சாம்பிராணிப் பூ
பனியாலும் மழையாலும் காற்றாலும் குளிரால் வாடிய பண்டைய மனிதனை இயற்கையில் கிடைத்த காய்ந்த மரங்களே காத்தன. மரங்களை எரித்து அது கொடுத்த வெப்பத்தின் கதகதப்பில் குளிரைப் போக்கிய மனிதன் மரங்களுக்கு மரம் அவை கொடுக்கும் வெப்பமும் மணமும் வேறுபடுவதைக் கண்டான். எந்தெந்த மரங்களின் புகை கண்ணில் கண்ணீரைப் பெருக்கவில்லை என்பதையும் பார்த்து அறிந்தான். அத்துடன் எரியும் புகையின் மணத்தை நுகர்ந்த போது நறுமணப் புகை அவனைக் கவர்ந்தது. கண்ணீரை வரவழைக்காத நறுமணத்தைக் கொடுத்த மரங்களின் புகை ஏன் மரத்துக்கு மரம் வேறுபடுகிறது என்பதை ஆராய்ந்தான்.
அந்த ஆய்வின் விளைவாகப் பல அரிய விடயங்களைக் கண்டறிந்தான். ஒருசில மரத்தின் புகை கொடிய
விலங்குகளை, நச்சுப் பாம்புகளை, பூச்சி புழுக்களை தம்மிடம் நெருங்க விடாததைக் கண்டான். வேறு சில மரங்களின் புகை தமக்கு வந்த நோய்களைப் போக்குவதையும் காயங்களை மாற்றுவதையும் பார்த்தறிந்தான். சில மரங்களில் இயற்கையாக வடிந்த மரப்பால் காற்றின் வெம்மையில் காய்ந்து கெட்டியாகிக் கட்டியாய் மரத்தோடு ஒட்டிக் கிடப்பதையும் கண்டறிந்தான். [வேப்பமரப்பிசின், முதிரமரப்பிசின் போன்று ஒட்டிக்கிடந்தன].
மரத்திலிருந்து வடிந்த சாம்பிராணி
மரங்களை எரித்துப் புகையை உண்டாக்குவதை விட மரங்களில் இருந்து வடிந்த பாற்கட்டிகளை சேகரித்து வைத்து தனக்குத் தேவையான போது நெருப்புத் தணலின் மேல் தூவி புகையை உண்டாக்குவது இலகுவாக இருந்ததை அறிந்தான். அந்த மரப்பாற் கட்டிகளில் எவை நறுமணத்தையும் அதிக புகையையும் கொடுத்து தமக்கு வந்த நோய்களையும் நீக்கினவோ அம்மரங்களை நட்டு வளர்த்தான். அப்பாற்கட்டிகளை சேகரித்து செல்லும் வழியிலும் தங்கும் இடங்களிலும் வேண்டிய போது அவற்றைப் பயன்படுத்தினான்.
இவ்வாறு மரப்புகையின் தன்மையைக் கண்டறிந்த பண்டைய மனித இனங்களில் தமிழினமும் ஒன்று. சங்கத்தமிழரின் வாழ்வியல் அதனை நன்கு எடுத்துக் காட்டுகிறது. சங்கத் தமிழர் போரினால் ஏற்பட்ட விழுப்புண்ணை மாற்றும் மருந்தாக நறுமணப் புகையைப் பயன்படுத்தியதை புறநானூற்றில் அரிசில்கிழார் எனும் சங்ககாலப் புலவர்
“நெடு நகர் வரைப்பில் கடி நறை புகைஇ
காக்கம் வம்மோ காதலம் தோழி!
வேந்துறு விழுமம் தாங்கிய
பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகைப் புண்ணே”
- (புறநானூறு: 281)
எனப் பாடியிருப்பதால் அறியலாம். அதாவது ‘அன்புடைய [காதலம்] தோழியே[தோழி]! வேந்தனுக்காக [வேந்துறு] விழுப்புண்பட்ட [விழுமம்தாங்கிய], பூக்கள் பொறித்த [பூம்பொறிக்] கழலை அணிந்த காலுடைய [கழற்கால்] நெடுந்தகையின் புண்ணை; மாளிகையில் [நெடு நகர் வரைப்பில்] நறுமணம் கமழ்கின்ற [கடி நறை] புகையை புகைத்து [புகைஇ] காக்க [காக்கம்] வருக [வம்மோ]’ எனத் தலைவி ஒருத்தி தன் தோழியை அழைக்கிறாள். வீரத்தினை எடுத்துக்காட்ட மாவீரர்கள் காலில் அணியும் அணிகலனைக் கழல் என்பர்.
புகையிட்டு புண்களை நோய்களைக் குணமாக்கும் வழக்கம் தமிழரிடையே பண்டைக்காலம் தொடக்கம் இன்றுவரை இருந்து வருகிறது என நினைக்கிறேன். ஏனெனில் நான் சிறியவளாக இருந்த பொழுது எனக்கு வந்த ஒவ்வாமையைப் போக்க என் தந்தை புகையூட்டினார். சிறியவளாக இருந்த காலத்தில் இயற்கையைப் பெரிதும் காதலித்தேன். பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் அம்மா தரும் சிற்றுண்டியை உண்பேன். விளையாடுவதற்குப் பதிலாக வெள்ளைத் தாள்களை எடுத்துச் சென்று மரஞ் செடி, கொடிகளின் இலை, பூ, காய், பழம் மட்டும் அல்லாமல் கண்ணில் படும் பூச்சி, புழு, பறவைகள், விலங்குகள் யாவற்றையும் கீறுவதும் ஆடிப்பாடித் திரிவதும் எனது பொழுது போக்கு. சில வேளைகளில் இலை, பூ, காய், பழங்களை அவற்றின் சுவை அறியக் கடித்துப் பார்ப்பதும் உண்டு.
ஒரு நாள் மாலை வீட்டுக்கு வந்தும் வழமைபோல அம்மா என்னைக் குளிப்பாட்டி துடைத்தார். அவவின் கண் முன்பே என் உடலெங்கும் திட்டுத் திட்டாகத் தடித்துக் கடிக்கத் தொடங்கியது. ‘என்ன சாப்பிட்டிங்க?’ என்று கேட்டார். நான் கீறி வைத்திருந்த படங்களைக் காட்டினேன். அவவுக்கே சில காய்களின் பெயர் தெரியாது. எது நஞ்சு! எது நஞ்சில்லை! என்பதும் தெரியாது. என்னை டாக்டரிடம் அழைத்துச் செல்வதற்காக உடைமாற்றினார். அப்போது வெளியே சென்றிருந்த என் தந்தை வந்தார். ‘மகளைப் பாருங்க, உடம்பெல்லாம் தடிக்கிறது டாக்டரிடம் கூட்டிப்போவோம்’ என்றார்.
எனது பொழுது போக்கு என்ன என்பது என் தந்தைக்குத் தெரியும். ‘மகள்! நீங்க கடித்துப் பார்தீங்களா? சாப்பிட்டீங்களா?’ எனக் கேட்டபடியே நான் கீறிய படங்களைப் பார்த்தார். [படங்களின் அருகே அது புளிக்குமா? கசக்குமா? இனிக்குமா? நாக்கில் ஒட்டுமா என எழுதிவைத்திருப்பேன்]. இது ஒவ்வாமை என்றார். இதற்கு டாக்டரிடம் போகவேண்டிய தேவையில்லை. போனாலும் அவர்கள் இதனை மாற்றுவார்களே ஒழிய முற்றிலும் குணமாக்க மாட்டார்கள் என்றார். எனக்கு அவர் சொன்னது விளங்கவில்லை. ‘மாற்றுவார்கள் ஆனால் முற்றிலும் குணமாக்க மாட்டார்கள் என்றால் என்ன என்றேன்? ஆங்கில மருத்துவம் ஒரு நோயை இன்னொரு நோயாக மாற்றும். தமிழ் மருத்துவம் நோயை முற்றாகக் குணமாக்கும் என்றார்.
எங்கள் வீட்டில் நின்றவரிடம் தென்னை மரத்தின் இளங்குருத்தோலையை வெட்டிக் கொண்டுவரும்படி கூறினார். முற்றத்தில் நெருப்பிட்டு தணலின் மேல் தென்னங்குருத்தை பரவி, அதிலிருந்து புகை வரத்தொடங்க, இடமும் வலமுமாக இரண்டுமுறை புகையை சுற்றி வரும்படி கூறி ஒரு முறை கடக்கவைத்தார். அவ்வளவே! சிறிது நேரத்தில் உடலெங்கும் உண்டான தடிப்புகளும் மறைந்து கடியும் நின்றது. அதன் பின்னர் உணவால் எந்த ஒரு ஒவ்வாமையும் எனக்கு வரவில்லை. பாருங்கள் எதுவித மருந்தும் பத்தியமும் இன்றி சில நிமிட நேரத்தில் தென்னங்குருத்தின் புகை ஒவ்வாமையை நீக்கியதே. இது நம் முன்னோர் கண்டறிந்திருந்த அநுபவ உண்மை அல்லவா?
வாடிய கற்றாழை மடல்
தென்னங்குருத்து மட்டுமல்ல பனங்குருத்து, வாழைக் குருத்து, வேப்பந்தளிர், ஆடாதோடைச் சருகு, வாடிச்சருகான கற்றாழை மடல் போன்ற பலவகை இலைகளின் புகையையும் வெள்ளெருக்கம்பூ, மாம்பூ போன்ற பல பூக்களின் புகையையும் குங்கிலியம், சாம்பிராணி போன்றவற்றின் புகையையும் நம்முன்னோர் பயன்படுத்தி நோய்களை நீக்கியதை வாகடங்கள் [வைத்திய ஏடுகள்] கூறுவதால் அறியலாம். இவற்றின் புகை ஈ, நுளம்பு, சிலந்தி, தேள் போன்றனவற்றின் தொல்லைகளில் இருந்து காத்ததோடு, கிருமி கொல்லியாக தொற்று நோய்களையும் தடுத்தது.
குங்கிலிய மரம்
குங்கிலியம் என்று சொன்னதும் சைவசமயத்தவர் மனக்கண்ணில் அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான குங்கிலியக்கலய நாயனாரே வருவார். பல்லாயிர வருடங்களாக குங்கிலியத்தை மனிதர் பயன்படுத்தி வருவதை வரலாறு காட்டுகிறது. குங்கிலிய மரத்திலிருந்து[shorea robusta] வடிந்த பாற்கட்டியே குங்கிலியமாகும். தெற்காசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட குங்கிலிய மரத்தை சால் மரம் என்றும் கூறுவர். இவை மிக உயரமாக வளரக்கூடியவை. ஜலரி என்று அழைக்கப்படும் மரம் மூன்று மீட்டர் உயரம் வரை வளரும்.
குங்கிலியம்
மருத்துவ வாகடங்கள், நிகண்டுகள் குங்கிலியத்தை குங்கிலிகம், குங்குலியம், குக்குலு என்றும் குறிக்கின்றன. குங்குதல் என்றால் நிலைகெடல் அல்லது குறைதல் என்ற கருத்தைத் தரும். தணலில் தூவப்படும் குங்கிலியம் உருகித் தன் நிலைகெட்டுப் போவதால் குங்கிலியம் என அழைத்தனர். குங்குலிய மரத்தில் பல இனங்கள் உண்டு. இனத்துக்கு இனம் குங்கிலியத்தின் நிறமும் மணமும் மாறுபடுவதோடு நோய் நீக்கும் தன்மையும் வேறுபடுகிறது. செங்குங்குலியம், பச்சைக் குங்குலியம், வெண்குங்குலியம், மஞ்சள் நிறக்குங்கிலியம், கருங்குங்குலியம், எருமைக்கண் குங்குலியம், பறங்கிக் குங்குலியம் எனக் குங்கிலியம் பலவகைப்படும். இலங்கையில் கிடைத்த ஒருவகைக் குங்கிலியத்தை இங்கிலாந்தில் ஒரு அந்தர் £14.50 என்ற விலைக்கு 1883ம் ஆண்டில் விற்றிருக்கிறார்கள்.
நாம் கடவுளர்க்குக் தூபம் காட்டும்போது இடும் சாம்பிராணியும்[Frankincense - C20H32O4] மரத்தில் இருந்து வடிந்து காய்ந்த பாற்கட்டியே. ஐயாயிர வருடங்களுக்கு மேலாகச் சாம்பிராணியை மனிதர் பயன்படுத்துகின்றனர். சிலர் குங்கிலியமும் சாம்பிராணியும் ஒன்று என்று கருதுகின்றனர். வெவ்வேறு விதமான மரங்களில் இருந்தே இரண்டும் கிடைக்கின்றன. இவற்றிலிருந்து வெவ்வேறு அமிலங்கள் கிடைக்கின்றறன. குங்கிலியத்தில் Stearic acid [C18H36O2] இருக்கிறது. சாம்பிராணியில் Boswellic acid [C30H48O3]இருக்கிறது. அவை பலவைகையான நோய்களை நீக்கின்றன.
குங்குலியப்பூ
நம் முன்னோர் பெண்களின் கர்ப்பப்பைக் கட்டிகளையும் கர்ப்பப்பையில் ஏற்படும் புற்றுநோயையும் சாம்பிராணி நீக்குமென்பதை அறிந்திருந்தனர் என்பதற்கு நமது மருத்துவ வாகடங்களே சான்றாகும். ஆயிரக்கணக்கான வருடங்களாக நம்மவர்கள் முழுகியதும் தலைமயிருக்கு சாம்பிராணிப் புகை இட்டார்கள். சாம்பிராணியின் புகை மூளையில் கட்டி [Brain Tumour] உண்டாகாது தடுத்ததுடன் தலைமயிர் நரைக்காதும் காத்தது. மேலை நாட்டு மோகத்தில் நாம் அதைக் கைவிட்டு hairdryer போடுகிறோம்.
பண்டை நாளில் இருந்து இன்றுவரை உலகில் உள்ள எல்லாமதப் பூசைகளிலும் கோயில்களிலும் தூபமாக குங்குலியமும் சாம்பிராணியும் போடுகிறார்கள். அவை கலப்படம் இல்லாது இருக்கும்வரை அவற்றால் மனிதருக்கு நன்மையே கிடைக்கின்றன. இன்றைய உலகம் செய்துவரும் நகரமயமாக்கல் என்னும் நாகரீகத்தால் காடுகளை அழிக்கிறோம். உயர்ந்த கோபுரங்களோடு கோயில்களைக் கட்டி அழகு பார்க்கிறோம். கோயிலைப் புனிதமாக்கும் எண்ணத்தில் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை மரங்களை வெட்டி, புல் பூண்டுகளைச் செருக்கி பளிங்குக் கற்களைப் பதித்து நமது செல்வச் செழிப்பைப் பறை அடிக்கிறோம். ஆனால் கோயில்களில் தூபமாகப் போடும் சாம்பிராணி மரத்தையோ குங்குலிய மரத்தையோ எந்த சமயத்தைச் சேர்ந்தோராவது நட்டு வளர்க்கிறார்களா? இம்மரங்களை எந்தக் கோயிலின் அருகிலாவது பார்த்ததுண்டா?
சாம்பிராணிமரம்
ஒருமரத்திலிருந்து ஒருவருடத்திற்கு ஒரு கிலோ சாம்பிராணியோ ஒருகிலோ குங்குலியமோ பெறமுடியுமென்பதே மிகவும் வேதனையான விடையமாகும். அந்நாளில் இயற்கையாக மரப்பட்டையில் உண்டாகும் வெடிப்பில் இருந்து வடிந்த சாம்பிராணியைப் பெற்ற நாம் இப்போது மரத்தைக் கீறி சாம்பிராணி பெறுகிறோம். உலகம் 85% சாம்பிராணியை சோமாலியாவில் இருந்தே பெற்றுவந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் அங்கும் காடுகள் அழிக்கப்படுவதாலும் மரம் நடுவார் இன்மையாலும் சாம்பிராணி உற்பத்தி வீழ்ச்சி அடைகிறது. மேலே படத்தில் பாருங்கள் அந்த வெளியில் எத்தனை மரங்கள் நிற்கின்றன. அத்துடன் இம்மரங்கள் மிக மிக மெதுவாக வளர்வன. இன்றைய விஞ்ஞான உலகமும் சாம்பிராணியில் உள்ள இரசாயனப் பொருட்கள் புற்றுநோயை நீக்குவதைக் கண்டு கொண்டன.
சாம்பிராணி கிருமிகளைக் கொல்வதால் உணவு சமைக்கும் இடத்தில் சாம்பிராணிப்புகை இட்டனர். அப்புகை சமைத்த உணவுகள் கெட்டுப் போகாது காத்தது. உணவு சமைக்கும் சமையலறை - அகடுக்களை, மடைப்பள்ளி எனவும் அழைக்கப்படும். இரண்டாயிர வருடங்களுக்கு முன்பே இலங்கையின் மாந்தையில் வாழ்ந்தோர் வீமன் எழுதிய மடைநூல் சொல்லியபடி சமையல் செய்ததை
“பனிவரை மார்பன்[வீமன்] பயந்த நுண்பொருள்
பனுவலின்[நூல்] வழாஅப்[வழுவாது] பல்வேறு அடிசில்[உணவு]”
- (சிறுபாணாற்றுப்படை: 240 - 241)
என்று சிறுபாணாற்றுப்படை கூறுகிறது. இவ்வரிகளுக்கு உரைஎழுதிய நச்சினார்க்கினியார் ‘பனிவரை மார்பன் பயந்த நுண் பொருள் பனுவலை’ - வீமன் எழுதிய மடைநூல் என்கிறார். எனவே மடையில் இட்ட சாம்பிராணியே மடைச் சாம்பிராணி.
பேச்சு வழக்கில் அது மடச்சாம்பிராணியாக மருவிவிட்டது. புத்தி குறைந்தோரைப் பார்த்து மடச்சாம்பிராணி என்று தமிழர் திட்டுவது உண்டல்லவா? ‘மடைச்சாம்பிராணிக்கு/மடச்சாம்பிராணிக்கு எங்கே போவது?’ என்று நம்மை நாமே கேட்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. நம் நாட்டில் வளரக்கூடிய இனத்தைச் சேர்ந்த சாம்பிராணி, குங்கிலிய மரங்களை நாம் வளர்க்கலாம். இல்லையேல் மாமன்னன் அலெக்சாண்டரைப் போல் சாம்பிராணிக்காக நாடுகளைப் கைப்பற்ற வேண்டிய நிலை வரும்.
அலெக்சாண்டர் சிறுவனாக இருந்த பொழுது லியோனிடாஸ்[Lionidas] என்பவரிடம் கல்வி கற்றார். ஒரு நாள் அலெக்சாண்டர் கைநிறைய சாம்பிராணியை அள்ளி நெருப்பில் தூவுவதைக் கண்ட லியோனிடாஸ், “இப்படி நெருப்பில் இட்டு சாம்பிராணியை வீணாக்க இது விளையும் நாடுகளைக் கைப்பற்ற வேண்டும்” என்று கண்டித்தார். அது நடந்து இருபது ஆண்டுகளின் பின் அலெக்சாண்டர் கி மு 332ல் காஷா[Gaza]வைக் கைப்பற்றினார். அப்போது தனது ஆசிரியருக்கு கப்பல் நிறைய சாம்பிராணியை அனுப்பிவைத்ததோடு ‘கஞ்சத்தனம் இல்லாது தாராளமாகச் சாம்பிராணியைப் பாவியுங்கள்’ எனத் துண்டெழுதி அனுப்பினான். அலெக்சாண்டரைப் போல் நாடுகளைக் கைப்பற்ற முடிந்தாலும் சாம்பிராணி மரங்களுக்கு எங்கே போவது?
இனிதே,
தமிஇன்இதழ்.கொம்ழரசி.