Jump to content

சுப.சோமசுந்தரம்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    414
  • Joined

  • Last visited

  • Days Won

    4

Everything posted by சுப.சோமசுந்தரம்

  1. ஓய்வூதியம் - சுப. சோமசுந்தரம் திருநெல்வேலி மாவட்டம் காரியாண்டி என்னும் குக்கிராமத்தைச் சேர்ந்த துரைப்பாண்டி தாத்தா தமது தொண்ணூறு வயதிலும் பனையேறும் தொழில் செய்து தம்மையும் தமது மனைவியையும் காப்பாற்றிக் கொள்கிறார் எனும் தகவல் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது. அவர் போற்றுதலுக்குரியவர்; போற்றப்பட்டார் என்பது சரிதான். காட்சித் திரையில் இதனைக் கண்ட ஒவ்வொருவரும், "நம்மிடையே வாழ்வையே சாகசமாக ஏற்று இப்படி ஒருவர் வாழ்கிறார் !" என்று பெருமிதத்தில் நெஞ்சு விம்மியது வரை கூட சரிதான். "நம்மிடையே அரைசாண் வயிற்றுக்காக ஒருவரை தள்ளாத வயதிலும் அல்லல்பட வைத்தோமே !" என்னும் குற்ற உணர்வு இச்சமுகத்தில் எவருக்கேனும் ஏற்படவில்லை எனில் அது சரிதானா? ஆரம்பக் காலத்தில் இருந்தே சோம்பேறித்தனமாய்ப் பிச்சை எடுத்து வாழ்பவர்கள் முதுமையில் அல்லலுறுவதை நாம் பேச வரவில்லை. தமது பன்னிரெண்டு வயது முதல் (அன்று குழந்தைத் தொழிலாளராய்) தொண்ணூறு வயது வரை பனையேறும் உழைப்பாளிக்கு இச்சமூகம் பனையின் உச்சியிலேயே சமாதி கட்டி விடுமோ ! சமூக வலைத்தளங்களின் மூலமாக இவர் பற்றிய செய்தி அரசின் கவனத்தை ஈர்த்ததால் துரைப்பாண்டி தாத்தாவிற்கும் அவரது துணைவியார் வேலம்மாள் பாட்டிக்கும் முதியோர் ஓய்வூதியம் கிடைக்க வழி செய்யப்பட்டது ஓரளவு ஆறுதல் செய்தி. சமூகத்தில் வெளிச்சத்திற்கு வராத துரைப்பாண்டியர் எத்தனை பேரோ ? வாழ்வில் பெரும்பகுதி விவசாயத் தொழிலாளர்களாகவும், கட்டுமானப் பணியாளர்களாகவும், தனியார் கடை ஊழியர்களாகவும், இன்ன பிற தொழிலாளர்களாகவும் இச்சமூகத்தில் களமாடியோர் முதுமையில் எப்படி வாழ்வார்கள் என்று இச்சமூகமோ அரசுகளோ பெரிய அளவில் நினைத்துப் பார்த்ததுண்டா ? சிறிய அளவில் அவர்கள் நினைக்கப்படுகிறார்கள் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். "பணியாளர் வருங்கால வைப்பு நிதியகம்" (Employees Provident Fund Organization - EPFO) என்ற அரசின் அமைப்பிற்கு பணியாளரும் பணி செய்யும் நிறுவனத்தின் உரிமையாளரும் மாதந்தோறும் பங்களிப்புச் செய்து வரும் பட்சத்தில், இருபது வருடங்களுக்குப் பிறகு சேர்ந்த தொகையுடன் மாதந்தோறும் ஒரு சிறிய ஓய்வூதியம் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது கால அளவிற்கு ஏற்ப வளரும் தன்மையுள்ள ஓய்வூதியம் அல்ல. இன்று மாதம் ரூபாய் ஐயாயிரம் என்று நிர்ணயிக்கப்படும் ஓய்வூதியம் பத்து வருடங்களுக்குப் பிறகும் ரூபாய் ஐயாயிரம் என்று இருப்பது எவ்வகையில் நியாயம் ? மேலும், பணிக்காலத்தில் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைத் தரத்தில் பழகியவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் ஓரளவு அத்தரத்தில் வாழ வகை செய்வதே சரியான ஓய்வூதியமாய் அமையும். பசியினால் வாடுவது மட்டும் வறுமையன்று; வாழ்க்கைத் தரம் அதல பாதாளத்திற்கு செல்வதும் வறுமைதான். நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர் காலத்திலேயே இந்த நோக்கில்தான் ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் EPFO தரும் ஓய்வூதியமோ ஒன்றுமில்லாததற்கு ஏதோ பரவாயில்லை (Something is better than nothing) என்ற வகையிலேயே உள்ளது. இந்நிலையை மாற்றி வாழ்வில் பெரும்பகுதி பணியாற்றியவர்களை எவரிடமும் கையேந்தாமல் வாழ வைப்பது எங்ஙனம் என்று சிந்தித்துச் செயலாற்றுவதே ஒரு சோஷலிச ஜனநாயகமாக இருக்க முடியும். அதை விடுத்து அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கிற நியாயமான ஓய்வூதியத்தையும் நிறுத்துவது சமூகத்தின், அரசுகளின் அராஜகப் போக்கு என்று தான் சொல்ல வேண்டும். எல்லோருக்கும் விடியலைத் தருவது தானே சமத்துவம் ? வெளிச்சத்தில் உள்ளோருக்கும் விளக்கை அணை என்பதுவா சமத்துவம் ? எல்லோரையும் ஏற்றி விடு என்றால், அதற்கு மாறாக படியில் ஏறியவர்களையும் இறக்கி விடு என்பதுவா சோஷலிசம் ? "பணத்திற்கு எங்கே போவது ?" என்று யாரோ ஒரு அரசியல்வாதி முதலாளியைப் போல் கர்ஜிக்கும் செய்தி வரும் அதே பக்கத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழங்கிய பல ஆயிரம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட செய்தியும் வருகிறது. "அரசு வருவாயில் பெரும்பகுதி ஊழியர்களின் சம்பளத்திற்கும் ஓய்வூதியத்திற்குமே செல்கிறது" என்று நம்பத் தகுந்த பொய்யினைச் சொல்லும் நிதி அமைச்சரே சட்டமன்ற அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை எந்த எதிர்ப்புமில்லாமல் (!) உயர்த்திக் கொள்கிறார். எத்தனை முறை ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஒவ்வொரு முறையும் தனித்தனியே அன்னாருக்கு ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படுகிறது. ஓய்வூதியத்தின் நோக்கமே ஒருவர் முதுமையில் கௌரவமாக வாழ வழி செய்வதுதானே ? அப்புறம் அதில் என்ன கௌரவம் ஒரு தரம், கௌரவம் இரண்டு தரம் என்று ஏலம் எல்லாம் ? இந்த முதலாளித்துவப் பார்வையில், பலம் குறைந்த பொதுவுடமைக் கட்சிகளைத் தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் விதிவிலக்கு அல்ல. இது ஏதோ பாசிச அணுகுமுறை கொண்ட தற்காலத்து பாஜக அரசினால் கொண்டுவரப்பட்டது என்று சொல்வதற்கில்லை. பொருளாதார மேதை என்று பெரிதும் கொண்டாடப்படும் மனமோகன் சிங் சார்ந்த காங்கிரஸ் அரசின் கைங்கரியம் என்று தான் சொல்ல வேண்டும். முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஏதோ பேட்டியில், மனிதர்களின் வாழ்நாள் கூடிவிட்டதை பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் (ஓய்வூதியத்தை இல்லாமல் செய்வதற்குப் பெயர் 'புதிய ஓய்வூதியத் திட்டம்') கைவிடுவதற்கான ஒரு காரணமாகச் சொன்ன நினைவு. மனிதருக்கு நாகரிகமான ஒரு காரணம் அன்று கிடைக்கவில்லையோ, என்னவோ ! பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாய் இரு தேர்தல்களில் வாக்குறுதி தந்த ஜெயலலிதா இரண்டாவது ஆட்சி காலம் முடியும் தறுவாயில் அதனைப் பரிசீலிக்கக் குழு ஒன்றை அமைத்தார். திட்டத்தை நிறுத்தும் போது இல்லாத பரிசீலனைக் குழு மீண்டும் அமல்படுத்துவதற்கு மட்டும் ஏன் ? ஒரு அடிமை அரசின் முதல்வராயிருந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு வாய்ப்பே இல்லை என்று எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் வெகு சாதாரணமாகப் பேசியது மனதை விட்டு அகல்வதாய் இல்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்காத திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் மீண்டும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் சேர்த்ததும், பின்னர் ஆட்சி அமைந்ததும் தனது நிதியமைச்சரை அதற்கு எதிராகப் பேச வைத்து வேடிக்கை பார்த்ததும் கயமைக்கு ஓர் எடுத்துக்காட்டு. மாநில வருவாயில் பெரும் பகுதி அரசு ஊழியர்களின் ஊதியத்திற்கே செல்கிறது என்பது எந்த போதி மரத்தின் கீழ் தோன்றிய ஞானோதயம் ? தேர்தல் வாக்குறுதியின் போது அப்போதி மரம் கண்ணில் தென்படவே இல்லையா ? ப.சிதம்பரமும் பழனிவேல் தியாகராஜனும் சொல்லும் போது அவர்களையும் மீறி ஒரு பண்ணையார்த்தனம் வெளிப்படுவதை அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல இயலவில்லை. வளர்ச்சித் திட்டங்கள் பற்றி வாய்ப்பு கிழியப் பேசும் இன்றைய அரசியலாளர்க்கு தனிமனித வாழ்வு மேம்பாடு வளர்ச்சித் திட்டமாய்த் தோன்றாதது விந்தையானது. ஓய்வூதியத்திற்கு எதிராக முதலாளித்துவ ஜனநாயக அரசியல்வாதிகள் தான் நிற்கிறார்கள் என்றில்லை. "லஞ்ச ஊழலில் திளைக்கும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் ஒரு கேடா ?" எனக் கேட்கும் வெகுசனத்திற்கும் குறைவில்லை. அத்தகையோர்க்கு நாம் கூற விரும்புவது, "மனித வரலாறு தெரிந்த நாள் முதல் தனி மனிதர்கள் பெரும்பாலும் பேராசை பெற்றவர்களாகவும், நினைத்தவற்றை அடைய சிறிய பெரிய தீவினை புரிபவர்களாகவுமே வாழ்ந்து வருகிறார்கள். இதனைக் கூறுவதால் நாம் லஞ்ச லாவண்யங்களை நியாயப்படுத்த எண்ணவில்லை. தீவினைக்கான வழிகளை அடைக்க முயல்வதே சமூகத்தில் நீதி நெறியை நிலை நாட்டுமே தவிர, ஒவ்வொரு மனிதனும் நியாய உணர்வுடன் செயல்படுவான் என்று எதிர்பார்ப்பது இருட்டறையில் இல்லாத கருப்புப் பூனையைத் தேடுவது. வலுக்கட்டாயமாக நல்வழி கைகூடுமா எனில் கைகூடும் என்றே தோன்றுகிறது. உதாரணமாக, அக்காலத்தில் கடவுச்சீட்டு (Passport) வாங்கியதற்கும் இக்காலத்தில் பெறுவதற்கும் எவ்வளவு வேறுபாடு ? சல்லிக்காசு யாருக்கும் தராமல் கால விரயமுமின்றி இன்று எவ்வாறு கைகூடியது ? மனிதர்கள் ஒட்டுமொத்தமாகத் திடீரென்று திருந்திட வாய்ப்பே இல்லையே !அங்கு அதனை நடைமுறைப்படுத்திய தானியங்கி (automation) முறையை ஒவ்வொரு துறையிலும் நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்களுக்கு ஒழுக்க உறுதிப்பாடு (moral conviction) வேண்டும். அப்படிச் செய்தால் தம் வருமானமும் போய்விடுமே என்றெண்ணும் ஆட்சியாளர்களால் நல்ல ஊழியர்களையும் குடிமக்களையும் உருவாக்க இயலாது. எனவே ஊதியம், ஓய்வூதியம் பற்றிப் பேசும்போது மட்டும் பெரும்பாலும் 'தீவினைக்கான வாய்ப்பின்மை ஒழுக்கசீலர்'க்கு நன்னெறியும் நேர்வழியும் கண்ணில் தெரிவது ஒரு வேடிக்கையான வாடிக்கை. இருப்பினும் நாம் கூறியது போல் நடைமுறைகளைச் செப்பனிடுவது மூலமாகவும், ஊழல் குற்றங்களுக்கான தண்டனையைக் கடுமையாக்குவது மூலமாகவும் அரசு இயந்திரத்தைச் சீர் செய்வது ஊதியம், ஓய்வூதியம் இவற்றிற்கு அப்பாற்பட்டு நமக்கான சமூகக் கடமை. இறுதியாக தனிப்பட்ட முறையில் ஒன்றிரண்டு வார்த்தைகள். வாழ்க்கையில் பணம்தான் எல்லாம் என்றில்லை. ஆனால் பணம் இல்லாமல் எதுவும் இல்லை - குறிப்பாக முதுமைக் காலத்தில். சாகப் போகிறவனிடம் உன் கடைசி விருப்பம் என்னவென்று கேட்பார்களே ! கேட்காமலேயே நான் சொல்கிறேன் : பழைய ஓய்வூதியத் திட்டத்தினால் எனக்குக் கிடைத்த அமைதியான வாழ்க்கை உலகில் வயதான ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டும். ஓய்வூதியரான என் தந்தையாரின் மறைவுக்குப் பின் குடும்ப ஓய்வூதியரான என் தாய்க்குக் கிடைத்த நிம்மதியும் பெருமிதமும் இவ்வுலகில் ஒவ்வொரு தாய்க்கும் கிடைக்க வேண்டும். தாங்கிப் பிடிக்கப் பிள்ளைகள் நாங்கள் இருந்தாலும், தம் கணவர் ஊழியம் செய்த அரசினால் எனது தாயார் இவ்வுலகில் பிள்ளைகளைக் கூட எதிர்பார்க்கும் நிலையில் இல்லை; இக்கர்வம் தரும் நிவாரணத்தை எந்த மருந்தும் தருவதில்லை என்பது என் தாய் வெளிப்படையாய்ச் சொல்லாமல் உணர்வால் தரும் செய்தி. அரசு ஊழியரோ தனியார் ஊழியரோ "யாம் பெற்ற அமைதியினை வாழ்விலும் சாவிலும் பெறுக !" என்பதே செல்லாக் காசு எனத் தெரிந்தும் நான் எழுத விரும்பும் உயில்.
  2. குண்டு வெடிப்பில் பலியானவர்களின் குடும்பங்கள் நமது மற்றும் அரசின் அனுதாபத்திற்கும் ஆதரவிற்கும் உரியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பேரறிவாளன் சந்தித்த வழக்கு எத்தகையது ? அன்றைக்கு இந்தியாவில் தடைசெய்யப்படாத ஒரு இயக்கத்தின் ஆதரவாளவாராக ஒரு பத்தொன்பது வயது இளைஞன் இருந்தது இயற்கையான ஒன்று. பேட்டரியை சொன்ன இடத்தில் கொடுக்கத்தான் பணிக்கப்பட்டிருப்பாரே தவிர, அது எதற்காக என்று அந்த செயலில் முதல் நிலையில் இருந்தோர் தவிர வேறு யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தாம் காரணத்தை அறிந்திருக்கவில்லை என அவர் தந்த வாக்குமூலத்தைப் பதிவு செய்யாதது விசாரணை அதிகாரி தியாகராஜனின் குற்றம் (பணியில் இருந்தபோது இவ்வளவு பெரிய விடயத்தை மறைத்தது கவனக் குறைவாக இருந்திருக்க வாய்ப்பில்லை). இருப்பினும் ஓய்வுபெற்ற பின்னர் நீதிமன்றத்தில் அதை ஒத்துக் கொண்டது வழக்கின் திருப்புமுனை (மனசாட்சி விழித்துக் கொண்டதோ என்னவோ !). சுருக்கமாக பேரறிவாளன் மீதான வழக்கு இவ்வளவுதான். இதற்கு 31 வருடக் கடுங்காவல் நியாயம்தானா ? மரண தண்டனைக்கு நாள் குறிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு முன் கால அவகாசம் நீட்டிக்கப்பெற்று அவர் தப்பித்தது பெரிய விடயம். அக்கால கட்டத்தில் ஒரு மனிதனுக்கு ஏற்படும் மன அழுத்தம் மரணத்தை விடக் கொடியது என்பது வேறு. ஒரு முன்னாள்/அந்நாள் பிரதமரின் கொலை எவ்வளவு பெரிய சூழ்ச்சியின் விளைவு எனக் காட்ட, இயன்ற வரை நிறையப் பேரை அதில் சிக்க வைப்பது காலங்காலமாய் நிகழும் கொடுமையாகத் தெரிகிறது. இந்திரா காந்தி கொலை வழக்கில், துப்பாக்கியால் சுட்ட பாதுகாவலர்கள் பியாந்த் சிங், சத்வந்த் சிங் தவிர பெரிய அளவில் யாரும் சிக்கவில்லை என்பதற்காகவே சத்வந்த் சிங்கின் உறவினர் கேஹார் சிங் சிக்க வைக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. கேஹார் சிங் நிலை மிகவும் கொடுமை. கொலைக்கு மூன்று மாதங்கள் முன்பு பொற்கோயிலுக்குக் குடும்பமாகச் சென்ற போது, அவரும் சந்த்வந்த் சிங்கும் தனியாகச் சென்று உரையாடியதற்கான சாட்சி மட்டுமே உண்டு. "ஏதோ சதித் திட்டமன்றி வேறு எதற்காகக் குடும்ப உறுப்பினர்களைத் தவிர்த்து தனியாக உரையாட வேண்டும்?" என்று தீர்ப்பில் உள்ளதாக வாசித்த நினைவு. பெரும் வேடிக்கையாகப் பரிகசிக்கப்பட்ட ஒன்று. குல்தீப் நய்யார் போன்ற மூத்த பத்திரிகையாளர்கள் எவ்வளவோ முயன்றும் கேஹார் சிங்கைத் தூக்கிலிருந்து காப்பாற்ற இயலவில்லை. கேஹார் சிங் அளவிற்கு பேரறிவாளன் துரதிர்ஷ்டசாலி இல்லை என்பது நமக்கான சிறிய மகிழ்ச்சி. நல்லோர் பலர் பேரறிவாளன் பக்கம் நின்றதும் வென்றதும் வரலாற்று நிகழ்வு. தீர்ப்பில் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரின் அதிகார வரம்பு சுட்டிக் காட்டப்பட்டது மற்றொரு வரலாற்று நிகழ்வு. குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டோர் பேரறிவாளனின் விடுதலையை எதிர்ப்பது வெறும் உணர்ச்சிக்கு அடிமையாவது; வருத்தத்திற்குரியது.
  3. பெரும்பேறு - சுப. சோமசுந்தரம் எழுத்துலகில் பழகுநன் என்ற முறையில் என்னைச் சற்றே திரும்பிப் பார்க்கிறேன். எனது எழுத்துகளில் இலக்கியம் சார்ந்த எழுத்து தவிர ஏனையவை என்னைச் சுற்றிய உலகின் நிகழ்வுகளாகவே அமைவதை உணர்கிறேன். எழுதுபவர்களில் பெரும்பாலானோர்க்கு அவரவர் மனதிற்குப் பிடித்த பாணியே அமையும் என்பது காரணமாக இருக்கலாம். அல்லது கற்பனை வளம் குறைவானதும் காரணமாயிருக்கலாம். எது எப்படியாயினும் வருவதைத்தானே எழுத முடியும் ? மேலும், நம்மை மீறிப் பொங்கி வருவதுதானே எழுத்தாய் அமைய முடியும் ? இனி இன்றைய என் எழுத்து. மூத்தோர் நலனும் அவரைப் பேணலும் பண்பட்ட சமூகத்தின் தலையாய கடமைகளில் ஒன்று என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய்த் துலங்கி நிற்பது. எனவே தமிழ்ச் சமூகத்தில் அதன் சிறப்பிடத்தைத் தனியாய்ச் சொல்லவேண்டியதில்லை. இருப்பினும் இது தொடர்பில் உடனே நம் எண்ணத்திரையில் ஓடுவது சிலப்பதிகாரக் காட்சி - மதுரைக்காண்டம் புறஞ்சேரி இறுத்த காதை. தன்னுடன் புலந்து கண்ணகியுடன் மதுரை நோக்கிச் செல்லும் கோவலனுக்கு மாதவி விடுத்த மடலில், "குரவர் பணி அன்றியும் குலப்பிறப்பாட்டியோடு இரவிடைக் கழிதற்கு என் பிழைப்பு அறியாது" என்கிறாள். 'குரவர் பணி அன்றியும் - மூத்தோர்க்கு (இங்கு பெற்றோர்க்கு எனக் கொள்வது பொருத்தம்) ஆற்ற வேண்டிய கடமைகளை மறந்தது மட்டுமல்லாது, குலமகளோடு (கண்ணகியோடு) இரவோடு இரவாக தாங்கள் ஊரை விட்டுச் செல்லும் அளவிற்கு என் பிழை யாது என்பது அறியேன் (என் பிழைப்பு அறியாது)' என்கிறாள் மாதவி. மாதவியின் மூலமாக இளங்கோவடிகள் குரவர் பணியைத் தலையாயதாய் வைத்தமை இங்கு போற்றி உணரத்தக்கது. ஊழல் மலிந்த சமூகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நேர்மையாளர்கள் ஒளிர்வதை சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வருதல் சமூகத்தைச் செப்பனிட வழிவகுக்கும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. அதுபோலவே, முதியோர் இல்லங்களை நிரப்பும் காலகட்டத்தில் பெற்றோரைப் பேணும் பிள்ளைகளையும், அதற்கான தகைமையும் புரிதலும் உள்ள பெற்றோரையும் நாம் கடந்து செல்லுகையில் சற்று நிதானித்து அவர்களையும் பதிவிடுதல் சமூக நன்மைக்கு வழிகோலும் எனும் எண்ணவோட்டமே இக்கட்டுரை. உறவுமுறையில் எனக்குச் சற்று தூரத்து உறவாக இருப்பினும் மனதளவில் நெருக்கமானவர்கள் நம் கதைமாந்தர். திரு. தாயுமானசுந்தரம் - திருமதி. விஜயகோமதி (கோமதி என்று சுருங்கி, பின்னர் கோமா என்றே இளம்பிராயத்திலிருந்து அழைக்கப்பட்டார்) தம்பதியரின் திருநிறைச்செல்வன் நாராயணன் என்ற சங்கர். வைணவமும் சைவமும் தனது ஒரே பெயரில் வாய்க்கப் பெற்றவன். சங்கரநாராயணன் என்று வைத்திருக்கலாமே என்று நாம் கேட்பதற்கு அவனது பெற்றோர் இப்போது இல்லை. உறவு முறையில் அவன் எனக்கு மைத்துனன். அவனது சகதர்மிணி ஜெயகோமதி. நிஜத்தைக் கதையாய் வடிப்பவர்கள் கதைமாந்தர் பெயர்களை எழுதுவதில்லை. அடியேன் அவர்களது பெயர்களை எழுத முற்பட்டதற்குக் காரணம் அவர்கள் பாடல் பெறத் தகுதியானவர்கள் என்பதேயாம். தாய்-தந்தை, மகன்-மருமகள் என்று ஒரே வீட்டில் இரண்டு கச்சிதமான தம்பதியர் அமைந்தால் அவ்வீடு கோயிலன்றி வேறென்ன ? கதையின் திறப்புக் களத்திலேயே திரு. தாயுமானசுந்தரம் அவர்கள் ஒரு பஞ்சாயத்து யூனியன் பள்ளியின் ஓய்வு பெற்ற ஆசிரியர். நம்மைச் சுற்றிய உலகில் ஆங்காங்கே நாம் காணும் பொறுமையின் சிகரங்கள் எல்லாம் ஏதோ ஒரு காலத்தில் அவரிடம் மாணாக்கராய் இருந்திருக்க வேண்டும். அவரது இல்லத்தரசியார் திருமதி. விஜயகோமதி அன்பை மட்டுமே தொழிலாகக் கொண்டவர்கள். நான் அவர்களது அக்காவின் மகளைக் கட்டிய மருமகனுக்கு அண்ணன் (இப்போதே கண்ணைக் கட்டுகிறதா ?) என்றபோதிலும், நானும் என் மனைவியும் எப்போதோ அவர்கள் இல்லத்திற்குச் சென்ற போதெல்லாம் அவர்களது சொந்த மருமகன் - மகள் போல அங்கு நடத்தப்பட்டது இயக்குனர் விக்ரமன் பட சென்டிமென்ட் போல எவருக்கும் தோன்றலாம். மானிடத்தின் மீது அவர்கள் கொண்ட அன்புக்கு இது சான்று பகர்வது. "உயிர்களிடத்தில் அன்பு வேணும்" எனும் பாரதியின் வரிகளுக்குச் சான்று வேண்டுமா? இதோ - நான்கைந்து பூனைகள் திருமதி. விஜயகோமதி அவர்களைச் சுற்றி வரும். "ஏய், இங்கே உட்காரு ! தோசை ஆறினதும் உனக்குத் தருவேன்" என்று சொன்னவுடன் அந்தப் பூனையும் அவர்கள் சுட்டிய இடத்தில் நல்ல பிள்ளையாய் அமர்ந்து கொள்ளும். எந்தப் பூனைக்கு என்ன பிடிக்கும் என்பதை அவர்கள் ரசித்துச் சொல்லும்போது நம்மில் சிலருக்குச் சற்று அதிகப்படியாகத் தோன்றலாம். அவர்கள் வீட்டில் உள்ள அந்த ஒரே நாயை 'தம்பி' என்று அழைப்பதும், அந்த நாய் பூனைகளிடம் தன் இனத்துக்கே உரிய சேட்டைகளைச் செய்யாமல் சாந்தமாய் இருப்பதும் எங்கேயோ எப்போதோ வாசித்ததைப் போன்ற பிரமிப்பு. இவ்வளவிற்கும் செல்வச் செழிப்பு வாய்ந்த குடும்பம் என்றில்லை. மனதளவில் அளப்பரிய செல்வம் வாய்த்த நடுத்தரவர்க்கம். "உயிர்களிடத்தில் அன்பு வேணும் தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்" என்ற பாரதியின் வரிகளையே "உயிர்களிடத்தில் அன்பு வேணும் தெய்வம் தானே எனும் உண்மை அறிதல் வேணும்" என்று மாற்றும் துணிவு திருமதி. விஜயகோமதி அவர்களைப் பார்த்த பின் எனக்கு ஏற்பட்டது. அறுபது வயதைத் தொட்டால் தலை சுற்றிக் கீழே விழுந்து தலையில் அடிபட வேண்டும் என்பதில்லை. ஆனால் திருமதி. விஜயகோமதி அவர்களுக்கு நேர்ந்தது. உயிருடன் நினைவற்ற நிலைக்குச் சென்றார்கள். "கோமா" என்று வாஞ்சையுடன் உற்றார்- உறவினரால் அழைக்கப்பட்டவர்கள் 'கோமா' நிலைக்குச் சென்றது இந்த நிஜக்கதையில் ஒரு அவலச்சுவை. அவர்களது குடும்பத்தின் நல்ல நண்பரான மருத்துவர் உயர்திரு. மங்களா இரவீந்திரன் அவர்கள் தம் மருத்துவமனையில் சிகிச்சை செய்து சிறிது காலம் பேணி, அந்த நிலையிலேயே இல்லத்தில் வைத்துப் பார்த்துக் கொள்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை என்ற நிலையில் திருமதி. விஜயகோமதி அவர்கள் குடும்பத்தாரிடம் (அந்த மூன்று பேர்தான்) ஒப்படைக்கப்பட்டார். எப்போதும் அவர்களின் சேவைக்கானவராய் மருத்துவ நண்பர் விளங்கினார். தெய்வாதீனமாக இந்நிலையிலிருந்து சிலர் தேறியுள்ளது கடலில் அவர்களுக்கான கட்டுமரம். மகன் சங்கர் பெரிய வருமானம் தரும் பணியில் இல்லாவிட்டாலும், சிறிய நிரந்தர வருமானமும் அலைச்சலும் உள்ள பணியில் இருந்தான். கணவர் திரு. தாயுமானசுந்தரம் அவர்களின் சுமாரான ஓய்வூதியமும் உண்டு. மாமியாரை முழுநேரமும் வீட்டில் இருந்து கவனிக்க ஏதுவாக மருமகள் ஜெயகோமதி தான் பார்த்துக் கொண்டிருந்த சிறியதொரு வருமானம் தரும் வேலையை உதறினாள். கண்திறந்து சுற்றுமுற்றும் கவனிக்கும் அளவு திருமதி. விஜயகோமதி அவர்களின் உடல்நிலையில் சிறியதொரு முன்னேற்றம் ஏற்பட்டது மட்டுமே உண்மை. வேளாவேளைக்கு எந்தக் குறையும் இல்லாமல் திரவ உணவு மட்டுமே. கண்ணசைவும் முகத்தில் தோன்றிய உணர்ச்சி மாற்றங்களுமே அவருக்கான மொழியாக மாறின. தனக்குத் திருமணமாகி சுமார் ஆறு வருடங்கள் மகள் போலவே தன்னைப் பாவித்த மாமியாரைத் தன் மகளாகவே மருமகள் கவனித்தாள். வேலைக்குச் சென்ற தனக்குக் காலையில் எழுந்து சமையல் செய்து, தலை வாரிவிட்டுப் பேணிய மாமியாரைக் குளிப்பாட்டிச் சுத்தம் செய்து தலை வாரி, நெற்றியில் திலகமிட்டுப் பேணிப் பாதுகாத்தாள். மாமியாரே மகள் ஆகப்போவதாலோ என்னவோ, அவளுக்குக் குழந்தைப்பேறு வாய்க்கவில்லை. அவர்களுக்கு வரும் சிறிய ஓய்வூதியத்தை எல்லாம் மீறி இயன்ற வசதிகளை எல்லாம் செய்து பேணினான் பெறற்கரிய பேறான பெற்ற மகன் சங்கர். படுக்கைப் புண்கள் (Bedsores) ஏற்படக் கூடாது என்பதற்காக நீர் அடைத்த மெத்தை (Water bed), கோடைக்காலத்திற்காக குளிர் மின்சாதனம் (air conditioner) என்று தான் பார்த்திராத விஷயங்களைக்கூட ஈன்று புறந்தந்த தன் தாய்க்காகச் செய்திருந்தான் அத்தனயன். அதுவும் தாய்க்குக் குளிர் அதிகமானால் அவளால் சொல்லக்கூட முடியாதே என்று எண்ணிப் பக்கத்து அறையில் குளிர் சாதனத்தை வைத்தான். ஊழிக்காலம் வரை தன் தாயை வாழவைக்கும் முனைப்பு அதில் தெரிந்தது. தாயின் கண் எதிரே சுவற்றில் பெரிய LED TV யை மாட்டியிருந்தான். அதையெல்லாம் பார்த்து அம்மாவுக்கு முழுமையான நினைவு வந்து விடாதா என்ற ஏக்கம் போலும். வடிவேலு காமெடியைப் பார்க்கையில் தாயின் முகமலர்ச்சியைக் கண்டு அபரிமிதமான ஆனந்தம். இந்த நிலையில் இருப்பவரைக் கூட தன் உடல்மொழியால் மகிழ்விக்க முடியும் என்று அறிந்தால் வடிவேலுக்கே அளப்பரிய ஆனந்தம் ஏற்படும். மற்றபடி திருமதி. விஜயகோமதி அவர்களால் வளர்க்கப்பட்ட அக்கா மகளும் எனது தம்பியான மருமகனும் வார இறுதி நாட்களில் தவறாத ஒரு கடமையாக அவர்களைப் பார்க்கச் சென்று கவனித்ததால் அவ்விருவரும் அவர்கள் நினைவில் நின்றார்கள். திருமதி. விஜயகோமதி அவர்களின் இந்நிலைக்குப் பின்னர் சுமார் நான்கு ஆண்டுகளில் கணவர் திரு. தாயுமானசுந்தரம் அவர்கள் இரத்த சோகையினால் (anemia), திடீரென்று காலமானார்கள். அவர்கள் நோயுற்றிருந்தாலும் படுக்கையில் விழாததால், தந்தைக்குப் பணி செய்யும் வாய்ப்பு மகனுக்குக் கிடைக்கவில்லை. கணவர் மறைந்தது மனைவிக்கு புரிந்தது போல் தெரியவில்லை. அவ்வப்போது யாரையோ தேடும் கண் அசைவையும் முக பாவனையையும் வைத்து அவர் கணவரைத் தேடுகிறார் என்பது முழு உணர்வுடன் வாழும் நம் கற்பனை. வழக்கம் போல் தனக்கு நெற்றிப் பொட்டு வைக்காமல் அவள் மட்டும் வைத்திருக்கிறாள் என்று மருமகளை மிரட்சியுடன் பார்ப்பதாய் மகன்-மருமகளின் கற்பனை. எனவே விதவையான பின்பும் உலக வழக்கு ஒழித்து திருமதி. விஜயகோமதிக்கு நெற்றிக் குங்குமம் இட்டு, தலையில் தவறாது பூச்சூடி விட்டாள் மகள் ஒத்த மருமகள். மேலும் அந்த அம்மாவைப் பொறுத்தவரையில் கணவர் மறைந்திருக்க வாய்ப்பில்லையே ! சுமார் ஐந்தரை ஆண்டுகள் வேறு எவருக்கும் பெரும் போராட்டமாய் இருந்திருக்கும் வாழ்வை எந்தப் போராட்டமும் இன்றி நிம்மதியாய் வாழ்ந்து ஒரு அமைதியான இரவில் நிறைவு செய்தார் திருமதி. விஜயகோமதி. மகன், மருமகள் இருவரிடமும் போராட்டத்திற்கான எவ்விதச் சோர்வும் தெரியவில்லை. போராளிகள் சோர்வடைவது இல்லை. தோல்வி அடைவதும் இல்லை. சாதாரணமாக செல்வந்தர் வீட்டில் கூட இத்தனைக் காலம் படுக்கையில் கிடந்தவர் உடல் சுருங்கி, முகம் முற்றிலுமாக மாறிப் போகவே வாய்ப்பு உண்டு. ஆனால் இவரோ நல்ல நினைவுடன் வாழும் போது இருந்த தோற்றத்தை விட நல்ல ஆரோக்கியமான தோற்றப்பொலிவுடனேயே மரணித்தார். திரவ உணவாக இருப்பினும் மருத்துவ ஆலோசனைப்படி சத்துள்ளவையே அளிக்கப்பட்டதால் இருக்கலாம். எல்லாப் புகழும் மகன், மருமகள் இருவருக்குமே. இந்த ஐந்தரை வருடங்களும் படுக்கையிலேயே வாழ்ந்ததற்குப் பதிலாக அப்போதே அவர்கள் மரணித்து இருந்தால் நல்ல சாவாக இருந்திருக்குமே என்பது நம்மில் பெரும்பான்மையான பாமரர்களின் பொதுப்புத்தி. திருமதி விஜயகோமதியின் அன்புசார் பெருவாழ்விற்கு அவரது மக்களால் இத்தனைக் காலம் சீராட்டப்பட்டது அவ்வாழ்க்கைக்கான மரியாதை. அவர்களுக்குக் கிடைத்த பெரும்பேறு. அம்மேதகு அன்னைக்கு இவர்கள் ஆற்றிய பாசப் பிணைப்புடனான தொண்டு இவர்களுக்கான பெரும்பேறு. தாயும் பிள்ளைகளும் தங்களைச் சுற்றிய உலகத்திற்கு வாழ்ந்து காட்டி சொல்லித் தந்த பாடத்தின் கால அளவு ஐந்தரை ஆண்டு. இவையெல்லாம் நடப்பதற்கு முன்னர் மைத்துனன் சங்கரின் நடவடிக்கைகளை வைத்துப் பொதுவாக நான் சொல்வதுண்டு, "அவன் எனக்கு வாய்த்த, வயதில் குறைந்த ஒன்றிரண்டு குருநாதர்களில் ஒருவன்" என்று. அத்தை என்று எனக்கு உறவு முறையாக அமைந்த திருமதி. விஜயகோமதி அவர்களுக்கான சேவைக்குப் பின், சங்கரும் அவனது துணைவியும் என் போன்றோருக்கு சிவ-பார்வதியாக, நாராயணன்-நாராயணியாகவே காட்சி தருகிறார்கள். இறை நம்பிக்கை இல்லாதவன் மானிடத்தில்தானே இறையைத் தேட முடியும் ? எனவே எனது 'எஞ்சாமி' பட்டியலில் இனி இவர்களும் உண்டு.
  4. உயர்சாதி அரசியல் - சுப. சோமசுந்தரம் கருத்தியல் அடிப்படையில் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி எனும் பாகுபாட்டிற்கு நாம் எதிரிகள் என்றாலும், சாதியில் ஊறிய சமூகம் தந்த இச்சொல்லாடல் இங்கு பயன்பாட்டிற்கு எளிதாகவும் இயல்பாகவும் தோன்றுவதால் இக்கட்டுரையில் 'உயர்சாதி'யைப் பொறுத்தருள வேண்டும். கட்சி அரசியலில் ஆரம்பித்து சாதி அரசியலிலும் சமூக நீதியிலும் இக்கட்டுரையை முடிப்பது தடம் புரள்வதல்ல. காலத்தின் கட்டாயம். இன்றைய நிதர்சனங்களின் பட்டவர்த்தனம் (தமிழ் ? சரி, விடுங்கள் தோழர் !) தமிழ்ச் சமூகத்தில் எல்லாக் காலங்களிலும் அரசியல் இருந்தது. நட்பு வட்டத்திலும் உறவுக் குழுமங்களிலும் கொள்கை அரசியல் மற்றும் கட்சி அரசியல் சார்புகள் இருந்தன. ஆனால் அவை நட்புக்கும் உறவுக்கும் இடையூறாய் நின்றதில்லை. குறிப்பாக உறவுமுறைகளில் யார் எந்தக் கொள்கை மற்றும் கட்சி சார்பு உடையவர் என்பதை முன்பெல்லாம் யாரும் கண்டுகொள்வதில்லை. இதில் பெரும்பான்மையோர் எந்தச் சார்பும் இல்லாமல் அரசியல், சமூக வாழ்வில் பெரும் நாட்டம் கொள்ளாமல் இருந்தமை காரணமாக இருக்கலாம். திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற பெருங்கட்சிகளும் வேறு சிறு கட்சிகளும் இந்திய சமூகத்தை, குறிப்பாகத் தமிழ்ச் சமூகத்தை, சொல்லிக்கொள்ளும் அளவிற்குப் பிரித்ததில்லை. சில சிறு கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள் சாதி மத அடையாளங்களுடன் வந்ததில்லை. வேட்பாளர் தேர்வு முதலிய நடவடிக்கைகளில் அனைத்து கட்சிகளிலும் சாதி மதங்களின் பங்களிப்பு இருந்தபோதும், ஒட்டுமொத்தமாக அவை தம் மீது சாதி, மதச் சாயம் பூசி கொண்டதில்லை. இவையனைத்திற்கும் மாறாக தற்காலத்தில் இரண்டே இரண்டு எதிரெதிரான அரசியல் சமூகத்தில் அரங்கேறக் காணலாம். அவற்றில் ஒன்று வெறித்தனமாக வினையாற்றுவதும் மற்றொன்று சளைக்காமல் எதிர்வினையாற்றுவதும் வாடிக்கையாகிப் போனது. இந்த மாற்றத்திற்கான காரணம் சமூகப்பார்வை உள்ள அனைவருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனி. இந்திய ஒன்றியத்தில் பெரும்பான்மைவாதமான இந்து மதவாதம் இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே அவ்வப்போது தலை தூக்க முயன்றதை வரலாறு ஓரளவு அறிந்தவர் அறிவர். மதக்கலவரங்கள் பெரிய அளவிலோ சிறிய அளவிலோ ஆங்காங்கே நிகழ்ந்த போதும் மதச்சார்பற்ற தலைவர்களின் ஆளுமையினால் இந்நாடு உலகமே வியக்கும் மதச்சார்பற்ற ஒரு பெரிய ஜனநாயகமாக முகிழ்த்தது. அத்தகைய தன்னேரில்லாத் தலைவர்கள் வாய்த்தது நாட்டிற்கான பெரும்பேறு. ஏனைய மதவாதங்களையும் புறந்தள்ளுவதற்கில்லை. அவற்றையும் கட்டுக்குள் வைத்தது தன்னலமற்ற ஆன்றோர், சான்றோர்தம் தலைமை பண்பு. இத்தலைமைப் பண்பின் குறியீடான காந்தியார் சுடப்பட்டது மதவாதத்தில் அன்று தோற்றுப்போனவர்களின் விரக்தி நிலை வெளிப்பாடு. அக்கூட்டத்தினர் வட இந்தியாவில் தலையெடுக்க ஆரம்பித்த அதே காலகட்டத்தில் தமிழகத்தில் சமூகநீதிக்கு அடித்தளமிட்ட நீதிக்கட்சி தோன்றியது தமிழருக்கான பெரும்பேறு. பின்னர் திராவிடக் கட்சிகளாக நம் நீதிக்கட்சி ஒன்று பல ஆயிடினும் சமூகநீதி, மொழி உணர்வு போன்ற அடிப்படைக் கொள்கைகள் என்றும் சீரிளமைத் திறத்துடன் துலங்கியதும், இந்து மத வாதம் ஆரிய இனவாதம் போன்ற அழிவுக் கோட்பாடுகள் இங்கு கருவிலேயே கலைந்ததும் தமிழினத்தில் பாமரர்களைப் பொருத்தமட்டில் கூரையைப் பிய்த்துக் கொண்டு வந்த வரம். அவ்வரம் தந்த சாமிகள் பெரியார், அண்ணா எனப் பல ஆன்றோர் பெருமக்கள். எத்துணை உயரிய கொள்கைகள் முன்னிருந்தாலும் பாமரன் பாமரன்தானே ! இலவசமாய்ப் பெற்றதன் அருமை தெரியாமல் வஞ்சனை செய்வாரிடம் விற்று விடுவானோ என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே இக்கட்டுரை எனலாம். அவ்வஞ்சகர், முன் எப்போதுமில்லாத அளவில் சூதுவாதுகளை ஆங்காங்கே விதைக்க முனைவதே இந்த அச்சத்திற்கும் ஆதங்கத்திற்கும் காரணமாய் இருக்கலாம். சரி, தற்காலத்தில் அரங்கேறி வரும் வலதுசாரி மதவெறி, இனவெறி அரசியலுக்கு வருவோம். தொலைக்காட்சி விவாதங்களிலும், புலனப் (Whatsapp) பதிவு, முகநூல் பதிவு போன்ற சமூக வலைத்தளங்களிலும், பத்திரிக்கை ஊடகங்களிலும், நண்பர்களும் உறவினர்களும் கூடும் நிகழ்ச்சிகளிலும் அவர்கள் எண்ணிக்கையில் மிகச் சிலரே ஆயினும் அவர்களின் சங்கநாதம் நம் காதுகளுக்கு நாராசமாய் ஒலிப்பது தவிர்க்க இயலாத ஒன்று. சிரங்குக் கையனுக்கு சொரியாமல் இருக்க முடியாது என்பதை போல் அவர்கள் மீண்டும் மீண்டும் மாற்று மதத்தினரையும் பகுத்தறிவுவாதிகளையும் வன்மத்துடன் விமர்சிப்பதைப் பார்க்கையில் 24 மணி நேரமும் வெறுப்பு அரசியலிலேயே அவர்கள் வாழ்வது புலனாகிறது. சங் பரிவாரங்களின் ஷாகாக்களில் மூளைச்சலவை செய்யப்பட்டோர் படித்தவர் படிக்காதவர் என்ற பேத மின்றி அப்படித்தான் இருக்கமுடியும். தமிழராயிருப்பினும் தமிழின் சிறப்பைப் பேசினாலே கோபம் வருகிற அளவிற்கான மூளைச்சலவை அது. மாற்று அரசியல் கருத்துக்களை நாம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அதுவும் ஒரு கருத்து என்ற முறையில் வரவேற்கலாம். ஆனால் பாசிசம் ஒரு அரசியல் கருத்தாகவே கொள்ளத்தக்கதல்ல. மேலும் கட்சி அரசியல் பேசுவதாக நினைத்துக் கொண்டு அவர்கள் பேசுவது அறிந்தோ அறியாமலோ அவர்களின் ஆழ்மனதில் விதைக்கப்பட்ட மதம் என்னும் விஷ வித்து. அதிலும் இவர்களைக் கவர்வதற்காக மதச் சாயம் பூசப்பட்ட உயர்சாதி அரசியல் எனும் விதையே அது. முளைக்கவிட்டால் வருணாசிரமம், மனுநீதி என்று மீண்டும் வெளிவரும் என்பது தமிழ் மாநில அளவில் அவர்களுக்குத் தலைமை ஏற்றுள்ள சில முட்டாள்களின் பிதற்றலில் தெற்றென விளங்கி நிற்பது. இந்துத்துவா என்ற பெயரைத் தாங்கியது பிராமணியமும் அரைப்பிராமணியமும் (Neo-Brahminism) என்பதை அவர்கள் உணரும்போது நிலைமை கை மீறிப் போயிருக்கும். இவையெல்லாம் பெரியார் மண்ணில் நிகழ வாய்ப்பில்லை என்ற நமது அசட்டுத் தைரியம் வஞ்சனை செய்வாரின் பலமாக வாய்ப்பு உண்டு. இது ஹிட்லர் உலகுக்கு சொல்லித்தந்த பாடம். சூழ்நிலை காரணமாக தமிழ்நாட்டில் அமைந்த அடிமை அரசினைக் கொண்டு அதிகாரப் பொறுப்புகளில் தங்களின் கோட்பாட்டினைத் (!) தழுவியவர்களை ஆங்காங்கே விதைத்ததும் தூவியதும் அவர்கள் நாஜிக்களிடம் கற்ற பாலபாடம். இச்சூழலில் பெரியாரையும் அண்ணாவையும் இன்றைய தமிழ் இளைஞர்களிடம் கொண்டு செல்வதே தமிழின உய்விற்கான வழியாக இருக்க முடியும். வலதுசாரிகளின் இன, மத, உயர்சாதி அரசியலைத் தமிழ் மண்ணில் எதிர்கொள்ள இடதுசாரிகளே இன்று கையில் எடுக்க வேண்டிய ஆயுதங்கள் பெரியார், அண்ணா போன்றோரே. இவ்விருவரும் வாழ்ந்து காட்டாத மண்ணுக்கான மார்க்சியம் உலகில் உண்டா என்ன ? இந்திய ஒன்றியத்தை காக்க நம்மால் முடியுமோ என்னவோ, தமிழ் மண்ணைக் காக்கும் கடமை தமிழராய் பிறந்த அனைவருக்கும் உண்டு. உயர்சாதியினரின் வீட்டு இழவில்கூட சிதைக்குத் தீ மூட்டிய கையோடு மரத்தடியில் அமர்ந்து அந்தக் கருமாந்திர அரசியலை அவர்கள் ஆரம்பிப்பது வெறியின் உச்சம். நட்பையும் உறவையும் அவர்கள் பகைக்கவும் தயங்குவதில்லை. இத்தகையோரின் நட்பும் உறவும் நமக்கு மட்டும் இனிக்குமா என்ன ? எதிர்வினையாடலைத் தவிர வேறு வழியை அவர்கள் நமக்கு விடுவதேயில்லை. நாம் எடுக்க வேண்டிய ஆயுதத்தை எதிரிதானே தீர்மானிக்க முடியும் ? உயர்சாதி என்று வகைப்படுத்தியிருக்கும் அரைப் பார்ப்பனிய சமூகமொன்றில் பிறந்த எனக்கு இவர்களை அருகிலேயே பார்க்கக் கிடைத்ததும், சுயசாதி விமர்சனம் செய்யும் நிலை ஏற்பட்டதும் எனது துர்ப்பாக்கியம். வலதுசாரி தீவிரவாதத்துடன் இயங்குவோர் ஏனைய சாதிகளில் இல்லாமல் இல்லை. ஆனால் அத்தகையோர் ஆங்காங்கே சிதறிக் கிடக்க, உயர் சாதியினர் மட்டும் அனேகமாக ஒட்டுமொத்தமாய் அங்கே நிற்பதைக் காண்கையில் அதற்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம் என்று எண்ணத் தோன்றும். "அப்படி உங்களுக்கு என்னதான் பிரச்சினை ?" என்று அவர்களைப் பேட்டி (!) எடுத்தால், உயரிய காரணம் எதுவுமில்லை என்பது புலப்படுகிறது. உயர்சாதியினர் அறிவு நிலையிலும் உயர்ந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்பது தெளிவாகிறது. பரவலாக அவர்கள் முன்வைக்கும் காரணங்கள் விரல்விட்டு எண்ணக்கூடியவையே. அவை முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்தினாலும் நம்மிடம் தேர்ந்த பதில்கள் இருப்பது கட்டாயமாகிறது இதோ நம் பட்டியல் : (1) மாற்று மதத்தினர் - குறிப்பாகக் கிறித்தவர், இஸ்லாமியர் - மதம் மாறியோர், மதம் மாற்றுவோர் என்பதாலும், அரசாங்கத்தில் சிறுபான்மையினர் உரிமை என்ற ஒன்றைப் பெறுவோர் என்பதாலும், மதச்சார்பின்மை பேசுவோர் இவர்களை விமர்சிப்பதில்லை என்பதாலும் இம் மதத்தினர் மீது வெறுப்பு. மதம் மாறியவர்கள் பெரும்பாலும் ஒரு காலத்தில் வருணாசிரமத்தினால் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதும், அப்போது அவர்கள் மாறினார்கள் என்பதை விட தங்களால் விரட்டப்பட்டவர்கள் என்பதும் இந்த உயர் சாதியினர் அறிவார்களா ? எனக்குத்தெரிந்து அன்றைய நெல்லை, குமரி மாவட்டங்களில் என் சாதியினரின் கோரத் தாண்டவத்தால் பாதிக்கப்பட்டு சிஎஸ்ஐ கிறித்துவத்தை நோக்கிப் பெரிய அளவில் மதமாற்றம் நடைபெற்றது. எந்தக் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டார்களோ அங்கே சென்றார்கள். எங்கே கல்வியும் மருத்துவமும் கிடைத்ததோ அங்கே சென்றார்கள். விரட்டியடித்த இவர்கள் புகலிடம் தந்து அவர்களுக்கான சமூக நீதியும் வழங்கியவர்களை வெட்கமில்லாமல் விமர்சிப்பார்களா ? மேலும் 300-400 வருடங்களாய் மதம் மாற்றப்பட்டவர்கள் அவர்கள் என்றால், சுமார் 1500 வருடங்களுக்கு முன் ஆரிய வந்தேறிகளால் மதம் மாற்றப்பட்டவர்கள்தானே நாமும் ? எந்த ஒரு மக்கள் திரளிலும் சிறுபான்மையினர் மீது தனிக்கவனம் செலுத்தி அவர்கள் தங்கள் அடையாளத்துடனும் தங்களுக்குரிய மரியாதையோடும் வாழ வழி செய்வது ஒரு ஜனநாயக அரசின் கடமை. மதச் சிறுபான்மையினர் மட்டுமின்றி மொழிச் சிறுபான்மையினருக்கும் தனிச் சலுகைகள் உள்ளது நியாயமானதே. பன்மைத்துவம் என்பது இந்திய ஒன்றிய அளவில் மட்டுமல்லாது மாநில அளவிலும் பேணப்பட வேண்டிய ஒன்றே. இனவாதமானாலும் மதவாதமானாலும் நடுநிலையோர் சிறுபான்மையை விடப் பெரும்பான்மையை அதிகம் பேசுவதற்கும் சாடுவதற்கும் காரணம் உண்டு. முன்னதை விடப் பின்னது ஆபத்தானது என்பதற்கு நாஜி ஜெர்மனி, சிங்களப் பேரினவாத இலங்கை, இஸ்ரேலை ஆக்கிரமித்துப் பின் பாலஸ்தீனத்தை விழுங்க முனையும் யூத மத, இனவாதம் என்று எடுத்துக்காட்டுகளை அடுக்கலாம். (2) சமூக நிலையில் தாழ்த்தப்பட்டோரின் ஆதிக்கம் அலுவலகம் முதலிய இடங்களில் அளவுகடந்து போவதாகவும் இதற்குக் காரணம் இட ஒதுக்கீடு என்பதுமான இவர்களின் மனக்குறை. தமிழ் நிலத்தில் சுமார் 60 வருடங்களே முழுமையாக அமலுக்கு வந்துள்ள இட ஒதுக்கீட்டையே இவர்களால் தாங்க முடியவில்லை. குறைந்தபட்சம் 1500 வருடங்களாக அவர்கள் 100 சதவீதம் ஒதுக்கி வைக்கப்பட்டதைப் பற்றி இவர்கள் வாயே திறப்பதில்லை. விழுந்தவன் எழுந்து நிற்கும்போது கம்பீரமாகத்தான் நின்று விட்டுப் போகட்டுமே ! அவன் யாரையும் எதையும் சட்டை செய்வதில்லை என்ற இவர்கள் குற்றச்சாட்டு உண்மையாயிருந்தால் கூட, அவனது எழுச்சியைக் கொண்டாடும் வகையில் அவனுக்குக் காலமும் வாய்ப்பும் தருவது சமூகத்தின் கடமை. (3) உயர்சாதியினரின் கட்டுப்பாட்டிலும் வழிகாட்டுதலிலும் செயல்படும் ஒன்றிய அரசு சமீபத்தில் இவர்களுக்கு அளித்த 10% இட ஒதுக்கீடு இவர்களுக்கான மகிழ்ச்சி. அதைப் பெற ஆண்டு வருமான உச்சவரம்பு ரூபாய் எட்டு லட்சம் என்பது இவர்களின் பரவசநிலை. முதலில் இட ஒதிக்கீடு சமூகநீதிக்கானதே தவிர வறுமை ஒழிப்புத் திட்டமன்று. வறுமை ஒழிப்புத் திட்டங்களை சாதி, மத பேதமின்றி வகுத்திடுவது ஒரு அரசின் கடமை என்பது ஒரு புறம். பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் அளித்த இட ஒதுக்கீட்டின் காரணமாகத்தான் உயர்சாதியினர் பாதிக்கப் பட்டனர் என்பது அபத்தம். அதாவது உயர் சாதியினர் மற்றவர்களைவிடத் தகுதி வாய்ந்தவர்கள் என்று பின்னப்படும் மாயை. அது உண்மையானால் இட ஒதுக்கீட்டின் பொதுப்பிரிவில் அத்தனை இடங்களையும் உயர்சாதியினர் நிரப்பியிருக்க வேண்டும். பொதுப்பிரிவில் 10 இடங்கள் இருந்தால் இரண்டு அல்லது அதிகபட்சம் மூன்று இடங்களில் உயர்சாதியினர் வரக் காணலாம். சமீபத்தில் ஒரு அரசு வங்கிக்கான நியமனத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான தகுதி வரையறை சுமார் 60% எனும்போது உயர்சாதியினருக்கான சமீபத்திய ஒதுக்கீட்டில் 28% என்பது வெட்கக்கேடு. வாய்ப்பு அளிக்கப்பட்ட அனைத்துச் சாதியினரும் தகுதியில் மேம்படுகிறார்கள் என்பதே உண்மை. சமூகத்தில் சமநிலை ஏற்படும்போது இட ஒதுக்கீட்டு முறையில் மீண்டும் மாற்றம் கொணர்வது ஜனநாயக முறையிலேயே நிகழமுடியும். வெறுப்பு அரசியலால் அல்ல. இப்போதுள்ள சமூக நீதியை ஜனநாயக முறையிலேயே நிலைநாட்டினார்கள். ஒடுக்கப்பட்டவர்களின் விரல் கூட ஒடுக்கியவர்கள் மீது படவில்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே சமூக ஒடுக்குமுறை குறித்த குற்றவுணர்வும், சாதி பேதமற்ற சமூகத்திற்கான முனைப்பும் உயர்சாதியினரிடம் அமைதல் வேண்டும். மேன்மக்களுக்கான வரையறையும் அதுவே. அதை விடுத்துக் குறுக்கு வழியில் மக்களை ஏமாற்றி, மதத்தின் பெயரால் உயர்சாதி அரசியல் செய்வது மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்டது.
  5. வளர்ந்து வா மகனே ! - சுப.சோமசுந்தரம் தமிழக தேர்தல் 2021 முடிவு வருமுன் அவசரம் அவசரமாக அனைத்துக் கட்சிக் கூட்டம் எனும் பெயரில் கூடி, ஆக்ஸிஜன் மட்டும் தயாரிக்க அனுமதிக்கலாம் எனப் பம்மாத்து வேலையாக ஸ்டெர்லைட்டைத் திறக்க வழி செய்த அனைத்துக் கட்சித் துரோகத்தை எழுதிய சிறிய பதிவு. சில காலம் முன்பு நிகழ்ந்த ஒரு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டத்தின் பின்னணியில். வளர்ந்து வா மகனே! நீயே இப்போது விடிவெள்ளி. நீயென்பது ஓட்டுக் கட்சிகளால் இன்னும் மூளைச்சலவை செய்யப்படாத உன் தலைமுறையினர். நாங்கள் பாசிசவாதிகளையும் அடிமைகளையும் என்றுமே நம்பியதில்லை; அதனால் அவர்கள் எங்களை ஏமாற்றவில்லை. முழுமையாக இல்லாவிட்டாலும் ஏதோ ஒட்டுப் போட்ட திராவிடக் கட்சி, நொண்டி நோக்காடான இடதுசாரிகள் என்று நம்பி ஏமாந்து போகிறோமே எங்களுக்கான நீதியை நீதானடா வழங்க வேண்டும். ஒவ்வொரு முறை ஏமாறும்போதும் பாமர மனம் நம்பிக்கையை வேறு எதிலாவது ஏற்றுகிறது. அப்படித்தான் இப்போது நீ கிடைத்திருக்கிறாய் மகனே ! நாங்கள் பெரும் விவேகிகள் என்று நினைத்தவர்கள் எல்லாம் சமாளிப்பு மன்னர்கள் என்று உணர எங்களுக்கு இத்தனை நாட்களா? அவரவர் கட்சிக்கு வாழ்க்கைப்பட்டு விட்டார்களாம். எங்களைப் போன்ற டியூப் லைட்டுகளைப் பார்த்து அந்தக் கொள்கைக் குன்றுகள் எள்ளி நகையாடுவது உன் காதுகளில் விழ வேண்டும். அந்தப் பதினான்கு உயிர்களின் ஓலத்தில் எங்கள் காது கிழிகிறதடா. அவர்களைச் சுட்டவன் எவன், சுடச் சொன்னவன் எவன் என்ற கேள்வியை இந்த அதிமேதாவிகள் யாரும் இன்று வரை கேட்கவில்லை. நியாயம்தானே! இவர்கள் ஆட்சிக் காலத்திலும் மக்களைச் சுட்டவர்கள்தானே ! அது தமிழகமாய் இருந்தால் என்ன, TATA முதலாளிக்கான சிங்கூர் ஆக இருந்தால் என்ன ? முதலாளி வர்க்கத்தின் முன் இடது என்ன, வலது என்ன, திராவிடம் என்ன, ஆரியம் என்ன ? Sterlite என்பது தேர்தல் முடிவுக்கு முன் இவர்களுக்கு வைக்கப்பட்ட litmus test. கையில் மை காயுமுன்பே தோற்றுப் போனார்கள். தேர்தல் முடிவு அறியும் ஆர்வமெல்லாம் போய்விட்டதடா. நீதியை வழங்க உன் தலைமுறையினருக்கான ஆயுதத்தை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அது மீண்டும் வாக்குச் சாவடியாகக் கூட இருக்கலாம். ஆனால் நீதி வேண்டும். நீயே வழங்க வேண்டும்.
  6. இந்த விளக்கம் எனக்குப் பிடித்திருக்கிறது என்பது தனிப்பட்ட விடயம். இறை நம்பிக்கையையும் 'புலுடா' என்று சொல்லி மக்களைச் சங்கடப்படுத்த விரும்பாத நான், நண்பர் ஒருவர் சொல்லும்போது ரசிக்கும் உரிமை எனக்கு உண்டு என்று நினைக்கிறேன். 🤭
  7. சொல்லாக்கத்தின் (etymology) வழி பார்த்தால், 'அஸ்தித்வ' என்ற வடமொழிச் சொல்லுக்கு 'இருப்பு' (existence) என்பது பொருள். ஆகையால் (இறை) இருப்பில் நம்பிக்கை கொண்டோர் 'ஆஸ்திக்' என வடமொழியில் வழங்கலாயினர். தமிழில் ஆத்திகர் ஆயினர். சொல்லின் முன் ந சேர்த்து எதிர்மறைப் பொருளாக்குவர். எனவே 'நாஸ்திக்' இறை மறுப்பாளர். தமிழில் நாத்திகர். தமிழில் வழக்கிலும் இன்று 'நாத்திகர்' இறைமறுப்பாளரையே குறிக்கிறது. இடைக்காலத்தில் ஸ்மார்த்தர்கள் (இறையை மறுப்பர்; வேதங்களை ஏற்பர்) நாத்திகர் எனப்பட்டதாக வாசித்திருக்கிறேன். இடையில் வந்தது இடையிலேயே போகட்டுமே. ஆகையால்தான் கட்டுரையின் தொடக்கத்திலேயே தற்போது வழக்கில் உள்ளவாறு 'நாத்திகம்' என்ற சொல்லை இறை மறுப்பிற்குப் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளேன்.
  8. எனது நாத்திகம் - சுப. சோமசுந்தரம் நாம் விரும்பாமலே நாத்திகம் எனும் வடமொழிச்சொல் வெகுசனத்திடம் பரவிவிட்டதால், இறை மறுப்பை நான் இங்கு ‘நாத்திகம்’ என்றே பதிவிடுகிறேன். ‘கடவுள் உண்டா இல்லையா ?’ என்ற அருதப் பழசான விவாதத்தை ஆரம்பித்து, வாசிப்போரின் கழுத்தில் நரம்பு புடைக்க வைப்பது சாமி சத்தியமாக(!) இவ்வெழுத்தின் நோக்கமல்ல. “உண்டென்பார்க்கு உண்டு, இல்லையென்பார்க்கு இல்லை” என்று ஏனையோரிடம் உரக்கச் சொல்லிவிட்டு, “ஆனால் எனக்குத் தெரியும் இல்லையென்று” என எனக்குள் சொல்லி ‘கடவுளைக்’ கடந்து செல்பவன் நான். (ஆகையால் அது ‘கட உள்’ தானோ?) ‘நான் நாத்திகன் ஏன்?’ என்ற பகத்சிங்கின் அளவில் சிறியதொரு பெரிய படைப்பினை வாசித்த அனுபவம் எனது நாத்திகத்தையும் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்ததோ என்னவோ ! பகத்சிங் தமது சிந்தனையாலும் செயலாலும் தம் படைப்பினை உலகையே வாசிக்க வைத்தவர். குறைந்த பட்சம் நட்பு வாசக வட்டத்தில் அனுபவங்களைப் பகிரும் எண்ணமே எனது இந்த எழுத்து. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்வது நமக்குப் புதிதா என்ன? எனக்கு விவரம் தெரிந்து சுமார் பன்னிரெண்டு வயது முதல் நான் நாத்திகன். இது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. என் வீட்டின் ஜனநாயகச் சூழலும், வீட்டில் பெரியாரையும் அண்ணாவையும் சிலர் பேசிக் கொள்ளும் சுமாரான அரசியல் சூழலும், எனக்கு வாய்த்த ஆசிரியர் ஒருவர் அந்நாளைய பள்ளி வரைமுறைகளைத் தாண்டி திராவிட இயக்க விதைகளை அவ்வப்போது தூவியதும் காரணமாய் அமைந்தன எனலாம். பசுமரத்தாணியாய்ப் பதிந்து நிற்கும் பருவம் அது. இறை நம்பிக்கையும் அப்படித்தானே ! குழந்தைப் பருவத்தில், “கண்ணு, சாமி கும்பிடு ! சாமி கும்பிடு !” என்று சொல்லி வளர்ப்பதே இறை, மத நம்பிக்கையாய் முகிழ்க்கும் என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை. பின்னர் அந்நம்பிக்கை சார்ந்த பெரியோரிடம் கற்றல், கேட்டல் மூலம் அது வலுப்பெறும். நிற்க. இளம் வயதில் பெரியார், அண்ணாவிடம் படித்த பாடம் கல்லூரி நாட்களிலும் பின்னாளிலும் மேலும் கிடைத்த நூலறிவினால் வாழ்வியலானது. குறிப்பிட்டுச் சொல்வதானால் ஆபிரகாம் கோவூரின் ‘Gods, Demons and Spirits’, பெட்ரன்ட் ரஸலின் ‘Why I am not a Christian’, கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸின் ‘God is not great’ என்னை நல்வழிப்படுத்தியவை. ஆயினும் இந்த ஆன்றமைந்த கொள்கைச் சான்றோர் எனக்குப் போதித்ததைப் போல் நாத்திகத்தை நான் யாருக்கும் போதிக்கவில்லை. என் குழந்தைகளுக்குக் கூட, உண்டு அல்லது இல்லை எனப் புகட்டியதில்லை. எனது நடவடிக்கைகள் மூலம் அவர்கள் இறைமறுப்பின்பால் ஈர்க்கப்பட்டது எனக்கான பேறு. அதிலும் அவர்கள் பெண்பிள்ளைகள் என்பது பெரிதினும் பெரிதான பேறு. இதில் இறைநம்பிக்கையுள்ள எனது இல்லாளின் பங்களிப்பு அபரிமிதமானது. அவளும் தன் நம்பிக்கையைக் குழந்தைகளுக்கு ஏற்றியது இல்லை. இந்த ஜனநாயகம் எல்லோருக்கும் வாய்ப்பதிலை. ஆத்திகர்களின் மொழியில் சொல்வதானால், நான் இறை மறுக்க அவர்களது இறைவனாலேயே ஆசீர்வதிக்கப்பட்டவன் போலும்! பெரும்பான்மைச் சமூகம் இறை நம்பிக்கை சார்ந்ததால், பெரும்பாலான இறை மறுப்பாளர்கள் தங்களை வெளிக்காட்டுவதில்லை. அது அவரவர் தனிப்பட்ட கருத்து எனும் நிலைப்பாடாக இருக்கலாம். இப்பூவுலகில் இவர்களோடுதானே வாழ வேண்டும் எனும் நடைமுறைச் சித்தாந்தமும் என் போன்றோர்க்கு ஏற்புடையதே. எனக்கு இறை நம்பிக்கை இல்லாவிட்டாலும் சமூகத்தில் பெரும்பாலானோர் அந்த நம்பிக்கையோடு வாழ வேண்டும் என்பது என் உள்ளக்கிடக்கை. அதற்கு நானாக வரித்துக் கொண்ட காரணங்கள் இரண்டு. ஒன்று, ‘மேலே ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்’ எனும் பயத்தினால் மட்டும் அதிகம் தவறு செய்யாமல் இருக்கும் வெகுசனம். இரண்டாவது, வாழ்வில் சொல்லொணாத் துயரத்தை எதிர்கொள்ள ‘மேலே இருப்பவன் பார்த்துக்கொள்வான்’ என்று பாரத்தைக் கற்பனையான தோள் மீது இறக்கி வைக்கும் மனோபாவம்; அக்கற்பனை தரும் ஆறுதலை அவர்களுக்கு என்னால் தர இயலாத கையறுநிலை. எனவே அறியாதாரை அறியாமை இருளிலேயே வைத்து நமக்கும் அவர்களுக்கும் துன்பமில்லாமல் வாழ நினைக்கும் சுயநலம் எனது. வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி நமக்கும் தான் வரும். அப்போது நமக்கு அந்த கற்பனைத் தோள் வேண்டாமா ? இல்லையென்று நம்பிக்கை(!) ஏற்பட்டு சுமார் ஐம்பது வருடங்களான பிறகு, இல்லாததைக் கற்பனை செய்ய இயலாது. வாழ்வில் ஏற்படும் இன்பத்தை அளவாய்த் துய்க்கத் தெரியும். துன்பத்தில் அழத் தெரியும், விழத் தெரியும், எழத் தெரிய வேண்டும். இது தான் பக்குவம் பெற்ற வாழ்விற்கான இலக்கணம் என்பது எனக்குப் பால பாடம். எனக்கு இலக்கிய ஆர்வம் உண்டாகையால் பக்தி இலக்கியங்களையும் விட்டு வைக்க மனம் வருவதில்லை. நான் உருகவில்லையாயினும் அவர்கள் எப்படி உருகுவார்கள் என்பதை உணரும் அளவு இலக்கியச் சுவை தெரிந்தவன். நாத்திகராயிருந்தும் கோயில்களையும் பக்தி இலக்கியங்களையும் சமயங்களின் அடிப்படைத் தத்துவங்களையும் உணர்ந்த அறிஞர் தொ. பரமசிவன் இவ்விடயத்தில் எனக்கான வழிகாட்டி. இவையனைத்தும் மக்களை வாசிக்க உதவும் கருவிகள் எனக் கொள்ளலாம். பக்தி இலக்கியம் பேசும்பொழுது, எழுதும் பொழுது நமது இறைமறுப்பை வெளிக்காட்டாது அவ்விலக்கியச் சுவை காட்டுவது கயிற்றின் மேல் நடப்பது. “கடவுள் இல்லை; இல்லவே இல்லை” என அறிவித்து மக்கட்சேவை செய்யும் நாத்திகப் பெரியோர் வீரமரபில் தோன்றிய சான்றோர். மக்கள் கூட்டத்திலிருந்து தனித்தியங்கும் ஆற்றல் பெற்றோர். அவ்வகையில் தமிழ்ச் சமூகத்தில் பெரியார் எஞ்சாமி(!). நடிப்பாற்றலால் வெகுசனத்தில் விரவி தன் அடையாளத்தைத் தொலைத்து வாழ்ந்து தொலைக்கும் நான் ஒரு கோழை. இதுகாறும் எனது நாத்திகத்தில் பொதுவான விஷயங்களைப் பேசிய நான் இது தொடர்பில் ஒன்றிரண்டு நிகழ்வுகளை நினைவு கூற நினைக்கிறேன். இத்தகைய நிகழ்வுகளும் என்னைப் பெரிதும் செதுக்கியதாக உணர்கிறேன். அவை என் மனதில் காட்சிகளாய் விரிகின்றன. காட்சி 1: இறை மறுத்து வளர, வாழ எனக்குச் சாதகமான சூழலே அமைந்தது எனக்கான வரம். அவ்வரம் எனக்கு பள்ளி, கல்லூரி வடிவிலும் அமைந்தது கூடுதல் சிறப்பு. உரோமன் கத்தோலிக்க நிறுவனங்களிலேயே நான் வளர்ந்தாலும், தம் மத நம்பிக்கைகளை என்மீது இம்மியளவும் அவர்கள் ஏற்ற முயற்சி செய்ததில்லை. கத்தோலிக்க மாணவர்களுக்கு வாரம் ஒரு மணி நேரம் கத்தோலிக்க மறை வகுப்பு நடைபெறும் பொழுது ஏனையோருக்கு நல்லொழுக்க வகுப்பு நடைபெறும். அவ்வளவே. ஒருமுறை கல்லூரியில் வகுப்புத் தோழன் ஒருவன் வேலைக்கு மனுச் செய்த போது அவனுக்கு நன்னடத்தைச் சான்றிதழ் தேவைப்பட்டது. கிறித்தவனான அவன் எங்களது தமிழ் ஆசிரியரும் அவனது விடுதிக் காப்பாளருமான பாதிரியாரிடம் சான்றிதழ் கேட்கப் போகும் பொழுது என்னையும் துணைக்கு அழைத்தான். நன்றாகப் படிக்கும் மாணவன் நல்ல மாணவன் என்ற வேடிக்கையான வரையறை அன்றும் இன்றும் உண்டே ! அதனால் பெரும்பாலான ஆசிரியர் பெருமக்களுக்கு என் மீது அன்பும் மதிப்பும் உண்டு என்பது என் கணிப்பு. பாதிரியார் அவனிடம், “எடேய், நீ ஜெபத்துக்கே வர மாட்டே ! உனக்கு எப்படி நான் காண்டக்ட் (conduct certificate) தரமுடியும்?” என்று கடிந்துகொண்டார். அவன் கூடப் போய் நான் அங்கு நின்றதே அநாகரிகம். அதையும் தாண்டி நான் அதிகப்பிரசங்கித் தனமாக அப்போது இடைமறித்துப் பேச வேறு ஆரம்பித்தேன். அவ்வயதில் எங்களுக்குத் தெரிந்த நாகரிகம் அவ்வளவுதான். “ ஃபாதர் ! ஒழுக்கத்திற்கும் ஜெபத்திற்கு என்ன தொடர்பு ? ஜெபம் ஒருவரின் தனிப்பட்ட விஷயம்தானே ?” – சாதாரணமாக ஒரு பாதிரியாரிடம் சராசரி மனிதர்கள் கேட்காத கேள்வி. என் மீது கொண்ட அன்பினால் அவர் கோபம் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். மாறாக, “நீ சிறிது நேரம் வெளியே நில்!” என்று சாந்தமாகச் சொல்லி அனுப்பிவிட்டு அவனிடம் பேசினார். பின்னர் அவனை அனுப்பிவிட்டு என்னை உள்ளே அழைத்துச் சொன்னார், “நீ சொன்னது உனக்குச் சரி, நான் சொன்னது அவனுக்குச் சரி. படிப்பெல்லாம் எப்படிப் போகிறது ? கம்பனில் நம் பாடப்பகுதியில் உள்ள அந்த சிறு பகுதியை நீ செமினார் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று வெகு சாதாரணமாய்ப் பேசி, புன்னகை மாறாமல் அனுப்பிவிட்டார். அவர் உள்ளே அழைத்ததும் எனக்கு கடவுள், ஜெபம் பற்றிய பாடம் எடுக்கப் போகிறார் என்று நினைத்தேன். தம் செயல்பாட்டின் மூலமாக அவர் எனக்குத் தந்த பாடம் ஜனநாயகம் என்று நம்புகிறேன். அன்று என்னுள் இருந்த இளைஞன் கபடமின்றி இப்படி யோசித்தான், “அவர் சான்றோர் என்பதில் ஐயமில்லை. கூடவே, அவரும் என்னைப் போல் இச்சமூகத்தில் ஒரு நாத்திக நடிகர்தானோ !” காட்சி 2 : அடிப்படைக் கணிதக் கோட்பாடுகளை அழகுற எடுத்துச்சொல்லி அத்துறையில் நான் நானாக பெரிதும் காரணமானவர் எனது கணிதப் பேராசிரியர் திரு. ஜோதிமணி அவர்கள். இலக்கிய ஆர்வமும் உள்ளவர். சிந்தனைச் சிற்பியான அவர் வாழ்வியலிலும் எனக்கு ஆசான். பல்துறை சார்ந்த அறிவே சான்றாண்மை என்பதை எடுத்துக் காட்டியவர். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகும் அவருடன் தொடர்பில் இருந்தேன். நான் எங்கள் ஊரிலேயே புதிதாகத் தோன்றிய பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியனாய்ப் பணி அமர்ந்ததால் நாங்கள் குடும்ப நண்பர்கள் ஆனோம். அவர் ஞாயிறு தவறாமல் தேவாலயம் செல்லும் கிறித்தவர். வழியில் மாரி அம்மனையும் வணங்கும் விந்தை மனிதர். பேராசிரியர் தொ.ப விற்கு அடுத்தபடியாக சைவமும் வைணவமும் அவரிடம்தான் கேட்டிருக்கிறேன். இவ்வாறு நிரம்பிய நூலுடையோர் கேண்மை வாய்த்தது எனக்கான அடுத்த பேறாக அடுக்குவது, கூறியது கூறலாகவும் தம்பட்டம் ஆகவும் அமையும் என்பதால் தவிர்க்கிறேன் (!!!). பேரா. ஜோதிமணி அவர்களுக்கு என்னிடம் ஒரு சிறிய மனக்குறை உண்டு. அது என் இறை மறுப்பு. தம் கருத்தை மற்றவர்களிடம் வலிந்து திணிக்கும் இயல்புக்கு எதிரானவர் அவர். எனினும் இறையருளில் பரிபூரண நம்பிக்கை அவருக்கு இருந்ததால் அவ்வருள் எனக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்ற ஆதங்கம் அவருக்கு. சமயக் கருத்துகளையும் பக்தி இலக்கியத்தையும் அவர் மேற்கோள் காட்டும்போது மிகுந்த (நடிப்பில்லாத) ஆர்வத்துடன் நான் கேட்பதுண்டு. ஆகையால் இறைவன்பால் ஒரு நாள் என்னை ஈர்க்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகக் கூறினார். அவர் நம்பிக்கை அவருக்கு. சவால் விடும் தொனியில் இல்லாமல் நான் அவருக்குப் பதில் சொன்னேன், “இறையுணர்வை இத்துணைப் பகுத்தறிவுடன் அணுகும் உங்களை இறைமறுப்பின்பால் திருப்ப முடியும் என்று எனக்கும் தோன்றுகிறது”. இது குரு, சிஷ்யன் இருவரின் தன்னம்பிக்கையையும் ஒருவர் மற்றவர் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் குறிக்கிறது. இருவருமே தோற்கக்கூடாது என்பது இயற்கையின் நியதியோ என்னவோ, திடீரென்று ஒரு நாள் அவர் தமது கர்த்தருக்குள் நித்திரை கொண்டார். அந்த நேரத்தில் என் கைபேசியும் காலாவதியானதால் ஒரு வாரம் கழித்துப் புதிய கைபேசி வாங்கலாம் என்று சோம்பேறித்தனமாய் இருந்துவிட்டேன். அந்த நேரத்தில் அந்தப் படுபாவி காலன் என் கண்ணையும் காதையும் மறைத்து அவரைக் காவு கொண்டான். மரணச்செய்தி நேரில் ஆள் மூலம் வந்ததும் சென்றேன். எனினும் அவர் மருத்துவமனையில் இருந்த கடைசி நேரத்தில் அவரிடம் பேச முடியாத வருத்தம் எனக்கு நிரந்தரமாகி விட்டது. சோகத்திலும் கவித்துவமாய் அவலச் சுவையில் சொல்வதாய் இருந்தால் அவரது விருப்பத்திற்கு மாறாக நான் இறை மறுத்ததால் அவரது இறைவன் எனக்கு அளித்த தண்டனையோ ! அவர் சீக்கிரம் விடை பெறுவார் என்று எனக்குத் தெரிந்திருந்தால், நான் தோற்று விட்டதாக - அவரது இறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டதாக – நடித்திருப்பேன். உலகத்தாரிடம் அங்கங்கே நடிக்கும்போது எனது குருவானவரின் இறுதி நாட்களில் அவரது மன நிறைவுக்காக நடிக்கக் கூடாதா, என்ன ? ஆனால் அவர் அதை நம்புவது ஐயப்பாடே ! எனது குருவை நான் அறிந்தது போல் அவருக்கும் தமது சீடனைத் தெரியும். மேலும் தமது ஞானபுத்திரனாய் அவரால் அறிவிக்கப்பட்ட நான் கருத்தியலில் அவரிடம் தோற்பதை அவரே விரும்ப மாட்டார். அவரும் எஞ்சாமி !
  9. 'மெல்லத் திறந்தது கதவு' திரைக்கதை போன்ற ஒரு நிறைவுக் காட்சி (climax). மெல்லிய தூறலுடன் இதமாக வருடிச் செல்லும் காற்றாக ஒரு மொழி நடை. வாழ்த்துகள்.
  10. நேரத்துக்கேற்ற கதை நேர்த்தியாய் சொல்லப்பட்டுள்ளது. குற்றத்தின் அளவைக் காட்டிலும் தண்டனை மிகுதியாய்ப் போனது இரக்க உணர்வு மேலிடச் செய்கிறது. சில நேரங்களில் யாருக்கும் இத்தகைய சூழல் ஏற்படுவதுண்டு.
  11. அக்னியஷ்த்ரா - இக்கதைசொல்லி ரசிக்கத்தக்க தனியொரு பாணியைக் கையாள்வது சிறப்பு. பெற்றோர் தந்த பெயரோ தாம் இட்ட புனைபெயரோ வடமொழியே தவிர (என் பெயர்கூட அப்படித்தான்), அவர் கையாளும் மொழியில் இயன்றவரை கலப்பில்லாத தமிழ்ச் சொற்களைக் கையாள்வதும் உருவாக்குவதும் கூடுதல் சிறப்பு. வாழ்த்துக்கள்.
  12. என்னே ஒரு அருமையான திறப்புக்களம் ! வடிவான எழுத்து. தொடர வாழ்த்துகள்.
  13. இயல்பான நடையில் மண் மணக்க நல்ல கதையோட்டம். 'அடுத்த பகுதியில் முடியும்' என்று பகுதி 1 ல் அறிவித்ததும் முடிக்க வேண்டாமே எனத் தோன்றியது. இப்போது 'தொடரும்' என்று போட்டதும் ஆறுதல். இதை நீங்கள் தொடராகவே எழுதலாமோ ?
  14. முதலில் உங்கள் வாசிப்புக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி, திரு.ஈழப்பிரியன். நீங்கள் ரசித்து வாசித்தமை இருமுறை நீங்கள் அளித்துள்ள கருத்துக்களிலிருந்து தெளிவு. குறிப்பாக, உங்களிடமிருந்து இரத்தினச் சுருக்கமாக சில தத்துவார்த்த முத்துக்களை உதிர வைத்தது எனக்கான மகிழ்ச்சி.
  15. கவலையில்லாத மனிதன் சந்திரபாபு அவர்கள் முக்கியக் கதாபாத்திரமாக நடித்து 1960 ம் வருடம் வெளியான படத்தின் தலைப்பு. இத்தலைப்புக்கு முழுத்தகுதியான ஒரு மனிதரை நெடுங்காலம் எனக்கு மிக அருகிலேயே பார்த்திருக்கிறேன். எனது அடுத்த வீட்டின் உரிமையாளரும் அங்கேயே நீண்ட காலம் வசித்தவருமான திரு. ரங்கசாமிதான் அவர். அந்தக் குடியிருப்புப் பகுதியில் 1982ல் முதலில் வீடு கட்டி வந்தவர் அவர்தான். 12 வருடங்கள் கழித்து அவருக்கு அண்டை வீட்டுக்காரனாகும் பேறு பெற்றவன் நான். அவர் உயர்ந்த கொள்கை பிடிப்புள்ளவர் என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை. ஆனால் அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த விஷயங்கள் ஒன்றிரண்டு உண்டு. அதனால் அவர் சில விஷயங்களில் எனக்கு முன்மாதிரி என்றே இன்றளவும் வைத்துள்ளேன். நான் அங்கு குடிவந்தபோதே அவரது ஐந்து பிள்ளைகளும் வேலையிலோ திருமண பந்தத்திலோ கட்டுண்டதால், அவரும் அவரது மனைவியும் மட்டுமே அவ்வீட்டில். பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் அவ்வப்போது வந்து போவார்கள். அவரும் அவரது மனைவியும் அரசுப் பணியில் இருந்தார்கள் அப்போது. துணைவியார் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவும் நமது கதாநாயகர் வருவாயித்துறையில் இளநிலை உதவியாளராகவும் இருந்தனர். “முப்பத்தி மூணு வருஷ சர்வீஸ்” என்று அவர் பெருமையாகக் கூறியதும் நான் தயங்கியபடி கேட்டேன், “சார், உங்கள் துறையில் இத்தனை வருஷமாகவா பதவி உயர்வு தராமல் Junior Assistant ஆகவே வைத்திருப்பார்கள்?” பொதுவாக ஒருவரின் பதவி நிலை, பணி உயர்வு போன்ற தனிப்பட்ட விஷயங்களுக்குள் போவது அநாகரிகம் என்று நினைக்கும் நானே அடக்கமாட்டாமல் கேட்டு விட்டேன். முப்பத்து மூன்று வருடங்கள், ஆரம்ப நிலையான இளநிலை உதவியாளர் என்னும் கொடுமையை என்னாலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் மனிதர் ஒரு மந்தகாசச் சிரிப்புடன் அக்கேள்வியைக் கடந்து சென்றார் பாருங்கள், “தம்பி, நான் அந்த நேரத்தில் நியமனம் ஆன முறைப்படி (ஏதோ 10A1, வழக்கு, கோர்ட் தீர்ப்பு என்றெல்லாம் சொன்னார்) Junior Assistant தான் எனக்கு கியாரண்டி. அடுத்த நிலைக்குச் செல்ல ஏதோ டெஸ்ட் எழுதணுமாம். அதெல்லாம் படிக்க எனக்குப் பொறுமையில்லை; சரக்குமில்லை. அப்புறாம் பதவி உயர்வு கொடுத்து இடமாற்றம் வேற பண்ணுவான். போதும் தம்பி ! நமக்கு என்ன குறை?” என் தந்தை இதே துறையைச் சார்ந்தவர். இவரைப் போலவே இளநிலை உதவியாளராய்ச் சேர்ந்து படிகள் சில கடந்து அப்போது வட்டாட்சியராய் இருந்தார்கள். அவர்கள் சொன்னது, “ஒரு முறை அலுவலக நண்பர்கள் ரங்கசாமியை வலுக்கட்டாயமாகத் தேர்வு எழுத வைத்து, புத்தகங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து, காபி டிபனெல்லாம் வாங்கி வந்து எழுத வைத்தார்கள். மனிதர் சாவகாசமாய் அமர்ந்து அவற்றையெல்லாம் சாப்பிட்டு விட்டு, “வே! உங்களையெல்லாம் மறக்க முடியாது வே!” என்று உணர்ச்சிப்பூர்வமாக நன்றி சொல்லி, விடைத்தாளில் ஏதோ கிறுக்கிவிட்டுச் சென்று விட்டார். நான் அதுகுறித்துக் கேட்டேன். “தம்பி ! அந்தப் புத்தகங்களில் விடை எங்கே இருக்கிறது என்று எவனுக்குத் தெரியும்? அவற்றைக் கொண்டு வந்த நம்ம ஃப்ரெண்ட்ஸ்கே தெரியல!”. பொதுவாக இப்படிப்பட்டவரை ‘சோம்பேறி’ என்றுதான் உலகம் விளிக்கும். அவரை அருகிலிருந்தே பார்ப்பதால் எனக்கு என்னவோ அப்படித் தோன்றவில்லை. பதவி உயர்வுகளை உரிய நேரத்தில் பெற்ற என் தந்தையாரை விட அவர் மகிழ்ச்சியாகவே தோன்றினார். பணியில் சேர்ந்த நாள் முதல் ‘Enterprising’, ‘Active’ என்ற பெயரில் எதையோ விரட்டிக் கொண்டே திரியும் நிம்மதியிழந்த ஜீவன்களை விட அவர் ஒரு உயிர்ப்புள்ள மனிதராகவே தெரிந்தார். சரி, இதிலிருந்து கிடைத்த பாடம்? பணி மேம்பாடு பக்கமே போகாமல் நானும் சித்தராகத் திரிந்தேனா? அவ்வளவு நான் முத்தி அடையவில்லை. அடுத்த நிலைக்கான சிறிய முயற்சியை மேற்கொள்ளாமல் இல்லை. ஆனால் அதையே நினைத்து வாழ்க்கையை வீணாக்காமல் தப்பினேன். ஒரு விரிவுரையாளனாய்ப் பணியில் சேர்ந்த நான் அதே நிலையில் ஓய்வு பெறும் மனநிலை பெற்றேன். அதையும் மீறி வந்த உயர்வினை ‘இலாபம்’ என்று எழுதினேன். அலுவலகம் எனும் உலகில் அமைதியான வாழ்வைப் பெற்றேன். உபயம் : உயர்திரு. ரங்கசாமி அவர்கள். பயன் : அதிகார வர்க்கத்திடம் தேவையில்லாமல் நான் சமசரம் செய்ததில்லை; மனநிறைவுடன் ஒரு தொழிற்சங்கவாதியாய் வாழ்ந்தேன். இளைய தலைமுறைக்கும் இத்தாரக மந்திரத்தைக் கடத்த முற்பட்டேன். அதன் பொருள் புரிந்தோர் பேறு பெற்றோர். சரி. மீண்டும் புகைப்படக் கருவியை (Camera) ரங்கசாமியின் பக்கம் திருப்புவோம். பிரச்சினையே இல்லாத மனிதன்தான் கவலையில்லாத மனிதனாய் வாழ முடியும் என்று நீங்கள் நம்பினால், ஒரு நொடி உங்களைக் கண்ணாடியில் பார்த்து நீங்களே சிரித்து விட்டுத் தொடருங்கள். இல்லறம் நல்லறமாய் அமையாத துர்பாக்கியசாலி அவர். அதற்கு அவரும் காரணமாய் இருந்திருக்கலாமே! இருக்கலாம். இல்லை என்று தீர்ப்பு வழங்க நான் நீதிமான் இல்லை. எது எப்படியாயினும் அது அவருக்கும் துன்பம்தானே ? இங்கு ஒரு நிகழ்வைப் பதிவு செய்ய விழைகிறேன். அவர்கள் வீட்டில் தென்னை நன்றாகக் காய்த்து என் வீட்டு மாடியில் தண்ணீர்த்தொட்டியின் குழாயை அவ்வப்போது பதம் பார்த்தது. ஒரு நாள் முற்றத்தில் நின்று கொண்டிருந்த அந்த அம்மாவிடம் சொன்னேன். உடனே சீற்றத்துடன், “நீங்கள் புதுசு புதுசா ரூம் எடுப்பீர்கள். எங்களுக்கு வேறு வேலையில்லையா?” என்றார் அந்த அம்மா. “என்னது, சம்பந்தமில்லாமல் பேசுகிறார்?” என்று யோசித்த பின்தான் தெரிந்தது; என் வீட்டில் அந்தப் புதிய தண்ணீர்த் தொட்டியே மாடியில் புதிய அறை கட்டியதால்தானே வந்தது ! பின்னர் ரங்கசாமி ஆளை அழைத்து வந்து தேங்காய் பறிக்கச் செய்தார். என்னிடம் சொன்னார், “தம்பி ! அவளிடம் பேசி உங்கள் மரியாதையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். என்னிடம் சொல்லுங்கள்”. இந்த நிகழ்வை நான் இப்போது சொன்னது, வாசிக்கும் உங்கள் நியாயத் தராசு ஒரு பக்கமாய்ச் சாயட்டுமே என்ற எனது அரசியலாக இருக்கலாம். 24x7 அந்த அம்மா கரித்துக் கொட்டுவதைச் சட்டை செய்யாமல், தேய்த்து வாங்கிய சட்டையை மடிப்புக் குலையாமல் எடுத்து அணிவார். சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட வாசனைத் திரவியத்தை அள்ளித் தெளித்து, தினமும் சவரம் செய்து பளபளப்பாக வைத்திருக்கும் முகத்தில் பவுடரால் (அதுவும் வாசனையுடன்) மெருகேற்றிக் கிளம்பி விடுவார். அது அலுவலகத்திற்கு அல்லது கடைத்தெருவில் நட்பு வட்டத்துடன் அரட்டையடிக்கும் தேநீர்க் கடைக்காக இருக்கலாம். அவருக்கு மகிழ்ச்சி எங்கே கிடைக்கிறதோ அங்கேதானே போக முடியும்! வெளியே செல்ல முடியாத நேரமாயிருந்தால் அவரும் குரலை உயர்த்துவார். கவலையில்லாத மனிதர் ஒருவரை சந்திக்கக் கிடைத்தது எனக்கு வாய்த்த பேறு என்றால், தினமும் அவர்களுக்கு இடையில் பரிமாறப்படும் வசவுகள் என் காதில் விழுவது நான் செய்த பாவம். பிள்ளைகள், பேரன், பேத்தி எல்லாம் ஏற்படுவதற்கு மனதளவில் கணவன் - மனைவி ஆக வேண்டிய அவசியமில்லை என்பதை அவர்களிடம் தெரிந்து கொண்டேன். எல்லா வீடுகளிலும் கோப தாபங்கள் எல்லாம் சகஜம்தானே என்று நீங்கள் கேட்கலாம். ஹலோ ! உங்கள் வீட்டில் ஏற்படும் அந்த நிகழ்வுக்குப் பெயர் ஊடல். அது உளவியல் அறிவியல் சார்ந்தது. இவர்கள் வீட்டில் நடப்பதற்குப் பெயர் யுத்த காண்டம்; வெகு சில வீடுகளிலேயே இது அரங்கேறும். கொதி நிலை என்ற ஒன்று உண்டே ! இருவரும் பணி ஓய்வு பெற்றபின் விவாகரத்து வழக்கு நீதிமன்றம் சென்றது. ஒரு மகள் மட்டும் அவர் பக்கமும், மூன்று பிள்ளைகள் தாயின் பக்கமும், ஒரு மகள் நடுநிலை வகித்தும் குடும்பம் சின்னா பின்னமாகியது. வீட்டின் மீது உரிமை கோரும் வழக்கும் பதிவானது. வழக்கு முடியும் வரை தம் பக்கம் நின்ற மகள் வீட்டோடு சென்றார் ரங்கசாமி. அந்த அம்மா மட்டும் இவ்வீட்டில். அவருக்கு யாருடனும் ஒத்துவராது என்று அவரே சொல்லிக் கொள்வார். ஆகையால் மற்ற பிள்ளைகள் அவரவர் வீட்டில். ஒரு நாள் திடீரென்று இரவில் மாரடைப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்; அந்த அம்மா நீள்துயில் கொண்டார். அண்டை வீடு என்பதால் முதலில் கண்டுபிடித்த துர்பாக்கியசாலி நானேதான். அந்த அம்மாவைச் சார்ந்து நின்ற பிள்ளைகளுக்குத் தகவல் கொடுத்தேன். வந்தார்கள். வீட்டுக் கதவை உடைக்கத் தயங்கினார்கள். அப்பா போலீஸில் பொய் வழக்குக் கொடுத்துத் தங்களுக்குப் பிரச்சனை ஏற்படுத்துவார் என்று பேச ஆரம்பித்தார்கள். நான் அவரிடம் சென்று பேசினேன். ‘அக்கம் பக்கத்தார் சாட்சியாக உங்கள் முன்தான் கதவு உடைக்கப்பட்டது என்று இருக்கட்டும்’ என்று அழைத்தேன். “தம்பி ! நீங்கள் வந்து அழைப்பதால் வருகிறேன். மற்றபடி அந்த உறவெல்லாம் எனக்கு முடிந்துவிட்டது. அவளுடன் வாழ்ந்து வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தொலைத்தது போதும்” என்று கிளம்பினார். சுமார் முப்பத்தைந்து வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்காக இல்லாமல், ‘அவருக்கு யாரோ’ எனும் நான் அழைத்ததால் வந்தார் என்பது அவர்களுக்கு இடையில் உள்ள வெறுப்பின் குறியீடு. கதவை உடைத்த பின் அவர் வீட்டின் உள்ளேயே செல்லாமல் போய் விட்டார். “இனி இந்தப் பயலுக என்னை அநாகரிகமாகப் பேச ஆரம்பிப்பானுக. நான் போறேன், தம்பி!” என்று மட்டும் சொன்னார். வீடு அவருக்கே உரியது என நீதிமன்றத்தில் தீர்ப்பானது. சில நாட்களில் வீட்டை விற்றுவிட்டார். அப்புறம் எங்கே சென்றார் என்று எனக்குத் தெரியாது. சுமார் மூன்று வருடங்கள் கழித்து ஒரு நாள் சந்தடி மிகுந்த சாலையில் நான் நடந்து செல்லும் போது ஒரு கார் என்னருகில் வந்து நின்றதை உணர்ந்தேன். அதிலிருந்து முன்பு போல் ‘மேக்-அப்புடன்’ நம் கதாநாயகர் இறங்கினார். “தம்பி, நல்லா இருக்கீங்களா?” என்று கை குலுக்கினார். சில வருடங்கள் கழித்துப் பார்த்த மகிழ்ச்சியை நானும் வெளிப்படுத்தினேன். “ஏய் ! கொஞ்சம் இறங்கு” என்று காரில் அமர்ந்திருந்த சுமார் 55-60 வயது மதிக்கத்தக்க அம்மணியிடம் கூறினார். அந்த அம்மா இறங்கி எனக்கு வணக்கம் தெரிவிக்க, நானும் புன்னகையுடன் வணக்கம் சொன்னேன். “தம்பி! இவள் என் மனைவி. நாங்கள் திருமணம் செய்து ஒரு வருஷம் ஆகுது. இவளும் டீச்சர்தான். இன்னும் ரெண்டு வருஷம் சர்வீஸ் இருக்கு.” நான் அவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தேன். அந்த அம்மாவிடம் சொன்னேன், “நீங்கள் கொடுத்து வைத்தவர். இந்த உலகில் மிக சந்தோஷமான மனிதரைக் கல்யாணம் பண்ணி இருக்கிறீர்கள்”. - சுப. சோமசுந்தரம்
  16. நண்பர் உடையார் அவர்கள் ஈராயிரம் பிறை கண்டதற்குச் சமமாய் வாழ்த்துகிறேன்.
  17. தமது விருப்பங்களாக (Interests) தமிழ், காதல், வீரம் என ஆதித்த இளம்பிறையன் அவர்கள் அடுக்கியது ஒரு மூன்று சொற்கவிதை. தம் வாழிடம் (Location) தமிழ் தேசம் என்றது தனிக் கவிதை. அவர்தம் வாழ்வு 'ரசனை' என்று நாம் சேர்ப்போமே !

  18. ஆயிரத்தில் ஒருவனைப் போல தமிழ்சிறி 'பத்தாயிரத்தில் ஒருவர்'. ஆயிரம் பிறை கண்டத்தைச் போல ராசவன்னியர் இன்று ஈராயிரம் பிறை கண்டவர். இருவருக்கும் வாழ்த்துக்கள்.
  19. நன்றி ஈழப்பிரியன். கோப்பையில் நன்றி சொல்ல ஒரு நாளுக்கு எண்ணிக்கை அளவு உள்ளதால், எழுத்தில் வடிக்க முடியாத நன்றியை எழுத்தில்தான் வடித்தேன்.
  20. தமிழ்சிறி அவர்களுக்கும் யாழ் சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி, நன்றி, நன்றி.
  21. ஆதவன், தமிழ்த் தென்றல் இவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  22. எல்லா வகையிலும் யூத இனத்தோடு நம் இனத்தை ஒப்பிடவில்லை. ஹிட்லர் போன்ற இன வெறியர்களின் இன அழிப்பு முயற்சியை எதிர்கொண்ட யூத இனத்தைப் போல் இலங்கைத் தமிழினமும் சிங்கள இன வெறியை எதிர்கொண்டுள்ளது. யூதர்கள் தமக்கான நிலத்தை (இஸ்ரேல்) அமைத்தது போல் தமிழரும் ஈழம் காண்பர். கரும்புலிகளுக்கு வீர வணக்கம்.
  23. பிறந்த வாழ்த்துக்கள் நிஷாந்தன், தர்மா.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.