• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

அபராஜிதன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  2,106
 • Joined

 • Last visited

 • Days Won

  6

அபராஜிதன் last won the day on July 28 2018

அபராஜிதன் had the most liked content!

Community Reputation

599 பிரகாசம்

About அபராஜிதன்

 • Rank
  Advanced Member

Profile Information

 • Gender
  Male

Recent Profile Visitors

15,109 profile views
 1. சில படங்கள் முந்தைய ஆண்டுகளில் வந்திருக்க கூடும் 2019 ல் தான் என்னால் பார்க்க கூடியதாக இருந்தவையும் இவற்றில் அடங்கும் ஹிந்தி 1)Andhadhun 2) Article 15 மலையாளம் 1)வைரஸ் 2)Under world 3)Uyare 4)Jomonte suvisheshangal 5)Lucifer 6)Vikramadithyan Telugu 1)maharshi English / other 1)Searching 2)The invisible guest 3) 7 days in ENTEBBE Series Game of throne-8 (HBO) Jack Ryan -1(Amazon prime) Hostages1&2, and Sacred Games-1 இன்னும் சில Netflix சீரியல்கள் ( பெயர் நினைவு இல்லை) உங்களின் ரசனைகளையும் பகிருங்கள்வ
 2. 1) காமதேனுவின் முத்தம் இன்று தான் படித்து முடித்தேன் கோவூர் எனும் கிராமத்தில் பெரியவீட்டுகாரர் என அழைக்கப்படும் குடும்பத்தில் கற்பிணிப்பெண்களின் கண்ணில் காம தேனு காட்சிகொடுக்கும் அக்கற்பிணிப்பெண்களுக்கு காமதேனு அம்சம் உள்ள பெண்குழந்தை பிறக்கும் அதன் பின் உள்ள மர்மங்கள் பற்றிய கதை காலசக்கரம் நரசிம்மா எழுதியது 2) ரோலெக்ஸ் வாட்ச் - சரவணன் சந்திரன் 3) மாயப்பெருநிலம் - சென் பாலன் 4) 5 முதலாளிகளின் கதை - ஜோதியி 5) வஜ்ரவியூகம் 6)சாம்ராட் 7) மஹாபாரதத் தேடல் அலெக்ஸாண்டர் இரகசியம் 8)வெண்முரசு ( பாரதப்போரின் துரியோதனன் இறப்பு வரையான பகுதிகள் (கார்கடல்..இருட்கனி.மற்ற பகுதிகளின் பெயர் நினைவில்லை) 9)கௌரவன் ( இன்னும் முடிக்கவில்லை பாதியில் நிக்கிறது ) 10)லீ குவான் யூ ( தமிழ் பாதியில் நிக்கிறது ) 11) நீ நதி போல ஓடிக்கொண்டிரு (பாரதி பாஸ்கர்) 12) குருதி தேடும் இயந்திரங்கள் ( கௌசிகன் ) நீங்கள் படித்தவற்றையும் பகிருங்கள்
 3. தப்பு என் மேல டிசம்பர் இறுதியில் பார்த்தது சாம்பியன் மற்றது எல்லாம் அவ்வப்போது பார்த்தவைகளே
 4. இந்த ஆண்டின இறுதியில் பார்த்த படம் சாம்பியன்.. 1) சாம்பியன் - வட சென்னையிலிருந்து இந்திய உதைப்பந்தாட்ட அணியில் விளையாடிய ஒருவரின் கதை பெரிய பட்ஜெட் படம் இல்லை போல ஆனாலும் நல்ல ஒரு படமாக இருந்தது 2)கென்னடி கிளப்- சசிக்குமாரின் படம் என தெரிந்தும் விளையாட்டு பற்றிய படம் என்பதால் துணிந்து பார்க்க தொடங்கினேன்..ஏமாற்றவில்லை.. 3)அக்சன்..(விசால் + சுந்தர்சி), ஆம்பள.. மற்றும் விசாலின் வேறு சில படங்களுடன் ஒப்பிடும் போது பரவாயில்ல ரகம் 4) பிகில்- அட்லீ+ விஜய் படம் எனக்கு பிடித்திருந்தது 5)அழியாத கோலங்கள் -2.. 6) கைதி- 7) நம்மவீட்டு பிள்ளை - சிவகார்த்திகேயனின் சில சொதப்பல்களுக்கு பிறகு வந்த குடும்ப படம் பிடித்திருந்தது.. ஹீரோ - இரும்பு திரைக்கு பிறகு மித்திரன் சிவகார்த்திகேயனுடன் பிடித்திருந்தது பார்க்கலாம் ( எதிர்பார்ப்பு இல்லாமல் தொடங்குங்க) 9)பயில்வான் நேரம் இருந்தால் மட்டும் பாருங்க சுதீப் நடித்திருக்கும் படம் ஓகே ரகம் 10)-காப்பான்- ஓகே ரகம் 12) சிவப்பு மஞ்சள் பச்சை- அக்கா தம்பி சென்டிமேன்டை வைச்சு இயக்குனர் சசி எடுத்திருந்த படம் ,படமும் பிடித்திருந்தது அந்த அக்கா வேடத்தில் நடித்தவரையும் பிடித்திருந்தது 13) மகாமுனி-ஆர்யா இருவேடங்களில் நடித்திருந்த படம் இந்த வருடம் வந்தவற்றில் சிறந்த படங்களில் ஒன்று (என் வரையில் ) 14) கடாரம் கொண்டான்.. ஜஸ்ட் ஓகே 15) K13வெவ்வேறான கிளைமாக்ஸ் கொண்ட படம் பார்க்கலாம் 16) Mr.Local- சிவகார்த்திகேயனின் கரியரில்மோசமான படம் நயன்தார கதை கேட்டு தான் நடிக்க ஒப்பு கொள்வார் என்பார்கள் இதில் எப்படி ஒப்பு கொண்டாரோ தெரியல 17)கேம் ஓவர் - தப்ஸி நடித்திருந்த விமர்சகர்களால் பெரிதாக பாராட்டப்பட்ட படம். பிடித்திருந்தது...ஓவர்ரேட்டட் ஓ என சிந்திக்க வைத்தது.. 18) ராட்சசி - பார்க்கலாம் 19) கொலைகாரன் - சந்தர்பம் கிடைத்தால் கட்டாயம் பாருங்கள் 20) நெஞ்சமுன்டு நேர்மை உண்டு ஓடு ராஜா- டைம் கிடைத்தாலும் பார்க்காதீர்கள் 21)இ.ஃக்லூ- 22)மன்ஸ்டர் - குழந்தைகளுக்கான படம் என்பார்கள் நம்பிவிடாதீர்கள்.. 23) கீ- இரும்பு திரை போல அதற்கு முன் வந்திருந்தால் ஓடியிருக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கும் 24)அக்னி தேவி- ஏன்டா பார்க்க தொடங்கினோம் என்றிருந்தது 25)கனா - நல்ல படம் 26)தடம் - இவ்வருடம் வந்தவற்றில் இன்னொரு சிறந்த த்ரில்லர் 27) பேட்ட - ரஜினி ரசிகர்கள் கொண்டாடிய படம் பழைய ரஜினி ய பார்க்க முடிந்தது 28) விசுவாசம் - அப்பா மகள் என குடும்ப சென்டிமேன்ட் உடன் வந்து கலக்கிய படம். 29) சர்வம் தாள மயம் - ராஜிவ் மேனன் நீண்ட்நாளுக்கு பிறகு தமிழில் இயக்கிய படம் 30) கண்ணே கலைமானே- சீனு ராமசாமியின் படம் ஆனால் தர்மதுரையிலிருந்த ஏதோ ஒன்று இதில் மிஸ்ஸிங் இவை 2019 ல் நான் பார்த்த தமிழ் படங்கள். நீங்கள் பார்த்தவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்கள் (நான் 2019 ல் பார்த்த வேற்று மொழி படங்கள் இன்னொரு திரியில் நேரம் கிடைத்தால் )
 5. Dr.Aravindha Raj. வீட்ல நம்ம அம்மாவோ/ மனைவியோ/ அக்காவோ/தங்கச்சியோ ~உடம்பெல்லாம் அடிச்சு போட்ட மாதிரி இருக்கு டா....முடில ~மேல் மூச்சு அதிகமா வாங்குது. ~அடிக்கடி குளிருது... முடில இது மாதிரி நிறைய சொல்லிருப்பாங்க....நாம பல சமயங்கள்ல இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுவோம். ஒரு நாள் அவங்க மயக்கம் போட்டு கீழ விழுந்தா, ஹாஸ்பிடல் கூப்பிட்டு போனதும் டாக்டர் ரத்த பரிசோதனை செஞ்சு உங்க கிட்ட சொல்லுற விஷயம்..! அம்மாவுக்கு ஒடம்புல இரும்புச்சத்து கம்மியா இருக்கு....அதனால அனீமியா (ANAEMIA) என்னும் ரத்தசோகை வந்திருக்கு என்பது தான். ~ரத்தசோகை ன்னா என்ன டாக்டர் ? பெண்களுக்கு HEMOGLOBIN எனப்படும் ரத்தத்தின் முக்கிய மூலக்கூறு நார்மலா 12-14 grams/dl இருக்கணும். ஆனா, இவங்களுக்கு 6 gm/dl தான் இருக்கு. அதனால, ரத்தம் ஏற்ற வேண்டிய சூழ்நிலை இருக்கு-ன்னு சொல்லிட்டு அட்மிட் பண்ணி ரத்தம் ஏத்தி, வீட்டுக்கு போறப்ப; இந்தாங்க...இது இரும்புச்சத்து அதிகரிக்க உதவும் மாத்திரை...இந்த மாத்திரைகளை ஒரு மாசம் போடுங்க, அப்புறம் வந்து பாருங்க-ன்னு சொல்லி அனுப்பி விடுவார். நம்ம ஆளுங்க 3 நாளைக்கு மட்டும் மாத்திரை வாங்கிட்டு, ரத்தம் ஏறனும்-ன்னா பேரிச்சம் பழம் சாப்பிட்டா போதும், தேன் குடிச்சா போதும் ன்னு அறிவாளி மாதிரி அவங்களே முடிவு பண்ணிடுவாங்க. இந்த பேரிச்சம்பழத்தோட லட்சணத்த இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு சொல்றேன். அதுக்கு முன்னாடி ..!! இந்தியா ல இருக்க 3 இல் 2 பங்கு பெண்களுக்கு ரத்தசோகை இருக்கு. இதுக்கு முக்கியமான காரணம் 2 1.மாதவிடாய்(MENSTRUATION) சமயத்தில் ஏற்படும் ரத்தப்போக்கு. 2.பெரும்பாலான வீடுகள்ல நம்ம சாப்பிட்டு மிச்சம் வெச்ச உணவை தான் நம்ம அம்மா சாப்பிடுவாங்க.... அது காய்கறியோ/கறிசோறோ ; அம்மாவுக்கு கிடைக்குறதெல்லாம் மிச்சமும் மீதியும் தான்...சிலருக்கு ரசம் சோறு தான். நமக்கு அதெல்லாம் என்னைக்கு கண்ணுல படுது !!! சரி வாங்க பாப்போம் !! தினசரி இரும்புச்சத்து தேவை நம்ம உடலுக்கு இருக்கு. அதை RDA ன்னு சொல்லுவாங்க !! (RECOMMENDED DAILY ALLOWANCE) இரும்புச்சத்துக்கான அந்த RDA ஆண்களுக்கு ஒரு நாளைக்கு RDA(Men)- 8mg/day. பெண்களுக்கு அது அப்டியே இரண்டு மடங்கு. RDA(Women) - 16mg/Day. காரணம் நான் சொன்ன மாதவிடாய் விஷயம் தான். ~சரி.... இரும்பு சத்து அதிகமா இருக்கணும் ன்னு நான் எங்க அம்மாவுக்கு தினமும் 5 பேரிச்சம் பழம் குடுக்குறேன் டாக்டர்... எப்டி...செம்ம ல ?? செம்ம லாம் இல்ல சார்... ஒரு பேரிச்சம் பழத்தில் உள்ள இரும்புச்சத்து வெறும் 0.07mg. நம்ம அம்மா ஒரு கிலோ பேரிச்சம் பழம் சாப்பிட்டாலும் அவங்களோட தினசரி தேவை பூர்த்தி அடையாது. அவ்ளோ இனிப்பு சாப்பிட்டா சுகர் வந்து நிலைமை இன்னும் மோசமா ஆகும்...இந்த பேரிச்சம் பழம் அதிக கலோரிகள் கொண்ட ஒரு குப்பை உணவு. இது யார் சாப்பிடுவாங்க தெரியுமா ?? பாலைவனத்துல நீண்ட தூரம் பயணம் செய்யும் மக்கள், தங்களுக்கு கலோரி குறைபாடு ஏற்பட கூடாதுன்னு சாப்பிடும் பொருள் தான் இது. ஆனா, அதுவே ஆட்டு ஈரல்/ ரத்தம்/ சுவரொட்டி/மீன்/முட்டை இதெல்லாம் இரும்புச்சத்து அதிகம் உள்ள பொருட்கள். வெறும் 75 கிராம் ஆட்டு ஈரல்ல ஒரு நாளைக்கு தேவையான 100% இரும்புச்சத்து இருக்கு. ஒரே ஒரு முட்டைல மட்டும் 1.2 mg இரும்புச்சத்து இருக்கு. லயன் டேட்ஸ் சிரப் குடுக்குறது, நல்லா இருக்க அம்மாவுக்கு வாண்டடா சுகர் வர்ற வெச்சு இன்சுலின் போட வெக்குறதுக்கு சமம்...உங்க வீட்ல லயன் டேட்ஸ் சிரப் இருந்தா அப்டியே தூக்கி தூர போடுறது சிறப்பு. கீரை ல இரும்புச்சத்து ஜாஸ்தி ...ஆனா,கீரை ல இருக்க OXALATE என்னும் பொருள் இந்த இரும்புச்சத்து உரிஞ்சப்படுவதை தடுக்கும். தேங்காய் நல்ல இரும்புச்சத்து கொண்ட உணவு. ஒரு தேங்காயில் 12mg இரும்புச்சத்து உண்டு. அதனால இறைச்சி சாப்பிடும் அசைவ நபர்கள் நான் மேல சொன்ன எல்லாத்தையும் சாப்பிட்டு இரும்புச்சத்தை கூட்டுங்க. சைவ உணவு சாப்பிடுறவங்க, உணவுல அதிகமா இரும்புச்சத்து கிடைக்க கொஞ்சம் கஷ்டம் என்பதால, தயவுசெஞ்சு மருத்துவரை அணுகி இருப்புச்சத்து சப்ளிமெண்ட் மாத்திரைகளை உட்கொள்ளவும். கர்பகாலத்தில் பெண்களுக்கு இரும்புச்சத்து மிக மிக முக்கியம். உள்ள இருக்க குழந்தைக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் ஏனைய சத்துக்கள் அம்மாவின் உடலில் இருந்து தான் செல்லும். இந்த இரும்புச்சத்து தான் நம்ம உடலின் ரத்த சிவப்பு அணுக்கள் (RBC) உண்டாக மிக முக்கிய காரணம். இந்த RBC தான் உடலெங்கும் ஆக்சிஜனை கொண்டு செல்லும். குறைவாக இரும்புச்சத்து இருந்தால், RBC குறைவாக உற்பத்தி ஆகும். அதனால் ஆக்சிஜன் ஒழுங்காக கடத்தப்படாது. குழந்தைக்கு தேவையான ஆற்றல் தடைபடும். அதனால் கண்டிப்பா மருத்துவர் அறிவுரை செய்யும் இரும்புச்சத்து மாத்திரைகளை உட்கொள்வது மிக மிக முக்கியம். (பாப்பா முக்கியம் பிகிலே !!!) இன்னொரு முக்கியமான விஷயம்...கண்ட குப்பை உணவுகள், பாஸ்ட் புட் எல்லாத்தையும் கம்மி பண்ணுங்க... அந்த மாதிரி சுத்தமற்ற முறையில் சமைக்குறப்ப 'WORM INFECTION' ஏற்பட்டு உடலில் இரும்புச்சத்து நுகர்வு கம்மியாகும். முடிஞ்ச வரைக்கும் வீட்ல சமைச்சு சாப்பிடுதல் நல்லது... உங்க கழிவறையை மிக சுத்தமா வெச்சுக்கோங்க... இந்த WORM INFECTION சுத்தமற்ற கழிவறை மூலமாகவும் ஏற்படும். ரத்தசோகை இல்லாத சமூகம் கூடிய சீக்கிரம் அமையட்டும். நன்றி. Dr.Aravindha Raj.
 6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்
 7. ப்ரியம் என்பது.. என்னைப் பொறுத்தவரை ப்ரியத்தை சொல்லாமலிருப்பது. அம்புட்டுதான்.. இளம் பிராயத்தில் ஏதேனுமொரு காரணத்துக்காக வீட்டில் பட்டினிப் போராட்டம் நடத்துவதுண்டு. உன் வயிறு.. உன் பசி.. என்று பேசாமல் போகாமல் அம்மா எப்போதும் என்னை சாப்பிடச் சொல்லி கெஞ்சியபடியே இருப்பாள். என் அம்மாவை பிளாக் மெயில் பண்ண வேண்டுமென்றால் உண்ணாவிரதம் இருந்தால் போதும். பலவாறாக கெஞ்சுவாள். நாம்தான் பெரிய கிரிமினல் ஆச்சே. எந்த கெஞ்சலுக்கும் எப்படிப்பட்ட கண்ணீருக்கும் மசிந்ததில்லையே.. நான் செத்தா நீ சாப்புடுவியாடா என்று கூட கெஞ்சுவாள். ம்ஹூம். சாப்பிட மாட்டேனே.. ஒரு முறையாவது எதற்காக நீ என்னை சாப்பிட வைக்க இத்தனை மெனக்கெடுகிறாய். ஒரு வேளை சாப்பிடாவிட்டால் நான் செத்தா போய்விடுவேன் என்று ஒரு வேளை கேட்டிருந்தால் இதுதாண்டா ப்ரியம் என்று அவள் சொல்லி இருப்பாள். அப்படி சொல்லி இருந்தால் அது ப்ரியமாக இருந்திருக்காது. ஆக என்னைப் பொறுத்தவரை ப்ரியம் என்பது இதுதான் ப்ரியம் என்று சொல்லாமல் இருப்பதும்தான்.. இப்படிப்பட்ட நான்சென்ஸ் ப்ரியங்களை நான் அனுபவித்தே வந்திருக்கிறேன். என்ன ஒரு கடுப்பு என்றால் அவற்றை அனுபவித்த பொழுதுகளில் அவற்றை மதித்ததே இல்லை. அவ்வளவுதான். இந்த குற்றத்தை செய்தவன் நான் மட்டுமில்லை என்பதும் எனக்குத் தெரியும்.. அப்போது காலேஜ் படித்துக் கொண்டிருக்கிறேன். வயது அவ்வளவுதான் 17 இருக்கும்.. அப்போதுதான் என் நண்பர் அழகு சுந்தரம் காதலிக்க ஆரம்பித்தார்.. அழகு சுந்தரம் என்னை விட குறைந்தது நான்கு வயதாவது மூத்தவர். நான் பி.எஸ்ஸி படித்துக் கொண்டிருந்த அந்த காலததில எம் எஸ்ஸி முடித்து பி எட் படிக்கத் துவங்கி இருந்தவர். அவரோட கெட்ட நேரம் எனக்கு நண்பரானார். நான் இலக்கியம் கழுதை குதிரை என்றெல்லாம் பேசியபடி திரிவதால் என்மீது அவருக்கு டெர்ரர் கலந்த மரியாதை. அவர் படித்த அதிகபட்ச இலக்கியம் பாலகுமாரன்தான். அதிலும் எனது ரெக்கமெண்டேஷனான இரண்டு நாவல்களை மட்டும் ஆழ்ந்து வாசித்திருந்தார். அந்த அளவில் அவர் - அது பி. எட். டுக்கான செமினாரா அல்லது எம்.ஃபில் லுக்கான செமினாரா என நினைவிலில்லை - ஒரு செமினாருக்குப் போனபோதுதான் அழகம்மையை சந்தித்தார். செமினாரின் இடைவேளையின்போது பாலகுமாரன் கதையை வைத்து படித்துககொண்டிருந்த அழகம்மையிடம் தானும் பாலகுமாரன் படிப்பதாக அறிவித்துகொண்டபோது நட்பு பூத்தது. அடுத்தடுத்த செமினார்களில அந்த நட்பு காதலாக மாறியது. என்ன செய்ய.. என் தலைவிதி அதுதான் என்பதால் அழகு என்னை அழகம்மையிடம் அறிமுகம் செய்து வைத்தார்.. சில அறிமுகங்கள் ஒட்டுப் புல் போல.. கண்டதும் அப்படியே ஒட்டிக் கொண்டு விடும். அழகம்மையும் அப்படித்தான். கண்ட விநாடியில் தம்பு.. என்றபடி என்னோடு ஒட்டிக் கொண்டாள். தம்பு என்பது தம்பி என்பதன் மரூவுவாகவும் இருக்கலாம். ஏனென்றால் எனக்குத் தெரிந்து அவர்கள் வீட்டில் அவள்தான் மூத்தவள். அவளுக்கடுத்து தங்கை ஒருத்திதான் இருந்தாள். அவளுக்கு தம்பி என்று எவனும் இல்லாததால் என்னை தத்தெடுத்துக கொண்டாளாக இருக்கலாம்.. எது எப்படியாயினும் நான் அவளுக்கு தம்புவானேன். அழகுவின் வீடு ரொம்ப கட்டுப் பெட்டியான குடும்பம். அவரது அப்பா வேறு ரிட்டயர்டு போலீஸ் ஆபீசர்.. ஆகவே அவர்கள் வீட்டில் யாருக்கு கடிதம் வந்தாலும் முதலில் அதை அப்பாதான் பிரித்துப் படிப்பார். அப்புறம்தான் கடிதத்துக்குரியோர் அதை படித்துப் பார்க்க முடியும். எங்கள் வீட்டில அப்படியே உல்டா. எங்கப்பா போலீசை விட ரொம்ப கண்டிப்பானவர். ஆனால் அவரவர் கடிதங்களை அவரவர்தான் படிக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச நாகரிகத்துடன் இருந்தவர். ஆகையால் என் பெயருக்கு வரும் கடிதங்கள் பிரிக்கப்படாமலே எனக்கு வந்து சேரும். இந்த காரணத்தினாலேயே அழகம்மை அழகுவுக்கு என் வீட்டு விலாசங்களுக்கே கடிதங்கள் அனுப்பினார்.. வரும் கடித உறைகளுக்குள் இரண்டு கடிதங்கள் இருக்கும். எனக்கான கடிதம் மற்றும் அழகுவுக்கான கடிதம்.. அழகுவுக்கான கடிதம் மட்டும் உள்ளே தனி உறைக்குள் போடப்பட்டு தனியாக இருக்கும். ஆனாலும் அந்த தனி உறை ஒட்டப்பட்டிருக்காது. இது நம்பிக்கை சாரந்த விஷயம். எனக்கான கடிதத்தை மட்டும் நான் படிப்பேன். அழகுவின் கடிதத்தை நான் படிக்க மாட்டேன் என்பது அவரது மற்றும் அழகினது நம்பிக்கை. அதை நான் காப்பாற்றியபடியே இருந்தேன். இருந்தாலும் தனி உறையில் கடிதத்தை இட்டு அனுப்புவதின் காரணம் அடையாளத்துககாகத்தான் என்பது அனைவருக்கும்அறிவிக்கப்பட்ட உண்மை.. என்ன விசித்திரம் என்றால் அழகுவுக்கு அழகம்மை எழுதிய கடிதங்கள் இரண்டு அல்லது மூன்று பக்கம் இருந்தது என்றால் எனக்கு அவர் எழுதிய கடிதங்கள் ஆறு அல்லது ஏழு பக்கம் இருக்கும். அழகு மீது அவர் வைத்திருந்த காதலைவிட தம்புவாகிய என்மீது அவர் வைத்திருந்த பாசம் கொஞ்சம் ஸ்ட்ராங்காகத்தான் இருந்தது.. செமினார் வரும்போதெல்லாம் எனக்கு இம்சைகள் ஆரம்பிக்கும். நீயும் என்னோடுவா என்பார்அழகு. போவதற்கு ஆசைதான். ஆனால் காசு வேணுமே. அப்போதெல்லாம் சிகரெட்டுக்கு காசு கிடைப்பதே பெரிய விஷயம். இதில் மதுரை போகவேண்டுமென்றால் கிட்டத்தட்ட 40 ரூபாய் தேவைப்படும். இந்த லட்சணத்தில் என்னை மதுரை வரச் சொல்லி அழைத்த புண்ணியவானின் நிலைமை என்ன வென்றால் அவங்க அப்பா மதுரைக்கு 16.50 டிக்கெட். போக வர அது 33 ரூபாய். மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இறங்கி ஸ்டடி செண்டர் போக 50 பைசா டிக்கெட். போக வர 1 ரூபாய். சாப்பிட 11 ரூபாய் என்று கணக்குப் பண்ணி வெறும் 50 ரூபாய் கொடுப்பார். (பாக்கி 5 ரூபாய் அவசர செலவுக்கு.. வீட்டுக்கு வந்ததும் அவசர செலவு இல்லை என்றால அந்த 5 ரூபாயை திருப்பிக் கொடுத்தாகணும்..) என்னதான் மிச்சம் பிடித்தாலும் அந்த 50 ரூபாயில் இரண்டு பேர் போய் வர முடியவே முடியாது. வழக்கம் போல நானே வீட்டில் திருடியும், நண்பர்களிடம கடன் வாங்கியும் பணம் தயார் செய்து கொண்டு அவருடன் மதுரை போவேன்.. மதுரையிலும் அழகம்மை அழகுவிடம் பேசிய பொழுதுகளை விட தம்புவிடம் பேசியபொழுதுகள்தான் அதிகமாக இருக்கும். திடீரென்று கேட்பார்.. உனக்கு இந்த வருஷம் என்னென்ன பேப்பர் என்று.. நான் ரொம்ப சிலிர்த்துக கொண்டு அதைப் பத்தி உங்களுக்கு என்ன.. என்பேன்.. அவர் கோபமாக இப்புடி எல்லாம் உங்க வீட்டுல பேசுற மாதிரி என்கிட்ட பேச முடியாது தம்பு.. மரியாதையா என்னென்ன பேப்பர் இருக்குன்னு சொல்லு.. என்று மிரட்டுவார். நாம் பயந்தால்தானே.. சொல்ல முடியாது.. உங்க வேலை எதுவோ அதைப் பாருஙக.. என்று திமிராக சொல்லுவேன்.. இப்படியாக ஒரு அக்காள் தம்பி சண்டையாகத்தான் எங்கள் சந்திப்பு நிகழும். அழகுவிடம் அவர் பேசிய நேரத்தைவிட என்னை சரிசெய்வதற்காக அவர் எடுத்துக் கொண்ட நேரம்தான் அதிகமாக இருக்கும்.. அதில் எனக்கோ அழகுவுக்கோ இல்லை அழகம்மைக்கோ எந்த வருத்தங்களும் இருந்ததில்லை.. மழை பெய்தால் தெருவில் நீர் தேங்குவது இயல்பே போல மதுரை சந்திப்பு எனில் என்னிடம் அவர் கெஞ்சுவதும் கோபப்படுவதும் இயல்பாக நடக்கும். எங்கள் விவகாரத்தில் அழகு தலையிட்டதே இல்லை.. எனக்கு வரும் அந்த ஆறேழு பக்க கடிதங்களும் இதேமாதிரி படிப்பு பற்றிய இம்சைகளைத் தாங்கியபடிதான் வரும். அழகம்மைக்கு என்னபிரச்சினை என்றால் அவள் ரொம்ப நன்றாகப் படிப்பாள். பி எஸ்ஸியில் கோல்டு மெடலை 0.5 சதவீதத்தில் தவற விட்டவள் எம் எஸ்ஸியில் பல்கலைக்கழக முதல் மாணவியாக வந்து கோல்டு மெடலை பெற்று காட்டினாள். பி எட்டிலும் அவள் முதல்மாணவியாகத்தான் வந்தபடிஇருந்தாள். அதன் பின்னர் எம் ஃபில் படித்தபோதும் அதில் முதல் மாணவியாக வந்ததாகத்தான் கேள்வி.. இத்தனை படிப்பையும் வைத்துக் கொண்டு அவளுக்கு, தம்புவானவன் தன் படிப்பை வேஸ்ட்டாக்கிக் கொண்டிருக்கிறானே என்ற ஆதங்கம் இருந்ததில் ஆச்சரியம் இல்லை.. இம்சைகள் இதோடு நிற்கவில்லை.. என் தம்பி காரைக்குடி அருகில் செட்டிநாடு எனப்படும் கானாடு காத்தான் பாலிடெக்னிக்கில்தான் படித்து வந்தான். அவன் ஃபர்ஸ்ட் இயரில் கணக்கில் அரியர் வைத்ததை அறிந்து அவனையும் திருத்த முயற்சி செய்தாள். என் தம்பி என்னை முறைத்ததில் அம்முயற்சியை அவளை கைவிடச் செய்தேன். பைத்தியக்காரி மாதிரி கையில் பிரியத்தை வைத்துக் கொண்டு முட்டாள்களுக்கெல்லாம் தரத் துடித்தபடி இருந்தவள் அவள்.. நன்றாக நினைவிருக்கிறது- கல்லூரியில் படிக்கும்போதே மத்திய அரசின் SSC தேர்வில் நான் பாஸ் செய்து விட்டேன். வெறும் கிளரிக்கல் போஸ்ட்டுக்கு அப்ளை செய்யாமல் டைப்பிஸ்ட் கம் கிளர்க் போஸ்ட்டுக்கு அப்ளை செய்திருந்ததால் அடுத்த டைப் டெஸ்ட்டுக்கும் வரும்படி அழைப்பு வந்தது- டைப் டெஸ்ட் மதுரையில்தான் நடக்கும். அதற்கு போவதே விநோதமான தயாரிப்பு.. ஒரு வாரம் முன்னமே மதுரை சென்று யாராவது தெரிந்தவரைப் பிடித்து ஒரு டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் நமக்கு ஒரு டைப்ரைட்டரை புக் பண்ண வேண்டும். அவர்கள் நமது சென்ட்டரை கேட்டுவிட்டு மொத்த வாடகை 30 ரூபாயில் 15 ஐ முன்பணமாக வாங்கிக் கொள்வார்கள். அதே சென்ட்டரில் நிறைய பேர் அவர்களிடம் புக் செய்திருப்பார்கள்.. குறிப்பிட்ட நாளில் ஒரு வேனில் அவர்களிடம் இருக்கும் எல்லா டைப்ரைட்டர்களையும் எடுத்துக் கொண்டு எக்ஸாம் சென்ட்டருக்கு வந்துவிடுவார்கள். எக்சாம் ஹாலுக்குள் டைப்ரைட்டர்கள் வரும்முன் பாக்கி பணத்தை தந்து விட வேண்டும். அவர்களே டைப்ரைட்டர்களை நமது இடத்தில்கொண்டு வந்து வைத்து செட் செய்து கொடுத்துவிட்டுப் போவார்கள். ஒரே நாளில் பல பேட்ச் மாணவர்களுக்கு டைப் டெஸ்ட் நடப்பதால் அவர்களுக்கு அன்று முழுவதும் டைப்ரைட்டர்கள் நல்ல வாடகைக்கு போனபடி இருக்கும். கடைசி நேரத்தில் யாருடைய டைப்ரைட்டராவது மக்கர் செய்தால் அவர்கள் ஓடோடி வந்து ஸ்பேர் டைப்ரைட்டரை வைத்துவிட்டுப் போவார்கள்.. இப்படியாக எங்க அப்பாவிடம் முன் கூட்டியே பணம் பெற்றுக் கொண்டு நான் சென்று டைப்ரைட்டரும் புக் பண்ணிவிட்டு வந்துவிட்டேன்.. அதற்கு ஒரு வாரம் முன்னிருந்து நண்பர் அழகுவுக்கு காய்ச்சல்.. டைஃபாயிடு என்று உறுதியானது. அழகம்மைக்கும் நான் கடிதம் மூலம் தகவல் சொல்லி விட்டேன். ஒரு ஞாயிறன்று எனக்கு டைப் டெஸ்ட். சனிக்கிழமை இரண்டாவது தபாலில் (அப்போதெல்லாம் எதற்காக அப்படி செய்தார்கள் என்று தெரியாது. தபால்காரர் காலை 10 மணிக்குள் ஒரு தடவை வந்து கடிதங்களை டெலிவர் செய்துவிட்டுப் போவார். அது முதல் தபால். அப்புறம் மாலை மூன்று அல்லது மூன்றரை வாக்கில் ரெண்டாவது ரவுண்டு வந்து தபால்களை கொடுத்துவிட்டு செல்வார்.. அது ரெண்டாவது தபால். ஒரு வேளை தபால்கள் திண்டுக்கல்லில் இருந்து காலையில் ஒரு செட் வருவதும், மதுரை வழியாக மாலையில் ஒரு தபால் பை வருவதுமாக இருந்திருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்..) மூன்றரை வாக்கில் அழகம்மையிடம் இருந்து தபால்… சுருக்கமாக, அழகுவைப் பார்க்க வருகிறேன். காலை எட்டு மணிக்கு எல்லாம் தேனி பஸ் ஸ்டாண்ட் வந்து விடுவேன். அங்கே எனக்காக காத்திருந்து அழகு வீட்டுக்கு அழைத்துச் செல்லவும். என்று மட்டும் எழுதியிருந்தாள் அழகம்மை. என்ன கொடுமை என்றால் நாளை எனக்கு SSC டைப் டெஸ்ட் இருக்கிறது. வராதே என்ற தகவல் சொல்லஅப்போது போன்வசதி எல்லாம் இல்லை. அப்போதே புறப்பட்டு காரைக்குடி போய் அவள் புறப்பாட்டை தடுத்து விடலாம் என்றாலும் காசு பணம் தேற்றிக் கொண்டு நான் காரைக்குடி அடைவதற்குள் இரவாகி விடக் கூடும்.இரவில்அவள் வீட்டுக்கு போக முடியாது. காத்திருந்து காலையில் அவள் பஸ் ஸ்டாண்டுக்கு வரும்போது வேண்டுமானால் தடுக்க முயலலாம். அப்படி செய்தாலும் இரவு முழுக்க விழித்துவிட்டு திரும்ப மதுரை வந்து டைப் டெஸ்ட் எழுதுவது கடினம் என்றுதான் தோன்றியது. அவள் பாட்டுக்கு வரட்டும் நாம் மதுரை போய்விடுவோம் என்று நினைத்தாலும். அந்த பெரிய தேனி பஸ் ஸ்டாண்டில் என்னை தேடியபடி அலையும் அவளது உருவம் நினைவில் வந்து மனதை சிக்கலாக்கியது.. வேறு வழி..? டைப் டெஸ்ட்டுக்கு போவதாக வீட்டில் சொல்லிவிட்டு தேனி பஸ் ஸ்டாண்டில் நின்று அவள் வருவதற்காக காத்திருந்தேன். கரெக்டாக எட்டு மணி பஸ்ஸில் வந்து விட்டாள்..எப்படித்தான் அவள் ஏறும் பஸ்கள் எல்லாம் சரியான நேரத்துக்கு வந்துவிடுமோ என்பது இன்று வரைக்கும் எனக்கு தெரியவே தெரியாது. நானா கடும் கோபத்தோடு காத்திருந்தேன்.. இப்படி திடீர் திடீரென்று உங்கள் காதல் பொங்குவதனால் நான் பல இம்சைகளுக்கு ஆளாகிறேன் என்று லெஃப்ட் ரைட் வாங்கிவிட வேண்டும் என்று வெறியுடன் இருந்தேன்.. (அதிலும் அக்கா மாதிரியான பெண்களை திட்டி அழவைப்பது அப்போது ரொம்ப பிடித்தமான விஷயமாக இருந்தது என்றே சொல்லலாம். என்ன ஒரு சாடிஸம்..) இறங்கியதுமே தலைவி கலக்கத்தில் இருப்பது தெரிந்தது. உறங்கி இருக்க மாட்டாள் போல.. அழகுவுக்கு டைஃபாயிடு என்பது அவளை அந்த அளவு பாதிக்கும் என்று நான் நினைக்கவில்லை.. என்னைப் பார்த்ததும் அவரு எப்புடி இருக்காரு என்ற வாக்கியத்தை அவளால் முடிக்க முடியவில்லை. கண்ணீர் பொல பொலவென்று கொட்ட ஆரம்பித்து விட்டது. எரிச்சலுடன் அழுவதற்கு மட்டும் திட்டிவிட்டு (டைஃபாயிடுதானே.. கேன்சர் இல்லையே.. இப்ப எதுக்கு இத்தனை அழுகை..) அவளை மேலும் அழ வைத்து ஒரு வழியாக சின்னமனூருக்கு பஸ் ஏறினோம். எனக்கா என்னை யாராவது பார்த்து அப்பாவிடம் வத்தி வைத்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் வேறு.. சின்னமனூரில் புது பஸ்ஸ்டாண்டு எனப்படும் பஸ் ஸ்டாண்டு ஊருக்கு வெளியே இருக்கும்.. (கட்டப்பட்டு முப்பது முப்பத்தைந்து வருடம் ஆகியும் இன்னும் அது புது பஸ் ஸ்டாண்டு எனவே அழைக்கப் படுவதுதான் இன்றுவரை வேடிக்கை. இப்பதான் கொஞ்சத்துக்கு கொஞ்சம் அவுட்டர் பஸ் ஸ்டாண்டு என அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.) ஊருக்குள் இருக்கும் உண்மையான பஸ் ஸ்டாண்டு என்பது மார்க்கையன் கோட்டை ரவுண்டாணாவில் இருக்கும், ஒரு நிழற் குடை கூட இல்லாத வெறும் பஸ் ஸ்டாப்தான். ஆனால் எங்கள் எல்லாருக்கும் அதுதான் பஸ் ஸ்டாண்டு. எங்கள் வீட்டுக்கு போக வேண்டும் என்றால் அந்த ஊருக்குள் இருக்கும் பஸ் ஸ்டாண்டில் இறங்க வேண்டும். ஆனால் அதிர்ஷ்டவசமாக அழகுவின் வீட்டுக்கு போக புது பஸ் ஸ்டாண்டு எனப்படும் அவுட்டர் பஸ் ஸ்டாண்டிலேயே இறங்கிக் கொள்ள வேண்டும். அதனால் எங்கப்பாவின் கண்ணில் படுவதிலிருந்து எஸ்கேப்.. அழைத்துக் கொண்டு அழகுவின் வீட்டுக்கு போய் அழகுவின் அம்மாவிடம் இவளும், அழகுவும் ஒன்றாக படிப்பதாகவும், செமினாரில் நோட்ஸ் தொலைந்து விட்டதால் அவனிடம் இருந்து நோட்ஸ் வாங்கிச் செல்ல வந்திருக்கிறாள் என்றும் ஒரு அரைப் பொய்யை சொல்லி நம்ப வைத்து அழகு படுத்திருக்கும் அறைக்குள் அவளை அழைத்துச சென்றேன். நோயின் தாக்கத்தால் மேலும் மெலிந்து களைத்துப் படுத்திருந்த தலைவன் இவளைப் பார்த்ததும் லிட்டரலாகவே நடுங்கத் துவங்கிவிட்டான். நீ.. ஏன்.. எப்புடி.. என்று வார்தைகள் கூட வரவில்லை.. வெறும் காத்துதான் வாயிலிருந்து வந்தது. நான் அவனை அதட்டிவிட்டு ஒன்றும் பயமில்லை என்று அவனது அம்மாவுக்கு தெரியாமல் தைரியம் அளித்து விட்டு இருவரையும் பேச வைத்தேன். எங்க பேசினாங்க..ஒரே அழுவாச்சிதான். நான் கடுப்போடு கத்தாத குறையாக அவளை அங்கே இருந்து அப்புறப்படுத்த வேண்டி வந்தது. சனியன்கள் இரண்டு நிமிஷ அழுகைக்காக என்னோட சென்ட்ரல் கவர்மெண்ட் வேலையையே கெடுத்துருச்சுகளே என்ற கடுப்பு வேறு.. சரி.. வந்தாச்சு.. பாத்தாச்சு.. ஒப்பாரி வச்சாச்சு.. கிளம்பலாமா.. என்று கொஞ்சம் சிரமப்பட்டு சோடா பாட்டிலில் இருந்து மூடியைப் பிரிக்கிற மாதிரிதான் அவளை அங்கிருந்து ஒரு pop ஒலியுடன் பிரித்து வர வேண்டி வந்தது.. சனியன் அத்தோடு விட்டதா என்றால் இல்லை.. என்னமோ இன்பச் சுற்றுலா வந்தது மாதிரி. வா. உங்க வீட்டுக்குப் போலாம். என்றாள். எனக்கு மனதுக்குள் ஒரு பெரும் பாறை பள்ளத்துக்குள் விழுந்த அதிர்வு.. சும்மா வர மாட்டீங்களா.-? கிளம்புங்க. போலாம் என்றேன் சிடுசிடுப்பாக.. அவளோ சிச்சுவேஷன் புரியாமல். உங்க வீட்டுக்கு என்னை கூட்டிட்டு போறதுக்கு என்ன பயம்.-? உன் தம்பியை நான் பாத்தும் நாளாச்சு. அப்புடியே உங்க அப்பாம்மாவை பாத்தமாதிரியும் இருக்கும். வா.. என்றாள். உண்மையில் அவள் என் தம்பியைப் பார்த்து அவன் எப்படி படிக்கிறான் என்று கேட்டு அவன் இன்னும் ஃபர்ஸ்ட் இயர் மேத்ஸை பாஸ் பண்ணாமல் இருப்பது கண்டு அவனை நாக்கைப் பிடுங்குகிற மாதிரி நாலுகேள்வி கேட்டால் ரொம்ப ரொம்ப சந்தோஷமே.. அதைப் பார்க்க எனக்கு கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.. எப்பவுமே தம்பிகள் நம் வீட்டில் ரொம்ப நல்லவன்களாகவும் பெரிய நல்லபெயர் எடுத்திருப்பவர்களாகவும் அடியே வாங்காதவர்களாகவும் இருப்பதைக் கண்டதில் வருகிற பொறாமைதான் அது. ஆனால் என்ன செய்வது. அந்த கண் கொள்ளாக் காட்சியைப் பார்ப்பதற்காக வீட்டுக்குப் போனால் டைப் டெஸ்ட்டுக்கு நான் ஏன் போகவில்லை என்று கேட்டு கொண்டே போடுவார்களே.. அழகம்மையிடம் இந்த மாதிரி இந்த சந்திப்பால் டைப் டெஸ்ட் நாசமாகப் போயிற்று என்ற தகவலையும் சொல்லவில்லை. சொன்னால் அதற்கு வேறு ஒரு ஒப்பாரியை பார்க்க வேண்டி வரும் என்ற நல்லெண்ணம்தான் காரணம்.. அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். கிளம்புவோம் வாங்க என்று அவளை பஸ் ஏறச் செய்வதிலேயே நான் குறியாக இருக்க, அவளோ நான் எங்க வீட்டுக்கு போய் என்னைப் பற்றி அவள் எதாவது வத்தி வைத்துவிடுவாளோ என்று பயப்படுகிறேன் என்று நினைத்து உங்க வீட்டுக்கு போறோம். அப்பா அம்மாவை பாக்குறோம். தம்பி கூட பேசுறோம். அடுத்த அஞ்சாவது நிமிஷம் கிளம்பிர்றோம். நீ சிகரெட் புடிக்கிறதைப் பத்தி எல்லாம் உங்க வீட்டுல சொல்ல மாட்டேன்.. என்று பேரத்தை துவங்கினாள். நீங்க சொல்லாட்டியும் எங்க வீட்டுல தெரியாதாக்கும் என்று கடுப்புடன் சொல்லி எத்தனையோ முயன்றும் அவள் தொடர்ந்து நச்சரிக்கவே வேறு வழியில்லாமல் என்னுடைய டைப் டெஸ்ட் ஹால் டிக்கெட்டை எடுத்து அவளிடம் நீட்டினேன். முதலில் அப்படியே சந்தோஷமாகி, அடப்பாவி.. அப்ஜெக்டிவ் டெஸ்ட் பாஸ் பண்ணி டைப் டெஸ்ட் வரைக்கும் வந்துட்டியா என்று சந்தோஷப்பட்டவள் தேதியைப் பார்த்துவிட்டு அப்படியே அப்செட் ஆனாள். அதற்கு பிறகு நடந்ததை என்னத்துக்கு சொல்லிக்கிட்டு.. அவள் ரொம்ப நாளைக்கு என்னை மன்னிக்கவே இல்லை.. அவ்வளவுதான்.. இப்படியொரு நட்பாகத்தான் இருந்தது அந்த நட்பு. அது நட்பு, பாசம் எல்லாம் தாண்டிய ஒரு பிரியம்.. அவ்வளவுதான்.. அதற்கு மேல் வரையறுக்க அங்கு எதுவும் இல்லை.. திடீரென்று ஓர் அழகற்ற நாளில் அழகு, அவர்களது காதல் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தான். காரணம் கேட்டதற்கு அவனது வீட்டில் அதை எதிர்க்கிறார்கள் என்று சொன்னான். எனக்கு வந்ததே கோபம்.. மானாங்காணியாகப் பேசிவிட்டேன்.. கடுமையான வார்த்தைகளை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் சாரம் இதுதான் : அழகம்மை காரைக்குடியின் கட்டுப்பாடு மிகுந்த சாதியில்இருந்து வருபவள். அவளுக்கு ஒரு தங்கை வேறு இருக்கிறாள். உன்னை மாதிரி ஒரு பரதேசியை காதலித்து கல்யாணம் பண்ணிக் கொண்டு போனால் அவளுக்குதான் பாதிப்பு அதிகம். அவளது தங்கையின் கல்யாணம் தடைப்படும்.. உனக்கு என்ன ஆம்பிளை தடியனுக்கு.. உன் தங்கைக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. ரெண்டு அண்ணன்களுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. இதற்கு மேல் நீ காதலித்து கல்யாணம் செய்து கொண்டால்தான் என்ன இல்லை சாமியாராக போனால்தான் என்ன-.? அழகம்மைக்கு இருக்கிற தைரியம் இல்லை என்றால் எதற்காக காதலிக்கிறாய்.. இதை பாடு பொருளாக வைத்து நான் இயற்றிய பாடல்களால் எங்கள் நட்பு முறிந்து போனது. எனக்கு அது பற்றி ஒரு சுக்கு கவலையும் இல்லை. . ஆனால் ஒரு வேளை அவன் மட்டும் அழகம்மையை விட்டு வேறு யாரையாவது திருமணம் செய்தால் இருககிறது வேட்டு என்று சொன்ன எனது சொற்கள் மட்டும் நண்பர்கள் மத்தியில் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தொங்கிக் கொண்டே இருந்தது.. அப்புறமும் என் வீட்டுக்குதான் கடிதம் வந்தது. உள்ளே திறந்து பார்த்தேன். தம்புவுக்கு கடிதம் இல்லாத கடித உறை அது. உள்ளே இன்னொரு உறையில் அழகுவுக்கு மட்டும்தான் கடிதம் இருந்தது. அந்தக் கடிதமும்.. ஒட்டப்பட்டு இருந்தது.. அவமானத்தில் நான் கூனிக் குறுகிப் போய்விட்டேன். அழகு என்னை வெறுக்க காரணங்கள் இருந்தன.. அழகம்மை ஏன் என்னை வெறுத்தாள்..? இந்த தம்புவை அவமானப்படுத்த அவளுக்கு எப்படி மனம் வந்தது..? பெரும் துக்கம் என்னை இரவைப் போல் பீடித்துக் கொள்ள நண்பர்களிடம் கொடுத்து அந்த கடிதத்தை அழகுவிடம் கொடுக்கச் சொல்லி விட்டேன். இனிமேல் என் விலாசத்துக்கு கடிதங்கள் வராமல் பார்த்துக கொள்ளுமாறும் சொல்லிவிடச் சொன்னேன்.. பின்ன..? ஒவ்வொரு முறையும் அவமானத்தை யார் சுமப்பதாம்..? நண்பர்கள் என்னைப் போல் நேர்மையானவர்கள் இல்லை. அல்லது அவர்களது நேர்மைக்கு வேறு அளவுகோல்கள் இருந்தன. நான் கொடுத்து விட்ட கடிதத்தை ஆவியில் பிடித்து பிரித்து உள்ளே இருந்த கடிதத்தின் முக்கியமான வரிகளை மட்டும் ஒரு தனி தாளில் எழுதி வைத்து, (அப்போது ஜெராக்ஸ் என்பது லக்சுரி) பின் கடித உறையை ஒட்டி அழகுவிடம் சேர்ப்பித்து விட்டடார்கள். தனியே எழுதி வைத்ததை என்னிடம் கொண்டு வந்து காட்டினார்கள். நான் படிக்கவே மாட்டேன் என்றபோதும் இது முழுக் கடிதம் அல்ல.. கடிதத்தில் உன்னைப் பற்றி இருந்த வரிகள் மட்டும்தான். படி. என வற்புறுத்தி படிக்க வைத்தார்கள்.. அதில்அழகம்மை, தம்பு இவ்வளவு மோசமானவன் என்று நான் நினைக்கவே இல்லை.. அவன் பேசியதாக நீ சொன்னதை எல்லாம் என்னால் நம்ப முடியவில்லை. அதை அவனிடம் கேட்காதே என்று வேறு சொல்லிவிட்டாய்.. இப்போது அவனை நினைக்கவே எனக்கு சங்கடமாக உள்ளது.. இனி ஒரு நாளும் நான் அவனிடம் பேசப்போவதே இல்லை.. என்று மட்டும் இருந்தது.. எனக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. தம்பு சொன்னதாக அழகு அவளிடம் என்ன சொன்னான் என்றும் தெரியவில்லை. அழகம்மையின் பிரியத்தையே அறுக்க வைக்குமளவு மோசமாக சொல்லி இருக்கிறான் என்றால் அதை நான் தெரிந்து கொள்ளவே வேண்டாம் என்றுதான் தோன்றியது.. நண்பர்கள், நடந்ததை விளக்கமாக சொல்லி அழகம்மைக்கு ஒரு கடிதம் போடச் சொல்லி வற்புறுத்தினார்கள். எனக்கு அதில் விருப்பம் இல்லை. நடந்தவை இப்படியே இருக்க, அவர்கள் கல்யாணம் செய்து கொண்டால் போதும். அழகு சொன்னதை அழகம்மையிடம் சொல்லி, அதனால் அவர்களுக்குள் சண்டை வந்து பிரிவு நிகழ்வானேன்.. தம்பு கெட்டவனாகவே இருந்துவிட்டுப் போகிறான். அவர்கள் பிரியக்கூடாது என்று சொல்லிவிட்டான் தம்பு.. அவ்வளவுதான். அப்புறம் காலம் திகுடுதிம்பாக ஓடியது. கால ஓட்டத்தில் நான் அழகுவை அழகம்மையை அவர்களது காதலை தம்புவை எல்லாவற்றையும் மறந்து விட்டிருந்தேன். பின்னர் பல வருடம் கழித்து நண்பர் ஒருவரின் ஆபீசில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, கொஞ்சம் பெரிய தொகையை பேங்க்கில் போட வேண்டும். வேலை பார்ப்பவர்களை அனுப்ப பயமாக இருக்கிறது.. நீ போய் போட்டுவிட்டு வா.. என்று என்னை அனுப்பினார்.. வரிசையில் நின்று பணத்தை கவுண்டருக்குள் நீட்டும்போதுதான் கவனித்தேன். அப்போதுதான் அந்த புது கேஷியரும் என்னை கவனித்தார். ஒரு யுகத்தின் மௌனத்தை நான் அப்போதுதான் உணர்ந்தேன். ஒரே ஒரு நொடிதான். மைக்ரோ செக்கண்ட் மௌனந்தான். அவ்வளவுதான் நிகழ்ந்தது. புது கேஷியர் அழகு எதுவும் பேசாமல் பணத்தை வாங்கி எண்ணி, சலானில் கையெழுத்து போட்டு என் கையில் கொடுத்தார். தம்புவும் எதுவும் பேசாமல் சலானை வாங்கிக் கொண்டு வெளியே வந்துவிட்டான்.. பின்னர்பொதுவான நண்பர்களிடம் விசாரித்தபோதுதான் தெரிந்தது. அழகு, அழகம்மை இருவருமே இப்போது கணவன் மனைவிதான். அழகு பேங்க்கில் ஊழியர்- அழகம்மை அரசு ஆசிரியர். இரண்டு குழந்தைகள் வேறாம்.. எனக்கு சந்தோஷமாகவும், மெல்லிய துக்கமாகவும் இருந்தது. எத்தனை கோபம் இருந்திருந்தாலும் திருமணம் என்று அழகம்மை எனக்கு ஒரு தகவலாவது தந்திருக்கலாம் என்றது மனது.. தம்பு தம்பு என்று அவள் அழைத்த ஒலி ஒரு வண்ணத்துப் பூச்சியைப் போல என் காதோரம் படபடத்து அலைந்தபடி இருந்தது.. ப்ரியம் என்பது என்ன என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.. ஒரு வேளை சொல்லாமலிருப்பதுதான் பிரியம் என்றே எனக்கு மறுபடியும் தோன்றுகிறது.. கல்யாணத்துக்கு சொல்லாமல் இருப்பதையும் சேர்த்துதான் சொல்கிறேன்.. ப்ரியங்களுடன்.. தம்பு என்கிற நந்தன் face book நந்தன் ஸ்ரீதரன்
 8. மக்கட்பேறு - என் அனுபவம் ‪#மக்கட்பேறு ‬ ‪திருமணமாகி மக்கட்பேறு இல்லாததை பற்றிய ட்விட்கள் பார்க்க நேரிட்டது..‬ ஒவ்வொருவரின் genetics, உடல்வாகு பொறுத்து அடைத்தும் மாறுபடும்..‬ நான் மருத்துவர் இல்லை மற்றும் இது மருத்துவ ஆலோசனை த்ரெட் இல்லை. எங்களுடைய அனுபவங்களை பகிர்கிறேன் அவ்வளவே.. ‪என்னுடைய pinned tweet-ல் இருக்கும் thread-ற்கு நேரெதிராக உணர்வு கொண்ட பதிவு இது..‬ ‪பெண் பார்த்தது.. திருமணம் நடந்தது.. எல்லாம் வழக்கம்போல சந்தோசமாக நடந்து முடிந்தது.. இல்லற வாழ்க்கை தொடங்கியது..‬ ‪திருமணம் முடிந்து மூன்றாவது மாதம்.. நாள் தள்ளிப்போவதாக மனைவி சொல்ல.. ஆனந்தத்தில் திளைத்தேன்.. ‪உடனடியாக pregnancy test kit வாங்கி வந்து மறுநாள் விடியற்காலை சோதனை செய்தோம்..‬ ‪இரண்டு கோடுகள்..‬ ‪தலைகால் புரியல.. சந்தோசத்தில் மனைவியை தழுவி உச்சிமுகர்ந்தேன்..‬ விடிந்ததும் வீட்டில் அனைவருக்கும் சொன்னோம்.. புது வரவை எண்ணி எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்..‬ மருத்துவமனை சென்றோம்.. blood test எடுத்து pregnancy உறுதி செய்யப்பட்டது..‬ ‪அடுத்து ultrasound..‬ ‪முதலில் மனைவி மட்டும் அறையில் இருக்க ultrasound செய்து மருத்துவர் பாத்தாங்க.. பின்னர் என்னை உள்ள அழைத்தாங்க..‬ திரையில் ஒரு ஆப்பிள் விதை அளவிற்கு இருக்கும் 5 வார குழந்தையை பார்த்த தருணம்..‬ எல்லாம் திருப்திகரமாக இருப்பதாக மருத்துவர் கூற மனது நிம்மதி பெற்றது..‬ ‪கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்க வேண்டிய அறிவுரைகளை மருத்துவர் கொடுக்க, கவனமாக கேட்டுக்கொண்டு வெளியே வந்தோம்.. வழக்கத்தை விட நான் கார் மெதுவாக ஓட்டுவது, மனைவியை அதிக பலு தூக்காமல் பார்த்துக்கொள்வது போன்ற அனைத்து அறிவுரைகளையும் அப்படியே செய்தோம்..‬ சத்தான உணவாக சாப்பிட்டு ஓய்வு எடுப்பதே மனைவியின் முக்கிய வேலையானது..‬ ‪இரண்டு வாரம் கழித்து HCG level பார்க்க blood test மற்றும் குழந்தை வளர்ச்சியை பார்க்க ultrasound-க்கு வர சொல்லிருந்தாங்க..‬ மருத்துவமனை போனோம்..‬ Lab technician உணவு இடைவேளைக்கு சென்றதால் ultrasound பார்த்திடலாம்னு சொல்ல.. வழக்கம்போல நான் அறைக்கு வெளியே இருக்க மருத்துவர் ultrasound பார்த்தாங்க..‬ ‪சிறிது நேரத்தில் என்னை அழைக்க, உள்ள போனேன்..‬ கலங்கிய கண்களுடன் என் மனைவி அமர்ந்திருக்க.. சட்டென்று எனக்கு ஏதும் புரியல‬.. ‪மருத்துவர் - Sorry, we don’t see any heart beat in the baby (குழந்தைக்கு இதயத் துடிப்பில்லை) என்றார்..‬ எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.. நெஞ்சு அடைக்குது.. கலங்கிய கண்களுடன் அருகில் மனைவி..‬ நான் அழுதால் இன்னும் நிலைமை மோசமாகிடும்னு, அழுகையை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிட்டு மருத்துவரை பார்த்து.. அடுத்து என்ன செய்யனும் என்றேன்..‬ ‪D&C procedure மூலமாக கருவை வெளியே எடுக்கனும் என்றார்..‬ வேற வழியில்லையா என்ற என் கேள்விக்கு இல்லையென்று தலையாட்டினார்..‬ அன்று மாலை அட்மிட் செய்ய சொன்னார்கள்.. மறுநாள் காலை operation theatre-ல் D&C procedure..‬ ‪வீட்டிற்கு ஃபோன் செய்து சொல்ல.. பதறியடித்து அனைவரும் வந்தார்கள்.. அம்மா, அப்பா, அண்ணன், மாமனார் என்ற அனைவரும் ஆறுதல் சொல்ல.. ஏதும் பேச தோன்றாமல் சரி அல்லது சரி என்பது போல தலையாட்டி வைத்தேன்..‬ ‪மாலை அட்மிட் ஆகி நான் கூட இருக்கிறேன், நீங்கல்லாம் நாளை procedure முடிஞ்ச பிறகு வாங்க என்று அனுப்பி வைத்தேன்..‬ anesthesia கொடுக்கனும்ன்றதால இரவு உணவிற்கு அப்புறம் தண்ணீர் உட்கொள்ளக் கூடாது என்பதால் மனைவி சோர்ந்துட்டாங்க..‬ அதுதான் வாழ்நாளில் நான் கண்ட மிக நீண்ட இரவு.. நொடிகள் அவ்வளவு மெதுவாக நகர்ந்து நான் பார்த்ததில்லை.. ‪nurse வந்து operation theatre-க்கு மனைவிய கொண்டுபோனாங்க‬.. சிகிச்சை முடிந்து பின்பு அறையில் மெல்ல மெல்ல மனைவிக்கு கண்விழிப்பு வந்தது.. மயக்க மருந்து மற்றும் செய்த procedure-னால வந்த உடல்வலி முகத்தில் தெரிந்தது..‬ ‪அருகில் அமர்ந்த என்னிடம்..‬ எனக்கு மட்டும் ஏங்க இப்படி நடக்குது, நான் யாருக்கும் எந்த கெட்டதும் நினச்சது கூட இல்லை என்று மார்பு மீது தலை வைத்து அழும் மனைவி..‬ அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டத்தை வெறித்தேன்.. என் கண்ணில் வர எத்தனித்த கண்ணீரை மனதிற்குள் விழுங்க..‬ ‪கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவை திறந்த என்னிடம் பேரக்குழந்தை பிறந்திருக்கு ஸ்வீட் எடுத்துக்கங்க என்றார் அந்த அறையின் சூழ்நிலை அறியாத அந்த புதுப் பாட்டி..‬ சிரித்தபடி வாழ்த்துக்கள் சொல்லி வழியனுப்பி மேசை மீது ஸ்வீட் வைத்துவிட்டு மனைவி மடி மீது நான் தலைவைக்க.. என் தலைமுடி கோதி ஆறுதல் தந்தார்.. ‪discharge ஆகும்போது அடுத்த 6 மாசத்தற்கு குழந்தைக்கான முயச்சி செய்யவேண்டாமென மருத்துவர் சொல்லி அனுப்பினார்..‬ நாங்க ஒரு வருடம் பொறுத்தோம்..‬ ‪அதன் பிறகு மனைவி கர்ப்பமானாங்க.. எல்லோருக்கும் சந்தோசம்.. மருத்துமனை சென்று blood test மற்றும் ultrasound செய்து எல்லாம் நல்லாருக்குன்னாங்க‬.. மூன்று வாரம் கழித்து, இரவில் தூங்கிக்கொண்டிருந்த போது திடீரென்று மனைவி எழுப்பினாங்க..‬ படுக்கை நிறமற்ற ஒரு திரவத்தால் நனைந்திருக்க.. என்னவென்று புரியவில்லை..‬ ‪அவசரமாக மருத்துவமனை செல்ல.. அங்கு ultrasound செய்து பார்க்க.. பனிக்குடம் உடைஞ்சிருச்சு.. No heart beat.. என்று மருத்துவர் சொல்ல..‬ நொறுங்கிவிட்டேன்.. என்ன சொல்லவென்று தெரியல..‬ ‪மறுபடி அதே D&C procedure.. ஆறு மாதம் இடைவெளி வட சொன்னாங்க..‬ ‪இந்த முறையும் ஒரு வருடத்திற்கு பிறகு முயன்றோம்..‬ மூன்றாவது முறை நல்ல செய்தி.. ஆனால் இந்த முறை 5வது வாரத்திலேயே அதுவாக கலைந்துவிட்டது..‬ ‪அதன் பின் இரண்டு வருடம் ஆகியும் நல்ல செய்தியில்லை.. அதனால் IUI (Intra Uterine Injection) மூலம் முய்சிக்கலாம் என்று மருத்துவர் சொல்ல.. ‬ ‪IUI - ஆண் விந்தினை கருவி மூலம் செயற்கை முறையில் பெண் உறுப்பு வழியாக உள்ளே செலுத்துவது‬.. அதற்கு ஆண் தன் விந்தினை சேகரித்து கொடுக்கவேண்டும்..‬ மருத்துவமனையில் அதற்கென்று அறை இருக்கும்.. அந்த மருத்துவமனையில் ஒதுக்குப்புறமாக இல்லாமல் நட்டநடுவில் இருக்கும்.. அந்த அறைக்கு எதற்கு போவார்கள் என்பது அந்த தளத்திற்கு வரும் அனைவருக்கும் தெரியும்.. அந்த அறைக்குள் சுய இன்பம் அனுபவித்துத்தான் விந்தினை சேகரிப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.. வெளியே 40-50 அமர்ந்திருக்க அவர்கள் பார்க்கும்போதே விந்து சேகரிக்கும் டப்பாவை எடுத்துக்கொண்டு பல கண்கள் மொய்க்க அந்த அறைக்குள் செல்வது மிக கொடுமையான தருணம்.. உள்ளே நாம் சுய இன்பம் செய்வோம் என்பது வெளியே அத்தனை பேருக்கும் தெரியும் என்ற சிந்தனையுடன் சுய இன்பம் செய்து விந்து எடுப்பது அதை விட கொடுமை.. ஒரு வழியாக விந்து சேகரித்து கொடுத்து IUI procedure முடிந்தது.. ஆனால் success ஆகல.. முதல் முறையே success ஆவது சாதாரணமாக நடக்கும் விசயமல்ல.. அடுத்த முறை IUI முயற்சி success ஆனது.. ஒவ்வொரு வாரமும் blood test and ultrasound செய்து குழந்தை சரியாக வளர்கிறதா என்று மருத்துவர் கண்காணிக்க வாரங்கள் நகர்ந்தது.. 10-வது வாரம் spotting ஆக ஆரம்பித்தது.. மருத்துவர் பரிசோதித்துவிட்டு progesterone மாத்திரைகள் கொடுத்தார்.. இருந்தும் spotting முழுவதும் நின்றபாடில்லை.. ஒரு வாரம் மருத்துவமணையில் அட்மிட் செய்து ஓய்வு எடுக்க செய்து ட்ரிப்ஸ் ஏற்றினார்கள்.. சில supportive medicine-களுடன்.. பின்னர் discharge ஆகி வீட்டிற்கு வந்தோம்.. வந்த இரண்டாவது நாள் மனைவிக்கு chicken pox வந்துவிட்டது.. மருத்துவமனை சென்றோம்.. அட்மிட் செய்ய சொன்னார்கள்.. solid food சாப்பிட முடியாத்தால் 24 மணி நேரமும் ட்ரிப்ஸ்.. மனைவிக்கு அம்மை நோய்க்கு மருந்து மற்றும் spotting நிற்காத்தால் குழந்தைக்கு பாதிப்பு ஆகாமல் இருக்க என்று மருந்து ட்ரிப்ஸ் வழியே கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்.. 3-4 நாட்களில் ட்ரிப்ஸ் இறங்காது.. எடுத்து இன்னொரு vein பார்த்து ஏத்தனும்.. ட்ரிப்ஸ் ஏறும் கையை அசைக்கமுடியாது 24 மணி நேரமும் அப்படியே வைத்திருக்கனும்.. ரொம்ப அசைக்கக்கூடாது.. அட்மிட்டான இரண்டாவது வாரம் scan report பார்த்தால் இன்ப அதிர்ச்சி.. இரட்டை குழந்தைகள் என்று இருந்தது.. முன்பு செய்த ஸ்கேன்களில் சரியாக தெரியவில்லை என்றனர்.. ஆனால் அந்த இன்பம் நிலைக்கவில்லை.. பின்னர் செய்த ஸ்கேனில் ஒரு கருவில் heart beat இப்போது இல்லை.. அந்த கரு தானாக கரைந்துவிடும் மற்றொரு கருவிக்கு பாதிப்பில்ஐ என்றனர்.. அந்த இரவுகள் முழுவதும் நான் உறங்கியதில்லை.. தூக்கத்தில் மனைவி கை வேகமாக அசைத்து ட்ரிப்ஸ் ஏதாவதாகிவிடுமோ என்று அதை கண்காணிக்க.. அந்த இரவுகளை எனக்கு நகர்த்தியது இசைஞானி இளையாராஜாவின் பாடல்கள்.. மறுநாள் காலை அம்மா வந்தவுடன் வீட்டிற்கு சென்று 2 மணி நேரம் தூங்கி பின்பு refresh ஆகிவிட்டு மருத்துவமனை வந்துவிடுவேன்.. அங்கிருந்தே பகல் முழுவதும் மனைவியை கவனித்துக்கொண்டே remote work செய்தேன்.. இப்படியே 5-6 வாரங்கள் சென்றது. வாழ்க்கையின் மிகக்கொடுமையான நாட்கள் அவை.. எதிரிக்கும் அந்த நிலை வரக்கூடாது.. பின்னர் discharge ஆகி வீட்டுற்கு வந்தோம்.. அடுத்த வாரம் எனக்கு chicken pox வந்தது.. 10 நாட்களுக்குப் பின் சரியானது.. அந்த சமயத்தில் மனைவிக்கு எந்த தொந்தரவுமல்லாததால் மருத்துவமனை செல்லவில்லை.. அடுத்து பார்க்க வேண்டியது 20th week anomaly scan.. பயந்து கொண்டே சென்றோம்.. முன்பு chicken pox வந்ததால்.. scan முடிந்தது.. மறுநாள் சென்று report வாங்கினேன்.. நல்லவிதமாகவே இருந்தது.. அனைவரும் சந்தோசபட்டோம்.. அது 2 நாட்கள் கூட நிலைக்கவில்லை.. அதிகாலையில் பனிக்குடம் உடைந்தது.. நிறைய தண்ணீர் வெளியேறிவிட்டது.. மருத்துவமனை சென்றோம்.. அட்மிட் செய்து பரிசோதித்தார்கள்.. நிறைய தண்ணீர் வெளியேறிவிட்டதால் குழந்தை இறந்துவிட்டது என்றார்கள்.. மனம் சுக்கு நூறாக உடைந்தது.. துக்கம் தாளாமல் மனைவி கட்டிப்பிடித்து கதறினாங்க.. எனக்கும் ஓவென்று கதறி அழவேண்டும் போல இருந்தது.. நானும் அழுது கொண்டிருந்தால் தேற்றுவது யார்.. மனதை இரும்பாக்கி கண்ணீரை அதனுள் அடக்கினேன்.. C section செய்யாமல் ஊசி போட்டு வலி வரவைத்து குழந்தையை வெளிய எடுக்க முயற்சித்தனர்.. பனிக்குடம் உடைந்து தண்ணீர் வெளியேறிவிட்டதால் அவ்வளவு எளிதில் குழந்தை வெளியே வரவில்லை.. இன்னும் சில ஊசிகள் போட்டு ஒரு வழியாக அடுத்த நாள் குழந்தையை வெளியே எடுத்தார்கள்.. முழுவதும் வெளியே வராத்தால் D&C procedure செய்து remnants செத்தம் செய்தார்கள்.. Operation theatre-க்கு வெளியில் பிறந்த குழந்தையை பார்க்க அமர்ந்திருந்தவர்களுக்கு மத்தியில் என் இறந்த குழந்தையின் வரவிற்காக காத்திருந்தேன்.. கண்ணாடி குடுவையில் இறந்த குழந்தையை போட்டு கொண்டு வந்து காட்டினார்கள்.. ஆண் குழந்தை.. கையில் ஏந்தி மகிழ வேண்டிய குழந்தையை ஒரு specimen போல கண்ணாடி குடுவையில் பார்ப்பேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை.. இரண்டு நாட்களுக்குப்பின் discharge ஆகி வீட்டிற்கு வந்தோம்.. அன்றிறவு என் மனைவி என்னிடம் “தயவு செஞ்சு அழுதிடுங்க.. இந்த 5 மாசம் நான் எவ்வளவோ முறை அழுதிட்டேன்.. இந்த வாரம் நிறைய அழுதிட்டேன்.. ஆனா நீங்க அழுது ஏன் கண் கலங்கி கூட நான் பாக்கல.. மனசுக்குள்ளயே அழாதீங்க.. வாய்விட்டு அழுதிடுங்க ப்ளீஸ்” என்றார்.. மெல்லிய புன்சிரிப்பை பதிலாக கொடுத்துவிட்டு உச்சிமுகர்ந்து ஆறுதல் சொன்னேன்.. என் மனைவிக்கு நானும், எனக்கு என் மனைவியும் குழந்தையானோம்.. ஒரு வருடம் ஓடியது.. நல்ல செய்தி ஏதுமில்லை.. வீட்டில் மற்றவர் வற்புறுத்தலால் மருத்தவனை சென்று இருவரும் full checkup செய்துகொண்டோம்.. report எல்லாம் பார்த்துவிட்டு உங்க ரெண்டு பேருக்கும் உடல் அளவில் எந்த பிரச்சனையுமில்ல.. ஆனா ஏன் குழந்தை உண்டாவதில் தாமதம்/தங்கவில்லை என்று தெரியல.. நீங்க வழக்கம்போல இருங்க தானாக நடக்கும் என்றார்கள்.. நாங்களும் இதற்கென்று தனியே ஏதும் மெனக்கெடாமல் முடிந்தவரை சந்தோசமாக வழக்கம்போல இருந்தோம்.. இரண்டு மாதம் கழித்து நல்ல செய்தி.. இந்த முறையும் spotting இருந்தது.. ஆனால் குறைவாக.. gestational diabetes இருப்பது blood test-ல் தெரியவர insulin injection pen மூலம் regular-ஆக கொடுத்தோம்.. ஒவ்வொரு வாரமும் blood test மற்றும் ultrasound செய்தோம்.. 20th week anomaly scan result நன்றாகவே வந்தது.. ஒவ்வொரு நாளும் ஒரு யுகம் போல கடந்தது.. ஒரு வழியாக 37 வாரம் வந்தாயிற்று.. Past history-யை வைத்து normal delivery வேண்டாம் C section செய்துவிடலாம் என்றார்கள்.. அதுவும் சரியென்று பட.. அடுத்த வாரம் நாள் குறித்தோம்.. முந்தைய நாள் இரவு அட்மிட் ஆனோம்.. மறுநாள் காலை முதல் operation எங்களுடையது.. மறுநாள் காலை anesthesia கொடுக்கும் முன்பு வேறு ஒரு emergency வந்ததால் இரண்டாவதாக எங்களை மாற்றினார்கள்.. பின்னர் மனைவிக்கு anesthesia கொடுக்கப்பட்டு operation theatre கொண்டுசெல்லப்பட்டர்.. 15 நிமிடங்களில் மருத்துவர் வந்து நல்லவிதமாக முடிந்தது உங்களுக்கு பையன் பிறந்திருக்கான் என்றி சொல்லிட்டு மறுபடி உள்ளே சென்றார்.. அம்மா என்னை கட்டி அழுதபடி உச்சிமுகர்ந்தார்.. கொஞ்ச நேரத்தில் குழந்தையை கொண்டு வந்து கையில் கொடுத்தார்.. இத்தனை வருடம் கிடைக்காத அப்பா என்ற பதவி கிடைத்த நாள் அது.. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.. ஆனால் என் மனைவிக்கு நம்பிக்கை உண்டு.. இத்தனை வருடம் இவ்வளவு சோதனைகளை கடந்தபோதும் கடவுள் நம்பிக்கை குறைந்ததில்லை.. நானும் இதுதான் சாக்கு என்று மனைவியிடம் அவர் கும்பிடும் கடவுளை திட்டியதில்லை.. அது அவர் நம்பிக்கை.. இதில் முக்கியமான விசயம் நம்பிக்கை.. நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை.. ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சொல்லாமல் இருப்பது.. நல்ல சத்தான உணவு சாப்பிட்டு ஆரோக்யமாக இருந்து முயற்சி செய்வது.. கூடவே மருத்துவர் சொல்லும் support medicines (prenatal) எடுத்துக்கொள்வது.. இவையெல்லாம் குழந்தை உருவாகும் சாத்தியத்தை அதிகப்படுத்தும்.. நம்பிக்கையோடு இருங்க.. நல்லதே நடக்கும்.. நன்றி, பச்சக்கிளி(twitter)
 9. சரசு மருந்து குடிச்சிருச்சு.. ஆசுபத்திரிக்கு கொண்டு போறாங்களாம்” தகவல் சொன்னவன் காத்திருக்கவில்லை. வண்டியைக் கிளப்பிக் கொண்டு போய் விட்டான். மணிவேல்தான் பதறினான். ”நான் போறேன்” சண்முகம் விடவில்லை. “நீ நில்லு.. யாவாரத்தைக் கவனி. நான் போயிட்டு என்னான்னு பார்த்திட்டு வரேன்.” கல்லாவைத் திறந்து கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பும்போது பார்வை தன்னிச்சையாய் பெற்றோர் படத்தின் மீது பதிந்தது. ‘கூட வரீங்களா’ சரக்கு எடுக்கப் போகும்போது.. வங்கியில் பணம் கட்டப் போனால்.. எந்த முக்கிய வேலை என்றாலும் ‘அம்மா.. அப்பா’ படம். மனசுக்குள் வேண்டுதல். ‘கூட வாங்க’. தடங்கல் இல்லாமல் வேலை முடியும் என்ற நம்பிக்கை. மணிவேல் தணிந்த குரலில் சொன்னான். “உடனே ஃபோன் பண்ணிருங்க.. “ சண்முகம் தலையாட்டினான். பைக் உறுமிக் கொண்டு போனது. ”தம்பி.. அரிசி 25 கிலோ வேணும். அனுப்பிடறீங்களா” வாடிக்கையாளர் வந்ததும் புத்தியில் வியாபாரம் புகுந்தது. “அண்ணே.. கவர் பால் இருக்கா” ப்ரிட்ஜைத் திறந்து அரை லிட்டர் பாலை எடுத்துக் கொடுத்து பணத்தை வாங்கிப் போட்டான். மளிகைக் கடை என்று பெயரே தவிர ஆத்திர அவசரத்திற்கு எல்லாம் விற்பனைக்கு வைத்திருக்க வேண்டியிருக்கிறது. ‘தலைவலி’ மண்டையை பொளக்குது என்று ஒருத்தர் வருவார். ’கிப்ட் ஐட்டம் இருக்கா’ என்று கூட ஒருவர் கேட்டார். இல்லையென்று அனுப்பியதும் மணிவேல்தான் அதற்கும் அவசரப் பட்டான். ‘அண்ணே ஏதாச்சும் வாங்கி வைக்கணும்’ இதெல்லாம் ரெகுலர் விற்பனை இல்லை. பணத்தை முடக்க வேண்டாம் என்று சமாதானம் செய்ய வேண்டியிருந்தது. பெட்டிக்கடை ரேஞ்சில் எதிரில் கடை வைத்திருந்தவன் இவர்களுக்கு முன் போட்டி போட முடியாமல் வியாபாரம் படுத்துப் போய் காலி செய்து கொண்டு போய் விட்டான். ’அண்ணன், தம்பியா’ என்று ஒருத்தர் கேட்டாராம். ’ஏனாம்’ ‘இல்ல.. ஒத்துமையா யாபாரம் பண்றாங்களே.. அது எப்படின்னு’ அண்ணனுக்குப் பெண் பார்க்கப் போனபோது பெண் வீட்டில் தரகர் முதலில் இவனைத்தான் அறிமுகம் செய்தார். ‘மணிவேலுன்னு சொன்னேனே.. அது இவருதான்’ வரப் போற அண்ணி எட்டிப் பார்த்தாங்களாம். ‘கட்டிக்கப்போறவன் என்னைக் கூட இவ சரியா பார்த்தாளோ.. என்னவோ.. முத முதல்ல உன்னைத்தான் பார்த்தாளாம்’ என்று சண்முகமே கேலி செய்வான். கல்யாணப் பேச்சு ஆரம்பித்த உடனேயே மணிவேலை அழைத்துக் கொண்டு வங்கிக்குப் போனான். ’இவன் பேர்ல ஒரு அக்கவுண்ட் ஆரம்பிக்கணும்’ மணிவேல் பதறிப் போனான். ‘எதுக்குண்ணே’ ’எல்லாம் நல்லதுக்குத்தான்’ கணிசமான தொகையுடன் ஆரம்பித்த கணக்கில் பணம் மாதாமாதம் ஏறிக் கொண்டிருக்கிறதே தவிர மணிவேல் எடுக்க வேண்டிய அவசியமே வரவில்லை. அதுவுமில்லாமல் இப்போது இன்னொரு வேலையும் சண்முகம் செய்துவிட்டான். தரகர் வந்துவிட்டுப் போனதாக கடைப்பையன் சொன்னதும் முதலில் மணிவேல் நம்பவில்லை. ‘வீட்டுல வச்சுப் பேசாம கடையில வச்சு ஏன் பேசணும்’ மணிவேலுக்கு அண்ணனிடம் கேட்கத் தயக்கம். ‘அவரே சொல்லுவாரு’ என்று விட்டு விட்டான். பிறகுதான் புரிந்தது. மணிவேலுக்குப் பெண் பார்த்திருக்கிறான். ’அண்ணி உங்களுக்குத் தெரியுமா’ சண்முகம் குறுக்கிட்டு சொன்னான். ’அவதாண்டா பார்க்கச் சொன்னது.. உனக்கும் வயசாச்சில்ல’ அண்ணி சிரித்தாள். ‘அதெல்லாம் ஒண்ணுமில்ல.. நான் தனியா இருக்கேனாம்.. சண்டை போட ஆள் வேணுமான்னு கேட்டாரு.. கூட்டியாங்கன்னு சொன்னதும் உனக்கு பொண்ணு பார்க்கறாரு’ அண்ணி உறவில் ஒரு சம்பந்தம் இருப்பதாகத் தகவல். ’புடிச்சிருந்தா மட்டும் பேசலாம்.. எங்க வீட்டு மனுஷங்கன்னு ஒப்புத்துக்க வேணாம்’ கார் வைத்துக் கொண்டு போனார்கள். பெண் அப்படியொன்றும் அசத்தல் இல்லை. ஆனாலும் அவர்கள் வீட்டில் திரும்பத் திரும்ப ‘ரொம்ப மரியாதை தெரிஞ்ச பொண்ணு’ என்று சொன்னது மூளைச் சலவை செய்த மாதிரி ஆகிவிட்டது. மறுபடி அந்தப் பெண்ணைப் பார்க்க ’ஆமா.. நான் அப்படித்தான்’ என்று சொல்கிற மாதிரி முகபாவம். ’என்னடா சொல்றே’ ‘உங்களுக்குப் பிடிச்சிருந்தா சரிண்ணே’ ’வாழப் போறவன் நீதாண்டா’ சண்முகம் சிரித்ததும் பெண்வீட்டார் விசாரித்தார்கள். அண்ணி ஏதோ சொல்ல முயற்சி செய்ய சண்முகம் தடுத்து விட்டான். ’தகவல் சொல்லி விடறேன்.. அப்ப வரட்டுங்களா’ வீட்டுக்கு வந்ததும் அண்ணிதான் கேட்டாள். ’ஏன் அப்படி சொல்லிட்டு வந்தீங்க’ சண்முகம் மௌனமாக இருக்கவும் அண்ணி மீண்டும் பதட்டமாய் கேட்டாள். மணிவேல் ஹாலை விட்டு வாசற்புறம் வந்து விட்டான். இருந்தாலும் சண்முகத்தின் குரல் தெளிவாகக் கேட்டது. 'உடனே சம்மதம்னு சொல்லி மணியை அவங்க குறைவா எடை போட்டிரக் கூடாதில்ல.. ஒரு வாரம் பொறுத்து சொல்லுவோம். நீ பேசாம இரு.. முந்திரிக் கொட்டையாட்டம் போய் உளறி வைக்காதே’ என்றான் கொஞ்சம் இறுக்கமாகவே. ஒரு வாரம் என்பது அப்படி இப்படியென்று பத்துப் பதினைந்து நாள் ஆகிவிட்டது. அதற்குள்தான் இந்தத் தகவல். ’நம்ம மணிவேலுக்குப் பார்த்தோமே.. அந்தப் பொண்ணு மருந்து குடிச்சிருச்சாம். ஆசுபத்திரிக்குக் கொண்டு போயிருக்காங்க’ என்ன நடந்தது.. ஏன் மருந்து குடித்தாள்.. என்னைப் பிடிக்கவில்லையா.. காதல் தோல்வியா.. வீட்டார் வற்புறுத்தி எனக்குப் பேசியதால் இந்த முடிவா.. தறிகெட்டு ஓடிய மனசைக் கடிவாளம் போட முடியாமல் மணிவேல் தடுமாறித்தான் போனான். போன் மணி ஒலித்தது. அவனையும் அறியாமல் கடிகாரத்தைப் பார்த்தான். ஒரு மணி நேரம் ஓடிவிட்டது. அவசரமாய் எடுக்க சண்முகத்தின் குரல். ’ஒண்ணுமில்ல.. புழைச்சிருச்சு’ ஹப்பாடா.. ’அண்ணே.. வந்து..’ ’அண்ணியும் நானுந்தான் வந்தோம்.. அவ இங்கே தங்கிட்டு வரேன்னா.. நான் அரை மணில கடைக்கு வந்திருவேன்.. வச்சிரட்டுமா’ பதிலை எதிர்பாராமல் வைத்துவிட்டான். மணிவேல் ‘அண்ணே.. அண்ணே’ என்று கத்தியதுதான் மிச்சம். இனி அவன் வரும் வரை நிலை கொள்ளாது. பதில் தெரியாத கேள்விகள் தலையைக் குடைந்து கொண்டிருக்கும். இன்னும் முப்பது நிமிஷம்.. இருபத்தொம்பது.. இருபத்தெட்டு.. ஏன் இத்தனை மெதுவாக நகர்கிறது.. ’எங்கே பெரியவரைக் காணோம்..’ வாடிக்கையாளர்தான். ஒரு வகையில் உறவுகூட. ’வெளியே போனாரு.. வந்திருவாரு’ ’நம்ம பொண்ணு கல்யாணம் ஞாபகம் இருக்கில்ல.. சாமான் முழுக்க நம்ம கடையிலதான்.. எப்ப லிஸ்ட் கொடுக்கட்டும்’ ’ஒன் அவர் டைம் கொடுங்க.. கொண்டு வந்து இறக்கிர மாட்டோம்..’ என்று வழக்கமாய் உற்சாகமாய் பதில் வரும். இன்று மெதுவாகத் தலையாட்டினான். வந்தவருக்கே அவன் சுணக்கம் புரிந்து போனது. ’என்ன தம்பி.. மேலுக்கு சுகமில்லியா’ சுதாரித்துக் கொண்டு தலையாட்டினான். 'நல்லாத்தான் இருக்கேன்’ பெரிதாய் ஒரு சிரிப்பும் சிரித்து வைத்தான். ’அதானே பார்த்தேன்.. வெக்கை அதிகமா.. அதான் தம்பி முகம் வாடியிருக்கு’ என்று அவராகவே ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு போய்விட்டார். சண்முகத்தின் பைக் சத்தம் கேட்டது. அவசரப்படக்கூடாது. அவனாகவே சொல்லட்டும். மணிவேல் ஏதோ ஒரு வேலையாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் பார்வை சண்முகத்தைத்தான் தேடியது. உள்ளே வந்து கல்லாவின் அருகில் உட்கார்ந்து பெரிதாய் ஒரு மூச்சு விட்டான். சொம்புத் தண்ணீர் கடகடவென இறங்கியது. தொண்டைக்குழி மேலும் கீழும் ஏறி இறங்கியதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மணிவேலுக்கு பொறுமை இறங்கிக் கொண்டிருந்தது. ‘அண்ணே நல்லா இருக்கில்ல’ ’ம்ம்’ ‘எ.. என்னவாம்’ ’மருந்து குடிச்சிருச்சு’ ‘தெரியாமலா’ ’தெரிஞ்சுதான்’ ‘ஏனாம்’ மணிவேலின் குரல் அடைத்துக் கொண்டது. ’நாம பதில் சொல்ல லேட்டாயிருச்சுல்ல.. ஒரு வேளை புடிக்கலியோன்னு தப்பா யூகம் பண்ணிகிட்டு’ சண்முகத்திற்கு இப்போது குரல் பிசிறியது. ஒருவேளை தன்னால்தானோ.. ‘அப்புறம்’ ’நல்ல பொண்ணும்மா.. நாள் நட்சத்திரம் பார்க்கவேணாமா.. டப்புன்னு எதையாச்சும் சொல்லிர முடியுமான்னு சமாதானம் சொல்லி.. இப்படி பொசுக்குன்னு மருந்து குடிச்சா.. எந்த நம்பிக்கையில உனக்கு சம்மதம் சொல்றது.. எங்க வீட்டுக்கு வந்தப்புறம் இப்படித்தான் இருப்பியான்னேன்.. பாதியை அதுவே துப்பிருச்சாம்.. முழுசாக் குடிக்கல.. ஒரு வாய் கூட உள்ளே போவல.. அதுக்குள்ர இவங்க பதறிப் போய் ஆசுபத்திரிக்கு கூட்டிகிட்டு போயிட்டாங்க.. உங்க அண்ணி கேட்டா.. ருசி பார்த்து குடிக்கிற மனுஷியா.. உடனே துப்பிட்டியேன்னு.. பொண்ணுக்கு எதுவும் ஆபத்தில்லேன்னு தெரிஞ்சப்புறம்தான் இந்த பேச்சு எல்லாம்’ மணிவேல் மௌனமாக இருந்தான். நிதானம் வந்திருந்தது. தன்மீது பெண்ணுக்கு மனக்குறை இல்லை. ’ரெண்டு கிலோ ரவை.. ஒரு கிலோ மைதா.. மூணு கிலோ சக்கரை’ கடைக்கு வந்தவர் கையில் வைத்திருந்த லிஸ்ட்டை படிக்க ஆரம்பிக்க மணிவேல் கைப்பேடில் குறிக்க ஆரம்பித்தான். ’இங்கே கொடுரா.. நான் பார்த்துக்கறேன்’ என்றான் சண்முகம் கையை நீட்டி. ’நான் சும்மாதானே இருக்கேன்’ ‘இந்தா சாவி.. போய் பார்த்திட்டு வா.. உன் வாயால சம்மதம்னு சொல்லிட்டு வந்திரு.. யாவாரம் ஆவுதுன்னாலும் சும்மா சும்மா பூச்சி மருந்தெல்லாம் கடையில வாங்கி வைக்க முடியாதில்ல..’ கை நீட்டி சாவியை வாங்கிக் கொண்ட மணிவேலுக்குத் தோன்றியது. ’அண்ணனின் சிரிப்பு கூட அழகுதான்’ (கல்கி பிரசுரம்) Face book
 10. படையப்பா பற்றிய முதன் முதல் செய்தி 98ஆம் வருடம் வந்தது. வழக்கம்போல் ஒரு பிரஸ் மீட் வைத்து, படத்தின் இயக்குநர், நடிகர், நடிகைகள், இசை அமைப்பாளர் போன்றோரை சம்பிரதாயமாக அறிவித்து படப்பிடிப்புக்கு கர்நாடகா நோக்கி பயணப்பட்டனர் படக்குழுவினர். அவ்வளவுதான் தமிழகமே தீப்பிடித்துக்கொண்டது. அந்த பிரஸ்மீட்டில், ரஜினி படையப்பா என்றால் படைகளுக்கு அப்பன், கமாண்டர்-இன் – சீஃப் போல என்று சொல்லிவிட்டு, இந்த படத்தின் மூலம் வரும் லாபத்தில் கட்டமைப்பு இல்லாத பள்ளிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று சொல்லிவிட்டு,. ”படிங்கப்பா இருக்கிறான் படையப்பா” என்று ஒரு பஞ்ச்சையும் சொன்னார். ஃபர்ஸ்ட் லுக்காக வெளியிடப்பட்ட ஸ்டில்லில் ரஜினி, ஜீன்ஸ் அணிந்து, சுருட்டு குடிப்பது போல இருக்கவும், குமுதம் அரசு பதிலில், அவர் எதையோ (கோட்டை) பிடிப்பார் என்று மக்கள் எதிர்பார்த்திருக்க, அவர் எதைப் பிடிக்கிறார் பாருங்கள் என்றார்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் அதைப்பற்றி எதுவும் கண்டுகொள்ளவில்லை. எப்போது படம் வரும் என்ற ஒரு எதிர்பார்ப்பு மட்டும் தான் அவர்களுக்கு.. 96ல் வெளியான முத்து மெகா ஹிட். ஆனால் அடுத்த படமான அருணாசலம் ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. நாங்கள் அப்போது அருப்புக்கோட்டையில் இருந்தோம். எங்கள் தெரு ஒரு ரஜினி கோட்டை. அதிலும் என் உயிர் நண்பன் ரமேஷ் பாபு ரஜினியை தெய்வமாகவே கொண்டாடுபவன். டிடியில் அண்ணாமலை போட்டபோது, சுத்த பத்தமாக குளித்து பட்டையடித்து, விளம்பரத்துக்கு கூட அசையாமல் அவன் படம் பார்த்ததைப் பார்த்து திகைத்துப் போயிருக்கிறேன். அதற்குமுன் குறைந்தது 50 முறையாவது அந்தப் படத்தை அவன் பார்த்திருப்பான். அவனே ஆச்சரியப்படும் ரஜினி ரசிகன் ஒருவனும் அருப்புக்கோட்டையில் இருந்தான். முத்துக்குமார். அருணாச்சலம் படத்தை அந்தப் படம் ஓடிய 45 நாட்களும் குறைந்தது ஒரு ஷோவாவது பார்த்தவன். படத்தின் ஆரம்பத்தில் வரும் பொன்னம்பலத்தின் பஞ்சு டயாலாக்கான “நாலு கொலை, ஏழு ……, பண்ணின அம்பலம், பொன்னம்பலம்” தைக்கூட மனப்பாடம் செய்தவன். அவனுக்கும் கூட அருணாசலம் பற்றிய அதிருப்தி இருந்தது. எனவே படையப்பாவை, பத்தாண்டு ஜெயிலில் இருந்தவன் ரிலீஸை எதிர்பார்ப்பதைவிட அதிகம் எதிர்பார்த்தான். படையப்பா பற்றி எந்த செய்தி எந்தப்பத்திரிக்கையில் வந்தாலும், அதை வாங்கிவிடுவான். பாடல்கள் வெளியான தினத்தன்று , தெருவையே அலறவிட்டார்கள் இருவரும் சேர்ந்து. இந்நிலையில் என் தந்தையின் பணி மாறுதல் காரணமாக நாங்கள் கோவைக்கு குடிபெயர்ந்தோம். எங்கள் குடும்பம் அந்த நேரத்தில் சில பிரச்சினைகளால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சோர்வுற்று இருந்தது. செல்போன் அவ்வளவாக புழக்கத்தில் இல்லாத காலம். திடீரென்று ஒருநாள் ரமேஷும், முத்துக்குமாரும் என்னைப் பார்க்க வந்தார்கள். ரெண்டு மாசமாச்சு, பார்த்து அதான் வந்தோம் என்றார்கள். உண்மையிலேயே நான் அன்றிருந்த நிலைக்கு கடவுள்களே நேரில் வந்தது போல் இருந்தது. என் அம்மாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டி போக வர என்று அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். ஆறுதலும் சொன்னார்கள். மூன்று நாள் கழித்து அவர்கள் கிளம்புகிறோம், நாளன்னிக்கு படையப்பா ரிலீஸ் என்று சொன்னார்கள், என் தந்தை, இன்னும் நாலு நாள் இருந்திட்டுப் போங்கப்பா. இங்கயே படையப்பா பாருங்களேன் என்றார். மதுரை, திண்டுக்கல், விருதுநகரில் எல்லாம் தலைவர் படம் ரிலீஸைப் பார்த்திருக்கோம். கோயம்புத்தூர்ல பார்த்தது இல்லை, பார்த்துடுவோம் என அவர்களும் உற்சாகமானார்கள். கோவையில் ராகம் தியேட்டரிலும், நடிகை அம்பிகாவுக்கு ஒரு காலத்தில் சொந்தமாயிருந்த அம்பாலிகா காம்ப்ளக்ஸிலும் படம் வெளியானது. ஒரு பட்டாலியனே வந்து கியூவை மேனேஜ் செய்ய வேண்டியிருந்தது. உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு படம் முதலில் பிடிக்கவில்லை. என்னடா இது பயங்கர பிற்போக்குத்தனமா இருக்கே என நினைத்தேன். ஆனால் 50 நாட்கள் ஆகியும் ராகம் தியேட்டரில் சனி, ஞாயிறுக்கு டிக்கட் வாங்குவது பெரிய விஷயமாக இருந்தது. படையப்பா படத்தின் வெற்றி என்பது சாதாரணமானது அல்ல என இன்றுவரைக்கும் அந்தப் படம் காட்டிக்கொண்டேயிருக்கிறது. சிவாஜி படம் ஓடி முடிந்த போது, கே எஸ் ரவிகுமாரிடம் அதைப் பற்றிக் கேட்ட போது அவர் சொன்னார், “உணமையில் படையப்பா படத்தை சிவாஜியை விட அதிகமானோர் பார்த்துள்ளார்கள். இது டெய்லி கலெக்‌ஷன் ரிப்போர்ட் பார்த்தால் தெரியும் என்றார்”. மறுக்க முடியாத உண்மை. ஏனென்றால் கோவை புறநகரில் உள்ள தியேட்டர் ஒன்றில் நூறு நாட்களுக்கு பின்னர் படையப்பாவை திரையிட்டார்கள். இரண்டு வாரம் ஹவுஸ்புல். மூன்றாம் வார முதல் நாள் வெள்ளிக்கிழமை மாலைக் காட்சிக்கு டிக்கெட் கிடைக்காமல் நூறு பேருக்கு மேல் திரும்பினார்கள். என்னய்யா இந்தப் படம் இந்த ஓட்டம் ஓடுது என்று தியேட்டரைச் சுற்றியுள்ள கடைக்காரர்கள் பேசிக்கொண்டதைப் பார்த்து, ஏரியா ரஜினி மன்ற நிர்வாகி, ஒரு மூட்டை மிளகாயை வாங்கி வந்து, நெருப்பில் போட்டு படத்திற்கு திருஷ்டி கழித்தார். ஏரியாவே கமறி விட்டது. அகில உலகிலேயே ஒரு திரைப்படத்திற்கு திருஷ்டி கழிக்கப்பட்ட நிகழ்வு இதுவாகத்தான் இருக்கும். அப்போது எங்கள் தெருவில் இருந்த சிலர், திருப்பதிக்கு போனார்கள். திரும்பிவந்த அவர்கள், இங்கதான் கூட்டம் அம்முதுன்னா, அங்க நரசிம்மான்னு டப் பண்ணியிருக்கான், அத விட கூட்டம் என்று சிலாகித்தார்கள். படையப்பா கூல் ட்ரிங்ஸ், படையப்பா சோப்பு என ஏராளமான லோக்கல் மார்க்கெட்டுகு தயாராகும் பொருட்கள், எல்லா காலேஜ் பங்சன்களிலும் மைம் பண்ணுபவர்கள், மாணவன் திருந்தி படிக்க ஆரம்பித்துவிட்டான் என்பதைக் குறிக்க போடும் “வெற்றிக் கொடு கட்டு” பாடல் என சொல்லிக் கொண்டே போகலாம். சன் குழுமத்திற்கு பெரும் செல்வத்தை கொடுத்த படையப்பா, அந்தப் படத்தோடு சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் நல்லதையே கொடுத்தது. இப்போது யோசித்துப் பார்த்தால் இந்தப் படம் தமிழகம் முழுவதுமே ஒரு நல்ல வைப்ரேசனை ஏற்படுத்தியது என்றே சொல்லத் தோணுகிறது. படம் வெளியாகி 60 நாட்கள் சென்றிருக்கலாம். என் அம்மாவின் அக்கா, அவரை பார்ப்பதற்காக வந்திருந்தார். இருவரும் தற்போதைய தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர்கள். அந்தக் காலத்தில் பெரியகுளத்தில் இருந்த ரஹீம் தியேட்டருக்கு வண்டி கட்டி சென்று படம் பார்த்தவர்கள், எம்ஜியார் மற்றும் சிவாஜியின் ரசிகைகள். அடுத்த காலகட்ட நடிகர்களில் ரஜினியை மட்டுமே அவர்களுக்குப் பிடிக்கும். அந்த வாரம் அவர்கள் இருவரையும் மாலைக்காட்சி படையப்பா படத்திற்கு அழைத்துச் சென்றிருந்தேன். லயித்து படம் பார்த்தார்கள். படம் முடிந்து தியேட்டர் அருகேயிருந்த மெஸ் ஒன்றிற்கு சாப்பிடப் போனோம். என் அம்மா “மொதோ பாட்டில பொண்ணு மாப்பிள்ளையும் கூடச் சேர்ந்து ஆடுறதுதான் பிடிக்கல. ஆனா படம் அப்பப்பா” என்று ஆரம்பித்தார். இருவரும் படத்தைப் பற்றி சிலாகிக்க ஆரம்பித்தனர். கேட்டுக் கொண்டிருந்த சர்வர், கெட்டிச் சட்னி, பொடி என சிறப்பாக கவனிக்கத் தொடங்கினார். எதிரில் ஒரு ஆட்டோக்காரர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். எங்களுடனே வெளிவந்த அவரிடம், டாடாபேட் போகணும் என்றேன். 65 ரூபா வாங்குவேன், நீங்க 40 கொடுங்க, என்று சொன்னார். வீட்டிற்கு வந்தும் அவர்கள் சிலாகிப்பு நிற்கவில்லை. என் பெரியம்மா சில வருடங்கள் முன்புதான் கணவனை இழந்திருந்தார். சொத்து பிரச்சினை ஒன்றில் ஏமாற்றப்பட்டதாக/ஏமாந்ததாக நம்பும் குடும்பம். நம்ம சொத்து நம்மளைவிட்டுப் போகாது, பிள்ளைக கொண்டுவந்து சேர்த்திடும் என்று படையப்பாவை உதாரணமாக காட்டி பேசினார். நீ கவலைப் படாதடி, உன் பிள்ள இருக்கான், ரஜினி மாதிரி, அவன் பார்த்துக்கிடுவான் என்று தேத்தினார். அடடா நாம ரஜினி ரசிகனா இருந்திருக்கலாமே என என்னை இரண்டாவது முறையாக எண்ண வைத்தது என் அம்மாவின் முகத்தில் தோன்றிய நிம்மதி. face book
 11. கடந்த வாரம், பனியால் மூடப்பட்ட ஒரு நாள், ரொறொன்ரோ மருத்துவமனை ஒன்றில் ஹெலன் என்ற பெண்மணியை சந்தித்தேன். பல வருடங்களுக்கு முன்னர் ஒரு சுப்பர்மாக்கெட்டுக்கு வெளியே சந்தித்து இவரைப் பற்றி எழுதியிருக்கிறேன். இவர் முகத்தை மறந்துவிட்டேன். ஆனால் அவர் என்னை அடையாளம் கண்டுவிட்டார். முதுகு எலும்பு எக்ஸ்ரே எடுப்பதற்காக வந்திருந்தார். இவருடைய கணவர் கடந்த 5 வருடங்களாக படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். தீராத முதுகு வலியால் ஹெலன் 24 மணிநேரமும் வேதனை அனுபவிக்கிறார். அதே துப்புரவுத் தொழிலைத்தான் இப்பவும் செய்கிறார். எந்த நேரமும் வேலை போகக்கூடும். ஆனால் பழைய சிரிப்பு இன்னமும் போகவில்லை. இவரிடம் நிறைய கற்க வேண்டியிருக்கிறது. *********"**"**""""************************* இதோ அந்தக் கதை நான் அமர்ந்திருந்தேன். சுப்பர்மார்க்கெட்டின் வெளியே காணப்பட்ட பல இருக்கைகளில் ஒன்றில். அந்தப் பெண் வந்து பொத்தென்று பக்கத்து ஆசனத்தில் அமர்ந்தார். சீருடை அணிந்திருந்தார். கையிலே பேப்பர் குவளையில் கோப்பி. தான் செய்த வேலையை பாதியில் நிறுத்திவிட்டு வந்திருந்தார். துப்புரவுப் பணிப்பெண் என்பது பார்த்தவுடன் தெரிந்தது. வயது 50 க்கு மேலே இருக்கும். கறுப்பு முடி, நீலக் கண்கள். வெண்மையான சருமம். கிழக்கு ஐரோப்பிய பெண்ணாக இருக்கலாம். ஒருவேளை ரஸ்யப் பெண்ணாகவும் இருக்கலாம். கோப்பியை சத்தம் எழுப்பாமல் குடித்தபடி யோசனையை எங்கோ தூரத்தில் செலுத்திவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தார். அந்தக் கண்களில் வெளிப்பட்ட துயரம் போல ஒன்றை நான் முன்னர் கண்டதில்லை. அதுவே அவருடன் என்னைப் பேசத் தூண்டியது. ’இன்றைய வேலையை முடித்துவிட்டீர்களா?’ என்று கேட்டேன். ’இல்லை, இன்னும் பாதி வேலை இருக்கிறது. ஓய்வெடுக்கிறேன்’ என்றார். அவருடைய அலங்காரம், பேச்சு, நடக்கும் தோரணை, ஆங்கில உச்சரிப்பு இவற்றை வைத்து பார்த்தபோது அவர் நீண்ட காலமாக ரொறொன்ரோவில் வசிக்கிறார் என்பதை உணர முடிந்தது. துப்புரவுப் பணியில் அநேகமாக புதிதாக குடிவந்தவர்கள் அல்லது அகதிக் கோரிக்கையாளர்கள்தான் வேலை செய்வது வழக்கம். நீண்டகாலம் வசிப்பவர்கள் சீக்கிரத்தில் வேறு தொழிலுக்கு மாறிவிடுவார்கள். ஆகவே இந்தப் பெண் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. ‘நீங்கள் கனடாவுக்கு எப்பொழுது குடிபெயர்ந்தீர்கள்?’ என்று கேட்டேன். அவர் கிரீஸ் நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கு 13 வயது நடந்தபோது தனியாக கனடாவுக்கு வந்தார். அவருடைய தகப்பன் அவருக்கு ஹெலென் என்று பெயர் சூட்டினார். ஹோமருடைய இதிகாசத்தில் வரும் பேரழகி ஹெலென். பிறந்தபோது அவர் அத்தனை அழகாக இருந்தாராம். புராணத்தில் வரும் ஹெலெனை பாரிஸ் என்ற வீரன் கடல் கடந்து அபகரித்துப் போனான். ஹெலென் என்ற பெயரைக்கொண்ட இந்தப் பெண்ணும் ஏறக்குறைய அம்மாதிரித்தான் கடத்தப்பட்டார். அவரே தன் மீதிக் கதையை கூறினார். ’எங்கள் குடும்பத்தில் நாங்கள் ஏழு பிள்ளைகள். நான் ஆறாவது. என் அப்பாவுக்கு ஒரு கால் கிடையாது. அவர் எப்பொழுதும் குதிரையில் ஆரோகணித்திருப்பார். படுக்கும் நேரம் போக மீதி நேரம் எல்லாம் அப்பாவை குதிரையின் மேல்தான் காணலாம். அவருடைய வேலை பிரபுக்களை வேட்டைக்கு அழைத்துப் போவது. அவரும் நன்றாக வேட்டையாடக் கூடியவர். குறிதவறாமல் சுடுவார். எங்கே எந்த நேரம் எந்த எடத்தில் என்ன பறவைகள் கிடைக்கும், என்ன மிருகங்கள் அகப்படும் என அவர் ஒருவருக்கே தெரியும். ஆகவே அப்பாவை தேடி பிரபுக்கள் வருவார்கள். அதிக வேட்டை கிடைத்தால் அப்பாவுக்கு அதிக பணம் கிடைக்கும். நான் பிறந்த பிறகு பிரபுக்கள் வேட்டையில் பெரிதாக முன்னர்போல ஆர்வம் காட்டவில்லை. படிப்படியாக அப்பாவின் வருமானம் குறைந்தது. அப்பாவுக்கு வேறு வேலை தெரியாது. அவராகவே ஆள் சேர்த்துக்கொண்டு வேட்டைக்கு போவார். அவரை எங்கள் கிராமத்தில் ‘ஐந்து கால் மனிதன்’ என்றே அழைப்பார்கள். எனக்கு 11, 12 வயது நடந்தபோது நிலைமை மோசமானது. வீட்டிலே நாங்கள் அடிக்கடி பட்டினி கிடக்க நேரிட்டது. அப்பா தொடர்ந்து குடும்பத்தை பராமரிப்பதற்கு பெரும் சிரமப் பட்டார். நான் படிப்பில் கெட்டிக்காரியாக இருந்தேன். தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற ஆசை எனக்கு. கிரேக்க காவியங்களும் என்னைக் கவர்ந்திருந்தன. பண்டைய கிரேக்க மொழியை படிக்கவேண்டும் என்ற ஆர்வமும் நிறையவிருந்தது. நவீன கிரேக்கம் வேறு, பண்டைய கிரேக்கம் வேறு. எழுத்துக்கள் ஒன்றாக இருந்தாலும் உச்சரிப்பு வேறு. பொருளும் வேறு. பண்டைய இலக்கியங்களை என்னால் வாசிக்க முடியும் ஆனால் பொருள் விளங்காது. என் அம்மாவின் தங்கை கனடாவில் வசதியாக வாழ்ந்தார். அவர் என்னை அழைத்தார். கனடாவில் என்ன வேண்டுமென்றாலும் படிக்கலாம் என்று ஆசை காட்டினார். ஏனோ நான் மகிழ்ச்சியில் குதித்தேன். அந்த வறுமையிலும் என் அம்மாவுக்கு நான் புறப்படுவதில் சம்மதம் இல்லை. ஆனால் என் அப்பாவுக்கு பெருமை பிடிபடவில்லை. நான் கனடாவுக்கு படிக்கப் போகிறேன் என்பதை நாலு தடவை ஊர் முழுக்க குதிரையில் சுற்றியபடி அறிவித்தார். 1969 ம் ஆண்டு டிசம்பர் மாதக் குளிரில் நான் மொன்ரியல் வந்து சேர்ந்தேன். என்னுடைய சின்னம்மாவுக்கு இரண்டு பிள்ளைகள். நான் வந்த அன்றே என்னை அவர்கள் அறையில் தூங்க அனுமதித்தார். அவர்கள் கட்டிலில் படுத்தார்கள். நான் தரையில் படுத்தேன். அடுத்த நாள் காலையே எனக்கு உண்மை புரிந்துவிட்டது. நான் வேலைக்காரியாகத்தான் வந்திருந்தேன். கிரேக்க புராணத்தில் ஒரு கதையுண்டு. திரோய் அரசன் தன் நகரத்தைச் சுற்றி பிரம்மாண்டமான சுவர் எழுப்ப திட்டம் போட்டான். அதற்காக அதிவீரன் அப்பொல்லோவையும் கடல் கடவுளான போஸிடோனையும் நியமித்தான். சுவரைக் கட்டி முடித்தபிறகு அவர்களுக்கு தகுந்த சன்மானம் தருவதாக வாக்குக் கொடுத்தான். ஆனால் அவர்கள் சுவரைக் கட்டி முடித்த பிறகு அவர்கள் சம்பளத்தை கொடுக்காமல் ஏமாற்றினான். கிரேக்க புராணம் சொல்லும் ஏமாற்றுக்காரர்களில் இவனே அதிகம் சிறப்புவாய்ந்த ஏமாற்றுக்காரன். என் சின்னம்மாவும் அப்படித்தான். சிறு பெண்ணான என்னைத் திட்டமிட்டு ஏமாற்றினார். காலையில் அவர் வேலைக்கு போய்விடுவார். நான் இரண்டு பிள்ளைகளையும் பார்ப்பேன். சமைப்பேன். துவைப்பேன். தரையை கூட்டி சுத்தம் செய்வேன். பள்ளிக்கூடம் போகவேண்டும் என்று நான் கேட்டபோது பனிக்காலம் முடியட்டும் என்று சொன்னர். பனிக்காலம் முடிந்தபோது செப்டம்பரில்தான் பள்ளியில் புது ஆட்களைச் சேர்ப்பார்கள் என்றார். இப்படியே புதுப்புது விதமான சாட்டுகளை உருவாக்கினார். என்னைக் கடைசி வரை அவர் பள்ளிக்கு அனுப்பவில்லை. நான் வீட்டுக்கு எழுதும் கடிதங்களை படித்து கிழித்துவிட்டு திரும்பவும் எழுதச் சொல்வார். அவரே என் கடிதத்தை உறையிலிட்டு தபால்தலை ஒட்டி அனுப்புவார். நான் கண்டது காலை, மதியம், மாலை, இரவு, அவ்வளவுதான். என்னை வெளியே கூட்டிப் போனது கிடையாது. எனக்கு பிரெஞ்சு மொழியும் தெரியாது. நான் ஓர் அடிமை வாழ்க்கை வாழ்ந்தேன். ஆனால் என் அப்பா நான் பெரிய படிப்பு படிக்கிறேன் என்ற ஆனந்தத்தில் இருந்தார். என்னுடைய சின்னம்மா கடிதத்தில் என்ன எழுதுவாரோ தெரியாது, ஆனால் அப்பா எனக்கு எழுதும் கடிதங்களில் ‘நல்லாகப் படி. அடுத்த சோதனையிலும் முதல் ஆளாக நீ வரவேண்டும்’ என்று எழுதியிருப்பார். என்னுடைய பல பிறந்த தினங்கள் வந்து போயின. அது என் ஒருத்திக்கு மட்டுமே தெரியும். யாரும் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து பாடவில்லை. ஒருநாள் இரவு எல்லோரும் உறங்கிய பின்னர் நான் கண்ணாடிக்கு முன் நின்று என்னைப் பார்த்தேன். நான் இளம் குமரியாக நின்றது எனக்கே ஆச்சரியமாக பட்டது. என்னையே பார்த்துக்கொண்டு நெடுநேரம் நின்றேன். அன்று மாலை சின்னம்மா அடித்ததில் கைவிரல்கள் பதிந்த அடையாளம் கண்ணாடியில் என் கன்னத்தின் பிழையான பக்கம் தெரிந்தது. அந்த வீட்டுத் தரைவிரிப்பை பாதி சுருட்டியபடி விட்டிருந்தேன். அதை மறுபடியும் விரிக்க மறந்துவிட்டேன். அதற்கான தண்டனைதான் என் கன்னத்தில் பதிந்து கிடந்தது. என் நிலையை எண்ணியபோது எனக்கே மிகவும் பரிதாபமாகப் பட்டது. சின்னம்மாவிடம் விலை மதிக்க முடியாத பொருள் ஒன்று இருந்தது. படிகக்கண்ணாடியால் செய்த ஏழு காம்புகள் கொண்ட மெழுகுதிரி தண்டு. அதை நான் துடைத்துக்கொண்டிருந்த போது அது கை தவறி கீழே விழுந்து உடைந்துவிட்டது. என்னுடைய சின்னம்மா எங்கிருந்தோ சத்தம் கேட்டு ’உடைத்துவிட்டாயா?’ என்று கத்திக்கொண்டு கையை ஓங்கியபடி ஓடிவந்தார். அன்று எனக்கு என்ன நடந்தது என்று தெரியாது. நான் 18 வயது யுவதி. கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு அவரை நேருக்கு பார்த்து ‘அதற்கு என்ன இப்போ?’ என்று கேட்டேன். அவர் அப்படியே நின்றார். முகத்தில் முதல் தடவையாக ஒருவித அச்சத்தை கண்டேன். புகைப்படம் எடுக்க மெதுவாக பின்னுக்கு நகர்வது போல நகர்ந்தார். தரையில் இருந்து விளையாடிய கைக்குழந்தையை சட்டென்று தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு அகன்றார். அன்றைக்கு உடைந்த கண்ணாடிச் சில்லுகளை நான் கூட்டி அள்ளவில்லை. அப்படியே போய் படுத்துவிட்டேன். என் வாழ்நாளில் அதுவே நீண்ட இரவு. அடுத்த நாள் அதிகாலை பஸ் கட்டணத்துக்கு வேண்டிய பணத்தை திருடிக்கொண்டு ரொறொன்ரோவுக்கு பஸ் பிடித்தேன்.’ ரொறொன்ரோவில் சந்தோஷமாக இருந்தீர்களா? ’ரொறொன்ரோ வந்து இறங்கிய அன்றுதான் வசந்தம் தொடங்கியிருந்தது. வானம் தொடக்கூடிய தூரத்தில் தெரிந்தது. மரங்கள் துளிர்த்து புது ஆரம்பத்தை நினைவூட்டின. மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. ஒரு தொழிற்சாலையில் உடைகளில் பொத்தான் தைக்கும் வேலை கிடைத்தது. மிகவும் சுதந்திரமாக இருந்தேன். அங்கே வேலை செய்த ஒருவரை மண முடித்தேன். ஒரு மகன் பிறந்தான். எல்லாம் நல்லாகவே போனது. திடீரென்று ஒரு நாள் என் கணவர் உணவகம் ஒன்று திறக்கலாம் என்று யோசனை சொன்னார். சேமிப்பில் வைத்திருந்த அவ்வளவு பணத்தையும் போட்டு கிரேக்க உணவம் ஒன்றை தொடங்கினோம். சில வருடங்களுக்கு பின்னர் அது லாபத்தில் ஓடியது. ஆனால் என் கணவர் இறந்தபோது நான் அதை நட்டத்திற்கு விற்க நேர்ந்தது. ’நீங்கள் உங்கள் சின்னம்மாவை பிறகு சந்திக்கவே இல்லையா?’ நான் மொன்ரியலில் போய் இறங்கிய அன்று சின்னம்மா என் நாடியை பிடித்து இங்கும் அங்கும் திருப்பி ஒவ்வொரு கோணத்திலும் என்னை உற்றுப் பார்த்தார். நான் நினைத்தேன் சின்னம்மா என்மீது அன்பு காட்டுகிறார் என்று. அது அப்படியில்லை. அவர் என் விலையை தீர்மானித்தார் என இப்போது தோன்றுகிறது. என்னிடமிருந்து எவ்வளவு வேலை வாங்கலாம் என்றுதான் அவர் கவலைப் பட்டார். எத்தனை கொடூரமாக என்னை அவர் நடத்தியிருந்தாலும் அவர் சொன்ன ஒரு வாசகத்தை மாத்திரம் இன்றைக்கும் என்னால் மறக்க முடியாது. ’நீ எதற்காக படிக்கவேண்டும், படிக்கவேண்டும் என்று அலைகிறாய். துடைப்பக்கட்டையோடு நிற்கும்போது நீ நல்ல அழகாய்த்தானே தெரிகிறாய்.’ இதுதான் சின்னம்மா. இறக்கும் வரைக்கும் என் அப்பாவுக்கு நான் ஏமாற்றப் பட்டது தெரியாது. ரொறொன்ரோ வந்த பின்னர் நான் எழுதித்தான் அம்மாவுக்கு தெரியும். அவர் சின்னம்மாவை மன்னிக்கவே இல்லை. நான் மன்னித்துவிட்டேன், ஆனால் அந்தக் காயம் இன்னும் ஆறாமலே கிடக்கிறது. எங்கள் நாட்டில் ஒரு பழமொழி உண்டு. சப்பாத்து விற்பனைக்காரன் முழங்காலில் உட்கார்ந்து ஆகவேண்டும். வேலைக்காரியாக என்னை சின்னம்மா ஆக்கிய பின்னர் நான் அவரிட்ட கட்டளையை நிறைவேற்றாமல் இருக்க முடியுமா? சின்னம்மா தன்னைப் பெரிய அழகியாக நினைத்திருந்தார். அப்படியல்ல, அவர் தண்ணீரில் ஊறவைத்ததுபோல ஊதிப்போய் இருப்பார். ஆனால் திறமையான எசமானி. அவர் கண்கள் பூச்சியின் கண்கள் போல சுழன்றபடி இருக்கும். என்னுடைய வேலைகளில் குறைகண்டபடி இருப்பது அவர் பொழுதுபோக்கு. தவறுசெய்தால் வசவு கிடைக்கும். என்னிடம் சாதாரணமாக கிரேக்க மொழியில் பேசுவார் ஆனால் திட்டும்போது ஆங்கிலத்துக்கு மாறிவிடுவார். நான் ஆங்கிலம் கற்றுக்கொண்டது அப்படித்தான். உங்களுக்கு மகன் இருக்கிறான் அல்லவா? என்றேன். ’நான் படிக்க முடியாத பெரிய படிப்பை என் மகன் படிப்பான் என நினைத்தேன். ஆனால் அவன் பள்ளிக்கூட படிப்பைக்கூட முடிக்கவில்லை. பத்து நாள் பழக்கமான ஒரு பெண்ணை எனக்கு தெரியாமல் மணமுடித்தான். அந்தப் பெண் சிரிக்கும்போது சிகரெட் புகை வெளியே வரும். அவளைக் கூட்டிக்கொண்டு அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்துக்கு போய்விட்டான். ஏன் அங்கே போனான் என்ற காரணத்தை யாராவது கேட்டால் சிரிப்பார்கள். அங்கேதான் வாத்து சுடலாம் என்கிறான். ஏர்னெஸ்ட் ஹெமிங்வே என்ற எழுத்தாளர் வாத்து சுட்ட மாநிலமாம். நான் ஒரு வாத்திலும் கீழாகிவிட்டேன். தாயை விட்டு ஒரு மகன் பிரிவதற்கு இது நல்ல காரணமா? என்னோடு ஒருவித தொடர்பும் அவனுக்கு கிடையாது. எனக்கு ஒருவருமே இல்லை, நான் தனியாகத்தான் வாழ்கிறேன். அடிக்கடி என் அப்பாவை நினைத்துக்கொள்வேன். அவர் இறக்கும்வரை உழைப்பதை நிறுத்தியதே இல்லை. ஊரிலே ‘ஐந்து கால் மனிதன்’ என்று அவரை பழித்தபோது அவர் அதை பொருட்படுத்தவில்லை. சோர்ந்து போனதும் கிடையாது. ஒருநாள் குதிரையில் அமர்ந்தபடியே இறந்துபோனார். ஒரு கால் மட்டுமே இருந்தாலும் அவர் அயராமல் உழைத்தார். ஆனல் எனக்கு இரண்டு கால்கள் இருக்கின்றனவே’ என்று சொல்லி சிரித்தார். ஹெலென் என்று அருமையாக பெயர் சூட்டப்பட்ட கிரேக்கப் பெண் சட்டென்று எழுந்து நின்று தன் ஆடையை தட்டி சரி செய்தார். ஒரு காலத்தில் அவர் பேரழகியாய் இருந்திருப்பார் என்றுதான் தோன்றியது. கோப்பிக் குவளையை, சற்றுமுன் அவர் சுத்தமாக்கிய குப்பைத் தொட்டியில் எறிந்தார். துடைப்பக்கட்டை, தண்ணீர் கலம், சோப் வாளி, கிருமி நாசினி ஆகியவை நிறைந்த வண்டிலைத் தள்ளிக்கொண்டு புறப்பட்டார். புறப்படும் முன்னர் அவர் கடைசியாகச் சொன்ன வாசகம் ஒரு சிறுகதையின் முடிவுக்குரிய லட்சணத்தோடு வெளிவந்தது. ‘நான் 13 வயதில் துடைப்பத்தை கையிலெடுத்து சுத்தம் செய்தேன். இன்று 55 வயதிலும் அதையே செய்கிறேன், இன்னும் மோசமாக.’ END Facebook
 12. ரகுவரன் teakkadai1 என்னும் முரளிக்கண்ணன் பார்வையில் இருந்து. கே எஸ் அதியமான் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி, கார்த்திக் நடிப்பில் தொட்டாச்சிணுங்கி படம் வந்து வெற்றி பெற்றிருந்த நேரம். அதை இந்தியில் தயாரிக்கப் போவதாக செய்தி வந்திருந்தது. நான் அப்போது தங்கியிருந்த மேன்ஷனில் இருந்த உதவி இயக்குநர் ஒருவர் இன்னொருவரிடம் கேட்டார் “ரகுவரன் ரோல அங்க யாரு பண்ணப்போறா?”. உடனே அங்கே ஒரு மௌனம் நிலவியது. அங்குதான் ஏகப்பட்ட நல்ல நடிகர்கள் இருக்கிறார்களே, இந்த வேடத்தை பண்ண மாட்டார்களா? என்ன? என்று நான் யோசித்தேன். ஒரு கணவன், தன் மனைவி தன்னை மட்டுமே நாயகனாக ஆராதிக்க வேண்டும், அன்பைப் பொழிய வேண்டும் என்று நினைக்கிறான். மனைவியோ ஒரு பாடகனிடம் தாய்மை அன்பு செலுத்துகிறாள். கணவன் இதனால் மனைவியிடம் கோபம் கொள்கிறான். சிறிது பிசகினாலும் தவறான அர்த்தம் வந்துவிடக் கூடிய வசனங்கள். ரகுவரன் அதை மிக எளிதாக கையாண்டு இயக்குநர் நினைத்த உணர்வை பர்வையாளனுக்கு கொண்டு சென்றிருப்பார். அதில் முக்கிய காட்சி ஒரு பாடலை பாடிவிட்டு “நான் பாடுறது நல்லா இல்லைன்னாலும் நீ நல்லா இருக்குன்னு சொல்லனும்” என்று ஏக்கத்துடன் பேசும் காட்சி. இந்தக் காட்சிக்கு கை இல்லாதவர்களைத் தவிர எல்லோரும் திரையரங்கில் கைதட்டுவார்கள். அப்போது (90 களின் மத்தியில்) சில உதவி இயக்குநர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்களின் மனதில் உள்ள கதையை சொல்வார்கள். ஏறக்குறைய எல்லோர் கதையிலும் ரகுவரனுக்கு ஒரு பாத்திரம் இருக்கும். நான் கூட கேட்பதுண்டு ரகுவரன் வேண்டும் என்பதற்க்காகவே இதை நுழைத்தீர்களா? என்று. அவர்களின் பதில் “ சில கதாபாத்திரங்களை நினைக்கும் போதே முதல் தேர்வாக ரகுவரனின் முகமே எங்களுக்கு தோன்றுகிறது” என்று. அந்த அளவுக்கு தன் நடிப்பால் பலர் உள்ளங்களில் படிந்தவர் அவர். எம்ஜியார் பிடிக்காதவர்கள், சிவாஜி பிடிக்காதவர்கள், ரஜினி பிடிக்காதவர்கள், கமல் பிடிக்காதவர்கள், கவுண்டமணி பிடிக்காதவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ரகுவரனை பிடிக்கவில்லை என்று சொன்ன யாரையும் நான் இதுவரை சந்தித்ததில்லை. அடையார் திரைபடக் கல்லூரியில் நடிப்புக்கான பட்டயப் படிப்பை முடித்த ரகுவரன் சில காலம் நாடகங்களில் நடித்து வந்தார். 1982 ஆம் ஆண்டு தன் 23 வயதில் ஏழாவது மனிதன் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். ஹரிஹரன் இயக்கத்தில் வைத்தியனாதன் இசையில் வெளியான இந்தப் படம் வணிக ரீதியிலான வெற்றி பெறவில்லை. ஆனால் பாடல்கள் பெரிதும் பேசப்பட்டன. காரணம் அவர்கள் உபயோகப் படுத்தியது பாரதியாரின் பாடல்கள். பின்னர் 83ஆம் ஆண்டு ஒரு ஓடை நதியாகிறது படத்தில் நடித்தார். அவருக்கு திருப்புமுனையான ஆண்டு, 1986 ஆம் ஆண்டு. குடிப்பழக்கத்தின் கொடுமைகளை விவரித்து சிவசங்கரி எழுதிய நாவல் தூர்தர்ஷனில் “ஒரு மனிதனின் கதை” என்ற பெயரில் ஒளிபரப்பானது. இயக்கம் எஸ் பி முத்துராமன், தயாரிப்பு ஏவிஎம். இதில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான தியாகு என்னும் மையப் பாத்திரத்தில் அனாசயமாக நடித்து அனைவரையும் கவர்ந்தார் ரகுவரன். இதே ஆண்டு ஏவிஎம் தயாரித்த சம்சாரம் அது மின்சாரம், மிஸ்டர் பாரத் ஆகிய படங்களில் ரகுவரனுக்கு வாய்ப்பு கிடைத்தது. இரண்டு வேடமும் இரண்டு துருவங்கள். சம்சாரம் அது மின்சாரத்தில் சிதம்பரம் என்னும் நடுத்தர வர்க்க சுயநலவாதி. மிஸ்டர் பாரத்தில் இட ஆக்ரமிப்பு செய்திருக்கும் பேட்டை தாதா. இரண்டிலும் தன் நடிப்பால் அசத்தினார். 1987 ஆம் ஆண்டு பாசிலின் இயக்கத்தில் வந்த பூ விழி வாசலிலேவில் கால் ஊனமுற்ற கொலைகாரன் வேடம். மக்கள் என் பக்கத்தில் டான் சத்யராஜின் வலதுகை. இந்த இரண்டு படங்களின் வெற்றி அவருக்கு தமிழ்சினிமாவில் நிலையான இடத்தைத் தந்தது. இந்த வெற்றிகளைத் தொடர்ந்து வி சி குகநாதன் இயக்கத்தில் மைக்கேல்ராஜ், கைநாட்டு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். முதலுக்கு மோசமில்லாத படங்கள். இந்தக் காலகட்டத்தில் ரஜினியின் ஆஸ்தான வில்லனாகவும் ரகுவரன் மாறியிருந்தார். ஊர்காவலன், மனிதன், ராஜா சின்ன ரோஜா என் ரஜினியுடன் தொடர்ந்து மல்லுக்கட்டினார். பாசிலின் இயக்கத்தில் அடுத்து வெளியான என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்திலும், கே சுபாஷ் இயக்கிய கலியுகம் படத்திலும் நல்ல வேடம் கிடைத்தது. 1990ல் வெளியான புரியாத புதிர், அஞ்சலி இரண்டும் நல்ல பெயரை பெற்றுத் தந்தன. புரியாத புதிரில் சைக்கோ கணவனாகவும், அஞ்சலியில் குறைபாடுள்ள குழந்தையால் மனைவி மனம் நோகக்கூடாது என எண்ணும் பாசமுள்ள கணவனாகவும் பரிமாணம் காட்டியிருப்பார். 1994ல் வெளியான காதலனில் குண்டு வைக்கும் நவீன அடியாள் வேடத்திலும், 95ல் பாட்ஷாவில் மும்பை டான் மார்க் ஆண்டனியாகவும் மிரட்டியிருப்பார். தொடர்ந்து அவர் தமிழிலும் தெலுங்கிலும் பல வேடங்களை ஏற்றார். சென்ற ஆண்டு அவர் இறந்தபின் வெளியான படம் யாரடி நீ மோகினி. அடுத்து வெளிவரவிருக்கும் கந்தசாமியிலும் அவர் ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தில் இருக்கும் காட்சி வரவிருக்கும் இந்திரவிழா திரைப்படத்திற்க்காக எடுக்கப்பட்ட ஒன்று. அவரது சட்டையை கழட்டிப் பார்த்தால் யாரும் அவரை வில்லன் என்று சொல்லமாட்டார்கள். வீரப்பா போலவோ, சரத்குமார்,சத்யராஜ் போலவோ வாட்ட சாட்டமான உடம்பு இல்லை. ஆனால் ஒரு பார்வையிலேயே ரசிகனுக்கு கிலியை ஏற்றிவிடுவார். அதுதான் ரகுவரனின் சிறப்பு. ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் தேவையில்லை, அடித்தொண்டையில் இருந்து வரும் குரல் போதும் ரகுவரனுக்கு. அதிலேயே எஃபெக்டை கொண்டுவந்து விடுவார். குணசித்திர வேடங்களில் நடிக்கும் போதும் அழுது புரண்டதில்லை. சலனமற்றுப் பார்க்கும் ஒரு ஏகாந்த பார்வை, உமிழ்நீர் விழுங்குவதுபோல ஒரு அசைவு இது போன்ற சிற்சில பாவனைகளிலேயே தேவையான உணர்வைக் கொண்டுவந்துவிடுவார். ஹோம் வோர்க் என்பதை தாரக மந்திரமாக கடைப் பிடித்தவர் ரகுவரன். கதையை உள்வாங்கி, அவரது கேரக்டர் எவ்வாறு அதில் புரஜெக்ட் ஆகிறது என்பதை ஸ்டடி செய்து அதற்கேற்ற மேனரிஷங்கள், உச்சரிப்பு, உடை என எல்லாவற்றிலும் கவனம் செலுத்துவார். படப்பிடிப்பு தளத்திற்க்கு வருமுன் வீட்டிலேயே ரிகர்சல் பார்த்து விட்டு வருவார். அதனால்தான் அவரால் எல்லாவித கேரக்டர்களையும் தனித்துவமுடன் செய்யமுடிந்தது. லவ்டுடே படத்தில் விஜய்யின் பாசக்கார தந்தையாக நடித்தவர், அதற்கடுத்த ஆண்டுகளில் வந்த நிலாவே வா படத்தில் விஜய்யின் காதலியை திருமணம் செய்ய வருபவராக நடித்தார். அந்தளவுக்கு அவர்மேல் இயக்குநர்களுக்கு நம்பிக்கை. தெலுங்கிலும் வெற்றிகரமான நடிகராக விளங்கினார். அவரது கேரியரில் சிறு சிறு இடைவெளிகள் இருக்கும். அத்ற்க்கு அவரே காரணம். திரைப்பட நடிகை ரோகினியை திருமனம் செய்து கொண்ட அவருக்கு ஒரு மகன் உண்டு. ஒரு மனிதனின் கதையில் போதைக்கு அடிமையானவனாக நடித்த அவர், வாழ்வையும் நடிப்பையும் பிரித்துப் பார்க்கவில்லை. அந்த பழக்கத்தாலேயே அவர் நம்மை விட்டு பிரிந்தார். உடல் ரீதியாக எங்களை விட்டு நீங்கள் நீங்கியிருக்கலாம். எங்கள் மனதை விட்டு எந்நாளும் நீங்கள் அகலப் போவதில்லை.
 13. இது மாதிரியும் மருத்துவர்கள்... டாக்டர் உள்ள வரலாமா ? வாங்க வாங்க உட்காருங்க என்ன பிரச்சனை ? நீங்க எப்படி இருக்கீங்க டாக்டர் ? நல்லா இருக்கேன்...சொல்லுங்க.... ஒண்ணுமில்ல டாக்டர் கழுத்தில இருந்து வலது கை,தோள்பட்டை எல்லாம் ஒரே வலி..நைட் தூங்க முடியல.... எவ்வளவு நாளா இருக்கு ? அது இருக்கும் டாக்டர் நாலஞ்சு மாசத்துக்கு மேலயே இருக்கும்..நெறய ட்ரீட்மென்ட் பார்த்தாச்சு..ஒண்ணும் சரியா வரல.... அப்படியா (பரிசோதனைக்கு பின்) சரி ஒரு எக்ஸ்ரே எடுத்து பார்த்திரலாம்.... எக்ஸ்ரே எதுக்கு டாக்டர் MRI எடுத்துரலாமே.... ( இன்ஸூரன்ஸ் வச்சிருக்காராம்...) இல்லங்க அவசியம் இல்ல. தேவையின்னா நானே சொல்லுவேன். இல்ல டாக்டர் MRI ல எல்லாம் தெரியும்னு நெட்ல பார்த்தேன். தேவையில்லைங்க. தேவையின்னா நானே சொல்லுவேன் கவலப்படாதீங்க. இதுக்கு எக்ஸ்ரே போதும். எடுத்துட்டு வாங்க. (சிறிது தயக்கத்துடன்) ஓ.கே டாக்டர். (எக்ஸ்ரே எடுத்தாச்சு) ம்ம்...எலும்புல எல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்ல. ரெகுலர் பிஸியோதெரபி,கொஞ்சம் உணவு கட்டுப்பாடு தேவை. அப்புறம் மருந்து எல்லாம் தர்ரேன். மேக்ஸிமம் ஒரு மாசத்தில சரியாயிரும். இல்ல டாக்டர் இதுக்கு ஆயுர்வேதம்,யுனானி தான் பெஸ்ட்னு நெட்ல போட்டுருக்கு. சாரிங்க எனக்கு அதெல்லாம் தெரியாது,நான் அலோபதி டாக்டர். எனக்கு தெரிந்த மருத்துவத்த நான் சொல்லிட்டேன். உங்களுக்கு உடன்பாடில்லன்னா நீங்க அதெல்லாம் ட்ரை பண்ணலாமே... அய்யோ டாக்டர் அதெல்லாம் ட்ரை பண்ணி சரியாகாமத்தான் உங்க கிட்ட வந்தேன். (நெட்ல அப்படி போட்டுருக்கு, இப்படி போட்டுருக்கு என்று நீண்ட வாத பிரதி வாதங்களுக்கு பிறகு டாக்டரின் சிகிச்சைக்கு ஒத்து கொண்டார்) நீங்க எங்க வேல பார்க்கிறீங்க ? நான் அந்த ஏர்லைன்ஸ்ல தான் இருக்கேன். ஊருக்கு போகும்போது என்ன ஹெல்ப் வேணும்னாலும் சொல்லுங்க டாக்டர். அப்படியா ரொம்ப சந்தோசம். எனக்கு ரொம்ப நாளா ப்ளேன் ஓட்டணும்னு ஆசை. நெட்ல எல்லாம் படிச்சுட்டு வந்துடுறேன். அதெப்படி டாக்டர் ... வெளயாடாதீங்க. நெட்ல படிச்சுட்டு எப்படி ப்ளேன் ஓட்ட முடியும் ? நெட்ல படிச்சுட்டு நீங்க இவ்வளவு ட்ரீட்மென்ட் சொல்றீங்க. அதே மாதிரி நெட்ல படிச்சுட்டு ப்ளேன் ஓட்ட முடியாதா என்ன ? (ஏதோ புரிந்த மாதிரி சிரித்துக் கொண்டே) சாரி டாக்டர்... என்றார். FB