Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  29348
 • Joined

 • Days Won

  128

Everything posted by கிருபன்

 1. ரணில் அதிர்ஸ்டசாலியா, இல்லையா? May 22, 2022 — கருணாகரன் — இலங்கையில் மிக அதிர்ஷ்டசாலியான ஒரு மனிதர் என்றால் அது ரணில் விக்கிரமசிங்கதான். யாருமே எதிர்பார்த்திருக்காத வகையில் பிரமராகியிருக்கிறார். ஹொலிவூட் சினிமாக்களில் வருவதைப்போல தனியொருவராக – ஒற்றை ஆளாக – நின்று ஆட்சி அமைத்திருக்கிறார். அவருடைய அமைச்சரவையில் இடம்பெறுகின்றவர்களும் இடம்பெறப் போகின்றவர்களும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். இதுவரையும் அவரைக் கடுமையாக எதிர்த்தவர்கள், எதிர்ப்பவர்கள். அவரையும் அவருடைய ஆட்சியையும் ஆதரிக்கப் போகின்றவர்களும் கூட எதிர்த் திசையில் நிற்பவர்களே. எவராலும் எதுவுமே செய்ய முடியாது என விதி வேறு விதமாக விளையாடத் தொடங்கியிருக்கிறது. இதனால் ரணில் விக்கிரமசிங்கவையும் அவருடைய ஆட்சியையும் எதிர்க்க முடியாது என்ற நிலையில் எல்லோரும் உள்ளனர். தவிர்க்க முடியாமல் அனைவரும் ரணில் விக்கிரமசிங்கவையும் அவருடைய ஆட்சியையும் ஆதரித்தே தீரவேண்டும். அல்லது பொறுமையாக அதை ஜீரணித்துக் கொள்ள வேணும். மறுத்து, எதிர்த்தால் வரலாற்றுப் பழி வந்து விடும். அது அரசியல் படுகுழியாகி விடும். நாட்டின் நிலையும் மக்கள் மனநிலையும் அந்தளவுக்கு வந்துள்ளது. இதனால், இந்த நிர்ப்பந்தத்தால் விரும்பியோ விரும்பாமலோ ரணில் அரசாங்கத்தை ஆதரித்தே ஆக வேண்டும் என்றாகியுள்ளது. இதை, இந்த வாய்ப்பை கடந்த தேர்தலில் வெற்றியைப் பெற்றிராத ஐக்கிய தேசியக் கட்சியோ ரணில் விக்கிரசிங்கவோ எதிர்பார்க்கவில்லை. ஏன் இலங்கையில் மட்டுமல்ல, உலகத்திலேயே கூட யாரும் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், நடந்துள்ளது. அவருடைய ஐக்கிய தேசியக் கட்சியில் அவரைத் தவிர வேறு யாருமே தெரிவாகவில்லை. ஏன் அவர் கூடக் கடந்த (2020) தேர்தலில் தோற்கடிக்கப்பட்டிருந்தார். ஆனால் இன்று அவர் இலங்கையின் பிரதமர். ஆகவே காலம் அவருக்கு அளித்த பரிசு என்றே இதைச் சொல்ல வேண்டும். அதிக எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்றவர்களும் அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சிகளும் எதுவுமே செய்ய முடியாத நிலையில் இருக்கும்போது தேர்தலில் தெரிவாகியிருக்காத –நிராகரிக்கப்பட்டவர் பிரதமராகியிருக்கிறார் என்றால்…! இதற்குக் காரணம், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் ராஜபக்ஸவினரின் ஆட்சித் தவறுகளுமே மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளின் தவறுமாகும். இவர்கள் விட்ட தவறுகளால்தான் அதிக வாக்குகளைப் பெற்றவர்களும் அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சிகளும் ஆட்சி அமைக்க முடியாது என்று தடுமாற வேண்டியிருந்தது. மட்டுமல்ல, வரலாற்றின் இந்த அபூர்வ தருணத்தில் தமிழ்,முஸ்லிம், மலையகக் கட்சிகள் –இனத்தவர்களிடையே இருந்து ஒருவரைக் கூட பிரதமராக்க முடியவில்லை. இதை ராஜபக்ஸவினரிடம் கேட்க முடியாதிருக்கலாம். ஆனால் எல்லா இனத்தவர்களும் இணைந்து போராடும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களிடத்திலும் தேசிய நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டும் என்று விரும்புகின்றவர்களிடத்திலும் கேட்க வேண்டும். அப்படியொரு தெரிவு நடந்திருந்தால் அது பொருளாதாரப்பிரச்சினையோடு, இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கான தொடக்கப்புள்ளியாகவும் இருந்திருக்கக் கூடும். நல்லிணக்கத்தின் மெய்யான புள்ளியைத் தொட்டதாகவும் இருந்திருக்கும். அதற்கான சூழல் இன்னும் கனியவில்லை என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது உள்ள சூழலில் தனியொருவராக – எந்த ஆதரவுப் பின்னணியும் இல்லாமல் துணிவோடு ரணில் முன்வந்ததே அவருடைய வெற்றியாகும். இதற்கு அவருக்குப் பின்னணி ஆதரவுகள் இருந்திருக்கலாம். (அப்படிப் பலமாக ஊகிக்கப்படுகிறது). ஆனாலும் அதை மட்டும் நம்பாமல் தன்னை நம்பிக் களத்தில் ஒரு போர் வீரரைப் போல இறங்கியதே அவருடைய வெற்றியாகும். ஆனாலும் இந்த வெற்றியை அவருடைய ஆட்சியே உறுதிப்படுத்த வேண்டும். ஏற்கனவே இந்த மாதிரி அவருக்கு எதிர்நிலையில் இருந்த இரண்டு ஜனாதிபதிகளால் தன்னுடைய ஆட்சியைத் தொடர முடியாமல் பதவியை இழந்த அனுபவம் அவருக்குண்டு. அப்படியிருந்தும் மூன்றாவது தடவையும் தலையைக் கொடுத்துள்ளார் என்றால்.. அது சாதாரணமானதல்ல. இப்பொழுது தவிர்க்க முடியாமல் அரசாங்கத்தில் பங்குபற்றப் போகும் கட்சிகளும் அரசாங்கத்தை ஆதரிக்கும் கட்சிகளுமாக (ஆதரித்தே ஆக வேண்டும் என்ற நிலையில்) ஏறக்குறைய அனைத்துத் தரப்பினரின் ஆதரவும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ளது. இப்படி முழுமையான ஆதரவு கிடைத்தாலும் அது எந்தளவுக்குச் செல்லும்? எதுவரை தாக்குப் பிடிக்கும் என்று தெரியவில்லை. ஏனென்றால் உருவாகியிருக்கும் பொருளாதார நெருக்கடி ஒரு தேசிய நெருக்கடியாக உணரப்படுவதைப்போல அதைத் தீர்ப்பதற்கான முயற்சிகளும் நடவடிக்கைகளும் உணரப்பட வேண்டும். அப்படி உணரப்பட்டால்தான் தீர்வைக் காண்பது இலகு. அதுதான் விரைவான மீட்புக்கு உதவும். இதற்கு ஒருங்கிணைந்த சிந்தனை வேண்டும். அல்லது பல நிலைப்பட்ட சிந்தனைகளை ஒருங்கிணைக்கும் ஆற்றல் வேண்டும். இலங்கையின் அரசியல் பண்பாட்டில் அப்படியான ஒருங்கிணைந்த சிந்தனையோ அல்லது பல நிலைப்பட்ட சிந்தனைகளை ஒருங்கிணைத்துத் தீர்மானங்களை எடுக்கும் மரபோ இல்லை. இங்கே நிலவுவது, கட்சிகளின் இருப்பும் வெற்றியைக் குறித்த இலக்கு – நோக்குமே. கட்சிகளுக்குள்ளும் தமக்கான இடத்தை – வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ளும் முனைப்புமே. இப்படியான ஒரு மரபுச் சூழலில் எப்படி இந்தத் தேசிய நெருக்கடிக்குத் தீர்வைக் காண்பது? நாடோ மிக அபாய நிலையில் உள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்ற பின் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இதை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் பிரதமர். எதையும் மக்களுக்கு மறைப்பதற்குத் தான் விரும்பவில்லை. மக்களுக்கு உண்மைகள் தெரிய வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், எதிர்வரும் காலம் என்பது மிகக் கடினமான நாட்களைக் கொண்டதாக இருக்கும் என எச்சரித்துள்ளார். அல்லது அறிவுறுத்தியுள்ளார். நிலைமையை மாற்றியமைப்பதற்கு தான் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் பிரதமர் கூறியிருக்கிறார். குறிப்பாக சிறிலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தைத் தனியாருக்கு விற்க வேண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இதைப்போல வேறு நிறுவனங்கள், சபைகளும் தனியார் மயப்படுவதற்கான சந்தர்ப்பமுண்டு. இப்பொழுது நாடு வெற்றிடமாகவே உள்ளது என்பதை அவருடைய அறிவிப்பிலிருந்து நாம் உணர முடிகிறது. இதையே முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஸவும் பொறுப்பேற்ற காலத்தில் கூறியிருந்தார். ஆகவே, நிலைமை படுமோசமாகவே உள்ளது. இப்பொழுது இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது கோதுமை மாவின் விலை 40 ரூபாயினால் அதிகரித்துள்ளது. பாணின் விலை 30 ரூபாயினால் கூடியுள்ளது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் எரிபொருள் விநியோகம் சீராகவில்லை. மின்தடை நீங்கவில்லை. இதெல்லாம் இப்போதைக்கு சீராகும் என்றில்லை. இதற்குக் காலம் எடுக்கும். அந்தக் காலத்தைத் தாக்குப்பிடிக்கக் கூடிய ஆட்சி வேண்டும். அல்லது விரும்பியோ விரும்பாமலோ கட்சி அரசியலுக்கு அப்பால் ஆட்சியை ஸ்திரப்படுத்த வேண்டும். அதோடு இந்த அபாய நெருக்கடிக்குத் தீர்வு காணக் கூடியவாறு ஒரு முகப்பட்டு தீர்மானங்களை எடுக்கின்ற ஒரு ஒழுக்கம் தேவைப்படுகிறது. இதை எப்படி உருவாக்குவது? மக்களின் மீது அக்கறை கொண்டு செயற்படுவதன் மூலமே இதை உருவாக்க முடியும். மக்கள்தான் நாடு. நாடு என்பது வெறும் நிலமும் கடலும் மலைகளும் காடுகளும் அல்ல. அது மக்களும் அவர்களுடைய வாழ்க்கையுமாகும். மக்களுடைய வாழ்க்கையைப் பாதுகாப்பது என்பது மக்களைப் பாதுகாப்பதாகும். மக்களைப் பாதுகாப்பது என்பதே நாட்டைப் பாதுகாப்பது என்பதாகும். இதைச் செய்ய முன்வராத சக்திகளையும் ஆட்களையும் மக்கள் இனங்காண வேண்டும். அவர்களை அரசியல் அரங்கிலிருந்து அகற்ற வேண்டும். அல்லது நிராகரிக்க வேண்டும். இது மக்கள் 100 வீதம் விழிப்பாக இருக்க வேண்டிய தருணம். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் மக்களுக்கு வேறு வழியில்லை. அவர்கள் இதைச் செய்துதான் ஆக வேண்டும். தமக்கு ஏற்பட்ட நெருக்கடியை முன்னிறுத்தி, அதற்கு எதிராகப் போராடியபடியால்தான் சிறிய அளவிலான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும். ஆகவே அதற்குத் தொடர்ந்து போராட வேண்டும். தொடர்ந்து விழிப்பாக இருக்க வேண்டும். மக்களே வழிப்படுத்துநர்களாக இருக்க வேண்டிய வரலாற்றுத் தருணம் இது. நெருக்கடிகள் உச்சமடையும்போது மக்களின் பங்கேற்பு உருவாகுவது உலக நியதி. உலகெங்கும் இதுவே நடந்துள்ளது. ஆகவே இந்த ஆட்சியை மக்களே வழிநடத்த வேண்டும். புதிய அரசாங்கம் பொறுப்பெடுத்துள்ளது. புதிய பிரதமரும் அமைச்சர்களும் வந்துள்ளனர். ஆகவே இனிப் பிரச்சினையில்லை. எல்லாமே சீராகி விடும் என்று நம்பவோ எதிர்பார்க்கவோ முடியாது. அதையே புதிய அரசாங்கத்திலும் தொடரும் நிலையும் பிரதமரின் அறிவிப்பும் சொல்கின்றன. மக்கள் அரசாங்கத்தை வழிநடத்தால், அதைச் சரியாகக் கண்காணிக்காமல் விட்டதன் தவறே இன்றைய அறுவடை என்பதையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே மக்கள் அரசாங்கத்தை வழிப்படுத்துவது, கண்காணிப்பதுடன் தம்முடைய வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொள்ள வேணும். நெருக்கடி நிலைக்கு ஏற்ப வாழ்க்கை முறையில் மாற்றம் தேவைப்படுகிறது. உணவு, உடை, போக்குவரத்து, பண்பாட்டு நிகழ்வுகள் என அனைத்திலும் இந்த மாற்றம் தேவை. அத்துடன் முக்கியமாக உழைப்பிலும் உற்பத்தியிலும் பன்மடங்கு ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். எல்லோரும் இரண்டு அல்லது இரண்டரை மடங்கு உழைக்க வேண்டும். அரச உத்தியோகத்தர்கள் தனியே உத்தியோகம் என்று அலுவலக வட்டத்திற்குள் சுற்றிக் கொள்ளாமல் களத்திலும் பணியாற்ற வேண்டும். இந்தப் பணி ஏதோ கடமைக்குச் செய்யும் பணி என்றில்லாமல் அர்ப்பணிப்புடன், புதிதாக்குகிறோம் என்ற உணர்வுடன் செய்யப்பட வேண்டும். இப்படி அனைத்துத் தரப்பிலும் ஒரு முகப்பட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளே இந்தத் தேசிய இடரை நீக்கப்பயன்படும். இதற்கான வழியை அரசாங்கமும் காட்ட வேண்டும். புதிய பிரதமரும் அவரை அங்கீரித்துள்ள ஜனாதிபதியும் கூட்டாக இணைந்து இந்த வழிகாட்டலைச் செய்ய வேண்டும். அவர்களை நெறிப்படுத்தும் பொறுப்பு மக்களுக்கு. ஆக பரஸ்பர உறவும் பங்கேற்புமான நிலையில்தான் புதிய சூழலை உருவாக்க முடியும். https://arangamnews.com/?p=7735
 2. சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு - அனைத்துலகத் தொடர்பகம். 20.05.2022 சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு. தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் ஜேர்மன் நாட்டில் மன்கைம் நகரத்தில், தன்னையும் ஒரு தேசியச் செயற்பாட்டாளராய் இணைத்துக்கொண்டு விடுதலைக்காகத் தொடர்ந்து பயணித்த சிவகாமசுந்தரி ஆசிரியர் என்று பலராலும் அறியப்பட்டவரை 18.05.2022 அன்று நாம் இழந்துவிட்டோம். தமிழீழ தேசம் விடுதலைக்காகப் போராடுகின்றபோது, பல அடக்குமுறைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் ஒரு தாயாக எமது விடுதலைப்போராட்டத்திற்கு எத்தகைய பங்களிப்பை வழங்கவேண்டும் என்பதை நன்குணர்ந்து செயற்பட்டவராவார். நெருக்கடியான இராணுவ ஆக்கிரமிப்புக் காலங்களில் போராளிகளுக்கான காப்பரணாகவிருந்து உணவு, தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து விடுதலைப்போராட்டத்திற்குப் பலம் சேர்த்தவராவார். தாயகத்தைவிட்டுப் புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வசித்தபோதும், எமது மக்களின் விடுதலைக்காகவும் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காகவும் தொடர்ந்தும் செயற்படவேண்டும் என்பதற்காக தேசிய செயற்பாட்டாளராகத் தன்னை இணைத்துக்கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்பட்டது மட்டுமல்லாது, எமது மாணவர்களின் தாய்மொழிக் கல்வி வளர்ச்சிக்காகக் கல்விக்கழகத்தின் ஊடாகத் தமிழாலயத்தில் இணைந்து நீண்டகாலம் செயலாற்றிய நல்லாசானாவார். மாவீரர்களின் தியாகங்களையும், தாயகமக்களின் விடுதலை அவாவையும் தன்னுள்தாங்கித் தொடர்ந்தும் அர்ப்பணிப்போடு தேசியப்பணியாற்றிய இவரை நாம் இழந்துவிட்டோம். அன்னாரின் இழப்பு தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கும் இவரிடம் கல்விகற்ற மாணவர்களுக்கும் குடும்பத்தினரிற்கும் பேரிழப்பாகும். இவரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் சிவகாமசுந்தரி தியாகராஜாஅவர்களின் தேசப்பற்றுமிக்கச் செயற்பாட்டிற்காக ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம். ‘‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’ அனைத்துலகத் தொடர்பகம். தமிழீழ விடுதலைப் புலிகள். https://www.thaarakam.com/news/e07abc35-88dc-4359-95b5-0418255b46a7
 3. சாகோஸ் தீவில் பிரிட்டனால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தனர் பிரிட்டனிற்கு சொந்தமான சாகோஸ் தீவில் உள்ள இராணுவதளத்தில் கடந்த ஏழு மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் தங்கள் நிலைமையை வெளிப்படுத்துவதற்காக உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சகோஸ் தீவில் கடந்த ஏழு மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள 89 இலங்கை தமிழ் அகதிகளில் 42 பேர் உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கடந்த ஒக்டோபரில் தமிழ் நாட்டிலிருந்து கனடா நோக்கி 89 இலங்கை தமிழ் அகதிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த படகு நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தவேளை பிரிட்டிஸ் இராணுவத்தினரை அதனை மீட்டு டியோகோ கார்சியாவிற்கு கொண்டு சென்றிருந்தனர். அமெரிக்க படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள டியோகோ கார்சியா இராணுவதளத்திற்கு இவர்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளது முதல் வெளி உலகத்துடனான அவர்களது தொடர்புகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன –முதல் ஆறு வாரங்கள் அவர்களை எவரும் தொடர்புகொள்ள முடியாத நிலை காணப்பட்டது என இலங்கை தமிழ் அகதிகளை பிரதிநிதித்துவம் செய்யும் லேய் டே என்ற பிரிட்டனின் சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. தீவிலிருந்து வெளியே கூடாரம்போன்றவற்றிற்குள் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் தாங்கள் சர்வதேச பாதுகாப்பை கோருவதாக அவர்கள் அதிகாரிகளிற்கு தெரியப்படுத்தியுள்ளதாக அறியமுடிகின்றது ஆனால் அவர்கள் புகலிடக்கோரிக்கையை முன்வைப்பதற்கு உதவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பிரிட்டனை சேர்ந்த சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரிட்டிஸ் நிறுவனமான லெய்டே பிரிட்டனின் வெளிவிவகார செயலாளருக்கும் பிஐஓடி ஆணையாளருக்கும் இலங்கை அகதிகள் தொடர்பில் மூன்று கடிதங்களை எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது அவர்களிற்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு சட்டங்களின் கீழ் பிரிட்டனிற்கு உள்ள கடப்பாடுகளிற்கு இது முரணாணவிடயம் என பிரிட்டனின் சட்ட நிறுவனம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது. அவர்கள் தொடர்ச்சியாக வெளிஉலகுடன் தொடர்புகொள்ள அனுமதி மறுப்பது –( அவர்களின் குடும்பத்தவர்கள் – சட்ட ஆலோசகர்களுடன்) சட்டவிரோதமானது எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. நாங்கள் பிரதிநிதித்துவம் செய்பவர்கள் டியாகோ கார்சியாவில் அவர்கள் அனுபவித்துவரும் விடயங்கள் மற்றும் அவர்களிற்கான தீர்வை கண்டுபிடிப்பதில் முன்னேற்றமின்மை குறித்து அதிகளவு அவநம்பிக்கை அடைந்துள்ளனர் என பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் இந்த வாரம் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர். சர்வதேச பாதுகாப்பை கோருவதற்கு அவர்களிற்கு எப்போது எங்னு எவ்வாறு அனுமதி வழங்கப்படும் என்பது குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை-எவ்வளவு காலம் அங்கு தங்கவைக்கப்படுவார்கள் எங்கு அனுப்பப்படுவார்கள் என்பது குறித்தும் எந்த தகவலும வழங்கப்படவில்லைஇஎனவும் பிரிட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை அகதிகளில் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்கள் பத்து வயதிற்கு உட்பட்ட 20 குழந்தைகள் உள்ளனர் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம் – அவர்களில் பலரின்மனோநிலையை மிகவும் அவநம்பிக்கை கொண்டவர்கள் என வர்ணிக்க முடியும் எனவும் பிரிட்டன் நிறுவனம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது. அவர்கள் அவ்வாறான நிலையில் உள்ளனர் தாங்கள் தீவில் இறந்தால் பிரிட்டன் என்ன செய்யும் என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர் சிலர் தாங்கள் உயிரிழந்தால் தங்கள் உடல்களை பிரிட்டிஸ் பிரஜைகளிற்கு வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளனர் எனவும் பிரிட்டிஸ் நிறுவனம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது. இலங்கையின் உள்நாட்டு யுத்தம் தமிழ் புலிகள் என அழைக்கப்படும் தமிழ் பிரிவினைவாத போராளி குழுவின் தோல்வியுடன் 2009 இல் முடிவிற்கு வந்தது. எனினும் மனித உரிமை அமைப்புகளும் ஐநாவும் துன்புறுத்தல்கள் கண்காணிப்பு கண்மூடித்தனமாக தடுத்துவைத்தல் – தமிழர்களின் நிலங்களை கையகப்படுத்துதல் என்பன கடந்த இரண்டு வருடங்களில் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளன. சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்கள் 20 குழந்தைகளை உள்ளடக்கிய இந்த பலவீனமான நிலையில் உள்ள குழுவினரை மட்டுப்படுத்தப்பட்ட தொடர்பாடல் கல்வியின்மை சர்வதேச பாதுகாப்பை தேடுவதற்கான வழிகள் இன்மை போன்றவற்றுடன் தீவில் தடுத்துவைத்திருப்பது பிரிட்டன் செய்யக்கூடிய சரியான விடயமல்ல என லெய்டேயின் திசா கிரகெரி தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட குழுவினர் அதிகளவில் நம்பிக்கையற்றவர்களாக காணப்படுகின்றனர்-நாங்கள் அவர்களின் மனோநிலை உடல்நிலை குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம்இஎந்த தாமதமும் இன்றி நீடித்த தீர்வு கிடைக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டிஸ் அரசாங்கம் கடந்த ஒக்டோபரில் பலரை மீன்பிடி படகிலிருந்து காப்பாற்றி பிரிட்டிஸ் இந்து சமுத்திர பகுதியொன்றிற்கு கொண்டு சென்றுள்ளது-தற்போதைய நிலைக்கு முடிவினை காணநாங்கள் அயராது பாடுபடுகின்றோம்-அவர்களின் பாதுகாப்பும் நலனும் எப்போதும் எங்களின் முன்னுரிமைக்குரிய விடயங்களாக உள்ளன-24 மணிநேர மருத்துவ உதவி போன்றவற்றை வழங்கியுள்ளோம் என பிரிட்டிஸ் அரசாங்க பேச்சாளர் தெரிவித்துள்ளார். டியாகோ கார்சியா என்பது சாகோஸ் தீவுகளின் ஒரு பகுதி – 1968 இல் மொறீசியசிற்கு சுதந்திரம் வழங்கியவேளை பிரிட்டன் மொரீசியசிடமிருந்து சட்டவிரோதமாக இந்த பகுதியை பிரித்தது என ஐநா தீர்ப்பு வழங்கியுள்ளது. பிரிட்டன் இதனை பிரிட்டன் இந்து சமுத்திரப்பகுதி என தெரிவித்துவருவதுடன் திருப்பி கொடுக்க மறுத்துவருகின்றது. https://thinakkural.lk/article/178872
 4. இலங்கைத்தீவு ஒரு தேசமாக இருப்பதில் தோல்வி அடையுமா? நிலாந்தன்! May 22, 2022 ரணில் விக்ரமசிங்க யாருடைய பிரதமர் ? அவர் கோத்தபாயவின் பிரதமரா ?அல்லது ஆளுங்கட்சியின் பிரதமரா ?அல்லது எதிர்க்கட்சிகளின் பிரதமரா? சிலர் அவரை அமெரிக்காவின் பிரதமர் என்று சொன்னார்கள். மேற்கத்திய நிதி முகவர் அமைப்புக்களின் பிரதமர் என்று சொன்னார்கள். காலிமுகத்திடலில் போராடும் புதிய தலைமுறை அவரை டீல்களின் பிரதமர் என்று சொன்னது. முன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் அவரை கிழட்டுக் கோழி என்று சொன்னார். ஆனால் ஒரே ஒரு ஆளாக உள்ளே வந்தவர்,இப்பொழுது பெரும்பாலானவர்களின் தவிர்க்கப்பட முடியாத தெரிவாக மாறியுள்ளார். நாட்டின் நிதி நெருக்கடியும் அதன் விளைவாக ஏற்பட்ட அரசியல் நெருக்கடியும் அவரை தவிர்க்க முடியாதவராக மாற்றி உள்ளனவா? அவர் மந்திரவாதி அல்ல. மந்திர தந்திரங்களில் நாட்டமுடையவரும் அல்ல. ராஜபக்ச குடும்பத்தைப் போல ஞானாக்காக்களின் பின் செல்பவரோ, அல்லது மந்திரித்த தாயத்துக்களை கைகளில் அணிந்திருப்பவரோ வைத்திருப்பவரோ அல்ல. அவர் மந்திரத்தை விடவும் தந்திரத்தை நம்புபவர். அவர் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டதும் பங்குச்சந்தை மாற்றத்தை காட்டத் தொடங்கியது. டொலரின் பெறுமதி குறைந்தது. மேற்கு நாடுகள் உதவிகளை அள்ளி வழங்கின. இதனால் ஒரு திடீர் எதிர்பார்ப்பு அவரை நோக்கி உருவாகியது. அதன் விளைவாக உள்ளூர் சந்தைகளில் பதுக்கப்பட்டிருந்த பொருட்கள் வெளிவந்தன. மூடப்பட்டிருந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வெளிப்படத் தொடங்கியது. முகநூலில் ஒரு நண்பர் எழுதியது போல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் ஊற்றெடுக்க தொடங்கியது. 3 ஆயிரம் வரையிலும் விற்கப்பட்ட சீமெந்து திடீரென்று 1200ரூபாய்க்கு இறங்கியது. இவ்வாறு பதுக்கப்பட்ட பொருட்கள் வெளிப்படத் தொடங்கியதும் அவர் மீதான நம்பிக்கை மேலும் அதிகரித்தது. நாடாளுமன்றத்தில் அவர் தெரிவு செய்யப்பட்ட விதத்தை, அவருடைய தெரிவை எதிர்த்த கட்சிகள் பெரும்பாலானவை படிப்படியாக அவரை எதிர்ப்பதில்லை என்ற முடிவை எடுக்கத் தொடங்கின. ஏனென்றால் ரணிலுக்கு எதிராக வாக்களித்தால் மக்களின் எதிர்ப்பை வாங்கிக்கட்ட வேண்டியிருக்கும் என்ற பயம் அவர்களுக்கு. கடந்த 9 ஆம் திகதியும் 10 ஆம் திகதியும் மக்களின் கோபம் எப்படியிருக்கும் என்பதை அனுபவித்தவர்கள் அவர்கள். இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேசசபைத் தலைவரும் மக்களால் அடித்துக் கொல்லப்படும் அளவுக்கு நிலைமைகள் பயங்கரமாக இருந்த நாட்கள் அவை. எனவே முதலில் பத்திரமாக சொந்த தேர்தல் தொகுதிக்குப் போகவேண்டுமென்றால் இப்போதைக்கு ரணிலை எதிர்ப்பதில்லை என்று பெரும்பாலான சிங்கள கட்சிகள் முடிவெடுத்தன. எனினும் பிரதி சபாநாயகர் தெரிவில் ரணிலுக்குள்ள வரையறைகளை ஆளுங்கட்சி உணர்த்தியிருக்கிறது. ரணில் பிரதமராக நியமிக்கப்பட்டதை பேராயர் மல்கம் ரஞ்சித் ஏற்றுக்கொள்ளவில்லை. மகா நாயக்கர்களின் கருத்தும் அதுதான் என்று அவர் சொன்னார். சகல மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சகல மக்களுக்கும் நம்பிக்கை ஊட்டக்கூடிய ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று பேராயர் போர்க்கொடி எழுப்பினார். அப்படி ஒருவரை நாடாளுமன்றத்தில் கண்டுபிடிப்பது கடினம் என்று பேராயருக்கும் தெரியும். தவிர நாடாளுமன்றத்துக்கு வெளியே அப்படிப்பட்ட ஒருவரைத் தேட பேராயராலும் முடியவில்லை. மகாநாயக்கர்களாலும் முடியவில்லை. இந்த வெற்றிடத்தை தந்திரமாகப் பயன்படுத்தி ரணிலை கோத்தபாய தெரிவு செய்தார். யாப்பின் பிரகாரம் தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி கோத்தாபய ரணிலைத் தெரிவு செய்தார். அதாவது யாப்பின்படி ரணில் தெரிவு செய்யப்பட்டார். இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயத்தை நாம் கவனிக்கவேண்டும். கோட்டாவை வீட்டுக்குப் போ என்று கேட்டு ஒரு புதிய தலைமுறை போராடுகிறது. ஆனால் யாப்பின்படி அவரை வெளியே அனுப்ப முடியாதுள்ளது. அதேசமயம் மஹிந்த பதவி விலகியது யாப்பின்படி அல்ல. யாப்பின்படி அவர் பலமாகக் காணப்பட்டார். ஆனால் யாப்புக்கு வெளியே நடந்த மக்கள் எழுச்சிகள் அவரைப் பதவிவிலகத் தூண்டின. அந்த மக்கள் எழுச்சிகளுக்கு எதிர்க்கட்சிகள் தலைமை தாங்கியிருந்திருந்தால் கோட்டோவையும் வீட்டுக்கு அனுப்பியிருந்திருக்கலாம். ஆனால் ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை தாங்க எந்த ஒரு சிங்களக் கட்சியாலும் முடியவில்லை. சஜித் பிரேமதாசவும் ஜேவிபியும் போராடும் தரப்புகளின் கோஷங்களை ஏற்றுக் கொள்வதன்மூலம் தாங்கள் அவர்களின் பக்கம் என்று காட்டினார்கள். ஆனால் போராடும் மக்களுக்கு தலைமை தாங்க அவர்களால் முடியவில்லை. இதுதான் அடிப்படைப் பிரச்சினை. யாப்பை மீறிச் செல்லத் துணிச்சலற்ற எதிர் கட்சிகளின் மத்தியில் யாப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணிலைத் தெரிவு செய்தார். இதை இன்னும் சரியான வார்த்தைகளில் சொன்னால் காலிமுகத்திடலில் போராடும் புதிய தலைமுறையும் தெருக்களில் இறங்கி அரசியல்வாதிகளுக்கு பாடம் படிப்பித்த மக்களும், எதிர்க்கட்சிகளும் போராடியதால் கிடைத்த கனிகளை ரணில் விக்கிரமசிங்க சுவீகரித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். மிகப் பலவீனமான, உலகின் மிக நூதனமான ஒரு பிரதமராக அவர் தொடக்கத்தில் தோன்றினார். ஆனால் படிப்படியாக தன்னை பலப்படுத்தி வருகிறார். அவர் கடைசியாக இரண்டு தடவைகள் பதவியில் இருந்த போதும் கூட நிலைமை அப்படித்தான் இருந்தது. அவர் உள்நாட்டில் மிகப் பலவீனமான தலைவராகவும் வெளியுலகில் மிகப் பலமான ஒரு தலைவராகவும் காணப்பட்டார். அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையும் தெரிவிக்கும் தகவல்களும் ஒப்பீட்டளவில் வெளிப்படையானவை. அவர் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கத் தயாரில்லை என்று தெரிகிறது. இந்தச் சோதனையில் அவர் வெற்றி பெற்றால் அவர் ஒரே கல்லில் மூன்று கனிகளை வீழ்த்துவார். முதலாவது தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் -அதாவது அவரைப் பொறுத்தவரை இது கடைசி ஓவர் -இந்த கடைசி ஓவரில் ஆவது அவர் வெற்றி பெற்ற ஒரு தலைவராக ஓய்வு பெறலாம். மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் நாட்டை மீட்டெடுத்தவர் என்ற புகழுடன் அவர் ஓய்வு பெறலாம். இரண்டாவது தனது கட்சியை பலப்படுத்தலாம். மூன்றாவது தனது உட்கட்சி எதிரிகளை தோற்கடிக்கலாம். அதேசமயம் ரணிலை நியமித்ததன் மூலம் கோத்தபாய முதலாவதாக தன்னைத் தற்காத்துக் கொண்டார். இரண்டாவதாக ஏனைய ராஜபக்சக்களையும் பாதுகாத்துக் கொண்டார். மூன்றாவதாக மக்கள் எதிர்ப்பை ஒப்பீட்டளவில் தணித்திருக்கிறார். காலிமுகத்திடலில் போராடும் புதிய தலைமுறை அவரை வீட்டுக்கு போ என்று கேட்கிறது. ஆனால் இன்றுவரை அவர் வீட்டுக்கு போகவில்லை. அதேசமயம் ரணிலை நியமித்தன்மூலம் அவர் நாட்டின் கவனத்தையும் வெளி உலகின் கவனத்தையும் ரணிலின் மீது குவியச் செய்து விட்டார். ரணிலின் மறைவில் அவர் தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொண்டார். இப்படிப் பார்த்தால் ரணிலை நியமித்ததன்மூலம் கோத்தபாயவும் ஒரு கட்டம் வரை வெற்றி பெற்றிருக்கிறார். ஆளும் கட்சியும் வெற்றி பெற்றிருக்கிறது. ரணிலும் வெற்றி பெற்றிருக்கிறார். அதாவது சிங்களத் தலைவர்கள் ஏதோ ஒரு விதத்தில் தங்களையும் யாப்பையும் சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பையும் அமைச்சுப் பதவிகளையும் பாதுகாத்திருக்கிறார்கள் என்று பொருள். ரணிலை விட்டால் வேறு யாரும் இல்லை என்ற ஒரு வெற்றிடம் ஏற்படுவதற்கு எதிர்க்கட்சிகளும் காரணம். பேராயர் மல்கம் ரஞ்சித் மகாநாயக்கர் போன்ற மதத் தலைவர்களும் காரணம். மதத்தலைவர்கள் நீதியின் மீது பசி தாகம் உடையவர்களாக இருந்தால் அரசியல்வாதிகளும் மக்களுக்கு பொறுப்புக் கூறுவார்கள். இலங்கைத்தீவின் பௌத்த மதம் ஓர் அரச மதம். யாப்பின்படி ஏனைய மதங்களை விட முதன்மை வகிக்கும் பௌத்தமதம் அதற்க்கு முழுப் பொறுப்புக் கூறவேண்டும். ஈஸ்டர் குண்டு வெடிப்போடு பேராயர் மல்கம் ரஞ்சித்துக்கு ஞானக்கண் திறந்திருக்கிறது. இலங்கைத்தீவின் கத்தோலிக்கத் திருச்சபை ஒப்பீட்டளவில் அதிக இன முரண்பாட்டை பிரதிபலித்தது. கடந்த வாரம் கூட வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் நடந்தது இனப்படுகொலை என்று சொல்லியிருக்கிறது. ஆனால் பேராயர் மல்கம் ரஞ்சித் கூறுவாரா? இவ்வாறு மதத்தலைவர்கள், குடிமக்கள் சமூகங்கள் போன்றவற்றால் ஒரு பொருத்தமான தலைவரை நாடாளுமன்றத்துக்கு வெளியே கண்டுபிடிக்க முடியாத ஒரு வெற்றிடத்தில்தான் ரணிலுக்கு லொத்தர் விழுந்தது. “ரணில்விக்கிரமசிங்க தோல்வியடைந்தால் இலங்கையும் தோல்வியடையும்- இந்த தோல்வி அடுத்த சில ஆண்டுகளிற்கான தோல்வியாகயிராது மாறாக ஒரு தேசமாக இலங்கையின் இருத்தலிற்கான தோல்வியாக இது காணப்படும்” என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டபில்யூ ஏ விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். தமிழ் மக்களைப் பொறுத்தவரை இலங்கைத்தீவு எப்பொழுதோ ஒரு தேசமாக இருப்பதில் தோல்வியடைந்து விட்டது. அதை ஒரு தேசமாகக் கட்டியெழுப்புவது என்பது சிங்கள பௌத்த தேசமாகக் கட்டியெழுப்புவது அல்ல. அது,தமிழ் மக்களை ஒரு தேசமாக அங்கீகரிப்பதுதான். அந்த அடிப்படையில், பல்லினத் தன்மை மிக்க; பல் சமயப் பண்பு மிக்க; பல்மொழி பண்புமிக்க; ஒரு தேசமாகக் இக்குட்டித்தீவைக் கட்டியெழுப்புவதுதான். தனது கடைசி ஓவரிலாவது ரணில் அதைச் செய்வாரா? அல்லது இலங்கைத்தீவு ஒரு தேசமாக இருப்பதில் தோல்வியடையுமா? https://globaltamilnews.net/2022/176989
 5. அவுஸ்திரேலிய தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி : புதிய பிரதமராகிறார் அந்தனி அல்பானீஸ் அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித்தலைமையிலான கூட்டணி அதிக ஆசனங்களை வென்றுள்ளது. தற்போதைய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தலைமையிலான லிபரல் கட்சி தோல்வியடைந்துள்ளது. அவுஸ்திரேலிய பாராளுமன்ற பொதுத் தேர்தல் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. 151 ஆசனங்கள் கொண்ட பாராளுமன்றத்துக்கான தேர்தலில் தொழிலாளர் கட்சிக் கூட்டணி 73 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆளும் லிபரல் கட்சிக் கூட்டணிக்கு 51 ஆசனங்கள் கிடைத்துள்ளன. சுயேட்சை வேட்பாளர்கள் 10 பேர் வெற்றியீட்டியுள்ளர். இதனால் தொழிலாளர் கட்சியின் தலைவர் அந்தனி அல்பானீஸ் (Anthony Albanese) அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார். தற்போதைய பிரதமர் ஸ்கொட் மொரிசன் இத்தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளதுடன் தொழிலாளர் கட்சியின் தலைவர் அந்தனி அல்பானீஸுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். சுமார் ஒரு தசாப்த காலத்தில் அவுஸ்திரேலிய தொழிலாளர் கட்சி ஆட்சியமைக்கவுள்ளமை இதுவே முதல் தடவையாகும். நாளை மறுதினம் திங்கட்கிழமை தனது தலைமையிலான அவுஸ்திரேலிய அரசாங்கம் பதவியேற்கவுள்ளதாக அந்தனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்னும் இரு தினங்களில் ஜப்பானில் நடைபெறவுள்ள குவாட் உச்சிமாநாட்டிலும் தான் பங்குபற்றவுள்ளதாகவும் அந்தனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்களும் இந்த உச்சிமாநாட்டில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/127928
 6. பஷிலின் விருப்பத்திற்கமையவே அரசாங்கம் முக்கிய தீர்மானங்களை முன்னெடுக்கிறது - திஸ்ஸ விதாரண (இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த்தில் இரட்டை குடியுரிமையுடையவர் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதில் தடைவிதிக்கப்படாவிடின் நாட்டில் மீண்டும் அரசியல் நெருக்கடி தீவிரமடையும். பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவின் விருப்பத்திற்கமையவே அரசாங்கம் முக்கிய தீர்மானங்களை முன்னெடுக்கிறது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் பொருளாதார நெருக்கடியும்,அரசியல் நெருக்கடியும் தீவிரமடைவதற்கு முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பொறுப்புக்கூற வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் தன்னிச்சையான தீர்மானங்களின் காரணமாக அரசியல் நெருக்கடியும் தீவிரமடைந்தது. பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் மக்களாணைக்கு முரணாக செயற்பட்ட கூட்டணியில் இருந்து 11 அரசியல் கட்சிகளும் வெளியேறி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுகிறோம். சர்வகட்சிகளையும் ஒன்றினைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் யோசனைக்கு பிரதான எதிர்க்கட்சிகள் இணக்கம் தெரிவிக்காத காரணத்தினால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் அரசியல் ஸ்தீரத்தன்மை பேணப்பட வேண்டும் என்பதால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்தோம். நிபந்தனையற்ற எமது ஆதரவை அரசாங்கம் தவறான முறையில் பயன்படுத்திக்கொள்ள கூடாது. அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட்டு 19ஆவது திருத்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்,21ஆவது திருத்தம் விரைவாக செயற்படுத்தப்பட வேண்டும் என்ற பொது கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம். இரட்டை குடியுரிமையுடையவர் அரசியலில் செல்வாக்கு செலுத்த அரசியலமைப்பி;ன் 20ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள வரப்பிரசாதம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பது எமது பிரதான கோரிக்கையாக உள்ளதுடன்,மக்களின் பிரதான எதிர்பார்ப்பாகவும் உள்ளது. 21ஆவது திருத்தத்தில் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படாவிடின் நாட்டில் மீண்டும் அரசியல் நெருக்கடி தீவிரமடையும் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவின் விருப்பத்திற்கமையவே தற்போதைய அரசாங்கத்தில் முக்கிய தீர்மானங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை கவலைக்குரியது என்றார். https://www.virakesari.lk/article/127917
 7. 21 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த ராஜபக்ஷர்கள் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள் - சம்பிக்க (இராஜதுரை ஹஷான்) காலிமுகத்திடல் சம்பவத்தை தொடர்ந்தும் ராஜபக்ஷர்கள் குடும்பம் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத நிலைமையே ஏற்படும். அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைத்த ராஜபக்ஷர்கள் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற 43 ஆவது படையணியின் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு சுதந்திரம் பெற்ற காலத்தின் பின்னர் மிக மோசமான பொருளதார நெருக்கடியினை தற்போது எதிர்க்கொண்டுள்ளது. பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியினை தீவிரப்படுத்தி,முழு சமூக கட்டமைப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட வரையறையற்ற அரச முறை கடன்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணியாக அமைகிறது. 2005 தொடக்கம் 2014 வரையான காலப்பகுதியில் அதிக வட்டிவீதத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட அரசமுறை கடன்களினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகளினால் நாட்டுக்கு எவ்வித வருவாயும் கிடைக்கப்பெறவில்லை. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதே தவிர இலாபத்தை பெற்றுக்கொடுக்கவில்லை. அரச முறை கடன்களை மீள் செலுத்த முடியாது என மத்திய வங்கி கடந்த மாதம் 12ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து இலங்கை வங்குரோத்து நிலைமையினை அடைந்து விட்டது என்பதை சர்வதேசம் விளங்கிக்கொண்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் சீனா வழங்கிய இருதரப்பு கடனை மீள பெற்றுக்கொள்ள அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தம் பிரயோகிக்கிறதை அவதானிக்க முடிகிறது. அரச முறை கடன் மறுசீரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு நட்பு நாடுகள் தொடர்ந்து இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும். இந்தியா தற்போது பல்வேறு வழிமுறைகளில் உதவி புரிந்த நிலையில் இருந்தாலும் அதனை தொடர்ந்து எதிர்பார்க்க முடியாது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்விற்கு தேசிய மட்டத்தில் பல திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய நிலையான அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும். சர்வக்கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க பிரதான எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. காலிமுகத்திடல் போராட்டத்தையும்,அதனுடனான வன்முறை சம்பவங்களை தொடர்ந்தும் ராஜபக்ஷர்கள் இன்னும் உரிய அரசியல் பாடத்தை கற்றுக்கொள்ளவில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கும் ராஜபக்ஷர்கள் தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்கிறார்கள்.பிரதிசபாநாயகர் தெரிவு ஊடாக அதனை விளங்கிக்கொள்ள முடிந்தது. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை மீள அமுல்படுத்தவும்,21ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தவும் ராஜபக்ஷர்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள். ராஜபக்ஷர்களின் தலையீடு இல்லாத அரசாங்கத்தினால் மாத்திரமே தற்போதைய பிரச்சினைகளுக்கு நிலையான சிறந்த தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்றார். https://www.virakesari.lk/article/127910
 8. இலங்கைக்கு உதவ 3 சர்வதேச நிதிவழங்கல் கட்டமைப்புக்கள் கூட்டிணைந்த பொதுச்செயற்திட்டத்தின் கீழ் ஒன்றிணைவு (நா.தனுஜா) பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்குப் பொதுவானதும் கூட்டிணைந்ததுமான செயற்திட்டமொன்றின்கீழ் இயங்குவதற்கு உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகிய மூன்று முக்கிய கட்டமைப்புக்களும் தீர்மானித்திருக்கின்றன. பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்குவது குறித்து சர்வதேச நிதிவழங்கல் கட்டமைப்புக்களான உலகவ ங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகிய மூன்றும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்பு தொடர்பான முதலாவது கூட்டம் கடந்த 19 ஆம் திகதி (வியாழக்கிழமை) திறைசேரியின் செயலாளரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது கூட்டிணைந்த ஓர் செயற்திட்டத்தின்கீழ் ஒன்றிணைந்து தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்குவதை முன்னிறுத்திய கூட்டமாகும். அந்தவகையில் இலங்கையில் அத்தியவாசிய சேவைகளின் நிலைபேறானதன்மைiயை உறுதிப்படுத்தல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் விளைவாகப் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைத்தல் ஆகியவற்றை இலக்காகக்கொண்டு மூன்று அமைப்புக்களும் பொதுவான கூட்டிணைந்த செயற்திட்டமொன்றை அங்கீகரித்துள்ளன. தற்போது நடைமுறையிலுள்ள செயற்திட்டங்களுக்கான நிதியை மீள் ஒதுக்கீடு செய்வதன் மூலம் மருந்து, எரிவாயு, உரம் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களின் கிடைப்பனவை உறுதிசெய்தல் மற்றும் நிதியுதவிகளை வழங்கல் என்பனவும் இதில் உள்ளடங்குகின்றது. https://www.virakesari.lk/article/127909
 9. தவறியது டெல்லி; தப்பியது பெங்களூா் டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான சனிக்கிழமை ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. தோல்வி கண்ட டெல்லி, பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. வெற்றியுடன் சீசனை நிறைவு செய்த மும்பை, பெங்களூா் பிளே ஆஃபுக்குத் தகுதிபெற உதவியது. தற்போது குவாலிஃபயா் 1-இல் குஜராத் - ராஜஸ்தானும் (மே 24), எலிமினேட்டரில் லக்னௌ - பெங்களூரும் (மே 25) மோதுகின்றன. சனிக்கிழமை ஆட்டத்தில் முதலில் டெல்லி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுக்க, மும்பை 19.1 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சோ்த்து வென்றது. டாஸ் வென்ற மும்பை பௌலிங்கை தோ்வு செய்ய, டெல்லி பேட்டிங்கில் டேவிட் வாா்னா் 5, மிட்செல் மாா்ஷ் 0 ரன்னிற்கு வீழ்ந்தனா். பிருத்வி ஷா 24, சா்ஃப்ராஸ் கான் 10 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். கேப்டன் ரிஷப் பந்த் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 39, அதிரடி காட்டிய பவெல் 1 பவுண்டரி, 4 சிக்ஸா்களுடன் 43 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். இறுதியாக ஷா்துல் தாக்குா் 4 ரன்களுக்கு நடையைக் கட்ட, ஓவா்கள் முடிவில் அக்ஸா் படேல் 19, குல்தீப் யாதவ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை பௌலிங்கில் பும்ரா 3, ரமன்தீப் சிங் 2, டேனியல் சாம்ஸ், மயங்க் மாா்கண்டே ஆகியோா் தலா 1 விக்கெட் சரித்தனா். பின்னா் மும்பை இன்னிங்ஸில் இஷான் கிஷண் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 48 ரன்கள் விளாசி நல்ல தொடக்கம் அளித்தாா். டெவால்ட் பிரிவிஸ் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 37, டிம் டேவிட் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 34 ரன்கள் சோ்த்து உதவினா். கேப்டன் ரோஹித் சா்மா 2, திலக் வா்மா 21 ரன்கள் அடித்தனா். முடிவில் ரமன்தீப் சிங் 13, டேனியல் சாம்ஸ் 0 ரன்னுடன் அணியை வெற்றி பெறச் செய்தனா். டெல்லி பௌலிங்கில் அன்ரிஹ் நோா்கியா, ஷா்துல் தாக்குா் ஆகியோா் தலா 2, குல்தீப் யாதவ் 1 விக்கெட் கைப்பற்றினா். https://www.dinamani.com/sports/sports-news/2022/may/21/delhi-miss-out-on-play-offs-mumbai-win-3848709.html
 10. நெடுக்ஸ் இவ்வளவு காலமும் பிஸியாக்கும். லேற்றாக வந்து இப்பத்தான் விக்கிபீடியா எல்லாம் படிக்கின்றார். யாழில் பல திரிகளும், கட்டுரைகளும், ஆய்வுகளும் நிறைய உள்ளன. அவற்றை எல்லாம் படிக்க உங்களுக்கு நேரம் இருக்காது என்பதால் @பகிடி எழுதிய அவரது உக்கிரேன் வாழ்வு அனுபவங்களையாவது படித்தால் டொன்பாஸ் பற்றிப் புரியும்.
 11. நிச்சயமாக புஷ்ஷின் பக்கம் இல்லை. ஒரு போதும் வலதுசாரிகளை ஆதரித்தது கிடையாது ஏனெனில் எனது சிந்தனை எப்போதும் முற்போக்கான இடது சார்ந்ததுதான். அது உங்களைப் போன்ற பிழைப்புவாதிகளின் சிந்தனை. அதுதான் உங்களிடம் இருந்து வந்துள்ளது. எவ்வளவு பிற்போக்குவாதியாக இருந்தாலும் புலிகளை ஆதரிக்கின்றேன், தமிழ்த்தேசியவாதி என்று சொன்னால் அரவணைத்துக் கொள்ளவும் யாழில் சிலர் இருக்கின்றார்கள். தமிழ் தேசியத்தைப் போர்வையாகக் கொண்ட பிற்போக்குவாதிகளையும், பிழைப்புவாதிகளையும் இங்கு தினமும் பார்க்கின்றோம்தானே.
 12. கண்முன்னால் நடக்கும் உக்கிரேன் மக்களின் இறப்புக்களையும் அழிவுகளையும் கொண்டாட்ட மனநிலையில் இருந்துகொண்டு இரசித்துக்கொண்டும் சர்வாதிகாரி பூட்டினின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்திக்கொண்டும் இருக்கும் உங்களைப் போன்றவர்கள் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், லிபியாவிலும் அமெரிக்காவின் தலைமையில் மேற்கு நாடுகள் மேற்கொண்ட அழிப்புக்களையும், சிரியாவில் ரஷ்யாவின் ஆதரவோடு ஆசாத் மேற்கொண்ட பயங்கர அழிப்புக்களையும் பார்த்து நிச்சயம் கண்ணீர் உகுத்திருக்கமாட்டீர்கள். மனிதாபிமானமும், அடிப்படை விழுமியங்களும் இல்லாதவர்கள்தான் மக்களின் அழிவுகளைப் பார்த்து மகிழ்ந்து திளைப்பார்கள். அராபியர் மீதும், முஸ்லிம்கள் மீதும் பிற்போக்கு சிந்தனையுள்ளவர்கள் எவ்வளவு அனுதாபம் காட்டுவார்கள் என்பதை யாழ் களத்திற்கு வருவபவர்கள் நன்கு அறிவார்கள். ஆனால் நாம் அமெரிக்காவின் புஷ்ஷின் ஆக்கிரமிப்பையோ, ரொனி பிளேயர் அதற்கு உடந்தையாக செயற்பட்டதையோ ஒருபோதும் நியாயப்படுத்தவும் இல்லை. ஆதரிக்கவும் இல்லை.
 13. தமிழ் ஈழத்தில் உக்ரைனில் உக்ரைன் மக்களையும், குடிமனைகளையும் ரஷ்ய ஆக்கிரமிப்பு படையினர் அழித்துள்ளனர். சிங்களப் படையினரின் அழிவுகளுக்குள் வாழ்ந்தவர்களுக்கு இந்த அழிவுகளின் வலிகள் புரியும். ஆனால் தமிழர்களின் வலிகளை வைத்து தமது வாழ்வை புலம்பெயர் நாடுகளில் வளமாக்கியவர்களுக்கு சர்வாதிகாரி பூட்டினின் மிலேச்சத்தனமான உக்கிரேன் மீதான ஆக்கிரமிப்பை ரசிக்கமுடியும், கொண்டாடமுடியும். யாழ் களத்தில் ஆசாரவாதிகளும், பிற்போக்குவாதிகளும், பிழைப்புவாதிகளும் தங்களை தமிழர்களின் போராட்டத்தின் ஆதரளவாளர்கள் என்று வேடம் போட்டுக்காட்டுவது வழமைதானே. அதில் சிலரை ரஷ்யாவின் உக்கிரேன் மீதான ஆக்கிரமிப்பு அம்மணமாக்கியுள்ளது. ஆனால் தாங்கள் அம்மணத்தை மறைக்க நேட்டோவின் எதிர்ப்பு, மேற்கின் எதிர்ப்பு என்று ஓட்டைகள் நிரம்பிய கோவணத்தை இடுப்பில் கட்டிவருவார்கள்!
 14. பசில் ராஜபக்சவின் இரட்டைக்குடியுரிமை நீக்கப்படும் May 21, 2022 இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 21-வது திருத்தச்சட்டத்தின் மூலம் இரட்டைக்குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை நிரந்தரமாக நீக்குவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் இரட்டைக்குடியுரிமை பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்களும் ரத்து செய்யப்படும் எனத் தொிவித்துள்ள அவா் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் இரட்டைக்குடியுரிமையும் நீக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளாா். https://globaltamilnews.net/2022/176982
 15. பிளே ஆஃபில் ராஜஸ்தான் சென்னை சூப்பா் கிங்ஸுக்கு எதிரான வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ரவுண்ட் ராபின் சுற்றை வெற்றியுடன் நிறைவு செய்த அந்த அணி, பட்டியலில் 2-ஆம் இடம் பிடித்து பிளே ஆஃபுக்குள் நுழைந்தது. சென்னை, தோல்வியுடன் சீசனை நிறைவு செய்து வெளியேறியது. ஆட்டத்தில் முதலில் சென்னை 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சோ்க்க, ராஜஸ்தான் 19.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து வென்றது. முன்னதாக டாஸ் வென்று பேட் செய்த சென்னையில் ருதுராஜ் கெய்க்வாட் 2 ரன்களுக்கும், உடன் வந்த டெவன் கான்வே 16 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனா். ஒன் டவுனாக வந்த மொயீன் அலி ராஜஸ்தான் பௌலிங்கை சிதறடித்தாா். மறுபுறம், நாராயண் ஜெகதீசன் 1, அம்பட்டி ராயுடு 3, கேப்டன் தோனி 26 ரன்கள் சோ்த்து வெளியேறினா். கடைசி விக்கெட்டாக மொயீன் அலி 13 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 93 ரன்களுக்கு வீழ்ந்தாா். ஓவா்கள் முடிவில் மிட்செல் சேன்ட்னா் 1, சிமா்ஜீத் சிங் 3 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். ராஜஸ்தான் பௌலிங்கில் யுஜவேந்திர சஹல், ஆபெட் மெக்காய் ஆகியோா் தலா 2, டிரென்ட் போல்ட், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா். அடுத்து ராஜஸ்தான் இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 59 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு அடித்தளமிட்டாா். ஜோஸ் பட்லா் 2, கேப்டன் சஞ்சு சாம்சன் 15, தேவ்தத் படிக்கல் 3, ஷிம்ரன் ஹெட்மயா் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். இறுதியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 40, ரியான் பராக் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். சென்னை பௌலிங்கில் பிரசாந்த் சோலங்கி 2, சிமா்ஜீத் சிங், மிட்செல் சேன்ட்னா், மொயீன் அலி ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா். https://www.dinamani.com/sports/ipl/2022/may/21/rajasthan-in-the-playoffs-3848290.html
 16. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் முதலாவது ஆசிய சுற்றுப்பயணம் ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு ஆசிய நாடுகளுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொள்கிறார். இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் எனப்படும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பானில் வருகிற 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது. [Lee Jin-man/Pool via Reuters] குவாட் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜப்பான் செல்லவுள்ளார். முன்னதாக நேற்று தென் கொரியா செல்லும் அவர், தென் கொரிய ஜனாதிபதி மற்றும் அதன் பிறகு ஜப்பான் பிரதமரை சந்தித்து பல்வேறு முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு ஆசிய நாடுகளுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/127884
 17. அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தம் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதே தனது பரிந்துரை - பிரதமர் (நா.தனுஜா) காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள், அரசியல் கட்சிகள் என்பன ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்துகின்ற போதிலும், ஜனாதிபதியின் பதவி விலகல் குறித்து சட்டத்தரணிகள் சங்கம் எதனையும் கூறவில்லை. எனவே அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கவேண்டும் என்று தான் பரிந்துரைத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரபல சர்வதேச ஊடகமொன்றுக்கு நிகழ்நிலையில் வழங்கிய நேர்காணலில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைக்கு யார் காரணம் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, 'நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு கடந்த அரசாங்கமே காரணமாகும். இதற்கு முன்னெப்போதுமில்லாத வகையில் இப்போது எமது நாடு கடன்களை மீளச்செலுத்தமுடியாத முறிவடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இப்போது எங்களிடம் டொலர்களோ ரூபாவோ இல்லை' என்று தெரிவித்தார். இருப்பினும் அந்த அரசாங்கத்திற்கு இன்னும் உரியவாறான தண்டனை வழங்கப்படவில்லையே என்றும், இன்னமும் ஜனாதிபதி பதவி விலகவில்லையே என்றும் எழுப்பப்பட்ட கேள்விக்கு பிரதமர் பின்வருமாறு பதிலளித்தார்: 'இது சர்ச்சைக்குரியதொரு விடயமாகும். காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களின் கோரிக்கை ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்பதாகவே இருக்கின்றது. சில அரசியல் கட்சிகளும் இந்த விடயத்தையே வலியுறுத்துகின்றன. ஆனால் இலங்கை சட்டத்தரணிகள் சங்கமானது நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றதே தவிர, ஜனாதிபதி பதவி விலகுவது குறித்து எதனையும் குறிப்பிடவில்லை. எனவே இவ்விடயத்தில் மாறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. ஆகவே நான் ஒரு விடயத்தைப் பரிந்துரை செய்திருக்கின்றேன். அதன்படி அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் 19 ஆவது திருத்தம் மீண்டும் அமுலுக்கு வருவதுடன், பாராளுமன்றம் மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் வலுப்படுத்தப்படும். அதன் பின்னர் ஜனாதிபதியும் அனைத்துக்கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து கலந்துரையாடி எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஒரு இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். https://www.virakesari.lk/article/127880
 18. தீவிரவாதத்துக்கான ஊக்குவிப்பா பேரறிவாளன் விடுதலை? கே.சந்துரு தமிழ் மக்களால் 1971-க்குப் பிறகு முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு கோமாளித்தனமான வேலையில் ஈடுபட்டுள்ளது. பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுவித்த தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் வாயில் துணியைக் கட்டிக்கொண்டு ஒரு மணி நேரம் மௌன எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று அக்கட்சியால் வெளியிடப்பட்ட அறிவிப்பு அரசியல் அபத்தம்! இது தவிர, அவர்களது ‘செய்தித் தொடர்பாளர்’ என்ற பெயரில் இயங்கும் அமெரிக்கை நாராயணன் உதிர்க்கும் முத்துகள் யாவும் காது கொடுக்க சகித்தாவை. இந்தத் தீர்ப்பை பயங்கரவாதத்திற்கும், பணநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி என்று கூறியதோடு, தமிழ் மக்கள் அடைந்திருக்கும் தோல்வி என்றும் குறிப்பிட்டுள்ளார் அவர். நீதிமன்றத்தின் முன்னின்ற கேள்வி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஒரு தேசிய அரசியல் கட்சி எதிர்ப்புப் போராட்டம் நடத்துவது என்பது கேலிக்கூத்து. வேடிக்கையாகச் சொல்வார்கள், “அரசமைப்புச் சட்டத்தில் என்ன எழுதியிருந்தாலும் இறுதியில் நீதிபதிகள் சொல்வதே சட்டம்!” என்று. ஒரு கிரிமினல் வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவே இறுதியானது என்பதை ஒரு சட்ட மாணவன்கூட உறுதிப்படுத்திவிடுவான். ஆனால், இந்தச் சிற்றறிவுகூட இல்லாமல் பொறுப்பற்ற முறையில் ஏன் இப்படி காங்கிரஸ் செயல்படுகிறது? தற்போது நீதிமன்றத்தின் முன் எழுப்பப்பட்டிருந்த பிரச்சினையானது, ‘ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் குற்றவாளிகளா அல்லது நிரபராதிகளா?’ என்பதே இல்லை. அக்கொலையில் சம்பந்தப்பட்ட நேரடிக் குற்றவாளிகள் அனைவரும் சிறப்புப் புலனாய்வுக் குழு மேற்பார்வையில் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார்கள். பின்னர் தடா சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள் எவரும் இந்தக் கொலையில் நேரடிப் பங்கு வகித்தவர்கள் அல்லர். கொலைக்கும், கொலையை ஒட்டிய ரகசிய சதிக்கும் பல்வேறு வழிகளில் துணை சென்றவர்கள் என்ற முறையில்தான் அவர்களது பங்கு அவ்விசாரணையில் கொண்டுவரப்பட்டது. தடா சட்டத்தின்படி வழக்கு விசாரணை ரகசியமாக நடத்தப்பட்டதுடன், காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள ஒருவர் முன் அளிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களைச் சாட்சியங்களாக ஏற்றுக்கொள்வதற்கும் அச்சட்டத்தில் இடம் உண்டு. மேலும், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே செய்ய முடியும். இப்படிப்பட்ட ஒரு கடுமையான சட்டத்தின் கீழ்தான், பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆட்படுத்தப்பட்ட குற்றவாளிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். சிறப்பு நீதிமன்றம் 26 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்தது எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கிரிமினல் வழக்குகளில் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் ஒவ்வொருவர் பங்கையும் தனித்தனியாக நிர்ணயித்து, அதன் அடிப்படையில் தண்டனை விதிப்பதுதான் உரிய முறை. ஆனால் அதையும் மீறி சிறப்பு நீதிமன்றம் அனைவருக்கும் மரண தண்டனை அளித்ததைப் பற்றி உச்ச நீதிமன்றத்தில் முறையிடும்போது, ‘இது நீதித் துறையே விளைவித்த கொலைக் குற்றம்’ என்று விமர்சிக்கப்பட்டது. பின்னர், இந்த மேல்முறையீட்டில் 22 பேர் மீதான கொலைத் தண்டனையை ரத்துசெய்து 4 பேருக்கு மட்டும் உறுதிசெய்தது உச்ச நீதிமன்றம். இந்தத் தீர்ப்பை எழுதிய நீதிபதி கே.டி.தாமஸ் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில், நான்கு பேருக்கு கொலைத் தண்டனையை உறுதிசெய்தது தவறு என்று கருத்து தெரிவித்தார். பேரறிவாளனிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்ற சிபிஐ கண்காணிப்பாளர் தியாகராஜன், தான் ஒப்புதல் வாக்குமூலத்தை எழுதும்போது அதில் முக்கியப் பகுதி ஒன்றைத் தவிர்த்துவிட்டதாக வருத்தம் தெரிவித்தார். அமைச்சரவையே பிரதானம் கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய 4 பேரும் ஆளுநரிடம் அரசமைப்புச் சட்டம் 161ஆவது பிரிவின்படி கருணை மனுவை அளித்தனர். அன்றைய ஆளுநர் பாத்திமா பீவி அப்பதவிக்கு வருவதற்கு முன் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றியவர். தமிழக அமைச்சரவையின் அறிவுரையைப் பெறாமலேயே 4 பேர் கருணை மனுக்களையும் அவர் தள்ளுபடி செய்தார். அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கில் அமைச்சரவையின் அறிவுரையின்றி ஆளுநர் கருணை மனுக்களைப் பரிசீலிக்க முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டதுடன், ஆளுநரின் தள்ளுபடி உத்தரவு ரத்து செய்யப்பட்டது. அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை அம்மனுக்களைப் பரிசீலித்தது. திமுக அரசு ஏற்கெனவே விடுதலைப் புலிகள் விவகாரத்தில் மென்போக்கோடு செயல்படுவதாக அப்போது குறிவைக்கப்பட்ட நிலையில், நளினிக்கு மட்டும் மரண தண்டனையைக் குறைப்பதற்கு ஆளுநருக்கு அரசு ஆலோசனை வழங்கியது; மற்ற மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதை எதிர்த்து குடியரசுத் தலைவருக்கு மனுக்கள் அளிக்கப்பட்டன. அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணனும், அதற்குப் பின்னர் பதவிக்கு வந்த அப்துல் கலாமும் முடிவு எதுவும் எடுக்காமல் 11 ஆண்டுகள் கருணை மனுக்கள் கிடப்பில் போடப்பட்டன. அதற்குப் பின் குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்த பிரதீபா பாட்டீல் அம்மனுக்களைத் தள்ளுபடி செய்ததையொட்டி மரண தண்டனையை நிறைவேற்றும் நாள் நெருங்கியது. அச்சமயத்தில் தமிழக சட்டப்பேரவையில் குற்றவாளிகள் 7 பேருக்கும் மரண தண்டனையை ரத்துசெய்வதற்கு குடியரசுத் தலைவர் கருணை காட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது (2011). சம்பந்தப்பட்டவர்கள் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அவ்வழக்கு விசாரணையில் இருக்கும்போதே அம்மனுக்கள் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. உச்ச நீதிமன்றம் இத்தனை ஆண்டுகளாக மரணக் கொட்டடியில் இருந்து வந்த அக்குற்றவாளிகளின் மரண தண்டனையை ரத்துசெய்து அதை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது (2014). இதற்குப் பின்தான் தமிழக அமைச்சரவை குற்றவாளிகள் 7 பேருக்கும் தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்யும்படி ஆளுநருக்கு அறிவுரை வழங்கியது. இதையொட்டி உச்ச நீதிமன்றமும் அவர்கள் குறைந்தபட்ச தண்டனைக் காலத்தை அனுபவித்துவிட்டதனால் அவர்கள் தண்டனையைக் குறைப்பதற்கோ, மாற்றுவதற்கோ குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நிவாரணம் பெறலாம் என்று கூறியதன் அடிப்படையில் அவர்கள் மீண்டும் ஆளுநரிடம் மனு அளித்தனர். மறுபடியும் தமிழக அமைச்சரவை ஆளுநரிடம் தண்டனையைக் குறைக்கும்படி அறிவுரை வழங்கியது. அதற்குப் பிறகு ஆளுநர் இதுகுறித்து முடிவு எதுவும் எடுக்காததனால் மீண்டும் ஒருமுறை சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினர். ஆனால், சென்னை உயர் நீதிமன்றமோ ஆளுநரின் இந்த சிறப்பு அதிகாரத்தில் தலையிட முடியாது என்று ஒதுங்கிக்கொண்டது. மறுபடியும் வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. 2018ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை மீண்டும் ஒருமுறை குற்றவாளிகளின் தண்டனையைக் குறைப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றியது (9.9.2018). அதே தேதியில் தமிழக அமைச்சரவை ஆளுநரிடம் குற்றவாளிகள் 7 பேருக்கும் தண்டனையை ரத்துசெய்வதற்கு ஆலோசனை வழங்கியது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமைச்சரவையின் ஆலோசனையைப் புறக்கணித்து ஆளுநர் முடிவு எதுவும் எடுக்காமல் காலம் தள்ளி வந்ததைத்தான் தற்போது உச்ச நீதிமன்றம் குறை கூறியுள்ளது. ஆளுநர் சார்பாக வாதாடிய ஒன்றிய அரசின் வாதத்தை நிராகரித்ததுடன், அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 161இன் கீழ் கருணை காட்டும் அதிகாரத்தை ஆளுநர் தன்னிச்சையாக பயன்படுத்த முடியாது என்றும், அமைச்சரவையின் ஆலோசனை அவரைக் கட்டுப்படுத்தும் என்றும் மீண்டும் ஒருமுறை வலிறுத்தப்பட்டுள்ளது. சீர்திருத்துவதே தண்டனையின் நோக்கம் சுமார் இரண்டாரை ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்த கருணை மனுக்களின் மீது மீண்டும் முடிவெடுப்பதற்காக ஆளுநரிடம் திருப்பி அனுப்பாமல், அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்யும் உத்தரவை உச்ச நீதிமன்றமே பிறப்பித்துள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்கது. இதைக் கண்டித்துதான் காங்கிரஸார் குரலெழுப்பிவருகிறார்கள். தீவிரவாதத்துக்கு ஆதரவானது என்று கருத்து கூறியுள்ள அமெரிக்கை நாராயணன் இந்தத் தீர்ப்பில் தீவிரவாதத்திற்கு ஆதரவாக ஏதேனும் ஒரு பகுதியைச் சுட்டிக்காட்ட முடியுமா? பணநாயகம் வென்றது அவர் கூறியுள்ளது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பாகும். தமிழக மக்களுக்குத் தோல்வி என்றும் அவர் எதைக் குறிப்பிடுகிறார் என்பது தெரியவில்லை. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தீவிரவாத சட்டப் பிரிவுகளைச் சேர்ப்பதற்கு இடம் இல்லை என்று 1999ஆம் வருடத்திய மேல்முறையீட்டிலேயே உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கிவிட்டது. இருப்பினும் இவ்வழக்கு சம்பந்தமான பிரச்சினை எழும்போதெல்லாம் குற்றவாளிகள் தீவிரவாதத்தை ஆதரிப்பவரகள் என்று தொடர்ச்சியான பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிடுவது சட்ட விரோதமானது மட்டுமல்லாமல், கீழ்த்தரமான அரசியல் பிரச்சாரமாகும். நம் நாட்டு குற்றவியல் தண்டனையின் அடிப்படை பழிவாங்குதல் அல்லது மாறு கை / மாறு கால் வாங்குவது அல்ல. மாறாக, தண்டனை விதிக்கப்பட்ட நபர்களைச் சீர்திருத்தி மைய நீரோட்டத்தில் கொண்டுசேர்ப்பதுதான். காந்திகூட ‘கண்ணுக்குக் கண் என்ற நோக்கம் தேசத்தையே குருடாக்கிவிடும்!’ என்று கூறினார். உச்ச நீதிமன்றமும் பல தீர்ப்புகளில் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளது. 1978இல் திருத்தப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 433-A கீழ் மரண தண்டனை பெற்ற குற்றவாளி 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்துவிட்டால் தண்டனைக் குறைப்பு பற்றி அரசு பரிசீலிக்கலாம் என்றுதான் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையைக் கழித்துவிட்ட 7 குற்றவாளிகளின் தண்டனையையும் ஏன் மாநில அரசு குறைக்கக் கூடாது என்கிற கேள்விதான் மேலோங்கி நிற்கும். ஆளுநரின் ஆதிகார வரையறை? கிரிமினல் சட்டத்தில் குற்றமிழைத்தவர்கள் மீது உரிய தண்டனை வழங்கிய பின் அவர்களுக்கு சட்டத்திலுள்ள சலுகைகள் வழங்குவதை அரசியலாக்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். கடந்த 30 வருடங்களாக ஒன்றிய அரசில் பதவி வகித்த காங்கிரஸ் கட்சியும், பாஜக கட்சியும் இப்பிரச்சனையில் ஒரே நிலைப்பாட்டைக் கடைப்பிடித்துவருவது அவர்களைத் தமிழக அரசியலிலிருந்து மேலும் வெளித்தள்ளிக்கொள்ளவே வழிவகுக்கும். குற்றங்களுக்கான தண்டனை தொடர்பில் சட்டங்கள் தெளிவாக இருக்கும்போது, அதையும் மீறி இத்துணைக்கண்டத்தின் அரசியலை முன்வைத்து தண்டனைகளை நிறைவேற்ற முயல்வது கிரிமினல் சட்ட முறைக்கே விரோதமானது. கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் அனைவரும் சட்டத்திலுள்ள குறைந்தபட்ச சிறைத் தண்டனைக்கு மீறி மேலும் ஒரு பங்கு சட்டப் போராட்ட காலத்தில் சிறையிலேயே கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்மையிலேயே ஒரு கேவலமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி நாகேஸ்வரராவ் ஜெயலலிதா அரசு சிறப்பு வக்கீலாக பல பொடா வழக்குகளில் மறு ஆய்வுக் குழு முன்னால் ஆஜராகி வாதிட்டவர். தமிழ்நாட்டில் தேசிய அமைப்புகளைச் சேர்ந்த நெடுமாறன், வைகோ போன்ற தலைவர்களைப் பொடா சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்குகள் நியாயம் என்று வாதாடியவர். அவருக்கு இந்த மாநிலத்தின் அரசியல் பின்னணி அத்துப்படி. இருப்பினும், சட்ட நியாயங்கள் கருதி சிறப்பான தீர்ப்பொன்றை அவர் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆளுநரின் அதிகார வரையறை என்ன என்பதையும், அவர் அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர் என்பதையும் வலியுறுத்திய அவரது தீர்ப்பு இன்றைய ஒன்றிய அரசுக்கும், இங்குள்ள பாஜகவினருக்கும் வேப்பங்காயாக இருக்கலாம். ஆனால், அதுதான் அரசமைப்புச் சட்டத்தின் உண்மையான நோக்கம் என்பதை அவர்கள் உணர வேண்டும். அது மட்டுமின்றி, மற்ற 6 குற்றவாளிகளுக்கும் மனத்தடையை அகற்றி சட்ட வரையறையுடன் செயல்பட்டு மன்னிப்பு அதிகாரத்தின் மூலம் தண்டனையை ரத்துசெய்தால் அவர்களை ‘திருந்திய மனிதர்கள்’ என்று கருத இடம் உண்டு. மீறினால் மீண்டும் குட்டு வைப்பதற்கு இருக்கவே இருக்கிறது உச்ச நீதிமன்றம்! கே.சந்துரு கே.சந்துரு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி; சமூக விமர்சனங்களை முன்வைப்பதோடு நீதித் துறையின் சீர்திருத்தங்களுக்கான சிந்தனைகளையும் தொடர்ந்து முன்வைப்பவர். ‘ஆர்டர்.. ஆர்டர்!’, ‘நீதிமாரே, நம்பினோமே!’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். https://www.arunchol.com/justice-chandru-on-perarivalan-case டிஸ்கி: ஜெய்பீம் திரைப்படத்திற்குப் பின்னர் தான் எங்கு சென்றாலும் தன்னை அனைவரும் ஜெய் பீம் சந்துரு என்று அழைக்கிறார்கள் என்றும், அதைக் கண்டு தான் பெருமை படுவதாகும் ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு அவர் தெரிவித்துள்ளார்.
 19. ஈராக் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு முற்றிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று - வார்த்தை தடுமாறி நகைக்க வைத்த புஷ் நாடொன்றின் தலைவரோ அன்றி முன்னாள் தலைவரோ என்ன கூறுகிறார் என்பதை முழு உலகமே உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கும் என்பது எவரும் அறியாதது அல்ல. அதிலும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளின் தலைமைத்துவத்தில் இருப்பவர்கள் அல்லது இருந்தவர்கள் வெளியிடும் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியத்துவம் மிக்கதாக இருக்கும். இந்நிலையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் அந்நாட்டு நேரப்படி நேற்று புதன்கிழமை உக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் குறித்து அமெரிக்க டலஸ் பிராந்தியத்திலுள்ள தனது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவர் இதன்போது உணர்வுபூர்வமான கருத்துகளை முன்வைத்து ஆக்ரோஷமாக உரையாற்றினார். இந்நிலையில் அவர் ஒரு கட்டத்தில் தன்னை மறந்து ரஷ்யாவின் உக்ரேன் மீதான படையெடுப்பை ஈராக் மீதான படையெடுப்பு எனத் தவறுதலாக குறிப்பிட்டு ஈராக் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு முற்றிலும் நியாயப்படுத்த முடியாத மிருகத்தனமான படையெடுப்பு எனத் தெரிவித்து அங்கிருந்தவர்கள் அனைவரையும் திகைப்பில் விழி பிதுங்க வைத்துள்ளார். இந்நிலையில் உடனடியாக தனது தவறை உணர்ந்து கொண்டு தனது தலையைக் குலுக்கி தான் கூறியதை உடனடியாக மறுத்த ஜோர்ஜ் டபிள்யூ புஷ், தான் உக்ரேனையே தவறுதலாக ஈராக் எனக் குறிப்பிட்டதாக தெரிவித்தார். அவர் இவ்வாறு கூறவும் அங்கிருந்தவர்கள் மத்தியில் பலத்த சிரிப்பொலி எழுந்தது. 2003 ஆம் ஆண்டு ஈராக் மீதான அமெரிக்காவின் படையெடுப்பிற்கு உத்தரவிட்டதன் மூலம் பலரதும் கண்டனத்திற்குள்ளாகியுள்ள ஜோர்ஜ் டபிள்யூ புஷ், தற்போது ஈராக் மீதான படையெடுப்பொன்றிற்கு தானே தவறுதலாக கண்டனம் தெரிவித்தமை குறித்து பலரதும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார். ஈராக்கிய முன்னாள் தலைவர் சதாம் ஹ{ஸைனுக்கு அல் கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷால் ஈராக் மீதான படையெடுப்புக்கு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில, அந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என பின்னர் அறியப்பட்டது. ஈராக் போரில் அமெரிக்கா பங்கேற்றதால் 4,825 க்கு மேற்பட்ட கூட்டமைப்புப் படையினர் கொல்லப்பட்டனர். https://www.virakesari.lk/article/127817
 20. மட்டக்களப்பில் இருந்து முள்ளிவாய்க்காலுக்கு சென்றவர்கள் மீது விசாரணை மட்டக்களப்பில் இருந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் வரை சென்ற இருவரின் வீடுகளுக்குச் சென்ற புலானாய்துறை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். May 15, 2022 பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை இனப்படுகொலைக்கு நீதி கோரி சென்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்குபற்றிய இருவர் மீதே இவ்வாறு விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. மட்டகளப்பு கிரான் பிரதேசத்தின் எத்தலை மேட்டுக்காடு பகுதியில் வசித்துவரும் செல்வநாயகம் நேசன். மற்றும் தங்க ரூபன் ஆகிய இருவரையும் அவர்களது வீடுகளுக்கு தேடிச் சென்ற சந்திவெளி காவல்துறைப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடாத்தியுள்ளனர். கடந்த 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை இனப்படுகொலைக்கு நீதி வேண்டிய சென்ற பயணத்தில் பங்குபற்றி நேரலையில் தொகுத்து வழங்கிய செல்வநாயகம் நேசன் மற்றும் சமூக ஆர்வளர் தங்க ரூபன் இருவரையும் பேரணியில் பங்குபற்றியமை தொடர்பாக இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று அவர்களது வீடுகளுக்கு சென்ற புலனாய்வு அதிகாரிகள் இருவர் இவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் அவர்கள் கைது செய்யப்படுவார்களோ என்ற அச்சத்தில் குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஸ்டிப்பதற்கு தடை இல்லை என ஒரு புறம் நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார். ஆனால் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் மக்களின் விடுகளுக்கு சென்று புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை நடாத்தி அச்சுறுத்தும் செயல்களை பார்க்கும் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவை பாதுகாப்பு தரப்பினர் கணக்கில் எடுக்காது அவர்கள் தொடர்ந்தும் தமிழ் மக்களை அச்சுறுத்தும் இது போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக பாதிக்கப்பட்ட தமிழர்கள் தெரிவித்துள்ளனர். https://www.ilakku.org/investigation-on-those-who-went-to-mullivaikkal/
 21. கொழும்பு லொட்ஜ்களில் கடந்த காலம் May 18, 2022 — வேதநாயகம் தபேந்திரன் — கொழும்பு லொட்ஜ்களுக்கும் (லாட்ஜ்?) எமக்கும் போர்க் காலத்தில் நகமும் சதையுமான வாழ்க்கை முறையொன்று இருந்தது. போரின் வெம்மை தாளாமல் வடக்கு கிழக்கை விட்டுத் தப்பியோடிய பலருக்கு அடைக்கலம் கொடுத்தவை இவை. நெல்லியடிக்காரரைச் சந்திக்க வேண்டுமா? பம்பலப்பிட்டி காசில் லொட்ஜ்க்குப் போங்கோ. இணுவில் ஆக்களைக் காண வேண்டுமா? ஆட்டுப்பட்டித்தெரு பி.ஜி.லொட்ஜ்க்குப் போங்கோ. இப்படியே ஊருக்கு ஒரு அடையாளமாக லொட்ஜ்கள் இருந்தன. லொட்ஜ் உரிமையாளர்கள் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு தமது ஊரவரை உறவினரை அரவணைத்தபோது அது அந்த ஊரவரின் அடையாளமாக இருந்து. ஊருக்கு ஒரு அடையாளமாக லொட்ஜ்களும் இருந்தன. பணவசதி படைத்த டீசன்ரான கிறவுட் என்றால் வெள்ளவத்தை. பணவசதி குறைந்த பாமர மக்களாயின் கொட்டஹேன (கொட்டாஞ்சேனை), புறக்கோட்டை போன்ற இடங்கள்தான் கைகொடுக்கும். ஆகவும் பணவசதி குறைந்தோராயின் நீர்கொழும்பு. 1980களின் இறுதி, 1990களில் வத்தளை, சீதுவ, ஜாஎல போன்ற இடங்களை தமிழர்கள் எட்டியும் பார்க்க முடியாது. லொட்ஜ்ஜில் தங்குவதானால் பொலிஸ் றிப்போட் கட்டாயமென்ற நடைமுறை பிற்காலததில் வநதது. கொழும்பு சென்றால் லொட்ஜில் தங்காமல் வடபகுதிக்குத் திரும்பிவரும் வாழ்க்கை ஒன்றிற்குள் வந்துவிட்டோம். போரின் நிறைவு தடையற்ற வாழ்க்கையைத் தந்தமையை வரவேற்கத்தான் வேண்டும். ஆனாலும் லொட்ஜ் வாழ்க்கையின் ஞாபகங்கள் அடிக்கடி தாலாட்டவே செய்கின்றன. யாழ்ப்பாணத்தான் ஆளுக்குச் சாதி பார்ப்பதுபோல லொட்ஜ்சுக்கும் சதிபார்த்தன். ஐலண்ட் லொட்ஜ் என்றால் அதுக்கு ஒரு பெயர். பி.ஜி.லொட்ஜ் என்றால் அதுக்கு ஒரு ஸ்ராண்ட்டட். லொட்ஜ்களைச் சுற்றி ஒரு ஆட்டோக்காரக் கூட்டம் இருக்கும். தமிழிலும் சிங்களத்திலும் வெளுத்து வாங்குவார்கள். பாஸ்போட் எடுக்க வேண்டுமா? ஐசி எடுக்க வேண்டுமா? பிறப்புச் சான்றிதழ், விவாகப்பதிவுச் சான்றிதழ் எடுக்க வேண்டுமா?தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்களுக்குச் செல்லவேண்டுமா? எல்லாமே ஆட்டோக்காரருக்கு அத்துப்படி. அதுபோல சிங்களத்தில் கதைத்துக் காரியமாற்றத் தெரிந்தவர்களுக்கும் படிவங்களை ஆங்கிலத்தில் சரியாக நிரப்பத் தெரிந்தவர்களுக்கும் தனிமதிப்பு. அப்போதெல்லாம் ஒன்லைன் சிஸ்ரங்கள் இல்லை. அதனால் வெளிநாட்டுத் தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்களின் படிவங்களைச் சரியாக நிரப்பத் தெரிந்தோருக்கு உயர்மதிப்புச் சுளையன வருமானம். ஏன் இப்போது கூட ஒன்லைனில் சரியாக நிரப்பத் தெரிந்தோருக்கு மாத வருமானம் இலட்சங்களைத் தாண்டும். அன்றைய நாள் லொட்ஜ்சுகளில் வெளிநாட்டுக் கனவுடன் இளைஞர்களும், யுவதிகளும் வந்திருந்தார்கள். விடுதலைப் புலிகளைப் பிடிப்பதற்கென்று நடக்கும் சுற்றிவளைப்பில் அப்பாவிகளானோர் தப்பவேண்டும். பகல் முழுவதும் அலுத்துக் களைத்துத் திரிந்தபின் இரவு நல்லதொரு மெய் உறக்கத்தில் இருப்போம். புலிவேட்டைக்கென பொலிஸ், ஆமிப்படையொன்று வரும். சந்தேகப்பட்டு பொலிஸ் பிடித்தால் உடுத்த உடுப்புடன் அரைகுறை நித்திரையால் கண்ணெரிய கண்ணெரியப் பயந்த பயந்த பொலிஸ் ஸ்ரேசன் போகவேண்டும். பொலிஸ் பிடித்துப்போனால் லொட்ஜ் மனேச்சரோ, முதலாளியோ போய்த்தான் மீட்கமுடியுமென்ற நிலையும் பலருக்கு இருந்தது. பொலிஸ் அணைவு இல்லை. சிங்களம் தெரியாது போன்ற காரணங்களே இதற்குக் காரணம். பிணை எடுத்துவிடுவோருக்கு வெளிநாட்டுப் பணத்திலோ, கொண்டுவந்த காசிலோ கவனிப்பு இருக்கும். பயணம் சரிப்பட்டால் லொட்ஜ்காரனே பொலிசுக்குத் தகவல்கொடுத்துப் பிடிக்கச்செய்து ஆயிரங்களோ ஓரிரு இலட்சங்களோ கறந்துவிட்டுப் பிணை எடுத்த சம்பவங்களும் உண்டு. யாழ்ப்பாணத்து வேலிக்குள் கட்டுக்கோப்பாக இருந்த சில குமருகள கட்டுப்பாடன்றி கட்டாக்காலயாக இருந்த கோலங்களம் உண்டு. வெளிநாட்டு மாப்பிளையை மறந்து ஆட்டோக்காரனோடையோ, மினி சினிமாக்காரனோடையோ அல்லது பயணம் போகவந்த இளைஞனோடையோ புதுக்குடித்தனம் நடத்திய விடலைப் பெண்களும் உண்டு. ஊரில் சகோதரிகள் குமராக இருக்க வெளிநாடுபோய் உழைத்துக் கரைசேற்றுவேன் எனவந்த சிலபெடியள் வெளியூர்க்காரிகளிடம் கொண்டாட்டம் வைத்து மடியில் இருந்தவற்றையெல்லாம் கொடுத்து ஒட்டாண்டியான சங்கதிகளும் உண்டு. வெளிநாட்டுக் கனவைக் கைவிட்டு, வெள்ளை சொள்ளையாக ஒருத்தியைப் பார்த்து குடும்பமாகியரும் உண்டு. போரின் வெம்மையால் கொழும்புக்கு ஓடிவந்து பயணம் போகவும் வழியின்றிச் சாப்பிடவும் வழியுமன்றி அல்லாடியரும் உண்டு. அரைப்பாசல் சோற்றையெடுத்து அதையே அரை அரைவாசியாக உண்டு வறுமை மறைத்து வாழ்ந்தோரும் உண்டு. லொட்ஜ்களில் தொலைபேசி வசதிகள் இருக்கும். கண்ணாடியால் சுற்றிவர அடித்த சிற்றறை ஒன்றில்தான் பெரும்பாலும் தொலைபேசி கதைக்கவேண்டும். வெளிச்செல்லும் அழைப்புக்கு ஒரு கட்டணம். உள்வந்த அழைப்புக்கு இன்னுமொரு கட்டணம். 15 நிமிடங்கள் கதைத்தால் 20 நிமிடங்களெனப் பொய்க் கணக்குவிட்டு ஏற்கனவே உள்ள கொள்ளைக் கட்டணத்தைவிட இன்னுமொரு கொள்ளையடிக்கும் சில வித்துவான்களும் உண்டு. இன்றி சிறிதேவிரெயின் அதிகாலையில் சீறிக்கொண்டு ஓடுகிறது. அதன் பின்னால் அடுத்தடுத்து ரெயின்கள் ஓடுகிறது. அதிகாலையில் வெளிக்கிட்டால் அடுத்தநாள் அதிகாலையில் வீடு. அதுபோல ஏசி பஸ்ஸா காசு குறைந்த தூசி பஸ்ஸா ஒன்றல்ல இரண்டல்ல ஒரு நூறு ஓடுகிறது. இரவு ஏறினால் விடிகாலை கொழும்பு. உடனேயே அலுவல் முடித்தால் மதியம் பஸ் எடுத்தால் முதல் சாமம் வரமுன்பே வீடு. எம்மவரின் புலம்பெயர்வுக்கும் ஏஜென்சித் தொழிலுக்குமான தொடர்புக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. இடைத்தங்கல் நாடுகளில் இருந்த ஏஜென்சிகளின் கதைகள் எனச் சொல்லப்போனால் அவை அதிகம் அதிகம். போர் முடிந்து 13 வருடங்களைக் கடந்து வந்துவிட்டோம். ஆதனால் ஏஜென்சித் தொழிலில் பெரும் தேய்வு ஏற்பட்டுவிட்டது. https://arangamnews.com/?p=7713
 22. ஹரீன் – மனுஷ கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கம்! கட்சியின் தீர்மானத்தை மீறி நடந்துகொண்டமைக்காக ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. மேலும் இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். ஒன்பது புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அதன்போது ஹரின் பெர்னாண்டோ சுற்றுலா மற்றும் காணி அமைச்சராகவும் மனுஷ நாணயக்கார தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இதன்படி இவர்கள் இருவரும் கட்சியின் தீர்மானத்தை மீறி செயற்பட்டுள்ளதாக தெரிவித்து இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி இவர்களை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தியுள்ளது. http://www.samakalam.com/ஹரீன்-மனுஷ-கட்சி-உறுப்பு/
 23. 'கிங் இஸ் பேக்': கோலி அதிரடியால் வென்றது பெங்களூரு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து முதலில் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். சுப்மான் கில் ஒரு ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வேட் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். சஹா பெரிய இன்னிங்ஸை ஆடுவதற்கான அடித்தளத்தை அமைத்தார். ஆனால், அவர் 31 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தார். 19-வது ஓவரில் பவுண்டரி அடித்த பாண்டியா 41-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். மில்லர் 34 ரன்களுக்கும், தெவாடியா 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் குஜராத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. பாண்டியா 47 பந்துகளில் 62 ரன்களும், ரஷித் கான் 6 பந்துகளில் 19 ரன்களும் எடுத்தனர். இதனைத்தொடர்ந்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான விராட் கோலி, டூபிளெஸ்ஸி ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விராட் கோலி அரை சதம் கடந்த நிலையில், டூபிளெஸ்ஸி ரஷித் கான் வீசிய பந்தில் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல்லும் கோலியுடன் அதிரடி காட்டினார். இதனிடையே அணியின் ரன்கள் பட்டியலை உயர்த்திய விராட் கோலி 54 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளை விளாசினார். அதனைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். மேக்ஸ் வெல் ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் சேர்த்தார். இதனால் 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்களை எடுத்து பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் பிளே ஆப் சுற்றை பெங்களூரு அணி தக்க வைத்துள்ளது. https://www.dinamani.com/sports/ipl/2022/may/19/royal-challengers-bangalore-vs-gujarat-titans-3847335.html
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.