Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    33696
  • Joined

  • Days Won

    157

Everything posted by கிருபன்

  1. போதமும் காணாத போதம் – 22 கடலின் முன்னே விரிந்திருக்கும் அடர்ந்த காட்டினுள்ளே குருதி கசிந்துலரா சரீரத்தோடு மூச்சடங்கி கிடந்தாள். அவளது வலதுகரம் திடுமென உயர்ந்து என்னை அழைத்தது. குண்டியிலிருந்து வழியும் காற்சட்டையைப் பிடித்தபடி அவளிடம் ஓடினேன். எனது கையைப் பற்றித் சிரசில் வைத்தாள். அவளது உச்சியில் உலோகத்தின் கொதி. பிடரி பிளவுண்டு மண்ணால் அடைக்கப்பட்டிருந்தது. சரீரத்தை தூக்கியபடி கடலை அடைந்த கணத்தில் மூச்சற்றாள். கடலில் வீசினேன். அலையின் ஒவ்வொரு மடிப்பிலும் உடல் சுருண்டு கடலுக்குள் போவதும் கரையொதுங்குவதுமாயிருந்தது. கழுகுகள் வானத்திலிருந்து கடல் நோக்கிச் சரிந்தன. அவற்றின் கால்களிலிருந்து ராட்சதக் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. ஒரு பேரோசை எழுந்தது. அவளின் குரல் எழுந்து மடிந்தது. காலுக்கடியில் கிடந்த சிப்பியையெடுத்து கடல் மீது வீசினேன். கடலில் மிதக்கும் சரீரத்தில் அந்திச் சூரியன் சாய்ந்தது. அவளது கைகள் வான்நோக்கி உயர்ந்து சூரியனை அறைந்தன. ஒளி மங்கியது. இருண்ட பூமியில் மிதந்துகொண்டே இருந்தாள் சித்தி. இக்கனவை அம்மாவிடம் சொன்னேன். “எப்ப பாத்தாலும் உன்ர கனவிலதான் அவள் வாறாள். என்ர கண்ணிலேயே அவளின்ர உருவத்தைக் காட்டமாட்டாள் போல” அம்மா சொன்னாள். “நாளைக்கு கனவில சித்தி வந்தால், அம்மா இப்பிடி சொல்லிக் கவலைப்படுகிறா, அவாவிட்டையும் போங்கோ என்று சொல்லுறன்” என்றேன். “உந்த வாயாடித்தனம் அவளிட்ட இருந்துதான் உனக்கு தொத்தினது. அவளும் இப்பிடிக் கிரந்தங்கள் கதைச்சு கடுமையா பேச்சு வாங்கியிருக்கிறாள்” “ஆரிட்ட?” ஆரிட்ட வாங்கேல்ல சொல்லு. ஒருக்கால் தம்பியின்ர சந்திப்பில தளபதிமாரவே கூடி நிக்கேக்க ஈகை சொல்லியிருக்கிறாள் “ அண்ணை, உந்தக் குடாரப்பு தரையிறக்கச் சண்டை வெற்றியில “லீமா”ன்ர புத்தி எவ்வளவு முக்கியமானதோ, அதுமாதிரி இராணுவத்தின்ர புத்தியின்மையும் முக்கியமானது. ஏனெண்டு சொன்னால் அவங்கள் சண்டை செய்யிறதப் பார்த்தால் எங்களுக்கு பாவமாய் இருந்தது. ஏதோ வேட்டைத் திருவிழாவுக்கு வேஷம் போட்டுக்கொண்டு திரியிறவே மாதிரியெல்லே வந்தவே” என்றிருக்கிறாள். அதில நிண்ட தளபதியொருத்தர் முகம் மாறி, கோபப்பட்டிருக்கிறார். “தலைவர் என்ன சொன்னவராம்?” அண்டைக்குப் பிறகு கனநாளாய் சந்திப்புக்கு ஆளை எடுக்கிறதில்லை. அதுக்குப் பிறகு ஒருநாள் வேறொரு சந்திப்பில ஈகையைக் கூப்பிட்டு “உன்ர பகிடியை விளங்கிச் சிரிக்கிற நேரத்தில, நாங்கள் இன்னொரு சண்டைக்கு வரைபடம் அடிச்சிடுவம். கொஞ்சம் வாயைக் குறை” என்றிருக்கிறார். “அதுக்கு இவள் சொன்ன பிரபலமான பதில கேள்விப்பட்டிருக்க மாட்டாய்” என்ற அம்மா என்னைப் பார்த்தாள். நான் பதிலென்னவென்று கேட்பதற்குள் தொடர்ந்தாள். “அண்ணை, எங்கட தளபதிமாருக்கு பகிடி விடுகிறது, சிரிக்கிறது எல்லாம் தேசத்துரோகம் இல்லையெண்டு உறுதிப்படுத்திச் சொல்லுங்கோ. அதுவும் உங்களுக்கு முன்னால சிரிக்க சிலர் அம்மானிட்ட கடிதம் வாங்கோணுமெண்டு நினைக்கினம்” என்றிருக்கிறாள். சுற்றியிருந்த ஏனைய போராளிகளும் ஈகை சொன்னதைக் கேட்டுச் சிரித்தனராம். ஈகை சமர்க்களத்தில் பகைவர்க்கு கொடியவள். எளிய வியூகங்களால் எதிரியின் முன்னேற்றத்தை முறியடிப்பவள். வேவு அணியிலிருந்த அனுபவம் அவளது படையியல் வலிமை. ஒருமுறை பூநகரியில் நடந்த வன்கவர் படையினருடனான மோதலில் ஈகையின் சிறப்பான முடிவுகள் இயக்கத்துக்கு பாரிய வெற்றியைப் பெற்றுத்தந்தது. ஈகை புலியில்லை சூழலுக்கு ஏற்றவாறு வேட்டையாடும் சிறுத்தை. ஒருநாளிரவு போராளிகளின் காவலரண்கள் மீது தாக்குதல் தொடங்கியது. நிலை கொண்டிருந்த தனது அணியினரிடம் பதிலுக்கு தாக்காமல் அமைதியாக இருக்குமாறு கட்டளை பிறப்பித்திருக்கிறாள் ஈகை. அந்தப் போர்முனையின் தளபதி ஈகையை அழைத்து இப்படி முட்டாள்தனமாக எதுவும் செய்யாதே என்று திட்டித் தீர்த்திருக்கிறார். தான் நினைத்தது போலவே எதிரியானவர்கள் தாக்குதலில் மும்முரமாக இருந்த வேளையில், தன்னுடைய சிறப்பு அணியினரை ஈகை முன்னேறச்செய்திருக்கிறாள். ஒரு கள்ளப்பாதை வழியாக உறுமறைக்கப்பட்ட இருபது போராளிகள் காட்டிலுள்ள மரங்களைப் போல நின்றிருந்தனர். பின்னர் ஒரே நேரத்தில் பின்னணிச் சூட்டு ஆதரவோடு பதுங்கியிருந்த அணியினர் தாக்குதலை தொடங்கினர். ஈகைக்கு இந்தச் சமரில் பெரிய பெயர் கிட்டிற்று. கிட்டத்தட்ட நாற்பது சடலங்களையும், ஒரு வன்கவர் வெறிப்படையினனை உயிரோடும் கைப்பற்றினார்கள். அவனை உரிய மரியாதையோடு பின்தளத்துக்கு அனுப்பி வைத்தாள். பிறகொரு நாளில் கைதிப்பரிமாற்றம் செய்யப்பட்ட அந்தப் படையினன் தன்னுடைய சொந்தவூருக்குச் சென்று, இயக்கத்திற்கு ஒரு கடிதம் எழுதினான். அதில் ஈகையாளின் போர் அறத்தைப் பற்றி அவன் நினைவு கூர்ந்தது மறக்க இயலாதது” என்றாள் அம்மா. ஈகையாள் சித்தியை உங்களுக்குத் தெரிந்திருக்காது. வன்னியிலிருந்தவர்களே பெரியளவில் அறிந்திருக்கவில்லை. இயக்க உறுப்பினர்களுக்கும் அதே கதிதான். இறுதியாக ஈகையாள் சித்தியை முள்ளிவாய்க்காலில் வைத்துச் சந்தித்தோம். “இனி மிச்சமிருக்கப்போவது தாய் நிலமல்ல, ஓர் உன்னதச் சகாப்தத்தின் நிர்மலமான இறந்தகாலம் மட்டுமே. வெறுமென அதற்காகவே காத்திருக்கிறோம்” என்றாள். சிறகாறா பறவையின் சோர்வு சித்தியில் கிளையோடியிருந்தது. அவளுக்கு அனைத்தும் அர்த்தமற்றதாக தோன்றிவிட்டதா? தியாகமென்பது இனி சொல்லின் ஞாபகமா? விடுதலையென்பது இனி கொடுஞ்சூட்டின் சீழா? பலவீனமடைந்த வீரயுகத்தின் நிர்மலம் தேயாதிருக்கட்டும். நம் வாழ்வு புதைக்கப்படுவதற்கும், விதைக்கப்படுவதற்கும் படைக்கப்பட்டது. நிதமும் துக்கத்தில் தத்தளிக்கும் பூர்வீகரோ நாம் என்று யாரோடு நோவது? யார்க்கெடுத்து உரைப்பது! போரின் குமுறல் ஓசை கூவி முழங்கியது. அம்மா கஞ்சி வைத்தாள். சேமிப்பிலிருந்த குத்தரிசியின் கடைசிச் சுண்டு உலையில் கொதித்தது. கொடூரமான ஏவுகணைகள், பீரங்கிகள் சிதறி வீழ்ந்தன. கஞ்சி கலயங்களோடு சித்தியும், நானும், அம்மாவும் பதுங்குகுழிக்குள் இருந்தோம். “இந்த நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலவும் உலர்ந்து போகும் புல்லைப் போலவும் இருக்கின்றன” என்றேன். “ஓமடா தம்பி! எங்கள் பிதாக்கள் யுத்தத்தின் விளைவுகளை அசட்டை செய்தனர். ரத்த தாகத்தோடு வல்லமையோடிருந்த யுத்தமோ தன் புழுதியால் நம்மை அழிவிக்கிறது. சிவந்த சமுத்திரத்தின் ஓரத்திலே பொஸ்பரஸ்களால் கொல்லப்பட்ட குழந்தைகள் மிதக்கின்றனர். இவ்வுலகில் எங்களுக்கு நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை. அக்கிரமக்காரர் பால்சோற்றைப் பட்சிக்கிக்கிறதைப் போல் சனத்தைப் பட்சிக்கிறார்கள். யுத்தம் எங்களை வெறுத்து தோல்வியை தண்டனையாக அளித்தது. எங்கள் பிதாக்களை அது வெட்கப்படுத்தியது. கரைந்துபோகிற நத்தையைப்போல ஒழிந்துபோகாத பெருங்கனவின் பாதத்தில் சந்ததியைப் பணிய வைத்தார்கள். இன்னும் சில தினங்களில் பட்டயத்தின் கருக்கை மழுக்கிப்போட்டு திக்கற்ற யுத்த அநாதைகளாக ஆகுவோம்” என்ற சித்தியை அன்றிரவே கட்டியணைத்து வழியனுப்பினாள் அம்மா. இரண்டு நாட்கள் எங்களோடு இருங்கள், அதன்பிறகு போகலாமென்று சொல்லியும் சித்தி கேட்கவில்லை. கூடாரங்களும் அழுகுரல்களுமாய் பரவியிருந்த நிணவெளியை ஊடறுத்து தனது கைத்துப்பாக்கியோடு நடந்து மறைந்தாள். மானுடத்திற்கு விரோதமான பெலனுடன் யுத்தம் தொடர்ந்தது. மண்ணின் விடுதலைக்காய் நீதிமானாய் களம் புகுந்தவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள். சுழல்காற்றின் பழிவாங்கல் போலவே கந்தகத் தீயின் சுவாலைகள் ரத்தத்தில் மூண்டன. நாங்கள் யுத்தத்தின் மீது சிறுசொட்டும் நம்பிக்கையாயிராமல் எதன் மீது நம்பிக்கையாயிருக்க வேண்டுமென தீர்மானிக்கமுடியாத அபயமற்றவர்கள். மெய்யாய் பூமியிலே யுத்தம் அழியட்டுமென சபித்து அழும் மனுஷத் திரளின் பட்டயத்தை எதனாலும் தாக்க இயலாது. ஈகையாள் சித்தியை நினைத்து அழுதபடியிருந்தேன். என்னைத் தூக்கி வளர்த்த வரிப்புலித் தாயவள். ஆய்ந்த விரல்களில் வாசம் வீசும் காட்டுப் பூ அவளது நறுமணம். என் தலையில் பேன் பார்த்து, குளிப்பாட்டி என்னையே மகவென தரித்தவள். அவள் எப்போதும் இறந்து போகமாட்டாள் என்று எண்ணிய என் குழந்தைப் பருவத்தின் ஒரு பெளர்ணமி நாளில் சித்தி சொன்னாள். “மகன், நீ வளர்ந்து வந்ததுக்குப் பிறகு, உனக்கொரு சித்தப்பா வருவார். அவரிட்ட நீதான் என்ர பிள்ளையெண்டு நான் சொல்லுவன்.” “நான், உங்கட பிள்ளைதானே சித்தி “ என்றேன். சமர்க்களத்தில் காயப்பட்டு கருப்பை முற்றாகச் சிதைந்து உயிர் மீண்ட ஈகை சித்தி என்னையே கருவாகச் சுமந்தாள். சித்தி புறப்பட்டு எட்டாவது நாளில் எல்லாமும் அழிந்திற்று. அழிவின் வெறுங்காலில் மிதிபட்டோம். கடலோரம் மண்டியிட்டவர்களை கண்முன்னே கொன்று போட்டனர். நாயகர்களின் பட்டயங்கள் மண்ணில் புரண்டு வீழ்ந்திருந்தன. பெருத்த காயங்களுக்கு உள்ளானவர்கள் தங்களுடைய ஆயுதங்களால் தம்மையே கொன்றனர். பிள்ளைகளை ஒருமிக்கச் சாகக்கொடுத்த தாய்நிலமும் தன்னையே வெடிவைத்து தகர்த்துக் கொண்டது. அம்மா, சித்தியை தேடிக் கொண்டிருந்தாள். அவளுக்கு நெருக்கமான மிகச்சிலரில் ஒருவரை மட்டுமே காணக்கூடியதாய் இருந்தது. ஈகை பற்றி எந்தத் தகவலும் தெரியாதென கை விரித்தார். பிறகு இன்னொருவரின் தகவலின் படி, முக்கியமான இடத்தில் நேற்றுவரை இருந்ததாக அறியமுடிந்தது. அம்மாவும் நானும் கடைசித் தடவையாக ஒரு சுற்றுத் தேடிவிட்டு வன்கவர் வெறிப்படையின் வேலிக்குள் போகலாமென முடிவெடுத்தோம். நந்திக்கடல் கண்டல் காடு வரை நடந்து போகலாமென எண்ணினேன். அம்மா வேறொரு திசையில் நடக்கத் தொடங்கினாள். சனங்களின் அழுகுரல் வெடியோசைகள் எல்லாமும் வெறுமை கப்பிய பதற்றத்தை தந்தது. கும்பி கும்பியாக காயப்பட்ட போராளிகள், உப்புக் களிமண்ணையள்ளி காயத்தில் திணித்தனர். எவ்வளவு காயங்களால் அரண் அமைக்கப்பட்டிருந்த மண். ஒரு காயத்தின் குருதியைக் கட்டுப்படுத்த முடியாமல் வெட்கித்து அழுதது. ஈகை உயிரோடு தானிருக்கிறாள். ஆனால் எங்கேயோ தப்பி போயிருக்கலாமெனத் தோன்றுகிறது என்று அம்மா சொல்லத்தொடங்கினாள். நடந்தவற்றை சொல்லுவதா வேண்டாமா என்ற குழப்பம். அம்மாவுக்கு ஈகை சித்தி உயிரோடு இருக்க வேண்டுமென ஆசை. எப்பிடியாவது ஒருநாள் ஈகை வந்துவிடுவாள் என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளவும் செய்கிறாள். ஆனால் இத்தனை வருடங்களாகியும் அம்மாவிடம் சொல்லாத சேதியொன்றை உங்களிடமும் சொல்லவேண்டும். அன்றைக்கு முள்ளிவாய்க்காலில் நானும் அம்மாவும் திசைக்கொன்றாக பிரிந்து தேடினோம் அல்லவா! நான் போன திசையிலிருந்த கண்டல் பற்றைக்குள் ஈகை சித்தியைக் கண்டேன். அவளது வயிற்றை ரத்தம் மூடியிருந்தது. சித்தியின் மூச்சு சீரற்றுத் திணறியது. அவள் என்னை இனங்கண்டு கொண்டாள். தன்னுடைய கழுத்தில் கிடக்கும் சயனைட் குப்பியை எடுத்து வாய்க்குள் திணிக்குமாறு கன்களால் இரந்து கேட்டாள். வீரயுகத்தின் கம்பீர மாண்பையும், எக்கணத்திலும் அஞ்சாத திண்மையையும் தந்தருளிய ஆலம். வாழ்நாள் முழுவதும் சமரில் எதிரிகளையும், துரோகிகளையும் துளி அச்சமுமின்றி நேராய் சந்தித்த அதே கண்களால் சித்தி என்னிடம் கெஞ்சினாள்.என்னால் முடியாது சித்தியென்று கதறியழுதேன். ஊழி பெருத்தோடும் கணம். மீட்சியற்ற பாழ்வெளியில் நாமிருந்தோம். முலையூட்டாத என் தாயின் மகிமைக்கும் மேன்மைக்குமாய்…! ஒரு மகவூட்டும் அமிழ்தமென மண்ணோடு அவளையும் சேர்த்து அள்ளிக்கொண்டேன். முத்தமிட்டேன். அவளது மார்பின் மீது கிடந்த குப்பியை வெளியே எடுத்துக் கொடுத்தேன். கண்களை மூடினேன். உயிர் நொருங்கியது. ஒளிபொருந்திய முகம் திரும்பிய ஈகையாள் சித்தி கண்களை விரித்து என்னையே பார்த்தாள். அசைவற்ற ஒரு இறுமாப்புடன் அவள் மானத்துடன் தப்பித்திருந்தாள். அவளுடைய வயிற்றின் மீதிருந்த குருதியை என் உடலெங்கும் பூசிக்கொண்டு நந்திக்கடலில் இறங்கினேன். காலத்தின் ஊழ், போரின் பலியாடுகளாய் தோற்ற சனங்களை மேய்த்தது. https://akaramuthalvan.com/?p=1902
  2. ஆடு ஜீவிதம்.. 14 வருட காத்திருப்புக்குப் பின் வெளியாகும் படம்..! March 11, 2024, 1:18 pm IST பிருத்விராஜ் நடிப்பில் பிளெஸ்ஸி இயக்கியிருக்கும், ஆடு ஜீவிதம் (தி கோட் லைஃப்) திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அரேபிய பாலைவனத்தில் ஆடு மேய்ப்பவராக பிருத்விராஜ் நடித்திருக்கும் காட்சிகள் இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. ஒளிப்பதிவு, கதைக்களம், எடிட்டிங், இசை, நடிப்பு, இயக்கம் என அனைத்தும் ட்ரெய்லரில் உலகத்தரத்தில் அமைந்துள்ளது. 2008 ல் பென்யாமின் எழுதிய ஆடு ஜீவிதம் நாவலைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் ஹரிப்பாடு பகுதியைச் சேர்ந்த நஜீப் முகமது சவுதி அரேபியாவுக்கு ஆடு மேய்க்கும் வேலைக்குச் சென்று அங்கு மாட்டிக் கொள்வதை அடிப்படையாக வைத்து ஆடு ஜீவிதம் நாவலை பென்யாமின் எழுதியிருந்தார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்த நாவல் வெளியாகும்வரை பென்யாமின் அறியப்படும் எழுத்தாளராக இருக்கவில்லை. நாவல் வெளிவந்த ஒரேயிரவில் ஸ்டார் எழுத்தாளராக கொண்டாடப்பட்டார். ஆடு ஜீவிதம் உடனடியாக பெஸ்ட் செல்லர் வரிசையில் இடம்பிடித்தது. குறுகிய காலத்தில் ஆடு ஜீவிதம் நாவல் 100 மறுபதிப்புகளை மலையாளத்தில் கண்டது. இதுவொரு சாதனை. பிறகு தமிழ், தாய், ஒடியா, அரபு, நேபாள, இந்தி, கன்னடா என்று பல மொழிகளில் இந்நாவல் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டது. இது வெளியான காலகட்டத்தில் நாவலை திரைப்படமாக்கும் தனது விருப்பத்தை இயக்குநர் பிளெஸ்ஸி பென்யாமினிடம் தெரிவித்தார். அதற்கான வேலைகள் தொடங்கின. பிறகு, படத்தின் பட்ஜெட் ஒரு மலையாள சினிமாவுக்கு மிகப்பெரியது என உணர்ந்து, பட முயற்சியை கைவிட்டனர். ஆனால், பிளெஸ்ஸியின் மனதிலிருந்து நாவல் மறையவில்லை. தொடர் முயற்சிகளுக்குப் பிறகு 2017 ல் பிருத்விராஜை வைத்து ஆடு ஜீவிதம் படத்தை எடுப்பதாக அறிவித்தார். 2018 ல் ரஹ்மான் இசையமைப்பாளராக படத்தில் இணைந்தார். கோவிட் காலகட்டத்தில் படப்பிடிப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஆடு ஜீவிதத்தை படமாக்க வேண்டும் என்ற விதை பிளெஸ்ஸின் மனதில் விழுந்து, சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு வரும் மார்ச் 28 படம் திரைக்கு வரவிருக்கிறது. ஒரு படைப்பாளியாக பிளெஸ்ஸியின் காத்திருப்பு பாராட்டப்பட வேண்டியது. 2004 ல் தனது 51 வது வயதில் காழ்ச்சா என்ற தனது முதல் படத்தை பிளெஸ்ஸி இயக்கினார். குஜராத் பூகம்பத்தில் பெற்றோர்களை இழந்து, கேரளா வரும் சிறுவனின் பின்னணியில் உருவான காழ்ச்சா புதியதொரு அனுபவத்தை மலையாள ரசிகர்களுக்கு தந்தது. அடுத்தப் படம் தன்மாத்ராவில் அல்சைமரால் நினைவுகளை இழக்கும் குடும்பத் தலைவனின் கதையை படமாக்கினார். இரண்டு படங்களும் வசூல், விருதுகள் என இரண்டு திசையிலும் கொடிகட்டிப் பறந்தன. அதன் பிறகு இயக்கிய பளிங்கு, கல்கத்தா நியூஸ், பிரம்மரம் படங்கள் சுமாராகவே போயின. 2011 ல் பிரணயம் படத்தின் மூலம் பிளெஸ்ஸி மீண்டும் ரசிகர்களை ஆச்சரிப்படுத்தினார். கடைசியாக அவரது இயக்கத்தில் ஸ்வேதா மேனனின் பிரசவத்தை படம் பிடித்து எடுத்த களிமண்ணு திரைப்படம் வெளியானது. ஒரு படைப்பாளி சாதாரணமாக யோசிக்காத பகுதிகளில் சிந்தனையை செலுத்துகிறவர் பிளெஸ்ஸி. ஒரு படத்திற்கான அவரது அர்ப்பணிப்பு மகத்தானது. அவரது திரைவாழ்க்கையின் உச்சமாக கருதப்படும் படம் ஆடு ஜீவிதம். மார்ச் 28 வெளியாகும் இப்படம், உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://tamil.news18.com/entertainment/cinema-aadu-jeevitham-movie-is-releasing-after-14-years-of-waiting-1374650.html
  3. கோட்டாவின் புத்தகம் March 12, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — கோட்டாபய ராஜபக்ச கடந்த வியாழக்கிழமை ‘என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றுவதற்கான சதி’ (The Conspiracy to oust me from the Presidency) என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் எழுதப்பட்டிருக்கும் அந்த நூலை இலங்கையின் முக்கியமான நூல் நிலையங்களில் பெற்றுக்கொள்ளமுடியும் என்று அவர் கடந்த வாரம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் அறியத் தந்திருக்கிறார். கொழும்பில் அரசியல்வாதிகளையும் இராஜதந்திரிகளையும் அழைத்து பெரும் ஆரவாரத்துடன் நூல் வெளியீட்டு வைபவத்தை நடத்துவதை அவர் தவிர்த்திருக்கிறார். உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் இந்த நூலுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், இலங்கையில் மக்கள் மத்தியில் பெரிய பரபரப்பை நூல் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறமுடியாது. இலங்கையில் இதுகாலவரையில் பதவியில் இருந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளில் மக்கள் கிளர்ச்சியின் விளைவாக அதிகாரத்தைத் துறக்க நிர்ம்பந்திக்கப்பட்ட முதல் ஆளான கோட்டாபய நூலுக்கு வேறு தலைப்பைக் கொடுத்திருந்தால் சிலவேளை கூடுதல் கவனத்தை ஈர்த்திருக்க முடியும். சதி முயற்சி என்பது ராஜபக்சாக்கள் நெடுகவும் கூறிவருகின்ற ஒன்று என்பதால் நூல் ஒரு பழைய கதை என்று பலரும் கருதவும் இடமிருக்கிறது. சதிக் கோட்பாடுகளைப் புனைவது ராஜபக்ச சகோதரர்களுக்கு கைவந்த கலை. 2015 ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்ச தன்னை தோற்கடித்தது இந்திய புலனாய்வுப் பிரிவான ‘றோ’ தான் என்று பகிரங்கமாகவே கூறினார். இலங்கையில் முன்னென்றும் இல்லாத வகையில் இரு வருடங்களுக்கு முன்னர் தங்களை ஆட்சியதிகாரத்தில் இருந்து விரட்டிய ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சியை உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் சதி என்று ராஜபக்சாக்கள் நெடுகவும் கூறிவருகிறார்கள். படுமோசமான பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ஊழல் தலைவிரித்தாடிய தங்களது தவறான ஆட்சிமுறைக்கு எதிராகவே மக்கள் தன்னியல்பாக வீதிகளில் இறங்கி கிளர்ச்சி செய்தார்கள் என்பதை ராஜபக்சாக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. கோட்டாபயவுக்கு முன்னர் ராஜபக்சாக்களின் அதிவிசுவாசிகளில் ஒருவராக இருந்து, பிறகு அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதன் காரணமாக அவர்களை விட்டு வெளியேறிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும் ‘ஒன்பது ; மறைக்கப்பட்ட கதைகள்’ (Nine ; The Hidden Story ) என்ற நூலை கடந்த வருடம் வெளியிட்டு மக்கள் கிளர்ச்சிக்கு பின்னணியில் வெளிநாட்டுச்சதி இருந்ததாகக் குற்றஞ்சாட்டினார். உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பிறகு கோட்டாபய அரசியலில் இறங்குவதற்கான ஒரு அச்சாரமாக 2012 ஆம் ஆண்டில் பத்திரிகையாளர் சி.ஏ. சந்திரப்பிரேமா ‘ கோட்டாவின் போர் ; இலங்கையில் தமிழ்ப் புலிகளின் பயங்கரவாதம் ஒழிப்பு ‘ ( Gota’s war ; The crushing of Tamil Tiger terrorism in Sri Lanka) என்ற நூலை எழுதி வெளியிட்டார். அந்த நூல் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபயவுக்கே போர் வெற்றிக்கான முழுப் பெருமையையம் உரித்தாக்கும் நோக்கில் எழுதப்பட்டது. நீண்டகால மௌனத்தைக் கலைத்து கோட்டாபய தற்போது தனது நூலை வெளியிட்டிருப்பது மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான களத்தை அமைப்பதில் முதல் அடியெடுத்துவைப்பாக இருக்கலாம் என்ற ஊகங்களும் ஒருபுறம் கிளம்புகின்றன. சர்வதேச சக்திகளின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட ஆட்சிமாற்ற நடவடிக்கையின் விளைவாகவே அதிகாரத்தில் இருந்து தான் இறங்கவேண்டி வந்தது என்று கோட்டாபய நூலில் விபரிக்கிறார். ஆட்சிக்கவிழ்ப்பு சதி பற்றிய தனிப்பட்டதும் நேரடியானதும் அனுபவத்தின் விளக்கம் என்று நூலை அவர் வர்ணிக்கிறார். எந்த நாட்டினதும் பெயரைக் குறிப்பிடுதை அவர் தவிர்த்திருக்கிறார். சீனாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான புவிசார் அரசியல் போட்டியே தனது வீழ்ச்சிக்கு பொறுப்பு என்பது அவரது நிலைப்பாடு.2006 ஆம் ஆண்டுக்கு பிறகு சீனாவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட உட்கட்டமைப்புத் திட்டங்கள் இலங்கையில் புவிசார் அரசியல் போட்டிப் போக்கு ஒன்றைக் கொண்டு வந்ததன் விளைவே தனது அரசியல் வீழ்ச்சி என்பது அவரது தர்க்க நியாயம். வெளிநாட்டுச் சதி இருக்கவில்லை என்று எவராவது கூறுவார்களேயானால் அவர்கள் உண்மையில் பத்தாம்பசலிகளாகவே இருக்கமுடியும் என்று வேறு அவர் கூறுகிறார். நூலின் நோக்கம் குறித்து அதை வாசிக்காமேயே சுருக்கமாக விளங்கிக் கொள்ளக்கூடியதாக கோட்டாபய கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை அமைந்திருந்தது. ” விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் நாம் வெற்றிபெற்ற நாளில் இருந்து இலங்கையில் கடுமையான வெளிநாட்டுத் தலையீடு தொடங்கிவிட்டது. 2019 நவம்பரில் நான் ஜனாதிபதியாக தெரிவான நேரம் தொடக்கம் என்னை அதிகாரத்தில் இருந்து அகற்றும் நோக்குடன் உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் செயற்படத் தொடங்கிவிட்டன. ” நான் பதவியேற்ற உடனடியாகவே இலங்கையிலும் உலகம் முழுவதும் கொவிட் — 19 பரவத்தொடங்கிவிட்டது. அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் எனது இரண்டரை வருட பதவிக்காலத்தையும் செலவிடவேண்டியேற்பட்டது. தடுப்பூசி இயக்கத்தின் மூலமாக அந்த பெருந்தொற்று நோயை 2022 மார்ச் மாதமளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததை அடுத்து பொருளாதாரம் மீட்சிபெறத் தொடங்கியதும் என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை சதிகாரச்சக்திகள் தொடங்கிவிட்டன. “இன்று இலங்கையில் வெளிநாட்டுத் தலையீடும் உள்நாட்டு அரசியல் வெளிச்சக்திகளினால் சூழ்ச்சித்தனமாக கையாளப்படும் போக்கும் கசப்பான உண்மையாகிவிட்டது. இலங்கை தந்திரமடைந்ததற்கு பின்னர் முதல் அறுபது வருடங்களில் இத்தகைய ஒரு நிலை காணப்படவில்லை. என்னைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கான அரசியல் முயற்சிகள், சுதந்திரம் பெற்றபிறகு தேர்தல்கள் மூலமாக அமைதியான முறையில் மாத்திரம் ஆட்சி மாற்றங்களைக் கண்டுவந்த இலங்கையின் அரசியலில் புதிய போக்கைக் கொண்டு வந்துவிட்டன. ” அதனால் 2022 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் நாட்டின் எதிர்காலத்துக்கு பாரதூரமான விளைவுகளைக் கொண்டுவரும் ஆபத்து இருக்கிறது. சர்வதேச அனுசரணையுடனான ஆட்சிமாற்ற நடவடிக்கை ஒன்றின் நேரடியான, தனிப்பட்ட அனுபவத்தை விளக்கும் இந்த நூல் இலங்கையர்களுக்கு மாத்திரமல்ல, வெளிநாட்டவர்களுக்கும் அக்கறைக்கு உரியதாக இருக்கும்.” அறகலய பற்றிய வியாக்கியானம் கோட்டாபயவின் நூலில் மிகவும் முக்கியமான பகுதிகள் என்று ஊடகங்கள் தெரிந்தெடுத்து கடந்த இரு தினங்களாக வெளியிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டதாகவே இந்த கட்டுரை அமைகிறது. ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி குறித்து அவர் எழுதிய பகுதிகளை பல ஊடகங்கள் மேற்கோள் காட்டி கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றன. அறகலயவுடன் தொடர்புடைய சகல போராட்டங்களையும் குறிப்பாக கொழும்பில் நடைபெற்ற போராட்டங்களை தொடர்ந்தும் தான் அதிகாரத்தில் இருந்தால் சிறுபான்மைச் சமூகங்களின் நலன்களுக்கு பாதகமான முறையில் சிங்கள பௌத்தர்கள் பலமடைந்துவிடுவார்கள் என்ற பயத்தின் காரணமாக முன்னெடுக்கப்பட்டவை என்று அவர் கூறுகிறார். அறகலய அதன் முதல் நாளில் இருந்தே சிங்களவர்களின் குறிப்பாக சிங்கள பௌத்தர்களின் நலன்களுக்கு விரோதமானதாக அமைந்திருந்ததாகவும் வெளிநாட்டு சக்திகளின் ஆதரவைக் கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.. மக்களின் அவலங்களுக்கு காரணமாக இருந்த பொருளாதார நெருக்கடிக்கு மூன்று ராஜபக்ச சகோதரர்களும் மத்திய வங்கியின் இரு ஆளுநர்கள் உட்பட அவர்களின் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்த சில உயரதிகாரிகளுமே பொறுப்பு என்று 2023 நவம்பர் 14 உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறியபோதிலும், அந்த நெருக்கடிக்கு தனது அரசாங்கம் பொறுப்பு என்பதை கோட்டாபய நூலில் ஒத்துக் கொள்ளவேயில்லை. செய்ததற்கு இரங்கி பச்சாதாபம் கொள்கிற பக்குவத்தை அவர் வெளிக்காட்டவில்லை. பாதிக்கப்பட்ட ஒரு ஆளாகத் தன்னைக் காட்சிப்படுத்தும் அவரின் முயற்சியாகவே நூல் அமைந்திருக்கிறது எனலாம். அறகலய பற்றி அவர் எழுதிய பகுதிகள் வருமாறு ; ” 2022 ஏப்ரில் 9 கொழும்பு காலிமுகத்திடலில் அறகலய தொடங்கி போராட்டக்காரர்கள் கூடாரங்களை அமைத்து ‘கோட்டா கோ கம’ என்று பிரகடனம் செய்ததை அடுத்து ஊடகங்களில் சில விமர்சகர்கள் பொதுவான குறிக்கோள் ஒன்றுக்காக சகல இனக்குழுக்களையும் மதங்களையும் அறகலய ஒன்றிணைத்திருக்கிறது என்று கூறினார்கள். எனது அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்த இளைஞர்கள், யுவதிகள் இனவாதத்தைத் தோற்கடித்துவிட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள். ” ஆனால், காலிமுகத்திடல் அறகலயவில் கூடிநின்றவர்கள் யார் என்பதை எவரும் உண்மையில் ஆராய்ந்துபார்த்தால் அவர்கள் எந்த வகையிலும் எனக்கு எதிரான பிரிவுகளைச் சேர்ந்தவர்களே என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும். “அறகலயவில் சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை பெருமளவில் காணக்கூடியதாக இருந்தது. ஏனென்றால் அங்கு வருவதற்கு சிறுபான்மைச் சமூகங்களைத் தூண்டிய காரணிகள் இருந்தன. விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் நாம் வெற்றிபெற்ற நாளில் இருந்து நான் தமிழர்களுக்கு எதிரானவனாகவே கருதப்பட்டேன். “ஒற்றையாட்சி அரசுக்கு (Unitary state ) பதிலாக ஐக்கிய இலங்கைக்கு (United SriLanka ) கோரிக்கை விடுக்கும் புலம்பெயர் தமிழர்களின் நிகழ்ச்சிநிரலை அறகலயவில் தெளிவாகக்க காணமுடிந்தது. இது சமஷ்டி அரசொன்றை வேண்டிநிற்பவர்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்துவருகிறது. அதனால் காலிமுகத்திடல் போராட்டங்களின்போது ஜனாதிபதி செயலகத்தின் சுவர்களில் அந்த சுலோகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ” 2012 ஆம் ஆண்டில் பொதுபல சேனாவின் தோற்றம் மற்றும் அந்த அமைப்பில் எனக்கு ஈடுபாடு இருந்ததாக கிளம்பிய சந்தேம் காரணமாக நான் முஸ்லிம்களுக்கு எதிரானவனாகவும் நோக்கப்பட்டேன். கொவிட் — 19 பெருந்தொற்றின் விளைவாக சடலங்களை எரிப்பது தொடர்பில் பிரச்சினை கிளம்பியபோது நான் முஸ்லிம்களுக்கு எதிரானவன் என்று ஏற்கெனவே இருந்த எண்ணம் மேலும் வலுவடைந்தது. ” தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குகள் என்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளருக்கே பெருமளவில் கிடைத்த போதிலும், 2019 ஜனாதிபதி தேர்தலில் நான் அதிகாரத்துக்கு தெரிவு செய்யப்பட்டேன். பதவியேற்பதற்கு சிங்கள பௌத்தர்களுக்கு முக்கியமான புனித தலமான ருவான்வெலிசேய வளாகத்தையே தெரிவுசெய்தேன். பதவியேற்ற பிறகு நான் நிகழ்த்திய உரையில் சிங்கள பௌத்தர்களின் வாக்குகளினாலேயே தெரிவுசெய்யப்பட்டதாக கூறியது பல்வேறு வியாக்கியானங்களுக்கு வழிவகுத்தது. ” தமிழ், முஸ்லிம் சமூகங்கள் பல்வேறு காரணங்களுக்காக என்னை எதிர்ப்பதற்கு அறகலயவுக்கு வந்தன. இதை சகல இடங்களிலும் குறிப்பாக கொழும்பில் இடம்பெற்ற போராட்டங்களில் தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது. நான் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருந்தால் சிறுபான்மைச் சமூகங்களுக்கு பாதகமான முறையில் சிங்கள பௌத்தர்கள் பலமடைந்துவிடுவார்கள் என்ற பயமும் அவர்களைத் தூண்டியிருக்கக்கூடும். ” வெளிநாட்டு நிதியுதவியைப் பெறுகின்ற அரசாங்க சார்பற்ற தன்னார்வ நிறுவனங்களின் தாராளபோக்குடைய அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக ஊடகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி, ஜனதா விமுக்தி பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் முன்னரங்க சோசலிஸ்ட் கட்சி என்று பல்வேறு எதிர்க்கட்சிகளும் அறகலயவில் பங்கேற்றன. காலிமுகத்திடலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு 17 கூடாரங்கள் இருந்ததாக அந்த கட்சியின் முக்கிய உறப்பினர் ஒருவரின் தகவல் மூலம் அறியமுடிந்தது. கிரிக்கெட் வீரர்கள், அவர்களின் மனைவிமார், நடிகர் நடிகைகள் என்று பல்வேறு தரப்பினரும் அங்கு நின்றார்கள். ” நூலின் முன்னுரையில் நான் சுட்டிக்காட்டியதைப் போன்று ஒரு புறத்தில் சிங்கள பௌத்தர்களின் நலன்களுக்கும் மறுபுறத்தில் சிங்களவர்களும் பௌத்தர்களும் அல்லாத சகல பிரிவினரின் நலன்களுக்கும் இடையிலான ஒரு போட்டியின் விளைவாகவே நான் அதிகாரத்துக்கு தெரிவு செய்யப்பட்டேன். கத்தோலிக்கத் திருச்சபையுடன் நான் அதுவரையில் உன்னதமான உறவைப் பேணிவந்தபோதிலும், 2021 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இருந்து அவர்களும் எனக்கு எதிராகத் திரும்பினர். ” எரிபொருள், சமையல் எரிவாயு வரிசைகளையும் மருந்து வகைகள் மற்றும் அத்தியாவசிய பாவனைப் பொருட்களுக்கு நிலவிய தட்டுப்பாடுகளையும் இல்லாமற்செய்து மக்களின் இடர்பாடுகளை தணிப்பதுதான் அறகலயவின் குறிக்கோள் என்று ஒரு எண்ணம் எவருக்காவது இருந்திருந்தால் அது வெறும் மருட்சியே. “அறகலயவில் பங்கேற்றவர்களுக்கு பல்வேறு வித்தியாசமான குறிக்கோள்களும் முன்னுரிமைகளும் இருந்தன. அறகலய என்பது அதன் முதல் நாளில் இருந்தே சிங்களவர்களின் குறிப்பாக சிங்கள பௌத்தர்களின் நலன்களுக்கு பாதகமானதாகவே அமைந்திருந்தது. பெருமளவுக்கு அதே குறிக்கோள்களைக் கொண்ட வெளிநாட்டுச் சக்திகள் அறகலயவுக்கு ஆதரவளித்தன.” பெரும்பான்மை இனவாத அணிதிரட்டல் கோட்டாபயவின இந்த விளக்கம் மீண்டும் பெரும்பான்மையினவாத அணிதிரட்டலின் மூலம் மாத்திரமே தங்களால் அரசியலில் செல்வாக்கான நிலைக்கு வரமுடியும் என்ற ராஜபக்சாக்களின் உறுதியான தீர்மானத்தின் ஒரு தெளிவான வெளிப்பாடாகும். தங்களுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளை அவர்கள் மிகவும் சுலபமாகவே வெளிநாட்டுச் சதி என்று கூறிவிடுவார்கள். அறகலய போராட்டம் தொடங்கிய நோக்கம் தெளிவானது. ஆனால், அமைதிவழியில் முன்னெடுக்கப்பட்டு முழு உலகத்தினதும் கவனத்தை இலங்கை நோக்கி திருப்பிய அந்த போராட்டத்தில் அரசியல் புரட்சியொன்றுக்கான பல பரிமாணங்கள் காணப்பட்டன. பரந்தளவிலான வெகுஜனப் போராட்டமாக அறகலய மாறியதும் பல்வேறு அரசியல் சக்திகள் அதற்குள் ஊடுருவி வன்முறை வழியில் திசைதிருப்பியதே அதற்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகளை அரசியல் அதிகார வர்க்கம் நியாயப்படுத்துவதற்கு வசதியான சூழ்நிலையை உருவாக்கிக்கொடுத்தது. அத்துடன் முறையான அரசியல் கோட்பாட்டின் வழிகாட்டலும் தலைமைத்துவமும் இல்லாத மக்கள் போராட்டங்களுக்கு நேரக்கூடிய கதிக்கு ஒரு அண்மைக்காலப் படிப்பினையாகவும் அறகலய அமைந்தது. ஆனால், சிங்கள மக்கள் தங்களுக்கு எதிராக இவ்வளவு விரைவாக கிளர்ந்தெழுவார்கள் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்காத ராஜபக்சாக்களினால் அதை தாங்கிக் கொள்ளமுடியவில்லை. விடுதலை புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக சிங்கள சமுதாயம் என்றென்றைக்கும் தங்களுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்றும் இலங்கையின் ஆட்சியதிகாரம் தங்களது ஏகபோக உரித்து என்றும் ஒரு எண்ணத்தை அவர்கள் வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். தங்களது செயற்பாடுகளை விமர்சனமின்றி சிங்களவர்கள் ஆதரிக்க வேண்டும் என்று ராஜபக்சாக்கள் எதிர்பார்த்தார்கள். அதில் தங்களுக்கு கிடைத்த தோல்வியை நிவர்த்திசெய்து மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கு ராஜபக்சாக்களுக்கு வெளிநாட்டுச்சதி என்ற பிரசாரத்தையும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான அரசியலையும் தவிர வேறு மார்க்கம் இல்லை. மக்கள் கிளர்ச்சியை சிங்கள பௌத்தர்களின் நலன்களுக்கு எதிரானது என்ற கோட்டாபயவின் கருத்து அந்த சமூகத்தின் விவேகத்தை அவமதிப்பதாகும். ஊழல் முறைகேடுகளையும் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தவறான ஆட்சியையும் மூடிமறைப்பதற்கு இனிமேலும் பெரும்பான்மை இனவாத அணிதிரட்டலுக்கு இடமளித்தால் இலங்கைக்கு எதிர்காலமேயில்லை. ராஜபக்சாக்கள் அந்த அணிதிரட்டலை ஏற்கெனவே ஆரம்பித்து விட்டார்கள். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செல்வாக்கை மீளக்கட்டியழுப்பும் முயற்சிகளை முன்னெடுக்கும் ராஜபக்ச குடும்பத்தின் அரசியல்வாரிசு நாமல் ராஜபக்ச கிராமங் கிராமமாக விகாரைகளுக்கு சென்று பிக்குமாரைச் சந்தித்து வருகிறார். சிங்கள பௌத்தர்களிடம் ராஜபக்சாக்களின் இந்த இனவாத அணிதிரட்டல் முயற்சி மீண்டும் எடுபடுமா என்பதை அடுத்த தேர்தல் ஒன்றின் மூலமாக மாத்திரமே தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். தனது வீழ்ச்சிக்கு வெளிநாட்டுச்சதியே காரணம் என்று கூறும் கோட்டாபய, அவர் அதிகாரத்துக்கு வருவதற்காக சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான சுலோகங்களை முன்வைத்து மக்கள் மத்தியில் குரோதங்களை வளர்த்து சிங்கள மக்களின் வாக்குகளை அமோகமாகப் பெறுவதற்கு கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட நச்சுத்தனமான பிரசாரங்களும் கூட ஒரு அரசியல் சதிதான் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும் என்று அரசியல் அவதானியொருவர் தெரிவித்த கருத்து மிகவும் கவனிக்கத்தக்கது. இன்றைய புவிசார் அரசியல் நிலைவரங்களை நோக்கும்போது நாடுகளின் உள்விவகாரங்களில் வல்லாதிக்க நாடுகள் அவற்றின் மூலோபாய நலன்களுக்காக தலையிடும் போக்கு அதிகரித்து வருகிறது. ஆனால், அவ்வாறான தலையீடுகளுக்கு வசதியான சூழ்நிலைகளை ஆட்சியாளர்களே தவிர மக்கள் ஏற்படுத்துவதில்லை. இன்றைய இலங்கை நிலைவரத்தை நோக்கும்போது வரவிருக்கும் தேசிய தேர்தல்களில் வெற்றிபெறுபவர்கள் யார் என்பதை நாட்டுமக்கள் மாத்திரம் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும் என்று சொல்லமுடியாமல் இருக்கிறது. வல்லாதிக்க நாடுகள் அவற்றின் நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்காக வெவ்வேறு அரசியல் கட்சிகளை தங்கள் செல்லாக்கிற்கு உட்படுத்தும் வியூகங்களை வகுக்கின்றன என்பது ஒன்றும் இரகசியமானது அல்ல. கோட்டாபயவின் நூல் குறித்து பல்வேறு விமர்சனங்கள் தொடர்ச்சியாக வரும் என்று எதிர்பார்க்கலாம். இது இவ்வாறிருக்க, ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் தன்னந்தனி உறுப்பினராக பாராளுமன்றத்தில் இருந்துகொண்டு எவ்வாறு ஜனாதிபதியாக வந்தார் என்ற கதையை நூலாக விரைவில் வெளியிடவிருப்பதாக கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன அறிவித்திருக்கிறார். அவர் ஏற்கெனவே ஜனாதிபதியைப் பற்றி பத்திரிகைகளில் வெளியான கேலிச்சித்திரங்களை தொகுத்து ஒரு நூலாக கடந்தவாரம் வெளியிட்டிருந்தார். அதிகாரத்தை விட்டு ஒடிப்போனவர் தனது கதையை வெளியிட்ட கையோடு அவரின் இடத்துக்கு அதிகாரத்துக்கு வந்தவரின் கதையும் வரவிருக்கிறது. வாசிப்போம். ( ஈழநாடு ) https://arangamnews.com/?p=10539
  4. புனைவு நன்றாக இருக்கின்றது. ஏன் அஸ்தியை (இறந்தவரின் சாம்பலை) வைத்திருப்பது ஜேர்மனியில் குற்றமாக உள்ளது?
  5. ரஞ்சித்துடன் வேலை செய்தவர் இள வயதில் குணப்படுத்தமுடியாத நோயால் இறந்தது மிகவும் கவலையானது. அவர் தொழில் நுணுக்கங்களை துரிதமாகக் கற்று முன்னுக்கு வந்து, எல்லோருடனும் நட்பாக பழகி, அவர்களின் அன்பைப் பெற்றதையும், அவரின் துயரமான இறுதி நிகழ்வையும் கண்முன்னே கொண்டுவந்த ரஞ்சித்துக்கு நன்றி.
  6. வானூர்திப்படையில் இணைய யாழில் 250 பேர் விண்ணப்பம் கண்காட்சி ஊடாக ஆட்சேர்ப்பு (ஆதவன்) சிறிலங்கா வானூர்திப் படையில் இணைந்து கொள்வதற்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளையோர் 250 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று அரச தலைவர் பணிக்குழாம் பிரதானியும், தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். முற்றவெளியில் சிறிலங்கா வான்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கண்காட்சி இடம்பெற்றது. https://newuthayan.com/article/வானூர்திப்படையில்_இணைய_யாழில்_250_பேர்_விண்ணப்பம்
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் @புங்கையூரன் அண்ணா🎉🎂🎊
  8. படம் திரையில் பார்த்தேன். சுற்றுலா போன இடத்தில் அதல பாதாள குழிக்குள் விழுந்த நண்பனைக் காப்பாற்றுவதுதான் கதை. எந்த நிலையிலும் கைவிடாமல் இருக்கும் நட்பு! வழமையான மலையாளப் படத்தின் யதார்த்த நடிப்பு! எதுவித பொறுப்புணர்வும் இல்லாத இளைஞர்களின் சுற்றுலாதான். ஜெயமோகனின் விமர்சனத்தில் உள்ளதுபோல குடிகுடிகுடி என்று குடிப்பதும், எச்சரிக்கைகளை மீறுவதும் அப்பட்டமாகவே படத்தில் காட்டப்பட்டுள்ளது. நாங்கள் நண்பர்களுடன் ஊரில் ஒன்றுகூடலுக்குப் போகும்போது இப்படித்தான் இருந்தோம். ஆனால் குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டவில்லை. அவை மேற்கத்தைய நாடுகளில் இருந்து கற்றுக்கொண்ட பண்புகளால் இருக்கலாம்! பாட்டில் பெரியாரைப் பற்றியும் சில வரிகள் வருகின்றன! படத்தில் காட்சிகள் வேறு! குடிக்கொண்டாட்டம்! யானை டாக்டர் கதையைப் படிக்க (மூன்று பகுதிகள்!) Chapter 1 : http://www.jeyamohan.in/?p=12433 Chapter 2 : http://www.jeyamohan.in/?p=12435 Chapter 3 : http://www.jeyamohan.in/?p=12439
  9. போதமும் காணாத போதம் – 21 அதிபத்தன் இயக்கத்திலிருந்தவர். அம்மாவுக்கு நெருக்கமான ஸ்நேகிதன். என்னுடைய சிறுவயதில் அதிபத்தனோடு சுற்றிய இடங்கள் இப்போதும் நினைவிலுள்ளன. நீந்துவதற்குப் பயந்த என்னைக் குளங்களிலும், வாய்க்கால்களிலும் கொண்டு சென்று பயிற்றுவித்தார். ஒருநாள் செம்பியன்பற்று கடலுக்கு அழைத்துச் சென்று நீந்து என்றார். அலைகள் பொங்கி ஆர்ப்பரிக்கும் வெயில் பொழுதில் நீந்தத் தெரியாது என்றேன். “அலைக்குள்ள இறங்கினால் தான் நீந்த வரும். உள்ள போ” என்று தூக்கி வீசினார். கால்களை அடித்து, கைகளை வீசி மூச்சுத்திணறி எழுந்து நின்றேன். கரையில் அமர்ந்திருந்த அதிபத்தன் நீந்து…நீந்து என்றார். அலைசுருட்டி என்னை இழுத்துச் சென்றுவிடுமோவென அஞ்சி அழுதேன். என்னைக் காப்பாற்றுங்கள் என்று கதறினேன். கடலின் பேரோசையில் ஒரு குழந்தைத் தும்மலென அடங்கியது என் குரல். “நீந்திக் கரைக்கு வா” என்றார். உடலை நீரில் கிடத்தி கால்களை அடித்து, கைகளை மாறி மாறி வீசினேன். அதிசயமாகவே இருந்தது. ஒரு கலமென என்னுடல் தண்ணீரில் நகர்ந்தது. “இவ்வளவு தான் நீச்சல், இன்னும் வேகத்தைக் கூட்டு” என்றார். கரைக்கு வந்ததும் கடலைப் பார்த்தேன். வடிவு வனைந்த திரவக்கோலமென அமைதியாய் அசைந்தது. இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் பாரிய போர் நடவடிக்கையொன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் செய்தனர். அதே நாளில் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த வன்கவர் வெறிப்படையினர் ஆனையிறவை கைப்பற்றும் முகமாக தாக்குதல்களைத் தொடர்ந்தனர். ஆனால் தரைவழியாகவும், கடல் வழியாகவும் இயக்கம் முன்னேறிச் சென்றது. யாழ்ப்பாணத்தின் கடலோரக் கிராமங்களில் வதியும் சனங்களை இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு புலிகளின் குரல் பண்பலை அறிவிப்புச் செய்தது. யாழ் செல்லும் படையணியினரின் வியூகங்கள் வெற்றி அடைவதாக வன்னி முழுதும் பேச்சுக்கள் புரண்டன. பண்பலையில் யுத்தம் நேரடி வர்ணனை செய்யப்பட்டது. நாகர்கோவில், கண்டல், முகமாலையென போராளிகளின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க இயலாமல் வன்கவர் வெறிச் சேனைகள் பின்வாங்கிய செய்தி வந்து சேர்ந்தது. கடல் வழியாக படையணிகளை தரையிறக்கும் முயற்சியில் இயக்கம் தீவிரம் காட்டியது. அலைகளில் யுத்தப் பேரிகைகள் எழுந்தன. கடும்புயல் திகைப்போடு கந்தகம் குடித்தது கடல். போரிடும் பொருட்டுப் போராளிகளைப் பெருக்கினார்கள். பளையிலுள்ள வடபோர்முனை கட்டளைப் பணியகத்தில் கூடினார்கள். அவர்கள் கூடிய பளை எனும் இடம் யாழ்ப்பாணத்திற்கும் ஆனையிறவுக்கும் இடையில் இருந்தது. அந்த நாட்களில் ஓரிரவு அவருக்குப் பிடித்தமான நெஞ்சொட்டி பாரை மீனுடன் வீட்டிற்கு வந்திருந்தார் அதிபத்தன். சமையல் முடித்து உணவைப் பரிமாறிய அம்மா “வெள்ளனவா, யாழ்ப்பாணம் போயிடுவமோ” என்று கேட்டாள். உறக்கம் கண்களைச் சொருக அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்தார். அம்மா எதையோ புரிந்து கொண்டவளைப் போல சரி, “மீன் துண்டைப் போட்டுச் சாப்பிடுங்கோ” என்றாள். அதிபத்தன் விடைபெறும் போது “சோதி பார்க்கலாம். போயிட்டுத் திரும்ப வாறனோ தெரியாது” என்றார். “இதென்ன புதுப்பழக்கம். போனால் வரத்தானே வேணும். வாங்கோ” அம்மா சொன்னாள். “நாளைக்கு கடலூடாக ஒரு அணியைக் கூட்டிக்கொண்டு வெளிக்கிடுகிறன். உயிர் மிஞ்சினால் ஆச்சரியம் தான்” என்றார். நற்செய்திக்காய்ப் பொருதும் வாழ்வு. சனங்களுக்கு எதிரான அக்கிரமக்காரர்களை அஞ்சாமல் வதம் செய்யும் அதிபத்தன் போன்றவர்களின் நெஞ்சுரத்தில் நிலம் விளைகிறது. சாவினைப் பற்றிய கவலை நெரிக்க, எங்கள் பகைவர்கள் இழப்புக்குள்ளாவர். தாய்மண் விடுதலையால் இரட்சிக்கப்படுமென்ற ஆசையோடு வழியனுப்பினோம். அம்மா வீட்டிற்குள் நுழைந்து படத்தட்டிலிருந்த விளக்கை ஏற்றிவைத்தாள். சுடர் பெருத்த நள்ளிரவின் வெளிச்சம் காலாதீதமாய் சுடர்ந்து எரியட்டும் என்றாள். “அதிபத்தனுக்கு எதுவும் நடக்காது. அவன் திரும்பி வருவான். அவன் வரும்வரை அணையாமல் எரியட்டும் இச்சுடர்” என்ற அம்மாவிடமிருந்து உயிர் உருகி கண்ணீராய்ச் சிந்தியது. வன்னியெங்கும் இச்சுடரின் ஒளி பெருகியது. போர்ப் படகுகள் அலைகளைப் பிளந்தன. அதிபத்தன் விண்மீனை வணங்கினான். மூன்று நாட்களாக நடந்து வந்த மோதல்களில் போராளிகள் வாகை சூடினார்கள். நூற்றுக்கணக்கான பகைவர்கள் கொன்று குவிக்கப்பட்ட செய்தியறிந்து வன்னிச் சனங்கள் பெரிதும் மகிழ்ந்தனர். அதிபத்தன் கடலில் நின்றான். வன்கவர் வெறிப்படையின் போர்க்கப்பல்கள் கடற்புலிகளில் படகுகளை முற்றுகையிட்டன. எங்கும் தப்பவியலாதவாறு இருதரப்பினரும் அழியும் வரை போரிட்டனர். அதிபத்தனின் கட்டளையேற்று நடந்த முறியடிப்புச் சமரில் போராளிகள் வென்றனர். இரண்டு போர்க்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. வானிலிருந்து அக்கினி வீழ்ந்த கடலின் மீது போர் விமானங்கள் பறந்து போயின. போராளிகளின் படகுகள் சுக்குநூறாய் சிதறின. தகன பலியிடும் பீடமென கடலில் ஆயுதமும் மாமிச துண்டங்களும் மிதந்தன. அதிபத்தனின் படகு சேதமடைந்திருந்தது. அவருடைய முழங்கையில் சிறிய காயம் ஏற்பட்டிருந்தது. தேசத்தின் சிறப்புக்குரிய ஊழியன் போரில் காயப்படுகிறான். நிலம் விசுவாசித்தவன் உயிர் துறக்கிறான். அடுத்தடுத்த நாட்களிலேயே களமுனையின் நிலவரம் பீதியாயிற்று. போராளிகளில் ஒரு தொகையினர் காயப்பட்டனர். யாரும் எதிர்பாராத முற்றுகை அகழிக்குள் அகப்பட்ட போராளிகளை பகைவர் கொன்று தீர்த்தனர். தரைவழியாகவும், கடல் வழியாகவும் பலவீனப்பட்டு இயக்கம் பின்வாங்கியது. தெய்வமே! உன்னுடைய சனங்களுக்கு நல்லவராயிருமென்று வன்னிச் சனங்கள் சோகம் தாளாது வேண்டினர். பார்க்கிறவர்களின் எலும்புகள் நடுங்குமளவுக்கு போராளிகளின் வித்துடல்கள் குவிக்கப்பட்டன. குணப்படுத்த முடியாதளவு நிலத்தின் சித்தம் பிறழ்ந்திருந்தது. மகா உன்னதமான தியாகம் தனது சிரசில் இத்தனை வித்துடல்களாலேயா மகுடம் அணிய வேண்டும்! அணையாமல் எரிந்து கொண்டிருந்தது விளக்கு. இரும்புத் தடியால் மண்குடத்தை உடைப்பதைப்போல எங்கள் தேசத்தை அழிக்கமுடியும் என்ற பகையின் இறுமாப்பை சில்லுச்சில்லாக உடைத்தவருள் அதிபத்தன் தலையாயவர். வீரச்சாவு அடைந்தவர்களின் விபரங்களை வாசித்து அறிந்தோம். அதிபத்தனின் பெயரில்லை. “வந்திடுவான். இப்பிடித்தான் இந்தியாமி காலத்திலையும் அவனுக்காக காத்திருந்தனாங்கள்” என்றாள் அம்மா. நாங்களிருந்த கிராமத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. வேறொரு திசையிலிருந்து பகைவர் முன்னேறத் திட்டமிட்டிருப்பதாக போராளிகள் கூறினர். அந்த விளக்கை ஏந்தியபடி அம்மா இடம்பெயர்ந்தாள். காற்றிலும் அணையாதவாறு தன்னுடைய வலது உள்ளங்கையைப் பக்கவாட்டில் குவித்து நடந்தாள். இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த, கிளிநொச்சியில் “அதிபத்தனின் அணையா விளக்கு” வைப்பதற்கு அம்மாவொரு பீடத்தைக் கட்டினாள். வேப்பமரத்தின் கீழே எல்லாப்பொழுதும் சுடரும் விளக்கைப் பார்த்து இது எந்தத் தெய்வத்திற்கு என்று கேட்காதவர்கள் மிகக் குறைவு. இது எங்கட தெய்வம். என்ர ஸ்நேகித தெய்வம் அதிபத்தன்ர அணையா விளக்கு” என்றாள். சமுத்திரத்தின் நட்சத்திரமே அதிபத்தா! என்று அடிக்கடி உச்சரிக்கத் தொடங்கினாள். போர் சகிக்கவியலாத அகோர வேதனை. அம்மாவிடம் வந்திருந்த முக்கிய போராளியொருவர் இயக்கத்தின் போக்குகள் பிடிக்கவில்லையென கூறினார். ஆயுத, ஆளணி பலமற்று சண்டையில் இறங்கினால் இப்படித்தான் விளைவுகள் தொடருமென்றார். அவரின் சொற்கள் உண்மையும் தூய்மையுமானவை. நெருப்பில் ஏழுமுறை உருக்கித் தூய்மையாக்கப்பட்ட வெள்ளியைப் போல தூய்மையானவை. அம்மா எதுவும் கதையாமல் உணவைப் பரிமாறினாள். நடந்து முடிந்த சண்டையில் அதிபத்தன் வீரச்சாவு என்ற செய்தியைச் சொன்ன போதுதான், அவரைக் கடிந்து கொண்ட அம்மா “அவன் வீரச்சாவில்லை. வருவான்” என்றாள். எனக்குமே அவர் சொன்னதில் உடன்பாடில்லை. வீரச்சாவு என்றால் இயக்கமே அறிவித்திருக்கும். மறைப்பதற்கு ஏதேனும் காரணங்கள் இருக்குமாவெனக் கேட்டேன். “ஆள் காயப்பட்டிருக்கு. அவரோட படகில இருந்த ஒரேயோருத்தர் மட்டும் வந்திருக்கிறார். அவன்ர தகவலின் படி ஆள் மிஸ்சிங்” என்றார். “மிஸ்சிங்கா?” “கடுமையான சண்டை நடந்து, சிதறிப் போயிருக்கினம். அதிபத்தன் மட்டும் தனியொரு படகில நிண்டு சண்டை செய்திருக்கிறார். அதுமட்டுந்தான் இறுதித் தகவல்.” என்றார். அம்மா விளக்கிற்கு எண்ணெய் விட்டதும் திரிச்சுடர் பிரகாசம் கொண்டது. பகலின் மீது சிறிய விதையென அது வளர்ந்து அசைந்தது. ஒரு வேலையாக மாங்குளம் சென்று வீட்டிற்குத் திரும்ப இரவாகியது. அம்மா வெளியே அமர்ந்திருந்தாள். “முகம், காலைக் கழுவிட்டு வா. சாப்பிடலாம்” என்ற அவளுடைய குரலில் வருத்தம் தோய்ந்திருந்தது. அன்றிரவு படுக்கையில் கேவி அழுத அம்மாவுக்கு ஆறுதல் சொன்னேன். அவருக்கு எந்தத் தீமையும் நேர்ந்திருக்காதென்று தெம்பூட்டினேன். அதிகாலையில் எழுந்து விளக்கு வைத்திருக்கும் பீடத்திற்குப் போனாள். அவளுடன் நான் செல்லாமல் படுக்கையில் விழித்திருந்தேன். அம்மா விளக்கில் திரிதீண்டி எண்ணெய் விட்டாள். அதிபத்தா! உனது கால்களால் அளந்த வன்னி நிலம் பதைபதைக்கிறது. நீ களமாடி வென்ற மண்ணின் பகுதிகள் பல பறிபோய்விட்டன. ஏன் இந்த நிலத்திற்கு நீயும், உனக்கு நிலமும் முக்கியமானது? ஏன் இந்தச் சனங்கள் முக்கியமானவர்கள்? உன்னை அவர்கள் பிரிந்து தவிக்கிறார்கள். சிலர் நினைவுகூருகிறார்கள். ஆனால் நீயோ நிலவாகவும் சூரியனாகவும் வானில் எழுந்து ஆச்சரியப்படுத்துகிறாய்! உன் வருகைக்காய் காத்திருக்கிறது இந்தச் சுடர் பீடம். நீ கெதியாக வா. உனக்குப் பிடித்த நெஞ்சொட்டி பாரை மீன்கள் என் கனவில் நீந்துகின்றன என்றாள். கிளிநொச்சியை விட்டு இடம்பெயருமாறு சனங்களுக்கு உத்தரவு வந்தது. அம்மா அதிபத்தனின் அணையா விளக்கை ஏந்திக் கொண்டு நகர்ந்தாள். கிளிநொச்சி பகைவரிடம் அணைந்தது. தரையிலிருந்த மக்கள் கடல் நோக்கி ஒதுக்கப்பட்டனர். இயக்கத்தினர் ஆயுதங்களையும், முகாம்களையும் மாற்றிக்கொண்டனர். சனங்கள் வீதிகளிலும், காடுகளிலும் கூடாரங்களை அமைத்தனர். போர் விமானங்கள் தினமும் நான்குமுறை மக்கள் குடியிருப்புக்களின் மீது குண்டுகள் வீசின. அவலப் பேராற்றின் தெருக்களில் அணையா விளக்கோடு நடந்து சென்ற அம்மாவை எல்லோரும் புதினமாகப் பார்த்தார்கள். என்ன வேண்டுதலோ என்று சிலர் குசுகுசுத்தார்கள். முள்ளிவாய்க்கால் கடற்கரையில் நான்கடி நீளமும் மூன்றடி ஆழமுமான பதுங்குகுழிக்குள் நானும் அம்மாவும் விளக்கை பாதுகாத்திருந்தோம். அம்மாவுக்கு விலக்கான நாட்களில் பதுங்குகுழிக்குள் சிறிய குழி தோண்டி விளக்கை வைத்தாள். “நிலத்துக்கு கீழ இருந்தால், அதை மனுஷத் தீட்டு தீண்டாது” என்றாள். முள்ளிவாய்க்காலில் விளக்கெரிக்கும் எண்ணெய் தீர்ந்து கொண்டிருந்தது. விளக்கை அணையவிடக் கூடாதென அம்மா உறுதி பூண்டிருந்தாள். ஒரு போராளியிடம் கோரிக்கையாக “விளக்கெரிக்க எண்ணெய் வேண்டும், உங்களிடம் இருந்தால் தாருங்களேன்” என்றாள். இருந்தால் கொண்டுவந்த தரச்சொல்லுகிறேன் என்றார். மூன்று நாட்கள் கழித்து அம்மாவுக்கு ஒரு யோசனை தோன்றிற்று. “நந்திக்கடல் போய் நீரெடுத்து வரலாம். அந்த உப்பு நீரில தானே, வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் விளக்கெரிக்கிறவே” என்றாள். “அம்மா அது கோவிலுக்கு எரியும். இந்த விளக்குக்கு எரியுமே” கேட்டேன். “அந்தத் தெய்வத்துக்கே தெரியுமடா, சனங்களைக் காக்கிறது எந்த தெய்வமெண்டு. இந்த தண்ணியில விளக்கு எரியாட்டி கண்ணகியின்ர அற்புதமெல்லாம் பொய்யிலதான் சேர்மதி கேட்டியோ” என்றாள். நானும் அம்மாவும் விளக்கை எடுத்துக் கொண்டு நந்திக்கடலுக்கு போகும் பாதையில் நடக்கத் தொடங்கினோம். கடுமையான மோதல் நடந்து கொண்டிருந்தது. தலையைத் தூக்கி நடந்தால் மரணம். சிறிது தூரத்திலேயே நானும் அம்மாவும் நிலத்தோடு நிலமாக ஊர்ந்தோம். அம்மா தன்னுடைய கையில் விளக்கைச் சுமந்திருந்தாள். நாங்கள் நந்திக்கடலை அடையமுடியாதவாறு கடுமையான மோதல் தொடர்ந்திருந்தது. அப்படியே நானும் அவளும் நிலத்திலேயே படுத்துக் கொண்டோம். போராளிகள் சிலர் எங்களைப் பார்த்ததும் “ஓடுங்கோ அம்மா. இனிமேலும் இஞ்ச இருக்கமுடியாது. நாங்கள் குப்பி கடிக்கப்போகிறோம் “என்றனர். அம்மா ஒரு போராளி அக்காவை அழைத்து “எனக்கு கொஞ்சம் நந்திக்கடல் தண்ணி வேணும் மோளே, எடுத்து தருவியளோ” என்று கேட்டாள். “அந்தத் தண்ணி எதுக்கென இப்ப” கேட்டாள். அம்மா விளக்கை காட்டி, “இந்த விளக்கை அணையவிடக் கூடாது மோளே, இது அதிபத்தன்ர அணையா விளக்கு” என்றாள். அந்த அக்காவுக்கு அம்மா சொன்னது விளங்கவில்லை. ஆனாலும் அவள் நந்திக்கடல் தண்ணீரை ஒரு வெடிகுண்டின் வெற்றுக் கோதில் நிரப்பிக்கொண்டு வந்து கொடுத்தாள். கடுமையாய் சுடுகுது என்றாள் அம்மா. அணையைத் துடிக்கும் சுடரின் அடித்திரி வேரில் நீரூற்றினாள். சுடர் எழுந்தது. வெற்றுக்கோதில் இருந்த மிச்சத் தண்ணீரை தாங்கியபடி அப்படியே நிலத்தில் கிடந்தோம். நந்திக்கடல் நீரில் அதிபத்தனின் அணையா விளக்கு நின்றெரிந்தது. நிணத்தில் எரிந்த நிலம் கருகி வீழ்ந்தது. அம்மாவின் ஆடைகளைக் கழற்றி நிர்வாணமாக்கிய சிப்பாய், அவளது அடிவயிற்றில் சிவந்து தகிக்கும் பகுதியை சந்தேகித்து துப்பாக்கியின் நஞ்சுக் கத்தியால் குத்திக் கிழித்தான். அவளினுள்ளே ரத்தத்தில் எரியும் சுடர் விளக்கு அசைந்தணைய அதிபத்தனின் நெஞ்சொட்டிப் பாரைகள் நந்திக்கடலில் செத்து மிதந்தன. https://akaramuthalvan.com/?p=1878
  10. ''அனைவரையும் சுட்டுக்கொல்ல கட்டளையிட்டவர் கோத்தா'' - சி. வி. விக்னேஸ்வரன் முன்னாள் அரச தலைவர் கோத்தாபய ராஜபக்ஷ மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரன், இராணுவத்தின் வசமிருந்த பல இடங்களில் இன்று மனித எலும்புக்கூடுகள் வெளி வருகின்றன. சர்வதேச விசாரணை ஒன்று நடைபெற்றால் உண்மை வெளிவந்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு - உள்நாட்டு சதியின் விளைவே தாம் பதவியிலிருந்து நீங்கியமை என்று முன்னாள் அரச தலைவர் கோத்தாபய ராஜபக்ஷ கூறுகின்றாரே! உங்கள் கருத்து என்ன? என்ற வாரத்துக்கொரு கேள்விக்கு பதிலளிக்கும் போதே நீதியரசர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். துஷ்டர்களைக் கண்டால் தூர விலகுவது நாம் காலம் காலமாக செய்து வரும் ஒரு செய்கையாகும். போர் காலத்தின் போதும் அரசியலில் ஈடுபட்ட காலத்தின் போதும் கோத்தாபய, துஷ்டனாகவே வாழ்ந்து வந்துள்ளார். 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்ட போது, இராணுவ சிங்கள நண்பர்களுடன் எம்மவர் சிலர் பேச நேர்ந்தது. அவர்கள் கூறிய கூற்று அந்த காலகட்டத்தில் எனக்கு பாரிய அதிர்ச்சியைத் தந்தது. அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் வெள்ளைக் கொடிகளைக் கையில் ஏந்தி சரணடைந்த தமிழ் மக்களை என்ன செய்ய வேண்டும் என்று முல்லைத்தீவு படையணியினர் வினவிய போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தாபய சற்றும் சிந்தியாது 'அவர்கள் யாவரையும் சுட்டுக் கொன்றுவிடுங்கள் என்று கட்டளை இட்டார்' என்று அந்த இராணுவ அதிகாரிகள் கூறினர். இராணுவத்தினர் கைவசம் அன்று இருந்த பல இடங்களில் இன்று இறந்தவர்களின் மனித எலும்புகளும் எலும்புக்கூடுகளும் நிலத்திலிருந்து வெளிவருகின்றன. உண்மையான சர்வதேச விசாரணை ஒன்று நடைபெற்றால் சரணாகதி அடைந்தவர்கள் எவ்வாறு, யாரின் கட்டளைக்கமைய காணாமல் போனார்கள் என்ற விடயம் வெளிவந்துவிடும். தமது வீழ்ச்சிக்குத் தமிழர்களையும் முஸ்டிம் மக்களையும் மறைமுகமாகக் குற்றஞ்சாட்டும் கோத்தாபய அரகலயவில் பங்கு பற்றியோர் 99 சதவிகிதமானோர் சிங்கள இளைஞர்களே என்பதை மறந்துவிடக்கூடாது. உயிர்த்த ஞாயிறு தின குண்டு வெடிப்பு நடைபெறமுன், எவ்வளவு காலமாக, யாருடன் கூட்டுச் சேர்ந்து குறித்த சம்பவம் நடைபெற பதவியில் இருந்த சிலர் பிரயத்தனங்களில் ஈடுபட்டனர் என்பது ஒரு சர்வதேச விசாரணை நடந்தால் வெளிவந்துவிடும். இந்த சம்பவத்தால் அரசியல் இலாபம் பெற்ற சிங்கள நபர் யார்? என்பதை விசாரணை எளிதாகக் காட்டிக் கொடுத்துவிடும். சர்வதேச விசாரணைகள் இங்கு நடைபெறக்கூடாது என்று இன்று பதவியில் உள்ளவர்கள் கூறுவது உண்மைகள் வெளிவந்துவிடாது தடுப்பதற்கே. என் நண்பர் சட்டத்தரணியும் பத்திரிகையாளருமான இலசந்த விக்ரமதுங்க எவ்வாறு, ஏன் கொலை செய்யப்பட்டார். பின்னணியில் இருந்தவர்கள் யார் என்று சர்வதேச விசாரணை நடந்தால் எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள். கோத்தாபயவின் பங்கு என்ன என்பதையும் சர்வதேச விசாரணை காட்டிக் கொடுத்துவிடும். வெளிநாட்டவர்கள் மற்றும் உள்நாட்டவர்கள் தமக்கெதிராகச் சதி செய்தார்களா? என்பதை கோத்தாபய தன்னிடமே விஸ்வாசத்துடன் கேட்டால் தன் செயல்களே தனது வீழ்ச்சிக்குக் காரணம் என்பதைப் புரிந்து கொள்வார். ஆனால் 'அரகலய' இளைஞர் - யுவதிகளை கிளர்ந்தெழச் செய்தது கோத்தாபயவின் முட்டாள்தனமான பொருளாதார நடவடிக்கைகளே. அதிகாரம் இருந்தால் எவர் அறிவுரையையும் பொருட்படுத்தாமல் முட்டாள்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று உலகுக்கு எடுத்துக் காட்டியவர் கோத்தாபயவே. இரசாயன உரங்களைத் தவிர்த்து இயற்கை உரத்தை எமது விவசாயிகள் பாவிக்க வேண்டும் என்பதில் எவரிடத்திலும் இரண்டாவது கருத்து ஒன்று இருக்கமுடியாது. ஆனால், சரியோ பிழையோ செயற்கை உரங்களை நம்பியே விவசாயிகள் அண்மைக் காலங்களில் விவசாயம் செய்து வந்துள்ளார்கள். ஆகவே, திடீரென செயற்கை உரத்தை வெளிநாட்டில் இருந்து வருவிப்பதைத் தடுத்தால் என்ன நடக்கும் என்று அவர் சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும். சிந்தித்திருந்தால் வரும் இரண்டு அல்லது மூன்று வருடங்களின் பின் செயற்கை உரங்களை வருவிப்பதை நீக்க இருக்கின்றோம். அவற்றிற்குப் பதில் பலமான இயற்கை உரங்களை உருவாக்க இப்பொழுதிருந்தே ஆயத்தமாகுங்கள் என்று கூறியிருப்பார். மண்புழு உரம், சாணி உரம், காய்ந்த சருகு உரம் என்று பல விதமான இயற்கை உரங்கள் தற்போது தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பயிர்கள் கூடிய அறுவடையைத் தர எவ்வாறு, என்னவாறான இயற்கை உரங்கள் இனிப் பாவிக்கப்பட வேண்டும் என்று ஆராய்ந்து அவற்றை பெருவாரியாக உள்நாட்டில் தயாரிக்க நடவடிக்கை எடுத்துக் கொண்டுதான் போதிய அறிவிப்புடன் செயற்கை உரங்கள் வருவிப்பதை நிறுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாது சிங்கள மக்களின் வயிற்றில் அடித்துவிட்டு சிறுபான்மையினரின் சதியே தமது வெளியேற்றம் என்று கூறுவது சிறுபிள்ளைத் தனமாகும். தனக்கு தேர்தலில் உதவி புரிந்த பணக்காரக் குடும்பங்களுக்கு வரிவிலக்கு கிடைக்கும் வண்ணம் தமது நிதிக் கொள்கைகளை மாற்றியமை சிங்கள மக்களிடையே பலத்த வெறுப்பை ஏற்படுத்தியது. இவை சாதாரண சிங்களக் குடும்பங்களில் இருந்தவர்களுக்கு வெறுப்பையும் கோபத்தையும் உண்டாக்கின. தமது வயிற்றில் அடிக்கப்பட்டதால் சிங்கள இளைஞர்கள் கோத்தாபயவுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்ததற்காக சிறுபான்மையினர் மீதும் வெளிநாட்டவர்கள் மீதும் சேறு பூசுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது. அடித்துத் துரத்தப்பட வேண்டிய ஒருவர் என்று சிங்கள மக்களால் அடையாளம் காணப்பட்ட ஒருவரே அவர்களால் விரட்டப்பட்டார். அவரின் குடும்பத்திற்குள்ளேயே சதிகாரர்கள் சிலர் இருந்திருக்கக்கூடும். அதனை அவர் ஆராய்ந்து பார்த்து தமது குடும்ப அங்கத்தவருடன் பேச வேண்டும். அதை விட்டு விட்டு 'செல்லும் செல்லாததற்கு செட்டியார் இருக்கின்றார்' என்பது போன்று சிறுபான்மையினர் மீது சதிப்பழி போடுவது அரச தலைவராகப் பதவி வகித்த ஒருவர்க்கு அழகல்ல. துஷ்டர் ஒருவரை சிங்கள இளைஞர் - யுவதிகள் பதவியில் இருந்து நீக்கினார்கள் என்பது தான் உண்மை. அது சதி அல்ல தண்டனை. மனிதப் படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு நிறுத்தப்படுவதை அவரின் இந்த நூல் தடுக்கும் என்று கோத்தாபய நினைத்தாரானால் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியது போல், கோத்தாபயவைப் போல வடிகட்டின முட்டாள் ஒருவர் இந்நாட்டில் இருக்க முடியாது- என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். https://newuthayan.com/article/''அனைவரையும்_சுட்டுக்கொல்ல_கட்டளையிட்டவர்_கோத்தா''
  11. முன்னாள் அரசியல் கைதியான அரவிந்தன், TIDக்கு அழைப்பு! adminMarch 11, 2024 வவுனியாவில் வசிக்கும் முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்க தலைவருமான செ.அரவிந்தன் என்பவரை கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (TID) அழைக்கப்பட்டுள்ளார். இதற்கான கடிதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் குறித்த அரசியல் கைதியின் வீட்டிற்கு சென்று நேற்று (10.03.24) வழங்கப்பட்டுள்ளது. வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்க தலைவருமான செல்வநாயகம் அரவிந்தனை (ஆனந்தவர்மன்) 12 ஆம் திகதி காலை 9.00 இற்கு கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு வாக்கு மூலம் பெற வருமாறு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “விசாரணை பிரிவு ஒன்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக முகநூல் கணக்கு சம்மந்தமாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக விசாரணையை மேற்கொள்வதற்கு 2024 ஆம் ஆண்டு 3 ஆம் மாதம் 12 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு இல149, கெப்பிட்டல் கட்டிடம், நாரன்பிட்டிய முகவரியில் விசாரணை பிரிவு ஒன்றின் பொறுப்பதிகாரியை சந்திக்குமாறு அழைக்கின்றோம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2024/201076/
  12. இன்றிரவு படத்தை திரையில் பார்க்கவுள்ளேன்😊 ஜெயமோகனின் விமர்சனத்தைப் படிக்க முன்னரே பதிவு செய்துவிட்டேன்☺️
  13. மஞ்ஞும்மல் பாய்ஸ்- குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம் ஜெயமோகன் March 9, 2024 சமகால சினிமாவை நான் விமர்சனம் செய்வதில்லை, கருத்தே சொல்வதில்லை. ஏனென்றால் நானும் இதில் இருக்கிறேன். இது கலை ஒன்றும் அல்ல, பிரச்சாரம்கூட அல்ல. வெறும் வணிகம். நூறு விழுக்காடு வணிகம். ஆகவே ஒரு வணிகர் இன்னொருவரின் வணிகத்தை அழிக்கலாகாது. அது ஒரு உள்நெறி ஆனால் யானை டாக்டர் எழுதியவன் என்னும் முறையில் இதை எழுதவேண்டியிருக்கிறது. புகழ்மொழிகள், புல்லரிப்புகள், வாழ்த்துக்கள் வழியாக நேற்று மஞ்ஞும்மல் பாய்ஸ் என்னும் மலையாளப் படத்தைப் பார்க்க நேர்ந்தது. முதல் விஷயம், மலையாள சினிமாவுக்கு நம்மவர் அளிக்கும் புல்லரிப்பு. குறிப்பாக தமிழ் ஹிந்து நாளிதழ் மலையாள சினிமா சார்ந்து 24 மணிநேர புல்லரிப்பு நிலையிலேயே இருக்கிறது. எல்லா படமும் அதன் பார்வையில் கிளாஸிக்தான். அவற்றில் பல படங்கள் பெற்ற அன்னை உட்கார்ந்து பார்க்கமுடியாத சலிப்பூட்டும் போலிப்படைப்புகள். மஞ்ஞும்மல் பாய்ஸ் படம் தமிழில் வந்திருந்தால் இங்குள்ள எளிய விமர்சகர்கூட ஒரு கேள்வியைக் கேட்டிருப்பார்கள். அதெப்படி தமிழ் நாளிதழ்களில் செய்திவெளிவந்த அவ்வளவு பெரிய இடர், ஒரு வீர சாதனை கேரளத்தில் அந்த ஊர்க்காரர்களுக்கு மட்டும் தெரியாமலேயே இருந்தது. மஞ்ஞும்மல் பையன்கள் அதை ஊரில் சொல்லவே இல்லையா? அது ஒருவன் இன்னொருவனுக்காக உயிர்கொடுக்கத் துணிந்த தருணம், அதை அப்படியே மூழ்கடித்து வைத்தார்களா என்ன? நாட்கணக்கில்கூட செய்தி கசியவில்லையா? கிளைமாக்ஸ் நெகிழ்ச்சிக்காக சமையல் செய்து உருவாக்கப்பட்ட காட்சி அது. ஆனால் மல்லுபடம் என்றால் அது ரியலிசம் என்பார்கள் நம்மூர் அரைவேக்காடுகள். அது எப்படியோ போகட்டும், எல்லா படங்களுமே விதவிதமான ஜோடனைகள்தான். வெறும் பொழுதுபோக்குகள். எளிய அறிவுத்துறை அறிமுகம்கூட இல்லாமல் சினிமாவில் மட்டுமே உழன்று, அதையே விவாதித்து, ஏதோ அறிவுச்செயல்பாட்டில் இருப்பதாகப் பாவனைசெய்து வாழும் பாமரப்பெருங்கூட்டம் இங்குள்ளது. அவர்களும் வெந்ததைத் தின்று விதிவரும் வரை இங்கே வாழவேண்டும். அவர்களின் பைக்காசுதான் நம் வங்கியை நிரப்புகிறது என்பதனால் அவர்கள்மேல் ஓரளவு கரிசனமும் எனக்குண்டு. புல் வளர்கிறதே என மாடு மகிழ்ச்சிதான் அடையவேண்டும். மஞ்ஞும்மல் பாய்ஸ் எனக்கு எரிச்சலூட்டும் படமாக இருந்தது. ஏனென்றால் அது காட்டுவது புனைவு அல்ல. அதே மனநிலைதான் தென்னகம் முழுக்க சுற்றுலா இடங்களுக்கு வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் உள்ளது. சுற்றுலாமையங்கள் மட்டுமல்ல அடர்காடுகளுக்குள் கூட வந்துவிடுவார்கள். குடிகுடிகுடி அவ்வளவுதான். வாந்தி எடுப்பது, சலம்புவது, விழுந்து கிடப்பது, அத்துமீறுவது. வேறெதிலும் ஆர்வமில்லை. அடிப்படை அறிவு கிடையாது. எந்தப் பொது நாகரீகமும் கிடையாது. குறைந்தது பத்து தடவையாவது ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் பகுதிகளில் இந்த மலையாளக் குடிகாரப் பொறுக்கிகள் சாலையில் அடிதடியில் ஈடுபட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். அவர்களின் வண்டிகளின் இருபுறமும் வாந்தி வழிந்துகொண்டிருக்கும் – இந்தப் படத்தில் காட்டப்படுவதுபோல. குடித்து முடித்த புட்டிகளை தூக்கி வீசி உடைத்துக்கொண்டே இருப்பார்கள். ஐயமிருந்தால் செங்கோட்டை – குற்றாலம் சாலையிலோ, கூடல்லூர்- ஊட்டி சாலையிலோ சென்று பாருங்கள் வழிநெடுக உடைந்த, உடையாத புட்டிகளாகவே கிடக்கும். அதையும் இப்படத்தில் பெருமையாகக் காட்டுகிறார்கள். பலமுறை இவர்களுடன் சண்டைக்குச் சென்றிருக்கிறோம். ஒரு முறை வாகமண் புல்வெளியில் எங்களுடன் வந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான செந்தில்குமார் இவர்கள் தூக்கி வீசிய புட்டிகளை அவரே அள்ளி பொறுக்கி சேர்த்து அகற்றினார். ஆண்டுக்கு இருபது யானைகளாவது இந்த புட்டிகளால் கால் அழுகி இறக்கின்றன. கொதித்துப்போய் நான் அதைக் கண்டித்து எழுதிய யானை டாக்டர் மலையாளத்திலும் பல லட்சம் பிரதி விற்றிருக்கிறது. ஆனால் இந்தப் படத்தின் இயக்குநர் அதை வாசித்திருக்க வாய்ப்பே இல்லை. இந்த மலையாளப் பொறுக்கிகளுக்கு ஒரு வார்த்தை இன்னொரு மொழி தெரியாது. எல்லா கேள்விக்கும் மலையாளத்திலேயே பதில்சொல்வார்கள். ஆனால் அவர்கள் மொழி பிறருக்குத் தெரிந்திருக்கவேண்டும் என்னும் தெனாவெட்டு தெரியும். இந்த படத்தில் தமிழகப்போலீஸ் அவர்களை நடத்தும் விதமும் உண்மையானது. அடி தவிர எதுவுமே இவர்களுக்குப் புரிவதில்லை. கேரளத்தில் திருமண நிகழ்வுகளுக்குச் செல்வதே பெருந்துன்பமாக ஆகிவிட்டிருக்கிறது. மலையாளிகளே இருவகை. அயல்நாட்டில் ரத்தம் சுண்ட உழைப்பவர்கள். அவர்களைச் சுரண்டி உள்நாட்டில் குடிப்பவர்கள். இந்தக் குடிகாரக் கும்பல் எந்தக் கல்யாணத்திலும் வந்து வெறியாட்டம் இடுகிறார்கள். மணப்பந்தலிலேயே வாந்தி எடுப்பவர்கள் ஏராளமானவர்கள். மணப்பந்தலில் மணமகனே வாந்தி எடுப்பதை கண்டிருக்கிறேன். குடியில் தமிழகம் கேரளம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதையும் சொல்லியாகவேண்டும். கேரளத்திலுள்ள வேறுபாடு என்னவென்றால் கேரளம் போதைவெறியை, அதன் எல்லாக் கீழ்மைகளையும் இயல்பானதாக ஆக்கிக்கொண்டே இருக்கிறது. சட்டத்தை மதிக்கும் சாமானியனை மடையனாகவும், உதவாக்கரையாகவும் அது சித்தரிக்கிறது. கேரளக்கடற்கரைகளில் மாலை ஏழு மணிக்குமேல் பெண்கள் மட்டுமல்ல சாமானியர்களான ஆண்கள் கூட செல்லமுடியாது- அதை போலீஸே அறிவுறுத்துகிறது. கேரள சினிமா தொடர்ச்சியாக மகிழ்ச்சியாக இருப்பதென்றாலே குடித்துச் சண்டைபோட்டு, வம்பிழுத்து, வாந்தி எடுத்து, சாமானியர்களை நிலைகுலையச் செய்து கும்மாளமிடுவது என்றே காட்டி வருகிறது. குடிக்காமல் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருக்கும் நாலுபேரை மலையாளப்படங்களில் எப்போதாவது பார்த்ததுண்டா ? இந்தப் படமும் அந்தப் பொறுக்கிகளை ‘ஜாலியானவர்கள்’ என்று சொல்கிறது. அதற்கான சமூகஏற்பை சினிமா வழியாக மெல்ல மெல்ல உருவாக்குகிறார்கள். அதாவது ஒரு தமிழ் கதைநாயகன் எந்தப் பொறுக்கிகளிடமிருந்து சாமானியர்களைக் காப்பாற்றுவாரோ அந்தப் பொறுக்கிதான் இன்றைய மலையாள சினிமாவின் கதைநாயகன். காரணம், எர்ணாகுளம் மையமிட்ட ஒரு சிறு போதையடிமைக் கும்பல் இன்றைய மலையாள சினிமாவின் மையத்தில் உள்ளது. அங்கே மது வெறி இரவும் பகலும். அதைவிட மோசமான போதைகள். போதைப்பார்ட்டிகள் கேரளத்தில், குறிப்பாக எர்ணாகுளத்தில், உள்ள அளவு இந்தியாவில் எங்குமே இல்லை. மலையாளக் கதாநாயக நடிகர்கள்கூட போதை மருந்து வழக்குகளில் சிக்கிக்கொள்வது அடிக்கடி செய்திகளில் வருகிறது. அவர்கள்தான் மலையாளச் சமூகத்தையே போதைவெறியை இயல்பாக எடுத்துக்கொள்ளப் பழக்கப்படுத்துகிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு ‘கிளி போயி’ ‘ஒழிவுநேரத்தே களி’ ‘வெடிவழிபாடு’ ’ஜல்லிக்கட்டு’ போன்று போதையையும் விபச்சாரத்தையும் normalaize செய்யும் சிறிய படங்கள் கேரளத்தில் வெளிவந்தன. உள்ளீடற்ற அசட்டுப் போலிப்படங்கள் அவை. அவை அறிவுஜீவிகளால் ’இயல்பான கலைப்படைப்புகள்’ என கொண்டாடப்பட்டன. இங்கும் முதிரா அறிவுஜீவிகள் அவற்றைக் கொண்டாடினார்கள். இன்று அந்தப்போக்கு மையச் சினிமாவாக ஆகியிருக்கிறது. கேரளத்தின் நலம்நாடும் ஓர் அரசு இருந்தால் இந்த சினிமாக்காரர்கள்மேல் நேரடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இவர்கள் எடுக்கும் போதைவெறி சினிமாக்களை தமிழகத்தில் கொண்டாடுபவர்கள் அசடுகள் அல்லது அயோக்கியர்கள் என்றே வகைப்படுத்துவேன். வணிகசினிமா என்பது கலையொன்றும் அல்ல. அது எந்தவகையான அறிவுப்பயிற்சியும் கலையறிமுகமும் இல்லாத மாபெரும் மக்கள் திரளை நோக்கி நேரடியாகப் பேசுகிறது. அதற்கு கலைக்குரிய சுதந்திரம் அளிக்கப்படவே கூடாது. அறிவார்ந்த எதிர்ப்பை அளிக்கமுடியாத எளிய மக்கள் திரளை அந்த கட்டின்மை சீரழித்துவிடும். இந்தக் கும்பல் சுற்றுலாத் தலங்களைச் சீரழிப்பது ஒரு பக்கம். ஆனால் அடர்காடுகளுக்குள் அத்து மீறுகிறார்கள். அதற்காக ஊடுவழிகளை எல்லாம் தேர்வு செய்கிறார்கள். எந்த சட்டத்தையும் பொருட்படுத்துவதில்லை. எந்த எச்சரிக்கைகளையும் பேணுவதில்லை. கொய்யாப்பழங்களுக்குள் மிளகாய்ப்பொடி நிறைத்து குரங்குகளுக்கு கொடுக்கிறார்கள். யானைகளை நோக்கி புட்டிகளை வீசுகிறார்கள். அடர்காடுகளுக்குள் உச்சத்தில் பாட்டுபோட்டு கூத்தாட்டம் போடுகிறார்கள். மே மாதம் மிக ஆபத்தானது. பீடி சிகரெட்டை காய்ந்த தமிழகக் காடுகளுக்குள் வீசிவிட்டுச் செல்வார்கள். பொதுவாகக் கேரளக் காடுகள் காய்வதில்லை. இங்கே அப்படி அல்ல. பல ஏக்கர்கள் எரிந்து அழியும். பல்லாயிரம் உயிர்கள் சாகும். இவர்கள் கவலையே படுவதில்லை. கேரளத்தில் உள்ள ரிசார்ட்டுகளுக்குச் செல்வதென்பது மிக ஆபத்து. பல வெளியே சொல்லமுடியாத அனுபவங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். என் நண்பர் ஒருவரின் மகளையும் மருமகனையும் தேனிலவுக்காக நானே அனுப்பினேன். அன்று இப்படி ஒரு கும்பல் வந்து செய்த அட்டூழியத்தில் இருந்து அவர்கள் தப்பி ஓடவேண்டியிருந்தது. நான் ஒரு சினிமாவுக்காகத் தங்கியிருந்த மானந்தவாடி ரிசார்ட்டில் ஒரு வட இந்திய இணையரை இக்கும்பல் தாக்கி பாலியல்பலாத்காரமே செய்ய முயன்றது. நான் அதில் தலையிட்டு எனக்குத் தெரிந்தவர்களை எல்லாம் அழைத்து காப்பாற்ற நேர்ந்தது (அங்கே மானேஜர் கூட இல்லை. இரண்டு மலையாளம்கூட தெரியாத வங்காளிப் பையன்கள் மட்டுமே) இந்தப் பொறுக்கிகளை எளியவர்களின் கொண்டாட்டம் என்று காட்டி நியாயப்படுத்துவது மட்டுமல்ல, அவர்களை உன்னதமாக்குகிறது மஞ்ஞும்மல் பாய்ஸ். அவர்களை தியாகிகள், நட்பின் இலக்கணங்கள் என்று சொல்ல முயல்கிறது. எந்த பொறுக்கிக் கும்பலுக்கும் அவர்களுக்குள் ஓர் ஒற்றுமை இருக்கும். குற்றவாளிக் கூட்டங்களுக்குள்ளேயே தியாகவுணர்வு இருக்கும். அதெல்லாம் உயர்ந்த உணர்வுகள் அல்ல. உண்மையிலேயே இப்படி நடந்து, அதில் ஒருவனுக்குத் தேசிய விருது அளிக்கப்பட்டிருப்பதாக படத்தின் இறுதியில் செய்தி காட்டப்படுகிறது. சட்டப்படிச் சிறையில் தள்ளப்பட வேண்டியவன் அவன். இந்தக் கும்பல்களைப் பற்றிய விழிப்புணர்வை தமிழகத்திலும் கர்நாடகத்திலும் இந்தச் சினிமா உருவாக்குமென்றால் நல்லது. இவர்களை போலீஸ் நேரடியாகவே குற்றவாளிகளாக மட்டுமே நடத்தவேண்டும். ஒருபோதும் ஒருவகையிலும் ஆதரிக்கக் கூடாது. அவ்வப்போது இவர்கள் எங்காவது சிக்கிச் சாவதுகூட நல்லதுதான். நம் காடுகள் காப்பாற்றப்படும். அது இவர்களுக்கு இயற்கை அளிக்கும் இயல்பான தண்டனை. https://www.jeyamohan.in/197808/
  14. வெடுக்குநாறிமலையில் வெறிச்செயல் வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்களைக் கைது செய்திருப்பதுடன், கோவிலுக்குள் சப்பாத்துக் கால்களுடன் சென்று அங்கு வழிபாட்டில் ஈடுபட்டிருந்த சிவ பக்தர்களின் உணர்வுகளை அவமதித்திருக்கும் பொலிஸாரின் செயற்பாடுகளைக் கண்டிப்பதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். இலங்கையின் அரசியல் சாசனத்தின் பிரகாரம் இலங்கை குடிமக்கள் தாம் விரும்பிய மதத்தை பின்பற்றவும் வழிபடவும் அவர்களுக்கு முழுமையான உரித்துண்டு. ஆனால் அதேசமயம் இலங்கையில் பௌத்தத்திற்கு முதலிடம் என்றும் கூறப்படுகின்றது. அதன் காரணமாக பௌத்த பிக்குகளும் இராணுவத்தினரும் பொலிசாரும் ஒன்றிணைந்து ஏனைய மதத்தலங்களை அழித்தொழிப்பதும் அந்த இடங்களில் புத்த விகாரையைக் கட்டுவதுமான செயற்பாடுகளில் கடந்த பல தசாப்தங்களாக ஈடுபட்டு வருகின்றனர். யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் வடக்கின் சகல மாவட்டங்களிலும் அதனைப் போன்றே திருகோணமலையிலும் கிழக்கின் ஏனைய பகுதிகளிலும் சிங்கள மக்களோ பௌத்த மக்களோ வாழாத பிரதேசங்களில் ஏனைய மதத்தலங்கள் இருந்த புராதான இடங்களில் புத்த விகாரைகளை நிறுவுகின்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெடுக்குநாறி மலையில் மக்கள் வழிபடுவதற்கு வவுனியா நீதிமன்றமும் ஆணைவழங்கியிருக்கக்கூடிய நிலையில், இரவு வழிபாடுகளில் ஈடுபடக்கூடாது என்று சொல்வதற்கும் அங்கு சென்ற அடியார்களை அடித்துத் துன்புறுத்துவதற்கும் பொலிஸாருக்கு எந்தவித அதிகாரமோ உரிமையோ கிடையாது. இலங்கையின் மிகப்பெருமளவிலான வருமானம் சுற்றுலாத்துறையையும் நம்பியிருக்கின்றது. ஆனால், அந்நியச் செலாவணியை ஈட்டித்தருகின்ற சுற்றுலாத்துறையையும் நிர்மூலமாக்கும் நடவடிக்கைகளிலேயே இன்றைய அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. இது நாட்டை மேலும் வங்குரோத்து நிலைக்கு இட்டுச் செல்வதுடன் இலங்கையின் மதிப்பை சர்வதேச மட்டத்தில் குறைப்பதற்குமே உதவுமே தவிர, நாட்டை சுபீட்சத்தை நோக்கி இட்டுச்செல்லாது என்பதை அரசாங்கத்துக்கும் அரச தலைவருக்கும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார். (க) https://newuthayan.com/article/வெடுக்குநாறிமலையில்_வெறிச்செயல்
  15. தடங்களில் அலைதல் sudumanalMay 8, 2023 நூல் அறிமுகம் “உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகளே அல்ல. அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள். ஆனால் உங்களிடமிருந்து அல்ல. அவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல” என்ற கலீல் ஜிப்ரானின் புகழ்பெற்ற கவிதையுடன் ஆரம்பித்து, வளரும் குழந்தைகளின் முதல் கண்டுபிடிப்பு “என் தந்தை என்பவர் எவ்வளவு முட்டாள் என்பதே” என பேச்சின் நடுவில் எடுத்துவிட்டேன். என் பேச்சு முடிய கீழே இறங்கினேன். வாட்டசாட்டமான ஒருவர் “நான் உம்மோடு பேச வேண்டும். வாரும் வெளியே பேசுவோம்” என்றார். “எங்கடை பிள்ளையள் எங்களுக்குப் பிறக்காம என்னடா வம்பிலா பிறந்தவங்கள்” என தொடங்கி சிங்கள இராணுவத்தின் தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் வழியாக தனது தூசணங்களோடு போய்க் கொண்டிருந்தார். என்னைச் சுற்றி கூட்டம். எல்லோரும் என்னை அடிக்கத் தயாராகிவிட்டனர். நாட்டிய ஆசிரியை ஒருவரின் கணவர் இடையில் புகுந்து, “இவரை நாங்கள் கூப்பிடாமலேயே தானாக வந்து மேடையேறிவிட்டார்” என்று வேறு சொல்லிவிட்டார். என் நம்பிக்கைகள் சிதறின. என் ரோச நரம்புகள் செத்துக் கிடந்தன. என்னை அவர்கள் விடுவதாயும் இல்லை. ஓடவும் முடியாது. கூட்டத்தில் நின்ற நியாயவாதி ஒருவர் கூறினார், “நாங்கள் எல்லாரும் ஏதோவொரு வகையில் பைத்தியக்காரர்கள்தான். ஆனால் என்ன… இவருக்கு கொஞ்சம் மிகை… அவ்வளவுதான்” என்றார். அப்போ தெரிந்தவர் ஒருவர் என்னை அடையாளம் கண்டுவிட்டு, “ஏன்… என்ன பிரச்சினை” என கேட்டு என்னை மீட்டுச் சென்றார். இந் நகரத்தின் ஒரு அறியப்பட்ட புத்திஜீவி என்னைக் காப்பாற்றிவிட்டார் என நினைத்துக் கொண்டேன். “நான் கலீல் ஜிப்ரானின் கவிதை ஒன்றை மேடையில் சொன்னன்” என்று சொல்லி முடிப்பதற்குள், அவர், “உனக்கேன் தேவையில்லாத வேலை… இலங்கை முஸ்லிம் பிரச்சினையை இங்கை எதுக்குப் பேசினாய்” என திருப்பிக் கேட்டார். தடங்களில் அலைதல் நூலின் ஆசிரியர் சுசீந்திரனை கலீல் ஜிப்ரான் இவ்வாறான ஒரு பிரச்சினையில் மாட்டிவிட்டிருந்தார். புகலிட இலக்கியம் இந்தச் சுழிகளுக்குள்தான் இயங்கியது, இயங்குகிறது. நாம் கடந்துவந்த அனுபவங்கள், அதை குறித்துவைத்த கடதாசித் துண்டுகள், பதிவுகள், குறிப்புகள், கடிதங்கள் என்பன பல காலத்தின்பின் கிளறப்படும்போது அவற்றிலிருந்து எழும் நினைவுகள் கதைசொல்லிகளாக மாறிவிடுவதுண்டு. அனுபவங்களை பட்டறிவு என்கிறோம். இற்றைப்படுத்தப்பட்ட இன்றைய அறிவில் அன்றைய அனுபவங்களில் விதையாய் விழுந்து புதைந்த வார்த்தைகள் மீண்டும் வெவ்வேறு அர்த்தங்களுடன் முளைத்து உயிர்கொண்டு வியாபிக்கிறதெனின் அவை காலமாகிவிடவில்லை என்பதுதானே அர்த்தம். தடங்களில் அலைதல் என்ற இந்த 120 பக்க நூலின் அந்த முளைப்புகளையும் வியாபித்தலையும் ரசித்தபடி வாசித்தேன். சிறுவயதில் தங்கை உறங்கிக்கொண்டிருந்த தொட்டிலின் நடு அச்சாணியின் முனையிலுள்ள ‘நட்’டுகளை கழற்றி வீசிவிட்டு, சுவாரசியத்துக்காகக் காத்திருந்தபோது அது தந்தையால் வேறு அனுபவமாக மாற்றப்பட்டுவிடுகிறது. விளையாட்டுத்தனமாக தொடங்கிய அந்தச் செயல் இன்று சக மனிதருக்கு ஆபத்து விளைவிப்பதை செய்யத் துணியாத மனவளத்தில் ஓர் அச்சாக சுழல்வதால், அது மறக்கப்படாமல் இருக்கிறது. வார்த்தைகள் முளைத்துக் காட்டுகின்றன. தாயின் இன்னொரு கையாக இருந்த தையல் மெசினோடு தந்தை ‘அலவாங்கு’ கொண்டு போர் புரிகிறார். “என்னைக் கொன்றபின் அதைக் கொல்” என்கிறாள் தாய். அதற்கு நானேதான் ஒரே சாட்சி என பெருமூச்சால் முற்றுப்புள்ளி இடுகிறார் சுசீந்திரன். அங்கும் வார்த்தைகள் இயற்கை எய்திவிட முடியாததாக தடங்களில் அலைகின்றன. எடி ஜேக்கோவின் “உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர்”, மிகயில் ஷோலகவ்வின் “டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது”, ஹைன்றிஷ் பொல்லின் “ஒரு கோமாளியின் பார்வைகள்” போன்றவை உட்பட வேற்றுமொழி நாவல்கள் சிலதையும், தமிழ் நாவல்கள் சிலதையும் அவ்வப்போது புகலிட இலக்கிய முகத்திற்கு அறிமுகமாக்கிய கட்டுரைகளும் இந் நூலில் இடம்பெறுகின்றன. தோளோடு சாய்ந்து நின்ற தோழர்களின் அவ்வப்போதான மரணங்களின் போது எழுதிய சில அஞ்சலிக் குறிப்புகளும் தடங்களில் அலைதலில் வருகின்றன. முக்கியமாக பாரிஸில் வைத்து புலிகளால் கொல்லப்பட்ட தோழர் சபாலிங்கம்!. புகலிட வாழ்வின் இலக்கிய அரசியல் வெளிகளிலிருந்து அழித்துவிட முடியாத அந்தத் தோழரின் கொலையும் காலச்சிதைப்பும் சுசீந்திரனின் அஞ்சலிக் குறிப்பிலும் உயிர்த்தே நிற்கின்றன. தடங்களில் அலைதல் நூலானது கட்டுரைத் தொகுப்பு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இவ்வாறான இலக்கிய வடிவங்களின் வகைப்பாடுகளின் சட்டகங்களுக்குள் சசீந்திரனின் தடங்களில் அலைதல் நூல் அகப்படாமல் இருக்கிறது என்றே வாசிப்பு அனுபவம் சொல்லி முடித்தது. கட்டுரைகள், நூல் அறிமுகங்கள், தனிநபர் அறிமுகங்கள், வாழ்வனுபவங்கள், அஞ்சலிக் குறிப்புகள் என தடங்களில் அலைதல் ஓர் அறிதலையும் சீரிய வாசிப்பனுபவத்தையும் ஒருபுறம் தருகிற அதேவேளை, இன்னொரு புறம் வலியும் நினைவுச்சுகமும் என முரண்களை அருகருகே வைப்பவையாகவும் இருக்கின்றன. அவை காலத்தைப் பின்னோக்கி நகர்த்திக்காட்டும் வல்லமை கொண்டவை. கால மாற்றத்தோடும் அறிவோடும் அனுபவங்களோடும் இற்றைப்படுத்தப்பட்டு முன்னோக்கி வந்துவிடுகிற நம் ஒவ்வொருவரையும் பின்னோக்கிய காலத்தில் இழுத்துச் சென்று அவற்றின்மீது புதிய பரிமாணங்களைக் காட்டுகிறது. அந்த புதிய பரிமாணமானது அறிவை சரிபார்ப்பதிலும் செழுமையாக்குவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. தடங்களில் அலைதல் நூலை வாசித்து முடித்தபோது இந்த எண்ணங்களே சேர்ந்தலையத் தொடங்கின. அனுபவங்களானவை உள்ளுடனில் உணர்வுகள் உணர்ச்சிகள் காயங்கள் வலிகள் என ஒரு பக்கத்தையும், அவை நினைவாக எழும்போது தரும் சுகமும் சுவாரசியமும் என இன்னொரு பக்கத்தையும் எப்போதுமே கொண்டிருக்கும். அது தடங்களில் அலைதலில் வெளிப்பட்டபடியே இருக்கின்றன. //மகிழ்ந்திருத்தல் என்பது அபரித ஆடம்பரமானது என்று எணணும் ஒரு வாழ்வினை வரித்துக் கொண்டவர்களில் எனது தாய் முதன்மையானவர் என நான் நினைப்பதுண்டு. அவளது கூறைச்சேலை சிவப்பு நிறமும் வெள்ளிச் சரிகை வேலைப்பாடும் கொண்டது. அதை நான் காவலாளியாக நடித்த ஒரு நாடகத்தில் உடுத்தியிருந்தேன். அதுவே என் இராக்கால போர்வையாகவும் இருந்தது. நான் அறிய அவள் கோவில்களுக்குச் சென்றதில்லை. சுற்றம்சூழ என்பார்களே.. அதை அவள் அனுபவித்ததில்லை. என் அப்பாவை அவள் நேசிப்பதற்கு ஏதாவது முகாந்திரம் இருந்ததுவா என்று நான் இன்று எண்ணிப் பார்க்கிறேன். தாய் பற்றி எழுத உங்கள் எல்லோருக்கும் இருப்பதுபோலவே எனக்கும் ஆயிரம் உண்டு// என நூலாசிரியர் தடங்களில் அலைதலுக்கான பயணத்தில் சக பயணிகளைக் காண்கிறார். எம்மையும் நினைவுத் தடங்களில் அழைத்துச் செல்கிறார்! * நூலாசிரியர் சுசீந்திரன் (ஜேர்மனி) மேற்குலக புகலிட இலக்கிய வெளியின் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்களில் ஒருவர் சுசீந்திரன். 80 களின் கடைசியில் தொடங்கிய இலக்கியச் சந்திப்பின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவராகவும் இருந்தவர். இன்னொரு வகையில் சொன்னால் சுமார் 40 வருட கால நீண்ட புகலிட இலக்கிய அரசியல் வெளியில் தன்னை அர்ப்பணித்து செயற்பட்ட ஒருவர். தமிழ், ஆங்கிலம் மட்டுமல்ல யேர்மன் மொழியிலும் புலமையுடையவராக இருந்ததால் மொழிபெயர்ப்புகளின் மூலமும் புகலிட இலக்கியத்துக்கு தன் பங்குக்கு வலுச் சேர்த்தவர். சேர்த்துக் கொண்டிருப்பவர். இன்னமும் அதிகமாக மொழிபெயர்ப்பில் அவர் செயற்பட்டு அவற்றை தமிழுக்கு தந்திருக்க முடியும், தர முடியும் என்பது என் அபிப்பிராயம்! https://sudumanal.com/2024/03/09/தடங்களில்-அலைதல்/#more-5996
  16. ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன் கொழும்பு ரோயல் மற்றும் புனித தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் இறுதி நாளான நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியை பார்வையிட நேரில் சென்றுள்ளார். இதன்போது ஜனாதிபதி ரணிலுடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கிரிக்கெட் போட்டியை பார்வையிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. மைதானத்திற்கு வருகை தந்து விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்திய ஜனாதிபதி மைதானத்திற்கு வருகை தந்த மாணவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார். அதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியைக் காண வந்திருந்த மக்கள் மத்தியில் சென்று அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார். ரோயல் கல்லூரி மற்றும் புனித தோமஸ் கல்லூரியின் பழைய மாணவர்களான அநுராத ஜயரத்ன, ரவி கருணாநாயக்க மஹிந்தானந்த அலுத்கமகே, ஹர்ஷ டி சில்வா மற்றும் சாகல ரத்நாயக்க, எம். ஏ. சுமந்திரன், சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர். https://akkinikkunchu.com/?p=270716
  17. “எங்கட விமானங்கள்” என்று தமிழ் மாணவர்கள் பெருமிதமாகச் சொல்லும் அளவிற்கு தேசிய நீரோட்டத்தில் கலந்துவிட்டார்கள். அதை தமிழ் யூடியுப்பர்களும் கொண்டாடி கொஞ்சம் சம்பாதிக்கவும் முயற்சிக்கின்றார்கள். ஆனால் புலம்பெயர்ந்த பழைய தலைமுறையோ இப்போதும் “பழய சீலை கிழிஞ்சமாதிரி” புறுபுறுத்துக்கொண்டிருக்கின்றார்கள்.!
  18. வானத்திலிருந்து யாழ்ப்பாணத்தைப் பார்த்த மாணவர்கள்! - நிலாந்தன் சிறீலங்கா விமானப்படையின் 73ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கில் “நட்பின் சிறகுகள்” என்ற தலைப்பில், 125 மில்லியன் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை விமானப்படை முன்னெடுக்கின்றது. இதில் 73 பள்ளிக்கூடங்களை புனரமைக்கும் திட்டமும், பள்ளிக்கூடங்களுக்கு 73000 புத்தகங்களை வழங்குவதும் அடங்கும். ”நட்பின் சிறகுகளின்” ஒரு பகுதியாக இம்மாதம் ஆறாந் திகதியிலிருந்து பத்தாம் திகதி அதாவது இன்றுவரையிலும் யாழ் முற்ற வெளியில் – Air tattoo 2024 -எயார் டாட்டு 2024 என்ற பெயரில் ஒரு கல்வி மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி இடம்பெறுகிறது. இக்கண்காட்சியில் விமானப்படையினரின் செயற்பாடுகள் தொடர்பான தொழில்நுட்ப விளக்கங்களும் வான சாகசங்களும் இசை அணிநடைகளும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. அது ஒரு கல்வி மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி என்ற அடிப்படையில் பாடசாலைப் பிள்ளைகள் இதில் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். விமானங்களின் இயக்கங்கள் தொடர்பாக மாணவர்கள் விளக்கம் தருகிறார்கள். மேலும் மாணவர்களுக்கு சிறிது நேரம் ஹெலிகொப்டரில் பயணம் செய்ய வாய்ப்புத் தரப்பட்டது. மாணவர்களும் உட்பட பெற்றோரும் ஏனையவர்களும் விருப்பத்தோடு உலங்கு வானூர்திகளில் ஏறிப் பயணம் செய்வதை காணக்கூடியதாக இருக்கிறது. வடக்கில் உள்ள வெவ்வேறு பாடசாலைகள் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளைகளுக்கு ஹெலிகொப்டரில் பறப்பதற்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. அவர்கள் அதை விருப்பத்தோடு அனுபவித்தார்கள். வானத்திலிருந்து யாழ்ப்பாணத்தைப் பார்ப்பதில் அவர்களுக்கு ஆர்வம் இருக்கும். முதலாவது பறப்பு அனுபவம் அவர்களுக்குப் பரவசமூட்டக்கூடும். ஆனால் இதே வானத்தை அவர்களுடைய பெற்றோர்களும் பெற்றோர்களின் பெற்றோர்களும் பயத்தோடும் பிரார்த்தனைகளோடும் அண்ணாந்து பார்த்த ஒரு காலம் உண்டு என்பதை அவர்களுக்கு யார் சொல்லிக் கொடுப்பது? 15ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களுக்கு வானம் ஒரு மரணக் கூரையாக காணப்பட்டது. வானில் போர் விமானங்கள் தோன்றும்போது இந்த பிள்ளைகளின் பெற்றோரும் பெற்றோரின் பெற்றோரும் பதுங்கு குழிகளுக்குள் ஓடி ஒளித்தார்கள். அவ்வாறு பதுங்கு குழிகளுக்குள் புகலிடம் தேடிய சிலருக்கு பதுங்கு குழியே புதை குழியாகவும் மாறியதுண்டு. யுத்தம் வாழ்க்கையை விடவும் நிச்சயமானது போல தோன்றிய அக் காலகட்டத்தில் சிறீலங்காவின் வான் படை தமிழ் மக்கள் மீது குண்டுகளைப் போட்டது. வானத்தையும் காற்றையும் கிழித்துக்கொண்டு போர் விமானங்கள் தமிழ் மக்களின் தலைகளை நோக்கி குத்திப் பதிந்தன. பயணிகள் போக்குவரத்து விமானம் ஆகிய “அவ்ரோ” ரக விமானங்களில் இருந்து தொடங்கி சியா மாசற்றி; அன்ரனோவ்; புக்காரா; கிபிர்; சூப்பர்சோனிக்; மிக்; சீனத் தயாரிப்பான Y12 முதலாய் பல்வேறு நாட்டு தயாரிப்புகளும் தமிழ் மக்களின் இரவுகளையும் பகல்களையும் கனவுகளையும் குண்டுகளால் பிளந்தன. ஈழப் போரின் முதலாவது கட்டத்தின்போது பயன்படுத்தப்பட்ட அவ்ரோ என்று அழைக்கப்படும் பயணிகள் விமானம் பீப்பாய்க் குண்டுகள் என்று தமிழ் மக்களால் அழைக்கப்பட்ட குண்டுகளை வீசியது. சில சமயங்களில் பீப்பாய்களில் குண்டுகளுக்கு பதிலாக மனித மலம் நிரப்பப்பட்டிருந்தது. அப்படித்தான் சீனத் தயாரிப்பான Y12 விமானத்தை தமிழ் மக்கள் சகடை என்று அழைத்தார்கள். மெதுமெதுவாக மிக உயரத்தில் பறந்து போகும் அந்த விமானத்திலிருந்து எவ்வளவு பெரிய குண்டைப் போட முடியுமோ அவ்வளவு பெரிய குண்டு போடப்பட்டது. ஒரு குண்டு ஒரு பெரிய வீட்டை அப்படியே தரைமட்டமாக்கியது. ஈழப் போரின் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிகளின் போது மிக நவீன குண்டு வீச்சு விமானங்கள் அரங்கினுள் பிரவேசித்தன. அவை காற்றையும் வானத்தையும் கிழித்துக்கொண்டு குத்தி பறந்து குண்டுகளை வீசின. சந்தைகள், சாவடிகள், பாடசாலைகள்,கோயில்கள்,தேவாலயங்கள் என்று பொதுசன இலக்குகளின் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். அல்லது உடல் உறுப்புகளை இழந்தார்கள். சொத்துக்களை இழந்தார்கள். குண்டு வீச்சு விமானங்கள் மட்டுமல்ல, கண்காணிப்பு விமானங்கள் அதாவது வேவு விமானங்களும் தமிழ் மக்களின் இரவுகளையும் பகல்களையும் வேவு பார்த்தன. நான்கு கட்ட ஈழப் போர்களின் போதும் வானில் வேவு விமானங்கள் நிரந்தரமாக ரீங்காரமிட்டபடி பறந்தன. குறிப்பாக இறுதிக்கட்டப் போரில் வானில் வேவு விமானங்கள் சூரியனைப் போல சந்திரனைப் போல நட்சத்திரங்களைப் போல நிரந்தரமாக காணப்பட்டன. சோளகக் காற்று பலமாக வீசும் காலங்களில் யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதிகளில் பட்டங்கள் பறக்க விடப்படும். பிரம்மாண்டமான பட்டங்களில் விண் பொருத்தப்படும். காற்றில் விண் அதிரும் பொழுது ஒரு வித ரீங்கார ஒலியை எழுப்பும். யுத்தம் இல்லாத காலங்களில் சோழகக் காற்று வீசும் இரவுகளில் பட்டங்களின் விண் ஒலி வானத்தில் நிரந்தரமாக உறைந்து நிற்கும். அதுபோலவே யுத்த காலங்களில் வேவு விமானங்களின் ரீங்கார ஒலி வானில் நிரந்தரமாக உறைந்து நின்றது. இறுதி கட்டப் போரின் இறுதி நாளுக்கு பின்னரும் அது கேட்டது. சிறீலங்கா விமானப்படை தமிழ் மக்களை வீட்டுக்கும் பதுங்கு குழிக்கும் இடையே கிழிபட வைத்தது. போரில் குண்டுகளை, துண்டுப் பிரசுரங்களை வீசிய அதே வான் படை ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் நல்லூர் தேர்த் திருவிழாவில் பூக்களைத் தூவியது. அந்தப் போரில் பயன்படுத்தப்பட்ட தொழிநுட்பம் இப்பொழுது முற்ற வெளியில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருக்கின்றது. ஒரு காலம் தமிழ் மக்களைக் கொல்லும் கருவிகளாக காணப்பட்டவை இப்பொழுது கண்காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டிருப்பது ஒரு மாற்றம்தான். காங்கேசந்துறை வீதியில் அமைந்திருக்கும் “ஃபொக்ஸ் ரிசோர்ட்ஸ்” என்று அழைக்கப்படுகின்ற விருந்தினர் விடுதியில் யுத்தகாலத்தில் வெட்டப்பட்ட பதுங்கு குழிகள் காட்சிக் கூடங்களாக மாற்றப்பட்டுள்ளன. அந்தக் கட்டிடம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் யாழ்ப்பாணம் இருந்த காலகட்டத்தில் அவர்களுடைய பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமையகமாக இருந்தது. அந்தக் கட்டடத்துக்கு கீழே பாதுகாப்பான பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின் அக்கட்டிடத்தின் உரிமையாளர் அதை விருந்தினர் விடுதியாக மாற்றியுள்ளார். அங்கிருந்த பதுங்கு குழி ஞாபகச் சின்னமாக ஒரு “ஷோகேஸ் பீசாகப்” பேணப்படுகின்றது. அதன் சுவர்கள் செப்பனிடப்பட்டு, அழகாக்கப்பட்டு, அது ஒர் ஓவியக் கூடமாக, உல்லாசப் பயணிகளைக் கவரும் காட்சிப் பொருளாக மாற்றப்பட்டிருக்கிறது. அங்கே ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரு காலம் துர்க்கனவாகக் காணப்பட்ட பதுங்குழி, இப்பொழுது ஃபொக்ஸ் விருந்தினர் விடுதியில் காட்சிப் பொருளாகப் பராமரிக்கப்படுகின்றது. அது ஒரு விருந்தினர் விடுதியின் விளம்பர உத்தி. ஆனால் முற்றவெளியில் நடப்பது என்ன? ஒரு காலம் தமிழ் மக்களின் தலைகளின் மீது மலத்தைக் கொட்டிய கொலைக் கருவிகளும் கொலை வாகனங்களும் இப்பொழுது முற்ற வெளியில் காட்சிப் பொருட்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. ஒரு தொகுதி யுடியூப்பர்கள் அதை ஒளி பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த மாற்றம் மேலோட்டமானது என்பதுதான் இங்குள்ள பிரச்சினை. போர் ஒரு விளைவு. அது மூல காரணம் அல்ல. மூல காரணம் இன ஒடுக்குமுறையாகும். இன ஒடுக்குமுறை எங்கிருந்து வருகிறது? தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள மறக்கும் பொழுதுதான். தமிழ் மக்களின் தேசிய இருப்பை அழிக்க முற்படும்பொழுதுதான் இன முரண்பாடுகள் ஆயுத மோதலாக மாறின. எனவே போர் ஒரு விளைவு. இன ஒடுக்குமுறைதான் மூல காரணம். அது இப்பொழுதும் உண்டு. கண்காட்சியில் கலந்துகொள்ளும் படைப் பிரதானிகளின் பாதுகாப்புக்காக நடுப்பகல் வேளைகளில் பலாலி வீதி நீட்டுக்கும் பிரதான சந்திகளில் படையினர் நிறுத்தப்பட்டிருந்தார்கள். இக்கட்டுரை எழுதப்படுகையில், வெட்டுக்குநாறி மலையில் சிவராத்திரியை அனுஷ்டிப்பதற்கு தமிழ்மக்கள் போராட வேண்டியிருக்கிறது. இன முரண்பாடுகளை நீக்கும் விதத்தில் இனப்பிரச்சினைக்கு இன்றுவரையிலும் தீர்வு வழங்கப்படவில்லை. இப்போதுள்ள ஜனாதிபதி அதை வடக்கின் பிரச்சினை என்று வர்ணிக்கிறார். அவருக்கு முன்பிருந்த கோட்டாபய அதனை பொருளாதாரப் பிரச்சினை என்று வர்ணித்தார். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த 15 ஆண்டுகளின் பின்னரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. அவ்வாறு தீர்வு காணப்படுவதற்குரிய அரசியல் திடசித்தம் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பிடம் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே போரின் மூல காரணங்கள் அப்படியே இருக்கத்தக்கதாக, யுத்தவெற்றியின் நினைவுச் சின்னங்களைப் பேணும் ஒரு படைத்தரப்பு, தனது போர்க்கருவிகளையும் போர் வாகனங்களையும் காட்சிப் பொருட்களாக கண்காட்சியில் வைப்பது என்பது, போர் தொடர்பான கொடுமையான நினைவுகளை மறக்கச் செய்யும் உள்நோக்கமுடையது. மிலன் குந்தேரா கூறுவதுபோல “அதிகாரத்துக்கு எதிரான மனிதர்களின் போராட்டம் எனப்படுவது மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டமே” மாணவர்களுக்கு மறதிக்கு எதிரான ஞாபக சக்தி இருக்க வேண்டும். அது கற்றலுக்கு அவசியம். அதைவிட அவசியம் தமது சொந்த வரலாற்றை மறந்துவிடாமலிருக்க. ஈழத் தமிழர்கள் தாயகத்துக்கு வெளியே அதிக தொகையில் வாழும் நாடு கனடா. அங்கு இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அது தொடர்பான அறிவை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்கோடு இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் ஒன்றை அந்த நாட்டின் அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருக்கிறது. அதாவது அடுத்தடுத்த தலைமுறை தமிழ் பிள்ளைகளுக்கு இனப்படுகொலை தொடர்பாக அறிவூட்டப்பட ஓர் ஏற்பாடு. ஆனால் தாயகத்தில் இனப்படுகொலை புரிந்ததாக தமிழ் மக்கள் குற்றம் சாட்டும் ஒரு படைத்தரப்பின் விமானங்களை தமிழ் மாணவர்களே “எங்களுடைய விமானங்கள்” என்று கூறுகிறார்கள். ஆயின்,தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்கப்படுகின்றார்களா? https://www.nillanthan.com/6597/
  19. வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்க மறியல் வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று நேற்று (09) உத்தரவிட்டுள்ளது. சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற போது சப்பாத்துக் கால்களுடன் ஆலயத்திற்குள் நுழைந்த பொலிஸார் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து தடுத்து வைத்திருந்தனர். குறித்த 8 பேரையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் நெடுங்கேணி பொலிஸார் இன்று மாலை முன்னிலைப்படுத்தினர். இதன்போது ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் சார்பாக சட்டத்தரணிகளான க.சுகாஸ், தி.திருஅருள், அ.திலீப்குமார் உள்ளிட்ட குழுவினர் மன்றில் ஆஜராகியிருந்தனர். இது தொடர்பில் சட்டத்தரணி தி.திருஅருள் கருத்து தெரிவிக்கையில், வெடுக்குநாறி ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டது. குறித்த வழக்கு தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதால் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளமை தொடபில் மன்றுக்கு தெரிவித்தமையால் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துவதற்காகவும் திகதியிடப்பட்டது எனத் தெரிவித்தார். குறித்த வழக்கு விசாரணை இடம்பெற்ற போது நீதிமன்றம் முன்பாக வேலன்சுவாமிகள், ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.samakalam.com/வெடுக்குநாறி-ஆதி-சிவன்-ஆ/
  20. கனடாவில் படுகொலை செய்யப்பட்ட ஆறு இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டது கனடாவில் படுகொலை செய்யப்பட்ட ஆறு இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளன. கனடாவிலேயே இடம்பெறும் இறுதிக்கிரியைகள் உயிரிழந்த ஆறு பேரின் இறுதிக் கிரியைகளும் அந்நாட்டிலேயே முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டடிருப்பதாக கனடாவிலுள்ள பௌத்த காங்கிரஸ் அமைப்பின் தலைவரும் ஒட்டாவா ஹில்டா ஜயவர்தனாராமய விகாரையின் விகாராதிபதியுமான நுகேகலயாகே ஜினாநந்த தேரர் தெரிவித்துள்ளார். கனடாவில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் விகாரை நன்கொடையாளர் சபையின் ஆதரவுடன் குறித்த ஆறு பேரின் இறுதிக்கிரியைகளையும் இடம்பெறும். இதற்கு அவர்களது குடும்பத்தாரும் விரும்பம் தெரிவித்துள்ளதாகவும் நுகேகலயாகே ஜினாநந்த தேரர் மேலும் தெரிவித்தார். கனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்களான டிலந்திகா ஏகநாயக்க மற்றும் காமினி அமரகோன் ஆகியோரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் சிலரை இறுதிச் சடங்குகளுக்காக கனடாவுக்கு அழைத்துவருவது தொடர்பில் கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சடலங்களை நாட்டிற்கு கொண்டுவர பெருந்தொகை பணம் செலவாகும் உயிரிழந்த ஆறு பேரின் சடலங்களை நாட்டிற்கு கொண்டுவருவதற்கு பெருந்தொகை பணம் செலவாகும் என தெரிவிக்கப்பட்டள்ளது. மேலதிக விசாரணைகள் காரணமாக இதுவரையில் சடலங்களை கனேடிய பொலிஸார் உரிய தரப்பினரிடம் கையளிக்வில்லை. விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், உயிரிழந்த ஆறு பேரின் இறுதிக் கிரியைகள் அவர்களின் உறவினர்களின் விருப்பப்படி மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. http://www.samakalam.com/கனடாவில்-படுகொலை-செய்யப்/
  21. வெடுக்குநாறி மலையில் குடிநீர் எடுத்துச்சென்ற உழவு இயந்திரம் விபத்து - இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி Vhg மார்ச் 09, 2024 வெடுக்குநாறி மலையில் குடிநீர் எடுத்துச்சென்ற உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தில் காயமடைந்த ஒருவர் நெடுங்கேணி வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் வருகை தந்த மக்களுக்கு குடிநீர் வழங்க பொலிஸார் மறுப்பு தெரிவித்தமையால் அங்கு பொலிஸாருக்கும் , பக்தர்களுக்கும் இடையில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. குடி நீர் எடுத்துச் செல்ல இடையூறு வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் சிவராத்திரி வழிபாடுகள் காலை முதல் இடம்பெற்றது. இதன்போது காலை முதல் வீதி தடைகளைப் போட்டிருந்த பொலிஸார் ஆலய வளாகத்திற்குள் குடி நீர் எடுத்துச் செல்ல இடையூறை ஏற்படுத்தியிருந்தனர். இந்நிலையில் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்ட குடி நீர் தாங்கி பொலிஸாரால் 3 கிலோமீற்றருக்கு முன்னரே தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து குடிநீர் இன்றி அவதிப்பட்ட சிறுவர்கள், பக்தர்களுக்காக அருகில் உள்ள ஆற்றில் இருந்து நீர் பெற்ற போதும் அதனையும் அவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் குடி நீர் இன்றி மக்கள் அவதிப்பட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழரசுக் கட்சி மத்திய குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன், மற்றும் ஆலய பக்தர்கள் குடிநீர் தாங்கியுடன் வந்த உழவு இயந்திரத்தை ஆலயத்திற்குள் விடுமாறு பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் குடிநீரை விடுமாறு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து மாலை மூன்று மணியளவில் குடிநீரை வழங்க பொலிஸார் இணங்கியுள்ளனர். இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட குடிநீரையும் பொலிஸார் மாலை ஆறு மணியளவில் குடிநீர் தாங்கியை திறந்து வெளியேற்றியுள்ளனர். இந்நிலையில், விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் https://www.battinatham.com/2024/03/blog-post_44.html
  22. இலங்கை துணை தூதரகத்துக்கு முருகன் சென்றுவர அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு March 8, 2024 முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகனுக்கு கடவுச்சீட்டு பெறுவதற்கான நேர்காணலுக்காக இலங்கைத் துணை தூதரகம் சென்று வர அனுமதி வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி அவரது மனைவி நளினி சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து உச்ச நீதிமன்றம் 7 பேரையும் விடுவித்தது. இந்த நிலையில், இலங்கை குடிமகன் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் எனது கணவர் முருகன் தங்கவைக்கப்பட்டுள்ளார். லண்டனில் வசிக்கும் தன் மகளுடன் சேர்ந்து வாழ விரும்புவதால், அனைத்து நாடுகளுக்கும் செல்வதற்கான கடவுச்சீட்டு வழங்க கோரி இருவரும் விண்ணப்பித்திருந்தோம். நேர்காணலுக்காக ஜனவரி 30 ஆம் திகதி அழைக்கப்பட்டோம். என்னுடைய நேர்காணல் முடிந்துவிட்டது. இந்த நேர்காணலில் கலந்துகொள்ள அனுமதிக்காததால், கணவர் முருகன், இலங்கை துணை தூதரகம் அழைத்தபோது ஆஜராக முடியவில்லை. திருச்சி முகாமில் உள்ள மோசமான சூழல் காரணமாக ஏற்கெனவே ஒரு மாதத்தில் 2 பேர் இறந்துள்ளனர். எனவே, என்னுடைய கணவருக்கு எதுவும் நடப்பதற்கு முன்பாக, நாங்கள் இருவரும் மகளுடன் சேர்ந்துவாழ விரும்புகிறோம். எனவே எனது கணவர் முருகன் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்குச் சென்று நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். அங்கு சென்று வருவதற்கு பாதுகாப்பு தேவைப்படும்பட்சத்தில், உரிய பாதுகாப்பு வழங்க பொலிஸாருக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். https://www.ilakku.org/இலங்கை-துணை-தூதரகத்துக்க/
  23. ரணிலின் தெரிவு இதுதான்! குழப்பத்தில் ராஜபக்ஷக்கள் – அரசியல் ஆய்வாளா் யதீந்திரா March 8, 2024 இலங்கையில் தோ்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. முக்கியமான நகா்வுகளைப் பாா்க்க முடிகிறது. பொலிஸ் அதிகாரம் இல்லாத அதிகாரப் பகிா்வு தொடா்பில் பேசப்போவதாக ஜனாதிபதி அறிவித்திருக்கின்றாா். தோ்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் ராஜபக்ஷக்கள் குழம்பிப்போயுள்ளாா்கள். இந்த நிலையில், இன்றைய தாயகக் களத்தில் அரசியலில் என்ன நடைபெறுகின்றது என்பதை ஆராய்கின்றாா் அரசியல் ஆய்வாளரும், பத்திரிகையாளருமான யதீந்திரா! கேள்வி – பொலிஸ் அதிகாரத்தைத் தவிா்துவிட்டு 13 ஆவது திருத்தத்தின் மூலமாக அதிகாரப் பரவலாக்கல் தொடா்பாக சிறுபான்மையினக் கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை ஒன்றுக்கு தான் தயாராக இருப்பதாகவும், அடுத்த வாரத்தில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெறும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கின்றாா். இந்த வேளையில் இவ்வாறான அறிவிப்பை அவா் எதற்காக வெளியிட்டிருக்கின்றாா்? பதில் – ஜனாதிபதி இதற்கு முன்னரும் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடா்பாகப் பேசத் தயாா் என கூறியிருந்தாா். அதனைவிட, கடந்த வருடத்தில் சுதந்திர தினத்துக்கு முன்னதாகத் தீா்வைக் காணப்போவதாகவும் கூறியிருந்தாா். ஆனால், எதுவுமே நடைபெறவில்லை. இப்போது ஜனாதிபதித் தோ்தல் நடைபெறப்போவது உறுதியாகியிருக்கும் சூழலில், அந்தத் தோ்தலில் அவா் போட்டியிடப்போவதும், உறுதியாகியிருக்கின்ற பின்னணியில் இந்தக் கருத்தை அவா் வெளியிட்டிருக்கின்றாா். ஆனால், ஜனாதிபதித் தோ்தல் நடைபெறும் வரையில் அவ்விதம் ஆக்கபுா்வமான விடயங்கள் எதுவும் நடைபெறப்போவதில்லை. இப்போது, பொலிஸ் அதிகாரம் இல்லாத 13 ஆவது திருத்தம் தொடா்பாகப் பேசப்போவதாகச் சொல்வதெல்லாம் தோ்தலை இலக்காகக் கொண்ட உத்தியாக மட்டுமே இருக்க முடியும். ஏனெனில், பறிக்கப்பட்ட அதிகாரங்களுடன் அதிகாரப் பரவலாக்கலை வழங்குதென்பது தற்போதுள்ள சூழ்நிலையில் வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை. ஜனாதிபதித் தோ்தல் நெருங்கிவரும் நிலையில், பல்வேறு தரப்புக்களின் ஆதரவையும் பெற வேண்டிய நிலையில் இருக்கும் ரணில் விக்கிரமசிங்க, நிச்சயமாக அவற்றைச் செய்யப்போவதில்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை. தமிழ் மக்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக அவா் இவ்வாறான கருத்துக்களை வெளியிடலாம். இதன்மூலம் மற்றவா்களைவிட சில விடயங்களைச் செய்வதற்கான விருப்பத்துடன் தான் இருப்பதாக – அது குறித்து தமிழ்க் கட்சிகளுடன் பேசத் தயாராக இருப்பதாகவும் தமிழ் மக்களுக்குக் காட்டிக்கொள்வதற்காகத்தான் இவ்வாறான கருத்துக்களை அவா் சொல்வதாகத்தான் நான் நினைக்கிறேன். கேள்வி – சிங்களத் தேசியவாதக் கட்சி ஒன்றின் தலைவரான உதய கம்மன்பிலவும், 13 ஆவது திருத்தத்தின் இருந்து பொலிஸ் அதிகாரங்களை நீக்குவதற்கான அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றைக் கொண்டுவந்திருக்கின்றாா். இவ்விடயத்தில் அவரது இலக்கு என்ன? பதில் – இதுவும் தோ்தலை இலக்காகக்கொண்ட ஒரு நகா்வுதான். கம்மன்பில போன்ற தேசியவாதிகள் நீண்ட காலமாகவே இவ்வாறு 13 க்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருபவா்கள்தான். குறிப்பாக வட, கிழக்கு இணைப்பு, பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் போன்வற்றைத் தொடா்ச்சியாக எதிா்த்து வந்துள்ளாா்கள். ஆனால், கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலைத் தொடா்ந்து தென்பகுதியில் இவா்களுடைய செல்வாக்கு பெருமளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இவா்கள் அனைவரும் கோட்டாபயவின் துாண்களாகச் செயற்பட்டவா்கள். அதனால், கோட்டாபயவின் வீழ்ச்சியின் ஒரு அங்கமாகத்தான் இதனையும் பாா்க்க வேண்டும். இந்த நிலையில் மீண்டும் ஒரு தோ்தல் நெருங்கிவரும் பின்னணியில் சிங்கள மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை உயா்த்திக்கொள்வதற்கும், தங்களை மீண்டும் பலப்படுத்திக்கொள்வதற்குமான ஒரு உத்தியாகத்தான் இந்த விடயங்களை அவா்கள் கைகளில் எடுக்கின்றாா்கள். 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் இனநெருக்கடிக்குத் தீா்வைக் காணப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே அறிவித்திருந்த ஒரு நிலையில்தான் பௌத்த பிக்குகள் 13 ஆவது திருத்தத்தின் நகலை எரிப்பது போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தாா்கள். இப்போது தோ்தல் நெருங்கிவரும் சந்தா்ப்பத்தில் பொலிஸ் அதிகாரம் இல்லாத 13 ஆவது திருத்தம் என்ற கருத்தை உதய கம்பன்பில போன்றவா்கள் முன்வைக்கின்றாா்கள். அவ்வாறு முன்வைப்பதற்கு பிரதான காரணம் இந்தத் தோ்தல் காலத்தில், வீழ்ச்சியடைந்திருக்கும் தமது ஆதரவுத் தளத்தை உயா்த்திக்கொள்வதுதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்துவது. அதேவேளையில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்துவதும், ஒரு கட்டத்துக்கு மேல் அவரால் தனித்து செயற்பட முடியாது என்ற நிலையை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாக இருக்கலாம். முக்கியமாக, இலங்கை – இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலம் முதல் இவ்வாறான கருத்துக்களைத்தான் சிங்கள தேசியவாதிகள் முன்வைத்து வருகின்றாா்கள். இந்திய மேலாதிக்கத்தின் ஒரு நீட்சியாகவே இது உள்ளது என இவா்கள் பிரசாரங்களையும் முன்னெடுத்து வந்துள்ளாா்கள். தற்போது பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் இலங்கை அதிலிருந்து மீள்வதற்கு இந்தியாவைத்தான் பெருமளவுக்கு நம்பியுள்ளது. இந்த நிலையில், இந்திய அழுத்தங்களுக்கு உட்பட்டு இந்த 13 போன்றவற்றை ரணில் விக்கிரமசிங்க தமிழா்களுக்கு வழங்கிவிடுவாா் என்பது போன்ற கருத்துக்களை சிங்கள மக்களிடம் கோண்டு செல்வதன் மூலம், தமது செல்வாக்கை உயா்த்திக்கொள்ளலாம் என்று சிங்களத் தேசியவாதிகள் சிந்திக்கின்றாா்கள். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலுக்கான நகா்வுகள் முன்னெடுக்கப்கடும் நிலையில், ரணில் விக்கிரமசிங்க எந்தக் கட்சியின் சாா்பில் போட்டியிடுவாா் என்பதில் குழப்பமான கருத்துக்களே வருகின்றன. உங்களைப் பொறுத்தவரை அவா் எந்தக் கட்சியில் போட்டியிடுவாா்? பதில் – என்னுடைய அவதானிப்புக்களைப் பொறுத்தவரையில் ரணில் விக்கிரமசிங்க ஒரு கட்சியின் சாா்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்றே தெரிகின்றது. அவா் ஒரு சுயாதீன வேட்பாளராகக் களமிறங்குவதற்கான வாய்ப்புக்களே இருப்பதாகத் தெரிகின்றது. ஏனெனில், ஐ..க.வின் சாா்பில் அவா் போட்டியிட்டால், ஏனைய கட்சிகளைச் சாா்ந்தவா்கள் இவரை ஆதரிக்கமாட்டாா்கள். அதேவேளையில், ரணில் வெகுஜன கவா்ச்சி – வசீகரம் மிக்க ஒரு தலைவரல்ல. கடந்த காலங்களில் அவரால் ஜனாதிபதித் தோ்தல்களில் வெற்றிபெற முடியவில்லை. தனித்து சிங்கள வாக்குகளால், அவரால் வெல்லவும் முடியாது. ஆனால், இந்தப் பொருளாதார நெருக்கடியை எதிா்கொள்ளக்கூடிய ஆளுமையுள்ள ஒருவா் இவா்தான், இவரை விட்டால் யாரும் இல்லை என்ற ஒரு கருத்துள்ளதைப் பயன்படுத்திக்கொண்டு, தோ்தலில் வென்றுவிட முடியும் என்ற உபாயத்துடன்தான் ரணில் விக்கிரமசிங்க செயற்படுவதாகத் தெரிகின்றது. ஆனால், இந்த வியுகத்தில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால், இவா் ராஜபக்ஷக்களுடன் இணைந்திருப்பது போன்ற ஒரு தோற்றம் இருப்பதால், ராஜபக்ஷக்களை எதிா்க்கும் எந்தவொரு தரப்பும் இவரை ஆதரிக்காது. இந்தப் பின்னணியில் ஐ.தே.க.வினரும் இவருக்கு வாக்களிக்க வேண்டும், மொட்டுக் கட்சியினரும் இவருக்கு வாக்களிக்க வேண்டும் ஏனைய தரப்பினரும் இவருக்கு வாக்களிக்க வேண்டும் ஏனைய சிறுபான்மையினரும் இவருக்கு வாக்களிக்க வேண்டுமானால், ஒரு சுயாதீன வேட்பாளராகவே இவா் போட்டியிட வேண்டியிருக்கும். கேள்வி – பொதுஜன பெரமுன தமது வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை. இந்தத் தோ்தலில் அவா்கள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பாா்கள்? பதில் – அரசியலில் அசைக்க முடியாதவா்கள் என்ற அவா்களுடைய நிலை இப்போது வீழ்ச்சியடைந்துவிட்டது. உடனடியாக அதிகாரத்தைக் கைப்பற்றுவது அவா்களைப் பொறுத்தவரை சாத்தியமானதல்ல. அதனால், அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது அவா்களுடைய நீண்டகால இலக்காக இருந்தாலும், தம்மைப் பாதுகாப்பது என்பதுதான் அவா்களுடைய உடனடியான தேவை. தம்மைப் பாதுகாக்கக்கூடிய ஒருவா் அதிகாரத்தில் இருப்பதைத்தான் அவா்கள் விரும்புவாா்கள். அப்படிப் பாா்க்கப்போனால், சஜித் பிரேமதாஸவோ, அநுரகுமாரவோ ஜனாதிபதித் தோ்தலில் வெற்றிபெற்றால், அது ராஜபக்ஷக்களுக்கு நெருக்கடியைக் கொடுப்பதாகவே இருக்கும். அவா்களுடைய எதிா்காலத்தைக் கேள்விக்குறியாக்கும். ஆனால், ரணில் ஜனாதிபதியானால், தமது அரசியலுக்கு அவா் நெருக்கடிகளை ஏற்படுத்தமாட்டா் என்ற நம்பிக்கை ராஜபக்ஷக்களுக்கு உள்ளது. அதனால், ரணில் ஜனாதிபதியாக வருவதைத்தான் அவா்கள் விரும்புவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளது. https://www.ilakku.org/ரணிலின்-தெரிவு-இதுதான்-க/
  24. சர்வதேச, உள்நாட்டு சதியை எதிர்கொள்ள என்னால் முடியாமற்போனது : ”ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை அகற்றுவதற்கான சதி” நூலில் கோட்டா தெரிவிப்பு வைராக்கியம் கொண்ட சர்வதேச சக்திகளும் ஒரு சில உள்நாட்டு தரப்பினரும் தம்மை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றுவதற்காக வன்முறையுடன் கூடிய எதிர்ப்புகளையும் நாசகார செயற்பாடுகளையும் வகுத்து, அதற்கான நிதியுதவிகளை வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று வெளியிட்ட தனது நூலில் தெரிவித்துள்ளார். ”ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை அகற்றுவதற்கான சதி” என்ற பெயரிலான இந்த நூல் நேற்று காலை முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வைராக்கியம் கொண்ட சர்வதேச சக்திகளும் ஒரு சில உள்நாட்டு தரப்பினரும் தம்மை ஆட்சியிலிருந்து அகற்றும் வரை, அவர்களின் நடவடிக்கைகளை நிறுத்த மாட்டார்கள் என்பதை தாம் அறிந்திருந்ததாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மக்களை பாதிப்பிற்குள்ளாக்கும் வகையில், முன்னெடுக்கப்பட்டு வந்த அரசியல் சதி மற்றும் நாசகார செயல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தாம் இராஜினாமா செய்ததாகவும் அவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். தாம் பதவி விலகக்கூடாது என வலியுறுத்திய பிரதான சர்வதேச வல்லரசு ஒன்றும் இருந்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அந்த சர்வதேச வல்லரசு இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கான எந்தவொரு நடவடிக்கைக்கும் தயாராகி இருந்ததை செயற்பாட்டு ரீதியில் நிரூபித்திருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அவ்வாறான நிலையிலும் மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதற்காக தாம் பதவி விலகியதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். ”ஒரு சில வல்லரசு நாடுகள் ஜனநாயகம் மற்றும் சட்டவாட்சியின் காவல் தெய்வங்களை போன்று உலக அரங்கில் தம்மை காண்பிக்கின்றன. ஜனநாயகம், சட்டவாட்சியை ஊக்குவிப்பதாக கூறிக்கொண்டு அபிவிருத்தி அடைந்து வரும் அனைத்து நாடுகளிலும் சம்பளம் பெறும் செயற்பாட்டாளர்கள் வலையமைப்பொன்றை அந்த நாடுகள் பராமரிக்கின்றன. உண்மையில் அவர்கள் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு பதிலாக தமது தேவைகளையே நிறைவேற்றிக்கொள்கின்றனர்” என அவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். தம்மை பதவியிலிருந்து அகற்றுவதற்காக அரங்கேற்றப்பட்ட சம்பவங்கள் சிலவற்றையும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது நூலில் எழுதியுள்ளதுடன், மிரிஹானையிலுள்ள தனது வீட்டிற்கு முன்பாக 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கை அவ்வாறாதொரு சம்பவம் எனவும் கூறியுள்ளார். ”இரவு 8 மணியளவில் பெங்கிரிவத்த வீதியை நெருங்கிய பேரணியில் குறிப்பிடத்தக்களவானவர்கள் இணைந்திருந்தனர். இந்த அனைத்தும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது, இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா , பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளை அதிகாரிகள் கொழும்பு சங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். நடப்பதை நான் ஷவேந்திரவுக்கும் கமலுக்கும் கூறினேன். ஷங்ரிலா ஹோட்டலில் திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் சுரெஷ் சலே மிரிஹானவிற்கு வந்தார். அவர் வருகின்றபோது அந்த இடத்தில் சுமார் நூறு ஆர்ப்பாட்டக்காரர்கள் மாத்திரமே இருந்தனர். எனினும், அங்கிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவ அதிகாரிகளுக்கு செய்ய வேண்டிய விடயங்கள் தொடர்பில் எவரும் ஆலோசனை வழங்கியிருக்கவில்லை. அந்த இடத்தில் இருந்து சலே – ஷவேந்திரவுக்கும் கமாலுக்கும் வீடியோ அழைப்பை ஏற்படுத்தி அங்கு வந்திருந்தவர்களை காண்பித்தாலும் அவர்களை கலைப்பதற்கான ஆலோசனை உயர்மட்ட அதிகாரிகளிடமிருந்து கீழ்மட்டத்திற்கு வரவில்லை” என அவர்விபரித்துள்ளார். இராணுவத்தளபதி , பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி , பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் மறுநாள் முற்பகல் 10.30 மணியளவிலேயே தமது இல்லத்திற்கு வருகை தந்ததாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை, இராணுவ தலைமையகத்தில் இருந்த நடவடிக்கை நிலையத்தை கொழும்பு ஜனாதிபதி மாளிகைக்கு மாற்றுமாறு 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8ஆம் திகதி கோட்டாபய பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்னவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். மே மாதம் 9 ஆம் திகதி இரவு அலரி மாளிகையில் இருந்த முன்னாள் பிரதமர் உள்ளிட்ட குழுவினரை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக இராணுவத்தினரை வரவழைக்கும் போது ஏற்பட்ட சீரற்ற அனுபவம் காரணமாக அனைத்து பாதுகாப்பு பிரதானிகளையும் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து நடவடிக்கை நிலையத்தை அங்கிருந்து செயற்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி தனது நூலில் கூறியுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி பாதுகாப்பு செயலாளர் , முப்படைத் தளபதிகள் , பொலிஸ்மா அதிபர், அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் இந்த நிலையத்தில் இருந்ததாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனினும், மக்கள் கொழும்பிற்கு வருவதைத் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமற்போனதாகவும் அவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். ”அனைத்து பிரவேச மார்க்கங்களையும் தடுப்பதனூடாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பிற்கு வருவதை தடுப்பதே அரசாங்கத்தின் திட்டமாக இருந்தது. எனினும், இத்தகைய வீதித்தடைகள் எந்த ஒரு இடத்திலும் ஸ்தாபிக்கப்படவில்லை என்பதுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் எவ்வித இடையூறும் இன்றி ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்தனர்” என அவர் தெரிவித்துள்ளார். தாம் பதவி விலகும் சந்தர்ப்பத்தில் ஏற்பட்டிருந்த எரிபொருள் , எரிவாயு பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி தனது நூலில் தெரிவித்துள்ளார். ”மூழ்கும் கப்பலிலிருந்து நான் தனியாக தப்பிச் சென்றதாக ஒரு சில குழுவினர் கூறினாலும் நான் இராஜினாமா செய்யும்போது இலங்கை ஒருபோதும் மூழ்கிக்கொண்டிருக்கவில்லை. 2022 ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் என்னை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்காக நாடு பெருந்தொற்றிலிருந்து மீள்வதற்கு ஆரம்பித்திருந்த சந்தர்ப்பத்தில் மூலோபாய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச, உள்நாட்டு சதியை எதிர்கொள்ள என்னால் முடியாமற்போனது. நான் இன்னும் இரண்டு வருடங்கள் ஆட்சியில் நீடிப்பதற்காக ஒரு உயிரையேனும் இழப்பது அர்த்தமற்ற செயலாக இருந்தது” எனவும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/294889
  25. கோத்தாவின் புத்தகத்துக்கு எகிறிய கிராக்கி! (புதியவன்) முன்னாள் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவினால் எழுதப்பட்ட “என்னை அரச தலைவர் பதவியில் இருந்து வெளியேற்ற சதி” என்ற புத்தகத்தின் முதல் கையிருப்பு நேற்று (07) முற்றாக விற்று தீர்ந்ததாக விஜித யாப்பா பதிப்பகத்தின் தலைவர் விஜித யாப்பா தெரிவித்தார். சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களும் தமது புத்தகக் கடைகளில் இருந்து புத்தகத்தை வாங்கியதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் எம்.பி.க்கள் மற்றும் அரசியல்வாதிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நூலின் பிரதான விற்பனையாளர் தமது நிறுவனம் எனத் தெரிவித்த விஜித யாப்பா, மேலும் ஒரு தொகுதி அச்சிடப்பட்ட புத்தகங்களை விற்பனை செய்ய இன்று (08) கொண்டுவரவுள்ளதாக தெரிவித்தார். இந்நூலை வாங்குவதற்கு நாடளாவிய ரீதியில் உள்ள புத்தகக் கடைகளில் இருந்து பல ஆர்டர்கள் கிடைத்துள்ளதாக அவர் கூறினார். “புத்தகத்திற்கு அதிக கிராக்கி உள்ளது. எதிர்பார்த்ததை விட வேகமாக விற்பனையாகிறது” என்றும் தெரிவித்திருந்தார். (ஏ) https://newuthayan.com/article/கோத்தாவின்_புத்தகத்துக்கு_எகிறிய_கிராக்கி!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.