்சனத்தின் மூலம் மெருகேற்றியுள்ளது பாராட்டுக்கு உகந்தது. நீங்கள் குறிப்பிட்ட பருவ வரிசையின்படி மூன்றாவது, நான்காவது கதைகளை இடம் மாற்றியிருக்கலாமோ எனத் தோன்றுகிறது.
 15. உண்மை. பேச்சு வழக்கு இடத்தைப் பொறுத்தே மாறுபடும். நெல்லைத் தமிழ், குமரி மாவட்டத் தமிழ், மதுரைத் தமிழ் ......என்று. ஆனால் பிராமணர்கள் (சவுராட்டிரர்கள் கூட) தமிழகம் முழுவதும் ஒரே தமிழ் பேசுவதில் அவர்கள் பரவிய இனக்குழு என்பதற்கான முகாந்திரம் உள்ளது. அதுவே வலுவான காரணமாக முன்வைக்கப்பட வேண்டியதில்லை. ஏனெனில் மாறுபாடாகவும் நிகழ்கிறது. உதாரணமாக திருநெல்வேலி சைவ வேளாளர் தஞ்சைத் தரணியிலிருந்து புலம் பெயர்ந்திருக்க வேண்டும் என்று அவர் காலத்து மக்களிடம் நடத்திய ஆய்வின் மூலம் இராபர்ட் கால்டுவெல் 'History of Tirunelveli' என்ற தமது வரலாற்று ஆய்வு நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் இன்று தஞ்சை வேளாளரும் திருநெல்வேலி வேளாளரும் தமது இல்லங்களில் ஒரே மாதிரியான சில பழக்க வழக்கங்கள் கொண்டிருப்பினும், ஒரே மாதிரியான தமிழ் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 16. நண்பர்கள் சிலர் ," ஒற்றைக்கு ஒற்றை மாட்டோடு போட்டுப் பார்க்கணும் " என்று சொல்வதைப் பார்த்தால், அதனோடு போரிட்டு வெல்வதே சல்லிக்கட்டின் குறிக்கோள் என்று எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது. ஏனையோர் நாகரிகமடையாத காலத்திலேயே தலைசிறந்த நாகரிகத்திற்குச் சொந்தக்காரனான தமிழன் பகுத்தறிவின்றி, தன் வாழ்வின் அங்கமான மாட்டை வெல்லவா நினைப்பான் ? இலக்கியங்களில் ஏறு தழுவுதலே அவனது வீர விளையாட்டுகளில் ஒன்றாக இருந்திருக்கிறது. அது கொம்பைப் பிடித்து அடக்குவதல்ல. அதனைத் தழுவுவதே அவன் மாட்டுடன் கொண்ட இணக்கமான உறவு. ஒருவன் திமிலைப் பிடித்த பின் மற்றவர்கள் விட்டுவிட வேண்டும். பிடித்தவன் குறிப்பிட்ட கால அளவு விடாமல் தழுவிச் சென்றால் வெற்றி பெற்றதாய் அறிவிக்கப் படுகிறான். வெற்றி மாட்டின் மீது அல்ல. தன் செல்லப் பிராணியுடனான இணக்கத்தில் வெற்றி. ஸ்பெயின் விளையாட்டைப் போல மாட்டைக் கோரமாகக் கொல்வதல்ல சல்லிக்கட்டு. தெலுங்கர் வரவுக்குப் பின் அவர்கள் ஊரில் இருந்தது போல் ஓட்டையுள்ள பழைய சல்லிக்காசை மாட்டின் கொம்பில் கட்டி அதனை எடுக்குமாறு சில இடங்களில் அமைந்த போது 'சல்லிக்கட்டு' என்ற பெயர் வந்தது. மேலும் தகவலுக்கு, தொல்லியல் ஆய்வாளர் தொ.பரமசிவனின் ஜல்லிக்கட்டு பற்றிய கட்டுரையை இணையத்தில் வாசிக்கலாம். இந்த வீர விளையாட்டிலும் சாவு நிகழ்வதைத் தவிர்க்கும் வழிமுறைகளை ஏற்படுத்தலாம். உழவு மற்றும் இவ்வீர விளையாட்டின் மூலம் நாட்டு மாட்டினம் அழியாமல் பார்த்துக் கொள்ளலாம். பீட்டாவின் கண்ணெரிச்சல் இதுவே. அதன் அரசியல் இதுவே.
 17. இலங்கை அரசு இக்கட்சி பற்றி எந்த முடிவும் எடுக்கும் முன் இந்திய அரசு தடை செய்ய முனைவானே ! அதிலும் கட்சி உதயமாகும் முன்பே தடை பண்ண யோசிப்பார்கள் கிராதகர்கள் ! (இவர்கள் தடையால் ........ரே போச்சு என்பது வேறு விடயம்).
 18. உண்மை. இங்கே எங்கள் அடையாளங்களை அழிக்க முனைவது வெறும் மிருகமே ! அங்கே அடையாள அழிப்பையும் தாண்டி இருப்பையே கேள்விக்குறியாக்கும் சாத்தான்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை. இவ்வேறுபாட்டை வெகு நிதானமாக எடுத்துரைத்தமைக்கு நன்றியும் பாராட்டும்.
 19. ஒரு வரி பிறழாமல் முற்றிலும் உண்மை. ஒவ்வொரு இந்தியனும், குறிப்பாக ஒவ்வொரு இந்தியத் தமிழனும் வெட்கித் தலை குனிய வேண்டிய விடயம்.
 20. புதிதாக அவர்களின் கதையைக் கட்டமைக்க எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். கீழடி ஆய்வுக்கு நிதி ஒதுக்காத அவர்கள், குஜராத்தில் அகழ்வாய்வுக்கு சில ஆயிரம் கோடிகள் ஒதுக்குகிறார்கள். இல்லாததை வைத்து எடுக்க வேண்டுமல்லவா ? கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர், அவர்களின் கதையைக் கந்தலாக்கி விடும் எனத் தெரிந்து கொண்டார்கள். சீதை கோயில் மூலமாக இலங்கையில் இந்துத்துவா 'பராக், பராக்' என் அறிவிக்க நினைக்கிறார்களோ, என்னவோ ? சிங்கள பௌத்தத்திற்கும், தமிழ் இஸ்லாத்திற்கும் எதிராக தமிழ் இந்துத்துவம் என்ற மாற்று அரசியலுக்கான விதையைத் தூவ நினைக்கலாம். அடுத்த தலைமுறைக்கான திட்டமிடுதலுடன் செயல்படுபவர்கள் RSS காரர்கள். இலங்கைத் தமிழர்கள் ஏமாறுவார்களா என்று தெரியவில்லை. யார் கண்டார்கள்? மதம் உலகின் மிக மோசமான கருவி. மதம் கொல்லும். மதம் எதுவும் செய்யும். தமிழர்க்கான விடுதலை என்ற கோஷத்துடன் இலங்கை அரசியலில் ஒரு காலத்தில் RSS பார்ப்பனியம் வேறு பெயருடன் நுழையலாம். எச்சரிக்கை ! அதீத கற்பனையாகத் தோன்றுகிறதோ?
 21. விடுதலைப் புலிகளுக்கு எதிர்ப்பு என்பது காங்கிரஸைப் பொறுத்தவரை பெரிய காரணம் ராஜீவ் காந்தி கொலை. ஆனால் பாஜகவிற்கு அதைவிடப் பெரிய கருதுகோள் (agenda) உண்டு. தமிழ் அடையாளத்தை நிறுவும் எதனையும் வன்மையாக எதிர்ப்பது. அவ்வேலையை பார்ப்பனியம், குறிப்பாக தமிழ்ப் பார்ப்பனியம், கச்சிதமாகச் செய்யும். தமிழ் இன/அடையாள அழிப்பில் சிங்களவனுடன் கைகோர்ப்பதில் முன்னணியில் நிற்பது பாஜகவே ! ஏழு பேர் விடுதலையை எதிர்ப்பதில் காங்கிரஸை விட பாஜக மும்முரமாய் நிற்பதைக் காணலாம்.
 22. தமிழ் பிராமணியத்தின் மனசாட்சிக்கு - சுப. சோமசுந்தரம் இந்தத் தலைப்பில் என்னிடம் உள்ள கருத்துக்கள் பல காலமாகவே என்னுள் உறைபவையாயினும், இவற்றை எழுத்தில் பதிவு செய்யுமுன் சிறிது யோசித்தேன்; சற்றே தயங்கினேன். அதற்குக் காரணங்கள் சிலவுண்டு. எனக்கு வாய்த்த சிறந்த பிராமண நண்பர்கள், பிராமணர்கள் பேசுவதற்கும் பழகுவதற்கும் பொதுவாக இனிமையானவர்கள் என்னும் என் கருத்து, அவர்களோடு உணர்வுப்பூர்வமாக நான் ஒன்றிய நினைவுகள் – இவ்வாறு அடுக்கலாம். இவற்றையெல்லாம் மீறி எங்கோ பதிவு செய்தே ஆக வேண்டும் என்ற உந்துதல். முடிவெடுத்த பின் எழுதித்தானே ஆக வேண்டும் ! பெரும்பான்மைத் தமிழ்ச் சமூகத்திடமிருந்து அநேகமாக அனைத்து விடயங்களிலும் அவர்கள் வேறுபட்டு நிற்பது, இம்மண்ணில் அவர்களது வேர்கள் இல்லை என்பதற்குச் சான்று. ஏன், நம்மில் பெரும்பாலானோர் கூட கலப்பின வந்தேறிகளாக இருக்கலாம். இங்குள்ள காணியர், தோடர் முதலிய பழங்குடியினரின் டி.என்.ஏ வுடன் நமது டி.என்.ஏ ஒத்துப் போகும் வாய்ப்பு மிகக் குறைவு. ஆனால் தமிழ்ப் பிராமணர்கள் இந்நிலத்திற்கு வந்தேறிகள் என்பதற்கு டி.என்.ஏ சோதனையெல்லாம் தேவையில்லை. முதலில் அவர்களில் பெரும்பான்மையோரின் தோல் நிறத்தில் இம்மண்ணிற்கான கூறு இல்லை. இரு தரப்புகளிலும் – பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதார் – வண்ணம் மாறிய காட்சிகள் உண்டே ! நான் ஏற்கனவே சொன்ன ‘கலப்பினச்’ செய்தியையும், இராமானுஜர் என்ற பிராமணப் பெரியார் இங்குள்ள சிலரையும் பிராமணராக்கிப் புரட்சி செய்த செய்தியையும் இன்ன பிறவற்றையும் அலசி ஆராய்ந்து தலைப்பிலிருந்து பெரிய அளவில் விலக விரும்பவில்லை. அவர்களுக்கென்று தனித்துவமான பழக்க வழக்கங்கள், மரபுகள் பற்றிப் பேசுவதானால், இம்மண்ணில் (அவர்களால் ஏற்படுத்தப்பட்ட?) சாதிகளுக்குள் வேற்றுமைகள் உண்டே, அதுபோல்தான் இதுவும் என்று தட்டிக் கழித்து விடலாம். ஏனையோர் சிறுதெய்வ வழிபாடுகளிலும் ஈடுபட, பிராமணர்கள் தாம் கொண்டு வந்த பெருந்தெய்வ வழிபாடுகளில் மட்டும் வழங்கி வருவது, குறித்துக் கொள்ள வேண்டிய ஒன்று. சமீப காலங்களில் புதிதாக அவர்களில் சிலர் சிறுதெய்வ வழிபாட்டிற்குள் வருவது, அந்தப் பழமையான சந்தையையும் பிடிக்க ஏதோ திட்டமிட்ட சதிதானோ என்று எண்ணத் தோன்றுகிறது. சுடலையை சிவனின் வடிவாக்கியதும், அந்தந்த வட்டாரங்களில் வழங்கிய பெண் தெய்வங்களை ‘யட்சி’ என இவர்கள் பெயரிட்டுப் பின்னர் தமிழன் அதனை ‘இசக்கி’ ஆக்கியதும் முன்பே அவர்கள் ஆரம்பித்த நடைமுறைகள். மொழி வேற்றுமை பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். பொதுவாக ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு வழக்கு உண்டு. ஒரு வட்டாரத்திற்குள்ளும் சமூகம் சார்ந்து சிறிய வேற்றுமைகள் இருக்கலாம். உதாரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில சமூகங்களில் மட்டும் பாட்டியை ‘ஆச்சி’ என்று அழைக்கும் வழக்கம் உண்டு. நாட்டுக்கோட்டை செட்டியார்களில் பெண் பிள்ளைகளைக் கூட மரியாதையுடன் ‘ஆச்சி’ என்று அழைப்பார்கள். ஆனால் பிராமண சமூகத்தில் மட்டும் வட்டார எல்லைக்கு அப்பாற்பட்டு தமிழகம் முழுவதும் ஒரே வகையான தமிழ் வழங்குவதைக் காணலாம். அது ‘தேவபாடை’யை அதிகம் தூக்கித் திரியும் மொழி. மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர் போன்ற சான்றோர்தம் முயற்சியால் வடமொழி ஆதிக்கத்திலிருந்து ஓரளவு மீட்டெடுக்கப்பட்ட தமிழை இன்னும் சிறைப்படுத்தியிருக்கும் மொழி பிராமணர்தம் மொழி. அதற்கு அக்காலத்தில் ‘மணிப்பிரவாள நடை’ என்று சிறப்பான பெயர் வேறு. ஷ, ஹ, ஸ இன்றி பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பதே பாவம் என்று அனைத்துத் தரப்பினரும் எண்ண ஆரம்பித்த பின், மொழிச் சிதைவுக்கு பிராமணர்களை மட்டும் குறை சொல்வானேன்? ஆயினும் தமிழகத்திலும் தமிழகத்திற்கு அப்பாலும் அவர்கள் வேறுபாடின்றி ஒரே மொழி (தமிழ்தான்) பேசுவது, அவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஒட்டு மொத்தமாகவும், பின்னர் பல கால கட்டங்களில் வெவ்வேறு குழுக்களாகவும் வடக்கிருந்து வந்து பரவிய ஒரே இனக்குழு என்பதை மேலும் வரையறுக்கிறது. ஒரு நிலத்தில் வந்தேறியானது குற்றமோ குறைவோ இல்லை. மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியது உண்மையானால், மற்ற அனைத்துப் பகுதிகளிலும் வாழ்பவர்கள் வந்தேறிகள்தாம். வரலாறு அறியாக் காலத்தில் வந்து அந்த நிலத்திற்குத் தொன்மையையும் தொன்மத்தையும் தந்தவன் அந்நிலத்திற்கு உரியவனாகிறான். அவ்வாறே இந்நிலத்திற்கு உரியவன், தான் கட்டமைத்த தலைசிறந்த நாகரிகத்தை, தான் வாழ்ந்து பார்த்த ஒரு பெருவாழ்வினைப் பொற்காலமாக்கி ஒரு காலகட்டத்தில் சங்க காலமாக என் கண்ணில் காட்டினான். அதற்கு முன்னரும் அப்பெருவாழ்வினை அவன் வாழ்ந்திருக்க வேண்டும். அவன் ஓலையில் எழுதி வைத்த வரைதானே என்னால் பார்க்க முடியும் ! தமிழ் மண்ணில் பெருமளவில் வந்து சேர்ந்த வேற்று மொழியினர் என்ற வரிசையில் சுமார் ஈராயிரம் ஆண்டுகளாக வடக்கிருந்து வந்த பிராமணர்களும், விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்திலும் திருமலை நாயக்கர் காலத்திலும் வந்த தெலுங்கர்கள் மற்றும் சௌராட்டிரர்களும் பட்டியலிடப் படலாம். சமீப காலங்களில் வாணிக நிமித்தமாக வந்த மார்வாடிகள், இராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் ஒரு காலும் இங்கொரு காலுமாக வாழ்வதால் அவர்களைத் தற்போது நமது விவாதத்தில் புறந்தள்ளி விடலாம். கோவை, சௌகார்பேட்டை போன்ற இடங்களில் வேட்பாளரின் வெற்றியைத் தீர்மானிக்கும் பலமே அவர்களிடம் உண்டு என்பது தனிக்கதை. தெலுங்கர்கள் தமிழ் கூறும் நல்லுலகில் கரைந்து போனார்கள். யாரும் தம் அடையாளங்களை இழந்து தன்னில் கரைந்து போக வேண்டும் என விடயம் அறிந்த தமிழன் விரும்புவதில்லை. தன் அடையாளத்தை அழிக்க நினைப்பவர்கள் மீதுதானே அவன் கோபம் எல்லாம் ! இருப்பினும் நடப்பதைச் சொல்லித்தானே ஆக வேண்டும் ? ஏதோ உடைந்த தெலுங்கைத் தம் வீடுகளில் பேசி, தமிழ்ச் சமூகத்தில் வெவ்வேறு சாதிக் குழுக்களானார்கள். அவ்வாறே சௌராட்டிரர்களும். குறிப்பாக தமிழில் தம் மொழியைக் கலந்துவிட்டுப் பாதகம் செய்யவில்லை இவர்கள். இவர்கள் மொழிக் கலப்புப் பாதகம் செய்யவில்லை என்று வேற்றுப் பொருள் வைப்பாக நாம் சொல்ல வருவது தெளிவு. இப்பாதகம் பெருமளவில் செய்தவர்கள் பிராமணர்களே. நாம் அவர்கள் மீது வைக்கும் முதற் குற்றச்சாட்டும் இதுவே. இதற்கு முன், ஏனைய இனக்குழுக்களைப் போல் எவ்வாறு வேறுபட்டு நின்றார்கள் என்பதையே சுட்டிக் காட்டினோம். அது அவர்கள் பிழையன்று. பெருமளவில் ‘தேவபாஷை’க் கலப்பும் ‘நீச பாஷை’ச் சிதைப்பும் அவர்களது முதற் பிழை. ஒரு காலகட்டத்தில் அவர்களே பெரும்பாலும் படித்தார்கள் ஆதலின், வடமொழிக் கலப்பே சமூகத்தில் உயர்வென்னும் பிம்பத்தை ஏற்படுத்த ஏதுவாயிற்று – தற்காலத்தில் ஆங்கிலக் கலப்பு சான்றாண்மையாய் அடையாளங் காட்டப்பெறுவதைப் போல. கூட்டம் போட்டுத் தீர்மானம் கொண்டு வந்தா இதனைச் செய்தார்கள் என்று கேட்கலாம். குழு மனப்பான்மை (Mass mentality) என்பது மறுக்க முடியாத எதார்த்தம். நாம் வளர்ந்து வரும் சூழலே நம்மைச் செதுக்கும். அப்படியில்லாமலா ஷேக்ஸ்பியர் போன்ற அறிஞர் பெருமக்களே யூதர்களை ஒட்டுமொத்தமாக விமர்சித்தார்கள்? எந்த சாதிக் குழுவையும் விமர்சிக்காத பெரியார், அம்பேத்கர் போன்ற பகுத்தறிவாளர்கள் பிராமணர்களை மட்டும் காரணமில்லாமலா விமர்சித்தார்கள்? எங்கும் விதிவிலக்குகள் உண்டு. விதிவிலக்கு என்றாலே விதி யாது என்பது தெளிவு. இதுவரை பிராமணர்களைப் படர்க்கையில் எழுதிய நான் அவர்களை முன்னிலையில் விளித்தால் இன்னும் உணர்வுப்பூர்வமாய் இருக்கும் என எண்ணுகிறேன். நான் முன்பே கூறியது போல் என் நட்பு வட்டத்திலும் அவர்கள் உண்டே! அதிகார மையத்திலோ அல்லது அம்மையத்திற்கு அருகிலேயோ எப்போதும் அமர்ந்திருக்க வேண்டும் என்ற உந்துதல் சரியானதுதானா, தோழர் ? அது ஏனையோரிடமும் உண்டே என்று கேட்கிறீர்களா? இருக்கலாம். ஆனால் உங்களிடம் நீக்கமற நிறைந்திருப்பதை உங்களால் மறுக்க முடியுமா? ‘பிராமணர்களுக்கு அதிகாரமே உணவு’ என்று சான்றாண்மை மிக்க ஒருவரின் எழுத்தை வாசித்திருக்கிறேன். அந்த உந்துதலும் முனைப்பும் தவறானதா? தவறானதுதான். நான் சொல்லவில்லை. நம் காலத்து அறிஞன், (ஆகவே) சமூகச் சிந்தனையாளன் சார்லி சாப்ளினிடம் கேளுங்களேன் : “தீமை செய்ய நினைத்தால் மட்டுமே அதிகாரம் வேண்டும். நன்மை செய்ய அன்பு ஒன்றே போதும்” (You need power only when you want to do something harmful, otherwise love is just enough to get everything done). உங்கள் அதிகாரப் பசியால் தீமை என்ன நிகழ்ந்தது என்ற வினாவிற்கு என் வினாவெதிர் வினாவையே விடையாக அளிக்கத் தோன்றுகிறது, “தீமையைத் தவிர வேறென்ன நிகழ்ந்தது?” அம்பேத்கர் சுட்டியதைப் போல, ‘நீங்கள் கற்றவர்கள்; சான்றாண்மை மிக்கோர் இல்லை’ என்பதைத் தொன்று தொட்டு நிரூபித்து வருகிறீர்கள். சேர, சோழ, பாண்டியர்களை மூளைச் சலவை செய்து பிரம்ம தேயங்கள், சதுர்வேதி மங்கலங்கள், அகரங்கள் முதல் பிராமண போஜனம் வரை அனைத்துச் சலுகைகளையும் பெற்றுக் கொண்டது மற்றவர்களுக்குப் பிரச்சனையில்லை. அம்மன்னர்கள் காலத்தில் மனுதர்மத்தைக் கோலோச்ச வைத்தீர்களே? பிராமணருக்கும், பாதி பிராமணரான வேளாளருக்கும் ஒரு நீதி, ஏனைய ‘கீழ்ச் சாதியினரு’க்கு வேறு நீதி என்ற முறைமை கல்வெட்டுக்களில் காணக் கிடைக்கின்றன. ‘மனுநெறி தழைக்க’, ‘மனுவாறு செழிக்க’ என்ற தொடர்கள் அக்கல்வெட்டுகளில் பரவலாகக் காணலாம். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் “தென்னிந்தியக் கல்வெட்டுகள்”, தொகுதி 6,22,26ல் காண்க. ஆட்சியதிகாரத்தில் நீங்கள் கொண்ட செல்வாக்கைக் கூற, தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 5, கல்வெட்டு 1409 போதும். குந்தவை நாச்சியாரின் ‘நந்தா விளக்கு’ இறைப்பணிக்காக எண்பத்து மூன்றரையே மூன்றுமான அரைக்காணி நிலத்தை சிறு நில உடைமையாளர்களிடம் இராசராச சோழன் ஆணைப்படி வலுக்கட்டாயமாக விலைக்கு வாங்கிய தரகு வேலையை பிராமண சபையினர் (ராஜ சேகர சதுர்வேதி மங்கல சபையார்) பார்த்தமை தெளிவு. நாம் பழங்காலக் கதைகளை மேம்போக்காகச் சொல்லவில்லை என்பதற்குச் சான்றாகவே கல்வெட்டுக் குறிப்புகள். உங்களைப் பெரிதும் ஆதரித்தவன் அல்லது உங்களிடம் பெரிதும் ஏமாந்தவன் இராசராச சோழன் என்பதாலோ என்னவோ, சமீப காலத்தில் அப்’பொன்னியின் செல்வ’னைப் பெரிதும் கொண்டாட ஆரம்பித்திருக்கிறீர்கள். அவன்தான் தமிழன் என்று ஆர்ப்பரித்து அவன் பிறந்த நாளைக் கொண்டாடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறீர்கள். மன்னர் காலத்தில் உங்கள் அதிகாரப் போக்கினை விரிவாகக் காண, சிறந்த ஆய்வாளரான பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் எழுதிய ‘பிராமண போஜனமும் சட்டிச் சோறும்’ (என்.சி.பி.எச் வெளியீடு) எனும் நூலில் கல்வெட்டு ஆதாரங்களுடன் காணலாம். பழங்கதையைக் கிளறியது, கருவின் குற்றம் பற்றிக் கூறத்தான். அக்காலத்தில் நீங்கள் அரசுகளையும் மக்களையும் கடைப்பிடிக்க வைத்த மனுநீதி, வர்ணாசிரமம், சனாதனம் அனைத்தையும் ஒரு இயக்கமாக எதிர்த்துப் போராட எத்தனை நூற்றாண்டுகள் காத்திருப்பு ! பெரியாரும் அம்பேத்கரும் இன்ன பிறரும் பிறந்து வர வேண்டியதாயிற்று. அக்காலத்திலேயே உங்களுக்கு எதிர்ப்பு இல்லாமல் இல்லை. சைவமும் பௌத்தமும், சமணமும் உங்கள் வேதாகமத்திற்கு எதிராகத் தோன்றியவையே. திருமூலரின் ‘பேர்கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால் போர் கொண்ட நாட்டுக்குப் பொல்லா வியாதியாம் பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம்என்றே சீர் கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே’ என்ற பாடல் நீங்கள் கோயில் நிர்வாகத்தில் புகுந்ததை எதிர்த்து எழுந்த கலகக் குரலே. ‘பேராசைக்காரனடா பார்ப்பான்’ என்று உங்களில் தோன்றி வளர்ந்த பாரதி கண்கூடாகக் கண்டு சொன்னானே ! மக்களுக்காகவே வாழ்ந்த தந்தை பெரியாரையே, உங்களை வசை பாட வைத்தீர்களே ! இன்றளவும் நூலுடை சான்றோர் உங்களைத்தானே விமர்சிக்கின்றனர் ! மக்கள் குழுக்களில் ஒருவருக்கொருவர் வெறுப்பினை உமிழ்வது நடந்தேறினாலும், சான்றோர் பெருமக்களால் தூற்றப்பெறும் பேறு உலகளவில் யூதர்களுக்கு அடுத்து உங்களுக்கேதான் ! உங்களில் சிலர் தமிழ்ச் சமூகத்திற்கு ஆற்றிய தொண்டினை ஈண்டு நினைவு கூர்தல் நன்றியறிந்த தமிழர்தம் கடமையே ! வள்ளுவத்தைப் போதித்த பரிமேலழகரையும், தமிழ்ச் செல்வங்களை வெளிக்கொணர்ந்த தமிழ்த் தாத்தா சாமிநாத ஐயரையும், தமிழாகவே வாழ்ந்த பரிதிமாற் கலைஞரையும் இன்ன சிலரையும் நினையாதவன் தமிழனா என்ன ! இதில் முதல் இருவர் தேவபாடையைத் தூக்கிப் பிடித்தமை தமிழர்க்கு நேர்ந்த சிறு அவலம் எனலாம். பாரதியை இதில் விட்டது, அவரை ‘உங்கள்’ எனும் பட்டியலில் தமிழன் வைப்பதில்லை, நீங்களே வைப்பதில்லை என்பதால். ஏதோவொரு விலங்கினமோ புள்ளினமோ பூவினமோ அழியும் செய்தியால் மனம் வலிக்கிறதே ! ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசும் அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்தின் கடைசி மனிதன் இறந்தான் எனும் செய்தியைப் பத்திரிக்கையில் வாசித்த நாள் முழுவதும் நெஞ்சில் ஏதோவொரு ஓலம் ! நம் காலத்தின் இந்த அடையாளங்களைப் பேணிக் காக்க முடியாத ஒரு கையாலாகாத்தனம் நம்மைச் சுடுகிறதே ! ஆனால் (அறியாமையால் அல்லது ஏமாந்ததால்) உங்களை வாழ வைத்த தமிழினத்தின் அடையாள அழிப்பில் உங்களுக்குக் குற்றவுணர்வு இல்லாமல் போனது எப்படி ? மொழிக் கலப்பு, சங்க காலம் முதலான அவனது தலைசிறந்த பண்பாடு நிராகரிப்பு போன்று காலங்காலமாய் நீங்கள் நிகழ்த்தி வரும் தாக்குதல்களும் அவன் ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்பதும் ஒரு புறம் இருக்கட்டும். அவன் தன்னைக் காக்க, தன் மண்ணைக் காக்க நிகழ்த்தும் எந்தவொரு போராட்டத்திலும் நீங்கள் அவனுடன் நிற்பதில்லையே ! மொழிப் போர், மரபு காக்கும் சல்லிக்கட்டு, அழிவு தரும் அணுசக்திக்கு எதிரான போராட்டம், தன் நிலம் காக்க ஹைட்ரோ கார்பன் மற்றும் எட்டு வழிச் சாலைக்கு எதிரான போராட்டங்கள், ஸ்டெர்லைட் போராட்டம் என்று அனைத்திலும் வளர்ச்சித் திட்டங்கள் என்னும் பெயரில் அவனுக்கு எதிராகத்தானே நிற்கிறீர்கள் ? அவனது போராட்டங்கள் உங்கள் இனத்திற்கானவை அல்ல என்பதாலா? இலங்கைத் தமிழின அழிப்பில் கூட சிங்களவனுடன் கை குலுக்கும் உங்கள் துரோகத்துக்கு என்று தோழர் முற்றுப்புள்ளி வைப்பீர்கள்? உங்களில் சிலர் அங்கும், சிலர் இங்குமாக நின்றால் கூட எங்களால் புரிந்து கொள்ள முடியும். அதெப்படி ஒட்டு மொத்தமாக நீங்கள் தமிழனுக்கு எதிராக? தமிழன் உணர்ச்சி வயப்பட, நீங்கள் மட்டும் அறிவார்ந்த சமூகம் என்று முடிவெடுத்துக் கொண்டீர்களோ? அறிவார்ந்த மனிதன் பாதிக்கப்படும் மக்களுடன்தான் நிற்பான். பிரம்ம தேயங்களையும், கல்வெட்டுக்களில் அவன் பொறித்துக் கொடுத்த ‘சட்டிச் சோறு’ உரிமைகளையும் நினைத்தாவது குறைந்த பட்சம் தமிழனிடம் ‘செஞ்சோற்றுக் கடன்’ என்ற சொல்லின் பொருளைப் படித்திருக்கலாமே ! உலகத்துக்கே நாகரிகம் சொல்லித் தந்த சங்க காலத் தமிழன் உங்களுக்குத் தமிழ் சொல்லித் தர மாட்டானா, என்ன? தந்தை பெரியார் வெறுத்துப் போய் கையறு நிலையில்தானே உங்களையும் பாம்பையும் வைத்துத் திட்டினார்? நீங்கள் திருந்தாத ஜென்மங்கள் என்ற முடிவுக்கு வந்த பெரியாரின் கூற்றைப் பொய்யாக்க என்றாவது முயற்சித்தீர்களா? இந்துத்துவா என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி நீங்கள் மீண்டும் கொணர நினைப்பது வர்ணாசிரமப் பார்ப்பனியம் அல்ல என்று உங்கள் நெஞ்சில் கை வைத்துச் சொல்ல முடியுமா ? திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் உங்களைத் தட்டி வைத்த வரைக்குதானே அடங்கி இருந்தீர்கள்? காலத்தின் அலங்கோலத்தில் , மத்தியில் ஒரு இந்துத்துவா அரசு அமைந்ததும், மத்தியிலும் மாநிலத்திலும் அரை வேக்காடான உங்கள் ஆட்களின் கொக்கரிப்பு உங்களுக்கே சகிக்கிறதா? ஏன், தமிழகத்தில் வாட்ஸ் அப் குழுமங்களிலும் முகநூலிலும் உங்களின் ஆரவாரங்கள் பெரியாரின் கூற்றை மெய்ப்பிக்கின்றனவா, இல்லையா? எத்தனை காலத்திற்கு இந்த ஆர்ப்பரிப்பு சாத்தியம் என்று நினைக்கிறீர்கள்? சக்கரம் சுழலத்தானே வேண்டும் ! உங்கள் மனதுடன் நான் பேச நினைத்தது இவ்வளவுதான். உங்கள் அடையாளத்துடன் வாழ உங்களுக்கு முழு உரிமை உண்டு. உயிரைக் கொடுத்தேனும் தமிழனின் அடையாளத்தைக் காக்கும் கடமையும் உங்களுக்கு உண்டு. போனது போகட்டும். “நின்னைச் செற்றனன் என்னைச் செற்றனன் தீயரே ஆயினும் உனக்கு உற்றனன் எனக்கும் உற்றனன்” என்று கம்ப நாடன் சொன்னது போல் நீங்கள் தமிழினத்திடம் கொள்ளும் உறவே மனித நீதியாக அமைய முடியும். தமிழனுடன் நில்லுங்கள், தோழர் ! அவன் என்றும் உங்களைத் தாங்கி நிற்பான். வந்தாரை வாழ வைப்பதே அவன் கண்ட அறம்.