• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  20,853
 • Joined

 • Days Won

  73

Everything posted by கிருபன்

 1. காந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன். கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் யோகராசா கோணேஸ்வரன் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:10.09.1971 வீரச்சாவு:10.07.1990 நிகழ்வு:யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடலில் வைத்து சிறிலங்கா கடற்படை எடித்தாரா கட்டளைக் கப்பல் மீதான கரும்புலித்தாக்குதலின்போது வீரச்சாவு காந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன். 1987 இன் ஆரம்பம். அப்போது காந்தரூபன் தொண்டைமானாறு சிங்களப் படைமுகாமைச் சுற்றியிருந்த காவலரணில் கடமையில் இருந்தான். ஒரு நாள் முகாமிலிருந்து சிங்களப் படையினர் வெளியேறியபோது சண்டை தொடங்கியது. அச்சண்டையின் ஒரு சர்ந்தப்பத்தில், எதிரியின் கையில் உயிருடன் பிடிபட்டுவிடக்கூடிய சூழ்நிலை உருவாகியபொழுது, காந்தரூபன் குப்பியைக் கடித்துவிட்டான். ஆனால், அதிஸ்ரவசமாக சக தோழர்களால் மீட்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டான். இருந்தபோதும், சயனைட் விஷம் காந்தரூபனின் உடலில் ஒரு உட்பாதிப்பை உண்டாக்கியிருந்தது. இந்த உட்பாதிப்பிற்க்கான பராமரிப்பு முறைகளில் அத்தியாவசியமானதாக நிறை உணவு அருந்த வேண்டுமென, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. 1988, 1989ம் ஆண்டு காலம். இப்போது காந்தரூபன் தலைவர் அவர்களுக்குப் பக்கத்தில் மணலாற்றுக் காட்டில் நின்றான். காந்தரூபனிற்கு இப்போதும் நிறை உணவு தேவைப்பட்டது. ஒரு பசுமாடு இருந்தால் காந்தரூபனிற்கும், சுகவீனம் அடைகின்ற போராளிகளுக்கும் பால் கொடுக்க முடியும் எனக் கருதிய தலைவர், வெளியிலிருந்து பால்தரக்கூடிய நல்ல இனப் பசு ஒன்றை, காட்டுக்குள் இருந்த தளத்திற்கு கொண்டு வருமாறு சொன்னார். பசு வந்து சேர்ந்தது. தலைவரின் துணைவியார் (மதிவதனி அண்ணி) ஒரு தாயைப்போல இருந்து பால் காய்ச்சிக் கொடுத்தார். அந்தப் பொழுதுகளிலெல்லாம் காந்தரூபன் நெஞ்சு நெகிழ்ந்து நிர்ப்பான். தான் ஒரு கதியற்றவன் என்ற கவலையே அற்றுப்போகும். ஒரு நாள் அன்பு கலந்த மரியாதையோடு, காந்தரூபன் தலைவருக்குப் பக்கத்தில் வந்தான். பாசத்தோடு அவனை அழைத்து அருகில் இருத்திக் கதைத்தார் தலைவர். அண்ணை…. என்னை கரும்புலிகளில் சேர்த்துக் கொள்ளுங்கோ…” என்றான். அதோடு தனது உள்ளத்துக்குள் உறைந்து கிடந்த இன்னொரு விருப்பத்தையும் அவன் தலைவரிடம் சொன்னான். தயவு செய்து நீங்கள் அதைச் செய்ய வேணும் …. “அவனுக்கருகில் இருந்து அவன் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் தலைவர்.” என்னைப் போல எத்தனையோ பெடியள் இந்த நாட்டில அநாதைகளாக வாழுறாங்கள் … அப்பா, அம்மா இல்லாம, சொந்தக்காரரின் ஆதரவில்லாம அலைஞ்சு திரியிறாங்கள். வாழ இடமில்லாம, படிக்க வசதி இல்லாமல், எவ்வளவோ ஏக்கங்களோடையும், துன்பங்களோடையும் அவங்கள் இருப்பாங்கள் எண்டிறதை, நான் அனுபவித்ததில கண்டனான் அண்ணை….” “நீங்கள் என்னை அன்போட கவனிச்சுப் பார்த்ததைப் போல அவங்களையும் கவனிக்க வேணும். அவங்கள் எந்தக் குறையுமில்லாமல் வளரவும் நன்றாகப் படிக்கவும் வசதி செய்து கொடுங்கோ. அவர்களுக்கென்று ஒரு இடத்தை அமைத்து, அங்குவைத்து அவர்களையெல்லாம் வளர்த்தெடுத்து, அவர்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைக் கொடுத்து விடுங்கள் அண்ணை …. ” தலைவரின் இதயத்தை இது தொட்டது. அப்படியான ஒன்றின் தேவை பற்றி எண்ணியிருந்த தலைவருக்கு காந்தரூபனின் வேண்டுகோள் மகிழ்ட்சியைக் கொடுத்தது. அவ்வாறான இல்லமொன்றை ஆரம்பித்து காந்தரூபனின் நினைவாக அதனை என்ற பெயரிலேயே இன்று செயற்ப்பட அவருடைய கண்கள் கலங்க்கிபோயிருந்தன. தனது சால்வையால் கண்களை ஒற்றிக் கொண்டார். அருகிலேயே நின்ற அம்மா சொன்னார். அன்றைக்கு முழுவதும் இவர் ஒரு மாதிரியா இருந்தார். நான் ஒன்றுமே கேட்கவில்லை. பின்னேரம், கடலில் பொடியள் கரும்புலியாய் போய் கப்பலடிக்கப் போறாங்களாம். எண்டு பாத்திட்டு வாறனெண்டு போனார். காந்தரூபனும் போகப் போறான் எண்டு இவர் சொல்லவில்லலை. இரவானதும் எனக்கு நித்திரை வரமறுக்குது. சத்தத்தையாவது கேப்பமென்று வீட்டு வாசலில் இருந்தன். கொஞ்ச நேரத்தில் கடலதிரச் சத்தங்கேட்டது. நான் வாசலிலேயே இருந்தன். சாமம் ஒரு மணியளவில் இவர் ஒரு மாதிரியாக சோர்ந்துபோய் வந்தார். வீட்டுக்குள்ள வந்தவர், எங்கட காந்தரூபனும் கரும்புலியாய்ப் போனவன் என்று சொல்லிப் போட்டு அழுதார். யோகராசா அண்ணரும், மனைவியும் பிற்காலத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றார்கள். அவர்கள் தங்களுக்கு நான்கு குழந்தைகள் என்று சொல்கின்றார்கள். தங்களுடைய முதல் மகன் கோணேஸ்வரன் (காந்தரூபன்) என்கிறார்கள். அவர்களுடைய மூத்த மகன் கரும்புலியாகிக் கடலிலே காவியமாகியபின், அவர்களுடைய நான்காவது மகன் பிறந்தான். இப்போது கைக்குழந்தையான அவனைத் தூக்கித் தோளில் சாய்த்தபடி அந்தத் தாய் சொல்கிறாள் …. காந்தரூபனா நினைத்துத்தான் இவனை நான் வளர்க்கிறன். இந்தத் தாயுடன் கூடவே அவரது தமக்கையாரும் இருந்தார். அதே உணர்வு சின்ன வயது முதல் காந்தரூபன் மீது அன்பு செலுத்திய இந்த பெரியம்மாவும் சேர்ந்து கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார். சின்ன வயதில காந்தரூபன் என்ர பிள்ளைகளோட சேர்ந்துதான் விளையாடித்திரிவான். படிக்கிரதென்றால் அவனுக்கு சரியான கள்ளம். என்ர மகள் அவனைக் கூட்டிக்கொண்டு வந்து இருத்தி எழுதக் கற்றுக் கொடுப்பாள். ‘அ’ எழுதி ‘ஆ’ எழுதி ‘இ’ எழுதும் போது….., “இதென்ன கனக்க சுழிபோட வேண்டியிருக்கு…. எழுதப்படுதில்லை” என்று சொல்லிக் கொப்பியைத் தூக்கி எறிஞ்சுபோட்டு ஓடிவிடுவான். அப்படிப்பட்டவன் பிறகு இயக்கத்திற்குப் போய் கொஞ்சக் காலத்தில திரும்பி வரேக்க பெரிய அறிவாளியாக இருந்தான். பெரிய அரசியல் மேதைகளைப் போல எங்களுக்கெல்லாம் விளக்கம் தருவான். அந்தளவுக்கு அவனை இயக்கம் தான் வளர்த்து விட்டது. பெரியம்மா தொடர்ந்து சொன்னார். கப்பலடிக்கிறதுக்குப் போறத்துக்கு இரண்டு நாளைக்கு முன்னர் சரியான வெயிலுக்கை வீட்டுக்கு வந்தான். ‘தலையிடியாக் கிடக்கு பனடோல் தாங்கோ’ என்றான். கொடுத்தேன். வாங்கிக் குடித்தான். நான் ஒரு முக்கியமான வேலையாக வேற ஒரு இடத்துக்குப் போறேன் பெரியம்மா என்றான். வருத்தம் என்று சொல்லுறாயேடா தம்பி ….. தலைவரிட்ட சொல்லிப் போட்டு நில்லன். இன்னொருதரம் போகலாம் தானே ?…. என்று ஆலோசனை சொன்னேன். “…. இல்லை பெரியம்மா. அந்த வேலைக்குப் போகப்போறன் என்று நானாத்தான் அவரிட்டைக் கேட்டனான்…. கட்டாயம் நான் தான் அந்த வேலைக்குப் போகோணும்…” என்றான். “சரி தம்பி ….. சுகமாய் போய் சுகமாய் திரும்பி வா” என்று நான் சொல்ல, அவன் திரும்பிச் சொன்னான்….. “சுகமாய் போவேன் பெரியம்மா….. அதில பிரசினையில்ல….. ஆனா….. திரும்பி வாறதென்கிறது தான்….. சரிபார்ப்பம்…. என்றான். அதற்க்கு மேல் பெரியம்மாவால் பேசமுடியவில்லை. மறுபக்கம் திரும்பி கண்களை துடைத்துக் கொண்டார். https://www.thaarakam.com/news/141196
 2. முதலாவது கடற்கரும்புலிகளின் தாக்குதல் 10.07.1990… எடித்தாராவை எட்டி உதைத்த கடற்கரும்புலிகள் 10.07.1990….! பலர் கருதுவது போல எமது வாழிடமான நிலப்பகுதி மட்டும்தான் தமிழீழத் தாயகம் அல்ல. பழமையும், பெருமையும், செழுமையும் கொண்ட தமிழீழக் கடலும் தமிழர் தாயகம் தான். எமது விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்த வரை எமது கடலிற்கும் முக்கிய பங்குண்டு. விநியோகங்களும், போக்குவரத்திற்கும், வெளி உலகத் தொடர்பிற்கும் இக்கடலே பிரதான பாதையாக இருந்துவருகின்றது. இதை நன்கு அறிந்த சிங்கள அரசு கடற்பயனங்களைத் தடுத்து விடுதலைப் போராட்டத்தை நசுக்கத் திட்டமிட்டது. அதன் பிரகாரம் 1984ம் ஆண்டு திரு.லலித் அத்துலத்முதலி பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்ற பின் , இந்தக் கடல் எமதும் எமது மக்களினதும் பாவனையிலிருந்து தடைசெய்யப்பட்டது. ‘கடல் கண்காணிப்பு வலையம்’ என்ற பெயரில் தமிழீழக் கடல் சிங்களக் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டது. இந்தக் கண்காணிப்பு வலையத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில், தமிழக் கடலில் நிரந்தரமாகச் சில கப்பல்கள் நங்கூரமிட்டன. இவை தாய்க்கபல்கள் அல்லது கட்டளைக் கப்பல்கள் என அழைக்கப்பட்டன. சாதாரண சரக்குக் கப்பல்களைக் கடற் கண்காணிப்புக்கு ஏற்றபடி சிறு மாற்றங்களை செய்து, சில சாதனங்களையும் பொருத்தி அவற்றைக் கட்டளைக்கப்பல்களாக சிங்கள அரசு மாற்றியுள்ளது. றேடார் சாதனங்களும், சிறுரக பீரங்கிகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கப்பல்களின் பணி, கடலில் தமிழர்களின் படகுகள் எவையாவது தென்படுகின்றனவா என்பதை வேவு பார்ப்பதும் அப்படித் தென்பட்டால் அந்தச் செய்தியை கடற்படையின் அதிவேக விசைப்படகுகளுக்கு அறிவித்து குறித்த படகுகளை முழ்கடிப்பதுமாகும். இவ்விதம் இக்கட்டளைக் கப்பல்கள் தமிழீழக்கடலில் நங்கூரமிட்டபின், கடலில் பயணம் போன நூறுக்கும் மேற்ப்பட்ட விடுதலைப்புலிவீரர்கள் கடலிலே வீரச்சாவடைந்தனர். 14.04.1985 அன்று விடுதலைப்புலிகள் இயக்கம் கடலிலே தனது முதலாவது இழப்பைச் சந்தித்தது. அதில் 14 விடுதலைப்புலிகள் வீரச்சாவடைந்தனர். அத்துடன் பல நூற்றுக்கணக்கான மீனவர்களும், பிரயாணம் செய்த மக்களும் கடலிலே பலியானார்கள். இந்த இழப்புக்களுக்கெல்லாம் யாழ் குடாநாட்டைச் சூழவுள்ள கடலில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கட்டளைக் கப்பல்களே மூலகாரணியாகும். “அபித்தா”, “எடித்தாரா” என்று பெயர் சூட்டப்பட்ட இந்த இரண்டு கப்பல்களில் ஒன்று காங்கேசன்துறைக்கும், பருத்தித்துறைக்கும் இடையில் உள்ள கடலில் நிறுத்தப்பட்டிருக்கும். மற்றையது வெற்றிலைக்கேணிக்கு நேரே நிறுத்தப்பட்டிருக்கும். இந்த இரண்டு கப்பல்களையும் அப்புறப்படுத்தாவிட்டால் தொடர்ந்தும் விடுதலைப்புலிவீரர்களை இழக்க நேரிடும் என்பதுடன், போராட்டப் பணிகளும் பெருத்த சிரமங்களையும் தடைகளையும் தடைகளையும் எதிர்கொள்ளும். ஆனால், விடுதலைப்புலிகள் இயக்கத்திடமிருக்கும் சிறிய படகுகளின் உதவியுடன் இக்கட்டளைக் கப்பல்களை அடித்து விரட்ட முடியாது. எனவேதான் கரும்புலித் தாக்குதல்கள் மூலம் அந்த, “கடல் திமிங்கிலங்களை” அகற்ற விடுதலைப்புலிகள் தீர்மானித்தனர். 10.07.1990 அன்று, வடமராட்சிக் கடலில் நங்கூரமிட்டிருந்த “எடித்தாரா” என்ற பெயருடைய கட்டளைக் கப்பல் மீது, ஒரு கரும்புலித்தாக்குதல் நடாத்தப்பட்டது. இதில் மேஜர் காந்தரூபன், கப்டன் வினோத், கப்டன் கொலின்ஸ் ஆகிய கரும்புலிகள் பங்கேற்று கட்டளைகப்பலுக்கு சேதத்தை ஏற்ப்படுத்தி வீரச்சாவடைந்தனர் வெளியீடு – உயிராயுதம் பாகம் 01 https://www.thaarakam.com/news/141192
 3. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் கனடாவில் சுட்டுக் கொலை -மேலும் இருவர் கைது On Jul 9, 2020 கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயின் கொலைச்சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார்கள் எனத் தெரிவித்து மேலும் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். கனடாவின் ரொறன்ரோ Scarborough-ல் கடந்த மார்ச் மாதம் 13-ஆம் திகதி யாழ்ப்பாணம் கொற்றாவத்தையைச் சேர்ந்த தீபா சீவரட்ணம் என்ற 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய்சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 30-ஆம் திகதி Toronto-வை சேர்ந்த 28 வயதான Steadley Kerr என்பவரை பொலிசார் கைது செய்தனர். அவர் மீது இரண்டாம் நிலை கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. Steadley Kerr வரும் 23-ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இந்நிலையில், தற்போது இந்த சம்பவம் தொடர்பாக Oshawa-வை சேர்ந்த ஹரி சாமுவேல்ஸ்(27) ரொறன்ரோவைச் சேர்ந்த விஜேந்திரன் பாலசுப்பிரமணியம்(42) ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவர் மீதும் முதல் நிலை கொலை மற்றும் கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. https://www.thaarakam.com/news/141206
 4. திருக்கோணேஸ்வர ஆலயம் மீது பௌத்த தோர்களால் மேற்கொள்ளப்படுகின்ற ஆதிக்கத்தை நிறுத்த ஜனாதிபதி உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்; இரா.துரைரெட்ணம் கோரிக்கை July 9, 2020 திருகோணமலை கோணேஸ்வர ஆலயம் தொடர்பாக பௌத்த மதகுருக்களால் மேற்கொள்ளப்படுகின்ற ஆதிக்கத்தை நிறுத்த ஜனாதிபதி தூரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல். பத்மநாபா மன்ற தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள ஈ.பி.ஆர்.எல். பத்மநாபா மன்ற கரியாலயத்தில் இன்று இடம்பெற் ஊடகவியளாளர் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள போரதீவுப்பற்று வெல்லாவெளி, மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை, மண்முனைமேற்கு வவுணதீவு, ஏறாவூர்பற்று செங்கலடி, கோறளைப்பற்று தெற்குகிரான், கோறளைப்பற்று வடக்கு வாகரை இப் பிரதேசசெயலகப் பிரிவுகளிலுள்ள மாகாண நீர்பாசனம், மத்திய நீர்பாசனம், வனவலத் திணைக்களக்காணிகளிலும், மகாவலிக்குரிய காணிகளிலும், தனியார் காணிகளிலும், ஏனைய வாவிகளிலும், வாய்க்கால்களிலும் மேட்டுநிலம் போன்ற சில இடங்களில் மணல் அகழப்படுவதால் இயற்கை சூழலுக்கும், விவசாயச் செய்கைக்கும், பொதுமக்கள் வாழுகின்ற கிராமங்களுக்கு வெள்ள அபாயமும் ஏற்படக் கூடியவாறு ஒரு சில அமைப்புக்களின் தனி நபர்களும், ஒரு சில அதிகாரிகளும், ஒரு சிலரின் அரசியல் பின்னணியுடனும் அனுமதி வழங்கப் படுகின்றன. இதனால் ஒரு சில தனிநபர் ஆதாயத்தைப் பெற்று முழு மாவட்டமும் பெரும் அபாயத்தை சந்திக்கப்போகின்றது பிரதமரால் குறிப்பிட்ட தினங்களாக கூறப்படும் ஜனாதிபதியின் கீழுள்ள ஆணைக்குழுக்களை மாற்றுவது தொடர்பான கருத்து சிறுபான்மை இனங்களின் குறிப்பாக தமிழர்களின் கருத்து சுதந்திரத்தையும் ஜனநாயகத் தன்மையையும், நல்லாட்சி முறையையும் இல்லாது ஓழித்து விடும். ஆணைக்குழுக்களை இல்லாமல் செய்வதன் ஊடாக ஒரு தனி நபரின் இராணுவ ரீதியான ஆட்சி முறையை மேலோங்கச் செய்யும். மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள சில அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அரச நிருவாகத்தின் கீழ் செயற்படுகின்ற அமைப்புக்களின் ஒருசிலரின் செயல்பாடுகளும் ஒரு சில வேட்பாளர்களின் செயற்பாடுகளும் அரசதுறை சார்ந்த வளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுவதை திணைக்களத் தலைவர்கள் தேர்தல் ஆணைக்குழு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பாராளுமன்றத் தேர்தலில் அதிக ஆசனங்களை பெற்றால் மட்டுமே பாராளுமன்றத்தில் தமிழர்களுக்காக குரல் எழுப்புவதோடு பௌத்த ஆதிக்கத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்ட மக்களை காப்பாற்ற முடியும். எனவே அதிக ஆசனங்களை பெறக்கூடியவாறு உள்ள வீட்டுச்சின்னத்திற்கு வாக்களித்து வாக்குகளைப் பிரிப்பதற்காக போட்டிபோடுகின்ற வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாமென அறைகூவல் விடுக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார். http://thinakkural.lk/article/53239
 5. ராஜபக்சாக்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு நிரந்தர எதிரிகளாக கருதவில்லை – சர்வதேச ஊடகத்திற்கு சம்பந்தன் கருத்து July 9, 2020 ராஜபக்சாக்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு நிரந்தர எதிரியாக கருதவில்லை என கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். இன்றுமாலை தொலைபேசி மூலம் வழங்கிய பேட்டியில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இதனை எனக்கு தெரிவித்தார் என சோனியா சர்கார் என்ற வெளிநாட்டு செய்தியாளர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். எங்கள் கட்சி ராஜபக்சாக்களை நிரந்தர எதிரியாக கருதவில்லை என சம்பந்தன் எனக்கு தெரிவித்தார் என அந்த செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். ஆட்சியில் சர்வாதிகரபோக்கினை கொண்டுவந்தமை போன்ற ஏற்றுக்கொள்ளமுடியாத விடயங்களை அவர்கள் செய்ததன் காரணமாகவே நாங்கள் 2015 இல் அவர்களை எதிர்த்தோம் என அவர் குறிப்பிட்டார் என அந்த செய்தியாளர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். ராஜபக்ச சகோதரர்கள் அரசமைப்பிற்கு முரணான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்,யுத்தத்தின்போது பொதுமக்களுக்கு எதிராக படையினர் மேற்கொண்ட குற்றங்களை விசாரணை செய்வதற்கான சுயாதீன ஆணைக்குழுவை கைவிடுவதற்கான நோக்கத்தை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர் அவர்கள் நீதித்துறையின் நடவடிக்கைகளில் தலையிட முயன்றனர் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் ராஜபக்சாக்கள் நாட்டை முன்னேற்றகரமான விதத்தில் ஆட்சி செய்தால் நாங்கள் அவர்களை எதிர்க்கமாட்டோம் என சம்பந்தன் தெரிவித்தார்,தற்போது எங்கள் தீர்மானங்கள் சில கொள்கைகளின் அடிப்படையில் காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார் என சோனியா சர்கார் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். எங்கள் மக்களுக்கு எது சிறந்ததோ அதனை நாங்கள் செய்வோம்,தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விடயங்களில் எந்தவிட்டுக்கொடுப்புமில்லை எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார். http://thinakkural.lk/article/53269
 6. இனத்துவத்தின் வெற்றியும் ஜனநாயகத்தின் தோல்வியும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஜூலை 09 விடுதலைப் போராட்டம் என்பது, அடக்கி ஒடுக்கப்படும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தின், விருத்தியடைந்த நிலை எனக் கூறலாம். இனக்குழுமம் ஒன்றின் வாழ்வு, இன ஒடுக்கலாகவும் அடக்குமுறையாகவும் இன ஒழிப்பாகவும் மாறும்போது, அதற்கெதிரான போராட்டமும் வளர்ச்சி பெற்று, விடுதலைப் போராட்டமாக வடிவம் பெறுகிறது. ஆனால், விடுதலை என்பதன் அர்த்தம், அச்சொட்டாகத் தீர்மானிக்கப்படக்கூடிய ஒன்றல்ல. விடுதலையின் நோக்கம் என்ன என்பதே, விடுதலையின் வடிவத்தையும் தீர்மானிக்கிறது. இது அனைத்து வகையான விடுதலைப் போராட்டங்களுக்கும் பொருந்தும். ஜூலை மாதம் நான்காம் திகதி, அமெரிக்கா தனது சுதந்திரப் பிரகடனத்தின் 244ஆவது ஆண்டு நிறைவைப் கொண்டாடியது. இந்தச் சுதந்திரப் பிரகடனத்தின் நினைவுகள், முன்னெப்போதையும் விட இப்போதோ, அமெரிக்கர்களுக்குத் தேவைப்படுகிறது. ஒருபுறம், அமெரிக்காவெங்கும் ‘Black Lives Matter’ போராட்டங்களால் தகித்துக் கொண்டிருக்கிறது. இன்னொருபுறம், கொவிட்-19 நோய்த்தொற்றின் தீவிரத்தால் தத்தளிக்கிறது. இவை இரண்டும் இணைந்து, உலக அரசியலில் இனத்துவத்தை விளங்குவதன் முக்கியத்துவத்தைக் காட்டியுள்ளன. இன்று 244 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தச் சுதந்திரப் பிரகடனத்தை வாசிக்கும் ஒருவருக்கு ஏற்படும் எண்ண ஓட்டம், எதுவாக இருக்கும் என்பது கொஞ்சம் சிக்கலான கேள்வி. குறிப்பாக, மூன்றாம் ஜோர்ஜ் மன்னருக்கு எதிராக, அந்தப் பிரகடனத்தில் குறிப்பிடப்படும் கருத்துகள், இன்று எவ்வாறு பொருள் கொள்ளப்படும்? முக்கியமாக, அப்பிரகடனத்தில் மன்னருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பின்வருமாறு தொடர்கின்றன. ‘ஏராளமான இராணுவப் படைகளை எங்களுக்குள் நிலைநிறுத்தியுள்ளார்; அவர் எங்களுடைய கடலைக் கொள்ளையிடுகிறார்; கடற்கரையோரப் பகுதிகளை அழித்துவிட்டார்; எங்களுடைய நகரங்களைத் தீயிட்டுக் கொழுத்தினார்; எங்கள் மக்களுடைய வாழ்வை அழித்துவிட்டார். இப்பொழுதும் அவர், ஏராளமான வெளிநாட்டுக் கூலிப் படைகளைக் கொண்டுவந்து, இறப்பு, பேரழிவு, கொடுங்கோன்மை போன்ற செயற்பாடுகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்; இவை அனைத்துமே, காட்டுமிராண்டிக் காலத்தில்கூட, இணையாகக் காணமுடியாத, நாகரிகமடைந்த ஓரு நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு முற்றிலும் தகுதியற்ற செயல்களாகும்”. கிட்டத்தட்ட இரண்டரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு, உலகில் ஒடுக்கப்பட்ட மக்களும் அமெரிக்காவால் சீரிழிக்கப்பட்ட தேசங்களும் இதே குற்றப்பத்திரத்தை அமெரிக்கா மீது, இன்று வாசிக்கின்றன. இதை எவ்வாறு விளங்கிக் கொள்வது? ஒடுக்கப்பட்ட தேசிய இனம், இன்னும் மோசமாக ஒடுக்கும் தேசிய இனமாக, எவ்வாறு உருவெடுத்தது என்பது கவனிப்புக்குரியது. தேசிய இனமும் தேசமும், மனிதரின் சமூக அடையாளங்கள். அவை, வரலாற்றால் உருவானவை. அவ்வாறே அவை, வரலாற்றுப் போக்கில் மாறக்கூடியவை. அவற்றுக்கு ஒரு நிரந்தர இயல்பும் இல்லை. அவை, எப்போது முக்கியத்தும் பெறுகின்றன என ஆராய்ந்தால், அவற்றுடன் சேர்ந்த வர்க்க நலன்களை அடையாளம் காணலாம். தேசத்தினதோ, தேசிய இனத்தினதோ பெயரில் இன்னொரு தேசத்தையோ, தேசிய இனத்தையோ ஒடுக்குவதை நியாயப்படுத்தத் தேசிய உணர்வு, தேசப்பற்று, தேசிய நலன் போன்ற கருத்துகள் பயன்படுகின்றன. ஆழ நோக்கின், அங்கு ஓர் அதிகார வர்க்க நலன் சார்ந்த சிந்தனையின் ஆதிக்கத்தைக் காணலாம். இது கொலனிய யுகத்தில் காணப்பட்டது; நவகொலனிய யுகத்திலும் காணப்படுகிறது. கொலனியமும் ஏகாதிபத்தியமும் மட்டுமன்றி, மூன்றாமுலக நாடுகளின் அதிகார வர்க்கங்களும் இவ்வாறு தேசிய நலன்களை வற்புறுத்தக் காணலாம். இத்தகைய தேசியவாதத்தின் பின்னாலுள்ள அதிகார வர்க்கங்கள், தாம் பிற தேசங்களை ஆக்கிரமிப்பதையும் அடக்குவதையும் சுரண்டுவதையும் ஏற்புடையனவாக்க, தமது சமூகத்தின் பெரும்பான்மையை மகிழ்விக்க வேண்டும். இதற்கு இனப்பகை வசதியான கருவியாக உள்ளது. மேலாதிக்கத்துக்கும் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிராக, விடுதலைக்காகப் போராடும் தேசியம், அந்த நோக்கங்களுக்கு உட்பட்டு முற்போக்கானது. எனினும், விடுதலைக்காகப் போராடும் தேசிய இயக்கங்கள் யாவுமே, முற்போக்கான உலக நோக்குடையனவல்ல. அவற்றிடையே, பலவாறான வர்க்க நிலைப்பாடுகளும் அரசியல் சிந்தனைகளும் இயங்குகின்றன. பழைமைவாதம், அடிப்படையான சமூக அமைப்பைப் பேணும் நோக்கு என்பனவற்றுடன், பிற தேசிய இனங்களையும் தேசங்களையும் இழிவாகவும் பகையாகவும் நோக்கும் தன்மையையும் பல தேசிய விடுதலை இயக்கங்களுக்குள் காண்கிறோம். இவற்றுக்கு மாறாக, மனித சமத்துவத்தையும் சமூக நீதியையும் வேண்டும் போக்குகளையும் அதே இயக்கங்களுக்குள் காணுகிறோம். தேசியத்தின் தன்மையும் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தன்மையும், ஆதிக்கம் செலுத்தும் வர்க்கப் பார்வை மீதும் வர்க்க நலன்கள் மீதுமே தங்கியுள்ளன. அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனம் முன்வைத்த அதே குற்றச்சாட்டுகளை, அமெரிக்கா மீது, அமெரிக்காவின் கறுப்பின மக்கள் இன்று முன்வைக்கிறார்கள். அமெரிக்க நீக்ரோ விடுதலைப் போராட்டம், அடிமை முறையிலிருந்து விடுபடும் போராட்டங்களில் தொடங்கி, பல்வேறு உரிமைப் போராட்டங்களூடாக வளர்ந்து, அமெரிக்க சமுதாயத்தில் நிற வேறுபாடின்றி, சமத்துவம் வேண்டி நிற்கும் போராட்டமாக இன்னும் தொடர்கிறது. அமெரிக்காவில் வெள்ளை நிற வெறியும் இன ஒடுக்கலும் அமெரிக்கா ஒரு வல்லரசாகத் தொடரும்வரை ஒழியப்போவதில்லை. நீக்ரோ மக்களினதும் அவர்கள் போன்று ஒடுக்கப்பட்ட ஹிஸ்பானிக் (ஸ்பானிய மொழிபேசும் லத்தீன் அமெரிக்க) சிறுபான்மையினரும் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்டனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட சில்லறைச் சீர்திருத்தங்கள், பிரச்சினையின் ஆணி வேரைத் தொடத் தவறிவிட்டன. எனவே, அவர்களது இனவிடுதலைப் போராட்டம் தொடர்கிறது. இதன் இன்னொரு வடிவமே, இப்போது நடைபெறுகின்ற Black Lives Matter போராட்டங்கள் ஆகும். உலக அரசியல் அரங்கில், இனத்துவம் முக்கியமான வகிபாகத்தை உடையது. தேச அரசுகளின் உருவாக்கமும் அதைத் தொடர்ந்த விடுதலைப் போராட்டங்களும் கொலனியாதிக்கம், முதலாளித்துவத்தின் வளர்ச்சி, அதன் ஏகபோகம் என்பனவும் இனத்துவத்தின் இருப்பையும் நிலைப்பையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளன. உலகின் முக்கியமான ஒரு பேசுபொருளான இனத்துவம், இன்றுவரை பேசப்படாமல் ஒதுக்கப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. உலக அரசியலின், வேறுபட்ட நிலைப்பாடுகளும் சித்தாந்த நெருக்கடிகளும் இனத்துவத்தை, அரங்கின் மய்யத்துக்கு வராமல் தடுத்து வைத்திருந்தன. இப்போது நிலைமை மாறுகிறது. இந்த மாற்றம் நிரந்தரமானதா அல்லது, தற்காலிகமானதா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இனத்துவம் இப்போது பேசுபொருளாகி உள்ளது; இது பயனுள்ளது. கடந்த ஒன்றரை நூற்றாண்டுகால வரலாற்றில், கொலனித்துவம் ஏற்படுத்திய நெருக்கடி, புதியதும் ஆழமானதும் ஆகும். இதன் தொடர்ச்சியே இப்போது வெவ்வேறு வடிவங்களில் அரங்கேறுகிறது. ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் தக்கவைப்பதற்கான வலிய கருவியாக, இனத்துவம் பயன்பட்டு வந்துள்ளது. இவ்விடத்தில் ‘எனக்கொரு கனவுண்டு’ (I have a dream) எனும், மார்ட்டின் லூதர் கிங்கின் பிரபலமான உரை, நினைவுக்கு வருவது தவிர்க்கவியலாது. இவ்விடத்தில், இந்த உரையின் இன்றைய பொருத்தப்பாடு பற்றி, அருந்ததி ராய் எழுப்பிய சில கேள்விகளை இங்கு நினைவுபடுத்தல் தகும்: “அவர் இன்று உயிரோடு இருந்திருந்தால், இன்னமும் ஒவ்வொரு அமெரிக்கனின் உள்ளத்திலும் உன்னதமான அமெரிக்கர்களின் அலங்காரப்பீட அடுக்கிலும் தனக்கான அசைக்க முடியாத இடத்தில் ஆறுதலாக அமர்ந்திருக்க விரும்பியிருப்பாரா? அல்லது, தனது பீடத்திலிருந்து கீழிறங்கி, வெற்றுப் புகழாரங்களை உதறித் தள்ளிவிட்டு தன் மக்களை, மீண்டும் பேரணியில் திரட்ட வீதிக்கு வந்திருப்பாரா”? இன்று இனத்துவம் பேசுபொருளாகியுள்ள நிலையில், இது வெறுமனே சில அற்பச் சலுகைகளுடன் முடிந்துவிடும் விடயமல்ல என்பதை அனைவரும் உணரல் வேண்டும். அமெரிக்க சுதந்திரப் பிரகடனமும் அதைத் தொடர்ந்த அமெரிக்காவின் நடத்தையும் இன்று கூர்மையடைந்திருக்கின்ற நீக்ரோ அமெரிக்கர்களின் உரிமைக்கான போராட்டங்களும் சொல்லும் செய்தி ஒன்றுண்டு. இனங்களுக்கிடையிலும் இனப் பிரிவுகளுக்கிடையிலும் நல்லுறவு வளர்த்தல், ஒடுக்கப்பட்ட மக்களது நலனுக்கு அவசியமானது என்ற உண்மை, உரத்துச் சொல்லப்படல் வேண்டும். ஓர் இனத்தவர், மற்ற இனத்தவர்களுக்குரிய குறிப்பான பிரச்சினைகளையும் அவர்களது வாழ்க்கை முறையையும் சிந்தனைகளையும் பற்றி ஓரளவு தெளிவு பெறுவதும் பிரச்சினைகளைத் தம் கண்ணோட்டத்தில் மட்டுமன்றி, மற்றவர்களது கண்ணோட்டத்திலும் காண முயல்வதும் மக்களிடையே இன அடிப்படையிலான முரண்பாடுகளில் பகைமையைக் குறைத்து, சினேக இயல்பை வலுவூட்ட உதவும். இவ்விடத்தில், இலங்கையை மய்யப்படுத்தி, பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட முன்வைத்துள்ள கருத்து கவனிக்கத்தக்கது: ‘இனத்துவமும் ஜனநாயகமும் நமது சமூகத்துக்கு நவீனத்துவம் கொண்டுவந்த இரு அதிமுக்கிய அரசியற் கற்பனைகளாம். இனத்துவம் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் மற்றும் சில சமூகங்கள் ஒவ்வொன்றும், தன்னை ஓர் அரசியல் சமூகமாகவும் அரசியல் பொதுக் கூட்டாகவும் கருதுவதற்கான சிந்தனைச் சட்டகத்தைத் தந்துள்ளது. ஜனநாயகம், உரிமையுடைய ஒரு தனிமனிதனாகவும் கண்ணியமாயும் சமத்துவமாயும் நடத்தப்பெறும் உரித்துடையனவனாயும் அரசாங்கத்துடன் ஒவ்வொரு குடிமகனும் தன்னை உறவுபடுத்த இயலுமாக்கியுள்ளது. இவை எவ்வாறும் நவீனத்துவத்தின் அற்பச் சாதனைகளல்ல. இவ்விரண்டும் இலங்கையின் குடிமக்கள் யாவரதும் அரசியல் சுயத்தின் மூலங்கள். இனத்துவத்தின் மூலம், நமது குடிமக்கள் தம்மை முதற்கண் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் இத்தியாதி பண்பாட்டு-அரசியல் சமூகங்களைச் சார்ந்தோராகத் தம்மை விளங்குகின்றனர். குடிமக்களின் இனத்துவ, அரசியல் அடையாளங்கள் கடந்த சமத்துவத்தை வசதிப்படுத்தும் ஜனநாயகம் உறுதியளிக்கப்பட்டிருந்தும் இனத்துவ அடையாளத்தையடுத்தே அதனில் பெரிதான தேச-அரசு அடையாளம் ‘இலங்கையர்த் தன்மை’ வருகிறது. வலிய பல காரணங்களால், குழு அடையாளத்தின் இனத்துவக் கற்பிதம் தேச-அரசு என்ற அடையாளக் கற்பிதத்தை மேவியுள்ளது. ஜனநாயகத்தின் தனிமனித, எதிர்மறையான உரிமைகள் பற்றிய கதையாடல், குழுக் களின் இக்கட்டுகளையோ சனத் திரள்களின் விமோசனம் பற்றிய பார்வைகளையோ ஒலிப்பித்தற்கான வெளிப்பாட்டு மொழியைத் தரவில்லை. இச் சூழலிலேயே சிங்கள, தமிழ் பின்னர் முஸ்லிம் இனத்துவத் தேசிய அடையாளங்கள், நவீன இலங்கையின் அதி வலிய அரசியல் இயக்க ஆற்றலாக விருத்திபெற்றன. மூன்று தசாப்தங்களாக நடந்த நீடித்த உள்நாட்டுப் போரை முன்னே உந்தியது இனத்துவத் தேசிய சித்தாந்தங்களேயன்றிச் ஜனநாயக இலட்சியங்களல்ல என நாம் உணரும் போது, அது மேலும் அச்சமூட்டுகிறது இனத்துவத்தின் வெற்றி நமது ஜனநாயகத்தின் தோல்வியாகியது. இச் செயற்பாங்கை மறுதலையாக்கி, இனத்துவத்தினதும் இனத்துவத் தேசியவாதங்களினதும் பிரிவுசார்ந்த, குறுகிய நோக்குடைய, விலக்கி நிற்கும் உறுதிமொழியை மழுங்கடிக்கும் ஆற்றலுடையதோர் அரசியல் சக்தியாக, ஜனநாயகத்தை மீளக் கொணர்வதே உள்நாட்டுப் போருக்குப் பிந்திய இலங்கையின் சவால்.’ நிறைவாக, எங்கே அடக்கு முறையும் ஒடுக்கலும் உண்டோ, அங்கே கிளர்ச்சியும் விடுதலைப் போராட்டமும் உண்டு. இது மனித வரலாறு கூறும் உண்மை. மனித இனத்தின் விமோசனம் மனிதரிடையே சமத்துவம் நிறுவப்படுவதன் மூலமே சாத்தியமாகும். மனிதனை மனிதன் அடிமைப்படுத்தவும் அடக்கி ஒடுக்கவும் சுரண்டவும் இயலுமான ஒரு சமுதாய அமைப்புக்குள் ஒடுக்கப்பட்டவன் மட்டுமல்லாமல், ஒடுக்குபவனும் தன்னுடைய ஒடுக்கு முறையுடன் தன்னைப் பிணைத்துக் கொள்கின்றான். இது கறுப்பின அமெரிக்கர்களுக்கு மட்டுமல்ல; இலங்கையர்களுக்கும் பொருந்தும். ஒடுக்கப்பட்ட அனைவருக்கும் பொருந்தும். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இனத்துவத்தின்-வெற்றியும்-ஜனநாயகத்தின்-தோல்வியும்/91-252959
 7. ஒரே நாளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அமெரிக்காவில் கொரோனா அமெரிக்காவில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். நேற்றையதினம் 60,020 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக அங்கு பல மாநிலங்களை மீண்டும் மூட வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இதன் காரணமாக சில தொழிலாளர்களுக்கு ஊதியம் இல்லாமல் போகும் நிலை ஏற்படும். புளோரிடாவில் கிட்டத்தட்ட 10,000 புதிய நோயாளர்களும், டெக்சாஸில் 9,500 க்கும் மேற்பட்ட நோயாளர்களும், கலிபோர்னியாவில் 8,500 க்கும் மேற்பட்ட புதிய நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். கலிபோர்னியா மற்றும் டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துவருகிறது. டென்னசி, மேற்கு வேர்ஜீனியா மற்றும் உட்டா ஆகிய மாநிலங்களில் தினசரி புதிய தொற்றாளர்கள் அதிகரித்துள்ளனர். மேலும் 50 மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களாக 42 மாநிலங்களிலேயே கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. தற்போது அமெரிக்காவில் 3 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 132,000 பேர் உயிரிழந்துள்ளார்கள். உலகளவில், கொரோனா தொற்றினால் 12 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 546,000 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/85453
 8. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றுகிறது - சந்திரகுமார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தங்களோடுதான் இருக்கின்றார் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் தெரிவித்துள்ள கருத்து தமிழ் மக்களை முட்டாள்களாக்கும் கருத்து. தமிழ் மக்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மீண்டும் இந்த தேர்தலில் ஏமாற்றுவதற்கு இவ்வாறான அறிக்கைகளை அவர்கள் விடுகின்றனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் பேசுகையில், பிராந்திய அரசியல் நலன்கள்சார்ந்து இந்தியா எப்பொழுதும் கொழும்போடுதான் இருந்துள்ளது. இன்றும் இருந்து வருகிறது. சர்வதேச நாடுகள் அனைத்தும் ஏனைய நாடுகளின் எந்த விடயத்திலும் தலையிடுகின்ற போது தங்களின் நலன்களிலிருந்து சிந்தித்தே முடிவுகளை எடுத்து வருகின்றனர். மாறாக அவர்கள் தமிழ் மக்கள் மீதான அக்கறையினால் அல்ல. யுத்தம் நிறைவுற்று கடந்த 10 வருடங்களாக தமிழ் மக்களின் விடயத்தில் சர்வேதேச நாடுகளின் செயற்பாடுகள் இவ்விதமே இருந்து வருகிறது. ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் முன் சர்வதேசம் என்ற மாயமானை காட்டி வாக்குகளை பெற்று தங்களின் வளப்படுத்திக்கொண்டார்களே தவிர தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள உடனடி பிரச்சினைகளை கூட நிர்வத்தி செய்யவில்லை. பிரதேசங்களின் அபிவிருத்தி, இளம் சமூகத்தின் வேலைவாய்ப்புகள், மக்களின் பொருளாதார முன்னேற்றம் போன்ற மக்களின் நாளாந்த வாழக்கை பிரச்சினைகளை கூட அவர்களால் தீர்த்து வைக்க முடியவில்லை. 2015 இற்கு பின்னர் கடந்த ஐந்து வருடத்தில் தமிழ் மக்கள் ஒரு வெறுமைக்குள் வாழ்ந்திருக்கின்றார்கள். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் யாழ் கிளிநொச்சி மாவட்டங்களில் போட்டியிடுகின்ற 10 வேட்பாளர்களும் முடிந்தால் ஒரே மேடையில் ஒற்றுமையாக இருந்து ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை நடாத்த முடியுமா? பத்து பேருக்குள்ளும் பத்துவிதமான கருத்துக்கள், ஒருவருக்கொருவர் குழிபறிக்கின்ற செயற்பாடுகள் கட்சிக்குள் அடிபாடுகள்,மாறிமாறி ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்துகின்றனர். நியாயமாக கேள்வி கேட்கின்றவர்களை கட்சியிலிருந்து விலக்குகின்றனர். இவ்வாறு தங்களுக்குள்ளுள் ஒற்றுமையின்றி இருந்துக்கொண்டு தமிழ் மக்களை ஒற்றுமையாக தங்களுக்கு வாக்களிக்க கோருவது கேலிக் கூத்தான செயற்பாடு. கடந்த காலங்களிலும் இவர்களின் இவ்வாறான வார்த்தைகளை நம்பி தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாக்களித்து பேரம் பேசும் பலத்தை வழங்கினார்கள் ஆனால் அவர்கள் தமிழ் மக்கள் வழங்கிய பேரம் பேசும் பலத்தை தங்களின் சுயலாப சுகபோக நலன்களுக்கு பயன்படுத்தினார்களே தவிர மக்களுக்காக பயன்படுத்தவேயில்லை. இதனால்தான் கடந்த ஐந்து வருடங்களில் தமிழ் மக்கள் ஐந்து வருடங்கள் பின்னோக்கி சென்றுவிட்டனர். எனவே இனியும் இவர்களை நம்பி இவர்களின் வார்த்தைகளை நம்பி தமிழ் மக்கள் ஏமாந்து போகக் கூடாது. மாறியிருகின்ற தமிழ் அரசியல் சூழலில் மாற்றத்தை நோக்கி வாக்களிக்க வேண்டும். மக்களின் நலனில் நாம் கேடயமாக நின்று காப்போம். இதனை கடந்த கால எங்களின் செயற்பாடுகள் கட்டியம் கூறுகின்றது. எனத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/85446
 9. தொல்பொருள் செயலணியின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் சனிக்கிழமை போராட்டம் July 9, 2020 தொல்பொருள் ஆய்வுகுழுவினரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 11 ம் திகதி மட்டக்களப்பில் அமைதிவழிபோராட்டமொன்று இடம்பெறவுள்ளது. தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த போராட்டம் மட்டளக்களப்பு காந்திபூங்காவில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி நியமித்துள்ள தொல்பொருள் ஆய்வுகுழுவில் தமிழர்களோ முஸ்லீம்களோ உள்வாங்கப்படவில்லை என தமிழ் உணர்வாளர்கள் அமை;பு சுட்டிக்காட்டியுள்ளது. ஒருதேசிய குழுவில் தேசிய இனங்கள் இல்லாதிருப்பது பாரிய குறைபாடு எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தமிழர்கள் அல்லாதவர்கள் நியமிக்கப்பாடதபோதே மர்மம் தோன்றப்போகின்றது என்பதை நாங்கள் உணர்ந்தோம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. பேராசிரியர் பத்மநாதன் , கலாநிதி சிவகணேசன்,பேராசிரிய மௌனகுரு போன்றோர் இக்குழுவில் சேர்க்கப்படாதது ஏன் எனவும் தமிழ்உணர்வாளர்கள் குழு கேள்வி எழுப்பியுள்ளது. தமிழர்கள் நிலங்களையும் அவர்களின் இருப்புக்களையும் அழித்தொழிக்கும் செயற்பாடே இந்த செயலணியின் நோக்கமாகும் என தமிழ் உணர்வாளர்கள் குழு தெரிவித்துள்ளது. கிழக்குமாகாண ஆளுநராக பெண் ஒருவரை இந்த அரசாங்கம் நியமித்துள்ளது,இந்த பெண்ணால் கல்குடாவில் சிங்கள பாடசாலையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள தமிழ் உணர்வாளர்கள் சங்கம் தமிழ்பேசும் மக்கள் இதற்கு ஆரம்பத்தலேயே முற்றுபுள்ளிவைக்கவேண்டும் என தெரிவித்துள்ளது. இதற்காக சனிக்கிழமை மட்டக்களப்பில் அறவழிப்போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. http://thinakkural.lk/article/53100
 10. பொதுத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் ஆகஸ்ட் 2 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு July 9, 2020 பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் ஆகஸ்ட் 2 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு செய்யப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலுடன் தொடர்புடைய பிரச்சார நடவடிக்கைகளின் போது அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குவிதிகள் தொடர்பான விசேட அறிவித்தலொன்று பொலிஸ் தலைமையகத்தினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளதுடன் அந்த அறிவித்தலிலேயே இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிவித்தலின் ஆகஸ்ட் 2ஆம் திகதி நள்ளிரவுடன் பிரச்சார நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதுடன் தேர்தல் முடிவுகள் வெளியாகி 7 நாட்களுக்கு எந்தவொரு பேரணியையும் நடத்த முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வீடுவீடாக சென்று பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடும் போது வேட்பாளர் மற்றும் வேட்பாளரின் குடும்பத்தினருக்கு செல்ல முடியாது என்பதுடன் அவ்வாறாக வேட்பாளர் ஒருவருக்காக 3 பேர் மாத்திரமே வீடு வீடாக செல்ல முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் , அரசியல் கட்சிகளின் மற்றும் சுயேட்சை குழுக்களின் கொள்கை பிரகடனங்கள், சின்னம், புகைப்படம், துண்டுபிரசும், இலக்கம் மற்றும் போஸ்டர் போன்றவற்றை வீடுகளுக்கு விநியோகிக்க முடியும். ஆனபோதும் அவற்றை வீதியில் பயணிக்கும் போது காட்சிப்படுத்தவோ வீட்டாருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதற்கோ தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வீட்டுக்கு வீடு செல்லும் போது ஒலி பெருக்கிகள் மற்றும் இசை கருவிகள் பயன்படுத்தக் கூடாது. விருப்பு இலக்கம் , சின்னம் ஆகியன உள்ளடங்கிய ஆடைகளும் அணிந்துக்கொண்டும் இந்த நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது. எனவும் ஆறிவிக்கப்பட்டுள்ளது. http://thinakkural.lk/article/53071
 11. முன்னரும் சுயாந்தனின் பதிவை வாசித்துவிட்டுத்தான் பதிந்திருந்தேன். முன்னைய பதிவு archive க்கு போனதால் அதில் கருத்துக்கள் இடமுடியாது. இதைக்கூட புரியாமல் நான் வாசிக்காமலேயே பதிகின்றேன் என்று நீங்கள் நிரூபிக்க முனைவது புரிகின்றது உடையார் இப்போதுதான் நூலை நான் படிக்கின்றேன். அதில் சில மேற்கோள்களைக் காட்டவே இந்தத் திரியைப் பாவிக்கின்றேன். ஜெயமோகனின் சமீபத்திய புளித்தமாவு சர்ச்சையில் “ பிரபல எழுத்தாளருக்கு அடி உதை ” என்று மகிழ்ந்து குலாவும் ஊடகத்தில் யாரேனும் அவரது ஒரு வரியையாவது வாசித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஊடகங்களுக்கு செய்திகளை உருவாக்க வேண்டும். அதற்கு இந்த “ பிரபல ” அவசியம்.
 12. ஆடி அமாவாசை தினத்தில் கடலோரங்களில் பிதிர்க் கடன்களை நிறைவு செய்வதற்கு அனுமதி கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுகாதார விதிமுறைகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதால் குளங்கள் மற்றும் கடலோரங்களில் பிதிர்க் கடனை செய்வதற்கு சுகாதார தரப்பினர் அனுமதி மறுத்திருந்தனர்.இந்நிலையில் ஆடி அமாவாசை தினத்தை அனுஷ்டிப்பவர்கள் தமது பிதிர்க் கடன்களை நிறைவு செய்வதற்கு கடலோரங்களில் செல்வதற்கான அனுமதிக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் குறித்த தரப்பினரது பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் முகமாக அமைச்சரவையில் அது தொடர்பில் பரஸ்தாபித்திருந்தார். இதையடுத்து குளங்கள் குறுகிய பரப்பை கொண்டுள்ளதால் கொரோனா தொற்று பரவும் சாத்தியம் அங்கு அதிகமாக இருப்பதால் அதற்கு பதிலாக கடலோரங்களில் அத்தகைய கிரிகைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்திதுள்ளமை குறிப்பிடத்தக்கது.எதிர்வரும் 20 ஆம் திகதி குறித்த நினைவு கூரும் தினமான ஆடி அமாவாசை தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதால் அத்தினத்தை அனுஷ்டிப்பவர்கள் தமது தந்தையருக்கு பிதிர்கடனை நிறைவேற்றுவதற்கு பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிட்டிருந்தது.இந்நிலையில் ஆடி அமாவாசை தினத்தை அனுஷ்டிப்பவர்கள் தமது பிதிர்க் கடன்களை நிறைவு செய்வதற்கு கடலோரங்களில் செல்வதற்கான அனுமதிக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.(15) http://www.samakalam.com/செய்திகள்/ஆடி-அமாவாசை-தினத்தில்-கட/
 13. சரவணபவனின் உதயன் என்று சொல்ல என்ன தயக்கம்? IBC மாபியா ஊடகம் போல் செயற்படுகின்றது. சுமந்திரனை தோற்கடிக்கவேண்டும் என்ற இவர்களின் பிரச்சாரம் யாழ் களத்திலும் ஒட்டப்படுகின்றது. ஆனால் சுமந்திரன் IBCயிடம் சமரசம் செய்தால் தலையில் தூக்கிக்கொண்டாடவும் செய்வார்கள்.
 14. கொரோனா வைரஸ் தாக்கமும் தொழிற்றுறைகளுக்கு மூடுவிழாவும் அனுதினன் சுதந்திரநாதன் கொரோனா வைரஸின் தாக்க அளவானது, இலங்கையில் குறைவாக உள்ளநிலையில், இறுக்கமான கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு, முழுமையாக இயங்குவதற்கான செயற்பாடுகளை, இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. மார்ச் மாதம் 15ஆம் திகதி முழுமையாக முடக்கப்பட்ட இலங்கையின் தொழிற்றுறையானது, ஜூன் 15ஆம் திகதி முதல், முழுமையாகச் செயற்பட ஆரம்பித்து இருக்கிறது. ஆனால், கடந்த வாரங்களில் வீதிகளில் பயணிக்கின்ற நீங்கள் வீதிக்கொரு கடை மூடப்பட்டு இருப்பதையும் அவை மீளத் திறக்கப்பட வாய்ப்பில்லை என்பதையும் அறிந்திருப்பீர்கள். நீங்கள் வாங்குகின்ற பொருள்களில், சில வர்த்தகக் குறியீடு கொண்ட பொருள்கள், காணாமல் போயிருப்பதை அவதானித்து இருப்பீர்கள். இப்படியாக, நமது அன்றாட வாழ்விலேயே, இப்படியாகக் கண்ணுக்குத் தெரிந்த தொழிற்றுறைப் பாதிப்புகளைப் பார்க்கின்ற நாம், நமக்குத் தெரியாமல் நடக்கின்ற தொழிற்றுறைப் பாதிப்புகள் தொடர்பிலும், அவற்றிலிருந்து வணிகங்கள் எவ்வாறு விடுபட்டுக்கொள்ள முடியும் என்பதையும் அறிவது, மிக முக்கியமானதாக இருக்கிறது. ஜூன் 15ஆம் திகதிக்குப் பிறகு, நாடு மீண்டும் வழமைக்குத் திரும்பி இருந்தாலும், கொரோனா வைரஸின் அச்சம், இன்னும் முழுமையாக நீங்கிவிடாத சூழ்நிலையே காணப்படுகிறது. இதனால், நிதி ரீதியான பிரச்சினைகளைத் தனிநபரோ, நிறுவனங்கள் மட்டுமல்லாமல் முழு நாடுமே எதிர்நோக்கி உள்ளது. உலக வங்கியின் கணிப்பின்படி, இந்தக் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, உலக பொருளாதாரம் இன்னும் மோசமான நிலைக்குச் செல்லுமென கணிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இந்த நிலையிலிருந்து மீள்வதற்கு, 2022ஆம் ஆண்டு கூட ஆகலாம் எனக் கணிப்பிட்டு இருக்கிறார்கள். எனவே, எதிர்வரும் காலமானது, நமக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகுக்கும் சவாலான ஒன்றாகும். எனவே, இத்தகைய நிலைக்கு, எம்மையும் தயார்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும். அப்படியாயின், குறுங்காலம், நடுத்தரகாலம் ஆகியவற்றின் அடிப்படைகளின் பிரகாரம், வணிகங்கள் தங்களை எப்படித் தயார்படுத்திக்கொண்டு, இந்த இடரான காலத்தில், தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியுமென்பதைப் பார்க்க வேண்டும். அதிலும், குறிப்பாகப் புதிதாகத் தொடங்கப்பட்ட சிறியதும் நடுத்தரமானதுமான வணிகங்கள் என அழைக்கப்படும் Small & Medium Enterprises நிறுவனங்களின் நிலைமையே மிக அதிகமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாக இருக்கின்றன. இவை, தற்போது சமூகப் பொறுப்புடன் செயற்பட்டு, தங்கள் தொழிலாளர்களுக்கு நன்மை செய்யவேண்டி இருப்பதுடன், தம்மையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. காரணம், இந்தப் பொருளாதார நெருக்கடிநிலை முடிவுக்கு வருகின்றபோது, யாரெல்லாம் தக்கனபிழைத்து இருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் மிகையான சந்தை வாய்ப்புகள் கிடைப்பதுடன், மிகப்பாரிய வளர்ச்சியையும் காண முடியும். ஆனால், அதற்கு அவர்கள் தக்கனபிழைத்து இருப்பது, மிகமிக அவசியமாகும். புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளல் இந்தக் கொரோனா வைரஸ் காலமானது, வணிகங்களுக்குப் பாதகமாக அமைந்துள்ளபோதிலும், புதிய வணிக வாய்ப்புகளை ஏற்படுத்தத் தவறவில்லை. எனவே, சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு இருக்கக்கூடிய, மிக இலகுவாக இசைவாக்கம் அடையக்கூடிய பலத்தைக் கொண்டு, தங்களுடைய வணிகத்தை மாற்றி அமைப்பதன் மூலம் அல்லது, தற்காலிகமாக உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் வணிகங்கள், தங்களுடைய இருப்பை உறுதிசெய்துகொள்ள முடியும். வணிகம் ஒன்று, தனித்துத் தன்னுடைய இருப்பை உறுதிசெய்து கொள்ளுகின்றபோது, அதில் தங்கியிருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படுவதை, நாம் மறந்துவிடக்கூடாது. உதாரணமாக, இந்தக் கொரோனா வைரஸ் காலத்தில், சுகாதாரம், கல்வி, தொழில்நுட்பம், விவசாயம் ஆகிய துறைகள் சார்ந்து, அதிகளவிலான வாய்ப்புகளை உருவாகி இருக்கிறது. எனவே, சிறிய, நடுத்தர வணிகங்கள், இந்தத் துறைகளில், ஏதேனுமொரு சேவையை, உற்பத்தியைச் செய்ய முடியுமானதாக இருப்பின், தங்களைக் குறுகியதும் நடுத்தரமான காலத்துக்குத் தற்பாதுகாத்துக்கொள்ள முடியும். நிதியியல் தேவைகளைப் பூர்த்திசெய்ய முயற்சித்தல் தற்போதைய நிலையில், வணிகங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரும் பிரச்சினையாக, நிதியியல் சார்ந்த தேவைகள் இருக்கின்றன. குறிப்பாக, நாளாந்த செயற்பாடுகளை மேற்கொள்ளவே, வணிகங்களுக்குப் போதுமான நிதி இல்லாத நிலையில், வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் தங்கியிருக்க வேண்டியதாக இருக்கிறது. வருமானம் என்கிற ஒன்று இல்லாததன் விளைவாக, இந்த மோசமான நிலையை, வணிகங்கள் எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. தற்போதைய நிலையில், இலங்கை மத்திய வங்கி, மிகப்பாரிய அளவிலான நிதியை, கடந்த மூன்று, நான்கு மாதங்களில், வணிக வங்கிகளின் மூலமாக, வணிகங்களுக்கு வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் வெளியான தரவுகளின் பிரகாரம், இதற்காகச் சுமார் 120 பில்லியன் இலங்கை ரூபாயை அச்சடித்து பணப்புழக்கத்துக்கு வழங்கி இருக்கிறது. அதுமட்டுமல்லாது, சுமார் 120 பில்லியன் ரூபாயை நிதி நெருக்கடியில் உள்ள சுமார் 14,000 வணிகங்களுக்கு வழங்க முடிவு செய்த்திருக்கிறது. இலங்கை தொழில் திணைக்களத்தில், இதுவரை 86,000 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் 10%க்கும் அதிகமான நிறுவனங்களுக்கே, இந்த உதவி வழங்கப்பட இருக்கிறது. அப்படியாயின், உங்களின் வணிகத்துக்கு, இத்தகைய நிதித் தேவைகளைப் பெற்றுக்கொள்ள, என்ன செய்ய வேண்டுமென்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. உண்மையில், நிதித் தேவைகளைச் சரிவர மக்களுக்குக் கொண்டுசென்று சேர்க்கவேண்டிய அரச பொறிமுறையில், மிகப்பெரும் குறைபாடுகள் இருக்கின்றன. பெரும்பாலான சமயங்களில், இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் வணிகங்களுக்கு, இத்தகைய நிதி சென்றடைவதில்லை. ஆனால், விமர்சனங்களைத் தாண்டி, தங்களுடைய வணிகங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் தற்காத்துக் கொள்ளவும், முயற்சியாளர்கள் இன்னமும் விரைவாகச் செயற்பட வேண்டியது அவசியமாகிறது. அரசாங்கத்தின் உதவிகள் வருமெனக் காத்திருப்பது, ‘இலவு காத்த கிளியின் கதை’ ஆகிவிடும். அதனால், வணிக வங்கிகளின் மூலமாக, உங்களுடைய நிதியியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சிக்க வேண்டும். தற்போது, இலங்கை வங்கி உட்பட, அரச வங்கிகள் வழங்கும் ஒற்றை இலக்க அடிப்படையிலான வட்டி வீதத்திலான கடன்களைப் பெறவும் என்ன செய்ய வேண்டுமென்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதன்மூலமாகவே வணிகங்கள், தம்முடைய வணிக முயற்சியை வெற்றிகரமாகவும் மிக சிறப்பாகவும், இந்த இடர் காலத்தில் தக்க வைத்துக்கொண்டு செயற்பட முடியும். தொழிலார்களின் நலனில் சமூக அக்கறையுடன் செயற்படல் வணிகங்களின் நாளைய நாள் நிச்சயமற்றதாக இருக்கின்றபோது, அந்த வணிகத்தைச் சார்ந்ததாக இருக்கும் தொழிலாளர் நிலை, எப்படியானது எனச் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். ஒருவேளை தங்களுடைய தொழிலை இழந்துவிட்டால், அடுத்து தொழிற்றுறை புதிய தொழிலாளர்களை உள்வாங்கிக்கொள்ள தயாராகாத நிலையில், அந்தத் தொழிலாளரின் எதிர்காலம், என்ன ஆகுமென்பதையும் சிந்தித்துப் பாருங்கள். இதனால்தான், இலங்கை தொழில் திணைக்களம், தான் நடத்திய ஆய்வுகளின் பிரகாரம், வணிகங்கள் தொழிலாளர்களைச் சமூக அக்கறையுடன் தக்கவைத்து கொள்ளவும் மாற்று பொறிமுறைகளைக் கையாளவும் பரிந்துரை செய்கிறது. உதாரணமாக, கொரோனா வைரஸ் காலத்தில், ஒரு தொழிலாளியிடம் இருந்து 100%மான பங்களிப்பைப் பெறமுடியாதபோதும், அவருக்கான ஊதியத்தை, நிறுவனம் வழங்க வேண்டியதாக அமைந்திருக்கும். இதனால், குறித்த காலத்துக்குப் பின்னர், குறித்த வணிக நிறுவனம் அந்தத் தொழிலாளியைப் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்தாலும், ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இத்தகைய சந்தர்ப்பங்களில், குறித்த தொழிலாளியைப் பணிநீக்கம் செய்வதைவிட, அவர்கள் தொழிற்றுறைக்குப் பங்களிப்புச் செய்யாத காலப்பகுதியை, தற்போது வணிகம் இயங்கும் சூழ்நிலையில், எப்படிப் பெற்றுக்கொள்ள முடியுமென்பதைக் கவனத்தில் கொண்டு, செயற்பட வேண்டியது அவசியமாகிறது. இதனூடாக, தொழிலாளரின் தொழில்களும் பாதுகாக்கப்படுவதுடன், வணிகத்தின் முன்னேற்றமும் உறுதி செய்யப்படுகிறது என, தொழில் திணைக்களம் பரிந்துரை செய்கிறது. இதுபோல, வணிகங்கள் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்வதை விட, மிகப் பொருத்தமான முறையில், யாருமே பாதிக்கப்படாத வகையில், சம்பளக் குறைப்பையோ, ஊழியர்கள் பகுதி நேரமாகத் தங்களுடைய ஊழிய இழப்பை ஈடு செய்வதற்கான வழிவகைகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதும் அவசியமாகிறது. இத்தகைய நடவடிக்கைகளின் மூலமாக, வணிகங்கள் தங்களுடைய இருப்பை உறுதிசெய்து கொள்வதுடன், சமூகப் பொறுப்புடன் தான் சார்ந்திருக்கும் ஊழியர்களின் தொழில்நிலையையும் உறுதி செய்ய முடியும். போட்டித் தன்மைமிக்க இந்தச் சூழலில், புதிய வாய்ப்புகள், நிதியியல் தேவைகள், தொழிலாளர் நலனில் சமநிலைத் தன்மை ஆகியவற்றைக் கொண்டிருப்பது மிகப்பெரும் சவாலான ஒன்றாகும். ஆனால், அந்தச் சவாலைச் சரிவர நிறைவேற்றுவதன் மூலமாகவே, வணிக ரீதியிலும் சரி, சமூக ரீதியிலும் சரி, வணிகங்கள் தக்கனபிழைக்கவும் வெற்றியைப் பெறவும் முடியும். http://www.tamilmirror.lk/வணிகம்/கொரோனா-வைரஸ்-தாக்கமும்-தொழிற்றுறைகளுக்கு-மூடுவிழாவும்/47-252585
 15. இலங்கை மத்திய வங்கி மக்களுக்காகவா? அரசியல்வாதிகளுக்காகவா? அனுதினன் சுதந்திரநாதன் இலங்கையின் பொருளாதாரத்தின் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கின்ற, வெளியிடுகின்ற ஒரு ஸ்தாபனாக இருக்கக்கூடிய மத்திய வங்கி, 15ஆம் திகதி தங்களுக்கு ஏற்பட்ட களங்கத்தை எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். நாட்டின் முதன்மை மனிதனாக அறியப்படுகின்ற ஜனாதியால், “என்னுடைய பொருளாதார கொள்கைகளை முன்கொண்டு செல்வதற்கு, நீங்கள் முட்டுக்கட்டையாக இருக்கிறீர்கள்” எனச் சொல்லும் அளவுக்கு, எங்கள் மத்திய வங்கியின் நிலை இருக்கிறதா? என்கிற கேள்வியை எல்லோரிடத்திலும் எழுப்பி இருக்கிறது. உண்மையில், இலங்கையின் மத்திய வங்கி வினைத்திறனற்று இருக்கிறதா? கொரோனா காலத்தில் நாட்டின் நலன்கருதி எதனையும் செய்யாமல் இருந்திருக்கிறதா? இதனாலேயே ஜனாதிபதியால் விமர்சனம் செய்யப்பட்டதா? இல்லை நாட்டின் அரசியல்வாதிகளின் இழுப்பார் கைப்பிள்ளையாக இல்லாததன் விளைவாக இந்த சேற்றை பூசும் முயற்சி பொதுவெளியில் நடத்தப்பட்டதா? என்பதை கொஞ்சம் ஆராய்ந்து அறியவேண்டியது அவசியமாகிறது. ஒருநாட்டில், மத்திய வங்கியின் தேவை என்ன என்பதை அறிவதிலிருந்து, கடந்த 15ஆம் திகதி ஜனாதிபதியின் குற்றஞ்சாட்டு வரை தெளிவான புரிதலுடன் அறிவதன் மூலமாக, நிறைய கசப்பான உண்மைகளை நாம் புரிந்துகொள்ள முடியும். இலங்கை மத்திய வங்கியின் தேவை என்ன ? இலங்கைக்கு மட்டுமல்ல, எந்தவொரு நாட்டுக்கும் மத்திய வங்கியின் தேவை மிக அத்தியாவசியமானது. ஒரு நாட்டின் நிதியியல் செயற்பாடுகள் சுதந்திரமாகவும் சரியான முறையில் இயங்கவும், நாட்டிலுள்ள அனைத்து நிதி நிறுவனங்களும் முறையாக செயற்படுகின்றனவா? என்பதைக் கண்காணித்து அவற்றின் ஊடாக மக்களின் நிதியியல் ஸ்திரத்தன்மையை பேணவும் மத்திய வங்கி மிக முக்கியமானது. இன்னும் இலகு வடிவில் சொன்னால், மத்திய வங்கி ஒரு தாய் போன்றவர். அப்பா வருமானத்தை துளைத்துக்கொண்டு வரலாம். பிள்ளைகள் வருமானம் உழைக்கலாம் அல்லது கல்வி பயிலலாம். அவர்கள் அனைவருக்குமே தனியான தேவைகள், விருப்பங்கள் இருக்கும். அதுபோல, அந்த வீட்டுக்கான ஒட்டுமொத்த தேவைகளும் தனியாக இருக்கும். இங்கே ஒட்டுமொத்த குடும்பத்தினதும் தனிநபரினதும் தேவைகளையும், விருப்பங்களையும் கவனத்திற்கொண்டு குடும்ப வருமானத்தை அடிப்படையாகக்கொண்டு தாய் முடிவுகளை எடுப்பார். இதன்போது, எல்லோருடைய தேவைகளும் நிறைவேற்றப்படும் என்பதற்கில்லை. ஆனால், குடும்ப நலனில் முக்கியமானவை முன்னுரிமை வழங்கப்பட்டு நிறைவேற்றப்படும். அப்படித்தான் மத்திய வங்கியும் செயற்படுகிறது. இலங்கை மத்திய வங்கியை பொறுத்தவரை, அவர்களுக்கு மிக முக்கியமான இரண்டு இலக்குகள் இருக்கின்றன. முதலாவது, நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம், நாட்டு மக்களின் நிதியியல் ஸ்திரத்தன்மையை கட்டுக்குள் வைத்திருப்பதாககும். இன்னும் இதனை இலகுபடுத்தின், நாங்கள் 100 ரூபாய்க்கு வாங்கிகொண்டிருக்கும் பொருளின் விலை நாளாந்தம், மாதாந்தம், வருடாந்தம் தொடர்ச்சியாக அதிகரித்து அதனை வாங்கவே முடியாதநிலை வராமல் பார்த்துக்கொள்ளுகின்ற முறை என்று சொல்லலாம். இங்கே நீங்கள் வாங்கும் பொருளென்பது, அத்தியாவசிய பொருளையே குறிக்கிறது. காரணம் மத்திய வங்கி, தாய்போல ஒட்டுமொத்த நாட்டினதும் பொதுவான நலனையே முன்னிலைப்படுத்தி செயற்படும். இரண்டாவது, நாட்டிலிருக்கக்கூடிய நிதியியல் ஸ்தாபனங்களை கண்காணிப்புச் செய்து, அவற்றின் மூலமாக நிதியியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதாகும். இதனை இன்னும் இலகுபடுத்தினால், இலங்கையில் வங்கிகள், நிதி நிறுவனங்களுடன் தொடர்பே இல்லாமல் இருக்கின்ற யாரையும் பார்க்க முடியாது. அப்படி நீங்கள் ஒரு வங்கியில் உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுவோம். ஒரு நாள் உங்கள் பணத்தேவைக்காக வங்கியிலிருந்து பணத்தை எடுக்க போகிறீர்கள். ஆனால், ஒட்டுமொத்த வங்கியுமே மூடப்பட்டு விட்டது. உங்களால் பணத்தை எடுக்க முடியாதநிலை வருகிறது? இந்த சமயத்தில் நீங்கள் என்ன செய்ய முடியும்? உங்கள் பணத்தை எங்கே பெற முடியும் ? என்கிற பதைபதைப்பு வருகிறது அல்லவா? இந்த இடத்தில்தான் மத்திய வங்கியின் செயற்பாடு முக்கியமானது. உங்கள் பணத்துக்கு வங்கி மட்டுமல்ல மத்திய வங்கியுமே பொறுப்பான ஒருவர்தான். இதனால், உங்கள் வங்கி மூடப்படாமல் இருக்க என்ன தேவையோ அத்தனையையும் மத்திய வங்கி செய்து கொண்டே இருக்கும். அதையும் மீறி, வங்கி மூடப்படுகின்ற நிலை வருமானால், உங்கள் பணத்துக்கு உத்திரவாதம் வழங்கி அது கிடைப்பதை மத்திய வங்கியே உறுதி செய்யும். அதாவது, நாட்டில் நிதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலமாக மீண்டும் மக்களை பாதுகாக்கும் நிறுவனமாக இது இருக்கிறது. அப்படியாயின் இத்தனை பொறுப்புகளுடன் இருக்கின்ற மத்திய வங்கி அத்தனையையும் இந்தக் கொரோனா காலத்தில் மறந்து விட்டதா? இல்லை ஜனாதிபதியின் நலனுக்குச் செயற்பட மறுக்கிறதா? கொரோனா காலத்தில் மத்திய வங்கி செய்தது என்ன? ஜனாதிபதியின் குற்றச்சாட்டுகள் உண்மையா, இல்லையா? என்பதை அறிவதற்கு, மூன்று மாதங்களில், அதாவது கொரோனா காரணமாக இலங்கை முடங்கியிருந்த நிலையில், இலங்கை மத்திய வங்கி என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதை நாம் அறிய வேண்டியது அவசியமாகிறது. உலகிலிருக்கும் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் மத்திய வங்கிகளுடன் ஒப்பிடுமிடத்து, இலங்கை மத்திய வங்கிதான் கொரோனாவின் தாக்கம் நாட்டினுள் அதிகரிக்க முன்னமே ஏற்பாடுகளை செய்த ஒரு வங்கியாக இருக்கின்றது. உதாரணத்துக்கு, பெப்ரவரி ஆரம்பத்திலேயே வட்டி வீக்கத்தில் மாற்றமொன்றை செய்திருந்தது மத்திய வங்கி. இந்த மாற்றம், எப்படி எங்களுக்கு நன்மையானது என உங்களில் பலர் கேட்கலாம். அத்தனையும் இலகுமுறையில் பார்ப்போம். மத்திய வங்கி, வங்கிகளுக்கெல்லாம் வங்கி. நமது நிதியியல் தேவைக்கு எப்படி வணிக வங்கிகளை நாம் நாடுகிறமோ? அதுபோல, அரச மற்றும் வணிக வங்கிகள், தங்களின் நிதித்தேவையை பூர்த்திசெய்ய நாடுகின்ற ஓர் இடமே மத்திய வங்கி. அவர்களும் தங்களுடைய செலவுகளை ஈடுசெய்யக் கூடியவகையில் வங்கிகளுக்குத் தேவையான நிதியை கடனாக வழங்குவார்கள். இதற்கு வட்டியும் அறவிடுவார்கள். எனவே, அதற்கு மேலதிகமாக வணிக வங்கிகள் வட்டியை நிர்ணயம் செய்து அதனை பொதுமக்களுக்கு வழங்குவார்கள். உதாரணத்துக்கு மத்திய வங்கி 9% வட்டியில் 100வை வணிக வங்கிக்கு வழங்கினால், அதனை தனிநபருக்கு அல்லது நிறுவனத்துக்கு வழங்கும்போது 11%க்கு வணிக வங்கி வழங்கும். எனவே, வணிக வங்கிகளுக்கு வழங்கும் வட்டி குறையும்போது, அது நிறுவனம் மற்றும் தனிநபருக்கான கடன் வட்டியிலும் குறைவை செய்யும். இது அவர்களுக்கு மேலதிக நிதியை பெற்று வணிகத்தை நடத்த உதவி புரியும். அதாவது, எங்கள் கைகளில் பணத்தின் நிரம்பல் அதிகரிக்க அதை நாங்கள் கொள்வனவு செய்ய பயன்படுத்துவோம். இதனால், நாட்டில் பணபாச்சல் சீராக இருக்கும். இது பொருளாதாரம் தடையின்றி நடக்க ஒருவகையில் உதவியாக இருக்கும். இலங்கை மத்திய வாங்கி, கொரோனா உச்சமான காலம் முழுவதுமே தன்னுடைய வட்டி வீதங்களை பரிசீலனை செய்து குறைத்தே வந்திருக்கிறது. ஆனால், அவர்களாலும் இதனை ஒட்டுமொத்தமாகக் குறைக்க முடியாது. உதாரணத்துக்கு, மத்திய வங்கி வணிக வங்கிக்கு எந்த வட்டியும் வாங்காமல் கடனை கொடுக்கிறது. வணிக வங்கி உங்களுக்கு எந்த வட்டியும் அறவிடாமல் உங்களுக்கு கடனை தருகிறது என வைத்துகொள்ளுங்கள். என்ன நடக்கும்? நாட்டில் எல்லோரிடத்திலும் பணம் கையிலிருப்பில் வர தொடங்கும். ஆனால, கொரோனா காரணமாக ஏற்றுமதி, இறக்குமதி உட்பட ஏனைய விடயங்கள் முடங்கிக் கிடக்க, பொருள்கள் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும். உங்களிடம் பணம் இருக்கிறது. ஆனால், சந்தையில் அதனை பயன்படுத்தி வாங்க போதுமான பொருள்கள் இருக்காது. இது சந்தையில் கேள்வி அதிகமாகவும், நிரம்பல் குறைவாகவும் உள்ளநிலை. இதனால், பொருள்களுக்கான விலை சடுதியாக அதிகரிக்கும். கொரோனா காலத்தில் மஞ்சளுக்கு விலை அதிகரித்ததைப் போன்ற நிலையாகும். இதனால், பணவீக்கம் அதிகரிக்கும். அதாவது, 100 ரூபாய்க்கான பொருளை நீங்கள் 1,000 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியதாக இருக்கும். எனவேதான் ஜனாதிபதியே, “இன்னும் வட்டியை குறையுங்கள்” என்றாலும், மத்திய வங்கி அதனை செய்வதில்லை. காரணம், அது தற்காலிக அரசியல்வாதிகளுக்காக இயங்கும் அமைப்பு அல்ல. அது நாட்டுக்கும் மக்களுக்குமாக செயற்படும் ஒரு சுயாதீன அமைப்பாகும். இதற்கு அடுத்ததாக, கொரோனா காலத்தில் இலங்கை மத்திய வங்கி பண அச்சடிப்பை நிகழ்த்தி, அதன்மூலமாக பணவெளியீட்டை செய்கிறது என்பதை அறிந்திருப்பீர்கள். இதற்காக, மத்திய வங்கியை திட்டியவர்களும் அதிகம் உண்டு. அப்படியாயின், இப்போது மட்டும் மக்களின் நலனில் மத்திய வங்கி அக்கறையோடு செயற்படவில்லையா என்கிற கேள்வி வரும். அத்தனையும் இலகுபடுத்தப்பட்ட முறையில் பார்ப்போம். கொரோனா காலத்தில், இலங்கை அரசுக்கு வருமானம் என்பதே இல்லை என்று சொல்ல முடியும். விவசாயத்துறைத் தவிர்த்து வேறு எந்த மூலங்களின் மூலமாகவும் வருமானம் இல்லை என்பதே உண்மை. ஆனால், அந்த மூன்று மாத காலப்பகுதியிலும் இலங்கை அரசானது, அரச ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். வருமானமற்றத் தரப்பினருக்கு தலா 5,000 ரூபாய் நிவாரண நிதியை வழங்க வேண்டும். கொரோனா கால வைத்திய செலவுகளுக்கு நிதியை ஒதுக்க வேண்டும். இதற்கெல்லாம் பணம் வேண்டும். இந்தப் பணத்துக்கு என்ன வழி? வழமையாக அரசு தனக்கு பணம் தேவையாக இருக்கின்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும், தங்களுடைய கடன்பத்திரமான முறிகளை விற்பனை செய்து பணத்தை திரட்டி கொள்வார்கள். அதாவது, வட்டிக்கு பணம் வாங்குவது போல ஒரு முறை. இப்போது நீங்கள் அரசுக்கு பணம் கொடுத்தால் வட்டியுடன் சில காலத்துக்கு பின் அரசு அதனை உங்களுக்கு வழங்கும். ஆனால், இந்தக் கொரோனா காலமானது, உலகநாடுகளையே முடக்கி போட்டிருப்பதால், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளைப் பெற முடியாது. இங்கேதான் மத்திய வங்கி, அரசுக்கு போதுமான உதவியை செய்கிறது. அரசின் முறிகளை வாங்கிக்கொண்டு அரசுக்கு பணத்தை கொடுக்கிறது. அப்படியாயின் மத்திய வங்கிக்கு எங்கிருந்து பணம் வருகிறது ? அதைத்தான் அவர்கள் அச்சடிக்கிறார்கள். இதனால், அரசுக்கு தேவையான நிதி தேவை தற்காலிகமாக பூர்த்தி செய்யப்படுகிறது. ஆனால், கொரோனா நிலைமை சீரடையும்போது மத்திய வங்கி தன்னிடமுள்ள முறிகளை விற்பனை செய்து பணத்தை சம்பாதிக்க வேண்டும். இல்லாவிட்டால், புதிதாக அச்சடித்த பணம் மக்களின் கைகளில் இருக்கும். நிலைமை சீரானதன் பின்பு, முடங்கியிருக்கும் பணமும் வெளியே வர தொடங்க, முன்பு சொன்னதுபோல பணவீக்கம் வந்துவிடும். இதனால்தான், மத்திய வங்கி சரியாக கணிப்பீடு செய்து நாணய அச்சடிப்பை செய்கிறது. ஆனால, சில சமயங்களில் அரசு அழுத்தம் மிக அதிகமாக இருக்கின்றபோது கணிப்பீடுகளை தாண்டியும் இந்த அச்சடிப்பை செய்கிறது. அதற்காக, எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த அழுத்தத்தை தாங்கிக்கொண்டு இதையே தொடர்ந்தால், மக்கல்நிலைதான் பரிதாபமாக ஆகும். இங்கேதான் ஜனாதிபதியும் மத்திய வங்கியும் முரண்பட்டுக் கொண்டார்கள். யார் குறுங்கால நலனுடனும் யார் நீண்டகால நலனுடனும் நாட்டுக்காக செயற்படுகிறார்கள் என்பதை இது தெளிவாக்கியிருக்கிறது. இதற்கு அடுத்து, அரச வங்கிகள், தனியார் வங்கிகள் வணிகங்கள் பாதிக்கப்படாமல் இருக்க நித்திக்கடன்களை வழங்குகிறார்கள். இந்தக் கடன்களுக்கான பணமும் மத்திய வங்கியிடமிருந்தே வருகிறது. அந்தப் பணமும் கூட அச்சடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகவே, இலங்கையின் மத்திய வங்கி முடிந்தவரை நிதியியல் கொள்கை அடிப்படையில் செயற்பட்டிருக்கும் போது, ஏன் ஜனாதிபதி இத்தனை விமர்சனங்களை முன் வைக்கிறார். எங்கே தவறு நடந்து இருக்கிறது ? இந்தப் பத்தியை இதுவரை வாசித்தவர்களாக இருந்தால், எந்தவித அரசியல் இலாபங்களுக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல் மத்திய வங்கி செயற்பட வேண்டியதன் முக்கியத்தை உணர்ந்து இருப்பீர்கள். நாட்டில் ஜனாதிபதி, அரசியல்வாதிகள் என எல்லோருமே வருவார்கள், போவார்கள். ஆனால், நாடும் அதன் மக்களுமே அந்த நாட்டின் உயிர்நாடியாக இருப்பார்கள். அவர்கள் நலனைக் கருத்திற்கொண்டு செயற்படுவதாக, சுயாதீன நிறுவனமாக இலங்கை மத்திய வங்கி இருக்கிறது. இருக்க வேண்டியது அவசியமாகிறது. அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்ளடங்காமல், நாட்டின் நலனைக் கொண்டு மத்திய வங்கி செயற்படும்போது, நாட்டின் ஜனாதிபதியே ஒரு விடயத்தை முன்மொழிந்தால், அதனை பரிசீலனை செய்ய முடியுமா? முடியாத? என்கிற முடிவை சொல்ல வேண்டியப் பொறுப்பு, மத்திய வங்கியிடம் இருக்கிறது. முடியுமாயின், அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பும் அவர்களுக்கும் இருக்கிறது. ஆனால், தேர்தல் நெருங்கிவரும் காலத்தில், அரசியல் இலாபங்களுக்காக குறுகியகால திட்டங்கள் மூலமாக மக்களை கவர்வதற்காக நடைமுறைபடுத்துங்கள் என்கிற திட்டத்தை எல்லாம் நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டுமா என்கிற கேள்வி வருகின்றபோது அதற்கான பதிலை நாம் இங்கே பிரத்தியேகமாக சொல்ல வேண்டிய அவசியமில்லை. இலங்கை மத்திய வங்கி போன்ற அமைப்பின் மீது, நிறைவான விமர்சனங்கள் எனக்கும், உங்களுக்கும் உண்டு. திறைசேரி முறி விவகாரம் அதற்கு மிகச்சிறந்த உதாரணம். மக்களுக்காக மத்திய வங்கி என்கிறநிலையை மறக்கின்ற நிலையால் இடம்பெற்ற வரலாற்றின் மிகப்பெரும் தவறு அது. ஆனால், அதுபோன்ற இன்னுமொரு பொருளாதார வீழ்ச்சிக்கு உந்துதல் வருகின்றபோது, அதனை மத்திய வங்கி நடைமுறைப்படுத்த தயங்குகின்றபோது அதற்கான ஆதரவும் மக்களின் பக்கமாக வரவேண்டியது அவசியமாகிறது.அப்போதுதான் எந்த அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள்ளும் சிக்கிக்கொள்ளாத ஒரு நிறுவனமாக மத்திய வங்கியால் செயற்பட முடியும் http://www.tamilmirror.lk/வணிகம்/இலங்கை-மத்திய-வங்கி-மக்களுக்காகவா-அரசியல்வாதிகளுக்காகவா/47-252330
 16. சுமந்திரனோடு சுருங்கிவிட்ட தேர்தல் களம் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜூலை 08 “...அனந்தியைக் கட்சியை விட்டு நீக்கிய உங்களால் (தமிழ்த் தேசிய கூட்டமைப்பால்), ஏன் சுமந்திரனைக் கட்சியை விட்டு நீக்க முடியவில்லை...” என்றொரு கேள்வி, யாழ்ப்பாணத்தில் சில நாள்களுக்கு முன்னர் இடம்பெற்ற பிரசாரக் கூட்டமொன்றில், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனை நோக்கி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “...அனந்தியை நீக்கியது தமிழரசுக் கட்சி; சுமந்திரன் விடயமும் அந்தக் கட்சி சார்ந்தது. வேணுமென்றால், தேர்தலில் அவரை மக்கள் தோற்கடிக்கலாம்...” என்றொரு பதிலை வழங்கினார். பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், கோவிட்-19 பொது முடக்கக் காலத்தில், சிங்கள ஊடகவியலாளர் ஒருவருக்கு எம்.ஏ. சுமந்திரன் வழங்கிய செவ்வியொன்று சர்ச்சையானது. அந்தச் செவ்வியில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஆயுதப் போராட்டத்துக்கும் எதிராக, சுமந்திரன் கருத்துத் தெரிவித்தார் என்பதுதான், சர்ச்சைக்கான காரணம் ஆகியது. ஊடகமொன்று, சுமந்திரனின் செவ்வியை ‘வெட்டி ஒட்டி’ ஒளிபரப்பியதை நம்பி, செவ்வியின் முழு வடிவத்தையும் காணாது, சுமந்திரனின் கட்சிக்காரர்களே அவசரப்பட்டு அறிக்கைகளை விட்டு, விடயத்தைப் பெரிதாக்கினர். எதிர்க்கட்சிகளால் மாத்திரமல்ல, சொந்தக் கட்சிக்காரர்களாலும் வேண்டாத ஒருவராக சுமந்திரன் காட்டப்பட்டார். ஆனால், குறித்த செவ்வியின் உண்மைத் தன்மையை ஆராய்ந்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நீண்ட அறிக்கையொன்றின் மூலம் முடிவுரை எழுதியிருந்தார். சுமந்திரன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்தும் இருந்தார். எனினும், தமிழ்த் தேசிய சூழல், சுமந்திரனை நோக்கி மய்யப்படுவதற்கு, குறித்த செவ்வி தோற்றுவித்த சர்ச்சைகள் பிரதானமானவை. தமிழ்த் தேசிய அரங்கு பருமட்டாக, ‘சுமந்திரன் எதிர் சொந்தக் கட்சி வேட்பாளர்கள், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி’ என்று நிலைபெற்று இருக்கின்றது. தமிழ்த் தேசிய பரப்புக்கு வெளியிலுள்ள அங்கஜன் அணியும் ஈ.பி.டி.பியும் கூட, சுமந்திரனுக்கு எதிராகவே பிரசாரத்தை முடுக்கி விட்டிருக்கின்றன. “சுமந்திரனைக் கட்சியை விட்டு ஏன் நீக்கவில்லை” என்கிற, சித்தார்த்தனை நோக்கிய மக்களின் கேள்வியும் அதன் ஒரு கட்டம்தான். குறித்த, சிங்களச் செவ்வியை வைத்துக் கொண்டு, சுமந்திரனை வீழ்த்திவிடலாம் என்றும் தாங்கள் வென்றுவிடலாம் என்றும் நினைத்தவர்களில், கூட்டமைப்பின் வேட்பாளர்களே அதிகம் இருந்தனர். ஆனால், அதுவே அவர்களுக்கு, இன்றைக்கு வினையாக மாறி நிற்கின்றது. அது, ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் ஒரே இடத்துக்குள் சுற்றிக் கொண்டிருக்கவும் வைத்திருக்கின்றது. தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் எல்லாவற்றிலும், கூட்டமைப்பின் வேட்பாளர்களை நோக்கி, சுமந்திரனின் செவ்வி குறித்தே அதிகம் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதுவரை, நூ‌ற்றுக்கும் அதிகமான மக்கள் சந்திப்புகளை நடத்திவிட்ட சுமந்திரன், ஒவ்வொரு சந்திப்பிலும் குறைந்தது 15 நிமிடங்கள், சர்ச்சைக்குரிய செவ்வியில் தான் கூறிய விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கிறார். கிட்டத்தட்ட வாய்ப்பாடுகளை ஒப்புவிக்கும் மாணவன் போல, ஒவ்வொரு கூட்டத்திலும் வார்த்தைகள் மாறாது, சர்ச்சை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். வடமராட்சியில் சில வாரங்களுக்கு முன்னர், இடம்பெற்ற தமிழரசுக் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திலும், அந்தச் சர்ச்சைக்குரிய செவ்வி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, சுமந்திரன் பதில் சொன்னார். அப்போது, மாவை சேனாதிராஜா, ஈ. சரவணபவன், இம்மானுவேல் ஆர்னோல்ட் உள்ளிட்டவர்கள் மேடையில் இருந்தார்கள். அவர்கள், செவ்விச் சர்ச்சை தொடர்பில், சுமந்திரனுக்கு எதிரான கருத்துகளை ஊடகங்களில் வெளிப்படுத்தியவர்கள். அப்போதும், “செவ்வியை முழுமையாகப் பார்த்து விளங்கிக் கொள்ள முடியாதவர்களே, எனக்கு எதிராக அறிக்கை வெளியிட்டு அம்பலப்படுத்தினார்கள்” எனச் சுமந்திரன் குற்றஞ்சாட்டினார். கூட்டமைப்புக்குள், குறிப்பாக, யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர்களுக்கிடையில் எழுந்திருக்கின்ற விருப்பு வாக்குப் போட்டி, அரசியல் அறத்துக்கு அப்பாலான நடவடிக்கைகளை எந்தவித தயவுதாட்சண்யங்களும் இன்றிச் செய்ய வைக்கின்றது. இந்தப் போட்டிக்குள், வெளிநாட்டு, உள்நாட்டு சதிகாரர்களும் உள்நுழைந்து, தங்களது திட்டங்களை நிறைவேற்றத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, அரச முகவர்களும் ஊடக மாபியாக்களும் களத்தில் இறங்கி நின்று வேலை பார்க்கின்றன. தென் இலங்கை அரசியலில் முகவர்களும் ஊடக மாபியாக்களும் கடந்த சில தசாப்த காலம் தொட்டே, ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு கட்சிக்குள்ளும் முக்கியஸ்தர்கள் தொடங்கி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரையில், அவர்கள் எந்த ஊடக முதலாளியின் தெரிவு, முகவரின் தெரிவு என்பது வெளிப்படையானது. ஒரு ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கும் அவரைத் தம்முடைய ஆளாக வைத்திருப்பதற்கும் தென் இலங்கை ஊடகங்களால் தாக்கம் செலுத்த முடிகின்றது. அவ்வாறான நிலையொன்றைத் தமிழ்த் தேசிய சூழலில் பேணுவதற்கும் சில ஊடகங்கள் முயல்கின்றன. இதற்கான விதைகளைப் போட்டமைக்கான பொறுப்பை இரா.சம்பந்தனும் மாவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான அசாதாரண சூழ்நிலையில் நடைபெற்ற 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், தமக்கான பிரசார நடவடிக்கைகளுக்காக, யாழ்ப்பாணத்தை மய்யமாகக் கொண்டியங்கும் ஊடகமொன்றின் உதவியை அவர்கள் நாடினார்கள். அதனால், அந்த ஊடகத்தின் முதலாளியை வேட்பாளராகவும் ஆக்க வேண்டி வந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் அவர், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். ஆனால், அந்த ஊடக முதலாளி, உண்மையில் கட்சிக்கான ஆதரவுத் தளத்தைத் தன்னுடைய ஊடகத்தைக் கொண்டு வளர்த்திருக்கின்றாரா என்கிற கேள்வி முக்கியமானது? ஏனெனில், கூட்டமைப்புக்கு எதிரான பிரசாரத்தை, அண்மைய நாள்களில் அந்த ஊடகமே அதிகளவில் மேற்கொண்டு இருக்கின்றது. இன்னொரு பக்கம், தென் இலங்கை ஊடக மாபியாக்களைப் பார்த்துவிட்டு, தமிழ்த் தேசிய சூழலில் தாமும் அப்படியோர் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்கிற ஆசையோடு, புலம்பெயர் தேசத்தைத் தளமாகக் கொண்டியங்கும் ஊடகமொன்று இயங்கிக் கொண்டிருக்கின்றது. அது, இணைய ஊடகங்களை வைத்துக் கொண்டு, தாயகத்திலுள்ள அரசியலைத் தம்மால் தீர்மானித்துவிட முடியும் என்றும் நம்புகின்றது. அதற்காக, ஒரு நிகழ்ச்சி நிரலை முன்னிறுத்தி, இயங்கிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான ஊடகங்களின் உள்நுழைவுதான், இம்முறை தமிழ்த் தேசிய தேர்தல் பரப்பை, சுமந்திரனை நோக்கி மய்யப்படுத்தி இருக்கின்றது. இந்தப் பொதுத் தேர்தலில், ராஜபக்‌ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்கிற ஒற்றை நிலைப்பாட்டோடு இருக்கிறார்கள். அதன்மூலம், வீழ்த்திவிட முடியாத ராஜபக்‌ஷ சாம்ராச்சியத்தை மீண்டும் கட்டியெழுப்பிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படியான சூழ்நிலையைத் தென் இலங்கை எதிர்கொள்கின்றதோ இல்லையோ, வடக்கு, கிழக்கு மக்கள் நிச்சயமாக எதிர்கொண்டாக வேண்டும். ஏனெனில், படைத்தரப்பின் தலையீடுகள் தொடங்கி, பௌத்த, சிங்கள தேசியவாதம் என்கிற நிலைப்பாடுகள் வரை, நிறுவனமயப்பட்ட சிந்தனையைத் தமிழ்த் தேசத்தில் முன்னெடுக்கும் முனைப்பை, கடந்த காலத்தைக் காட்டிலும் அதிக வேகத்தோடு ராஜபக்‌ஷக்கள் ஆரம்பித்து இருக்கின்றார்கள். அப்படியான நிலையில், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ராஜபக்‌ஷக்கள் பெறும்போது, அங்கொன்றும் இங்கொன்றுமாக உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களுக்கான உரிமைகளையும் பௌத்த, சிங்கள நிறுவன நிகழ்ச்சி நிரலுக்குள் வைத்து அழித்துவிடுவார்கள். ஒரு காலத்தில், தன்னைத் தாராளவாதியாக முன்னிறுத்திக் கொண்டிருந்த மிலிந்த மொரகொட, 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவாகத் தோற்றுவிக்கப்பட்ட மாகாண சபை முறைமையை இல்லாது ஆக்க வேண்டும் என்று பேசத் தொடங்கி இருக்கின்றார். வழக்கமாக பௌத்த, சிங்கள கடும் தேசியவாதிகளே இவ்வாறான நிலைப்பாட்டை முன்வைப்பார்கள். ஆனால், இம்முறை தாராளவாதிகளாக நின்றவர்களே, அந்த நிலைப்பாட்டோடு வருகிறார்கள். அப்படியான சூழலில், அதற்குப் பின்னாலுள்ள திட்டங்களைப் புரிந்து கொண்டு, எதிர்கொள்ளும் திறனை, தமிழ் அரசியல் பரப்பு வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு, தென் இலங்கை எவ்வாறான திட்டங்களோடு இந்தத் தேர்தலை அணுகிக் கொண்டிருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொள்ளாமல், சுமந்திரன் என்கிற ஒருவரைச் சுற்றித் தேர்தல் களத்தை வடிவமைத்து, காவிக் கொண்டிருப்பதென்பது உண்மையிலேயே ஆரோக்கியமானது அல்ல. ஒரு செவ்விச் சர்ச்சையை, பொதுத் தேர்தல் களமொன்று பிரதானமாக்கி விட்டிருக்கின்றது என்பது, நினைத்துக் கூடப் பார்க்க முடியாததொன்று. அது, சுமந்திரனுக்கு எதிரான நல்லாட்சிக் கால கேள்விகளை இல்லாமலாக்கி விட்டிருக்கின்றது. அதுவே, அவருக்குத் தேர்தல் வெற்றியை இலகுவாக்கும் கட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது. ஏனெனில், சிங்களச் செவ்விச் சர்ச்சைக்குப் பதிலளிக்க ஆரம்பித்ததுமே, அவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களை இலகுவாக வெட்டி வீழ்த்திவிடுகிறார்; மக்களை நம்ப வைத்துவிடுகிறார். கடந்த ஐந்து ஆண்டுகால கூட்டமைப்பின் நடவடிக்கைகளுக்கு அதிகம் பொறுப்புக்கூற வேண்டிய சுமந்திரனை, ஒரு செவ்விச் சர்ச்சைக்குள் சுருக்கி, அவருக்கான ஆதரவுத் தளத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அதைப் புரிந்து கொள்ளாதவர்களை என்னவென்று சொல்வது? விருப்பு வாக்குச் சண்டைகள், தமிழ் மக்களின் அரசியலைச் சூனிய வெளிக்குள் தள்ளிவிட்டிருக்கின்றது. அவ்வளவுதான்.. அதற்கு மேல் என்ன சொல்ல? http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சுமந்திரனோடு-சுருங்கிவிட்ட-தேர்தல்-களம்/91-252929
 17. ஆமாம் அகத்தான் ஐயா! ஏழாம் அறிவு படைத்த ஏழு அடி உயரத்திற்கும் அதிகமான telepathy மூலம் தொடர்பாடல் செய்யும், ஆணும், பெண்ணும் ஒரே உடலான அர்த்தநாரீஸ்வரன் தொல் தமிழன் லெமூரியன். அட்லாண்டிஸ் என்று கடலுக்குள் மறைந்திருக்கும் கண்டம்தான் லெமூரியக் கண்டம். இந்த அண்டத்தையும், பேரண்டத்தையும் உருவாக்கிய பிரம்மத்திலிருந்து லெமூரியன் தோன்றினான். தொல்தமிழன் லெமூரியன் தன் ஒளிமுகத்தை வெறும்வெளியை ஆடியாக்கி நோக்கிய படிமை ஒரு மைந்தனாகியது. அவனே ஆதாம். முடிவிலா ஒளியாகிய காலம் மறைந்த யோகத்திலமைந்து தன் அசையாத சித்தத்தை லெமூரியன் பெண்ணாக்கினான். அவளே ஏவாள்.! அவர்கள் பேசிய மொழி தமிழ். அதிலிருந்து கிளைத்ததுதான் இந்த மானுடகுலம். ஆதித் தமிழனின் பரம்பரை என்று நான் மார்தட்டலாம். ஆனால் 500 - 1000 வருடங்களுக்கு முன்னர் வந்தேறியாக வந்து தமிழர்களாக மாறியவர்களின் பரம்பரையாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால் அடக்கிவாசிக்க வேண்டியுள்ளது — ஆய்வணுகுமுறையில் இரு வகையுண்டு. முதலாவது கிடைக்கப்பெறும் சான்றுகளைக் கொண்டு முடிவுக்கு வருதல். அடுத்தது எடுத்த முடிவை நிறுவுவதற்கு ஆதாரம் சேர்ப்பது. முற்கற்பித முடிவுகளை நிறுவுவதற்கு வலிந்து ஆதாரம் கோர்ப்பது. நீங்கள் செய்வது இரண்டாவது. இப்படி ஆயிரம் பேர் உலகமெல்லாம் செய்கின்றார்கள். நன்றி உங்கள் நேரத்தை முற்கற்பித முடிவுகளை நிறுவுவதற்குப் பயன்படுத்துவதற்கு
 18. எம்மை நோக்கி பாயும் இராணுவ, பௌத்த ஆக்கிரமிப்பு: ஸ்ரீதரன் (ஆர்.யசி) தமிழ் மக்களை நோக்கிய ஆபத்தான அரசியல் சூழலொன்று உருவாகி வருகின்றது. எம்மை நோக்கிய பெளத்த, இராணுவ ஆக்கிரமிப்புகள் படையெடுத்து வருகின்றது. இது எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உட்ப்படுத்தப்படுகிறது எனத் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைபின் தேர்தல் பிரசார கூட்டமொன்றில் உரையாட்டும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், எம் இனத்தின் வாழ்க்கை என்பது அழிக்கப்பட்டுக்கொண்டு செல்கிறது. எங்களை நோக்கி புத்த கோவில்கள் வருகிறது எங்கள் இடங்கள் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டுக்கொண்டு உள்ளது. காலையில் இருந்து மாலை வரை எத்தனையோ காவலரண்களை பார்கின்றோம். நாளாந்தம் புத்தம் புதிய காவலரண்கள் வருகிறது. இந்த சூழ்நிலைகள் எல்லாம் எங்களைப் பொறுத்த வரை ஒரு ஆபத்தான சூழ்நிலைக்குள் போய்கொண்டிருக்கின்றோம் . முழுமையாக ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்ட இராணுவ பிரசன்னத்திற்குள் வாழ்கின்ற சூழல் எங்களை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளது. இந்த சூழலில் தான் எங்கள் பணிகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். இப்போது தமிழர்கள் அனைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடு ஒன்றாக பயணிக்க வேண்டிய நேரம் அவ்வாறு ஒன்றாக பயணித்தால் வடக்கு கிழக்கில் இந்த பாராளுமன்ற தேர்தலில் இருபது ஆசனங்களை நாம் பெற முடியும். 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே நாம் எதிர்வரும் காலங்களில் இந்த மண்ணில் ஏதாவது பேசக்கூடிய அறுத்துறுத்து சொல்லக் கூடிய அல்லது எங்கள் உரிமைக்காக உரத்துக் குரல் கொடுக்கக்கூடிய வல்லமை எங்களுக்கு கிடைக்கும். இல்லை என்றால் யாரோ அபிவிருத்தி என்கின்ற மாய வலையை விரித்து வாக்குக் கேட்பவர்களுக்கும், அரச முகவர்களுக்கு வாக்களித்துக் கொண்டிருக்க போகின்றோம். நாங்களாக எங்கள் மண்ணில் இறந்துபோன இறமைகளை மீட்டு எடுத்து நிமிர்ந்து வாழப்போகின்றோம் என்கின்ற சூழல் எங்களுக்கு எப்போது வரப் போகிறது. நான் கூட இரண்டு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கின்றேன், என்னால் முடிந்த பணிகளை இந்த மண்ணிற்கு ஆற்றியிருக்கிறேன். மீண்டும் உங்கள் பேராதரவினை நாடி நிற்கின்றோம் என தெரிவித்தார் https://www.virakesari.lk/article/85379
 19. கூட்டமைப்புக்குள் தீவிரமடையும் உள் மோதல்கள்? - யதீந்திரா தேர்தல் தொடர்பில் மக்கள் மத்தியில் எவ்வாறான பார்வை காணப்படுகின்றது என்பதை தற்போதைக்கு ஊகிப்பது கடினம். ஆனால் தேர்தல் போட்டியானது, குறிப்பாக வடக்கு மாகாணத்தில், இம்முறை ஒப்பீட்டடிப்படையில் மக்களுக்கு முன்னால் தெரிவுகள் அதிகரித்திருக்கின்றன. அதே வேளை கூட்டமைப்புக்குள்ளும் இலங்கை தமிழசு கட்சிக்;குள்ளும் உள் முரண்பாடுகள் தீவிரமடைந்திருக்கின்றன. தேர்தலில் வெல்ல வேண்டுமென்பதற்காக கூட்டமைப்புக்குள்ளும் தமிழரசு கட்சிக்குள்ளும் அணிகள் உருவாகியிருக்கின்றன. தமிழரசு கட்சிக்குள் மாவை அணி – சுமந்திரன் அணியென்று இரு அணிகளாக பிரிந்து செயற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. சுமந்திரன் அணியென்பது, உண்மையில் சம்பந்தன் அணியாகும். சம்பந்தன் பொதுவாக பச்சைக் கொடியை அசைத்துவிட்டு அமைதியாக இருப்பார். அதனை சம்பந்தன் ஒரு வேளை தனது சாணக்கியமென்று எண்ணலாம். விக்கினேஸ்வரனுக்கு எதிராக, வடக்கு மாகாண சபையில் தமிழரசு கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்த போதும் சம்பந்தன் இப்படித்தான் எதுவுமே தெரியாதவர் போலிருந்தார். அதனை மாகாண சபையின் பிரச்சினை மாதிரி காண்பித்துவிட்டு, அனைத்துக்கும் பின்னால் அமைதியாக தலையை ஆட்டிக்கொண்டிருந்தார். இப்போது மாவைக்கு எதிரான அனைத்து நகர்வுகளுக்கும் பின்னாலிருந்து கொண்டு, தனக்கு எதுவுமே தெரியாதது போன்று முகபாவனை காட்டிக்கொண்டிருக்கின்றார். முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டு, தனது காரியங்களை சாதித்துக் கொள்வதில் சம்பந்தனுக்கு நிகர் சம்பந்தன்தான். தமிழரசின் ஒவ்வொரு அணியும் மற்றவர்களின் தோல்விகளை விரும்புகின்றது. ஏனெனில் ஒரு அணியின் வெற்றி இன்னொரு அணியின் தோல்வியில்தான் சாத்தியப்படும். அதே போன்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் தங்களுடைய வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியிருக்கின்றது. ஏனெனில் பங்காளிக் கட்சிகள் பெறப் போகும் ஆசனங்கள்தான் கூட்டமைப்புக்குள் அவர்களுக்கான இடத்தை தீர்மானிக்கும். இதன் காரணமாக ஒவ்வொருவரும் மக்களுக்கு முன்னால் தங்களை சரியானவர்களாக காண்பிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. இதற்கு சுமந்திரன் தொடர்பான சர்ச்சைகளே பிரதான காரணம். சுமந்திரனின் கருத்துக்களால், கூட்டமைப்பினரை நோக்கி கேள்விகள் எழுகின்றன. ஏனையவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கும் தமிழசு கட்சியின் வேட்பாளர்களுக்கும் இது ஒரு நெருக்கடியாக மாறியிருக்கின்றது. சுமந்திரனை எதிர்த்துப் பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. சிலர் வெளிப்படையாகவும் சிலர் மறைமுகமாகவும் இதனைச் செய்கின்றனர். அண்மையில் வவுணியாவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசிய டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இதனை போட்டுடைத்திருக்கின்றார். கூட்டமைப்பு தவறு செய்யவில்லை. நாங்கள் சரியான வழியில்தான் செல்கின்றோம் ஆனாலும் கூட்டமைப்புக்குள் சில புலியெதிர்ப்பாளர்கள் இருக்கின்றனர். அவ்வாறானவர்களை மக்கள் புறம்தள்ள வேண்டும். துரோகிகளையும் காட்டிக்கொடுப்பவர்களையும் களையெடுக்க வேண்டும். உண்மையில் செல்வம் அடைக்கலநாதன் யாரைப் பற்றி பேசுகின்றார்? இயக்கங்கள் கோலோச்சிய காலத்தில், களையெடுப்பு என்பதற்கு வேறு ஒரு அர்த்தம் இருந்தது. ஆனால் இது ஜனநாயக அரசியல் அல்லவா! கூட்டமைப்புக்குள் பிழையானவர்கள் இருக்கின்றனர் என்பதை கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரே ஒப்புக்கொண்டிருக்கின்றார். கூட்டமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்திருப்பதால்தான் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறானதொரு வாக்குமூலத்தை வழங்கியிருக்கின்றார். அதே போன்று டெலோவின் பிறிதொரு பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய டெலோவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநோ, சம்பந்தன் அரசியலிலிருந்து ஒதுங்க வேண்டுமென்றும் தெரிவித்திருக்கின்றார். இதன் போது செல்வம் அடைக்கலநாதனும் உடனிருந்தார். பிறர் உதவியின்றி நடக்க முடியாமல் தடுமாறும் சம்பந்தனோ, திருகோணமலையில் போட்டியிடுகின்றார். மேற்படி விடயங்கள் அனைத்தும் கூட்டமைப்புக்குள் அதிகாரம் சார்ந்து மோதல்கள் தீவிரமடைந்திருக்கின்றன என்பதற்கான ஆதாரங்களாகும். மறுபுறத்தில் தமிழரசு கட்சியின் அதிகாரப் போட்டிகள் தினமும் ஊடகங்களின் வாயிலாக, காட்சிப்படுத்தப்படுகின்றது. தமிழரசு கட்சியின் மகளீர் அணித் தலைவி அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்கள் கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. கூட்டமைப்பிற்கு இதுவரை புலம்பெயர் சமூகத்திடமிருந்து 21 கோடிகள் வந்திருப்பதாகவும் அவற்றுக்கு என்ன நடந்ததென்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதுவரை கேட்கப்படாத ஒரு விடயம் இந்தத் தேர்தலின் போது ஏன் கேட்கப்படுகின்றது? உண்மையில் தமிழசு கட்சிக்குள் உருவாக்கியியிருக்கும் மாவை – சுமந்திரன் அணி மோதலின் விளைவுதான் இது. பொதுவாக ஒரு அணிக்குள் பிளவுகள் தோன்றினால் உண்மைகள் தாராளமாக வெளிவரத் தொடங்கும். அதுதான் தற்போது நடைபெறுகின்றது. இன்னொரு விடயமும் இங்கு கவனத்தை பெறுகின்றது. அதாவது, தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பித்த நாளிலிருந்து சர்ச்சைக்குரியவாறான கருத்துக்களையே தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் வெளியிட்டுவருகின்றனர். இதில் தமிழசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முக்கியமானவர். நீலன் திருச்செல்வத்தை பிரபாகரன் விண்ணன் என்று கூறிதாக தெரிவித்தார். அன்ரன் பாலசிங்கத்தையும் சுமந்திரனையும் தொடர்புபடுத்தி மொட்டைத் தலைக்கும் முழக்காலுக்கும் முடிச்சுப் போட்டார். இதனால் ஒரு சர்ச்சை ஏற்பட்டது. தற்போது 73 கள்ள வாக்குகள் போட்டதாகக் கூறி மீண்டுமொரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றார். ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கூறியிருப்பதானது, கூட்டமைப்பின் ஜனநாயக முகமூடியை கிழித்துத் தொங்கவிட்டிருக்கின்றது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், அதன் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் ஜனநாயகம் தொடர்பில் அதிகம் பேசுபவர்கள். தங்களுடைய ஒவ்வொரு செயற்பாடுகளும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கானதென்று வாதிடுபவர்கள். இதிலுள்ள வேடிக்கையான பக்கம் என்னவென்றால் – கள்ளவாக்குள் போட்ட சிறிதரனும் – ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக சதா பாடுபடு;ம் சுமந்தரனும் ஓரணியாக செயற்படுகின்றனர். தேர்தல் என்றாலே ஆச்சரியங்களுக்கு பஞ்சமிருப்பதில்லை. இவ்வாறான சர்ச்சைக்குரிய கருத்துக்களும் கூட்டமைப்பிற்குள் நிலவும் ஒருவகை பதட்டத்தின் பிரதிபலிப்புத்தான். அதே வேளை இதனை ஒரு தேர்தல் உக்தியாகவும் கூட சிலர் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கலாம். கூட்டமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் கேள்விகள் அதிகரித்திருப்பதால், மக்களை திசைதிருப்புவதற்கு இவ்வாறான சர்ச்சைகள் உதவக் கூடுமென்று அவர்கள் எண்ணியிருக்கலாம். ஆனால் இவ்வாறான பேச்சுக்கள் கூட்டமைப்பின் ஒழுங்கீனத்தையும் தலைமைத்துவ வறுமையையுமே காட்டுகின்றன. பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடும் இவ்வாறானவர்களால் எவ்வாறு தமிழ் மக்களுக்கு சரியானதொரு தலைமைத்துவத்தை வழங்கமுடியும்? கூட்டமைப்புக்குள் காணப்படும் உள் மோதல்கள் ஒரு விடயத்தை தெளிவாக எடுத்துக்காட்;டுகின்றன. அதாவது, சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு அதன் தலைமைத்துவ தகுதியை முற்றிலுமாக இழந்துவிட்டது. மக்கள் தமக்கு பழக்கப்பட்ட ஒரு சின்னம் என்னும் நிலையில் ஒரு வேளை கூட்டமைப்பை திரும்பிப் பார்க்கலாம் ஆனால், அது கூட்டமைப்பிலுள்ளவர்களின் வெற்றியாக அமையாது மாறாக, கூட்டமைப்பின் தவறுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பிப்பதில் காணப்படும் போதைமைகளாவே இருக்க முடியும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரிக்கும் போதே மாற்றங்கள் சாத்தியப்படும். http://www.samakalam.com/செய்திகள்/கூட்டமைப்புக்குள்-தீவிர/
 20. தம்பி பிரபாகரன் கட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வீடு இப்பொழுது சிதைந்து போயுள்ளது – சீ.வி.விக்னேஸ்வரன் தம்பி பிரபாகரன் கட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வீடு இப்பொழுது சிதைந்து போயுள்ள நிலையில் எந்த நாளும் அந்த வீட்டினுள் போராட்டங்கள், குழிபறிப்புக்கள், கழுத்தறுத்தல்கள் இடம்பெறுவதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.ஆகவே தம்பி பிரபாகரன் கைநீட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்பொழுது இல்லை என்பது தான் உண்மை.நேற்று நெல்லியடியில் இடம்பெற்ற தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பரப்புரைக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சென்ற ஐந்து வருடகாலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மலைபோல் நம்பிய புதிய அரசியல் யாப்பை இந்தா தருகின்றோம் என்று கூறித் தாமதப்படுத்தி ஏமாற்றியதே அன்றி எதுவும் நடக்கவில்லை. இவர்களுக்கு வேண்டியது சிங்கள ஏகாதிபத்தியமே அன்றி தமிழர்கள் நல்வாழ்வு அன்று.சிங்களத் தேசியக் கட்சிகளுக்கு தேர்தல் காலங்களில் எமது வாக்குகள் வேண்டும். அதன் பின் அவர்கள் சார்பில் யாராவது தமிழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களுக்குத் தனிப்பட்ட சலுகைகளைக் கொடுத்து சரிப்படுத்தி விடுவார்கள். தேர்தலுக்காக இவர்கள் செலவழித்த பணம் அவ்வளவையும் கிடைக்க வைத்து மேலதிகமாகவும் வருமானங்கள் வரச்செய்து எமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளை வாய்மூடச் செய்து விடுவார்கள். ஆகவே பெரும்பான்மை இன மக்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்காதீர்கள்.அவர்கள் தரும் சலுகைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். காரணம் தமிழ் மக்களிடம் கொள்ளை அடித்த பணமே எம்மிடம் திரும்ப வருகின்றது. அதற்கு நன்றியறிதல் தேவையில்லை. எமது தமிழ் வேட்பாளர்களுக்கு தமது சிங்களத் தலைவர்களின் நெறிப்படுத்தலுக்கு மாறாக இக் கட்சிகளுடன் சேர்ந்து எதையும் செய்யமுடியாது. பொருளாதார நன்மைகளைப் பெற்றுத் தருவார்களே என்று நீங்கள் கூறலாம். அது தான் இல்லை.தாம் நினைக்கும் திட்டங்களை, தமக்கு நன்மை தரும் திட்டங்களை மட்டுந்தான் அவர்கள் உங்களுக்குக் கொடுக்க முன்வருவார்கள். அதாவது சிங்களப் பெரும்பான்மையினம் நன்மை பெறவல்ல திட்டங்களையே வகுப்பார்கள். செயல்படுத்துவார்கள். வடமாகாணத்தில் இருக்கும் குளங்கள் அனைத்தையும் தூர் அகற்றி சுத்தப்படுத்தி அணைகட்ட வேண்டும் என்று நாங்கள் கேட்டதற்கு பணம் இல்லை என்றார்கள். அதை இந்திய அரசாங்கத்தின் உதவி கொண்டு செய்ய முற்படுகையில் அதற்கு அனுமதி அளிக்காமல் விட்டார்கள்.மேலும் நாம் மரக்கறி வகைகள், பழங்கள் ஆகியவற்றை இங்கு பயிரிட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கேட்ட போது சகல அறிக்கைகளும் எமக்கு சார்பாக இருந்த போது மத்திய அரசின் காணி செயலாளர் நாயகம் மட்டும் அந்த செயற்றிட்டத்திற்கு அனுமதி வழங்காமல் விட்டுவிட்டார். காரணம் அவர்களைத் தமக்குச் சார்பாக பக்கத்தில் வைத்திருக்க பெரும்பான்மையினத் தேசியக் கட்சிகள் பார்க்கின்றனவே தவிர தமிழ் மக்கள் வளர்வதை, மேம்படுவதை, முன்நகர்வதை அக்கட்சிகளை அடக்கி ஆளும் பெரும்பான்மை இனத்தவர் விரும்பமாட்டார்கள்.அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு. இவர்களுக்கும் தேசியக் கட்சிகளின் அடிமைக் கட்சிகளுக்கும் இடையில் கடந்த ஐந்து வருடங்களில் எந்த வித வித்தியாசமும் இருக்கவில்லை என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.தம்பி பிரபாகரன் கட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வீடு இப்பொழுது சிதைந்து போயுள்ளது. கூரையுடு வானத்தைப் பார்க்கலாம் எந்த நாளும் அந்த வீட்டினுள் போராட்டங்கள், குழிபறிப்புக்கள், கழுத்தறுத்தல்கள். முதலில் அந்தக் கூட்டில் ஒன்றிணைந்த கட்சிகள் பல அதனுள் இருந்து வெளியேறிவிட்டார்கள். மிகுதி இருந்த பங்குக் கட்சிகள் சில தமக்குள் பிரிந்துவிட்டனர். ஆகவே தம்பி பிரபாகரன் கைநீட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்பொழுது இல்லை என்பது தான் உண்மை.தமக்குள் முரண்பட்டுக் கொண்டிருக்கும் அவர்களை அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தொடர்ந்து ஆதரிப்பதில் எதுவித நன்மையும் இல்லை.இன்று ஒட்டு மொத்த வடக்கு, கிழக்குத் தமிழ்ப் பேசும் மக்களின் நிரந்தரத் தொடர் இருப்பானது கேள்விக்குறியாகியுள்ளது. ஒரு பக்கத்தில் சர்வாதிகாரத்திற்கான அடித்தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மறுபுறம் வரும் தேர்தலில் அந்த சர்வாதிகாரத்தை நடைமுறைப்படுத்த உங்களிடம் அனுமதி கேட்டு சில வேட்பாளர்கள் வந்துள்ளார்கள். 19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் திரும்பவும் அதீத அதிகாரங்கள் கொண்ட ஒரு ஜனாதிபதி உருவாக வாக்களிக்க வேண்டும் என்றும் இவர்கள் கேட்கின்றார்கள்.வெளிப்படையாக அவ்வாறு அவர்கள் கேட்காவிட்டாலும் அவர்களது கட்சித் தலைமைகள் அவர்களைக் களத்தில் இறக்கியிருப்பது முக்கியமாக 19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்காகவே என்பது வெளிப்படை. பொல்லைக் கொடுத்து அடி வாங்குவதெனக் கூறுவார்கள். அது போன்றதொரு காரியம் தான் இது. பெரும்பான்மை இனத்தவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தேசியக் கட்சிகளுக்கு வாக்களித்தீர்களானால் இதுதான் நடக்கும். உங்கள் வாக்குகளைப் பெற்று உங்களை அடிமைப்படுத்தி விடுவார்கள்.ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு இடம் கொடுக்குமா? என்று சிலர் கேட்பார்கள். ஆனால் நீங்கள் கடந்த 5 வருடகால நல்லாட்சி பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும். கோட்டாபயவும், மகிந்தவும், ரணிலும், சஜித்தும் ஒரே குட்டையில் பிறந்த சிங்கள மட்டைகள் என்பதை மறந்துவிடாதீர்கள் என தெரிவித்துள்ளார்.(15) http://www.samakalam.com/செய்திகள்/தம்பி-பிரபாகரன்-கட்டிய-த/
 21. சம்பந்தன் சுமந்திரன் குழுவினர்களை மக்கள் நிச்சயம் நிராகரிப்பார்கள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலையை நிராகரித்த சம்பந்தன், சுமந்திரன் குழுவினர்களை மக்கள் நிச்சயம் நிராகரிப்பார்கள்.கூட்டமைப்பை வெளியேற்றுவதே சர்வதேச விசாரணைக்கான சாவியாக அமையும். இதை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நிறைவேற்ற வேண்டும்.புதிய அரசியல் சாசனத்தை, அதாவது அடிமை சாசனத்தை கொண்டு வருவதற்காகவே தமிழர்களை பலவீனப்படுத்தி அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கொழும்பின் நிகழ்ச்சி நிரலை சிந்திக்கவிடாமல் தமிழ் வாக்காளர்களை அடிமையாக வைத்திருந்ததாக கூட்டமைப்பு பெருமை கொள்கின்றது என வவுனியாவில் சுழற்சிமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.வவுனியாவில் கடந்த ஆயிரத்து 236ஆவது நாளாக போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுத்த போராட்டத்தைத் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.(15) http://www.samakalam.com/செய்திகள்/சம்பந்தன்-சுமந்திரன்-குழ/
 22. சீனாவுடனான மோதலை தொடர்ந்து ஆயுதக்கொள்வனவை அதிகரிக்கின்றது இந்தியா July 8, 2020 இந்திய சீன படையினர் மத்தியில் எல்லையில் இடம்பெற்ற மோதல்களை தொடர்ந்து இந்தியா உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு கொள்வனவு பேரவை 6பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு பேரவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் ஒரு அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சூழ்நிலையில் நாங்கள் எங்கள் எல்லைகளின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு படையினரை பலப்படுத்தவேண்டியுள்ளது என தெரிவித்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இடம்பெற்ற பாதுகாப்பு கொள்வனவு பேரவையின் கூட்டத்தில் இந்திய படையினருக்கு தேவையான பல சாதனங்கள் உட்பட ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. 5.55 மில்லியன் டொலர்களிற்கான கொள்வனவிற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த அனுமதியின் அடிப்படையில் இந்தியா தனது 59 மிக் 29 விமானங்களை தரமுயர்த்தும் மேலும் ரஸ்யாவிடமிருந்து 21 விமானங்களை கொள்வனவு செய்யும். இது தவிர இந்தியா ரஸ்யாவில் தயாரிக்கப்பட்ட 12 எஸ்யு-எம்கேஐபோர்விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளது.இதற்கான உத்தரவை இந்திய அரசாங்கத்தின் இந்துஸ்தான் ஏரோனட்டிக்ஸ் நிறுவனத்திற்கு இந்தியா வழங்கவுள்ளது. மேலும் இந்திய அரசாங்கம் உள்நாட்டில் பல ஆயுத உற்பத்தி திட்டங்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளது,பினாகா பல்குழல் பீரங்கிக்கான வெடிபொருட்களை உற்பத்தி செய்வதற்கும் அனுமதி வழங்கியுள்ளது. பிஎம்பி-2 காலாட்படை போர்வாகனங்களின் ஆயுதங்களை மேம்படுத்தல்,மென்பொருட்களை அடிப்படையாக கொண்ட வானொலிகருவிகள்,நிர்பய் தரைதாக்குதல் குரூஸ் ஏவுகணைகள்,மற்றும் அஸ்டிரோ போன்ற பலவற்றிற்கான தரமுயர்த்தலிற்கான உத்தரவையும் இந்தியா வழங்கியுள்ளது. http://thinakkural.lk/article/52808
 23. மதரஸாக்கள், புர்கா மற்றும் காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர் July 8, 2020 முஸ்லீம்களின் மத்ரசாக்கள், காதி நீதிமன்றம் மற்றும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடைகள் என்பவற்றை ஒரு வாரத்திற்குள் அரசாங்கம் தடை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அத்துரலிய ரத்ன தேரர் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுக்காவிட்டால் உடனடியாக பேராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக எச்சரிக்கைவிடுத்துள்ளார். கொழும்பில் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். முஸ்லீம் சமூகத்தில் உள்ள சில சக்திகள் மதவாதத்தை ஊக்குவித்தன என குற்றம்சாட்டியுள்ள அவர் அரசாங்கம் இந்த சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்கான பொருத்தமான நடவடிக்கையை எடுப்பதற்கான சரியான தருணம் இதுவென குறிப்பிட்டுள்ளார். கொழும்பின் தனியார் வங்கியொன்றில் இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாக வைத்து முஸ்லீம் தீவிரவாதிகள் பல சமூகவிரோத அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர் என அத்துரலிய ரத்னதேரர் தெரிவித்துள்ளார். சிலமுஸ்லீம் கடைகள் குறிப்பிட்ட வங்கியை தாங்கள் புறக்கணிக்கபோவதாக அறிவித்தல் பலகைகளை காட்சிப்படுத்தியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் இது இடம்பெறுவதற்குஅனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் அரசாங்கத்தை ஆகியவற்றை மதரஸாக்கள், புர்கா மற்றும் காதிநீதிமன்றங்களை தடை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்,இந்த விடயம் குறித்து பௌத்த மதகுருக்களின் தலைமைப்பீடங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். http://thinakkural.lk/article/52745
 24. சித்திரவதைத் தடுப்புச் சட்டத்துக்கு முன்னுரை எழுதும் சாத்தான்குளம் மரணங்கள் எம். காசிநாதன் / 2020 ஜூலை 06 தமிழகப் பொலிஸ் துறையின் வரலாற்றில், ‘கரும்புள்ளி’யாக மாறிய சாத்தான்குளம் மரணங்கள், பொலிஸாரின் சித்திரவதைக்கு எதிரான குரலை, இந்திய அளவில் எழுப்பியுள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக அழைத்துச் செல்லப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் அடித்துத் துவைக்கப்பட்டார்கள். பின்னர், சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு, அங்கிருந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, உயிரிழந்தார்கள். தமிழகத்தின் தென் மாவட்டங்களை மட்டுமின்றி, மாநிலத்தையே உலுக்கிய இந்த ‘இருவர் மரணம்’ , சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் தீர்ப்புகளுக்குப் பின்னர், இந்திய அளவில் பேசப்படும் மரணங்களாக மாறியிருக்கின்றன. இந்த வழக்கை விசாரித்த நீதியரசர்கள் பி.என். பிரகாஷ், புகழேந்தி ஆகிய இருவரும், இன்று தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் மனித உரிமையை நிலைநாட்டும் நீதிபதிகளாகவும் உயர்நீதிமன்றத்தின் அதிகாரம் என்ன என்பதைப் பொலிஸாருக்கு அறிவுறுத்தும் நீதிபதிகளாகவும் புகழ் பெற்று, உயர்ந்து நிற்கிறார்கள். மனித உரிமை ஆர்வலர்கள் பாராட்டும் நீதிபதிகளான இவர்கள், இந்த வழக்கில் பிறப்பித்த அதிரடி உத்தரவுகள், நீதி தேடிப் போராடிய மக்களுக்குப் பெரிய ஆறுதலை ஏற்படுத்தி இருக்கிறது. பொது அமைதி மீண்டும் தென் மாவட்டங்களில் மட்டுமின்றி, தூத்துக்குடி மாவட்டத்திலும் வழமைக்குத் திரும்பியிருக்கிறது. “ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மரணங்களில், கொலை வழக்காகப் பதிவு செய்வதற்கான முகாந்திரம் இருக்கிறது என்பது, பின்வரும் நடவடிக்கைகள் மூலம் உணர்ந்தகொள்ள முடியும். பொலிஸ் நிலையத்துக்கு விசாரிக்கப் போன நீதிபதியைப் பணி செய்ய விடாமல் தடுத்த அதிகாரிகளை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராக வைக்கப்பட்டது. சம்பவம் நடைபெற்ற சாத்தான்குளம் பொலிஸ் நிலையத்தை, பொலிஸ் அதிகாரிகளின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து, வருவாய் துறையின் கட்டுப்பாட்டின் கொண்டு வரப்பட்டது. சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதை மாற்றி, அது காலதாமதம் ஆகும் என்றும், உடனடியாக சி.பி.சி.ஐ.டி விசாரணையை, ஒரு நிமிடம் கூடத் தாமதம் ஆகாமல் எடுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. பொலிஸ் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் தாக்கப்பட்டமை குறித்துச் சாட்சி சொன்ன, அந்த நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ரேவதியுடன், உயர்நீதிமன்ற நீதிபதிகளே நேரடியாக அலை பேசியில் தொடர்புகொண்டு, பாதுகாப்பு, லீவு, சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டது. மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள் எல்லாமே, மனித உரிமையை நிலைநாட்டுவதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் போட்ட உத்தரவுகள். தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற பொலிஸ் நிலைய மரணம், நீதிமன்றக் காவல் மரணம் போன்றவற்றில், இதுவரை இல்லாத அளவுக்கு முன்னுதாரணமாக, இந்த உத்தரவுகள் அமைந்துவிட்டன. இனியொரு முறை, இப்படியொரு தாக்குதல் சம்பவமோ, மரணமோ பொலிஸ் நிலையத்தில் நடக்கக் கூடாது என்பது இந்த உத்தரவுகளில் மேலோங்கியுள்ளது. அந்த வகையில், சட்டத்தின் ஆட்சியை உயர்நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. அதே சமயத்தில், பொலிஸ் நிலைய நிர்வாகக் கட்டுப்பாட்டை பொலிஸ் துறையிடமிருந்து வருவாய்த்துறைக்கு மாற்றியமையானது, வரலாறு காணாத உத்தரவு. இந்திய வரலாற்றில், இது முதல் உத்தரவாகவே போலிஸ் அதிகாரிகளால் பேசப்படுகிறது. குறிப்பாக, பொலிஸ் துறை, முதலமைச்சரின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. பொலிஸ் நிலைய நிர்வாகத்தை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருந்தே, வேறு ஒரு துறைக்கு மாற்றியமை, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில், எப்போதுமே முன்னணிக் கள வீரர்களாக நிற்போம் என்பதை வெளிக்காட்டும் விதத்தில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் செயற்பட்டுள்ளார்கள். இந்த உத்தரவு, இந்திய மக்கள் அனைவராலும் வரவேற்கப்படுகிறது; வாழ்த்தப்படுகிறது. இந்த இரு மரணங்களும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மனதை எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என்பதற்கு, அவர்கள் அளித்துள்ள உத்தரவில் உள்ள வாசகங்களே போதுமான ஆதாரங்களாக இருக்கின்றன. இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி சப்-இன்ஸ்பெக்டர் அனில் குமாரை நியமித்த உத்தரவில், “இறந்த இருவரின் குடும்பத்தினரின் கண்களில் ஆறாக ஓடும் கண்ணீரைத் தன் முன் நிறுத்தி,- பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கண்ணீரைத் துடைக்கும் விதத்தில், புலனாய்வு செய்வார் என்று நம்புகிறோம்” என்று உருக்கமாகத் தெரிவித்த குறிப்பிட்ட நீதிபதிகள், “இந்த வழக்கு விசாரணையை, உயர்நீதிமன்றம் நேரடியாகக் கண்காணிக்கிறது என்பதை, புலனாய்வு அதிகாரி மனதில் கொள்ள வேண்டும்” என்றும், எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்கள். பொலிஸ் நிலையங்களில் இது போன்று சித்திரவதைகள், மனித நேயமற்ற விசாரணை முறைகள் (Third Degree Methods) இருக்கக் கூடாது என்று, பலமுறை உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் எச்சரித்து வந்துள்ளன. இதன் உச்சக்கட்டமாக, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களே இதைத் தடுக்கும் வகையில், சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று, குரல் எழுப்பி வந்துள்ளனர். அதன் விளைவாக, 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் இருந்த போது, 1975இல் ஐ.நா சபை கொண்டு வந்த, ‘சித்திரவதைக்கு எதிரான பிரகடனம்’ அதிகமாகப் பேசப்பட்டது. இந்தப் பிரகடனத்தில் 1997இல் இந்தியா கையெழுத்திட்டாலும், அதை ஏற்று உள்ளூர் சட்டங்களில் சித்திரவதைக்கு எதிரான, சட்டத் திருத்தங்கள் கொண்டு வரவில்லை என்ற குரல் எழும்பியது. உச்சநீதிமன்றமே சில வழக்குகளில், “ஏன் ஐ.நா பிரகடனத்தில் கையெழுத்திட்டும் இதுவரை சித்திரவதை தடுப்புச் சட்டம் கொண்டு வரவில்லை” என்று மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே, இதைச் சமாளிக்க, சித்திரவதைத் தடுப்புச் சட்டமூலம் -2010 இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளில், ஒன்றான மக்களவையில் 2010 ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்டு, மே மாதம் நிறைவேற்றப்பட்டது. அது, இன்னோர் அவையான மாநிலங்களவையில் நிறைவேறி இருக்க வேண்டிய நேரத்தில், அந்தச் சட்டமூலத்தில் சித்திரவதைகளைத் தடுக்கும் வலுவான பிரிவுகள் இல்லை என்று கூறி, அன்றைய சட்டத்துறை அமைச்சர் அஸ்வனி குமார் தலைமையிலான 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட தேர்வுக்குழுவுக்கு ஓகஸ்ட் 2010 இல் அனுப்பி வைக்கப்பட்டது. அந்தக் குழு, இந்தச் சித்திரவதைத் தடுப்புச் சட்டமூலத்தை ஆய்வு செய்வதற்காக, ஒன்பது கூட்டங்கள் நடத்தியது. கைதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி, இறுதியில் ஒரு சட்டமூலத்தை 2010 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் தயாரித்தது. அந்தச் சித்திரவதைத் தடுப்புச் சட்டமூலத்தில், பொலிஸ் காவலில் சட்டவிரோதமாகச் சித்திரவதை செய்தால், மூன்று வருட சிறைத் தண்டனையும் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் நட்டஈடும் சித்திரவதை செய்யப்பட்டது குறித்து, பாதிக்கப்பட்டவர் இரண்டு வருடங்களுக்குள் புகார் அளித்திருக்க வேண்டும் எனவும் இது போன்ற சித்திரவதை வழக்கில், ஒரு வருடத்துக்குள் விசாரித்துத் தீர்ப்பளித்து விட வேண்டும் என்பன போன்ற முக்கிய பிரிவுகள், சேர்க்கப்பட்டு இருந்தன. ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஆட்சி இழந்ததால், அந்தச் சட்டமூலம் அப்படியே காலாவதியானது. பின்னர், 2014இல் ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசாங்கத்துக்கும் இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டது. குறிப்பாக, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் அஸ்வணி குமார், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, இந்திய சட்ட ஆணைக்குழுவுக்கு இந்த விடயம் அனுப்பப்பட்டு, ஐ.நா பிரகடனத்தை ஏற்று, உள்ளூர் சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவது குறித்து ஆராயுமாறு பணிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், 273ஆவது சட்ட அறிக்கை அளிக்கப்பட்டு, அதில் புதிதாக ‘சித்திரவதைத் தடுப்புச் சட்டமூலம் 2017’ தயார் செய்யப்பட்டது. இந்தப் புதிய அறிக்கையில், 2010 சட்டமூலத்தில் இருந்த மூன்றாண்டு சிறைத்தண்டனை, ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டமை மிக முக்கியமான பரிந்துரையாகும். அதேபோல், ஒருவரைச் சித்திரவதை செய்யவில்லை என்று நிரூபிக்கும் பொறுப்பு, பொலிஸ் நிலைய அதிகாரியின் மீது சுமத்தப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் சமூக, பொருளாதார இழப்புகளை அடிப்படையாக வைத்து, நீதிமன்றமே நட்ட ஈட்டை நிர்ணயிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இந்தச் சித்திரவதைச் சட்டம் 2017இல் நடைமுறைக்கு வந்திருந்தால், பொலிஸ் நிலைய மரணங்கள் நிகழ்ந்திருக்காது. 1975இல் வெளிவந்த ஐ.நா பிரகடனத்துக்கு, 22 வருடங்களுக்குப் பிறகு கையெழுத்திட்டும் இன்றுவரை, சித்திரவதை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு, உள்ளூர் குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் 1973, இந்திய தண்டனைச் சட்டம் 1872 ஆகியவற்றில் உரிய திருத்தங்கள் கொண்டு வரவில்லை என்ற கோரிக்கை அலை நாடு முழுவதும் பரவியிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.ஷாவே, “சட்ட விரோத சித்திரவதைகளுக்கு முடிவுரை எழுதும் காலம் வந்து விட்டது” என்று தன் ஆவேசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆகவே, சித்திரவதைத் தடுப்புச் சட்டம் விரைவில் வருவதற்கு, சாத்தான்குளம் பொலிஸ் நிலைய மரணங்கள் முன்னுரை எழுத வேண்டும் என்பது, சட்டத்தின் ஆட்சியை விரும்பும் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சித்திரவதைத்-தடுப்புச்-சட்டத்துக்கு-முன்னுரை-எழுதும்-சாத்தான்குளம்-மரணங்கள்/91-252842
 25. கரும்புலிகள் தினத்தில் முல்லைதீவில் குண்டை வெடிக்கவைக்க திட்டமிட்டனர்- ஐலன்ட் செய்தி July 7, 2020 கரும்புலிகள் தினத்தில் தாக்குதலை மேற்கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட குண்டே இயக்கச்சியில் வெடித்தது என விசாரணையாளர்கள் தெரிவிப்பதாக ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இயக்கச்சியில் முன்கூட்டியே வெடித்த குண்டை முல்லைத்தீவிற்கு கொண்டு சென்று வெடிக்கவைப்பதற்கான திட்டம் காணப்பட்டது என ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் போராளிகளும் கிளிநொச்சியை சேர்ந்த பல இளைஞர்களும் கரும்புலிகள் தினத்தை கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர் என விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர் என ஜலன்ட் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை சம்பவத்தினை தொடர்ந்து குண்டு தயாரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்னாள் பேராளியின் மனைவியையும் கைதுசெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,அவரும் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க போராளி, குண்டை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வு பிரிவின் போராளி அவரதுபெயர் மேனன் என ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது. மேனன் முதலில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவரது நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அனுராதபர வைத்தியசாலையி;ல அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஐலன்ட் தெரிவித்துள்ளது. மேனனின் வீட்டை சோதனையிட்டவேளை இரு குண்டுகளையும் வெடிக்கவைக்கும் கருவிகளையும் கண்டுபிடித்தனர்.முன்கூட்டியே குண்டு வெடித்ததன் காரணமாக விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களால் கரும்புலிகள் தினத்தில் தங்கள் திட்டத்தினை முன்னெடுக்க முடியவில்லை என ஐலன்ட் தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளி இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டவர் எனவும்விடுதலையான பின்னர் புதிதாக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியில் இணைந்தவர் எனவும் தெரியவந்துள்ளதாக விசாரணையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர் எனஐலன்ட் தெரிவித்துள்ளது. இதேவேளை யாழ்பல்கலைகழக மாணவர்கள் கரும்புலிகள் தினத்தை கடைப்பிடித்தமை குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என ஐலன்ட் குறிப்பிட்டுள்ளது. http://thinakkural.lk/article/52409