Jump to content

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8242
  • Joined

  • Last visited

  • Days Won

    100

ரஞ்சித் last won the day on February 28

ரஞ்சித் had the most liked content!

About ரஞ்சித்

  • Birthday 12/05/1973

Contact Methods

  • ICQ
    0
  • Yahoo
    anton_devaranjith@yahoo.com

Profile Information

  • Gender
    Male
  • Location
    Sydney
  • Interests
    Politics, music, sports.

Recent Profile Visitors

16054 profile views

ரஞ்சித்'s Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • Posting Machine Rare
  • Collaborator

Recent Badges

4.9k

Reputation

  1. 2009 இல் வன்னியில் இவ்வாறு நிவாரணத்தை எதிர்பார்த்துநின்ற வேளை பலநூற்றுக்கணக்கானோரை இலங்கை விமானப்படை குண்டுவீசிக் கொன்றது. இன்று இஸ்ரேல் செய்வது அன்று இலங்கை செய்ததைத்தான். மேற்குக் கரையில் அடாத்தாக இஸ்ரேலியர்களைக் குடியேற்றி அவர்களை இராணுவமயப்படுத்துவது போலவே முல்லைத்தீவில் சிங்களவர்களைக் குடியேற்றி இராணுவமயப்படுத்தி வருகிறோம் என்று 1985 இல் இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகவே கூறியது. இன்று இஸ்ரேலை ஆதரிப்பவர்கள், உண்மையிலேயே தமிழ் மக்கள் மீதான இனக்கொலையினை ஆதரிக்கிறார்கள் என்றே பொருள். இஸ்ரேலும், இலங்கையும் இனவழிப்பில் இணைந்தே செயற்பட்டு வருகின்றன. புரிந்துகொள்பவர்கள் புரிந்துகொள்ளட்டும்.
  2. கொக்கிளாய் இராணுவ முகாம் தாக்குதல் அச்சுவேலியில் அமைந்திருந்த தமது முகாமை இராணுவத்தினர் தாக்கியமைக்குப் பழிவாங்கலாக இராணுவத்தினரின் நன்கு பலப்படுத்தப்பட்டிருந்த முகாம் ஒன்றினைத் தாக்க புலிகள் முடிவெடுத்தனர். மாசி மாதம் 13 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாம் மீது இராணுவச் சீருடையில் வந்த சுமார் 100 புலிகள் தாக்குதலைத் தொடுத்தனர். வடமாகாணத்தின் தெற்கு எல்லையில் அமைக்கப்பட்டுவந்த சிங்களக் குடியேற்றங்களைப் பாதுகாப்பதற்கென்று அரசாங்கத்தால் இவ்வருட ஆரம்பத்திலேயே இந்த முகாம் அமைக்கப்பட்டிருந்தது. காலை புலரும் முன்னர் மாத்தையா தலைமையில் முகாமைச் சுற்றிவளைத்துக்கொண்ட புலிகள் சிறுது சிறிதாக முகாமை அண்மித்து நிலையெடுத்துக்கொண்டனர். முகாமின் காப்பரண் ஒன்றில் கடமையிலிருந்த இராணுவத்தினன் ஒருவன் முகாமிற்கு அருகில் நிலையெடுத்திருந்த புலிகளைக் கண்டவுடன் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட ஆரம்பித்தான். தமது இருப்புத் தெரியவந்ததையடுத்து வேறு வழியின்றி புலிகள் தாக்குதலை ஆரம்பித்தனர். கிர்ணேட் உந்துகணைச் செலுத்திகள், இயந்திரத் துப்பாக்கிகள் கொண்டு புலிகள் தாக்கினார்கள். தமது இராணுவத்தினன் ஒருவனின் முயற்சியால் சுதாரித்துக்கொண்ட முகாமினுள் இருந்த இராணுவத்தினர் பாதுகாப்பாக நிலையெடுத்து திருப்பித் தாக்கத் தொடங்கினார்கள். சுமார் 5 மணிநேரம் கடுமையாக நடைபெற்ற சண்டையினையடுத்து புலிகள் பின்வாங்க முடிவெடுத்தார்கள். இச்சண்டையில் புலிகளில் 14 பேரைத் தாம் கொன்றுவிட்டதாகவும் தம்மில் 4 இராணுவத்தினர் பலியானதாகவும் அரசாங்கம் அறிவித்தது. சென்னையில் இயங்கிவந்த புலிகளின் அரசியற் பணிமனை வெளியிட்ட அறிக்கையில் 106 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் 16 போராளிகள் வீரமரணம் அடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. போரில் எதிரிகளின் இழப்பினை அதிகமாகக் காட்டுவதும், தம்பக்க இழப்புக்களை குறைத்துக் காட்டுவதும் காலம் காலமாக போரில் ஈடுபடுபவர்கள் செய்துவரும் ஒரு செயல். இச்செயலுக்கு இலங்கை இராணுவமோ அல்லது தமிழ்ப் போராளிகளோ விதிவிலக்கல்ல. போரில் கொல்லப்படும் தமது போராளிகளின் விபரங்களை அப்படியே வெளியிடுவது என்பது புலிகளின் கொள்கை. கொல்லப்பட்ட போராளிகளின் எண்ணிக்கை, அவர்களின் பெயர்கள் என்று அனைத்து விடயங்களும் புலிகளால் காலக்கிரமமாக வெளியிடப்பட்டே வந்தன. ஆனால், இராணுவத்தின் இழப்புக்களை அதிகரித்துக் காட்டும் நடைமுறை புலிகளுக்கும் இருந்தது. ஆனால், இராணுவமோ சர்வதேச நடைமுறையான எதிரியின் இழப்புக்களைப் பன்மடங்கு அதிகரித்தும், தன்பக்க இழப்புக்களை வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டும் செய்தி வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. புலிகளால் 106 இராணுவத்தினர் கொக்கிளாயில் கொல்லப்பட்டார்கள் என்கிற செய்தி தமிழ் மக்களை உற்சாகப்படுத்தியிருந்தது. கொக்கிளாயில் நன்கு பலப்படுத்தப்பட்ட இராணுவ முகாம் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதல் அரசாங்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. உடனடியாக தேசியப் பாதுகாப்புச் சபையினைக் கூட்டிய அரசாங்கம், முப்படைகளின் தளபதிகள், ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகர் ரவி ஜயவர்த்தன ஆகியோருடன் கொக்கிளாய் இராணுவ முகாம் நிலைமைகள் குறித்து ஆராய்ந்தது. ஒவ்வொரு திங்கள் காலையிலும் தேசிய பாதுகாப்புச் சபை கூடுவது வழமை. ஜெயாரே அதற்குத் தலைமை தாங்குவார். இச்சபையின் ஏனைய உறுப்பினர்களாக தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித், ஜனாதிபதியின் ஆலோசகர் ரவி, முப்படைகளின் தளபதிகள், பொலீஸ் மா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் அங்கம் வகித்தனர். கொல்லப்பட்ட புலிகளின் உடல்களையும் அவர்களிடமிருந்த ஆயுதங்களையும் ரவி ஜயவர்த்தனவும், முப்படைகளின் தளபதிகளும் பார்த்தபோது மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். கொல்லப்பட்ட போராளிகள் இராணுவச் சீருடையில் காணப்பட்டதோடு அவர்களிடம் உணவுப் பொட்டலங்கள், தண்ணீர், மருந்துவகைகள் என்பன காணப்பட்டன. இரவு நேரத்தில் பார்க்கும் உபகரணங்கள், ஏ.கே - 47 மற்றும் எம் - 16 ரக நவீன துப்பாக்கிகளும், கிர்ணேட்டுக்களும் அவர்களிடம் இருந்தன. கிர்ணேட் உந்துகணைச் செலுத்திகளை பின்வாங்கிய புலிகள் தம்முடன் எடுத்துச் சென்றிருந்தனர். பாதுகாப்புச் சபைக்கு இத்தாக்குதல் தொடர்பாக ரவி ஜயவர்த்தன வழங்கிய அறிக்கையில் கொக்கிளாய்த் தாக்குதலின் மூலம் இனப்பிரச்சினை முழு அளவிலான போராக உருமாறியிருப்பது தெளிவாகிறது என்று குறிப்பிட்டிருந்தார். நவீன ஆயுதங்களுடன் போரிடும் எதிரியை எதிர்கொள்வதற்கு இராணுவமும் தயார்ப்படுத்தப்படுவது அவசியம் என்று அவர் கூறியிருந்தார். சண் பத்திரிக்கை இத்தாக்குதல் குறித்து பின்வருமாறு எழுதியது, இது இன்னொரு பயங்கரவாதத் தாக்குதல் அல்ல. இராணுவத்தினரின் மீது கிர்ணேட்டுக்கள், மோட்டார் எறிகணைகள், ரொக்கெட் உந்துகணைகள், தாக்குதல்த் துப்பாக்கிகள் கொண்டு மூர்க்கத்தனமாகத் தாக்கியிருக்கிறார்கள். பாதுகாப்புப் படைகளுடன் நேருக்கு நேராகப் பயங்கரவாதிகள் மோதிக்கொண்டது இதுவே முதல்முறையாகும். இரு நாட்களுக்கு முன்னரும் காரைநகர் கடற்படை முகாம் மீதும், வல்வெட்டித்துறை, குருநகர், நெல்லியடி மற்றும் ஆனையிறவு ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த இராணுவ முகாம்கள் மீதும் தாக்குதல் முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. இப்போது முதன்முறையாக ஒரு இராணுவ முகாம் மீது நேரடியான தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் சண் பத்திரிக்கை குறிப்பிட்ட ஏனைய முகாம்கள் மீதான தாக்குதல் என்பது தூரவிருந்து குறிப்பார்துச் சுடும் தாக்குதல்கள். குருநகர் மீதான தாக்குதலை நடத்தியவர் கிட்டு. பலாலிக்கும் குருநகருக்கும் இடையே விமானப்படை உலங்குவானூர்திகள் அடிக்கடி பறப்பில் ஈடுபடுவதுண்டு. குருநகர் முகாமின் உலங்கு வானூர்தி தரையிறங்கும் பகுதியினை அருகிலிருக்கும் இரண்டுமாடிக் கட்டடம் ஒன்றில் இருந்து பார்த்தால் தெளிவாகத் தெரியும். ஒருநாள் குருநகரில் தரையிறங்கிக்கொண்டிருந்த உலங்குவானூர்தி மீது அக்கட்டடத்திலிருந்து கிர்ணேட் உந்துகணைச் செலுத்தியினால் கிட்டு சுட்டார். ஆனால், இலக்குத் தவறிவிட்டது. உலங்கு வானூர்தியிலிருந்து சில மீட்டர்கள் தூறத்தில் அது வீழ்ந்து வெடித்தது. விமானப்படையினர் மீது புலிகள் நடத்திய முதலாவது தாக்குதல் அது. கொக்கிளாய் முகாம் மீதான புலிகளின் தாக்குதலின் மூலம் தமிழ் ஆயுதப் போராட்டம் புதிய நிலை ஒன்றினை அடைந்திருப்பதை ஜெயவர்த்தன உணர்ந்துகொண்டார். மாசி 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசிய ஜெயார் இதுகுறித்தும் பேசினார். இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திவிட்டு ஓடும் செயற்பாட்டில் இதுவரை ஈடுபட்டிருந்த தமிழ் இளைஞர்கள் தற்போது நன்கு பலப்படுத்தப்பட்ட இராணுவ முகாம் மீது நேரடியாகத் தாக்குதல் நடத்தும் நிலைக்கு உயர்ந்திருப்பதாக அவர் கூறினார். தேவையானளவு பயிற்சியினையும், ஆயுதங்களை அவர்கள் பெற்றுக்கொண்டபின்னர் இறுதியானதும், தீர்க்கமானதுமான தாக்குதல் ஒன்றினை நடத்துவதன் மூலம் தமது இலட்சியத்தை அவர்கள் அடைந்துவிடுவார்கள் என்று அவர் எச்சரித்தார். மேலும் இலங்கையின் இதயப்பகுதி என்று தான் அழைத்த பகுதிகள் மீதும் அவர்கள் தாக்கக் கூடும் என்று எச்சரித்த ஜெயார், இவை நடக்கும் கால எல்லை குறித்து எதுவும் கூறவில்லை. அவ்வருடம் புதுவருட நாளுக்கு முன்னர் போராளிகள் தமது இறுதித் தாக்குதலை நடத்தலாம் என்று அதுலத் முதலி எதிர்வுகூறினார். தமிழர் தாயகத்தினை சிறுகச் சிறுக அபகரிக்க தான் ஏற்படுத்திவந்த எல்லையோரச் சிங்களக் கிராமங்களை நியாயபடுத்தவும், தனது ஊர்காவல்ப் படைத் திட்டத்தின் மூலம் இக் குடியேற்றங்களை இராணுவமயப்படுத்தும் தனது நோக்கத்தினை முடுக்கிவிடவுமே போராளிகள் இறுதித் தாக்குதலுக்குத் தயாராகி வருகிறார்கள் எனும் செய்தியை ஜெயார் பரப்பத் தொடங்கியிருந்தார். மாசிமாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது நாட்டின் எப்பகுதியையும் ஒரு குறிப்பிட்ட இனம் தனது பூர்வீகத் தாயகம் எனும் கோருவதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று அறிவித்தார். நாட்டின் சனத்தொகை விகிதாசாரத்திற்கு அமைவாக குடியேற்றங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார் . 1985 ஆம் ஆண்டு மன்னார் முதல் முல்லைத்தீவு வரையான வன்னியின் உலர்வலயப் பகுதிகளில் தெற்கிலிருந்து 30,000 சிங்களவர்களைக் கொண்டுவந்து குடியேற்றும் தனது திட்டத்தினை மனதில் வைத்தே இதனை அவர் தெரிவித்திருந்தார். இவ்வாறு வன்னியில் குடியேற்றப்படும் ஒவ்வொரு சிங்களக் குடும்பத்திற்கும் தலா அரை ஏக்கர் நிலம் வழங்கப்படுவதோடு வீடு கட்டுவதற்கான பணமும் அரசால் வழங்கப்பட ஏற்பாடாகியிருந்தது. வன்னியில் இவ்வாறு அமைக்கப்படும் ஒவ்வொரு சிங்களக் குடியேற்றத்தினதும் பாதுகாப்பிற்கென்று 25 இயந்திரத் துப்பாக்கிகளும் 200 ரைபிள்களும் இராணுவத்தால் வழங்கப்படவிருந்தன. மேலும், மாசி 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அவர் தொடர்ந்தும் பேசும்பொழுது "நாம் சிங்களவர்களை எல்லைகளில் குடியேற்றி, அதனை விஸ்த்தரிக்காவிட்டால், அவ்வெல்லை எம்மை நோக்கி நகரத் தொட‌ங்கும்" என்று தான் நடத்திவந்த குடியேற்றங்களை நியாயப்படுத்தினார். Far Eastern Economic Review எனும் பத்திரிகைக்குப் பேட்டியளித்த காமிணி திசாநாயக்க,சிங்களக் குடியேற்றங்கள் இராணுவமயப்படுத்தப்படுவது அவசியமானது என்று வாதிட்டார். இஸ்ரேலின் மேற்குக்கரைக் கொள்கையினை அடிப்படையாக வைத்தே தாம் சிங்களக் குடியேற்றங்களை இராணுவ மயப்படுத்தி வருவதாக அவர் கூறினார். தமிழ் மக்களின் ஆயுத ரீதியிலான விடுதலைப் போராட்டத்தினை அழிப்பதற்கான ஒரே வழி அவர்கள் மீது பாரிய படுகொலைகளைப் புரிவதன் மூலம் அச்சப்படுத்தி, ஈற்றில் போராட்டத்தைக் கைவிடப்பண்ணுதல் தான் என்று ஜெயவர்த்தனவின் அரசாங்கம் எண்ணியது. அத்திட்டத்தின்படி, கொக்கிளாய் முகாம் மீதான தாக்குதலுக்குப் பழிவாங்கலாக, மாசி 15 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினர் படுகொலைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். இந்நாள் தாக்குதலில் மட்டும் 52 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் "தமிழ்ப் பிரிவினைவாதிகள்" என்று லலித் அதுலத் முதலி அறிவித்தார். ஆனால், கொல்லப்பட்ட அனைவரும் அப்பகுதியில் அகதிகள் முகாமிலிருந்து இராணுவத்தால் இழுத்துச் செல்லப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களே என்று உள்ளூர் வாசிகள் உறுதிப்படுத்தினர். தமிழ் மக்கள் மீதான அரசாங்கத்தின் திட்டமிட்ட படுகொலைகளும், தமிழர்களின் பூர்வீக நிலங்களில் இருந்து அவர்கள் முற்றாக விரட்டியடிக்கப்பட்டமையும் நிலைமையினை மிகவும் மோசமாக்கியிருந்தது. இவ்வாறு விரட்டப்பட்ட மக்களினால் தமிழர் தாயகம் கடுமையான இடப்பெயர்வுகளையும், தாயகத்திற்குள்ளேயே தமிழ்மக்கள் அகதிகளாகும் நிலைமையினையும் எதிர்கொண்டது. இதன் பக்கவிளைவாக பெருமளவு இளைஞர்கள் தமிழ்ப் போராளி அமைப்புக்களில் தம்மை இணைத்துக்கொள்ளத் தொடங்கினர். இவ்வாறு இடப்பெயர்வினைச் சந்தித்த பெருமளவு குடும்பங்கள் இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல, அக்குடும்பங்களின் இளைஞர் யுவதிகள் ஆயுத அமைப்புக்களில் இணைந்துகொண்டனர். தமிழர்கள் அகதிகளாகிவரும் பிரச்சினை சர்வதேசப் பிரச்சினையாக உருமாறத் தொடங்கியது. இப்படுகொலைகளை எதிர்த்து அமிர்தலிங்கம் விமர்சனத்தில் ஈடுபட்டார். இந்தியா உடனடியாக இராணுவ ரீதியில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையினையும் அவர் முன்வைத்தார். "1970 முதல் 1971 வரையான காலப்பகுதியில் கிழக்கு வங்கத்தில் நிலவிய சூழ்நிலைக்கு ஒத்த சூழ்நிலை இலங்கையின் தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கில் நிலவுகிறது. தமிழ் மக்கள் மீதான இனக்கொலையினை நிறுத்துவதற்கு இந்தியா இராணுவ ரீதியில் தலையிட வேண்டும்" என்று அவர் சென்னையிலிருந்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். தமிழ் ஈழம் ஆதரவு அமைப்பு (TESO) எனும் பெயரில் தமிழ்நாட்டில் இயங்கிவந்த அமைப்பின் தலைவராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருநாநிதி செயற்பட்டு வந்தார். முல்லைத்தீவில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்த படுகொலைகளை இவ்வமைப்பு அறிக்கை ஒன்றின்மூலம் கண்டித்திருந்தது. அமிர்தலிங்கத்தின் கோரிக்கையினை ஆதரித்து இந்திய இராணுவத் தலையீட்டினைக் கோரிய இவ்வறிக்கை, இந்தியா தமிழ்மக்கள் தொடர்பில் மாற்றாந்தாய் மனப்பாங்குடன் செயற்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டி இருந்தது. மேலும், இப்படுகொலைகளையடுத்து பல படகுகளில் ஈழத் தமிழர்கள் தமிழகம் நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் இவ்வறிக்கை கூறியது. வீரமணி ‍- திராவிடர் கழகம் கருநாநிதியினால் அரசியல் இலாபம் கருதி உருவாக்கப்பட்ட டெஸோ அமைப்பு நெடுநாள் நீடித்து நிற்கவில்லை. இவ்வமைப்பில் திராவிடர் கழகத்தின் வீரமணி மற்றும் நெடுமாறன் ஆகியோர் ஒருகாலத்தில் இணைந்து செயற்பட்டு வந்தனர். இவ்வமைப்பு மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்திருந்தது. 1. தமிழர்களைப் பாதுகாப்பதற்கு இந்தியா இராணுவத்தை அனுப்ப வேண்டும். 2. இலங்கையுடனான சகல இராஜதந்திரத் தொடர்புகளையும் இந்தியா இரத்துச் செய்ய வேண்டும். 3. தமிழ் ஈழம் பிறப்பெடுக்க இந்தியா உதவிட வேண்டும் ஆகியவையே அம்மூன்று கோரிக்கைகளுமாகும். இலங்கையில் இந்தியா இராணுவ ரீதியில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து கருநாநிதி போராட்டங்களை ஆரம்பித்தார். இப்போராட்டங்களை முடக்கிவிட எத்தனித்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் , கருநாநிதியையும் அவரது ஆதரவாளர்களையும் கைதுசெய்யுமாறு பொலீஸாருக்கு உத்தரவிட்டார். கருநாநிதியும் அவரது 8000 தொண்டர்களும் சிறையிலடைக்கப்பட்டார்கள். இதனையடுத்து ஈழத்தமிழர் மீது எம்.ஜி.ஆர் இற்கு அக்கறையில்லை என்று திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கினார்கள். தான் எதிர்பார்த்த இலக்குகளை அடையாமலேயே டெஸோ அமைப்பு கலைந்து போனது. கருநாநிதி டெலோ அமைப்பினை ஆதரிக்க, வீரமணியும், நெடுமாறனும் புலிகளை ஆதரித்து வந்தனர். டெலோ அமைப்பைத் தவிர அனைத்து தமிழ் ஆயுத அமைப்புக்களும் டெஸோவிடமிருந்து தம்மை விலத்தியே வைத்திருந்தன.
  3. புலிகளின் அச்சுவேலி முகாம் சுற்றிவளைப்பும் பண்டிதரின் வீரமரணமும் 1984 ஆம் ஆண்டு ஐப்பசி 31 ஆம் நாள் இந்திரா காந்தி கொல்லப்பட்ட போது ஜெயார் தனக்கான சந்தர்ப்பம் ஒன்று கனிந்து வந்திருப்பதாக எண்ணினார். ஆகவேதான் அன்றுவரை தான் நடத்துவதாகப் பாசாங்கு செய்து வந்த சர்வ கட்சி மாநாட்டினை முற்றாக மூட்டை கட்டி வைத்துவிட்டு தனது ஒற்றை நோக்கமான இராணுவ ரீதியில் தமிழர்களின் அபிலாஷைகளை அழித்தலை ஆரம்பித்தார். மார்கழி 26 ஆம் திகதி சர்வகட்சி மாநாடு ஜெயாரினால் திடீரென்று கலைத்துப் போடப்பட்டது. தனது இராணுவ அதிகாரிகளுடன் பேசிய ஜெயார், உடனடியாக இராணுவத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்துமாறு பணித்தார். 1985 ஆம் ஆண்டு தை மாதம் 9 ஆம் திகதி இராணுவம் வெற்றிகரமான இராணுவ நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டது. அச்சுவேலி பகுதியில் அமைந்திருந்த புலிகளின் பாரிய முகாம் ஒன்றினை இராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். காலை புலரும் வேளைக்குச் சற்று முன்னர் அப்பகுதிக்குள் நுழைந்த இராணுவத்தினர், முகாமை சுற்றிவளைக்கத் தொடங்கினர்.புலிகளின் யாழ்ப்பாணத் தளபதி பண்டிதர், அவரது துணைத் தளபதி கிட்டு மற்றும் இன்னும் சில பிரதான போராளிகள் இம்முகாமில் இருந்தபோதிலும் இராணுவத்தின் ஊடுருவல் குறித்து அறிந்திருக்கவில்லை. லலித் அதுலத் முதலியின் வழிநடத்துதலிலேயே இத்தாக்குதல் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டது. புலிகளுடன் இருந்து விட்டு பின்னர் இராணுவத்தினரின் உளவாளியாகச் செயற்பட்ட ஒரு நபரை கொழும்பு ஸ்லேவ் ஐலண்ட் பகுதியில் உள்ள‌ தேசிய காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் 7 ஆவது மாடியில் அமைந்திருந்த தனது அலுவலகத்தில் சந்தித்தார் லலித். இந்தச் சந்திப்பிற்காக யாழ்ப்பாணத்திலிருந்து இந்த உளவாளி விமானத்தில் கொண்டுவரப்பட்டிருந்தார். புலிகளின் முகாம்கள், தலைவர்களின் மறைவிடங்கள், ஆயுதச் சேமிப்புக் கிடங்குகள் குறித்த விடயங்களுடன் நன்கு பரீட்சயமான இந்த முன்னாளப் போராளி அச்சுவேலி முகாம் குறித்த தகவல்களை லலித்திடம் கூறினார். முகாமின் அமைவிடம், பதுங்கு குழிகள், ஆயுதங்கள், அம்முகாமிற்கு அடிக்கடி வந்துபோகும் தளபதிகள் போன்ற விடயங்களை உளவாளியூடாக இராணுவத்தினர் அறிந்துகொண்டனர். இம்முகாமில் சேமித்துவைக்கப்பட்ட ஆயுதங்களில் இந்திய அரசினால் வழங்கப்பட்ட ஆயுதங்களும் அடங்கும் என்றும் லலித்திடம் கூறப்பட்டது. ஏ.கே - 47 துப்பாக்கிகள், கிர்ணேட் உந்துகணைச் செலுத்திகள், ரைபிள்கள், பெருமளவு துப்பாக்கி ரவைகள் என்பன அங்கு சேமிக்கப்பட்டிருந்தன. கிட்டு இராணுவத்தினர் முன்னெடுத்த இத்தாக்குதலின் போது இரு முக்கிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தவேண்டிய தேவை பண்டிதருக்கு இருந்தது. முகாமிற்கு மிக அருகில் வாழ்ந்துவந்த மூதாட்டி ஒருவர் மற்றும் அவரது இரு புதல்விகளை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவது. இரண்டாவது அங்கிருந்த ஆயுதத் தொகுதியில் ஒரு பகுதியையாவது பாதுகாப்பாக அங்கிருந்து வெளியே எடுத்துச் செல்வது. இப்பணிகளைச் செய்யும் பொறுப்பினை கிட்டுவிடம் கையளித்தார் அவர். இராணுவத்தினரின் தாக்குதலைத் திசைதிருப்பும் நோக்கத்துடன் பண்டிதரும் இன்னும் சில முக்கிய போராளிகளும் முகாமின் ஒரு திசையிலிருந்து இராணுவம் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். பண்டிதரும் ஏனைய போராளிகளும் தாக்குதல் நடத்திய திசை நோக்கி இராணுவத்தினர் தமது தாக்குதலை ஆரம்பிக்க, கிடைத்த இடைவெளியினைச் சாதகமாகப் பாவித்த கிட்டு அருகிலிருந்த பெண்கள் மூவரையும் பாதுகாப்பாக வெளியேற்றியதோடு, ஆயுதங்களில் பெரும்பாலானவற்றையும் வெளியே எடுத்துச் சென்றார். அச்சண்டையில் பண்டிதரும் இன்னும் ஐந்து போராளிகளும் வீரச்சாவை எய்தினர். பண்டிதருடன் இச்சண்டையில் வீரச்சாவடைந்த மற்றைய போராளிகளின் விபரங்கள் : தில்லைச் சந்திரன் (நேரு), நவரட்ணம் (சாமி), தவராஜா (தவம்), சிவேந்திரன் (சிவா) மற்றும் பிரதாபன் (ரவி). பண்டிதர் தனது சிறுபராயத்திலிருந்தே பிரபாகரனின் நெருங்கிய தோழராக இருந்தவர். வல்வெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட பண்டிதரின் இயற்பெயர் ரவீந்திரன் ஆகும். தமிழர்களின் கண்ணியம் குறித்து அவர் அடிக்கடி பேசியும் எழுதியும் வந்ததனால் போராளிகளினால் "பண்டிதர்" என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்தார். ஆங்கிலத்தில் சிறிதளவும் பரீட்சயம் அற்ற பண்டிதர் தனது பேச்சிலும், எழுத்திலும் ஆங்கில வார்த்தைகளைப் பாவிப்பதை முற்றாகத் தவிர்த்து வந்தார். இதனால் பண்டிதர் எனும் செல்லப்பெயரே அவருக்கு இயக்கத்தில் வழங்க‌ப்படலாயிற்று. பண்டிதர், சங்கர் மற்றும் ரகு ஆகிய மூவருமே பிரபாகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான போராளிகளாக அன்று இருந்தனர். சங்கரும், ரகுவும் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்களாக பணிபுரிய, பண்டிதரோ அரசியற்செயற்ப்பாட்டாளராக பணியாற்றி வந்தார். ஆஸ்த்துமா நோயினால் பெருமளவு அவதிப்பட்டு வந்த பண்டிதர் ஒரு சிறந்த சமையற்காரர். 1981 ஆம் ஆண்டுகளில் வலசரவாக்கம் பகுதியில் அன்டன் பாலசிங்கமும், அடேலும் தங்கியிருந்த வீட்டில் சமையல் வேலைகளை பண்டிதரே கவனித்துக்கொண்டார். விடுதலை வேட்கை எனும் புத்தகத்தில் எழுதும் அடேல், "மண்ணெண்ணெய் குக்கரில் பண்டிதர் வேர்த்து விறுவிறுக்கச் சமையல் செய்வார்" என்று எழுதுகிறார். பண்டிதரின் கட்டளைக்கேற்ப ரகுவும், சங்கரும் காய்கறிகளை நேர்த்தியாக‌ வெட்டிக் கொடுப்பார்கள் என்றும், அவர்கள் மூவருக்கும் இடையே பண்டிதரே சிறந்த சமையற்காரர் என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது என்றும் அவர் கூறுகிறார். தமது இராணுவ நடவடிக்கை வெற்றியளித்ததையிட்டு லலித் அதுலத் முதலியும், இராணுவ உயர் அதிகாரிகளும் பெருத்த உற்சாகத்தில் காணப்பட்டனர். மறுநாளான தை 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசிய லலித், அச்சுவேலியில் அமைந்திருந்த புலிகளின் தலைமைச் செயலகத்தை இராணுவத்தினர் சுற்றிவளைத்து அழித்துவிட்டதாக பெருமையுடன் பேசினார். புலிகளுக்கெதிரான போரில் இது ஒரு முக்கிய திருப்பம் என்று கூறிய லலித், இம்முகாமை அழிக்க முன்னாள்ப் போராளி ஒருவரே தகவல் தந்து உதவினார் என்பதையும் சொல்லத் தவறவில்லை. "நான் தேசியப் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டபின்னர் இராணுவத்தினர் நடத்திய மிகப்பெரும் தாக்குதல் இதுதான்" என்று லலித் கூறினார். தீவிரவாதிகளுக்கெதிரான புதிய பாணி ஒன்றினைக் கைக்கொண்டே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக லலித் கூறினார். பயங்கரவாதிகள் தொடர்பான தகவல்கள் தமக்குத் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவதாகவும், ஒவ்வொரு துப்பாக்கியும் கைப்பற்றப்பட வழங்கப்படும் தகவல் ஒன்றிற்கு தலா 25000 ரூபாய்களை தான் வழங்கவிருப்பதாகவும் கூறினார். "இராணுவத்தினரின் முன்னகர்வு மிகவும் இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டது. அப்பகுதியின் புலிகளின் தளபதி உட்பட பல முக்கிய பயங்கரவாதிகள் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். மீதிப்பேர் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டனர். பெருமளவு ஆயுதங்களும் அவர்களின் நிலக்கீழ் பதுங்குழியில் இருந்து கைப்பற்றப்பட்டன" என்று அவர் மேலும் கூறினார். "தை மாதம் 14 ஆம் திகதி ஒருதலைப் பட்சமாக சுதந்திர ஈழப் பிரகடனம் செய்யக் காத்திருந்த பிரிவினைவாதப் பயங்கரவாதிகளுக்கு இம்முகாம் அழிக்கப்பட்டது பாரிய பின்னடைவினைக் கொடுத்திருக்கிறது" என்றும் அவர் மேலும் கூறினார். ஆனால் லலித் குறிப்பிட்ட ஒருதலைப்பட்சமான சுதந்திர ஈழப் பிரகடனத்தைச் செய்யப்போவதாக அறிவித்தது அதிகம் அறியப்படாத சிறிய அமைப்பான பாலசுப்பிரமணியம் என்பவர் தலைமையில் நடத்தப்பட்டு வந்த ஈழப் புரட்சிகர கம்மியூனிஸ்ட் கட்சி என்கிற அமைப்பாகும். இக்கட்சியும் தென்னிலங்கையின் ரோகண‌ விஜேவீர தலைமையில் செயற்பட்டு வந்த மக்கள் விடுதலை முன்னணியும் மிக நெருக்கமாக இயங்கி வந்தன. கம்மியூனிஸ்ட் கட்சியின் சண்முகதாசன் பிரிவு எனும் அமைப்பில் இயங்கிய ரோகண விஜேவீர, பின்னர் அதிலிருந்து விலகி மக்கள் விடுதலை முன்னணியினை ஆரம்பித்தார். அதன்போது பாலசுப்ரமணியமும் அவ்வியக்கத்தில் இணைந்துகொண்டார். புலிகளின் முகாம் மீதான இராணுவத்தினரின் வெற்றிகரமான தாக்குதல் தமிழ் மக்களை வருத்தப்படச் செய்திருந்தது. தமிழ் மக்களின் மனநிலையினைப் புரிந்துகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களுள் ஒருவரான சிவசிதம்பரம் பேசும்போது, "தமிழர்களுக்கு இனிமேல் இந்தியாதான் பாதுகாப்புத் தர‌வேண்டும்" என்று கோரினார். அச்சுவேலித் தாக்குதலின் வெற்றியினால் களிப்படைந்திருந்த லலித், நாட்டின் 25 மாவட்டங்களினதும் அரச அதிபர்களை வரவழைத்து மாநாடு ஒன்றினை நடத்தினார். தேசிய பாதுகாப்புச் சபை என்று ஒரு அமைப்பினை தான் உருவாக்குவதாக அறிவித்த லலித், இனிமேல் ஒவ்வொரு மாவட்ட அரசாங்க அதிபரும் தமது வழமையான நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக இராணுவத்தினருடன் இணைந்து தேசியப் பாதுகாப்பில் பங்கெடுப்பதும் அவசியம் என்று அறிவித்தார். மேலும், அரசாங்க அதிபர்கள் எடுக்கும் தீர்மானங்கள் அனைத்தும் தேசியப் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டே அமைந்திருக்க வேண்டும் என்றும் கூறினார். அரச அதிபர்கள் முன்னிலையில் பேசிய லலித், அச்சுவேலி முகாமிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் பெரும்பாலானவை இந்தியாவினால் வழங்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இதன்மூலம் தம்ழிப் பிரிவினைவாதப் போராளிகளுக்கு இந்தியா உதவிவருவது வெட்ட வெளிச்சமாகிறது என்றும் கூறினார். மேலும், தனக்குக் கிடைத்த தகவல்களின்படி போராளிகள் ஒருங்கிணைந்த தாக்குதல்களில் ஈடுபட முயற்சித்து வருகிறார்கள் என்றும் அரச அதிபர்களை எச்சரித்தார். ஆனால், அச்சுவேலிச் சண்டையின் பின்னடைவினால் போராளிகள் சோர்ந்துவிடவில்லை. அவர்கள் பாரிய தாக்குதல்களுக்காக திட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள். 1985 ஆம் ஆண்டு டெலோ அமைப்பு மிகப்பெரும் தாக்குதல் ஒன்றில் ஈடுபட்டது. அனறிரவு, தை 19 ஆம் திகதி கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த புகையிரதத்தை டெலோ போராளிகள் முருகண்டியில் வைத்துத் தாக்கினர். இக்குண்டுவெடிப்புத் தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டதுடன் இன்னும் 50 பேர் காயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களின் 20 பேரும், காயமடைந்தவர்களில் 25 பேரும் யாழ்ப்பாணத்திலிருந்து விடுமுறைக்காகக் கொழும்பு திரும்பிக்கொண்டிருந்த இராணுவத்தினர் என்பது குறிப்பிடத் தக்கது. இராணுவத்தினர் பயணம் செய்த பெட்டியின் கழிவறையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நேரம் குறித்து வெடிக்கும் குண்டினால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. குண்டுவெடிப்பினால் குடைசாய்ந்த புகையிரதப் பெட்டிகளின் மீது டெலோ போராளிகள் கிர்ணேட்டுக்களை எறிந்தும், துப்பாக்கிகளினாலும் தாக்குதல் நடத்தினார்கள். புகையிரதத் தாக்குதலில் மாட்டிக்கொண்ட இராணுவத்தினரின் உதவிக்கென்று அருகிலிருந்த மாங்குளம் முகாமிலிருந்து அவசரமாகக் கிளம்பி வந்த இராணுவ அணிமீதும் டெலோ போராளிகளினால் தாக்குதல் நடத்தப்பட்டது. கிளிநொச்சியிலிருந்து முருகண்டி நோக்கி முன்னேற முயன்ற பொலீஸ் அணியும் போராளிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. புகையிரதத் தாக்குதலினால் கொதிப்படைந்த அரசாங்கம் வடக்குக் கிழக்கிலும், கொழும்பிலும் சந்தேகத்திற்கிடமான தமிழ் இளைஞர்களைக் கைதுசெய்யுமாறு இராணுவத்தினருக்கும் பொலீஸாருக்கும் உத்தரவிட்டது. ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொழும்பில் மட்டும் 4,000 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். ஒருநாளில் மட்டும் 200 புலிச் சந்தேக நபர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக பொலீஸார் அறிவித்தனர். இச்சுற்றிவளைப்பு மற்றும் கைதுசெய்யும் நடவடிக்கைகளில் இராணுவத்தினரும் பொலீஸாருடன் இணைந்து ஈடுபட்டிருந்தனர்.தை 25 ஆம் திகதி நான்கு தமிழ் இளைஞர்களை மட்டக்களப்பில் பொலீஸார் சுட்டுக் கொன்றதுடன், மாசி 4 ஆம் திகதி மேலும் 6 இளைஞர்கள் திருகோணமலையில் பொலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அச்சுவேலிச் சண்டையின் வெற்றியும், சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பெருமளவு தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டமையும் பயங்கரவாதம் அழிக்கப்படவேண்டும் என்று ஜெயாரைப் பேச வைத்தது. மாசி 4 ஆம் திகதி சுதந்திர தினமன்று நாட்டு மக்களுக்குப் பேசிய ஜெயார், "பயங்கரவாதிகளை நாம் முற்றாக அழித்து அனைத்து இன மக்களும் சமாதானமாகவும், சமமாகவும், ஒற்றுமையாகவும் வாழும் நிலையினை உருவாக்குவோம்" என்று பறைசாற்றினார். ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியற் பிரிவு, இந்தியா பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகச் சாடியது. அச்சுவேலி முகாமில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும், இராணுவத்தினரின் மீதான தாக்குதல்களின்போது போராளிகள் பாவிக்கும் ஆயுதங்களும் இந்தியா போராளிகளின் நடவடிக்கைகளின் பின்னால் நிற்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என்றும் சாடியிருந்தது.
  4. "நான் தான் பிரபாகரன்" பிரபாகரனைப் பொறுத்தவரை செய்தியாளர் ஒருவரைச் சந்திக்கும் முதலாவது தருனம் அதுதான். அனீட்டாவைப் பொறுத்தவரை இது ஒரு மிகப்பெரிய தருனம். இந்த நேர்காணலூடாக செவ்வி காண்பவரும், காணப்படுபவரும் பிரபலமானார்கள். தனது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நேர்காணலை எடுப்பதற்காக சென்னை பெசன்ட் நகரில் கடற்கரையோரத்தில் அமைந்திருந்த புலிகளின் பாதுகாப்பான இடம் என்று கருதப்பட்ட இரு மாடிகளைக் கொண்ட வீட்டிற்குச் சென்றார். அவர் அமரவைக்கப்பட்ட அறையினுள் சில பிரம்பினால் பின்னப்பட்ட கதிரைகளும், சிறிய உணவருந்தும் மேசையும் சுற்றிவர ஆறு சிறிய‌ கதிரைகளும் அடுக்கப்பட்டிருந்ததுடன் ஓரத்தில் சிறிய வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும் இருந்தது.அவர் அமரவைக்கப்பட்ட சில நிமிடங்களின் பின்னர் தமது இயக்கம் தொடர்பான சில கசெட்டுக்களை அத்தொலைக்காட்சிப் பெட்டியில் புலிகள் ஓட்டினார்கள். தமிழ் ஈழம் எனும் தனிநாட்டின் ஒழுக்கமும் கட்டுப்பாடும் கொண்ட இராணுவ அமைப்பான புலிகள் பற்றி அக்காணொளிகள் பேசின. ஒரு காணொளியில் பிரபாகரன் இராணுவ அணிவகுப்பொன்றினை ஏற்றுக்கொள்வதும் படமாக்கப்பட்டிருந்தது. ஒரு இரு மணிநேரம் அனீட்டா அங்கு இருந்திருப்பார். உயரம் குறைந்த, சற்றுப் பருமனான, சராசரி மனிதர் ஒருவர் அவர் அமர்ந்திருந்த அறைப்பகுதிக்குள் நுழைந்தார். பல லட்சம் தமிழ் ஆண்களுக்கும் அப்போது உள்நுழைந்த மனிதருக்கும் உருவ அமைப்பில் எந்த வேறுபாடும் இல்லாமையினால் உள்ளே வந்தவர் குறித்து தான் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை என்று கூறுகிறார். "ஆறடி உயரம் கொண்ட கம்பீரமான வீரன் ஒருவனை நான் எதிர்பார்த்திருந்தேன்" என்று கூறுகிறார். இரத்தத் தீவு எனும் தான் எழுதிய புத்தகத்தில் இத்தருணம் குறித்து எழுதும் அனீட்டா, "சில நிமிடங்களுக்குப் பின்னர்...." என்று ஆரம்பிக்கிறார். "அந்த மனிதரின் முகத்தில் சிறிய புன்னகை ஒன்று இருந்தது. கிட்டத்தட்ட மன்னிப்பொன்றினை இரைஞ்சுவது போன்று வைத்துக்கொள்ளலாம். அவரின் முகத்தை உற்றுப் பார்க்கத் தொடங்கினேன், அடக் கடவுளே அது பிரபாகரன் தான் என்று உணர்ந்தபோது அதிர்ச்சியடைந்தேன்...." "பழுப்பு நிறத்தில் நீளமான காற்சட்டையினையும், பெருக்கத் தொடங்கியிருந்த இடைப்பகுதியை மறைக்கத்முடியாத மென் நீல நிறத்தில் மேற்சட்டையும் அணிந்திருந்தார். எனது அவநம்பிக்கையினையும், அவரது உருவ அமைப்புப் பற்றி நான் எண்ணிவைத்திருந்தவற்றிற்கும் அவரது உண்மையான தோற்றத்திற்கும் இடையிலான வேறுபாட்டினால் ஏற்பட்ட ஏமாற்றத்தையும் மறைக்க நான் கடுமையாகப் போராட வேண்டியதாயிற்று. ஆனால் நான் ஒரு ஊடகவியலாளர், நடிகையல்ல. எனது ஏமாற்றத்தை மறைக்கும் பிரயத்தனத்தில் நான் முற்றாகத் தோற்றுப்போயிருந்தேன்.அதிர்ஷ்ட்டவசமாக பிரபாகரனை எனது ஏமாற்றம் மகிழ்வித்திருந்தது. அவர் புன்னகைத்தார், சிறு பையனைப்போல.........." பிரபாகரன் குறித்த தனது எண்ணங்களையும் அனீட்டா எழுதுகிறார். "அந்த நேர்காணல் இரு மணித்தியாலங்கள் வரை நீண்டு சென்றது. நான் எனது வாழ்க்கையில் சந்தித்த அல்லது நான் சந்திக்கவிருந்த‌ மிக முக்கியமான மனிதர் அவர்தான் என்பதனையும் நான் உணர்ந்து கொண்டேன்.ஆகவேதான் அந்தச் சந்திப்பிற்கு பத்து வருடங்களுக்குப் பின்னர் உலகின் மிகவும் பிரபலமான கெரில்லா நாயகனாக அவர் உயர்ந்தபோது அது என்னை ஆச்சரியப்பட வைக்கவில்லை". "ஈவு இரக்கமற்ற, சூட்சுமம் கொண்ட, கடுமையான மனிதராக பிரபாகரன் வலம் வந்திருக்கலாம். ஆனால் அவர் மிகச் சிறந்த திட்டமிடலாளன் என்பதும் இராணுவ நிபுணன் என்பதும் அதேயளவிற்கு உண்மையானது. அவரது சிந்தனைகள் ஒருபோது தெளிவற்று இருந்ததில்லை. கூர்மையாக, தெளிவாக, சிக்கலற்றுத் தெளிவானது அவரது சிந்தனை. சந்தேகங்களோ, அச்சங்களோ வருத்தங்களோ அவரது இலட்சியப் பார்வையினை மழுங்கடிக்கவில்லை. எதிர்காலம் நோக்கிய அவரது பார்வையும் விசாலமானது. இனிவரும் காலங்களில் எதிரிகள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை அவரால் உணர்ந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. அவருக்கு செஸ் விளையாட்டில் பிரியமிருந்திருந்தால் மிகச்சிறந்த செஸ் வீரராக அவர் வந்திருப்பார்". எதிர்காலம் குறித்து அனுமானிக்கும் திறமை மிக்கவர் இரத்தத் தீவில் எழுதும்போது பிரபாகரனின் தீர்க்கதரிசனம் குறித்து அனீட்டா பேசுகிறார். நேர்காணலின் பகுதியொன்றினை மேற்கோள் காட்டி அது எழுதப்பட்டிருந்தது. தனது கேள்வி பதில் பகுதியில் அச்சந்தர்ப்பம் வராமையினால் பத்திரிக்கையில் அதனை எழுதுவதை அவர் தவிர்த்திருக்கலாம். ஆனால், புத்தகத்தில் அவர் குறிப்பிட்டிருக்கும் சந்தர்ப்பத்தினை அதன் முக்கியத்துவம் கருதி முழுமையாக இங்கு பதிகிறேன். "நாம் பேசிக்கொண்டிருக்கும்போது "இறுதியாக நான் இந்தியாவுடன் மோதவேண்டி வரும்" என்று கூறினார். இந்தியப்படைகள் இலங்கைக்குள் வருவதற்கும், ரஜீவ் காந்தி பிரதமராவதற்கும் முன்னாலேயே இதனை பிரபாகரன் அனுமானித்திருந்தார். அத்தருணத்தில் இந்தியாவின் சர்வதேச உளவு அமைப்பான ரோ புலிகளுக்கு பணமும், ஆயுதங்களும், பயிற்சியும் வழ‌ங்கிக்கொண்டிருந்தது". "அதிர்ச்சியடைந்த நான் அவரிடம் அதனைத் தெரிவித்தேன். அவருக்கு உணவளிக்கும் கரத்தையே அவர் கடிப்பது எவ்வாறு அவரால் சாத்தியமாகிறது? இது நன்றி மறுப்பல்லவா? நன்றிமறுப்பிற்கப்பால தற்கொலைக்குச் சமனானது இல்லையா?" "இலங்கையை விடவும் இந்தியாவே எமது தனிநாட்டினை எதிர்க்கும் என்பது எனக்குத் தெரியும். தமிழ்நாட்டில் இருக்கும் ஐம்பத்தைந்து மில்லியன் தமிழர்களை மனதில் வைத்தே இந்தியா எமது தனிநாட்டுக் கனவினை அழிக்க முனையும்" என்று அவர் பதிலளித்தார். "அப்படியானால் எதற்காக இந்தியாவின் உதவியினை இவர் ஏற்றுக்கொள்கிறார்? "நாம் இப்போது சிறிய அமைப்பாக இருக்கிறோம், நாம் வளர்வதற்கு இந்தியாவின் ஆதரவு எமக்குத் தேவை". பேட்டியின் பிரதான பகுதியில் இச்சம்பாச‌ணை வெளிவராத போதிலும், பிரபாகரனின் தீர்க்கதரிசனம் குறித்து அனீட்ட கொண்டிருந்த பார்வை அவரது புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது. தனது இறுதிக் கேள்வியில், "உங்களின் ஈழத்தினை அடைவதற்கு எத்தனை வருடங்கள் ஆகலாம் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?" என்று அவர் கேட்டார். "ஒரு விடுதலைப் போராட்டம் எவ்வாறு வென்றெடுக்கப்படும் என்பது புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் திட்டமோ அல்லது கால அவகாசம் கொண்ட செயற்பாடோ கிடையாது. எமது தாயகத்திலும் சர்வதேசத்தில் நடக்கு சம்பவங்களை அடிப்படையாக வைத்தே அது தீர்மானிக்கப்படும்" என்று அவர் அன்று கூறியிருந்தபோதும், அது எவ்வளவு உண்மையானது என்பதனை இன்று போராட்டம் இருக்கும் நிலை உண்மையென்று உறுதிப்படுத்தியிருக்கின்றது. "தேசியப் பற்றுக்கொண்ட ஒரு பலமான இராணுவத்தினால் தனிநாடான ஈழம் உருவாக்கப்பட்டு, அதன் மக்களும், சொத்துக்களும் பாதுக்காக்கப்படும் நிலை உருவாகும் வரையில் தமிழ் மக்கள் இங்கு பாதுகாப்பாகவும், அச்சமின்றியும் வாழமுடியாது" என்று பிரபாகரன் அன்று தீர்க்கதரிசனத்துடன் கூறியிருந்தார். "தமிழ் மக்களுக்கான நியாயமான அரசியல்த் தீர்வொன்றினை வழங்குவதற்கு ஜெயவர்த்தனா ஒருபோதுமே விரும்பாதபோது, அவர் கண்துடைப்பிற்காக 1984 ஆம் ஆண்டில் நடத்திவந்த சர்வகட்சி மாநாடு ஒருபோதும் வெற்றியளிக்கப்போவதில்லை" என்று பிரபாகரன் எதிர்வுகூறியிருந்தார். "பல தசாப்த்தங்களாக நாம் கண்டுகொண்ட அனுபவத்தின் அடிப்படையிலேயே எமது பார்வை அமைந்திருக்கிறது" என்று கூறிய பிரபாகரன் "சிங்களத் தலைவர்கள் தமிழர்களின் அவலங்களைத் தீர்க்கும் நேர்மையான செயற்பாடுகள எதனையும் மேற்கொள்ளவில்லை. இப்போது நடக்கும் பேரம்பேசல்களும் இதே முடிவினையே அடையும். அனைத்துச் சிங்களக் கட்சிகளும், பெளத்த அமைப்புக்களும் அதிகாரம் கொண்ட பிராந்தியங்களைத் தமிழர்களுக்கு வழங்குவதையே முற்றாக எதிர்க்கின்றன. சிறிய அதிகாரப் பகிர்வினைக்கூட அவர்கள் வழங்கத் த‌யாராக இல்லை. ஆகவே, தமிழருக்கு எதுவித தீர்வும் இவ்வாறான பேச்சுவார்த்தைகளால் கிடைக்கப்போவதில்லை" என்று அன்று அவர் கூறிய வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை? "சிங்கள இனவாத அரசுகள் இந்தியாவின் உதவியைக் கொண்டு தமிழருக்கு நியாயமான தீர்வொன்றினை வழங்கும் என்று நான் ஒருபோதும் நம்பவில்லை" என்று பிரபாகரன் கூறினார். "தமிழர்களை சிறிது சிறிதாகப் பலவீனப்படுத்தி, ஈற்றில் முற்றாக அழித்துவிடவே பேச்சுவார்த்தை நாடகங்களை சிங்கள இனவாதிகள் மேற்கொண்டு வருகின்றனர்" என்று அவர் அன்று எதிர்வு கூறியதை பிரேமதாசவும் சந்திரிக்காவும் பின்வந்த காலங்களில் உறுதிப்படுத்தினர். " தமிழருக்கான தீர்வு ஒன்றினை உருவாக்குவதில் இந்தியா வகிக்கக்கூடிய பாகம் எவ்வாறு இருக்க வேண்டும்?" என்று அனீட்டா பிரபகாரனிடம் வினவினார். மிகுந்த தீர்க்கதரிசனத்துடன் கேட்கப்பட்ட, பதிலளிக்கப்பட்ட இந்த விடயங்கள் குறித்து நான் இங்கு பகிர்கிறேன். கேள்வி : தமிழர்களுக்கு உதவ இந்தியா சரியாக எதனைச் செய்யவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? பிரபாகரன் : எமது மக்களின் நியாயமான , நீதியான அபிலாஷைகளை இந்தியா புரிந்துகொண்டு, நாம் சுயநிர்ணய உரிமை கொண்ட இனக்குழுமம் என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். கேள்வி : " இராணுவ ரீதியிலான தலையீடு ஒன்று தேவைப்படும் என்று கருதுகிறீர்களா? பிரபாகரன் : எமது விடுதலையினை நாமே வென்றெடுக்கக் கூடிய துணிவும், உறுதியும், இலட்சிய வேட்கையும் எமக்குத் தாராளமாகவே இருக்கின்றன. நாம் போராடியே எம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும். இந்தியாவின் அனுதாபமும், ஆதரவும் இருந்தாலே போதுமானது. ஆனால் இந்தியாவுக்கு வேறொரு திட்டம் இருந்தது. இந்தியாவின் தேசிய நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள தனது செல்வாக்கு வட்டத்திற்குள் இலங்கையை வைத்திருக்க வேண்டும் என்று என்று அது விரும்பியது. அதனை அடைவதற்கு, ஈழத் தமிழர்களைப் பாவித்து இலங்கையரசாங்கத்தை தன்னிடம் மண்டியிட வைக்க அது முயன்றது. இன்றோ, தமிழர்கள் தொடர்பான அச்சத்தினை சிங்களவர்களிடையே உருவாக்குவதன் ஊடாக இலங்கையரசாங்கத்தை தனது செல்வாக்கிற்குள் கொண்டுவர முயல்கிறது. 1983 ஆண்டின் தமிழினக்கொலையினை ஜெயாரே திட்டமிட்டு, தமிழரை அழிக்க அதனைச் செய்தார் என்பதனை பிரபாகரன் உறுதியாக நம்பினார். ஆகவேதான், ஜெயவர்த்தன, தனது அமைச்சர்களினதும், சிங்கள இனவாதக் கழுகளினதும் சிறையில் அடைபட்டிருக்கிறார் என்று அனீட்டா கூறியபோது பிரபாகரன் அதனை முற்றாக நிராகரித்தார். அனீட்டா : ஜெயவர்த்தன தனது அமைச்சரவையில் இருக்கும் ப‌லமான சிங்கள இனவாதக் கழுகுகளினதும், இன்னும் சில பலம் மிக்க அமைச்சர்களினதும் கைகளில் சூழ்நிலைக் கைதியாக இருக்கிறார் என்றோ அல்லது கடும்போக்குச் சிங்கள பெளத்த துறவிகளினதும் அழுத்தத்தினால் இப்படி நடந்துகொள்ளலாம் என்றோ நீங்கள் நினைக்கவில்லையா ? என்று கேட்ட‌போது, "ஜெயவர்த்தன தனது சுய விருப்பத்தினாலேயே இப்படி நடக்கிறார். அவரிடமே அனைத்து அதிகாரங்களும் குவிந்து கிடக்கின்றன. இனவாதக் கழுகுகளும், பெளத்த துறவிகளும் அவருக்கு ஆதரவாக நிற்கின்றனர்" என்று பிரபாகரன் பதிலளித்தார். தான் ஒரு நேர்மையான, சமத்துவத்தினை ஆதரிக்கும் மனிதர் என்றும், கொடூரமான இனவாதிகள் மத்தியில் இருந்துகொண்டு நீதியானதைச் செய்ய எத்தனிக்கும் மகான் என்றும் நாட்டு மக்களையும், சர்வதேசத்தையும் நம்பவைப்பதில் ஜெயவர்த்தன ஈடுபட்டிருந்தார். ஆனால், அவரால் உருவாக்கப்பட்டவர்தான் சிறில் மத்தியூ எனும் கடும்போக்குச் சிங்கள இனவாதி. ஜெயவர்த்தன சிறில் மத்தியுவை பதவிநீக்கியபின்னர் அவர் முற்றாக மறைந்துபோனார். காமிணி திசாநாயக்கவும், லலித் அதுலத் முதலியும் கூட ஜெயார் விரும்பியதைச் செய்வதற்காகவே அவரால் பாவிக்கப்பட்டார்கள். ஜெயவர்த்தனவின் சூழ்ச்சிகளை பிரபாகரனைப் போலவே அனீட்டாவும் உணர்ந்துகொண்டிருந்தார். 1985 ஆம் ஆண்டு ஆவணி 5 ஆம் திகதி சென்னையிலிருந்து வெளிவந்த கல்கி இதழில் அவர் எழுதும்போது ஜெயவர்த்தனவுடனான தனது கலந்துரையாடல் ஒன்றுபற்றிக் குறிப்பிட்டிருந்தார். தமிழர்களுக்கான நீதியான தீர்வொன்றைக் காண்பதில் அவர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அவர் கேட்டார். அதற்குப் பதிலளித்த ஜெயார், தமிழர்களுக்கான நீதியான தீர்வொன்றைக் காண்பதில் தான் அக்கறையுடன் செயற்பட்டு வருவதாகக் கூறினார். "நான் அதிகபட்சமான தீர்வொன்றினை அவர்களுக்கு வழங்க முயல்கிறேன். ஆனால், அதனைச் செய்வது எனக்குக் கடிணமானதாகத் தெரிகிறது. ஏனென்றால் தமிழர்களுக்கு எதிரான அமைச்சர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள்" என்று அவர் பதிலளித்தார். ஆனால் ஜெயார் கூறியதை தன்னால் நம்பமுடியவில்லை என்று எழுதும் அனீட்டா, "சினிமா நடிகர்கள் அரசியலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள் படங்களைத் தயாரித்திருக்கிறார்கள். ஆனால் இலங்கையில் மட்டும்தான் சினிமாவில் ஈடுபடாத அரசியல்வாதிகளால் மிகவும் திறமையாக நடிக்க முடிகிறது. ஜனாதிபதி ஜெயவர்த்தனவும் மிகத் திறமையான நடிகர். உலகிலேயே ஜெயவர்த்தனவைக் காட்டிலும் திறமையாக நடிக்கக் கூடிய அரசியல்வாதியொருவர் இருக்கிறார் என்பது சந்தேகம்தான். அவரது சிறப்பான நடிப்பிற்காக அவருக்கு ஒஸ்கார் விருது கூடக் கொடுக்கலாம்" என்று கூறுகிறார். சிங்களத் தலைவர்களின் சூட்சுமங்களையும், திட்டங்களையும் பிரபாகரன் நன்கு அறிந்தே வந்திருந்தார். அவர்களின் அத்திட்டங்களை முறியடிக்க தேசிய விடுதலை இராணுவமான தமிழீழ விடுதலைப் புலிகளை அவர் உருவாக்கினார். அவரது ஒப்பற்ற மகத்துவம் அங்கேயே ஆரம்பிக்கிறது. புனைபெயர்கள் 1984 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியிலேயே தமது விடுதலைக்கான போராட்டத்தின் முன்னணிப் போராளிகள் புலிகள்தான் என்பதை யாழ்ப்பாணத்து மக்கள் உணர ஆரம்பித்திருந்தனர். ஐந்து முக்கிய போராளி அமைப்புக்களுக்கு அவர்கள் வழங்கிய புனைபெயர்கள் இதனைத் தெளிவாக உணர்த்தியிருந்தன. அக்காலத்தில் பிரபலமாக இருந்த தமிழ்நாட்டுத் திரைப்படங்களின் பெயர்களை இவ்வமைப்புக்களுக்கு அவர்கள் சூட்டி அழைத்தனர். புலிகளுக்கு தமிழர்கள் வழங்கிய பெயர், "ஓயாத அலைகள்". இராணுவத்தினரையும், பொலீஸாரையும் இடையறாது தாக்கி, அவர்களை எப்போது அச்சத்தில் வைத்திருந்தமையினால் புலிகளுக்கு இந்தப் பெயரை தமிழர்கள் வழங்கினார்கள். புலிகளால் இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும் அதனூடாகப் பெறப்பட்ட வெற்றிகளும் யாழ்ப்பாணத்து தமிழர்களால் விரும்பி வரவேற்கப்பட்டன. தம்மை அடக்கி, ஆக்கிரமித்து நின்ற சிங்கள இராணுவத்தை திருப்பியடித்து, அகற்றிவிட வீரன் ஒருவனை தமிழர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பினை பிரபாகரன் பூர்த்தி செய்து வைத்தார். புலிகளைத் தவிர வேறு சில அமைப்புக்களும் தமிழர்களால் பேசப்பட்டன. அவ்வாறான அமைப்பொன்றுதான் டெலோ. அதற்கு அவர்கள் சூட்டிய பெயர் "தூறள் நின்றுபோச்சு" எப்போதாவது ஒரு தாக்குதலைச் செய்துவிட்டு நீண்டகாலம் ஓய்வெடுக்கும் காரணத்தினால் அவர்களை அப்படி ஏளனமாக அவர்கள் அழைத்தார்கள். புளொட் அமைப்பிற்கு "விடியும் வரை காத்திரு" என்று அவர்கள் பெயரிட்டார்கள். மார்க்சிய சிந்தனைகளால் உந்தப்பட்டு, சிங்கள இடதுசாரிகளையும் இணைத்துக்கொண்டு ஒட்டுமொத்த மக்கள் புரட்சி வெடிக்கும்வரை அவர்கள் காத்திருந்தமையினால் அவர்கள் அவ்வாறு அழைக்கப்பட்டார்கள். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பிற்கு அவர்கள் இட்ட பெயர் "பயணங்கள் முடிவதில்லை". தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் ஒரே பாணியிலேயே தமது தாக்குதல்களை மேற்கொள்வதும், அவை தோல்வியில் முடிவடைவதும் அவர்கள் எப்போதாவது நடத்தும் தாக்குதல்களில் நடைபெற்று வந்தமையினால் அவ்வாறு அழைக்கப்பட்டார்கள். தமிழர் தாயகத்திற்கு வெளியே, கொழும்பு போன்ற இடங்களில் குண்டுத் தாக்குதல்களில் ஈரோஸ் அமைப்பு ஈடுபட்டு வந்தமையினால் அவர்களுக்கு "தூரத்து இடிமுழக்கம்" என்று பெயர் வழங்கப்பட்டது. தமது விருப்பத்தின்பால் போராளி அமைப்புக்களைப் பெயரிட்டு தமிழ் மக்கள் அழைத்தார்கள். பிரபாகரனைத் தமது வீரனாகவும், அவரது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை தமது பிரியமான போராளிகளாகவும் அவர்கள் கண்டுகொண்டனர். தமது திட்டமிடல், தீர்மானம் எடுக்கும் ஆற்றல், தாக்குதல்களின் வீரியம் என்பவற்றினால் பிரபாகரனும் புலிகளும் மக்களின் மனங்களின் ஆளமாக பதிந்துபோனார்கள். அனீட்டா பிரபாகரனை பலமுறை பேட்டி கண்டிருந்தார். அப்படிச் செய்த ஒரேயொரு பத்திரிக்கையாளரும் அவர்தான். வேறு எவருக்கும் ஒருமுறைக்கு மேல் செவ்விகளை பிரபாகரன் வழங்கியதில்லை. 90 களின் இறுதிப் பகுதிகளில் பிரபாகரனைப் பேட்டிகண்டபோது, "இந்த இருபது வருட கால கெரில்லாப் போராட்டத்தில் நீங்கள் கற்றுக்கொண்ட ஒற்றை விடயம் எது?" என்று கேட்டபோது "துணிபவனே வெற்றியடைகிறான்" என்று அவர் பதிலளித்தார். அவர் வெற்றி பெற்று வருகிறார் என்பதற்கான அடையாளங்கள் 1985 ஆம் ஆண்டிலேயே தென்படத் தொடங்கியிருந்தன. அந்த வருடத்திலேயே தமிழர்கள் தமது அபிலாஷைகள், தேசியம், தாயகம் , சுயநிர்ணய உரிமை போன்றவற்றிற்கான வடிவத்தை கொடுக்க ஆரம்பித்தார்கள். 1985 இல், புலிகளின் தலைமையில் தமிழ்ப் போராளிகள் சிங்கள இராணுவத்தை அவர்களின் முகாம்களுக்குள் தள்ளி, முடக்கி வைத்துக்கொண்டனர் !
  5. நான் இந்தப் படத்தை இதுவரை பார்க்கவில்லை. இனியும் பார்க்கும் எண்ணமும் எனக்கில்லை. யூடியூப்பில் வந்தால்க்கூட கடந்துதான் செல்லப்போகிறேன். இதற்கு எனக்குக் காரணங்கள் உண்டு. எனது மொழியில் இருந்து பிறந்து, எனது மொழியையும் இனத்தையும் அவமதித்து, எனது தோல்நிறத்தை எருமை மாடுகளின் தோல் என்று இகழ்ந்து, கேரளாவில் இருக்கும் தமிழர்களை நாய்கள் என்று அழைத்து, எனது விடுதலை வீரர்களை விலைமாதர்களாகச் சித்திரித்து, எமது இனம் அழித்த இந்திய ராணுவப் பேய்களை தெய்வங்களாக வழிபட்டு, இறுதியாக எனது தலைவனின் பெயரையே தனது படத்தில் வலம்வரும் நாய்க்கு இட்டு அதனைப் "பிரபாகரா" என்று அழைத்து தனது இச்சை தீர்க்கும் கேரளத்துப் பொறுக்கிகளின் படத்தை நாம் ஏன் கொண்டாட வேண்டும்? உடனேயே நீங்கள் வருவீர்கள், "கலையைக் கலையாகப் பார்க்க வேண்டும், இனத்துவேஷம் கூடாது" என்று சொல்லிக்கொண்டு. முதலில் தமது சினிமாவில் தமிழர்களை தீண்டத்தகாதவர்களாக, நாய்களாக, எருமை மாட்டுத் தோல் கொண்டவர்களாக சித்திரிப்பதை நிறுத்தட்டும், பின்னர் அவர்களின் கலையைக் கலையாக ரசிக்கலாம்.
  6. அனீட்டா பிரட்டாப் வெளையிட்ட இனக்கொலை பற்றிய அறிக்கை டெலிகிராப் பத்திரிக்கை அனீட்டா பிரடாப்பின் இனக்கொலை தொடர்பான செய்தியை முதற்பக்க செய்தியாக வெளியிட்டபோது இந்தியாவிலும், சர்வதேசத்திலும் அது கடுமையான அதிர்ச்சியலையினை ஏற்படுத்தியது. இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை பாராளுமன்றத்தில் விவாதித்ததோடு, இந்தியா இப்பிரச்சினையில் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.இத்தாக்குதல்கள் தமிழர்களின் மீதும், அவர்களின் பொருளாதார தளத்தினை அழிக்கும் நோக்கத்திலும் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட வகையிலும் திட்டமிட்ட ரீதியிலும் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் என்பது சர்வதேசத்திற்குத் தெளிவாகத் தெரிந்தது. தான் கண்டுகொண்ட காட்சிகள் ஊடாகவும், அழிவுகள் தொடர்பாக தான் வரைந்துகொண்ட விபரங்களைத் தொகுத்தும், தாக்குதலுக்குள்ளான‌ தமிழர்களின் வாக்குமூலங்களைக் கொண்டும் மிகவும் தத்ரூபமாக இனக்கொலையின் நிகழ்வுகளை அனீட்டா பதிவுசெய்திருந்தார். "வாக்ககளர் பட்டியலை ஆயுதமாகப் பாவித்து வெற்று லொறிகளில் வந்திறங்கிய காடையர்கள் தமிழர்களின் வீடுகளிலிருந்த பொருட்களை அந்த லொறிகளில் நிரப்பிக்கொண்டு சென்றனர். அவற்றுள், தொலைக்காட்சிப் பெட்டிகள், வானொலிகள், குளிர்சாதனப்பெட்டிகள், இசைக்கருவிகள், நகைகள், கடிகாரங்கள், உடைகள் உட்பட பல பொருட்கள் காணப்பட்டன. தமிழர்கள் எங்கெங்கெல்லாம் வாழ்கிறார்கள் என்பதை மட்டுமல்லாமல், அவர்களிடம் எவ்வகையான பொருட்கள் இருந்தன என்பது குறித்தும் அவர்களிடம் தகவல்கள் இருந்தன" என்று அவர் எழுதுகிறார். பல இந்தியர்களூடாகவும் தனது செய்தியை அனீட்டா நகர்த்தியிருந்தார். "இந்திய உயர்ஸ்த்தானிகரான மோகன் சந்திரனின் மனவியான‌ ஓமனாவும் அவர்களுள் ஒருவர். 1983 ஆம் ஆண்டு ஆடி 26 ஆம் திகதி தனது வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் வீழ்ந்து நொறுங்கும் சத்தம் அவருக்குக் கேட்டது. நடப்பதை அறிந்துகொள்ள அவர் வீட்டின் முற்பகுதிக்குச் சென்றபோது பலர் வீட்டின் மூன்னால் குழுமி நின்று வீட்டின்மீது கற்களை எறிவது தெரிந்தது. அவர் பார்த்துக்கொண்டிருக்க கைகளில் இரும்புக் கம்பிகள், கோடரிகள், வாட்கள், பொல்லுகளுடன் அவர்கள் வீட்டினுள்ளே நுழைந்தார்கள். வீட்டை விட்டு வெளியேறுமாறு அவரை நோக்கிக் கூச்சலிட்ட அந்தக் கும்பல் தாம் கொண்டுவந்த ஆயுதங்களால் வீட்டிலிருந்த தளபாடங்களை அடித்தி நொறுக்க ஆரம்பித்தது. ஒரு கையில் தனது ஐந்துமாதக் குழந்தையினையும், மறுகையில் அழுதுகொண்டிருக்கும் தனது ஐந்து வயது மகளையும் இழுத்துக்கொண்டு ஓமனா அருகிலிருக்கும் வீட்டிற்குள் அடைக்கலம் தேடி ஒளிந்துகொண்டார். அவர்களும் சிங்களவர்கள்தான், ஆனாலும் அவர் உள்ளேவர அவர்கள் ஒத்துக்கொண்டார்கள்" என்று அனீட்டா எழுதுகிறார். மோகன் சந்திரன் தம்பதிகளின் உடமைகள் அனைத்தும் சூறையாடப்பட்டன. "எங்களிடம் தற்போது எதுவுமே இல்லை, பிச்சைக்காரர்களாகிவிட்டோம்" என்று ஓமனா அனீட்டாவிடம் கூறியிருக்கிறார். பாதிக்கப்பட்ட இன்னொரு இந்தியரூடாக மேலும் பல அவலங்களை அவர் வெளிக்கொணர்ந்தார். திரிலோக் சிங் தம்பதிகள் தொடர்மாடிக் கட்டடம் ஒன்றின் முதலாவது மாடியில் வசித்து வந்தார்கள். அவர்களது வீட்டிற்குக் கீழே வசித்த 60 வயதுடைய தமிழ்ப்பெண் ஒருவரின் வீட்டினை உடைத்துக்கொண்டு ஒரு கும்பல் உள்நுழைவதை அவர் கண்டார். அக்கும்பலால் அவர் கூட்டாகப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதோடு அவரது உடமைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. அருகிலிருந்த தமிழரின் வீடொன்றிற்குள் சென்ற அக்கும்பல் அங்கிருந்த ஆண் ஒருவரின் கையை வாட்களால் வெட்டி வீழ்த்தியது. திரிலோக் தம்பதிகள் வீதிக்கு இறங்கி ஓடத் தொடங்கும்போது ஒரு தமிழ்க் குடும்பமும் அவர்களுடன் சேர்ந்து ஓடிக்கொண்டிருந்தது. தமது ஏழு வயது மகனை திரிலோக்கின் கைகளில் எறிந்துவிட்டு அத்தமிழ்த் தம்பதி தொடர்ந்து ஓடத் தொடங்கியது. இந்தியர்களின் மகனென்று அச்சிறுவனை சிங்களவர்கள் உயிருடன் விட்டுவிடலாம் என்று அவர்கள் நம்பியிருக்கலாம். அச்சிறுவனின் தமிழ்ப் பெற்றோர்கள் அன்று கொல்லப்பட திரிலோக் தம்பதிகளே அவனைப் பராமரிக்கத் தொடங்கினார்கள். தமிழர்கள் அகதிகளாகத் தஞ்சம் அடைந்திருந்த முகாம் ஒன்றிற்கு அனீட்டா சென்றவேளை அங்கு அவர் கண்ட காட்சி அவரை மனம் நெகிழச் செய்திருந்தது. "நான் பல பெற்றோர்களை அங்கே கண்டேன். பணம் படைத்தவர்கள், நடுத்தர வர்க்கத்தினர்கள், ஏழைகள் என்று அனைவருமே ஒன்றாகக் குழுமியிருந்தார்கள். படுகொலைகள் தலைவிரித்தாடியபோது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடியவேளை தாம் தவறவிட்ட தமது குழந்தைகளை எண்ணி அவர்கள் அழுதுகொண்டிருந்தார்கள். அவ்வாறே இன்னுமொரு முகாமில் பெற்றோர்களைப் பலிகொடுத்துவிட்டு அழுது கொண்டிருக்கும் குழந்தைகளையும் நான் கண்டேன்" என்று அவர் எழுதுகிறார். அகதி முகாம்களில் காணப்பட்ட மிகவும் அசெளகரியமான சூழ்நிலை பற்றிக் குறிப்பிடும்பொழுது, "அங்கிருந்த நிலைமைகள் மிகவும் கவலைக்கிடமாக இருந்தன. ஐந்து நாட்களாக உணவின்றி அம்மக்கள் அவஸ்த்தைப்பட்டார்கள். ஆறாவது நாள் வெறும் 30 உணவுப் பொட்டலங்களை யாரோ கொண்டுவந்து கொடுத்தார்கள், ஆனால் முகாமிலிருந்தவர்களோ ஏறக்குறைய 1,000 பேர். முகாமின் சுகாதார நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருந்தது. அங்கு நீர் வசதிகள் இருக்கவில்லை, ஆகவே மலசல கூடங்கள் பூட்டப்பட்டிருந்தன. அம்முகாமின் இன்னொரு மூலைக்குச் சென்று மலங்கழிக்கவும், சிறுநீர் கழிக்கவும் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். ஒரு சில நாட்களிலேயே அம்முகாம் எங்கும் கடும் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. அன்றிருந்த வெப்பமான காலநிலை முகாமினை கிருமிகள் உற்பத்திசெய்யும் நிலையமாக மாற்றிவிட்டிருந்தது. அம்முகாமெங்கும் இருந்த மலக்கழிவுகளில் உயிர்வாழ்ந்த சாதாரண வீட்டு இலையான்கள் பருத்துப் போய் பல்வேறு நிறங்களில் வலம்வந்துகொண்டிருந்தன. நோய்கள் பரவத் தொடங்க, பல அகதிகள் வாந்திபேதியினாலும், வயிற்றுப்போக்கினாலும் அவஸ்த்தைப்பட்டுக்கொண்டிருந்தனர். ஏற்கனவே பரவிவந்த துர்நாற்றத்துடன் இவையும் கலந்துகொள்ள அப்பகுதி வசிப்பதற்கே மிகவும் கடிணமான இடமாக மாறிவிட்டிருந்தது. காய்ச்சலால் இரத்தச் சிவப்பாகிவிட்ட கண்கள், தண்ணீரின்மையினால் வெடித்துப்போயிருந்த உதடுகள், வயிற்றோட்டத்தால் எரிந்துகொண்டிருந்த பின்புறங்கள் என்று அம்மக்கள் நரக வாழ்வினை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்". அனீட்டா பிரட்டாப். அகதிகளாக்கப்பட்ட தமிழர்களின் அவலங்களைத் தனது அறிக்கையில் சேர்த்ததன் மூலம் அவ்வறிக்கையினை சோகம் நிறைந்ததாக மாற்றியிருந்தார். அவ்வகையான மூன்று அகதிகளின் கதைகள் பகிரப்பட்டிருந்தவற்றில் முக்கியமானவையாகத் தெரிந்தன. சச்சிதானந்தன் எனும் வயோதிபர் வாழ்ந்துவந்த தொடர்மாடி வீட்டினுள் நுழைந்த சிங்களவர்கள் அங்கிருந்த பொருட்களைக் கொள்ளையிட்ட பின்னர் வீட்டிற்குத் தீமூட்டினர். தாக்குதலில் ஈடுபட்ட ஒரு சிங்களவன் அவ்வயோதிபரைப் பிடித்து இழுத்துவந்து கைகளைப் பின்னால்க் கட்டினான். இன்னும் மூன்று சிங்களவர்கள அவரது மகனையும் இழுத்துவந்து பின்னால் கைகளைக் கட்டி இருத்தினார்கள். தமது வீட்டின் விறாந்தையில் அவர்கள் இருத்தி வைக்கப்பட்டார்கள். பின்னர் கீழே எரிந்து கொண்டிருந்த மொறிஸ் மைனர் காரின் மீது மகனை உயிருடன் தூக்கி வீசியது அச்சிங்களக் கூட்டம். மகன் எரிந்து கருகுமட்டும் தகப்பனாரை அதனைப் பார்க்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தினார்கள் மீதிச் சிங்களவர்கள். இன்னொரு தமிழரான சிவானந்தன் நான்கு மாடிகளைக் கொண்ட குடியிருப்பில் இருந்து கீழே பாய்ந்து உயிர் தப்ப முனைந்தார். கீழே வீழ்ந்தபோது அவரது கால்கள் இரண்டும் நொறுங்கிப்போக, நடமாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். அவரை கொழும்பு பிரதான வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்றபோது இன்னும் பல தமிழர்களை வைத்தியசாலையில் பணிபுரிந்த சிங்களவர்கள் அவமதித்துத் திருப்பியனுப்பியது போன்று அவரையும் திருப்பியனுப்பினார்கள். மேர்சி மொறாயஸ் 29 வயது நிரம்பிய சட்டக்கல்லூரி மாணவி. அகதி முகாம்களின் ஒன்றின் நிர்வாகத்தை அவரே கவனித்து வந்தார். நீண்டநேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவரது கணவரான மொறாயஸ் குறித்து அனீட்டா வினவினார். இதைக் கேட்டதும் மேர்சி அழத் தொடங்கினார், "எனக்குத் தெரியாது, அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டார்கள் என்று கேள்விப்பட்டேன்" என்று அவர் தேம்பியபடியே கூறினார். அனீட்டாவின் அறிக்கையினை படித்த ஒவ்வொரு தமிழரும் அவருக்கென்று ஒரு இடத்தை அவர்களின் மனங்களில் அமைத்தார்கள். அதற்கு நன்றிக்கடனாகவே தனது முதலாவது நேர்காணலுக்கான அனுமதியினை பிரபாகரன் அனீட்டாவிற்கு வழங்கினார்.
  7. முதலாவது நேர்காணல் இந்தியாவின் முன்னணிச் சஞ்சிகையான ச‌ண்டே, தனது பங்குனி 11 முதல் 17 வரையான இதழில் பிரபாகரனின் முதலாவது பேட்டியை வெளியிட்டதன் மூலம் இலங்கையிலும், இந்தியாவிலும் பலரது கவனத்தையும் ஈர்ந்தது. அதன் முன் அட்டையில் அகன்ற விழிகளுடன், சற்று பருமனான முகம் கொண்ட பிரபாகரன் இராணுவச் சீருடையில், அருகே துப்பாக்கியும் ஒலிநாடாக் கருவியும் இருக்க, மேசையொன்றின் பின்னால் அமர்ந்திருக்கும் வர்ணப்படம் அச்சிடப்பட்டிருந்தது. அட்டைப்படத்தில், நேர்காணலின் போது பிரபாகரன் கூறிய வசனமான , "ஜெயவர்த்தன ஒரு உண்மையான பெளத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் தூக்கவேண்டிய தேவை வந்திருக்காது" என்றும் எழுதப்பட்டிருந்தது. பிரபாகரன், அநிதா பிரதாப்புடனான நேர்காணலின் போது ‍ 1984 இந்த நேர்காண‌லின்போது இந்தியாவின் கொள்கைகள், இக்கொள்கைகளை முன்னெடுப்பதில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஆற்றும் பங்கு, தனிநாடான ஈழத்திற்காக புலிகள் கொண்டிருக்கும் பற்றுறுதி ஆகியன பற்றி பிரபாகரன் வெளியிட்ட கருத்துக்கள் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. இது மட்டுமல்லாமல், இந்த நேர்காணல் இலங்கையிலும் கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இலங்கை இராணுவமும், பொலீஸாரும் பிரபாகரனின் தற்போதைய உருவ அமைப்பினை புகைப்படமாகக் கண்டது இந்த அட்டைப்படத்தில்த்தான். அதுவரை காலமும் அவர்கள் பிரபாகரனின் சிறுவயதுப் படம் ஒன்றை வைத்துக்கொண்டே இலங்கையில் மிகவும் வேண்டப்பட்டவரான அவரைத் தேடிக்கொண்டிருந்தார்கள். இப்புகைப்படம் வெளிவந்தவுடன், அதனைப் பல பிரதிகள் எடுத்து நாடெங்கிலும் உள்ள பொலீஸ் நிலையங்களுக்கு அவர்கள் அனுப்பி வைத்தார்கள். கல்கத்தாவைத் தளமாகக் கொண்டு வெளிவரும் சண்டே மற்றும் டெலிகிராப் ஆகிய பத்திரிக்கைகளின் நிருபராக, கேரளாவின் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த மலையாளியான 25 வயது நிரம்பிய அனீட்டா பிரதாப்பே இந்த நேர்காணலினை செய்தவர். கல்கத்தாவில் தனது பள்ளிப்படிப்பினை நிறைவுசெய்து, தில்லியில் பட்டப்படிப்பினை முடித்து பின்னர் தமிழ்நாடு வந்து அங்கிருந்து இலங்கை தொடர்பான விடயங்களையும், இனப்பிரச்சினை தொடர்பான தகவல்களையும் அவர் வழங்கிவந்தார். 1981 ஆம் ஆண்டிலிருந்து இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து அதீத அக்கறை காண்பித்து வந்த அனீட்டா, சென்னையில் அமைந்திருந்த பல தமிழ்ப் போராளி அமைப்புக்களினதும் அலுவலகங்களுக்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார். பிரபாகரனைத் தவிர ஏனைய தமிழப் போராளி அமைப்புக்களினதும் தலைவர்களை அவர் ஏற்கனவே பேட்டி கண்டிருந்தார். புலிகளின் தலைவரைப் பேட்டி காண்பதற்கு தான் பலமுறை முயன்றபோதும்கூட, இவ்வாறான பேட்டிகளில் தலைவருக்கு நம்பிக்கையில்லை என்பதனால் அவர் இதற்கு உடன்படப்போவதில்லை என்று புலிகளின் அரசியல்த்துறை தன்னிடம் கூறிவந்ததையும் அவர் ஒத்துக்கொள்கிறார். "பேட்டிகள் கொடுப்பதைக் காட்டிலும், செயலில் ஈடுபடுவதன்மூலமே மக்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்று அவர் நம்புகிறார்" என்று அனீட்டாவிடம் புலிகள் கூறியிருக்கிறார்கள். தனது போராளிகளுடன் பேசும்போது, "எமக்குப் பிரச்சாரம் தேவையில்லை, எமது தாக்குதல்களே எமக்கான பிரச்சாரத்தைச் செய்கின்றன" என்று பிரபாகரன் அடிக்கடி கூறியிருக்கிறார். செவ்விகாண்பதில் சிறந்தவரான அனீட்டா, பிரபாகரனைப் பேட்டி காண வேண்டும் என்று பாலசிங்கத்தையும், புலிகளின் அரசியல்த்துறையைச் சேர்ந்தவர்களையும் 1984 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே தொடர்ச்சியாக கேட்டுவந்ததனால், இவர்குறித்து புலிகள் நன்கு அறிந்து வைத்திருந்தனர். இரத்தத் தீவு என்று தான் எழுதிய புத்தகத்தில் பிரபாகரனைத் தனித்துவமான மனிதராக அவர் சித்திரித்திருக்கிறார். அனீட்டா பிரதாப் இலங்கைக்கு இருமுறை பயணம் செய்திருக்கிறார். தனது கணவருடன் 1983 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் பின்னர் ஆடி இனக்கொலை நடந்தபின்னர் அதனைப் பதிவுசெய்யவும் அங்கு சென்றிருக்கிறார். மாசி மாத பயணத்தின்போது இலங்கை ஜனாதிபதியான ஜெயாரை அவர் பேட்டி கண்டார். "தன்னைப் பேட்டி காண நான் கேட்டுக்கொண்டபோது ஜனாதிபதி ஜயவர்த்தன இணங்குவார் என்று நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை" என்று அவர் கூறுகிறார். "நான் ஒரு அனுபவம் குறைந்த, இளவயதுப் பெண், ஆகவே அவர் நேர்காணலுக்கு இணங்கியபோது உண்மையாகவே நான் அதிர்ச்சியடைந்தேன்" என்று 2001 இல் தனது புத்தகத்தை வெளியிட அவர் கொழும்பு வந்திருந்தபோது கூறினார். தகவல்த் தொடர்ப்பாற்றலின் இயக்குநரான மானல் அபெயரட்ண என்னிடம் பேசும்போது, இந்திய மக்களுக்கு, இந்திய ஊடகம் ஒன்றின் ஊடாகவே தனது செய்தியைச் சொல்வதற்கு அனீட்டாவின் நேர்காணலினைப் பயன்படுத்த ஜெயவர்த்தன விரும்பியதாக கூறினார். யாழ்ப்பாணத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து உடனடியாக இந்திய மக்களுக்கு அறிவிக்கவேண்டிய தேவை அவருக்கு இருந்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டிருந்த மதகுருக்களையும், தொழில்சார் நிபுணர்களையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி பல்லாயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், மதகுருமார், தொழிலாளிகள், சாதாரண பொதுமக்கள் என்று பாரிய சனக்கூட்டம் ஒன்று தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தது. மாணவர்களும், அரசியற்கட்சி தலைவர்களும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு போராடி வந்த அதேவேளை, ஆயுத அமைப்புக்கள் பொலீஸார் மீதும், இராணுவத்தினர் மீதும் தாக்குதல்களை முடுக்கிவிட்டிருந்தனர். இந்நாட்களிலேயே பொலீஸ் அதிகாரியான விஜயவர்த்தனவும், அவரது பொலீஸ் சாரதியும் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர். ஆகவே, இவ்வாறான போராட்டங்களுக்கெதிராக தான் எடுத்திருக்கும் கடுமையான நிலைப்பாட்டினை சர்வதேசத்திற்கும், இந்தியாவுக்கும் நியாயப்படுத்த வேண்டிய தேவை ஜெயவர்த்தனவுக்கு இருந்தது. தனது நேர்காணலுக்கான வரவேற்பின்பொழுது ஜெயவர்த்தன் கைகளைக் கட்டியபடி வரவேற்ற விதமும், அவ்வரவேற்பினை தகவற்தொடர்பாற்றல் பிரிவு புகைப்படம் எடுத்துக்கொண்ட விதமும் அனீட்டாவை ஆச்சரியப்பட வைத்திருந்தன. இந்த நேர்காணலுக்கான பிரச்சாரத்தை வர்ணப் புகைப்படங்களுடன், தலைப்புச் செய்தியாக வெளியிட வேண்டும் என்று லேக் ஹவுஸ் பத்திரிக்கைகள் அரசால் பணிக்கப்பட்டன. டெயிலி நியூஸ் தனது முதலாவது பக்கத்தில் பேட்டியினையும், இரண்டாவது பக்கத்தில் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தது. இப்புகைப்படங்களில் ஒன்றினை தகவற் தொடர்பாடல் அமைப்பிடமிருந்து பெற்றுக்கொண்ட அனீட்டா, ஆடியில் இனக்கொலையினைப் பதிவுசெய்ய மீண்டும் இலங்கை வந்தபோது தனது பையில் அதனையும் கொண்டுவந்திருந்தார். ஆடி இனக்கொலையினை அனீட்டா பிரசுரித்த விதம் பிரபாகரனைக் கவர்ந்திருந்தது. அதனாலேயே அனீட்டா கேட்டுக்கொண்டபோது நேர்காணலுக்கு அவர் ஒத்துக்கொண்டார். 1983 ஆம் ஆண்டு இனக்கொலையினை அவர் பதிவுசெய்த விதமும், துணிவுடன் அவர் வெளியிட்ட செய்திகளும் தன்னைக் கவர்ந்திருந்ததாக அனீட்டாவிடம் நேர்காணலின்பொழுது பிரபாகரன் தெரிவித்திருந்தார். அனீட்டவுடன் பிரபாகரன் பேசும்போது, "நாம் கெரில்லாப் போராளிகள், நாம் தெரிவுசெய்திருக்கும் பாதை மிகவும் ஆபத்தானது. ஆகவே, கடிணமான சந்தர்ப்பங்களுக்கு முகம் கொடுப்பதென்பது எங்களைப் பொறுத்தவரை இயல்பானது. ஆனால், செய்தியாளரான நீங்கள் ஆபத்தான விடயங்களில் இறங்கவேண்டிய தேவையில்லை. ஆனால், உண்மையினை வெளிக்கொண்டுவருவதற்காக போர்நடக்கும் தேசத்திற்குள் வந்து எம் மக்களின் அவலங்களைச் செய்தியாக்கியிருக்கிறீர்கள். உங்கள் மூலம் தமிழர்களின் அவலங்கள் சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதற்காக தமிழர்கள் என்றென்றைக்கும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார். தனது சொந்த விருப்பின் பேரிலேயே ஆடி இனக்கொலை தொடர்பாக செய்தி சேகரிக்க இலங்கை வர எண்ணினார் அனீட்டா. அதற்காக டெலிகிராப் ஆசிரியரான அக்பரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அனுமதிகோரியபோது, தயக்கத்துடனேயே அவரும் அனுமதியளித்தார். மிகக் கொடூரமான இனக்கலவரம் ஒன்றினைச் செய்தியாக்குவதற்காக இளவயதுப் பெண் ஒருவரை அனுப்புவதென்பது அக்பரைப் பொறுத்தவரையில் கடிணமான செயலாக இருந்தது. இனக்கொலை ஆரம்பித்து நான்காம் நாளான ஆடி 28 ஆம் திகதி அனீட்டா கட்டுநாயக்கவில் வந்திறங்கினார். அன்றிரவு அவர் வந்திறங்கியபோது நகரில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததுடன், அவர் தங்குவதற்கான விடுதியும் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கவில்லை. அவருடன் விமானத்தில் கூடவே பயணம் செய்த பி.பி.சி யின் மாக் டல்லி அவருக்கு விடுதி ஒன்றினை ஒழுங்குசெய்ய உதவினார். கோல்பேஸ் ஹோட்டலில் அவருக்கு தங்க வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. மறுநாளான வெள்ளிக்கிழமை, புலிகள் கொழும்பு நகருக்குள் வந்துவிட்டார்கள் என்கிற வதந்தி பரவவே நகர் அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருந்தது. ஊரடங்கு உத்தரவின்போது செய்தி சேகரிக்கும் அனுமதியினைப் பெற்றுக்கொள்வதற்காக அவர் தான் தங்கியிருந்த கோல்பேஸ் ஹோட்டலில் இருந்து கொள்ளுப்பிட்டியில் அமைந்திருக்கும் பொலீஸ் நிலையத்திற்கு நடந்தே சென்றார். ஊரடங்கு நேரத்தில் பயணிக்கும் அனுமதியைப் பெற்று, தனது கைப்பையில் பத்திரமாக மடித்து வைத்துக்கொண்ட அனீட்டா, உண்மையைத் தேடி ஆபத்தான பயணத்தினை ஆரம்பித்தார். அக்பர் அஞ்சியது போல, அவரது பயணம் சுமூகமானதாக இருக்கவில்லை. ஒவ்வொரு வீதியாகச் சென்று அங்கு இடம்பெற்றிருக்கும் அழிவுகளை ஒளிப்படங்களாகவும், குறிப்புக்களாகவும் பதிவுசெய்யத் தொடங்கினார். எரிந்துபோய், எலும்புக்கூடுகளாகக் காட்சியளித்த தமிழருக்குச் சொந்தமான கடைத் தொகுதிகள், வீதிகளில் கவிழ்த்து எரிக்கப்பட்ட தமிழர் பயணித்த வாகனங்கள், மனித ஆரவாரம் இன்றி வெறிச்சோடிப் போயிருந்த நகர வீதிகள், வீதியெங்கும் பரவிக் கிடந்த தளபாடங்களும், ஏனைய கண்ணாடிப் பொருட்களும், ஆங்காங்கே இன்னமும் கட்டிடங்களிலிருந்து மேலெழுந்துகொண்டிருந்த கரிய புகை, வீதிகளில் பெருகத்தொடங்கியிருந்த குப்பை கூழங்கள் என்று எல்லாமே செயலிழந்துபோன தேசத்தை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஒரு கட்டத்தில் துப்பாக்கிகளை ஏந்திப்பிடித்துக்கொண்டு அவரை நோக்கி ஓடிவந்த இரு பொலீஸார் அவரது ஒளிப்படக்கருவியைப் பறித்துக்கொண்டதோடு, பொலீஸ் நிலையம் நோக்கி இழுத்துச் செல்லத் தொடங்கினர். தான் கட்டிடக் கலை பயிலும் மாணவி என்றும், கட்டடங்களைப் படமெடுக்கவே அங்கு வந்ததாகவும் அவர் கூறினார். ஆனால் பொலீஸ்காரர்கள் அவரை நம்பத் தயாராக இருக்கவில்லை. ஆகவே, அவரது கைப்பையைப் பறித்துச் சோதனையிட‌த் தொடங்கினார்கள். உள்ளே அவ்வருட மாசி மாதத்தில் ஜெயவர்த்தனவுடன் அனீட்டா எடுத்துக்கொண்ட புகைப்படம் கண்ணில்ப் படவே, அவரது ஒளிப்படக் கருவியை அவரிடமே கொடுத்துவிட்டு, உள்ளிருந்த ஒளிப்படச் சுருளினை வெளியே எடுத்து, "இங்கே ஒளிப்படம் எதனையும் எடுக்காதே" என்று எச்சரித்து அனுப்பினர். தான் கொழும்பில் இருந்த நாட்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், குறிப்புக்களையும் நட்டைவிட்டு வெளியே கொண்டுவருவதும் சவாலாக இருக்கப்போகிறது என்பதை அனுமானித்த அவர், குறிப்புக்களை மடித்து தனது காலணிக்குள் மறைத்துக்கொண்டதோடு, புகைப்படச் சுருட்களை இன்னொரு இந்தியப் பயணியிடமும் கொடுக்கவேண்டியதாயிற்று.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.