Jump to content

Justin

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  4528
 • Joined

 • Last visited

 • Days Won

  27

Everything posted by Justin

 1. தமிழர்களுக்கு மட்டுமன்றி பல தீர்வு, சுயாட்சி தேடும் மக்களினங்களுக்கும் எப்போதுமே அவர்கள் 100% விரும்பும் தெரிவுகள் வெள்ளித் தட்டில் கிடைப்பதில்லை! இலங்கையை ஆளும் சிங்களக் கட்சி முதல், உலகின் வல்லரசுகள் வரை, உள்ள தெரிவுகளில் எமக்கு பாதகம் குறைந்ததைத் தெரிவு செய்ய மட்டுமே எமக்கு இயலுமையுண்டு! இதில் "எமக்கு இரு கண்ணும் போனாலும் பரவாயில்லை, இந்தியாவுக்கு ஒரு கண் போகட்டும்" என்ற உணர்ச்சிமய கோசங்களை வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் போடலாம் - அதற்கான luxury அவர்களுக்குண்டு! தாயக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என யாராவது சொல்லுங்கள். சீனா, ஆபிரிக்க நாடுகளில் சர்வாதிகாரிகளையும் ஊழல் வாதிகளையும் ஆட்சியில் ஆதரிக்கிறது - காரணம் அந்த நாடுகளின் வளங்கள். தாய்வானையும், ஹொங்கொங்கையும் கூட சுயாட்சியை விட்டு ஒற்றையாட்சிக்குள் இழுத்து வரும் பிற்போக்குத் தனமும் சீனாவுடையதாக இருக்கிறது. இந்த லட்சணத்தில் இலங்கையில் மிகச் சிறுபான்மையான தமிழர்களின் எதிர்பார்ப்பை சீனா நிறைவேற்றுமா?
 2. உங்கள் தகவல்கள் முற்றிலும் சரியானவையல்ல: 1. பாரம்பரிய தடுப்பூசியும், கோவிட் தடுப்பூசிகளும் ஒரே விஞ்ஞானத் தரத்திலான சோதனைக்குள்ளானவையே - பரிசோதனைக் காலம் மட்டும் அனுமதிக்கப் பட்ட போது 6 வாரங்களாக இருந்து இப்போது 1 வருடம் தாண்டி விட்டது! கோவிட் தடுப்பூசிகள் விரைவாக வெளிவர பரிசோதனை நிலைகள்overlap ஆனதும், முதலீடுகள் உடனே கிடைத்ததுமே காரணம். சொல்லப் போனால், போலியோ தடுப்பூசியைப் பரிசோதித்த போது இருக்காத வெளிப்படைத் தன்மை, கோவிட் தடுப்பூசிகளைப் பரிசோதித்த போது இருந்தது. 2. பைசருக்கு முழு அனுமதி கிடைத்து விட்டது அமெரிக்காவில். மொடெர்னா இன்னும் முழுதாக பரிசோதனை முடிவுகள் கிடைக்காமையால் முழு அனுமதிக்கு விண்ணப்பிக்கவில்லை. ஆனால், real world data இன் படி மொடெர்னாவின் தரம் பைசரை விட சிறிது அதிகம் என்பது கடந்த ஒரு வருடத்தில் நிரூபிக்கப் பட்டு விட்டது. 3. mRNA வக்சீன்கள் வைரசுக்கெதிராகப் பரீட்சிக்கப் பட்டது இதுவே முதல் முறை. பல வருடங்களாக ஆய்வு கூடப் பரிசோதனையில் இருந்தது சில புற்று நோய்கள் உட்பட்ட நோய்களுக்கெதிரான எம்.ஆர்.என்.ஏ சிகிச்சை முறைகள் மட்டுமே, வக்சீன்கள் அல்ல!
 3. கற்பகதரு, இவ்வாறு இயற்கை நோயெதிர்ப்பை மட்டும் நம்பி ஒமிக்ரோனைப் பரவ அனுமதிப்பது பெருந்தொற்று ஆரம்பத்தில் சுவீடன் செய்ததை விட அதிக ஆபத்தான செயல் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. இதன் காரணங்கள் கீழே: 1. ஒமிக்றோன் காட்டுத் தீ போல பரவுகிறது. 200 பேரில் ஒருவர் தான் மரணிப்பர் என வைத்துக் கொண்டாலும், 1000 பேருக்குத் தொற்ற அனுமதித்தால் 5 மரணங்கள். ஒரு லட்சம் பேரில் தொற்றை அனுமதித்தால் 500 மரணங்கள். இப்படி பகுதியெண் அதிகரிக்கும் அதே வேகத்தில் மரண எண்ணிக்கையான தொகுதியெண்ணும் அதிகரிக்கும். இந்த வாரம் அமெரிக்காவின் கேஸ்களின் எண்ணிக்கை ~243,000. இவர்களுள் 0.5% பேர் அடுத்த 10 நாட்களுக்குள் மரணப் பட்டியலில் சேர்வர். அவர்கள் வயதானவர்கள், உடல் பலவீனமானோர் என இருந்தாலும் - இதைத் தடுக்கக் கூடிய வழி இருக்கும் போது, தடுக்காமல் விடுவது தவறு - அந்த தடுப்பு வழி, மூன்றாவது டோஸைக் கொடுப்பதால் நோய்த்தீவிரம், பரவல் இரண்டையும் குறைப்பது தான். 2. கோவிட் தடுப்பூசிகளின் நீண்டகால விளைவுகள் பற்றி மக்கள் இன்னும் பயம் கொண்டிருப்பது எனக்கு ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் குழந்தைகளாக இருந்த போது நிஜமான நோய் தரும் வைரசுகளைக் கொன்று அல்லது வலுவற்றதாக்கி அதையே உடலினுள் தடுப்பூசியாக எடுத்துக் கொண்ட நாம், இன்று வைரசின் ஒரு பாகத்தை மட்டும் மூன்று நாட்களுக்கு உடலினுள் வைத்திருந்தால் நீண்ட காலப் பாதிப்பு வந்து விடக் கூடும் என்று அஞ்சுவது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
 4. இதற்கு ஒரு இலக்கத்தைக் கொடுக்க முடியுமாவென்று தெரியவில்லை. கொரனா வைரஸ் போன்ற ஆர்.என்.ஏ வைரசுகளின் விகாரம் வேகமாகவும், எழுந்தமானமாகவும் நடப்பது. சில விகாரங்கள் வைரஸ் தப்பி வாழ உதவாது விட்டால் அவை அழியும்- மனிதர்களுக்கு அதிர்ஷ்டம். சில விகாரங்கள் வைரசை பல்கிப் பெருக அனுமதித்தால் வைரசுக்கு அதிர்ஷ்டம். ஆனால், தற்போது ஒமிக்றோன் வைரசுக்கும் மனிதர்களுக்கும் நன்மை தரும் win-win நிலைமை: வைரஸ் பல்கிப் பெருகும், ஆனால் மனிதர்களை பெருமளவில் கொல்லாத நிலை! எனவே, எந்தத் திசையில் நகரும் என்று தெரியாத வைரசின் மாற்றங்களை குறைப்பது தான் நாம் செய்யக் கூடியது. தடுப்பூசிகள் , தொற்றியவர்கள் தனிமை பேணிப் பரவலைக் கட்டுப் படுத்தல் ஆகியன மூலம், வைரசுக்கு விளைநிலமில்லாமல் செய்வது மட்டுமே நாம் செய்யக் கூடியது!
 5. ஒமிக்றோன் தரும் நோய் கோசான் சொல்வது போல, சுவாசக் குழாயின் மேற்பகுதியோடு தொடர்பான அறிகுறிகளைத் தான் (உ+ம் - மூக்கொழுகல், தொண்டைக் கரகரப்பு, தொண்டை வலி போன்றன) அனேகமானோரில் காட்டுகிறது என அமெரிக்க கேஸ்களைப் பார்க்கும் போதும் தெரிகிறது. அதிகமானோர் தடுப்பூசி எடுத்துக் கொண்டிருப்பதாலும், பலர் ஏற்கனவே இயற்கைத் தொற்றுக்குள்ளாகி நோயெதிர்ப்பைக் கொண்டிருப்பதாலும் இந்த நிலை என ஊகிக்கிறேன். ஆனால், தடுப்பூசி எடுக்காதோரில், சுவாசக் குழாயின் கீழ் பகுதி வரைச் சென்று தாக்குவதால் ஒக்சிசன் குறைதல் போன்ற தீவிர நோய் நிலை ஏற்படலாம். இப்படி சுவாசக் குழாய் மேற்பகுதி மட்டும் பாதிக்கப் படும் நிலைக்குக் காரணம், நாம் மேலே பார்த்த "ரி" வகைக் கலங்களாக இருக்கலாம். ஒமிக்றோன் அன்ரிபொடியின் பாதுகாப்பை மீறி தொண்டையில் இருக்கும் கலங்களினுள் நுழைந்து விடுகிறது. ஆனால், "ரி" வகைக் கலங்களின் கொல்லும் படையணி, இந்தத் தொற்றுக்குள்ளான கலங்களைத் தாக்கி அழிக்கிறது - இதனால் வைரஸ் அழிக்க்கப் பட்டாலும், எங்களுக்கு சிறிது அழற்சி நிலையேற்படும். இது தான் நடக்கிறது என விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்கள்.
 6. வாழ்த்துக்கள் சுமே. ஏற்கனவே தமிழக புத்தகக் கண்காட்சிகளில் உங்கள் புத்தகங்கள் இடம்பிடித்திருக்கின்றன. அத்துடன் சேர்த்து இதுவும் உங்களுக்கான நல்ல அங்கீகாரம். எரிச்சல் பொறாமை எங்கள் எழுத்துலகில் மிகவும் சாதாரணம் என அறிந்திருக்கிறேன்.
 7. நிழலி, ஆம். வெவ்வேறு தடுப்பூசி வகைகளைக் கலப்பதில் ஆபத்தில்லை. அது மட்டுமன்றி கலக்கும் போது உருவாகும் நோயெதிர்ப்பின் வலுவும் சிறிது அதிகமாக இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. வக்சீன்களைக் கலப்பது பற்றிய தமிழினியின் கேள்விக்கு, நெடுக்கரின் திரியில் நான் அளித்த பதில் கீழே:
 8. பிராண்ட் பெறுமதி. சம்பந்தர் விலகினால் அடுத்து கூட்டமைப்பு சார்பில் உலகத்திற்கு முகமாக இருக்கப் போகிறவர்கள் இரு வகையினர்: 1. முயற்சிகள் செய்து சர்ச்சைக்குள்ளாவோர், 2. முயற்சியெதுவும் செய்யாமல் சர்ச்சைக்குள்ளாகாமல் இருப்போர். இந்த இரு தரப்பினரையும் உலகம் தமிழர்களின் முகமாகப் பார்க்காமல் இருக்க, சம்பந்தரின் தலைமை அவசியம்!
 9. ஒமிக்றோன் உலகின் முடிவா அல்லது பெருந்தொற்றின் முடிவா? தடுப்பூசி எடுத்துக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, தனி மனிதர்கள் மட்டுமன்றி முழு உலகுமே கோவிட் பெருந்தொற்றிலிருந்து விடுதலை பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. அவ்வாறு எடுத்துக் கொள்ளாதோர் வைரசைப் பல்கிப் பெருக அனுமதிக்கும் போது மேலும் மாறி வைரசுகள் உருவாவவது ஒரு பாதகமான விளைவாக இருக்கும் - இதை கோவிட் பற்றி எழுதிய எல்லாக் கட்டுரைகளிலும் சுட்டிக் காட்டி வந்திருக்கிறேன். "told you so!" என்ற தொனி இல்லாமல், இந்த ஆபத்து நிகழ்ந்தே விட்டது என்பதை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும்: ஒமிக்ரோன் என்ற மாறி வைரஸ் உருவான தென்னாபிரிக்காவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டோரின் வீதம் 25% இலும் குறைவாக இருந்திருக்கிறது. மேலும், உடலின் நோயெதிர்ப்பைப் பலவீனப் படுத்தும் எச்.ஐ.வி வைரசின் தொற்றுடையோரின் விகிதாசாரமும் தென்னாபிரிக்காவில் அதிகம் - இந்த இரு காரணிகளும் ஒமிக்ரோன் என்ற ஏராளமான விகாரங்கள் கொண்ட ஒரு வைரஸ் தடையின்றி உருவாகப் பங்களித்திருக்கலாம் என்று ஒரு சந்தேகம் பரவலாக இருக்கிறது. ஒமிக்ரோன் உருவான கதையை விட்டு விடலாம். இனி என்ன செய்யலாம்? வைரஸ் எங்களைத் தீர்த்து விடுமா அல்லது வைரசை நாம் கட்டுப் படுத்தலாமா? எதிர்காலம் (2022) எப்படியிருக்கும்? இவை மட்டும் பற்றிப் பார்க்கலாம். தடுப்பூசியின் இலக்கு மாறியிருக்கிறது மேற்கு நாடுகளில் பயன்பாட்டிலிருக்கும் நான்கு தடுப்பூசிகளின் பலம் ஒமிக்ரோனுக்கெதிராகக் குறைந்திருக்கிறது. வெறுமனே "குறைந்திருக்கிறது" என்பதை சற்று விரிவாகப் பார்ப்பது முக்கியமானது: ஒமிக்ரோன் தொற்றை தற்போதுள்ள தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்கள் தடுப்பது குறைந்து விட்டது. மூன்றாவது டோஸ் எடுத்துக் கொண்டோரிலும் தொற்றுத் தடுப்பு சிறிது வீழ்ச்சி கண்டிருக்கிறது. ஆனால், மிக முக்கியமானது, மூன்றாவாது டோஸ் எடுத்துக் கொண்டோரில் ஒமிக்ரோனால் தீவிர நோய் ஏற்படுவது வெகுவாகக் குறைக்கப் படுகிறது. எனவே, தான் தடுப்பூசியின் நோக்கம் தற்போது தொற்றை முற்றாகத் தடுத்தல் என்பதில் இருந்து மாறி, தொற்றினால் தீவிர நோய் ஏற்படாமல் தடுத்தல் என்று இப்போது மாறியிருக்கிறது. இதனால், மருத்துமனைகள் மீதான சுமையும், மரணங்களும் குறைக்கப் படுகின்றன. எனவே, தடுப்பூசியின் மூன்றாம் டோஸ் எடுத்துக் கொள்வதற்கு மருத்துவ ரீதியான காரணம் இருக்கிறது. எனவே ஒமிக்ரோன் தொற்றலை வேறு வழிகளால் தடுப்பது தேவையற்றதா? தற்போது பல நாடுகளில் ஒமிக்ரோன் வந்த பின்னர் உள்ளக நிகழ்வுகள், கூட்டம் கூடுதல், முகக் கவசம் என்பன பற்றிய விதிகள் இறுக்கப் பட்டிருக்கின்றன. வேகமாகப் பரவும் ஒமிக்ரோன், தீவிர நோயை உருவாக்குவதாகத் தெரியவில்லை என்ற செய்திகளின் பின்னணியில் இந்தக் கட்டுப்பாடுகள் ஏன் என்ற கேள்வி எழுகிறது. இரண்டு காரணங்கள்: 1. தீவிர நோய்க்குள்ளாகும் ஆட்களின் விகிதாசாரம் குறைவாக இருந்தாலும், மிக அதிக நோயாளிகளை ஒமிக்ரோன் உருவாக்குகிறது - அவர்களுள் தீவிர நோய்க்குள்ளாகி மருத்துவமனை வரை செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இது சாதாரணமான தொகுதியெண் , பகுதியெண் கணக்கு. 2. வழமையான காரணம் - வைரசைப் பல்கிப் பெருக அனுமதித்தால், ஒமிக்ரோன் போல மேலும் மாறி வைரசுகள் உருவாகும் வாய்ப்புகளும் அதிகரிக்கும். எனவே, சாதாரண வாழ்க்கையைப் பாதிக்காதவாறு, முகக் கவசம், கூட்டம் கூடுதல் குறைத்தல் போன்ற தொற்றல் கட்டுப் பாடுகளை தடுப்பூசி முற்றாக எடுத்துக் கொண்டோரும் பின்பற்றுவதற்கு காரணங்களாக இவை இருக்கின்றன. இனி என்ன செய்யலாம்? விஞ்ஞானம் என்ன தீர்வை வைத்திருக்கிறது? டெல்ரா மாறி உருவாகிப் பரவிய போதே கோவிட்டுக்கெதிரான நோயெதிர்ப்பு பற்றிய ஆய்வுகளில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டது. கோவிட் தடுப்பில் "பிறபொருளெதிரிகள்" என அழைக்கப் படும் அன்ரிபொடிகளின் பங்கு பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். எங்கள் உடலின் என்பு மச்சைகளில் உருவாகி, நிணநீர்க்கணுக்களிலும், மண்ணீரலிலும் வளரும் "பி" வகை நிணநீர்க்குழியங்கள் கோவிட் வைரசுக்கெதிரான அன்ரிபொடியை உருவாக்குகின்றன. ஆனால், கோவிட்டுக்கு எதிராக மட்டுமன்றி பல வைரசுகளுக்கெதிராக வேறுவழிகளில் பாதுகாப்பை வழங்கும் இன்னொரு வகை நிணநீர்க்குழியத்தின் மீது கடந்த வருடம் டெல்ரா அலையோடு கவனம் திரும்பியது. என்பு மச்சையில் பிறந்து, தைமஸ் சுரப்பியில் வளரும் நிணநீர்க்குழியங்களை "ரி" வகை நிணநீர்க்குழியங்கள் என்போம். இந்த "ரி" வகை நிணநீர்க்குழியங்களில் ஒரு பகுதி, நேரடியாகவே வைரசுகள் தொற்றிய உடற்கலங்களை தாக்கியழிக்கும் (எனவே கொலைக் குழியங்கள் -killer T-cells எனப் படுகின்றன). அது மட்டுமல்லாமல், இந்த "ரி' வகை நிணநீர்க்குழியங்களில் இன்னொரு வகை, அன்ரிபொடிகளை உருவாக்கும் "பி" வகை நிணநீர்க்குழியங்களை ஊக்குவிக்கும் தொழிலைச் செய்கின்றன (இதனால் "உதவிக் குழியங்கள்" -helper T-cells என அழைக்கப் படுகின்றன) கோவிட்டுக்கெதிரான நோயெதிர்ப்பை தடுப்பூசி மூலமோ, இயற்கையான தொற்றல் மூலமோ எமது உடல் பெறும் போது, இந்த "ரி" வகைக் கலங்களும் கோவிட் வைரஸ் குறித்த அடையாளத்தை எதிர்காலப் பாதுகாப்பிற்காகக் குறித்து வைத்துக் கொள்கின்றன. பின்னர், மீள கோவிட் வைரசை உடல் எதிர் கொண்டால், இந்த "ரி" வகைக் கலங்களும் நேரடியாக தொற்றுக்குள்ளான உடற்கலங்களைக் கொல்வதன் மூலமோ, "பி" வகைக் கலங்களைத் தூண்டுவதன் மூலமோ உடலின் நோயெதிர்ப்பை தட்டியெழுப்பும் வேலையைச் செய்கின்றன. "ரி" வகைக் கலங்களின் வைரசுகளுக்கெதிரான பணி பல காலமாகத் தெரிந்த விடயம். ஆனால், விஞ்ஞானிகள் தற்போது நவீன நுட்பங்கள் மூலம் "ரி" வகைக் கலங்களின் பணியை நீண்டகால கோவிட் தடுப்பிற்குப் பயன்படுத்த முயல்வது தான் புதிய விடயம். பல்வேறு முயற்சிகள் நடைபெற்றாலும்,"ரி" வகைக் கலங்களை, "பி" வகைக் கலங்களோடு சேர்த்துத் தூண்டும் வகையிலான தடுப்பூசிகள் பரீட்சிக்கப் படுகின்றன. இந்த முயற்சிகளின் ஒரு முக்கிய நோக்கம்: கோவிட் தொற்றை முற்றாகத் தடுக்காமல், தடுப்பூசி மூலமும், தடுக்கவியலாத தொற்றுக்கள் மூலமும் எங்கள் உடலின் நோயெதிர்ப்பை நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்க செய்தல். எனவே, எதிர்காலம் இப்போது உங்களுக்குத் தெளிவாகியிருக்கும்: கோவிட் எங்களோடு இருக்கப் போகிறது, ஆனால் முகக்கவசம், சமூக இடைவெளி பேணல் என்பன அவசியமில்லாத தீவிரமற்ற நோய் தரும் ஒரு வைரசாக இருக்கப் போகிறது. மேலதிக மூலங்கள்: https://www.nature.com/articles/d41587-021-00025-3 https://www.nature.com/articles/s41586-021-04232-5 சொற்பட்டியல்: நோயெதிர்ப்பு - immunity பிறபொருளெதிரிகள் - antibodies மாறி வைரஸ் – variant virus நிணநீர்க்குழியம் – lymphocyte "பி" வகை நிணநீர்க்குழியம்/ "பி" வகைக் கலம்: B-lymphocyte/ B- cell "ரி" வகை நிணநீர்க்குழியம்/"ரி" வகைக் கலம்: T-lymphocyte/T-cell என்பு மச்சை- bone marrow நிணநீர்க்கணு- lymph node மண்ணீரல் - spleen தைமஸ் சுரப்பி- thymus gland கொலைக் கலம்- Killer T-cell உதவிக் கலம் – Helper T-cell தொகுப்பு: ஜஸ்ரின்.
 10. அஷோக்பரன் நல்ல நோக்கத்தில் தான் சொல்கிறார். ஆனால், கூட்டமைப்பிற்குள் நிகழும் சாதாரண விடயங்களைக் கூட தங்கள் தீவிர தமிழ் தேசிய அரசியலை முன்னிறுத்துவதற்குப் பாவிக்க ஒரு குழு எப்பவும் காத்திருக்கும். சம்பந்தர் பாராளுமன்றம் போய் பேசுவதால் மேலதிக நன்மைகள் எதுவும் கிடைத்துவிடாது, எனவே அதனால் இழப்பில்லை. ஆனால், ஒரு figurehead ஆக அவர் தான் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கட்சிக்கு இருக்க வேண்டும்.
 11. நீங்கள் சொன்னது போல நீதிமன்றில் தண்டனை வழங்கப்படவில்லையென்பது தெரிகிறதா இப்போது? விளக்க மறியல் என்பது சிறைத்தண்டனை தான் என்று வாதிட மாட்டீர்களென நம்புகிறேன்!
 12. நீங்கள் ஜோர்ஜியா போன்ற ஜனநாயக நாடொன்றிலா இருக்கிறீர்கள்?: பேசவிடாமல் கூட்டம் குழப்புவது, புகைக்குண்டெறிவது, முகத்தை துணியால் மூடிக் கொண்டு ஒருமையில் திட்டுவது இவையெல்லாம் உங்கள் "ஜனநாயகம்" போல? இவற்றை யாரும் படிப்பித்திருக்க மாட்டார்கள் என்பது சரியே! தெரு முனையில் நிற்கும் றௌடிகளின் "ஜனநாயக முறைகளே" இவை!
 13. சிறு நீரகக் கல் பற்றிய பல செய்திகள் பயனுள்ள தகவல்கள் பகிரப் பட்டிருக்கின்றன. இது பற்றிய மேலும் சில தகவல்களைப் பார்க்கலாம்: 1. சிறு நீரகக் கல்லின் அடிப்படை செறிவான சிறுநீர்: கீழேயுள்ள படத்தை முழுவதும் விளக்கும் எண்ணத்தோடு இணைக்கவில்லை. ஆனால், ஒரு முக்கியமான விடயத்தை இந்தச் சிறு நீரகத் தொழிற்பாட்டை விளக்கும் படம் சொல்கிறது: எங்கள் சிறு நீரின் செறிவைத் தீர்மானிக்கும் பிரதானமான காரணிகளாக நீரும் சோடியமும் இருக்கின்றன. Credit: கல்வி/விழிப்புணர்வூட்டல் நோக்கிற்காக மட்டும் நன்றியுடன் பகிரப்பட்டது. சோடியம் என்பதை நாம் "உப்பு" என்று பயன்பாட்டு நோக்கத்திற்காக அழைத்துக் கொள்ளலாம்! மேல் படத்திலிருப்பது போன்ற மில்லியனுக்கு மேற்பட்ட சிறு அலகுகளால் (nephrons) ஆக்கப் பட்டதே எங்கள் சிறுநீரகம். இந்த அலகு ஒவ்வொன்றும் ஒரு கோப்பை போன்ற வடிகட்டியையும், அதன் தொடர்ச்சியான குழாயையும் இந்த அமைப்புகளோடு பின்னிப் பிணைந்த இரத்தக் குழாய்களையும் கொண்டிருக்கும். சிறுநீர் என்று நாம் அழைப்பது உண்மையில் இந்த சிறுநீரக அலகில் நடக்கும் மூன்று முக்கிய நிகழ்வுகளின் நிகர விளைவு: 1. கிண்ணம் போன்ற அமைப்பினூடான வடிகட்டல் (filtration)- அனேகமாக வடிகட்டக் கூடிய பருமனுடைய எல்லாம் வடிக்கப் படும்! 2. மீள அகத்துறிஞ்சல் (reabsorption): வடிகட்டியவற்றுள் முக்கியமானவற்றை கிண்ணத்தின் தொடர்ச்சியான குழாயினூடாக செல்லும் வழியில் மீள உடல் உறிஞ்சிக் கொள்ளும். உதாரணமாக, குளூக்கோஸ் முழுவதும் வடிக்கப் பட்டு, சாதாரண நிலையில் முழுவதும் மீள உறிஞ்சப் படும். ஒரு அளவுக்கு மேல் நீரிழிவு நோயில் குழூக்கோஸ் மிகுதியானால், மீள உறிஞ்ச இயலாத பகுதி சிறுநீரோடு வெளியேறும். 3. சுரத்தல் (secretion): சில பொருட்கள், வடிக்கப் படுவதற்கு மேலதிகமாக, சிறுநீரக அலகுகளின் குழாய்களினுள் இரத்தத்தில் இருந்து வெளியே தள்ளப் படும். எனவே, இறுதியில் உருவாகும் சிறுநீர், இந்த மூன்று செயல்பாடுகளின் விளைவால் உருவாகும் போது, அதில் இருக்கும் நீரின் அளவு சிறு நீரின் செறிவைத் தீர்மானிக்கும். எனவே, போதுமானளவு நீர் அருந்துவது சிறு நீரின் செறிவைக் குறைத்து, சிறு நீரகக் கல் உருவாகாமல் காக்கும் எளிய வழி! ஆனால் அது மட்டும் செறிவு குறைந்த சிறுநீரை உருவாக்கப் போதுமா என்றால் பதில் "இல்லை" என்பது தான்! 2. "சோடியம் அல்லது உப்பு" சிறுநீரக வடிகட்டலில் முக்கியமானது! உப்பை நாம் சுவைக்காகச் சேர்த்துக் கொள்கிறோம் உணவில். உப்பில் இருக்கும் சோடியம், குளோரைட் ஆகிய அயனிகளுக்கு எங்கள் உடலில் முக்கியமான தொழில்கள் இருக்கின்றன. ஆனால், உடலின் தேவைக்கதிகமான உப்பை நாம் வாய்வழி எடுத்துக் கொள்ளும் போது, அதனை உடலில் இருந்து அகற்றும் பாரிய பணி சிறுநீரகத்தின் மேல் விழுகிறது. திரும்பவும் மேலே இருக்கும் படத்தை அவதானித்தால், சோடியமும், தண்ணீரும் இராமரும் சீதையும் போல இணைபிரியாமல் இருப்பதைக் காண்பீர்கள்: இதன் விளைவு, சோடியம் அதிகமாக இருக்குமிடத்தில் நீரும் அதிகமாகத் தேவை! எனவே, சிறுநீரக வடிகட்டலில் அதிக சோடியம், குறைந்த நீர் இருக்கும் நிலையில், உடலைக் காப்பதா அல்லது சிறுநீரைச் செறிவாக்குவதா என்ற தெரிவு வரும் போது, உடலுக்கு முன்னுரிமை கிடைக்கும் - சிறு நீர் செறிவாக வெளியே அனுப்பப் படும்! எனவே, போதிய நீர் அருந்தும் அதே வேளை, வாய்வழி நாம் எடுத்தும் கொள்ளும் உப்பையும் அளவாகவே எடுத்துக் கொண்டால் மட்டுமே, சிறு நீர் செறிவாதலைத் தடுக்கலாம்! அளவாக என்றால் எவ்வளவு உப்பு? மனித உடலுக்கு அன்றாடம் தேவையான உப்பின் அளவு வெறும் 1.5 கிராம்கள் என்று கணித்திருக்கிறார்கள். ஒரு தேக்கரண்டி உப்பில் 5 கிராம் உப்பு இருக்கும் என்று பார்த்தால், இது கிட்டத்தட்ட 1/3 தேக்கரண்டி என்று கொள்ளலாம்! "ஏற்கனவே நான் ஒரு தேக்கரண்டியில் ஒரு நுனி உப்பைத் தான் சமையலில் சேர்த்துக் கொள்கிறேன்" என்று நீங்கள் திருப்திப் பட்டுக் கொள்ளும் முன் கொஞ்சம் பொறுங்கள்: உப்பு, நீங்கள் தனியாகச் சேர்க்கும் வழியில் மட்டுமன்றி, எங்கள் ஏனைய உணவுகளின் வழியேயும் உடலுக்குக் கிடைக்கிறது என்பதைக் கவனியுங்கள்: 1. காய்கறிகள் 2. மாமிச உணவுகள் 3. குடிக்கும் தண்ணீர் இவை மூலமே, எங்கள் உடலின் அடிப்படைத் தேவையான 1.5 கிராம் உப்பு கிடைத்து விடுகிறது! இதை விட ஆசிய உணவுகளில் சேர்க்கப் படும் மசாலாக்களிலும் போதிய உப்பு இருக்கிறது. எனவே, நாம் தனியாகச் சேர்க்கும் உப்பு இவையெல்லாவற்றையும் விட மேலதிகமான உப்பு என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்! 3. சிறுநீரக் கல்லில் கல்சியம் எங்கே வருகிறது? கல்சியம் எங்கள் எலும்புகளுக்கும், வேறு சில உடற்றொழில்களுக்கும் அவசியமான ஒரு கனிமம். மேலே பலராலும் (மருத்துவர்கள் உட்பட) குறிப்பிடப் பட்டிருப்பது போல, அதீத கல்சியம் மட்டுமே சிறுநீரகக் கல்லை உருவாக்கும் என்பது தவறான ஒரு புரிதல்! முன்னர் நாம் பார்த்தது போல, நீர் அருந்துவதும் குறைந்து, உப்பும் அதிகரித்தால் , நாம் எடுத்துக் கொள்ளும் கல்சியம் சிறுநீரில் செறிவாகி கல்லை ஏற்படுத்தும். எனவே, அதிகரித்த கல்சியம் மட்டுமே சிறுநீர்க்கல்லை ஏற்படுத்தாது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்! எனவே, சிறுநீரகக் கற்களைத் தவிர்க்க, பாலுணவுகள் மூலம் கிடைக்கும் கல்சியத்தை நாம் குறைக்க வேண்டுமென்பது ஒரு தவறான ஆலோசனையாக இருக்கிறது. உண்மையில், அமெரிக்க சிறுநீரக ஆய்வு அமைப்பின் (Kidney Foundation) ஆலோசனையின் படி, பாலுணவுகள் மூலம் நாம் எடுத்துக் கொள்ளும் கல்சியம், சில வகையான சிறு நீரகக் கற்களைத் தடுக்கும் என்பதால், பாலுணவுகளை நாம் போதியளவு எடுத்துக் கொள்ள வேண்டுமென்கிறார்கள்! இது ஏன் எனப் புரிய நாம் ஒக்சலேற் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்! 4. பெரும்பான்மையானவை கல்சியம் ஒக்சலேற் கற்கள்: நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல, பெரும்பாலான சிறு நீரகக் கற்கள் கல்சியம் ஒக்சலேற் கற்களாகும். இதன் காரணம், எங்கள் சாதாரண உடற்தொழிற்பாடுகளின் பக்க விளைவாகவும், நாம் எடுத்துக் கொள்ளும் உணவின் வழியாகவும் ஒக்சலேற்றுகள் எங்கள் உடலினுள் அதிகரிக்கின்றன. கல்சியம் அயனி அந்த ஒக்சலேற்றோடு சேர்ந்து கொள்ளும் போது, "கல்சியம் ஒக்சலேற்" என்ற நீரில் இலகுவில் கரையாத பளிங்கு உப்பு உருவாகிறது: இந்தப் பளிங்கு உப்பு சிறு நீரில் உருவானால் கல்சியம் ஒக்சலேற் சிறு நீரகக் கல் உருவாகும்! நிற்க: நீரில் இலகுவில் கரையாத கல்சியம் ஒக்சலேற் எங்கள் குடலில் உருவானால், அது உடலினுள் உறிஞ்சப் படுவது குறையும். அதே போல நீரில் இலகுவில் கரையாத கல்சியம் ஒக்சலேற் எங்கள் உடலினுள் உருவானால், அது எலும்புகளினுள் உள்ளீர்க்கப் பட்டு, சிறு நீரகத்தினால் அகற்றப் படாமல் தங்கும்! இதனால் தான், நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் கல்சியத்தை எடுத்துக் கொள்ளும் போது, குடலிலும், எலும்பிலும் ஒக்சலேற்றினைச் சிறைப்பிடித்து, சிறு நீரகக் கல் உருவாவவதைத் தடுப்பதாக பெரும்பாலான மருத்துவர்கள் வாதிக்கின்றனர். 5. எனவே, கல்சியம் ஒக்சலேற் கல் உருவாகாமல் தடுக்க, ஒக்சலேற்றைக் குறைக்க வேண்டும்! ஒக்சலேற் உடலினுள் சாதாரணமாக உருவாகும் ஒரு பக்க விளைவுப் பொருள். அது கல்சியம் ஒக்சலேற் கற்களை அதிகரிக்காமல் இருக்க, தண்ணீர் போதியளவு அருந்துதல், உப்பைக் குறைத்தல், போதியளவு கல்சியம் உணவு மூலம் எடுத்துக் கொள்ளல் என்பன முக்கியமான செயல்பாடுகள்! குடலில் இருந்து உணவு மூலம் உள்ளே வரும் ஒக்சலேற்றைக் குறைக்க வேறென்ன செய்யலாம்? இரண்டு வழிகள் இருக்கின்றன: 1. ஒக்சலேற் அதிகம் கொண்ட உணவுகளை மிதமாக உள்ளெடுத்தல் (தவிர்க்க வேண்டிய அவசியம் அனேகமானோரில் ஏற்படாது தக்காளி, எள்ளுணவுகள், "முந்தானை முடிச்சு" புகழ் முருங்கைக்காய் , முருங்கைக் கீரை ஆகியன ஒக்சலேற் அதிகம் கொண்ட தாவர உணவுகள். இவற்றை தினசரி உட் கொள்வதைத் தவிர்க்கலாம். 2. ஒரு புதிய ஒக்சலேற் தடுப்பு முறை: எங்கள் குடலில் இருக்கும் பற்றீரிய வகை நுண்ணங்கிகளால் எங்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய அனுகூலங்கள் பல. ஒக்சலோபக்ரர் fபோர்மிஜனேஸ் (Oxalobacter formigenes) எனப்படும் ஒரு குடல் பற்றீரியா, உணவில் இருக்கும் ஒக்சலேற்றை உள்வாங்கி அதை அழித்து விடும் வல்லமை மிக்கது. சிறுவயதினரின் குடலில் அதிகம் காணப்படும் இந்த பற்றீரியா, வளர்ந்தோரில் அதிகம் இல்லாமல் ஒழிந்து போவதற்கு நவீன உணவுப் பழக்க வழக்கங்கள் காரணமாக இருக்கலாமென நம்புகிறார்கள். ஒரு ஆய்வின் முடிவின் படி, அமேசன் காடுகளை அண்டிய பகுதிகளில் தாவர உணவுகளை அதிகம் உண்டு வாழும் ஆதிவாசி மக்களின் குடலில், இந்த ஒக்சலோபக்ரர் பற்றீரியாக்கள் அமெரிக்க மக்களின் குடலில் இருப்பதை விட அதிகம் காணப்படுவதாகக் கண்டறிந்திருக்கிறார்கள். இதனால் அமேசன் ஆதிவாசிகளில் சிறு நீரகக் கல் உருவாகும் ஆபத்தும் சிறிதளவு குறைந்ததாகத் தெரிகிறது. ஒக்சலோபக்ரர் பற்றீரியாவின் அளவை எங்கள் குடலில் அதிகரிக்க இலகுவாக நாம் செய்யக் கூடியது, உணவில் நார்ச்சத்தை அதிகரிப்பதாகும். அதிக மரக்கறிகள், பழங்களை எடுத்துக் கொள்ளும் போது இரு நன்மைகள் சிறு நீரகக் கல் சார்ந்து எமக்கு ஏற்படலாம்: 1. ஒக்சலோபக்ரர் உட்பட்ட குடல் பற்றீரியாக்களின் அளவு அதிகரிப்பதால் உணவின் மூலம் வரும் ஒக்சலேற்றின் அளவு குறைக்கப் படும். 2. தாவர உணவின் காரணமாக எங்கள் சிறுநீரின் காரத்தன்மை அதிகரிக்கும் போது, அதனாலும் கல்சியம் ஒக்சலேற் கற்கள் உருவாகும் வாய்ப்புகள் குறையும். எனவே, சுருக்கமாக பிரதான வகை சிறுநீரகக் கல்லான கல்சியம் ஒக்சலேற் கற்கள் உருவாகாமல் குறைக்க எமக்குள்ள வழிகள் இவை: 1. போதியளவு தண்ணீர். 2. உணவில் குறைந்த உப்பு 3. போதியளவு கல்சியம் - பாலுணவுகள் மூலம். 4. குறைந்த ஒக்சலேற் கொண்ட உணவுகள். 5. அதிக நார்த்தன்மை கொண்ட உணவுகள். தொகுப்பு: ஜஸ்ரின்
 14. ஞானப்பிராகாசன், அருமையான உரை, பல விடயங்களைத் தெளிவாக்கிய உரை. நீங்கள் குறிப்பிட்ட சில சொற்றொடர் வகைகள் பல வருடங்கள் முன்பு படித்த தமிழ் இலக்கணத்தின் நினைவைக் கிளறியது. இவை பற்றி யாழிலும் எழுதுங்கள். நன்றி
 15. கோசான், பொதுவாக எங்கள் சிறு நீரகத்தில் வடிகட்டலைப் பாதிக்கும் மருந்துகள் சிறு நீரைச் செறிவாக்கி ( கற்களை உருவாக்கும் ஆபத்தைக் கூட்டும் (ஆனால், தண்ணீரை போதியளவு குடித்து hydration ஐப் பேணினால் இந்த ஆபத்தையும் குறைக்கலாம்). இப்படிக் கல் தரும் மருந்து வகைகள் சில: 1. சிறுநீர் கழிப்பூக்கிகள்(diuretics): இவை சிறு நீர் கழிவதை அதிகரிக்கும் மருந்துகள். உதாரணம்: furosemide 2. வேறு சில மருந்துகள், சிறு நீரின் அமில காரத்தன்மையை (pH) மாற்றுவதால் கல் உருவாகும் நிலைமையை அதிகரிப்பவை: உதாரணம்: சில வலிப்பு எதிர்ப்பான் மருந்துகள் (anti-epileptics): Topiramate, acetazolamide, Zonisamide 3. சில மருந்துகள் , எங்கள் ஈரலினால் சுத்திகரிக்கப் படும்போது உருவாகும் பக்க விளைவுப் பொருட்கள் சிறு நீரில் செறிவானால், அந்தப் பக்க விளைவுப் பொருட்களே கற்களை உருவாக்கும்: சில உதாரணங்கள்: சிப்றோ வகை நுண்ணுயிர் கொல்லிகள் (ciprofloxacin) சல்பா வகை நுண்ணுயிர் கொல்லிகள் (sulfamethoxazole) இந்தினாவிர் (Indinavir) என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்து (எச்.ஐ.வி நோயாளிகளில் பாவிப்பது) ஆனால், இந்த மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளாக சிறுநீரகக் கல் இருப்பதால், மருந்தைத் தரும் போதே உங்களுக்கு இது பற்றிய எச்சரிக்கையையும் தருவார்கள்: தண்ணீர் நன்கு குடிக்க வேண்டும், வேறு சிறு நீரக வடிகட்டலைப் பாதிக்கும் மருந்துகளோடு சேர்த்து எடுக்கக் கூடாது, போன்ற ஆலோசனைகள் தரப்படும்!
 16. ஓ..இது வழமையான பெருமாள் பிரச்சினை - தமிழ் கிரகிப்பின் சவால்: நான் "என்னை நினைச்சீங்களா தும்மினது" என்றதை " பீற்றருக்கு இன்னும் கூட அடிச்சிருக்க வேண்டுமென்று!" விளங்கியிருக்கிறார்! இதுக்கு என்னிடம் தீர்வில்லை!
 17. சுத்து மாத்தாக நடந்த அந்தத் தேர்தலில் விக்கி ஐயா, கஜேந்திரன், கஜேந்திரகுமார் எல்லாரும் வென்றார்கள் என்கிறீர்கள்! அந்த பீற்றர் தாக்கப் பட்ட விடயத்தில் இன்னும் தாக்கியிருக்க வேணுமெண்டு நான் எழுதியதை ஒருக்கா மேற்கோள் காட்டினால், பெருமாளின் omnipresent "நம்பகத் தன்மையை" யாழ் வாசகர்கள் அறிய உதவியாய் இருக்குமே? செய்வீர்களா? கூவி கூவி உங்களைப் போன்ற சுமந்திரன் "லவ்வு" அதீதமாகக் கொண்ட புலம்பெயர் தமிழர்கள் மட்டும் தான் அடிக்கிறார்கள் - அவர்களுள் சிலர் றௌடிகள் என்பதும் பல சம்பவங்களில் தெரிய வந்த விடயம். தாயக மக்கள் வாக்குகளைப் போட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர். கோழி தினமும் கூவுவது அதன் கடமை, ஆனால் விடிவது அதனால் என நினைப்பது சுத்த மடமை!
 18. பெருமாள்: உலகம் என்ன ஷேப்? ருல்பென்: கோளம், மேலே கீழே கொஞ்சம் தட்டை! ஜஸ்ரின்: ருல்பென் சொன்னது தான் என் பதிலும்! பெருமாள்: ஆ..அது செல்லாது , இன்னொருவர் பதிலை ஏற்றுக் கொள்வது குழுவாதம்- உது விதி மீறல்! ஜஸ்ரின்: விடுங்க, பெருமாள் மீண்டும் மீண்டும் பொல்லோடு வராமல்! மடை மாற்றல் இல்லை: யோசப் ஐயா, கஜேந்திரன் வேறு வழி. சுமந்திரன் வேறு வழி. அச்சில் வார்த்தது போல எல்லாரும் இருந்தால் நின்ற இடத்திலேயே நிற்க வேண்டியது தான்! தெரிவு செய்த மக்கள் பிடிக்கா விட்டால் அகற்றுவர். இது தான் ஜனநாயகம்! உங்களுக்கு கொஞ்சம் புதிசு தான், புரிகிறது!
 19. சரி, உங்களுக்கு மருந்துகளால் தான் கல் வந்தது என்ற சந்தேகம் தலை தூக்கி விட்டது என நினைக்கிறேன். மருத்துவர் சொன்னது போல, அப்படி கல் உருவாக்கும் சில மருந்துகள் உண்டு, ஆனால் இரத்த அழுத்த மாத்திரை, கொழுப்புக் குறைக்கும்/நீரிழிவு மருந்துகளில் அந்தப் பக்க விளைவு இல்லை, அவர் சொன்னது சரியானதே! பின் வரும் நான்கு வகையான கற்களில் எந்த வகை என்று உங்கள் அறிக்கையில் இருக்கிறதா என்று ஒரு தடவை பார்த்துச் சொல்ல முடியுமா? (கல் வகையை வைத்து என்ன நடந்திருக்கிறது என ஓரளவு புரிந்து கொள்ளலாம்): 1. ஒக்சலேற் -oxalate (மிக அதிகமானோருக்கு வருவது) 2. யூறேற் -Urate (இரண்டாவது மிக அதிகமாக வரும் கல்) 3. ஸ்ருவைற்-Struvite (மிக அரிது) 4. சிஸ்ரின் - Cystine (மிக அரிது)
 20. எல்லாவற்றையும் சுமந்திரன் பொது மேடையில் சொல்ல வேண்டுமென்று எதிர்பார்க்கும் நிலாந்தன் இறுதிப் போர்க்காலத்தில் வன்னியில் நடந்த சம்பவங்களைப் பற்றிப் பேசுவதேயில்லையாம். ஏன் என்று கேட்டால் "நான் உண்மைகளை அடைகாக்கிறேன்" என்பாராம்! இதனாலேயே எழுத்தாளர் கற்சுறா நிலாந்தனை ஒரு "அடை காக்கும் கோழி" என்று அழைத்தார் ஓரிடத்தில்! நீங்க "பின் கதவால்" எனும் போது மாமனிதர் பட்டம் பெற்ற அமரர் யோசப் ஐயாவையும், தற்போது "பின் கதவால்" வந்திருக்கும் கஜேந்திரனையும் சேர்த்தே திட்டுகிறீர்கள் என்று புரிவதில்லைப் போல?
 21. சிங்கப்பூர் பெரும்பாலும் அமைதிப்பூங்காவாக இருப்பதற்குக் காரணம் கொஞ்சம் இறுக்கமான பேச்சுச் சுதந்திரத்தோடு பின்னப் பட்ட ஜனநாயக அமைப்பு. மதம், இனம் போன்றவற்றை சுட்டிப் பேசும் அல்லது இழிவு செய்யும் எவர் மீதும் சட்டம் பாயும்! இவர்கள் அப்படி நடந்தார்களா என அறியேன்! ஆனால் இணையக் கண்காணிப்பில் நாம் தமிழர் தம்பிகளின் "வன்முறைக் காதல்" கலந்த சொல்லாடலைக் கண்டிருப்பார்கள் என ஊகிக்கிறேன்!
 22. இது தான் புலம்பெயர் தமிழர் அமைப்புகள்/பாடசாலைகளில் நாம் தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடுவது.
 23. குமாரசாமியர் பொதுநலம் செறிந்த இன்னொரு திரியை ஆரம்பித்திருக்கிறார். அவர் முழுவதும் எழுதி முடிய இந்த சிறு நீரகக் கல் தடுப்பு பற்றி எழுதுகிறேன்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.