இராஜன் முருகவேல் (சோழியன்) மறைந்தார்!
நண்பனே உனக்காக மௌனமாக நிற்பதை தவிர
ஒன்றும் செய்ய தெரியவில்லை!
இலங்கை சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் , ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவன் , இராஜன் முருகவேல் (சோழியன்) மறைவு ஓர் அதிர்ச்சியாக தம்பி பரணி மூலம் முகப் புத்தகம் வாயிலாக அறிய முடிந்தது.
சில காலமாக உடல் நலமில்லாமல் இருந்தார். நான் இடையிடையே தொலைபேசி வழி பேசுவேன். பெட்டி செய்தி ஊடாக கருத்து பரிமாற்றம் செய்து கொள்வோம். யாழ் இணையம் மூலம் ஏற்பட்ட நட்பு. அன்று முதல் தொடர்ந்து வந்தது.
ஆரம்ப காலம் தொட்டு யாழ் இணைய உறவாக இருந்தவர். அரசியல் ரீதியாக நாங்கள் இருவரும் முரண்பட்டவர்கள். இருந்தாலும் நட்பு ரீதியாக அது எம்மை பிரித்ததில்லை. காயப்படுத்தியதும் இல்லை. அப்படியான ஒரு குண நலன் கொண்டவரை பார்ப்பது மிக அரிது. நான் பல முறை அவர் வீட்டுக்கு போய் தங்கி மகிழ்வாய் கழித்துள்ளோம். உண்மைகளை அஞ்சாமல் பேசும் ஒரு அன்பர். அதை நகைச்சுவையாக சொல்வதில் கை தேர்ந்தவர். கடினமான எதையும் சிரித்துக் கொண்டே சொல்வார். அதனால் அவரை எனக்கு நன்கு பிடிக்கும்.
புலி ஆதரவாளர்களில் எனக்கு மிகவும் பிடித்த நண்பர்களில் இவரும் ஒருவர். இதைவிட அதிகம் தேவையில்லை.
செய்தி கேட்டதும் வீட்டுக்கு தொடர்பு கொண்டேன். மகனோடு பேசினேன். அனைவரோடும் எனக்கு நல்ல உறவு. இராஜனுக்கு கொலொஸ்ரோல் இருந்து வந்தது. அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். அண்மையில் இலங்கைக்கும் போய் வந்தார். முகப் புத்தகத்தில் படங்களை போட்டு , ஊரின் நிலை குறித்து உண்மையை பதிவு செய்து கொண்டிருந்தார்.
உடல் நலமில்லாமல் எதுவும் செய்யாமல் சில நாட்களாக கட்டிலிலேயே இருந்துள்ளார். நேற்று தூங்கியவரை எழுப்பிய போது அவர் எழுந்திருக்கவில்லை.
நண்பர்கள் அழைப்பதற்காக அவரது வீட்டு தொலைபேசி எண் : 0049 421 55 37 27