Ravi Indran

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  26
 • Joined

 • Last visited

Everything posted by Ravi Indran

 1. அம்மா! நினைவினைப் பிழிந்து கொஞ்சம் நெஞ்சின் நெருப்பிலே போடுகின்றோம். தீயின் தீ கூட கசிந்து மெல்ல கண்ணீராய் வழியுதம்மா..!! தடம் மாறிப்போன தமிழை இடம் நோக்கி இழுத்து வர ஒரு பிள்ளை பெற்றாயம்மா! இன்று பாரின் திசையிருந்து அழுவோர்க்கெல்லாம் என்றும் நீயே அம்மா! மானத் தமிழன் தாயே அம்மா! இதமான மழையின் ஈரம் பலமான அலையின் ஓரம் கால் பட்ட தடங்கள் அழிய ஈமங்கள் முடியும் அங்கே! நாமங்கள் முடிவதில்லை! அம்மா உன் ஞாபகம் வளரும் எம்மில் ஈழப்போர் ஓய்வின்றித் தொடரும்..!
 2. தேசக் காதல் யூலியட் இறக்கவில்லை நடித்திருந்தாள். ரோமியோ அறியவில்லை இறந்துவிட்டான். யூலியட் அறிந்துபின் இறந்துவிட்டாள். “இருவரும் இறக்கவில்லை விதைக்கப்பட்டார்கள்” எழுதிவைத்தார்கள் காதலுக்காய் உயிரைவிடுதல் காவியம் என்று. ரோமியோ! யூலியட்! உருகி வழிகிறது உலகம் முழுதும் ஒன்றுக்கு பதிலாய் பல நூறாயிரமாய் நாமும் காதலித்தோம். இதயச்சுவர்களில் ஈரமாய் எழுதினோம். ஊர்காற்று முழுதும் ஓலை அனுப்பினோம். காது மடல்களில் கானம் இசைத்தோம். மூக்கு முட்டிச் சுவாசித்தோம். இதழ்களால் இறுகப் பற்றினோம். கண்கள் முழுதும் நிறைத்தோம். ஒரு கோப்பையில் உண்டோம். காலடிச் சுவடுகளில் கால்வைத்து நடந்தோம். அவள் ஒளியில் அவள் தந்த சுகத்தில் அவள் காட்டிய அரவணைப்பில் ஆனந்தமாய் இருந்தோம். காதல்..! காதல்…! இனிதாய்தான் பருகினோம். ஆனால் எங்களை நிஐமாய் நேசித்தவளை சாகடிக்கும் போது நாமும் இறந்துவிட்டோம். எங்களுடைய சாவுக்கு யாரும் வருத்தப்படவில்லை. எங்கள் காதலை காவியமாய் யாரும் இன்றுவரை எழுதவில்லை. நாம் இத்தாலியில் பிறக்கவில்லை எங்கள் வீதிகளில் வெரோனாவின் வாசம் இல்லை என்பதாலோ தெரியவில்லை. வல்லவர்களே! நீங்கள் ஒட்டிய பயங்கரவாத முத்திரைகளுடன் உங்கள் வாசல்களில் வந்து நிற்கும் எங்கள் உறவுகள் சொல்லுவார்கள். எங்கள் காதலை ஒருநாள் உங்களுக்கு மனச்சாட்சி வந்தால் அவர்கள் சொல்வதையும் கேளுங்கள். எங்களையும் எழுதுங்கள். பெரும் காவியமாய் அல்லாவிட்டாலும் நாங்களும் காதலுக்காக உயிரை விட்ட மானசீக காதலர்களே! என்ற பேருண்மையை உலகம் அறியப்போதுமான “நாம் பயங்கரவாதிகள் அல்ல” என்ற சிறு குறிப்பை மட்டும் ரவி இந்திரன்
 3. காதல் அம்மாவின் மார்புக்குள் அப்பாவை தொட்டபடி விளையாட்டுப் பொம்மையுடன் தூங்குகிறேன். வெளியில் நான் இலைபோட்டுக் காப்பாற்றிய மழைவெள்ளத்தில் நனைந்த எறும்பு குளிருக்கு என்ன செய்யும்? ஐயோ பாவம்! எல்லாமே என் சொந்தம் சொந்தங்கள் எல்லாமே எனக்காக என்கிறது குழந்தை எனக்குப் பசித்திருக்கும் அவனுக்குப் பால் கொடுப்பேன். எனக்குத் தூக்கம் வரும் அவனைத் தாலாட்டுவேன். தந்தைக்குச் சேமித்த நேரத்தையும் அவனுக்குச் செலவு செய்வேன் என்கிறாள் தாய் என் வலிய தோள்களே வலிபெறுமளவுக்கு சுமப்பேன். முடமான கால்களால்கூட அவனைச் சுமந்து நடப்பேன். வீட்டுக்கொரு கொலுசுச் சத்தம் கூட்டி வந்த பின்பும் கண்ணை இமைபோல அவனை நான் காப்பேன். என்கிறார் தந்தை. என் தங்கை வடிவில் எனக்கொரு மகள் உண்டு அவளுக்கான மெழுகுவர்த்தி ஒளி நான் என்கிறான் அண்ணன். அவள் சிரிக்கும் போது என் நெஞ்சுக் கூட்டில் நெருப்பெரியும். முறைக்கும் போது இருதயத்துக்குள் மழை பொழியும். நினைக்கும் போது முற்றிலுமாய் தொலைந்து போவேன் என்கிறான் அவன். உன்னைக் காதலிக்கவும் வேறு யாரையும் காதலிக்காமல் இருக்கவும் கற்றுத் தந்தது உன் மீது நான் கொண்ட காதல் என்கிறாள் அவள். எனக்குத் தெரிந்த அழகிய வார்த்தை காதல். நான் எதை எழுதும் போதும் எதிரில் வந்து அருகில் அமர்வது காதல். என்கிறான் கவிஞன். எனக்குத் தெரிந்த அதி சக்தி வாய்ந்த அணுகுண்டு காதல் என்கிறான் விஞ்ஞானி. அவனுக்காக அவளும் அவளுக்காக அவனும் உயிரைக் கொடுத்ததால் உலகில் உருவாகியது காதல் காவியங்கள். தாயே உனக்காக ஒன்றல்ல நூறல்ல பல்லாயிரமாய் அவள்களும் அவன்களுமாய் நாம் உயிரைக் கொடுக்கிறோம் உலகில் உயர்ந்தது உன்னதமானது உன்மீது நாம் கொண்ட காதல் என்கிறான் போராளி இடம் பொருள் ஏவலிற்கேற்ப வடிவெடுக்கும் வல்லமை கொண்ட உயிரி ஒவ்வொன்றினதும் உயிர்ப்பான உணர்வே காதல் என்கிறான் என் நண்பன் பல சமயம் உள்ளே மிருகம் வெளியே கடவுள் சில சமயம் வெளியே மிருகம் உள்ளே கடவுள் என்கிறான் இன்னொருவன் இதில் எல்லாருமாய் நான் இருக்கிறேன் அல்லது இருக்க விரும்புகிறேன். காரணம் காதலை நான் காதலிக்கிறேன் காதலால் நான் காதலிக்கப்படுகிறேன் என்கிறேன் நான் ரவி இந்திரன்
 4. வணக்கம் வல்வை சகாரா அக்கா, உங்கள் கவிதைக்கும் சக உறவுகள் கருத்துக்கும் என் கருத்தாக நிறைய எழுத வேண்டி இருக்கு.... எனக்கு நேரம் கிடைப்பது மிக அரிது தாமதத்திற்கு மன்னிக்கவும் உங்கள் கவிதை அருமை ஆனாலும் நன்றியோ பாராட்டோ தெரிவிக்க விரும்பவில்லை. ஏனெனில் நம்பிக்கையையும் விடுதலை வேட்கையையும் விதைப்பது ஒவ்வொரு கலைஞனினதும் கடமை. (உதாரணத்திற்கு போராட்டம் மிகப்பெரும் சவாலையும் மனிதப்பேரழிவையும் சந்தித்துக்கொண்டிருந்த மே மாத தொடக்கத்தில் ஒரு போராளியுடன் பேசும் சாத்தியம் கிடைத்தது. அப்போது பின்னணியில் குண்டுச் சத்தங்களுக்கு மத்தியில் தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதை ஒன்று ஒலித்துக் கொண்டிருந்தது. என்ன அண்ணா இந்த நேரத்தில் கவிதை எனக் கேட்டேன். அதற்கு “ அண்ணை எங்களுக்கு காயத்திற்கு மருந்து சாப்பாடு இரத்தம் எல்லாமே இப்ப இதுதான் தருது என்றார். கவிதையின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய விடயம் இது. கவிதைக்கு பெருமை சேர்க்கின்ற விடயம். உலகப்போரியல் வரலாற்றில் விடுதலை வேண்டி போராடும் இனங்களின் வரலாற்றில் அந்தக் கவிதை சிகரம். ஆனால் துரதிஸ்ட வசமாக அந்தக்கவிதை இன்னும் வெளிவரவில்லை. அந்தக்கவிதை குறிப்பிட்ட போராளிகளை இன்னும் சாதிக்கவைத்தது. நம்பிக்கையை அதிகமாக்கியது. இராணுவ முற்றுகையை உடைத்த அந்தப்போராளிகள் தற்போது உயிருடன் உள்ளார்கள். ஆகையால் அந்தக் கவிதை வெளி உலகிற்கு வரும்.) சாத்தியம் சாத்தியம் இன்மை பற்றி வட்டமேசை போடவும் அங்கே தவறு இங்கே தவறு என்று மேடைபோட்டு முழங்கவும் நாங்கள் ஆய்வாளர்களோ அரசியல்வாதிகளோ அல்ல. இன்னும் சொல்லப்போனால் போராட்டம் முன்னேற்றம் கண்ட காலத்தில் பெற்ற தாயை இரத்த உறவுகளை விட தமிழீழத்தாய் மண்ணின் விடுவு மட்டுமே கண்களுக்கும் உணர்வுக்கும் தெரிந்த அந்த அப்பழுக்கற்ற தமிழ்த்தாய் மைந்தர்கள் போல் போராட்டம் பின்னடைவைக் கண்டிருக்கும் இந்தக் காலத்தில் நம்பிக்கையையும் விடுதலை வேட்கையையும் இன்னும் இன்னும் அதிகமாய் விதைக்கும் அப்பழுக்கற்ற எழுத்துப்போராளிகள் நிறையத் தேவை.(யாழ் களத்தைப் பார்க்கும் போதே புரிகிறது) ஏனெனில் இன்றைய நிலையில் எதிரிகளும் துரோகிகளும் தமிழரின் நம்பிக்கையையும் விடுதலை வேட்கையையும் சிதைக்கும் கருத்து யுத்தத்தை தீவிரப்படுத்துகின்றார்கள். நாங்களும் எங்கள் பணியை தீவிரப்படுத்துவோம். எதிரிகளையோ துரோகிகளையோ கண்டு அஞ்சத்தேவையில்லை அவரவர் கடன் அவரவர் பணி செய்து கிடப்பதே ஆகும். ஆகவே எல்லோரு தொர்வோம். உதாரணத்திற்கு “இன்னுமொரு மில்லர் பிறப்பான் அவன் முன்னைவிட பெரிதாய் வெடிப்பான்” என்று எழுதினால் அது கற்பனை பண்ணுவதாயோ உசுப்பேத்தி விடுவதாயோ அர்த்தம் ஆகாது. தேவையேற்படின் அந்த இன்னுமொரு மில்லர் நானாக தயாரான பின்னரே அப்படி எழுதுகின்றேன். (எனக்கு யாரும் மண்டையை கழுவவும் இல்லை. எனக்கு வாழ கஸ்டமும் இல்லை. சிறு வயதில் இருந்தே சுகபோகமாய் வெளிநாட்டில் வாழும் பல்லாயிரம் இளைஞர்களில் நானும் ஒருவன் அவ்வளவுதான்) அத்துடன் மாவீரர் பட்டியலிலும் முகம்தெரியாக் கரும்புலிகள் பட்டியலிலும் வெளிநாட்டில் பிறந்தவர்கள் அல்லது வாழ்ந்தவர்களி;ன் பெயர்கள் உள்ளன. யார் எதை அழித்தாலும் தமிழீழ ஆண்மாவின் வரலாறு நிச்சயம் பதியப்படும். அப்போது பெயர்கள் வெளிவரும். புரட்சிகள் கண்டம் கடந்தும் தேசம் கடந்தும் நடந்தது வரலாறு. புரட்சியின் சரித்திரம் சாய்ந்ததில்லை அது புது வழி காணாமல் ஓய்ந்ததில்லை. நாங்களும் நிச்சயம் வழி காணுவோம். யூதர்கள் போல் ஊர்மனையேறியே உறங்குவவதாய் சபதம் எடுப்போம். மாறிவரும் உலக சூழலுக்கேற்ப காய் நகர்த்த வேண்டும் என்பது உண்மை. அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பிக்கொடு என்ற தகவல் ஒவ்வொரு தமிழனின் மரபணுவிலும் பொதிந்து கிடக்கம் பரம்பரைச்செய்தி என்பதும் உண்மை. என் சொந்தங்கள் ஐம்பத்தி எட்டுப்பேரை பேரினவாத யுத்தம் தின்றுவிட்டது. இன்னும் நூற்றி அறுபத்தி எட்டுப்பேர் முகாமுக்குள்ளும் சிறைக்குள்ளும் இன்றைய செய்தியாக இரண்டு கால்களையும் இழந்த பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவனுக்கு பல்கலைக்கழகம் செல்ல அனுமதி மறுப்பு ஈர நிலத்தில் அமர்ந்து புலமைப்பரிசில் பரீட்சை எழுத வேண்டிய நிலையில் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் தங்களை அறியாமலேயே கர்ப்பமாகியிருக்கும் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழச்சிகள். சீழ்ப்பிடித்த சித்திரவதைக்காயங்களால் மடியும் சிறப்பு முகாம் தமிழ்ர்கள் இப்படி நீள்கிறது... சிங்களப் பேரினவாதம் தமிழினத்தின் ஆண்மாவில் ஏற்படுததும் ஆழமான காயங்கள். இவை என்றுமே ஆறிவிடவோ மாறிவிடவோ போவதில்லை. ஆகையால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கின்றான். (மாறாக ஆய்வாளப்பெருந்தகைகளோ கருத்துக் கந்தசாமிகளோ அல்ல) மானத்தமிழினத்தின் தலைவன் சொன்னதிலிருந்து ” எனது மக்களிற்கான தீர்வை சர்வதேசத்திடமும் வரலாற்றிடமும் விடுகின்றேன்” இது சர்வதேசம் தீர்ப்புச் சொல்ல வேண்டிய காலம். தவறினால் வரலாறு நிச்சயமாக தீர்ப்புச்சொல்லும். ஆனால் அதற்கு நாங்கள் விதைக்க வேண்டியது நம்பிக்கையும் விடுதலை வேட்கையும் அன்றி சாத்தியம் சாத்தியம் இன்மை பற்றிய ஆய்வுகளோ சரி தவறு பற்றிய வாதப்பிரதி வாதங்களோ அல்ல. சகாரா அக்கா எங்கள் போராட்ட வரலாற்றை பேணிப் பாதுகாக்கவும் நம்பிக்கையையும் விடுதலை வேட்கையையும் விதைக்கவும் உங்களுக்கு முன்னால் விளங்கும் ஒளிபொருந்திய கண்களையும் உணர்ச்சி மிக்க இதயங்களையும் பயன்படுத்துவது தவறில்லை. Jun 27 2009, 02:43 PM Post #1 “விடுதலை” செய்யுங்கள் புல்லோடும் புயலோடும் கல்லோடும் கடலோடும் பேச முடிந்த கவிஞர்களே! என்ன திடீர் மௌனம் உங்களுக்குள்ளே? புயலுக்கு முந்தியதா? பிந்தியதா? என உங்கள் மௌனங்களுக்கு உங்களுக்குள்ளேயே ஆராய்ச்சியா? நல்ல கதை. புயல்களை புதிது புதிதாய் பிறப்பிப்பதே நீங்கள்தானே. நீங்களே தூங்கினால் நாளைய பொழுதுகளின் நம்பிக்கையை யார் கொடுப்பது? நீண்ட இரவுகளின் இராச்சியத்திற்கு உங்கள் இமைகளை அனுமதிக்காதீர் கசியும் உங்கள் கண்களைத் துடையுங்கள் கடலலை மோதும் ஒவ்வொரு கரைகளுடனும் பேசுங்கள் முள்ளிவாய்க்காலில் சாட்சி இன்றி நடந்த யுத்தத்தை சாட்சியுடன் எழுதுங்கள் காற்றில் தவழும் அத்தனை அலைகளுடனும் உரையாடுங்கள் கஞ்சிக்கு உயிர் விலை கொடுத்ததையும் காற்றே களவாடப்பட்டு கந்தகமும் பொசுபரசும் பரிசளிக்கப்பட்டதையும் மருந்துக்கு மண் அள்ளிப் போட்டதையும் பெற்றதாய் மார்பில் செத்தபின் பால்குடித்த துயரத்தையும் என எங்கள் துயரத்தை எங்கள் நியாயத்தை எங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை நீதிக்கு இழைக்கப்பட்ட அநீதியை மொத்தமாய் பதிவுசெய்யுங்கள் இலக்கு தெளிவாய் தெரியும் விடுதலைப்பயணத்தில் இருள் என்று ஒன்று இல்லை. இருப்பின் அதன் பெயர் குறைந்த வெளிச்சம் என்று உங்கள் கவிதைகள் தீக்குச்சி கிழிக்கட்டும் கேளுங்கள் தரப்படும் தரப்படாவிட்டால் தரும்வரை கேளுங்கள் தட்டுங்கள் திறக்கப்படும் திறக்கப்படாவிட்டால் திறக்கும் வரை தட்டுங்கள் என்று மக்களுக்கு மனனஞ்செய்யட்டும் உங்கள் கவிதைகள் கவிஞர்களே! தயவு செய்து உங்கள் மௌனங்களை உடையுங்கள் செத்த கவிஞர்கள் கடமையையும் நீங்கள் தான் செய்யவேண்டும் பிறக்க இருந்து இறந்த கவிஞர்களையும் நீங்கள் தான் உருவாக்க வேண்டும் அவர்கள் எழுத நினைத்தவற்றையும் நீங்கள் தான் எழுதவேண்டும் அவர்கள் தொடக்கிவைத்தவற்றையும் நீங்கள்தான் முடிக்கவேண்டும் புறப்படுங்கள் தூரங்களும் இதயங்களும் சுருங்கிப்போன உலகில் உங்கள் கவிதைகள் காவியங்களாய் ஊடுருவட்டும் புயல்களை எதிர்பார்க்க பூகம்பங்களை எதிர்கொள்ள ஓவ்வொரு தமிழனுக்கும் கற்றுக் கொடுங்கள் அதோ தொலைவில்.. “போர் இன்னும் ஓயவில்லை எங்கள் தமிழ் ஈழமண்ணில்….” ஒரு கவிஞன் உடைத்த மௌனம் பேசுகிறது “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்…” இன்னொரு கவிஞனின் நம்பிக்கை பேசுகிறது. எங்கே நீங்களும் உங்கள் மௌனங்களை உடையுங்கள் உடைக்கும் போது மறக்கவேண்டாம் நம்பிக்கையையும் விடுதலை வேட்கையையும் விதைப்பதற்கு அன்பானவர்களே! உங்கள் பேனாக்கள் துளித்துளியாய் கரையட்டும் வார்த்தைகள் தீப் பொறியாய் வீழட்டும் அதுவே தமிழர் மனங்களில் உலகின் திசைகளில் ஈழ விடுதலைப் பெருந்தீயை அணையாது எரிக்கட்டும். எங்கள் பணி நாங்கள் தொடர்வோம்
 5. எங்கோ பார்த்தேன் அங்கே தொலைந்தேன் என்பேனே அது இவளைத்தான் என்றோ பார்த்தேன் அன்றே தொடர்ந்தேன் என்பேனே அது இவள் காலடித்தடம் தான் நான் மெல்லிசை ரசித்த முதல் பொழுதொன்று சொல்வேனே அது பிறந்தது இவள் கொலுசில் இருந்துதான் நான் தினம் தினம் இசைத்திடும் பல்லவி இருக்கிறதே அது பிறந்தது இவள் மொனத்தில் இருந்துதான் சூரிய தேவன் ஏவிய கதிராய் எனைச் சுட்டெரித்த கதை சொல்வேனே அது இந்தக் கண்கள் தான் வண்டுக்கு மலர்ந்த வாசமலரையெல்லாம் சூடிக்கொள்ளும் வசியக்காரி என்பேனே அவள் இவள்தான் உன் புன்னகை என்பது என்ன விலை என எனைப் பிறர் கேட்பதெல்லாம் இவள் எனைப் பார்த்துச் சிரித்த பிறகுதான் அப்பாவிய் நான் அன்று அழுது புரண்ட கதை ஒன்று சொல்வேனே அப்போது எனை அடித்துச் சென்றவள் இவள் தான் காவலர்களே! இவளைப் பிடித்துச் சிறையில் அடையுங்கள் நானிருக்கும் பைத்தியக்காரச் சிறையிலல்ல வெளியில் எங்கும் எரிகிறதே தீ அதை மூட்டிவிட்டு உள்ளிருக்கும் காதல் தீவிர வாதிகளுடன்.
 6. ஒருவன்.... இருளுக்கு நடுவில் எப்படி உன்னால் சிரிக்க முடிகிறது? இன்னொருவன்.... உன் வாழ்வின் ஒவ்வொரு சொட்டும் வசீகரம் மிக்கது. மற்றொருவன்.... இன்றும் போல என்றும் இருந்தால் எப்படி இருக்கும்? நான்.... ஆற்று வெள்ளம் அள்ளிப்போகும் கிளிஞ்சல் வாழ்வு. வாழ்வின் கோப்பையை நிறைப்பது இரவு. இரவின் கோப்பையை நிறைப்பது நிலவு. ஆனால் அதிகாலை வேளைகளில் நீ புற்களில் அழுதுவிட்டுப்போவதை நான் மட்டுமே அறிகின்றேன். என்னிரு விழிகள் போதவில்லை உன்னுடன் சேர்ந்து அழுவதற்கு நான் கவிஞன் என்பதால் என்னிடம் வர்ணம் பூசாத வார்த்தைகள் கூட இல்லை. நீ ஏன் அழுகின்றாய் என்பதை இந்த உலகிற்கு சொல்லிப்போவதற்கு.
 7. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் பென்மன்
 8. முகமறியாமல் அவர்கள் போயிருந்தாலும் அவர்களே எங்கள் முகவரிகள். எங்கள் முகவரிகளை நாங்கள் தொலைக்கவில்லை விதைத்துள்ளோம். மீண்டும் முளைகொண்டு விருட்சமாய் விரியும் விடுதலை வேட்கை.
 9. ஜீவா உங்கள் கருத்துக்கு நன்றிகள் அந்த நண்பன் எங்களை உருவாக்கியது போல் நாங்கள் ஒவ்வொருவரும் நிறைய நண்பர்களை உருவாக்குவது காலத்தின் தேவை. அதுவே ஈழத்தின் எதிர்காலத்திற்கு தேவை
 10. வல்வை சகாரா அக்கா உங்கள் கருத்துக்கு நன்றிகள் இன்றைய காலகட்டத்தில், எமக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஆவணப்படுத்துதலும், வீரம் தியாகம் நிறைந்த விடுதலைப் போராட்டத்தை முற்றுமுழுதாக கலை, இலக்கிய படைப்புக்களுக்குள் உள்வாங்கி பத்திரப்படுத்துதலும், நம்முன்னுள்ள முக்கிய பணி ஆகும். ஏனெனில் எங்களுக்கு உலகம் பதில் சொல்லாவிட்டாலும் வரலாறு நிச்சயம் பதில் சொல்லும்
 11. அரோகரா அரோகரா நல்லூர்க் கந்தனுக்கு அரோகரா வண்ணமயில் ஏறிவரும் வடிவேலனுக்கு அரோகரா முருகா! என்னப்பா இது? இனம் மொழி தாண்டி உன்ர வாசலிலை நிறையுது பக்தர்கள் வெள்ளம் கடையில விக்கிற பிள்ளையார் சிலையில மேடின் சைனா இருக்கு கடைக்குட்டிக்கு வாங்கிற அம்மம்மா குழலை வடக்கத்தையான் விற்கிறான் ஐப்பான் காரன் வந்து “சோ” றூம் போடுறான் பாகிஸ்தான் காரன் வந்து பாய் வி(ரி)க்கிறான் கண்ணுக்கு தெரியிற இடமெல்லாம் துரோகிகள் கூட்டம் கண்கட்டி வித்தை காட்டுது சிங்கள தேசம் வெள்ளை வேட்டி கட்டி சுது மாத்தையாக்கள் வெறும் மேலோட களு பண்டாக்கள் போதாக்குறைக்கு விமானச் சீட்டுக்கு விலைக்குறைப்பு ஊரடங்குச்சட்டத்துக்கு நேரக்குறைப்பு ஏ ஒன்பது பாதை திறப்பு… இப்படி நீளுது திருவிளையாடல் எங்களுக்கு மட்டும் ஓர வஞ்சனை முன்னூறாயிரம் பேருக்கு முள்ளுக்கம்பிச் சிறை பலபேருக்கு இலங்கை வரத்தடை ஏனெனில் நாங்கள் கேட்டது அலங்காரச் சுதந்திரமல்ல ஆனந்த சுதந்திரம் உனக்கென்னப்பா நூறு குடத்தில அபிசேகம் மண் போட்டால் மண் விழாத மக்கள் கூட்டம் வண்ண மயில் ஏறி வள்ளி தெய்வயானையோடு வடிவழகு வருகை வாழ்வு கந்தா கடம்பா கதிர்வேலா உன்ர வீதியில இருந்துதான் எங்கள ஏமாத்த நினைச்சவங்களை கண்டு பிடிச்சனாங்கள் உன்ரை வீதியிலை பசித்திருந்துதான் ஒரு பிள்ளை வடக்கத்தையான் முகத்திரை கிழிச்சவன் எங்கட மக்கள் மறந்தாலும் நீயாவது மறக்காமல் இரப்பா உனக்காச்சும் ஒரு சமயத்தில கோவணம் மிச்சம் இப்ப கொட்டாவி விடுற எங்கட சனத்துக்கு? எல்லாருக்கும் நல்லவரம் நல்கும் தமிழ்க்கடவுளே முருகா எனக்கும் ஒரு வரம் தந்துவிடு திருந்த நினைக்காத சனத்தை திருத்தவும் வேண்டாம் முள்ளுக்கம்பி வளவுக்குள்ள வருந்திற எங்கடை சனத்துக்கு வாழ்வளிக்கவும் வேண்டாம் இனக்கொலை புரிந்த தென்னிலங்கைக்கு தண்டனையும் வேண்டாம் வஞ்சகத்தோடை வளவுக்குள்ள வாறவங்களை கண்டு பிடிக்கவும் வேண்டாம் உனக்கு கொஞ்சம் பக்கத்தில காக்கா பீச்சினபடி நிற்கிற சங்கிலியன் சிலை மண்ணுக்குள்ள புதைஞ்சிருக்கிற மாவீரன் பண்டாரவன்னியன் கல்லறை முன்னர் கண்டியை ஆண்ட விக்கிரம ராஜசிங்கன் ஆழக்கடலாண்ட சோழ மகாராஜன் தமிழர் மனங்களில் கொழுந்துவிட்டெரிகிற விடுதலைப் பெருநெருப்பு பிரபாகரன் இப்பிடி மண்ணிலை முளைச்சிருக்கிற வரலாறை உன்ர பக்தர்களுக்கு நினைவிருத்து அதுபோதும் வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆதிக்கம் அகன்ற நாள் வர நாங்களும் ஒரு நாள் உன் வாசல் வருவோம் அதுவரை அரோகரா அரோகரா நல்லூர்க் கந்தனுக்கு அரோகரா வண்ணமயில் ஏறிவிளையாடும் வடிவேலனுக்கு அரோகரா
 12. உள்ளிருந்து ஒலித்த முகவரி தொலைத்த மனிதர்களின் குரலை சத்தமாக சொன்னமைக்கு நன்றிகள் எழுதியவரின் முகவரியை தவறவிட்டிருந்தாலும் அது ஒரு வகையில் பொருத்தமானதாகவே இருக்கின்றது. ஏனெனில் இது ஒரு தனிமனிதனின் குரல் அல்ல. முகவரி தொலைத்து நிற்கும் முகம் தெரியா உறவுகளின் ஆத்மாவின் குரல்
 13. முகம் தெரியாத நண்பனும் நாங்களும் “வணக்கம்” அங்கிருந்தொருவன் அருகிருப்பதுபோல் பேசுவான் தொலை தூர வாழ்வில் அதிகாலைப்பொழுதில் தினந்தோறும் வருவான். தாய்நாட்டு வாசனை தன் குரலாலே தெளிப்பான். முன்னைய நாட்களில்.. தனித்தேசக் கனவை தன்மான உணர்வை செயல் திறன் ஆற்றலை எங்களுக்குள் இன்னும் அதிகமாக்கியவன் இறுதி நாட்களில்.. முள்ளி வாய்க்கால் இப்போது என்ன சொல்லுதென்று வரி விடாமல் சொல்லுவான் நீர்க்குமிழி வாழ்வுக்குள்ளிருந்தபடி நிமிர்ந்து வந்து குரல் தருவான். எங்களைப்போல் முகம் தெரியா நண்பர்கள் அவனுக்கு அதிகம். அத்தனை பேரும் தேடுகின்றோம் அவனை. இப்போது நீண்ட நாட்களாய் காணவில்லை. அவனை? அவன் குரலை? இன்று.. அருகிருப்பவன் சொன்னான் அவன் வீர மரணமென்று படம் கிடைத்தது. முதன் முதலாய் முகம் பார்த்தோம். முகத்தோடு முகம் புதைத்து அழுதோம் இனம் புரியா உணர்வால் தவித்தோம் அவன் செய்தி படித்தோம் “அழுகை நிறுத்துங்கள்” அதில் ஒன்று. “எழுந்து நடவுங்கள்” இன்னொன்று. விழுப்புண்ணாய் இருக்கையிலே வெளி வேலை செய்வாயாம் ஆறிய மறுகணமே களம் நோக்கி நடப்பாயாம். புல்லரித்துப்போகின்றோம் உன்னைத் தொட்டபடி நடந்தது வரம். தொலைத்துவிட்டுத் தவிப்பது சாபம். நாங்கள் பதில் போடவும் எங்கள் முகம் காணவும் நீயில்லை எங்கள் முகந்தெரியாத நண்பனே! இப்போது புடம் போடுகின்றோம், நீ சொன்னதுபோல் விடுதலைக்காய் எங்களை...!
 14. வாழ்த்துக்கு நன்றிகள் அனைலைதீவான்.
 15. பாராட்டுக்களுக்கு நன்றிகள் நிலாமதி தமிழராய் இணைந்து வழி சமைப்பதாக நீங்கள் கூறியது போல எல்லா தமிழரும் எழுந்து நின்றாலே போதும். மீண்டும் இன்னொரு கவி வரிகளுடனே சந்திப்போம். நன்றிகள்
 16. உள்ளிருந்து ஒரு குரல் நில்லுங்கள் மனிதர்களே! வண்ணங்கள் கொண்டு எங்கள் வாழ்க்கையை வனைய வேண்டாம் நிறையப் புனைகதை புனைந்து எங்களுக்கு அனுதாபம் தேடித்தரவும் வேண்டாம் நாங்கள் தொலைத்ததில் கொஞ்சத்தையும் சுமப்பதில் கொஞ்சத்தையும் அங்கங்கே எழுத்துப்பிழைகளோடாவது எழுதினால் போதும் நாங்கள் மீண்டும் உயிர்பெறுவோம். நம்புங்கள் மனிதர்களே! முள்ளுக்கம்பிகளுக்குள் முளைத்து நிற்பவை எங்கள் கனவுகளின் சமாதிகளே மீட்பின் பெயரால் நடந்துகொண்டிருப்பது அழிப்பின் அதி உச்சமே இங்கு வசந்தம் என்பது வாடகைக்கு கூட இல்லை மறுவாழ்வு என்பது மருந்துக்கும் இல்லை ஒரு இரவுக்கும் பகலுக்கும் இடையில் பல வருடங்களை தின்றபடிதான் எங்கள் காலச்சக்கரம் சுழல்கின்றது பல வார்த்தைகளை தின்றுவிட்டுத்தான் சில வார்த்தைகள் பேசுகின்றோம் இங்கே குயில்கள் கூவுவதில்லை காதில் கேட்பதெல்லாம் முகாரி ராகங்களே கால்களுக்கு காப்புறுதி உயிர்கள் என்பதால் எந்த மயிலும் நடனம் ஆட நினைப்பதில்லை தாயொரு கூடாரத்தில் அதன் சேயொரு கூடாரத்தில் நடுவில் ஏழு வரியில் முள்ளுக்கம்பிகளும் அதைச்சுற்றி “மல்லி”த் தம்பிகளுமாய் எங்கள் வாழ்வு எங்கோ தொலைந்து கரைகிறது எந்தப்பகலிலும் இருளே நிறைந்து வழிகிறது ஒரு குடம் தண்ணிக்கு நாலு நாள் வரிசையில் நிற்போம் வெறும் கஞ்சிக்கு கையேந்தி இன்னும் எத்தனை நாள் எங்கள் ஜீவனை வளர்ப்போம்? உறவைச் சந்திக்கும் நேரத்தில் தள்ளி நின்று அழுவோம் சந்திக்க உறவே இல்லாதோர் தனியிருந்தும் அழுவோம் கொஞ்சம் சிந்திக்கும் நேரத்தில் சிறகொடிந்து துடிப்போம் ஆயினும் பறக்கவே துடிக்கின்றோம் சுதந்திரமாய் கந்தகம் கலந்த போதும் சுதந்திரம் சுமந்த காற்றை எப்போது தொலைத்தோமோ அப்போதே செத்துப்போனோம் ஆயினும் இப்போதும் உயிர்வாழ்கின்றோம் மறுவாழ்வு வேண்டி மறுவாழ்வு என்பது மீண்டும் கந்தகம் கலந்தாலும் சுதந்திரம் சுமந்த காற்றை சுவாசித்தலே ஆறாத எங்கள் காயத்திற்கு அருமருந்து அந்த சாலைகளின் ஓரங்களில் காலாற நடத்தலே
 17. உயிர்த்தெழுவோம் அள்ளி அணைத்து உறவெல்லாம் ஆரத்தழுவும் மெல்ல மலர்ந்து ஒரு முல்லை சிரிக்கும் சின்னக் குழந்தையாய் அதன் உள்ளம் இருக்கும் நல்ல தமிழாய் அதன் வார்த்தை இனிக்கும் வண்ணக் கனவுகள் நின்று நிறைக்கும் வார்த்தைக்கு வார்த்தை அண்ணனை கதைக்கும் அப்போது இன்னும் சில நிமிடமே இருக்கும் இனி சொல்ல வார்த்தையின்றி தவிக்கும் அப்போதும் அந்த முகம் சிரிக்கும் சின்னக் கை அசைத்து விடை பெறும் ஒரு வண்ணம் ஓவியமாய் உயிர்பெறும் நல்ல காவியமாய் தேசப்புயல் கடக்கும் ஆம் ஒரு கரும்புலி கந்தகம் சுமந்து நடக்கும் பெரும் பகை மோதி வெடி வெடிக்கும் ஒரு உன்னத மனிதன் உயிர் விட ஒரே உன்னத இலட்சியம் துளிர்விடும் உயிர்ப்புற்று உறுதிபெறும் மெல்ல வரும் காற்று எங்கள் மேனி தொடும் சொல்ல வார்த்தையின்றி அது தன்னாலே தடவி அழும் அலையும் கடலும் கரை வந்து கரையும் நாமும் மெல்ல விழி கசிவோம் நெஞ்சுக்குள் நெருப்பெரிப்போம் மீண்டும் சின்னக்குழந்தைகளாய் சிரிப்போம் ஏனெனில் நாங்கள் கரும்புலிகள் எங்கள் தலைமுறைக்காக எங்களை அர்ப்பணித்தவர்கள் இலட்சியம் ஈடேறும் வரை நாங்கள் சாவதில்லை சந்ததிக்குள்ளே உயிர்த்தெழுவோம் சத்தியம் தமிழீழம் காண்போம்.
 18. “விடுதலை” செய்யுங்கள் புல்லோடும் புயலோடும் கல்லோடும் கடலோடும் பேச முடிந்த கவிஞர்களே! என்ன திடீர் மௌனம் உங்களுக்குள்ளே? புயலுக்கு முந்தியதா? பிந்தியதா? என உங்கள் மௌனங்களுக்கு உங்களுக்குள்ளேயே ஆராய்ச்சியா? நல்ல கதை. புயல்களை புதிது புதிதாய் பிறப்பிப்பதே நீங்கள்தானே. நீங்களே தூங்கினால் நாளைய பொழுதுகளின் நம்பிக்கையை யார் கொடுப்பது? நீண்ட இரவுகளின் இராச்சியத்திற்கு உங்கள் இமைகளை அனுமதிக்காதீர் கசியும் உங்கள் கண்களைத் துடையுங்கள் கடலலை மோதும் ஒவ்வொரு கரைகளுடனும் பேசுங்கள் முள்ளிவாய்க்காலில் சாட்சி இன்றி நடந்த யுத்தத்தை சாட்சியுடன் எழுதுங்கள் காற்றில் தவழும் அத்தனை அலைகளுடனும் உரையாடுங்கள் கஞ்சிக்கு உயிர் விலை கொடுத்ததையும் காற்றே களவாடப்பட்டு கந்தகமும் பொசுபரசும் பரிசளிக்கப்பட்டதையும் மருந்துக்கு மண் அள்ளிப் போட்டதையும் பெற்றதாய் மார்பில் செத்தபின் பால்குடித்த துயரத்தையும் என எங்கள் துயரத்தை எங்கள் நியாயத்தை எங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை நீதிக்கு இழைக்கப்பட்ட அநீதியை மொத்தமாய் பதிவுசெய்யுங்கள் இலக்கு தெளிவாய் தெரியும் விடுதலைப்பயணத்தில் இருள் என்று ஒன்று இல்லை. இருப்பின் அதன் பெயர் குறைந்த வெளிச்சம் என்று உங்கள் கவிதைகள் தீக்குச்சி கிழிக்கட்டும் கேளுங்கள் தரப்படும் தரப்படாவிட்டால் தரும்வரை கேளுங்கள் தட்டுங்கள் திறக்கப்படும் திறக்கப்படாவிட்டால் திறக்கும் வரை தட்டுங்கள் என்று மக்களுக்கு மனனஞ்செய்யட்டும் உங்கள் கவிதைகள் கவிஞர்களே! தயவு செய்து உங்கள் மௌனங்களை உடையுங்கள் செத்த கவிஞர்கள் கடமையையும் நீங்கள் தான் செய்யவேண்டும் பிறக்க இருந்து இறந்த கவிஞர்களையும் நீங்கள் தான் உருவாக்க வேண்டும் அவர்கள் எழுத நினைத்தவற்றையும் நீங்கள் தான் எழுதவேண்டும் அவர்கள் தொடக்கிவைத்தவற்றையும் நீங்கள்தான் முடிக்கவேண்டும் புறப்படுங்கள் தூரங்களும் இதயங்களும் சுருங்கிப்போன உலகில் உங்கள் கவிதைகள் காவியங்களாய் ஊடுருவட்டும் புயல்களை எதிர்பார்க்க பூகம்பங்களை எதிர்கொள்ள ஓவ்வொரு தமிழனுக்கும் கற்றுக் கொடுங்கள் அதோ தொலைவில்.. “போர் இன்னும் ஓயவில்லை எங்கள் தமிழ் ஈழமண்ணில்….” ஒரு கவிஞன் உடைத்த மௌனம் பேசுகிறது “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்…” இன்னொரு கவிஞனின் நம்பிக்கை பேசுகிறது. எங்கே நீங்களும் உங்கள் மௌனங்களை உடையுங்கள் உடைக்கும் போது மறக்கவேண்டாம் நம்பிக்கையையும் விடுதலை வேட்கையையும் விதைப்பதற்கு அன்பானவர்களே! உங்கள் பேனாக்கள் துளித்துளியாய் கரையட்டும் வார்த்தைகள் தீப் பொறியாய் வீழட்டும் அதுவே தமிழர் மனங்களில் உலகின் திசைகளில் ஈழ விடுதலைப் பெருந்தீயை அணையாது எரிக்கட்டும்.
 19. வணக்கம் எல்லோருக்கும் நான் யாழின் நீண்டகால பார்வையாளன். எழுத வேணும் என்ற ஆசை கொஞ்ச காலமாக இருந்தபோது இணைந்தேன். ஆனால் இன்றுதான் எழுதக்கூடியதாக இருந்தது. என்னையும் வரவேற்பீங்களா உறவுகளே?